Bible in 90 Days
ஆசாரியர்களின் நியமன விழா
29 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கு ஆசாரியர்களாக விசேஷ பணிவிடையை ஆரோனும் அவன் மகன்களும் செய்யும்பொருட்டு நீ செய்ய வேண்டிய காரியங்களை நான் உனக்குக் கூறுவேன். ஒரு இளங்காளையையும், குறைகள் இல்லாத இரண்டு இளம் வெள்ளாடுகளையும் தேர்ந்தெடுத்துக்கொள். 2 சுத்தமான கோதுமை மாவை புளிப்பில்லாத ரொட்டியாகச் செய்துகொள். அதே மாவைப் பயன்படுத்தி ஒலிவ எண்ணெயால் வார்ப்பு ரொட்டிகளையும் தயாரித்துக்கொள். சிறிய மெல்லிய அடைகளையும் எண்ணெய் பூசி உண்டாக்கு. 3 வார்ப்பு ரொட்டிகளையும், அடைகளையும் ஒரு கூடையில் வைத்து அவைகளையும், காளையையும், இரண்டு கடாக்களையும் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கொடு.
4 “ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலுக்கு ஆரோனையும், அவனது மகன்களையும் அழைத்துவா. அவர்களை தண்ணீரில் கழுவின பின்பு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை அணிவி. 5 முழுவதும் நெய்த வெள்ளை அங்கியையும், ஏபோத்தோடு அணிய வேண்டிய நீல அங்கியையும் உடுத்திவிடு. அதன் மேல் ஏபோத்தையும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தையும் அணியச்செய். அழகிய அரைக்கச்சையை கட்டிவிடு. 6 தலைப்பாகையை அவன் தலையில் வைத்து, அதன்மேல் பரிசுத்த கிரீடத்தை வை. 7 பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து ஆரோனின் தலையின்மேல் ஊற்று. கர்த்தருக்குரிய ஆசாரியப் பணிவிடைக்கு ஆரோன் பிரித்தெடுக்கப்பட்டதை இது காட்டும்.
8 “பின்பு ஆரோனின் மகன்களை அந்த இடத்திற்கு அழைத்து வா. முழுவதும் நெய்யப்பட்ட வெள்ளை நிற அங்கிகளை அவர்களுக்கு அணிவி. 9 பின் அரைக்கச்சைகளைக் கட்டிவிடு. அவர்கள் அணிவதற்கான விசேஷ பாகைகளைக் கொடு. அப்போதிலிருந்து அவர்கள் ஆசாரியர்களாகப் பணி செய்ய ஆரம்பிப்பார்கள். என்றென்றைக்குமான விசேஷ சட்டப்படி அவர்கள் ஆசாரியர்களாக இருப்பார்கள். இவ்வாறு ஆரோனையும் அவன் மகன்களையும் நீ ஆசாரியர்களாக்கவேண்டும்.
10 “ஆசாரிப்புக் கூடாரத்திற்கு முன் காளையைக் கொண்டு வா. ஆரோனும், அவனது மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலையில் வைக்கட்டும். 11 ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் காளையைக் கொல். கர்த்தர் இதைப் பார்ப்பார். 12 காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பலிபீடத்திற்குச் செல். உனது விரல்களை இரத்தத்தில் தோய்த்து பலிபீடத்தின் கொம்புகளில் பூசு. மீதி இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிடு. 13 காளையின் உட்புறத்திலுள்ள எல்லா கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள சவ்வையும், சிறுநீரகங்களையும், அவைகளை சுற்றிய கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தில் எரித்துவிடு. 14 பின் காளையின் மாமிசம், அதன் தோல், பிற பகுதிகளை எடுத்துவிட்டு பாளையத்துக்கு வெளியே கொண்டுபோய் அவற்றைச் சுட்டெரித்துவிடு. இதுவே ஆசாரியர்களின் பாவத்தைப் போக்குவதற்கான காணிக்கை ஆகும்.
15 “பின் ஆரோனும், அவனது மகன்களும் ஆட்டுக் கடாவின் தலையில் தம் கைகளை வைக்கும்படி சொல். 16 கடாவைக் கொன்று இரத்தத்தைச் சேகரித்துப் பலிபீடத்தைச் சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் அதைத் தெளித்துவிடு. 17 செம்மறி ஆட்டுக் கடாவைப் பல துண்டுகளாக்கு. அதன் எல்லா உட்பாகங்களையும், கால்களையும் கழுவு. அவற்றை செம்மறி ஆட்டுக் கடாவின் தலையோடும், அதன் மற்ற துண்டுகளோடும் வை. 18 எல்லாவற்றையும் பலிபீடத்தில் எரித்துவிடு. இது கர்த்தருக்குத் தரப்படும் தகனபலியாகும். கர்த்தருக்கு சுகந்த வாசனையாக இது இருக்கும்.
19 “ஆரோனும், அவனது மகன்களும் மற்றொரு ஆட்டுக் கடாவின்மேல் தம் கைகளை வைக்கட்டும். 20 அக்கடாவைக் கொன்று கொஞ்சம் இரத்தத்தை சேகரித்துக்கொள். அந்த இரத்தத்தை ஆரோனின் வலது காது மடலிலும், அவன் மகன்களின் வலது காது மடலிலும், அவர்களின் வலது கைப் பெரு விரல்களிலும், அவர்களின் வலது கால் பெருவிரல்களிலும் தடவு. பின்பு பலிபீடத்தின் 4 பக்கங்களின் எதிரிலும் மீதி இரத்தத்தை தெளி. 21 பிறகு சிறிது இரத்தத்தைப் பலி பீடத்திலிருந்து எடுத்து அதை விசேஷ எண்ணெயுடன் கலந்து ஆரோன் மீதும் அவன் ஆடைகள் மீதும் தெளி. பின்பு அவனது மகன்கள் மற்றும் அவர்களின் ஆடைகள் மீதும் தெளி. ஆரோனும் அவனது மகன்களும் எனக்கு விசேஷ பணிவிடை செய்பவர்கள் என்பதையும், இந்த ஆடைகள் விசேஷ காலங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டியவை என்பதையும் இது காட்டும்.
22 “பின்பு ஆட்டுக் கடாவிலிருந்து கொழுப்பை அகற்று. (ஆரோனை தலைமை ஆசாரியனாக நியமிக்கும் விழாவில் பயன்படுத்தப்படும் கடா இது.) வாலையும், உட்பாகங்களையும் சூழ்ந்திருக்கும் கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள சவ்வையும், சிறுநீரகங்களையும் அவைகளைச் சுற்றி இருக்கும் கொழுப்பையும் வலது காலையும் எடுத்துக்கொள். 23 பின் புளிப்பு இல்லாத ரொட்டி இருக்கும் கூடையை எடுத்துக்கொள். கர்த்தரின் முன் வைக்க வேண்டிய கூடை இது. ஒரு வார்ப்பு ரொட்டி, எண்ணெயால் செய்யப்பட்ட அடை, ஒரு சிறிய மெல்லிய அடை ஆகியவற்றைக் கூடையில் இருந்து எடுக்க வேண்டும். 24 இவற்றை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கையில் கொடு. இவற்றை அவர்கள் ஏந்தி நிற்கும்படி செய். கர்த்தருக்கு உகந்த அசைவாட்டும் காணிக்கையாக அவர்கள் அதை அசைவாட்ட வேண்டும். 25 பின்பு அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் ஆட்டுக்கடாவோடு பலிபீடத்தில் சுட்டெரி. இது நெருப்பின் மூலமாக தேவனுக்குத் தரப்படும் தகன பலியாகும். அதன் சுகந்த வாசனை கர்த்தருக்கு ஏற்றது.
26 “ஆட்டுக்கடாவின் (இந்தக் கடா ஆரோனை தலைமை ஆசாரியனாக்கும் விழாவில் பயன்படுத்தப்படும்) மார்புப் பகுதியை விசேஷ காணிக்கையாக கர்த்தரின் முன்னிலையில் ஏந்தி நிற்க வேண்டும். பின் அதை எடுத்து வை. மிருகத்தின் இந்தப் பகுதி உனக்குரியது. 27 ஆரோனைத் தலைமை ஆசாரியனாக்குவதற்குப் பயன்படுத்திய கடாவின் மார்புப் பகுதி, கால் ஆகியவற்றை எடுத்து அவற்றை பரிசுத்தப்படுத்து. அந்த விசேஷ பாகங்களை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கொடு. 28 இஸ்ரவேல் ஜனங்கள் எப்போதும் இப்பாகங்களை ஆசாரியர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தும்போதெல்லாம் இப்பாகங்கள் ஆசாரியர்களுக்கு உரியவை. இவற்றை அவர்கள் ஆசாரியர்களுக்குக் கொடுக்கும்போது அது கர்த்தருக்கு கொடுப்பதற்குச் சமமாகும்.
29 “ஆரோனுக்காகச் செய்த அந்த விசேஷ ஆடைகளைப் பாதுகாப்பாக வைத்திரு. அவனுக்குப்பின் வரும் மகன்களுக்கும் அந்த ஆடைகள் உரியனவாகும். தலைமை ஆசாரியர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் அவற்றை அணிவார்கள். 30 ஆரோனின் மகன் அவனுக்குப்பின் தலைமை ஆசாரியனாவான். பரிசுத்த இடத்தில் பணியாற்றுவதற்காக ஆசாரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது 7 நாளளவும் அவன் அதை உடுத்த வேண்டும்.
31 “ஆரோனை தலைமை ஆசாரியனாக்க பயன்படுத்திய ஆட்டுக்கடாவின் மாம்சத்தை பரிசுத்தமான இடத்தில் சமைக்க வேண்டும். 32 முன் வாசலில் ஆரோனும் அவன் மகன்களும் அதை உண்ண வேண்டும். ஆசாரிப்புக் கூடாரத்தின் கூடையிலுள்ள ரொட்டியையும் அவர்கள் சாப்பிட வேண்டும். 33 அவர்கள் ஆசாரியர்களானபோது, அவர்கள் பாவங்களை அகற்ற இந்தக் காணிக்கை பயன்படுத்தப்பட்டது. இப்போது அவர்கள் அவற்றை உண்ண வேண்டும். அவைகள் பரிசுத்தமானதால் அந்நியன் அவைகளை உண்ணக் கூடாது. 34 மறு நாள் காலையில் கடாவின் மாமிசமோ, ரொட்டியோ மீதியிருந்தால் அது முற்றிலும் சுட்டெரிக்கப்பட வேண்டும். அதை விசேஷ காலத்தில் விசேஷ வகையில் சாப்பிட வேண்டுமாதலால் அந்த ரொட்டியையோ, மாமிசத்தையோ நீ சாப்பிடக் கூடாது.
35 “ஆரோனுக்காகவும், அவன் மகன்களுக்காகவும் நீ அவற்றைச் செய்ய வேண்டும். நான் சொன்னபடியே அவற்றைச் செய்ய வேண்டும். ஆசாரியர்களாக அவர்களை நியமிக்கும் விழா 7 நாட்கள் தொடர வேண்டும். 36 ஏழு நாட்களிலும் தினந்தோறும் ஒவ்வொரு காளையைக் கொல்ல வேண்டும். ஆரோன், அவன் மகன்களின் பாவங்களுக்காக செலுத்தப்பட்ட பலியாக இது அமையும். பலிபீடத்தைப் பரிசுத்தப் படுத்துவதற்கு இப்பலிகளை நீ பயன்படுத்த வேண்டும். அதைப் பரிசுத்தமாக்க ஒலிவ எண்ணெயை ஊற்ற வேண்டும். 37 அந்த 7 நாட்களில் பலிபீடத்தை சுத்தமாகவும், பரிசுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது பலிபீடம் மகா பரிசுத்தமாகும். பலிபீடத்தைத் தொடும் எப்பொருளும் பரிசுத்தம் ஆகும்.
38 “ஒவ்வொரு நாளும் பலிபீடத்தில் ஒரு காணிக்கை செலுத்த வேண்டும். ஒரு வயது நிரம்பிய இரண்டு ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல வேண்டும். 39 ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும் மற்றொன்றை மாலையிலும் காணிக்கையாய் செலுத்த வேண்டும். 40-41 முதல் ஆட்டுக்குட்டியைக் கொல்லும்போது, சுத்தமான அரைத்த 8 கிண்ணம் கோதுமை மாவைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அந்த மாவைக் கால்படி திராட்சைரசத்தோடு சேர்த்து காணிக்கையாக அளிக்க வேண்டும். மாலையில் இரண்டாவது ஆட்டுக்குட்டியைக் கொல்லும்போதும் 8 கிண்ணம் மாவையும் கால்படி திராட்சை ரசத்தையும் காலையில் செய்தது போலவே காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அது கர்த்தருக்கு அளிக்கும் சுகந்த வாசனையான தகன காணிக்கையாகும். இதனை எரிக்கும்போது, கர்த்தர் வாசனையை முகருவார், அது அவரை மகிழ்விக்கும்.
42 “ஒவ்வொரு நாளும் இவற்றைச் சர்வாங்க தகனக் காணிக்கையாக எரிக்க வேண்டும். கர்த்தருக்கு முன்பாக ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் இதைச் செய். தொடர்ந்து உனது தலைமுறைகளுக்கும் இவ்வாறே செய். நீ காணிக்கை செலுத்தும்போது கர்த்தராகிய நான் உங்களைச் சந்தித்துப் பேசுவேன். 43 அங்கு இஸ்ரவேல் ஜனங்களைச் சந்திப்பேன். எனது மகிமை அவ்விடத்தைப் பரிசுத்தப்படுத்தும்.
