Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
அப்போஸ்தலர் 16:38-28:16

38 பவுல் கூறியவற்றை வீரர்கள் தலைவர்களுக்குக் கூறினர். பவுலும் சீலாவும் ரோம மக்கள் என்பதைத் தலைவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் பயந்தார்கள். 39 எனவே அவர்கள் வந்து பவுலிடமும், சீலாவிடமும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறைக்கு வெளியே அழைத்துவந்து அவர்களை நகரத்தை விட்டுப்போகுமாறு கூறினர். 40 ஆனால் பவுலும் சீலாவும் சிறையினின்று வந்தபோது அவர்கள் லிதியாளின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் விசுவாசிகள் சிலரைக் கண்டு, அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். பின் பவுலும் சீலாவும் வெளியேறினர்.

தெசலோனிக்கேயில் பவுலும் சீலாவும்

17 அம்பிபோலி, அப்போலோனியா நகரங்கள் வழியாகப் பவுலும் சீலாவும் பிரயாணம் செய்தனர். அவர்கள் தெசலோனிக்கே நகரத்திற்கு வந்தனர். அந்நகரில் யூதர்களின் ஜெப ஆலயம் ஒன்று இருந்தது. யூதர்களைப் பார்க்கும்படியாகப் பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்றான். இதையே அவன் எப்போதும் செய்தான். மூன்று வாரங்கள் ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களைக் குறித்துப் பவுல் யூதர்களோடு பேசினான். வேதவாக்கியங்களை யூதர்களுக்கு பவுல் விவரித்தான். கிறிஸ்து இறக்க வேண்டும் என்பதையும், மரணத்திலிருந்து எழ வேண்டும் என்பதையும் காட்டினான். பவுல் “நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற மனிதனாகிய இயேசுவே கிறிஸ்து ஆவார்” என்றான். அவர்களில் சிலர் ஒப்புக்கொண்டு பவுலுடனும் சீலாவுடனும் இணைந்தார்கள். ஜெப ஆலயத்தில் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்க மனிதர்கள் இருந்தனர். அங்கு முக்கியமான பெண்மணிகள் பலரும் இருந்தனர். இவர்களில் பலரும் பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டனர்.

ஆனால் விசுவாசியாத யூதர்கள் பொறாமை கொண்டனர். நகரத்திலிருந்து சில தீய மனிதர்களை கூலிக்காக அமர்த்திக்கொண்டனர். இத்தீய மனிதர்கள் பல மக்களைச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் கலகம் விளைவித்தனர். பவுலையும் சீலாவையும் தேடிக்கொண்டு இந்த மனிதர்கள் யாசோனின் வீட்டிற்குச் சென்றனர். பவுலையும் சீலாவையும் நகர சபையின் முன்பாக அழைத்து வரவேண்டுமென்று அம்மனிதர்கள் கேட்டனர். ஆனால் அவர்கள் பவுலையும் சீலாவையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே மக்கள் யாசோனையும், வேறு சில விசுவாசிகளையும் நகரின் தலைவர்கள் முன்பாக இழுத்து வந்தனர். மக்கள் எல்லோரும், “இம்மனிதர்கள் உலகத்தின் எல்லா இடங்களிலும் கலகமுண்டாக்கினார்கள். இப்போது இவர்கள் இங்கும் வந்துவிட்டனர்! யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வைத்திருக்கிறான். இராயரின் சட்டங்களுக்கு எதிரான செயல்களை அவர்களெல்லாம் செய்கின்றனர். இயேசு என்னும் இன்னொரு மன்னன் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்” என்று கூக்குரலிட்டனர்.

நகரத்தின் தலைவர்களும் பிற மக்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் கலக்கமடைந்தார்கள். யாசோனும் பிற விசுவாசிகளும் தண்டனைப் பணம் செலுத்தும்படியாகச் செய்தனர். பின் விசுவாசிகளை விடுதலை செய்து போகும்படி அனுமதித்தனர்.

பெரேயாவில் ஊழியம்

10 அதே இரவில் விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பெரேயா எனப்பட்ட மற்றொரு நகரத்திற்கு அனுப்பினர். பெரேயாவில் பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். 11 தெசலோனிக்கேயின் யூதர்களைக் காட்டிலும் இந்த யூதர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். பவுலும் சீலாவும் கூறியவற்றை இந்த யூதர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றார்கள். பெரேயாவின் யூதர்கள் ஒவ்வொருநாளும் வேதவாக்கியங்களைக் கற்றார்கள். இக்காரியங்கள் உண்மையானவையா என்று அறிய இந்த யூதர்கள் விரும்பினார்கள். 12 இந்த யூதர்களில் பலர் நம்பிக்கை கொண்டனர். உயர்நிலையிலிருந்த பல கிரேக்கப் பெண்களும் ஆண்களைப் போலவே நம்பிக்கை கொண்டனர்.

13 தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவில் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசித்தான் என்பதை அறிந்தபோது அவர்கள் பெரேயாவுக்கும் வந்தனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவின் மக்களைக் கலக்கமுறச் செய்து கலகம் உண்டாக்கினர். 14 எனவே விசுவாசிகள் விரைந்து பவுலைக் கடற்கரை வழியாக அனுப்பி வைத்தனர், ஆனால் சீலாவும் தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கினர். 15 பவுலோடு சென்ற விசுவாசிகள் அவனை அத்தேனே நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். பவுலிடமிருந்து அந்தச் சகோதரர்கள் சீலாவுக்கும் தீமோத்தேயுவுக்கும் குறிப்புகளை எடுத்துச் சென்றனர். அக்குறிப்புகள், “எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் என்னிடம் வாருங்கள்” என்றன.

அத்தேனேயில் பவுல்

16 அத்தேனேயில் பவுல் சீலாவுக்காகவும் தீமோத்தேயுவுக்காகவும் காத்துக்கொண்டிருந்தான். நகரம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக் கண்டு பவுல் மனக்கலக்கமடைந்திருந்தான். 17 ஜெப ஆலயத்தில் பவுல் யூதர்களோடும் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்கரோடும் பேசினான். நகரத்தின் சந்தை வெளிகளில் நேரம் போக்கிக்கொண்டிருந்த சில மக்களோடும் பவுல் பேசினான். ஒவ்வொரு நாளும் பவுல் இதைச் செய்தான். 18 எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் தத்துவவாதிகளில் சிலர் அவனோடு விவாதித்தார்கள்.

அவர்களில் சிலர், “தான் கூறிக்கொண்டிருப்பதைப் பற்றி இந்த மனிதனுக்கு உண்மையாகவே தெரியாது. அவன் என்ன சொல்ல முயன்றுகொண்டிருக்கிறான்?” என்றார்கள். இயேசு மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட நற்செய்தியைப் பவுல் அவர்களுக்குக் கூறிக்கொண்டிருந்தான். எனவே அவர்கள், “வேறு ஏதோ சில தேவர்களைக் குறித்து அவன் நமக்குச் சொல்லிக்கொண்டிருப்பதாகப் படுகிறது” என்றனர்.

19 அவர்கள் பவுலைக் கண்டுபிடித்து அரியோபாகஸ் [a] சங்கத்தின் கூட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அவர்கள், “நீங்கள் போதிக்கிற இப்புதிய கருத்தை எங்களுக்கு விளக்குங்கள். 20 நீங்கள் சொல்லுபவை எங்களுக்குப் புதியவை. இவற்றைக் குறித்து நாங்கள் முன்னர் கேள்விப்பட்டதில்லை. இப்போதனையின் பொருள் என்ன என்று நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றனர். 21 (அத்தேனேயின் மக்கள் அனைவரும் அங்கே வாழ்ந்துகொண்டிருந்த பிற நாட்டு மக்களும் இந்தப் புத்தம்புதிய கருத்துக்களைப் பற்றிப் பேசிப் பேசியே பொழுதைக் கழித்தனர்.)

22 அரியோபாகஸ் சங்கத்தின் கூட்டத்தில் பவுல் எழுந்து நின்றான். பவுல், “அத்தேனேயின் மனிதர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் பக்தியில் மிக்கவர்களாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. 23 நான் உங்கள் நகரத்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்தேன். நீங்கள் வழிபடுகின்ற பொருட்களைப் பார்த்தேன். ‘ அறியப்படாத தேவனுக்கு’ என்று எழுதப்பட்ட ஒரு பீடத்தையும் கண்டேன். நீங்கள் அறியாத ஒரு தேவனை வழிபடுகின்றீர்கள். நான் உங்களுக்குக் கூறுகின்ற தேவன் அவரே!

24 “அவரே உலகம் முழுவதையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் உண்டாக்கின தேவன். அவரே வானம் பூமி ஆகியவற்றின் கர்த்தர். மனிதன் கட்டுகிற ஆலயங்களில் அவர் வசிப்பதில்லை. 25 உயிர், மூச்சு, பிற அனைத்தையும் மக்களுக்குக் கொடுப்பவர் இந்த தேவனே, அவருக்கு மக்களிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை. தேவனுக்குத் தேவையான எல்லாம் அவரிடம் இருக்கின்றன. 26 ஒரு மனிதனை உருவாக்குவதிலிருந்து தேவன் ஆரம்பித்தார். அவனிலிருந்து தேவன் வெவ்வேறான மக்களை உருவாக்கினார். தேவன் அவர்களை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கச் செய்தார். எப்போது, எங்கு அவர்கள் வசிக்க வேண்டுமென்பதை தேவன் மிகச் சரியாகத் தீர்மானித்தார்.

27 “மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை.

28 “நாம் அவரோடு வாழ்கிறோம். நாம் அவரோடு நடக்கிறோம். நாம் அவரோடு இருக்கிறோம். உங்கள் கவிஞர்கள் சிலர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஏனென்றால் நாம் அவரது பிள்ளைகள்.’

29 “நாம் தேவனின் பிள்ளைகள். மக்கள் கற்பனை செய்கிற அல்லது உண்டாக்குகிற பொருளைப் போன்றவர் தேவன் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் பொன், வெள்ளி அல்லது கல்லால் செய்யப்பட்ட பொருளைப் போன்றவர் அல்ல. 30 கடந்த காலத்தில் மக்கள் தேவனைப் புரிந்துகொள்ளவில்லை. தேவனும் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் அவனது இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக எல்லா இடங்களிலும் கூறுகிறார். 31 தேவன் உலகிலுள்ள எல்லா மக்களையும் நியாயம்தீர்ப்பதற்கு ஒரு நாளைக் குறித்து வைத்துள்ளார். அவர் சரியான தீர்ப்பு வழங்குவார். அவர் ஒரு மனிதனைப் பயன்படுத்துவார். தேவன் பல காலத்திற்கு முன்னரேயே இம்மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அம்மனிதனை மரணத்தினின்று எழுப்பியதன் மூலம் தேவன் இதற்கான உறுதியை அனைவருக்கும் அளித்தார்” என்றான்.

32 இயேசு மரணத்தினின்று எழுதல் என்பதைக் கேள்விப்பட்டபோது அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்கள், “உங்களிடம் இதைக் குறித்து மேலும் பின்னர் கேட்போம்” என்றனர். 33 எனவே பவுல் அவர்களுக்கிடையிலிருந்து சென்றான். 34 ஆனால் மக்களில் சிலர் பவுலை நம்பி அவனோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவன் தியொனீசியு, அவன் அரியோபாகஸ் சங்கத்தின் உறுப்பினன். வேறொருத்தி தாமரி என்று அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி. இன்னும் சில மக்களும் அவர்களுடன் விசுவாசிகளாக மாறினர்.

கொரிந்துவில் பவுல்

18 இதன் பிறகு பவுல் அத்தேனேயை விட்டு, கொரிந்து நகரத்திற்குச் சென்றான். கொரிந்துவில் பவுல் ஆக்கில்லா என்னும் பெயருள்ள யூத மனிதனைச் சந்தித்தான். ஆக்கில்லா பொந்து நாட்டில் பிறந்தவன். ஆனால் ஆக்கில்லாவும் அவனது மனைவி பிரிசில்லாவும் சமீபத்தில் இத்தாலியிலிருந்துகொரிந்துவுக்கு வந்திருந்தனர். கிலவுதியு எல்லா யூதர்களும் ரோமை விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டதால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்தனர். பவுல், ஆக்கில்லா, பிரிசில்லா ஆகியோரைச் சந்திக்கச் சென்றான். அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான்.

ஒவ்வொரு ஓய்வு நாளிலும் பவுல் ஜெப ஆலயத்தில் யூதரோடும் கிரேக்கரோடும் பேசினான். அவர்கள் இயேசுவில் விசுவாசம்கொள்ள ஒப்புமாறு செய்வதற்குப் பவுல் முயற்சி செய்துகொண்டிருந்தான். சீலாவும் தீமோத்தேயுவும் மக்கதோனியாவிலிருந்துகொரிந்துவிலுள்ள பவுலிடம் வந்தனர். இதன் பிறகு பவுல் தனது நேரம் முழுவதையும் மக்களுக்கு நற்செய்தியைக் கூறுவதிலேயே செலவிட்டான். இயேசுவே கிறிஸ்து என்பதை அவன் யூதர்களுக்குக் காட்டினான். ஆனால் யூதர்கள் பவுலின் போதனையை ஏற்றுக்கொள்ளவில்லை. சில புண்படுத்தும் வார்த்தைகளை யூதர்கள் கூறினர். எனவே பவுல் உடையிலிருந்த தூசியை உதறினான். அவன் யூதரை நோக்கி, “நீங்கள் இரட்சிக்கப்படாவிட்டால் அது உங்களின் தவறுதான்! நான் என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன்! இதன் பிறகு, நான் யூதரல்லாத மக்களிடம் மட்டுமே செல்வேன்!” என்றான்.

