Bible in 90 Days
எகிப்தில் யாக்கோபின் குடும்பம்
1 யாக்கோபு (இஸ்ரவேல்) தன் மகன்களோடு எகிப்திற்குப் பயணமானான். ஒவ்வொரு மகனும் தன் குடும்பத்தோடே சென்றான். பின்வருபவர்களே இஸ்ரவேலின் மகன்கள்: 2 ரூபன், சிமியோன், லேவி, யூதா, 3 இசக்கார், செபுலோன், பென்யமீன், 4 தாண், நப்தலி, காத், ஆசேர். 5 70 பேர் யாக்கோபின் நேரடி சந்ததியாகப் பிறந்தவர்களாக இருந்தனர். (யோசேப்பு 12 மகன்களில் ஒருவன். ஆனால் அவன் ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.)
6 பின்னர், யோசேப்பும் அவனது சகோதரர்களும் அத்தலைமுறையைச் சேர்ந்த எல்லோருமே மரித்துவிட்டார்கள். 7 ஆனால் இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பல குழந்தைகள் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது. இஸ்ரவேலின் ஜனங்கள் வலிமையுடையோரானார்கள். எகிப்து நாடும் இஸ்ரவேலரால் நிரம்பிற்று.
இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தொல்லை
8 அப்போது யோசேப்பை அறிந்திராத ஒரு புதிய அரசன் எகிப்தை அரசாள ஆரம்பித்தான். 9 இந்த அரசன் தம் ஜனங்களை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் மிக அதிகமாயிருக்கிறார்கள்! நம்மைக் காட்டிலும் அவர்கள் பலம்மிக்கவர்கள்! 10 இஸ்ரவேலர் பலம் பொருந்தியவர்களாய் வளர்ந்துகொண்டிருப்பதைத் தடை செய்ய நாம் திட்டங்கள் வகுக்க வேண்டும். போர் ஏற்படுமானால், இஸ்ரவேலர் நமது பகைவரோடு சேர்ந்துகொள்வதுடன், நம்மைத் தோற்கடித்து, நம்மிடமிருந்து தப்பித்துக்கொள்ளக்கூடும்” என்றான்.
11 இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையைச் சிரமமாக்குவதென எகிப்திய ஜனங்கள் முடிவெடுத்து, அவர்களிடையே மேற்பார்வையாளர்களை எகிப்தியர் நியமித்தார்கள். இந்த மேற்பார்வையாளர்கள் பித்தோம், ராமசேஸ் நகரங்களை அரசனுக்காகக் கட்டும்படியாக இஸ்ரவேலரைக் கட்டாயப்படுத்தினர். தானியங்களையும் பிற பொருட்களையும் சேர்த்து வைப்பதற்காக அரசன் இந்நகரங்களைப் பயன்படுத்தினான்.
12 மிகக் கடினமாக உழைக்கும்படியாக எகிப்தியர்கள் இஸ்ரவேலரை வற்புறுத்தினார்கள். எந்த அளவுக்கு இஸ்ரவேல் ஜனங்களை வேலை செய்யும்பொருட்டு கட்டாயப்படுத்தினார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகுதியாகப் பெருகிப் பரவினார்கள். இஸ்ரவேல் ஜனங்களைக் கண்டு எகிப்திய ஜனங்கள் அதிக பயமடைந்தனர். 13 எனவே, எகிப்தியர்கள் இஸ்ரவேலரை இன்னும் கடினமாக உழைக்கும்படியாகக் கட்டாயப்படுத்தினார்கள்.
14 இஸ்ரவேலரின் வாழ்க்கையை எகிப்தியர்கள் கடினமாக்கினார்கள். செங்கல்லும், சாந்தும் செய்யும்படியாக இஸ்ரவேலரை அவர்கள் வற்புறுத்தி வேலை வாங்கினார்கள். வயல்களிலும் கடினமாக உழைக்கும்படியாக அவர்களைக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் செய்த ஒவ்வொரு வேலையிலும் கடினமாக உழைக்குமாறு, கட்டாயப்படுத்தினார்கள்.
தேவனைப் பின்பற்றிய மருத்துவச்சிகள்
15 இஸ்ரவேல் பெண்கள் குழந்தை பெறுவதற்கு உதவ சிப்பிராள், பூவாள் என்ற இரண்டு எபிரெய மருத்துவச்சிகள் இருந்தனர். எகிப்தின் அரசன் மருத்துவச்சிகளிடம் பேசி, 16 “எபிரெயப் பெண்களின் பிரசவத்திற்கு நீங்கள் இருவரும் தொடர்ந்து உதவுங்கள். பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை உயிரோடிருக்கட்டும். குழந்தை ஆணாக இருந்தால், நீங்கள் அதைக் கொன்றுவிட வேண்டும்!” என்றான்.
17 ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்படுகிறவர்களானதால் அவர்கள் அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எல்லா ஆண் குழந்தைகளையும் உயிரோடு விட்டனர்.
18 எகிப்திய அரசன் மருத்துவச்சிகளை அழைத்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் குழந்தைகளை ஏன் உயிரோடு விடுகிறீர்கள்?” என்று கேட்டான்.
19 மருத்துவச்சிகள் அரசனை நோக்கி, “எபிரெயப் பெண்கள் எகிப்தியப் பெண்களைக் காட்டிலும் வலிமையானவர்கள். நாங்கள் உதவுவதற்குப் போகும் முன்னரே அவர்களுக்குக் குழந்தை பிறந்துவிடுகின்றது” என்றனர். 20 (20-21 தேவன் மருத்துவச்சிகளின்மேல் மகிழ்ச்சி அடைந்து அவர்களுக்கு நன்மை செய்தார். அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் செழிப்படையச் செய்தார்.)
எபிரெய ஜனங்கள் தொடர்ந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்து, வலிமை மிகுந்தோர் ஆயினர். 22 எனவே பார்வோன், தனது சொந்த ஜனங்களிடம், “எபிரெயரின் எல்லாப் பெண் குழந்தைகளும் உயிரோடிருக்கட்டும், ஆனால் ஒவ்வொரு ஆண் குழந்தை பிறக்கும்போதும், அதனை நைல் நதியில் வீசிவிட வேண்டும்” என்று ஆணையிட்டான்.
குழந்தையான மோசே
2 லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் லேவியின் குடும்பத்திலிருந்த ஒரு பெண்ணை மணந்தான். 2 அப்பெண் கருவுற்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாய் அக்குழந்தையின் அழகைக் கண்டு அதை மூன்று மாதங்கள் மறைத்து வைத்தாள். 3 அது ஆணாக இருந்ததால், அக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுமோ என்று தாய் பயந்தாள். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் ஒரு கூடையைச் செய்து, அது மிதக்கும்படியாக கீல் பூசி, குழந்தையை அக்கூடையில் வைத்து, நதியில் உயரமான புற்களிடையே கூடையை மிதக்கவிட்டாள். 4 குழந்தையின் சகோதரி அங்கு நின்று நடப்பதைக் கவனித்தாள். குழந்தைக்கு நிகழப்போவதைப் பார்க்க விரும்பினாள்.
5 அப்போதுதான் பார்வோனின் மகள் குளிப்பதற்காக நதிக்கு வந்தாள். உயர்ந்த புற்களிடையே இருந்த கூடையை அவள் கண்டாள். நதியருகே அவளது வேலைக்காரிகள் நடந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் கூடையை எடுத்து வருமாறு அவள் கூறினாள். 6 அரசனின் மகள் கூடையைத் திறந்து அதில் ஒரு ஆண் குழந்தையைக் கண்டாள். அக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. அவள் அதற்காக மனமிரங்கினாள். அது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று என்பதை அவள் அறிந்தாள்.
7 அங்கே நின்றுகொண்டிருந்த குழந்தையின் சகோதரி அரசனின் மகளை நோக்கி, “நான் போய் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கும், அதைக் கவனித்துக்கொள்வதற்கும் ஒரு எபிரெயப் பெண்ணை அழைத்து வரட்டுமா?” என்றாள்.
8 அரசனின் மகளும், “தயவு செய்து அவ்வாறே செய்” என்றாள்.
எனவே அப்பெண் சென்று, குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
9 அரசனின் மகள் அத்தாயை நோக்கி, “குழந்தையை எடுத்து எனக்காக அதற்குப் பாலூட்டு. அவனைக் கவனித்துக்கொள்வதற்காக உனக்குப் பணம் கொடுப்பேன்” என்றாள்.
எனவே, அப்பெண் குழந்தையை எடுத்துச் சென்று, அதனை வளர்த்தாள். 10 குழந்தை வளர்ந்தது. சில காலத்திற்குப் பிறகு, அவள் அக்குழந்தையை அரசனின் மகளிடம் கொடுத்தாள். அரசனின் மகள் குழந்தையைத் தன் சொந்த மகனாகவே ஏற்றுக்கொண்டாள். அக்குழந்தையை தண்ணீரிலிருந்து எடுத்ததால் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
மோசே தன் ஜனங்களுக்கு உதவுதல்
11 மோசே வளர்ந்து, பெரியவனானான். அவனது சொந்த ஜனங்களாகிய எபிரெயர்கள் கடினமாக உழைப்பதற்கு வற்புறுத்தப்படுவதைக் கண்டான். ஒரு நாள் ஒரு எபிரெய மனிதனை, எகிப்திய மனிதன் ஒருவன் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டான். 12 மோசே சுற்றிலும் நோக்கி, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதைக் கண்டான். பின் மோசே, எகிப்தியனைக் கொன்று, அவனை மண்ணில் புதைத்தான்.
13 மறுநாள் இரண்டு எபிரெய மனிதர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதையும், அவர்களில் ஒருவன் செய்தது தவறாயிருப்பதையும் மோசே பார்த்தான். மோசே அம்மனிதனை நோக்கி, “நீ ஏன் உனது அயலானை அடிக்கிறாய்?” என்று கேட்டான்.
14 அம்மனிதன் அதற்குப் பதிலாக, “எங்களுக்கு அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் இருக்கும்படியாக உன்னிடம் யாராவது கூறினார்களா? நீ எகிப்தியனை நேற்று கொன்றதுபோல என்னையும் கொல்லப் போகிறாயா?” என்றான்.
இதைக் கேட்டு மோசே அஞ்சினான். மோசே தனக்குள், “நான் செய்ததை எல்லோரும் இப்போது அறிந்திருக்கிறார்கள்” என்று நினைத்துக்கொண்டான்.
15 மோசே செய்ததைக் குறித்து பார்வோன் கேள்விப்பட்டு, அவன் மோசேயைக் கொல்ல முடிவு செய்தான். ஆனால் பார்வோனிடமிருந்து மோசே தப்பி ஓடி, மீதியான் தேசத்திற்குச் சென்றான்.
மீதியானில் மோசே
மீதியானின் ஒரு கிணற்றருகே மோசே நின்றான். 16 ஏழு பெண்களைப் பெற்ற ஒரு ஆசாரியன் மீதியானில் இருந்தான். அப்பெண்கள் வந்து தம்முடைய தந்தையின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டும்படிக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். 17 ஆனால் அங்கிருந்த சில மேய்ப்பர்கள் அப்பெண்களைத் துரத்தி, அவர்கள் தண்ணீர் இறைக்க முடியாதபடி செய்தனர். மோசே அப்பெண்களுக்கு உதவி, அவர்களின் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்தான்.
18 பின் அப்பெண்கள் தங்கள் தந்தையாகிய ரெகுவேலிடம் சென்றனர். அவர்கள் தந்தை அவர்களிடம், “இன்று சீக்கிரமாக வந்துவிட்டீர்களே!” என்று கேட்டான்.
19 அப்பெண்கள், “மேய்ப்பர்கள் எங்களைத் துரத்திவிட முயன்றதால் ஒரு எகிப்திய மனிதன் எங்களுக்கு உதவினான். அவன் எங்களுக்கும் எங்கள் ஆடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்று பதில் சொன்னார்கள்.
20 எனவே, ரெகுவேல் அவனது பெண்களை நோக்கி, “அம்மனிதன் எங்கே? ஏன் அவனை விட்டு வந்தீர்கள்? அவனை அழையுங்கள், அவன் நம்மோடு சாப்பிடட்டும்” என்றான்.
21 மோசே அம்மனிதனோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தான். ரெகுவேல், தனது மகளாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்து வைத்தான். 22 சிப்போராள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். மோசே அவனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டான். தனக்குச் சொந்தமில்லாத நாட்டில் அந்நியனாக இருந்தமையால் மோசே அவனுக்கு இப்பெயரை வைத்தான்.
இஸ்ரவேலுக்கு உதவ தேவன் முடிவு செய்தல்
23 நீண்டகாலம் கழிந்தது. எகிப்தின் மன்னன் மரித்தான். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ கடினமாக உழைப்பதற்கு தொடர்ந்து வற்புறுத்தப்பட்டனர். உதவிக்காக அவர்கள் அழுதார்கள். 24 தேவன் அவர்கள் ஜெபத்தைக் கேட்டார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரோடு செய்த உடன்படிக்கையை அவர் நினைவுகூர்ந்தார். 25 இஸ்ரவேல் ஜனங்கள் அடைந்த துயரங்களை தேவன் கண்டார். விரைவில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தீர்மானித்தார்.
எரியும் புதர்
3 மோசேயின் மாமன் எத்திரோ என்ற
பெயருடையவன் ஆவான். (எத்திரோ மீதியானில் ஆசாரியனாக இருந்தான்) எத்திரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தான். ஒரு நாள், மோசே ஆடுகளைப் பாலைவனத்தின் மேற்குத் திசைக்கு அழைத்துச் சென்றான். மோசே ஓரேப் (சீனாய்) எனப்படும் தேவனின் மலைக்குப் போனான். 2 மோசே மலையின்மேல், ஒரு எரியும் புதரில் கர்த்தருடைய தூதனைக் கண்டான். அது பின்வருமாறு நிகழ்ந்தது:
அழியாதபடி எரிந்துகொண்டிருந்த ஒரு புதரை மோசே கண்டான். 3 மோசே புதரின் அருகே சென்று, அழியாதபடி அது எவ்வாறு எரிகிறது என்பதைப் பார்ப்பதற்குத் தீர்மானித்தான்.
4 புதரைப் பார்ப்பதற்கு மோசே வந்துகொண்டிருப்பதை கர்த்தர் கண்டார். எனவே, தேவன் புதரிலிருந்து, “மோசே, மோசே!” என்று கூப்பிட்டார்.
மோசே, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.
