Bible in 90 Days
ஸ்தேவானுக்கு எதிராக யூதர்கள்
8 ஸ்தேவான் மிகுந்த ஆசீர்வாதத்தைப் பெற்றான். தேவனிடமிருந்து ஸ்தேவானும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் தேவனிடமிருந்து மக்களுக்குச் சான்றுகளைக் காட்டும் வல்லமையையும் பெற்றிருந்தான். 9 ஆனால் சில யூதர்கள் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். அவர்கள் ஒரு யூத ஜெப ஆலயத்திலிருந்து வந்திருந்தனர். அது விடுதலை பெற்ற யூதர்களுக்குரிய ஜெப ஆலயமாக இருந்தது. (இந்த ஜெப ஆலயம் சிரேனே, அலெக்ஸாண்டிரியா ஆகிய இடங்களிலுள்ள யூதர்களுக்கு உரியது) சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களின் யூதர்களும் அவர்களோடிருந்தனர். அவர்கள் எல்லோரும் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். 10 ஞானத்தோடு பேசுவதற்கு ஆவியானவர் ஸ்தேவானுக்கு உதவினார். அவனுடைய வலிமையான சொற்கள் யூதர்கள் அவனோடு வாதிட முடியாதபடி செய்தன.
11 எனவே யூதர்கள் சில மனிதர்களுக்குக் கூலி கொடுத்து “மோசேக்கு எதிராகவும், தேவனுக்கெதிராகவும் ஸ்தேவான் தீயவற்றைக் கூறுவதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் செய்தார்கள். 12 இவ்வாறு செய்ததால் யூதர்கள் மக்களையும். முதிய யூதத் தலைவர்களையும், வேதபாரகரையும் கலக்கமுறச் செய்தனர். அவர்கள் மிகுந்த கோபமடைந்து ஸ்தேவானிடம் வந்து அவனைப் பிடித்தனர். யூத அதிகாரிகள் கூடியிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர்.
13 யூதர்கள் சிலரை அக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். ஸ்தேவானைக் குறித்துப் பொய் சொல்லும்படி அவர்களுக்கு யூதர்கள் கூறியிருந்தனர். அந்த மனிதர்கள், “இவன் எப்போதும் பரிசுத்தமான இடத்தைக் குறித்துக் கெட்டதையே சொல்கிறான். மோசேயின் சட்டத்திற்கு எதிராகவே எப்போதும் சொல்கிறான். 14 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்று அவன் கூறியதை நாங்கள் கேட்டோம். நாம் கடைப்பிடிக்குமாறு மோசே சொன்னவற்றை இயேசு மாற்றுவார் என்றும் அவன் கூறினான்” என்றனர். 15 கூட்டத்தில் அமர்ந்திருந்த மக்கள் எல்லோரும் ஸ்தேவானைக் கூர்ந்து நோக்கினர். அவனது முகம் தேவதூதனின் முகத்தைப்போன்று தோன்றியது. அவர்கள் அதைக் கண்டனர்.
ஸ்தேவானின் பேச்சு
7 தலைமை ஆசாரியன் ஸ்தேவானை நோக்கி, “இந்தக் காரியங்கள் எல்லாம் உண்மைதானா?” என்று கேட்டான். 2 ஸ்தேவான் பதிலாக, “எனது யூத தந்தையரே, சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். மகிமைபொருந்திய நமது தேவன் நமது தந்தையாகிய ஆபிரகாமுக்குக் காட்சி கொடுத்தார். ஆபிரகாம் மெசொபொதாமியாவில் இருந்தார். அவர் ஆரானில் வாழ்வதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. 3 தேவன் ஆபிரகாமை நோக்கி, ‘உன் நாட்டையும் உன் உறவினர்களையும் விட்டுவிட்டு, நான் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ [a] என்றார்.
4 “எனவே ஆபிரகாம் கல்தேயா நாட்டை விட்டுச் சென்றார். ஆரானில் வசிப்பதற்காகச் சென்றார். ஆபிரகாமின் தந்தை இறந்த பிறகு, நீங்கள் இப்போது வசிக்கிற இந்த இடத்திற்கு தேவன் அவரை அனுப்பினார். 5 ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு இந்த நாட்டில் எதையும் கொடுக்கவில்லை. ஒரு அடி நிலம் கூடக் கொடுக்கவில்லை. ஆனால் ஆபிரகாமுக்கும் அவர் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இந்நாட்டைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்தார். (ஆபிரகாமுக்குக் குழந்தை இல்லாதிருந்தபோது இது நடந்தது)
6 “தேவன் அவருக்குக் கூறியது இதுவாகும். ‘உன் சந்ததியர் மற்றொரு நாட்டில் வாழ்வர். அவர்கள் அந்நியர்களாயிருப்பர். அந்நாட்டின் மக்கள் அவர்களை அடிமைப்படுத்துவர். [b] 400 வருடங்களுக்கு அவர்களை மோசமாக நடத்துவர். 7 ஆனால் அவர்களை அடிமையாக்கிய நாட்டினரை நான் தண்டிப்பேன்.’ தேவன் மேலும், ‘இந்தக் காரியங்கள் நடந்தபின் உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர்’ [c] என்றார்.
8 “தேவன் ஆபிரகாமோடு ஓர் உடன்படிக்கை பண்ணினார். இந்த உடன்படிக்கையின் அடையாளமே விருத்த சேதனமாகும். எனவே ஆபிரகாமுக்கு ஒரு மகன் பிறந்ததும், அவன் பிறந்து எட்டு நாட்களான பின் ஆபிரகாம் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். அவரது மகனின் பெயர் ஈசாக்கு. ஈசாக்கும் தனது மகன் யாக்கோபுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். யாக்கோபும் தனது மக்களுக்கு அதைச் செய்தார். அந்த மகன்களே பின்னர் பன்னிரண்டு தந்தையராக மாறினர்.
9 “இந்தத் தந்தையர் யோசேப்பைக் (அவர்களது இளைய சகோதரன்) கண்டு பொறாமை கொண்டனர். எகிப்தில் ஒரு அடிமையாக யோசேப்பை அவர்கள் விற்றனர். ஆனால் தேவன் யோசேப்போடு இருந்தார். 10 யோசேப்புக்கு அங்கு பல தொல்லைகள் நேர்ந்தாலும், தேவன் அத்தொல்லைகள் எல்லாவற்றிலிருந்தும் அவரைக் காப்பாற்றினார். பார்வோன் எகிப்தின் அரசனாக இருந்தான். அவன் யோசேப்புக்கு தேவன் கொடுத்த ஞானத்தைக் கண்டு அவரை விரும்பவும் நேசிக்கவும் செய்தான். எகிப்தின் ஆளுநர் வேலையைப் பார்வோன் யோசேப்புக்குக் கொடுத்தான். பார்வோனின் வீட்டிலுள்ள எல்லா மக்களையும் ஆளுவதற்கும் யோசேப்பை பார்வோன் அனுமதித்தான். 11 ஆனால் எகிப்திலும், கானானிலுமிருந்த எல்லா நிலங்களும் வறண்டு போயின. அங்கு உணவு தானியங்கள் வளர முடியாதபடிக்கு நாடு வறட்சியுற்றது. இது மக்களுக்குப் பெரும் துன்பத்தை விளைவித்தது. நமது தந்தையருக்கு உண்பதற்கு எதுவும் அகப்படவில்லை.
12 “ஆனால் எகிப்தில் உணவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதை யாக்கோபு கேள்விப்பட்டார். எனவே அவர் நமது தந்தையரை அங்கு அனுப்பினார். (இது எகிப்துக்கு அவர்களின் முதற்பயணமாயிருந்தது.) 13 பின்னர், அவர்கள் இரண்டாம் முறையாகவும் அங்கு சென்றார்கள். இந்தத் தடவை யோசேப்பு தன் சகோதரர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். பார்வோனுக்கும் யோசேப்பின் குடும்பத்தைக் குறித்துத் தெரிய வந்தது. 14 பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார். 15 எனவே யாக்கோபு எகிப்திற்குப் போனார். யாக்கோபும் நமது தந்தையரும் அவர்களின் மரணம் மட்டும் அங்கு வாழ்ந்தனர். 16 பின்னர் அவர்கள் சரீரங்கள் சீகேமுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் அங்கு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டனர். (வெள்ளியைக் கொடுத்து ஏமோரின் மகன்களிடமிருந்து சீகேமில் ஆபிரகாம் வாங்கிய கல்லறை அது.)
17 “எகிப்தில் யூத மக்களின் தொகை பெருகியது. நமது மக்கள் அங்கு மென்மேலும் பெருகினர். (தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருந்தது) 18 பின் இன்னொரு மன்னன் எகிப்தை ஆளத் தொடங்கினான். அவனுக்கு யோசேப்பைப்பற்றி எதுவும் தெரியாது. 19 இந்த மன்னன் நமது மக்களை ஏமாற்றினான். நம் முன்னோருக்கு அவன் தீமை செய்தான். அம்மன்னன் அவர்களது குழந்தைகளை இறக்கும்படியாக வெளியே போடும்படிச் செய்தான்.
20 “இக்காலத்தில் தான் மோசே பிறந்தார். அவர் அழகான குழந்தையாகவும் தேவனுக்கு இனிமையானவராகவும் இருந்தார். தன் தந்தையின் வீட்டில் மூன்று மாத காலத்துக்கு மோசேயை வைத்துப் பராமரித்தார்கள். 21 மோசேயை வெளியில் விட்டபொழுது பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தன் சொந்தக் குழந்தையைப் போன்றே வளர்த்தாள். 22 தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார்.
23 “மோசே நாற்பது வயதாக இருந்தபோது தன் சகோதரர்களான யூத மக்களைச் சந்திப்பது நல்லது என்று நினைத்தார். 24 எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான். 25 தேவன் அவர்களை மீட்பதற்காக அவரைப் பயன்படுத்துவதை யூத சகோதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
26 “மறுநாள் இரண்டு யூதர்கள் சண்டையிடுவதை மோசே பார்த்தார். அவர்களுக்குள் அமைதியை நிலை நாட்ட அவர் முயன்றார். அவர், ‘மனிதரே, நீங்கள் இருவரும் சகோதரர்கள். நீங்கள் ஏன் ஒருவரையொருவர் மோசமாக நடத்துகிறீர்கள்?’ என்றார். 27 ஒருவனுக்கு எதிராகத் தவறிழைத்த மற்றொருவன் மோசேயைத் தள்ளிவிட்டான். அவன் மோசேயை நோக்கி, ‘நீ எங்கள் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் இருக்கும்படி யாராவது கூறினார்களா? இல்லை. 28 நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’ [d] என்றான். 29 அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.
30 “மோசே நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்தில் இருந்தார். எரிகின்ற புதரின் ஜூவாலையிலிருந்து ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றினான். 31 அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது. 32 தேவன் கூறினார், ‘ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் முன்னோரின் தேவன் நானே’ [e] என்றார். மோசே பயத்தால் நடுங்க ஆரம்பித்தார். அவர் புதரைப் பார்க்கவும் அஞ்சினார்.
33 “கர்த்தர் அவரிடம், ‘உன் மிதியடிகளைக் கழற்று. நீ நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் பரிசுத்த பூமி. 34 எகிப்தில் எனது மக்கள் மிகவும் துன்புறுவதைக் கண்டிருக்கிறேன். என் மக்கள் அழுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்துள்ளேன். மோசே! இப்பொழுது வா, நான் எகிப்திற்கு உன்னைத் திரும்பவும் அனுப்புகிறேன்’ [f] என்றார்.
35 “யூதர்கள் அவர்களுக்கு வேண்டாமெனக் கூறிய அதே மோசே அவர்தான். அவர்கள் அவரிடம், ‘நீ எங்களுக்கு அதிபதியாகவும், நீதிபதியாகவும் இருக்கமுடியுமென்று யாராவது கூறினார்களா? இல்லை!’ என்றனர். தேவன் அதிபதியாகவும் மீட்பராகவும் மோசேயாகிய அதே மனிதனை அனுப்பினார். தேவன் ஒரு தேவதூதனின் உதவியோடு மோசேயை அனுப்பினார். எரியும் புதரில் மோசே கண்ட தேவ தூதன் இவனே. 36 அதனால் மோசே மக்களை வெளியே நடத்திச் சென்றார். அவர் வல்லமை வாய்ந்த செயல்களையும் அற்புதங்களையும் செய்தார். எகிப்திலும், செங்கடலிலும், வானந்தரத்திலும் 40 ஆண்டுகள் இவற்றை மோசே செய்தார்.
