Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
மத்தேயு 5-15

இயேசுவின் மலைப் பிரசங்கம்(A)

அங்குக் கூட்டமாயிருந்த மக்களைப் பார்த்த இயேசு ஒரு குன்றின்மீது சென்று அமர்ந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்தார்கள். இயேசு மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு போதனை செய்தார்:

,“ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
    பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.
இம்மையில் துக்கம் அடைந்த மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    தேவன் அவர்களைத் தேற்றுவார்.
பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    தேவன் வாக்களித்த இடத்தை [a] அவர்கள் பெறுவார்கள்.
மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    அவர்களுக்கு முழுத்திருப்தியைத் தேவன் அளிப்பார்.
மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.
தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள்.
அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார்.
10 நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.

11 ,“உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதினிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 12 அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய மகத்தான வெகுமதி உங்களுக்குக் காத்திருக்கிறது. உங்களுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் மக்கள் அதே விதமான தீமைகளைச் செய்தார்கள்.

உப்பு, ஒளி உவமைகள்(B)

13 ,“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.

14 ,“உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது. 15 மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. 16 அது போலவே, நீங்களும் மற்ற மனிதர்களுக்கு விளக்காக விளங்கவேண்டும். உங்களது நற்செயல்களை மற்றவர்கள் காணும்படி வாழுங்கள். பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவை மக்கள் புகழ்ந்து பேசுமாறு நீங்கள் வாழுங்கள்.

இயேசுவும் பழைய ஏற்பாடும்

17 ,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். 18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.

19 ,“ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். 20 சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.

கோபத்தைப் பற்றிய போதனை

21 ,“‘எவரையும் கொல்லாதே. [b] கொலை செய்கிறவன் தண்டிக்கப்படுவான்’ என்று வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். 22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள். அனைவரும் உங்கள் சகோதரர்களே. நீங்கள் மற்றவர்களிடம் கோபம் கொண்டால், நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். மற்றவருக்கு எதிராகத் தீயவைகளைச் சொன்னால் யூத ஆலோசனைக் குழுவினால் தண்டிக்கப்படுவீர்கள். வேறொரு மனிதனை முட்டாள் என்று நீங்கள் அழைத்தால், நரகத் தீயின் ஆபத்துக்குள்ளாவீர்கள்.

23 ,“எனவே, நீங்கள் தேவனுக்கு உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்பொழுது மற்றவர்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்தும்பொழுது, உங்கள் சகோதரன் உங்கள் மீது வருத்தத்துடன் இருப்பது உங்கள் நினைவிற்கு வந்தால், 24 உங்கள் காணிக்கையைப் பலிபீடத்திற்கு முன் வைத்துவிட்டு, சென்று அவனுடன் சமாதானமாகுங்கள். பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

25 ,“உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்தால், அவனுடன் விரைவாக நட்பாகுங்கள். நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பே அதைச் செய்ய வேண்டும். அவனுடன் நட்பாகாவிட்டால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான். மேலும், நீதிபதி உங்களைச் சிறையிலடைக்க காவலரிடம் ஒப்படைப்பார். 26 நான் சொல்லுகிறேன், நீங்கள் கொடுக்கவேண்டியது அனைத்தையும் கொடுத்துத் தீர்க்கிறவரையிலும் உங்களால் அந்தச் சிறையை விட்டு மீளமுடியாது.

கற்பைக் குறித்த போதனை

27 ,“‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’ [c] என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 28 ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான். 29 உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று. 30 உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று.

விவாகரத்துப்பற்றிய போதனை(C)

31 ,“‘தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவரும் அவளுக்கு எழுத்தின் மூலமாக சான்றிதழ் அளிக்க வேண்டும்’ [d] என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளை விபச்சாரப் பாவத்தின் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறான். தன் மனைவி வேறொரு ஆடவனுடன் சரீர உறவு வைத்திருப்பது மட்டுமே ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யத்தக்க காரணமாகும். விவாகரத்து செய்யப்பட்ட அப்பெண்ணை மணம் புரிகிறவனும் விபச்சாரம் செய்தவனாகிறான்.

வாக்குறுதிகளைப்பற்றிய போதனை

33 ,“‘நீ ஒரு சத்தியம் செய்தால், அதை மீறக் கூடாது என்றும், கர்த்தருக்குச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக’ [e] என்றும், வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள். 34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருபோதும் சத்தியம் செய்யாதீர்கள். பரலோக இராஜ்யத்தின் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பரலோக இராஜ்யம் தேவனின் அரியாசனம். 35 பூமியின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பூமி தேவனுக்குச் சொந்தமானது. எருசலேம் நகரத்தின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், எருசலேம் மகா இராஜாவின் நகரம். 36 உங்கள் தலை மீதும் சத்தியம் செய்யாதீர்கள். உங்கள் தலையின் ஒரு முடியைக் கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ இயலாது. 37 ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டுமே கூறுங்கள். ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதற்கு மேலாக ஏதும் நீங்கள் கூறினால் அது பொல்லாங்கனாகிய பிசாசின் வார்த்தைகளாயிருக்கும்.”

பழிவாங்குதல் பற்றிய போதனை(D)

38 ,“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ [f] என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். 40 உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். 41 ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள். 42 ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.

அனைவரையும் நேசியுங்கள்(E)

43 ,“‘உன் சினேகிதனை நேசி. [g] உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள். 45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார். 46 உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். 47 உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள். 48 பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.

தர்மம் செய்வதைப் பற்றிய போதனை

,“நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது.

,“நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, நீங்கள் உதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்களைப் போல் நீங்கள் செய்யாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன்னர் குழல் ஊதி அறிவிப்பார்கள். அவர்கள் யூத ஆலயங்களிலும் தெருக்களிலும் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே, நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது மிக இரகசியமாக உதவுங்கள். மற்றவர் எவரும் அறியாதவாறு உதவுங்கள். உங்கள் உதவி இரகசியமாகச் செய்யப்படவேண்டும். உங்கள் பிதாவாகிய தேவன் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். எனவே அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.

பிரார்த்தனை பற்றி போதித்தல்(F)

,“நீங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுது, நல்லவர்களைப்போல நடிக்கும் தீயவர்களைப் போல் நடக்காதீர்கள். போலியான மனிதர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த குரலில் பிராத்தனை செய்ய விரும்புகிறார்கள். தாம் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் காண அவர்கள் விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள். நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.

,“நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார். நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்க வேண்டும்:

, “‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே,
    உமது பெயர் என்றென்றும் புனிதமாயிருக்கப் பிரார்த்திக்கிறோம்.
10 உமது இராஜ்யம் வரவும் பரலோகத்தில் உள்ளது போலவே
    பூமியிலும் நீர் விரும்பியவை செய்யப்படவும் பிரார்த்திக்கிறோம்.
11 ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
12 மற்றவர் செய்த தீமைகளை நாங்கள் மன்னித்தது போலவே
    எங்கள் குற்றங்களையும் மன்னியும்.
13 எங்களைச் சோதனைக்கு உட்படப் பண்ணாமல்
    பிசாசினிடமிருந்து காப்பாற்றும்.’ [h]

14 நீங்கள் மற்றவர் செய்யும் தீயவைகளை மன்னித்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவானவரும் உங்கள் தீயசெயல்களையும் மன்னிப்பார். 15 ஆனால், மற்றவர்கள் உங்களுக்குச் செய்யும் தீமைகளை நீங்கள் மன்னிக்காவிட்டால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் தீமைகளை மன்னிக்கமாட்டார்.

உபவாசத்தைப் பற்றிய போதனை

16 ,“நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, சோகமாகக் காட்சியளிக்காதீர்கள். மாயக்காரர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். நீங்களும் அவர்களைப்போல நடிக்காதீர்கள். தாங்கள் உபவாசம் இருப்பதை மற்றவர்கள் காண்பதற்காகத் தங்கள் முகத்தை விநோதமாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு பலனை அடைந்துவிட்டார்கள். 17 எனவே, நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, மகிழ்ச்சியாகக் காணப்படுங்கள். முகம் கழுவிக்கொள்ளுங்கள். 18 எனவே, நீங்கள் உபவாசம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் காண முடியாத உங்கள் பிதாவானவர் உங்களைக் காண்பார். உங்கள் பிதாவானவர் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். மேலும் அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.

பணமும் தேவனும்(G)

19 ,“உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். 20 எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. 21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

22 ,“உடலுக்கு ஒளி தருவது கண். உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியுடன் திகழும். 23 ஆனால், உங்கள் கண்கள் கெட்டுப் போனால், உங்கள் சரீரம் முழுவதும் ஒளியிழந்து போகும். உங்களிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால் அவ்விருள் எவ்வளவு கொடியதாயிருக்கும்.

24 ,“எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது.

தேவ இராஜ்யத்திற்கு முதலிடம்(H)

25 ,“எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது.

28 ,“உடைகளுக்காக ஏன் கவலை கொள்கிறீர்கள்? தோட்டத்தில் உள்ள மலர்களைப் பாருங்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பாருங்கள். அவைகள் வேலை செய்வதுமில்லை. தங்களுக்கான உடைகளைத் தயார் செய்வதுமில்லை. 29 ஆனால் நான் சொல்கிறேன் மாபெரும் பணக்கார மன்னனான சாலமோன் கூட இந்தப் பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடை அணியவில்லை. 30 அவ்வாறே தேவன் வயல்களிலுள்ள புற்களுக்கும் உடை அணிவிக்கிறார். இன்றைக்கு உயிருடன் இருக்கும் புல், நாளைக்கு தீயிலிடப்பட்டு எரிக்கப்படும். எனவே, தேவன் உங்களுக்குச் சிறப்பாக உடையணிவிப்பார் என்பதை அறியுங்கள். தேவனிடம் சாதாரணமான நம்பிக்கை வைக்காதீர்கள்.

31 ,“‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள். 32 தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார். 33 தேவனின் இராஜ்யத்தையும் நீங்கள் செய்ய வேண்டுமென தேவன் விரும்பும் நற்செயல்களைச் செய்தலையுமே நீங்கள் நாடவேண்டும். அப்போது தேவன் உங்களது மற்றத் தேவைகளையும் நிறைவேற்றுவார். 34 எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு.

நியாயம் தீர்ப்பதைப்பற்றி போதனை(I)

,“மற்றவர்களை நீங்கள் நியாயம் தீர்க்காதீர்கள். அப்பொழுது தேவன் உங்களை நியாயம் தீர்க்கமாட்டார். நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.

,“உங்கள் கண்ணில் இருக்கும் மரத்துண்டினைக் கவனிக்காது, உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியைக் காண்கிறீர்கள். அது ஏன்? ‘உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’, என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது. மாயக்காரரான நீங்கள் முதலில் உங்கள் கண்ணிலிருந்து அம்மரத்துண்டை அகற்றுங்கள். பின்னரே, உங்கள் சகோதரனின் கண்ணிலிருந்து தூசியை அகற்ற முன் வாருங்கள்.

