Bible in 90 Days
12 “உங்கள் போர் முகாமிற்கு வெளிப் புறத்தில் மலம் கழிக்கும் இடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 13 உங்களது படைக் கருவிகளுடன் நீங்கள் தரையைத் தோண்டுவதற்காக சிறியகோலையும் வைத்திருக்கவேண்டும். பின் நீங்கள் மலம், சிறுநீர் கழிக்கின்றபோது அச்சிறிய கோலைக் கொண்டு மண்ணைத் தோண்டி அதில் கழிவைச் செய்த பின்பு மூடிவிட வேண்டும். 14 ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது போர் முகாமில் உங்களோடே இருந்து, உங்களைக் காத்து, உங்கள் எதிரிகள் உங்களிடம் தோல்வியடைய உதவுகிறார் ஆகையால் அந்தப் போர் முகாம் பரிசுத்தமாக இருக்கவேண்டும். அப்போது கர்த்தர் உங்களுடைய சுத்தமற்ற காரியங்களைக் காணாமலும் உங்களை விட்டுப் போகாமலும் இருப்பார்.
பிற சட்டங்கள்
15 “ஒரு அடிமை தன் எஜமானனிடம் இருந்து உங்களிடம் ஓடி வந்தால் நீங்கள் அவனை அவன் முதலாளியிடமே ஒப்படைத்து விடாதீர்கள். 16 அந்தச் சேவகன் உங்களிடத்தில் எங்கும் அவன் விரும்புகிறபடி பணிசெய்யலாம். அவன் தேர்ந்தெடுக்கிற ஏதாவது நகரில் வாழலாம். நீங்கள் அவனை ஒன்றும் செய்யாதீர்கள்.
17 “எந்த ஒரு இஸ்ரவேல் ஆணோ, பெண்ணோ, ஆலய விபச்சாரக்காரனாகவோ வேசியாகவோ இருக்கக்கூடாது. 18 ஒரு ஆணோ, பெண்ணோ, விபச்சார பாவத்தினால் சம்பாதித்தப் பணத்தை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டுவரக் கூடாது. எந்தவொரு நபரும் அந்த பணத்தை தேவனுக்கு வாக்களித்திருந்த பொருளை வாங்குவதற்கென்று பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்கள் உடல்களை விற்று விபச்சாரப் பாவம் செய்யும் அந்த ஜனங்களை அருவெறுக்கின்றார்.
19 “நீங்கள் வேறு ஒரு இஸ்ரவேல் சகோதரருக்கு கடன் கொடுத்திருப்பீர்கள் என்றால் அதற்கான வட்டியை வசூலிக்கக் கூடாது. அவர்களுக்குக் கொடுத்த பணத்தின் மீதோ, உணவின் மீதோ அல்லது வேறு எந்த பொருள் மீதோ நீங்கள் வட்டி வாங்கக் கூடாது. 20 நீங்கள் அந்நியர்களிடமிருந்து வட்டி வசூலித்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் இஸ்ரவேல் சகோதரர்களிடம் வட்டி வசூலிக்கக் கூடாது. இந்த விதிகளை நீங்கள் பின்பற்றினால், பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் எல்லாச் செயல்களிலும் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வாழப்போகின்ற இந்த தேசத்தில் நீங்கள் செய்யும் எல்லாவற்றினையும் ஆசீர்வதிப்பார்.
21 “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஏதாவது பொருத்தனை செய்திருந்தால், அவற்றைச் செலுத்துவதில் தாமதம் செய்யாதீர்கள், ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர், நீங்கள் அவற்றை செலுத்துமாறு உரிமையோடு கேட்பார். நீங்கள் வாக்களித்தபடி அவற்றை செலுத்தவில்லை என்றால் அது உங்களுக்குப் பாவமாகும். 22 நீங்கள் அப்படி ஏதும் வாக்களிக்கவில்லையென்றால் உங்கள் மீது பாவமில்லை. 23 ஆனால் நீங்கள் செய்வதாக உங்கள் வாயினால் சொன்னதை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் தேவனுக்குத் தருவதாக விசேஷமான வாக்களித்திருந்தால், நீங்கள் அதை நிறைவேற்றவேண்டும். தேவன் கட்டாயப்படுத்தி உங்களை வாக்களிக்கும்படிச் செய்யவில்லை. நீங்களே தருவதாக வாக்களித்திருந்தால் நீங்கள் சொன்னபடி அவற்றைச் செலுத்தவேண்டும்!
24 “நீங்கள் பிறருடைய திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்துசெல்ல வேண்டியிருந்தால், நீங்கள் விரும்புகின்ற அளவிற்கு அங்குள்ள திராட்சைப் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட உங்கள் கூடையில் போட்டுக்கொள்ளக் கூடாது. (அப்பழங்களை உங்களோடு எடுத்துவராதீர்கள்.) 25 நீங்கள் மற்றவரின் தானியவயல் வழியாக செல்ல வேண்டியிருந்தால் உங்கள் கைகளால் அங்குள்ள கதிர்களைப் பறித்து உண்ணலாம். ஆனால் பிறருடைய அந்த விளைச்சலை நீங்கள் அறுவடை செய்து தூக்கிக்கொண்டு செல்ல எண்ணி அரிவாளைப் போடக் கூடாது.
24 “ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்பு அவளிடத்தில் ஏதோ இரகசியமான காரியத்தைக் கண்டு, அதனால் அவள் மீது விருப்பமில்லாதவன் ஆகக்கூடும். அவன் அவளோடு மகிழ்ச்சியாய் இருக்கவில்லையென்றால், விவாகரத்து எழுதிக்கொடுத்து அவளைத் தன் வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும். 2 அவள் அவனது வீட்டைவிட்டுப் போனபின்பு வேறு ஒருவனுக்கு மனைவியாகலாம். 3-4 ஆனால் அவளின் அந்த புதிய கணவனும் அவளை விரும்பாது, மீண்டும் அனுப்பிவிட்டால், அவனும் அவளுக்கு விவாகரத்து எழுதிக்கொடுக்கவேண்டும். அல்லது அவன் மரித்துப் போக நேரிட்டால், அதன் பின்பு அவளின் முதல் கணவன் அவளை மீண்டும் மனைவியாக்கிக்கொள்ளக் கூடாது. அவள் அவனுக்கு அசுத்தமானவளாகிவிட்டவள். அப்படி அவன் அவளை மீண்டும் மணந்துகொள்வான் என்றால், அவன் கர்த்தர் வெறுக்கின்ற காரியங்களைச் செய்கின்றான் என்பதாகும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த தேசத்தில் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்யக்கூடாது.
5 “ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் திருமணம் செய்திருந்தால், அவன் தரைப் படையில் சேவை செய்யப் புறப்பட்டு செல்லவேண்டாம். அதுமட்டுமின்றி வேறு எந்த சிறப்புப் பணியிலும் அவன் ஈடுப்படக் கூடாது. அவன் ஓராண்டிற்குத் தன் வீட்டில் தான் விரும்பியபடி இருந்து, தான் திருமணம் செய்து கொண்ட மனைவியை சந்தோஷப்படுத்த வேண்டும்.
6 “நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு அடமானமாக அவர்களது மாவு அரைக்கும் திரிகையின் அடிக்கல்லையாவது மேற்கல்லையாவது வாங்கக்கூடாது. ஏனென்றால் அது அவர்களின் உணவையே அவர்களிடமிருந்து எடுத்துப் போடுவதற்கு சமமாகும்.
7 “ஒருவன் தன் சொந்த ஜனங்களாகிய இஸ்ரவேல் சகோதரன் ஒருவனை கடத்திச் சென்று அவனை அடிமையாக விற்று ஆதாயம் தேடினால், அந்த ஆட்களைக் கடத்தும் திருடனைக் கொன்றுவிட வேண்டும். அவ்வாறாக இந்தத் தீமையை உங்களிடமிருந்து விலக்கிவிட வேண்டும்.
8 “நீங்கள் தொழுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளானால் லேவியராகிய ஆசாரியர்கள் உங்களுக்கு சொல்வதைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையுடன் இருங்கள். இதற்காக நான் ஆசாரியரிடம் கொடுத்த கட்டளையின்படியே நீங்கள் செய்ய எச்சரிக்கையுடன் இருங்கள். 9 நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறி புறப்பட்டு வருகின்ற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
10 “நீங்கள் பிறருக்குக் கொடுக்கின்ற எந்த வகையான கடனுக்கும் அடமானத்தைப் பெற அவனது வீட்டிற்குள் செல்லவேண்டாம். 11 வெளியே நின்றுவிடுங்கள். பின் அவன் நீங்கள் கொடுத்த கடனுக்கான அடமானத்தை வெளியில் வந்து தருவான். 12 ஒருவேளை அவன் ஏழையாக இருந்தால், (அவன் போர்த்திக்கொள்ள வைத்திருந்த ஆடைகளை கொடுக்க முன் வந்தால்), நீங்கள் அவற்றை இரவு முழுவதும் வைத்துக்கொள்ளாதீர்கள். 13 நீங்கள் அவற்றை ஒவ்வொரு நாள் மாலையிலும் அவனிடம் கொடுத்துவிட வேண்டும். அது அவன் தூக்கத்திற்கு அவசியமானதாகும். அவன் உங்களை ஆசீர்வதிப்பான். உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு இத்தகைய நல்ல செயல் உன் வாழ்வின் நியாயத்தை ஏற்கச் செய்திடும்.
14 “நீங்கள் உங்களிடம் காண்கின்ற ஏழை எளிய கூலிக்காரனை வஞ்சனை செய்யக் கூடாது. உங்கள் நகரங்களில் வசிக்கின்ற அந்நியர்களிடமும் அல்லது உங்களது இஸ்ரவேல் சகோதரர்களிடமும் இத்தகைய வஞ்சனை செயல்களைச் செய்யாதீர்கள். 15 அவர்களது ஊதியத்தை ஒவ்வொரு நாள் சாயங்காலத்திலும் கொடுத்துவிட வேண்டும். ஏனென்றால் அவன் அந்த சம்பளத்தையே எதிர்ப்பார்த்து வாழ்கின்ற ஏழையாக இருக்கின்றான். நீங்கள் அப்படி அவனுக்கு கொடுக்கவில்லையென்றால் அவன் கர்த்தரிடம் உங்களுக்கு எதிராக முறையிடுவான். நீங்கள் பாவம் செய்தவராகிவிடுவீர்கள்.
16 “பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.
17 “உங்களைச் சார்ந்துள்ள அந்நியர்களையும், அநாதைகளையும், நியாயமாகவே நடத்துவதில் உறுதிகொண்டு இருக்க வேண்டும். விதவைகளின் ஆடைகள் துணிமணிகளை அடமானமாக ஒருபோதும் வாங்கிகொள்ளக்கூடாது. 18 எகிப்தில் நீங்கள் ஏழை அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கிருந்து உங்களை மீட்டுவந்து நீங்கள் சுதந்திரமாக வாழ அமைத்துக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் ஏழை ஜனங்களிடம் நீங்கள் இவ்வாறாக நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறேன்.
19 “நீங்கள் உங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்து எடுத்து வரும்போது கொஞ்சம் தானியத்தை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வந்தீர்கள் என்றால் அவற்றை எடுக்க நீங்கள் திரும்பிச் செல்லக்கூடாது. அவை அந்நியர்களுக்கும் ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் இருக்கட்டும். கொஞ்சம் தானியத்தை அவர்களுக்காக அங்கேயேவிட்டு வந்தால், உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்கின்ற எல்லாக் காரியங்களையும் ஆசீர்வதிப்பார். 20 நீங்கள் உங்கள் ஒலிவ மரத்தை உதிர்த்துவிட்டுத் திரும்பிய பின்பு மீண்டும் அதன் கிளைகளிலே தப்பியவற்றைப் பறிப்பதற்குத் திரும்பிப்போக வேண்டாம். அவற்றை உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக. 21 நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டங்களில் திராட்சைப் பழங்களைப் பறித்து சேர்த்த பின்பு தப்பிக்கிடக்கும் பழங்களைப் பறிப்பதற்கு மீண்டும் அங்கே செல்ல வேண்டாம். அந்தத் திராட்சைப் பழங்கள் உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக. 22 நீங்கள் எகிப்தில் ஏழை அடிமைகளாக இருந்ததை நினைத்துப்பாருங்கள். அதனால்தான் இந்த ஏழை ஜனங்களுக்காக இவைகளைச் செய்யுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25 “இருவருக்குள் வாக்குவாதம் முற்றி அதனால், அவர்கள் தங்கள் வழக்கைத் தீர்க்க நீதிமன்றம் வந்தால் நீதிபதிகள் அவ்விருவரில் யார் நிரபராதி? யார் குற்றவாளி? என்று முடிவு செய்வர். 2 குற்றவாளி சாட்டையால் அடிக்கப்பட வேண்டியவன் என நீதிபதி முடிவு செய்தால், நீதிபதி அக்குற்றவாளியை கீழே முகம் குப்புறப் படுக்கச்செய்து வேறு ஒருவரை வைத்து தம்முன்னால் அவனை அடிக்கச்செய்வார். அந்த அடிகளின் எண்ணிக்கை அவனது குற்றத்திற்கேற்ப அமையும். 3 நாற்பது அடிகளுக்குமேல் அவனை அடிக்க கூடாது. அவ்வாறு நாற்பது அடிகளுக்குமேல் அடித்தால், அவனுடைய உயிர் உங்களுக்கு முக்கியமல்ல என்பது வெளிப்படும். எனவே, நாற்பது அடிகளுக்கு மேல் ஒருவனை அடிக்காதீர்கள்.
