Bible in 90 Days
11 “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! 12 நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக [a] பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்’ என்றார்” என்றான்.
13 அப்போது தாவீது நாத்தனை நோக்கி, “நான் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தேன்” என்றான்.
நாத்தான் தாவீதை நோக்கி, “கர்த்தர் இந்த பாவத்தை மன்னிப்பார். நீ மரிக்கமாட்டாய். 14 ஆனால் நீ செய்த இந்த பாவத்தின் மூலம் கர்த்தருடைய எதிரிகளும் அவரை வெறுத்தொதுக்க நீ வழிவகுத்துவிட்டாய்! ஆதலால் உனக்குப் பிறக்கும் மகன் மரிப்பான்” என்றான்.
தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த மகனின் மரணம்
15 பின்பு நாத்தான் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த ஆண் குழந்தையை கர்த்தர் பெரும் நோய்க்குள்ளாக்கினார். 16 தாவீது தேவனிடம் குழந்தையின் பொருட்டு வேண்டினான். தாவீது உண்ணவோ, குடிக்கவோ மறுத்தான். வீட்டிற்குள் சென்று அங்கேயே இருந்தான். இரவு முழுவதும் தரையில் கிடந்தான்.
17 தாவீதின் குடும்பத்திலுள்ள மூப்பர்கள் வந்து தரையிலிருந்து அவனை எழுப்ப முயன்றனர். ஆனால் தாவீதோ எழுந்திருக்க மறுத்தான். அந்த மூப்பர்களுடன் அமர்ந்து உண்ண மறுத்தான். 18 ஏழாவது நாள், குழந்தை மரித்தது. தாவீதின் பணியாட்கள் குழந்தை மரித்த செய்தியை தாவீதிடம் சொல்லப் பயந்தனர். அவர்கள், “குழந்தை உயிரோடிருந்தபோது தாவீதோடு பேச முற்பட்டோம். ஆனால் அவர் நாங்கள் சொன்னதைக் கேட்க மறுத்தார். இப்போது குழந்தை மரித்ததென்று தாவீதிடம் சொன்னால், அவர் தனக்குத்தானே தீங்கு ஏதேனும் செய்துக்கொள்ளலாம்” என்றனர்.
19 ஆனால் தாவீது, அவனது பணியாட்கள் மெதுவான குரலில் பேசிக்கொள்வதைப் பார்த்தான். குழந்தை மரித்துப்போனதைப் புரிந்துக்கொண்டான். எனவே தாவீது பணியாட்களை நோக்கி, “குழந்தை மரித்துவிட்டதா?” என்று கேட்டான். பணியாட்கள், “ஆம், அவன் மரித்துப்போனான்” என்றனர்.
20 அப்போது தாவீது தரையிலிருந்து எழுந்து குளித்தான். பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டான். பின்னர் அவன் கர்த்தருடைய வீட்டிற்குள் தொழுதுகொள்ளச் சென்றான். அதன் பின் தன் வீட்டிற்குப் போய் உண்பதற்கு ஏதாவது வேண்டுமெனக் கேட்டான். அவனது வேலைக்காரர்கள் கொடுத்த உணவை உண்டான்.
21 தாவீதின் வேலையாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படிச் செய்கிறீர்? குழந்தை உயிருடன் இருந்தபோது உண்ண மறுத்து அழுதீர்? ஆனால் அது மரித்த பின்பு, எழுந்து புசித்தீரே?” என்று கேட்டனர்.
22 தாவீது, “குழந்தை உயிரோடிருந்தபோது, நான் உணவுண்ண மறுத்து அழுதேன். ஏனெனில், ‘யாருக்குத் தெரியும்? கர்த்தர் எனக்காக இரக்கங்கொண்டு குழந்தையின் உயிரை அனுமதிக்கக்கூடும்’ என நான் எண்ணினேன். 23 இப்போது குழந்தை மரித்துப்போனது, நான் உண்ண மறுத்து பயன் என்ன? அதனால் குழந்தையை உயிருடன் கொண்டுவர முடியுமா? முடியாது! ஒரு நாள் நானும் அவனிடம் செல்வேன், ஆனால் அவனோ என்னிடம் வரமுடியாது” என்றான்.
சாலொமோன் பிறப்பு
24 பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் கூறினான். அவன் அவளோடு பாலின உறவுக்கொண்டான். பத்சேபாள் மீண்டும் கருவுற்றாள். அவளுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறந்தது. தாவீது அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டான். கர்த்தர் சாலொமோனை நேசித்தார். 25 கர்த்தர், தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலமாக சொல்லியனுப்பி சாலொமோனுக்கு யெதிதியா என்று பெயரிட்டார். நாத்தான் கர்த்தருக்காக இதைச் செய்தான்.
தாவீது ரப்பாவைக் கைப்பற்றுகிறான்
26 ரப்பா அம்மோனியாவின் தலைநகரமாயிருந்தது. அம்மோனியரின் ரப்பாவுக்கு எதிராக யோவாப் போரிட்டான். அவன் அந்நகரைக் கைப்பற்றினான். 27 யோவாப் தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி, “நான் ரப்பாவுக்கு எதிராகப் போர் செய்தேன். நீர்நிலைகளின் நகரத்தை நான் கைப்பற்றினேன். 28 இப்போது பிறரையும் அழைத்து வந்து இந்நகரைத் (ரப்பாவை) தாக்குங்கள். நான் கைப்பற்றும் முன்பு இந்நகரைக் கைப்பற்றுங்கள். நான் இந்நகரைக் கைப்பற்றினால் அது என் பெயரால் அழைக்கப்படும்” என்று கூறினான்.
29 பின்பு தாவீது எல்லோரையும் அழைத்துக்கொண்டு ரப்பாவுக்குப் போனான். அவன் ரப்பாவுக்கு எதிராகப் போர்செய்து அந்நகரைக் கைப்பற்றினான். 30 அந்த அரசனின் தலையிலிருந்த கிரீடத்தை [b] தாவீது அகற்றினான். அக்கிரீடம் பொன்னாலானது. 75 பவுண்டு எடையுள்ளது. அக்கிரீடத்தில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அக்கீரிடத்தை தாவீதுக்கு சூட்டினார்கள். அந்நகரிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை தாவீது எடுத்துச் சென்றான்.
31 ரப்பாவின் ஜனங்களை தாவீதின் நகருக்கு வெளியே அழைத்துவந்தான். இரம்பம், கடப்பாரை, இரும்புக்கோடரி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வேலையை அவர்கள் செய்யும்படி தாவீது கூறினான். செங்கற்களால் கட்டிடம் கட்டும் வேலையைச் செய்யும்படியாகவும் தாவீது அவர்களை வற்புறுத்தினான். அம்மோனியரின் நகரங்கள் அனைத்திலும் தாவீது இதனையே செய்தான். பின்பு தாவீதும் அவனது படையினரும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.
அம்னோனும் தாமாரும்
13 தாவீதுக்கு அப்சலோம் என்னும் பெயருள்ள மகன் இருந்தான். அப்சலோமின் சகோதரியின் பெயர் தாமார் ஆகும். தாமார் மிகுந்த அழகுடையவள். தாவீதின் மற்றொரு மகனாகிய அம்னோன் 2 தாமாரை விரும்பினான். தாமார் ஒரு கன்னிகை. அவளுக்கு எந்தத் தீமையையும் விளைவிக்க அம்னோன் நினைக்கவில்லை. எனினும் அவன் அவளை அதிகமாக நேசித்தான். நோயுறுமளவிற்கு அம்னோன் அவள் நினைவானான்.
3 சிமியாவின் மகனாகிய யோனதாப் அம்னோனின் நெருங்கிய நண்பன். (சிமியா தாவீதின் சகோதரன்) யோனதாப் மிகவும் புத்திசாலி. 4 யோனதாப் அம்னோனை நோக்கி, “நாளுக்கு நாள் நீ மெலிந்துக்கொண்டே வருகிறாய். நீ அரசனின் மகன்! உனக்கு உண்பதற்கு ஏராளமான பொருட்கள் இருந்தும், நீ ஏன் எடை குறைந்து காணப்படுகிறாய்? சொல்!” என்றான்.
அம்னோன் யோனதாபை நோக்கி, “நான் தாமாரை மிகவும் விரும்புகிறேன். அவள் எனது ஒன்று-விட்ட-சகோதரன் அப்சலோமின் சகோதரி” என்றான்.
5 யோனதாப் அம்னோனை நோக்கி, “படுக்கைக்குப் போ. நோயுற்றவன் போல் நடி. உன் தந்தை உன்னைக் காணவருவார். அவரிடம், ‘எனது சகோதரியாகிய தாமார் வந்து எனக்கு உணவு தரட்டும். அவள் என் முன்னே உணவு சமைக்கட்டும். அப்போது அதை நான் பார்த்து அவள் கையால் புசிப்பேன்’ என்று சொல்” என்றான்.
6 அவ்வாறே அம்னோன் படுக்கையில் படுத்து நோயுற்றவன்போல் நடித்தான். தாவீது அரசன் அம்னோனைப் பார்க்க வந்தான். அம்னோன் தாவீது அரசனிடம், “தயவு செய்து எனது சகோதரி தாமாரை உள்ளே வரச்செல்லுங்கள். அவள் என் முன்னே எனக்காக இரண்டு அப்பங்கள் சுட்டுதரட்டும். அப்போது அவள் கையால் ஊட்ட அவற்றை புசிப்பேன்” என்றான்.
7 தாவீது தாமாரின் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். செய்தி சொல்ல வந்த ஆட்கள் தாமாரிடம், “உனது சகோதரன் அம்னோன் வீட்டிற்குச் சென்று அவனுக்காக கொஞ்சம் உணவைத் தயாரித்துக் கொடு” என்றார்கள்.
தாமார் அம்னோனுக்காக உணவு தயாரித்தல்
8 எனவே தாமார் தன் சகோதரனாகிய அம்னோனின் வீட்டிற்குச் சென்றாள். அம்னோன் படுக்கையில் இருந்தான். தாமார் மாவை எடுத்து தன் கைகளால் பிசைந்து, அப்பங்களைச் சுட்டாள். அம்னோன் எதிரிலேயே இதனைச் செய்தாள். 9 சமையல் பாத்திரத்திலிருந்து அவற்றை எடுத்து, அம்னோன் உண்பதற்காகப் பரிமாறினாள். ஆனால் அம்னோன் சாப்பிட மறுத்தான். அம்னோன் தன் வேலையாட்களை நோக்கி, “இங்கிருந்து போங்கள், என்னைத் தனிமையில் இருக்கவிடுங்கள்!” என்றான். எனவே எல்லா வேலையாட்களும் அறையை விட்டு வெளியே சென்றனர்.
அம்னோன் தாமாரைக் கற்பழித்தல்
10 அப்போது அம்னோன் தாமாரிடம், “உணவைப் படுக்கையறைக்குள் கொண்டு வந்து உனது கைகளால் எனக்கு உணவூட்டு” என்றான்.
எனவே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரனின் படுக்கையறைக்குள் சென்றாள். 11 அவள் அம்னோனுக்கு அவ்வுணவைக் கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ அவளை கையைப் பிடித்திழுத்து அவளிடம், “சகோதரியே, நீ என்னோடு சேர்ந்து படுத்துக்கொள்” என்றான்.
12 தாமார் அம்னோனிடம், “சகோதரனே, வேண்டாம்! அவ்வாறு செய்ய என்னை வற்புறுத்தாதே! அவமானமான இக்காரியத்தைச் செய்யாதே! இஸ்ரவேலில் இந்த கொடிய காரியம் நடக்கக்கூடாது! 13 நான் எனக்கு நேரும் அவமானத்திலிருந்து ஒருபோதும் மீளமுடியாது. நீ ஒரு பயங்கர குற்றவாளி என்று ஜனங்கள் கவனிப்பார்கள். தயவுசெய்து, அரசனோடு பேசு. என்னை நீ மணம் செய்துக்கொள்ள அவர் அனுமதியளிப்பார்” என்றாள்.
14 ஆனால் அம்னோன், தாமார் சொன்னதைக் கேட்க மறுத்தான். அவன் தாமாரைக் காட்டிலும் பலசாலி. அம்னோன் தாமாரை பாலின உறவுகொள்ளும்படி கட்டாயப்படுத்தி அவளை பலவந்தமாய் கற்பழித்தான். 15 பின்பு அம்னோன் தாமாரை வெறுக்க ஆரம்பித்தான். அவளை முன்பு விரும்பினதற்கு அதிகமாக அவளை வெறுக்க ஆரம்பித்தான். அம்னோன் தாமாரை நோக்கி, “எழுந்து இங்கிருந்து போ!” என்றான்.
16 தாமார் அம்னோனிடம், “இப்படி என்னை அனுப்பிவிடாதே. முன்பு நிகழ்ந்ததைக் காட்டிலும் அது தீமையானதாக இருக்கும்” என்றாள்.
ஆனால் அம்னோன், தாமார் சொல்வதைக் கேட்க மறுத்தான். 17 அம்னோன் தன் வேலையாளை அழைத்து, “இப்பெண்ணை இந்த அறைக்கு வெளியே கொண்டு செல்லுங்கள். பின்பு அவளுக்குப் பிறகு கதவை தாழ்ப்பாளிடுங்கள்” என்றான்.
18 அவ்வாறே அம்னோனின் வேலைக்காரன் தாமாரை அறைக்கு வெளியே நடத்தி, கதவைத் தாழிட்டான்.
தாமார் பலநிறங்களுள்ள ஒரு நீண்ட அங்கி அணிந்திருந்தாள். அரசனின் கன்னிப் பெண்கள் (மகள்கள்) இத்தகைய நீண்ட பலவர்ண அங்கி அணிவது வழக்கமாக இருந்தது. 19 தாமார் பலவர்ண அங்கியைக் கிழித்துக்கொண்டு, தலையின் மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டாள். பின் அவள் தனது கையைத் தலையில் வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
20 அப்போது தாமாரின் சகோதரன் அப்சலோம் அவளை நோக்கி, “நீ உனது சகோதரன் அம்னோனிடம் சென்றாயா? அவன் உன்னைத் துன்புறுத்தினானா? அமைதியாக இரு, அம்னோன் உனது சகோதரன். நாங்கள் இது குறித்து கவனித்துக்கொள்வோம். அதிகமாக உன் மனதை வருத்தாதே” என்றான். தாமார் எதுவும் சொல்லவில்லை. அவள் அமைதியாக அப்சலோமின் வீட்டில் தங்கும்படி சென்றாள்.
