Add parallel Print Page Options

உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்ப கொண்டுவந்தது

13 தாவீது தனது படையின் அனைத்து அதிகாரிகளோடும் பேசினான். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “இது நல்ல யோசனை என்று நீங்கள் நினைத்தால், கர்த்தருடைய விருப்பமும் இருந்தால், இஸ்ரவேலின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நமது சகோதரர்களுக்குச் செய்தியை அனுப்புவோம். ஆசாரியர்களுக்கும், நகரங்களிலும், வெளி நிலங்களிலும், நமது சகோதரர்களோடு வாழும் லேவியர்களுக்கும் செய்தியை அனுப்புவோம். நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளும்படி செய்தி அவர்களுக்குச் சொல்லப்படட்டும். நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை திரும்பவும் எருசலேமுக்குக் கொண்டுவருவோம். சவுல் ராஜாவாக இருந்தபோது உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுவர அக்கறை இல்லாமல் இருந்துவிட்டோம்” என்றான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தாவீது சொன்னதை ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் இதுவே செய்வதற் கேற்ற சரியான செயல் என்று எண்ணினர்.

எகிப்திலுள்ள சீகோர் ஆறுமுதல் லெபோ ஆமாத்தின் எல்லைவரையுள்ள அனைத்து ஜனங்களையும் தாவீது கூட்டினான். அவர்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டியை கீரியாத் யாரீமிலிருந்து கொண்டுவருவதற்காகக் கூடினார்கள். தாவீதும் அவனோடு இருந்த மற்ற இஸ்ரவேலர்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். (பாலா என்பது கீரியாத்யாரீமின் இன்னொரு பெயர்) உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர அவர்கள் அங்கே போனார்கள். உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவனாகிய கர்த்தருடைய பெட்டி. அவர் கேருபீன்களுக்கு மேலே அமர்ந்திருக்கிறார். இப்பெட்டி கர்த்தருடைய நாமத்தாலேயே அழைக்கப்படுகிறது.

ஜனங்கள் உடன்படிக்கைப் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து தூக்கி வந்தனர். அதனைப் புதிய வண்டியில் வைத்தனர். ஊசாவும் அகியாவும் அவ்வண்டியை ஓட்டினார்கள்.

தாவீதும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக கொண்டாடினார்கள். அவர்கள் தேவனை புகழ்ந்து பாடினார்கள். அவர்கள் சுரமண்டலங்களையும், மேளங்களையும், கைத்தாளங்களையும், எக்காளங்களையும் இசைத்தனர்.

அவர்கள் கீதோனின் தானியத்தைப் பிரித்தெடுக்கும் களம் வந்தனர். வண்டியை இழுத்து வந்த மாடுகள் இடறின. உடன்படிக்கைப் பெட்டியானது ஏறக்குறைய விழுவது போலானது. ஊசா, அதனை ஒரு கையால் விழாமல் பிடித்துக்கொள்ள கையை நீட்டினான். 10 ஊசாவின் மேல் கர்த்தருக்கு பெருங் கோபம் உண்டாயிற்று, ஊசா பெட்டியைத் தொட்டதால் கர்த்தர் அவனைக் கொன்றுப்போட்டார். எனவே அவன் தேவனுக்கு முன்னால் மரித்துப் போனான். 11 தேவன் தனது கோபத்தை ஊசாவின் மேல் காட்டினார். இதனால் தாவீதுக்குக் கோபம் வந்தது. அன்று முதல் இன்றுவரை இந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது.

12 தாவீது அன்று தேவனுக்குப் பயந்தான். தாவீது, “தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை இங்கு என்னிடம் என்னால் கொண்டுவர முடியாது!” என்றான். 13 எனவே தாவீது தனது நகரத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் செல்லவில்லை. அவன் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டில் விட்டுவிட்டுப் போனான். இவன் காத் நகரத்தைச் சேர்ந்தவன். 14 உடன்படிக்கைப் பெட்டியானது ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்களுக்கு இருந்தது. ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும், அவனுக்குரிய அனைத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.

தாவீதின் அரசு வளர்ந்தது

14 ஈராம், தீரு எனும் நகரத்தின் ராஜா, ஈராம், தாவீதுக்கு தூதுவனை அனுப்பியிருந்தான். அதோடு கேதுரு மரத்தடிகளையும், கல்தச்சர்களையும், மரவெட்டிகளையும் அனுப்பியிருந்தான். தாவீதிற்கு வீடு கட்டவே ஈராம் இவற்றை அனுப்பினான். உண்மையிலேயே கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் ராஜாவாக்கியதை தாவீது அறிய முடிந்தது. தாவீதின் அரசாங்கத்தைக் கர்த்தர் பலமுள்ளதாகவும் பெரிதானதாகவும் ஆக்கினார். தேவன், தாவீதையும் இஸ்ரவேல் ஜனங்களையும் நேசித்ததால் இவ்வாறு செய்தார்.

எருசலேம் நகரத்தில் தாவீது மேலும் பெண்களை மணந்துக்கொண்டான். அவனுக்கு ஏராளமாக ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். இவை எருசலேமில் தாவீதின் பிள்ளைகளின் பெயர்களாகும்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், இப்கார், எலிசூவா, எல்பெலேத், நோகா, நெப்பேக், யப்பியா, எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் ஆகியோர்.

தாவீது பெலிஸ்தர்களை வெல்கிறான்

இஸ்ரவேலின் ராஜாவாகத் தாவீது தேர்ந்தெடுக்கப்பட்டதை பெலிஸ்தர்கள் அறிந்தனர். எனவே பெலிஸ்தர்கள் அனைவரும் தாவீதை தேடுவதற்காக வந்தார்கள். இதனை தாவீது கேள்விப்பட்டான். பிறகு தாவீது பெலிஸ்தர்களோடு போரிடச் சென்றான். பெலிஸ்தர்கள், ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கி அவர்களது பொருட்களைக் கொள்ளை அடித்தனர். 10 தாவீது தேவனிடம், “நான் பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போரிடலாமா? நான் அவர்களைத் தோற்கடிக்கும்படி செய்வீரா?” என்று கேட்டான்.

அதற்குக் கர்த்தர் தாவீதிடம், “போ, நான் உன்னைப் பெலிஸ்தர்களை வெல்லும்படிச் செய்வேன்” என்று பதிலுரைத்தார்.

11 பிறகு, தாவீதும் அவனது ஆட்களும் பாகால் பிராசீம்வரை சென்றனர். அங்கே தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தர்களைத் தோற்கடித்தனர். தாவீது அவர்களிடம், “உடைந்த அணையிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதைப்போல, என் எதிரிகளிடமிருந்து தேவன் வெற்றிக் கண்டுள்ளார்! தேவன், இதனை என் மூலம் செய்தார்” என்றான். அதனால் அந்த இடம் பாகால்பிராசீம் என்ற பெயரைப் பெற்றது. 12 பெலிஸ்தர்கள் பாகால்பிராசீமில் தங்கள் விக்கிரங்களை விட்டு, விட்டு ஓடிப் போனார்கள். அவற்றை எரித்துப்போடும்படி தாவீது கட்டளையிட்டான்.

பெலிஸ்தர் மீது மேலும் வெற்றிபெற்றது

13 பெலிஸ்தர்கள், மீண்டும் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கினார்கள். 14 தாவீது மீண்டும் தேவனிடம் ஜெபித்தான். தாவீதின் ஜெபத்திற்குத் தேவன் பதில் சொன்னார். தேவன், “நீ பெலிஸ்தர்களைத் தாக்கும்போது அவர்களுக்கு முன்பாகப் போகாதே. அதற்குப் பதிலாக அவர்களைச் சுற்றிக்கொண்டு செல். நறுமணம் வீசும் திரவங்கள் வடியும் மரங்களுக்குப்பின் மறைந்துக்கொள். 15 அவற்றின் மீது ஏறு. அதன் மேலிருந்து உன்னால் படைகளின் வருகை ஒலியைக் கேட்க முடியும். அப்போது, பெலிஸ்தர்களை நீ தாக்கு. நான் (தேவன்) உனக்கு முன்னால் போய் பெலிஸ்தர்களைத் தோற்கடிப்பேன்!” என்றார். 16 தேவன் சொன்னபடியே தாவீது செய்தான். அதனால் தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தரின் படைகளை வென்றனர். பெலிஸ்தர் வீரர்களை கிபியோன் முதல் காசேர்வரை அவர்கள் கொன்றார்கள். 17 எனவே, தாவீது அனைத்து நாடுகளிலும் பிரபலமானான். தாவீதிற்கு அனைத்து தேசங்களும் பயப்படும்படி கர்த்தர் செய்தார்.

உடன்படிக்கைப் பெட்டி எருசலேமில்

15 தாவீதின் நகரத்திலே தாவீது தனக்காக வீடுகளைக் கட்டினான். பிறகு, உடன்படிக்கைப் பெட்டியை வைக்கவும் ஒரு இடத்தைக் கட்டினான். அதற்காகக் கூடாரத்தை அமைத்தான். பிறகு தாவீது, “உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி வர லேவியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். உடன்படிக்கைப் பெட்டியை தூக்கிச் செல்லவும் அவருக்கு எக்காலத்துக்கும் பணிவிடை செய்யவும் கர்த்தர் லேவியர்களையே தேர்ந்தெடுத்துள்ளார்” என்றான்.

தாவீது, எருசலேமில் ஜனங்களை எல்லாம் கூட்டி, உடன்படிக்கைப் பெட்டிக்காக அவன் தயார் செய்த இடத்திற்கு அதைக் கொண்டுவர ஏற்பாடு செய்தான். தாவீது, ஆரோன் மற்றும் லேவியர்களின் சந்ததியினரை எல்லாம் அழைத்தான்.

கோகாத் கோத்திரத்தில் இருந்து 120 பேர் வந்தனர். ஊரியேல் அவர்களின் தலைவன்.

மெராரியின் கோத்திரத்தில் இருந்து 220 பேர் வந்தனர். அசாயா அவர்களின் தலைவன்.

கெர்சோன் கோத்திரத்தில் இருந்து 130 பேர். யோவேல் அவர்களின் தலைவன்.

எலிசாப்பான் கோத்திரத்தில் இருந்து 200 பேர். செமாயா அவர்களின் தலைவன்.

எப்ரோன் கோத்திரத்தில் இருந்து 80 பேர். எலியேல் அவர்களின் தலைவன்.

10 ஊசியேல் கோத்திரத்தில் இருந்து 112 பேர். அமினதாப் அவர்களின் தலைவன்.

தாவீது ஆசாரியர்களோடும் லேவியர்களோடும் பேசுதல்

11 பிறகு தாவீது சோதாக் மற்றும் அபியத்தார் ஆசாரியர்களை அழைத்தான். தாவீது கீழ்க்கண்ட லேவியர்களையும் அழைத்தான். ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் ஆகியோர். 12 தாவீது அவர்களிடம், “நீங்கள் லேவியர் கோத்திரத்திலிருந்து வந்த தலைவர்கள். நீங்களும் மற்ற லேவியர்களும் உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உடன்படிக்கைப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைப்பதற்காக எடுத்து வாருங்கள். 13 சென்ற முறை, உடன்படிக்கைப் பெட்டியை எவ்வாறு எடுத்து வர வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கவில்லை. லேவியர்களாகிய நீங்கள் அதனைத் தூக்கி வரவில்லை, அதனால் கர்த்தர் நம்மைத் தண்டித்தார்” என்றான்.

14 பிறகு ஆசாரியர்களும், லேவியர்களும் தம்மைப் பரிசுத்தமாக்கிக் கொண்டனர். எனவே அவர்களால் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை தூக்கிவர முடிந்தது. 15 மோசே கட்டளையிட்டபடியே, லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தோளில் தூக்கிவர சிறப்பான தடிகளைப் பயன்படுத்தினர். கர்த்தர் சொன்னபடியே அவர்கள் அப்பெட்டியைத் தூக்கி வந்தனர்.

பாடகர்கள்

16 தாவீது, லேவியர்களிடம் அவர்களது சகோதரர்களான பாடகர்களை அழைக்கச் சொன்னான். பாடகர்கள் தங்கள் சுரமண்டலம், கைத்தாளம், ஆகியவற்றோடு வந்து மகிழ்ச்சியுடன் பாடுமாறு கேட்டான்.

17 பிறகு லேவியர்கள், ஏமானையும், அவனது சகோதரர்களான ஆசாப்பையும், ஏத்தானையும் அழைத்தனர். ஏமான் யோவேலின் குமாரன். ஆசாப் பெரகியாவின் குமாரன். ஏத்தான் குஷாயாவின் குமாரன். இவர்கள் அனைவரும் மெராரியின் கோத்திரத்தினர். 18 அங்கே லேவியர்களின் இரண்டாவது குழுவும் இருந்தது. அதில் சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத் ஏதோம், ஏயேல் ஆகியோர் இருந்தனர். இவர்கள் லேவியக் காவலர்கள் ஆவார்கள்.

19 ஏமான், ஆசாப், ஏத்தான் ஆகிய பாடகர்கள் தம் வெண்கலக் கைத்தாளங்களை ஒலித்து பாடினார்கள். 20 சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா ஆகியோர் அல்மோத் என்னும் இசையில் தம்புருவை வாசித்தனர். 21 மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத் ஏதோம், ஏயேல், அச்சியா, ஆகியோர் செமனீத் எனும் இசையில் சுரமண்டலங்களை வாசித்தனர். இதுவே இவர்களின் வேலையாகும். 22 பாடலுக்குரிய பொறுப்பு லேவியர் தலைவனாகிய கெனானியாவிடம் இருந்தது. இவன் பாடுவதில் வல்லவன். எனவே அவன் அந்த வேலையைச் செய்தான்.

23 பெரகியாவும், எல்க்கானாவும், உடன்படிக்கைப் பெட்டியைக் காவல் காத்தனர். 24 செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் ஆகிய ஆசாரியர்கள் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எக்காளங்களை ஊதினார்கள். ஓபேத் ஏதோமும், எகியாவும் உடன்படிக்கைப் பெட்டிக்கு வாசல் காவலர்களாக இருந்தனர்.

25 தாவீதும், இஸ்ரவேல் தலைவர்களும், சேர்வைக்காரர்களும் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவரச் சென்றனர். அவர்கள் அதனை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து கொண்டு வந்தனர். ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்! 26 உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி வரும்படி லேவியருக்கு தேவன் உதவியபடியால், அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டனர். 27 உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி வந்த அனைத்து லேவியரும் மெல்லிய ஆடையான சால்வைகளை அணிந்திருந்தனர். பாடகரின் தலைவனாகிய கெனானியாவும், மற்ற பாடகர்களும், மெல்லிய ஆடையான சால்வையை அணிந்திருந்தனர். தாவீது மெல்லிய சணலால் ஆன ஏபோத்தை அணிந்திருந்தான்.

28 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்தனர், எக்காளங்களை ஊதினர், பூரிகைகளை ஊதினர், கைத்தாளங்களை ஒலித்தனர், தம்புருக்களையும், சுரமண்டலங்களையும் வாசித்தனர்.