5 அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்றுகொண்டிருக்கிறாய். 6 நான் உனது முற்பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார்.
தேவனைப் பார்ப்பதற்குப் பயந்ததால் மோசே முகத்தை மூடிக்கொண்டான்.
7 அப்போது கர்த்தர், “எகிப்தில் என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். 8 நான் இப்போது இறங்கிப்போய், எகிப்தியரிடமிருந்து என் ஜனங்களை மீட்பேன். அந்நாட்டிலிருந்து தொல்லைகளில்லாமல் சுதந்திரமாக வாழத்தக்க ஒரு நல்ல நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். [a] அந்நாடு நல்ல பொருட்களால் நிரம்பியதாகும். கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற ஜனங்கள் அந்நாட்டில் வாழ்கிறார்கள். 9 நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன். 10 நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து!” என்றார்.
11 ஆனால் மோசே தேவனிடம், “நான் பெரிய மனிதன் அல்ல, நான் எவ்வாறு பார்வோனிடம் போய், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தக் கூடும்?” என்று கேட்டான்.
12 தேவன், “நான் உன்னோடு இருப்பேன். எனவே நீ இதைச் செய்ய முடியும். நான் உன்னை அனுப்புகிறேன் என்பதற்கு இதுவே சான்றாகும்! ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய்!” என்றார்.
13 அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?” என்று கேட்டான்.
14 அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார். 15 மோசேயிடம் தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.
16 மேலும் கர்த்தர், “போய் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒருமித்துக் கூடி வரச் செய்து அவர்களுக்கு, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யேகோவா, எனக்குத் தரிசனமளித்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரின் தேவன் என்னிடம் பேசினார். கர்த்தர், ‘நான் உங்களை நினைவுகூர்ந்து, எகிப்தில் உங்களுக்கு நடந்ததையும் கண்டேன். 17 எகிப்தில் நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து உங்களை விடுவிக்க முடிவு செய்தேன். இப்போது கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற வெவ்வேறு ஜனங்களுக்குச் சொந்தமான தேசத்திற்கு உங்களை அழைத்துச் செல்வேன். பல நல்ல பொருட்களால் நிரம்பிய தேசத்திற்கு உங்களை வழிநடத்துவேன்’ என்று சொன்னார்” என்று சொல்.
18 “மூப்பர்கள் (தலைவர்கள்) உனக்குச் செவி கொடுப்பார்கள். பின்னர் நீயும், அவர்களும் எகிப்திய அரசனிடம் செல்லுங்கள். நீ அரசனிடம், ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய யேகோவா எங்களிடம் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணப்படும்படியாகக் கூறினார். எங்கள் தேவனாகிய யேகோவாவுக்கு நாங்கள் அங்கு பலி செலுத்தவேண்டும்’ என்று சொல்லுங்கள்.
19 “ஆனால் எகிப்திய அரசன் உங்களைப் போக அனுமதிக்கமாட்டான் என்பதை அறிவேன். மிகப் பெரிய ஒரு வல்லமை மட்டுமே உங்களை அனுப்ப அவனைக் கட்டாயப்படுத்தும். 20 ஆகையால் எனது மிகுந்த வல்லமையை எகிப்துக்கு எதிராகப் பயன்படுத்துவேன். அந்த தேசத்தில் வியக்கும்படியான காரியங்கள் நிகழும்படி செய்வேன். நான் இதைச் செய்தபிறகு, அவன் உங்களைப் போக அனுமதிப்பான். 21 இஸ்ரவேல் ஜனங்களிடம் எகிப்திய ஜனங்கள் இரக்கம்கொள்ளும்படி செய்வேன். எகிப்தைவிட்டுப் புறப்படும்போது, உங்கள் ஜனங்களுக்கு எகிப்தியர்கள் பல வெகுமதிகளைக் கொடுப்பார்கள்.
22 “எல்லா எபிரெய பெண்களும் தங்கள் அண்டை வீடுகளிலும், தங்கள் வீடுகளிலும் வசிக்கும் எகிப்திய பெண்களிடம் பரிசுகளைக் கேட்க வேண்டும். அந்த எகிப்திய பெண்கள் அவர்களுக்குப் பரிசுகளைக் கொடுப்பார்கள். உன் ஜனங்கள் பொன், வெள்ளி, விலைமதிப்புள்ள ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகப் பெறுவார்கள். பின் நீங்கள் எகிப்தை விட்டுப் புறப்படும்போது, உங்கள் குழந்தைகளுக்கு அப்பரிசுகளை அணிவிப்பீர்கள். இவ்வகையில் நீங்கள் எகிப்து தேசத்தின் செல்வத்தை எடுத்துச் செல்வீர்கள்” என்றார்.
மோசேக்கு அடையாளம்
4 அப்போது மோசே தேவனை நோக்கி, “நீர் என்னை அனுப்பினீர் என்று கூறும்பொழுது, இஸ்ரவேல் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள். அவர்கள், ‘தேவன் (யேகோவா) உனக்குக் காட்சியளிக்கவில்லை’ என்பார்கள்” என்றான்.
2 தேவன் மோசேயை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார்.
மோசே, “இது எனது கைத்தடி” என்றான்.
3 அப்போது தேவன், “உனது கைத்தடியை தரையில் போடு” என்றார்.
மோசே, தனது கைத்தடியை நிலத்தின் மேல் போட்டான். அது பாம்பாக மாறிற்று. மோசே அதற்குப் பயந்து அங்கிருந்து ஓடினான். 4 கர்த்தர் மோசேயை நோக்கி, “கையை நீட்டி, பாம்பின் வாலைப் பிடி” என்றார்.
எனவே மோசே கையை நீட்டிப் பாம்பின் வாலைப் பிடித்தான். மோசே அவ்வாறு செய்தபோது, பாம்பு மீண்டும் கைத்தடியாயிற்று. 5 அப்போது, தேவன், “உனது கைத் தடியை இவ்வாறு பயன்படுத்து. அப்போது நீ உனது முற்பிதாக்களின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரைக் கண்டாய் என்பதை ஜனங்கள் நம்புவார்கள்” என்றார்.
6 பின் கர்த்தர், “உனக்கு மற்றொரு அடையாளத்தையும் தருவேன். உனது கையை அங்கிக்குள் நுழை” என்றார்.
எனவே மோசே தன் அங்கிக்குள் கையை நுழைத்தான். மோசே அங்கியிலிருந்து கையை எடுத்தபோது, அது மாறிப்போயிருந்தது. கை முழுவதும் உறைந்த பனியைப் போன்ற வெள்ளைப் புள்ளிகளால் நிரம்பியிருந்தது.
7 அப்போது தேவன், “உனது கையை அங்கிக்குள் மீண்டும் நுழை” என்றார். மோசே அவ்வாறே அங்கிக்குள் கையை நுழைத்தான். பின் மோசே கையை வெளியே எடுத்தபோது அவனது கை முன்பிருந்ததைப்போலவே நன்றாக இருந்தது.
8 அப்போது தேவன், “நீ உனது கைத்தடியைப் பயன்படுத்தும்போது ஒருவேளை ஜனங்கள் உன்னை நம்பாவிட்டாலும், இந்த அடையாளத்தைக் காட்டும்போது, அவர்கள் உன்னை நம்புவார்கள் 9 இந்த இரண்டு காரியங்களைக் காண்பித்து, அவர்கள் உன்னை நம்ப மறுத்தால், நீ நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை அள்ளி, அதனைத் தரையில் ஊற்று. அது நிலத்தைத் தொட்டதும் இரத்தமாக மாறும்” என்றார்.
10 ஆனால் மோசே கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன் நான் தேர்ந்த பேச்சாளன் அல்ல. நான் சிறப்பாக எப்போதும் பேசியதில்லை. இப்போது உம்மிடம் பேசிய பிறகும்கூட, நான் சிறந்த பேச்சாளனாக மாறவில்லை. நான் நிதானமாகப் பேசுகிறேன் என்பதும், சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாத திக்குவாய் உடையவன் என்பதும் உமக்கு தெரியும்” என்று கூறினான்.
11 அப்போது கர்த்தர் அவனை நோக்கி, “யார் மனிதனின் வாயை உண்டாக்கினார்? யாரால் மனிதனைச் செவிடனாகவும், ஊமையாகவும் செய்யமுடியும்? யார் ஒருவனைக் குருடனாக்கக் கூடும்? யார் ஒருவனுக்குப் பார்வை தரமுடியும்? இக்காரியங்களைச் செய்ய வல்லவர் நானே. நான் யேகோவா. 12 எனவே நீ போ! நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ சொல்லவேண்டிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன்” என்றார்.
13 ஆனால் மோசே, “எனது கர்த்தாவே, வேறு யாரையாவது அனுப்புமாறு உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன், என்னை அனுப்பவேண்டாம்” என்றான்.
14 அப்போது மோசேயின்மேல் கர்த்தர் கோபம் கொண்டு, “நல்லது! உனக்கு உதவியாக நான் ஒருவனைத் தருவேன். லேவியனாகிய உனது சகோதரன் ஆரோனை நான் பயன்படுத்துவேன். அவன் தேர்ந்த பேச்சாளன். அவன் உன்னைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறான். அவன் உன்னைப் பார்த்து சந்தோஷப்படுவான். 15 அவன் உன்னோடுகூட பார்வோனிடம் வருவான். நீ கூற வேண்டியதை உனக்குச் சொல்வேன். நீ அதை ஆரோனுக்குச் சொல். பார்வோனிடம் பேச வேண்டிய தகுந்த வார்த்தைகளை ஆரோன் தெரிந்துகொள்வான். 16 உனக்காக ஆரோன் ஜனங்களிடமும் பேசுவான். நீ ஒரு பேரரசனைப் போலிருப்பாய், உனக்குரிய பேச்சாளனாக அவன் இருப்பான். [b] 17 எனவே போ. உனது கைத்தடியையும் எடுத்துச்செல். நான் உன்னோடிருக்கிறேன் என்பதை ஜனங்களுக்குக் காட்டுவதற்கு உனது கைத்தடியையும், பிற அற்புதங்களையும் பயன்படுத்து” என்றார்.
மோசே எகிப்துக்குத் திரும்பி வருதல்
18 அப்போது மோசே தன் மாமனாகிய எத்திரோவிடம் திரும்பிப்போனான். மோசே எத்திரோவை நோக்கி, “நான் எகிப்துக்குத் திரும்பிப்போக அனுமதி கொடும். எனது ஜனங்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்” என்றான்.
எத்திரோ மோசேயை நோக்கி, “நீ சமாதானத்தோடு போய்வா” என்றான்.
19 மோசே இன்னும் மீதியானில் இருக்கும்போதே, தேவன் மோசேயை நோக்கி, “இப்போது நீ எகிப்திற்குத் திரும்பிப் போவதற்குப் பொருத்தமான வேளை. உன்னைக் கொல்ல விரும்பிய மனிதர்கள் மரித்து போய்விட்டனர்” என்றார்.
20 எனவே மோசே, தன் மனைவியையும், குழந்தைகளையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்திற்குத் திரும்பிப் போனான். தேவனின் வல்லமையைப் பெற்றிருந்த தனது கைத்தடியையும் மோசே எடுத்துக்கொண்டான்.
21 மோசே எகிப்தை நோக்கிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது, தேவன் அவனோடு பேசினார். அவர், “நீ பார்வோனோடு பேசும்போது, உனக்கு நான் அளித்துள்ள வல்லமையினால் எல்லா அற்புதங்களையும் செய்து காட்ட வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். ஆனால் பார்வோன் மிகவும் பிடிவாதமாக இருக்கும்படியாகச் செய்வேன். ஜனங்களைப் போகும்படியாக அவன் அனுமதிக்கமாட்டான். 22 அப்போது நீ பார்வோனைப் பார்த்து, ‘இஸ்ரவேல் எனது முதற்பேறான மகன். 23 என் மகன் கிளம்பிப் போய் என்னைத் தொழுதுகொள்ளவிடு என்று உனக்குக் கூறுகிறேன்! இஸ்ரவேல் போவதற்கு நீ அனுமதி அளிக்க மறுத்தால், நான் உனது முதற்பேறான மகனைக் கொல்வேன், என்று கர்த்தர் சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
மோசேயின் மகன் விருத்தசேதனம் செய்யப்படுதல்
24 எகிப்திற்குச் செல்லும் வழியில் இரவைக் கழிப்பதற்காக மோசே ஓரிடத்தில் தங்கினான். கர்த்தர் அவ்விடத்தில் மோசேயைச் சந்தித்து அவனைக் கொல்ல முயன்றார். [c] 25 ஆனால் சிப்போராள் கூர்மையான கல்லினால் செய்யப்பட்டக் கத்தியினால் தனது மகனின் நுனித்தோலை அறுத்தெடுத்து, நுனித் தோலினால் மோசேயின் பாதங்களைத் தொட்டு, “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான கணவன்” என்றாள். 26 மகனுக்கு அவளே விருத்தசேதனம் செய்யும்படியாக நேரிட்டதால் சிப்போராள் இவ்வாறு கூறினாள். எனவே தேவன் மோசேயை மன்னித்து அவனைக் கொல்லாமல்விட்டார்.
தேவனின் முன்னிலையில் மோசேயும் ஆரோனும்
27 கர்த்தர் ஆரோனோடு பேசினார். கர்த்தர் அவனிடம், “பாலைவனத்தில் சென்று மோசேயைப் பார்” என்றார். எனவே ஆரோன் சென்று, தேவனின் மலையில் மோசேயைச் சந்தித்தான். ஆரோன் மோசேயைக் கண்டு, அவனை முத்தமிட்டான். 28 தேவன் அவனை அனுப்பினார் என்பதை நிரூபிப்பதற்காக அவன் செய்யவேண்டிய காரியங்களையும் அற்புதங்களையும் குறித்து மோசே ஆரோனுக்குச் சொன்னான். தேவன் அவனுக்குச் சொன்ன எல்லாவற்றையும் மோசே ஆரோனுக்குக் கூறினான்.