21 தாவீது அரசன் இச்செய்தியைக் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபப்பட்டான். 22 அப்சலோம் அம்னோனை வெறுத்தான். அப்சலோம் அம்னோனிடம் நல்லதோ கெட்டதோ ஒரு வார்த்தையும் பேசவில்லை, தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்ததால், அப்சலோம் அம்னோனை வெறுத்தான்.
அப்சலோம் பழிவாங்குதல்
23 இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அப்சலோமின் ஆடுகளிலிருந்து உரோமத்தைக் கத்தரிக்க பாகால்சோரிலிருந்து சிலரை வரவழைத்தான். அதைப் பார்ப்பதற்கென்று அரசனின் எல்லாப் பிள்ளைகளையும் அப்சலோம் அழைத்தான். 24 அப்சலோம் அரசனிடம் போய், “எனது ஆடுகளின் மயிரைக் கத்தரிக்க சிலர் வந்துள்ளனர். உங்கள் வேலையாட்களோடும் வந்து அதைப் பாருங்கள்” என்றான்.
25 தாவீது அரசன் அப்சலோமிடம், “இல்லை மகனே, நாங்கள் எல்லோரும் வரமாட்டோம். உனக்கு அதிகம் தொல்லையாக இருக்கும்” என்றான்.
தாவீதை வரும்படி அப்சலோம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் தாவீது வரவில்லை, ஆனாலும் தன் ஆசிகளை அவனுக்கு வழங்கினான்.
26 அப்சலோம், “நீங்கள் வர விரும்பாவிட்டால் எனது சகோதரன் அம்னோனை என்னோடு அனுப்புங்கள்” என்றான்.
தாவீது அரசன் அப்சலோமிடம், “அவன் ஏன் உன்னோடு வரவேண்டும்?” என்று கேட்டான்.
27 அப்சலோம் தாவீதை கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தான். எனவே இறுதியாக, அம்னோனும், அரசனின் மற்ற மகன்களும் அப்சலோமோடு சென்றனர்.
அம்னோன் கொலைச் செய்யப்படுகிறான்
28 பின்பு, அப்சலோம் தன் வேலையாட்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான். “அம்னோனை கவனித்துக்கொண்டிருங்கள். அவன் குடிக்க ஆரம்பித்து திராட்சைரசப் போதையில் ஆழ்ந்திருக்கும்போது, நான் உங்களுக்குக் கட்டளையிடுவேன். நீங்கள் அம்னோனைத் தாக்கி அவனைக் கொல்லுங்கள். தண்டனை நேரும் என்று அஞ்சாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எனது கட்டளைக்குப் பணிகிறீர்கள். இப்போது, துணிவும் வீரமும் உடையவர்களாய் இருங்கள்” என்றான்.
29 ஆகையால் அப்சலோமின் இளம் வீரர்கள் அவன் கூறியபடியே செய்தார்கள். அவர்கள் அம்னோனைக் கொன்றார்கள். ஆனால் தாவீதின் பிற மகன்கள் தப்பிப் பிழைத்தார்கள். ஒவ்வொரு மகனும் தன் கோவேறு கழுதையின் மேலேறித் தப்பிச் சென்றான்.
தாவீதுக்கு அம்னோனின் மரணச் செய்தி
30 அரசனின் மகன்கள் தங்கள் நகரத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ந்தவற்றைப் பற்றிய செய்தியை தாவீது அரசன் முந்திக் கேள்விப்பட்டான். ஆனால் அவனறிந்தச் செய்தி, “அரசனின் எல்லா மகன்களையும் அப்சலோம் கொன்றுவிட்டான். ஒருவன் கூட உயிரோடு விடப்படவில்லை” என்பதாகும்.
31 தாவீது அரசன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தரையில் கிடந்தான். அவனருகே நின்றுக்கொண்டிருந்த அதிகாரிகளும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர்.
32 ஆனால் தாவீதின் சகோதரனும், சிமியாவின் மகனுமாகிய யோனதாப், “அரசனின் எல்லா மகன்களும் கொல்லப்பட்டார்கள் என்று நினைக்கவேண்டாம்! அம்னோன் மட்டுமே மரித்தான். அப்சலோமின் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்ததிலிருந்து அப்சலோம் இதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். 33 எனது ஆண்டவனாகிய அரசரே, உங்கள் எல்லா மகன்களும் மரித்துவிட்டனர் என்று நினைக்கவேண்டாம். அம்னோன் மட்டுமே மரித்தான்” என்றான்.
34 அப்சலோம் ஓடிப்போய்விட்டான். நகரகோட்டைச் சுவரின் மீது ஒரு காவலாள் நின்றுக்கொண்டிருந்தான். மலை மேட்டிலிருந்து பலர் வந்துக்கொண்டிருப்பதை அவன் கவனித்தான். 35 எனவே யோனதாப் தாவீது அரசனை நோக்கி, “பாருங்கள், நான் சொன்னது சரியே! அரசனின் மகன்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.
36 யோனதாப் அவ்வாறு கூறி முடித்ததும், அரசனின் மகன்கள் வந்து சேந்தனர். அவர்கள் சத்தமாக அழுதுக்கொண்டிருந்தனர். தாவீதும் அவனது அதிகாரிகளும் அழ ஆரம்பித்தனர். அவர்கள் மிகவும் புலம்பி அழுதனர். 37 தாவீது தனது மகனுக்காக (அம்னோனுக்காக) தினசரி அழுதான்.
அப்சலோம் கேசூருக்குத் தப்பிச் செல்லுதல்
அப்சலோம் அம்மியூதின் மகனாகிய தல்மாய் என்னும் கேசூரின் அரசனிடம் ஓடிப் போனான். 38 அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போன பிறகு, அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். 39 தாவீது அரசன் அம்னோனின் மரணத்திற்குப் பின், ஆறுதல் பெற்றான். ஆனால் அப்சலோமின் பிரிவு அவனை மிகவும் வாட்டியது.
யோவாப் புத்திசாலியான ஒரு பெண்ணை தாவீதிடம் அனுப்புகிறான்
14 தாவீது அரசன் அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் மகனாகிய யோவாப் அறிந்தான். 2 எனவே, யோவாப் சிலரைத் தெக்கோவாவிற்கு அனுப்பி, அங்கிருந்து புத்திசாலியான ஒரு பெண்ணை அழைத்து வருமாறு கூறினான். யோவாப் அந்தப் பெண்ணிடம், “மிகவும் துக்கமாயிருக்கிறவளைப்போல் காண்பித்துக்கொள். துக்கத்திற்கு அறிகுறியான ஆடைகளை அணிந்துக்கொள். நல்ல ஆடைகளை அணியாதே. மரித்த ஒருவருக்காக பல நாட்கள் வருந்துகிற ஒருவளைப் போல் நடி. 3 அரசனிடம் போய் நான் உனக்குச் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்திப் பேசு” என்றான். பின்பு யோவாப் அப்பெண்ணுக்கு அவள் கூற வேண்டியவற்றைச் சொல்லிக்கொடுத்தான்.
4 பின்பு தெக்கோவாவைச் சேர்ந்த அப்பெண் அரசனிடம் பேசினாள். அவள் தரையில் விழுந்து முகம் நிலத்தைத் தொடும்படி வணங்கினாள். அவள் குனிந்து, “அரசே, எனக்கு உதவுங்கள்!” என்றாள்.
5 தாவீது அரசன் அவளிடம், “உனக்கு நேர்ந்த பிரச்சனை என்ன?” என்று கேட்டான்.
அப்பெண், “நான் ஒரு விதவை எனது கணவன் மரித்துப்போனான். 6 எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் களத்தில் போரிட்டனர். ஒருவரும் அவர்கள் சண்டையைச் சென்று நிறுத்தவில்லை. ஒருவன் மற்றவனைக் கொன்றுவிட்டான். 7 இப்போது எனது குடும்பத்தார் எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி, ‘சகோதரனைக் கொன்ற உனது மகனை அழைத்து வா, நாங்கள் அவனைக் கொல்லவேண்டும். ஏனெனில் அவன் தனது சகோதரனைக் கொன்றிருக்கிறான்’ என்றனர். எனது மகன் நெருப்பில் மீந்திருக்கும் கடைசி கரிநெருப்பைப் போன்றவன். அவன் மரித்தால் எங்கள் குடும்ப விளக்கு அணைந்துவிடும். தந்தையின் சொத்தை சுதந்தரிக்கும்படி பிழைத்திருக்கும் ஒரே மகன் அவனே. அவன் மரித்தால் மரித்துப்போன எனது கணவனின் சொத்துக்கள் வேறொருவருக்குச் சொந்தமாகும். அவனது பெயரும் தேசத்தில் இல்லாதபடி அழிந்துப்போகும்” என்றாள்.
8 அப்போது அரசன் அப்பெண்ணை நோக்கி, “வீட்டிற்குப் போ. நான் உன் காரியங்களைக் கவனிப்பேன்” என்றான்.
9 தெக்கோவாவின் பெண் அரசனை நோக்கி, “பழி என் மீது இருக்கட்டும். எனது ஆண்டவனாகிய அரசனே! நீர் குற்றமற்றவர் உமது சிங்காசனமும் குற்றமற்றது” என்றாள்.
10 தாவீது அரசன், “யாரேனும் உன் மீது தீயவற்றைக் கூறினால் அவனை என்னிடம் அழைத்து வா. அவன் உன்னை மீண்டும் தொல்லைப்படுத்தமாட்டான்” என்றான்.
11 அந்தப் பெண், “தயவு செய்து, உமது தேவனாகிய கர்த்தருடைய பெயரால் ஆணையிட்டு நீங்கள் அந்த ஜனங்களைத் தடுப்பதாக எனக்கு வாக்களியுங்கள். தனது சகோதரனைக் கொலைச் செய்ததற்காக அவர்கள் எனது மகனைத் தண்டிக்க விரும்புகிறார்கள். அவர்கள் என் மகனை அழிக்காதபடி நீர் பாதுகாப்பீராக எனக்கு வாக்கு கொடும்” என்றாள்.
தாவீது, “கர்த்தர் உயிரோடிருப்பது போலவே, யாரும் உன் மகனைத் தாக்கமாட்டார்கள். உன் மகனின் தலையிலிருந்து ஒரு முடிகூட நிலத்தில் விழாது” என்றான்.
12 அப்பெண், “எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து நான் வேறு சிலவற்றை உம்மிடம் பேச அனுமதியும்” என்றாள்.
அரசன், “சொல்” என்றான்.
13 அப்போது அப்பெண், “தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் இவ்வாறு திட்டமிடுகிறீர்? இவ்வாறு சொல்லும்போது நீரே குற்றவாளியென்பதைக் காட்டிவிடுகிறீர். ஏனெனில் உமது வீட்டிலிருந்து போகும்படி செய்த உமது மகனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துவரவில்லை. 14 நாம் எல்லோரும் ஒரு நாள் மரிப்போம். நாம் நிலத்தில் சிந்திய தண்ணீரைப் போன்றவர்கள். யாரும் அத்தண்ணீரை நிலத்திலிருந்து மீண்டும் சேகரிக்க முடியாது. தேவன் மக்களை மன்னிப்பாரென்று உமக்குத் தெரியும். பாதுகாப்பான இடத்திற்கு விரட்டப்பட்ட ஜனங்களுக்காக தேவன் திட்டம் வகுத்திருக்கிறார். தேவன் தம்மிடமிருந்து ஓடிப் போகும்படி அவர்களை வற்புறுத்தமாட்டார். 15 எனது ஆண்டவராகிய அரசனே, நான் இவ்வார்த்தைகளை உம்மிடம் கூற வந்தேன். ஏனெனில் ஜனங்கள் என்னைப் பயமுறுத்தினர். நான் எனக்குள் சொல்லியதாவது, ‘நான் அரசனிடம் பேசுவேன். அரசன் ஒருவேளை எனக்கு உதவலாம். 16 அரசன் நான் சொல்வதைக் கேட்டு, என்னையும் எனது மகனையும் கொல்ல விரும்பும் மனிதனிடமிருந்து காப்பாற்றுவார். அம்மனிதன் தேவன் எங்களுக்குக் கொடுத்த பொருட்களைப் பெறாதபடி செய்கிறான்.’ 17 எனது அரசனாகிய ஆண்டவனின் வார்த்தைகள் எனக்கு ஆறுதலளிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நீங்கள் தேவனிடமிருந்து வந்த தூதனைப் போன்றவர். நல்லது எது, கெட்டது எது என்பது உமக்குத் தெரியும். தேவனாகிய கர்த்தர் உம்மோடு இருக்கிறார்” என்றாள்.
18 தாவீது அரசன் அந்த பெண்ணிற்கு உத்தரவாக, “நான் கேட்கவிருக்கும் கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டும்” என்றான். அப்பெண், “எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து உங்கள் வினாவை சொல்லுங்கள்” என்றாள்.
19 அரசன், “இவற்றையெல்லாம் சொல்வதற்கு யோவாப் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
அப்பெண் பதிலாக, “எனது அரசனாகிய ஆண்டவனே, நீங்கள் உயிரோடிருக்குமளவிற்கு நீங்கள் சரியானவர்! உங்கள் அதிகாரியாகிய யோவாப் என்னிடம் இவற்றையெல்லாம் கூறும்படிச் சொன்னார். 20 நடந்த காரியங்களை நீர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்காக யோவாப் இவற்றைச் செய்தார். என் ஆண்டவனே, நீர் தேவதூதனைப் போன்ற ஞானம் உள்ளவர்! உமக்கு இப்பூமியில் நடப்பவையெல்லாம் தெரியும்” என்றாள்.
அப்சலோம் எருசலேம் திரும்புதல்
21 அரசன் யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.
