Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நீதிமொழிகள் 7:1-20:21

ஞானம் உன்னை விபச்சாரத்திலிருந்து காக்கும்

என் மகனே! எனது வார்த்தைகளை நினைவுப்படுத்திக்கொள். நான் உனக்குத் தந்த கட்டளைகளை மறக்காதே. எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. உனக்கு வாழ்வு கிடைக்கும். உனது வாழ்க்கையில் எனது போதனைகளை மிக முக்கியமானதாக வைத்துக்கொள். எனது போதனைகளையும் கட்டளைகளையும் நீ எப்பொழுதும் உன்னோடேயே வைத்திரு. அவற்றை உன் விரல்களைச் சுற்றி அணிந்துகொள். அவற்றை உன் இதயத்தில் எழுதிக்கொள். ஞானத்தை உன் சகோதரியைப் போன்று நடத்து. புரிந்துகொள்ளுதலை உன் குடும்பத்திலுள்ள ஒரு பாகமாக நினைத்துக்கொள். அப்போது அவை உன்னை அந்நிய பெண்களிடமிருந்து காப்பாற்றும். பாவத்துக்கு வழிநடத்திச் செல்லும் பிற பெண்களின் மென்மையான வார்த்தைகளிலிருந்து உன்னைக் காக்கும்.

ஒரு நாள் ஜன்னல் வழியே நான் வெளியே பார்த்தேன். பல முட்டாள் இளைஞர்களையும் பார்த்தேன். அவர்களில் ஒரு இளைஞன் மிகவும் அறிவீனனாக இருந்தான். அவன் ஒரு மோசமான பெண்ணின் வீடு இருக்கும் தெருவுக்குப் போனான். அவன் அவளது வீட்டின் அருகில் போனான். அது ஏறக்குறைய இருட்டும் நேரம். சூரியன் மறைந்து, இரவு தொடங்கிவிட்டது. 10 அந்தப் பெண் அவனைச் சந்திக்க வெளியே வந்தாள். அவள் ஒரு வேசியைப்போன்று ஆடையணிந்திருந்தாள். அவள் அவனோடு பாவம் செய்யத் திட்டமிட்டாள். 11 அவள் அடங்காதவளாகவும் எதிர்ப்பவளாகவும் இருந்தாள். அவள் எப்பொழுதும் வீட்டில் தங்குவதில்லை. 12 அதனால் அவள் தெருக்களில் நடந்து அலைவாள். பிரச்சனைக்காக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாள். 13 அவள் அந்த இளைஞனைத் தழுவி முத்தமிட்டாள். அவள் வெட்கமில்லாமல், 14 “என்னிடம் சமாதானப் பலிகளின் விருந்து உள்ளது. நான் கொடுப்பதாக வாக்களித்தவற்றைக்கொடுத்துவிட்டேன். 15 இன்னும் என்னிடம் விருந்து மீதமுள்ளது. எனவே, என்னோடு உன்னைச் சேர்த்துக்கொள்ள அழைப்பதற்காக வெளியே வந்துள்ளேன். நான் உனக்காகவே காத்துக்கொண்டிருந்தேன். இப்போது நான் உன்னைக் கண்டு பிடித்தேன். 16 என் படுக்கையின்மேல் சுத்தமான விரிப்பை விரித்துள்ளேன். அது எகிப்திலுள்ள அழகான விரிப்பு. 17 நான் என் படுக்கையின் மேல் மணப்பொருட்களைத் தூவியுள்ளேன். வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கப்பட்டை ஆகியவற்றால் என் படுக்கையை மணம் வீசச்செய்திருக்கிறேன். 18 வா, நாம் விடியும் வரை அன்போடு சேர்ந்திருப்போம். இரவு முழுவதும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு இருப்போம். 19 என் கணவன் வெளியே சென்றிருக்கிறான். அவன் வியாபாரத்திற்காகத் தூரதேசங்களுக்குச் சென்றிருக்கிறான். 20 அவன் நீண்ட பயணத்துக்குப் போதுமான பணத்தை எடுத்துப் போயிருக்கிறான். அவன் இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்கு வரமாட்டான்” என்றாள்.

21 அவள் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி அந்த இளைஞனுக்கு ஆசைகாட்டினாள். அவளது மென்மையான வார்த்தைகள் அவனைத் தூண்டின. 22 அந்த இளைஞன் அவளது வலைக்குள் விழுந்தான். பலியிடப்போகும் காளையைப் போன்று அவன் சென்றான். அவன் வலையை நோக்கிப்போகும் மானைப்போன்று சென்றான். 23 வேட்டைக்காரன் அந்த மானின் நெஞ்சில் அம்பை வீசத் தயாராக இருந்தான். அவன் வலைக்குள் பறந்துபோகும் பறவையைப்போன்று இருந்தான். அவன் தனக்கு வரப்போகும் ஆபத்தை அறிந்துகொள்ளவில்லை.

24 மகன்களே! இப்போது கவனியுங்கள். நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். 25 ஒரு மோசமான பெண் உன்னை அழைத்துச் செல்லும்படி வைத்துக்கொள்ளாதே. அவளது வழிகளை பின்பற்றிச் செல்லாதே. 26 பல ஆண்கள் விழுவதற்குக் காரணமாக அவள் இருந்திருக்கிறாள். அவள் பல ஆண்களை அழித்திருக்கிறாள். 27 அவளது வீடு மரணத்திற்குரிய இடமாகும். அவளது பாதையானது மரணத்திற்கு நேரடியாக அழைத்துப்போகும்.

ஞானம் ஒரு நல்ல பெண்

கவனியுங்கள்! ஞானமும், அறிவும்
    கவனிக்கும்படி உங்களை அழைக்கின்றன.
அவை, மலையின் உச்சிமீது நிற்கின்றன.
    சாலையின் பக்கத்தில், பாதைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கின்றது.
அவை நகர வாசல்களின் அருகில் உள்ளன.
    திறந்த கதவுகளின் வெளியே அவை அழைக்கின்றன.
ஞானம் சொல்கிறதாவது: “ஜனங்களே, உங்களை நோக்கி அழைக்கிறேன்.
    நான் எல்லா ஜனங்களையும் அழைக்கிறேன்.
நீங்கள் முட்டாள்களாக இருந்தால், ஞானவான்களாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
    முட்டாள் மனிதர்களே, புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
கவனியுங்கள், நான் கற்றுத்தருபவை முக்கியமானவை
    நான் சரியானவற்றையே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனது வார்த்தைகள் உண்மையானவை.
    நான் பொய்யான பாவங்களை வெறுக்கிறேன்.
நான் சொல்வதெல்லாம் சரியானவை.
    என் வார்த்தைகளில் தவறோ பொய்யோ இல்லை.
புரிந்துகொள்ளும் திறமை உடையவர்களுக்கு என் வார்த்தைகள் அனைத்தும் தெளிவானவை.
    அறிவுள்ள ஒருவன் இதனைப் புரிந்துகொள்வான்.
10 எனது ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது.
    இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது.
11 ஞானமானது முத்துக்களைவிட மதிப்புமிக்கது.
    ஒருவன் விரும்புகிற அனைத்துப் பொருட்களையும்விட இது மிகவும் மதிப்புடையது”

என்று ஞானம் கூறுகிறது.

