Bible in 90 Days
19 நான் தொல்லையில் இருந்தேன்.
என் பகைவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால் எனக்கு உதவிச்செய்ய கர்த்தர் இருந்தார்!
20 கர்த்தர் என்மேல் பிரியமாயிருக்கிறார்.
எனவே என்னைக் காத்தார்.
பாதுகாப்பான இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
21 கர்த்தர் எனக்கான வெகுமதியை எனக்குத் தருவார்.
ஏனெனில் நான் சரியானவற்றையே செய்தேன்.
நான் தவறிழைக்கவில்லை.
எனவே அவர் எனக்கு நல்லதைச் செய்வார்.
22 ஏனென்றால் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்!
எனது தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்யவில்லை.
23 நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன்,
அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!
24 நான் பரிசுத்தமானவனாகவும் களங்கமற்றவனாகவும் அவர் முன்னிலையில் இருந்தேன்.
25 எனவே கர்த்தர் எனக்கு வெகுமதியைத் தருவார்!
ஏனெனில் சரியானதையே நான் செய்தேன்!
அவர் எதிர்பார்ப்பதையே நான் செய்கிறேன்.
நான் தவறு செய்யவில்லை.
எனவே அவர் எனக்கு நலமானதைச் செய்வார்.
26 ஒருவன் உண்மையிலேயே உம்மை விரும்பினால் அவனுக்கு உண்மையான அன்பை நீர் காட்டுவீர்.
ஒருவன் உம்மிடம் உண்மையாக இருந்தால் நீர் அவனிடம் உண்மையாக இருப்பீர்.
27 கர்த்தாவே, யார் நல்லவராகவும் பரிசுத்தமானவராகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் நல்லவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்கிறீர்.
உம்மிடம் மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் நடந்துகொள்வீர்.
28 கர்த்தாவே, சிறுமைப்பட்ட ஜனங்களுக்கு உதவுகிறீர்.
மேட்டிமையானவர்களை நாணமுற வைக்கிறீர்.
29 கர்த்தாவே, நீர் என்னுடைய விளக்கு.
கர்த்தர் என்னைச் சுற்றியுள்ள இருளைப் போக்கி ஒளி தருகிறார்!
30 கர்த்தாவே, உம்முடைய உதவியால் நான் வீரர்களுடன் பாயமுடியும்.
தேவனுடைய உதவியால் பகைவர்களின் சுவர்களில் என்னால் ஏறமுடியும்.
31 தேவனுடைய ஆற்றல் முழுமையானது.
கர்த்தருடைய சொல் சோதித்துப்பார்க்கப்பட்டது.
அவரை நம்புகிறவர்களை அவர் பாதுகாக்கிறார்.
32 கர்த்தரைத் தவிர வேறு தேவன் கிடையாது.
நமது தேவனைத் தவிர வேறு கன்மலை இல்லை.
33 தேவன் என் அரண்.
அவர் தூயவர்களைச் சரியாக வாழவைக்கிறார்.
34 தேவன் நான் ஒரு மானைப்போல வேகமாக ஓடும்படி செய்கிறார்!
உயரமான இடங்களில் நான் நிலையாக நிற்கும்படி செய்கிறார்.
35 தேவன் என்னைப் போருக்குப் பயிற்சி தருகிறார்.
அதனால் என் கைகள் சக்தி வாய்ந்த அம்புகளைச் செலுத்த முடியும்.
36 தேவனே, நீர் என்னைப் பாதுகாத்தீர்.
எனக்கு வெற்றி அளித்தீர்.
என் பகைவரை நான் வெல்ல உதவினீர்.
37 என் கால்களையும் மூட்டுகளையும் பலப்படுத்தினீர்.
எனவே நான் தடுமாறாமல் வேகமாக நடக்க முடியும்.
38 நான் பகைவர்களை விரட்ட வேண்டும்.
அவர்களை இறுதியில் அழிக்கும்வரை!
அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை நான் திரும்பி வரமாட்டேன்.
39 என் பகைவர்களைத் தோற்கடித்தேன்.
அவர்களை வென்றேன்!
அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.
ஆம், என் பகைவர்கள் என் பாதத்தில் விழுந்தார்கள்.
40 தேவனே நீர் என்னை போரில் வலிமையுடையவன் ஆக்கினீர்.
என் பகைவர்கள் என் முன்னே வந்து விழும்படி செய்தீர்.
41 என் பகைவர்களைத் தலைக்குனிய வைப்பதில் நீர் உதவினீர்,
என் பகைவர்களின் கழுத்தை வெட்டும்படியாக அவர்கள் கழுத்தை என் முன் ஒப்புவித்தீர்!
42 என் பகைவர்கள் உதவிக்கு ஆள் தேடினார்கள்.
ஆனால் யாரும் அவர்கள் உதவிக்கு வரவில்லை.
அவர்கள் கர்த்தரிடம் கூட கேட்டார்கள்.
ஆனால் அவர் அவர்களுக்குப் பதில் அளிக்கவில்லை.
43 என் பகைவர்களைத் துண்டு துண்டாக்கினேன்.
அவர்கள் நிலத்தின் மீது புழுதியானார்கள்.
என் பகைவர்களை நான் சிதறடித்தேன்.
அவர்கள் மீது தெருப்புழுதியென நினைத்து நடந்தேன்.
44 நீர் எனக்கு எதிராக போரிட்டவரிடமிருந்து என்னைக் காத்தீர்.
நீர் அந்தத் தேசங்களை ஆள்பவனாக என்னை ஆக்கினீர்.
எனக்குத் தெரியாதவர்கள் இப்போது எனக்குப் பணி செய்கிறார்கள்!
45 பிற தேசத்தவர் எனக்கு கீழ்ப்படிகின்றார்கள்!
என்னுடைய கட்டளையைக் கேட்கும்போது விரைந்து பணிவிடை செய்கிறார்கள், அயல் நாட்டவர்கள் எனக்குப் பயப்படுகிறார்கள்!
46 அந்த அயல்நாட்டினர் பயத்தால் நடுங்குகிறார்கள்.
பயந்துகொண்டே அவர்களின் மறைவிடங்களிலிருந்து வெளியில் வருகிறார்கள்.
47 கர்த்தர் உயிரோடிருக்கிறார்.
எனது கன்மலையான அவரைத் துதிப்பேன்!
தேவன் உயர்ந்தவர்!
என்னைப் பாதுகாக்கும் ஒரு கன்மலை அவர்.
48 என் பகைவர்களை எனக்காகத் தண்டிக்கும் தேவன் அவர்.
ஜனங்களை என் ஆட்சியின் கீழ் அவர் வைக்கிறார்.
49 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காத்தீர்!
என்னை எதிர்த்தவர்களைத் தோற்றோடச் செய்தீர்.
கொடியவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தீர்!
50 கர்த்தாவே, ஆகையால் எல்லா தேசங்களும் அறியும்படி நாம் உம்மைத் துதிப்பேன்.
எனவே உமது பேரில் நான் பாடல்கள் பாடுகிறேன்.
51 கர்த்தர், தன் அரசன் போரில் வெல்லும்படி செய்கிறார்!
கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு உண்மையான அன்பைக் காட்டுகிறார்.
அவர் தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் எப்போதும் உண்மையாக இருப்பார்!
தாவீதின் கடைசி வார்த்தைகள்
23 இவையே தாவீதின் கடைசி வார்த்தைகள்:
“இச்செய்தி ஈசாயின் மகன் தாவீதினுடையது.
தேவனால் உயர்த்தப்பட்ட மனிதனுடையது.
யாக்கோபின் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன்,
இஸ்ரவேலின் இனியப் பாடகன்.
2 கர்த்தருடைய ஆவி என் மூலமாகப் பேசினார்.
என் நாவில் அவரது வார்த்தைகள் இருந்தன.
3 இஸ்ரவேலின் தேவன் பேசினார்.
இஸ்ரவேலின் கன்மலையானவர் என்னிடம்,
‘நேர்மையாய் ஆளும் மனிதன்,
தேவனை மதித்து ஆளும் மனிதன்,
4 உதயகால ஒளியைப் போன்றிருப்பான்:
மேகங்கள் அற்ற அதிகாலையைப்போல இருப்பான்.
மழையைத் தொடர்ந்து தோன்றும் வெளிச்சத்தைப் போன்றிருப்பான்.
அம்மழை நிலத்திலிருந்து பசும்புல்லை எழச்செய்யும்’ என்று சொன்னார்.
5 “கர்த்தர் என் குடும்பத்தை பலமுள்ளதாகவும் பாதுகாப்புள்ளதாகவும் மாற்றினார்.
தேவன் என்னோடு ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்தார்!
எல்லா வழிகளிலும் இந்த உடன்படிக்கை
நல்லதே என்று தேவன் உறுதி செய்தார்.
உறுதியாக அவர் எனக்கு எல்லா வெற்றியையும் தருவார்.
எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் அவர் தருவார்.
6 “ஆனால் தீயோர் முட்களைப் போன்றவர்கள்.
ஜனங்கள் முட்களை வைத்திருப்பதில்லை.
அவர்கள் அவற்றை வீசிவிடுவார்கள்.
7 ஒருவன் அவற்றைத் தொட்டால்
அவை மரத்தாலும் வெண்கலத்தாலுமான ஈட்டியால் குத்துவது போலிருக்கும்.
ஆம், அம்மக்கள் முட்களைப் போன்றவர்கள்.
அவர்கள் தீயில் வீசப்படுவார்கள்.
அவர்கள் முற்றிலும் எரிக்கப்படுவார்கள்!”
மூன்று புகழ்வாய்ந்த வீரர்கள்
8 இவை தாவீதின் பலம்பொருந்திய வீரர்களின் பெயர்கள்:
தேர்ப்படை அதிகாரிகளின் தலைவன் தக்கெமோனியின் மகனாகிய யோசேப்பாசெபெத். அவன் அதீனோஏஸ்னி எனவும் அழைக்கப்பட்டான். யோசேப்பாசெபெத் 800 பேரை ஒரே நேரத்தில் கொன்றவன்.
9 இவனுக்குப் பின் அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார் குறிப்பிடத்தக்கவன். பெலிஸ்தரை எதிர்த்தபோது தாவீதோடிருந்த மூன்று பெரும் வீரர்களில் எலெயாசாரும் ஒருவன். அவர்கள் போருக்கு ஓரிடத்தில் குழுமியிருந்தனர். ஆனால் இஸ்ரவேல் வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 10 மிகவும் சோர்ந்துபோகும்வரைக்கும் எலெயாசார் பெலிஸ்தரோடு போரிட்டான். ஆனால் அவன் வாளை இறுகப் பிடித்துக்கொண்டு போர் செய்வதைத் தொடர்ந்தான். கர்த்தர் அன்று இஸ்ரவேலருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார். எலெயாசார் போரில் வென்ற பிறகு பிற வீரர்கள் திரும்பி வந்தனர். மரித்த பகைவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட அவர்கள் வந்தனர்.
11 இவனுக்குப் பிறகு சொல்லத்தக்கவன் ஆராரிலுள்ள ஆகேயின் மகன் சம்மா. பெலிஸ்தர் போரிட ஒன்றாகத் திரண்டு வந்தனர். சிறு பயிறு நிரம்பிய களத்தில் அவர்கள் போர் செய்தனர். பெலிஸ்தரிடமிருந்து வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 12 ஆனால் சம்மா போர்களத்தின் நடுவில் நின்று தாங்கிக்கொண்டான். அவன் பெலிஸ்தரை வென்றான். அன்று கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார்.
மூன்று பெரும் வீரர்கள்
13 ஒரு முறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான். பெலிஸ்தரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இருந்தது. முப்பது பெரும் வீரர்களில் [a] மூன்று பேர் நிலத்தில் தவழ்ந்தவாறே சென்று தாவீது இருக்குமிடத்தை அடைந்தனர்.
14 மற்றொரு முறை தாவீது அரணுக்குள் பாதுகாப்பான இடத்தில் இருந்தான். பெலிஸ்திய வீரர்களின் ஒரு கூட்டத்தினர் பெத்லேகேமில் இருந்தனர். 15 தாவீது தனது சொந்த ஊரின் தண்ணீரைப் பருகும் தாகங்கொண்டிருந்தான். தாவீது, “பெத்லகேமின் நகர வாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து யாரேனும் எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தருவார்களா என்று விரும்புகிறேன்!” என்றான். தாவீதுக்கு உண்மையில் அது தேவைப்படவில்லை. வெறுமனே அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.