44 “ஆசாரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தப்படுத்துவேன். ஆரோனையும், அவனது மகன்களையும் எனக்கு ஆசாரியராகப் பணியாற்றுவதற்காகப் பரிசுத்தமாக்குவேன். 45 நான் இஸ்ரவேல் ஜனங்களோடு வாழ்வேன், நான் அவர்கள் தேவனாக இருப்பேன். 46 நானே தேவனாகிய கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள். அவர்களோடு வாழும்படியாக அவர்களை எகிப்திலிருந்து வழிநடத்திய தேவன் நான் என்பதை அவர்கள் அறிவார்கள். நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்” என்றார்.
தூபபீடம்
30 மேலும் தேவன் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடத்தை தயார் செய்து, நறுமணப்புகை எரிக்கும்படியான தூபபீடமாக அதைப் பயன்படுத்து. 2 பலிபீடம் 1 முழம் நீளமும் 1 முழம் அகலமும் உடைய சதுர வடிவில் இருக்க வேண்டும். அது 2 முழம் உயரம் இருக்கட்டும். நான்கு மூலைகளிலும் கொம்புகள் இருக்கும். இந்த கொம்புகள் ஒரே துண்டாக தூபபீடத்தோடு இணைக்கப்பட வேண்டும். 3 பீடத்தின் மேல் புறத்தையும் பக்கங்களையும் கொம்புகளையும் பொன்னால் மூட வேண்டும். பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தைப் பதிக்க வேண்டும். 4 அதன் கீழ் இரண்டு பொன் வளையங்கள் இருக்கட்டும். பீடத்தின் எதிர்ப்பக்கங்களில் இரண்டு பொன் வளையங்கள் இருக்க வேண்டும். பீடத்தைத் தண்டுகளால் சுமப்பதற்கு இவ்வளையங்கள் பயன்படுத்தப்படும். 5 தண்டுகளை சீத்திம் மரத்தால் செய்து பொன்னால் மூடு. 6 விசேஷ திரைக்கு முன்னால் தூபபீடத்தை நிறுத்து. அத்திரைக்குப் பின் உடன்படிக்கைப் பெட்டி இருக்கும். உடன்படிக்கைக்குமேல் இருக்கும் கிருபாசனத்துக்கு முன்னால் பீடம் அமையும். இவ்விடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன்.
7 “ஆரோன் தினந்தோறும் அதிகாலையில் தூபபீடத்தின்மேல் இனிய நறுமணப் புகையை எரிக்க வேண்டும். விளக்குகளை பராமரிக்க வரும்போது அவன் இதைச் செய்வான். 8 மீண்டும் மாலையிலும் அவன் நறுமணப்புகையை எரிப்பான். அதுவும் மாலையில் விளக்கைப் பராமரிப்பதற்கு அவன் வரும் நேரமேயாகும். ஒவ்வொரு நாளும் என்றென்றும் கர்த்தரின் முன் நறுமணப் புகை எரிக்கப்பட வேண்டும். 9 வேறு எந்த நறுமணப் பொருட்களை எரிப்பதற்கோ, வேறு தகனபலிகளை எரிப்பதற்கோ இந்தத் தூபபீடத்தைப் பயன்படுத்தக் கூடாது. தானிய காணிக்கையையோ, பானங்களின் காணிக்கையையோ எரிப்பதற்கு இப்பீடத்தைப் பயன்படுத்தலாகாது.
10 “ஆண்டிற்கொருமுறை கர்த்தருக்கு ஒரு விசேஷ பலியை ஆரோன் செலுத்த வேண்டும். ஜனங்களின் பாவத்தைப் போக்குவதற்கு பாவப்பரிகார பலியின் இரத்தத்தை ஆரோன் பயன்படுத்த வேண்டும். பீடத்தின் கொம்புகளினருகே ஆரோன் இதனைச் செய்வான். இது பாவப்பரிகார நாள் எனப்படும். இது கர்த்தருக்கு மிகவும் பரிசுத்த நாள்” என்றார்.
ஆலய வரி
11 கர்த்தர் மோசேயை நோக்கி, 12 “இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள். நீ இதைச் செய்தபிறகு ஒவ்வொருவனும் கர்த்தருக்கென ஒரு தொகை கொடுக்க வேண்டும். ஒவ்வொருவனும் இதைச் செய்தால் அவர்களுக்குத் தீங்கு நேராது. 13 எண்ணப்பட்ட ஒவ்வொருவனும் 1/2 சேக்கல் வீதம் கொடுக்க வேண்டும். (அதாவது அதிகாரப்பூர்வமான அளவுப்படி 1/2 சேக்கல்.) 1 சேக்கலுக்கு 20 கேரா 1/2 சேக்கல் கர்த்தருக்குரிய காணிக்கை. 14 குறைந்தபட்சம் இருபது வயது நிம்பியவர்கள் எல்லோரையும் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுத்து கொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் கர்த்தருக்கு இந்தக் காணிக்கையைக் கொடுக்க வேண்டும். 15 செல்வந்தர்கள் 1/2 சேக்கலுக்கு அதிகமாக கொடுக்கக் கூடாது. ஏழைகளும் 1/2 சேக்கலுக்குக் குறைவாகக் கொடுக்கக்கூடாது. எல்லோரும் கர்த்தருக்கு ஒரே அளவு காணிக்கை தரவேண்டும். இது உங்கள் வாழ்க்கையின் இரட்சிப்பிற்கான பணம். 16 இப்பணத்தை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து திரட்டு. அதை ஆசாரிப்புக் கூடாரத்தின் பணிவிடைக்காகப் பயன்படுத்து. கர்த்தர் தமது ஜனங்களை நினைவுகூருவதற்காக இது அமையும். அவர்களின் சொந்த வாழ்க்கையின் பாதுகாப்புக்காக ஜனங்கள் கொடுக்கும் பணம் இது” என்றார்.
கழுவும் தொட்டி
17 கர்த்தர் மோசேயை நோக்கி, 18 “வெண்கலத்தால் ஒரு பெரிய தொட்டியைச் செய்து அதை வெண்கலப் பீடத்தில் வை. இதைக் கைகளையும், கால்களையும் கழுவுவதற்குப் பயன்படுத்து. அதை ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் நடுவில் வை. வெண்கலத் தொட்டியைத் தண்ணீரால் நிரப்பு. 19 ஆரோனும், அவனது மகன்களும் அவர்கள் கைகளையும் கால்களையும் இந்த தொட்டித் தண்ணீரில் கழுவ வேண்டும். 20 ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போதும் கர்த்தருக்குக் காணிக்கையைப் படைக்க பலிபீடத்தை நெருங்கும்போதும் ஒவ்வொரு முறையும் அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் மரிக்கமாட்டார்கள். 21 அவர்கள் மரிக்காமலிருக்கும்படிக்குத் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும். இது ஆரோனும், அவனது ஜனங்களும் என்றென்றும் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். எதிர் காலத்தில் வாழவிருக்கும் ஆரோனின் ஜனங்களுக்கும் இது நித்திய கட்டளையாயிருக்கும்” என்றார்.
அபிஷேக எண்ணெய்
22 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 23 “தரத்தில் உயர்ந்த நறுமணப் பொருட்களை அரசாங்க அளவின்படி வாங்கு. வெள்ளைப் போள தைலம் 12 பவுண்டும், நறுமணப் பட்டை 6 பவுண்டும், வசம்பு 6 பவுண்டும் 24 இலவங்கம் 12 பவுண்டும் வாங்கிக்கொள். அதிகாரப்பூர்வமான அளவின்படி பார்த்து வாங்குவதோடு ஒரு கேலன் தரமான ஒலிவ எண்ணெயையும் வாங்கிக்கொள்.
25 “எல்லாவற்றையும் கூட்டிக் கலந்து சுகந்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்துக்கொள். 26 ஆசாரிப்புக் கூடாரத்தின் மேலும் உடன்படிக்கைப் பெட்டியின் மேலும் இந்த எண்ணெயைத் தெளி. அவை விசேஷமானவை என்பதை இது உணர்த்தும். 27 எண்ணெயை மேசைமீதும் அதன் மீதுள்ள எல்லாப் பாத்திரங்களின்மீதும் ஊற்று. குத்துவிளக்குத் தண்டின்மீதும், அதன் உபகரணங்களின்மீதும், தூபபீடத்தின்மீதும் ஊற்று.
28 “தேவனுக்கு பலிகளை எரிப்பதற்கான பலிபீடத்திலும் எண்ணெயை ஊற்று. இதன் பாத்திரத்திலும் அதன் அடித்தளத்திலும் ஊற்று. 29 இவற்றையெல்லாம் நீ பரிசுத்தமாக்குவாய். அவை கர்த்தருக்கு மிகவும் விசேஷமானவை. அவற்றைத் தொடும் எவையும் பரிசுத்தமாகும்.
30 “ஆரோன்மீதும், அவனது மகன்கள் மீதும் அபிஷேக எண்ணெயை ஊற்று. அவர்கள் எனக்கு விசேஷ பணிவிடை செய்வதை அது காட்டும். அப்பொழுது அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு சேவை செய்யலாம். 31 அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது என்பதை இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல். அது எனக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 32 சாதாரண நறுமணப் பொருளாக அதைப் பயன்படுத்தக் கூடாது. இந்த விசேஷ எண்ணெயைத் தயாரிக்கும் முறையில் சாதாரண நறுமண தைலத்தை தயாரிக்கக் கூடாது. இந்த அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது. இது உங்களுக்கு மிகவும் விசேஷமானதாகும். 33 இந்தப் பரிசுத்த எண்ணெயைப் போல யாரேனும் நறுமண தைலத்தை உண்டாக்கி அதை அந்நியருக்குக் கொடுத்தால் அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்றார்.
நறுமணப்பொருள்
34 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “இந்த நறுமணப் பொருட்களை வாங்கிக்கொள். அவை வெள்ளைப் போளம், குங்கிலியம், அல்பான் பிசின், கந்தவர்க்கம், சாம்பிராணி ஆகியன எல்லாவற்றையும் ஒரே அளவில் எடுத்துக்கொள். 35 இவற்றைச் சேர்த்து நறுமணமுள்ள தூபவர்க்கம் செய். அபிஷேக எண்ணெய் தயாரிப்பதுபோல, இதைத் தயாரிக்க வேண்டும். உப்பையும் அதனோடு சேர்க்கும்போது அது சுத்தமானதாகவும், விசேஷமானதாகவும் இருக்கும். 36 அதில் கொஞ்சம் தூபவர்க்கத்தைத் தூளாக்கு. ஆசாரிப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைக்கு முன்னால் நறுமணப் பொடியை வை. அந்த இடத்தில் நான் உன்னைச் சந்திப்பேன். விசேஷ காரியத்துக்காக மட்டுமே அந்த நறுமணப் பொடியை நீ பயன்படுத்த வேண்டும். 37 இப்படியாக இந்த நறுமணப்பொருளை கர்த்தருக்கென்று சிறந்த முறையில் தயாரிக்கவேண்டும். அதேவிதமாக வேறு நறுமணப் பொருளைத் தயாரிக்கக் கூடாது. 38 ஒருவன் நறுமணத்திற்கென்று தனது உபயோகத்திற்காக நறுமணப் பொருளை இதே முறையில் தயாரிக்க விரும்பலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்தால், எனது ஜனங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவான்” என்றார்.
பெசலெயேலும் அகோலியாபும்
31 கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேல். 3 தேவ ஆவியால் நான் பெசலெயேலை நிரப்பியுள்ளேன். எல்லாவிதமான கைவேலைகளையும் செய்யக்கூடிய திறமையையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். 4 பெசலெயேல் கலைப் பொருட்களை வடிப்பதில் வல்லவன். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருட்களைச் செய்ய அவனுக்கு இயலும். 5 பெசலெயேலால் அழகான அணிகலன்களை வெட்டி உருவாக்க முடியும். மரவேலைகளிலும் அவன் கை தேர்ந்தவன். அவன் எல்லாவிதமான வேலைகளையும் செய்யும் ஆற்றல்மிக்கவன். 6 அவனுக்கு உதவி செய்வதற்கு தாண் கோத்திரத்திலிருந்து அகிசாமாக்கின் மகன் அகோலியாபை தெரிந்தெடுத்துள்ளேன். நான் உனக்குக் கூறிய எல்லாப் பொருட்களையும் செய்யும் திறமையை எல்லாப் பணியாட்களுக்கும் கொடுத்துள்ளேன். நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.
7 ஆசாரிப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி, கிருபாசனம், கூடாரத்தின் பணி முட்டுகளும்,
8 மேசையும் அதற்குத் தேவையான பொருட்களும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் கருவிகளும், நறுமணப் பொருளை எரிக்கும் பீடம்,
9 காணிக்கைகளை எரிக்கும் பலிபீடம், பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தொட்டியும் அதன் பீடமும்,
10 ஆசாரியனாகிய ஆரோனின் விசேஷ ஆடைகள், ஆரோனின் மகன்கள் ஆசாரியராக சேவை செய்ய அவர்களுக்கான உடைகள்,
11 நறுமணம் மிக்க அபிஷேக எண்ணெய், மகா பரிசுத்த இடத்தின் நறுமணப்பொருள் அனைத்தையும்
நான் உனக்குக் கூறிய விதத்திலேயே பணியாளர்கள் செய்ய வேண்டும்” என்றார்.
ஓய்வு நாள்
12 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 13 “இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதைக் கூறு: ‘ஓய்வுக்குரிய விசேஷ தினங்களின் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எல்லாத் தலைமுறைகளிலும் அது உங்களுக்கும் எனக்கும் மத்தியிலுள்ள அடையாளமாக விளங்கும். உங்களை எனது விசேஷமான ஜனங்களாக கர்த்தராகிய நான் ஏற்றுக்கொண்டதை இது உணர்த்தும்.
