Bible in 90 Days
1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும் பிதாவாகிய தேவனுக்குள்ளும் இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தருக்குள்ளும் இருக்கும் தெசலோனிக்கேயாவில் உள்ள சபையோருக்கு எழுதுவது. தேவனுடைய கிருபையும் சமாதானமும் உங்களோடு இருப்பதாக.
வாழ்வும் விசுவாசமும்
2 நாங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் உங்களை நினைவுகூருகிறோம். உங்கள் அனைவருக்காவும் தொடர்ந்து தேவனிடம் நன்றி கூறுகிறோம். 3 பிதாவாகிய தேவனிடம் பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் விசுவாசத்தினாலும், அன்பினாலும் நீங்கள் செய்தவற்றுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையில் நீங்கள் உறுதியுடன் இருப்பதற்காக நாங்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறோம்.
4 சகோதர சகோதரிகளே, தேவன் உங்களிடம் அன்பாய் இருக்கிறார். அவர் உங்களைத் தமக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று நாங்கள் அறிவோம். 5 உங்களிடம் நற்செய்தியைக் கொண்டு வந்தோம். ஆனால் நாங்கள் வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை, அதிகாரத்தையும் பயன்படுத்தினோம். பரிசுத்த ஆவியானவரோடும் முழு உறுதியோடும் நாங்கள் அதைக் கொண்டு வந்தோம். உங்களோடு நாங்கள் இருந்தபோது எப்படி வாழ்ந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு உதவும் வகையிலேயே வாழ்ந்தோம். 6 நீங்கள் எங்களைப் போலவும், கர்த்தரைப் போலவும் ஆனீர்கள். நீங்கள் மிகவும் துன்புற்றீர்கள், எனினும் மகிழ்ச்சியோடு போதனைகளை ஏற்றுக்கொண்டீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தார்.
7 மக்கதோனியா, அகாயா ஆகிய நகரங்களில் உள்ள விசுவாசிகளுக்கு நீங்கள் எடுத்துக்காட்டு ஆனீர்கள். 8 உங்கள் மூலம் மக்கதோனியாவிலும், அகாயாவிலும் தேவனுடைய போதனை பரவியது. தேவனுடைய பேரில் உள்ள உங்கள் விசுவாசம் எல்லா இடங்களுக்கும் தெரிய வந்தது. எனவே உங்கள் விசுவாசத்தைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. 9 நீங்கள் எங்களை ஏற்றுக்கொண்ட நல்வழியைப் பற்றி எல்லா இடத்திலும் இருக்கிற மக்கள் கூறுகிறார்கள். நீங்கள் எப்படி உருவ வழிப்பாட்டை நிறுத்தினீர்கள் என்பதையும், உண்மையான, ஜீவனுள்ள தேவனுக்கு சேவை செய்யும் மாற்றத்தைப் பெற்றீர்கள் என்பதையும் கூறுகிறார்கள். 10 உருவ வழிபாட்டை நிறுத்திவிட்டு பரலோகத்திலிருந்து வரப்போகும் தேவனுடைய குமாரனுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள். தேவன் தன் குமாரனை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார். இயேசுவாகிய அவரே, நியாயத்தீர்ப்பு அளிக்கப்போகும் தேவனுடைய கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறவர்.
தெசலோனிக்கேயாவில் பவுலின் பணி
2 சகோதர சகோதரிகளே! உங்களை நாடி நாங்கள் வந்தது வீணாகவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். 2 உங்களிடம் வரும் முன்பு நாங்கள் பிலிப்பியில் துன்புற்றோம். அங்குள்ள மக்கள் எங்களுக்கு எதிராகக் கெட்டதாகப் பேசினார்கள். உங்களுக்கு அவை பற்றித் தெரியும். நாங்கள் உங்களிடம் வந்தபோது பலர் எதிர்த்தார்கள். ஆனால் தைரியமாக இருக்க தேவன் உதவினார். நற்செய்தியை உங்களிடம் கூறவும் உதவி செய்தார். 3 நாங்கள் மக்களுக்கு ஊக்கமூட்டுகிறோம். ஒருவரும் எங்களை முட்டாளாக்கவில்லை. நாங்கள் தீயவர்கள் அல்லர். மக்களிடம் நாங்கள் தந்திரம் செய்ய முயற்சிக்கவில்லை. 4 நாங்கள் நற்செய்தியைப் பரப்புகிறோம். ஏனென்றால் எங்களை சோதித்து அறிந்த பின் நற்செய்தியைச் சொல்லும் பொருட்டு தேவன் எங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார். ஆகவே நாங்கள் மனிதர்களை திருப்பதிப்படுத்த விரும்பவில்லை. தேவனை திருப்திப்படுத்தவே விரும்புகிறோம். தேவன் ஒருவரே நம் இதயங்களைத் தொடர்ந்து சோதனை செய்ய வல்லவர்.
5 உங்களைப் பற்றி உங்களுக்குப் பிடித்த வகையில் முகஸ்துதி செய்து திருப்திப்படுத்த நாங்கள் ஒருபோதும் முயலவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்கள் பணத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. உங்களிடம் மறைக்கத்தக்க சுயநலம் எதுவும் எங்களிடம் இருந்ததில்லை. இது உண்மை என்பது தேவனுக்குத் தெரியும். 6 எவ்வித பாராட்டையும் மக்களிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களிடமிருந்தோ வேறு யாரிடமிருந்தோ நாங்கள் எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை.
7 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர். எனவே நாங்கள் உங்களோடு இருக்கும்போது சில காரியங்களை நீங்கள் செய்யும் பொருட்டு உங்கள் மீது அதிகாரம் செலுத்தி இருக்ககூடும். எனினும் நாங்கள் மென்மையாகவே நடந்துகொண்டோம். ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போன்று இருந்தோம். 8 உங்களை நாங்கள் பெரிதும் நேசித்தோம். எனவே, தேவனுடைய நற்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைந்தோம். அதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாழ்க்கையையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ந்தோம். 9 சகோதர சகோதரிகளே! நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பதை நான் அறிவேன். இரவும் பகலுமாக நாங்கள் பணியாற்றினோம். தேவனுடைய நற்செய்தியைப் பரப்பும்பொழுது உங்களில் எவர்மீதும் எவ்விதமான பொருளாதார பாரத்தையும் சுமத்த விரும்பவில்லை.
10 விசுவாசிகளாகிய உங்களோடு நாங்கள் இருந்தபோது தூய்மையும் நீதியும் உள்ள வழியில் குற்றமற்று வாழ்ந்தோம். இது உண்மை என உங்களுக்குத் தெரியும். தேவனுக்கும் இது உண்மை எனத் தெரியும். 11 ஒரு தந்தை தன் பிள்ளைகளை நடத்துவது போன்று நாங்கள் உங்களை நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். 12 நாங்கள் உங்களைப் பலப்படுத்தினோம். உங்களுக்கு ஆறுதல் அளித்தோம். தேவனுக்கான நல்வாழ்க்கையை வாழுமாறு கூறினோம். தேவன் தமது இராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைக்கிறார்.
13 நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட விதத்திற்காக நாங்கள் தேவனுக்குத் தொடர்ந்து நன்றி செலுத்துகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் நற்செய்தியைக் கேட்டீர்கள். அது மனிதர்களின் வார்த்தையன்று. தேவனுடைய வார்த்தை என்றும் ஏற்றுக்கொண்டீர்கள். அது உண்மையில் தேவனுடைய செய்திதான். அது விசுவாசமுள்ள உங்களிடம் பலன் தருகிறது. 14 சகோதர சகோதரிகளே! நீங்கள் யூதேயாவில் உள்ள கிறிஸ்துவுக்குள் இருக்கும் சபைகளைப் போன்றிருக்கிறீர்கள். யூதேயாவில் உள்ள தேவனுடைய மக்கள் மற்ற யூதர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். நீங்களும் உங்கள் சொந்த நாட்டு மக்களால் அதேவிதமாக துன்புறுத்தப்பட்டீர்கள் 15 அந்த யூதர்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைக் கொன்றார்கள். மேலும் அவர்கள் தீர்க்கதரிசிகளையும் கொன்றார்கள். எங்களை யூதேயாவை விட்டு வெளியேறும்படி அவர்கள் வற்புறுத்தினார்கள். தேவன் அவர்களுடன் மகிழ்ச்சியாயில்லை. அவர்கள் மக்களனைவருக்கும் எதிராக உள்ளனர். 16 யூதர்கள் அல்லாதவர்களுக்கு நாங்கள் போதனை செய்வதை அவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். யூதர் அல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்பொருட்டு நாங்கள் அவர்களுக்குப் போதிக்கிறோம். ஆனால் அந்த யூதர்களோ தாம் ஏற்கெனவே செய்த பாவங்களோடு மேலும் மேலும் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போது தேவனுடைய கோபம் முழுமையாக அவர்கள் மீது வந்துள்ளது.
மீண்டும் அவர்களைப் பார்க்க விருப்பம்
17 சகோதர சகோதரிகளே! கொஞ்ச காலமாக நாங்கள் உங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தோம். (அங்கே நாங்கள் உங்களோடு இல்லாவிட்டாலும் எங்கள் நினைவுகள் உங்களோடு இருந்தன.) உங்களைப் பார்க்க நாங்கள் மிகவும் விரும்பினோம். அதற்காக மிகவும் கடுமையாய் முயற்சி செய்தோம். 18 ஆம், உங்களிடம் வர நாங்கள் விரும்பினோம். உண்மையில் பவுலாகிய நான் பலமுறை வர முயன்றேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான். 19 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது நாங்கள் பெருமைப்படக் கூடிய எங்களது நம்பிக்கையும், மகிழ்ச்சியும், கிரீடமும் நீங்கள் தானே. 20 உண்மையில் நீங்களே எங்கள் மகிழ்ச்சியும் மகிமையும் ஆவீர்கள்.
3 நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆனால் காத்திருப்பது மிகவும் கொடுமையாக இருந்தது. 2 ஆகையால் உங்களிடம் தீமோத்தேயுவை அனுப்பத் தீர்மானித்தேன். நான் மட்டும் அத்தேனேயில் இருந்தேன். தீமோத்தேயு எங்கள் சகோதரன். தேவனுக்காக அவன் எங்களோடு பணியாற்றுகிறான். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் கூறிட தேவன் உதவுகிறார். நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலம் பெறவும், உங்களை உற்சாகமூட்டவும் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தோம். 3 எங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களால் நீங்கள் மனம் தவிக்காமல் இருக்கும்பொருட்டு தீமோத்தேயுவை அனுப்பினோம். இத்தகைய துன்பங்களைச் சகித்துக்கொள்ளவே நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். 4 நாங்கள் உங்களோடு இருந்தபோது கூட இப்படி பலவிதமான துன்பங்களை ஏற்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே கூறியிருக்கிறோம். எனவே இவை நாங்கள் சொன்னபடிதான் நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். 5 இதற்காகத்தான் நான் உங்களிடம் தீமோத்தேயுவை, உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ள அனுப்பி வைத்தேன். மேலும் என்னால் காத்திருக்க முடியாத நிலையில் தான் நான் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தேன். மக்களைத் தீயவற்றினால் இழுத்து கவர்ச்சிக்கும் பிசாசு உங்களைத் தோல்வியுறச் செய்துவிடுவானோ என்றும் எங்களின் உழைப்பு வீணாய்ப் போகுமோ என்றும் நான் பயந்திருந்தேன்.
6 ஆனால் உங்களிடமிருந்து தீமோத்தேயு திரும்பி வந்தான். உங்களது அன்பு மற்றும் விசுவாசம் பற்றிய நல்ல செய்திகளை அவன் கூறினான். நல்வழியில் நீங்கள் எப்போதும் எங்களை நினைத்துக்கொள்வதாகவும் எங்களை நீங்கள் மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் கூறினான். அதுபோலத் தான் நாங்களும் உங்களைப் பார்க்க விரும்புகிறோம். 7 எனவே, சகோதர சகோதரிகளே! உங்கள் விசுவாசத்தால் உங்களைப் பற்றி ஆறுதல் அடைந்திருக்கிறோம். எங்களுக்கு துன்பங்களும், சிக்கல்களும் உள்ளன. எனினும், நாங்கள் ஆறுதலடைந்திருக்கிறோம். 8 நீங்கள் உறுதியாகக் கர்த்தருக்குள் இருக்கும்போது எங்கள் வாழ்வு முழுமை பெறுவதாக உணர்கிறோம். 9 உங்களால் தேவனுக்கு முன்பு நாங்கள் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ஆகவே உங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். ஆனால் எங்கள் முழு மகிழ்ச்சிக்கும் எங்களால் போதுமான நன்றி சொல்ல முடியாது. 10 இரவும் பகலுமாக நாங்கள் உங்களுக்காக மிகவும் உறுதியோடு தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் அங்கே வந்து உங்களை மீண்டும் பார்க்கவும், உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கான செயல்களைச் செய்யவும் பிரார்த்தனை செய்கிறோம்.