16 ஆனால் அந்த மூன்று பெரும் வீரர்களும் பெலிஸ்தரின் படைக்குள் புகுந்து சென்றனர். பெத்லகேமின் நகரவாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்தனர். அம்முப்பெரும் வீரர்களும் அந்த தண்ணீரை தாவீதிடம் கொண்டு வந்தனர். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். கர்த்தருக்குக் காணிக்கையாக அதை நிலத்தில் ஊற்றிவிட்டான். 17 தாவீது, “கர்த்தாவே, நான் இந்த தண்ணீரைப் பருகமுடியாது. எனக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற மனிதரின் இரத்தத்தைக் குடிப்பதற்கு அது சமமாகும்” என்றான். இதனாலேயே தாவீது தண்ணீரைப் பருகவில்லை. இதைப்போன்ற பல துணிவான காரியங்களை முப்பெரும் வீரர்களும் செய்தார்கள்.
மற்ற தைரியமான வீரர்கள்
18 அபிசாயி யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனும் ஆவான். முப்பெரும் வீரர்களின் தலைவன், 300 வீரர்களைத் தனது ஈட்டியால் கொன்றவன் இந்த அபிசாயி. 19 இவன் முப்பெரும் வீரர்களைப் போன்ற புகழ் பெற்றவன். அவன் அவர்களில் ஒருவனாக இல்லாதிருந்தும், அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்.
20 பின்பு யோய்தாவின் மகன் பெனாயா இருந்தான். இவன் வலிமைக்கொண்ட ஒருவனின் மகன். அவன் கப்செயேல் ஊரான். பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். மோவாபிலுள்ள ஏரியேலின் இரண்டு மகன்களை பெனாயா கொன்றான். ஒரு நாள் பனிபெய்துக்கொண்டிருக்கையில் பெனாயா நிலத்திலிருந்த ஒரு குழியில் இறங்கிச் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். 21 பெனாயா ஒரு மிகப் பெரிய எகிப்திய வீரனையும் கொன்றான். எகிப்தியனின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. பெனாயா கையில் ஒரு தடி மட்டுமே இருந்தது. ஆனால் பெனாயா எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து எடுத்தான். எகிப்தியனின் ஈட்டியாலேயே பெனாயா அவனைக் கொன்றான். 22 யோய்தாவின் மகன் பெனாயா அத்தகைய பல துணிவான செயல்களைச் செய்தான். முப்பெரும் வீரர்களைப் போன்று பெனாயா புகழ் பெற்றவன். 23 பெனாயா முப்பெரும் வீரர்களைக் காட்டிலும் மிகவும் புகழ் பெற்றவன். ஆனால் அவன் முப்பெரும் வீரர்களின் குழுவைச் சார்ந்தவன் அல்லன். தாவீது தனது மெய்க்காப்பாளர்களின் தலைவனாக பெனாயாவை நியமித்தான்.
முப்பது வீரர்கள்
24 முப்பது வீரர்களின் பெயர்ப் பட்டியல்:
யோவாபின் சகோதரனாகிய ஆசகேல்;
பெத்லகேமின் தோதோவின் மகன் எல்க்கானான்;
25 ஆரோதியனாகிய சம்மா;
ஆரோதியனாகிய எலிக்கா;
26 பல்தியனாகிய ஏலெஸ்;
தெக்கோவின் இக்கேசின் மகன் ஈரா;
27 ஆனதோத் தியனாகிய அபியேசர்;
ஊசாத்தியனாகிய மெபுன்னாயி;
28 அகோகியனாகிய சல்மோன்;
தெந்தோபாத் தியனாகிய மகராயி;
29 பானாவின் மகன் ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன்;
பென்யமீனியரின் கிபியா ஊரைச் சார்ந்தரிபாயின் மகன் இத்தாயி;
30 பிரத்தோனியனாகிய பெனாயா;
காகாஸ் நீரோடைகளின் நாட்டிலுள்ள ஈத்தாயி;
31 அர்பாத்தியன் ஆகிய அபி அல்பொன்;
பருமியன் ஆகிய அஸ்மாவேத்;
32 சால்போனியன் ஆகிய எலி யூபா; யாசேனின் மகனாகிய யோனத்தான்; 33 ஆராரியனாகிய சம்மா; ஆராரியனாகிய சாராரின் மகனாகிய அகியாம்;
34 மாகாத்தியன் ஆகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத்;
கீலோனியன் ஆகிய அகித்தோப்பேலின் மகன் எலியாம்;
35 கர்மேலியன் ஆகிய எஸ்ராயி;
அர்பியனாகிய பாராயி;
36 சோபாவில் உள்ள நாத்தானின் மகன் ஈகால்;
காதியனாகிய பானி;
37 அம்மோனியனாகிய சேலேக் பெரோத்தியனாகிய நகராய், (செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுதங்களை நகராய் சுமந்துச் சென்றான்)
38 இத்ரியனாகிய ஈரா;
இத்ரியனாகிய காரேப்;
39 ஏத்தியனாகிய உரியா.
மொத்தத்தில் அவர்கள் எண்ணிக்கை 37 பேர் ஆகும்.
தாவீது தன் படையை கணக்கெடுக்க முடிவெடுக்கிறான்
24 இஸ்ரவேல் மீது மீண்டும் கர்த்தர் கோபம் அடைந்தார். இஸ்ரவேலருக்கு எதிராகக் திரும்பும்படி கர்த்தர் தாவீதை மாற்றினார். தாவீது, “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுங்கள்” என்றான்.
2 தாவீது அரசன் படைத் தலைவனாகிய யோவாபை நோக்கி, “தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிடமும் நீ போய் ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடு. அப்போது நான் மொத்த ஜனங்கள் தொகையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள முடியும்” என்றான்.
3 ஆனால் யோவாப் அரசனிடம், “எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்பது முக்கிய மன்று. உன் தேவனாகிய கர்த்தர், உங்களுக்கு நூறு மடங்கு ஆட்களைத் தருவார், உங்கள் கண்கள் அவ்வாறு நடப்பதைப் பார்க்கும்! ஆனால் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டான்.
4 தாவீது அரசன் உறுதியாக யோவாபுக்கும் படைத் தலைவர்களுக்கும் ஜனங்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார். எனவே யோவாபும் படைத் தலைவர்களும் இஸ்ரவேலின் ஜனங்கள் தொகையைக் கணக்கெடுக்க அரசனிடமிருந்து சென்றனர். 5 அவர்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் ஆரோவேரில் முகாமிட்டுத் தங்கினார்கள். நகரின் வலது புறத்தில் அவர்கள் முகாம் இருந்தது.
(காத் பள்ளத்தாக்கின் நடுவில் நகரம் இருந்தது. யாசேருக்குப் போகும் வழியில் அந்த நகரம் இருந்தது.)
6 பின்பு அவர்கள் கீலேயாத்திற்கும் தாதீம் ஓத்சிக்கும் போனார்கள். அங்கேயிருந்து தாண்யானுக்கும் சீதோனைச் சூழ்ந்த பகுதிகளுக்கும் சென்றார்கள். 7 அவர்கள் தீரு என்னும் கோட்டைக்கு போனார்கள். அவர்கள் கானானியர் மற்றும் ஏவியரின் நகரங்களுக்கெல்லாம் சென்றார்கள். அவர்கள் யூதாவின் தெற்கிலுள்ள பெயெர்செபாவிற்குப் போனார்கள். 8 ஒன்பது மாதங்களும் 20 நாட்களும் கழிந்த பிறகு அவர்கள் தேசம் முழுவதும் சுற்றிவந்திருந்தார்கள். 9 மாதங்கள் 20 நாட்களுக்குப் பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தனர்.
9 யோவாப் அரசனுக்குரிய ஜனங்களின் பட்டியலைக் கொடுத்தான். இஸ்ரவேலில் 8,00,000 ஆண்கள் வாளைப் பயன்படுத்தக் கூடியவர்கள். யூதாவிலும் 5,00,000 ஆண்கள் இருந்தனர்.
கர்த்தர் தாவீதைத் தண்டிக்கிறார்
10 ஜனங்கள் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது வெட்கமடைந்தான். தாவீது கர்த்தரை நோக்கி, “நான் செய்த இக்காரியத்தில் பெரும் பாவம் செய்தேன்! கர்த்தாவே! என் பாவத்தை மன்னிக்கும்படி நான் கெஞ்சுகிறேன். நான் மிகவும் மூடனாகிவிட்டேன்” என்றான்.
11 காலையில் தாவீது எழுந்தபோது, கர்த்தருடைய வார்த்தை தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்திற்கு வந்தது. 12 கர்த்தர் காத்தை நோக்கி, “போய் தாவீதிடம் கூறு, ‘இதுவே கர்த்தர் கூறுவது: நான் மூன்று காரியங்களை முன் வைக்கிறேன். நான் உனக்குச் செய்வதற்கு ஏதேனும் ஒன்றைத் தெரிந்துக்கொள் என்கிறார்’ என்று சொல்” என்றார்.
13 காத் தாவீதிடம், போய் அவ்வாறே கூறினான். அவன் தாவீதிடம், “இம்மூன்று காரியங்களிலும் ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் இத்தேசத்திற்கும் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரவேண்டுமா? மூன்று மாதங்கள் உங்கள் பகைவர்கள் உங்களைத் துரத்தவேண்டுமா? அல்லது மூன்று நாட்கள் உங்கள் தேசத்தாரை நோய் பாதிக்கட்டுமா? இதைக் குறித்து யோசித்துப் பாருங்கள், இவற்றில் எதை முடிவு செய்கிறீர்கள் என்பதை நான் என்னை அனுப்பிய கர்த்தருக்குக் கூற வேண்டும்” என்றான்.
14 தாவீது காத்தை நோக்கி “உண்மையிலேயே நான் துன்பத்துக்குள்ளானேன்! ஆனால் கர்த்தர் இரக்கமுள்ளவர். எனவே கர்த்தர் நம்மைத் தண்டிக்கட்டும். ஜனங்களிடமிருந்து எனக்குத் தண்டனை கிடைக்க வேண்டாம்” என்றான்.
15 எனவே கர்த்தர் இஸ்ரவேலில் நோயை அனுப்பினார். அது, காலையில் ஆரம்பித்துக் குறிப்பிட்ட காலம் மட்டும் நீடித்தது. தாணிலிருந்து பெயெர் செபாவரைக்கும் 70,000 பேர் மடிந்தனர். 16 தேவ தூதன் எருசலேமை அழிக்கும்படி அதற்கு நேராக தன் கரங்களை உயர்த்தினான். ஆனால் நடந்த தீய காரியங்களுக்காக கர்த்தர் மனம் வருந்தினார். ஜனங்களை அழித்த தூதனை கர்த்தர் நோக்கி, “போதும்! உனது கரங்களைத் தாழ்த்து” என்றார். எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு அருகே கர்த்தருடைய தூதன் நின்றுக்கொண்டிருந்தான்.
அர்வனாவின் போரடிக்கிற களத்தைத் தாவீது வாங்குகிறான்
17 ஜனங்களைக் கொன்ற தூதனை தாவீது பார்த்தான். தாவீது கர்த்தரிடம் பேசினான். தாவீது, “நான் பாவம் செய்தேன்! நான் தவறிழைத்தேன். இந்த ஜனங்கள் ஆடுகளைப் போன்று என்னைப் பின் பற்றினார்கள். அவர்கள் தவறேதும் செய்யவில்லை. என்னையும் எனது தந்தையின் குடும்பத்தையும் நீங்கள் தண்டியுங்கள்” என்றான்.
18 அன்றைய தினம் காத் தாவீதிடம் வந்தான். காத் தாவீதைப் பர்ர்த்து, “எபூசியனாகிய அர்வனாவின் களத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பு” என்றான். 19 காத் கூறியபடியே தாவீது செய்தான். கர்த்தர் விரும்பியபடியே தாவீது செய்தான். அர்வனாவைப் பார்க்க தாவீது சென்றான். 20 அரசனான தாவீதும் அவனது அதிகாரிகளும் தன்னிடம் வருவதை அர்வனா பார்த்தார். அர்வனா நிலத்தில் தலைதாழ்த்தி வணங்கினார். 21 பின் அர்வனா, “எனது ஆண்டவனும் அரசருமாகிய நீங்கள் ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
தாவீது அவனுக்கு, “உன்னிடமிருந்து போரடிக்கிற களத்தை வாங்குவதற்கு வந்தேன். அதில் கர்த்தருக்குப் பலிபீடம் அமைக்கமுடியும். அப்படி செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும்” என்றான்.