29 உடன்படிக்கைப் பெட்டியானது தாவீதின் நகரத்திற்குள் வந்தபோது, தன் ஜன்னலின் வழியாக மீகாள் பார்த்தாள். மீகாள் சவுலின் குமாரத்தி. ராஜாவாகிய தாவீது ஆடிப்பாடி வருவதையும் கண்டாள். அவளுக்குத் தாவீது மீது இருந்த மரியாதை போயிற்று. அவனை அவள், ஒரு முட்டாளாக எண்ணினாள்.

16 லேவியர்கள், உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து அதற்காகத் தாவீது கட்டியிருந்த இடத்தில் வைத்தனர். பிறகு தேவனுக்கு அவர்கள் சர்வாங்க தகன பலியையும், சமாதான பலியையும் கொடுத்தனர். தாவீது சர்வாங்க தகனபலியையும், சமாதான பலியையும் கொடுத்த பிறகு, கர்த்தருடைய பேரால் ஜனங்களை ஆசீர்வதித்தான். பிறகு அவன், ஒரு துண்டு அப்பத்தையும், இறைச்சி துண்டையும் உலர்ந்த திராட்சைகளையும், எல்லா இஸ்ரவேலிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் கொடுத்தான்.

உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு சேவை செய்வதற்காக தாவீது சில லேவியர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு துதிப்பாடுவதும், அவருக்கு நன்றி சொல்வதும் வேலையாய் இருந்தது. ஆசாப், முதல் குழுவின் தலைவன். இவர்கள் கைத்தாளங்களை இசைத்தனர். சகரியா, இரண்டாவது குழுவின் தலைவன். மற்ற லேவியர்கள்: ஏயேல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா. ஓபேத் ஏதோம், ஏயெல் ஆகியோர். இவர்கள் தம்புரு, சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை இசைத்தனர். பெனாயாவும் யாகாசியேலும் ஆசாரியர்கள். இவர்கள் எப்போதும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எக்காளங்களை ஊதினார்கள். தாவீது கர்த்தரைத் துதித்து பாடுமாறு ஆசாப்பிடமும் அவனது சகோதரனிடமும் இவ்வேலையைக் கொடுத்தான்.

தாவீதின் நன்றிப்பாடல்

கர்த்தரை துதியுங்கள், அவரது நாமத்தை அழையுங்கள்,
    ஜனங்களிடம் கர்த்தருடைய மகத்தான செயல்களைக் கூறுங்கள்.
கர்த்தரை பாடுங்கள், கர்த்தருடைய துதிகளைப் பாடுங்கள்,
    அவரது அதிசயங்களையும் கூறுங்கள்.
10 கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்காகப் பெருமைப்படுங்கள்,
    கர்த்தரிடம் வருகிற நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்!
11 கர்த்தரையும், அவரது பலத்தையும் பாருங்கள்,
    எப்பொழுதும் அவரிடம் உதவிக்குப்போங்கள்.
12 கர்த்தர் செய்திருக்கிற அற்புதங்களை நினைத்துப் பாருங்கள்,
    அவரது தீர்மானங்களை நினைத்துப் பாருங்கள், அவர் செய்த வல்லமைவாய்ந்த செயல்களையும் கூட.
13 இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய தொண்டர்கள்.
    யாக்கோபின் சந்ததியினர்,
    கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
14 கர்த்தர் நமது தேவன்,
    அவரது வல்லமை எங்கும் உள்ளது.
15 அவரது உடன்படிக்கையை எப்போதும் நினைவு கொள்ளுங்கள்,
    ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கும் அவர் கட்டளையிட்டுள்ளார்.
16 கர்த்தர் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை நினைவுகொள்ளுங்கள்,
    அவர் ஈசாக்குக்கு செய்த வாக்குறுதியையும் கூட.
17 கர்த்தர் யாக்கோபுக்காக சட்டத்தைச் செய்தார்,
    இது இஸ்ரவேலோடு செய்த உடன்படிக்கை, இது என்றென்றும் தொடரும்.
18 கர்த்தர் இஸ்ரவேலிடம் சொன்னது: “கானான் நாட்டை நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
    வாக்களிக்கப்பட்ட நிலம் உங்களுக்குரியதாகும்.”

19 அங்கே சில ஜனங்களே இருந்தனர்,
    சில அந்நியர்களும் இருந்தனர்.
20 அவர்கள், ஒரு நாட்டிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள்.
    அவர்கள் ஒரு அரசிலிருந்து இன்னொன்றுக்குப் போனார்கள்.
21 ஆனால் கர்த்தர், அவர்களை எவரும் புண்படுத்தாதபடி செய்தார்;
    அவர்களைப் புண்படுத்தாதபடி ராஜாக்களை எச்சரித்தார்.
22 கர்த்தர் அந்த ராஜாக்களிடம் சொன்னது, “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களையும்
    எனது தீர்க்கதரிசிகளையும் புண்படுத்தாதீர்கள்.”
23 கர்த்தரை பாடுங்கள், பூமியெங்கும் கர்த்தர் நம்மை காப்பாற்றும்
    நற்செய்தியை ஒவ்வொரு நாளும் சொல்லவேண்டும்.
24 கர்த்தருடைய மகிமையை அனைத்து நாடுகளுக்கும் கூறுங்கள்,
    எவ்வளவு அற்புதமானவர் என்பதையும் கூறுங்கள்.
25 கர்த்தர் பெரியவர், அவர் துதிக்கத்தக்கவர்.
    அந்நிய தெய்வங்களைவிட கர்த்தர் பயப்படத்தக்கவர்.
26 ஏனென்றால், உலகிலுள்ள அனைத்து தெய்வங்களும் பயனற்ற உருவச் சிலைகளே.
    ஆனால் கர்த்தர் ஆகாயத்தை உண்டாக்கினார்!
27 வலிமையும், மகிழ்ச்சியும் கர்த்தர் வசிக்கும் இடத்தில் உள்ளன.
    கர்த்தர் ஒரு பிரகாசமான வெளிச்சத்தைப் போன்றவர்.
28 குடும்பங்களே, ஜனங்களே
    கர்த்தருடைய மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
29 கர்த்தருடைய மகிமையைத் துதியுங்கள், அவரது பெயருக்கு மரியாதை செலுத்துங்கள்,
    கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வாருங்கள்,
    கர்த்தரை பரிசுத்த அலங்காரத்துடன் தொழுதுகொள்ளுங்கள்.
30 கர்த்தருக்கு முன்னால் உலகமுழுவதும் நடுங்குகிறது!
    ஆனால் அவர் பூமியை வலிமை உள்ளதாகச் செய்தார், இந்த பூமி (நகராது) அசையாது.
31 பூமியும், வானமும் மகிழ்ச்சியடையட்டும்,
    “கர்த்தர் ஆளுகிறார்!” என்று ஒவ்வொருவரும் எங்கும் சொல்லட்டும்.
32 கடலும், அதிலுள்ளவையும் முழங்கட்டும்!
    வயலும், அதிலுள்ள அனைத்தும் மகிழட்டும்!
33 கர்த்தருக்கு முன்னால் காட்டு மரங்களும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்!
    ஏனென்றால், கர்த்தர் வந்துக்கொண்டிருக்கிறார்.
    உலகை நியாயந்தீர்க்க அவர் வருகிறார்.
34 ஓ, கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.
    கர்த்தருடைய அன்பு என்றென்றும் தொடர்வதாக.
35 கர்த்தரிடம் “எங்களை காத்திடும் தேவனே, எங்கள் மீட்பரே,
    எங்களை ஒன்றுக் கூட்டிடும், மற்ற ஜனங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்,
பிறகு உமது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம்.
    பிறகு உம்மை எங்கள் பாடல்களால் துதிப்போம்” என்று சொல்லுங்கள்.
36 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எப்பொழுதும் துதிக்கத்தக்கவர்,
    அவர் எப்பொழுதும் துதிக்கப்படட்டும்!

அனைத்து ஜனங்களும் கர்த்தரைத் துதித்து, “ஆமென்!” என்று சொன்னார்கள்.

37 பிறகு தாவீது, ஆசாப்பையும் அவனது சகோதரர்களையும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் விட்டுவிட்டு வந்தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் பெட்டிக்கு முன்பு சேவைச் செய்ய வைத்தான். 38 தாவீது, அங்கே ஆசாப்பு மற்றும் அவன் சகோதரர்களோடு ஓபேத்ஏதோமையும் 68 லேவியர்களையும் சேவைச் செய்ய விட்டு, விட்டு வந்தான். ஓபேத்ஏதோமும் ஓசாவும் வாசல் காவல்காரர்கள். ஓபேத்ஏதோம் எதித்தூனின் குமாரன் ஆவான்.

39 கிபியோனிலுள்ள மேட்டில் இருக்கிற கர்த்தருடைய கூடாரத்தில் சேவை செய்வதற்காக தாவீது சோதாக்கையும் மற்ற ஆசாரியர்களையும் விட்டு வைத்தான். 40 ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் சோதாக்கும், மற்ற ஆசாரியர்களும் பலிபீடத்தில் சர்வாங்கதகன பலிகளைக் கொடுத்தனர். கர்த்தர் இஸ்ரவேலுக்கு எழுத்தின் மூலமாக வழங்கிய சட்டத்தின்படி அவர்கள் செய்தார்கள். 41 ஏமானையும், எதித்தூனையும், மற்ற லேவியர்களையும் கர்த்தரைத் துதித்துப் பாடுவதற்காகத் தேர்ந்தெடுத்தனர். ஏனென்றால், கர்த்தருடைய அன்பு என்றும் தொடர்ந்திருக்கும் போன்ற பாடல்களை பாட 42 ஏமானும், எதித்தூனும் அவர்களோடு இருந்தனர். அவர்களின் வேலை எக்காளத்தை ஊதுவதும், கைத்தாளம் இடுவதும் ஆகும். தேவனுக்காக பாடல்கள் பாடப்பட்டபோது அவர்கள் வேறு இசைக் கருவிகளையும் இசைத்து வந்தனர். எதித்தூனின் குமாரர்கள் வாசலைக் காத்தனர்.

43 விழா முடிந்த பிறகு, மிஞ்சியுள்ள ஜனங்கள் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள். தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கச் சென்றான்.

கர்த்தர் தாவீதிற்கு வாக்குறுதியளித்தல்

17 தாவீது, தன் வீட்டிற்குச் சென்ற பிறகு, அவன் தீர்க்கதரிசி நாத்தானிடம், “பார், நான் கேதுரு மரங்களால் ஆன வீட்டில் இருக்கிறேன். ஆனால் உடன்படிக்கைப் பெட்டியோ கூடாரத்தில் இருக்கிறது. எனவே தேவனுக்காக நான் ஒரு ஆலயம் கட்ட விரும்புகிறேன்” என்றான்.

நாத்தான் தாவீதிற்கு, “நீர் என்ன விரும்புகிறீரோ அதனைச் செய்யும், உம்மோடு தேவன் இருக்கிறார்” என்று பதிலுரைத்தான்.

ஆனால், அன்று இரவு தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு வந்தது. தேவன்,

“போய் எனது தொண்டனான தாவீதிடம் கூறு: ‘தாவீது, எனக்காக ஆலயம் கட்ட வேண்டியவன் நீயல்ல. 5-6 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்த நாள் முதல் இன்று வரை நான் ஒரு வீட்டிலும் வசித்ததில்லை. நான் கூடாரத்துடனேயே திரிந்து கொண்டிருந்தேன். இஸ்ரவேலர்களுக்காகச் சிறப்பான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள், எனது ஜனங்களின் மேய்ப்பர்களைப் போன்றவர்கள். இஸ்ரவேலுக்குள் நான் பல்வேறு இடங்களுக்குத் திரிந்து கொண்டிருந்தபோது, நான் அந்தத் தலைவர்களிடம் எனக்குக் கேதுரு மரங்களால் ஆலயம் கட்டுமாறு சொன்னதில்லை. எனவே நீங்கள் ஏன் கேதுரு மரங்களால் ஆலயம் கட்டவில்லை?’ என்று அவர்களை நான் ஒரு பொழுதும் கேட்டதில்லை.

“இப்போது, இவற்றை என் தொண்டனான தாவீதிடம் கூறு: அவர் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘நீ, வயல்களில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். என் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உன்னை ராஜாவாக்கினேன். நீ எங்கே போனாலும் அங்கெல்லாம் நான் உன்னோடு இருந்தேன். நான் உனக்கு முன்னால் போய் உன் பகைவர்களை அழித்தேன். இப்போது, உன்னைப் பூமியிலேயே மிக புகழ்ப்பெற்றவர்களில் ஒருவனாக ஆக்குவேன். இந்த இடத்தை நான் என் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கிறேன். அவர்கள் இதில் மரங்களை நடுவார்கள். அம்மரங்களுக்கு அடியில் சமாதானத்தோடு இருப்பார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். தீயவர்கள் முன்புபோல அவர்களுக்குத் தீங்கு செய்யமாட்டார்கள். 10 பல தீமைகள் உங்களுக்கு ஏற்பட்டன. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாக்க தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். உங்கள் பகைவர்களையும் தோற்கடிப்பேன்.

“‘கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று நான் உனக்குக் கூறுகிறேன். 11 நீ மரித்த பிறகு, உன் முற்பிதாக்களோடு சேருவாய். பிறகு, உன் சொந்த குமாரனைப் புதிய ராஜா ஆக்குவேன். அவன் உனது குமாரர்களில் ஒருவன். அவனது அரசைப் பலமாக்குவேன். 12 உனது குமாரன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். நான் உனது குமாரனின் சந்ததியை என்றென்றும் ஆட்சி செலுத்தும்படி செய்வேன். 13 நான் அவனது தந்தையாக இருப்பேன். அவன் எனது குமாரனாக இருப்பான். உனக்கு முன்பு சவுல் ராஜாவாக இருந்தான். நான் அவனுக்கு அளித்த ஆதரவை நீக்கினேன். ஆனால் நான் உன் குமாரன் மீது கொண்ட அன்பை நிறுத்தமாட்டேன். 14 நான் அவனை எனது ஆலயத்திற்கும் அரசாங்கத்திற்கும் என்றென்றும் பொறுப்பாளியாக்குவேன். அவனது ஆட்சி என்றென்றும் தொடர்ந்திருக்கும்!’” என்றார்.

15 நாத்தான் தான் கண்டத் தரிசனத்தை தாவீதிடம் கூறினான். தேவன் சொன்னதையும் கூறினான்.

தாவீதின் ஜெபம்

16 பிறகு தாவீது ராஜா பரிசுத்தக் கூடாரத்திற்குப் போனான். கர்த்தருக்கு முன்பு உட்கார்ந்தான்.