37 “‘தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியைக் கொடுப்பார். உங்கள் மக்களிடமிருந்தே அந்தத் தீர்க்கதரிசி வருவார். அவர் என்னைப் போலவே இருப்பார்’ [g] என்று கூறிய அதே மோசேதான் அவர். 38 வனாந்தரத்தில் யூதர்களின் கூட்டத்தோடு இருந்தவர் இவரேதான். சீனாய் மலையில் தன்னோடு பேசிய தேவதூதனுடன் இருந்தார். நமது முன்னோரோடும் அவர் இருந்தார். மோசே தேவனிடமிருந்து ஜீவன் தரும் கட்டளைகளைப் பெற்றார். மோசே நமக்கு அந்தக் கட்டளைகளைக் கொடுத்தார்.
39 “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் அவரைத் தள்ளி ஒதுக்கினர். மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டுமென அவர்கள் விரும்பினர். 40 நம் தந்தையர் ஆரோனை நோக்கி, ‘மோசே நம்மை எகிப்து நாட்டிற்கு வெளியே வழி நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாங்கள் அறியோம். எனவே எங்களுக்கு முன்னே போகவும் எங்களுக்கு வழிகாட்டவும் சில தெய்வங்களை உண்டாக்கும்’ [h] என்றனர். 41 எனவே மக்கள் கன்றுக் குட்டியைப் போன்ற ஒரு சிலை உண்டாக்கினர். பின் அவர்கள் அதற்குப் படைப்பதற்காகப் பொருட்களைக் கொண்டு வந்தனர். தங்கள் கைகளால் உண்டாக்கிய அதனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர்! 42 ஆனால் தேவன் அவர்களுக்கு எதிராகத் திரும்பினார். வானத்திலுள்ள பொய்யான தெய்வங்களின் கூட்டத்தை வழிபடுவதிலிருந்து அவர்களைத் தடுப்பதை தேவன் நிறுத்திக்கொண்டார். தீர்க்கதரிசிகளின் நூலிலும் இவைதான் எழுதப்பட்டுள்ளன. தேவன் சொல்கிறார்,
“‘யூத மக்களாகிய நீங்கள் எனக்கு இரத்தபடைப்புக்களையோ பலிகளையோ 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் கொண்டு வரவில்லை.
43 உங்களோடு மோளேகிற்காக ஒரு கூடாரத்தையும் ரெம்பான் என்னும் நட்சத்திர உருவத்தையும் சுமந்து சென்றீர்கள்.
இந்த விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதற்காக உருவாக்கினீர்கள்.
எனவே நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்.’ (A)
44 “வனாந்தரத்தில் பரிசுத்தக் கூடாரம் [i] நமது முன்னோரிடம் இருந்தது. இந்தக் கூடாரத்தை எப்படி உண்டாக்குவது என்று தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் காட்டிய திட்டத்தின்படியே மோசே அதை உண்டாக்கினார். 45 பின்னால் பிற தேசங்களின் நிலங்களைக் கைப்பற்றும்படியாக யோசுவா நமது தந்தையரை வழி நடத்தினார். நமது மக்கள் அங்குச் சென்றபோது அங்கிருந்த மக்களை தேவன் வெளியேறும்படிச் செய்தார். நமது மக்கள் இப்புதிய நிலத்திற்குச் சென்றபொழுது, இதே கூடாரத்தைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். தாவீதின் காலம்வரைக்கும் நம் மக்கள் அதை வைத்திருந்தனர். 46 தேவன் தாவீதைக் குறித்து மகிழ்ந்தார். தாவீது தேவனிடம் யாக்கோபின் தேவனாகிய அவருக்கு ஒரு வீட்டைக் கட்ட அனுமதி வேண்டினான். 47 ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான்.
48 “ஆனால் உன்னதமானவர் மனிதர் தங்கள் கைகளால் கட்டும் வீடுகளில் வசிப்பதில்லை. தீர்க்கதரிசி இதனையே எழுதினார்.
49 “கர்த்தர் கூறுகிறார்,
‘வானம் எனது சிம்மாசனம்.
பூமி எனது பாதங்கள் வைக்கும் இடம்.
எனக்காக எவ்விதமான வீட்டைக் கட்டப்போகிறீர்கள்?
ஓய்வெடுக்க எனக்கு ஓர் இடம் தேவையில்லை.
50 நான் இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன் என்பதை நினைவுகூருங்கள்!’” (B)
என்றான்.
51 பின் ஸ்தேவான், “பிடிவாதமான யூதத் தலைவர்களே! நீங்கள் உங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுக்கவில்லை! நீங்கள் அவர் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கமாட்டீர்கள்! பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கூற முயல்வதை எப்போதும் எதிர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தந்தையர் இதைச் செய்தார்கள். நீங்களும் அவர்களைப் போலவே இருக்கிறீர்கள்! 52 உங்கள் தந்தையர் தங்கள் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் புண்படுத்தினார்கள். அந்தத் தீர்க்கதரிசிகள் வெகு காலத்திற்கு முன்பே நீதியுள்ள ஒருவர் வருவார் எனக் கூறினார்கள். ஆனால் உங்கள் தந்தையர் அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். இப்பொழுது நீங்கள் நீதியுள்ள அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளீர்கள். 53 மோசேயின் சட்டத்தைப் பெற்றவர்கள் நீங்கள். தமது தேவதூதர்களின் மூலமாகக் தேவன் இந்தச் சட்டத்தை உங்களுக்குக் கொடுத்தார். ஆனால் நீங்களோ இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை” என்றான்.
ஸ்தேவான் கொல்லப்படுதல்
54 இவற்றை ஸ்தேவான் கூறுவதை யூதத் தலைவர்கள் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் அடைந்தனர். யூதத் தலைவர்கள் பித்துப் பிடித்தவர்களைப்போல், ஸ்தேவானை நோக்கிப் பற்களைக் கடித்தனர். 55 ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக இருந்தான். ஸ்தேவான் வானத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் தேவனுடைய மகிமையைக் கண்டான். தேவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதைக் கண்டான். 56 ஸ்தேவான், “பாருங்கள்! பரலோகம் திறந்திருப்பதை நான் பார்க்கிறேன். தேவனுடைய வலபக்கத்தில் மனித குமாரன் நிற்பதை நான் காண்கிறேன்!” என்றான்.
57 பின் யூத அதிகாரிகள் எல்லோரும் உரத்த குரலில் சத்தமிட்டார்கள். அவர்கள் கைகளால் தமது காதுகளைப் பொத்திக்கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் ஸ்தேவானை நோக்கி ஓடினர். 58 அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியில் கொண்டு சென்று அவன் சாகும்வரை அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஸ்தேவானுக்கு எதிராகப் பொய் கூறியவர்கள் தங்களது மேலாடைகளை சவுல் என்னும் இளைஞனிடம் கொடுத்தார்கள். 59 பின் அவர்கள் ஸ்தேவானின் மேல் கற்களை வீசினார்கள். ஆனால் ஸ்தேவான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். அவன், “கர்த்தராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்!” என்றான். 60 அவன் முழங்காலில் நின்று, “கர்த்தரே! இந்தப் பாவத்திற்காக அவர்களைக் குற்றம் சாட்டாதிரும்!” என்று பிரார்த்தித்தான். இதைக் கூறிய பிறகு ஸ்தேவான் இறந்து போனான்.
8 ஸ்தேவானின் கொலை ஒரு நல்ல நிகழ்ச்சியே என்று சவுல் அச்சமயம் ஒப்புக்கொண்டான்.
விசுவாசிகளுக்கு உபத்திரவம்
2-3 சில நல்ல மனிதர்கள் ஸ்தேவானைப் புதைத்தனர். அவர்கள் அவனுக்காகச் சத்தமிட்டு அழுதனர். எருசலேமிலுள்ள விசுவாசிகளின் கூட்டத்திற்கு அன்றிலிருந்து யூதர்கள் தீங்கிழைக்க ஆரம்பித்தனர். அவர்களை அதிகமாகத் துன்புறுமாறு யூதர்கள் செய்தனர். அக்கூட்டத்தை அழிப்பதற்கு சவுலும் முயன்றுகொண்டிருந்தான். சவுல் அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்தான். அவர்களில் ஆண்களையும் பெண்களையும் வெளியே இழுத்து வந்து சிறைக்குள் தள்ளினான். எல்லா விசுவாசிகளும் எருசலேமைவிட்டு அகன்றனர். அப்போஸ்தலர்கள் மட்டுமே அங்குத் தங்கினர். யூதேயா, மற்றும் சமாரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் விசுவாசிகள் சென்றனர். 4 விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியிருந்தனர். விசுவாசிகள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கூறினர்.
சமாரியாவில் பிலிப்பு
5 பிலிப்பு சமாரியாவிலுள்ள ஒரு நகரத்திற்குச் சென்றான். அவன் கிறிஸ்துவைப் பற்றிப் போதித்தான். 6 அங்குள்ள மக்கள் பிலிப்பு கூறியதைக் கேட்டனர். அவன் செய்துகொண்டிருந்த அதிசயங்களைக் கண்டனர். பிலிப்பு கூறிய செய்திகளைக் கவனமாகக் கேட்டனர். 7 அம்மக்களில் பலரினுள்ளும் அசுத்த ஆவிகள் இருந்தன. அசுத்த ஆவிகள் அவர்களை விட்டுப் போகும்படியாக பிலிப்பு கட்டளையிட்டான். அவை வெளியே வந்தபோது, ஆவிகள் மிகுந்த சத்தமிட்டன. பாரிச வியாதிக்காரர்கள் பலரும், ஊனமுற்றவர்கள் பலரும் அங்கிருந்தனர். பிலிப்பு அவர்களையும் குணப்படுத்தினான். 8 இதனால் அந்நகர மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.
9 ஆனால் அந்நகரில் சீமோன் என்னும் பெயருள்ள மனிதன் இருந்தான். பிலிப்பு அங்கு வருமுன்னர், சீமோன் மந்திர தந்திரங்களைச் செய்தான். சமாரியா மக்களைத் தனது தந்திரங்களால் வியப்புறச் செய்தான். 10 முக்கியமான, மற்றும் முக்கியமற்ற மக்கள் அனைவரும் சீமோன் கூறியவற்றை நம்பினர். மக்கள், “‘மகத்தான வல்லமை’ எனப்படும் தேவனுடைய வல்லமை இம்மனிதனுக்கு உள்ளது!” என்றனர். 11 சீமோன் தனது மந்திர தந்திரங்களால் மக்களை நீண்ட நாட்களாக வியக்க வைத்தான். மக்கள் அவனைப் பின்பற்றுவோராயினர். 12 ஆனால் பிலிப்பு தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியையும், இயேசு கிறஸ்துவின் வல்லமையையும் மக்களுக்கு எடுத்துக் கூறினான். ஆண்களும் பெண்களும் பிலிப்புவை நம்பினர். அவர்கள் ஞானஸ்நானம் பெற்றனர். 13 சீமோனும் கூட நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் பெற்றான். சீமோன் பிலிப்புவோடு இருந்து வந்தான். பிலிப்பு செய்த அற்புதங்களையும், வல்லமைமிக்க காரியங்களையும் கண்ட சீமோன் வியப்படைந்தான்.
14 அப்போஸ்தலர்கள் இன்னும் எருசலேமில் இருந்தனர். தேவனுடைய வார்த்தையை சமாரியாவின் மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டார்கள். 15 ஆகவே பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பினார்கள். பேதுருவும் யோவானும் வந்தபோது சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர். 16 இந்த மக்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் ஒருவர்மீதும் இறங்கி வரவில்லை. இந்த நோக்கத்திற்காகப் பேதுருவும் யோவானும் பிரார்த்தனை செய்தனர். 17 இரண்டு அப்போஸ்தலர்களும் அவர்கள் கைகளை மக்கள் மீது வைத்தார்கள். அப்போது அம்மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றனர்.
18 அப்போஸ்தலர்கள் தமது கைகளை மக்கள் மீது வைத்தபோது ஆவியானவர் அவர்களுக்கு அளிக்கப் பெற்றதை சீமோன் பார்த்தான். எனவே சீமோன் அப்போஸ்தலர்களிடம் பணத்தைக் கொண்டுவந்து 19 “நான் ஒருவன் மீது எனது கையை வைத்ததும், அவன் பரிசுத்த ஆவியைப் பெறும்படிக்கு இந்த வல்லமையை எனக்குத் தாருங்கள்” என்றான்.
