Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 24:1 - 2 நாளாகமம் 7:10

ஆசாரியர்களின் குழுக்கள்

24 ஆரோன் மகன்களின் கீழ்க்கண்ட குழுக்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர் ஆரோனின் மகன்கள். ஆனால் நாதாபும், அபியூவும் தந்தைக்கு முன்னரே செத்துவிட்டனர். அவர்களுக்கு மகன்களும் இல்லை. எனவே எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரியர்களாக தொண்டாற்றினார்கள். எலெயாசர், இத்தாமார் ஆகிய இரண்டு கோத்திரங்களையும் வேறு வேறு குழுக்களாக தாவீது பிரித்து வைத்தான். தமக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளைச் சரிவரச் செய்யும் பொருட்டு தாவீது இக்குழுக்களை இவ்விதம் பிரித்தான். தாவீது இதனை சாதோக், அகிமெலேக் ஆகியோரின் உதவியைக் கொண்டு இவ்வாறு செய்தான். சாதோக் எலெயாசாரின் சந்ததியைச் சேர்ந்தவன். அகிமெலேக்கு இத்தாமாரின் சந்ததியைச் சேர்ந்தவன். இத்தாமாரின் குடும்பத்தைவிட எலெயாசாரின் குடும்பத்தில் ஏராளமான தலைவர்கள் இருந்தனர். எலெயாசாரின் குடும்பத்தில் 16 தலைவர்களும் இத்தாமாரின் குடும்பத்தில் இருந்து 8 தலைவர்களும் இருந்தனர். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிலர் பரிசுத்த இடத்தின் பொறுப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றவர்கள் ஆசாரியர்களாக சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் எலெயாசார், இத்தாமார் ஆகிய வம்சங்களில் இருந்து வந்தனர்.

செமாயா செயலாளனாக இருந்தான். இவன் நெதனெயேலின் மகன். செமாயா, லேவியர் கோத்திரத்திலிருந்து வந்தவன். இவன் அவர்களின் சந்ததியினரின் பெயர்களை எழுதினான். அவன் இதனைத் தாவீது அரசன் மற்றும் சாதோக் ஆசாரியர்களின் தலைவர்கள், அகிமெலேக், ஆசாரிய குடும்பங்களின் தலைவர்கள், லேவியர்களின் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் செய்தான். அகிமெலேக் அபியதாரின் மகன். அவர்கள் ஒவ்வொரு முறையும் சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்தனர். செமாயா இவர்களின் பெயர்களை எழுதினான். எனவே, எலெயாசார் மற்றும் இத்தாமார் கோத்திரங்களிடையே வேலைகளைப் பங்கிட்டனர்.

யோயாரீபின் குழு முதல் குழு.

யெதாயாவின் குழு இரண்டாவது குழு.

ஆரிமின் குழு மூன்றாம் குழு.

செயோரீமின் குழு நான்காவது குழு.

மல்கியாவின் குழு ஐந்தாம் குழு.

மியாமீனின் குழு ஆறாம் குழு.

10 அக்கோத்சின் குழு ஏழாம் குழு.

அபியாவின் குழு எட்டாவது குழு.

11 யெசுவாவின் குழு ஒன்பதாவது குழு.

செக்கனியாவின் குழு பத்தாவது குழு.

12 எலியாசீபின் குழு பதினோராவது குழு.

யாக்கீமின் குழு பன்னிரண்டாவது குழு.

13 உப்பாவின் குழு பதின்மூன்றாவது குழு.

எசெபெயாவின் குழு பதினான்காவது குழு.

14 பில்காவின் குழு பதினைந்தாவது குழு.

இம்மேரின் குழு பதினாறாவது குழு.

15 ஏசீரின் குழு பதினேழாவது குழு.

அப்சேசின் குழு பதினெட்டாவது குழு.

16 பெத்தகியாவின் குழு பத்தொன்பதாவது குழு.

எகெசெக்கியேலின் குழு இருபதாவது குழு.

17 யாகின் குழு இருபத்தொன்றாவது குழு.

காமுவேலின் குழு இருபத்திரண்டாவது குழு.

18 தெலாயாவின் குழு இருபத்தி மூன்றாவது குழு.

மாசியாவின் குழு இருபத்தி நான்காவது குழு.

19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆரோனுக்கு கட்டளைகளைக் கற்பித்தார். இவர்கள் ஆலயத்தில் சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆரோனின் விதிகளை ஆலயத்தில் சேவை செய்யக் கடைபிடித்தனர்.

மற்ற லேவியர்கள்

20 மற்ற லேவியின் சந்ததியாரின் பெயர்கள் இவை:

அம்ராமின் சந்ததியினர்: சூபவேல், சூபவேலின் சந்ததியினர்: எகேதியா;

21 ரெகபியாவின் வழிவந்த இஷியா, (இஷியா மூத்த மகன்.)

22 இத்சாரியின் கோத்திரத்தில் இருந்து செலெமோத், செசெமோத்தின் குடும்பத்தில் இருந்து யாகாத்.

23 எப்ரோனின் மூத்த மகன் எரியா, இரண்டாம் மகன் அம்ரியா மூன்றாம் மகன் யாகாசியேல், நான்காம் மகன் எக்காமியாம்,

24 ஊசியேலின் மகன் மீகா, மீகாவின் மகன் சாமீர்.

25 மீகாவின் சகோதரன் இஷியா, இஷியாவின் மகன் சகரியா.

26 மெராரியின் சந்ததியினர் மகேலி, மூசி ஆகியோர், யாசியாவின் மகன் பேனோ,

27 மெராரியின் மகன் யாசியேல், யாசியேலுக்கு பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி ஆகியோர்.

28 மகேலியின் மகனான எலெயாசார், எலெயாசாருக்கு மகன்கள் இல்லை.

29 கீசின் மகனான யெராமியேல்.

30 மூசியின் மகன்களாக மகேலி, ஏதேர், எரிமோத் ஆகியோர்.

இவை அனைத்தும் லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் பெயர்கள் ஆகும். அவர்களின் குடும்ப வரிசைப்படி இப்பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 31 இவர்கள் சிறப்பு வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ஆசாரியர்களான தங்கள் உறவினர்களைப்போன்று, சீட்டுக் குலுக்கல் போட்டனர். ஆரோனின் சந்ததியினர் ஆசாரியரானார்கள். அரசனான தாவீது, சாதோக், அகிமெலேக், ஆசாரியர்களின் தலைவர்கள் மற்றும் லேவியர் குடும்பத்தினர் முன்னால் இவர்கள் சீட்டுக் குலுக்கல் போட்டனர். வேலைகளைத் தேர்ந்தெடுப்பதில் மூத்த வம்சத்தினரும் இளைய வம்சத்தினரும் ஒன்று போலவே நடத்தப்பட்டனர்.

இசைக் குழுவினர்

25 தாவீதும், படைத்தலைவர்களும் ஆசாப்பின் மகன்களை சிறப்பு வேலைக்காகத் தனியாகப் பிரித்தனர். ஆசாப்பின் மகன்கள் ஏமான், எதுத்தூன் ஆகியோர். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதை தேவனுக்கு சிறப்புப்பணியாகக் கொண்டனர். இதனைச் சுரமண்டலங்கள், தம்புருகள், கைத்தாளங்கள் போன்றவற்றால் செய்தனர். இவ்வகையில் பணி செய்தவர்களின் பெயர் பட்டியல் இது:

ஆசாப்பின் குடும்பத்தில், சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா ஆகியோர். தாவீது அரசன், ஆசாப்பைத் தீர்க்கதரிசனம் சொல்லத் தேர்ந்தெடுத்தான். ஆசாப் மகன்களுக்கு வழிகாட்டினான்.

எதுத்தானின் குடும்பத்திலிருந்து கெதலியா, சேரீ, எஷாயா, சீமேயி, அஷபியா, மத்தித்தியா எனும் ஆறுபேர். எதுத்தான் தன் மகன்களுக்கு வழிகாட்டினான். எதுத்தான் சுரமண்டலங்களைப் பயன்படுத்தி தீர்க்கதரிசனம் சொன்னான். கர்த்தருக்கு நன்றி சொல்லுவதும் துதிப்பதுமாக இருந்தான்.

ஏமானின் மகன்களான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் ஆகியோர் பணிசெய்தனர். இவர்கள் அனைவரும் ஏமானின் மகன்கள். ஏமான் தாவீதின் தீர்க்கதரிசி. ஏமானைப் பலப்படுத்துவதாக தேவன் வாக்களித்துள்ளார். எனவே ஏமானுக்கு அதிக மகன்கள். தேவன் அவனுக்கு 14 மகன்களையும் 3 மகள்களையும் கொடுத்தார்.

ஏமான் தன் மகன்களை ஆலயத்தில் பாடுவதற்குப் பயிற்சிகொடுத்தான். அவர்கள் சுரமண்டலங்கள், தம்புருக்கள், கைத்தாளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் தேவாலயத்தில் பணிசெய்தனர். தாவீது அரசன் அவர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களும் அவர்களது உறவினர்களும் லேவியர்களின் கோத்திரத்தில் உள்ளவர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களில் 288 பேர் கர்த்தரை துதித்துப் பாடக் கற்றிருந்தனர். அவர்கள் சீட்டுக் குலுக்கல் மூலம் அவர்களுக்குரிய வேலைகளை ஒதுக்கினான். எல்லோரும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். முதியவர்களும், இளைஞர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். குருக்களும், மாணவர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர்.

முதலில், ஆசாப்பின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இரண்டாவதாக, கெதலியா மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

10 மூன்றாவதாக, சக்கூரின் மகன்களிடமும், உறவினர்களிடமும், இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

11 நான்காவதாக, இஸ்ரியின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

12 ஐந்தாவதாக, நெத்தனியாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

13 ஆறாவதாக, புக்கியாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

14 ஏழாவதாக, எசரேலாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

15 எட்டாவதாக, எஷாயாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

16 ஒன்பதாவதாக, மத்தனீயாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

17 பத்தாவதாக, சிமேயாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

18 பதினொன்றாவதாக அசாரியேலின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

19 பன்னிரெண்டாவதாக, அஷாபியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

20 பதிமூன்றாவதாக, சுபவேலின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

21 பதினான்காவதாக, மத்தித்தியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

22 பதினைந்தாவதாக, எரேமோத்தின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

23 பதினாறாவதாக, அனனியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

24 பதினேழாவதாக, யோஸ்பேக்காஷாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

25 பதினெட்டாவதாக, ஆனானியின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

26 பத்தொன்பதாவதாக, மலோத்தின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

27 இருபதாவதாக, எலியாத்தாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

28 இருபத்தொன்றாவதாக, ஒத்திரின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

29 இருபத்திரெண்டாவதாக கிதல்தியின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

30 இருபத்துமூன்றாவதாக, மகாசியோத்தின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

31 இருபத்துநான்காவதாக, ரொமந்தியேசரின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வாயில் காவலர்கள்

26 வாயில் காவலர் குழு: இவர்கள் கோராகிய வம்சத்தினர்.

மெஷெலேமியாவும் அவனது மகன்களும் ஆவார்கள். மெஷெலேமியா கோரேயின் மகன். இவன் ஆசாப்பின் கோத்திரத்தைச் சேர்ந்தவன். மெஷெலேமியாவிற்கு மகன்கள் இருந்தனர். சகரியா மூத்த மகன். எதியாயேல் இரண்டாவது மகன். செபதியா மூன்றாவது மகன். யதனியேல் நான்காவது மகன், ஏலாம் ஐந்தாவது மகன், யோகனான் ஆறாவது மகன், எலியோனாய் ஏழாவது மகன்.