22 அர்வனா, தாவீதிடம், “எனது அரசனாகிய ஆண்டவன் தாங்கள் பலிகொடுக்க எதையும் என்னிடமிருந்து எடுக்கலாம். இந்தப் பசுக்களைத் தகனபலிக்காகவும், போரடிக்கிற உருளைகளையும், நுகத்தடிகளையும் விறகுக்காகவும் பயன்படுத்துங்கள். 23 அரசனே! நான் எல்லாவற்றையும் உங்களுக்கு தருவேன்!” என்றான் அர்வனா மீண்டும் அரசனுக்கு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் இதைக் கண்டு மகிழட்டும்” என்றான்.
24 ஆனால் அரசன் அர்வனாவுக்கு, “நான் உனக்கு உண்மையைச் சொல்வேன், உன் நிலத்தை ஒரு விலை கொடுத்துப் பெறுவேன். ஆனால் எனது தேவனாகிய கர்த்தருக்கு இலவசமாக கிடைத்த எந்த தகன பலியையும் செலுத்தமாட்டேன்” எனக் கூறினான்.
ஆகையால் தாவீது போரடிக்கிற களத்தையும் பசுக்களையும் 50 சேக்கல் வெள்ளிக்கு வாங்கினான். 25 பின்பு தாவீது ஒரு பலிபீடத்தை கர்த்தருக்காக கட்டினான். தாவீது அதில் தகனபலியையும் சமாதானபலியையும் அளித்தான். தேசத்திற்காகச் செய்யப்பட்ட தாவீதின் ஜெபத்திற்கு கர்த்தர் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலிலிருந்த நோய்களைப் பரவாமல் தடுத்தார்.
அதோனியா இராஜாவாக விரும்புகிறான்
1 தாவீது அரசன் வயதானபோது, அவன் உடல் சூடு குறைந்து கொண்டே வந்தது. அவனது வேலைக்காரர்கள் அவனைப் போர்வையால் மூடினார்கள், எனினும் அவனுக்குக் குளிராய் இருந்தது. 2 எனவே அவனது வேலைக்காரர்கள் அவனிடம், “உங்களை கவனித்துக்கொள்ள ஒரு சிறு பெண்ணைத் தேடுவோம். அவள் உங்கள் அருகே நெருக்கமாகப் படுத்து உங்களுக்கு சூட்டினை உண்டாக்குவாள்” என்றனர். 3 எனவே அரசனின் உடலில் சூடேற்றும் பொருட்டு அரசனின் வேலைக்காரர்கள் ஒரு அழகான சிறு பெண்ணை இஸ்ரவேல் நாடு முழுவதும் தேடினார்கள். அவர்கள் அபிஷாக் என்ற பெண்ணைக் கண்டுபிடித்தனர். அவள் சூனேம் நகரத்தவள். அவளை அவர்கள் அரசனிடம் அழைத்து வந்தனர். 4 அந்தப் பெண் மிகவும் அழகானவள். அவள் அரசனை மிகவும் கவனித்து சேவை செய்தாள். ஆனால் அரசனான தாவீது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளவில்லை.
5 தாவீதிற்கும் அவனது மனைவி ஆகீத்திற்கும் அதோனியா எனும் மகன் இருந்தான். அவன் பெருமிதம் கொண்டவனாகி அவனே புதிய அரசனாக ஆவான் என்று முடிவு செய்தான். அவனுக்கு அரசனாவதில் மிகுந்த விருப்பமும் இருந்தது. எனவே அவன் ஒரு இரதத்தையும், குதிரைகளையும், முன்னால் ஓட்டிப்போக 50 ஆட்களையும் ஏற்பாடு செய்துக் கொண்டான். 6 அவன் அழகான தோற்றம் உடையவன். அப்சலோமுக்குப்பிறகு பிறந்தவன். ஆனால் தாவீதோ அவனைத் திருத்தவில்லை, “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்றும் கேட்கவில்லை.
7 செருயாவின் மகனான யோவாபோடும் ஆசாரியனாகிய அபியத்தாரோடும் அதோனியா பேசினான். அவன் புதிய அரசனாக அவர்கள் உதவ முடிவு செய்தனர். 8 ஆனால் பலர் அதோனியாவின் செயலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து தாவீதிற்கு உண்மையானவர்களாக இருந்தனர். ஆசாரியனான சாதோக்கு, யோய்தாவின் மகனான பெனாயா, தீர்க்கதரிசியாகிய நாத்தான், சீமேயி, ரேயி, தாவீதோடு இருந்த பலசாலிகள் போன்றோர் அதோனியாவுக்குச் சாதகமாக இல்லை.
9 ஒரு நாள், அதோனியா இன்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் மலையில் சில ஆடுகளையும், பசுக்களையும், கொழுத்த மிருகங்களையும் கொன்று சமாதானப் பலியாகக் கொடுத்தான். அவன் தன் தந்தையின் மற்ற மகன்களான சகோதரர்களையும், யூதாவிலுள்ள அதிகாரிகளையும் அழைத்திருந்தான். 10 ஆனால் அவன் தந்தையின் சிறப்பான மெய்க்காவலாளியையும், தன் சகோதரனான சாலொமோனையும், தீர்க்கதரிசிகளாகிய நாத்தான், பெனாயா ஆகியோரையும் அழைக்கவில்லை.
நாத்தானும் பத்சேபாளும் சாலொமோனுக்காக பேசுதல்
11 ஆனால் நாத்தான், இதைப்பற்றி அறிந்து சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் சென்றான். அவளிடம் அவன், “ஆகீத்தின் மகனான அதோனியா என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறிவீர்களா? அவன் தன்னையே அரசனாக்கிக்கொண்டான். நமது ஆண்டவனும் அரசனுமான தாவீது இதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். 12 உங்கள் வாழ்வும், உங்கள் மகன் சாலொமோனின் வாழ்வும் ஆபத்தில் உள்ளது. நான் உங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியைப்பற்றிக் கூறுகிறேன். 13 அரசனிடம் செல்லுங்கள். அவனிடம், ‘என் அரசனும் ஆண்டவனுமானவரே! என் மகன் சாலொமோனே அடுத்த அரசனாக வருவான் என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது அதோனியா எவ்வாறு அரசனாக வரமுடியும்?’ என்று சொல்லுங்கள். 14 நீங்கள் அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, நான் அங்கே வருவேன். நீங்கள் போனபிறகு நானும் அரசனிடம் நடப்பவற்றைக் கூறுவேன். அதனால் நீங்கள் கூறியதும் உண்மையாக அவருக்குத் தோன்றும்” என்றான்.
15 எனவே பத்சேபாள் அரசனை அவனது படுக்கை அறையில் போய் பார்த்தாள். அரசன் முதியவனாயிருந்தான். சூனேமிலுள்ள பெண்ணான அபிஷாக் அவனைக் கவனித்துக்கொண்டிருந்தாள். 16 அவள் அரசனின் முன்பு குனிந்து வணங்கினாள். “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று அரசன் கேட்டான்.
17 பத்சேபாள் அவனிடம், “ஐயா உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்: ‘எனக்குப் பிறகு உன் மகனான சாலொமோனே அடுத்த அரசன். சாலொமோன் என் சிங்காசனத்தில் அமர்வான்’ என்று கூறியுள்ளீர்கள். 18 இப்போது, இதை அறியாமல் அதோனியா தன்னையே அரசனாக்கிக்கொண்டிருக்கிறான். 19 அவன் சமாதான விருந்தைக் கொடுக்கிறான். அவன் சமாதான பலிக்காக பல பசுக்களையும் சிறந்த ஆடுகளையும் கொன்றிருக்கிறான். அதற்கு அவன் உங்கள் அனைத்து மகன்களையும், ஆசாரியனான அபியத்தாரையும், தளபதியான யோவாபையும் அழைத்துள்ளான். ஆனால் உங்களுக்கு உண்மையுள்ள மகனான சாலொமோனை அழைக்கவில்லை. 20 எனது அரசனும் ஆண்டவனுமானவரே, இப்போது உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். உமக்குப் பிறகு அடுத்த அரசன் யார் என்பதை முடிவு செய்ய அவர்கள் உமக்காக காத்திருக்கிறார்கள். 21 நீங்கள் மரிப்பதற்கு முன் ஏதாவது செய்யவேண்டும். இல்லாவிட்டால், உங்களை அடக்கம் செய்த பிறகு, அவர்களால் நானும் என் மகன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள்.
22 இவ்வாறு அவள் அரசனோடு பேசிக் கொண்டிருக்கும்போதே, தீர்க்கதரிசியான நாத்தான் வந்தான். 23 வேலைக்காரர்கள் அரசனிடம் போய், “தீர்க்கதரிசியான நாத்தான் வந்துள்ளார்” என்றனர். எனவே நாத்தான் அரசனிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். 24 பிறகு அவன், “எனது ஆண்டவனும் அரசனுமானவரே, உங்களுக்குப் பிறகு அதோனியாதான் அடுத்த அரசன் என்று நீங்கள் அறிவித்துள்ளீர்களா? இனி அதோனியாதான் ஜனங்களை ஆள்வான் என்று முடிவு செய்துவிட்டீர்களா? 25 ஏனென்றால் அவன் இன்று பள்ளத்தாக்குக்குப் போய், பல பசுக்களையும், ஆடுகளையும் சமாதானப் பலியாகக் கொடுத்துள்ளான். அதற்கு சாலொமோனைத் தவிர அனைத்து மகன்களையும் அழைத்துள்ளான். படைத் தலைவர்களும் ஆசாரியனான அபியத்தாரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவனோடு அவர்கள், உண்டும் குடித்தும் மகிழ்கின்றனர். அவர்கள், ‘அதோனியா அரசன் நீண்டகாலம் வாழட்டும்!’ என்று வாழ்த்துகின்றனர். 26 ஆனால் அவன் என்னையும், ஆசாரியனான சாதோக்கையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும், உங்கள் மகனான சாலொமோனையும் அழைக்கவில்லை. 27 எனது அரசனும் ஆண்டவனுமானவரே, நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் இதனைச் செய்தீர்களா? தயவு செய்து உங்களுக்குப் பிறகு யார் அரசனாவார்கள் என்பதை தெரிவியுங்கள்” என்றான்.
28 பிறகு அரசனாகிய தாவீது, “பத்சேபாளை உள்ளே வரச்சொல்!” என்றான். எனவே பத்சேபாளும் உள்ளே வந்தாள்.
29 பின்னர் அரசன், ஒரு வாக்குக்கொடுத்தான்: “தேவனாகிய கர்த்தர்தாமே என்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி இருக்கிறார். கர்த்தர் உயிருடன் இருப்பதைப் போலவே, இவ்வாக்குறுதியும் உறுதியானது. 30 நான் முன்பு உனக்கு ஆணையிட்டபடியே இன்று செயலாற்றுவேன், இதனை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய வல்லமையால் வாக்குறுதியளிக்கிறேன். எனக்குப் பின் உன் மகனான சாலொமோனே அரசனாவான். எனது இடத்தையும் அவன் பிடித்துக்கொள்வான். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்!” என்றான்.
31 பிறகு பத்சேபாள் தரையில் குனிந்து அரசனை வணங்கினாள். அவள், “தாவீது அரசன் நீண்டகாலம் வாழ்வாராக!” என்று வாழ்த்தினாள்.
சாலொமோன் புதிய அரசனாக தேர்ந்தெடுக்கப்படுதல்
32 பிறகு தாவீது அரசன், “ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் மகனான பெனாயா ஆகியோரை உள்ளே வரச்சொல்” என்றான். எனவே மூன்று பேரும் உள்ளே வந்து அரசன் முன்பு நின்றனர். 33 அவன் அவர்களிடம், “எனது அதிகாரிகளை உங்களோடு அழைத்துக்கொள்ளுங்கள். என் மகனாகிய சாலொமோனை என் கோவேறு கழுதையின்மேல் ஏற்றுங்கள். அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுப் போங்கள். 34 அங்கே, ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்யட்டும். பின் எக்காளத்தை ஊதி, ‘புதிய அரசனாகிய சாலொமோன் வாழ்க!’ என்று வாழ்த்துங்கள். 35 பிறகு அவனை நகர்வலம் செய்து என் சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அவனே எனது இடத்தில் அரசனாக இருப்பான். இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் தலைவனாக இருக்கும்படி அவனைத் தேர்ந்தெடுத்தேன்” என்றான்.
