எண்ணாகமம் 14:20-35
Tamil Bible: Easy-to-Read Version
20 இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுக்கொண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன். 21 ஆனால் உனக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நான் இந்த பூமியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே எனது மகிமையும் பூமியில் நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். 22 எகிப்திலிருந்து என்னால் அழைத்து வரப்பட்டவர்கள் எவரும் கானான் நாட்டைக் காணமாட்டார்கள். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும் நான் பாலைவனத்தில் செய்த பெருஞ்செயல்களையும், அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. என்னைப் பத்துமுறை சோதித்திருக்கிறார்கள். 23 நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. 24 ஆனால் எனது ஊழியனான காலேப் வேறுபட்டவன். என்னை அவன் முழுமையாகப் பின்பற்றினான். எனவே அவனை ஏற்கெனவே அவன் பார்வையிட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்வேன். அவனது ஜனங்கள் அந்நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். 25 அமலேக்கியரும், கானானியரும் இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, நாளை இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு செங்கடலுக்குச் செல்லும் சாலையின் மேலுள்ள பாலைவனத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.
கர்த்தர் ஜனங்களைத் தண்டித்தல்
26 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 27 “இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தீய ஜனங்கள் எனக்கு எதிராக முறையிடுவார்கள்? நான் இவர்களின் முறையீடுகளையும், புலம்பல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன். 28 நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது: 29 நீங்கள் பாலைவனத்தில் மரித்துப்போவீர்கள். இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள, எண்ணி கணக்கிடப்பட்ட ஜனங்கள் மரிப்பார்கள். கர்த்தராகிய எனக்கு எதிராக முறையிட்டீர்கள். 30 எனவே, நான் வாக்களித்திருந்த நாட்டிற்குள் எப்புன்னேயின் குமாரனான காலேபும், நூனின் குமாரனான யோசுவாவும் தவிர வேறு எவரும் நுழைய முடியாது. 31 அந்நாட்டிலுள்ள உங்களது பகைவர்கள், உங்கள் பிள்ளைகளை அபகரித்துக்கொள்வார்கள் என்று அஞ்சி முறையிட்டீர்கள். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன், அந்தப் பிள்ளைகள் அந்நாட்டிற்குள் செல்வார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்கள். 32 உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் இந்தப் பாலைவனத்திலேயே மரித்துப் போவீர்கள்.
33 “உங்கள் பிள்ளைகள் இந்தப் பாலைவனத்தில் மேய்ப்பர்களாக 40 ஆண்டுகள் அலைந்து திரிவார்கள், நீங்கள் எனக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால், அவர்கள் துன்பப்படுவார்கள். நீங்கள் அனைவரும் இப்பாலைவனத்தில் மரித்து விழும்வரை அவர்கள் துன்பப்படுவார்கள். 34 40 ஆண்டுகள் உங்கள் பாவங்களுக்காக நீங்கள் துன்பப்படுவீர்கள். (நீங்கள் கானான் நாட்டைச் சுற்றி பார்த்தது 40 நாட்கள். ஒரு நாளுக்கு ஒரு ஆண்டு வீதம் 40 ஆண்டுகள்.) உங்களுக்கு எதிராக என்னை நிறுத்தி வைப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
35 “நானே கர்த்தர். நான் சொல்லியிருக்கிறேன், தீய ஜனங்கள் அனைவருக்கும் நான் சொன்னபடியே செய்வேன் என்று உறுதியாய்க் கூறுகிறேன். இந்த ஜனங்கள் அனைவரும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்தார்கள். எனவே அனைவரும் இப்பாலைவனத்திலேயே மரித்துப்போவார்கள்” என்றார்.
Read full chapter2008 by Bible League International