14 “‘ஒய்வு நாளை ஒரு விசேஷ நாளாக எண்ணுவாயாக. பிறநாட்களுக்கு சமமாக ஓய்வு நாளையும் ஒருவன் எண்ணினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். ஓய்வு நாளில் வேலை செய்கிறவனை அவனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கிவிட வேண்டும். 15 வேலை நாட்களாக வாரத்தில் ஆறு நாட்கள் உள்ளன. ஏழாவது நாள் ஓய்வுக்குரிய விசேஷ நாளாகும். கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாள் அது. ஓய்வு நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். 16 இஸ்ரவேல் ஜனங்கள் ஓய்வு நாளை நினைவுகூர்ந்து அதை விசேஷ நாளாக்க வேண்டும். என்றென்றும் தொடர்ந்து இதைச் செய்துவர வேண்டும். என்றென்றும் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் தொடர்கிற உடன்படிக்கையாக அது விளங்கும். 17 ஓய்வு நாள் எனக்கும் இஸ்ரவேலருக்கும் மத்தியில் ஒரு அடையாளமாக எப்போதும் இருக்கும். கர்த்தர் ஆறு நாட்கள் உழைத்து வானையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் ஏழாம் நாளில் ஓய்வாகவும் அமைதியாகவும் இருந்தார்’” என்றார்.
18 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம் பேசி முடித்தார். உடன்படிக்கை பதித்த இரண்டு கற்பலகைகளை கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். தேவன் தமது விரல்களால் அக்கற்பலகைகளில் எழுதினார்.
பொன் கன்றுக்குட்டி
32 மோசே மலையிலிருந்து இறங்கிவர மிகுந்த தாமதமானதை ஜனங்கள் உணர்ந்தனர். அவர்கள் ஆரோனைச் சூழ்ந்து, அவனை நோக்கி, “பாரும், மோசே எங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே வழி நடத்தி வந்தான். இப்போது அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆகவே எங்களுக்கு முன்பாகச் சென்று வழி நடத்துவதற்குச் சில தேவர்களை உருவாக்கும்” என்றனர்.
2 ஆரோன் ஜனங்களிடம், “உங்கள் மனைவி, பிள்ளைகளுக்குச் சொந்தமான பொன் காதணிகளை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றான்.
3 எல்லா ஜனங்களும் தங்கள் பொன் காதணிகளைச் சேர்த்து ஆரோனிடம் கொடுத்தனர். 4 ஆரோன் ஜனங்களிடமிருந்து அவற்றை வாங்கி, அதைப் பயன்படுத்தி ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தை வார்த்தான். பின்பு ஒரு உளியைப் பயன்படுத்தி, அந்த சிலையைச் செதுக்கினான். பின் அதை பொன் தகட்டால் மூடினான்.
அப்போது ஜனங்கள், “இஸ்ரவேலரே, இந்த தெய்வங்களே உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தன!” என்றனர்.
5 ஆரோன் இவற்றையெல்லாம் பார்த்தான். கன்றுக்குட்டியின் எதிரில் ஒரு பலிபீடம் அமைத்தான். பின்பு ஜனங்களை நோக்கி, “கர்த்தரைக் கனப்படுத்துவதற்கு நாளை ஒரு பண்டிகை நடத்துவோம்” என்றான்.
6 மறுநாள் காலையில் ஜனங்கள் வெகு சீக்கிரமாக எழுந்தனர். அவர்கள் மிருகங்களைக் கொன்று தகன பலிகளையும், சமாதானபலிகளையும் படைத்தனர். ஜனங்கள் தின்று, குடித்துக் களிக்க உட்கார்ந்தனர். பின்பு எழுந்து மிகுதியான அநாகரீகத்தில் ஈடுபட்டனர்.
7 அப்போது கர்த்தர் மோசேயிடம், “இந்த மலையைவிட்டு சீக்கிரமாய் கீழே இறங்கிப் போ. எகிப்திலிருந்து நீ வெளியே அழைத்து வந்த, உனது ஜனங்கள் மிகவும் சீர்கேடான பாவத்தைச் செய்திருக்கிறார்கள். 8 செய்யும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டவைகளினின்று மிக வேகமாய் சோரம் போனார்கள். பொன்னை உருக்கி கன்றுக்குட்டியை வார்த்தார்கள். அவர்கள் அதைத் தொழுது அதற்குப் பலி செலுத்துகிறார்கள். அதனிடம், ‘எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தின தெய்வங்கள் இவையே’ என்றனர்” என்றார்.
9 மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் இந்த ஜனங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பிடிவாத குணமுடையோர் என்பதையும் அறிவேன். அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திரும்புவார்கள். 10 எனவே என் கோபத்தால் அவர்களை அழிப்பேன். பின் உன் மூலமாக ஒரு பெரிய ஜனத்தை உருவாக்குவேன்” என்றார்.
11 ஆனால் மோசே தேவனாகிய கர்த்தரை மிகவும் கெஞ்சி, “கர்த்தாவே, உமது கோபத்தால் உமது ஜனங்களை அழித்துவிடாதேயும். உமது மிகுந்த ஆற்றலினாலும் வல்லமையாலும் நீர் இந்த ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தீர். 12 ஆனால் நீர் உமது ஜனங்களை அழித்துவிட்டால் எகிப்தியர்கள், ‘கர்த்தர் அந்த ஜனங்களுக்குத் தீமை செய்யத் திட்டமிட்டார். எனவே அவர்களை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார். அவர்களை மலைகளில் கொல்ல விரும்பினார். அவர்களைப் பூமியிலிருந்து நிர்மூலமாக்க எண்ணினார், என்று சொல்வார்கள்.’ எனவே, உமது ஜனங்களிடம் கோபம் கொள்ளாதிரும். உமது எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்! உமது ஜனங்களை அழித்துவிடாதிரும். 13 ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் (யாக்கோபு) ஆகியோரை நினைவுகூரும். அவர்கள் உமக்குப் பணிவிடை செய்தனர். உமது பெயரால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர். ‘நான் உன் ஜனங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்வேன். நான் உன் ஜனங்களுக்கு வாக்குறுதி அளித்த தேசத்தைக் கொடுப்பேன். அத்தேசம் என்றும் அவர்களுக்குரியதாகும்’ என்று நீர் வாக்குறுதி தந்தீர்” என்றான்.
14 எனவே, கர்த்தர் ஜனங்களுக்காக மனஸ்தாபப்பட்டார். தான் செய்வதாகக் கூறிய செயலை கர்த்தர் செய்யவில்லை, அவர் ஜனங்களை அழிக்கவில்லை.
15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான். உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை அவன் கையில் ஏந்திவந்தான். கற்பலகைகளின் முன்புறமும், பின்புறமும் அந்தக் கட்டளைகள் எழுதப்பட்டிருந்தன. 16 தேவனே அக்கற்களை உண்டாக்கி, அக்கற்களின் மீது கட்டளைகளை எழுதியிருந்தார்.
17 மலையிலிருந்து இறங்கியபோது பாளையத்திலிருந்து பெரும் சத்தத்தை யோசுவா கேட்டான். யோசுவா மோசேயை நோக்கி: “நம் பாளையத்தில் யுத்த சத்தம் எழும்புகிறது” என்றான்.
18 மோசே பதிலாக, “இது வெற்றியால் ஒரு படை எழுப்பும் சத்தமல்ல. தோல்வியால் ஒரு படை எழுப்பும் கூக்குரலும் அல்ல. நான் கேட்டது இசையின் சத்தமே” என்றான்.
19 மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். அவன் கற்பல கைகளை தரையில் வீசி எறிந்தான். மலை அடிவாரத்தில் அவை சுக்கு நூறாக உடைந்து சிதறின. 20 பின்பு மோசே ஜனங்கள் செய்த கன்றுக்குட்டியை உடைத்து, அதை நெருப்பில் போட்டு உருக்கினான். பொன்னைத் தூளாகுமட்டும் அரைத்து அதைத் தண்ணீரில் கரைத்தான். அந்த தண்ணீரை பருகும்படி இஸ்ரவேல் ஜனங்களை வற்புறுத்தினான்.
21 மோசே ஆரோனை நோக்கி, “இந்த ஜனங்கள் உனக்குச் செய்ததென்ன? ஏன் இந்த மாபெரும் கேடான பாவத்தைச் செய்யும்படியாக அவர்களை வழி நடத்தினாய்?” என்று கேட்டான்.
22 ஆரோன், “கோபம் கொள்ளாதிரும், இந்த ஜனங்கள் எப்போதுமே பாவம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும் அல்லவா. 23 ஜனங்கள் என்னிடம், ‘மோசே எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினான். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, எங்களை வழிநடத்துவதற்கு தெய்வங்களைச் செய்’ என்றார்கள். 24 நான் அவர்களிடம், ‘உங்களிடம் பொன் காதணிகள் இருந்தால், அவற்றை என்னிடம் கொடுங்கள்’ என்றேன். ஜனங்கள் பொன்னை என்னிடம் கொடுத்தார்கள். நான் பொன்னை நெருப்பில் போட்டேன். நெருப்பிலிருந்து கன்றுகுட்டி வந்தது!” என்று பதிலுரைத்தான்.
25 ஜனங்கள் கட்டுப்பாட்டை மீறி அநாகரீகமாக நடக்கும்படியாக ஆரோன் அவர்களை அனுமதித்ததை மோசே கண்டான். ஜனங்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதை அவர்களின் பகைவர்கள் கண்டனர். 26 எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள்.
27 பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான்.
28 லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். 29 மோசே, “தமக்குப் பணிவிடை செய்ய கர்த்தர் இன்று உங்களைத் தெரிந்தெடுத்தார். ஏனென்றால், இன்றைக்கு உங்களில் ஒவ்வொருவரும் அவனது மகனுக்கு எதிராகவும், சகோதரனுக்கு எதிராகவும் இருந்தீர்கள். எனவே இன்று அவர் உங்கள் மேல் ஆசீர்வாதம் பொழிவார்” என்றான்.
30 மறுநாள் காலையில் மோசே ஜனங்களை நோக்கி, “நீங்கள் கொடிய பாவம் செய்துள்ளீர்கள்! நான் கர்த்தரிடம் மேலே போவேன். உங்கள் பாவத்தை அவர் மன்னிப்பதற்காக நான் ஏதாவது செய்யக்கூடுமா எனப் பார்ப்பேன்” என்றான். 31 எனவே மோசே கர்த்தரிடம் மீண்டும் சென்று, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! இந்த ஜனங்கள் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் பொன்னால் ஒரு தேவனைச் செய்தனர். 32 இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை கிறுக்கி விடும்” என்றான்.
33 ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கெதிராக பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன். 34 எனவே நீ கீழே போய் நான் சொல்கிற இடத்திற்கு ஜனங்களை வழிநடத்து. எனது தூதன் உங்களுக்கு முன்பாகச் சென்று வழிநடத்துவார். பாவம் செய்கிற மனிதர்கள் தண்டிக்கப்படும் காலம் வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். 35 எனவே கர்த்தர் ஒரு கொடிய நோய் ஜனங்களை வாதிக்கும்படியாகச் செய்தார். ஆரோனிடம் பொன் கன்றுக்குட்டியைச் செய்யுமாறு கேட்டதால் அவர் இவ்வாறு செய்தார்.
நான் உங்களோடு வரமாட்டேன்
33 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “நீயும், நீ எகிப்திலிருந்து வழிநடத்திய ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட வேண்டும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக நான் வாக்குறுதி அளித்த தேசத்திற்குச் செல்லுங்கள். அவர்களின் சந்ததிக்கு அத்தேசத்தைக் கொடுப்பதாகச் சொன்னேன். 2 எனவே உங்களுக்கு முன்பாகச் செல்வதற்கு ஒரு தூதனை அனுப்புவேன். கானானியரையும், எமோரியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும், நான் தோற்கடிப்பேன். உங்கள் தேசத்தைவிட்டு அவர்கள் போகும்படியாகச் செய்வேன். 3 எனவே உச்சிதமான பொருட்களால் நிரம்பியுள்ள அத்தேசத்திற்குச் செல்லுங்கள். ஆனால் நான் உங்களோடு வரமாட்டேன். நீங்கள் பிடிவாதமான ஜனங்கள். என்னை மிகவும் கோபப்படுத்துகிறீர்கள். நான் உங்களோடு வந்தால் ஒருவேளை வழியிலேயே உங்களை அழித்து விடுவேன்” என்றார்.
4 ஜனங்கள் இந்தச் செய்தியைக் கேட்டுக் கவலையடைந்தனர். அவர்கள் ஆபரணங்கள் அணிவதை விட்டுவிட்டனர். 5 ஏனெனில் கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கூறு, ‘நீங்கள் பிடிவாதமான ஜனங்கள். சிறிது காலம் உங்களோடு வந்தாலும் நான் உங்களை அழித்து விடக்கூடும். நான் உங்களுக்கு என்ன செய்வதென முடிவெடுக்கும்வரை உங்கள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள்’ என்று கூறு” என்றார். 6 (சீனாய்) ஓரேப் மலையருகே இஸ்ரவேல் ஜனங்கள் ஆபரணங்களை அணிவதை விட்டுவிட்டனர்.
