Bible in 90 Days
20 சவுல் உடனே தரையில் விழுந்து கிடந்தான். சாமுவேல் சொன்னதைக் கேட்டு மிகவும் பயந்தான். அன்று சவுல் இரவும் பகலும் உண்ணாமல் இருந்ததால் மிகவும் பலவீனமாக இருந்தான்.
21 அந்தப் பெண் சவுலிடம் வந்து, உண்மையில் அவன் பயப்படுவதைக் கவனித்தாள். அவள் “நான் உங்கள் வேலைக்காரி, நான் உங்களுக்கு கீழ்ப்படிந்து இருக்கிறேன். என் உயிரைப் பணயம் வைத்து நீங்கள் சொன்னப்படி செய்தேன். 22 இப்போது தயவு செய்து எனக்குச் செவிகொடுங்கள், உங்களுக்குச் சிறிது உணவு கொடுக்க அனுமதியுங்கள், நீங்கள் அதனை உண்ணவேண்டும். பின் உங்கள் வழியில் செல்லப் போதுமான பலம் கிடைக்கும்” என்றாள்.
23 ஆனால் சவுல், “நான் உண்ணமாட்டேன்” என மறுத்துவிட்டான்.
சவுலின் அதிகாரிகளும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து கெஞ்சினார்கள். இறுதியில் அவள் சொன்னதைக் கேட்டான், தரையிலிருந்து எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். 24 அப்பெண்ணின் வீட்டில் கொழுத்த கன்றுகுட்டி இருந்தது. அவள் அதை வேகமாகக் கொன்று சமைத்தாள். மாவை பிசைந்து புளிப்பு இல்லாத அப்பம் சுட்டாள். 25 சவுல் மற்றும் அவனது அதிகாரிகளின் முன்னர் அவள் அந்த உணவை வைத்தாள். அவர்கள் அதை புசித்தப்பின், அன்று இரவே புறப்பட்டுச் சென்றார்கள்.
தாவீது எங்களோடு வரக்கூடாது!
29 ஆப்பெக்கில் பெலிஸ்திய வீரர்கள் கூடினார்கள். இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற நீரூற்றுக்கருகில் முகாமிட்டனர். 2 பெலிஸ்திய அரசர்கள் தங்கள் 100 பேர் குழுவோடும், 1,000 பேர் குழுவோடும் அணிவகுத்து வந்தனர். தாவீதும் அவனது ஆட்களும் ஆகீஸோடு கடைசியில் சேர்ந்து வந்தனர்.
3 பெலிஸ்திய தலைவர்கள், “இந்த எபிரெயர் இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு ஆகீஸ் பெலிஸ்திய தலைவரிடம், “இவன் தாவீது, இவன் முன்பு சவுலின் அதிகாரிகளுள் ஒருவனாக இருந்தான். என்னிடம் இப்போது நீண்ட காலம் இருக்கிறான். அவன் சவுலை விட்டு என்னிடம் வந்து சேர்ந்த நாள் முதல் இன்றுவரை அவனிடம் எந்தக் குறையும் காணவில்லை” என்றான்.
4 ஆனால் பெலிஸ்திய தலைவர்கள் ஆகீஸின் மீது கோபங்கொண்டு, “தாவீதைத் திரும்ப அனுப்பிவிடு. நீ கொடுத்த நகரத்திற்கே அவன் திரும்பிப் போகட்டும். அவன் நம்மோடு யுத்தத்துக்கு வரக் கூடாது. அவன் இங்கே இருப்பதும் எதிரி நமது முகாமிற்குள் இருப்பதும் ஒன்றே. அவன் நமது வீரர்களைக் கொல்வதன் மூலம் அவனது அரசனாகிய சவுலுக்கு ஆதரவாகிவிடுவான். 5 தாவீதைப்பற்றி ஏற்கெனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
“‘சவுல் ஆயிரக்கணக்கான பகைவர்ளைக் கொன்றான்.
ஆனால் தாவீதோ பத்தாயிரக்கணக்கான பகைவர்களைக் கொன்றிருக்கிறான்!’” என்றனர்.
6 எனவே ஆகீஸ் தாவீதை அழைத்து, “கர்த்தருடைய ஜீவன் மேல் ஆணையாக, நீ எனக்கு உண்மையாக இருக்கிறாய், நீ எனது படையில் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. என்னிடம் நீ சேர்ந்த நாள் முதலாக உன்னிடம் எந்தக் குற்றமும் காணவில்லை. ஆனால் பெலிஸ்திய படைத்தலைவர்கள் உன்னை அங்கீகரிக்கவில்லை. 7 என்றாலும் சமாதானமாகத் திரும்பிப் போ. பெலிஸ்திய அரசர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் இரு” என்றான்.
8 அதற்கு தாவீது, “நான் என்ன குற்றம் செய்தேன்? நான் உங்களிடம் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை என்னிடம் என்ன தவறு கண்டீர்கள்? என் அரசனுக்கு எதிரான பகைவர்களோடு சண்டையிட ஏன் என்னை அனுமதிக்கவில்லை?” என்று கேட்டான்.
9 ஆகீஸோ, “நான் உன்னை விரும்புகிறேன். அது உனக்குத் தெரியும். நீ தேவனிடமிருந்து வந்த தூதுவனைப் போன்றவன், ஆனால் பெலிஸ்திய அரசர்களோ, ‘நம்மோடு தாவீது போருக்கு வரக்கூடாது’ என்கின்றனர். 10 அதிகாலையில், நீயும் உனது ஆட்களும் திரும்பி, நான் கொடுத்த நகரத்திற்கே போங்கள். தலைவர்கள் சொன்னதுபோல் கெட்டக் காரியங்களில் கவனம் செலுத்தாதீர்கள். நீ நல்லவன், எனவே, சூரியன் உதிக்கும் முன் புறப்பட்டு போ” என்றான்.
11 ஆகவே, தாவீதும் அவனது ஆட்களும் அதிகாலையில் எழுந்து, பெலிஸ்திய நகரத்திற்குத் திரும்பினார்கள். பெலிஸ்தர்களோ யெஸ்ரயேலுக்குச் சென்றனர்.
சிக்லாக் மீது அமலேக்கிய தாக்குதல்
30 மூன்றாவது நாள், தாவீதும் அவனது ஆட்களும் சிக்லாகை அடைந்தனர். அங்கே அமலேக்கியர்கள் அந்நகரைத் தாக்குவதைக் கண்டனர். அவர்கள் நெகேவ் பகுதியில் நுழைந்து சிக்லாகைத் தாக்கித் தீ மூட்டினர். 2 சிக்லாகில் உள்ள பெண்களைச் சிறைப்பிடித்தனர். இளைஞர் முதல் முதியோர்வரை அனைவரையும் பிடித்தனர். ஆனால் யாரையும் கொல்லவில்லை. அவர்களைப் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.
3 தாவீதும் அவனது ஆட்களும் சிக்லாகை அடைந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது. அவர்களின் மனைவியர், ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் அனைவரும் அமலேக்கியர்களால் சிறைகொண்டு போகப்பட்டனர். 4 அவர்கள் இதனைக் கண்டு கதறி அழுதனர். மீறி அழுது அழ முடியாத அளவிற்கு பலவீனம் அடைந்தனர். 5 அமலேக்கியர்கள் தாவீதின் இரு மனைவியரான யெஸ்ரேலின் அகினோவாளையும், கர்மேலிலுள்ள நாபாலின் விதவையான அபிகாயிலையும் பிடித்துச் சென்றிருந்தார்கள்.
6 படையில் உள்ள அனைவரும் தமது மகன்களையும் மகள்களையும் பறிகொடுத்ததால், கடுங்கோபமும் வருத்தமும் கொண்டனர். அவர்கள் தாவீதைக் கல்லெறிந்து கொல்ல எண்ணினார்கள். இந்த செய்தி தாவீதைத் தளரச் செய்தது. எனினும் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்தினான். 7 தாவீது ஆசாரியனும் அகிமலேக்கின் மகனுமான அபியத்தாரிடம், “ஏபோத்தைக் கொண்டு வா” என்றான். அபியத்தார் அவனிடம் ஏபோத்தைக் கொண்டு போனான்.
8 பிறகு தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். “எங்கள் குடும்பத்தை பிடித்துக் கொண்டு போனவர்களைத் துரத்தட்டுமா? அவர்களைப் பிடிப்போமா?” என்று கேட்டான்.
அதற்கு கர்த்தர், “அவர்களைத் துரத்து, நீ பிடிப்பாய், நீ உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவாய்” என்றார்.
எகிப்திய அடிமையை தாவீதும் அவனது ஆட்களும் காண்கிறார்கள்
9-10 தாவீது தன்னோடு 600 வீரர்களை அழைத்துக் கொண்டு பேசோர் ஆற்றருகே வந்தான். அங்கு 200 பேர்த் தங்கிவிட்டனர். காரணம் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். அமலேக்கியரைத் துரத்திக் கொண்டு தாவீது 400 பேரோடு கிளம்பினான்.
11 வயலில் ஒரு எகிப்திய அடிமையை தாவீதின் ஆட்கள் கண்டனர். அவனை தாவீதிடம் அழைத்து வந்தனர். அவனுக்கு உண்ண உணவும் குடிக்க தண்ணீரும் கொடுத்தனர். 12 அவர்கள் அவனுக்கு அத்திப் பழ அடையின் ஒரு துண்டையும் வற்றலான இரண்டு திராட்சைக் குலைகளையும் தின்ன கொடுத்தனர். அதை உண்டு அவன் சிறிது பெலன் பெற்றான். அவன் மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் இருந்தப்படியால் மிகவும் பலவீனமாக இருந்தான்.
13 தாவீது அந்த அடிமையிடம், “உனது எஜமானன் யார்? நீ எங்கேயிருந்து வருகிறாய்?” எனக் கேட்டான்.
அதற்கு அவன், “நான் ஒரு எகிப்தியன், நான் அமலேக்கியனின் அடிமை. மூன்று நாட்களுக்கு முன் நான் சுகமில்லாமல் போனதால் என்னை இங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டனர். 14 நாங்கள் கிரேத்தியர்கள் வாழும் நெகேவ் பகுதியைத் தாக்கினோம். யூதா நாட்டையும் காலேப் பகுதியையும் தாக்கினோம். சிக்லாகையும் தீ மூட்டி எரித்தோம்” என்று பதிலுரைத்தான்.
15 தாவீது அவனிடம், “எங்கள் குடும்பத்தைப் பிடித்துப் போனவர்கள் இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துப் போவாயா?” எனக் கேட்டான்.
அதற்கு அந்த எகிப்தியன், “தேவன் முன்னிலையில் சிறப்பு ஆணை செய்து தந்தால் நான் உங்களுக்கு உதவுவேன். அதன்படி நீங்கள் என்னைக் கொல்லக் கூடாது, அதோடு என் எஜமானனிடமும் என்னைத் திரும்ப அனுப்பக் கூடாது” என்றான்.
தாவீது அமலேக்கியரைத் தோற்கடிக்கிறான்
16 அந்த எகிப்தியன் அமலேக்கியர் இருக்கும் இடத்திற்கு தாவீதை அழைத்துப் போனான். அங்கே அவர்கள் தரையில் புரண்டு, குடித்து வெறித்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். பெலிஸ்தர்களின் நகரங்களில் இருந்தும் யூதாவிலிருந்தும் கொண்டு வந்த பொருட்களால் மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருந்தனர். 17 தாவீது அவர்களை தாக்கிக் கொன்றான். அவர்கள் காலை முதல் மறுநாள் மாலைவரை சண்டையிட்டனர். அமலேக்கியரில் 400 இளைஞர்கள் மட்டும் ஒட்டகத்தின் மூலம் தப்பித்துப்போனார்கள், மற்றவர் எவரும் பிழைக்கவில்லை.
18 அமலேக்கியர்கள் கைப்பற்றிய அனைத்தையும் தாவீது திரும்பப்பெற்றான். இரண்டு மனைவியரையும் பெற்றுக்கொண்டான். 19 எதுவும் தவறவில்லை. சிறுவர்களும், முதியவர்களும் கிடைத்தனர். மகன்களையும், மகள்களையும் திரும்பப் பெற்றனர். விலை மதிப்புள்ள பொருட்களையும் பெற்றனர். 20 அனைத்து ஆடுகளையும், வெள்ளாடுகளையும் தாவீது கைப்பற்றினான். அவைகளை தங்களுக்கு முன்னால் ஓட்டினார்கள். தாவீதின் ஆட்கள், “அவை தாவீதின் பரிசுகள்” என்றனர்.