,“புனிதமானவற்றை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். அவை திரும்பி உங்களைத் துன்புறுத்தவே செய்யும். முத்துக்களைப் பன்றிகளின் முன் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அவைகள் முத்துக்களைக் காலால் மிதித்து சேதப்படுத்தும்.

தேவனிடம் கேட்டுப்பெறுதல்(J)

,“தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும். ஆம், ஒருவன் தொடர்ந்து கேட்டால், அவன் அதைப் பெறுவான். ஒருவன் தொடர்ந்து தேடினால், அவன் கண்டடைவான். ஒருவன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.

,“உங்களில் யாருக்கேனும் மகன் உண்டா? உங்கள் மகன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை. 10 அல்லது, உங்கள் மகன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை. 11 நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ?

மிகமுக்கியமான சட்டம்

12 ,“மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும்.

இரண்டு வழிகள்(K)

13 ,“பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். 14 ஆனால், மெய்யான வாழ்விற்கான வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டடைகிறார்கள்.

மக்களின் செயல்களைக் கவனியுங்கள்(L)

15 ,“போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள், ஓநாய்களைப்போல அபாயமானவர்கள். 16 அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை. 17 அதுபோலவே, ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளையே கொடுக்கும். தீய மரங்கள் தீய பழங்களையே கொடுக்கும். 18 அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது. 19 நல்ல கனிகளைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும். 20 போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம்.

21 ,“என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியும். 22 இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள். 23 அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன்.

இரண்டுவித மனிதர்கள்(M)

24 ,“என் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின் மேல் கட்டினான். 25 கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்று வீசி வீட்டைத் தாக்கியது. பாறையின் மேல் கட்டப்பட்டதால் அந்த வீடு இடிந்து விழவில்லை.

26 ,“என் போதனைகளைக் கேட்டுவிட்டு அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன் மணல் மீது தன் வீட்டைக் கட்டினான். 27 கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது.”

28 இயேசு இவற்றைக் கூறி முடித்தபொழுது, மக்கள் அவரது போதனைகளைக் குறித்து வியப்படைந்தனர். 29 வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார்.

தொழுநோயாளி குணமடைதல்(N)

இயேசு குன்றின்மீதிருந்து கீழிறங்கி வந்தார். ஏராளமான மக்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழு நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்பாகப் பணிந்து,, “கர்த்தாவே, நீர் விரும்பினால், என்னைக் குணப்படுத்த முடியும். அவ்வல்லமையைப் பெற்றிருக்கிறீர்” என்று சொன்னான்.

இயேசு அவனைத் தொட்டு,, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணம் அடைவாயாக!” என்று சொன்னார். உடனே அந்த மனிதன் தொழுநோயிலிருந்து குணமாக்கப்பட்டான். பின் இயேசு அவனிடம்,, “என்ன நடந்தது என்பதை எவரிடமும் கூறாதே. ஆனால் ஆசாரியரிடம் சென்று உன்னைக் காட்டு. [i] நோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் செலுத்தவேண்டிய காணிக்கையை மோசே கட்டளையிட்டபடி செலுத்து. அதுவே நீ குணமடைந்ததை மக்களுக்குக் காட்டும்” என்று கூறி அனுப்பினார்.

வேலைக்காரன் குணமாகுதல்(O)

இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். இயேசு அந்நகரத்திற்குள் நுழைந்த பொழுது, படை அதிகாரி ஒருவன் வந்து அவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சினான். அந்த அதிகாரி,, “கர்த்தாவே, என் வேலைக்காரன் மிக நோய் வாய்ப்பட்டு வீட்டில் படுத்திருக்கிறான். அவனால் சரீரத்தை அசைக்கக்கூட முடியவில்லை. மிகுந்த வலியினால் அவதிப்படுகிறான்” என்று சொன்னான்.

இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று கூறினார்.

அதற்கு அந்த அதிகாரி,, “கர்த்தாவே, நீர் என் வீட்டிற்குள் வருமளவிற்கு நான் மேலானவனல்ல. நீர் செய்யவேண்டுவதெல்லாம், என் வேலைக்காரன் குணமடையட்டும் என்று கட்டளையிடுவது மட்டுமே. அப்போது அவன் குணம் அடைவான். நான் என்னிலும் அதிகாரம் மிக்கவர் கீழ்ப் பணிபுரிகிறேன். என் அதிகாரத்திற்குக் கீழும் படைவீரர்கள் உள்ளனர். நான் ஒரு வீரனிடம் ‘போ’ என்றால், அவன் போகிறான். மற்றொரு வீரனிடம் ‘வா’ என்றால், அவன் வருகிறான். நான் என் வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால், அவன் அதைச் செய்கிறான். (அதைப் போலவே நீரும் வல்லமை பெற்றவர் என்பதை நான் அறிவேன்)” என்றான்.

10 இதைக் கேட்ட இயேசு வியப்படைந்தார். தன்னுடன் இருந்த மக்களிடம் இயேசு,, “உண்மையைச் சொல்லுகிறேன், நான் பார்த்த மனிதர் அனைவரிலும், இஸ்ரவேலிலும் கூட, இவனே அதிக விசுவாசம் உடையவன். 11 பலர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருடன் அமர்ந்து பரலோக இராஜ்யத்தில் உணவு உண்பார்கள். 12 ஆனால் பரலோக இராஜ்யத்தை அடைய வேண்டியவர்களான யூதர்களோ வெளியே இருட்டில் எறியப்படுவார்கள். அங்கு அவர்கள் பற்களைக் கடித்துக் கூக்குரலிடுவார்கள்” என்று கூறினார்.

13 பிறகு இயேசு அதிகாரியிடம்,, “வீட்டிற்குச் செல். நீ எவ்வாறு விசுவாசித்தாயோ அவ்வாறே உன் வேலைக்காரன் குணமாவான்” என்று சொன்னார். அந்த நேரத்திலேயே அந்த அதிகாரியின் வேலைக்காரன் குணமாக்கப்பட்டான்.

இயேசு அநேகரைக் குணமாக்குதல்(P)

14 இயேசு பேதுருவின் வீட்டிற்குச் சென்றார். அங்குப் பேதுருவின் மாமியார் அதிகக் காய்ச்சலுடன் படுத்திருந்ததைக் கண்டார். 15 இயேசு அவளது கையைத் தொட்டார். உடனே அவளது காய்ச்சல் நீங்கியது. பின்னர் அவள் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தாள்.

16 அன்று மாலை, பிசாசு பிடித்த பல மக்களை அவரிடம் அழைத்து வந்தனர். இயேசு தமது வார்த்தையினால் அப்பிசாசுகளைத் துரத்தி, வியாதியாய் இருந்த அனைவரையும் குணமாக்கினார்.

17 ,“அவர் எங்களது நோய்களைத் தீர்த்தார்;
பிணிகளை நீக்கினார்” (Q)

என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடந்தேறும்படியாக இயேசு இவற்றைச் செய்தார்.

இயேசுவைப் பின்தொடர்தல்(R)

18 அனைத்து மக்களும் தன்னைச் சுற்றி இருப்பதை இயேசு கண்டார். எனவே, இயேசு தன் சீஷர்களிடம் ஏரியின் மறு கரைக்குச் செல்லுமாறு கூறினார். 19 பின் வேதபாரகரில் ஒருவன் இயேசுவிடம் வந்து,, “போதகரே, நீர் போகுமிடமெல்லாம் நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்றான்.

20 அதற்கு இயேசு,, “நரிகள் தாம் வாழ குழிகளைப் பெற்றுள்ளன. பறவைகள் தாம் வாழ கூடுகளைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதகுமாரனுக்குத் தலை சாய்க்க ஓரிடமும் இல்லை” என்று கூறினார்.

21 இயேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம்,, “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான்.

22 ஆனால் இயேசு அவனிடம்,, “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்” என்றார்.

இயேசு ஒரு புயலை நிறுத்துதல்(S)

23 இயேசு ஒரு படகில் ஏறினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். 24 படகு கரையை விட்டுப் புறப்பட்ட பின்னர், கடலில் மிகப் பலமான புயல் உருவானது. படகை அலைகள் சூழ்ந்தன. ஆனால், இயேசு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார். 25 அவரது சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினார்கள். அவர்கள்,, “ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும். இல்லையேல் நாங்கள் மூழ்கிவிடுவோம்!” என்று சொன்னார்கள்.

26 இயேசு அவர்களிடம்,, “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்குப் போதிய விசுவாசம் இல்லை” என்று கூறினார். பின்பு, இயேசு எழுந்து நின்று காற்றுக்கும் அலைகளுக்கும் ஒரு கட்டளை பிறப்பித்தார். காற்று நின்றது. கடல் மிகவும் அமைதியானது.

27 படகிலிருந்தவர்கள் வியப்புற்று,, “எப்படிப்பட்ட மனிதர் இவர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறி வியப்படைந்தனர்.

இருவரிடமிருந்து பிசாசுகளை விரட்டுதல்(T)

28 இயேசு கெதரேனே மக்கள் வசிக்கும் ஏரியின் மறு கரையை வந்தடைந்தார். அங்கு இருவர் இயேசுவிடம் வந்தனர். அவர்களுக்குப் பிசாசுகள் பிடித்திருந்தன. அவர்கள் இருவரும் கல்லறைகள் இருக்குமிடத்தில் வாழ்ந்தனர். மிக அபாயமானவர்கள் அவர்கள். எனவே, மக்கள் அவர்கள் வசித்த கல்லறைகளுக்கு அருகில் சென்ற பாதைகளை உபயோகிக்க இயலவில்லை. 29 இயேசுவிடம் வந்த அவ்விருவரும்,, “தேவகுமாரனே, எங்களிடமிருந்து என்ன வேண்டும்? தக்க சமயத்திற்கு முன்பாகவே எங்களைத் துன்புறுத்த வந்தீரோ?” என்று சத்தமிட்டனர்.

30 அந்த இடத்திற்கு அருகில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துக்கொண்டிருந்தன. 31 அவர்களைப் பிடித்திருந்த பிசாசுகள் இயேசுவிடம்,, “இவர்களை விட்டு எங்களை வெளியேற்றுவதானால், தயவுசெய்து நாங்கள் அந்த பன்றி கூட்டத்திற்குள் செல்லவிடுங்கள்” என்று கெஞ்சின.

32 இயேசு பிசாசுகளிடம்,, “செல்லுங்கள்” என்றார். உடனே, அப்பிசாசுகள் அவர்களை விட்டு நீங்கி பன்றி கூட்டத்திற்குள் சென்றன. பிறகு, அப்பன்றிக் கூட்டம் முழுவதும் குன்றிலிருந்து கீழிறங்கி ஏரிக்குள் ஓடின. எல்லாப் பன்றிகளும் நீரில் மூழ்கின. 33 பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் நகரத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் நகர மக்களிடம் பிசாசு பிடித்திருந்த இருவருக்கும் பன்றிகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கூறினார்கள். 34 பிறகு, அந்த நகர மக்கள் அனைவரும் இயேசுவைக் காணச் சென்றனர். இயேசுவைக் கண்ட மக்கள், அவர்களது இடத்தைவிட்டு அவரை விலகிச் செல்லுமாறு கெஞ்சினர்.

