Add parallel Print Page Options

ஆலயத்தைப் பற்றிய விவரங்கள்

14 இவ்வாறு சாலொமோன் ஆலயத்தைக் கட்டும் வேலையை முடித்தான். 15 ஆலயத்தின் உட்புறத்தில் உள்ள கற்சுவர்கள் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. அவை தரையிலிருந்து கூரைவரை இருந்தன. கல் தரையானது தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டன. 16 ஆலயத்தின் பின் பகுதியில் 30 அடி நீளத்தில் ஒரு அறையைக் கட்டினார்கள். அதன் சுவர்களைக் கேதுருமரப் பலகைகளால் தரையிலிருந்து கூரைவரை மூடினர். இந்த அறையானது மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. 17 மகா பரிசுத்த இடத்தின் முன்புறத்தில்தான் ஆலயத்தின் முக்கிய இடம் இருந்தது. இந்த அறை 60 அடி நீளம் இருந்தது. 18 அவர்கள் சுவரில் உள்ள கற்கள் தெரியாத வண்ணம் கேதுருமரப் பலகைளால் மூடினார்கள். அவர்கள் பூ மொட்டுகள் மற்றும் மலர்களின் வடிவங்களை அம்மரத்தில் செதுக்கினார்கள்.

19 சாலொமோன் ஒரு அறையை ஆலயத்தின் பின்பகுதியில் உள்ளே கட்டினான். இந்த அறையில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைத்தனர். 20 இது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமும் உடையதாக இருந்தது. 21 சாலொமோன் இந்த அறையைச் சுத்தமான தங்கத்தால் மூடினான். அவன் நறுமணப்பொருட்களை எரிக்கும் பலிபீடத்தை கட்டினான். அவன் பலிபீடத்தையும் தங்கத் தகடுகளால் மூடி பொன் சங்கிலிகளைக் குறுக்காகத் தொங்கவிட்டான். அந்த அறையில் இரண்டு கேருபீன்களின் உருவங்கள் இருந்தன. அவை தங்கத்தால் மூடப்பட்டவை. 22 ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் தங்கத்தால் மூடப்பட்டன. மகா பரிசுத்த இடத்திற்கு வெளியே உள்ள பலிபீடத்தையும் தங்கத்தால் மூடினார்கள்.

23 வேலைக்காரர்கள் ஒலிவ மரத்தைக் கொண்டு இரண்டு கேருபீன்களின் உருவங்களை செய்தனர். இவற்றை மகாபரிசுத்த இடத்தில் வைத்தனர். இவற்றின் உயரம் 15 அடி. 24-26 இரு கேருபீன்களும் ஒரே மாதிரி ஒரே முறையில் செய்யப்பட்டவை. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு சிறகும் 7 1/2 அடி நீளமுடையவை. ஒரு சிறகின் நுனியிலிருந்து இன்னொரு சிறகின் நுனிவரை 15 அடி இருந்தன. ஒவ்வொரு கேருபீனும் 15 அடி உயரம் இருந்தன. 27 அவை மகாபரிசுத்த இடத்தில் இரு பக்கங்களிலும் இருந்தன. இரண்டின் சிறகுகளும் அறையின் மத்தியில் தொட்டுக்கொண்டிருந்தன. வெளிநுனிகள் சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தன. 28 இரு கேருபீன்களும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தன.

29 முக்கிய அறையைச் சுற்றியுள்ள சுவர்களிலும் உட்சுவர்களிலும் கேருபீன்களின் உருவங்கள், பேரீச்ச மரங்கள், பூக்கள் என பொறிக்கப்பட்டன. 30 இரு அறைகளின் தரைகளும் தங்கத்தகடுகளால் மூடப்பட்டன.

31 மகா பரிசுத்த இடத்தின் நுழைவாயிலில் ஒலிவ மரத்தால் ஆன இரு கதவுகளைச் செய்து பொருத்தினர். இதன் சட்டமானது ஐந்து பக்கங்களுடையதாக அமைக்கப்பட்டது. 32 இக்கதவுகளின் மேல் கேருபீன்களும், பேரீச்ச மரம், பூக்கள் எனப் பல வடிவங்கள் செதுக்கப்பட்டன. பின்னர் தங்கத்தால் இவற்றை மூடினார்கள்.

33 அவர்கள் முக்கியமான அறையின் நுழைவிற்குக் கதவுகள் செய்தனர். அவர்கள் ஒலிவ மரத்தை பயன்படுத்தி சதுர கதவு சட்டத்தைச் செய்தனர். 34 பிறகு அவர்கள் கதவுகளைச் செய்ய ஊசியிலை மரத்தைப் பயன்படுத்தினார்கள். 35 ஒவ்வொரு கதவும் இரண்டு பகுதிகளாக இருந்தன. இரண்டு மடிப்புகள் இருந்தன, அக்கதவுகளில் கேருபீன்கள், பேரீச்ச மரங்களும் பூக்களும் வரையப்பட்டன. தங்கத்தால் அவைகள் மூடப்பட்டிருந்தன.

36 பிறகு அவர்கள் உட்பிரகாரத்தைக் கட்டினார்கள். அதைச் சுற்றி சுவர்களைக் கட்டினர். ஒவ்வொரு சுவரும் மூன்று வரிசை வெட்டப்பட்ட கற்களாலும், ஒரு வரிசை கேதுருமரங்களாலும் செய்யப்பட்டன.

Read full chapter