பவுல் ஜெப ஆலயத்தை விட்டு யுஸ்து என்பவரின் வீட்டிற்குப் போனான். இம்மனிதன் உண்மையான தேவனை வணங்கினான். அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்திருந்தது. அந்த ஜெப ஆலயத்திற்கு அதிகாரி கிறிஸ்பு என்பவன். கிறிஸ்புவும் அவன் வீட்டில் வசிக்கும் எல்லா மக்களும் கர்த்தரை விசுவாசித்தனர். கொரிந்துவிலுள்ள வேறு பலரும் பவுல் கூறியதைக் கேட்டனர். அவர்களும் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் பெற்றனர்.

இரவு வேளையில் பவுலுக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. கர்த்தர் அவனை நோக்கி, “பயப்படாதே! மக்களுக்குப் போதிப்பதைத் தொடர்ந்து செய். நிறுத்தாதே! 10 நான் உன்னோடு இருக்கிறேன். யாரும் உன்னை தாக்கித் துன்புறுத்த முடியாது. என்னுடைய மக்கள் பலர் நகரத்தில் இருக்கிறார்கள்” என்றார். 11 ஒன்றரை ஆண்டு காலம் பவுல் அங்கேயே தங்கி மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை உபதேசித்தான்.

கல்லியோன் முன் பவுல்

12 கல்லியோன் அகாயா நாட்டின் ஆளுநரானான். அக்காலத்தில் யூதர்களில் சிலர் பவுலுக்கு எதிராகக் குழுவாக வந்தனர். அவர்கள் பவுலை நீதி மன்றத்திற்குக் கொண்டு போனார்கள். 13 யூதர்கள் கல்லியோனிடம், “யூத விதிக்கு மாறான வகையில் தேவனை வழிபடும்படி இம்மனிதன் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்கிறான்!” என்றார்கள்.

14 பவுல் ஏதோ சொல்ல இருந்தான். ஆனால் கல்லியோன் யூதர்களிடம், “நீங்கள் பெரிய குற்றத்தைக் குறித்தோ அல்லது தவறைக் குறித்தோ புகார் செய்திருந்தால் நான் உங்களுக்குச் செவிசாய்த்திருப்பேன். 15 ஆனால் யூதர்களாகிய நீங்கள் கூறுபவையோ வார்த்தைகள், பெயர்கள் ஆகியவற்றைப் பற்றிய வினாக்களும், உங்களுடைய சட்டத்தைப் பற்றிய வாக்குவாதமும் மட்டுமேயாகும். எனவே நீங்களே இந்தப் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். இந்த விஷயங்களில் நான் நீதிபதியாக இருக்க விரும்பவில்லை!” என்றான். 16 பின் கல்லியோன் அவர்களை நீதிமன்றத்தை விட்டுப்போகச் செய்தான்.

17 அவர்கள் எல்லோரும் சொஸ்தேனேயைப் பிடித்துக்கொண்டார்கள். (சொஸ்தேனே அப்போது ஜெப ஆலயத்தின் தலைவனாக இருந்தான்) அவர்கள் சொஸ்தேனேயை நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். ஆனால் கல்லியோன் இதைக்குறித்து எந்தக் கவலையும்படவில்லை.

அந்தியோகியாவுக்குத் திரும்புதல்

18 பவுல் சகோதரர்களுடன் பலநாட்கள் தங்கியிருந்தான். பின் அவன் அவர்களை விட்டுப் புறப்பட்டு, சிரியாவிற்குக் கடற்பயணமானான். பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் அவனோடிருந்தனர். கெங்கிரேயாவில் பவுல் தனது தலைமயிரைக் களைந்தான். அவன் தேவனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தான் என்பதை இது உணர்த்தியது. 19 பின் அவர்கள் எபேசு பட்டணத்தை அடைந்தார்கள். இங்கு அவன் ஆக்கில்லாவையும், பிரிசில்லாவையும் பிரிந்தான். பவுல் எபேசுவில் இருந்தபோது ஜெப ஆலயத்திற்குள் சென்று யூதரோடு பேசினான். 20 யூதர்கள் பவுலை இன்னும் சில காலம் தங்குமாறு வேண்டினார்கள். ஆனால் பவுல் மறுத்துவிட்டான். 21 “ஆனால் தேவன் விரும்பினால் நான் உங்களிடம் மீண்டும் வருவேன்” என்று புறப்படும்பொழுது கூறினான். எனவே பவுல் எபேசுவிலிருந்து மீண்டும் கடற்பயணம் செய்தான்.

22 பவுல் செசரியா நகரத்திற்குச் சென்றான். பின்னர் அவன் எருசலேமிலிருந்த சபையினரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தினான். அதன் பிறகு பவுல் அந்தியோகியா நகரத்திற்குச் சென்றான். 23 பவுல் அந்தியோகியாவில் சிலகாலம் தங்கியிருந்தான். பின் அவன் கலாத்தியா, பிரிகியா நாடுகள் வழியாகச் சென்றான். இந்நாடுகளில் பவுல் ஊர் ஊராகப் பயணம் செய்தான். அவன் இயேசுவின் சீஷர்கள் அனைவரையும் பலப்படுத்தினான்.

அப்பொல்லோவின் ஊழியம்

24 அப்பொல்லோ என்னும் பெயருள்ள யூதன் எபேசுவிற்கு வந்தான். அப்பொல்லோ, அலெக்ஸாண்டிரியா நகரத்தில் பிறந்தவன். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவன் வேத வாக்கியங்களை வல்லமையுடன் பயன்படுத்தினான். 25 கர்த்தரைப் பற்றி அவன் கற்றிருந்தான். அப்பொல்லோ ஆன்மீக உற்சாகம் நிரம்பியிருந்தான். இயேசுவைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தான். இயேசுவைக் குறித்து சரியான கருத்துக்களையே அப்பொல்லோ கற்பித்தான். அவனுக்குத் தெரிந்தது யோவானின் ஞானஸ்நானம் மட்டுமே. 26 அப்பொல்லோ ஜெப ஆலயங்களில் துணிவாகப் பேசத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் துணிவுடன் அதைச் செய்தான். அவன் பேசுவதைப் பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் கேட்டனர். அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தேவனுடைய வழியை இன்னும் துல்லியமாக அறிய உதவினார்கள்.

27 அகாயா நாட்டிற்குப் போவதற்கு அப்பொல்லோ விரும்பினான். அதற்கு எபேசுவின் சகோதரர்கள் அவனுக்கு உதவினர். அகாயாவிலுள்ள இயேசுவின் சீஷர்களுக்கு அவர்கள் ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் அப்பொல்லோவை இச்சீஷர்கள் வரவேற்குமாறு அவர்கள் கேட்டனர். அகாயாவில் உள்ள இந்தச் சீஷர்கள் தேவனுடைய கிருபையின் மூலமாக இயேசுவில் விசுவாசம் வைத்திருந்தார்கள். அப்பொல்லோ அங்கு வந்து சேர்ந்தபொழுது அவன் அவர்களுக்கு மிகவும் உதவினான். 28 அவன் எல்லா மக்களுக்கும் முன்பாக யூதர்களுக்கு எதிராக மிக வன்மையாக வாதிட்டான். யூதர்கள் தவறான போதனைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை நிரூபித்தான். அவன் வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று காட்டினான்.

எபேசுவில் பவுல்

19 அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.

இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர்.

எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.

அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள்.

பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான்.

அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர். இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர்.

பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்று, மிகவும் துணிவாகப் பேசினான். பவுல் மூன்று மாதங்கள் இதைச் செய்தான். அவன் யூதர்களிடம் தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிப் பேசி, அவற்றை யூதர்கள் ஏற்றுக்கொள்ளும்படித் தூண்ட முயற்சித்தான். ஆனால் சில யூதர்கள் பிடிவாதமாக இருந்தனர். அவர்கள் நம்ப மறுத்தனர். இந்த யூதர்கள் தேவனுடைய வழியைக் குறித்துத் தீயவற்றைப் பேசினர். எல்லா மக்களும் இவற்றை கேட்டனர். எனவே பவுல் இந்த யூதரை விட்டு நீங்கி, இயேசுவின் சீஷர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான். திறன்னு என்ற ஒருவனின் பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்குப் பவுல் போனான். பவுல் அங்கிருந்த மக்களுடன் தினமும் கலந்துரையாடினான். 10 பவுல் இதை இரண்டு வருடங்கள் செய்தான். இச்செயலால் ஆசியாவில் வசித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு யூதனும் கிரேக்கனும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டனர்.

ஸ்கேவாவின் பிள்ளைகள்

11 சில அசாதாரணமான அற்புதங்களைச் செய்வதற்கு தேவன் பவுலைப் பயன்படுத்தினார். 12 பவுல் பயன்படுத்திய துணிகளையும் கைக்குட்டைகளையும் சிலர் எடுத்துச் சென்றனர். இவற்றை மக்கள் நோயாளிகள் மீது வைத்தனர். அவர்கள் இதைச் செய்தபோது, நோயாளிகள் குணமடைந்தார்கள். அசுத்த ஆவிகள் அவர்களைவிட்டு நீங்கிச் சென்றன.

13-14 சில யூதர்களும் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களை விட்டு அசுத்த ஆவிகள் நீங்கும்படியாகச் செய்தனர். ஸ்கேவாவின் ஏழு மகன்களும் இதைச் செய்தனர். (ஸ்கேவா ஒரு தலைமை ஆசாரியன்) கர்த்தர் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி, மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளை வெளியேற்ற இந்த யூதர்கள் முயன்றனர். அவர்கள் எல்லோரும், “பவுல் பேசுகின்ற அதே இயேசுவினால், வெளியேறுமாறு நான் கட்டளையிடுகிறேன்!” என்று கூறினர்.

15 ஆனால் ஒருமுறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, “எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது.

16 மேலும் அசுத்த ஆவி பிடித்த மனிதன், இந்த யூதர்கள் மீது தாவினான். அவர்கள் எல்லோரைக் காட்டிலும் அவன் மிகுந்த பலம் பொருந்தியவனாக இருந்தான். அவன் அவர்களை அடித்து, அவர்களின் ஆடைகளைக் கிழித்துப்போட்டான். அந்த வீட்டிலிருந்து இந்த யூதர்கள் நிர்வாணமாக ஓடிப் போனார்கள்.

17 எபேசுவின் எல்லா ஜனங்களும், யூதரும் கிரேக்கரும் இதனை அறிந்தனர். தேவனிடம் மிகுந்த மரியாதை கொள்ளத் துவங்கினர். கர்த்தராகிய இயேசுவின் பெயரை மக்கள் அதிகமாக மகிமைப்படுத்த ஆரம்பித்தனர்.

18 விசுவாசிகளில் பலர் தாங்கள் செய்த பாவச் செயல்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் துவங்கினார்கள். 19 சில விசுவாசிகள் மந்திரத்தைப் பயன்படுத்தினவர்களாயிருந்தனர். அவர்கள் தங்கள் மந்திர நூல்களைக் கொண்டு வந்து, அவற்றை எல்லோருக்கும் முன்பாக எரித்தனர். அப்புத்தகங்கள் சுமார் ஐம்பதாயிரம் வெள்ளிக் காசுகள் மதிப்புடையனவாக இருந்தன. 20 இவ்வாறே கர்த்தரின் வார்த்தை மிக்க வல்லமை வாய்ந்த வகையில் அதிகமான மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் விசுவாசம் வைத்தனர்.

பவுல் பயணத்திட்டம்

21 இக்காரியங்களுக்குப் பிறகு, பவுல் எருசலேமுக்குச் செல்லத் திட்டமிட்டான். மக்கதோனியா, அகாயா நாடுகள் வழியாகச் சென்று, பின் எருசலேமுக்குச் செல்லப் பவுல் திட்டமிட்டான். பவுல், “நான் எருசலேமை அடைந்த பிறகு, ரோமையும் பார்க்க வேண்டும்” என்று எண்ணினான். 22 தீமோத்தேயுவும், எரஸ்துவும் பவுலுக்கு உதவியவர்களில் இருவர். மக்கதோனியாவுக்கு அவர்களைத் தனக்கு முன்பாகவே பவுல் அனுப்பினான். ஆசியாவில் இன்னும் சிலகாலம் பவுல் தங்கியிருந்தான்.

எபேசுவில் குழப்பம்

23 ஆனால் அக்காலத்தில் எபேசுவில் மிகத் தீவிரமான ஒரு குழப்பம் ஏற்பட்டது. தேவனுடைய வழியைக் குறித்த குழப்பம் அது. அவையெல்லாம் இவ்வாறு நிகழ்ந்தன. 24 தெமெத்திரியு என்னும் பெயர் கொண்ட மனிதன் ஒருவன் இருந்தான். அவன் வெள்ளி வேலை செய்பவனாக இருந்தான். ஆர்தமிஸ் தேவதையின் தேவாலயத்தைப் போன்று தோற்றமளித்த வெள்ளியாலான சிறிய மாதிரி தேவாலயங்களை அவன் செய்து வந்தான். இவ்வேலையைச் செய்தவர்கள் மிகுந்த பணம் சம்பாதித்தார்கள்.