ஓபேத்ஏதோமினுக்கு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் செமாயா, இரண்டாவது மகன் யோசபாத், மூன்றாவது மகன் யோவாக், நான்காவது மகன் சாக்கார், ஐந்தாவது மகன் நெதநெயேல், ஆறாவது மகன் அம்மியேல், ஏழாவது மகன் இசக்கார், எட்டாவது மகன் பெயுள்தாயி. தேவன் உண்மையாகவே ஓபேத்ஏதோமை ஆசீர்வதித்திருந்தார். ஓபேத்ஏதோமின் மகனான செமாயாவிற்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் பலமுள்ளவர்களாகத் தங்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். செமாயாவுக்கு ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத், எலிகூ, செமகியா எனும் மகன்கள் இருந்தனர். எல்சாபாத்தின் உறவினர் திறமையுள்ள வேலையாட்கள். இவர்கள் அனைவரும் ஓபேத்ஏதோமின் சந்ததியினர். இவர்களும் இவர்களின் மகன்களும் உறவினர்களும் வல்லமையுள்ளவர்கள், நல்ல காவலர்கள். ஓபேத்ஏதோமிற்கு 62 சந்ததியினர் இருந்தனர்.

மெஷெலேமியாவின் மகன்களும் உறவினர்களும் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். மொத்தத்தில் மகன்களும் உறவினர்களுமாக 18 பேர்கள் இருந்தார்கள்.

10 மெராரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாயில் காவலர்கள் ஓசாவும் இருந்தான். சிம்ரி முதன்மையானவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். உண்மையில், இவன் மூத்த மகன் அல்ல, ஆனால் அவனது தந்தை இவனை முதலில் பிறந்தவனாக வைத்தான். 11 இல்க்கியா இவனது இரண்டாவது மகன், தெபலியா மூன்றாவது மகன், சகரியா நான்காவது மகன். ஆக மொத்தம் ஓராவின் மகன்களும் உறவினர்களுமாக 13 பேர் இருந்தனர்.

12 இவர்கள் வாயில் காவல் குழுவின் தலைவர்கள். இவர்கள் சிறப்பான வழியில் கர்த்தருடைய ஆலயத்தில் பணிசெய்து வந்தனர், இது இவர்களின் உறவினர்கள் செய்தது போன்றது. 13 ஒவ்வொரு குடும்பத்திற்கும் காவல் காப்பதற்கென ஒரு வாசல் கொடுக்கப்பட்டது. வாசலைத் தேர்ந்தெடுக்க இவர்கள் சீட்டுக்குலுக்கல் முறையைப் பயன்படுத்தினார்கள். முதியவர்களும், இளைஞர்களும் சமமாக நடத்தப்பட்டனர்.

14 மெஷெலேமியா கிழக்கு வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பிறகு மெஷெலேமியாவின் மகனான சகரியாவிற்கு சீட்டு குலுக்கிப் போட்டனர். இவன் ஞானமுள்ள ஆலோசகனாக இருந்தான். வடவாசல் காவலுக்கு இவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். 15 ஓபேத் ஏதோம் தென்வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். இவனது மகன்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டின் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 16 மேற்குவாசல் காவலுக்கு சூப்பீமும் ஓசாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல் சாலையில் இருந்த ஷெல்லகத் வாசலையும் காவல் செய்தனர்.

காவலர்கள் பக்கம் பக்கமாக நின்றனர். 17 ஒவ்வொரு நாளும் ஆறு லேவியர்கள் கிழக்கு வாசலில் நின்றனர். நான்கு லேவியர்கள் தினமும் வடக்கு வாசலில் நின்றனர். ஒவ்வொரு நாளும் நான்கு லேவியர்கள் தெற்கு வாசலில் நின்றார்கள். இரண்டு லேவியர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டு வாசலைக் காவல் காத்தனர். 18 நான்கு லேவியர்கள் மேற்குப்புறமான வழியில் இருந்தனர். வெளிப்புறமான வழியில் இரண்டு லேவியர்கள் காவல் செய்தனர்.

19 இவர்களே வாயில் காவலர்கள் குழுவினர். இவர்கள் கோராக் மற்றும் மெராரி குடும்பத்தினர்.

கருவூல அதிகாரிகளும் மற்ற அதிகாரிகளும்

20 அகியா, லேவியர் கோத்திரத்தில் உள்ளவன். தேவனுடைய ஆலயத்தில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்ட பொக்கிஷ அறைக்குப் பொறுப்பாளியாக இருந்தான். பரிசுத்தமான பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கும் பொறுப்பாளியாக இவன் இருந்தான்.

21 லாதான் கெர்சோனியானின் குடும்பத்தில் உள்ளவன். லாதானின் கோத்திரத்தில் யெகியேலி தலைவர்களுள் ஒருவனாயிருந்தான். 22 யெகியேலியின் மகன் சேத்தாம், சேத்தாமின் சகோதரன் யோவேல். இவர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்தனர்.

23 மற்ற தலைவர்கள் அமரம், இத்சாகார், எப்ரோன், ஊசியேல் ஆகியோரின் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

24 செபுவேல் கருவூலப் பொறுப்பாளனாக இருந்தான். இவன் கெர்சோமின் மகன். கெர்சோம் மோசேயின் மகன். 25 கீழ்க்கண்டவர்கள் சுபவேலின் உறவினர்கள், எலியேசர் மூலமாக வந்த உறவினர்கள். எலியேசரின் மகனான ரெகபியா, ரெகபியாவின் மகனான எஷாயா, எஷாயாவின் மகனான யோராம், யோராமின் மகனான சிக்கிரி, சிக்கிரியின் மகனான செலோமித். 26 செலோமித்தும் இவனது உறவினர்களும் ஆலயத்திற்காக தாவீது சேகரித்த அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளரானார்கள்.

படையில் உள்ள அதிகாரிகளும் ஆலயத்திற்காகப் பொருட்களைக் கொடுத்தனர். 27 அவர்கள் போரில் கைப்பற்றிய பொருட்களைக் கொடுத்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயம் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்களைத் தந்தார்கள். 28 செலோமித்தும், அவனது உறவினரும் தீர்க்கதரிசியான சாமுவேலும், கீஸின் மகனான சவுலும், நேரின் மகனான அப்னேரும், செருயாவின் மகனான யோவாபும் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். ஜனங்கள் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களையும் பாதுகாத்தனர்.

29 இத்சாகார் குடும்பத்திலிருந்து கெனானியாவும் அவனது மகன்களும் ஆலயத்துக்கு வெளியேயுள்ளவற்றைக் கவனித்துக் கொண்டனர். அவர்கள் காவலர்களாகவும், நீதிபதிகளாகவும் இஸ்ரவேலின் பல இடங்களிலும் பணியாற்றினார்கள். 30 எப்ரோன் குடும்பத்தில் அசபியா தோன்றினான். இவனும் இவனது உறவினர்களும் கர்த்தருக்கான வேலைகள் அனைத்துக்கும் பொறுப்பாளிகளாக இருந்தனர். யோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள இஸ்ரவேல் பகுதியில் அரசனது வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். 1,700 பலமிக்கவர்கள் அசபியாவின் குழுவில் இருந்தனர். 31 எப்ரோனின் வம்சவரலாறு: இவர்களின் தலைவனாக எரியா இருந்ததாகக் கூறும், தாவீதின் 40வது ஆட்சியாண்டில் குடும்ப வரலாற்றின் மூலம் திறமையும் சக்தியும் கொண்டவர்களைத் தேடும்படி கட்டளையிட்டான். அவர்களில் சிலர் எப்ரோன் வம்சத்தவர்களாக கீலேயாத் நாட்டின் ஏசேரில் கண்டுபிடித்தனர். 32 எரியாவிற்கு 2,700 உறவினர்கள் இருந்தனர். அவர்கள் வல்லமை வாய்ந்தவர்களாகவும், குடும்பத் தலைவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு தாவீது அரசன், தேவன் மற்றும் அரசனின் எல்லா வேலைகளையும் செய்யுமாறு ஆணையிட்டான். ரூபினியர், காதியர், மனாசேயின் கோத்திரத்தில் பாதிப்பேர்கள் ஆகியோரைக் கவனிக்கும்படியும் வைத்தான்.

படைக் குழுக்கள்

27 அரசனது படையில் பணியாற்றும் இஸ்ரவேல் ஜனங்களின் பட்டியல் இது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு மாதத்தில் பணியாற்றினார்கள். அவர்களில் குடும்பத் தலைவர்களும், தளபதிகளும், படைத்தலைவர்கள், காவல் வீரர்களும் இருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 24,000 பேர் இருந்தனர்.

முதல் மாதத்தில் முதல் குழுவின் பொறுப்பாளனாக யஷொபெயாம் இருந்தான். இவன் சப்தியேலின் மகன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். யஷொபெயாம், பேரேசின் சந்ததியாரில் ஒருவன். இவன் முதல் மாதத்திற்குரிய அனைத்து படைத்தலைவர்களுக்கும் தலைவன்.

இரண்டாவது மாதப் படைக் குழுவிற்குத் தோதாயி பொறுப்பாளி. இவன் அகோகியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

மூன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் மூன்றாவது மாதத்தின் பொறுப்பாளி. பெனாயா யோய்தாவின் மகன். யோய்தா தலைமை ஆசாரியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். பெனாயா 30 நாயகர்களில் ஒருவனாகவும், அவர்களின் தலைவனுமாகவும் இருந்தான். பெனாயாவின் குழுவிற்கு அவனது மகனான அமிசபாத் பொறுப்பாளியாயிருந்தான்.

ஆசகேல் நான்காவது தளபதி ஆவான். இவன் நான்காவது மாதத்திற்கு பொறுப்பாளி. இவன் யோவாபின் சகோதரன். பின்பு ஆசகேலின் மகனான செபதியா இவனது பதவியை வகித்தான். ஆசகேலின் குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

சம்கூத் ஐந்தாவது தளபதி ஆவான். இவன் ஐந்தாவது மாதத்திற்குரியவன். இவன் இஸ்ராகியின் வம்சத்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

ஆறாவது தளபதி ஈரா ஆவான். இவன் ஆறாவது மாதத்திற்குரியவன். இவன் இக்கேசின் மகன். இக்கேசுதெக்கோவியா நாட்டினன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

10 ஏழாவது தளபதி ஏலேஸ் ஆவான். இவன் ஏழாவது மாதத்திற்குரியவன். இவன் எப்பிராயீம் சந்ததியிலிருந்து வந்தவன். பெலேனிய நாட்டவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

11 எட்டாவது தளபதி சிபெக்காயி ஆவான். இவன் எட்டாவது மாதத்திற்குரியவன். இவன் ஊஷாத்தியன். இவன் சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

12 ஒன்பதாவது தளபதி அபியேசர் ஆவான். இவன் ஒன்பதாவது மாதத்திற்குரியவன். இவன் ஆனதோத் நகரத்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

13 பத்தாவது தளபதி மக்ராயி ஆவான். இவன் பத்தாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன். சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

14 பதினொன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் பதினொன்றாவது மாதத்திற்குரியவன். இவன் பிரத்தோனியன், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

15 பன்னிரெண்டாவது தளபதி எல்தாயி. இவன் பன்னிரெண்டாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன், ஒத்னியேல் குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

கோத்திரங்களின் தலைவர்கள்

16 இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் பெயர் பின்வருமாறு:

ரூபனியருக்கு சிக்ரியின் மகனான எலியேசர் தலைவன்.

    சிமியோனியருக்கு மாக்காவின் மகனான செப்பத்தியா தலைவன்.

17 லேவியருக்கு கேமுவேலின் மகனான அஷாபியா தலைவன்.

    ஆரோனியருக்குச் சாதோக் தலைவன்.

18 யூதாவுக்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனான எலிகூ தலைவன்.

    இசக்காருக்கு மிகாவேலின் மகனான ஒம்ரி தலைவன்.

19 செபுலோனக்கு ஒபதியாவின் மகனான இஸ்மாயா தலைவன்.

    நப்தலிக்கு அஸ்ரியேலின் மகனான எரிமோத் தலைவன்.

20 எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகனான ஓசெயா தலைவன்.

    மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குப் பெதாயாவின் மகனான யோவேல் தலைவன்.

21 கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குச் சகரியாவின் மகனான இத்தோ தலைவன்.

    பென்யமீனுக்கு அப்னேரின் மகனான யாசியேல் தலைவன்.

22 எரோகாமின் மகனான அசாரியேல் தாணின் தலைவன்.

இவர்கள் இஸ்ரவேலரின் தலைவர்கள்.

தாவீது இஸ்ரவேலர்களை எண்ணிக் கணக்கிட்டது

23 தாவீது, இஸ்ரவேலர்களில் ஆண்களைக் கணக்கிட திட்டமிட்டான். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஏனென்றால் தேவன், இஸ்ரவேலர்களை வானத்து நட்சத்திரங்களைப் போன்று பெருக்குவதாக வாக்களித்திருந்தார். எனவே தாவீது இஸ்ரவேலர்களில் இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட்டான். 24 செருயாவின் மகனான யோவாப் இஸ்ரவேலர்களை எண்ணத் தொடங்கினான். ஆனால் அவன் அதைச் செய்து முடிக்கவில்லை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் கோபங்கொண்டார். இதனால்தான், தாவீது அரசனின் வரலாறு, என்ற புத்தகத்தில் ஜனங்கள் தொகை குறிக்கப்படவில்லை.

அரசனின் நிர்வாகிகள்

25 அரசனது சொத்துக்களை நிர்வகித்தவர்களின் பட்டியல் இது:

அரசனது பொக்கிஷங்களுக்கு ஆதியேலின் மகனான அஸ்மாவேத் அதிகாரியானான்.

    சிறிய பட்டணங்கள், கிராமங்கள், கோபுரங்கள் போன்றவற்றின் பொக்கிஷங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் அதிகாரியானான்.

26 நிலத்தைப் பயிரிடும் வயல்வெளிகளில் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி அதிகாரியானான்.

27 திராட்சைத் தோட்டங்களுக்கு ராமாத்தியனான சீமேயும், திராட்சைரசம் வைக்கும் இடங்களுக்கு சிப்மியனாகிய சப்தியும் அதிகாரிகளானார்கள்.

28 மேற்கு மலை நாடுகளிலுள்ள ஒலிவ மரங்களுக்கும், ஆலமரங்களுக்கும் கெதேரியனான பால் கானான் அதிகாரியானான்.

எண்ணெய் கிடங்குகளுக்கு யோவாசு அதிகாரியானான்.

29 சாரோனில் மேய்கிற மாடுகளுக்கு சரோனியனான சித்ராய் அதிகாரியானான்.

    பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் அதிகாரியானான்.

30 ஒட்டகங்களுக்கு இஸ்மவேலியனான ஓபில் அதிகாரியானான்.

    கழுதைகளுக்கு மெரோனோத்தியனாகிய எகெதியா அதிகாரியானான்.

31 ஆடுகளுக்கு ஆசாரியனான யாசிசு அதிகாரியானான்.

இவர்கள் அனைவரும் தாவீதின் உடமைகளுக்கு அதிகாரிகளாய் இருந்தனர்.

32 யோனத்தான் ஞானமிக்க ஆலோசனைக்காரனகவும், எழுதும் பயிற்சிப்பெற்றவனாகவும் இருந்தான். இவன் தாவீதின் சிறிய தகப்பன். அக்மோனியின் மகனான யெகியேல் அரசனின் மகன்களைப் பொறுப்பேற்றுக்கொண்டான். 33 அகித்தோப்பேல் அரசனுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான். ஊஷாயி அரசனின் நண்பன். இவன் அர்கியன். 34 யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலின் பதவியைப் பெற்று அரசனுக்கு ஆலோசனை கூறினார்கள். யோய்தா பெனாயாவின் மகன். யோவாப் அரசனின் படைத்தலைவனாக இருந்தான்.

ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள்

28 இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களையெல்லாம் தாவீது கூட்டினான். அவர்களை எருசலேமிற்கு வரும்படி கட்டளையிட்டான். தாவீது கோத்திரங்களின் தலைவர்களையும், அரசனது படையில் பணியாற்றும் தளபதிகளையும், பிரதானிகளையும் கூட்டினான். அரசனுக்கும் அவனது மகன்களுக்கும் உரிய சொத்துக்களையும் மிருகங்களையும் நிர்வகிக்கும் அதிகாரிகளையும் கூட்டினான், அதோடு முக்கியமான அதிகாரிகளையும், வலிமைமிக்க வீரர்களையும், தைரியமிக்க வீரத்தலைவர்களையும் கூட்டினான்.

தாவீது எழுந்து நின்று அவர்களிடம், “நான் சொல்வதைக் கவனியுங்கள், எனது ஜனங்களே, சகோதரர்களே, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்க ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்று மனதில் நினைத்துள்ளேன். தேவனுடைய பாதப்படியை வைப்பதற்காக ஒரு இடத்தைக் கட்ட விரும்புகிறேன். தேவனுக்காக ஆலயம் கட்ட திட்டமிட்டுள்ளேன். ஆனால் தேவன் என்னிடம், ‘வேண்டாம் தாவீது, எனது பேரால் நீ ஆலயம் கட்டவேண்டாம். ஏனென்றால் நீ ஒரு போர்வீரன், நீ பலரைக் கொன்றிருக்கிறாய்’ என்றார்.

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தை, இஸ்ரவேலின் பன்னிரண்டு இனங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தார். யூதாவின் கோத்திரத்தில் கர்த்தர் என் தந்தையின் வம்சத்தைத் தேர்ந்தெடுத்தார். அக்குடும்பத்திலும் என்னை தேவன் இஸ்ரவேலின் அரசனாகத் தேர்ந்தெடுத்தார்! தேவன் என்னை என்றென்றைக்கும் இஸ்ரவேலின் அரசனாக்க விரும்பினார்! கர்த்தர் எனக்கு பல மகன்களைத் தந்துள்ளார். அவர்களினுள்ளும், இஸ்ரவேலின் புதிய அரசனாக சாலொமோனைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் உண்மையில், கர்த்தருடைய அரசாங்கம் இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் உள்ளது. கர்த்தர் என்னிடம், ‘தாவீது, உன் மகனான சாலொமோன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். அதைச் சுற்றிய இடங்களையும் கட்டுவான். ஏனென்றால் நான் அவனை எனது மகனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனது தந்தையாக இருப்பேன். சாலொமோன் என் சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிறான். அவன் தொடர்ந்து இவ்வாறு எனது சட்டங்களுக்கு அடி பணிந்து வந்தால், அவனது அரசை என்றென்றைக்கும் பலமுள்ளதாக ஆக்குவேன்!’ என்றார்.”

“இப்போது இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாகவும், தேவனுக்கு முன்பாகவும், நான் கூறுகிறேன். தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் கவனமாக இருங்கள்! அப்போது தான் இந்த நல்ல நிலம் உங்களுடையதாக இருக்கும். என்றென்றும் இதனை உங்கள் சந்ததிகளுக்கும் தர இயலும்.

“என் மகன் சாலொமோனாகிய நீ உன் தந்தையின் தேவனைப் பற்றி அறிவாய், சுத்தமான இருதயத்தோடு தேவனுக்கு சேவை செய். தேவனுக்கு சேவை செய்வதில் மனதில் மகிழ்ச்சிகொள். ஏனென்றால், கர்த்தருக்கு ஒவ்வொருவரின் மனதினுள்ளும் என்ன இருக்கிறது என்பது தெரியும். நீ நினைக்கிற அனைத்தையும் கர்த்தர் புரிந்துகொள்வார். நீ உதவிக்கு கர்த்தரிடம் போனால், அவர் பதில் தருவார். ஆனால் நீ கர்த்தரிடமிருந்து விலகினால் அவர் என்றென்றைக்கும் விட்டுவிடுவார். 10 சாலொமோன், கர்த்தர் தன் ஆலயத்தை கட்ட உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள். உறுதியாக இருந்து இதனைச் செய்துமுடி” என்றான்.

11 பிறகு அவன் தன் மகன் சாலொமோனுக்கு ஆலயத்தை கட்டுவதற்கான திட்டங்களைப்பற்றிக் கூறினான். நுழைவு மண்டபம், கட்டிடங்கள், அறைகள், கருவூல அறைகள், அதன் மேல் வீடுகள், அதின் உள்ளறைகள், கிருபாசனம் போன்றவற்றின் மாதிரிகளைக் கொடுத்தான். 12 தாவீது ஆலயத்தின் அனைத்து பாகங்களுக்கும் திட்டம் வைத்திருந்தான். அவன் அவற்றை சாலொமோனிடம் கொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் திட்டங்களையும் கொடுத்தான். அவன் கருவூல அறைகளுக்கும் பரிசுத்தமானப் பொருட்கள் வைக்கும் அறைகளுக்கும் உரிய திட்டங்களையும் கொடுத்தான். 13 ஆசாரியர் குழுக்களைப் பற்றியும் லேவியர்களைப் பற்றியும் சாலொமோனுக்கு தாவீது கூறினான். கர்த்தருடைய ஆலயத்தில் செய்ய வேண்டிய சேவைகளைப் பற்றியும் சேவைகளுக்குரிய பொருட்களைப் பற்றியும் கூறினான். 14 ஆலயத்தில் பயன்படுத்தவேண்டிய தங்கம், வெள்ளி பற்றிய அளவினையும் கூறினான். 15 தங்க விளக்குகள் மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. வெள்ளி விளக்குகள், மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. இவ்விளக்குகளுக்கும் விளக்குத் தண்டுகளுக்கும் எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்பதையும் சொன்னான். தேவைப்படுகிற இடங்களில் வெவ்வேறு விளக்குத் தண்டுகள் இருந்தன. 16 பரிசுத்த அப்பம் வைப்பதற்குரிய மேஜை செய்ய தேவையான தங்கம் பற்றியும் கூறினான். வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியின் அளவைப் பற்றியும் தாவீது கூறினான். 17 முள் குறடுகளுக்கும் தூவப் பயன்படும் கலங்களுக்கும், தட்டுகளுக்கும் வேண்டிய தங்கத்தைப் பற்றியும் கூறினான். பொன் கிண்ணங்களுக்குத் தேவையான பொன்னின் அளவையும், வெள்ளிக் கிண்ணங்களுக்கு தேவையான வெள்ளியின் அளவையும் தாவீது கூறினான். 18 நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடத்திற்கு வேண்டிய பரிசுத்த பொன்னின் அளவைப் பற்றியும் கூறினான். தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்தான். இவை தங்கத்தால் ஆனவை.

19 தாவீது, “கர்த்தருடைய வழிகாட்டுதலால் இத்திட்டங்களை நான் எழுதினேன். அவரது உதவியால்தான் அனைத்தும் திட்டமிடப்பட்டது” என்றான்.

20 தாவீது மேலும் தன் மகன் சாலொமோனிடம், “உறுதியாக இரு. தைரியமாக இந்த வேலையை முடித்துவிடு. பயப்படாதே. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தர் உன்னோடும் இருப்பார். அனைத்து வேலைகளும் முடியும்வரை அவர் உனக்கு உதவுவார். அவர் உன்னை விட்டுப் போகமாட்டார். கர்த்தருடைய ஆலயத்தை நீ கட்டி முடிப்பாய். 21 ஆசாரியர்களின் குழுவும், லேவியர்களும் தேவாலயத்தின் எல்லா வேலைகளுக்கும் தயாராக உள்ளனர். திறமையுள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆலயத்தின் வேலைகளுக்கு உதவுவார்கள். உனது அனைத்து ஆணைகளுக்கும், அதிகாரிகளும் ஜனங்களும் கீழ்ப்படிவார்கள்” என்றான்.

