Add parallel Print Page Options

இறந்த பெண் உயிரடைதலும் நோயாளி குணப்படுதலும்

(மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43)

40 இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றபோது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர். 41 யவீரு என்னும் பெயருள்ள மனிதன் இயேசுவிடம் வந்தான். ஜெப ஆலயத்தின் தலைவனாக யவீரு இருந்தான். இயேசுவின் பாதங்களில் விழுந்து வணங்கி யவீரு தன் வீட்டுக்கு வருகை தருமாறு அவரை வேண்டினான். 42 யவீருக்கு ஒரே ஒரு குமாரத்தி இருந்தாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகி இருந்தது. அவள் இறக்கும் தருவாயில் இருந்தாள். யவீருவின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லா பக்கங்களிலிருந்தும் இயேசுவை மக்கள் சூழ்ந்து கொண்டனர். 43 இரத்தப் போக்கினால் பன்னிரண்டு ஆண்டுகள் துன்புற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் அவர்களுள் ஒருத்தி ஆவாள். மருத்துவர்களிடம் சென்று அவள் தனது பணத்தை எல்லாம் செலவழித்திருந்தாள். ஆனால் எந்த மருத்துவராலும் அவளைக் குணமாக்க இயலவில்லை. 44 அப்பெண் இயேசுவுக்குப் பின்னாக வந்து அவரது அங்கியின் கீழ்ப் பகுதியைத் தொட்டாள். அந்நேரமே அவளின் இரத்தப் போக்கு நின்றுவிட்டது. 45 அப்போது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். எல்லாருமே தாம் இயேசுவைத் தொடவில்லை என்று கூறினர். பேதுரு, “குருவே! உங்களைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது” என்றான்.

46 அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டது உண்மை. என்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன்” என்றார். 47 தன்னால் ஒளிக்க முடியாததை உணர்ந்த பெண், நடுங்கியவளாய் இயேசுவின் முன்னே விழுந்து வணங்கினாள். மக்கள் அனைவரும் கேட்கும்படி தான் இயேசுவைத் தொட்டதன் காரணத்தைக் கூறினாள். பின்னர் தான் இயேசுவைத் தொட்டவுடன் குணமடைந்ததையும் சொன்னாள். 48 இயேசு அவளை நோக்கி, “என் மகளே, நீ விசுவாசித்ததால் குணமாக்கப்பட்டாய். சமாதானத்தோடு போ” என்றார்.

49 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஜெப ஆலயத்தின் தலைவனின் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, “உங்கள் குமாரத்தி இறந்துவிட்டாள். போதகரை மேலும் தொல்லைப்படுத்த வேண்டாம்” என்றான்.

50 இயேசு அதைக் கேட்டார். அவர் யவீருவை நோக்கி, “பயப்படாதே, விசுவாசத்துடனிரு, உன் குமாரத்தி குணம் பெறுவாள்” என்றார்.

51 இயேசு வீட்டை அடைந்தார். பேதுரு யோவான், யாக்கோபு, பெண்ணின் தந்தை, தாய் ஆகியோரை மட்டுமே உள்ளே வர அனுமதித்தார். பிறரை உள்ளே விடவில்லை. 52 எல்லா மக்களும் அச்சிறுமி இறந்ததற்காக அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தனர். ஆனால் இயேசு, “அழாதீர்கள். அவள் இறக்கவில்லை. அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்” என்றார்.

53 அச்சிறுமி இறந்தாள் என அறிந்திருந்ததால் மக்கள் இயேசுவைப் பார்த்துச் சிரித்தனர். 54 ஆனால் இயேசு அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்து நில்” என்றார். 55 அவள் ஆவி அவளுக்குள் திரும்ப வந்தது. அவள் உடனே எழுந்து நின்றாள். இயேசு, “அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். 56 சிறுமியின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். நடந்ததைப் பிறருக்குக் கூறாமல் இருக்கும்படியாக இயேசு அவர்களுக்குக் கூறினார்.

Read full chapter