36 யோய்தாவின் மகனான பெனாயா, “எனது அரசனும் ஆண்டவனுமானவரே, தேவனாகிய கர்த்தரும் இவ்வாறே சொன்னார். 37 என் அரசனும் ஆண்டவனுமானவரே! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். இனி சாலொமோனோடும் கர்த்தர் இருப்பார் என்று நம்புவோமாக! அவனது அரசாங்கம் வளர்ந்து உங்களுடையதைவிட அதிக வலிமையுள்ளதாகும் என்று நம்புகிறேன்” என்றான்.
38 எனவே ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் மகனான பெனாயா, மற்றும் அரசு அதிகாரிகள் தாவீது அரசனுக்குக் கீழ்ப்படிந்தனர். சாலொமோனை அரசனுடைய கழுதையின் மேல் ஏற்றி கீகோனுக்கு அழைத்துச் சென்றனர். 39 ஆசாரியனான சாதோக் பரிசுத்த கூடாரத்தில் இருந்து எண்ணெயை எடுத்துச் சென்றான். அவனது தலையில் அதனை ஊற்றி அரசனாக அபிஷேகம் செய்தான். எக்காளம் ஊத மற்ற ஜனங்கள், “அரசன் சாலொமோன் நீண்ட காலம் வாழட்டும்!” என்று வாழ்த்தினார்கள். 40 பிறகு அனைவரும் சாலொமோனைப் பின்தொடர்ந்து நகருக்கு வந்தனர். நாதசுரங்களை ஊதினர். அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பூமி அதிரும்படி அவர்கள் சத்தத்தை எழுப்பினர்.
41 இதற்கிடையில், அதோனியாவும் அவனது விருந்தினரும் விருந்தை முடித்தனர். அவர்கள் எக்காள சத்தத்தைக் கேட்டனர். “இது என்ன சத்தம், நகரத்தில் என்ன நடக்கிறது?” என யோவாப் கேட்டான்.
42 அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஆசாரியனான அபியத்தாரின் மகனான, யோனத்தான் வந்தான்.
அதோனியா அவனிடம், “இங்கே வா! நீ நல்லவன். நல்ல செய்தியைக் கொண்டு வந்திருப்பாய்” என்றான்.
43 ஆனால் அவனோ, “இல்லை. இது உனக்கு நல்ல செய்தியில்லை! தாவீது அரசன் சாலொமோனைப் புதிய அரசனாக நியமித்துவிட்டான். 44 அவனோடு ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும், மற்ற அரச அதிகாரிகளையும் அனுப்பினான். அவர்கள் அரசனின் கழுதை மேல் அவனை ஏற்றினார்கள். 45 பின் ஆசாரியனான சாதோக்கும், தீர்க்கதரிசியான நாத்தானும் கீகோனில் அவனை அரசனாக அபிஷேகம் செய்தனர். பின் நகரத்திற்குள் வந்தனர். ஜனங்கள் அவனைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுதான் நீங்கள் கேட்கும் சத்தம், 46 சாலொமோன் இப்போது அரச சிங்காசனத்தில் இருக்கிறான். 47 அனைத்து அதிகாரிகளும் அரசர் தாவீதுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், ‘தாவீது அரசனே, நீ மிகப் பெரிய அரசன்! சாலொமோனையும் மிகப் பெரிய அரசனாக்கும்படி உங்கள் தேவனிடம் இப்போது நாங்கள் ஜெபம் செய்கிறோம். உங்கள் தேவன் உங்களைவிடவும் சாலொமோனைப் புகழுள்ளவனாக்குவார் என்று நம்புகிறோம். மேலும் உங்கள் அரசாங்கத்தைவிட சாலொமோனின் அரசாங்கம் பெரியதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்!’” என்று வாழ்த்தினர்.
அங்கே தாவீது அரசனும் இருந்தான். படுக்கையிலேயே அவன் குனிந்து வணங்கினான். 48 அரசன் தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள். என் சிங்காசனத்தில் என் மகனையே கர்த்தர் உட்காரவைத்துள்ளார். இதைத் தொடர்ந்து காண எனக்கு ஜீவனைக் கொடுத்தார்” என்று சொன்னான்.
49 அதோனியாவின் விருந்தினர் பயந்து வேகமாக வெளியேறினார்கள். 50 அதோனியாவும் சாலொமோனுக்குப் பயந்தான். அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான். [b] 51 சிலர் சாலொமோனிடம் போய், “அதோனியா உங்களைக் கண்டு அஞ்சுகிறான். அவன் பரிசுத்த கூடாரத்தில் பலி பீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். அவன், ‘என்னை கொல்லமாட்டேன் என சாலொமோனை வாக்குறுதி தரச்சொல்லுங்கள்’ என்கிறான்” என்றார்கள்.
52 எனவே சாலொமோன், “அதோனியா தன்னை நல்லவன் என்று காட்டினால், நான் அவனது தலையிலுள்ள ஒரு மயிருக்குக்கூட தீங்குச் செய்யமாட்டேன். அவனிடம் கேடு இருந்தால், அவன் மரிக்க வேண்டும்” என்று பதில் சொன்னான். 53 பிறகு சிலரை அனுப்பி அதோனியாவை அழைத்தான். அவர்கள் அவனை அழைத்துவந்தனர். அதோனியா வந்து சாலொமோனை பணிந்து வணங்கினான். அதற்கு சாலொமோன், “வீட்டிற்குப் போ” என்று சொன்னான்.
தாவீது ராஜாவின் மரணம்
2 தாவீது மரித்துப்போவதற்குரிய நேரம் வந்தது. எனவே அவன் சாலொமோனிடம் சொல்லும்போது 2 “நான் எல்லா மனிதரையும் போலவே மரிக்க இருக்கிறேன். ஆனால் நீ மேலும் பலத்தில் வளர்ந்து மனிதனாக இரு. 3 இப்போது, உனது தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்து நட. நீ அனைத்து சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும், முடிவுகளுக்கும் உடன்படிக்கைகளுக்கும் கீழ்ப்படி. மோசேயின் சட்டங்களில் எழுதப்பட்ட அனைத்திற்கும் கீழ்ப்படிந்திரு. நீ இவற்றைச் செய்தால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் நீ போகிற அனைத்து திட்டங்களிலும் வெற்றிபெற்றவன் ஆவாய். 4 நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்லிய வழிகளில் உன் பிள்ளைகள் கவனமாகவும் மனதுக்கு உண்மையாகவும் நடந்தால், பின்னர் இஸ்ரவேலரின் அரசன் உன் குடும்பத்தில் உள்ள ஒருவனாகவே இருப்பான்’ என்றார்” என்றான்.
5 தாவீது மேலும், “செருயாவின் மகனான யோவாப் எனக்கு என்ன செய்தான் என்பதை நினைத்துப் பார். அவன் இஸ்ரவேலரின் படையிலுள்ள இரண்டு தளபதிகளைக் கொன்றான். அவன் நேரின் மகனான அப்னேரையும் ஏத்தேரின் மகனான அமாசாவையும் கொன்றான். அவன் இவர்களைச் சமாதானக் காலத்தின்போது கொன்றான் என்பதை நினைத்துப்பார். இம்மனிதர்களின் இரத்தமானது அவனது அரைக்கச்சையிலும் கால்களிலுள்ள பாதரட்சைகளிலும் படிந்தது. நான் அவனைத் தண்டித்திருக்க வேண்டும். 6 ஆனால் இப்போது நீ தான் அரசன். எனவே நீ விரும்புகிற வழியில் அவனைத் தண்டிப்பதுதான் மிகப் புத்திசாலித்தனமானது. ஆனால் அவன் கொல்லப்படவேண்டியவன் என்பதில் மட்டும் நீ உறுதியாக இருக்கவேண்டும். அவனைத் தன் முதுமையில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே!
7 “கீலேயாத்தியனான பர்சிலாயின் பிள்ளைகளுக்கு இரக்கம் காட்டு. அவர்களை உனது நண்பர்களாக்கி உனது மேஜையிலேயே உணவு உண்ணச் செய். நான் உன் சகோதரனாகிய அப்சலோமிடமிருந்து ஓடிப்போகும்போது அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.
8 “கேராவின் மகனான சீமேயி இன்னும் இங்கே தான் இருக்கிறான் என்பதை நினைத்துக்கொள். அவன் பகூரிமின் ஊரைச் சார்ந்த பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன். நான் மக்னாயீமுக்குப் போகும்போது அவன் என்னை மோசமாக சபித்தான். ஆனாலும் நான் யோர்தானுக்குப் போனதும் அவன் என்னை வரவேற்றதால் நான் உன்னை வாளால் கொல்வதில்லை என்று கர்த்தர் மேல் வாக்குறுதிக் கொடுத்துவிட்டேன். 9 எனினும், அவனை குற்றமற்றவன் என்று எண்ணி நீ தண்டிக்காமல் விட்டுவிடாதே. அவனை என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியும். அவனையும் முதியவயதில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே” என்றான்.
10 பின்னர் தாவீது மரித்தான். அவன் தாவீது நகரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டான். 11 இஸ்ரவேலை 40 ஆண்டு தாவீது அரசாண்டான். அதாவது 7 ஆண்டுகள் எப்ரோனிலும் 33 ஆண்டுகள் எருசலேமிலும் ஆண்டான்.
Solomon and Adonijah சாலொமோன் தன் இராஜ்யத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்
12 இப்போது சாலொமோன் அரசன் தனது தந்தையின் சிங்காசனத்தில் அமர்ந்தான். அவன் ராஜ்யபாரம் முழுவதையும் தன் ஆளுகையின்கீழ் கொண்டு வந்தான்.
13 ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் வந்தான். அவள் அவனிடம், “நீ சமாதானத்தோடு வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.
அவனோ, “ஆமாம், இது ஒரு சமாதான வருகையே ஆகும். 14 நான் உங்களிடம் சொல்வதற்கு ஒரு காரியம் இருக்கிறது” என்றான். பத்சேபாள், “அப்படியென்றால் சொல்” என்றாள்.
15 அதோனியா, “ஒரு காலத்தில் அரசாங்கம் எனக்குரியதாயிருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் அடுத்த அரசன் நான்தான் என்று எண்ணினார்கள். ஆனால் நிலைமை மாறிவிட்டது. இப்போது எனது சகோதரன் அரசனாகிவிட்டான். கர்த்தர் அவனை அரசனாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். 16 இப்போது உங்களிடம் கேட்க ஒரு காரியம் உள்ளது. தயவு செய்து மறுத்துவிடாதீர்கள்” என்றான். பத்சேபாள், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.
17 அதோனியா, “அரசனாகிய சாலொமோனிடம் நீ என்ன கேட்டாலும் அவன் கொடுப்பான் என்பது எனக்குத் தெரியும். அவன், நான் சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணக்கும்படி செய்யவேண்டும்” என்று கேட்டான்.
18 பிறகு பத்சேபாள், “நல்லது இதுபற்றி உனக்காக அரசனிடம் பேசுவேன்” என்றாள்.
19 எனவே பத்சேபாள் அரசன் சாலொமோனிடம் பேசுவதற்காகப் போனாள். சாலொமோன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றான். அவன் குனிந்து வணங்கி பிறகு உட்கார்ந்தான். அவளுக்கு இன்னொரு சிங்காசனம் கொண்டுவரும்படி வேலைக்காரர்களிடம் கூறினான். அவனது வலது பக்கத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள்.
20 பத்சேபாள் அவனிடம், “நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய காரியம் உள்ளது. தயவுசெய்து மறுத்துவிடாதே” என்றாள்.
அதற்கு அரசன், “அம்மா, நீங்கள் என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். நான் மறுக்கமாட்டேன்” என்றான்.
21 எனவே பத்சேபாள், “உனது சகோதரனான அதோனியா சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும்” என்றாள்.
22 அதற்கு அவன் தன் தாயிடம், “அபிஷாகை அதோனியாவிற்குக் கொடுக்கும்படி நீ ஏன் வேண்டுகிறாய். அவனையே அரசனாக்கிவிடு என்று நீ ஏன் கேட்கவில்லை. இத்தனைக்கும் அவன் எனக்கு மூத்தசகோதரன் தானே! ஆசாரியனான அபியத்தாரும் யோவாபும் அவனுக்கு பக்கபலமாக இருப்பார்கள்!” என்றான்.
23 பிறகு சாலொமோன் கர்த்தரிடம் ஒரு வாக்குறுதி செய்துகொடுத்தான். “நான் இதற்குரிய விலையை அதோனியாவை செலுத்தச் செய்வேன்! அது அவனது உயிராகவும் இருக்கும்! 24 கர்த்தர் என்னை இஸ்ரவேலின் அரசனாக்கினார். என் தந்தை தாவீதிற்கு உரிய சிங்காசனத்தை நான் பெறுமாறு செய்தார். கர்த்தர் தன் வாக்குறுதியைக்காத்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஆட்சியை அளித்தார். நான் கர்த்தர்மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று அதோனியா கொல்லப்படுவான்” என்றான்.