தாவீது, “தேவனாகிய கர்த்தாவே, நீர் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் எவ்வளவோ செய்திருக்கிறீர். இது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை 17 இவற்றுக்கெல்லாம் மேலாக, எதிர்காலத்தில் என் குடும்பத்திற்கு என்னென்ன நடைபெறும் என்பதையும் நான் அறியுமாறு செய்துவிட்டீர். நீர் என்னை ஒரு மிக முக்கியமான மனிதனாக நடத்தினீர். 18 இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது? நீர் எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறீர். நான் உமது ஊழியன். இதை நீர் அறிவீர். 19 கர்த்தாவே, எனக்காக இந்த அற்புதங்களைச் செய்துள்ளீர். நீர் இவற்றைச் செய்தீர் ஏனென்றால், இவற்றை நீர் விரும்பினீர்.

20 உம்மைப்போல் எவருமில்லை கர்த்தாவே. உம்மைத்தவிர வேறு தேவன் இல்லை. வேறு எந்தத் தெய்வமும் இதுபோல் அற்புதங்களைச் செய்ததாக நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை! 21 இஸ்ரவேலைப்போன்று வேறு நாடுகளும் இல்லை. இந்த அதிசயங்களை நீர் செய்த நாடு பூமியிலேயே இஸ்ரவேல் ஒன்று மட்டும்தான். நீர் எங்களை எகிப்திலிருந்து விடுவித்தீர், என்னைச் சுதந்தரமாக்கினீர். உமக்கே நீர் புகழ் சேர்த்தீர்! உமது ஜனங்களுக்கு முன்னால் நீர் சென்றீர். மற்ற ஜனங்கள் தமது நாடுகளை எங்களுக்காக விட்டுச்செல்லும்படி செய்தீர்! 22 இஸ்ரவேல் ஜனங்களை என்றென்றும் உமது ஜனங்களாக ஏற்றுக்கொண்டீர்! கர்த்தாவே, நீர் அவர்களின் தேவனும் ஆனீர்!

23 “கர்த்தாவே, நீர் இந்த வாக்குறுதியை எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் செய்தீர். இப்போது, உமது வாக்குறுதிகளை என்றென்றும் காப்பாற்றுவீர், சொன்னபடியே செய்யும்! 24 நம்பிக்கைக்கு நீர் உரியவர் என்பதைக் காட்டும். ஜனங்கள் உமது நாமத்தை எப்போதும் பெருமைபடுத்துவார்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இஸ்ரவேலரின் தேவன்!’ என்று என்றென்றும் ஜனங்கள் கூறுவார்கள். நான் உமது தொண்டன். எனது குடும்பத்தைப் பலமுள்ளதாக்கி என்றென்றும் உமக்குச் சேவைச் செய்ய அனுமதியும்.

25 “என் தேவனே, உமது ஊழியக்காரனாகிய என்னிடம் பேசினீர். எனது குடும்பத்தை அரச குடும்பம் ஆக்குவீர் என்பதைத் தெளிவாக்கிவிட்டீர். அதனால் நான் தைரியமாய் இருக்கிறேன். அதனால் தான் உம்மிடம் வேண்டுதல்களை வைத்த வண்ணம் இருக்கிறேன். 26 கர்த்தாவே நீரே தேவன், நீரே இந்த நன்மைகளெல்லாம் எனக்குச் செய்வதாகக் கூறிவிட்டீர். 27 கர்த்தாவே! எனது குடும்பத்தை ஆசீர்வதிக்க மனம்கொண்டீர். வாக்களிக்கும் அளவிற்குக் கருணைகொண்டுள்ளீர். எனது குடும்பம் என்றென்றும் உமக்குச் சேவைச் செய்யும் பாக்கியத்தையும் கருணையோடு தந்துள்ளீர். கர்த்தாவே, நீரே எனது குடும்பத்தை ஆசீர்வதித்துவிட்டீர். எனவே எனது குடும்பம் என்றென்றும் ஆசீர்வாதத்திற்கு உட்பட்டது!” என்றான்.

தாவீது பல நாடுகளை வெல்கிறான்

18 பிறகு தாவீது பெலிஸ்தரைத் தாக்கித் தோற்கடித்தான். காத் நகரங்களையும் அதைச் சுற்றியுள்ள சிறு நகரங்களையும் பெலிஸ்தரின் வசமிருந்து கைப்பற்றினான்.

பிறகு தாவீது மோவாப் நாட்டைத் தோற்கடித்தான். மோவாபியர்கள் தாவீதின் வேலைக்காரர்களானார்கள். அவர்கள் தாவீதிற்கு புகழுரைகளைச் செலுத்தினார்கள்.

தாவீது, ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகவும் சண்டையிட்டான். ஆதாரேசர் சோபா நாட்டின் ராஜா. தாவீது, அப்படைகளோடு ஆமாத் நகரத்தின்வரை போரிட்டான். தாவீது இவ்வாறு செய்வதற்குக் காரணம் என்னவென்றால் ஆதாரேசர் தனது அரசை ஐபிராத்து நதிவரை பரப்ப விரும்பினான். தாவீது, ஆதாரேசரிடமிருந்து 1,000 இரதங்களையும் 7,000 இரதமோட்டிகளையும் 20,000 வீரர்களையும் கைப்பற்றினான். ஆதாரேசரின் பெரும்பாலான குதிரைகளைத் தாவீது முடமாக்கினான். அவை தேர் இழுக்கப் பயன்படுவன. ஆனால் தாவீது, அவற்றில் நூறு இரதக் குதிரைகளை மட்டும் வைத்துக்கொண்டான்.

தமஸ்குஸ் நகரத்தில் இருந்து ஆர்மீனியர்கள் ஆதாரேசருக்கு உதவி செய்யவந்தனர். ஆனால் தாவீது, அவர்களையும் தோற்கடித்து 22,000 ஆர்மீனியர்களைக் கொன்றான். பிறகு தாவீது, ஆராமில் உள்ள தமஸ்குஸ் நகரில் கோட்டை அமைத்தான். ஆர்மீனியர்கள் தாவீதின் வேலைக்காரர்களாகி அவனுக்குப் புகழுரைகளைக் கொண்டுவந்தனர். தாவீது எங்கெங்கு போனானோ அங்கெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றிகளைத் தந்தார்.

தாவீது ஆதாரேசரின் படைத்தளபதிகளிடமிருந்து தங்கள் கேடயங்களைப் பறித்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். திப்காத்திலும் கூனிலுமுள்ள வெண்கலத்தையும் தாவீது எடுத்து வந்தான். இந்நகரங்கள் ஆதாரேசருக்கு உரியவை. பிறகு சாலொமோன் இந்த வெண்கலத்தை ஆலயத்திற்குரிய வெண்கலத்தொட்டி, தூண், தட்டுமுட்டு போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தினான்.

ஆமாத் நகரத்தின் ராஜா தோயூ. ஆதாரேசர் சோபா நாட்டின் ராஜா. தோயூ, தாவீது ஆதாரேசரின் படைகளை வென்றுவிட்டதை அறிந்தான். 10 எனவே, தோயூ அவனது குமாரனான ஆதோராமை ராஜா தாவீதினிடம் அனுப்பி சமாதானத்தைத் தெரிவித்து ஆசீர்வாதத்தை வேண்டினான். தாவீது ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்கடித்ததால் அவன் இவ்வாறு நடந்துக்கொண்டான். முன்பு போர்க்களத்தில் ஆதாரேசர் தோயூவோடு இருந்தான். ஆதோராம், தாவீதிற்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றால் செய்யப்பட்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். 11 தாவீது ராஜா அவற்றைப் பரிசுத்தப்படுத்தி கர்த்தருக்கு கொடுத்துவிட்டான். ஏதோம், மோவாப், அம்மோனியர், பெலிஸ்தர், அமலேக்கியர் ஆகியோரிடமிருந்து பெற்ற பொன், வெள்ளி போன்றவற்றையும் தாவீது இவ்வாறே செய்து பரிசுத்தப்படுத்தினான்.

12 உப்பு பள்ளத்தாக்கிலே செருயாவின் குமாரனான அபிசாயி 18,000 ஏதோமியரைக் கொன்றான். 13 அபிசாயி ஏதோமில் அரண் அமைத்தான். அனைத்து ஏதோமியரும் தாவீதின் வேலைக்காரர்களானார்கள். தாவீது செல்லுமிடங்களில் எல்லாம் கர்த்தர் வெற்றியளித்தார்.

தாவீதின் முக்கிய அதிகாரிகள்

14 தாவீது, அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் ராஜா ஆனான். அவன் ஒவ்வொருவருக்கும் சரியானதையும், நியாயமானதையும் செய்தான். 15 செருயாவின் குமாரனான யோவாப் தாவீதின் படைத்தளபதியாக இருந்தான். ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் வரலாறு எழுதுபவனாக இருந்தான். 16 சாதோக்கும், அபிமெலேக்கும் ஆசாரியர்கள். சாதோக் அகிதூபின் குமாரன். அபிமெலேக் அபியதாரின் குமாரன். சவிஷா எழுத்துக்காரன். 17 பெனாயா, கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாய் இருந்தான். பெனாயா யோய்தாவின் குமாரன். தாவீதின் குமாரர்களும் முக்கிய அதிகாரிகளாய் இருந்தனர். அவர்கள் தாவீதின் பக்கம் தொண்டு செய்தனர்.

தாவீதின் ஆட்களை அம்மோனியர் அவமானப்படுத்தியது

19 நாகாஸ் என்பவன் அம்மோனியர்களின் ராஜாவாக இருந்தான். நாகாஸ் மரித்ததும், அவனது குமாரன் ராஜா ஆனான். பிறகு தாவீது, “நாகாஸ் என்னிடம் அன்பாய் இருந்தான், எனவே நான் அவனது குமாரன் ஆனூனிடம் அன்பாய் இருப்பேன்” என்றான். அதனால் தாவீது தூதுவர்களை ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அனுப்பினான். தாவீதின் தூதுவர்கள் அம்மோன் நாட்டிற்கு ஆனூனுக்கு ஆறுதல் சொல்லச் சென்றனர்.

ஆனால் அம்மோனிய தலைவர்கள் ஆனூனிடம், “முட்டாளாகாதே, தாவீது உண்மையிலேயே உனக்கு ஆறுதல் சொல்லவும், மரித்துப்போன உன் தந்தையைக் கௌரவப்படுத்தவும் தூதுவர்களை அனுப்பவில்லை! அவன் உன்னையும், உன் நாட்டையும் உளவறியவே தூதுவரை அனுப்பியுள்ளான். அவன் உண்மையில் உன் நாட்டை அழிக்கவே விரும்புகிறான்!” என்றனர். எனவே, ஆனூன் தாவீதின் தூதுவர்களைக் கைதுசெய்து அவர்களது தாடியை வெட்டினான். இடுப்புப் பக்கத்தில் அவர்களின் ஆடையையும் வெட்டினான். பிறகு வெளியே துரத்திவிட்டான்.

தாவீதின் ஆட்களுக்கு வீட்டிற்குத் திரும்பிப் போக அவமானமாக இருந்தது. சிலர் தாவீதிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டதைச் சொன்னார்கள். எனவே தாவீது தன் ஆட்களுக்கு, “உங்களது தாடி முழுவதும் வளரும்வரை எரிகோவிலேயே தங்கியிருங்கள். பிறகு உங்கள் வீட்டிற்கு வரலாம்” என்று செய்தி அனுப்பினான்.

அம்மோனியர்கள் தமது செயல்களாலேயே தாம் தாவீதிற்குப் பகையானதைக் கண்டனர். பின் ஆனூனும் அம்மோனியர்களும் 75,000 பவுண்டு வெள்ளியை செல விட்டு மெசொப்பொத்தாமியாவிலிருந்து இரதங்களையும் இரதமோட்டிகளையும் வாங்கினார்கள். அவர்கள் இரதங்களையும் இரதமோட்டிகளையும் மாக்கா, சோபா எனும் சீரியரின் நாடுகளிலிருந்தும் பெற்றனர். அம்மோனியர்கள் 32,000 இரதங்களை வாங்கினார்கள். அவர்கள் மாக்காவின் அரசுக்கு அதனுடைய படைகள் வந்து உதவுவதற்காகப் பணம் செலுத்தினர். மாக்காவின் அரசின் ஆட்களும் வந்து மேதேபாவுக்கு அருகில் பாசறை அமைத்தனர். அம்மோனியர்கள் தம் நகரங்களை விட்டு வெளியே வந்து போருக்கு தயாரானார்கள்.

அம்மோனியர்கள் போருக்குத் தயாராக இருப்பதை தாவீது அறிந்தான். எனவே, அவன் யோவாபையும், இஸ்ரவேலின் முழு படையையும் அனுப்பினான். அம்மோனியர்கள் வெளியே வந்து போருக்குத் தயாரானார்கள். அவர்கள் நகர வாசல்களுக்கு அருகில் இருந்தார்கள். உதவி செய்வதற்கு வந்த ராஜாக்களும் வயல்வெளிகளில் தனியாகத் தங்கியிருந்தார்கள்.

10 யோவாப், தனக்கு எதிராக இரண்டு படைகள் போர்ச் செய்ய தயாராக இருப்பதைக் கண்டான். ஒரு படை தனக்கு முன்பும் இன்னொரு படை தனக்குப் பின்னாலும் இருப்பதை அறிந்தான். உடனே தமது படையில் உள்ள சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை ஆராம் படையோடு போரிட அனுப்பினான். 11 மீதமிருந்த இஸ்ரவேலியப் படையை யோவாப் அபிசாயின் தலைமையின் கீழ் அமைத்தான். அபிசாயி அவனது சகோதரன். அவ்வீரர்கள் அம்மோனிய படையோடு போரிடச் சென்றனர். 12 யோவாப் அபிசாயிடம், “ஆராமிலுள்ள படைகள் என்னைவிட பலமானதாக இருந்தால், நீ வந்து உதவவேண்டும். ஆனால், அம்மோனியப் படைகள் உன்னைவிடப் பலமானதாக இருந்தால், நான் வந்து உனக்கு உதவுவேன். 13 நாம் நமது ஜனங்களுக்காகவும் தேவனுடைய நகரங்களுக்காகவும் போராடும்போது பலமாகவும், தைரியமாகவும் இருக்கவேண்டும். தனக்குச் சரி என்று எண்ணுவதைக் கர்த்தர் செய்வார்!” என்றான்.

14 யோவாபும், அவனது படையும் ஆராம் படையைத் தாக்கியது, ஆராம் படை தோற்று ஓடியது. 15 அம்மோனியரின் படை ஆராம் படை ஓடுவதைப் பார்த்து, தானும் ஓடியது. அது அபிசாயிடமும் அவனது படைகளிடமும் இருந்து ஓடியது. அம்மோனியர்கள் தம் நகரங்களுக்கும் யோவாப் எருசலேமிற்கும் திரும்பிச் சென்றனர்.

16 ஆராமிய தலைவர்கள், இஸ்ரவேலரால் தாம் தோற்கடிக்கப்பட்டதை அறிந்தனர். எனவே, அவர்கள் உதவிக்காகத் தூதுவர்களை ஐபிராத்து நதிக்கு கிழக்குப்புறத்தில் வசிப்பவர்களிடம் அனுப்பினார்கள். ஆராமில் இருந்து வந்த ஆதாரேசரின் படைத் தலைவன் சோப்பாக். அவனும் மற்ற ஆராமிய வீரர்களை வழிநடத்தினான்.

