Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 36:1-47:12

இஸ்ரவேல் நாடு மீண்டும் கட்டப்படும்

36 “மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேல் மலைகளிடம் பேசு. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்குமாறு இஸ்ரவேல் மலைகளிடம் கூறு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவர்களிடம் கூறு: ‘பகைவர்கள் உனக்கு விரோதமாகத் தீயவற்றைச் சொன்னார்கள். அவர்கள் சொன்னார்கள்: ஆ, ஆ! இஸ்ரவேலின் பழங்காலத்து மலைகள் எங்கள் வசமாகும்!’

“எனக்காக இஸ்ரவேல் மலைகளிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவர்களிடம் சொல்: ‘பகைவர்கள் உன் நகரங்களை அழித்தனர். அவர்கள் உன்னைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் நின்று தாக்கினார்கள். அவர்கள் இதனைச் செய்தனர். எனவே நீ பிற நாடுகளுக்கு உரியவனானாய். பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பேசி அவதூறு உரைத்தனர்.’”

எனவே, இஸ்ரவேல் மலைகளே, எனது கர்த்தரும் ஆண்டவருமானவரின் வார்த்தையைக் கேளுங்கள்! கர்த்தரும் ஆண்டவருமானவர் கொள்ளையடிக்கப்பட்டு, சுற்றியுள்ள நாடுகளால் பரிகாசம் செய்யப்பட்ட மலைகளுக்கும் குன்றுகளுக்கும், ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட இடங்களுக்கும் வெறுமையாய் விடப்பட்ட நகரங்களுக்கும் இவற்றைக் கூறுகிறார். எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் எனது பலமான உணர்ச்சிகளை எனக்காகப் பேச அனுமதிப்பேன்! நான், ஏதோமையும் மற்ற நாடுகளையும் என் கோபத்தை உணரச் செய்வேன். ஏதோம் ஜனங்கள் எனது நாட்டை அழிக்கும் நோக்கத்துடன் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அந்த நாட்டை வெறுப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. அவர்கள் அந்நாட்டை அழிப்பதற்காக தமக்கே எடுத்துக் கொண்டனர்!”

“எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: எனவே இஸ்ரவேலின் நாட்டிடம் எனக்காகப் பேசு. மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல். கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று கூறு: ‘நான் என் எரிச்சலினாலும் உக்கிரத்தினாலும் பேசுவேன். ஏனென்றால், அந்நாடுகள் செய்த நிந்தையினால் துன்பப்பட்டீர்கள்.’”

எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உங்களைச் சுற்றிலும் இருக்கிற நாடுகள் அந்த நிந்தைகளுக்காக துன்பப்பட வேண்டும் என்று நானே வாக்களிக்கிறேன்!

“ஆனால் இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் புதிய மரங்களை வளர்த்து என் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பழங்களைக் கொடுப்பீர்கள். என் ஜனங்கள் விரைவில் திரும்பி வருவார்கள். நான் உங்களோடு இருப்பேன். நான் உங்களுக்கு உதவுவேன். ஜனங்கள் உங்கள் மண்ணைப் பண்படுத்துவார்கள். ஜனங்கள் உங்களில் விதைகளை விதைப்பார்கள். 10 உங்களில் ஏராளமான ஜனங்கள் வாழ்வார்கள். இஸ்ரவேல் வம்சத்தார் முழுவதும் அங்கே வாழ்வார்கள். நகரங்களில் ஜனங்கள் குடியேற்றப்படுவார்கள். அழிந்துபோன இடங்கள் புதிதாகக் கட்டப்படும். 11 நான் உங்களுக்குப் பல ஜனங்களையும், மிருகங்களையும் கொடுப்பேன். அவர்கள் மேலும் பெருகுவார்கள். முற்காலத்தில் இருந்ததுபோல, வாழ்வதற்காக ஜனங்களை இங்கு நான் கொண்டுவருவேன். நான் உங்களைத் தொடக்கத்தில் இருந்ததை விட சிறப்பாகச் செய்வேன். பின்னர் நான் கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 12 ஆம், நான் என் ஜனங்கள் பலரையும் உன் நாட்டிற்கு, வழிநடத்துவேன். அவர்கள் உன்னை எடுத்துக்கொள்வார்கள். நீ அவர்களுக்கு உரியவளாவாய். நீ மீண்டும் என்றும் என் ஜனங்கள் மீது மரணத்தைக் கொண்டு வரமாட்டாய்.”

13 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேல் பூமியே, ஜனங்கள் உன்னிடம் கெட்டவற்றைக் கூறுகிறார்கள். நீ உனது ஜனங்களை அழித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நீ உனது பிள்ளைகளைச் மரிக்க கொடுத்தாய் என்று கூறுகிறார்கள். 14 நீ இனிமேல் ஜனங்களை அழிக்கமாட்டாய். நீ இனிமேல் உன் பிள்ளைகளை மரிக்க கொடுப்பதில்லை” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: 15 “நான் இனிமேல் பிறநாட்டார் உன்னை அவமானம் செய்யும்படி விடமாட்டேன். நீ இனிமேல் அந்த ஜனங்களால் பாதிக்கப்படமாட்டாய். நீ அவர்களை இனிமேல் குழந்தை இல்லாமல் இருக்கும்படிச் செய்யமாட்டாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

கர்த்தர் அவரது சொந்த நல்ல நாமத்தைக் காத்துக்கொள்வார்

16 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 17 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தம் சொந்த நாட்டில் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அந்த நாட்டை தமது கெட்டச் செயல்களால் தீட்டுப்படுத்தினார்கள். எனக்கு அவர்கள் மாதவிலக்கால் தீட்டான பெண்ணைப்போன்று இருந்தார்கள். 18 அவர்கள் அந்த நாட்டில் ஜனங்களைக் கொன்றபோது இரத்தத்தை தரையில் சிந்தினார்கள். அவர்கள் அந்த நாட்டைத் தங்கள் அசுத்த விக்கிரகங்களால் தீட்டாக்கினார்கள். எனவே நான் எவ்வளவு கோபமாய் இருக்கிறேன் என்பதைக் காட்டினேன். 19 நான் பிற நாடுகளுக்குள்ளே அவர்களைக் சிதறடித்தேன். பல தேசங்களில் அவர்கள் தூற்றிப் போடப்பட்டார்கள். அவர்கள் செய்த கெட்ட செயல்களுக்காக நான் தண்டித்தேன். 20 அவர்கள் பிற நாடுகளுக்குச் சென்றனர். அவர்கள் அந்த நாடுகளிலும் என் நாமத்தைக் கெடுத்தார்கள். எப்படி? அந்நாடுகளில் உள்ளவர்கள் இவர்களைப்பற்றிப் பேசினார்கள். அவர்கள், ‘இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள். ஆனால் அவர்கள் அவரது நாட்டைவிட்டு வந்தார்கள். அதனால் கர்த்தரிடம் ஏதோ தவறு இருக்கவேண்டும்!’ என்று பேசினார்கள்.

21 “இஸ்ரவேல் ஜனங்கள் அவர்கள் சிதறடிக்கப்பட்டிருந்த நாடுகளில் எனது பரிசுத்தமான நாமத்தை பாழாக்கினார்கள். நான் என் நாமத்திற்காக வருத்தப்பட்டேன். 22 எனவே, இஸ்ரவேல் வம்சத்தாரிடம், கர்த்தரும் ஆண்டவருமானவர் இவற்றைக் கூறுகிறார், என்று சொல்: ‘இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் எங்கெல்லாம் போனீர்களோ அங்கெல்லாம் என் பரிசுத்தமான நாமத்தைக் கெடுத்தீர்கள். இதனை நிறுத்த நான் சிலவற்றைச் செய்யப்போகிறேன். இஸ்ரவேலே நான் இதனை உனக்காகச் செய்யவில்லை. நான் இதனை எனது பரிசுத்தமான நாமத்திற்காகவே செய்வேன். 23 எனது பெரும் நாமம் உண்மையில் பரிசுத்தமானது என்பதை அந்த நாடுகளுக்குக் காட்டப்போகிறேன். நீங்கள் அந்நாடுகளில் என் நாமத்தைப் பாழாக்கீனீர்கள். ஆனால் நான் பரிசுத்தமானவர் என்பதை காட்டுவேன். நீங்கள் என் நாமத்தை மதிக்கும்படி செய்வேன். பிறகு அந்த நாட்டவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

24 தேவன் சொன்னார்: “நான் அந்நாடுகளிலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து, ஒன்று சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். 25 பின்னர் நான் உங்கள் மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். நான் உங்களை சுத்தமாக்குவேன். நான் உங்களது எல்லா அசுத்தங்களையும் கழுவுவேன். நான் உங்களது பாவங்களாலும், அருவருப்பான விக்கிரகங்களாலும் வந்த அசுத்த்தையும் கழுவுவேன். 26 நான் உங்களில் புதிய ஆவியை வைத்து, உங்கள் சிந்தனை முறையையும் மாற்றுவேன். நான் உங்கள் உடலில் உள்ள கல் போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு மென்மையான மனித இருதயத்தைக் கொடுப்பேன். 27 நான் உங்களுக்குள் எனது ஆவியை வைப்பேன். நான் உங்களை மாற்றுவேன். எனவே நீங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிவீர்கள். நீங்கள் கவனமாக என் கட்டளைகளுக்கு அடிபணிவீர்கள். 28 பின்னர் நீங்கள் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டில் வாழ்வீர்கள். நீங்கள் என் ஜனங்களாயிருப்பீர்கள். நான் உங்களது தேவனாயிருப்பேன். 29 நான் உங்களைப் பாதுகாப்பேன், அசுத்தமாகாமல் இரட்சிப்பேன். நான் தானியத்தை முளைக்கும்படி கட்டளையிடுவேன். உங்களுக்கு விரோதமாகப் பஞ்சம் ஏற்படும்படிச் செய்யமாட்டேன். 30 நான் உங்கள் மரங்களிலிருந்து நிறைய பழங்கள் கிடைக்கும்படியும் உங்கள் வயல்களிலிருந்து நல்ல விளைச்சல் கிடைக்கும்படியும் செய்வேன். எனவே நீங்கள் பிற நாடுகளில் பசியால் அவமானப்பட்டதைப்போன்று இனிமேல் மீண்டும் படமாட்டீர்கள். 31 நீங்கள் செய்த கெட்டவற்றை நினைப்பீர்கள். நீங்கள் அவை நல்லவை அல்ல என நினைப்பீர்கள். பிறகு நீங்களே உங்களை வெறுப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் செய்த பாவங்களும் பயங்கரமான செயல்களும் மிகுதி.”

32 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நீங்கள் இவற்றை நினைவுகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இவற்றை உங்கள் நன்மைக்காக செய்யவில்லை! எனது நல்ல நாமத்திற்காகவே நான் இதனைச் செய்தேன்! எனவே இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வாழ்ந்த முறையை எண்ணி வெட்கப்படுங்கள்!”

33 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார், “நான் உங்கள் பாவங்களைக் கழுவும் நாளில் நான் உங்களை உங்களது நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வருவேன். அந்த அழிந்துபோன நகரங்கள் மீண்டும் கட்டப்படும். 34 காலியான நிலங்கள் பயிரிடப்படும். அந்த வழியாகப் போகிறவர்களின் பார்வையில் இனி பாழாக இராது. 35 அவர்கள் சொல்வார்கள், ‘முன்பு இந்நிலம் பாழாகக் கிடந்தது, ஆனால் இப்பொழுது ஏதேன் தோட்டம் போல் ஆகியிருக்கிறது. நகரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவை பாழாகி வெறுமையாயிற்று. ஆனால் இப்பொழுது அவை பாதுகாக்கப்பட்டன. அவற்றில் ஜனங்கள் வாழ்கின்றனர்.’”

36 தேவன் சொன்னார்: “பின்னர் உன்னைச் சுற்றியுள்ள அந்நாடுகள் நானே கர்த்தர் என்பதையும் நான் பாழான இடங்களை மீண்டும் கட்டினேன் என்பதையும் அறிவார்கள். காலியாக இருந்த இந்த நிலத்தில் நான் நட்டுவைத்தேன். நானே கர்த்தர் நான் இவற்றைக் கூறினேன் இவை நடக்கும்படிச் செய்வேன்!”

37 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேல் ஜனங்களையும் கூட என்னிடம் வந்து தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்க அனுமதிப்பேன். அவர்கள் மேலும் மேலும் பெருகும்படிச் செய்வேன். அவர்கள் ஆட்டு மந்தைகளைப் போன்றிருப்பார்கள். 38 எருசலேமில் அதன் சிறப்பான திருவிழாக்களில் வருகிற மந்தைக் கூட்டம்போன்று ஜனங்கள் மிகுதியாக இருப்பார்கள். அதைப்போலவே நகரங்களும் பாழான இடங்களும் ஜனங்கள் கூட்டத்தால் நிரம்பும். பின்னர் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”

காய்ந்த எலும்புகளின் தரிசனம்

37 கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. கர்த்தருடைய ஆவி என்னை நகரத்திலிருந்து தூக்கி ஒரு பள்ளத்தாக்கின் நடுவிலே கொண்டுபோய்விட்டது. அப்பள்ளத்தாக்கு மரித்துப்போன மனிதர்களின் எலும்புகளால் நிறைந்திருந்தது. பள்ளத்தாக்கின் வெட்ட வெளியில் அந்த எலும்புகள் மிகுதியாகக் கிடந்தன. என்னை அந்த எலும்புகள் நடுவே நடக்குமாறு கர்த்தர் செய்தார். நான் அவ்வெலும்புகள் மிகவும் காய்ந்து கிடந்ததைக் கண்டேன்.

பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கேட்டார்: “மனுபுத்திரனே, இந்த எலும்புகளுக்கு உயிர்வருமா?”

நான் சொன்னேன், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உமக்கு மட்டுமே இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும்.”

எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “அவ்வெலும்புகளிடம் எனக்காகப் பேசு. அவ்வெலும்புகளிடம் சொல், ‘காய்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கவனியுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை உங்களுக்குக் கூறுகிறார். உங்களுக்குள் உயிர்மூச்சு வரும்படிச் செய்வேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்! நான் உங்களில் தசைநார்களையும், தசைகளையும் வைப்பேன். நான் உங்களை தோலால் மூடுவேன். பின்னர், நான் உங்களுக்குள் மூச்சுக் காற்றை வைப்பேன். நீங்கள் திரும்ப உயிர் பெறுவீர்கள்! பிறகு, நானே கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.’”

எனவே, நான் கர்த்தருக்காக எலும்புகளிடம் அவர் சொன்னது போல் பேசினேன். நான் இன்னும் பேசிக்கொண்டிருந்தபோது, உரத்த சத்தம் கேட்டது, எலும்புகள் அசைந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்துக்கொண்டன. அங்கே என் கண் முன்னால் எலும்புகளின் மேல் தசைநார்களும், தசைகளும் சேர்ந்தன. அவற்றைத் தோல் மூடிக்கொண்டது. ஆனால் உடல்கள் அசையவில்லை. அவற்றில் மூச்சுக் காற்று இல்லை.

பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “எனக்காகக் காற்றிடம் பேசு. மனுபுத்திரனே, எனக்காகக் காற்றிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று காற்றிடம் சொல்: ‘காற்றே, எல்லா திசைகளிலுமிருந்து வா, மரித்த உடல்களுக்குள் மூச்சுக் காற்றை ஊது! அவர்கள் மீண்டும் உயிர்பெறட்டும்!’”

10 எனவே நான் கர்த்தருக்காகக் காற்றிடம் அவர் சொன்னதுபோன்று பேசினேன். மரித்த உடல்களுக்குள் ஆவி புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று எழுந்து நின்றார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகமிக அதிகமான பெருஞ்சேனையைப்போன்று நின்றார்கள்!

11 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “மனுபுத்திரனே, இவ்வெலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே, இஸ்ரவேல் ஜனங்கள் சொல்கிறார்கள்: ‘எங்கள் எலும்புகள் காய்ந்துவிட்டன. எங்கள் நம்பிக்கை போய்விட்டது. நாங்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறோம்!’ 12 எனவே, எனக்காக அவர்களிடம் பேசு, கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று சொல்: ‘என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டுவருவேன்! பின்னர் உங்களை நான் இஸ்ரவேல் நிலத்திற்குக் கொண்டு வருவேன். 13 என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டு வருவேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 14 நான் உங்களில் எனது ஆவியை வைப்பேன். நீங்கள் மீண்டும் உயிர் பெறுவீர்கள். பின்னர் நான் உங்களை உங்களது சொந்த நாட்டிற்கு வழிநடத்திச்செல்வேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நான் இவற்றைச் சொன்னேன் என்பதையும் இவை நடக்கும்படிச் செய்வேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.’” கர்த்தர் அவற்றைச் சொன்னார்.

யூதாவும் இஸ்ரவேலும் மீண்டும் ஒன்றாகுதல்

15 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 16 “மனுபுத்திரனே, ஒரு கோலை எடுத்து இதனை எழுதிவை: ‘இந்த கோல் யூதாவுக்கும் அதன் நண்பர்களான இஸ்ரவேல் ஜனங்களுக்கும் உரியது’ பின்னர் இன்னொரு கோலை எடுத்து இதனை எழுதிவை. ‘இந்தக் கோல் யோசேப்புக்கும் அவன் நண்பர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கும் சொந்தம். அதனுடைய பெயர்: “எப்பிராயீமின் கோல்.”’ 17 பின்னர் இரண்டு கோல்களையும் ஒன்று சேர்த்துவிடு. உன் கையில் இரண்டும் ஒன்றாக இருக்கும்.

18 “அதன் பொருள் என்னவென்று விளக்கும்படி உன் ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள். 19 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் சொல்: ‘நான் எப்பிராயீம் கையிலும் அவன் நண்பர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் கையிலும் இருக்கும் யோசேப்பின் கோலை எடுத்து, அக்கோலை யூதாவின் கோலோடு சேர்த்து அவற்றை ஒரே கோலாக்குவேன். என் கையில் அவை ஒரே கோலாக இருக்கும்!’

20 “அக்கோல்களை உன் கையில் அவர்களுக்கு முன்பாகப் பிடி. நீ அக்கோல்களில் அப்பெயர்களை எழுதினாய். 21 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று ஜனங்களிடம் சொல்: ‘நான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்கள் சென்ற நாடுகளிலிருந்து அழைத்து வருவேன். நான் அவர்களைச் சுற்றிலுமுள்ள நாடுகளிலிருந்து சேகரித்து அவர்களது சொந்த நாட்டிற்குக் கொண்டு வருவேன். 22 நான் அவர்களை மலைகளின் தேசமாகிய இஸ்ரவேலில் ஒரே நாடாக்குவேன். அவர்கள் அனைவருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இரு நாட்டினராக இருக்கமாட்டார்கள். அவர்கள் இனிமேல் இரண்டு அரசுகளாக இருக்கமாட்டார்கள். 23 அவர்கள் இனிமேல் அருவருப்பான சிலைகளையும், விக்கிரங்களையும் வணங்கித் தங்களைத் தீட்டாக்கிக் கொள்ளமாட்டார்கள். அல்லது, வேறு குற்றங்களையும் செய்யமாட்டார்கள். ஆனால் நான் அவர்கள் பாவம் செய்த எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுவேன். நான் அவர்களைக் கழுவிச் சுத்தமாக்குவேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.

24 “‘அவர்களுக்கு எனது தாசனாகிய தாவீது அரசனாக இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே மேய்ப்பன் இருப்பான். அவர்கள் எனது நியாயங்களில் நடந்து என் கட்டளைகளைக் கடைபிடிப்பார்கள். அவர்கள் நான் சொன்னவற்றின்படியே நடப்பார்கள். 25 நான் எனது தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்த நாட்டிலேயே அவர்கள் வாழ்வார்கள். உங்கள் முற்பிதாக்கள் அந்த இடத்தில் வாழ்ந்தார்கள். என் ஜனங்களும் அங்கே வாழ்வார்கள். அவர்களும் அவர்களது பிள்ளைகளும் அவர்களது பேரப்பிள்ளைகளும் அங்கே என்றென்றும் வாழ்வார்கள். எனது தாசனாகிய தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாயிருப்பான். 26 நான் அவர்களோடு ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்துகொள்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் தொடர்ந்து இருக்கும். நான் அவர்களது நாட்டை அவர்களிடம் கொடுக்க ஒப்புக்கொள்கிறேன். நான் அவர்கள் மேலும் மேலும் பெருக ஒப்புக்கொண்டேன். நான் எனது பரிசுத்தமான இடத்தை அங்கே அவர்களுடன் என்றென்றும் வைக்க ஒப்புக்கொண்டேன். 27 என் பரிசுத்தமான கூடாரம் அவர்களோடு இருக்கும். ஆம், நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். 28 மற்ற நாடுகளும் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். எனது பரிசுத்தமான இடத்தினை இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் இருக்கச் செய்வதன் மூலம் அவர்களை எனது சிறப்புக்குரிய ஜனங்களாக்கினேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.’”

கோகுக்கு விரோதமான செய்தி

38 கர்த்தருடைய செய்தி என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, மாகோகு நாட்டில், கோகைப் பார். அவன் மேசேக், தூபால் நாட்டினரின் முக்கியமான தலைவன். கோகுக்கு விரோதமாக எனக்காகப் பேசு. கர்த்தரும் ஆண்ட வருமானவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய நாடுகளின் முக்கியமான தலைவன்! ஆனால் நான் உனக்கு விரோதமானவன். நான் உன்னைக் கைப்பற்றி மீண்டும் இங்கே கொண்டுவருவேன். உனது படையில் உள்ள அனைவரையும் இங்கே கொண்டுவருவேன். நான் எல்லாக் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நான் உங்கள் வாய்களில் கொக்கிகளைப் போட்டு இங்கே திரும்பக் கொண்டுவருவேன். எல்லா வீரர்களும் தங்கள் சீருடைகளையும் கேடயங்களையும் வாள்களையும் அணிந்திருப்பார்கள். பெர்சியா, எத்தியோப்பியா, லீபியா ஆகிய நாட்டுவீரர்கள் அவர்களோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தம் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் அணிந்திருப்பார்கள். கோமேரும் அவனுடைய எல்லாப் படைகளும் அங்கே இருப்பார்கள். வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களது படைகளும் இருப்பார்கள். கைதிகளாகிய கூட்டம் கூட்டமான ஜனங்களும் அங்கே இருப்பார்கள்.

“‘தயாராக இரு. ஆம், உன்னைத் தயார்படுத்திக்கொண்டு உன்னோடுள்ள படைகளையும் தயார்படுத்து. நீ அவர்களுக்குக் காவலனாகத் தயாராக இரு. நீண்ட காலத்துக்குப் பிறகு நீ கடமைக்காக அழைக்கப்பட்டாய். பின்வரும் ஆண்டுகளில் போரிலிருந்து குணமான நாட்டிற்கு வருவாய். மலைகளுள்ள இஸ்ரவேலுக்குப் பல நாடுகளில் உள்ள ஜனங்கள் கூடித் திரண்டு திரும்பி வருவார்கள். முன்பு மலைகளுள்ள இஸ்ரவேல் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டது. ஆனால் இந்த ஜனங்கள் பல நாடுகளிலிருந்து திரும்பி வருவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களைத் தாக்க வருவீர்கள். நீங்கள் புயலைப்போன்று வருவீர்கள். நீங்கள் பூமியை மூட வருகிற இடியுடைய மேகம்போன்று வருவீர்கள். இந்த ஜனங்களைத் தாக்க நீயும் உனது படை வீரர்களும் பல நாடுகளிலிருந்து வருவீர்கள்.’”

10 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அப்பொழுது, உங்கள் மனதில் ஒரு திட்டம் வரும். ஒரு கெட்டத் திட்டத்தை நீங்கள் தொடங்குவீர்கள். 11 நீங்கள் சொல்வீர்கள்: ‘சுவர்கள் இல்லாத நகரங்களை உடைய அந்த நாட்டுக்கு (இஸ்ரவேல்), விரோதமாக நான் தாக்கப் போவேன். அந்த ஜனங்கள் சமாதானமாய் வாழ்கின்றார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். அங்கே அவர்களைக் காப்பதற்கு எந்தச் சுவர்களும் இல்லை. அவர்களுடைய கதவுகளுக்கு எந்தப் பூட்டுகளும் இல்லை. அவர்களுக்குக் கதவுகளும் இல்லை! 12 நான் அவர்களைத் தோற்கடித்து அவர்களிடமுள்ள அனைத்து விலைமதிப்புடைய பொருட்களையும் எடுத்து வருவேன். கடந்தகாலத்தில் அழிக்கப்பட்டு, ஆனால், இப்போது ஜனங்கள் குடியேறியிருக்கும் இடங்களுக்கு விரோதமாக நான் சண்டையிடுவேன். ஆனால், ஜனங்கள் அங்கே வாழ்கிறார்கள். நான் அந்த ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) விரோதமாகப் போரிடுவேன். அவர்கள் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டனர். இப்பொழுது அந்த ஜனங்கள் ஆடுமாடுகளும் சொத்துக்களும் வைத்திருக்கின்றனர். அவர்கள் உலகின் சாலை சந்திப்புக்களில் வாழ்கின்றனர். பலம் வாய்ந்த நாடுகள் இந்த இடத்தின் வழியாகத்தான் மற்ற பலம் வாய்ந்த நாடுகளுக்குப் போகவேண்டும்.’

13 “சேபா, தேதான், ஆகிய நகர ஜனங்களும் தர்ஷீசின் வியாபாரிகளும் அவர்களோடு வியாபாரம் செய்யும் நகரங்களும் உன்னிடம் கேட்பார்கள்: ‘நீ விலைமதிப்புடைய பொருட்களைக் கைப்பற்ற வந்தாயா? நல்ல பொருட்களைப் பறித்துக்கொள்ளவும், வெள்ளியையும், பொன்னையும், ஆடுமாடுகளையும், சொத்துக்களையும் எடுத்துக்கொள்ள உன் வீரர்களை அழைத்து வந்தாயா? இவ்விலை மதிப்புடைய பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல நீ வந்தாயா?’”

14 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக கோகிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல்: ‘என் ஜனங்கள் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழும்போது நீ அவர்களைத் தாக்குவதற்கு வருவாய். 15 நீ வடதிசையில் உள்ள உனது இடத்திலிருந்து வருவாய். நீ உன்னோடு பலரை அழைத்து வருவாய். அவர்கள் அனைவரும் குதிரையின் மேல் வருவார்கள். நீ பெரியதும் ஆற்றல் உடையதுமான படையாக இருப்பாய். 16 எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போரிட நீ வருவாய். நீ பூமியை மூட வரும் இடிமேகம் போன்று வருவாய். அந்த நேரம் வரும்போது, என் நாட்டிற்கு எதிராகப் போரிட நான் உன்னை அழைப்பேன். பிறகு கோகே, நான் எவ்வளவு வல்லமை உடையவர் என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும். அவர்கள் என்னை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நான் பரிசுத்தமானவர் என்பதை தெரிந்துகொள்வார்கள். நான் உனக்கு என்ன செய்வேன் என்பதை அவர்கள் பார்ப்பார்கள்!’”

17 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “அந்நேரத்தில், முன்பு நான் உன்னைப்பற்றி பேசினேன் என்பதை ஜனங்கள் நினைவுகொள்வார்கள். நான் எனது வேலையாட்களாகிய இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நினைவுகொள்வார்கள். இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் முன்பு எனக்காகப் பேசினார்கள் என்பதை அவர்கள் நினைவுகொள்வார்கள், அவர்களுக்கு எதிராகச் சண்டையிட நான் உங்களைக் கொண்டுவருவேன் என்று சொன்னார்கள்.”