29 மோசேயும் ஆரோனும் சென்று இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒன்றாகக் கூட்டினார்கள். 30 அப்போது ஆரோன் ஜனங்களிடம் கர்த்தர் மோசேயிடம் கூறிய எல்லாக் காரியங்களையும் கூறினான். எல்லா ஜனங்களும் பார்க்கும்படியாக அடையாளங்களைச் செய்து காட்டினான். 31 தேவன் மோசேயை அனுப்பினார் என்பதை ஜனங்கள் நம்பினார்கள். தேவன் அவர்களின் துன்பங்களைக் கண்டார் எனவும், அவர்களுக்கு உதவுவதற்காக அவன் வந்துள்ளான் என்பதையும் இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்தார்கள். எனவே அவர்கள் தலைகுனிந்து தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
பார்வோனின் முன்னே மோசேயும் ஆரோனும்
5 மோசேயும் ஆரோனும் ஜனங்களிடம் பேசிய பிறகு, பார்வோனிடம் சென்றனர். அவர்கள், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி என்னை கௌரவப்படுத்துவதற்கு என் ஜனங்களை நீ போகவிடு’ என்று கூறுகிறார்” என்றனர்.
2 ஆனால் பார்வோன், “யார் உங்கள் கர்த்தர்? நான் ஏன் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்? இஸ்ரவேலரை நான் ஏன் போக அனுமதிக்கவேண்டும்? இந்த கர்த்தர் யாரென்று கூட எனக்குத் தெரியாது. நான் இஸ்ரவேலரைப் போக அனுமதிக்கமாட்டேன்” என்றான்.
3 அப்போது ஆரோனும் மோசேயும், “எபிரெய ஜனங்களின் தேவன் எங்களுடன் பேசினார். பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செல்வதற்கு எங்களை அனுமதிக்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம். அங்கு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்துவோம். இதை நாங்கள் செய்யவில்லையென்றால், அவர் கோபங்கொண்டு நோய் அல்லது யுத்தத்தினால் நாங்கள் அழியும்படியாகச் செய்வார்” என்றனர்.
4 ஆனால் பார்வோன் அவர்களை நோக்கி, “மோசேயே, ஆரோனே, நீங்கள் வேலை செய்கிறவர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள். அவர்கள் அவர்களது வேலையைச் செய்யட்டும். உங்கள் வேலையை நீங்கள் கவனியுங்கள். 5 ஏராளமான வேலையாட்கள் உள்ளார்கள். தம் வேலைகளைச் செய்யாதபடி நீங்கள் அவர்களை தடுக்கிறீர்கள்” என்றான்.
பார்வோன் ஜனங்களைத் தண்டித்தல்
6 அதே நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் இன்னும் கடினமாக உழைக்கும்படியாக பார்வோன் ஒரு கட்டளையிட்டான். அடிமைகளின் மேற்பார்வையாளர்களிடமும் எபிரெயர்களைக் கண்காணிப்பவர்களிடமும் பார்வோன், 7 “ஜனங்களுக்கு எப்போதும் நீங்கள் வைக்கோலை கொடுத்து வந்தீர்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திச் செங்கல் செய்தார்கள். ஆனால் இப்போது செங்கல் செய்வதற்குத் தேவையான வைக்கோலை அவர்களே சேகரித்து வரும்படி கூறுங்கள். 8 ஆனால் முன்னால் செய்தபடியே, அதே எண்ணிக்கை செங்கற்களை தினமும் அவர்கள் செய்யவேண்டும். அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர், எனவே தான் தங்களை அனுப்பும்படியாக அவர்கள் என்னைக் கேட்கிறார்கள். அவர்கள் செய்வதற்குப் போதிய வேலை இல்லை. எனவேதான் அவர்கள் தங்கள் தேவனுக்குப் பலிகள் செலுத்தவேண்டுமென என்னைக் கேட்கிறார்கள். 9 எனவே இந்த மனிதர்கள் கடினமாக வேலை செய்யும்படிச் செய்யுங்கள். அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். அப்போது அவர்களுக்கு மோசேயின் பொய்களை நம்புவதற்குப் போதிய நேரமிராது” என்றான்.
10 எனவே இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்களும், எபிரெய மேற்பார்வையாளர்களும் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, “செங்கற்கள் செய்ய உங்களுக்கு வைக்கோல் தரமுடியாதென பார்வோன் முடிவு செய்துள்ளார். 11 நீங்கள் போய் உங்களுக்கு வேண்டிய வைக்கோலைக் கொண்டு வரவேண்டும். ஆனால் முன்னால் செய்தபடியே எண்ணிக்கைகளில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை” என்றார்கள்.
12 வைக்கோலைக் கொண்டு வருவதற்காக ஜனங்கள் எகிப்தின் எல்லா இடங்களுக்கும் சென்றார்கள். 13 மேற்பார்வையாளர்கள் ஜனங்களை இன்னும் கடினமாக வேலைவாங்கினார்கள். முன்னால் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யும்படி வற்புறுத்தினார்கள். 14 இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஜனங்கள் செய்த வேலைக்கு அவர்களைப் பொறுப்பாளர்கள் ஆக்கினார்கள். இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களை அடித்து அவர்களிடம், “முன்னால் செய்த எண்ணிக்கையளவு செங்கற்களை ஏன் நீங்கள் செய்யவில்லை? முன்பு அதனைச் செய்ய முடிந்ததென்றால், இப்போதும் உங்களால் அதைச் செய்யக் கூடும்!” என்றார்கள்.
15 அப்போது எபிரெய மேற்பார்வையாளர்கள் பார்வோனிடம் சென்று: “நாங்கள் உமது ஊழியர்கள். ஏன் எங்களை இவ்வாறு நடத்துகிறீர்? 16 எங்களுக்கு நீர் வைக்கோல் தரவில்லை. ஆனால் முன்பு செய்த எண்ணிக்கையளவுக்கு செங்கற்களை இப்போதும் செய்யும்படியாகக் கூறுகிறீர். இப்போது எங்கள் எஜமானர்கள் எங்களை அடிக்கிறார்கள். இவ்வாறு உங்கள் ஜனங்கள் செய்வது தவறானது” என்று குறை கூறினார்கள்.
17 பார்வோன், “நீங்கள் சோம்பேறிகள், உங்களுக்கு வேலைசெய்ய விருப்பமில்லை. அதனால் தான் உங்களை அனுப்பும்படி நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து போய், கர்த்தருக்கு பலிசெலுத்த விரும்புகிறீர்கள். 18 இப்போது வேலை செய்யத் திரும்பி போங்கள்! உங்களுக்கு வைக்கோல் தரமாட்டோம். ஆனால் முன்பு செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களை நீங்கள் செய்ய வேண்டும்!” என்று பதிலளித்தான்.
19 தங்களுக்குத் தொல்லை நேர்ந்ததை எபிரெய மேற்பார்வையாளர்கள் கண்டுகொண்டார்கள். கடந்த காலத்த்தில் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யமுடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.
20 பார்வோனைச் சந்தித்துத் திரும்பிக்கொண்டிருந்த வழியில் மோசேயும், ஆரோனும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். 21 அவர்கள் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “நம்மைப் போகவிடும்படியாக பார்வோனைக் கேட்டபடியால் நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். பார்வோனும், அவரது ஆட்சியாளர்களும் எங்களை வெறுக்கும்படிச் செய்ததால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். எங்களைக் கொல்வதற்கு அவர்களுக்கு ஒரு தருணத்தை அளித்திருக்கிறீர்கள்” என்றனர்.
மோசே தேவனிடம் முறையிடுதல்
22 மோசே கர்த்தரிடம் ஜெபம் செய்து, “ஆண்டவரே, உமது ஜனங்களுக்கு ஏன் இந்தக் கொடுமையான காரியத்தைச் செய்தீர்? ஏன் என்னை இங்கு அனுப்பினீர்? 23 நான் பார்வோனிடம் போய் நீர் கூறும்படியாகச் சொன்னவற்றைக் கூறினேன். அப்போதிலிருந்து அவன் ஜனங்களைக் கேவலமாக நடத்துகிறான். அவர்களுக்கு உதவுவதற்கு நீர் எதையும் செய்யவில்லை!” என்றான்.
6 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய். அவனுக்கு எதிராக என் மகா வல்லமையைப் பயன்படுத்துவேன். அவன் என் ஜனங்களைப் போகவிடுவான். அவர்களை அனுப்ப மிக்க ஆயத்தத்தோடு இருப்பான். அவர்கள் போகும்படியாக அவன் கட்டாயப்படுத்துவான்” என்றார்.
2 பின், தேவன் மோசேயை நோக்கி, “நானே கர்த்தர். 3 நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை. 4 நான் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்தேன். கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன். அவர்கள் அத்தேசத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் அது அவர்களின் சொந்த தேசமல்ல. 5 இஸ்ரவேல் ஜனங்கள் படும் தொல்லைகளை நான் இப்போது அறிகிறேன். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பதையும் நான் அறிகிறேன், எனது உடன்படிக்கையை நினைவுகூருகிறேன். 6 எனவே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, ‘நானே கர்த்தர். நான் உங்களை மீட்பேன். நான் உங்களை விடுவிப்பேன். எகிப்தியர்களுக்கு நீங்கள் அடிமைகளாக இருக்கமாட்டீர்கள். எனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தி, எகிப்தியருக்குப் பயங்கரமான தண்டனை அளிப்பேன். பின், உங்களை மீட்பேன். 7 நீங்கள் எனது ஜனங்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாக இருப்பேன். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டேன் என்பதை அறிவீர்கள். 8 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஒரு பெரிய வாக்குத்தத்தம் பண்ணினேன். அவர்களுக்கு ஒரு விசேஷமான தேசத்தை அளிப்பதாக வாக்களித்தேன். எனவே உங்களை அத்தேசத்திற்கு வழிநடத்துவேன். உங்களுக்கு அத்தேசத்தைத் தருவேன், அது உங்களுடையதாக இருக்கும். நானே கர்த்தர்!’ என்று கூறியதாகச் சொல்லுங்கள்” என்றார்.
9 மோசே இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறினான். ஆனால் ஜனங்கள் அதற்குச் செவிசாய்க்கவிலை. அவர்கள் மிகக் கடினமாக உழைத்ததால் மோசேயிடம் பொறுமையிழந்து காணப்பட்டார்கள்.
10 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, 11 “பார்வோனிடம் போய் இஸ்ரவேல் ஜனங்களை தனது தேசத்திலிருந்து போகவிடும்படியாகக் கூறு” என்றார்.
12 ஆனால் மோசே, “இஸ்ரவேல் ஜனங்களே எனக்குச் செவிசாய்க்க மறுக்கிறார்கள்! எனவே பார்வோனும் நான் சொல்வதைக் கேட்கமாட்டான். நான் பேச திறமையில்லாதவன்” என்று பதில் கூறினான்.
13 ஆனால் கர்த்தர் மோசேயோடும், ஆரோனோடும் பேசினார். இஸ்ரவேல் ஜனங்களிடமும், பார்வோனிடமும் சென்று பேசுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்துமாறும் அவர்களுக்கு தேவன் கட்டளையிட்டார்.
இஸ்ரவேலின் சில குடும்பங்கள்
14 இஸ்ரவேல் குடும்பத் தலைவர்களில் சிலருடைய பெயர்கள் இங்குத் தரப்படுகின்றன:
இஸ்ரவேலின் முதல் மகன் ரூபனுக்கு நான்கு மகன்கள். அவர்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகியோர்.
15 சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், சவுல் ஆகியோர். (சவுல் கானானிய பெண்ணின் மகன்.)
16 லேவி 137 ஆண்டுகள் வாழ்ந்தான். கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் ஜனங்கள்.
17 கெர்சோனுக்கு, லிப்னீ, சிமேயீ என்னும் இரண்டு மகன்கள் இருந்தனர்.
18 கோகாத் 133 ஆண்டுகள் வாழ்ந்தான். கோகாத்தின் ஜனங்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர்.
19 மெராரியின் ஜனங்கள் மகேலியும், மூசியுமாவர்.
இந்தக் குடும்பங்கள் அனைத்தும் இஸ்ரவேலின் மகன் லேவியிலிருந்து வந்தவை.
20 அம்ராம் 137 ஆண்டுகள் வாழ்ந்தான். அவன் தன் தந்தையின் சகோதரியாகிய யோகெபேத்தை மணந்தான். அம்ராமும் யோகெபேத்தும், ஆரோனையும் மோசேயையும் பெற்றனர்.
21 கோராகு, நெப்பேக், சித்ரி ஆகியோர் இத்சேயாரின் மகன்கள்.
22 மீசவேல், எல்சாபான், சித்ரி ஆகியோர் ஊசியேலின் மகன்கள்.
23 எலிசபாளை ஆரோன் மணந்தான். (எலிசபா அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமாவாள்.) ஆரோனும் எலிசபாளும் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரைப் பெற்றனர்.
24 ஆசீர், எல்க்கானா, அபியாசாப் ஆகியோர் கோராகின் ஜனங்களும் கோராகியரின் முற்பிதாக்களும் ஆவார்கள்.
25 ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தயேலின் மகள் ஒருத்தியை மணந்தான். அவள் பினெகாசைப் பெற்றெடுத்தாள்.
இந்த ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் குடும்பத்தினராவார்கள்.
26 ஆரோனும் மோசேயும், இந்த கோத்திரத்திலிருந்து வந்தனர். அவர்களிடம் தேவன் பேசி, “குழுக்களாக என் ஜனங்களை வழிநடத்து” என்றார். 27 ஆரோனும், மோசேயும் எகிப்து மன்னன் பார்வோனிடம் பேசினார்கள். எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்கு அனுமதிக்கும்படி அவர்கள் பார்வோனிடம் கூறினார்கள்.
மோசேயை தேவன் மீண்டும் அழைத்தல்
28 எகிப்தில் தேவன் மோசேயிடம் பேசினார். 29 அவர், “நானே கர்த்தர். நான் உன்னிடம் கூறுகின்றவற்றை எகிப்து அரசனிடம் சொல்” என்றார்.
30 ஆனால் மோசே, “நான் பேச திறமையில்லாதவன். அரசன் எனக்குச் செவிசாய்க்கமாட்டான்” என்று பதிலளித்தான்.
7 கர்த்தர் மோசேயிடம், “நான் உன்னோடு இருப்பேன். பார்வோனுக்கு நீ ஒரு பேரரசனைப் போல் தோன்றுவாய். ஆரோன் உனக்காகப் பேசுகிறவனாய் இருப்பான். 2 நான் உனக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் ஆரோனுக்குச் சொல். நான் சொல்லும் காரியங்களை அவன் அரசனுக்குச் சொல்வான். இஸ்ரவேல் ஜனங்கள் இத்தேசத்தை விட்டுச் செல்வதற்கு பார்வோன் அனுமதிப்பான். 3 ஆனால் பார்வோன் பிடிவாதமாக இருக்கும்படி நான் செய்வேன். நீங்கள் சொல்லுகிற காரியங்களுக்கு அவன் கீழ்ப்படியமாட்டான். நான் யாரென்பதை நிரூபிப்பதற்காக எகிப்தில் அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வேன். ஆனால் உங்களுக்கு செவிகொடுக்க மறுப்பான். 4 பிறகு நான் எகிப்தை அதிகமாகத் தண்டிப்பேன். என் ஜனங்களையும் வெளியே கொண்டு வருவேன். 5 அப்போது எகிப்து ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். அதன்பின் அவர்கள் தேசத்திலிருந்து என் ஜனங்களை வழி நடத்துவேன்” என்றார்.