22 யோவாப் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் தாவீது அரசனை வாழ்த்தியபடியே, “நீங்கள் என்னிடம் கருணைக் காட்டுகிறீர்கள் என்பதை இன்று அறிகிறேன். நான் கேட்டதை நீர் நிறைவேற்றுகிறபடியால் அதை நான் அறிகிறேன்” என்றான்.
23 பின்பு யோவாப் எழுந்து கேசூருக்குப் போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான். 24 ஆனால் தாவீது அரசன், “அப்சலோம் தனது வீட்டிற்குப் போகலாம். ஆனால் அவன் என்னைப் பார்க்க வரமுடியாது” என்றான். எனவே அப்சலோம் தனது வீட்டிற்குப் போனான். அப்சலோம் அரசனைப் பார்க்கபோக முடியவில்லை.
25 அப்சலோமின் அழகைக்கண்ட ஜனங்கள் வியந்தனர். இஸ்ரவேலில் ஒருவனும் அப்சலோமைப்போல் அழகுடையவனாக இருக்கவில்லை. தலையிலிருந்து பாதம்வரைக்கும், அவனது உடம்பில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது. 26 ஒவ்வோராண்டின் இறுதியிலும் அப்சலோம் தனது தலையைச் சிரைத்துக்கொண்டான். அவன் சிரைத்தப் பின் தலைமயிரை எடுத்து, நிறுத்துப்பார்த்தான். அது 5 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. 27 அப்சலோமுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இம்மகளின் பெயர் தாமார். தாமார் ஒரு அழகிய பெண்மணி.
யோவாபுக்கு அப்சலோம் தன்னை வந்து பார்க்குமாறு வற்புறுத்தல்
28 அப்சலோம் இரண்டு ஆண்டுகள் வரை தாவீது அரசனைப் பார்க்க அனுமதியின்றி எருசலேமில் வாழ்ந்தான். 29 அப்சலோம் யோவாபிடம் ஆட்களை அனுப்பினான். அவர்கள் யோவாபிடம் அப்சலோமை அரசனிடம் அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் யோவாப் அப்சலோமிடம் வரவில்லை. இரண்டாவது முறையும் அப்சலோம் ஒரு செய்தியை அனுப்பினான். ஆனால் யோவாப் இம்முறையும் மறுத்தான்.
30 அப்போது அப்சலோம் தனது வேலையாட்களிடம், “பாருங்கள், யோவாபின் வயல் எனது வயலுக்கு அருகிலுள்ளது. அவனது வயலில் பார்லியைப் பயிரிட்டிருக்கிறான். போய் அந்த பார்லி பயிரை எரித்துவிடுங்கள்” என்றான்.
எனவே அப்சலோமின் வேலையாட்கள் போய் யோவாபின் வயலுக்கு நெருப்புமூட்டினர். 31 யோவாப் புறப்பட்டு அப்சலோமின் வீட்டிற்கு வந்தான். யோவாப் அப்சலோமிடம், “உன் வேலையாட்கள் எதற்காக என் வயலைக் கொளுத்தினர்?” என்று கேட்டான்.
32 அப்சலோம் யோவாபிடம், “நான் உனக்குச் செய்தி சொல்லியனுப்பினேன். நான் உன்னை இங்கு வருமாறு அழைத்தேன். உன்னை அரசனிடம் அனுப்ப விரும்பினேன். கேசூரிலிருந்து என்னை இங்கு ஏன் வரவழைத்தார் என்று எனக்காக நீ அவரைக் கேட்க வேண்டும். நான் அவரை நேரில் பார்க்கமுடியாது, எனவே நான் கேசூரில் தங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போது நான் போய் அரசனைக் காணவிடுங்கள். நான் பாவம் செய்திருந்தால் அவர் என்னைக் கொல்லட்டும்!” என்றான்.
அப்சலோம் தாவீது அரசனை சந்தித்தல்
33 பின்பு யோவாப் அரசனிடம் வந்து அப்சலோமின் வார்த்தைகளைக் கூறினான். அரசன் அப்சலோமை வரவழைத்தான். அப்போது அப்சலோம் அரசனிடம் வந்தான். அப்சலோம் அரசனுக்கு முன்பு தரையில் விழுந்து வணங்கினான். அரசன் அப்சலோமை முத்தமிட்டான்.
அப்சலோம் பல நண்பர்களை கூட்டுதல்
15 இதற்குப் பின்பு அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும் தனக்காக பெற்றுக்கொண்டான். அவன் தேரைச் செலுத்தும்போது அவனுக்கு முன்னே ஓடுவதற்கு 50 ஆட்கள் இருந்தனர். 2 அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாசலருகே [c] நின்று, நியாயத்திற்காக தாவீது அரசனிடம் செல்லும் ஆட்களைக் கவனிப்பான். பின்பு அவர்களோடு பேசி, “எந்த நகரத்திலிருந்து வருகிறாய்?” என்பான். அம்மனிதன், “நான் இஸ்ரவேலின் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுவான். 3 அப்சலோம் அம்மனிதனிடம், “பாரும், நீ சொல்வது சரியே. ஆனால் தாவீது அரசன் நீ சொல்வதைக் கேட்கமாட்டார்” என்பான்.
4 அப்சலோம் மேலும், “யாராகிலும் என்னை இந்நாட்டின் நீதிபதியாக நியமித்தால் சிக்கலோடு வருகிற ஒவ்வொரு மனிதனுக்கும் நான் உதவக் கூடும். அவனுக்குத் தக்க தீர்ப்பு கிடைப்பதற்கு நான் உதவுவேன்” என்பான்.
5 எவனாகிலும் அப்சலோமிடம் வந்து அவனை வணங்கியதும் அப்சலோம் அவனை நெருங்கிய நண்பனாக எண்ணி நடத்துவான். அப்சலோம் கையை நீட்டி, அவனைத் தொட்டு, முத்தமிடுவான். 6 தாவீது அரசனிடம் நீதி வேண்டி வந்த எல்லா இஸ்ரவேலருக்கும் அவ்வாறே செய்தான். அதனால் இஸ்ரவேலருடைய இருதயங்களைக் கவர்ந்துக்கொண்டான்.
தாவீதின் அரசைப் பெற அப்சலோம் திட்டம்
7 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு [d] அப்சலோம், அரசன் தாவீதிடம், “எப்ரோனில் கர்த்தருக்கு நான் கொடுத்த விசேஷ வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு போகிறேன். 8 ஆராமிலுள்ள கேசூரில் வாழ்ந்து கொண்டிருக்கையில் அந்த வாக்குறுதியை நான் செய்தேன்: ‘என்னை கர்த்தர் எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவந்தால் நான் கர்த்தருக்கு சேவைச் செய்வேன்’ என்றேன்” என்றான்.
9 தாவீது அரசன், “சமாதானமாகப் போ” என்றான்.
அப்சலோம் எப்ரோனுக்குப் போனான். 10 ஆனால் அப்சலோம் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்கள் மூலமாகவும் உளவாளிகளை அனுப்பினான். இந்த உளவாளிகள் ஜனங்களிடம், “நீங்கள் எக்காளம் முழங்கியதும், ‘அப்சலோம் எப்ரோனின் அரசன் ஆனான்’ என்று கூறுங்கள்!” என்றான்.
11 அப்சலோம் தன்னோடு வர 200 பேரை அழைத்தான். அவர்கள் எருசலேமிலிருந்து அவனோடு புறப்பட்டனர். ஆனால் அப்சலோமின் திட்டத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 12 அகித்தோப்பேல் தாவீதுக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவன். அவன் கீலோ என்னும் ஊரைச் சேர்ந்தவன். அப்சலோம் பலிகளைச் செலுத்தும் போது அகித்தோப்பேலை நகரத்திலிருந்து (கீலோவிலிருந்து) வருமாறு கூறினான். அப்சலோமின் திட்டங்கள் சரிவர நிறைவேறிக்கொண்டிருந்தன. ஜனங்களில் பலர் அவனுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.
அப்சலோமின் திட்டங்களை தாவீது அறிகிறான்
13 ஒரு மனிதன் தாவீதிடம் அச்செய்தியைச் சொல்ல வந்தான். அவன், “இஸ்ரவேல் ஜனங்கள் அப்சலோமைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றான்.
14 அப்போது தாவீது எருசலேமில் தன்னோடிருந்த அதிகாரிகளை நோக்கி, “நாம் தப்பித்து விட வேண்டும். நாம் தப்பிக்காவிட்டால் அப்சலோம் நம்மை விட்டுவிடமாட்டான். அப்சலோம் நம்மைப் பிடிக்கும் முன்னர் விரைவாய் செயல்படுவோம். அவன் நம் எல்லோரையும் அழிப்பான், அவன் எருசலேம் ஜனங்களை அழிப்பான்” என்றான்.
15 அரசனின் அதிகாரிகள் அவனை நோக்கி, “நீங்கள் சொல்கின்றபடியே நாங்கள் செய்வோம்” என்றார்கள்.
தாவீதும் அவன் ஆட்களும் தப்பித்தனர்
16 தாவீது தன் வீட்டிலிருந்த எல்லோரோடும் வெளியேறினான். தன் பத்து மனைவியரையும் வீட்டைக் கவனித்துக்கொள்வதற்கு விட்டுச் சென்றான். 17 எல்லா ஜனங்களும் பின் தொடர்ந்து வர அரசன் வெளியேறினான். கடைசி வீட்டினருகே சற்று நின்றார்கள். 18 தன் அதிகாரிகள் எல்லோரும் அரசன் அருகே நடந்தனர். கிரேத்தியர், பிலேத்தியர், கித்தியர், (காத்திலிருந்து வந்த 600 பேர்) எல்லோரும் அருகே நடந்தார்கள்.
19 அப்போது அரசன் கித்தியனாகிய ஈத்தாயிடம், “நீ ஏன் எங்களோடு வந்துக் கொண்டிருக்கிறாய்? திரும்பிச் சென்று புதிய அரசனோடு (அப்சலோமோடு) தங்கியிரு. நீ ஒரு அந்நியன். இது உன் சொந்த தேசம் அல்ல. 20 நேற்றுதான் நீ என்னோடு சேர்வதற்கு வந்தாய். நான் எங்கே செல்கிறேன் என்று தெரியாதபொழுது, உன்னையும் அலைந்து திரிய என்னோடு அழைத்துச் செல்லவேண்டுமா? வேண்டாம். திரும்பிப் போ. உனது சகோதரர்களையும் உன்னோடு அழைத்துச் செல். உனக்கு இரக்கமும் உண்மையும் காட்டப்படட்டும்” என்றான்.
21 ஆனால் ஈத்தாய் அரசனுக்குப் பதிலாக, “கர்த்தர் உயிரோடிருப்பதைப்போல நீங்கள் வாழும் காலம் வரைக்கும் நான் உங்களோடு இருப்பேன். வாழ்விலும், மரணத்திலும் நான் உங்களோடு இருப்பேன்!” என்றான்.
22 தாவீது ஈத்தாயை பார்த்து, “வா, நாம் கீதரோன் ஆற்றைக் கடக்கலாம்” என்றான்.
எனவே காத் நகரிலிருந்து வந்த ஈத்தாயும் அவனுடைய எல்லா ஜனங்களும் அவர்களுடைய குழந்தைகளும் கீதரோன் ஆற்றைக் கடந்தார்கள். 23 எல்லா ஜனங்களும் சத்தமாய் அழுதார்கள். தாவீது அரசனும் கீதரோன் ஆற்றைக் கடந்தான். ஜனங்கள் பாலைவனத்திற்குச் சென்றார்கள். 24 சாதோக்கும் லேவியரும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து சென்றார்கள். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கீழே வைத்தார்கள். எருசலேமை விட்டு எல்லா ஜனங்களும் வெளியேறும் வரைக்கும் அபியத்தார் ஜெபம் செய்துக் கொண்டிருந்தான்.
25 தாவீது அரசன் சாதோக்கிடம், “தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குத் திரும்பவும் கொண்டு போ. கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டினால் என்னைத் திரும்பவும் வரவழைத்துக்கொள்வார். கர்த்தர் எருசலேமையும் அவருடைய ஆலயத்தையும் பார்ப்பதற்கு எனக்கு உதவுவார். 26 கர்த்தர் என்னிடம் கருணை காட்டவில்லை என்பாராயின், அவர் விரும்புகிற எதையும் எனக்குச் செய்யட்டும்” என்றான்.
27 அரசன் ஆசாரியனாகிய சாதோக்கைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி அல்லவா? நகரத்திற்குச் சமாதானத்தோடு திரும்பிப் போ. உன் மகனாகிய அகிமாசையும் அபியத்தாரின் மகன் யோனத்தானையும் உன்னோடு அழைத்துப் போ. 28 ஜனங்கள் பாலைவனத்திற்குள் கடந்து செல்லும் இடங்களில் நான் காத்திருப்பேன். உங்களிடமிருந்து செய்தி எனக்குக் கிடைக்கும் வரைக்கும் நான் காத்திருப்பேன்” என்றான்.
29 எனவே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பரிசுத்த பெட்டியை எருசலேமுக்கு எடுத்துச் சென்று அங்கே தங்கினார்கள்.
அகித்தோப்பேலுக்கு எதிராக தாவீதின் ஜெபம்
30 தாவீது ஒலிவமலைக்குப் போனான். அழுதுக் கொண்டிருந்தான். அவன் தலையை மூடிக்கொண்டு, கால்களில் மிதியடி இல்லாமல் நடந்தான். தாவீதோடிருந்த எல்லா ஜனங்களும் அவர்களுடைய தலைகளை மூடிக்கொண்டனர். அவர்கள் அழுதபடியே, தாவீதோடு சென்றனர்.
31 ஒருவன் தாவீதிடம், “அப்சலோமோடு திட்டமிட்டவர்களில் அகித்தோப்பேலும் ஒருவன்” என்றான். அப்போது தாவீது, “கர்த்தாவே நீர் அகித்தோப்பேலின் உபதேசம் பயனற்றவையாக இருக்கும்படி செய்யும்” என்று ஜெபம் செய்தான். 32 தாவீது மலையின் உச்சிக்கு வந்தான். இங்கு அவன் அடிக்கடி தேவனை தொழுதுகொள்ள வந்திருக்கின்றான். அப்போது அற்கியனாகிய ஊசாய் அவனிடம் வந்தான். அவன் அங்கி கிழிந்திருந்தது. தலையில் புழுதி இருந்தது.