11 பிதாவாகிய தேவனும், கர்த்தராகிய இயேசுவும் எங்களுக்கு உங்களிடம் வருவதற்கான வழியைத் தயார் செய்யட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 12 உங்கள் அன்பை கர்த்தர் வளரச் செய்ய பிரார்த்திக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்பு செய்யவும் எல்லா மக்களிடமும் அன்பு செய்யவும் அவர் உங்களுக்கு உதவ பிரார்த்திக்கிறோம். நாங்கள் உங்களை நேசிப்பது போன்று நீங்கள் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 13 உங்கள் இதயம் உறுதியாகும்படியாக நாங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு தம் பரிசுத்த மக்களோடு வரும்போது நீங்கள் பிதாவாகிய தேவன் முன் பரிசுத்தராகவும், குற்றமற்றவர்களாகவும் நிற்பீர்கள்.
தேவனை மகிழ்வூட்டும் வாழ்க்கை
4 சகோதர சகோதரிகளே! நான் உங்களுக்கு வேறு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். தேவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்குக் கற்பித்தோம். நீங்கள் அத்தகைய விதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மென்மெலும் அவ்வாறு வாழ கர்த்தராகிய இயேசுவின் பேரில் உங்களைக் கேட்டுக்கொள்வதோடு ஊக்கப்படுத்தவும் செய்கிறோம். 2 நாங்கள் செய்யச் சொன்னவற்றை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தால் சொன்னோம். 3 நீங்கள் பரிசுத்தமுடன் இருக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் பாலியல் குற்றத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். 4 உங்கள் சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் சரீரத்தைத் தூய்மையாய் வைத்துக்கொள்ளுங்கள். அது தேவனுக்குப் பெருமை சேர்க்கும். 5 உங்கள் சரீரத்தை வெறித்தனமான உணர்வுகளுக்கு ஒப்படைக்காதீர்கள். தேவனை அறிந்துகொள்ளாதவர்கள்தான் அதனை அதற்குப் பயன்படுத்துவார்கள். 6 உங்களில் எவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்கள் சகோதரர்களை இக்காரியத்தில் ஏமாற்றவோ, கெடுதல் செய்யவோ முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு செய்பவர்களை கர்த்தர் தண்டிப்பார். இதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி எச்சரித்திருக்கிறோம். 7 நாம் பரிசுத்தமாய் இருக்கும்படி தேவன் அழைத்தார். நாம் பாவங்களில் வாழ்வதை அவர் விரும்பவில்லை. 8 எனவே இந்தப் போதனைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவன், மனிதருக்கு அல்ல, தேவனுக்கே கீழ்ப்படிய மறுக்கிறான். அவர் ஒருவரே நமக்கு பரிசுத்த ஆவியானவரைத் தர வல்லவர்.
9 கிறிஸ்துவுக்குள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் அன்பாய் இருங்கள் என்று உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் நேசிக்க தேவன் ஏற்கெனவே உங்களுக்குப் போதித்திருக்கிறார். 10 மக்கதோனியாவில் உள்ள எல்லா சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும் அன்பு செலுத்துகிறீர்கள். மேலும் மேலும் அன்பு செய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.
11 சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். 12 இவற்றை எல்லாம் நீங்கள் செய்யும்போது விசுவாசமற்ற மக்கள் உங்கள் வாழ்வு முறையை மதிப்பார்கள். உங்கள் தேவைக்கு வேறு எவரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கும்.
கர்த்தரின் வருகை
13 சகோதர சகோதரிகளே! இறந்து போனவர்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனைய நம்பிக்கையற்ற மக்களைப் போன்று நீங்கள் வருத்தம் கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை. 14 இயேசு இறந்தார், ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறோம். ஆகையால் இயேசுவை விசுவாசித்து மரித்துப்போன எல்லாரையும் தேவன் இயேசுவோடுகூட ஒன்று சேர்ப்பார்.
15 கர்த்தரின் செய்தியையே நாங்கள் இப்போது உங்களுக்குக் கூறுகிறோம். இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் கர்த்தர் வரும்போதும் ஒருவேளை வாழ்ந்துகொண்டிருப்போம். ஏற்கெனவே மரித்தவர்கள் கர்த்தரோடு இருப்பார்கள். உயிரோடிருக்கிற நாமும் அவரோடிருப்போம். ஆனால் நாம் அவர்களுக்கு (ஏற்கெனவே இறந்தவர்களுக்கு) முந்திக்கொள்வதில்லை. 16 கர்த்தர் அவராகவே பரலோகத்தில் இருந்து வருவார். அங்கே உரத்த கட்டளை இருக்கும். அக்கட்டளை பிரதான தேவ தூதனுடையதாக இருக்கும். தேவ எக்காளமும் கேட்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இறந்து போனவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள். 17 அதற்குப் பிறகு, அவர்களோடு அப்பொழுது வாழும் நாமும் எடுத்துச்செல்லப்படுவோம். கர்த்தரை வான வெளியில் சந்திப்போம். அதன் பின் எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம். 18 ஆகவே இவ்வார்த்தைகளால் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.
கர்த்தரின் வருகைக்காகத் தயாராகுங்கள்
5 சகோதர சகோதரிகளே, இப்பொழுது இவை நடக்கும் காலத்தையும் தேதியையும் எழுதத் தேவை இல்லை. 2 கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 3 “நாங்கள் சமாதானத்தோடும், பாதுகாப்போடும் இருக்கிறோம்” என்று மக்கள் சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு அழிவு திடீரென வரும். அவ்வழிவு கர்ப்பவதியின் பிரசவ வேதனை போன்று திடீரென வரும். அவர்கள் தப்பமுடியாது.
4 ஆனால் நீங்கள் இருட்டில் வாழவில்லை. எனவே திருடனைப்போல அந்த நாள் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தராது. 5 நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை. 6 எனவே நாம் ஏனைய மக்களைப்போன்று இருக்கக் கூடாது. நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. விழிப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். 7 தூங்கும் மக்கள் இரவுப்பொழுதில் தூங்குவார்கள். குடித்து வெறிகொள்பவர்கள் இரவுப் பொழுதில் குடிப்பார்கள். 8 ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக்கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்துகொள்வோம். நம் தலைக்கவசமாய் இட்சிப்பின் நம்பிக்கை அமையும்.
9 தேவன் தம் கோபத்தை நம்மேல் காட்டுவதற்காக நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இட்சிப்பு அடையவே தேர்ந்தெடுத்தார். 10 அவரோடு நாம் அனைவரும் இணைந்து வாழும்பொருட்டு, நமக்காக அவர் இறந்தார். எனவே, இயேசு வரும்போது, நாம் உயிருடன் இருக்கிறோமோ அல்லது இறந்துபோவோமா என்பது முக்கியமில்லை. 11 எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்துகொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள்.
இறுதி அறிவிப்புகளும், வாழ்த்துக்களும்
12 சகோதர சகோதரிகளே! உங்களோடு கடுமையாய் உழைப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள். கர்த்தருக்குள் அவர்களே உங்கள் தலைவர்கள். ஆத்தும அளவில் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். 13 அவர்கள் செய்துகொண்டிருக்கிற செயலுக்காக அவர்களை அன்போடு மதியுங்கள்.
ஒருவருக்கொருவர் சமாதானமாய் வாழுங்கள். 14 சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள். 15 ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்துகொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள்.
16 எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். 17 பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள். 18 தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார்.
19 பரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள். 20 தீர்க்கதரிசனங்களை முக்கியமற்ற ஒன்றாக எண்ணாதீர்கள். 21 ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.
23 சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தமாக்கும் பொருட்டு தேவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது உங்கள் ஆவி, ஆன்மா, சரீரம் முழுவதும் குற்றமில்லாததாய் இருக்கும்படி காக்கப்படுவதாக. 24 உங்களை அழைக்கிற தேவன் இவற்றை உங்களுக்குச் செய்வார். அவரை நம்புங்கள்.
25 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 26 நீங்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பரிசுத்தமாக முத்தமிட்டுக்கொள்ளுங்கள் 27 அனைத்து சகோதர சகோதரிகளிடமும் இந்த நிருபம் வாசிக்கப்பட வேண்டும் என்று உங்களுக்கு கர்த்தரின் அதிகாரத்தால் ஆணையிட்டுக் கூறுகிறேன். 28 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களுடன் இருப்பதாக!
1 தெசலோனிக்கேயாவில் இருக்கும் சபைக்கு பவுல், சில்வான், தீமோத்தேயு ஆகியோர் எழுதிக்கொள்வது, பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் நீங்கள் இருக்கிறீர்கள்.
2 உங்களுக்கு நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 உங்களுக்காக எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதுவே செய்வதற்கு உரியது என்பதால் நாங்கள் அதனைச் செய்கின்றோம். உங்கள் விசுவாசம் மேலும் மேலும் வளருவதால் அப்படிச் செய்கிறோம். உங்களில் ஒருவருக்கொருவரிடம் உள்ள அன்பும் வளர்கின்றது. 4 தேவனுடைய ஏனைய சபைகளில் உங்களைப்பற்றி நாங்கள் பெருமையாய்ப் பேசிக்கொள்கிறோம். விசுவாசத்திலும், பலத்திலும் நீங்கள் தொடர்ந்து இருப்பது குறித்து மற்ற சபைகளுக்கு நாங்கள் கூறுகிறோம். நீங்கள் பல உபத்திரவங்களையும். துன்பங்களையும் அடைந்தீர்கள். எனினும் தொடர்ந்து விசுவாசமும் பலமும் உடையவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள்.
தேவனுடைய தீர்ப்பு
5 தேவன் தன் தீர்ப்பில் சரியாக உள்ளார் என்பதற்கு அதுவே நிரூபணமாக இருக்கிறது. தேவன் தன் இராஜ்யத்துக்கு ஏற்றவர்களாக நீங்கள் இருக்கவேண்டும் என விரும்புகிறார். உங்கள் துன்பங்கள் கூட அந்த இராஜ்யத்துக்காகத்தான். 6 எது சரியானதோ அதையே தேவன் செய்வார். உங்களுக்கு யார் துன்பம் தருகிறார்களோ அவர்களுக்கு தேவன் துன்பம் தருவார். 7 துன்பப்படுகிற உங்களுக்கு தேவன் இளைப்பாறுதலைத் தருவார். எங்களுக்கும் சமாதானத்தைத் தருவார். கர்த்தராகிய இயேசுவின் வருகையின்போது தேவன் எங்களுக்கு இந்த உதவியைச் செய்வார். இயேசு பரலோகத்தில் இருந்து வல்லமை வாய்ந்த தம் தேவதூதர்களோடு வருவார். 8 பரலோகத்திலிருந்து அவர் வரும்போது, தேவனை அறியாதவர்களைத் தண்டிப்பதற்காக எரிகின்ற அக்கினியோடும் வருவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள் எல்லாரையும் அவர் தண்டிப்பார். 9 என்றென்றும் நித்திய அழிவுகள் நேரும் வகையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் கர்த்தரோடு இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அவருடைய பெரும் வல்லமையிடம் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். 10 தம் பரிசுத்த மக்களோடு மகிமைப்படுத்தப்படவும், எல்லா விசுவாசிகளுக்கும் தம் மகிமையைப் புலப்படுத்தவும் கர்த்தராகிய இயேசு வரும் நாளில் இவை நிகழும். விசுவாசம் உள்ளவர்களெல்லாம் இயேசுவோடு சேர்ந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அந்த விசுவாசிகளின் கூட்டத்தில் நீங்களும் இருப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் சொன்னவற்றை நீங்கள் விசுவாசித்தீர்கள்.
11 அதற்காகத்தான் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். உங்களை நல்வழியில் வாழச் செய்யுமாறு நாங்கள் தேவனை வேண்டுகிறோம். இதற்காகவே தேவனால் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்னும் ஆவல் உங்களிடம் இருக்கிறது. உங்களது விசுவாசம் உங்களைப் பணியாற்ற வைக்கும். மேலும் மேலும் இத்தகைய செயலைச் செய்ய தேவன் உங்களுக்கு உதவுமாறு நாங்கள் அவரை வேண்டுகிறோம். 12 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உங்களில் மகிமை அடையும் பொருட்டே இவை அனைத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உங்களில் அவர் மகிமையடைவார். அவரில் நீங்கள் மகிமையடைவீர்கள். அம்மகிமை நம் தேவனும், கர்த்தருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையிலிருந்து வருகிறது.
தீயசெயல்கள் நிகழும்
2 சகோதர, சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவது பற்றிச் சில காரியங்கள் சொல்ல வேண்டியது உள்ளன. நாம் எப்போது அவரோடு ஒன்று சேருவோம் என்பது பற்றிப் பேச நாங்கள் விரும்புகிறோம். 2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். சிலர் இதனைத் தீர்க்கதரிசனமாகவோ, செய்தியாகவோ சொல்லலாம், அல்லது ஒருவன் எங்களிடத்தில் இருந்து கூட ஒரு கடிதம் வந்ததாகக் கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கலாம். 3 எவரும் உங்களை எவ்விதத்திலும் முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் விசுவாச மறுதலிப்பும், அழிவின் மகனாகிய பாவமனிதனும் தோன்றும் வரை அந்த நாள் வராது. பாவமனிதன் நரகத்துக்கு உரியவன். 4 அவன் தேவனுக்கும் மனிதர்களின் வழிபாடுகளுக்கும் எதிரானவன். அவன் தேவனுடைய ஆலயத்திற்கும் சென்று அங்கே உட்காருவான். பிறகு, தன்னை தேவனைவிட உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்வான்.