தற்காலிக ஆசரிப்புக் கூடாரம்
7 பாளையத்துக்கு வெளியே சற்று தூரத்தில் மோசே ஒரு கூடாரத்தை எடுத்துச் செல்வது வழக்கம். மோசே அதை “ஆசரிப்புக் கூடாரம்” என்று அழைத்தான். கர்த்தரிடமிருந்து எதையாவது கேட்டறிய விரும்புகிறவன் பாளையத்துக்கு வெளியே ஆசாரிப்புக் கூடாரத்திற்குச் செல்வான். 8 மோசே அக்கூடாரத்திற்குப் போகும் போதெல்லாம் ஜனங்கள் அவனைக் கவனித்து நோக்கினார்கள். ஜனங்கள் அவரவர் கூடாரத்தின் வாயிலில் வந்து நின்று, மோசே ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவதைப் பார்த்தனர். 9 மோசே கூடாரத்திற்கு போகும்போதெல்லாம் நீண்ட மேகம் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் தங்கும். கர்த்தர் மோசேயோடு பேசுவார். 10 ஜனங்கள் கூடார வாசலில் மேகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவரவர் கூடார வாசல்களுக்குச் சென்று கீழே குனிந்து கர்த்தரை வணங்கினார்கள்.
11 இவ்வாறு கர்த்தர் மோசேயுடன் நேருக்கு நேராக நின்று பேசினார். ஒரு மனிதன் தன் நண்பனிடம் பேசுவதுபோல கர்த்தர் மோசேயுடன் பேசினார். கர்த்தரிடம் பேசியபிறகு, மோசே தங்குமிடத்துக்குத் திரும்பினான். ஆனால் அவனது உதவியாளன் எப்போதும் கூடரத்திலேயே இருந்தான். அந்த உதவியாளன் நூனின் மகனாகிய யோசுவா என்பவனாவான்.
கர்த்தருடைய மகிமையை மோசே காண்கிறான்
12 மோசே கர்த்தரை நோக்கி, “இந்த ஜனங்களை வழிநடத்துமாறு நீர் சொன்னீர். ஆனால் என்னோடு வருபவர் யார் என்பதை நீர் கூறவில்லை. நீர் என்னிடம், ‘உன்னை நன்கு அறிவேன். உன்னைக் குறித்து பிரியமாயிருக்கிறேன்.’ என்றீர். 13 நான் உண்மையாகவே உம்மை திருப்திப்படுத்தியிருந்தால் உமது வழிகளை எனக்குப் போதியும். நான் உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் தொடர்ந்து உம்மைப் பிரியப்படுத்துவேன். இவர்கள் உமது ஜனங்கள் என்பதை நினைவுகூரும்” என்றான்.
14 கர்த்தர், “நான் உன்னோடுகூட வருவேன். உன்னை வழிநடத்துவேன்” என்றார்.
15 அப்போது மோசே கர்த்தரை நோக்கி, “நீர் வழி நடத்தவில்லையெனில், என்னை இவ்விடத்திலிருந்து அனுப்பாதிரும். 16 மேலும், என்னிடமும் இந்த ஜனங்களிடமும் திருப்தியடைந்துள்ளீர் என்பதை நான் எவ்வாறு அறிவேன்? நீர் எங்களோடு வந்தால், அதை நிச்சயமாக அறிவோம். இல்லையென்றால், பூமியிலுள்ள மற்ற மனிதருக்கும் எங்களுக்கும் வித்தியாசமேயில்லை” என்றான்.
17 அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ கேட்டபடியே நான் செய்வேன். உன்னில் சந்தோஷம் அடைந்திருக்கிறேன், உன்னை நான் நன்கு அறிவேன்.” என்றார்.
18 அப்போது மோசே, “இப்போது உமது மகிமையை எனக்குக் காட்டும்” என்றான்.
19 கர்த்தர், “என் பரிபூரண நன்மை உனக்கு முன் செல்லும்படி செய்வேன். நானே கர்த்தர், நீ கேட்கும்படி என் பெயரை அறிவிப்பேன். நான் விரும்பும் யாருக்கும் எனது இரக்கத்தையும், அன்பையும் காட்டுவேன். 20 ஆனால் நீ என் முகத்தைப் பார்க்க முடியாது. எந்த மனிதனும் என்னைப் பார்த்து பின்பு உயிரோடு இருக்க முடியாது.
21 “எனக்கருகிலுள்ள ஒரு இடத்தில் ஒரு பாறை உள்ளது. நீ அப்பாறையின் மேல் ஏறி நில். 22 எனது மகிமை அவ்விடத்தைக் கடந்து செல்லும். நான் உன்னைத் தாண்டும்போது உன்னை அந்தப் பாறையின் வெடிப்பில் வைத்து என் கரங்களால் உன்னை மூடுவேன். 23 பின் எனது கைகளை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய், ஆனால் நீ என் முகத்தைக் காணமாட்டாய்” என்றார்.
புதிய கற்பலகைகள்
34 கர்த்தர் மோசேயை நோக்கி, “உடைந்து போன முதல் இரண்டு பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளைச் செய். முதல் இரண்டு கற்களிலும் எழுதப்பட்ட அதே வார்த்தைகளை நான் இந்தக் கற்களிலும் எழுதுவேன். 2 நாளை காலையில் தக்க ஆயத்தத்துடன் சீனாய் மலைக்கு வா. மலையின்மேல் என் முன்னே வந்து நில். 3 உன்னோடு வேறு யாரும் வரக்கூடாது. யாரும் மலையில் காணப்படக் கூடாது. உங்கள் மிருகங்களோ, ஆட்டு மந்தைகளோ எதுவும் மலையடிவாரத்தில் புல்லை உண்பதற்குக்கூட அனுமதிக்கக் கூடாது” என்றார்.
4 எனவே, முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளை மோசே உருவாக்கினான். மறுநாள் அதிகாலையில் சீனாய் மலையின் மேல் ஏறிச் சென்றான். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தான். மோசே இரண்டு கற்பலகைகளையும் தன்னோடு எடுத்துச் சென்றான். 5 மோசே மலையின்மீது ஏறியவுடன், கர்த்தர் மேகத்தில் அவனிடம் இறங்கி வந்து, தமது பெயரை மோசேயிடம் சொன்னார்.
6 கர்த்தர் மோசேக்கு முன்னர் கடந்து சென்று, “யேகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக்கைக்குரியவர். 7 ஆயிரம் தலைமுறைவரைக்கும் கர்த்தர் தமது இரக்கத்தைக் காட்டுவார். ஜனங்கள் செய்கிற தவறுகளை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் குற்றவாளிகளைத் தண்டிக்க கர்த்தர் மறப்பதில்லை. கர்த்தர் குற்றவாளிகளை மட்டும் தண்டிக்காமல் அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும், அவர்களின் பிள்ளைகளையும், அவர்கள் செய்த தீயகாரியங்களுக்காகத் தண்டிப்பார்” என்றார்.
8 உடனே மோசே கீழே தரையில் குனிந்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். மோசே, 9 “கர்த்தாவே நீர் என்னோடு சந்தோஷமாக இருக்கிறீர் என்பது உண்மையானால் தயவு செய்து எங்களோடு வாரும். இவர்கள் பிடிவாதமான ஜனங்கள் என்பதை அறிவேன். ஆனால் நாங்கள் செய்த தீயசெயல்களுக்கு எங்களை மன்னித்தருளும்! உமது ஜனங்களாக எங்களை ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
10 அப்போது கர்த்தர், “உன் ஜனங்கள் எல்லாரோடும் இந்த உடன்படிக்கையைச் செய்கிறேன். பூமியிலுள்ள வேறெந்த ஜனத்துக்கும் செய்யாத வியக்கத்தக்க காரியங்களை நான் உங்களிடம் செய்வேன். உன்னோடு இருக்கிற ஜனங்கள் நான் மிக உன்னதமான கர்த்தர் என்பதைக் காண்பார்கள். நான் உனக்காகச் செய்யப்போகும் அற்புதங்களை ஜனங்கள் காண்பார்கள். 11 நான் இன்றைக்கு உங்களுக்கு இடும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்கள் நாட்டிலிருந்து உங்கள் பகைவர்கள் போகும்படி செய்வேன். எமோரியரையும், கானானியரையும், ஏத்தியரையும், பெரிசியரையும், ஏவியரையும், எபூசியரையும் வெளியேற்றுவேன். 12 எச்சரிக்கையாயிருங்கள், நீங்கள் நுழையும் இந்தத் தேசத்தின் ஜனங்களோடு எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள்! அந்த ஜனங்களோடு ஒப்பந்தம் செய்தால் அது உங்களுக்குத் தொல்லையைத் தரும். 13 ஆகையால் அவர்கள் பலிபீடங்களை அழித்துப்போடுங்கள். அவர்கள் தொழுதுகொள்ளும் கற்களை உடையுங்கள். அவர்கள் விக்கிரகங்களை நொறுக்குங்கள். 14 வேறெந்த தேவனையும் தொழுதுகொள்ளாதீர்கள். நான் ‘யேகோவா’ என்னும் வைராக்கியமுள்ள கர்த்தர். இதுவே என் பெயர். நான் எல்கானா-வைராக்கியமுள்ள தேவன்.
15 “இத்தேசத்து ஜனங்களோடு எந்தவொரு ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் அவர்கள் தங்கள் தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்போது நீங்களும் சேர்ந்துகொள்ள அவர்கள் உங்களை அழைப்பார்கள். பிறகு அவர்கள் செலுத்திய பலிகளை நீங்கள் உண்பீர்கள். 16 அவர்களின் மகள்களை உங்கள் மகன்களுக்காக நிச்சயம் செய்யக்கூடும். அப்பெண்கள் பொய்த் தேவர்களை சேவிக்கிறார்கள். உங்கள் மகன்களையும் அவ்வாறே பொய்த் தேவர்களை தொழுதுகொள்ள வழிநடத்தக்கூடும்.
17 “விக்கிரகங்களைச் செய்யாதீர்கள்.
18 “புளிப்பில்லாத ரொட்டியின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். உங்களுக்கு நான் கட்டளையிட்டபடி ஏழு நாட்கள் புளிப்பில்லாமல் செய்த ரொட்டிகளை உண்ணுங்கள். நான் தெரிந்துகொண்டபடி ஆபிப் மாதத்திலேயே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்தைவிட்டு வந்தீர்கள்.
19 “ஒரு பெண்ணிடம் பிறக்கும் முதல் குழந்தை எப்போதும் எனக்குரியது. உங்கள் மிருகங்களின் ஆடுகளின் முதற்பேறானவையும் எனக்குரியவை. 20 கழுதையின் முதல் ஈற்றை நீங்கள் வைத்துக்கொள்ள விரும்பினால் அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்து திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு ஆட்டுக்குட்டியைக் கொடுத்து அக்கழுதையை மீட்காவிட்டால் அப்போது அந்தக் கழுதையின் கழுத்தை முறித்துப் போடவேண்டும். உங்கள் முதற்பேறான மகன்கள் அனைவரையும் நீங்கள் என்னிடமிருந்து மீண்டும் வாங்கவேண்டும். காணிக்கையின்றி யாரும் என் முன்னிலையில் வரக்கூடாது.
21 “நீங்கள் ஆறு நாட்கள் உழையுங்கள். ஏழாம் நாள் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். விதைப்பு, அறுவடை காலங்களிலும் நீங்கள் ஓய்வு நாளில் ஓய்வெடுக்க வேண்டும்.
22 “வாரங்களின் பண்டிகையை (பெந்தெகோஸ்தே) கொண்டாடுங்கள். கோதுமை அறுவடையின் முதல் தானியத்தை அதற்குப் பயன்படுத்துங்கள். இலையுதிர் காலத்தின்போது அறுப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.
23 “ஆண்டில் மூன்று முறை உங்கள் ஜனங்கள் இஸ்ரவேலரின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதானத்திற்குச் செல்ல வேண்டும்.
24 “உங்கள் தேசத்திற்குள் நீங்கள் போகும்போது, அத்தேசத்திலிருந்து உங்கள் பகைவர்களை வெளியேற்றுவேன். உங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி உங்கள் தேசத்தின் அளவை அதிகரிக்கச் செய்வேன். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன் ஓராண்டில் மூன்று முறை செல்லுங்கள் அப்போது, யாரும் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள முயலமாட்டார்கள்.
25 “பலியின் இரத்தத்தை எனக்குப் படைக்கும்போதெல்லாம் புளிப்பை அதனோடு படைக்காதீர்கள்.
“பஸ்கா உணவிலுள்ள இறைச்சியை மறுநாள் காலைவரைக்கும் வைக்காதீர்கள்.
26 “நீங்கள் அறுவடை செய்யும் முதல் தானியங்களைக் கர்த்தருக்குக் கொடுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வீட்டிற்கு அவற்றைக் கொண்டு வாருங்கள்.
“இளம் ஆட்டை அதன் தாய்ப்பாலில் ஒருபோதும் சமைக்காதீர்கள்” என்றார்.
27 மீண்டும் கர்த்தர் மோசேயிடம், “நான் உங்களுக்குக் கூறிய எல்லாக் காரியங்களையும் எழுதிக்கொள். உன்னோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் நான் செய்த உடன்படிக்கை இதுவேயாகும்” என்றார்.
28 மோசே 40 பகலும் 40 இரவும் கர்த்தரோடு தங்கினான். மோசே எந்த உணவையும் உண்ணவோ, தண்ணீரைப் பருகவோ இல்லை. இரண்டு கற்பலகைகளில் உடன்படிக்கையை (பத்துக் கட்டளைகளை) மோசே எழுதினான்.