The Value of Wisdom

12 நான் ஞானம். நான் நல்ல தீர்ப்புகளோடு வாழ்கிறேன்.
    நீ என்னை அறிவாலும் நல்ல தீர்மானங்களாலும் கண்டுக்கொள்ள முடியும்.
13 ஒருவன் கர்த்தரை மதிக்கும்போது அவன் தீயவைகளை வெறுக்கிறான்.
    ஞானமாகிய நான் பெருமையை வெறுக்கிறேன்.
மற்றவர்களைவிட தன்னைப் பெரியவனாக நினைப்பவர்களையும் நான் வெறுக்கிறேன்.
    நான் தீய வழிகளையும், பொய்சொல்லும் வாய்களையும் வெறுக்கிறேன்.
14 ஆனால் ஞானமாகிய நான் ஜனங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்கும் திறமைகளையும் நல்ல தீர்ப்புகளையும் வழங்குகிறேன்.
    நான் புரிந்துகொள்ளும் வல்லமையும் கொடுக்கிறேன்.
15 அரசர்கள் ஞானமாகிய என்னை ஆட்சிக்குப் பயன்படுத்துவார்கள்.
    ஆளுபவர்கள் என்னை நியாயமான சட்டங்களை ஏற்படுத்தப் பயன்படுத்துவார்கள்.
16 பூமியில் உள்ள ஒவ்வொரு நல்ல ஆட்சியாளனும் என்னைப் பயன்படுத்தி
    தனக்குக் கட்டுப்பட்ட ஜனங்களை ஆளுகிறான்.
17 என்னை நேசிக்கிற ஜனங்களை ஞானமாகிய நான் நேசிக்கிறேன்.
    என்னை கண்டுக்கொள்ள ஜனங்கள் கடுமையாக முயற்சித்தால் அவர்கள் கண்டுக்கொள்வார்கள்.
18 ஞானமாகிய என்னிடமும் கொடுப்பதற்கென்று செல்வமும் மதிப்பும் உள்ளன.
    நான் உண்மையான செல்வத்தையும் வெற்றியையும் தருவேன்.
19 நான் தருகின்ற பொருட்கள் சிறந்த பொன்னைவிட உயர்ந்தவை.
    எனது அன்பளிப்புகள் சுத்தமான வெள்ளியைவிட உயர்ந்தவை.
20 ஞானமாகிய நான் ஜனங்களை நல் வழியிலேயே நடத்திச்செல்வேன்.
    நான் அவர்களைச் சரியான நியாயத்தீர்ப்பின் வழியில் நடத்திச் செல்வேன்.
21 என்னை நேசிக்கின்றவர்களுக்கு நான் செல்வத்தைத் தருவேன்.
    ஆம், அவர்களின் வீட்டைக் களஞ்சியத்தால் நிரப்புவேன்.
22 நீண்டகாலத்துக்கு முன், துவக்கத்தில்
    முதலாவதாக ஞானமாகிய நானே படைக்கப்பட்டேன்.
23 ஞானமாகிய நான் துவக்கத்தில் உருவாக்கப்பட்டேன்.
    உலகம் படைக்கப்படும் முன்னே நான் படைக்கப்பட்டேன்.
24 ஞானமாகிய நான் கடல்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டேன்.
    நான் தண்ணீருக்கு முன்னமே படைக்கப்பட்டேன்.
25 ஞானமாகிய நான் மலைகளுக்கு முன்னமே பிறந்தவள்.
    நான் குன்றுகளுக்கு முன்னமே பிறந்தேன்.
26 கர்த்தர் பூமியைப் படைப்பதற்கு முன்னமே ஞானமாகிய நான் பிறந்தேன்.
    நான் வயல் வெளிகளுக்கு முன்னமே பிறந்தேன். நான் உலகில் முதல் மண் உருவாக்கப்படும் முன்னமே தேவனால் பிறப்பிக்கப்பட்டேன்.
27 கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன்.
    கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன்.
28 கர்த்தர் வானத்தில் மேகங்களை வைப்பதற்கு முன்னரே நான் பிறப்பிக்கப்பட்டேன்.
    கர்த்தர் கடலில் தண்ணீரை ஊற்றும்போதே நான் அங்கிருந்தேன்.
29 கடல்களில் தண்ணீரின் அளவை கர்த்தர் நிர்ணயித்தபோதே நான் அங்கிருந்தேன்.
    தண்ணீரானது கர்த்தருடைய அனுமதியின்றி உயர்ந்திட முடியாது.
கர்த்தர் உலகத்தின் அஸ்திபாரத்தை உண்டாக்கியபோது நான் அங்கிருந்தேன்.
30 நான் அவரது அருகில் திறமையுள்ள வேலைக்காரனாக இருந்தேன்.
    கர்த்தர் என்னால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைந்தார்.
    நான் அவரை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு சிரிக்கச் செய்தேன்.
31 தான் படைத்த உலகத்தைப் பார்த்து கர்த்தர் மகிழ்ந்தார்.
    அவர் அதிலுள்ள ஜனங்களைப் பார்த்து மகிழ்ந்தார்.
32 “குழந்தைகளே! இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள்.
    நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
    ஆனால் எனது வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
33 எனது போதனைகளைக் கேட்டு ஞானம் பெறுங்கள்.
    அதைக் கவனிக்க மறுக்காதீர்கள்.
34 என்னைக் கவனிக்கிற எவனும் மகிழ்ச்சியாக இருப்பான்.
    அவன் ஒவ்வொரு நாளும் என் வழிகளைக் கவனிப்பான்.
    அவன் என் வழியருகில் காத்திருப்பான்.
35 என்னைக் கண்டுக்கொள்கிறவன் வாழ்வைக் கண்டுக்கொள்கிறான்.
    அவன் கர்த்தரிடமிருந்து நல்லவற்றைப் பெறுவான்.
36 ஆனால் எனக்கு எதிராகப் பாவம் செய்கிறவன் தன்னையே புண்படுத்திக்கொள்கிறான்.
    என்னை வெறுக்கிற அனைவரும் மரணத்தை விரும்புகிறார்கள்.”

ஞானம் தனது வீட்டைக் கட்டி அதில் ஏழு தூண்களையும் அமைத்துக்கொண்டாள். ஞானம் இறைச்சியைச் சமைத்து, திராட்சை ரசத்தைத் தயாரித்து அவைகளை மேஜைமீது வைத்தாள். பிறகு தன் வேலைக்காரர்களை அனுப்பி நகரத்திலிருந்து ஜனங்களை மலைக்கு வந்து தன்னோடு உணவருந்தும்படி அழைத்தாள். அவள், “வாருங்கள், கற்க அவசியமுள்ளவர்களே வாருங்கள்” என்று அழைத்தாள். அறிவில்லாதவர்களையும் அவள் வரவழைத்தாள். “வாருங்கள், ஞானமாகிய உணவை உண்ணுங்கள். நான் தயாரித்த திராட்சைரசத்தைப் பருகுங்கள். உங்கள் பழைய முட்டாள்தனமான வழிகளை விட்டுவிடுங்கள். உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. புரிந்துகொள்ளுதலின் வழியைப் பின்பற்றுங்கள்” என்றாள்.

பெருமை கொண்டவனிடம் சென்று அவன் வழிகள் தவறானவை என்று நீ சொல்ல முயற்சித்தால், அவன் உன்னிடமே குற்றம் கண்டுபிடித்து இழிவாகப் பேசுவான். அவன் தேவனுடைய ஞானத்தையும் கேலிச் செய்வான். ஒரு கெட்டவனிடம் அவன் தவறானவன் என்று நீ சொன்னால் அவன் உன்னையும் கேலிச் செய்வான். எனவே ஒருவன் மற்றவர்களைவிட தான் மேலானவன் என எண்ணிக்கொண்டிருந்தால், அவன் வழிகள் தவறானவை என்று அவனிடம் சொல்லவேண்டாம். இதற்காக அவன் உன்னை வெறுப்பான். ஆனால் நீ ஒரு புத்திசாலிக்கு உதவி செய்தால் அவன் உன்னை மதித்துப் போற்றுவான். நீ அறிவாளிக்குப் போதித்தால் அவன் மேலும் ஞானத்தைப் பெறுகிறான். நீ நல்லவனுக்குப் போதித்தால் அவன் மேலும் கற்றுக்கொள்வான்.

10 கர்த்தரை மதிப்பதுதான் ஞானம் பெறுவதற்கான முதல் படியாகும். கர்த்தரைப்பற்றிய அறிவைப் பெறுவதுதான் அறிவைப் பெறுவதற்கான முதல் படியாகும். 11 நீ ஞானம் உடையவனாக இருந்தால், உன் ஆயுள் காலம் நீண்டதாக இருக்கும். 12 நீ ஞானம் உடையவனாக ஆனால் உனது சொந்த நன்மைக்கு நீ ஞானம் உடையவனாகிறாய். ஆனால் நீ வீண்பெருமை கொண்டவனாகி மற்றவர்களைக் கேலி செய்தால், உனது துன்பங்களுக்கு நீயே பொறுப்பாளி ஆகிறாய்.

Foolishness—the Other Woman

13 ஒரு முட்டாள் சத்தமாகப் பேசும் தீய பெண்ணைப் போன்றவன். அவளுக்கு அறிவில்லை. 14 அவள் தன் வீட்டுக் கதவருகில் உட்கார்ந்திருப்பாள். நகரத்து மலை மீது இருக்கை போட்டு அமர்ந்திருப்பாள். 15 அவ்வழியாக ஜனங்கள் போகும்போது அவள் அவர்களை அழைக்கிறாள். அவர்களுக்கு அவளைப்பற்றி எந்த ஆர்வமும் இல்லாவிட்டாலும் அவள், 16 “கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் எல்லாரும் வாருங்கள்” என்பாள். அவள் முட்டாள் ஜனங்களையும் அழைக்கிறாள். 17 ஆனால் முட்டாள்தனமாகிய அந்தப் பெண், “நீங்கள் தண்ணீரைத் திருடினால் அது உங்கள் சொந்தத் தண்ணீரைவிடச் சுவையானதாக இருக்கும். நீங்கள் ரொட்டியைத் திருடினால், அது நீங்களாக சமைத்த ரொட்டியைவிடச் சுவையானதாக இருக்கும்” என்பாள். 18 அவள் வீடு முழுவதும் கெட்ட ஆவிகளால் நிறைந்திருக்கும் என்று முட்டாள்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவள் அவர்களை மரணத்தின் ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வாள்.

சாலொமோனின் நீதிமொழிகள்

10 இவை அனைத்தும் சாலொமோனின் நீதிமொழிகள் (ஞானவார்த்தைகள்):

ஒரு ஞானமுள்ள மகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் ஒரு முட்டாள் மகனோ தன் தாயைத் துன்பப்படுத்துகிறான்.

