Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
புலம்பல் 2:1 - எசேக்கியேல் 12:20

கர்த்தர் எருசலேமை அழித்தார்.

கர்த்தர் சீயோன் மகளை ஒரு மேகத்தின் கீழ் எவ்வாறு மூடி வைத்திருக்கிறார் என்பதை பார்.
    அவர் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமிக்கு எறிந்திருக்கிறார்.
    கர்த்தர் அவரது கோப நாளில் இஸ்ரவேல் அவரது பாதபீடம் என்பதை தன் மனதில் வைக்கவில்லை.
கர்த்தர் யாக்கோபின் வீடுகளை அழித்தார்.
    அவர் அவற்றை இரக்கமில்லாமல் அழித்தார்.
அவர் அவரது கோபத்தில் யூதா மகளின் [a]
    கோட்டைகளை அழித்தார்.
கர்த்தர் யூதாவின் இராஜ்யத்தையும்
    அதன் அரசர்களையும் தரையில் தூக்கி எறிந்தார்.
    அவர் யூதாவின் இராஜ்யத்தை அழித்தார்.
கர்த்தர் கோபமாக இருந்து இஸ்ரவேலின் பலத்தை அழித்தார்.
    அவர் தனது வலது கையை இஸ்ரவேலிலிருந்து எடுத்தார்.
பகைவர்கள் வந்தபோது அவர் இதனைச் செய்தார்.
    அவர் யாக்கோபில் அக்கினி ஜூவாலைப் போல் எரிந்தார்.
அவர் சுற்றிலும் உள்ளவற்றை எரிக்கிற
    நெருப்பைப் போன்று இருந்தார்.
கர்த்தர் தனது வில்லை ஒரு பகைவனைப் போன்று வளைத்தார்.
    அவர் தனது வாளை வலது கையில் ஏந்தினார்.
அவர் யூதாவினுள் கண்ணுக்கு அழகான ஆண்களை எல்லாம் கொன்றார்.
    கர்த்தர் ஒரு பகைவனைப்போன்று அவர்களைக் கொன்றார்.
கர்த்தர் தனது கோபத்தை ஊற்றினார்.
    அவர் சீயோனின் கூடாரங்களில் அதனை ஊற்றினார்.

கர்த்தர் ஒரு பகைவனைபோன்று ஆகியிருக்கிறார்.
    அவர் இஸ்ரவேலை விழுங்கியிருக்கிறார்.
அவர் அவளது அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்.
    அவர் அவளது கோட்டைகளையெல்லாம் விழுங்கினார்.
அவர் யூதா மகளின் மரித்த ஜனங்களுக்காக
    மிகவும் துக்கமும் அழுகையும் உண்டாக்கினார்.

கர்த்தர் தனது சொந்த கூடாரத்தை
    ஒரு தோட்டத்தின் செடிகளைப் பிடுங்குவதைப் போன்று பிடுங்கிப்போட்டார்.
ஜனங்கள் போய் கூடி அவரை தொழுவதற்காக
    இருந்த இடத்தை அவர் அழித்திருந்தார்.
கர்த்தர் சீயோனில் சிறப்பு சபைக் கூட்டங்களையும்,
    ஓய்வு நாட்களையும் மறக்கப்பண்ணினார்.
கர்த்தர் அரசன் மற்றும் ஆசாரியர்களை நிராகரித்தார்.
    அவர் கோபங்கொண்டு அவர்களை நிராகரித்தார்.
கர்த்தர் அவரது பலிபீடத்தையும் தனது தொழுவதற்குரிய பரிசுத்தமான இடத்தையும் புறக்கணித்தார்.
    அவர் எருசலேமின் அரண்மனை சுவர்களை இடித்துப்போடும்படி பகைவர்களை அனுமதித்தார்.
பண்டிகை நாளில் ஆரவாரம் செய்வதுபோல்
    கர்த்தருடைய ஆலயத்தில் ஆரவாரம் பண்ணினர்.
சீயோன் மகளின் சுவர்களை அழித்திட கர்த்தர் திட்டமிட்டார்.
    அவர் ஒரு அளவு கோட்டை சுவரில் குறித்து,
அதுவரை இடித்துப் போடவேண்டும் என்று காட்டினார்.
    அவர் அழிப்பதிலிருந்து தன்னை நிறுத்தவில்லை.
எனவே, அவர் அனைத்து சுவர்களையும் துக்கத்தில் அழும்படிச் செய்தார்.
    அவை எல்லாம் முற்றிலும் ஒன்றுக்கும் உதவாது அழிந்துபோயின.

எருசலேமின் வாசல்கள் தரையில் அமிழ்ந்துகிடந்தன.
    அவர் அதன் தாழ்ப்பாள்களை உடைத்து நொறுக்கிப்போட்டார்.
அவரது அரசன் மற்றும் இளவரசர்கள் அயல் நாடுகளில் இருக்கிறார்கள்.
    அங்கே அவர்களுக்கு இனி வேறு போதனைகள் எதுவுமில்லை.
எருசலேமின் தீர்க்கதரிசிகளும் கூட
    கர்த்தரிடமிருந்து எந்தவிதமான தரிசனத்தையும் பெறவில்லை.

10 சீயோனின் முதியவர்கள் தரையில் இருக்கின்றனர்.
    அவர்கள் தரையில் அமர்ந்து மௌனமாக இருக்கிறார்கள்.
தம் தலையில் அவர்கள் தூசியைப் போட்டனர்.
    அவர்கள் கோணியைப் போட்டுக்கொள்கிறார்கள்.
எருசலேமின் இளம்பெண்கள் துக்கத்தில்
    தலைகளைக் குனிந்து தரையைப் பார்க்கின்றனர்.

11 எனது கண்கள் கண்ணீரால் களைத்துப்போயின!
    எனது உள்மனம் கலங்குகிறது!
எனது இதயம் தரையில் ஊற்றப்பட்டதுபோன்று உணர்கின்றது!
    எனது ஜனங்களின் அழிவைக்கண்டு நான் இவ்வாறு உணர்கிறேன்.
பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது வீதிகளின் மூலைகளிலும்
    மயக்கமடைந்து கிடக்கின்றனர்.
12 அப்பிள்ளைகள் தம் தாய்மார்களிடம்,
    “அப்பமும் திராட்சைரசமும் எங்கே?” எனக் கேள்வியைக் கேட்ட வண்ணமாகவே அவர்களின் தாயின் மடியிலே மரிக்கின்றனர்.
13 சீயோன் மகளே, நான் எதனோடு உன்னை ஒப்பிட முடியும்?
    சீயோனின் கன்னிகையே, நான் உன்னை எதனோடு ஒப்பிடமுடியும்?
நான் உன்னை எப்படி ஆறுதல் செய்யமுடியும்?
    உனது அழிவானது கடலைப்போன்று அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
    எவரும் உன்னை குணப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.

14 உனது தீர்க்கதரிசிகள் உனக்காகத் தரிசனம் கண்டார்கள்.
    ஆனால் அவர்களது தரிசனங்கள் எல்லாம் பயனற்றவைகளாயின.
அவர்கள் உனது பாவங்களுக்கு எதிராகப் பேசவில்லை.
    அவர்கள் காரியங்களைச் சரிபண்ண முயற்சி செய்யவில்லை.
அவர்கள் உனக்கு செய்திகளைப் பிரசங்கித்தனர்.
    ஆனால் அவை உன்னை ஏமாற்றும் செய்திகள்.

15 சாலையில் உன்னைக் கடந்துபோகும் ஜனங்கள்
    உன்னைப் பார்த்து கைதட்டுகிறார்கள்.
அவர்கள் பிரமித்து எருசலேம் மகளைப் பார்த்து
    தலையாட்டுகிறார்கள்.
அவர்கள், “இதுதானா, ‘முழுமையான அழகுடைய நகரம்’
    ‘பூமியிலே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பது’ என்று ஜனங்களால் அழைக்கப்பட்ட நகரம்?”
    என்று கேட்கிறார்கள்.

16 உனது எல்லா பகைவர்களும் உன்னைப் பார்த்து நகைப்பார்கள்.
    அவர்கள் உன்னைப் பார்த்து பிரமித்து தம் பற்களைக் கடிக்கிறார்கள்.
அவர்கள், “நாங்கள் அவர்களை விழுங்கியிருக்கிறோம்!
    நாங்கள் உண்மையிலேயே இந்த நாளுக்காகவே நம்பிக்கொண்டிருந்தோம்.
    நாங்கள் இறுதியாக இது நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம்” என்பார்கள்.

17 கர்த்தர் தான் திட்டமிட்டபடியே செய்தார்.
    அவர் எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதையே செய்திருக்கிறார்.
    நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அவர் எதை கட்டளையிட்டாரோ அதைச் செய்திருக்கிறார்.
அவர் அழித்தார், அவரிடம் இரக்கம் இல்லை.
    உனக்கு ஏற்பட்டவற்றுக்காக அவர் உனது பகைவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
    அவர் உனது பகைவர்களைப் பலப்படுத்தினார்.

18 கர்த்தரிடம் உனது இதயத்தை ஊற்றி கதறு!
    சீயோன் மகளின் சுவரே, ஒரு நதியைப்போன்று கண்ணீர்விடு!
    இரவும் பகலும் உன் கண்ணீரை வடியவிடு! நிறுத்தாதே!
உனது கண்ணின் கறுப்பு விழி
    சும்மா இருக்கும்படிச் செய்யாதே!

19 எழுந்திரு! இரவில் கதறு! இரவின் முதற் சாமத்தில் கதறு!
    உனது இதயத்தைத் தண்ணீரைப்போன்று ஊற்று!
    கர்த்தருக்கு முன்னால் உன் இதயத்தை ஊற்று!
கர்த்தரிடம் ஜெபம் செய்வதற்கு உன் கைகளை மேலே தூக்கு.
    உன் குழந்தைகளை வாழவிடும்படி அவரிடம் கேள்.
    பசியினால் மயங்கிக்கொண்டிருந்த உனது பிள்ளைகள் வாழும்படி நீ அவரிடம் கேள்.
    நகரத்தின் எல்லா தெருக்களிலும் அவர்கள் பசியால் மயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

20 கர்த்தாவே, என்னைப் பாரும்!
    இந்த வழியில் யாரை நீர் நடத்தியிருக்கிறீர் என்று பாரும்!
என்னை இக்கேள்வியைக் கேட்கவிடும்; பெண்கள் தாம் பெற்ற பிள்ளைகளையே தின்ன வேண்டுமா?
    பெண்கள் தாம் கவனித்துக் கொள்ளவேண்டிய பிள்ளைகளையே தின்னவேண்டுமா?
    கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியரும் தீர்க்கதரிசியும் கொல்லப்படவேண்டுமா?
21 நகர வீதிகளின் தரைகளில் இளைய ஆண்களும்
    முதிய ஆண்களும் விழுந்து கிடக்கின்றனர்.
கர்த்தாவே, நீர் அவர்களை உமது கோபத்தின் நாளில் கொன்றீர்!
    அவர்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!

22 நீர் எல்லா இடங்களிலிருந்தும்
    பயங்கரங்களை என்மேல் வரசெய்தீர்.
பண்டிகை நாட்களுக்கு வரவழைப்பதுபோன்று
    நீர் பயங்கரங்களை வரவழைத்தீர்.
கர்த்தருடைய கோபநாளில் எவரும் தப்பவில்லை.
    நான் வளர்த்து ஆளாக்கியவர்களை என் பகைவன் கொன்றிருக்கிறான்.

துன்பங்களின் அர்த்தம்

நான் அதிகமான துன்பங்களைப் பார்த்திருக்கிற மனிதன்.
கர்த்தர் கம்பால் எங்களை அடித்தார்.
    நான் இது நிகழ்ந்ததைப் பார்த்தேன்!
கர்த்தர் என்னை வெளிச்சத்தில் அல்ல
    இருட்டில் வழிநடத்தி கொண்டுவந்தார்.
கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார்.
    அவர் நாள்முழுதும் இதனை மீண்டும் மீண்டும் செய்தார்.
அவர் எனது சதையையும் தோலையும் முற்றலாக்கினார்.
    அவர் எனது எலும்புகளை உடைத்தார்.
கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார்.
    அவர் கசப்பையும் வருத்தத்தையும் என்னைச் சுற்றிலும் வரும்படி செய்தார்.
அவர் என்னை இருட்டில் இருக்கும்படிச் செய்தார்.
    நீண்ட காலமாகச் செத்துக் கிடக்கிற சிலரைப் போல என்னை அவர் செய்தார்.
கர்த்தர் என்னை உள்ளே வைத்து பூட்டினார்.
என்னால் வெளியே வரமுடியவில்லை.
    அவர் என்மீது கனமான சங்கிலிகளைப் போட்டார்.
நான் கதறினாலும் உதவி கேட்டாலும்
    கர்த்தர் எனது ஜெபத்தைக் கேட்பதில்லை.
அவர் எனது பாதையைக் கற்களால் அடைத்துவிட்டார்.
    அவர் எனது பாதையைக் கோணலாக்கினார்.
10 கர்த்தர் என்னைத் தாக்க வரும் கரடியாய் இருக்கிறார்.
    அவர் மறைவிடத்திலுள்ள சிங்கம் போலவும் இருக்கிறார்.
11 கர்த்தர் என் பாதையின் மீது முட்களைப் பரப்பினார்.
    அவர் என்னைத் துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டார்.
    அவர் என்னை பாழாக்கினார்.
12 அவர் தனது வில்லை தயார் செய்தார்.
    அவரது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.
13 அவர் தனது அம்பை என்னுடைய
    வயிற்றில் எய்தார்.
14 நான் எனது ஜனங்கள் அனைவருக்கும் ஒரு வேடிக்கையாகிப் போயிருக்கிறேன்.
    நாள் முழுவதும் அவர்கள் என்னைப்பற்றி பாடல் பாடி என்னைக் கேலிச் செய்கிறார்கள்.
15 கர்த்தர் இந்த விஷத்தை (தண்டனையை) நான் குடிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
    அவர் என்னை இந்தக் கசப்பான பானத்தால் நிரப்பினார்.
16 கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார்.
    அவர் என்னைத் தூசியில் தள்ளினார்.
17 நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன்.
    நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன்.
18 நான் எனக்குள், “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை
    நான் இழந்து விட்டேன்” என்றேன்.
19 கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும்.
    எனக்கு வீடு இல்லை.
    நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும்.
20 நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
    நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.
21 ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன்.
    பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன்.
    நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்:
22 கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.
    கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை.
23 ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்!
    கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!
24 நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார்,
    ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.

