Bible in 90 Days
மோவாப் பற்றிய செய்தி
48 இது மோவாபைப் பற்றிய செய்தி. இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறது:
“நேபோ மலைக்கு கேடு வரும்.
நேபோ மலை அழிக்கப்படும்.
கீரியாத் தாயீம் தாழ்மைப்படும்.
இது கைப்பற்றப்படும்.
பலமான இடம் தாழ்மைப்படும்.
இது நொறுக்கப்படும்.
2 மோவாப் மீண்டும் பாராட்டப்படாது.
மோவாபின் தோல்விக்கு எஸ்போனின் ஆட்கள் திட்டமிடுவார்கள்.
அவர்கள், ‘வா, அந்த நாட்டிற்கு ஒரு முடிவு செய்வோம்’ என்று சொல்வார்கள்.
மத்மேனே, நீ மௌனமாக்கப்படுவாய்.
பட்டயம் உன்னைத் துரத்தும்.
3 ஒரோனாயிமிலிருந்து வரும் கதறல்களைக் கேள்.
அவை குழப்பமும் பேரழிவுமுள்ள கதறல்களாக இருக்கும்.
4 மோவாப் அழிக்கப்படும்.
அவளது சிறு குழந்தை உதவிக்காக அழும்.
5 மோவாபின் ஜனங்கள் லூகித்துக்குச் செல்லும் பாதையில் செல்வார்கள்.
அவர்கள் போகும் போது மிக மோசமாக அழுதுக்கொண்டிருப்பார்கள்.
ஒரோனாயிமுக்குச் செல்லும் இறக்கமான பாதையில்
வேதனை மற்றும் துன்பத்தின் அழுகையொலி கேட்கலாம்.
6 ஓடுங்கள்! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்!
வனாந்தரத்தில் காற்றில் அடித்துச்செல்லும் முட்செடியைப் போல ஓடுங்கள்!
7 “நீங்கள் உங்களால் செய்யப்பட்ட பொருளின் மீதும், உங்கள் செல்வத்தின்மீதும் நம்பிக்கை வைத்தீர்கள்.
எனவே, நீங்கள் கைப்பற்றப்படுவீர்கள்.
கேமோஷ் தெய்வம் சிறையெடுக்கப்படும்.
அதனோடு அதன் ஆசாரியர்களும் அதிகாரிகளும் கொண்டு செல்லப்படுவார்கள்.
8 ஒவ்வொரு பட்டணத்துக்கு எதிராகவும் அழிக்கிறவன் வருவான்.
ஒரு பட்டணம் கூட தப்பிக்காது.
பள்ளத்தாக்கு அழிக்கப்படும்.
மேட்டு நிலமும் அழிக்கப்படும்.
இது நிகழும் என்று கர்த்தர் சொன்னார்.
எனவே, இது நடக்கும்.
9 மோவாபின் வயல்களின் மேல் உப்பைத் தூவுங்கள்.
அந்நாடு காலியான வனாந்தரமாகும்.
மோவாபின் பட்டணங்கள் காலியாகும்.
அவற்றில் ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.
10 கர்த்தர் சொல்வதின்படி ஒருவன் செய்யாவிட்டால்,
அவரது பட்டயத்தைப் பயன்படுத்தி அந்த ஜனங்களைக் கொல்லாவிட்டால் பிறகு அந்த மனிதனுக்கு தீயக் காரியங்கள் நிகழும்.
11 “மோவாப் என்றைக்கும் துன்பங்களை அறிந்ததில்லை.
மோவாப் அடியில் தங்கும் படிவிட்ட திராட்சைரசத்தைப் போன்றது.
அது ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படாமல் இருந்தது.
அது சிறைபிடிக்கப்படாமல் இருந்தது.
அது முன்புப் போலவே சுவைக்கப்பட்டது.
அதன் வாசனை மாறாமல் இருக்கிறது.”
12 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்,
“ஆனால் நான் விரைவில் உங்களை
உங்கள் பாத்திரத்திலிருந்து ஊற்றி ஆட்களை அனுப்புவேன்.
பிறகு அவர்கள் அப்பாத்திரங்களைக் காலிச் செய்து
உடைத்துப் போடுவார்கள்.”
13 பிறகு மோவாப் ஜனங்கள் தம் கேமோஷ் எனும் அந்நிய தெய்வத்துக்காக அவமானம் அடைவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அந்த அந்நிய தெய்வத்தை பெத்தேலில் நம்பினார்கள். அந்த அந்நிய தெய்வம் உதவி செய்யவில்லை என்று இஸ்ரவேல் ஜனங்கள் வெட்கப்பட்டனர். மோவாபும் அது போலாகும்.
14 “உங்களால், ‘நாங்கள் நல்ல வீரர்கள்.
போரில் நாங்கள் தைரியமான ஆட்கள்’ என்று சொல்ல முடியாது.
15 பகைவர்கள் மோவாபைத் தாக்குவார்கள்.
பகைவர்கள் அப்பட்டணங்களுக்குள் நுழைந்து அவற்றை அழிப்பார்கள்.
அவளது சிறந்த இளைஞர்கள் வெட்டப்படுவார்கள்”
இந்த வார்த்தை அரசரிடமிருந்து வந்தது.
அந்த அரசனின் நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
16 “மோவாபின் முடிவு அருகில் உள்ளது.
மோவாப் விரைவில் அழிக்கப்படும்.
17 மோவாபைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்கின்ற ஜனங்களாகிய நீங்கள் அந்நாட்டிற்காக அழுவீர்கள்.
மோவாப் எவ்வளவு புகழுடையதாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.
எனவே அதற்காக அழுங்கள்.
‘ஆள்வோனின் வல்லமை உடைக்கப்பட்டது.
மோவாபின் வல்லமையும் மகிமையும் போய்விட்டன’ என்று சோகப் பாட்டைப் பாடுங்கள்.
18 “தீபோனில் வாழ்கின்ற ஜனங்களே,
உங்களது மகிமையுள்ள இடத்தைவிட்டு கீழே இறங்கி வாருங்கள்.
புழுதித் தரையில் உட்காருங்கள்.
ஏனென்றால், மோவாபை அழித்தவன் வந்துக் கொண்டிருக்கிறான்.
அவன் உங்களது பலமான நகரங்களை அழிப்பான்.”
19 கர்த்தர், “ஆரோவேரில் வாழ்கின்ற ஜனங்களே
சாலையிலே நின்று கவனித்துக்கொண்டிருங்கள்.
மனிதன் வெளியே ஓடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள்.
பெண்கள் ஓடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள்.
என்ன நடந்தது என்று அவர்களைக் கேளுங்கள்.
20 “மோவாப் அழிக்கப்படும். வெட்கத்தால் நிறையும்.
மோவாப் மேலும் மேலும் அழும்.
மோவாப் அழிக்கப்படுகிறது என்று ஆர்னோன்
நதிக்கரையில் அறிவியுங்கள்.
21 மேட்டுச் சமவெளியில் வாழ்கின்ற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.
ஓலோன், யாத்சா, மேப்காத் ஆகிய பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.
22 தீபோன், நேபோ, பெத்லாத்தாயீம் ஆகிய
பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.
23 கீரியாத்தாயீம், பேத்கமூல், பெத்மெயோன் ஆகிய
பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
24 கீரியோத் மற்றும் போஸ்றா
பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
மோவாபின் பக்கத்திலும் தூரத்திலுமுள்ள அனைத்து
பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
25 மோவாபின் பலம் வெட்டப்பட்டிருக்கிறது.
மோவாபின் கை உடைந்திருக்கிறது” என்று சொன்னார்.
26 “மோவாப் தன்னை கர்த்தரை விட முக்கியமானவனாக நினைத்தான்.
எனவே அவன் குடிக்காரனைப்போன்று தடுமாறுகிறவரை தண்டியுங்கள்.
மோவாப் விழுந்து தனது வாந்தியிலேயே உருளட்டும்.
ஜனங்கள் மோவாபைக் கேலிசெய்யட்டும்.
27 “மோவாபே, ஒரு திருடர் கூட்டத்தால் இஸ்ரவேல்
சிறைபிடிக்கப்பட்டபோது நீ அதனால் சந்தோஷப்பட்டு இஸ்ரவேலைக் கேலிசெய்தாய்.
நீ இஸ்ரவேலைப்பற்றி ஒவ்வொரு முறையும் பேசும்போது,
உன் தலையை உதறி இஸ்ரவேலைவிட நீ சிறந்தவன் என்பதுபோல நடித்தாய்.
28 மோவாபின் ஜனங்களே, உங்கள் பட்டணங்களை விட்டு விலகுங்கள்.
பாறைகளுக்கு இடையில் வாழப் போங்கள்.
குகைப் பிளவுகளில் புறாக்கள் கூடு கட்டியிருப்பதுப் போல
அமைத்துக்கொள்ளுங்கள்.”
29 “நாங்கள் மோவாபின் பெருமையைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
அவன் மிகப் பெருமிதம் உடையவனாக இருந்தான்.
அவன் தன்னை முக்கியமானவன் என்று நினைத்தான்.
அவன் எப்பொழுதும் பெருமை பேசினான்.
அவன் மிகமிகப் பெருமை உடையவன்.”
30 கர்த்தர் கூறுகிறார்: “எந்தக் காரணமுமில்லாமல் மோவாப் கோபங்கொண்டு வீம்பு பேசுகிறது என்று நான் அறிவேன்.
ஆனால் அவன் வீண் பெருமைகள் பொய்யானவை.
அவன் சொல்வதை அவனால் செய்ய முடியாது.
31 எனவே, நான் மோவாபிற்காக அழுகிறேன்.
நான் மோவாபிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் அழுகிறேன்.
நான் கீராரேஸ்ஸிலிருந்து வந்தவர்களுக்காகவும் அழுகிறேன்.
32 நான் யாசேருக்காக யாசேர் ஜனங்களோடு சேர்ந்து அழுகிறேன்.
சிப்மாவூர் கடந்தகாலத்தில் உனது திராட்சைக் கொடிகள் கடலைக் கடந்து பரவின.
அது வெகு தொலைவிலுள்ள நகரமான யாசேரை அடைந்தது.
ஆனால் அழிக்கிறவன் உனது பழங்களையும் திராட்சைகளையும் எடுத்திருக்கிறான்.
33 மகிழ்ச்சியும், சந்தோஷமும் மோவாபின் பெரிய திராட்சைத் தோட்டங்களிலிருந்து முடிவடைந்தன.
திராட்சை ஆலைகளில் இருந்து திராட்சைரசம் பாய்வதை நான் நிறுத்தினேன்.
அங்கே திராட்சை ரசத்துக்காகத் திராட்சை ஆலையை மிதிக்கிறவர்களின் பாடலும் ஆடலும் இல்லை.
மகிழ்ச்சியின் சத்தங்கள் இல்லை.”
34 கர்த்தர், “எஸ்போன், எலெயாலே நகரங்களில் உள்ள ஜனங்கள் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அழுகை வெகு தொலைவில் உள்ள யாகாஸ் வரைக்கும் கேட்கிறது. அவர்களின் அழுகை சோவாரிலிருந்து கேட்கிறது. அது வெகு தொலைவில் உள்ள ஒரோனாயிம் மற்றும் எக்லாத்செலிஷியாத் வரைக்கும் கேட்கிறது. நிம்ரீமின் தண்ணீரும் வற்றிப்போகும். 35 மோவாப் தேசத்து மேடைகளில் தகனபலிகள் இடுவதை நான் தடுப்பேன். அவர்கள் தம் தெய்வங்களுக்குப் பலிகள் கொடுப்பதை நான் நிறுத்துவேன்” என்று கூறினார்.
36 “நான் மோவாபிற்காக மிகவும் வருந்துகிறேன். மரணப் பாடலில் புல்லாங்குழலில் சோக ஒலியைப்போன்று எனது இதயம் அழுகின்றது. கீராரேஷ் ஜனங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். அவர்களது பணமும் செல்வமும் எல்லாம் எடுக்கப்பட்டன. 37 ஒவ்வொருவரும் தலையை மழித்திருந்தார்கள். ஒவ்வொருவரின் தாடியும் வெட்டப்பட்டிருந்தது. ஒவ்வொருவரின் கைகளும் வெட்டப்பட்டு இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் இடுப்பைச் சுற்றி சோகத்தின் ஆடையை அணிந்துக்கொண்டிருக்கின்றனர். 38 ஜனங்கள், மோவாபின் ஒவ்வொரு இடங்களிலும் அனைத்து வீடுகளின் மேலும் தெருச்சதுரங்களிலும் மரித்துப்போனவர்களுக்காக அழுதுக்கொண்டிருந்தனர். அங்கே துயரம் இருந்தது. ஏனென்றால், ஒரு காலியான ஜாடியை உடைப்பதுப்போன்று நான் மோவாபை உடைத்துள்ளேன்” என்று கர்த்தர் சொன்னார்.
