Add parallel Print Page Options

தேவன் அழைத்தபடியே வாழுங்கள்

17 தேவன் உங்களுக்குத் தந்த வாழ்வின்படியே ஒவ்வொருவனும் வாழ்ந்துகொண்டிருக்கட்டும். தேவன் உங்களை அழைத்தபோது நீங்கள் இருந்தபடியே வாழுங்கள். எல்லா சபைகளிலும் நான் உருவாக்கிய விதி இது தான். 18 அழைக்கப்பட்டபோது ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனாக இருந்தால், பின்னர் அதன் அடையாளங்களை மாற்ற அவன் முயற்சி செய்யக் கூடாது. அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யப்படாதவனாக இருந்தால், பிறகு அவன் விருத்தசேதனம் செய்துகொள்ளக் கூடாது. 19 ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். 20 தேவன் அழைத்தபோது இருந்தபடியே ஒவ்வொருவனும் இருக்கட்டும். 21 தேவன் அழைத்தபோது நீ அடிமையாய் இருந்தால் நீ அதுபற்றிக் கவலைப்படாதே. ஆனால் நீ சுதந்தரமானவனாக இருந்தால், பிறகு எல்லாவகையிலும் வாய்ப்பைப் பயன்படுத்து. 22 கர்த்தர் அழைத்தபோது அடிமையாய் இருந்தவன் கர்த்தருக்குள் சுதந்தர மனிதனாக இருக்கிறான். அவன் கர்த்தருக்குரியவன். அழைக்கப்பட்டபோது சுதந்திர மனிதனாக இருந்தவனோ இப்போது கிறிஸ்துவுக்கு அடிமையாக இருக்கிறான். 23 நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டீர்கள். எனவே மனிதருக்கு அடிமை ஆகாதீர்கள். 24 சகோதரர்களே, சகோதரிகளே! தேவனோடான உங்கள் புது வாழ்க்கையில், உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் அழைக்கப்பட்டபோது இருந்தபடியே வாழ்க்கையைத் தொடரவேண்டும்.

திருமணம் குறித்த கேள்விகள்

25 திருமணம் செய்துகொள்ளாதவர்களைப் பற்றி இப்போது எழுதுகின்றேன். கர்த்தரிடமிருந்து இது பற்றிய கட்டளை எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால், என் கருத்தைச் சொல்கிறேன். கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டுவதால் என்னை நீங்கள் நம்பலாம். 26 இது சச்சரவுகளின் காலம். எனவே நீங்கள் இருக்கிறபடியே வாழ்வது உங்களுக்கு நல்லது என நினைக்கிறேன். 27 உங்களுக்கு மனைவி இருந்தால் அவளை விலக்கி வைக்க முற்படாதீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஒரு மனைவியைத் தேட முயலாதீர்கள். 28 ஆனால் நீங்கள் திருமணம் செய்ய முடிவுசெய்தால், அது பாவமல்ல திருமணமாகாத ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்துகொள்பவர்களுக்கோ இந்த வாழ்க்கையில் ஏராளமான தொல்லைகள். நீங்கள் அத்தொல்லைகளிலிருந்து விடுபட்டவர்களாய் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

29 சகோதர சகோதரிகளே, நான் கருதுவது இதுதான். நமக்கு அதிக காலம் தரப்படவில்லை. இப்போதிருந்தே மனைவியுள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப்போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். 30 துக்கம் உடையவர்கள் துக்கமில்லாதவர்களைப்போல வாழ்தல் வேண்டும். சந்தோஷம் உடையவர்கள் சந்தோஷம் அற்றவர்களைப் போல வாழவேண்டும். பொருள்களை வாங்கும் மனிதர்கள் ஏதுமற்றவர்கள்போல இருக்கவேண்டும். 31 இந்த உலகப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், அந்தப் பொருட்கள் முக்கியமானவை அல்ல என்பது போன்று வாழவேண்டும். இந்த உலகமும் இந்த உலகத்தின் வழிகளும் மறைந்துபோகும். எனவே, நீங்கள் இவ்வாறு வாழ வேண்டும்.

32 நீங்கள் கவலையினின்று விடுபட வேண்டுமென நான் விரும்புகிறேன். திருமணம் ஆகாதவன் கர்த்தரின் வேலையில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறான். 33 ஆனால், திருமணமானவனோ உலகத்துப் பொருள்கள் தொடர்பான வேலைகளில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறான். 34 அவன் இரண்டு காரியங்களை நினைவில் கொள்ள வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதும், கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துவதும் ஆகியவை அவை. திருமணம் ஆகாத பெண்ணோ, ஒரு இளம்பெண்ணோ கர்த்தரின் வேலையில் முனைவாள். கர்த்தருக்கு சரீரத்தையும் ஆன்மாவையும் முழுக்க அர்ப்பணிக்க விரும்புகிறாள். ஆனால், திருமணமான பெண்ணோ உலகக் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுகிறாள். அவள் கணவனை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறாள். 35 உங்களுக்கு உதவிசெய்வதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் நீங்கள் தக்க வழியில் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் நேரத்தைப் பிற பொருள்களுக்காகச் செலவிடாமல் உங்களை முழுக்க தேவனுக்குக் கொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

36 ஒருவனின் குமாரத்தி திருமணமாகும் வயதைக் கடந்துவிட்டபட்சத்தில், அப்பெண்ணின் தந்தை அவளுக்குச் செய்யவேண்டியதைச் செய்யவில்லை என நினைக்கலாம். திருமணம் என்பது முக்கியமானது என அவன் நினைக்கலாம். தனக்கு விருப்பமானதைச் செய்யவேண்டும். திருமணம் செய்துகொள்ள அவளை அனுமதிக்க வேண்டும். அது பாவமல்ல. 37 ஆனால் இன்னொரு மனிதன் மனதில் திடமானவனாக இருக்கக்கூடும். அங்கு திருமணத்துக்குத் தேவையிராது. அவன் விருப்பப்படியே செய்ய அவனுக்கு உரிமையுண்டு. தனது கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் முடித்துவைக்க அவன் விரும்பாவிட்டால் அப்போது அவன் சரியான செயலையே செய்கிறான். 38 தனது கன்னிப் பெண்ணாகிய குமாரத்தியைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய குமாரத்தியைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான்.[a]

39 எவ்வளவு காலம் கணவன் உயிரோடு இருக்கிறானோ அதுவரைக்கும் ஒரு பெண் அவனோடு சேர்ந்து வாழ்தல் வேண்டும். ஆனால் அவள் கணவன் இறந்தால், அப்பெண் தான் விரும்புகிற யாரையேனும் மணந்துகொள்ளும் உரிமை பெறுகின்றாள். ஆனால், கர்த்தருக்குள் அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். 40 பெண் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சந்தோஷமாய் இருக்கிறாள். இது எனது கருத்து. தேவனுடைய ஆவி எனக்குள் இருப்பதாக நான் நம்புகிறேன்.

விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்ட உணவு

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி குறித்து இப்போது எழுதுவேன். “நாம் அறிவுடையவர்கள்” என்பது நம் அனைவருக்கும் தெரியும். “அறிவு” உங்களைப் பெருமை உடையவர்களாக மாற்றும். ஆனால், அன்பு பிறருக்கு உதவி செய்யுமாறு உங்களை மாற்றும். தனக்கு ஏதோ தெரியுமென எண்ணுகிற ஒருவனுக்கு, இருக்க வேண்டிய அளவுக்கு ஞானம் இருப்பதில்லை. ஆனால், தேவனை நேசிக்கிற மனிதனோ தேவனால் அறியப்பட்டவன்.

எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி உண்பதைப் பற்றி நான் கூறுவது இதுவே: விக்கிரகமானது இவ்வுலகத்தில் ஒரு பொருட்டல்ல என்பது நமக்குத் தெரியும். ஒரே ஒரு தேவனே உள்ளார் என்பதையும் நாம் அறிவோம். பரலோகத்திலும் பூலோகத்திலும் தேவர்களாக அழைக்கப்படும் பல பொருள்கள் இருக்கின்றன. எனினும் அவை நமக்கு முக்கியமல்ல. “தேவனென்றும்,” “கர்த்தரென்றும்” மனிதர்கள் கருதுகின்ற பல பொருள்கள் உண்டு. ஆனால் நமக்கோ ஒரே ஒரு தேவன் உள்ளார். அவர் நமது பிதாவே. எல்லாம் அவரிலிருந்தே வந்தன. நாம் அவருக்காக வாழ்கிறோம். ஒரே ஒரு கர்த்தரே உண்டு. அவர் இயேசு கிறிஸ்து ஆவார். எல்லாப் பொருள்களும் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டன. நாம் அவர் மூலமாகவே உயிரைப் பெறுகிறோம்.

ஆனால் எல்லோரும் இதனை அறியார். விக்கிரக வழிபாட்டுக்குப் பழகிப்போன சிலர் இருக்கிறார்கள். எனவே இறைச்சி உண்ணும்போது அது விக்கிரகத்துக்குரியது என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகிறது. இந்த இறைச்சியைச் சாப்பிடுவது சரியா என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அதனைச் சாப்பிடும்போது அவர்கள் குற்றமனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இறைச்சியுண்பது தேவனுக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லாது. இறைச்சியுண்ணாமையும் தேவனுக்குக் குறைவான மகிழ்ச்சியைத் தருபவர்களாக நம்மை ஆக்காது.

ஆனால், உங்கள் சுதந்திரத்தைக் குறித்துக் கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிமையற்ற மக்களை உங்கள் சுதந்திரம் பாவத்தில் விழக் காரணமாக இருக்கும். 10 உங்களுக்குப் புரிந்துகொள்ளும் திறமை இருக்கிறது. எனவே விக்கிரகங்களுக்குரிய கோயிலில் உண்பதை நீங்கள் இயல்பானதாகக் கருதலாம். ஆனால் விசுவாசம் குறைவுள்ள மனிதன் உங்களை அங்கு பார்க்கக் கூடும். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்கு அவன் முற்பட இது வழி வகுக்கும். ஆனால், அது சரியானதல்ல என்றும் அவன் நினைப்பான். 11 உங்கள் அறிவினால் பலவீனமான இந்தச் சகோதரன் அழிக்கப்படுவான். ஆனால் இந்தச் சகோதரனுக்காகவும் இயேசு மரித்தார். 12 கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சகோதர சகோதரிகளுக்கு எதிராக நீங்கள் இவ்வாறு பாவம் செய்தாலும் அவர்கள் தவறென நினைக்கிற காரியங்களைச் செய்யும்படியாகத் தூண்டி அவர்களைத் துன்புறுத்தினாலும் நீங்கள் கிறிஸ்துவுக்கு எதிராக பாவம் செய்கின்றீர்கள். 13 நான் உண்ணும் உணவு எனது சகோதரனைப் பாவம் செய்யத் தூண்டினால் நான் மீண்டும் இறைச்சி சாப்பிடவேமாட்டேன். எனது சகோதரன் மீண்டும் பாவம் செய்யாதபடி இறைச்சி உண்ணுவதை விட்டுவிடுவேன்.

நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள். மற்ற மக்கள் என்னை அப்போஸ்தலனாக ஒருவேளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், நீங்கள் நிச்சயமாக என்னை அப்போஸ்தலனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கர்த்தரில் நான் ஒரு அப்போஸ்தலன் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.

சில மனிதர்கள் என்னை நியாயம் தீர்க்க விரும்புகிறார்கள். நான் இந்தப் பதிலை அவர்களுக்கு அளிக்கிறேன். உண்ணவும், பருகவும் நமக்கு உரிமை இருக்கிறது அல்லவா? நாம் பயணம் செய்யும்போது விசுவாசத்திற்குள்ளான மனைவியை அழைத்துச் செல்ல உரிமை இருக்கிறது அல்லவா? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தரின் சகோதர்களும், கேபாவும் இதைச் செய்கிறார்கள். பர்னபாவும் நானும் மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. படையில் சேவை புரியும் எந்த வீரனும் தன் செலவுக்குத் தன் சொந்தப் பணத்தைக் கொடுப்பதில்லை. திராட்சையை விதைக்கிற யாரும் அதன் பழத்தை உண்ணாமல் இருப்பதில்லை. மந்தையை மேய்க்கிற எவரும் அதன் பாலைப் பருகாமல் இருப்பதில்லை.

இவை மனிதன் நினைப்பவை மாத்திரமல்ல. தேவனின் சட்டமும் அவற்றையே கூறுகின்றன. ஆம், மோசேயின் சட்டத்தில் அது எழுதப்பட்டுள்ளது “உழைக்கும் மிருகத்தை, தானியத்தைப் பிரிக்கப் பயன்படுத்தும்போது அதன் வாயை மூடாதே. அது தானியத்தை உண்ணாதபடி தடை செய்யாதே.”(A) தேவன் இதைக் கூறியபோது, அவர் உழைக்கும் மிருகங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டாரா? இல்லை. 10 இவ்வாக்கியம் நம்மைப் பற்றிக் குறிக்கவில்லையா? ஆம் வேத வாக்கியங்கள் நமக்காக எழுதப்பட்டதால் எல்லா வகையிலும் இது நம்மையே குறிக்கிறது. தம் வேலைக்கு சிறிதளவு தானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உழுகிறவனும், தானியத்தை அறுவடை செய்கிறவனும் அந்தந்த வேலையைச் செய்யவேண்டும். 11 நாங்கள் ஆன்மீக விதையை உங்களில் விதைத்துள்ளோம். ஆகவே இந்த வாழ்க்கையில் உங்களுடைய சில பொருள்களை நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக அறுவடை செய்யக்கூடும். இது அதிகமாக ஆசைப்படுவதல்ல. 12 பிறர் உங்களிடமிருந்து பொருளைப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். எனவே எங்களுக்கும் நிச்சயமாய் இந்த உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்தவில்லை. இல்லை, பிறர் கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்காமலிருப்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் சகித்துக்கொள்கிறோம். 13 தேவாலயத்தில் பணிவிடை செய்பவர்களுக்கு உணவு தேவாலயத்தில் இருந்து கிடைக்கிறது. பலிபீடத்தில் பணி செய்பவருக்குப் பலிபீடத்தில் படைக்கப்பட்டவற்றில் ஒரு பகுதி கிட்டும். 14 நற்செய்தியை அறிவிப்போரின் வாழ்க்கைக்குரிய பொருள் அந்த வேலையிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.

15 ஆனால் இந்த உரிமைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. இவற்றைப் பெற வேண்டுமென்று முயற்சி செய்யவும் இல்லை. இதை உங்களுக்கு எழுதுவதினால் என் நோக்கமும் அதுவல்ல. பெருமைப்படுவதற்குரிய காரணத்தை என்னிடமிருந்து அபகரித்துச் செல்லப்படுவதைவிட நான் இறப்பது நல்லதாகும். 16 நற்செய்தியைப் போதிப்பது நான் பெருமைப்படுவதற்குரிய காரணமல்ல. நற்செய்தியைப் போதிப்பது எனது கடமை. நற்செய்தியைப் போதிப்பது என்பது நான் கண்டிப்பாக செய்யவேண்டியது. அதைச் செய்யாமலிருப்பது எனக்குத் தீமையாகும். 17 நானே என் தேர்வுக்குத் தகுந்தபடி நற்செய்தியைப் போதித்தால் நான் ஒரு வெகுமதிக்குத் தகுதியுடையவனாகிறேன். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. நான் நற்செய்தியைப் போதிக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நான் செய்கிறேன். 18 எனக்கு என்ன பலன் கிடைக்கிறது? நற்செய்தியை எங்கும் பரப்புவதே எனக்கு கிட்டும் வெகுமதி. எனவே நற்செய்தி எனக்கு வழங்குகிற “பலன் பெறுதல்” என்கிற உரிமையை நான் பயன்படுத்தவில்லை.