25 கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
    கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
26 ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள
    கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது.
27 ஒருவன் கர்த்தருடைய நுகத்தை அணிந்துகொள்ளுவது நல்லது.
    ஒருவன், தன் இளமை காலத்திலிருந்தே அந்த நுகத்தடியைச் சுமப்பது நல்லது.
28 கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது,
    அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான்.
29 அம்மனிதன் கர்த்தருக்கு முன் தன் முகம் தரையில் படும்படி குப்புற விழுந்து வணங்க வேண்டும்.
    அதில் இன்னும் நம்பிக்கை இருக்கலாம்.
30 அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும்.
    அம்மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனுமதிக்கவேண்டும்.
31 கர்த்தர் என்றென்றும் ஜனங்களை புறக்கணிக்கமாட்டார் என்பதை
    அம்மனிதன் நினைவில்கொள்ளவேண்டும்.
32 கர்த்தர் தண்டிக்கும்போது
    அவனுக்கும் இரக்கத்தையும் வெளிபடுத்துகிறார்.
அவரது பேரன்பாலும் கருணையாலும் அன்பாலும்
    அவனுக்கு இரக்கம் வெளிப்படுகிறது.

33 கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்க விரும்புவதில்லை.
    அவர் ஜனங்கள் மகிழ்ச்சியற்று இருப்பதை விரும்புவதில்லை.
34 கர்த்தர் இவற்றை விரும்புவதில்லை.
    யாரோ ஒருவன் பூமியிலுள்ள அனைத்து சிறைக் கைதிகளையும் தன் காலுக்கடியில் நசுக்குவதை அவர் விரும்புவதில்லை.
35 யாரோ ஒருவன் இன்னொருவனுக்கு அநியாயமானவனாக இருப்பதை அவர் விரும்புவதில்லை.
    ஆனால் சில ஜனங்கள் உன்னதமான தேவனுக்கு முன்பாக அத்தீயவற்றைச் செய்கிறார்கள்.
36 கர்த்தர், ஒருவன் இன்னொருவனை ஏமாற்றுவதை விரும்புவதில்லை.
    கர்த்தர் இத்தகைய எவற்றையுமே விரும்புவதில்லை.
37 ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது,
    நிகழச் செய்யவும் முடியாது.
38 உன்னதமான தேவனே
    நல்லதும் தீயதும் நிகழும்படி கட்டளையிடுகிறார்.
39 ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது
    உயிரோடுள்ள எவனும் புகார் கூற முடியாது.
40 நாம் நம்முடைய செயல்களைச் சோதித்து ஆராய்வோம்.
    பிறகு கர்த்தரிடம் திரும்புவோம்.

41 பரலோகத்தின் தேவனிடம்
    நமது கைகளோடு இதயத்தையும் ஏறெடுப்போம்.
42 நாம் அவரிடம், “நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம்.
    இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர்.
43 நீர் கோபத்தால் மூடப்பட்டு
    எங்களைத் துரத்தினீர்.
    நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!
44 ஜெபம் எதுவும் வந்து சேராதபடி
    நீர் உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
45 மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும்
    அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆக்கினீர்.
46 எங்களது பகைவர்கள் எல்லாம்
    எங்களுடன் கோபத்தோடு பேசுகிறார்கள்.
47 நாங்கள் பயந்திருக்கிறோம்.
    நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம்.
நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
    நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன்.
48 எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது!
    எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன்.
49 எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன!
    நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்!
50 கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை,
    நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை
    நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
51 எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது
    என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன.
52 அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள்.
    ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள்.
53 நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள்.
    அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள்.
54 என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது.
    “நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன்.
55 கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன்.
    நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன்.
56 நீர் எனது சத்தத்தைக் கேட்டீர்.
    நீர் உமது காதுகளை மூடவில்லை.
    நீர் என்னை மீட்பதற்கு மறுக்கவில்லை.
57 நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர்.
    “பயப்படாதே” என்று நீர் என்னிடம் சொன்னீர்.
58 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர்.
    நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர்.
59 கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர்.
    இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும்.
60 எனது பகைவர்கள் எவ்வாறு
    என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர்.
அவர்கள் எனக்கு எதிராகச் செய்த
    அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர்.
61 கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர்.
    அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர்.
62 எல்லா நேரத்திலும்
    எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன.
63     கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும்,
    என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்!
64 கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்!
    அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்!
65 அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்!
    பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்!
66 அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்!
    கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்!

எருசலேம் மீதான தாக்குதலின் பயங்கரங்கள்

தங்கம் எவ்வளவு ஒளி மங்கி இருக்கிறது என்று பார்.
    நல்ல தங்கமானது எப்படி மாறியிருக்கிறது எனப் பார்.
எல்லா இடங்களிலும் நகைகள் சிதறி கிடக்கின்றன.
    ஒவ்வொரு தெருமுனையிலும் அவை சிதறி கிடக்கின்றன.
சீயோனின் ஜனங்கள் மிகுதியான நன்மதிப்புள்ளவர்களாயிருந்தார்கள்.
    அவர்கள் தங்கத்தின் எடைக்குச் சமமான எடையுள்ளவர்களாக இருந்தனர்.
ஆனால் இப்பொழுது பகைவர்கள் அந்த ஜனங்களை பழைய மண்பாத்திரங்களைப்போன்று கருதுகின்றனர்.
    பகைவர்கள், குயவனால் செய்யப்பட்ட மண்பாத்திரங்களைப்போன்று இவர்களைக் கருதுகிறார்கள்.
காட்டுநாய்கூடத் தன் குட்டிகளுக்கு உணவூட்டுகின்றன.
    ஓநாய் கூடத் தன் குட்டிகள் மார்பில் பால் குடிக்கும்படிவிடும்.
ஆனால் எனது ஜனங்களின் குமாரத்தியோ கொடூரமானவள்.
    அவள் வனாந்தரத்தில் வாழும் நெருப்புக் கோழியைப் போன்றவள்.
சிறு குழந்தைகளின் நாக்கானது,
    தாகத்தால் வாயின்மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொள்கிறது.
சிறு குழந்தைகள் அப்பம் கேட்கிறார்கள்.
    ஆனால் அவர்களுக்கு எவரும் அப்பம் கொடுக்கவில்லை.
ஒரு காலத்தில், செல்வமான உணவை உண்ட ஜனங்கள் இப்போது,
    வீதிகளில் மரித்துக் கிடக்கின்றனர்.
மென்மையான சிவப்பு ஆடைகளை அணிந்த ஜனங்கள்
    இப்போது குப்பைமேடுகளை பொறுக்குகிறார்கள்.
எனது ஜனங்களின் மகள் [b]
    செய்த பாவம் மிகப்பெரியது.
அவளின் பாவம் சோதோமும் கொமோராவும் [c]
    செய்த பாவத்தை விடப் பெரியது.
சோதோமும் கொமோராவும் திடீரென அழிக்கப்பட்டது.
    எந்த மனிதனின் கையும் அழிவுக்கு காரணமாயிருக்க முடியவில்லை.
யூதாவிலுள்ள சில புருஷர்கள்
    விசேஷ முறையில் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டனர்.
அம்மனிதர் மிகவும் பரிசுத்தமானவர்கள்.
    அவர்கள் பனியைவிட வெள்ளையானவர்கள்.
    அவர்கள் பாலைவிட வெண்மையானவர்கள்.
அவர்களின் உடல்கள் பவளத்தைப்போன்று சிவந்தவை.
    அவர்களின் தாடிகள் இந்திர நீலக் கற்களாயிருந்தன.
ஆனால் இப்பொழுது, அவர்களின் முகங்கள் கரியைவிட கருத்துப்போயின.
    வீதியில் எவராலும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை.
அவர்களின் தோல் எலும்புகளோடு ஒட்டிக் கொண்டது.
    அவர்களின் தோல் மரத்தைப் போலுள்ளது.
வாளால் கொல்லப்பட்ட ஜனங்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்ட ஜனங்களைவிடச் சிறந்தவர்கள்.
    பட்டினியாக இருந்த ஜனங்கள் மிக துக்கமாக இருந்தார்கள்.
அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
    அவர்கள் வயலிலிருந்து எந்த உணவையும் பெறாததால் மரித்தனர்.
10 அப்பொழுது, மிக மெல்லிய இயல்புடைய பெண்களும்கூடத்
    தம் சொந்த குழந்தைகளைச் சமைத்தனர்.
அக்குழந்தைகள் தம் தாய்மார்களின் உணவாயிற்று.
    என் ஜனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டபோது இது நிகழ்ந்தது.
11 கர்த்தர் தனது கோபம் அனைத்தையும் பயன்படுத்தினார்.
    அவர் தனது கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்தார்.
அவர் சீயோனில் ஒரு நெருப்பை உண்டாக்கினார்.
    அந்த நெருப்பு சீயோனை அதன் அஸ்திபாரம்வரைக்கும் எரித்துபோட்டது.
12 பூமியிலுள்ள அரசர்கள் என்ன நிகழ்ந்தது
    என்பதைப்பற்றி நம்ப முடியவில்லை.
உலகில் உள்ள ஜனங்களால் என்ன நடந்தது என்பதை
    நம்ப முடியவில்லை.
பகைவர்களால் எருசலேமின் நகர வாசல்கள் மூலமாக
    நுழைய முடியும் என்பதை அவர்களால்
    நம்ப முடியவில்லை.
13 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் செய்த
    பாவத்தால் இது நிகழ்ந்தது.
எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் செய்த
    தீயச்செயல்களால் இது நிகழ்ந்தது.
எருசலேம் நகரில் அந்த ஜனங்கள் இரத்தம் வடித்துக்கொண்டிருந்தார்கள்.
    நல்ல ஜனங்களின் இரத்தத்தை அவர்கள் சிந்திக்கொண்டிருந்தார்கள்.
14 தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் வீதிகளில்
    குருட்டு மனிதர்களைப்போன்று நடந்து திரிந்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் இரத்தத்தினால் அழுக்காயிருந்தார்கள்.
    அவர்களது அழுக்கால் எவரும் அவர்களுடைய ஆடையை தொடமுடியாதபடி இருந்தனர்.
15 “வெளியே போ! வெளியே போ!
    எங்களைத் தொடவேண்டாம்” என்று ஜனங்கள் சத்தமிட்டனர்.
அந்த ஜனங்கள் சுற்றி அலைந்தனர்.
அவர்களுக்கு வீடு இல்லை.
    மற்ற நாடுகளிலுள்ள ஜனங்கள், “அவர்கள் எங்களோடு வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.
16 கர்த்தர் தாமே அந்த ஜனங்களை அழித்தார்.
    அதற்குப் பிறகு அவர்களை அவர் பாதுகாக்கவில்லை.
அவர் ஆசாரியர்களை மதிக்கவில்லை.
    யூதாவிலுள்ள மூப்பர்களுடன் அவர் சிநேகம் வைக்கவில்லை.
17 நாங்கள் உதவிக்காகக் காத்திருந்து எங்கள் கண்கள் களைத்துப் பழுதாயிற்று.
    ஆனால் எந்த உதவியும் வரவில்லை.
எங்களைக் காப்பாற்றப் போகிற ஒரு தேசத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.
    நாங்கள் பார்வை கோபுரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.
    ஆனால் எந்தத் தேசமும் எங்களுக்கு உதவ வரவில்லை.
18 எங்கள் பகைவர்கள் எப்பொழுதும் எங்களை வேட்டையாடினார்கள்.
    எங்களால் வீதிகளுக்குக் கூடப் போகமுடியவில்லை.
எங்கள் முடிவு அருகில் நெருங்கி வந்தது. எங்கள் காலம் போய்விட்டது.
    எங்கள் முடிவு வந்தது!
19 எங்களைத் துரத்துகிற மனிதர்கள் வானத்தில் பறக்கும் கழுகுகளைவிட விரைவாக இருந்தனர்.
    அம்மனிதர்கள் எங்களை மலைகளுக்குத் துரத்தினார்கள்.
எங்களைப் பிடிப்பதற்காக
    அவர்கள் வனாந்தரத்தில் மறைந்திருந்தனர்.
20 அரசன் எங்களுக்கு மிக முக்கியமானவனாக இருந்தான்.
எங்கள் நாசியின் சுவாசத்தைப் போல் இருந்தான்.
    ஆனால் அரசன் அவர்களால் வலைக்குட்படுத்தப்பட்டிருந்தான்.
இந்த அரசன் கர்த்தராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான்.
    அரசனைப் பற்றி நாம், “நாங்கள் அவனது நிழலில் வாழ்வோம்.
    அவன் எங்களை பிற தேசங்களிடமிருந்து காப்பாற்றுகிறான்” என்று சொல்லியிருந்தோம்.
21 ஏதோம் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள்.
    ஊத்ஸ் நாட்டில் வாழும் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள்.
ஆனால் நினைத்துக்கொள், கர்த்தருடைய கோபமாகிய கிண்ணம் உங்களைச் சுற்றிலும் கூட வரும்.
நீ கிண்ணத்திலிருந்து (தண்டனை) குடிக்கும் போது நீ குடிகாரனாவாய்.
    உன்னை நீயே நிர்வாணமாக்கிக்கொள்வாய்.
22 சீயோனே, உனது தண்டனை முடிந்தது.
    நீ மீண்டும் சிறைகைதியாகமாட்டாய்.
ஆனால் ஏதோம் ஜனங்களே கர்த்தர் உனது பாவங்களைத் தண்டிப்பார்.
    அவர் உனது பாவங்களை வெளிப்படுத்துவார்.