39 “மோவாப் சிதறடிக்கப்படுகிறது. ஜனங்கள் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். மோவாப் சரணடைந்தது. இப்பொழுது மோவாப் அவமானப்படுகிறது. ஜனங்கள் மோவாபைக் கேலிசெய்கிறார்கள். ஆனால் நடந்தவைகள் அவர்களிடம் பயத்தை நிரப்பியுள்ளன.”
40 கர்த்தர் கூறுகிறார், “பார் ஒரு கழுகு வானத்திலிருந்து கீழே பறந்து வந்துக்கொண்டிருக்கிறது.
அது மோவாபின் மேல் தன் இறக்கைகளை விரித்துக்கொண்டிருக்கிறது.
41 மோவாபின் பட்டணங்கள் கைப்பற்றப்படும்.
பலமான மறைவிடங்கள் தோற்கடிக்கப்படும்.
அப்போது மோவாபின் வீரர்கள் ஒரு ஸ்திரீ பிள்ளையை பெறுகிற சமயத்தில் பயப்படுவதுபோல பயப்படுவார்கள்.
42 மோவாப் தேசம் அழிக்கப்படும்.
ஏனென்றால், அவர்கள் தம்மை கர்த்தரைவிட முக்கியமானவர்களாக நினைத்தனர்.”
43 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்.
“மோவாபின் ஜனங்களே, பயமும், ஆழமான குழிகளும், கண்ணிகளும் உனக்காகக் காத்திருக்கின்றன.
44 ஜனங்கள் பயந்து வெளியே ஓடுவார்கள்.
அவர்கள் ஆழமான குழிகளில் விழுவார்கள்.
எவராவது ஆழமான குழிகளில் இருந்து
வெளியே ஏறி வந்தால் அவன் கண்ணிகளில் சிக்குவான்.
நான் மோவாபிற்குத் தண்டனை ஆண்டைக் கொண்டு வருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
45 “ஜனங்கள் வல்லமை மிக்க பகைவரிடமிருந்து ஓடினார்கள்.
அவர்கள் பாதுகாப்புக்காக எஸ்போனுக்கு ஓடினார்கள்.
(ஆனால் அங்கே பாதுகாப்பு இல்லை.)
எஸ்போனில் நெருப்பு பற்றியது.
சீகோனில் பட்டணத்திலும் நெருப்பு பிடித்தது.
மோவாபின் தலைவர்களையும் அது அழிக்கிறது.
இது அந்த வீண்பெருமையுள்ள ஜனங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது.
46 மோவாபே, இது உனக்குக் கேடாகும்.
கேமோஷின் ஜனங்கள் அழிக்கப்படுகின்றனர்.
உனது மகன்களும் மகள்களும் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்கு கொண்டுப்போகப்படுகின்றனர்.
47 மோவாபின் ஜனங்கள் கைதிகளாகச் சிறைப் பிடிக்கப்பட்டு அவர்களை அடிமைகளாக அழைத்துச் செல்வார்கள். ஆனால் நாட்கள் வரும்போது நான் மோவாபின் ஜனங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மோவாபின் தீர்ப்பு இத்துடன் முடிந்தது.
அம்மோனைப் பற்றிய செய்தி
49 அம்மோனியர்களைப்பற்றி கர்த்தர் இதைக் கூறுகிறார்,
“அம்மோனிய ஜனங்களே, இஸ்ரவேல் ஜனங்களுக்குப்
பிள்ளைகள் இல்லையென்று நினைக்கிறீர்களா?
பெற்றோர்கள் மரித்தப்போது நாட்டை சுதந்தரித்துக்கொள்ள
பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறீர்களா?
ஒருவேளை அதற்காகவேதான் மில்காம் காத்தின் நாட்டை எடுத்துக்கொண்டிருக்கலாம்.”
2 கர்த்தர் கூறுகிறார், “அம்மோனின் ரப்பாவிலே ஒரு காலம் வரும்.
அப்போது ஜனங்கள் போரின் சத்தங்களைக் கேட்பார்கள்.
அம்மோனின் ரப்பா அழிக்கப்படும்.
அது அழிந்த கட்டிடங்கள் நிறைந்த வெற்று மலையாகும்.
அதைச் சுற்றியுள்ள பட்டணங்கள் எரிக்கப்படும்.
அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களைத் தம் சொந்த நாட்டை விட்டு விலகும்படி பலவந்தப்படுத்தினார்கள்.
ஆனால் பிறகு, இஸ்ரவேல் அவர்களை விலகும்படி வற்புறுத்தி அவர்கள் தேசத்தை சுதந்தரிப்பர்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 “எஸ்போன் ஜனங்களே அழுது புலம்புங்கள்! ஏனென்றால், ஆயி பட்டணம் அழிந்துக்கொண்டிருக்கிறது.
அம்மோனது ராப்பாவின் பெண்களே அழுங்கள்!
சோகத்துக்குரிய ஆடையை அணிந்துக் கொண்டு அழுங்கள்.
பாதுகாப்புக்காக நகரத்திற்கு ஓடுங்கள்.
ஏனென்றால், பகைவன் வந்துக்கொண்டிருக்கிறான்.
அவர்கள் மில்காம் என்ற தெய்வத்தை எடுத்துச் செல்வார்கள்.
அவர்கள் மில்காமின் ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் எடுத்துச் செல்வார்கள்.
4 நீ உனது பலத்தைப்பற்றி பெருமைபட்டாய்.
ஆனால் நீ உனது பலத்தை இழந்துக் கொண்டிருக்கிறாய்.
உனது பணம் உன்னை பாதுகாக்கும் என்று நம்புகிறாய்.
எவரும் உன்னைத் தாக்கிட நினைக்கவும்மாட்டார்கள் என்று நினைக்கிறாய்.”
5 ஆனால் சர்வ வல்லையுள்ள கர்த்தர் இதனைக் கூறுகிறார்:
“எல்லாப் பக்கங்களிலுமிருந்தும் உனக்கு கஷ்டங்களை வரப்பண்ணுவேன்.
நீங்கள் அனவைரும் ஓடுவீர்கள்.
எவராலும் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கமுடியாது.”
6 “அம்மோனிய ஜனங்கள் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்குக் கொண்டு போகப்படுவார்கள். ஆனால் நேரம் வரும். அப்போது நான் அம்மோனிய ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏதோம் பற்றிய செய்தி
7 இச்செய்தி ஏதோமைப் பற்றியது. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்:
“தேமானில் இனி ஞானமில்லையா?
ஏதோமில் உள்ள ஞானிகள் நல்ல ஆலோசனைக் கூற முடிவதில்லையோ?
அவர்கள் தம் ஞானத்தை இழந்துவிட்டார்கள்.
8 தேதானில் வாழ்கிற ஜனங்களே ஓடிப் போங்கள்! ஒளிந்துக்கொள்ளுங்கள்.
ஏனென்றால், நான் ஏசாவை அவர்களின் தீமைகளுக்குத் தண்டிப்பேன்.
9 “வேலைக்காரர்கள் திராட்சைக் கொடிகளில் இருந்து திராட்சையைப் பறிக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கொடியில் சில திராட்சைகளை விட்டுவிடுவார்கள்.
இரவில் திருடர்கள் வந்தால்
அவர்கள் எல்லாவற்றையும் எடுக்கமாட்டார்கள்.
10 நான் ஏசாவிலிருந்து எல்லாவற்றையும் எடுப்பேன்.
நான் அவர்களின் அனைத்து மறைவிடங்களையும் கண்டுக்கொள்வேன்.
அவன் என்னிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியாது.
அவனது பிள்ளைகள், உறவினர்கள், அயலார்கள் அனைவரும் மரிப்பார்கள்.
11 தன் பிள்ளைகளை பராமரிக்க யாரும் இருக்கமாட்டார்கள்.
அவனுடைய மனைவிகள் தாங்கள் சார்ந்திருக்க எவரும் இல்லாதிருப்பார்கள்.”
12 இதுதான் கர்த்தர் சொல்கிறது: “சில ஜனங்கள் தண்டிக்கப்படத்தக்கவர் அல்ல. ஆனால் அவர்கள் துன்புறுகிறார்கள். ஆனால் ஏதோம் நீ தண்டிக்கப்படத் தகுதி உள்ளவன். எனவே, நீ உண்மையாகத் தண்டிக்கப்படுவாய். உனக்கேற்ற தண்டனையிலிருந்து நீ தப்பிக்கமாட்டாய் நீ தண்டிக்கப்படுவாய்.” 13 கர்த்தர் கூறுகிறார், “எனது சொந்த வல்லமையினால், நான் இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். போஸ்றா பட்டணம் அழியப்போகிறது என்று நான் வாக்குக் கொடுக்கிறேன். அந்த பட்டணம் பாறைக் குவியலாக அழியும். ஜனங்கள் மற்ற நகரங்களுக்கு ஏற்படும் அழிவுகளைப்பற்றி சொல்லும்போது இதனை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள். ஜனங்கள் அப்பட்டணத்தை நிந்திப்பார்கள். போஸ்றாவைச் சுற்றியுள்ள அனைத்து பட்டணங்களும் என்றென்றும் அழிக்கப்படும்.”
14 நான் கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தையைக் கேட்டேன்.
கர்த்தர் நாடுகளுக்கு ஒரு தூதுவனை அனுப்பினார்.
“உங்கள் படைகளை ஒன்று சேருங்கள்! போருக்குத் தயாராகுங்கள்!
ஏதோம் நாட்டிற்கு எதிராகச் செல்லுங்கள்!
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15 ஏதோமே, நான் உன்னை ஜனங்களுக்குள்ளே முக்கியமற்றவனாகச் செய்வேன்.
ஒவ்வொருவரும் உன்னை வெறுப்பார்கள்.
16 ஏதோமே, நீ மற்ற தேசங்களை பயமுறுத்தினாய்.
எனவே நீ முக்கியமானவன் என்று நினைத்தாய்.
ஆனால் நீ முட்டாளானாய்.
உன் பெருமை உன்னை வஞ்சித்திருக்கிறது.
ஏதோமே, நீ மலைகளின் உச்சியில் இருக்கிறாய்.
நீ பாறைகளும் குன்றுகளும் பாதுகாப்பாக இருக்கிற இடத்தில் இருக்கிறாய்.
ஆனால், நீ உனது வீட்டை கழுகின் கூட்டைப்போன்று உயரத்தில் கட்டினாலும் நான் உன்னைப் பிடிப்பேன்.
நான் உன்னை அங்கிருந்து கீழே கொண்டு வருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17 “ஏதோம் அழிக்கப்படும்.
ஜனங்கள் அழிந்த நகரங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.
அந்த அழிந்த நகரங்களில் ஜனங்கள் பிரமித்து பிரமிப்பார்கள்.
18 சோதோம் கொமோரா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களைப்போன்று ஏதோம் அழிக்கப்படும்.
அங்கே ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19 “யோர்தான் ஆற்றின் கரையிலுள்ள அடர்த்தியான புதர்களில் இருந்து சில வேளைகளில் சிங்கம் வரும். ஜனங்கள் தங்கள் ஆடுகளையும் மாடுகளையும் விட்டிருக்கிற வயல்களில் அச்சிங்கம் போகும். நான் அந்தச் சிங்கத்தைப் போன்றிருக்கிறேன். நான் ஏதோமுக்குப் போவேன். நான் அந்த ஜனங்களைப் பயப்படுத்துவேன். அவர்களை ஓடும்படிச்செய்வேன். அவர்களது இளைஞர்கள் யாரும் என்னைத் தடுக்கமுடியாது. எவரும் என்னைப்போல இரார். எவரும் எனக்குச் சவால் விடமுடியாது. அவர்களில் எந்த மேய்ப்பர்களும் (தலைவர்கள்) எனக்கு எதிரே நிற்கமுடியாது.”
20 எனவே, ஏதோம் ஜனங்களுக்கு என்ன செய்ய வேண்டும்
என்று கர்த்தர் திட்டமிட்டுள்ளாரோ அதைக் கவனி!
தீமான் ஜனங்களுக்கு கர்த்தர் என்ன செய்யவேண்டும்
என்று முடிவு செய்தாரோ, அதை கவனி!
ஏதோமின் மந்தையில் (ஜனங்கள்) உள்ள குட்டிகளைப் பகைவர்கள் இழுத்துப் போடுவார்கள்.