5 இக்காரியங்கள் நிகழும் என்பது பற்றி முன்னரே நான் உங்களிடம் கூறினேன், ஞாபகம் இருக்கிறதா? 6 அவனை இப்போது தடுத்து நிறுத்தி இருப்பது யாரென்று உங்களுக்குத் தெரியும். அவன் இப்போது தடுக்கப்பட்டிருப்பது சரியான நேரத்தில் வெளிப்படும் பொருட்டுத்தான். 7 பாவத்தின் இரகசிய சக்தி ஏற்கெனவே உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை உடையவர் ஒருவரே! அவன் முழுமையாகத் தன் வழியில் இருந்து விலக்கப்படும்வரை அவனைத் தடுத்து நிறுத்துவார் அவர். 8 பிறகு அந்தப் பாவ மனிதன் வெளிப்படுவான். கர்த்தராகிய இயேசு தன் வாயில் இருந்து வரும் சுவாசத்தினால் அவனைக் கொல்வார். அவர் தன் பெருமைமிகு வருகையின் மூலமே அந்தப் பாவமனிதனை அழிப்பார்.
9 சாத்தானின் சக்தியாலேயே பாவமனிதன் வருவான். அவனுக்குப் பெரும் சக்தி இருக்கும். அதனால் போலி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வான். 10 பாவ மனிதன் எல்லாவிதமான பாவங்களையும் செய்து ஆன்மீக அளவில் தான் வஞ்சிக்கும் மக்களை ஏமாற்ற பல தந்திரங்கள் செய்வான். உண்மையை நேசிக்க மறுத்ததால் அம்மக்கள் ஆன்மீக அளவில் தொலைந்துபோனவர்கள் ஆகிறார்கள். (உண்மையை நேசித்திருந்தால் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்.) 11 ஆனால் அவர்கள் உண்மையை நேசிக்க மறுத்தார்கள். எனவே, அவர்கள் பொய்யை நம்பத்தக்கதாகப் போலி நம்பிக்கை என்னும் ஆற்றலை அவர்களுக்குள் தேவன் அனுப்புகிறார். 12 எனவே, உண்மையை நம்பாத மக்கள் எல்லாரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் உண்மையை நம்பவில்லை. பாவச் செயல்கள் செய்வதிலே மகிழ்ந்தார்கள்.
மீட்கப்படுவதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்
13 சகோதர, சகோதரிகளே! கர்த்தர் உங்களிடம் அன்புடன் இருக்கிறார். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே தேவன் ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார். ஆகவே, உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற பரிசுத்த ஆவியானவராலும், உண்மையின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தாலும் இரட்சிக்கப்படுகிறீர்கள். 14 அந்த இரட்சிப்பை அடைய உங்களை தேவன் அழைத்தார். நாங்கள் பரப்புகிற நற்செய்தியைப் பயன்படுத்தி நீங்கள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டு தேவன் உங்களை அழைத்தார். 15 சகோதர சகோதரிகளே! ஆகையால் உறுதியாய் நில்லுங்கள். எங்கள் போதனைகளில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். அவற்றை நாங்கள் பிரசங்கங்கள் மூலமும், நிருபங்களின் மூலமும் உங்களுக்குப் போதித்திருக்கிறோம்.
16-17 நம்மை நேசித்தும், நமக்கு நல்ல விசுவாசத்தைக் கொடுத்தும், எக்காலத்திலும் தொடர்கிற ஆறுதலை வழங்கியும் வருகிற இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தரும், நம் பிதாவாகிய தேவனும் தொடர்ந்து உங்களை ஆறுதல்படுத்தவும், நீங்கள் சொல்கிற, மற்றும் செய்கிற ஒவ்வொரு நற்செயலிலும் உங்களை வலிமையுறச் செய்யவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.
எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்
3 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கர்த்தரின் போதனை தொடர்ந்து வேகமாகப் பரவவேண்டும். அப்போதனையை மக்கள் ஏற்று கனப்படுத்த வேண்டும். உங்களிடம் அது பரவி இருப்பதுபோன்று மற்றவர்களிடமும் பரவவேண்டும். இதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 2 கெட்ட, தீய மனிதர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். (எல்லா மக்களும் கர்த்தரிடம் விசுவாசம் வைக்கவில்லை)
3 ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் உங்களுக்கு பலத்தைக் கொடுத்து தீமையினின்று உங்களைப் பாதுகாப்பார். 4 மேலும், நாங்கள் வழி காட்டியபடியே நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்றும், இனி மேலும் நடந்துகொள்வீர்கள் என்றும் உங்களைக் குறித்து கர்த்தருக்குள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். 5 தேவனுடைய அன்புக்குள்ளும், கிறிஸ்துவின் பொறுமைக்குள்ளும் உங்கள் இதயம் இருக்கக் கர்த்தர் வழிகாட்ட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறோம்.
வேலைக்கான பொறுப்புகள்
6 சகோதர சகோதரிகளே! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தால் உங்களுக்கு ஆணை இடுகிறோம். வேலை செய்ய மறுக்கிற விசுவாசியிடம் இருந்து விலகிச் செல்லுங்கள். வேலை செய்ய மறுக்கிறவர்கள், எங்களிடமிருந்து நீங்கள் பெற்ற போதனையைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல. 7 நாங்கள் வாழ்வது போன்றே நீங்களும் வாழவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களோடு நாங்கள் இருந்தபோது சோம்பேறிகளாக இருந்ததில்லை. 8 அடுத்தவர்கள் உணவை உண்டபோது அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் மேலும் மேலும் வேலை செய்தோம். எனவே, எவருக்கும் தொந்தரவு தந்ததில்லை. நாங்கள் இரவும் பகலுமாக உழைத்தோம். 9 எங்களுக்கு உதவும்படி உங்களிடம் கேட்க எங்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் எங்கள் தேவைக்கு நாங்களே வேலை செய்தோம். எனவே உங்களுக்கு முன்மாதிரியாக நாங்கள் இருந்தோம். இதனை நீங்கள் பின்பற்றவேண்டும். 10 “ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம்.
11 உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் உழைக்க மறுப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் எதுவும் செய்வதில்லை. அவர்கள் ஏனைய மக்களின் வாழ்வில் குறுக்கிடுபவர்களாக இருக்கிறார்கள். 12 மற்றவர்களுக்குத் தொந்தரவு தர வேண்டாம் என்று அவர்களுக்கு ஆணை இடுகிறோம். உழைத்து உங்கள் உணவை சம்பாதித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் இதனைக் கேட்டுக்கொள்கிறோம். 13 சகோதர சகோதரிகளே! நல்லவற்றைச் செய்வதில் சோர்வு அடையாதீர்கள்.
14 இந்த நிருபத்தில் சொல்லப்பட்டவற்றிற்கு எவனொருவன் பணிய மறுக்கிறானோ அவன் யாரென்று அறிந்துகொள்ளுங்கள். அவனோடு சேராதீர்கள். பிறகு அதற்காக அவன் வெட்கப்படுவான். 15 ஆனால் அவனை ஒரு பகைவனைப் போல நடத்தாதீர்கள். ஒரு சகோதரனைப் போன்று எச்சரிக்கை செய்யுங்கள்.
இறுதி வார்த்தைகள்
16 சமாதானத்தின் கர்த்தர் உங்களுக்கு எப்பொழுதும் சமாதானத்தைத் தருவாராக. அவர் எப்பொழுதும் எல்லா வழியிலும் சமாதானத்தைத் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.
17 பவுலாகிய நான் என் சொந்தக் கையாலேயே இவ்வாழ்த்துக்களை எழுதி முடிக்கிறேன். என் அனைத்து நிருபங்களிலும் இம்முறையில் தான் நான் கையெழுத்திடுகிறேன். நான் எழுதும் விதம் இதுவே.
18 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
1 நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற இயேசு கிறிஸ்துவும் ஆணை இட்டபடியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் இருக்கிற பவுல்,
2 விசுவாசத்தில் உண்மையான மகனாக இருக்கும் தீமோத்தேயுவுக்கு எழுதுவது: நமது பிதாவாகிய தேவனாலும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உண்டாவதாக.
தவறான போதனைகளுக்கு எச்சரிக்கை
3 எபேசு நகரத்தில் நீ இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் மக்கதோனியாவுக்குப் போனபோது நீ அவ்வாறு செய்யும்படி கேட்டேன். எபேசு நகரில் சிலர் தவறானவற்றைப் போதித்து வருகிறார்கள். இது போல் செய்ய வேண்டாம் என்று ஆணையிட்டுச் சொல்லும் பொருட்டு நீ அங்கே தங்கி இரு. 4 உண்மையற்ற கட்டுக்கதைகளைக் கேட்டு காலத்தை வீணாக்க வேண்டாம் என்றும், குடும்ப வரலாற்றுப் பட்டியல்களைக் கேட்க வேண்டாம் என்றும் கூறு. அவை வெறும் விவாதங்களை மட்டுமே உருவாக்கும். அவை தேவனுடைய பணிக்கு உதவாதவை. விசுவாசத்தின் மூலமே தேவனுடைய பணி நடைபெறும். 5 மக்கள் அன்புகொள்ள வேண்டும் என்பதே இக்கட்டளையின் நோக்கம். இந்த அன்பைப் பெற மக்கள் தூய இதயத்தைப் பெற வேண்டும். எது சரியானது என்று எண்ணுகிறார்களோ அதைச் செய்ய வேண்டும். உண்மையான விசுவாசம் கொள்ளவேண்டும். 6 சிலர் இக்காரியங்களைச் செய்யத் தவறினார்கள். ஆகையால் அவர்கள் அதிலிருந்து விலகி ஒன்றுக்கும் உதவாத காரியங்களைப் பற்றி இப்பொழுது பேசுகிறார்கள். 7 அந்த மக்கள் நியாயப்பிரமாண போதகர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தாம் என்ன சொல்கிறோம் என்பது தெரியவில்லை. அதோடு தாம் உறுதியாகச் சொல்கின்றவற்றைப் பற்றியும் புரிந்துகொள்ளவில்லை.
8 ஒருவன் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அச்சட்டம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். 9 சட்டமானது நல்ல மனிதர்களுக்காக உருவாக்கப்படவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். சட்டத்துக்கு எதிரானவர்களுக்காகவும், பின்பற்ற மறுப்பவர்களுக்காகவும் இச்சட்டம் உருவாக்கப்பட்டது. இது தேவனுக்கு எதிரானவர்களுக்காகவும், பாவிகளுக்காகவும், பக்தியில்லாதவர்களுக்காகவும், தூய்மையற்றவர்களுக்காகவும், தம் பெற்றோரைக் கொல்கிறவர்களுக்காகவும், கொலைகாரர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது. 10 விபசாரம், ஓரினக்கலவி, அடிமை விற்பனை, பொய், ஏமாற்று, தேவனின் உண்மை போதனைக்கு எதிர்ப்பு போன்றவற்றைச் செய்கின்ற மக்களுக்கு உரியது. 11 சொல்லும்படி தேவன் என்னிடம் ஒப்படைத்த நற்செய்தியின் ஒரு பகுதியே என் போதனையாகும். பெருமை மிகு அந்நற்செய்தி மகிமையின் தேவனிடமிருந்து வருகிறது.
தேவனுடைய கிருபைக்காக நன்றி
12 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நான் நன்றி கூறுகிறேன், ஏனெனில் என்னை விசுவாசமுள்ளவனாகக் கண்டுணர்ந்து சேவை செய்யும் பொருட்டு அவர் எனக்கு இப்பணியைக் கொடுத்திருக்கிறார். அவர் எனக்கு பலத்தைக் கொடுத்திருக்கிறார். 13 முன்பு நான் கிறிஸ்துவுக்கு எதிராகப் பேசி துன்பப்படுத்தி, கொடுமையான காரியங்களைச் செய்தேன். ஆனால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்தார். ஏனென்றால், செய்வதை இன்னதென்று அறியாமல் நான் செய்தேன். அவரை நம்பாதபோது தான் அவற்றைச் செய்தேன். 14 ஆனால் கர்த்தராகிய அவர் தம் முழுமையான கிருபையை எனக்குத் தந்தார். அதோடு கிறிஸ்து இயேசுவில் விசுவாசமும் அன்பும் வந்தது.
15 நான் என்ன சொல்கிறேனோ, அவை உண்மையானவை. நீங்கள் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். பாவிகளை மீட்பதற்காகவே கிறிஸ்துவாகிய இயேசு இந்த உலகத்துக்கு வந்தார். அவர்களுள் நான் மிக மோசமானவன். 16 ஆனால் எனக்குக் கருணை அளிக்கப்பட்டது. அதனால் என் மூலம் இயேசு கிறிஸ்து எல்லையற்ற பொறுமை உடையவர் என்று புலப்படுத்திவிட்டார். கிறிஸ்து தனது பொறுமையை எல்லா பாவிகளிலும் மோசமான என்னிடம் காட்டினார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நித்திய வாழ்வைப் பெறுவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கும்படியாகக் கிறிஸ்து விரும்பினார். 17 கனமும், மகிமையும் நிரந்தரமான அரசருக்கு இருப்பதாக. அவர் அழிக்கப்படாதவர். பார்க்கப்படாதவர். அந்த ஒரே தேவனுக்கே எப்பொழுதும் கனமும், மகிமையும் உண்டாவதாக.