கர்த்தருக்கு ஒரு ஜெபம்

கர்த்தாவே, எங்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணிப்பாரும்.
    எங்களது அவமானத்தை நோக்கிப்பாரும்!
எங்கள் நாடு அந்நியர்களுக்கு உரியதான சொத்தாக மாறிற்று.
    எங்கள் வீடுகள் அயல் நாட்டுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் அநாதைகளாயிருக்கிறோம்.
    எங்களுக்குத் தந்தை இல்லை.
    எங்கள் தாய்மார்கள் விதவைகளைப்போன்று ஆனார்கள்.
நாங்கள் குடிக்கிற தண்ணீரையும் விலைக்கு வாங்க வேண்டியதிருக்கிறது.
    நாங்கள் பயன்படுத்துகிற விறகுக்கும் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.
எங்கள் கழுத்துகளில் நுகத்தைப் பூட்டிக்கொள்ள வற்புறுத்தப்படுகிறோம்.
    நாங்கள் களைத்துப்போகிறோம். எங்களுக்கு ஓய்வில்லை.
நாங்கள் எகிப்தோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
    நாங்கள் போதுமான அப்பங்களைப் பெற அசீரியாவோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
எங்கள் முற்பிதாக்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தனர்.
இப்போது அவர்கள் மரித்துப்போனார்கள்.
    இப்பொழுது நாங்கள் அவர்கள் செய்த பாவத்துக்காகத் துன்பப்படுகிறோம்.
அடிமைகள் எங்களது ஆள்வோர்களாக ஆகியிருக்கின்றனர்.
    அவர்களிடமிருந்து எவராலும் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை.
நாங்கள் உணவைப்பெற வாழ்க்கையில் அபாயத்தை எதிர்கொள்கிறோம்.
    வனாந்திரத்தில் மனிதர்கள் வாள்களோடு நின்றுக்கொண்டிருக்கின்றனர்.
10 எங்கள் தோல் வறுக்கும் சட்டியைப்போன்று சூடாக உள்ளது.
    எங்களுக்கு பசியினால் அதிகமாய் காய்ச்சல் உள்ளது.
11 பகைவர்கள் சீயோன் பெண்களை கற்பழித்தனர்.
    யூதாவின் நகரங்களில் அவர்கள் பெண்களை கற்பழித்தனர்.
12 பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர்.
    எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை.
13 பகைவர்கள் எங்கள் இளைஞர்களை
    எந்திர ஆலைகளில் தானியத்தை அரைக்கும்படிச் செய்தனர்.
எங்கள் இளைஞர்கள் மரத்தடிகளின் சுமையால்
    கீழே இடறி விழுந்தார்கள்.
14 மூப்பர்கள் இனி நகரவாசல்களில் உட்காருவதில்லை.
    இளைஞர்கள் இனி இசை எழுப்புவதில்லை.
15 எங்கள் இதயத்தில் இனி மகிழ்ச்சியே இல்லை.
    எங்கள் நடனம் மரித்தவர்களுக்கான ஒப்பாரியாக மாறிவிட்டது.
16 எங்கள் தலையிலிருந்து கிரீடம் கீழே விழுந்துவிட்டது.
    எங்களுக்கு எங்கள் பாவங்களால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது.
17 இவற்றால் எங்கள் இதயம் நோயுற்றிருக்கிறது.
    எங்கள் கண்களால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.
18 சீயோன் மலை வெறு நிலமாகிவிட்டது.
    சீயோன் மலையைச் சுற்றி நரிகள் ஓடித் திரிகின்றன.
19 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் ஆளுகிறீர்,
    உமது இராஜ சிங்காசனம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
20 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் எங்களை மறந்துவிட்டது போன்று இருக்கின்றீர்.
    எங்களை நெடுங்காலமாக தனியே விட்டுவிட்டதுபோன்று இருக்கின்றீர்.
21 கர்த்தாவே, உம்மிடம் மீண்டும் எங்களைக் கொண்டுவாரும்.
    நாங்கள் மகிழ்ச்சியோடு உம்மிடம் திரும்பி வருவோம்.
    எங்கள் வாழ்க்கையை முன்பு இருந்ததுபோன்று ஆக்கும்.
22 நீர் எங்கள் பேரில் கடுங்கோபமாக இருந்தீரே.
    எங்களை நீர் முழுமையாக நிராகரித்துவிட்டீரா?

முன்னுரை

நான் ஆசாரியன், பூசியின் மகனான எசேக்கியேல், நான் நாடு கடத்தப்பட்டு பாபிலோனின் கேபார் ஆற்றின் அருகில் இருந்தபோது வானங்கள் திறந்தன. நான் தேவதரிசனங்களைக் கண்டேன். இது முப்பதாம் ஆண்டின் நான்காம் (ஜூலை) மாதத்தில் ஐந்தாம் தேதியாக இருந்தது. யோயாக்கீன் அரசன் சிறையிலிருந்து ஐந்தாவது ஆண்டில் ஐந்தாவது மாதத்தில் கர்த்தருடைய வார்த்தை எசேக்கியேலிடம் வந்தது. அந்த இடத்தில் கர்த்தருடைய வல்லமை அவன் மேல் வந்தது.

கர்த்தருடைய இரதம் தேவனுடைய சிங்காசனம்

நான் (எசேக்கியேல்) வடக்கிலிருந்து பெரிய புயல் வருவதைப் பார்த்தேன். அது பெரும் மேகமாய் பலமான காற்றையுடையதாய் இருந்தது. அதிலிருந்து நெருப்பு பளிச்சிட்டது. அதைச் சுற்றிலும் வெளிச்சமும் இருந்தது. இது நெருப்புக்குள்ளே பழுத்துக்கொண்டிருக்கும் உலோகம்போல் இருந்தது. அதற்குள்ளே நான்கு ஜீவன்கள் இருந்தன. அவை மனிதர்களைப்போன்று காணப்பட்டன. ஆனால், ஒவ்வொரு ஜீவன்களுக்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் இருந்தன. அவற்றின் கால்கள் நேராக இருந்தன. அவற்றின் பாதங்கள் பசுக்களின் பாதங்களைப்போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போன்று பளபளப்பாக இருந்தன. அவற்றின் சிறகுகளுக்கடியில் மனித கைகள் இருந்தன. அங்கே நான்கு ஜீவன்கள் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் இருந்தன. ஒவ்வொரு ஜீவனின் இறக்கைகளும் மற்ற ஜீவனின் இறக்கைகளை ஒவ்வொரு பக்கமும் தொட்டன. ஜீவன்கள் அசையும்போது அவை திரும்பவில்லை. அவை எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தனவோ அத்திசையிலேயே சென்றன.

10 ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முன்பக்கத்தில் ஒவ்வொன்றுக்கும் மனித முகம் இருந்தது. வலது பக்கத்தில் உள்ளவை சிங்கங்களின் முகங்களாக இருந்தன. இடது பக்கத்தில் உள்ளவை காளைகளின் முகங்களாக இருந்தன. பின்பக்கத்தில் அவற்றிற்கு கழுகின் முகங்களாக இருந்தன. 11 ஜீவன்கள் தம்மை சிறகுகளால் மூடிக்கொண்டன. அவை இரண்டு சிறகுகளால் தம் அருகிலிருக்கும் ஜீவனைத் தொட நீட்டின. இரண்டு சிறகுகளால் தம் உடலை மறைத்துக்கொண்டன. 12 அவை எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தனவோ அந்தச் திசையிலேயே சென்றன. காற்று அவற்றை எத்திசையில் செலுத்துகின்றதோ அத்திசையிலேயே சென்றன. அந்த ஜீவன்கள் நகரும்போது திரும்புவதில்லை. 13 அந்த ஜீவன்கள் அப்படித்தான் காணப்பட்டன.

ஜீவன்களுக்குள் இருந்த இடைவெளியில் ஏதோ எரிகின்ற நெருப்பு கரிதுண்டுகளைப் போலிருந்தது. இந்த நெருப்பானது சிறு தீபங்களைப்போல ஜீவன்களைச் சுற்றி அசைந்துகொண்டிருந்தது. அது பிரகாசமாக மின்னலைப்போன்று ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது! 14 அந்த ஜீவன்கள் மின்னலைப்போன்று ஓடித்திரிந்தன!

15-16 நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. அச்சக்கரங்கள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. அச்சக்கரங்கள் மஞ்சள் நகையால் செய்யப்பட்டதுப்போன்று தோன்றின. சக்கரத்திற்குள் சக்கரம் இருப்பதுப்போன்று அவை தோன்றின. 17 சக்கரங்கள் எத்திசையிலும் (திரும்ப) அசைய முடிந்தது, ஆனால் ஜீவன்களோ அவை அசைந்தபோது திரும்பவில்லை.

18 இப்பொழுது நான் அவற்றின் பின்பாகத்தைப்பற்றி சொல்லுவேன்! சக்கரங்களின் ஓரங்கள் உயரமாகவும் பயங்கரமாகவும் இருந்தன. நான்கு சக்கரங்களின் ஓரங்கள் முழுவதிலும் கண்கள் இருந்தன.

19 அச்சக்கரங்கள் எப்பொழுதும் ஜீவன்களோடேயே நகர்ந்தன. ஜீவன்கள் காற்றில் மேலேறிப் பறந்தால் அச்சக்கரங்களும் அவற்றோடு சென்றன. 20 காற்றானது அவற்றை எங்கெங்கு செலுத்த விரும்புகிறதோ அங்கே அவற்றோடு சக்கரங்களும் சென்றன. ஏனென்றால், ஜீவன்களின் வல்லமையானது அவற்றின் சக்கரத்தில் உள்ளன. 21 எனவே, ஜீவன்கள் நகர்ந்தால் சக்கரங்களும் நகர்ந்தன. ஜீவன்கள் நின்றால் சக்கரங்களும் நின்றன. சக்கரங்கள் காற்றில் பறந்து போனால் ஜீவன்களும் அவற்றோடு போயின. ஏனென்றால், சக்கரங்களுக்குள் காற்று இருந்தது.

22 ஜீவன்களின் தலைகளின்மேல் வியப்படையச்செய்யும் ஒன்று இருந்தது. அது தலை கீழாகத் திருப்பப்பட்ட ஒரு கிண்ணம்போல் இருந்தது. அப்பாத்திரம் படிகக்கட்டியைப்போன்று தெளிவாக இருந்தது. இது ஜீவன்களின் தலைக்குமேல் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தது! 23 பாத்திரத்திற்குக் கீழே, ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு நேரான சிறகுகள் இருந்தன. இரண்டு சிறகுகள் விரிக்கபட்டு அருகிலிருக்கும் ஜீவனின் சிறகுகளை நோக்கி நீட்டப்பட்டிருந்தன. இரண்டு சிறகுகள் மற்ற திசையில் விரிக்கப்பட்டு ஜீவனின் உடலை மூடியிருந்தன.

24 பிறகு, நான் சிறகுகளின் சத்தம் கேட்டேன். ஜீவன்கள் ஒவ்வொருமுறை நகரும்போதும் அதன் சிறகுகள் பெருஞ்சத்தத்தை எழுப்பின. அச்சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போன்றிருந்தது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய குரல் போல் இருந்தது. அது ஒரு படை அல்லது ஜனங்கள் கூட்டத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. ஜீவன்கள் நகர்வதை நிறுத்தும்போது தம் சிறகுகளை பக்கவாட்டில் வைத்துக்கொள்ளும்.

25 ஜீவன்கள் நகர்வதை நிறுத்தின. தமது சிறகுகளைத் தாழ்த்தின. இன்னொரு பெருஞ்சத்தம் கேட்டது, அது அவற்றின் தலைக்கு மேலிருந்த கிண்ணத்திலிருந்து கேட்டது. 26 பாத்திரத்திற்கு மேலே ஏதோ இருந்தது. அது சிங்காசனத்தைப்போல் இருந்தது. அது நீல வண்ணத்தில் ரத்தினம்போல் இருந்தது. அந்தச் சிங்காசனத்தில் யாரோ ஒரு மனிதர் உட்கார்ந்திருப்பதுபோன்று தோன்றியது. 27 நான் அவரை இடுப்பிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தேன். அவர் சூடான உலோகத்தைப்போன்று இருந்தார். அவரைச் சுற்றிலும் நெருப்பு இருப்பதைப் போன்றிருந்தது. நான் அவரை இடுப்பிலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தேன். அது நெருப்பைப் போன்றிருந்தது. அவரைச் சுற்றிலும் அது மின்னியது. 28 அவரைச் சுற்றிலும் மின்னிக்கொண்டிருந்த வெளிச்சமானது வானவில்லைப் போன்றிருந்தது. அது கர்த்தருடைய மகிமை. அதைப் பார்த்த உடனே நான் தரையிலே விழுந்தேன். என் முகம் தரையிலே படும்படிக் குனிந்தேன். பின்னர் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன்.

குரலானது, மனுபுத்திரனே, [d] எழுந்து நில், நான் உன்னோடு பேசப்போகிறேன் என்று சொன்னது.

பிறகு, ஒரு காற்று வந்து என்னை நிற்கும்படி செய்தது. என்னோடு பேசிய அந்த நபருக்கு (தேவன்) செவிசாய்த்தேன். அவர் என்னிடம் “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தோடு பேசுவதற்கு நான் உன்னை அனுப்புகிறேன். அந்த ஜனங்கள் எனக்கு எதிராகப் பலமுறை திரும்பினார்கள். அவர்களது முற்பிதாக்களும் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனக்கு எதிராகப் பலமுறை பாவம் செய்திருக்கின்றனர். அவர்கள் இன்றும் பாவம்செய்துகொண்டிருக்கின்றனர். அந்த ஜனங்களோடு பேசவே உன்னை நான் அனுப்புகிறேன். ஆனால் அவர்கள் மிகக் கடினமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கடினமான மனதை உடையவர்கள். ஆனால் நீ அந்த ஜனங்களோடு பேசவேண்டும். நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும். ஆனால் அந்த ஜனங்கள் நீ சொல்வதைக் கவனிக்கமாட்டார்கள். அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மோசமான கலகக்காரர்கள். அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராக திரும்புகின்றார்கள். ஆனால் நீ அவற்றைச் சொல்லவேண்டும். எனவே, அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி இருப்பதை அறிந்துக்கொள்வார்கள்.