33 தாவீது ஊசாய்க்கு, “நீ என்னோடு வந்தால் எனக்குப் பாரமாவாய். 34 ஆனால் நீ எருசலேமுக்குத் திரும்பிப் போனால் அகித்தோப்பேலின் அறிவுரை பயனற்றுப் போகும்படி நீ செய்யலாம். அப்சலோமிடம், ‘அரசனே, நான் உங்கள் பணியாள். நான் உங்கள் தந்தைக்கு சேவை செய்தேன். இப்போது உங்களுக்கு சேவை செய்வேன்’ என்று கூறு. 35 ஆசாரியர்களான சாதோக்கும், அபியத்தாரும் உன்னோடு இருப்பார்கள். நீ அரண்மனையில் கேட்கும் செய்திகளை அவர்களிடம் சொல்லவேண்டும். 36 சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் அவர்களோடிருப்பார்கள். அவர்கள் மூலமாக உனக்குத் தெரியவரும் செய்திகளை எனக்கு அனுப்பு” என்றான்.
37 தாவீதின் நண்பனாகிய ஊசாய் நகரத்திற்குப் போனான். அப்சலோம் எருசலேமுக்கு வந்தான்.
சீபா தாவீதைச் சந்திக்கிறான்
16 தாவீது ஒலிவமலை உச்சியின் மேல் கொஞ்சதூரம் நடந்துப்போனான். அங்கு மேவிபோசேத்தின் பணியாளாகிய சீபா தாவீதைச் சந்தித்தான். சீபாவிடம் சேணம் கட்டப்பட்ட இரண்டு கழுதைகள் இருந்தன. கழுதைகள் 200 ரொட்டிகளையும், 100 குலைகள் உலர்ந்த திராட்சைகளையும், 100 கோடைக்காலக் கனிகளையும் ஒரு துருத்தி திராட்சைரத்தையும் சுமந்து வந்தன. 2 தாவீது அரசன் சீபாவைப் பார்த்து, “இவைகளெல்லாம் எதற்கு?” என்று கேட்டான்.
சீபா பதிலாக, “இந்தக் கழுதைகள் அரசனின் குடும்பத்தினர் செல்வதற்காகவும் ரொட்டியும் பழங்களும் அதிகாரிகளின் உணவிற்காகவும், திராட்சைரசம் பாலைவனத்தில் நடந்து செல்வோர் சோர்வுறும் போது குடிப்பதற்காகவும் பயன்படும்” என்றான்.
3 அரசன், “மேவிபோசேத் எங்கே?” என்று கேட்டான்.
சீபா அரசனிடம், “மேவிபோசேத் எருசலேமில் இருக்கிறான் ஏனென்றால் அவன் ‘இன்று என் பாட்டனாரின் அரசை இஸ்ரவலர்கள் எனக்குத் திருப்பிக் கொடுப்பார்கள் என நினைக்கிறான்’” என்று கூறினான்.
4 பின்னர் அரசன் சீபாவிடம், “சரி மேவிபோசேத்திற்கு உரியவற்றையெல்லாம் இப்போது நான் உனக்குத் தருகிறேன்” என்றான்.
சீபா, “நான் உங்களை வணங்குகிறேன். நான் எப்போதுமே உங்கள் தயை பெறுவேன் எனக் கருதுகிறேன்” என்றான்.
சீமேயி தாவீதை சபிக்கிறான்
5 தாவீது பகூரிமுக்கு வந்தான். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் ஒருவன் பகூரிமுலிருந்து அங்கு வந்தான். இம்மனிதன் கேராவின் மகனாகிய சீமேயி. சீமேயி தாவீதிடம் தீயவற்றைப் பேசியவனாக வந்தான். அவன் மீண்டும் மீண்டும் தீயனவற்றையே பேசினான்.
6 தாவீதின் மீதும் அவனது அதிகாரிகள் மீதும் சீமேயி கற்களை வீச ஆரம்பித்தான். ஆனால் மக்களும் வீரர்களும் தாவீதைச் சூழ்ந்து நின்று அவனைக் காத்தனர். 7 சீமேயி தாவீதை சபித்தான். அவன், “கொலைகாரனே! வெளியே போ. வெளியே போ. 8 கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார். ஏனெனில், நீ சவுலின் குடும்பத்தாரைக் கொலைச் செய்தாய். நீ சவுலின் இடத்தில் அரசனாக அமர்ந்தாய். ஆனால் இப்போது கர்த்தர் அரசாட்சியை உனது மகனான அப்சலோமுக்குக் கொடுத்துள்ளார். இப்போது அதே தீமைகள் உனக்கு நேர்கின்றன. ஏனெனில் நீ ஒரு கொலைக்காரன்” என்றான்.
9 செருயாவின் மகனாகிய அபிசாய் அரசனை நோக்கி, “எனது அரசனாகிய ஆண்டவரே, ஏன் இந்த மரித்த நாய் உம்மை சபிக்க வேண்டும்? நான் சீமேயியின் தலையை வெட்டப் போகிறேன்” என்றான்.
10 அதற்கு அரசன், “நான் என்ன செய்ய முடியும், செருயாவின் ஜனங்களே? சீமேயி என்னை சபிக்கிறான். ஆனால் அவன் என்னை சபிக்குமாறு அவனிடம் கர்த்தர் கூறியுள்ளார்” என்றான். 11 தாவீது அபிசாயிடமும் அவனது பணியாட்களிடமும், “இங்கே பாருங்கள், என் சொந்த மகனான அப்சலோம் என்னைக் கொல்ல முயல்கிறான். சீமேயி என்ற பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன் என்னைக் கொல்ல அதிக உரிமையுடைவன். அவன் அதைச் செய்யட்டும். அவன் தீய வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். கர்த்தர் அவ்வாறு செய்ய அவனிடம் கூறியுள்ளார். 12 ஒரு வேளை கர்த்தர் தீய காரியங்கள் எனக்கு நேரிடுவதைப் பார்ப்பார். பின்பு கர்த்தர் சீமேயி சொல்லும் தீய காரியங்கள் ஒவ்வொன்றிற்கும் பதிலாக நல்லதைச் செய்யலாம்” என்றான்.
13 இவ்வாறு தாவீதும் அவனுடைய ஆட்களும் பாதையில் தொடர்ந்து நடந்துச் சென்றனர். ஆனால் சீமேயி தாவீதைப் பின் தொடர்ந்தான். மலையோரமுள்ள மறுபுறத்துப் பாதையில் சிமேயி நடந்தான். சீமேயி தீயவற்றைச் சொல்லிக்கொண்டே நடந்தான். சீமேயி கற்களையும் அழுக்கையுங்கூட தாவீதின் மீது எறிந்தான்.
14 தாவீது அரசனும் அவனது ஆட்களும் பகூரிம்முக்கு வந்தனர். அரசனும் அவனது ஆட்களும் சோர்வுற்றிருந்தனர். ஆகையால் பகூரிமில் ஓய்வெடுத்தனர்.
15 அப்சலோம், அகித்தோப்பேல் மற்றும் இஸ்ரவேலர் அனைவரும் எருசலேமுக்கு வந்தனர். 16 தாவீதின் நண்பனாகிய அற்கியனாகிய ஊசாய் அப்சலோமிடம் வந்தான். ஊசாய் அப்சலோமிடம், “அரசரே! நீண்டகாலம் வாழ்க” என்றான்.
17 அப்சலோம் பதிலாக, “நீ உன் நண்பனான தாவீதுக்கு உண்மையாக இருக்கவில்லையா? எருசலேமைவிட்டு உன் நண்பனோடு ஏன் போகவில்லை?” என்று கூறினான்.
18 அதற்கு ஊசாய், “கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ஆளைச் சார்ந்தவன் நான். இந்த ஜனங்களும் இஸ்ரவேலரும் உம்மைத் தேர்ந்தெடுத்தனர். நான் உம்மோடு தங்குவேன். 19 முன்பு நான் உமது தந்தைக்குப் பணியாற்றியிருக்கிறேன். ஆகவே இப்போது நான் தாவீதின் மகனுக்குப் பணிசெய்யவேண்டும். எனவே உமக்குப் பணி செய்வேன்” என்றான்.
அப்சலோம் அகித்தோப்பேலிடம் அறிவுரை கேட்கிறான்
20 அப்சலோம் அகித்தோப்பேலிடம், “நாம் இப்போது என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான்.
21 அகித்தோப்பேல் அப்சலோமிடம், “உங்கள் தந்தையார் அவரது மனைவியரில் சிலரை இங்கிருக்கும் வீட்டைக் கவனிக்க விட்டிருந்தார். போய், அவர்களோடு பாலின உறவுக்கொள்ளுங்கள். பின்பு எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை உங்களை வெறுப்பதை அறிவார்கள். உங்கள் ஜனங்கள் உங்களுக்கு அதிகமான ஆதரவு காட்ட ஊக்கமடைவார்கள்” என்றான்.
22 பின்பு அவர்கள் அப்சலோமிற்காக வீட்டின் மாடியின் மீது ஒரு கூடாரத்தை அமைத்தனர். அப்சலோம் தன் தந்தையின் மனைவியரோடு பாலின உறவுக்கொண்டான். இஸ்ரவேலர் அதனைப் பார்த்தனர். 23 அந்நேரத்தில் அகித்தோப்பேலின் உபதேசம் தாவீதுக்கும், அப்சலோமுக்கும் மிக முக்கியமானதாக இருந்தது. தேவன் மனிதனுக்குச் சொன்ன வாக்கைப்போன்று முக்கியமானதாக இருந்தது.
தாவீதைக் குறித்த அகித்தோப்பேலின் அறிவுரை
17 அகிதோப்பேல் மேலும் அப்சலோமிடம், “நான் இப்போது 12,000 ஆட்களைத் தேர்ந்தெடுப்பேன். இன்றிரவு தாவீதை நான் துரத்துவேன். 2 அவன் தளர்ந்து சோர்வுற்றிருக்கும்போது அவனைப் பிடிப்பேன். நான் அவனைக் கலக்கமடையச் செய்வேன். அவனது ஆட்கள் ஓடிவிடுவார்கள். ஆனால் தாவீது அரசனை மட்டும் கொல்வேன். 3 பின்பு ஜனங்களையெல்லாம் உங்களிடம் அழைத்து வருவேன். தாவீது மரித்துவிட்டால், எல்லா ஜனங்களும் சமாதானத்தோடு திரும்புவார்கள்” என்றான்.
4 இத்திட்டம் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் தலைவர்களுக்கும் நல்லதெனப்பட்டது. 5 ஆனால் அப்சலோம், “அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிடுங்கள். அவன் கூறுவதைக் கேட்கவேண்டும்” என்றான்.
அகித்தோப்பேலின் அறிவுரையை ஊசாய் பாழாக்குகிறான்
6 ஊசாய் அப்சலோமிடம் வந்தான். அப்சலோம் ஊசாயிடம், “இதுதான் அகித்தோப்பேல் வகுத்தளித்த திட்டம். நாம் இதைப் பின்பற்ற வேண்டுமா? இல்லையெனில் சொல்லும்” என்றான்.
7 ஊசாய் அப்சலோமிடம், “இம்முறை அகிப்தோப்பேலின் அறிவுரை சரியாக இல்லை” என்றான். 8 மேலும் ஊசாய், “உன் தந்தையும் அவரது ஆட்களும் வலியவர்கள் என்பது உனக்குத் தெரியும், தன் குட்டிகளைக் களவு கொடுத்த கரடிகள் போல் அவர்கள் கோபங்கொண்டிருக்கிறார்கள். உன் தந்தை பயிற்சிப் பெற்ற வீரர். அவர் ஜனங்களோடு இரவில் தங்கமாட்டார். 9 அவர் ஒருவேளை குகையிலோ, வேறெங்கோ ஒளிந்திருக்க வேண்டும். அவர் முதலில் உன் ஆட்களைத் தாக்கினால், ஜனங்கள் அச்செய்தியை அறிவார்கள். அவர்கள், ‘அப்சலோமின் ஆட்கள் தோற்கிறார்கள்’ என்று நினைப்பார்கள். 10 பின்பு சிங்கம் போல் தைரியம்கொண்ட ஆட்களும் பயப்படுவார்கள். ஏனென்றால் எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை சிறந்த வீரர் என்றும், அவரது ஆட்கள் தைரியமானவர்கள் என்றும் அறிவார்கள்.
11 “இதுவே நான் சொல்ல விரும்புவதாகும்: நீ தாண் முதல் பெயெர்செபா மட்டும் உள்ள இஸ்ரவேலரை ஒன்று திரட்ட வேண்டும். அப்போது கடலின் மணலைப் போல் பலர் இருப்பார்கள். பின்பு நீ போருக்குச் செல்லவேண்டும். 12 நாம் தாவீதை அவர் ஒளிந்திருக்குமிடத்திலிருந்து பிடிக்கலாம். பனித்துளி நிலத்தில் விழுவதுபோல், நாம் தாவீதின் மீது விழுந்து பிடிக்கலாம். தாவீதையும் அவரது ஆட்களையும் கொல்லலாம். யாரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். 13 ஒருவேளை நகரத்திற்குள் தாவீது தப்பிச் சென்றால் எல்லா இஸ்ரவேலரும் அங்குக் கயிறுகளைக் கொண்டுவருவர். நகரத்தின் மதில்களை தகர்ப்போம். நகரம் பள்ளத்தாக்காக மாறும்படி செய்வர். ஒரு கல்கூட முன்பு போல் நகரத்தில் இராது” என்றான்.
14 அப்சலோமும் இஸ்ரவேலர் எல்லோரும், “அற்கியனாகிய ஊசாயின் அறிவுரை அகித்தோப்பேலுடையதைக் காட்டிலும் சிறந்தது” என்றனர். இது கர்த்தருடைய திட்டமானதால் அவர்கள் அவ்வாறு கூறினார்கள். அகித்தோப்பேலின் நல்ல அறிவுரை பயனற்றுப்போகும்படி கர்த்தர் திட்டமிட்டார். அப்சலோமை கர்த்தர் இவ்வாறு தண்டிப்பார்.
