Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 12:21-23:39

துன்பம் வரும்

21 பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 22 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் நாட்டைப்பற்றி ஜனங்கள் இந்தப் பாடலை ஏன் பாடுகின்றனர்?

“‘துன்பம் விரைவில் வராது,
    தரிசனம் நிகழாது.’

23 “அவர்களின் கர்த்தராகிய ஆண்டவர் இப்பாடலை நிறுத்துவார் என்று அந்த ஜனங்களிடம் சொல். இனிமேல் அவர்கள் இஸ்ரவேலைப்பற்றி அவற்றைச் சொல்லமாட்டார்கள். இப்பொழுது அவர்கள் இப்பாடலைச் சொல்லுவார்கள்:

“‘துன்பம் விரைவில் வரும்,
    தரிசனம் நிகழும்.’

24 “இது உண்மை. இனிமேல் பொய்யான தரிசனங்கள் இஸ்ரவேலில் இராது. மந்திரவாதிகளின் நிறைவேறாத குறிகளும் இனிமேல் இராது. 25 ஏனென்றால், நானே கர்த்தர். என்ன சொல்ல விரும்புகிறேனோ அதையே சொல்வேன். அவை நிகழும்! நான் அதன் காலத்தை நீடிக்கச் செய்யமாட்டேன். அத்துன்பங்கள் உன் சொந்த வாழ்நாளிலேயே விரைவில் வரும்! கலகக்காரர்களே, நான் எதையாவது சொல்லும்போது அது நடக்கும்படிச் செய்வேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

26 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 27 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் ஜனங்கள் நான் உனக்குக் கொடுக்கும் தரிசனங்கள் நிகழ அநேக நாட்கள் ஆகும் என்று எண்ணுகிறார்கள். பல, வருஷங்கள் கழித்து நடக்கப்போகும் காரியங்களைப்பற்றி நீ பேசுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். 28 எனவே நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: நான் இனி தாமதிக்கமாட்டேன். ஏதாவது நிகழும் என்று நான் சொன்னால் அது நிகழும்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

13 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ எனக்காக இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளிடம் பேச வேண்டும். அத்தீர்க்கதரிசிகள் உண்மையில் எனக்காகப் பேசவில்லை, அவர்கள் தாம் சொல்ல விரும்புவதையே சொல்கிறார்கள். எனவே நீ அவர்களிடம் பேசவேண்டும். அவர்களிடம் இவற்றைப் பேசு, ‘கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தியைக் கேளுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். மூடத் தீர்க்கதரிசிகளே, உங்களுக்குத் தீயவை ஏற்படும். நீங்கள் உங்களது சொந்த ஆவிகளைப் பின்பற்றுகிறீர்கள். நீங்கள் உண்மையில் எவற்றைத் தரிசிக்கிறீர்களோ அவற்றை ஜனங்களிடம் கூறுவதில்லை.

“‘இஸ்ரவேலே, உங்கள் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் வாழும் நரிகளுக்கு ஒப்பானவர்கள். நீங்கள் நகரத்தின் உடைந்த சுவர்களுக்கு அருகில் படை வீரர்களை நிறுத்தி வைக்கவில்லை. நீங்கள் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பாதுகாப்பதற்காக சுவர்களைக் கட்டியிருக்கவில்லை. எனவே கர்த்தர் உங்களைத் தண்டிக்கும் காலம் வரும்போது நீங்கள் போரை இழப்பீர்கள்!

“‘பொய்த் தீர்க்கதரிசிகள் தரிசனங்களைக் கண்டதாகக் கூறினார்கள். அவர்கள் தம் மந்திரங்களைச் செய்தார்கள். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் தம்மை கர்த்தர் அனுப்பியதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் இன்னும் தாம் கூறிய பொய்கள் உண்மையாவதற்காக காத்திருக்கிறார்கள்.

“‘பொய்த் தீர்க்கதரிசிகளே, நீங்கள் கண்ட தரிசனங்களெல்லாம் உண்மையல்ல. நீங்கள் உங்கள் மந்திரங்களைச் செய்தீர்கள். சில நிகழும் என்றீர்கள். ஆனால் நீங்கள் பொய் சொன்னீர்கள்! கர்த்தர் அவற்றைக் கூறியதாக நீங்கள் சொன்னீர்கள். ஆனால் நான் உங்களிடம் பேசவில்லை!’”

எனவே இப்போது, எனது கர்த்தராகிய ஆண்டவர் உண்மையிலேயே பேசுவார்! அவர் கூறுகிறார்: “நீங்கள் பொய்களைச் சொன்னீர்கள். நீங்கள் உண்மையற்ற தரிசனங்களைப் பார்த்தீர்கள். எனவே நான் (தேவன்) இப்பொழுது உங்களுக்கு எதிராக இருக்கிறேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைச் சொன்னார். கர்த்தர் கூறுகிறார்: “பொய்த் தரிசனங்களைப் பார்த்து பொய் சொன்ன தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அவர்களை என் ஜனங்களிடமிருந்து விலக்குவேன். இஸ்ரவேல் வம்சத்தாரின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இருக்காது. அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நான்தான் கர்த்தராகிய ஆண்டவர் என்றும், நீங்கள் அறிவீர்கள்!

10 “மீண்டும் மீண்டும் அந்தப் பொய்த் தீர்க்கதரிசிகள் என் ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். சமாதானம் இருக்கிறது என்று தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். ஆனால் அங்கே சமாதானம் இல்லை. ஜனங்களுக்கு சுவரை நிர்மாணித்து போர் செய்ய தயாராகிட அவசியம் இருந்தது. ஆனால் அவர்கள் உடைந்த சுவரின் மேல் ஒரு மெல்லிய பூச்சை மட்டுமே பூசினார்கள். 11 நான் கல்மழையையும் பெருமழையையும் (பகைவர் படை) அனுப்புவேன் என்று அம்மனிதர்களிடம் சொல். காற்று கடுமையாக அடிக்கும். புயல் காற்றும் வரும். 12 பிறகு அந்தச் சுவர் கீழே விழும். ஜனங்கள் தீர்க்கதரிசிகளிடம், ‘சுவரில் நீங்கள் பூசிய பூச்சு என்னவாயிற்று?’ என்று கேட்பார்கள்.” 13 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பலமான புயல் காற்றை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பெருமழையை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் வானத்திலிருந்து பெருங்கல் மழையைப் பொழியச் செய்து உன்னை முழுமையாக அழிப்பேன்! 14 நீங்கள் அவற்றில் பூச்சு பூசினீர்கள். ஆனால் நான் முழுச் சுவற்றையும் அழித்துவிட்டேன். அதைத் தரையிலே விழப்பண்ணுவேன். அச்சுவர் உன்மீது விழும். பிறகு, நான்தான் கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 15 நான் சுவருக்கும் சாந்து பூசினவர்களுக்கும் எதிரான எனது கோபத்தை முடிப்பேன். பிறகு நான் சொல்லுவேன்; ‘சுவரும் இல்லை, சாந்து பூசின வேலைக்காரர்களும் இல்லை.’

16 “இஸ்ரவேலில் உள்ள பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு இவை எல்லாம் ஏற்படும். அத்தீர்க்கதரிசிகள் எருசலேம் ஜனங்களிடம் பேசுகிறார்கள். அத்தீர்க்கதரிசிகள் சமாதானம் உண்டென்று சொல்கிறார்கள். ஆனால் சமாதானம் இல்லை” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

17 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலில் உள்ள பெண் தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அப்பெண் தீர்க்கதரிசிகள் எனக்காகப் பேசுவதில்லை. அவர்கள் விரும்புவதையே சொல்லுகிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக நீ எனக்காக அவர்களிடம் பேச வேண்டும். 18 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: பெண்களாகிய உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். நீங்கள், ஜனங்கள் தம் கையில் அணிந்துகொள்ளத் தாயத்துகளைச் செய்கிறீர்கள். ஜனங்கள், தம் தலையில் அணிந்துக்கொள்ள சிறப்பான முக்காட்டுச் சேலைகளை உண்டாக்குகிறீர்கள். ஜனங்களது வாழ்வை அடக்கி ஆள மந்திரசக்தி இவற்றில் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களது வாழ்வுக்காக அந்த ஜனங்களை நீங்கள் வேட்டையாடுகிறீர்கள்! 19 நான் முக்கியமானவனில்லை என்று ஜனங்களை நினைக்கும்படிச் செய்கிறீர்கள். சில பிடி வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் அவர்களை எனக்கு எதிராக நீங்கள் திருப்புகிறீர்கள். நீங்கள் என் ஜனங்களிடம் பொய் கூறுகிறீர்கள். அவர்கள் பொய்களைக் கேட்க விரும்புகிறார்கள். வாழவேண்டிய ஜனங்களைக் கொல்லுகிறீர்கள். மரிக்கவேண்டிய ஜனங்களை வாழவைக்கிறீர்கள். 20 எனவே கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நீங்கள் துணியையும் தாயத்துக்களையும் ஜனங்களை வலைக்குட்படுத்த உருவாக்குகிறீர்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை விடுவிப்பேன். அவர்கள் கைகளிலிருந்து அத்தாயத்துகளைப் பிய்த்து எறிவேன். ஜனங்கள் உங்களிடமிருந்து விடுதலை பெறுவார்கள். அவர்கள் வலையிலிருந்து பறக்கும் பறவைகளைப்போன்று இருப்பார்கள்! 21 நான் உங்கள் முக்காட்டுச் சேலைகளைக் கிழித்து உங்கள் வல்லமையிலிருந்து என் ஜனங்களைக் காப்பேன். அந்த ஜனங்கள் உங்கள் வலைகளிலிருந்து தப்புவார்கள். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

22 “‘தீர்க்கதரிசிகளாகிய நீங்கள் பொய்களைச் சொல்கிறீர்கள். உங்களது பொய்கள் நல்ல ஜனங்களைப் புண்படுத்துகின்றன. அந்த நல்ல ஜனங்கள் புண்படுவதை நான் விரும்புவதில்லை. நீங்கள் கெட்ட ஜனங்களை ஆதரிக்கிறீர்கள், உற்சாகப்படுத்துகிறீர்கள். அவர்களின் வாழ்வை மாற்றும்படி நீங்கள் அவர்களிடம் சொல்வதில்லை. அவர்களின் வாழ்வைக் காப்பாற்ற நீங்கள் முயல்வதில்லை! 23 எனவே இனி நீங்கள் பயனற்ற தரிசனங்களைக் காண்பதில்லை. இனிமேல் நீங்கள் எவ்வித மந்திரமும் செய்யப் போவதில்லை. நான் எனது ஜனங்களை உங்களது சக்திகளிலிருந்து காப்பாற்றுவேன். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.’”

14 இஸ்ரவேலின் மூப்பார்கள் என்னிடம் வந்தார்கள். அவர்கள் என்னோடு பேச உட்கார்ந்தார்கள். கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்; “மனுபுத்திரனே, இம்மனிதர்கள் உன்னோடு பேச வந்திருக்கிறார்கள். என்னிடம் ஆலோசனை கேட்க அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அம்மனிதர்கள் இன்னும் தங்கள் அசுத்தமான விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் பாவத்தை உண்டுபண்ணுபவற்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்தச் சிலைகளை இன்னும் வழிபடுகிறார்கள். எனவே, என்னிடம் ஆலோசனை கேட்க எதற்காக அவர்கள் வரவேண்டும்? அவர்களது கேள்விகளுக்கு நான் பதில் சொல்வேனா? இல்லை! ஆனால் நான் ஒரு பதிலைச் சொல்வேன். நான் அவர்களைத் தண்டிப்பேன்! நீ அவர்களிடம் இவற்றைக் கூறவேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; எந்த இஸ்ரவேலராவது ஒரு தீர்க்கதரிசியிடம் வந்து என்னிடம் ஆலோசனை கேட்டால், அவனுக்கு அத்தீர்க்கதரிசி பதில் சொல்லமாட்டான். அவனது கேள்விக்கு நானே பதில் கூறுவேன். இன்னும் அவனிடம் அந்த அசுத்தமான விக்கிரகங்கள் இருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கி வந்தாலும், இன்னும் அவர்கள் பாவத்தைச் செய்யத் தூண்டும் பொருட்களை வைத்திருந்தாலும் நான் பதில் சொல்வேன். அவனுடைய அசுத்த விக்கிரகங்கள் இன்னும் இருந்தபொழுதும் நான் அவனுடன் பேசுவேன். ஏனென்றால், நான் அவர்களின் இதயத்தைத் தொட விரும்புகிறேன். என்னத்தான் அவர்கள் அசுத்தமான விக்கிரகங்களை வணங்க என்னை விட்டு விலகினாலும், நான் அவர்களை நேசிக்கிறேன் என்பதைக் காட்டவேண்டும்.’