25 அரசனான சாலொமோன் அதை பெனாயாவிற்கு கட்டளையிட்டான். அவன் சென்று அதோனியாவைக் கொன்று விட்டான்.
26 பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம் அரசனான சாலொமோன், “நான் உன்னைக் கொல்ல வேண்டும். ஆனால் உன்னை உனது வீடு இருக்கிற ஆனதோத்திற்குப் போக அனுமதிக்கிறேன். நான் இப்போது உன்னைக் கொல்லமாட்டேன். ஏனென்றால் என் தந்தையோடு பயணம்செய்யும்போது கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றாய். என் தந்தையின் துன்பங்களிலும் பங்கு பெற்றிருக்கிறாய் என்று தெரியும்” என்றான். 27 சாலொமோன் ஆசாரியனாகிய அபியத்தாரிடம் மேலும் தொடர்ந்து அவன் கர்த்தருக்கு சேவை செய்யமுடியாது என்றும் சொன்னான். இது கர்த்தர் சொன்ன வழியிலேயே நிகழ்ந்தது. சீலோவில் தேவன் ஆசாரியனான ஏலி பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் இவ்வாறுதான் சொன்னார். அபியத்தாரும் ஏலியின் குடும்பத்தினன்தான்.
28 யோவாப், இதைப்பற்றி கேள்விப்பட்டதும் அஞ்சினான். அவன் அப்சலோமிற்கு உதவாவிட்டாலும் அதோனியாவிற்கு உதவியிருக்கிறான். அவன் கர்த்தருடைய கூடாரத்துக்கு ஓடிப்போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான். 29 யாரோ ஒருவன் சாலொமோனிடம் போய், யோவாப் கர்த்தருடைய கூடாரத்தில் பலிபீடத்தருகில் இருப்பதாய் சொன்னான். எனவே சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவிடம் அங்குபோய் அவனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.
30 பெனாயா கர்த்தருடைய கூடாரத்திற்குப் போய் யோவாபிடம், “வெளியே வா! என அரசன் சொல்கிறான்” என்றான்.
ஆனால் யோவாபோ, “இல்லை, நான் இங்கேயே மரிக்கிறேன்” என்றான்.
எனவே பெனாயா அரசனிடம் திரும்பி வந்து யோவாப் சொன்னதைச் சொன்னான்.
31 பிறகு அரசன் பெனாயாவை நோக்கி, “அவன் சொல்வதுபோன்று செய்! அங்கேயே அவனைக் கொன்று புதைத்துவிடு. பின்னரே நானும் எனது குடும்பமும் பழியிலிருந்து விடுதலை பெறுவோம். அப்பாவி ஜனங்களை கொன்றதுதான் யோவாப் செய்த குற்றம். 32 யோவாப் அவனைவிட மிகச்சிறந்த இரண்டு பேரைக் கொன்றிருக்கிறான். அவர்கள் நேரின் மகனான அப்னேரும் ஏதேரின் மகனான அமாசாவும் ஆவார்கள். அப்னேர் இஸ்ரவேல் படையின் தளபதியாகவும் அமாசா யூதேயா படையின் தளபதியாகவும் இருந்தனர். அந்தக் காலத்தில் அவர்களை யோவாப்தான் கொன்றான் என்பது என் தந்தையான தாவீதிற்குத் தெரியாது. எனவே கர்த்தர் அவனைக் கொலையுறும்படி தண்டித்துள்ளார். 33 அவர்களின் மரணத்துக்கு அவனே காரணம், அவனது குடும்பத்திற்கும் இப்பழி எக்காலத்திற்கும் உரியதாகும். ஆனால் தேவன் தாவீதிற்கும், அவனது சந்ததியினருக்கும், குடும்பத்திற்கும், அரசாங்கத்திற்கும் எக்காலத்திலும் சமாதானத்தை உருவாக்குவார்” என்றான்.
34 எனவே, யோய்தாவின் மகனான பெனாயா யோவாபைக் கொன்றான். அப்பாலைவனத்திலேயே, அவனது வீட்டிற்கு அருகிலேயே யோவாப் அடக்கம் செய்யப்பட்டான். 35 பிறகு யோவாபின் இடத்தில் யோய்தாவின் மகனான பெனாயாவைத் தனது படைத்தளபதியாக அரசன் நியமித்தான். அபியத்தாரின் இடத்தில் சாதோக்கை சாலொமோன் தலைமை ஆசாரியனாக நியமித்தான். 36 பிறகு சீமேயியை வரவழைத்தான். அரசன் அவனிடம், “எருசலேமிலே உனக்கென்று ஒரு வீட்டைக் கட்டி அதிலே வாழ்ந்து கொள். நகரத்தை விட்டு வெளியே போகாதே. 37 நீ நகரத்தை விட்டு கீதரோன் ஆற்றை தாண்டிச் சென்றால் கொல்லப்படுவாய். அது உனது சொந்த தவறாக இருக்கும்” என்றான்.
38 எனவே சீமேயி, “அரசனே! அது நல்லது. நான் உங்களுக்குக் கீழ்ப்படிவேன்” என்றான். அதனால் எருசலேமில் நீண்ட காலம் அவன் வாழ்ந்தான். 39 ஆனால் மூன்று ஆண்டுகள் கழிந்ததும், அவனது இரண்டு அடிமைகள் அவனைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் காத் நகர அரசனான மாக்காவின் மகனான ஆகீஸிடம் ஓடிச் சென்றனர். சீமேயிக்கு தனது அடிமைகள் காத் நகரில் இருப்பது தெரியவந்தது. 40 எனவே சீமேயி தனது கழுதையின் மீது சேணத்தைப் போட்டு காத்திலுள்ள ஆகீஸ் அரசனிடம் சென்றான். அவன் தன் அடிமைகளைக் கண்டுபிடித்து வீட்டிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்தான்.
41 ஆனால் சிலர் சாலொமோனிடம் சீமேயி எருசலேமிலிருந்து காத்திற்குச்சென்று திரும்பியதைப் பற்றி சொன்னார்கள். 42 எனவே சாலொமோன் அவனை அழைத்துவரச் செய்தான். அரசன், “நீ எருசலேமை விட்டுச்சென்றால் கொல்லப்படுவாய் என்று நான் கர்த்தருடைய பேரால் ஆணைச் செய்து உன்னை எச்சரித்துள்ளேன். நீ எங்காவது சென்றால், உன் மரணத்துக்கு உன் தவறே காரணம் என்றும் எச்சரித்திருக்கிறேன். நான் சொன்னதற்கு நீயும் ஒப்புக்கொண்டிருக்கிறாய். எனக்குக் கீழ்ப்படிவதாகக் கூறினாய். 43 உனது சத்தியத்திலிருந்து ஏன் தவறினாய்? எனது கட்டளைக்கு ஏன் கீழ்ப்படியவில்லை 44 என் தந்தை தாவீதிற்கு எதிராகப் பல தவறுகளை நீ செய்துள்ளாய் என்பதை அறிவேன். இப்போது அத்தவறுகளுக்குக் கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார். 45 ஆனால் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார். அவர் தாவீதின் அரசாங்கத்தை என்றென்றும் பாதுகாப்பார்” என்றான்
46 பிறகு அரசன் பெனாயாவிடம் சீமேயியைக் கொல்லுமாறு ஆணையிட்டான். அவனும் அப்படியே செய்தான். இப்போது சாலொமோன் தன் அரசாங்கத்தை தன் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான்.
சாலொமோன் ஞானத்தைக் கேட்டல்
3 சாலொமோன், பார்வோன்எனும் எகிப்திய மன்னனோடு, ஒப்பந்தம் செய்து அவனது மகளை திருமணம் செய்துகொண்டான். சாலொமோன் அவளை தாவீது நகரத்திற்கு அழைத்து வந்தான். அப்போது, சாலொமோன் தனது அரண்மனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் கட்டிக்கொண்டிருந்தான். அவன் எருசலேமைச் சுற்றிலும் ஒரு சுவரையும் கட்டிக்கொண்டிருந்தான். 2 ஆலயம் முடிக்கப்படாமல் இருந்தது. எனவே ஜனங்கள் பொய் தெய்வங்களின் பலிபீடங்களில் மிருகங்களைப் பலிகொடுத்து வந்தனர். 3 சாலொமோன் கர்த்தரை நேசிப்பதாகக் காட்டிக்கொண்டான். அவனது தந்தையான தாவீது சொன்னதற்கெல்லாம் கீழ்ப்படியும்பொருட்டு அவன் இவ்வாறு செய்து வந்தான். அதனால் அதோடு தாவீது சொல்லாத சிலவற்றையும் அவன் செய்துவந்தான். அவன் மேடைகளுக்குப் பலி கொடுப்பதையும் நறுமணப்பொருட்களை எரிப்பதையும் இன்னும் கடைப்பிடித்தான்.
4 அரசனான சாலொமோன் கிபியோனுக்குச் சென்று பலிகொடுத்தான். அது மிகவும் முக்கியமான தெய்வீகஇடம் என்பதால் அவன் அங்கே சென்றான். அவன் பலிபீடத்தில் 1,000 பலிகளைச் செய்தான். 5 சாலொமோன் கிபியோனில் இருந்தபோது. அன்று இரவு கனவில் கர்த்தர் வந்தார். தேவன், “உனக்கு என்ன வேண்டுமோ கேள் அதனை நான் உனக்கு தருவேன்” என்றார்.
6 சாலொமோனும், “உங்கள் ஊழியனான என் தந்தை தாவீதிடம் நீர் மிகுந்த கருணையுடன் இருந்தீர். அவரும் உம்மை பின்பற்றினார். அவர் நல்லவராகவும் சரியானவராகவும் வாழ்ந்தார். அவரது மகனை அவருக்குப் பின் சிங்காசனத்தில் அமர வைத்ததன் மூலம் கருணையைக் காட்டிவிட்டீர். 7 என் தேவனாகிய கர்த்தாவே, என் தந்தையின் இடத்தில் என்னை அரசனாக்கினீர். ஆனால் நான் ஒரு குழந்தையைப்போன்று இருக்கிறேன். நான் செய்யவேண்டியதைச் செய்வதற்குரிய ஞானம் இல்லாமல் இருக்கிறேன். 8 உங்கள் ஊழியனான நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருவனாக இருக்கிறேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருக்கின்றனர். அவர்கள் கணக்கிட மிகுதியாக இருந்தனர். ஒரு அரசன் அவர்கள் மத்தியில் பல முடிவுகளை எடுக்க வேண்டியவனாக இருக்கிறான். 9 எனவே எனக்கு ஞானத்தைத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனால் நான் ஜனங்களைச் சிறப்பாக ஆளவும் சரியான வழியில் நியாயந்தீர்க்கவும் இயலும். இது நான் நல்லதுக்கும் தீமைக்குமான வேறுபாட்டை அறிந்துக்கொள்ளச் செய்யும். மிகப் பெரிய இந்த ஞானம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உள்ள மனிதர்களை ஆள்வது முடியாத செயல்” என்று வேண்டினான்.
10 இவ்வாறு சாலொமோன் வேண்டியதைக் கேட்டு கர்த்தர் மிகவும் மகிழ்ந்தார். 11 தேவன் அவனிடம், “நீ உனக்காக நீண்ட ஆயுளைக் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உனக்காக பெரிய செல்வத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உன் எதிரிகளின் மரணத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை. நீயோ வழக்குகளைக் கவனிக்கவும் சரியான முடிவை எடுக்கவும் ஞானத்தைக் கேட்கிறாய். 12 எனவே நீ கேட்டதை நான் உனக்குத் தருவேன். ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தருவேன். இதற்கு முன் இதுபோல யாரும் இருந்ததில்லை என்று சொல்லும்படி உனது ஞானத்தை மகத்தான தாக்குவேன். அதோடு எதிர்காலத்திலும் உன்னைப் போல் யாரும் இருக்கமாட்டார்கள். 13 அதோடு, நீ கேட்காத சிலவற்றையும் உனக்குப் பரிசுகளாகத் தருவேன். உனது வாழ்க்கை முழுவதும் நீ செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குவாய். இந்த உலகில் உன்னைப்போல் எந்த அரசரும் இல்லை என்று செய்வேன். 14 என்னைப் பின்பற்றுமாறும் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறும் கேட்டுக்கொள்கிறேன். உன் தந்தை தாவீது செய்ததுபோல் செய். அவ்வாறு செய்தால், உனக்கு நீண்ட ஆயுளையும் தருவேன்” என்றார்.