19 நான் சுதந்திரமானவன். யாருக்கும் உரியவன் அல்ல. ஆனால் எல்லா மனிதருக்கும் என்னை அடிமையாக்குகிறேன். என்னால் இயன்ற அளவுக்கு மக்களைக் காப்பதற்காக இதைச் செய்கிறேன். 20 யூதர்களிடம் நான் யூதனைப் போலானேன். யூதர்களை காப்பதற்காக இதைச் செய்தேன். நான் சட்டத்தின் ஆளுகைக்குக் கட்டுப்படாதவன்தான். ஆனால் சட்டப்படி வாழும் மக்களின் முன்பு சட்டப்படி வாழும் மனிதனாகவே நான் ஆனேன். சட்டத்தால் ஆளப்படுகிற மக்களைக் காப்பாற்றவே நான் இதைச் செய்தேன். 21 சட்டத்தின் கீழ் இல்லாத மக்களிடம் சட்டத்தைப் பின்பற்றாதவனாக நடந்துகொண்டேன். சட்டத்தின்படி நடவாத மக்களை காப்பதற்காக நான் இதைச் செய்தேன். (ஆனால் தேவனின் சட்டத்தை நான் மீறவில்லை. கிறிஸ்துவின் சட்டப்படியே நான் ஆளப்படுகிறேன்) 22 பலவீனமான மனிதரை அவர்கள் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்யும்படி பலவீனமானவனைப்போல நடந்துகொண்டேன். எல்லா மனிதர்களுக்கும் நான் எல்லாரையும்போல நடந்துகொண்டேன். எந்த வகையிலாவது மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென இவ்வாறு செய்தேன். 23 நற்செய்தியின் பொருட்டு இவற்றையெல்லாம் செய்கிறேன். நற்செய்தியின் ஆசீர்வாதத்தில் பங்குபெற விரும்பி இவற்றைச் செய்கிறேன்.

24 ஒரு பந்தயத்தில் எல்லா ஓட்டக்காரர்களும் ஓடுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். எனவே அதைப் போன்று ஓடுங்கள். வெற்றி பெறுவதற்காக ஓடுங்கள். 25 பந்தயங்களில் பங்கு பெறுகிறவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிரீடத்தை வெல்வதற்காக இதைச் செய்வார்கள். கொஞ்ச காலத்தில் அழியக் கூடிய உலக ரீதியான கிரீடம் அது. ஆனால் நாம் பெறும் கிரீடமோ அழியாது நிலைநிற்கும். 26 குறிக்கோளோடு ஓடுகிற மனிதனைப் போன்று நானும் ஓடுகிறேன். காற்றோடு மோதாமல் இலக்கில் தாக்குகிற குத்துச் சண்டை வீரனைப்போல போரிடுகிறேன். 27 எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.

யூதர்களைப் போல இராதீர்

10 சகோதர சகோதரிகளே, மோசேயைப் பின்பற்றிய நமது முன்னோர்களுக்கு நேர்ந்தது என்னவென்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்: அவர்கள் எல்லாரும் மேகத்தின் கீழ் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கடல்வழியே கடந்து சென்றார்கள். அந்த மக்கள் எல்லாரும் மேகத்திலும் கடலிலும் மோசேயோடு உள்ள நல்லுறவில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்கள். ஒரே வகையான ஆன்மீக உணவை அவர்கள் அனைவரும் உட்கொண்டார்கள். ஒரே வகையான ஆன்மீக பானத்தை அவர்கள் பருகினார்கள். அவர்களோடிருந்த ஆன்மீகப் பாறையில் இருந்து அவர்கள் பருகினர். அந்தப் பாறை கிறிஸ்து. ஆனால் அம்மக்கள் பலர் தேவனுக்கு உகந்தவர்களாய் இருக்கவில்லை. வானந்தரத்தில் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

நடந்தேறிய இக்காரியங்கள் நமக்கு உதாரணங்களாக அமையும். அந்த மக்கள் செய்த தீய காரியத்தைச் செய்ய விரும்புவதினின்று இவை நம்மைத் தடுத்து நிறுத்தும். அந்த மக்களில் சிலர் செய்தது போல் விக்கிரகங்களை வணங்காதீர்கள். “மக்கள் உண்பதற்காகவும் பருகுவதற்காகவும் அமர்ந்தனர். மக்கள் நடனமாடுவதற்காக எழுந்து நின்றனர்”(B) என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த மக்களுள் சிலர் செய்ததைப்போல் பாலுறவுப் பாவங்களை நாம் செய்யக் கூடாது. ஒரே நாளில் தம் பாவத்தினால், 23,000 பேர் இறந்தனர். அம்மக்களில் சிலர் செய்தது போல் நாம் கர்த்தரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது. கர்த்தரைச் சோதித்ததால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்கள். 10 அம்மக்களுள் சிலர் செய்ததுபோல் முறுமுறுக்காதீர்கள். அழிவுக்கான தேவ தூதனால் அம்மக்கள் கொல்லப்பட்டார்கள்.

11 அம்மக்களுக்கு நடந்தவை நமக்கு உதாரணங்கள் ஆகும். நமக்கு எச்சரிக்கையாக அவை எழுதப்பட்டுள்ளன. அப்பழைய வரலாறுகள் முடிவடையும் காலத்தில் நாம் வாழ்கிறோம். 12 அதனால், உறுதியாக நிற்பதாக எண்ணும் ஒருவன் விழுந்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும். 13 எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை தேவன் உங்களுக்குத் தரமாட்டார். உங்களுக்குச் சோதனை வரும்போது அச்சோதனையில் இருந்து விடுபடவும் தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்போது நீங்கள் சோதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடும்.

14 என் அன்புக்குரிய நண்பர்களே, அதனால் நீங்கள் விக்கிரக வழிபாட்டிலிருந்து விலகுங்கள். 15 நீங்கள் அறிவுள்ள மனிதர்கள் என்பதால் உங்களோடு பேசுகிறேன். நான் சொல்வதை நீங்களே சரியா, தவறா எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். 16 நாம் நன்றியறிதலுடன் பங்குபெறும் ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தைப் பங்கிடுவதாகும். நாம் பகிர்ந்துண்ணும் அப்பமோ கிறிஸ்துவின் சரீரத்தைப் பகிர்தலாகும். 17 ஒரு அப்பம் உள்ளது. நாமோ பலர். ஆனால் அந்த ஒரே அப்பத்தை நாம் பகிர்ந்துகொள்கிறோம். எனவே நாம் உண்மையாகவே ஒரே சரீரமாக இருக்கிறோம்.

18 இஸ்ரவேல் மக்களை நினைத்துப்பாருங்கள். படைக்கப்பட்டவற்றைப் புசிப்பவர்கள் பலிபீடத்துடன் நல்லுறவுகொண்டிருக்கிறார்கள் அல்லவா. 19 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு முக்கியத்துவம் உடையது என்று சொல்ல நான் முன் வரவில்லை. விக்கிரகம் ஒரு குறிப்பிடத்தக்க பொருள் எனவும் நான் கூறவில்லை. 20 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பொருள்கள் பிசாசுகளுக்கே கொடுக்கப்படுகின்றன, தேவனுக்கல்ல. நீங்கள் பிசாசுகளோடு எந்தப் பொருளையும் பகிர்ந்துகொள்வதை நான் விரும்பமாட்டேன். 21 கர்த்தருடைய பாத்திரத்திலிருந்தும் பிசாசுகளின் பாத்திரத்திலும் நீங்கள் பருக முடியாது. கர்த்தரின் மேசையிலும் பிசாசுகளின் மேசையிலும் உங்களால் உண்ண முடியாது. 22 கர்த்தரை எரிச்சல் கொள்ளச் செய்யலாமா? நாம் அவரைவிட பலசாலிகளா? இல்லை.

உங்கள் சுதந்திரம் எதற்கு?

23 “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆம், ஆனால் எல்லாப் பொருள்களும் நல்லதல்ல. “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டவை” எனினும், சில பொருள்கள் பக்தியில் வளருவதற்குப் பிறருக்கு உதவுவதில்லை. 24 தனக்கு மட்டுமே உதவக்கூடிய காரியங்களை ஒருவன் செய்ய முயலக்கூடாது. பிறருக்குப் பயன்படக் கூடிய செயல்களை அவன் செய்ய முயற்சி செய்தல் வேண்டும்.

25 சந்தையில் விற்கப்படும் எந்த இறைச்சியையும் சாப்பிடுங்கள். சரி அல்லது தவறு என்பது பற்றி (அதைச் சாப்பிடுவது தொடர்பாக) எந்தக் கேள்வியையும் கேட்காதீர்கள். 26 “இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தருக்கு உரியவை.”(C) ஆதலால் நீங்கள் அதைச் சாப்பிடலாம்.

27 அவிசுவாசியான ஒரு மனிதன் அவனோடு உண்ணுவதற்கு உங்களை அழைக்கக் கூடும். நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன் வைக்கப்படும் உணவு எதுவாயினும் அதனை உண்ணுங்கள். சாப்பிடத் தகுந்ததா, இல்லையா என அறியும் பொருட்டு வினா எழுப்பாதீர்கள். 28 ஆனால் ஒருவன் உங்களுக்கு “அது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று கூறினால், பின்னர் அதை உண்ணுவது குற்றமாகும். ஏனெனில் அது குற்றம் என மக்கள் நினைக்கிறார்கள். அதைக் கூறிய மனிதனின் மனச்சாட்சியை நீங்கள் கெடுக்கக் கூடாது. 29 நீங்கள் அது குற்றமென நினைப்பதாக நான் கருதவில்லை. ஆனால் மற்ற மனிதன் அதைக் குற்றமென எண்ணுகிறான். அதனால் நான் அந்த இறைச்சியை உண்ணமாட்டேன். மற்றொரு மனிதன் என்ன நினைப்பானோ என்கிற எண்ணத்தால் எனது சுதந்திரம் தீர்மானிக்கப்பட நான் அனுமதிக்கமாட்டேன். 30 நான் உணவை நன்றியுணர்வுடன் உண்ணுகிறேன். எனவே தேவனுக்கு நான் நன்றி தெரிவிக்கிற ஏதோ சிலவற்றில் என்னைப் பற்றி பிறர் விமர்சிப்பதை நான் விரும்புவதில்லை.

31 எனவே உண்டாலும், பருகினாலும், வேறு எதைச் செய்தாலும் ஒவ்வொன்றையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்யுங்கள். 32 யூதர்கள், கிரேக்கர்கள் அல்லது தேவனுடைய சபையார் தவறிழைக்கும்படிச் செய்யவைக்கிற எந்தச் செயலையும் செய்யாதீர்கள். 33 நானும் அதனையே செய்கிறேன். எல்லாரையும் எல்லா வகைகளிலும் திருப்திப்படுத்த முனைகிறேன். எனக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றை நான் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் அநேக மக்களுக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றைச் செய்ய முயற்சிக்கிறேன். பிறர் இரட்சிக்கப்படுவதற்காக பலருக்குப் பயன்படுவதையே செய்ய முயற்சி செய்கிறேன்.

11 நான் கிறிஸ்துவை உதாரணமாகப் பின்பற்றுவதுபோல, என்னை உதாரணமாகப் பின்பற்றுங்கள்.

தலைமைக்குக் கீழ்ப்படிதல்

நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூருவதால் உங்களைப் புகழ்கிறேன். நான் உங்களுக்கு வழங்கியிருக்கிற போதனைகளை நீங்கள் பின்பற்றிக்கொண்டுள்ளீர்கள். ஆனால் நீங்கள், இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனின் தலைவரும் கிறிஸ்துவே. பெண்ணின் தலைவன் ஆணாவான். கிறிஸ்துவின் தலைவர் தேவனே.

தீர்க்கதரிசனம் சொல்கிறவனோ அல்லது பிரார்த்திக்கிறவனோ தலையை மூடியிருந்தால் அது அவன் தலைக்கு இழுக்கைத் தரும். தீர்க்கதரிசனம் சொல்கிறவளும் பிரார்த்தனை செய்கிறவளும் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தலையை மூடியிராவிட்டால் அது அவள் தலைக்கு இழுக்கைத் தரும். தலைமயிரை மழித்துக்கொண்ட பெண்ணுக்கு அவள் ஒப்பாவாள். ஒரு பெண் தனது தலையை மூடியிராவிட்டால் அவள் தலை மயிரை மழிப்பதற்கு ஒப்பாகும். தலை மயிரைக் குறைப்பதோ, மழிப்பதோ பெண்ணுக்கு இழிவைத் தரும். எனவே அவள் தனது தலையை மூடியிருக்க வேண்டும்.

ஆனால், ஓர் ஆண் தனது தலையை மூடக்கூடாது. ஏனெனில் அவன் தேவனைப் போல அமைக்கப்பட்டவன். அவன் தேவனுக்கு மகிமையாய் அமைபவன். ஆனால் பெண்ணோ ஆணுக்கு மகிமையாய் அமைபவள். பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை. ஆணிலிருந்து பெண் தோன்றினாள். ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. பெண்ணோ ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். 10 அதனால்தான் பெண் ஒருவனுக்கு அடங்கியவள் என்பதைக் காட்டும்படியாக தனது தலையை மூடியிருக்க வேண்டும். தேவதூதர்களுக்காகவும் அவள் இதைச் செய்தல்வேண்டும்.

11 ஆனால் கர்த்தருக்குள் பெண் ஆணுக்கு முக்கியமானவள். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். 12 ஆணிடமிருந்து பெண் தோன்றியதால் இது உண்மையாகிறது. ஆனால் பெண்ணிடம் இருந்து ஆண் பிறக்கிறான். உண்மையாகவே ஒவ்வொன்றும் தேவனிடம் இருந்து வருகிறது.

13 இதை நீங்களே முடிவு செய்யுங்கள். தனது தலையை மறைக்காமல் தேவனிடம் பிரார்த்தனை செய்வது ஒரு பெண்ணுக்கு உகந்ததா? 14 நீளமான மயிரோடு இருப்பது ஆணுக்கு இழுக்கானது என்பதை இயற்கையே உணர்த்துகிறது. 15 ஒரு பெண்ணுக்கு நீளமான கூந்தலிருப்பது அவளுக்கு கௌரவமாகும். ஏனெனில் ஒரு மகிமையாகவே அது அவளுக்குத் தரப்பட்டிருக்கிறது. 16 இதைக் குறித்துச் சிலர் இன்னும் விவாதிக்க விரும்பலாம். ஆனால் நாங்களும், தேவனுடைய சபைகளும் அம்மக்கள் இதைப்பற்றி வாக்குவாதம் செய்வதை ஏற்பதில்லை.

கர்த்தரின் திருவிருந்து

17 இப்போது உங்களுக்குச் சொல்பவற்றில் நான் உங்களைப் புகழமாட்டேன். நீங்கள் ஒன்று சேர்வது உங்களுக்குத் தொல்லை உருவாகுவதில் முடிகிறது. 18 முதலில், ஒரு சபையாக நீங்கள் சேரும்போது உங்களுக்குள் பிரிவினைகள் உண்டு என்று நான் கேள்விப்பட்டேன். அதில் சிலவற்றை நான் நம்புகிறேன். 19 பிரிவினைகள் இருப்பது தேவைதான். உங்களில் யார் சரியான காரியத்தைச் செய்கிறவர் என்பதைத் தெளிவுபடுத்த அது உதவும்.

20 நீங்கள் ஒன்று கூடுகையில் கர்த்தரின் திருவிருந்தை[b] உண்மையாகப் புசிப்பதில்லை. 21 ஏன்? ஏனெனில் நீங்கள் சாப்பிடும்போது இன்னொருவருக்காகக் காத்திராது உண்ணுகிறீர்கள். சிலருக்குப் போதுமான அளவு சாப்பிடக் கிடைப்பதில்லை. ஆனால் மற்றும் சிலர் போதைக்கு ஆளாகும் அளவுக்கு உட்கொள்கிறார்கள். 22 உங்கள் வீடுகளில் நீங்கள் சாப்பிடவும், குடிக்கவும் செய்யலாம். தேவனுடைய சபையினர் முக்கியமற்றவரென நீங்கள் நினைப்பதாக எனக்குப் படுகிறது. நீங்கள் ஏழைகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறீர்கள். நான் என்ன கூறமுடியும்? உங்களை இதற்காகப் புகழ்வதா? நான் உங்களைப் புகழேன்.

23 நான் உங்களுக்குச் சொன்ன போதனை உண்மையில் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்டது ஆகும். இயேசு கொலை செய்யப்படுவதற்காக ஒப்புவிக்கப்பட்ட இரவில் அவர் அப்பத்தை எடுத்து நன்றி கூறினார். 24 அந்த அப்பத்தைப் பகிர்ந்து அவர் “இதை புசியுங்கள். இது எனது சரீரமாகும். இது உங்களுக்குரியது. என்னை நினைவுகூருவதற்காக இதைச் செய்யுங்கள்” என்றார். 25 அவர்கள் அதைச் சாப்பிட்டபின், இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து பகிர்ந்தளித்தார். “தேவனிடமிருந்து அவரது மக்களுக்கு அளிக்கப்பட்ட புது உடன்படிக்கையை இந்த இரசக் கோப்பை காட்டுகிறது! எனது இரத்தத்தில் இந்த உடன்படிக்கை ஆரம்பமாகிறது. நீங்கள் இதைப் பருகும்போது, என்னை நினைப்பதற்காக அவ்வாறு செய்யுங்கள்” என்றார். 26 ஒவ்வொரு முறையும் அப்பத்தைச் சாப்பிடும்போதும் இந்த பானத்தைப் பருகும்போதும், கர்த்தர் வரும்வரையில் கர்த்தருடைய மரணத்தைப் பிறருக்கு அறிவிக்கிறீர்கள்.