பக்கவாத வியாதிக்காரன் குணமாகுதல்(U)

இயேசு ஒரு படகில் ஏரியைக் கடந்து மீண்டும் தம் சொந்த நகருக்குத் திரும்பினார். பக்கவாத வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சிலர் இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவன் படுக்கையில் படுத்திருந்தான். அம்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்திருந்ததை இயேசு கண்டார். எனவே இயேசு அந்த வியாதிக்காரனிடம்,, “வாலிபனே, மகிழ்ச்சியாயிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

இதைக் கேட்ட சில வேதப்போதகர்கள்., “இந்த மனிதன் (இயேசு) தேவனைப் போலவே பேசுகிறான். இது தேவனை நிந்திக்கும் செயல்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.

அவர்கள் இவ்வாறு எண்ணியதை இயேசு அறிந்தார். எனவே இயேசு,, “நீங்கள் ஏன் தீய எண்ணங்களைச் சிந்திக்கின்றீர்கள்? பக்கவாத வியாதிக்காரனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’, என்று கூறுவது எளிதா? அல்லது ‘எழுந்து நட’, என்று கூறுவது எளிதா? ஆனால் மனித குமாரனுக்கு பூமியில் பாவங்களை மன்னிக்கும் வல்லமை இருப்பதை நான் உங்களுக்கு நிரூபிப்பேன்” என்று சொன்னார். பிறகு அந்த வியாதிக்காரனிடம் இயேசு,, “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்!” என்று கூறினார்.

அம்மனிதன் எழுந்து வீட்டுக்குச் சென்றான். இதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர். இத்தகைய வல்லமையை மனிதனுக்கு அளித்ததற்காக அவர்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.

இயேசு மத்தேயுவைத் தேர்ந்தெடுத்தல்(V)

அங்கிருந்து இயேசு செல்லும்பொழுது, மத்தேயு என்ற மனிதனைக் கண்டார். மத்தேயு வரி அலுவலகத்தில் அமர்ந்திருந்தான்., “என்னைத் தொடர்ந்து வா” என்று மத்தேயுவிடம் இயேசு கூறினார். உடனே மத்தேயு எழுந்திருந்து இயேசுவைப் பின் தொடர்ந்தான்.

10 இயேசு மத்தேயுவின் வீட்டில் விருந்துண்டார். வரி வசூலிப்பவர்கள் பலரும் தீயவர்கள் பலரும் வந்திருந்து இயேசுவுடனும் அவரது சீஷர்களுடனும் விருந்துண்டனர். 11 அத்தகைய மனிதர்களுடன் இயேசு விருந்துண்டதைப் பரிசேயர்கள் கண்டனர். பரிசேயர்கள் இயேசுவின் சீஷர்களிடம்,, “ஏன் உங்கள் குருவானவர் வரி வசூலிப்பவர்களுடனும் தீய மனிதர்களுடனும் உணவு உண்கிறார்?” என்று கேட்டனர்.

12 பரிசேயர்கள் இவ்வாறு கூறுவதை இயேசு கேட்டார். எனவே, இயேசு பரிசேயர்களிடம்,, “ஆரோக்கியமானவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிகளுக்குத்தான் மருத்துவர் தேவை. 13 நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். விலங்குகளைப் பலியிடுவதை நான் விரும்பவில்லை. [j] நான் மக்களிடம் கருணையை விரும்புகிறேன். நல்லவர்களை அழைக்க நான் வரவில்லை. பாவம் செய்தவர்களை அழைக்கவே நான் வந்தேன்” என்று கூறினார்.

வித்தியாசமான போதனை(W)

14 பின்னர், யோவானின் சீஷர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி உபவாசம் இருக்கிறோம். ஆனால், உங்கள் சீஷர்கள் உபவாசம் இருப்பதில்லை. ஏன்?” என்று கேட்டார்கள்.

15 அதற்கு இயேசு அவர்களிடம்,, “திருமணத்தின்போது, மணமகன் உடன் இருக்கும் பொழுது அவன் நண்பர்கள் சோகமாக இருப்பதில்லை. ஆனால் மணமகன் அவர்களிடமிருந்து பிரிக்கப்படும் நேரம் வரும். அப்பொழுது மணமகனின் நண்பர்கள் வருத்தம் அடைகிறார்கள். அப்பொழுது அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.

16 ,“ஒருவன் தன் பழைய சட்டையிலுள்ள ஒரு ஓட்டையை தைக்கும்பொழுது, சுருக்கமடையாத புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை. அப்படிச் செய்தால், இணைத்த துண்டுத்துணியானது சுருங்கி சட்டையிலிருந்து கிழிந்துவிடும். அதனால் ஓட்டை மேலும் மோசமடையும். 17 மேலும், மக்கள் ஒருபோதும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகளில் வைப்பதில்லை. ஏனென்றால் பழைய திராட்சை இரசம் இருக்கும் பைகள் கிழிந்துவிடும். திராட்சை இரசமும் சிந்திவிடும். திராட்சை இரசப் பைகளும் வீணாகும். அதனால், மக்கள் எப்பொழுதும் புதிய திராட்சை இரசத்தை புதிய பைகளிலேயே ஊற்றுகிறார்கள். அதனால் திராட்சை இரசமும் பைகளும் நன்றாக இருக்கும்” என்றார்.

மரித்த பெண் உயிரடைதல், நோயாளிப் பெண் சுகமடைதல்(X)

18 இயேசு இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபொழுது, யூத ஆலயத் தலைவன் ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவை வணங்கி,, “என் மகள் சற்றுமுன் இறந்துவிட்டாள். ஆனாலும், நீர் வந்து உமது கையால் அவளைத் தொடும். அவள் மீண்டும் உயிர் பிழைப்பாள்” என்றான்.

19 உடனே, இயேசு எழுந்து அவனுடன் சென்றார். இயேசுவின் சீஷர்களும் அவரைத் தொடர்ந்தார்கள்.

20 அப்பொழுது பன்னிரெண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதியுற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் இயேசுவின் பின் வந்து அவரது மேலங்கியின் நுனியைத் தொட்டாள். 21 அந்தப் பெண்,, “நான் இந்த மேலங்கியைத் தொட்டால் குணமடைவேன்” என எண்ணிக்கொண்டிருந்தாள்.

22 இயேசு திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து அவளிடம்,, “பெண்ணே, மகிழ்ச்சியாயிரு. நீ சுகமாக்கப்பட்டாய். ஏனென்றால், நீ விசுவாசித்ததினால் குணமாக்கப்பட்டாய்” என்றார். உடனே அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள்.

23 இயேசு அந்தத் தலைவனுடன் தொடர்ந்து சென்று, அவனது வீட்டிற்குள் சென்றார். சரீர அடக்கத்திற்கான இசை இசைப்போரை இயேசு அங்கு கண்டார். அந்தச் சிறுமி இறந்துவிட்டதனால், அழுதுகொண்டிருந்த பலரையும் இயேசு கண்டார். 24 இயேசு,, “விலகிச் செல்லுங்கள். இச்சிறுமி இறக்கவில்லை. இவள் தூக்கத்திலிருக்கிறாள்” என்று சொன்னார். அதைக் கேட்ட அங்கிருந்த மக்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். 25 அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இயேசு சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். இயேசு சிறுமியின் கரத்தைப் பிடித்தார். சிறுமி எழுந்து நின்றாள். 26 இச்செய்தி அத்தேசம் முழுவதும் பரவியது.

இயேசு பலரைக் குணமாக்குதல்

27 இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக்குருடர்கள் உரத்த குரலில்,, “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன்னார்கள்.

28 இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து,, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள், “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர்.

29 பிறகு இயேசு அவர்களது கண்களைத் தொட்டு,, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று நம்புகிறீர்கள். எனவே அது நடக்கும்” என்று சொன்னார். 30 உடனே அவர்களால் பார்க்க முடிந்தது. பின் அவர்,, “இதைக் குறித்து யாரிடமும் கூறாதீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார். 31 ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று இயேசுவைக் குறித்த செய்திகளை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள்.

32 அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்ற பின், சிலர் வேறொரு மனிதனை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள். இம்மனிதனைப் பிசாசு பிடித்திருந்ததினால் அவனால் பேச இயலவில்லை. 33 இயேசு அம்மனிதனிடமிருந்த பிசாசை விரட்டினார். பிறகு ஊமையான அம்மனிதனால் பேச முடிந்தது. அதனால் வியப்படைந்த மக்கள்,, “இஸ்ரவேலில் நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை” என்று கூறினார்கள்.

34 ஆனால் பரிசேயர்கள்,, “பிசாசுகளை விரட்டுகிற வல்லமையை இயேசுவிற்குக் கொடுத்தது பிசாசுகளின் தலைவனே” என்று சொன்னார்கள்.

இயேசுவின் கரிசனை

35 இயேசு எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார். பரலோக அரசைப் பற்றிய நற்செய்தியை இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் மக்களுக்குக் கூறினார். இயேசு எல்லாவகையான நோய்களையும் குணமாக்கினார். 36 திரளான மனிதர்களைக் கண்ட இயேசு அவர்களுக்காக வருத்தமடைந்தார். ஏனென்றால், மக்கள் கவலை கொண்டும் ஆதரவற்றும் இருந்தனர். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையைப்போல மக்கள் தங்களை வழிநடத்த மேய்ப்பனின்றி இருந்தனர். 37 இயேசு தம் சீஷர்களிடம்,, “ஏராளமான மக்கள் அறுவடைக்காக (காப்பாற்றப்பட) உள்ளனர். ஆனால் அவர்களை அறுவடை செய்வதற்கோ மிகச் சில பணியாளர்களே உள்ளனர். தேவனுக்கு உரியது அறுவடை (மக்கள்). 38 பிரார்த்தனை செய்யுங்கள். தேவன் மேலும் பலரைத் தம் அறுவடையைச் சேகரிக்க அனுப்புவார்” என்றார்.

அப்போஸ்தலர்களை அனுப்புதல்(Y)

10 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற்கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய்களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமையையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு:

சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.)

மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா,

செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும்

அவரது சகோதரன் யோவான்,

பிலிப்பு

மற்றும் பார்த்தலோமியு,

தோமா

மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு,

அல்பேயுவின் மகன் யாக்கோபு,

ததேயு,

சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து.

இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான்.

இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இவ்வல்லமைகளை உங்களுக்குத் தாராளமாய் வழங்குகிறேன். எனவே, மற்றவர்களுக்குத் தாராளமாய் உதவுங்கள். உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செம்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள். 10 பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும்.