17 ஆராமியர்கள் மீண்டும் போருக்குத் தயாராகக் கூடுவதை தாவீது கேள்விப்பட்டான். எனவே அவனும் எல்லா இஸ்ரவேலர்களையும் கூட்டினான். யோர்தான் நதியைக் கடந்து தாவீது வழிநடத்தினான். அவர்கள் ஆராமியர்களுக்கு நேருக்கு நேராக வந்தனர். தாவீது போருக்குத் தயாராகி ஆராமியர்களைத் தாக்கினான். 18 ஆராமியர்கள் இஸ்ரவேலரிடம் தோற்று ஓடினார்கள். தாவீதும் அவனது படைகளும் 7,000 ஆராமிய இரத மோட்டிகளையும் 40,000 ஆராமிய வீரர்களையும் கொன்றனர். தாவீதின் படை ஆராமியப் படையின் தளபதியான சோபாக்கையும் கொன்றது.

19 ஆதாரேசரின் அதிகாரிகள், தாம் இஸ்ரவேலர்களால் தோற்கடிக்கப்படுவது அறிந்ததும் தாவீதோடு சமாதானம் செய்துகொண்டனர். அவர்கள் தாவீதின் வேலைக்காரர்கள் ஆனார்கள். எனவே ஆராமியர்கள் அம்மோனியர்களுக்கு மீண்டும் உதவ மறுத்துவிட்டனர்.

யோவாப் அம்மோனியர்களை அழிக்கிறான்

20 அடுத்த ஆண்டு வசந்தகால வேளையில், இஸ்ரவேல் படையைக் கூட்டி யோவாப் போருக்குத் தயார் செய்தான். பொதுவாக ராஜாக்கள் போருக்கு வெளியே புறப்பட்டுச் செல்லும் காலம் அது. ஆனால் தாவீது எருசலேமில் இருந்தான். இஸ்ரவேல் படை அம்மோன் நாட்டிற்குப் போய் அதை அழித்தது. பிறகு அவர்கள் ரப்பா நாட்டிற்குச் சென்று அங்கே முற்றுகையிட்டது. ஆட்களை உள்ளேயோ, வெளியேயோ போகவிடாமல் செய்தனர். யோவாப்பும் இஸ்ரவேல் படையும் அந்நகரம் அழியும்வரை போரிட்டனர்.

தாவீது அம்மோனிய ராஜாக்களின் கிரீடத்தை எடுத்தான். அந்தத் தங்க மகுடம் 75 பவுண்டு இருந்தது. அதில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அம்மகுடம் தாவீதின் தலையில் சூட்டப்பட்டது. பிறகு தாவீது ரப்பா நகரிலிருந்து மேலும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டான். தாவீது ரப்பாவிலிருந்து ஜனங்களைக் கூட்டிவந்து அவர்களைப் பலவந்தமாக ரம்பம், இரும்பு, ஊசிகள், கோடரி போன்றவற்றால் வேலைசெய்ய வைத்தான். தாவீது இதனை அனைத்து அம்மோனிய நகரங்களின் ஜனங்களுக்கும் விதித்தான். பிறகு தாவீதும், அவனது படையும் எருசலேமுக்குத் திரும்பியது.

இராட்சத பெலிஸ்தர் வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்

பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தர்களுடன் கேசேர் நகரில் போரிட்டனர். அப்போது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத குமாரனான சிப்பாயி என்பவனைக் கொன்றான். எனவே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளானார்கள்.

இன்னொரு தடவை, மீண்டும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களோடு போரிட்டனர். யாவீரின் குமாரன் எல்க்கானான். இவன் லாகேமியைக் கொன்றான். லாகெமி கோலியாத்தின் சகோதரன். கோலியாத் காத் நகரைச் சேர்ந்தவன். லாகேமியின் ஈட்டி மிகப் பெரிதாகவும் பலமானதாகவும் இருந்தது. அது தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் போல் இருந்தது.

பிறகு இஸ்ரவேலர் பெலிஸ்தர்களோடு காத் நகரில் இன்னொரு தடவை போரிட்டனர். இந்நகரில் ஒரு பெரிய மனிதன் இருந்தான். அவனுக்கு 24 கைவிரல்களும் கால் விரல்களும் இருந்தன. அவனுக்கு ஒவ்வொரு கையிலும், ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்கள் இருந்தன. எனவே அவன் இராட்சதர்களின் குமாரன்தான். அவன் இஸ்ரவேலரைக் கேலிச் செய்தபோது, யோனத்தான் அவனைக் கொன்றான். யோனத்தான் சிமேயாவின் குமாரன். சிமேயா தாவீதின் சகோதரன் ஆவான்.

பெலிஸ்தர்கள் காத்திலுள்ள இராட்சதர்களுக்கு பிறந்தவர்கள். தாவீதும் அவனுடைய வீரர்களும் இவர்களைக் கொன்றனர்.

இஸ்ரவேலரை எண்ணுவதினால் தாவீது பாவம் செய்கிறான்

21 இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக சாத்தான் எழுந்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிட தாவீதை ஊக்கப்படுத்தினான். எனவே தாவீது யோவாப்பிடமும், ஜனங்கள் தலைவர்களிடமும், “போய் அனைத்து இஸ்ரவேலரின் எண்ணிக்கையையும் கணக்கிடு. நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் பெயர்செபா முதல் தாண் வரையுள்ள அனைவரையும் கணக்கிடு. பிறகு எனக்குச் சொல். மொத்தத்தில் ஜனங்கள் தொகை எத்தனை என்று கணக்கிட்டு எனக்குச் சொல்” என்றான்.

ஆனால் யோவாப், “இப்போது இருக்கிற ஜனங்களைவிட நூறு மடங்காக கர்த்தர் செய்வார்! ஐயா, இஸ்ரவேலரின் அனைத்து ஜனங்களும் உங்கள் தொண்டர்கள். எனது ராஜாவும் ஆண்டவனும் ஆனவரே! இந்த செயலை ஏன் செய்ய விரும்புகிறீர்? நீங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பாவம் செய்த உணர்வுக்கு உள்ளாக்குவீர்கள்!” என்று சொன்னான்.

ஆனால், தாவீது ராஜாவோ உறுதியாக இருந்தான். ராஜா சொன்னபடியே யோவாப் செய்தான். எனவே அவன் இஸ்ரவேலின் முழுவதற்கும் போய் கணக்கிட்டான். பிறகு அவன் எருசலேமிற்குத் திரும்பி வந்தான். அவன் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 11,00,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர். யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. ஏனென்றால் அவன் தாவீது ராஜாவின் கட்டளையை விரும்பவில்லை. தேவனுடைய பார்வையில் தாவீது இந்த தீயச்செயலைச் செய்துவிட்டான். எனவே, தேவன் இஸ்ரவேலரைத் தண்டித்தார்.

தேவன் இஸ்ரவேலரைத் தண்டிக்கிறார்

பிறகு தாவீது தேவனிடம், “நான் முட்டாள்தனமான செயலைச் செய்துவிட்டேன். இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி ஒரு தீய பாவத்தைச் செய்துவிட்டேன். இப்போது உங்கள் தொண்டனாகிய எனது பாவத்தை என்னிடமிருந்து நீக்குமாறு கெஞ்சுகிறேன்” என்றான்.

9-10 காத் என்பவன் தாவீதின் தீர்க்கதரிசி ஆவான். கர்த்தர் காத்திடம், “போய் தாவீதிடம், ‘இதுதான் கர்த்தர் கூறியது: நான் உனக்குத் தேர்ந்தெடுக்க மூன்று காரியங்களைத் தருகிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு நீ தேர்ந்தெடுத்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்றார்.

11-12 பிறகு காத் தாவீதிடம் சென்று, அவனிடம், “‘தாவீதே நீ விரும்புகிற தண்டனையைத் தேர்ந்தெடுத்துக்கொள்: மூன்று ஆண்டுகள் உணவில்லாமல் இருப்பது, அல்லது மூன்று மாதங்கள் உனது பகைவர்கள் தம் ஆயுதங்களால் துரத்த ஓடிக்கொண்டே இருப்பது, அல்லது மூன்று நாட்கள் கர்த்தர் தரும் தண்டனை. இதனால் பயங்கரமான நோய் நாடு முழுவதும் பரவும், கர்த்தருடைய தூதன் இஸ்ரவேல் முழுவதுமுள்ள ஜனங்களை அழிப்பான்’ என்று கர்த்தர் சொல்கிறார். தேவன் என்னை அனுப்பினார். இப்போது, நான் அவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நீ முடிவு செய்” என்றான்.

13 தாவீது காத்திடம், “நான் இக்கட்டில் அகப்பட்டுக்கொண்டேன்! என்னை மனிதர்களின் கைகளில் அகப்பட்டுக்கொள்ளவிடாதே. மனிதர்கள் என் தண்டனையை முடிவுசெய்வதை நான் விரும்பவில்லை. கர்த்தர் இரக்கம் உள்ளவர், எனவே அவரே என் தண்டனையை முடிவுசெய்யட்டும்” என்றான்.

14 எனவே கர்த்தர் கொடிய நோயை இஸ்ரவேலரிடம் பரப்பினார். 70,000 பேர் மரித்தனர். 15 தேவன், எருசலேமை அழிக்க ஒரு தூதனை அனுப்பினார். ஆனால், அத்தூதன் எருசலேமை அழிக்கத் தொடங்கும்போது, கர்த்தர் அதனைப் பார்த்து வருத்தப்பட்டார். கர்த்தர் அத்தூதனிடம், “நிறுத்து! இதுபோதும்!” என்றார். கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தருகில் நின்றான்.

16 கர்த்தருடைய தூதன் ஆகாயத்தில் நிற்பதைத் தாவீது கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். அத்தூதன் எருசலேம் நகரை நோக்கி தன் வாளை உருவிக்கொண்டு நின்றான். தாவீதும், மற்ற தலைவர்களும் தரையில் முகம்படும்படி குனிந்து வணங்கினார்கள். தாவீதும், தலைவர்களும் தங்கள் துக்கத்தை வெளிக்காட்ட சிறப்பான ஆடையை அணிந்திருந்தனர். 17 தாவீது தேவனிடம், “பாவம் செய்தவன் நான் ஒருவனே! ஜனங்களை எண்ணி கணக்கிடும்படி நானே கட்டளையிட்டேன்! நானே தவறு செய்தவன்! இஸ்ரவேல் ஜனங்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை! தேவனாகிய கர்த்தாவே, என்னையும் என் குடும்பத்தையும் தண்டியும்! உமது ஜனங்களை அழிக்கும் கொடிய நோயை நிறுத்தும்!” என்றான்.

18 பிறகு கர்த்தருடைய தூதன் காத்திடம் பேசினான். அவன், “தாவீதிடம், கர்த்தரை தொழுதுகொள்ள ஒரு பலிபீடம் கட்டுமாறு கூறு. தாவீது, அப்பலிபீடத்தை எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கட்டவேண்டும்” என்றான். 19 காத் இவற்றை தாவீதிடம் கூற, தாவீது ஒர்னானின் களத்துக்குப் போனான்.

20 ஒர்னா கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். அவன் திரும்பி தேவதூதனைப் பார்த்தான். ஒர்னானின் நான்கு குமாரர்களும் ஓடி ஒளிந்துக் கொண்டார்கள். 21 தாவீது ஒர்னாவிடம் சென்றான், ஒர்னா களத்தைவிட்டு வெளியே வந்தான். தாவீதின் அருகிலே போய் அவன் முன்பு தரைமட்டும் குனிந்து வணங்கினான்.

22 தாவீது ஒர்னாவிடம், “உனது களத்தை எனக்கு விற்றுவிடு நான் உனக்கு முழு விலையையும் தருவேன். பிறகு இந்த இடத்தை கர்த்தரை தொழுது கொள்வதற்கான பலிபீடத்தைக் கட்டப் பயன்படுத்துவேன். அதன் பிறகே இப்பயங்கர நோய் போகும்” என்றான்.

23 ஒர்னா தாவீதிடம், “களத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எனது ராஜா, மற்றும் ஆண்டவன். உமது விருப்பப்படி செய்யும். நான் உங்களுக்கு தகனபலியிட மாடுகளும், விறகுகளும் தருவேன். தானியக் காணிக்கைக்காக, கோதுமையைத் தருவேன். நான் இவை அனைத்தையும் தருவேன்!” என்றான்.

24 ஆனால் தாவீது ராஜா, “இல்லை, நான் உனக்கு முழு விலையையும் தருவேன். நான் உனக்குரிய எதையும் எடுத்து கர்த்தருக்கு கொடுக்கமாட்டேன். இலவசமாக எதையும் எடுத்து காணிக்கை செலுத்தமாட்டேன்” என ஒர்னாவிடம் கூறினான்.

25 எனவே தாவீது ஒர்னாவுக்கு 15 பவுண்டு தங்கத்தைக் கொடுத்தான். 26 தாவீது கர்த்தருக்கு அங்கே பலிபீடத்தைக் கட்டினான். தாவீது சர்வாங்க தகன பலியையும், சமாதானப் பலியையும் அளித்தான். தாவீது, கர்த்தரிடம் ஜெபம் செய்தான். வானிலிருந்து அக்கினியை வரவழைத்து, கர்த்தர் தாவீதிற்குப் பதில் சொன்னார். அந்த அக்கினி தகனபலிபீடத்தில் வந்து விழுந்தது. 27 பிறகு கர்த்தர் தூதனுக்கு அவனது வாளை உறையில் போடும்படி கட்டளையிட்டார்.

28 ஒர்னாவின் களத்தில் கர்த்தர் தனக்குப் பதில் சொன்னதை தாவீது கண்டான். எனவே, தாவீது கர்த்தருக்கு தானே பலிகளைச் செலுத்தினான். 29 தகன பலிபீடமும் பரிசுத்தக் கூடாரமும் மலைமீது கிபியோனில் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் இருக்கும்போது மோசே இந்தப் பரிசுத்தக் கூடாரத்தை அமைத்தான். 30 தாவீது, பரிசுத்தக் கூடாரத்திற்குள் தேவனோடு பேச நுழையவில்லை. ஏனென்றால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. கர்த்தருடைய தூதனுக்கும் அவனது வாளுக்கும் தாவீது மிகவும் பயந்தான்.

22 தாவீது, “தேவனாகிய கர்த்தருடைய ஆலயமும் சர்வாங்க தகனபலிக்கான பலிபீடமும் இங்கே கட்டப்படும்” என்றான்.

தாவீது ஆலயத்திற்கு திட்டமிடுகிறான்

தாவீது இஸ்ரவேலில் வாழும் அயல் நாட்டுக்காரர்களைக் கூடும்படிக் கட்டளையிட்டான். அவர்களில் கல்தச்சர்களைத் தேர்ந்தெடுத்தான். தேவனுடைய ஆலயத்திற்கானக் கற்களை வெட்டும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான். தாவீது வாசல் கதவுக்கான ஆணிகளுக்கும் கீல்களுக்கும் தேவையான இரும்பையும் பெற்றான். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலத்தையும் பெற்றான். எண்ண முடிகிற அளவிற்கும் அதிகமான அளவில் கேதுரு மரங்களையும் பெற்றான். சீதோன், தீரு போன்ற நகர ஜனங்கள் கேதுருமரங்களை தாவீதிற்குக் கொண்டுவந்தனர்.

