Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 1-16

உலகத்தின் தொடக்கம்

துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

முதல் நாள்-வெளிச்சம்

அப்பொழுது தேவன், “வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. தேவன் வெளிச்சத்தைப் பார்த்தார். அது நல்லதென்று அறிந்துகொண்டார். பிறகு தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார்.

மாலையும் காலையும் ஏற்பட்டது. இதுவே முதல் நாளாயிற்று.

இரண்டாம் நாள்-வானம்

பிறகு தேவன், “இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது!” என்றார். தேவன் காற்றின் விரிவை உருவாக்கி, தண்ணீரைத் தனியாகப் பிரித்தார். தண்ணீரில் ஒரு பகுதி காற்றிற்கு மேலேயும், மறுபகுதி காற்றிற்குக் கீழேயும் ஆனது. தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது இரண்டாம் நாள் ஆகும்.

மூன்றாம் நாள்-வறண்ட நிலமும் செடிகொடிகளும்

பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று. 10 தேவன் அந்த காய்ந்த நிலத்துக்கு “பூமி” என்று பெயரிட்டார். ஒன்று சேர்ந்த தண்ணீருக்கு தேவன் “கடல்” என்று பெயரிட்டார். தேவன் இது நல்லது என்று கண்டார்.

11 பிறகு தேவன், “பூமியில் புல்லும் விதைகளைத் தரும் செடிகளும் கனிதருகிற மரங்களும் உருவாகட்டும். கனிமரங்கள் விதைகளை உடைய கனிகளை உருவாக்கட்டும். ஒவ்வொரு செடிகொடிகளும் தங்கள் இனத்தை உண்டாக்கக்கடவது. இவை பூமியிலே வளரட்டும்” என்று சொன்னார். அவ்வாறே ஆயிற்று. 12 பூமி புல்லையும் தானியங்களைக் கொடுக்கும் செடிகளையும் முளைப்பித்தது. பூமி விதைகளைக்கொண்ட பழங்களைக் கொடுக்கும் மரங்களை முளைப்பித்தது. ஒவ்வொரு செடியும் தனக்கேயுரிய இனத்தை உருவாக்கியது. தேவன் இது நல்லதென்று கண்டார்.

13 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது மூன்றாம் நாளாயிற்று.

நான்காவது நாள்-சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்

14 பிறகு தேவன், “வானத்தில் வெளிச்சம் உண்டாகட்டும், இந்த வெளிச்சமானது பகலையும் இரவையும் பிரிக்கட்டும். இந்த வெளிச்சங்கள் காலங்களையும் நாட்களையும் ஆண்டுகளையும் குறிப்பதாக இருக்கட்டும். 15 இந்த வெளிச்சங்கள் வானத்திலிருந்து பூமிக்கு ஒளி தரட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

16 தேவன் இரண்டு மகத்தான ஒளிச்சுடர்களை உண்டுபண்ணினார். தேவன் பெரிய ஒளிச்சுடரைப் பகலை ஆண்டுகொள்ளவும், சிறிய ஒளிச்சுடரை இரவை ஆண்டுகொள்ளவும் செய்தார். நட்சத்திரங்களையும் தேவன் உருவாக்கினார். 17 தேவன் இந்த ஒளிச்சுடர்களைப் பூமிக்கு வெளிச்சம் தரும்படி வானத்தில் வைத்தார். 18 இரவையும் பகலையும் ஆள்வதற்கு இந்த ஒளிச்சுடர்களைத் தேவன் வானத்தில் ஏற்படுத்தினார். இவை வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வேறுபாட்டை உண்டாக்கிற்று. இது நல்லது என்று தேவன் கண்டுகொண்டார்.

19 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது நான்காம் நாள்.

ஐந்தாம் நாள்-மீன்களும் பறவைகளும்

20 பிறகு தேவன், “தண்ணீரானது திரளான உயிரினங்களை தோற்றுவிப்பதாக, பூமியிலும் வானத்திலும் பறப்பதற்காக பறவைகள் உருவாகட்டும்” என்றார். 21 பிறகு தேவன் கடலில் வாழும் பெரிய உயிரினங்களை உருவாக்கினார். கடலுக்குள் அலைந்து திரிகிற ஏராளமான உயிரினங்களைப் படைத்தார். பல்வேறு வகையான கடல் வாழ் உயிர்களையும் படைத்தார். வானத்தில் பறந்து திரிகிறதற்கு பல்வேறுவகைப் பறவைகளையும் படைத்தார். தேவன் இது நல்லது என்று கண்டார்.

22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, இனப் பெருக்கம் செய்து, எண்ணிக்கையில் விருத்தியடைந்து கடல் தண்ணீரை நிரப்புங்கள், மேலும் பறவைகள் பூமியில் பெருகட்டும் என்று சொன்னார்.

23 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஐந்தாம் நாள் ஆயிற்று.

ஆறாவது நாள்-மிருகங்களும் மனிதர்களும்

24 பிறகு தேவன், “பூமியானது, கால் நடைகள், ஊர்வன, காட்டு மிருகங்கள் முதலியனவற்றை அதனதன் இனத்திற்கு ஏற்ப தோற்றுவிப்பதாக” என்றார். அவை அப்படியே உண்டானது.

25 இவ்வாறு, தேவன் எல்லாவகையான மிருகங்களையும் படைத்தார். அவர் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும், பூமியில் ஊர்ந்து செல்லும் விதவிதமான உயிரினங்களையும் படைத்தார். இவை நல்லதென்று தேவன் கண்டுகொண்டார்.

26 அதன் பிறகு தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னார்.

27 எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனுகுலத்தைப் படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். 28 தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களிடம், “பிள்ளைகளைப் பெற்று விருத்தியடையுங்கள், பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளுங்கள். கடலில் உள்ள மீன்களையும் வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளுங்கள். பூமியில் அலைந்து திரிகின்ற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்றார்.

29 மேலும் தேவன், “நான் உங்களுக்குத் தானியங்களைத் தரும் அனைத்து வகைப் பயிரினங்களையும், எல்லாவகையான பழ மரங்களையும் தருகிறேன். அந்த மரங்கள் விதைகளோடு கூடிய கனிகளைத் தரும். அந்த விதைகளும் கனிகளும் உங்களுக்கு உணவாகும். 30 நான் புல் பூண்டுகளையெல்லாம் மிருகங்களுக்காகக் கொடுத்துள்ளேன். புல் பூண்டுகள் அவற்றுக்கு உணவாக இருக்கும். பூமியில் உள்ள அனைத்து மிருகங்களும் வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தரையில் ஊர்கின்ற அனைத்து சிறு உயிரினங்களும் அவற்றை உணவாகக்கொள்ளும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

31 தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார்.

மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று.

ஏழாவது நாள்-ஓய்வு

பூமியும் வானமும் அவற்றிலுள்ள யாவும் படைக்கப்பட்டு முடிந்தது. தேவன் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். ஆகையால் ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்தார். தேவன் ஏழாவது நாளை ஆசீர்வதித்து அதனைப் பரிசுத்தமாக்கினார். அவர் அன்றைக்குத் தமது படைப்பு வேலைகளையெல்லாம் நிறைவு செய்துவிட்டு ஓய்வெடுத்ததால் அந்த நாள் சிறப்புக்குரியதாயிற்று.

மனித குலத்தின் தொடக்கம்

இதுதான் பூமி மற்றும் வானம் தோன்றின வரலாறாகும். இதுதான் தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, நடந்தவற்றைப்பற்றிக் கூறும் விபரங்களாகும். பூமியில் எந்தத் தாவரமும் இல்லாமல் இருந்தது. வயலிலும் அதுவரை எதுவும் வளரவில்லை. எந்தப் பகுதியிலும் எந்தச் செடிகொடிகளும் இல்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் இன்னும் மண்ணில் மழை பெய்யச் செய்யவில்லை. பூமியில் விவசாயம் செய்ய மனுக்குலம் எதுவும் இல்லை.

பூமியிலிருந்து தண்ணீர் [a] எழும்பி நிலத்தை நனைத்தது. பிறகு தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான். பிறகு தேவனாகிய கர்த்தர் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டத்தை அமைத்து அதற்கு ஏதேன் என்று பெயரிட்டார். தேவனாகிய கர்த்தர் தாம் உருவாக்கிய மனிதனை அத்தோட்டத்தில் வைத்தார். தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக் கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்டத்தில் வளரும்படிச் செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார்.

10 ஏதேன் தோட்டத்தில் தண்ணீர் பாய ஒரு ஆற்றையும் படைத்தார். அந்த ஆறு நான்கு சிறு ஆறுகளாகவும் பிரிந்தது. 11 அந்த முதல் ஆற்றின் பெயர் பைசோன். அந்த ஆறு ஆவிலா நாடு முழுவதும் ஓடிற்று. 12 அந்த நாட்டில் தங்கம் இருந்தது. அத்தங்கம் நன்றாக இருந்தது. அங்கு வாசனைப் பொருள்களும் கோமேதகக் கல்லும் இருந்தன. 13 இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதும் ஓடிற்று. 14 மூன்றாவது ஆற்றின் பெயர் இதெக்கேல் அது அசீரியாவுக்கு கிழக்கே பாய்ந்தது. நான்காவது ஆற்றின் பெயர் ஐபிராத்து.

15 தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அதனைப் பராமரிக்கவும், காக்கவும் செய்தார். 16 தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “இந்த தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீ உண்ணலாம். 17 ஆனால் நன்மை தீமை பற்றிய அறிவைக் கொடுக்கக் கூடிய மரத்தின் கனியைமட்டும் உண்ணக் கூடாது. அதனை உண்டால் நீ மரணமடைவாய்” என்றார்.

முதல் பெண்

18 மேலும் தேவனாகிய கர்த்தர், “ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்” என்றார்.