11 ,“நீங்கள் ஒரு நகரத்திலோ ஊரிலோ நுழையும்பொழுது, தகுதிவாய்ந்த மனிதரைக் கண்டு நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லும்வரை அவருடன் தங்கி இருங்கள். 12 நீஙகள் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்று சொல்லுங்கள். 13 அவ்வீட்டில் உள்ளவர்கள் உங்களை வரவேற்றால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நீங்கள் அவர்களுக்கு விரும்பிய சமாதானம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். வீட்டிலுள்ளவர்கள் உங்களை வரவேற்காவிட்டால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுக்கு நீங்கள் விரும்பிய சமாதானத்தைத் திரும்பப் பெறுங்கள். 14 ஒரு வீட்டிலுள்ளவர்களோ அல்லது நகரத்திலுள்ளவர்களோ உங்களை வரவேற்கவோ அல்லது உங்கள் பேச்சைக் கேட்கவோ மறுத்தால், அவ்விடத்தை விட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்த தூசியைத் தட்டிவிடுங்கள். 15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நியாயத்தீர்ப்பு நாளிலே சோதாம் மற்றும் கொமோரா ஆகிய ஊர்களுக்கு நேர்ந்ததைக் காட்டிலும் மோசமானது அவ்வூருக்கு நடக்கும்.

பிரச்சனைகளைப் பற்றிய எச்சரிக்கை(Z)

16 ,“கவனியுங்கள்! நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கிடையில் அகப்பட்ட வெள்ளாட்டினைப் போல இருப்பீர்கள். எனவே, பாம்புகளைப்போல சாதுரியமாய் இருங்கள். ஆனால் புறாவைப்போல கபடற்றவர்களாயிருங்கள். 17 மக்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களைக் கைது செய்து கொண்டு போய் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார்கள். உங்களை (அவர்களது) ஜெப ஆலயங்களில் வைத்து சாட்டையால் அடிப்பார்கள். 18 ஆளுநர்களுக்கும் மன்னர்களுக்கும் யூதர் அல்லாதவர்களுக்கும் முன்னால் நிறுத்தப்படுவீர்கள். என்னிமித்தம் உங்களுக்கு மக்கள் இதைச் செய்வார்கள். அப்போது நீங்கள் என்னைப் பற்றி அம்மன்னர்களுக்கும் ஆளுநர்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் எடுத்துச் சொல்வீர்கள். 19 நீங்கள் கைது செய்யப்படும்பொழுது, எதைச் சொல்வது எப்படிச் சொல்வது என்று கவலைகொள்ளாதீர்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் பேச வேண்டியவை அருளப்படும். 20 அப்பொழுது உண்மையில் பேசுவது நீங்களாயிருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவர் உங்கள் மூலமாகப் பேசுவார்.

21 ,“சகோதரர்களே தமது சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தந்தையரே தம் பிள்ளைகளுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிள்ளைகளே தமது பெற்றோர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். 22 நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள். ஆனால், இறுதிவரை உறுதியாயிருக்கிறவன் இரட்சிக்கப்படுவான். 23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.

24 ,“ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு வேலைக்காரன் தன் முதலாளியைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. 25 ஒரு மாணவன் தன் ஆசிரியரின் அளவிற்கு முன்னேறுவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானைப்போல முன்னேற்றமடைவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வீட்டின் தலைவனே ‘பெயல்செபூல்’ என்றழைக்கப்பட்டால், அக்குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அதனிலும் மோசமான பெயரால் அழைக்கப்படுவார்கள்.

யாருக்குப் பயப்படுவது(AA)

26 ,“எனவே, அத்தகைய மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். மறைந்துள்ள யாவும் வெளியே வரும். மர்மமாயுள்ள அனைத்தும் தெளிவாக அறியப்படும். 27 நான் இவற்றை இருளில் (இரகசியமாக) கூறுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றை வெளிச்சத்தில் கூற வேண்டுமென நான் விரும்புகிறேன். நான் இவற்றை அமைதியாக உங்களுடன் மட்டும் மெதுவாகப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றைத் தாராளமாக எல்லா மக்களுக்கும் கூற வேண்டும்.

28 ,“மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆத்துமாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும். அவர் சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்திற்கு அனுப்ப வல்லவர். 29 பறவைகள் விற்கப்படும் பொழுது இரண்டு சிறிய பறவைகளின் விலை ஓரணா மட்டுமே. ஆனால் இரண்டில் ஒன்று கூட உங்கள் பிதாவானவரின் அனுமதி இன்றி சாக முடியாது. 30 உங்கள் தலையிலுள்ள முடிகளின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். 31 எனவே பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் நீங்கள் அதிக மதிப்பு வாய்ந்தவர்கள்.

விசுவாசத்தை வெளிப்படுத்துங்கள்(AB)

32 ,“ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் (நின்று கொண்டு) என்னிடம் நம்பிக்கை உடையவனாய் இருப்பதாகக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவான். நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன். 33 மாறாக, ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் என்னிடம் நம்பிக்கை உடையவனல்ல எனக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவானல்ல. நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன்.

வித்தயாசமான போதனை(AC)

34 ,“பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நான் வந்திருப்பதாய் நினைக்காதீர்கள். சமாதானத்தை ஏற்படுத்த நான் வரவில்லை. ஒரு பட்டயத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்துள்ளேன். 35-36 கீழ்க்கண்டவை நடந்தேறவே நான் வந்துள்ளேன்:

, “‘தன் குடும்பத்து மக்களே ஒருவருக்கு ஒருவர் எதிராவார்கள்.
மகன் தன் தந்தைக்கும்,
    மகள் தன் தாய்க்கும்,
    மருமகள் தன் மாமியாருக்கும், எதிராவார்கள்.’ (AD)

37 ,“என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. 38 என்னைப் பின்பற்றும்பொழுது உண்டாகும் துன்பத்தை ஏற்றுக்கொள்ளாதவன், என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. 39 என்னைவிடவும் தன் வாழ்வை அதிகம் நேசிக்கிறவன், மெய்யான வாழ்வை இழக்கிறான். எனக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறவன், மெய்யான வாழ்வை அடைவான்.

உங்களை ஏற்றுக்கொள்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்(AE)

40 ,“உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொண்டவன். என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். 41 தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். நல்லவரை அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்கிறவன், நல்லவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவான். 42 யாரேனும் என்னைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சிறிய அளவேனும் உதவினால், அவன் தக்க வெகுமதியை நிச்சயம் பெறுவான். என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்திருந்தாலும், அவனுக்குத் தக்க வெகுமதி நிச்சயம் கொடுக்கப்படும்.”

இயேசுவும் யோவான் ஸ்நானகனும்(AF)

11 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கும் இவற்றைக் கூறி முடித்தார். பின்னர் அங்கிருந்து கலிலேயாவின் நகரங்களுக்குப் போதனை செய்வதற்காகச் சென்றார்.

யோவான் ஸ்நானகன் சிறையிலிருந்தான். கிறிஸ்து செய்து கொண்டிருந்த பணிகளை யோவான் கேள்வியுற்றான். எனவே, யோவான் தனது சீஷர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்பினான். யோவானின் சீஷர்கள் இயேசுவைக்கண்டு,, “யோவான் வருவதாகக் கூறிய மனிதர் நீங்கள்தானா அல்லது நாங்கள் வேறொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களிடம்,, “யோவானிடம் திரும்பிச் சென்று நீங்கள் கேள்வியுறுவனவற்றையும் காண்பவற்றையும் கூறுங்கள். குருடர்கள் பார்வை பெறுகிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள். தொழு நோயாளிகள் குணமாகிறார்கள். செவிடர்கள் கேட்கும் சக்தி பெறுகிறார்கள். இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுகிறார்கள். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னை ஏற்றுக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்” என்று பதில் சொன்னார்.

யோவானின் சீஷர்கள் புறப்பட்டுப் போன பின்பு, இயேசு அங்கிருந்த மக்களிடம் யோவானைப் பற்றிப் பேசலானார். இயேசு அவர்களிடம்,, “வானாந்திரத்திற்கு எதைக் காண்பதற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலைக் காண்பதற்காகவா? இல்லை. உண்மையில் எதைக் காணச் சென்றீர்கள்? சிறந்த ஆடைகளை உடுத்திய மனிதனைக் காண்பதற்கா? இல்லை சிறந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிறவர்கள் அரண்மனைகளில்தான் வசிக்கிறார்கள். அப்படியானால் எதைக் காண வனாந்திரத்திற்குப் போனீர்கள்? தீர்க்கதரிசியையா? ஆம், நான் சொல்லுகிறேன், தீர்க்கதரிசியைக் காட்டிலும் யோவான், மேலானவன். 10 ஏற்கெனவே வேதவாக்கியங்களில் யோவானைப்பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

, “‘கவனியுங்கள்! நான் என் உதவியாளை உங்களுக்கு முன்பாக அனுப்புவேன்.
உங்களுக்கான பாதையை அவன் தயார் செய்வான்.’” என்று கூறினார். (AG)

11 ,“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், ஞானஸ்நானம் வழங்கும் யோவான் இவ்வுலகில் வாழ்ந்த எந்த மனிதனைக் காட்டிலும் மேலானவன். ஆனால், பரலோக இராஜ்யத்தில் மிகவும் அற்பமான மனிதன் கூட யோவானைக் காட்டிலும் முக்கியமானவன். 12 யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைந்து வருகிறது. மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் பரலோக இராஜ்யத்தை அடைய முயன்று வந்திருக்கிறார்கள். 13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின. 14 நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா [k] என்பதையும் நீங்கள் நம்புவீர்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் அவன் வருவான் எனச் சொல்கின்றன. 15 என் பேச்சைக் கேட்பவர்களே, கவனியுங்கள்.

16 ,“இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்ல முடியும்? எப்படிப்பட்டவர்கள் அவர்கள்? கடை வீதியில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளைப் போன்றவர்கள் இன்றைய மக்கள். ஒரு கூட்ட பிள்ளைகள் மற்றொன்றைப் பார்த்து,

17 ,“‘உங்களுக்காக இசைத்தோம்,
    ஆனாலும், நீங்கள் நடனமாடவில்லை.
சோகப் பாடல் ஒன்றைப் பாடினோம்,
    ஆனாலும், நீங்கள் சோகம் கொள்ளவில்லை’

என்று அழைக்கிறது.

18 ,“மக்கள் அப்படிப்பட்டவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? யோவான் மற்றவர்களைப்போல உண்ணவில்லை. திராட்சை இரசம் குடிக்கவில்லை. ஆனால் மக்கள் ‘யோவானுக்குள் ஒரு பிசாசு இருக்கிறது’, என்று சொல்கிறார்கள். 19 மனிதகுமாரன் வந்திருந்து மற்றவர்களைப் போலவே உண்ணுகிறார்: திராட்சை இரசமும் குடிக்கிறார். மக்களோ, ‘அவரைப் பாருங்கள்!’ அதிகமாக உண்ணுகிறார். அதிகமாக திராட்சை இரசமும் குடிக்கிறார். வரி வசூலிப்பவர்களுக்கும் தீயவர்களுக்கும் அவர் நண்பர் என்று சொல்கிறார்கள். ஆனால் ஞானம் அதன் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது.”