4 “தானியக்களத்தில் போரடிக்கிற ஒரு மாட்டை, அது தின்னாதபடி அதன் வாயைக் கட்டாதீர்கள்.
5 “இரு சகோதரர்கள் ஒரே வீட்டில் வசித்துவர, அதில் ஒருவன் பிள்ளைப்பேறு இல்லாது மரித்துவிடுவான் என்றால், மரித்தவனின் மனைவியை அந்தக் குடும்பத்தைவிட்டு வெளியே இருக்கிற வேறு ஒருவனுக்கு திருமணம் செய்துவைக்கக் கூடாது. அவளது கணவனின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, அவளுடன் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை, அவளது கணவனின் சகோதரர் அவளுக்குச் செய்ய வேண்டும். 6 பின் அவர்களது முதல் குழந்தைக்கு மரித்த சகோதரனின் பெயரை வைத்து, மரித்தவனின் பெயர் இஸ்ரவேலை விட்டு அழியாதபடி காத்திடவேண்டும். 7 ஆனால் அவன் அவனது சகோதரனின் மனைவியைத் தன் மனைவியாக எடுக்க விரும்பவில்லை என்றால், பின் அவள் ஊர் கூடும் பஞ்சாயத்திற்குச் சென்று ஊர்த் தலைவர்களிடம், ‘என் கணவனின் சகோதரர் அவரது சகோதரரின் பெயர் இஸ்ரவேலில் நிலைத்து நிற்கச் செய்ய மறுக்கிறார். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை எனக்கு இவர் செய்யவில்லை’ என்று முறையிடவேண்டும். 8 பின் ஊர்த் தலைவர்கள் அவனை அழைத்துப் பேசுவார்கள். அதற்கு அவன், ‘நான் அவளை மனைவியாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை’ என்று பிடிவாதமாக் கூறினால், 9 பின் அவனது சகோதரன் மனைவி ஊர்த் தலைவர்கள் எதிரில் அவனருகில் வந்து, அவனது பாதரட்சைகளை அவன் கால்களிலிருந்து கழற்றி, பின் அவன் முகத்தில் துப்புவாள். அவள், ‘தன் சகோதரன் மனைவியை ஏற்று அவன் குடும்பத்தைக் கட்டிக்காக்கத் தவறியவனுக்கு இப்படியே செய்யவேண்டும்’ என்று கூறவேண்டும். 10 பின் இஸ்ரவேலில் இப்படிப்பட்டவனின் வீடு, ‘செருப்பு கழற்றிப் போடப்பட்டவன் வீடு’ என்று அழைக்கப்படும்.
11 “இருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், ஒருவனது மனைவி தன் கணவனை அடிக்கின்றவனிடமிருந்து அவனைக் காப்பாற்ற நினைத்து அங்கு வந்து தன் கையை நீட்டி அடிக்கிறவனின் அந்தரங்க உறுப்பை நசுக்கி இழுக்கக்கூடாது. 12 அவள் இப்படிச் செய்தால், அவள் கையைத் துண்டித்துவிட வேண்டும். அவளிடம் இரக்கம் காட்டாதீர்கள்.
13 “ஏமாற்றும் நோக்கத்துடன் ஜனங்களை ஏமாற்ற கூடுதலான அல்லது குறைவான எடைக் கற்களைப் பயன்படுத்தாதீர்கள். 14 உங்கள் வீடுகளில் அதிகமான அல்லது குறைவான அளவுக் கருவிகளை வைத்திருக்காதீர்கள். 15 சரியானதாகவும் பிழையற்றதாகவும் உள்ள எடைக்கற்களையும், அளவு கருவிகளையுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். அப்போது நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீண்ட காலம் வாழலாம். 16 உங்கள் தேவனாகிய கர்த்தர், ஏமாற்றும் எண்ணத்துடன் தவறான எடைக்கற்களையும், அளவுக் கருவிகளையும் பயன்படுத்துபவர்களை வெறுக்கின்றார். ஆம், தேவன் தவறு செய்கின்ற அனைவரையும் வெறுக்கின்றார்.
அமலேக்கியர்கள் அழிக்கப்பட வேண்டும்
17 “எகிப்திலிருந்து நீங்கள் வருகின்ற வழியில் அமலேக்கிய ஜனங்கள் உங்களுக்கு செய்ததை நினைத்துப் பாருங்கள். 18 அந்த அமலேக்கிய ஜனங்கள் நமது தேவனை மதிக்காமல், நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் இருந்தபொழுது உங்களைத் தாக்கினார்கள். அவர்கள் உங்கள் ஜனங்களில் மெதுவாக எல்லோருக்கும் பின்னால் நடந்து வந்தவர்களைத் தாக்கி வெட்டிக் கொன்றார்கள். 19 அதனால் நீங்கள் இந்த அமலேக்கியர்களின் நினைவே இந்த உலகத்தில் இருக்காமல் அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற இந்த தேசத்தில், உங்களைச் சுற்றியிருக்கும் உங்கள் எதிரிகளை எல்லாம் அழித்து உங்களை இளைப்பாறச் செய்கையில், அமலேக்கியர்களை அழித்துவிட வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்!
முதல் அறுவடை
26 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் விரைவில் நுழையப் போகிறீர்கள். நீங்கள் அந்த நிலத்தில் குடிகொண்டு சுதந்திரமாய் வாழப் போகிறீர்கள். 2 கர்த்தர் உங்களுக்கு வழங்கிய நிலத்தில் விளைந்தவற்றை நீங்கள் அறுவடை செய்யும்போது, உங்களின் விளைச்சலின் முதல் பலனை கூடைகளில் எடுத்து வைத்துவிட வேண்டும். பின் நீங்கள் அறுவடை செய்ததின் முதல் பங்கை எடுத்துக்கொண்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த அவரது ஆலயத்திற்கு கொண்டுசென்று, 3 அங்கே ஆலய சேவையில் இருக்கின்ற ஆசாரியரிடம்: ‘கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு ஒரு தேசத்தைக் கொடுப்பேன் என்று ஆணையிட்டார். இன்று தேவனாகிய கர்த்தரிடத்தில், நான் அந்தத் தேசத்திற்கு வந்து விட்டேன் என்று அறிக்கையிடுகிறேன்’ என்று கூறு.
4 “பின் அந்த ஆசாரியன் உன்னிடமிருந்து அந்தக் கூடையை எடுத்து கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பு வைப்பான். 5 பின் அவ்விடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு நீங்கள்: ‘அலைந்து திரிந்த அரேமியரான எனது முற்பிதாக்கள் எகிப்துக்குச் சென்று அங்கு தங்கினார்கள். செல்லும்போது கொஞ்சம் ஜனங்களே அவன் குடும்பத்தினராய் இருந்தனர். ஆனால் எகிப்தில் அவர்கள் பெரிய ஜனமாக பெருகினார்கள். வலிமை வாய்ந்த ஜனமாக அதிக ஜனங்களை கொண்டவர்களாக இருந்தனர். 6 எகிப்தியர்கள் எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்களை அடிமைகளாக்கினார்கள். எங்களை வேதனைப்படுத்தி மிகவும் கடினமான வேலைகளைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். 7 பின் நாங்கள் எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தோம். அவர்களைப்பற்றி முறையீடு செய்தோம். கர்த்தர் நாங்கள் கூறியவற்றைக் கேட்டார். எங்களது இன்னல்களையும், கடின உழைப்பையும், நாங்கள் அடைந்த வருத்தங்களையும் கர்த்தர் பார்த்தார். 8 பின் கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைத் தனது மிகுந்த ஆற்றலாலும், பலத்தினாலும் மீட்டுக்கொண்டு வந்தார். அவர் மிகுந்த அற்புதங்களையும், அதிசயங்களையும் பயன்படுத்தினார். வியக்கத்தக்க நிகழ்ச்சிகளைச் செய்தார். 9 அதனால் எங்களை இந்த தேசத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தார். பாலும், தேனும் ஓடக் கூடிய இந்த வளமான தேசத்தை எங்களுக்குத் தந்தார். 10 இப்போதும் இதோ கர்த்தாவே நீர் எங்களுக்குத் தந்த தேசத்திலிருந்து நாங்கள் பெற்ற முதல் அறுவடையின் பலனைக் கொண்டு வந்துள்ளோம்’ என்று சொல்ல வேண்டும்.
“பின் நீங்கள் அந்த அறுவடையின் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு வைத்து தாழ்ந்து பணிந்து அவரை ஆராதிக்க வேண்டும். 11 பின் நீங்கள் சேர்ந்து உண்டு மகிழ்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கொடுத்த எல்லா நன்மைகளினிமித்தமும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நீங்கள் அந்த நன்மைகளில் எல்லாம் லேவியர்களுக்கும் மற்றும் உங்களைச் சார்ந்து வாழ்கின்ற அந்நியர்களுக்கும் பங்களிக்க வேண்டும்.
12 “ஒவ்வொரு மூன்றாவது ஆண்டும் பத்தில் ஒரு பங்கைச் செலுத்தும் ஆண்டாக இருக்கவேண்டும். இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் அறுவடைப் பலனில் பத்திலொரு பங்கை லேவியருக்கும், உங்கள் நாட்டில் வாழும் அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் கொடுக்க வேண்டும். பின் ஒவ்வொரு நகரத்திலும் அந்த ஜனங்கள் தாராளமாக, திருப்தியாக உண்டு மகிழ்வார்கள். 13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம், ‘கர்த்தாவே, நான் எனது வீட்டிலிருந்து எனது அறுவடைப் பலனின் பரிசுத்த பங்கு ஒன்றை வெளியே எடுத்துவந்து லேவியருக்கும், அயல் நாட்டு குடிகளுக்கும், அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் கொடுத்துள்ளேன். நீர் எனக்குத் தந்த எல்லா கட்டளைகளையும் நான் பின்பற்றியுள்ளேன். நான் உமது எந்த கட்டளைக்கும் கீழ்ப்படிய மறுத்ததில்லை. அவற்றை மறந்ததுமில்லை. 14 நான் துக்கமாயிருந்தபோது அதில் எதையும் உண்ணவில்லை. நான் சுத்தமில்லாதவனாக இருந்தபோது அவற்றை சேகரிக்கவில்லை. நான் மரித்தவர்களுக்காக அதிலிருந்து எந்த உணவையும் செலுத்தவில்லை. நான் உமக்குக் கீழ்ப்படிந்து இருந்தேன். என் தேவனாகிய கர்த்தாவே நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் எல்லா செயல்களையும் செய்துள்ளேன். 15 தேவனே பரலோகத்தில் உமது பரிசுத்த ஆலயத்திலிருந்து என்னைப் பாரும். உமது இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதியும். நீர் எங்களுக்குக் கொடுத்த தேசத்தை ஆசீர்வதிப்பீராக. எங்கள் முற்பிதாக்களிடம் ஆணையிட்டபடி எல்லா வளங்களும் கொண்ட பாலும், தேனும் ஓடக் கூடிய நீர் தந்த இந்த தேசத்தை ஆசீர்வதியும்’ என்று கூறுவீர்களாக.
தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்
16 “இந்த எல்லாச் சட்டங்களுக்கும், விதிகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய, உங்கள் தேவனாகிய கர்த்தர் இன்று உங்களுக்குக் கட்டளையிடுகின்றார். நீங்கள் உங்கள் ஆத்ம திருப்தியுடனும், முழு மனதோடும், அவற்றைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாய் இருங்கள்! 17 இன்று நீங்கள் கர்த்தரே உங்கள் தேவன் என்று சொல்லியிருக்கிறீர்கள்! தேவன் விரும்பிய நெறிப்படியே நீங்கள் வாழ்வதாக வாக்களித்துள்ளீர்கள்! அவரது போதனைகளுக்கும், நியாயங்களுக்கும், கட்டளைகளுக்கும், நீங்கள் கீழ்ப்படிவதாக உறுதி செய்துள்ளீர்கள். நீங்கள் செய்யும்படி கர்த்தர் உங்களுக்குச் சொல்லிய ஒவ்வொன்றையும் செய்வதாகச் சொன்னீர்கள். 18 இன்று உங்களெல்லோரையும் கர்த்தருடைய சிறப்புக்குரிய சொந்த ஜனங்களாக கர்த்தர் ஏற்றுக்கொண்டார்! அவர் இப்படிச் செய்ய உங்களிடம் வாக்களித்துள்ளார். அவரது கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்றும் கர்த்தர் சொன்னார். 19 கர்த்தர் தாம் படைத்த மற்றெல்லா ஜனங்களையும்விட, புகழும், பெருமையும், மதிப்பும் கொண்ட சிறந்தவர்களாக உங்களை ஆக்கியுள்ளார். கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடியே, நீங்களும் அவருக்குச் சொந்தமான விசேஷ ஜனங்களாக இருக்க வேண்டும்.”