20 பேதுரு சீமோனை நோக்கி, “நீயும் உனது பணமும் அழிவைக் காணட்டும்! தேவனுடைய வரத்தைப் பணத்தால் வாங்க முடியும் என்று நீ எண்ணினாய். 21 இந்த வேலையில் நீ பங்கைப் பெறமுடியாது. தேவனுக்கு முன்பாக உனது இருதயம் நேர்மையாக இல்லை. 22 உனது மனதை மாற்று! நீ செய்த இந்தத் தீய காரியத்திலிருந்து விலகி விடு. கர்த்தரை நோக்கி பிரார்த்தனை செய். நீ இவ்வாறு நினைத்ததை அவர் மன்னிக்கக் கூடும். 23 நீ வெறுப்பினாலும், பொறாமையினாலும் நிரம்பி, பாவத்தால் ஆளப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன்” என்றான்.
24 சீமோன் பதிலாக, “கர்த்தரிடம் நீங்கள் இருவரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் சொன்னவை எனக்கு நேராதபடிக்கு பிரார்த்தனை செய்யுங்கள்!” என்றான்.
25 தாங்கள் கண்ட, இயேசு செய்த காரியங்களை, அப்போஸ்தலர்கள் மக்களுக்குக் கூறினர். கர்த்தரின் செய்தியை அப்போஸ்தலர் மக்களுக்குக் கூறினர். பின்பு அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். வழியில் அவர்கள் சமாரியர்களின் ஊர்கள் பலவற்றிற்குச் சென்று, மக்களுக்கு நற்செய்தியைப் போதித்தனர்.
எத்தியோப்பிய அதிகாரியும் பிலிப்புவும்
26 தேவதூதன் ஒருவன் பிலிப்புவிடம் பேசினான். “புறப்பட்டு தெற்கு நோக்கிச் செல். எருசலேமிலிருந்து காசாவிற்குப் போகும் பாதைக்குச் செல். அந்தப் பாதை பாலைவனம் வழியாகச் செல்கிறது” என்றான்.
27 எனவே பிலிப்பு தயாராகிப் புறப்பட்டுச் சென்றான். பாதையில் எத்தியோப்பியாவிலிருந்து வந்த மனிதன் ஒருவனைக் கண்டான். அம்மனிதன் ஆண்மையிழந்தவன். எத்தியோப்பியாவின் அரசியாகிய கந்தாகே என்பவளின் அலுவலரில் அவன் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தான். அவன் அவளது கருவூலத்திற்குப் பொறுப்பாயிருந்தான். அம்மனிதன் எருசலேமில் வழிபாடு செய்யச் சென்றிருந்தான். 28 இப்போது அவன் வீட்டிற்குப் பயணமாகிக்கொண்டிருந்தான். அவன் தனது இரதத்தில் அமர்ந்து தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தான்.
29 ஆவியானவர் பிலிப்புவை நோக்கி, “இரதத்தின் அருகே போய் காத்திரு” என்றார். 30 எனவே பிலிப்பு இரதத்தை நோக்கி ஓடினான். அம்மனிதன் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் நூலிலிருந்து வாசிப்பதைக் கேட்டான். பிலிப்பு அவனை நோக்கி, “நீ படித்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?” என்று கேட்டான்.
31 அம்மனிதன், “நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அதை விளக்கிச் சொல்லக் கூடிய ஒருவர் தேவை!” என்றான். அவன் பிலிப்புவை இரதத்தினுள் ஏறி, அவனோடு உட்காருமாறு வேண்டினான். 32 வேதவாக்கியத்தில் அவன் படித்துக்கொண்டிருந்த பகுதி இதோ,
“அவர் கொல்லப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆட்டைப் போன்றிருந்தார்.
அவர், தனது முடிவெட்டப்படுகிறபோது சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப் போன்றிருந்தார்.
33 அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவர் உரிமைகள் பறிக்கப்பட்டன.
உலகில் அவர் வாழ்க்கை முடிந்தது.
அவர் குடும்பம்பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை.” (C)
34 அதிகாரி பிலிப்புவிடம், “யாரைக் குறித்து தீர்க்கதரிசி சொல்கின்றார் என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள். தன்னைக் குறித்தா அல்லது வேறு யாரைக் குறித்து அவர் போசுகிறார்?” என்று கேட்டான். 35 பிலிப்பு பேச ஆரம்பித்தான். அவன் வேதவாக்கியத்தின் இந்தப் பகுதியிலிருந்து பேச ஆரம்பித்து, அம்மனிதனுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைச் சொல்லத் தொடங்கினான்.
36 அவர்கள் மேலும் பயணம் செய்கையில் தண்ணீர் இருந்த ஓர் இடத்திற்கு அருகே வந்தனர். அதிகாரி, “பார்! இங்கு தண்ணீர் உள்ளது. நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடை ஏது?” என்றான். 37 [j] 38 அதிகாரி இரதத்தை நிறுத்தக் கட்டளையிட்டான். பிலிப்புவும் அதிகாரியும் நீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். 39 அவர்கள் நீரிலிருந்து வெளிவந்தபோது கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அதிகாரி அவனை மீண்டும் பார்க்கவில்லை. அதிகாரி தனது வீட்டை நோக்கிப் பயணமானான். அவன் மகிழ்வுடன் இருந்தான். 40 ஆசோத்து என்னும் பட்டணத்தில் பிலிப்பு பின்னர் காட்சி தந்தான். அவன் செசரியா என்னும் நகரத்திற்குப் போய்க்கொண்டிருந்தான். அவன் நற்செய்தியை ஆசோத்திலிருந்து செசரியா செல்லுகிற எல்லா ஊர்களிலும் போதித்தான்.
சவுல் மனம் மாறுதல்
9 சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். 2 தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுகிற சீஷர்களைக் கண்டுபிடிக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு தலைமை ஆசாரியரைக் கேட்டான். அங்கு ஆணோ, பெண்ணோ, விசுவாசிகள் எவரையேனும் கண்டால் அவன் அவர்களைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டு வர விரும்பினான்.
3 எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. 4 சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம்.
5 சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.
அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, 6 நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது.
7 சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை. 8 சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். 9 மூன்று நாட்கள் சவுலால் பார்க்க முடியவில்லை. அவன் எதையும் உண்ணவோ, எதையும் பருகவோ இல்லை.
10 தமஸ்குவில் இயேசுவின் சீஷன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அனனியா. கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனிடம் வந்து பேசினார். கர்த்தர், “அனனியாவே!” என்று அழைத்தார்.
அனனியா பதிலாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்றான்.
11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் [k] வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். 12 சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.
13 ஆனால் அனனியா பதிலாக, “ஆண்டவரே பல மக்கள் இம்மனிதனைக் குறித்து எனக்குக் கூறியிருக்கிறார்கள். எருசலேமிலுள்ள உமது தூய மக்களுக்கு இந்த மனிதன் செய்த தீமைகளை அவர்கள் எனக்குச் சொன்னார்கள். 14 இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.
15 ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ! நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும். 16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார்.
17 எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான். 18 உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். 19 அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான்.
சவுல் தமஸ்குவில் போதித்தல்
சில நாட்கள் தமஸ்குவில் சவுல் இயேசுவின் சீஷர்களோடு இருந்தான். 20 ஜெப ஆலயங்களில் இயேசுவைக் குறித்துப் போதிக்க ஆரம்பித்தான். மக்களுக்கு, “இயேசு தேவனுடைய குமாரன்!” என்று கூறினான்.
21 சவுலைக் கேட்ட எல்லா மக்களும் வியப்புற்றனர். அவர்கள், “இவன் எருசலேமிலிருந்த அதே மனிதன். இந்தப் பெயரை நம்பிய மக்களை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தான்! அவன் இங்கும் அதைச் செய்வதற்காகவே வந்தான். இயேசுவின் சீஷர்களைக் கைது செய்து எருசலேமிலுள்ள தலைமை ஆசாரியர்களிடம் அழைத்துச் செல்வதற்கு வந்தான்” என்றனர்.
22 ஆனால் சவுலோ மென்மேலும் வல்லமையில் பெருகினான். அவன் இயேசுவே கிறிஸ்து என நிரூபித்தான். தமஸ்குவில் அவன் சான்றுகள் வலுவாக இருந்தபடியால் யூதர்கள் அவனோடு வாக்குவாதம் செய்ய இயலவில்லை.
சவுல் தப்பிச் செல்லுதல்
23 பல நாட்களுக்குப் பிறகு, யூதர்கள் சவுலைக் கொல்லத் திட்டமிட்டனர். 24 சவுலுக்காக நகரத்தின் கதவுகளை இரவும் பகலும் யூதர்கள் காவல் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் அவனைக் கொல்ல விரும்பினர். ஆனால் சவுல் அவர்களின் சதித்திட்டத்தைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்தான். 25 ஒரு நாள் இரவில் சில சீஷர்கள் அவன் நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு உதவினர். சீஷர்கள் அவனை ஒரு கூடையில் வைத்தனர். நகரக் கோட்டையிலிருந்த ஒரு துவாரத்தின் வழியாக கூடையை இறக்கி அவனை வெளியே விட்டனர்.
எருசலேமில் சவுல்
26 பிறகு சவுல் எருசலேமுக்குச் சென்றான். சீஷர் குழுவில் சேர்ந்துகொள்ள அவன் முயற்சித்தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர். சவுல் உண்மையாகவே இயேசுவைப் பின்பற்றுகிறவன் என்பதை அவர்கள் நம்பவில்லை. 27 ஆனால் பர்னபா சவுலை ஏற்றுக் கொண்டு அவனை அப்போஸ்தலரிடம் அழைத்து வந்தான். பர்னபா அப்போஸ்தலருக்கு, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் சவுல் கர்த்தரை தரிசித்ததைச் சொன்னான். கர்த்தர் சவுலிடம் பேசிய வகையை பர்னபா அப்போஸ்தலருக்கு விளக்கினான். பின் அவன் அப்போஸ்தலர்களுக்கு இயேசுவுக்காக பயமின்றி தமஸ்குவில் மக்களுக்கு சவுல் போதித்ததையும் சொன்னான்.
28 சவுலும் சீஷரோடு தங்கினான். பயமின்றி கர்த்தரைப் பற்றி எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் சென்று போதித்தான். 29 கிரேக்கமொழி பேசிய யூதரிடம் சவுல் அவ்வப்போது பேசினான். அவர்களோடு விவாதங்கள் நடத்தினான். ஆனால் அவனைக் கொல்வதற்கு அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். 30 சகோதரர்கள் இதைப்பற்றி அறிந்தபோது அவர்கள் சவுலை செசரியா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். செசரியாவிலிருந்து தர்சு நகரத்திற்கு அவர்கள் சவுலை அனுப்பினர்.
31 யூதேயா, கலிலேயா, சமாரியா, ஆகிய இடங்களிலுள்ள சபையினர் அமைதியுடன் வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் வலிமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாழ்ந்த வகையால் கர்த்தரை அவர்கள் மதித்தனர் என்பதை விசுவாசிகள் காட்டினர். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் விசுவாசிகள் குழு பெருகி வளர்ந்தது.
லித்தா மற்றும் யோப்பாவில் பேதுரு
32 எருசலேமைச் சுற்றிலுமிருந்த எல்லா ஊர்கள் வழியாகவும் பேதுரு பயணமானான். லித்தாவில் வாழ்ந்த விசுவாசிகளை [l] அவன் சந்தித்தான். 33 அங்கு பக்கவாத வியாதியால் பீடிக்கப்பட்ட ஐனேயா என்ற பெயருள்ள ஒருவனை அவன் கண்டான். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐனேயாவால் அவனது படுக்கையை விட்டு நகர முடியவில்லை. 34 பேதுரு அவனிடம், “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார். எழுந்து உன் படுக்கையை மடக்கு. உன்னால் இப்போது இதனைச் செய்ய முடியும்!” என்றான். ஐனேயா உடனே எழுந்து நின்றான். 35 லித்தாவில் வாழ்ந்த எல்லா மக்களும் சாரோனின் மக்களும் அவனைக் கண்டனர். இம்மக்கள் கர்த்தரிடம் திரும்பினார்கள்.
36 யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருள்ள இயேசுவின் சீஷப் பெண் இருந்தாள். (அவளது கிரேக்க பெயரான, தொர்காள், “மான்” எனப் பொருள்பட்டது) அவள் மக்களுக்கு எப்போதும் நன்மையையே செய்தாள். தேவைப்பட்ட மக்களுக்குப் பண உதவியும் செய்து வந்தாள். 37 பேதுரு லித்தாவிலிருக்கும்போது, தபித்தா நோய்வாய்ப்பட்டு இறந்தாள். அவர்கள் அவளது சரீரத்தைக் கழுவி மாடியில் ஓர் அறையில் வைத்திருந்தனர். 38 யோப்பாவில் சீஷர்கள் பேதுரு லித்தாவில் இருப்பதைக் கேள்விப்பட்டனர். (லித்தா யோப்பாவுக்கு அருகிலுள்ளது). எனவே அவர்கள் இரண்டு மனிதர்களைப் பேதுருவிடம் அனுப்பினர். அவர்கள் அவனிடம் “விரைந்து எங்களிடம் சீக்கிரம் வாரும்!” என்று வேண்டினர்.