18 எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: “அந்நேரத்தில் இஸ்ரவேல் நாட்டுக்கு விரோதமாகச் சண்டையிட கோகு வருவான். நான் என் கோபத்தைக் காட்டுவேன். 19 நான் எனது கோபத்திலும் பலமான உணர்ச்சியிலும் இந்த ஆணையைச் செய்வேன். இஸ்ரவேல் நாட்டில் பெரும் நில அதிர்ச்சி ஏற்படும் என்று ஆணை செய்தேன். 20 அந்த நேரத்தில், வாழுகின்ற எல்லா உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். கடலிலுள்ள மீன்கள், வானத்துப் பறவைகள், காட்டிலிலுள்ள மிருகங்கள், தரையில் ஊருகின்ற சின்னஞ்சிறு உயிர்கள், மேலும் எல்லா மனித உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். மலைகள் இடியும், மதில்கள் தரையிலே விழும், எல்லாச் சுவர்களும் தரையிலே விழும்!”

21 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “இஸ்ரவேலின் மலைகள் மேல், பட்டயத்தை கோகுக்கு விரோதமாக வரவழைப்பேன். அவனது வீரர்கள் பயந்து ஒருவரையொருவர் தாக்கி ஒருவரையொருவர் தம் வாளால் கொல்வார்கள். 22 நான் கோகை நோயாலும் மரணத்தாலும் தண்டிப்பேன். நான் கோகின் மேலும் அவனது வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த வீரர்களின் மேலும் கல் மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் பொழியச்செய்வேன். 23 பிறகு நான் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டுவேன். நான் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிப்பேன். நான் செய்வதை பல நாடுகள் பார்த்து நான் யாரென்பதைக் கற்றுக்கொள்ளும். பின்னர் அவர்கள் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.

கோகும் அவனது படையும் மரணமடைதல்

39 “மனுபுத்திரனே, எனக்காகக் கோகிற்கு விரோதமாகப் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய இரு நாடுகளிலும் மிக முக்கியமான தலைவன்! ஆனால், நான் உனக்கு விரோதமானவன். நான் உன்னைக் கைப்பற்றி இங்கே கொண்டு வருவேன். நான் உன்னை வட திசையிலிருந்து கொண்டுவருவேன். நான் உன்னை இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாகப் போரிட அழைப்பேன். ஆனால் நான் உனது இடது கையிலுள்ள வில்லைத் தட்டிவிடுவேன். நான் உனது வலது கையிலுள்ள அம்புகளைத் தட்டிவிடுவேன். நீ இஸ்ரவேலின் மலைகளில் கொல்லப்படுவாய். அப்போரில் நீயும் உன்னோடுள்ள படை வீரர்களும், உன்னோடுள்ள பிற நாட்டவர்களும் கொல்லப்படுவார்கள். நான் உங்களை இறைச்சியைத் தின்னுகிற எல்லாவகைப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகக் கொடுப்பேன். நீ நகரத்திற்குள் நுழையமாட்டாய். நீ வெளியே திறந்த வெளியில் கொல்லப்படுவாய். நான் சொன்னேன்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

தேவன் சொன்னார்: “நான் மாகோகுக்கு விரோதமாகவும் தீவுகளில் பாதுகாப்பாக வாழ்கிற ஜனங்களுக்கு விரோதமாகவும் நெருப்பை அனுப்புவேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். நான் எனது பரிசுத்தமான நாமம் இஸ்ரவேல் ஜனங்களிடம் தெரியும்படிச் செய்வேன். நான் இனிமேல் என் நாமத்தை ஜனங்கள் அழிக்கும்படி விடமாட்டேன். நானே கர்த்தர் என்பதை நாடுகள் அறியும். நான் இஸ்ரவேலில் பரிசுத்தமானவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அந்தக் காலம் வருகின்றது! இது நிகழும்!” கர்த்தர் இவற்றைச் சொன்னார்: “நான் பேசுகிறது அந்த நாளைப்பற்றித்தான்.

“அந்த நேரத்தில், இஸ்ரவேல் நகரங்களில் வாழ்கின்ற ஜனங்கள் வயல்களைவிட்டு வெளியே செல்வார்கள். அவர்கள் பகைவர்களின் ஆயுதங்களைப் பொறுக்கி அவற்றை எரிப்பார்கள். அவர்கள் எல்லா கேடயங்களையும், வில்லம்புகளையும், வளை தடிகளையும், ஈட்டிகளையும் எரிப்பார்கள். அவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு அவற்றை விறகாகப் பயன்படுத்துவார்கள். 10 அவர்கள் வயல்களில் விறகு பொறுக்குவதையோ அல்லது காடுகளில் விறகு வெட்டவோமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் ஆயுதங்களை விறகாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் தம்மைக் கொள்ளையிட்ட வீரர்களிடமிருந்து விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பார்கள். தங்களிடமிருந்து நல்ல பொருட்களைச் சூறையாடியவர்களிடமிருந்து, நல்ல பொருட்களை அவர்கள் சூறையாடுவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

11 தேவன் சொன்னார்: “அந்நாளில், நான் இஸ்ரவேலில் கோகைப் புதைக்கிற இடத்தைத் தேர்ந்தெடுப்பேன். அவன், சவக் கடலின் கிழக்கே பயணக்காரர்களின் பள்ளத்தாக்கில் புதைக்கப்படுவான். அது பயணிகளின் வழியை அடைக்கும். ஏனென்றால், கோகும் அவனது படையும் அந்த இடத்தில் புதைக்கப்படுவார்கள். ஜனங்கள் இதனை ‘ஆமோன் கோகின் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். 12 இஸ்ரவேல் வம்சத்தார் அவர்களை புதைத்து பூமியைச் சுத்தப்படுத்த ஏழு மாதங்கள் ஆகும். 13 பொது ஜனங்கள் அந்த பகைவீரர்களைப் புதைப்பார்கள். நானே எனக்கு மகிமைக் கொண்டுவரும், அந்த நாளில் அவர்கள் புகழடைவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றை கூறினார்.

14 தேவன் சொன்னார்: “ஜனங்கள் வேலைக்காரர்களுக்கு மரித்த வீரர்களைப் புதைக்க முழுநாள் வேலையைக் கொடுப்பார்கள். இவ்வாறு, அவர்கள் பூமியைச் சுத்தம் செய்தார்கள். வேலைக்காரர்கள் ஏழு மாதங்கள் வேலைசெய்வார்கள். அவர்கள் மரித்த உடல்களைத் தேடி சுற்றிலும் அலைவார்கள். 15 அவ்வேலைக்காரர்கள் தேடியலைவார்கள். அவர்களில் ஒருவன் எலும்பைப் பார்த்தால் அவன் அதில் ஒரு அடையாளம் இடுவான். அந்த அடையாளமானது கல்லறைக்குழி தோண்டுகிறவர்கள் வந்து அந்த எலும்பை கோகின் பள்ளத்தாக்கில் புதைக்கும்வரை இருக்கும். 16 மரித்த ஜனங்களின் நகரமானது ஆமோனா என்று அழைக்கப்படும். இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவார்கள்.”

17 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “மனுபுத்திரனே, எனக்காக எல்லாப் பறவைகளிடமும் காட்டு மிருகங்களிடமும் பேசு: ‘இங்கே வாருங்கள்! இங்கே வாருங்கள்! சுற்றிலும் கூடுங்கள். நான் உங்களுக்காகத் தயார் செய்து வைத்த இந்தப் பலியை உண்ணுங்கள், இஸ்ரவேலின் மலைகளில் மிகப் பெரிய பலி இருக்கும். வாருங்கள் இறைச்சியைத் தின்று இரத்தத்தைக் குடியுங்கள். 18 நீங்கள் பலமான வீரர்களின் உடல்களிலுள்ள இறைச்சியைத் தின்பீர்கள். உலகத் தலைவர்களின் இரத்தத்தை நீங்கள் குடிப்பீர்கள். அவர்கள் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக் கடாக்களுக்கும், ஆட்டுக் குட்டிகளுக்கும், வெள்ளாட்டுக் கடாக்களுக்கும், காளைகளுக்கும் சமமானவர்கள். 19 நீங்கள் உங்கள் விருப்பம்போல் கொழுப்பை எல்லாம் உண்ணலாம். நீங்கள் வயிறு நிறைய இரத்தம் குடிக்கலாம். நான் உங்களுக்காகக் கொன்ற எனது பலிகளிலிருந்து நீங்கள் உண்பீர்கள், குடிப்பீர்கள். 20 எனது மேசையில் உங்களுக்கு உண்ண நிறைய ஏராளமாக இறைச்சி இருக்கும். அங்கே குதிரைகளும், இரதமோட்டிகளும், ஆற்றலுடைய வீரர்களும், போர் வீரர்களும் இருப்பார்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

21 தேவன் சொன்னார்: “நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை பிற நாட்டினரைப் பார்க்கச் செய்வேன். அந்த நாடுகள் என்னை மதிக்கத் தொடங்கும்! அவர்கள் எனது வல்லமையைப் பார்ப்பார்கள். இந்த வல்லமை அந்தப் பகைவனுக்கு எதிராகப் பயன்படுத்தியது. 22 பிறகு அந்நாளிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் நானே அவர்களது கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவார்கள். 23 அந்நாடுகள் இஸ்ரவேல் வம்சத்தார் ஏன் பிற நாடுகளுக்குச் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டார்கள் என்பதை அறியும். என் ஜனங்கள் எனக்கு விரோதமாக மாறினார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே நான் அவர்களிடமிருந்து விலகினேன். நான் அவர்களை அவர்களது பகைவர்கள் தோற்கடிக்கும்படிச் செய்தேன். எனவே, என் ஜனங்கள் போரில் கொல்லப்பட்டார்கள். 24 அவர்கள் பாவம் செய்து தம்மைத்தாமே அசுத்தம் செய்துகொண்டார்கள். எனவே அவர்கள் செய்தவற்றிற்காக நான் அவர்களைத் தண்டித்தேன். நான் அவர்களிடமிருந்து விலகி அவர்களுக்கு உதவி செய்ய மறுத்தேன்.”

25 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இப்பொழுது நான் யாக்கோபு வம்சத்தாரை சிறையிருப்பிலிருந்து கொண்டுவருவேன். நான் இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோர் மீதும் இரக்கம் கொள்வேன். நான் எனது பரிசுத்தமான நாமத்திற்காக பலமான உணர்ச்சியைக் காட்டுவேன். 26 ஜனங்கள் கடந்தகாலத்தில் எனக்கு விரோதமாகச் செய்தத் தீயச்செயல்களுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். எவரும் அவர்களை அச்சப்படுத்தமுடியாது. 27 நான் மற்ற நாடுகளிலிருந்து என் ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன். அவர்களின் பகைவரது நாடுகளிலிருந்து அவர்களை ஒன்று கூட்டுவேன். பிறகு, பல நாடுகள் நான் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதைக் காணும். 28 அவர்கள் நானே அவர்களது தேவனாகிய கர்த்தர் என்பதை அறிவார்கள். ஏனென்றால், நான் அவர்களைத் தம் சொந்த வீட்டினை விட்டு நாடு கடத்தப்பட்டு சிறை இருக்கச் செய்தேன். நான் அவர்களை ஒன்று கூட்டி அவர்களது நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்தேன். எந்த இஸ்ரவேலனும் சிறையிருப்பில் இருக்கமாட்டான். 29 நான் எனது ஆவியை இஸ்ரவேல் வம்சத்தாரிடம் ஊற்றுவேன். அதற்குப் பிறகு, நான் மீண்டும் என் ஜனங்களைவிட்டு விலகமாட்டேன்” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

புதிய ஆலயம்

40 நாங்கள் சிறைப்பட்ட 25ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதலாம் மாதம் (அக்டோபர்) பத்தாம் நாளன்று கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. பாபிலோனியர்கள் எருசலேமைப் பிடித்து 14 ஆண்டுகளாயிற்று, ஒரு தரிசனத்தில் கர்த்தர் என்னை அங்கே எடுத்துக்கொண்டு போனார்.

தரிசனத்தில், தேவன் என்னை இஸ்ரவேல் நாட்டுக்குக் கொண்டுபோனார். ஒரு உயரமான மலையில் என்னை அவர் வைத்தார். மலையின் மேல் ஒரு கட்டிடம் நகரத்தைப்போன்று காட்சியளித்தது. அந்நகரம் கிழக்கு நோக்கி இருந்தது. கர்த்தர் என்னை அங்கே கொண்டுபோனார். அங்கே ஒரு மனிதன் இருந்தான். அவன் துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போன்று பளபளப்பாக இருந்தான். அவன் கையில் சணல்கயிறும, அளவு கோலும் இருந்தன. அவன் வாசலருகில் நின்றுகொண்டிருந்தான். அம்மனிதன் என்னிடம் சொன்னான், “மனுபுத்திரனே, உன் கண்களையும், காதுகளையும் பயன்படுத்து. இவற்றைப் பார், என்னைக் கவனி! நான் காட்டுகிற எல்லாவற்றிலும் உன் கவனத்தைச் செலுத்து. ஏனென்றால், நீ கொண்டுவரப்பட்டாய். எனவே நான் உனக்கு இவற்றைக் காட்டுகிறேன். நீ பார்த்தவற்றையெல்லாம் பற்றி இஸ்ரவேல் வம்சத்தாரிடம் கூறவேண்டும்.”

நான் ஆலயத்தைச் சுற்றிலும் கட்டப்பட்ட ஒரு சுவரைக் கண்டேன். அந்த மனிதனின் கையில் ஒரு அளவுகோல் இருந்தது, அது ஆறு முழ நீளமுள்ளதாக (10’6’) இருந்தது. எனவே அம்மனிதன் அச்சுவரின் கனத்தை அளந்தான். அது ஒரு அளவுகோலின் (10’6”) கனமுள்ளதாக இருந்தது. அம்மனிதன் சுவரின் உயரத்தை அளந்தான். அது ஒரு அளவுகோல் உயரமுடையதாக (10’6”) இருந்தது.