6 கர்த்தரின் கட்டளைகளுக்கு மோசேயும் ஆரோனும் கீழ்ப்படிந்தனர். 7 பார்வோனிடம் பேசும்போது, மோசே 80 வயதுள்ளவனாகவும் ஆரோன் 83 வயதுள்ளவனாகவும் இருந்தனர்.
மோசேயின் கைத்தடி பாம்பாக மாறுதல்
8 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 9 “பார்வோன் உங்கள் வல்லமையை நிரூபித்துக் காட்டச் சொல்வான். உங்களிடம் ஒரு அற்புதத்தைச் செய்ய வேண்டுமென பார்வோன் கேட்பான். ஆரோனின் கைத்தடியை நிலத்தில் வீசும்படியாகச் சொல். பார்வோன் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, கைத்தடி ஒரு பாம்பாக மாறும்” என்றார்.
10 எனவே மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் போய், கர்த்தர் சொன்னபடியே செய்தார்கள். ஆரோன் அவனது கைத்தடியைக் கீழே எறிந்தான். பார்வோனும் அவனது அதிகாரிகளும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, கைத்தடி பாம்பாக மாறிற்று.
11 எனவே, அரசன் தன் நாட்டுԔஞானிகளுக்கும், மந்திரவாதிகளுக்கும் சொல்லியனுப்பினான். அம்மனிதர்களும் அவர்களது உபாயங்களைப் பயன்படுத்தி ஆரோன் செய்தவாறே செய்தனர். 12 அவர்களும் தங்கள் கைத்தடிகளை நிலத்தின் மேல் எறிந்தபோது, அக்கைத்தடிகள் பாம்புகளாயின, ஆனால் ஆரோனின் கைத்தடியோ அவற்றைத் தின்றது. 13 பார்வோனின் இருதயம் கடினமாகி, இப்போதும் ஜனங்களைப் போக விட மறுத்துவிட்டான். கர்த்தர் நடக்குமெனக் கூறியபடியே இது நிகழ்ந்தது. மோசேயும் ஆரோனும் கூறுவதைக் கேட்க அரசன் மறுத்தான்.
தண்ணீர் இரத்தமாகுதல்
14 கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் பிடிவாதமாக இருக்கிறான். பார்வோன் ஜனங்களை அனுப்ப மறுக்கிறான். 15 காலையில் பார்வோன் நதிக்குப் போவான். நைல் நதியினருகே பாம்பாக மாறின உனது கைத்தடியை எடுத்துக்கொண்டு அவனிடம் போ. 16 அவனிடம் இதைக் கூறு: ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் என்னை உன்னிடம் அனுப்பினார். பாலைவனத்தில் அவரது ஜனங்கள் சென்று தொழுதுகொள்ள அனுப்பு என்று உன்னிடம் கூறுமாறு எனக்கு கர்த்தர் சொன்னார். இதுவரைக்கும் நீ கர்த்தர் கூறியவற்றிற்கு செவிசாய்க்கவில்லை. 17 எனவே, அவரே கர்த்தர் என்பதை உனக்குக் காட்டுவதற்காக சில காரியங்களைச் செய்வதாக கர்த்தர் சொல்கிறார். எனது கையிலிருக்கும் இந்தக் கைத்தடியால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன். நதி இரத்தமாக மாறும். 18 நதியின் மீன்கள் செத்துப்போகும், நதியிலிருந்து துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும். அப்போது நதியின் தண்ணீரை எகிப்தியர்கள் பருகமுடியாது’” என்று கூறினார்.
19 கர்த்தர் மோசேயை நோக்கி, “ஆரோனின் கையிலுள்ள கைத்தடியை நதிகள், கால்வாய்கள், ஏரிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் அனைத்தின் மேலாகவும் நீட்டும்படியாக ஆரோனுக்குக் கூறு, அவன் அவ்வாறு செய்தவுடன் தண்ணீரெல்லாம் இரத்தமாகும். மரத்தாலும் கல்லாலுமாகிய ஜாடிகளில் நிரப்பியிருக்கும் தண்ணீர் உட்பட, எல்லா இடங்களிலுள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்றார்.
20 ஆகையால் மோசேயும் ஆரோனும் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் கைத்தடியை உயர்த்தி நைல் நதியின் தண்ணீரை பார்வோன் முன்பாகவும் அவனது அதிகாரிகள் முன்பாகவும் அடித்தான். நதியின் தண்ணீர் முழுவதும் இரத்தமாயிற்று. 21 நதியின் மீன்கள் இறந்தன. நதி நாற்றமெடுத்தது. நதியின் தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியாமலாயிற்று. எகிப்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டது.
22 எகிப்திய மந்திரவாதிகளும் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தி இதையே செய்தார்கள். எனினும், பார்வோன் மோசேக்கும், ஆரோனுக்கும் செவிசாய்க்க மறுத்தான். இது கர்த்தர் சொன்னபடியே நடந்தது. 23 மோசேயும், ஆரோனும் செய்தவற்றை பார்வோன் பொருட்படுத்தவில்லை. பார்வோன் மறுபுறமாகத் திரும்பி வீட்டிற்குள் சென்றான்.
24 நதியிலிருந்து தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியாமற்போயிற்று. எனவே, அவர்கள் நதியைச் சுற்றிலும் குடிப்பதற்குரிய தண்ணீரைப் பெறுவதற்காக கிணறுகளைத் தோண்டினர்.
தவளைகள்
25 நைல் நதியை கர்த்தர் மாற்றிய பின்னர் ஏழு நாட்கள் கழிந்தன.
8 கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போய், ‘எனது ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்ள செல்வதற்கு அனுமதிகொடு! 2 எனது ஜனங்கள் போக நீ அனுமதிக்காவிட்டால், நான் எகிப்தை தவளைகளால் நிரப்புவேன். 3 நைல் நதி தவளைகளால் நிரம்பும், அவை நதியை விட்டு வெளியேறி உங்கள் வீடுகளுக்குள் நுழையும். அந்த தவளைகள் உங்கள் படுக்கையறைகளிலும், படுக்கைகளிலும் இருக்கும். உங்கள் அதிகாரிகளின் வீடுகளிலும், உங்கள் சமையல் அடுப்புகளிலும் தண்ணீர் ஜாடிகளிலும் இருக்கும். 4 தவளைகள் உன் மீதும், உன் ஜனங்கள் மீதும், உன் அதிகாரிகள் மீதும் இருக்கும்’ என்று கர்த்தர் சொல்கிறார்” என்று சொல்லுமாறு கூறினார்.
5 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “கால்வாய்கள், நதிகள், ஏரிகள் ஆகியவற்றின் மீது அவனது கைத்தடியைப் பிடிக்குமாறு ஆரோனுக்குக் கூறு, அப்போது எகிப்து தேசமெங்கும் தவளைகள் வெளியில் வந்துசேரும்” என்றார்.
6 எனவே ஆரோன் எகிப்தின் தண்ணீர் நிலைகள் அனைத்தின்மீதும் தனது கையைத் தூக்கினான். தவளைகள் தண்ணீரிலிருந்து வெளியேறிவர ஆரம்பித்து எகிப்து தேசமெங்கும் நிறைந்தன.
7 மந்திரவாதிகளும் அதே காரியத்தைச் செய்வதற்குத் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தினர். எனவே, இன்னும் அதிகமான தவளைகள் எகிப்து தேசத்திற்குள் வந்தன!
8 பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைத்து, “என்னிடமிருந்தும், எனது ஜனங்களிடமிருந்தும் தவளைகளை அப்புறப்படுத்தும்படியாக கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள், நான் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்துவதற்கு ஜனங்களைப் போக அனுமதிப்பேன்” என்றான்.
9 மோசே பார்வோனை நோக்கி, “தவளைகளை எப்போது அப்புறப்படுத்தலாமென்பதை எனக்குக் கூறு. நான் உனக்காகவும் உனது ஜனங்களுக்காவும் உனது அதிகாரிகளுக்காகவும் வேண்டிக்கொள்வேன். அப்போது தவளைகள் உங்களையும் உங்கள் வீடுகளையயும் விட்டுச்செல்லும், நதியில் மட்டுமே அவை வாழும். எப்போது தவளைகள் போக வேண்டுமென நீ விரும்புகிறாய்?” என்றான்.
10 பார்வோன், “நாளைக்கு” என்றான்.
மோசே, “நீ சொல்வதுபோல் நடக்கும். இதன் மூலமாக எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போல வேறே தேவன் இல்லை என்பதை நீ அறிவாய். 11 தவளைகள் உன்னையும், உன் வீட்டையும், உன் அதிகாரிகளையும், உன் ஜனங்களையும் விட்டுநீங்கும். ஆற்றில் மட்டுமே தவளைகள் தங்கும்” என்றான்.
12 மோசேயும், ஆரோனும் பார்வோனிடமிருந்து சென்றனர். பார்வோனுக்கு எதிராக கர்த்தர் அனுப்பிய தவளைகளைக் குறித்து மோசே அவரை நோக்கி ஜெபம் செய்தான். 13 மோசே கேட்டபடியே கர்த்தர் செய்தார். வீடுகளிலும், வெளிகளிலும், வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயின. 14 தவளைகள் குவியலாக சேர்க்கப்பட்டன. அவை அழுகிப்போனதால், நாடெங்கும் துர்நாற்றம் வீசியது. 15 தவளைகளின் தொல்லை இல்லாததைக் கண்ட பார்வோன் மேலும் பிடிவாதம் கொண்டான். மோசேயும் ஆரோனும் கேட்டுக்கொண்டதை பார்வோன் செய்யவில்லை. கர்த்தர் கூறியபடியே இது நடந்தது.
பேன்கள்
16 கர்த்தர் மோசேயை நோக்கி, “ஆரோனிடம் அவனது தடியை உயர்த்தி, பூமியின் மீதுள்ள தூசியை அடிக்கும்படி கூறு, அப்போது எகிப்து தேசத்தின் எல்லா இடங்களிலும் தூசியெல்லாம் பேன்களாகும்” என்றார்.
17 அவர்கள் அவ்வாறே செய்தார்கள். ஆரோன் அவனது கையிலுள்ள தடியை உயர்த்தி, பூமியின் மீதுள்ள தூசியில் அடித்தான். எகிப்து முழுவதுமிருந்த தூசி பேன்களாயிற்று. மிருகங்களின் மீதும், ஜனங்களின் மீதும் அவை புகுந்தன.
18 மந்திரவாதிகளும் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தி அவ்வாறே செய்ய முயன்றனர். தூசியிலிருந்து பேன்கள் வரும்படியாகச் செய்ய மந்திரவாதிகளால் முடியவில்லை. பேன்கள் மிருகங்களின் மீதும், ஜனங்களின் மீதும் தங்கின. 19 தேவனின் வல்லமையால் இவ்வாறு நிகழ்ந்தது என்று மந்திரவாதிகள் பார்வோனுக்குக் கூறினார்கள். ஆனால் பார்வோன் தன் மனதைக் கடினமாக்கி அவர்கள் கூறியதைக் கேட்க மறுத்தான். கர்த்தர் கூறியபடியே இது நடந்தது.
ஈக்கள்
20 கர்த்தர் மோசேயை நோக்கி, “காலையில் எழுந்து பார்வோனிடம் போ. பார்வோன் நதிக்குப் போவான். அவனிடம், ‘எனது ஜனங்கள் போய், என்னைத் தொழுதுகொள்ள அனுமதி. 21 எனது ஜனங்களைப் போக அனுமதிக்காவிட்டால் ஈக்கள் உங்கள் வீட்டிற்குள்ளும், உன்மீதும், உன் அதிகாரிகள் மீதும் மிகுதியாய் வரும், உன் தேசமெங்கும் ஈக்கள் நிரம்பியிருக்கும்! 22 எகிப்திய ஜனகங்களுக்கு செய்ததுபோல, நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் செய்யமாட்டேன். என் ஜனங்கள் வாழும் கோசேனில் ஈக்கள் இராது. இதன் மூலம் இந்த ஜனங்களின் கர்த்தர் நான் என்பதை நீ அறிவாய். 23 எனவே நாளைக்கு எனது ஜனங்களை உன் ஜனங்களைக் காட்டிலும் வேறுவிதமாக நடத்துவேன். அதுவே எனது அடையாளமாக அமையும்’ என்று கூறு” என்றார்.
24 பிறகு கர்த்தர் தான் சொன்னபடியே செய்து காட்டினார். மிகுதியான ஈக்கள் எகிப்து தேசமெங்கும் பார்வோன் வீட்டினுள்ளும் அவன் அதிகாரிகளின் வீட்டினுள்ளும் நிரம்பியிருந்தன. ஈக்கள் தேசத்தை அழித்துக்கொண்டிருந்தன. 25 எனவே பார்வோன் மோசேக்கும், ஆரோனுக்கும் சொல்லியனுப்பினான். பார்வோன் அவர்களை நோக்கி, “இந்தத் தேசத்திலேயே உங்கள் தேவனுக்குப் பலிகளைக் கொடுங்கள்” என்றான்.
26 ஆனால் மோசே, “அவ்வாறு செய்வது சரியாக இருக்காது. எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுவதற்காக மிருகங்களைக் கொல்வது கொடிய காரியம் என்று எகிப்தியர்கள் நினைக்கிறார்கள். இதை நாங்கள் இங்குச் செய்தால் எகிப்தியர் எங்களைக் கண்டு, எங்கள் மீது கற்களை வீசிக் கொன்றுவிடுவார்கள். 27 மூன்று நாட்கள் பாலைவனத்திற்குப் போய் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்த அனுமதிக்கவும். நாங்கள் செய்யும்படியாக கர்த்தர் கூறியதும் இதுதான்” என்றான்.
28 அதற்கு பார்வோன், “பாலைவனத்திற்கு நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பலிகளைச் செலுத்துவதற்கு உங்களை அனுமதிப்பேன். ஆனால் வெகு தூரம் பயணம் செய்யக் கூடாது. இப்போது போய் எனக்காக ஜெபம் செய்யுங்கள்” என்றான்.