ஜனங்களுக்கான கல் நினைவுச் சின்னங்கள்
27 மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும்
(தலைவர்கள்) இஸ்ரவேல் ஜனங்களுடன் பேசினார்கள். மோசே, “இன்று நான் கொடுக்கிற அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுங்கள். 2 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக கொடுத்திருக்கிற நாட்டிற்குள் போகும்படி நீங்கள் விரைவில் யோர்தான் ஆற்றைக் கடப்பீர்கள். அந்த நாளில் நீங்கள் பெரிய கற்களை நாட்டவேண்டும். அக்கற்களைச் சாந்து பூசி மூடி 3 பிறகு அக்கற்களின் மேல் இந்த கட்டளைகளையும், போதனைகளையும் எழுத வேண்டும். நீங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்தவுடன் இதனைச் செய்யவேண்டும். பிறகு நீங்கள் அந்த நாட்டிற்குள் போகலாம். அதை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகக் கொடுத்திருக்கிறார். அந்நாடு பல நன்மைகளால் நிறைந்தது. உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் இந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தார்.
4 “யோர்தான் ஆற்றைக் கடந்து நீங்கள் போனதும், நான் இன்று கட்டளையிடுகின்றவற்றை நீங்கள் செய்யவேண்டும். அக்கற்களை நீங்கள் ஏபால் மலையின் மேல் நாட்ட வேண்டும். நீங்கள் இக்கற்களைச் சாந்து பூசி மூடவேண்டும். 5 அதோடு சில கற்களைப் பயன்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்ட வேண்டும். கற்களை வெட்டுவதற்கு இரும்புக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம். 6 உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலிபீடம் கட்டும்போது செதுக்கின கற்களைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு இப்பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துங்கள். 7 நீங்கள் சமாதான பலிகளையும் அங்கே செலுத்தி அதனை உண்ணவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அவற்றைச் சேர்ந்து உண்டு உங்களுக்குள் மகிழுங்கள். 8 நீங்கள் நாட்டிய கற்களில் இந்தப் போதனைகளையெல்லாம் தெளிவாக எழுதவேண்டும். அதனால் அவற்றை வாசிக்க சுலபமாக இருக்கும்” என்றான்.
சட்டத்தின் சாபங்களை ஜனங்கள் ஒப்புக்கொள்கிறார்கள்
9 மோசேயும், ஆசாரியர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசினார்கள். மோசே, “அமைதியாக இருந்து கவனியுங்கள். இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள். 10 எனவே நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நீங்கள் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இன்று அவற்றை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.
11 அதே நாளில் மோசே ஜனங்களிடம் இதையும் சொன்னான், 12 “யோர்தான் ஆற்றை நீங்கள் கடந்து போனபிறகு, ஜனங்களுக்குரிய ஆசீர்வாதங்களை வாசிக்க சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகியோரின் கோத்திரங்கள் கெரிசீம் மலையின் மீது நிற்பார்கள். 13 ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோரின் கோத்திரங்கள் ஏபால் மலைமீது நின்று சாபத்தை வாசிப்பார்கள்.
14 “லேவியர் உரத்தக் குரலில்:
15 “‘பொய்த் தெய்வங்களைச் செய்து இரகசியமான இடத்தில் அதனை ஒளித்து வைப்பவன் சபிக்கப்பட்டவன். அந்த பொய்த் தெய்வங்கள் எல்லாம் சித்திரவேலைக்காரர்களால் மரத்தாலும் கல்லாலும் அல்லது உலோகத்தாலும் செய்யப்பட்ட சிலைகள். கர்த்தர் அவற்றை வெறுக்கின்றார்!’ என்று அவர்கள் சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
16 “லேவியர்கள், ‘தன் தகப்பனுக்கும் தாய்க்கும் மரியாதை செய்யாமலிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
17 “லேவியர், ‘தனது அயலானின் எல்லைக் கல்லை மாற்றிப் போடுகிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
18 “லேவியர், ‘குருடனை வழிதப்பச் செய்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“பிறகு எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.
19 “லேவியர், ‘அயல் நாட்டவர், அநாதைகள், விதவைகளின் நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
20 “லேவியர், ‘தனது மாற்றாந்தாயோடு பாலின உறவு வைத்துக்கொள்பவன் சபிக்கப்பட்டவன். ஏனென்றால், அவன் தன் தந்தைக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறான்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
21 “லேவியர், ‘யாதொரு மிருகத்தோடும் புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
22 “லேவியர், ‘தன் சகோதரியோடும், சகோதரி உறவுள்ளவர்களோடும் பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
23 “லேவியர், ‘தன் மாமியாரோடு பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,
“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
24 “லேவியர், ‘மற்றொருவனைக் கொல்லுகிறவன், பிடிபடாமல் இருந்தால் கூட, சபிக்கப்பட்டவனாக இருப்பான்’ என்று சொல்லும்போது,
“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.
25 “லேவியர், ‘ஒரு அப்பாவியைக் கொன்று அவனது பொருட்களை அபகரிப்பவன் சபிக்கப்பட்டவன்.’ என்று சொல்லும்போது,
“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
26 “லேவியர், ‘இந்த சட்டத்தின் வார்த்தைகளையெல்லாம் ஆதரிக்காமலும் அதற்குக் கீழ்ப்படியும்படி அதற்கு ஒப்புக்கொள்ளாமலும் இருப்பவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,
“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.
சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களுக்கான ஆசீர்வாதங்கள்
28 “இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார். 2 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்:
3 “நகரத்திலும் வயலிலும்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
4 கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து
உங்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பார்.
அவர் உங்கள் நிலத்தை ஆசீர்வதிப்பார்.
அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுப்பார்.
அவர் உங்கள் மிருகங்களை ஆசீர்வதிப்பார்.
அவற்றுக்கு நிறைய குட்டிகளைப் பெருகச்செய்வார்.
அவர் உங்களது அனைத்து கன்றுகளையும் மற்றும் ஆட்டுக் குட்டிகளையும் ஆசீர்வதிப்பார்.
5 கர்த்தர் உங்களது கூடைகளையும்,
பாத்திரங்களையும் ஆசீர்வதித்து அவற்றில் உணவை நிரப்புவார்.
6 கர்த்தர் உங்களை எல்லா நேரங்களிலும் நீங்கள் செய்கிற அனைத்திலும் ஆசீர்வதிப்பார்.
7 “உங்களுக்கு எதிராகச் சண்டைச் செய்ய வருகிற உங்கள் பகைவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பகைவர்கள் உங்களுக்கு எதிராக ஒரு வழியாக வருவார்கள், ஆனால் அவர்கள் வேறுபட்ட ஏழு வழிகளில் ஓடுவார்கள்.
8 “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்களை நிரப்புவார். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர் உங்களுக்குக் கொடுத்த நாட்டை ஆசீர்வதிப்பார். 9 கர்த்தர் உங்களைத் தமக்கென்று சிறந்த பரிசுத்த ஜனங்களாக, தாம் வாக்குறுதி அளித்தபடி ஆக்குவார். நீங்கள் உங்களது தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் கர்த்தர் இதனைச் செய்வார். 10 பிறகு எல்லா நாட்டினரும் கர்த்தருடைய பெயரால் நீங்கள் அழைக்கப்படுவதைக் கேட்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்.
11 “கர்த்தர் உங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்வார். அவர் உங்களுக்குப் பல பிள்ளைகளைத் தருவார். உங்களது பசுக்களுக்குப் பல கன்றுகளை அவர் தருவார். உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நிலத்தில் அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தருவார். 12 கர்த்தர், தமது வளமான ஆசீர்வாதங்களை வைத்துள்ள சேமிப்பு அறையினைத் திறப்பார். உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையைச் சரியான காலத்தில் அனுப்புவார். நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுக்கிற அளவிற்குப் பணம் பெறுவீர்கள். அவர்களிடமிருந்து எதையும் கடனாகப் பெறுகிற தேவை உங்களுக்கு நேரிடாது. 13 கர்த்தர் உங்களை வாலாக இல்லாமல் தலையாக ஆக்குவார். நீங்கள் கீழாக இல்லாமல் மேலாவீர்கள். இன்று நான் சொல்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கேட்டால், இது நிகழும். நீங்கள் கவனமாக இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். 14 நான் இன்று உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளிலிருந்து நீங்கள் விலகிப் போகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பவேண்டாம். நீங்கள் மற்ற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு சேவை செய்யக்கூடாது.
சட்டங்களுக்குக் கீழ்ப்படியாவிட்டால் எற்படும் சாபங்கள்
15 “ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொல்கின்றவற்றைக் கவனிக்காமல் இருந்தால், நான் இன்று உனக்கு சொல்கின்றபடி அவரது சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு இத்தீமைகள் எல்லாம் உனக்கு ஏற்படும்:
16 “நகரிலும், வயலிலும்
கர்த்தர் உன்னைச் சபிப்பார்.
17 கர்த்தர் உனது கூடைகளையும், பாத்திரங்களையும் சபிப்பார்.
அவற்றில் உணவு இல்லாமல் போகும்.
18 கர்த்தர் உன்னைச் சபிப்பார்.
உனக்கு அதிகக் குழந்தைகள் இல்லாமல் போகும்.
அவர் உனது நிலத்தைச் சபிப்பார்.
உனக்கு நல்ல விளைச்சல் கிடைக்காமல் போகும்.
அவர் உனது மிருகங்களைச் சபிப்பார்.
அவை குட்டிகள் அதிகம் இல்லாமல் போகும்.
அவர் உனது எல்லா கன்றுக்குட்டிகளையும் ஆட்டுக்குட்டிகளையும் சபிப்பார்.
19 கர்த்தர் எல்லா நேரங்களிலும் நீ செய்கின்ற எல்லாவற்றையும் சபிப்பார்.
20 “நீ தீமைசெய்து கர்த்தரை விட்டுவிலகிப் போனால், பிறகு அவர் உனக்கு தீமைகள் ஏற்படும்படிச் செய்வார். நீ செய்கிற எல்லாவற்றிலும் உனக்கு விரக்தியும், கஷ்டமும் ஏற்படும்படிச் செய்வார். நீ விரைவாகவும் முழுவதுமாகவும் அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார். அவர் இதனைச் செய்வார். ஏனென்றால், நீ அவரை விட்டு விலகிப்போனாய். 21 நீ பெறப்போகும் நாட்டிலிருந்து நீ அழிந்து முடிந்து போகும்வரை, உனக்கு கர்த்தர் பயங்கரமான நோய்கள் ஏற்படும்படிச் செய்வார். 22 கர்த்தர் உன்னை நோய்களாலும், காய்ச்சல் மற்றும் வீக்கங்களாலும் தண்டிப்பார். கர்த்தர் உனக்குப் பயங்கரமான வெப்பத்தை அனுப்புவார். உனக்கு மழை இல்லாமல் போகும். உனது பயிர்கள் வெப்பத்தாலும், நோயாலும் பட்டுப் போகும். நீ அழிக்கப்படும்வரை இத்தீமைகள் எல்லாம் நிகழும். 23 வானத்தில் மேகங்கள் இராது. வானம் பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தைப் போல் இருக்கும். உனக்குக் கீழுள்ள பூமியானது கெட்டியான இரும்பைப்போன்று இருக்கும். 24 கர்த்தர் மழையை அனுப்பமாட்டார். வானத்திலிருந்து மணலும், புழுதியுமே விழும். நீ அழிகிறவரை இது கீழே வந்து கொண்டிருக்கும்.
25 “உனது பகைவர்கள் உன்னைத் தோற்கடிக்கும்படி கர்த்தர் செய்வார். உனது பகைவரோடு சண்டையிட நீ ஒரு வழியில் போவாய். ஆனால் நீ வேறுபட்ட ஏழு வழிகளில் தப்பி ஓடுவாய். உனக்கு ஏற்படும் இந்த தீமைகள் எல்லாம் பூமியிலுள்ள எல்லா ஜனங்களையும் பயப்படுத்தும். 26 உங்களது மரித்த உடல்கள் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகும். உங்கள் மரித்த உடல்களிலிருந்து அவற்றை எவராலும் பயமுறுத்தி விரட்ட முடியாது.