39 பேதுரு தயாராகி அவர்களோடு போனான். அவன் வந்து சேர்ந்தபொழுது அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். விதவைகள் எல்லோரும் பேதுருவைச் சூழ்ந்து நின்றனர். அவர்கள் அழுதுகொண்டிருந்தனர். தொர்காள் உயிரோடிருந்தபோது செய்த அங்கிகளையும் பிற ஆடைகளையும் பேதுருவுக்குக் காட்டினர். 40 பேதுரு எல்லா மக்களையும் அறைக்கு வெளியே அனுப்பினான். அவன் முழங்காலில் நின்று பிரார்த்தனை செய்தான். பின் அவன் தபித்தாவின் சரீரத்துக்கு நேராகத் திரும்பி, “தபித்தாவே, எழுந்து நில்!” என்றான். அவள் கண்களைத் திறந்தாள். அவள் பேதுருவைக் கண்டபோது, எழுந்து அமர்ந்தாள். 41 அவன் அவளுக்கு நேராகக் கையை நீட்டி, அவள் எழுந்திருக்கும்படி உதவினான். பின் அவன் விசுவாசிகளையும், விதவைகளையும் அறைக்குள் அழைத்தான். அவர்களுக்குத் தபித்தாவைக் காட்டினான். அவள் உயிரோடிருந்தாள்!
42 யோப்பாவிலுள்ள மக்கள் எல்லோரும் இதனை அறிந்தனர். அவர்களில் பலர் கர்த்தரை நம்பினர். 43 பேதுரு யோப்பாவில் பல நாட்கள் தங்கினான். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயருள்ள ஒரு மனிதனோடு அவன் தங்கினான்.
பேதுருவும் கொர்நேலியுவும்
10 செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான். 2 கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். 3 ஒருநாள் மதியத்திற்குப்பின் மூன்று மணியளவில் கொர்நேலியு ஒரு காட்சியைக் கண்டான். அவன் தெளிவாக அதைக் கண்டான். அக்காட்சியில் தேவனிடமிருந்து ஒரு தூதன் அவனிடம் வந்து “கொர்நேலியுவே!” என்றான்.
4 கொர்நேலியு தேவதூதனைக் கண்டு பயந்து, “ஆண்டவரே, என்ன வேண்டும்?” என்றான்.
தேவதூதன் கொர்நேலியுவிடம், “தேவன் உனது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நீ ஏழை மக்களுக்குக் கொடுக்கும் தருமங்களை அவர் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். 5 யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான். 6 சீமோன் எனப்படும் தோல் தொழிலாளியோடு சீமோன் பேதுரு தங்கிக்கொண்டிருக்கிறான். கடற்கரையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது இருக்கிறான்” என்றான். 7 கொர்நேலியுவோடு பேசிய தேவதூதன் அகன்றான். பின் கொர்நேலியு இரண்டு வேலைக்காரர்களையும், ஒரு வீரனையும் அழைத்தான். அந்த வீரன் ஒரு நல்ல மனிதன். கொர்நேலியுவின் நெருக்கமான உதவியாளர்களில் அவ்வீரனும் ஒருவன். 8 கொர்நேலியு அம்மூன்று மனிதருக்கும் எல்லாவற்றையும் விளக்கினான். பின் அவன் அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான்.
9 மறுநாள் இம்மனிதர்கள் யோப்பா அருகே வந்தனர். அப்போது பேதுரு மாடிக்குப் பிரார்த்தனை செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது மதியமாகிக்கொண்டிருந்தது. 10 பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது. 11 திறந்த வானத்தின் வழியாக ஏதோ ஒன்று இறங்கி வருவதை அவன் கண்டான். அது பூமிக்கு வரும் பெரிய விரிப்பைப் போன்றிருந்தது. அதனுடைய நான்கு மூலைகளிலிருந்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. 12 ஒவ்வொரு வகை பிராணியும் அதில் இருந்தது. நடப்பன, பூமியில் ஊர்வன, வானில் பறக்கும் பறவைகள் போன்ற யாவும் அதில் இருந்தன. 13 பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது.
14 ஆனால் பேதுரு, “நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை” என்றான்.
15 ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, “தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே!” என்றது. 16 இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
17 இந்தக் காட்சியின் பொருள் என்ன என்று பேதுரு ஆச்சரியப்பட்டான். இதற்கிடையில் கொர்நேலியு அனுப்பிய மனிதர்கள் சீமோனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். அவர்கள் வாசலருகே நின்றுகொண்டிருந்தனர். 18 அவர்கள், “சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.
19 பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 20 எழுந்து கீழே போ. அம்மனிதர்களோடு கேள்விகள் எதுவும் கேட்காமல் போ. நான் அவர்களை உன்னிடம் அனுப்பியிருக்கிறேன்” என்றார். 21 எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், “நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றான்.
22 அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர். 23 பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான்.
மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர். 24 அடுத்த நாள் செசரியா நகரத்திற்குள் அவர்கள் வந்தனர். கொர்நேலியு அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது வீட்டில் உறவினரையும், நெருங்கிய நண்பர்களையும் ஏற்கெனவே வரவழைத்திருந்தான்.
25 பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான். 26 ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான். 27 பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான்.
28 பேதுரு மக்களை நோக்கி, “யூதரல்லாத எந்த மனிதனோடும் சந்திப்பதோ தொடர்பு கொள்வதோ கூடாது என்பது எங்கள் யூதச் சட்டம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நான் எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது என்று தேவன் எனக்குக் காட்டியுள்ளார். 29 அதனால்தான் அம்மனிதர் இங்கு வருமாறு என்னை அழைத்தபோது நான் மறுக்கவில்லை. எதற்காக என்னை இங்கு அழைத்தீர்கள் என்பதை இப்போது தயவு செய்து கூறுங்கள்” என்றான்.
30 கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன், என் வீட்டில் நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். அது இதே வேளை பிற்பகல் மூன்று மணியாயிருந்தது. திடீரென ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் ஒளிமிக்க பிரகாசமான ஆடைகளை அணிந்துகொண்டிருந்தான். 31 அம்மனிதன், ‘கொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். 32 எனவே சில மனிதர்களை யோப்பா நகரத்திற்கு அனுப்பு. சீமோன் எனப்படும் பேதுருவை வரச்சொல். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயர் கொண்ட ஒருவனின் வீட்டில் பேதுரு தங்கியிருக்கிறான். அவன் வீடு கடற்கரையில் உள்ளது’ என்றான். 33 எனவே உடனேயே உமக்கு வரச்சொல்லியனுப்பினேன். நீர் இங்கு வந்தது நல்லது. இப்போது தேவனுக்கு முன்பாக நாங்கள் அனைவரும் கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படியாக உமக்குக் கட்டளையிட்டவற்றைக் கேட்க இங்கு கூடியிருக்கிறோம்” என்றான்.
கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு
34 பேதுரு பேச ஆரம்பித்தான். “மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். 35 சரியானவற்றைச் செய்து அவரை வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார். 36 தேவன் யூத மக்களோடு பேசியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக சமாதானம் வந்தது என்ற நற்செய்தியை தேவன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இயேசு எல்லா மக்களின் கர்த்தராவார்.
37 “யூதேயா முழுவதும் நிகழ்ந்த செயல்களை நீங்கள் அறிவீர்கள். யோவான் மக்களுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து உபதேசிக்கத் துவங்கியதற்குப் பின் இவை யாவும் கலிலேயாவில் ஆரம்பமாயின. 38 நீங்கள் நாசரேத்தின் இயேசுவைக் குறித்து அறிவீர்கள். பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்து தேவன் அவரைக் கிறிஸ்துவாக்கினார். இயேசு எல்லா இடங்களுக்கும் சென்று மக்களுக்கு நல்லவற்றைச் செய்துகொண்டிருந்தார். பிசாசினால் முடக்கப்பட்ட மக்களை இயேசு குணப்படுத்தினார். தேவன் இயேசுவோடிருந்தார் என்பதை இது காட்டிற்று.
39 “யூதேயாவிலும் எருசலேமிலும் இயேசு செய்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள் சாட்சிகள். ஆனால் இயேசு கொல்லப்பட்டார். மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையில் அவரை அறைந்தனர். 40 ஆனால் மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை தேவன் கொடுத்தார். 41 ஆனால் எல்லா மக்களும் அவரைப் பார்க்கவில்லை. தேவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்சிகள் மட்டும் அவரைப் பார்த்தார்கள். நாங்களே அந்த சாட்சிகள்! இயேசு மரித்து பின்னர் எழுந்த பிறகு அவரோடு உண்டோம், குடித்தோம்.
42 “மக்களுக்குப் போதிக்கும்படியாக இயேசு எங்களுக்குக் கூறினார். உயிரோடிருக்கும் மக்களுக்கும் மரித்த மக்களுக்கும் நீதிபதியாக தேவன் நியமித்தவர் அவரே என்று மக்களுக்குச் சொல்லும்படி எங்களுக்குக் கூறினார். 43 இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான்.
யூதரல்லாதவருக்கும் பரிசுத்த ஆவி
44 பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார். 45 பேதுருவோடு வந்த யூத விசுவாசிகள் வியந்தனர். யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். 46 ஏனெனில் அவர்கள் வேற்று மொழிகளைப் பேசுவதையும், தேவனைத் துதிப்பதையும் யூத விசுவாசிகள் கேட்டனர். பின்பு பேதுரு 47 “தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான். 48 கொர்நேலியுவும் அவன் உறவினரும் நண்பர்களும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பேதுரு கட்டளையிட்டான். பின் அம்மக்கள் பேதுருவைச் சில நாட்கள் தங்களோடு தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டனர்.
எருசலேமில் பேதுரு
11 யூதரல்லாத மக்களும் தேவனுடைய போதனையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்களும் யூதேயாவிலுள்ள சகோதரரும் கேள்விப்பட்டனர். 2 எனவே எருசலேமுக்குப் பேதுரு வந்தபோது சில யூத விசுவாசிகள் அவனோடு வாதிட்டனர். 3 அவர்கள், “யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்!” என்று கூறினார்கள்.
4 எனவே பேதுரு நடந்தது முழுவதையும் அவர்களுக்கு விளக்கினான். 5 பேதுரு, “நான் யோப்பா நகரில் இருந்தேன். நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அக்காட்சியில் நான் ஏதோ ஒன்று வானிலிருந்து கீழே வரக் கண்டேன். அது ஒரு பெரிய விரிப்பைப் போன்று தோற்றமளித்தது. அதன் நான்கு மூலைகளாலும் பிடித்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. அது கீழே இறங்கி எனக்கு வெகு அருகாமையில் நின்றது. 6 நான் அதனுள்ளே கவனமாகப் பார்த்தேன். ஊரும் பிராணிகளையும், வானில் பறக்கும் பறவைகளையும் கண்டேன். வீட்டு விலங்குகளையும், வன விலங்குகளையும் நான் பார்த்தேன். 7 ஒரு குரல் என்னை நோக்கி, ‘பேதுரு எழுந்திரு. இந்தப் பிராணிகளில் எதையேனும் நீ புசிக்கலாம்’ என்று கூறிற்று.
8 “ஆனால் நான், ‘கர்த்தாவே நான் ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன். தூய்மையற்றதும் அசுத்தமான பொருளையும் நான் ஒருபோதும் தின்றதில்லை’ என்றேன்.
9 “ஆனால் வானத்திலிருந்து மீண்டும் அந்தக் குரல் பதில் கூறிற்று. ‘தேவன் இவை சுத்தமானவை என அறிவித்துள்ளார். தூய்மையற்றவை என அவற்றை அழைக்காதே!’