19 தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து காட்டிலுள்ள அனைத்து மிருகங்களையும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளையும் படைத்து அவைகளை மனிதனிடம் கொண்டு வந்தார். அவன் அவை ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தான். 20 மனிதன் வீட்டு மிருகங்களுக்கும், வானில் பறக்கும் பறவைகளுக்கும், காட்டிலுள்ள மிருகங்களுக்கும் பெயர் வைத்தான். மனிதன் எல்லா மிருகங்களையும் பறவைகளையும் கண்டான். எனினும் அவனுக்கு ஏற்ற துணை காணவில்லை. 21 எனவே, தேவனாகிய கர்த்தர் அவனை ஆழ்ந்து தூங்க வைத்தார். அவன் தூங்கும்போது அவர் அவனது சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, அந்த இடத்தை சதையால் மூடிவிட்டார். 22 தேவனாகிய கர்த்தர் அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, அந்தப் பெண்ணை மனிதனிடம் அழைத்து வந்தார். 23 அப்பொழுது அவன்,

“இறுதியில் என்னைப்போலவே ஒருத்தி;
    அவளது எலும்பு என் எலும்பிலிருந்து உருவானவை.
    அவளது உடல் எனது உடலிலிருந்து உருவானது.
அவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டாள்.
    அதனால் அவளை மனுஷி என்று அழைப்பேன்” என்றான்.

24 அதனால் தான் மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர்.

25 மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

பாவத்தின் தொடக்கம்

தேவனாகிய கர்த்தரால் படைக்கப்பட்ட விலங்குகளிலேயே பாம்பானது மிகவும் தந்திர குணமுள்ளதாயிருந்தது. அது அவளிடம், “பெண்ணே! தேவன் உங்களிடம் இத்தோட்டத்தில் உள்ள மரத்தின் பழங்களை உண்ணக்கூடாது என்று உண்மையில் கூறினாரா?” என்று கேட்டது.

அந்தப் பெண்ணும் பாம்புக்கு, “இல்லை! தேவன் அவ்வாறு சொல்லவில்லை. நாங்கள் இத்தோட்டத்தில் எல்லா மரங்களின் கனிகளையும் உண்ணலாம். ஆனால் ‘இத்தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்தின் கனியை உண்ணக் கூடாது. அம்மரத்தைத் தொடவும் கூடாது. இதை மீறினால் மரணமடைவீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்” எனப் பதில் சொன்னாள்.

ஆனால் பாம்போ அவளிடம், “நீங்கள் மரிக்கமாட்டீர்கள். தேவனுக்குத் தெரியும், நீங்கள் அதன் கனியை உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், நன்மை தீமை பற்றிய அறிவைப் பெறுவீர்கள். நீங்களும் தேவனைப்போன்று ஆவீர்கள்” என்றது.

அந்தப் பெண் அந்த மரம் அழகாக இருப்பதைக் கண்டாள். அதன் கனியும் உண்பதற்கு ஏற்றதாக இருப்பதை அறிந்தாள். அப்பழம் தன்னை அறிவாளியாக்கும் என்பதை எண்ணி அவள் பரவசமடைந்தாள். எனவே அவள் அம்மரத்தின் கனியை எடுத்து உண்டதுடன், அவள் தன் கணவனுக்கும் அதைக் கொடுத்தாள். அவனும் அதை உண்டான்.

இதனால் அவர்களின் கண்கள் திறந்தன. அவர்கள் தாங்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பதை அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் அத்தி மரத்தின் இலைகளை எடுத்து அவற்றைத் தைத்து ஆடையாக அணிந்துகொண்டனர்.

பகலின் குளிர்ச்சியான வேளையில் தேவனாகிய கர்த்தர் அத்தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார். மனிதனும், மனுஷியும் அவருடைய சத்தத்தைக் கேட்டுப் பயந்து தோட்டத்திலிருந்த மரங்களுக்கு இடையில் தங்களை மறைத்துக்கொண்டார்கள். ஆனால் தேவனாகிய கர்த்தர் மனிதனை அழைத்து, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார்.

10 அதற்கு அவன், “நீர் தோட்டத்தில் நடந்து போவதைக் கண்டேன். எனக்குப் பயமாக உள்ளது. நான் நிர்வாணமாக இருப்பதால் மறைந்திருக்கிறேன்” என்றான்.

11 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “நீ நிர்வாணமாக இருப்பதாக யார் உனக்குச் சொன்னது? நீ உண்ண வேண்டாம் என்று நான் கூறியிருந்த மரத்தின் கனியை உண்டாயா?” என்று அவனிடம் கேட்டார்.

12 அதற்கு அவன், “எனக்காக உம்மால் படைக்கப்பட்ட இந்தப் பெண் அந்த மரத்தின் கனியைக் கொடுத்தாள். நான் உண்டுவிட்டேன்” என்றான்.

13 பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம், “நீ என்ன காரியத்தைச் செய்தாய்?” என்று கேட்டார்.

அதற்கு அவள், “பாம்பு என்னை வஞ்சித்துவிட்டது. எனவே நான் பழத்தை உண்டுவிட்டேன்” என்றாள்.

14 எனவே தேவனாகிய கர்த்தர் பாம்பிடம்:

“நீ இந்தத் தீய செயலைச் செய்தபடியால்,
மற்ற எந்த மிருகத்தை விடவும்
    நீ மிகவும் துன்பப்படுவாய்.
நீ உன் வயிற்றாலேயே ஊர்ந்து திரிவாய்.
    வாழ்நாள் முழுவதும் மண்ணைத் தின்று உயிர்வாழ்வாய்.
15 உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன்.
    அதோடு உன் பிள்ளைகளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் பகை உண்டாக்குவேன்.
அவள் பிள்ளையின் காலை நீ கடிப்பாய்,
    அவர் உன் தலையை நசுக்குவார்” என்று சொன்னார்.

16 பிறகு தேவனாகிய கர்த்தர் பெண்ணிடம்:

“நீ கருவுற்றிருக்கும்போது
    உனது வேதனையை அதிகப்படுத்துவேன்.
அதுபோல் நீ பிரசவிக்கும்போதும்
    அதிக வேதனைப்படுவாய்.
உனது ஆசை உன் கணவன் மேலிருக்கும்.
    அவன் உன்னை ஆளுகை செய்வான்” என்றார்.

17 பின்பு தேவனாகிய கர்த்தர் ஆணிடம்:

“அந்த மரத்தின் கனியை உண்ணக் கூடாது என்று உனக்கு ஆணையிட்டிருந்தேன்.
    ஆனால் நீ உன் மனைவியின் பேச்சைக் கேட்டு அந்த கனியை உண்டுவிட்டாய்.
ஆகையால் உன்னிமித்தம் இந்தப் பூமி சபிக்கப்பட்டிருக்கும்.
    எனவே நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மிகுந்த கஷ்டத்துடன் பூமியின் பலனைப் பெறுவாய்.
18 இந்தப் பூமி உனக்கு முள்ளையும் களையையும் தரும்.
    விளையும் பயிர்களை நீ உண்பாய்.
19 உனது முகம் வேர்வையால் நிறையும்படி
    கஷ்டப்பட்டு உழைத்து உனது உணவை உண்பாய்.
மரிக்கும்வரை நீ கஷ்டப்பட்டு உழைப்பாய்.
உன்னை மண்ணால் உருவாக்கினேன்.
    நீ மரிக்கும்போது மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.

20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனென்றால் அவள் உயிரோடுள்ள அனைவருக்கும் தாயாக விளங்குபவள்.

21 தேவனாகிய கர்த்தர் மிருகங்களின் தோலை ஆடையாக்கி அவனுக்கும் அவளுக்கும் அணிந்துகொள்ளக் கொடுத்தார்.

22 பின்பு தேவனாகிய கர்த்தர், “இதோ, நன்மை தீமை அறிந்தவனாக மனிதன் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுது மனிதன் ஜீவமரத்தின் பழத்தை எடுத்து உண்டால் என்றென்றும் உயிருடன் இருப்பான்” என்றார்.

23 ஆகையால் அவர்களை தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். ஆதாம் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறி தான் உருவாக்கப்பட்ட மண்ணிலேயே உழைக்கும்படி வலியுறுத்தப்பட்டான். 24 தேவனாகிய கர்த்தர் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்திவிட்டு அதனைப் பாதுகாக்க தோட்டத்தின் நுழை வாசலில் கேருபீன்களை வைத்தார். அதோடு தேவனாகிய கர்த்தர் நெருப்பு வாளையும் வைத்தார். அது மின்னிக்கொண்டு, ஜீவமரத்துக்குச் செல்லும் வழியைச் சுற்றிக் காவல் செய்தது.

முதல் குடும்பம்

ஆதாமும் அவன் மனைவியும் பாலின உறவு கொண்டனர். அவள் கர்ப்பமுற்று காயீன் என்ற ஒரு மகனைப் பெற்றெடுத்து, நான், “கர்த்தரின் உதவியால் ஒரு மனிதனைப் பெற்றுள்ளேன்” என்றாள்.

அதன் பிறகு ஏவாள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவன் காயீனின் சகோதரனான ஆபேல். ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும், காயீன் ஒரு விவசாயியாகவும் வளர்ந்தனர்.

முதல் கொலை

3-4 அறுவடைக் காலத்தில் காயீன் தன் வயலில் விளைந்த தானியங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு போனான். ஆனால் ஆபேல் தன் மந்தையிலிருந்து சில சிறந்த ஆடுகளைக் கொண்டு போனான்.

கர்த்தர் ஆபேலையும், அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் துக்கமும் கோபமும் கொண்டான். கர்த்தர் அவனிடம், “ஏன் நீ கோபமாயிருக்கிறாய்? ஏன் உன் முகத்தில் கவலை தெரிகிறது. நீ நன்மை செய்திருந்தால் எனக்கு விருப்பமானவனாக இருந்திருப்பாய். நானும் உன்னை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் நீ தீமை செய்தால் பிறகு அந்தப் பாவம் உன் வாழ்வில் இருக்கும். உனது பாவம் உன்னை அடக்கி ஆள விரும்பும். நீயோ உன் பாவத்தை அடக்கி ஆளவேண்டும்” [b] என்றார்.

காயீன் தனது சகோதரன் ஆபேலிடம். “வயலுக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலுக்குப் போனார்கள். அங்கே காயீன் தன் தம்பியைத் தாக்கிக் கொலை செய்துவிட்டான்.

பிறகு கர்த்தர் காயீனிடம், “உனது சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்றான்.