27 “கர்த்தர் எகிப்தியர்களுக்கு அனுப்பியது போன்று பருக்களால் உன்னைத் தண்டிப்பார். அவர் உன்னைக் குணமாக்க முடியாதபடியுள்ள மூல வியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் தண்டிப்பார். 28 கர்த்தர் உன்னைப் புத்தி மயங்க வைத்தும் தண்டிப்பார். அவர் உன்னைக் குருடாக்கியும் குழப்புவார். 29 பகல் வெளிச்சத்தில், குருடனைப்போல் உனது வழியை தடவிப்பார்த்துச் செல்வாய். நீ செய்கிற எல்லாவற்றிலும் தோற்றுப் போவாய். ஜனங்கள் மீண்டும், மீண்டும் உன்னைத் தாக்கி உன்னிடமுள்ளவற்றைத் திருடிக்கொள்வார்கள். அங்கு எவராலும் உன்னைக் காப்பாற்ற முடியாது.
30 “நீ ஒரு பெண்ணை நியமித்துக்கொள்வாய், ஆனால் இன்னொருவன் அவளோடு பாலின உறவுகொள்வான். நீ ஒரு வீட்டைக் கட்டுவாய். ஆனால் அதில் நீ இருக்கமாட்டாய். நீ திராட்சைச் செடிகளைப் பயிர் செய்வாய். ஆனால் அவற்றிலிருந்து எதையும் நீ சேகரிக்கமாட்டாய். 31 ஜனங்கள் உனக்கு முன்னாலேயே உனது பசுக்களைக் கொல்வார்கள். ஆனால் அவற்றின் இறைச்சியை நீ தின்னமாட்டாய். ஜனங்கள் உனது கழுதைகளை எடுத்துக்கொள்வார்கள் அவர்கள் அவற்றை உனக்குத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். உனது பகைவர்கள் உனது ஆட்டு மந்தையை எடுத்துக்கொள்வார்கள். அங்கே எவரும் உன்னைக் காப்பாற்ற இருக்கமாட்டார்கள்.
32 “மற்ற ஜனங்கள் உனது மகன்களையும், மகள்களையும் எடுத்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நாள்தோறும் உனது பிள்ளைகளை எதிர்ப்பார்த்திருப்பாய். உனது கண்கள் பலவீனமாகிக் குருடாகும்வரை நீ பார்த்துக்கொண்டிருப்பாய். ஆனால் உன்னால் அவர்களைக் காணமுடியாது. தேவன் உனக்கு உதவிசெய்யமாட்டார்.
33 “நீ அறிந்திராத நாடு உனது விளைச்சல் எல்லாவற்றையும், மற்றும் நீ உழைத்துப் பெற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும். ஜனங்கள் உன்னை மோசமாக நடத்துவார்கள். ஜனங்கள் உன்னைப் பழிப்பார்கள். 34 நீ பார்க்கின்றவை அனைத்தும் உனக்குப் பைத்தியத்தை ஏற்படுத்தும். 35 கர்த்தர் உன்னைக் குணப்படுத்தமுடியாத கொடிய எரிபந்தப் பருக்களினால் தண்டிப்பார். அப்பருக்கள் உனது முழங்கால்களிலும், கால்களிலும் இருக்கும். அப்பருக்கள் உனது உள்ளங்கால்கள் முதல் உச்சந்தலைவரை உடம்பின் எல்லாப் பாகங்களிலும் இருக்கும்.
36 “நீ அறிந்திராத நாட்டிற்கு உன்னையும், உனது அரசனையும் கர்த்தர் அனுப்புவார். நீயும் உனது முற்பிதாக்களும் இதற்கு முன்னால் இந்நாட்டைப் பார்த்திருக்கவில்லை. அங்கே நீ பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவை மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்டிருக்கும். 37 கர்த்தர் உங்களை அனுப்பிய நாடுகளில் உங்களுக்கு ஏற்படுகின்ற தீயவற்றைப் பார்த்து அங்குள்ள ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர்கள் உங்களைப்பற்றி மோசமாகப் பேசுவார்கள்.
தோல்வியின் சாபம்
38 “உங்கள் வயல்கள் ஏராளமாக தானியங்ளை விளைவித்தாலும், உங்களது அறுவடை சிறியதாக இருக்கும். ஏனென்றால், வெட்டுக்கிளிகள் உங்கள் அறுவடையைத் தின்றுவிடும். 39 நீ திராட்சைச் செடிகளைப் பயிர்செய்வாய். அவற்றுக்காகக் கடினமாக வேலை செய்வாய். ஆனால், நீ திராட்சைப் பழங்களைப் பறிக்கமாட்டாய். திராட்சைரசத்தையும் குடிக்கமாட்டாய். ஏனென்றால், புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும். 40 உனது நிலத்தில் ஒலிவ மரங்கள் எங்கெங்கும் வளர்ந்திருக்கும். ஆனால், நீ பயன்படுத்திட ஒலிவ எண்ணெயைப் பெறமாட்டாய். ஏனென்றால், ஒலிவ மரங்களில் பிஞ்சுகள் கீழே விழுந்து அழுகிப்போகும். 41 உனக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள், ஆனால் நீ அவர்களைப் பாதுகாக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படுவார்கள். 42 வெட்டுக் கிளிகள் உனது வயலில் உள்ள விளைச்சலையும், மரங்களையும் அழித்துவிடும். 43 உங்களிடையே வாழ்கிற பிற நாட்டு ஜனங்கள் மேலும் மேலும் அதிகாரத்தைப் பெறுவார்கள். நீயோ உனக்கிருந்த அதிகராத்தையும் இழப்பாய். 44 பிற நாட்டுக்காரர்கள் உனக்குக் கடன்தர பணம் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னிடம் பணம் இருக்காது. (தலை உடலைக் கட்டுப்படுத்துவது போன்று) அவர்கள் உன்னைக் கட்டுப்படுத்துவார்கள். நீ வாலைப் போன்று இருப்பாய்.
45 “இந்த சாபங்கள் எல்லாம் உனக்கு வரும். நீ அழியும்வரை இவை உன்னைத் துரத்திப் பிடிக்கும். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை. அவர் கொடுத்த சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீ அடிபணியவில்லை. 46 உன்னையும் உனது சந்ததிகளையும் தேவன் நியாயந்தீர்த்திருக்கிறார் என்று ஜனங்களுக்கு இந்த சாபங்கள் காட்டும். உங்களுக்கு ஏற்படுகிற பயங்கரத்தைப்பற்றி ஜனங்கள் வியப்படைவார்கள்.
47 “உனது தேவனாகிய கர்த்தர் உனக்குப் பல ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். ஆனால் நீ அவருக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கொண்ட மனதோடு சேவை செய்யவில்லை. 48 ஆகவே கர்த்தர் அனுப்பிவைத்த உனது பகைவர்களுக்கு நீ சேவை செய்வாய். நீ பசியும், தாகமும், நிர்வாணமும், ஏழ்மையும் அடைவாய். கர்த்தர் உன்மீது நீக்க முடியாத சுமையை வைப்பார். அவர் உன்னை அழிக்கும்வரை அந்தச் சுமையை நீ சுமப்பாய்.
பகை நாட்டிற்குரிய சாபம்
49 “கர்த்தர் தொலைதூரத்திலிருந்து உன்னோடு சண்டையிட ஒரு நாட்டை வரவழைப்பார். அவர்களது மொழியை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் விரைந்து வருவார்கள். வானிலிருந்து ஒரு கழுகு வருவதுபோன்று வருவார்கள். 50 அந்த ஜனங்கள் கொடூரமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் முதியவர்களைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அவர்கள் இளங்குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள். 51 அவர்கள் உங்களது மிருகங்களையும் நீங்கள் வளர்த்த உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்வார்கள். உன்னை அழிக்கும்வரை அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன்னிடம் தானியம், திராட்சை ரசம், எண்ணெய், பசுக்கள், ஆடுகள் அல்லது மாடுகள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் உன்னை அழிக்கும்வரை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள்.
52 “அந்த நாடு உனது நகரங்களைச் சுற்றி முற்றுகையிட்டுத் தாக்கும். உனது நகரங்களைச் சுற்றியுள்ள உயரமும் உறுதியும் கொண்ட சுவர்கள் உங்களைக் காப்பாற்றும் என்று நீ நினைத்தால், அந்தச் சுவர்கள் கீழே விழும், உனது தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாவற்றையும் பகைவர்கள் முற்றுகையிடுவார்கள். 53 நீ மிகவும் துன்பப்படுவாய். பகைவர்கள் உனது நகரங்களை முற்றுகையிடுவார்கள், உனக்கு உணவு கிடைக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். நீ மிகுந்த பசியை அடைவாய். உங்கள் சொந்த மகன்களையும் மகள்களையும் தின்னும்படியும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுத்த பிள்ளைகளைத் தின்னும்படியும் உங்களுக்கு அதிக பசி இருக்கும்.
54 “உங்களில் மிக சாந்தமும் இரக்கமும் கொண்டவன் கொடூரமானவனாக ஆவான். அவன் பிறருக்கும், தான் மிகவும் நேசித்த தன் மனைவிக்கும் கொடியவன் ஆவான். அவன் உயிரோடுள்ள தன் பிள்ளைகளுக்கும் கொடியவன் ஆவான். 55 அவனுக்கு எந்த உணவும் இல்லாதபடியால் தன் சொந்தப் பிள்ளைகளையே புசிப்பான். அவன் அந்த உணவை வேறு யாரோடும் தன் சொந்தக் குடும்பத்தினரோடும்கூட பகிர்ந்துக்கொள்ள மாட்டான். உனது பகைவர்கள் உன் நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இந்த கொடூரங்களெல்லாம் ஏற்படும்.
56 “உங்கள் மத்தியில் மிகுந்த சாந்தமும் இரக்கமுமுள்ள பெண்ணும்கூடக் கொடியவள் ஆவாள். அவள் மிகவும் சாந்தமும், அவளது கால்கள் தரையில்படாத அளவிற்கு நளினமுள்ளவளாகவும் இருக்கலாம். ஆனால் அவள் தன் மிகுந்த அன்புக்குரிய கணவனுக்குக் கொடியவள் ஆவாள். அவள் தனது சொந்த மகனுக்கும், மகளுக்கும்கூடக் கொடியவள் ஆவாள். 57 அவள் மறைவாக ஒரு குழந்தையைப் பெறுவாள். அக்குழந்தையோடு அவளது உடலிலிருந்து வெளிவரும் அனைத்தையும் அவள் புசிப்பாள். உன் பகைவன் உனது நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இத்தீயவை எல்லாம் நிகழும்.
58 “நீ இந்தப் புத்தகத்திலுள்ள அனைத்து கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். நீ உனது தேவனாகிய கர்த்தருடைய அற்புதமும் பயங்கரமுமான பெயருக்கு மதிப்பளிக்க வேண்டும். நீ கீழ்ப்படியாவிட்டால் பிறகு 59 கர்த்தர் உனக்கும் உனது சந்ததிகளுக்கும் மிகுந்த துன்பங்களைக் கொடுப்பார். உன் துன்பங்களும் நோய்களும் பயங்கரமானதாக இருக்கும். 60 எகிப்தில் நீ பல துன்பங்களையும் நோய்களையும் பார்த்தாய். அவை உன்னை அஞ்சும்படி செய்தன. உனக்கு அத்துன்பங்களையெல்லாம் கர்த்தர் கொண்டு வருவார். 61 இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்படாத துன்பங்களையும், நோய்களையும் கர்த்தர் உனக்குக் கொண்டுவருவார். நீ அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார். 62 நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போன்று அதிக எண்ணிக்கையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களிடம் சிலரே மீதியாகவிடப்படுவீர்கள். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை.
63 “கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பதிலும் உனது நாட்டை வளர்ச்சி அடைய செய்வதிலும் மகிழ்ந்தார். அதே வழியில் உன்னை அழிப்பதிலும் அதம்பண்ணுவதிலும் மகிழ்ச்சியடைவார். நீ அந்த நாட்டை உனக்குச் சொந்தமானதாக ஆக்கப்போகிறாய், ஆனால் ஜனங்கள் அந்த நாட்டைவிட்டு உன்னை அப்புறப்படுத்துவார்கள். 64 கர்த்தர் உங்களை உலக நாட்டு குடிகளினிடையில் சிதறடிப்பார். அங்கே நீ கல்லாலும், மரத்தாலும் ஆன பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவர்கள் உன்னாலும் உனது முற்பிதாக்களாலும் ஆராதிக்கப்படாத பொய்த் தெய்வங்கள்.