10 “இது மூன்று தடவை நடந்தது. பின்னர் அவை முழுவதும் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டன. 11 பின் நான் வசித்துக்கொண்டிருந்த வீட்டிற்கு மூன்று மனிதர்கள் வந்தார்கள். செசரியா நகரத்திலிருந்து அவர்கள் என்னிடம் அனுப்பப்பட்டவர்கள். 12 சந்தேகப்படாது அவர்களோடு போகும்படி ஆவியானவர் கூறினார். இந்த ஆறு சகோதரர்களும் கூட என்னோடு வந்தார்கள். கொர்நேலியுவின் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். 13 கொர்நேலியு தனது வீட்டில் அவன் கண்ட தேவதூதனைக் குறித்து எங்களுக்குக் கூறினான். தேவதூதன் கொர்நேலியுவை நோக்கி, ‘சில மனிதரை யோப்பாவுக்கு அனுப்பு. சீமோன் பேதுருவை இங்கு வரும்படி அழைப்பாய். 14 அவன் உங்களிடம் பேசுவான். உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவன் கூறும் செய்திகள் இரட்சிக்கும்’ என்றான்.
15 “நான் பேச ஆரம்பித்த பிறகு, துவக்கத்தில் [m] பரிசுத்த ஆவியானவர் நம்மீது வந்ததைப் போலவே, அவர்கள் மீதும் பரிசுத்த ஆவியானவர் வந்தார். 16 அப்போது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். கர்த்தர், ‘யோவான் மக்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’ என்றார். 17 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைத்ததால் நமக்குக் கொடுக்கப்பட்ட அதே வரத்தை இந்த மக்களுக்கும் தேவன் கொடுத்தார். ஆகையால் நான் தேவனுடைய செயலைத் தடுக்கமுடிந்ததா? முடியவில்லை!” என்றான்.
18 யூத விசுவாசிகள் இதனைக் கேட்டதும் அவர்கள் வாதிடுவதை நிறுத்தினர். அவர்கள் தேவனை வாழ்த்திக் கூறினார்கள், “ஆகையால் தேவன் யூதரல்லாத மக்கள் தங்கள் இருதயங்களை மாற்றி நம்மைப் போன்ற வாழ்க்கை உடையவர்களாக வாழ அனுமதிக்கிறார்” என்று ஒப்புக்கொண்டனர்.
அந்தியோகியாவிற்கு நற்செய்தி
19 ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு விளைந்த துன்பங்களினால் விசுவாசிகள் சிதறுண்டனர். தூரத்து இடங்களாகிய பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் நற்செய்தியை இந்த இடங்களிலெல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள். 20 இந்த விசுவாசிகளில் சிலர் சீப்புரு, சிரேனே ஆகிய நாடுகளிலிருந்து வந்த மனிதர்கள். இந்த மனிதர்கள் அந்தியோகியாவுக்கு வந்தபோது அவர்களும் கிரேக்கரிடம் பேசினர். அந்த கிரேக்க மக்களுக்குக் கர்த்தர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் கூறினர். 21 கர்த்தர் விசுவாசிகளுக்கு உதவிக்கொண்டிருந்தார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விசுவாசம் வைத்து கர்த்தரைப் பின்பற்றினர்.
22 எருசலேமின் சபை அந்தியோகியாவிலிருந்த இப்புதிய விசுவாசிகளைப்பற்றி அறிந்தது. எனவே பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினர். 23-24 பர்னபா நல்ல மனிதன். அவன் பரிசுத்த ஆவியாலும் மிகுந்த விசுவாசத்திலும் நிரம்பியிருந்தான். அந்தியோகியா மக்கள் பெரிதும் தேவ ஆசீர்வாதம் பெற்றதைக் கண்டான், அது பர்னபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவன் அந்தியோகியாவின் எல்லா விசுவாசிகளுக்கும் உற்சாகமூட்டினான். அவன் அவர்களை நோக்கி, “ஒருபொழுதும் விசுவாசம் இழக்காதீர்கள். எப்பொழுதும் உங்கள் முழு இருதயத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றான். பற்பல மக்கள் கர்த்தரின் சீஷராயினர்.
25 பின்பு பர்னபா தர்சு நகரத்திற்குச் சென்றான். அவன் சவுலைத் தேடினான். 26 அவன் சவுலைப் பார்த்தபோது பர்னபா அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். ஓர் ஆண்டு முழுவதும் சவுலும் பர்னபாவும் அங்கே தங்கி இருந்தனர். விசுவாசிகளின் கூட்டம் ஒருங்கே கூடியபோதெல்லாம் சவுலும் பர்னபாவும் அவர்களைச் சந்தித்து மக்கள் பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் இயேசுவின் சீஷர்கள் முதன்முதலாக “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
27 அதே கால கட்டத்தில் சில தீர்க்கதரிசிகள் எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்குச் சென்றனர். 28 அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் அகபு. அந்தியோகியாவில் அகபு எழுந்து நின்று பேசினான். “உலகம் முழுவதற்கும் மிகப் பெரிய பஞ்சம் வருகிறது. மக்கள் உண்ண உணவிராது” என்று பரிசுத்த ஆவியானவரின் துணையால் அறிவித்தான். (கிலவுதியு என்னும் சக்கரவர்த்தியின் காலத்தில் உண்மையாகவே இப்பஞ்சம் ஏற்பட்டது) 29 யூதேயாவில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கு உதவவேண்டுமென விசுவாசிகள் முடிவெடுத்தனர். தங்களால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு அனுப்புவதாக ஒவ்வொரு விசுவாசியும் திட்டமிட்டனர். 30 அவர்கள் அப்படியே பணத்தைச் சேர்த்து பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்தனர். பின் பர்னபாவும் சவுலும் அதனை யூதேயாவிலிருந்த பெரியோரிடம் கொண்டு வந்தனர்.
சபையைத் துன்புறுத்துதல்
12 அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக்களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான். 2 ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன். 3 யூதர்கள் இதை விரும்பினர் என்பதை ஏரோது கண்டான். எனவே அவன் பேதுருவையும் கைது செய்ய முடிவெடுத்தான். (இது பஸ்கா பண்டிகை எனப்படும் யூதரின் பண்டிகையின்போது நடந்தது) 4 ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் வைத்தான். 16 வீரர்களின் கூட்டம் பேதுருவைக் காவல் காத்தது. பஸ்கா பண்டிகை கழியுமட்டும் காத்திருப்பதற்கு ஏரோது விரும்பினான். பின்னர் மக்களின் முன்னால் பேதுருவைக் கொண்டு வர அவன் திட்டமிட்டான். 5 எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டான். ஆனால் சபையினரோ பேதுருவுக்காகத் தொடர்ந்து தேவனிடம் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.
பேதுரு விடுவிக்கப்படுதல்
6 இரண்டு வீரர்களுக்கு மத்தியில் பேதுரு படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். மேலும் அதிகமான வீரர்கள் சிறைக் கதவைக் காத்துக்கொண்டிருந்தனர். அது இரவுப்பொழுது. மறுநாள் மக்களின் முன்பாகப் பேதுருவை அழைத்துவர ஏரோது திட்டமிட்டிருந்தான்.
7 அறையில் திடீரென ஓர் ஒளி பிரகாசித்தது. தேவ தூதன் ஒருவன் பேதுருவைப் பக்கவாட்டில் தொட்டு எழுப்பினான். தேவ தூதன், “விரைந்து எழு!” என்றான். பேதுருவின் கரங்களிலிருந்து விலங்குகள் கழன்று விழுந்தன. 8 தேவதூதன் பேதுருவை நோக்கி, “ஆடைகளை உடுத்து, செருப்புகளை அணிந்துகொள்” என்றான். அவ்வாறே பேதுருவும் செய்தான். பின் தேவ தூதன் “அங்கியை அணிந்துகொண்டு என்னைத் தொடர்ந்து வா” என்றான்.
9 தேவதூதன் வெளியே சென்றான். பேதுருவும் அவனைத் தொடர்ந்தான். நடந்தவை உண்மையா என்பது பேதுருவுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியைக் காண்பதாகவே அவன் எண்ணினான். 10 பேதுருவும் தேவதூதனும் முதல் காவலனையும் இரண்டாம் காவலனையும் கடந்தனர். நகரத்திலிருந்து அவர்களைப் பிரித்த பெரிய இரும்புக் கதவருகே வந்தனர். அந்தக் கதவு தானாகவே அவர்களுக்காகத் திறந்தது. பேதுருவும் தேவ தூதனும் கதவின் வழியாகச் சென்று அடுத்த தெரு வரைக்கும் நடந்தார்கள். அப்போது திடீரென தேவதூதன் மறைந்தான்.
11 நடந்தது என்னவென்பதைப் பேதுரு அப்போது உணர்ந்தான். அவன், “கர்த்தர் உண்மையாகவே தனது தேவதூதனை என்னிடம் அனுப்பினார் என்பதை நான் அறிவேன். ஏரோதிடமிருந்து அவன் என்னை விடுவித்தான். தீமை எனக்கு நேருமென்று யூதர்கள் எண்ணினர். ஆனால் கர்த்தர் இவற்றிலிருந்து என்னைக் காத்தார்” என்று எண்ணினான்.
12 பேதுரு அதை உணர்ந்தபோது அவன் மரியாளின் வீட்டிற்குப் போனான். அவள் யோவானின் தாய். யோவான் மாற்கு என்றும் அழைக்கப்பட்டான். பல மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.
13 பேதுரு வெளிக் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருள்ள வேலைக்காரச் சிறுமி பதில் கூற வந்தாள். 14 ரோதை பேதுருவின் குரலை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். அவள் கதவைத் திறக்கவும் மறந்துவிட்டாள். அவள் உள்ளே ஓடி, கூட்டத்தினரிடம், “பேதுரு கதவருகே நிற்கிறார்!” என்றாள். 15 விசுவாசிகள் ரோதையை நோக்கி, “நீ ஒரு பைத்தியம்!” என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், “அது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும்” என்றனர்.
16 ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருந்தான். விசுவாசிகள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். 17 அவர்களை அமைதியாக இருக்கும்படியாகப் பேதுரு தனது கையால் சைகை செய்தான். தேவன் அவனைச் சிறையினின்று எவ்வாறு விடுவித்தார் என்பதை அவன் அவர்களுக்கு விவரித்தான். அவன், “நடந்ததை யாக்கோபுக்கும் பிற சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்றான். பின் வேறிடத்திற்குப் போவதற்காக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றான்.
18 மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர். 19 ஏரோது பேதுருவுக்காக எல்லா இடங்களிலும் தேடியும் அவன் அகப்படவில்லை. எனவே ஏரோது காவலரை வினவினான். பின் காவலரைக் கொல்லும்படியாக ஆணையிட்டான்.
ஏரோது அகிரிப்பாவின் மரணம்
பின்னர் ஏரோது யூதேயாவிலிருந்து சென்றான். அவன் செசரியா நகரத்திற்குச் சென்று அங்கு சில காலம் தங்கினான். 20 தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து அரசனின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.
21 ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்துகொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான். 22 மக்கள் உரக்க, “இது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல!” என்றனர். 23 ஏரோது இந்த வாழ்த்தைத் தனக்குரியதாக ஏற்றுக்கொண்டு, தேவனுக்குரிய மகிமையை அளிக்கவில்லை. எனவே கர்த்தரின் தூதன் ஒருவன் அவனை நோய்வாய்ப்படச் செய்தான். அவன் உள்ளே புழுக்களால் உண்ணப்பட்டு இறந்தான்.
24 தேவனுடைய செய்தி பரவிக்கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது.
25 எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.
விசேஷ அழைப்பு
13 அந்தியோகியா சபையில் சில தீர்க்கதரிசிகளும் போதகர்களும் இருந்தனர். அவர்கள் பர்னபாஸ், சிமியோன் (நீகர் எனவும் அழைக்கப்பட்டான்), லூகி (சிரேனே பட்டணத்தைச் சேர்ந்தவன்), மானாயீன் (ஆட்சியாளனான ஏரோதுவோடு வளர்ந்தவன்), சவுல் ஆகியோர். 2 இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார்.
3 எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர்.
சீப்புருவில் பர்னபாவும் சவுலும்
4 பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர். 5 சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்).
6 அவர்கள் தீவைக் கடந்து பாப்போ நகர்வரைக்கும் சென்றனர். பாப்போவில் மந்திர தந்திரங்கள் செய்த ஒரு யூத மனிதனை அவர்கள் சந்தித்தனர். அவன் பெயர் பர்யேசு, அவன் ஒரு போலித் தீர்க்கதரிசி. 7 ஆளுநர் செர்கியு பவுல் என்பவரோடு பர்யேசு எப்போதும் இருந்தான். செர்கியு பவுல் ஒரு ஞானவான். அவன் பர்னபாவையும் சவுலையும் சந்திக்க விரும்பினான். 8 ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான். 9 பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து, 10 “பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்! 11 இப்போது கர்த்தர் உன்னைத் தொடுவார். நீ குருடனாவாய். சில காலம் வரைக்கும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் ஒளியைக் கூடப் பார்க்க முடியாது” என்றான்.