27 எனவே தகுதியற்ற வகையில் இந்த அப்பத்தை உண்டாலோ, அல்லது கர்த்தரின் இந்தப் பாத்திரத்தில் பருகினாலோ, அப்போது அந்த மனிதன் கர்த்தரின் சரீரத்துக்கும், இரத்தத்துக்கும் எதிராகப் பாவம் செய்தவனாகிறான். 28 இந்த அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு முன்னரும், இந்த பாத்திரத்தில் இருந்து பருகும் முன்னரும் ஒவ்வொருவனும் தன் இதயத்தைப் பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். 29 கர்த்தருடைய சரீரத்தின் பொருளை நிதானித்து அறியாமல் ஒருவன் இந்த அப்பத்தை உண்ணவோ இந்த பானத்தைப் பருகவோ செய்தால் அந்த மனிதன் உண்பதாலும் பருகுவதாலும் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படுவான். 30 எனவே தான், உங்களில் பலர் நோயுற்றவராகவும் பலவீனராகவும் காணப்படுகிறீர்கள். பலர் இறந்தும் போய்விட்டார்கள். 31 நாமே நம்மைச் சரியான வழியில் நியாயம் தீர்த்திருந்தோமானால் தேவன் நம்மை நியாயம் தீர்த்திருக்கமாட்டார். 32 ஆனால், தேவன் நம்மை நியாயம் தீர்க்கும்போது, நமக்குச் சரியான வழியைக் காட்டும்படி நமக்குத் தண்டனை அளிக்கிறார். நாம் இந்த உலகத்திலுள்ள பிற மனிதரோடு குற்றம் சாட்டப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்கிறார்.

33 சகோதர சகோதரிகளே! எனவே, நீங்கள் ஒன்று சேர்ந்து உண்ணுவதற்கு வருகையில் பிறருக்காகக் காத்திருங்கள். 34 ஒருவன் மிகுந்த பசியால் வாடினால், அவன் வீட்டில் உண்ணட்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் வராதபடிக்கு நீங்கள் ஒன்று கூடுகையில் இதைச் செய்யுங்கள். நான் வரும்போது நீங்கள் செய்யவேண்டிய பிற காரியங்களைக் குறித்து உங்களுக்குக் கூறுவேன்.

பரிசுத்த ஆவியானவரின் வரங்கள்

12 சகோதர சகோதரிகளே, இப்போது நீங்கள் ஆவியின் வரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். நீங்கள் விசுவாசம் உடையவராக மாறும் முன்னர், நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். பிறர் உங்கள்மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் உயிரற்ற விக்கிரகங்களை வணங்குவதற்கும் உங்களை நீங்கள் அனுமதித்தீர்கள். தேவனுடைய ஆவியானவரின் உதவியால் பேசுகிற எவனும் “இயேசு சபிக்கப்படட்டும்” என்று கூறுவதில்லை என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி ஒருவனும் “இயேசுவே கர்த்தர்” என்பதைக் கூற முடியாது.

ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை. ஊழியம் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் கர்த்தரிடமிருந்தே வருபவை. மனிதரிடம் தேவன் செயல்படும் வழிகள் பல உண்டு. ஆனால் அவை அனைத்தும் நமக்குள் செயல்படுகிற தேவனிடமிருந்து வருபவை. நாம் ஒவ்வொன்றையும் செய்ய தேவன் நம்மில் செயல்படுகிறார்.

ஆவியானவரின் வரங்களில் சில ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும். பிறருக்கு உதவும்படியாய் ஆவியானவர் இதை ஒவ்வொருவருக்கும் அளிப்பார். ஒருவனுக்கு ஞானத்துடன் பேசும் ஆற்றலைப் பரிசுத்த ஆவியானவர் வழங்குகிறார். அதே பரிசுத்த ஆவியானவர் அறிவோடு பேசும் ஆற்றலை இன்னொருவனுக்குக் கொடுக்கிறார். அதே பரிசுத்த ஆவியானவர் விசுவாசத்தை ஒருவனுக்கு அளிக்கிறார். குணப்படுத்தும் வல்லமையை மற்றொருவனுக்கு அதே பரிசுத்த ஆவியானவர் தருகிறார். 10 அதிசயங்களைச் செய்யும் சக்தியை இன்னொரு மனிதனுக்கு ஆவியானவர் கொடுக்கிறார். இன்னொருவனுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லும் திறனையும், மற்றொருவனுக்கு நல்ல, தீய ஆவிகளின் வேறுபாட்டைக் காணும் திறனையும் அளிக்கிறார். பல்வேறு மொழிகளிலும் பேசும் ஆற்றலை ஒருவனுக்கும், அம்மொழிகளை விளக்கியுரைக்கும் திறமையை மற்றொருவனுக்கும் அளிக்கிறார். 11 ஒரே ஆவியானவரே இவற்றையெல்லாம் செய்கிறார். ஒவ்வொருவனுக்கும் எதனைக் கொடுக்க வேண்டும் என்பதை ஆவியானவரே தீர்மானிக்கிறார்!

கிறிஸ்துவின் சரீரம்

12 ஒருவனின் சரீரம் முழுமையான ஒன்றாக இருந்தாலும், அதில் பல உறுப்புகள் உண்டு. ஆம், சரீரம் பல உறுப்புகளால் ஆனது. ஆனால், அத்தனை உறுப்புகளும் ஒரே சரீரத்துக்குரியவை. கிறிஸ்துவும் அதைப் போன்றவர். 13 நம்மில் சிலர் யூதர்கள். மற்றும் சிலர் கிரேக்கர்கள். சிலர் அடிமைகள். சிலர் சுதந்திரமானவர்கள். ஆனால் நாம் எல்லாரும் ஒரே சரீரமாக ஒரே ஆவியானவர் மூலம் ஞானஸ்நானம் பெற்றோம். நாம் எல்லாரும் ஒரே ஆவியைப் பெற்றோம்.

14 ஒருவனின் சரீரம் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது. 15 பாதம் சொல்லக்கூடும், “நான் கையல்ல, எனவே நான் சரீரத்துக்குச் சொந்தமானதல்ல.” இப்படிச் சொல்வதால் பாதம் சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. 16 காது சொல்லக்கூடும், “நான் கண்ணல்ல. எனவே இந்த சரீரத்தைச் சார்ந்தவன் அல்ல.” இப்படிச் சொல்வதால் காது சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. 17 சரீரம் முழுவதும் கண்ணாகச் செயல்படுமேயானால், அது கேட்கமுடியாது. சரீரம் முழுவதும் காதாகச் செயல்படுமேயானால், சரீரத்தால் எதையும் முகர்ந்து பார்க்க முடியாது. 18-19 சரீரத்தின் உறுப்புகள் எல்லாம் ஒரேவகை உறுப்புகளாக இருந்தால் அப்போது சரீரம் இருப்பதில்லை. தேவன் உண்மையாகவே தாம் விரும்பியபடி சரீரத்தின் உறுப்புகளை சரீரத்தில் அமைத்தார். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஓர் இடத்தை அமைத்தார். 20 எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன.

21 கண் கையிடம் “எனக்கு நீ தேவை இல்லை” என்று கூறமுடியாது. தலை பாதத்திடம் “நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியாது. 22 பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை. 23 சரீரத்தின் தகுதி குறைந்த உறுப்புகளாக நாம் கருதுபவற்றிற்கு அதிகமான அக்கறை காட்டுகிறோம். வெளிக்காட்ட விரும்பாத உறுப்புகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கிறோம். 24 சரீரத்தின் அழகிய உறுப்புகளுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் கௌரவிக்கத்தக்க உறுப்புகளை கௌரவிக்கிற விதத்தில் சரீரத்தின் உறுப்புக்களை தேவன் ஒழுங்குபடுத்தினார். 25 நம்முடைய சரீரம் பிரிக்கப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்தார். வெவ்வேறு உறுப்புகளும் பிறவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று தேவன் இதைச் செய்தார். 26 சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும், மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு துன்புறும். நம் சரீரத்தின் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும்.

27 நீங்கள் எல்லாரும் இணைந்து கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் உறுப்பாக அமைகிறீர்கள். 28 முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார். 29 எல்லா மனிதர்களும் அப்போஸ்தலர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் தீர்க்கதரிசிகளல்ல. எல்லா மனிதர்களும் போதகர்களுமல்ல. எல்லாரும் அதிசயங்களைச் செய்ய முடியாது. 30 குணப்படுத்தும் ஆற்றலும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எல்லாருக்கும் வெவ்வேறு வகையான மொழிகளைப் பேசமுடியாது. எல்லாரும் அவற்றை விளக்கவும் முடியாது. 31 ஆவியானவரின் சிறந்த வரங்களைப் பெற நீங்கள் உண்மையாகவே விரும்ப வேண்டும்.

அன்பே சிறந்த வரம்

13 நான் இப்போது மிகச் சிறந்த வழியைக் காட்டுவேன். மனிதர்களுடையதும், தேவ தூதர்களுடையதுமான வெவ்வேறு மொழிகளை நான் பேசக்கூடும். ஆனால் என்னிடம் அன்பு இல்லையானால் நான் சப்தமிடும் மணியைப் போலவும், தாளமிடும் கருவியைப் போலவும் இருப்பேன். தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் எனக்கு இருக்கலாம். தேவனுடைய இரகசியமான காரியங்களை நான் உணர்ந்துகொள்ளக் கூடும். எல்லாம் அறிந்திருக்கக்கூடும். மலைகளை அசைக்க வல்ல அரிய விசுவாசம் எனக்கு இருக்கக் கூடும். ஆனால் இவையிருந்தும் என்னிடம் அன்பு இல்லையானால் மேற்கண்ட செய்கைகளைச் செய்வதால் எனக்கு எவ்வித பயனுமில்லை. மக்களுக்கு உணவுகொடுக்க என்னிடமிருக்கிற ஒவ்வொன்றையும் நான் கொடுக்கலாம். என் சரீரத்தையே கூட காணிக்கைப் பொருளாகக் கொடுக்கலாம். ஆனால் என்னிடம் அன்பு இல்லையென்றால் இக்காரியங்களைச் செய்வதன் மூலம் எனக்கு எவ்வித லாபமும் இல்லை.

அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது. அன்பு கடுமையானதன்று. அன்பு தன்னலமற்றது. அன்பு எளிதாகக் கோபம் அடையாது. தனக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளையும் அன்பு நினைவுகொள்ளாது. அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும்.

அன்பு முடிவற்றது. தீர்க்கதரிசன வரங்கள் முடிவுடையவை. பல மொழிகளைப் பேசும் வரங்களும் உண்டு. அவற்றிற்கும் முடிவுண்டு. அறிவென்னும் வரமும் உண்டு. ஆனால் அதுவும் முடிவு கொண்டது. நமது அறிவும் தீர்க்கதரிசனம் கூறும் திறனும் முழுமையுறாதவை. எனவே அவற்றிற்கு முடிவு உண்டு. 10 முழுமையான ஒன்று வருகிறபொழுது முழுமையுறாத பொருள்கள் முடிவுறும்.

11 நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையைப்போலப் பேசினேன். குழந்தையைப் போல சிந்தித்தேன். குழந்தையைப் போலவே திட்டமிட்டேன். நான் பெரிய மனிதனானபோது குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டேன். 12 அதுவே நம் அனைவருக்கும் பொருந்தும். தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதியே எனக்குத் தெரியும். தேவன் என்னை அறிந்துகொண்டதுபோல அப்போது நான் முழுக்க அறிவேன். 13 எனவே இந்த மூன்றும் நிலைத்திருக்கிறது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு. இவற்றுள் அன்பே மிக மேன்மையானது.

ஆவியின் வரங்களைப் பயன்படுத்துங்கள்

14 அன்பை நாடுங்கள். ஆவியானவரின் வரங்களைப் பெற விரும்புங்கள். தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்திற்காகப் பெரிதும் முயலுங்கள். ஏனென்று உங்களுக்கு விளக்குகிறேன். வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்றவன் மக்களிடம் அதனைப் பேசவில்லை. அவன் தேவனிடம் பேசுகிறான். வேறு எவரும் அவனைப் புரிந்துகொள்வதில்லை. அவன் ஆவியானவர் மூலமாக இரகசியங்களை வெளிப்படுத்துகிறான். ஆனால் தீர்க்கதரிசனம் சொல்கிற ஒருவன் மக்களிடம் பேசுகிறான். அவன் மக்களுக்கு வல்லமை, உற்சாகம், ஆறுதல் ஆகியவற்றைக் கொடுக்கிறான். வேறு மொழியில் பேசுகிறவன் அவனுக்கு மட்டுமே பயன்படுகிறான். ஆனால் தீர்க்கதரிசனம் சொல்கிறவன் சபை முழுமைக்கும் பயன்படுகிறான்.

நீங்கள் எல்லாரும் வேறு மொழிகளில் பேசும் வரத்தை பெற வேண்டுமென விரும்புகிறேன். ஆனால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்வதை இன்னும் அதிகமாய் விரும்புகிறேன். வேறு மொழிகளில் பேசுகிற மனிதனைவிட தீர்க்கதரிசனம் சொல்லக்கூடிய மனிதன் சிறந்தவன். வேறு மொழிகளைப் பேசும் மனிதன் அவற்றை விளக்கிக் கூற முடியுமானால் அவனும் தீர்க்கதரிசனம் சொல்கிறவனை ஒத்தவன். அப்போது சபையும் அவன் கூறுவதன் மூலமாகப் பயன் அடைய முடியும்.

சகோதர, சகோதரிகளே, நான் வெவ்வேறு மொழிகளில் பேசுபவனாக உங்களிடம் வந்தால் அது உங்களுக்குப் பயன்படுமா? இல்லை, நான் புதிய உண்மை அல்லது அறிவு, அல்லது தீர்க்கதரிசனம், அல்லது போதனை ஆகியவற்றை உரைக்கும்படியாய் உங்களிடம் வந்தால் அது உங்களுக்குப் பயன்படும். குழல், வீணை ஆகிய உயிரற்ற பொருட்கள் ஒலியெழுப்புவதைப் போன்று அது அமைந்துவிடும். வெவ்வேறு விதமான இசையொலிகள் தெளிவாக எழுப்பப்படாவிட்டால், இசைக்கும் இசையை நீங்கள் புரிந்துகொள்ள இயலாது. இசையைப் புரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு ராகமும் தெளிவாக மீட்டப்படுதல் வேண்டும். யுத்தத்தின்போது எக்காள முழக்கம் சரியாக முழக்கப்படாவிட்டால் வீரர்களுக்குப் போருக்குத் தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் அதுவென்பது தெரிய வராது.

அதுவே உங்களுக்கும் பொருந்தும். உங்கள் வாயின் வார்த்தைகள் தெளிவாக இருக்கட்டும். நீங்கள் தெளிவாகப் பேசாவிட்டால் உங்கள் கருத்தைப் பிறர் புரிந்துகொள்ள முடியாது. 10 இவ்வுலகில் பலவகையான பேச்சு மொழிகள் உண்டு என்பதும் அவை பொருள் பொருந்தியவை என்பதும் உண்மை. 11 ஒருவன் என்னிடம் கூறுவதன் பொருளை நான் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அவன் விசித்திரமாகப் பேசுவதாக நானும், நான் விசித்திரமாகப் பேசுவதாய் அவனும் எண்ணக்கூடும். 12 அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் ஆன்மீக வரங்களைப் பெற விரும்புகிறீர்கள். சபை உறுதியாய் வளருவதற்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

13 ஆகவே வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்ற ஒருவன் அதை விளக்கிக் கூறும் திறமையை அடையும் பொருட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். 14 நான் வேறு மொழியில் பிரார்த்தித்தால் என் ஆவி பிரார்த்திக்கும். ஆனால் என் மனம் எச்செயலையும் செய்யாது. 15 எனவே, நான் என்ன செய்ய வேண்டும்? நான் எனது ஆவியால் பிரார்த்திக்கும்போது, என் மனதாலும் பிரார்த்திப்பேன். எனது ஆவியால் நான் பாடுகையில், என் மனதாலும் பாடுவேன். 16 உங்கள் ஆவியால் நீங்கள் தேவனை வாழ்த்தக்கூடும். நீங்கள் நன்றியறிதலுக்கான பிரார்த்தனையைக் கூறும்போது அதைப் புரிந்துகொள்ளாத ஒருவன் “ஆமென்” என்று சொல்ல முடியாது. ஏன்? அவனுக்கு நீங்கள் சொல்வது என்னவென்று தெரியாது. 17 நீங்கள் தேவனுக்கு நல்லமுறையில் நன்றி தெரிவிக்கக்கூடும். ஆனால் மற்ற மனிதன் அதனால் பயன் அடையவில்லை.