“எனவே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: என்னிடம் திரும்பி வாருங்கள், உங்கள் அசுத்த விக்கிரகங்களை விட்டுவிடுங்கள். அப்பொய்யான தெய்வங்களை விட்டு விலகிப்போங்கள். இஸ்ரவேலில் வாழும் இஸ்ரவேலனோ அல்லது அயல்நாட்டுக்காரனோ என்னிடம் ஆலோசனை கேட்க வந்தால், நான் அவனுக்குப் பதில் சொல்வேன். அவன் இன்னும் அந்த அசுத்த விக்கிரகங்களை வைத்திருந்தாலும், இன்னும் அவன் பாவத்தை உண்டுபண்ணுகின்றவற்றை வைத்திருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கினாலும், நான் அவனுக்கு பதில் சொல்வேன். அவனுக்கு நான் தரும் பதில் இதுதான். நான் அவனுக்கு எதிராகத் திரும்புவேன். நான் அவனை அழிப்பேன். அவன் மற்ற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பான். ஜனங்கள் அவனைப் பார்த்துச் சிரிப்பார்கள். நான் அவனை எனது ஜனங்களிலிருந்து விலக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்! ஒரு தீர்க்கதரிசி முட்டாளைப்போன்று தன் சொந்தமாக ஒரு பதிலைச் சொன்னால், அப்பொழுது நான் அவன் எவ்வளவு மதியீனன் என்பதை அவனுக்குக் காட்டுவேன். நான் அவனுக்கு எதிராக எனது வல்லமையைக் காட்டுவேன்! நான் அவனை அழித்து எனது இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து விலக்குவேன். 10 எனவே, ஆலோசனைக்கு வருபவன் பதில் சொல்லும் தீர்க்கதரிசி, என இருவரும் ஒரே தண்டனையைப் பெறுவார்கள். 11 ஏன்? எனது ஜனங்களை என்னிடமிருந்து வழிதப்பிப் போக அந்தத் தீர்க்கதரிசிகள் தூண்டுவதை உற்சாகப்படுத்தவேண்டும். எனவே எனது ஜனங்கள் அவர்கள் பாவங்களால் அசுத்தமாகாமல் தடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் எனது சிறப்புக்குரிய ஜனங்களாவார்கள். நான் அவர்களின் தேவனாய் இருப்பேன்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

எருசலேம் தண்டிக்கப்படும்

12 பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 13 “மனுபுத்திரனே, என்னை விட்டு விலகி எனக்கு எதிராகப் பாவம் செய்யும் எந்த நாட்டையும் நான் தண்டிப்பேன். நான் அவர்களுக்கு உணவு கொடுக்கப்படுவதை நிறுத்துவேன். நான் பசி காலத்திற்குக் காரணம் ஆவேன். அந்நாட்டை விட்டு மனிதர்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 14 நான் அந்நாட்டை அங்கு நோவா, தானியேல், யோபு போன்றவர்கள் வாழ்ந்தாலும் கூடத் தண்டிப்பேன். தங்கள் நற்குணத்தினால் அம்மனிதர்கள் தம் சொந்த உயிரைக் காப்பாற்றமுடியும். ஆனால் அவர்களால் முழு நாட்டையும் காப்பாற்ற முடியாது.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

15 தேவன் சொன்னார்: “அல்லது நான் காட்டு விலங்குகளை அந்நாட்டிற்கு அனுப்புவேன். அவ்விலங்குகள் அனைத்து ஜனங்களையும் கொல்லும், அக்காட்டு விலங்குகளால் எவரும் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்ய முடியாது. 16 நோவா, தானியேல், யோபு ஆகியோர் வாழ்ந்தால் நான் அம்மூன்று பேரையும் காப்பாற்றுவேன். அம்மூன்று பேரும் தம் சொந்த உயிரைக் காப்பாற்றுவார்கள். ஆனால் நான் என் வாழ்வில் வாக்களித்தபடி, அவர்களால் மற்றவர்களின் உயிரை காப்பாற்றமுடியாது. அது அவர்களது சொந்த மகன்கள் அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

17 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டுக்கு எதிராகப் போரிட ஒரு பகைப்படையை அனுப்பலாம். அவ்வீரர்கள் அந்நாட்டை அழிக்கலாம். நான் அந்நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 18 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கே வாழ்ந்தாலும் நான் அம்மூன்று நல்லவர்களை மட்டுமே காப்பாற்றுவேன். அம்மூன்றுபேராலும் தங்கள் உயிரைத்தான் காப்பாற்ற முடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் அளித்த வாக்குறுதிப்படி அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாக அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

19 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டிற்கு எதிராக நான் கொள்ளை நோயை அனுப்பலாம். நான் என் கடுங்கோபத்தை அதன் மீது இரத்தச் சிந்துதலுடன் ஊற்றுவேன். நான் அந்நாட்டிலுள்ள எல்லா ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 20 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கு வாழ்ந்தாலும், நான் அம்மூன்று பேரை மட்டும் காப்பாற்றுவேன். ஏனென்றால் அவர்கள் நல்லவர்கள். அம்மூன்று பேராலும் தங்கள் உயிரை மட்டுமே காப்பாற்றமுடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் வாக்களிக்கிறேன், அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாகவோ, மகள்களாகவோ இருந்தாலும் காப்பாற்றமுடியாது!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவ்வாறு கூறினார்.

21 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் மேலும் சொன்னார். “எனவே எருசலேமிற்கு இது எவ்வளவு கேடானது என்று எண்ணிப்பார். நான் இந்த நகரத்திற்கு எதிராக இந்நான்கு தண்டனைகளையும் அனுப்புவேன். நான் பகைவரின் படை, பசி, நோய், காட்டுமிருகங்கள் ஆகியவற்றை நகருக்கெதிராக அனுப்புவேன். நான் அந்நாட்டிலுள்ள ஜனங்களையும் விலங்குளையும் வெளியே அனுப்புவேன்! 22 ஜனங்களில் சிலர் அந்நாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் உதவிக்காகத் தம் மகன்களையும் மகள்களையும் உன்னிடம் அழைத்து வருவார்கள். பின்னர் அவர்கள் உண்மையில் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை நீ அறிவாய். நான் எருசலேமிற்குக் கொடுத்த துன்பங்கள் எல்லாம் பரவாயில்லை என்று நீ உணர்வாய். 23 அவர்கள் வாழும் வாழ்வையும் செய்யும் தீமையையும் நீ பார்ப்பாய். பிறகு, நான் அவர்களைத் தண்டித்ததற்குச் சரியான காரணம் உண்டென்று நீ அறிவாய்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

எருசலேம் என்னும் திராட்சைக்கொடி எரிக்கப்படும்

15 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது, அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, காட்டிலுள்ள மரங்களிலிருந்து வெட்டப்பட்டக் கிளைகளை விட திராட்சைக் கிளைகளின் குச்சி சிறந்ததா? இல்லை! திராட்சைக் கொடியிலிருக்கும் மரத்துண்டை நீ எதற்காவது பயன்படுத்த முடியுமா? இல்லை! அந்த மரத்தைக் கொண்டு பாத்திரங்களைத் தொங்கவிடும் முளைகளைச் செய்யமுடியுமா? இல்லை! ஜனங்கள் அவற்றை தீயில்தான் போடுவார்கள். சில குச்சிகள் முனைகளில் எரியத்தொடங்கும். நடுப்பகுதி நெருப்பால் கறுப்பாகும். அக்குச்சிகள் முழுவதும் எரியாது. அக்குச்சிகளை நீ வேறு எதற்கும் பயன்படுத்த முடியுமா? அவை எரிவதற்கு முன்னமே அவற்றைப் பயன்படுத்த முடியாது என்றால், பிறகு அவை எரிந்தபின் அவற்றைப் பயன்படுத்தவேமுடியாது! எனவே திராட்சைக் கொடியிலுள்ள குச்சிகளும் காட்டிலுள்ள மற்ற மரங்களின் குச்சிகளைப் போன்றவைதான். ஜனங்கள் அம்மரத்துண்டுகளை நெருப்பில் எறிவார்கள்.” நெருப்பு அவற்றை எரிக்கும்! அதுபோலவே, நானும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களை நெருப்பில் எறிவேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைச் சொன்னார். “நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். ஆனால் ஜனங்களில் சிலர் முழுவதும் எரியாத குச்சிகளைப்போன்றுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் முழுவதுமாக அழிக்கப்படவில்லை. அந்த ஜனங்களை நான் தண்டித்தேன் என்பதை நீ பார்ப்பாய். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்! நான் அந்த நாட்டை அழிப்பேன். ஏனென்றால் ஜனங்கள் பொய்த் தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

16 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேம் ஜனங்களிடம் அவர்கள் செய்திருக்கிற வெறுக்கத்தக்க செயல்களைப்பற்றி சொல். நீ சொல்லவேண்டியது, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிற்கு இவற்றைச் சொல்கிறார்; உன் வரலாற்றைப் பார், நீ கானான் தேசத்தில் பிறந்தாய். உனது தந்தை எமோரியன்: உனது தாய் எத்தித்தி. எருசலேமே, உன் பிறந்த நாளில் உன் தொப்புள் கொடியை அறுக்க யாருமில்லை, உன் மீது உப்பினைப் போட்டு உன்னைக் கழுவிச் சுத்தப்படுத்திட எவருமில்லை. எவரும் உன்னைத் துணியில் சுற்றவில்லை. எருசலேமே, நீ தனிமையாக இருந்தாய். உனக்காக எவரும் வருத்தப்படவில்லை. உன்னை ஆதரிக்க எவருமில்லை. எருசலேமே, நீ பிறந்த நாளிலே உன் பெற்றோர் உன்னை வயல்வெளியில் வீசினார்கள். நீ அப்பொழுதும் பிறந்தவுடன் உன்மேலுள்ள இரத்தத்தில் கிடப்பதைப் பார்த்தேன்.

“‘பிறகு நான் (தேவன்) கடந்து போனேன். அங்கே நீ இரத்தத்தில் கிடப்பதைப் பார்த்தேன். நீ இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாய். நான் “நீ பிழைத்திரு!” என்றேன். ஆம் நீ இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாய். ஆனால் நான், “நீ பிழைத்திரு!” என்று சொன்னேன். வயலில் வளரும் செடியைப்போன்று நீ வளர நான் உதவினேன். நீ இளம் பெண்ணானாய். நீ மேலும் மேலும் வளர்ந்தாய். உனது மாதவிலக்குத் தொடங்கியது. உனது மார்புகள் வளர்ந்தன. உனது முடி வளரத்தொடங்கியது. ஆனால் நீ அப்பொழுதும் நிர்வாணமாக இருந்தாய். நான் உன்னை முழுவதாய் பார்த்தேன். நீ மணம் செய்ய தயாராக இருப்பதைப் பார்த்தேன். எனவே நான் எனது ஆடைகளை உன்மேல் விரித்து உனது நிர்வாணத்தை மறைத்தேன். நான் உன்னை மணந்துகொள்வதாய் வாக்களித்தேன். நான் உன்னோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தேன். நீ என்னுடையவளானாய்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்: “‘நான் உன்னை தண்ணீரில் கழுவினேன். நான் உன் இரத்தத்தைக் கழுவினேன். உன் தோல்மீது எண்ணெய் தடவினேன். 10 நான் உனக்கு சித்திரத் தையல் வேலை பொருந்திய ஆடையைக் கொடுத்தேன்: மென்மையான தோல் பாதரட்சைகளைக் கொடுத்தேன். நான் உனக்கு மெல்லிய புடவையையும் மூடிக்கொள்ள பட்டுச் சால்வையையும் கொடுத்தேன். 11 பிறகு, நான் உனக்கு சில நகைகளைக் கொடுத்தேன். நான் உனது கைகளில் கையணியையும், கழுத்துக்கு மாலையையும் கொடுத்தேன். 12 நான் உனக்கு மூக்கு வளையத்தையும், சில காதணிகளையும், அழகான கிரீடத்தையும் கொடுத்தேன். 13 நீ உனது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் அழகாக இருந்தாய். நீ மெல்லிய புடவையையும் பட்டையும் சித்திர வேலைப்பாடுகளுள்ள ஆடைகளையும் அணிந்தாய். நல்ல உணவினை உண்டாய். நீ மிக மிக அழகுபெற்றாய். நீ அரசி ஆனாய்! 14 நீ உன் அழகில் புகழ்பெற்றாய். ஏனென்றால், நான் உன்னை அழகாகவும் மகிமையாகவும் ஆக்கியிருந்தேன்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

எருசலேம் என்னும் உண்மையற்ற மணவாட்டி

15 தேவன் சொன்னார்: “ஆனால் நீ உனது அழகை நம்பத்தொடங்கினாய். நீ உனது நல்ல பெயரைப் பயன்படுத்தி எனக்கு உண்மையற்றவளாக ஆனாய். உன்னைக் கடந்துசெல்லும் ஒவ்வொருவரிடமும் நீ வேசியைப்போன்று நடந்துகொண்டாய். அவர்கள் அனைவருக்கும் நீ உன்னையே கொடுத்தாய். 16 நீ உனது ஆடைகளை எடுத்து தொழுகை இடங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தினாய். நீ அந்த இடங்களில் வேசியைப்போன்று நடந்துகொண்டாய். அங்கே வரும் அனைவருக்கும் நீ உன்னைக் கொடுத்தாய்! 17 பிறகு நீ உன் அழகான, நான் கொடுத்த நகைகளை எடுத்து, வெள்ளியாலும் தங்கத்தாலும் ஆன அந்நகைகளை ஆண் உருவங்களைச் செய்யப் பயன்படுத்தினாய். நீ அவர்களோடு பாலின உறவு வைத்துக்கொண்டாய். 18 பிறகு நீ உனது அழகான ஆடைகளை எடுத்து அச்சிலைகளுக்குப் பயன்படுத்தினாய். நான் உனக்குக் கொடுத்த நறுமணப் பொருட்களையும் தூபவர்க்கத்தையும் அவ்வுருவச் சிலைகளுக்கு முன்னால் வைத்தாய். 19 நான் உனக்கு அப்பம், தேன், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன். ஆனால் நீ அவற்றை அந்த விக்கிரகங்களுக்கு கொடுத்தாய். உனது பொய்த் தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்த நீ இனிய மணப்பொருட்களை வழங்கினாய்! அப்பொய்த் தெய்வங்களிடம் நீ ஒரு வேசியைப்போன்று நடந்துகொண்டாய்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

20 தேவன் சொன்னார்: “நீ எனக்குப் பெற்ற உன் மகன்களையும், உன் மகள்களையும் எடுத்து, அவர்களைக் கொன்று அப்பொய்த் தெய்வங்களிடம் கொடுத்துவிட்டாய்! ஆனால், நீ என்னை ஏமாற்றிவிட்டு அப்பொய்த் தெய்வங்களிடம் போனபோது நீ செய்த கெட்டக் காரியங்களில் இவைச் சில மாத்திரமே. 21 நீ எனது மகன்களை நெருப்பின் மூலம் கொன்று அப்பொய்த் தெய்வங்களுக்கு பலியாகக் கொடுத்தாய். 22 நீ என்னை விட்டு விலகி பயங்கரமானவற்றைச் செய்தாய். நீ இளமையாக இருந்த காலத்தைப்பற்றி நினைக்கவில்லை. நான் உன்னைக் கண்டபோது, நீ நிர்வாணமாக இரத்தம் படிந்து கிடந்ததை நினைப்பதில்லை.

