மத்தேயு 9:18-26
Tamil Bible: Easy-to-Read Version
மரித்த பெண் உயிரடைதல், நோயாளிப் பெண் சுகமடைதல்
(மாற்கு 5:21-43; லூக்கா 8:40-56)
18 இயேசு இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபொழுது, யூத ஆலயத் தலைவன் ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவை வணங்கி, “என் குமாரத்தி சற்றுமுன் இறந்துவிட்டாள். ஆனாலும், நீர் வந்து உமது கையால் அவளைத் தொடும். அவள் மீண்டும் உயிர் பிழைப்பாள்” என்றான்.
19 உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள்.
20 அப்பொழுது பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதியுற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் இயேசுவின் பின் வந்து அவரது மேலங்கியின் நுனியைத் தொட்டாள். 21 அந்தப் பெண், “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள்.
22 இயேசு திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து அவளிடம், “பெண்ணே, மகிழ்ச்சியாயிரு. நீ சுகமாக்கப்பட்டாய். ஏனென்றால், நீ விசுவாசித்ததினால் குணமாக்கப்பட்டாய்” என்றார். உடனே அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள்.
23 இயேசு அந்தத் தலைவனுடன் தொடர்ந்து சென்று, அவனது வீட்டிற்குள் சென்றார். சரீர அடக்கத்திற்கான இசை இசைப்போரை இயேசு அங்கு கண்டார். அந்தச் சிறுமி இறந்துவிட்டதனால், அழுதுகொண்டிருந்த பலரையும் இயேசு கண்டார். 24 இயேசு, “விலகிச் செல்லுங்கள். இச்சிறுமி இறக்கவில்லை. இவள் தூக்கத்திலிருக்கிறாள்” என்று சொன்னார். அதைக் கேட்ட அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். 25 அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இயேசு சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். இயேசு சிறுமியின் கரத்தைப் பிடித்தார். சிறுமி எழுந்து நின்றாள். 26 இச்செய்தி அத்தேசம் முழுவதும் பரவியது.
Read full chapter2008 by Bible League International