ஏதோமின் மேய்ச்சல் நிலம் அவர்கள் என்ன செய்தார்களோ
அதினிமித்தம் வெறுமையாய்விடும்.
21 ஏதோமின் வீழ்ச்சியின் ஓசையில்
பூமி அதிரும்.
அவர்களின் அழுகை
செங்கடல் வழி முழுவதும் கேட்கும்.
22 கர்த்தர், மிருகத்தைத் தாக்கப்போகிற கழுகு மேலே பறப்பதுப்போன்று இருப்பார்.
போஸ்ராவின் மேல் சிறகை விரிக்கிற கழுகைப்போன்று கர்த்தர் இருப்பார்.
அந்நேரத்தில் ஏதோமின் வீரர்கள் மிகவும் அஞ்சுவார்கள்.
குழந்தையைப் பெறுகிற பெண்ணைப்போன்று அவர்கள் பயத்தால் அழுவார்கள்.
தமஸ்குவைப்பற்றியச் செய்தி
23 இச்செய்தி தமஸ்குவைப்பற்றியது:
“ஆமாத், அர்ப்பாத் ஆகிய பட்டணங்கள் அஞ்சுகின்றன.
அவர்கள் பயப்படுகிறார்கள்.
ஏனென்றால், அவர்கள் கெட்டச் செய்திகளைக் கேட்டனர்.
அவர்கள் அதைரியப்படுகிறார்கள்.
அவர்கள் கவலைப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள்.
24 தமஸ்கு நகரம் பலவீனமாயிற்று.
ஜனங்கள் ஓட விரும்புகின்றனர்.
ஜனங்கள் திகில் அடைய தயாராகின்றனர்.
குழந்தை பெறும் பெண்களைப்போன்று
ஜனங்கள் வலியும் துன்பமும் அடைகின்றனர்.
25 “தமஸ்கு மகிழ்ச்சியுள்ள நகரமாயிருக்கிறது.
ஜனங்கள் அந்த ‘மகிழ்ச்சி நகரை’ இன்னும் விட்டுப் போகவில்லை.
26 எனவே, இளைஞர்கள் நகரின் பொதுச் சதுரங்களில் மரிப்பார்கள்.
அந்த நேரத்தில் அவளது வீரர்கள் எல்லோரும் கொல்லப்படுவார்கள்.”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
27 “தமஸ்குவின் சுவர்களில் நான் நெருப்பை வைப்பேன்.
அது பெனாதாத்தின் பலமான கோட்டைகளை முழுவதுமாக எரிக்கும்.”
கேதார் மற்றும் காத்சோர் பற்றியச் செய்தி
28 இது கேதார் மற்றும் காத்சோர் கோத்திரத்தை ஆள்வோர்களைப்பற்றிய செய்தி. பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் அவர்களைத் தோற்கடித்தான்.
கர்த்தர் கூறுகிறார்.
“போய் கேதாரின் கோத்திரத்தை தாக்கு.
கிழக்கின் ஜனங்களை அழியுங்கள்.
29 அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் எடுக்கப்படும்.
அவர்களின் கூடாரம் மற்றும் அவர்களின் செல்வமெல்லாம் எடுக்கப்படும்.
பகைவர்கள் அவர்களது ஒட்டகங்களை எடுப்பார்கள்.
இதனை ஆண்கள் அவர்களிடம் சத்தமிடுவார்கள்.
‘நம்மைச் சுற்றிலும் பயங்கரமானவை நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
30 ‘வேகமாக ஓடுங்கள்!
காத்சோரின் ஜனங்களே, ஒளிந்துக்கொள்ள நல்ல இடத்தைப் பாருங்கள்’
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
‘நேபுகாத்நேச்சார் உனக்கு எதிராக திட்டமிட்டான்.
உன்னைத் தோற்கடிக்க அவன் ஒரு நல்ல திட்டத்தை நினைத்தான்.’
31 “பாதுகாப்பை உணர்கிற ஒரு தேசம் இருக்கிறது.
அத்தேசம் பாதுகாப்பை உணர்கிறது.
அந்தத் தேசத்திற்கு வாசலோ வேலியோ பாதுகாப்புக்கு இல்லை.
அவற்றின் அருகில் எவரும் இல்லை.
கர்த்தர், ‘அத்தேசத்தைத் தாக்குங்கள்!’ என்றார்.
32 பகைவர்கள் அவர்களின் ஒட்டகங்களைத் திருடுவார்கள்,
அவர்களின் பெரிய மந்தையை எடுத்துக்கொள்வார்கள்.
நான் பூமியின் மூலைகளுக்கு அவர்களை ஓடச் செய்வேன்.
நான் அவர்களுக்குப் பயங்கரமான துன்பங்களை எல்லா பக்கத்திலிருந்தும் கொண்டுவருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33 “ஆசோர் தேசம், காட்டு நாய்கள் மட்டும் வாழத்தக்க இடமாக மாறும்.
அந்த இடத்தில் எவரும் வாழ்வதில்லை.
அது என்றென்றும் காலியான வனாந்தரமாக இருக்கும்.”
ஏலாமைப் பற்றியச் செய்தி
34 யூதாவின் அரசனான சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப நாட்களில், தீர்க்கதரிசி எரேமியா கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். அச்செய்தி ஏலாம் தேசத்தைப்பற்றியது.
35 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்.
“நான் விரைவில் ஏலாமின் வில்லை உடைப்பேன்.
வில் ஏலாமின் பலமான ஆயுதம்.
36 நான் ஏலாமிற்கு எதிராக நான்கு காற்றுகளைக் கொண்டு வருவேன்.
நான் அவற்றை வானத்தின் நான்கு மூலைகளில் இருந்தும் கொண்டுவருவேன்.
நான்கு காற்றுகளும் வீசுகிற பூமியின் அனைத்து
இடங்களுக்கும் ஏலாம் ஜனங்களை அனுப்புவேன்.
எல்லா தேசங்களுக்கும் ஏலாமின் கைதிகள் கொண்டுச்செல்லப்படுவார்கள்.
37 நான் ஏலாமை, அவர்களின் பகைவர்கள்
கவனிக்கும்போதே துண்டுகளாக உடைப்பேன்.
அவர்களைக் கொல்ல விரும்பும் ஜனங்களின் முன்னால்
ஏலாமை நான் உடைப்பேன்.
நான் அவர்களுக்குப் பயங்கரமானவற்றைக் கொண்டு வருவேன்.
நான் எவ்வளவு கோபமாக இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“நான் ஏலாமைத் துரத்தும்படி வாளை அனுப்புவேன்.
நான் அவர்கள் அனைவரையும் கொல்லும்வரை அந்த வாள் அவர்களைத் துரத்தும்.
38 நான் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறேன் என்பதை ஏலாமிற்குக் காட்டுவேன்.
நான் அவளது அரசனையும் அவளது அதிகாரிகளையும் அழிப்பேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
39 “ஆனால் எதிர்காலத்தில், நான் ஏலாமிற்கு நன்மை நடக்கும்படிச் செய்வேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பாபிலோன் பற்றியச் செய்தி
50 பாபிலோனைப் பற்றியும் பாபிலோனிய ஜனங்களைப் பற்றியும் கர்த்தர் பேசிய வார்த்தை இது. கர்த்தர் இந்த வார்த்தையை எரேமியா மூலமாகப் பேசினார்:
2 “அனைத்து தேசங்களுக்கும் இதனை அறிவியுங்கள்!
ஒரு கொடியைத் தூக்கிச் செய்தியை அறிவியுங்கள்!
முழுச் செய்தியையும் பேசுங்கள்:
சொல்லுங்கள்: ‘பாபிலோன் தேசம் கைப்பற்றப்படும்.
அந்நிய தெய்வமாகிய பேல் தெய்வம் அவமானம் அடைவான்.
பொய்த் தெய்வமாகிய மெரொதாக் தெய்வம் மிகவும் பயப்படுவான்.
பாபிலோனின் விக்கிரகங்கள் அவமானம் அடையும்.
அவளது தெய்வங்களின் விக்கிரகங்கள் பயங்கரத்தால் நிறைந்திருக்கும்.’
3 வடக்கிலிருந்து ஒரு தேசம் பாபிலோனைத் தாக்கும்.
அத்தேசம் பாபிலோனைக் காலியான வனாந்தரம் போலாக்கும்.
அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
அங்கிருந்து மனிதர்களும் மிருகங்களும் வெளியே ஓடுவார்கள்.”
4 கர்த்தர் கூறுகிறார்: “அந்த நேரத்தில்,
இஸ்ரவேல் ஜனங்களும் யூதாவின் ஜனங்களும் சேர்வார்கள்.
அவர்கள் அழுவார்கள்.
அவர்கள் கூடி அழுவார்கள்.
அவர்களுடைய தேவனாகிய கர்த்தரைத் தேட அவர்கள் போவார்கள்.
5 சீயோனுக்கு எப்படி போகவேண்டும் என்று அந்த ஜனங்கள் கேட்பார்கள்.
அந்தத் திசையில் அவர்கள் போகத் தொடங்குவார்கள்.
ஜனங்கள் சொல்லுவார்கள், ‘வாருங்கள், கர்த்தருடன் நாம் ஒன்று சேர்வோம்.
நாம் என்றென்றும் நிலைத்திருக்கும்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம்.
என்றென்றும் மறக்கமுடியாதபடி ஒரு ஒப்பந்தத்தை நாம் செய்வோம்.’
6 “எனது ஜனங்கள் காணாமல் போன ஆட்டைப்போன்று இருக்கிறீர்கள்.
அவற்றின் மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தவறான வழியில் வழிநடத்துகின்றனர்.
அவர்களின் தலைவர்கள் அவர்களை மலைகளிலும் குன்றுகளிலும் அலைய வைத்தார்கள்.
அவர்களது ஆறுதலுக்குரிய இடம் எதுவென்று அவர்கள் மறந்தார்கள்.
7 எவர்கள் என் ஜனங்களைக் கண்டார்களோ அவர்களை காயப்படுத்தினார்கள்.
அப்பகைவர்கள் ‘நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை’ என்று சொன்னார்கள்.
‘அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப்
பாவம் செய்தார்கள்.
கர்த்தர் தாமே அவர்களுடைய உண்மையான இளைப்பாறும் இடம்.
கர்த்தர் தாமே அவர்களது முற்பிதாக்கள் நம்பின தேவன்.’
8 “பாபிலோனை விட்டு ஓடுங்கள்.
பாபிலோனிய ஜனங்களின் தேசத்தை விட்டு விலகுங்கள்.
மந்தையை வழிநடத்திச் செல்லும் வெள்ளாடுகளைப் போன்று இருங்கள்.
9 நான் வடக்கிலிருந்து பல தேசங்களை ஒன்று சேர்ப்பேன்.
இந்தத் தேசங்களின் குழு பாபிலோனுக்கு எதிராகச் சண்டையிடத் தயாராகும்.
வடக்கிலிருந்து வரும் ஜனங்களால் பாபிலோன் கைப்பற்றப்படும்.
இத்தேசங்கள் பாபிலோன் மேல் பல அம்புகளை எய்யும்.
அந்த அம்புகள் போரிலிருந்து வெறுங்கைகளோடு
திரும்பி வராத வீரர்களைப் போன்றிருக்கும்.
10 பகைவர்கள் கல்தேயர் ஜனங்களின் செல்வமெல்லாவற்றையும் எடுப்பார்கள்.
அவ்வீரர்கள் அவர்கள் விரும்பும் எல்லாவற்றையும் எடுப்பார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 “பாபிலோனே, நீ சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தாய்.
நீ என் நாட்டை எடுத்தாய்.
நீ ஒரு இளம்பசு தானியங்களுக்குள்
புகுந்ததுப்போன்று சுற்றிலும் ஆடுகிறாய்.
குதிரைகள் செய்வதுப்போன்று உனது சிரிப்பு
சந்தோஷ ஒலியாக உள்ளது.
12 ஆனால் உனது தாய் மிகவும் அவமானம் அடைவாள்.
உன்னைப் பெற்ற பெண் சங்கடம் அடைவாள்.
எல்லா தேசங்களையும்விட பாபிலோன் குறைந்த முக்கியத்துவம் உடையது.
அவள் காலியான, வறண்ட வனாந்தரம்போல் ஆவாள்.
13 கர்த்தர் அவரது கோபத்தைக் காட்டுவார்.
எனவே அங்கே ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.
பாபிலோன் முழுவதும் காலியாகும்.
பாபிலோனைக் கடந்துப்போகும் எவரும் பயப்படுவார்கள்.
அது எவ்வளவு மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறதைப் பார்க்கும்போது அவர்கள் தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
14 “பாபிலோனுக்கு எதிராகப் போரிடத் தயாராகுங்கள்.