25 இதே வேலையைச் செய்து வந்தவர்கள் அனைவரையும் அதன் தொடர்பான வேலையைச் செய்தவர்களையும் தெமெத்திரியு ஒன்று கூட்டினான். தெமெத்திரியு அவர்களை நோக்கி, “நமது வளம் இத்தொழிலைச் சார்ந்துள்ளதை அறிவீர்கள். 26 ஆனால் இந்த மனிதன் பவுல் செய்துகொண்டிருப்பதைப் பாருங்கள்! அவன் சொல்வதைக் கேளுங்கள்! பவுல் மனிதர்களைத் தூண்டி, மனம் மாற்றிவிட்டான். எபேசுவிலும் அநேகமாக ஆசியாவின் எல்லாப் பகுதிகளிலும் இதைச் செய்திருக்கிறான். மனிதன் செய்கின்ற கடவுள் சிலைகள் உண்மையானவை அல்ல என்று பவுல் சொல்கிறான். 27 பவுல் சொல்கின்ற இந்தக் காரியங்கள் மக்களை, நமது வேலைக்கெதிராகத் திருப்பக்கூடும். ஆனால் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. பெரிய தேவியான ஆர்தமிஸின் தேவாலயம் முக்கியமானதல்ல என்று மக்கள் நினைக்கக் கூடும். அவளது பெருமை அழிக்கப்படக்கூடும். ஆசியாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் வழிப்படுகின்ற தேவதை ஆர்தமிஸ் ஆவாள்” என்றான்.

28 அம்மனிதர்கள் இதனைக் கேட்டபோது மிகவும் கோபமுற்றனர். அவர்கள், “எபேசு பட்டணத்தார்களின் தேவியான ஆர்தமிஸே பெரியவள்” என்று உரக்க கூவினர். 29 நகரத்தின் எல்லா மக்களும் குழப்பமான நிலையில் காயுவையும், அரிஸ்தர்க்குவையும் பிடித்தார்கள். (இவ்விருவரும் மக்கதோனியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பவுலோடு பயணம் செய்துகொண்டிருந்தனர்.) பின் எல்லா மக்களும் அரங்கிற்குள் ஓடினார்கள். 30 பவுல் உள்ளே சென்று கூட்டத்தில் பேச விரும்பினான். ஆனால் இயேசுவின் சீஷர்கள் அவனைப் போக அனுமதிக்கவில்லை. 31 மேலும் நாட்டின் சில தலைவர்கள் பவுலின் நண்பர்களாக இருந்தனர். இத்தலைவர்கள் அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினர். அவர்கள் பவுல் அரங்கிற்குள் செல்ல வேண்டாமென்று கூறினர்.

32 ஒருவர் சத்தம் போட்டு ஒன்றையும் இன்னொருவர் சத்தம் போட்டு இன்னொன்றையும் சொன்னார்கள். மேலும் அவர்கள் எதற்காகக் கூடியிருக்கிறார்கள் என்பதைப் பெரும்பாலோர் அறியாதவாறு கூட்டத்தில் குழப்பம் மிகுந்திருந்தது. 33 யூதர்கள் அலெக்ஸாண்டர் என்னும் பெயருள்ள ஒருவனை மக்கள் முன்பாக நிறுத்தினர். அவன் செய்ய வேண்டியதை மக்கள் அவனுக்கு விளக்கினார்கள். மக்களுக்குக் காரியங்களை விளக்கவேண்டியிருந்ததால் அலேக்ஸாண்டர் தனது கையை அமைதிக்காக அசைத்தான். 34 அலெக்ஸாண்டர் ஒரு யூதன் என்பதை மக்கள் அடையாளம் கண்டபோது அவர்கள் எல்லோரும் உரத்த குரலில் கூச்சலிட ஆரம்பித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். மக்கள் “எபேசுவின் ஆர்தமிஸ் பெருமை பொருந்தியவள்! எபேசுவின் ஆர்தமிஸ் பெருமை மிக்கவள்! ஆர்தமிஸ் பெரியவள்!” என்றனர்.

35 நகர அலுவலன் மக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டினான். அவன், “எபேசுவின் மக்களே! ஆர்தமிஸ் தேவியின் தேவாலயத்தையும் பரலோகத்திலிருந்து விழுந்த அவளது பரிசுத்தப் பாறையையும் [b] பெற்ற நகரம் எபேசு என்பதை எல்லா மக்களும் அறிவர். 36 இவற்றை யாரும் மறுக்க முடியாது. எனவே நீங்கள் அமைதியாக இருங்கள். முரட்டுத்தனமாக எதையும் செய்யாதீர்கள்

37 “நீங்கள் இந்த மனிதர்களை அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால் நமது தேவிக்கு விரோதமாக அவர்கள் எதுவும் கூறவில்லை. அவள் தேவாலயத்திலிருந்து அவர்கள் எதையும் திருடவில்லை. 38 நம்மிடம் நீதி வழங்கும் மன்றங்களும் நீதிபதிகளும் இருக்கிறார்கள். தெமெத்திரியுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் எவருக்கேனும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றனவா? அவர்கள் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும்! அங்கே குற்றச்சாட்டுகளையும் எதிர் குற்றச்சாட்டுக்களையும் வைக்கலாம்.

39 “நீங்கள் பேசவேண்டியது வேறு ஏதேனும் உள்ளதா? அப்படியானால் மக்களின் நகரமன்றம் நமக்கிருக்கிறது. அங்கு முடிவெடுக்கலாம். 40 நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்று ஒருவன் இந்தத் தொல்லையைப் பார்த்துவிட்டு, நாம் கலகத்தை உண்டாக்குகிறோம் என்று கூறலாம். இந்தத் தொல்லையை நம்மால் விளக்க முடியாது, ஏனெனில் இக்கூட்டத்திற்கு உண்மையான காரணம் எதுவும் இல்லை” என்றான். 41 நகர அலுவலன் இவற்றைக் கூறிய பிறகு, அவன் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினான். எல்லா மக்களும் கலைந்தார்கள்.

மக்கதோனியா, கிரீஸில் பவுல்

20 தொல்லை நீங்கியபோது பவுல் சீஷர்களைத் தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தான். அவன் அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி,பின் விடை பெற்றான். பவுல் மக்கதோனியா நாட்டிற்குத் தன் பயணத்தைத் துவக்கினான். மக்கதோனியாவிற்குச் சென்ற வழியில் பல இடங்களில் தங்கி சீஷர்களை பலப்படுத்துவதற்குப் பல காரியங்களை அவர்களுக்குக் கூறினான். பின் பவுல் கிரீசை அடைந்தான். அவன் அங்கு மூன்று மாதங்கள் தங்கினான். அவன் சிரியாவுக்குக் கடற்பயணம் செய்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். ஆனால் சில யூதர்கள் அவனுக்கெதிராகத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தனர். எனவே பவுல் மக்கதோனியா வழியாக சிரியாவுக்குத் திரும்பிப் போக முடிவு செய்தான். சில மனிதர்கள் அவனோடிருந்தனர். அவர்கள் பெரேயா நகரத்தைச் சேர்ந்த சோபத்தர், தெசலோனிக்கா நகரத்தின் அரிஸ்தர்க்கு மற்றும் செக்குந்து, தெர்பெ நகரின் காயு, தீமோத்தேயு, ஆசியாவின் இரண்டு மனிதர்களான தீகிக்குவும், துரோப்பீமும் ஆவர். பவுலுக்கு முன்னரே இம்மனிதர்கள் சென்றனர். துரோவா நகரில் அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். புளிப்பில்லாத அப்பத்தின் பண்டிகைக்குப் பிறகு நாங்கள் பிலிப்பி நகரத்திலிருந்து கடற் பயணமாகச் சென்றோம். ஐந்து நாட்களுக்குப் பிறகு துரோவாவில் இம்மனிதர்களை நாங்கள் சந்தித்தோம். அங்கு ஏழு நாட்கள் தங்கினோம்.

துரோவாவில் பவுல்

கர்த்தரின் திருவிருந்தை [c] உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். நாங்கள் எல்லோரும் மாடியிலுள்ள அறையில் கூடியிருந்தோம். அறையில் பல விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. ஐத்தீகு என்னப்பட்ட இளைஞன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். ஐத்தீகு மிக, மிக தூக்க கலக்கமுற்றான். கடைசியில் அவன் தூங்கி, ஜன்னலிலிருந்து விழுந்தான். மூன்றாம் மாடியிலிருந்து அவன் கீழே விழுந்தான். மக்கள் சென்று அவனைத் தூக்கியபோது அவன் இறந்து விட்டிருந்தான்.

10 பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான். 11 பவுல் மீண்டும் மாடிக்குச் சென்றான். அவன் அவர்களோடு அப்பத்தைப் பிட்டு உண்டான். பவுல் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்தபோது அதிகாலைப் பொழுதாகியிருந்தது. பின் பவுல் புறப்பட்டுப் போனான். 12 மக்கள் இளைஞனை வீட்டிற்குள் எடுத்துச்சென்றனர். அவன் உயிரோடிருந்தான். மக்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர்.

மிலேத்துவுக்குப் பயணம்

13 ஆசோ நகருக்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். நாங்கள் பவுலுக்கு முன்பாகவே முதலாவதாக அங்கு சென்றோம். ஆசோவில் பவுல் எங்களைச் சந்தித்து அங்குள்ள கப்பலில் எங்களோடு சேர்ந்துகொள்ளத் திட்டமிட்டான். பவுல் ஆசோவிற்கு நிலத்தின் வழியாகப் பயணம் செய்ய விரும்பியதால் இவ்வாறு செய்யும்படி எங்களுக்குக் கூறினான். 14 பின்னர் பவுலை நாங்கள் ஆசோவில் சந்தித்தோம். அங்கு அவன் எங்களோடு கப்பலின்மேல் வந்தான். நாங்கள் எல்லோரும் மித்திலேனே நகருக்குச் சென்றோம். 15 மறுநாள் நாங்கள் மித்திலேனேயிலிருந்து கடற்பயணமானோம். கீயுதீவின் அருகேயுள்ள ஓரிடத்திற்கு வந்தோம். மறுநாள் சாமோஸ் தீவிற்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். ஒரு நாள் கழித்து, மிலேத்து நகரத்திற்கு வந்தோம். 16 எபேசுவில் தங்கவேண்டாமென்று பவுல் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தான். ஆசியாவில் நீண்ட காலம் தங்க அவன் விரும்பவில்லை. முடிந்தால் பெந்தெகோஸ்து [d] நாளில் எருசலேமில் இருக்க விரும்பியதால் அவன் அவசரப்பட்டுக்கொண்டிருந்தான்.

எபேசு மூப்பர்களுடன் பவுல்

17 மிலேத்துவிலிருந்து பவுல் ஒரு செய்தியை எபேசுவுக்கு அனுப்பினான். எபேசு சபையின் மூப்பரைத் தன்னிடம் வருமாறு அவன் அழைத்தான்.

18 மூப்பர்கள் அவனிடம் வந்தபொழுது பவுல் அவர்களை நோக்கி, “நான் ஆசியாவுக்கு வந்த முதல் நாளிலிருந்து என் வாழ்க்கையைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். நான் உங்களோடிருந்த காலம் முழுவதும் நான் வாழ்ந்த வகையையும் நீங்கள் அறிவீர்கள். 19 யூதர்கள் அடிக்கடி எனக்கு எதிராகக் காரியங்களைத் திட்டமிட்டனர். இது எனக்குத் துன்பங்களைத் தந்தது. நான் அடிக்கடி அழுதேன். ஆனால் மிகப் பணிவாக எப்போதும் தேவனுக்கு சேவை செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 20 உங்களுக்கு மிகவும் சிறந்ததையே நான் எப்போதும் செய்தேன். இயேசுவைக் குறித்த நற்செய்தியை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறினேன். வீடுகளிலும் உங்களுக்குக் கற்பித்தேன். 21 தங்கள் இருதயங்களை மாற்றி, தேவனுக்கு நேராகத் திரும்பும்படி, யூதரும் கிரேக்கருமாகிய எல்லா மக்களுக்கும் நான் கூறினேன். நமது கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைக்குமாறு அவர்கள் எல்லோருக்கும் சொன்னேன்.

22 “ஆனால் இப்போது பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து எருசலேமுக்கு நான் போக வேண்டும். எனக்கு அங்கு என்ன நேருமென்று எனக்குத் தெரியாது. 23 துன்பமும் சிறையும் எருசலேமில் எனக்காக காத்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நகரிலும் கூறுவதை மட்டும் அறிவேன். 24 நான் எனது உயிரைப் பொருட்படுத்தவில்லை. நான் பந்தயத்தை முடிக்கிறேன் என்பதும் தேவனுடைய கிருபையைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்குச் சொல்லுமாறு கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்த வேலையை முடிக்கிறேன் என்பதும் முக்கியமானவை.