தாவீது, “நாம் கர்த்தருக்காக மிகவும் மகத்தான ஆலயத்தை கட்டவேண்டும். ஆனால் என் குமாரன் சாலொமோன் இளைஞனாக இருக்கிறான். அவன் எதையெதை அறிந்துக்கொள்ள வேண்டுமோ அதனை இன்னும் அறிந்துக்கொள்ளவில்லை. கர்த்தருடைய ஆலயமானது மிக மகத்தானதாக இருக்க வேண்டும். அது தன் உயர்வாலும் அழகாலும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெறும். எனவே, நான் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட திட்டமிடுகிறேன்” என்றான். எனவே தாவீது இறப்பதற்கு முன்பு ஆலயம் கட்டுவதற்கான திட்டங்களை அமைத்தான்.

பிறகு தாவீது தன் குமாரன் சாலொமோனை அழைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுமாறு சொன்னான். தாவீது சாலொமோனிடம், “என் மகனே, எனது தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்ட நான் விரும்பினேன். ஆனால் கர்த்தர் என்னிடம், ‘தாவீது, நீ பல போர்களைச் செய்து அதில் பலரைக் கொன்றிருக்கிறாய். எனவே எனது நாமத்தில் நீ ஆலயம் கட்டக் கூடாது. ஆனால் உனக்கு ஒரு குமாரன் இருப்பான். அவன் சமாதான புருஷனாக இருப்பான். நான் உனது குமாரனுக்குச் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுப்பேன். அவனைச் சுற்றியுள்ள பகைவர்கள் அவனுக்குத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவனது பெயர் சாலொமோன். சாலொமோன் ராஜாவாக இருக்கும்போது இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சமாதானமும் அமைதியும் தருவேன். 10 சாலொமோன் எனது நாமத்துக்காக ஆலயம் கட்டுவான். அவன் எனது குமாரனாக இருப்பான், நான் அவனது தந்தையாக இருப்பேன். நான் சாலோமோனின் அரசைப் பலமுள்ளதாக்குவேன். அவனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்றென்றும் இஸ்ரவேலை ஆள்வார்கள்’ என்றார்!” என்றான்.

11 தாவீது மேலும், “இப்போது மகனே, கர்த்தர் உன்னோடு இருக்கட்டும், உன் செயல்களில் வெற்றி கிடைக்கட்டும். உனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தால் ஆலயம் கட்டுவாய். அவர் சொன்னது போலவே கட்டாயம் நீ செய்வாய். 12 கர்த்தர் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக்குவார். ஜனங்களை வழி நடத்தவும் கர்த்தருடைய சட்டங்களை மதித்து கட்டுப்பட்டு நடக்கவும் தேவையான ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும் தேவனாகிய கர்த்தர் உனக்கு வழங்கட்டும். 13 நீ வெற்றிமிக்கவனாய் இருப்பாய். இஸ்ரவேலுக்காக கர்த்தர் மோசேயிடம் கொடுத்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் நீ கவனமாகக் கீழ்ப்படிய வேண்டும். பலமாகவும், தைரியமாகவும் இரு. பயப்படாதே.

14 “சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்டதிட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். 15 உன்னிடம் ஏராளமான கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் உள்ளனர். எல்லா வேலைகளையும் செய்யும் திறமை உடையவர்களும் உனக்கு இருக்கின்றனர். 16 அவர்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலை செய்வதில் வல்லவர்கள். எண்ணிபார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளனர். இப்போதே வேலையைத் தொடங்கு. கர்த்தர் உன்னோடு இருக்கட்டும்” என்றான்.

17 பிறகு தாவீது, இஸ்ரவேலின் தலைவர்கள் அனைவருக்கும் தனது குமாரன் சாலொமோனுக்கு உதவும்படி கட்டளையிட்டான். 18 தாவீது தலைவர்களிடம், “தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருக்கிறார். அவர் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுத்திருந்தார். நம்மைச் சுற்றி இருப்பவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உதவினார். கர்த்தருக்கும், அவரது ஜனங்களுக்கும் இப்போது இந்த நிலம் கட்டுப்பட்டிருக்கிறது. 19 இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உங்கள் இதயத்தையும் ஆத்துமாவையும் கொடுங்கள். அவர் சொன்னபடி செய்யுங்கள். தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள். கர்த்தருடைய நாமத்துக்காக ஆலயம் கட்டுங்கள். பிறகு உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வாருங்கள். மற்ற பரிசுத்தமான பொருட்களையும் ஆலயத்திற்குள் கொண்டு வாருங்கள்” என்றான்.

லேவியர்கள் ஆலயத்திற்கு சேவை செய்யத் திட்டமிடுகிறார்கள்

23 தாவீது முதியவன் ஆனான். எனவே இஸ்ரவேலின் புதிய ராஜாவாகத் தன் குமாரன் சாலொமோனை ஆக்கினான். அனைத்து இஸ்ரவேல் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் தாவீது ஒன்றுக்கூட்டினான். அவன் லேவியர்களில் 30 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களை எண்ணினான். ஆக மொத்தம் 38,000 பேர் இருந்தனர். 4-5 தாவீது அவர்களிடம், “24,000 லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை மேற்பார்வை பார்க்க வேண்டும். 6,000 லேவியர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கவேண்டும். 54,000 லேவியர்கள் வாசல் காவலர்களாக இருக்கட்டும். 4,000 லேவியர்கள் இசைக் கலைஞர்களாக இருக்கட்டும். அவர்களுக்காக சிறப்பான இசைக் கருவிகளை தயாரித்து வைத்துள்ளேன். கர்த்தரை துதித்துப்பாட அவர்கள் அக்கருவிகளைப் பயன்படுத்துவார்கள்” என்றான்.

தாவீது லேவியர்களை 3 குழுவாகப் பிரித்தான். அவர்கள் லேவியின் மூன்று குமாரர்களான கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோரின் கோத்திரத்தினராக இருந்தனர்.

கெர்சோன் கோத்திரத்தினர்

லாதானும், சிமேயும், கெர்சோன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். லாதானுக்கு மூன்று குமாரர்கள் இருந்தார்கள். மூத்த குமாரனின் பெயர் யெகியேல் ஆகும். அவனது மற்ற குமாரர்கள் சேத்தாம், யோவேல். சிமேயின் குமாரர்கள் செலோமித், ஆசியேல், ஆரான் எனும் மூன்று பேர்கள். இவர்கள் லாதானின் குடும்பத் தலைவர்களாக இருந்தனர்.

10 சிமேயிற்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்பவை அவர்களின் பெயர்கள் ஆகும். 11 யாகாத் மூத்த குமாரன். சீனா அடுத்த குமாரன். ஆனால் எயூஷீக்கும் பெரீயாவுக்கும் அதிகப் பிள்ளைகள் இல்லை. எனவே இருவரும் ஒரே குடும்பமாக எண்ணப்பட்டனர்.

கோகாத் கோத்திரத்தினர்

12 கோகாத்திற்கு 4 பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர். 13 அம்ராமிற்கு ஆரோன், மோசே என இரு பிள்ளைகள் இருந்தார்கள். ஆரோன் சிறப்புக் குரியவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆரோனும் அவனது சந்ததியினரும் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் சிறப்பானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்த்தருடைய சேவைக்குப் பரிசுத்தப் பொருட்களைத் தயார் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரோனும், அவனது சந்ததியினரும் நறுமணப் பொருட்களை கர்த்தருக்கு முன்பு எரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆசாரியர்களாகப் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எல்லாக் காலத்திலும் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் அளித்தனர்.

14 மோசே தேவனுடைய மனிதன். லேவி கோத்திரத்தினரின் ஒரு பகுதியினர், மோசேயின் பிள்ளைகள் ஆவார்கள். 15 கெர்சோமும், எலியேசரும் மோசேயின் குமாரர்கள். 16 செபுவேல், கெர்சோமின் மூத்த குமாரன். 17 ரெகபியா, எலியேசரின் மூத்த குமாரன். எலியேசருக்கு வேறு பிள்ளைகள் இல்லை. ஆனால் ரெகபியாவிற்கு ஏராளமான குமாரர்கள் இருந்தனர்.

18 செலோமித், இத்சாரின் மூத்தகுமாரன்.

19 எரியா எப்ரோனின் மூத்த குமாரன். அமரியா இரண்டாவது குமாரன். யாகாசியேல் மூன்றாவது குமாரன். எக்காமியாம் நான்காவது குமாரன்.

20 ஊசியேல் மீகாவின் மூத்த குமாரன், இஷியா இரண்டாவது குமாரன்.

மெராரி கோத்திரத்தினர்

21 மகேலியும், மூசியும் மெராரியின் குமாரர்கள் ஆவார்கள். மகேலிக்கு எலெயாசார், கீஸ் எனும் குமாரர்கள் இருந்தனர். 22 எலெயாசார் ஆண் பிள்ளைகள் இல்லாமலேயே மரித்துப்போனான். அவனுக்குப் பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். எலெயாசாரின் குமாரத்திகள் உறவினரையே மணந்துகொண்டனர். அவர்களின் உறவினர்கள் கீஸின் குமாரர்கள். 23 மூசியின் குமாரர்களாக மகலி, ஏதேர், ஏரோமோத் எனும் மூன்று பேர் இருந்தனர்.

லேவியர்களின் வேலை

24 இவர்கள் லேவியரின் சந்ததியினர். அவர்கள் குடும்ப வாரியாகக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். ஒவ்வொருவரின் பெயரும் பட்டியலிடப்பட்டது. இருபதும், அதற்கு மேலும் உள்ள வயதினர் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் பணி செய்தனர்.

25 தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தனது ஜனங்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்திருந்தார். கர்த்தர், எருசலேமிற்கு எல்லாக் காலத்திலும் வாழ்வதற்கு வந்திருந்தார். 26 எனவே பரிசுத்தக் கூடாரத்தை இனி தூக்கிக்கொண்டு செல்லும் வேலை லேவியர்களுக்கு இல்லை. ஆலயப்பணியில் பயன்படுத்தப்பட்ட வேறு பொருட்களைத் தூக்குகிற வேலையும் இல்லை” என்றான்.

27 இஸ்ரவேல் ஜனங்களுக்கு, லேவியர் கோத்திரத்தை எண்ணிக் கணக்கிடும்படி தாவீது கடைசியாக அறிவுறுத்தினான். அவர்கள் இருபதும் அதற்கும் மேலும் வயது கொண்டவர்களை எண்ணினார்கள்.

28 ஆரோனின் சந்ததியினர் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது லேவியர்கள் உதவுவதை வேலையாகக் கொண்டனர். அவர்கள் ஆலயத்தின் பிரகாரங்களையும் பக்கத்து அறைகளையும் கவனித்துக்கொண்டனர். எல்லாப் பரிசுத்தமானப் பொருட்களையும் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்தனர். தேவனுடைய ஆலயத்திற்குள் பணி செய்வதில் இது அவர்களின் வேலையாய் இருந்தது. 29 ஆலய மேஜையின் மேல் அப்பத்தை வைக்கும் பொறுப்பு இவர்களுடையது. மாவு, தானியக் காணிக்கை, புளிக்காத மாவில் அப்பம் செய்யும் வேலை போன்றவற்றைக் கவனித்துக்கொண்டனர். சட்டிகளில் சுடுகிற வேலைக்கும், கலவை பலிகளுக்கும் அவர்களே பொறுப்பாளர்களாக இருந்தனர். எல்லா வகையான அளவிடுகின்ற வேலைகளையும் செய்தார்கள். 30 லேவியர்கள் ஒவ்வொரு காலையிலும் கர்த்தருக்கு முன்பு நின்று நன்றி சொல்லியும் துதித்தும் பாடினார்கள். இதனை ஒவ்வொரு மாலையிலும் கூடச் செய்து வந்தனர். 31 சிறப்பு ஓய்வு நாட்கள், மாதப் பிறப்பு நாட்கள், திருவிழாக்கள், சிறப்பு விடுமுறை நாட்கள் ஆகிய காலங்களில் அவர்கள் கர்த்தருக்குத் தகன பலியைச் செலுத்தினார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தருக்கு முன்னால் பணிவிடைச் செய்தார்கள். ஒவ்வொரு வேளையும் எத்தனை லேவியர்கள் பணிவிடைச் செய்யவேண்டும் என்பதிலும் சில சட்டவிதிகள் இருந்தன. 32 லேவியர்கள் எதையெதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்களோ, அவற்றையெல்லாம் செய்தனர். பரிசுத்தக் கூடாரத்தின் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். பரிசுத்த இடத்தின் பொறுப்பையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் ஆரோனின் சந்ததியினர். தமது உறவினர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் உதவினார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் பணி விடைகளை ஆசாரியர்களுக்கு உதவியாகச் செய்து வந்தனர்.

ஆசாரியர்களின் குழுக்கள்

24 ஆரோன் குமாரர்களின் கீழ்க்கண்ட குழுக்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர் ஆரோனின் குமாரர்கள். ஆனால் நாதாபும், அபியூவும் தந்தைக்கு முன்னரே செத்துவிட்டனர். அவர்களுக்கு குமாரர்களும் இல்லை. எனவே எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரியர்களாக தொண்டாற்றினார்கள். எலெயாசர், இத்தாமார் ஆகிய இரண்டு கோத்திரங்களையும் வேறு, வேறு குழுக்களாக தாவீது பிரித்து வைத்தான். தமக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளைச் சரிவரச் செய்யும் பொருட்டு தாவீது இக்குழுக்களை இவ்விதம் பிரித்தான். தாவீது இதனை சாதோக், அகிமெலேக் ஆகியோரின் உதவியைக் கொண்டு இவ்வாறு செய்தான். சாதோக் எலெயாசாரின் சந்ததியைச் சேர்ந்தவன். அகிமெலேக்கு இத்தாமாரின் சந்ததியைச் சேர்ந்தவன். இத்தாமாரின் குடும்பத்தைவிட எலெயாசாரின் குடும்பத்தில் ஏராளமான தலைவர்கள் இருந்தனர். எலெயாசாரின் குடும்பத்தில் 16 தலைவர்களும் இத்தாமாரின் குடும்பத்தில் இருந்து 8 தலைவர்களும் இருந்தனர். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிலர் பரிசுத்த இடத்தின் பொறுப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றவர்கள் ஆசாரியர்களாக சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் எலெயாசார், இத்தாமார் ஆகிய வம்சங்களில் இருந்து வந்தனர்.