23 “அனைத்துத் தீய செயல்களுக்கும் பிறகு,… ஓ எருசலேமே, உனக்கு மிகுந்த கேடு வரும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றையெல்லாம் கூறினார். 24 “அவை அனைத்துக்கும் பிறகு அந்தப் பொய்த் தெய்வத்தை தொழுதுகொள்ள நீ மேடையைக் கட்டினாய். ஒவ்வொரு தெருமுனையிலும் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள நீ அவ்விடங்களைக் கட்டினாய். 25 ஒவ்வொரு சாலையின் முனையிலும் நீ உயர்ந்த மேடைகளைக் கட்டினாய். பிறகு நீ உன் அழகை கேவலப்படுத்திக்கொண்டாய். அவ்வழியாகப் போவோரைப் பிடிக்க அதனைப் பயன்படுத்தினாய். நீ உனது பாவாடையைத் தூக்கினாய். அதனால் அவர்களால் உன் கால்களைக் காணமுடிந்தது. பின் அம்மனிதர்களோடு வேசிகளைப்போன்று நடந்துகொண்டாய். 26 பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய். 27 எனவே நான் உன்னைத் தண்டித்தேன். நான் உனது சம்பளத்தின் (நிலம்) ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன். உனது பகைவர்களான பெலிஸ்தருடைய குமாரத்திகள் (நகரங்கள்) அவர்கள் விருப்பப்படி உனக்கு வேண்டியதைச் செய்ய அனுமதித்தேன். அவர்கள் கூட உனது முறைகேடான செயல்களைப் பார்த்து வெட்கப்பட்டார்கள். 28 பிறகு நீ அசீரியாவோடு பாலின உறவு செய்தாய். உனக்குப் போதுமானதை பெற முடியவில்லை, நீ எப்பொழுதும் திருப்திபட்டதில்லை. 29 எனவே நீ கானான் பக்கம் திரும்பினாய், பிறகு பாபிலோனில் இருந்தும் நீ திருப்தி அடையவில்லை. 30 நீ உன்னுடைய தீய வழிகளினால் பெலவீனமடைந்தாய். பாவம் செய்வதற்கு மற்ற அனைத்து ஆண்களையும் நீ அனுமதித்தாய். நீ ஒரு வெட்கமற்ற வேசியைப்போலவே நடந்துகொண்டாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

31 தேவன் சொன்னார், “ஆனால் நீ ஒரு சரியான வேசியாக இருக்கவில்லை. ஒவ்வொரு சாலை முனைகளிலும் நீ மேடைகளைக் கட்டினாய். ஒவ்வொரு தெருமுனையிலும் நீ வழிபடுவதற்கான இடங்களைக் கட்டினாய். நீ அம்மனிதர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாய். ஆனால் நீ வேசியைப்போன்று அவர்களிடம் பணம் கேட்கவில்லை. 32 நீ சோரம் போன பெண். நீ உன் சொந்தக் கணவனை விட்டுவிட்டு அந்நிய ஆண்களோடு பாலின உறவுகொள்வதை விரும்புகிறவள். 33 பெரும்பாலான வேசிகள் பாலின உறவுக்காக பணத்தை வற்புறுத்திக் கேட்பார்கள். ஆனால் நீ உனது நேசர்களுக்கு உன்னையே கொடுத்தாய். நீ உன்னுடைய நேசர்களுக்குப் பணத்தைக் கொடுத்து உன்னோடு பாலின உறவுகொள்ள வரும்படி அழைத்தாய். 34 நீ வேசிகளுக்கு எதிர்மாறாக இருக்கிறாய். வேசிகள் வேசித்தனம் செய்ய பணம் கேட்டு வற்புறுத்துவார்கள். ஆனால் நீயோ உன்னோடு உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்குப் பணம் கொடுக்கிறாய்.”

35 வேசியே, கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள். 36 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நீ உனது பணத்தைச் செலவழித்தாய். உன்னை நேசித்தவர்களும் பொய்த் தெய்வங்களும் உனது நிர்வாணத்தைக் காணவும் உன்னோடு பாலின உறவுகொள்ளவும் அனுமதித்தாய். நீ உன் குழந்தைகளைக் கொன்றிருக்கிறாய். அவர்களது இரத்தத்தைச் சிந்தினாய். அப்போலித் தெய்வங்களுக்கு இது நீயளித்த பரிசாகும். 37 எனவே நான் உன்னை நேசித்த யாவரையும் ஒன்று கூட்டுவேன். உன்னை நேசித்த எல்லா ஆண்களையும், நீ வெறுத்த எல்லா ஆண்களையும் ஒன்று கூட்டுவேன். அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி உனது நிர்வாணத்தைப் பார்க்கும்படிச் செய்வேன். அவர்கள் உனது முழு நிர்வாணத்தையும் பார்பார்கள். 38 பிறகு நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைக் கொலைக்காரியாகவும் சோரம் போனவளாகவும் தண்டிப்பேன். ஒரு கோபமும் பொறாமையும்கொண்ட கணவனால் பழி தீர்க்கப்படுவதுபோல் தண்டிப்பேன். 39 உன்னை நேசித்தவர்களிடம் உன்னை ஒப்படைப்பேன். அவர்கள் உனது மேடைகளை அழிப்பார்கள். அவர்கள் உன்னை தொழுதுகொள்ளும் இடங்களை எரிப்பார்கள், அவர்கள் உன்னுடைய உயர்ந்த ஆராதனை மேடைகளை உடைத்துப்போடுவார்கள். அவர்கள் உனது ஆடைகளை கிழித்தெறிவார்கள். உனது அழகான நகைகளை எடுத்துக்கொள்வார்கள். நான் உன்னை முதலில் பார்த்தபோது இருந்ததைப்போன்று அவர்கள் உன்னை நிர்வாணமாக விட்டு விட்டுப் போவார்கள். 40 அவர்கள் ஜனங்கள் கூட்டத்தைக் கூட்டி வந்து உன்மேல் கல்லை எறிந்து கொல்ல முயல்வார்கள், பிறகு அவர்கள் தம் வாள்களால் உன்னைத் துண்டுகளாக வெட்டிப் போடுவார்கள். 41 அவர்கள் உனது வீட்டை (ஆலயத்தை) எரிப்பார்கள். பிற பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள். நீ ஒரு வேசியைப்போல் வாழ்வதை நான் தடுப்பேன். நீ உனது நேசர்களுக்குப் பணம் கொடுப்பதையும் நான் தடுப்பேன். 42 பிறகு நான் கோபமும் பொறாமையும் அடைவதை நிறுத்துவேன். நான் அமைதி அடைவேன். நான் இனிக் கோபங்கொள்ளமாட்டேன். 43 ஏன் இவை எல்லாம் நிகழ்கின்றன? நீ இளமையில் எவ்வாறு இருந்தாய் என்பதை நினைக்காததால் இவையெல்லாம் உனக்கு நிகழும். நீ அனைத்து தீயச்செயல்களையும் செய்து என்னைக் கோபமூட்டுகிறாய். அதனால் நான் உன்னைத் தீயச் செயல்களுக்காகத் தண்டித்தேன். ஆனால் நீ இன்னும் பயங்கரமான செயல்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

44 “உன்னைப்பற்றி பேசுகிற ஜனங்கள் எல்லாரும் பேச இன்னுமொன்று உள்ளது. அவர்கள், ‘தாயைப் போல மகள்’ என்று சொல்வார்கள். 45 நீ உனது தாயின் மகள். நீ உனது கணவன் அல்லது குழந்தைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. நீ உனது சகோதரியைப் போன்றிருக்கிறாய். நீங்கள் இருவரும் கணவனையும் குழந்தைகளையும் வெறுத்தீர்கள். நீ உனது பெற்றோர்களைப் போன்றிருக்கிறாய். உனது தாய் ஏத்தித்தி, உன் தகப்பன் எமோரியன். 46 உனது மூத்த சகோதரி சமாரியா. அவள் உனது வட புறத்தில் தன் மகள்களோடு (நகரங்கள்) வாழ்ந்தாள். உன் இளைய சகோதரி சோதோம். அவள் உனது தென்புறத்தில் தனது மகள்களோடு (நகரங்கள்) வாழ்ந்தாள். 47 அவர்கள் செய்த அனைத்து பயங்கரங்களையும் நீயும் செய்தாய். ஆனால் நீ அவற்றை விடவும் மோசமாகச் செய்தாய். 48 நானே கர்த்தரும், ஆண்டவரும் ஆவேன். நான் உயிரோடு இருக்கிறேன். என் உயிரைக்கொண்டு நான் வாக்குரைக்கிறேன். உன் சகோதரி சோதோமும் அவளது மகள்களும் நீயும் உனது மகள்களும் செய்ததுபோன்று அவ்வளவு தீயச்செயல்களைச் செய்யவில்லை.”

49 தேவன் சொன்னார்: “உனது சகோதரி சோதோமும் அவளது மகள்களும் தற்பெருமை கொண்டவர்கள். அவர்கள் அதிகமாக உண்டார்கள். அதிகமான நேரத்தை வீணாக செலவழித்தனர். அவர்கள் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவவில்லை. 50 சோதோமும் அவளது மகள்களும் மிகவும் தற்பெருமை கொண்டவர்களாகி எனக்கு முன்னால் தீமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அவற்றைச் செய்வதைக் கண்டபோதெல்லாம் நான் தண்டித்தேன்.”

51 தேவன் சொன்னார்: “நீ செய்த தீயச் செயல்களில் பாதி அளவுக்கூட சமாரியா செய்யவில்லை. நீ சமாரியாவை விடப் பல மடங்கு தீமைகளைச் செய்திருக்கிறாய். நீ உன் சகோதரிகளை விடப் பல மடங்கு பாவங்களைச் செய்திருக்கிறாய். சோதோமும் சமாரியாவும் உன்னோடு ஒப்பிடும்போது நல்லவர்களாகத் தோன்றுகிறார்கள். 52 எனவே, உனது அவமானத்தை நீ தாங்கிக்கொள்ள வேண்டும். உன்னோடு ஒப்பிடும்போது உனது சகோதரிகளை நீ நல்லவர்கள் ஆக்கிவிடுகிறாய். நீ பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறாய். எனவே, நீ அவமானப்படவேண்டும்.”

53 தேவன் சொன்னார்: “நான் சோதோமையும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களையும் அழித்தேன். நான் சமாரியாவையும் அதனைச் சுற்றியுள்ளவற்றையும் அழித்தேன். எருசலேமே, உன்னையும் நான் அழிப்பேன். ஆனால் அந்நகரங்களை நான் மீண்டும் கட்டுவேன். எருசலேமே உன்னையும் நான் கட்டுவேன். 54 நான் உனக்கு ஆறுதல் அளிப்பேன். பிறகு நீ செய்த பயங்கரமான காரியங்களை நினைவுபடுத்துவாய். நீ அதற்கு அவமானப்படுவாய். 55 எனவே, நீயும் உன் சகோதரிகளும் மீண்டும் கட்டப்படுவீர்கள். சோதோமும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும் சமரியாவும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும், நீயும் உன்னைச் சுற்றியுள்ள நகரங்களும், மீண்டும் கட்டப்படுவீர்கள்.”

56 தேவன் சொன்னார், “முன்பு, நீ தற்பெருமை கொண்டு சோதோமைக் கேலி செய்தாய். ஆனால் நீ அவற்றை மீண்டும் செய்யமாட்டாய். 57 நீ தண்டிக்கப்படுவதற்கு முன்பும் உனது அயலவர்கள் உன்னைக் கேலிசெய்வதற்கு முன்பும் நீ அவற்றைச் செய்தாய். ஏதோமின் மகள்களும் (நகரங்கள்) பெலிஸ்தியாவும் உன்னை இப்போது கேலி செய்கிறார்கள். 58 இப்பொழுது நீ செய்த பயங்கரச் செயல்களுக்காக வருத்தப்படவேண்டும்.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

கர்த்தர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்

59 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார், “நீ என்னை நடத்தின வண்ணம் நான் உன்னை நடத்துவேன்! நீ உனது திருமண உடன்படிக்கையை உடைத்தாய். நீ நமது உடன்படிக்கையை மதிக்கவில்லை. 60 ஆனால் நான் உனது இளமையில் செய்த உடன்படிக்கையை ஞாபகப்படுத்திக்கொள்வேன். நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கை உன்னோடு செய்தேன்! 61 நான் உன் சகோதரிகளை உன்னிடம் அழைத்து வந்தேன். நான் அவர்களை உனது மகள்களாக ஆக்குவேன். அது நமது உடன்படிக்கையில் இல்லை. ஆனால் அதனை உனக்காகச் செய்வேன். பிறகு நீ உனது தீய வழிகளை நினைத்து அதற்காக அவமானமடைவாய். 62 எனவே நான் எனது உடன்படிக்கையை உன்னுடன் செய்வேன். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய். 63 நான் உன்னிடம் நல்லபடி இருப்பேன். எனவே என்னை நீ நினைவுகொள்வாய். நீ செய்த தீமைகளுக்காக வெட்கப்படுவாய். உன்னால் ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் நான் உன்னை தூய்மையாக்குவேன். நீ மீண்டும் வெட்கமடையமாட்டாய்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

17 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இக்கதையைக் கூறு. இதன் பொருள் என்னவென்று கேள். அவர்களிடம் சொல்:

“‘ஒரு பெரிய கழுகு (நேபுகாத்நேச்சார்) பெருஞ் சிறகுகளுடன் லீபனோனுக்கு வந்தது.
    அக்கழுகு புள்ளிகளைக்கொண்ட இறகுகளை கொண்டிருந்தது.
அக்கழுகு பெரிய கேதுரு மரத்தின் உச்சியை (லீபனோன்) உடைத்தது;
    கானானுக்குக் கொண்டுவந்தது.
    கழுகு வியாபாரிகளின் பட்டணத்திற்கு கிளையைக் கொண்டுவந்தது.
பிறகு கழுகு கானானிலிருந்து சில விதைகளை (ஜனங்கள்) எடுத்தது.
    அது அவற்றை நல்ல மண்ணில் நட்டுவைத்தது.
    அது நல்ல ஆற்றங்கரையில் நட்டது.
அவ்விதைகள் வளர்ந்து திராட்சை கொடியானது.
    இது ஒரு நல்ல கொடி.
இக்கொடி உயரமாக இல்லை.
    ஆனால் அது படர்ந்து பெரும் இடத்தை அடைத்தது.
அக்கொடிகளுக்கு வேர்கள் வளர்ந்தன.
    சிறு கொடிகள் மிக நீளமாக வளர்ந்தன.
இன்னொரு பெரிய கழுகு தன் பெருஞ் சிறகுடன் இக்கொடியைப் பார்த்தது.
    அக்கழுகுக்கு நிறைய இறகுகள் இருந்தன.
அத்திராட்சைக் கொடி,
    இக்கழுகு தன்னைப் பராமரிக்க வேண்டும் என்று விரும்பியது.
எனவே இக்கழுகை நோக்கித் தன் வேர்களை வளர்த்தது.
    அதன் கிளைகளும் இக்கழுகை நோக்கி நீண்டன.
    கிளைகள் தன்னை நட்டுவைத்த நிலத்தை விட்டு வெளியே வளர்ந்தன.
    திராட்சைக் கொடி இக்கழுகு தனக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என விரும்பியது.
திராட்சைக் கொடியானது நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.
ஏராளமான தண்ணீரின் அருகில் இது நடப்பட்டிருந்தது.
    அதில் கிளைகளும் பழங்களும் வளர்ந்திருந்தன.
    அது நல்ல திராட்சைக் கொடியாக இருந்திருக்கலாம்.’”