தாவீதுக்கு ஊசாய் ஒரு எச்சரிக்கை அனுப்புகிறான்
15 இவ்விஷயங்களையெல்லாம் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஊசாய் கூறினான். அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேல் தலைவர்களுக்கும் கூறிய காரியங்களை அவன் அவர்களுக்குத் தெரிவித்தான். சாதோக்குக்கும், அபியத்தாருக்கும் ஊசாய் தான் கூறிய ஆலோசனை பற்றிய செய்தியையும் தெரிவித்தான். ஊசாய், 16 “விரையுங்கள்! தாவீதுக்குச் செய்தி அனுப்புங்கள். இன்றிரவில் ஜனங்கள் பாலைவனத்திற்குக் கடந்து செல்லுமிடங்களில் தங்கவேண்டாமெனக் கூறுங்கள். ஆனால் உடனே யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நதியைக் கடந்துவிட்டால் அரசனும் அவனுடைய ஜனங்களும் பிடிபடமாட்டார்கள்” என்று கூறினான்.
17 ஆசாரியர்களின் மகன்களாகிய யோனத்தானும் அகிமாசும், இன்றோகேல் என்னுமிடத்தில் காத்திருந்தார்கள். ஊருக்குள் போவதைப் பிறர் காணவேண்டாமென விரும்பினார்கள், எனவே ஒரு வேலைக்காரப் பெண்மணி அவர்களிடம் வந்தாள். அவள் அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்தாள். பின்பு யோனத்தானும் அகிமாசும் அரசன் தாவீதிடம் சென்று இவ்விஷயங்களைப்பற்றித் தெரிவித்தனர்.
18 ஆனால் ஒரு சிறுவன் யோனத்தானையும் அகிமாசையும் பார்த்துவிட்டான். அவன் அதைச் சொல்வதற்கு அப்சலோமிடம் ஓடினான். யோனத்தானும் அகிமாசும் விரைவாக ஓடிவிட்டார்கள். அவர்கள் பகூரிமில் உள்ள ஒரு மனிதனின் வீட்டை அடைந்தனர். அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. யோனத்தானும் அகிமாசும் கிணற்றினுள் இறங்கினார்கள். 19 அம்மனிதனின் மனைவி ஒரு விரிப்பை எடுத்துக் கிணற்றின் மீது விரித்தாள். பின்பு அவள் அதன் மீது தானியங்களைப் பரப்பினாள். தானியத்தைக் குவித்து வைத்திருந்தாற்போல் அக்கிணறு காணப்பட்டது. யாரும் யோனத்தனும் அகிமாசும் அங்கு ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. 20 அப்சலோமின் பணியாட்கள் வீட்டிலிருந்த பெண்ணிடம் வந்தார்கள். அவர்கள், “யோனத்தானும் அகிமாசும் எங்கே?” என்று கேட்டார்கள்.
அப்பெண் அப்சலோமின் வேலையாட்களிடம், அவர்கள் ஏற்கெனவே நதியைக் கடந்துவிட்டார்கள் என்று கூறினாள்.
அப்சலோமின் வேலைக்காரர்கள் பின்பு யோனத்தானையும் அகிமாசையும் தேடினர், ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அப்சலோமின் வேலைக்காரர்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
21 அப்சலோமின் வேலைக்காரர்கள் போன பிறகு, யோனத்தானும் அகிமாசும் கிணற்றிற்கு வெளியே வந்தார்கள். அவர்கள் போய் தாவீது அரசனிடம் சொன்னார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “விரைந்து நதியைக் கடந்து போய்விடுங்கள். அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக இந்த காரியங்களைத் திட்டமிட்டுள்ளான்” என்றார்கள்.
22 அப்போது தாவீதும் அவனோடிருந்த எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்தார்கள். சூரியன் தோன்றும் முன்னர் தாவீதின் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்துவிட்டிருந்தனர்.
அகித்தோப்பேல் தற்கொலை செய்துக்கொள்கிறான்
23 இஸ்ரவேலர் தனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அகித்தோப்பேல் கண்டான். அகித்தோப்பேல் கழுதையின் மேல் சுமைகளை ஏற்றிக்கொண்டான். அவன் நகரத்திலிருந்த தன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் குடும்பக் காரியங்களை ஒழுங்குப்படுத்தி, தூக்கு போட்டுக்கொண்டான். அகித்தோப்பேல் மரித்தபிறகு, ஜனங்கள் அவனை அவனது தந்தையின் கல்லறைக்குள் புதைத்தார்கள்.
அப்சலோம் யோர்தான் நதியைக் கடக்கிறான்
24 தாவீது மக்னாயீமை வந்தடைந்தார்.
அப்சலோமும் இஸ்ரவேலரும் யோர்தான் நதியைக் கடந்தனர். 25 அப்சலோம் அமாசாவைப் படைக்குத் தலைவனாக்கினான். அமாசா யோவாபின் பதவியை வகித்தான். அமாசா இஸ்மவேலனாகிய எத்திராவின் மகன். செருயாவின் சகோதரியாகிய நாகாசின் மகளாகிய அபிகாயில் அமாசாவின் தாய். (செருயா யோவாபின் தாய்)
26 கீலேயாத் தேசத்தில் அப்சலோமும் இஸ்ரவேலரும் பாளயமிறங்கினார்கள்.
சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர்
27 தாவீது மக்னாயீமை வந்தடைந்தார். அந்த இடத்தில் சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர் இருந்தனர். (அம்மோனியரின் ஊராகிய ரப்பாவைச் சார்ந்தவன் சோபி நாகாசின் மகன் லோதேபாரிலிருந்து அம்மியேலின் மகனாகிய மாகீர் வந்தான். கீலேயாத்திலுள்ள ரோகிலிமிலிருந்து வந்தவன் பர்சிலா) 28-29 அவர்கள், “பாலைவனத்தில் ஜனங்கள் சோர்வோடும், பசியோடும், தாகத்தோடும் இருக்கிறார்கள்” என்றார்கள். தாவீதும் அவரின் ஜனங்களும் உண்பதற்காகவும் குடிப்பதற்காகவும் அவர்கள் பல பொருட்களைக் கொண்டு வந்தார்கள். படுக்கைகள், குவளைகள், மண்பாண்டங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் கோதுமை, பார்லி, மாவு, வறுத்த தானியங்கள், பெரும்பயிறு, சிறும் பயிறு, உலர்ந்த கொட்டைகள், தேன், வெண்ணெய், ஆடுகள், பால்கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார்கள்.
தாவீது போருக்குத் தயாராகிறான்
18 தாவீது தன் ஆட்களை எண்ணிப் பார்த்தான். 1,000 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் 100 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் ஜனங்களை வழி நடத்துவோரை நியமித்தான். 2 ஜனங்களை மூன்று பிரிவினராகப் பிரித்தான். பின்பு ஜனங்களை வெளியே அனுப்பினான். மூன்றில் ஒரு பகுதி ஜனங்களை யோவாப் வழி நடத்தினான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினரை செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாய் வழி நடத்தினான். காத்திலிருந்து வந்த ஈத்தாயி மூன்றாவது பிரிவு ஜனங்களை வழி நடத்தினான்.
தாவீது அரசன் ஜனங்களிடம், “நானும் உங்களோடு வருவேன்” என்று கூறினான்.
3 ஆனால் ஜனங்கள், “இல்லை, நீங்கள் எங்களோடு வரக்கூடாது. ஏனெனில் நாங்கள் (யுத்தத்தில்) ஓடிவிட்டால் அப்சலோமின் ஆட்கள் பொருட்படுத்தமாட்டார்கள். நம்மில் பாதி பேர் கொல்லப்பட்டாலும் அப்சலோமின் ஆட்கள் கவலைப்படமாட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களில் 10,000 பேருக்கு ஒப்பானவர்கள்! நீங்கள் நகரத்தில் தங்கியருப்பதே நல்லது. பின்பு எங்களுக்கு உதவி தேவையானால், நீங்கள் எங்களுக்கு உதவ முடியும்” என்றார்கள்.
4 அரசன் ஜனங்களை நோக்கி, “நீங்கள் சிறந்ததென முடிவெடுக்கும் காரியத்தையே நான் செய்வேன்” என்றான்.
பின்பு அரசன் வாயிலருகே வந்து நின்றான். படை வெளியே சென்றது. அவர்கள் 100 பேராக மற்றும் 1,000 பேராக அணிவகுத்துச் சென்றனர்.
“அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்!”
5 யோவாப், அபிசாயி, ஈத்தாய் ஆகியோருக்கு அரசன் ஒரு கட்டளையிட்டான். அவன், “இதை எனக்காகச் செய்யுங்கள் அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்” என்றான்.
ஜனங்கள் எல்லாரும் அப்சலோமைக் குறித்து படைத் தலைவர்களுக்கு அரசன் இட்ட கட்டளையைக் கேட்டார்கள்.
தாவீதின் படை அப்சலோமின் படையைத் தோற்கடிக்கிறது
6 அப்சலோமின் இஸ்ரவேலருடைய படையைத் தாவீதின் படை களத்தில் சந்தித்தது. அவர்கள் எப்பிராயீமின் காட்டில் சண்டையிட்டனர். 7 தாவீதின் படை இஸ்ரவேலரைத் தோற்கடித்தது. அன்றைக்கு 20,000 ஆட்கள் கொல்லப்பட்டனர். 8 அப்போர் தேசமெங்கும் பரவியது. அன்றைக்கு வாளால் மரித்தோரைக்காட்டிலும் காட்டில் மரித்தவர்களே அதிக எண்ணிகையில் இருந்தனர்.
9 அப்சலோம் தாவீதின் அதிகாரிகளைச் சந்திக்க நேர்ந்தது. அப்சலோம் தனது கோவேறு கழுதையின் மேலேறிக்கொண்டு, தப்பித்துச்செல்ல முயன்றான். ஒரு பெரிய கர்வாலி மரத்தின் கீழே அந்தக் கோவேறு கழுதைச் சென்றது. அதன் கிளைகள் அடர்த்தியாக இருந்தன. அப்சலோமின் தலை மரத்தில் அகப்பட்டுக்கொண்டது, அவன் ஏறி வந்த கோவேறு கழுதை ஓடிவிட்டதால், அப்சலோம் நிலத்திற்கு மேலாகத் [e] தொங்கிக்கொண்டிருந்தான்.
10 ஒரு மனிதன் நிகழ்ந்தது அனைத்தையும் பார்த்தான். அவன் யோவாபிடம், “ஓர் கர்வாலி மரத்தில் அப்சலோம் தொங்கிக்கொண்டிருப்பதை நான் கண்டேன்” என்றான்.
11 யோவாப் அம்மனிதனை நோக்கி, “ஏன் அவனைக் கொன்று நிலத்தில் விழும்படியாகச் செய்யவில்லை? நான் உனக்கு ஒரு கச்சையையும் 10 வெள்ளிக் காசையும் கொடுத்திருப்பேன்!” என்றான்.
12 அம்மனிதன் யோவாபை நோக்கி, “நீங்கள் எனக்கு 1,000 வெள்ளிக்காசைக் கொடுத்தாலும் நான் அரசனின் மகனைக் காயப்படுத்த முயலமாட்டேன். ஏனெனில் உங்களுக்கும், அபிசாயிக்கும், ஈத்தாயிக்கும் அரசன் இட்ட கட்டளையை நாங்கள் கேட்டோம். அரசன், ‘இளைய அப்சலோமைக் காயப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றான். 13 நான் அப்சலோமைக் கொன்றால் அரசன் கண்டு பிடித்துவிடுவான். அப்போது நீங்களே என்னைத் தண்டிப்பீர்கள்” என்றான்.
14 யோவாப், “நான் உன்னோடு இங்குப் பொழுதை வீணாக்கமாட்டேன்!” என்றான்.
அப்சலோம் உயிரோடு இன்னும் ஓக் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். யோவாப் மூன்று ஈட்டிகளை எடுத்தான். அவற்றை அப்சலோமை நோக்கி எறிந்தான். அவை அப்சலோமின் இருதயத்தை துளைத்தன. 15 யோவாபுக்கு யுத்தத்தில் உதவிய பத்து இளம் வீரர்கள் இருந்தனர். அந்த பத்து பேரும் அப்சலோமைச் சூழ்ந்து நின்று அவனைக் கொன்றனர்.
16 யோவாப் எக்காளம் ஊதி அப்சலோமின் இஸ்ரவேலரைத் துரத்துவதை நிறுத்துமாறு அறிவித்தான். 17 பின்பு அப்சலோமின் உடலை யோவாபின் ஆட்கள் எடுத்துக் காட்டிலிருந்த ஒரு பெரிய குழியில் இட்டனர். அக்குழியைப் பெரிய கற்களால் மூடினார்கள்.
அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் ஓடிப்போய், தங்கள் வீடுகளை அடைந்தனர்.
18 அப்சலோம் உயிரோடிருந்தபோது அரசனின் பள்ளதாக்கில் ஒரு தூணை நிறுவினான். அப்சலோம், “எனது பெயரை நிலைநிறுத்துவதற்கு எனக்கு மகன் இல்லை” என்றான். எனவே அத்தூணுக்கு தனது பெயரிட்டான். அத்தூண் இன்றைக்கும் “அப்சலோமின் ஞாபகச் சின்னம்” என்று அழைக்கப்படுகிறது.
யோவாப் தாவீதுக்கு செய்தியனுப்புகிறான்
19 சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை நோக்கி, “நான் ஓடிப்போய் தாவீது அரசனுக்குச் செய்தியைத் தெரிவிப்பேன். அவருக்காக பகைவனை கர்த்தர் தாமே அழித்தார் என்று சொல்வேன்” என்றான்.
20 யோவாப் அகிமாசிடம், “வேண்டாம், நீ இன்று தாவீதுக்குச் செய்தியைச் சொல்ல வேண்டாம். இன்றல்ல, இன்னொரு நாள் செய்தியைக் கொண்டு போகலாம். ஏனெனில், அரசனின் மகன் மரித்துவிட்டான்” என்றான்.