18 உங்களைக் காட்டிலும் சிறந்த முறையில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் வரத்தை நான் பெற்றிருப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். 19 ஆனால், சபையின் கூட்டங்களில் நான் புரியக் கூடிய மொழியில் ஐந்து வார்த்தைகளைப் பேசுவதையே, புரியாத மொழியில் ஆயிரம் வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும் விரும்புவேன். நான் பிறருக்குப் போதிக்கும்படியாக, எனது புரிந்துகொள்ளும் தன்மையோடு பேசுவதையே தேர்ந்துகொள்கிறேன்.

20 சகோதர சகோதரிகளே, குழந்தைகளைப் போல யோசிக்காதீர்கள். தீய காரியங்களில், குழந்தைகளைப்போல இருங்கள். ஆனால் சிந்திக்கும்போது மனிதரைப்போல சிந்தியுங்கள்.

21 “வெவ்வேறு மொழிகளைப் பேசும் மனிதர்களையும்,
    வேற்று மக்களின் மொழிகளையும் பயன்படுத்தி இந்த மக்களோடு பேசுவேன்.
அப்போதும் இந்த மக்கள்
    எனக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள்”(D)

என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு கர்த்தர் சொல்கிறார்.

22 எனவே, வெவ்வேறு மொழிகளில் பேசும் வரம் விசுவாசமற்ற மக்களுக்கு நிரூபணத்தின் ஒரு அடையாளமாகும், விசுவாசமுள்ள மக்களுக்கு அல்ல. தீர்க்கதரிசனம் விசுவாசமுள்ள மக்களுக்கேயொழிய, விசுவாசமற்ற மக்களுக்கல்ல. 23 சபையினர் எல்லோரும் கூடி இருக்கையில் நீங்கள் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதாக வைத்துக்கொள்வோம். விசுவாசமற்றவர்களோ, உங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களோ அப்போது வந்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாகக் கருதுவர். 24 ஆனால், நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது விசுவாசமற்றவனோ, புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத மனிதனோ அங்கு வந்தால் அந்த மனிதனின் பாவம் அவனுக்கு உணர்த்தப்படும். நீங்கள் கூறும் காரியங்களின்படியே அவன் நியாயம் தீர்க்கப்படுவான். 25 அவன் உள்ளத்தின் இரகசியங்கள் அவனுக்குத் தெரிவிக்கப்படும். எனவே அந்த மனிதன் தலை குனிந்து வீழ்ந்து தேவனை வணங்குவான். “உண்மையாகவே, தேவன் உங்களோடு இருக்கிறார்” என்று அவன் கூறுவான்.

உங்கள் ஐக்கியம்

26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் சந்திக்கும்போது ஒருவரிடம் சங்கீதம் இருக்கிறது. மற்றொருவரிடம் போதனை இருக்கிறது. இன்னொருவரிடம் தேவனிடம் இருந்து பெற்ற புதிய செய்தி இருக்கிறது. ஒருவர் வேறு மொழியைப் பேசக்கூடும். இன்னொருவர் அதனை விளக்கியுரைக்கக் கூடும். இந்தக் காரியங்களின் நோக்கம் சபை வளருவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். 27 நீங்கள் சந்திக்கும்போது வேறு மொழிகளில் ஒருவர் உங்களோடு பேசினால் இருவராக மட்டுமே இருக்க வேண்டும். மூன்று பேருக்குமேல் இதைச் செய்யக்கூடாது. அவர்கள் ஒருவருக்குப்பின் ஒருவர் பேசவேண்டும். இன்னொருவர் அவர்கள் பேசுவதை விளக்க வேண்டும். 28 அவ்வாறு விளக்கக்கூடியவர் அங்கே இல்லையென்றால் சபையினர் சந்திக்கும்போது வேறு மொழியில் பேசுகின்றவர் அமைதியாக இருக்க வேண்டும். தன்னிடமும் தேவனிடமும் மட்டுமே பேசிக்கொண்டு அவர் இருத்தல் வேண்டும்.

29 இரண்டு அல்லது மூன்று தீர்க்கதரிசிகள் மட்டுமே பேசவேண்டும். அவர்கள் கூறுவதைப் பிறர் நிதானிக்கவேண்டும். 30 சபையில் இருப்பவரில் ஒருவர் தேவனிடமிருந்து ஏதேனும் செய்தியைப் பெற்றால் முதலில் பேசுகிறவர் உடனே பேசுவதை நிறுத்த வேண்டும். 31 இந்த முறையில் ஒருவருக்குப் பின் ஒருவராக நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்க முடியும். அவ்வாறாக எல்லா மக்களும் பயிற்சியும், உற்சாகமும் பெறுவார்கள். 32 தீர்க்கதரிசிகளின் ஆவிகளும்கூட தீர்க்கதரிசிகளால் கட்டுப்படுத்தப்பட முடியும். 33 தேவன் குழப்பத்தின் தேவனல்ல. அவர் சமாதானத்தின் தேவனாவார்.

34 சபைக் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். தேவனுடைய மக்களுடைய எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும். பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது. 35 பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது.

36 தேவனுடைய போதனை உங்களிடமிருந்து வந்ததா? இல்லை. அல்லது தேவனுடைய போதனையைப் பெற்றவர்கள் நீங்கள் மட்டுமா? இல்லை. 37 உங்களில் ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியாகக் கருதினாலோ அல்லது ஆவியின் வரம் பெற்றிருப்பதாக எண்ணினாலோ, அவன் நான் உங்களுக்கு எழுதுவதை கர்த்தரின் கட்டளையாக அடையாளம் கண்டு கொள்ளட்டும். 38 இதை அந்த மனிதன் அறியவில்லையென்றால் அவன் தேவனால் அறியப்படாதவன்.

39 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் தீர்க்கதரிசனம் உரைப்பதை விரும்புங்கள். அதே சமயத்தில் மக்கள் வேறு மொழிகளில் பேசும் வரத்தைத் தடுக்காதீர்கள். 40 ஆனால் தகுதியானதும் ஒழுங்கானதுமான வகையில் ஒவ்வொன்றும் செய்யப்பட வேண்டும்.

கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி

15 சகோதர சகோதரிகளே, உங்களுக்குக் கூறிய நற்செய்தியை இப்போது நீங்கள் நினைவுகூரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் இச்செய்தியைப் பெற்றீர்கள். அச்செய்தியில் உறுதியாய்த் தொடருங்கள். நீங்கள் இந்நற்செய்தியால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொன்னவற்றை தொடர்ந்து நம்புங்கள். அங்ஙனம் செய்யாத பட்சத்தில் உங்களின் விசுவாசம் வீணாய் போகும்.

நான் பெற்ற செய்தியை உங்களுக்கு அறிவித்தேன். நான் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கூறினேன். வேத வாக்கியங்கள் கூறியபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார். வேதவாக்கியங்கள் கூறியபடியே கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டார். கிறிஸ்து தன்னைப் பேதுருவுக்கும் பின்னர் பன்னிரண்டு அப்போஸ்தருக்கும் காட்சியளித்தார். அதற்குப் பிறகு கிறிஸ்து 500 சகோதரர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே சமயத்தில் தன்னை வெளிப்படுத்தினார். அவர்களில் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். சிலர் மறைந்துவிட்டனர். அதன் பின்னர் கிறிஸ்து யாக்கோபுக்கும் பிறகு மீண்டும் எல்லாச் சீஷர்களுக்கும் காட்சியளித்தார். இறுதியாக வழக்கமற்ற முறையில் பிறந்த ஒருவனைப் போன்ற எனக்கும் கிறிஸ்து தன்னைக் காண்பித்தார்.

மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள். நான் தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தியவன். எனவே அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்கும் நான் தகுதியுடையவன் அல்ல. 10 ஆனால் தேவனுடைய இரக்கத்தினால் இப்போதைய எனது தகுதியைப் பெற்றேன். தேவன் என்னிடம் காட்டிய இரக்கம் வீணாய் போகவில்லை. நான் மற்ற எல்லா அப்போஸ்தலரைக் காட்டிலும் கடினமாய் உழைத்தேன். (ஆனால், உண்மையில் உழைப்பவன் நான் அல்ல. தேவனுடைய இரக்கமே என்னோடு இருந்தது.) 11 நான் உங்களுக்குப் போதித்தேனா, அல்லது மற்ற அப்போஸ்தலர்கள் உங்களுக்குப் போதித்தார்களா என்பது முக்கியமில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே விஷயத்தையே போதிக்கிறோம். இதையே நீங்களும் நம்பினீர்கள்.

நமது உயிர்த்தெழுதல்

12 கிறிஸ்து மரணத்தில் இருந்து எழுப்பப்பட்டார் என்று போதிக்கிறோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்பட முடியாது என்று உங்களில் சிலர் கூறுவதேன்? 13 மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படமாட்டார்கள் என்றால் கிறிஸ்துவும் ஒருபோதும் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். 14 மரணத்திலிருந்து ஒருபோதும் கிறிஸ்து எழுப்பப்பட்டிருக்கவில்லை எனில், பிறகு எங்கள் போதனை எந்தத் தகுதியுமற்றது. மேலும் உங்கள் விசுவாசம் தகுதியற்றதாகிறது. 15 நாம் தேவனைப் பற்றி பொய்யுரைக்கும் களங்கம் உடையவர்கள் ஆவோம். ஏனென்றால் தேவன் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து எழுப்பினாரென்று நாம் தேவனைக் குறித்துப் போதித்துள்ளோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் தேவனால் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். 16 இறந்தோர் எழுப்பப்படாவிட்டால் கிறிஸ்துவும் கூட எழுப்பப்பட்டிருக்கவில்லை எனலாம். 17 கிறிஸ்து எழுப்பப்படவில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீணானது. இன்னும் நீங்கள் அனைவரும் பாவிகளாக இருக்கிறீர்கள். 18 ஏற்கெனவே இறந்துபோன கிறிஸ்துவின் மக்களும் அழிந்துபோயிருப்பார்கள். 19 இவ்வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்போமானால் வேறெவரைக் காட்டிலும் நாமே அதிக பரிதாபத்துக்குரியவர்களாகக் காணப்படுவோம்.

20 ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் முதல்வராய் கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார். 21 ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது. 22 ஆதாமில் நாம் எல்லாரும் இறக்கிறோம். அதைப்போன்று கிறிஸ்துவில் நாம் அனைவரும் மீண்டும் வாழ அனுமதிக்கப்படுகிறோம். 23 ஆனால் தகுந்த வரிசைப்படியே ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான். கிறிஸ்து முதலில் எழுப்பப்பட்டார். கிறிஸ்து மீண்டும் வரும்போது கிறிஸ்துவின் மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள். 24 அப்போது முடிவு வரும். எல்லா ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும், சக்திகளையும் கிறிஸ்து அழிப்பார். பிதாவாகிய தேவனிடம் கிறிஸ்து இராஜ்யத்தை ஒப்படைப்பார்.

25 கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் எல்லா பகைவர்களும் வரும்வரைக்கும் கிறிஸ்து ஆளவேண்டும். 26 கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும். 27 “தேவன் அவரது அதிகாரத்துக்குள் எல்லாவற்றையும் வைத்தார்”(E) என்று வேதவாக்கியங்கள் சொல்கின்றன. “எல்லாப் பொருள்களும் அவரது (கிறிஸ்துவின்) அதிகாரத்துக்கு உட்பட்டது” எனும்போது தேவனை உள்ளடக்கிக் கூறவில்லை என்பது தெளிவாகிறது. எல்லாவற்றையும் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தியவர் தேவனே. 28 எல்லாம் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தப்பட்டதும் தேவனுடைய அதிகாரத்துக்குள் குமாரனும் (கிறிஸ்துவும்) உட்படுத்தப்படுவார். அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார். தேவன் எல்லாவற்றின்மீதும் முழுமையாக ஆட்சியாளராக இருக்கும் வகையில் கிறிஸ்து தேவனுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.

29 மரணத்திலிருந்து மக்கள் எழுப்பப்படமாட்டார்கள் என்றால், ஞானஸ்நானம் பெற்ற மக்கள் மரணமடைந்தவர்களுக்குச் செய்ய வேண்டியதென்ன? மரணமடைந்த மக்கள் எழுப்பப்படவில்லை என்றால் மக்கள் அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவதேன்?

30 நமது நிலை என்ன? ஒவ்வொரு மணி நேரமும் ஏன் நாம் ஆபத்துக்குள்ளாகிறோம்? 31 நான் தினமும் மரணமடைகிறேன். கிறிஸ்து இயேசுவாகிய நமது கர்த்தருக்குள் நான் உங்களைக் குறித்துப் பெருமை பாராட்டுவது போன்ற உண்மை அதுவாகும். 32 எபேசுவில் கொடிய விலங்குகளோடு என் பெருமையை திருப்திப்படுத்தும் எண்ணத்தோடு போராடினேன் என்று கூறினால் எனக்கு எந்த நன்மையுமில்லை. மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவதில்லை என்றால், “நாம் நாளை மரணம் அடையக் கூடுமென்பதால் உண்டு பருகுவோம்.”(F) என்று சொல்லலாமே.

33 முட்டாளாக்கப்படாதீர்கள். “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள்.” 34 சரியானபடி சிந்திக்க ஆரம்பியுங்கள். பாவம் செய்யாதீர்கள். உங்களில் சிலர் தேவனை அறியவில்லை. நீங்கள் வெட்கப்படும்படியாக இதைக் கூறுகிறேன்.

மகிமையின் சரீரம்

35 “எப்படி இறந்தோர் எழுப்பப்படுவர்? அவர்களுக்கு எத்தகைய சரீரம் அமையும்?” என்று சிலர் கேட்கக்கூடும். 36 என்ன ஒரு தேவையற்ற கேள்வி! எதையேனும் விதைத்தால் அது மீண்டும் உயிர்பெற்று வளருவதற்கு முன் பூமியில் விழுந்து மடியும். 37 அது பூமியில் இருந்து வளரும்போது பெறுகின்ற “தோற்றத்தை” அதை பூமியில் விதைக்கும்போது பெற்றிருப்பதில்லை. நீங்கள் விதைப்பது கோதுமை அல்லது வேறு ஏதாவது ஒரு தானிய விதை மட்டுமே. 38 ஆனால் தேவன் அதற்கு என வகுக்கப்பட்டுள்ள ஓர் உருவைக் கொடுக்கிறார். ஒவ்வொரு வகையான விதைக்கும் அதற்குரிய உருவத்தை அளிக்கிறார். 39 மாம்சத்திலான உயிர்கள் அனைத்தும் ஒரே வகையான உருவைப் பெற்றிருக்கவில்லை. மனிதர் ஒருவகை உருவையும், விலங்குகள் மற்றொரு வகை உருவத்தையும், பறவைகள் இன்னொரு வகை தோற்றத்தையும் மீன்கள் பிறிதொரு அமைப்பையும் பெற்றிருக்கின்றன. 40 வானத்துக்குரிய சரீரங்களும் உண்டு. மண்ணுக்குரிய சரீரங்களும் உண்டு. வானத்துக்குரிய சரீரங்களின் அழகு ஒருவகையானது. மண்ணுக்குரிய சரீரங்களின் அழகு மற்றொரு வகையானது. 41 சூரியனுக்கு ஒருவகை அழகும், சந்திரனுக்கு மற்றொரு வகை அழகும், நட்சத்திரங்களுக்கு வேறு வகையான அழகும் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரமும் அழகில் வேறுபட்டது.

42 மரணமடைந்த மக்கள் எழுப்பப்படும்போதும் இவ்வாறே நிகழும். மரணத்தின் பின் “புதைக்கப்பட்ட” சரீரம் கெட்டு அழியும். ஆனால் எழுப்பப்பட்ட சரீரம் அழிவற்ற வாழ்வைக் கொண்டிருக்கும். 43 சரீரம் “புதைக்கப்படுகிறபோது” மரணத்திற்கு எந்த கௌரமும் இல்லை. ஆனால் அது மீண்டும் எழுப்பப்படும்போது அது மகிமையில் எழுப்பப்படுகிறது. புதைக்கப்படுகிறபோது பலவீனமாக இருக்கிறது. ஆனால் அது ஆற்றலில் எழுப்பப்படுகிறது. 44 “அடக்கம் செய்யப்பட்ட” சரீரம் பூத சரீரம். எழுப்பப்படும்போது அது ஆவிக்குரிய சரீரமாகும். பூத சரீரம் ஒன்று உண்டு.