“மனுபுத்திரனே, அந்த ஜனங்களுக்குப் பயப்படாதே, அவர்கள் சொல்கின்றவற்றுக்கும் பயப்படாதே. இது உண்மை. அவர்கள் உனக்கு எதிராகத் திரும்பி உன்னைக் காயப்படுத்த விரும்புவார்கள். அவர்கள் முட்களைப் போன்றிருப்பார்கள். நீ தேள்களோடு இருப்பதைப்போன்று நினைப்பாய். ஆனால் அவர்கள் சொல்கின்றவற்றுக்கு நீ பயப்படாதே. அவர்கள் கலகக்காரர்கள். அவர்களுக்குப் பயப்படாதே! நான் சொல்கின்றவற்றை நீ அவர்களிடம் சொல்லவேண்டும். அவர்கள், நீ சொல்வதைக் கவனிக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கலகக்காரர்கள்.

“மனுபுத்திரனே நான் உனக்குச் சொல்கின்றவற்றை நீ கவனிக்கவேண்டும். அக்கலகக்கார ஜனங்களைப்போன்று நீ எனக்கு எதிராகத் திரும்பவேண்டாம். உன் வாயைத் திறந்து நான் தரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள். பின்னர் அவ்வார்த்தைகளை அந்த ஜனங்களிடம் பேசு, இவ்வார்த்தைகளை சாப்பிடு” என்றார்.

பின்னர் நான் (எசேக்கியேல்) என்னிடம் ஒரு கை நீட்டப்படுவதைக் கண்டேன். அதனிடம் எழுதப்பட்ட சுருள் ஒன்று இருந்தது. 10 நான் அச்சுருளைத் திறந்து முன்னும் பின்னும், எழுதப்பட்டிருப்பதைப் பார்தேன். அனைத்தும் துக்கப் பாடல்களாகவும் துக்கக் கதைகளாகவும் எச்சரிக்கைகளாகவும் இருந்தன.

தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ எதைப் பார்க்கிறாயோ அதை சாப்பிடு. இச்சுருளையும் சாப்பிடு. பின்னர் போய் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல்.”

எனவே, நான் எனது வாயைத் திறந்தேன். அவர் என் வாய்க்குள் சுருளைப் போட்டார். பின்னர் தேவன், “மனுபுத்திரனே, நான் இந்தச் சுருளைக் கொடுக்கிறேன், இதை விழுங்கு. இது உன் உடலை நிரப்பட்டும்” என்றார்.

எனவே நான் சுருளைச் சாப்பிட்டேன். அது வாயிலே தேனைப்போன்று சுவையாக இருந்தது.

பின்னர் தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் செல். என் வார்த்தைகளை அவர்களிடம் பேசு. நீ புரிந்துகொள்ள இயலாத அந்நிய நாட்டுக்காரர்களிடம் உன்னை அனுப்பவில்லை. நீ இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நான் உன்னை இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அனுப்புகிறேன்! நான் உன்னை உன்னால் புரிந்துகொள்ள முடியாத மொழிகளைப் பேசுகிற பல்வேறு நாடுகளுக்கு அனுப்பவில்லை. நீ அந்த ஜனங்களிடம் சென்று அவர்களோடு பேசினால் அவர்கள் நீ சொல்வதைக் கவனிப்பார்கள். ஆனால் நீ அந்த கடினமான மொழியைக் கற்க வேண்டியதில்லை. இல்லை! நான் உன்னை இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அனுப்புகிறேன். இந்த ஜனங்கள் மட்டுமே கடினமான மனங்களை உடையவர்கள். அவர்கள் மிகவும் பிடிவாதமுள்ளவர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் நீ சொல்வதை கவனிக்க மறுப்பார்கள். அவர்கள் என்னைக் கவனிக்க விரும்புவதில்லை. ஆனால் அவர்களைப்போன்று உன்னையும் அவ்வளவு கடினமுள்ளவனாகச் செய்வேன். அவர்களுடையதைப் போன்றே உனது மனமும் அவ்வளவு கடினமானதாக இருக்கும். வைரமானது கன்மலையைவிடக் கடினமானது. அதைப்போலவே உனது மனமானது அவர்களைவிடக் கடினமாகும். நீ அதைவிட மிகக்கடினமாக இருப்பாய். எனவே, அந்த ஜனங்களுக்கு நீ பயப்படமாட்டாய். எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகிற அந்த ஜனங்களுக்குப் பயப்படமாட்டாய்” என்றார்.

10 பின்னர் தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, நான் உன்னிடம் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நீ கவனிக்கவேண்டும். நீ அவ்வார்த்தைகளை நினைவுகொள்ளவேண்டும். 11 பிறகு, நீ நாடு கடத்தப்பட்ட உனது ஜனங்களிடம் சென்று, ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்’ என்று சொல்லவேண்டும். அவர்கள் நீ சொல்வதைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஆனால், நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும்” என்றார்.

12 பிறகு காற்று என்னைத் தூக்கியது. பிறகு நான் எனக்குப் பின்னால் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது இடியைப்போன்று பெருஞ்சத்தமாக இருந்தது. அது “கர்த்தருடைய மகிமை ஆசீர்வதிக்கப்படுவதாக” என்று சொன்னது. 13 பின்னர் ஜீவன்களின் சிறகுகள் நகரத் தொடங்கின. சிறகுகள் ஒன்றை ஒன்று தொட்டு விடுவதுபோன்று பெருஞ்சத்தத்தை எழுப்பின. அவற்றின் முன்னால் இருந்த சக்கரங்கள் இடியைப்போன்று பெருஞ்சத்தத்தை எழுப்பின. 14 காற்று என்னைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது. நான் அந்த இடத்தை விட்டுவிலகினேன். எனது ஆவி மிகவும் துக்கமும் கலக்கமுமடைந்தது. கர்த்தருடைய வல்லமை என்மீது மிகவும் பலமாக இருந்தது. 15 இஸ்ரவேலை விட்டு கட்டாயமாக, தெலாபீபிலே, கேபார் கால்வாய் அருகில் வாழச் சென்ற ஜனங்களிடம் போனேன். அவர்களுடன் நான் ஏழு நாட்கள் தங்கினேன். அந்த நாட்களில் நான் அதிர்ச்சி அடைந்த நிலையில் பேச முடியாதவனாக இருந்தேன்.

16 ஏழு நாட்கள் ஆன பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர், 17 “மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேலின் காவல்காரனாக ஆக்கினேன். அவர்களுக்கு ஏற்படப்போகும் தீயவற்றைப்பற்றி நான் உனக்குச் சொல்வேன். நீ அவற்றைப்பற்றி இஸ்ரவேலை எச்சரிக்க வேண்டும். 18 ‘இந்தக் கெட்ட மனிதன் மரிப்பான்!’ என்று நான் சொன்னால் பிறகு, நீ அவனை எச்சரிக்க வேண்டும். அவன் தனது வாழ்வை மாற்றி தீமை செய்வதை நிறுத்தவேண்டும். நீ அவனை எச்சரிக்காவிட்டால் அவன் மரிப்பான். அவன் தனது பாவத்தால் மரிப்பான்! ஆனால் நான் அவனது மரணத்திற்கு உன்னையும் பொறுப்பாளி ஆக்குவேன். ஏனென்றால், நீ அவனிடம் சென்று அவனது வாழ்க்கையைக் காப்பாற்றவில்லை.

19 “ஒருவேளை அந்த மனிதனை நீ எச்சரித்து அவன் தனது வாழ்வை மாற்றிக்கொண்டு தீயவற்றைச் செய்வதை நிறுத்தும்படிச் சொல்லியிருக்கலாம். அவன் நீ சொல்வதைக் கவனிக்க மறுத்ததால் அவன் மரிப்பான். அவன் பாவம் செய்ததால் மரிப்பான். நான் அவன் மரணத்திற்கு உன்னைப் பொறுப்பாளியாக்கமாட்டேன். ஏனென்றால், நீ அவனை எச்சரித்தாய், நீ உனது வாழ்க்கையைக் காப்பாற்றினாய்.

20 “அல்லது ஒரு நல்லவன் தனது நற்செயலை நிறுத்திவிடலாம். அவனுக்கு முன்னால் நான் சில தடைகளை வைப்பேன். அது அவன் விழக் (பாவஞ்செய்ய) காரணமாகலாம். அவன் தீயவற்றைச் செய்யத் தொடங்கலாம். அவன் பாவம் செய்வதால் மரிப்பான். நீ அவனை எச்சரிக்கவில்லை. அவனது மரணத்திற்கு உன்னைப் பொறுப்பாளியாக்குவேன். ஜனங்கள் அவன் செய்த நன்மைகளை நினைக்கமாட்டார்கள்.

21 “ஆனால், நீ ஒரு நல்ல மனிதனை எச்சரித்து பாவத்தை நிறுத்தும்படிச் சொல்ல அவனும் பாவம் செய்வதை நிறுத்திவிட்டால் பின்னர் அவன் மரிக்கமாட்டான். ஏனென்றால், நீ அவனை எச்சரித்தாய், அவனும் உன்னைக் கவனித்தான். இவ்வழியில் நீ உனது சொந்த உயிரைக் காப்பாற்றினாய்” என்றார்.

22 பின்னர் கர்த்தருடைய வல்லமை என்னிடம் அங்கு வந்தது. அவர் என்னிடம், “எழுந்து பள்ளத்தாக்குக்குப் போ, அங்கே நான் உன்னிடம் பேசுவேன்” என்றார்.

23 எனவே, நான் எழுந்து பள்ளத்தாக்குக்குப் போனேன். கர்த்தருடைய மகிமை அங்கே இருந்தது. கேபார் ஆற்றங்கரையில் இருந்தது போன்றிருந்தது. எனவே, நான் தரையில் என் முகம் படும்படிக் குனிந்தேன். 24 ஆனால் காற்று வந்து நான் நிற்குமாறு என்னைத் தூக்கியது. அவர் என்னிடம் “உன் வீட்டிற்குப் போய் உனது வீட்டிற்குள் அங்கே உன்னைப் பூட்டிகொள். 25 மனுபுத்திரனே, ஜனங்கள் கயிறுகளோடு வந்து உன்னைக் கட்டிப்போடுவார்கள். ஜனங்களிடம் போக உன்னை அனுமதிக்கமாட்டார்கள். 26 நான் உனது நாக்கை மேல் அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்படிச் செய்வேன். உன்னால் பேசமுடியாமல் போகும். எனவே அந்த ஜனங்கள், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று கற்றுத் தர ஆள் இல்லாமல் போவார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர். 27 ஆனால் நான் உன்னிடம் பேசுவேன். பின்னர் நான் உன்னைப் பேச அனுமதிப்பேன். ஆனால் நீ அவர்களிடம் பேச வேண்டும். ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்.’ ஒருவன் இதனைக் கேட்க விரும்பினால் நல்லது. ஒருவன் கேட்க விரும்பாவிட்டாலும் நல்லது. ஆனால் அந்த ஜனங்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர்.

“மனுபுத்திரனே, ஒரு செங்கல்லை எடு. அதன் மீது எருசலேம் நகரத்தின் படத்தை வரை. பிறகு நகரத்தைச் சுற்றி முற்றுகையிடும் படை போல நடி. நகரத்தைத் தாக்க உதவுவதற்கு, அதைச் சுற்றி மதிலைக் கட்டு. நகரத்தின் சுவர்வரை போகும் ஒரு மண் பாதையைப் போடு, இடிக்கும் கருவிகளைக் கொண்டு வா. நகரத்தைச் சுற்றிப் படை முகாம்களை ஏற்படுத்து. பிறகு ஒரு இரும்பு தகட்டினை எடுத்து உனக்கும் நகரத்திற்கும் இடையில் வை, அது உன்னையும் நகரத்தையும் பிரிக்கின்ற இருப்புச் சுவரைப் போன்றது. இவ்வாறு நீ நகரத்திற்கு எதிரானவன் என்பதைக் காட்டுவாய். நீ முற்றுகையிட்டு நகரத்தைத் தாக்குவாய். ஏனென்றால், இது இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நான் (தேவன்) எருசலேமை அழிப்பேன் என்பதை இது காட்டும்.

“பின்னர் நீ உனது இடதுபக்கத்தில் படுக்க வேண்டும். உனக்குக் காட்டுகிறபடி நீ செய்ய வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த பாவத்தை நீயே சுமக்கவேண்டும். நீ இடதுபுறமாக எவ்வளவு நாட்கள் படுத்திருக்கிறாயோ அத்தனை நாட்கள் நீ அவர்களின் குற்றத்தைச் சுமப்பாய். நீ 390 நாட்கள் இஸ்ரவேலரின் குற்றங்களைச் சுமக்கவேண்டும். இவ்வாறு, நான் இஸ்ரவேல் எவ்வளவு காலம் தண்டிக்கப்படும் என்பதை ஒரு நாள், ஒரு ஆண்டுக்குச் சமமாகக் கணக்கிட்டுச் சொல்வேன்.

“அதற்குப் பிறகு, 40 நாட்கள் நீ உனது வலதுபுறமாகப் படுப்பாய். இம்முறை நீ யூதாவின் குற்றங்களை சுமப்பாய். ஒரு நாள் ஓராண்டுக்குச் சமம். எவ்வளவு காலத்திற்கு யூதா தண்டிக்கப்படும் என்பதை நான் சொல்கிறேன்” என்றார்.

தேவன் மீண்டும் பேசினார். அவர், “இப்பொழுது, நீ உனது சட்டை கைகளைச் சுருட்டிக்கொள், செங்கலுக்கு மேலாக உன் கரத்தை உயர்த்து. எருசலேம் நகரத்தைத் தாக்குவதுபோன்று நடி. நீ ஜனங்களிடம் எனது தூதுவனைப்போன்று பேசுகிறாய் என்பதைக் காட்ட இதனைச் செய். இப்பொழுது பார். நான் உன் மேல் கயிற்றைக் கட்டுகிறேன். நகரத்திற்கு எதிராக உனது தாக்குதல் முடியுமட்டும் உன்னால் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு உருளமுடியாது” என்றார்.