வில்லோடுள்ள வீரர்கள் அனைவரும் பாபிலோன் மேல் அம்பை எய்யுங்கள்.
உங்கள் அம்புகளில் எதையும் சேமிக்கவேண்டாம்.
பாபிலோன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறது.
15 பாபிலோனைச் சுற்றியுள்ள வீரர்களே வெற்றிக்குரலை எழுப்புங்கள்!
பாபிலோன் முற்றுகையிடப்பட்டிருக்கிறது!
அவளது சுவர்களும் கோபுரங்களும் கீழே தள்ளப்படும்!
கர்த்தர் அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
தேசங்களாகிய நீங்கள் பாபிலோனுக்கு
பொருத்தமான தண்டனையைக் கொடுக்கவேண்டும்.
மற்ற தேசங்களுக்கு அவள் என்ன செய்தாளோ அவற்றை அவளுக்குச் செய்யுங்கள்.
16 பாபிலோனில் உள்ள ஜனங்களைத் தங்கள் விதையை விதைக்கவிடாதீர்.
அவர்களை அறுவடையைச் சேகரிக்கவிடாதீர்.
பாபிலோனின் வீரர்கள் தம் நகரத்திற்கு பல கைதிகளைக் கொண்டு வந்திருக்கின்றனர்.
இப்போது பகைவரது வீரர்கள் வந்திருக்கிறார்கள்.
எனவே, அந்தக் கைதிகள் திரும்பப்போயிருக்கிறார்கள்.
அக்கைதிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
17 “நாடு முழுவதும் சிதறி இருக்கிற மந்தையைப்போன்று
இஸ்ரவேல் சிதறி இருக்கிறது.
இஸ்ரவேல் சிங்கங்களால் துரத்தப்படுகின்ற ஆடுபோன்று உள்ளது.
அசீரியா அரசன் தாக்குவது முதல் சிங்கம் தாக்குவது போன்றது.
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் கடைசி சிங்கத்தைப்போன்று தாக்கி
அதன் எலும்புகளை நொறுக்குவான்.
18 எனவே, இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
‘நான் விரைவில் பாபிலோன் அரசனையும் அவனது நாட்டையும் தண்டிப்பேன்.
நான் அசீரியா அரசனைத் தண்டித்ததுப்போன்று அவனைத் தண்டிப்பேன்.
19 “‘நான் இஸ்ரவேலை அவர்களின் சொந்த வயல்களுக்கு மீண்டும் கொண்டுவருவேன்.
அப்பொழுது அவன் கர்மேல் மலையிலும் பாசான் நாட்டிலும் விளைந்த உணவை உண்ணுவான்.
அவன் உண்டு நிறைவுப்பெறுவான்.
எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அவன் உண்ணுவான்.’”
20 கர்த்தர் கூறுகிறார், “அந்த நேரத்தில், இஸ்ரவேலின் குற்றத்தைக் கண்டுப்பிடிக்க ஜனங்கள் மிகக் கடுமையாக முயலுவார்கள்.
ஆனால் அங்கே குற்றம் இருக்காது.
யூதாவின் பாவங்களை கண்டுப்பிடிக்க அவர்கள் முயலுவார்கள்.
ஆனால் எந்தப் பாவத்தையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
ஏனென்றால், நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவிலிருந்து உயிர் பிழைத்தவர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன்.
அவர்களது அனைத்துப் பாவங்களையும் நான் மன்னித்துவிடுகிறேன்.”
21 கர்த்தர் கூறுகிறார்: “மெரதாயீம் தேசத்தைத் தாக்கு!
பேகோடில் வாழ்கின்ற ஜனங்களைத் தாக்கு!
அவர்களைத் தாக்கு!
அவர்களைக் கொல்! அவர்களை முழுமையாக அழி!
நான் உனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்.
22 “நாடு முழுவதிலும் யுத்தத்தின் போரொலியைக் கேட்கலாம்.
அது பேரழிவின் ஓசையாகும்.
23 பாபிலோன், ‘பூமியின் சம்மட்டி’
என்று அழைக்கப்பட்டது.
ஆனால் இப்போது ‘சம்மட்டி’ உடைக்கப்படுகிறது.
எல்லா தேசங்களையும்விட அதிகமாக அழிக்கப்பட்ட தேசம் பாபிலோன்.
24 பாபிலோனே, நான் உனக்காகக் கண்ணி வைத்தேன்.
அதனைத் தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் நீ மாட்டிக்கொண்டாய்.
நீ கர்த்தருக்கு எதிராகச் சண்டையிட்டாய்.
எனவே நீ கண்டுப்பிடிக்கப்பட்டு பிடிப்பட்டாய்.
25 கர்த்தர் தமது பொருட்கள் சேமிக்கும் அறையைத் திறந்திருக்கிறார்.
கர்த்தர் அவருடைய கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டு வந்தார்.
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் அந்த ஆயுதங்களைக் கொண்டுவந்தார்.
ஏனென்றால், அவர் செய்யவேண்டிய வேலை இருக்கிறது.
கல்தேய ஜனங்களின் தேசத்தில் அவர் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.
26 “பாபிலோனுக்கு எதிராகத் தொலை தூரத்திலிருந்து வா.
அவள் தனது தானியங்களைச் சேகரித்து வைத்திருக்கிற அறைகளை உடைத்துத் திற.
பாபிலோனை முழுமையாக அழி.
எவரையும் உயிரோடுவிடாதே.
அவர்களது உடல்களைத் தானியக் கதிர்களைக் குவியலாக்குவதுப்போல் குவியலாக்கு.
27 பாபிலோனில் உள்ள எல்லா இளங்காளையையும் (இளைஞரையும்) கொல்.
அவர்கள் வெட்டப்படட்டும்.
அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கான நேரம் வந்திருக்கிறது.
எனவே இது அவர்களுக்கு மிகக் கேடாகும்.
இது அவர்கள் தண்டிக்கப்படுவதற்குரிய காலம்.
28 ஜனங்கள் பாபிலோனை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேசத்திலிருந்து தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் சீயோனுக்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் ஒவ்வொருவரிடமும் கர்த்தர் செய்தவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கர்த்தர் பாபிலோனுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
பாபிலோன் கர்த்தருடைய ஆலயத்தை அழித்தது.
எனவே இப்போது கர்த்தர் பாபிலோனை அழித்துக்கொண்டிருக்கிறார்.
29 “அம்புகளை எய்யும் ஆட்களைக் கூப்பிடு.
பாபிலோனைத் தாக்கும்படி அவர்களிடம் சொல்.
நகரத்தை முற்றுகையிடும்படி அவர்களிடம் சொல்.
எவரையும் தப்பிக்கவிடாதே.
அவள் செய்த தீமைக்கு, திருப்பிக்கொடுங்கள்.
அவள் மற்ற தேசங்களுக்கு எவற்றைச் செய்தாளோ அவற்றை அவளுக்குச் செய்யுங்கள்.
பாபிலோன் கர்த்தருக்கு மரியாதை செய்யவில்லை.
பாபிலோன் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரிடம் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டது.
எனவே பாபிலோனைத் தண்டித்துவிடு.
30 பாபிலோனின் இளைஞர்கள் தெருவில் கொல்லப்படுவார்கள்.
அந்த நாளில் அவளது வீரர்கள் எல்லாம் கொல்லப்படுவார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
31 “பாபிலோனே, நீ மிகவும் வீண்பெருமை உள்ளவள்.
நான் உனக்கு எதிராக இருக்கிறேன்” எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.
“நான் உங்களுக்கு எதிராக இருக்கிறேன்.
நீங்கள் தண்டிக்கப்படுவதற்குரிய காலம் வந்திருக்கிறது.
32 வீண் பெருமையுள்ள பாபிலோனே நீ இடறி விழுவாய்.
நீ எழ எவரும் உதவி செய்யமாட்டார்கள்.
நான் அவளது பட்டணங்களில் நெருப்பை வைப்பேன்.
அவளைச் சுற்றியுள்ள எல்லோரையும் நெருப்பு முழுமையாக எரிக்கும்.”
33 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் அடிமைகளாக இருக்கிறார்கள்.
பகைவர் அவர்களைக் கைப்பற்றினார்கள்.
பகைவர் இஸ்ரவேலைப் போக விடமாட்டார்கள்.
34 ஆனால் தேவன் அந்த ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.
அவர் அவர்களைப் பலமாகப் பாதுகாப்பார்! அவர்களை அவர் பாதுகாப்பார்.
அதனால் அவர் அந்த தேசத்தை ஓய்வுக்கொள்ளச் செய்வார்.
ஆனால் அங்கே பாபிலோனில் வாழ்கிற ஜனங்களுக்கு ஓய்வு இராது.”
35 கர்த்தர் கூறுகிறார்,
“வாளே, பாபிலோனில் வாழ்கிற ஜனங்களைக் கொல்.
வாளே, அரசனின் அதிகாரிகளையும்
பாபிலோனின் ஞானிகளையும் கொல்”
36 வாளே, பாபிலோனின் ஆசாரியர்களையும், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கொல்.
அவர்கள் முட்டாள்களைப்போன்று ஆவார்கள்.
வாளே, பாபிலோனின் வீரர்களைக் கொல்.
அவர்கள் பயங்கரத்தினால் நிறைந்திருப்பார்கள்.
37 வாளே, பாபிலோனின் குதிரைகளைக் கொன்றுப்போட்டு பாபிலோனிய இரதங்களை அழித்துப்போடு.
வாளே, பிற தேசங்களில் இருந்து கூலிக்குக் கொண்டுவரப்பட்ட வீரர்களையும் கொல்.
அவ்வீரர்கள் பயந்தப் பெண்களைப் போன்றுள்ளார்கள்.
வாளே, பாபிலோனின் பொக்கிஷங்களை அழி.
அப்பொக்கிஷங்கள் எடுத்துச்செல்லப்படும்.
38 வாளே, பாபிலோனின் தண்ணீரைத் தாக்கு.
அத்தண்ணீர் வற்றிப்போகும்.
பாபிலோனில் நிறைய நிறைய விக்கிரகங்கள் உள்ளன.
பாபிலோன் ஜனங்கள் முட்டாள்கள் என்பதை அந்த விக்கிரகங்கள் காட்டுகிறது.
எனவே அந்த ஜனங்களுக்குத் தீமை ஏற்படும்.
39 “பாபிலோன் மீண்டும் ஜனங்களால் நிறையாது.
காட்டு நாய்கள், நெருப்புக் கோழிகள், பிற காட்டு மிருகங்கள் அங்கு வாழும்.
ஆனால் ஒருக்காலம் மீண்டும் மனிதர்கள் அங்கே வாழமாட்டார்கள்.
40 தேவன் முழுமையாக சோதோம் கொமோரா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் அழித்தார்.
இப்பொழுது அந்நகரங்களில் ஜனங்கள் எவரும் வாழவில்லை.
அதே வழியில் பாபிலோனில் ஜனங்கள் எவரும் வாழவில்லை.
அங்கே வாழ ஜனங்கள் எவரும் என்றென்றும் போகமாட்டார்கள்.
41 “பார்! வடக்கிலிருந்து ஜனங்கள் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வல்லமையான நாட்டிலிருந்து வருகிறார்கள்.
உலகின் சுற்றிலும் உள்ள பல அரசர்கள் சேர்ந்து வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
42 அவர்களது படைகள் வில்லும் ஈட்டிகளும் வைத்திருக்கிறார்கள்.
வீரர்கள் கொடுமையானவர்கள்.
அவர்களிடம் இரக்கம் இல்லை.
வீரர்கள் தங்கள் குதிரைகளின்மேல் சவாரி செய்கிறார்கள்.
அந்த ஓசை இரைச்சலிடுகிற கடலைப் போன்றுள்ளது.
அவர்கள் தம் இடங்களில் நிற்கிறார்கள்.
போருக்குத் தயாராக இருக்கிறார்கள்.
அவர்கள் பாபிலோன் நகரமே, உன்னைத் தாக்கத் தயாராக இருக்கிறார்கள்.
43 பாபிலோன் அரசன் அப்படைகளைப்பற்றிக் கேள்விபட்டான்.
அவன் மிகவும் பயம் அடைந்தான்.
அவன் கைகள் நகரமுடியாத அளவிற்குப் பயந்தான்.
குழந்தைப்பெறுகிற பெண்ணின் வயிறுபோன்று அவனது வயிறு வலித்தது.”
44 கர்த்தர் கூறுகிறார்:
“சில நேரங்களில் யோர்தான் நதிக்கரையிலுள்ள அடர்ந்த புதர்களிலிருந்து சிங்கம் வரும்.
