மத்தேயு 10:5-15
Tamil Bible: Easy-to-Read Version
5 இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம், “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 7 நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 8 நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இவ்வல்லமைகளை உங்களுக்குத் தாராளமாய் வழங்குகிறேன். எனவே, மற்றவர்களுக்குத் தாராளமாய் உதவுங்கள். 9 உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள். 10 பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும்.
11 “நீங்கள் ஒரு நகரத்திலோ ஊரிலோ நுழையும்பொழுது, தகுதிவாய்ந்த மனிதரைக் கண்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லும்வரை அவருடன் தங்கி இருங்கள். 12 நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள். 13 அவ்வீட்டில் உள்ளவர்கள் உங்களை வரவேற்றால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நீங்கள் அவர்களுக்கு விரும்பிய சமாதானம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். வீட்டிலுள்ளவர்கள் உங்களை வரவேற்காவிட்டால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுக்கு நீங்கள் விரும்பிய சமாதானத்தைத் திரும்பப் பெறுங்கள். 14 ஒரு வீட்டிலுள்ளவர்களோ அல்லது நகரத்திலுள்ளவர்களோ உங்களை வரவேற்கவோ அல்லது உங்கள் பேச்சைக் கேட்கவோ மறுத்தால், அவ்விடத்தை விட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்த தூசியைத் தட்டிவிடுங்கள். 15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நியாயத்தீர்ப்பு நாளிலே சோதாம் மற்றும் கொமோரா ஆகிய ஊர்களுக்கு நேர்ந்ததைக் காட்டிலும் மோசமானது அவ்வூருக்கு நடக்கும்.
Read full chapter2008 by Bible League International