18 தீமோத்தேயுவே, நீ என் மகனைப் போன்றவன். நான் உனக்கு ஓர் ஆணையிடுகிறேன். உன்னைக் குறித்து முன்பு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின்படியே விசுவாசத்திற்காக மாபெரும் போரில் நீ ஈடுபடு. இதுவே எனது ஆணை. 19 தொடர்ந்து விசுவாசம் கொள். உனக்கு நியாயமானது என்று தெரிந்ததைச் செய். சிலர் இதனைச் செய்யவில்லை. எனவே அவர்கள் விசுவாசத்திலிருந்து விலகி விழுந்தார்கள். 20 இமனேயும், அலெக்சாண்டரும் இத்தகு இரண்டு உதாரணங்கள். தேவனுக்கு எதிராகப் பேசக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் அவர்களை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சில விதிமுறைகள்
2 எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்று முதலில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரையும் பற்றி தேவனிடம் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைப்பற்றிக் கேளுங்கள். அவரிடம் நன்றியுணர்வுடன் இருங்கள். 2 அரசர்களுக்காகவும், அதிகாரம் உள்ளவர்களுக்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். முழுக்க முழுக்க சேவையும், தேவனைக் குறித்த மரியாதையும் அமைதியும் சமாதானமும் உள்ள வாழ்வை நாம் பெறும்பொருட்டு அத்தலைவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 3 இது நன்று. நம் மீட்பரான தேவனுக்கு இது மிகவும் விருப்பமானது.
4 அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அனைத்து மக்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தேவன் ஆசைப்படுகிறார். 5 ஒரே ஒரு தேவனே இருக்கிறார். மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது. 6 அனைத்து மக்களின் பாவங்களுக்காகவும் அவர் தன்னையே தந்துவிட்டார். தேவன் எல்லாரையும் மீட்க விரும்புகிறார் என்பதற்கு இயேசுவே சாட்சி. அவர் சரியான நேரத்தில் வந்தார். 7 அதனால்தான் நற்செய்தியைப் பரப்புவதற்காக, நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் தான் நான் அப்போஸ்தலானாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். (நான் உண்மையைத் தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை) யூதர் அல்லாதவர்களுக்கான போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அவர்கள் விசுவாசம் கொள்ளவும், உண்மையை அறிந்துகொள்ளவும் போதிக்கிறேன்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் விசேஷ விதிமுறைகள்
8 ஆண்கள் எல்லா இடத்திலும் பிரார்த்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கைகளை உயர்த்தி ஜெபம் செய்யும் இவர்கள் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். இவர்கள் கோபமும், தர்க்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
9 பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டுமென்று விரும்புகிறேன். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும். எளிமையாகவும், சரியான சிந்தனை உடையவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் நவநாகரீகமான தலையலங்காரமும், பொன், முத்து நகையலங்காரங்களும், விலையுயர்ந்த ஆடை அலங்காரங்களும் இல்லாமல் இருப்பார்களாக. 10 ஆனால், அவர்கள் அழகானவர்களாகத் தோன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். தேவனை வழிபடுகிற பெண்கள் அவ்விதத்திலேயே தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.
11 பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும். 12 ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும். 13 ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள். 14 அதோடு, சாத்தானின் தந்திரத்துக்குள் ஆதாம் அகப்படவில்லை. பெண் தான் முதலில் தந்திரத்துக்குள் சிக்கி பாவியானாள். 15 தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.
சபையில் தலைவர்கள்
3 நான் சொல்வதெல்லாம் உண்மையே, மூப்பரின் சேவையை விரும்புகிறவன் நல்ல வேலையைச் செய்வதையே விரும்புகிறான். 2 ஒரு மூப்பன் நல்லவனாகவே இருக்க வேண்டும். அவன் தன்னைக் குற்றம் சாட்டப்படாதவனாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாகவும், சுயக்கட்டுப்பாடும், ஞானமும் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களால் மதிக்கப்படவேண்டும் மக்களை உபசரிப்பவனாக இருக்க வேண்டும். நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். 3 அவன் மது அருந்துபவனாகவும், சண்டையிட விரும்புகிறவனாகவும் இருக்கக் கூடாது. அவன் பொறுமையும், சமாதானமும் உடையவனாக இருக்கவேண்டும். அதோடு அவன் பண ஆசை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும். 4 அவன் தன் குடும்பத்தில் சிறந்த தலைவனாக இருக்க வேண்டும். அதாவது அவனது பிள்ளைகள் அவனிடம் முழு மரியாதையோடு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தில் நல்லதொரு தலைவனாக இருக்க தெரியாவிட்டால், பிறகு எப்படி அவனால் தேவனுடைய சபைப்பொறுப்பை ஏற்று நடத்த முடியும்?
6 ஆனால் மூப்பராக வருகிற ஒருவன் புதிதாக விசுவாசம் கொண்டவனாக இருக்கக்கூடாது. இதில் அவன் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவ்வாறு செய்தால் அவன் தற்பெருமைக்காகத் தண்டிக்கப்படுவான். அது சாத்தான் பெற்ற தண்டனையைப்போன்று இருக்கும். 7 சபையில் இல்லாதவர்களின் மரியாதையையும் பெற்றவனாக மூப்பர் இருக்க வேண்டும். பிறகு அவன் மற்றவர்களால் விமர்சிக்கப்படாமல் இருப்பான். சாத்தானின் தந்திரத்துக்கும் பலியாகாமல் இருப்பான்.
சபையில் உள்ள உதவியாளர்கள்
8 இதே விதத்திலேயே மக்களின் மரியாதைக்கு உரியவர்களாக சிறப்பு உதவியாளர்களும் இருக்க வேண்டும். அவர்கள் நினைப்பொன்றும் சொல்லொன்றுமாக இல்லாமலும், மதுக்குடியர்களாக இல்லாமலும் இருக்கவேண்டும். மற்றவர்களை ஏமாற்றி செல்வம் சேர்ப்பவர்களாகவும் இருக்கக் கூடாது. 9 அவர்கள், தேவன் நமக்கு வெளிக்காட்டிய உண்மைகளைக் கடைப்பிடிக்கிறவர்களாகவும் சரியெனப்படுவதை மட்டுமே செய்பவர்களாவும் இருக்க வேண்டும். 10 முதலில் நீங்கள் அவர்களைச் சோதனை செய்யுங்கள். அவர்களில் எதுவும் குற்றம் இல்லாவிட்டால் பிறகு அவர்கள் விசேஷ உதவியாளர்களாக சேவைசெய்ய முடியும்.
11 இதைப்போலவே மற்றவர்கள் மதிக்கத்தக்கவர்களாக பெண்கள் இருக்க வேண்டும். பிறர்மேல் அவதூறு பேசாதவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாகவும், எல்லாவற்றிலும் உண்மை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.
12 விசேஷ உதவியாளர்களாக இருப்பவர்கள் ஒரே ஒரு மனைவி உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தம் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் நல்ல தலைவர்களாக இருக்க வேண்டும். 13 இவ்வாறு நல்ல வழியில் சேவை செய்கிறவர்கள் ஒரு மரியாதைக்குரிய நிலையை அடைவார்கள். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் மேலும் உறுதி பெறுவார்கள்.
நம் வாழ்க்கையின் இரகசியம்
14 விரைவில் நான் உங்களிடம் வருவேன் என நம்புகிறேன். ஆனால் இப்பொழுது இதை உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். 15 பிறகு நான் விரைவில் வராவிட்டாலும் தேவனுடைய குடும்பத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். தேவனுடைய குடும்பம் என்பது ஜீவனுள்ள தேவனின் சபைதான். உண்மையின் தூணாகவும் அடித்தளமாகவும் சபை இருக்கிறது. 16 நம் வழிபாட்டு வாழ்வின் இரகசியம் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல் மிக உயர்ந்தது ஆகும்.
“கிறிஸ்து மனித சரீரத்துடன் காட்சியளித்தார்.
அவர் நீதியானவர் என்பதை ஆவியானவர் நிரூபித்தார்.
தேவதூதர்களால் காணப்பட்டார்.
யூதர் அல்லாதவர்களின் தேசங்களில் அவரைப் பற்றிய நற்செய்தி பரப்பப்பட்டது.
உலகெங்கிலுமுள்ள மக்கள் அவர்மேல் விசுவாசம் கொண்டனர்.
அவர் மகிமையுடன் வானுலகிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.”
தவறான போதகர்களைப் பற்றி எச்சரிக்கை
4 வருங்காலத்தில் சிலர் உண்மையான போதனையை நம்புவதை நிறுத்திவிடுவார்கள் என்று தூய ஆவியானவர் கூறி இருக்கிறார். அவர்கள் பொய் சொல்லும் ஆவிகளுக்குத் தலைவணங்குவார்கள். அவர்கள் பிசாசுகளின் போதனைகளைப் பின்பற்றுவார்கள். 2 பொய்யும், தந்திரமும் உடையவர்கள் மூலம் அத்தீய போதனைகள் வருகிறது. அந்த மக்கள் சரி எது, தவறு எது என்று பார்க்கமாட்டார்கள். அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மை, சூடு போடப்பட்டு, அழிக்கப்பட்டதைப் போன்றது. 3 அவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்கின்றனர். சில உணவு வகைகளை உண்ணக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த உணவுகளை தேவனே படைத்திருக்கிறார். நம்புகிறவர்களும், உண்மையை அறிந்தவர்களும் அவற்றை நன்றியோடு உண்ணலாம். 4 தேவனால் படைக்கப்பட்ட அனைத்துமே நல்லதுதான். நன்றிக் கடனாகப் பெறுகிறவரையில் தேவனால் உருவாக்கப்பட்ட எதையும் மறுக்கக்கூடாது. 5 தேவனால் படைக்கப்பட்டவை எல்லாம் தேவனுடைய வார்த்தையாலும் பிரார்த்தனைகளாலும் தூய்மையாக்கப்படும்.
கிறிஸ்துவின் நல்ல வேலையாளாக இரு
6 அங்குள்ள சகோதர சகோதரிகளிடமும் இவற்றைக் கூறு. இவை நீ இயேசு கிறிஸ்துவின் நல்ல வேலையாள் என்பதைக் காட்டும். விசுவாசமான வார்த்தைகளாலும், பின்பற்றப்படுகிற நல்ல போதனையாலும் நீ பலப்படுத்தப்படுகிறாய் என்றும் காட்டுவாய். 7 மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள். 8 உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும். 9 நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். 10 இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.
11 கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். 12 நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.
13 மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். 14 உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். 15 இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். 16 உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.
மற்றவர்களோடு வாழ்வதற்கான சில விதிமுறைகள்
5 முதியோர்களிடம் கோபமாகப் பேசாதே. ஆனால் அவர்களைத் தந்தையாக மதித்து நடத்து. இளைஞர்களை சகோதரர்களாக மதித்து நடத்து. 2 முதிய பெண்களைத் தாயாகக் கருது. வயது குறைந்த பெண்களை சகோதரிகளாக நினை. அவர்களை எப்பொழுதும் நல்ல முறையில் நடத்து.
3 உண்மையிலேயே தனியாக உள்ள விதவைகளைப் பாதுகாத்து மதித்து நட. 4 ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், இவர்கள் தம் பெற்றோர்களுக்கு உதவுவதன் மூலம் தன் குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதை முதலில் கற்கவேண்டும். இவர்கள் இதைச் செய்தால் பெற்றோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் நன்றிக் கடன் செலுத்தியவர்களாவார்கள். இதையே தேவன் ஒப்புக்கொள்கிறார். 5 விதவையாக இருக்கும் ஒருத்தி தேவனைத் தன் ஒரே விசுவாசமாகக்கொண்டிருப்பாள். இரவு பகல் என அவள் எப்பொழுதும் பிரார்த்தனை செய்வாள். தேவனிடம் உதவியை வேண்டுவாள். 6 தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதவை தன் வாழ்வை கழித்தாளெனில் உயிரோடு இருந்தாலும் இறந்தவளுக்குச் சமமாவாள். 7 அங்குள்ள விசுவாசிகளிடம் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும்படி கூறு. அதனால் மற்றவர்கள் அவர்கள் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று கூறமாட்டார்கள். 8 ஒருவன் தன் சொந்த மக்களிடமும் அக்கறை காட்ட வேண்டும். அதைவிட முக்கியமாக அவன் தன் சொந்தக் குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருவன் இதைச் செய்யாவிட்டால் பிறகு அவன் உண்மையான விசுவாசத்தைக் கைவிட்டவன் ஆகிறான். அவன் விசுவாசம் அற்றவனை விட மோசமானவனாகிறான்.
9 உன் விதவைகள் பட்டியலில் சேர்க்கப்பட, விதவையானவளுக்கு அறுபது வயதுக்கு மேலாகி இருக்கவேண்டும். அவள் தன் கணவனுக்கு உண்மையானவளாக இருந்திருக்க வேண்டும். 10 நல்ல காரியங்களைச் செய்யும் ஒரு பெண் என அறியப்பட்டிருக்க வேண்டும். அதாவது பிள்ளைகளை வளர்த்தல், வீட்டில் அந்நியர்களை உபசரித்தல், தூயவர்களின் கால்களைக் கழுவுதல், துன்பப்படுகிறவர்களுக்குத் துணை புரிதல் போன்று தன் வாழ்க்கை முழுவதும் பலவித நன்மைகளைச் செய்தல் வேண்டும்.