பிறகு அம்மனிதன் கிழக்கு வாசலுக்குச் சென்றான். அம்மனிதன் படிகளில் ஏறிப்போய் வாசலின் இடைவெளியை அளந்தான். அது ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக இருந்தது. மறுவாசற்படியையும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக அளந்தான். காவலாளிகளுக்குரிய அறைகள் ஒரு அளவு கோல் (10’6”) நீளமுடையதாகவும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாகவும் இருந்தன. அறைகளுக்கு இடையில் 5 முழ (8’9”) இடமிருந்தது. மண்டபத்தருகேயுள்ள இடைவெளி, ஆலயத்தை எதிர்நோக்கியிருந்த வாசல் வழியின் கடைசியிலிருந்தது. அங்கும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக இருந்தது. பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோல் (10’6”) அகலமுடையதாக அளந்தான். பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தை அளந்தான். அது எட்டு முழமுடையதாக (14’) இருந்தது. அம்மனிதன் வாசலின் ஒவ்வொரு பக்கத்திலிருந்த சுவர்களை அளந்தான். ஒவ்வொரு பக்கமும் 2 முழம் (3’6”) கொண்டதாக இருந்தது. வாசலின் மண்டபம் ஆலயத்தை எதிர் நோக்கியிருந்த வாசல் வழியின் கடைசியிலிருந்தது. 10 வாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று சிறிய அறைகள் இருந்தன. இம்மூன்று சிறு அறைகளும் ஒவ்வொரு பக்கத்திலும் சம அளவுடையதாக இருந்தன. இருபக்கங்களிலும் இருந்த பக்கச்சுவர்கள் சம அளவுடையதாக இருந்தது. 11 அம்மனிதன் வாசல் கதவுகளின் அகலத்தை அளந்தான். அவை 10 முழம் (17’6”) அகலமுடையதாக இருந்தன. அந்த முழு வாசலும் 13 முழம் நீளம் உடையதாக இருந்தன. 12 ஒவ்வொரு அறையின் முன்பும் சிறு சுவர் இருந்தது. அச்சுவர் 1 முழம் (1’6”) உயரமும் 1 முழம் (1’6”) கனமும் உடையதாக இருந்தது. அவ்வறைகள் 6 முழம் (10’6”) நீளமுடையதாக ஒவ்வொரு பக்கத்திலும் இருந்தன.

13 அம்மனிதன் வாசலில் இருந்து அறையின் மெத்தையினின்றும் மற்ற அறையின் மெத்தை மட்டும் அளந்தார். அது 25 முழமாக (43’9”) இருந்தது. ஒவ்வொரு கதவும் இன்னொரு கதவிற்கு நேர் எதிராக இருந்தது. 14 அம்மனிதன் முற்றத்திலிருந்து மண்டபத்தின் இரு பக்கங்களிலிருந்த பக்கசுவர்கள் உள்பட எல்லா பக்கச்சுவர்களின் முன்புறங்களையும் அளந்தான். அது மொத்தம் 60 முழம். 15 வெளிவாயிலின் உட்புற முனையிலிருந்து மண்டபத்தின் கடைசி முனைவரை 50 முழங்களாகும். 16 எல்லா அறைகளிலும், பக்கச்சுவர்களின் மேலும் வாயில் மண்டபங்களின் மேலும் சிறு சிறு ஜன்னல்கள் இருந்தன. ஜன்னல்களின் அகலப்பகுதி நுழை வாயிலை நோக்கியிருந்தது. நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் பேரீச்சமரங்கள் செதுக்கப்பட்டிருந்தன.

வெளிப்பிரகாரம்

17 பிறகு, அம்மனிதன் என்னை வெளிப்பிரகாரத்திற்கு அழைத்து வந்தான். நான் அறைகளையும் தள வரிசைகளையும் பார்த்தேன். அவை பிரகாரத்தைச் சுற்றிலும் இருந்தன. சுவற்றின் வழியே நடை பாதையை உள்நோக்கி 30 அறைகள் இருந்தன. 18 அத்தள வரிசை வாசலின் பக்கம்வரை சென்றது. தளவரிசை வாசல்களின் நீளத்திற்கு இருந்தது. இது தாழ்ந்த தளவரிசையாக இருந்தது. 19 பிறகு அம்மனிதன் கீழ்வாசலின் உள்பக்கத்திலிருந்து உள்முற்றத்தின் வெளிப்பக்கம் வரையுள்ள அகலத்தை அளந்தான். அது கிழக்குப்பக்கமும் வடக்குப்பக்கமும் 100 முழம் அளவு இருந்தது.

20 வெளிப்பிரகாரத்தைச் சுற்றியுள்ள சுவரில் வடக்கு வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அம்மனிதன் அளந்தான். 21 அது இரு பக்கங்களிலும் மூன்று அறைகளுடையதாக இருந்தது. அதன் வாசல் தூண்களும் மண்டபமும் முதல் வாசலின் அளவுகளைப் போன்றே இருந்தன. அது 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் உடையதாக இருந்தது. 22 அதன் ஜன்னல்களும் மண்டபமும் பேரிச்ச மரச் செதுக்கல்களும் கிழக்கு நோக்கியிருந்த வாசலை போன்றதாகவே இருந்தது. வாசலை நோக்கி ஏழு படிகள் மேலே போயின. வாசலின் மண்டபம் நுழைவாயிலின் உள்பக்கம் கடைசியில் இருந்தது. 23 வடக்கு நுழைவாயிலிலிருந்து முற்றத்துக்குக் குறுக்கே உள்முற்றத்துக்கு ஒரு நுழைவாயில் இருந்தது. அது கிழக்கில் இருந்த நுழைவாயிலைப் போன்றிருந்தது. ஒரு நுழைவாயிலிலிருந்து இன்னொரு நுழைவாயில்வரை அளந்தான். அது 100 முழம் (175’) அகலம் இருந்தது.

24 பிறகு அம்மனிதன் என்னைத் தெற்கே நடத்திச் சென்றான். நான் தெற்கே ஒரு வாசலைக் கண்டேன். அம்மனிதன் பக்கச் சுவர்களையும் மண்டபத்தையும் அளந்தான். அவை மற்ற வாசல்களைப்போன்றே அளவுடையதாக இருந்தன. 25 வாசலும் அதன் மண்டபமும் மற்ற வாசல்களைப்போன்றே ஜன்னல்கள் உடையதாக இருந்தன. அவை 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் கொண்டதாக இருந்தன. 26 வாசலில் ஏழு படிகள் மேல் நோக்கிச் சென்றன. அதன் மண்டபம் நுழைவாயிலின் உட்புறமாக கடைசியில் இருந்தது. சுவர்கள் மேல் இரு பக்கமும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. 27 உட்பிரகாரத்தின் தென் பக்கமும் ஒரு வாசல் இருந்தது. அம்மனிதன் தெற்கு நோக்கி உள் வாசலில் இருந்து இன்னொரு வாசலுக்கு அளந்தான். அது 100 முழம் (175’) அகலமுடையதாக இருந்தது.

உட்பிரகாரம்

28 பிறகு, அம்மனிதன் என்னைத் தெற்கு வாசல் வழியாக உட்பிரகாரத்திற்கு அழைத்துப்போனான். அவன் இந்த வாசலை அளந்தான். அத்தெற்கு வாசலும் மற்ற வாசல்களைப்போன்று அளவுடையதாக இருந்தது. 29 தெற்கு வாசலில் உள்ள அறைகள், அதன் பக்கச்சுவர்கள், அதன் மண்டபம் ஆகியவை மற்ற வாசல்களில் உள்ள அளவையே கொண்டிருந்தன. வாசலையும் மண்டபத்தையும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. வாசல் 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் இருந்தது. 30 மண்டபம் 25 முழம் (43’9”) அகலமும் 5 முழம் (8’9”) நீளமும் இருந்தது. 31 தென்பக்க வாசல் மண்டபம் வெளிப்பிரகாரத்தை நோக்கி இருந்தது. நுழைவாயிலின் இரு பக்கச்சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதில் ஏறிட 8 படிகளும் இருந்தன.

32 அம்மனிதன் என்னை கிழக்குப் புறமுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்து வந்தான். அவன் வாசலை அளந்தான். அது மற்ற வாசல்களைப்போன்றே அளவுடையதாக இருந்தது. 33 கிழக்கு வாசலின் அறைகளும், பக்கச்சுவர்களும், மண்டபமும் மற்ற வாசல்களைப்போன்றே அளக்கப்பட்டன. வாசலையும் அதன் மண்டபத்தையும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. கிழக்கு வாசல் 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் உடையதாக இருந்தது. 34 அதன் மண்டபம் வெளிப்பிரகாரத்தை நோக்கி இருந்தது. நுழைவாயிலின் இரு பக்கச்சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதற்குப் போக எட்டுப் படிகள் இருந்தன.

35 பிறகு அந்த மனிதன் என்னை வடக்கு வாசலுக்கு அழைத்து வந்தான். அவன் அதை அளந்தான். அது மற்ற வாசல்களைப்போன்று அதே அளவுடையதாக இருந்தது. 36 இதன் அறைகள், இதன் பக்கச் சுவர்களும், வாயில் மண்டபமும் கூட, மற்ற நுழை வாயில்களின் அளவுடையதாக இருந்தன. வாசலைச் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. இது 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் கொண்டதாக இருந்தது. 37 இதன் வாயில் மண்டபம், நுழை வாயிலின் கடைசியில் வெளிமுற்றத்திற்குப் பக்கத்தில் இருந்தது. நுழைவாயிலின் இருபக்கச் சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. இதில் மேலே போக 8 படிகள் இருந்தன.

பலிகளை ஆயத்தப்படுத்தும் அறைகள்

38 வாயில் மண்டபத்தில் கதவுள்ள ஒரு அறை இருந்தது. இதுதான் ஆசாரியர்கள் தம் தகனபலிக்காக மிருகங்களைக் கழுவும் இடம். 39 மண்டபத்தின் கதவின் இரண்டு பக்கத்திலும் இரண்டு மேசைகள் இருந்தன. தகனபலி, பாவநிவாரண பலி, குற்ற நிவாரணப் பலி ஆகியவற்றின் மிருகங்களை மேசை மேல் வைத்துக் கொல்லுவார்கள். 40 மண்டபத்துக்கு வெளியே, வடக்கு வாசல் திறந்திருக்கிற இடத்தில், இரண்டு மேசைகள் இருந்தன. இம்மண்டபத்தின் வெளிவாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு மேசைகள் இருந்தன. 41 இவ்வாறு உள்ளே நான்கு மேசைகள் இருந்தன. வெளியே நான்கு மேசைகள் இருந்தன. இந்த எட்டு மேசைகளின் மேல் ஆசாரியர்கள் பலிகளுக்கான மிருகங்களைக் கொன்றார்கள். 42 நான்கு மேசைகள் தகனபலிக்காகக் கல்லால் செய்யப்பட்டிருந்தன. இம்மேசைகள் 1 1/2 முழம் (2’7 1/2”) நீளமும் 1 1/2 முழம் (2’7 1/2”) அகலமும் 1 முழம் (1’6”) உயரமும் உள்ளதாக இருந்தன. மேசைகளின்மேல் ஆசாரியர்கள் தகன பலிகள் மற்றும் இதர பலிகளுக்கான மிருகங்களைக் கொல்வதற்கான கருவிகளை வைத்திருந்தார்கள். 43 கொக்கிகள் 1 சாண் (3”) நீளமுள்ள இறைச்சிக் கொக்கிகள் இப்பகுதியிலுள்ள எல்லாச் சுவர்களிலும் அடிக்கப்பட்டிருந்தன. காணிக்கைகளின் இறைச்சி மேசைமேல் வைக்கப்பட்டது.

ஆசாரியர்களின் அறைகள்

44 உட்புற முற்றத்தில் இரண்டு அறைகள் இருந்தன. ஒன்று வடக்கு வாசலில் இருந்தது. அது தெற்கு நோக்கி இருந்தது. இன்னொன்று தெற்கு வாசலில் இருந்தது. அது வடக்கு நோக்கி இருந்தது. 45 அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தெற்கு நோக்கி இருக்கும் இந்த அறை ஆலயத்தில் பணியிலிருந்து சேவை செய்கிற ஆசாரியரின் அறை. 46 ஆனால் வடக்கு நோக்கி இருக்கும் அறை பலிபீடத்தில் பணிசெய்கிற ஆசாரியரின் அறையாகும். இந்த ஆசாரியர்கள் லேவியின் தலைமுறையைச் சார்ந்தவர்கள். ஆனால் இந்த இரண்டாவது ஆசாரியக் குழு சாதோக்கின் வாரிசுகள். அவர்கள் மாத்திரமே பலிகளை பலிபீடத்திற்குச் சுமந்துசென்று கர்த்தருக்குச் சேவை செய்ய முடியும்.”

47 அம்மனிதன் பிரகாரத்தை அளந்தான். அது சரியான சதுரமாக இருந்தது. இது 100 முழம் (175’) நீளமும் 100 முழம் (175’) அகலமும் உடையதாக இருந்தது. பலிபீடம் ஆலயத்தின் முன்னால் இருந்தது.

ஆலயத்தின் மண்டபம்

48 பிறகு, அம்மனிதன் என்னை ஆலய மண்டபத்துக்குக் கொண்டுபோனான். மண்டபத்தின் இரு பக்கங்களிலும் இருந்த சுவர்களை அளந்தான். ஒவ்வொரு பக்கச்சுவரின் கனம் 5 முழமாகவும் அகலம் 3 முழமாகவும் இருந்தது. அவைகளுக்குள் இருந்த இடைவெளி 14 முழமாயிருந்தது. 49 மண்டபம் 20 முழம் (35’) நீளமும் 12 முழம் (19’3”) அகலமும் உள்ளது. மண்டபத்தின் மேலே செல்ல 10 படிகள் இருந்தன. தூணாதரங்களிலே இந்தப் புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.