25 “இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். என்னை உங்களில் ஒருவரும் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை நான் உங்களோடிருந்த போதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். 26 எனவே நான் உறுதியாயிருக்கிற ஒன்றைக் குறித்து இன்று உங்களுக்குக் கூற முடியும். உங்களில் சிலர் இரட்சிக்கப்படாவிட்டால் தேவன் என்னைக் குற்றம் சாட்டமாட்டார். 27 நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென தேவன் விரும்பிய அனைத்தையும் உங்களுக்குக் கூறினேன். எதையும் விட்டு வைக்கவில்லை என்பதால் இதை நான் சொல்ல முடிகிறது. 28 உங்களுக்காகவும் தேவன் உங்களுக்குத் தந்த எல்லா மக்களுக்காகவும் எச்சரிக்கையாக இருங்கள். அவரது மந்தையைக் கவனிக்கும் வேலையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். தேவனின் சபைக்கு நீங்கள் மேய்ப்பர்களைப்போல் இருக்க வேண்டும். தேவன் தமது சொந்த இரத்தத்தால் வாங்கிய சபை இது. 29 நான் பிரிந்த பின் உங்கள் குழுவில் சில மனிதர்கள் வருவார்கள் என்பதை அறிவேன். அவர்கள் கொடிய ஓநாய்களைப் போல் இருப்பார்கள். அவர்கள் மந்தையை அழிக்க முயல்வர். 30 மேலும் உங்கள் சொந்தக் குழுவின் மனிதர்களும் மோசமான தலைவராக மாறுவர். அவர்கள் தவறான போதனைகளைப் போதிக்கத் தொடங்குவர். உண்மையை விட்டு விலகி இயேசுவின் சீஷர்கள் சிலரைத் தம்மைப் பின்பற்றுமாறு செய்வார்கள். 31 எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எப்போதும் இதை நினைவுகூருங்கள். நான் உங்களோடு மூன்று ஆண்டுகள் இருந்தேன். இக்காலத்தில் நான் உங்களை எச்சரிப்பதை நிறுத்தவில்லை. நான் இரவும் பகலும் உங்களுக்கு உபதேசித்தேன். நான் அடிக்கடி உங்களுக்காக அழுதேன்.

32 “நான் இப்போது உங்களை தேவனுக்கு நியமம் செய்கிறேன். உங்களை பலப்படுத்தக் கூடிய தேவனுடைய கிருபையைப் பற்றிய தேவனுடைய செய்தியைச் சார்ந்திருக்கிறேன். தேவன் தனது பரிசுத்த மக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் ஆசீர்வாதத்தை இந்தச் செய்தி உங்களுக்குக் கொடுக்கும். 33 நான் உங்களோடிருந்தபோது, பிறருடைய பணத்தையோ விலை உயர்ந்த ஆடைகளையோ விரும்பவில்லை. 34 எனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும், என்னோடிருந்த மக்களின் தேவைகளுக்காகவும் எனது கைகளைக் கொண்டே நான் எப்போதும் உழைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 35 நான் செய்ததைப் போலவே நீங்களும் உழைத்து எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென எப்போதும் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நினைவு கூருவதற்கு உங்களுக்குக் கற்பித்தேன். ‘நீங்கள் ஒன்றைப் பெறும் வேளையைக் காட்டிலும் பிறருக்குக் கொடுக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று இயேசு கூறினார்” என்றான்.

36 இவ்விஷயங்களைக் கூறி முடித்த பின்னர், பவுல் எல்லோருடனும் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தான். 37-38 அங்கு அழுகின்ற பெரும் சத்தம் இருந்தது. பவுல் மீண்டும், அவர்கள் தன்னைப் பார்க்கமாட்டார்கள் என்று கூறியதால் அம்மனிதர்கள், மிகவும் வருத்தமுடனிருந்தார்கள். அவர்கள் பவுலைக் கட்டிக்கொண்டு, முத்தம் கொடுத்தனர். அவனை வழியனுப்புவதற்காக அவனோடு கப்பல் வரைக்கும் சென்றனர்.

பவுல் எருசலேமுக்குப் போகிறான்

21 நாங்கள் அனைவரும் மூப்பர்களிடமிருந்து விடைபெற்றோம். பின் கடற்பயணம் துவங்கினோம். நேராகக் கோஸ் தீவிற்குச் சென்றோம். மறுநாள் ரோது தீவிற்குச் சென்றோம். ரோதுவிலிருந்து நாங்கள் பத்தாராவுக்குப் போனோம். சீப்புரு பகுதிக்குப் போய்க்கொண்டிருந்த கப்பல் ஒன்றை பத்தாராவில் கண்டோம். நாங்கள் அக்கப்பலில் ஏறி, கடலில் பயணப்பட்டோம்.

சீப்புரு தீவினருகே நாங்கள் கடற்பயணம் செய்தோம். வடதிசையில் நாங்கள் அதைப்பார்க்க முடிந்தது. ஆனால் நாங்கள் அங்கு நிற்கவில்லை. நாங்கள் சிரியா நாட்டிற்குப் பயணமானோம். தீரு நகரத்தில் சில சரக்குகளை இறக்கும் பொருட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. தீருவில் சீஷர்கள் சிலரைக் கண்டோம். அவர்களோடு ஏழு நாட்கள் தங்கியிருந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கூறியதின்படி, அவர்கள் பவுலை எருசலேமுக்குப் போகாதபடி எச்சரித்தனர். ஆனால் எங்கள் சந்திப்பிற்குப் பின் நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இயேசுவின் சீஷர்கள் எல்லோரும், பெண்களும், குழந்தைகளும் கூட எங்களோடு நகருக்கு வெளியே வந்து எங்களுக்கு விடை கொடுக்க வந்தனர். கடற்கரையில் நாங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தோம். பின் நாங்கள் விடை பெற்று கப்பலில் ஏறினோம். சீஷர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

தீருவிலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து பித்தொலோமாய் நகருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர்களை வாழ்த்தினோம், அவர்களோடு ஒரு நாள் தங்கியிருந்தோம். மறுநாள் நாங்கள் பித்தொலோமாயை விட்டுப் புறப்பட்டு செசரியா நகரத்திற்குப் போனோம். நாங்கள் பிலிப்புவின் வீட்டிற்குச் சென்று, அவனோடு தங்கினோம். நற்செய்தியைக் கூறும் வேலையை பிலிப்பு செய்து வந்தான். ஏழு உதவியாளரில் அவனும் ஒருவன். அவனுக்குத் திருமணமாகாத நான்கு பெண்கள் இருந்தனர். தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் அப்பெண்களுக்கு இருந்தது.

10 பல நாட்கள் நாங்கள் அங்கிருந்த பிறகு அகபு என்னும் தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். 11 அவன் எங்களிடம் வந்து பவுலின் கச்சையை [e] வாங்கினான். பின்பு அகபு அக்கச்சையால் தனது கைகளையும் கால்களையும் கட்டினான். அகபு, “இக்கச்சையைக் கட்டுகிற மனிதனை இவ்வாறே எருசலேமில் யூதர்கள் கட்டுவார்கள். பின் அவனை யூதரல்லாத மனிதரிடம் ஒப்படைப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கூறுகிறார்” என்றான்.

12 நாங்கள் எல்லோரும் இந்த வார்த்தைகளைக் கேட்டோம். எனவே நாங்களும் இயேசுவின் உள்ளூர் சீஷர்களும் எருசலேமுக்குப் போக வேண்டாமென்று பவுலைக் கெஞ்சினோம். 13 ஆனால் பவுல், “ஏன் நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்கள்? ஏன் என்னை இத்தனை கவலை கொள்ளச் செய்கிறீர்கள்? நான் எருசலேமில் கட்டப்படுவதற்குத் தயாராக இருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக இறப்பதற்கும் நான் தயாராக உள்ளேன்” என்றான்.

14 பவுலை வற்புறுத்தி அவனை எருசலேமுக்குப் போகாதிருக்கச் செய்ய எங்களால் இயலவில்லை. எனவே அவனை வேண்டுவதை நாங்கள் நிறுத்திவிட்டு, “கர்த்தர் விரும்புவது நடக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்றோம்.

15 இதன் பிறகு நாங்கள் தயாராகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். 16 செசரியாவிலுள்ள சீஷர்களில் சிலர் எங்களோடு சென்றனர். இந்தச் சீஷர்கள் செசரியாவிலிருந்த எங்களை சீப்புருவிலிருந்து வந்த மினாசோனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முதன் முதலாக இயேசுவின் சீஷர்களாக மாறியவர்களில் இந்த மினாசோனும் ஒருவன். நாங்கள் அவனோடு தங்கும்படியாக அவர்கள் எங்களை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

பவுல் யாக்கோபைச் சந்தித்தல்

17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.

20 மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.

22 “நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள [f] முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.

25 “யூதரல்லாத விசுவாசிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். அக்கடிதம்,

‘விக்கிரகங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.

இரத்தத்தை ருசிக்காதீர்கள், நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள்,

பாலியல் தொடர்பான பாவங்களைச் செய்யாதீர்கள்’ என்று கூறிற்று” என்றார்கள்.

பவுல் கைதுசெய்யப்படுகிறார்

26 பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.

27 ஏழு நாட்களும் முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆசியாவிலுள்ள யூதர்களில் சிலர் பவுலை தேவாலயத்தில் கண்டனர். அவர்கள் எல்லா மக்களிடமும் குழப்பம் விளைவித்தனர். அவர்கள் பவுலைப் பிடித்தனர். 28 அவர்கள் உரக்க, “யூத மனிதரே, எங்களுக்கு உதவுங்கள்! மோசேயின் சட்டத்தை எதிர்க்கவும் நம் மக்களுக்கும் தேவாலயத்துக்கும் எதிராகவும் பலவற்றையும் கற்பிக்கின்ற மனிதன் இவன்தான். இம்மனிதன் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மனிதருக்கும் இவ்விஷயங்களை உபதேசிக்கின்றான். இப்போது தேவாலயத்துக்கு உள்ளே சில கிரேக்க மக்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். இத்தூய ஸ்தலத்தைத் தூய்மையிழக்கச் செய்திருக்கிறான்!” என்றார்கள். 29 பவுலோடு துரோப்பீமுவை எருசலேமில் பார்த்ததால் யூதர்கள் இதைச் சொன்னார்கள். எபேசுவிலுள்ள துரோப்பீமு ஒரு கிரேக்கன். பவுல் அவனை தேவாலயத்துக்குள் அழைத்துச் சென்றான் என்று யூதர்கள் எண்ணினர்.

30 எருசலேமின் எல்லா மக்களும் நிலைகுலைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஓடிப் பவுலைப் பிடித்தனர். தேவாலயத்துக்கு வெளியே அவனை இழுத்து வந்தனர். உடனே கதவுகள் மூடப்பட்டன. 31 மக்கள் பவுலைக் கொல்ல முயற்சித்தனர். எருசலேமிலுள்ள ரோமப் படை அதிகாரி நகரம் முழுவதும் தொல்லை அடைந்துள்ளது என்ற செய்தியைப் பெற்றான். 32 உடனே அவன் மக்கள் கூடியிருந்த இடத்திற்கு ஓடினான். அவன் வீரர்களையும் படை அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தான். மக்கள் அதிகாரிகளையும் வீரர்களையும் கண்டனர். எனவே பவுலை அடிப்பதை நிறுத்தினர்.

33 அதிகாரி பவுலிடம் சென்று அவனைக் கைது செய்தான். இரண்டு விலங்குகளால் பவுலைக் கட்டுமாறு அதிகாரி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பின் அதிகாரி, “இம்மனிதன் யார்? இவன் செய்த தவறு என்ன?” என்று கேட்டான். 34 அங்கிருந்தோரில் சிலர் ஒன்றைக் கூக்குரலிடவும் பிறர் வேறொன்றைக் கூக்குரலிடவும் செய்தனர். குழப்பமாகவும், கூச்சலாகவும் இருந்தமையால் அதிகாரி நடந்த உண்மையை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே அதிகாரி வீரர்களிடம் பவுலைப் படைக்கூடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறினான். 35-36 எல்லா மக்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். வீரர்கள் படிகளினருகே வந்தபோது, அவர்கள் பவுலை சுமக்க வேண்டியதாயிற்று. மக்கள் அவனைக் காயப்படுத்த முனைந்ததால் அவனது பாதுகாப்பிற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். மக்கள் உரக்க, “அவனைக் கொல்லுங்கள்” என்று கத்தினர்.

37 வீரர்கள் பவுலைப் படைக்கூடத்திற்குள் கொண்டுசெல்லத் தயாராயினர். ஆனால் பவுல் அதிகாரியிடம் பேசினான். பவுல், “நான் உங்களோடு சிலவற்றைப் பேசலாமா?” என்று கேட்டான். அதிகாரி, “நீ கிரேக்க மொழி பேசுகிறாயா? 38 அப்படியானால் நான் நினைத்தது போன்ற மனிதன் அல்ல நீ. சமீபத்தில் அரசுக்கு எதிராகத் தொல்லை ஏற்படுத்திய எகிப்திய மனிதன் என்று நான் எண்ணினேன். எகிப்திய மனிதன் நாலாயிரம் கொலையாளிகளை பாலைவனத்திற்குக் கூட்டிச் சென்றான்” என்றான்.

39 பவுல், “இல்லை நான் தர்சுவைச் சேர்ந்த யூத மனிதன். தர்சு சிலிசியா நாட்டில் உள்ளது. அம்முக்கியமான நகரின் குடிமகன் நான். தயவு செய்து நான் மக்களிடம் பேச அனுமதியுங்கள்” என்றான்.

40 பவுல் மக்களிடம் பேச அதிகாரி அனுமதித்தான். எனவே பவுல் படிகளில் ஏறி நின்றான். மக்கள் அமைதியாக இருக்கும்படியாகக் கைகளால் சைகை செய்தான். மக்கள் அமைதியடைந்ததும் பவுல் அவர்களோடு பேசினான். அவன் யூதமொழியைப் பயன்படுத்தினான்.

பவுல் மக்களோடு பேசுகிறான்

22 பவுல், “எனது சகோதரர்களே! தந்தையரே! நான் கூறுவதைக் கேளுங்கள், நான் என் சார்பான நியாயங்களை உங்கள் முன்வைக்கிறேன்” என்றான்.