65 “இந்நாட்டு குடிகளுக்குள்ளே நீ சமாதானத்தைப் பெறமாட்டாய், உனக்கு ஓய்வு கொள்ள இடமிருக்காது. கர்த்தர் உனது மனம் முழுவதையும் கவலைகளால் நிரப்புவார். உனது கண்கள் சோர்வை உணரும். நீ மிகுந்த மனசஞ்சலம் அடைவாய். 66 நீ எப்பொழுதும் ஆபத்துக்களுக்கிடையில் பயத்தோடு இருப்பாய். நீ இரவும், பகலும் பயப்படுவாய். நீ உனது வாழ்க்கையைப் பற்றிய உறுதி இல்லாமல் இருப்பாய். 67 காலையில் நீ, ‘எப்பொழுது சாயங்காலம் வருமோ’ என்றும், மாலையில் ‘இது காலையாக இருக்க விரும்புகிறேன்’ என்றும் சொல்லுவாய். ஏனென்றால், உன் மனதில் பயம் இருக்கும். நீ தீயவற்றைப் பார்ப்பாய். 68 கப்பல்களில் கர்த்தர் உன்னை மீண்டும் எகிப்திற்கு அனுப்புவார். உங்களை மீண்டும் அனுப்பமாட்டேன் என்று நான் சொன்னேன். ஆனால், கர்த்தர் உங்களை அனுப்புவார். எகிப்தில் உங்கள் பகைவர்களுக்கு நீங்களே உங்களை அடிமைகளாக விற்பீர்கள். ஆனால் உங்களை யாரும் வாங்கமாட்டார்கள்.”
மோவாபில் உடன்படிக்கை
29 கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களோடு ஓரேப் மலையின் (சீனாய்) மேல் உடன்படிக்கை செய்தார். அவர்கள் மோவாபில் இருக்கும்போது உடன்படிக்கையோடு கர்த்தர், இன்னொரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளும்படி மோசேக்குக் கட்டளையிட்டார். இதுதான் அந்த உடன்படிக்கை:
2 மோசே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் கூட்டி அழைத்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் கர்த்தர் எகிப்தில் செய்த எல்லாவற்றையும் பார்த்தீர்கள். அவர் பார்வோனுக்கும், பார்வோனின் அதிகாரிகளுக்கும், நாடு முழுவதற்கும் செய்தவற்றை நீங்கள் பார்த்தீர்கள். 3 அவர் கொடுத்த பெருந் துன்பங்களையும் நீங்கள் பார்த்தீர்கள். அவர் செய்த அற்புதங்களையும், வியக்கத்தக்கவற்றையும் பார்த்தீர்கள். 4 ஆனால், இன்றுவரை என்ன நடந்தது என்று நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றி உண்மையிலேயே புரிந்துகொள்ள கர்த்தர் அனுமதிக்கவில்லை. 5 கர்த்தர் 40 ஆண்டுகளாக உங்களை வனாந்தரத்தில் வழி நடத்தினார். அக்காலம் முழுவதும் உங்கள் ஆடைகளும் பாதரட்சைகளும் கிழிந்து போகவில்லை. 6 உங்களோடு எவ்வித உணவும் இருக்கவில்லை. உங்களிடம் குடிப்பதற்குத் திராட்சைரசமோ வேறு பானமோ இருக்கவில்லை. ஆனால், கர்த்தர் உங்களைக் கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவரே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதைப் புரிந்து கொள்ளும்படி அவர் இதனைச் செய்தார்.
7 “நீங்கள் இந்த இடத்திற்கு வந்தீர்கள். நமக்கு எதிராகச் சண்டையிட எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் வந்தார்கள். ஆனால் நாம் அவர்களைத் தோற்கடித்தோம். 8 பிறகு நாம் அவர்களுடைய நாடுகளை எடுத்து ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கொடுத்தோம். 9 இந்த உடன்படிக்கையில் உள்ள அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிந்தால் பிறகு நீ செய்கிற எல்லாவற்றிலும் தொடர்ந்து வெற்றிபெறுவாய்.
10 “இன்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தலைவர்கள், அதிகாரிகள், மூப்பர்கள் மற்றும் எல்லா மனிதர்களும், 11 உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் இங்கே இருக்கிறார்கள். உங்களிடையே அயல் நாட்டுக் குடிகள் வாழ்கிறார்கள். அவர்கள் உங்களுக்கென்று மரத்தை வெட்டி, தண்ணீரைக்கொண்டு வருகிறார்கள். 12 உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உடன்படிக்கை செய்ய நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்கள். கர்த்தர் இன்று உங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்கிறார். 13 இந்த உடன்படிக்கையோடு, கர்த்தர் உங்களைத் தமது சொந்த விசேஷமான ஜனங்களாக்கிக்கொண்டிருக்கிறார். அவர்தாமே உங்கள் தேவன் ஆவார். அவர் இதை உனக்குக் கூறுகிறார். அவர் உனது முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோர்களுக்கு வாக்களித்திருக்கிறார். 14 கர்த்தர் இந்த உடன்படிக்கையை தமது வாக்குறுதிகளோடு உங்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை. 15 நமது தேவனாகிய கர்த்தருக்கு முன்பு நிற்கிற நம் அனைவரோடும் அவர் உடன்படிக்கை செய்திருக்கிறார். ஆனால் இந்த உடன்படிக்கை இன்று நம்மோடு இங்கே இல்லாத நமது சந்ததிகளுக்கும் உரியதாகிறது. 16 நாம் எகிப்து நாட்டில் எப்படி வாழ்ந்தோம் என்றும், நாம் கடந்து வந்த வழியிலுள்ள இந்நாடுகளில் எப்படிப் பயணம் செய்தோம் என்றும் நினைத்துக்கொள்ளுங்கள். 17 அவர்களது வெறுக்கத்தக்க பொருட்களான மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களை பார்த்தீர்கள். 18 இங்கே ஒரு ஆணோ, பெண்ணோ, கோத்திரமோ இன்று, நமது தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகாதபடி உறுதியாயிருங்கள். அந்நிய நாடுகளிலுள்ள தெய்வங்களுக்கு சேவை செய்ய எவரும் போகவேண்டாம். அவ்வாறு செய்கிற ஜனங்கள் கசப்பும், விஷத் தன்மையும் உள்ள கனியுள்ள செடி போல இருப்பார்கள்.
19 “ஒருவன் இந்தச் சாபங்களைக் கேட்கலாம். ஆனால் அவன் தன்னை ஆறுதல்படுத்திக்கொண்டு தனக்குள், ‘நான் என் விருப்பம் போல்தான் செய்வேன். எனக்கு எந்தத் தீமையும் ஏற்படாது’ என்று சொல்லலாம். அவன் தனக்கு மட்டும் தீமையை வரவழைப்பதில்லை. ஆனால் எல்லோருக்கும், நல்லவர்களுக்கும் கூடத் தீமையை வரவழைக்கிறான். 20-21 கர்த்தர் அவனை மன்னிப்பதில்லை. அவன்மேல் கர்த்தர் கோபமும் எரிச்சலும் அடைவார். அவனை கர்த்தர் தண்டிப்பார். கர்த்தர் அவனது பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப் போடுவார். கர்த்தர் அவனை முழுமையாக அழிப்பார். இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாத் தீமைகளும் அவனுக்கு ஏற்படும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உடன்படிக்கையின் ஒரு பகுதியாக அவை இருக்கும்.
22 “எதிர்காலத்தில் உங்கள் சந்ததிகளும், தொலை தூரத்து அயல்நாட்டுக் குடிகளும் இந்நாடு எவ்வாறு பாழானது என்று காண்பார்கள். கர்த்தர் இந்த நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிற நோய்களையும் பார்ப்பார்கள். 23 அனைத்து நாடுகளும் பயனற்றுப்போகும். எரிகின்ற கந்தகத்தால் அழிக்கப்பட்டு உப்பால் மூடப்படும். எதுவும் நடுவதற்கு ஏற்றதாக பூமி இருக்காது. களைகள் கூட வளராத அளவிற்குப் பாழாய் போகும். கர்த்தர் மிகக் கோபத்தோடு இருந்தபோது, நகரங்களான சோதோமையும், கொமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் அழித்தது போன்று இந்த நாடும் அழிக்கப்படும்.
24 “‘கர்த்தர் இந்த நாட்டிற்கு ஏன் இவ்வாறு செய்தார்? அவர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?’ மற்ற அனைத்து நாடுகளும் கேட்கும். 25 அதன் பதில் இவ்வாறு இருக்கும்: ‘கர்த்தர் கோபமாக இருக்கிறார். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையை விட்டுவிலகிப் போனார்கள். அவர்களை கர்த்தர் எகிப்தை விட்டு வெளியே கொண்டுவந்தபோது அவர்களோடு அவர் செய்த உடன்படிக்கையை பின்பற்றுவதை நிறுத்தினர். 26 இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களுக்கும், இதற்குமுன்பு தொழுதுகொள்ளாத தெய்வங்களுக்கும் பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். அத்தெய்வங்களை ஆராதிக்க வேண்டாம் என்று கர்த்தர் அந்த ஜனங்களிடம் கூறினார். 27 அதனால்தான், கர்த்தர் அந்நாட்டு ஜனங்களுக்கு எதிராக மிகவும் கோபங்கொண்டார். எனவே, புத்தகத்தில் எழுதப்பட்ட எல்லா சாபங்களையும் அவர்களுக்கு அவர் கொண்டு வந்தார். 28 கர்த்தர் அவர்கள்மேல் மிகவும் கோபங்கொண்டு எரிச்சல் அடைந்தார். எனவே, அவர்களை அவர் அந்நாட்டைவிட்டு வெளியே எடுத்தார். அவர் அவர்களை இன்று இருக்கிற நாட்டில் விட்டார்.’
29 “நமது தேவனாகிய கர்த்தர் சில காரியங்களை இரகசியமாக வைத்துள்ளார். அவற்றை அவர் மட்டுமே தெரிந்திருக்கிறார். ஆனால் கர்த்தர் தமது போதனைகளை நமக்கும் நமது சந்ததிகளுக்கும் என்றென்றைக்கும் கொடுத்திருக்கிறார். அந்தச் சட்டத்திலுள்ள எல்லா கட்டளைகளுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும்.
இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்புவார்கள்
30 “நான் சொல்லியிருக்கிற அனைத்தும் உங்களுக்கு நிகழும். நீங்கள் ஆசீர்வாதங்களிலிருந்து நன்மையைப் பெறுவீர்கள். நீங்கள் சாபங்களிலிருந்து தீமைகளைப் பெறுவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவார். பிறகு நீங்கள் இவற்றைப் பற்றி நினைப்பீர்கள். 2 அந்த நேரத்தில் நீங்களும் உங்கள் சந்ததிகளும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வருவீர்கள். நீங்கள் முழுமனதோடு அவரைப் பின்பற்றுவீர்கள். நான் இன்று உங்களுக்குக் கொடுத்திருக்கிற அவரது அனைத்து கட்டளைகளுக்கும் முழுமையாக அடிபணிவீர்கள். 3 பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் இரக்கம்கொள்வார். கர்த்தர் உங்களை மீண்டும் விடுதலை செய்து உங்களை அனுப்பிய தேசங்களிலிருந்து திரும்பக் கூட்டிச் சேர்ப்பார். 4 அவர் உங்களை பூமியின் ஒரு பகுதிக்கு அனுப்பியிருந்தாலும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சேகரித்துக் திரும்ப அங்கிருந்து உங்களைக் கொண்டு வருவார். 5 உங்கள் முற்பிதாக்களுக்குரிய நாட்டிற்கு கர்த்தர் உங்களைக் கொண்டுவருவார். அந்நாடு உங்களுக்கு உரியதாகும். கர்த்தர் உங்களுக்கு நன்மையைச் செய்வார். உங்கள் முற்பிதாக்களுக்குரியதைவிட நீங்கள் அதிகம் பெறுவீர்கள். அவர்களிடம் இருந்த ஜனங்களைவிட உங்கள் நாட்டில் மிகுதியான ஜனங்கள் இருப்பார்கள். 6 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் கீழ்ப்படிய விரும்பும்படிச் செய்வார். பிறகு நீ உன் முழு இருதயத்தோடு கர்த்தரை நேசிப்பாய். நீ வாழ்வாய்!
7 “பிறகு உனது தேவனாகிய கர்த்தர் உங்கள் பகைவர்களுக்கு அத்தீமைகளை எல்லாம் ஏற்படும்படிச் செய்வார். ஏனென்றால், அந்த ஜனங்கள் உன்னை வெறுத்து உனக்குத் தீமையைச் செய்தார்கள். 8 நீ மீண்டும் கர்த்தருக்குக் கீழ்ப்படிவாய். நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற அவரது அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிவாய். 9 உனது தேவனாகிய கர்த்தர் நீ செய்கிற அனைத்திலும் வெற்றி அடையும்படிச் செய்வார். அவர் உன்னை அதிகக் குழுந்தைகள் பெறும்படி ஆசீர்வதிப்பார். அவர் உனது பசுக்களை ஆசீர்வதிப்பார். அவை மிகுதியான கன்றுகளைப் பெறும். அவர் உனது வயல்களை ஆசீர்வதிப்பார். அவை நல்ல விளைச்சல் அடையும். கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பார். கர்த்தர் உனக்கு நன்மை செய்வதில் உங்கள் முற்பிதாக்களுக்கு நன்மை செய்யும் போது மகிழ்ந்ததைப்போன்று மீண்டும் மகிழ்வார். 10 ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்ய வேண்டும். நீ அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும். உனது தேவனாகிய கர்த்தருக்கு நீ உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் கீழ்ப்படிய வேண்டும். அப்போது உனக்கு இந்த நன்மைகள் ஏற்படும்.