15 சாலொமோன் விழித்தபொழுது, கனவிலே தேவன் பேசினார் என்று அவனுக்குத் தெரிந்தது. பின் அவன் எருசலேம் போய் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் முன்பு நின்று கர்த்தருக்குத் தகனபலியைச் செலுத்தினான். கர்த்தருக்குத் சமாதான பலியையும் தந்தான். பின், அவன் தன் ஆட்சிக்கு உதவும் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விருந்துகொடுத்தான்.
16 ஒரு நாள் இரு வேசிகள் சாலொமோனிடம் வந்தனர். அவர்கள் அரசன் முன்பு நின்றனர். 17 அதில் ஒருத்தி, “ஐயா, இவளும் நானும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் கர்ப்பமாகி குழந்தைப் பேற்றுக்குத் தயாராக இருந்தோம். நான் குழந்தை பெறும்போது இவளும் கூட இருந்தாள். 18 மூன்று நாட்களுக்குப் பின் இவளும் குழந்தைப் பெற்றாள். அந்த வீட்டில் எங்களைத் தவிர எவரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டும்தான் இருந்தோம். 19 ஒரு இரவில் இவள் தன் குழந்தையோடு தூங்கும்போது, குழந்தை மரித்துப்போனது. 20 அப்பொழுது நான் தூங்கிக்கொண்டிருந்ததால், இவள் என் குழந்தையை எடுத்துக்கொண்டாள். அவளது மரித்த குழந்தையை என் கையருகில் போட்டுவிட்டாள். 21 மறுநாள் காலையில் எழுந்து என் குழந்தைக்குப் பால் கொடுக்க முயன்றேன். ஆனால் குழந்தை மரித்திருப்பதை அறிந்தேன். பிறகு உற்றுப்பார்த்தபோது அது என் குழந்தையல்ல என்பதை அறிந்துகொண்டேன்” என்றாள்.
22 ஆனால் அடுத்தவள், “இல்லை உயிரோடுள்ள குழந்தை என்னுடையது. மரித்துப்போன குழந்தை உன்னுடையது” என்றாள்.
ஆனால் முதல் பெண், “இல்லை நீ தவறாக சொல்கிறாய்! மரித்த குழந்தை உன்னுடையது. உயிருள்ள குழந்தை என்னுடையது” என்றாள். இவ்வாறு இருவரும் அரசனுக்கு முன்பு வாக்குவாதம் செய்து கொண்டனர்.
23 பிறகு சாலொமோன் அரசன், “இருவருமே உயிரோடுள்ள குழந்தை உங்களுடையது என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருத்தியும் மரித்துப்போன குழந்தை மற்றவளுடையது என்று கூறுகிறீர்கள்” என்றான். 24 பிறகு சாலொமோன் வேலைக்காரனை அனுப்பி ஒரு வாளைக் கொண்டுவரச் செய்தான். 25 பின்னர் அவன், “நம்மால் செய்யமுடிந்தது இதுதான். உயிரோடுள்ள குழந்தையை இரு துண்டுகளாக வெட்டுவோம். ஆளுக்குப் பாதியைக் கொடுப்போம்” என்றான்.
26 இரண்டாவது பெண், “அதுதான் நல்லது. குழந்தையை இரண்டாக வெட்டுங்கள். பிறகு இருவருக்குமே கிடைக்காமல் போகும்” என்றாள்.
ஆனால் முதல் பெண், அக்குழந்தை மேல் மிகுந்த அன்பு கொண்டவள். அவளே உண்மையான தாய், அவள் அரசனிடம், “ஐயா அந்தக் குழந்தையைக் கொல்லவேண்டாம்! அதனை அவளிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள்.
27 பிறகு சாலொமோன், “அக்குழந்தையைக் கொல்லவேண்டாம். அதனை முதல் பெண்ணிடமே கொடுத்துவிடுங்கள். அவளே உண்மையான தாய்” என்றான்.
28 இஸ்ரவேல் ஜனங்கள் சாலொமோனின் முடி வைப்பற்றி கேள்விப்பட்டனர். அவனது அறிவுத் திறனைப் பாராட்டி அவனைப் பெரிதும் மதித்தனர். அவன் தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்று சரியான முடிவுகளை எடுத்துள்ளான் என்று அறிந்தனர்.
சாலொமோனின் இராஜ்யம்
4 சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் ஆண்டான். 2 கீழ்க்கண்ட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவனது ஆட்சிக்கு உதவினார்கள்.
சாதோக்கின் மகனான அசரியா ஆசாரியனாக இருந்தான்.
3 சீசாவின் மகனான ஏலிகோரேப்பும், அகியாவும் எழுத்தாளர்கள்.
அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளர்.
4 யோய்தாவின் மகன் பெனாயா படைத் தலைவன்.
சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்கள்.
5 நாத்தானின் மகன் அசரியா மணியக்காரர்களின் தலைவன்.
நாத்தானின் மகன் சாபூத் அரசனின் அன்புக்குரிய பிரதானியும், ஆசாரியனுமாயிருந்தான்.
6 அகீஷார் அரண்மனை விசாரிப்புக்காரன்.
அப்தாவின் மகன் அதோனிராம் அடிமைகளுக்கு பொறுப்பு அதிகாரி.
7 இஸ்ரவேல் பன்னிரெண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. சாலொமோன் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஆள ஆளுநர்களை தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்களைச் சேகரித்து அரசனுக்கும் அவனது குடும்பத்திற்கும் அளித்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 8 கீழ்க்கண்டவர்களே அந்தப் பன்னிரண்டு ஆளுநர்களாவார்கள்:
எப்பிராயீம் மலைநாட்டின் ஆளுநர் ஊரின் குமாரன்.
9 தேக்கேரின் குமாரன், மாக்காத்சிலும், சால்பீமிலும் பெத்ஷிமேசிலும், ஏலோன் பெத்தானானிலும் ஆளுநராக இருந்தான்.
10 ஏசேதின் குமாரன் அறுபோத்திலும், சோகோப்பிலும், எப்பேர் சீமையிலும் ஆளுநராக இருந்தான்.
11 அபினதாபின் மகன் இரதத்தின் ஆளுநர்.
இவன் சாலொமோனின் மகளான தாபாத்தை மணந்திருந்தான்.
12 அகிலூதின் மகனான பானா, தானாகு, மெகிதோ, சர்த்தனாவுக்கு அருகிலும் ஆளுநர்.
இது யெஸ்ரயேலுக்கு கீழாகவும் பெத்செயான் முதல் ஆபேல்மெகொல்லா வரையிலும் யக்மெயாமுக்கு அப்புறம் மட்டும் இருந்தது.
13 ராமோத் கீலேயாத்தின் ஆளுநராக கேபேரின் மகன் இருந்தான்.
கீலேயாத் மனாசேயின் மகனான யாவீரின் எல்லா ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் அவன் ஆளுநராக இருந்தான்.
மேலும் பாசானில் அர்கோப் மாவட்டத்திற்கும் அவன் ஆளுநராக இருந்தான்.
இப்பகுதியில் பெரிய மதில்களைக்கொண்ட 60 நகரங்கள் இருந்தன.
இந்த நகரங்களின் வாயில்களில் வெண்கலக்கம்பிகளும் இருந்தன.
14 இத்தோவின் மகனான அகினதாப் மக்னாயீமில் ஆளுநர்.
15 அகிமாஸ் நப்தலியில் ஆளுநர்.
இவன் சாலொமோனின் மகளான பஸ்மாத்தை மணந்திருந்தான்.
16 ஊசாயின் மகனான பானா ஆசேரிலும் ஆலோத்திலும் ஆளுநர்.
17 பருவாவின் மகன் யோசபாத் இசக்காரின் ஆளுநர்.
18 ஏலாவின் மகன் சீமேயி பென்யமீனில் ஆளுநர்.
19 ஊரியின் மகன் கேபேர் கீலேயாத் நாட்டில் ஆளுநர்.
இங்கு எமோரியரின் அரசனாகிய சீகோனும் பாசானின் அரசனாகிய ஓகு ஜனங்களும் வாழ்ந்தனர்.
எனினும் இவன் மட்டுமே இங்கு ஆளுநராக இருந்தான்.
20 யூதாவிலும், இஸ்ரவேலிலும் ஏராளமான ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தது. அவர்கள் உண்டும், குடித்தும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
21 சாலொமோன், ஐபிராத்து ஆறு முதல் பெலிஸ்தர் நாடுவரையுள்ள நாடுகளை ஆண்டு வந்தான். அவனது எல்லை எகிப்து வரை விரிந்திருந்தது. இந்நாடுகள் சாலொமோனுக்குப் பரிசுகளை அனுப்பி அவனது வாழ்வு முழுவதும் கட்டுபட்டு வாழ்ந்தது.
22-23 சாலொமோனுக்கும் அவனோடு மேஜையில் உணவைச் சேர்ந்து உண்ணும் மற்றவர்களுக்கும் ஒரு நாளுக்கு கீழ்க்கண்ட பொருட்கள் தேவைப்பட்டன:
30 மரக்கால் மெல்லியமாவு, 60 மரக்கால் மாவு, 10 கொழுத்த பசுமாடுகள், 2 நன்றாக மேய்ந்த பசுமாடுகள், 100 ஆடுகள், கலைமான்கள், வெளிமான்கள், பறவைகள்.
24 சாலொமோன் ஐபிராத்து ஆற்றின் மேற்கிலுள்ள நாடுகளையும் அரசாண்டான். இது திப்சா முதல் ஆசா மட்டும் இருந்தது. சாலொமோன் தனது இராஜ்யத்தின் எல்லாப் பக்கங்களிலும் சமாதானமாயிருந்தான். 25 சாலொமோனின் வாழ்நாளில் யூதா மற்றும் இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள், தாண் முதல் பெயெர்செபா வரை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் இருந்தனர். இவர்கள் தமது அத்திமரத்தின் நிழலிலும், திராட்சைகொடியின் நிழலிலும் சமாதானத்தோடு குடியிருந்தனர்.
26 சாலொமோனிடம் 4,000 இரதக் குதிரை லாயங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தனர். 27 ஒவ்வொரு மாதமும் பன்னிரெண்டு மாவட்டங்களிலும் உள்ள ஆளுநர்களும் அரசனான சாலொமோனுக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுத்து வந்தனர். அரசனோடு உணவு அருந்துகின்றவர்களுக்கு இது போதுமானதாக இருந்தது. 28 இரதக் குதிரைகளுக்கும் சவாரிக்குதிரைகளுக்கும் தேவையான வைக்கோல், பார்லி போன்றவற்றையும் அவர்கள் கொடுத்துவந்தனர். ஒவ்வொரு வரும் தங்கள் பொறுப்பின்படி தேவையான தானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டுவந்தனர்.
சாலொமோனின் ஞானம்
29 தேவன் சாலொமோனைச் சிறந்த ஞானியாக்கினார். அவனால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனது ஞானம் கற்பனைக்குள் அடங்காததாக இருந்தது. 30 கிழக்கே உள்ள அறிஞர்களின் ஞானத்தைவிட சாலொமோனின் ஞானம் மிகச்சிறந்ததாக இருந்தது. எகிப்திலுள்ள அனைவரின் ஞானத்தை விடவும் சிறந்த ஞானமாக இருந்தது. 31 பூமியிலுள்ள அனைவரையும்விட புத்திசாலியாக இருந்தான். எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் ஜனங்களைவிடவும் ஞானவானாயிருந்தான். இஸ்ரவேல் மற்றும் யூதாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் அவன் புகழ் பெற்றவனாக விளங்கினான். 32 அவனது வாழ்வில் 3,000 நீதிமொழிகளையும் 1,005 பாடல்களையும் எழுதினான்.
33 சாலொமோனுக்கு இயற்கையைப்பற்றி தெரியும். வீபனோனில் உள்ள கேதுரு மரங்கள் முதற் கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்பு பூண்டுவரை பலவிதமான தாவரங்கள்பற்றி கற்பித்தான். மேலும் அவன் மிருகங்கள் பறவைகள் ஊர்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றைப் பற்றியும் கற்பித்தான். 34 அவனது ஞானத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள பல நாடுகளில் உள்ளவர்களும் வந்தனர். பலநாட்டு அரசர்களும் தம் நாட்டிலுள்ள அறிஞர்களை அனுப்பி சாலொமோனைக் கவனிக்க வைத்தனர்.