ஆலயத்தின் பரிசுத்த இடம்

41 பின்பு அவன் என்னை ஒரு அறைக்கு (பரிசுத்தமான இடத்திற்கு) அழைத்துக் கொண்டு போனான். அவன் அறையின் இருபுறமுள்ள சுவர்களை அளந்தான். அவை 6 முழம் (10’6”) கனமுடையதாக ஒவ்வொரு பக்கமும் இருந்தன. கதவானது 10 முழம் (17’6”) அகலமுடையதாக இருந்தது. வாசல் நடையின் பக்கங்கள் ஒவ்வொரு புறத்திலும் 5 முழம் (8’9”) உடையன. அம்மனிதன் அந்த அறையை அளந்தான். அது 40 முழம் (70’) நீளமும் 20 முழம் (35’) அகலமும் கொண்டது.

ஆலயத்தின் மகா பரிசுத்த இடம்

பிறகு, அவன் கடைசி அறைக்குள் சென்றான். அவன் வாசலின் இருபக்கச் சுவர்களையும் அளந்தான். ஒவ்வொரு பக்கச்சுவரும் 2 முழம் கனமாகவும் 7 முழம் அகலமாகவும் இருந்தது. வாசல் வழியானது 6 முழம் அகலமுடையதாயிருந்தது. பிறகு, அம்மனிதன் அறையின் நீளத்தை அளந்தான். அது 20 முழம் (35’) நீளமும் 20 முழம் (35’) அகலமுமாக ஆலயத்தின் முன்புறத்தில் அளந்தான். அம்மனிதன் என்னிடம், “இது மிகவும் பரிசுத்தமான இடம்” என்றான்.

ஆலயத்தைச் சுற்றியுள்ள மற்ற அறைகள்

பிறகு அம்மனிதன் ஆலயத்தின் சுவரை அளந்தான். அது 6 முழம் கனமாகயிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகள் இருந்தன. இவை 4 முழம் (7’) அகலமுடையதாக இருந்தன. இந்த பக்கத்து அறைகள் மூன்று வேறுபட்ட தளங்களில் இருந்தன. அவை ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தன. ஒவ்வொரு தளத்திலும் 30 அறைகள் இருந்தன. இந்த பக்கத்து அறைகள் சுற்றிலும் உள்ள சுவரால் தாங்கப்பட்டிருந்தன. எனவே ஆலயச் சுவர் தானாக அறைகளைத் தாங்கவில்லை. ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகளின் ஒவ்வொரு தளமும் கீழே உள்ள தளத்தைவிட அகலம் அதிகமாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றியுள்ள உயர மேடையானது ஒவ்வொரு தளத்திலும் ஆலயத்தைச் சுற்றிப் பரந்திருந்தது, எனவே, மேல் தளங்களின் அறைகள் அகலமாயிருந்தன. ஆதலால் கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளம் வழியாய் மேல் தளத்திற்கு ஏறும் வழி இருந்தது.

ஆலயத்தைச் சுற்றி உயர்த்தப்பட்ட அடிப்பாகம் இருப்பதைப் பார்த்தேன். அது பக்கத்து அறைகளுக்கு அஸ்திபாரமாக இருந்தது. அது ஒரு முழுக் கோலின் உயரம் கொண்டதாயிருந்தது. பக்கத்து அறைகளின் வெளிச் சுவரின் அகலம் 5 முழமாக (8’9”) இருந்தது. ஆலயத்தின் பக்கத்து அறைகளுக்கும் ஆசாரியரின் அறைகளுக்கும் இடையே ஒரு திறந்தவெளி இருந்தது. 10 அது ஆலயத்தைச் சுற்றிலும் 20 முழம் (35’) அகலமாக இருந்தது. 11 பக்கத்து அறைகளின் கதவுகள், உயர்த்தப்பட்ட அடிப்பாகத்தை நோக்கித் திறந்திருந்தன. ஒரு வாசல்நடை வடகேயும் ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தன. உயர்த்தப்பட்ட அடிப்பாகத்தின் அகலம் 5 முழமாய் (8’9”) சுற்றிலும் இருந்தது.

12 தடைசெய்யப்பட்ட ஆலய முற்றத்தின் முன்பிருந்த மேற்கு திசையிலுள்ள கட்டிடம் 70 முழம் (122’6”) அகலமுடையதாய் இருந்தது, அக்கட்டிடத்தின் சுற்றுச் சுவர்கள் 5 முழம் (8’9”) கனமுடையதாய் இருந்தன. அது 90 முழம் (157’6”) நீளமுடையது. 13 பிறகு அம்மனிதன் ஆலயத்தை அளந்தான். அது 100 முழம் (175’) நீளமுடையது. தடைசெய்யப்பட்ட பரப்பையும், கட்டிடத்தையும், அதன் சுவர்களையும் 100 முழம் (175’) அகலமுடையதாக அளந்தான். 14 ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான தடைச் செய்யப்பட்ட பரப்பும் 100 முழம் (175’) அகலமுடையதாக இருந்தது.

15 அம்மனிதன் தடைசெய்யப்பட்ட பரப்பின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த கட்டிடத்தின் நீளத்தையும் அதற்கு இரு புறத்திலும் இருந்த நடை பந்தல்களையும் அளந்தான். அது 100 முழம் (175’) நீளமுடையது.

மகா பரிசுத்த இடமும், பரிசுத்த இடமும், மண்டபமும், உள் அறையை நோக்கியிருந்தன. 16 அவற்றின் சுவர்கள் முழுவதும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. மூன்று பக்கங்களிலும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. வாசல்களுக்கு எதிரான நடைப் பந்தல்களும் சுற்றிலும் தரை தொடங்கி ஜன்னல்கள் வரை பலகை அடித்திருந்தது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. 17 வாசலின் மேலே தொடங்கி,

ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் பலகைகளால் மூடப்பட்டிருந்தன. சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் 18 கேருபீன்களும் பேரீச்ச மரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. கேருபீன்களுக்கு இடையில் பேரீச்சமரம் இருந்தது. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு முகங்கள் இருந்தன. 19 ஒரு முகம் மனிதமுகமாய் பேரீச்ச மரத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்தவாறு இருந்தது. இன்னொரு முகம் சிங்க முகமாய் பேரீச்ச மரத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தவாறு இருந்தது. அவை ஆலயத்தைச் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன. 20 தரையிலிருந்து வாசலின் மேல்புறம்வரை பரிசுத்த இடத்தின் சுவர்களில் கேருபீன்களும் பேரீச்ச மரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன.

21 பரிசுத்த இடத்தின் இருபக்கத்திலும் இருந்த சுவர்கள் சதுரமானவை. மகாபரிசுத்தமான இடத்துக்கு எதிரில் ஏதோ ஒன்று பலிபீடத்தைப்போலக் காணப்பட்டது. 22 அது மரத்தால் செய்யப்பட்ட பலிபீடத்தைப் போன்றிருந்தது. அது 3 முழம் உயரமும் 2 முழம் நீளமுமாயிருந்தது. அதன் மூலைகள், அடிப்பாகம், பக்கங்கள் எல்லாம் மரத்தால் ஆனவை. அம்மனிதன் என்னிடம், “இதுதான் கர்த்தருக்கு முன்னால் உள்ள மேசை” என்றான்.

23 நடு அறையும் (பரிசுத்தமான இடமும்) மிகப் பரிசுத்தமான இடமும் இரட்டைக் கதவுகளைக் கொண்டவை. 24 வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகள் இருந்தன. ஒவ்வொரு வாசலுக்கும் இரண்டு சிறு கதவுகளும் இருந்தன. 25 பரிசுத்த இடத்தின் கதவுகளிலும் கேருபீன்களும் பேரிச்ச மரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அவை சுவற்றில் செதுக்கப்பட்டிருந்தவை போன்றிருந்தன. வெளியே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மண்டபத்தின் முன் பாகத்திற்குமேல் ஒரு மரக் கூரையிருந்தது. 26 இருபுறங்களிலும் ஆலயத்தின் சுற்றுக் கட்டுக்களிலும் சட்டங்கள் பொருந்திய ஜன்னல்கள் இருந்தன. சுவர்களிலும் ஆலயத்தைச் சுற்றியுள்ள அறைகளிலும் வரையப்பட்ட பேரீச்ச மரங்களும் இருந்தன.

ஆசாரியர்களின் அறை

42 பிறகு அம்மனிதன் என்னை வட திசையின் வழியாக வெளிப்பிரகாரத்திற்கு அழைத்துப்போனான். தடைசெய்யப்பட்ட பரப்பிற்கு மேற்கேயிருந்த அறைக்கும் வடக்கே இருந்த கட்டிடத்திற்கும் போனோம். வடக்கே இருந்த கட்டிடமானது 100 முழம் (175’) நீளமும் 50 முழம் (87’6”) அகலமும்கொண்டது. இக்கட்டத்தில் மூன்று முன்மண்டபங்களுடைய மேல் மாடிகள் இருந்தன. 20 முழம் அளவுள்ள உள்முற்றம், கட்டிடத்திற்கும் ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. இன்னொரு பக்கம், அறைகள் வெளிமுற்றத்தின் நடைபாதையை நோக்கியிருந்தன. அறைகளுக்கு முன்னால் ஒருவழி இருந்தது. அது உள்ளே சென்றது. இது 10 முழம் (17’6”) அகலமும் 100 முழம் (175’) நீளமும் உடையதாக இருந்தது. அவற்றின் கதவுகள் வடக்கே இருந்தன. 5-6 கட்டிடம் 3 மாடி உயரமுள்ளதாகவும், வெளிமுற்றத்தைப்போல தூண்கள் இல்லாததாலும், மேல் அறைகள் நடுமாடியிலும், முதல்தளத்திலும் இருந்த அறைகளைவிட சற்றுப் பின்னால் இருந்தன. மேல்தளம், நடுத்தளத்தையும், அடித்தளத்தையும்விட குறுகலாயிருந்தது. ஏனெனில், மேல்மாடிகள் இவ்விடங்களை பயன்படுத்தியிருந்தன. வெளியே ஒரு மதில் இருந்தது. அது அறைகளுக்கு இணையாக இருந்தது. அது வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்திருந்தது. அது அறைகளுக்கு எதிரே இருந்தது. அதன் நீளம் 50 முழம் (87’6”) இருந்தது. வெளிப்பிரகாரத்தில் உள்ள அறைகளும் 50 முழம் (87’6”) நீளமுடையதாக இருந்தன. கட்டிடத்தின் முழு நீளம், ஆலயத்தின் பக்கம் 100 முழம் நீளமாயிருந்தது. கிழக்கே வெளிப்பிரகாரத்திலிருந்து அந்த அறைகளுக்குள் செல்லுகிற நடை அவற்றின் கீழே இருந்தது. 10 உள்ளே நுழையும் வாசல், முற்றத்தின் பக்கத்திலுள்ள சுவரின் ஆரம்பத்திலிருந்தது.

தடைசெய்யப்பட்ட பரப்பிற்கும் கட்டிடத்திற்கும் தெற்குப் பக்கத்திலும் அறைகள் இருந்தன. 11 அவைகளுக்கு முன்னால் ஒரு பாதை இருந்தது. அவை வடக்கே உள்ள அறைகள் போன்றவை. அவை அதே நீளமும் அகலமும் கொண்டவையாகவும் அதே மாதிரியான கதவுகளைக்கொண்டவையாகவும் இருந்தன. 12 கீழ் அறைகளுக்குப் போகும் நுழை வாசல் கட்டிடத்தின் கிழக்குப்பகுதியின் கடைசியிலிருந்தது. இதனால் ஜனங்கள் சுவரின் பக்கம் இருந்த பாதையின் முடிவில் திறந்தவழியாகப் போக முடியும்.

13 அம்மனிதன் என்னிடம், “தடைசெய்யப்பட்ட பரப்பிற்கு முன்னிருக்கிற வடபுறமான அறைகளும் தென்புறமான அறைகளும் பரிசுத்தமான அறைகள். இந்த அறைகள் கர்த்தருக்குப் பலிகள் படைக்கிற ஆசாரியர்களுடையவை. அவ்வாசாரியர்கள் இவ்வறைகளில்தான் மிகப் பரிசுத்தமான உணவை உண்பார்கள். அங்குதான் அவர்கள் மிகப் பரிசுத்தமான பலிகளை எல்லாம் வைக்கிறார்கள். ஏனென்றால், அந்த இடம் பரிசுத்தமானது. தானிய காணிக்கை, பாவப்பரிகாரபலி, குற்ற நிவாரண பலி, ஆகியவை மிகப் பரிசுத்தமான காணிக்கைகளாகும். 14 பரிசுத்தமான பகுதிக்குள் நுழையும் ஆசாரியர்கள் பரிசுத்த இடத்திலிருந்து வெளிப்பிரகாரத்திற்கு வருவதற்கு முன்பே ஆராதனை செய்யும்போது அணிந்திருந்த உடைகளைக் கழற்றி வைப்பார்கள். ஏனென்றால், அந்த உடைகள் பரிசுத்தமானவை. ஆசாரியர் ஜனங்கள் இருக்கும் பிரகாரத்துக்குப் போக விரும்பினால் வேறு உடைகளை அணிந்துகொண்டு போவார்கள்.”