தேவன் மேலும் சொன்னார்: “நீ ரொட்டி செய்வதற்கு கொஞ்சம் தானியத்தைப் பெறவேண்டும். கொஞ்சம் கோதுமை, வாற்கோதுமை, மொச்சை, அவரைக்காய், தினை, கம்பு ஆகியவற்றையும் பெறு, ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு கலந்து மாவாக்கு. நீ இதனை ரொட்டி செய்யப் பயன்படுத்து. நீ 390 நாட்கள் ஒரு பக்கமாகப் படுத்திருக்கும்போது இந்த ரொட்டியையே உண்பாய். 10 இம்மாவில் ஒரு நாளைக்கு ஒரு கோப்பை மட்டுமே ரொட்டி செய்யப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவாய். நீ வேளாவேளைக்கு அந்த உணவை உண்பாய். 11 நீ ஒவ்வொரு நாளும் 3 கோப்பை தண்ணீரைமட்டுமே குடிக்க அனுமதிக்கப்படுவாய். இதை நீ ஒவ்வொரு நாளும் வேளாவேளைக்குக் குடிக்க அனுமதிக்கப்படுவாய். 12 உனது உணவை நீயே ஒவ்வொரு நாளும் தயாரிக்கவேண்டும். நீ காய்ந்த மனித மலத்தை எரித்து ரொட்டியைச் சுட வேண்டும். இந்த ரொட்டியை நீ ஜனங்களுக்கு முன்னால் சுட்டு உண்ணவேண்டும்”. 13 பின்னர் கர்த்தர் சொன்னார்: “இஸ்ரவேல் குடும்பத்தார் வெளி நாடுகளில் சுத்தமற்ற ரொட்டியை உண்பார்கள்” என்பதை இது காட்டும். அவர்கள் அத்தகைய நாடுகளுக்குப் போகும்படி நான் பலவந்தப்படுத்தினேன்.

14 பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன் “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே, நான் என்றைக்கும் அசுத்தமான உணவை உண்டதில்லை. நான் இது வரை நோயால் மரித்த அல்லது காட்டுமிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியைத் தின்றதில்லை. நான் சிறுவனாய் இருந்த நாள் முதல் இன்றுவரை அசுத்தமான இறைச்சியைத் தின்றதில்லை. இத்தகைய மோசமான இறைச்சி என் வாய்க்குள் நுழைந்ததில்லை”.

15 பிறகு தேவன் என்னிடம் சொன்னார் “சரி! நான் உனது அப்பத்தை சுடுவதற்கு உலர்ந்த மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறேன். நீ காய்ந்த மனிதமலத்தைப் பயன்படுத்த வேண்டாம்.”

16 பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமிற்கு விநியோகம் ஆகும் உணவை அழிக்கிறேன். ஜனங்களிடம் உண்பதற்குச் சிறிதளவு உணவு உள்ளது. அவர்கள் தமது உணவு விநியோகத்தைப்பற்றிக் கவலையோடு இருப்பார்கள். அவர்களிடம் குடிப்பதற்குச் சிறிது அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும். அவர்கள் அந்தத் தண்ணீரைக் குடிக்கும்போது மிகவும் பயப்படுவார்கள். 17 ஏனென்றால், ஜனங்களுக்குப் போதிய அளவு உணவும் தண்ணீரும் இருக்காது. ஜனங்கள் தமது பாவங்களுக்காக, ஒருவருக்கொருவர் பயந்து வாடிப் போவார்கள்.

“மனுபுத்திரனே, நகரத்தின்மேல் உனது தாக்குதலுக்குப் பிறகு, நீ இவற்றைச் செய்ய வேண்டும். நீ கூர்மையான ஒரு வாளை எடுத்துக்கொள். அதனை சவரகனின் கத்தியைப்போன்று பயன்படுத்தி உனது முடியையும் தாடியையும் மழித்துவிடு. மழித்த முடியைத் தராசில்போட்டு நிறுத்துப்பார். உனது முடியை சமமான மூன்று பாகங்களாகப் பிரி, அதில் மூன்றில் ஒரு பாகத்தை நகரத்தின் (செங்கல்) மேல் வை, அந்நகரத்தில் முடியை எரி. சில ஜனங்கள் நகரத்திற்குள் மரிப்பார்கள் என்பதை இது காட்டும். பிறகு வாளைப் பயன்படுத்தி மூன்றில் ஒரு பாகமுள்ள முடியைச் சிறு துண்டுகளாக வெட்டு. அவற்றை நகரைச் (செங்கல்) சுற்றிலும் போடு. இது, சில ஜனங்கள் நகரத்திற்கு வெளியே மரிப்பார்கள் என்பதைக் காட்டும். பிறகு மூன்றில் ஒரு பங்கு முடியைக் காற்றில் தூவு. காற்று அவற்றைப் பரவலாக்கட்டும். நான் என் வாளை வெளியிலெடுத்து அந்த ஜனங்களுள் சிலரைப் பிற தூர நாடுகளுக்குத் துரத்துவேன் என்பதை இது காட்டும். ஆனால் பிறகு, நீ போய் சில முடிகளை எடுத்து வரவேண்டும். அவற்றை உன்மேல் சட்டையில் சுற்றிவைத்துப் பாதுகாக்கவேண்டும். நான் என் ஜனங்கள் சிலரைக் காப்பாற்றுவேன் என்பதை இது காட்டும். பிறகு பறந்துபோன இன்னும் கொஞ்சம் முடியை எடுத்து வரவேண்டும். அவற்றை நெருப்பில் போடவேண்டும். அங்கு நெருப்பொன்று எரிய ஆரம்பித்து இஸ்ரவேல் வீடு முழுவதையும் அழிக்கும் என்பதை இது காட்டுகிறது.”

பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்; “அந்தச் செங்கல் எருசலேமைக் குறிக்கிறது. நான் எருசலேமை மற்ற தேசங்களுக்கு நடுவில் இருக்கச் செய்தேன். அவளைச் சுற்றிலும் மற்ற நாடுகள் உள்ளன. எருசலேம் ஜனங்கள் எனது கட்டளைகளுக்கு எதிராகக் கலகம் செய்தனர். அவர்கள் மற்ற நாடுகளைவிட மோசமாக இருக்கின்றனர்! அவர்களைச் சுற்றியுள்ள நாட்டிலுள்ளவர்களைவிட அவர்கள் எனது பெரும்பாலான சட்டங்களை மீறிவிட்டனர். எனது கட்டளைகளைக் கேட்கவும், சட்டங்களுக்கு அடிபணியவும் மறுத்துவிட்டனர்.”

எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “நான் உனக்குப் பயங்கரமானவற்றைச் செய்வேன்; ஏனென்றால், நீ எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. நீ எனது கட்டளைகளுக்கு அடிபணியவில்லை. உன்னைச் சுற்றியுள்ள ஜனங்களை விட நீ எனது சட்டங்களை அதிகமாக மீறினாய்! உன்னைச் சுற்றியிருக்கும் நாடுகள் தவறு என கருதும் குற்றங்களையும் கூட நீ செய்தாய்!” எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “எனவே இப்பொழுது, நானும்கூட உனக்கு எதிரானேன்! மற்ற ஜனங்கள் பார்க்கும்படி நான் உன்னைத் தண்டிப்பேன். நான் இதற்கு முன்னால் செய்யாதவற்றை உனக்குச் செய்வேன். நான் பயங்கரமானவற்றை மீண்டும் செய்யமாட்டேன்! ஏனென்றால், நீ ஏராளமான கொடூரமானச் செயல்களைச் செய்தாய். 10 பெற்றோர் தம் குழந்தைகளைத் தின்பார்கள். அத்தகைய பசியில் எருசலேம் ஜனங்கள் இருப்பார்கள். பிள்ளைகளும் தம் சொந்த பெற்றோர்களைத் தின்பார்கள். நான் உன்னைப் பல வழிகளில் தண்டிப்பேன்! மீதி வாழ்கிற ஜனங்களை நான் காற்றிலே தூவுவேன்.”

11 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “எருசலேமே, நான் உன்னைத் தண்டிப்பேன் என்று என் உயிரின்மேல் சத்தியம் செய்கிறேன். ஏனென்றால், எனது பரிசுத்தமான இடத்தில் நீ கொடூரமான செயலைச் செய்தாய். அதனைத் தீட்டுப்படுத்துமாறு நீ அருவருப்பான செயல்களைச் செய்தாய்! நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னிடம் இரக்கம்கொள்ளமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். 12 உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்குள் பசியாலும், கொள்ளைநோயாலும் மரிப்பார்கள். உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்கு வெளியில் போரில் மரிப்பார்கள். உனது ஜனங்களில் பங்கினரை எனது வாளை வெளியிலெடுத்து அவர்களை தூரதேசங்களுக்கு விரட்டுவேன். 13 அதற்குப் பிறகுதான் நான் உங்கள் மீதுள்ள கோபத்தை நிறுத்துவேன். அவர்கள் எனக்குச் செய்த தீமைகளுக்காகத் தண்டிக்கப்பட்டனர் என்று அறிவேன். நான் கர்த்தர், அவர்கள் மேலுள்ள ஆழ்ந்த அன்பினால் நான் அவர்களிடம் பேசினேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

14 கர்த்தர் கூறினார்; “எருசலேமே, நான் உன்னை அழிப்பேன். நீ ஒன்றுமில்லாமல் வெறும் கற்களின் குவியலாவாய். உன்னைக் கடந்து செல்லும் ஜனங்கள் கேலிசெய்வார்கள். 15 உன்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் உன்னைக் கேலிசெய்வார்கள். ஆனால் அவர்களுக்கு நீ ஒரு பாடமாக இருப்பாய். நான் கோபங்கொண்டு உன்னைத் தண்டித்துவிட்டதை அவர்கள் காண்பார்கள். நான் மிகவும் கோபமாக இருந்தேன் உன்னை எச்சரித்தேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று கர்த்தராகிய நான் சொன்னேன்! 16 உனக்கு பயங்கரமான பஞ்சத்தை அனுப்புவேன் என்று சொன்னேன். உன்னை அழிக்கக் கூடியவற்றை அனுப்புவேன் என்று நான் சொன்னேன். அப்பஞ்ச காலம் மீண்டும் மீண்டும் வரும். நான் உனக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை நிறுத்திவிடுவேன் என்று சொன்னேன். 17 நான் பஞ்சகாலத்தின்போது உங்கள் குழந்தைகளைக் கொல்லும் காட்டு மிருகங்களை உங்களுக்கு எதிராக அனுப்புவேன் என்று சொன்னேன். நகரம் முழுவதும் நோயும் சாவுமாக இருக்கும். அந்தப் பகை படை வீரர்களை உங்களோடு சண்டையிட அழைப்பேன். கர்த்தராகிய நான் உனக்கு இவையெல்லாம் நிகழும் என்று சொன்னேன், அவையெல்லாம் நடக்கும்!”

பின்னர் கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார், “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மலைகளை நோக்கித் திரும்பு! எனக்காக அவற்றுக்கு எதிராகப் பேசு. அம்மலைகளிடம் இவற்றைக் கூறு: ‘இஸ்ரவேலின் மலைகளே, எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இந்த மலைகளிடமும், குன்றுகளிடமும் மலைச்சந்துகளிடமும் பள்ளதாக்கிடமும் கூறுவது இதுதான். பாருங்கள்! தேவனாகிய நான், உனக்கு எதிராகச் சண்டையிட பகைவரைக் கொண்டுவருகிறேன். நான் உனது உயர்ந்த மேடைகளை அழிப்பேன். உனது பலிபீடங்கள் துண்டு துண்டாக உடைக்கப்படும்! உனது நறுமணப் பீடங்கள் நொறுக்கப்படும்! நான் உனது மரித்த உடல்களை நரகலான சிலைகளுக்கு முன்னால் எறிவேன். நான் இஸ்ரவேல் ஜனங்களின் மரித்த உடல்களை உங்களது நரகலான சிலைகளுக்கு முன்னால் போடுவேன். உங்களது பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைப் போடுவேன். உங்களது ஜனங்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தீமை ஏற்படும். அவர்களது நகரங்கள் கற்களின் குவியலாகும். அவர்களது மேடைகள் அழிக்கப்படும். ஏனென்றால், வழிபாட்டிற்குரிய அவ்விடங்கள் மீண்டும் பயன்படக் கூடாது. அப்பலிபீடங்கள் எல்லாம் அழிக்கப்படும். ஜனங்கள் நரகலான அச்சிலைகளை மீண்டும் வழிபடமாட்டார்கள். அச்சிலைகள் தகர்க்கப்படும். நீ செய்த அனைத்தும் அழிக்கப்படும்! உங்கள் ஜனங்கள் கொல்லப்படுவார்கள். பிறகு, நான் கர்த்தர் என்று நீ அறிவாய்!’”

தேவன் கூறினார்: “ஆனால் நான் உங்கள் ஜனங்களில் சிலரைத் தப்பிக்க வைப்பேன், அவர்கள் கொஞ்சக் காலத்திற்கு வெளிநாட்டில் வாழ்வார்கள். அவர்களை வேறுநாடுகளில் சிதறி வாழும்படி நான் வற்புறுத்துவேன். பின்னர் தப்பிப்போன அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் வேறு நாடுகளில் வாழும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆனால் தப்பிப்போன அவர்கள் என்னை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள். நான் அவர்களின் ஆத்துமாவை உடைத்தேன். அவர்கள் தாம் செய்த தீமைக்காகத் தம்மையே வெறுப்பார்கள். கடந்த காலத்தில், அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்கள். அவர்கள் தம் நரகலான சிலைகளைத் துரத்திச் சென்றனர். அவர்கள் தம் கணவனை விட்டு விட்டு இன்னொருவனோடு சோரம்போகிற பெண்களைப் போன்றவர்கள். அவர்கள் பல பயங்கரமானவற்றைச் செய்தனர். 10 ஆனால் நான்தான் கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்! நான் சொன்னால் சொன்னபடி செய்வேன் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட எல்லாத் தீமைகளுக்கும் நானே காரணம் என்பதை அறிவார்கள்.”