மோசேயின் பிரகாசமான முகம்
29 பின் மோசே சீனாய் மலையிலிருந்து உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளையும் எடுத்துக்கொண்டு இறங்கி வந்தான். கர்த்தரோடு பேசியதால் அவன் முகம் பிரகாசித்தது. ஆனால் மோசே அதனை அறியவில்லை. 30 ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களும் மோசேயின் முகம் பிரகாசிப்பதைக் கண்டனர். எனவே அவனிடம் செல்ல பயந்தனர். 31 ஆனால் மோசே அவர்களை அழைத்தான். எனவே, ஆரோனும், ஜனங்களின் தலைவர்களும் மோசேயிடம் சென்றனர். மோசே அவர்களோடு பேசினான். 32 அதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மோசேயிடம் வந்தனர். சீனாய் மலையில் கர்த்தர் அவனிடம் கொடுத்த கட்டளைகளை மோசே அவர்களுக்குக் கொடுத்தான்.
33 ஜனங்களிடம் மோசே பேசி முடித்த பின்பு அவன் தன் முகத்தில் ஒரு முக்காடு போட்டுக்கொண்டான். 34 மோசே கர்த்தருக்கு முன் பேசச் செல்லும்போது அதை அகற்றினான். அப்புறம் கர்த்தர் கூறிய கட்டளைகளை அவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் வந்து கூறினான். 35 மோசேயின், முகம் பிரகாசிப்பதை ஜனங்கள் கண்டனர். மீண்டும் மோசே முகத்தை மூடிக்கொண்டான். மறுமுறை கர்த்தரை சந்தித்துப் பேசுவதற்குச் செல்லும்வரைக்கும் மோசே அவனது முகத்தை மூடி வைத்திருந்தான்.
ஓய்வு நாளைப்பற்றிய விதிகள்
35 மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி அவர்களை நோக்கி, “நீங்கள் செய்ய வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களை நான் உங்களுக்குக் கூறுவேன்:
2 “ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாவது நாள் நீங்கள் ஓய்வெடுப்பதற்குரிய மிக விசேஷ நாளாகும். அந்த நாளில் ஓய்வெடுப்பதன் மூலம் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள். ஏழாவது நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். 3 ஓய்வு நாளில் நீங்கள் வாழுமிடங்களில் நெருப்பை மூட்டவும் கூடாது” என்றான்.
பரிசுத்தக் கூடாரத்திற்கான பொருட்கள்
4 மோசே இஸ்ரவேலின் எல்லா ஜனங்களுக்கும் கூறியதாவது, “இதுவே கர்த்தர் கட்டளையிட்டவை: 5 கர்த்தருக்காக விசேஷ காணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள். என்ன காணிக்கையைக் கொடுக்க வேண்டும் என்பதை மனதுக்குள்ளேயே ஒவ்வொருவரும் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். பின் அந்த காணிக்கையை கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள். 6 இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூலையும், வெள்ளாட்டு மயிராலான கம்பள துணியையும் 7 சிவப்புத் தோய்த்த கடாவின் தோலையும், மெல்லிய தோலையும், சீத்திம் மரத்தையும், 8 குத்து விளக்குகளுக்கு எண்ணெயையும், தூபம் காட்டுவதற்கு நறுமணப் பொருள்களையும் கொண்டு வாருங்கள். 9 மேலும் கோமேதகக் கல்லையும், ஏபோத்திலும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதகத்திலும் வைக்க வேண்டிய கற்களையும் கொண்டு வாருங்கள்.
10 “கர்த்தர் கட்டளையிட்ட பொருள்களையெல்லாம் திறமை மிகுந்த கைவேலைக்காரர் அனைவரும் செய்ய வேண்டும். 11 பரிசுத்தக் கூடாரம், அதன் வெளிப்பிரகாரம், அதன் மேற் பரப்பு: கொக்கிகள், பலகைகள், தாழ்ப்பாள்கள், தூண்கள், அடித்தளங்கள், 12 பரிசுத்தப் பெட்டி, அதன் தண்டுகள், கிருபாசனம், பெட்டி இருக்குமிடத்தை மூடும் திரை, 13 மேசையும் அதன் தண்டுகளும், மேசையின் மீதிருக்கும் பொருள்கள், மேசையின் மீது வைக்க வேண்டிய விசேஷ ரொட்டி, 14 வெளிச்சத்திற்கான குத்து விளக்குத் தண்டு, அதனோடு பயன்படுத்தப்படும் பொருட்கள், விளக்குகள், விளக்குக்கு எண்ணெய், 15 நறுமணப் பொருள்களை எரிக்கும் பீடம், அதன் தண்டுகள், அபிஷேக எண்ணெய், நறுமணப் புகைப் பொருள், பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடும் திரை, 16 தகன பலிபீடம், வெண்கலத் தளம், அதின் தண்டுகள், பலிபீடத்தில் பயன்படும் பொருட்கள், வெண்கலத் தொட்டிகள், அதன் பீடம், 17 பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள திரைகள், அவற்றிற்கான தூண்களும், பீடங்களும், பிரகாரத்திற்கான நுழை வாயிலை மூடும் திரை, 18 கூடாரத்தைத் தாங்கி நிற்க உதவும் வெண்கல முளைகள், திரைகளின் சுவர்கள், வெளிப்பிரகாரத்தின் முளைகள், முளைகளில் கட்டப்படும் கயிறுகள், 19 பரிசுத்த இடத்தில் ஆசாரியர் அணியும் பொருட்டு விசேஷமாக நெய்த ஆடைகள். இந்த விசேஷ ஆடைகள் ஆசாரியனான ஆரோனும் அவன் மகன்களும் அணிவதற்குரியவை. அவர்கள் ஆசாரியராகப் பணியாற்றும்போது இந்த விசேஷ ஆடைகளை அணிவார்கள்” என்றான்.
ஜனங்களின் சிறப்புக் காணிக்கை
20 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடமிருந்து புறப்பட்டு சென்றனர். 21 கர்த்தருக்கு காணிக்கைகளைக் கொடுக்க விரும்பியவர்கள் அனைவரும் கொண்டு வந்தனர். ஆசாரிப்புக் கூடாரம், அதிலுள்ள பொருட்கள், விசேஷ ஆடைகள் ஆகியவற்றைச் செய்வதற்கு இப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. 22 பல வகை பொன் அணிகலன்களைக் கொடுக்க விரும்பிய தாராள மனமுள்ள ஆண்களும், பெண்களும் அவற்றைக் கொண்டு வந்தனர். அவர்கள் ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், மற்றும் பிற அணிகலன்களைக் கொண்டு வந்தார்கள். கர்த்தருக்காக தம் ஆபரணங்களை அவர்கள் கொடுத்தனர். இது கர்த்தருக்கு விசேஷ காணிக்கையாகும்.
23 மெல்லிய துகில், மற்றும் இளநீல இரத்தாம்பர, சிவப்பு நூல் வைத்திருந்தவர்கள் அனைவரும் அவற்றை கர்த்தருக்காகக் கொண்டு வந்தார்கள். மேலும் ஆட்டுத் தோலோ, சிவப்புச் சாயமிட்ட செம்மறியாட்டுத் தோலோ அல்லது பதனிடப்பட்ட மெல்லிய தோலோ வைத்திருந்தவர்கள் அதை கர்த்தருக்காகக் கொண்டு வந்தனர். 24 வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொடுக்க விரும்பியவர்கள், கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். சீத்திம் மரத்தை வைத்திருந்தவர்கள் அதைக் கர்த்தருக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள். 25 கலைத்திறன் வாய்ந்த ஒவ்வொரு பெண்ணும் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூல்களையும் தயாரித்தனர். 26 திறமை மிகுந்தவர்களும், உதவிசெய்ய விரும்பிய எல்லா பெண்களும் வெள்ளாட்டு மயிரால் ஆடைகளைச் செய்தனர்.
27 தலைவர்கள் கோமேதகக் கற்களையும் பிற விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தனர். ஆசாரியரின் ஏபோத்திலும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் இவை வைக்கப்பட்டன. 28 ஜனங்கள் தூபவர்க்க பொருட்களையும், ஒலிவ எண்ணெயையும் கொண்டு வந்தனர். நறுமணப் பொருள்களுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும், குத்துவிளக்கின் எண்ணெய்க்கும் இவை பயன்படுத்தப்பட்டன.
29 உதவிசெய்ய விரும்பிய இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். இவ்வன்பளிப்புகளை அவர்கள் விரும்பிக் கொடுத்ததால் தாராளமாகக் கொடுத்தார்கள். கர்த்தர் மோசேக்கும், அவனது ஜனங்களுக்கும் செய்யுமாறு கட்டளையிட்ட எல்லாப் பொருட்களையும் செய்வதற்கு இப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன.
பெசலெயேலும் அகோலியாபும்
30 பின் மோசே இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனின் குமாரனாகிய, ஊரியின் மகனான பெசலெயேலை தெரிந்தெடுத்துள்ளார். 31 தேவ ஆவியால் பெசலெயேலை நிரப்பியுள்ளார். பலவகை காரியங்களையும் செய்யவல்ல திறனையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். 32 அவன் பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருள்களைச் செய்து அவற்றை வடிவமைக்க வல்லவன். 33 கற்களைச் செதுக்கி அவற்றில் ஆபரணங்களைச் செய்யமுடியும். பெசலெயேலுக்கு மரவேலைகள் அனைத்தும் தெரியும். 34 பிறருக்குக் கற்பிக்கும்படியான விசேஷ திறமைகளை கர்த்தர் பெசலேயேலுக்கும், அகோலியாபிற்கும் (தாண் கோத்திரத்து அகிசமாகின் மகன்.) கொடுத்திருக்கிறார். 35 எல்லா வகை வேலைகளையும் செய்யும் ஆற்றலை கர்த்தர் இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தச்சு, உலோக வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும், மெல்லிய துகிலாலும் ஆடைகளைச் சித்திர வேலைப்பாடுகளோடு நெய்வதில் வல்லவர்கள். கம்பளியும் அவர்களால் நெய்ய முடிந்தது.
36 “எனவே பெசலேயேல், அகோலியாப், மற்றும் திறமைவாய்ந்த கலைவல்லுநர்கள் அனைவரும் சேர்ந்து கர்த்தர் கட்டளையிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் இந்த பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கான கைதேர்ந்த வேலையை செய்யத் தேவையான ஞானத்தையும், அறிவையும் கர்த்தர் அந்த மனிதருக்குக் கொடுத்திருக்கிறார்” என்றான்.
2 பின் மோசே பெசலெயேலையும், அகோலியாபையும் கர்த்தரால் திறமை வழங்கப்பட்ட பிற கலைவல்லுநர்களையும் அழைத்தான். வேலையில் உதவ விரும்பியதால் அவர்களும் ஒன்றாகக் கூடினார்கள். 3 இஸ்ரவேல் ஜனங்கள் காணிக்கையாகக் கொண்டு வந்த எல்லாப் பொருட்களையும் மோசே இந்த ஜனங்களுக்குக் கொடுத்தான். தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு அவர்கள் அந்தப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். காலைதோறும் ஜனங்கள் தங்கள் விருப்பதின்படி காணிக்கைகளை கொண்டு வந்தனர். 4 பின்னர் கலை வல்லுநர்கள் பரிசுத்த இடத்தில் தாங்கள் செய்யும் வேலையை விட்டு மோசேயிடம் பேசுவதற்குச் சென்றார்கள். அவர்கள், 5 “ஜனங்கள் மிகுதியாகப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளனர்! கூடார வேலையை முடிப்பதற்குத் தேவையான பொருளைக் காட்டிலும் அதிகமான பொருள்கள் உள்ளன!” என்றார்கள்.
6 மோசே இந்தச் செய்தியை பாளையத்தைச் சுற்றிலும் அறிவித்து: “பரிசுத்த இடத்தின் வேலைக்கு இனிமேல் எவரும் எதையும் காணிக்கையாக தரவேண்டாம்” என்றான். இவ்வாறு ஜனங்கள் அளவுக்கதிகமாகக் கொடுப்பதைக் கட்டாயமாக நிறுத்த வேண்டியதாயிற்று. 7 தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு ஜனங்கள் தேவைக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்கள்.
பரிசுத்தக் கூடாரம்
8 பரிசுத்தக் கூடாரத்தை திறமையுள்ளவர்கள் அமைக்கத் தொடங்கினார்கள். மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் அவர்கள் பத்துத் திரைகளை உண்டாக்கினார்கள். திரைகளில் சிறகுகளுள்ள கேரூப் தூதர்களின் சித்திரங்களைத் தைத்தனர். 9 ஒவ்வொரு திரையும் 28 முழ நீளமும் 4 முழ அகலமுமாக ஒரே அளவுடையதாய் அமைந்தன. 10 பணி செய்வோர் இரண்டு வெவ்வேறு திரைகளாக அத்திரைகளை இணைத்தனர். ஐந்து திரைகளை ஒரே திரையாகவும், மற்றும் ஐந்து திரைகளை இன்னொரு திரையாகவும் இணைத்தனர். 11 ஒரு திரையின் கடைசிப் பகுதியில் நீலத்துணியால் துளைகளைச் செய்தனர். மற்றொரு திரையின் கடைசிப் பகுதியிலும் அவ்வாறே செய்தனர். 12 ஒரு திரையின் இறுதிப் பகுதியில் 50 கண்ணிகளும் மற்றொரு திரையின் இறுதிப் பகுதியில் 50 கண்ணிகளும் இருந்தன. அவ்வளையங்கள் எதிரெதிராக அமைந்தன. 13 பின் அவர்கள் அத்திரைகளை இணைப்பதற்கு 50 பொன் வளையங்களைச் செய்தனர். எனவே பரிசுத்தக் கூடாரம் ஒரே துண்டாக இணைக்கப்பட்டது.