29 மோசே, “பார், நான் போய் உன்னிடமிருந்தும், உன் ஜனங்களிடமிருந்தும், உன் அதிகாரிகளிடமிருந்தும், ஈக்களை நீக்குவதற்காக கர்த்தரைக் கேட்டுக்கொள்வேன். ஆனால் கர்த்தருக்கு ஜனங்கள் பலி செலுத்துவதை நீ தடுக்கக் கூடாது” என்றான்.
30 பின் மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபம் செய்தான். 31 மோசே கேட்டபடியே கர்த்தர் செய்தார். பார்வோன், அவன் அதிகாரிகள், ஜனங்கள் ஆகியோரிடமிருந்தும் ஈக்களை அகற்றினார். எல்லா ஈக்களும் அகன்றன. 32 ஆனால் பார்வோன் மீண்டும் பிடிவாதம் மிகுந்தவனாய் ஜனங்களைப் போக அனுமதிக்கவில்லை.
மிருகங்களின்மேல் நோய்
9 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போய் அவனைப் பார்த்து, ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர்: என்னைத் தொழுதுக்கொள்ளும்படி என் ஜனங்களைப் போக அனுமதி! 2 நீ விடாப்பிடியாக அவர்களை அனுப்ப மறுத்தால், 3 உனது பண்ணை மிருகங்களுக்கு எதிராக கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார். ஒரு கொடிய நோயால் உனது குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், பசுக்கள், ஆடுகள், ஆகியவை பாதிக்கப்படும்படியாக கர்த்தர் செய்வார். 4 எகிப்தியரின் மிருகங்களுக்கும், இஸ்ரவேலரின் மிருகங்களுக்கும் கர்த்தர் வித்தியாசம் காட்டுவார். இஸ்ரவேல் ஜனங்களின் மிருகங்கள் எதுவும் சாகாது. 5 இது நடப்பதற்குரிய காலத்தை கர்த்தர் குறித்துவிட்டார். நாளை இதனை இத்தேசத்தில் கர்த்தர் நிறைவேற்றுவார் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
6 மறுநாள் காலையில் எகிப்தின் பண்ணை மிருகங்கள் அனைத்தும் மடிந்தன. ஆனால் இஸ்ரவேலருக்குரிய மிருகங்கள் எதுவும் மரிக்கவில்லை. 7 இஸ்ரவேலரின் மிருகங்களில் ஏதேனும் மரித்திருக்கிறதா என்று பார்ப்பதற்கு பார்வோன் ஆட்களை அனுப்பினான். இஸ்ரவேலரின் மிருகங்கள் எதுவும் மரிக்கவில்லை என்று பார்வோன் அறிந்தும் பிடிவாதமாகவே இருந்தான். அவன் ஜனங்களைப் போக அனுமதிக்கவில்லை.
கொப்புளங்கள்
8 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “உலையிலுள்ள சாம்பலை உங்கள் கைகளில் அள்ளிக்கொள்ளுங்கள். மோசே, நீ பார்வோனுக்கு முன்பாக உன் கைகளிலுள்ள சாம்பலைக் காற்றில் வீசு. 9 எகிப்து தேசம் முழுவதும் இச்சாம்பல் பரவி தூளாக இது மாறும். அந்தத் தூள் ஒரு மனிதன் மீதோ, ஒரு மிருகத்தின்மீதோ பட்டவுடன் தோலின் மீது கொப்புளங்கள் ஏற்படும்” என்றார்.
10 எனவே மோசேயும், ஆரோனும் ஒரு உலையிலிருந்து சாம்பலை அள்ளிக்கொண்டனர். பின் அவர்கள் போய் பார்வோனுக்கு முன்னே நின்று, மோசே சாம்பலைக் காற்றில் தூவினான். ஜனங்களின் மீதும், மிருகங்களின் மீதும் கொப்புளங்கள் தோன்றின. 11 மோசே இவ்வாறு செய்வதை மந்திரவாதிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில் மந்திரவாதிகளின் மீதும் கொப்பளங்கள் தோன்றியிருந்தன. எகிப்து தேசமெங்கும் இவ்வாறு நிகழ்ந்தது. 12 ஆனால் பார்வோன் பிடிவாதமாக இருக்கும்படி கர்த்தர் செய்தார். எனவே மோசேக்கும், ஆரோனுக்கும் செவிசாய்க்க, பார்வோன் விரும்பவில்லை. கர்த்தர் கூறியவாறே இது நடந்தது.
கல்மழை காற்று
13 பின்பு கர்த்தர் மோசேயிடம், “காலையில் எழுந்து பார்வோனிடம் போ. எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர், ‘எனது ஜனங்கள் என்னைத் தொழுதுக்கொள்வதற்குப் போக அனுமதி கொடு! 14 நீ அவ்வாறு செய்யாவிட்டால் எனது முழு சக்தியையும் உனக்கும், உனது அதிகாரிகளுக்கும், உனது ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். அப்போது என்னைப் போன்ற தேவன் இவ்வுலகில் எவரும் இல்லை என்பதை நீ அறிவாய். 15 என் வல்லமையைப் பயன்படுத்தி ஒரு நோயை ஏற்படுத்தி அதனால் உன்னையும், உனது ஜனங்களனைவரையும் பூமியிலேயே இராதபடி அழிக்கமுடியும். 16 ஆனால் என் வல்லமையை உங்களுக்குக் காட்டுவதற்காகவே உங்களை இங்கு வைத்திருக்கிறேன். அப்போது உலகமெங்குமுள்ள ஜனங்கள் என்னைக் குறித்து அறிந்துக்கொள்வார்கள்! 17 எனது ஜனங்களுக்கு எதிராகவே நீ இன்னும் இருக்கிறாய். அவர்களை விடுதலை செய்வதற்கு நீ அனுமதிக்கவில்லை. 18 எனவே நாளைக்கு இதே நேரத்தில், ஒரு கொடிய கல்மழை காற்றை வீசச் செய்வேன். எகிப்து தேசத்தில் இன்றுவரை அதைப் போன்ற புயல்காற்று வீசியதே இல்லை. 19 இப்போதே உனது மிருகங்களை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடு. வயல்களில் காணப்படும் உனக்குரிய பொருள் எதுவாயினும் அதைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிடு. ஏனெனில் வயலில் இருக்கும் எந்த மனிதனாயினும் சரி, மிருகமாயினும் சரி, அது கொல்லப்படும். அனைத்து பொருட்களின் மீதும் கல்மழை காற்று வீசும் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
20 கர்த்தரின் செய்திக்குப் பார்வோனின் அதிகாரிகளில் சிலர் செவிசாய்த்தனர். அவர்கள் தங்கள் மிருகங்களையும், அடிமைகளையும், வீடுகளுக்குள் விரைவாகச் சேர்த்தனர். 21 ஆனால் மற்றவர்கள் கர்த்தரின் செய்தியை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை. அவர்கள் வயல்களிலிருந்த எல்லா அடிமைகளையும் மிருகங்களையும் விட்டுவிட்டனர்.
22 கர்த்தர் மோசேயிடம், “உன் கைகளை மேலே உயர்த்து. எகிப்து முழுவதும் கல்மழை பொழியத் துவங்கும். எகிப்தின் வயல்களிலுள்ள எல்லா ஜனங்கள், விலங்குகள் மற்றும் செடிகளின் மீதும் கல்மழை விழ ஆரம்பிக்கும்” என்றார்.
23 மோசே தனது கைத்தடியை உயர்த்தினான். இடி, மின்னல், புயல் ஆகியவை எகிப்தைப் பாதிக்குமாறு கர்த்தர் செய்தார். 24 எகிப்தில் புயல் வீசியபோது மின்னல் அதனூடே தோன்றியது. எகிப்து ஒரு தேசமான பின்னர், அங்கு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் இதுவேயாகும். 25 புயல், எகிப்தின் வயல்களிலிருந்த எல்லாவற்றையும், ஜனங்கள், மிருகங்கள், தாவரங்கள் அனைத்தையும் அழித்தது. வயல்களின் மரங்களைப் புயல் வீழ்த்தியது. 26 எபிரெய ஜனங்கள் வாழ்ந்த கோசேன் தேசத்தில் மட்டும் புயலின் பாதிப்பு ஏற்படவில்லை.
27 பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைத்து அவர்களிடம், “இம்முறை நான் பாவம் செய்தேன். கர்த்தர் நீதியானவர். நானும் எனது ஜனங்களும் குற்றம் செய்தோம். 28 தேவன் அனுப்பிய புயலும், இடியும், கல்மழையும் கொடியவை. புயலை நிறுத்தும்படியாக தேவனிடம் விண்ணப்பியுங்கள். நான் நீங்கள் போவதற்கு அனுமதிப்பேன். நீங்கள் இங்குத் தங்க வேண்டியதில்லை” என்றான்.
29 மோசே பார்வோனிடம், “நான் நகரத்தை விட்டுப் புறப்பட்டதும் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தபடியே என் கைகளை உயர்த்துவேன். இடியும் கல்மழையும் நின்றுபோகும், இந்த பூமியில் கர்த்தர் இருக்கிறார் என்பதை அப்போது நீ அறிவாய். 30 ஆனால் நீயும் உனது அதிகாரிகளும் உண்மையாகவே கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவில்லை என்பதை நான் அறிவேன்” என்றான்.
31 சணல் பயிர்களில் ஏற்கெனவே கதிர்களும், வாற்கோதுமைப் பயிரில் பூக்களும் தோன்றியிருந்தன. இச்செடிகள் அனைத்தும் அழிந்தன. 32 ஆனால் கோதுமையும், கம்பும், பிற தானியங்களைக் காட்டிலும் தாமதமாக அறுவடை ஆகும். எனவே இவை அழிக்கப்படவில்லை.
33 மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டு நகரத்திற்கு வெளியேபோய் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்ய கரங்களை உயர்த்தினான். உடனே கல்மழையும், புயலும், இடியும்கூட நின்றுபோனது.
34 மழை, புயல், இடி ஆகியவை நின்றுபோயின என்பதைக் கண்ட பார்வோன் மீண்டும் தவறு செய்தான். அவனும், அவனது அதிகாரிகளும் மீண்டும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். 35 இஸ்ரவேல் ஜனங்களை விடுதலை செய்ய பார்வோன் மறுத்தான். மோசேயின் மூலமாக கர்த்தர் கூறியபடியே இது நிகழ்ந்தது.
வெட்டுக்கிளிகள்
10 கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போ. அவனையும், அவனது அதிகாரிகளையும் பிடிவாதம் உடையவர்களாக்கினேன். எனது வல்லமைமிக்க அற்புதங்களை அவர்களுக்குக் காட்டும்படியாக நான் இதைச் செய்தேன். 2 நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும், மற்ற அதிசயமான காரியங்களையும் குறித்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சொல்வதற்காகவும் நான் இதைச் செய்தேன். அப்போது நானே கர்த்தர் என்பதை நீங்கள் எல்லாரும் அறவீர்கள்” என்றார்.
3 ஆகையால் மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்றார்கள். அவர்கள் அவனை நோக்கி, “எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர், ‘எத்தனை காலம் எனக்குக் கீழ்ப்படிய மறுப்பாய்? எனது ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்வதற்குப் போக அனுமதி! 4 நீ எனது ஜனங்களைப் போகவிடாவிட்டால், நாளை உனது நாட்டிற்குள் வெட்டுக்கிளிகளை அனுப்புவேன். 5 வெட்டுக்கிளிகள் நாட்டை ஆக்கிரமிக்கும். பூமியைப் பார்க்க முடியாத அளவிற்கு வெட்டுக்கிளிகள் நிரம்பும். புயலின் அழிவிற்குத் தப்பியவை அனைத்தும் வெட்டுக்கிளிகளால் அழிக்கப்படும். வயலிலுள்ள மரங்களின் இலைகள் அனைத்தையும் வெட்டுக்களிகள் தின்றுவிடும். 6 உனது வீட்டிலும், உனது அதிகாரிகளின் வீடுகளிலும், எகிப்திலுள்ள எல்லா வீடுகளிலும் வெட்டுக்கிளிகள் நிறைந்துவிடும். உங்கள் பிதாக்களோ, முற்பிதாக்களோ, பார்த்திராத அளவிற்கு வெட்டுக்கிளிகள் காணப்படும். எகிப்தில் ஜனங்கள் வாழ ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை பார்த்த வெட்டுக்கிளிகளைக் காட்டிலும் அதிகமான வெட்டுக்கிளிகள் காணப்படும் என்கிறார்’” என்று சொன்னார்கள். பிறகு மோசே திரும்பி, பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
7 அப்போது அதிகாரிகள் பார்வோனிடம், “இந்த ஜனங்களால் எத்தனை நாட்கள் நாம் இக்கட்டில் அகப்பட்டிருப்போம்? அவர்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ள அந்த ஜனங்களைப் போகவிடும். நீர் அவர்களைப் போகவிடாவிட்டால், நீர் அறிந்துகொள்ளும் முன்பு எகிப்து அழிக்கப்படும்!” என்று கூறினார்கள்.
8 எனவே பார்வோன் மோசேயையும், ஆரோனையும் திரும்பவும் தன்னிடம் அழைக்கும்படிக்கு அதிகாரிகளை அனுப்பினான். பார்வோன் அவர்களை நோக்கி, “நீங்கள் போய், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், ஆனால் யார் யார் போகப்போகிறீர்கள் என்பதைச் சரியாக எனக்குக் கூறுங்கள்” என்றான்.
9 மோசே பதிலாக, “இளைஞரும், முதியோருமாகிய எல்லா ஜனங்களும் போவோம். எங்களோடு எங்கள் மகன்களையும், மகள்களையும், ஆடுகளையும், மாடுகளையும், அழைத்துச் செல்வோம். கர்த்தரின் பண்டிகை எங்கள் எல்லோருக்கும் உரியது என்பதால் நாங்கள் எல்லோரும் போவோம்” என்று கூறினான்.
10 பார்வோன் அவர்களிடம், “நான் உங்களையும் உங்கள் ஜனங்களையும் எகிப்தைவிட்டுப் போகும்படியாக அனுமதிக்கும் முன்னர் கர்த்தர் உங்களோடு கண்டிப்பாக இருக்கவேண்டும். பாருங்கள், நீங்கள் தீமையான ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள். 11 ஆண்கள் மாத்திரம் போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளலாம். நீங்கள் முதலில் அதைத்தான் என்னிடம் கேட்டீர்கள். உங்கள் ஜனங்கள் எல்லாரும் போகமுடியாது” என்று கூறி, பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அனுப்பிவிட்டான்.