10-11 அதற்குக் கர்த்தர், “நீ என்ன காரியம் செய்தாய்? நீ உன் சகோதரனைக் கொன்றுவிட்டாய். பூமியிலிருந்து அவனது இரத்தம் என்னைக் கூப்பிடுகிறதே. இப்பொழுது அவனது இரத்தத்தை உன் கைகளிலிருந்து வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த, இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். 12 கடந்த காலத்தில் நீ பயிர் செய்தவை நன்றாக விளைந்தன. ஆனால் இனிமேல் நீ பயிரிடுபவை விளையாதவாறு இந்த பூமி தடை செய்யும். இந்தப் பூமியில் நிலையில்லாமல் ஒவ்வொரு இடமாக அலைந்துகொண்டிருப்பாய்” என்றார்.

13 பிறகு காயீன், “என்னால் தாங்கிக்கொள்ள இயலாதவாறு இந்தத் தண்டனை அதிகமாக இருக்கிறது. 14 எனது பூமியை விட்டுப் போகுமாறு நீர் என்னை வற்புறுத்துகின்றீர். நான் உமது பார்வையிலிருந்து மறைவேன். எனக்கென்று ஒரு வீடு இருக்காது. பூமியில் ஒவ்வொரு இடமாக அலையும்படி நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறேன். என்னைப் பார்க்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான்.

15 பிறகு கர்த்தர் காயீனிடம், “அவ்வாறு நடக்குமாறு நான் விடமாட்டேன். எவராவது உன்னைக் கொன்றால் நான் அவர்களை மிகுதியாகத் தண்டிப்பேன்” என்றார். ஆகையால் கர்த்தர் காயீன்மீது ஒரு அடையாளம் இட்டார். அதனால் எவரும் அவனைக் கொல்லமாட்டார்கள் என்றார்.

காயீன் குடும்பம்

16 காயீன் கர்த்தரைவிட்டு விலகிப்போய் ஏதேனின் கிழக்கிலிருந்த நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.

17 காயீன் தன் மனைவியுடன் பாலின உறவு கொண்டபோது அவள் ஏனோக் என்னும் பெயருள்ள மகனைப் பெற்றாள். காயீன் ஒரு நகரத்தை உருவாக்கி அதற்குத் தன் மகனின் பெயரை வைத்தான்.

18 ஏனோக்குக்கு ஈராத் என்னும் மகன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் என்ற மகன் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் என்ற மகன் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக் என்ற மகன் பிறந்தான்.

19 லாமேக் இரண்டு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதாள், இன்னொருத்தியின் பெயர் சில்லாள். 20 ஆதாள் யாபாலைப் பெற்றாள். யாபால் கூடாரத்தில் வாழ்பவர்களுக்கும், மந்தையை மேய்க்கிறவர்களுக்கும் தந்தை ஆனான். 21 ஆதாளுக்கு யூபால் என்று இன்னொரு மகன் இருந்தான். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் போன்றோருக்குத் தந்தை ஆனான். 22 சில்லாள் தூபால்-காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் தந்தை ஆனான். தூபால் காயீனுக்கு, நாமாள் என்ற சகோதரி இருந்தாள்.

23 லாமேக்கு தன் மனைவிகளிடம்,

“ஆதாளே, சில்லாளே என் பேச்சைக் கேளுங்கள்.
    நீங்கள் லாமேக்கின் மனைவியர், நான் சொல்வதைக் கவனியுங்கள்.
என்னை ஒருவன் துன்புறுத்தினான், அவனை நான் கொன்றேன்.
    என்னுடன் இளைஞன் மோதினான், எனவே அவனையும் கொன்றேன்.
24 காயீனின் கொலைக்காக கொடுக்கப்பட்ட தண்டனை மிகப்பெரியது.
    என்னைக் கொல்வதால் கிடைக்கும் தண்டனையும் மிக அதிகமாகவே இருக்கும்” என்றான்.

ஆதாம்-ஏவாளுக்கு புதிய மகன் பிறந்தது

25 ஆதாம் ஏவாளோடு பாலின் உறவு கொண்டான். ஏவாள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்குச் சேத் என்று பெயரிட்டனர். ஏவாள், “தேவன் எனக்கு இன்னொரு மகனைக் கொடுத்திருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றான். ஆனால் நான் சேத்தைப் பெற்றேன்” என்றாள். 26 சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பெயர் வைத்தான். அப்பொழுது மனிதர்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தனர். [c]

ஆதாமின் குடும்ப வரலாறு

இது ஆதாமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி. தேவன் மனிதரைத் தம் சாயலிலேயே படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களைப் படைத்த அந்நாளிலேயே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு “மனிதர்” என்று பெயரிட்டார்.

ஆதாமுக்கு 130 வயது ஆன பிறகு இன்னொரு மகன் பிறந்தான். அவன் ஆதாமைப்போலவே இருந்தான். ஆதாம் அவனுக்கு சேத் என்று பெயர் வைத்தான். சேத் பிறந்த பிறகும் ஆதாம் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் ஆதாமுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். எனவே ஆதாம் மொத்தமாக 930 ஆண்டுகள் வாழ்ந்து, மரணமடைந்தான்.

சேத்துக்கு 105 வயதானபோது அவனுக்கு ஏனோஸ் என்ற மகன் பிறந்தான். ஏனோஸ் பிறந்த பிறகு சேத் 807 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். சேத் மொத்தம் 912 ஆண்டுகள் வாழ்ந்து பிறகு மரணமடைந்தான்.

ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்கு கேனான் என்ற மகன் பிறந்தான். 10 கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 11 ஏனோஸ் 905 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் மரணமடைந்தான்.

12 கேனானுக்கு 70 வயதானபோது அவனுக்கு மகலாலேயேல் என்ற மகன் பிறந்தான். 13 மகலாலேயேல் பிறந்த பிறகு கேனான் 840 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 14 ஆகவே கேனான் 910 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

15 மகலாலேயேல் 65 வயதானபோது அவனுக்கு யாரேத் என்ற மகன் பிறந்தான். 16 யாரேத் பிறந்த பின் மகலாலேயேல் 830 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 17 மகலாலேயேல் 895 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

18 யாரேத்துக்கு 162 வயதானபோது அவனுக்கு ஏனோக் என்ற மகன் பிறந்தான். 19 ஏனோக் பிறந்த பின் யாரேத் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 20 யாரேத் மொத்தம் 962 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

21 ஏனோக்குக்கு 65 வயதானபோது அவனுக்கு மெத்தூசலா என்ற மகன் பிறந்தான். 22 மெத்தூசலா பிறந்தபின் ஏனோக் 300 ஆண்டுகள் தேவனோடு வழிநடந்தான். அக்காலத்தில் அவன் ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். 23 அவன் மொத்தம் 365 ஆண்டுகள் வாழ்ந்தான். 24 ஒரு நாள் ஏனோக் தேவனோடு நடந்துகொண்டிருக்கும்போதே அவன் மறைந்து போனான். தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

25 மெத்தூசலாவுக்கு 187 வயதானபோது அவனுக்கு லாமேக் என்ற மகன் பிறந்தான். 26 லாமேக் பிறந்தபின் மெத்தூசலா 782 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். 27 மெத்தூசலா 969 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

28 லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். 29 அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். அவன், “நாம் விவசாயிகளாக பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியைச் சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்” என்றான்.

30 நோவா பிறந்தபின், லாமேக் 595 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவன் ஆண் பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். 31 லாமேக் மொத்தம் 777 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

32 நோவாவுக்கு 500 வயதானபின் அவனுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் ஆண்பிள்ளைகள் பிறந்தனர்.

ஜனங்கள் தீயவர்களாக மாறுதல்

பூமியில் ஜனங்கள் தொகை பெருக ஆரம்பித்தது. அவர்களுக்குப் பெண் பிள்ளைகள் ஏராளமாகப் பிறந்தனர். தேவ குமாரர்கள் மானிடப் பெண்களை அதிக அழகுள்ளவர்கள் எனக் கண்டு, தாங்கள் விரும்பியபடி பெண்களைத் தேர்ந்தெடுத்து மணந்துகொண்டனர்.

அப்பெண்களும் பிள்ளைகளைப் பெற்றனர். அந்நாட்களிலும், அதற்குப் பிறகும் இராட்சதர்கள் இருந்தார்கள். அவர்கள் பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்ற வீரர்களாகவும் இருந்தனர்.

கர்த்தர், “ஜனங்கள் மனிதப்பிறவிகளே, அவர்களால் என்றென்றைக்கும் எனது ஆவி துன்புறும்படி அனுமதிக்கமாட்டேன். அவர்கள் 120 ஆண்டுகள் வாழும்படி அனுமதிக்கிறேன்” என்றார்.

பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெரும் பாவிகளாக இருப்பதை கர்த்தர் அறிந்தார். அவர்கள் எல்லாக் காலத்திலும் பாவ எண்ணங்களையே கொண்டிருப்பதை கர்த்தர் பார்த்தார். கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். எனவே கர்த்தர், “பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும், மிருகங்களையும், ஊர்வனவற்றையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப் போகிறேன். ஏனென்றால் நான் இவற்றையெல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்றார்.

ஆனால் கர்த்தருக்கு விருப்பமான வழியில் நடப்பவனாக நோவா என்னும் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தான்.

நோவாவும் பெருவெள்ளமும்

இது நோவாவின் குடும்பத்தைப்பற்றிக் கூறுகின்ற பகுதி. நோவா நேர்மையான மனிதனாக இருந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களில் குற்றமற்றவனாக இருந்தான். அவன் எப்பொழுதும் தேவனைப் பின்பற்றி வாழ்ந்தான். 10 அவனுக்கு சேம், காம், யாப்பேத் எனும் மூன்று மகன்கள் இருந்தனர்.

11-12 தேவன் பூமியைப் பார்த்தார். அது மனிதர்களால் கெடுக்கப்பட்டிருப்பதை அறிந்தார். எங்கும் வன்முறை பரவியிருந்தது. ஜனங்கள் பாவிகளாகவும், கொடூரமானவர்களாகவும் மாறியிருந்தனர். அவர்கள் பூமியில் தம் வாழ்க்கையையும் கெடுத்திருந்தனர்.

13 எனவே, தேவன் நோவாவிடம், “எல்லோரும் பூமியில் பாவத்தையும் வன்முறையையும் பரவ வைத்துள்ளனர். எனவே நான் எல்லா உயிர்களையும் அழித்து, அவற்றை பூமியிலிருந்து விலக்குவேன். 14 கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி நீயே ஒரு பெரிய கப்பலைச் செய். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி விடு.