நம்பிக்கையற்றோருக்கு எச்சரிப்பு(AH)

20 பிறகு, தாம் பெரும்பாலான அற்புதங்களை நிகழ்த்திய நகரங்களை இயேசு விமர்சித்தார். ஏனென்றால் அந்நகரங்களிலுள்ள மக்கள் அதற்குப்பின் தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு பாவம் செய்வதை நிறுத்தவில்லை. 21 இயேசு,, “கோராசின் நகரமே, பெத்சாயிதா நகரமே, இது உங்களுக்கு மிகவும் கொடுமையானது. உங்களுக்கு நான் பல அற்புதங்களை நிகழ்த்தினேன். அதே அற்புதங்களைத் தீரு மற்றும் சீதோன் நகரங்களில் நடத்தியிருந்தால், அம்மக்கள் வெகு நாள் முன்பே மனந்திருந்தியிருப்பார்கள். தங்கள் பாவங்களுக்காகத் தம் வருத்தத்தைத் தெரிவிக்க சாக்குத்துணி ஆடையை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள். 22 நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளன்று தீரு மற்றும் சீதோன் மக்களைவிடவும் உங்களுக்கு மிகத் துன்பம் ஏற்படும் என்று நான் சொல்கிறேன்.

23 ,“கப்பர்நகூம் மக்களாகிய நீங்கள் வானம் வரை உயர்த்தப்படுவீர்களோ? இல்லை! நீங்கள் மரணக் குழியில் தள்ளப்படுவீர்கள். உங்களிடம் பல அற்புதங்களைச் செய்தேன் நான். அந்த அற்புதங்களைச் சோதோம் நகரில் நிகழ்த்தியிருந்தால், அந்நகர மக்கள் பாவம் செய்வதை நிறுத்தியிருப்பார்கள். இன்னும் ஒரு நகரமாகவே அது இருந்திருக்கும். 24 ஆனால் நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளன்று சோதோம் நகர மக்களைக் காட்டிலும் மிகத் துன்பம் உங்களுக்கு ஏற்படும் என்று சொல்கிறேன்” என்று கூறினார்.

இயேசு தரும் இளைப்பாறுதல்(AI)

25 பிறகு இயேசு,, “பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவராகிய பிதாவே! உமக்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால், இவற்றை நீர் ஞானவான்களிடமிருந்து மறைத்துள்ளீர். ஆனால் இவற்றைக் குழந்தையைப் போன்ற மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர். 26 ஆம். பிதாவே, நீர் மெய்யாகவே இவை நடைபெற வேண்டும் என விரும்பியதால் இப்படிச் செய்தீர்” என்றார்.

27 ,“என் பிதா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். குமாரனை வேறு யாரும் அறியார்; பிதாவே குமாரனை அறிவார். அதைப் போலவே, பிதாவைக் குமாரன் மட்டுமே அறிவார்; வேறு யாரும் அறியார். மேலும், பிதாவானவரைப்பற்றி அறிந்தவர்களையே குமாரனும் போதனை செய்யத் தேர்ந்தெடுக்கிறார்.

28 ,“களைப்படைந்து மிகுந்த பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிப்பேன். 29 என் பணிகளை ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நான் சாந்தமும் பணிவும் கொண்டவன். உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வைக் கண்டடைவீர்கள். 30 நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வேலை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது” என்று இயேசு கூறினார்.

இயேசுவைக்குறித்த விமர்சனம்(AJ)

12 அப்போது இயேசு, யூதர்களுக்கு முக்கியமான வாரத்தின் ஓய்வு நாளன்று வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தார். இயேசுவின் சீடர்கள் அவருடன் இருந்தனர். அவர்கள் பசியுடனிருந்தனர். எனவே, சீடர்கள் கதிர்களைப் பிடுங்கி உண்டனர். இதைப் பரிசேயர்கள் பார்த்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “பாருங்கள். யூதச்சட்டத்துக்கு எதிராக ஓய்வு நாளில் செய்யக் கூடாததை உங்கள் சீடர்கள் செய்கிறார்கள்” என்றனர்.

இயேசு அவர்களிடம்,, “தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவனுடைய வீட்டிற்குச் சென்றான். தேவனுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அப்பத்தைத் தாவீதும் மற்றவர்களும் உண்டார்கள். அந்த அப்பத்தை உண்டது குற்றமா? ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தை உண்ணலாம். நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் படித்திருக்கிறீர்கள். அதாவது ஓய்வு நாளில் ஆலயங்களில் ஆசாரியர்கள் ஓய்வு கொள்ளாமல் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்று. ஆனால், அவ்வாறு செய்யும் ஆசாரியர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆலயத்தைக் காட்டிலும் மேலானவர் இங்கே இருக்கிறார். வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’ [l] அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள்.

,“மனித குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்” என்று பதிலுரைத்தார்.

சூம்பிய கையைக் குணமாக்குதல்(AK)

இயேசு அவ்விடத்தைவிட்டு, ஜெப ஆலயத்துக்குள் நுழைந்தார். 10 ஜெப ஆலயத்துக்குள் சூம்பிய கையுடன் ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்துவதற்கான ஒரு காரணத்தைத் தேடி சில யூதர்கள் அங்கிருந்தனர். எனவே அவர்கள் இயேசுவிடம்,, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?” [m] என்று கேட்டார்கள்.

11 இயேசு,, “உங்களில் யாருக்கேனும், ஓர் ஆடு இருந்து அது ஓய்வு நாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைக் குழியில் இருந்து தூக்கி எடுப்பீர்கள் அல்லவா? 12 ஓர் ஆட்டைக் காட்டிலும் மனிதன் நிச்சயமாக மேலானவன். எனவே, ஓய்வு நாளில் நற்செயல்களைச் செய்ய மோசேயின் நியாயப்பிரமாணம் அனுமதிக்கின்றது” என்று பதிலளித்தார்.

13 பிறகு, இயேசு சூம்பிய கையுடைய மனிதனிடம்,, “எங்கே உன் கைகளைக் காட்டு!” என்றார். அவன் இயேசு காணுமாறு தன் சூம்பியகையை நீட்டினான். அது மற்ற கையைப்போல குணமாயிற்று. 14 ஆனால் பரிசேயர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டம் தீட்டியவாறு அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இயேசு தேவனின் ஊழியர்

15 பரிசேயர்களின் எண்ணத்தை அறிந்த இயேசு, அவ்விடத்தை விட்டு நீங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். இயேசு நோயாளிகள் அனைவரையும் குணமாக்கினார். 16 ஆனால், தான் யாரென்பதை மற்றவர்களிடம் கூறக் கூடாது என அவர்களை எச்சரித்தார். 17 ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடக்கும்படிக்கு இயேசு இவ்வாறு செய்தார். ஏசாயா சொன்னது இதுவே,

18 ,“இதோ என் ஊழியன்.
    நான் இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
நான் இவரை நேசிக்கிறேன்;
    இவரைக்குறித்து நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
என் ஆவியை இவர்மேல் அமரச்செய்வேன்.
    இவர் தேசங்களுக்கு (என்) நேர்மையான நியாயத்தைக் கூறுவார்.
19 இவர் வாக்குவாதம் செய்யார்; கூக்குரல் செய்யார்.
    வீதிகளில் உள்ள மக்கள் இவர் குரலைக் கேளார்.
20 ஏற்கெனவே வளைந்த நாணலைக்கூட இவர் உடைக்கமாட்டார்.
    அணையப்போகிற விளக்கைக்கூட இவர் அணைக்கமாட்டார்.
    நியாயத்தீர்ப்பு செய்து முடிக்கும்வரை இவர் தம் முயற்சியில் தளரமாட்டார்.
21 எல்லா மக்களும் இவரிடம் நம்பிக்கைக்கொள்வார்கள்.” (AL)

இயேசுவின் வல்லமை(AM)

22 பின்னர், சிலர் இயேசுவிடம் ஒரு மனிதனை அழைத்து வந்தனர். குருடனான அவனால் பேசவும் முடியவில்லை. ஏனென்றால் அவனுக்குள் ஒரு பிசாசு இருந்தது. இயேசு அவனைக் குணப்படுத்தினார். அவனால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. 23 வியப்புற்ற மக்கள்,, “தேவன் தாம் அனுப்பிவைப்பதாக வாக்களித்த தாவீதின் குமாரன் இவர்தான் போலும்!” என்றனர்.

24 மக்கள் இவ்வாறு கூறுவதைப் பரிசேயர்கள் கேட்டனர். பரிசேயர்கள்,, “பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர். பெயல்செபூல் பிசாசுகளின் தலைவன்.

25 இயேசு பரிசேயர்களின் எண்ணங்களை அறிந்தார். எனவே இயேசு,, “தனக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் பிரிவுகளைக்கொண்ட எந்த இராஜ்யமும் அழிந்துவிடும். பிரிவுகொள்ளுகின்ற எந்த நகரமும் நிலைக்காது. பிரிகின்ற எந்தக் குடும்பமும் முன்னேற்றம் அடையாது. 26 எனவே சாத்தான் [n] தன்னுடைய பிசாசுகளையே துரத்தினால், சாத்தான் பிரிந்திருக்கிறான். எனவே சாத்தானின் இராஜ்யம் நிலைத்திருக்காது. 27 நான் பிசாசுகளை விரட்டும்பொழுது சாத்தானின் வல்லமையை நான் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மையெனில், உங்கள் மனிதர்கள் பிசாசுகளை விரட்ட எந்த சக்தியைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்கள் மக்களே நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்கிறார்கள். 28 ஆனால், பிசாசுகளை விரட்ட நான் தேவ ஆவியின் வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. 29 ஒருவன் வலிமையான மனிதனின் வீட்டுக்குள் புகுந்து திருட நினைத்தால், முதலில் அவ்வலிமையான மனிதனைக் கட்டிப்போட வேண்டும். பின்னரே, அவன் அவ்வலிமையான மனிதனின் வீட்டிலிருந்து பொருட்களைத் திருட முடியும். 30 என்னுடன் இல்லாதவன் எனக்கு எதிரானவன். என்னுடன் சேர்ந்து செயல் புரியாதவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறவன்.

31 ,“அதனால் நான் சொல்லுகிறேன், மனிதர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். மேலும் மனிதர்கள் சொல்லுகின்ற எல்லாத் தீயவற்றுக்கும் மன்னிப்புண்டு. ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. 32 மனித குமாரனுக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. இப்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ அவன் மன்னிக்கப்படமாட்டான்.