ஜனங்கள் தங்கள் மிருகங்களை விட்டிருக்கிற வயல்களில் சிங்கம் நடந்துப்போகும்.
(அங்குள்ள மிருகங்கள் வெளியே ஓடும்).
நான் அந்தச் சிங்கத்தைப்போன்று இருப்பேன்.
நான் பாபிலோனை அதன் தேசத்திலிருந்து விரட்டுவேன்.
இதைச் செய்வதற்கும் நான் யாரைத் தேர்ந்தெடுப்பேன்.
என்னைப்போல் எவரும் இல்லை.
எனக்குச் சவால்விட எவரும் இல்லை.
(எனவே நானே இதனைச் செய்வேன்).
எந்த மேய்ப்பனும் வந்து என்னைத் துரத்திடான்.
நான் பாபிலோன் ஜனங்களைத் துரத்துவேன்.”
45 பாபிலோனுக்கு என்ன செய்யவேண்டும்
என்று கர்த்தர் திட்டமிட்டிருக்கிறார் என்பதை கவனி.
பாபிலோனிய ஜனங்களுக்கு
கர்த்தர் செய்யவேண்டுமென முடிவு செய்திருப்பதை கவனி.
பகைவர்கள் பாபிலோனின் மந்தையிலிருந்து (ஜனங்கள்) சிறிய குட்டிகளை இழுத்துச் செல்வார்கள்.
பாபிலோனின் மேய்ச்சல் நிலங்கள் கர்த்தரால் முழுவதுமாக அழிக்கப்படும்.
46 பாபிலோன் விழும்.
அந்த வீழ்ச்சி பூமியை அதிரச்செய்யும்.
பாபிலோனின் அழுகையின் சத்தத்தை
அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் கேள்விப்படுவார்கள்.
51 கர்த்தர் கூறுகிறார்:
“வல்லமையான ஒரு காற்றை நான் வீசச்செய்வேன்.
நான் அதனை பாபிலோனுக்கும் கல்தேயாவின் தலைவர்களுக்கும் எதிராக வீசச்செய்வேன்.
2 நான் பாபிலோனுக்கு அயல்நாட்டவரை அனுப்புவேன்.
அவர்கள் பாபிலோனைத் தூற்றுவார்கள்.
அந்த ஜனங்கள் பாபிலோனிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள்.
நகரத்தைப் படைகள் முற்றுகையிடும்.
பயங்கரமான பேரழிவு ஏற்படும்.
3 பாபிலோன் வீரர்கள் தங்கள் வில்லையும் அம்பையும் பயன்படுத்தமாட்டார்கள்.
அவ்வீரர்கள் தங்கள் கவசங்களையும் கூட அணிந்துக்கொள்ளமாட்டார்கள்.
பாபிலோனிய இளைஞர்களுக்காக இரக்கம்கொள்ளாதே.
அவளது படையை முழுவதுமாக அழித்துவிடு.
4 கல்தேயர்களின் தேசத்தில் பாபிலோனிய வீரர்கள் கொல்லப்படுவார்கள்.
அவர்கள் மோசமாக பாபிலோன் தெருக்களில் காயம் அடைவார்கள்.”
5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்
இஸ்ரவேல் மற்றும் யூதாவைத் தனியாகக் கணவனை இழந்த விதவைப் பெண்ணைப்போன்று விடமாட்டார்.
தேவன் அந்த ஜனங்களை விட்டுவிடமாட்டார்.
இல்லை, அந்த ஜனங்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை விட்டு விலகின குற்றவாளிகள்.
அவர்கள் அவரை விட்டு விலகினார்கள்.
ஆனால் அவர் அவர்களை விட்டு விலகவில்லை.
6 பாபிலோனை விட்டு ஓடுங்கள்!
உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுங்கள்! தங்காதீர்கள்.
பாபிலோனின் பாவத்தால் கொல்லப்படாதீர்கள்.
பாபிலோனின் ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக கர்த்தரால் தண்டிக்கப்படக் கூடிய காலம் இது!
பாபிலோன் அவளுக்கு ஏற்றதான தண்டனையைப் பெறும்.
7 பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள தங்கக் கிண்ணத்தைப் போன்றிருந்தது.
பாபிலோன் உலகம் முழுவதையும் குடிக்கும்படி செய்தது.
தேசங்கள் பாபிலோனின் திராட்சைரசத்தைக் குடித்தது.
எனவே அவை புத்திமயங்கிப்போயின.
8 ஆனால் பாபிலோன் திடீரென்று விழுந்து உடைந்துப்போகும்.
அவளுக்காக அழுங்கள்!
அவளது வலிக்கு மருந்து வாங்குங்கள்!
ஒருவேளை குணம் பெறலாம்!
9 நாம் பாபிலோன் குணமடைய முயன்றோம்.
ஆனால் அவளால் குணம் பெறமுடியாது.
எனவே, அவளை விட்டுவிடுங்கள்.
நம் சொந்த நாட்டுக்கும் நம்மில் ஒவ்வொருவரும் போகவிடுங்கள்.
பரலோகத்திலுள்ள தேவன் பாபிலோனின் தண்டனையை முடிவு செய்வார்.
பாபிலோனுக்கு என்ன நேரும் என்பதையும் அவர் முடிவு செய்வார்.
10 கர்த்தர் நமக்காக காரியங்களைச் சரி செய்துள்ளார்.
வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தர்
செய்திருக்கிறவற்றை பற்றி சீயோனில் எடுத்துச்சொல்லுவோம்.
11 அம்புகளைக் கூர்மைப்படுத்துங்கள்!
கேடயங்களை வாங்குங்கள்!
கர்த்தர் மேதியருடைய அரசர்களின் ஆவியை எழுப்பினார்.
ஏனென்றால், அவர் பாபிலோனை அழிக்க விரும்புகிறார்.
பாபிலோனிய ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை கர்த்தர் கொடுப்பார்.
எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைப் பாபிலோன் படை அழித்தது.
எனவே கர்த்தர் அவர்களுக்குரிய தண்டனையைக் கொடுப்பார்.
12 பாபிலோன் சுவர்களுக்கு எதிராகக் கொடியை உயர்த்துங்கள்
மேலும் காவலாளிகளைக் கொண்டு வாருங்கள்.
அவர்களின் இடங்களில் காவல்காரர்களைப் போடுங்கள்.
இரகசிய தாக்குதலுக்குத் தயாராகுங்கள்.
கர்த்தர், தான் திட்டமிட்டப்படிச் செய்வார்.
பாபிலோன் ஜனங்களுக்கு எதிராக எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதைச் செய்வார்.
13 பாபிலோனே, நீ மிகுந்த தண்ணீருக்கு அருகில் வாழ்கிறாய்.
நீ பொக்கிஷங்களோடு செல்வத்துடன் இருக்கிறாய்.
ஆனால் உனது முடிவு வந்திருக்கிறது.
உனது அழிவுக்கான காலம் வந்திருக்கிறது.
14 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தன் நாமத்தைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்தார்.
“பாபிலோனே, நான் உன்னைப் பல பகை வீரர்களால் நிரப்புவேன்.
அவர்கள் வெட்டுக்கிளியின் கூட்டத்தைப் போன்றிருப்பார்கள்.
உனக்கு எதிராகப் போரில் அவர்கள் வெல்வார்கள்.
அவர்கள் உனக்கு மேல் நின்றுக்கொண்டு வெற்றி முழக்கம் செய்வார்கள்.”
15 கர்த்தர் தனது பெரும் வல்லமையைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார்.
அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி உலகத்தைப் படைத்தார்.
அவர் தனது பேரறிவினால் வானத்தை விரித்தார்.
16 அவர் சத்தமிடுகையில், வானத்திலுள்ள தண்ணீர் இரைந்தது.
அவர் பூமி முழுவதும் மேகங்களை அனுப்பினார்.
அவர் தனது சேமிப்பு அறையிலிருந்து
காற்றைக் கொண்டுவந்தார்.
17 ஆனால் ஜனங்கள் மிகவும் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
தேவன் என்ன செய்திருக்கிறார் என்று அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
திறமையுள்ள தொழிலாளிகள் பொய் தெய்வங்களின் விக்கிரகங்களைச் செய்தனர்.
அவ்விக்கிரகங்கள் மாயையான தெய்வங்களே.
எனவே, அந்த விக்கிரகங்கள் அவைகளை உருவாக்கின தொழிலாளிகளின் முட்டாள்தனத்திற்கு சான்றாக இருக்கின்றன.
அந்த விக்கிரகங்கள் உயிரற்றவை.
18 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை.
ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர்.
அவை மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
நியாயத் தீர்ப்புக்கான காலம் வரும்.
அந்த விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
19 ஆனால் யாக்கோபுவின் பங்கு (தேவன்) அப்பயனற்ற விக்கிரகங்களைப் போன்றவறில்லை.
ஜனங்கள் தேவனை உருவாக்கவில்லை,
தேவனே தன் ஜனங்களை உருவாக்கினார்.
தேவன் எல்லாவற்றையும் உருவாக்கினார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
20 கர்த்தர் கூறுகிறார், “பாபிலோனே, நீ எனது தண்டாயுதம்.
நான் உன்னைப் பயன்படுத்தி தேசங்களை நொறுக்கினேன்.
இராஜ்யங்களை அழிக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
21 நான் குதிரையையும், அதை ஓட்டுபவனையும் நொறுக்க உன்னைப் பயன்படுத்தினேன்.
இரதத்தையும் தேரோட்டியையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
22 ஆண்களையும் பெண்களையும் நொறுக்கநான் உன்னைப் பயன்படுத்தினேன்.
இளைஞர்களையும் முதியவர்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
இளம் ஆண்களையும் பெண்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
23 மேய்ப்பர்களையும் ஆடுகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
விவசாயிகளையும் பசுக்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
24 ஆனால் பாபிலோனுக்குத் திருப்பிக் கொடுப்பேன்.
நான் பாபிலோனிய ஜனங்கள் அனைவருக்கும் திருப்பிக் கொடுப்பேன்.
அவர்கள் சீயோனுக்குச் செய்த அத்தனை தீமைகளுக்கும் திருப்பிக் கொடுப்பேன்.
யூதாவே, உனக்கு எதிரில்தானே நான் அவர்களைத் தண்டிப்பேன்”
கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
25 கர்த்தர் கூறுகிறார்:
“பாபிலோனே, நீ ஒரு அழிக்கும் மலை.
நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
பாபிலோனே, முழு நாட்டையும் அழித்துவிட்டாய்.
நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நான் எனது கையை உனக்கு எதிராக வைப்பேன்.
நான் உன்னைக் கன்மலையிலிருந்து உருட்டுவேன்.
நான் உன்னை எரிந்துப்போன மலையாக்குவேன்.
26 ஜனங்கள் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் ஆக்க பாபிலோனிலிருந்து எந்த கல்லையும் எடுக்கமாட்டார்கள்.
ஜனங்கள் மூலைக்கல்லுக்குப் போதுமான அளவு பெரிய கல்லைக் கண்டுப்பிடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், உனது நகரமானது கற்களின் குவியலாக என்றென்றைக்கும் இருக்கும்”
கர்த்தர் இவற்றைக் கூறினார்.
27 “இந்நாட்டில் போர்க்கொடியை ஏற்றுங்கள்!
அனைத்து நாடுகளிலும் எக்காளத்தை ஊதுங்கள்!
பாபிலோனுக்கு எதிராகச் சண்டை செய்ய தேசங்களைத் தயார் செய்யுங்கள்!
அந்த இராஜ்யங்களைப் பாபிலோனுக்கு எதிராகப் போரிட அழையுங்கள்.
ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ்.
அதற்கு எதிராகப் படை நடத்திச்செல்ல ஒரு தளபதியைத் தேர்ந்தெடு.
வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போன்ற குதிரைகளை ஏராளமாக அனுப்பு.
28 அவளுக்கு எதிராகப் போரிட தேசங்களைத் தயார் செய்.
மேதியா தேசத்தின் அரசர்களைத் தயார் செய்.
அவர்களின் ஆளுநர்களையும் முக்கிய அதிகாரிகளையும் தயார் செய்.
பாபிலோனுக்கு எதிராகப் போரிட அவர்கள் ஆளும் தேசங்களைத் தயார் செய்.
29 நிலமானது வலியோடு இருப்பதுப்போன்று அசைந்து நடுங்குகிறது.
கர்த்தர் தனது திட்டப்படி பாபிலோனுக்குச் செய்யும்போது தேசம் நடுங்கும்.