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்
5 ஈராம் தீரு நாட்டு அரசன். அவன் எப்போதும் தாவீதின் நண்பனாக இருந்தான். தாவீதிற்குப் பிறகு அவனது மகன் சாலொமோன் புதிய அரசனானதை அறிந்து தனது வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான். 2 சாலொமோன் ஈராம் அரசனுக்கு,
3 “என் தந்தை தாவீது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தார். அதனால் தன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட நேரம் இல்லாமல் இருந்தது. கர்த்தர் தனது பகைவர்களை எல்லாம் வெல்லும்வரை தாவீது காத்திருந்தார். 4 ஆனால் தேவனாகிய கர்த்தர் எனது நாட்டின் அனைத்து பக்கங்களிலும் அமைதியையும் சமாதானத்தையும் தந்திருக்கிறார். இப்போது எனக்குப் பகைவர்கள் யாரும் இல்லை. என் ஜனங்களுக்கும் ஆபத்தில்லை.
5 “என் தந்தையான தாவீதிற்கு கர்த்தர் ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். கர்த்தர், ‘உனக்குப் பிறகு உன் மகனை அரசனாக்குவேன். அவன் எனக்குப் பெருமை தரும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார். இப்போது நான் என் தேவனாகிய கர்த்தரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்ட திட்டமிடுகிறேன். 6 எனவே எனக்கு உதவும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். லீபனோனுக்கு உங்கள் ஆட்களை அனுப்புங்கள். அவர்கள் அங்கே எனக்காக கேதுரு மரங்களை வெட்டவேண்டும். எனது வேலையாட்களும் அவர்களோடு வேலை செய்வார்கள். உங்கள் ஆட்களுக்கு எவ்வளவு கூலிக் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கூலியை நான் கொடுப்பேன். ஆனால் உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. சீதோனில் உள்ள தச்சர்களைப்போன்று அவ்வளவு சிறந்தவர்களாக இங்குள்ள தச்சர்கள் இல்லை” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினான்.
7 சாலொமோனின் வேண்டுகோளை அறிந்து ஈராம் மிகவும் மகிழ்ந்தான். அவனும், “இப்படி ஒரு அறிவு மிக்க மகனை தாவீதிற்குத் தந்து இவ்வளவு அதிகமான ஜனங்களை ஆளவிட்டதற்குக் கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படட்டும்!” என்றான். 8 பிறகு ஈராம் சாலொமோனுக்கும் செய்தி அனுப்பினான்.
அதில், “நீங்கள் கேட்டிருந்தவற்றை அறிந்தேன். நான் இங்குள்ள அனைத்து கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும் வெட்டி உங்களுக்குத் தருவேன். 9 எனது ஆட்கள் அவற்றை லீபனோனில் இருந்து கடலுக்குக் கொண்டுவருவார்கள். பிறகு அவற்றைக் கட்டி நீங்கள் விரும்புகின்ற இடத்துக்கு மிதந்து வரும்படி செய்வேன். அங்கே அவற்றைப் பிரித்துத் தருவேன். நீங்கள் எடுத்துச்செல்லலாம்” என்று குறிப்பிட்டிருந்தான்.
10-11 சாலொமோன் ஈராமின் குடும்பத்திற்காக 20,000 கலம் கோதுமையையும் 20 கலம் ஒலிவ மர எண்ணெயையும் கொடுத்தான். இதுவே சாலொமோன் ஈராமிற்கு ஆண்டுதோறும் கொடுப்பது.
12 கர்த்தர் வாக்குறுதி அளித்தபடி சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். ஈராமும் சாலொமோனும் சமாதானமாக இருந்தனர். இருவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.
13 சாலொமோன் அரசன் கோவில் வேலைக்காக 30,000 இஸ்ரவேல் ஆண்களைப் பயன்படுத்தினான். 14 சாலொமோன், இவர்களுக்கு மேற்பார்வையாளராக அதோனிராமை நியமித்தான். அரசன் தம் ஆட்களை மூன்று பிரிவாக்கி ஒவ்வொன்றிலும் 10,000 பேரை வகுத்தான். ஒவ்வொரு குழுவும் ஒரு மாதம் லீபனோனிலும், இரு மாதம் தம் வீட்டிலும் இருந்தனர். 15 சாலொமோன் மலைநாட்டில் வேலை செய்ய 80,000 ஆட்களை அனுப்பினான். இவர்கள் கற்பாறைகளை உடைத்தனர். 70,000 ஆட்கள் அவற்றைச் சுமந்து வந்தனர். 16 3,300 பேர் இந்த வேலையை மேற்பார்வை செய்துவந்தனர். 17 ஆலயத்திற்கு அடித்தளக் கல்லாக பெரிய கல்லை வெட்டும்படி ஆணையிட்டான். கற்கள் கவனமாக வெட்டப்பட்டன. 18 சாலொமோன் மற்றும் ஈராமின் கல்தச்சர்கள் கல்லைச் செதுக்கினார்கள். ஆலயத்தைக் கட்டுவதற்குரிய கற்களையும் மரத்தடிகளையும் தயார் செய்துமுடித்தனர்.
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுதல்
6 சாலொமோன் அவ்வாறே ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து 480 ஆண்டுகள் ஆகியிருந்தன. இப்போது சாலொமோன் அரசனாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. இது ஆண்டின் இரண்டாவது மாதமாகவும் இருந்தது. 2 ஆலயம் 90 அடி நீளமும், 30 அடி அகலமும், 45 அடி உயரமுமாய் இருந்தது. 3 ஆலயத்தின் முகப்பானது 30 அடி அகலமும், 15 அடி நீளமும் கொண்டது. இது ஆலயத்தின் முக்கிய பகுதியோடு இணைந்திருந்தது. இதன் நீளமானது ஆலயத்தின் அகலத்திற்கு சமமாக இருந்தது. 4 ஆலயத்தில் குறுகிய ஜன்னல்களும் இருந்தன. இவை வெளியே குறுகலாகவும் உட்பகுதியில் பெரிதாகவும் தோற்றமளித்தன. 5 ஆலயத்தின் முக்கியமான பகுதியைச் சுற்றி சாலொமோன் வரிசையாக பல அறைகளைக் கட்டினான். இந்த அறைகள் ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தன. இவ்வரிசை அறைகளின் உயரமானது மூன்று அடுக்குகளையுடையதாக இருந்தன. 6 இவ்வறைகள் ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அந்தச் சுவர்களுக்குள் உத்திரங்கள் கட்டப்படவில்லை. ஆலயச் சுவரானது உச்சியில் மெல்லியதாக இருந்தது. எனவே அறைகளின் ஒரு பக்க சுவர் மற்ற பக்கங்களைவிட மெல்லியதாக இருந்தது. அறைகளின் அடித்தளமானது 7 1/2 அடி அகலமும், நடுத்தள அறையானது 9 அடி அகலமும் அதற்கு மேலுள்ள அறையானது 10 1/2 அடி அகலமும் கொண்டவை. 7 வேலைக்காரர்கள் சுவர்களைக் கட்டுவதற்குப் பெரிய கற்களைப் பயன்படுத்தினார்கள். பூமியில் வெட்டி எடுக்கப்படும் இடத்திலேயே அவர்கள் கற்களை வெட்டி சரிசெய்துவிட்டனர். அதனால் ஆலயம் கட்டும் இடத்தில் சுத்திகள், வாச்சிகள், முதலான எந்த இரும்புக் கருவிகளின் சத்தமும் கேட்கவில்லை.
8 அடியிலுள்ள அறையின் நுழை வாசலானது ஆலயத்தின் தென்புறத்தில் இருந்தது. உள்ளே படிக்கட்டுகள் அங்கிருந்து இரண்டாவது மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் போயின.
9 இவ்வாறு, சாலொமோன் ஆலயம் கட்டும் வேலையை முடித்தான். ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் கேதுருமரங்களால் மூடப்பட்டிருந்தது. 10 ஆலயத்தைச் சுற்றியுள்ள அறைகளின் வேலைகளையும் முடித்தான். ஒவ்வொரு அறையும் 7 1/2 அடி உயரமுள்ளவை. அந்த அறைகளில் உள்ள கேதுரு மரத்தூண்கள் ஆலயத்தைத் தொட்டுக் கொண்டிருந்தன.
11 கர்த்தர் சாலொமோனிடம், 12 “நீ எனது அனைத்து சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தால் உன் தந்தை தாவீதிற்கு வாக்களித்தபடி நான் உனக்குச் செய்வேன். 13 நீ கட்டிய இவ்வாலயத்தில் இஸ்ரவேலின் ஜனங்களோடு நான் வாழ்வேன். நான் இஸ்ரவேல் ஜனங்களை விட்டு போகமாட்டேன்” என்றார்.
ஆலயத்தைப் பற்றிய விவரங்கள்
14 இவ்வாறு சாலொமோன் ஆலயத்தைக் கட்டும் வேலையை முடித்தான். 15 ஆலயத்தின் உட்புறத்தில் உள்ள கற்சுவர்கள் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. அவை தரையிலிருந்து கூரைவரை இருந்தன. கல் தரையானது தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டன. 16 ஆலயத்தின் பின் பகுதியில் 30 அடி நீளத்தில் ஒரு அறையைக் கட்டினார்கள். அதன் சுவர்களைக் கேதுருமரப் பலகைகளால் தரையிலிருந்து கூரைவரை மூடினர். இந்த அறையானது மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. 17 மகா பரிசுத்த இடத்தின் முன்புறத்தில்தான் ஆலயத்தின் முக்கிய இடம் இருந்தது. இந்த அறை 60 அடி நீளம் இருந்தது. 18 அவர்கள் சுவரில் உள்ள கற்கள் தெரியாத வண்ணம் கேதுருமரப் பலகைளால் மூடினார்கள். அவர்கள் பூ மொட்டுகள் மற்றும் மலர்களின் வடிவங்களை அம்மரத்தில் செதுக்கினார்கள்.
19 சாலொமோன் ஒரு அறையை ஆலயத்தின் பின்பகுதியில் உள்ளே கட்டினான். இந்த அறையில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைத்தனர். 20 இது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமும் உடையதாக இருந்தது. 21 சாலொமோன் இந்த அறையைச் சுத்தமான தங்கத்தால் மூடினான். அவன் நறுமணப்பொருட்களை எரிக்கும் பலிபீடத்தை கட்டினான். அவன் பலிபீடத்தையும் தங்கத் தகடுகளால் மூடி பொன் சங்கிலிகளைக் குறுக்காகத் தொங்கவிட்டான். அந்த அறையில் இரண்டு கேருபீன்களின் உருவங்கள் இருந்தன. அவை தங்கத்தால் மூடப்பட்டவை. 22 ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் தங்கத்தால் மூடப்பட்டன. மகா பரிசுத்த இடத்திற்கு வெளியே உள்ள பலிபீடத்தையும் தங்கத்தால் மூடினார்கள்.
23 வேலைக்காரர்கள் ஒலிவ மரத்தைக் கொண்டு இரண்டு கேருபீன்களின் உருவங்களை செய்தனர். இவற்றை மகாபரிசுத்த இடத்தில் வைத்தனர். இவற்றின் உயரம் 15 அடி. 24-26 இரு கேருபீன்களும் ஒரே மாதிரி ஒரே முறையில் செய்யப்பட்டவை. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு சிறகும் 7 1/2 அடி நீளமுடையவை. ஒரு சிறகின் நுனியிலிருந்து இன்னொரு சிறகின் நுனிவரை 15 அடி இருந்தன. ஒவ்வொரு கேருபீனும் 15 அடி உயரம் இருந்தன. 27 அவை மகாபரிசுத்த இடத்தில் இரு பக்கங்களிலும் இருந்தன. இரண்டின் சிறகுகளும் அறையின் மத்தியில் தொட்டுக்கொண்டிருந்தன. வெளிநுனிகள் சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தன. 28 இரு கேருபீன்களும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தன.
29 முக்கிய அறையைச் சுற்றியுள்ள சுவர்களிலும் உட்சுவர்களிலும் கேருபீன்களின் உருவங்கள், பேரீச்ச மரங்கள், பூக்கள் என பொறிக்கப்பட்டன. 30 இரு அறைகளின் தரைகளும் தங்கத்தகடுகளால் மூடப்பட்டன.
31 மகா பரிசுத்த இடத்தின் நுழைவாயிலில் ஒலிவ மரத்தால் ஆன இரு கதவுகளைச் செய்து பொருத்தினர். இதன் சட்டமானது ஐந்து பக்கங்களுடையதாக அமைக்கப்பட்டது. 32 இக்கதவுகளின் மேல் கேருபீன்களும், பேரீச்ச மரம், பூக்கள் எனப் பல வடிவங்கள் செதுக்கப்பட்டன. பின்னர் தங்கத்தால் இவற்றை மூடினார்கள்.