11 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார், “உங்கள் கைகளைத் தட்டுங்கள், கால்களை உதையுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த கொடூரமான காரியங்களைப்பற்றிப் பேசுங்கள். அவர்கள் நோயாலும் பசியாலும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய். அவர்கள் போரில் கொல்லப்படுவார்கள் என்று சொல். 12 தொலை தூரங்களில் ஜனங்கள் நோயால் மரிப்பார்கள். இந்த இடத்திற்கு அருகில் உள்ள ஜனங்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். இந்நகரத்தில் மீதியாக தங்கும் ஜனங்கள் பட்டினியால் மரிப்பார்கள். பிறகுதான் நான் என் கோபத்தை நிறுத்துவேன். 13 பிறகுதான், நான் கர்த்தர் என்பதை நீ அறிவாய். உங்களது மரித்த உடல்கள் நரகலான சிலைகளுக்கு முன்னாலும் பலிபீடங்களுக்கு அருகிலும் கிடக்கும்போது நீ அறிவாய். அந்த உடல்கள், உங்களது ஒவ்வொரு வழிபாட்டு இடங்களிலும், உயர்ந்த குன்றுகளிலும், மலைகளிலும், ஒவ்வொரு பச்சை மரங்கள் மற்றும் இலைகளுடனுள்ள ஓக் மரங்களின் அடியிலும், கிடக்கும். அந்த இடங்களில் எல்லாம் நீ பலிகளைச் செலுத்தினாய். அங்கே, அவை உன்னுடைய, நரகலான சிலைகளுக்கு இனிய வாசனையை வெளிப்படுத்தியது. 14 ஆனால் ஜனங்களாகிய உங்கள்மேல் என் கரத்தை உயர்த்தி நீங்கள் எங்கு குடியிருந்தாலும் தண்டிப்பேன்! உங்கள் நாட்டை அழிப்பேன்! அது திப்லாத் வனாந்தரத்தைவிட மிகவும் வெறுமையாக இருக்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!”

பின்னர் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “இப்பொழுது, மனுபுத்திரனே, இதைச் சொல்: எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. இச்செய்தி இஸ்ரவேல் நாட்டுக்குரியது!

“முடிவு வந்திருக்கிறது.
    நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது.
இப்பொழுது உன் முடிவு வந்துகொண்டிருக்கிறது!
    நான் உன் மீது எவ்வளவு கோபத்தோடு இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்.
நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.
    நீ செய்த பயங்கரமானவற்றுக்கெல்லாம் உன்னை விலை கொடுக்கும்படிச் செய்வேன்.
நான் உன்னிடம் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன்.
    நான் உனக்காக வருத்தப்படமாட்டேன்.
நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிக்கிறேன்.
    நீ அத்தகைய பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறாய்.
இப்பொழுது நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “ஒரு கேட்டிற்குப் பின் இன்னொரு கேடு ஏற்படும்! முடிவு வருகிறது, அது விரைவில் நிகழும்! இஸ்ரவேலில் குடியிருக்கும் ஜனங்களே மகிழ்ச்சியின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? பகைவன் வருகிறான், தண்டனைக் காலம் மிக விரைவில் வருகிறது! பகைவரின் சத்தம் மலைகளில் மேலும் மேலும் அதிகரிக்கிறது. இப்பொழுது மிக விரைவில் நான் எனது கோபத்தைக் காட்டுவேன். உனக்கு எதிரான எனது கோபம் முழுவதையும் நான் காட்டுவேன். நீ செய்த தீயவற்றுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன். நீ செய்த பயங்கர செயலுக்காக விலை கொடுக்கச் செய்வேன். நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். நீங்கள் அத்தகைய பயங்கரங்களைச் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களை அடிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

10 “ஒரு செடி துளிர்த்து, மொட்டுவிட்டு, பூப்பதுபோல், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. தேவன் அடையாளம் கொடுத்துவிட்டார். பகைவன் தயாராகிவிட்டான். பெருமைகொண்ட அரசனான நேபுகாத்நேச்சார் ஏற்கெனவே வல்லமை வாய்ந்தவனாகிக்கொண்டிருக்கிறான். 11 மூர்க்கத்தனமான மனிதன் கெட்ட ஜனங்களைத் தண்டிக்கத் தயாராகி இருக்கிறான். இஸ்ரவேலில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவன் அவர்களில் ஒருவன் அல்ல. அந்தக் கூட்டத்தில் ஒருவனாக அவன் இல்லை. அவன் அந்த ஜனங்களில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவன் அல்ல.

12 “அந்தத் தண்டனைக் காலம் வந்திருக்கிறது, அந்த நாள் இதோ இருக்கிறது. பொருட்களை வாங்குகிறவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டான். பொருட்களை விற்பவனும் விற்பதைப்பற்றி துக்கப்படமாட்டான். ஏனென்றால், அப்பயங்கரமான தண்டனை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். 13 தம் சொத்தை விற்கிற ஜனங்கள் திரும்பவும் அங்கே வருவதில்லை. ஒருவன் உயிர் தப்பிப் பிழைத்தாலும் அவன் தன் சொத்தைப் பெற திரும்பப் போகமாட்டான். ஏனென்றால், இந்த தரிசனம் ஜனங்கள் கூட்டம் முழுவதற்குரியதாகும். எனவே, ஒருவன் தப்பி உயிர் பிழைத்தாலும் ஜனங்கள் பலமிருப்பதாக உணரமாட்டார்கள்.

14 “அவர்கள் ஜனங்களை எச்சரிக்க எக்காளத்தை ஊதுவார்கள். ஜனங்கள் போருக்குத் தயாராவார்கள். ஆனால் அவர்கள் போர் செய்யமாட்டார்கள். ஏனென்றால், அந்தக் கூட்டத்தின் மேல் நான் எவ்வளவு கோபங்கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்டுவேன். 15 பகைவன் தனது வாளோடு நகரத்திற்கு வெளியே இருக்கிறான். நோயும் பசியும் நகரத்திற்குள்ளே இருக்கின்றன. ஒருவன் நகரத்திற்கு வெளியே போனால் பகைவரின் போர்வீரன் கொல்வான். அவன் நகரில் தங்கினால் பசியும் நோயும் அவனை அழிக்கும்.

16 “ஆனால் சில ஜனங்கள் தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் மலைகளுக்கு ஓடுவார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் தமது அனைத்து பாவங்களுக்காகவும் வருந்துவார்கள். அவர்கள் அழுவார்கள். புறாக்களைப் போன்ற துயர ஒலிகளை எழுப்புவார்கள். 17 ஜனங்கள் தம் கைகளை உயர்த்துவதற்குச் சோர்வும் துக்கமும் அடைவார்கள். அவர்களது கால்கள் தண்ணீரைப் போன்றிருக்கும். 18 அவர்கள் துக்கத்திற்குரிய ஆடைகளை அணிவார்கள். பயத்தால் மூடப்படுவார்கள். ஒவ்வொரு முகத்திலும் நீ அவமானத்தைக் காண்பாய். அவர்கள் தம் துயரத்தைக் காட்ட தலையை மழித்துக்கொள்வார்கள். 19 அவர்கள் தமது தங்கத்தாலும் வெள்ளியாலுமான சிலைகளை வீதிகளில் எறிவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்கள் மீது தன் கோபத்தைக் காட்டும்போது அச்சிலைகளால் அவர்களுக்கு உதவமுடியாமல் இருக்கும். அச்சிலைகள் அவர்களைப் பாவத்தில் விழச்செய்கிற வலையல்லாமல் வேறு எதுவுமில்லை. அச்சிலைகள் ஜனங்களுக்கு உணவைக் கொடுப்பது இல்லை. அச்சிலைகள் அவர்கள் வயிற்றில் உணவை வைப்பதுமில்லை.

20 “அந்த ஜனங்கள் தம் அழகான நகைகளைப் பயன்படுத்தி ஒரு சிலையைச் செய்தனர். அவர்கள் அச்சிலைக்காகப் பெருமைப்பட்டனர். அவர்கள் தமது வெறுக்கத் தக்க சிலைகளைச் செய்தனர்! அவர்கள் நரகலான அவற்றைச் செய்தனர். எனவே நான் (தேவன்) அவர்களை அழுக்கு நிறைந்த கந்தையைப்போல் வெளியே எறிவேன். 21 அவர்களை அந்நியர்கள் எடுத்துச் செல்லும்படி அனுமதிப்பேன். அந்நியர்கள் அவர்களைக் கேலி செய்வார்கள். அந்த அந்நியர்கள் சில ஜனங்களைக் கொன்று மற்றவர்களைக் கைதிகளாகச் சிறைபிடிப்பார்கள். 22 அவர்களிடமிருந்து நான் என் தலையைத் திருப்புவேன். நான் அவர்களைப் பார்க்கமாட்டேன். அந்த அந்நியர்கள் என் ஆலயத்தை அழிப்பார்கள். அவர்கள் அப்பரிசுத்தமான கட்டிடத்தின் மறைக்கப்பட்ட பகுதிகளுக்குள் சென்று அவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்வார்கள்.

23 “சிறைக் கைதிகளுக்காகச் சங்கிலிகளைச் செய்யுங்கள்! ஏனென்றால், மற்றவர்களைக் கொல்லுகிற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். நகரத்தின் ஒவ்வொரு இடத்திலும் வன்முறை நிகழும். 24 நான் மற்ற நாடுகளில் உள்ள கெட்ட ஜனங்களை அழைத்து வருவேன். அக்கெட்ட ஜனங்கள் இஸ்ரவேலில் உள்ள அனைத்து வீடுகளையும் அபகரித்துக்கொள்வார்கள். நான் உங்களது பலம் வாய்ந்த ஜனங்கள் பெருமைப்படுவதை நிறுத்துவேன். வெளிநாடுகளிலுள்ள அந்த ஜனங்கள் நீங்கள் தொழுகை செய்யும் இடங்களை எல்லாம் அபகரிப்பார்கள்.

25 “ஜனங்களாகிய நீங்கள் அச்சத்தால் நடுங்குவீர்கள். நீங்கள் சமாதானத்தைத் தேடுவீர்கள், ஆனாலும் அது இருக்காது. 26 நீங்கள் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் துன்பக் கதைகளைக் கேட்பீர்கள். நீங்கள் கெட்ட செய்திகளைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் தீர்க்கதரிசியைத் தேடி அவனிடம் தரிசனம் பற்றி கேட்பீர்கள், ஆனால் அது கிடைக்காது. ஆசாரியர்களிடம் உங்களுக்குக் கற்றுத்தர எதுவும் இருக்காது. மூப்பர்களிடம் உங்களுக்கு ஆலோசனை சொல்ல எதுவும் இருக்காது. 27 உங்கள் அரசன் மரித்துப்போன ஜனங்களுக்காக அழுதுகொண்டிருப்பான். தலைவர் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருப்பார்கள். பொது ஜனங்கள் மிகவும் பயந்து போயிருப்பார்கள். ஏனென்றால், நான் அவர்களுடைய தீயசெயல்களுக்கு ஏற்றவண்ணம் திருப்பிக்கொடுப்பேன். அவர்களுக்குரிய தண்டனையை நான் தீர்மானிப்பேன். நான் அவர்களைத் தண்டிப்பேன். பிறகு அந்த ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.”

ஒரு நாள் நான் (எசேக்கியேல்) என் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டிருந்தேன். யூதாவின் மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். இது நாடுகடத்தப்பட்ட ஆறாம் ஆண்டின் ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாளாக இருந்தது. திடீரென்று எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமை என்மேல் வந்தது. நெருப்புபோன்ற ஒன்றை நான் பார்த்தேன். அது மனித உடலைப்போன்றும் இருந்தது. இடுப்புக்குக் கீழே அது நெருப்பைப் போன்றிருந்தது. இடுப்புக்கு மேலே நெருப்பிலே பழுத்த உலோகம்போன்று மின்னிக்கொண்டிருந்தது. பிறகு நான் கையைப்போன்று தோன்றிய ஒன்றைப் பார்த்தேன். அவர் தன் கையை நீட்டி என் தலைமயிரைப் பிடித்துத் தூக்கினார். பின்னர் ஆவியானவர் என்னைத் தூக்கிக்கொண்டு, தேவதரிசனத்திலே என்னை எருசலேமிற்குக் கொண்டுபோனார். அவர் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையில்விட்டார். தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற சிலையும் அங்கே இருந்தது. ஆனால் இஸ்ரவேலின் தேவனுடைய மகிமையும் அங்கே இருந்தது. அம்மகிமையானது நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்திற்கு ஒத்ததாக இருந்தது.

கேபார் பள்ளத்தாக்கினில்

தேவன் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, வடக்கை நோக்கிப் பார்.” எனவே, நான் வடக்கு நோக்கிப் பார்த்தேன்! அங்கே, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே, நடையிலே தேவனுக்கு எரிச்சலை உண்டாக்குகிற சிலை இருந்தது.

பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேல் ஜனங்கள் செய்கிற வெறுக்கத்தக்க காரியங்களை நீ காண்கிறாயா? அவர்கள் இங்கே எனது ஆலயத்தை அடுத்து அந்த பயங்கரமான சிலையைக் வைத்திருகிறார்கள்! நீ என்னோடு வந்தால், இதைவிடப் பயங்கரமானவற்றையெல்லாம் நீ பார்க்கலாம்!”

எனவே, நான் பிரகாரத்தின் வாசலுக்குப் போனேன். நான் சுவற்றில் ஒரு துவாரத்தைப் பார்த்தேன். தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, சுவற்றில் ஒரு துவாரம் செய்” என்றார். எனவே, நான் சுவற்றில் ஒரு துவாரம் செய்தேன். அங்கே நான் ஒரு கதவைப் பார்த்தேன்.

பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “உள்ளே போய் ஜனங்கள் செய்யும் வெறுக்கத்தக்கதும் கெட்டதுமானவற்றையெல்லாம் பார்.” 10 எனவே, நான் உள்ளே போய் பார்த்தேன். நீங்கள் நினைத்துப் பார்க்கவே வெறுக்கின்ற ஊர்கின்ற மற்றும் ஓடுகின்ற மிருகங்களின் சிலைகள் இருந்தன. அவை இஸ்ரவேல் ஜனங்களால் வழிபடப்படுகிற அருவருப்பான சிலைகள். அந்த நரகலான சிலைகள் சுவற்றில் செதுக்கப்பட்டிருந்தன!