கர்த்தருடைய திட்டம் பாபிலோன் தேசத்தை காலியான வனாந்தரமாக்குவதே.
அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
30 பாபிலோனிய வீரர்கள் சண்டையிடுவதை நிறுத்தினார்கள்.
அவர்கள் தங்கள் கோட்டைகளில் தங்கினார்கள்.
அவர்களின் பலம் போயிருக்கிறது.
அவர்கள் திகிலடைந்த பெண்களைப்போன்று இருக்கிறார்கள்.
பாபிலோனின் வீடுகள் எரிந்துக்கொண்டிருக்கின்றன.
அவளது கதவின் கட்டைகள் உடைக்கப்படுகின்றன.
31 ஒரு தூதுவன் இன்னொருவனைப் பின் தொடருகிறான்.
அவர்கள் பாபிலோன் அரசனிடம்
அவனது நாடு முழுவதும் கைப்பற்றப்பட்டது
என்று தெரிவிக்கின்றனர்.
32 ஆற்றைக் கடக்கும் வழிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
சகதியான நிலம் எரிந்துக்கொண்டிருக்கின்றன.
பாபிலோனிய வீரர்கள் அனைவரும் அஞ்சுகின்றனர்.”
33 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,
“பாபிலோன் மிதிக்கப்படும் களத்தைப்போன்று உள்ளது.
அறுவடை காலத்தில் ஜனங்கள் பதரிலிருந்து தானியத்தைப் பிரிக்க அடிப்பார்கள்.
பாபிலோனை அடிக்க வேண்டிய காலம் விரைவாக வந்துக்கொண்டிருக்கிறது.”
34 சீயோன் ஜனங்கள் இவ்வாறு கூறுவார்கள்,
“பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் கடந்த காலத்தில் எங்களை அழித்தான்.
கடந்த காலத்தில் நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்கினான்.
கடந்த காலத்தில் அவன் எங்கள் ஜனங்களைக் கொண்டுப் போனான்.
நாங்கள் காலியான ஜாடியைப் போன்றிருந்தோம்.
எங்களிடமிருந்த சிறந்தவற்றை அவன் எடுத்தான்.
அவன் பெரிய ராட்சதனைப்போன்று வயிறு நிறையும்வரை தின்றுக்கொண்டிருந்தான்.
எங்களிடமுள்ள சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு
எங்களை எறிந்துவிட்டான்.
35 எங்களைத் தாக்க பாபிலோன் பயங்கரமானவற்றைச் செய்தது.
அவை இப்பொழுது பாபிலோனுக்கு ஏற்படவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”
சீயோனில் வாழ்கின்ற ஜனங்கள் அவற்றைச் சொல்வார்கள்:
“பாபிலோனிய ஜனங்கள் எங்கள் ஜனங்களைக் கொன்ற குற்றம் உள்ளவர்கள்.
இப்பொழுது அவர்கள் தாம் செய்த தவறுக்குத் தண்டிக்கப்படுகிறார்கள்”
எருசலேம் நகரம் அவற்றைச் சொல்லும்.
36 எனவே கர்த்தர் கூறுகிறார்,
“யூதா உன்னை நான் பாதுகாப்பேன்.
பாபிலோன் தண்டிக்கப்படும் என்பதை நான் உறுதி செய்வேன்.
பாபிலோன் கடலை நான் வற்றச் செய்வேன்.
நான் அவளது நீரூற்றுக்களை வற்றச் செய்வேன்.
37 பாபிலோன் அழிந்த கட்டிடங்களின் குவியலாக ஆகும்.
பாபிலோன் காட்டு நாய்கள் வாழத்தக்க இடமாகும்.
ஜனங்கள் கற்குவியலைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
அவர்கள் பாபிலோனைப் பற்றி நினைக்கும்போது தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
ஜனங்கள் எவரும் வாழாத இடமாக பாபிலோன் ஆகும்.
38 “பாபிலோன் ஜனங்கள் கெர்ச்சிக்கிற இளம் சிங்கங்களைப் போன்றவர்கள்.
அவர்களது சத்தம் சிங்கக் குட்டிகளைப் போன்றிருக்கும்.
39 அந்த ஜனங்கள் வல்லமை மிக்க சிங்கங்களைப் போன்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு ஒரு விருந்துக் கொடுப்பேன்.
நான் அவர்களைக் குடிபோதையேறினவர்களாக்குவேன்.
அவர்கள் சிரிப்பார்கள். நல்ல நேரத்தைப் பெறுவார்கள்.
பிறகு அவர்கள் என்றென்றும் தூங்குவார்கள்.
அவர்கள் என்றும் விழிக்கமாட்டார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
40 “பாபிலோன் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்கும்.
ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாடுகள் போன்றிருக்கும்.
நான் அவற்றை வெட்டுவதற்குக் கொண்டு செல்வேன்.
41 “சேசாக்கு” தோற்கடிக்கப்படும்.
பூமியிலே சிறந்ததும் கர்வமுமுள்ள நாடு எவ்வாறு சிறைப் பிடிக்கப்படும்?
மற்ற தேசங்களில் உள்ள ஜனங்கள்
பாபிலோன் பாழாய்ப்போவதை கவனித்துப் பார்ப்பார்கள்.
அவர்கள் பார்க்கின்றவை அவர்களைப் பயப்படுத்தும்.
42 பாபிலோன் மீது கடல் எழும்பும்.
அதன் இரைச்சலான அலைகள் அவளை மூடும்.
43 பாபிலோன் நகரங்கள் அழிக்கப்பட்டு காலியாகும்.
பாபிலோன் வறண்ட வனாந்தரமாகும்.
அது ஜனங்கள் வாழாத தேசமாகும்.
ஜனங்கள் பாபிலோன் வழியாகப் பயணம்கூட செய்யமாட்டார்கள்.
44 பாபிலோனிலுள்ள பொய்த் தெய்வமான பேலைத் தண்டிப்பேன்.
அவன் விழுங்கிய ஜனங்களை வாந்திப்பண்ணும்படி செய்வேன்.
பாபிலோனைச் சுற்றியுள்ள சுவர்கள் கீழே விழும்.
மற்ற தேசத்தார்கள் பாபிலோனுக்கு வருவதை நிறுத்துவார்கள்.
45 எனது ஜனங்களே, பாபிலோன் நகரத்தை விட்டு வெளியே வாருங்கள்.
உங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடுங்கள்.
கர்த்தருடைய பெருங்கோபத்திலிருந்து ஓடுங்கள்.
46 “எனது ஜனங்களே, பயந்து நடுங்கவேண்டாம்.
வதந்திகள் பரவும் ஆனால் பயப்படவேண்டாம்!
இந்த ஆண்டு ஒரு வதந்தி வரும்.
அடுத்த ஆண்டு இன்னொரு வதந்தி வரும்.
நாட்டில் நடக்கும் பயங்கரமான சண்டையைப்பற்றி வதந்திகள் இருக்கும்.
ஆள்வோர்கள் மற்ற ஆள்வோர்களுக்கு எதிராகச் சண்டையிடுவதைப்பற்றி வதந்திகள் இருக்கும்.
47 நேரம் நிச்சயம் வரும்.
பாபிலோனில் உள்ள பொய்த் தெய்வங்களை நான் தண்டிப்பேன்.
பாபிலோன் நாடு முழுவதும் வெட்கப்படுத்தப்படும்.
ஏராளமாக மரித்த ஜனங்கள்
அந்நகரத் தெருக்களில் கிடப்பார்கள்.
48 பிறகு பாபிலோனைப்பற்றி பரலோகமும் பூமியும் அவற்றில் உள்ளனவும் மகிழ்ச்சியுடன் சத்தமிடும்.
அவர்கள் சத்தமிடுவார்கள்.
ஏனென்றால், வடக்கிலிருந்து படை வந்து
பாபிலோனுக்கு எதிராகச் சண்டையிட்டது”
கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
49 “இஸ்ரவேலில் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.
பூமியின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஜனங்களை பாபிலோன் கொன்றது.
எனவே பாபிலோன் விழவேண்டும்!
50 வாளுக்குத் தப்பியவர்களே,
வேகமாக பாபிலோனை விட்டு விலகுங்கள்.
காத்திருக்காதீர்கள்!
நீங்கள் தொலைதூர நாட்டில் இருக்கிறீர்கள்.
ஆனால், நீங்கள் எங்கே இருந்தாலும் கர்த்தரை நினையுங்கள்.
எருசலேமை நினையுங்கள்.
51 “யூதாவின் ஜனங்களாகிய நாங்கள் அவமானமடைகிறோம்.
நாங்கள் நிந்திக்கப்பட்டிருக்கிறோம்.
ஏனென்றால், அந்நியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின்
பரிசுத்தமான இடங்களுக்குள் போயிருக்கிறார்கள்.”
52 கர்த்தர் கூறுகிறார்: “நேரம் வந்துக்கொண்டிருக்கிறது,
நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிப்பேன்.
அப்போது, புண்ப்பட்ட ஜனங்கள் வலியுடன்
நாட்டின் எல்லா இடங்களிலும் அழுவார்கள்.
53 பாபிலோன் வானத்தைத் தொடுகின்றவரை வளரலாம்.
பாபிலோன் தனது கோட்டைகளைப் பலப்படுத்தலாம்.
ஆனால் அந்நகரத்தை எதிர்த்து போரிடுமாறு நான் ஜனங்களை அனுப்புவேன்.
அந்த ஜனங்கள் அவளை அழிப்பார்கள்”
கர்த்தர் இவற்றைக் கூறினார்.
54 “பாபிலோனில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருப்பதை நாங்கள் கேட்கமுடியும்.
பாபிலோன் தேசத்தில் ஜனங்கள் பொருட்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓசையைக் கேட்கமுடியும்.
55 விரைவில் கர்த்தர் பாபிலோனை அழிப்பார்.
அந்த நகரில் உள்ள உரத்த ஓசைகளை அவர் நிறுத்துவார்.
பகைவர்கள் இரைகின்ற அலைகளைப்போன்று வருவார்கள்.
சுற்றிலும் உள்ள ஜனங்கள் அந்த இரைச்சலைக் கேட்பார்கள்.
56 படை வந்து பாபிலோனை அழிக்கும்.
பாபிலோனின் வீரர்கள் கைப்பற்றப்படுவார்கள்.
அவர்களின் அம்புகள் உடைக்கப்படும்.
ஏனென்றால், கர்த்தர் ஜனங்கள் செய்த தீயசெயல்களுக்கு தண்டனையைக் கொடுக்கிறார்.
கர்த்தர் அவர்களுக்கேற்ற முழு தண்டனையையும் கொடுக்கிறார்.
57 நான் பாபிலோனின் ஞானிகளையும்
முக்கியமான அதிகாரிகளையும் குடிமயக்கத்துக்குள்ளாக்குவேன்.
நான் ஆளுநர்களையும் அதிகாரிகளையும்
வீரர்களையும்கூடக் குடிக்கச்செய்வேன்.
பிறகு அவர்கள் என்றென்றைக்கும் உறங்குவார்கள்.
அவர்கள் எப்பொழுதும் எழமாட்டார்கள்”
அரசர் இவற்றைச் சொன்னார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
58 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,
“பாபிலோனின் அகலமான வலிமையான சுவர் கீழேத்தள்ளப்படும்.
அவளது உயர்ந்த வாசல்கள் எரிக்கப்படும்.
பாபிலோன் ஜனங்கள் கடினமான வேலை செய்வார்கள்.
ஆனால் அது உதவாது.
அவர்கள் நகரைக் காப்பாற்ற முயல்வதில்
சோர்ந்து போவார்கள்.
ஆனால் அவர்கள் எரியும் நெருப்புக்கு எண்ணெய் போன்று ஆவார்கள்.”
எரேமியா பாபிலோனுக்குச் செய்தி அனுப்புகிறான்
59 இதுதான் எரேமியா அதிகாரி செராயாவிற்குக் கொடுத்த செய்தி. செராயா நேரியாவின் மகன். நேரியா மசெயாவின் மகன். செரயா யூதாவின் அரசன் சிதேக்கியாவோடு பாபிலோனுக்குப் போனான். இது சிதேக்கியா யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் நடந்தது. அப்போது, எரேமியா இச்செய்தியை அதிகாரியான செரயாவிடம் கொடுத்தான். 60 எரேமியா பாபிலோனுக்கு ஏற்படக்கூடிய பயங்கரங்களைப்பற்றி புத்தகச்சுருளில் எழுதியிருந்தான். அவன் பாபிலோனைப்பற்றி எல்லாவற்றையும் எழுதியிருந்தான்.