செமாயா செயலாளனாக இருந்தான். இவன் நெதனெயேலின் குமாரன். செமாயா, லேவியர் கோத்திரத்திலிருந்து வந்தவன். இவன் அவர்களின் சந்ததியினரின் பெயர்களை எழுதினான். அவன் இதனைத் தாவீது ராஜா மற்றும் சாதோக் ஆசாரியர்களின் தலைவர்கள், அகிமெலேக், ஆசாரிய குடும்பங்களின் தலைவர்கள், லேவியர்களின் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் செய்தான். அகிமெலேக் அபியதாரின் குமாரன். அவர்கள் ஒவ்வொரு முறையும் சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்தனர். செமாயா இவர்களின் பெயர்களை எழுதினான். எனவே, எலெயாசார் மற்றும் இத்தாமார் கோத்திரங்களிடையே வேலைகளைப் பங்கிட்டனர்.

யோயாரீபின் குழு முதல் குழு.

யெதாயாவின் குழு இரண்டாவது குழு.

ஆரிமின் குழு மூன்றாம் குழு.

செயோரீமின் குழு நான்காவது குழு.

மல்கியாவின் குழு ஐந்தாம் குழு.

மியாமீனின் குழு ஆறாம் குழு.

10 அக்கோத்சின் குழு ஏழாம் குழு.

அபியாவின் குழு எட்டாவது குழு.

11 யெசுவாவின் குழு ஒன்பதாவது குழு.

செக்கனியாவின் குழு பத்தாவது குழு.

12 எலியாசீபின் குழு பதினோராவது குழு.

யாக்கீமின் குழு பன்னிரண்டாவது குழு.

13 உப்பாவின் குழு பதின்மூன்றாவது குழு.

எசெபெயாவின் குழு பதினான்காவது குழு.

14 பில்காவின் குழு பதினைந்தாவது குழு.

இம்மேரின் குழு பதினாறாவது குழு.

15 ஏசீரின் குழு பதினேழாவது குழு.

அப்சேசின் குழு பதினெட்டாவது குழு.

16 பெத்தகியாவின் குழு பத்தொன்பதாவது குழு.

எகெசெக்கியேலின் குழு இருபதாவது குழு.

17 யாகின் குழு இருபத்தொன்றாவது குழு.

காமுவேலின் குழு இருபத்திரண்டாவது குழு.

18 தெலாயாவின் குழு இருபத்தி மூன்றாவது குழு.

மாசியாவின் குழு இருபத்தி நான்காவது குழு.

19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆரோனுக்கு கட்டளைகளைக் கற்பித்தார். இவர்கள் ஆலயத்தில் சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆரோனின் விதிகளை ஆலயத்தில் சேவை செய்யக் கடைபிடித்தனர்.

மற்ற லேவியர்கள்

20 மற்ற லேவியின் சந்ததியாரின் பெயர்கள் இவை:

அம்ராமின் சந்ததியினர்: சூபவேல், சூபவேலின் சந்ததியினர்: எகேதியா;

21 ரெகபியாவின் வழிவந்த இஷியா, (இஷியா மூத்த குமாரன்.)

22 இத்சாரியின் கோத்திரத்தில் இருந்து செலெமோத், செசெமோத்தின் குடும்பத்தில் இருந்து யாகாத்.

23 எப்ரோனின் மூத்த குமாரன் எரியா, இரண்டாம் குமாரன் அம்ரியா மூன்றாம் குமாரன் யாகாசியேல், நான்காம் குமாரன் எக்காமியாம்,

24 ஊசியேலின் குமாரன் மீகா, மீகாவின் குமாரன் சாமீர்.

25 மீகாவின் சகோதரன் இஷியா, இஷியாவின் குமாரன் சகரியா.

26 மெராரியின் சந்ததியினர் மகேலி, மூசி ஆகியோர், யாசியாவின் குமாரன் பேனோ,

27 மெராரியின் குமாரன் யாசியேல், யாசியேலுக்கு பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி ஆகியோர்.

28 மகேலியின் குமாரனான எலெயாசார், எலெயாசாருக்கு குமாரர்கள் இல்லை.

29 கீசின் குமாரனான யெராமியேல்.

30 மூசியின் குமாரர்களாக மகேலி, ஏதேர், எரிமோத் ஆகியோர்.

இவை அனைத்தும் லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் பெயர்கள் ஆகும். அவர்களின் குடும்ப வரிசைப்படி இப்பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 31 இவர்கள் சிறப்பு வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ஆசாரியர்களான தங்கள் உறவினர்களைப்போன்று, சீட்டுக் குலுக்கல் போட்டனர். ஆரோனின் சந்ததியினர் ஆசாரியரானார்கள். ராஜாவாகிய தாவீது, சாதோக், அகிமெலேக், ஆசாரியர்களின் தலைவர்கள் மற்றும் லேவியர் குடும்பத்தினர் முன்னால் இவர்கள் சீட்டுக் குலுக்கல் போட்டனர். வேலைகளைத் தேர்ந்தெடுப்பதில் மூத்த வம்சத்தினரும் இளைய வம்சத்தினரும் ஒன்று போலவே நடத்தப்பட்டனர்.

இசைக் குழுவினர்

25 தாவீதும், படைத்தலைவர்களும் ஆசாப்பின் குமாரர்களை சிறப்பு வேலைக்காகத் தனியாகப் பிரித்தனர். ஆசாப்பின் குமாரர்கள் ஏமான், எதுத்தூன் ஆகியோர். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதை தேவனுக்கு சிறப்புப்பணியாகக் கொண்டனர். இதனைச் சுரமண்டலங்கள், தம்புருகள், கைத்தாளங்கள் போன்றவற்றால் செய்தனர். இவ்வகையில் பணி செய்தவர்களின் பெயர் பட்டியல் இது:

ஆசாப்பின் குடும்பத்தில், சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா ஆகியோர். தாவீது ராஜா, ஆசாப்பைத் தீர்க்கதரிசனம் சொல்லத் தேர்ந்தெடுத்தான். ஆசாப் குமாரர்களுக்கு வழிகாட்டினான்.

எதுத்தானின் குடும்பத்திலிருந்து கெதலியா, சேரீ, எஷாயா, சீமேயி, அஷபியா, மத்தித்தியா எனும் ஆறுபேர். எதுத்தான் தன் குமாரர்களுக்கு வழிகாட்டினான். எதுத்தான் சுரமண்டலங்களைப் பயன்படுத்தி தீர்க்கதரிசனம் சொன்னான். கர்த்தருக்கு நன்றி சொல்லுவதும் துதிப்பதுமாக இருந்தான்.

ஏமானின் குமாரர்களான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் ஆகியோர் பணிசெய்தனர். இவர்கள் அனைவரும் ஏமானின் குமாரர்கள். ஏமான் தாவீதின் தீர்க்கதரிசி. ஏமானைப் பலப்படுத்துவதாக தேவன் வாக்களித்துள்ளார். எனவே ஏமானுக்கு அதிக குமாரர்கள். தேவன் அவனுக்கு 14 குமாரர்களையும் 3 குமாரத்திகளையும் கொடுத்தார்.

ஏமான் தன் குமாரர்களை ஆலயத்தில் பாடுவதற்குப் பயிற்சிகொடுத்தான். அவர்கள் சுரமண்டலங்கள், தம்புருக்கள், கைத்தாளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் தேவாலயத்தில் பணிசெய்தனர். தாவீது ராஜா அவர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களும் அவர்களது உறவினர்களும் லேவியர்களின் கோத்திரத்தில் உள்ளவர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களில் 288 பேர் கர்த்தரை துதித்துப் பாடக் கற்றிருந்தனர். அவர்கள் சீட்டுக் குலுக்கல் மூலம் அவர்களுக்குரிய வேலைகளை ஒதுக்கினான். எல்லோரும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். முதியவர்களும், இளைஞர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். குருக்களும், மாணவர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர்.

முதலில், ஆசாப்பின் குமாரர்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இரண்டாவதாக, கெதலியா குமாரர்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

10 மூன்றாவதாக, சக்கூரின் குமாரர்களிடமும், உறவினர்களிடமும், இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

11 நான்காவதாக, இஸ்ரியின் குமாரர்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

12 ஐந்தாவதாக, நெத்தனியாவின் குமாரர்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

13 ஆறாவதாக, புக்கியாவின் குமாரர்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

14 ஏழாவதாக, எசரேலாவின் குமாரர்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

15 எட்டாவதாக, எஷாயாவின் குமாரர்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

16 ஒன்பதாவதாக, மத்தனீயாவின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

17 பத்தாவதாக, சிமேயாவின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

18 பதினொன்றாவதாக அசாரியேலின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

19 பன்னிரெண்டாவதாக, அஷாபியாவின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

20 பதிமூன்றாவதாக, சுபவேலின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

21 பதினான்காவதாக, மத்தித்தியாவின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

22 பதினைந்தாவதாக, எரேமோத்தின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

23 பதினாறாவதாக, அனனியாவின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

24 பதினேழாவதாக, யோஸ்பேக்காஷாவின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

25 பதினெட்டாவதாக, ஆனானியின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

26 பத்தொன்பதாவதாக, மலோத்தின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

27 இருபதாவதாக, எலியாத்தாவின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

28 இருபத்தொன்றாவதாக, ஒத்திரின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

29 இருபத்திரெண்டாவதாக கிதல்தியின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

30 இருபத்துமூன்றாவதாக, மகாசியோத்தின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

31 இருபத்துநான்காவதாக, ரொமந்தியேசரின் குமாரர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வாயில் காவலர்கள்

26 வாயில் காவலர் குழு: இவர்கள் கோராகிய வம்சத்தினர்.

மெஷெலேமியாவும் அவனது குமாரர்களும் ஆவார்கள். மெஷெலேமியா கோரேயின் குமாரன். இவன் ஆசாப்பின் கோத்திரத்தைச் சேர்ந்தவன். மெஷெலேமியாவிற்கு குமாரர்கள் இருந்தனர். சகரியா மூத்த குமாரன். எதியாயேல் இரண்டாவது குமாரன். செபதியா மூன்றாவது குமாரன். யதனியேல் நான்காவது குமாரன், ஏலாம் ஐந்தாவது குமாரன், யோகனான் ஆறாவது குமாரன், எலியோனாய் ஏழாவது குமாரன்.

ஓபேத்ஏதோமினுக்கு குமாரர்கள் இருந்தனர். மூத்த குமாரன் செமாயா, இரண்டாவது குமாரன் யோசபாத், மூன்றாவது குமாரன் யோவாக், நான்காவது குமாரன் சாக்கார், ஐந்தாவது குமாரன் நெதநெயேல், ஆறாவது குமாரன் அம்மியேல், ஏழாவது குமாரன் இசக்கார், எட்டாவது குமாரன் பெயுள்தாயி. தேவன் உண்மையாகவே ஓபேத்ஏதோமை ஆசீர்வதித்திருந்தார். ஓபேத்ஏதோமின் குமாரனான செமாயாவிற்கு குமாரர்கள் இருந்தனர். அவர்கள் பலமுள்ளவர்களாகத் தங்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். செமாயாவுக்கு ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத், எலிகூ, செமகியா எனும் குமாரர்கள் இருந்தனர். எல்சாபாத்தின் உறவினர் திறமையுள்ள வேலையாட்கள். இவர்கள் அனைவரும் ஓபேத்ஏதோமின் சந்ததியினர். இவர்களும் இவர்களின் குமாரர்களும் உறவினர்களும் வல்லமையுள்ளவர்கள், நல்ல காவலர்கள். ஓபேத்ஏதோமிற்கு 62 சந்ததியினர் இருந்தனர்.

மெஷெலேமியாவின் குமாரர்களும் உறவினர்களும் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். மொத்தத்தில் குமாரர்களும் உறவினர்களுமாக 18 பேர்கள் இருந்தார்கள்.

10 மெராரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாயில் காவலர்கள் ஓசாவும் இருந்தான். சிம்ரி முதன்மையானவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். உண்மையில், இவன் மூத்த குமாரன் அல்ல, ஆனால் அவனது தந்தை இவனை முதலில் பிறந்தவனாக வைத்தான். 11 இல்க்கியா இவனது இரண்டாவது குமாரன், தெபலியா மூன்றாவது குமாரன், சகரியா நான்காவது குமாரன். ஆக மொத்தம் ஓராவின் குமாரர்களும் உறவினர்களுமாக 13 பேர் இருந்தனர்.

12 இவர்கள் வாயில் காவல் குழுவின் தலைவர்கள். இவர்கள் சிறப்பான வழியில் கர்த்தருடைய ஆலயத்தில் பணிசெய்து வந்தனர், இது இவர்களின் உறவினர்கள் செய்தது போன்றது. 13 ஒவ்வொரு குடும்பத்திற்கும் காவல் காப்பதற்கென ஒரு வாசல் கொடுக்கப்பட்டது. வாசலைத் தேர்ந்தெடுக்க இவர்கள் சீட்டுக்குலுக்கல் முறையைப் பயன்படுத்தினார்கள். முதியவர்களும், இளைஞர்களும் சமமாக நடத்தப்பட்டனர்.

14 மெஷெலேமியா கிழக்கு வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பிறகு மெஷெலேமியாவின் குமாரனான சகரியாவிற்கு சீட்டு குலுக்கிப் போட்டனர். இவன் ஞானமுள்ள ஆலோசகனாக இருந்தான். வடவாசல் காவலுக்கு இவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். 15 ஓபேத் ஏதோம் தென்வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். இவனது குமாரர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டின் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 16 மேற்குவாசல் காவலுக்கு சூப்பீமும் ஓசாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல் சாலையில் இருந்த ஷெல்லகத் வாசலையும் காவல் செய்தனர்.

காவலர்கள் பக்கம் பக்கமாக நின்றனர். 17 ஒவ்வொரு நாளும் ஆறு லேவியர்கள் கிழக்கு வாசலில் நின்றனர். நான்கு லேவியர்கள் தினமும் வடக்கு வாசலில் நின்றனர். ஒவ்வொரு நாளும் நான்கு லேவியர்கள் தெற்கு வாசலில் நின்றார்கள். இரண்டு லேவியர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டு வாசலைக் காவல் காத்தனர். 18 நான்கு லேவியர்கள் மேற்குப்புறமான வழியில் இருந்தனர். வெளிப்புறமான வழியில் இரண்டு லேவியர்கள் காவல் செய்தனர்.

19 இவர்களே வாயில் காவலர்கள் குழுவினர். இவர்கள் கோராக் மற்றும் மெராரி குடும்பத்தினர்.

கருவூல அதிகாரிகளும் மற்ற அதிகாரிகளும்

20 அகியா, லேவியர் கோத்திரத்தில் உள்ளவன். தேவனுடைய ஆலயத்தில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்ட பொக்கிஷ அறைக்குப் பொறுப்பாளியாக இருந்தான். பரிசுத்தமான பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கும் பொறுப்பாளியாக இவன் இருந்தான்.

21 லாதான் கெர்சோனியானின் குடும்பத்தில் உள்ளவன். லாதானின் கோத்திரத்தில் யெகியேலி தலைவர்களுள் ஒருவனாயிருந்தான். 22 யெகியேலியின் குமாரன் சேத்தாம், சேத்தாமின் சகோதரன் யோவேல். இவர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்தனர்.