11 அந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்க்காதீர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குத் தம்மை ஒப்படைத்தாலும், பலமான காம ஆசைகளால் அவரை விட்டு வெளியே இழுக்கப்படுவர். அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பலாம். 12 இதற்காகவே அவர்கள் குற்றவாளியாவார்கள். தாங்கள் முதலில் வாக்குறுதி கொடுத்தபடி நடந்துகொள்ளாததால் குற்றவாளியாவார்கள். 13 இவர்கள் வீடு வீடாகப் போய்த் தங்கள் நேரத்தை வீணாகப் போக்குவார்கள். அது மட்டும் அல்ல, வீண் பேச்சு பேசுவார்கள். மேலும் மற்ற மனிதர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய வதந்திகளையும், எதைச் சொல்லக் கூடாதோ அவற்றையுமே சொல்வார்கள். 14 ஆகையால் இளம் விதவைகள் மீண்டும் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, வீட்டைக் கவனித்துக்கொள்வார்களாக. இதுவே அவர்கள் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த வழியில் அவர்கள் எதிரிக்கு விமர்சிக்கும் வாய்ப்பை கொடுக்கமாட்டார்கள். 15 ஆனால், ஏற்கெனவே சில இளம் விதவைகள் சாத்தானைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்.
16 விசுவாசமுள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தில் எவரேனும் விதவைகள் இருந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என உதவிகளுக்காக சபையில் சென்று தொந்தரவு செய்யக் கூடாது. அப்பொழுது குடும்பமே அற்ற விதவைகளைக் கவனிக்கும் பொறுப்பை மட்டுமே சபை ஏற்றுக்கொள்ள இயலும்.
மூப்பர்களைப்பற்றியும் பிற காரியங்களைப்பற்றியும் இன்னும் சில விஷயங்கள்
17 சபைகளை நன்றாக நடத்திச்செல்லும் மூப்பர்கள் தக்க கௌரவம் பெற வேண்டும். பேசுவதன் மூலமும், போதிப்பதன்மூலம் உழைப்பவர்களாய் இருப்பவர்களே அத்தகு கௌரவத்தைப் பெறுவர். 18 ஏனென்றால், “பிணையல் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே. அது உண்ணட்டும்” [a]என்று வேதவாக்கியம் கூறுகிறது. “உழைக்கிறவனுக்கு அதற்கேற்ற கூலி கொடுக்கப்படவேண்டும்” [b]என்றும் கூறுகிறது.
19 மூப்பர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கவனிக்காதே, இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இருந்தால் அதை ஏற்றுக்கொள். 20 பாவம் செய்பவர்களைக் கண்டிக்க வேண்டும். அதுவும் சபைக்கு முன்னால் மற்றவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி கண்டிக்க வேண்டும்.
21 தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ தூதர்களுக்கும் முன்பாக இவற்றை நீ செய்யவேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகிறேன். பாரபட்சத்தோடு ஒன்றும் செய்யாதே. அதைப்பற்றி ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ளும் முன்பு முடிவு செய்யாதே.
22 எவர் மீதும் கைகள் வைக்கும் முன்பு எச்சரிக்கையோடு யோசி. மற்றவர்கள் செய்யும் பாவங்களில் பங்குகொள்ள வேண்டாம். உன்னைச் சுத்தம் உள்ளவனாகக் காத்துக்கொள்.
23 தீமோத்தேயுவே! நீ இதுவரை தண்ணீரையே குடித்து வந்தாய். அதை நிறுத்தி கொஞ்சம் திராட்சை இரசமும் குடி. அது உன் வயிற்றுக்கு நல்லது. உனக்கு அடிக்கடி வரும் வியாதியில் உனக்கு இது உதவக் கூடும்.
24 சிலரது பாவங்கள் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும்படியாக இருக்கும். அவர்கள் நியாயம்தீர்க்கப்படுவார்கள் என்பதை அவர்கள் பாவங்களே காட்டுகின்றன. ஆனால் சிலரது பாவங்களோ தாமதமாகவே வெளிப்படும். 25 அவ்வாறே சிலரது நற்செயல்களும் வெளிப்படையாகவே இருக்கும். அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்க முடியாது.
அடிமைகளுக்கான விதிமுறைகள்
6 அடிமைகளாய் இருக்கிற அனைவரும் தங்கள் எஜமானர்களுக்கு மரியாதை காட்டவேண்டும். அவர்கள் இதனைச் செய்யும்பொழுது தேவனுடைய பெயரும், நம் போதனையும் விமர்சிக்கப்படாமல் இருக்கும். 2 சில அடிமைகளின் எஜமானர்கள் விசுவாசம் உடையவர்களாய் இருப்பார்கள். அதனால் அவர்கள் இருவரும் சகோதரர்களாய் இருப்பார்கள். எனினும் அந்த அடிமைகள் தங்கள் மரியாதையைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் மேலும் சிறப்பான முறையில் தங்கள் வேலையைத் தங்கள் எஜமானர்களுக்காகச் செய்யவேண்டும். ஏனென்றால் தாம் நேசிக்கும் விசுவாசிகளுக்கு அந்த அடிமைகள் உதவிக்கொண்டும் பயன் விளைவித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
இக்காரியங்களைச் செய்ய நீ அவர்களுக்கு இதனைப் போதிக்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும்.
தவறான போதனையும் உண்மையான செல்வமும்
3 சிலர் தவறான போதனைகளைச் செய்துவருகிறார்கள். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான போதனையை அவர்கள் பின்பற்றுவதில்லை. தேவனுக்குச் சேவை செய்கிற உண்மையான வழியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 4 தவறான போதகன் தற்பெருமையை உடையவன். அவனுக்கு எதுவும் புரியாது. வாக்குவாதங்களின் மேல் ஒரு நோய் கொண்ட உற்சாகத்தை உடையவனாக இருக்கிறான். அது பொறாமையையும், சண்டையையும், அவதூறுகளையும், பொல்லாத ஐயங்களையும் உண்டாக்குகின்றன. 5 உக்கிரமான தீயமனம் உடையவர்கள் வெறும் வாக்குவாதங்களையே முடிவில் உருவாக்குகிறார்கள். அவர்கள் உண்மையைத் தொலைத்துவிட்டார்கள். தேவனை சேவிப்பது செல்வந்தனாகும் வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
6 தன்னிடம் இருப்பதே போதும் என்று ஒருவன் திருப்தி அடைகிறானெனில் அத்துடன் அவனுக்குள்ள தேவபக்தியானது மிகுந்த இலாபமாயிருக்கும், என்பது உண்மை. 7 நாம் இந்த உலகத்துக்கு வரும்போது எதையும் நம்மோடு கொண்டு வரவில்லை. நாம் இறக்கும்போதும் எதையும் கொண்டு போகப் போவதில்லை. 8 எனவே, நம்மிடம் உள்ள உணவு, ஆடை ஆகியவற்றோடு திருப்தி அடையவேண்டும். 9 மேலும் செல்வந்தராக விரும்புகிறவர்கள் சோதனைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கண்ணிகளில் மாட்டிக்கொள்கிறார்கள். முட்டாள்தனமானதும் ஆபத்தானதுமான ஆசைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அவை அவர்களைப் பாதித்து, அழிக்கும். 10 பண ஆசையானது எல்லாவிதமான பாவங்களுக்கும் வழி வகுக்கும். சிலர் மேலும் மேலும் பணத்தை விரும்பி உண்மையான போதனையை விட்டுவிட்டார்கள். அதனால் தம் துன்பத்துக்குத் தாமே காரணமாகிறார்கள்.
நினைவுகொள்ளவேண்டிய விஷயங்கள்
11 நீயோ தேவனுடைய மனிதன். எனவே நீ இவற்றில் இருந்து விலகி இருக்கவேண்டும். சரியான வழியில் வாழ முயற்சி செய். தேவனுக்கு சேவை செய். விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தம் ஆகியவற்றை வைத்துக்கொள். 12 விசுவாசம் வைத்தல் பந்தயத்தில் ஓடுவது போன்றது. அதில் வெற்றி பெறக் கடுமையாகப் பாடுபடு. நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அத்தகைய வாழ்க்கைக்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக மக்களுக்கு முன்னிலையில் கிறிஸ்துவின் பேருண்மையை நீ அறிக்கை பண்ணியுமிருக்கிறாய். 13 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் முன்பாக நான் ஒரு ஆணையை இடுகிறேன். பொந்தியு பிலாத்துவின் முன்னால் நிற்கும்போது அவர் பேருண்மைக்கு சாட்சியம் வழங்கினவர். கிறிஸ்து இயேசு ஒருவரே எல்லாவற்றிற்கும் வாழ்வளிக்கிறார். 14 அதனால் இப்பொழுது உனக்குக் கூறுகிறேன், உனக்கு ஆணையிட்டுள்ளபடி செய். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்வரை குற்றம் இல்லாமலும் பிழை இல்லாமலும் சரியாகச் செய். 15 தேவன் அதனைச் சரியான நேரத்தில் நிகழும்படி செய்வார். தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், ஏக சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார். அவரே அரசர்களுக்கெல்லாம் அரசராகவும், கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தராகவும் விளங்குகிறார். 16 அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென்.
17 இந்த ஆணைகளைச் செல்வர்களிடம் கூறு. பெருமிதம் கொள்ளவேண்டாம் என அவர்களுக்குச் சொல். செல்வத்தின் மீது விசுவாசம் நிரந்தரமாக வைக்கவேண்டாம் என்றும், தேவன் மீது விசுவாசம் வைக்குமாறும் கூறு. செல்வம் விசுவாசிப்பதற்கு உரியதன்று. ஆனால் தேவன் நம்மை செழிப்பாகப் பாதுகாக்கிறார். அவற்றை நாம் சந்தோஷமாக அனுபவிக்க அவர் கொடுக்கிறார். 18 நல்ல செயல்களைச் செய்யுமாறு செல்வர்களிடம் கூறு. வள்ளல்களாகவும், பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்களாகவும் இருக்கக் கூறு. 19 இவற்றைச் செய்வதன் மூலம் அவர்கள் பரலோகத்தில் ஒரு பொக்கிஷத்தைச் சேமித்து வைக்கிறார்கள். அது அவர்களுக்குப் பலமான அஸ்திபாரமாக எதிர்கால வாழ்வைக் கட்ட உதவியாக இருக்கும். அதனால் உண்மையான வாழ்வைப் பெறுவர்.
20 தீமோத்தேயுவே, தேவன் உன்னிடம் நம்பிக்கையுடன் பல நல்ல காரியங்களைத் தந்திருக்கிறார். அவற்றைப் பாதுகாத்துக்கொள். தேவனிடமிருந்து வராத முட்டாள்தனமான காரியங்களைப் பேசுகிறவர்களிடமிருந்து விலகு. உண்மைக்கு எதிராக வாதம் செய்கிறவர்களிடமிருந்தும் விலகிப் போ. அவர்கள் “ஞானம்” என்று அழைப்பதெல்லாம் தவறான “ஞானம்” ஆகும். 21 சிலர் தங்களிடம் அந்த “ஞானம்” உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையான போதனையில் இருந்து விலகிப்போனார்கள்.
தேவனுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
1 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பவுல் எழுதுவது: தேவனின் விருப்பப்படியே நான் அப்போஸ்தலனானேன். கிறிஸ்து இயேசுவிலுள்ள வாழ்க்கையின் வாக்குறுதியைப் பற்றி மக்களிடம் கூறுமாறு தேவன் என்னை அனுப்பினார்.
2 தீமோத்தேயுவே! நீ எனக்குப் பிரியமுள்ள மகனைப் போன்றவன். கிருபை, இரக்கம், சமாதானம் ஆகியவற்றை நீ பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் பெறுவாய் என்று நம்புகிறேன்.
நன்றி செலுத்துதலும் உற்சாகமூட்டுதலும்
3 இரவிலும் பகலிலும் என் பிரார்த்தனைகளில் உன்னை எப்பொழுதும் நினைத்துக்கொள்ளுகிறேன். என்னுடைய முன்னோர் சேவை செய்த தேவன் அவரே. நான் உனக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அறிந்த அளவில் சரியானதை மட்டுமே செய்கிறேன். 4 நீ எனக்காக சிந்திய கண்ணீர்த் துளிகளை நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் உன்னைக் காண மிகவும் விரும்புகிறேன். அதனால் நான் முழு மகிழ்ச்சியை அடைய முடியும். 5 நான் உனது உண்மையான விசுவாசத்தை நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய விசுவாசம் முதலில் உன் பாட்டியான லோவிசாளுக்கும் உன் தாயான ஐனிக்கேயாளுக்கும் இருந்தது. அவர்களைப் போன்றே உனக்கும் விசுவாசம் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். 6 ஆகவேதான், தேவன் உனக்குக் கொடுத்த வரத்தை நீ நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது கையை உன் மேல் வைத்தபோதுதான் தேவன் அந்த வரத்தைக் கொடுத்தார். இப்பொழுது அந்த வரத்தைப் பயன்படுத்த வேண்டும். அது சிறு தீப்பொறி எரிந்து பெருநெருப்பாவதுபோல வளரவேண்டும் என விரும்புகிறேன். 7 அச்சத்தின் ஆவியை தேவன் நமக்குத் தராமல், சக்தியும், அன்பும், சுயக்கட்டுப்பாடும் உள்ள ஆவியையே தந்திருக்கிறார்.