செயல்கள் வெளிப்படுத்தும் உண்மை(AN)

33 ,“நல்ல பழங்கள் தேவையெனில், நல்ல மரத்தை வளர்க்க வேண்டும். மரம் தீயதானால், பழங்களும் தீயனவாகும். ஒரு மரத்தின் தரம் அதன் பழங்களைக்கொண்டே அறியப்படும். 34 பாம்புகள் நீங்கள்! பொல்லாதவர்கள் நீங்கள்! நீங்கள் எப்படி நல்லவற்றைக் கூற முடியும். உள்ளத்திலுள்ளதையே வாய் பேசுகிறது. 35 ஒரு நல்லவன் தன் உள்ளத்தில் நல்லவைகளை வைத்திருக்கிறான். எனவே அவன் நல்லவைகளை உள்ளத்திலிருந்து பேசுகிறான். ஆனால் பொல்லாத மனிதன் தன் உள்ளத்தில் பொல்லாதவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறான். எனவே அவன் பொல்லாதவைகளைத் தன் உள்ளத்திலிருந்து பேசுகிறான். 36 மனிதர்கள் தாங்கள் பேசுகிற கவனமற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இது நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளில் நடக்கும். 37 உங்களது வார்த்தைகளே உங்களுக்கு நியாயம் வழங்க பயன்படுத்தப்படும். உங்களது வார்த்தைகளே உங்களை நல்லவரென்றும் உங்கள் வார்த்தைகளே உங்களைத் தீயோர் என்றும் நியாயம் தீர்க்கும்” என்று சொன்னார்.

யூதர்கள் ஆதாரம் கேட்டல்(AO)

38 பின்னர், பரிசேயர்கள் சிலரும் வேதபாரகர்கள் சிலரும் இயேசுவுக்கு மறுமொழி கூறினார்கள். அவர்கள்,, “போதகரே, உம்மை நிரூபிக்கும்படியாக ஓர் அற்புதம் செய்து காட்டும்” என்று கேட்டனர்.

39 அதற்கு இயேசு,, “பொல்லாதவர்களும் பாவிகளும்தான் அற்புதங்களை ஆதாரமாகக் கேட்பார்கள். ஆனால், எந்த அற்புதமும் அவர்களுக்கு ஆதாரமாகக் காட்டப்படமாட்டாது. தீர்க்கதரிசி யோனாவிற்கு நிகழ்ந்த அற்புதம் மட்டுமே ஆதாரமாக கொடுக்கப்படும். 40 யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருந்தான். அதைப் போலவே, மனித குமாரனும் கல்லறைக்குள் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருப்பார். 41 மேலும் நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளில் நினிவே [o] பட்டணத்து மனிதர் உயிர்த்தெழுந்து இன்று வாழ்கின்ற உங்கள் தவறுகளை நிரூபிப்பார்கள். ஏனென்றால், யோனாவின் போதனையைக் கேட்டு, அவர்கள் மனந்திரும்பினார்கள். நான் சொல்லுகிறேன், நான் யோனாவைக் காட்டிலும் மேன்மையானவன்.

42 ,“நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளில், தென்திசையின் அரசி உயிர்த்தெழுந்து உங்கள் மேல் குற்றம் சுமத்துவாள். ஏனென்றால், அந்த அரசி மிகத் தொலைவிலிருந்து சாலமோனின் ஞானம் செறிந்த போதனைகளைக் கேட்க பயணப்பட்டு வந்தாள். நான் சொல்லுகிறேன், நான் சாலமோனைக் காட்டிலும் மேலானவன்.

திரும்பி வரும் தீய ஆவி(AP)

43 ,“பிசாசின் பொல்லாத ஆவி ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியில் வரும்பொழுது, வறண்ட நிலப்பகுதியில் ஓய்விடம் தேடி அலைகிறது. ஆனால், அதற்கு ஓய்விடம் கிடைப்பதில்லை. 44 எனவே, அந்த ஆவி, ‘நான் புறப்பட்ட இடத்திற்கே திரும்பச் செல்வேன்’ என்று சொல்லி அந்த ஆவி திரும்பி அதே மனிதனிடம் வரும்பொழுது, அது இருந்த இடம் வெறுமையாயும் சுத்தமாயும் ஒழுங்குடனும் இருப்பதை அறிகிறது. 45 பின்னர், வெளியேறித் தன்னிலும் பொல்லாத மேலும் ஏழு பொல்லாத ஆவிகளை அழைத்து வருகிறது. எல்லா ஆவிகளும் அவனுக்குள் புகுந்து வசிக்கின்றன. முன்பைவிட அவனுக்கு ஆழ்ந்த தொல்லை ஏற்படுகிறது. இன்று வாழ்கின்ற பொல்லாதவர்களுக்கும் அப்படியே நேரும்” என்று பதிலளித்தார்.

இயேசுவின் குடும்பத்தினர் யார்?(AQ)

46 இயேசு மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது தாயும் சகோதரர்களும் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் இயேசுவிடம் பேச விரும்பினர். 47 ஒருவன் இயேசுவிடம்,, “உம் தாயும் சகோதரர்களும் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் உம்மிடம் பேச விரும்புகிறார்கள்” என்றான்.

48 இயேசு,, “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். 49 தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி,, “பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும். 50 பரலோகிலிருக்கும் என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள்” என்று அவனுக்கு பதிலளித்தார்.

விதையைப் பற்றிய உவமை(AR)

13 அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார். ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்தனர். எனவே இயேசு ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் ஏரிக்கரையோரம் அமர்ந்தார்கள். பிறகு உவமைகளின் மூலமாக இயேசு மக்களுக்குப் பலவற்றையும் போதித்தார்.

இயேசு,, “ஒரு விவசாயி விதைகளை விதைக்கப் போனான். அவன் விதைகளைத் தூவியபோது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவை யாவற்றையும் தின்றுவிட்டன. சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை. எனவே, விதைகள் வேகமாக முளைத்தன. ஆனால் சூரியன் உதித்ததும், அவை கருகிப்போயின. ஆழமான வேர்கள் இல்லாமையால் அச்செடிகள் காய்ந்தன. இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின் செடிகள் வளராதவாறு தடுத்தன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அந்நிலத்தில், விதைகள் முளைத்து நன்கு வளர்ந்தன. சில செடிகள் நூறு மடங்கு தானியங்களைக் கொடுத்தன. சில அறுபது மடங்கும் சில முப்பது மடங்கும் தானியங்களைக் கொடுத்தன. நான் சொல்வதைக் கேட்கிறவர்களே, கவனியுங்கள்” என்று இயேசு கூறினார்.

உவமைகள் ஏன்?(AS)

10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து,, “மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டனர்.

11 இயேசு மறுமொழியாக,, “பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை மற்றவர்கள் அறிய முடியாது. 12 சிறிது புரிந்தவன் மேலும் விளக்கம் பெறுவான். தேவையானதை விடவும் அவனுக்கு அதிகம் கிடைக்கும். அதிகம் புரியாதவன், தான் அறிந்ததையும் இழப்பான். 13 அதனால் தான் நான் மக்களுக்கு உவமைகளின் மூலம் போதனை செய்கிறேன். மக்கள் பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பார்ப்பதுமில்லை, புரிந்துகொள்வதுமில்லை. 14 எனவே ஏசாயா தீர்க்கதரிசி இவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொன்னது உண்மை என்பதை இம்மக்கள் காட்டுகிறார்கள்:

, “‘மக்களே! நீங்கள் கவனித்து கேட்பீர்கள்.
    ஆனாலும் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
மக்களே! நீங்கள் நோக்கி பார்ப்பீர்கள்.
    ஆனாலும், நீங்கள் பார்ப்பதைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
15 ஆம், இறுகியிருக்கிறது இம்மக்களின் மனம்.
    காதுகளிருந்தும் கேட்பதில்லை.
    உண்மையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.
தங்கள் காதால் கேளாதிருக்கவும்
    தங்கள் கண்ணால் பார்க்காதிருக்கவும்
    தங்கள் மனதால் அறியாதிருக்கவும்
    இவ்வாறு நடந்துள்ளது.
குணம் பெற என்னிடம் வராதிருக்குமாறும் இவ்வாறு நடந்துள்ளது.’ (AT)

16 ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கண்களால் பார்ப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். காதால் கேட்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். 17 நான் உண்மையைச் சொல்லுகிறேன், பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் நீங்கள் இப்பொழுது காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் காணவில்லை. நீங்கள் இப்பொழுது கேட்பவற்றைக் கேட்பதற்குப் பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் கேட்கவில்லை.

விதைகளின் உவமையின் விளக்கம்(AU)

18 ,“எனவே, விவசாயியைப் பற்றிய உவமையின் பொருளைக் கவனியுங்கள்:

19 ,“சாலையின் ஓரம் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது பரலோக இராஜ்யத்தைப் பற்றிக் கேள்வியுற்றும் அதைப் புரிந்துகொள்ளாத மனிதனைக் குறிக்கிறது. அவனது மனதில் விதைக்கப்பட்டவற்றைச் சாத்தான் கவர்ந்துகொள்கிறான்.

20 ,“பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. 21 அவன் போதனைகளைத் தன் மனதில் ஆழமாகப் பதிய வைத்துத் கொள்வதில்லை. அவன் போதனைகளைத் தன் மனதில் குறைந்த காலத்திற்கே வைத்திருக்கிறான். போதனைகளை ஏற்றுக்கொண்டதினால் உபத்திரவமோ, துன்பமோ ஏற்படும்பொழுது, அவன் விரைவாக அதை விட்டு விடுகிறான்.

22 ,“முட்புதருக்கிடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையினால் போதனைகள் தன்னுள் நிலையாதிருக்கச் செய்பவனைக் குறிக்கிறது. எனவே, போதனைகள் அவன் வாழ்வில் பயன் [p] விளைவிப்பதில்லை.

23 ,“ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை போதனைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் நூறு மடங்கும் சில சமயம் அறுபது மடங்கும் சில சமயம் முப்பது மடங்கும் பலன் தருகிறான்” என்றார்.

கோதுமை, களையின் உவமை

24 பிறகு, இயேசு மற்றொரு உவமையின் மூலம் போதனை செய்தார்., “பரலோக இராஜ்யம் தனது வயலில் நல்ல விதையை விதைத்த மனிதனைப் போன்றது. 25 அன்றைக்கு இரவில், அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவனது பகைவன் வந்து கோதுமை விதைகளுக்கிடையில் களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். 26 பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன. 27 அவனது வேலைக்காரர்கள் அவனிடம் சென்று, ‘நல்ல விதைகளையே நீங்கள் உங்கள் வயலில் விதைத்தீர்கள். ஆனால், களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.

28 ,“அதற்கு அவன், ‘ஒரு பகைவன் களைகளை விதைத்துவிட்டான்’ என்றான்.

, “வேலைக்காரர்கள், ‘நாங்கள் களைகளை நீக்க வேண்டுமா?’ என்று கேட்டார்கள்.