23 மற்ற தலைவர்கள் அமரம், இத்சாகார், எப்ரோன், ஊசியேல் ஆகியோரின் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

24 செபுவேல் கருவூலப் பொறுப்பாளனாக இருந்தான். இவன் கெர்சோமின் குமாரன். கெர்சோம் மோசேயின் குமாரன். 25 கீழ்க்கண்டவர்கள் சுபவேலின் உறவினர்கள், எலியேசர் மூலமாக வந்த உறவினர்கள். எலியேசரின் குமாரனான ரெகபியா, ரெகபியாவின் குமாரனான எஷாயா, எஷாயாவின் குமாரனான யோராம், யோராமின் குமாரனான சிக்கிரி, சிக்கிரியின் குமாரனான செலோமித். 26 செலோமித்தும் இவனது உறவினர்களும் ஆலயத்திற்காக தாவீது சேகரித்த அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளரானார்கள்.

படையில் உள்ள அதிகாரிகளும் ஆலயத்திற்காகப் பொருட்களைக் கொடுத்தனர். 27 அவர்கள் போரில் கைப்பற்றிய பொருட்களைக் கொடுத்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயம் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்களைத் தந்தார்கள். 28 செலோமித்தும், அவனது உறவினரும் தீர்க்கதரிசியான சாமுவேலும், கீஸின் குமாரனான சவுலும், நேரின் குமாரனான அப்னேரும், செருயாவின் குமாரனான யோவாபும் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். ஜனங்கள் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களையும் பாதுகாத்தனர்.

29 இத்சாகார் குடும்பத்திலிருந்து கெனானியாவும் அவனது குமாரர்களும் ஆலயத்துக்கு வெளியேயுள்ளவற்றைக் கவனித்துக் கொண்டனர். அவர்கள் காவலர்களாகவும், நீதிபதிகளாகவும் இஸ்ரவேலின் பல இடங்களிலும் பணியாற்றினார்கள். 30 எப்ரோன் குடும்பத்தில் அசபியா தோன்றினான். இவனும் இவனது உறவினர்களும் கர்த்தருக்கான வேலைகள் அனைத்துக்கும் பொறுப்பாளிகளாக இருந்தனர். யோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள இஸ்ரவேல் பகுதியில் ராஜாவின் வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். 1,700 பலமிக்கவர்கள் அசபியாவின் குழுவில் இருந்தனர். 31 எப்ரோனின் வம்சவரலாறு: இவர்களின் தலைவனாக எரியா இருந்ததாகக் கூறும், தாவீதின் 40வது ஆட்சியாண்டில் குடும்ப வரலாற்றின் மூலம் திறமையும் சக்தியும் கொண்டவர்களைத் தேடும்படி கட்டளையிட்டான். அவர்களில் சிலர் எப்ரோன் வம்சத்தவர்களாக கீலேயாத் நாட்டின் ஏசேரில் கண்டுபிடித்தனர். 32 எரியாவிற்கு 2,700 உறவினர்கள் இருந்தனர். அவர்கள் வல்லமை வாய்ந்தவர்களாகவும், குடும்பத் தலைவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு தாவீது ராஜா, தேவன் மற்றும் ராஜாவின் எல்லா வேலைகளையும் செய்யுமாறு ஆணையிட்டான். ரூபினியர், காதியர், மனாசேயின் கோத்திரத்தில் பாதிப்பேர்கள் ஆகியோரைக் கவனிக்கும்படியும் வைத்தான்.

படைக் குழுக்கள்

27 ராஜாவின் படையில் பணியாற்றும் இஸ்ரவேல் ஜனங்களின் பட்டியல் இது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு மாதத்தில் பணியாற்றினார்கள். அவர்களில் குடும்பத் தலைவர்களும், தளபதிகளும், படைத்தலைவர்கள், காவல் வீரர்களும் இருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 24,000 பேர் இருந்தனர்.

முதல் மாதத்தில் முதல் குழுவின் பொறுப்பாளனாக யஷொபெயாம் இருந்தான். இவன் சப்தியேலின் குமாரன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். யஷொபெயாம், பேரேசின் சந்ததியாரில் ஒருவன். இவன் முதல் மாதத்திற்குரிய அனைத்து படைத்தலைவர்களுக்கும் தலைவன்.

இரண்டாவது மாதப் படைக் குழுவிற்குத் தோதாயி பொறுப்பாளி. இவன் அகோகியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

மூன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் மூன்றாவது மாதத்தின் பொறுப்பாளி. பெனாயா யோய்தாவின் குமாரன். யோய்தா தலைமை ஆசாரியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். பெனாயா 30 நாயகர்களில் ஒருவனாகவும், அவர்களின் தலைவனுமாகவும் இருந்தான். பெனாயாவின் குழுவிற்கு அவனது குமாரனான அமிசபாத் பொறுப்பாளியாயிருந்தான்.

ஆசகேல் நான்காவது தளபதி ஆவான். இவன் நான்காவது மாதத்திற்கு பொறுப்பாளி. இவன் யோவாபின் சகோதரன். பின்பு ஆசகேலின் குமாரனான செபதியா இவனது பதவியை வகித்தான். ஆசகேலின் குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

சம்கூத் ஐந்தாவது தளபதி ஆவான். இவன் ஐந்தாவது மாதத்திற்குரியவன். இவன் இஸ்ராகியின் வம்சத்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

ஆறாவது தளபதி ஈரா ஆவான். இவன் ஆறாவது மாதத்திற்குரியவன். இவன் இக்கேசின் குமாரன். இக்கேசுதெக்கோவியா நாட்டினன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

10 ஏழாவது தளபதி ஏலேஸ் ஆவான். இவன் ஏழாவது மாதத்திற்குரியவன். இவன் எப்பிராயீம் சந்ததியிலிருந்து வந்தவன். பெலேனிய நாட்டவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

11 எட்டாவது தளபதி சிபெக்காயி ஆவான். இவன் எட்டாவது மாதத்திற்குரியவன். இவன் ஊஷாத்தியன். இவன் சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

12 ஒன்பதாவது தளபதி அபியேசர் ஆவான். இவன் ஒன்பதாவது மாதத்திற்குரியவன். இவன் ஆனதோத் நகரத்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

13 பத்தாவது தளபதி மக்ராயி ஆவான். இவன் பத்தாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன். சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

14 பதினொன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் பதினொன்றாவது மாதத்திற்குரியவன். இவன் பிரத்தோனியன், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

15 பன்னிரெண்டாவது தளபதி எல்தாயி. இவன் பன்னிரெண்டாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன், ஒத்னியேல் குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

கோத்திரங்களின் தலைவர்கள்

16 இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் பெயர் பின்வருமாறு:

ரூபனியருக்கு சிக்ரியின் குமாரனான எலியேசர் தலைவன்.

சிமியோனியருக்கு மாக்காவின் குமாரனான செப்பத்தியா தலைவன்.

17 லேவியருக்கு கேமுவேலின் குமாரனான அஷாபியா தலைவன்.

ஆரோனியருக்குச் சாதோக் தலைவன்.

18 யூதாவுக்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனான எலிகூ தலைவன்.

இசக்காருக்கு மிகாவேலின் குமாரனான ஒம்ரி தலைவன்.

19 செபுலோனக்கு ஒபதியாவின் குமாரனான இஸ்மாயா தலைவன்.

நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரனான எரிமோத் தலைவன்.

20 எப்பிராயீமியருக்கு அசசியாவின் குமாரனான ஓசெயா தலைவன்.

மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குப் பெதாயாவின் குமாரனான யோவேல் தலைவன்.

21 கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரனான இத்தோ தலைவன்.

பென்யமீனுக்கு அப்னேரின் குமாரனான யாசியேல் தலைவன்.

22 எரோகாமின் குமாரனான அசாரியேல் தாணின் தலைவன்.

இவர்கள் இஸ்ரவேலரின் தலைவர்கள்.

தாவீது இஸ்ரவேலர்களை எண்ணிக் கணக்கிட்டது

23 தாவீது, இஸ்ரவேலர்களில் ஆண்களைக் கணக்கிட திட்டமிட்டான். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஏனென்றால் தேவன், இஸ்ரவேலர்களை வானத்து நட்சத்திரங்களைப் போன்று பெருக்குவதாக வாக்களித்திருந்தார். எனவே தாவீது இஸ்ரவேலர்களில் இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட்டான். 24 செருயாவின் குமாரனான யோவாப் இஸ்ரவேலர்களை எண்ணத் தொடங்கினான். ஆனால் அவன் அதைச் செய்து முடிக்கவில்லை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் கோபங்கொண்டார். இதனால்தான், தாவீது ராஜாவின் வரலாறு, என்ற புத்தகத்தில் ஜனங்கள் தொகை குறிக்கப்படவில்லை.

ராஜாவின் நிர்வாகிகள்

25 ராஜாவின் சொத்துக்களை நிர்வகித்தவர்களின் பட்டியல் இது:

ராஜாவின் பொக்கிஷங்களுக்கு ஆதியேலின் குமாரனான அஸ்மாவேத் அதிகாரியானான்.

சிறிய பட்டணங்கள், கிராமங்கள், கோபுரங்கள் போன்றவற்றின் பொக்கிஷங்களுக்கு உசியாவின் குமாரன் யோனத்தான் அதிகாரியானான்.

26 நிலத்தைப் பயிரிடும் வயல்வெளிகளில் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் குமாரன் எஸ்ரி அதிகாரியானான்.

27 திராட்சைத் தோட்டங்களுக்கு ராமாத்தியனான சீமேயும், திராட்சைரசம் வைக்கும் இடங்களுக்கு சிப்மியனாகிய சப்தியும் அதிகாரிகளானார்கள்.

28 மேற்கு மலை நாடுகளிலுள்ள ஒலிவ மரங்களுக்கும், ஆலமரங்களுக்கும் கெதேரியனான பால் கானான் அதிகாரியானான்.

எண்ணெய் கிடங்குகளுக்கு யோவாசு அதிகாரியானான்.

29 சாரோனில் மேய்கிற மாடுகளுக்கு சரோனியனான சித்ராய் அதிகாரியானான்.

பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளுக்கு அத்லாயின் குமாரன் சாப்பாத் அதிகாரியானான்.

30 ஒட்டகங்களுக்கு இஸ்மவேலியனான ஓபில் அதிகாரியானான்.

கழுதைகளுக்கு மெரோனோத்தியனாகிய எகெதியா அதிகாரியானான்.

31 ஆடுகளுக்கு ஆசாரியனான யாசிசு அதிகாரியானான்.

இவர்கள் அனைவரும் தாவீதின் உடமைகளுக்கு அதிகாரிகளாய் இருந்தனர்.

32 யோனத்தான் ஞானமிக்க ஆலோசனைக்காரனகவும், எழுதும் பயிற்சிப்பெற்றவனாகவும் இருந்தான். இவன் தாவீதின் சிறிய தகப்பன். அக்மோனியின் குமாரனான யெகியேல் ராஜாவின் குமாரர்களைப் பொறுப்பேற்றுக்கொண்டான். 33 அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான். ஊஷாயி ராஜாவின் நண்பன். இவன் அர்கியன். 34 யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலின் பதவியைப் பெற்று ராஜாவுக்கு ஆலோசனை கூறினார்கள். யோய்தா பெனாயாவின் குமாரன். யோவாப் ராஜாவின் படைத்தலைவனாக இருந்தான்.

ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள்

28 இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களையெல்லாம் தாவீது கூட்டினான். அவர்களை எருசலேமிற்கு வரும்படி கட்டளையிட்டான். தாவீது கோத்திரங்களின் தலைவர்களையும், ராஜாவின் படையில் பணியாற்றும் தளபதிகளையும், பிரதானிகளையும் கூட்டினான். ராஜாவுக்கும் அவனது குமாரர்களுக்கும் உரிய சொத்துக்களையும் மிருகங்களையும் நிர்வகிக்கும் அதிகாரிகளையும் கூட்டினான், அதோடு முக்கியமான அதிகாரிகளையும், வலிமைமிக்க வீரர்களையும், தைரியமிக்க வீரத்தலைவர்களையும் கூட்டினான்.

தாவீது எழுந்து நின்று அவர்களிடம்,

“நான் சொல்வதைக் கவனியுங்கள், எனது ஜனங்களே, சகோதரர்களே, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்க ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்று மனதில் நினைத்துள்ளேன். தேவனுடைய பாதப்படியை வைப்பதற்காக ஒரு இடத்தைக் கட்ட விரும்புகிறேன். தேவனுக்காக ஆலயம் கட்ட திட்டமிட்டுள்ளேன். ஆனால் தேவன் என்னிடம், ‘வேண்டாம் தாவீது, எனது பேரால் நீ ஆலயம் கட்டவேண்டாம். ஏனென்றால் நீ ஒரு போர்வீரன், நீ பலரைக் கொன்றிருக்கிறாய்’ என்றார்.

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தை, இஸ்ரவேலின் பன்னிரண்டு இனங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தார். யூதாவின் கோத்திரத்தில் கர்த்தர் என் தந்தையின் வம்சத்தைத் தேர்ந்தெடுத்தார். அக்குடும்பத்திலும் என்னை தேவன் இஸ்ரவேலின் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார்! தேவன் என்னை என்றென்றைக்கும் இஸ்ரவேலின் ராஜாவாக்க விரும்பினார்! கர்த்தர் எனக்கு பல குமாரர்களைத் தந்துள்ளார். அவர்களினுள்ளும், இஸ்ரவேலின் புதிய ராஜாவாக சாலொமோனைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் உண்மையில், கர்த்தருடைய அரசாங்கம் இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் உள்ளது. கர்த்தர் என்னிடம், ‘தாவீது, உன் குமாரனான சாலொமோன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். அதைச் சுற்றிய இடங்களையும் கட்டுவான். ஏனென்றால் நான் அவனை எனது குமாரனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனது தந்தையாக இருப்பேன். சாலொமோன் என் சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிறான். அவன் தொடர்ந்து இவ்வாறு எனது சட்டங்களுக்கு அடி பணிந்து வந்தால், அவனது அரசை என்றென்றைக்கும் பலமுள்ளதாக ஆக்குவேன்!’ என்றார்.”

“இப்போது இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாகவும், தேவனுக்கு முன்பாகவும், நான் கூறுகிறேன். தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் கவனமாக இருங்கள்! அப்போது தான் இந்த நல்ல நிலம் உங்களுடையதாக இருக்கும். என்றென்றும் இதனை உங்கள் சந்ததிகளுக்கும் தர இயலும்.

“என் குமாரன் சாலொமோனாகிய நீ உன் தந்தையின் தேவனைப் பற்றி அறிவாய், சுத்தமான இருதயத்தோடு தேவனுக்கு சேவை செய். தேவனுக்கு சேவை செய்வதில் மனதில் மகிழ்ச்சிகொள். ஏனென்றால், கர்த்தருக்கு ஒவ்வொருவரின் மனதினுள்ளும் என்ன இருக்கிறது என்பது தெரியும். நீ நினைக்கிற அனைத்தையும் கர்த்தர் புரிந்துகொள்வார். நீ உதவிக்கு கர்த்தரிடம் போனால், அவர் பதில் தருவார். ஆனால் நீ கர்த்தரிடமிருந்து விலகினால் அவர் என்றென்றைக்கும் விட்டுவிடுவார். 10 சாலொமோன், கர்த்தர் தன் ஆலயத்தை கட்ட உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள். உறுதியாக இருந்து இதனைச் செய்துமுடி” என்றான்.