ஜீவன் அல்லது மரணம்
11 “இன்று நான் உனக்கு கொடுக்கிற இந்த கட்டளைகள் கடினமானவை அல்ல, உங்களுக்குத் தூரமானதும் அல்ல. 12 ‘பரலோகத்துக்குச் சென்று, எங்களுக்காக அதனைக் கொண்டுவருவது யார்? அப்பொழுதுதான் எங்களால் அதைக் கேட்கவும் அதன்படி நடக்கவும் முடியும்’ என்று நீ சொல்லாதபடிக்கு அது பரலோகத்தில் உள்ளதும் அல்ல. 13 ‘கடல் கடந்துபோய் நாங்கள் கேட்கவும், செய்யவும் யார் கொண்டு வருவார்கள்?’ என்று நீ சொல்லாதபடிக்கு அது கடலுக்கு அக்கரையிலும் இல்லை. 14 இந்த வார்த்தை உனக்கு மிகவும் அருகில் இருக்கிறது. அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கிறது. எனவே நீ அதற்குக் கீழ்ப்படிய முடியும்.
15 “இன்று நான் வாழ்வையும், மரணத்தையும், நன்மையையும், தீமையையும் உனக்கு முன்பாகத் தெரிந்துகொள்ளும்படியாகக் கொடுக்கிறேன். 16 உனது தேவனாகிய கர்த்தரை நேசிக்கும்படி இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அவரைப் பின்பற்றும்படியும் அவரது சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறு நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். பிறகு நீ வாழ்வாய், உனது ஜனம் பெரிதாக வளரும். உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைகின்ற இந்த நாட்டில் உன்னை, உனது தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பார். 17 ஆனால் கர்த்தரிடமிருந்து விலகி நீ அவருக்குச் செவிசாய்க்க மறுத்து நீ அவரை தொழுதுகொள்வதிலிருந்து விலகி பிற பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்தால். 18 நீ அழிக்கப்படுவாய். நான் உன்னை எச்சரிக்கிறேன். நீ கர்த்தரிடமிருந்து விலகினால், உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைந்து கொண்டிருக்கிற யோர்தானைக் கடந்து போகிற நாட்டில் நீண்டகாலம் வாழமாட்டாய்.
19 “இன்று நான் உனக்கு முன்பாக இரண்டு வழிகளை வைத்தேன். உனது தேர்வுக்கு பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்தேன். நீ வாழ்வு அல்லது மரணத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீ வாழ்வைத் தெரிந்தெடுத்தால் அது ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். நீ மரணத்தைத் தெரிந்தெடுத்தால் அது உனக்கு சாபத்தைக் கொண்டுவரும். எனவே வாழ்வைத் தேர்ந்தெடு. பிறகு நீயும் உனது பிள்ளைகளும் வாழலாம். 20 நீ உனது தேவனாகிய கர்த்தரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவரைவிட்டு விலகக்கூடாது. ஏனென்றால், கர்த்தரே உனது வாழ்வு. உனது முற் பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு கர்த்தர் வாக்களித்த நாட்டில் நீண்ட காலம் வாழும்படி அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.”
யோசுவா புதிய தலைவனாக இருப்பான்
31 பிறகு மோசே போய் இஸ்ரவேலின் அனைத்து
ஜனங்களிடம் இவற்றைப் பேசினான். 2 மோசே அவர்களிடம், “நான் இன்று 120 வயதுள்ளவன். இனிமேல் என்னால் உங்களை வழிநடத்த முடியாது. கர்த்தர் என்னிடம்: ‘நீ யோர்தானைக் கடந்து போகமாட்டாய்’ என்று சொன்னார். 3 ஆனால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை அந்த நாட்டிற்குள் வழிநடத்திச் செல்வார். உனக்காக கர்த்தர் இந்த ஜாதிகளை அழிப்பார். நீ அவர்களது நாட்டை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வாய், ஆனால், யோசுவா உங்களை வழி நடத்த வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்.
4 “கர்த்தர் சீகோனையும், ஓகையும் அழித்தார். கர்த்தர் அந்த எமோரிய அரசர்களையும் அழித்தார். கர்த்தர் உனக்காக மீண்டும் அதனைச் செய்வார். 5 அந்த ஜாதிகளைத் தோற்கடிக்க கர்த்தர் உதவி செய்வார். ஆனால் நான் உங்களுக்குச் சொன்னபடி எல்லாவற்றையும் நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டும். 6 பலமுள்ளவர்களாகவும் தைரியம் உள்ளவர்களாகவும் இருங்கள். அந்த ஜனங்களுக்குப் பயப்பட வேண்டாம். ஏனென்றால், உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்றான்.
7 பின்பு மோசே யோசுவாவை அழைத்தான். மோசே யோசுவாவிடம் சொல்வதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். அவன் “பலமாகவும் தைரியமாகவும் இரு. அவர்களது முற்பிதாக்களுக்கு தருவதாக கர்த்தர் வாக்களித்த நாட்டிற்கு நீதான் இவர்களை வழி நடத்தவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நாட்டைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ உதவ வேண்டும். 8 கர்த்தர் உன்னை வழிநடத்துவார். அவர் தாமே உன்னுடன் இருக்கிறார். அவர் உன்னைக் கைவிடமாட்டார். உன்னை விட்டு விலகமாட்டார். கவலைப்படாதே. பயப்படாதே” என்றான்.
மோசே போதனைகளை எழுதுகிறான்
9 பிறகு மோசே போதனைகளை எழுதி ஆசாரியர்களிடம் கொடுத்தான். அந்த ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் கோத்திரத்தினர். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் வேலையை உடையவர்கள். மோசே போதனைகளை இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அனைவருக்கும் கொடுத்தான். 10 பிறகு, மோசே தலைவர்களிடம் பேசினான். அவன், “ஒவ்வொரு ஏழு ஆண்டின் முடிவிலும் விடுதலைக்கான ஆண்டில் அடைக்கல கூடாரப் பண்டிகையில், இந்தப் போதனைகளை ஜனங்களுக்கு வாசியுங்கள். 11 அப்பொழுது, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் கூடி வருவார்கள். அவர்கள் உன் தேவனாகிய கர்த்தர் குறிப்பிடும் சிறப்பான இடத்தில் அவரைச் சந்திக்க வருவார்கள். பிறகு நீ ஜனங்களுக்கு போதனைகளை வாசிக்க வேண்டும். அப்பொழுது அவற்றை அவர்கள் கேட்க முடியும். 12 அனைத்து ஜனங்களையும் ஒன்று கூட்டு. ஆண்கள், பெண்கள், சிறுகுழந்தைகள், உங்கள் நகரங்களில் வாழும் அயல்நாட்டுக்குடிகள் என அனைவரையும் கூட்டு. போதனைகளை அவர்கள் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். போதனைகளில் உள்ளவற்றுக்குக் கீழ்ப்படிவார்கள். 13 அவர்களது சந்ததிகள் போதனைகளை அறிந்திராவிட்டால், பிறகு அவர்கள் அவற்றைக் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நீ உனது நாட்டில் வாழும் காலம்வரை அவர்கள் அவரை மதிப்பார்கள். நீ விரைவில் யோர்தானை கடந்துபோய் அந்த நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வாய்” என்றான்.
கர்த்தர் மோசேயையும் யோசுவாவையும் அழைக்கிறார்
14 கர்த்தர் மோசேயிடம், “இப்பொழுது நீ மரணமடைவதற்குரிய நேரம் நெருங்கியுள்ளது. பரிசுத்தக் கூடாரத்திற்குள் வரும்படி யோசுவாவிடம் சொல். அவன் செய்ய வேண்டியவற்றை நான் யோசுவாவிடம் கூறுவேன்” என்றார். எனவே மோசேயும் யோசுவாவும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சென்றார்கள்.
15 கர்த்தர் கூடாரத்திலே உயரமான மேகத் தூணில் தோன்றினார். உயரமான அந்த மேகத்தூண் கூடாரத்தின் வாசலுக்கு மேல் நின்றது! 16 கர்த்தர் மோசேயிடம், “நீ விரைவில் மரணமடைவாய். நீ உனது முற்பிதாக்களோடு போய்ச் சேர்ந்தபிறகு இந்த ஜனங்கள் என் மீதுள்ள நம்பிக்கையில் தொடரமாட்டார்கள். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை அவர்கள் முறிப்பார்கள். அவர்கள் என்னைவிட்டு விலகி வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் போகிற நாட்டில் உள்ள பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள். 17 அந்த நேரத்தில் நான் அவர்கள் மேல் மிகவும் கோபங்கொள்வேன். நான் அவர்களை விட்டு விலகுவேன். அவர்களுக்கு உதவ நான் மறுப்பேன். அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். பிறகு அவர்கள், ‘இத்தீமைகள் எல்லாம் எங்களுக்கு ஏற்படுகின்றன. ஏனென்றால், தேவன் எங்களோடு இல்லை’ என்பார்கள். 18 நான் அவர்களுக்கு உதவ மறுப்பேன். ஏனென்றால், அவர்கள் தீமை செய்திருக்கின்றனர். மற்ற தெய்வங்களை வணங்கினார்கள்.
19 “எனவே, இப்பாடலை எழுது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதனைக் கற்றுக்கொடு. இப்பாடலைப் பாட அவர்களுக்குக் கற்றுக்கொடு. பிறகு இப்பாடல் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக எனக்குச் சாட்சியாக இருக்கும். 20 நான் அவர்களது முற்பிதாக்களுக்கு கொடுப்பதாக வாக்களித்த பல நன்மைகள் நிறைந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அவர்கள் உண்ண விரும்புகின்றவற்றை எல்லாம் பெறுவார்கள். அவர்கள் வளமான வாழ்வைப் பெறுவார்கள். ஆனால், பின்னர் அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பி அவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலகி எனது உடன்படிக்கையை உடைப்பார்கள். 21 பிறகு பல பயங்கரமானவை அவர்களுக்கு நிகழும். அவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படும். அப்போது, அவர்களின் ஜனங்கள் இப்பாடலை நினைவு வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவு தவறியுள்ளனர் என்பதை இப்பாடல் காட்டும். நான் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அதுவரை அழைத்துப் போயிருக்கமாட்டேன். ஆனால் ஏற்கெனவே அவர்கள் அங்கே என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன்” என்று கூறினார்.
22 எனவே அதே நாளில் மோசே அப்பாடலை எழுதினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அந்தப் பாட்டைக் கற்றுத்தந்தான்.
23 பின்னர், கர்த்தர் நூனின் மகனான யோசுவாவிடம் பேசி, “பலமுள்ளவனாகவும், தைரியமுள்ளவனாகவும் இரு. நான் வாக்களித்த நாட்டிற்கு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்வாய். நான் உன்னோடு இருப்பேன்” என்று கூறினார்.
மோசே இஸ்ரவேல் ஜனங்களை எச்சரிக்கிறான்
24 மோசே கவனமாக இப்போதனைகள் எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தபோது, 25 அவன் லேவியர்களுக்கு ஒரு ஆணை கொடுத்தான். (இவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லுகிறவர்கள்.) மோசே, 26 “இந்த போதனைகளின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இதனை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு எதிரான சாட்சியாக அங்கே இருக்கும். 27 நீங்கள் கடினமானவர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் உங்கள் சொந்த வழியில் வாழ விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். பாருங்கள், நான் உங்களோடு இருக்கும்போதே நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நான் மரித்தபிறகும் நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுப்பீர்கள். 28 எல்லா அதிகாரிகளையும், கோத்திரங்களின் தலைவர்களையும் ஒன்று கூட்டுங்கள். நான் அவர்களிடம் இவற்றைச் சொல்வேன். நான் பரலோகத்தையும், பூமியையும் அவர்களுக்கு எதிராக சாட்சியாக அழைப்பேன். 29 எனது மரணத்திற்குப் பிறகு நீங்கள் கெட்டவர்களாவீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் பின்பற்றுவதற்காக நான் கட்டளையிட்ட வழிகளை விட்டு விலகுவீர்கள். ஆகையால், எதிர்காலத்தில் உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால், கர்த்தர் தீங்கு என்று சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் செய்த தீமைகளினால் அவரைக் கோபமடையச் செய்கிறீர்கள்” என்று சொன்னான்.
மோசேயின் பாடல்
30 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூட்டப்பட்டனர். மோசே அவர்களுக்காக இந்தப் பாடலைப் பாடினான். மோசே முழுப்பாடலையும் பாடினான்:
32 “வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன்.
பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள்.
2 எனது போதனைகள் மழையைப் போன்று வரும்,
பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும்,
மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும்,
பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும்.
3 நான் கர்த்தருடைய நாமத்தைப் பேசுவேன். தேவனைப் போற்றுங்கள்!
4 “அவர் பாறை (கர்த்தர்), அவரது செயல்கள் பரிபூரணமானவை!