14 பரிசுத்தக் கூடாரத்தை மூடி மறைத்து நிற்குமாறு அந்தத் திறமைச்சாலிகள் மற்றொரு கூடாரத்தை அமைத்தனர். வெள்ளாட்டின் மயிரால் பதினொரு திரைகளைச் செய்தனர். 15 எல்லாத் திரைகளும் 30 முழ நீளமும் 4 முழ அகலமும் கொண்ட ஓரே அளவுடையனவாய் இருந்தன. 16 பணியாட்கள் ஐந்து திரைகளை ஒன்றாகவும், பிற ஆறு திரைகளை ஒன்றாகவும் இணைத்தனர். 17 ஒரு திரையின் இறுதியில் 50 துளைகளை அமைத்தனர். மறறொரு திரையில் இறுதியிலும் அவ்வாறே செய்தனர். 18 பணியாட்கள் 50 வெண்கல வளையங்களை இரு திரைகளையும் சேர்த்து ஒரே கூடாரமாக இணைப்பதற்காகச் செய்தனர். 19 பரிசுத்தக் கூடாரத்திற்கு அவர்கள் மேலும் இரண்டு மூடுதிரைகளை செய்தனர். ஒரு மூடுதிரை சிவப்புத் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாவின் தோலாலானது. மற்றொரு மூடுதிரை மெல்லிய தோலினாலானது.
20 பிறகு அந்த வல்லுநர்கள் பரிசுத்த கூடாரத்தைத் தாங்குவதற்காக சீத்தீம் மரத்தினால் சட்டங்களை அமைத்தனர். 21 ஒவ்வொரு சட்டமும் 10 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் உடையதாய் இருந்தது. 22 இரண்டு பக்கத்திலும் தூண்கள் குறுக்குத் துண்டுகளால் இணைக்கப்பட்டு ஒவ்வொரு சட்டமும் அமைக்கப்பட்டது. பரிசுத்தக் கூடாரத்தின் ஒவ்வொரு சட்டமும் அவ்வாறு அமைந்தது. 23 பரிசுத்தக் கூட்டத்தின் தெற்குப் புறத்திற்கு 20 சட்டங்களைச் செய்தனர். 24 பின் அந்தச் சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர். ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்கள் இருந்தன. 25 அவர்கள் மறுபக்கமாகிய (வடபுறத்திற்கு) 20 சட்டங்களைச் செய்தார்கள். 26 ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்களாக 20 சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர். 27 பரிசுத்த கூடாரத்தின் பின் பகுதியாகிய மேற்கு புறத்திற்கு 6 சட்டங்கள் செய்தனர். 28 மேலும் பரிசுத்த கூடாரத்தின் பின் மூலைகளுக்கென்று 2 சட்டங்கள் செய்தனர். 29 இந்தச் சட்டங்கள் அடிப் புறத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டன. மேலே இந்த மூலை சட்டங்களை ஒரு வளையம் தாங்கிக்கொண்டிருந்தது. இரண்டு மூலைகளுக்கும் அவர்கள் அவ்வாறே செய்தனர். 30 பரிசுத்தக் கூடாரத்தின் மேற்குப் புறத்தில் மொத்தம் எட்டுச் சட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்கள் வீதம் 16 வெள்ளியாலாகிய பீடங்கள் அமைந்தன.
31 பரிசுத்தக் கூடாரத்தின் முதல் பக்கத்திற்கு சீத்திம் மரத்தாலான ஐந்து தாழ்ப்பாள்களைப் பணியாட்கள் செய்தனர். 32 மறுபக்கத்திற்கு ஐந்து தாழ்ப்பாள்களும், பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்திற்கு (மேற்கு) ஐந்து தாழ்ப்பாள்களும் அமைத்தனர். 33 சட்டத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்லும்படியாக மத்தியிலுள்ள தாழ்ப்பாளைச் செய்தனர். 34 தாழ்ப்பாள்களைத் தாங்கிக்கொள்வதற்குப் பொன்னால் வளையங்களைச் செய்தனர். தாழ்ப்பாள்களில் பொன் முலாம் பூசினர்.
35 மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல்களையும் மகாபரிசுத்த கூடாரத்தின் நுழைவாயிலுக்கான திரையைச் செய்வதற்குப் பயன்படுத்தினர். திரையில் கேருபீன்களின் சித்திரங்களைத் தைத்தனர். 36 சீத்திம் மரத்தால் நான்கு தூண்களைச் செய்து அவற்றிற்குப் பொன் முலாம் பூசினர். அவற்றிற்குப் பொன் கொக்கிகளைச் செய்தனர். அவற்றிற்கு நான்கு வெள்ளி பீடங்களைச் செய்து வைத்தனர். 37 கூடாரத்தின் வாயிலை மூடுவதற்குத் திரைகள் அமைத்தனர். அவர்கள் இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூலையும், மெல்லிய துகிலையும் இத்திரையைச் செய்வதற்கு உபயோகப்படுத்தினர். அத்திரையில் சித்திரங்களை நெய்தனர். 38 பின் அவர்கள் நுழைவாயிலின் திரைக்காக ஐந்து தூண்களையும் அதன் கொக்கிகளையும் அமைத்தனர். அவர்கள் தூண்களின் மேற் பகுதிகளையும் திரைத்தண்டுகளையும் பொன் தகட்டால் மூடினார்கள். அத்தூண்களுக்கு ஐந்து வெண்கல பீடங்களைச் செய்தனர்.
உடன்படிக்கைப் பெட்டி
37 சீத்திம் மரத்தினால் பெசலெயேல் பரிசுத்தப் பெட்டியைச் செய்தான். அந்தப் பெட்டி 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் 1 1/2 முழு உயரமும் கொண்டவையாக இருந்தன. 2 அவன் பெட்டியின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பசும் பொன் தகட்டால் மூடினான். பெட்டியைச் சுற்றிலும் பொன் சட்டங்களைச் செய்தான். 3 அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நான்கு மூலைகளிலும் இணைத்தான். அவ்வளையங்கள் பெட்டியைச் சுமப்பதற்கென்று பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு வளையங்கள் இருந்தன. 4 பின் அவன் பெட்டியைச் சுமப்பதற்குத் தேவையான தண்டுகளைச் செய்தான். அவன் சீத்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து அவற்றைப் பசும் பொன்னால் மூடினான். 5 பெட்டியின் இருபுறங்களிலுமுள்ள வளையங்களினுள்ளே தண்டுகளைச் செலுத்தினான். 6 பின் கிருபாசனத்தை பசும் பொன்னால் செய்தான். அது 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் உடையதாக இருந்தது. 7 இரண்டு கேருபீன்களைச் செய்வதற்கு பெசலெயேல் பொன்னைச் சுத்தியால் அடித்து உருவமைத்தான். இந்தக் கேருபீன்களை கிருபாசனத்தின் இரண்டு ஓரத்திலும் வைத்தான். 8 ஒரு கேருபீனை கிருபாசனத்தின் ஒரு ஓரத்திலும், மற்றொரு கேருபீனை எதிர் ஓரத்திலும் வைத்தான். மூடியோடு இரண்டு கேருபீன்களையும் எதிரெதிரே ஒன்றாக இணைத்தான். 9 கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்த்தப்பட்டிருந்தன. கேருபீன்கள் தங்கள் சிறகுகளால் பெட்டியை மூடியிருந்தன. கிருபாசனத்தின் மேல் குனிந்த நிலையில் தூதர்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
விசேஷ மேசை
10 பின் அவன் சீத்திம் மரப் பலகையிலான மேசையைச் செய்தான். அம்மேசை 2 முழ நீளமும் 1 முழ அகலமும் 1 முழ உயரமும் உள்ளதாக இருந்தது. 11 அவன் மேசையை பசும் பொன்னினால் மூடினான். மேசையைச் சுற்றிலும் பொன் சட்டங்களை இணைத்தான். 12 பின் அவன் 3 அங்குல அகலமுள்ள ஒரு சட்டத்தை மேசையைச் சுற்றிலும் இணைத்தான். அவன் சட்டத்தின் மேல் பொன் தகட்டை வைத்தான். 13 பின் அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்களுமுள்ள நான்கு மூலைகளிலும் வைத்தான். 14 மேசையின் மேற்பகுதியைச் சுற்றிலும் உள்ள சட்டத்தினருகே அவன் அந்த வளையங்களை இணைத்தான். மேசையைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு அவ்வளையங்கள் பயன்பட்டன. 15 பின் அவன் சீத்திம் மரப்பலகையால் செய்யப்பட்ட மேசையைச் சுமக்கும் தண்டுகளைச் செய்தான். தண்டுகளைச் சுத்த பொன்னால் மூடினான். 16 பின் அவன் மேசையில் பயன்படுத்தப்படுவதற்குரிய எல்லாப் பொருட்களையும் செய்தான். தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், கிண்ணங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றையும் அவன் பொன்னால் செய்தான். பானங்களின் காணிக்கைகளை ஊற்றுவதற்குக் கிண்ணங்களும் பாத்திரங்களும் பயன்பட்டன.
குத்துவிளக்குத் தண்டு
17 பிறகு அவன் குத்துவிளக்கைச் செய்தான். அவன் பசும் பொன்னை அடித்து அதன் பீடத்தையும், தண்டையும் செய்தான். பின் அவன் பூக்கள், மொட்டுகள், இதழ்கள் ஆகியவற்றைச் செய்து எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தான். 18 குத்துவிளக்குக்கு ஆறு கிளைகள் இருந்தன. மூன்று கிளைகள் ஒரு புறத்திலும் மூன்று கிளைகள் எதிர் புறத்திலும் இருந்தன. 19 ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருந்தன. அப்பூக்கள் மொட்டுகளோடும், இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன. 20 குத்துவிளக்கின் தண்டில், மேலும் நான்கு பூக்கள் இருந்தன. அவையும் மொட்டுகளோடும் இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன. 21 தண்டின் இருபுறங்களிலுமிருந்து மூன்று கிளைகள் வீதம் ஆறு கிளைகள் இருந்தன. கிளைகள் தண்டோடு இணைந்த மூன்று இடங்களுக்கும் கீழே மொட்டுகளோடும் இதழ்களோடும் கூடிய ஒவ்வொரு பூ இருந்தது. 22 பூக்களும் கிளைகளும் கொண்ட வேலைப்பாடுகள் உடைய அந்தக் குத்துவிளக்கு முழுவதும் பொன்னால் ஆனதாக இருந்தது. இந்தப் பொன் சுத்தியால் அடிக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது. 23 இந்தக் குத்துவிளக்கிற்கு ஏழு அகல்களை அவன் செய்தான். பின் அவன் திரி கத்தரிக்கும் கருவிகளையும், சாம்பல் கிண்ணங்களையும் பொன்னால் செய்தான். 24 குத்து விளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு அவன் 75 பவுண்டு எடையுள்ள சுத்தமான பொன்னைப் பயன்படுத்தினான்.
நறுமணப் பொருள்களை எரிப்பதற்கான பீடம்
25 நறுமணப் பொருள்களை எரிக்கும்படியான பீடத்தையும் அவன் செய்தான். சீத்திம் மரத்தால் இதைச் செய்தான். பீடம் சதுரவடிவமானது. அது 1 முழ நீளமும் 1 முழ அகலமும் 2 முழ உயரமுமாக இருந்தது. நறுமணப் பீடத்தில் நான்கு கொம்புகள் ஒவ்வொரு மூலையிலும் ஒன்வொன்றாக இருந்தன. இவை நறுமணப் பீடத்தோடு ஒன்றாக அடிக்கப்பட்டன. 26 நறுமணப் பீடத்தின் மேல்புறம், பக்கங்கள், கொம்புகள் ஆகியவற்றை அவன் பசும்பொன்னால் மூடினான். பின்பு அவன் நறுமணப் பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தை இணைத்தான். 27 நறுமணப் பீடத்திற்கு இரண்டு பொன் வளையங்கள் செய்தான். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பொன் தகட்டிற்கு அடியில் சேரும்படி பொன் வளையங்களைப் பொருத்தினான். நறுமணப் பீடத்தைத் தூக்கிச் செல்லும்போது, தண்டைக் கோர்க்கும்படி இந்தத் தங்க வளையங்கள் இருந்தன. 28 அவன் சீத்திம் மரத்தினாலான தண்டுகளைச் செய்து அவற்றையும் பொன்னால் மூடினான்.
29 பிறகு அவன் பரிசுத்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்தான். அவன் சுத்தமான நறுமணப் பொருளையும் தயாரித்தான். நறுமணத் திரவியங்களைத் தயாரிக்கும் முறையிலேயே இப்பொருட்கள் அனைத்தையும் அவன் செய்தான்.
பலிகளை எரிக்கும் பீடம்
38 பலிபீடத்தை பெசலெயேல் சீத்திம் மரத்தால் செய்தான். இப்பலிபீடம் பலிகளை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. அது சதுரவடிவமானது. அது 5 முழ நீளமும் 5 முழ அகலமும் 3 முழ உயரமும் உடையது. 2 அவன் பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொம்பைச் செய்து வைத்தான். அவற்றைப் பலிபீடத்தோடு இணைத்து ஒன்றாக அடித்தான். பின்பு பலிபீடத்தை வெண்கலத்தால் மூடினான். 3 பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் எல்லா கருவிகளையும் வெண்கலத்தால் செய்தான். பானைகள், கரண்டிகள், கிண்ணங்கள், முள்கரண்டிகள், பெரிய கொப்பரைகளையும் செய்தான். 4 பின்னர் பலிபீடத்திற்காக வெண்கலத்தாலான வலைப் பின்னல் போன்ற ஒரு சல்லடையை உண்டாக்கினான். பலிபீடத்தின் அடித்தட்டில் அந்தச் சல்லடையைப் பொருத்தினான். அது பலிபீடத்தின் நடுப்பகுதியில் (பாதி உயரத்தில்) பொருந்தியது. 5 பின் அவன் பித்தளை வளையங்களை செய்தான். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு இவ்வளையங்கள் பயன்பட்டன. சல்லடையின் நான்கு மூலைகளிலும் அவன் அந்த வளையங்களை வைத்தான். 6 பின் அவன் சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து அவற்றை வெண்கலத்தால் மூடினான். 7 பலிபீடத்தின் பக்கங்களிலுள்ள வளையங்களில் தண்டுகளைச் செலுத்தினான். தண்டுகள் பலிபீடத்தைச் சுமப்பதற்குப் பயன்பட்டன. பலிபீடத்தின் நான்கு பக்கங்களையும் சீத்திம் பலகைகளினால் செய்தான். அது வெறுமையான பெட்டியைப் போன்று உள்ளே ஒன்றுமில்லாதிருந்தது.