12 கர்த்தர் மோசேயை நோக்கி, “இப்போது உன் கைகளை எகிப்து தேசத்திற்கு மேலாக உயர்த்து, அப்போது எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வந்து பரவும். புயல் அழிக்காமல்விட்ட எல்லா தாவரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிடும்” என்றார்.
13 எனவே, மோசே தனது கைத்தடியை எகிப்து நாட்டிற்கு மேலாக உயர்த்தினான். கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசும்படியாக கர்த்தர் செய்தார். பகலும் இரவும் காற்று வீசிற்று. காலையில் காற்று எகிப்திற்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்திருந்தது. 14 வெட்டுக்கிளிகள் எகிப்து நாட்டிற்குள் வந்து பூமியில் விழுந்தன. எகிப்தில் அதுவரை அந்த அளவில் வெட்டுக்கிளிகள் வந்ததுமில்லை, இனி மேலும் அத்தனை எண்ணிக்கை வெட்டுக்கிளிகள் எகிப்தில் வருவதும் இல்லை. 15 வெட்டுக்கிளிகள் தேசம் முழுவதும் பூமி மேல் இருள் மூடும்வரை நிரப்பின. கல்மழை அழிக்காமல் விட்ட மரங்களின் கனிகளையும், பூமியிலுள்ள தாவரங்கள் அனைத்தையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிட்டன. எகிப்தில் எங்கும் மரங்களிலும் செடிகளிலும் ஒரு இலைகூட இருக்கவில்லை.
16 பார்வோன் அவசரமாக மோசேயையும், ஆரோனையும் அழைத்துவரச் செய்து, “நான் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் எதிராகப் பாவம் செய்தேன். 17 இம்முறை எனது பாவங்களுக்காக என்னை மன்னியுங்கள். இந்த ‘மரணத்தை’ (வெட்டுக்கிளிகளை) என்னிடமிருந்து அகற்றுவதற்கு கர்த்தரிடம் கேளுங்கள்” என்றான்.
18 மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபித்தான். 19 எனவே, கர்த்தர் காற்றின் திசையை மாற்றி மேற்கிலிருந்து மிகப் பலமான காற்று ஒன்று வீசும்படியாகச் செய்தார். அது வெட்டுக்கிளிகளை எகிப்திலிருந்து அகற்றி, செங்கடலில் விழச்செய்தது. எகிப்தில் ஒரு வெட்டுக்கிளிகூட இருக்கவில்லை! 20 ஆனால், பார்வோன் மீண்டும் பிடிவாதமாக இருக்குமாறு கர்த்தர் செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்குப் பார்வோன் அனுமதிதரவில்லை.
காரிருள்
21 கர்த்தர் மோசேயை நோக்கி, “உனது கைகளை மேலே உயர்த்து. எகிப்தை இருள் மூடும். நீங்கள் உணர்ந்துகொள்ளுமளவிற்கு இருள் மிகுதியாக இருக்கும்!” என்றார்.
22 மோசே கைகளை மேலே உயர்த்தியபோது, இருண்ட மேகமானது எகிப்தை மறைத்தது. எகிப்தை மூன்று நாட்கள் இருள் மூடியது.
23 ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. மூன்று நாட்களாக எந்த இடத்திற்கும் போவதற்காக ஜனங்கள் எழுந்திருக்கவில்லை. ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் ஒளி இருந்தது.
24 பார்வோன் மீண்டும் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் குழந்தைகளையும் அழைத்துப்போகலாம். ஆனால் உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் இங்கே விட்டுச் செல்லவேண்டும்” என்றான்.
25 மோசே, “நாங்கள் போகும்போது எங்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, எங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குப் பயன்படுத்தும்பொருட்டுப் பலிகளையும், காணிக்கைகளையும் நீங்களே கூட எங்களுக்குக் கொடுப்பீர்கள்! 26 ஆம், கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கு நாங்கள் எங்கள் மிருகங்களையும் கொண்டு செல்வோம். எந்த மிருகத்தின் குளம்பையும்கூட விட்டுச் செல்லமாட்டோம். கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குத் தேவைப்படுபவை எவை என்பதை இன்னமும் நாங்கள் சரியாக அறியவில்லை. நாங்கள் போகவிருக்கும் இடத்தை அடையும்போதுதான் அதை அறிந்துகொள்வோம், எனவே இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் நாங்கள் கொண்டு செல்லவேண்டும்” என்றான்.
27 கர்த்தர் பார்வோனை இன்னும் பிடிவாதம் உடையவனாக்கினார். எனவே பார்வோன் அவர்களை அனுப்ப மறுத்தான். 28 பிறகு பார்வோன் மோசேயிடம், “இங்கிருந்து போய்விடு! நீ இங்கு மீண்டும் வருவதை நான் விரும்பவில்லை! என்னைப் பார்க்க நீ மீண்டும் வந்தால் நீ சாவாய்” என்று கூறினான்.
29 அப்போது மோசே பார்வோனை நோக்கி, “நீ ஒரு விஷயத்தைச் சரியாகச் சொன்னாய், நான் உன்னைப் பார்ப்பதற்கு மீண்டும் வரப்போவதில்லை!” என்றான்.
முதற்பேறான குழந்தைகளின் மரணம்
11 அப்போது கர்த்தர் மோசேயைப் பார்த்து, “பார்வோனுக்கும், எகிப்துக்கும் எதிராக நான் செய்யவிருக்கும் கேடு இன்னும் ஒன்று உண்டு. இதன் பிறகு, அவன் உங்களை எகிப்திலிருந்து அனுப்பிவிடுவான். உண்மையில், இந்நாட்டை விட்டு நீங்கள் வெளியேறும்படி துரத்துவான். 2 நீ இஸ்ரவேலுக்கு இந்த செய்தியைத் தெரியப்படுத்து: இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் உங்கள் அக்கம் பக்கத்தாரிடம் வெள்ளியாலும் பொன்னாலுமாகிய பொருட்களை உங்களுக்குக் கொடுக்கும்படியாகக் கேட்கவேண்டும். 3 எகிப்தியர்கள் உங்களிடம் இரக்கத்துடன் இருக்கும்படி செய்வேன். எகிப்திய ஜனங்களும், பார்வோனின் சொந்த அதிகாரிகளும்கூட மோசேயைப் பெரியவனாக ஏற்கெனவே கருதுகிறார்கள்” என்றார்.
4 மோசே ஜனங்களிடம், “கர்த்தர் ‘இன்று நள்ளிரவில், நான் எகிப்தின் வழியாகச் செல்வேன், 5 எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகள் அனைவரும், எகிப்து மன்னனாகிய பார்வோனின் முதற்பேறான மகன் முதல், மாவரைக்கிற அடிமைப் பெண்ணின் முதற்பேறான மகன் வரைக்கும் எல்லோரும் மரிப்பார்கள். முதற்பேறான மிருகங்கள் கூட மடியும். 6 கடந்த எந்தக் காலத்தைக் காட்டிலும் எகிப்தின் அழுகுரல் பயங்கரமாயிருக்கும். வருங்காலத்தில் நடக்கக் கூடியதைக் காட்டிலும் அது கொடியதாக இருக்கும். 7 ஆனால் இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவரும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு நாய் கூட அவர்களைப் பார்த்துக் குரைக்காது. இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவனும், மிருகங்களில் ஒன்றும் காயமடைவதில்லை. இதன் மூலமாக, எகிப்தியரைக் காட்டிலும் இஸ்ரவேலரை நான் வித்தியாசமாக நடத்துவதை நீங்கள் அறிவீர்கள். 8 அப்போது உங்கள் அடிமைகள் (எகிப்தியர்கள்) எல்லோரும் குனிந்து என்னைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள், “உங்கள் ஜனங்களை உங்களோடு அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்லுங்கள்” என்பார்கள். அப்போது கோபத்தோடு நான் பார்வோனை விட்டுப் புறப்படுவேன்!’ என்றார்” என்று கூறினான்.
9 பின்பு கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் நீ சொன்னதைக் கேட்கவில்லை, ஏன்? நான் எகிப்தில் என் மகா வல்லமையைக் காட்ட அப்போதுதான் முடியும்” என்றார். 10 எனவே தான், மோசேயும், ஆரோனும் இம்மகா அற்புதங்களை பார்வோனுக்கு முன்பாகச் செய்து காட்டினார்கள். இதனாலேயே இஸ்ரவேல் ஜனங்களைத் தனது தேசத்திலிருந்து அனுப்பாதபடி பார்வோனைப் பிடிவாதமுள்ளவனாக கர்த்தர் ஆக்கினார்.
பஸ்கா பண்டிகை
12 மோசேயும் ஆரோனும் இன்னும் எகிப்தில் இருக்கையில் கர்த்தர் அவர்களிடம் பேசினார்: 2 “இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும். 3 இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திற்கும் இந்தக் கட்டளை உரியது: இம்மாதத்தின் பத்தாவது நாள் ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டினருக்காக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர வேண்டும். 4 ஒரு ஆட்டுக்குட்டியை உண்பதற்கு வேண்டிய ஆட்கள் அவனது வீட்டில் இல்லாதிருந்தால், அவன் அக்கம் பக்கத்தாரில் சிலரை உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு அழைக்க வேண்டும். ஆட்டுக் குட்டி ஒவ்வொருவரும் உண்ணப் போதுமானதாக இருக்கவேண்டும். 5 அந்த ஆட்டுக் குட்டி ஒரு வயது நிரம்பிய கடாவாகவும், நோயற்றதாகவும் இருக்க வேண்டும். அது ஒரு செம்மறி ஆடு அல்லது வெள்ளாட்டின் குட்டியாக இருக்கலாம். 6 மாதத்தின் பதினான்காவது நாள்வரை அம்மிருகத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். அந்நாளில், இஸ்ரவேல் கோத்திரத்தின் எல்லா ஜனங்களும் மாலைப்பொழுதில் அவற்றைக் கொல்ல வேண்டும். 7 நீங்கள் அதன் இரத்தத்தைச் சேகரிக்க வேண்டும். இந்த இரத்தத்தை, அதன் இறைச்சியை உண்ணுகிறவர்கள் தங்கள் வீட்டு வாசலின் மேற்பகுதியிலும், பக்கவாட்டிலும் நிலைக்கால்களில் பூசவேண்டும்.
8 “இந்த இரவில், ஆட்டுக்குட்டியை நெருப்பில் வாட்டியெடுத்து மாமிசம் எல்லாவற்றையும் உண்ண வேண்டும். நீங்கள் கசப்பான கீரை வகைகளையும், புளிக்காத ரொட்டியையும் கூட சாப்பிட வேண்டும். 9 ஆட்டுக்குட்டியை நீங்கள் தண்ணீரில் வேக வைக்கக்கூடாது. அந்த ஆட்டுக்குட்டி முழுவதையும் நெருப்பினால் சுடவேண்டும். அதன் தலை, கால்கள் மற்றும் உள் உறுப்புக்கள் எல்லாம் இருக்க வேண்டும். 10 அந்த இரவுக்குள் நீங்கள் மாமிசம் முழுவதையும் சாப்பிட்டு முடிக்கவேண்டும். காலையில் மாமிசம் மீதியாயிருந்தால் நெருப்பில் அந்த மாமிசத்தை சுட்டு எரிக்கவேண்டும்.
11 “நீங்கள் உணவைச் சாப்பிடும்போது பயணத்திற்குத் தயாரான உடை அணிந்தவர்களாய் இருக்க வேண்டும். உங்கள் மிதியடிகளை அணிந்து, கைத்தடிகளை ஏந்தியவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் அதை அவசரமாகச் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இது கர்த்தருடைய பஸ்கா பண்டிகை. கர்த்தர் தமது ஜனங்களைப் பாதுகாத்து, எகிப்திலிருந்து விரைவாக வெளியில் கொண்டுவரும் நேரம்.
12 “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன். 13 ஆனால் உங்கள் வீடுகளில் பூசப்பட்ட இரத்தம் ஒரு விசேஷ அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைப் பார்த்ததும் உங்கள் வீட்டைக் கடந்து போவேன். எகிப்தின் ஜனங்களுக்குத் தீமையான காரியங்கள் ஏற்படுமாறு செய்வேன். அத்தீய நோய்கள் ஒன்றும் உங்களைப் பாதிக்காது.
14 “இந்த இரவை நீங்கள் எப்போதும் நினைவு கூருவீர்கள். இது உங்களுக்கு ஒரு விசேஷ விடுமுறை நாளாக இருக்கும். எப்போதும் இந்த விடுமுறை நாளில் உங்கள் சந்ததியார் கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள். 15 இந்த விடுமுறையின் ஏழு நாட்களும் புளிக்காத மாவினால் செய்த ரொட்டியை உண்ணவேண்டும். இந்த விடுமுறையின் முதல் நாளில் புளிப்பான யாவற்றையும் உங்கள் வீடுகளிலிருந்து அகற்ற வேண்டும். இப்பண்டிகையின் ஏழு நாட்களிலும் யாரும் புளிப்பான எதையும் உண்ணக்கூடாது. யாரேனும் புளிப்பானதைச் சாப்பிட்டால், அவன் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து ஒதுக்கப்படவேண்டும். 16 விடுமுறை காலத்தின் முதல் நாளிலும் கடைசி நாளிலும் பரிசுத்த சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். இந்நாட்களில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. உங்கள் சாப்பாட்டிற்கான உணவைத் தயாரிப்பது மட்டுமே நீங்கள் செய்யும் வேலையாக இருக்க வேண்டும். 17 நீங்கள் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை நினைவுகூர வேண்டும். ஏனெனில் இந்நாளில் உங்கள் ஜனங்கள் எல்லோரையும் குழுக்களாக எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். எனவே உங்கள் எல்லா சந்ததியாரும் இந்த நாளை நினைவுகூர வேண்டும். எந்நாளும் நிலைபெற்றிருக்கும் சட்டமாக இது அமையும். 18 எனவே (நிசான்) முதல் மாதத்தின் பதினான்காவது நாளில் நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியை உண்ணத் துவங்க வேண்டும். அதே மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரைக்கும் இந்த புளிப்பில்லாத ரொட்டியைத் தொடர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டும். 19 ஏழு நாட்கள் உங்கள் வீடுகளில் எந்தப் புளிப்பான பொருளும் காணப்படக் கூடாது. இஸ்ரவேலின் குடிமகனாகிலும், அந்நியனாகிலும், புளிப்பானதைச் சாப்பிட்டால் அவன் இஸ்ரவேல் ஜனத்தினின்று ஒதுக்கப்பட வேண்டும். 20 இந்த ஓய்வு நாளில் நீங்கள் புளிப்புள்ள உணவை உண்ணவே கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் புளிப்பு இல்லாத மாவால் செய்த ரொட்டியையே உண்ணவேண்டும்” என்றார்.