ஏனென்றால் அவரது வழிகள் எல்லாம் சரியானவை!
தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர்.
அவர் நீதியும் செம்மையுமானவர்.
5 நீங்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல.
உங்களது பாவங்கள் அவரை அசுத்தமாக்கியது.
நீங்கள் கோணலான பொய்யர்கள்.
6 உங்களுக்காக இவ்வளவு செய்த கர்த்தருக்கு இந்த வழியிலா நீங்கள் திரும்ப கொடுப்பீர்கள்? இல்லை!
நீங்கள் அறிவில்லாத அஞ்ஞான ஜனங்கள்.
கர்த்தர் உங்களது தந்தையாக இருக்கிறார்.
அவர் உங்களை உண்டாக்கினார். அவர் உங்களைத் தாங்குகிறார்.
7 “நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத்துப்பாருங்கள்.
பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள்.
உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான்.
உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள்.
8 உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து
ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார்.
அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார்.
இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார்.
9 கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு,
யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம்.
10 “கர்த்தர் யாக்கோபை (இஸ்ரவேல்) ஒரு வனாந்திரத்தில் கண்டுபிடித்தார்.
அது ஒரு காலியான காற்று மிகுந்த நிலம்.
கர்த்தர் அவனைக் காப்பாற்றுவதற்கு யாக்கோபுவைச் சுற்றி வளைத்துக்கொண்டார்.
அவர் அவனை தன் சொந்த கண்மணியைப் போல் காத்தார்.
11 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார்.
ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும்.
பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும்.
அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும்,
அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும்.
கர்த்தர் இதனைப் போன்றவர்.
12 கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார்.
அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை.
13 கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார்.
யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான்.
கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார்.
கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார்.
14 கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார்.
அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும்,
சிறந்த கோதுமையையும் கொடுத்தார்.
இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள்.
15 “ஆனால் யெஷுரன் கொழுத்துப்போய் கொழுத்த காளையைப்போன்று உதைத்தான்
(ஆமாம், நீங்கள் நன்றாகப் போஷிக்கப்பட்டீர்கள்! நீங்கள் திருப்தியாகி கொழுத்தீர்கள்.)
அவன் தன்னை உண்டாக்கின தேவனை விட்டு விலகினான்.
தன்னை இரட்சித்த பாறையை (தேவன்) விட்டு ஓடினான்.
16 கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர்.
கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள்.
17 அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர்.
அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும்.
அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும்.
18 நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டு விலகினாய்.
உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய்.
19 “கர்த்தர் இதனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார்.
ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்!
20 அதனால் கர்த்தர் கூறினார்,
‘நான் அவர்களிடமிருந்து திரும்புவேன்.
அப்போது அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கட்டும்!
அவர்கள் மிகவும் கலகக்கார ஜனங்களாய் இருக்கின்றனர்.
அவர்கள் தம் பாடங்களைப் படிக்காத பிள்ளைகளைப் போன்று இருக்கின்றார்கள்.
21 அவர்கள் பிசாசுகளை தொழுதுகொண்டு என்னைப் பொறாமைபடும்படிச் செய்தனர்.
இவ்விக்கிரகங்கள் உண்மையான தேவன் அல்ல.
அவர்கள் பயனற்ற விக்கிரகங்கள் மூலம், என்னைக் கோபமடையச் செய்தனர்.
எனவே, நான் இஸ்ரவேலுக்குப் பொறாமையை உண்டாக்குவேன். ஒரு தேசமாக மதிக்கப்படாத மூட ஜனங்களின் மூலம் நானும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குவேன்.
22 எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது.
அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது.
அது பூமியையும், பூமி உற்பத்தி செய்யும் பொருட்களையும் எரிக்கிறது.
அது மலைகளின் அஸ்திவாரங்களையும் எரிக்கிறது!
23 “‘நான் இஸ்ரவேலர்களுக்குத் துன்பங்களைக் கொண்டுவருவேன்.
நான் அவர்கள் மீது எனது அம்புகளை எய்வேன்.
24 அவர்கள் பசியால் மெலிந்து பலவீனம் அடைவார்கள்.
பயங்கரமான நோய்கள் அவர்களை அழிக்கும்.
நான் அவர்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன்.
விஷப் பாம்புகளும் பல்லிகளும் அவர்களைக் கடிக்கும்.
25 வீரர்கள் அவர்களை வீதிகளில் கொல்லுவார்கள்.
அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே பயப்படுவார்கள்.
படைவீரர்கள் இளைஞர்களையும்,
இளம் பெண்களையும் கொல்வார்கள்.
அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கொல்வார்கள்.
26 “‘நான் இஸ்ரவேலர்களை அழிக்க விரும்பினேன்.
எனவே ஜனங்கள் அவர்களை முழுமையாக மறப்பார்கள்!
27 அவர்களது பகைவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நான் அறிவேன்.
பகைவருக்கு அது புரியாது,
அவர்கள் பெருமை கொண்டு சொல்வார்கள்:
“கர்த்தர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் வென்றோம்!”’
28 “இஸ்ரவேல் ஜனங்கள் அறிவில்லாதிருக்கிறார்கள்.
அவர்கள் புரிந்துகொள்கிறதில்லை.
29 அவர்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் புரிந்திருக்கக்கூடும்.
என்ன நடந்திருக்கக் கூடும் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள்!
30 ஒருவனால் 1,000 பேரைத் துரத்த முடியுமா?
இரண்டு பேரால் 10,000 பேரை ஓடவைக்க முடியுமா?
கர்த்தர் அவர்களை எதிரிகளுக்குக் கொடுத்திருந்தால் மட்டுமே அது நிகழும்!
அவர்களின் பாறையானவர் (தேவன்) அடிமைகளைப்போன்று விற்றிருந்தால் மட்டுமே அது நிகழும்!
31 எதிரிகளின் ‘பாறையானவன்’ நமது பாறையானவரைப் (கர்த்தர்) போன்று பலமுள்ளவன் அல்ல.
நமது பகைவர்கள் கூட இதனைத் தெரிந்திருக்கின்றார்கள்!
32 பகைவர்களின் திராட்சைத் தோட்டங்களும், வயல்களும் சோதோம் மற்றும் கொமோராவைப் போன்று அழிக்கப்படும்.
அவர்களது திராட்சைப் பழங்கள் விஷமுள்ளதாகும்.
33 அவர்களது திராட்சைரசம் பாம்பு விஷம் போன்றிருக்கும்.
34 “கர்த்தர் கூறுகிறார்,
‘நான் அந்தத் தண்டனையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
நான் அதனை எனது சேமிப்பு அறையில் பூட்டியுள்ளேன்!
35 அவர்கள் தீமையான கிரியைகளைச் செய்யும்போது
நான் அதற்குத் தண்டனையை வைத்திருப்பேன்.
அவர்கள் தவறானவற்றைச் செய்ததால் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
அவர்களின் துன்ப காலம் அருகில் உள்ளது.
அவர்களது தண்டனை விரைவில் வரும்.’
36 “கர்த்தர் தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பார்.
அவர்கள் அவரது வேலைக்காரர்கள், அவர்களுக்கு அவர் இரக்கம் காண்பிப்பார்.
அவர்களது வல்லமை போய்விட்டதை அவர் பார்ப்பார்.
அவர்களில் அடிமைகளும், சுதந்திரமானவர்களும் ஏகமாய் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் பார்ப்பார்.
37 பின்னர் கர்த்தர் கூறுவார்,
‘பொய்த் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்?
பாதுகாப்பிற்காக நீங்கள் ஓடிய “பாறை” எங்கே?
38 அப்பொய்த் தெய்வங்கள் உங்கள் பலிகளில் உள்ள கொழுப்பைத் தின்றன.
அவை உங்கள் காணிக்கையில் உள்ள திராட்சை ரசத்தைக் குடித்தன.
எனவே அந்தத் தெய்வங்கள் எழுந்து உங்களுக்கு உதவட்டும்.
அவை உங்களைக் காக்கட்டும்!
39 “‘இப்பொழுது நானே, நான் ஒருவரே தேவனாக இருக்கிறதைப் பார்!
வேறு தேவன் இல்லை. நான் ஜனங்களை மரிக்கச் செய்வேன்.
நானே ஜனங்களை உயிருடன் வைப்பேன்.
நான் ஜனங்களைக் காயப்படுத்த முடியும்.
நான் அவர்களைக் குணப்படுத்தவும் முடியும்.
எனது அதிகாரத்திலிருந்து ஒருவனும் இன்னொருவனைக் காப்பாற்ற முடியாது.
40 நான் எனது கையைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்.
நான் என்றென்றும் ஜீவித்திருக்கிறவர் என்பதினால் அவை நிகழும் என்பதும் உண்மையாகும்!
41 நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன்.
எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன்.
அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன்.
42 எனது பகைவர்கள் கொல்லப்படுவார்கள்.
கைதிகளாக சிறைபிடிக்கப்படுவார்கள்.
எனது அம்புகள் அவர்களது இரத்தத்தால் மூடப்படும்.
அவர்களது வீரர்களின் தலைகளை எனது வாள் வெட்டும்.’
43 “இந்த உலகம் முழுவதும் தேவஜனங்களுக்காக மகிழவேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு அவர் உதவுகிறார்.
அவர்களது வேலைகாரர்களைக் கொன்ற ஜனங்களை அவர் தண்டிக்கிறார்.
அவர் அவரது பகைவர்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுக்கிறார்.
அவர் அவரது நாட்டையும், ஜனங்களையும் சுத்தம் செய்கிறார்.”
மோசே அவனது பாடலை ஜனங்களுக்குக் கற்றுத்தருகிறான்
44 மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் மகனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான். 45 மோசே இவற்றை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து முடித்தபோது 46 அவன் அவர்களிடம், “இன்று நான் உங்களுக்குச் சொன்ன அனைத்துக் கட்டளைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லவேண்டும். 47 இந்தப் போதனைகளை முக்கியமற்றவை என்று நீங்கள் எண்ணவேண்டாம். அவை உங்கள் ஜீவன் ஆகும். இந்தப் போதனைகள் மூலம், யோர்தான் ஆற்றைக் கடந்துபோய் நீங்கள் சுதந்தரிக்கத் தயாராக இருக்கும் தேசத்தில் நீண்ட வாழ்வை வாழப்போகிறீர்கள்” என்றான்.
நேபோ மலையின்மேல் மோசே
48 கர்த்தர் மோசேயிடம் அதே நாளில் பேசினார். கர்த்தர், 49 “அபாரீம் எனும் மலைகளுக்குப் போ, எரிகோவிற்கு எதிர்ப்புறமாக இருக்கிற மோவாப் நாட்டிலுள்ள நேபோ மலையின்மேல் ஏறு. பிறகு நீ, இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்வதற்காக நான் கொடுக்கிற, கானான் நாட்டினைப் பார்க்க முடியும். 50 நீ அந்த மலைமீது மரணமடைவாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் மலைமீது மரித்து முற்பிதாக்களிடம் சேர்ந்ததுபோல் நீயும் உன் முற்பிதாக்களிடம் சேருவாய். 51 ஏனென்றால், நீங்கள் இருவரும் எனக்கு எதிராக பாவம் செய்தீர்கள். நீங்கள் காதேசிலே மேரிபாவின் தண்ணீர் அருகில் இருந்தீர்கள். அது சீன் வனாந்தரத்திலே இருந்தது. அங்கே, இஸ்ரவேல் ஜனங்கள் முன்பாக, நான் பரிசுத்தமானவர் என்று நீ கனப்படுத்தவில்லை. 52 எனவே, இப்போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கிற தேசத்தை நீ பார்க்கலாம். ஆனால், நீ அந்த தேசத்திற்குள் செல்லமுடியாது” என்று கூறினார்.
மோசே ஜனங்களை ஆசீர்வதிக்கிறான்
33 மோசே மரிப்பதற்கு முன்பு, தேவனுடைய மனுஷனான அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் இதுதான்.
2 மோசே சொன்னான்:
“சீனாயிலிருந்து கர்த்தர் வந்தார்.
கர்த்தர் சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமாகும் ஒளிபோன்று தோன்றினார்.
அவர் பாரான் மலையிலிருந்து ஒளி வீசும் வெளிச்சத்தைப் போன்று இருந்தார்.
கர்த்தர் 10,000 பரிசுத்தரோடு வந்தார்.
தேவனின் பலமிக்க படை வீரர்கள் அவரது பக்கத்திலேயே இருந்தார்கள்.
3 ஆம்! கர்த்தர் அவரது ஜனங்களை நேசிக்கிறார்.
அவரது பரிசுத்தமான ஜனங்கள் அனைவரும் அவரது கைக்குள் இருக்கிறார்கள்.
அவர்கள் அவரது காலடியில் இருந்து, அவரது போதனையைக் கற்கிறார்கள்!
4 மோசே சட்டத்தை கொடுத்தான்.