அனைவருக்கும் சம பங்கீடு
21 தனது 200 ஆட்கள் இருக்கும் பேசோர் ஆற்றங்கரைக்கு தாவீது வந்துச் சேர்ந்தான். அங்கு களைப்பாகவும் பலவீனமாகவும் இருந்தவர்கள் தாவீதைக் கண்டதும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர். 22 தாவீதைப் பின்தொடந்தவர்களில் சிலர் கெட்டவர்களாகவும், குழப்பம் செய்வபவர்களாகவும் இருந்தனர். அவர்கள், “இந்த 200 பேரும் எங்களோடு வரவில்லை. எனவே நாங்கள் கைப்பற்றியவற்றில் இவர்களுக்குப் பங்கு கொடுக்கமாட்டோம். இவர்களுக்கு இவர்களது மனைவி ஜனங்கள் மட்டுமே உரியவராவார்கள்” என்றனர்.
23 தாவீதோ, “அவ்வாறில்லை, என் சகோதரரே அப்படிச் செய்யக்கூடாது! நாம் மீட்டதை, கர்த்தர் நமக்குக் கொடுத்ததைப் பாருங்கள்! நம்மை தாக்கியவர்களை கர்த்தர் தான் தோல்வியுறச் செய்தார். 24 உங்கள் பேச்சுக்கு யாரும் சம்மதம் தெரிவிக்க முடியாது! இங்கே தங்கியவர்களாயினும் சரி, சண்டைக்கு போனவர்களாயினும் சரி, அனைவருக்கும் சமபங்கு உண்டு” என்று பதில் சொன்னான். 25 தாவீது இதனை இஸ்ரவேலருக்கு ஒரு விதியாக்கினான். இது இன்றும் தொடர்ந்து வருகிறது.
26 தாவீது சிக்லாகை வந்தடைந்தான். யூதாவின் தலைவர்களுக்கும் அவனது நண்பர்களுக்கும் அமலேக்கியரிடம் அபகரித்தப் பொருட்களில் சிலவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். அவன் “கர்த்தருடைய பகைவரிடமிருந்து வென்று எடுத்தப் பொருட்களை உங்களுக்குத் தருகிறோம்” என்றான்.
27 அவன் மேலும் பெத்தேல் நெகெவிலுள்ள ராமோத், யாத்தீர், 28 ஆரோவேர், சிப்மோத், எஸ்கேமோவா, 29 ராக்கால், யெராமித்தீயரின் கேனிய நகரங்கள் 30 ஓர்மா, கொராசீன், ஆற்றாகில், 31 எப்ரோன் ஆகிய நகரங்களில் உள்ளவர்களுக்கும் தாவீது தன் ஆட்களுடன் எங்கெங்கே தங்கினானோ, அங்கே உள்ள தலைவர்களுக்கும் அன்பளிப்பைக் கொடுத்து அனுப்பினான்.
சவுலின் மரணம்
31 பெலிஸ்தியர் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டனர். இஸ்ரவேலர் தோற்று ஓடினார்கள். கில்போவா மலைப்பகுதியில் பல இஸ்ரவேலர் கொல்லப்பட்டனர். 2 சவுலுக்கும் அவனது மகன்களுக்கும் எதிராகக் கடுமையாய் பெலிஸ்தியர் போரிட்டனர். அவர்கள் சவுலின் மகன்களான யோனத்தான், அபினதாப், மற்றும் மல்கிசூகா ஆகியோரைக் கொன்றனர்.
3 சவுலுக்கு எதிராக போரானது மேலும் மேலும் வலுத்தது. வில் வீராகள் சவுலின் மீது அம்பு எய்ததால், சவுல் பயங்கரமாக காயப்பட்டான். 4 தன்னோடு ஆயுதம் தூக்கி வருபவனிடம் சவுல், “உனது பட்டயத்தை எடுத்து என்னைக் கொன்று போடு. அதனால் அந்நியர் என்னை காயப்படுத்தி கேலிச் செய்யாமல் இருப்பார்கள்” என்றான். அவன் பயந்து அவ்வாறு செய்ய மறுத்துவிட்டான். எனவே சவுல் தனது வாளை உருவி தற்கொலை செய்து கொண்டான். 5 சவுல் மரித்துப்போனதை, ஆயுதங்களை எடுத்து வரும் அவனது உதவியாளன் அறிந்து, தனது வாளால் தானும் மடிந்தான். 6 எனவே சவுலும் அவனது மூன்று மகன்களும், சவுலின் ஆயுதம் தாங்கும் வீரனும் அனைத்துப் படை வீரர்களும் அதே நாளில் மரித்தார்கள்.
சவுலின் மரணத்தால் பெலிஸ்தியர் மகிழ்ச்சியடைகின்றனர்
7 பள்ளத்தாக்கின் மறு பக்கத்தில் இருந்த இஸ்ரவேலர் தங்கள் சேனை பயந்து ஓடுவதைக் கண்டனர். சவுலும் அவனது மகன்களும் மரித்துப்போனதை அறிந்தனர். எனவே அவர்கள் தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். பெலிஸ்தியர் அந்நகரங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
8 மறுநாள், பெலிஸ்தியர் பிணங்களின் மேலுள்ள பொருட்களை கவரச் சென்றனர். கில்போவா மலையில் சவுலும், அவனது மூன்று மகன்களும் மரித்துக் கிடப்பதைக் கண்டனர். 9 அவர்கள் சவுலின் தலையை வெட்டி, அவனது ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் இச்செய்தியைப் பெலிஸ்தருக்கும், தங்கள் விக்கிரகங்களின் ஆலயத்திற்கும் எடுத்துச் சென்றனர். 10 சவுலின் ஆயுதங்களை அவர்கள் அஸ்தரோத் கோவிலில் வைத்தனர். சவுலின் உடலை அவர்கள் பெத்ஸானின் சுவரில் தொங்கவிட்டனர்.
11 இது குறித்து யாபேஸ் கீலேயாத் நகரத்தார் கேள்விப்பட்டனர். 12 எனவே, எல்லா வீரர்களும் பெத்ஸானுக்கு இரவு முழுவதும் பயணம் செய்து, சவுலின் உடலையும் அவனது மகன்களின் பிணங்களையும் எடுத்து வந்தனர், அவற்றை யாபேசில் எரித்தனர். 13 பின்பு சவுல் மற்றும் அவனது மகன்களின் எலும்புகளை எடுத்து யாபேசில் பெரிய மரத்தடியில் புதைத்தனர். யாபேஸின் குடிகள் 7 நாட்களுக்கு உணவு உண்ணாமல் துக்கம் கொண்டாடினர்.
சவுல் மரணத்தை தாவீது அறிதல்
1 அமலேக்கியரை முறியடித்தபின் தாவீது சிக்லாகிற்குத் திரும்பிச் சென்றான். சவுல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்தது. அங்கே தாவீது இரண்டு நாட்கள் தங்கினான். 2 பின்பு, மூன்றாம் நாளில், ஒரு இளம் வீரன் சிக்லாகிற்கு வந்தான். அவன் சவுலின் முகாமிலிருந்து வந்திருந்தான். அம்மனிதனின் ஆடைகள் கிழிந்திருந்தன. அவனுடைய தலையில் புழுதி படிந்திருந்தது [a] அவன் தாவீதிடம் வந்து நிலத்தில் முகங்குப்புற விழுந்து வணங்கினான்.
3 தாவீது அம்மனிதனைப் பார்த்து, “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான்.
அம்மனிதன் தாவீதிடம், “நான் இஸ்ரவேலரின் முகாமிலிருந்து வருகிறேன்” என்று பதிலுரைத்தான்.
4 தாவீது அம்மனிதனை நோக்கி, “யார் போரில் வெற்றியடைந்தார் என்பதை தயவு செய்து கூறு” என்றான்.
அம்மனிதன், “நம் வீரர்கள் போரிலிருந்து தப்பி ஓடினார்கள். பலர் யுத்தத்தில் அகப்பட்டு மடிந்தனர். சவுலும் அவனது மகன் யோனத்தானுங்கூட மரித்துவிட்டனர்” என்று பதில் கூறினான்.
5 தாவீது இளைஞனாகிய அந்த வீரனிடம், “சவுலும் யோனத்தானும் மரித்ததைப் பற்றி உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.
6 அந்த இளம் வீரன், “நான் கில்போவா மலைக்குப் போயிருந்தேன். சவுல் தனது ஈட்டியில் சொருகிச் சாய்ந்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பெலிஸ்தியரின் தேர்களும் குதிரை வீரர்களும் சவுலுக்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தனர். 7 சவுல் திரும்பி என்னைப் பார்த்து அழைத்து 8 என்னை யாரென்று கேட்டார். நான் ஒரு அமலேக்கியன் என்பதை அவருக்குக் கூறினேன். 9 அப்போது சவுல், ‘தயவு செய்து என்னைக் கொன்றுவிடு. நான் மிகவும் காயப்பட்டு மரிக்கும் தருவாயில் உள்ளேன்’ என்றார். 10 அவர் அதிகமாகக் காயப்பட்டிருந்ததால், இனி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை நான் மிக நன்கு அறிந்தேன். எனவே நான் அவரைக் கொன்றேன். பின்பு அவரது தலையிலிருந்த கிரீடத்தையும் புயங்களில் இருந்த கடகத்தையும் கழற்றினேன். அவற்றை என் ஆண்டவனாகிய உங்களிடம் கொண்டுவந்துள்ளேன்” என்றான்.
11 அப்போது தாவீது தன் துக்கமிகுதியால் ஆடைகளை கிழித்தான். தாவீதோடிருந்த மனிதர்களும் அவ்வாறே செய்தார்கள். 12 அவர்கள் வருத்தமுற்று அழுது மாலை வரைக்கும் ஏதும் உண்ணவில்லை. சவுலும் அவனது மகன் யோனத்தானும் மரித்துப் போனதால் அவர்கள் அழுதார்கள். தாவீதும் அவனது மனிதர்களும் கொல்லப்பட்டிருந்த கர்த்தருடைய ஜனங்களுக்காகவும் இஸ்ரவேலருக்காகவும் அழுதனர். சவுலும், யோனத்தானும் பல இஸ்ரவேலரும் யுத்தத்தில் கொல்லப்பட்டதற்காக அவர்கள் அழுதனர்.
அமலேக்கியனைக் கொல்ல தாவீது கட்டளை
13 சவுலின் மரணத்தைப்பற்றிக் கூறிய இளம் வீரனிடம் தாவீது பேசினான். தாவீது, “நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?” என்று கேட்டான்.
அந்த இளம் வீரன், “நான் ஒரு அந்நியனின் மகன், நான் ஒரு அமலேக்கியன்” என்றான்.
14 தாவீது அந்த இளம் வீரனிடம், “கர்த்தர் தேர்ந்தெடுத்த, அரசனைக் கொல்வதற்கு நீ ஏன் அச்சம் கொள்ளவில்லை?” என்றான்.
15-16 பின்பு தாவீது அமலேக்கியனை நோக்கி, “உனது மரணத்திற்கு நீயே காரணம். கர்த்தர் தேர்ந்தெடுத்த அரசனைக் கொன்றாய் என்று நீயே கூறினாய். உனது வார்த்தைகளே நீ குற்றவாளி என்று தீர்க்கின்றன” என்று கூறினான். பின்பு தாவீது ஒரு இளம் வேலையாளை அழைத்து அமலேக்கியனைக் கொல்லுமாறு கூறினான். எனவே அந்த இஸ்ரவேல் இளைஞன் அமலேக்கியனைக் கொன்றான்.
சவுல், யோனத்தான் பற்றிய தாவீதின் சோககீதம்
17 சவுலையும் அவனது மகன் யோனத்தானையும் குறித்து துயரம் மிகுந்த பாடலொன்றைத் தாவீது பாடினான். 18 அப்பாடலை யூதா ஜனங்களுக்குக் கற்பிக்குமாறு தாவீது தனது ஆட்களிடம் கூறினான். அப்பாடல் “வில்” எனப்பட்டது. அது யாசேரின் புத்தகத்தில் உள்ளது.
19 “இஸ்ரவேலே, உன் அழகு உன் மேடுகளில் அழிக்கப்பட்டது.
ஓ, அந்த வீரர்கள் எப்படி வீழ்ந்தனர்!.
20 அச்செய்தியைக் காத் [b] நகரில் கூறாதே,
அஸ்கலோனின் தெருக்களில் அதை அறிவிக்காதே.
அதனால் பெலிஸ்திய நகரங்கள் களிப்படையும்!
அந்த அந்நியர்கள் மகிழக்கூடும்.
21 மழையோ பனியோ கில்போவா மலைகளில் பெய்யாதென நம்புகிறேன்.
அவ்வயல்களினின்று பயிர்களின் காணிக்கை இனி வராதென நான் நம்புகிறேன்.
வீரர்களின் கேடயங்கள் அங்குத் துருப்பிடித்தன.
சவுலின் கேடகத்தில் எண்ணெய் பூசப்படவில்லை.
22 வில்லால் பல பகைவரைக் கொன்றான் யோனத்தான்.
வாளால் அவ்வாறே வெற்றி கண்டான், சவுல்.
இவர்கள் மடிந்த பல வீரரின் இரத்தத்தைச் சிந்த வைத்தனர்!
வலியோரில் வலிய வீரரையும் துண்டுத் துண்டாக வெட்டினர்.