ஒருவன் தீயச் செயல்கள் மூலம் பொருள் சம்பாதித்திருந்தால் அவை பயனற்றவை. ஆனால் நல்ல செயல்களைச் செய்வது உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும்.

கர்த்தர் நல்லவர்களைப்பற்றியே அக்கறைகொள்கிறார். அவர் அவர்களுக்குத் தேவையான உணவைக்கொடுக்கிறார். தீய ஜனங்கள் விரும்புகிறவற்றை கர்த்தர் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறார்.

ஒரு சோம்பேறி ஏழ்மையாக இருப்பான். ஆனால் கடினமாக உழைக்கிற ஒருவன் செல்வந்தனாகிறான்.

சுறுசுறுப்பானவன் சரியான நேரத்தில் அறுவடை செய்துகொள்கிறான். ஆனால் அறுவடைக் காலத்தில் தூங்கிவிட்டு, பயிர்களைச் சேகரிக்காமல் இருப்பவன், வெட்கத்திற்குரியவனாவான்.

நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப்பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களின் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்.

நல்லவர்கள் நல்ல நினைவுகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர். தீயவர்கள் விரைவில் மறக்கப்படுகின்றனர்.

யாராவது நல்லவற்றைச் செய்யவேண்டும் எனக்கூறினால் அறிவாளி அதற்குக் கீழ்ப்படிகிறான். ஆனால் அறிவில்லாதவனோ வீண்விவாதம் செய்து தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்கிறான்.

ஒரு நல்ல நேர்மையான மனிதன் பாதுகாப்பாக இருக்கிறான். ஆனால் கோணல் வழியில் செல்பவன் பிடிபடுவான்.

10 உண்மையை மறைக்கிறவன் துன்பங்களுக்குக் காரணமாகிறான். வெளிப்படையாகப் பேசுபவன் சமாதானத்தை உருவாக்குகிறான்.

11 நல்லவனின் வார்த்தைகள் வாழ்வைச் சிறப்புள்ளதாக்கும். ஆனால் தீயவனின் வார்த்தைகள் அவனுக்குள்ளிருக்கும் தீயவற்றையே வெளிக்காட்டும்.

12 வெறுப்பு விவாதங்களுக்குக் காரணமாகும். ஆனால் அன்பானது ஜனங்கள் செய்கிற தவறுகளை மன்னித்து விடும்.

13 அறிவுள்ளவர்கள் கேட்கத்தக்கவற்றைப் பேசுகிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ பாடம் கற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே தண்டிக்கப்படவேண்டும்.

14 அறிவுள்ளவர்கள் அமைதியாக இருந்து புதியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்கள் வீணாகப் பேசி தமக்குத்தாமே துன்பத்தை வரவ ழைத்துக்கொள்கிறார்கள்.

15 செல்வமானது செல்வந்தர்களைக் காப்பாற்றுகிறது. வறுமையோ ஏழைகளை அழிக்கிறது.

16 ஒருவன் நன்மை செய்தால் அதற்காகப் பாராட்டப்படுவான். அவனுக்கு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது. தீமையோ தண்டனையை மட்டுமே பெற்றுத்தருகிறது.

17 ஒருவன் தனது தண்டனைகளிலிருந்து கற்றுக்கொண்டால் அது மற்றவர்களின் வாழ்க்கைக்கு உதவும். ஆனால் கற்றுக்கொள்ள மறுக்கிறவன் ஜனங்களைத் தவறான வழியிலேயே அழைத்துச்செல்வான்.

18 வெறுப்பை மறைக்கிறவனால் பொய் சொல்ல முடியும். ஆனால் ஒரு முட்டாளால் வதந்தியை மட்டுமே பரப்ப முடியும்.

19 அதிகமாகப் பேசுகிற ஒருவன் துன்பத்திற்கு ஆளாகிறான். ஞானம் உள்ளவன் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான்.

20 நல்லவனின் வார்த்தைகள் சுத்தமான வெள்ளியைப் போன்றவை. தீயவனின் எண்ணங்களோ பயனற்றவை.

21 நல்லவனின் வார்த்தைகள் பலருக்கு உதவியாக இருக்கும். ஆனால் முட்டாள்களோ அறிவீனத்தால் அழிந்துபோவார்கள்.

22 கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு உண்மையான செல்வத்தைக்கொண்டுவரும். அது துன்பத்தைக்கொண்டு வராது.

23 அறிவில்லாதவர்களோ தவறு செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். அறிவுள்ளவனோ ஞானத்தால் மகிழ்ச்சி அடைகிறான்.

24 தீயவர்கள் தாங்கள் அஞ்சுகிறவற்றாலேயே தோற்கடிக்கப்படுவார்கள். ஆனால் நல்லவர்களோ தாங்கள் விரும்புவதைப் பெறுவார்கள்.

25 தங்களுக்கு நேரும் பிரச்சனைகளாலேயே தீயவர்கள் அழிவார்கள். ஆனால் நல்லவர்களோ எல்லாக் காலங்களிலும் உறுதியாக நிற்பார்கள்.

26 ஒரு சோம்பேறியை உனக்காக எதுவும் செய்ய அனுமதிக்காதே. ஏனென்றால் அவர்கள் பற்களுக்குக் காடியைப் போன்றும் கண்களுக்குப் புகையைப் போன்றும் இருப்பார்கள்.

27 நீ கர்த்தரை மதித்தால் நீண்டகாலம் வாழலாம். ஆனால் தீயவர்களோ தம் வாழ்நாளில் பல ஆண்டுகளை இழப்பார்கள்.

28 நல்லவர்கள் நம்புகிறவை மகிழ்ச்சியைக்கொண்டுவரும். கெட்டவர்கள் நம்புகிறவையோ அழிவைக்கொண்டுவரும்.

29 கர்த்தர் நல்லவர்களைப் பாதுகாக்கிறார். ஆனால் தவறு செய்பவர்களையோ கர்த்தர் அழிக்கிறார்.

30 நல்ல மனிதர்கள் எப்பொழுதும் பாதுகாக்கப்படுவார்கள். தீயவர்கள் தேசத்தைவிட்டுப் போகக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆண்டவர் நல்ல ஜனங்களை பாதுகாப்பார். அவர் தீய செயல்களைச் செய்யும் ஜனங்களை அழிப்பார்.

31 நல்லவர்கள் ஞானமுள்ளவற்றைப் பேசுவார்கள். தொல்லை உண்டாக்கும் காரியங்களைப் பேசுபவர்களின் வார்த்தைகளை ஜனங்கள் கேட்காமல் நிறுத்திவிடுவார்கள்.

32 நல்லவர்கள் சரியானவற்றைச் சொல்ல அறிந்துள்ளனர். ஆனால் கெட்டவர்களோ தொல்லை தருவதையே பேசுகின்றனர்.

11 பொருள்களைச் சரியாக எடை போடாத தராசுகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அவற்றை ஜனங்களை ஏமாற்றவே பயன்படுத்துகின்றனர். கர்த்தர் அப்பொய் அளவுகளை வெறுக்கிறார். கர்த்தருக்கு விருப்பமானது சரியான அளவுகளே.

வீண்பெருமையும் அகந்தையும் உடையவர்கள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிற ஜனங்கள் ஞானம் பெறுகிறார்கள்.

நல்ல குணமும் உத்தம குணமும் கொண்டவர்கள் உத்தமத்தால் வழிநடத்தப்படுவர். ஆனால் கெட்டவர்களோ மற்றவர்களை ஏமாற்றுவதால் தங்களை அழித்துக்கொள்கிறார்கள்.

தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் பணம் பயனற்றதாகப் போகும். ஆனால் நன்மை ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும்.

நல்லவன் உத்தமனாகவும் இருந்தால் அவனது வாழ்க்கை எளிதானதாக இருக்கும். ஆனால் தீயவனோ தான் செய்கிற கெட்ட செயல்களால் அழிக்கப்படுகிறான்.

நன்மை உத்தமனைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீயவர்களோ தாம் விரும்புகிற கெட்ட செயல்களால் சிக்கிக்கொள்கின்றனர்.

தீயவன் மரித்துப்போன பிறகு அவனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவன் நம்பியவை எல்லாம் போகும்; ஒன்றுமில்லாமல் பயனற்றுப்போகும்.

துன்பங்களில் இருந்து நல்லவன் தப்பித்துக்கொள்கிறான். அத்துன்பமானது தீயவர்களுக்குப் போய்ச சேரும்.

தீயவன், தன் சொற்களால் பிறரைப் புண்படுத்துவான். ஆனால் நல்லவர்களோ தங்களுடைய ஞானத்தால் காப்பாற்றப்படுவார்கள்.

10 நல்லவர்கள் வெற்றிபெறும்போது, நகரம் முழுவதும் மகிழும். கெட்டவர்கள் அழியும் போது ஜனங்கள் மகிழ்ச்சியோடு சத்தமிடுவார்கள்.