21 பின்பு யோவாப் கூஷியை நோக்கி, “நீ பார்த்த காரியங்களை அரசனிடம் போய்ச் சொல்” என்றான்.
கூஷியன் யோவாபை வணங்கினான். பின்பு அவன் தாவீதுக்குச் சொல்ல ஓடினான்.
22 ஆனால் சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை மீண்டும் வேண்டியவனாய், “எது நடந்தாலும் பரவாயில்லை. கூஷியன் பின்னால் ஓட என்னை அனுமதியுங்கள்!” என்றான்.
யோவாப், “மகனே, ஏன் நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டும் என நினைக்கிறாய்? நீ கூறப்போகும் செய்திக்கு எந்தப் பரிசையும் பெறமாட்டாய்” என்றான்.
23 அகிமாஸ் பதிலாக, “எது நடந்தாலும் பரவாயில்லை, நான் ஓடுவேன்” என்றான்.
யோவாப் அகிமாசிடம், “ஓடு!” என்றான்.
அப்போது அகிமாஸ் யோர்தான் பள்ளதாக்கு வழியாக ஓடினான். அவன் கூஷியனை முந்திவிட்டான்.
தாவீது செய்தியை அறிகிறான்
24 நகர வாயில்கள் இரண்டிற்கும் நடுவே தாவீது உட்கார்ந்திருந்தான். வாயில் மதிலின் கூரையில் காவலன் போய் நின்றான். ஒரு மனிதன் தனித்து ஓடிவருகிறதைக் காவலன் கண்டான். 25 காவலன் தாவீது அரசனிடம் உரக்கச் சொன்னான்.
தாவீது அரசன், “அம்மனிதன் தனித்து வந்தால் அவன் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.
அம்மனிதன் அருகே வந்துக்கொண்டிருந்தான். 26 காவலன் மற்றொரு மனிதனும் ஓடி வருவதைக் கண்டான். காவலன் வாயிற் காப்போனிடம், “பார்! மற்றொருவனும் தனியாக ஓடிவருகிறான்!” என்றான்.
அரசன், “அவனும் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.
27 காவலன், “சாதோக்கின் மகன் அகிமாசைப் போல் முதல் மனிதன் ஓடிவருகிறான்” என்றான்.
அரசன், “அகிமாஸ் நல்ல மனிதன். அவன் நற்செய்தியைக் கொண்டு வரக்கூடும்” என்றான்.
28 அகிமாஸ் அரசனிடம், “எல்லாம் நல்லபடி நடந்தது!” என்றான். அகிமாஸ் அரசனை வணங்கினான். அவனது முகம் நிலத்திற்கு அருகில் வந்தது. அகிமாஸ், “உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்! எனது அரசனாகிய ஆண்டவனே, உங்களுக்கு எதிரான ஆட்களை கர்த்தர் தோற்கடித்தார்” என்றான்.
29 அரசன், “இளம் அப்சலோம் நலமா?” என்று கேட்டான்.
அகிமாஸ் பதிலாக, “யோவாப் என்னை அனுப்பியபோது பெரிய சந்தடியிருந்தது. அது என்னதென்று எனக்குத் தெரியாது” என்றான்.
30 அப்போது அரசன், “இங்கே வந்து நின்று காத்திரு” என்றான். அகிமாசும் தள்ளிப்போய் நின்றான்.
31 கூஷியன் வந்தான். அவன், “எனது ஆண்டவனாகிய அரசனுக்குச் செய்தி இது. உங்களுக்கு எதிரான ஜனங்களை கர்த்தர் இன்று தண்டித்தார்!” என்றான்.
32 அரசன் கூஷியனை நோக்கி, “இளம் அப்சலோம் நலமா?” என்றான்.
கூஷியன் பதிலாக, “உங்களுக்கு எதிராக வரும் பகைவர்களும் ஜனங்களும் இந்த இளம் மனிதனைப் (அப்சலோமைப்) போல தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்றான்.
33 அப்போது அப்சலோம் மரித்துவிட்டான் என்பதை அரசன் அறிந்தான். அரசன் நிலை குலைந்தான். நகரவாயிலின் மேலிருந்த அறைக்கு அவன் சென்றான். அங்கே அவன் அழுதான். போகும்போது, “எனது மகன் அப்சலோமே, என் மகன் அப்சலோமே! நான் உனக்காக மரித்திருக்கலாம் என விரும்புகிறேன். என் மகனே, என் மகனே!” என்றான்.
யோவாப் தாவீதைக் கடிந்துக் கொள்கின்றான்
19 ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, “பாருங்கள் அரசர் அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்” என்றார்கள். 2 அன்றைய போரில் தாவீதின் படை வெற்றி பெற்றது, ஆனால் அந்த நாள் எல்லோருக்கும் துக்க நாளாக அமைந்தது. “அரசன் தனது மகனுக்காக அதிக துக்கமடைந்துள்ளான்” என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டதால் அது மிகுந்த துக்க நாள் ஆயிற்று.
3 ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள். 4 அரசன் முகத்தை மூடிக் கொண்டிருந்தான். “எனது மகன் அப்சலோமே, ஓ அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான்.
5 அரசனின் அரண்மனைக்குள் யோவாப் வந்தான். யோவாப் அரசனைப் பார்த்து, “உங்கள் ஒவ்வொரு அதிகாரிகளையும் நீங்கள் புண்படுத்துகிறீர்கள். பாருங்கள் அந்த அதிகாரிகள் இன்று உங்கள் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உங்கள் மகன்கள், மகள்கள், மனைவிகள், வேலைக்காரிகள் ஆகியோரின் உயிர்களையும் காப்பாற்றினார்கள். 6 உங்களைப் பகைக்கிறவர்களை நீர் நேசிக்கிறீர். உங்களை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். உங்கள் அதிகாரிகளும் உங்கள் வீரர்களும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று வெளிப்படுத்திவிட்டீர்கள். அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தால் நீர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது! 7 இப்போது எழுந்து போய் உங்கள் அதிகாரிகளிடம் பேசுங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்! இப்போதே எழுந்து நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று கர்த்தர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நீங்கள் குழந்தையாயிருந்ததிலிருந்து அனுபவித்த எல்லா துன்பங்களையும்விட அது தீமையானதாக இருக்கும்” என்றான்.
8 அப்போது அரசன் நகரவாயிலுக்குச் சென்றான். அரசன் வாயிலருகே வந்துள்ளான் என்ற செய்தி பரவியது. எனவே எல்லோரும் அரசனைக் காண வந்தனர். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் வீடுகளுக்கு ஓடிப்போய் விட்டனர்.
தாவீது மீண்டும் அரசனாகுதல்
9 எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்த ஜனங்களும் விவாதிக்கக் தொடங்கினார்கள். அவர்கள், “பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவரிடமிருந்தும் தாவீது அரசர் நம்மைக் காப்பாற்றினார். தாவீது, அப்சலோமிடமிருந்து ஓடிப்போனார். 10 நம்மை ஆள்வதற்கு அப்சலோமைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் அவன் போரில் மரித்துப் போனான். நாம் தாவீதை மீண்டும் அரசனாக்க வேண்டும்” என்றார்கள்.
11 தாவீது அரசன் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் செய்தியனுப்பினர். தாவீது, “யூதாவின் தலைவர்களிடம் பேசுங்கள். அவர்களிடம் கூறுங்கள், ‘தாவீதை தன் வீட்டிற்கு அழைத்து வரும் கடைசி கோத்திரமாக நீங்கள் இருப்பதேன்? பாருங்கள், இஸ்ரவேலர் எல்லோரும் அரசனை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 12 நீங்கள் எனது சகோதரர்கள், நீங்கள் என் குடும்பம். அவ்வாறிருக்கையில் அரசனை வீட்டிற்குத் திரும்ப அழைப்பதற்கு நீங்கள் கடைசி கோத்திரமாக இருப்பதேன்?’ என்று சொல்லுங்கள். 13 அமாசாவிடம், ‘நீங்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியினர். யோவாபின் இடத்தில் உங்களைப் படை தலைவன் ஆக்காவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
14 தாவீது யூதாவின் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டான், அவர்கள் ஒரே மனிதனைப்போன்று அவன் கூறியதற்குச் சம்மதித்தனர். யூதா ஜனங்கள் அரசனுக்குச் செய்தியனுப்பினார்கள். அவர்கள், “நீங்களும் உங்கள் அதிகாரிகளும் திரும்பி வாருங்கள்” என்றனர்.
15 பின்பு தாவீது அரசன் யோர்தான் நதிக்கு வந்தான். யூதா ஜனங்கள் அரசனைக் காண கில்காலுக்கு வந்தனர். அரசனை யோர்தான் நதியைத் தாண்டி அழைத்துச் செல்வதற்காக அவர்கள் அங்கு வந்தனர்.
சீமேயி தாவீதிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான்
16 கேராவின் மகனாகிய சீமேயி பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் பகூரிமில் வாழ்ந்தான். தாவீது அரசனைச் சந்திப்பதற்குச் சீமேயி விரைந்தான். யூதாவின் ஜனங்களோடு சீமேயி வந்தான். 17 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த 1,000 ஆட்களும் சீமேயியோடு வந்தனர். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த சீபா என்னும் பணியாளும் வந்தான். சீபா தன் 15 மகன்களையும் 20 பணியாட்களையும் தன்னோடு அழைத்து வந்தான். தாவீது அரசனைச் சந்திப்பதற்கு இவர்கள் எல்லோரும் யோர்தான் நதிக்கு விரைந்தனர்.
18 அரசனின் குடும்பத்தை மீண்டும் யூதாவுக்கு அழைத்து வருவதில் உதவுவதற்காக ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அரசன் விரும்பியவாறே ஜனங்கள் செயல்பட்டனர். அரசன் நதியைக் கடந்துகொண்டிருக்கும்போது, கேராவின் மகனாகிய சீமேயி அவனைச் சந்திப்பதற்கு வந்தான். அரசனுக்கு முன் சீமேயி தரையில் விழுந்து வணங்கினான். 19 சீமேயி அரசனிடம், “என் ஆண்டவனே, நான் செய்த தவறுகளை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எனது அரசனாகிய ஆண்டவனே, நீர் எருசலேமை விட்டுப் போனபோது நான் செய்த தீய காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள். 20 நான் பாவம் செய்தேன் என்பதை நீர் அறிவீர். யோசேப்பின் குடும்பத்திலிருந்து வந்து உங்களைச் சந்திக்கிற முதல் மனிதன் நான், எனது ஆண்டவனாகிய அரசனே” என்றான்.
21 ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்குத் தீமை நிகழவேண்டுமென்று வேண்டிக்கொண்டதால் நாம் சீமேயியைக் கொல்லவேண்டும்” என்றான்.
22 தாவீது, “செருயாவின் மகன்களே, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? இன்று நீங்கள் என் எதிராளி. ஆனால் இஸ்ரவேலில் ஒருவனும் இன்று கொல்லப்படமாட்டான். இஸ்ரவேலுக்கு நான் அரசன் என்பது இன்று எனக்குத் தெரியும்” என்றான். 23 பிறகு அரசன் சீமேயியை நோக்கி, “நீ மரிக்கமாட்டாய்” என்றான். அரசன் சீமேயியைக் கொல்லப் போவதில்லை என்று சீமேயிக்கு வாக்களித்தான். [f]
மேவிபோசேத் தாவீதைப் பார்க்கப் போகிறான்
24 தாவீது அரசனைக் காண சவுலின் பேரனாகிய மேவிபோசேத் வந்தான். மேவிபோசேத் அரசன் எருசலேமிலிருந்து போனதிலிருந்து அமைதியோடு திரும்பி வரும் வரைக்கும் அவனது கால்களைச் சுத்தம் பண்ணவில்லை. தாடியை சவரம் செய்து கொள்ளவில்லை. அவனது ஆடைகளை வெளுக்கவுமில்லை. 25 மேவிபோசேத் எருசலேமிலிருந்து அரசனைச் சந்திக்க வந்தான். அரசன் மேவிபோசேத்தை நோக்கி, “மேவிபோசேத், நான் எருசலேமிலிருந்து ஓடிப் போனபோது நீ ஏன் என்னோடு வரவில்லை?” என்று கேட்டான்.
26 மேவிபோசேத் பதிலாக, “எனது அரசனாகிய ஆண்டவனே, எனது வேலையாள் (சீபா) என்னை ஏமாற்றிவிட்டான். நான் சீபாவிடம், ‘நான் முடவன் எனவே கழுதையில் ஏற்றி வை. நான் கழுதையின் மேலேறி அரசனோடு போவேன்’ என்றேன். 27 ஆனால் எனது வேலையாள் என்னை ஏமாற்றிவிட்டான். என்னைக் குறித்து தீய செய்திகளை உங்களிடம் சொல்லி இருக்கிறான். தேவதூதனைப் போன்றவன் எனது அரசனாகிய ஆண்டவன் என்பது என் எண்ணம், உங்களுக்கு நல்லதென்று தோன்றுவதைச் செய்யுங்கள். 28 எனது பாட்டனாரின் குடும்பத்தார் எல்லோரையும் நீங்கள் கொன்றிருக்க முடியும். ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை. உங்கள் மேசையில் உண்கிறவர்களோடு என்னையும் வைத்தீர்கள். எனவே எதைக் குறித்தும் அரசனோடு முறையிட எனக்கு உரிமையில்லை” என்றான்.
29 அரசன் மேவிபோசேத்தை நோக்கி, “உனது கஷ்டங்களைக் குறித்து அதிகமாக எதுவும் சொல்லாதே. இதுவே நான் செய்த முடிவு: நீயும் சீபாவும் தேசத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றான்.
30 மேவிபோசேத் அரசனிடம், “நிலம் முழுவதையும் சீபாவே எடுத்துக்கொள்ளட்டும், ஏனெனில் எனது அரசனாகிய ஆண்டவன் சமாதானத்தோடு சொந்த வீட்டிற்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்! இதுவே எனக்குப் போதும்” என்றான்.