8 அவன் வெண்கலத்தாலான தொட்டிகளையும், அதன் பீடங்களையும் செய்தான். பெண்கள் கொடுத்த வெண்கல முகக் கண்ணாடிகளை அதற்குப் பயன்படுத்தினான். இந்தப் பெண்களே ஆசரிப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் திருப்பணியாற்றி வந்தனர்.
பரிசுத்த கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரம்
9 பின்னர் முற்றத்தைச் சுற்றி திரைச் சீலைகள் எழுப்பினான். 100 முழ நீளமுள்ள தொங்குதிரையை தெற்குப் பக்கத்தில் எழுப்பினான். மெல்லிய துகிலால் அத்திரைகள் அமைந்தன. 10 தெற்குப் பக்கத்துத் திரைகளை 20 தூண்கள் தாங்கின. அவற்றிற்கு 20 வெண்கல பீடங்கள் அமைந்தன. தூண்களுக்கான கொக்கிகளையும் திரைச் சீலைத் தண்டுகளையும் வெள்ளியால் செய்தான். 11 பிரகாரத்தின் வடக்குப்புறத்தில் 100 முழ நீளமான திரைச் சுவர் அமைந்தது. 20 வெண்கலப் பீடங்கள் உள்ள 20 தூண்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டன.
12 வெளிப்பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் 50 முழ நீளமான தொங்குதிரையை அமைத்தான். அந்த 10 தூண்களுக்கும், 10 பீடங்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளையும் திரைப் பூண்களையும் வெள்ளியால் அமைத்தான்.
13 வெளிப் பிரகாரத்தின் கிழக்குப்புறத்திலிருந்து தொங்குதிரை 50 முழ அகலம்Ԕஉடையதாக இருந்தது. பிரகாரத்தின் நுழைவாயில் இப்பக்கத்தில் இருந்தது. 14 நுழைவாயிலின் ஒரு பக்கத்தில் தொங்கு திரை 15 முழ நீள முடையதாகவும் மூன்று பீடங்களின்மேல் நின்ற மூன்று தூண்களைக் கொண்டதாகவும் இருந்தது. 15 நுழை வாயிலின் மறுபுறத்திலுள்ள தொங்கு திரைகள் 15 முழ நீளமுடையதாக இருந்தது. அந்தப் பக்கத்தில் மூன்று தூண்களும் அவற்றிக்கு மூன்று பீடங்களும் அமைத்தனர். 16 பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகள் மெல்லிய துகிலால் செய்யப்பட்டன. 17 தூண்களின் பீடங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. கொக்கிகளும், திரைப்பூண்களும், வெள்ளியால் செய்யப்பட்டன. தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. பிரகாரத்தின் தூண்களில் வெள்ளியாலான திரைப்பூண்கள் இருந்தன.
18 பிரகார நுழைவாயிலின் தொங்குதிரைகள் மெல்லிய துகிலாலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் நெய்யப்பட்டன. அவற்றில் பல சித்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. திரையானது 20 முழ நீளமும் 5 முழ உயரமும் உடையதாக இருந்தது. அவை பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகளின் உயரம் கொண்டிருந்தன. 19 தொங்குதிரையை நான்கு தூண்களும், வெண்கல பீடங்களும் தாங்கின. தூண்களின் கொக்கிகள் வெள்ளியால் ஆனவை ஆகும். தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. திரைப் பூண்களும் வெள்ளியாலாயின. 20 பரிசுத்தக் கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகள் வெண்கலத்தால் செய்யப்பட்டன.
21 உடன்படிக்கையின் கூடாரமாகிய பரிசுத்த கூடாரத்திற்குத் தேவைப்பட்ட பொருட்களை எல்லாம் லேவி குடும்பத்தார் எழுதி வைத்துக்கொள்ளும்படியாக மோசே கட்டளையிட்டான். பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பை ஆரோனின் மகனாகிய இத்தாமார் ஏற்றுக்கொண்டான்.
22 மோசேக்கு கர்த்தர் விதித்த எல்லாக் கட்டளைகளையும் யூதாவின் கோத்திரத்தின் வழியே வந்த ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் நிறைவேற்றினான். 23 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகனான அகோலியாப் அவனோடு ஒத்துழைத்தான். அகோலியாப் மிகச் சிறந்த சித்திரை கைவேலையாளும், நெசவில் நிபுணனும் ஆவான். மெல்லிய துகிலை நெய்வதிலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலை நெய்வதிலும் அவன் தலைசிறந்தவனாக இருந்தான். 24 கர்த்தரின் பரிசுத்த இடத்திற்கு 2 டன்கள் எடைக்கு மேற்பட்ட பொன் காணிக்கையாக அளிக்கப்பட்டது. (அதிகாரப் பூர்வமான அளவு எடையின்படி அது எடையிடப்பட்டது.)
25 எண்ணிக்கை எடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் 3 3/4 டன்கள் வெள்ளி கொடுத்தனர். (இதுவும் அதிகாரப்பூர்வமான அளவின் தராசில் நிறுக்கப்பட்டது) 26 இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஆண்கள் எண்ணப்பட்டனர். 6,03,550 ஆண்கள் இருந்தனர். ஒவ்வொருவனும் 1 பெக்கா வெள்ளியை வரியாக அளித்தான். (அதிகாரப்பூர்வமான அளவின்படி 1 பெக்கா என்பது 1/2 சேக்கல் எடை அளவாகும்.) 27 கர்த்தரின் பரிசுத்த இடத்தின் தொங்கு திரைகளுக்கும் 100 பீடங்களை உண்டாக்குவதற்கு அந்த 3 3/4 டன்கள் வெள்ளியைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு பீடத்திற்கும் சுமார் 75 பவுண்டு வெள்ளி வீதம் உபயோகப்படுத்தப்பட்டது. 28 மீதமுள்ள 50 பவுண்டு வெள்ளியால் கொக்கிகளையும், திரைப்பூண்களையும், தூண்களின் வெள்ளிப் பூச்சையும் செய்தனர்.
29 கர்த்தருக்கு 26 1/2 டன்களுக்கும் அதிகமான வெண்கலம் தரப்பட்டது. 30 ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் பீடங்களைச் செய்வதற்கு அது பயன்பட்டது. பீடத்தையும், சல்லடையையும் செய்வதற்கும் வெண்கலத்தைப் பயன்படுத்தினர். பலிபீடத்தின் எல்லாக் கருவிகளையும், பாத்திரங்களையும் செய்வதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. 31 பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும், நுழைவாயிலில் உள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும் அமைப்பதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. வெண்கலத்தால் பரிசுத்தக்கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் தொங்கு திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகளைச் செய்தனர்.
ஆசாரியர்களுக்கான விசேஷ ஆடைகள்
39 கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு வரும்போது ஆசாரியர் அணிய வேண்டிய விசேஷ ஆடைகளை நெய்வதற்கு இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலை சித்திர வேலையாட்கள் பயன்படுத்தினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் ஆரோனுக்கு விசேஷ ஆடைகளைத் தயாரித்தனர்.
ஏபோத்
2 பொன் ஜரிகை, மெல்லிய துகில், இள நீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல் ஆகியவற்றால் ஏபோத்தைச் செய்தார்கள். 3 (அவர்கள் பொன்னை மெல்லிய நாடாவாக அடித்து பொன் ஜரிகைகளை வெட்டினார்கள். இந்தப் பொன் ஜரிகையை இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலிலும், மெல்லிய துகிலுடனும் சேர்த்து நெய்தார்கள். இது சிறந்த சித்திரக்காரனின் கைவேலையாக இருந்தது). 4 அவர்கள் ஏபோத்தின் தோள் பட்டைகளைச் செய்தார்கள். ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் அந்தத் தோள் பட்டைகளை இணைத்தார்கள். 5 அவர்கள் கச்சையை ஏபோத்தோடு இணைத்தார்கள். ஏபோத்தைப் போலவே இதுவும் செய்யப்பட்டது. அவர்கள் பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
6 கைவேலைக்காரர் ஏபோத்துக்கு இரண்டு கோமேதகக் கற்களை தங்கச்சட்டத்தில் பதித்தனர். அக்கற்களின்மீது இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களைப் பதித்தனர். 7 பின் அவர்கள் அதனை ஏபோத்தின் தோள்பட்டைகளோடு இணைத்தனர். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் நினைவு கூருவதற்காக இந்தக் கற்கள் பயன்பட்டன. மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தனர்.
நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம்
8 பின் அவர்கள் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை செய்தனர். ஏபோத்தைச் செய்தது போலவே, இதுவும் கைத்தேர்ந்த சித்திர வேலையாக இருந்தது. அது பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலால் நெய்யப்பட்டன. 9 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை இரண்டாக மடித்து சதுரவடிவில் அமைத்தனர். இது 9 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் உடையதாக இருந்தது. 10 சித்திரவேலையாட்கள் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் 4 வரிசை விலையுயர்ந்த கற்களைப் பதித்தனர். முதல் வரிசையில் பத்மராகமும், புஷ்பராகமும், மாணிக்கமும் இருந்தன. 11 இரண்டாம் வரிசையில் மரகதமும், இந்திர நீலக் கல்லும், வச்சிரமும் காணப்பட்டன. 12 மூன்றாம் வரிசையில் கெம்பும், வைடூரியமும், சுகந்தியும் இருந்தன. 13 நாலாம் வரிசையில் படிகப் பச்சையும், கோமேதகமும், யஸ்பியும் காணப்பட்டன. இந்தக் கற்கள் அனைத்தும் பொன்னில் பூட்டப்பட்டிருந்தது. 14 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் இஸ்ரவேலின் (யாக்கோபின்) ஒவ்வொரு மகனுக்கும் ஒவ்வொரு கல் வீதம் பன்னிரண்டு கற்கள் இருந்தன. ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப் போன்று இஸ்ரவேலின் மகன்கள் ஒவ்வொருவரின் பெயரும் பொறிக்கபட்டிருந்தது.
15 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்காக சித்திர வேலைக்காரர் பசும்பொன்னால் இரண்டு சங்கிலிகளைச் செய்தார்கள். அச்சங்கிலிகள் கயிறுகளைப் போல் பின்னப்பட்டிருந்தன. 16 சித்திர வேலைக்காரர் இரண்டு பொன் வளையங்களைச் செய்து, அவற்றை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு மூலைகளிலும் இணைத்தனர். தோள்பட்டைகளுக்கு பூட்டும்படி இரண்டு பொன் வளையங்களைச் செய்தனர். 17 அவர்கள் பொன் சங்கிலிகளை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் மூலைகளிலிருந்த வளையங்களில் இணைத்தனர். 18 தோள்பட்டைகளின் பொன்வளையங்களில் பொன் சங்கிலிகளின் மறுமுனைகளை இணைத்தனர். இவற்றை அவர்கள் ஏபோத்தின் முன்புறத்தில் சேர்த்தனர். 19 பின்பு அவர்கள் மேலும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு மூலைகளிலும் தைத்தனர். ஏபோத்தை அடுத்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் உட்புறத்தில் இது இருந்தது. 20 ஏபோத்தின் முன்புறத்தில் தோள்பட்டைகளின் கீழே இரண்டு பொன் வளையங்களை தைத்தனர். கச்சைக்கு மேலே ஏபோத்தின் இணைப்புக்கருகே இவ்வளையங்கள் இருந்தன. 21 பின் அவர்கள் நீல நிற நாடாவையும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் வளையங்களையும் ஏபோத்தின் வளையங்களோடு கட்டினார்கள். இவ்விதமாக நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம் கச்சைக்கு அருகில் ஏபோத்துக்கு இணையாக இருக்கும்படி இழுத்துக் கட்டப்பட்டது. கர்த்தர் கட்டளையிட்டபடி அவர்கள் எல்லாவற்றையும் செய்தனர்.
ஆசாரியர்களுக்கான பிற ஆடைகள்
22 பின் அவர்கள் ஏபோத்திற்காக ஒரு அங்கியை நெய்தனர். இளநீல துணியால் அதைச் செய்தார்கள். அது சிறந்த சித்திரத் தையல்காரனால் நெய்யப்பட்டது. 23 அங்கியின் மத்தியில் ஒரு துளையை அவர்கள் உண்டுபண்ணி, அந்தத் துவாரத்தின் விளிம்பைச் சுற்றிலும் ஒரு துண்டுத் துணியைத் தைத்தனர். துவாரம் கிழிந்து போகாதபடி அது பாதுகாத்தது.
24 பின் அவர்கள் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூலைக் கொண்டு துணியாலான மாதுளம் பழங்களை உண்டாக்கினார்கள். அங்கியின் கீழ்த்தொங்கலில் இந்த மாதுளம் பழங்களைத் தைத்தனர். 25 பின்பு பசும் பொன்னால் மணிகளை உண்டாக்கினார்கள். அவற்றை அங்கியின் கீழ்த்தொங்கலில் மாதுளம் பழங்களுக்கு இடையே தொங்கவிட்டனர். 26 அங்கியின் கீழ்த் தொங்கலைச் சுற்றிலும் மாதுளம் பழங்களும், பொன்மணிகளும் இருந்தன. மாதுளம் பழங்களுக்கு இடையில் ஒரு பொன்மணி இருந்தது. மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே, கர்த்தருக்கு பணிவிடை செய்யும்போது ஆசாரியன் அணியும் அங்கியாக இது இருந்தது.