ஆலயம் கட்டுவதற்கான அன்பளிப்புகள்

29 அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமும் தாவீது, “என் மகன் சாலொமோனை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். அவன் இளைஞன். இந்த வேலையைச் செய்து முடிக்கும் தேவைகளைப் பற்றிய அறிவு இல்லாதவன். ஆனால் இந்த வேலையோ மிகவும் முக்கியமானது. இது ஜனங்களுக்கான வீடு அன்று. இது தேவனாகிய கர்த்தருக்கான வீடு. எனது தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான திட்டங்களை என்னால் முடிந்தவரை செய்துள்ளேன். நான் தங்கப் பொருட்கள் செய்வதற்கான தங்கத்தைக் கொடுத்துள்ளேன். வெள்ளிப் பொருட்களைச் செய்வதற்கான வெள்ளியையும் நான் கொடுத்துள்ளேன். வெண்கலப் பொருட்களைச் செய்வதற்கான வெண்கலத்தையும் நான் கொடுத்துள்ளேன். இரும்பு பொருட்களைச் செய்வதற்கான இரும்பையும் நான் கொடுத்துள்ளேன். மரப் பொருட்கள் செய்வதற்கான மரத்தையும் நான் கொடுத்துள்ளேன். பதிப்பதற்குத் தகுந்த ஒளிமிக்க கற்களையும், பலவண்ண கற்களையும், வெண்கற்பாளங்களையும், விலையுயர்ந்த சகல வித இரத்தினங்களையும், கோமேதகம் போன்ற கற்களையும் நான் கொடுத்துள்ளேன். இது போல் பலவிதமான பொருட்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்காக நான் கொடுத்திருக்கிறேன். எனக்குச் சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். இதனை நான் எதற்காகச் செய்தேன் என்றால் என் தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அதனால் அனைத்து பொருட்களையும் பரிசுத்த ஆலயத்திற்கு கொடுத்துவிட்டேன். 110 டன் சுத்தமான பொன்னை நான் ஓபிரிலிருந்து கொடுத்தேன். 260 டன் சுத்தமான வெள்ளியையும் நான் கொடுத்திருக்கிறேன். இவ்வெள்ளி ஆலயச் சுவர்களை மூடிட பயன்படும். தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன பொருட்களுக்குத் தேவையான தங்கத்தையும், வெள்ளியையும் கொடுத்திருக்கிறேன். இந்த பொன்னினாலும் வெள்ளியாலும் திறமையுடையவர்கள் ஆலயத்திற்குத் தேவையான பல்வேறு வகை பொருட்களைச் செய்யலாம். இப்போது இஸ்ரவேலர்களில் எத்தனை பேர் ஆலயப் பணிக்காக, உங்களைக் கர்த்தருக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

குடும்பத் தலைவர்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களும், ஆயிரம் பேருக்கான அதிபதிகளும், நூறுபேருக்கான அதிபதிகளும், அரசனின் மந்திரிகளான தலைவர்களும் ஒப்புக் கொண்டு தங்களது மதிப்பு வாய்ந்த பொருட்களைக் கொடுக்க முன்வந்தனர். அவர்கள், தேவாலயத்திற்குக் கொடுத்த பொருட்களின் பட்டியல் இது: 190 டன் தங்கம், 375 டன் வெள்ளி, 675 டன் வெண்கலம், 3,750 டன் இரும்பு, ஜனங்கள் விலையுயர்ந்த கற்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொடுத்தனர். யெகியேல் இக்கற்களைக் காக்கும் பொறுப்பாளி ஆனான். இவன் கெர்சோன் குடும்பத்தவன். தலைவர்கள் மகிழ்ச்சியோடு இவ்வாறு பொருட்களைக் கொடுத்ததால் ஜனங்களும் மகிழ்ச்சியடைந்தனர். தலைவர்கள் நல்ல மனதோடு கொடுத்தனர். தாவீது அரசனும் மகிழ்ந்தான்.

தாவீதின் அழகான ஜெபம்

10 பிறகு தாவீது அனைத்து ஜனங்களின் முன்பாக கர்த்தரை துதித்தான். தாவீது:

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எங்கள் தந்தையே,
    எல்லா காலங்களிலும் உமக்கு துதி உண்டாவதாக!
11 மாட்சிமை, வல்லமை, மகிமை, வெற்றி, மகத்துவம் அனைத்தும் உமக்குரியவை.
    ஏனென்றால் மண்ணிலும், விண்ணிலும் உள்ள அனைத்தும் உமக்குரியவை.
கர்த்தாவே இராஜ்யம் உமக்குரியது.
    நீரே தலைவர், எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர் நீரே.
12 செல்வமும், மகத்துவமும் உம்மிடம் இருந்து வரும்.
    நீர் எல்லாவற்றையும் ஆளுகிறீர்.
உமது கையில் வல்லமையும் அதிகாரமும் உள்ளது!
    எவரையும் வல்லமையும், அதிகாரமும் உள்ளவனாக்கும் வல்லமையும் உமது கையில் உள்ளது!
13 இப்போது எங்கள் தேவனே, உமக்கு நன்றி.
    நாங்கள் உமது பெருமைக்குரிய நாமத்தைத் துதிப்போம்!
14 இந்தப் பொருட்கள் அனைத்தும் என்னிடமும், என் ஜனங்களிடமும் இருந்து வந்ததல்ல!
    அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன.
    நாங்கள் அவற்றை உமக்குத் திருப்பித் தருகிறோம்.
15 நாங்கள் எங்கள் முற்பிதாக்களைப் போன்று
    உலகமெங்கும் பயணம் செய்துகொண்டு பரதேசிகளாக இருக்கிறோம்.
இவ்வுலகில் எங்கள் வாழ்வு கடந்து செல்லும் நிழல் போன்றுள்ளது.
    இதனை நிறுத்த முடியவில்லை.
16 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் இவ்வளவு பொருட்களையும் ஆலயத்திற்காக சேகரித்துள்ளோம்.
    உமது பெயரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்டுகிறோம்.
ஆனால் அனைத்தும் உம்மிடம் இருந்து வந்தன.
    எல்லாம் உமக்குரியன.
17 எனது தேவனே, நீர் ஜனங்களை சோதிப்பதை நான் அறிவேன்.
    ஜனங்கள் நன்மை செய்தால் நீர் மகிழ்ச்சி அடைவீர்.
நான் மகிழ்ச்சியோடு சுத்தமான, நேர்மையான மனதோடு இவற்றைத் தருவேன்.
    நான் உமது ஜனங்கள் கூட்டியுள்ளதை பார்த்தேன். இப்பொருட்களை உமக்குக் கொடுப்பதில், அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
18 கர்த்தாவே, எங்கள் முற்பிதாக்களான, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் ஆகியோரின் தேவன்,
    சரியானவற்றைத் திட்டமிடுவதில் உம் ஜனங்களுக்கு தயவுசெய்து உதவும்!
    உம்மிடம் உண்மையாகவும், தாழ்மையாகவும் இருக்க உதவும்.
19 என் மகன் சாலொமோன் உமக்கு உண்மையாக இருக்கவும்,
    உமது ஆணைகளுக்கும், சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கூட கீழ்ப்படிய உதவும். இவற்றைச் செய்ய சாலொமோனுக்கு உதவும்.
    நான் திட்டமிட்டபடி இத்தலைநகரைக் கட்ட அவனுக்கு உதவும்” என்றான்.

20 பிறகு தாவீது அனைத்து குழு ஜனங்களிடமும், இப்போது உங்கள், “தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்” என்றான். எனவே அனைத்து ஜனங்களும் துதித்தனர். தரையில் குனிந்து கர்த்தரையும் அரசனையும் வணங்கினார்கள்.

சாலொமோன் அரசனாகிறான்

21 மறுநாள் ஜனங்கள் கர்த்தருக்கு பலிகள் இட்டனர். தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் 1,000 காளைகள், 1,000 ஆட்டுக் கடாக்கள், 1,000 ஆட்டுக் குட்டிகள், போன்றவற்றையும் பானங்களின் காணிக்கைகளையும் செலுத்தினர். அவர்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் பலவற்றையும் பலியிட்டனர். 22 அன்று ஜனங்கள் மகிழ்ச்சியோடு கர்த்தருடன் உண்பதும் குடிப்பதுவுமாய் இருந்தனர்.

அவர்கள் தாவீதின் மகனான சாலொமோனை இரண்டாம் முறையாக அரசனாக்கினார்கள். அவர்கள் சாலொமோனை அரசனாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும், அபிஷேகம் செய்தனர். கர்த்தர் இருக்கிற இடத்திலேயே அவர்கள் இதைச் செய்தார்கள்.

23 பிறகு சாலொமோன் கர்த்தருடைய சிங்காசனத்தின் மேல் அமர்ந்தான். அவன் தனது தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். அவன் வெற்றியுள்ளவனாயிருந்தான். இஸ்ரவேலர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். 24 அனைத்து தலைவர்களும், வீரர்களும் தாவீதின் மகனான சாலொமோனை அரசனாக ஏற்றுக்கொண்டனர். அனைவரும் சாலொமோனுக்குக் கீழ்ப்படிந்தனர். 25 கர்த்தர் சாலொமோனை மிகப் பெரியவனாக்கினார். கர்த்தர் சாலொமோனைப் பெரியவராக்கிவிட்டார் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தெரிந்துக்கொண்டனர். ஒரு அரசனுக்குரிய பெருமையைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். வேறு எந்த அரசனுக்கும் இஸ்ரவேலில் இவ்வளவு ராஜரீக மகத்துவம் கிடைத்ததில்லை.

தாவீதின் மரணம்

26-27 ஈசாயின் மகனான தாவீது 40 ஆண்டுகள் இஸ்ரவேல் முழுவதற்கும் அரசனாக இருந்தான். எப்ரோன் நகரில் தாவீது 7 ஆண்டுகளுக்கு அரசனாக இருந்தான். பிறகு தாவீது எருசலேம் நகரில் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான். 28 தாவீது முதுமையடைந்ததும் மரித்தான். தாவீது ஒரு நீண்ட நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். தாவீது பல செல்வங்களையும் பெருமைகளையும் பெற்றான். அவனுக்குப் பிறகு அவனது மகனான சாலொமோன் புதிய அரசன் ஆனான்.

29 தொடக்கமுதல், இறுதிவரை தாவீது செய்தவற்றையெல்லாம் தீர்க்கதரிசியான நாத்தனும், ஞானதிருஷ்டிக்காரனான சாமுவேலும், ஞானதிருஷ்டிக்காரனான காத்தும் தங்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர். 30 தாவீது இஸ்ரவேலின் அரசனாகச் செய்தவற்றையெல்லாம் அந்த எழுத்துக்கள் கூறுகின்றன. அவை தாவீதின் வலிமையையும், அவனுக்கு நேர்ந்தவற்றையும் கூறுகின்றன. அவை இஸ்ரவேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரசுகளுக்கும் ஏற்பட்டவற்றையும் கூறும்.

சாலொமோன் ஞானத்தை கேட்கிறான்

சாலொமோன் பலமுள்ள அரசனாக விளங்கினான். ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் அவனோடு இருந்தார். கர்த்தர் அவனை மிகப் பெரியவனாக்கினார். இஸ்ரவேல் ஜனங்களோடு சாலொமோன் பேசினான். அத்துடன் எல்லா தலைவர்களோடும், பொது அதிகாரிகளோடும், நீதிபதிகளோடும், இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு வழிகாட்டிகளோடும், ஒவ்வொரு குடும்பத் தலைவர்களோடும் பேசினான். பிறகு சாலொமோனும் மற்றும் அனைவரும் கூடி கிபியோனில் இருக்கிற மேடைக்குப் போனார்கள். அங்கு தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் இருந்தது. இதனைக் கர்த்தருடைய ஊழியக்காரனான மோசே வனாந்தரத்தில் இருக்கும்போது அமைத்தான். தாவீது தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். அவன் எருசலேமில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கும்படி ஒரு கூடாரத்தை அமைத்திருந்தான். ஊரியின் மகனான பெசலெயேல் வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான். அது பரிசுத்தக் கூடாரத்தின் முன்பாக கிபியோனில் இருந்தது. எனவே சாலொமோனும் ஜனங்களும் கிபியோனுக்கு கர்த்தருடைய ஆலோசனை பெற சென்றனர். சாலொமோன் மேலே ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பிருந்த வெண்கல பலிபீடத்தின் அருகிலே சென்றான். அப்பலிபீடத்தில் சாலொமோன் 1,000 தகனபலிகளைக் கொடுத்தான்.