23 “சவுலும் யோனத்தானும் தம் வாழ்வில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி மகிழ்ந்தனர்.
மரணமும் அவர்களைப் பிரிக்கவில்லை!
அவர்கள் கழுகுகளிலும் வேகமானவர்கள்.
அவர்கள் சிங்கங்களிலும் பலசாலிகள்.
24 இஸ்ரவேலின் குமாரத்திகளே, சவுலுக்காக அழுங்கள்!
இரத்தாம்பர ஆடைகளை சவுல் உனக்குத் தந்தான். இன்னும் ஆடைகளில் பொன் வேலைப்பாடுகள் செய்வித்தான்!
25 “போரில் பலசாலிகள் வீழ்ந்தனர்.
கில்போவா மலையில் யோனத்தான் மடிந்தான்.
26 சகோதரன் யோனத்தானே, மறைந்தாய், வெகுவாய் வருந்துகிறேன்.
உனது அன்பு பெருமகிழ்வைத் தந்தது. மங்கையரின் நேசத்தைக் காட்டிலும் மாமேன்மையானது உனது அன்பு.
27 போரில் பலசாலிகள் வீழ்ந்தனர்.
போர்க்கருவி அனைத்தும் அழிந்தனவே.”
தாவீது தனது ஆட்களுடன் எப்ரோனுக்குச் செல்வது
2 பின்பு தாவீது கர்த்தருடைய அறிவுரையைக் கேட்டான். தாவீது, “நான் யூதாவின் நகரங்களுள் ஏதேனும் ஒரு நகரத்திற்குப் போகலாமா?” என்று கேட்டான்.
கர்த்தர் தாவீதிடம், “போகலாம்” என்றார். தாவீது, “எங்கு நான் போகட்டும்?” என்று கேட்டான். கர்த்தர், “எப்ரோனுக்கு” என்று பதிலளித்தார்.
2 எனவே, தாவீதும் அவனது இரண்டு மனைவியரும் எப்ரோனுக்குச் சென்றனர். (யெஸ்ரயேல் ஊராளான அகினோவாள் ஒரு மனைவி, மற்றொருத்தி கர்மேல் நாபாலின் விதவையாகிய அபிகாயில்) 3 தாவீது தம் ஆட்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தம்மோடு அழைத்துச் சென்றான். அவர்கள் எல்லோரும் எப்ரோனிலும் அருகிலுள்ள ஊர்களிலும் குடியேறினார்கள்.
தாவீது யாபேசின் ஜனங்களுக்கு நன்றி கூறுவது
4 யூதாவின் மனிதர்கள் எப்ரோனுக்கு வந்து தாவீதை யூதாவின் அரசனாக அபிஷேகம் செய்தார்கள். அவர்கள் தாவீதிடம், “கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்கள் சவுலைப் புதைத்தார்கள்” என்றனர்.
5 கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களிடம் தாவீது தூதுவர்களை அனுப்பினான். அந்த ஆட்கள் யாபேசின் மனிதர்களை நோக்கி, “சவுலின் சாம்பலைப் [c] புதைத்து உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இரக்கம் காட்டியதால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 6 கர்த்தர் உங்களிடம் இரக்கமாகவும் உண்மையாகவும் இருப்பாராக, நானும் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். 7 இப்போது பலமும் தைரியமும் உடையவர்களாய் இருங்கள். உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்துவிட்டார். ஆனால் யூதா கோத்திரத்தினர் அவர்களுடைய அரசனாக என்னை அபிஷேகம் செய்திருக்கிறார்கள்” என்று தாவீது செய்தியைக் கூறியனுப்பினான்.
இஸ்போசேத் அரசனாவது
8 சவுலின் படைக்கு நேர் என்பவனின் மகனாகிய அப்னேர் தளபதியாக இருந்தான். சவுலின் மகனாகிய இஸ்போசேத்தை அப்னேர் மகனாயீமுக்கு அழைத்துச்சென்று அவனை, 9 கீலேயாத், அஷூரியர், யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன், இஸ்ரவேல் எல்லாவற்றிற்கும் அரசனாக்கினான்.
10 இஸ்போசேத் சவுலின் மகன். அவன் இஸ்ரவேலை ஆளத் தொடங்கியபோது அவனுக்கு நாற்பது வயது, அவன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். ஆனால் யூதா கோத்திரத்தார் தாவீதைப் பின் பற்றினர். 11 தாவீதும் எப்ரோனில் அரசனாக இருந்தான். தாவீது 7 ஆண்டுகள் 6 மாதங்கள் யூதா கோத்திரத்தை அரசாண்டான்.
ஆபத்தான போட்டி
12 நேரின் மகனாகிய அப்னேரும் சவுலின் மகனாகிய இஸ்போசேத்தின் அதிகாரிகளும் மகனாயீமைவிட்டுக் கிபியோனுக்குச் சென்றனர். 13 செருயாவின் மகனாகிய யோவாபும், தாவீதின் அதிகாரிகளும் சேர்ந்து கிபியோனுக்குச் சென்றனர். கிபியோனின் குளத்தருகே அவர்கள் அப்னேரையும் இஸ்போசேத்தின் அதிகாரிகளையும் சந்தித்தனர். அப்னேரின் கூட்டத்தினர் குளத்தின் ஒரு கரையிலும், யோவாபின் கூட்டத்தார் குளத்தின் மறுகரையிலும் அமர்ந்தனர்.
14 அப்னேர் யோவாபிடம், “இளம் வீரர்கள் நமக்கு முன்பு ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளட்டும்” என்றான்.
யோவாபும், “சரி நாம் போட்டியிடலாம்” என்றான். 15 எனவே இளம் வீரர்கள் எழுந்தனர். இரு குழுவினரும் போராடத் துணிந்து தங்கள் ஆட்களை எண்ணிக்கையிட்டனர். சவுலின் மகனாகிய இஸ்போசேத்திற்காகச் சண்டையிட பென்யமீன் கோத்திரத்திலிருந்து 12 பேர்களையும் தாவீதின் பக்கத்திலிருந்து 12 பேர்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்தனர். 16 ஒவ்வொருவனும் பகைவனின் தலையைப் பிடித்து வாளால் விலாவில் குத்திக்கொண்டான். எனவே அம்மனிதர்கள் ஒருமித்து வீழ்ந்தனர். எனவே அந்த இடம், “கூரிய கத்திகளின் நிலம்” (எல்கா அருரீம்) என அழைக்கப்பட்டது. இந்த இடம் கிபியோனில் இருக்கிறது. 17 பின் அந்தச் சண்டை பெரும் யுத்தமாக மாறிற்று. அந்த நாளில் தாவீதின் அதிகாரிகள் அப்னேரையும் இஸ்ரவேலரையும் தோற்கடித்தனர்.
அப்னேர் ஆசகேலைக் கொல்வது
18 செருயாவிற்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் யோவாப், அபிசாய், ஆசகேல் ஆகியோராவார்கள். ஆசகேல் மிக வேகமாக ஓடக்கூடியவன். காட்டுமானைப் போன்ற வேகமுள்ளவன். 19 ஆசகேல் அப்னேரிடம் ஓடி அவனைத் துரத்த ஆரம்பித்தான். 20 அப்னேர் திரும்பி பார்த்து, “நீ ஆசகேலா?” எனக் கேட்டான்.
ஆசகேல், “ஆம், நானே தான்” என்றான்.
21 அப்னேர் ஆசகேலைத் தாக்க விரும்பவில்லை. எனவே அப்னேர் ஆசகேலை நோக்கி, “என்னைத் துரத்துவதைவிட்டு, இளம் வீரர்களுள் வேறு ஒருவனைத் துரத்து, நீ எளிதில் அவனை வென்று அவன் போர் அங்கிகளை எடுத்துவிடுவாய்” என்றான். ஆனால் ஆசகேல் அப்னேரைத் துரத்துவதை நிறுத்தவில்லை.
22 அப்னேர் மீண்டும் ஆசகேலிடம், “என்னைத் துரத்துவதை விட்டுவிடு. இல்லையென்றால் நான் உன்னைக் கொல்ல வேண்டியிருக்கும். பிறகு உனது சகோதரனாகிய யோவாபின் முகத்தை மீண்டும் நான் பார்க்க முடியாது” என்றான்.
23 ஆனால் ஆசகேலோ அப்னேரை விடாமல் துரத்தினான். எனவே அப்னேர் ஈட்டியின் மறுமுனையால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி ஆசகேலின் வயிற்றினுள் புகுந்து முதுகில் வெளி வந்தது. ஆசகேல் அங்கேயே விழுந்து மரித்தான்.
யோவாபும் அபிசாயும் அப்னேரைத் துரத்துதல்
ஆசகேலின் உடல் நிலத்தில் கிடந்தது. ஓடிவந்த மனிதர்கள் அவனருகே நின்றுவிட்டனர். 24 ஆனால் யோவாபும், அபிசாயும் [d] அப்னேரைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே ஓடினார்கள். அம்மா என்னும் மேட்டை அவர்கள் அடைந்தபோது சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. (கிபியோன் பாலைவனத்திற்குப் போகும் வழியில் கீயாவிற்கு எதிரில் அம்மா மேடு இருந்தது) 25 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள் அப்னேரிடம் வந்தனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள்.
26 அப்னேர் யோவாபை நோக்கி உரக்க, “நாம் போரிட்டு ஒருவரையொருவர் கொல்லவேண்டுமா? இது துக்கத்திலேயே முடிவுறும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். சொந்த சகோதரர்களையே துரத்திக் கொண்டு இருக்கவேண்டாம் என ஜனங்களுக்குச் சொல்” என்றான்.
27 அப்போது யோவாப், “நீ அவ்வாறு சொன்னது நல்லதாயிற்று, நீ அவ்வாறு சொல்லாவிட்டால், எல்லாரும் தங்கள் சகோதரர்களைக் காலைவரை துரத்திக்கொண்டே இருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக் கொண்டுச் சொல்லுகிறேன்” என்றான். 28 எனவே, யோவாப் ஒரு எக்காளத்தை ஊதி, தனது ஆட்கள் இஸ்ரவேலரைக் துரத்தாதபடி தடுத்து நிறுத்தினான். அவர்கள் இஸ்ரவேலரோடு போரிட முயலவில்லை.
29 அப்னேரும் அவனது ஆட்களும் யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவுப் பொழுதில் அணிவகுத்து சென்றனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்து மகனாயீமுக்கு வரும்வரை பகல் முழுவதும் அணிவகுத்து நடந்தனர்.
30 அப்னேரைத் துரத்துவதை விட்டுவிட்டு யோவாப் திரும்பிச் சென்றான். யோவாப் தன் ஆட்களை அழைத்தான். ஆசகேல் உட்பட தாவீதின் அதிகாரிகளுள் 19 பேர் அங்கு இல்லாதிருப்பதைக் கண்டான். 31 ஆனால் தாவீதின் அதிகாரிகள் பென்யமீன் கோத்திரத்திலிருந்து அப்னேரின் ஆட்களில் 360 பேரைக் கொன்றிருந்தனர். 32 தாவீதின் அதிகாரிகள் ஆசகேலை எடுத்துச் சென்று பெத்லகேமிலிருந்த அவனது தந்தையின் கல்லறையில் புதைத்தனர்.
யோவாபும், அவனது மனிதர்களும் இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் எப்ரோனை அடைந்தபோது சூரியன் உதித்தது.
இஸ்ரவேலுக்கும் யூதாவுக்குமிடையே போர்
3 சவுல், தாவீது ஆகியோரின் குடும்பத்தாருக்கிடையே நீண்டகாலம் யுத்தம் தொடர்ந்தது. தாவீது வலிமை பெற்றுக்கொண்டே இருந்தான். சவுலின் குடும்பத்தார் தளர்ந்துக்கொண்டே வந்தனர்.
தாவீதுக்கு ஆறு மகன்கள் எப்ரோனில் பிறந்தனர்
2 எப்ரோன் நகரில் தாவீதுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.
முதல் மகன் அம்மோன். அம்மோனின் தாய் யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாள் ஆவாள்.
3 இரண்டாவது மகன் கீலேயாப். கீலேயாபின் தாய் அபிகாயில். அவள் கர்மேலிலுள்ள நாபாலின் விதவையாயிருந்தாள்.
மூன்றாவது மகன் அப்சலோம். இவனது தாய், கேசூரின் அரசனாகிய தல்மாயின் மகள் மாக்காள் என்பவள் ஆவாள்.
4 நான்காம் மகன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத்.
ஐந்தாம் மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால்.
5 ஆறாம் மகன் இத்ரேயாம். தாவீதின் மனைவி எக்லாள் இத்ரேயாமுக்கு தாய்.
தாவீதுக்கு எப்ரோனில் இந்த ஆறு மகன்களும் பிறந்தனர்.