8 எனவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வெட்கப்பட வேண்டாம். என்னைக் குறித்தும், நான் கர்த்தருக்காகச் சிறையில் இருப்பது குறித்தும் வெட்கப்பட வேண்டாம். ஆனால் நற்செய்திக்காக என்னோடு துன்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான பலத்தை தேவன் தருகிறார்.
9 தேவன் நம்மைக் காத்து தனது பரிசுத்த மக்களாக்கினார். இது நமது முயற்சியால் நிகழ்வதன்று. இது தேவனால் ஆவது. தம் கிருபையால் நம்மை அழைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் தனது கிருபையை இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே படைப்பு காலத்திற்கு முன்பிருந்தே வழங்குகிறார். 10 அக்கிருபை நமக்குத் தெளிவானது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தபோதுதான் அக்கிருபை நமக்குப் புலப்படுத்தப்பட்டது. இயேசு மரணத்தை அழித்து நமக்கெல்லாம் நித்திய வாழ்வுக்குரிய வழியைக் காட்டினார். நற்செய்தியின் மூலமாகவே நமக்கு அவர் நித்திய வாழ்வைப் பெறுவதற்கான வழியைக் காட்டினார்.
11 அந்த நற்செய்தியைச் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். நான் அவரது அப்போஸ்தலனாகவும், நற்செய்திக்கான போதகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 12 நற்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பதால் இப்போது துன் பப்படுத்தப்படுகிறேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் நம்புகிற இயேசுவைப்பற்றி எனக்குத் தெரியும். என்னிடத்தில் நம்பி ஒப்படைத்தவற்றை அந்த நாள்வரைக்கும் காத்துக்கொள்ளும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. இதனை நான் உறுதியாக நம்புகிறேன்.
13 என்னிடமிருந்து நீங்கள் கேட்ட உண்மையான போதனைகளைப் பின்பற்றுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பும் விசுவாசமும் கொண்டு அப்போதனைகளைப் பின்பற்றுங்கள். அப்போதனைகள் நீங்கள் போதிக்க வேண்டியவற்றைப் பற்றி உங்களுக்குச் சான்றாகக் காட்டும். 14 உங்களிடம் கொடுக்கப்பட்ட உண்மைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கிறார். அவர் அவ்வுண்மைகளைப் பாதுகாக்க உதவுவார்.
15 ஆசிய நாடுகளில் உள்ள பலர் என்னை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை நீ அறிவாய். பிகெல்லும் எர்மொகெனேயும் கூட என்னைவிட்டு விலகிவிட்டனர். 16 கர்த்தரானவர் ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கிருபை காட்டும்படி நான் பிரார்த்தனை செய்கிறேன். பலமுறை அவன் எனக்கு உதவியிருக்கிறான். நான் சிறையில் இருந்தது பற்றி அவன் வெட்கப்படவில்லை. 17 அவன் ரோமுக்கு வந்தபோது என்னைக் காணும் பொருட்டு பல இடங்களில் கடைசி வரைக்கும் தேடியிருக்கிறான். 18 ஒநேசிப்போரு அந்த நாளில் கர்த்தரிடமிருந்து கிருபை பெறவேண்டும் என்று நான் கர்த்தரிடம் வேண்டுகிறேன். எபேசு நகரில் அவன் எவ்வகையில் உதவியிருக்கிறான் என்று உனக்கு நன்றாகவே தெரியும்.
நம்பிக்கைக்குரிய வீரன்
2 தீமோத்தேயுவே, நீ என் மகனைப் போன்றவன். இயேசு கிறிஸ்துவிற்குள் நாம் கொண்டுள்ள கிருபையில் உறுதியாக இரு. 2 நீ கேட்ட என் போதனைகள் மற்றவர்களுக்கும் கூட போதிக்கப்பட வேண்டும். நீ விசுவாசம் வைத்திருக்கிற மக்களிடம் எல்லாம் அதனைப் போதிப்பாயாக. பிறகு அவர்களாலும் அவற்றை ஏனைய மக்களுக்குப் போதிக்க முடியும். 3 நாம் அனுபவிக்க நேரும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம். அவற்றை ஒரு உண்மையான போர் வீரனைப்போன்று ஏற்றுக்கொள்வோம். 4 போர் வீரனாயிருக்கும் ஒருவன் எப்பொழுதும் தனது மேலதிகாரியைத் திருப்திப்படுத்தவே விரும்புவான். எனவே அவன் மற்றவர்களைப் போன்று தன் பொழுதை வேறுவகையில் போக்கமாட்டான். 5 விதிமுறைகளின்படி போட்டியிடாமல் எந்த விளையாட்டு வீரனாலும் வெற்றிக் கிரீடத்தை அடைய முடியாது. 6 பாடுபட்டு விளைய வைக்கிற விவசாயியே, விளைச்சலின் முதல் பகுதி உணவை உண்பதற்குத் தகுதியானவன். 7 நான் சொல்லிக்கொண்டிருக்கிற விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார். இவை பற்றிய முழுமையான அறிவை கர்த்தர் உனக்குத் தருவார்.
8 இயேசு கிறிஸ்துவை ஞாபகப்படுத்திக்கொள். அவர் தாவீதின் குடும்பத்திலிருந்து வந்தவர். இறந்த பிறகு அவர் மரணத்திலிருந்து எழுந்தார். இதுதான் நான் சொல்லும் நற்செய்தி. 9 நான் இதனைச் சொல்வதால் பலவித துன்பங்களுக்கு உட்படுகிறேன். நான் ஒரு குற்றவாளியைப் போல் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறேன். ஆனால் தேவனுடைய போதனைகள் கட்டப்படவில்லை. 10 ஆகையால் நான் பொறுமையோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். தேவனால் தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் உதவும் பொருட்டே நான் இதனைச் செய்தேன். இதனால் மக்கள் இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பைப் பெறுவார்கள். அதனால் முடிவற்ற மகிமையைப் பெறுவர்.
11 இந்தப் போதனை உண்மையானது:
நாம் இயேசுவோடு மரணமடைந்திருந்தால் பிறகு நாமும் அவரோடு வாழ்வோம்.
12 நாம் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் பிறகு அவரோடு ஆட்சியும் செய்வோம்.
நாம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தால் பிறகு அவரும் நம்மை ஏற்க மறுப்பார்.
13 நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார்.
ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.
அங்கீகரிக்கப்பட்ட வேலையாள்
14 மக்களிடம் இவற்றைத் தொடர்ந்து சொல்லுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதபடி தேவனுக்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அது எவருக்கும் உதவாது. அதைக் கவனிப்பவர்களையும் அழித்து விடும். 15 தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறவகையில் அவரிடம் உங்களை ஒப்படைக்க உங்களால் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். தன் வேலையைப்பற்றி வெட்கப்படாத வேலையாளாக இருங்கள். கிறிஸ்துவின் உண்மையான போதனைகளைச் சரியான வழியில் போதியுங்கள்.
16 தேவனிடமிருந்து பெறப்படாத, பயன் இல்லாத காரியங்களைப் பேசுவோரிடமிருந்து விலகி இருங்கள். அவ்வகை பேச்சுகள் ஒருவனை மேலும் தேவனுக்கு எதிராக்கும். 17 அவர்களின் தீய போதனைகள் சரீரத்துக்குள் நோய் பரவுவது போன்று பரவும். இமெநேயுவும், பிலேத்துவும் இத்தகையவர்ளே. 18 அவர்களின் போதனைகள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. மரணத்திலிருந்து எழுங்காலம் ஏற்கெனவே நடந்து முடிந்துபோனது என்று அவர்கள் போதிக்கிறார்கள். அந்த இருவரும் சில மனிதர்களின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள்.
19 ஆனால் தேவனின் பலமான அஸ்திபாரம் அப்படியே தொடர்ந்து உள்ளது. அஸ்திபாரத்தின்மீது, “கர்த்தருக்குத் தன்னைச் சேர்ந்தவர்கள் எவரென்று தெரியும்.” “கர்த்தரில் விசுவாசம் கொள்கிற ஒவ்வொருவரும் தவறு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” [c]என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது.
20 ஒரு பெரிய வீட்டில் பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன. அதோடு மரத்தாலும், மண்ணாலும் செய்யப்பட்ட பொருட்களும் உள்ளன. சில பொருட்கள் சில விசேஷ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவை பிற காரியங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு உள்ளன. 21 எவனொருவன் தீய காரியங்களில் ஈடுபடாமல் விலகி தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ அவன் சிறப்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்குப் பயன்படுபவனாக இருப்பான். அவன் எவ்வித நற்பணி செய்யவும் தயாராக இருப்பான்.
22 ஓர் இளைஞன் செய்ய விரும்புகிற தீய செயல்களில் இருந்து விலகி இருங்கள். சரியான வழியில் வாழவும், விசுவாசம், அன்பு, சமாதனம் ஆகியவற்றைப் பெறவும் கடுமையாக முயற்சியுங்கள். 23 இவற்றை நீங்கள் சுத்தமான இதயம் உள்ளவர்களோடும் கர்த்தரிடம் நம்பிக்கை உள்ளவர்களோடும் சேர்ந்து செய்யுங்கள். முட்டாள்தனமான அறிவற்ற விவாதங்களில் இருந்தும் விலகி நில்லுங்கள். இப்படிப்பட்ட விவாதங்கள் வளர்ந்து பெரிதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 24 கர்த்தருடைய ஊழியன் சண்டைக்காரனாக இருக்கக் கூடாது. அவன் எல்லோரிடமும் இரக்கத்துடன் இருத்தல் வேண்டும். அவன் நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் பொறுமையுள்ளவனாக இருக்க வேண்டும். 25 தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும். அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் தேவன் அவர்களின் மனத்தையும் மாற்றுவார். 26 பிசாசானவன் இத்தகைய மக்களை வலை போட்டுப்பிடித்து தன் விருப்பப்படி செயல்பட வைப்பான். எனினும் அவர்கள் விழித்தெழுந்து, பிசாசு தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து, தம்மைப் பிசாசின் வலைக்குள் இருந்து விடுவித்துக்கொள்வர்.
இறுதி நாட்கள்
3 இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். 2 அந்தக் காலங்களில் மக்கள் தம்மையும் செல்வத்தையும் மட்டுமே விரும்புவர். அவர்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். 3 அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். 4 இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். 5 அவர்கள் தேவனுக்கு சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். தீமோத்தேயுவே இவர்களிடமிருந்து விலகி இரு.
6 சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும். 7 அப்பெண்கள் எப்போதும் புதிய போதனைகளை விரும்புவர். ஆனால் உண்மை பற்றிய அறிவைப் பெற முடியாதவர்களாக இருப்பர். 8 யந்நேயையும், யம்பிரேயையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் மோசேக்கு எதிரானவர்கள். இவர்களும் அவர்களைப் போன்றே உண்மைக்கு எதிரானவர்கள். அவர்கள் குழம்பிய எண்ணமுடையவர்கள். அவர்கள் உண்மையைப் பற்றிய அறிவை அடைய தவறிவிட்டார்கள். 9 ஆனால் அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர். இதுவே யந்நேயுக்கும், யம்பிரேயுக்கும் ஏற்பட்டது.
இறுதி அறிவுரைகள்
10 ஆனால் உனக்கு என்னைப்பற்றி எல்லாம் தெரியும். நான் போதனை செய்வது பற்றியும் என் வாழ்க்கைமுறை பற்றியும் நீ அறிவாய். என் வாழ்வின் குறிக்கோள்பற்றியும் நீ அறிவாய். எனது விசுவாசம், பொறுமை, அன்பு ஆகியவற்றையும் நீ அறிவாய். நான் முயற்சியைக் கைவிடமாட்டேன் என்பதையும் அறிவாய். 11 எனது உபத்திரவங்களையும் நான் பட்ட துன்பங்களையும் பற்றி நீ அறிந்திருக்கிறாய். அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய நகரங்களில் எனக்கு ஏற்பட்டவற்றைப் பற்றியும் நீ அறிவாய். ஆனால் நான் அனுபவித்த எல்லா உபத்திரவங்களிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றி விட்டார். 12 தேவன் விரும்புகிறபடி இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்கிற எவருமே இத்தகைய துன்பங்களைக் கண்டிப்பாக அனுபவிக்கவேண்டி இருக்கும். 13 தீயவர்களும், பிறரை ஏமாற்றுகிறவர்களும் மேலும் மேலும் கெட்டுப்போவார்கள். அவர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவார்கள். ஆனால் அதே சமயத்தில் தம்மைத் தாமே முட்டாளாக்கிக்கொள்வார்கள்.
14 நீ அறிந்த போதனைகளின்படி தொடர்ந்து செல். அவை உண்மையான போதனைகள் என்பதை அறிந்திருக்கிறாய். ஏனெனில் அவ்விஷயங்களை உனக்குப் போதித்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்பதை நீ அறிவாய். 15 நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். 16 அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். 17 வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான்.