11 உத்தமமானவர்கள் இருந்து ஆசீர்வதிப்பதால் நகரம் சிறப்புடையதாகிறது. தீயவர்களின் பேச்சால் நகரம் அழிந்துபோகிறது.

12 ஒருவன் நல்லுணர்வு இல்லாதவனாக இருந்தால் பக்கத்தில் உள்ளவர்களைப்பற்றி அவதூறாகப் பேசுகிறான். ஆனால் ஞானம் உள்ளவனோ எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறான்.

13 அடுத்தவனது இரகசியங்களைச் சொல்லும் யாரையும் நம்ப இயலாது. ஆனால் நம்பத் தகுந்த ஒருவன் பொய்ச் செய்திகளைப் பரப்பமாட்டான்.

14 பலவீனமான தலைவர்களை உடைய நாடு வீழ்ந்துபோகும். ஆனால் பல நல்ல ஆலோசனை உடையவர்கள் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள்.

15 நீ அடுத்தவனது கடனைத் தீர்ப்பதாக வாக்களித்திருந்தால் அதனால் வருத்தப்படுவாய். நீ இத்தகைய செயல்களை மறுத்துவிட்டால் பாதுகாப்பாக இருப்பாய்.

16 கருணையும் ஒழுக்கமும் உள்ள பெண் மதிக்கப்படுவாள். வல்லமையுள்ளவர்களோ செல்வத்தை மட்டுமே பெறுவார்கள்.

17 இரக்கமுள்ள மனிதன் நன்மையை அடைகிறான். ஆனால் மோசமான மனிதனோ தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.

18 தீயவனோ ஜனங்களை ஏமாற்றி பொருளைக் கவர்ந்துகொள்கிறான். ஆனால் நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறவன் உண்மையான பரிசினைப் பெறுகிறான்.

19 உண்மையில் நன்மையானது வாழ்வைக்கொண்டுவரும். ஆனால் தீயவர்களோ தீமையைப் பின்தொடர்ந்து மரணத்தை அடைகின்றனர்.

20 தீமை செய்ய விரும்புகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நன்மை செய்ய முயல்பவர்களில் மகிழ்ச்சி அடைகிறார்.

21 தீயவர்கள் தண்டனை பெறுவது உண்மை. நல்லவர்களோ விடுவிக்கப்படுகிறார்கள்.

22 அழகான பெண் முட்டாளாக இருப்பது, பன்றியின் மூக்கில் உள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.

23 நல்லவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் மிகுந்த நன்மை விளையும். தீயவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் தொல்லைகளே விளையும்.

24 ஒருவன் தாராளமாகக்கொடுத்தால் அவன் மேலும் மேலும் பெறுவான். ஆனால் ஒருவன் கொடுக்க மறுத்தால் பிறகு அவன் ஏழ்மையாவான்.

25 ஒருவன் தாராளமாகக்கொடுத்தால் அவன் லாபம் அடைகிறான். நீ அடுத்தவர்களுக்கு உதவினால் நீயும் நன்மை பெறுவாய்.

26 தானியங்களைக் கட்டிவைத்து விற்க மறுப்பவர்கள்மீது ஜனங்கள் கோபம் அடைகிறார்கள். ஆனால் தானியங்களை மற்றவர்களுக்கு விற்பவர்கள்மேல் ஜனங்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

27 நன்மை செய்ய முயலுகிற ஒருவனை ஜனங்கள் மதிக்கின்றனர். ஆனால் தீமை செய்கிறவனோ துன்பத்தைத் தவிர வேறு எதையும் பெறுவதில்லை.

28 தன் செல்வத்தை மட்டும் நம்புகிறவன் காய்ந்த இலையைப் போன்று உதிர்ந்து விழுகிறான். ஆனால் நல்லவனோ பச்சையான இலையைப்போன்று வளர்கிறான்.

29 ஒருவன் தன் குடும்பத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்தால், அவன் எதையும் பெறமாட்டான். அதோடு அறிவில்லாதவன் முடிவில் ஞானமுள்ளவனுக்குச் சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுவான்.

30 நல்லவன் செய்கிற செயல்கள் எல்லாம் வாழ்வு தரும் மரம் போன்றவை. ஞானமுள்ளவன் ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக்கொடுக்கிறான்.

31 பூமியில் நல்லவர்கள் தமக்குரிய வெகுமதியைப் பெறும்போது, தீயவர்களும் தங்களுக்குப் பொருத்தமானதைப் பெறுவார்கள்.

12 ஒருவன் ஞானமுள்ளவனாக விரும்பினால், அவனது தவறினை மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதை வெறுக்கிறவனோ முட்டாளாகக் கருதப்படுகிறான்.

நல்லவர்களில் கர்த்தர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் தீயவன் தண்டனை பெறும்படி கர்த்தர் தீர்ப்பளிக்கிறார்.

தீயவர்கள் என்றென்றும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆனால் நல்லவர்களோ பாதுகாப்பாக இருக்கின்றனர்.

நல்ல மனைவியை அடைந்த கணவன் மகிழ்ச்சியாகவும் பெருமை உடையவனாகவும் இருக்கிறான். ஆனால் ஒருபெண் தன் கணவனை அவமானப்பட வைத்தால், அவள் அவனது உடம்பை உருக்கும் நோய் போன்று கருதப்படுகிறாள்.

நல்லவர்கள் தாம் செய்யத் திட்டமிட்டவற்றைச் சரியாகவும் நேர்மையாகவும் செய்துவிடுகின்றனர். ஆனால் தீயவர்கள் சொல்லுகின்றவற்றை மட்டும் நம்பாதே.

தீயவர்கள் தம் வார்த்தைகளால் பிறரைப் புண்படுத்துவார்கள். ஆனால் நல்லவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும்.

தீயவர்கள் அழிக்கப்படுவார்கள்; அவர்களில் எதுவும் மிச்சம் இராது. ஆனால் நல்லவர்களை ஜனங்கள் அவர்கள் காலத்திற்குப் பின்பும் நீண்ட காலம் நினைவுகூருவார்கள்.

ஞானமுள்ளவர்களை ஜனங்கள் போற்றுவார்கள். ஆனால் அறிவில்லாதவர்களை ஜனங்கள் மதிப்பதில்லை.

ஒருவன் ஆகாரமில்லாதவனாக இருந்தும் தன்னை முக்கிய மனிதனாகக் காட்டுவதைக் காட்டிலும் கடினமாக உழைக்கும் சாதாரண மனிதனாக இருப்பதே நல்லதாகும்.

10 நல்லவன் தன் மிருகங்களைக் கவனித்துக்கொள்கிறான். கெட்டவனோ கருணை உள்ளவனாக இருக்கமாட்டான்.

11 தன் நிலத்தில் வேலைசெய்கிற விவசாயி தனக்குரிய உணவைப் பெறுகிறான். ஆனால் பயனற்ற சிந்தனைகளில் நேரத்தை வீணாக்குகிறவன் முட்டாளாகிறான்.

12 தீயவர்கள் எப்போதும் தவறானவற்றைச் செய்யவே விரும்புவார்கள். ஆனால் நல்லவர்கள் வேர்களைப்போன்று ஆழமாகப் போகும் ஆற்றல் கொண்டுள்ளனர்.

13 தீயவன் முட்டாள்தனமானவற்றைச் சொல்லி அவ்வார்த்தைகளாலேயே அகப்பட்டுக்கொள்கிறான். ஆனால் நல்லவன் இத்தகைய துன்பங்களிலிருந்து தப்பித்துக்கொள்கிறான்.

14 ஒருவன் தான் சொல்கிற நல்லவற்றுக்காகப் பரிசுபெறுகிறான். இதுபோலவே அவன் செய்கிற வேலையும் பலனளிக்கிறது.

15 அறிவில்லாதவன் தனது வழியையே சிறந்த வழி என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் ஞானமுள்ளவனோ மற்றவர்கள் சொல்லுவதைக் கவனிக்கிறான்.

16 அறிவில்லாதவன் சுலபமாகக் கவலையடைகிறான். ஆனால் அறிவுள்ளவனோ மற்றவர்கள் தவறாகப் பேசுவதை மன்னித்துவிடுகிறான்.

17 ஒருவன் உண்மையைப் பேசுபவனாக இருந்தால் அவன் சொல்பவற்றில் நேர்மை இருக்கும். ஆனால் ஒருவன் பொய் சொன்னால் அது அவனைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்லும்.

18 ஒருவன் சிந்திக்காமல் பேசினால் அவ்வார்த்தைகள் வாளைப்போன்று மற்றவர்களை துன்புறுத்தும். ஆனால் ஞானமுள்ளவனோ தான் சொல்பவற்றில் எச்சரிக்கையாக இருப்பான். அவனது வார்த்தைகள் புண்ணைக் குணப்படுத்தும்.