61 எரேமியா செராயாவிடம் சொன்னான், “செராயா, பாபிலோனுக்குப் போ, இச்செய்தியை வாசிப்பதைப்பற்றி உறுதி செய்துக்கொள். எனவே எல்லா ஜனங்களும் உன்னைக் கேட்பார்கள். 62 பிறகு சொல், ‘கர்த்தாவே, இந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொன்னீர். நீர் அழிப்பீர். எனவே மனிதர்களோ மிருகங்களோ இதில் வாழாது. இந்த இடம் என்றென்றும் காலியான அழிவிடமாக இருக்கும்.’ 63 இப்புத்தகச் சுருளை வாசித்து முடிந்த பிறகு இதில் ஒரு கல்லைக்கட்டு. பிறகு இந்தப் புத்தகச்சுருளை ஐபிராத்து நதியில் போடு. 64 பிறகு சொல், ‘இதே வழியில் பாபிலோன் மூழ்கும், பாபிலோன் என்றும் எழாது. பாபிலோனியர் மூழ்கிப் போவார்கள். ஏனென்றால், நான் இங்கே பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்.’”
எரேமியாவின் வார்த்தைகள் இங்கே முடிகிறது.
எருசலேமின் வீழ்ச்சி
52 சிதேக்கியா யூதாவின் அரசனானபோது அவனது வயது 21. சிதேக்கியா எருசலேமை பதினோரு ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் அமுத்தாள். அவள் எரேமியாவின் மகள். அவனது குடும்பம் லீப்னா ஊரிலிருந்து வந்தது. 2 சிதேக்கியா பொல்லாப்புகளை யோயாக்கீம் போலச் செய்தான். சிதேக்கியா பொல்லாப்புகளைச் செய்வதை கர்த்தர் விரும்பவில்லை. 3 எருசலேமுக்கும் யூதாவுக்கும் பயங்கரமானவை நேர்ந்தது. ஏனென்றால் கர்த்தர் அவர்களுடன் கோபமாக இருந்தார். இறுதியாக, கர்த்தர் அவரது பார்வையிலிருந்து எருசலேம் மற்றும் யூதா ஜனங்களைத் தூர எறிந்தார்.
சிதேக்கியா பாபிலோன் அரசனுக்கு எதிராகத் திரும்பினான். 4 எனவே, சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு எதிராகப் படையெடுத்தான். நேபுகாத்நேச்சாரோடு அவனது முழுப்படையும் இருந்தது. பாபிலோனின் படையானது எருசலேமிற்கு வெளியே முகாமிட்டது. நகரச் சுவரைச் சுற்றிலும் அவர்கள் மதிற்சுவர்களைக் கட்டினார்கள். எனவே அவர்களால் சுவரைத் தாண்ட முடிந்தது. 5 எருசலேம் நகரமானது பாபிலோன் படையால் சிதேக்கியாவின் பதினோராவது ஆட்சியாண்டுவரை முற்றுகையிடப்பட்டது. 6 அந்த ஆண்டின் நாலாவது மாதத்தின் ஒன்பதாவது நாளில் நகரில் பசியானது மிக அதிகமாக இருந்தது. நகர ஜனங்கள் உண்பதற்கு உணவு எதுவும் மீதியில்லை. 7 அந்த நாளில் பாபிலோனின் படை எருசலேமிற்குள் நுழைந்தது. எருசலேமிலுள்ள வீரர்கள் வெளியே ஓடினார்கள். அவர்கள் இரவில் நகரைவிட்டு ஓடினார்கள். இரண்டு சுவர்களுக்கு இடையில் உள்ள வாசல் வழியாக அவர்கள் போனார்கள். அந்த வாசல் அரசனின் தோட்டத்திற்கு அருகில் இருந்தது. பாபிலோனின் படை நகரை முற்றுகையிட்டிருந்தபோதிலும் எருசலேம் வீரர்கள் மேலும் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் வனாந்தரத்தின் வழியாக ஓடிப்போனார்கள்.
8 ஆனால் பாபிலோனியப்படை அரசன் சிதேக்கியாவைத் துரத்தியது. எரிகோ சமவெளியில் அவர்கள் அவனைப் பிடித்தனர். அவனோடு வந்த வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 9 பாபிலோன் படை அரசன் சிதேக்கியாவைக் கைப்பற்றினர். அவர்கள் அவனை ரிப்லா நகரத்திற்குக் கொண்டுபோயினர். ரிப்லா, ஆமாத் நாட்டில் இருக்கிறது. ரிப்லாவில் பாபிலோன் அரசன் சிதேக்கியா பற்றிய தீர்ப்பை அறிவித்தான். 10 ரிப்லா நகரத்தில் சிதேக்கியாவின் மகன்களை பாபிலோன் அரசன் கொன்றான். தன் மகன்கள் கொல்லப்படுவதை கவனிக்கும்படி சிதேக்கியா வற்புறுத்தப்பட்டான். பாபிலோன் அரசன் யூதாவின் எல்லா அதிகாரிகளையும் கொன்றான். 11 பிறகு பாபிலோன் அரசன் சிதேக்கியாவின் கண்களைப் பிடுங்கினான். அவன் அவனுக்கு வெண்கல சங்கிலிகளைப் போட்டான். பிறகு அவன் பாபிலோனுக்கு சிதேக்கியாவைக் கொண்டுப் போனான். பாபிலோனில் அவன் சிறையில் சிதேக்கியாவை அடைத்தான். சிதேக்கியா மரித்துப் போகும்வரை சிறையிலேயே இருந்தான்.
12 நேபுசராதான், பாபிலோன் அரசனது சிறப்பு காவல் படையின் தளபதி. அவன் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாவது மாதத்தின் 10வது நாளில் இது நடந்தது. பாபிலோனில் நேபுசராதான் ஒரு முக்கியமான தலைவன். 13 நேபுசராதான் கர்த்தருடைய ஆலயத்தை எரித்தான். அவன் எருசலேமில் அரசனது அரண்மனையையும் இன்னும் பல வீடுகளையும் எரித்தான். எருசலேமில் உள்ள ஒவ்வொரு முக்கிய கட்டிடத்தையும் எரித்தான். 14 பாபிலோனியப் படை முழுவதும் எருசலேமைச் சுற்றியுள்ள சுவர்களை உடைத்தது. அப்படை அரசரது சிறப்புப் படையின் தளபதியின்கீழ் இருந்தது. 15 நேபுசராதான், தளபதி, எருசலேமில் மீதியாக இருந்த ஜனங்களைக் கைதிகளாகச் சிறைபடுத்தினான். பாபிலோன் அரசனிடம் சரணடைந்தவர்களையும் அவன் அழைத்துக் கொண்டுப்போனான். எருசலேமில் மீதியாக இருந்த கைவினைக் கலைஞர்களையும் அவன் அழைத்துக்கொண்டுப்போனான். 16 ஆனால் நேபுசராதான் அந்நாட்டில் சில ஏழைகளை மட்டும் விட்டுவிட்டுப் போனான். திராட்சைத் தோட்டத்திலும் வயல்களிலும் வேலை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டுப் போனான்.
17 பாபிலோனியப்படை ஆலயத்தில் உள்ள வெண்கலத்தூண்களை உடைத்தார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள தாங்கிகளையும் வெண்கலத்தொட்டியையும் உடைத்தார்கள். அவர்கள் பாபிலோனுக்கு அவ்வெண்கலத்தைக் கொண்டுப் போனார்கள். 18 பாபிலோனியப்படை ஆலயத்திலிருந்து கீழ்க்கண்டவற்றைக் கொண்டுப்போனது. செப்புச் சட்டிகள், சாம்பல் எடுக்கும் கரண்டிகள், வெட்டுக்கத்திகள், கலங்கள், கலயங்கள்,ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகள், 19 அரசனது சிறப்புக் காவல் படையின் தளபதி இவற்றையும் கொண்டுபோனான். கிண்ணங்கள், நெருப்புத்தட்டுகள், கலங்கள், சட்டிகள், விளக்குத் தண்டுகள், கலயங்கள், கரகங்கள், பான பலிகளின் காணிக்கை மற்றும் வெள்ளியாலும் பொன்னாலுமான எல்லாவற்றையும் அவன் எடுத்தான். 20 இரண்டு தூண்கள், கடல் தொட்டியும் அதனடியில் உள்ள பன்னிரெண்டு வெண்கல காளைகளும் நகரும் தாங்கிகளும் மிக கனமானவை. சாலொமோன் அரசன் கர்த்தருடைய ஆலயத்திற்காக செய்தான். எடை பார்க்க முடியாத அளவுள்ள வெண்கலத்தை இப்பொருட்கள் செய்ய பயன்படுத்தினான். 21 ஒவ்வொரு வெண்கலத் தூணும் 31 அடி உயரமுடையது. ஒவ்வொரு தூணும் 21 அடி சுற்றளவு உள்ளது. ஒவ்வொரு தூணும் உள்ளே வெற்றிடம் கொண்டது. ஒவ்வொரு தூணிண் சுவரும் 3 அங்குலம் உடையது. 22 முதல் தூணின் மேலிருந்த குமிழின் உயரம் 8 அடி உயரம் உடையது. அதைச்சுற்றிலும் வலைப் பின்னல்களாலும் மாதளம் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அடுத்தத் தூணிலும் மாதளம்பழ அலங்காரம் உண்டு. அது முதல் தூணைப்போன்றிருந்து. 23 மொத்தம் 96 மாதுளம்பழங்கள் தூணின் பக்கங்களில் தொங்கின. ஆக மொத்தம் 100 மாதுளம்பழங்கள் வலைப் பின்னலில் தூண்களைச் சுற்றி இருந்தன.
24 அரசனின் சிறப்புக் காவல்படை தளபதி செராயா மற்றும் செப்பனியாவை கைதிகளாகச் சிறைப்பிடித்தான். செராயா தலைமை ஆசாரியன், செப்பனியா அடுத்த ஆசாரியன். மூன்று வாயில் காவலர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். 25 அரசனின் சிறப்புக் காவல் படைத் தளபதி சண்டையிடுவோரின் மேலதிகாரியைச் சிறைப்பிடித்தான். அவர் அரசனின் ஏழு ஆலோசகர்களையும் சிறைப்பிடித்தான். எருசலேமில் அவர்கள் அப்பொழுதும் இருந்தனர். படையில் சேர்க்கின்ற எழுத்தாளனையும் அவன் பிடித்தான். அவன் நகரில் இருந்த சாதாரண ஆட்கள் 60 பேரையும் பிடித்தான். 26-27 நேபுசராதான் தளபதி இந்த அதிகாரிகள் எல்லோரையும் பிடித்தான். அவன் அவர்களை பாபிலோன் அரசனிடம் கொண்டு வந்தான். பாபிலோன் அரசன் ரிப்லா நகரில் இருந்தான். ரிப்லா ஆமாத் நாட்டில் இருக்கிறது. அந்த ரிப்லா நகரில், அரசன் அதிகாரிகளையெல்லாம் கொல்லும்படி கட்டளையிட்டான்.
எனவே யூதா ஜனங்கள் தமது நாட்டிலிருந்து பிடித்துச்செல்லப்பட்டனர். 28 நேபுகாத்நேச்சார் எத்தனை ஜனங்களைக் கைது செய்தான் என்னும் பட்டியல் இது:
நேபுகாத்நேச்சாரின் ஏழாவது ஆட்சியாண்டில் யூதாவிலிருந்து 3,023 ஆண்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
29 நேபுகாத்நேச்சாரின் 18வது ஆட்சியாண்டில் 832 ஜனங்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
30 நேபுகாத்நேச்சாரின் 23வது ஆட்சியாண்டில் நேபுசராதான் 745 பேரைக் கைது செய்து கொண்டுப்போனான்.
நேபுசராதான் அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதி.
மொத்தம் 4,600 ஜனங்கள் சிறை செய்யப்பட்டனர்.
யோயாக்கீன் விடுதலை செய்யப்படுகிறான்
31 யோயாக்கீன் யூதாவின் அரசன். இவன் பாபிலோனில் 37 ஆண்டுகள் சிறையில் இருந்தான். பாபிலோனின் அரசனான ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் இரக்கமாயிருந்தான். அவ்வாண்டில் யோயாக்கீனை சிறையைவிட்டு விடுவித்தான். இதே ஆண்டில்தான் ஏவில்மெரொதாக் பாபிலோனின் அரசன் ஆனான். ஏவில்மெரொதாக் 12வது மாதத்தின் 25ஆம் நாளன்று யோயாக்கீனை சிறையிலிருந்து விடுவித்தான். 32 ஏவில்மெரொதாக் யோயாக்கீனுடன் இரக்கமான வழியில் பேசினான். பாபிலோனில் தன்னோடு இருந்த மற்ற அரசர்களுக்குரியதைவிட கௌரவமான இடத்தைக் கொடுத்தான். 33 எனவே யோயாக்கீன் தனது சிறை உடையை நீக்கினான். மீதியுள்ள வாழ்நாளில், அரசனின் மேசையில் ஒழுங்காகச் சாப்பிட்டான். 34 ஒவ்வொரு நாளும் பாபிலோன் அரசன் யோயாக்கீனுக்கு உதவித் தொகை கொடுத்தான். யோயாக்கீன் மரிக்கும்வரை இது தொடர்ந்தது.