எனவே ஆவிக்குரிய சரீரமும் உண்டு. 45 இதே பொருளில் “முதல் மனிதன் (ஆதாம்) உயிருள்ளவனானான்.”(G) இறுதி ஆதாமாகிய கிறிஸ்துவோ உயிரளிக்கும் ஆவியானவரானார் என்று வேதவாக்கியம் கூறுகிறது. 46 ஆவிக்குரிய சரீரம் முதலில் தோன்றவில்லை. இயற்கையான சரீரத்துக்குரிய மனிதனே முதலில் தோன்றினான். பின்னரே ஆவிக்குரிய மனிதனின் தோற்றம் அமைந்தது. 47 முதல் மனிதன் பூமியின் மண்ணிலிருந்து வந்தவன். இரண்டாம் மனிதன் (கிறிஸ்து) பரலோகத்திலிருந்து வந்தவர். 48 மக்கள் பூமிக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் பூமியில் இருந்து வந்த முதல் மனிதனைப் போன்றவர்கள். ஆனால் பரலோகத்துக்குரிய மனிதர்கள் பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றவர்கள். 49 நாம் பூமியிலிருந்து வந்த மனிதனைப் போன்று அமைக்கப்பட்டோம். எனவே பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றும் அமைக்கப்படுவோம்.

50 சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்குக் கூறுகிறேன். மாம்சமும், இரத்தமும் (பூத சரீரம்) தேவனுடைய இராஜ்யத்தில் இருக்கமுடியாது! அழியத்தக்க பொருள் அழிவற்ற பொருளின் பாகமாக மாற முடியாது! 51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். 52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம். 53 அழியக் கூடிய இந்த சரீரம் என்றும் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். மரணமுறும் இந்த உடம்பு மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். 54 எனவே அழியக்கூடிய இந்த சரீரம் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும். மரணத்திற்குள்ளாகும் இச்சரீரம் மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும். இது நடந்தேறும்போது வேத வாக்கியத்தின் வாசகம் உண்மையாகும்.

“மரணம் வெற்றிக்குள் விழுங்கப்பட்டது”(H)

55 “மரணமே, உன் வெற்றி எங்கே?
பாதாளமே, அழிக்கும் உன் வல்லமை எங்கே?”(I)

56 மரணத்தின் ஆற்றலே பாவம். பாவத்தின் ஆற்றலே சட்டமாகும். 57 நாம் தேவனுக்கு நன்றி கூறுவோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர் நமக்கு வெற்றியை அருளினார்.

58 எனவே என் அன்பான சகோதர சகோதரிகளே, உறுதியாய் நில்லுங்கள். எதுவும் உங்களை மாற்றாமல் இருக்கட்டும். எப்போதும் முழுமையாக உங்களைக் கர்த்தரின் பணிக்கு ஒப்புக்கொடுங்கள். கர்த்தருக்கான உங்கள் பணி வீணாகப் போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

பிற விசுவாசிகளின் காணிக்கை

16 தேவனுடைய மக்களுக்காகப் பணத்தை வசூலிப்பதுப்பற்றி இப்போது உங்களுக்கு எழுதுவேன். கலாத்திய சபைகளுக்கு நான் கூறியுள்ளபடியே நீங்களும் செய்யுங்கள். ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் உங்களில் ஒவ்வொருவனும் தங்கள் வரவுக்கேற்ப எவ்வளவு பணத்தைச் சேமிக்க முடியுமோ அத்தனையையும் சேமித்து வையுங்கள். நீங்கள் இந்தப் பணத்தை ஒரு விசேஷமான இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள். அவ்வாறாயின் நான் வந்த பின் நீங்கள் பணத்தைத் திரட்டும் சிரமம் உங்களுக்கு இருக்காது. நான் வரும்போது உங்கள் வெகுமதியை எருசலேமிற்கு எடுத்துச் செல்வதற்காகச் சில மனிதர்களை அனுப்புவேன். நீங்கள் அனுப்புவதற்கு இசைந்த மனிதர்களையே உங்களிடம் அனுப்புவேன். அறிமுகக் கடிதம் கொடுத்து அவர்களை அனுப்புவேன். நானும் அவர்களோடு போவது நல்லது எனத் தோன்றினால், அந்த மனிதரை என்னோடு அழைத்துச் செல்வேன்.

பவுலின் திட்டங்கள்

நான் மக்கதோனியாவின் வழியாகப் போகத் திட்டமிட்டுள்ளேன். நான் மக்கதோனியா வழியாகப் போனபின் உங்களிடம் வருவேன். நான் உங்களிடம் சில காலம் இருக்கக் கூடும். பனிக் காலம் முழுவதும் நான் தங்கக்கூடும். பிறகு நான் எங்கெங்கு சென்றாலும் என் பயணத்திற்கு நீங்கள் உதவமுடியும். நான் இந்தச் சமயத்தில் மட்டும் போகிற வழியில் உங்களைப் பார்க்க விரும்பவில்லை. கர்த்தர் விரும்பினால் உங்களோடு நீண்ட காலம் தங்க விரும்புகிறேன். பெந்தெகோஸ்து வரைக்கும் எபேசுவில் தங்கி இருப்பேன். பெரிய வளர்ச்சியுறும் பணி எனக்கு இப்போது தரப்பட்டுள்ளதால் அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தும்படிக்கு இங்கு தங்குவேன். அதற்கு எதிராக வேலை செய்வோர் பலர் உள்ளனர்.

10 தீமோத்தேயு உங்களிடம் வரக்கூடும். அவன் உங்களோடு பயமில்லாமல் இருக்க உதவுங்கள். என்னைப்போலவே அவனும் கர்த்தருக்காகப் பணியாற்றுகிறான். 11 எனவே உங்களில் ஒருவரும் தீமோத்தேயுவை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது. என்னிடம் அவன் வரமுடியும் வகையில் அவனது பயணம் அமைதி நிரம்பியதாக இருப்பதற்கு உதவுங்கள். சகோதரர்களுடன் சேர்ந்து அவன் என்னிடம் வருவதை எதிர்ப்பார்க்கிறேன்.

12 இப்போது நமது சகோதரன் அப்பொல்லோவைக் குறித்து எழுதுகிறேன். பிற சகோதரர்களுடன் சேர்ந்து அவன் உங்களைச் சந்திக்க வேண்டுமென மிகவும் ஊக்கமூட்டினேன். அவன் இப்போது உங்களிடம் வருவதில்லை என உறுதியாகக் கூறினான். அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது அவன் உங்களிடம் வருவான்.

பவுல் கடிதத்தை முடிக்கிறார்

13 கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிவுறுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வன்மையுடன் இருங்கள். 14 அன்பினால் ஒவ்வொன்றையும் செய்யுங்கள்.

15 அகாயாவில் ஸ்தேவானும் அவனது குடும்பத்தாரும், முதன் முதலில் விசுவாசம் கொண்டவர்கள் என்பதை அறிவீர்கள். அவர்கள் தங்களை தேவனுடைய மக்களுக்குச் செய்யும் சேவைக்காக ஒப்புவித்துள்ளார்கள். சகோதர சகோதரிகளே! 16 இத்தகையோரின் தலைமையை ஒத்துக்கொள்ளும்படியும் அவர்களோடு சேவை செய்கிற ஒவ்வொருவரையும் ஒப்புக்கொள்ளும்படியும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

17 ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் வந்ததை அறிந்து சந்தோஷப்பட்டேன். நீங்கள் இங்கு இல்லை. ஆனால் அவர்கள் உங்கள் இடத்தை நிரப்பியுள்ளார்கள். 18 எனது ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் அவர்கள் ஓய்வளித்துள்ளார்கள். இத்தகைய மனிதரின் மதிப்பை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

19 ஆசியாவின் சபையினர் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறார்கள். அவர்களின் வீட்டில் சந்திக்கிற சபையும் உங்களை வாழ்த்துகிறது. 20 இங்குள்ள எல்லா சகோதர சகோதரிகளும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். நீங்கள் சந்திக்கையில் பரிசுத்த முத்தத்தின் மூலம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்ளுங்கள்.

21 பவுல் ஆகிய நான் இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினால் எழுதுகிறேன்.

22 கர்த்தரை நேசிக்காத எவனொருவனும் தேவனிடமிருந்து எந்நாளும் பிரிந்தவனாக முற்றிலும் அழிந்துபோனவனாக இருப்பானாக.

கர்த்தரே, வாரும்.

23 கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களோடு இருப்பதாக!

24 கிறிஸ்து இயேசுவில் என் அன்பு உங்கள் அனைவரோடும்கூட இருப்பதாக!

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது, நான் அப்போஸ்தலன் ஆனேன். ஏனென்றால் நான் அவ்விதம் ஆவதையே தேவன் விரும்பினார். கிறிஸ்துவில் நமது சகோதரனாகிய தீமோத்தேயுவிடமிருந்தும்

கொரிந்து நகரின் தேவனுடைய சபைக்கும் அகாயா நாடெங்கும் உள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

பவுல் தேவனுக்கு நன்றி கூறுதல்

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை வாழ்த்துங்கள். தேவனே இரக்கம் நிறைந்த பிதா. எல்லா விதமான ஆறுதல்களுக்கும் உறைவிடம் அவர் தான். நாம் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர் ஆறுதல் வழங்குகிறார். இது எந்த வகையிலாவது மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும்போது நாம் ஆறுதல் வழங்கத் துணையாயிருக்கும். நம்மை தேவன் ஆறுதல்படுத்துவதைப் போலவே நாம் அவர்களையும் ஆறுதல்படுத்த வேண்டும். கிறிஸ்துவின் அநேக துன்பங்களில் நாம் பங்கு கொண்டால் கிறிஸ்துவிடமிருந்து நமக்கு மிகுந்த ஆறுதலும் கிடைக்கும். நாங்கள் தொல்லைக்குட்பட்டால் அது உங்களின் இரட்சிப்புக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். நாங்கள் ஆறுதல் பெற்றால் அது உங்களின் ஆறுதலுக்காகத்தான். எங்களுக்கு நேரும் தொல்லைகள் போல உங்களுக்கு நேரும் தொல்லைகளை நீங்கள் பொறுமையுடன் தாங்கிக்கொள்ள இது உதவும். உங்களுக்கான எங்கள் நம்பிக்கை பலமானது. எங்கள் துன்பங்களில் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்பதை அறிவோம். எனவே, எங்கள் ஆறுதலிலும் உங்களுக்குப் பங்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம்.

சகோதர சகோதரிகளே, ஆசியா நாட்டில் நாங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அங்கே எங்களுக்குப் பெரும் பாரங்கள் இருந்தன. அந்த பாரங்கள் எங்கள் பலத்தைவிட பெரிது. வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையையே நாங்கள் இழந்துவிட்டோம். உண்மையாகவே நாங்கள் இறந்து போவோம் என மனதிற்குள் எண்ணினோம். நம்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன் மீது நம்பிக்கை வைப்பதை நாம் உணரும் பொருட்டு இது இவ்வகையில் நடந்தது. அவர் மரணத்திலிருந்து மக்களை எழுப்பியவர். 10 இது போன்ற மரண ஆபத்துகளில் இருந்து தேவன் எங்களைக் காப்பாற்றினார். அவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நாங்கள் அவர் மீது தான் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அவரே தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். 11 நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்.

பவுலின் திட்டங்களில் மாற்றம்

12 இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நான் இதனை மனப்பூர்வமாகக் கூறுவேன். இது உண்மையானது. நாங்கள் இந்த உலகத்தில் செய்த அனைத்தையும் தேவன் தந்த நேர்மையும் சுத்தமும் கொண்ட இதயத்தோடு செய்தோம். நாங்கள் உங்களிடம் செய்த காரியங்களில் இது மேலும் உண்மையானது. இவற்றை நாங்கள் தேவனுடைய கிருபையால் செய்தோம். உலகிலுள்ள ஞானத்தால் செய்யவில்லை. 13 உங்களால் வாசித்து புரிந்துகொள்ளத்தக்கவற்றை மட்டுமே உங்களுக்கு எழுதுகிறோம். 14 எங்களைப் பற்றி ஏற்கெனவே சில காரியங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதைப் போல இதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம். எங்களுக்காகப் பெருமை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது உங்களுக்காக நாங்கள் பெருமைப்படுவதைப் போன்றிருக்கும்.

15 நான் இவற்றைப் பற்றியெல்லாம் மிகவும் உறுதியாக இருந்தேன். அதனால் தான் முதலில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு நீங்கள் இரண்டு முறை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவீர்கள். 16 மக்கதோனியாவுக்குப் போகிற வழியில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு திரும்பும் வழியில் மீண்டும் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். யூதேயாவுக்குப் போகும்போது உங்கள் உதவியைப் பெற விரும்பினேன். 17 நான் சிந்தித்துப் பார்க்காமலேயே இத்திட்டங்களை வகுத்தேன் என்று நினைக்கிறீர்களா? அல்லது நான் “ஆமாம், ஆமாம்” என்றும் அதே நேரத்தில் “இல்லை, இல்லை” என்றும் சொல்லும்படியான இந்த உலகத்தின் திட்டங்களைப் போன்றே இத்திட்டங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?

18 ஆனால் தேவனை நம்ப முடியுமானால், பிறகு நாங்கள் சொல்பவை ஒரே நேரத்தில் “ஆமாம் என்றும்” “இல்லை என்றும்” இருக்காது என நம்பமுடியும். 19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும் போதிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெறும் “ஆமாம்” மற்றும் “இல்லை” போல அல்லர். கிறிஸ்துவுக்குள் அது எல்லா காலத்திலும் “ஆமாம்” மட்டும்தான். 20 தேவனுடைய வாக்குறுதிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் “ஆம்” என்றுள்ளது. ஆகவேதான் தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் வழியாகச் சொல்லும்போது “ஆமென்”[c] என்கிறோம். 21 நீங்களும் நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்களே என்பதை தேவனே உறுதியாக்கினார். நமக்கு ஞானஸ்நானம் வழங்கியவரும் அவரே. 22 நாம் அவரைச் சார்ந்தவர் என்பதைக் காட்ட அவரே முத்திரையிட்டார். அவர் தம்முடைய ஆவியை நம் இதயத்தில் நிரப்பினார். அது அவர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதற்கான உறுதிப்பத்திரமும் நிரூபணமுமாயிற்று.

23 நான் சொல்வதெல்லாம் உண்மை. இதற்கு தேவனே சாட்சி. நான் கொரிந்து நகருக்கு வராததற்குக் காரணம் உங்களைத் தண்டிக்கக் கூடாது என்பதும் உங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதும்தான். 24 நாங்கள் உங்கள் விசுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்று நான் எண்ணவில்லை. நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலமாய் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு பணிபுரிபவர்களாக இருக்கிறோம்.

எனது அடுத்த சந்திப்பு உங்களைத் துயரப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். நான் உங்களைத் துயரப்படுத்தினால், பின்னர் யார் என்னை மகிழ்ச்சிப்படுத்துவர்? நான் துயரப்படுத்திய நீங்கள்தானே என்னை மகிழ்ச்சிப்படுத்த முடியும்? இந்தக் காரணத்துக்காகத்தான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன். அதனால் உங்களை சந்திக்கும்போது, என்னை மகிழ்ச்சிப்படுத்தப்போகும் உங்களைத் துயரப்படுத்தமாட்டேன். எனது மகிழ்ச்சியை நீங்கள் அனைவரும் பகிர்ந்துகொள்வீர்கள் என்று உறுதியாக எண்ணுகிறேன். நான் இதற்கு முன்பு உங்களுக்கு எழுதும்போது மனதில் தொல்லைகளையும், துயரங்களையும் கொண்டிருந்தேன். நான் என் கண்ணீராலேயே எழுதினேன். உங்களைத் துயரப்படுத்த வேண்டுமென்று அதை எழுதவில்லை. உங்கள் மீதுள்ள என் அளவற்ற அன்பை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவ்வாறு எழுதினேன்.