21 மோசே எல்லா மூப்பர்களையும் (தலைவர்கள்) ஒன்றாகக் கூடிவரச் செய்தான். மோசே அவர்களிடம், “உங்கள் குடும்பங்களுக்குரிய ஆட்டுக்குட்டிகளைக் கொண்டு வந்து, பஸ்கா பண்டிகைக்காக அவற்றைக் கொல்லுங்கள். 22 ஈசோப் தழைகளை எடுத்து, அவற்றை இரத்தம் நிரம்பியிருக்கும் கிண்ணங்களில் தோய்த்து எடுத்து வாசல் நிலைக்கால்களின் பக்கங்களிலும், மேலேயும் இரத்தத்தைப் பூசுங்கள். காலை வரைக்கும் ஒருவனும் அவனது வீட்டை விட்டு எங்கும் போகக்கூடாது. 23 எகிப்தின் முதற்பேறானவற்றை அழிப்பதற்காக கர்த்தர் கடந்து செல்லும்போது அவர் வாசல் நிலைக்கால்களிலிருக்கும் இரத்தத்தைக் காண்பார். அப்போது கர்த்தர் அந்த வீட்டைப் பாதுகாப்பார். அழிக்கிறவன் உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்களைச் சேதப்படுத்த கர்த்தர் அவனை விடமாட்டார். 24 நீங்கள் இக்கட்டளையை நினைவுகூர வேண்டும். உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் எந்நாளும் இது சட்டமாக இருக்கும். 25 கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்திற்குப் போன பிறகும் இதை நினைவுகூர்ந்து செய்ய வேண்டும். 26 உங்கள் பிள்ளைகள், ‘நீங்கள் ஏன் இந்த பண்டிகையைக் கொண்டாடுகிறீர்கள்?’ என்று உங்களைக் கேட்டால், 27 நீங்கள், ‘இந்தப் பஸ்காப் பண்டிகை கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குரியதாகும். ஏனெனில், நாங்கள் எகிப்தில் வாழ்ந்தபோது கர்த்தர் இஸ்ரவேலரின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர்களைக் கொன்றார், ஆனால் அவர் நமது வீடுகளின் ஜனங்களைக் காப்பாற்றினார்.’ என்று கூறுங்கள்” என்றார்.
ஜனங்கள் கர்த்தரைப் பணிந்து தொழுதுகொள்கிறார்கள் 28 கர்த்தர் இந்தக் கட்டளையை மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டவற்றைச் செய்தார்கள்.
29 நள்ளிரவில் கர்த்தர் எகிப்தின் முதற்பேறானவர்களை, எகிப்தை ஆண்ட பார்வோனின் முதல் மகனிலிருந்து, சிறையிலுள்ள கைதியின் முதல் மகன் வரைக்கும் எல்லோரையும் அழித்தார். எல்லா முதற் பேறான மிருகங்களும் மரித்தன. 30 அந்த இரவில் எகிப்தின் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் மரித்தனர். பார்வோனும், அவனது அதிகாரிகளும், எகிப்தின் எல்லா ஜனங்களும் சத்தமிட்டு அழுதனர்.
இஸ்ரவேல் எகிப்தைவிட்டுப் புறப்படுதல்
31 அந்த இரவில் பார்வோன் மோசேயையும், ஆரோனையும் வரவழைத்தான். பார்வோன் அவர்களிடம், “எழுந்து என் ஜனங்களை விட்டு விலகிப்போங்கள். நீங்கள் கூறுகிறபடியே நீங்களும் உங்கள் ஜனங்களும் செய்யலாம். போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்! 32 உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் நீங்கள் கூறியபடியே உங்களோடு எடுத்துச் செல்லலாம், போங்கள்! என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்றான். 33 எகிப்தின் ஜனங்களும் அவர்களை விரைந்து போகும்படிக் கேட்டுக்கொண்டனர். அவர்கள், “நீங்கள் போகாவிட்டால், நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம்!” என்று கூறினார்கள்.
34 இஸ்ரவேல் ஜனங்கள் ரொட்டியைப் புளிக்கச் செய்வதற்கும் நேரமிருக்கவில்லை. மாவிருந்த கிண்ணங்களைத் துணியால் பொதிந்து அவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர். 35 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மோசே கூறியபடியே செயல்பட்டனர். அவர்கள் அக்கம் பக்கத்தாராகிய எகிப்தியரிடம் சென்று ஆடைகளையும், பொன் மற்றும் வெள்ளி பொருட்களையும் கேட்டார்கள். 36 இஸ்ரவேல் ஜனங்கள் மீது எகிப்தியர்களுக்கு இரக்கம் உண்டாகுமாறு கர்த்தர் செய்தார். எனவே எகிப்தியர்கள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தனர்.
37 ராமசேசிலிருந்து சுக்கோத்துக்கு இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்தனர். சமார் 6,00,000 புருஷர்கள் இருந்தனர். குழந்தைகள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. 38 ஆடுகளும், மாடுகளும், பிற பொருட்களும் மிக அதிகமாக இருந்தன. அவர்களோடு இஸ்ரவேலர் அல்லாத வெவ்வேறு இனத்து ஜனங்களும் பயணம் செய்தனர். 39 ரொட்டி மாவை புளிக்கவைக்க ஜனங்களுக்கு நேரம் இருக்கவில்லை. பயணத்திற்காக எந்த விசேஷ உணவையும் அவர்கள் தயாரிக்கவில்லை. எனவே புளிப்பற்ற ரொட்டியையே சுட்டார்கள்.
40 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர். 41 சரியாக 430 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நாளில் கர்த்தரின் சேனைகள் [d] எகிப்தை விட்டுச் சென்றனர். 42 கர்த்தர் செய்ததை ஜனங்கள் நினைவுகூரும் அந்த இரவு விசேஷமா னது. இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லாரும் எந்நாளும் அந்த இரவை நினைவுகூருவார்கள்.
43 கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “பஸ்கா பண்டிகையின் விதிகள் இவை: அந்நியன் யாரும் பஸ்காவை உண்ணக் கூடாது. 44 ஆனால் ஒருவன் ஒரு அடிமையை வாங்கி அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தால், அந்த அடிமை பஸ்காவை உண்ணலாம். 45 ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த்தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.
46 “ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் வீட்டில் அவ்வுணவை உண்ண வேண்டும். வீட்டிலிருந்து வெளியே அவ்வுணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஆட்டுக்குட்டியின் எலும்புகளை முறிக்க வேண்டாம். 47 இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 48 உங்களோடு வசிக்கும் இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் கர்த்தரின் பஸ்காவில் பங்குகொள்ள விரும்பினால், அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும். அப்போது அவன் இஸ்ரவேலின் குடிமகனாகக் கருதப்படுவான். அவன் பஸ்கா உணவில் பங்குகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், அவன் பஸ்கா உணவை உண்ண முடியாது. 49 இந்த விதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இஸ்ரவேலின் குடி மகன் அல்லது உங்கள் நாட்டில் வசிக்கும் இஸ்ரவேல் அல்லாத எல்லோருக்கும் விதிகள் பொதுவானதாகவே இருக்கும்” என்றார்.
50 கர்த்தர் மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்த கட்டளைகளின்படி இஸ்ரவேலின் ஜனங்கள் குழுக்களாக எல்லோரும் எகிப்தை விட்டுபோனார்கள். 51 அதே நாளில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தினார். ஜனங்கள் குழுக்களாக புறப்பட்டனர்.
13 பிறகு கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முதலில் பிறந்த ஒவ்வொரு விலங்கும் எனக்குரியதாகும்” என்றார்.
3 அப்போது மோசே ஜனங்களிடம், “இந்த நாளை நினைவுகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் இந்த நாளில் கர்த்தர் அவரது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி உங்களை விடுதலை செய்தார். நீங்கள் புளிப்புள்ள ரொட்டியை உண்ணக்கூடாது. 4 ஆபீப் மாதத்தின் இந்த நாளில் நீங்கள் எகிப்தை விட்டுச் செல்கிறீர்கள். 5 கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு ஒரு விசேஷமான வாக்குறுதியை அளித்தார். கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் ஜனங்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்தார். நல்ல பொருட்களால் நிரப்பப்பட்ட நாட்டிற்கு கர்த்தர் உங்களை வழிநடத்திய பிறகும் நீங்கள் இந்த நாளை நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதல் மாதத்தின் இந்த நாளை வழிபாட்டிற்குரிய விசேஷ தினமாகக் கொள்ளவேண்டும்.
6 “புளிப்பு இல்லாத ரொட்டியையே ஏழு நாட்களுக்கு நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் ஒரு பெரிய விருந்து கர்த்தரை மகிமைப்படுத்துவதற்காக நடைபெறும். 7 எனவே ஏழு நாட்கள் புளிப்புள்ள ரொட்டியை நீங்கள் உண்ணவே கூடாது. உங்கள் தேசத்தில் எப்பக்கத்திலும் புளிப்புள்ள ரொட்டி இருக்கவே கூடாது. 8 இந்த நாளில் உங்கள் பிள்ளைகளுக்கு, ‘கர்த்தர் நம்மை எகிப்திலிருந்து வழிநடத்தியதால் இந்த விருந்து நடைப்பெறுகிறது’ என்று சொல்ல வேண்டும்.
9 “உங்கள் கண்களின் முன்னால் இது அடையாளமாக இருக்கும். இந்த பண்டிகை நாள் கர்த்தரின் போதனைகளை நினைவுபடுத்தவும், உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர கர்த்தர் தமது பெரும் வல்லமையைப் பயன்படுத்தினார் என்பதை நினைவுபடுத்தவும் இது உதவும். 10 எனவே ஒவ்வொரு ஆண்டும் அதன் காலத்தில் இந்த விடுமுறை நாளை நினைவு கூருங்கள்.
11 “உங்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்த தேசத்திற்கு அவர் உங்களை வழிநடத்துவார். கானானிய ஜனங்கள் இப்போது அங்கு வாழ்கிறார்கள். இத்தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக தேவன் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தார்.” தேவன் இந்நாட்டை உங்களுக்குக் கொடுத்தபிறகு, 12 நீங்கள் உங்கள் முதல் மகனை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவு கூருங்கள். முதலில் பிறந்த எந்த ஆண் மிருகத்தையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். 13 முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் கழுதையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப்பெற்று, அதற்குப் பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுக்கவேண்டும். கர்த்தரிடமிருந்து கழுதையை வாங்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால், அதனைக் கொன்றுவிடுங்கள். அது ஒரு பலியாகும். நீங்கள் அதன் கழுத்தை முறிக்க வேண்டும். முதலில் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெற வேண்டும்.
14 “வருங்காலத்தில் நீங்கள் இதைச் செய்வதன் காரணத்தை அறியும்படி உங்கள் பிள்ளைகள், ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்பார்கள். நீங்கள் அவர்களிடம்: ‘கர்த்தர் தமது மகா வல்லமையைப் பயன்படுத்தி நம்மை எகிப்திலிருந்து மீட்டார். நாம் அந் நாட்டில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் கர்த்தர் நம்மை இங்கு வழிநடத்தினார். 15 எகிப்தில், பார்வோன் பிடிவாதமாக இருந்தான். நாம் புறப்படுவதற்கு அவன் அனுமதி கொடுக்வில்லை. எனவே கர்த்தர் அந்நாட்டின் முதலாவதாகப் பிறந்த எல்லா உயிரினங்களையும் கொன்றார். (கர்த்தர் முதலில் பிறந்த மகன்களையும், முதலில் பிறந்த மிருகங்களையும் கொன்றார்.) எனவே நான் முதலில் பிறந்த ஆண் மிருகத்தை கர்த்தருக்குக் கொடுக்கிறேன், எல்லா முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெறுகிறேன்!’ என்று நீங்கள் பதில் கூறுவீர்கள். 16 இது உங்கள் கையில் கட்டப்பட்ட ஒரு குறியீடு போலவும், உங்கள் கண்களுக்கு நடுவில் தொங்கும் ஒரு அடையாளமாகவும் காணப்படும். கர்த்தர் தமது அளவில்லா வல்லமையினால் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார் என்பதை நீங்கள் நினைவுகூர இது உதவும்” என்றான்.
எகிப்திலிருந்து வெளியேறும் பயணம்
17 பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினான். பெலிஸ்தரின் நாட்டின் வழியாக ஜனங்கள் பயணம் செய்வதை கர்த்தர் அனுமதிக்கவில்லை. கடலின் ஓரமாக உள்ள அந்த சாலை குறுக்கு சாலையாக இருந்தது. ஆனால் கர்த்தர், “அவ்வழியே ஜனங்கள் பயணத்தை மேற்கொண்டால் அவர்கள் போரிட வேண்டியிருக்கும். அதனால் தங்கள் எண்ணத்தை மாற்றி, எகிப்திற்குத் திரும்பிப் போகக்கூடும்” என்றார். 18 ஆகவே கர்த்தர் அவர்களை வேறு வழியாக நடத்திச் சென்றார். செங்கடல் அருகே பாலைவனத்தின் நடுவே அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது சண்டைக்கு ஆயத்தமான ஆடைகளை அணிந்திருந்தனர்.
யோசேப்பு தாயகத்திற்குத் திரும்புதல்
19 யோசேப்பின் எலும்புகளை மோசே தன்னோடு எடுத்துச் சென்றான். (யோசேப்பு மரிக்கும் முன்னர் இஸ்ரவேலின் ஜனங்களிடம் இதைச் செய்ய வேண்டுமென வாக்குறுதி பெற்றிருந்தான். யோசேப்பு, “தேவன் உங்களை மீட்கும்போது, எனது எலும்புகளை எகிப்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள்” என்று கூறியிருந்தான்.)