எருசலேம் அவளது அழிவிற்காக அழுகிறாள்
1 எருசலேம் ஒரு காலத்தில் ஜனங்கள் நிறைந்த நகரமாக இருந்தது.
ஆனால் இப்போது, இந்த நகரம் வனாந்தரமாயுள்ளது!
எருசலேம் உலகத்தில் பெரிய நகரங்களுள் ஒன்றாயிருந்தது.
ஆனால் இப்போது, அவள் ஒரு விதவையைப் போன்றிருக்கிறாள்.
அவள் ஒரு காலத்தில் நகரங்களில் இளவரசியைப் போன்றிருந்தாள்.
ஆனால் இப்பொழுது அடிமையாக்கப்பட்டிருக்கிறாள்.
2 அவள் இரவில் பரிதாபமாக அழுகிறாள்.
அவளது கண்ணீர் அவளின் கன்னங்களில் உள்ளது.
இப்பொழுது யாருமே அவளைத் தேற்றுவாரில்லை.
பல நாடுகள் அவளிடம் நட்புடனிருந்தன.
இப்பொழுது யாரும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.
அவளது அனைத்து நண்பர்களும் அவளுக்கு முதுகைத் திருப்பிக் கொண்டனர்.
அவளது நண்பர்கள் அவளின் எதிரிகளானார்கள்.
3 யூதா மிகவும் துன்புற்றது.
பிறகு, யூதா சிறையெடுக்கப்பட்டது.
யூதா மற்ற நாடுகளுக்கு மத்தியில் வாழ்கிறது.
ஆனால், அவள் ஓய்வைப் பெற்றிருக்கவில்லை.
ஜனங்கள் அவளைத் துரத்திப் பிடித்தார்கள்.
அவர்கள் அவளைக் குறுகலான பள்ளத்தாக்குகளில் பிடித்தனர்.
4 சீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன.
ஏனென்றால், விடுமுறை நாட்களைக் கழிக்க எவரும் இனிமேல் வருவதில்லை.
சீயோனின் அனைத்து வாசல்களும் அழிக்கப்பட்டன.
சீயோனின் அனைத்து ஆசாரியர்களும் தவிக்கிறார்கள்.
சீயோனின் இளம் பெண்கள் கடத்திக் கொண்டுப்போகப்பட்டனர்.
இவை அனைத்தும் சீயோனுக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது.
5 எருசலேமின் பகைவர்கள் வெற்றி பெற்றார்கள்.
அவளது பகைவர்கள் வளமடைந்தனர்.
இது ஏன் நிகழ்ந்தது என்றால், கர்த்தர் அவளைத் தண்டித்தார்.
அவர் எருசலேமை அவளது பல பாவங்களுக்காகத் தண்டித்தார்.
அவளது பிள்ளைகள் வெளியேறிவிட்டனர்.
அவர்களது பகைவர்கள் அவர்களைக் கைப்பற்றி பிடித்துக்கொண்டு போனார்கள்.
6 சீயோன் மகளது [a] அழகு போய்விட்டது.
அவளது இளவரசர்கள் மேய்ச்சல் இடத்தைக் கண்டுபிடியாத மான்களைப் போலானார்கள்.
அவர்கள் பலமில்லாமல் அவர்கள் தம்மை துரத்துகிறவனை விட்டு ஓடிப்போனார்கள்.
7 எருசலேம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறாள்.
எருசலேம் தான் பாதிக்கப்பட்டு
தன் வீடுகளை இழந்த காலத்தை நினைக்கிறாள்.
அவள் கடந்த காலத்தில் தான் பெற்றிருந்த
இனிய காரியங்களை எண்ணிப் பார்க்கிறாள்.
அவள் பழைய நாட்களில் பெற்ற
சிறந்தவற்றை நினைத்துப் பார்க்கிறாள்.
அவள் தனது ஜனங்கள் எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டதை
எண்ணிப் பார்க்கிறாள்.
அவள் தனக்கு உதவ எவரும் இல்லாத
நிலையை எண்ணுகிறாள்.
அவளை அவளது பகைவர்கள் பார்க்கும்போது சிரித்தார்கள்.
ஏனென்றால், அவள் அழிக்கப்பட்டாள்.
8 எருசலேம் மிக மோசமான பாவங்களைச் செய்தாள்.
எருசலேம் பாவம் செய்ததால்,
அவள் அழிக்கப்பட்ட நகரமானாள்.
ஜனங்கள் அவளது நிலையைக் கண்டு தங்களின் தலைகளை அசைத்து மறுதலிக்கிறார்கள்.
கடந்த காலத்தில் ஜனங்கள் அவளை மதித்தனர். இப்போது ஜனங்கள் அவளை வெறுக்கின்றனர்.
ஏனென்றால், அவர்கள் அவளை அவமானப்படுத்தினார்கள்.
எருசலேம் பெருமூச்சுவிட்டு பின்னிட்டுத் திரும்பினாள்.
9 எருசலேமின் ஆடைகள் அழுக்காயின.
அவளுக்கு என்ன நிகழப்போகிறது என்பதைப் பற்றி அவள் எண்ணிப் பார்க்கவில்லை.
பார் நான் எப்படி காயப்பட்டேன்! அவளது வீழ்ச்சி அதிசயமானது.
அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை.
“கர்த்தாவே! நான் எவ்வாறு காயப்பட்டேன் என்பதைப் பாரும்.
எனது பகைவன் தன்னை எவ்வளவு பெரியவனாக நினைக்கிறான் என்பதைப் பாரும்!” என்று சொன்னாள்.
10 பகைவன் தனது கையை நீட்டினான்.
அவன் அவளது இன்பமான அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.
உண்மையில், அவள் தனது ஆலயத்திற்குள் அயல்நாட்டவர்கள் நுழைவதைப் பார்த்தாள்,
கர்த்தாவே, அந்த ஜனங்கள் எங்கள் சபையில் சேரமுடியாது என்று நீர் சொன்னீர்!
11 எருசலேமின் அனைத்து ஜனங்களும் தவிக்கிறார்கள்.
அவர்கள் உணவுக்காக அலைகிறார்கள்.
அவர்கள் தங்கள் நல்ல பொருட்களை உணவுக்காக மாற்றிக் கொண்டார்கள்.
அவர்கள் உயிர் வாழ்வதற்காக இவற்றைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எருசலேம் சொல்கிறது: “கர்த்தாவே என்னைப் பாரும்!
ஜனங்கள் என்னை எப்படி வெறுக்கிறார்கள் பாரும்.
12 சாலை வழியாகக் கடந்து செல்லும் ஜனங்களே,
நீங்கள் எனக்காக கவலைப்படுகின்றவர்களாக தெரியவில்லை.
ஆனால் என்னைப் பாருங்கள்.
எனது வலியைப்போன்று வேறுவலி உண்டோ?
எனக்கு வந்திருக்கிற வலியைப்போன்று வேறுவலி இருக்கிறதா?
கர்த்தர் என்னைத் தண்டித்திருக்கிறது போன்றவலி வேறு உள்ளதோ?
அவர் தனது பெருங்கோபமான நாளில் என்னைத் தண்டித்திருக்கிறார்.
13 கர்த்தர் மேலிருந்து நெருப்பை அனுப்பினார்,
அந்த நெருப்பு எனது எலும்புகளுக்குள் சென்றது.
அவர் எனது கால்களுக்கு வலையை விரித்தார்.
என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்.
என்னைப் பாழ்நிலமாகப் பண்ணினார்.
நாள் முழுவதும் நான் நோயுற்றிருந்தேன்.
14 “எனது பாவங்கள் நுகத்தைப்போன்று கட்டப்பட்டுள்ளது,
எனது பாவங்கள் கர்த்தருடைய கைகளில் கட்டப்பட்டுள்ளது.
கர்த்தருடைய நுகம் என் கழுத்தில் இருக்கிறது.
கர்த்தர் என்னை பலவீனமாக்கியுள்ளார்.
நான் எதிர்த்து நிற்க முடியாதபடி
கர்த்தர் என்னை ஒடுக்குகிற ஜனங்களின் கையில் கொடுத்திருக்கிறார்.
15 கர்த்தர் எனது பலமான படை வீரர்களை மறுத்துவிட்டார்.
அவ்வீரர்கள் நகரத்திற்குள்ளே இருந்தனர்.
பிறகு கர்த்தர் ஒரு ஜனக்குழுவை எனக்கு எதிராக கொண்டு வந்தார்.
என்னுடைய இளம் வீரர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வந்தார்.
கர்த்தர் ஆலைக்குள்ளே திராட்சைப் பழங்களை மிதிப்பதுபோல
யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.
16 “நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன்.
எனது கண்களில் கண்ணீர் ஓடுகிறது.
எனக்கருகில் ஆறுதல் எதுவுமில்லை.
என்னைத் தேற்ற எவருமில்லை.
எனது பிள்ளைகள் பாழான நிலத்தைப் போன்றிருக்கிறார்கள்.
அவர்கள் அவ்வாறு இருக்கின்றனர்.
ஏனென்றால் பகைவர்கள் வென்றிருக்கின்றனர்.”
17 சீயோன் தனது கைகளை விரித்தாள்.
அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை.
கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.
கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு நகரத்தைச் சுற்றி வளைக்கும்படி கட்டளையிட்டார்.
எருசலேம் அசுத்தமாகியிருக்கிறது.
அந்தப் பகைவர்களுக்கு மத்தியில் எருசலேம் அசுத்தமாயிற்று.
18 இப்போது எருசலேம் கூறுகிறாள்: “நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன்.
எனவே, கர்த்தர் இவற்றையெல்லாம் செய்யும் உரிமையைப் பெற்றார்.
எனவே ஜனங்களே, கவனியுங்கள்! எனது வேதனையைப் பாருங்கள்!
எனது இளம் பெண்களும் ஆண்களும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
19 நான் எனது நேசர்களை கூப்பிட்டேன்.
ஆனால் அவர்கள் என்னை மோசம் பண்ணினார்கள்.
எனது ஆசாரியர்களும், முதியவர்களும்
இந்நகரத்தில் மரித்திருக்கின்றனர்.
அவர்கள் உணவுக்காக அலைந்திருக்கிறார்கள்.
அவர்கள் உயிரோடு வாழ விரும்பியிருக்கிறார்கள்.
20 “என்னைப் பாரும் கர்த்தாவே, நான் மிக்க துன்பத்தில் இருக்கிறேன்!
எனது உள்மனம் கலங்குகிறது!
எனது இதயம் மேலிருந்து கீழ்ப்பக்கம் திரும்பினதுபோல் உள்ளது!
என்னுடைய கசப்பான அனுபவங்களின்
காரணமாக என் இதயம் இப்படி உணர்கிறது!
வீதிகளில் வாள் எனது பிள்ளைகளைக் கொன்றது.
வீடுகளுக்குள் மரணம் இருந்தது.
21 “என்னைக் கவனியுங்கள்! ஏனென்றால், நான் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
எனக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லை!
எனது பகைவர்கள் எல்லாரும் என் துன்பத்தைக் கேள்விப்பட்டு,
அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.
நீர் இவற்றை எனக்குச் செய்ததால்,
அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
தண்டனைக்குரிய காலம் வரும் என்று நீர் சொன்னீர்.
எனது பகைவர்களைத் தண்டிப்பதாகச் சொன்னீர்.
நீர் என்ன சொன்னீரோ அதை இப்பொழுது செய்யும்.
நான் இப்பொழுது இருப்பதுபோன்று என் பகைவரும் இருக்கட்டும்.
22 “எனது பகைவர்கள் எவ்வளவு கொடியவர்கள் எனப்பாரும்.
எனது பாவங்களுக்கெல்லாம் எனக்கு எவ்வாறு செய்தீரோ அதே வழியில் அவர்களுக்கும் செய்யும்.
இதனைச் செய்யும்.
ஏனென்றால், நான் மேலும் மேலும் வேதனையடைகிறேன்.
ஏனென்றால், எனது இதயம் நோயுற்றிருக்கிறது.”
2008 by World Bible Translation Center