பர்சிலாவைத் தன்னோடு வரும்படியாக தாவீது கேட்கிறான்
31 கீலேயாத்தின் பர்சிலா ரோகிலிமிலிருந்து வந்தான். தாவீது அரசனோடு அவன் யோர்தான் நதிக்கு வந்தான். நதியைக் கடந்து அரசனை அழைத்துச் செல்வதற்காக அவன் அரசனோடு போனான். 32 பர்சிலா மிகவும் வயது முதிர்ந்தவன். அவனுக்கு 80 வயது. மக்னாயீமில் தாவீது தங்கியிருந்தபோது அவனுக்கு உணவும் பிற பொருட்களும் கொடுத்தான். அவன் செல்வந்தனாக இருந்தபடியால் அவனால் இதைச் செய்யமுடிந்தது. 33 தாவீது பர்சிலாவிடம், “என்னோடு நதியைக் கடந்துவா. என்னோடு எருசலேமில் நீ வாழ்ந்தால் நான் உன்னைப் பராமரிப்பேன்” என்றான்.
34 ஆனால் பர்சிலா அரசனிடம், “நான் எவ்வளவு வயது முதிர்ந்தவன் என்பது உனக்குத் தெரியுமா? நான் உன்னோடு எருசலேமுக்குப் போகமுடியும் என நீ நினைக்கிறாயா? 35 எனக்கு 80 வயது! எது நல்லது, எது கெட்டது என்று கூறுவதற்கும் இயலாத முதிர்ந்த வயது. நான் உண்ணும், பருகும் உணவுகளின் சுவையறிய இயலாதவன். பாடுகிற ஆண்களின், பெண்களின் சத்தத்தைக் கேட்கவும் இயலாத அளவிற்கு வயதில் முதிர்ந்தவன். நீ ஏன் என்னைப்பற்றிக் கவலைப்படுகிறாய்? 36 உன்னிடமிருந்து எனக்கு எந்த பரிசும் வேண்டாம். நான் உன்னோடு யோர்தான் நதியைத் தாண்டுவேன். 37 ஆனால் நான் திருப்பிப் போக அனுமதியுங்கள். அப்போது நான் எனது நகரத்தில் மரித்து எனது தந்தை, தாய் ஆகியோரின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவேன். கிம்காம் உங்களுக்குப் பணியாளாயிருப்பான். எனது அரசனாகிய ஆண்டவனே, அவன் உங்களோடு வரட்டும். உங்கள் விருப்பப்படியே அவனை நடத்தும்” என்றான்.
38 அரசன் பதிலாக, “கிம்காம் என்னோடு வருவான். உனக்காக நான் அவனிடம் இரக்கம் காட்டுவேன். நான் உனக்காக எதையும் செய்வேன்” என்றான்.
தாவீது வீட்டிற்குப் போகிறான்
39 அரசன் பர்சிலாவை முத்தமிட்டு வாழ்த்தினான். பர்சிலா வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசனும் அவனது ஜனங்கள் எல்லோரும் நதியைக் கடந்தனர்.
40 அரசன் யோர்தான் நதியைத் தாண்டி, கில்காலுக்குப் போனான். கிம்காம் அவனோடு சென்றான். யூதா ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலில் பாதிப் பகுதியினரும் தாவீதை நதியைத் தாண்டி அழைத்துச் சென்றனர்.
யூதா மக்களோடு இஸ்ரவேலர் வாதாடுகின்றனர்
41 இஸ்ரவேலர் எல்லோரும் அரசனிடம் வந்தனர். அவர்கள் அரசனைப் பார்த்து, “ஏன் எங்கள் சகோதரராகிய யூதா ஜனங்கள் உங்களைத் திருடிச் சென்று, இப்போது உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஆட்களோடு யோர்தான் ஆற்றைத் தாண்டி அழைத்து வந்திருக்கின்றனர்!” என்றார்கள்.
42 யூதாவின் ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலருக்குப் பதிலாக, “ஏனெனில் அரசன் எங்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதே அதன் காரணம். இந்த விஷயம் குறித்து நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? நாங்கள் ஒன்றும் அரசனின் செலவில் சாப்பிடவில்லை. அரசன் எங்களுக்கு எந்தப் பரிசும் தரவில்லை” என்றார்கள்.
43 இஸ்ரவேலர் பதிலாக, “தாவீதிடம் எங்களுக்குப் பத்துப் பங்குகள் உள்ளன. எனவே உங்களைக் காட்டிலும் தாவீதிடம் எங்களுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால் நீங்கள் எங்களை மதிக்கவில்லை. நாங்கள் தாம் அரசரை அழைத்து வருவதைக்குறித்து முதலில் எடுத்துரைத்தோம்” என்றார்கள்.
ஆனால் யூதா ஜனங்கள் இஸ்ரவேலரிடம் கடுமையாக நடந்துக்கொண்டனர். யூத ஜனங்களுடைய வார்த்தைள் இஸ்ரவேல் ஜனங்களுடைய வார்த்தைகளைக்காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது.
தாவீதுக்கு எதிராக இஸ்ரவேலரை சேபா வழிநடத்துகிறான்
20 பிக்கிரியின் மகனாகிய சேபா என்னும் மனிதன் அந்த இடத்தில் இருந்தான். சேபா எல்லோருக்கும் தொல்லை விளைவிக்கும் பயனற்ற மனிதன். சேபா பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். ஜனங்களைக் கூட்டுவதற்காக அவன் ஒரு எக்காளம் ஊதினான். பின்பு அவன்,
“நமக்கு தாவீதிடம் பங்கெதுவும் இல்லை.
ஈசாயின் மகனிடத்தில் நமக்கு எந்தப் பாகமும் இல்லை.
இஸ்ரவேலே, நாம் நமது கூடாரங்களுக்குத் திரும்புவோம்” என்றான்.
2 எனவே இஸ்ரவேலர் எல்லோரும் தாவீதை விட்டு பிக்கிரியின் மகனாகிய சேபாவைப் பின்பற்றினார்கள். ஆனால் யூதா ஜனங்கள் யோர்தான் ஆற்றிலிருந்து எருசலேம்வரைக்கும் வருகிற வழியில் எல்லாம் அவர்களுடைய அரசனோடு தங்கியிருந்தனர்.
3 தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சென்றான். தாவீது தன் 10 மனைவியரை வீட்டைக் கவனித்துக்கொள்வதற்காக விட்டுச் சென்றிருந்தான். தாவீது அவர்களை ஒரு தனித்த வீட்டில் வைத்தான்.
அந்த வீட்டைச் சுற்றிலும் காவலாளரை நியமித்தான். அவர்கள் மரிக்கும்வரைக்கும் அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். தாவீது அப்பெண்களைப் பராமரித்து அவர்களுக்கு உணவளித்தான். ஆனால் அவர்களோடு பாலின உறவுக்கொள்ளவில்லை. அவர்கள் மரிக்கும்வரைக்கும் விதவைகளைப்போல் வாழ்ந்தார்கள்.
4 அரசன் அமாசாவை நோக்கி, “இன்னும் மூன்று நாட்களுக்குள் யூதா ஜனங்கள் என்னை வந்து சந்திக்க வேண்டுமென அவர்களுக்குக் கூறு, நீயும் இங்கிருக்க வேண்டும்” என்றான்.
5 உடனே யூதா ஜனங்களை அழைத்து வருவதற்காக அமாசா சென்றான். ஆனால் அரசன் கொடுத்த கால அவகாசத்தைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக் கொண்டான்.
சேபாவைக் கொல்லும்படி அபிசாயிடம் தாவீது கூறுகிறான்
6 தாவீது அபிசாயிடம், “பிக்கிரியின் மகனாகிய சேபா அப்சலோமைக் காட்டிலும் அதிகம் ஆபத்தானவன். எனவே என் அதிகாரிகளை அழைத்துச் சென்று சேபாவைத் துரத்து, மதிலுள்ள நகரங்களுக்குள் அவன் நுழையும்முன் விரைந்து செல். பாதுகாப்பான நகரங்களுக்குள் சேபா சென்றுவிட்டால் பிறகு அவனைப் பிடிக்க முடியாது” என்றான்.
7 எனவே யோவாப் பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்துவதற்காக எருசலேமை விட்டுச் சென்றான். கிரேத்தியர் பிலேத்தியர் மற்ற வீரர்கள் ஆகியோரோடுகூட யோவாப் தன் ஆட்களையும் அழைத்துக் கொண்டான்.
யோவாப் அமாசாவைக் கொல்கிறான்
8 கிபியோனிலுள்ள பெரும்பாறை அருகே யோவாபும் அவனது படையும் வந்தபோது, அவர்களை சந்திப்பதற்கு அமாசா அங்கு வந்தான். யோவாப் சீருடை அணிந்திருந்தான். யோவாப் கட்டியிருந்த கச்சைக்குள் உறையில் தன் வாளை வைத்திருந்தான். யோவாப் அமாசாவை சந்திக்க நடந்து சென்றபோது யோவாபின் வாள் உறையிலிருந்து வெளியே விழுந்தது. யோவாப் வாளை எடுத்துக் கையில் ஏந்தியிருந்தான். 9 யோவாப் அமாசாவை நோக்கி, “சகோதரனே, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.
பின்பு யோவாப் தனது வலது கையை நீட்டி அமாசாவின் தாடியைப் பிடித்து முத்தமிடுவதுபோல் இழுத்தான். 10 யோவாபின் இடது கையிலிருந்த வாளை அமாசா கவனிக்கவில்லை. ஆனால் உடனே யோவாப் தன் வாளால் அமாசாவை வயிற்றில் குத்தினான். அமாசாவின் குடல் நிலத்தில் சரிந்தது. யோவாப் மீண்டும் அமாசாவைக் குத்த வேண்டியிருக்கவில்லை. அவன் மரித்துப் போயிருந்தான்.
தாவீதின் ஆட்கள் சேபாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்
பின்பு யோவாபும், அவனது சசோதரன் அபிசாயியும் பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்தத் தொடங்கினர். 11 யோவாபின் இளம் வீரர்களில் ஒருவன் அமாசாவின் உடல் அருகே நின்றான். இந்த இளம் வீரன், “யோவாபையும் தாவீதையும் ஆதரிக்கின்ற வீரர்களே, நாம் யோவாபைப் பின் தொடர்வோம்” என்றான். 12 பாதையின் நடுவே அமாசாவின் உடல் அவனது குருதியினூடே கிடந்தது. எல்லா ஜனங்களும் அதைப் பார்ப்பதற்கு நின்றதை அந்த இளம் வீரன் கவனித்தான். எனவே அவன் அந்த உடலைப் பாதையிலிருந்து வயலுக்குள் புரட்டித் தள்ளினான். பின் உடலை ஒரு துணியால் மூடினான். 13 அமாசாவின் உடல் பாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, ஜனங்கள் அதைத் தாண்டிச்சென்று யோவாபைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் யோவாபோடு சேர்ந்து பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்தினார்கள்.
ஆபேல் பெத்மாக்காவிற்கு சேபா தப்பிக்கிறான்
14 ஆபேல் பெத்மாக்காவை அடையும்வரை வழியில் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களையும் பிக்கிரியின் மகனாகிய சேபா கடந்து சென்றான். பேரீமின் ஜனங்களும் சேபாவைப் பின்தொடர்ந்து சென்றனர்.
15 யோவாபும் அவனது ஆட்களும் ஆபேல் பெத்மாக்காவிற்கு வந்தனர். யோவாபின் படை நகரத்தைச் சூழ்ந்தது. நகரத்து மதிலின் மேல் அவர்கள் புழுதி வீசினார்கள். அவர்கள் மதிலில் ஏறுவதற்கு வசதியாக இதைச் செய்தார்கள். யோவாபின் மனிதர் மதில் கீழே விழும்படியாக மதிலின் கற்களை உடைக்க ஆரம்பித்தார்கள்.
16 ஆனால் அந்நகரத்தில் ஒரு புத்திசாலியானப் பெண் இருந்தாள். அவள், “நான் சொல்வதைக் கேளுங்கள்! யோவாபை இங்கு வரும்படி கூறுங்கள். நான் அவனோடு பேசவேண்டும்” என்றாள்.
17 யோவாப் அப்பெண்ணை சந்தித்துப் பேசுவதற்குச் சென்றான். அப்பெண் அவனிடம், “நீர் யோவாபா?” என்று கேட்டாள்.
யோவாப், “ஆம் நானே” என்று பதில் கூறினான்.
அப்போது அப்பெண்மணி, “நான் கூறுவதைக் கேள்” என்றாள்.
யோவாப், “நான் கேட்கிறேன்” என்றான்.
18 அப்போது அப்பெண்மணி, “முன்பு ஜனங்கள் ‘ஆபேலில் யாரேனும் உதவி வேண்டினால் தேவையானது கிடைக்கும்’ என்று சொல்லிக்கொள்வார்கள். 19 நான் இவ்வூரின் சமாதானமான, உண்மையான ஜனங்களுள் ஒருத்தி. இஸ்ரவேலின் ஒரு முக்கிய நகரத்தை நீ அழிக்கப்போகிறாய். கர்த்தருக்குச் சொந்தமான ஒன்றை நீ ஏன் அழிக்க விரும்புகிறாய்?” என்று கேட்டாள்.
20 யோவாப் பதிலாக, “நான் எதையும் அழிக்க விரும்பவில்லை! உங்கள் ஊரை அழிக்க, நான் விரும்பமாட்டேன். 21 ஆனால் மலைநாடாகிய எப்பிராயீமைச் சார்ந்த ஒரு மனிதன் உங்கள் நகரில் இருக்கிறான். அவன் பிக்கிரியின் மகன் சேபா. அவன் தாவீது அரசனை எதிர்க்கிறான். அவனை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் நகரை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றான்.
அப்பெண் யோவாபிடம், “சரி அவனது தலை மதிலின் மேலாக உங்களிடம் வீசப்படும்” என்றாள்.
22 அந்நகரின் ஜனங்களிடம் அப்பெண் மிகவும் புத்திசாதுரியத்தோடு பேசினாள். பிக்கிரியின் மகனாகிய சேபாவின் தலையை ஜனங்கள் வெட்டினார்கள். சேபாவின் தலையை மதிலுக்கு மேலாக யோவாபுக்கு அந்த ஜனங்கள் வீசினார்கள்.