தாவீதோடு சேர அப்னேரின் தீர்மானம்
6 தாவீது, சவுல் ஆகியோரின் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருந்த போது சவுலின் படையில் அப்னேர் மிகவும் பலமடைந்து வந்தான். 7 சவுலிடம் ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள வேலைக்காரி ஒருத்தி இருந்தாள். இஸ்போ சேத் அப்னேரை நோக்கி, “எனது தந்தையின் வேலைக்காரியோடு நீ ஏன் பாலின உறவு கொண்டாய்?” என்று கேட்டான்.
8 இஸ்போசேத் இவ்வாறு கேட்டதால் அப்னேர் கோபமடைந்தான். அப்னேர், “நான் சவுலுக்கும் அவனது குடும்பத்துக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன். நான் உன்னைத் தாவீதிடம் ஒப்படைக்கவில்லை. அவன் உன்னைத் தோற்கடிக்க அனுமதிக்கவில்லை. நான் யூதாவுக்காக உழைக்கும் வஞ்சகன் அல்ல. நான் இத்தீயக் காரியத்தைச் செய்ததாக நீ கூறிக்கொண்டிருக்கிறாய். 9-10 நான் இப்போது இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். தேவன் சொன்ன காரியங்கள் நிறைவேறும் என நான் உறுதியாக நம்புகிறேன். சவுலின் குடும்பத்தாரிடமிருந்து அரசை எடுத்து தாவீதின் குடும்பத்தாருக்குக் கொடுப்பதாக கர்த்தர் கூறினார். கர்த்தர் தாவீதை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் அரசனாக்குவார். தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும் [e] அவன் அரசாளுவான். இது நிகழும்படியாக நான் செய்யாவிட்டால் தேவன் எனக்குத் தீமை செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்!” என்றான். 11 இஸ்போசேத்தால் அப்னேருக்கு எந்த பதிலும் கூற முடியவில்லை. அவனைக் கண்டு இஸ்போசேத் மிகவும் பயந்தான்.
12 அப்னேர் தாவீதிடம் செய்தி சொல்வோரை அனுப்பினான். அப்னேர், “நீ யார் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று நினைக்கிறாய்? என்னோடு ஒப்பந்தம் செய்துக்கொள். இஸ்ரவேலருக்கு அரசனாகும்படியாக நான் உனக்கு உதவுவேன்” என்றான்.
13 தாவீது, “நல்லது! நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வேன். ஆனால் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்: சவுலின் மகள் மீகாளை என்னிடம் அழைத்துவரும்வரை உன்னை நான் சந்திக்கமாட்டேன்” என்றான்.
தாவீது தன் மனைவி மீகாளை பெற்றுக்கொள்கிறான்
14 தாவீது சவுலின் மகனாகிய இஸ்போசேத்திடம் செய்தியோடு தூதுவரை அனுப்பினான். தாவீது, “என்னுடைய மனைவியாகிய மீகாளைக் கொடு. அவளை எனக்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ளது. நான் அவளுக்காக நூறு பெலிஸ்தியரைக் கொன்றேன்” என்றான்.
15 இஸ்போசேத் லாயிசின் மகனாகிய பல்த்தியேலிடமிருந்து மீகாளை அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினான். 16 மீகாளைப் பின் தொடர்ந்து அவள் கணவன் பல்த்தியேலும் சென்றான். மீகாளோடு பகூரீமுக்கு வந்தபோது பல்த்தியேல் அழுதுக்கொண்டே பின்தொடர்ந்தான். ஆனால் அப்னேர் பல்த்தியேலை நோக்கி, “வீட்டிற்குப் போ” என்றான். எனவே பல்த்தியேல் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.
தாவீதுக்கு உதவுவதாக அப்னேரின் உறுதி
17 இஸ்ரவேலின் தலைவர்களுக்கு அப்னேர் செய்தி சொல்லியனுப்பினான். அவன், “நீங்கள் தாவீதை அரசனாக ஆக்கக் காத்திருக்கிறீர்கள். 18 இப்போது அவ்வாறே செய்யுங்கள்! கர்த்தர் தாவீதைக் குறித்து ஏற்கெனவே இவ்வாறு சொல்லியிருக்கிறார். ‘இஸ்ரவேலராகிய எனது ஜனங்களை நான் பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் விடுவிப்பேன். எனது தாசனாகிய தாவீதின் மூலமாக இதைச் செய்வேன்’” என்றார்.
19 எப்ரோனிலிருந்த தாவீதுக்கு அப்னேர் சொன்ன இக்காரியங்களை பென்யமீன் கோத்திரத்திற்கும் சொன்னான். பென்யமீன் கோத்திரத்திற்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அப்னேர் கூறிய காரியங்கள் நன்மையாகத் தோன்றின.
20 பின்பு எப்ரோனிலிருந்த தாவீதிடம் அப்னேர் வந்தான். அவன் தன்னோடு 20 பேரை அழைத்து வந்திருந்தான். அப்னேருக்கும் அவனோடு வந்த ஆட்களுக்கும் தாவீது விருந்தளித்தான்.
21 அப்னேர் தாவீதை நோக்கி, “எனது ஆண்டவனும், அரசருமானவரே! நான் அனைத்து இஸ்ரவேலரையும் உம்மிடம் அழைத்துவர அனுமதியும். அப்போது அவர்கள் உம்மோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வார்கள். பின் நீர் விரும்பியதுபோல் இஸ்ரவேலை ஆளலாம்” என்றான்.
எனவே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான். அப்னேர் சமாதானமாய் திரும்பினான்.
அப்னேரின் மரணம்
22 யோவாபும் தாவீதின் அதிகாரிகளும் யுத்தத்திலிருந்து திரும்பினார்கள். பகைவரிடமிருந்து எடுத்த பல பொருட்கள் அவர்களிடமிருந்தன. அப்போதுதான் அப்னேர் தாவீதிடமிருந்து சமாதானமாய் புறப்பட்டுச் சென்றிருந்தான். ஆதலால் அந்நேரம் எப்ரோனில் தாவீதோடு அப்னேர் இருக்கவில்லை 23 யோவாபும் அவனது படையும் எப்ரோனை அடைந்தது. படையினர் யோவாபிடம், “நேரின் மகனாகிய அப்னேர் தாவீது அரசனிடம் வந்திருந்தான். அவன் சமாதானமாய் செல்லுமாறு தாவீது அனுமதித்தான்” என்றனர்.
24 யோவாப் அரசனிடம் வந்து, “நீங்கள் என்ன செய்தீர்கள்? அப்னேர் உங்களிடம் வந்தும், அவனுக்கு எந்தத் துன்பமும் செய்யாமல் அவனை அனுப்பியுள்ளீர்கள்! 25 நேரின் மகனாகிய அப்னேரை உமக்குத் தெரியும். அவன் உம்மை வஞ்சிக்க வந்தான். நீர் செய்துக்கொண்டிருக்கும் காரியங்களைக் குறித்து வேவு பார்க்க அவன் வந்தான்” என்றான்.
26 யோவாப் தாவீதை விட்டுச்சென்று சீராவின் கிணற்றருகே இருந்த அப்னேரைச் சந்திக்கும்படி தூதுவர்களை முன்னே அனுப்பினான். அவர்கள் அப்னேரை தனியே அழைத்து வந்தனர். அது தாவீதுக்குத் தெரிந்திருக்கவில்லை. 27 அப்னேர் எப்ரோனை அடைந்ததும், அவனோடு தனித்துப் பேசும்படியாக யோவாப் வாசலின் பின்புறம் அழைத்துச் சென்றான். அப்போது யோவாப் அப்னேரை வயிற்றில் குத்தினான். அப்னேர் மரித்தான். யோவாபின் சகோதரனான ஆசகேலை அப்னேர் கொன்றிருந்தான். ஆகையால் இப்போது யோவாப் அப்னேரைக் கொன்றான்.
அப்னேருக்காக தாவீதின் அழுகை
28 தாவீது நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டான். தாவீது, “நானும் எனது அரசும் நேரின் மகனாகிய அப்னேரின் மரணத்தைக் குறித்து என்றும் களங்கமற்றவர்கள். இதைக் குறித்து கர்த்தர் அறிவார். 29 யோவாபின் குடும்பத்தார் குற்றவாளிகள். அவர்களுக்கும் பல தொல்லைகள் நேரக்கூடும். தொழு நோய் போன்றவற்றால் அக்குடும்பத்தினர் பாதிக்கப்படக்கூடும். அவர்கள் முடவர்களாகக் கூடும். யுத்தத்தில் மரிக்கக்கூடும், உண்ண உணவின்றி வாழக்கூடும்!” என்றான்.
30 கிபியோனில் நடந்த யுத்தத்தில் தங்கள் சகோதரனாகிய ஆசகேலை அப்னேர் கொன்றதால் யோவாபும் அவனது சகோதரன் அபிசாயும் அப்னேரைக் கொன்றார்கள்.
31-32 யோவாபிடமும், யோவாபுடனிருந்த எல்லா ஜனங்களிடமும் தாவீது, “உங்கள் ஆடைகளைக் கிழித்து துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அப்னேருக்காக அழுங்கள்” என்றான். அவர்கள் எப்ரோனில் அப்னேரைப் புதைத்தார்கள். அடக்கத்திற்கு தாவீது சென்றிருந்தான். தாவீது அரசனும் எல்லா ஜனங்களும் கல்லறையருகே அப்னேருக்காக அழுதனர்.
33 அப்னேரின் அடக்கத்தின்போது தாவீது அரசன் இந்த சோக கீதத்தைப் பாடினான்:
“அறிவில்லாத குற்றவாளியைப்போல அப்னேர் மரித்தானா?
34 அப்னேர், உனது கைகள் கட்டப்படவில்லை.
கால்களில் விலங்கு மாட்டப்படவில்லை, அப்னேரே, தீயோர் உன்னை கொன்றனர்!”
அப்போது ஜனங்கள் எல்லோரும் அப்னேருக்காக மீண்டும் அழுதனர். 35 அந்த நாள் முழுவதும் ஜனங்கள் தாவீதிடம் வந்து அப்பம் உண்ணுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் தாவீது விசேஷ வாக்குறுதி செய்திருந்தான். அவன், “சூரியன் மறையும் முன்னர் நான் ரொட்டியையோ, வேறு உணவையோ உட்கொண்டால் தேவன் என்னைத் தண்டிப்பாராக” என்றான். 36 எல்லோரும் நடந்ததைக் கண்டனர். தாவீது அரசனின் செய்கையைக் கண்டு திருப்தியுற்றனர். 37 நேரின் மகனாகிய அப்னேரைத் தாவீது அரசன் கொல்லவில்லையென யூதா ஜனங்களும் இஸ்ரவேலரும் புரிந்துக்கொண்டனர்.
38 தாவீது அரசன் அதிகாரிகளை நோக்கி, “இஸ்ரவேலில் இன்று ஒரு முக்கியமான தலைவன் மரித்துவிட்டான் என்பதை அறிவீர்கள். 39 இதே நாளில் நான் அரசனாகவும், அபிஷேகம் செய்யப்பட்டேன். இந்த செருயாவின் மகன்கள் எனக்கு மிகுந்த துன்பத்தை கொடுத்துவிட்டனர். அவர்கள் தவறுக்கேற்ற தண்டனையை கர்த்தர் அளிப்பார் என நம்புகிறேன்” என்றான்.
சவுலின் குடும்பத்திற்குத் தொல்லைகள்
4 எப்ரோனில் அப்னேர் மரித்தான் என்பதை சவுலின் மகனான இஸ்போசேத் கேள்விப்பட்டான். இஸ்போசேத்தும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மிகவும் அச்சம் கொண்டனர். 2 சவுலின் மகனாகிய இஸ்போசேத்தைப் பார்ப்பதற்கு இருவர் சென்றனர். அவர்கள் படைத்தலைவர்களாக இருந்தனர். அவர்கள் ரிம்மோனின் மகன்களாகிய, ரேகாபும், பானாவும் ஆவார்கள். (ரிம்மோன் பேரோத்தைச் சேர்ந்தவன். பென்யமீன் கோத்திரத்திற்கு உரிய நகரமாக பேரோத் இருந்ததால் அவர்கள் பென்யமீனியர் ஆவார்கள். 3 ஆனால் பேரோத்தின் ஜனங்கள் கித்தாயீமிற்கு ஓடிவிட்டனர். அவர்கள் இன்றும் அங்கேயே வசித்து வருகின்றனர்.)
4 சவுலின் மகனாகிய யோனத்தானுக்கு மேவிபோசேத் என்னும் பெயருள்ள மகன் இருந்தான். சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யெஸ்ரயேலிலிருந்து வந்தபோது மேவிபோசேத்திற்கு ஐந்து வயது ஆகியிருந்தது. பகைவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்ததால் மேவிபோசேத்தை வளர்த்த தாதி பெண் அச்சம் கொண்டாள். எனவே அவள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். அவ்வாறு ஓடியபோது அவள் குழந்தையைத் தவறி போட்டுவிட்டாள். எனவே அவனது இரண்டு கால்களும் முடமாயின.