தவறு செய்தவனை மன்னியுங்கள்

உங்கள் கூட்டத்திலுள்ள ஒருவனே துயரத்துக்குக் காரணமாக இருந்தான். எனக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவரின் துயரத்துக்கும் அவனே காரணமாக இருந்தான். அதாவது, ஏதாவது ஒரு வழியில் (நான் மிகைப்படுத்த விரும்பவில்லை) எல்லாருக்கும் துயரமுண்டாக அவன் காரணமாக இருந்தான். உங்களில் பலர் அவனுக்குத் தந்த தண்டனையே போதுமானது. ஆனால் இப்பொழுது அவனை மன்னித்து ஆதரவு அளிக்க வேண்டும். அது அவனை அதிக துயரத்தில் ஆழ்ந்து போகாதபடி காக்கும். நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதனால்தான் நான் உங்களுக்கு எழுதினேன். நீங்கள் எல்லாவற்றிலும் பணிவுடன் இருக்கிறீர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன். 10 நீங்கள் யாரையாவது மன்னித்தால் அவர்களை நானும் மன்னித்துவிடுகிறேன். நான் மன்னிப்பவை அனைத்தும் (மன்னிக்கப்பட ஏதேனும் இருக்கும் பட்சத்தில்) உங்கள் பொருட்டே ஆகும். கிறிஸ்து எங்களோடு இருக்கிறார். 11 சாத்தான் என்னிடமிருந்த எதையும் வெல்ல முடியாதவகையில் இதைச் செய்தேன். சாத்தானின் சதிதிட்டங்களையும் நாம் நன்றாக அறிவோம்.

துரோவாவில் பவுலின் பணி

12 கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதற்காக நான் துரோவாவிற்குப் போனேன். கர்த்தர் அங்கு எனக்கு நல்ல வாய்ப்பினைத் தந்தார். 13 அங்கே எனது சகோதரன் தீத்துவைப் பார்க்காததால் நான் அமைதியற்று இருந்தேன். எனவே நான் அங்குள்ளவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கதோனியாவிற்குப் போனேன்.

14 தேவனுக்கு நன்றி. தேவன் எப்பொழுதும் எங்களைக் கிறிஸ்துவின் மூலம் வெற்றி பெறும்படி வழி நடத்துகிறார். இனிய மணமுள்ள வாசனைப் பொருளைப் போன்று எல்லா இடங்களிலும் தேவன் தனது அறிவைப் பரப்ப நம்மைப் பயன்படுத்துகிறார். 15 இரட்சிக்கப்படுகிறவர்களுக்கிடையிலும் கெட்டுப்போவோரிடையேயும் நாங்கள் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம். இதுவே நாங்கள் தேவனுக்குத் தரும் காணிக்கை. 16 கெட்டுப்போவோரிடையே இறப்புக்கு ஏதுவான மரணத்தின் வாசனையாக இருக்கிறோம். இட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே வாழ்க்கைக்கு ஏதுவான ஜீவ வாசனையாக இருக்கிறோம். இவைகளை செயல்படுத்தத் தகுதியானவன் யார்? 17 மற்றவர்களைப் போன்று, நாங்கள் தேவனுடைய வார்த்தையை இலாபத்துக்காக விற்பதில்லை. ஆனால் தேவனுக்கு முன்னால் கிறிஸ்துவுக்குள் உண்மையையே பேசுகிறோம். தேவனால் அனுப்பப்பட்டவர்களைப் போல் நாங்கள் பேசுகிறோம்.

புதிய உடன்படிக்கை

நாங்கள் மீண்டும் எங்களைப்பற்றியே பெருமையாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டோமா? மற்றவர்களைப் போன்று எனக்கோ அல்லது என்னிடமிருந்தோ அறிமுக நிருபங்கள் தேவையா? எங்கள் நிருபம் நீங்கள் தான். எங்கள் இதயங்களில் நீங்கள் எழுதப்பட்டிருக்கிறீர்கள். அனைவராலும் அறியப்படுகிறவர்களாகவும், வாசிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறீர்கள். கிறிஸ்துவிடமிருந்து எங்கள் மூலம் அனுப்பிய நிருபம் நீங்கள் தான் என்று காட்டிவிட்டீர்கள். இந்நிருபம் மையால் எழுதப்படவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய ஆவியால் எழுதப்பட்டுள்ளது. இது கற்பலகையின்[d] மீது எழுதப்படவில்லை. மனித இதயங்களின் மீது எழுதப்பட்டுள்ளது.

கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு முன்னால் உறுதியாக நம்புவதால் எங்களால் இவற்றைச் சொல்ல முடிகிறது. எங்களால் நல்லதாக எதனையும் செய்ய முடியும் என்று நாங்கள் கருதுவதாக அர்த்தம் இல்லை. செய்யவேண்டிய எல்லாக் காரியங்களுக்குமான வல்லமையை எங்களுக்குத் தருபவர் தேவனே ஆவார். புது உடன்படிக்கை ஊழியராக இருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர் ஆக்கினார். இந்தப் புதிய ஒப்பந்தம் வெறும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமாய் இராமல் ஆவிக்குரியதாக இருக்கிறது. எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது.

புதிய உடன்படிக்கையும் மகிமையும்

மரணத்துக்கு வழி வகுக்கும் சேவைக்குரிய பிரமாணங்கள் கற்களில் எழுதப்பட்டன. அது தேவனுடைய மகிமையோடு வந்தது. அதனால் மோசேயின் முகம் ஒளி பெற்றது. அந்த ஒளி இஸ்ரவேல் மக்களைப் பார்க்க இயலாதபடி செய்தது. அந்த மகிமை பிறகு மறைந்துபோனது. எனவே ஆவிக்குரிய சேவை நிச்சயமாக மிகுந்த மகிமையுடையதாக இருக்கும். மக்களை நியாயம் தீர்க்கிற சேவைகள் மகிமையுடையதாக இருக்கும்போது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே சீரான உறவுக்கு உதவும் சேவைகளும் மிகுந்த மகிமை உடையதாக இருக்கும். 10 பழைய சேவைகளும் மகிமைக்குரியதே. எனினும் புதிய சேவைகளால் வரும் மகிமையோடு ஒப்பிடும்போது அதன் பெருமை அழிந்துபோகிறது. 11 மறைந்து போகிறவை மகிமையுடையதாகக் கருதப்படுமானால் என்றென்றும் நிலைத்து இருப்பவை மிகுந்த மகிமையுடையதே.

12 எங்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதால் நாங்கள் தைரியமாக இருக்கிறோம். 13 நாங்கள் மோசேயைப் போன்றில்லை. அவர் தன் முகத்தை முக்காடிட்டு மூடி மறைத்துக்கொண்டார். அவரது முகத்தை இஸ்ரவேல் மக்களால் பார்க்க முடியவில்லை. அந்த வெளிச்சமும் மறைந்து போயிற்று. அவர்கள் அதன் மறைவைப் பார்ப்பதை மோசே விரும்பவில்லை. 14 ஆனால் அவர்கள் மனமும் அடைத்திருந்தது. அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுதும் கூட அந்த முக்காடு அவர்கள் பழைய ஏற்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாதபடி செய்கின்றது. அந்த முக்காடு கிறிஸ்துவால்தான் விலக்கப்படுகிறது. 15 ஆனாலும் கூட இன்று, மக்கள் மோசேயின் சட்டத்தை வாசிக்கும்போது அவர்களின் மனம் மூடிக்கொண்டிருக்கிறது. 16 ஆனால் எவனொருவன் மாற்றம் பெற்று, கர்த்தரைப் பின்பற்றுகிறானோ அவனுக்கு அந்த முக்காடு விலக்கப்படுகிறது. 17 கர்த்தரே ஆவியாய் இருக்கிறார். எங்கெல்லாம் அந்த ஆவியானவர் உள்ளாரோ அங்கெல்லாம் விடுதலை உண்டு. 18 நமது முகங்கள் மூடப்பட்டில்லை. நாமெல்லாரும் தேவனுடைய மகிமையைக் காட்டுகிறோம். நாம் அவரைப்போன்று மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நம்முள் எழும் இம்மாற்றம் மேலும், மேலும் மகிமையைத் தருகிறது. இம்மகிமை ஆவியாக இருக்கிற கர்த்தரிடமிருந்து வருகிறது.

ஆன்மாவுக்குரிய பொக்கிஷம்

தேவன் தன் கிருபையால் இந்தப் பணியை எங்களுக்குக்கொடுத்தார். ஆகையால் இதனை விட்டுவிடமாட்டோம். ஆனால் இரகசியமானதும் வெட்கப்படத்தக்கதுமான வழிகளில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் தந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. தேவனுடைய போதனைகளையும் இழிவாக்குவதில்லை. நாங்கள் உண்மையைத் தெளிவாகப் போதிக்கிறோம். நாங்கள் யார் என்பதை இப்படித்தான் மக்களுக்குப் புலப்படுத்துகிறோம். இது, நாம் தேவனுக்கு முன் எத்தகைய மக்கள் என்பதையும் அவர்கள் மனதிற்குக் காட்டுகிறது. நாம் பரப்புகிற நற்செய்தி மறை பொருளாக இருக்கலாம். ஆனால் அது கெட்டுப்போகிறவர்கட்கே மறை பொருளாய் இருக்கும். இந்த உலகத்தை ஆள்பவனாகிய[e] சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள். கிறிஸ்து மட்டுமே தேவன் போன்று இருப்பவர். நாங்கள் எங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர் என்றும் நாங்கள் இயேசுவுக்காக உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறோம். “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார்.

இப்பொக்கிஷத்தை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் நாங்களோ பொக்கிஷத்தைத் தாங்கியுள்ள மண் ஜாடிகளைப் போன்றே இருக்கிறோம். இப்பேராற்றலானது எங்களிடமிருந்து அல்ல, தேவனிடம் இருந்தே வருகிறது என்பதை இது காட்டும். எங்களைச் சுற்றிலும் தொல்லைகள் உள்ளன. ஆனால் அவற்றால் நாங்கள் தோல்வி அடையவில்லை. அவ்வப்போது செய்வது தெரியாமல் திகைக்கிறோம். ஆனால் முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடவில்லை. நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் தேவன் எங்களைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நாங்கள் தூக்கியெறியப்படுகிறோம். ஆனால் அழிந்துபோகவில்லை. 10 எங்கள் சொந்த சரீரங்களில் இயேசுவின் மரணத்தைச் சுமந்து திரிகிறோம். அதனால் எங்கள் சரீரங்களில் இயேசுவின் வாழ்வும் புலப்படவேண்டும் என்பதற்காகவே மரணத்தைச் சுமந்து திரிகிறோம். 11 நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றாலும் இயேசுவுக்காக எப்போதும் மரண ஆபத்தில் உள்ளோம். அழியும் நம் சரீரங்களில் இயேசுவின் வாழ்வைக் காணமுடியும் என்பதற்காகவே இது எங்களுக்கு நேர்ந்திருக்கிறது. 12 ஆகையால் மரணம் எங்களுக்குள் பணிபுரிகிறது; வாழ்வு உங்களுக்குள் பணிபுரிகிறது.

13 “நான் விசுவாசித்தேன், அதனால் பேசுகிறேன்”(J) என்று எழுதப்பட்டுள்ளது. எங்கள் விசுவாசமும் அத்தகையது தான். நாங்கள் விசுவாசிக்கிறோம், அதனால் பேசுகிறோம். 14 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். அதோடு இயேசுவுடன் தேவன் எங்களையும் எழுப்புவார் என்று அறிவோம். தேவன் உங்களோடு எங்களையும் ஒன்று சேர்ப்பார். நாம் அவருக்கு முன் நிற்போம். 15 இவை எல்லாம் உங்களுக்காகத்தான். ஆகையால் தேவனுடைய கிருபை, மென்மேலும் மிகுதியான மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது, மேலும் தேவனுடைய மகிமைக்காக அதிக அளவில் நன்றிகளைக் குவிக்கும்.

விசுவாசத்தால் வாழ்தல்

16 அதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனர்களாக ஆவதில்லை. எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது. 17 தற்சமயத்திற்கு சிற்சில தொந்தரவுகள் எங்களுக்கு உண்டு. எனினும் அவை, முடிவற்ற மகிமையைப் பெறவே எங்களுக்கு உதவும். அந்த முடிவற்ற மகிமையானது இந்தத் தொல்லைகளைவிட மிகப் பெரியது. 18 ஆகையால் நம்மால் காணமுடிந்தவற்றைப் பற்றியல்ல, காணமுடியாதவற்றைப் பற்றியே நாங்கள் சிந்திக்கிறோம். காணப்படுகிறவை தற்காலிகமானவை. காணப்படாதவையோ நிரந்தரமானவை.

பூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது. ஆனால் நாம் இப்பொழுது இந்த சரீரத்தால் சோர்வுற்றிருக்கிறோம். பரலோக வீட்டை தேவன் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். அது நம்மை ஆடையுள்ளவர்களைப் போலாக்கும். நாம் நிர்வாணமானவர்களைப்போல இருக்கமாட்டோம். நம் கூடாரம் போன்ற இந்த சரீரத்தில் வாழும்வரை பாரமுள்ளவர்களாய்த் துன்பப்படுகிறோம். இந்த சரீரத்தை விட்டுவிட வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால் நாம் பரலோக வீட்டால் போர்த்தப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். பிறகு அழிவடையும் இந்த சரீரம் உயிருடன் நிறைந்திருக்கும். இதற்காகத்தான் தேவன் நம்மை ஆயத்தம் செய்திருக்கிறார். ஆவி என்னும் அச்சாரத்தைத் தந்து நமக்கு புதிய வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறார்.

எனவே நாம் எப்பொழுதும் தைரியத்தோடு இருக்கிறோம். நாம் இந்த சரீரத்தில் இருக்கும் வரை கர்த்தரை விட்டு விலகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் எதை நம்புகிறோமோ அதன்படி வாழ்கிறோம். நாம் எதைப் பார்க்கிறோமோ அதன்படி வாழவில்லை. எனவேதான் நமக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்கிறேன். நாம் உண்மையாகவே இந்த சரீரத்தைவிட்டு விலகி பரலோகத்தில் கர்த்தரோடு இருக்கவே விரும்புகிறோம். தேவனைத் திருப்திப்படுத்துவதே வாழ்க்கையில் நமது ஒரே குறிக்கோள். இங்கே இந்த சரீரத்தில் வாழ்ந்தாலும் அங்கே கர்த்தரோடு இருந்தாலும் தேவனைத் திருப்திப்படுத்தவே விரும்புகிறோம். 10 நியாயந்தீர்க்கப்படுவதற்காக நாம் அனைவரும் கிறிஸ்துவின் முன்பு நிற்க வேண்டும். ஒவ்வொருவனும் அவனவனுக்குரியதைப் பெறுவான். உலகில் சரீரத்துடன் பூமியில் வசிக்கும்போது அவனவன் செய்த நன்மை அல்லது தீமைகளுக்குத் தகுந்தபடியே தீர்ப்பளிக்கப்படுவான்.

தூண்டிவிடும் தேவ அன்பு

11 கர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன பொருள் என நாம் அறிவோம். எனவே மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். உண்மையில் நாங்கள் யார் என்பது தேவனுக்குத் தெரியும். எங்களைப் பற்றி உங்கள் இதயங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன். 12 நாங்கள் மீண்டும் உங்களுக்கு எங்களை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். இப்போது வெளிப்படையாய்த் தெரியும் சில காரணங்களுக்காகத் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் சிலருக்குத் தெரிவிக்க உங்களிடம் ஒரு பதில் உள்ளது. ஒரு மனிதனின் இதயத்துக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள் அவர்கள். 13 நாங்கள் பைத்தியம் என்றால் அதுவும் தேவனுக்காகத்தான். நாங்கள் தெளிந்த, சரியான புத்தி உள்ளவர்கள் என்றால் அதுவும் உங்களுக்காகத்தான். 14 கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும். 15 கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும்.

16 எனவே, இந்த நேரத்திலிருந்து, நாங்கள் ஒருவரையும் மற்ற உலக மக்களைப் போன்று சரீரத்தில் அறியமாட்டோம். முன்பு நாங்களும் மற்றவர்களைப் போன்றே கிறிஸ்துவை சரீரத்தில் அறிந்திருந்தோம். இனிமேல் அவ்வாறு எண்ணவில்லை. 17 எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின. 18 இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தன. கிறிஸ்துவின் மூலம் தேவன் அவருக்கும் நமக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார். மக்களை சமாதானத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். 19 தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். அவருக்கும் உலகத்துக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார் என்று சொல்கிறேன். கிறிஸ்துவுக்குள், தம் பாவங்கள் குறித்து குற்ற உணர்ச்சி கொண்ட மக்களை தேவன் குற்றவாளிகளாக நிறுத்துவதில்லை. இச்சமாதானச் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு எங்களுக்குக் கொடுத்தார். 20 எனவே, கிறிஸ்துவுக்காகப் பேச நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம். எங்கள் மூலம் தேவன் உங்களை அழைக்கிறார். நாங்கள் கிறிஸ்துவுக்காகப் பேசுகிறோம். நீங்கள் அனைவரும் தேவனோடு சமாதானமாக இருக்க வேண்டுகிறோம். 21 கிறிஸ்துவிடம் பாவம் இல்லை. ஆனால் தேவன் நமக்காக அவரைப் பாவம் ஆக்கினார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார்.