11 பின்னர், நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் (தலைவர்கள்) எழுபது பேரும் அவர்களின் நடுவிலே சாப்பானுடைய மகனாகிய யசனியாவும் தொழுதுகொண்டு இருப்பதைக்கவனித்தேன். அவர்கள் ஜனங்களுக்கு முன்னால் இருந்தனர்! ஒவ்வொரு தலைவரும் தன் கையிலே தூப கலசத்தை வைத்திருந்தனர். அவற்றிலிருந்து வெளிவந்த புகை காற்றில் எழும்பியது: 12 பிறகு தேவன் என்னிடம் சொன்னார். “மனுபுத்திரனே, இருளிலே இஸ்ரவேலின் மூப்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா? ஒவ்வொருவனும் தமது பொய்த் தெய்வத்துக்கு ஒரு சிறப்பான அறை வைத்திருக்கிறான். அம்மனிதர்கள் தங்களுக்குள், ‘கர்த்தரால் நம்மைப் பார்க்கமுடியாது. கர்த்தர் இந்நாட்டை விட்டு விலகிப்போய்விட்டார்’ என்கின்றனர்.” 13 பிறகு தேவன் என்னிடம்: “நீ என்னோடு வந்தால், அம்மனிதர்கள் இதைவிடப் பயங்கரமானவற்றைச் செய்வதை நீ காணலாம்” என்றார்.

14 பிறகு தேவன், கர்த்தருடைய ஆலய வாசலுக்கு அழைத்துச் சென்றார். இந்த வாசல் வடப் பக்கத்தில் இருந்தது. அங்கே பெண்கள் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் பொய்த் தெய்வமான தம்மூஸுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

15 தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, இப்பயங்கரமானவற்றைப் பார்த்தாயா? என்னோடு வா. இதைவிட மிக மோசமானவற்றை நீ பார்ப்பாய்!” என்றார். 16 பிறகு கர்த்தருடைய ஆலயத்திலுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் 25 பேர் குனிந்து தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவிலே தவறான திசை நோக்கி இருந்தனர்! அவர்களின் முதுகுகள் பரிசுத்த இடத்தின் பக்கம் திரும்பியிருக்க அவர்கள் சூரியனைப் பார்த்து குனிந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள்!

17 பிறகு தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இதனைப் பார்த்தாயா? யூதா ஜனங்கள் எனது ஆலயத்தை முக்கியமானதாகக் கருதாமல், என் ஆலயத்தில் இவ்வாறு பயங்கரமான காரியங்களைச் செய்கின்றனர்! இந்நாடு வன்முறையால் நிறைந்துள்ளது. என்னைக் கோபப்படுத்தும்படியான காரியங்களை எப்பொழுதும் செய்கின்றனர். பார்! தம் மூக்கில் வளையங்களை சந்திரன் எனும் பொய்த் தெய்வத்தை கௌரவப்படுத்துவதற்காக அணிந்துள்ளனர்! 18 நான் எனது கோபத்தைக் காட்டுவேன். நான் அவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன்! நான் அவர்களுக்காக வருத்தப்படமாட்டேன்! அவர்கள் அழுது, சத்தமானக் குரலில் என்னைக் கூப்பிடுவார்கள்! ஆனால் நான் அவற்றைக் கவனிக்க மறுக்கிறேன்!”

பின்னர் தேவன், தண்டனைக்குப் பொறுப்பாக இருந்த தலைவர்களிடம் சத்தமிட்டார். ஒவ்வொரு தலைவரும் தமது கையில் கொலைக்குரிய ஆயுதங்களை வைத்திருந்தனர். பிறகு உயர்ந்த வாசலிலிருந்து ஆறு மனிதர்கள் சாலையில் நடந்து வருவதை நான் பார்த்தேன். அவ்வாசல் வடபகுதியில் இருக்கிறது. ஒவ்வொருவரும் தமது கையில் வெட்டுகிற ஆயுதத்தை வைத்திருந்தனர். ஒரு மனிதன் சணல் நூல் ஆடை அணிந்திருந்தான். அவன் தன் இடுப்பில் நகலரின் எழுது கோலையும் மைக்கூட்டையும் வைத்திருந்தான். அம்மனிதர்கள் ஆலயத்தில் உள்ள வெண்கல பலிபீடத்தின் அருகில் நின்றனர். பிறகு இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன் மேலிருந்து எழும்பியது. பிறகு அந்த மகிமை ஆலயத்தின் வாசலுக்குச் சென்றது. அங்கே நின்று, அம்மகிமை சணல் நூலாடை அணிந்து மைக்கூடும் எழுதுகோலும் வைத்திருக்கிற மனிதனைக் கூப்பிட்டது.

பிறகு அவனிடம் கர்த்தர் (மகிமை) சொன்னார்: “எருசலேம் நகரத்தின் வழியாகப் போ. நகரில் ஜனங்கள் செய்யும் எல்லா பயங்கரமான காரியங்களையும் பற்றி பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் அடையாளம் போடு.”

5-6 பிறகு தேவன் மற்றவர்களிடம் கூறுகிறதைக் கேட்டேன்: “நீங்கள் முதல் மனிதனைப் பின்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். தன் நெற்றியில் அடையாளம் இல்லாத ஒவ்வொருவரையும் நீங்கள் கொல்லவேண்டும். நீங்கள் யார் மேலும் பரிதாபப்படவேண்டாம். நெற்றியில் அடையாளம் இல்லாத மூப்பர்கள் (தலைவர்கள்) இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகள், பிள்ளைகள் தாய்மார்கள் உள்பட எல்லோரையும் கொல்லுங்கள். உங்கள் ஆயுதங்களால் அவர்களைக் கொல்லவேண்டும். அவர்களிடம் இரக்கம் காட்டவேண்டாம். எவருக்காகவும் வருத்தப்படவேண்டாம். எனது ஆலயத்திலிருந்தே தொடங்குங்கள்.” எனவே, ஆலயத்தின் முன்னாலிருந்து மூப்பர்களோடு ஆரம்பித்தார்கள்.

தேவன் அவர்களிடம் சொன்னார்: “இந்த ஆலயத்தை தீட்டுப்படுத்துங்கள். இப்பிரகாரங்களை மரித்த உடல்களால் நிரப்புங்கள்! இப்பொழுது போங்கள்!” எனவே, அவர்கள் நகருக்குள் போய் ஜனங்களைக் கொன்றார்கள்.

அம்மனிதர்கள் போய் ஜனங்களைக் கொல்லும்போது நான் அங்கே தங்கினேன். நான் என் முகம் தரையில் படும்படிக் குனிந்து வணங்கிச் சொன்னேன். “எனது கர்த்தராகிய ஆண்டவரே, எருசலேமின் மீது தனது கோபத்தைக் காட்டுகிறவரே, இஸ்ரவேலில் தப்பிப் பிழைத்த அனைவரையும் கொல்லப் போகிறீரா?”

தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் வம்சத்தாரும் யூதா வம்சத்தாரும் மிகவும் மோசமான பாவங்களைச் செய்திருக்கின்றனர்! நாட்டில் ஒவ்வொரு இடங்களிலும் ஜனங்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். நகரம் குற்றங்களால் நிறைந்திருக்கின்றது. ஏனென்றால், ஜனங்கள் தங்களுக்குள் ‘கர்த்தர் நாட்டை விட்டு விலகினார். நாம் செய்கின்றவற்றை அவரால் பார்க்க முடியாது’ என்று கூறுகின்றனர். 10 நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் இந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டேன். அவர்கள் இதனைத் தாமாகவே கொண்டுவந்தனர். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையையே கொடுக்கிறேன்!”

11 பிறகு சணல் நூலாடை அணிந்து நகலரின் எழுது கோலும் மைக்கூடும் வைத்திருந்தவன் பேசினான். அவன், “நீர் கட்டளையிட்டபடி நான் செய்திருக்கிறேன்” என்றான்.

10 பிறகு நான் கேருபீன்களுடைய தலைக்கு மேலிருந்த கிண்ணம் போன்ற வட்டத்தைப் பார்த்தேன். அது இந்திர நீல ரத்தினம் போன்று காணப்பட்டது. அதற்குமேல் ஒரு சிங்காசனம் இருப்பது போலவும் தோன்றியது. பிறகு சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் சணல் நூலாடை அணிந்த மனிதனிடம் சொன்னார்; “சக்கரங்களுக்கு இடையில் வா, கேருபீனின் கீழ் உள்ள பகுதிக்கு வா, கேருபீன்களின் நடுவிலே எரிந்துகொண்டிருந்த நெருப்புத் தழலைக் கை நிறைய எடு. அவற்றை எருசலேம் நகரத்தின் மேல் ஏறி.”

அந்த மனிதன் என்னைக் கடந்து போனான். அந்த மனிதன் மேகங்களுக்குள் நடந்துப் போனபோது கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன. அந்த மேகம் உட்பிரகாரத்தை நிரப்பியது. பிறகு பிரகாரத்திலும் ஆலயத்தின் வாசலிலும் நின்றுகொண்டிருந்த கேருபீன்களின் மேலிருந்து கர்த்தருடைய மகிமை எழும்பியது. பிறகு மேகம் ஆலயத்தை நிரப்பிற்று. கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் ஆலயப் பிரகாரம் நிரம்பியது. பின்னர் நான் கேருபீன்களுடைய சிறகுகளின் சத்தத்தைக் கேட்டேன். அச்சத்தமானது, சர்வ வல்லமையுள்ள தேவன் பேசும்போது ஏற்படும் இடியோசை போன்றிருந்தது. சிறகுகளின் சத்தத்தை வெளிப்பிரகாரம்வரை கேட்கமுடிந்தது.

தேவன் சணல் நூலாடை அணிந்திருந்த மனிதனைப் பார்த்து, ஒரு கட்டளையிட்டார். தேவன் அவனிடம் சக்கரத்திற்குள்ளே போய் கேருபீன்களிடையிலுள்ள நெருப்புத் தழலை எடுத்து வரும்படிச் சொல்லியிருந்தார். எனவே அந்த மனிதன் உள்ளே நுழைந்து சக்கரத்தின் அருகிலே நின்றான். அப்போது ஒரு கேருபீன் தன் கையை கேருபீன்களுக்கிடையில் உள்ள நெருப்புவரை நீட்டி எடுத்தது. அம்மனிதனின் கைகளில் நெருப்புத் துண்டுகளை இட்டது. அம்மனிதன் போனான். (கேருபீனின் சிறகுகளுக்கடியில் மனித கையைப்போன்று காணப்பட்டது)

பிறகு நான் நான்கு சக்கரங்கள் இருப்பதைக் கவனித்தேன். ஒவ்வொரு கேருபீனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒளிமிக்க மஞ்சள் நிற இரத்தினக்கல் போலிருந்தது. 10 அங்கே நான்கு சக்கரங்கள் இருந்தன. அனைத்து சக்கரங்களும் ஒன்றுபோல காணப்பட்டன. ஒரு சக்கரத்திற்குள் இன்னொரு சக்கரம் இருப்பதுபோல் தோன்றியது. 11 அவை நகரும் போதெல்லாம் நான்கும் ஒரே நேரத்தில் நகர்ந்தன. ஆனால் அவை நகரும்போது கேருபீன் திரும்பாது. தலைபார்க்கும் திசையிலேயே அவை சென்றன. அவை நகரும்போது திரும்பவில்லை. 12 அவற்றின் உடலெல்லாம் கண்கள் இருந்தன. அவற்றின் பின்புறத்திலும், கைகளிலும் சிறகுகளிலும் சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. ஆம், நான்கு சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. 13 சக்கரங்கள் “சுழலும் சக்கரங்கள்” என்று அழைக்கப்படுவதை நான் கேட்டேன்.

14-15 ஒவ்வொரு கேருபீனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முதல் முகம் கேருபீன் முகமாக இருந்தது. இரண்டாவது முகம் மனிதமுகமாக இருந்தது. மூன்றாவது முகம் சிங்கமுகமாக இருந்தது. நான்காவது முகம் கழுகின் முகமாக இருந்தது. நான் கேபார் ஆற்றருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்கள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

கேருபீன்கள் மேலே எழும்பின. 16 அவற்றோடு சக்கரங்களும் எழும்பின. கேருபீன்கள் மேலே எழும்பிக் காற்றில் பறந்தபோது சக்கரங்கள் திசை மாறவில்லை. 17 கேருபீன்கள் காற்றில் பறக்கும்போது சக்கரங்கள் அவற்றோடு சென்றன. கேருபீன்கள் அசையாமல் நின்றபோது சக்கரங்களும் நின்றன. ஏனென்றால், ஜீவனுடைய ஆவி (வல்லமை) அவற்றில் இருந்தது.

18 பிறகு கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியில் இருந்து கேருபீன்களின் மேலிருந்த இடத்திற்குச் சென்று நின்றது. 19 அப்பொழுது கேருபீன்கள் தம் சிறகுகளை விரித்துக் காற்றில் பறந்தன. அவை ஆலயத்தை விட்டுப் போவதைப் பார்த்தேன். சக்கரங்கள் அவற்றோடு சென்றன. பின்னர் அவை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலில் நின்றன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமையானது அவற்றின்மேல் காற்றில் இருந்தது.

20 பிறகு நான், கேபார் ஆற்றின் அருகில் கண்ட தரிசனத்தில் இஸ்ரவேல் தேவனுடைய மகிமைக்கடியில் தெரிந்த ஜீவன்களை நினைத்துப் பார்த்தேன். நான், அவ்விலங்குகள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன். 21 ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் சிறகுகளுக்கடியில் மனித கரங்களைப்போன்று மறைந்தும் இருந்தன. 22 கேருபீன்களின் முகங்கள் கேபார் ஆற்றின் அருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்களின் முகங்களைப்போன்றிருந்தன. அவை ஒவ்வொன்றும் தமது முகம் இருந்த திசையை நோக்கிச் சென்றன.