27 ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் சட்டைகளை கைவேலைக்காரர் நெய்தனர். இவை மெல்லிய துகிலால் நெய்யப்பட்டன. 28 மெல்லிய துகிலிலிருந்து கை வேலையாட்கள் ஒவ்வொரு தலைப்பாகையையும் நெய்தனர். உள் ஆடைகளையும் நெற்றிப்பட்டைகளையும் மெல்லிய துகிலிலிருந்து செய்தார்கள்.
29 மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலிலிருந்து கச்சையைச் செய்தனர். ஆடையில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே இவை அனைத்தும் தைக்கப்பட்டன.
30 பின் பரிசுத்தக் கிரீடத்திற்குரிய நெற்றிப்பட்டையைத் தயாரித்தனர். சுத்தப் பொன்னால் அதைச் செய்தனர். அந்தப் பொன் தகட்டில் “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்ற வார்த்தைகளைப் பதித்தனர். 31 பொன் பட்டையை நீல நாடாவில் இணைத்தனர். மோசேக்கு கர்த்தர் இட்ட கட்டளைப்படியே இந்த நீல நாடாவை தலைப்பாகையோடு இணைத்தனர்.
மோசே பரிசுத்தக் கூடாரத்தைப் பார்வையிடுதல்
32 இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் (அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின்) எல்லா வேலைகளும் செய்து முடிக்கப்பட்டன. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொன்றையும் செய்தனர். 33 பின் அவர்கள் மோசேக்குப் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் காட்டினார்கள். வளையங்கள், சட்டங்கள், தாழ்ப்பாள்கள், தூண்கள், பீடங்கள் ஆகியவற்றை அவனுக்குக் காட்டினார்கள். 34 சிவப்புச் சாயம் தோய்த்த ஆட்டுக்கடாவின் தோலால் கூடாரம் மூடப்பட்டிருந்ததைக் காட்டினார்கள். அதன் கீழ் பதனிடப்பட்ட மெல்லிய தோலாலாகிய மூடியையும் காட்டினார்கள். மகா பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடிய திரைச் சீலையயும் அவர்கள் அவனுக்குக் காட்டினார்கள்.
35 அவர்கள் மோசேக்கு உடன்படிக்கைப் பெட்டியைக் காட்டினார்கள். பெட்டியைச் சுமக்கும் தண்டுகளையும், பெட்டியின் மூடியையும் காண்பித்தனர். 36 மேசையை அதனுடன் சேர்ந்த பொருட்களோடும், விசேஷ ரொட்டியோடும் காட்டினார்கள். 37 அவர்கள் அவனுக்குப் பசும் பொன்னால் செய்யப்பட்ட குத்துவிளக்குத் தண்டையும் அதன் அகல்களையும் காட்டினார்கள். அகலுக்குப் பயன்படுத்தவேண்டிய எண்ணெயையும் பிற பொருட்களையும் காண்பித்தனர். 38 பொன் நறுமணப்பீடம், அபிஷேக எண்ணெய், நறுமணப்பொருள், கூடாரத்தை மூடிய தொங்குதிரை ஆகியவற்றையும் அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். 39 வெண்கல பலிபீடத்தையும், வெண்கல சல்லடையையும் அவனுக்குக் காட்டினார்கள். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளையும் காட்டினார்கள். பலிபீடத்தின் பொருட்களையும் காண்பித்தனர். வெண்கலத் தொட்டியையும் அதன் பீடத்தையும் அவனுக்குக் காட்டினார்கள்.
40 பின்பு தூண்களோடும் அவற்றின் பீடங்களோடும் கூடிய வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் காணப்பட்ட தொங்கு திரைகளை அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். பிரகாரத்தின் நுழை வாயிலில் இருந்த திரையைக் காண்பித்தனர். கயிறுகளையும், கூடார ஆணிகளையும் காட்டினார்கள். பரிசுத்த கூடாரத்தின் அதாவது ஆசரிப்புக் கூடாரத்தின் எல்லாப் பொருட்களையும் அவர்கள் அவனுக்குக் காட்டினார்கள்.
41 பரிசுத்த பிரகாரங்களில் பணிவிடை செய்யும் ஆசாரியர்களுக்கான ஆடைகளை அவர்கள் மோசேக்குக் காட்டினார்கள். ஆசாரியனான ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் தைக்கப்பட்ட விசேஷ ஆடைகளைக் காட்டினார்கள். அவர்கள் ஆசாரியர்களாகப் பணிவிடை செய்யும்போது அணிய வேண்டிய ஆடைகள் இவையாகும்.
42 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்திருந்தனர். 43 மோசே எல்லா வேலைகளையும் கூர்ந்து கவனித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே எல்லா வேலைகளும் நிறைவேற்றப்பட்டதைக் கண்டான். எனவே மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவுதல்
40 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “முதல் மாதத்தின் முதல் நாளில் பரிசுத்தக் கூடாரத்தை, அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தை எழுப்பு. 3 பரிசுத்தக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டியை வைத்துப் பெட்டியைத் திரையால் மூடு. 4 பிறகு மேசையை உள்ளே கொண்டு வா. மேசையின் மேல் வைக்க வேண்டிய பொருட்களை வை. பின்பு கூடாரத்தில் குத்து விளக்குத் தண்டை வை. சரியான இடங்களில் குத்து விளக்கின் அகல்களை வை. 5 கூடாரத்தில் நறுமணப் பொருட்களின் காணிக்கையைப் படைக்க பொன்னாலான நறுமணப் பீடத்தை வை. உடன்படிக்கைப் பெட்டியின் முன்புறத்தில் நறுமணப்பீடத்தை வை. அதன்பின் பரிசுத்தக் கூடாரத்தின் நுழை வாயிலில் திரைகளை இடு.
6 “பரிசுத்தக் கூடாரத்தின், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் முன்பு தகனபலிக்கான பலிபீடத்தை வை. 7 ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே தொட்டியை வை. தொட்டியில் தண்ணீர் ஊற்றி வை. 8 வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைச் சீலைகளைத் தொங்கவிடு. பிரகாரத்தின் நுழைவாயில் திரையை அதன் ஸ்தானத்தில் தொங்கவிடு.
9 “பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து பரிசுத்தக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் அபிஷேகம் செய். எண்ணெயை இப்பொருட்களின் மேல் ஊற்றும்போது அவை பரிசுத்தமாகும். 10 தகனபலிக்கான பலிபீடத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து, பலிபீடத்தை பரிசுத்தமாக்கு. அது மிகவும் பரிசுத்தமானதாகும். 11 பின் தொட்டியையும், அதன் அடித்தளத்தையும் அபிஷேகம் செய். அப்பொருட்கள் பரிசுத்தமாவதற்கு இவ்வாறு செய்.
12 “ஆரோனையும், அவனது மகன்களையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அழைத்து வா. அவர்களைத் தண்ணீரால் கழுவு. 13 பிறகு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை உடுத்தி எண்ணெயால் அபிஷேகம் செய்து அவனைப் பரிசுத்தப்படுத்து. அப்போது அவன் ஆசாரியனாகப் பணியாற்ற முடியும். 14 பின் அவனது மகன்களுக்கும் ஆடைகளை அணிவித்துவிடு. 15 அவர்களது தந்தைக்கு செய்தபடியே அவர்கள் மேலும் எண்ணெயை ஊற்றி அவர்களையும் பரிசுத்தப்படுத்து. அப்போது அவர்களும் ஆசாரியப் பணிவிடை செய்யமுடியும். அவர்கள்மேல் அபிஷேக எண்ணெயை ஊற்றும்போது, அவர்கள் ஆசாரியர் ஆவார்கள். வரும் காலங்களில் எல்லாம் அவர்கள் குடும்பத்தினர் ஆசாரியர்களாகவே இருப்பார்கள்” என்றார். 16 மோசே கர்த்தர் கூறியபடியெல்லாம் செய்தான்.
17 எனவே, ஏற்ற காலத்தில் பரிசுத்தக் கூடாரம் எழுப்பப்பட்டது. எகிப்தைவிட்டுப் புறப்பட்ட இரண்டாம் வருடத்தின் முதல் மாதம் முதல் தேதியன்று 18 கர்த்தர் கூறியபடியே மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவினான். முதலில் பீடங்களை வைத்தான். பிறகு பீடங்களின்மீது சட்டங்களை பொருத்தினான். பின்பு தாழ்ப்பாள்களை வைத்து, தூண்களை நிறுவினான். 19 அதன் பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்திற்கு மேல் வெளிக் கூடாரத்தை அமைத்தான். பிறகு பரிசுத்தக் கூடாரத்தின் மேல் மூடியை அமைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இவற்றையெல்லாம் செய்தான்.
20 மோசே உடன்படிக்கையை எடுத்து அதை பரிசுத்தப் பெட்டியில் வைத்தான். மோசே பெட்டியின்மீது தண்டுகளை வைத்து பெட்டியின் மூடியை பொருத்தினான். 21 பின்பு மோசே பரிசுத்தப் பெட்டியை பரிசுத்தக் கூடாரத்தில் வைத்தான். அதைப் பாதுகாப்பதற்காக தொங்கு திரையை அதற்குரிய இடத்தில் தொங்கவிட்டான். இவ்வாறு அவன் கர்த்தர் கட்டளையிட்டபடியே தொங்கு திரைகளுக்குப் பின்னே உடன்படிக்கைப் பெட்டியை வைத்து பாதுகாத்தான். 22 பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் மேசையை வைத்தான். அதைக் கூடாரத்தின் வடக்குத் திசையில் இருந்த பரிசுத்தக் கூடாரத்தில் திரைகளுக்கு முன்னே வைத்தான். 23 பிறகு கர்த்தருக்கு முன்னே மேசையின்மீது பரிசுத்த அப்பத்தை வைத்தான். கர்த்தர் சொன்னபடியே அவன் இதைச் செய்தான். 24 பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் குத்துவிளக்குத் தண்டை வைத்தான். கூடாரத்தின் தெற்குப் பகுதியில் மேசைக்கு எதிராக அதனை வைத்தான். 25 அதன் பின் மோசே கர்த்தருக்கு முன் இருந்த விளக்குத் தண்டில் அகல்களை வைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தான்.
26 பின்பு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பொன் நறுமணப்பீடத்தை திரைக்கு முன்னால் நிறுவினான். 27 பின் நறுமணப் பீடத்தில் சுகந்தவாசனையுள்ள நறுமணப் பொருள்களை எரித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இதனையும் செய்தான். 28 பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலில் தொங்குதிரையை தொங்கவிட்டான்.
29 பரிசுத்தக் கூடாரம், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலில் தகன பலிக்கான பலிபீடத்தை மோசே வைத்தான். பின் மோசே அந்தப் பலிபீடத்தின் மேல் ஒரு தகன பலியைச் செலுத்தினான். தானிய காணிக்கைகளையும் கர்த்தருக்குச் செலுத்தினான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இக்காரியங்களைச் செய்தான்.
30 பின்பு ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் மத்தியில் மோசே தொட்டியை வைத்தான். கழுவுவதற்கான தண்ணீரை மோசே, தொட்டியில் நிரப்பினான். 31 மோசே, ஆரோன், ஆரோனின் மகன்கள் ஆகியோர் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு இந்தத் தொட்டியைப் பயன்படுத்தினார்கள். 32 அவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தில் நுழையும்போதெல்லாம் தங்களைக் கழுவிக்கொண்டனர். பலிபீடத்தின் அருகே செல்லும்போதெல்லாம் அவர்கள் தங்கள் கை, கால்களைக் கழுவிக்கொண்டனர். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் இக்காரியங்களைச் செய்தார்கள்.
33 பின்பு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைகளைத் தொங்கவிட்டான். மோசே பலி பீடத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்தான். வெளிப்பிரகாரத்தின் நுழைவாயிலில் திரைச் சீலைகளைத் தொங்கவிட்டான். கர்த்தர் செய்யுமாறு கூறிய எல்லா வேலைகளையும் மோசே செய்து முடித்தான்.
கர்த்தரின் மகிமை
34 அப்போது ஆசாரிப்புக் கூடாரத்தை மேகம் வந்து மறைத்துக்கொண்டது. கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியது. 35 ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் மோசே செல்ல முடியவில்லை. ஏனெனில், மேகம் அதன் மீது மூடியிருந்தது. மேலும் கர்த்தரின் மகிமை பரிசுத்தக் கூடாரத்தை நிரப்பியிருந்தது.
36 இந்த மேகமே ஜனங்கள் புறப்பட வேண்டிய நேரத்தை உணர்த்தி வந்தது. பரிசுத்தக் கூடாரத்திலிருந்து மேகம் எழும்பியபோது, இஸ்ரவேல் ஜனங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.
37 ஆனால் பரிசுத்தக் கூடாரத்தில் மேகம் மூடியிருந்தபோது ஜனங்கள் பயணத்தைத் தொடர முயலவில்லை. மேகம் கிளம்பும் வரையிலும் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கினார்கள். 38 எனவே பகலில் கர்த்தரின் மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மீது இருந்தது. இரவில் மேகத்தில் நெருப்பு காணப்பட்டது. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணத்தின் போதெல்லாம் மேகத்தைப் பார்க்க முடிந்தது.
2008 by World Bible Translation Center