5 பேரோத்திலுள்ள ரிம்மோனின் மகன்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்கு நண்பகலில் சென்றார்கள். வெப்பம் மிகுதியாக இருந்ததால் இஸ்போசேத் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். 6-7 கோதுமை எடுக்க வந்தவர்களைப் போன்று ரேகாபும் பானாவும் வீட்டிற்குள் புகுந்தனர். படுக்கையறையில் இஸ்போசேத் சாய்ந்திருந்தான். அவனை ரேகாபும் பானாவும் குத்திக் கொன்றார்கள். பின் அவனது தலையை வெட்டி எடுத்துக் கொண்டு யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவு முழுவதும் பயணம் செய்தனர். 8 அவர்கள் எப்ரோனை வந்தடைந்தனர். இஸ்போசேத்தின் தலையை தாவீதிடம் கொடுத்தனர்.
ரிம்மோனின் பிள்ளைகளாகிய ரேகாபும் பானாவும் தாவீது அரசனை நோக்கி, “இதோ உம்மைக் கொல்ல முயன்ற உமது பகைவனாகிய சவுலின் மகன் இஸ்போசேத்தின் தலை, உமக்காக இன்று கர்த்தர் சவுலையும் அவனது குடும்பத்தாரையும் தண்டித்துள்ளார்” என்றனர்.
9 ஆனால் தாவீது ரேகாபையும் அவனது சகோதரன் பானாவையும் நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வாறே அவர் என்னைத் தொல்லைகளிலிருந்து விடுவித்ததும் நிச்சயம். 10 ஆனால் முன்பொருமுறை ஒருவன் எனக்கு ஏதோ நற்செய்தி கொண்டுவருவதாக எண்ணினான். அவன் என்னிடம், ‘பாருங்கள் சவுலை கொன்றதினால் மரித்துவிட்டான்’ என்றான். அச்செய்தியைக் கொண்டு வந்ததற்காக ஏதேனும் பரிசளிப்பேன் என்று அவன் எண்ணினான். ஆனால் அம்மனிதனைப் பிடித்து சிக்லாக் என்னும் இடத்தில் அவனைக் கொன்றேன். 11 எனவே உன்னையும் நான் கொன்று இத்தேசத்திலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில் துஷ்டராகிய நீங்கள் ஒரு நல்ல மனிதனை வீட்டிற்குள், அவனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொன்றீர்கள்” என்றான்.
12 எனவே ரேகாபையும் பானாவையும் கொல்லும்படி தனது இளம் வீரர்களுக்கு தாவீது கட்டளையிட்டான். அந்த இளம் வீரர்கள் ரேகாப், பானா ஆகியோரின் கைகளையும் கால்களையும் வெட்டி எப்ரோன் குளத்தருகே தொங்கவிட்டார்கள். பின் அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனில் அப்னேர் புதைக்கப்பட்ட இடத்திலேயே புதைத்தார்கள்.
இஸ்ரவேலர் தாவீதை அரசனாக்குகிறார்கள்
5 இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லோரும் எப்ரோனில் தாவீதிடம் கூடிவந்தார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தார்! [f] 2 சவுல் நமது அரசனாக இருந்தபோதும் யுத்தத்தில் நீர் எங்களை வழி நடத்தினீர். யுத்தத்திலிருந்து இஸ்ரவேலரை அவர்கள் இருப்பிடத்திற்கு நீரே அழைத்து வந்தீர். கர்த்தர் உம்மிடம், ‘எனது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு மேய்ப்பனாயிருப்பாய். இஸ்ரவேலுக்கு அரசனாக இருப்பாய்!’ என்று சொன்னார்” என்றார்கள்.
3 எனவே இஸ்ரவேலின் அனைத்து தலைவர்களும் தாவீதைச் சந்திப்பதற்காக எப்ரோன் என்னும் நகருக்கு வந்தார்கள். தாவீது அரசன் இத்தலைவர்களோடு கர்த்தருடைய முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். இஸ்ரவேலின் அரசனாக தலைவர்கள் அனைவரும் தாவீதை அபிஷேகம் பண்ணினார்கள்.
4 தாவீது அரசாள ஆரம்பித்தபோது அவனுக்கு 30 வயது. அவன் 40 ஆண்டுகள் அரசாண்டான். 5 எப்ரோனில் 7 ஆண்டு 6 மாதங்கள் அவன் யூதர்களுக்கு அரசனாக இருந்தான். எருசலேமில் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.
எருசலேமில் தாவீதின் வெற்றி
6 அரசனும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது. [g] எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள். 7 ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)
8 அந்த நாளில் தாவீது தனது ஆட்களை நோக்கி, “நீங்கள் எபூசியரை வெல்ல விரும்பினால், தண்ணீர் குகை [h] வழியே சென்று ‘முடவரும், குருடரும்’ ஆகிய பகைவரை நெருங்குங்கள்” என்றான். இதனால்தான் மக்கள், “குருடரும் முடவரும் வீட்டினுள் வரமுடியாது” என்பார்கள்.
9 கோட்டையினுள் தாவீது வாழ்ந்தான். அதை “தாவீதின் நகரம்” என்று அழைத்தான், மில்லோ என்னும் கோபுர பகுதியையும் தாவீது கட்டினான். நகரத்திற்குள்ளும் பல கட்டிடங்களை கட்டினான். 10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தாவீதோடிருந்ததால் அவன் பலம் மிகுந்தவனானான்.
11 தீருவின் அரசனாகிய ஈராம் தாவீதினிடம் தூதுவர்களை அனுப்பினான். கேதுரு மரங்களையும் தச்சரையும், சிற்பிகளையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கென்று ஒரு வீட்டைக் கட்டினார்கள். 12 அப்போது தாவீது கர்த்தர் தன்னை உண்மையாகவே இஸ்ரவேலின் அரசனாக்கியதை அறிந்தான். தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு தனது அரசை கர்த்தர் முக்கியமானதாக ஆக்கினார் என்பதை அவன் உணர்ந்தான்.
13 தாவீது எப்ரோனிலிருந்து எருசலேமுக்கு குடி பெயர்ந்தான். எருசலேமுக்கு வந்த பின் தாவீது இன்னும் பல மனைவியரையும் வேலைக்காரிகளையும் சேர்த்துக்கொண்டான். அவனுக்கு மேலும் பிள்ளைகள் பிறந்தனர். 14 எருசலேமில் தாவீதுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் இவைகளே: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 15 இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, 16 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத்.
பெலிஸ்தியருக்கு எதிராக தாவீது சண்டையிடுகிறான்
17 இஸ்ரவேலின் அரசனாக தாவீதை இஸ்ரவேலர் அபிஷேகம் செய்தார்கள் என்பதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். தாவீதைக் கொன்றுவிடுவதற்காக பெலிஸ்தியர் அவனைத் தேடிப் புறப்பட்டனர். தாவீது இதையறிந்து எருசலேமில் கோட்டைக்குள் இருந்தான். 18 பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டு தங்கினார்கள்.
19 தாவீது கர்த்தரிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்த்துப் போரிட வேண்டுமா? பெலிஸ்தியரைத் தோற்கடிக்க நீர் எங்களுக்கு உதவுவீரா?” என்று கேட்டான்.
கர்த்தர் தாவீதிடம், “பெலிஸ்தியரைத் தோற்கடிப்பதற்கு நான் கண்டிப்பாக உதவுவேன்” என்றார்.
20 பின்பு தாவீது பாகால் பிராசீம் என்னும் இடத்துக்கு வந்து அந்த இடத்தில் பெலிஸ்தியரைக் தோற்கடித்தான். தாவீது, “உடைந்த அணையில் வெள்ளம் பெருக்கெடுப்பதைப்போல கர்த்தர் எனது பகைவர்களிடையே பாய்ந்தார்” என்று கூறினான். எனவே அவ்விடத்திற்குப் “பாகால் பிராசீம்” என்று பெயரிட்டான். 21 பெலிஸ்தியர்கள் பாகால் பிராசீமில் தம் தெய்வங்களின் உருவங்களை விட்டுச் சென்றனர். தாவீதும் அவன் ஆட்களும் அவற்றை அப்புறப்படுத்திவிட்டனர்.
22 மீண்டும் பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டு தங்கினார்கள்.
23 தாவீது கர்த்தரிடம் பிராத்தனை செய்தான். இம்முறை கர்த்தர் தாவீதிடம், “நீ அங்குப் போகாதே. அவர்கள் படைக்குப் பின்னே சென்று வளைத்துக்கொள். முசுக்கட்டை செடிகளுக்கு அருகே இருந்து அவர்களைத் தாக்கு. 24 முசுக்கட்டை செடிகளின் உச்சியிலிருந்து பெலிஸ்தியர் போருக்காக அணிவகுத்து வரும் ஒலியைக் கேட்பீர்கள். அப்போது நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். ஏனெனில் அதுவே கர்த்தர் உங்களுக்கு முன்பாக சென்று பெலிஸ்தியரைத் தோற்கடிக்கும் சமயமாகும்” என்றார்.
25 கர்த்தர் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவன் பெலிஸ்தியரை வென்றான். கேபாவிலிருந்து கேசேர் வரைக்கும் அவர்களைத் துரத்தினான்.
தேவனுடைய பரிசுத்தப்பெட்டி எருசலேமுக்கு வருதல்
6 இஸ்ரவேலின் மிகச்சிறந்த வீரர்களையெல்லாம் தாவீது ஒன்றாகக் கூட்டினான். மொத்தம் 30,000 பேர் இருந்தனர். 2 தாவீதும் அவனது ஆட்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியருகே வருவார்கள். பரிசுத்தப் பெட்டியானது கர்த்தருடைய சிங்காசனமாக இருந்தது. கேருபீன்களின் உருவங்கள் பரிசுத்தப் பெட்டியின் மேலே இருந்தன. கேருபீன்கள் மேல் கர்த்தர் ராஜாவாக வீற்றிருக்கிறார். 3 மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிற்கு வெளியே அவர்கள் பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தார்கள். பின்பு தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டியை அபினதாபின் மகன்களாகிய ஊசாவும் அகியோவும் ஓட்டினார்கள்.
4 மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்துவந்தனர். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோடு ஊசா வண்டியின் மீது அமர்ந்திருந்தான். பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக அகியோ நடந்துக்கொண்டிருந்தான். 5 கர்த்தருக்கு முன் தாவீதும் இஸ்ரவேலரும் நடனமாடினார்கள். இரட்டைவால் வீணை, சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, தாளம் ஆகிய மருதகட்டையில் செய்த இசைக்கருவிகளை இசைத்தப்படி சென்றனர். 6 நாகோனுக்குச் சொந்தமான போரடிக்கும் களத்தை அடைந்தபோது வண்டியில் பூட்டப்பட்ட பசுக்கள் இடறின. எனவே தேவனுடைய பரிசுத்த பெட்டி வண்டிக்கு வெளியே விழலாயிற்று. ஊசா பரிசுத்த பெட்டியை பிடித்தான். 7 ஆனால் கர்த்தர் ஊசாவின் மீது கோபங்கொண்டு அவனைக் கொன்றார். [i] ஊசா பரிசுத்த பெட்டியைத் தொட்டபோது அவன் தேவனுக்கு மரியாதை கொடுக்காமல் செயல்பட்டான். ஆகவே தேவனுடைய பரிசுத்தப் பெட்டியருகில் ஊசா அங்கே மரித்தான். 8 கர்த்தர் ஊசாவைக் கொன்றதால் தாவீது கலக்கமுற்றான். தாவீது அந்த இடத்தை “பேரேஸ் ஊசா” என்று அழைத்தான். இன்றும் அந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது.
9 தாவீது அந்த நாளில் கர்த்தரிடம் பயப்பட்டான். தாவீது, “நான் இங்கு இப்போது தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எவ்வாறு கொண்டுவர முடியும்?” என்றான். 10 ஆகையால் தாவீதின் நகரத்திற்குள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைக் கொண்டு வரவில்லை. காத் ஊரானாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் தாவீது பரிசுத்தப் பெட்டியை வைத்தான். போரடிக்கும் களத்திலிருந்து ஓபேத் ஏதோமின் வீடுவரைக்கும் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை தாவீது சுமந்து வந்தான். 11 ஓபேத் ஏதோமின் வீட்டில் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி மூன்று மாதங்கள் இருந்தது. ஓபேத் ஏதோமையும் அவனது குடும்பத்தாரையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
12 பின்னர், ஜனங்கள் தாவீதிடம், “ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும், தேவனுடைய பரிசுத்தப் பெட்டி அங்கிருந்ததால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” என்றார்கள். தாவீது போய் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஓபேத் ஏதோம் வீட்டிலிருந்து கொண்டு வந்தான். அதனை தாவீதின் நகரத்திற்கு கொண்டு போனான். தாவீது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தான். 13 கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் நின்றார்கள். தாவீது ஒரு காளையையும் கொழுத்த கன்று குட்டியையும் பலியிட்டான். 14 பின்பு தாவீது கர்த்தருக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடு நடனமாடினான். தாவீது மெல்லிய பஞ்சாலாகிய ஏபோத்தை அணிந்திருந்தான்.