அன்று இரவு தேவன் சாலொமோனிடம், “நான் உனக்கு என்ன தரவேண்டும் என விரும்புகிறாய் என்பதை கேள்” என்றார்.

சாலொமோன் தேவனிடம், “என் தந்தையான தாவீதிடம் நீர் மிகவும் கருணையோடு இருந்தீர். என் தந்தையின் இடத்திற்கு என்னைப் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். இப்போது தேவனாகிய கர்த்தாவே! என் தந்தை தாவீதிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும். இப்பெரிய நாட்டிற்கு என்னை அரசனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். பூமியில் உள்ள புழுதியைப் போன்று ஏராளமான அளவில் ஜனங்கள் வசிக்கின்றனர். 10 இப்போது எனக்கு அறிவையும் ஞானத்தையும் நீர் தரவேண்டும். அதனால் இந்த ஜனங்களை சரியான வழியில் நடத்திச் செல்வேன். உம்முடைய உதவி இல்லாமல் எவராலும் இந்த ஜனங்களை ஆள இயலாது!” என்றான்.

11 தேவன் சாலொமோனிடம், “உனக்கு நீதியான மனப்பான்மை உள்ளது. நீ செல்வத்தையோ, பொருட்களையோ, பெருமையையோ கேட்கவில்லை. உன் பகைவர்களை அழிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. நீ நீண்ட வாழ்நாளையும் கேட்கவில்லை. நீ இத்தகையவற்றைக் கேட்கவில்லை. நீ என்னிடம் அறிவையும் ஞானத்தையும் வேண்டுகிறாய். எனவே என்னால் தேர்ந்தெடுக்கப்படும் உன்னால் என் ஜனங்களுக்காக சரியான முடிவுகளை எடுக்க இயலும். 12 ஆகையால் நான் உனக்கு அறிவும் ஞானமும் தருகிறேன். ஆனால் அதோடு உனக்குச் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் தருவேன். இதற்கு முன்னால் இருந்த எந்த அரசனுக்கும் கிடைக்காத அளவிற்கு உனக்குச் செல்வமும் சிறப்பும் தருவேன். எதிர்காலத்திலும் இதுபோல் எந்த அரசனும் செல்வமும் சிறப்பும் பெறப்போவதில்லை” என்றார்.

13 எனவே, சாலொமோன் கிபியோனில் தொழுதுகொள்ளும் இடத்திற்குச் சென்றான். பிறகு சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு எருசலேமிற்கு இஸ்ரவேலின் அரசனாக அரசாளத் திரும்பிச் சென்றான்.

சாலொமோன் தனது படையையும் செல்வத்தையும் சேர்க்கிறான்

14 சாலொமோன் தனது படைக்காகக் குதிரைகளையும் இரதங்களையும் சேகரிக்க ஆரம்பித்தான். சாலொமோனிடம் 1,400 இரதங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். அவற்றை அவன் இரதத்துக்குரிய நகரங்களில் இருக்கச்செய்தான். அவர்களில் சிலரை அரண்மனையிருந்த எருசலேமிலும் இருக்கச் செய்தான். 15 எருசலேமில் சாலொமோன் ஏராளமாகத் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்தான். அங்கே பொன்னும் வெள்ளியும் கற்களைப் போன்று ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தன. சாலொமோன் கேதுருமரங்களையும் ஏராளமாகச் சேகரித்தான். அவை மேற்கு மலை பள்ளத்தாக்கில் உள்ள காட்டத்தி மரங்களைப் போன்று ஏராளமாக இருந்தன. 16 சாலொமோன் எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும் குதிரைகளை வாங்கி வந்தான். அரசனின் வியாபாரிகள் கியூவிலிருந்து குதிரைகளை வாங்கி வந்தனர். 17 சாலொமோனின் வியாபாரிகள் 600 சேக்கல் வெள்ளிக்கு ஒரு இரதத்தையும் 150 சேக்கல் வெள்ளிக்கு ஒரு குதிரையையும் வாங்கி வந்தனர். பிறகு இதே விதத்தில் அந்த வியாபாரிகள் குதிரைகளையும் இரதங்களையும் ஏத்தியரின் அரசர்களுக்கும் ஆராம் அரசர்களுக்கும் கொண்டுபோய் விற்றார்கள்.

ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட சாலொமோன் திட்டமிடுகிறான்

கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாக்க சாலொமோன் ஆலயம் கட்ட திட்டமிட்டான். மேலும் தனக்காக ஒரு அரண்மனை கட்டிக்கொள்ளவும் சாலொமோன் திட்டமிட்டான். மேலும் மலையில் கல் உடைக்கும் பொருட்டு சாலொமோனிடம் 70,000 தொழிலாளர்களும் 80,000 கல் தச்சர்களும் இருந்தார்கள். மேற்பார்வை செய்யும்பொருட்டு 3,600 பேரைத் தேர்ந்தெடுத்தான்.

பிறகு சாலொமோன் ஈராம் என்பவனுக்கு தூது அனுப்பினான். ஈராம் தீரு என்னும் நாட்டின் அரசன். சாலொமோன்,

“என் தந்தையான தாவீதிற்கு உதவிச் செய்தது போன்று எனக்கும் உதவிச் செய்யுங்கள். நீங்கள் கேதுருமரக்கட்டைகளை அனுப்பினீர்கள். அதனால் அவர் தனக்கு அரண்மனை கட்டிக்கொண்டார். நான் எனது தேவனாகிய கர்த்தருடைய பெயரை மகிமைப்படுத்துவதற்காக ஒரு ஆலயம் கட்டப்போகிறேன். ஆலயத்தில் கர்த்தருக்கு முன்பாக நாங்கள் நறுமணப் பொருட்களை எரிக்கப்போகிறோம். சிறப்புக்குரிய மேஜையில் பரிசுத்த அப்பத்தை வைக்கப்போகிறோம். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தகனபலிகளை செலுத்தப் போகிறோம். ஓய்வுநாட்களிலும், பிறைச்சந்திர நாட்களிலும் நமது தேவனாகிய கர்த்தர் கொண்டாடச் சொன்ன பண்டிகை நாட்களிலும் தகனபலிகளை செலுத்தப்போகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் எக்காலத்திற்கும் கீழ்ப்படியவேண்டிய சட்டம் இது.

“நமது தேவன் மற்ற எல்லாத் தெய்வங்களை விட பெரியவர். எனவே நான் அவருக்காகப் பெரிய ஆலயத்தைக் கட்டுவேன். உண்மையில் எவராலும் நம் தேவனுக்கு ஆலயம் கட்டமுடியாது. வானமும் வானாதி வானமும் கூட அவரைத் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே என்னாலும் நமது தேவனுக்கு ஆலயம் கட்டமுடியாது. என்னால் முடிந்ததெல்லாம் அவரை மகிமைப்படுத்த அவருக்கு நறுமணப் பொருட்களை எரிக்க ஒரு இடத்தை அமைப்பதுதான்.

“இப்போது நான் உங்களிடம் ஒரு மனிதனை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவனுக்குப் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலைகளில் திறமை இருக்கவேண்டும் அவனுக்கு இரத்தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அவன் இங்கு யூதாவிலும் எருசலேமிலும் இருக்கின்றவர்களோடும் என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடும் வேலைச்செய்ய வேண்டும். லீபனோனில் உள்ள கேதுரு, தேவதாரு, வாசனை மரங்கள் போன்றவற்றின் பலகைகளையும் அனுப்பவேண்டும். உனது வேலைக்காரர்கள் லீபனோனில் உள்ள மரங்களை வெட்டத் தெரிந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனது வேலைக்காரர்கள் உனது வேலைக்காரர்களுக்கு உதவுவார்கள். எனக்கு ஏராளமான மரப்பலகைகள் தேவை. ஏனென்றால் நான் கட்டப்போகும் ஆலயமானது பெரியதாகவும் அழகானதாகவும் இருக்கும். 10 பலகைகளுக்காக மரத்தை வெட்டப்போகும் உன்னுடைய வேலைக்காரர்களுக்கு நான் கொடுக்கப்போகும் கூலி இதுதான். நான் அவர்களின் உணவுக்காக 20,000 மரக்கால் கோதுமையையும், 20,000 மரக்கால் வாற் கோதுமையையும், 20,000 குடம் திராட்சைரசத்தையும், 20,000 குடம் எண்ணெயையும் கொடுப்பேன்” என்று சொல்லி அனுப்பினான்.

11 பிறகு ஈராம் சாலொமோனுக்குப் பதில் அனுப்பினான். ஈராம் அனுப்பிய செய்தியில் அவன்,

“சாலொமோன், கர்த்தர் தமது ஜனங்களை நேசிக்கிறார். அதனால்தான் அவர்களுக்கு அரசனாக உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டான். 12 ஈராம் மேலும், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்! அவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் தாவீதிற்கு ஞானமுடைய மகனைக் கொடுத்தார். சாலொமோன், உன்னிடம் ஞானமும் அறிவும் உள்ளது. நீ கர்த்தருக்காக ஆலயம் கட்டிக் கொண்டிருக்கிறாய். நீ உனக்காக ஒரு அரண்மனையும் கட்டுகிறாய். 13 நான் உன்னிடம் ஈராம் அபி என்னும் கைதேர்ந்த நிபுணனை அனுப்புவேன். 14 அவனது தாய் தாண் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவள். அவனது தந்தை தீரு என்னும் நாட்டிலிருந்து வந்தவன். ஈராம்அபி பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மரம் போன்றவற்றில் திறமையாக வேலைச் செய்பவன். மேலும் அவன் கருஞ் சிவப்பு, நீலம், சிவப்புத் துணிகள் மற்றும் மென்பட்டுத்துணி போன்றவற்றில் வேலைச்செய்யும் திறமையும்கொண்டவன். அவனால் வரைபடம் அமைக்கவும் நீ சொல்வதுபோல கட்டவும் முடியும். அவன் உனது கைத்தொழில் வல்லுநர்களோடும் உனது தந்தையான அரசன் தாவீதின் கைத் தொழில் வல்லுநர்களோடும் பணியாற்றுவான்.

15 “இப்போது ஐயா, எங்களுக்கு கோதுமையையும், வாற்கோதுமையையும், திராட்சைரசமும், எண்ணெயும் தருவதாக நீங்கள் கூறினீர்கள். அவை அனைத்தையும் என் வேலைக்காரர்களிடம் கொடுங்கள். 16 நாங்கள் லீபனோன் நாட்டிலிருந்து மரங்களை வெட்டுவோம். நாங்கள் தேவையான அளவிற்கு மரங்களை வெட்டுவோம். நாங்கள் மரப் பலகைகளைக் கட்டி தெப்பங்களைப் போன்று கடல் வழியாக யோப்பாவரை கொண்டுவருவோம். பிறகு நீங்கள் எருசலேமிற்கு அவற்றை எடுத்துச் செல்லலாம்” என்றான்.

17 பிறகு, சாலொமோன் இஸ்ரவேல் நாட்டில் வாழும் அந்நியர்களின் தொகையைக் கணக்கெடுத்தான். இதுபோல ஏற்கெனவே தாவீது அரசனும் கணக்கெடுத்திருக்கிறான். தாவீது சாலொமோனின் தந்தையாகும். அவர்கள் 1,53,600 அந்நியர்கள் இருப்பதை அறிந்தனர். 18 அவர்களில் 70,000 பேரைப் பொருட்களைத் தூக்கிச்செல்ல தேர்ந்தெடுத்தான். 80,000 பேரை, மலையில் கல்லை வெட்டத் தேர்ந்தெடுத்தான். 3,600 பேரை, மேற்பார்வை செய்யத் தேர்ந்தெடுத்தான்.

சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்

எருசலேமில் உள்ள மோரியா என்னும் மலை மீது கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும் வேலையை சாலொமோன் ஆரம்பித்தான். மோரியா மலையில்தான் கர்த்தர் சாலொமோனின் தந்தையான தாவீதிற்கு காட்சியளித்தார். தாவீது தயார்செய்து வைத்திருந்த இடத்திலேயே சாலொமோன் ஆலயம் கட்டினான். இந்த இடம் எபூசியனாகிய ஒர்னானின் களத்தில் இருந்தது. சாலொமோன் இஸ்ரவேலின் அரசனான நான்காவது ஆண்டின் இரண்டாவது மாதத்தில் ஆலய வேலையைத் தொடங்கினான்.

தேவாலயத்தின் அடித்தளத்திற்கு சாலொமோன் பயன்படுத்திய அளவு முறைகள் வருமாறு: அடித்தளமானது 90 அடி நீளமும், 30 அடி அகலமும் உடையது. சாலொமோன் ஆலயத்தை அளந்தபொழுது பழைய அளவு முறையையே பயன்படுத்தினான். முகப்பு மண்டபமானது ஆலயத்திற்கு முன்பாய் இருபது முழ நீளமும் 180 அடி உயரமுமாய் இருந்தது. சாலொமோன் முகப்பு மண்டபத்தின் உட்பாகத்தை சுத்தமான தங்கத் தகட்டால் மூடினான். ஆலயத்தின் பெரிய மாளிகை சுவர்களைத் தேவதாரு மரப்பலகைகளால் செய்தான். அவற்றைப் பசும்பொன்னால் இழைத்தான். அதன் மேல் பேரீச்சு வேலைகளையும், சங்கிலி வேலைகளையும் சித்தரித்தான். அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான். இவன் பயன்படுத்திய தங்கமானது பர்வாயீமினுடையது. அந்த ஆலயத்தின் உத்திரங்கள், நிலைகள், சுவர்கள், கதவுகள் போன்றவற்றைப் பொன் தகட்டால் மூடினான். சுவர்களிலே கேருபீன்களைச் செய்து வைத்தான்.

பிறகு, சாலொமோன் மகாபரிசுத்தமான இடத்தையும் கட்டினான். இது 20 முழ நீளமும், 20 முழ அகலமும் உடையதாய் இருந்தது. இதன் அகலம் ஆலயத்தைப் போன்றதே. இதன் சுவர்களைப் பசும் பொன்னால் இழைத்தான். இப்பொன்னின் எடை 600 தாலமாகும். தங்க ஆணிகள் 50 சேக்கல் எடையுள்ளது. மேல் அறைகளையும் பொன்னால் இழைத்தான். 10 சாலொமோன் இரண்டு கேருபீன்களைச் செய்து மகாபரிசுத்தமான இடத்தில் வைத்தான். அவற்றையும் பொன் தகட்டால் மூடினான். 11 கேருபீன்களின் ஒவ்வொரு சிறகும் 5 முழ நீளமுடையது. ஆக மொத்தம் சிறகுகளின் நீளம் 20 முழ நீளமாயிருந்தது. முதல் கேருபீனின் ஒரு சிறகு அந்த அறையின் ஒரு சுவரைத் தொட்டது. அதன் இன்னொரு சிறகு இன்னொரு கேருபீனின் சிறகைத் தொட்டது. 12 இரண்டாவது கேருபீனின் இன்னொரு சிறகானது அவ்வறையின் இன்னொரு சுவரைத் தொட்டது. 13 கேருபீன்களின் சிறகுகள் மொத்தமாக 30 அடி நீளத்தில் பரவியிருந்தன. கேருபீன்கள் பரிசுத்த இடத்தை நோக்கிய வண்ணம் நின்றன.

14 சாலொமோன் திரையை இளநீலம், சிவப்பு, இரத்தாம்பரம், மெல்லிய லினன் போன்ற நூல்களால் செய்தான். அதன்மேல் கேருபீன் வடிவங்களையும் அமைத்தான்.

15 சாலொமோன் ஆலயத்திற்கு முன்னால் இரண்டு தூண்களை அமைத்தான். அவற்றின் உயரம் 35 முழமாகும். அவற்றின் மேல் முனையில் 5 முழ உயர கும்பங்களையும் வைத்தான். 16 சாலொமோன் சங்கிலிகளையும் செய்தான். அவற்றைத் தூண்களின் மேல் முனையில் பொருத்தினான். அச்சங்கிலிகளில் 100 மாதளம் பழங்களைச் செய்து தொங்கவிட்டான். 17 பிறகு சாலொமோன் அத்தூண்களை ஆலயத்திற்கு முன்னர் தூக்கி நிறுத்தினான். ஒரு தூண் வலது பக்கத்திலும் இன்னொரு தூண் இடது பக்கத்திலும் நிறுத்தினான். வலது பக்கமுள்ள தூணுக்கு சாலொமோன் “யாகீன்” என்றும் இடது பக்கமுள்ள தூணுக்கு “போவாஸ்” என்றும் பெயரிட்டான்.

ஆலயத்திற்கானப் பொருட்கள்

சாலொமோன் ஒரு பலிபீடத்தை வெண்கலத்தால் செய்தான். அது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்டது. பிறகு ஒரு பெரிய தொட்டியைச் செய்ய சாலொமோன் உருக்கிய வெண்கலத்தைப் பயன்படுத்தினான். இது வட்ட வடிவத்தில் ஒரு விளிம்பிலிருந்து மறுவிளிம்புவரை 18 அடி அகலம் கொண்டதாக இருந்தது. 7 1/2 அடி உயரமும், 45 அடி சுற்றளவும் கொண்டிருந்தது. தொட்டியின் கீழ்ப்புறமாய் காளைகளின் உருவங்கள் வெண்கலத்தால் வார்க்கப்பட்டு 18 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு வரிசைகளில் காளையின் உருவங்கள் தொட்டியோடு வார்க்கப்பட்டன. இத்தொட்டி 12 காளை உருவங்களின் மேல் வைக்கப்பட்டது. அவற்றில் 3 காளைகள் வடக்கு நோக்கியும், 3 காளைகள் மேற்கு நோக்கியும், 3 காளைகள் கிழக்கு நோக்கியும், 3 காளைகள் தெற்கு நோக்கியும் இருந்தன. பெரிய தொட்டியானது இக்காளைகளின் மேல் இருந்தது. அவற்றின் பின்பக்கம் உட்புறமாய் இருந்தது. பெரிய வெண்கலத் தொட்டியின் கனம் 4 விரல்கடை அளவுள்ளது. தொட்டியின் விளிம்பானது கப்பின் விளிம்புபோல் இருந்தது. அவ்விளிம்பானது லீலி பூ போலவும் இருந்தது. இது 3,000 குடம் தண்ணீர் கொள்ளளவு கொண்டது.

சாலொமோன் 10 குழாய்கள் பொருத்தப்பட்ட கிண்ணங்களைச் செய்தான். இவற்றில் 5 கிண்ணங்களைத் தொட்டியின் வலது பக்கத்திலும், 5 கிண்ணங்களை இடது பக்கத்திலும் வைத்தான். தகனபலிக்கான பொருட்களைச் சுத்தப்படுத்த இக்கோப்பைகள் பயன்பட்டன. பலிகளைக் கொடுக்கும் முன்பு குளித்து பரிசுத்தமாகும் பொருட்டு ஆசாரியர்களால் வெண்கலத் தொட்டி பயன்படுத்தப்பட்டது.

சாலொமோன் 10 விளக்குத் தண்டுகளைத் தங்கத்தில் செய்தான். அவன் விளக்குத் தண்டுகளைச் செய்வதற்கான விதிமுறைகளைப் பயன்படுத்தினான். அவன் அவ்விளக்குத் தண்டுகளை ஆலயத்தில் வைத்தான். 5 விளக்குத் தண்டுகளை வலது பக்கத்திலும், 5 விளக்குத் தண்டுகளை இடது பக்கத்திலும் வைத்தான். சாலொமோன் 10 மேஜைகளைச் செய்து ஆலயத்தில் வைத்தான். அவற்றில் 5 மேஜைகளை வலது பக்கத்திலும், 5 மேஜைகளை இடது பக்கத்திலும் வைத்தான். சாலொமோன் 100 குழாய் பொருத்தப்பட்ட கிண்ணங்களைத் தங்கத்தால் செய்தான். சாலொமோன் ஆசாரியர்களின் பிரகாரத்தையும், பெரிய பிரகாரத்தையும், மற்ற பிரகாரங்களையும் வாசலோடு அமைத்தான். அவன் பிரகாரக் கதவுகளை வெண்கலத் தகடுகளால் மூடினான். 10 தொட்டியை ஆலயத்தின் வலதுபுறத்தில் தென்கிழக்காக வைத்தான்.

11 ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், கலங்களையும் செய்தான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் அரசனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தான்.

12 அதுவரை அவன் இரண்டு தூண்களையும், தூண்களின் மேல் உள்ள கும்பங்களையும் குமிழ்களையும் இவற்றை மூடுவதற்கான வலைகளையும் செய்திருந்தான்.

13 இரண்டு வலைகளையும் அலங்கரிப்பதற்காக 400 மாதளம் பழங்களையும் செய்தான். ஒவ்வொரு வலையிலும் இருவரிசையாக மாதளம் பழங்களைத் தொங்கவிட்டான். இவ்வலைகள் இரண்டு தூண்களின் மேலுள்ள கும்பங்களை மூடிக்கொண்டிருந்தன.

14 தாங்கிகளையும் தாங்கிகளின் மேலுள்ள பாத்திரங்களையும் ஈராம் செய்தான்.

15 ஈராம் ஒரு பெரிய வெண்கலத் தொட்டியையும் அதற்கடியில் 12 காளைகளையும் செய்துமுடித்தான்.

16 ஈராம் செப்புச் சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள் துறடுகள் போன்ற பணிமூட்டுகள் போன்றவற்றையும் அரசன் சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்தான்.

இவை பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தால் செய்யப்பட்டன. 17 அரசன் சாலொமோன் முதலில் இவற்றைக் களிமண் வார்ப்படங்களில் வடித்தான். அக்களிமண் வார்ப்படங்கள் யோர்தான் பள்ளத்தாக்கில் சுக்கோத் மற்றும் சரேத்தா ஆகிய ஊர்களுக்கு இடையில் செய்யப்பட்டன. 18 இதுபோல் ஏராளமான பொருட்களை சாலொமோன் செய்தான். இதற்குரிய வெண்கலத்தின் எடையை அளக்க யாரும் முயற்சி செய்யவில்லை.

19 தேவனுடைய ஆலயத்திற்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் சாலொமோன் செய்தான். அவன் தங்கத்தாலான பலிபீடத்தைச் செய்தான். சமூகத்து அப்பங்களை வைக்கும் மேஜைகளையும் அவன் செய்தான். 20 சாலொமோன் விளக்குத் தண்டுகளையும் அதன்மேல் வைக்க விளக்குகளையும் சுத்தமான தங்கத்தால் செய்தான். உள்புறமிருந்த பரிசுத்த இடத்தில் சன்னதிக்கு முன்பு முறைப்படி விளக்கு ஏற்றுவதற்காக இவைச் செய்யப்பட்டன. 21 பூக்களையும், விளக்குகளையும், இடுக்கிகளையும், 22 கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் செய்ய சாலொமோன் தூய பொன்னையே பயன்படுத்தினான். மகா பரிசுத்தமான இடத்தின் உட்கதவுகளையும் ஆலயத்தின் கதவுகளையும் வாசல் கதவுகளையும் பொன்னால் செய்வித்தான்.

பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் செய்யவேண்டிய வேலையெல்லாம் முடிக்கப்பட்டது. ஆலயத்திற்காக தாவீது தந்த பொருட்களையெல்லாம் சாலொமோன் கொண்டு வந்தான். பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களையும் மேஜை நாற்காலிகளையும் கொண்டுவந்து தேவனுடைய ஆலயத்தில் கருவூலத்தின் அறைகளில் வைத்தான்.

பரிசுத்தப் பெட்டி ஆலயத்திற்குள் கொண்டு வரப்படுகிறது

இஸ்ரவேலில் இருக்கிற மூத்தவர்களையும், எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும் சாலொமோன் எருசலேமில் ஒன்றாகக் கூட்டினான். தாவீதின் நகரிலிருந்து கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவரவே இவ்வாறு செய்தான். சீயோன் தாவீதின் நகரமாகும். இஸ்ரவேலின் அனைத்து ஆட்களும் சாலொமோனுடன் அடைக்கல கூடாரப் பண்டிகை விருந்தில் கூடினார்கள். இவ்விருந்து ஏழாவது மாதத்தில் (செப்டம்பர்) நடைபெற்றது.

இஸ்ரவேலின் மூப்பர்கள் அனைவரும் கூடியதும் லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கினார்கள். உடனே ஆசாரியர்களும் லேவியர்களும் எருசலேமுக்கு உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தனர். மேலும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திற்குள் இருந்த பரிசுத்தமானப் பொருட்களையும் கூட எருசலேமுக்குக் கொண்டுவந்தனர். சாலொமோன் அரசனும் இஸ்ரவேல் ஜனங்களும் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஒன்றாகக் கூடினார்கள். அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களையும் காளைகளையும் பலிகொடுத்தனர். எவராலும் எண்ணி கணக்கிட முடியாத செம்மறியாட்டுக் கடாக்கள், மற்றும் காளைகளின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தது. பிறகு ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை அதனை வைப்பதற்காகச் செய்யப்பட்ட மகா பரிசுத்தமான இடத்திற்கு ஆலயத்திற்குள் கொண்டுவந்தார்கள். அவர்கள் அதனைக் கேருபீன்களின் சிறகுகளுக்கு அடியில் வைத்தனர். உடன்படிக்கைப் பெட்டிக்கு மேலே கேருபீன்கள் தமது சிறகுகளை விரித்து அதனை மூடியவண்ணம் இருந்தது. இச்சிறகுகள் அப்பெட்டியைத் தூக்கப் பயன்படும் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன. மகா பரிசுத்த இடத்தின் முன்பிருந்து காணத்தக்கவையாகப் பெட்டியிலிருந்த தண்டுகள் மிகவும் நீளமானவையாக இருந்தன. அதனை எவராலும் ஆலயத்திற்கு வெளியே இருந்து காணமுடியவில்லை. ஆனால் அத்தண்டுகள் இன்றும் கூட அங்கேயே உள்ளன. 10 அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. மோசே ஒரேப் மலையில் வைத்து இந்த இரண்டு கற்பலகைகளையும் பெட்டிக்குள் வைத்தான். ஒரேபில்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்துகொண்டார். இது இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்த பிறகு நடந்தது.

11 அங்கிருந்த ஆசாரியர்கள் எல்லாம் தங்களை பரிசுத்தமாக்கிக்கொள்ள சடங்குகளைச் செய்தார்கள். அவர்கள் அனைவரும் பரிசுத்த இடத்தை விட்டு வெளியே வந்ததும் தங்களுடைய விசேஷ குழுக்களின்படியில்லாமல் ஒன்றாக சேர்ந்து நின்றார்கள். 12 லேவியப் பாடகர்கள் அனைவரும் பலிபீடத்தின் கிழக்குப்பகுதியில் நின்றுகொண்டனர். ஆசாப், எமான் மற்றும் எதுத்தூனிய பாடல் குழுவினர் அனைவரும் தமது மகன்களுடனும் உறவினர்களுடனும் அங்கு இருந்தார்கள். அவர்கள் வெண்ணிற மென்மையான ஆடையை அணிந்திருந்தனர். அவர்களிடம் கைத்தாளங்களும் சுரமண்டலங்களும் தம்புருக்களும் இருந்தன. லேவியப் பாடகர்களோடு 120 ஆசாரியர்களும் இருந்தனர். இந்த 120 ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதினார்கள். 13 எக்காளங்களை ஊதியவர்களும் பாடல்களைப் பாடியவர்களும் ஒரே ஆளைப்போல இருந்தார்கள். அவர்கள் கர்த்தரைப் புகழ்ந்தும் கர்த்தருக்கு நன்றி சொல்லியும் ஒரே குரலில் ஒருமித்துப் பாடினார்கள். வாத்தியக்கருவிகளையும், இசைக்கருவிகளையும், தாளக் கருவிகளையும் ஒன்றாக மீட்டி பெருத்த ஓசையை அவர்கள் எழுப்பினார்கள். அவர்கள் பாடிய பாட்டு இதுதான்:

"கர்த்தரைத் துதியுங்கள் ஏனென்றால் கர்த்தர் நல்லவர்.
    கர்த்தருடைய கருணை என்றென்றும் நிலைத்திருக்கிறது."

பிறகு கர்த்தருடைய ஆலயமானது மேகங்களால் மூடப்பட்டது. 14 மேகத்தின் இடையூறால் ஆசாரியர்களால் தொடர்ந்து பணிச்செய்ய முடியவில்லை. கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

பிறகு சாலொமோன், “இந்த இருண்ட மேகத்தில் நான் இருப்பேன் என்று கர்த்தர் கூறினார். கர்த்தாவே, நீர் வாழ்வதற்காக நான் ஒரு ஆலயத்தைக் கட்டினேன். இது உயரமான வீடு. என்றென்றும் நீர் இருப்பதற்குரிய இடம்!” என்றான்.

சாலொமோனின் பேச்சு

தனக்கு முன்னால் கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களின் பக்கம் திரும்பி அரசன் சாலொமோன் அவர்களை ஆசீர்வாதம் செய்தான். அவன்,

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். என் தந்தையான தாவீதோடு பேசும்போது கர்த்தர் வாக்களித்தபடி இப்போது செய்து முடித்துள்ளார். தேவனாகிய கர்த்தர், ‘எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வெளியேற்றி அழைத்துக் கொண்டு வந்த நாள் முதலாக நான் இஸ்ரவேலின் எந்த கோத்திரத்திலிருந்தும் என் நாமத்தில் ஒரு வீட்டை கட்டிக்கொள்ள எந்த நகரத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. என் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல எந்த தலைவனையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் இப்போது எனது நாமத்திற்காக எருசலேமைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். மேலும் என்னுடைய இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல தாவீதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.’

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்காக ஆலயம் கட்ட வேண்டுமென்று என் தந்தை தாவீது விரும்பினார். ஆனால் கர்த்தர் என் தந்தையிடம், ‘தாவீது, எனது பேரால் ஆலயம் கட்ட விரும்புகிறாய், உனது எண்ணம் நல்லதுதான். ஆனால் உன்னால் ஆலயம் கட்டமுடியாது. உன் மகன் என்பேரால் ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார். 10 இப்போது கர்த்தர் தான் என்ன செய்யப் போவதாகச் சொன்னாரோ அதனைச் செய்து முடித்துவிட்டார். என் தந்தையின் இடத்தில் நான் புதிய அரசனாக இருக்கிறேன். தாவீது என்னுடைய தந்தை. இப்போது நான் இஸ்ரவேலரின் அரசன். இதுதான் கர்த்தர் அளித்த வாக்குறுதி. நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்காக ஆலயம் கட்டிவிட்டேன். 11 ஆலயத்திற்குள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைத்துவிட்டேன். உடன்படிக்கைப் பெட்டி கர்த்தருடைய உடன்படிக்கையைக் கொண்டுள்ளது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்” என்றான்.

சாலொமோனின் ஜெபம்

12 சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாக நின்றான். அவன் கூடியிருக்கிற எல்லா இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாக நின்றான். அவன் தன் கைகளை விரித்தான். 13 சாலொமோன் வெண்கலத்தால் ஒரு மேடை செய்திருந்தான். அது 5 முழ நீளமும் 5 முழ அகலமும் 3 முழ உயரமும் கொண்டது. அதனை வெளிப்பிரகாரத்தின் மத்தியில் வைத்தான். பிறகு அவன் மேடையின் மேல் ஏறினான். இஸ்ரவேல் ஜனங்களின் முன்னால் முழங்கால் போட்டு நின்றான். சாலொமோன் தனது கைகளை வானத்தை நோக்கி விரித்து உயர்த்தினான். 14 சாலொமோன்,

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மை போன்ற ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய அன்பினாலும் இரக்கத்தினாலும் ஆன உடன்படிக்கையை காப்பாற்றி வருகிறீர். தம் முழு இருதயத்துடன் நேர்மையாக வாழ்ந்து உமக்கு பணிந்து நடக்கும்போது, உம்முடைய ஊழியக்காரர்களோடும் உடன்படிக்கையைக் காப்பாற்றி வருகிறீர். 15 உம்முடைய ஊழியக்காரனான தாவீதிற்கு நீர் தந்த வாக்குறுதியை காப்பாற்றினீர். தாவீது என்னுடைய தந்தை. வாய் வழியாக நீர் வாக்குறுதி தந்தீர். மேலும் இன்று உம்முடைய கரங்களினால் அந்த வாக்குறுதி நிறைவேறுமாறு செய்திருக்கிறீர். 16 இப்பொழுது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனான தாவீதிற்குத் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றும். நீர், ‘தாவீது, என் முன்னிலையில் இஸ்ரவேலரின் சிங்காசனத்தில் உனது குடும்பத்திலிருந்து ஒருவனை அமரச்செய்வதில் நீ தோல்வி அடையமாட்டாய். தாங்கள் செய்வதில் உன் மகன்கள் கவனமாக இருந்தால்தான் இது நடைபெறும். அவர்கள் எனது சட்டங்களுக்கு நீ அடிபணிந்தது போலவே பணியவேண்டும்’ என்று வாக்குறுதி கொடுத்தீர். 17 இப்போது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, உமது வாக்குறுதி உண்மையாகட்டும். நீர் இந்த வாக்குறுதியை உமது ஊழியக்காரனான தாவீதிற்குக் கொடுத்திருக்கிறீர்.

18 “ஆனால் தேவனாகிய நீர் உண்மையில் ஜனங்களோடு பூமியில் வசிக்கமாட்டீர் என்பதை நாங்கள் அறிவோம். பரலோகமும் அதற்கு மேலானதும் கூட உம்மை கட்டுப்படுத்த முடியாது. நான் கட்டியுள்ள இந்த ஆலயமும் கூட உம்மை வைத்திருக்காது என்பதை அறிவோம். 19 எனினும் எனது ஜெபத்தைக் கேளும். நான் இரக்கத்திற்காக கெஞ்சுகிறேன். எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை அழைக்கும் என் குரலைக் கேளும். உம்மை நோக்கி நான் செய்யும் ஜெபங்களையும் கேளும். நான் உம்முடைய ஊழியக்காரன். 20 இரவும் பகலும் இவ்வாலயத்தை கண்ணோக்கிப் பாரும் என்று ஜெபித்துக்கொள்கிறேன். இந்த இடத்தில் உமது நாமத்தை இடுவதாக நீர் சொன்னீர். உம்முடைய அடியானாகிய நான் இவ்வாலயத்தை நோக்கும்பொழுது செய்யும் ஜெபத்தைக் கேளும். 21 எனது ஜெபங்களைக் கேளும். உம்முடைய இஸ்ரவேல் ஜனங்களின் ஜெபங்களையும் கேளும். நாங்கள் இவ்வாலயத்தை நோக்கி ஜெபிக்கும்போது செவிகொடும். நீர் பரலோகத்தில் இருந்தாலும் எங்களை கவனிப்பீராக. எங்கள் ஜெபங்களை நீர் கேட்கும்போதெல்லாம் எங்கள் மீறுதல்களை மன்னியும்.