ஆலயத்தின் வெளிமுற்றம்

15 அம்மனிதன் ஆலயத்தின் உள்பக்கத்தை அளந்து முடித்த பிறகு அவன் என்னை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாக வெளியே அழைத்துக்கொண்டு போனான். அவன் ஆலயத்தின் வெளிப்புறத்தில் சுற்றிலும் அளந்தான். 16 அவன் அளவு கோலால் கிழக்குப் பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) நீளமிருந்தது. 17 அவன் வடப் பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது. 18 அவன் தெற்குப்பகுதியை அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது. 19 அவன் சுற்றிக்கொண்டு மேற்குப் பகுதிக்குப்போய் அளந்தான். அது 500 முழம் (875’) இருந்தது. 20 அவன் ஆலயத்தின் நான்கு புறங்களையும் அளந்தான். ஆலயத்தைச் சுற்றி மதில் சுவர் இருந்தது. அது 500 முழம் நீளமும் 500 முழம் அகலமுமாயிருந்தது. அது பரிசுத்தமற்ற இடத்திலிருந்து அப்பரிசுத்தமான இடத்தைப் பிரித்தது.

கர்த்தர் தமது ஜனங்களுக்கு மத்தியில் வாழ்வார்

43 அம்மனிதன் என்னைக் கிழக்கு வாசலுக்கு அழைத்துக்கொண்டு போனான். அங்கே இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது. தேவனுடைய சத்தம் கடலின் இரைச்சலைப் போன்றிருந்தது. தேவ மகிமையால் பூமி பிரகாசித்தது. நான் பார்த்த தரிசனம் கேபார் ஆற்றங்கரையில் கண்ட தரிசனத்தைப்போன்று இருந்தது. நான் தரையில் முகங்குப்புற விழுந்தேன். கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாக ஆலயத்தின் உள்ளே நுழைந்தது.

அப்பொழுது என்னை ஆவியானவர் எடுத்துக்கொண்டு போய் உட்பிரகாரத்தில் விட்டார். கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது. என்னிடம் யாரோ ஆலயத்திற்குள்ளிருந்து பேசுவதைப்போன்று கேட்டேன். இன்னும் அந்த மனிதன் என்னுடன் இருந்தான். ஆலயத்திற்குள்ளிருந்து வந்த குரல் என்னிடம் சொன்னது, “மனுபுத்திரனே, இந்த இடத்தில்தான் எனது சிங்காசனமும் பாதபீடமும் உள்ளன. நான் என்றென்றும் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இந்த இடத்தில் வாழ்வேன். இஸ்ரவேல் வம்சத்தார் இனிமேல் என் நாமத்தைப் பாழாக்கமாட்டார்கள். அரசர்களும் அவரது ஜனங்களும் தங்கள் வேசித்தனங்களாலும் இங்கே தங்கள் அரசர்களின் உடல்களைப் புதைப்பதின் மூலமும் எனது நாமத்தைத் தீட்டுப்படுத்துவதில்லை. அவர்கள், என் கதவு நிலைக்கு அடுத்து அவர்கள் கதவு நிலையை வைத்தும் தங்கள் வாசற்படியை என் வாசற்படியருகில் கட்டியும் என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவரமாட்டார்கள். முன்பு ஒரு சுவர் என்னை அவர்களிடமிருந்து பிரித்தது. எனவே அவர்கள் ஒவ்வொரு முறை பாவம் செய்யும்போதும் அருவருப்பான செயல்களைச் செய்யும்போதும் என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்காகத்தான் நான் கோபம்கொண்டு அவர்களை அழித்தேன். இப்பொழுது அவர்கள் தங்கள் பாலின உறவு பாவங்களையும், தங்கள் அரசர்களின் மரித்த உடல்களையும் என்னைவிட்டுத் தூரமாய் எடுத்துச் செல்லட்டும். பிறகு, நான் அவர்கள் மத்தியில் என்றென்றும் வாழ்வேன்.

10 “இப்பொழுது, மனுபுத்திரனே, ஆலயத்தைப்பற்றி இஸ்ரவேல் வம்சத்தாரிடம் சொல். பிறகு, அவர்கள் தம் பாவங்களுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் ஆலயத்துக்கான திட்டங்களைப்பற்றி அறிந்துகொள்வார்கள். 11 அவர்கள் தாம் செய்த தீமைகளுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் ஆலயத்தின் வடிவத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளட்டும். அவர்கள் ஆலயத்தை எவ்வாறு கட்டுவது என்பதைத் தெரிந்துகொள்ளட்டும். எங்கே அதன் நுழைவாசல்களையும் எங்கே அதன் பின் வாசல்களையும் வைப்பது என்பதுபற்றி அறியட்டும். அதன் எல்லா சட்டதிட்டங்களையும் கற்றுக்கொடு. இவற்றையெல்லாம் எழுதிவை. அவர்கள் பார்த்து ஆலயத்தின் எல்லா விதிகளையும் கைக்கொள்ளுவார்கள். பிறகு அவர்களால் அவற்றைச் செய்ய முடியும். 12 இதுதான் ஆலயத்தின் சட்டம்: மலை உச்சியின் மேல் சுற்றிலும் அதன் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாக இருக்கும். இதுவே ஆலயத்தின் சட்டம்.

பலிபீடம்

13 “இவை பலிபீடத்தின் அளவுகள். இவை முழக் கோல்களால் அளக்கப்பட்டவை. பலிபீடத்தின் அடிப்பாகத்தைச் சுற்றிலும் ஒரு முழம் (1’9”) ஆழமும் ஒரு முழம் (1’9”) அகலமும் கொண்ட வாய்க்கால் இருந்தது. அதன் ஓரத்தைச் சுற்றியுள்ள விளிம்பு ஒரு சாண் (9”) உயரமாயிருக்கும். இதுதான் பலிபீடத்தின் உயரமாக இருந்தது. 14 தரையிலே இருக்கிற ஆதாரம் முதல் கீழ்நிலைமட்டும் 2 முழம் (3’6”) இருந்தது. அதன் அகலம் ஒரு முழம் (1’9”) இருந்தது. சின்ன விளிம்பு முதல் பெரிய விளிம்புவரை நான்கு முழம் அளவு (7’) இருந்தது. அதன் அகலம் 2 முழம் (3.6”). 15 பலிபீடத்தின் நெருப்பு வைக்கிற இடம் 4 முழம் (7’) உயரமாயிருந்தது. பலிபீடத்தின் ஒவ்வொரு மூலையில் ஒன்றாக 4 கொம்புகள் இருந்தன. 16 பலிபீடத்தின் நெருப்பு வைக்கிற இடம் 12 முழம் நீளமும் 12 முழம் (21’) அகலமுமாய் இருந்தன. இது சரியான நாற்சதுரம். 17 அதன் சட்டமும் சதுரமானது. அது 14 முழம் (24’6”) நீளமும் 14 முழம் (24’6”) அகலமும் கொண்டது. அதைச் சுற்றிலும் உள்ள விளிம்பு அரை முழம் (10 1/2’) அகலமாயிருந்தது. அதனைச் சுற்றியுள்ள ஆதாரம் 2 முழம் (3’6”) ஆக இருக்கும். பீடத்திற்கு போகும் படிகள் கிழக்குப்பக்கம் இருந்தன.”

18 பிறகு அம்மனிதன் என்னிடம் சொன்னான்: “மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘இதுதான் பலிபீடத்துக்கான விதிகள். இதனைக் கட்டும் நாளிலே அதன்மேல் தகனபலியிடவும் அதன்மேல் இரத்தம் தெளிக்கவும் அமைக்கப்படும். 19 நீ ஒரு இளங்காளையை பாவப் பரிகாரப் பலியாக சாதோக்கின் குடும்பத்தில் ஒருவனுக்குக் கொடுக்கவேண்டும். இந்த ஆட்கள் லேவியர் வம்சத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் ஆசாரியர்களாக இருக்கிறார்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்: 20 “நீ காளையின் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலும், சட்டத்தின் நான்கு கொடிகளிலும், சுற்றியிருக்கிற விளிம்பிலும் பூசி பாவநிவர்த்தி செய்யலாம். இவ்வாறு நீ பலிபீடத்தை சுத்தப்படுத்துவாய். 21 நீ பாவப் பரிகார பலிக்குக் காளையைக் கொண்டு வந்து அதை ஆலயத்திற்கு வெளியில் அதற்குரிய இடத்தில் சுட்டெரிக்கவேண்டும்.

22 “இரண்டாவது நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவப்பரிகார பலியாக பலியிடு. ஆசாரியர்கள் முன்பு காளை பலிக்குச் செய்தது போலவே இதற்கும் பலிபீடத்தைப் பரிசுத்தப்படுத்தவேண்டும். 23 நீ பலிபீடத்தை பரிசுத்தப்படுத்தின பின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும், மந்தையிலிருந்து பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் பலியாக்கு. 24 பிறகு நீ அவற்றை கர்த்தருக்கு முன் பலியிடு. ஆசாரியர்கள் அதன்மேல் உப்பைத் தூவுவார்கள். பிறகு ஆசாரியர்கள் காளையையும் கடாவையும் கர்த்தருக்குத் தகன பலியாகக் கொடுப்பார்கள். 25 ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து தினம் பாவப்பரிகாரத்திற்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவைத் தயார் செய். அதோடு மந்தையிலிருந்து ஒரு காளையையும் ஆட்டுக்கடாவையும் தயார் செய். காளைக்கும் ஆட்டுக்காடாவுக்கும் எவ்விதப் பழுதும் இருக்கக் கூடாது. 26 ஏழு நாட்களுக்கு ஆசாரியர்கள் பலிபீடத்தைச் சுத்தமாக வைத்து, சுத்திகரித்து அர்ப்பணிக்கவேண்டும். 27 அந்நாட்கள் முடிந்த பின்பு எட்டாம் நாள் முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின் மேல் உங்கள் தகன பலிகளையும், சமாதான பலிகளையும் படைக்கவேண்டும். அப்பொழுது நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைச் சொன்னார்.

வெளிவாசல்

44 பிறகு அம்மனிதன் என்னை ஆலயத்தின் கிழக்கு வாசலுக்கு அழைத்து வந்தான். அது பூட்டப்பட்டிருந்தது. கர்த்தர் என்னிடம் சொன்னார்: “இந்த வாசல் திறக்கப்படாது. இது எப்பொழுதும் பூட்டப்பட்டிருக்கும். இதன் வழியாக எவரும் நுழைய முடியாது. ஏனென்றால், இஸ்ரவேலின் கர்த்தர் இதன் வழியாக நுழைந்திருக்கிறார். எனவே இது எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். இந்த வாசலில் உட்கார ஜனங்களின் அதிபதிக்கு மாத்திரமே உரிமையுண்டு. கர்த்தருடைய சந்நிதியில் உணவு உண்ணும்போது உட்காரலாம். அவன் வாசல் மண்டபக் கதவு வழியாக நுழைந்து அதே வழியாக வெளியேற வேண்டும்.”

ஆலயத்தின் பரிசுத்தம்

பிறகு அந்த மனிதன் என்னை வடக்கு வாசல் வழியாக ஆலயத்தின் முன்புறத்திற்கு அழைத்துவந்தான். நான் கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தில் நிறைந்திருப்பதைக் கண்டேன். நான் தரையில் முகம்குப்புற விழுந்தேன். கர்த்தர் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, கவனமாகப் பார்! உன் கண்களையும் காதுகளையும் பயன்படுத்து. இவற்றைக் கவனி. நான் உனக்கு கர்த்தருடைய ஆலயத்தின் சகல விதிகளையும் அதன் சகல சட்டங்களையும்பற்றிச் சொல்வதைக் கவனமாகக் கேள். ஆலயத்தின் எல்லா நுழை வாசல்களையும் பரிசுத்த இடத்திலிருந்து வெளியேறும் வாசல்களையும் கவனமாகப் பார். பிறகு இந்தச் செய்தியை எனக்குக் கீழ்ப்படிய மறுத்த இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடு. அவர்களிடம் சொல்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளும் போதும்! நீங்கள் எனது ஆலயத்திற்குள் அந்நியரை அழைத்து வந்தீர்கள். அந்த ஜனங்கள் உண்மையாகவே விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை. அவர்கள் தம்மை எனக்கு முழுமையாகக் கொடுக்கவில்லை. இவ்வாறு நீங்கள் என் ஆலயத்தை அசுத்தம் செய்தீர்கள். நீங்கள் நமது உடன்படிக்கையை உடைத்தீர்கள். நீங்கள் அருவருப்பான செயல்களைச் செய்தீர்கள். பிறகு நீங்கள் அப்பம், கொழுப்பு, இரத்தம் ஆகிய காணிக்கைகளைக் கொடுத்தீர்கள். ஆனால், இவைகளே என் ஆலயத்தை அசுத்தமாக்கின. நீங்கள் எனது பரிசுத்தமான பொருட்களைக் கவனித்துக்கொள்ளவில்லை. நீங்கள் எனது பரிசுத்த இடத்தின் பொறுப்பை அந்நியர்களிடம் விட்டுவிட்டீர்கள்!’”