11 பிறகு அவன் தன் குமாரன் சாலொமோனுக்கு ஆலயத்தை கட்டுவதற்கான திட்டங்களைப்பற்றிக் கூறினான். நுழைவு மண்டபம், கட்டிடங்கள், அறைகள், கருவூல அறைகள், அதன் மேல் வீடுகள், அதின் உள்ளறைகள், கிருபாசனம் போன்றவற்றின் மாதிரிகளைக் கொடுத்தான். 12 தாவீது ஆலயத்தின் அனைத்து பாகங்களுக்கும் திட்டம் வைத்திருந்தான். அவன் அவற்றை சாலொமோனிடம் கொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் திட்டங்களையும் கொடுத்தான். அவன் கருவூல அறைகளுக்கும் பரிசுத்தமானப் பொருட்கள் வைக்கும் அறைகளுக்கும் உரிய திட்டங்களையும் கொடுத்தான். 13 ஆசாரியர் குழுக்களைப் பற்றியும் லேவியர்களைப் பற்றியும் சாலொமோனுக்கு தாவீது கூறினான். கர்த்தருடைய ஆலயத்தில் செய்ய வேண்டிய சேவைகளைப் பற்றியும் சேவைகளுக்குரிய பொருட்களைப் பற்றியும் கூறினான். 14 ஆலயத்தில் பயன்படுத்தவேண்டிய தங்கம், வெள்ளி பற்றிய அளவினையும் கூறினான். 15 தங்க விளக்குகள் மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. வெள்ளி விளக்குகள், மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. இவ்விளக்குகளுக்கும் விளக்குத் தண்டுகளுக்கும் எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்பதையும் சொன்னான். தேவைப்படுகிற இடங்களில் வெவ்வேறு விளக்குத் தண்டுகள் இருந்தன. 16 பரிசுத்த அப்பம் வைப்பதற்குரிய மேஜை செய்ய தேவையான தங்கம் பற்றியும் கூறினான். வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியின் அளவைப் பற்றியும் தாவீது கூறினான். 17 முள் குறடுகளுக்கும் தூவப் பயன்படும் கலங்களுக்கும், தட்டுகளுக்கும் வேண்டிய தங்கத்தைப் பற்றியும் கூறினான். பொன் கிண்ணங்களுக்குத் தேவையான பொன்னின் அளவையும், வெள்ளிக் கிண்ணங்களுக்கு தேவையான வெள்ளியின் அளவையும் தாவீது கூறினான். 18 நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடத்திற்கு வேண்டிய பரிசுத்த பொன்னின் அளவைப் பற்றியும் கூறினான். தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்தான். இவை தங்கத்தால் ஆனவை.

19 தாவீது, “கர்த்தருடைய வழிகாட்டுதலால் இத்திட்டங்களை நான் எழுதினேன். அவரது உதவியால்தான் அனைத்தும் திட்டமிடப்பட்டது” என்றான்.

20 தாவீது மேலும் தன் குமாரன் சாலொமோனிடம், “உறுதியாக இரு. தைரியமாக இந்த வேலையை முடித்துவிடு. பயப்படாதே. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தர் உன்னோடும் இருப்பார். அனைத்து வேலைகளும் முடியும்வரை அவர் உனக்கு உதவுவார். அவர் உன்னை விட்டுப் போகமாட்டார். கர்த்தருடைய ஆலயத்தை நீ கட்டி முடிப்பாய். 21 ஆசாரியர்களின் குழுவும், லேவியர்களும் தேவாலயத்தின் எல்லா வேலைகளுக்கும் தயாராக உள்ளனர். திறமையுள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆலயத்தின் வேலைகளுக்கு உதவுவார்கள். உனது அனைத்து ஆணைகளுக்கும், அதிகாரிகளும் ஜனங்களும் கீழ்ப்படிவார்கள்” என்றான்.

ஆலயம் கட்டுவதற்கான அன்பளிப்புகள்

29 அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமும் தாவீது,

“என் குமாரன் சாலொமோனை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். அவன் இளைஞன். இந்த வேலையைச் செய்து முடிக்கும் தேவைகளைப் பற்றிய அறிவு இல்லாதவன். ஆனால் இந்த வேலையோ மிகவும் முக்கியமானது. இது ஜனங்களுக்கான வீடு அன்று. இது தேவனாகிய கர்த்தருக்கான வீடு. எனது தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான திட்டங்களை என்னால் முடிந்தவரை செய்துள்ளேன். நான் தங்கப் பொருட்கள் செய்வதற்கான தங்கத்தைக் கொடுத்துள்ளேன். வெள்ளிப் பொருட்களைச் செய்வதற்கான வெள்ளியையும் நான் கொடுத்துள்ளேன். வெண்கலப் பொருட்களைச் செய்வதற்கான வெண்கலத்தையும் நான் கொடுத்துள்ளேன். இரும்பு பொருட்களைச் செய்வதற்கான இரும்பையும் நான் கொடுத்துள்ளேன். மரப் பொருட்கள் செய்வதற்கான மரத்தையும் நான் கொடுத்துள்ளேன். பதிப்பதற்குத் தகுந்த ஒளிமிக்க கற்களையும், பலவண்ண கற்களையும், வெண்கற்பாளங்களையும், விலையுயர்ந்த சகல வித இரத்தினங்களையும், கோமேதகம் போன்ற கற்களையும் நான் கொடுத்துள்ளேன். இது போல் பலவிதமான பொருட்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்காக நான் கொடுத்திருக்கிறேன். எனக்குச் சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். இதனை நான் எதற்காகச் செய்தேன் என்றால் என் தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அதனால் அனைத்து பொருட்களையும் பரிசுத்த ஆலயத்திற்கு கொடுத்துவிட்டேன். 110 டன் சுத்தமான பொன்னை நான் ஓபிரிலிருந்து கொடுத்தேன். 260 டன் சுத்தமான வெள்ளியையும் நான் கொடுத்திருக்கிறேன். இவ்வெள்ளி ஆலயச் சுவர்களை மூடிட பயன்படும். தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன பொருட்களுக்குத் தேவையான தங்கத்தையும், வெள்ளியையும் கொடுத்திருக்கிறேன். இந்த பொன்னினாலும் வெள்ளியாலும் திறமையுடையவர்கள் ஆலயத்திற்குத் தேவையான பல்வேறு வகை பொருட்களைச் செய்யலாம். இப்போது இஸ்ரவேலர்களில் எத்தனை பேர் ஆலயப் பணிக்காக, உங்களைக் கர்த்தருக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

குடும்பத் தலைவர்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களும், ஆயிரம் பேருக்கான அதிபதிகளும், நூறுபேருக்கான அதிபதிகளும், ராஜாவின் மந்திரிகளான தலைவர்களும் ஒப்புக் கொண்டு தங்களது மதிப்பு வாய்ந்த பொருட்களைக் கொடுக்க முன்வந்தனர். அவர்கள், தேவாலயத்திற்குக் கொடுத்த பொருட்களின் பட்டியல் இது: 190 டன் தங்கம், 375 டன் வெள்ளி, 675 டன் வெண்கலம், 3,750 டன் இரும்பு, ஜனங்கள் விலையுயர்ந்த கற்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொடுத்தனர். யெகியேல் இக்கற்களைக் காக்கும் பொறுப்பாளி ஆனான். இவன் கெர்சோன் குடும்பத்தவன். தலைவர்கள் மகிழ்ச்சியோடு இவ்வாறு பொருட்களைக் கொடுத்ததால் ஜனங்களும் மகிழ்ச்சியடைந்தனர். தலைவர்கள் நல்ல மனதோடு கொடுத்தனர். தாவீது ராஜாவும் மகிழ்ந்தான்.

தாவீதின் அழகான ஜெபம்

10 பிறகு தாவீது அனைத்து ஜனங்களின் முன்பாக கர்த்தரை துதித்தான். தாவீது:

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எங்கள் தந்தையே,
    எல்லா காலங்களிலும் உமக்கு துதி உண்டாவதாக!
11 மாட்சிமை, வல்லமை, மகிமை, வெற்றி, மகத்துவம் அனைத்தும் உமக்குரியவை.
    ஏனென்றால் மண்ணிலும், விண்ணிலும் உள்ள அனைத்தும் உமக்குரியவை.
கர்த்தாவே இராஜ்யம் உமக்குரியது.
    நீரே தலைவர், எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர் நீரே.
12 செல்வமும், மகத்துவமும் உம்மிடம் இருந்து வரும்.
    நீர் எல்லாவற்றையும் ஆளுகிறீர்.
உமது கையில் வல்லமையும் அதிகாரமும் உள்ளது!
    எவரையும் வல்லமையும், அதிகாரமும் உள்ளவனாக்கும் வல்லமையும் உமது கையில் உள்ளது!
13 இப்போது எங்கள் தேவனே, உமக்கு நன்றி.
    நாங்கள் உமது பெருமைக்குரிய நாமத்தைத் துதிப்போம்!
14 இந்தப் பொருட்கள் அனைத்தும் என்னிடமும், என் ஜனங்களிடமும் இருந்து வந்ததல்ல!
    அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன.
    நாங்கள் அவற்றை உமக்குத் திருப்பித் தருகிறோம்.
15 நாங்கள் எங்கள் முற்பிதாக்களைப் போன்று
    உலகமெங்கும் பயணம் செய்துகொண்டு பரதேசிகளாக இருக்கிறோம்.
இவ்வுலகில் எங்கள் வாழ்வு கடந்து செல்லும் நிழல் போன்றுள்ளது.
    இதனை நிறுத்த முடியவில்லை.
16 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் இவ்வளவு பொருட்களையும் ஆலயத்திற்காக சேகரித்துள்ளோம்.
    உமது பெயரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்டுகிறோம்.
ஆனால் அனைத்தும் உம்மிடம் இருந்து வந்தன.
    எல்லாம் உமக்குரியன.
17 எனது தேவனே, நீர் ஜனங்களை சோதிப்பதை நான் அறிவேன்.
    ஜனங்கள் நன்மை செய்தால் நீர் மகிழ்ச்சி அடைவீர்.
நான் மகிழ்ச்சியோடு சுத்தமான, நேர்மையான மனதோடு இவற்றைத் தருவேன்.
    நான் உமது ஜனங்கள் கூட்டியுள்ளதை பார்த்தேன். இப்பொருட்களை உமக்குக் கொடுப்பதில், அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
18 கர்த்தாவே, எங்கள் முற்பிதாக்களான, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் ஆகியோரின் தேவன்,
    சரியானவற்றைத் திட்டமிடுவதில் உம் ஜனங்களுக்கு தயவுசெய்து உதவும்!
    உம்மிடம் உண்மையாகவும், தாழ்மையாகவும் இருக்க உதவும்.
19 என் குமாரன் சாலொமோன் உமக்கு உண்மையாக இருக்கவும்,
    உமது ஆணைகளுக்கும், சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கூட கீழ்ப்படிய உதவும். இவற்றைச் செய்ய சாலொமோனுக்கு உதவும்.
    நான் திட்டமிட்டபடி இத்தலைநகரைக் கட்ட அவனுக்கு உதவும்” என்றான்.

20 பிறகு தாவீது அனைத்து குழு ஜனங்களிடமும், இப்போது உங்கள், “தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்” என்றான். எனவே அனைத்து ஜனங்களும் துதித்தனர். தரையில் குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் வணங்கினார்கள்.

சாலொமோன் ராஜாவாகிறான்

21 மறுநாள் ஜனங்கள் கர்த்தருக்கு பலிகள் இட்டனர். தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் 1,000 காளைகள், 1,000 ஆட்டுக் கடாக்கள், 1,000 ஆட்டுக் குட்டிகள், போன்றவற்றையும் பானங்களின் காணிக்கைகளையும் செலுத்தினர். அவர்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் பலவற்றையும் பலியிட்டனர். 22 அன்று ஜனங்கள் மகிழ்ச்சியோடு கர்த்தருடன் உண்பதும் குடிப்பதுவுமாய் இருந்தனர்.

அவர்கள் தாவீதின் குமாரனான சாலொமோனை இரண்டாம் முறையாக ராஜாவாக்கினார்கள். அவர்கள் சாலொமோனை ராஜாவாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும், அபிஷேகம் செய்தனர். கர்த்தர் இருக்கிற இடத்திலேயே அவர்கள் இதைச் செய்தார்கள்.

23 பிறகு சாலொமோன் கர்த்தருடைய சிங்காசனத்தின் மேல் அமர்ந்தான். அவன் தனது தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். அவன் வெற்றியுள்ளவனாயிருந்தான். இஸ்ரவேலர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். 24 அனைத்து தலைவர்களும், வீரர்களும் தாவீதின் குமாரனான சாலொமோனை ராஜாவாக ஏற்றுக்கொண்டனர். அனைவரும் சாலொமோனுக்குக் கீழ்ப்படிந்தனர். 25 கர்த்தர் சாலொமோனை மிகப் பெரியவனாக்கினார். கர்த்தர் சாலொமோனைப் பெரியவராக்கிவிட்டார் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தெரிந்துக்கொண்டனர். ஒரு ராஜாவுக்குரிய பெருமையைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். வேறு எந்த ராஜாவுக்கும் இஸ்ரவேலில் இவ்வளவு ராஜரீக மகத்துவம் கிடைத்ததில்லை.

தாவீதின் மரணம்

26-27 ஈசாயின் குமாரனான தாவீது 40 ஆண்டுகள் இஸ்ரவேல் முழுவதற்கும் ராஜாவாக இருந்தான். எப்ரோன் நகரில் தாவீது 7 ஆண்டுகளுக்கு ராஜாவாக இருந்தான். பிறகு தாவீது எருசலேம் நகரில் 33 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். 28 தாவீது முதுமையடைந்ததும் மரித்தான். தாவீது ஒரு நீண்ட நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். தாவீது பல செல்வங்களையும் பெருமைகளையும் பெற்றான். அவனுக்குப் பிறகு அவனது குமாரனான சாலொமோன் புதிய ராஜா ஆனான்.

29 தொடக்கமுதல், இறுதிவரை தாவீது செய்தவற்றையெல்லாம் தீர்க்கதரிசியான நாத்தனும், ஞானதிருஷ்டிக்காரனான சாமுவேலும், ஞானதிருஷ்டிக்காரனான காத்தும் தங்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர். 30 தாவீது இஸ்ரவேலின் ராஜாவாகச் செய்தவற்றையெல்லாம் அந்த எழுத்துக்கள் கூறுகின்றன. அவை தாவீதின் வலிமையையும், அவனுக்கு நேர்ந்தவற்றையும் கூறுகின்றன. அவை இஸ்ரவேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரசுகளுக்கும் ஏற்பட்டவற்றையும் கூறும்.