Add parallel Print Page Options

இயேசுவைப்பற்றி யோவான்

(மத்தேயு 3:1-12; மாற்கு 1:2-8; லூக்கா 3:1-9,15-17)

19 எருசலேமிலுள்ள யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடம் அனுப்பி வைத்தார்கள். “நீர் யார்?” என்று கேட்பதற்காக அவர்களை யூதர்கள் அனுப்பினர். 20 யோவான் அவர்களிடம் தாராளமாகப் பேசினான். அவன் பதில் சொல்ல மறுக்கவில்லை. “நான் கிறிஸ்து அல்ல” என்று யோவான் தெளிவாகக் கூறினான். இது தான் அவன் மக்களிடம் சொன்னது.

21 “பிறகு நீர் யார்? நீர் எலியாவா?” என்று மேலும் யூதர்கள் யோவானிடம் கேட்டார்கள். “இல்லை. நான் எலியா இல்லை” என்று யோவான் பதிலுரைத்தான்.

“நீர் தீர்க்கதரிசியா?” என யூதர்கள் கேட்டனர்.

“இல்லை. நான் தீர்க்கதரிசி இல்லை” என்றான் யோவான்.

22 “நீர் யார்? உம்மைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் சொல்வதற்கென்று ஒரு பதில் சொல்லுங்கள். உம்மைப்பற்றி நீர் என்ன சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.

23 யோவான் அவர்களிடம் தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளைச் சொன்னான்.

“வனாந்தரத்தில் சத்தமிடுகிறவனின் ஓசையாக நான் இருக்கிறேன்.
    ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்.’”(A)

24 யூதர்களான இவர்கள் பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்டிருந்தனர். 25 “நீர் கிறிஸ்து அல்ல என்று கூறுகிறீர். நீர் எலியாவோ தீர்க்கதரிசியோ அல்ல என்றும் கூறுகிறீர். பின்னர் நீர் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்?” என அவர்கள் யோவானிடம் கேட்டார்கள்.

26 “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால் உங்களோடு இங்கே இருக்கிற ஒருவர் உங்களால் அறியப்படாதவராக இருக்கிறார். 27 அந்த ஒருவர்தான் எனக்குப் பின்னால் வருகிறவர். அவரது செருப்பின் வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவன் நான்” என்று யோவான் பதிலுரைத்தான்.

28 இந்நிகழ்ச்சிகள் யாவும் யோர்தான் ஆற்றின் அக்கரையில் உள்ள பெத்தானியாவில் நடைபெற்றன. இங்கேதான் யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

Read full chapter