19 ஒருவன் பொய் சொன்னால் அவ்வார்த்தைகள் வீணாகிப்போகும். ஆனால் உண்மை என்றென்றைக்கும் வாழும்.

20 தீயவர்கள் எப்பொழுதும் துன்பம் செய்யவே எண்ணுவார்கள். ஆனால் சமாதானத்திற்காக வேலைசெய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

21 நல்லவர்கள் கர்த்தரால் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள். ஆனால் தீயவர்களுக்கோ நிறைய துன்பங்கள் இருக்கும்.

22 கர்த்தர் பொய் சொல்லுபவர்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் உண்மை சொல்பவர்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

23 அறிவுள்ளவன் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லமாட்டான். ஆனால் அறிவில்லாதவனோ எல்லாவற்றையும் சொல்லி தன்னை முட்டாளாகக் காட்டிக்கொள்வான்.

24 கடினமாக உழைக்கிறவர்கள் மற்ற உழைப்பாளிகளுக்கு பொறுப்பாளி ஆவார்கள். சோம்பேறியோ அடிமையைப்போன்று மற்றவர்களின் கீழ் வேலைசெய்வான்.

25 கவலையானது ஒருவனின் மகிழ்ச்சியை எடுத்துவிடும். ஆனால் இரக்கமான வார்த்தைகள் ஒருவனை மகிழ்ச்சிப்படுத்தும்.

26 தான் தேர்ந்தெடுக்கிற நண்பர்களைப்பற்றி நல்லவன் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பான். ஆனால் தீயவர்களோ கெட்ட நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.

27 சோம்பேறி தான் விரும்பியவற்றை செய்து முடிப்பதில்லை. ஆனால் கடினமாக உழைக்கிறவனிடம் செல்வம் வந்து சேரும்.

28 நீ சரியாக வாழ்ந்தால் உண்மையான வாழ்க்கையை அடைவாய். அதுவே என்றென்றும் வாழ்வதற்குரிய வாழ்வாகும்.

13 ஒரு ஞானமுள்ள மகன், தான்செய்யவேண்டியது என்னவென்று தன் தந்தை கூறும்போது அவன் அதனைக் கவனமாகக் கேட்பான். ஆனால் வீண் பெருமையுள்ளவனோ, ஜனங்கள் தன்னைத் திருத்த முயலும்போது கவனிப்பதில்லை.

நல்லவர்கள், தாம் சொல்லுகிற நல்லவற்றுக்காகத் தகுந்த வெகுமதிகளை அடைகிறார்கள். ஆனால் தீயவர்களோ எப்பொழுதும் தவறானவற்றைச் செய்ய விரும்புகின்றனர்.

ஒருவன் தான் சொல்லுகின்றவற்றில் எச்சரிக்கையோடு இருந்தால் அது அவன் வாழ்வைக் காப்பாற்றும். ஆனால் சிந்தித்துப் பார்க்காமல் பேசுகின்றவர்களின் வாழ்க்கை அழிந்துப்போகும்.

சோம்பேறி பலவற்றை விரும்புவான், ஆனால் அவனால் அவற்றை அடைய முடிவதில்லை. ஆனால் கடினமாக உழைக்கிறவர்கள் தாம் விரும்புவதைப் பெற் றுக்கொள்வார்கள்.

நல்லவர்கள் பொய்யை வெறுக்கிறார்கள். தீயவர்களோ அவமானமடைவார்கள்.

நல்ல குணமானது நேர்மையானவர்களைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீமையோ பாவங்களை நேசிக்கிறவர்களைத் தோற்கடிக்கும்.

சிலர் செல்வந்தர்களைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் எதுவுமில்லை. மற்றும் சிலரோ ஏழையைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் செல்வந்தர்களாக இருப்பார்கள்.

செல்வமுள்ளவன் சில சமயங்களில் தன் உயிரைக் காப்பாற்ற ஒரு தொகையைச் செலுத்த வேண்டியதாயிருக்கும். ஆனால் ஏழைக்கு இதுபோன்ற மிரட்டல்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும்.

ஒரு நல்லவன் பிரகாசமாக எரிகிற விளக்கைப்போன்றவன். கெட்டவனோ இருண்டு போகிற விளக்கைப்போன்றவன்.

10 மற்றவர்களைவிட தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்கள் துன்பத்தையே உருவாக்குகிறார்கள். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பவர்கள் ஞானம் உடையவர்கள்.

11 ஒருவன் பணம் பெறுவதற்காக மற்றவனை ஏமாற்றலாம். பிறகு அப்பணமும் அவனை விட்டு உடனடியாகப் போய்விடும். ஆனால் கடினமாக சம்பாதிக்கிறவனின் பணமானது மென்மேலும் வளர்ந்து பெருகும்.

12 நம்பிக்கை எதுவும் இல்லாவிட்டால் மனம் சோர்வடையும். நீ விரும்புவதுபோல எல்லாம் நடந்தால் நீ மகிழ்ச்சியால் நிரப்பப்படுவாய்.

13 மற்றவர்கள் உதவிசெய்ய முயற்சிக்கும்போது ஒருவன் அவர்களது வார்த்தைகளைக் கவனிக்காமல் புறக்கணித்தால், பிறகு அவன் தனக்குத்தானே துன்பத்தை வரவழைத்துக்கொள்கிறான். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிக்கிறவன் அதற்கு தகுந்த வெகுமதியைப் பெறுகிறான்.

14 ஞானம் உள்ளவனின் போதனைகள் வாழ்வைத் தரும். அந்த வார்த்தைகள் துன்ப காலத்தில் உதவும்.

15 புரிந்துகொள்ளும் நல்ல உணர்வுள்ளவர்களை ஜனங்கள் விரும்புவார்கள். ஆனால் நம்ப முடியாதவர்கள் வாழ்வு கடினமாகிப்போகிறது.

16 ஞானமுள்ளவர்கள் எதையும் செய்வதற்கு முன் சிந்திக்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ, தம் செயல்கள் மூலம் தமது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொள்வார்கள்.

17 ஒரு தூதுவனை நம்ப முடியாவிட்டால் அவனைச் சுற்றிலும் துன்பங்களே ஏற்படும். ஆனால் ஒருவன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தால் சமாதானம் உண்டாகும்.

18 ஒருவன் தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் ஏழையாகவும் அவமானத்துக்குரியவனாகவும் இருப்பான். ஆனால் தான் விமர்சிக்கப்படும்போதும் தண்டனைக்குட்படும்போதும் கவனிக்கிறவன் பயன் அடைகிறான்.

19 ஒருவன் ஒன்றை விரும்பி, அதனைப் பெற்றுக்கொண்டால் அவன் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால் முட்டாள்களோ தீயதை விரும்பி, மாற மறுக்கிறார்கள்.

20 ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய். ஆனால் நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும்.

21 பாவிகள் எங்கே போனாலும் துன்பங்கள் அவர்களைத் துரத்தும். ஆனால் நல்லவர்களுக்கு நல்லவையே நடக்கும்.

22 நல்லவர்களுக்குத் தம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுக்கிற அளவிற்குச் செல்வம் இருக்கும். தீயவர்களிடம் உள்ள அனைத்தையும் முடிவில் நல்லவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

23 ஒரு ஏழை, ஏராளமான விளைச்சலைத் தரும் நல்ல நிலத்தை வைத்திருக்கலாம், ஆனால் அவன் தவறான தீர்மானங்கள் செய்தால் பட்டினியாக இருப்பான்.

24 ஒருவன் உண்மையாகவே தன் பிள்ளைகளை நேசித்தால், அவர்கள் தவறு செய்யும் போது அவற்றைத் திருத்தவேண்டும். நீ உன் மகனை நேசித்தால் அவனுக்குச் சரியான பாதையைப் போதிக்க வேண்டும்.

25 நல்லவர்கள், தமக்கு எது தேவையோ அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் தீயவர்களோ, முக்கியமானவற்றைப் பெறாமலேயே இருப்பார்கள்.

14 ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்.

சரியான வழியில் வாழ்கிறவர்கள் கர்த்தரை மதிக்கிறார்கள். ஆனால் நேர்மையாக இல்லாதவன் கர்த்தரை வெறுக்கிறான்.

அறிவற்றவனின் வார்த்தைகள் அவனது துன்பத்திற்குக் காரணமாகின்றன. ஆனால் ஞானமுள்ளவனின் வார்த்தைகள் அவனைக் காக்கும்.

வேலை செய்வதற்கு எருதுகள் இல்லாவிட்டால் களஞ்சியங்கள் வெறுமையாக இருக்கும். எருதுகளின் பலத்தைப் பயன்படுத்தி ஜனங்கள் அதிக விளைச்சலைப் பெறமுடியும்.

உண்மையானவன் பொய் சொல்வதில்லை. அவனே ஒரு நல்ல சாட்சியாக இருக்க முடியும். ஆனால் நம்பத் தகாதவனோ உண்மையைச் சொல்வதில்லை. அவன் ஒரு பொய் சாட்சிக்காரன்.