4 தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால் உனக்கு ஒரு கட்டளையை இடுகிறேன். வாழ்கிறவர்கள் மத்தியிலும், இறந்தவர்கள் மத்தியிலும் நியாயம் தீர்ப்பவர் இயேசு ஒருவரே. இயேசுவுக்கென்று ஒரு இராஜ்யம் உண்டு. அவர் மீண்டும் வருவார். எனவே நான் இந்தக் கட்டளையை வழங்குகிறேன். 2 மக்களிடம் நற்செய்தியைக் கூற எப்பொழுதும் தயாராக இரு. மக்களிடம் அவர்கள் செய்யவேண்டியவற்றைச் சொல். அவர்கள் தவறானவற்றைச் செய்யும்போது எடுத்துச் சொல்லி தடுத்து நிறுத்து. நல்லதைச் செய்யும்போது உற்சாகப்படுத்து. இவற்றைப் பொறுமையுடனும் கவனத்துடனும் போதி.
3 மக்கள் உண்மையான போதனைகளைக் கவனிக்காத காலம் வரும். தம் ஒவ்வொரு விசித்திர விருப்பத்தையும் சந்தோஷப்படுத்தும் ஏராளமான போதகர்களை சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இது விருப்பமாக இருக்கும். மக்கள் கேட்க விரும்புவதையே அவர்கள் கூறுவர். 4 மக்கள் உண்மையைக் கேட்பதை நிறுத்திவிடுவர். அவர்கள் பொய்க்கதைகளைப் போதிப்பவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவர். 5 ஆனால் நீ எப்பொழுதும் உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். துன்பம் வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்க. நற்செய்தியைச் சொல்லும் வேலையைச் செய்க. தேவனின் ஊழியனாக அனைத்து கடமைகளையும் செய்க.
6 என் வாழ்க்கையை தேவனுக்கே காணிக்கையாகத் தந்துவிட்டேன். இங்கே என் வாழ்வு முடியும் காலம் நெருங்கி விட்டது. 7 நான் போரிலே நன்றாகப் போராடியிருக்கிறேன். நான் பந்தயத்தை முடித்துவிட்டேன். நான் விசுவாசத்தைப் பாதுகாத்திருக்கிறேன். 8 இப்பொழுது எனக்காக ஒரு கிரீடம் காத்திருக்கிறது. அந்த நாளில் தேவன் என்னிடம் இதைக் கொடுப்பார். கர்த்தரே நியாயம் தீர்க்கிறவர். அவர் சரியாகச் செய்வார். அந்த நாளில் அவர் எனக்குக் கிரீடத்தைத் தருவார். அவரது வருகையை விரும்பி, அவருக்காகவே காத்திருக்கிற அனைவருக்கும் அவர் கிரீடத்தைத் தருவார்.
தனிப்பட்ட வார்த்தைகள்
9 உன்னால் எவ்வளவு விரைவில் என்னிடம் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வர முயற்சி செய். 10 தேமா இந்த உலகை மிகுதியாக நேசித்தான். அதனாலேயே அவன் என்னை விட்டுப் போனான். அவன் தெசலோனிக்கே நகரத்துக்குப் போனான். கிரெஸ்கெ கலாத்தியாவுக்குப் போனான். தீத்து தல்மாத்தியாவுக்குப் போனான். 11 லூக்கா மட்டுமே என்னோடு இருக்கிறான். நீ வரும்போது உன்னோடு மாற்குவையும் அழைத்து வா. இங்கே அவன் எனது பணிக்கு உதவியாக இருப்பான். 12 நான் தீகிக்குவை எபேசுவுக்கு அனுப்பினேன்.
13 நான் துரோவாவில் இருந்தபோது எனது மேலங்கியை கார்ப்புவிடம் விட்டு விட்டு வந்தேன். நீ வரும்போது அதை எடுத்து வா. எனது புத்தகங்களையும் எடுத்து வா. குறிப்பாக தோலால் ஆன என் புத்தகச்சுருளை எடுத்து வா. அவையே எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.
14 கொல்லனாகிய அலெக்சாண்டர் எனக்கு எதிராகப் பல தீய செயல்களைச் செய்தான். அவன் செய்த செயல்களுக்கு கர்த்தர் அவனைத் தண்டிப்பார். 15 அவன் உன்னையும் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொள். அவன் நம் போதனைகளை மோசமாக எதிர்த்தான்.
16 முதல் முறையாக நானே என்னைத் தற்காத்துக்கொண்டேன். எவரும் எனக்கு உதவவில்லை. எல்லோரும் விலகிவிட்டனர். அவர்களை மன்னிக்குமாறு தேவனிடம் வேண்டுகிறேன். 17 ஆனால் கர்த்தர் என்னோடு இருந்தார். அவர் எனக்கு பலம் தந்தார். இவ்வகையில் நற்செய்தியைப் போதிக்கும் என் வேலை முழுமையாக நடைபெறும். யூதர் அல்லாதவர்கள் அனைவரும் நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்று கர்த்தரும் விரும்பினார். நான் சிங்கத்தின் வாயில் விழாமல் காப்பாற்றப்பட்டேன். 18 எவராவது என்னை அழிக்க முயன்றால் கர்த்தர் என்னைக் காப்பாற்றுவார். அவர் பரலோகஇராஜ்யத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்ப்பார். கர்த்தருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக.
இறுதி வாழ்த்துக்கள்
19 பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஓநேசிப்போரின் வீட்டாருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறு. 20 கொரிந்து நகரில் எரஸ்து இருந்துவிட்டான். மிலேத்துவில் தூரோப்பீமுவை நோயாளியாக விட்டு விட்டு வந்தேன். 21 குளிர் காலத்துக்கு முன்னால் நீ வந்து சேருமாறு கடும் முயற்சி எடுத்துக்கொள். ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும் கிறிஸ்துவில் உள்ள எல்லா சகோதரர்களும் உன்னை வாழ்த்துகின்றனர்.
22 உன் ஆவியோடுகூட கர்த்தர் இருப்பாராக. அவரது கிருபை உங்களோடு இருப்பதாக.
1 தேவனுடைய ஒரு ஊழியனும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான பவுல் எழுதிக்கொள்வது: தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் விசுவாசத்துக்கு உதவும் பொருட்டு நான் அனுப்பப்பட்டேன். மக்கள் உண்மையை அறிந்துகொள்ள உதவுவதற்கே நான் அனுப்பப்பட்டேன். எவ்வாறு தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை அந்த உண்மை நமக்குக் காட்டுகிறது. 2 அந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வுக்கான நம்பிக்கையின் மூலமே வருகின்றது. அவ்வாழ்க்கையை நமக்குத் தருவதாக தேவன் வாக்குறுதி அளித்திருக்கிறார். தேவன் பொய் சொல்வதில்லை. 3 சரியான நேரத்தில் உலகம் அவ்வாழ்வை அறிந்துகொள்ளுமாறு தேவன் செய்தார். தேவன் தம் போதனைகள் மூலம் இதனைச் செய்தார். அப்பணியில் என்னை நம்பியிருக்கிறார். அவற்றை நான் போதித்து வருகிறேன். ஏனென்றால், நமது இரட்சகராக இருக்கிற தேவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
4 தீத்துவுக்கு எழுதிக்கொள்வது: நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிற விசுவாசத்தில் நீ எனக்கு உண்மையான மகனைப் போன்றவன்.
கிருபையும், சமாதானமும் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உண்டாவதாக.
கிரேத்தாவில் தீத்துவின் பணி
5 இன்னும் செய்யவேண்டிய பல செயல்களை நீ செய்யும்பொருட்டும் உன்னை நான் கிரேத்தாவில் ஏற்கெனவே உன்னிடம் சொன்னபடி ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிக்கும் பொருட்டும் உன்னை அங்கே விட்டுவந்தேன். 6 மூப்பராக இருக்கிறவன் எந்தத் தவறுகளையும் செய்யாத குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாக இருக்க வேண்டும். அவனது பிள்ளைகள் விசுவாசிகளாக இருக்கவேண்டும். கொடுமைக்காரர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் அவர்கள் இருக்கக் கூடாது. 7 ஒரு மூப்பர் தேவனுடைய பணியைக் கவனிக்கும் கடமையை உடையவர். எனவே, அவருக்குத் தவறு செய்தோம் என்ற குற்ற உணர்வு இருக்கக் கூடாது. தற்பெருமையும், சுயநலமும், முன் கோபமும் இல்லாதவராக இருக்கவேண்டும். அவர் குடிகாரனாக இருக்கக் கூடாது. சண்டைப் பிரியனாக இருக்கக் கூடாது. பிறரை ஏமாற்றிச் செல்வம் சேர்ப்பவராகவும் இருக்கக்கூடாது. 8 தம் வீட்டில் அந்நிய மக்களை வரவேற்று உபசரிக்கிறவராகவும், நல்லவற்றின் மீது அன்புடையவராகவும் மூப்பர்கள் இருக்க வேண்டும். ஞானமும், நேர்மையுமாய் வாழ்பவராகவும், தூய்மையும், சுய கட்டுப்பாடும் உடையவராகவும் அவர் இருக்க வேண்டும். 9 நாம் போதிக்கின்றவற்றை மூப்பர் உண்மையிலேயே பின்பற்றுபவராக இருக்கவேண்டும். உண்மையான போதனையின் மூலம் மக்களை உற்சாகப்படுத்த முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். உண்மையான போதனைகளுக்கு எதிரானவர்களை அவர்கள் எங்கே தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வல்லமையும் வேண்டும்.
10 பலர் பணிய மறுக்கிறார்கள். அவர்கள் வீணான வார்த்தைகளைப் பேசி மக்களைத் தவறான வழியில் நடத்திச்செல்கிறார்கள். குறிப்பாக யூதரல்லாதவர்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டுமென்று சொல்கிற யூதர்களை நான் குறிப்பிடுகிறேன். 11 இத்தகையவர்களின் பேச்சு தவறானது என மக்களுக்குச் சுட்டிக்காட்டும் திறமையுடையவராக மூப்பர் இருத்தல் வேண்டும். பயனற்ற இத்தகு பேச்சுக்களைப் பேசுவதை நிறுத்த வேண்டும். எதைப் போதிக்கக் கூடாதோ அதையெல்லாம் போதித்து எல்லாக் குடும்பங்களையும் அவர்கள் அழிக்கிறார்கள். மக்களை ஏமாற்றிச் செல்வம் சேர்க்கவே அவர்கள் இவ்வாறு போதிக்கிறார்கள். 12 கிரேத்தாவில் வசிக்கும் அவர்களின் சொந்த தீர்க்கதரிசி ஒருவர் கூட, “கிரேத்தா மக்கள் பொய்யர்கள், கெட்ட மிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்” என்று கூறி இருக்கிறார். 13 அந்தத் தீர்க்கதரிசி சொன்னதெல்லாம் உண்மைதான். எனவே அவர்கள் தவறானவர்கள் என்று கூறு. அவர்களிடம் நீ கண்டிப்பாக இரு. பிறகே அவர்கள் விசுவாசத்தில் பலம் பெறுவர். 14 இவ்விதம் யூதக் கதைகளைக் கவனித்துக் கேட்பதை அவர்கள் நிறுத்துவார்கள். உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிற அவர்களின் கட்டளைகளையும் பின்பற்றுவதையும் நிறுத்துவார்கள்.
15 தூய்மையானவர்களுக்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும். பாவம் நிறைந்தவர்களுக்கும், நம்பிக்கை அற்றவர்களுக்கும் எதுவும் தூய்மையாக இராது. உண்மையில் அவர்களின் எண்ணங்கள் பாவம் உடையதாகும். அவர்களின் மனசாட்சி அழிக்கப்பட்டது. 16 தேவனை அறிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்களைப் பார்த்தால் அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்ளாதது தெரியும். அவர்கள் பயங்கரமானவர்கள். அவர்கள் அடக்கமில்லாதவர்கள், அவர்களால் நன்மை செய்ய இயலாது.
உண்மையான போதனையைப் பின்பற்றுதல்
2 பின்பற்ற வேண்டிய உண்மையான போதனையை நீ மக்களுக்குக் கூற வேண்டும். 2 முதியவர்கள் சுயக் கட்டுப்பாடும், கௌரவமும் ஞானமும் உடையவர்களாக இருக்கப் போதனை செய். அவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும், பொறுமையிலும் உறுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.
3 மற்றும் வாழும் முறையில் பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு முதிய பெண்களிடம் போதனை செய். மற்றவர்களை எதிர்த்து எதையும் பேசவேண்டாம் என்றும், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகவேண்டாம் என்றும் சொல். அப்பெண்கள் நல்லதைப் போதிக்கவேண்டும். 4 அவ்வழியில், அவர்கள் இளம் பெண்களுக்குக் கணவன்மீதும் பிள்ளைகள் மீதும் அன்புகொள்ளுமாறு அறிவுறுத்த முடியும். 5 அவர்களுக்கு ஞானத்தோடும், பரிசுத்தத்தோடும் இருக்கும்படியும், வீட்டைப் பராமரித்தல், கருணை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றையும் அவர்கள் கற்பிக்க முடியும். பிறகு தேவன் நமக்குத் தந்த போதனைகளைப் பற்றி எவரும் விமர்சிக்க முடியாது.