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உண்மையான விருத்தசேதனம் செய்துகொள்ளாத அந்நியன் என் ஆலயத்திற்குள் வரக் கூடாது. இஸ்ரவேலர் மத்தியில் நிரந்தரமாக வாழும் அந்நியனும் என் ஆலயத்திற்குள் வருவதற்கு முன் விருத்தசேதனம் செய்துகொண்டு தன்னை எனக்கு முழுமையாகத் தரவேண்டும். 10 கடந்த காலத்தில் இஸ்ரவேலர்கள் என்னைவிட்டு விலகியபோது லேவியர்கள் என்னைவிட்டு விலகினார்கள். இஸ்ரவேலர்கள் தம் விக்கிரகங்களை பின்பற்றுவதற்காக என்னிடமிருந்து விலகினார்கள். லேவியர்கள் தம் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவார்கள். 11 லேவியர்கள் எனது பரிசுத்தமான இடத்தில் சேவை செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் ஆலயத்தின் வாசலைக் காவல் செய்தார்கள். அவர்கள் ஆலயத்திற்குள் சேவை செய்தார்கள். அவர்கள் பலியிடுவதற்காக மிருகங்களைக் கொன்றார்கள். ஜனங்களுக்காகத் தகன பலிகளைச் செய்தார்கள். அவர்கள் ஜனங்களுக்கு உதவுவதற்காகவும் சேவை செய்வதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 12 ஆனால் அந்த லேவியர்கள் எனக்கு விரோதமாகப் பாவம் செய்வதற்கு உதவினார்கள்! அவர்கள், விக்கிரகங்களைத் தொழுதுக்கொள்ள ஜனங்களுக்கு உதவி செய்தார்கள்! எனவே நான் அவர்களுக்கு விரோதமாக இந்த ஆணையைச் செய்கிறேன்: ‘அவர்கள் தமது பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவார்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

13 “எனவே ஆசாரியர்களைப்போன்று லேவியர்கள் காணிக்கைகளை எனக்குக் கொண்டுவரமாட்டார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான பொருட்களுக்கு அருகிலே வரமாட்டார்கள். அல்லது மிகப் பரிசுத்த பொருட்களுக்கு அருகிலும் வரமாட்டார்கள். அவர்கள் தாங்கள் செய்த அருவருப்பான செயல்களுக்காக அவமானங்களைச் சுமக்க வேண்டும். 14 ஆனால், அவர்கள் ஆலயத்தின் பொறுப்பை எடுத்துக்கொள்ள அனுமதிப்பேன். அவர்கள் ஆலயத்திற்குள் வேலைசெய்வார்கள். செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்வார்கள்.

15 “ஆசாரியர்கள் அனைவரும் லேவியர் வம்சத்திலிருந்து வந்தவர்கள். ஆனால் இஸ்ரவேலர்கள் என்னை விட்டு விலகிப் போனபோது, சாதோக்கின் குடும்பத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் மட்டுமே எனது பரிசுத்தமான இடத்தைக் கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். எனவே சாதோக்கின் குடும்பத்தார் மட்டுமே எனக்கு காணிக்கை கொண்டுவரவேண்டும். அவர்கள் எனக்கு முன்னே நின்று கொழுப்பையும் இரத்தத்தையும் செலுத்துவார்கள்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். 16 “அவர்கள் எனது பரிசுத்தமான இடத்திற்குள் நுழைவார்கள். எனக்கு சேவை செய்ய என் பீடத்தின் அருகில் வருவார்கள். நான் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களைக் கவனித்துக்கொள்வார்கள். 17 அவர்கள் உள் பிரகாரத்தின் வாசலுக்குள் நுழைகிறபோது சணல்நூல் ஆடைகளை அணிந்துகொள்வார்கள். அவர்கள் உட்பிரகாரத்தின் வாசல்களிலும் உள்ளேயும் ஆராதனை செய்யும்போது ஆட்டுமயிர் ஆடையை அணியக் கூடாது. 18 அவர்கள் தம் தலையில் சணல் தலைப்பாகை அணிவார்கள். அவர்கள் தம் இடைகளில் சணல் நூல் உள்ளாடைகளைக் கட்டுவார்கள். வியர்வை உண்டாக்கத்தக்க எந்த ஆடைகளையும் அவர்கள் அணியமாட்டார்கள். 19 அவர்கள் வெளிப் பிரகாரமாகிய புறமுற்றத்திலுள்ள ஜனங்களிடம் போகும்போது, தாங்கள் ஆராதனை செய்யும்போது அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி விடுவார்கள். அவற்றை பரிசுத்த அறைகளில் வைப்பார்கள். பிறகு அவர்கள் வேறு ஆடைகளை அணிவார்கள், இவ்வாறு அவர்கள் தம் பரிசுத்தமான ஆடைகளை ஜனங்கள் தொடவிடமாட்டார்கள்.

20 “இந்த ஆசாரியர்கள் தம் தலைகளைச் சிரைக்கவோ தங்கள் மயிரை நீளமாக வளர்க்கவோ மாட்டார்கள். இவ்வாறு செய்தால் அவர்கள் சோகமாய் இருப்பதாகக் காட்டும். கர்த்தருக்குச் சேவைசெய்யும்போது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். எனவே அவர்கள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளவேண்டும். 21 அவர்கள் உட்பிரகாரத்திற்குள் செல்லும்போது எந்த ஆசாரியரும் திராட்சைரசம் குடித்திருக்கக் கூடாது. 22 ஆசாரியர்கள் ஒரு விதவையையோ, விவாகரத்து பெற்றவளையோ மணக்கக் கூடாது. அவர்கள் இஸ்ரவேல் வம்சத்திலுள்ள கன்னிப் பெண்களையோ அல்லது மரித்துப்போன ஆசாரியனின் விதவையையோ மாத்திரம் மணந்துக்கொள்ளலாம்.

23 “அதோடு ஆசாரியர்கள் ஜனங்களுக்குப் பரிசுத்தமானவை எவை என்றும் பரிசுத்தமற்றவை எவை என்றும் கற்பிக்கவேண்டும். அவர்கள், எனது ஜனங்கள் சுத்தமானவை எவையென்றும், சுத்தமற்றவை எவை என்றும் தெரிந்துகொள்ள உதவவேண்டும். 24 ஆசாரியர்கள் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பார்கள். எனவே, ஜனங்களை அவர்கள் நியாயம்தீர்க்கும்போது எனது சட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். எனது அனைத்து சிறப்புப் பண்டிகைகளிலும் அவர்கள் என் நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையுமே கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் எனது சிறப்பு ஓய்வு நாட்களை மதித்து அவற்றைப் பரிசுத்தமாகக் கைக்கொள்ள வேண்டும். 25 அவர்கள் மரித்த உடல்களுக்கு அருகில் போய்த் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது, ஆனால் மரித்துப்போனவர்கள் ஆசாரியரின் தந்தை, தாய், மகன், மகள், சகோதரன் அல்லது மணமாகாத சகோதரியாக இருந்தால் அவர்கள் அதன் மூலம் தீட்டடைந்தாலும் அதன் அருகில் போகலாம். 26 அது ஆசாரியனை தீட்டுப்படுத்தும். பிறகு, ஆசாரியன் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்ட பிறகு ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும். 27 பிறகே அவனால் பரிசுத்தமான இடத்திற்குத் திரும்பிப் போகமுடியும். ஆனால் அவன் உட்பிரகாரத்திற்குள் ஆராதனைக்குச் செல்லும் நாளில் அவன் தனக்காகப் பாவப்பரிகாரப் பலியைக் கொடுக்கவேண்டும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

28 “லேவியர்களுக்குரிய நிலங்களைப்பற்றியது: நானே அவர்களின் சொத்து. நீங்கள் இஸ்ரவேலில் லேவியர்களுக்கென்று எந்தச் சொத்தும் கொடுக்க வேண்டாம். நானே இஸ்ரவேலில் அவர்களின் பங்கு. 29 அவர்கள் உண்பதற்காக தானியக் காணிக்கை, பாவப்பரிகாரப் பலி, குற்றநிவாரணபலி ஆகியவற்றைப் பெறுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கென்று கொடுக்கும் அனைத்தும் அவர்களுக்கு உரியதாகும். 30 எல்லாவகை விளைச்சலிலும் உள்ள முதல் அறுவடை ஆசாரியர்களுக்கு உரியதாகும். நீங்களும் உங்களது பிசைந்த மாவின் முதல் பகுதியைக் கொடுப்பீர்கள். அது உங்கள் வீட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். 31 ஆசாரியர்கள் இயற்கையாக மரித்துப்போன எந்தப் பறவைகளையோ மிருகங்களையோ உண்ணக்கூடாது. காட்டு மிருகங்களால் துண்டுத் துண்டாகக் கிழித்தெறியப்பட்டவற்றையும் அவர்கள் உண்ணக் கூடாது.

பரிசுத்த பயன்பாட்டிற்காக நிலம் பிரிக்கப்படுதல்

45 “நீங்கள் சீட்டுப்போட்டு இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நிலங்களைப் பங்கு வைத்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நிலத்தின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிக்க வேண்டும். இது கர்த்தருக்குரிய பரிசுத்தமான பகுதியாகும். அந்நிலம் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6 மைல்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். இந்நிலம் முழுவதும் பரிசுத்தமானதாக இருக்கும். 500 முழம் (875’) சதுரமுள்ள இடம் ஆலயத்துக்குரியது, 50 முழம் (875’) அகலமுடைய திறந்த வெளி இடம் ஆலயத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டும். பரிசுத்தமான இடத்தில் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் கொண்ட இடம் அளந்தெடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் ஆலயம் அமைக்க வேண்டும். ஆலயப் பகுதி மிகவும் பரிசுத்தமான இடமாக இருக்கும்.

“நிலத்தின் பரிசுத்தமான பகுதியானது, ஆசாரியர்களுக்கும் கர்த்தருக்கு அருகில் போய் ஆராதனை செய்யும் ஆலயப் பணியாளர்களுக்கும் உரியது. இது ஆசாரியர்களின் வீடுகளுக்கும் ஆலயத்திற்கும் உரியது. இன்னொரு பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் உடையதாக ஆலயத்தில் பணிபுரியும் லேவியர்களுக்காக இருக்கவேண்டும். இந்த நிலமும் லேவியர்கள் வாழ்வதற்குரிய இடமாக இருக்கும்.

“நீங்கள் நகரத்துக்கென்று 5,000 முழம் (1.6 மைல்) அகலமும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் கொண்ட இடம் தரவேண்டும். இது பரிசுத்தமான பகுதிக்கு அருகிலேயே இருக்கவேண்டும். இது இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் உரியதாக இருக்கும். அதிபதி பரிசுத்தமான பகுதியின் இருபக்கங்களிலுள்ள நிலத்தையும் நகரத்திற்குச் சொந்தமான நிலத்தையும் பெறுவான். இது பரிசுத்தமான பகுதிக்கும் நகரப்பகுதிக்கும் இடையில் இருக்கும். இது வம்சத்தாருக்குரிய பகுதியின் பரப்பைப் போன்ற அளவுடையதாக இருக்க வேண்டும். இதன் நீளம் மேல் எல்லை தொடங்கி கீழ் எல்லை மட்டும் இருக்கும். இது இஸ்ரவேலில் அதிபதியின் சொத்தாக இருக்கும். எனவே அதிபதி எனது ஜனங்களை என்றைக்கும் துன்பப்படுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால், அவர்கள் அந்த நிலத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களின் கோத்திரங்களுக்குத் தக்கதாகக் கொடுப்பார்கள்!”

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “போதும் இஸ்ரவேல் அதிபதிகளே! கொடூரமாக இருப்பதை நிறுத்துங்கள்! ஜனங்களிடம் கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள்! நேர்மையாக இருங்கள். நன்மையைச் செய்யுங்கள். என் ஜனங்களை வீட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தாதீர்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

10 “ஜனங்களை ஏமாற்றுவதை விடுங்கள். சரியான படிக்கற்களையும் அளவு கோல்களையும் பயன்படுத்துங்கள்! 11 மரக்காலும் அளவு குடமும் ஒரே அளவாய் இருக்கட்டும். மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் அளவுக்குடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கட்டும். கலத்தின்படியே அதன் அளவு நிர்ணயிக்கப்படட்டும். 12 ஒரு சேக்கல் இருபது கேரா, ஒரு மினா 60 சேக்கலுக்கு இணையாக வேண்டும். 20 சேக்கலுடன் 25 சேக்கலைச் சேர்த்து, அதோடு 15 சேக்கலைச் சேர்த்தால், அதற்கு இணையாக வேண்டும்.

13 “இது நீங்கள் கொடுக்கவேண்டிய சிறப்புக் காணிக்கை.

ஒரு கலம் (6 சேக்கல்) கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கையும் (14 கோப்பைகள்),

ஒரு கலம் (6 சேக்கல்) வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கைப் (14 கோப்பைகள்) படைக்க வேண்டும்:

14 அளவு குடத்தால் அளக்கவேண்டிய எண்ணெயின் கட்டளை:

பத்து குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி (55 கேலன்) எண்ணெயில் 1/10 பங்கை (1/2 கேலன்) படைக்க வேண்டும்.

15 இஸ்ரவேல் நாட்டிலே நல்ல மேய்ச்சல் மேய்கிற மந்தையிலே 200 ஆடுகளில் ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.

“இச்சிறப்பு காணிக்கை தானிய காணிக்கைக்காகவும் தகனபலியாகவும் சமாதான பலியாகவும் அமையும். இக்காணிக்கைகள் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்த உதவும்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறினார்.

16 “நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் அதிபதிக்கு இக்காணிக்கைகளைக் கொடுக்கவேண்டும். 17 ஆனால் அதிபதி சிறப்பான பரிசுத்த விடுமுறைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்கவேண்டும். அதிபதி தகனபலிகள், தானியக் காணிக்கைகள், பானங்களின் காணிக்கைகள் ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். இவற்றைப் பண்டிகை நாட்களிலும் அமாவாசை (மாதப் பிறப்பு) நாட்களிலும், ஓய்வு நாட்களிலும், இஸ்ரவேல் குடும்பத்தாரின் மற்ற எல்லாச் சிறப்புப் பண்டிகை நாட்களிலும் கொடுக்கவேண்டும். அதிபதி பாவப்பரிகாரக் பலிகளையும், தானியக் காணிக்கைகளையும், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் இஸ்ரவேல் வம்சத்தாரை பரிசுத்தப்படுத்துவதற்காகக் கொடுக்கவேண்டும்.”

18 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “முதல் மாதத்தின், முதல் நாளில், பழுதற்ற ஒரு இளங்காளையை எடுக்கவேண்டும். நீங்கள் அதனை ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தவேண்டும். 19 ஆசாரியன் பாவப் பரிகார இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆலயத்தின் வாசல் தூண்களிலும் பலிபீடத்தின் சட்டத்து நான்கு மூலைகளிலும் உட்பிரகாரத்தின் வாசல் நிலைகளிலும் பூசவேண்டும். 20 நீங்கள் இதேபோன்று மாதத்தின் ஏழாவது நாளிலும் தவறுதலாகவோ அல்லது தெரியாமலோ பாவம் செய்த ஒருவனுக்காகச் செய்யலாம். இவ்வாறு நீங்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தலாம்.