15 “கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் இருக்கட்டும். 16 இதில் 18 அங்குலம் கூரையை விட்டு கீழே ஒரு ஜன்னல் இருக்கட்டும். கப்பலின் பக்கவாட்டில் ஒரு கதவு இருக்கட்டும். அதில் மேல்தளம், நடுத்தளம், கீழ்த்தளம் என்று மூன்று தளங்கள் இருக்கட்டும்.

17 “நான் உனக்குச் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவேன். வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். மண்ணிலுள்ள அனைத்தும் மரணமடையும். 18 ஆனால் நான் உன்னோடு ஒரு சிறப்பான உடன்படிக்கையைச் செய்கிறேன். நீயும் உன் மனைவியும் உன் மகன்களும், மகன்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய்விடுங்கள். 19 பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவைகள் உயிரோடு இருக்கட்டும். 20 ஒவ்வொரு பறவை இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு மிருக இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், எல்லா ஊர்வனவற்றிலும் ஒவ்வொரு ஜோடியும் கண்டு பிடித்து, அவற்றையும் உனது கப்பலில் உயிரோடு வைத்துக்கொள். 21 எல்லாவகை உணவுப் பொருட்களையும் கப்பலில் சேமித்து வை. அவ்வுணவு உங்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் உதவியாக இருக்கட்டும்” என்றார்.

22 நோவா தேவன் சொன்னபடி எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான்.

வெள்ளப் பெருக்கின் தொடக்கம்

பிறகு கர்த்தர் நோவாவிடம், “நீ நல்லவன் என்பதை, எல்லோரும் கெட்டுப்போன இக்காலத்திலும் கண்டிருக்கிறேன். ஆகையால் உனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கப்பலுக்குள் செல். பலிக்குரிய சுத்தமான விலங்குகளில் [d] ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். மற்ற மிருகங்களில் ஒரு ஜோடி போதும். இவற்றையெல்லாம் உனது கப்பலுக்குள் சேர்த்து வை. பறவைகளில் ஒவ்வொரு வகையிலும் ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். இதனால் மற்ற இனங்கள் அழிந்தாலும் இவை நிலைத்திருக்கும். இன்றிலிருந்து ஏழு நாட்களானதும் பூமியில் பெருமழை பொழியச் செய்வேன். 40 இரவும் 40 பகலுமாக தொடர்ந்து மழை பொழியும். உலகில் வாழும் அனைத்து உயிர்களும் அழிந்துபோகும். என்னால் படைக்கப்பட்ட அனைத்தும் அழியும்” என்றார். நோவா கர்த்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்து முடித்தான்.

மழை பெய்தபோது நோவாவுக்கு 600 வயதாயிருந்தது. நோவாவும் அவனது குடும்பத்தினரும் கப்பலுக்குள் சென்று வெள்ளத்திலிருந்து உயிர் பிழைத்தனர். நோவாவோடு அவனது மனைவியும் அவனது மகன்களும், மகன்களின் மனைவியரும் இருந்தனர். பலிக்குரிய மிருகங்களும் மற்ற மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும், நோவாவோடு கப்பலுக்குள் கொண்டுவரப்பட்டன. அவை ஆணும் பெண்ணுமாக ஜோடி ஜோடியாக தேவனுடைய ஆணையின்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. 10 ஏழு நாட்களானதும் வெள்ளப்பெருக்கு துவங்கியது. மழை தொடர்ந்து பெய்தது.

11-13 இரண்டாவது மாதத்தின் பதினேழாவது நாள் பூமிக்கடியில் உள்ள ஊற்றுகள் எல்லாம் திறந்து பீறிட்டுக் கிளம்பின. அன்று பெருமழையும் சேர்ந்து கொட்ட ஆரம்பித்தது. அது வானத்தின் ஜன்னல்கள் திறந்துகொண்டது போன்று இருந்தது. நாற்பது நாட்கள் இரவும் பகலுமாக மழை தொடர்ந்து பெய்தது. முதல் நாளே நோவாவும் அவனது மனைவியும் அவன் மகன்களான சேம், காம், யாப்பேத் ஆகியோரும் அவர்களது மனைவிமாரும் கப்பலுக்குள் சென்றுவிட்டனர். அப்போது நோவாவுக்கு 600 வயது. 14 அவர்களும் எல்லாவகை மிருகங்களும் கப்பலுக்குள் இருந்தனர். எல்லா வகை மிருகங்களும், எல்லாவகைப் பறவைகளும், எல்லாவகை ஊர்வனவும் கப்பலுக்குள் இருந்தன. 15 இவை எல்லாம் நோவாவோடு கப்பலுக்குள் சென்றன. அவைகள் எல்லா மிருக வகைகளிலிருந்தும் ஜோடி, ஜோடியாக வந்தன. 16 இந்த மிருகங்கள் எல்லாம் இரண்டு இரண்டாக, கப்பலுக்குள் சென்றன. தேவனுடைய ஆணையின்படியே அவை கப்பலுக்குள் சென்றன. பிறகு கர்த்தர் கப்பலின் கதவை அடைத்துவிட்டார்.

17 பூமியில் 40 நாட்கள் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது. 18 வெள்ளம் தொடர்ந்து ஏறியது. அதனால் கப்பல் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது. 19 உயரமான மலைகளும் மூழ்கும்படி வெள்ளம் உயர்ந்தது. 20 வெள்ளம் மலைகளுக்கு மேலும் உயர்ந்தது. அதன் உயரம் மலைகளுக்கு மேல் 20 அடி இருந்தது.

21-22 உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மரித்தன. எல்லா ஆண்களும் பெண்களும், பறவைகளும், எல்லா மிருகங்களும், எல்லா ஊர்வனவும் மரித்தன. தரையில் வாழக்கூடிய அனைத்து உயிர்களும் மரித்துப்போயின. 23 இவ்வாறு தேவன் பூமியை அழித்தார். தேவன் பூமியில் உயிருள்ள அனைத்தையும் மனிதன், மிருகம், ஊர்ந்து செல்லும் பிராணிகள், பறவைகள் உட்பட எல்லாவற்றையும் பூமியிலிருந்து முற்றிலுமாய் அழித்தார். நோவாவும் அவனது குடும்பத்தினரும் அவனோடு கப்பலிலிருந்த பறவைகளும், மிருகங்களும் மட்டுமே உயிர் பிழைத்தன. 24 வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது.

வெள்ளப் பெருக்கின் முடிவு

ஆனால் தேவன் நோவாவை மறக்கவில்லை. தேவன் அவனையும் அவனது குடும்பத்தினரையும் அவனோடு கப்பலிலுள்ள விலங்குகளையும் நினைவுகூர்ந்தார். பூமியின்மீது காற்று வீசுமாறு செய்தார். தண்ணீரெல்லாம் மறையத்தொடங்கியது.

வானிலிருந்து பெய்த மழை நின்றது. 3-4 பூமியின் மீதிருந்த தண்ணீர் கீழே செல்லத் துவங்கியது. 150 நாட்கள் ஆனதும் மீண்டும் கப்பல் பூமியைத் தொடுகிற அளவிற்குக் குறைந்து போனது. கப்பல் அரராத் என்ற மலைமீது அமர்ந்தது. அது ஏழாவது மாதத்தின் 17வது நாள். வெள்ளமானது மேலும் மேலும் கீழே போயிற்று. பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அனைத்து மலைகளின் மேல்பாகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது.

நாற்பது நாட்களுக்குப் பிறகு நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, ஒரு காகத்தை வெளியே அனுப்பினான். அது பூமியிலுள்ள தண்ணீர் வற்றிப்போகும்வரை போவதும் வருவதுமாக இருந்தது. நோவா ஒரு புறாவையும் வெளியே அனுப்பினான். அது தான் தங்கிட ஒரு வறண்ட இடத்தைக் கண்டுக்கொள்ளும் என எண்ணினான். இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம் என நினைத்தான்.

ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது. நோவா அதனைத் தன் கையை நீட்டிப் பிடித்து கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.

10 ஏழு நாட்களானதும் நோவா மீண்டும் புறாவை அனுப்பினான். 11 அன்று மாலையில் அப்புறா மீண்டும் திரும்பி வந்தது. அதன் வாயில் ஒலிவ மரத்தின் புதிய இலை இருந்தது. இதன் மூலம் அவன் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டான். 12 மேலும் 7 நாட்கள் ஆனதும் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினான். ஆனால் அது திரும்பி வரவே இல்லை.

13 அதன் பிறகு நோவா கப்பலின் கதவைத் திறந்தான். தரை காய்ந்துபோனதை நோவா தெரிந்துகொண்டான். இதுதான் அந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று. நோவா 601 வயதுடையவன் ஆனான். 14 இரண்டாவது மாதத்தின் 27வது நாளில் தரை முழுவதும் நன்றாகக் காய்ந்துவிட்டது.

15 பிறகு தேவன் நோவாவிடம், 16 “நீயும் உன் மனைவியும் உன் மகன்களும் அவர்களின் மனைவியரும் இப்போது கப்பலை விட்டு வெளியே வாருங்கள். 17 உங்களோடுள்ள அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். பறவைகள், விலங்குகள், ஊர்வன அனைத்தும் மீண்டும் குட்டிகளும் குஞ்சுகளும் இட்டு பூமியை நிரப்பட்டும்” என்றார்.

18 எனவே நோவா தன் மனைவி, மகன்கள், மருமகள்கள் ஆகியோரோடு வெளியே வந்தான். 19 கப்பலிலுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும் எல்லா விலங்கினங்களும் கப்பலை விட்டு ஜோடிகளாக வெளியே வந்தன.

20 பிறகு நோவா கர்த்தருக்கு ஓர் பலிபீடத்தைக் கட்டினான். அவன் பலிக்குரிய சுத்தமான மிருகங்களையும், பறவைகளையும் தேர்ந்தெடுத்து தேவனுக்குப் பலியிட்டான்.