11 பிறகு ஆவியானவர் என்னை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலுக்குத் தூக்கிச் சென்றார். இந்த வாசல் சூரியன் உதிக்கிற கிழக்கு நோக்கி இருந்தது. நுழை வாசலில் 25 பேர் இருப்பதை நான் பார்த்தேன். அம்மனிதர்களோடு ஆசூரின் மகனான பெலத்தியாவும் இருந்தான். பெலத்தியா ஜனங்களின் தலைவனாயிருந்தான்.

பிறகு, தேவன் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இவர்கள்தான் நகரத்திற்குக் கேடான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள். இம்மனிதர்கள் எப்பொழுதும் ஜனங்களிடம் கெட்டவற்றைச் செய்யும்படிக் கூறுகிறார்கள். இம்மனிதர்கள், ‘நாங்கள் விரைவில் எங்களது வீடுகளை கட்டப்போகிறோம். நாங்கள் இந்நகரத்தில் பாத்திரத்திற்குள் இருக்கிற இறைச்சிபோன்று பத்திரமாக இருக்கிறோம்’ என்கின்றனர். அவர்கள் இப்பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, எனக்காக நீ ஜனங்களிடம் பேசவேண்டும். மனுபுத்திரனே, ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லப் போ.”

பிறகு கர்த்தருடைய ஆவி என்மேல் வந்தார். அவர் என்னிடம் சொன்னார்: “கர்த்தர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் கூறு: இஸ்ரவேல் குடும்பமே, நீ பெரியவற்றைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாய். ஆனால் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன்! நீ இந்நகரத்தில் பலரைக் கொன்றிருக்கிறாய். நீ தெருக்களைப் பிணங்களால் நிறைத்திருக்கிறாய். இப்போது நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘மரித்த உடல்களே இறைச்சியாகும். நகரமே பானையாகும். ஆனால் அவன் (நேபுகாத்நேச்சார்) வந்து உன்னைப் பாதுகாப்பான பானையிலே இருந்து வெளியே எடுப்பான்! நீ வாளுக்குப் பயப்படுகிறாய். ஆனால் நான் உனக்கு எதிராக வாளைக் கொண்டு வருகிறேன்!’” நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். எனவே அவை நிகழும்!

தேவன் மேலும் சொன்னார்: “நான் ஜனங்களாகிய உங்களை நகரத்திலிருந்து வெளியேற்றுவேன். நான் அந்நியர்களிடம் உங்களைக் கொடுப்பேன் உங்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்! 10 நீங்கள் வாளால் மரணம் அடைவீர்கள். நான் உங்களை இங்கே இஸ்ரவேலில் தண்டிப்பேன். எனவே, உங்களைத் தண்டிக்கிறவர் நானே என்பதை நீங்கள் அறிவீர்கள். நானே கர்த்தர். 11 ஆம், இந்த இடம் சமையல் பானையாக இருக்கும். அதற்குள் வேகும் இறைச்சி நீங்களே! நான் உங்களை இஸ்ரவேலில் தண்டிப்பேன். 12 பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீறியது எனது சட்டம்! நீங்கள் எனது ஆணைகளுக்கு அடிபணியவில்லை. உங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினரைப்போன்று நீங்கள் வாழ முடிவுசெய்தீர்கள்.”

13 நான் தீர்க்கதரிசனம் சொல்லி முடிக்கும்போது, பெனாயாவின் மகனான பெலத்தியா மரித்தான்! நான் தரையில் விழுந்தேன். என் முகம் தரையில் படும்படி குனிந்து, “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே, இஸ்ரவேலில் வாழ்கிற மீதியான உயிர் தப்பியோர் அனைவரையும் நீர் அழித்துக்கொண்டிருக்கிறீர்!” என்று உரத்த குரலெழுப்பினேன்.

எருசலேமில் உள்ள மீதி தப்பிப்பிழைத்தவர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

14 ஆனால், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 15 “மனுபுத்திரனே, உனது சகோதரர்களை நினைத்துப்பார். இஸ்ரவேல் குடும்பத்தாரையும் இந்நகரை விட்டு வெளியேற்றப்பட்டவர்களையும் நினைத்துப்பார்! அந்த ஜனங்கள் இந்நாட்டிலிருந்து தொலை தூரத்தில் வாழ்கிறார்கள். ஆனால் எருசலேமில் வாழ்கிற ஜனங்களே அவர்களிடம் கூறுகிறார்கள்: ‘கர்த்தரிடமிருந்து விலகி தூரத்தில் இருங்கள். இந்த நிலம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, இது எங்களுடையது!’

16 “எனவே, ஜனங்களிடம் இவற்றைப்பற்றிச் சொல்; எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; ‘இது உண்மை. நான் எனது ஜனங்களை அந்நிய நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். பல நாடுகளில் அவர்களைச் சிதறும்படிச் செய்தேன். அவர்கள் அங்குத் தங்கும்பொழுது, குறுகிய காலத்திற்கு நான் அவர்களுடைய ஆலயமாயிருப்பேன். 17 எனவே நீ அந்த ஜனங்களிடம் அவர்களது கர்த்தராகிய ஆண்டவர், அவர்களைத் திரும்ப கொண்டு வருவார் என்று சொல்லவேண்டும். உங்களைப் பல நாடுகளில் சிதறடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைச் சேர்த்து அந்நாடுகளில் இருந்து திரும்ப அழைப்பேன். நான் இஸ்ரவேல் நாட்டை உங்களுக்கு திரும்பத் தருவேன்! 18 எனது ஜனங்கள் திரும்பி வரும்போது அவர்களுடைய வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளை அழிப்பார்கள். 19 நான் அவர்களை ஒன்று சேர்த்து ஒரே ஆள்போன்று செய்வேன். நான் அவர்களுக்குப் புதிய ஆவியைக் கொடுப்பேன். நான் அவர்களிடமுள்ள கல்போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உண்மையான இருதயத்தை வைப்பேன். 20 பின்னர் அவர்கள் எனது சட்டங்களுக்குப் பணிவார்கள். நான் அவர்களிடம் சொல்வதைச் செய்வார்கள். அவர்கள் எனது உண்மையான ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.’”

கர்த்தருடைய மகிமை எருசலேமை விட்டு வெளியேறுதல்

21 பிறகு தேவன் சொன்னார்: “ஆனால், இப்போது அவர்கள் இருதயம் அந்த வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளுக்குரியதாக இருக்கிறது. நான், அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக தண்டிப்பேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார். 22 பிறகு கேருபீன்கள் தம் சிறகை விரித்து காற்றில் பறக்க ஆரம்பித்தன, சக்கரங்களும் அவற்றோடு இருந்தன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமை அதற்கு மேல் இருந்தது. 23 கர்த்தருடைய மகிமை காற்றில் எழுந்து எருசலேமை விட்டு வெளியேறியது. அது நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின் மேல் நின்றது. 24 பிறகு ஆவியானவர் என்னை மேலே தூக்கி பாபிலோனியாவிற்கு இஸ்ரவேலை விட்டுக் கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்ட ஜனங்களிடம் திரும்பக் கொண்டுவந்தார். நான் அதையெல்லாம் தேவ தரிசனத்தில் கண்டேன். பின்னர் நான் தரிசனத்தில் கண்ட அவர் காற்றில் எழுந்து என்னைவிட்டுப் போனார். 25 பிறகு நான் நாடுகடத்தப்பட்ட ஜனங்களிடம் பேசினேன். கர்த்தர் எனக்குக் காட்டிய எல்லாவற்றையும் நான் சொன்னேன்.

12 பின்னர் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ கலகக்காரர்களின் மத்தியில் வாழ்கிறாய். அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர். நான் அவர்களுக்காகச் செய்ததைப் பார்க்க அவர்களிடம் கண்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அவற்றைப் பார்க்கவில்லை. நான் அவர்களிடம் செய்யச் சொல்வதைக் கேட்க அவர்களிடம் காதுகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் எனது ஆணைகளைக் கேட்கவில்லை. ஏனென்றால், அவர்கள் கலகக்காரர்கள். எனவே, மனுபுத்திரனே, உனது பைகளைக்கட்டு, நீ தொலைதூர நாட்டிற்குப் போவதுபோன்று நடி. இவ்வாறு செய். இதனால் உன்னை ஜனங்கள் பார்க்கமுடியும். அவர்கள் உன்னைப் பார்க்கலாம், ஆனால் அவர்கள் கலகக்காரர்கள்.

“பகல் நேரத்தில், உனது பைகளை வெளியே வை, அதனால் உன்னை ஜனங்கள் பார்க்கமுடியும். பிறகு மாலையில், ஒரு கைதி தொலைதூர நாட்டிற்குப் போவதுபோன்று நீ புறப்படு. ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போது சுவற்றில் ஒரு துவாரமிட்டு, அத்துவாரத்தின் வழியாக வெளியே போ. இரவில், உனது பைகளைத் தோளில் போட்டுக்கொண்டு விலகிப்போ. உன் முகத்தை மூடிக்கொள். அதனால் நீ போகும்போது உன்னால் பார்க்க முடியாமல்போகும். நீ இவற்றையெல்லாம் செய்யவேண்டும். எனவே ஜனங்கள் உன்னைப் பார்க்கமுடியும். ஏனென்றால், இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னை ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துவேன்.”

எனவே நான் (எசேக்கியேல்) கட்டளையிடப்பட்டபடி செய்தேன். பகல் பொழுதில், எனது பைகளை எடுத்துகொண்டு தூரநாடுகளுக்குப் போவதுபோன்று புறப்பட்டேன். அன்று மாலையில் நான் என் கையால் சுவரில் துவாரமிட்டேன். இரவில் நான் என் தோளில் பைகளைப் போட்டுக்கொண்டு விலகினேன். நான் இதனைச் செய்தேன். எனவே ஜனங்களால் என்னைப் பார்க்கமுடிந்தது.

மறுநாள் காலையில், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று இஸ்ரவேலின் கலகக்காரர்கள் உன்னைப் பார்த்துக் கேட்டார்கள் அல்லவா? 10 அவர்களது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார் என்று அவர்களிடம் கூறு. இந்தத் துயரச் செய்தியானது எருசலேமின் தலைவரையும் இஸ்ரவேலில் வாழ்கிற அனைத்து ஜனங்களையும் பற்றியது. 11 அவர்களிடம், ‘நான் (எசேக்கியேல்) ஜனங்களாகிய உங்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறேன். நான் செய்திருக்கின்றவையெல்லாம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்’ என்று சொல். நீங்கள் சிறைக் கைதிகளாகத் தூர நாடுகளுக்குப் பலவந்தமாக அனுப்பப்படுவீர்கள். 12 உங்கள் தலைவன் சுவற்றில் துவாரமிட்டு அவற்றின் வழியாக நழுவிப் போய்விடுவான். அவன் தனது முகத்தை மூடுவான். எனவே, ஜனங்களால் அவனை அடையாளம் காணமுடியாது. அவன் எங்கே போகிறான் என்பதை அவனது கண்களால் கண்டுகொள்ள முடியாது. 13 அவன் தப்பித்துக்கொள்ள முயல்வான். ஆனால் நான் (தேவன்) அவனைப் பிடித்துக்கொள்வேன்! அவன் என் வலைக்குள் பிடிக்கப்படுவான். நான் அவனை கல்தேயர் வாழும் பாபிலோனுக்கு கொண்டு போவேன். ஆனாலும் அவன் பாபிலோனைப் பார்க்கமுடியாது. பகைவர்கள் அவனது கண்களைக் குத்திக் குருடாக்குவார்கள். பிறகு அவன் அங்கு மரிப்பான். 14 இஸ்ரவேலைச் சுற்றியுள்ள நாடுகளில் வாழும்படி நான் அரசனின் ஜனங்களைப் பலவந்தப்படுத்துவேன். நான் அவனது படையைக் காற்றில் சிதறடிப்பேன். பகைவரின் படைவீரர்கள் அவர்களைத் துரத்துவார்கள். 15 பிறகு அந்த ஜனங்கள், நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். நான் அவர்களைப் பல நாடுகளில் சிதறடித்தேன் என்பதையும் அறிவார்கள். அவர்களை வேறு நாடுகளுக்குச் செல்லும்படி நான் கட்டாயப்படுத்தினேன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

16 “ஆனால், கொஞ்சம் ஜனங்களை நான் வாழும்படி அனுமதித்தேன். அவர்கள் நோயாலும் பசியாலும் போராலும் மரிக்கமாட்டார்கள். நான் அந்த ஜனங்களை வாழவிடுவேன், அதனால் அவர்கள் எனக்கு எதிராகச் செய்த பயங்கரமான காரியங்களைப்பற்றிப் பிற ஜனங்களுக்குச் சொல்ல முடியும், பிறகு, நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

பயத்தோடு நடுங்கு

17 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, நீ பயந்தவனைப்போன்று நடக்கவேண்டும். நீ உணவை உண்ணும்போது நடுங்கவேண்டும். நீ உனது தண்ணீரைக் குடிக்கும்போது கவலையும் அச்சமும் கொண்டவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். 19 நீ இதனைப் பொது ஜனங்களுக்குச் சொல்லவேண்டும். நீ, இவ்வாறு சொல்லவேண்டும். எருசலேமிலும் இஸ்ரவேலின் மற்றப் பகுதிகளிலும் வாழ்கிற ஜனங்களுக்கு, ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். உங்கள் உணவை நீங்கள் உண்ணும்போது ஜனங்களாகிய நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள், நீங்கள் உங்கள் தண்ணீரைக் குடிக்கும்போது திகிலடைவீர்கள். ஏனென்றால், உங்கள் நாட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் அழிக்கப்படும்! அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களிடம் பகைவர்கள் கொடூரமாக நடந்துகொள்வார்கள். 20 இப்பொழுது உங்கள் நகரங்களில் ஏராளமான ஜனங்கள் வாழ்கிறார்கள். ஆனால் அந்நகரங்கள் அழிக்கப்படும். உங்கள் நாடு முழுவதும் பாழாக்கப்படும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.’”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center