நியாயாதிபதிகள் 3:12-30
Tamil Bible: Easy-to-Read Version
நியாயாதிபதியாகிய ஏகூத்
12 மீண்டும் இஸ்ரவேலர் தீயகாரியங்களைச் செய்வதை கர்த்தர் கவனித்தார். எனவே மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலரைத் தோற்கடிக்கும் ஆற்றலை அளித்தார். 13 அம்மோனியரும், அமலேக்கியரும் எக்லோனுக்கு உதவினார்கள். அவர்கள் அவனோடு சேர்ந்து இஸ்ரவேலரைத் தாக்கி ஈச்சமரங்களின் நகரமாகிய எரிகோவை விட்டு அவர்கள் போகுமாறு செய்தனர். 14 மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலர்கள் 18 ஆண்டுகள் அடிபணிந்து இருந்தார்கள்.
15 பின் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடம் வந்து அழுதார்கள். இஸ்ரவேலரை மீட்பதற்கு கர்த்தர் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஏகூத். அவன் இடது கைப் பழக்கமுடையவனாயிருந்தான். ஏகூத் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கேரா என்பவனின் குமாரன். மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு கப்பம் செலுத்தி வருமாறு இஸ்ரவேலர் ஏகூதை அனுப்பினார்கள். 16 ஏகூத் தனக்காக ஒரு வாளைச் செய்து கொண்டான். அது இருபுறமும் கருக்குள்ளதாகவும் 12 அங்குல நீளமுடையதாகவும் இருந்தது. ஏகூத் தன் வலது தொடையில் வாளைக் கட்டிக்கொண்டு தனது ஆடைகளினுள் அதை மறைத்துக்கொண்டான்.
17 இவ்வாறு ஏகூத் மோவாபின் ராஜா எக்லோனுக்குக் கப்பம் கொண்டு வந்தான். எக்லோன் பருத்த உடல் உடையவன். 18 ஏகூத் எக்லோனுக்கு கப்பம் கொடுத்தபின், கப்பம் கொண்டுவந்த மனிதர்களை ஊருக்குத் திரும்பிச் செல்லுமாறு கூறினான். 19 கில்காலில் தெய்வங்களின் சிலைகளிலிருந்த இடத்திலிருந்து எக்லோன் திரும்பியபொழுது, ஏகூத் எக்லோனிடம், “ராஜாவே, நான் உமக்காக ஒரு இரகசியச் செய்தி வைத்திருக்கிறேன்” என்றான்.
ராஜா, “அமைதியாக இருங்கள்!” என்று சொல்லி அறையிலிருந்த பணியாட்களை வெளியே அனுப்பினான். 20 ராஜாவாகிய எக்லோனுடன் ஏகூத் சென்றான். கோடைக் கால அரண்மனையிலுள்ள மேல் அறையில் எக்லோன் இப்போது தனித்தவனாய் உட்கார்ந்திருந்தான்.
ஏகூத், “தேவனிடமிருந்து ஒரு செய்தியை உமக்குக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். ராஜா சிங்காசனத்திலிருந்து எழுந்து நின்றான். அவன் ஏகூத்திற்கு மிக அருகில் இருந்தான்.
21 ராஜா சிங்காசனத்திலிருந்து எழுந்த போது, ஏகூத் தனது இடது கையை நீட்டி வலது தொடையில் கட்டப்பட்டிருந்த வாளை எடுத்து அவ்வாளை ராஜாவின் வயிற்றில் செருகினான்.
22 வாளின் பிடிகூட வெளியே தெரியாதபடி வாள் எக்லோனின் வயிற்றினுள் நுழைந்தது. ராஜாவின் பருத்த உடல் வாளை மறைத்தது. எனவே ஏகூத் வாளை எக்லோனின் உடம்பிலேயே விட்டுவிட்டான்.
23 ஏகூத் அறையிலிருந்து வெளியே வந்து கதவுகளை மூடிப் பூட்டிவிட்டான். 24 ஏகூத் புறப்பட்ட சற்று நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து, அறையின் கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “ராஜா கழிவறைக்குப் போயிருக்க வேண்டும்” என்று எண்ணினார்கள். 25 எனவே அவர்கள் அதிக நேரம் காத்திருந்தனர். இறுதியில் அவர்கள் கவலை அடைந்து கதவுகளைத் திறந்தனர். பணியாட்கள் உள்ளே நுழைந்தபோது ராஜா மரணமடைந்து, தரையில் கிடப்பதைப் பார்த்தனர்.
26 பணியாட்கள், ராஜாவுக்காகக் காத்திருந்தபோது, ஏகூத்திற்குத் தப்பிச்செல்ல போதுமான நேரம் இருந்தது. ஏகூத் விக்கிரகங்கள் இருந்த வழியே கடந்துசென்று சேயிரா என்னும் இடத்திற்குச் சென்றான். 27 சேயிராவை அடைந்ததும், அந்த எப்பிராயீம் மலைநாடுகளில் எக்காளம் ஊதினான். இஸ்ரவேலர் அதனைக் கேட்டு, ஏகூத்தின் பின்செல்ல மலைகளிலிருந்து இறங்கி வந்தனர். 28 ஏகூத் இஸ்ரவேலரிடம், “என்னைப் பின்பற்றுங்கள்! நமது பகைவராகிய மோவாபியரை வெல்வதற்கு கர்த்தர் எனக்கு உதவினார்” என்றான்.
எனவே இஸ்ரவேலர் ஏகூதைப் பின்பற்றினார்கள். யோர்தான் நதியை எளிதாகக் கடக்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் ஏகூதைப் பின்பற்றி அவற்றைக் கைப்பற்றுவதற்காகக் சென்றனர். ஒருவரும் யோர்தான் நதியைக் கடந்து செல்வதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அனுமதிக்கவில்லை. 29 மோவாபில் வலிமையும் துணிவும் உள்ள மனிதர்களில் சுமார் 10,000 பேரை இஸ்ரவேலர் கொன்றனர். மோவாபியரில் ஒருவனும் தப்பிச் செல்லவில்லை. 30 அன்றையதினம் இஸ்ரவேலர் மோவாபியரை ஆளத் தொடங்கினார்கள். அத்தேசத்தில் 80 ஆண்டுகள் அமைதி நிலவிற்று.
Read full chapter2008 by Bible League International