21 கர்த்தர் அதன் வாசனையை முகர்ந்தார். அது அவருக்கு விருப்பமாக இருந்தது. கர்த்தர் தமக்குள், “மனிதர்களைத் தண்டிக்க நான் மீண்டும் இது போன்று பூமியைச் சபிக்கமாட்டேன். ஜனங்கள் இளமை முதலாகவே பாவத்தில் இருக்கிறார்கள். நான் செய்ததுபோல, மீண்டும் ஒருமுறை உயிர்களை அழிக்கமாட்டேன். 22 பூமி தொடர்ந்து இருக்கும் காலம்வரை நடுவதற்கென்று ஒரு காலமும், அறுவடைக்கென்று ஒரு காலமும் இருக்கும். பூமியில் குளிரும் வெப்பமும், கோடையும் வசந்தமும், இரவும் பகலும் இருக்கும்” என்றார்.

புதிய துவக்கம்

தேவன் நோவாவையும் அவனது பிள்ளைகளையும் ஆசீர்வதித்தார். தேவன் அவர்களிடம், “குழந்தைகளைப் பெற்று, ஜனங்களால் இப்பூமியை நிரப்புங்கள். பூமியிலுள்ள அனைத்து மிருகங்களும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தண்ணீரிலுள்ள அனைத்து மீன்களும், பிற அனைத்து ஊர்வனவும் உங்களைக் கண்டு அஞ்சும், அவை உங்கள் அதிகாரத்திற்குள் இருக்கும். கடந்த காலத்தில் பச்சையான தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்தேன். இப்போது அனைத்து மிருகங்களும் உங்களுக்கு உணவாகட்டும். உலகிலுள்ள அனைத்தும் உங்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களுக்கு ஒரு ஆணை இடுகிறேன். இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் உண்ணாதீர்கள். நான் உங்களது உயிருக்காக உங்களது இரத்தத்தைக் கேட்பேன். அதாவது ஒரு மனிதனைக் கொல்லுகிற விலங்கின் இரத்தத்தைக் கேட்பேன். மேலும் மற்றொரு மனிதனைக் கொல்லுகிற மனிதனின் இரத்தத்தைக் கேட்பேன்.

“தேவன் மனிதனைத் தமது சாயலாகவேப் படைத்தார்.
    எனவே மற்றவனைக் கொல்லுகிற எவனும் இன்னொருவரால் கொல்லப்பட வேண்டும்.

“நோவா, நீயும் உன் மகன்களும் குழந்தைகளைப் பெற்று, உங்கள் ஜனங்களால் பூமியை நிரப்புங்கள்” என்றார்.

பிறகு தேவன் நோவாவிடமும் அவனது பிள்ளைகளிடமும், “நான் உங்களோடும் உங்களுக்குப் பின்னுள்ள வாரிசுகளோடும், 10 உங்களோடு கப்பலிலே இருந்த பறவைகளோடும் மிருகங்களோடும் ஊர்வனவற்றோடும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் எனது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறேன். 11 வெள்ளப்பெருக்கால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் இது போல் நடைபெறாது. இன்னொரு வெள்ளப் பெருக்கு பூமியில் உள்ள உயிர்களை அழிக்காது” என்றார்.

12 மேலும் தேவன், “உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அடையாளமாக ஒன்றை உங்களுக்குத் தருகிறேன். உன்னோடும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரோடும் நான் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அது அத்தாட்சியாக இருக்கும். இந்த உடன்படிக்கை இனிவரும் எல்லாக் காலத்துக்கும் உரியதாக இருக்கும். இதுவே அந்த அத்தாட்சி. 13 மேகங்களுக்கு இடையே ஒரு வானவில்லை உருவாக்கி உள்ளேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி. 14 பூமிக்கு மேலாய் மேகங்களைக் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் அதில் வானவில்லைப் பார்க்கலாம். 15 வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் நான் எனக்கும் உங்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன். அந்த உடன்படிக்கை இனி ஒரு வெள்ளப் பெருக்கு உலகில் தோன்றி இங்குள்ள உயிர்களை அழிக்காது என்று கூறுகிறது. 16 மேகங்களுக்கிடையில் நான் வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பூமியின் மீதுள்ள அனைத்து உயிர்களுக்குமிடையிலான நிரந்தரமான உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன்.”

17 “நான் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அத்தாட்சியாக வானவில் விளங்குகிறது” என்றார்.

பிரச்சனைகள் மீண்டும் தோன்றுதல்

18 நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை. 19 இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் அவர்களது வம்சமேயாகும்.

20 நோவா ஒரு விவசாயி ஆனான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தைப் பயிர் செய்தான். 21 நோவா அதில் திராட்சை ரசத்தைச் செய்து குடித்தான். அவன் போதையில் தன் கூடாரத்தில் ஆடையில்லாமல் விழுந்து கிடந்தான். 22 கானானின் தந்தையான காம் ஆடையற்ற தனது தந்தையைப் பார்த்து அதைக் கூடாரத்திற்கு வெளியே இருந்த தன் சகோதரர்களிடம் சொன்னான். 23 சேமும் யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்து தங்கள் முதுகின் மேல் போட்டுக்கொண்டு பின்னால் நடந்து கூடாரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் தகப்பன் மேல் போட்டார்கள். இவ்வாறு தந்தையின் நிர்வாணத்தைப் பார்க்காமல் தவிர்த்தார்கள்.

24 திராட்சை ரசத்தைக் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய மகனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. 25 எனவே அவன்,

“கானான் சபிக்கப்பட்டவன்.
    அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்” என்றான்.

26 மேலும்,

“சேமுடைய தேவனாகிய கர்த்தர் துதிக்கப்படுவாராக.
    கானான் சேமுடைய அடிமையாய் இருப்பான்.
27 தேவன் யாப்பேத்துக்கு மேலும் நிலங்களைக் கொடுப்பார்.
    தேவன் சேமுடைய கூடாரத்தில் இருப்பார்.
    இவர்களின் அடிமையாகக் கானான் இருப்பான்” என்றான்.

28 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு நோவா 350 ஆண்டுகள் வாழ்ந்தான். 29 அவன் மொத்தம் 950 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.

நாடுகளின் வளர்ச்சியும் பரவலும்

10 சேம், காம், யாப்பேத் ஆகியோர் நோவாவின் மகன்கள். வெள்ளப் பெருக்குக்குப் பின் இவர்கள் மேலும் பல பிள்ளைகளுக்குத் தந்தை ஆனார்கள். இங்கே அவர்களின் பிள்ளைகள் பற்றிய பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

யாப்பேத்தின் சந்ததி

கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் ஆகியோர் யாப்பேத்தின் மகன்கள்.

அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா ஆகியோர் கோமரின் மகன்கள்.

எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் மகன்கள்.

மத்தியத்தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஜனங்கள் யாப்பேத்தின் வழி வந்தவர்கள். ஒவ்வொரு மகனும் தனக்குரிய சொந்த நிலத்தைப் பெற்றிருந்தான். ஒவ்வொரு குடும்பமும் பெருகி வெவ்வேறு நாடுகளாயின. ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனி மொழியைப் பெற்றது.

காமின் சந்ததி

கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் ஆகியோர் காமின் பிள்ளைகள்.

சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா, ஆகியோர் கூஷின் பிள்ளைகள்.

சேபா, திதான் ஆகியோர் ராமாவின் பிள்ளைகள்.

கூஷ் நிம்ரோத்தை பெற்றான். நிம்ரோத் பூமியில் மிக வல்லமை மிக்க வீரன் ஆனான். இவன் கர்த்தருக்கு முன்னால் பெரிய வேட்டைக்காரனாக இருந்தான். இதனால் “கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோத்தைப்போல” என்ற வழக்குச்சொல் உண்டானது.

10 நிம்ரோத்தின் அரசாட்சி பாபேலிலிருந்து ஏரேக், அக்காத், சிநெயார் நாட்டிலுள்ள கல்னேவரை பரவியிருந்தது. 11 நிம்ரோத் அசீரியாவுக்குப் போனான், அங்கு நினிவே, ரெகொபோத், காலாகு, ரெசேன் ஆகிய நகரங்களைக் கட்டினான். 12 (ரெசேன் நகரமானது நினிவேக்கும் காலாகுக்கும் இடைப்பட்ட பெரிய நகரம்)

13 லூதி, ஆனாமீ, லெகாபீ, நப்தூகீம், 14 பத்ருசீம், பெலிஸ்தர், கஸ்லூ, கப்தொர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயீம்.

15 கானான் சீதோனின் தந்தையானான். இவன் கானானின் மூத்தமகன். கானான் கேத்துக்கும் தந்தை. கேத் கேத்தியர்களின் தந்தை ஆனான். 16 எபூசியர், எமோரியர், கிர்காசியர், 17 ஈவியர், அர்க்கீரியர், சீநியர், 18 அர்வாதியர், செமாரியர், காமாத்தியர், ஆகியோருக்கும் கானான் தந்தை ஆனான்.

இவனது சந்ததியினர் உலகின் பல பாகங்களிலும் பரவினர். 19 கானான் தேசத்தில் இருந்தவர்களுக்கு தம் எல்லையாக சீதோன் முதல் கேரார் வழியாய் காசா மட்டும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசா மட்டும் இருந்தது.

20 இவர்கள் அனைவரும் காமுடைய சந்ததியார்கள். இக்குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்கென்று சொந்த மொழியும் சொந்த பூமியும் உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் தனித்தனி நாட்டினராயும் ஆயினர்.

சேமின் சந்ததி

21 சேம், யாப்பேத்தின் மூத்த சகோதரன். அவனது சந்ததியில் ஒருவனே ஏபேர். எபேரே எபிரெய ஜனங்கள் அனைவருக்கும் தந்தையானான். [e]

22 ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் ஆகியோர் சேமின் பிள்ளைகள்.

23 ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் ஆகியோர் ஆராமின் பிள்ளைகள்.

24 அர்பக்சாத்தின் மகன் சாலா.

சாலாவின் மகன் ஏபேர்.

25 ஏபேருக்கு இரு மகன்கள். ஒருவன் பேர் பேலேகு. அவனுடைய நாட்களில்தான் பூமி பகுக்கப்பட்டது. யொக்தான் இன்னொரு மகன்.

26 அல்மோதாத், சாலேப் அசர்மாவேத், யேராகை, 27 அதோராம், ஊசால், திக்லா, 28 ஓபால், அபிமாவேல், சேபா, 29 ஒப்பீர், ஆவிலா, யோபா ஆகியோரை யொக்தான் பிள்ளைகளாகப் பெற்றான். 30 இவர்களின் பகுதிகள் மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழி மட்டும் இருந்தது.