பவுல் யூத மொழியில் பேசுவதை யூதர்கள் கேட்டார்கள். எனவே அவர்கள் மேலும் அமைதியாயினர். பவுல்,

“நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின் [g] மாணவன். நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார். நான் தேவனுடைய சேவையில், நீங்கள் எல்லோரும் இப்போது இருப்பதைப் போல், முனைந்து நின்றேன். இயேசுவின் வழியைப் பின்பற்றிய மக்களைத் தண்டித்தேன். அவர்களில் சிலர் என் நிமித்தமாகக் கொல்லப்பட்டனர். நான் ஆண்களையும் பெண்களையும் கைது செய்தேன். அவர்களை சிறையில் வைத்தேன்.

“தலைமை ஆசாரியரும் முதிய யூதர்களின் சங்கமும் இது உண்மை என்பதை உங்களுக்குக் கூறமுடியும்! ஒருமுறை இந்த அதிகாரிகள் என்னிடம் சில கடிதங்களைக் கொடுத்தனர். அக்கடிதங்கள் தமஸ்குவிலுள்ள யூத சகோதரர்களுக்கு முகவரி இடப்பட்டிருந்தன. நான் அங்கு இயேசுவின் சீஷர்களைக் கைது செய்வதற்கும் தண்டனைக்காக அவர்களை எருசலேமுக்குக் கொண்டுவரவும் போய்க் கொண்டிருந்தேன்.

பவுலின் சாட்சி

“ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்?’ என்றது.

“நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது. என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.

10 “நான், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யட்டும்?’ என்றேன். கர்த்தராகிய இயேசு பதிலாக, ‘எழுந்து தமஸ்குவுக்குள் போ, நீ செய்ய வேண்டுமென நான் திட்டமிட்டுள்ள அனைத்தையும் குறித்து அங்கே உனக்கு அறிவிக்கப்படும்’ என்றார். 11 என்னால் பார்க்கமுடியாதபடிக்கு, அப்பிரகாசமான ஒளி என்னைக் குருடாக்கிற்று. எனவே என் மனிதர்கள் என்னைத் தமஸ்குவுக்கு வழி நடத்தினார்கள்.

12 “தமஸ்குவில் அனனியா [h] என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர். 13 அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.

14 “அனனியா என்னிடம், ‘நமது முன்னோர்களின் தேவன் அவரது திட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கு உன்னைத் தேர்ந்தெடுத்தார். நேர்மையானவரைக் கண்டு அவரது வார்த்தைகளை அவரிடமிருந்து கேட்பதற்காக அவர் உன்னைத் தெரிந்துகொண்டார். 15 எல்லா மக்களுக்கும் நீ அவரது சாட்சியாக இருப்பாய். நீ பார்த்ததையும் கேட்டதையும் மனிதருக்குக் கூறுவாய். 16 இப்போது இன்னும் காத்திராமல் எழுந்திரு. ஞானஸ்நானம் பெற்றுக்கொள். உன் பாவங்கள் நீங்கக் கழுவப்படு. உன்னை இரட்சிப்பதற்காக இயேசுவின் மீது விசுவாசம் கொண்டு இதனைச் செய்’ என்றான்.

17 “பிற்பாடு நான் எருசலேமுக்குத் திரும்பி வந்தேன். நான் தேவாலய முற்றத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காட்சியைக் கண்டேன். 18 நான் இயேசுவைக் கண்டேன். இயேசு என்னிடம், ‘விரைவாகச் செயல்படு. இப்போதே எருசலேமை விட்டுச் செல். இங்குள்ள மக்கள் என்னைப்பற்றிய உனது சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.

19 “நான், ‘ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிகளைச் சிறையில் அடைத்தும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியவனுமாயிருந்தேன் என்பதை மக்கள் அறிவர். உங்களிடம் நம்பிக்கை வைத்த மக்களைத் தேடி யூத ஜெப ஆலயங்களுக்கெல்லாம் சென்றேன். 20 உங்கள் சாட்சியாக ஸ்தேவான் கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்ததையும் மக்கள் அறிவர். நான் அங்கு நின்று ஸ்தேவான் கொல்லப்பட வேண்டுமென ஆமோதித்தேன். அவனைக் கொன்று கொண்டிருந்த மனிதர்களின் அங்கிகளையும் வைத்திருந்தேன்!’ என்றேன்.

21 “ஆனால் பின்னர் இயேசு என்னை நோக்கி, ‘இப்போது புறப்பட்டுச் செல். நான் உன்னைத் தூர இடங்களுக்கு யூதரல்லாத மக்களிடம் அனுப்புவேன்’ என்றார்” என்றான்.

22 யூதரல்லாத மக்களிடம் செல்வதைப் பற்றிய இக்கடைசி வார்த்தைகளைப் பவுல் கூறியபோது, மக்கள் கவனிப்பதை நிறுத்தினர். அவர்கள் எல்லோரும் உரக்க, “அவனைக் கொல்லுங்கள். உலகத்திலிருந்து அவனை ஒழித்துக்கட்டுங்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதனை உயிர்வாழ விடக்கூடாது” என்றனர். 23 அவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அங்கிகளைக் கழற்றி வீசினர். அவர்கள் புழுதியை அள்ளி வானத்தில் வீசினர். [i] 24 அப்போது அதிகாரி பவுலைப் படைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். பவுலை அடிக்குமாறு வீரர்களுக்கு கூறினான். அவனுக்கு எதிராக மக்கள் கூக்குரலிடுவதன் காரணத்தைப் பவுல் கூறவேண்டுமென்று விரும்பினான். 25 எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்று கேட்டான்.

26 அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளையிடுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான்.

27 அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான்.

பவுல் “ஆம்” என்றான்.

28 அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான்.

ஆனால் பவுல், “நான் பிறப்பால் குடிமகன்” என்றான்.

29 பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு விலகினர். ரோமக் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.

பவுலும்-யூதத்தலைவர்களும்

30 மறுநாள் யூதர்கள் பவுலுக்கு எதிராகப் பேசும் உறுதியான காரணத்தைக் கண்டறிய அந்த அதிகாரி முடிவு செய்தான். எனவே தலைமை ஆசாரியரையும் யூதர்களையும் அழைத்து பவுலின் விலங்குகளைக் கழற்றக் கட்டளையிட்டான். பின் பவுலை வெளியே அழைத்து வந்து, அக்கூட்டத்தின் முன்பாக நிறுத்தினான்.

23 யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், “சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான். தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான். பவுல் அனனியாவைப் பார்த்து, “தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றான்.

பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, “தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்!” என்றனர்.

பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’ [j] என்று எழுதப்பட்டள்ளது” என்றான்.

அக்கூட்டத்தில் சிலர் சதுசேயராகவும், சிலர் பரிசேயராகவும் இருந்தார்கள். எனவே பவுலுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அவன் அவர்களிடம் உரக்க, “எனது சகோதரரே, நான் ஒரு பரிசேயன். எனது தந்தையும் ஒரு பரிசேயர். மரணத்திலிருந்து மக்கள் எழுவர் என்று நான் நம்புவதால் என்னை இங்கு நியாயந்தீர்க்கின்றனர்!” என்றான்.

பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது. (மக்கள் இறந்தபிறகு, மீண்டும் வாழ இயலாது என்று சதுசேயர் நம்புகிறார்கள். தேவதூதர்களோ, ஆவிகளோ இருப்பதில்லை என்று சதுசேயர்கள் போதிக்கிறார்கள். ஆனால் பரிசேயர்கள் இவற்றையெல்லாம் நம்புகிறார்கள்.) எல்லா யூதர்களும் உரக்கச் சத்தமிட ஆரம்பித்தனர். பரிசேயரான சில வேதபாரகர்கள் எழுந்து நின்று, இவ்வாறு விவாதித்தனர், “நாங்கள் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. தமஸ்குவுக்கு வரும் வழியில் தேவதூதனோ ஆவியோ அவனோடு பேசியிருக்க வேண்டும்!” என்றனர்.

10 விவாதம் சண்டையாக மாறிற்று. யூதர்கள் பவுலை நார் நாராகக் கிழித்து விடுவார்கள் என்று அதிகாரி அஞ்சினான். எனவே அவன் கீழே சென்று யூதர்களிடமிருந்து பவுலை விலக்கி அழைத்து வந்து படைக் கூடத்தில் வைத்திருக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

11 மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், “தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும்” என்றார்.

பவுலைக் கொல்ல சில யூதர்களின் திட்டம்

12 மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். 13 நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர். 14 இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்! 15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.

16 பவுலின் சகோதரியின் மகன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். 17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான். 18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் மகனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான்.

19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, “நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்?” என்று கேட்டான்.

20 இளைஞன், “பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர். 21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம்மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான்.

22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, “அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே” என்றான்.

செசரியாவிற்குப் பவுல் அனுப்பப்படுதல்

23 பின்பு அதிகாரி இரண்டு படை அதிகாரிகளை அழைத்தான். அவன் அவர்களை நோக்கி, “செசரியாவுக்குப் போவதற்குச் சில மனிதர்கள் வேண்டும். இருநூறு படை வீரர்களை ஆயத்தப்படுத்துங்கள். எழுபது குதிரை வீரர்களையும் இருநூறு ஈட்டியேந்திய வீரர்களையும் தயார்படுத்துங்கள். இன்றிரவு ஒன்பது மணிக்குப் புறப்படத் தயாராக இருங்கள். 24 பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்” என்றான். 25 அதிகாரி ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தின் விபரம் வருமாறு.

26 கிளாடியஸ் லைசியஸிடமிருந்து மிக மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்ஸ் அவர்களுக்கு,

வாழ்த்துக்கள்.

27 யூதர்கள் இம்மனிதனைக் கைப்பற்றி அவனைக் கொல்வதற்கு இருந்தார்கள். அவன் ஒரு ரோமக் குடிமகன் என்பதை நான் அறிந்தேன். எனவே நான் எனது வீரரோடு சென்று அவனைக் காப்பாற்றினேன். 28 அவர்கள் ஏன் அவனைப் பழிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். 29 எனவே யூத சங்கத்திற்கு முன்னால் அவனைக் கொண்டு வந்தேன். இதுவே நான் கண்டது. தவறான சில காரியங்களைப் பவுல் செய்ததாக யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அவர்களது சொந்த யூதவிதிகளைப் பற்றியது. இந்த விஷயங்கள் எதுவும் சிறைத் தண்டனைக்கோ மரண தண்டனைக்கோ ஏற்றவை அல்ல. 30 சில யூதர்கள் பவுலைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாமதிக்காமல் நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவனுக்கெதிரான காரியங்களை உங்களுக்குச் சொல்லுமாறு நான் அந்த யூதர்களுக்குச் சொல்லி இருக்கிறேன் என்பதே.

31 அவர்களுக்குச் சொல்லப்பட்ட காரியங்களை வீரர்கள் செய்தனர். அன்றிரவு அந்திபத்ரி நகரத்திற்கு வீரர்கள் பவுலைக் கூட்டிச் சென்றனர். 32 மறு நாள் குதிரை மேலிருந்த வீரர்கள் பவுலோடு செசரியாவுக்குச் சென்றனர். ஆனால் மற்ற வீரர்களும் ஈட்டியேந்திய வீரர்களும் எருசலேமிலுள்ள படைக்கூடத்துக்குத் திரும்பினர். 33 குதிரை மேலிருந்த வீரர்கள் செசரியாவுக்குள் நுழைந்து ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தனர். பின் பவுலை அவரிடம் ஒப்படைத்தனர்.

34 ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார். 35 ஆளுநர், “உன்மீது குற்றம் சுமத்தியவர்கள் இங்கு வரும்போது வழக்கை விசாரிக்கிறேன்” என்றார். அரண்மனையில் பவுலை வைத்திருக்கும் பொருட்டு ஆளுநர் ஆணைகள் பிறப்பித்தார். (இக்கட்டிடம் ஏரோதால் கட்டப்பட்டது)

யூதர்களின் குற்றச்சாட்டு

24 ஐந்து நாட்களுக்குப் பிறகு அனனியா செசரியா நகரத்திற்கு வந்தான். அனனியா தலைமை ஆசாரியனாக இருந்தான். சில முதிய யூதத் தலைவர்களையும் தெர்த்துல்லு என்னும் பெயருள்ள வழக்கறிஞரையும் அனனியா அழைத்து வந்திருந்தான். ஆளுநர் முன்னால் பவுல் மீது வழக்கு தொடுக்கும் பொருட்டு அவர்கள் செசரியாவுக்குச் சென்றார்கள். கூட்டத்திற்கு முன் பவுல் அழைக்கப்பட்டான். தெர்த்துல்லு குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கத் துவங்கினான். தெர்த்துல்லு, “மிகக் கனம் பொருந்திய பெலிக்ஸ் அவர்களே! உங்களால் எங்கள் மக்கள் மிகுந்த அமைதியோடு வாழ்கிறார்கள். உங்கள் ஞானமான உதவியால் எங்கள் நாட்டில் பல தவறான காரியங்கள் திருத்தப்பட்டு வருகின்றன. உங்களிடமிருந்து இவற்றைப் பெறுவதால் மிக நன்றியுடையவர்களாக இருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாங்கள் அவற்றை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் உங்கள் நேரத்தை மேலும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே நான் சுருக்கமாகச் சொல்கிறேன். தயவு செய்து பொறுமையாக இருங்கள். இம்மனிதன் தொல்லைகளை ஏற்படுத்துகிறவன். உலகமெங்குள்ள யூதர்களிடம் அமைதியைக் குலைக்கிறான். நசரேயக் குழுவின் தலைவன் இவன். 6-8 மேலும் அவன் தேவாலயத்தை நாசமாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறான். ஆனால் நாங்கள் அவனைத் தடுத்துவிட்டோம். இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையா என்பதை நீர் முடிவு கட்டலாம். நீரே அவனிடம் சில கேள்விகளைக் கேளும்” [k] என்றான். பிற யூதர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள், “இவையனைத்தும் உண்மையே!” என்றனர்.