தேவனைக் கேலிச்செய்பவர்கள் ஞானத்தைத் தேடலாம். ஆனால் அவர்கள் அதனைக் கண்டடையமாட்டார்கள். தேவனை நம்புகிறவர்கள் உண்மையான ஞானமுடையவர்கள். அவர்களுக்கு அறிவு எளிதாக வரும்.

முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை.

புத்திசாலிகள் அறிவுள்ளவர்கள். ஏனென்றால் அவர்கள் தாம் செய்யப்போவதைப்பற்றி எச்சரிக்கையோடு சிந்திக்கிறார்கள். ஏமாற்றிப் பிழைத்துவிடலாம் என்று நினைக்கிற காரணத்தால் அறிவீனர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

மூடர்கள் தாம் செய்யும் தவறான செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற கருத்தை ஏளனம் செய்கின்றனர். ஆனால் அறிவாளிகளோ ஏற்புடையவர்கள் ஆவதற்குப் பெரும் முயற்சி செய்வார்கள்.

10 ஒருவன் வருத்தமாயிருந்தால் அந்த வருத்தத்தை அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இதுபோலவே ஒருவனது மகிழ்ச்சியையும் அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

11 தீயவனின் வீடு அழிக்கப்படும். நல்லவனின் வீடு என்றும் வாழும்.

12 ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.

13 ஒருவன் வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளே சோகமாக இருக்கலாம். அச்சிரிப்புக்குப் பிறகும்கூட, அத்துயரமானது அவனோடேயே இருக்கிறது.

14 தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள்.

15 முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான்.

16 அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான்.

17 விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான். ஆனால் அறிவுள்ளவனோ பொறுமையாக இருப்பான்.

18 அறிவற்றவர்கள் தங்கள் மூடத்தனத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அறிவாளிகளோ ஞானத்தையே வெகுமதியாகப் பெறுவார்கள்.

19 நல்லவர்கள் தீயவர்களுக்கு எதிராக வெற்றிப் பெறுவார்கள். தீயவர்கள் அவர்களின் உதவிக்காகக் கெஞ்சும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

20 ஏழைகளுக்கு அவர்களுடைய பக்கத்து வீட்டாரும்கூட நண்பர்களாக இருப்பதில்லை. ஆனால் செல்வர்களுக்கோ ஏராளமான நண்பர்கள்.

21 உனது பக்கத்து வீட்டுக்காரர்களைப்பற்றி கெட்டவற்றை நினையாதே. நீ மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், ஏழை ஜனங்களிடம் இரக்கமாக இரு.

22 தீமைபுரியத் திட்டமிடும் எவனுமே தவறு செய்தவனாகிறான். ஆனால் ஒருவன் நன்மை செய்ய முயல்வதால் நிறைய நண்பர்களைப் பெறுகிறான். எல்லோரும் அவனை நேசித்து நம்புகின்றனர்.

23 நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய்.

24 அறிவுள்ளவர்கள் செல்வத்தால் வெகுமதிகளைப் பெறுவர். ஆனால் அறிவற்றவர்களோ முட்டாள்தனத்தையே பெறுகின்றனர்.

25 உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான்.

26 கர்த்தரை மதிக்கிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவனது பிள்ளைகளும் பாதுகாப்பாக வாழ்வார்கள்.

27 கர்த்தரை மதிப்பது உண்மையான வாழ்வைத் தரும். அது அவன் மரண வலையில் விழாமல் அவனைக் காப்பாற்றும்.

28 ஒரு அரசன் ஏராளமான ஜனங்களை ஆட்சி செய்தால் அவன் பெரியவன் ஆகிறான். ஆனால் ஆளுவதற்கு ஜனங்கள் இல்லாதவனோ ஒன்றும் இல்லாதவன் ஆகிறான்.

29 பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்.

30 மனதில் சமாதானம் உள்ள ஒருவன், உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பொறாமையோ நோய்களுக்குக் காரணமாகிறது.

31 ஏழைகளுக்குத் துன்பம் செய்கிறவன் தேவனுக்கு மரியாதை செய்யாதவன் எனக் காண்பித்துக்கொள்கிறான். ஏனென்றால் இருவரையும் தேவனே படைத்துள்ளார். ஆனால் ஒருவன் ஏழைகளிடம் தயவாக இருந்தால் அவன் தேவனையும் மகிமைப்படுத்துகிறான்.

32 தீய மனிதன் தன்னுடைய துன்மார்க்கத்தினால் தோற்கடிக்கப்படுவான். ஆனால் நல்ல மனிதனோ மரணகாலத்திலும் கூட அடைக்கலம் பெறுவான்.

33 அறிவுள்ளவன் அறிவுள்ளவைகளையே சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவர்களோ அறிவைப்பற்றிக்கொஞ்சமும் அறிந்துகொள்ளமாட்டார்கள்.

34 நல்ல குணம் நாட்டைப் பெருமைக்குரியதாக்கும். ஆனால் பாவமோ ஜனங்களை வெட்கப்பட வைக்கும்.

35 அறிவுள்ள தலைவர்கள் இருந்தால் அரசன் மகிழ்ச்சியோடு இருப்பான். ஆனால் முட்டாள்தனமான தலைவர்கள்மேல் அரசன் கோபப்படுவான்.

15 ஒரு சமாதானமான பதில் கோபத்தை மறையச்செய்யும். ஆனால் கடுமையான பதிலோ கோபத்தை அதிகப்படுத்தும்.

அறிவுள்ளவன் பேசும்போது மற்றவர்கள் அதைக் கேட்க விரும்புவார்கள். ஆனால் அறிவற்றவன் முட்டாள்தனமாகவே பேசுவான்.

எல்லா இடங்களிலும் என்ன நடைபெறுகிறது என்று கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார். நல்லவர்கள் தீயவர்கள் அனைவரையும் கர்த்தர் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

தயவான வார்த்தைகள் வாழ்வளிக்கும் மரம் போன்றது. ஆனால் பொய்யான வார்த்தைகள் மனிதனின் ஆவியை அழித்துவிடும்.

முட்டாள்தனமான மனிதன் தன் தந்தையின் அறிவுரைகளைக் கேட்க மறுத்துவிடுவான். ஆனால் அறிவுள்ளவனோ, ஜனங்கள் தனக்குப் போதிக்கவரும்போது கவனித்துக் கேட்கிறான்.

நல்லவர்கள் பலவற்றில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் தீய மனிதனிடத்திலுள்ளவை அவனைத் துன்பத்திற்குக் காரணமாக்குகின்றன.

அறிவுள்ளவர்கள் பேசும் பேச்சு உனக்குப் புதிய தகவல்களைத் தருபவையாக இருக்கும். அறிவில்லாதவர்கள் பேசுவதோ கேட்கப் பயனில்லாததாக இருக்கும்.

தீயவர்கள் கொடுக்கிற பலிகளை கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களைக் கேட்பதில் கர்த்தர் மகிழ்கிறார்.

தீயவர்களின் வாழ்க்கை முறையை கர்த்தர் வெறுக்கிறார். நல்லவற்றைச் செய்ய முயல்கிறவர்களை கர்த்தர் நேசிக்கிறார்.

10 ஒருவன் தவறாக வாழத்தொடங்கினால் அவன் தண்டிக்கப்படுவான். கண்டிக்கப்படுவதை வெறுப்பவன் அழிக்கப்படுவான்.

11 கர்த்தருக்கு எல்லாம் தெரியும். மரண இடத்திலும் என்ன நடக்கும் என்பதையும் அவர் அறிவார். எனவே கர்த்தர் ஜனங்களின் மனதிலும் இருதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை நிச்சயமாகவே அறிவார்.

12 அறிவற்றவன் தவறு செய்யும்போது தான் சுட்டிக் காட்டப்படுவதை வெறுக்கிறான். அவன் அறிவுள்ளவர்களிடம் அறிவுரைக் கேட்பதை வெறுக்கிறான்.

13 ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனது முகம் அதனைக் காட்டிவிடும். ஆனால் ஒருவன் தன் இருதயத்தில் துக்கம் உடையவனாக இருந்தால் அதை அவனது ஆவி வெளிப்படுத்தும்.

14 அறிவுள்ளவன் மேலும் அறிவைப் பெற விரும்புகிறான். அறிவில்லாதவனோ மேலும் முட்டாள் ஆவதை விரும்புகிறான்.

15 சில ஏழைகள் எப்போதும் துக்கமாக இருக்கிறார்கள். ஆனால் மனதில் மகிழ்ச்சி கொண்ட ஜனங்களுக்கு வாழ்க்கை ஒரு விருந்தாகும்.

16 ஒருவன் ஏழையாக இருந்து கர்த்தரை மதிப்பது சிறந்ததாகும். ஒருவன் செல்வனாக இருந்து துன்பப்படுவதைவிட இது மேலானதாகும்.

17 வெறுப்புள்ள இடத்தில் ஏராளமாக உண்பதைவிட அன்புள்ள இடத்தில் கொஞ்சம் உண்பதே நல்லது.