ஆகையால் யோவாப் எக்காளம் ஊதினான். படை நகரைவிட்டு நீங்கிச் சென்றது. ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்திற்குச் சென்றார்கள். யோவாப் எருசலேமில் அரசனிடம் சென்றான்.
தாவீதின் ஆளுகையின் கீழ் மக்கள்
23 இஸ்ரவேல் படைக்கு யோவாப் தலைவனாக இருந்தான். கிரேத்தியரையும் பிலேத்தியரையும் யோய்தாவின் மகன் பெனாயா வழி நடத்தினான். 24 அதோனிராம் கடும் உழைப்பாளிகளுக்குத் தலைவனானான். அகிலூதின் மகன் யோசபாத் வரலாற்றாசிரியனாக இருந்தான். 25 சேவா செயலாளரானான். சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களாக இருந்தார்கள். 26 யயீரியனாகிய ஈரா தாவீதுக்குப் பிரதானியாக [g] இருந்தான்.
சவுலின் குடும்பம் தண்டிக்கப்படுகிறது
21 தாவீது அரசனாக இருந்தபோது ஒரு பஞ்சம் வந்தது. இம்முறை பஞ்சம் மூன்று ஆண்டுகள் நீடித்தது. தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தரும் அவனுக்குப் பதில் தந்தார். கர்த்தர், “சவுலும் கொலைக்காரரான அவனது குடும்பத்தாரும் இப்பஞ்சத்திற்குக் காரணமானார்கள். இப்பஞ்சம் சவுல் கிபியோனியரைக் கொன்றதால் வந்ததாகும்” என்றார். 2 (கிபியோனியர் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் எமோரியர் குழுவினராகும். இஸ்ரவேலர் கிபியோனியரைத் துன்புறுத்துவதில்லை என்று வாக்களித்திருந்தனர். ஆனால் சவுல் கிபியோனியரைக் கொல்ல முயன்றான். அவன் இஸ்ரவேலர் மீதும் யூதா ஜனங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் இப்படிச் செய்தான்.)
அரசனாகிய தாவீது கிபியோனியரை அழைத்து அவர்கள் எல்லோரிடமும் பேசினான். 3 தாவீது கிபியோனியரிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்? இஸ்ரவேலின் பாவத்தைப் போக்குவதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனவே நீர் கர்த்தருடைய ஜனங்களை ஆசிர்வதிக்கலாம்” என்றான்.
4 கிபியோனியர் தாவீதிடம், “தாம் செய்த காரியத்திற்கு ஈடாக கொடுப்பதற்கு சவுலின் குடும்பத்தினரிடம் போதிய அளவு வெள்ளியோ, தங்கமோ இல்லை. ஆனால் இஸ்ரவேலரைக் கொல்வதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது” என்றனர்.
தாவீது, “அப்படியெனில், நான் உங்களுக்காக என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.
5 அதற்கு கிபியோனியர் அரசன் தாவீதிடம், “எங்களுக்கெதிராக சவுல் திட்டங்கள் தீட்டினான். இஸ்ரவேலில் வாழும் எங்கள் அத்தனைபேரையும் அழிப்பதற்கு அவன் முயன்றான். 6 சவுலின் ஏழு மகன்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன். ஆகையால் நாங்கள் கிபியா மலையில் கர்த்தரின் முன்னால் சவுலின் மகன்களைத் தூக்கில் இடுவோம்” என்றார்கள்.
அரசனாகிய தாவீது, “நல்லது, அவர்களை நான் உங்களிடம் ஒப்படைப்பேன்” என்றான். 7 ஆனால் அரசன் யோனத்தானின் மகனாகிய மேவிபோசேத்தைப் பாதுகாத்தான். யோனத்தான் சவுலின் மகன். ஆனால் கர்த்தருடைய பெயரில் யோனத்தானுக்கு தாவீது ஒரு வாக்குறுதி அளித்திருந்தான். [h] ஆகையால் அரசன் மேவிபோசேத்தை அவர்கள் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொண்டான். 8 சவுலுக்கும் அவன் மனைவி ரிஸ்பாவுக்கும் பிறந்தவர்கள் அர்மோனியும் மேவிபோசேத்தும் [i] ஆவார்கள். சவுலுக்கு மீகாள் என்னும் மகள் இருந்தாள். அவளை மேகோலாவிலுள்ள பர்சிலாவின் மகன் ஆதரியேலுக்கு மணம் புரிந்து வைத்தனர். ஆதரியேலுக்கும் மீகாளுக்கும் பிறந்த ஐந்து மகன்களைத் தாவீது அழைத்தான். 9 இவ்வாறு தாவீது ஏழுபேரைக் கிபியோனியருக்குக் கொடுத்தான். கிபியோனியர் கர்த்தருக்கு முன்பாக அவர்களை கிபியா மலையில் தூக்கிலிட்டனர். ஏழு பேரும் ஒரே சமயத்தில் மடிந்தனர். அறுவடையின் ஆரம்ப நாட்களில் அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டனர். இது வசந்தக் காலத்தில் பார்லி அறுப்புக்கு முன் நடந்தது.
தாவீதும் ரிஸ்பாவும்
10 ஆயாவின் மகளான ரிஸ்பாள் துக்கத்திற்கு அறிகுறியான துணியை எடுத்து பாறை மீது வைத்தாள். அந்த ஆடை அறுவடை தொடங்கியக் காலத்திலிருந்து மழை வரும்வரை பாறை மீதே இருந்தது. ரிஸ்பாள் மரித்தவர்களின் உடலை இரவும் பகலும் காத்தாள். காட்டுப் பறவைகள் பகலிலும், காட்டு விலங்குகள் இரவிலும் உடலை நெருங்கி விடாத வண்ணம் கண்காணித்தாள்.
11 ஜனங்கள் தாவீதிடம் சென்று சவுலின் வேலைக் காரியான ரிஸ்பாவின் செயலைப் பற்றிக் கூறினார்கள். 12 பின்பு தாவீது யாபேஸ் கீலேயாத்திலுள்ள ஜனங்களிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளை எடுத்தனர். (கிலேயாத்திலுள்ள யாபேசின் ஆட்கள் கில்போவாவில் சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்ட பிறகு இந்த எலும்புகளை எடுத்தார்கள். பெலிஸ்தர்கள் சவுல், மற்றும் யோனத்தானின் உடல்களை பெத்சானிலுள்ள ஒரு சுவரில் தொங்கவிட்டனர். ஆனால் யாபேஸ் கீலேயாத்தின் ஆட்கள் அங்குச்சென்று பொது இடத்திலிருந்து உடல்களைத் திருடினார்கள்.)
13 தாவீது கீலேயாத்திலுள்ள யாபேசிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டு வந்தான். அவர்கள் தூக்கிலிடப்பட்ட ஏழு பேரின் உடல்களையும் கொண்டுவந்தனர். 14 அவர்கள் பென்யமீன் பகுதியில் சவுல் மற்றும் யோனத்தானின் எலும்பைப் புதைத்தனர். அவர்கள் சவுலின் தந்தையாகிய கீசின் கல்லறையில் அவர்களைப் புதைத்தனர். அரசன் சொன்னபடி ஜனங்கள் செய்தனர். ஆகையால் தேவன் அந்த ஜனங்களின் வேண்டுதல்களை ஏற்றுக்கொண்டார்.
பெலிஸ்தரோடு போர்
15 பெலிஸ்தர் இஸ்ரவேலருடன் இன்னொரு போரை ஆரம்பித்தனர். தாவீதும் அவனது ஆட்களும் பெலிஸ்தரோடு போரிடச் சென்றனர். தாவீது சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். 16 இஸ்பிபெனோப் இராட்சதர்களில் ஒருவன். இஸ்பிபெனோபின் ஈட்டி 71/2 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. அவனிடம் புதிய வாள் ஒன்றும் இருந்தது. அவன் தாவீதைக் கொல்ல முயன்றான். 17 ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய் பெலிஸ்தனைக் கொன்று தாவீதைக் காப்பாற்றினான்.
பின்பு தாவீதின் ஆட்கள் தாவீதிற்கு சிறப்பான ஒரு வாக்குறுதி அளித்தனர். அவர்கள் தாவீதிடம், “இனி நீங்கள் எங்களோடு சேர்ந்து போருக்கு வர வேண்டாம். அவ்வாறு வந்தால் இஸ்ரவேல் தனது சிறந்த தலைவரை இழக்கக்கூடும்” என்றனர்.
18 பின்பு கோப் என்னுமிடத்தில் பெலிஸ்தரோடு மற்றொரு போர் நடந்தது. ஊசாத்தியனாகிய சீபேக்காய் இன்னொரு இராட்சதனான (ரஃபா குடும்பத்தவனான) சாப் என்பவனைக் கொன்றான்.
19 மீண்டும் பெலிஸ்தருக்கு எதிராக கோப் என்னுமிடத்தில் போர் நடந்தது. யாரெயொர்கிமின் மகனான எல்க்கானான் பென்யமீன் குடும்பத்திலிருந்து வந்தவன். அவன் காத்தியனாகிய (காத் ஊரானாகிய) கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டி நெய்கிறவர்களின் படைமரம் போன்று பெரியதாக இருந்தது.
20 மற்றொரு போர் காத் என்னுமிடத்தில் நடந்தது. அங்கு மிகப்பெரிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்களும், ஒவ்வொரு பாதத்திலும் ஆறு விரல்களும் காணப்பட்டன. இவ்வாறு அவனுக்கு மொத்தம் 24 விரல்கள் இருந்தன. இவனும் ரஃபா (இராட்சதக்) குடும்பத்தைச் சார்ந்தவன். 21 அவன் இஸ்ரவேலை சவாலுக்கு அழைத்தான். இஸ்ரவேலரை பார்த்து நகைத்தான். ஆனால் யோனத்தான் அவனைக் கொன்றான். (யோனத்தான் தாவீதின் சகோதரனான சீமேயின் மகன்.)
22 இவ்வாறு மரித்த நான்கு பேரும் காத் ஊரைச் சார்ந்த ரஃபாவின் ஜனங்களாவார்கள். அவர்கள் தாவீதினாலும் அவனது ஆட்களாலும் கொல்லப்பட்டார்கள்.
கர்த்தருடைய துதிகளைப் பாடும் தாவீதின் பாட்டு
22 கர்த்தர் தாவீதை சவுல் மற்றும்
பகைவர்களிடமிருந்து பாதுகாத்த போது, தாவீது கர்த்தரைப் புகழ்ந்து பாடிய பாட்டு.
2 கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம்.
3 அவர் எனது தேவன்.
நான் பாதுகாப்பைத் தேடி ஓடும் கன்மலை.
தேவன் எனது கேடயம்.
அவரது ஆற்றல் என்னைக் காக்கிறது.
மலைகளின் உச்சியில் நான் மறைந்துக் கொள்ள ஏதுவான என் பாதுகாப்பிடம் கர்த்தர் ஆவார்.
கொடிய பகைவரிடமிருந்து
அவர் என்னைக் காக்கிறார்.
4 அவர்கள் என்னைக் கேலிச் செய்தனர்.
ஆனால் நான் கர்த்தரை உதவிக்கு அழைத்தேன்.
என் பகைவரிடமிருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்!
5 என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்!
மரணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்தன.
மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
6 மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின.
மரணத்தின் கண்ணி எனக்கு முன் இருந்தது.
7 மாட்டிக்கொண்ட நான் கர்த்தரிடம் உதவிக் கேட்டேன்.
ஆம், எனது தேவனை அழைத்தேன்.
தேவன் தமது ஆலயத்தில் இருந்து என் குரலைக் கேட்டார்.
அவர் என் அழுகையைக் கேட்டார்.
8 பின்பு பூமி அசைந்து நடுங்கியது, பரலோகத்தின் அடித்தளம் ஆடியது.
ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்.
9 தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்தது.
எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது.
எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன.
10 கர்த்தர் ஆகாயத்தைக் கீறி கீழிறங்கி வந்தார்!
அவர் கட்டியான கறுப்பு மேகத்தில் நின்றார்!
11 அவர் பறந்துக்கொண்டிருந்தார், கேருபீன்கள் மீது பறந்து வந்தார்.
காற்றின் மீது பயணம் வந்தார்.
12 கர்த்தர் கருமேகத்தைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரம்போல் அணிந்தார்.
அவர் கட்டியான இடி மேகங்களில் தண்ணீரைச் சேகரித்தார்.
13 அவரது ஒளி நிலக்கரியைக் கூட எரிய வைக்கும் பிரகாசத்தைக் கொண்டது!
14 வானிலிருந்து இடியைப்போல கர்த்தர் முழங்கினார்!
உன்னதமான தேவன் தனது குரலை எல்லோரும் கேட்கும்படி செய்தார்.
15 கர்த்தர் தனது அம்புகளை எய்து
பகைவர்களைப் பயந்தோடச் செய்தார்.
கர்த்தர் மின்னலை அனுப்பினார்
ஜனங்கள் குழம்பிச் சிதறியோடினார்கள்.
16 கர்த்தாவே நீர் பலமாகப் பேசினீர்.
பலமுள்ள காற்று உங்கள் வாயிலிருந்து அடித்தது.
தண்ணீர் விலகிற்று.
எங்களால் கடலின் அடிப்பாகத்தைப் பார்க்கமுடிந்தது.
பூமியின் அடித்தளத்தையும் எங்களால் பார்க்க முடிந்தது.
17 கர்த்தர் எனக்கும் உதவினார்!
கர்த்தர் மேலிருந்து கீழே வந்தார். கர்த்தர் என்னை துன்பத்திலிருந்துக் காப்பாற்றினார்.
18 என் பகைவர்கள் என்னைவிட பலமானவர்கள்.
அவர்கள் என்னை வெறுத்தார்கள்.
என் பகைவர்கள் என்னை வெல்லக் கூடியவர்கள்!
எனவே தேவன் தாமே என்னை பாதுகாத்தார்.
2008 by World Bible Translation Center