நாங்கள் தேவனோடு சேர்ந்து பணியாற்றுகிறவர்கள். எனவே, தேவனிடமிருந்து நீங்கள் பெற்ற கிருபையை பயனற்ற வகையில் வீணடிக்க வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

“நான் சரியான சமயத்தில் உன்னைக் கேட்டேன்.
    இரட்சிப்புக்கான நாளில் நான் உதவி செய்தேன்”(K)

என்று தேவன் கூறுகிறார்.

அவர் சொன்ன “சரியான நேரம்” என்பது இதுதான் என்று உங்களுக்குக் கூறுகிறேன். “இரட்சிப்புக்கான நாளும்” இதுதான்.

எங்களின் பணியில் எவரும் குற்றம் கண்டு பிடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனாலும் மற்றவர்களுக்குப் பிரச்சனையாய் இருக்கும் எதையுமே நாங்கள் செய்யவில்லை. ஆனால், அனைத்து வழிகளிலும் நாங்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்பதைக் காட்டி வருகிறோம். பல கஷ்டங்களிலும், பிரச்சனைகளிலும், துன்பங்களிலும் இதனை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். நாங்கள் அடிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்படுகிறோம். மக்கள் அதிர்ச்சியடைந்து எங்களுடன் மோதுகிறார்கள். நாங்கள் கடின வேலைகளைச் செய்கிறோம். சில நேரங்களில் உணவும், உறக்கமும் இல்லாமல் இருக்கிறோம். எங்கள் அறிவினாலும், பொறுமையாலும், இரக்கத்தாலும், தூய வாழ்க்கையாலும் நாங்கள் தேவனுடைய ஊழியர்கள் எனக் காட்டிக்கொள்கிறோம். நாங்கள் இதனைப் பரிசுத்த ஆவியாலும், தூய அன்பாலும், உண்மையான பேச்சாலும் தேவனுடைய வல்லமையாலும் வெளிப்படுத்துகிறோம். எங்கள் சரியான வாழ்க்கையைப் பயன்படுத்தி எல்லாவற்றிலும் இருந்தும் எங்களைக் காத்துக்கொள்கிறோம்.

சிலர் எங்களை மதிக்கிறார்கள். மற்றும் சிலர் எங்களை அவமானப்படுத்துகிறார்கள். சிலர் எங்களைப் பற்றி நல்ல செய்திகளையும் வேறு சிலர் கெட்ட செய்திகளையும் பரப்புகிறார்கள். சிலர் எங்களைப் பொய்யர்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நாங்கள் உண்மையையே பேசுகிறோம். இன்னும் சிலருக்கு நாங்கள் முக்கியமற்றவர்கள். ஆனால் நாங்கள் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள். நாங்கள் மடிந்து போவதுபோல் இருக்கிறோம். ஆனால் தொடர்ந்து வாழ்கிறோம். நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் கொல்லப்படவில்லை. 10 எங்களுக்கு நிறைய சோகம் உண்டு. ஆனால் நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நாங்கள் ஏழைகள்தான். ஆனால் பலரைச் செல்வராக்குகிறோம். எங்களுக்கென்று எதுவுமில்லை. ஆனால் உண்மையில் எங்களுக்கு எல்லாம் இருக்கிறது.

11 கொரிந்தியர்களாகிய உங்களிடம் நாங்கள் வெளிப்படையாகப் பேசியிருக்கிறோம். எங்கள் மனதைத் திறந்து காட்டியிருக்கிறோம். 12 உங்களிடம் நாங்கள் கொண்ட அன்பு எப்பொழுதும் குறையவில்லை. அதைத் தடுத்ததும் இல்லை. ஆனால் எங்கள்மீது உங்களிடம் உள்ள அன்பே தடுக்கப்பட்டிருக்கிறது. 13 நீங்கள் எனது பிள்ளைகள் என்ற முறையில் தான் நான் பேசுகிறேன். நாங்கள் செய்வது போலவே நீங்கள் இதயங்களைத் திறந்து காட்டுவீர்களா?

கிறிஸ்தவர் அல்லாதவர்களோடு வாழ்வது எப்படி?

14 நீங்கள் விசுவாசம் இல்லாத மற்ற மக்களைப் போன்றவர்கள் அல்லர். எனவே நீங்களாகவே சென்று அவர்களோடு சேராதீர்கள். நல்லவையும் கெட்டவையும் சேரக் கூடாது. வெளிச்சமும் இருட்டும் சேர்ந்திருக்க முடியாது. 15 எப்படி கிறிஸ்துவும் சாத்தானும் உடன்பாடுகொள்ள முடியும்? ஒரு விசுவாசிக்கும், விசுவாசம் இல்லாதவனுக்கும் பொதுவாக என்ன இருக்க முடியும்? 16 தேவனுடைய ஆலயமானது வெறும் சிலைகளோடு எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்? நாம் ஜீவனுள்ள தேவன் வாழும் ஆலயங்களைப் போன்றுள்ளோம்.

“நான் அவர்களோடு வாழ்வேன்; நடப்பேன்; நான் அவர்களது தேவனாக இருப்பேன்.
அவர்களே எனது மக்களாக இருப்பார்கள்.”(L)

17 “எனவே அவர்களை விட்டுவிட்டு வெளியே வாருங்கள்.
    அவர்களிடமிருந்து தனியாக உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்.
சுத்தமில்லாத எதையும் தொடவேண்டாம்.
    நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.”(M)

18 “நான் உங்களின் பிதாவாக இருப்பேன். நீங்கள் எனது குமாரர்களாகவும்
    குமாரத்திகளாகவும் இருப்பீர்கள் என்று எல்லா வல்லமையும் கொண்ட கர்த்தர் கூறுகிறார்”(N)

என்று தேவன் கூறுகிறார்.

அன்புள்ள நண்பர்களே! தேவனிடமிருந்து இந்த வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறோம். எனவே, நாம் நம் சரீரத்தையும், ஆத்துமாவையும் அசுத்தப்படுத்தும் எதனிடமிருந்தும் முழுக்க, முழுக்க விலகி நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் நமது வாழ்க்கை முறையிலேயே மிகச் சரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் தேவனை மதிக்கிறோம்.

பவுலின் மகிழ்ச்சி

எங்களுக்காக உங்கள் இதயங்களைத் திறந்து வைத்திருங்கள். நாங்கள் யாருக்கும் தீமை செய்ததில்லை. நாங்கள் எவரது நம்பிக்கையையும் அழித்ததில்லை. எவரையும் ஏமாற்றியதில்லை. உங்களைக் குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. எங்கள் வாழ்வும் சாவும் உங்கள் உடனே இருக்கும் அளவுக்கு உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். நான் உங்களைப் பற்றி உறுதியாக உணர்கிறேன். உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்கு மிகுந்த தைரியம் கொடுக்கிறீர்கள். அதனால் அனைத்து துன்பங்களுக்கு இடையிலும் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

நாங்கள் மக்கதோனியாவுக்கு வந்தபோது எங்களுக்கு ஓய்வு இல்லாமல் இருந்தது. எங்களைச் சுற்றிலும் நெருக்கடிகள் இருந்தன. நாங்கள் வெளியே போராடிக்கொண்டும் உள்ளுக்குள் பயந்துகொண்டும் இருந்தோம். ஆனால் தேவன் துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிறார். தீத்து வந்தபோது தேவன் ஆறுதல் தந்தார். அவனது வருகையிலும், நீங்கள் அவனுக்குக் கொடுத்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதலடைந்தோம். என்னை நீங்கள் பார்க்க விரும்பியதைப் பற்றி தீத்து கூறினான். உங்களது தவறுகளுக்கு நீங்கள் வருந்தியது பற்றியும் கூறினான். என்மீது நீங்கள் கொண்ட அக்கறையைப் பற்றி அவன் சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் உங்களுக்கு எழுதிய நிருபம் ஏதேனும் வருத்தத்தை தந்திருக்குமானால் அதை எழுதியதற்காக நான் இப்பொழுது வருத்தப்படவில்லை. அந்நிருபம் உங்களுக்கு வருத்தத்தை தந்தது என அறிவேன். அதற்காக அப்பொழுது வருந்தினேன். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான் உங்களுக்குத் துயரத்தைத் தந்தது. இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது நீங்கள் துயரப்படும்படி ஆனதால் அன்று. அத்துயரம் உங்கள் இதயங்களை மாற்றியதற்காக நான் மகிழ்கிறேன். தேவனுடைய விருப்பப்படியே நீங்கள் துக்கப்பட்டீர்கள். எனவே நீங்கள் எங்களால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. 10 தேவனுடைய விருப்பப்படி நேரும் வருத்தம் ஒருவனது இதயத்தை மாற்றி, வாழ்வையும் மாற்றுகிறது. அவனுக்கு இரட்சிப்பையும் தருகிறது. அதற்காக வருத்தப்படவேண்டாம். ஆனால் உலகரீதியிலான துயரங்களோ மரணத்தை வரவழைக்கின்றது. 11 தேவனின் விருப்பப்படியே நீங்கள் வருத்தம் அடைந்தீர்கள். இப்பொழுது அவ்வருத்தம் உங்களுக்கு எதைக் கொண்டு வந்தது என்று பாருங்கள். அது உங்களிடம் ஜாக்கிரதையை உருவாக்கியது. குற்றமற்றவர்கள் என உங்களை நிரூபிக்கத் தூண்டியது. அது கோபத்தையும், பயத்தையும் தந்தது. அது என்னைக் காணத் தூண்டியது. அது உங்களை அக்கறை கொள்ளச் செய்தது. அது நல்லவற்றைச் செய்ய ஒரு காரணமாயிற்று. இக்காரியத்தில் எவ்விதத்திலும் நீங்களும் குற்றம் இல்லாதவர்கள் என்று உங்களை நிரூபித்துக்கொண்டீர்கள். 12 நான் உங்களுக்கு நிருபம் எழுதியதின் காரணம் ஒருவன் தவறு இழைத்துவிட்டான் என்பதாலல்ல, அதேபோல ஒருவன் பாதிக்கப்பட்டுவிட்டான் என்பதாலும் உங்களுக்கு நிருபம் எழுதவில்லை. தேவனுக்கு முன்பாக உங்களுக்காக நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் காணும்பொருட்டே அப்படி எழுதினேன். இதனால்தான் நாங்கள் ஆறுதலடைந்தோம். 13 நாங்கள் மிகவும் ஆறுதலடைந்தோம்.

தீத்து மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்து நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம். அவன் நலமடைய நீங்கள் அனைவரும் உதவினீர்கள். 14 உங்களைப் பற்றி தீத்துவிடம் பெருமையாகச் சொன்னவை அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு நாங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகும். 15 நீங்கள் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறீர்கள். இதை நினைத்து தீத்து உங்கள் மீது உறுதியான அன்பைக் கொண்டிருக்கிறான். நீங்கள் அவனைப் பயத்தோடும் மரியாதையோடும் ஏற்றுக்கொண்டீர்கள். 16 நான் உங்களை முழுமையாக நம்பலாம் என்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கிறிஸ்தவர்களின் கொடுக்கும் தன்மை

சகோதர சகோதரிகளே இப்போது மக்கதோனியா சபைகளுக்கு தேவன் காட்டிய கிருபையைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அந்த விசுவாசிகள் பெருந்தொல்லைகளால் சோதிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் ஏழை மக்கள். ஆனால் தமக்குண்டான மிகுந்த மகிழ்ச்சியால் அவர்கள் அதிகமாகக் கொடுத்தார்கள். தம்மால் முடிந்த அளவு அவர்கள் கொடுத்தார்கள் என்று என்னால் சொல்ல முடியும். அந்த விசுவாசிகள் தங்களால் முடிந்த அளவுக்கும் மீறி கொடுத்தார்கள். இதனை அவர்கள் சுதந்தரமாகச் செய்தனர். எவரும் அவர்களை அவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தவில்லை. ஆனால் அவர்கள் மீண்டும், மீண்டும் எங்களைக் கேட்டார்கள். தேவனுடைய மக்களுக்கான சேவையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப வேண்டினர். நாம் எதிர்பார்த்திராத வகையில் அவர்கள் கொடுத்தார்கள். அவர்கள் தம் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால் கர்த்தருக்கும் எங்களுக்கும் தம்மையே கொடுத்தார்கள். இதைத்தான் தேவனும் விரும்புகிறார்.

எனவே தீத்து இந்த நல்ல காரியத்தைத் தொடங்கினபடியே முடிக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். நம்பிக்கையிலும், பேச்சிலும், அறிவிலும், உண்மை விருப்பத்தோடு உதவுவதிலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் நீங்கள் செல்வந்தராய் இருக்கிறீர்கள். இந்த கொடுக்கும் நற்காரியத்திலும் நீங்கள் செல்வந்தராய் இருக்க வேண்டும்.

கொடுக்க வேண்டுமென்று உங்களுக்குக் கட்டளையிடவில்லை, ஆனால் உங்கள் அன்பு உண்மையான அன்பென்று நாங்கள் பார்க்க விரும்புகிறோம். மற்றவர்களும் உண்மையில் உதவ விரும்புவதை உங்களுக்குக் காட்டவே இதைச் செய்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்து தேவனோடு செல்வந்தராயிருந்தார். ஆனால் உங்களுக்காக அவர் ஏழையானார். அதன் மூலம் அவர் உங்களைச் செல்வந்தர்களாக்க விரும்பினார்.

10 உங்கள் நன்மைக்காகவே நீங்கள் இதைச் செய்ய வேண்டுமென நான் சொல்ல விரும்புகிறேன். சென்ற ஆண்டில் கொடுக்க விரும்பியதில் நீங்களே முதலாவதாக இருந்தீர்கள். அது போல் கொடுப்பதிலும் முதலாவதாக இருந்தீர்கள். 11 எனவே, இப்பொழுது தொடங்கிய செயலை முடித்துவிடுங்கள். பிறகு உங்கள் செயலானது உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக அமையும். உங்களிடம் இருப்பதைக் கொடுங்கள். 12 நீங்கள் விரும்பிக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். உங்களது கொடுத்தலானது உங்களிடம் இல்லாததை வைத்து தீர்மானிக்கப்படாது; இருப்பதைக்கொண்டே தீர்மானிக்கப்படும். 13 மற்றவர்கள் சௌகரியமாக இருக்கையில் நீங்கள் மட்டும் தொல்லைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 14 இப்பொழுது உங்களிடம் நிறைய உள்ளது. அவற்றைத் தேவையானவர்களுக்குக் கொடுங்கள். அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவார்கள். இப்படியே எல்லாம் சமமாகும்.

15 “அதிகமாகச் சேர்த்தவன் எவனும் அதிகமாக வைத்திருப்பதில்லை.
குறைவாக சேர்த்தவன் எவனும் குறைவுடன் இருப்பதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.(O)

தீத்துவும் அவனது குழுவும்

16 உங்கள் மீது எனக்கிருக்கும் அன்பைப் போலவே தீத்துவின் இதயத்திலும் அன்பைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவன் என்னைப் போலவே உங்களிடம் அன்பாய் இருக்கிறான். 17 நாங்கள் செய்யச் சொன்னதையெல்லாம் தீத்து ஏற்றுக்கொண்டான். அவன் உங்களிடம் வர பெரிதும் விரும்பினான். இது அவனது சொந்த முயற்சியே ஆகும். 18 நாங்கள் தீத்துவோடு ஒரு சகோதரனையும் அனுப்பி வைத்தோம். அச்சகோதரன் அனைத்து சபைகளாலும் அவனது சிறப்பான ஊழியத்துக்காகப் பாராட்டப்படுகிறவன். 19 அதோடு, இக்காணிக்கைப் பணத்தை சுமந்துச் செல்லும்போது எங்களுக்குத் துணையாக இருக்க சபைகளால் நியமிக்கப்பட்டவனே இச்சகோதரன் ஆவான். தேவனுக்கு மகிமை உண்டாகவே நாங்கள் இச்சேவையைச் செய்ண்டிருக்கிறோம். சேவை செய்யும் எங்கள் விருப்பத்தைப் புலப்படுத்தவும் இதைச் செய்கிறோம்.