பஸ்கா பண்டிகையின்போது கொடுக்கவேண்டிய காணிக்கைகள்

21 “முதல் மாதத்தின் 14வது நாளன்று நீங்கள் பஸ்காவைக் கொண்டாடவேண்டும். இந்த நேரத்தில் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை தொடங்கும். அப்பண்டிகை ஏழுநாட்கள் தொடரும். 22 அந்த நேரத்தில் அதிபதி தானே ஒரு இளங்காளையை அவனுக்காகவும், எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்காகவும் பாவப்பரிகாரம் செய்வதற்காகக் கொடுப்பான். 23 ஏழு நாள் பண்டிகையின்போது அதிபதி ஏழு இளங்காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பழுதற்றதாகக் கொடுக்க வேண்டும். அவை கர்த்தருக்குரிய தகனபலியாக அமையும். ஏழு நாள் பண்டிகையில் ஒவ்வொரு நாளும் ஒரு இளங்காளையைக் கொடுப்பான். அவன் ஒவ்வொரு நாளும் ஒரு ஆட்டுக்கடாவை பாவப் பரிகார பலியாக கொடுப்பான். 24 ஒவ்வொரு காளையோடும் ஒரு மரக்கால் மாவையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடு ஒரு எப்பா வாற் கோதுமை மாவையும் கொடுப்பான். அதிபதி ஒருபடி (1 கேலன்) எண்ணெயையும் கொடுப்பான். 25 ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் தொடங்குகிற கூடாரப் பண்டிகையிலே அவன் அப்படியே ஏழு நாளும் அதற்குச் சரியானபடிச் செய்ய வேண்டும். அப்பலிகள் பாவப்பரிகாரப் பலியாகவும் தகனபலியாகவும் தானியக் காணிக்கையாகவும் எண்ணெய் காணிக்கையாகவும் அமைய வேண்டும்.”

அதிபதியும் பண்டிகைகளும்

46 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். “உட்பிரகாரத்தின் கிழக்கு வாசல் ஆறு வேலை நாட்களிலும் பூட்டப்பட்டிருக்கும், அது ஓய்வு நாளிலும், அமாவாசை நாளிலும் திறக்கப்படும். அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து வாசலருகில் நிற்பான். பிறகு ஆசாரியர்கள் அதிபதியுடைய தகன பலிகளையும், சமாதான பலிகளையும் படைப்பார்கள். அதிபதி வாசல் படியிலேயே தொழுகை செய்வான். பிறகு அவன் வெளியேறுவான். அந்த வாசல் மாலைவரை பூட்டப்படாமல் இருக்கும். பொது ஜனங்கள் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் தொழுகை நடத்துவார்கள்.

“அதிபதி ஓய்வு நாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலியைத் தருவான். அவன் பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக் கடாவுமே தருவான். ஆட்டுக் கடாவோடு தானியக் காணிக்கையாக ஒரு மரக்கால் மாவைக் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகளோடே தானியக் காணிக்கையாக தன்னால் முடிந்தவரை கொடுக்க வேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் கொடுக்க வேண்டும்.

“அமாவாசை நாளிலோ, பழுதற்ற இளங்காளையை அவன் கொடுக்கவேண்டும். அவன் பழுதற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளையும் ஒரு ஆட்டுக் கடாவையும் பலிகொடுக்கவேண்டும். தானியக் காணிக்கையாக இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவைக் கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக் குட்டிகளோடு தானியக்காணிக்கையை தனக்கு முடிந்தவரை கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடு ஒருபடி எண்ணெயையும் கொடுக்க வேண்டும்.”

அதிபதி வருகிறபோது, “கிழக்கு வாசலின் மண்டபத்தின் வழியாய் நுழைந்து அதன் வழியாகத் திரும்பிப்போக வேண்டும்.

“பொது ஜனங்கள் சிறப்புப் பண்டிகை நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, தொழுகை செய்ய வடக்கு வாசல் வழியாக வந்து தெற்கு வாசல் வழியாகப் போக வேண்டும். அவன் தான் நுழைந்த வாசல் வழியாக திரும்பிப் போகாமல் தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப் போக வேண்டும். 10 அவர்கள் நுழையும்போது அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடு கூட நுழைய வேண்டும். அவர்கள் புறப்படும்போது அவனும் அவர்களோடு கூடப் புறப்பட்டு போகவேண்டும்.

11 “பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட சிறப்புக் கூட்டங்களிலும் அவன் படைக்கும் தானியக் காணிக்கையாவது: அவன் ஒவ்வொரு இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக் கடாவோடும், ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக்குட்டிகளோடு அவனால் முடிந்தவரை தானியக் காணிக்கையைக் கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடும் ஒருபடி எண்ணெய் கொடுக்க வேண்டும்.

12 “அதிபதி சுயவிருப்பக் காணிக்கையை கர்த்தருக்குச் செலுத்தும்போது அது தகன பலியாயிருக்கலாம், அல்லது சமாதான பலியாயிருக்கலாம். அல்லது சுயவிருப்பக் காணிக்கையாயிருக்கலாம். அவனுக்குக் கிழக்கு வாசல் திறக்கப்படவேண்டும். அப்பொழுது அவன் ஓய்வு நாட்களில் செய்கிறதுபோல தன் தகனபலியையும் சமாதான பலியையும் செலுத்தி பின்பு புறப்படவேண்டும். அவன் புறப்பட்ட பின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.

தினசரி காணிக்கை

13 “நீ ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஆட்டுக் குட்டியைக் கொடுப்பாய். இது ஒவ்வொரு நாளும் கர்த்தருக்குத் தகன பலியாக இருக்கும். நீ இதனை ஒவ்வொரு நாள் காலையிலும் கொடுப்பாய். 14 அதோடு ஒவ்வொரு நாள் காலையிலும் நீ ஆட்டுக் குட்டியோடு தானியக் காணிக்கையாக ஒரு மரக்கால் மாவிலே 1/6 பங்கு (14 கோப்பை) ஒரு படி எண்ணெயிலே 1/3 பங்கு (1/3 கேலன்) எண்ணெயை மாவைப் பிசைவதற்காகவும் கொடுக்க வேண்டும். இது கர்த்தருக்குத் தினந்தோறும் கொடுக்க வேண்டிய தானியக் காணிக்கையாகும். 15 எனவே அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் தகன பலியாக ஆட்டுக்குட்டியையும் எண்ணெயையும் தானியக் காணிக்கையையும் செலுத்த வேண்டும்.”

அதிபதிக்குரிய வாரிசுச் சட்டங்கள்

16 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “ஒரு அதிபதி தனது நிலத்திலுள்ள ஒரு பங்கைத் தன் மகன்களில் ஒருவனுக்குக் கொடுத்தால் அது அம்மகனுக்குரியதாகும். அது அவனுடைய சொத்தாகும். 17 ஆனால் அவன் தன் அடிமைகளில் ஒருவனுக்குத் தன் நிலத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால் அது விடுதலையடையும் ஆண்டுவரை (யூபிலிவரை) அவனுடையதாக இருக்கும். பிறகு, அது திரும்பவும் அதிபதியின் உடமையாகும். அதிபதி மகன்களுக்கு மட்டுமே அது உரியதாகும். அது அவர்களுடையதாக இருக்கும். 18 அதிபதி தன் ஜனங்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முடியாது. அல்லது அவன் அவர்களைப் பலவந்தமாக நிலத்தைவிட்டு வெளியேற்ற முடியாது. அவன் தன் சொந்த நிலத்தையே தன் மகன்களுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு எனது ஜனங்கள் தம் நிலத்தை இழக்கும்படி பலவந்தப்படுத்தப்படமாட்டார்கள்.”

சிறப்பான சமயலறைகள்

19 அம்மனிதன் வாசலின் பக்கத்தில் இருந்த நடை வழியாய் என்னை அழைத்துப் போனான். அவன் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்தமான அறைகளுக்கு அழைத்துப்போனான். அங்கே பாதைக்கு மேற்புறக் கடைசியில் ஒரு இடம் இருப்பதைப் பார்த்தேன். 20 அம்மனிதன் என்னிடம் சொன்னான்: “இந்த இடம்தான் ஆசாரியர்கள் குற்றநிவாரணப் பலியையும் பாவப்பரிகார பலியையும், தானியக் காணிக்கையையும் சமைக்கிற இடம். ஏனென்றால், வெளிப்பிரகாரத்திலே கொண்டுபோய் இந்த காணிக்கைகளை ஜனங்களிடம் காட்ட வேண்டிய தேவையில்லை. எனவே, அவர்கள் பரிசுத்தமான இப்பொருட்களைப் பொது ஜனங்கள் இருக்கிற இடத்திற்குக் கொண்டுவரமாட்டார்கள்.”

21 பிறகு, அம்மனிதன் என்னை வெளிப்பிரகாரத்திற்கு அழைத்துக்கொண்டு போனான். என்னைப் பிரகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்து போகச் செய்தான். பெரிய முற்றத்தின் ஒவ்வொரு மூலையிலும் சிறிய முற்றங்கள் இருப்பதைக் கண்டேன். 22 பிரகாரத்தின் நாலு மூலைகளிலும் வேலியடைக்கப்பட்ட சிறுபகுதி இருந்தது. ஒவ்வொரு முற்றமும் 40 முழம் (70’) நீளமும் 30 முழம் (52’6”) அகலமும் உடையது. நான்கு மூலைகளும் ஒரே அளவுடையதாக இருந்தன. 23 உள்ளே இந்த நாலு சிறு முற்றங்களைச் சுற்றிலும் செங்கல் சுவர்கள் இருந்தன. இந்தச் சுவர்களுக்குள் சமைப்பதற்கான இடங்கள் கட்டப்பட்டிருந்தன. 24 அம்மனிதன் என்னிடம் சொன்னான்: “இவை, ஜனங்கள் தரும் பலிகளை ஆலயத்தின் வேலைக்காரர்கள் சமைக்கிற சமையலறைகள்.”

ஆலயத்திலிருந்து வெளியே வழிந்தோடும் தண்ணீர்

47 அம்மனிதன் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்ப வரச்செய்தான். ஆலயத்தின் கிழக்கு வாசலின் கீழிருந்து தண்ணீர் கிழக்கே ஓடுவதைப் பார்த்தேன். ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது. அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது. அம்மனிதன் என்னை வடக்கு வாசல் வழியாக வெளியே நடத்திச் சென்றான். அவன் என்னை வெளியே கீழ்த்திசையின் புறவாசல் வரை சுற்றி நடத்திக் கொண்டு போனான். அங்கே தண்ணீர் வாசலின் தெற்கே பாய்ந்தது.

அம்மனிதன் தனது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கே நடந்தான். அவன் 1,000 முழம் (1/3 மைல்) அங்கே அளந்தான். பிறகு அவன் என்னிடம் அந்த இடத்தில் தண்ணீரைக் கடக்கச் சொன்னான். அத்தண்ணீர் என் கணுக்கால் அளவுக்கு இருந்தது. அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். அங்கே அவன் என்னைத் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் முழங்கால் அளவாய் இருந்தது. பிறகு, அவன் இன்னொரு 1,000 முழம் (1/3 மைல்) அளந்து, அந்த இடத்தில் என்னிடம் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் என் இடுப்பளவிற்கு இருந்தது. அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். ஆனால் அங்கே தண்ணீர் கடக்க முடியாத அளவிற்கு ஆழமாக இருந்தது. அது ஆறு போல இருந்தது. அந்தத் தண்ணீர் நீந்துகிற அளவிற்கு ஆழமாயிருந்தது. பிறகு அம்மனிதன் என்னிடம், “மனுபுத்திரனே, நீ பார்த்ததை உன்னிப்பாகக் கவனித்தாயா?” என்றான்.

பிறகு என்னை, நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டு போனான். நான் நடந்து வரும்போது இதோ நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் அநேக மரங்கள் இருந்தன. அம்மனிதன் என்னிடம், “இந்தத் தண்ணீர் புறப்பட்டு கிழக்கே போய், கீழே அரபா பள்ளத்தாக்கிற்கு போகிறது. இந்தத் தண்ணீர் சவக்கடலுக்குள் பாயும். அதனால் அக்கடலிலுள்ள தண்ணீர் புத்துயிரும் சுத்தமும் அடையும். இத்தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த ஆறு போகிற இடங்களில் எல்லாம் எல்லா வகை மிருகங்களும் உள்ளன. 10 என்கேதி முதல் எனெக்லாயிம் வரை மீன் பிடிக்கிறவர்கள் ஆற்றங்கரையில் நிற்பதை நீ பார்க்கமுடியும். அவர்கள் தம் வலையை வீசி பலவகை மீன்கள் பிடிப்பதை நீ பார்க்க முடியும். சவக்கடலிலுள்ள மீன்கள் மத்திய தரைக் கடலில் உள்ள மீன்களைப்போன்று பலவகைகளாகவும் மிகுதியாகவும் இருக்கும். 11 ஆனாலும் அதனுடைய உளையான பள்ளங்களும் மேடுகளும் வளம் பெறாமல் உப்பு நிலமாகவே விடப்படும். 12 எல்லாவகையான பழ மரங்களும் ஆற்றின் இரு கரைகளிலும் வளரும். அவற்றின் இலைகள் காய்ந்து உதிர்வதில்லை. அம்மரங்களில் பழங்கள் பழுப்பது நிற்பதில்லை. ஒவ்வொரு மாதமும் மரங்களில் பழங்கள் வரும். ஏனென்றால், இம்மரங்களுக்கான தண்ணீர் ஆலயத்திலிருந்து வருகின்றது. அம்மரங்களின் கனிகள் உணவாகவும் அவற்றின் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center