18 எளிதில் கோபப்படுகிறவர்கள் துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள். பொறுமையுள்ளவர்களோ சமாதானத்துக்குரியவர்கள்.

19 எல்லா இடங்களிலும் சோம்பேறி துன்பம் அடைகிறான். ஆனால் நேர்மையானவனுக்கு வாழ்வு எளிதாக இருக்கும்.

20 அறிவுள்ள மகன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் அறிவற்றவனோ தாய்க்கு அவமானத்தைத் தருகிறான்.

21 முட்டாள்தனமானவற்றைச் செய்வதில் அறிவற்றவன் மகிழ்கிறான். அறிவுள்ளவனோ சரியானவற்றைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கிறான்.

22 ஒருவன் போதுமான அறிவுரையைப் பெறாவிட்டால் அவனது திட்டங்கள் தோல்வியுறும். ஆனால் அறிவுள்ளவர்களின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கிறவன் தன் செயல்களில் வெற்றிபெறுகிறான்.

23 நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது.

24 வாழ்விக்கும் வழியைக் கடைபிடித்துத் வாழ்வடையும் நல்லவன், கீழ் நோக்கிச் செல்லும் மரணத்தின் பாதையைத் தவிர்த்துவிடுகிறான்.

25 வீண் பெருமை கொண்ட ஒருவனுக்குரிய எல்லாவற்றையும் கர்த்தர் அழிப்பார். ஒரு விதவைக்குரிய அனைத்தையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.

26 கர்த்தர் கெட்ட எண்ணங்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் தயவுமிக்க வார்த்தைகளில் மகிழ்கிறார்.

27 ஏமாற்றிப் பொருட்களைப் பெற்றுக்கொள்பவன், தன் குடும்பத்துக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக்கொண்டவனாவான். நேர்மையாக இருப்பவனுக்கோ துன்பம் இல்லை.

28 நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள். ஆனால் தீயவர்கள் சிந்திக்கும் முன்னரே பேசுகின்றனர். அவை அவர்களுக்குத் துன்பம் தரும்.

29 தீயவர்களிடமிருந்து கர்த்தர் வெகு தூரத்தில் உள்ளார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களை எப்போதும் கேட்கிறார்.

30 ஒருவனின் புன்னகை மற்றவர்களை மகிழச் செய்கிறது. நல்ல செய்திகள் ஜனங்களை நல்லுணர்வுக்கொள்ளச் செய்கின்றன.

31 நீ தவறு செய்கிறாய் என்று சொல்பவர்களைக் கவனிப்பவன் மிகவும் புத்திசாலி ஆகிறான்.

32 ஒருவன் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவனின் பேச்சைக் கவனிப்பவன் மேலும் புரிந்துகொள்கிறான்.

33 கர்த்தரை மதிக்கிறவன் அறிவுள்ளவனாகக் கற்றுக்கொள்கிறான். ஒருவன் உண்மையாகவே கர்த்தரை மதிப்பதற்கு முன்பு அவன் பணிவுள்ளவனாக இருக்கவேண்டும்.

16 ஜனங்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் காரியங்களை நிறைவேறச் செய்பவரோ கர்த்தர்.

ஒருவன் தான் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் கர்த்தர் செயல்களின் காரணங்களை நியாயம் தீர்க்கின்றார்.

நீ செய்கிற அனைத்து செயல்களுக்கும் கர்த்தரிடம் உதவிக்கு அணுகினால் நீ வெற்றி அடைவாய்.

ஒவ்வொரு காரியத்திற்க்கும் கர்த்தரிடம் ஒரு திட்டம் உள்ளது. கர்த்தருடைய திட்டத்தில் தீயவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.

மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவர்களை கர்த்தர் வெறுக்கிறார். இவ்வாறு பெருமைகொள்கின்றவர்களை எல்லாம் கண்டிப்பாக கர்த்தர் தண்டிப்பார்.

உண்மையான அன்பும் நேர்மையும் உன்னைப் பரிசுத்தமாக்கும். கர்த்தரை மதித்து தீயவற்றிலிருந்து விலகியிரு.

ஒருவன் நல்ல வாழ்க்கை வாழ்ந்து, கர்த்தருக்குப் பிரியமானவற்றைச் செய்தால், அவனது பகைவன்கூட அவனுடன் சமாதானமாக வாழ்வான்.

ஒருவன் பிறரை ஏமாற்றி அதிகப் பொருள் சம்பாதிப்பதைவிட நல்ல வழியில் கொஞ்சம் பொருள் சம்பாதிப்பது நல்லது.

ஒருவன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்வதற்குத் திட்டமிடலாம். ஆனால் எது நடக்க வேண்டுமென முடிவு செய்பவர் கர்த்தரே.

10 அரசன் பேசும்போது, அவனது வார்த்தைகள் சட்டமாகும். அவனது முடிவுகள் எப்பொழுதும் சரியாக இருக்கவேண்டும்.

11 எல்லா அளவுக் கருவிகளும் சரியாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து வியாபார ஒப்பந்தங்களும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகின்றார்.

12 தீமை செய்பவர்களை அரசர்கள் வெறுக்கின்றனர். நன்மை அவனது அரசாங்கத்தை வலுவுள்ளதாக்கும்.

13 அரசர்கள் உண்மையைக் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் பொய் சொல்லாமல் இருப்பதை அரசர்கள் விரும்புகின்றனர்.

14 அரசனுக்குக் கோபம் வந்தால் அவன் ஒருவனைக்கொல்லலாம். அறிவுள்ளவர்கள் அரசனை எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர்களாகச் செய்வார்கள்.

15 அரசன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அனைவரின் வாழ்வும் நன்றாக இருக்கும். உன் காரியங்களால் அரசன் மகிழ்ச்சிகொண்டானெனில், அது மேகத்தில் இருந்து வசந்தகால மழை பொழிவதற்கு ஒப்பாகும்.

16 தங்கத்தைவிட அறிவு மதிப்புமிக்கது. புரிந்துகொள்ளுதல் வெள்ளியைவிட மதிப்புடையது.

17 நல்லவர்கள் தம் வாழ்வைத் தீமையில் இருந்து விலக்கி வைப்பார்கள். தன் வாழ்வில் கவனமாக இருக்கிற ஒருவன், தன் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்கிறான்.

18 ஒருவன் கர்வம் கொண்டவனாக இருந்தால் அவன் அழிவின் ஆபத்தில் இருக்கிறான். மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவன் தோல்வியின் ஆபத்தில் இருக்கிறான்.

19 மற்றவர்களைவிடத் தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்களோடு செல்வத்தைப் பங்கிட்டு வாழ்வதைவிட பணிவாகவும், ஏழை ஜனங்களோடும் சேர்ந்து வாழ்வது சிறந்ததாகும்.

20 ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

21 ஒருவன் அறிவுள்ளவனாக இருப்பதை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கவனமாகப் பேசுபவன் நிரூபிக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கமுடியும்.

22 அறிவானது ஜனங்களுக்கு உண்மையான வாழ்க்கையைத் தரும். ஆனால் அறிவற்றவர்களோ மேலும் முட்டாள் ஆவதையே விரும்புவார்கள்.

23 அறிவுள்ளவர்கள் எப்பொழுதும் பேசுவதற்கு முன்பு சிந்திப்பார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் நல்லவையாகவும் உயர்வானவையாகவும் இருக்கும்.

24 கருணைமிக்க வார்த்தைகள் தேனைப் போன்றவை. அவை ஏற்றுக்கொள்ள எளிமையானவை, உடல் நலத்திற்கும் நல்லது.

25 ஜனங்களுக்குச் சில வழிகள் சரியானதாக தோன்றும். அவ்வழிகள் மரணத்துக்கே அழைத்துச் செல்லும்.

26 உழைப்பாளியின் பசிதான் அவனைத் தொடர்ந்து உழைக்க வைக்கிறது. உண்ணும் பொருட்டு வேலை செய்யும் தூண்டுதலைப் பசியே கொடுக்கிறது.

27 பயனற்றவன் கெட்ட செயல்களைச் செய்யவே திட்டமிடுவான். அவனது அறிவுரை நெருப்பைப்போன்று அழிக்கும்.

28 தொல்லையை உருவாக்குகிறவன் எப்பொழுதும் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறான். பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவன் நெருங்கிய நண்பர்களுக்குள் துன்பத்தை ஏற்படுத்துவான்.

29 தொல்லையை உருவாக்குகிறவன் பல தொல்லைகளுக்குக் காரணமாகிறான். தனது நண்பர்களுக்கு நன்மை தராத வழிகளில் அவர்களை அழைத்துச் செல்கிறான். 30 அவன் தன் கண்களால் ஜாடை செய்து சிலவற்றை அழிக்கத் திட்டமிடுகிறான். தனது பக்கத்து வீட்டுக்காரனைத் துன்புறுத்த சிரித்துக்கொண்டே திட்டமிடுகிறான்.