33 அவர்கள் முக்கியமான அறையின் நுழைவிற்குக் கதவுகள் செய்தனர். அவர்கள் ஒலிவ மரத்தை பயன்படுத்தி சதுர கதவு சட்டத்தைச் செய்தனர். 34 பிறகு அவர்கள் கதவுகளைச் செய்ய ஊசியிலை மரத்தைப் பயன்படுத்தினார்கள். 35 ஒவ்வொரு கதவும் இரண்டு பகுதிகளாக இருந்தன. இரண்டு மடிப்புகள் இருந்தன, அக்கதவுகளில் கேருபீன்கள், பேரீச்ச மரங்களும் பூக்களும் வரையப்பட்டன. தங்கத்தால் அவைகள் மூடப்பட்டிருந்தன.
36 பிறகு அவர்கள் உட்பிரகாரத்தைக் கட்டினார்கள். அதைச் சுற்றி சுவர்களைக் கட்டினர். ஒவ்வொரு சுவரும் மூன்று வரிசை வெட்டப்பட்ட கற்களாலும், ஒரு வரிசை கேதுருமரங்களாலும் செய்யப்பட்டன.
37 ஆண்டின் இரண்டாவது மாதமான சீப் மாதத்தில், ஆலயத்தின் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். இது சாலொமோன் இஸ்ரவேலின் அரசனாகி நான்காவது ஆண்டாக இருந்தது. 38 ஆலயத்தின் வேலையானது ஆண்டின் எட்டாவது மாதமான பூல் மாதத்தில் முடிந்தது. இது சாலொமோன் ஆட்சிக்கு வந்த பதினொன்றாவது ஆண்டாயிற்று. ஆலய வேலை முடிய ஏழு ஆண்டுகள் ஆனது. திட்டமிட்ட விதத்திலேயே ஆலயமானது மிகச்சரியாகக் கட்டப்பட்டது.
சாலொமோனின் அரண்மனை
7 சாலொமோன் அரசன் தனக்கென ஒரு அரண்மனையும் கட்டிமுடித்தான். இவ்வேலை முடிய 13 ஆண்டுகள் ஆயின. 2 “லீபனோன் காடு” என்ற கட்டிடத்தையும் கட்டினான். இது 150 அடி நீளமும், 75 அடி அகலமும் 45 அடி உயரமும் கொண்டது. கேதுரு மரத்தூண்கள் நான்கு வரிசைகளில் அமைக்கப்பட்டன. அதன் மேல் கேதுருமர உத்திரங்களையும் அமைத்தான். 3 உத்திரங்களின் மேல் கேதுரு மரச்சட்டங்களைப் பாவினர். ஒவ்வொரு தூணுக்கும் 15 சட்டங்கள் இருந்தன. அங்கே மொத்தம் 45 சட்டங்கள் இருந்தன. 4 சுவர்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வரிசையாக ஜன்னல்கள் இருந்தன. மூன்று வரிசை ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது. 5 ஒவ்வொன்றின் முடிவிலும் மூன்று கதவுகள் இருந்தன. அவற்றின் சட்டங்கள் சதுரமாயிருந்தன.
6 சாலொமோன் 75 அடி நீளமும், 45 அடி அகலமும்கொண்ட “தூண்” ஒன்றைக் கட்டினான். எதிரே தூண்களையும் நிறுத்தினான்.
7 சாலொமோன் நியாயம் தீர்க்கிறதற்கு, “நியாய விசாரணை மண்டபத்தையும்” கட்டினான். அம்மண்டபம் தரையிலிருந்து கூரைவரை கேதுருமரங்களால் அமைக்கப்பட்டிருந்தன.
8 நியாய விசாரனை மண்டபத்திற்குள்தான் சாலொமோன் வசித்து வந்தான். அவன் குடியிருந்த அரண்மனைக்குள்ளும் இதுபோல் ஒரு மண்டப வீடு இருந்தது. நியாய விசாரணை மண்டபம் அமைக்கப்பட்ட விதத்திலேயே இவ்வீடும் கட்டப்பட்டது. எகிப்து அரசனின் மகளான, தன் மனைவிக்கும் இதே போல ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்தான்.
9 இக்கட்டிடங்கள் அனைத்தும் விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டன. கற்கள் சரியான அளவில் வெட்டப்பட்டிருந்தன. முன்னும் பின்னும் செதுக்கப்பட்டிருந்தன. இக்கற்கள் அஸ்திவாரம் முதல் கூரைவரை பயன்படுத்தப்பட்டன. சுற்றுச்சுவர்களும் விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டன. 10 அஸ்திபாரமானது பெரியதும் விலையுயர்ந்ததுமான கற்களால கட்டப்பட்டது. சில 15 அடி நீளமும், சில 12 அடி நீளமும் கொண்டன. 11 உச்சியிலும் வேறு விலையுயர்ந்த கற்களும் கேதுருமர உத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன. 12 அரண்மனை, ஆலயம், மண்டபம் ஆகியவற்றைச் சுற்றிலும் சுவர்கள் மூன்று வரிசை கற்களும், ஒரு வரிசை கேதுருமரப் பலகைகளாலும் கட்டப்பட்டன.
13 சாலொமோன் அரசன் தீருவில் உள்ள ஈராமுக்கு ஒரு செய்தி அனுப்பினான். அவனை எருசலேமுக்கு வரவழைத்தான். 14 ஈராமின் தாய் இஸ்ரவேல் குடும்பத்தில் உள்ள நப்தலியின் கோத்திரத்தைச் சேர்ந்தவள் ஆவாள். அவளது மரித்துப்போன தந்தை தீருவை சேர்ந்தவர். ஈராம் வெண்கலப் பொருட்களைச் செய்பவன். அவன் திறமையும் அனுபவமும் வாய்ந்தவன். எனவே அவனை அழைத்து, வெண்கல வேலைகளுக்கும் பொறுப்பாளி ஆக்கினான். அவன் வெண்கலத்தால் செய்யவேண்டியவற்றைச் செய்து முடித்தான்.
15 ஈராம் இரண்டு வெண்கல தூண்களைச் செய்தான். ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 18 அடி சுற்றளவும் கொண்டது. இது 3 அங்குல கனமும் உள்ளே வெற்றிடமாகவும் இருந்தது. 16 ஈராமும் 7 1/2 அடி உயரமுள்ள இரண்டு கும்பங்களைத் தூண்களின் உச்சியில் வைக்கச்செய்தான். 17 பிறகு அவன் கும்பங்களை மூட வலை போன்ற இரு பின்னல்களைச் செய்தான். 18 பின்னர் அவன் இரு வரிசைகளில் வெண்கல மாதுளம் பழங்களைச் செய்தான். இவற்றை தூண்களின் உச்சியில் வலைகளுக்கு முன் வைத்தான். 19 தூண்களின் உச்சியில் இருந்த 7 1/2 அடி கும்பங்கள் பூவைப்போன்றும், 20 கிண்ணம் போன்ற வடிவில் உள்ள வலைகளுக்கு மேலும் அமைக்கப்பட்டன. கும்பங்களைச் சுற்றிலும் வரிசைக்கு 20 உருண்டைகளாக தொங்கவிட்டான். 21 ஈராம் இந்த இரு வெண்கலத்தூண்களையும் ஆலய வாசல் மண்டபத்தில் நிறுவினான். வாசலின் உட்புறத்தில் ஒன்றும் தென்புறத்தில் ஒன்றுமாகத் தூண்கள் நிறுத்தப்பட்டன. தெற்குத் தூண் யாகீன் என்றும் வடக்குத் தூண் போவாஸ் என்றும் பெயர் பெற்றன. 22 தூண்களுக்கு மேல் மலர் வடிவ கும்பங்கள் வைக்கப்பட்டதும் தூண்களின் வேலை முடிந்தது.
23 வெண்கலத்தாலேயே வட்டவடிவில் ஒரு தொட்டியை ஈராம் அமைத்தான். அவர்கள், அதை “கடல்” என்று அழைத்தார்கள். இதன் சுற்றளவு 51 அடிகள், குறுக்களவு 17 அடியாகவும், ஆழம் 7 1/2 அடியாகவும் இருந்தன. 24 தொட்டியைச் சுற்றிலும் விளிம்பில் தகடு பொருத்தப்பட்டது. இதற்கு அடியில் இரு வரிசைகளில் வெண்கலப் பொருட்கள் வார்க்கப்பட்டன. இவை தொட்டியோடு சேர்த்து பொருத்தப்பட்டன. 25 இது 12 வெண்கல காளைகளின் மேல் வைக்கப்பட்டது. அக்காளைகளின் பின்புறங்கள், தொட்டிகளுக்கு உள்ளே மறைந்து காணப்பட்டன. மூன்று காளைகள் வடக்கிலும், மூன்று காளைகள் தெற்கிலும், மூன்று காளைகள் மேற்கிலும், மூன்று காளைகள் கிழக்கிலும் பார்த்தவண்ணம் இருந்தன. 26 தொட்டியின் பக்கங்கள் 4 அங்குல கனம்கொண்டவை. தொட்டியின் விளிம்பானது கிண்ணத்தின் விளிம்பைப் போலவும், பூவின் இதழ்களைப் போலவும் இருந்தன. இதன் கொள்ளளவு 11,000 காலன்களாகும்.
27 பிறகு பத்து வெண்கல வண்டிகளையும் ஈராம் செய்தான். ஒவ்வொன்றும் 6 அடி நீளமும், 6 அடி அகலமும், 4 1/2 அடி உயரமும் கொண்டவை, 28 இவை சதுர சட்டங்களால் ஆன சவுக்கையால் செய்யப்பட்டிருந்தன. 29 சவுக்கைகளிலும் சட்டங்களிலும் வெண்கலத்தால் சிங்கங்கள், காளைகள், கேருபீன்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலேயும் கீழேயும் சிங்கங்கள் மற்றும் காளைகளின் உருவங்களோடு வெண்கலத்தால் பூ வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டன. 30 ஒவ்வொரு வண்டியிலும் வெண்கலத்தால் சக்கரங்களும் அச்சுகளும் அமைக்கப்பட்டன. நான்கு மூலைகளிலும் உதவியாக கிண்ணங்கள் வைக்கப்பட்டன. அவற்றில் வெண்கல பூ வேலைப்பாடுகளும், இருந்தன. 31 கிண்ணங்களின் உச்சியில் சட்டம் அமைக்கப்பட்டன. அவை 18 அங்குலம் கிண்ணத்தின் விளிம்பிலிருந்து உயர்ந்திருந்தது. அதன் திறப்பு 27 அங்குல விட்டத்தில் அமைந்திருந்தது. சட்டத்தில் வெண்கல வேலைபாடுகள் இருந்தன. அது வட்டமாக இல்லாமல் சதுரமாக இருந்தது. 32 சட்டத்திற்கு அடியில் நான்கு சிறு சக்கரங்கள் இருந்தன. அவற்றின் விட்டம் 27 அங்குலமாக இருந்தது. இரு சக்கரங்களையும் இணைக்கும் அச்சுத் தண்டு வண்டியோடு இணைக்கப்பட்டது. 33 இச்சக்கரங்கள் தேர்ச் சக்கரங்களைப் போன்றிருந்தன. சக்கரங்கள், அச்சுத் தண்டு, பட்டை, வட்டங்கள், கம்பிகள் எல்லாம் வெண்கலத்தால் ஆனவை.
34 ஒவ்வொரு வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு தாங்கிகள் இருந்தன. அவை அனைத்தும் வண்டியோடு ஒன்றாக இணைக்கப்பட்டன. 35 ஒவ்வொரு வண்டியின் தலைப்பிலும் வெண்கலத்தால் ஆன விளிம்பு இருந்தது. அவை வண்டியோடு ஒரே துண்டாக இணைக்கப்பட்டிருந்தது. 36 வண்டியின் பக்கங்களில் வெண்கலத்தால் ஆன கேருபீன்களும், சிங்கங்களும், பேரீந்து மரங்களும் வைக்கப்பட்டிருந்தன. வண்டியில் எங்கெங்கே இடம் இருந்ததோ அங்கெல்லாம் இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. வண்டியின் சட்டங்களில் பூ வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டன. 37 ஈராம் பத்து வண்டிகளை செய்தான். எல்லாம் ஒரே மாதிரியாக வெண்கலத்தால். வார்க்கப்ட்டிருந்தன.
2008 by World Bible Translation Center