பவுல் தனக்காக பெலிக்ஸின் முன்பு வழக்காடுதல்

10 பவுல் பேசுமாறு ஆளுநர் குறிப்பிட்டார். எனவே பவுல் பதிலாக, “ஆளுநர் பெலிக்ஸ் அவர்களே, இந்தத் தேசத்தின் நியாயாதிபதியாக, நீண்ட காலமாக நீங்கள் இருந்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் உங்கள் முன்பு எனக்காக வழக்காடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். 11 பன்னிரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் எருசலேமுக்கு வழிபடச் சென்றேன். இது உண்மையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 12 என்னைப் பழிக்கிற இந்த யூதர்கள் நான் ஆலயத்தில் யாரோடும் விவாதிப்பதைப் பார்க்கவில்லை. நான் மக்களிடம் தொல்லையையும் விளைவிக்கவில்லை. ஜெப ஆலயங்களிலோ, நகரத்தின் வேரிடங்களிலோ நான் விவாதிக்கவோ, தொல்லை விளைவிக்கவோ செய்யவில்லை. 13 இப்போது எனக்கெதிராக அவர்கள் கூறும் குற்றச் சாட்டுகளை அவர்கள் நிரூபிக்க முடியாது.

14 “ஆனால் நான் உங்களுக்கு இதைச் சொல்வேன். இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடனாக நான் நமது முன்னோரின் தேவனை வணங்குகிறேன். 15 இந்த யூதர்கள் தேவனிடம் கொண்டுள்ள நம்பிக்கை, அதாவது நல்லோராயினும் தீயோராயினும் சரி எல்லா மக்களும் மரணத்தினின்று எழுப்பப்படுவர் என்ற அதே நம்பிக்கை எனக்கும் உள்ளது. 16 எனவே தான் தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக நான் சரியென்று நம்புவதை எப்பொழுதும் செய்ய முயல்கிறேன்.

17 “பலகாலம் எருசலேமிலிருந்து தொலைவில் வாழ்ந்து வந்தேன். என் மக்களுக்குப் பணம் கொண்டு வரவும் காணிக்கை செலுத்தவும் நான் அங்குத் திரும்பிச் சென்றேன். 18 தேவாலயத்தில் நான் இதைச் செய்துகொண்டிருந்தபோது சில யூதர்கள் என்னைக் கண்டனர். சுத்தப்படுத்தும் பண்டிகையை [l] முடித்தேன். நான் எந்தக் தொல்லையையும் ஏற்படுத்தவில்லை. என்னை சுற்றி எந்தக் கூட்டமும் சேரவில்லை. 19 ஆசியாவிலுள்ள சில யூதர்கள் அங்கிருந்தார்கள். இங்கும் உங்கள் முன் அவர்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும். நான் ஏதேனும் தவறாகச் செய்திருந்தால் என்னைக் குற்றம் சாட்டவேண்டியவர்கள் அவர்களே. 20 எருசலேமிலுள்ள யூத சங்கத்தின் முன் நான் நின்றபோது என்னில் ஏதேனும் பிழையை அவர்கள் கண்டார்களா என்பதை இந்த யூதர்களிடம் விசாரியுங்கள். 21 நான் அவர்கள் முன்னிலையில் நின்றபோது ஒன்றை மட்டும் கூறினேன். ‘மரணத்தினின்று மக்கள் எழும்புவர் என்பதை நான் நம்புவதால் இன்றைக்கு நீங்கள் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள்’ என்றேன்” என்று கூறினான்.

22 இயேசுவின் வழிகளைக் குறித்து ஏற்கனவே பெலிக்ஸ் நிரம்பத் தெரிந்துவைத்திருந்தான். அவன் வழக்கை இந்த இடத்தில் நிறுத்தியவனாக, “அதிகாரி லீசியா இங்கு வருகிறபோது, இவற்றைக் குறித்து முடிவெடுப்பேன்” என்றான். 23 பெலிக்ஸ் படை அதிகாரியிடம் பவுலைக் காவலில் வைக்குமாறு கூறினான். அவன் படை அதிகாரியிடம் பவுலுக்குச் சற்றுச் சுதந்திரம் அளிக்குமாறும், பவுலின் நண்பர்கள் அவனுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து உதவுவதற்கு அனுமதி அளிக்குமாறும் கூறினான்.

பெலிக்ஸ் முன் பவுல்

24 சில நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ், அவனது மனைவி துருசில்லாவுடன் வந்தான். அவள் யூதப் பெண்மணி. பெலிக்ஸ் பவுலைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான். கிறிஸ்து இயேசுவில் வைக்கும் விசுவாசத்தைக் குறித்துப் பவுல் பேசுவதை பெலிக்ஸ் கேட்டான். 25 நேர்மையான வாழ்வு, தன்னடக்கம், எதிர்காலத்தின் நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்துப் பவுல் கூறியதைக் கேட்டு அவன் அஞ்சினான். பெலிக்ஸ் “இப்போது போய் விடு! இன்னும் கால அவகாசம் கிடைக்கும்போது உன்னை அழைக்கிறேன்” என்றான். 26 பவுலோடு பெலிக்ஸ் பேசுவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. பவுல் தனக்கு லஞ்சம் கொடுப்பான் எனவும் பெலிக்ஸ் நம்பினான். எனவே பெலிக்ஸ் பவுலை அடிக்கடி அழைப்பித்து அவனோடு பேசினான்.

27 ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போர்சியு பெஸ்து ஆளுநரானார். பெலிக்ஸ் ஆளுநராக இருக்கவில்லை. பெலிக்ஸ் யூதர்களை மகிழ்விக்கும்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று விரும்பியதால் பவுலைச் சிறையிலேயே விட்டுச் சென்றான்.

பவுலின் வாதம்

25 பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான். தலைமை ஆசாரியரும் முக்கியமான யூதத் தலைவர்களும் பெஸ்துவுக்கு முன் பவுலுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தனர். தங்களுக்கு ஓர் உதவி செய்யும்படியாக பெஸ்துவை வேண்டினர். பவுலை எருசலேமுக்கு மீண்டும் அனுப்பும்படியாக பெஸ்துவைக் கேட்டார்கள். வழியில் பவுலைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்தனர்.

ஆனால் பெஸ்து, “இல்லை! பவுல் செசரியாவில் வைக்கப்படுவான். நானே செசரியாவுக்குச் சீக்கிரம் போவேன். உங்கள் தலைவர்கள் சிலரும் என்னோடு வரலாம். அவன் உண்மையாகவே குற்றம் செய்திருந்தால் செசரியாவில் அவர்கள் அம்மனிதன் மீது வழக்கு தொடரலாம்” என்றான்.

எட்டு அல்லது பத்து நாட்கள் பெஸ்து எருசலேமில் தங்கினான். பின் அவன் செசரியாவுக்குத் திரும்பினான். மறுநாள் பெஸ்து பவுலைத் தனக்கு முன்னால் அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கூறினான். பெஸ்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தான். பவுல் அறைக்குள் வந்தான். எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் அவனைச் சுற்றிலும் நின்று கொண்டனர். பவுல் பல குற்றங்களைச் செய்தான் என்று யூதர்கள் கூறினார்கள். ஆனால் இக்காரியங்கள் எதையும் நிரூபிக்க முடியவில்லை. பவுல் தன்னைக் காத்துக்கொள்வதற்குக் கூறியதாவது, “யூத சட்டத்துக்கு மாறாகவோ, தேவாலயத்துக்கு எதிராகவோ, இராயருக்கு விரோதமாகவோ, நான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை” என்றான்.

ஆனால் பெஸ்து யூதர்களைத் திருப்திப்படுத்த நினைத்தான். எனவே அவன் பவுலை நோக்கி, “நீ எருசலேமுக்குப் போக விரும்புகிறாயா? இக்குற்றங்களுக்காக நான் அங்கு நீதி வழங்கவேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டான்.

10 பவுல், “இராயனின் நியாயஸ்தலத்திற்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கிறேன். இங்கு நான் நியாயந்தீர்க்கப்படவேண்டும்! நான் யூதர்களுக்கு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 11 நான் ஏதேனும் தவறு செய்து, சட்டமும் நான் அதற்காக இறக்க வேண்டுமெனக் கூறினால், நான் இறப்பதற்குச் சம்மதிக்கிறேன். நான் மரணத்தினின்று தப்பவேண்டுமென்று கேட்கவில்லை. ஆனால் இப்பழிகள் பொய்யெனில் யாரும் என்னை யூதரிடம் ஒப்படைக்கக் கூடாது. நான் இராயரால் நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறேன்!” என்றான்.

12 பெஸ்து தனது ஆலோசகர்களிடம் இதைக் குறித்துக் கலந்தாலோசித்தான். பின்பு அவன், “நீ இராயரைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டாய், எனவே நீ இராயரிடம் போவாய்” என்றான்.

ஏரோது அகிரிப்பாவின் முன் பவுல்

13 சில நாட்களுக்குப் பிறகு அகிரிப்பா மன்னரும் பெர்னிசும் பெஸ்துவை சந்திக்குமாறு செசரியாவுக்கு வந்தனர். 14 அங்குப் பல நாட்கள் தங்கியிருந்தனர். பவுலின் வழக்கைக் குறித்து பெஸ்து மன்னருக்குக் கூறினான். பெஸ்து, “பெலிக்ஸ் சிறையில் விட்டுச் சென்ற ஒரு மனிதன் இருக்கிறான். 15 நான் எருசலேமுக்குப் போனபோது தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவன் மீது வழக்குத் தொடுத்தனர். அவனுக்கு நான் மரண தண்டனை அளிக்க வேண்டுமென யூதர்கள் விரும்பினர். 16 ஆனால் நான், ‘ஒரு மனிதன் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டால், ரோமர் அவனைப் பிறரிடம் நியாயம் வழங்குவதன் பொருட்டு ஒப்படைப்பதில்லை. முதலில் அம்மனிதன் அவனைப் பழியிடும் மக்களை எதிர்கொள்ளவேண்டும். அவர்கள் இட்ட வழக்குகளுக்கு எதிரான தனது கருத்துக்களைச் சொல்லவேண்டும்’ என்று பதில் அளித்தேன்.

17 “எனவே இந்த யூதர்கள் வழக்காடுவதற்காக செசரியாவுக்கு வந்தனர். நான் காலத்தை வீணாக்கவில்லை. மறுநாளே நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து, அம்மனிதனை அழைத்து வருமாறு கட்டளையிட்டேன். 18 யூதர்கள் எழுந்து நின்று அவனைப் பழித்தனர். ஆனால் எந்தப் பயங்கரக் குற்றத்தையும் அவன் செய்ததாக யூதர்கள் கூறவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். 19 அவர்கள் தங்கள் மதத்தைக் குறித்தும் இயேசு என்கிற மனிதனைப் பற்றியும் மட்டுமே கூறினார்கள். இயேசு இறந்தார், ஆனால் பவுல் அவர் இன்னும் உயிரோடிருக்கிறார். என்று கூறுகிறான். 20 எனக்கு இவற்றைக் குறித்து விவரமாகத் தெரியவில்லை. எனவே நான் கேள்விகள் கேட்கவில்லை. நான் பவுலை நோக்கி, ‘நீ எருசலேமுக்குப் போய் அங்கு இவை குறித்து நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறாயா?’ என்று கேட்டேன். 21 ஆனால் பவுல் செசரியாவிலேயே வைக்கப்பட வேண்டுமென்று கேட்டான். அவன் இராயர் முடிவெடுக்க வேண்டுமென விரும்புகிறான். ரோமில் இராயரிடம் அவனை அனுப்பும் மட்டும் அவன் இங்கேயே வைக்கப்பட நான் கட்டளையிட்டுள்ளேன்” என்று கூறினான்.

22 அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “நானும் நாளை இந்த மனிதன் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.

பெஸ்து, “நீங்கள் கேட்பீர்கள்” என்றான்.

23 மறுநாள் அகிரிப்பாவும் பெர்னிசும் அங்கு வந்தார்கள். மிக முக்கியமான மனிதர்களுக்குரிய ஆடைகளை உடுத்தி, அதற்கேற்றவாறு நடந்துகொண்டனர். அகிரிப்பாவும் பெர்னிசும் படை அதிகாரிகளும், செசரியாவின் முக்கிய மனிதர்களும் நியாயத்தீர்ப்பு அறைக்குள் சென்றனர். பெஸ்து பவுலை உள்ளே அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

24 பெஸ்து, “அகிரிப்பா மன்னரும் இங்குள்ள எல்லோரும் இப்போது இம்மனிதனைப் பார்க்கிறீர்கள். இங்கும், எருசலேமிலுள்ள எல்லா யூத மக்களும் இவனுக்கெதிராக என்னிடம் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் குற்றங்களைக் கூறியபோது, அவனை இனிமேலும் உயிரோடு விட்டு வைக்கக்கூடாதென்று கூக்குரலிட்டனர். 25 நான் நியாயங்கேட்டபோது அவனிடம் எந்தத் தவறையும் காணவில்லை. அவனுக்கு மரண தண்டனை விதிக்குமளவிற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. அவன் இராயரிடம் நியாயம் பெற விரும்புகிறான். எனவே அவனை ரோமுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளேன். 26 இம்மனிதன் செய்த தவறாக இராயருக்கு எழுதுவதற்குத் தீர்மானமாக எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு முன்பாக, விசேஷமாக அகிரிப்பா மன்னரே, உங்களுக்கு முன்பாக அவனைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் அவனை வினவலாம். இராயருக்கு ஏதாவது எழுதுமாறு கூறலாம். 27 ஒரு கைதிக்கு எதிராக எந்தக் குற்றத்தையும் குறிப்பிடாமல் அவனை இராயரிடம் அனுப்புவது மூடத்தனமானது என்று நினைக்கிறேன்” என்றான்.