31 இவர்கள் அனைவரும் சேமுடைய வாரிசுகள். இவர்கள் அனைவரும் தம் குடும்பங்கள், மொழிகள், நாடுகள், தேசங்கள், வழியாக வரிசைப்படுத்தப்பட்டவர்கள்.

32 நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர்.

உலகம் பிரிக்கப்பட்டது

11 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர். ஜனங்கள், “நாம் செங்கற்களைச் செய்து, நெருப்பில் அவற்றைச் சுடுவோம். அது பலமுடையதாகும்” என்றனர். எனவே ஜனங்கள் கற்களைப் பயன்படுத்தாமல் செங்கற்களைப் பயன்படுத்தி வீடு கட்டினர். சாந்துக்கு பதிலாக தாரைப் பயன்படுத்தினர்.

மேலும் ஜனங்கள், “நமக்காக நாம் ஒரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேண்டும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்” என்றனர்.

கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார். கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார்.

அவ்வாறே, கர்த்தர் ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று. உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார்.

சேம் குடும்பத்தின் வரலாறு

10 இது சேமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேமுக்கு 100 வயதானபோது அர்பக்சாத் என்னும் மகன் பிறந்தான். 11 அதன் பிறகு அவன் 500 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் இருந்தனர்.

12 அர்பக்சாத்துக்கு 35 வயதானபோது சாலா என்னும் மகன் பிறந்தான். 13 சாலா பிறந்த பின் அர்பக்சாத் 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.

14 சாலாவுக்கு 30 வயதானபோது ஏபேர் பிறந்தான். 15 ஏபேர் பிறந்தபின் சாலா 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.

16 ஏபேருக்கு 34 வயதானபோது பேலேகைப் பெற்றான். 17 பேலேக் பிறந்த பின் ஏபேர் 430 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.

18 பேலேக்குக்கு 30 வயதானபோது அவனது மகன் ரெகூ பிறந்தான். 19 ரெகூ பிறந்த பின் பேலேகு 209 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.

20 ரெகூவுக்கு 32 வயது ஆனதும் அவனது மகன் செரூகைப் பெற்றான். 21 செரூகு பிறந்தபின் ரெகூ 207 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.

22 செரூகுக்கு 30 வயது ஆனதும் நாகோர் பிறந்தான். 23 நாகோர் பிறந்தபின் செரூகு 200 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.

24 நாகோருக்கு 29 வயது ஆனதும் அவனது மகன் தேராகைப் பெற்றான். 25 தேராகு பிறந்ததும் நாகோர் 119 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.

26 தேராகுக்கு 70 வயதானபோது அவனது மகன்கள் ஆபிராம், நாகோர், ஆரான் பிறந்தார்கள்.

தேராகு குடும்பத்தின் வரலாறு

27 இது தேராகு குடும்பத்தின் வரலாறு ஆகும். தேராகு என்பவன் ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோரின் தந்தையானவன். ஆரான் லோத்தின் தந்தையானவன். 28 ஆரான் தனது பிறந்த நகரமான பாபிலோனியாவில் உள்ள ஊர் என்ற இடத்தில் மரணமடைந்தான். அப்போது அவனது தந்தையான தேராகு உயிரோடு இருந்தான். 29 ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்துகொண்டனர். ஆபிராமின் மனைவியின் பெயர் சாராய். நாகோரின் மனைவியின் பெயர் மில்காள். இவள் ஆரானுடைய மகள். ஆரான் மில்காளுக்கும் இஸ்காளுக்கும் தந்தை. 30 சாராய் பிள்ளைகள் இல்லாமல் மலடியாய் இருந்தாள்.

31 தேராகு தனது குடும்பத்தோடு பாபிலோனியாவில் உள்ள ஊர் எனும் இடத்தை விட்டுப் போனான். அவர்கள் கானானுக்குப் போகத் திட்டமிட்டனர். தேராகு தனது மகன் ஆபிராமையும் பேரன் லோத்தையும், மருமகள் சாராவையும் தன்னோடு அழைத்துச் சென்றான். அவர்கள் ஆரான் நகரத்துக்கு போய் அங்கே தங்கிவிட முடிவு செய்தனர். 32 தேராகு 205 ஆண்டுகள் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தான்.

தேவன் ஆபிராமை அழைக்கிறார்

12 கர்த்தர் ஆபிராமிடம்,

“நீ உனது
ஜனங்களையும், நாட்டையும்,
    தந்தையின் குடும்பத்தையும்விட்டு வெளியேறி நான் காட்டும் நாட்டுக்குப் போ.
நான் உன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்.
    நான் உன்னை ஆசீர்வதிப்பேன்.
உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன்.
    ஜனங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவர்.
உன்னை ஆசீர்வதிக்கிற ஜனங்களை நான் ஆசீர்வதிப்பேன்.
    உன்னை சபிப்பவர்களை நான் சபிப்பேன்.
நான் உன் மூலம் பூமியிலுள்ள
    அனைத்து ஜனங்களையும் ஆசீர்வதிப்பேன்” என்றார்.

ஆபிராம் கானானுக்குப் போகிறான்

எனவே, ஆபிராம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஆரானை விட்டுப் போனான். லோத்து அவனோடு சென்றான். அப்போது ஆபிராமுக்கு 75 வயது. ஆபிராம் ஆரானை விட்டு போகும்போது தன் மனைவி சாராயையும், தன் சகோதரனுடைய மகனான லோத்தையும், எல்லா அடிமைகளையும், ஆரானில் அவனுக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். அவர்கள் ஆரானை விட்டுக் கானானை நோக்கிப் பயணம் செய்தனர். ஆபிராம் கானான் தேசத்தின் வழியாகப் பயணம் செய்து சீகேம் நகரம் வழியே மோரேயில் இருக்கும் பெரிய மரங்கள் உள்ள இடத்திற்கு வந்தான். அக்காலத்தில் அங்கு கானானியர் வாழ்ந்தனர்.

கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து, “நான் உன் சந்ததிக்கு இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்றார்.

கர்த்தர் காட்சியளித்த இடத்தில் ஆபிராம் கர்த்தரைத் தொழுகைசெய்ய ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின் ஆபிராம் அந்த இடத்தை விட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போனான். அங்கு அவன் கூடாரம் போட்டான். பெத்தேல் நகரம் மேற்காக இருந்தது. ஆயீ நகரம் அதற்குக் கிழக்கே இருந்தது. அங்கு ஒரு பலிபீடத்தை கர்த்தருக்கு அமைத்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். மீண்டும் ஆபிராம் பயணம் செய்து பாலைவனப் பகுதிக்குச் சென்றான்.

எகிப்தில் ஆபிராம்

10 அந்நாட்களில் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் உணவுப் பொருட்களும் விளையாமல் இருந்தது. எனவே ஆபிராம் எகிப்திற்கு பிழைப்பதற்காகப் போனான். 11 தன் மனைவி சாராய் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று எண்ணிய அவன், எகிப்தை நெருங்குவதற்கு முன் சாராயிடம், “நீ வெகு அழகான பெண் என்பது எனக்குத் தெரியும். 12 எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள், ‘இவள் இவனுடைய மனைவி’ என்று பேசுவார்கள் பிறகு உன்னை அடைய விரும்பி என்னைக் கொன்றுவிடுவார்கள். 13 அதனால் நான் அவர்களிடம் நீ என் சகோதரி என்று கூறுவேன். பிறகு அவர்கள் என்னைக் கொல்லமாட்டார்கள். நான் உன் சகோதரன் என்பதால் அவர்கள் என் மீது கருணையோடு இருப்பார்கள். இவ்வகையில் நீ என் உயிரைக் காப்பாற்றலாம்” என்றான்.

14 எனவே ஆபிராம் எகிப்துக்குப் போனான். அங்குள்ள ஜனங்கள் சாராய் மிகவும் அழகானவளாக இருப்பதைப் பார்த்தனர். 15 சில எகிப்தின் தலைவர்களும் அவளைப் பார்த்தனர். அவள் மிகவும் அழகான பெண் என்று அவர்கள் பார்வோனிடம் கூறினர். அவர்கள் அவளை பார்வோனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 16 ஆபிராமை சாராயின் சகோதரனாக எண்ணி பார்வோனும் ஆபிராமிடம் அன்பாக இருந்தான். பார்வோன் அவனுக்கு ஆடுகள், மாடுகள், பெண் வேலையாட்கள், கழுதைகள், ஒட்டகங்கள் என்று பலவற்றைக் கொடுத்தான்.

17 பார்வோன் ஆபிராமின் மனைவியை எடுத்துக்கொண்டான். எனவே பார்வோனும் அவனது வீட்டில் உள்ளவர்களும் கொடிய வியாதியுறுமாறு கர்த்தர் சபித்துவிட்டார். 18 எனவே பார்வோன் ஆபிராமை அழைத்தான். அவன், “நீ எனக்கு மிகக் கெட்ட காரியத்தைச் செய்துள்ளாய்! சாராய் உன் மனைவி என்று சொல்லாமல், 19 அவளை உன் சகோதரி என்று ஏன் சொன்னாய்? நான் அவளை எடுத்துக்கொண்டதால் அவள் எனது மனைவியாக இருந்திருப்பாளே. ஆனால் இப்பொழுது உன் மனைவியை உனக்கு நான் திரும்பிக் கொடுக்கிறேன். அவளை அழைத்துகொண்டு போய்விடு” என்றான். 20 பிறகு, பார்வோன் தன் வீரர்களிடம், ஆபிராமை நாட்டைவிட்டு வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டான். எனவே, ஆபிராமும் அவனது மனைவியும் அவர்களுக்குச் சொந்தமானவற்றை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

ஆபிராம் கானானுக்குத் திரும்புதல்

13 ஆபிராம் எகிப்தை விட்டு வெளியேறி, தன் மனைவியோடும் தனக்குரிய பொருட்களோடும் பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்தான். லோத்துவும் அவனோடு சென்றான். ஆபிராம் மிகவும் செல்வந்தனாக இருந்தான். அவனிடம் ஏராளமான மிருகங்களும் தங்கமும் வெள்ளியும் இருந்தன.