அந்தப் போதனைகள் எல்லாம் யாக்கோபின் ஜனங்களுக்குரியது.
5 அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள்.
கர்த்தர் யெஷுரனுக்கு அரசரானார்!
ரூபனுக்கான ஆசீர்வாதம்
6 “ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்!
ஆனால், அவனது குடும்பத்தில் கொஞ்சம் ஜனங்கள் மட்டும் இருக்கட்டும்!”
யூதாவுக்கான ஆசீர்வாதம்
7 மோசே யூதாவைப் பற்றி இவற்றைச் சொன்னான்:
“கர்த்தாவே, யூதாவிலிருந்து தலைவன் உதவிக்காக அழைக்கும்போது கேளும்.
அவனை அவனது ஜனங்களிடம் கொண்டு வாரும்.
அவனைப் பலப்படுத்தும், அவனது பகைவர்களை தோற்கடிக்கும்படி உதவும்.”
லேவிக்கான ஆசீர்வாதம்
8 மோசே லேவியைப் பற்றி இவற்றைச் சொன்னான்:
“லேவி உமது உண்மையான சீடன்.
அவன் ஊரீம் மற்றும் தும்மீமை வைத்திருக்கிறான்.
நீர் மாசாவிலே லேவியின் ஜனங்களைச் சோதித்தீர்.
மேரிபாவின் தண்ணீரிடத்திலே அவர்கள் உமது ஜனங்களாக இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தீர்.
9 கர்த்தாவே, அவர்கள் சொந்தக் குடும்பத்தை காட்டிலும் உமக்கென்று மிகவும் கவனம் செலுத்தினார்கள்.
அவர்களது தந்தை மற்றும் தாயைப் பற்றியும் கவலைப்படவில்லை.
அவர்கள் தமது சகோதரர்களையும் அடையாளம் காணவில்லை.
அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகள் மேலும் அக்கறை செலுத்தவில்லை.
ஆனால், அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
அவர்கள் உமது உடன்படிக்கையைக் காத்தார்கள்.
10 அவர்கள் உமது விதிகளை யாக்கோபிற்குப் போதிப்பார்கள்.
அவர்கள் உமது சட்டத்தை இஸ்ரவேலுக்குப் போதிப்பார்கள்.
அவர்கள் உமக்கு முன்னால் நறுமண பொருட்களை எரிப்பார்கள்.
அவர்கள் உமது பலிபீடத்தில் தகன பலிகளைச் செலுத்துவார்கள்.
11 “கர்த்தாவே, லேவியின் உடமைகளை ஆசீர்வதியும்.
அவன் செய்கின்றவற்றை ஏற்றுக்கொள்ளும்.
அவனைத் தாக்குகிறவர்களை அழித்துப்போடும்!
அவனது பகைவர்களைத் தோற்கடியும் அப்போது அவர்கள் மீண்டும் அவனை தாக்கமாட்டார்கள்.”
பென்யமீனுக்கான ஆசீர்வாதம்
12 மோசே பென்யமீனைப் பற்றி இதனைச் சொன்னான்:
“கர்த்தர் பென்யமீனை நேசிக்கிறார்.
பென்யமீன் அவர் அருகில் பாதுகாப்பாக வாழ்வான்.
கர்த்தர் எல்லா நேரத்திலும் அவனைக் காப்பாற்றுகிறார்.
கர்த்தர் அவனது நாட்டில் வாழ்வார்.”
யோசேப்புக்கான ஆசீர்வாதம்
13 மோசே யோசேப்பைப் பற்றி இதனைச் சொன்னான்:
“கர்த்தர் யோசேப்பின் நாட்டை ஆசீர்வதிக்கட்டும்.
கர்த்தாவே, வானத்தின் மேலிருந்து மழையையும் பூமிக்குக் கீழிருந்து நீரூற்றுகளையும் அனுப்பும்.
14 அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.
ஒவ்வொரு மாதமும் அதன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.
15 குன்றுகளும், பழைமையான மலைகளும்
அவற்றின் சிறந்த கனியைத் தயார் செய்யட்டும்.
16 பூமி தனது சிறந்த பொருட்களை யோசேப்பிற்குத் தரட்டும்.
யோசேப்பு தனது சகோதரர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டான்.
எனவே, எரியும் முட்செடிகளில் இருந்து கர்த்தர் தன்னிடமுள்ள சிறந்தவற்றை யோசேப்பிற்குக் கொடுக்கட்டும்.
17 யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான்.
அவனது இரு மகன்களும் காளையின் கொம்புகளைப் போன்றுள்ளனர்.
அவர்கள் மற்ற ஜனங்களைத் தாக்கிப்
பூமியின் கடைசிவரை தள்ளுவர்!
ஆமாம், மனாசே ஆயிரக்கணக்கான ஜனங்களையும்,
எப்பிராயீம் பத்தாயிரக்கணக்கான ஜனங்களையும் தள்ளியிருக்கிறார்கள்.”
செபுலோன் மற்றும் இசக்காருக்கான ஆசீர்வாதம்
18 மோசே இதனை செபுலோனுக்குச் சொன்னான்:
“செபுலோன், நீ வெளியே போகும்போது மகிழ்ச்சியாய் இரு.
இசக்கார், நீ உன் கூடாரங்களாகிய தாபரத்தில் மகிழ்ச்சியாய் இரு.
19 அவர்கள் ஜனங்களை தங்கள் மலைக்கு அழைப்பார்கள்.
அவர்கள் அங்கே நல்ல பலிகளை செலுத்துவார்கள்.
அவர்கள் கடலிலிருந்து செல்வங்களையும்
கடற்கரையிலிருந்து பொக்கிஷங்களையும் எடுப்பார்கள்.”
காத்துக்குரிய ஆசீர்வாதம்
20 மோசே இதனைச் சொன்னார்.
“தேவனைப் போற்றுங்கள்.அவர் காத்திற்கு மிகுதியான நாட்டைக் கொடுத்தவர்!
காத் ஒரு சிங்கத்தைப் போன்றவன். அவன் படுத்துக் காத்திருக்கிறான். பிறகு, அவன் தாக்கி மிருகத்தைத் துண்டுகளாகக் கிழிப்பான்.
21 அவன் அவனுக்குரிய சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுக்கிறான்.
அவன் அரசனின் பாகத்தை எடுக்கிறான்.
ஜனங்களின் தலைவர்கள் அவனிடம் வருகிறார்கள்.
கர்த்தர் சொன்ன நல்லவற்றை அவன் செய்கிறான்.
இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சரியானதை அவன் செய்கிறான்.”
தாணுக்குரிய ஆசீர்வாதம்
22 மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்:
“தாண் சிங்கத்தின் குட்டியாக இருக்கிறான்.
அது பாசானிலிருந்து வெளியே குதித்தது.”
நப்தலிக்கான ஆசீர்வாதம்
23 மோசே நப்தலியைப் பற்றி இதனைச் சொன்னான்:
“நப்தலி, ஏராளமான நல்லவற்றைப் பெறுவாய்.
கர்த்தர் உன்னை உண்மையாக ஆசீர்வதிப்பார்.
நீ கலிலேயா ஏரி உள்ள நாட்டைப் பெறுவாய்.”
ஆசேருக்கான ஆசீர்வாதம்
24 மோசே ஆசேரைப் பற்றி இதனைச் சொன்னான்:
“மகன்கள் அனைவரிலும், ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆசேர் இருக்கிறான்.
அவன் தனது சகோதரர்களுக்கு பிரியமானவனாக இருக்கட்டும். அவன் தனது கால்களை எண்ணெயில் கழுவட்டும்.
25 உனது வாசல்கள் இரும்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பூட்டுகளைப் பெறட்டும்.
உனது வாழ்நாள் முழுவதும் நீ பலத்தோடு இருப்பாய்.”
மோசே தேவனைப் புகழுகிறான்
26 “யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை!
தேவன் உனக்கு உதவுவதற்காகத் தமது மகிமையோடு மேகங்களின் மேல் சவாரி செய்து வானங்களின் மேல் வருகிறார்.
27 தேவன் என்றென்றும் வாழ்கிறார்.
அவர் உனது பாதுகாப்பான இடம்.
தேவனின் வல்லமை என்றென்றும் தொடரும்!
அவர் உன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்.
உனது பகைவர்கள் உன் நாட்டை விட்டு விலகும்படி தேவன் துரத்துவார்.
அவர், ‘பகைவரை அழித்துப்போடு’ என்று சொல்லுவார்.
28 எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும்.
யாக்கோபின் ஊற்று அவர்களுக்கு உரியதாக இருக்கும்.
அவர்கள் தானியமும், திராட்சை ரசமும் நிறைந்த நாட்டைப் பெறுவார்கள்.
அந்த நாடு மிகுதியான மழையைப் பெறும்.
29 இஸ்ரவேலே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்.
வேறு எந்த நாடும் உன்னைப் போன்றில்லை.
கர்த்தர் உன்னைக் காப்பாற்றினார்.
கர்த்தர் உனக்குப் பாதுகாப்பான கேடயத்தைப் போன்றிருக்கிறார்!
கர்த்தர் பலமுள்ள வாளைப் போன்றும் இருக்கிறார்.
உனது பகைவர்கள் உனக்குப் பயப்படுவார்கள்.
நீ அவர்களது பரிசுத்த இடங்களை மிதிப்பாய்!”
மோசே மரணமடைதல்
34 மோசே நேபோ மலைமீது ஏறினான். மோசே மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியிலிருந்து பிஸ்காவின் உச்சிக்குச் சென்றான். இது எரிகோவிலிருந்து யோர்தான் ஆற்றுக்கு எதிர்புறத்தில் உள்ளது. கர்த்தர் மோசேக்கு கீலேயாத் முதல் தாண்வரையுள்ள அனைத்து நாடுகளையும் காட்டினார். 2 கர்த்தர் அவனுக்கு நப்தலி, எப்பிராயீம், மற்றும் மனாசேயின் நாடுகள் எல்லாவற்றையும் காட்டினார். அவர் அவனுக்கு மத்தியதரைக் கடல் வரையுள்ள யூதா நாடு முழுவதையும் காட்டினார். 3 கர்த்தர் மோசேக்கு பாலைவனத்தையும், பேரீச்ச மரங்களின் நகரம் என்னும் சோவார் முதல் எரிகோவரையுள்ள பள்ளத்தாக்கையும் காட்டினார். 4 கர்த்தர் மோசேயிடம், “நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்த நாடு இதுதான். நான் அவர்களிடம் சொன்னேன் ‘நான் இந்த நாட்டை உங்கள் சந்ததிகளுக்குத் தருவேன். அந்த நாட்டை நீ பார்க்கும்படி செய்வேன். ஆனால் அங்கே உன்னால் போகமுடியாது’” என்று கூறினார்.
5 பின்னர் கர்த்தருடைய தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் மரித்தான். கர்த்தர் மோசேயிடம் இவை நிகழும் என்று சொல்லியிருந்தார். 6 கர்த்தர் மோசேயை மோவாபில் அடக்கம் செய்தார். இது பெத்பேயோருக்கு எதிர்புறத்தில் உள்ள பள்ளத்தாக்கிலே உள்ளது. ஆனால் இன்றுவரை மோசேயின் கல்லறை எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. 7 மோசே மரணமடையும்போது 120 வயதுடையவனாக இருந்தான். அவன் எப்பொழுதும்போல் பலமுள்ளவனாக இருந்தான். அவனது கண்கள் அப்பொழுதும் நன்றாக இருந்தது. 8 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்காக 30 நாட்கள் அழுதனர். அவர்கள் துக்ககாலம் முடியும்வரை மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியில் தங்கினார்கள்.
யோசுவா புதிய தலைவனாகுதல்
9 யோசுவாவின்மேல் மோசே தனது கைகளை வைத்து அவனைப் புதிய தலைவனாக நியமித்திருந்தான். பிறகு நூனின் மகனான யோசுவா ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவிற்குக் கீழ்ப்படியத் தொடங்கினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தவற்றை எல்லாம் அவர்கள் செய்தனர்.
10 இஸ்ரவேல் மோசேயைப் போன்று இன்னொரு தீர்க்கதரிசியைப் பெறவில்லை. கர்த்தர் மோசேயை நேருக்கு நேர் தெரிந்து வைத்திருந்தார். 11 எகிப்து நாட்டில் அற்புதங்களைச் செய்வதற்கு கர்த்தர் மோசேயை அனுப்பினார். பார்வோன், அவனது அதிகாரிகள் மற்றும் எகிப்திலுள்ள அனைத்து ஜனங்களும் அந்த அற்புதங்களைப் பார்த்தனர். 12 மோசே செய்ததுபோன்று வேறு எந்த தீர்க்கதரிசியும் சகல வல்லமையும், பயங்கரமும் கொண்ட செயல்களைச் செய்யவில்லை. அவன் செய்ததை இஸ்ரவேலில் உள்ள எல்லா ஜனங்களும் பார்த்தனர்.
2008 by World Bible Translation Center