அகிரிப்பா மன்னன் முன் பவுல்

26 அகிரிப்பா பவுலை நோக்கி, “இப்போது உன்னைப்பற்றி நீயே பேசலாம்” என்றான். பின் பவுல் தனது கையை உயர்த்தித் தனக்கு சார்பாகப் பேசத் துவங்கினான். அவன், “அகிரிப்பா மன்னரே, யூதர்கள் எனக்கு எதிராகச் சொன்ன எல்லா வழக்குகளுக்கும் நான் பதில் கூறுவேன். நான் இன்று உங்கள் முன்பாக நின்று இதைச் செய்வதை ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். நீங்கள் எல்லா யூத வழக்கங்களையும் யூதர்கள் வாதிடுகிற காரியங்களையும் மிகுதியாக அறிந்திருப்பதால் நான் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். தயவு செய்து நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.

“எனது முழு வாழ்க்கையைக் குறித்து எல்லா யூதர்களும் அறிந்திருக்கிறார்கள். முதலில் எனது சொந்த நாட்டில் நான் வாழ்ந்த வகையையும், பின்னர் எருசலேமில் வாழ்ந்த வகையையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த யூதர்களுக்கு என்னைப் பல காலமாகத் தெரியும். அவர்கள் விரும்பினால் நான் ஒரு நல்ல பரிசேயன் என்று உங்களுக்குக் கூற முடியும். யூத மக்களில் பிற எல்லா பிரிவினரைக் காட்டிலும் பரிசேயர்கள் யூத மதவிதிகளைக் கவனமாகப் பின்பற்றுகிறார்கள். தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நம்புவதால் இப்போது நான் விசாரணையிலிருக்கிறேன். நமது மக்களில் பன்னிரண்டு குலத்தினரும் பெறவேண்டுமென நம்பும் வாக்குறுதி இதுவே. இந்நம்பிக்கைக்காக யூதர்கள் தேவனுக்கு இரவும் பகலும் சேவை புரிகின்றனர். எனது மன்னரே, நான் இந்த வாக்குறுதியிலே நம்பிக்கை வைத்திருப்பதால் யூதர்கள் என் மீது பழி சுமத்துகின்றனர்! தேவன் மரணத்தினின்று மக்களை எழுப்ப முடியுமென்பது நம்ப இயலாதது என ஏன் மக்கள் எண்ணுகின்றனர்?

“நான் பரிசேயனாக இருந்தபோது, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்ய எண்ணினேன். 10 எருசலேமில் விசுவாசிகளுக்கு [m] எதிராகப் பல காரியங்களைச் செய்தேன். விசுவாசிகளில் பலரைச் சிறையிலிடும் அதிகாரத்தைத் தலைமை ஆசாரியர் எனக்குக் கொடுத்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் கொல்லப்பட்டபோது, அது ஒரு நல்ல செய்கை என்று நான் ஒப்புக்கொண்டேன். 11 ஒவ்வொரு யூத ஜெப ஆலயத்திலும் நான் அவர்களைத் தண்டித்தேன். இயேசுவுக்கு எதிராக அவர்கள் தகாதவற்றைப் பேசச் செய்வதற்கு முயற்சித்தேன். அம்மக்களிடம் நான் கொண்ட அதிக சினத்தால் அவர்களைக் கண்டு பிடித்துத் துன்புறுத்துவதற்காக வேறு நகரங்களுக்கு சென்றேன்.

இயேசுவைப் பற்றி பவுலின் சாட்சி

12 “ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்குப் போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள். 13 நான் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது நண்பகல் பொழுது. நான் வானத்திலிருந்து ஓர் ஒளியைப் பார்த்தேன். சூரியனைக் காட்டிலும் அதிகமாக அவ்வொளி பிரகாசித்தது. அந்த ஒளி என்னையும் என்னோடு பயணம் செய்த மனிதர்களைச் சுற்றியும் பிரகாசித்தது. 14 நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் ‘சவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக்கொண்டிருக்கிறாய்’ என்றது.

15 “நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே. 16 எழுந்திரு. நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீ எனக்குச் சாட்சியாக இருப்பாய். இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்குக் கூறுவாய். 17 நான் உனது சொந்த மக்கள் உன்னைத் துன்புறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன். யூதரல்லாத மக்களிடமிருந்தும் நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன். 18 உண்மையை இம்மக்களுக்கு நீ காட்டுவாய். அதனால் மக்கள் இருளிலிருந்து ஒளிக்குத் திரும்புவார்கள். சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடம் திரும்புவார்கள். மேலும் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். என்னை நம்புவதால் பரிசுத்தமாக்கப்பட்ட மனிதரோடு அவர்களும் பங்குபெற முடியும்’ என்றார்” என்று கூறினான்.

தன் ஊழியம் பற்றி பவுல்

19 பவுல் தொடர்ந்து பேசினான். “அகிரிப்பா மன்னரே, பரலோகத்திலிருந்து இக்காட்சி வந்தபோது, நான் அதற்குக் கீழ்ப்படிந்தேன். 20 மக்கள் அவர்களது இருதயங்களையும் வாழ்க்கைகளையும் மாற்றிக்கொண்டு, தேவனிடம் திரும்ப வேண்டுமென்று அவர்களுக்குக் கூற ஆரம்பித்தேன். அவர்கள் மனம் மாறினார்கள் என்பதை வெளிக்காட்டும்படியான செயல்களைச் செய்யுமாறு மக்களுக்குக் கூறினேன். தமஸ்குவிலுள்ள மக்களுக்கு முதலில் இதைக் கூற ஆரம்பித்தேன். பின் எருசலேமுக்கும், யூதேயாவின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று, அங்குள்ள மக்களுக்கு இவற்றைக் கூறினேன். மேலும் யூதரல்லாத மக்களிடமும் நான் சென்றேன்.

21 “எனவேதான் யூதர்கள் என்னைப் பிடித்து, தேவாலயத்தில் என்னைக் கொல்ல முயன்றார்கள். 22 ஆனால் தேவன் எனக்கு உதவினார். இன்னமும் எனக்கு உதவிக் கொண்டிருக்கிறார். தேவனுடைய உதவியால் நான் இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நான் கண்ட மகத்தானதும் எளியதுமானவற்றையும் கூறிக்கொண்டுள்ளேன். ஆனால் நான் எதையும் புதிதாகக் கூறிக் கொண்டிருக்கவில்லை. பின்னர் நிகழுமென்று மோசேயும் தீர்க்கதரிசிகளும் கூறியவற்றை நான் கூறிக்கொண்டிருக்கிறேன். 23 தொல்லைகளை அனுபவித்தபின் மரணத்தின்று முதன் முதலில் எழுபவர் கிறிஸ்துவே என்று அவர்கள் கூறினர். மோசேயும் தீர்க்கதரிசிகளும் கிறிஸ்து யூத மக்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் ஒளியைத் தருபவர் என்று கூறினார்கள்” என்றான்.

அகிரிப்பாவை தன் சார்பாக்க முனைவது

24 பவுல் இவற்றைத் தனக்குச் சாதகமாகக் கூறிக்கொண்டிருந்தபொழுது பெஸ்து உரக்க, “பவுலே, நீ பைத்தியக்காரன்! அதிகப் படிப்பு உன்னைப் பித்தனாக்கிவிட்டது!” என்றான்.

25 பவுல், “மிக மாட்சிமைமிக்க பெஸ்துவே, நான் பித்தன் அல்லன். நான் கூறுபவை உண்மையானவை. எனது வார்த்தைகள் ஒரு மூடனின் வார்த்தைகள் அல்ல. அவை உண்மையானவையும், ஞானமிக்கவையும் ஆகும். 26 அகிரிப்பா மன்னர் இவற்றை நன்கு அறிந்திருக்கிறார். நான் சுதந்திரமாக அவரோடு பேசமுடியும். இவை அனைத்தையும் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஏன்? இவையனைத்தும் மக்கள் காணும்படியாக நடந்தவையே. 27 அகிரிப்பா மன்னரே, தீர்க்கதிரிசிகள் எழுதியவற்றை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!” என்றான்.

28 அகிரிப்பா பவுலிடம் “நீ அவ்வளவு எளிதாக என்னைக் கிறிஸ்தவனாக மாறுவதற்குத் தூண்ட முடியும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான்.

29 பவுல், “அது எளிதானதா கடினமானதா, என்பது முக்கியமல்ல. நீங்கள் மட்டுமல்ல, என்னைக் கேட்கிற இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று இரட்சிக்கப்பட்டு எனக்குப் பூட்டப்பட்டுள்ள இந்த விலங்குகளைத் தவிர்த்து எல்லாவற்றிலும் என்னைப் போலாக வேண்டுமென்று தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்றான்.

30 அகிரிப்பா மன்னரும் கவர்னர் பெஸ்துவும் பெர்னிசும் அவர்களோடு அமர்ந்திருந்த எல்லா மக்களும் எழுந்து 31 ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு அந்த அறையை விட்டுச் சென்றார்கள். அவர்கள், “இம்மனிதன் கொல்லப்படவோ, சிறையில் அடைக்கப்படவோ கூடாது, உண்மையிலேயே தவறான எதையும் அவன் செய்யவில்லை!” என்றார்கள். 32 அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவன் மட்டும் இராயரிடம் விண்ணப்பிக்காமலிருந்திருந்தால் அவன் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்” என்றான்.

ரோமாபுரிப் பயணம்

27 நாங்கள் இத்தாலிக்குக் கடற்பயணம் செய்யவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. ஜூலியஸ் என்னும் பெயருள்ள படை அதிகாரி பவுலையும் வேறு சில கைதிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டான். இராயரின் படையில் ஜூலியஸ் சேவை புரிந்துகொண்டிருந்தான். நாங்கள் ஒரு கப்பலில் ஏறிச் சென்றோம். கப்பல் அதிரமித்தியம் என்னும் நகரிலிருந்து வந்து ஆசியாவின் பல இடங்களுக்குப் பயணம் செல்லத் தயாராக இருந்தது. அரிஸ்தர்க்கும் எங்களோடு வந்தான். அம்மனிதன் மக்கதோனியாவில் தெசலோனிக்கா நகரத்தைச் சேர்ந்தவன்.

மறுநாள் நாங்கள் சீதோன் நகரத்திற்கு வந்தோம். ஜூலியஸ் பவுலோடு நல்ல முறையில் நடந்துகொண்டான். அவன், பவுல் அவனது நண்பர்களைச் சென்று சந்திக்கும் சுதந்திரத்தை அவனுக்குக் கொடுத்தான். இந்த நண்பர்கள் பவுலுக்குரிய தேவைகளைக் கவனித்து வந்தனர். நாங்கள் சீதோன் நகரத்திலிருந்து கடலில் பயணமானோம். காற்று எங்களுக்கு எதிர்த் திசையில் வீசியபடியால் சீப்புரு தீவின் கரையோரம் எங்கள் கடற்பயணம் தொடர்ந்தது. சிலிசியா, பம்பிலியா வழியாகக் கடலைக் கடந்து சென்றோம். பின் லீசியாவிலுள்ள மீரா நகரத்திற்கு நாங்கள் வந்தோம். மீராவில் படை அதிகாரி அலெக்ஸாண்டிரியா நகரத்திலிருந்து வந்த ஒரு கப்பலைக் கண்டான். இந்தக் கப்பல் இத்தாலிக்குப் போய்க் கொண்டிருந்தது. எனவே அவன் எங்களை அதில் ஏற்றினான்.

நாங்கள் நிதானமாகப் பல நாட்கள் கடலில் பயணம் செய்தோம். காற்று எங்களுக்கு எதிராக வீசிக்கொண்டிருந்தபடியால் கினீது நகரை அடைவதே கடினமாக இருந்தது. அவ்வழியாக மேலும் போக முடியவில்லை. சால்மோனின் அருகேயுள்ள கிரேத்தா தீவின் தென் பகுதியின் வழியாகக் கடல் பயணமானோம். கடற்கரை ஓரமாகப் போனோம். ஆனாலும் கடற் பயணம் கடினமாக இருந்தது. பாதுகாப்பான துறைமுகம் என்னும் இடத்திற்கு வந்தோம். லசேயா நகரம் அந்த இடத்திற்கு அருகாமையிலிருந்தது.

நிறைய நேரத்தை நாங்கள் இழந்திருந்தோம். கடற்பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது. ஏனெனில் யூதர்களின் உபவாச தினம் ஆரம்பித்திருந்தது. எனவே பவுல், 10 “மனிதரே இப்பயணத்தில் இன்னும் தொல்லைகள் மிகுதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” என்று அவர்களை எச்சரித்தான். “கப்பலும், கப்பலின் பொருள்களும் இழக்கப்படலாம். நம் உயிரையும் நாம் இழக்கக்கூடும்!” என்றான். 11 ஆனால் கப்பல் தலைவனும் கப்பலின் சொந்தக்காரனும் பவுல் கூறியதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் படை அதிகாரி பவுலை நம்பவில்லை. பதிலாக, தலைவனும் கப்பலின் சொந்தக்காரனும் கூறியதை அதிகாரி நம்பினான். 12 குளிர்காலத்தில் கப்பல் தங்குவதற்கு அத்துறைமுகமும் ஏற்றதல்ல. எனவே பெரும்பான்மையான மனிதர்களும் கப்பல் புறப்படவேண்டுமென முடிவெடுத்தனர். பேனிக்ஸ் நகரத்தை அடையக் கூடுமென அவர்கள் நம்பினர். குளிர்காலத்தில் கப்பல் அங்கு தங்கமுடியும். (கிரேத்தா தீவில் பேனிக்ஸ் ஒரு நகரம். தென் மேற்கு, வட மேற்கு திசைகளை நோக்கிய துறைமுகம் அங்கிருந்தது.)