ஆபிராம் தொடர்ந்து பயணம் செய்து பாலைவனத்தை விட்டு பெத்தேலுக்குச் சென்று, பெத்தேல் நகரத்திற்கும் ஆயி நகரத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் தங்கினான். அது ஏற்கெனவே அவனும் அவன் குடும்பத்தாரும் தங்கிய இடமாகும். இங்கு தான் ஆபிராம் பலிபீடம் அமைத்திருந்தான். எனவே, ஆபிராம் கர்த்தரை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.

ஆபிராமும் லோத்தும் பிரிகிறார்கள்

இந்த நேரத்தில் லோத்தும் ஆபிராமோடு பயணம் செய்துகொண்டிருந்தான். லோத்துக்கும் நிறைய மிருகங்களும் கூடாரங்களும் இருந்தன. ஆபிராமிடமும் லோத்திடமும் இருந்த மிருகங்கள் வாழ்கிற அளவிற்கு அந்த நிலம் அவ்வளவு போதுமானதாக இல்லை. அதோடு கானானியர்களும் பெரிசியரும் அவர்களுடன் அங்கு வாழ்ந்து வந்தனர். ஆபிராமின் மேய்ப்பர்களும் லோத்தின் மேய்ப்பர்களும் தங்களுக்குள் சண்டையிட்டனர்.

எனவே, ஆபிராம் லோத்திடம், “நம்மிருவருக்கும் இடையில் எவ்வித வாக்குவாதமும் வேண்டாம். உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இனி மேல் எந்த விரோதமும் வேண்டாம். நாம் சகோதரர்கள். நாம் பிரிந்து விடுவோம். உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக்கொள். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றான்.

10 லோத்து யோர்தான் நதிக்கு அருகான சமவெளியைப் பார்வையிட்டான். அங்கு நீர் வளம் இருப்பதைக் கண்டான். (கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிப்பதற்கு முன்பு சோவாருக்குப்போகும் வழிவரை அது கர்த்தரின் தோட்டம் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.) 11 எனவே லோத்து யோர்தான் சமவெளியைத் தேர்ந்தெடுத்தான். இருவரும் பிரிந்தனர். லோத்து கிழக்கு நோக்கிப் பயணம் செய்தான். 12 ஆபிராம் கானான் தேசத்தில் தங்கினான். லோத்து சமவெளிப்பகுதியின் நகரங்களில் தங்கினான். லோத்து மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து சோதோமில் கூடாரம் அடித்தான். 13 சோதோம் ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துகொண்டிருந்தனர் என்பதை அறிந்திருந்தார்.

14 லோத்து விலகிப்போனதும் கர்த்தர் ஆபிராமிடம், “உன்னைச் சுற்றிலும் வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் பார். 15 இந்தப் பூமியை நான் உனக்கும் உன் சந்ததியினருக்கும் கொடுக்கிறேன். இது என்றென்றும் உங்களுக்குரியதாக இருக்கும். 16 உன் ஜனங்களை உலகத்தில் உள்ள புழுதியின் அளவுக்குப் பெருகச் செய்வேன். எவராவது புழுதியை எண்ண முடியுமானால் அதுவே உங்கள் தொகையாக இருக்கும். 17 எனவே நாட்டின் நீளமும் அகலமும் எவ்வளவோ அவ்வளவு தூரம் நட. நான் அவற்றை உனக்குத் தருவேன்” என்றார்.

18 எனவே, ஆபிராம் தனது கூடாரத்தை எடுத்துக்கொண்டு பெரிய மரங்களிருக்கும் எபிரோனிலிலுள்ள மம்ரேயின் சமபூமிக்குச் சென்றான். இங்கு ஆபிராம் கர்த்தரைத் தொழுதுகொள்ள ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

லோத்து பிடிக்கப்படுதல்

14 அம்ராப்பேல் சிநெயாரின் அரசன். அரியோகு ஏலாசாரின் அரசன். கெதர்லாகோமேர் ஏலாமின் அரசன். திதியால் கோயம் தேசத்தின் அரசன். இவர்கள் அனைவரும் மற்ற அரசர்களோடு சண்டையிட்டனர். சோதோமின் அரசனான பேராவோடும், கொமோராவின் அரசனான பிர்சாவோடும், அத்மாவின் அரசனான சிநெயாவோடும், செபோயீமின் அரசனான செமேபரோடும் பேலாவின் அரசனோடும் (பேலா சோவார் என்றும் அழைக்கப்பட்டான்) அவர்கள் போர் செய்தனர்.

சித்தீம் பள்ளத்தாக்கில் எல்லா அரசர்களும் தம் படைகளோடு கூடினர். (சித்தீம் பள்ளத்தாக்கு இப்போது உப்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.) இந்த அரசர்கள் 12 ஆண்டுகள் கெதர்லாகோமேருக்குச் சேவைசெய்து 13ஆம் ஆண்டில் கலகம் செய்தார்கள். 14 ஆம் ஆண்டிலே கெதர்லாகோமேரும் அவனோடு இருந்த அரசர்களும் போருக்கு வந்தனர். இவர்கள் அஸ்தரோத் கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும் காமிலிருந்த சூசிமியரையும், சாவேகீரியத் தாயீமிலே இருந்த ஏமியரையும், சேயீர் மலைகளில் இருந்த ஒசரியரையும் வனாந்தரத்திற்கு அருகிலே இருந்த எல்பாரான் மட்டும் தோற்கடித்தனர். அதன்பிறகு அரசன் கெதர்லாகோமேர் வடதிசையில் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து அமலேக்கியரின் நாடுகளையும் அத்சாத்சோன் தாமாரிலே இருந்த எமோரியரையும் அழித்து ஒழித்தான்.

அப்போது சோதோம், அத்மா, கொமோரா, செபோயீம், சோவார் என்னும் பேலா ஆகிய நாடுகளின் அரசர்கள் புறப்பட்டுப் போனார்கள். இவர்கள் சித்தீம் பள்ளத்தாக்கிலே, ஏலாமின் அரசனாகிய கெதர்லாகோமேரோடும், கோயம் அரசனாகிய திதியாலோடும் சிநெயாரின் அரசனாகிய அம்ராப்பேலோடும் ஏலாசாரின் அரசனாகிய அரியோகோடும் யுத்தம் செய்தார்கள். எனவே நான்கு அரசர்கள் ஐந்து பேருக்கு எதிராக இருந்தனர்.

10 அந்த சித்தீம் பள்ளத்தாக்கு முழுவதும் தார் நிறைந்த குழிகள் இருந்தன. சோதோம் கொமோராவின் அரசர்கள் தோற்றோடி வந்து அதில் விழுந்தார்கள். இன்னும் பலர் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.

11 எனவே, சோதோம் மற்றும் கொமோராவினருக்கு உரிய பொருட்களை எல்லாம் அவர்களின் பகைவர்கள் எடுத்துக்கொண்டனர். அவர்களது அனைத்து உணவுப் பொருட்களையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஆபிராமின் சகோதரனுடைய மகனான லோத்து சோதோமில் வசித்துக்கொண்டிருந்தான். 12 அவனையும் எதிரிகள் பிடித்துக்கொண்டார்கள். மேலும் அவனுடைய உடமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு எதிரிகள் ஓடினார்கள். 13 பிடிபடாதவர்களில் ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஆபிராம் மம்ரே என்னும் எமோரியனுடைய பூமியில் குடியிருந்தான். மம்ரே, எஸ்கோல், ஆநேர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் உதவுவதாக ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்கள் ஆபிராமுக்கு உதவுவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

ஆபிராம் லோத்தை மீட்கிறான்

14 லோத்து கைதுசெய்யப்பட்டதை ஆபிராம் அறிந்துகொண்டான். அவன் தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்தான் அவர்களிடம் 318 பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்தனர். அவன் அவர்களோடு தாண் நகரம்வரை பகைவர்களைத் துரத்திக்கொண்டு போனான். 15 அன்று இரவு அவனும் அவனது வீரர்களும் பகைவரைத் திடீரென்று தாக்கினர். அவர்களைத் தோற்கடித்து தமஸ்குவின் வடக்கேயுள்ள கோபாவரை துரத்தினர். 16 பிறகு, பகைவர்கள் எடுத்துசென்ற அனைத்து பொருட்களையும் ஆபிராம் மீட்டுக்கொண்டான். பெண்கள், வேலைக்காரர்கள், லோத்து, அவனது பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.

17 பிறகு ஆபிராம் கெதர்லாகோமரையும் அவனோடிருந்த அரசர்களையும் தோற்கடித்து விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினான். சோதோமின் அரசன் புறப்பட்டு சாவே பள்ளத்தாக்குக்கு வந்து ஆபிராமை வரவேற்றான். (இப்போது இப்பள்ளத்தாக்கு அரசனின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.)

மெல்கிசேதேக்

18 சாலேமின் அரசனாகிய மெல்கிசேதேக்கும் ஆபிராமைச் சந்திக்கப் போனான். இவன் உன்னதமான தேவனின் ஆசாரியன். இவன் அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்தான். 19 மெல்கிசேதேக் ஆபிராமை ஆசீர்வாதம் செய்து,

“ஆபிராமே, வானத்தையும் பூமியையும் படைத்த
    உன்னதமான தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
20 நாம் உன்னதமான தேவனைப் போற்றுவோம்.
    உன் பகைவர்களை வெல்ல உனக்கு தேவன் உதவினார்” என்றான்.

போரில் கைப்பற்றியவற்றில் பத்தில் ஒரு பங்கை ஆபிராம் மெல்கிசேதேக்கிற்குக் கொடுத்தான். 21 பிறகு சோதோமின் அரசன் ஆபிராமிடம், “இவை எல்லாவற்றையும் நீ உனக்கே வைத்துக்கொள். எனது ஜனங்களை மட்டும் எனக்குக் கொடு அது போதும்” என்றான்.