29 ,“அதற்கு அந்த விவசாயி, ‘தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் களையெடுக்கும்பொழுது கோதுமை செடிகளையும் பிடுங்குவீர்கள். 30 களைகளும் கோதுமையும் அறுவடைக் காலம்வரையிலும் ஒன்றாக வளரட்டும். அறுவடையின்பொழுது அறுவடை செய்பவர்களிடம் நான், முதலில் களைகளைத் தீயிலிடுவதற்காகச் சேர்த்துக் கட்டுங்கள், பின்னர் கோதுமையைச் சேகரித்து என் களஞ்சியத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று சொல்வேன்’ எனப் பதில் சொன்னான்” என்று இயேசு கூறினார்.

மேலும் பல உவமைகள்(AV)

31 பிறகு இயேசு மக்களுக்கு வேறொரு உவமையைக் கூறினார்., “பரலோக இராஜ்யமானது கடுகைப் போன்றது. ஒருவன் தன் வயலில் கடுகு விதையை விதைக்கிறான். 32 விதைகளிலெல்லாம் மிகச் சிறியது கடுகு. ஆனால், அது முளைக்கும்பொழுது மிகப் பெரிய செடிகளில் ஒன்றாக வளர்கிறது. அது மரமாக வளர்ந்து பறவைகள் அதன் கிளைகளில் கூடு கட்டுகின்றன” என்றார்.

33 இயேசு மக்களுக்கு மேலும் ஒரு உவமையைக் கூறினார்., “பரலோக இராஜ்யமானது ஒரு பெண் மாவுடன் கலக்கும் புளித்த பழைய மாவைப் போன்றது. புளித்த மாவானது அனைத்து மாவையும் புளிக்க வைக்கிறது” என்றார்.

34 இவை அனைத்தையும் மக்களுக்குப் போதிப்பதற்காக இயேசு உவமைகளைக் கையாண்டார். எப்பொழுதும் மக்களுக்குப் போதனை செய்ய இயேசு உவமைகளையேக் கையாண்டார். 35 இது தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னபடியே நடந்தது,

, “நான் உவமைகளின் வழியாகப் பேசுவேன்,
    உலகம் வந்தது முதல் இரகசியமாயுள்ளவற்றை நான் சொல்வேன்” (AW)

கடினமான உவமையை விளக்குதல்

36 இயேசு மக்களை விட்டு வீட்டிற்குள் சென்றார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்து,, “வயலில் முளைத்த களையின் உவமை கூறும் உண்மைப் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டனர்.

37 இயேசு மறுமொழியாக,, “நல்ல விதைகளை வயலில் விதைத்தவன் மனித குமாரன் தான். 38 இவ்வுலகமே வயல். நல்ல விதைகள் பரலோகத்திற்குரிய நல்ல பிள்ளைகள். களைகள் பிசாசின் பிள்ளைகள். 39 பிசாசே களைகளை விதைத்தப் பகைவன். உலகின் [q] முடிவுக் காலமே அறுவடைக் காலம். தேவதூதர்களே அறுவடை செய்பவர்கள்.

40 ,“களைகள் பிடுங்கப்பட்டு தீயிலிடப்படுகின்றன. உலகின் முடிவுக் காலத்திலும் அப்படியே இருக்கும். 41 மனித குமாரன் தனது தேவதூதர்களை அனுப்புவார். அவரது தூதர்கள் பாவம் செய்கிறவர்களைக் கண்டு பிடிப்பார்கள். அத்தூதர்கள் அவர்களை மனிதகுமாரனின் இராஜ்யத்திலிருந்து வெளியேற்றுவார்கள். 42 அவர்களை அத்தேவ தூதர்கள் சூளையின் நெருப்பில் தள்ளுவார்கள். அங்கு அவர்கள் வேதனையால் கூக்குரலிடுவார்கள்; தங்கள் பற்களைக் கடிப்பார்கள். 43 நல்ல மனிதர்கள் சூரியனைப்போல ஒளி வீசுவார்கள். அவர்கள் பிதாவின் அரசாட்சியில் இருப்பார்கள். என் வார்த்தைகளைக் கேட்பவர்களே, இதை கவனித்துக்கொள்ளுங்கள்.

புதையல், முத்து பற்றி உவமைகள்

44 ,“பரலோக இராஜ்யம் புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தைப் போன்றது. புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தை ஒருவன் ஒருநாள் கண்டு பிடித்தான். புதையல் கிடைத்ததால் அவன் மிக மகிழ்ந்தான். மீண்டும் அவன் அச்செல்வத்தைப் புதைத்து வைத்து அந்த நிலத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றான்.

45 ,“மேலும், பரலோக இராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியைப் போன்றது. 46 ஒரு நாள் அவ்வியாபாரி மிகச் சிறந்த முத்து ஒன்றைக் கண்டான். அம்முத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த அனைத்தையும் அந்த வியாபாரி விற்றான்.

வலையைப் பற்றிய உவமை

47 ,“பரலோக இராஜ்யம் ஏரியில் விரிக்கப்பட்ட வலையைப் போன்றது, ஏரியில் விரிக்கப்பட்ட ஒரு வலை, பலவகையான மீன்களைப் பிடித்தது. 48 நிரம்பிய வலையை, மீனவர்கள் கரைக்கு இழுத்தனர். நல்ல மீன்களை மீனவர்கள் ஒரு கூடையிலிட்டனர். பின், தகுதியற்ற மீன்களைத் தூர எறிந்தனர். 49 இவ்வுலகின் முடிவுக் காலத்திலும் அவ்வாறே நடக்கும். தேவதூதர்கள் வந்து நல்ல மனிதர்களைத் தீயவர்களிடமிருந்து பிரிப்பார்கள். 50 அந்தத் தேவதூதர்கள் தீயவர்களைச் சூளையின் நெருப்பில் எறிவார்கள் அங்கு அவர்கள் வலியினால் கூக்குரலிட்டுப் பற்களைக் கடிப்பார்கள்.”

51 பிறகு, இயேசு தம் சீஷர்களிடம்,, “உங்களுக்கு இவைகள் புரிகின்றனவா?” என்று கேட்டார். சீஷர்கள்,, “ஆம், எங்களுக்குப் புரிகின்றன” என்று பதிலுரைத்தனர்.

52 பின்பு இயேசு தம் சீஷர்களிடம்,, “பரலோக இராஜ்யத்தைப்பற்றி அறிந்த வேதபாரகர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீட்டின் சொந்தக்காரனைப் போன்றவர்கள். வீட்டின் சொந்தக்காரன் தன் வீட்டில் புதியதும் பழையதுமான பொருட்களைச் சேமித்து வைத்திருக்கிறான். அவன் புதியதும் பழையதுமான பொருட்களைக் கொண்டு வருகிறான்” என்றார்.

தன் சொந்த ஊரில் இயேசு(AX)

53 இந்த உவமைகளைக் கூறி முடித்த இயேசு, அவ்விடத்தை விட்டு அகன்று, 54 தாம் வளர்ந்த நகருக்குச் சென்றார். ஜெப ஆலயங்களில் இயேசு மக்களுக்குப் போதித்தார். மக்கள் வியப்புற்று, “இம்மனிதன் இந்த ஞானத்தையும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்? 55 தச்சுத் தொழிலாளியின் மகன்தானே இவன். இவன் தாய் மரியாள். யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா ஆகியோர் இவன் சகோதரர்கள். 56 இவனது எல்லா சகோதரிகளும் நம்முடன் உள்ளார்கள். அப்படியிருந்தும், இந்த ஞானத்தையும் அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமையையும் இம்மனிதன் எங்கிருந்து பெற்றானோ?” என்று பேசிக்கொண்டார்கள். 57 அது மட்டுமின்றி, இயேசுவை ஏற்றுக்கொள்ள மக்கள் மறுத்தனர்.

, “மற்றவர்கள் ஒரு தீர்க்கதரிசிக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். ஆனால், அத்தீர்க்கதரிசியின் சொந்த நகரத்து மக்களே அவனுக்கு மதிப்பு கொடுக்க மறுக்கிறார்கள்” என்று இயேசு அம்மக்களுக்குச் சொன்னார். 58 அம்மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைக்கவில்லை. எனவே, இயேசு மேலும் பல அற்புதங்களை அங்கு நடத்தவில்லை.

ஏரோது இயேசுவைப்பற்றி அறிதல்(AY)

14 அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசியவைகளைக் கேள்வியுற்றான். எனவே, ஏரோது தன் வேலைக்காரர்களிடம்,, “இந்த மனிதனே உண்மையில் யோவான் ஸ்நானகன். மரணத்திலிருந்து அவன் மீண்டும் எழுந்திருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனால் இத்தகைய அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்று கூறினான்.

யோவான் ஸ்நானகனின் மரணம்

இதற்கு முன்னர், ஏரோது யோவானைக் கைது செய்திருந்தான். ஏரோது யோவானைச் சங்கிலியால் கட்டி சிறையிலிட்டிருந்தான். ஏரோதியாளின் நிமித்தம் யோவானை ஏரோது கைது செய்திருந்தான். ஏரோதுவின் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள். ,“நீ ஏரோதியாளை உன்னோடு வைத்திருப்பது சரியல்ல” என்று யோவான் ஏரோதுவிடம் கூறியதால் யோவானை ஏரோது கைது செய்தான். யோவான் தீர்க்கதரிசியென மக்கள் நம்பியிருந்தார்கள். எனவே, யோவானைக் கொல்ல விரும்பிய ஏரோது பயந்தான்.

ஏரோதின் பிறந்த நாளன்று, ஏரோதியாளின் மகள் ஏரோதுவையும் அவன் நண்பர்களையும் மகிழ்விக்க நடனமாடினாள். அவள் நடனத்தால் ஏரோது மிக மகிழ்ந்தான். எனவே, அவள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்தான். தன் மகள் எதைக் கேட்கவேண்டும் என்பதை ஏரோதியாள் முன்னமே அறிவுறுத்தியிருந்தாள். ஆகவே, அவள் ஏரோதுவிடம்,, “எனக்கு யோவான்ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தாருங்கள்” என்று கூறினாள்.

இதனால் மன்னன் ஏரோது மிகுந்த துக்கம் கொண்டான். ஆனால் தன் மகள் எதை விரும்பினாலும் தருவதாக வாக்களித்திருந்தான். ஏரோதுவுடன் உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் அவன் வாக்குறுதியைக் கேட்டிருந்தார்கள். எனவே, அவள் விரும்பியதை நிறைவேற்ற ஏரோது கட்டளையிட்டான். 10 சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டுவதற்கு அவன் ஆட்களை அனுப்பினான். 11 அவர்கள் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து அதை அவளிடம் கொடுத்தனர். பின்னர், அப்பெண் அத்தலையைத் தன் தாய் ஏரோதியாளிடம் எடுத்துச் சென்றாள். 12 யோவானின் சீஷர்கள் அவனது உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். பின், அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.