6 அந்தப்படியே இளைஞர்களையும் ஞானமாயிருக்கும்படிக் கூறு. 7 இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். நேர்மையோடும் அக்கறையோடும் உன் போதனைகள் இருக்க வேண்டும். 8 பேசும்போது உண்மையையே பேசு. அதனால் எவரும் உன்னை விமர்சிக்க முடியாது. நமக்கு எதிராக எதையும் தவறாகச் சொல்ல முடியாத நிலையில் நம்மை எதிர்த்துப் பேச வரும் ஒவ்வொருவரும் வெட்கப்படுவர்.
9 அடிமைகளுக்கும் அறிவுரை கூறு. அவர்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானதையே செய்ய வேண்டும். அவர்கள் எதிர்வாதம் செய்யக்கூடாது. 10 அவர்கள் எஜமானர்களுக்கு உரியதைத் திருடக்கூடாது. அவர்கள் தம் நடத்தையின் மூலம் முழுக்க முழுக்க தாங்கள் நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டவேண்டும். நமது இரட்சகராகிய தேவனுடைய போதனைகள் நல்லவை எனப் புலப்படும்படி அவர்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும்.
11 நாம் வாழவேண்டிய வழி இது தான். ஏனென்றால் தேவனுடைய கிருபை வந்திருக்கிறது. அது அனைவரையும் இரட்சிக்கும். நமக்கும் அது தரப்பட்டிருக்கிறது. 12 தேவனுக்கு எதிராக வாழாமல் இருக்கவும், உலகம் விரும்புகிற தீய காரியங்களைச் செய்யாமல் இருக்கவும் அக்கருணை ஞானத்தையும், நீதியையும் போதிக்கிறது. தேவ பக்தியும் உடையவர்களாக இவ்வுலகில் வாழ அது கற்றுத்தருகிறது. 13 நமது மகா தேவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்குக் காத்திருக்கும்போது அவ்விதமாய் நாம் வாழவேண்டும். அவரே நமது பெரும் நம்பிக்கை. அவர் மகிமையுடன் வருவார். 14 நமக்காக அவர் தன்னையே தந்தார். அக்கிரமங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க அவர் இறந்தார். நற்செயல்களை எப்பொழுதும் செய்ய ஆர்வமாக இருக்கும் அவருக்குச் சொந்தமான மக்களாகிய நம்மைப் பரிசுத்த மனிதர்களாக்க அவர் இறந்தார்.
15 மக்களிடம் இவற்றைக் கூறு. உனக்கு முழு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தால் மக்களைப் பலப்படுத்து. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறு. நீ முக்கியமற்றவன் என மற்றவர்கள் உன்னை நடத்தும் அளவுக்கு எவரையும் அனுமதிக்காதே.
வாழ்வதற்கேற்ற சரியான வழி
3 கீழ்க்கண்டவற்றைச் செய்ய நினைவில் வைக்கும்படி மக்களிடம் சொல். ஆள்வோரின் அதிகாரிகளுக்கும் அரசு அலுவலகர்களுக்கும் அடங்கி இருக்கவும், நன்மை செய்யத் தயாராக இருக்கவும், 2 யாருக்கும் எதிராகத் தீமையைப் பேசாமல் இருக்கவும், கீழ்ப்படியவும், மற்றவர்களோடு சமாதானமாகவும், மென்மையாகவும் எல்லா மனிதர்களிடமும் மரியாதை காட்டவும் இதனை விசுவாசிகளிடம் கூறு.
3 கடந்த காலத்தில் நாமும் முட்டாளாக இருந்தோம். நம்மிடம் கீழ்ப்படிதல் இல்லை. தவறுகிறவர்களாக நாம் இருந்தோம். பலவித ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தோம். தீயவற்றைச் செய்து, பொறாமையோடு வாழ்ந்தோம். மக்கள் நம்மை வெறுத்தார்கள். நாமும் ஒருவரையொருவர் வெறுத்தோம். 4 ஆனால் பிறகு, இரட்சகராகிய தேவனுடைய கிருபையும், அன்பும் வெளிப்படுத்தப்பட்டன. 5 தேவனுடன் சரியான வகையில் இருக்கும்பொருட்டு நாம் செய்த எந்த நல்ல செயல்களாலும் இரட்சிக்கப்படவில்லை. அவருடைய கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டோம். நம்மைப் புதிய மனிதர்களாக்கும் சுத்திகரிப்பின் மூலமும், பரிசுத்த ஆவியின் புதுப்பிக்கும் வல்லமை மூலமும், அவர் இரட்சித்தார். 6 அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அந்தப் பரிசுத்த ஆவியை நம் மீது முழுமையாகப் பொழிந்தார். 7 தேவனது கிருபையால் நாம் அவரோடு நீதிமான்களானோம். தேவன் நமக்கு ஆவியைக் கொடுத்தார். அதனால் நாம் நித்திய வாழ்வைப் பெறமுடியும். அதுவே நாம் நம்பிக்கொண்டிருப்பதும் ஆகும். 8 இந்தப் போதனை உண்மையானது.
மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தேவனை நம்பும் மக்கள் தம் வாழ்வை நன்மை செய்வதற்குப் பயன்படுத்த எச்சரிக்கையாக இருப்பர். இவை நல்லவை, எல்லா மக்களுக்கும் பயன் உள்ளவை.
9 முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற குடும்பக் கதைகளைப் பேசுவோர், சண்டைகளைத் தூண்டி விடுவோர், மோசேயின் சட்டங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வோர் ஆகியோரிடமிருந்து விலகி இரு. அவை எதற்கும் பயனற்றவை, யாருக்கும் உதவாதவை. 10 எவனாவது வாக்குவாதங்களை உருவாக்கினால் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்தால் மேலும் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தால் அவனது தொடர்பை விட்டுவிடு. 11 ஏனென்றால் இப்படிப்பட்ட ஒருவன் நிலை தவறி, பாவம் செய்கிறவனாக இருக்கிறான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். இவனது பாவங்களே இவன் தவறானவன் என்பதை நிரூபிக்கிறது.
நினைவில் வைக்கவேண்டியவை
12 நான் உங்களிடம் அர்த்தெமாவையும் தீகிக்குவையும் அனுப்புவேன். அவர்களை நான் அனுப்புகிறபொழுது நீ நிக்கொப்போலிக்கு வந்து என்னைப் பார்க்க முயற்சி செய். நான் மழைக்காலத்தில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துள்ளேன். 13 வழக்கறிஞனான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் எவ்விதக் குறைவும் இல்லாதபடி அவர்களை அனுப்பிவை. தமக்குத் தேவையான அனைத்தையும் அடைய அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவிசெய். 14 நன்மை செய்வதற்குரியதாகத் தம் வாழ்வைப் பயன்படுத்தும்படி நம் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேவையானவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். பிறகு அவர்களின் வாழ்வு பயனற்றதாக இருக்காது.
15 என்னுடன் இருக்கிற எல்லாரும் உனக்கு வாழ்த்து கூறுகின்றனர். விசுவாசத்தில் நம்மை சிநேகிக்கிறவர்களுக்கு நீயும் வாழ்த்து கூறு.
உங்கள் அனைவரோடும் தேவனுடைய கிருபை இருப்பதாக.
1 இயேசு கிறிஸ்துவுக்காக சிறைப்பட்டிருக்கிற பவுலும் சகோதரனாகிய தீமோத்தேயுவும் எழுதுவது,
எங்கள் அன்புக்குரிய நண்பனும் எங்களோடு பணியாற்றுகிறவனுமாகிய பிலேமோனுக்கு எழுதுவது: 2 எங்கள் சகோதரியாகிய அப்பியாவுக்கும், எங்களோடுள்ள ஊழியனாகிய அர்க்கிப்புவுக்கும் உங்கள் வீட்டிலே கூடி வருகிற சபைக்கும் எழுதுவது:
3 நமது பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாகட்டும்.
பிலேமோனின் அன்பும் விசுவாசமும்
4 என் பிரார்த்தனைகளில் உங்களை நினைத்துக்கொள்கிறேன். நான் எப்போதும் உங்களுக்காக தேவனிடம் நன்றி செலுத்துகிறேன். 5 கர்த்தராகிய இயேசுவிடம் நீங்கள் கொண்ட விசுவாசத்தையும் தேவனுடைய பரிசுத்தமான அனைத்து மக்களிடமும் நீங்கள் கொண்ட அன்பையும் பற்றி நான் கேள்விப்படுகிறேன். உங்கள் விசுவாசத்துக்கும் அன்புக்கும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 6 இயேசுவில் நாம் கொண்டுள்ள எல்லா நல்லவற்றையும் நீங்கள் புரிந்துகொள்ள, நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விசுவாசம் உதவட்டும் என நான் பிரார்த்திக்கிறேன். 7 எனது சகோதரனே! தேவனுடைய மக்களிடம் நீ அன்பாக இருந்தாய். அவர்களை மகிழ்ச்சிகொள்ளச் செய்தாய். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது.
சகோதரனைப் போல ஏற்றுக்கொள்
8 நீங்கள் செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன. நான் உங்களுக்குக் கட்டளையிட முடியும். கிறிஸ்துவில் நம்முடைய உறவானது அப்படிச் செய்யும் உரிமையைக் கொடுக்கிறது என நான் உணருகிறேன். 9 ஆனால், நான் உங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக அன்பினிமித்தம் நான் இவற்றைச் செய்யுமாறு உங்களை கேட்கிறேன். நான் பவுல். இப்போது நான் ஒரு முதியவன். இயேசு கிறிஸ்துவுக்காகச் சிறைப்பட்டவன். 10 என் மகன் ஒநேசிமுக்காக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் சிறையில் இருந்தபோது அவன் எனக்கு விசுவாசத்தில் மகன் ஆனான். 11 கடந்த காலத்தில் அவன் உங்களுக்குப் பயனற்றவனாக இருந்தான். ஆனால் இப்பொழுதோ அவன் உங்களுக்கும் எனக்கும் பயனுள்ளவன்.
12 நான் அவனை உங்களிடம் மீண்டும் அனுப்புகிறேன். அவனுடன் என் இதயத்தையும் சேர்த்து அனுப்புகிறேன். 13 நற்செய்திக்காகச் சிறைப்பட்டிருக்கிற எனக்கு சேவை செய்வதற்காக அவனை என்னோடு வைத்திருக்க விரும்பினேன். எனக்குக் கிடைக்கும் அவன் உதவி எனக்கு உதவுவதன்மூலம் உண்மையில் உங்களிடமிருந்து வருகிறது. 14 ஆனால் முதலில் உங்களைக் கேட்டுக்கொள்ளாமல் நான் எதையும் செய்ய விரும்பவில்லை. அதற்குப் பின்பு எனக்காக நீங்கள் செய்கிற நல்ல காரியங்கள், என்னுடைய வற்புறுத்தலுக்காக அல்லாமல் நீங்களாகவே விரும்பிச் செய்தவையாக இருக்கும்.
15 கொஞ்சக் காலமாக ஒநேசிமு உங்களை விட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை என்றென்றைக்குமாக நீங்கள் அவனைத் திரும்பப் பெறும் பொருட்டு இது நிகழ்ந்தது. 16 இனிமேல் ஒரு அடிமையாக அல்ல, அடிமைக்கும் மேலானவனாக, அன்புகுரிய சகோதரனாக இருப்பான். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் அதைவிட மேலாக நேசிக்க வேண்டும். கர்த்தருக்குள் அவனை மனிதனாகவும் நல்ல சகோதரனாகவும் நீங்கள் நேசிக்கவேண்டும்.
17 நீங்கள் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால், பிறகு அவனையும் திரும்பவும் ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை வரவேற்பது போலவே அவனையும் வரவேற்றுக்கொள்ளுங்கள். 18 அவன் உங்களிடம் ஏதாவது ஒருவகையில் செய்த குற்றங்களையும் கடன்களையும், என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். 19 நான் பவுல். நானே என் கையால் உங்களுக்கு இதனை எழுதுகிறேன். நான் ஒநேசிமுவின் கடனைத் தீர்த்துவிடுவேன். உங்கள் வாழ்வுக்காக நீங்கள் என்னிடம் கடன்பட்டுள்ளதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லமாட்டேன். 20 எனவே என் சகோதரனே! ஒரு கிறிஸ்தவன் என்கிற முறையில் எனக்குச் செய்யப்படும் ஒரு உதவியாக நீங்கள் அதைச் செய்யவேண்டும் எனக் கேட்கிறேன். கிறிஸ்துவுக்குள் என் இதயத்தை ஆறுதல்படுத்துங்கள். 21 நான் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக நீங்கள் எனக்குச் செய்வீர்கள் என்று அறிவேன். இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்ற உறுதி எனக்கு இருப்பதால் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
22 மேலும் நான் தங்குவதற்காக ஓர் இடத்தை ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் வேண்டுதலுக்கு தேவன் செவிசாய்ப்பார் என்று நான் நம்புகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் மூலமாக நான் உங்களிடம் வர முடியும் என்றும் நம்புகிறேன்.
இறுதி வாழ்த்துக்கள்
23 இயேசு கிறிஸ்துவுக்காக எப்பாப்பிராவும் என்னோடு சிறைவைக்கப்பட்டிருக்கிறான். அவனும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறான். 24 மாற்கு, அரிஸ்தர்க்கு, தோமா, லூக்கா போன்றோரும் உங்களுக்கு வாழ்த்துரைக்கிறார்கள். இவர்கள் என்னோடு பணியாற்றுகிறார்கள்.
25 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக.
2008 by World Bible Translation Center