அப்போது எலிமாஸுக்கு எல்லாம் இருண்டு போயின. பார்க்க முடியாதபடி அங்குமிங்கும் தடுமாறினான். கையால் பிடித்து அவனை வழி நடத்துகிற ஒருவனைக் கண்டு பிடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தான். 12 ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான்.
தொடர் ஊழியம்
13 பாப்போவிலிருந்து பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் கடற் பயணமாயினர். பம்பிலியாவிலுள்ள பெர்கே என்னும் நகரத்திற்கு அவர்கள் வந்தனர். ஆனால் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவன் எருசலேமுக்குத் திரும்பினான். 14 அவர்கள் பயணத்தைத் தொடர்ந்து பெர்கேவிலிருந்து பிசிதியாவுக்கு அருகேயுள்ள நகராகிய அந்தியோகியாவுக்குப் போனார்கள். அந்தியோகியாவில் ஓய்வுநாளில் யூத ஜெப ஆலயத்திற்குள் போய் அமர்ந்தார்கள். 15 மோசேயின் நியாயப் பிரமாணமும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் வாசிக்கப்பட்டன. பின் ஜெப ஆலயத் தலைவர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் ஒரு செய்தி அனுப்பினர். “சகோதரரே, நீங்கள் இங்குள்ள மக்களுக்கு உதவுமாறு ஏதேனும் கூறவேண்டியிருந்தால் தயவு செய்து பேசுங்கள்” என்றனர்.
16 பவுல் எழுந்து நின்றான். அவன் அமைதிக்காகத் தன் கைகளை உயர்த்தி, “எனது யூத சகோதரர்களே, உண்மையான தேவனை வழிபடும் மக்களே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். 17 இஸ்ரவேலின் தேவன் நமது முன்னோரைத் தெரிந்துகொண்டார். அவர்கள் அந்நியராக எகிப்தில் வாழ்ந்த காலத்தில் தேவன் அவரது மக்களுக்கு உதவினார். மிகுந்த வல்லமையால் அந்நாட்டிலிருந்து அவர்களை அழைத்து வந்தார். 18 வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் தேவன் அவர்களோடு பொறுமையாக இருந்தார். 19 கானானிலுள்ள ஏழு தேசங்களை தேவன் அழித்தார். அவரது மக்களுக்கு அவர்கள் நாட்டைக் கொடுத்தார். 20 இவையெல்லாம் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளில் நடந்தன.
“இதன் பிறகு, சாமுவேல் என்னும் தீர்க்கதரிசியின் காலம் வரைக்கும் தேவன் நமது மக்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்தார். 21 பின் மக்கள் ஒரு மன்னன் வேண்டுமென்று கேட்டனர். தேவன் அவர்களுக்கு கீஷ் என்பவனின் மகனாகிய சவுலைக் கொடுத்தார். சவுல் பென்யமீனின் குடும்ப மரபில் வந்தவன். அவன் நாற்பது ஆண்டுகள் மன்னனாக இருந்தான். 22 தேவன் சவுலை எடுத்துக்கொண்ட பிறகு தாவீதை அவர்களுக்கு மன்னனாக்கினார். தாவீதைக் குறித்து தேவன் கூறியதாவது: ‘ஈசாயின் மகனான தாவீதை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னென்ன செய்யவேண்டுமென நான் நினைக்கிறவற்றை அவன் செய்வான்’
23 “தேவன் தாவீதின் தலைமுறையினரில் ஒருவரை இஸ்ரவேலுக்கு மீட்பராக அனுப்பினார். அவ்வாறு வந்தவர்தான் இயேசு. தேவன் இதைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். 24 இயேசு வரும் முன்னர் எல்லா யூத மக்களுக்கும் யோவான் போதித்தான். அவர்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புவதைக் காட்டும் பொருட்டு யோவான் மக்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். 25 யோவான் தன் வேலையை முடித்துக்கொண்டிருக்கும் போது அவன், ‘நான் யாரென்று நினைக்கிறீர்கள். நான் கிறிஸ்து அல்ல. அவர் எனக்குப் பின் வருவார். அவர் மிதியடிகளை அவிழ்ப்பதற்கும் எனக்குத் தகுதி கிடையாது’ என்றான்.
26 “எனது சகோதரர்களே! ஆபிரகாமின் குடும்பத்து மக்களே! உண்மையான தேவனை வணங்கும் யூதரல்லாதோரே, கவனியுங்கள்! மீட்பைக் குறித்த செய்தி நமக்காக அனுப்பப்பட்டுள்ளது. 27 எருசலேமில் வாழும் யூதர்களும், யூதத் தலைவர்களும் இயேசுவே மீட்பர் என்பதை உணரவில்லை. இயேசுவைக் குறித்து தீர்க்கதரிசிகள் எழுதிய வார்த்தைகள் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் யூதர்களுக்கு வாசிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. யூதர்கள் இயேசுவைக் குற்றப்படுத்தினார்கள். அவர்கள் இதைச் செய்தபோது தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நிறைவேறும்படிச் செய்தார்கள். 28 இயேசு இறப்பதற்கான உண்மையான காரணத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவரைக் கொல்லும்படியாக பிலாத்துவைக் கேட்டார்கள்.
29 “கிறிஸ்துவுக்கு ஏற்படும் என வேதவாக்கியங்கள் கூறிய எல்லா தீமைகளையும் அந்த யூதர்கள் செய்தார்கள். பின் அவர்கள் இயேசுவைச் சிலுவையிலிருந்து இறக்கி, அவரை ஒரு கல்லறையில் வைத்தார்கள். 30 ஆனால் தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார்! 31 அதன் பிறகு, கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு இயேசுவோடு வந்திருந்தவர்கள் அவரைப் பல நாட்கள் கண்டார்கள். இவர்களே, இப்போது எல்லா மக்களுக்கும் அவரது சாட்சிகள்.
32 “தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறோம். 33 நாம் அவர்களுடைய மக்கள். இந்த வாக்குறுதி நமக்கு உண்மையாகுமாறு தேவன் செய்தார். இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியபடியால் தேவன் இதைச் செய்தார். சங்கீதம் இரண்டிலும் நாம் இதைப்பற்றி வாசிக்கிறோம்.
“‘நீர் எனது மகன்,
இன்று நான் உமது தந்தையாகி இருக்கிறேன்.’ (D)
34 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். இயேசு மீண்டும் கல்லறைக்கு ஒரு போதும் போகமாட்டார். புழுதியாகமாட்டார். எனவே தேவன் சொன்னார்:
“‘நான் தாவீதுக்குச் செய்த தூய உண்மையான வாக்குறுதிகளை உங்களுக்குக் கொடுப்பேன்.’ (E)
35 ஆனால் இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்:
“‘உங்களது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறையில் மக்கிப்போக அனுமதிக்கமாட்டீர்கள்.’ (F)
36 “தேவனுடைய விருப்பத்தை தாவீது உயிரோடிருக்கும் காலத்தில் நிறைவேற்றினான். பின் அவன் இறந்தான். தாவீது அவனது முன்னோரோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனது சரீரமும் கல்லறையில் மக்கிப் போனது. 37 ஆனால் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினவரோ கல்லறையில் மக்கிப் போகவில்லை. 38-39 சகோதரரே, நாங்கள் உங்களுக்குக் கூறுவது என்னவென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர் மூலமாக உங்கள் பாவங்களின் மன்னிப்பை நீங்கள் பெற முடியும். மோசேயின் சட்டம் உங்களை உங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்க முடியவில்லை. ஆனால் இயேசுவில் விசுவாசம் வைத்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் இயேசுவின் மூலமாகத் தனது எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான். 40 சில காரியங்கள் நடக்குமென்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள். எச்சரிக்கையாயிருங்கள்! இக்காரியங்கள் உங்களுக்கு நேராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள்,
41 “‘ஐயம்கொள்ளும் மக்களே, கவனியுங்கள்.
நீங்கள் வியப்புறக்கூடும்,
ஆனால் மரித்து அழிவீர்கள்.
ஏனெனில் உங்கள் காலத்தில் நீங்கள் நம்பாத சிலவற்றை நான் செய்வேன்.
சிலர் உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்’” (G)
என்றனர்.
42 பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தை விட்டுச் செல்லும்பொழுது, அடுத்த ஓய்வு நாளில் மீண்டும் வந்து இவற்றைக் குறித்து இன்னும் பல விஷயங்களை அவர்களுக்குச் சொல்லுமாறு மக்கள் கூறினார்கள். 43 இக்கூட்டத்திற்குப் பின், அந்த இடத்திலிருந்து யூதர்கள் பலர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். யூதர்களோடு யூத மதத்திற்கு மாறிய பலரும் இருந்தார்கள். இவர்களும் உண்மையான தேவனை வணங்கினார்கள். பவுலும் பர்னபாவும் தேவனுடைய கிருபையில் தொடர்ந்து நம்பிக்கை வைக்குமாறு அவர்களை உற்சாகமூட்டினார்கள்.
44 அடுத்த ஓய்வு நாளில் அநேகமாக நகரத்தின் எல்லா மக்களும் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படியாக ஒருமித்துக் கூடினார்கள். 45 யூதர்கள் அந்த எல்லா மக்களையும் அங்கே கண்டார்கள். அது அவர்களுக்கு மிகுந்த பொறாமையை ஏற்படுத்தியது. எனவே, அவர்கள் வெகு தீமையான சில காரியங்களைக் கூறி பவுல் கூறிய வார்த்தைகளுக்கு எதிராக விவாதித்தார்கள். 46 ஆனால் பவுலும் பர்னபாவும் மிகவும் துணிச்சலாகப் பேசினார்கள். அவர்கள், “யூதர்களாகிய உங்களுக்கு முதலில் தேவனுடைய செய்தியை நாங்கள் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். நீங்கள் உங்களை இழக்கப்பட்டவர்களாக நித்தியமான வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்கள்! எனவே நாங்கள் இப்போது வேறு தேசங்களின் மக்களிடம் செல்வோம்! 47 இதைத் தான் நாங்கள் செய்யும்படியாக ஆண்டவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார். கர்த்தர் கூறினார்:
“‘இரட்சிப்பின் பாதையை உலகின் எல்லா மக்களுக்கும் நீங்கள்
காட்டும் பொருட்டு உங்களை வேறு தேசங்களுக்கு ஒளியாக்கினேன்.’” (H)
48 பவுல் இவ்வாறு கூறியதை யூதரல்லாத மக்கள் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சிகொண்டனர். அவர்கள் கர்த்தரின் செய்திக்கு மதிப்பளித்தனர். பல மக்கள் செய்தியை நம்பினர். இவர்கள் நித்தியமான வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாவர்.
49 எனவே கர்த்தரின் செய்தி நாடு முழுவதும் சொல்லப்பட்டது. 50 ஆனால் யூதர்கள் சில முக்கியமான பக்தியுள்ள பெண்களையும், நகரத் தலைவர்களையும் சினமடையும்படியாகவும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிராகவும் நகரத்திலிருந்து கிளப்பி விட்டனர். இந்த மக்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிரான செயல்களைச் செய்து அவர்களை ஊரை விட்டு வெளியேறும்படிச் செய்தனர். 51 எனவே பவுலும் பர்னபாவும் தங்கள் பாதங்களிலிருந்து தூசியை உதறினர். பின் அவர்கள் அந்த இடத்தை விட்டு இக்கோனியா நகருக்கு வந்தார்கள். 52 ஆனால் அந்தியோகியாவிலுள்ள இயேசுவின் சீஷர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து பரிசுத்த ஆவியால் நிரம்பினர்.
இக்கோனியத்தில் ஊழியம்
14 பவுலும் பர்னபாவும் இக்கோனியம் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். (இதைத் தான் அவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் செய்தனர்) அவர்கள் அங்குள்ள மக்களிடம் பேசினர். பவுலும் பர்னபாவும் பேசின விதத்தில் பல யூதர்களும், கிரேக்கர்களும் அவர்கள் கூறியதை முழுமையாக நம்பினர். 2 ஆனால் மனந்திரும்பாத யூதர்கள், யூதரல்லாத சகோதரரைக் குறித்துத் தீமையானவற்றை எண்ணும்படியாகச் செய்தனர்.
