ஆதியாகமம் 37:12-35
Tamil Bible: Easy-to-Read Version
12 ஒரு நாள் யோசேப்பின் சகோதரர்கள் சீகேமிற்குத் தங்கள் தந்தையின் ஆடுகளை மேய்க்கப் போனார்கள். 13 சில நாட்களான பின்பு யாக்கோபு யோசேப்பிடம், “சீகேமிற்குப் போ. அங்கு உன் சகோதரர்கள் ஆடு மேய்க்கிறார்கள்” என்றான்.
யோசேப்பும், “நான் போகிறேன்” என்று கூறினான்.
14 யாக்கோபு அவனிடம், “போய் உன் சகோதரர்களும், ஆடுகளும் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்த்து வா” என்றான். அவனை எபிரோன் சமவெளியிலிருந்து சீகேமிற்கு அனுப்பினான்.
15 சீகேமிற்குப் போகும்போது யோசேப்பு வழிதப்பிவிட்டான். ஒரு மனிதன் இவன் அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்து, “யாரை நீ தேடிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.
16 “நான் என் சகோதரர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் மந்தைகளோடு எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.
17 அவனோ, “அவர்கள் ஏற்கெனவே தோத்தானுக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான். எனவே யோசேப்பும் தோத்தானுக்குப் போய் சகோதரர்களைக் கண்டுகொண்டான்.
அடிமையாக யோசேப்பு விற்கப்படுதல்
18 யோசேப்பு தூரத்தில் வரும்போதே அவனது சகோதரர்கள் அவனைப் பார்த்துவிட்டு, அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தார்கள். 19 அவர்கள் ஒருவருக்கொருவர், “கனவு காணும் யோசேப்பு வந்துகொண்டிருக்கிறான். 20 இப்பொழுது நம்மால் அவனைக் கொல்லமுடியும். கொன்று ஏதாவது ஒரு கிணற்றில் அவன் பிணத்தை எறிந்துவிடுவோம். ஏதோ காட்டு மிருகம் அவனைக் கொன்றுவிட்டதாகத் தந்தையிடம் சொல்லுவோம். அவனது கனவுகள் பயனற்றவை என்று நீரூபிப்போம்” எனப் பேசிக்கொண்டனர்.
21 ஆனால் யோசேப்பைக் காப்பாற்ற ரூபன் விரும்பினான். “அவனைக் கொல்ல வேண்டாம். 22 அவனைத் தூக்கி பாலைவனத்திலுள்ள இந்தக் கிணற்றில் போட்டுவிடுங்கள்” என்றான். பிறகு அவனைக் காப்பாற்றி தந்தையிடம் அனுப்பலாம் என்று அவன் திட்டம் போட்டான். 23 யோசேப்பு சகோதரர்களிடம் வந்தான். அவர்கள் அவனை அடித்து அவனது அழகான மேல் அங்கியைக் கிழித்தனர். 24 பிறகு அவனை ஒரு வறண்ட கிணற்றில் தூக்கிப்போட்டனர்.
25 அவன் கிணற்றில் கிடக்கும்போது அவர்கள் மேலே உணவு உண்ண உட்கார்ந்தனர். அப்போது வியாபாரிகள் கூட்டமாக கீலேயாத்திலிருந்து எகிப்து நோக்கிப் போவதைக் கண்டனர். அவர்கள் ஒட்டகங்களில் நிறைய செல்வங்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் ஏற்றிச் சென்றனர். 26 எனவே யூதா சகோதரர்களிடம், “யோசேப்பைக் கொன்று மறைத்து விடுவதால் நமக்கு என்ன லாபம்? 27 அதைவிட அவனை வியாபாரிகளிடம் விற்றுவிட்டால் நிறைய லாபம் கிடைக்குமே, சொந்த சகோதரனைக் கொன்றோம் என்ற பழியும் இருக்காதே” என்றான். மற்ற சகோதரர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர். 28 மீதியானிய வியாபாரிகள் அருகில் வந்ததும் யோசேப்பைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து 20 வெள்ளிக்காசுகளுக்கு அவனை விற்றுவிட்டனர். அவர்கள் யோசேப்பை எகிப்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.
29 இச்சமயத்தில் ரூபன் அவர்களோடு இல்லை. அவனுக்கு அவர்கள் யோசேப்பை விற்றுவிட்டார்கள் என்பது தெரியாது. அவன் கிணற்றைப் பார்த்தபோது அவன் இல்லாததை அறிந்து வருத்தப்பட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். 30 ரூபன் தன் சகோதரர்களிடம் போய், “அந்த இளைஞன் கிணற்றில் இல்லையே, நான் என்ன செய்வது?” என்று கேட்டான். 31 அச்சகோதரர்கள் ஒரு ஆட்டைக் கொன்று அதன் இரத்தத்தை யோசேப்பின் அங்கியில் தோய்த்தனர். 32 பிறகு அதைக் கொண்டுபோய் தந்தையிடம் காட்டி, “இந்த அங்கியைக் கண்டெடுத்தோம். இது யோசேப்பினுடையதா?” என்று கேட்டனர்.
33 தந்தை அந்த அங்கியைப் பார்த்துவிட்டு அது யோசேப்பினுடையது என்று அறிந்துகொண்டான். “ஆமாம் இது அவனுடையதுதான். ஒருவேளை ஏதாவது காட்டு மிருகம் அவனைக் கொன்றிருக்கும். என் குமாரன் யோசேப்பு காட்டு மிருகத்தால் உண்ணப்பட்டான்” என்று கூறினான். 34 அவனுக்கு வருத்தம் அதிகமாகித் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். பிறகு அவன் தன் சோகத்தை சாக்கினாலான ஆடையை அணிந்து வெளிப்படுத்தினான். அவன் தொடர்ந்து நீண்ட நாள் குமாரனைப் பற்றிய துக்கத்தில் இருந்தான். 35 யாக்கோபின் பிற குமாரர்களும், குமாரத்திகளும் அவனுக்கு ஆறுதல் கூற முயன்றார்கள். ஆனால் அவன் ஆறுதல் அடையவில்லை. “நான் மரிக்கும்வரை என் மகனுக்காக வருத்தப்படுவேன்” என்று கூறினான்.
Read full chapter2008 by Bible League International