22 “ஒருவன் இன்னொருவனுக்கு எதிராகக் குற்றம் செய்து இருக்கலாம். அப்படி நேரும்போது, குற்றம் சாட்டப்பட்டவன் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும்பொருட்டு உமது நாமத்தைப் பயன்படுத்தி வாக்குறுதி செய்யலாம். ஆலயத்தில் உள்ள உமது பலிபீடத்தின் முன்னிலையில் அங்ஙனம் ஒருவன் வந்து வாக்குறுதிச் செய்யும்போது, 23 அதனை பரலோகத்தில் இருந்து செவிகொடுத்துக் கேளும். பிறகு அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கும்! கெட்டவர்களைத் தண்டியும். அவன் பிறருக்கு எத்தகைய துன்பத்தைத் தந்தானோ அத்தகைய துன்பத்தை அவன் பெறும்படி செய்யவேண்டும். நேர்மையானதைச் செய்தவன் அப்பாவி என்பதை நிரூபியும்.

24 “உம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்து அதனால் அவர்கள் தம் எதிரிகளால் தோற்கடிக்கப்படலாம். அதற்குப்பின் அவர்கள் உம்மிடம் திரும்பிவந்து உம்முடைய பேரைச் சொல்லி ஜெபித்து உமது ஆலயத்தில் கெஞ்சலாம். 25 அப்பொழுது பரலோகத்திலிருந்து அதனை கேட்டு அவர்களது பாவங்களை மன்னியும். நீர் அவர்களுக்கும் அவர்களது முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிற்கு அவர்களை திரும்பக் கொண்டு வாரும்.

26 “வானம் மூடிக்கொள்வதால் மழை வராமல் போகலாம். இது இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்யும்போது நிகழும். இதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மனம்மாறி வருந்தி இவ்வாலயத்திற்கு வந்து ஜெபம் செய்தால் உம்முடைய பேரைச் சொல்லி முறையிட்டு, உம்முடைய தண்டனையால் தம் பாவங்களையும் விட்டுவிட்டால், 27 அவர்களின் முறையீட்டை பரலோகத்திலிருந்து கேளும். அவர்களது பாவங்களை மன்னியும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் உம்முடைய ஊழியர்கள். அவர்கள் சரியான முறையில் வாழ்வதற்குக் கற்றுக்கொடுங்கள். உம்முடைய நிலத்திற்கு மழையைக் கொடும். இது உம்மால் உம்முடைய ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட நாடு.

28 “நிலத்தில் பெரும் பஞ்சமோ, கொடிய நோயோ, வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி போன்றவற்றால் பயிரழிவோ ஏற்படலாம். அல்லது பகைவர்கள் இஸ்ரவேலரின் நகரங்களைத் தாக்கலாம். அல்லது இஸ்ரவேலில் ஏதாவது நோய் வரலாம். 29 உமது இஸ்ரவேல் ஜனங்களில் எவராவது வந்து ஜெபம் செய்து கெஞ்சினால், ஒவ்வொருவரும் தங்கள் துன்பங்களையும் வலியையும் உணர்ந்து இவ்வாலயத்தை நோக்கித் தம் கைகளை விரித்து முறையிட்டால், 30 பரலோகத்திலிருந்து அதனைக் கேளும். நீர் இருக்கிற பரலோகத்திலிருந்து அவற்றைக் கேட்டு மன்னித்துவிடும். ஒவ்வொருவனும் பெறத்தக்கது எதுவோ அதனைக் கொடும். ஏனென்றால் ஒவ்வொருவனின் மனதிலும் இருப்பதை நீர் அறிவீர். பிறகு, நீர் மட்டுமே ஒருவருடைய மனதில் இருப்பதை அறிவீர். 31 ஜனங்கள் எங்கள் முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த நிலத்தில் வசிக்கும்வரை உமக்கு பயந்து கீழ்ப்படிவார்கள்.

32 “ஒருவன் அந்நியனாக, இஸ்ரவேலரின் ஒருவனாக இல்லாமல் இருக்கலாம். எனினும் அவன் தூர நாட்டிலிருந்து இவ்வாலயத்திற்கு உம்முடைய மகத்தான நாமத்தின் நிமித்தமும், உம்முடைய வலிமையான கரத்தின் நிமித்தமும் தண்டிக்கின்ற உம்முடைய கரத்தின் நிமித்தமும் வரலாம். அவ்வாறு அவன் வந்து உமது ஆலயத்தில் ஜெபம் செய்தால், 33 அதனை பரலோகத்திலிருந்து கேளும். நீர் இருக்கிற பரலோகத்திலிருந்தே அவனுக்கு வேண்டியதைச் செய்யும். அதனால் பூமியில் உள்ள அனைவரும் உம்முடைய நாமத்தை அறிந்து உம்மை மதிப்பார்கள். அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போன்றே மதிப்பார்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும், என்னால் கட்டப்பட்ட இவ்வாலயம் உமது நாமத்தால் அழைக்கப்படும் என்பதை அறிவார்கள்.

34 “உம்முடைய ஜனங்களைத் தம் பகைவர்களுக்கு எதிராக நீர் சண்டையிட அனுப்பும்போது அவர்கள் அங்கிருந்து உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நகரத்தையோ உம்முடைய நாமத்திற்காக என்னால் கட்டப்பட்ட இவ்வாலயத்தைப் பார்த்தோ ஜெபம் செய்தால், 35 பரலோகத்தில் இருந்து அதனைக் கேளும். உதவிக்காக அவர்கள் கெஞ்சும்போது அதனைக் கேளும். கேட்டு அவர்களுக்கு உதவும்.

36 “ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வார்கள். பாவம் செய்யாதவர் யாருமில்லை. அவர்கள் மீது உமக்கு கோபம் வரும். அவர்களை எதிரி தோற்கடிக்குமாறு செய்வீர். மேலும் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அருகிலோ தொலைவிலோ இருக்கிற நிலத்திற்குக் கொண்டு செல்லப்படுமாறு செய்வீர். 37 அவர்கள் சிறையிருக்கிற நிலப்பகுதியில் உண்மையை உணர்ந்து மனம் திரும்பி உம்மிடம் கெஞ்சுவார்கள். அவர்கள், ‘நாங்கள் பாவம் செய்தோம். நாங்கள் தவறு செய்துவிட்டோம். கேடு புரிந்துவிட்டோம்’ என்று சொல்வார்கள். 38 பிறகு அவர்கள் கைதிகளாக உள்ள நிலத்தில் தங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் உம்மிடம் திரும்பிவருவார்கள். அவர்கள் உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமது முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்நாட்டை நோக்கி ஜெபம் செய்யலாம். உம்முடைய பேரால் நான் கட்டிய இவ்வாலயத்தை நோக்கியும் அவர்கள் வணங்கி ஜெபம் செய்யலாம். 39 அப்போது பரலோகத்திலிருந்து நீர் அவற்றைக் கேளும். நீர் இருக்கும் பரலோகத்திலிருந்தே அவர்களது ஜெபங்களை ஏற்றுக் கொண்டு உதவும். உமக்கு எதிராக பாவம் செய்த உம்முடைய ஜனங்களை மன்னியும். 40 இப்போது எனது தேவனே, உம்முடைய கண்களையும் செவிகளையும் திறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இங்கிருந்து ஜெபிப்பதையெல்லாம் கேட்டு அதில் கவனம் செலுத்தும்.

41 “இப்போது தேவனாகிய கர்த்தாவே! எழுந்திரும். உம்முடைய பலத்தைக் காட்டும்.
    இந்த உடன்படிக்கைப் பெட்டி வீற்றிருக்கும் இடத்திற்கு வருக!
உம்முடைய ஆசாரியர்கள் இரட்சிப்பின் ஆடையை அணியட்டும்.
    இத்தகைய நல்ல காரியங்களைப்பற்றி உம்முடைய உண்மையான தொண்டர்கள் மகிழட்டும்.
42 தேவனாகிய கர்த்தாவே! அபிஷேகிக்கப்பட்ட உம்முடைய அரசனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
    உம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரனான தாவீதை நினைத்துக்கொள்ளும்” என்றான்.

கர்த்தருக்கென்று ஆலயம் அர்ப்பணிக்கப்படுகிறது

சாலொமோன் தனது ஜெபத்தை முடித்தபோது வானத்திலிருந்து அக்கினி வந்தது. அது தகன பலிகளையும் காணிக்கைகளையும் எரித்தது. கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது. கர்த்தருடைய மகிமை ஆலயத்தில் நிரம்பியிருந்ததால் ஆசாரியர்களால் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை. வானுலகத்திலிருந்து அக்கினி இறங்கி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருடைய மகிமை ஆலயத்திற்குள் நிரம்பியிருப்பதையும் பார்த்தனர். அவர்கள் தரையில் முகங்குப்புற விழுந்து தொழுது கொண்டு கர்த்தருக்கு நன்றி சொன்னார்கள். அவர்கள்,

“கர்த்தர் நல்லவர்.
    அவரது கிருபை என்றென்றைக்கும் தொடர்கிறது” என்றனர்.

கர்த்தருக்கு முன்னால் சாலொமோனும் ஜனங்களும் பலிகளைச் செலுத்தினர். சாலொமோன் அரசன் 22,000 காளைகளையும், 1,20,000 வெள்ளாடுகளையும் பலியிட்டான். அரசனும் அனைத்து ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொண்டனர். அவ்வாலயத்தை தேவனை ஆராதிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆசாரியர்கள் தமது பணியைச் செய்ய எப்போதும் தயாராக இருந்தார்கள். லேவியர்களும் கர்த்தரைப் பாட எப்பொழுதும் தயாராக இசைக் கருவிகளோடு நின்றனர். இந்த இசைக் கருவிகள் தாவீது அரசனால் கர்த்தருக்கு நன்றி சொல்வதற்காக உருவாக்கப்பட்டவை. ஆசாரியர்களும், லேவியர்களும், “கர்த்தரைத் துதியுங்கள், அவருடைய அன்பு என்றென்றும் தொடர்கிறது” என்றனர். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை லேவியர்களுக்கு எதிராக நின்று ஊதினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர்.

சாலொமோன் பிரகாரத்தின் நடுப்பகுதியை பரிசுத்தமாக்கினான். அது கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பாக இருந்தது. அந்த இடத்தில்தான் சாலொமோன் தகன பலிகளையும், சமாதான பலியின் கொழுப்பையும் கொடுத்தான். வெண்கல பலிபீடமானது எல்லா தகனபலிகளையும் தானியக் காணிக்கைகளையும், நிணத்தையும் தாங்காது என்பதாலேயே சாலொமோன் இந்த நடுப்பகுதியைப் பயன்படுத்தினான்.

சாலொமோனும் இஸ்ரவேல் ஜனங்களும் ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடினார்கள். சாலொமோனோடு பெரிய அளவிலான கூட்டம் சேர்ந்திருந்தது. அவர்கள் ஆமாத் நகரத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதி மட்டும் கூடினார்கள். எட்டாவது நாள் அவர்களுக்குப் பரிசுத்தக் கூட்டம் இருந்தது. ஏனென்றால் அவர்கள் ஏழுநாட்கள் பண்டிகை கொண்டாடினார்கள். அவர்கள் பலிபீடத்தைப் பரிசுத்தமாக்கினார்கள். அதனை கர்த்தரை தொழுதுகொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். அவர்கள் அந்தப் பண்டிகையை ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். 10 ஏழாவது மாதத்தின் 23வது நாளில் சாலொமோன் ஜனங்களை வீட்டிற்குத் திரும்ப அனுப்பினான். ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களின் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. ஏனென்றால் கர்த்தர் தாவீதிடமும் சாலொமோனிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் அன்பாக இருந்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center