கர்த்தர் தமது ஜனங்களை வழிநடத்துகிறார்
20 இஸ்ரவேல் ஜனங்கள் சுக்கோத்தை விட்டு நீங்கி ஏத்தாமில் தங்கினார்கள். ஏத்தாம் பாலைவனத்தினருகே இருந்தது. 21 கர்த்தர் பாதை காட்டினார். பகலில், கர்த்தர் ஜனங்களை வழிநடத்த உயரமான ஒரு மேகத்தையும், இரவு வேளையில் வழிநடத்த உயரமான ஒரு நெருப்புதூணையும் பயன்படுத்தினார். அவர்கள் இரவிலும் பயணம் செய்வதற்கேதுவாக இந்த நெருப்பு வெளிச்சம் தந்தது. 22 உயர்ந்த மேகம் பகல் முழுவதும், உயர்ந்த நெருப்பு தூண் இரவு முழுவதும் அவர்களோடிருந்தது.
14 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “ஜனங்களிடம் ஈரோத்துக்கு திரும்பிப் போகும்படியாகக் கூறு. பாகால் செபோனுக்கு அருகேயுள்ள மிக்தோலுக்கும் செங்கடலுக்கும் மத்தியில் அவர்கள் இரவில் தங்கட்டும். 3 இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் காணாமற்போனார்கள் என்று பார்வோன் எண்ணுவான். ஜனங்களுக்குப் போகத்தக்க இடம் எதுவுமில்லை என்று அவன் நினைப்பான். 4 பார்வோனுக்குத் தைரியம் தந்து, அவன் உங்களைத் துரத்தும்படியாகச் செய்வேன். ஆனால் நான் பார்வோனையும் அவனது சேனையையும் தோற்கடிப்பேன். அது எனக்கு கனத்தைக் கொண்டுவரும். அப்போது எகிப்திய ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்” என்றார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர் கூறினபடியே அவர்கள் செய்தார்கள்.
பார்வோன் இஸ்ரவேலரைத் துரத்துதல்
5 இஸ்ரவேல் ஜனங்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி பார்வோனுக்குக் கிடைத்தது. இதைக் கேட்டபோது அவனும், அவனது அதிகாரிகளும் மனம்மாறி முன்பு செய்த தங்கள் செயல்களை மறு பரிசீலனை செய்தனர். பார்வோன், “இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்கு ஏன் அனுமதித்தோம்? அவர்கள் ஓடிப்போவதற்கு ஏன் வகை செய்தோம்? இப்போது நாம் நமது அடிமைகளை இழந்துபோனோம்!” என்றான்.
6 எனவே, பார்வோன் தனது ஆட்களோடு தேரையும் தயார்ப்படுத்தினான். 7 பார்வோன் அவனது சிறந்த 600 ஆட்களையும், அவனது இரதங்கள் அனைத்தையும் கூட்டிச் சென்றான். ஒவ்வொரு தேரிலும் ஒரு அதிகாரி இருந்தான். 8 வெற்றிக் களிப்போடு தங்கள் கைகளை உயர்த்தியவர்களாய் இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் எகிப்திய அரசனாகிய பார்வோன் தைரியம் கொள்ளும்படியாக கர்த்தர் செய்தார். பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களைத் துரத்தினான்.
9 எகிப்திய படையில் இரதங்களோடு கூடிய பல குதிரை வீரர்கள் இருந்தனர். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைப் பின் தொடர்ந்து அவர்கள் செங்கடலின் அருகேயுள்ள பாகால் செபோனுக்குக் கிழக்கேயிருக்கிற ஈரோத்தில் இருக்கும்போது நெருங்கி வந்தனர்.
10 பார்வோனும் அவனது படையினரும் தங்களை நோக்கி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டு மிகவும் பயந்தனர். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினர். 11 அவர்கள் மோசேயை நோக்கி, “நீர் ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? பாலைவனத்தில் சாகும்படியாக ஏன் எங்களை அழைத்துக் கொண்டு வந்தீர்? எகிப்தில் நிம்மதியாக மரித்திருப்போம். எகிப்தில் நிறைய கல்லறைகள் இருந்தன. 12 இவ்வாறு நடக்குமென நாங்கள் உங்களிடம் கூறினோம். எகிப்தில் இருந்தபோது நாங்கள், ‘எங்களைத் தொல்லைப்படுத்தாதீர்கள். நாங்கள் தங்கியிருந்து எகிப்தியருக்கு அடிமை வேலை செய்வோம்’ என்றோம். அங்கிருந்து வெளியேறி பாலைவனத்தில் இங்கு மடிவதைக் காட்டிலும் அங்கு தங்கி அடிமைகளாக இருப்பதே நலமாக இருந்திருக்கும்” என்றனர்.
13 ஆனால் மோசே, “பயப்படாதீர்கள்! ஓடிப் போகாதீர்கள்! சும்மா இருந்து, கர்த்தர் இன்றைக்கு உங்களை மீட்பதைப் பாருங்கள். இந்த எகிப்தியர்களை இனிமேல் பார்க்கமாட்டீர்கள்! 14 நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்” என்றான்.
15 கர்த்தர் மோசேயை நோக்கி, “ஏன் இன்னும் நீ என்னிடம் அழுகிறாய்? இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பயணத்தைத் தொடருமாறு கூறு. 16 செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் பிளக்கும். அப்போது ஜனங்கள் அதிலுள்ள உலர்ந்த தரை வழியே நடந்து செல்லலாம். 17 உங்களைத் துரத்தும்படியாக நானே எகிப்தியருக்குத் தைரியம் அளித்தேன். ஆனால் நானே பார்வோனையும், அவனது குதிரைகள் இரதங்களைக் காட்டிலும் வல்லமை பொருந்தியவர் என்று உணரச் செய்வேன். 18 அப்போது எகிப்தியர் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். பார்வோனையும் அவனது இரதம் குதிரை வீரர்களையும் நான் மேற்கொள்ளும்போது அவர்கள் என்னை மதிப்பார்கள்” என்றார்.
கர்த்தர் எகிப்திய சேனைகளை முறியடித்தல்
19 அப்போது கர்த்தருடைய தூதன் ஜனங்களுக்குப் பின்னாகப் போனான். (கர்த்தருடைய தூதன் எப்போதும் ஜனங்களுக்கு முன்னே, அவர்களை வழிநடத்தியபடியே சென்று கொண்டிருந்தான்). அந்த உயரமான மேகம் ஜனங்களுக்கு முன்னே செல்லாமல் அவர்களுக்கு பின்னே சென்றது. 20 இவ்வாறு அம்மேகம் எகிப்தியருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே சென்று நின்றது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வெளிச்சம் இருந்தது. ஆனால் எகிப்தியர்களையோ இருள் சூழ்ந்தது. எனவே அந்த இரவில் எகிப்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை நெருங்கிவர முடியவில்லை.
21 மோசே தனது கரங்களைச் செங்கடலுக்கு நேராக உயர்த்தினான். கர்த்தர் கிழக்கிலிருந்து ஒரு காற்று வீசும்படியாகச் செய்தார். இரவு முழுவதும் காற்று வீசிற்று, கடல் பிளந்தது. காற்று நிலத்தை உலரச் செய்தது. 22 இஸ்ரவேல் ஜனங்கள் உலர்ந்த தலையின் மேல் கடலினூடே போனார்கள். அவர்களுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தண்ணீர் சுவர்போல் உயர்ந்து நின்றது. 23 அப்போது பார்வோனின் குதிரை வீரர்கள் தங்கள் இரதங்களுடன் கடலினுள் இஸ்ரவேலரைப் பின்தொடர ஆரம்பித்தனர். 24 அதிகாலையில் கர்த்தர் உயர்ந்த மேகத்திலிருந்தும், நெருப்புத் தூணிலிருந்தும் எகிப்திய படையை நோக்கிப் பார்த்து அவர்களைத் தோற்கடித்தார். 25 இரதங்களின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன. இரதங்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. எகிப்தியர்கள், “இங்கிருந்து தப்பிப் போவோம்! இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் நம்மை எதிர்த்து போர் செய்கிறார்” என்றார்கள்.
26 அப்போது கர்த்தர் மோசேயிடம், “உன் கைகளைக் கடலுக்கு மேலாக உயர்த்து, தண்ணீர் புரண்டு எகிப்தியரின் இரதங்களையும் குதிரை வீரர்களையும் மூழ்கடிக்கும்” என்றார்.
27 எனவே விடிவதற்குச் சற்றுமுன் மோசே கடலுக்கு மேலாகத் தன் கரங்களை உயர்த்தினான். தண்ணீர் முன்புபோல் சமமாக வந்து நின்றது. எகிப்தியர்கள் தங்களால் முடிந்த அளவு தண்ணீரிலிருந்து தப்பி ஓட முயன்றார்கள். ஆனால் கர்த்தர் அவர்களைக் கடலில் மூழ்கடித்துவிட்டார். 28 தண்ணீர் முன்பு போல் சமமாக வந்ததால் இரதங்களையும், குதிரை வீரர்களையும் மூழ்கடித்து விட்டது. பார்வோனின் படையினர் இஸ்ரவேல் ஜனங்களைத் துரத்தினர், ஆனால் அப்படையோ அழிக்கப்பட்டது, ஒருவரும் பிழைக்கவில்லை!
29 இஸ்ரவேல் ஜனங்கள் உலர்ந்த தரையில் கடலைக் கடந்தனர். அவர்களது வலது, இடது புறங்களில் மாத்திரம் தண்ணீர் சுவரைப்போல நின்றது. 30 எனவே, அந்நாளில் எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் மீட்டார். செங் கடலின் கரையில் எகிப்தியரின் பிணங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டனர். 31 கர்த்தர் எகிப்தியர்களை வென்றபோது, இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் மிகுந்த வல்லமையைக் கண்டார்கள். எனவே ஜனங்கள் பயந்து கர்த்தரை மதித்தார்கள். அவர்கள் கர்த்தரையும் அவரது தாசனாகிய மோசேயையும் நம்ப ஆரம்பித்தனர்.
மோசேயின் பாட்டு
15 அப்போது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரை நோக்கி பின்வரும் பாடலைப் பாடினார்கள்:
“நான் கர்த்தரைப் பாடுவேன்!
அவர் பெருமைமிக்க செயல்களைச் செய்தார்,
அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலில் தள்ளினார்.
2 கர்த்தரே எனது பலம். அவர் என்னை மீட்கிறார்.
நான் அவரைத் துதித்துப்பாடுவேன் கர்த்தரே எனது தேவன், நான் அவரைத் துதிப்பேன்.
கர்த்தர் எனது முற்பிதாக்களின் தேவன்.
நான் அவரை மதிப்பேன்.
3 கர்த்தர் யுத்தத்தில் சிறந்தவர்,
கர்த்தர் என்பது அவரது பெயர்.
4 பார்வோனின் இரதங்களையும், வீரர்களையும் அவர் கடலில் தள்ளினார்.
பார்வோனின் சிறந்த வீரர்கள் செங்கடலில் அமிழ்ந்தனர்.
5 ஆழியின் தண்ணீர் அவர்களை மூடிக்கொண்டது.
அவர்கள் கடலினடியில் பாறைகளைப்போல் மூழ்கிப்போயினர்.
6-7 “உமது வலது கரம் வியக்கத்தகும் வல்லமை உடையது.
கர்த்தாவே, உமது வலது கரம் பகைவர்களைச் சிதறடித்தது.
உமது பெருமையால் உமக்கு எதிராக நின்ற ஜனங்களை நீர் அழித்தீர்.
உமது கோபம் அவர்களை வைக்கோலில் பற்றும் நெருப்பைப் போல அழித்தது.
8 உமது உக்கிரத்தின் பெருமூச்சால் தண்ணீர் மேலெழும்பிற்று, ஒழுகும் தண்ணீர் திடமான சுவராயிற்று.
ஆழத்தின் அஸ்திபாரம்வரைக்கும் கடல் தண்ணீர் திடன் கொண்டது.
9 “நான் தொடர்ந்து பிடிப்பேன், ‘நான் அவர்கள் செல்வத்தைப் பறிப்பேன்.
எனது வாளால் அவற்றை அபகரிப்பேன்.
நான் எல்லாவற்றையும் எனக்காக எடுப்பேன்’ என்று பகைவன் சொன்னான்.
10 ஆனால் நீர் அவர்கள் மேல் ஊதி, கடலால் அவர்களை மூடினீர்.
ஆழ்கடலில் அவர்கள் ஈயத்தைப் போல மூழ்கினார்கள்.
11 “கர்த்தரைப்போன்ற தேவர்கள் உள்ளனரோ?
இல்லை! உம்மைப்போன்ற தேவர்கள் எவருமில்லை!
நீர் மேலான பரிசுத்தமானவர்!
நீர் வியக்கத்தக்க ஆற்றல் வாய்ந்தவர்!
நீர் மாபெரும் அற்புதங்கள் செய்பவர்!
12 வலதுகரத்தை உயர்த்தி உலகத்தை அழிக்க உம்மால் முடியும்.
13 ஆனால் உமது இரக்கத்தால்
நீர் மீட்ட ஜனங்களை வழிநடத்துகிறீர்.
உமது வல்லமையால் அவர்களைப் பரிசுத்தமும்,
இன்பமுமான நாட்டிற்குள் நடத்துகிறீர்.
14 “பிற ஜாதிகள் இதைக் கேட்டு, பயந்து நடுங்குவார்கள்.
பெலிஸ்தியர் பயத்தால் நடுங்குவார்கள்.
15 ஏதோமின் தலைவர்கள் பயத்தால் நடுங்குவார்கள்.
மோவாபின் தலைவர் பயத்தால் நடுங்குவார்கள்.
கானானின் ஜனங்கள் துணிவிழப்பார்கள்.
16 அவர்கள் உமது ஆற்றலைக் காண்கையில் அச்சத்தால் நிரம்புவார்கள்.
கர்த்தரின் ஜனங்கள் செல்லும்மட்டும், உம்மால் உண்டாக்கப்பட்ட உமது ஜனங்கள் கடந்து செல்லும்மட்டும் அவர்கள் உறுதியான பாறையைப் போல ஸ்தம்பித்து நிற்பார்கள்.
17 கர்த்தாவே நீர் உம்முடைய ஜனங்களை உம்முடைய மலைக்கு வழிநடத்துவீர்.
உமது சிங்காசனத்திற்காக நீர் தேர்ந்தெடுத்த இடத்தினருகே அவர்களை வாழச்செய்வீர். ஆண்டவரே,
நீர் உமது ஆலயத்தைக் கட்டுவீர்!
18 “கர்த்தாவே நீர் என்றென்றும் ஆளுகை செய்வீர்!”
2008 by World Bible Translation Center