5,000 பேருக்கு உணவளித்தல்(AZ)

13 யோவானுக்கு நேர்ந்ததைக் கேள்வியுற்ற இயேசு, ஒரு படகில் புறப்பட்டுச் சென்றார். யாருமற்ற ஒரு தனியிடத்திற்குத் தன்னந்தனியே சென்றார். இயேசு புறப்பட்டுச் சென்றதை மக்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்களும் தங்கள் நகரங்களை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு சென்ற இடத்திற்கு அவர்கள் தரை வழியே சென்றனர். 14 இயேசு அங்கு வந்த பொழுது, அங்கே ஏராளமான மக்களைக் கண்டார். அவர்களுக்காக வருத்தமுற்ற இயேசு, அங்கிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார்.

15 அன்று பிற்பகல், இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து,, “மனிதர் யாரும் இங்கு வசிப்பதில்லை. மேலும் நேரமுமாகிவிட்டது. மக்களைத் திருப்பி அனுப்புங்கள். அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று உணவை வாங்க முடியும்” என்று சொன்னார்கள்.

16 இயேசு,, “மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவையில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார்.

17 அதற்குச் சீஷர்கள்,, “ஆனால், நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தானே உள்ளன” என்று பதில் சொன்னார்கள்.

18 ,“அப்பத்தையும் மீனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று இயேசு கூறினார். 19 பிறகு, அங்கிருந்த மக்களை இயேசு புல்வெளியில் அமரச் சொன்னார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கையிலெடுத்துக் கொண்டார். இயேசு வானத்தைப் பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களைச் சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். 20 மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். மக்கள் உண்டது போக எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 21 அங்கு சுமார் ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்டனர். மேலும், பல பெண்களும் குழந்தைகளும் கூட உணவு உண்டனர்.

இயேசு தண்ணீரின் மேல் நடத்தல்(BA)

22 பிறகு இயேசு தமது சீஷர்களைப் படகில் ஏறச் சொன்னார். இயேசு அவர்களை ஏரியின் மறுகரைக்குப் போகச் சொன்னார். தாம் பின்னர் வருவதாக அவர்களிடம் கூறினார். 23 மக்களிடம் விடை பெற்றுக்கொண்ட இயேசு குன்றின்மீது ஏறினார். தனியே பிரார்த்தனை செய்வதற்காக இயேசு அங்கு சென்றார். 24 அந்தச் சமயம், படகு ஏற்கெனவே வெகு தொலைவு சென்றிருந்தது. படகு அலைகளினால் தொல்லைகளுக்கு உள்ளானது. படகு சென்ற திசைக்கு எதிராகக் காற்று வீசியது.

25 அதிகாலை, மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை இயேசுவின் சீஷர்கள் படகிலேயே இருந்தனர். இயேசு தண்ணீரின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார். 26 இயேசு தண்ணீரின் மேல் நடப்பதைக் கண்ட சீஷர்கள் பயந்து போனார்கள்., “அது ஒரு ஆவிதான்” என்று அவர்கள் பயத்தில் அலறினார்கள்.

27 உடனே இயேசு அவர்களிடம்,, “கவலை கொள்ளாதீர்கள். நான்தான்! பயப்படாதீர்கள்” என்று கூறினார்.

28 அதற்குப் பேதுரு,, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான்.

29 இயேசு அவனிடம்,, “வா, பேதுரு” என்று கூறினார்.

பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தான். 30 ஆனால், தண்ணீரின் மேல் நடந்து சென்றபொழுது பேதுரு காற்றடிப்பதையும் அலைகள் வீசுவதையும் கண்டான். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்க ஆரம்பித்தான். உடனே பேதுரு,, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று அலறினான்.

31 உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றிக்கொண்டார். இயேசு அவனிடம்,, “உன் விசுவாசம் சிறியது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?” என்று சொன்னார்.

32 பேதுருவும் இயேசுவும் படகில் ஏறியதும் காற்று அமைதியடைந்தது. 33 அதன் பிறகு படகிலிருந்த சீஷர்கள் இயேசுவை வணங்கி,, “உண்மையிலேயே நீர் தேவகுமாரன்தான்” என்று சொன்னார்கள்.

அநேக நோயாளிகளை இயேசு குணமாக்குதல்(BB)

34 அவர்கள் ஏரியைக் கடந்து, கெனசெரேத்து என்ற இடத்தை அடைந்தார்கள். 35 அங்கிருந்த மக்கள் இயேசுவைக் கண்டனர். அவர்கள் அவர் யார் என்பதை அறிந்திருந்தனர். எனவே, அவர்கள் அப்பிரதேசத்தைச் சுற்றியிருந்த மற்றவர்களிடம் இயேசு வந்திருப்பதைக் கூறினார்கள். நோயாளிகள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்து வந்தனர். 36 அவரது மேலாடையைத் தொடுவதற்கு மட்டுமாவது அனுமதித்து குணம் பெறத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவிடம் மக்கள் கெஞ்சிக் கேட்டனர். இயேசுவின் மேலாடையைத் தொட்ட நோயாளிகள் அனைவரும் குணமடைந்தனர்.

தேவனின் பிரமாணங்களும் மனிதர் விதிமுறைகளும்(BC)

15 அப்பொழுது பரிசேயர்கள் சிலரும் நியாயப்பிரமாண போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த அவர்கள் இயேசுவிடம், ,“நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீஷர்கள் ஏன் பின்பற்றுவதில்லை? உணவு உண்பதற்கு முன் உமது சீஷர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.

இயேசு அவர்களுக்கு,, “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படிக்கு நீங்கள் ஏன் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? ‘உன் தாய் தந்தையரை நீ மதிக்க வேண்டும்’ [r] என்று தேவன் சொன்னார். மேலும் ‘தந்தையிடமோ தாயிடமோ தீய சொற்களைக் கூறுகிறவன் கொல்லப்படுவான்’ [s] என்றும் தேவன் சொல்லியுள்ளார். ஆனால் நீங்கள் ஒருவனுக்கு தன் தாய் தந்தையரிடம், ‘நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். ஆனால், அதை உங்களுக்குச் செய்யமாட்டேன். அதைத் தேவனுக்குக் காணிக்கையாக்குவேன்’ என்று கூறுவதற்குப் போதிக்கிறீர்கள். தந்தையை மதிக்காதிருக்க நீங்கள் போதிக்கிறீர்கள். தேவன் சொன்னதைச் செய்வது முக்கியமல்ல என்று நீங்கள் போதிக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் மாயமானவர்கள்! உங்களைப்பற்றி ஏசாயா சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:

,“இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள்.
    ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை.
என்னை வணங்குவதில் பொருளில்லை.
    அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!” (BD)

10 இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து,, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார்.

12 பின்னர். அவரது சீஷர்கள் இயேசுவிடம் வந்து,, “நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாயுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

13 அதற்கு இயேசு,, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். 14 பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். குருடர்கள் குருடர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார்.

15 அப்பொழுது பேதுரு,, “நீர் மக்களுக்கு முதலில் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டான்.

16 அதற்கு இயேசு,, “புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்? 17 ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு அனைத்தும் அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலை விட்டு வெளியேறுகிறது. 18 ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. 19 தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. 20 இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.

யூதரல்லாத பெண்மணிக்கு உதவுதல்(BE)

21 இயேசு அவ்விடத்தை விட்டு தீரு மற்றும் சீதோன் பிரதேசங்களுக்குச் சென்றார். 22 அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது,, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்! என் மகளைப் பிசாசு பிடித்திருக்கிறது. அவள் மிகவும் துன்பப்படுகிறாள்” என்றாள்.

23 ஆனால் இயேசு அவளுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லும். நம்மைத் தொடந்து வந்து கதறுகிறாள்” என்று கெஞ்சினார்கள்.

24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார்.

25 அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு,, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள்.

26 இயேசு,, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார்.

27 அதற்கு அப்பெண்,, “ஆம் ஆண்டவரே! ஆனால் எஜமானனின் மேஜையிலிருந்து சிதறும் அப்பத்துண்டுகளை நாய்கள் உண்ணுகின்றனவே” என்றாள்.

28 பின்னர் இயேசு அவளை நோக்கி,, “பெண்ணே, உனக்கு மிகுந்த விசுவாசம் இருக்கின்றது! நான் செய்ய வேண்டுமென்று நீ விரும்பியதை நான் செய்கின்றேன்” என்று கூறினார். அதே நேரத்தில் அப்பெண்ணின் மகள் குணப்படுத்தப்பட்டாள்.

இயேசு பலரையும் குணமாக்குதல்

29 பின் இயேசு அவ்விடத்தைவிட்டு விலகி, கலிலேயா ஏரிக்கரைக்குச் சென்றார். இயேசு ஒரு குன்றின்மீதேறி அங்கே அமர்ந்தார்.

30 ஏராளமான மக்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் நோயாளிகள் பலரையும் அழைத்து வந்து, அவர்களை இயேசுவின் முன் கொண்டு வந்தனர். அங்கு முடவர்களும் குருடர்களும் செவிடர்களும் இன்னும் பலவகை நோயாளிகளும் இருந்தனர். இயேசு அவர்கள் அனைவரையும் குணமாக்கினார். 31 ஊமையர் பேசியதைக் கண்ட மக்கள் வியப்புற்றனர். முடவர்கள் மீண்டும் நடந்தனர். குருடர்கள் பார்வை பெற்றனர். மக்கள் அனைவரும் இஸ்ரவேலின் (யூதர்களின்) தேவனுக்கு அதற்காக நன்றி கூறினார்கள்.

நாலாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு அளித்தல்(BF)

32 இயேசு தம் சீஷர்களை அருகில் அழைத்து,, “இம்மக்களுக்காக நான் வருந்துகிறேன். இவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்களுக்கு உணவு ஏதுமில்லை. அவர்களைப் பசியுடன் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்குத் திரும்பும்பொழுது அவர்கள் சோர்வடையலாம்” என்றார்.

33 இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “இவர்கள் அனைவருக்கும் போதுமான அப்பத்துக்கு நாம் எங்கே போக முடியும்? எந்த நகரமும் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்கள்.

34 இயேசு,, “எத்தனை அப்பங்கள் உங்களிடம் உள்ளன?” என்று கேட்டார்.

அதற்கு அவரது சீஷர்கள்,, “எங்களிடம் ஏழு அப்பங்களும் சில மீன்களும் உள்ளன” என்றனர்.

35 இயேசு மக்களைத் தரையில் உட்காரச் சொன்னார். 36 இயேசு ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்துக் கொண்டார். பின் அவர் அவ்வுணவுக்காகத் தேவனுக்கு நன்றி கூறி, அவ்வுணவைத் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்கு உணவை அளித்தனர். 37 மக்கள் அனைவரும் திருப்தியாய் உண்டனர். அதன் பின்னர், எஞ்சிய உணவைச் சீஷர்கள் ஏழு கூடை நிறைய நிறைத்தார்கள். 38 அங்கு சுமார் 4,000 ஆண்கள் உணவருந்தினர். மேலும் பல பெண்களும் குழந்தைகளும் உணவு உண்டார்கள். 39 அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center