15 தாவீதும் இஸ்ரவேலரும் களிப்படைந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்து எக்காளம் ஊதியபடி கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை நகரத்திற்குள் கொண்டு வந்தார்கள். 16 சவுலின் மகள் மீகாள் ஜன்னல் வழியாய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோது, கர்த்தருக்கு முன்பாக தாவீது பாடி நடனம் ஆடிக்கொண்டிருந்தான். மீகாள் தாவீதைப் பார்த்து தன் மனதிற்குள் அவனை இகழ்ந்தாள். அவன் தன்னைத் தானே தரக்குறைவாக்கிக்கொள்கிறான் என்று அவள் நினைத்தாள்.
17 தாவீது பரிசுத்தப் பெட்டிக்காக ஒரு கூடாரம் அமைத்தான். இஸ்ரவேலர் கூடாரத்தினுள்ளே கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். பின்பு தாவீது தகனபலியையும் சமாதான பலியையும் கர்த்தருக்கு முன்பாகச் செலுத்தினான்.
18 தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்திய பிறகு தாவீது சர்வ வல்லைமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் ஜனங்களை ஆசீர்வதித்தான். 19 தாவீது இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் பங்காகிய ரொட்டியும், முந்திரிப்பழ அடையும், பேரீச்சம்பழ அடையும் கொடுத்தான். பின்பு எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
மீகாள் தாவீதை திட்டுதல்
20 தாவீது தன் வீட்டை ஆசீர்வதிப்பதற்காகத் திரும்பிச் சென்றான். ஆனால் சவுலின் மகளாகிய மீகாள் அவனைச் சந்தித்து, “இஸ்ரவேலின் அரசன் தன்னைத்தான் இன்று மதிக்கவில்லை! பணிப்பெண்களின் முன்னே உமது ஆடைகளை நீக்கி வெட்கமின்றி ஆடுகின்ற மூடனைப்போல் நடந்துக்கொண்டீர்!” என்றாள்.
21 அதற்கு தாவீது மீகாளை நோக்கி, “உனது தந்தையையோ, அவரது குடும்பத்தின் எந்த மனிதனையோ தேர்ந்தெடுக்காமல் கர்த்தர், என்னைத் தேர்ந்தெடுத்தார். அவரது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்குத் தலைவனாக கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்தார். எனவே நான் கர்த்தருக்கு முன்பாக தொடர்ந்து ஆடிப்பாடிக் கொண்டாடுவேன்! 22 இதைக்காட்டிலும் அவமரியாதையான செயல்களையும் நான் செய்யக்கூடும்! நீ என்னை மதியாமலிருந்தாலும் நீ குறிப்பிடும் பெண்கள் என்னை உயர்வாக மதிக்கிறார்கள்!” என்றான்.
23 சவுலின் மகளான மீகாள் தனது மரண நாள்வரை குழந்தை இல்லாமல் இருந்து மரித்தாள்.
தாவீது ஒரு ஆலயம் கட்ட விரும்புதல்
7 தாவீது தன் புதுவீட்டிற்குச் சென்றபின் கர்த்தர் அவனது பகைவர்களிடமிருந்து அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார். 2 தாவீது அரசன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி, “பாரும், நான் தேவதாரு மரங்களால் அமைந்த அழகிய வீட்டில் வாழ்கிறேன். ஆனால் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோ ஒரு கூடாரத்திலேயே இன்னும் வைக்கப்பட்டுள்ளது! பரிசுத்தப் பெட்டிக்கு அழகான நல்ல கட்டிடம் நாம் கட்ட வேண்டும்” என்றான்.
3 நாத்தான் தாவீது அரசனை நோக்கி, “நீர் செய்ய விரும்புகிறதைச் செய்யும். கர்த்தர் உம்மோடிருக்கிறார்” என்றான்.
4 ஆனால் அன்றிரவு, நாத்தானுக்கு கர்த்தருடைய செய்திக் கிடைத்தது.
கர்த்தர் நாத்தானிடம்,
5 “நீ என் தாசனாகிய தாவீதிடம் போய், ‘இதுவே கர்த்தர் சொல்வதாகும், நான் வாழவேண்டிய வீட்டைக் கட்டும் ஆள் நீ அல்ல. 6 இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வந்தபோது நான் ஒரு வீட்டிலும் தங்கி வாழவில்லை. நான் ஒரு கூடாரத்திலேயே எல்லா இடங்களுக்கும் பயணமானேன். எனது வீடாக கூடாரத்தையே பயன்படுத்தினேன். 7 தேவதாரு மரங்களாலாகிய அழகிய வீட்டை எனக்கு கட்டுமாறு நான் எந்த ஒரு இஸ்ரவேல் கோத்திரத்திற்கும் ஒருபோதும் ஒரு வார்த்தையும் கூறவில்லை’.
8 “நீ என் தாசனாகிய தாவீதுக்கு இதைக் கூற வேண்டும்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவது இதுவே: நீ ஆடு மேய்த்து கொண்டிருக்கும்போது உன்னை தேர்ந்தெடுத்தேன். அவ்வேலையிலிருந்து விலக்கி எடுத்து இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு உன்னை தலைவனாக்கினேன். 9 நீ சென்ற எல்லா இடங்களிலும் நான் உன்னோடு இருந்தேன். உனக்காக உன் பகைவர்களை நான் முறியடித்தேன். உலகிலுள்ள மேன்மையான ஜனங்களைப்போல் உன்னையும் புகழ்பெறச் செய்வேன். 10-11 இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு, நான் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நான் இஸ்ரவேலரை நிலை நிறுத்தினேன். அவர்கள் வாழ்வதற்குரிய சொந்த இடத்தைக் கொடுத்தேன். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு அவர்கள் அலைந்து கொண்டிராதபடிக்கு நான் இதைச் செய்தேன். முன்பு இஸ்ரவேலரை வழிநடத்த நியாயாதிபதிகளை அனுப்பினேன். ஆனால் தீயோர் அவர்களுக்குத் தொல்லைகள் விளைவித்தனர். அத்தொல்லைகள் இப்போது வராது. உனது எல்லாப் பகைவர்களிடமிருந்தும் உனக்கு அமைதியளிக்கிறேன். உனது குடும்பத்தாரை அரசர்களாக்குவேன் என உனக்கு வாக்குறுதி அளிக்கின்றேன்.
12 “‘உனது முதிர்வயதில், நீ மரித்து உனது முற்பிதாக்களோடு சேர்த்து புதைக்கப்படுவாய். அப்போது உனது சொந்த மகனை அரசனாக்குவேன். 13 அவன் எனது பெயரில் ஒரு வீட்டைக் (ஆலயத்தைக்) கட்டுவான். அவனது அரசின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலை நிறுத்துவேன். 14 நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் பாவம் செய்கையில், பிறரால் அவனுக்குத் தண்டனை அளிப்பேன். அவர்கள் எனது சாட்டையாக இருப்பார்கள். 15 ஆனால் நான் அவனை என்றும் நேசியாமல் விட்டு விடமாட்டேன். அவனுக்கு உண்மையானவனாக என்றும் இருப்பேன். சவுலிடமிருந்து எனது அன்பையும் இரக்கத்தையும் நீக்கினேன். நான் உன்னிடம் திரும்பியபோது சவுலைத் தள்ளிவிட்டேன். ஆனால் உனது குடும்பத்தாருக்கு அவ்வாறு செய்யமாட்டேன். 16 உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.
17 நாத்தான் தான் கண்ட தரிசனத்தைக் குறித்து தாவீதுக்குக் கூறினான். தேவன் கூறிய எல்லாவற்றையும் அவன் தாவீதிற்குக் கூறினான்.
தாவீது தேவனிடம் ஜெபம் செய்கிறான்
18 அப்போது தாவீது அரசன் உள்ளே சென்று கர்த்தருக்கு முன்பாக அமர்ந்தான்.
தாவீது, “கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் ஏன் உமக்கு முக்கியமானவனானேன்? என் குடும்பம் ஏன் உமக்கு முக்கியமானதாயிற்று? என்னை ஏன் முக்கியமானவனாக மாற்றினீர்? 19 நான் ஊழியக்காரனன்றி வேறெதுவுமல்ல. நீர் என்னிடம் மிகவும் இரக்கம் காட்டினீர். எனது எதிர்கால குடும்பம் பற்றியும் இரக்கமான சொற்களைக் கூறினீர்! கர்த்தராகிய என் ஆண்டவரே, நீர் எப்போதும் ஜனங்களிடம் இவ்வாறு பேசுவதில்லை அல்லவா? 20 நான் எவ்வாறு தொடர்ந்து உம்மோடு பேச முடியும்? கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது ஊழியன் என்பதை அறிவீர். 21 நீர் செய்வதாகக் கூறியதாலும் அவற்றைச் செய்ய விரும்புவதாலும் இந்த அற்புதமான காரியங்களை நீர் செய்வீர். இக்காரியங்கள் எல்லாவற்றையும் நான் அறிந்துகொள்ள நீர் முடிவு செய்தீர். 22 கர்த்தராகிய என் ஆண்டவரே, அதனால்தான் நீர் மிகவும் பெரியவர்! உம்மைப் போன்று வேறொருவரும் இல்லை. உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டிருப்பதால் அதை அறிவோம்.
23 “உமது ஜனங்களாகிய இஸ்ரவேலருடையதைப் போன்று இவ்வுலகில் வேறு எந்த ஜனங்களும் இல்லை. அவர்கள் விசேஷமான ஜனங்கள். அவர்கள் அடிமைகளாயிருந்தார்கள், ஆனால் நீர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்து விடுதலை அடைய வைத்தீர். அவர்களை உமது ஜனங்களாக மாற்றினீர். அவர்களை உமது ஜனங்களாக்கினீர். உமது ஜனங்களுக்காக பெரிய காரியங்களையும் அற்புதங்களையும் செய்தீர். உமது தேசத்திற்காக (நிலம்) அற்புதமான காரியங்களைச் செய்தீர். 24 என்றென்றும் உம்முடைய சொந்த ஜனங்களாக இஸ்ரவேலரைச் செய்தீர், கர்த்தாவே, நீர் அவர்கள் தேவனானீர்.
25 “இப்போது, தேவனாகிய கர்த்தாவே, உமது ஊழியக்காரனாகிய எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் சில காரியங்களைச் செய்ய வாக்குறுதி தந்தீர், நீர் வாக்குறுதி அளித்த காரியங்களை இப்போது செய்யும். என் குடும்பத்தை அரச குடும்பமாக எப்போதும் வைத்திரும். 26 அப்போது உமது பெயர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படும்! ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலை ஆளுகிறார். உமக்கு சேவை செய்வதில் உமது ஊழியக்காரனாகிய தாவீதின் குடும்பம் தொடர்ந்து வலிமை பெறட்டும்’ என்பார்கள்.
27 “சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் எனக்குப் பல காரியங்களைக் காட்டினீர். நீர், ‘உன் குடும்பத்தைப் பெருமைப்படுத்துவேன்’ என்றீர். அதனால் உமது தாசனாகிய நான் இப்பிரார்த்தனையை செய்கிறேன். 28 கர்த்தராகிய என் ஆண்டவரே, நீர் தேவன். நீர் கூறும் காரியங்களை நான் நம்பமுடியும், உமது ஊழியக்காரனாகிய எனக்கு இந்நல்ல காரியங்கள் ஏற்படும் என்று நீர் கூறினீர். 29 இப்போது தயவு செய்து என் குடும்பத்தை ஆசீர்வதியும். உமக்கு முன்பாக நின்று எப்போதும் ஊழியம் செய்யட்டும். கர்த்தராகிய என் ஆண்டவரே, நீரே இவற்றைக் கூறினீர். உம்முடைய ஆசீர்வாதம் என்றும் தொடரும். நீரே என் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்” என்றான்.
தாவீதுக்கு பல போர்களில் வெற்றி
8 இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தியரை வென்றான். பெலிஸ்தியரின் தலைநகரம் பரந்த நிலப்பகுதியைக் கொண்ட நகரமாக இருந்து வந்தது. தாவீது அந்த இடங்களின் ஆட்சியைக் கைப்பற்றினான். 2 மோவாபின் ஜனங்களையும் தாவீது தோற்கடித்தான். அவர்கள் எல்லோரையும் தரை மட்டும் பணியச் செய்தான். பின் அவர்களை வரிசைகளாக ஒரு கயிற்றினால் பிரித்தான். அவர்களில் இரண்டு வரிசை ஆட்களைக் கொன்றான். மூன்றாவது வரிசை ஆட்களை உயிரோடுவிட்டான். இவ்விதமாக மோவாபின் ஜனங்கள் தாவீதின் பணியாட்களாயினர். அவர்கள் தாவீதுக்கு கப்பம் கட்டினார்கள்.