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்:
“அக்கொடி தொடர்ந்து செழித்து வளரும் என்று நினைக்கிறாயா?
    இல்லை! புதிய கழுகு திராட்சைக் கொடியைப் பூமியில் இருந்து பிடுங்கும்.
அப்பறவை கொடியின் வேர்களை உடைக்கும்.
    அது எல்லா திராட்சைகளையும் உண்ணும்.
பிறகு புதிய இலைகள் வாடி உதிரும்.
    அக்கொடி மிகவும் பலவீனமாகும்.
பலம் வாய்ந்த புயத்தோடும் வல்லமை வாய்ந்த ஜனங்களோடும் வந்து
    அதனைப் பிடுங்கிப்போடத் தேவையில்லை.
10 கொடியை நட்ட இடத்தில் அது வளருமா?
    இல்லை! சூடான கிழக்குக் காற்று வீசும்.
    அதில் அது வாடி உலர்ந்துபோகும்.
    அது நட்டுவைத்த இடத்திலேயே வாடிப் போகும்.”

சிதேக்கியா அரசன் தண்டிக்கப்படுதல்

11 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 12 “இஸ்ரவேல் ஜனங்களிடம் இக்கதையைக் விவரித்துக் கூறு. அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடம் இவற்றைச் சொல். முதல் கழுகு என்பது பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சார். அவன் எருசலேமிற்கு வந்தான். அரசனையும் தலைவர்களையும் பிடித்தான். அவன் அவர்களை பாபிலோனுக்குக் கொண்டு போனான். 13 பிறகு நேபுகாத்நேச்சார் அரச குடும்பத்திலுள்ள ஒருவனிடம் ஒப்பந்தம் செய்துகொண்டான். நேபுகாத்நேச்சார் அம்மனிதனை வற்புறுத்தி ஒரு வாக்குறுதியைச் செய்ய வைத்தான். எனவே அவன் நேபுகாத்நேச்சாருக்கு உண்மையாக இருப்பதாக வாக்களித்தான். நேபுகாத்நேச்சார் அவனை யூதாவின் புதிய அரசனாக ஆக்கினான், பிறகு அவன் ஆற்றல்மிக்க மனிதர்களையெல்லாம் யூதாவை விட்டு வெளியேற்றினான். 14 எனவே யூதா ஒரு பலவீனமான அரசானது. நேபுகாத்நேச்சாருக்கு எதிராகத் திரும்ப முடியாதுபோயிற்று. புதிய அரசனோடு செய்த ஒப்பந்தத்தை ஜனங்கள் பின்பற்றும்படி வற்புறுத்தப்பட்டனர். 15 ஆனால் புதிய அரசன் எப்படியாவது நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்ய விரும்பினான்! அவன் உதவி வேண்டி எகிப்துக்குத் தூதுவர்களை அனுப்பினான். புதிய அரசன் ஏராளமான குதிரைகளையும், வீரர்களையும் கேட்டான். இப்பொழுது, யூதாவின் புதிய அரசன் வெற்றி பெறுவான் என்று நினைக்கிறீர்களா? இப்புதிய அரசன் போதிய ஆற்றலைப்பெற்று ஒப்பந்தத்தை உடைத்து தண்டனையில் இருந்து தப்புவான் என்று நினைக்கின்றீர்களா?”

16 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரின்மேல் உறுதியாகச் சொல்கிறேன்! புதிய அரசன் பாபிலோனில் மரிப்பான். நேபுகாத்நேச்சார் இப்புதியவனை யூதாவின் அரசனாக ஆக்கினான். ஆனால் இவன் தான் நேபுகாத்நேச்சாரோடுச் செய்த வாக்குறுதியை உடைத்தான். இப்புதிய அரசன் ஒப்பந்தத்தை அசட்டை செய்தான். 17 எகிப்தின் அரசன் யூதாவின் அரசனைக் காப்பாற்ற முடியாது. அவன் வேண்டுமானால் ஏராளமான வீரர்களை அனுப்பலாம். ஆனால் எகிப்தின் பெரும் பலம் யூதாவைக் காப்பாற்றாது. நேபுகாத்நேச்சாரின் படை நகரத்தைக் கைப்பற்றுவதற்காக மண் சாலைகளையும், முற்றுகைச் சுவர்களையும் கட்டுவார்கள். ஏராளமானவர்கள் மரிப்பார்கள். 18 ஆனால் யூதாவின் அரசன் தப்பிக்கமாட்டான். ஏனென்றால் அவன் தன் ஒப்பந்தத்தை அசட்டை செய்தான். அவன் நேபுகாத்நேச்சாரோடு செய்த வாக்குறுதியை உடைத்தான்.” 19 எனது ஆண்டவரான கர்த்தர் இந்த வாக்குறுதியைச் செய்கிறார்: “எனது உயிரின்மேல், நான் யூதாவின் அரசனைத் தண்டிப்பதாக வாக்குரைத்தேன். ஏனென்றால் அவன் எனது எச்சரிக்கையை அசட்டை செய்தான். அவன் எங்கள் ஒப்பந்தத்தை உடைத்தான். 20 நான் எனது வலையைப் போடுவேன். அவன் அதில் அகப்படுவான். நான் அவனை பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அவன் அங்கே தண்டிக்கப்படுவான். ஏனென்றால் அவன் எனக்கு எதிராகத் திரும்பினான். 21 நான் அவனது படையை அழிப்பேன். நான் அவனது சிறந்த போர் வீரர்களை அழிப்பேன், தப்பிப் பிழைப்பவர்களை நான் காற்றில் சிதறடிப்பேன். பிறகு நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள். நான் இவற்றை உங்களுக்குச் சொன்னேன். 22 எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைக் கூறினார்:

“நான் உயர்ந்த கேதுரு மரத்திலிருந்து ஒரு கிளையை எடுப்பேன்.
    நான் மர உச்சியிலிருந்து ஒரு சிறு கிளையை எடுப்பேன்.
    நானே அதனை உயரமான மலையில் நடுவேன்.
23 நானே அதனை இஸ்ரவேலின் மலையில் நடுவேன்.
    அக்கிளை மரமாக வளரும்.
அது கிளைகளாக வளர்ந்து கனிதரும்.
    அது அழகான கேதுரு மரமாகும்.
பல பறவைகள் அதன் கிளைகளில் அமரும்.
    பல பறவைகள் அதன் கிளைகளின் அடியிலுள்ள நிழலில் தங்கும்.

24 “பிறகு மற்ற மரங்கள்,
    நான் உயரமான மரங்களைத் தரையில் வீழ்த்துவேன்,
    குட்டையான மரங்களை உயரமாக வளர்ப்பேன் என்பதை அறியும்.
நான் பச்சைமரங்களை உலரச் செய்வேன்.
    உலர்ந்த மரங்களைத் தளிர்க்கச் செய்வேன்.
நானே கர்த்தர்.
    நான் சிலவற்றைச் செய்வதாகச் சொன்னால் செய்வேன்!”

18 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “ஜனங்களாகிய நீங்கள் இப்பழமொழியை மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்.

“‘ஏன்? நீங்கள் பெற்றோர்கள் புளித்த திராட்சை தின்றார்கள்.
    ஆனால் குழந்தைகள் புளிப்புச் சுவையைப் பெறுகிறார்கள்’” என்று சொல்லுகிறீர்கள்.

(நீங்கள் பாவம் செய்தால் எதிர்காலத்தில் எவராவது தண்டனை அனுபவிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.)

ஆனால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “எனது உயிரைக்கொண்டு நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களிக்கிறேன். இப்பழமொழி இனிமேல் உண்மையாக இருக்காது. நான் ஒவ்வொரு மனிதனையும் அவ்வாறே நடத்துகிறேன். அவன் பெற்றவனா, பிள்ளையா என்பதைப்பற்றி கவலையில்லை. பாவம் செய்கிற ஒருவன் அதற்கேற்றபடி மரிப்பான்!

“ஒருவன் நல்லவனாக இருந்தால் அவன் நன்றாக வாழ்வான்! அந்நல்லவன் ஜனங்களிடம் நியாயமாக இருக்கிறான். அந்நல்லவன் மலைகளுக்குச் சென்று பொய்த் தெய்வங்களுக்கு உணவு காணிக்கை தரவில்லை. இஸ்ரவேலில் உள்ள அசுத்த பொய்த் தெய்வங்களிடம் வேண்டுதல் செய்யவில்லை. அவன் அயலானின் மனைவியோடு விபச்சாரப் பாவத்தைச் செய்யவில்லை. அவன் தனது மனைவியுடன் அவளது விலக்குக் காலத்தில் பாலின உறவுவைத்துக் கொள்ளவில்லை. அந்நல்லவன் பிறரை தன் நன்மைக்காகப் பயன்படுத்தவில்லை. எவராவது அவனிடமிருந்து பணம் கடன் வாங்கினால் திருப்பித் தரும்போது அடமானத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறான். அந்நல்லவன் பசித்தவர்களுக்கு உணவைத் தருகிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான். ஒருவன் அந்நல்லவனிடம் கடன் வாங்க விரும்பினால் அவன் கடன் கொடுப்பான். அவன் அந்தக் கடனுக்காக வட்டி பெறவில்லை. அவன் வஞ்சகமாக நடந்துகொள்ளவில்லை. அவன் எல்லோரிடமும் நேர்மையாக நடந்து கொள்கிறான். ஜனங்கள் அவனை நம்பலாம். அவன் எனது சட்டங்களுக்கு அடிபணிகிறான், அவன் எனது முடிவுகளைப்பற்றி எண்ணுகிறான், நியாயமாக இருக்கக் கற்றிருக்கிறான். அவன் நல்லவன், அதனால் வாழ்வான்.

10 “ஆனால் அந்நல்லவனுக்கு ஒரு மகன் பிறந்து அவன் தன் தந்தையைப்போல் இந்நற்காரியங்களில் எதையும் செய்யாதவனாக இருக்கலாம். அந்த மகன் பொருட்களைத் திருடலாம், பிறரைக் கொலை செய்யலாம். 11 அம்மகன் இத்தீமைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அவன் மலைகளுக்குப் போய் பொய்த் தெய்வங்களுக்கு உணவுக் காணிக்கை தரலாம். அப்பாவியாகிய மகன் அயலான் மனைவியோடு கள்ள உறவு வைத்திருக்கலாம். 12 அவன் ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் தவறாக நடத்தலாம். அவன் ஜனங்களை ஏமாற்றி பயன்பெறலாம். ஒருவன் தனது கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அவன் அடமானத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கலாம். அந்தப் பாவி மகன் அந்த ஆபாசமான விக்கிரங்களுக்கு பிரார்த்தனை செய்து வேறு பயங்கரமான செயல்களைச் செய்யலாம். 13 ஒருவனுக்கு இப்பாவி மகனிடம் இருந்து பணம் கடன் வாங்கும் தேவை ஏற்படலாம். அம்மகன் அவனுக்குக் கடன் கொடுக்கலாம். ஆனால் அவன் அக்கடனுக்கு வட்டி கொடுக்கும்படி வற்புறுத்துவான். எனவே அப்பாவி மகன் வாழமாட்டான். அவன் எல்லா அருவருப்பான செயல்களையும் செய்தான். அதனால் மரணம் அடைவான். அவனது மரணத்திற்கு அவனே பொறுப்பாவான்.

14 “இப்பொழுது, இப்பாவி மகனுக்கு ஒரு மகன் பிறந்திருக்கலாம். ஆனால் இந்த மகன் தன் தந்தை செய்த எல்லாப் பாவங்களையும் பார்த்து அவன் தந்தையைப்போன்று வாழ மறுக்கலாம். அந்த நல்ல மகன் ஜனங்களை நியாயமாக நடத்தலாம். 15 அந்நல்ல மகன் மலைகளுக்குப் போய் தனது உணவைப் பொய்த் தெய்வங்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில்லை. இஸ்ரவேலில் அசுத்தத் தெய்வங்களிடம் அவன் விண்ணப்பம் செய்வதில்லை. அவன் அயலானின் மனைவியோடு விபச்சாரம் செய்வதில்லை. 16 அந்நல்ல மகன் ஜனங்களை ஒடுக்குவதில்லை. ஒருவன் இவனிடம் வந்து கடன் கேட்டால் இவன் அடமானத்தைப் பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கிறான். அவன் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அடமானத்தை இவன் திருப்பிக் கொடுக்கிறான். இந்நல்ல மகன் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான். 17 இவன் ஏழைகளுக்கு உதவுகிறான். ஒருவன் இவனிடம் பணம் கடன் கேட்க விரும்பினால் கடன் கொடுக்கிறான். இவன் அக்கடனுக்கு வட்டி வசூலிக்கவில்லை. இந்நல்ல மகன் எனது நியாயங்களுக்கு அடிபணிந்து எனது நியாயங்களைப் பின்பற்றுகிறான். இந்நல்ல மகன் தந்தையின் பாவங்களுக்காக மரணமடையமாட்டான். இந்நல்ல மகன் வாழ்வான். 18 இத்தந்தை ஜனங்களுக்குக் கொடுமை செய்து அவர்களின் பொருட்களைத் திருடியிருக்கலாம். அவன் தனது ஜனங்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் இருக்கலாம். இத்தந்தை தனது சொந்தப் பாவங்களுக்காக மரிப்பான். ஆனால் அம்மகன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான்.

19 “நீ, ‘அம்மகன் தந்தையின் பாவங்களுக்காக ஏன் தண்டிக்கப்படவில்லை?’ என்று கேட்கலாம், மகன் நல்லவனாக இருந்து நன்மையைச் செய்தான் என்பதுதான் காரணம்! அவன் வெகு கவனமாக எனது நியாயங்களுக்குக் கீழ்ப்படிந்தான்! எனவே அவன் வாழ்வான். 20 பாவங்கள் செய்கிற ஒருவனே மரணத்திற்கு ஆளாவான். ஒரு மகன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு தந்தை தன் மகனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு நல்லவனின் நன்மை அவனை மட்டுமே சேரும். ஒரு கெட்டவனின் பாவங்கள் அவனை மட்டுமே சேரும்.