3 எனவே பவுலும் பர்னபாவும் இக்கோனியத்தில் நீண்ட காலம் தங்கினர். கர்த்தருக்காகத் துணிவோடு பேசினர். தேவனுடைய கிருபையைக் குறித்து பவுலும், பர்னபாவும் பேசினர். அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்கு அப்போஸ்தலர்களுக்கு உதவி செய்து அவர்கள் கூறியதை உண்மையென்று தேவன் நிரூபித்தார். 4 ஆனால் நகர மக்களில் சிலர் யூதர்கள் கூறியதை ஒப்புக்கொண்டனர். நகரத்தின் மற்ற மக்களோ பவுலையும் பர்னபாவையும் நம்பினர். எனவே நகரம் பிரிவுபட்டது.
5 சில யூதரல்லாத மக்களும், சில யூதர்களும் அவர்களின் யூத அதிகாரிகளும் பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்த முயன்றனர். இந்த மக்கள் அவர்களைக் கற்களால் எறிந்துகொல்ல எண்ணினர். 6 பவுலும் பர்னபாவும் இதை அறிந்தபோது, நகரிலிருந்து சென்றனர். அவர்கள் லிஸ்தீராவுக்கும், தெர்பைக்கும் லிக்கோனியாவின் நகரங்களுக்கும், அந்த நகரங்களைச் சூழ்ந்த கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றனர். 7 அவர்கள் அங்கும் கூட நற்செய்தியைக் கூறினர்.
லிஸ்திரா, தெர்பை நகர ஊழியம்
8 பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன். 9 அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான். 10 எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான்.
11 பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர். 12 மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர். 13 சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர்.
14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர். [n] பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில், 15 “மனிதரே ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படியாக நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்.
16 “முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார். 17 ஆனால் அதே சமயம் தேவன் உண்மையானவர் என்பதை நிறுவும் காரியங்களையே தேவன் செய்தார். அவர் உங்களுக்கு நல்லவற்றையே செய்கிறார். அவர் வானிலிருந்து உங்களுக்கு மழையைத் தருகிறார். அவர் தக்க காலங்களில் உங்களுக்கு நல்ல அறுவடையைக் கொடுக்கிறார். அவர் மிகுதியான உணவை உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள் இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்” என்றனர்.
18 பவுலும் பர்னபாவும் மக்களுக்கு இவற்றைக் கூறினர். ஆனாலும் அவர்களை வழிபடுவதற்காக அவர்கள் இட்ட பலியை அநேகமாக பவுலும் பர்னபாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
19 பின் அந்தியோகியாவிலிருந்தும், இக்கோனியத்திலிருந்தும் சில யூதர்கள் வந்தனர். அவர்கள் பவுலை எதிர்க்கும்படியாக மக்களை ஏவினர். எனவே மக்கள் பவுலின்மீது கற்களை வீசி, அவன் இறந்துவிட்டானென்று நினைத்து அவனை ஊருக்குப் புறம்பே இழுத்து வந்தனர். 20 இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர்.
அந்தியோகியாவுக்குத் திரும்புதல்
21 பவுலும் பர்னபாவும் தெர்பை நகரத்திலும் நற்செய்தியைக் கூறினர். பல மக்கள் இயேசுவின் சீஷராயினர். லிஸ்திரா, இக்கோனியம், அந்தியோகியா நகரங்களுக்குப் பவுலும் பர்னபாவும் திரும்பினர். 22 அந்நகரங்களில் இயேசுவின் சீஷர்களை பவுலும் பர்னபாவும் வலிமைமிக்கவர்களாக ஆக்கினர். நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு அவர்கள் உதவினர். பவுலும் பர்னபாவும், “தேவனுடைய இராஜ்யத்துக்குள் செல்லும் நம் பாதையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்றனர். 23 பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை அமர்த்தினார்கள். அவர்கள் உபவாசமிருந்து அம்மூப்பர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அம்மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்த மனிதராயிருந்தார்கள். எனவே பவுலும் பர்னபாவும் கர்த்தரின் பாதுகாப்பில் அவர்களை விட்டனர்.
24 பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர். 25 அவர்கள் பெர்காவில் தேவனுடைய செய்தியைக் கூறினார்கள். பின் அவர்கள் அத்தாலியா நகரத்திற்குச் சென்றனர்.
26 அங்கிருந்து பவுலும் பர்னபாவும் சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்குக் கடல் வழியாகப் பயணமாயினர். இந்நகரில்தான் விசுவாசிகள் அவர்களை தேவனுடைய கண்காணிப்பில் ஆட்படுத்தி இவ்வேலை செய்ய அனுப்பியிருந்தனர். இப்போது அவர்கள் தங்கள் வேலையை முடித்திருந்தனர்.
27 பவுலும் பர்னபாவும் வந்துசேர்ந்தபோது அவர்கள் சபையைக் கூட்டினர். தேவன் அவர்களோடு செய்த எல்லாக் காரியங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் அவர்களுக்குக் கூறினர். அவர்கள், “வேறு தேசங்களின் மக்களும் நம்பும்படிக்கு தேவன் ஒரு வாசலைத் திறந்தார்” என்றார்கள். 28 கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.
எருசலேமில் சந்திப்பு
15 பின்பு யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்குச் சில மனிதர் வந்தனர். யூதரல்லாத சகோதரருக்கு அவர்கள் “நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள். இதைச் செய்யும்படியாக மோசே நமக்குக் கற்பித்தார்” என்று போதிக்க ஆரம்பித்தனர். 2 பவுலும் பர்னபாவும் இந்தப் போதனையை எதிர்த்தனர். அதைக் குறித்து இந்த மனிதரிடம் அவர்கள் விவாதித்தனர். எனவே அந்தச் சபையார் பவுலையும் பர்னபாவையும், வேறு சில மனிதர்களையும் எருசலேமுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அங்கிருந்த அப்போஸ்தலரிடமும் மூப்பர்களிடமும் இதைக் குறித்து அதிகமாகப் பேசப் போகிறவர்களாக இந்த மனிதர்கள் இருந்தார்கள்.
3 அவர்கள் பயணத்திற்கு சபை உதவிற்று. பெனிக்கே, சமாரியா ஆகிய தேசங்களின் வழியாக அம்மனிதர்கள் சென்றனர். யூதரல்லாத மக்கள் உண்மையான தேவனிடம் திரும்பியது குறித்த அனைத்தையும் அவர்கள் கூறினர். இது எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. 4 பவுலும் பர்னபாவும் பிறரும் எருசலேமை வந்தடைந்தனர். அப்போஸ்தலரும், மூப்பர்களும் விசுவாசிகள் அனைவரும் சேர்ந்து அவர்களை வரவேற்றனர். பவுலும் பர்னபாவும், பிறரும் தேவன் தங்களிடம் செய்த அனைத்துக் காரியங்களையும் கூறினர். 5 எருசலேமின் விசுவாசிகளில் சிலர் பரிசேயர்கள். அவர்கள் எழுந்து “யூதரல்லாத விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்” என்று கூறினர்.
6 அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். 7 நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே, தொடக்கக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நீங்கள் நினைவுகூருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியைப் போதனை செய்வதற்கு அப்போது உங்களுக்கிடையிலிருந்து தேவன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் என் மூலமாக நற்செய்தியைக் கேட்டு விசுவாசம் வைத்தனர். 8 தேவன் மனிதரின் எண்ணங்களை அறிவார். அவர் யூதரல்லாத மக்களையும் ஏற்றுக்கொண்டார். எங்களுக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து தேவன் இதனைக் காட்டினார். 9 இந்த மனிதர்கள் தேவனுக்கு நம்மிலிருந்தும் வேறுபட்டவர்களல்லர். அவர்கள் விசுவாசம் வைத்தபோது, தேவன் அவர்கள் இருதயங்களை பரிசுத்தமுறச் செய்தார். 10 எனவே யூதரல்லாத விசுவாசிகளிகளின் கழுத்தில் ஏன் பெரும் பாரத்தைச் சுமத்துகிறீர்கள். தேவனைக் கோபப்படுத்த நீங்கள் முயன்றுகொண்டிருக்கிறீர்களா? அந்தப் பாரத்தைச் சுமப்பதற்கு நமக்கும் நமது முன்னோர்களுக்கும் வலிமை இருக்கவில்லை! 11 நாமும் இந்த மக்களும் கர்த்தராகிய இயேசுவின் கிருபையினாலே இரட்சிக்கப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.” என்றான்.
12 அப்போது அந்தக் கூட்டம் முழுமையும் அமைதியாயிற்று. பவுலும் பர்னபாவும் பேசுவதைக் கவனித்தனர். யூதரல்லாத மக்களின் மத்தியில் தேவன் அவர்கள் மூலமாகச் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் விவரித்தார்கள். 13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.
16 “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.
தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.
அது விழுந்துவிட்டது.
அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.
அவனது வீட்டைப் புதியதாக்குவேன்.
17 பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர்.
யூதரல்லாத மக்களும் என் மக்களே.
கர்த்தர் இதைக் கூறினார்.
இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’(I)
18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன.
19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:
‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.
பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’
21 ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.
யூதரல்லாத சகோதரருக்குக் கடிதம்
22 பவுல், பர்னபா ஆகியோருடன் அந்தியோகியாவுக்குச் சில மனிதர்களை அனுப்பவேண்டுமென அப்போஸ்தலரும், மூப்பரும், சபையினர் எல்லோரும் முடிவு செய்தார்கள். அக்கூட்டத்தினர் தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பர்சபா என்ற யூதாவையும், சீலாவையும் தேர்ந்தெடுத்தனர். எருசலேமின் சகோதரர்கள் அவர்களை மதித்தனர். 23 அக்கூட்டத்தினர் அவர்கள் மூலமாக அக்கடிதத்தை அனுப்பினார்கள். அக்கடிதம் கூறியது:
அப்போஸ்தலர்கள், மூப்பர்கள், சகோதரர்களிடமிருந்து,
அந்தியோகியாவிலும், சிரியாவிலும், சிலிசியாவிலுமுள்ள
அன்பான யூதரல்லாத சகோதரருக்கு:
24 எங்கள் கூட்டத்திலிருந்து சில மனிதர்கள் உங்களிடம் வந்தார்கள் எனக் கேள்விப்பட்டோம். அவர்கள் கூறிய காரியங்கள் உங்களைத் தொந்தரவு செய்து உங்கள் மனங்களை நிலைகுலையச் செய்துள்ளன. ஆனால் அவற்றைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களுக்குக் கூறவில்லை. 25 சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து உங்களிடம் அனுப்புவதென நாங்கள் எல்லோரும் முழு மனதாக முடிவு செய்துள்ளோம். நமது அன்பான நண்பர்களாகிய பர்னபா, பவுல் ஆகியோரோடு அவர்களும் இருப்பார்கள். 26 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சேவைக்காக பர்னபாவும் பவுலும் தங்கள் பிராணனையே கொடுத்துள்ளார்கள். 27 எனவே அவர்களோடு யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம். அவர்கள் வாய் வார்த்தைகளினால் அவற்றை உங்களுக்கு உறுதிசெய்வார்கள். 28 உங்கள் மீது இன்னும் அதிகமான பாரங்கள் விதிக்கப்படலாகாதென பரிசுத்த ஆவியானவர் முடிவு செய்தார். நாங்களும் அதை ஆமோதிக்கிறோம். நீங்கள் செய்யத் தேவையான இந்தக் காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்.
29 விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடாதீர்கள்.
பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.
இத்தகைய காரிங்களில் நீங்கள் உங்களை
ஈடுபடுத்தாதிருந்தால் நல்லது.
30 எனவே பவுல், பர்னபா, யூதா, சீலா ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்றனர். அவர்கள் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அந்தியோகியாவில் விசுவாசிகளைக் கூட்டி அக்கடிதத்தைக் கொடுத்தனர். 31 விசுவாசிகள் அதை வாசித்தபோது மகிழ்ச்சியடைந்தனர். அக்கடிதம் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. 32 யூதாவும் சீலாவும்கூடத் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். சகோதரர்கள் வலிமைபெற உதவுவதற்காக அவர்கள் பல காரியங்களைக் கூறினர். 33 அவர்கள் சகோதரரிடமிருந்து அமைதியின் வாழ்த்தைப் பெற்றனர். யூதாவும் சீலாவும் எருசலேமில் தங்களை அனுப்பிய சகோதரரிடம் சென்றனர். 34 [o]
35 ஆனால் பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் தங்கினர். அவர்களும் இன்னும் பலரும் தேவனுடைய செய்தியைக் கற்பிக்கவும் உபதேசிக்கவும் செய்தார்கள்.