3 ரேகோபின் மகனாகிய ஆதாதேசர் சோபாவின் அரசனாக இருந்தான். ஐபிராத்து நதியருகேயுள்ள நிலப்பகுதியை தாவீது கைப்பற்றுவதற்காகச் சென்றபோது தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்தான். 4 ஆதாதேசரிடமிருந்து 1,700 குதிரை வீரர்களையும் 20,000 காலாட்படைகளையும் தாவீது கைப்பற்றினான். 100 இரதக் குதிரைகளைத் தவிர்த்துப் பிறவற்றை தாவீது முடமாக்கினான்.
5 சோபாவின் அரசனாகிய ஆதாதேசருக்கு உதவுவதற்காக தமஸ்கு நகரிலிருந்து ஆராமியர்கள் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தாவீது 22,000 ஆராமியர்களையும் வென்றான். 6 பின் தாவீது, ஆராமிலுள்ள தமஸ்குவில் வீரர்களைக் கூட்டம் கூட்டமாக நிறுத்தினான். ஆராமியர்கள் தாவீதின் பணியாட்களாகி அவனுக்கு கப்பம் கட்டி வந்தனர். தாவீது சென்ற இடங்களிலெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
7 ஆதாதேசரின் பணியாட்களுக்குரிய வெண்கல கேடயங்களைத் தாவீது எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் எருசலேமுக்குக் கொண்டு வந்தான். 8 பேத்தா, பேரொத்தா ஆகிய நகரங்களிலிருந்து வெண்கலத்தாலாகிய பற்பல பொருட்களைத் தாவீது எடுத்துக்கொண்டான். (பேத்தாவும், பேரொத்தாவும் ஆதாதேசேருக்குச் சொந்தமான நகரங்கள்)
9 ஆமாத்தின் அரசனாகிய தோயீ, ஆதாதேசரின் படைகளையெல்லாம் தாவீது தோற்கடித்ததைக் கேள்வியுற்றான். 10 எனவே, தோயீ தன் மகனாகிய யோராமைத் தாவீது அரசனிடம் அனுப்பினான். தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்ததால் யோராம் தாவீதை வாழ்த்தி ஆசீர்வதித்தான். ஆதாதேசர் முன்பு தோயீக்கு எதிராக போரிட்டிருந்தான். பொன், வெள்ளி வெண்கலம் ஆகியவற்றாலான பொருட்களை யோராம் கொண்டு வந்திருந்தான். 11 தாவீது, இப்பொருட்களை வாங்கி கர்த்தருக்கு அர்ப்பணித்தான். கர்த்தருக்குக் கொடுத்த பிற பொருட்களோடு அவற்றையும் வைத்தான். தாவீது தோற்கடித்த தேசங்களிலிருந்து அவற்றை தாவீது எடுத்துக்கொண்டான். 12 ஆராம், மோவாப், அம்மோன், பெலிஸ்தியா, அமலேக்கு ஆகிய நிலப்பகுதிகளை தாவீது வென்றான். சோபாவின் அரசனும் ரேகோபின் மகனாகிய ஆதாதேசரையும் தாவீது வென்றான். 13 தாவீது 18,000 ஆராமியரையும் உப்புப் பள்ளத்தாக்கில் தோற்கடித்தான். அவன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பியபோது புகழ் பெற்றவனாக இருந்தான். 14 தாவீது ஏதோமில் வீரர்களின் கூட்டத்தை வைத்தான். ஏதோம் முழுவதும் இவ்வாறு கூட்டம் கூட்டமாக வீரர்களை நிறுத்தினான். ஏதோமியர் எல்லாரும் தாவீதின் பணியாட்களானார்கள். தாவீது சென்ற இடமெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
தாவீதின் ஆட்சி
15 இஸ்ரவேல் முழுவதையும் தாவீது ஆட்சி செய்தான். தாவீது தனது ஜனங்கள் எல்லோருக்கும் சிறந்த நன்மையான தீர்மானங்களை எடுத்தான். 16 செருயாவின் மகனாகிய யோவாப் தாவீதின் படைத்தலைவனாக இருந்தான். அகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான். 17 அகிதூபின் மகனாகிய சாதோக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்கும் ஆசாரியர்கள். செராயா செயலாளனாக இருந்தான். 18 யோய்தாவின் மகனாகிய பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் [j] பொறுப்பாளியாக இருந்தான். தாவீதின் மகன்களும் முக்கிய தலைவர்களாக இருந்தார்கள்.
சவுலின் குடும்பத்தாருக்கு தாவீது இரக்கம் காட்டுகிறான்
9 தாவீது, “சவுலின் வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான் அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். யோனத்தான் நிமித்தம் நான் இதைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.
2 சவுலின் குடும்பத்தை சேர்ந்த சீபா என்னும் வேலைக்காரன் இருந்தான். தாவீதின் பணியாட்கள் சீபாவை தாவீதிடம் அழைத்து வந்தனர். தாவீது அரசன், சீபாவிடம், “நீ சீபாவா?” என்று கேட்டான்.
சீபா, “ஆம் நான் உங்கள் பணியாளாகிய சீபா” என்றான்.
3 அரசன், “சவுலின் குடும்பத்தில் யாராவது உயிரோடிருக்கிறார்களா? தேவனுடைய இரக்கத்தை நான் அவனுக்குக் காட்ட வேண்டும்” என்றான்.
தாவீதிடம், “யோனத்தானுக்கு இரு கால்களும் முடமான ஒரு மகன் இருக்கிறான்” என்று சீபா சொன்னான்.
4 அரசன் சீபாவை நோக்கி, “அந்த மகன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.
சீபா, அரசனிடம், “லோதேபாரில் அம்மியேலின் மகனாகிய மாகீரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்றான்.
5 தாவீது அரசன் பணியாட்களை லோதேபாரிலுள்ள அம்மியேலின் மகனாகிய மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை அங்கிருந்து அழைத்து வருவதற்காக அனுப்பினான். 6 யோனத்தானின் மகன் மேவிபோசேத் என்பவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணங்கினான்.
தாவீது, “மேவிபோசேத்?” என்றான்.
மேவிபோசேத், “நான் உங்கள் பணியாளாகிய மேவிபோசேத்” என்றான்.
7 தாவீது மேவிபோசேத்தை நோக்கி, “பயப்படாதே நான் உனக்கு இரக்கம் காட்டுவேன். உன் தந்தை யோனத்தானிமித்தம் இதைச் செய்வேன். உன் பாட்டனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் தருவேன். நீ எப்பொழுதும் எனது பந்தியில் உண்பாய்” என்றான்.
8 மேவிபோசேத் மீண்டும் தாவீதை வணங்கினான். மேவிபோசேத், “உங்கள் பணியாளாகிய என்னிடம் நீங்கள் இரக்கம் காட்டுகிறீர்கள். நான் செத்த நாயைக் காட்டிலும் மேலானவன் அல்ல” என்றான்.
9 அப்போது தாவீது அரசன் சவுலின் வேலைக்காரன் சீபாவை அழைத்தான். தாவீது சீபாவை நோக்கி, “உன் எஜமானரின் பேரனாகிய மேவிபோசேத்திற்கு சவுல் குடும்பம் மற்றும் சவுலுக்கும் சொந்தமான எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். 10 நீ அந்த நிலத்தைப் பயிர் செய்வாய். உன் மகன்களும் வேலையாட்களும் மேவிபோசேத்திற்காக இதைச் செய்ய வேண்டும். நீ பயிர்களை அறுவடைச் செய்து விளைச்சலைச் சேர்ப்பாய். அப்போது உன் எஜமானனின் பேரனான, மேவிபோசேத் உண்பதற்குத் தேவையான உணவைப் பெறுவான். உனது எஜமானின் பேரன், எப்பொழுதும் என் பந்தியில் ஆகாரம் உண்பான்” என்றான்.
சீபாவிற்கு 15 மகன்களும் 20 வேலைக்காரரும் இருந்தனர். 11 சீபா தாவீது அரசனை நோக்கி “நான் உங்கள் பணியாள், ஆண்டவனாகிய எனது அரசன் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் நான் செய்வேன்” என்றான்.
மேவிபோசேத் ராஜகுமாரனைப்போல் தாவீதின் பந்தியில் உணவுண்டான். 12 மேவிபோசேத்திற்கு மீகா என்னும் சிறிய மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தின் ஜனங்கள் அனைவரும் மேவிபோசேத்தின் வேலையாட்களாயினர். மேவிபோசேத் இரு கால்களும் முடமானவன். 13 மேவிபோசேத் எருசலேமில் வாழ்ந்தான். ஒவ்வொரு நாளும் அவன் அரச பந்தியில் உணவுண்டான்.
தாவீதின் ஆட்களுக்கு ஆனூனால் அவமானம்
10 அதற்குப் பிறகு அம்மோன் அரசனாகிய நாகாஸ் மரித்தான். அவனது மகனாகிய ஆனூன் அவனுக்குப் பிறகு அரசனானான். 2 தாவீது, “நாகாஸ் என்னிடம் இரக்கத்தோடு நடந்துக்கொண்டான். எனவே நானும் அவனது மகன் ஆனூனுக்கு இரக்கம் காட்டுவேன்” என்றான். எனவே ஆனூனின் தந்தையின் மறைவிற்குத் துக்கம் விசாரிப்பதற்காக தாவீது தனது அதிகாரிகளை அனுப்பினான்.
தாவீதின் அதிகாரிகள் அம்மோன் தேசத்திற்குச் சென்றார்கள். 3 ஆனால் அம்மோனின் அதிகாரிகள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனை நோக்கி, “உங்களுக்கு ஆறுதல் கூறுவதற்குச் சில அதிகாரிகளை அனுப்புவதால் தாவீது உங்களைப் பெருமைப்படுத்துவதாக நீர் நினைக்கிறீரா? இல்லை! உங்கள் நகரத்தைக் குறித்து உளவறிந்து கொள்வதற்காக தாவீது இந்த ஆட்களை அனுப்பியிருக்கிறான். உங்களுக்கு எதிராக போரிடுவதற்கான திட்டம் இதுவாகும்” என்றார்கள்.
4 எனவே ஆனூன் தாவீதின் அதிகாரிகளைப் பிடித்து அவர்கள் தாடியின் ஒரு பகுதி மயிரைச் சிரைத்தான். அவர்கள் ஆடைகளை இடுப்புப் பகுதி வரைக்கும் நடுவே கிழித்துவிட்டப் பின் அவர்களை அனுப்பிவிட்டான்.
5 இச்செய்தியை ஜனங்கள் தாவீதிடம் தெரிவித்தபோது அவன் தனது அதிகாரிகளைச் சந்திக்கும் பொருட்டு அவர்களிடம் தூதுவர்களை அனுப்பினான். தனது அதிகாரிகள் அவமானப்படுத்தப்பட்டதால் தாவீது அரசன் செய்தியனுப்பி, “உங்கள் தாடி மீண்டும் வளரும்மட்டும் எரிகோவில் தங்கியிருங்கள். பின்பு எருசலேமுக்குத் திரும்பி வாருங்கள்” என்றான்.
அம்மோனியருக்கு எதிராகப் போர்
6 அம்மோனியர் தாவீதிடம் பகை வளர்த்தனர். எனவே அவர்கள் பெத்ரேகோப், ஸோபா ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரை அழைத்தனர். காலாட் படைகளில் 20,000 ஆராமியர் தேறினார்கள். அம்மோனியர் மாக்கா அரசனையும் அவனது 1,000 வீரர்களையும் தோபிலிருந்து 12,000 வீரர்களையும் வரவழைத்தார்கள்.
7 தாவீது இதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் யோவாபையும், வலிமை மிகுந்த தனது முழு சேனையையும் அனுப்பினான். 8 அம்மோனியர் புறப்பட்டு போருக்குத் தயாராயினர். அவர்கள் நகர வாயிலருகே நின்றுக்கொண்டனர். சோபா, ரேகோப் ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரும் தோப், மாக்கா ஆகிய இடங்களிலுள்ள வீரர்களும் யுத்தக் களத்தில் அம்மோனியரோடு சேர்ந்து நிற்கவில்லை.
9 அம்மோனியர் முன்னணியிலும் பின் பகுதியிலும் தனக்கு எதிரே நிற்பதை யோவாப் கண்டான். எனவே அவன் இஸ்ரவேலரில் திறமை மிகுந்த வீரர்களைத் தெரிந்துக்கொண்டான். ஆராமியருக்கு எதிராகப் போர் செய்வதற்காக இவர்களை அனுப்பினான். 10 பின் தனது சகோதரனாகிய அபிசாயின் தலைமையில் யோவாப் மற்ற வீரர்களை அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு அனுப்பினான். 11 யோவாப் அபிசாயியை நோக்கி, “ஆராமியர் மிகுந்த பலசாலிகளாக இருந்தால் நீ எனக்கு உதவுவாய். அம்மோனியர்களின் பலம் மிகுந்திருந்தால் நான் உனக்கு உதவுவேன். 12 துணிவாயிரு. நமது ஜனங்களுக்காகவும் நமது தேவனுடைய நகரங்களுக்காகவும் நாம் வீரத்தோடு போரிடுவோம். கர்த்தர் தாம் சரியெனக் கண்டதைச் செய்வார்” என்றான்.