21 “இப்பொழுது, தீயவன் தனது வாழ்க்கை முறையை மாற்றினால் பிறகு அவன் மரிக்கமாட்டான் வாழ்வான். அவன் தான் செய்த பாவங்களை நிறுத்திவிடலாம் அவன் எனது சட்டங்களுக்கு கவனமாகக் கீழ்ப்படியலாம். அவன் நல்லவனாகவும் நியாயமானவனாகவும் ஆகலாம். 22 தேவன் அவன் செய்த தீயவைகளை நினைக்கமாட்டார். தேவன் அவனது நன்மைகளை மட்டுமே நினைப்பார்! எனவே அம்மனிதன் வாழ்வான்!”

23 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் தீயவர்கள் மரிப்பதை விரும்பவில்லை. நான் அவர்கள் தம் வாழ்வை மாற்றுவதை விரும்புகிறேன். எனவே, அவர்கள் வாழமுடியும்!

24 “இப்பொழுது, ஒரு நல்ல மனிதன் தனது நற்செயல்களை நிறுத்தலாம். அவன் தன் வாழ்வை மாற்றி முன்பு தீயவர்கள் என்னென்ன பாவங்களைச் செய்தார்களோ அவற்றைச் செய்யத் தொடங்கலாம். (அத்தீயவன் மாறினான் எனவே அவன் வாழமுடியும்). எனவே, அந்நல்ல மனிதன் மாறிப் தீயவனானால் பிறகு தேவன் அவன் செய்த நன்மைகளைப்பற்றி நினைக்கமாட்டார். அவன் அவருக்கு எதிராக மாறி பாவம் செய்யத் தொடங்கிவிட்டான் என்பதையே நினைப்பார். எனவே அம்மனிதன் தனது பாவங்களுக்காக மரிப்பான்.”

25 தேவன் சொன்னார்: “நீங்கள், ‘எனது தேவனாகிய ஆண்டவர் நியாயமானவராக இல்லை!’ என்று சொல்லலாம். ஆனால், கவனியுங்கள், இஸ்ரவேல் குடும்பத்தாரே, நியாயமற்றவர்கள் நீங்கள்தான்! 26 ஒரு நல்ல மனிதன் மாறிப் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் தனது பாவங்களுக்காக மரிப்பான். 27 ஒரு தீயமனிதன் மாறி நன்மை செய்யத் தொடங்கினால், பிறகு அவன் தனது வாழ்வைக் காப்பாற்றுவான். அவன் வாழ்வான்! 28 அந்த மனிதன், எவ்வளவு தீயவனாக இருந்தான், அவன், தான் எவ்வளவு மோசமானவன் என்று உணர்ந்து என்னிடம் திரும்பிவரத் தீர்மானித்தான். அவன் கடந்த காலத்தில் செய்த பாவத்தை நிறுத்தினான். எனவே அவன் வாழ்வான், மரிக்கமாட்டான்!”

29 இஸ்ரவேல் ஜனங்கள் சொன்னார்கள்: “அது செம்மையில்லை! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்கக்கூடாது!”

தேவன் சொன்னார்: “நான் நியாயமாகவே இருக்கிறேன். நீங்களே நியாயமற்றவர்கள்! 30 ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் ஒவ்வொரு மனிதரையும் அவர்கள் செய்தவற்றுக்காகவே நியாயம் தீர்க்கிறேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். “எனவே என்னிடம் திரும்பி வாருங்கள்! அந்த அருவருப்பான பொருட்கள் (விக்கிரகங்கள்) உங்களைப் பாவம் செய்யத் தூண்ட அனுமதிக்காதீர்கள்! 31 எல்லா அருவருப்பான பொருட்களையும் தூர எறியுங்கள். அவை நீங்கள் செய்தவை. அவையே உங்களது பாவங்களுக்கெல்லாம் காரணம்! உங்களது இருதயங்களையும் ஆவிகளையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள்! இஸ்ரவேல் ஜனங்களே, உங்களது மரணத்தை ஏன் நீங்களே வரவழைத்துக்கொள்கிறீர்கள்? 32 நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. தயவுசெய்து திரும்பிவந்து வாழ்ந்திருங்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைக் கூறினார்.

19 தேவன் என்னிடம் கூறினார்: “இஸ்ரவேல் தலைவர்களைப்பற்றிய இந்த சோகப் பாடலை நீ பாடவேண்டும்.

“‘உன்னுடைய தாய், அங்கு
    ஆண் சிங்கங்களுடன் படுத்திருக்கும் பெண் சிங்கத்தைப் போலிருக்கிறாள்.
அவள், இளம் ஆண் சிங்கங்களுடன் படுக்கச் சென்றாள்.
    பல குட்டிகளை பெற்றெடுத்தாள்.
தனது குட்டிகளில் ஒன்று எழும்புகிறது.
    அது பலமான இளஞ்சிங்கமாக வளர்ந்திருக்கிறது.
அது தனது உணவைப் பிடிக்கக் கற்றிருக்கிறது.
    அது மனிதனைக் கொன்று தின்றது.

“‘அது கெர்ச்சிப்பதை ஜனங்கள் கேட்டனர்.
    அவர்கள் அதனை வலையில் பிடித்தனர்!
அதன் வாயில் கொக்கிகளைப் போட்டனர்:
    அதனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.

“‘அக்குட்டி தலைவனாகும் என்று தாய்ச்சிங்கம் நம்பிக்கை வைத்திருந்தது.
    ஆனால் இப்போது அது நம்பிக்கையிழந்துவிட்டது.
எனவே அது தனது அடுத்த குட்டியை எடுத்தது.
    சிங்கமாவதற்குரிய பயிற்சியைக் கொடுத்தது.
அது பெரிய சிங்கத்தோடு வேட்டைக்குப் போனது.
    அது பலமான இளம் சிங்கமாயிற்று.
அது தனது உணவைப் பிடிக்கக் கற்றது.
    அது மனிதனைக் கொன்று தின்றது.
அது அரண்மனைகளைத் தாக்கியது.
அது நகரங்களை அழித்தது.
    அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அதன் கெர்ச்சினையைக் கேட்டு பேசப் பயந்தனர்.
பிறகு அதனைச் சுற்றி வாழ்ந்த ஜனங்கள் அதற்கு ஒரு வலை அமைத்தனர்.
    அவர்கள் அதனைத் தம் வலையில் பிடித்தனர்.
அவர்கள் கொக்கிகளைப் போட்டு அதனைப் பூட்டினார்கள்.
அவர்கள் அதனை வலைக்குள் வைத்தனர்.
    எனவே அவர்கள் பாபிலோன் அரசனிடம் கொண்டு போனார்கள்.
இப்பொழுது அதன் கர்ச்சனையை
    இஸ்ரவேல் மலைப் பகுதிகளில் நீங்கள் கேட்க முடியாது,

10 “‘உனது தாய் தண்ணீர் கரையில் நடப்பட்ட
    திராட்சைக் கொடியைப் போன்றவள்.
அவளுக்கு மிகுதியான தண்ணீர் இருந்தது.
    எனவே அவள் தழைத்த திராட்சைக் கொடியாயிருந்தாள்.
11 பிறகு அவள் நிறைய கிளைகளோடு வளர்ந்தாள்.
    அந்தக் கிளைகள் கைத்தடிகளைப் போன்றிருந்தன.
    அக்கிளைகள் அரசனின் செங்கோலைப் போன்றிருந்தன.
அத்திராட்சைக் கொடி மேலும் மேலும் உயரமாக வளர்ந்தது,
    அது பல கிளைகளைப் பெற்று மேகங்களைத் தொட்டன.
12 ஆனால் அக்கொடி வேரோடு பிடுங்கப்பட்டு
    தரையில் வீசியெறியப்பட்டது.
சூடான கிழக்குக் காற்று வந்து பழங்களை காய வைத்தது.
    பலமான கிளைகள் ஒடிந்தன. அவை நெருப்பில் எறியப்பட்டன.

13 “‘இப்போது திராட்சைக் கொடி வனாந்தரத்தில் நடப்படுகிறது.
    இது வறண்ட தாகமுள்ள நிலம்.
14 பெரிய கிளையிலிருந்து நெருப்பு பரவியது.
    அந்நெருப்பு அதன் கிளைகளையும் பழங்களையும் எரித்தது.
எனவே இனிமேல் அதில் கைத்தடி இல்லை.
    அரசனின் செங்கோலும் இல்லை.’

இது மரணத்தைப்பற்றிய சோகப் பாடல். இது மரணத்தைப்பற்றிய துன்பப் பாடலாகப் பாடப்பட்டது.”

20 ஒரு நாள், சில மூப்பர்கள் (தலைவர்கள்) இஸ்ரவேலில் இருந்து, கர்த்தரிடம் ஆலோசனை கேட்க என்னிடம் வந்தனர். இது கைதியான ஏழாம் ஆண்டு ஐந்தாம் மாதம் பத்தாம் நாள். அம்மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்தார்கள்.

பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மூப்பர்களிடம் (தலைவர்கள்) கூறு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறீர்களா? அது அவ்வாறானால் நான் அதனைத் தரமாட்டேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.’ அவர்களை நியாயம்தீர்க்க வேண்டுமா? மனுபுத்திரனே, நீ அவர்களை நியாயம்தீர்க்கிறாயா? அவர்கள் பிதாக்கள் செய்த அருவருப்பான பாவங்களைப்பற்றி நீ சொல்ல வேண்டும். நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நான் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்த நாளில், நான் யாக்கோபின் குடும்பத்தின்மேல் என் கையை உயர்த்தி, நான் அவர்களுக்கு முன்னால், எகிப்தில், என்னை வெளிப்படுத்தினேன். என் கையை உயர்த்தி நான் சொன்னேன்: “நானே உமது தேவனாகிய கர்த்தர்.” அந்நாளில் உன்னை எகிப்தைவிட்டு வெளியே எடுத்துச்செல்வேன் என்று வாக்களித்தேன்: நான் உங்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். இது பல நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. இது எல்லா நாடுகளையும்விட அழகான நாடு!

“‘நான் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அவர்களது அருவருப்பான விக்கிரகங்களை எறிந்து விடும்படிச் சொன்னேன். எகிப்தில் உள்ள அசுத்தமான சிலைகளோடு சேர்ந்து தீட்டுப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். “நானே உங்களது தேவனாகிய கர்த்தர்.” ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பி என் சொல்லைக் கேட்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் தம் அருவருப்பான விக்கிரகங்களை எறியவில்லை. ஆனால் அவர்கள் எகிப்தியரின் அந்த ஆபாசமான சிலைகளை விடவில்லை. எனவே நான் (தேவன்) எகிப்தில் அவர்களையும் அழித்திட முடிவு செய்தேன். எனது கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணருமாறுச் செய்தேன். ஆனால் நான் அவர்களை அழிக்கவில்லை. அவர்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவருவேன் என்று அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டில் ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். நான் எனது நல்ல பெயரை அழிக்கவில்லை. எனவே, மற்ற ஜனங்களின் முன்பு இஸ்ரவேலை நான் அழிக்கவில்லை. 10 நான் இஸ்ரவேல் குடும்பத்தாரை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அவர்களை வனாந்தரத்தில் வழிநடத்தினேன். 11 பிறகு நான் எனது சட்டங்களைக் கொடுத்தேன். எனது விதிகளை எல்லாம் அவர்களிடம் சொன்னேன். ஒருவன் அந்த விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். 12 நான் அவர்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களைப்பற்றியும் சொன்னேன். அவ்விடுமுறை நாட்கள் எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள அடையாளங்கள் ஆகும். நானே கர்த்தர். நான் அவர்களை எனக்குப் பரிசுத்தமாக்கிக் கொண்டிருந்தேன் என அவை காட்டும். எனக்குரிய சிறப்பாக அவற்றைச் செய்தேன்.

13 “‘ஆனால் இஸ்ரவேல் குடும்பத்தார் வனாந்தரத்தில் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவை நல்ல விதிகள். ஒருவன் அவ்விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை எல்லாம் முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் அந்நாட்களில் பலமுறை வேலை செய்தனர். நான் அவர்களை வனாந்தரத்திலேயே அழிக்கவேண்டுமென முடிவெடுத்தேன். என் கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். 14 ஆனால் அவர்களை நான் அழிக்கவில்லை. நான் இஸ்ரவேலரை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்ததை மற்ற நாடுகள் பார்த்தன. நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை எனவே மற்றவர்கள் முன்பு நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. 15 வனாந்தரத்தில் அந்த ஜனங்களுக்கு இன்னொரு வாக்கு கொடுத்தேன். நான் கொடுத்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வரமாட்டேன் என்று சொன்னேன். அது நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. எல்லா நாடுகளையும் விட அது அழகான நாடு!

16 “‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். என் சட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் எனது ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் இவற்றையெல்லாம் செய்தனர். ஏனென்றால், அவர்கள் இருதயங்கள் அந்த அசுத்த விக்கிரங்களுக்குச் சொந்தமாயிருந்தன. 17 ஆனால் நான் அவர்களுக்காக வருத்தப்பட்டேன். நான் அவர்களை அழிக்கவில்லை. நான் வனாந்தரத்தில் அவர்களை முழுமையாக அழிக்கவில்லை. 18 வனாந்திரத்தில் நான் அவர்களது பிள்ளைகளோடு பேசினேன்: “உங்கள் பெற்றோர்களைப்போன்று இருக்க வேண்டாம். நீங்கள் அசுத்த சிலைகளோடு சேர்ந்து அசுத்தமாகவேண்டாம். அவர்களின் சட்டங்களைப் பின்பற்றவேண்டாம். அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டாம். 19 நானே கர்த்தர். நானே உங்கள் தேவன். எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் சொன்னபடி செய்யுங்கள். 20 எனது ஓய்வுக்குரிய நாட்கள் எல்லாம் முக்கியமானவை என்று காட்டுங்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே அவை சிறப்பான அடையாளங்களாக இருப்பதை நினைவுகொள்ளுங்கள். நானே கர்த்தர். அவ்விடுமுறைகள் நானே உங்கள் தேவன் என்பதைக் காட்டும்.”

21 “‘ஆனால் அப்பிள்ளைகள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. நான் சொன்னபடி அவர்கள் செய்யவில்லை. அவை நல்ல சட்டங்கள். ஒருவன் அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் எனது சிறப்பிற்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றவையாகக் கருதினர். எனவே அவர்களை வனாந்திரத்தில் நான் முழுமையாக அழிக்க விரும்பினேன். 22 ஆனால் நான் என்னைக் கட்டுப்படுத்தினேன். நான் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்ததை மற்ற நாட்டினர் பார்த்தனர். நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை. எனவே மற்ற நாடுகளின் முன்னால் நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. 23 எனவே வனாந்திரத்தில் அந்த ஜனங்களுக்கு வேறொரு வாக்கு தந்தேன். அவர்களைப் பல்வேறு நாடுகளில் சிதறடிப்பேன் என்று வாக்குறுதி செய்தேன்.