22 ஆனால் ஆபிராமோ சோதோம் அரசனிடம், “நான் உன்னதமான தேவனாகிய கர்த்தரிடம் வாக்குப் பண்ணியிருக்கிறேன். வானத்தையும் பூமியையும் படைத்த உன்னதமான தேவனுக்கு முன்பாக என் கைகள் சுத்தமாயிருக்கிறது. 23 உனக்குரிய எதையும் நான் வைத்திருக்க மாட்டேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறேன். நான் உனக்குரிய ஒரு நூல் அல்லது பாதரட்டையின் சிறு வாரையாகிலும் கூட ஏற்கமாட்டேன். ‘நான் ஆபிராமைப் பணக்காரன் ஆக்கினேன்’ என்று நீ சொல்வதை நான் விரும்ப மாட்டேன். 24 என்னுடைய இளைஞர்கள் உண்பதற்கான உணவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். ஆனால் மற்றவர்களுக்கு அவர்களின் பங்கினைக் கொடுத்துவிடு. நாம் போரில் வென்ற பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள். சிலவற்றை ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகியவர்களுக்குக் கொடு. இவர்கள் எனக்குப் போரில் உதவினார்கள்” என்றான்.

ஆபிராமோடு தேவனின் உடன்படிக்கை

15 இவையெல்லாம் நடந்த பிறகு கர்த்தரின் வார்த்தையானது ஆபிராமுக்குத் தரிசனத்தில் வந்தது. தேவன், “ஆபிராமே, நீ பயப்படவேண்டாம். நான் உன்னைப் பாதுகாப்பேன். உனக்குப் பெரிய பரிசு தருவேன்” என்றார்.

ஆனால் ஆபிராமோ, “தேவனாகிய கர்த்தாவே! நீர் கொடுக்கிற எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தராது, ஏனென்றால் எனக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே நான் மரித்த பிறகு எனக்குரிய பொருட்கள் எல்லாம் எனது அடிமையான தமஸ்குவைச் சேர்ந்த எலியேசருக்கு உரியதாகும்” என்றான். மேலும் ஆபிராம், “நீர் எனக்கு மகனைக் கொடுக்கவில்லை. எனவே என் வீட்டில் பிறக்கும் அடிமைக்கு இந்த சொத்து முழுவதும் உரிமையாகுமே” என்றான்.

கர்த்தர் ஆபிராமிடம், “அந்த அடிமை உனக்குரியவற்றைப் பெறமாட்டான். உனக்கொரு மகன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்றார்.

பிறகு தேவன் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான நட்சத்திரங்களைப் பார், அவற்றை உன்னால் எண்ணமுடியாது, வருங்காலத்தில் உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும்” என்றார்.

ஆபிராம் தேவனை நம்பினான். மேலும் தேவன் ஆபிராமின் நம்பிக்கையை அவனுடைய நீதியான காரியமாக எண்ணினார். தேவன் ஆபிராமிடம், “நானே கர்த்தர். உன்னை பாபிலோனியாவிலுள்ள ஊர் என்னும் பட்டணத்திலிருந்து அழைத்து வந்தேன். நானே இதைச்செய்தேன். இந்தத் தேசத்தை உனக்குக் கொடுக்கிறேன். இது உனக்கே உரியதாகும்” என்றார்.

ஆனால் ஆபிராமோ, “கர்த்தராகிய என் ஆண்டவரே! இந்தத் தேசம் எனக்கு உரியதாகும் என்று எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?” என்று கேட்டான்.

தேவன் ஆபிராமிடம், “நாம் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வோம், மூன்று ஆண்டுகள் ஆன ஒரு பசுவை கொண்டு வா. அதோடு மூன்று ஆண்டுகள் ஆன ஆட்டையும், ஆட்டுக்கடாவையும், கொண்டு வா, அதோடு ஒரு காட்டுப் புறாவையும், புறாக் குஞ்சையும் என்னிடம் கொண்டு வா” என்றார்.

10 ஆபிராம் இவை எல்லாவற்றையும் தேவனிடம் கொண்டு வந்தான். ஒவ்வொன்றையும் கொன்று இரண்டு துண்டுகளாக வெட்டி, பிறகு ஒரு பாதியை இன்னொரு பாதியோடு சேர்த்தான். பறவைகளை அவன் அவ்வாறு வெட்டவில்லை. 11 பின்னர், பெரிய பறவைகள் விலங்குகளின் உடலை உண்ண கீழே பறந்து வந்தன. ஆபிராம் அவற்றைத் துரத்தினான்.

12 சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கியபோது ஆபிராமுக்குத் தூக்கம் வந்தது. அத்துடன் அச்சுறுத்தும் இருள் அவனைச் சூழ்ந்துகொண்டது. 13 பிறகு கர்த்தர் ஆபிராமிடம், “நீ இவ்விஷயங்களைப்பற்றி அறிய வேண்டும். உனது சந்ததி தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அங்குள்ளவர்கள் அவர்களை 400 ஆண்டு காலத்துக்கு அடிமைகளாக வைத்திருந்து, மோசமாக நடத்துவார்கள். 14 ஆனால் நான் அந்த நாட்டைத் தண்டிப்பேன். உனது ஜனங்கள் அந்நாட்டை விட்டு பல்வேறு பொருட்களுடன் வெளியேறுவார்கள்.

15 “நீ நல்ல முதிர் வயதாகும்வரை வாழ்ந்து, சமாதானமாக மரணமடைவாய். 16 நான்கு தலைமுறைகளுக்குப்பின் உன் சந்ததியினர் மீண்டும் இங்கே வருவார்கள். அப்போது உனது ஜனங்கள் எமோரியரைத் தோற்கடிப்பார்கள். இது எதிர்காலத்தில்தான் நடைபெறும், ஏனென்றால் இன்னும் எமோரியர்கள் தண்டிக்கப்படுகிற அளவிற்கு மிக மோசமாகக் கெட்டுப்போகவில்லை” என்றார்.

17 சூரியன் அஸ்தமித்தபின் மேலும் இருளாயிற்று. மரித்துப்போன மிருகங்கள் தரையின் மேலேயே கிடந்தன. இரண்டு துண்டுகளாகக் கிடந்த அவற்றின் உடலிலிருந்து சூளையின் புகையும் நெருப்பும் வெளிவந்தன.

18 ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

ஆகார் எனும் வேலைக்காரப்பெண்

16 சாராய் ஆபிராமின் மனைவி. அவளுக்கும் ஆபிராமுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. சாராய்க்கு ஒரு எகிப்திய வேலைக்காரப் பெண் இருந்தாள். அவள் பெயர் ஆகார். சாராய் ஆபிராமிடம், “கர்த்தர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. எனவே எனது வேலைக்காரப் பெண்ணோடு செல்லுங்கள். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை என் குழந்தை போல் ஏற்றுக்கொள்வேன்” என்றாள். ஆபிராமும் தன் மனைவி சாராய் சொன்னபடி கேட்டான்.

இது ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நடந்தது. சாராய் தனது வேலைக்காரப் பெண்ணை ஆபிராமுக்குக் கொடுத்தாள். (ஆகார் எகிப்திய வேலைக்காரப் பெண்) ஆபிராமால் ஆகார் கர்ப்பமுற்றாள். இதனால் அவளுக்குப் பெருமை ஏற்பட்டது. அவள் தன்னைத் தன் எஜமானியைவிடச் சிறந்தவளாக எண்ணினாள். ஆனால் சாராய் ஆபிராமிடம், “இப்பொழுது என் வேலைக்காரப் பெண் என்னை வெறுக்கிறாள். இதற்காக நான் உம்மையே குற்றம்சாட்டுவேன். நான் அவளை உமக்குக் கொடுத்தேன். அவள் கர்ப்பமுற்றாள். பிறகு என்னைவிடச் சிறந்தவளாகத் தன்னை நினைத்துக்கொள்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில் கர்த்தரே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள்.

ஆனால் ஆபிராமோ சாராயிடம், “நீ ஆகாரின் எஜமானி, நீ அவளுக்கு செய்ய விரும்புவதைச் செய்யலாம்” என்றான். எனவே சாராய் ஆகாரைக் கடினமாகத் தண்டித்தபடியால் அவள் சாராயை விட்டு ஓடிப்போனாள்.

இஸ்மவேல்-ஆகாரின் மகன்

பாலைவனத்தில் சூருக்குப் போகிற வழியில் இருந்த நீரூற்றினருகில் ஆகாரை கர்த்தருடைய தூதன் கண்டான். தூதன் அவளிடம், “சாராயின் பணிப்பெண்ணாகிய ஆகாரே. ஏன் இங்கே இருக்கிறாய்? எங்கே போகிறாய்?” என்று கேட்டான்.

அவளோ, “நான் சாராயிடமிருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.

அதற்கு கர்த்தருடைய தூதன், “சாராய் உனது எஜமானி. வீட்டிற்குத் திரும்பிப் போய் அவளுக்குக் கீழ்ப்படிந்திரு. 10 உன்னிடமிருந்து ஏராளமான ஜனங்கள் தோன்றுவர், அவர்கள் எண்ண முடியாத அளவிற்கு இருப்பார்கள்” என்றான்.

11 மேலும் கர்த்தருடைய தூதன்,

“ஆகார் நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய்.
    உனக்கு ஒரு மகன் பிறப்பான்.
அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு.
    ஏனென்றால் நீ மோசமாக நடத்தப்பட்டதை கர்த்தர் அறிந்திருக்கிறார். உன் மகன் உனக்கு உதவுவான்.
12 இஸ்மவேல் காட்டுக் கழுதையைப் போன்று முரடனாகவும்,
    சுதந்திரமானவனாகவும் இருப்பான்.
அவன் ஒவ்வொருவருக்கும் விரோதமாக இருப்பான்.
    ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக இருப்பார்கள்.
அவன் ஒவ்வொரு இடமாகச் சுற்றித் தன் சகோதரர்கள் அருகில் குடியேறுவான்.
    அவர்களுக்கும் அவன் விரோதமாக இருப்பான்” என்றான்.

13 கர்த்தர் ஆகாரிடம் பேசினார், அவள் அவரிடம், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று கூறினாள். அவள், “இத்தகைய இடத்திலும் தேவன் என்னைக் காண்கிறார், பொறுப்போடு கவனிக்கிறார். நானும் தேவனைக் கண்டேன்” என்று நினைத்து இவ்வாறு சொன்னாள். 14 எனவே, அந்த கிணற்றிற்கு பீர்லாகாய் ரோயீ என்று பெயரிடப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் இடையில் இருந்தது.

15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஆபிராம் இஸ்மவேல் என்று பெயரிட்டான். 16 ஆபிராம் ஆகார் மூலம் இஸ்மவேலைப் பெறும்போது அவனுக்கு 86 வயது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center