பவுலும் பர்னபாவும் பிரிதல்
36 சில நாட்களுக்குப் பிறகு பவுல் பர்னபாவை நோக்கி, “பல ஊர்களில் கர்த்தரின் செய்தியை நாம் கூறியுள்ளோம். அந்த ஊர்களிலுள்ள சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்திக்கவும், அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதைக் காணவும் நாம் அந்த ஊர்களுக்குத் திரும்பவும் போக வேண்டும்” என்றான்.
37 பர்னபா அவர்களோடு யோவான் மாற்குவையும் அழைத்துச் செல்ல விரும்பினான். 38 ஆனால் அவர்களின் முதல் பயணத்தில் பம்பிலியாவில் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவர்களது வேலையில் அவர்களோடு அவன் சேர்ந்துகொள்ளவில்லை. எனவே பவுல் அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாமென வலியுறுத்தினான். 39 பவுலும் பர்னபாவும் இதைக் குறித்துப் பெரிய வாக்குவாதம் நிகழ்த்தினார்கள். எனவே அவர்கள் பிரிந்து வெவ்வேறு வழிகளில் சென்றார்கள். பர்னபா சீப்புருவுக்கு கடல் வழியாகச் சென்றான். அவனோடு மாற்குவையும் சேர்த்துக்கொண்டான்.
40 பவுல் தன்னோடு செல்வதற்கு சீலாவைத் தேர்ந்துகொண்டான். அந்தியோகியாவில் சகோதரர்கள் பவுலைக் கர்த்தரின் கவனிப்பில் ஒப்புவித்து அவனை அனுப்பினர். 41 பவுலும் சீலாவும் சிரியா, சிலிசியா நாடுகளின் வழியாக சபைகள் பலமடைவதற்கு உதவியபடியே பயணம் செய்தனர்.
பவுல்-சீலா-தீமோத்தேயு
16 தெர்பை, லிஸ்திரா ஆகிய நகரங்களுக்குப் பவுல் சென்றான். தீமோத்தேயு எனப்படும் கிறிஸ்துவின் சீடன் அங்கிருந்தான். தீமோத்தேயுவின் தாய் ஒரு விசுவாசியான யூதப் பெண்மணி, அவன் தந்தை ஒரு கிரேக்கன். 2 லிஸ்திரா, இக்கோனியம் நகரங்களிலுள்ள விசுவாசிகள் தீமோத்தேயுவை மதித்தனர். அவனைப் பற்றிய நல்ல கருத்துக்களையே கூறினர். 3 தீமோத்தேயு தன்னுடன் பயணம் செய்ய பவுல் விரும்பினான். அப்பகுதியில் வசித்த எல்லா யூதர்களும் தீமோத்தேயுவின் தந்தை கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான்.
4 பின் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் பிற பட்டணங்கள் வழியாகப் பிரயாணம் செய்தனர். எருசலேமில் அப்போஸ்தலரும் மூப்பர்களும் எடுத்த முடிவுகளையும் விதிகளையும் அவர்கள் விசுவாசிகளுக்கு அளித்தார்கள். இந்த விதிகளைப் பின்பற்றும்படிக்கு அவர்கள் விசுவாசிகளுக்குக் கூறினர். 5 எனவே சபைகள் விசுவாசத்தில் வலிமையுற்று நாள்தோறும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தன.
ஆசியாவிற்கு வெளியே அழைப்பு
6 பிரிகியா, கலாத்தியா நாடுகளின் வழியாகப் பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் சென்றனர். ஆசியா நாட்டில் அவர்கள் நற்செய்தியைப் போதிப்பதை பரிசுத்த ஆவியானவர் அனுமதிக்கவில்லை. 7 மீசியா நாட்டிற்கருகே பவுலும் தீமோத்தேயுவும் சென்றனர். பித்தினியா நாட்டிற்குள் போக அவர்கள் விரும்பினர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உள்ளே செல்ல விடவில்லை. 8 எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகருக்குச் சென்றனர்.
9 அன்றிரவு பவுல் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சியில் மக்கதோனியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் பவுலிடம் வந்தான். அம்மனிதன் அங்கு நின்று, “மக்கதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்றான். 10 பவுல் அக்காட்சியைக் கண்ட பின்பு கர்த்தருடைய நற்செய்தியை அம்மக்களுக்குக் கூறுவதற்கு தேவன் எங்களை அழைத்துள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
லீதியாளின் மாற்றம்
11 நாங்கள் ஒரு கப்பலில் துரோவாவை விட்டுப் புறப்பட்டு சாமோத்திராக்கே தீவிற்குப் பயணமானோம். மறுநாள் நாங்கள் நியாப்போலி நகருக்கு கடல் வழியாகப் பயணமானோம். 12 அங்கிருந்து நாங்கள் பிலிப்பிக்குச் சென்றோம். மக்கதோனியாவில் பிலிப்பி ஒரு முக்கியமான நகரம். அது ரோமர்களுக்கான நகரம். சில நாட்கள் நாங்கள் அந்நகரில் தங்கினோம்.
13 ஓய்வுநாளில் நகர வாசல் வழியாக ஆற்றை நோக்கிச் சென்றோம். நதியருகே ஒரு சிறப்பான பிரார்த்தனை செய்வதற்கு இடம் கிடைக்கக்கூடும் என்று எண்ணினோம். சில பெண்கள் அங்குக் கூடியிருந்தனர். நாங்கள் அங்கு அமர்ந்து அவர்களோடு பேசினோம். 14 தியத்தீரா என்னும் நகரிலுள்ள லீதியாள் என்னும் பெண்மணி அங்கிருந்தாள். ஊதாநிற பட்டு ஆடைகளை விற்பதே அவளது தொழில். அவள் உண்மையான தேவனை வழிபட்டாள். அவள் பவுலைக் கவனித்துக்கொண்டிருந்தாள். கர்த்தர் அவளது இருதயத்தைத் திறந்து பவுல் சொன்னவற்றை ஒப்புக்கொள்ளச் செய்தார். அவள் பவுல் கூறியவற்றை நம்பினாள். 15 அவளும் அவளது வீட்டினரும் ஞானஸ்நானம் பெற்றனர். பின் லீதியாள் எங்களை அவளது வீட்டிற்கு அழைத்தாள். அவள், “கர்த்தராகிய இயேசுவில் நான் உண்மையாகவே விசுவாசம் உள்ளவள் என்று நீங்கள் எண்ணினால் என் வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்றாள். அவள் எங்களை அவளோடு தங்குமாறு வற்புறுத்தினாள்.
சிறையில் பவுலும் சீலாவும்
16 ஒரு நாள் பிரார்த்தனை செய்யுமிடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு வேலைக்காரச் சிறுமி எங்களைச் சந்தித்தாள். அவளுக்குள் ஒரு விசேஷ ஆவி இருந்தது. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப்பற்றிக் கூறும் வல்லமையை இந்த ஆவி அவளுக்குக் கொடுத்தது. அவளது உரிமையாளர்களுக்கு இதைச் செய்து மிகுந்த பணத்தை அவள் சம்பாதித்துக்கொடுத்தாள். 17 இந்தப் பெண் பவுலையும் எங்களையும் தொடர்ந்து வந்தாள். அவள் உரத்த குரலில் “இம்மனிதர்கள் மிக உன்னதமான தேவனின் ஊழியர்கள்! உங்களுக்கு இரட்சிப்பின் வழியை அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்!” என்றாள். 18 அவள் இதையே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாள். மேலும் அதைப் பொறுக்கமுடியாத பவுல் அந்த ஆவியைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவளிடமிருந்து வெளியே வருமாறு உனக்குக் கட்டளையிடுகிறேன்!” என்றான். உடனே ஆவி வெளியேறிற்று.
19 அந்த வேலைக்காரப் பெண்ணின் உரிமையாளர்கள் இதைக் கண்டனர். அப்பெண்ணைப் பணம் சம்பாதிப்பதற்கு இனிமேல் பயன்படுத்த முடியாது என்பதை அம்மனிதர்கள் அறிந்தனர். எனவே அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து வந்து நகரத்தின் சந்தியில் நிறுத்தினர். நகர அதிகாரிகள் அங்கிருந்தனர். 20 தலைவர்களின் முன்பு அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் கொண்டு வந்தனர். அவர்கள், “இம்மனிதர்கள் யூதர்கள். நகரத்தில் துன்பத்தை விளைவிக்கிறார்கள். 21 நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள்.
22 பவுலையும், சீலாவையும் கூட்டத்தினர் எதிர்த்தார்கள். பவுல், சீலா ஆகியோரின் ஆடைகளைத் தலைவர்கள் கிழித்தார்கள். பவுலையும், சீலாவையும் கழிகளால் அடிக்கும்படி அவர்கள் சில மனிதர்களுக்குச் சொன்னார்கள். 23 அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் பல முறை அடித்தார்கள். பின் அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையில் தள்ளினார்கள். தலைவர்கள் சிறை அதிகாரியை நோக்கி, “கவனமாக அவர்களைக் காவலில் வையுங்கள்!” என்றார்கள். 24 சிறையதிகாரி இந்தச் சிறப்புக் கட்டளையைக் கேட்டான். எனவே அவன் பவுலையும் சீலாவையும் சிறையின் மிக உட்பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து காவலில் வைத்தான். பெரிய மரத்தூண்களுக்கிடையில் அவர்கள் கால்களைக் கட்டினான்.
25 நள்ளிரவில் பவுலும், சீலாவும் பிரார்த்தனை செய்துகொண்டும் தேவனை நோக்கி துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டுமிருந்தனர். மற்ற சிறைக் கைதிகள் அவர்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். 26 திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. சிறையின் அஸ்திபாரத்தை அசைக்கும்படியாக அது பலமாக இருந்தது. பின் சிறைச் சாலையின் கதவுகள் எல்லாம் திறந்தன. எல்லா கைதிகளும் அவர்களது விலங்குகளிலிருந்து விடுபட்டனர். 27 சிறையதிகாரி விழித்தெழுந்தான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதை அவன் கண்டான். சிறைக் கைதிகள் ஏற்கெனவே தப்பித்துப் போயிருக்க வேண்டுமென அவன் நினைத்தான். எனவே சிறையதிகாரி தன் வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள இருந்தான். 28 ஆனால் பவுல் உரக்க, “உன்னைத் துன்புறுத்திக்கொள்ளாதே. நாங்கள் எல்லோரும் இங்கு இருக்கிறோம்!” என்றான்.
29 சிறையதிகாரி விளக்குகளைக் கொண்டுவருமாறு ஒருவனுக்குப் பணித்தான். பின் அவன் உள்ளே ஓடினான். அவன் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் பவுல், சீலா ஆகியோர் முன்பாகக் கீழே விழுந்தான். 30 பின் அவன் அவர்களை வெளியே அழைத்து வந்து அவர்களிடம், “நான் இரட்சிப்படைய என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
31 அவர்கள் அவனை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாயிரு. நீயும் உன் வீட்டாரும் இரட்சிப்பு அடைவீர்கள்” என்றார்கள். 32 எனவே பவுலும் சீலாவும் கர்த்தரின் செய்தியை சிறையதிகாரிக்கும் அவன் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் கூறினர். 33 சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் அழைத்துச் சென்று அவர்களது காயங்களைக் கழுவினான். பின் சிறையதிகாரியும் அவன் வீட்டிலிருந்த அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர். 34 அதன் பிறகு சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்தான். அவன் வீட்டிலிருந்த அனைவரும் தேவன் மீதுகொண்ட விசுவாசத்தால் மகிழ்ந்தார்கள்.
35 மறுநாள் காலையில், தலைவர்கள் சில வீரர்களைச் சிறையதிகாரியிடம், “அம்மனிதர்களை விடுதலை செய்!” என்று கூற அனுப்பினர்.
36 சிறையதிகாரி பவுலிடம், “உங்களை விடுதலை செய்யும்படியாகக் கூறி தலைவர்கள் இந்த வீரர்களை அனுப்பியுள்ளனர். நீங்கள் போகலாம். அமைதியாகச் செல்லுங்கள்” என்று அறிவித்தான்.
37 ஆனால் பவுல் வீரரை நோக்கி, “உங்கள் தலைவர்கள் எங்களை விசாரணை செய்யவில்லை. ஆனால் மக்கள் முன்பாக அவர்கள் எங்களை அடித்துச் சிறையில் அடைத்தார்கள். நாங்கள் ரோம மக்கள். எங்களுக்கு உரிமை உள்ளது. இப்போது தலைவர்கள் நாங்கள் இரகசியமாகப் போக வேண்டுமென விரும்புகிறார்கள். முடியாது, தலைவர்களே வந்து எங்களை வெளியேற்றட்டும்!” என்றான்.
2008 by World Bible Translation Center