புயல்

13 தெற்கிலிருந்து ஒரு நல்ல காற்று வீசியது. கப்பலிலிருந்த மனிதர்கள், “நமக்குத் தேவையான காற்று இது. இப்போது அது வீசுகிறது!” என்று நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை மேலே இழுத்தார்கள். கிரேத்தா தீவுக்கு வெகு அருகில் பயணம் செய்தோம். 14 “வட கிழக்கன்” என்னும் பெயருள்ள மிகப் பலமான காற்று தீவின் குறுக்காக வந்தது. 15 இக்காற்று கப்பலைச் சுமந்து சென்றது. காற்றுக்கு எதிராகக் கப்பலால் செல்ல முடியவில்லை. எனவே, முயற்சி செய்வதைவிட்டு, காற்று எங்களைச் சுமந்து செல்லும்படியாக விட்டோம்.

16 கிலவுதா என்னும் ஒரு சிறிய தீவின் கீழே சென்றோம். எங்களால் உயிர் மீட்கும் படகை வெளியே எடுக்கமுடிந்தது. ஆனால் அதை எடுப்பது மிகக் கடினமான செயலாக இருந்தது. 17 உயிர் மீட்கும் படகை மனிதர்கள் எடுத்த பின், அவர்கள் கப்பலைச் சுற்றிலும் கயிறுகளால் கப்பல் சரியாக இருப்பதற்கென்று கட்டினார்கள். சிர்டிஸின் மணற் பாங்கான கரையில் கப்பல் மோதக்கூடுமென்று அவர்கள் நினைத்தார்கள். எனவே துடுப்புகளை எடுத்துவிட்டு, காற்று கப்பலைச் செலுத்தும்படியாக விட்டார்கள்.

18 மறுநாள் புயல் கடுமையாகத் தாக்கியதால் மனிதர்கள் கப்பலிலிருந்து சில பொருட்களை வெளியே வீசினார்கள். 19 ஒரு நாள் கழிந்ததும் கப்பலின் கருவிகளை வெளியே வீசினர். 20 பல நாட்கள் எங்களால் சூரியனையோ, நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. புயல் கொடுமையாக இருந்தது. நாங்கள் உயிர் பிழைக்கும் நம்பிக்கையைக் கைவிட்டோம். நாங்கள் இறந்து விடுவோமென எண்ணினோம்.

21 நீண்ட காலமாக அம்மனிதர்கள் சாப்பிடவில்லை. பின்பு ஒருநாள் பவுல் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, “மனிதரே, கிரேத்தாவை விட்டுப் புறப்படாதீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் நான் சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும். இத்தனை தொல்லைகளும் நஷ்டமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. 22 ஆனால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்படிக்கு உங்களுக்குக் கூறுகிறேன். உங்களில் ஒருவரும் இறக்கமாட்டீர்கள்! ஆனால் கப்பல் அழிந்து போகும். 23 நேற்று இரவு தேவனிடமிருந்து ஒரு தூதன் என்னிடம் வந்தான். நான் வணங்குகிற தேவன் அவரே. நான் அவருடையவன். 24 தேவதூதன், ‘பவுலே, பயப்படாதே! நீ இராயருக்குமுன் நிற்க வேண்டும். தேவன் உனக்கு இவ்வாக்குறுதியைத் தருகிறார். உன்னோடு பயணமாகிற எல்லா மனிதரின் உயிர்களும் காப்பாற்றப்படும்’ என்றான். 25 எனவே மனிதரே மகிழ்ச்சியாயிருங்கள்! நான் தேவனிடம் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது தூதன் கூறியபடி எல்லாம் நடக்கும். 26 ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம்” என்றான்.

27 பதினான்காம் நாள் இரவில் ஆதிரியாக் கடலைச் சுற்றிலும் நாங்கள் கப்பலில் மிதந்துகொண்டிருந்தோம். மாலுமிகள் கரையை நெருங்குகிறோம் என்று எண்ணினர். 28 அவர்கள் ஒரு கனமான பொருளை நுனியில் கட்டி கயிற்றை நீருக்குள் வீசினர். நீர் 120 அடி ஆழமானது என்று அவர்கள் கண்டனர். இன்னும் சற்று தூரம் சென்று கயிற்றை மீண்டும் வீசினர். அங்கு நீர் 90 அடி ஆழமாயிருந்தது. 29 நாங்கள் பாறையில் மோதுவோமென்று மாலுமிகள் பயந்தார்கள். எனவே நான்கு நங்கூரங்களை நீருக்குள் பாய்ச்சினர். மறுநாளின் பகலொளிக்காகப் பிரார்த்தனை செய்தனர். 30 சில மாலுமிகள் கப்பலைக் கைவிட விரும்பினர். அவர்கள் உயிர் மீட்கும் படகை நீரில் இறக்கினர். கப்பலின் முன்பக்கத்திலிருந்து அதிகமான நங்கூரங்களை வீசுவதாக பிறமனிதர்கள் கருதும்படியாக நடந்துகொண்டனர். 31 ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான். 32 எனவே வீரர்கள் கயிறுகளை அறுத்து உயிர் மீட்கும் படகை நீரில் விழச்செய்தனர்.

33 அதிகாலைக்குச் சற்று முன் பவுல் எல்லா மக்களையும் ஏதேனும் உண்பதற்குச் சம்மதிக்க வைத்தான். அவன் “கடந்த இரண்டு வாரங்களாக நீங்கள் காத்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். பதினான்கு நாட்களாக நீங்கள் எதையும் உண்ணவில்லை. 34 நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள்” என்றான். 35 இதைக் கூறிய பிறகு பவுல் ரொட்டியை எடுத்து எல்லோர் முன்பாகவும் அதற்காக தேவனுக்கு நன்றி சொன்னான். அதில் ஒரு பகுதியை எடுத்து, அவன் உண்ண ஆரம்பித்தான். 36 எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். 37 (கப்பலில் 276 பேர் இருந்தனர்.) 38 நாங்கள் திருப்தியாகச் சாப்பிட்டோம். பின் கப்பலிலிருந்த தானியங்களை எல்லாம் கப்பலின் பாரத்தைக் குறைக்கும்பொருட்டு கடலுக்குள் வீசினோம்.

கப்பல் அழிந்தது

39 பகல் ஒளி வர ஆரம்பித்ததும் மாலுமிகள் நிலத்தைக் கண்டனர். அந்நிலம் எதுவென்று அவர்களால் அறியமுடியவில்லை. அவர்கள் கடற்கரையோடு கூடிய ஒரு வளைகுடாவைக் கண்டனர். மாலுமிகள் அவர்களால் முடிந்தவரைக்கும் கடற்கரைக்கு நேராக கப்பலைச் செலுத்த முயன்றனர். 40 ஆனால் கப்பல் மணல் மேட்டில் மோதியது. 41 கப்பலின் முன்பகுதி அதற்குள் நுழைந்து நின்றது. கப்பலால் அசைய முடியவில்லை. பெரும் அலைகள் வந்து கப்பலின் பின்பகுதியில் மோதி, கப்பலை உடைத்துவிட்டன.

42 எந்தக் கைதியும் நீந்தித் தப்பித்துப் போகாதவாறு வீரர்கள் அவர்களைக் கொல்வதற்கு முடிவு செய்தார்கள். 43 ஆனால் படைத் தலைவன் பவுலை உயிரோடு காக்க எண்ணினான். எனவே வீரர்கள் கைதிகளைக் கொல்வதற்கு அவன் அனுமதிக்கவில்லை. நீந்தத் தெரிந்தவர்கள் கடலில் குதித்து நீந்திக் கரை சேரலாமென்று ஜூலியஸ் மக்களுக்குக் கூறினான். 44 பிற மக்கள் மரப் பலகைகளையோ கப்பலின் உடைந்த பகுதிகளையோ பிடித்து நீந்தினர். இவ்வாறு எல்லா மக்களும் நிலத்தை அடைந்தனர். மக்களில் ஒருவரும் இறக்கவில்லை.

மெலித்தா தீவில் பவுல்

28 நாங்கள் நலமாகக் கரையை அடைந்தபோது அத்தீவு மெலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம். மழை பெய்துகொண்டிருந்தது. குளிர் மிகுதியாக இருந்தது. ஆனால் அங்கு வாழ்ந்த மக்கள் எங்களை அசாதாரணமான அன்புடன் நடத்தினார்கள். அவர்கள் எங்களுக்காகத் தீ மூட்டி எங்களையெல்லாம் வரவேற்றனர். நெருப்பின் பொருட்டு பவுல் விறகுக் குச்சிகளை சேகரித்தான். பவுல் அக்குச்சிகளை நெருப்பில் இட்டுக்கொண்டிருந்தான். விஷப் பாம்பு ஒன்று வெப்பத்தினால் வெளியேறி வந்து பவுலின் கையில் கடித்தது. தீவில் வாழ்ந்த மக்கள் பவுலின் கையில் அப்பாம்பு தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “இம்மனிதன் ஒரு கொலைக்காரனாக இருக்க வேண்டும். அவன் கடலில் இறக்கவில்லை. ஆனால் தெய்வீக நீதியானது அவன் வாழ்வதை விரும்பவில்லை” என்றனர்.

ஆனால் பவுல் பாம்பைத் தீயினுள் உதறினான். அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. பவுல் சரீரம் வீங்கக் கூடும், அல்லது அவன் இறந்துவிடக்கூடும் என்று மக்கள் எண்ணினர். மக்கள் காத்திருந்து நீண்ட நேரம் பவுலைக் கண்காணித்தனர். ஆனால் அவனுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. எனவே பவுலைக் குறித்த தங்கள் கருத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர். அவர்கள் “அவன் ஒரு தேவன்” என்றனர்.

அப்பகுதியைச் சுற்றிலும் சில வயல்கள் இருந்தன. தீவின் ஒரு முக்கியமான மனிதனுக்கு அந்த வயல்கள் சொந்தமானவை. அவன் பெயர் புபிலியு. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் வரவேற்றான். அவன் எங்களுக்கு நல்லவனாக இருந்தான். நாங்கள் அவனது வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். புபிலியுவின் தந்தை மிகவும் நோயுற்றுப் படுக்கையிலிருந்தார். அவருக்கு காய்ச்சலும் வயிற்றிளைச்சலும் இருந்தது. ஆனால் பவுல் அவனிடம் சென்று அவனுக்காகப் பிரார்த்தனை செய்தான். பவுல் தனது கைகளை அம்மனிதன் மீது வைத்து அவனைக் குணமாக்கினான். இது நடந்த பின் தீவிலுள்ள எல்லா நோயாளிகளும் பவுலிடம் வந்தனர். அவர்களையும் கூடப் பவுல் குணமாக்கினான்.

10-11 தீவின் மக்கள் எங்களுக்குப் பல கௌரவங்களை அளித்தார்கள். (நாங்கள் தீவில் மூன்று மாதம் தங்கினோம்) நாங்கள் புறப்படுவதற்குத் தயாரானபோது எங்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் கொடுத்தார்கள்.

பவுல் ரோமுக்குப் போகிறான்

அலெக்ஸாண்டிரியாவிலிருந்து வந்த ஒரு கப்பலில் நாங்கள் ஏறினோம். குளிர் காலத்தில் அக்கப்பல் மெலித்தா தீவில் தங்கியிருந்தது. மிதுனம் [n] என்னும் சின்னம் கப்பலில் முன்புறத்தில் இருந்தது. 12 சிராகூஸ் நகரில் நாங்கள் கப்பலை நிறுத்தினோம். மூன்று நாட்கள் சிராகூஸில் தங்கியிருந்து பின் புறப்பட்டோம். 13 ரேகியு நகருக்கு நாங்கள் வந்தோம். தென்மேற்கிலிருந்து மறுநாள் ஒரு காற்று வீசியது. எனவே நாங்கள் கடலில் பயணமாக முடிந்தது. ஒரு நாள் கழித்து நாங்கள் புத்தேயோலி நகருக்கு வந்தோம். 14 அங்குச் சில சகோதரர்களை நாங்கள் கண்டோம். ஒரு வாரம் தம்மோடு எங்களைத் தங்கியிருக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். இறுதியில் நாங்கள் ரோமை அடைந்தோம். 15 ரோமிலுள்ள விசுவாசிகள் நாங்கள் அங்கிருப்பதை கேள்விப்பட்டனர். அப்பியு சந்தையிலும், மூன்று விடுதிகளிலும் எங்களைச் சந்திக்கும்படியாக அவர்கள் வந்தனர். விசுவாசிகளைக் கண்டபோது பவுல் ஊக்கம் பெற்றான். பவுல் தேவனுக்கு நன்றி கூறினான்.

ரோமில் பவுல்

16 பின்பு நாங்கள் ரோமுக்குச் சென்றோம். ரோமில் பவுல் தனித்துத் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டான். ஒரு வீரன் மட்டும் பவுலைக் காவல் காப்பதற்காக அவனோடு தங்கினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center