24 “‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் தம் தந்தையர்களுடைய அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். 25 எனவே நான் அவர்களுக்கு நன்மையற்ற சட்டங்களைக் கொடுத்தேன். வாழ்வு தராத கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தேன். 26 நான் அவர்கள் தமது அன்பளிப்புகளால் (அவர்கள் விக்கிரகங்களுக்கு படைத்தவை) தங்களையே தீட்டுப்படுத்திக்கொள்ள இடங்கொடுத்தேன். அவர்கள் தம் முதல் குழந்தைகளைக் கூட பலியிடத் தொடங்கினார்கள். இவ்வழியில், அந்த ஜனங்களை அழிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.’ 27 எனவே இப்பொழுது, மனுபுத்திரனே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இஸ்ரவேல் ஜனங்கள் என்னைப்பற்றி கெட்டவற்றைச் சொன்னார்கள். எனக்கு எதிராகத் தீயத்திட்டங்களைப் போட்டனர். 28 ஆனால் நான் வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வந்தேன். அவர்கள் அனைத்து குன்றுகளையும் பச்சை மரங்களையும் பார்த்தனர். அவர்கள் அந்த இடங்களுக்கு தொழுகைச் செய்யச் சென்றனர். அவர்கள் தம் பலிகளையும் எனக்குக் கோப பலியையும் [a] கொண்டு சென்றனர். அவர்கள் பலிகளைக் கொடுத்தனர். அது இனிய மணத்தைக் கொடுத்தது. அந்த இடங்களில் எல்லாம் அவர்கள் பானங்களின் காணிக்கையைக் கொடுத்தனர். 29 நான் அந்த ஜனங்களிடம் அந்த மேடான இடங்களுக்கு ஏன் போகிறீர்கள் என்று கேட்டேன். இன்றும் அம்மேடான இடங்கள் அங்கு இருக்கின்றன’” என்று சொல்.

30 தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்துப் பாவங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. ‘என் கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: உங்கள் முற் பிதாக்களைப்போன்று தீமைகளைச் செய்து நீங்கள் உங்களை அசுத்தமாக்கிக்கொண்டீர்கள். நீங்கள் வேசியைப்போன்று நடந்துகொண்டீர்கள். நீங்கள் உங்கள் முன்னோர்கள் வழிபட்ட அருவருப்பான தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினீர்கள். 31 நீங்கள் அதேபோன்று அன்பளிப்புகளைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பொய்த் தெய்வங்களுக்குப் பலியாக நெருப்பில் போடுகிறீர்கள். இன்றுவரை நீங்கள் அசுத்த விக்கிரகங்களோடு சேர்ந்து உங்களை தீட்டாக்கிக்கொண்டீர்கள்! நான் உங்களை என்னிடம் ஆலோசனை கேட்க வரவிடவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? நானே ஆண்டவரும் கர்த்தருமாயிருக்கிறேன். என் உயிரின் மூலம் நான் வாக்களிக்கிறேன், நான் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லமாட்டேன். உங்களுக்கு ஆலோசனை தரமாட்டேன்! 32 நீங்கள் வேறு நாட்டினரைப்போன்று இருப்போம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பிற நாட்டினரைப்போன்று வாழ்கிறீர்கள். நீங்கள் மரத்துண்டுகளையும் கல்லையும் (சிலைகள்) சேவிக்கிறீர்கள்.’”

33 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக்கொண்டு நான் வாக்களிக்கிறேன், நான் உங்களை அரசனைப்போன்று ஆள்வேன். ஆனால் நான் என் வல்லமை வாய்ந்த கையை உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். நான் உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்! 34 உங்களை நான் சிதறடித்த நாடுகளிலிருந்து வெளியே கொண்டு வருவேன். நான் உங்களை ஒன்று சேர்ப்பேன். இந்நாடுகளிலிருந்து உங்களை மீண்டும் கொண்டு வருவேன். ஆனால், நான் எனது வல்லமை வாய்ந்த கரத்தை உங்களுக்கு எதிராக உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்! 35 நான் உங்களை முன்புபோல் வனாந்திரத்தில் வழிநடத்துவேன். ஆனால் இது மற்ற நாட்டினர் வாழும் இடம். நாம் நேருக்கு நேராக நிற்போம். நான் உங்களை நியாயந்தீர்ப்பேன். 36 நான் எகிப்தின் அருகில் உள்ள வனாந்திரத்தில் உங்கள் முன்னோர்களை நியாயந்தீர்த்தது போன்று உங்களை நியாயந்தீர்ப்பேன்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

37 “நான் உடன்படிக்கையின் உங்கள் குற்றங்களை நியாயம் தீர்த்து தண்டிப்பேன். 38 நான் எனக்கு எதிராகத் திரும்பி பாவம் செய்தவர்களை விலக்குவேன். நான் அவர்களை உங்கள் தாய்நாட்டிலிருந்து விலக்குவேன். அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”

39 இப்பொழுது, இஸ்ரவேல் குடும்பத்தினரே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “எவராவது தம் அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளவேண்டுமானால், அவன் போய் தொழுதுகொள்ளட்டும். ஆனால் பிறகு, என்னிடமிருந்து ஆலோசனை கிடைக்கும் என்று எண்ண வேண்டாம்! இனிமேலும் எனது நாமத்தை உங்கள் அன்பளிப்புகளாலும், உங்கள் விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுத்த முடியாது.”

40 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “ஜனங்கள் எனது பரிசுத்தமான மலைகளுக்கு இஸ்ரவேலிலுள்ள உயரமான மலையில் எனக்குச் சேவை செய்ய வரவேண்டும்! இஸ்ரவேலின் எல்லா வம்சத்தாருமாகிய அனைவரும் உங்கள் நிலத்தில் (தேசத்தில்) இருப்பீர்கள். என்னிடம் வந்து ஆலோசனை கேட்கக்கூடிய இடம் அதுதான். நீங்கள் அந்த இடத்திற்கு உங்கள் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும். உங்கள் விளைச்சலின் முதல் பகுதியை அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். உங்கள் பரிசுத்த அன்பளிப்புகள் அனைத்தையும் அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். 41 பிறகு நான் உங்கள் பலிகளின் இனிய மணத்தால் பிரியமாய் இருப்பேன். நான் உங்களைத் திரும்ப அழைத்து வரும்போது அது நிகழும். நான் உங்களைப் பல தேசங்களில் சிதற அடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் உங்களை எனது சிறப்புக்குரிய ஜனங்களாக மீண்டும் செய்வேன். அந்நாடுகள் எல்லாம் இதனைப் பார்க்கும். 42 பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டுவரும்போது இதனை அறிவீர்கள். உங்கள் முற்பிதாக்களிடம் அந்த நாட்டையே உங்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்தேன். 43 அந்நாட்டில் உங்களை அசுத்தமாக்கிய நீங்கள் செய்த பாவங்களை நினைப்பீர்கள். நீங்கள் உங்கள் தீய வழிகளினிமித்தம் வெட்கப்பட்டுப்போவீர்கள். 44 இஸ்ரவேல் குடும்பத்தாரே, நீங்கள் பல கெட்டக் காரியங்களைச் செய்தீர்கள். அத்தீயக்காரியங்களால் நீங்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எனது நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ள உங்களுக்கேற்ற அத்தண்டனைகளை நான் தரவில்லை. பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.”

45 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 46 “மனுபுத்திரனே, யூதாவின் தென் பகுதியிலுள்ள நெகேவைப் பார். நெகேவ் காட்டிற்கு [b] எதிராகப் பேசு. 47 நெகேவ்காட்டிடம் சொல், ‘கர்த்தருடைய வார்த்தையைக் கேள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: பார், உன் காட்டில் நெருப்பிட நான் தயாராக இருக்கிறேன். நெருப்பானது எல்லா பச்சை மரங்களையும் எல்லா காய்ந்த மரங்களையும் அழிக்கும். எரியும் ஜூவாலையை அணைக்கமுடியாது. தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து நிலமும் எரியும். 48 பிறகு எல்லா ஜனங்களும் கர்த்தராகிய நானே நெருப்பு வைத்தேன் என அறிவார்கள். அந்நெருப்பு அணைக்கப்படாது!’”

49 பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன், “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே! நான் இவற்றைச் சொன்னால், பிறகு ஜனங்கள் நான் கதைகளை மட்டும் சொல்வதாக நினைப்பார்கள். இது உண்மையில் நிகழும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள்!”

21 எனவே கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமை நோக்கிப் பார். அதன் பரிசுத்தமான இடங்களுக்கு எதிராகப் பேசு. எனக்காக இஸ்ரவேல் நாட்டிற்கு எதிராகப் பேசு. இஸ்ரவேல் நாட்டிடம் கூறு, ‘கர்த்தர் இவற்றைச் சொன்னார்; நான் உனக்கு எதிரானவன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து எடுப்பேன்! நல்லவர்கள் தீயவர்கள் ஆகிய எல்லா ஜனங்களையும் உன்னிடமிருந்து விலக்குவேன். நான் நல்ல ஜனங்களையும், தீய ஜனங்களையும் உன்னிடமிருந்து துண்டிப்பேன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து உருவி தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து ஜனங்களுக்கும் எதிராகப் பயன்படுத்துவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை எல்லா ஜனங்களும் அறிந்துகொள்வார்கள். நானே எனது வாளை உறையிலிருந்து உருவியிருக்கிறேன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். எனது வாள் தன் வேலையை முடிக்கும்வரை தன் உறைக்குள் திரும்பப் போகாது.’”

தேவன் என்னிடம் சொன்னார், “மனுபுத்திரனே, துக்கமான மனிதனைப்போன்று உடைந்த உள்ளத்துடன் துக்க ஒலிகளை எழுப்பு. இத்துயர ஒலிகளை ஜனங்களுக்கு முன்னால் எழுப்பு. பிறகு அவர்கள் உன்னை ‘ஏன் இத்தகைய துக்க ஒலிகளை எழுப்புகிறாய்’ எனக் கேட்பார்கள். பிறகு நீ, ‘துக்கச்செய்தி வரப்போகிறது, ஒவ்வொரு இதயமும் பயத்தால் உருகப்போகிறது, எல்லா கைகளும் பலவீனமடையப் போகிறது. எல்லா ஆவியும் சோர்ந்துபோகும். எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போன்று ஆகும்’ என்று சொல்லவேண்டும். பார், கெட்ட செய்தி வந்துகொண்டிருக்கிறது. இவை எல்லாம் நிகழும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.

வாள் தயாராயிருக்கிறது

கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் பேசு. இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘பார், ஒரு வாள், கூர்மையான வாள்,
    அந்த வாள் தீட்டப்பட்டிருக்கிறது.
10 வாள் கொல்வதற்காகக் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
    இது மின்னலைப்போன்று பளிச்சிட கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
என் மகனே, நான் உன்னைத் தண்டிக்க வரும் பிரம்பிடமிருந்து ஓடிவிட்டாய்.
    அம்மரத்தடியால் தண்டிக்கப்படுவதற்கு நீ மறுக்கிறாய்.
11 எனவே, வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது.
    இப்போது இதனைப் பயன்படுத்த முடியும்.
வாள் கூர்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.
    இப்போது இது கொலையாளியின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

12 “‘கதறியழு, கத்து, மனுபுத்திரனே! ஏனென்றால், இந்த வாள் எனது ஜனங்களுக்கும் இஸ்ரவேலை ஆள்வோர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும்! அந்த ஆள்வோர்கள் போரை விரும்பினார்கள். எனவே, வாள் வரும்போது அவர்கள் எனது ஜனங்களோடு இருப்பார்கள்! எனவே உனது தொடையிலே அடித்துக்கொண்டு, உன் துக்கத்தைக் காட்ட ஒலி எழுப்பு! 13 எனென்றால், இது ஒரு சோதனை அன்று! மரத்தடியால் தண்டிக்கப்பட நீ மறுத்தாய் எனவே, நான் உன்னை வேறு எதனால் தண்டிக்க முடியும்? ஆம் வாளால்தான்’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

14 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, உன் கைகளைத் தட்டு.
    எனக்காக ஜனங்களிடம் பேசு.
இந்த வாள் கீழே இரண்டு முறை வரட்டும்! மூன்று முறை வரட்டும்.
    இந்த வாள் ஜனங்களைக் கொல்வதற்குரியது!
இந்த வாள் பெருங் கொலைக்குரியது.
    இந்த வாள் ஜனங்களுக்குள் ஊடுருவுமாறு செருகப்பட்டிருக்கிறது.
15 அவர்களின் இதயங்கள் அச்சத்தால் உருகும்.
    மிகுதியான ஜனங்கள் கீழே விழுவார்கள்.
நகர வாசல்களில் இந்த வாள் பலரைக் கொல்லும்.
    ஆம் இந்த வாள் மின்னலைப்போன்று பளிச்சிடும்.
    இது ஜனங்களைக் கொல்லத் தீட்டப்பட்டிருக்கிறது!
16 வாளே, கூர்மையாக இரு!
    வலது பக்கத்தை வெட்டு.
    நேராக மேலே வெட்டு.
    இடது பக்கத்தை வெட்டு.
உனது முனை தேர்ந்தெடுத்த இடங்களில் எல்லாம் போ!

17 “பிறகு நானும் எனது கைகளைத் தட்டுவேன்.
    என் கோபத்தைக் காட்டுவதை நிறுத்துவேன்.
கர்த்தராகிய நான் பேசினேன்!”

எருசலேம் தண்டிக்கப்படுதல்

18 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 19 “மனுபுத்திரனே, பாபிலோனிய அரசனின் வாள் இஸ்ரவேலுக்கு வரத்தக்கதாக இரண்டு பாதைகளை வரைந்துக்கொள். இரண்டு சாலைகளும் ஒரே தேசத்திலிருந்து (பாபிலோன்) வர வேண்டும். சாலையின் ஆரம்பத்தில் ஒரு குறிப்பை எழுது. 20 அடையாளத்தைப் பயன்படுத்தி எந்த வழியில் வாள் வருமென்று காட்டு. ஒருவழி அம்மோனியரின் நகரமாகிய ரப்பாவுக்குக் கொண்டுபோகும். இன்னொரு வழி யூதாவில் இருக்கிற பாதுகாக்கப்பட்ட நகரம் எருசலேமிற்கு கொண்டுபோகும்! 21 பாபிலோனிய அரசன் தாக்குவதற்காகத் தான் போக விரும்பும் வழியைத் திட்டமிட்டிருக்கிறான் என்பதை இது காட்டும். பாபிலோன் அரசன் இரு வழிகளும் பிரிகிற இடத்திற்கு வந்திருக்கிறான். பாபிலோன் அரசன் எதிர்காலத்தை அறிய மந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அவன் சில அம்புகளை ஆட்டினான். அவன் குடும்ப விக்கிரகங்களிடம் கேள்விகள் கேட்டான். அவன் தான் கொன்ற விலங்கின் ஈரலைப் பார்த்தான்.