20 இப்பெரிய தொகையை கையாள்வது குறித்து நாங்கள் கொள்ளும் அக்கறைகளைப் பற்றி யாரும் விமர்சனம் செய்துவிடக் கூடாது எனக் கூடுமான வரையில் எச்சரிக்கையாய் உள்ளோம். 21 சரியானவற்றைச் செய்யவே நாங்கள் முயல்கிறோம். தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல. மக்களுக்கு முன்பாகவும் நேர்மையாகப்படுவதை மட்டுமே செய்ய விரும்புகிறோம்.

22 இவர்களோடு எங்கள் சகோதரனையும் அனுப்புகிறோம். அவன் எப்பொழுதும் உதவத் தயாராய் இருப்பான். பல வழிகளில் அவன் இதை நிரூபித்திருக்கிறான். உங்கள் மீது அதிக அளவு நம்பிக்கை கொண்டிருப்பதால் அதிக அளவில் உதவ அவன் விரும்புகிறான்.

23 தீத்துவைப் பற்றிக் கூறுவதானால், அவன் எனது கூட்டாளி. உங்களுக்கு உதவுவதற்காக என்னோடு பணிபுரிபவன். மற்ற சகோதரர்களைப் பற்றி கூறுவதானால் அவர்கள் சபைகளால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குப் புகழ் சேர்த்தவர்கள். 24 எனவே, உங்களது உண்மையான அன்பை அவர்களுக்குக் காட்டுங்கள். ஏன் உங்களை நினைத்துப் பெருமைப் பாராட்டுகிறோம் என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். பிறகு எல்லா சபைகளும் இதைப் பார்க்க முடியும்.

உடன் கிறிஸ்தவர்களுக்கு உதவுதல்

தேவனுடைய மக்களுக்கு செய்ய வேண்டிய இந்த உதவி பற்றி உங்களுக்கு நான் அதிகமாக எழுத வேண்டிய தேவையில்லை. நீங்கள் உதவ விரும்புவதை நான் அறிவேன். மக்கதோனியா மக்களிடம் நான் இதைப்பற்றிப் பெருமையாகப் பேசி இருக்கிறேன். அகாயாவிலுள்ள நீங்கள் உதவி செய்ய ஓராண்டாகத் தயாராய் உள்ளீர்கள் என்பதைக் கூறி இருக்கிறேன். உங்களது உற்சாகம் இங்குள்ள பலரையும் தூண்டியது. ஆனால் நான் சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். இக்காரியத்தில் உங்களைப் பற்றி நாங்கள் சொன்ன பாராட்டுகள் பொய்யாகப் போகாமல் நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தமாக இருங்கள். நான் சில மக்கதோனியர்களோடு அங்கே வரும்போது நீங்கள் தயாராய் இல்லாமல் இருந்தீர்களெனில் அதனால் எனக்கு மிகவும் வெட்கம் உண்டாகும். ஏனென்றால் உங்களைப் பற்றி அவ்வளவு உறுதியாகக் கூறியிருக்கிறேன். (அது உங்களுக்கும் அவமானத்தைத் தரும்.) ஆகையால் நாங்கள் வருவதற்கு முன்னரே எங்கள் சகோதரர்களை உங்களிடம் அனுப்பி வைப்பது அவசியம் என்று நினைத்தேன். நீங்கள் ஏற்கெனவே சொன்னபடி விருப்பமுடன் பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அச்சகோதரர்கள் அவற்றைச் சேர்த்துத் தயாராக வைத்திருப்பர்.

“கொஞ்சமாக விதைக்கிறவன் கொஞ்சமாகவே அறுவடை செய்வான். மிகுதியாக விதைக்கிறவனோ மிகுதியாகவே அறுவடை செய்வான்” என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொருவனும், தன் இதயத்தில் எதைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறானோ அதைக் கொடுப்பானாக. கொடுப்பதுப்பற்றி எவருக்காவது வருத்தம் ஏற்படுமானால் அவன் கொடுக்காமலேயே இருக்கட்டும். கட்டாயத்தின் பேரில் எவரும் கொடுக்கவேண்டாம். மகிழ்ச்சியோடு கொடுப்பவனையே தேவன் அதிகமாக நேசிக்கிறார். அவர்களுக்குத் தேவைக்கு மிகுதியான ஆசீர்வாதத்தை தேவனால் கொடுக்க முடியும். பிறகு உங்களிடமும் ஏராளமான செல்வம் சேரும். ஒவ்வொரு நற்செயலுக்கும் கொடுக்கப் போதுமான செல்வம் உங்களிடம் இருக்கும்.

“அவன் தாராளமாக ஏழைகளுக்குக் கொடுக்கிறான்.
    அவனுடைய கருணை என்றென்றும் தொடர்ந்து நிற்கும்.”(P)

என்று எழுதப்பட்டுள்ளது.

10 தேவனே விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறார். உண்பதற்கு அவரே அப்பத்தையும் கொடுக்கிறார். அவர் ஆன்மாவிற்குரிய விதையைக் கொடுப்பார். அதனை வளர்க்கவும் செய்வார். உங்களது நீதியினிமித்தம் சிறந்த அறுவடையையும் பெருகச் செய்வார். 11 தாராளமாய்க் கொடுக்கும் அளவுக்கு எல்லா வகையிலும் தேவன் உங்களைச் செல்வந்தர் ஆக்குவார். நீங்கள் எங்கள் மூலமாகக் கொடுத்தால் மக்கள் தேவனுக்கு நன்றி சொல்வர்.

12 தேவைப்படும் தேவனுடைய மக்களுக்கு நீங்கள் உதவி செய்வது பெரும் சேவையாகும். இதற்கு இணையானது வேறில்லை. தேவனுக்கு அளவு கடந்த நன்றிகளை இது கொண்டு வரும். 13 நீங்கள் செய்யும் இச்சேவையானது உங்கள் விசுவாசத்திற்கான நல்ல சாட்சியாகும். இதற்காக மக்கள் தேவனைப் பாராட்டுவர். நீங்கள் விசுவாசிப்பதாக ஒத்துக்கொள்ளும் கிறிஸ்துவின் நற்செய்தியை நீங்கள் பின்பற்றுவதால் மக்கள் அவருக்கு நன்றி சொல்வார்கள். ஏனெனில் அவர்களின் தேவைகளிலும் ஒவ்வொருவரின் தேவைகளிலும் நீங்கள் தாராளமாகப் பங்கு கொள்கிறீர்கள். 14 அந்த மக்கள் தேவனிடம் ஜெபிக்கும்போது, அவர்கள் உங்களோடு இருக்கவே விரும்புவர். ஏனென்றால் தேவன் உங்களுக்கு மிகுதியாகக் கிருபை செய்திருக்கிறார். 15 தேவன் அருள்செய்த விளக்க இயலாத வியக்கத்தக்க கிருபைக்காக நன்றி செலுத்துவோமாக.

பவுலும்-தேவசபையும்

10 நான் பவுல். உங்களை வேண்டிக்கொள்கிறேன். கிறிஸ்துவின் கருணையோடும், சாந்தத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களோடு இருக்கும்போது தாழ்மையுடையவனாகவும் உங்களைவிட்டுத் தூரமாயிருக்கும்போது உங்கள் மேல் கண்டிப்புடனும் இருப்பதாகச் சிலர் என்னிடம் கூறுகிறார்கள். நாங்கள் உலக நடைமுறைப்படி வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கின்றனர். அங்கு வரும்போது அவர்களிடம் நான் தைரியமாக இருக்கவேண்டும். நான் அங்கு வரும்போது, உங்களிடம் கண்டிப்பாய் அந்த தைரியத்தைப் பயன்படுத்தாதபடிக்கு இருக்க நான் பிரார்த்திக்கிறேன். நாம் மனிதர்கள். ஆனால் உலகம் போரிடும் முறையைப் போலவே போரிடுவதில்லை. உலகத்தார் பயன்படுத்தும் ஆயுதங்களிருந்து முற்றிலும் மாறான வேறுவகையான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம். நமது ஆயுதங்களுக்கான சக்தியைத் தேவனிடமிருந்து பெறுகிறோம். இவை பகைவர்களின் வலிமையான இடங்களை அழித்துவிடும். நாம் மக்களின் விவாதங்களை அழிக்கிறோம். தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம். அடிபணியாத எவரையும் தண்டிக்கத் தயாராக இருக்கிறோம். முதலில் நீங்கள் முழுமையாக அடிபணியுமாறு விரும்புகிறோம்.

உங்களுக்கு முன்னாலுள்ள உண்மைகளை நீங்கள் கவனித்துகொள்ள வேண்டும். ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நம்புவானேயானால் பிறரைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால் உங்களைத் தூக்கியெறிய இந்த அதிகாரத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை. உங்களை பலப்படுத்தவே கொடுத்திருக்கிறார். அதனால் அதுபற்றி பெருமைப்பட்டுக்கொள்ள நான் வெட்கப்படவில்லை. இந்த நிருபத்தின் மூலம் உங்களைப் பயமுறுத்துகிறவனாய் நான் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 10 ஆனால் சிலரோ, “பவுலின் நிருபங்கள் பலமுள்ளவை; மிகவும் முக்கியமானவை. ஆனால் அவன் எங்களோடு இருக்கும்போது பலவீனனாக இருக்கிறான். அவன் பேச்சு எந்தப் பயனையும் விளைவிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். 11 “நாங்கள் இப்பொழுது அங்கே உங்களோடு இல்லை. அதனால் நிருபத்தின் மூலம் பேசுகிறோம். ஆனால் நாங்கள் உங்களோடு இருக்கும்போதும் நிருபத்தில் உள்ளது போலவே செயல்படும் அதிகாரத்துடன் இருப்போம்” என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

12 தம்மைத் தாமே முக்கியமானவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் குழுவுடன் சேர நாங்கள் விரும்பவில்லை. எங்களை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பமாட்டோம். அவர்களைப் போன்று ஆகவும் விரும்பமாட்டோம். அவர்கள் தங்களைக்கொண்டே தங்களை அளக்கிறார்கள். தங்களைக்கொண்டே தங்களை ஒப்பிடுகின்றனர். அவர்கள் அறிவுள்ளவர்கள் அல்ல.

13 எங்களுக்குத் தரப்பட்ட வேலைகளின் அளவை மீறி எப்போதும் பெருமைபேசிக்கொள்ளமாட்டோம். தேவன் எங்களுக்குக் கொடுத்த பணியின் அளவிற்கே பெருமை கொள்ளுகிறோம். உங்கள் நடுவில் இதுவும் எங்கள் வேலைகளுள் ஒன்றாக இருக்கிறது. 14 அளவுமீறி பெருமை பேசித் திரிபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் உங்களிடம் வராமல் இருந்திருந்தால் எங்களைப் பற்றி அளவுக்கு மீறி பெருமை பேசி இருப்போம். ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியோடு உங்களிடம் வந்தோம். 15 மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு எங்கள் அளவைக் கடந்து பெருமை பாராட்டமாட்டோம். உங்கள் விசுவாசம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் உங்களிடையே எங்கள் வேலையானது மென்மேலும் வளர்ச்சியடைய நீங்கள் உதவுவீர்கள் என்றும் நம்புகிறோம். 16 உங்கள் இருப்பிடத்துக்கு அப்பாலும் நாங்கள் நற்செய்தியைப் பரப்ப விரும்புகிறோம். மற்றவர்களால் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டதை எங்களால் செய்யப்பட்டதாகக் கூறி பெருமைப்படமாட்டோம். 17 ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.”(Q) 18 தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.

பவுலும்-போலி அப்போஸ்தலர்களும்

11 நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். எனினும் கிறிஸ்துவிடமுள்ள உங்கள் முழு அர்ப்பணிப்பில் இருந்து விலகும்படி உங்கள் மனம் கெடுக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். பாம்பின் (சாத்தான்) தந்திர வழிகளின் மூலம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் நேரும். நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள்.

மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.

நான் உங்களுக்கு இலவசமாக தேவனுடைய நற்செய்தியைப் போதித்திருக்கிறேன். உங்களை உயர்த்துவதற்காக நான் பணிந்துபோயிருக்கிறேன். அதனைத் தவறு என்று எண்ணுகிறீர்களா? உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன். நான் உங்களோடு இருக்கும்போது, எனது தேவைகளுக்காக உங்களைத் துன்புறுத்தியதில்லை. எனக்கு தேவையானவற்றையெல்லாம் மக்கதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்தனர். எந்த வகையிலும் நான் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இனிமேலும் பாரமாக இருக்கமாட்டேன். 10 இதைப் பற்றி நான் பெருமைபட்டுக்கொள்வதை அகாயாவிலுள்ள[f] எவரும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை நான் என்னோடு இருக்கிற கிறிஸ்துவின் சத்தியத்தைக்கொண்டு கூறுகிறேன். 11 உங்களுக்குப் பாரமாயிருக்க விரும்பவில்லை என்று ஏன் கூறுகிறேன். உங்கள் மீது எனக்கு அன்பில்லையா? உண்டு. அதைப்பற்றி தேவன் நன்கு அறிவார்.

12 நான் இப்பொழுது செய்வதைத் தொடர்ந்து செய்வேன். ஏனென்றால் எங்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் தேடுகிறவர்களுக்குக் காரணம் கிடைக்கக் கூடாது. தம் வேலையைப் பற்றிப் பெருமை பேசுகிறவர்கள் தம் வேலையை நம் வேலையைப் போன்ற ஒன்றாகச் சொல்லிக்கொள்ள விரும்புவார்கள். 13 அப்படிப்பட்டவர்கள் உண்மையான அப்போஸ்தலர்கள் அல்லர்; பொய் நிறைந்த பணியாளர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தர்களின் வேடத்தைத் தரித்துக்கொள்ளுகிறார்கள். 14 இது எங்களை வியப்படையச் செய்யவில்லை. ஏனென்றால், சாத்தானே ஒளியின் தூதனாக[g] மாறுவேடம் அணிந்திருக்கிறான். 15 எனவே சாத்தானின் வேலைக்காரர்கள் நீதியின் வேலைக்காரர்களைப் போன்று வேடமிடுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இவர்கள் இறுதியில் தங்கள் செயலுக்காகத் தண்டிக்கப்படுவர்.

Footnotes

  1. 1 கொரி 7:38 இன்னொரு மொழிபெயர்ப்பு: 36 தான் தன் கன்னிக்கு நியாயம் செய்யவில்லை என்று ஒருவன் நினைக்கலாம். அப்பெண் திருமணத்துக்குரிய நல்ல வயதைத் தாண்டியிருக்கலாம். எனவே அவன் அவளை மணந்துகொள்ள எண்ணலாம். அவன் விரும்புவதைச் செய்யலாம். அவர்கள் மணந்துகொள்ளலாம். இதில் பாவமில்லை. 37 ஆனால் அடுத்தவர்களுக்கு அவன் மனம் பற்றிய உறுதி இருக்கவேண்டும். அங்கு திருமணத்திற்குத் தேவை இல்லாமல் இருந்தால் அவன் செய்வதில் சுதந்திரம் உள்ளது. அவன் மனமாற அக்கன்னிப் பெண்ணைத் திருமணமாகாமல் வைத்திருக்க எண்ணினால் அவன் சரியானவற்றையே செய்யவேண்டும். 38 எனவே ஒருவன் கன்னியை மணந்துகொள்வதும் சரியே.
  2. 1 கொரி 11:20 கர்த்தரின் திருவிருந்து இயேசு தன் நினைவாக உண்ண வேண்டும் என்று தன் சீடர்களிடம் சொன்னது. லூக்கா 22:14-20.
  3. 2 கொரி 1:20 ஆமென் ஆமென் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று பொருள்.
  4. 2 கொரி 3:3 கற்பலகை தேவன் மோசேக்கு கொடுத்தச் சட்டம். அது கற்பலகையில் எழுதப்பட்டிருந்தது. யாத். 24:12; 25:16.
  5. 2 கொரி 4:4 ஆள்பவன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.
  6. 2 கொரி 11:10 அகாயா கொரிந்து இருந்த கிரேக்கத்தின் தென்பகுதி.
  7. 2 கொரி 11:14 ஒளியின் தூதன் தேவனுடைய தூதுவன் போல சாத்தான் மக்களை ஏமாற்றி தன்னை தேவனிடமிருந்து வந்ததாக எண்ணச் செய்தான்.