13 பின்பு யோவாபும் அவனது வீரர்களும் ஆராமியரைத் தாக்கினார்கள். ஆராமியர்கள் யோவாபிடமிருந்தும் அவனது ஆட்களிடமிருந்தும் தப்பி ஓடினார்கள். 14 ஆராமியர் ஓடிப்போவதை அம்மோனியர் பார்த்தனர். எனவே அவர்கள் அபிசாயிடமிருந்து தப்பி ஓடிப்போய் தங்கள் நகரத்தை அடைந்தனர்.
எனவே யோவாப் அம்மோனியரோடு போர் செய்வதை நிறுத்தி திரும்பி வந்து, எருசலேமிற்கு போனான்.
ஆராமியர் மீண்டும் போரிட முடிவெடுக்கின்றனர்
15 இஸ்ரவேலர் தங்களைத் தோற்கடித்ததை ஆராமியர்கள் கண்டார்கள். எனவே அவர்கள் ஒரு பெரும்படையைத் திரட்டினார்கள். 16 ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்த ஆராமியரை அழைத்து வருவதற்கு ஆதாதேசர் ஆட்களை அனுப்பினான். இந்த ஆராமியர் ஏலாமுக்கு வந்தார்கள். அவர்களின் தலைவனாக ஆதாதேசரின் படைத் தலைவனாகிய சோபாக் சென்றான்.
17 தாவீது இதைக் கேள்விப்பட்டான். எல்லா இஸ்ரவேலரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டி ஏலாமுக்குச் சென்றனர்.
ஆராமியர் போருக்குத் தயாராகித் தாக்கினார்கள். 18 ஆனால் தாவீது ஆராமியரை முறியடித்தான். இஸ்ரவேலரிடமிருந்து ஆராமியர் தப்பித்து ஓடினார்கள். தாவீது 700 தேரோட்டிகளையும் 40,000 குதிரை வீரர்களையும் கொன்றான். தாவீது ஆராமியரின் படைத்தலைவனாகிய சோபாக்கைக் கொன்றான்.
19 ஆதாதேசருக்கு உதவ வந்த அரசர்கள் இஸ்ரவேலர் வென்றதைக் கண்டார்கள். எனவே அவர்கள் இஸ்ரவேலரோடு சமாதானம் செய்து அவனுக்குப் பணிவிடைச் செய்தனர். அம்மோனியருக்கு மீண்டும் உதவுவதற்கு ஆராமியர்கள் அஞ்சினார்கள்.
தாவீது பத்சேபாளைச் சந்திக்கிறான்
11 வசந்த காலத்தில் அரசர்கள் போர் புரியப்போகும்போது தாவீது யோவாபையும் அதிகாரிகளையும் அனைத்து இஸ்ரவேலரையும் அம்மோனியரை அழிப்பதற்காக அனுப்பினான். யோவாபின் சேனை பகைவர்களின் தலைநகராகிய ரப்பாவைத் தாக்கிற்று.
ஆனால் தாவீது எருசலேமில் தங்கி விட்டான். 2 சாயங்காலத்தில் அவன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்தபோது குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் மிகுந்த அழகியாயிருந்தாள். 3 உடனே தாவீது தனது அதிகாரிகளை அழைத்து அப்பெண் யாரென விசாரித்தான். ஒரு அதிகாரி, “அப்பெண், எலியாமின் மகளாகிய பத்சேபாள், அவள் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி” என்றான்.
4 தாவீது பத்சேபாளைத் தன்னிடம் அழைத்து வருவதற்காக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதிடம் வந்தபோது தாவீது அவளோடு பாலின உறவுகொண்டான். அவள் தன் தீட்டுக்கழிய குளித்தப் பின்பு தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள். 5 ஆனால் பத்சேபாள் கருவுற்றாள். அதனை தாவீதுக்குச் சொல்லியனுப்பி, “நான் கருவுற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்தாள்.
தாவீது தன் பாவத்தை மறைக்க முயலுவது
6 தாவீது யோவாபுக்கு, “ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு” என்று சொல்லியனுப்பினான்.
எனவே யோவாப் உரியாவை தாவீதிடம் அனுப்பினான். 7 உரியா தாவீதிடம் வந்தான். தாவீது உரியாவிடம், “யோவாப் நலமா, வீரர்கள் நலமா, யுத்தம் எப்படி நடக்கிறது?” என்று விசாரித்தான். 8 பின்பு தாவீது உரியாவை நோக்கி, “நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்” என்றான்.
அரசனின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். அரசனும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான். 9 ஆனால் உரியா தன் வீட்டிற்குப் போகவில்லை. வாசலுக்கு வெளியே அரசனின் பிற பணியாட்கள் செய்ததைப் போலவே அவனும் அங்குத் தூங்கினான். 10 காவலர்கள் தாவீதை நோக்கி, “உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்றனர்.
தாவீது உரியாவிடம், “நீ நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறாய் அல்லவா? ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான்.
11 உரியா தாவீதை நோக்கி, “பரிசுத்தப் பெட்டியும், இஸ்ரவேல் யூதாவின் வீரர்களும் கூடாரங்களில் தங்கியுள்ளனர். எனது ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவருடைய (தாவீதின்) அதிகாரிகளும் வெளியே முகாமிட்டுத் தங்கி இருக்கின்றனர். எனவே வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து மனைவியோடு உறவு கொள்வது எனக்கு முறையன்று” என்றான்.
12 தாவீது உரியாவிடம், “நீ இன்று இங்கே தங்கியிரு. நாளை உன்னைப் போருக்கு அனுப்புகிறேன்” என்றான்.
உரியா மறுநாள் காலைவரை எருசலேமில் தங்கியிருந்தான். 13 அப்போது தாவீது தன்னை வந்து பார்க்கும்படி உரியாவுக்குச் சொல்லியனுப்பினான். உரியா தாவீதுடன் உண்டு குடித்தான். தாவீது உரியாவைக் குடிபோதையில் மூழ்கும்படிச் செய்தான். அப்போதும் உரியா வீட்டிற்குப் போகவில்லை. பதிலாக அரசரின் பணியாட்களோடு வீட்டிற்கு வெளியே உரியா தூங்கச் சென்றான்.
தாவீது உரியாவின் மரணத்திற்கு திட்டமிடுகிறான்
14 மறுநாள், காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதை உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். 15 கடிதத்தில் தாவீது, “உரியாவைக் கடும் போர் நடக்கும் யுத்தமுனையில் தனித்து நிறுத்து. போரில் அவன் கொல்லப்படட்டும்” என்றான்.
16 யோவாப் பலசாலிகளான அம்மோனியர் இருக்கும் இடத்தைக் கவனித்தான். உரியாவை அங்கு அனுப்பினான். 17 ரப்பா நகரத்தின் ஆட்கள் யோவாபை எதிர்த்து போரிட வந்தனர். அப்போது தாவீதின் ஆட்களில் சிலர் கொல்லப்பட்டனர். ஏத்தியனாகிய உரியாவும் அவர்களில் ஒருவன்.
18 யுத்தத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்து யோவாப் ஒரு குறிப்பு எழுதி தாவீதுக்கு அனுப்பினான். 19 போரில் நடந்தவற்றை தாவீது அரசனுக்குச் சொல்லும்படி தூதுவர்களிடம் யோவாப் கூறினான். 20 “அரசன் கோபமடையக்கூடும், ‘யோவாபின் படை போரிடுவதற்கு நகரை மிகவும் நெருங்கியதேன்?’ என்று அரசன் கேட்கக் கூடும். அம்புகளை எய்யக்கூடிய ஆட்கள் நகர மதில்களில் அமர்ந்திருப்பார்கள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். 21 எருப்சேத்தின் மகனாகிய அபிமெலேக்கை ஒரு பெண் கொன்றாள் என்பதை அவன் நிச்சயமாக அறிவான். அது தேபேசில் நடந்தது. அப்பெண் நகர மதிலில் அமர்ந்திருந்து அரைக்கிற கல்லின் மேல்பாகத்தை அபிமெலேக்கின் மேல் எறிந்தாள். எனவே, ‘ஏன் யோவாப் மதிலுக்கு மிக அருகே சென்றான்?’ என்றும் கேட்கக் கூடும். தாவீது அரசன் இவ்வாறு கூறினால் அவனிடம் இச்செய்தியைக் கூறவேண்டும்: ‘உங்கள் அதிகாரிகளில் ஏத்தியனான உரியாவும் மரித்துவிட்டான்’” என்றான்.
22 செய்தியாளன் தாவீதிடம் சென்று யோவாப் கூறியவற்றையெல்லாம் சொன்னான். 23 அவன் தாவீதிடம், “அம்மோனியர் களத்தில் எங்களை எதிர்த்தார்கள். நாங்கள் போரிட்டு அவர்களை நகரவாயில் வரைக்கும் துரத்தினோம். 24 அப்போது நகரமதிலிலிருந்த ஆட்கள் உங்கள் அதிகாரிகள் மேல் அம்புகளை எய்தார்கள். உமது சில அதிகாரிகள் அதில் மரித்தனர். அவர்களில் ஏத்தியனாகிய உரியாவும் மரித்தான்” என்றான்.
25 தாவீது அத்தூதுவனிடம், “யோவாபுக்கு இச்செய்தியைத் தெரிவி: ‘இதைக் குறித்து மிகவும் கலங்காதே, ஒரு வாள் ஒருவனை மட்டுமல்ல, அடுத்தவனையும் கொல்லக் கூடும். ரப்பாவின் மீது தாக்குதலைப் பலப்படுத்து. நீ வெற்றி பெறுவாய்’ இந்த வார்த்தைகளால் யோவாபுக்கு உற்சாகமூட்டு” என்று சொல்லியனுப்பினான்.
தாவீது பத்சேபாளை மணந்துகொள்கிறான்
26 தனது கணவன் உரியா மரித்ததை பத்சேபாள் கேள்விப்பட்டாள். அவளது கணவனுக்காக அழுதாள், 27 அவளது துக்க காலம் முடிந்தபிறகு, தாவீது அவளைத் தனது வீட்டிற்கு அழைத்து வரும்படியாக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதின் மனைவியானாள். அவள் தாவீதுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆனால் தாவீது செய்த இந்த தீமையை கர்த்தர் விரும்பவில்லை.
தாவீதிடம் நாத்தான் பேசுகிறான்
12 கர்த்தர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம் சென்றான். நாத்தான், “ஒரு நகரத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. 2 செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன. 3 ஆனால், ஏழையிடம் அவன் வாங்கிய ஒரு (பெண்) ஆட்டுக்குட்டி மாத்திரம் இருந்தது. அது அந்த ஏழையோடும் அவனது பிள்ளைகளோடும் வளர்ந்து, உணவை உண்டது, ஏழையின் கோப்பையில் அது குடித்தது. ஏழையின் மார்பில் அது தூங்கிற்று. அந்த ஏழைக்கு அது ஒரு மகளைப் போல இருந்தது.
4 “அந்த வழியாய் வந்த ஒரு பயணி செல்வந்தனைச் சந்திப்பதற்காக இறங்கினான். செல்வந்தன் அவனுக்கு ஒரு விருந்து தர ஏற்பாடு செய்தான். அதற்கென்று அச்செல்வந்தன் தனது ஆடுமாடுகளில் எதையும் தொடாமல் ஏழையின் ஒரே ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதைக் கொன்று விருந்தாளிக்கு உணவாகச் சமைத்தான்” என்றான்.
5 தாவீது அச்செல்வந்தன் மீது கோபங்கொண்டான். அவன் நாத்தானை நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது நிச்சயமானால், அம்மனிதன் மரிக்க வேண்டும் என்பதும் நிச்சயம்! 6 அவன் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவன் இக்கொடிய தீமையைச் செய்தான். ஏனெனில் அவனிடம் இரக்க குணம் எள்ளளவும் இருக்கவில்லை” என்றான்.
நாத்தான் தாவீதிடம் அவன் பாவத்தை கூறுதல்
7 அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, “நீயே அந்த செல்வந்தன்! இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். 8 நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு அரசனாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். 9 ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய்? அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய்? உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். நீ, அம்மோனியரின் வாளால் ஏத்தியனாகிய உரியாவைக் கொன்றாய். இந்த விதமாக ஏத்தியானாகிய உரியாவை ஒரு வாளால் கொன்றாய். 10 எனவே வாள் உன் குடும்பத்தை விட்டு அகலாது. நீ ஏத்தியானாகிய உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டாய். இப்படி செய்ததினால் நீ என்னைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டினாய்’.
2008 by World Bible Translation Center