22 “அடையாளமானது வலது பக்கமாக எருசலேமிற்குப் போகும் வழியில் போகச் சொல்லும்! அவன் வாசலை இடிக்கும் எந்திரங்களைக் கொண்டுவர திட்டமிடுகிறான். அவன் கட்டளை இடுவான். அவனது வீரர்கள் கொல்லத் தொடங்குவார்கள். அவர்கள் போர் ஆரவாரத்தைச் செய்வார்கள். பிறகு அவர்கள் நகரத்தைச் சுற்றி சுவரைக் கட்டுவார்கள், மணசாலைகளை அமைப்பார்கள். நகரத்தைத் தாக்க அவர்கள் மரக்கோபுரங்களைக் கட்டுவார்கள். 23 அச்செயல்களை வெறும் பயனற்ற மந்திர வித்தைகளாக இஸ்ரவேல் ஜனங்கள் கருதினார்கள். அவர்கள் தங்களுக்குள் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஆனால் கர்த்தர் அவர்களது பாவங்களை நினைப்பார்! பிறகு இஸ்ரவேலர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள்.”

24 எனது கர்த்தராகிய ஆண்டவர், இதனைக் கூறுகிறார்: “நீ பல பாவங்களைச் செய்திருக்கிறாய். உன் பாவங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. நீ குற்றவாளி என்பதை அவை எனக்கு நினைப்பூட்டுகின்றன. எனவே எதிரி தன் கையில் உன்னைப் பிடித்துக்கொள்வான். 25 இஸ்ரவேலின் தீய தலைவனான நீ கொல்லப்படுவாய். உன் தண்டனைக் காலம் வந்திருக்கிறது. இங்கே முடிவு இருக்கிறது!”

26 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உன் தலைப்பாகையை எடு! உன் கிரீடத்தை எடுத்துவிடு. காலம் மாறி இருக்கிறது. முக்கியமான தலைவர்கள் தாழ்த்தப்படுவார்கள். முக்கியமற்றவர்கள் தலைவர்கள் ஆவார்கள். 27 நான் அந்த நகரத்தை முழுமையாக அழிப்பேன்! ஆனால் சரியான மனிதன் புதிய அரசன் ஆகும்வரை இது நிகழாது. பிறகு நான் அவனை (பாபிலோன் அரசனை) இந்நகரத்தை வைத்துக் கொள்ளவிடுவேன்.”

அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

28 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் கூறு, இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் அம்மோன் ஜனங்களிடமும் அவர்களின் அவமானத்திற்குரிய பொய்த் தேவனிடமும் இவற்றைச் சொல்கிறார்:

“‘பார், ஒரு வாள்!
    வாள் உறையிலிருந்து வெளியே உள்ளது.
    வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது!
வாள் கொலை செய்யத் தயாராக இருக்கிறது.
    இது மின்னலைப்போன்று ஒளிவிட கூர்மையாக்கப்பட்டுள்ளது!

29 “‘உங்கள் தரிசனங்கள் பயனற்றவை,
    உங்கள் மந்திரம் உங்களுக்கு உதவாது. இது பொய்களின் கொத்து மட்டுமே.
இவ்வாள் இப்பொழுது தீய மனிதர்களின் தொண்டையில் உள்ளது.
    அவர்கள் மரித்த உடல்களாக விரைவில் ஆவார்கள்.
அவர்களின் நேரம் வந்திருக்கிறது.
    அவர்களின் தீமை முடிவடையும் நேரம் வந்திருக்கிறது.

பாபிலோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

30 “‘உனது வாளை (பாபிலோன்) உறையிலே போடு, பாபிலோனே, நீ எந்த இடத்தில் உருவாக்கப்பட்டாயோ, எந்த இடத்தில் பிறந்தாயோ அங்கே நான் உன்னை நியாயந்தீர்ப்பேன். 31 எனது கோபத்தை நான் உனக்கு எதிராகக் கொட்டுவேன். எனது கோபம் உன்னை ஒரு சூடான காற்றைப்போன்று அழிக்கும். நான் உன்னைத் தீய மனிதர்களிடம் ஒப்படைப்பேன். அவர்கள் ஜனங்களைக் கொல்வதில் திறமை உடையவர்கள். 32 நீங்கள் நெருப்புக்கான எண்ணெயைப் போன்றவர்கள். உங்கள் இரத்தம் பூமியின் ஆழம்வரை பாயும். ஜனங்கள் உன்னை மீண்டும் நினைக்கமாட்டார்கள். கர்த்தராகிய நான் பேசினேன்!’”

எசேக்கியேல் எருசலேமிற்கு எதிராகப் பேசுகிறான்

22 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ நியாயம் தீர்ப்பாயா? கொலைக்காரர்களின் நகரத்தை (எருசலேம்) நியாயம்தீர்ப்பாயா? நீ அவளிடம் அவள் செய்த அருவருப்புகளை எல்லாம் சொல்வாயா? நீ கூறவேண்டும், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இந்நகரம் கொலைக்காரர்களால் நிறைந்திருக்கிறது. எனவே அவளது தண்டனைக் காலம் வந்திருக்கிறது. அவள் தனக்குள் அசுத்த விக்கிரகங்களைச் செய்தாள். அவை அவளை தீட்டுப்படுத்தின.

“‘எருசலேம் ஜனங்களே, நீங்கள் பல ஜனங்களைக் கொன்றீர்கள், நீங்கள் அசுத்த விக்கிரகங்களைச் செய்தீர்கள். நீங்கள் குற்றவாளிகள், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. உங்கள் முடிவு வந்திருக்கிறது. மற்ற நாடுகள் உங்களைக் கேலிசெய்கின்றன. அந்நாடுகள் உங்களைப் பார்த்துச் சிரிக்கின்றன. தொலைவிலும் அருகிலும் உள்ள ஜனங்கள் உங்களைக் கேலிசெய்கின்றனர். நீங்கள் உங்கள் பெயர்களை அழித்தீர்கள். நீங்கள் உரத்த சிரிப்பைக் கேட்க முடியும்.

“‘பாருங்கள்! எருசலேமில் எல்லா ஆள்வோர்களும் தம்மைப் பலப்படுத்தினர். எனவே, அவர்கள் மற்ற ஜனங்களைக் கொல்லமுடியும். எருசலேமில் உள்ள ஜனங்கள் தம் பெற்றோரை மதிப்பதில்லை. அந்நகரத்தில் அவர்கள் அயல் நாட்டினரைத் துன்புறுத்தினார்கள். அந்த இடத்தில் அவர்கள் அநாதைகளையும் விதவைகளையும் ஏமாற்றினார்கள். நீங்கள் என் பரிசுத்தமான பொருட்களை வெறுக்கிறீர்கள். எனது சிறப்பிற்குரிய ஓய்வு நாட்களை நீங்கள் முக்கியமற்றவையாகக் கருதினீர்கள். எருசலேமில் உள்ள ஜனங்கள் மற்ற ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்கிறார்கள். அவர்கள் அப்பாவி ஜனங்களைக் கொல்வதற்காக இவ்வாறு செய்கின்றனர். ஜனங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள மலைகளுக்குப் போகிறார்கள். பிறகு அவர்களின் ஐக்கிய உணவை உண்ண எருசலேமிற்கு வருகிறார்கள்.

“‘எருசலேமில், ஜனங்கள் பல பாலின உறவு பாவங்களைச் செய்கின்றனர். 10 எருசலேமில் ஜனங்கள் தம் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொள்கின்றனர். எருசலேமில் ஆண்கள் பெண்களின் மாதவிலக்கு நாட்களிலும் பலவந்தமாக பாலின உறவுகொள்கின்றனர். 11 ஒருவன் அருவருக்கத்தக்க இப்பாவத்தை தன் அயலானின் மனைவியோடேயே செய்கிறான். இன்னொருவன் தன் சொந்த மருமகளிடமே பாலின உறவுகொண்டு அவளைத் தீட்டுப்படுத்துகிறான். இன்னொருவன் தன் தந்தைக்குப் பிறந்த மகளை தன் சொந்த சகோதரியைக் கற்பழிக்கிறான். 12 எருசலேமில், நீங்கள் ஜனங்களைக் கொல்வதற்குப் பணம் பெறுகிறீர்கள். நீங்கள் கடன் கொடுத்து அவற்றுக்கு வட்டி வசூலிக்கிறீர்கள். நீங்கள் சிறிது பணம் பெறுவதற்காக உங்கள் நண்பர்களை ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் என்னை மறந்திருக்கிறீர்கள்.’ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

13 தேவன் சொன்னார்: “‘இப்போது பார்! நான் எனது கையை நீட்டி உன்னைத் தடுக்கிறேன். நீ ஜனங்களை ஏமாற்றியதற்கும் கொன்றதற்கும் நான் உன்னைத் தண்டிப்பேன். 14 பிறகு தைரியமாக இருப்பாயா? நான் உன்னைத் தண்டிக்க வரும் காலத்தில் நீ பலமுடையவனாக இருப்பாயா? இல்லை! நானே கர்த்தர், நான் பேசியிருக்கிறேன்! நான் சொன்னவற்றைச் செய்வேன். 15 நான் உங்களைப் பலநாடுகளில் சிதறடிப்பேன். நீங்கள் பலநாடுகளுக்குப் போகும்படி நான் உங்களைப் பலவந்தப்படுத்துவேன். இந்நகரிலுள்ள தீட்டானவைகளை நான் முழுவதுமாக அழிப்பேன். 16 ஆனால் எருசலேமே, நீ தீட்டாவாய். இவை எல்லாம் நிகழ்வதை மற்ற நாடுகள் எல்லாம் பார்க்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.’”

இஸ்ரவேல் பயனற்ற பொருள் போலாகிறது

17 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, பித்தளை, தகரம், இரும்பு, ஈயம் ஆகியவற்றை வெள்ளியோடு ஒப்பிடும்போது அவை பயன் குறைந்தவை. வெள்ளியைச் சுத்தப்படுத்த நெருப்பிலே போடுவார்கள். வெள்ளி உருகிய பின் அதிலுள்ள அசுத்தத்தை வேலைக்காரர்கள் நீக்குவார்கள். இஸ்ரவேல் நாடு அந்த உதவாத மீதியான அழுக்கைப் போலாயிற்று. 19 எனவே எனது ஆண்டவரும் கர்த்தருமானவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீங்கள் எல்லோரும் பயனற்றவர்களாவீர்கள். நான் உங்களை எருசலேமிற்குள் கூட்டிச் சேர்ப்பேன். 20 வேலைக்காரர்கள் வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயம் போன்றவற்றை நெருப்பிலே போடுவார்கள். அது வெப்பம் அடைய காற்றை ஊதுவார்கள். பிறகு அந்த உலோகங்கள் உருக ஆரம்பிக்கும். அதுபோலவே, நான் உங்களை என் நெருப்பில்போட்டு உருகவைப்பேன். அந்நெருப்புதான் என் கோபம். 21 நான் உன்னை அந்நெருப்பில் போடுவேன். என் கோபத்தீயில் காற்று ஊதுவேன். நீ உருகத் தொடங்குவாய். 22 வெள்ளி நெருப்பில் உருகும். வேலைக்காரர்கள் வெள்ளியை மட்டும் தனியே ஊற்றி அதனைக் காப்பாற்றுவார்கள். அது போலவே நகரில் நீ உருகுவாய். பிறகு நானே கர்த்தர் என்பதை அறிவாய். அதோடு என் கோபத்தை உனக்கு எதிராக ஊற்றியதையும் நீ அறிவாய்.’”

எசேக்கியேல் எருசலேமிற்கு எதிராகப் பேசியது

23 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 24 “மனுபுத்திரனே, இஸ்ரவேலிடம் பேசு. அவள் பரிசுத்தமாக இல்லை என்பதைக் கூறு. அந்நாட்டின் மீது நான் கோபமாக இருக்கிறேன். எனவே அந்நாடு அதன் மழையைப் பெறவில்லை. 25 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் பாவத் திட்டங்களை இடுகிறார்கள். அவர்கள் சிங்கத்தைப் போன்றவர்கள். அது தான் பிடித்த விலங்கைத் தின்னத் தொடங்கும்போது கெர்ச்சிக்கும். அத்தீர்க்கதரிசிகள் பலரது வாழ்வை அழித்திருக்கின்றனர். அவர்கள் பல விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்திருக்கின்றனர். எருசலேமில் பல பெண்கள் விதவையாவதற்குக் காரணமாக இருந்திருக்கின்றனர்.

26 “ஆசாரியர்கள் உண்மையில் எனது போதனைகளை சிதைத்துவிட்டனர். எனது பரிசுத்தமானவற்றை அவர்கள் சரியாக வைத்துக்கொள்ளவில்லை. அவற்றை அவர்கள் முக்கியமானதாகக் காண்பிப்பதில்லை. பரிசுத்தமானவற்றை பரிசுத்தமற்றவைபோன்று நடத்துகிறார்கள். அவர்கள் சுத்தமானவற்றைச் சுத்தமற்றவற்றைப்போல் நடத்துகிறார்கள். அவர்கள் ஜனங்களுக்கு இதைப்பற்றி கற்றுத் தரவில்லை. எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களுக்கு மதிப்பு மறுக்கிறார்கள். அவர்கள் என்னை முக்கியமற்றவராக நடத்தினார்கள்.

27 “எருசலேமில் தலைவர்கள் எல்லாம் தான் பிடித்த இரையைத் தின்கிற ஓநாய்களைப் போன்றவர்கள். அத்தலைவர்கள் செல்வம் பெறுவதற்காக ஜனங்களைப் பிடித்துக் கொல்கின்றனர்.

28 “தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரிப்பதில்லை. அவர்கள் உண்மையை மூடினார்கள். அவர்கள் சுவர் கட்டத்தெரியாத வேலைக்காரர்களைப் போன்றவர்கள். அவர்கள் துவாரங்களில் சாந்தை மட்டும் பூசுகிறவர்கள். அவர்கள் பொய்களை மட்டும் பேசுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்ள மந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்களை மட்டும் சொல்கிறார்கள். கர்த்தர் அவர்களோடு பேசவில்லை!

29 “பொது ஜனங்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறார்கள்: ஒருவரை ஒருவர் திருடுகின்றனர். அவர்கள் ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் பிச்சைக்காரர்களையும் தங்கள் உபயோகத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் அந்நிய நாட்டவரை ஏமாற்றுகின்றனர், அவர்களுக்கு எதிராக எந்த நியாயமும் இல்லை என்பதுபோன்று நடந்து கொள்கின்றனர்!

30 “நான் ஜனங்களிடம் அவர்களது வாழ்க்கையை மாற்றும்படியும் நாட்டைக் காப்பாற்றும்படியும் கேட்டேன். நான் ஜனங்களிடம் சுவரை இணைக்கும்படி கேட்டேன். அவர்கள் திறப்புகளில் நின்று பகைவருடன் சண்டையிட்டு நகரைக் காப்பாற்றவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எவரும் உதவிக்கு வரவில்லை! 31 எனவே, நான் என் கோபத்தைக் காட்டுவேன். நான் அவர்களை முழுமையாக அழிப்பேன். அவர்கள் செய்திருக்கிற தீயவைகளுக்காக நான் அவர்களைத் தண்டிப்பேன். இதெல்லாம் அவர்களுடைய தவறு!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

23 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, சமாரியா மற்றும் எருசலேம் பற்றிய இந்தக் கதையைக் கேள். இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் ஒரே தாயின் மகள்கள். அவர்கள் இளமையாக இருக்கும்போதே எகிப்தில் வேசிகள் ஆனார்கள், எகிப்தில் அவர்கள் முதலில் வேசித்தனம் செய்தனர். ஆண்கள் தம் மார்புகளைத் தொடவும் வருடவும் அனுமதித்தனர். மூத்தவளின் பெயர் அகோலாள்; அவள் தங்கையின் பெயர் அகோலிபாள். அந்தச் சகோதரிகள் எனது மனைவிகள் ஆனார்கள். எங்களுக்குப் பிள்ளைகள் இருந்தனர். (அகோலாள் உண்மையில் சமாரியா. அகோலிபாள் உண்மையில் எருசலேம்).

“பிறகு அகோலாள் எனக்கு நம்பிக்கையற்றவள் ஆனாள். அவள் வேசியைப்போன்று வாழத் தொடங்கினாள். அவள் தனது நேசர்களை விரும்பத் தொடங்கினாள். அவள் அசீரிய படைவீரர்களை அவர்களது நீல வண்ணச் சீருடையில் பார்த்தாள். அவர்கள் குதிரைமேல் சவாரி செய்கிற விரும்பத்தக்க இளம் வீரர்கள். அவர்கள் தலைவர்களாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர். அகோலாள் அவர்கள் அனைவருக்கும் தன்னையே கொடுத்தாள். அவர்கள் அனைவரும் அசீரியப் படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள். அவள் அவர்கள் அனைவரையும் விரும்பினாள். அவள் அவர்களது தீட்டான சிலைகளோடு சேர்ந்து தீட்டானாள். இதோடுகூட, அவள் எகிப்து மீதுகொண்ட நேசம் மோகத்தையும் நிறுத்தவில்லை. அவள் இளமையாக இருந்தபோது எகிப்து அவளோடு நேசம் செய்தது. அவளது இளம் மார்பகங்களைத் தொட்ட முதல் நேசன் எகிப்துதான். எகிப்து தனது உண்மையற்ற நேசத்தை அவள் மீது ஊற்றியது. எனவே நான் அவளை நேசர்கள் வைத்துக்கொள்ளும்படி விட்டுவிட்டேன். அவள் அசீரியாவை விரும்பினாள். எனவே, நான் அவளை அவர்களுக்குக் கொடுத்தேன். 10 அவர்கள் அவளைக் கற்பழித்தனர். அவளது குழந்தைகளை எடுத்தனர். அவர்கள் அவளைக் கடுமையாகத் தண்டித்தனர். அவளை வாளால் கொன்றனர். பெண்கள் இன்றும் அவளைப்பற்றிப் பேசுகிறார்கள்.

11 “அவளது இளைய சகோதரி அகோலிபாள் இவை எல்லாம் நடப்பதைப் பார்த்தாள். ஆனாலும் அவள் தன் அக்காவைவிட மிகுதியாகப் பாவங்களைச் செய்தாள்! அவள் அகோலாளைவிட மிகவும் நம்பிக்கையற்றவள் ஆனாள், 12 அவள் அசீரியத் தலைவர்களையும், அதிகாரிகளையும் விரும்பினாள். அவள் நீலவண்ணச் சீருடையில் குதிரையில் சவாரி செய்துவரும் இளம் வீரர்களை விரும்பினாள். அவர்கள் அனைவரும் விரும்பத்தக்க இளம் ஆண்கள். 13 அவர்கள் இருவரும் அதே தவறால் தம் வாழ்வை தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் பார்த்தேன்.

14 “அகோலிபாள் தன் சோரத்தைத் தொடர்ந்தாள். பாபிலோனில், சுவரில் ஆண்கள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள். அவை சிவப்புச் சீருடை அணிந்த கல்தேயரின் உருவங்கள். 15 அவர்கள் தம் இடுப்பைச்சுற்றி கச்சை அணிந்திருந்தனர். தலையில் நீண்ட தலைப் பாகை அணிந்தனர். அவர்கள் அனைவரும் தேரோட்டிகளைப்போன்று காட்சி தந்தனர். அவர்கள் அனைவரும் பாபிலோனில் பிறந்தவர்களின் சாயலில் இருந்தனர். 16 அகோலிபாள் அவர்களை விரும்பினாள். அதனால் அவள் தூதர்களை கல்தேயாவுக்கு அவர்களிடம் அனுப்பினாள். 17 எனவே பாபிலோனியர்கள் அவளது நேசம் படுக்கைக்கு வந்து அவளோடு பாலின உறவுகொண்டனர். அவர்கள் அவளைப் பயன்படுத்தி மிகவும் தீட்டுப்படுத்தியதினால் அவள் அவர்கள் மேல் வெறுப்படைந்தாள்!

18 “அகோலிபாள் இவ்வாறு என்னிடம் விசுவாசமற்றவளாக இருந்ததை யாவரும் காணும்படிச் செய்தாள். பலர் அவளது நிர்வாணத்தை அனுபவிக்கும்படி அனுமதித்தாள். நான் அவளது அக்காளோடு வெறுப்படைந்ததுபோல அவளோடும் வெறுப்படைந்தேன். 19 மீண்டும் மீண்டும் அகோலிபாள் எனக்குத் துரோகம் செய்தாள். பிறகு அவள் தான் இளம்பெண்ணாக எகிப்தில் இருந்தபொழுது நடந்த வேசித்தனத்தை நினைவுபடுத்திக்கொண்டாள். 20 கழுதைக் குறிகள்போன்ற தன் நேசர்களின் ஆண் குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப்போன்ற தன் நேசர்களின் விந்துப் பெருக்கின் மீதும் தனக்கிருந்த ஆசையை அவள் நினைத்துக்கொண்டாள்.

21 “அகோலிபாளே, நீ உன் இளமையைப்பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில் உன் நேசர்கள் உன் மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள். 22 எனவே, அகோலிபாளே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீ உன் நேசர்கள்மேல் வெறுப்படைந்தாய், ஆனால் நான் இங்கு உன் நேசர்களைக் கொண்டுவருவேன். அவர்கள் உன்னை முற்றுகையிடுவார்கள். 23 நான் பாபிலோனில் உள்ள அனைத்து ஆண்களையும் குறிப்பாகக் கல்தேயர்களையும் அழைப்பேன். நான் பேகோடு, சோவா, கோவா ஆகிய தேசங்களில் உள்ளவர்களையும் அழைப்பேன். நான் அசீரியாவில் உள்ள ஆண்களையும் அழைப்பேன். நான் அனைத்துத் தலைவர்களையும் அதிகாரிகளையும் அழைப்பேன். அவர்கள் எல்லோரும் குதிரை மீது சவாரிசெய்யும் விரும்பத்தக்க இளம் ஆண்கள், அதிகாரிகள், சேனாதிபதிகள், மேலும் முக்கிய நபர்களாகவும் இருந்தனர். 24 அந்த ஆண்களின் கூட்டம் உன்னிடம் வரும். அவர்கள் தமது இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறி வருவார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பார்கள். அவர்கள் தமது ஈட்டிகள், கேடயங்கள், தலைக்கவசங்கள் ஆகியவற்றை அணிந்திருப்பார்கள். அவர்கள் உன்னைச் சுற்றி நிற்பார்கள். நான் அவர்களிடம் நீ எனக்குச் செய்திருந்ததைச் சொல்வேன். அவர்கள் தம் சொந்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பார்கள். 25 நான் எவ்வளவு பொறாமையுள்ளவன் என்பதை உனக்குக் காட்டுவேன். அவர்கள் மிகவும் கோபம்கொண்டு உன்னைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உனது மூக்கையும் காதுகளையும் வெட்டுவார்கள். அவர்கள் வாளைப் பயன்படுத்தி உன்னைக் கொல்லுவார்கள். பிறகு உனது பிள்ளைகளை எடுத்துக்கொள்வார்கள். பிறகு விடுபட்டுள்ள உனக்குரியவற்றை எரிப்பார்கள். 26 அவர்கள் உனக்குரிய மெல்லிய ஆடைகளையும் நகைகளையும் எடுத்துக்கொள்வார்கள். 27 நான் உனது எகிப்தோடுள்ள வேசித்தனம் பற்றிய கனவை நிறுத்துவேன். அவற்றை நீ மீண்டும் தேடமாட்டாய். அவர்களை மீண்டும் நீ நினைக்கமாட்டாய்!’”

28 எனது கார்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நீ வெறுக்கிற ஆண்களிடம் நான் உன்னைக் கொடுக்கிறேன். நீ அருவருப்படைந்த ஆண்களிடம் நான் உன்னைக் கொடுக்கிறேன். 29 அவர்கள் உன்னை எவ்வளவு தூரம் வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டுவார்கள். அவர்கள் உன் உழைப்பின் பலனை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் உன்னை வெறுமையாகவும் நிர்வாணமாகவும் விட்டுவிடுவார்கள். ஜனங்கள் உன் பாவங்களைத் தெளிவாகக் காண்பார்கள். அவர்கள், நீ வேசியைப்போன்று நடந்துகொண்டதையும் கெட்ட கனவுகள் கண்டதையும் காண்பார்கள். 30 நீ என்னை விட்டுவிட்டு மற்ற நாடுகளைத் துரத்திக்கொண்டு போனபோது அப்பாவங்களைச் செய்தாய். அவர்களது அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளத் தொடங்கும்போது அப்பாவங்களைச் செய்தாய். அவற்றினால் நீ உன்னையே தீட்டுப்படுத்திக்கொண்டாய். 31 நீ உன் அக்காவைப் பின்பற்றி அவளைப்போன்று வாழ்ந்தாய். நீயே அவளுடைய விஷக் கோப்பையை எடுத்து உனது கைகளில் பிடித்துக்கொண்டாய். உனது தண்டனைக்கு நீயே காரணம் ஆனாய்.” 32 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“நீ உன் சகோதரியின் விஷக் கோப்பையை குடிப்பாய்.
    இது உயரமும் அகலமும்கொண்ட விஷக் கோப்பை.
அக்கோப்பையில் மிகுதியான விஷம் (தண்டனை) உள்ளது.
    ஜனங்கள் உன்னைப் பார்த்துச் சிரித்துக் கேலிசெய்வார்கள்.
33 நீ ஒரு குடிகாரனைப்போன்று தடுமாறுவாய்.
    நீ மிகவும் சஞ்சலம் அடைவாய்.
அது அழிவும் பாழ்க்கடிப்பும் உள்ள கோப்பை.
    இது உன் சகோதரி குடித்த கோப்பையைப் (தண்டனை) போன்றது.
34 அக்கோப்பையிலுள்ள விஷத்தை நீ குடிப்பாய்.
    அதிலுள்ள கடைசி சொட்டையும் நீ குடிப்பாய்.
நீ அந்தக் கோப்பையை எறிந்து துண்டு துண்டாக்குவாய்.
    நீ வேதனையினால் உன் மார்பகங்களைக் கிழிப்பாய்.
இவை நிகழும், ஏனென்றால், நானே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிறேன்.
    நான் இவற்றைக் கூறினேன்.

35 “எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: ‘எருசலேமே, என்னை மறந்து விட்டாய். நீ என்னை தூர எறிந்துவிட்டு என்னை விட்டுப் போய்விட்டாய். எனவே இப்போது என்னை விட்டு விலகியதற்காக நீ துன்பப்படவேண்டும். வேசியைப்போன்று வாழ்கிறாய். உனது கெட்ட கனவுகளுக்காகவும் உன் வேசித்தனங்களுக்காகவும் நீ துன்பப்பட வேண்டும்.’”

அகோலாள், அகோலிபாள் ஆகியோருக்கு எதிரான நியாயத்தீர்ப்பு

36 எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, அகோலாவையும் அகோலிபாளையும் நியாயம்தீர்க்கப்போகிறாயா? அவர்கள் செய்திருக்கிற அருவருப்பான செயல்களைப்பற்றி அவர்களிடம் கூறு, 37 அவர்கள் விபச்சாரமாகிய பாவத்தைச் செய்தனர். அவர்கள் கொலைக் குற்றவாளிகள். அவர்கள் வேசிகளைப்போன்று நடந்துகொண்டனர். அவர்கள் அசுத்த விக்கிரகங்களுக்காக என்னை விட்டுவிட்டனர். அவர்கள் என் மூலம் குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி தீக்குள்ளாக்கி அந்த அசுத்த விக்கிரகங்களுக்கு போஜனப்பலியாகக் கொடுத்தனர். 38 மேலும் அவர்கள் என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி என் சிறப்பான ஓய்வு நாட்களை முக்கியமற்றதாக நடத்தினார்கள். 39 அவர்கள் தம் விக்கிரகங்களுக்காகக் குழந்தைகளைக் கொன்றார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான இடத்திற்குச் சென்று அவற்றையும் அருவருப்பானதாக ஆக்கினார்கள்! அவர்கள் இதனை என் ஆலயத்திற்குள் செய்தார்கள்!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center