31 நல் வாழ்க்கை வாழ்பவர்களின் நரை முடியானது கிரீடத்தைப் போன்று உயர்வானது.

32 வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது. ஒரு நகரத்தை அடக்கி ஆள்வதைவிட உன் கோபத்தை அடக்குவது நல்லது.

33 ஜனங்கள் குலுக்கல் சீட்டு மூலம் முடிவெடுக்கின்றனர். ஆனால் அனைத்து முடிவுகளும் தேவனிடமிருந்தே வருகின்றன.

17 எப்பொழுதும் வாதமிடுகிறவர்களின் வீட்டில் முழுச்சாப்பாடு உண்பதைவிட, ஒரு துண்டு காய்ந்த ரொட்டியை சமாதானத்தோடு தின்பது நல்லது.

அறிவுத்திறமுள்ள வேலைக்காரன் தன் எஜமானின் மூட மகனையும் அடக்கி ஆள்வான். அவ்வேலைக்காரன் மகனைப்போல நடத்தப்பட்டு, பரம்பரைச் சொத்தில் பங்கும்பெறுவான்.

பொன்னையும் வெள்ளியையும் தூய்மைப்படுத்தவே நெருப்பில் போடுகிறார்கள். ஆனால் ஜனங்கள் இதயங்களை கர்த்தர் ஒருவரே சுத்தம் செய்கிறார்.

தீயவர்கள் மற்றவர்கள் சொல்லும் தீயவற்றையே கவனிக்கின்றனர். பொய்யர்கள் பொய்யையே கவனிக்கின்றனர்.

சிலர் ஏழை ஜனங்களைக் கேலிச் செய்வார்கள். தொல்லைகளுக்கு உள்ளானவர்களைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். தம்மைப் படைத்த தேவனை அவர்கள் மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.

பேரப்பிள்ளைகள் முதியவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள். பிள்ளைகள் தம் பெற்றோர்களைப்பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.

அறிவற்றவன் அதிகமாகப் பேசுவது அறிவுள்ள செயல் அல்ல. இதுபோலவே, ஆள்பவன் பொய் சொல்லுவதும் அறிவுள்ள செயல் அல்ல.

சிலர், லஞ்சத்தை இனிமையான அதிர்ஷ்டப் பொருளாக நினைக்கிறார்கள். அவர்கள் எங்கு போனாலும் அது பணியைச் செய்துமுடிக்கப் பயன்படுவதாக நினைக்கிறார்கள்.

ஒருவன் செய்த தவறை நீ மன்னித்துவிட்டால் நீங்கள் நண்பர்கள் ஆகலாம். ஆனால் அவன் செய்த தவறையே தொடர்ந்து நீ நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் நட்பை அது அழித்துவிடும்.

10 சுறுசுறுப்பானவன் தன் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறான். ஆனால் அறிவில்லாதவனோ, எதையும் கற்றுக்கொள்ளமாட்டான். நூறு பாடங்களுக்குப் பிறகும் கற்றுக்கொள்ளமாட்டான்.

11 தீயவன் தவறுகளைச் செய்யவே விரும்புகிறான். முடிவில் தேவன் தன் தூதனை அனுப்பி அவனைத் தண்டிப்பார்.

12 தன் குட்டிகளைப் பறிகொடுத்த கோபம் கொண்ட பெண் கரடியை எதிர்கொள்வது, மிகவும் ஆபத்தானது. ஆனால் எப்பொழுதும் மூடத்தனமான செயல்களைச் செய்யும் அறிவில்லாதவனைச் சந்திப்பதைக் காட்டிலும் அது எளிதானது.

13 உனக்கு நன்மை செய்கிறவர்களுக்கு, நீ தீமை செய்யாதே. அவ்வாறு செய்தால் நீ உனது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவாய்.

14 வாதம் செய்ய ஆரம்பிப்பது, பெரிய அணைக்கட்டில் துளை விழுந்தது போன்றாகும். அது மிகப் பெரிதாக ஆவதற்கு முன் வாதத்தை நிறுத்து.

15 தவறே செய்யாதவர்களைத் தண்டிப்பதும், குற்றம் செய்தவர்களை தப்பவிடுவதுமான இரண்டு காரியங்களும் கர்த்தரால் வெறுக்கப்படும்.

16 அறிவற்றவனிடம் செல்வம் இருந்தால் அது பயனற்றது. ஏனென்றால் அவன் தன் செல்வத்தை அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தமாட்டான்.

17 ஒரு நண்பன் எப்பொழுதும் நேசிக்கிறான். உண்மையான சகோதரன் உனக்கு எப்பொழுதும் உதவுகிறான். துன்ப காலங்களிலும்கூட உதவி செய்கிறான்.

18 அடுத்தவன் கடனுக்கு தான் பொறுப்பாளியென அறிவற்றவனே வாக்குறுதி கொடுப்பான்.

19 வாதம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறவன், பாவம் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறான். நீ உன்னையே பெருமைப்படுத்திப் பேசினால் நீயே துன்பங்களை வரவழைத்துக்கொள்கிறாய்.

20 தீயவன் நன்மை பெறமட்டான். பொய்யன் துன்பமடைவான்.

21 அறிவற்றவனின் தந்தை மிகவும் சோகம் அடைவான். அறிவற்றவனின் தந்தையால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.

22 மகிழ்ச்சி என்பது நல்ல மருந்தைப் போன்றது. ஆனால் துக்கமோ நோயைப் போன்றது.

23 தீயவன் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக இரகசியமாகப் பணத்தைப் பெறுகிறான்.

24 அறிவுள்ளவன் மிகச்சிறந்த செயல்களைச் செய்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டு இருப்பான். ஆனால் அறிவற்றவனோ தூரத்து இடங்களைப்பற்றியே கனவு காண்பான்.

25 ஒரு அறிவற்ற மகன் தந்தைக்குத் துக்கத்தைத் தருகிறான். அவன் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்கும் துன்பத்தைத் தருகிறான்.

26 தவறு செய்யாதவனைத் தண்டிப்பது தப்பாகும். தலைவர்கள் நேர்மையானவர்களாக இருக்கும்போது அவர்களைத் தண்டிப்பதும் தவறாகும்.

27 அறிவுள்ளவன் தன் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுகிறான். அறிவுள்ளவன் எளிதில் கோபம் கொள்ளமாட்டான்.

28 அறிவற்றவனும் அமைதியாக இருந்தால் அறிவாளியைப்போன்று தோன்றுவான். அவன் எதையும் பேசாவிட்டால், ஜனங்கள் அவனை அறிவாளியாக நினைத்துக்கொள்வார்கள்.

18 சிலர் மற்றவர்களைச் சுற்றி இருப்பதை விரும்பமாட்டார்கள். அவர்கள் தாம் செய்ய விரும்புவதையே செய்வார்கள். யாரேனும் இவர்களுக்கு அறிவுரை சொல்லப்போனால், அது இவர்களைக் கோபமடையச் செய்யும்.

மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர்.

ஜனங்கள் தீயவர்களை விரும்பமாட்டார்கள். ஜனங்கள் அந்த அறிவற்றவர்களைக் கேலிச்செய்வார்கள்.

ஞானமுள்ளவனின் வார்த்தைகள் ஆழமான ஞானக் கிணற்றிலிருந்து வெளியேறும் நீரோட்டத்தைப் போன்றது.

ஜனங்களை நியாயந்தீர்ப்பதில் நேர்மையாக இரு. நீ குற்றம் செய்தவர்களை விட்டுவிடுவாயானால் அது நல்லவர்களுக்கு நன்மை செய்ததாக இராது.

அறிவற்றவன் தான் பேசும் வார்த்தைகளாலேயே துன்பத்தை அடைகிறான். அவனது வார்த்தைகள் சண்டையை மூட்டும்.

அறிவற்றவன் பேசும்போது, அவன் தன்னையே அழித்துக்கொள்வான். அவனது சொந்த வார்த்தையே அவனை ஆபத்துக்குள்ளாக்கும்.

ஜனங்கள் எப்பொழுதும் வம்புகளை விரும்பிக் கேட்பார்கள். இது அவர்களுக்கு நல்ல உணவு வயிற்றுக்குள் போவதைப் போன்றிருக்கும்.

ஒருவன் கெட்ட செயல்களைச் செய்வது, பொருட்களை அழிப்பது போன்றதாகும்.

10 கர்த்தருடைய நாமத்தில் மிகுந்த பலம் உண்டு. இது உறுதியான கோபுரத்தைப் போன்றது. நல்லவர்கள் அவரிடம் ஓடிச் சென்று பாதுகாப்பைப் பெறுகின்றனர்.

11 செல்வந்தர்கள், தங்கள் செல்வம் தங்களைக் காக்குமென்று நம்புகின்றனர். அது வலிமையான கோட்டையைப்போன்றது என எண்ணுகின்றனர்.

12 பெருமைகொண்ட ஒருவன் விரைவில் அழிந்துபோவான். பணிவாக இருப்பவன் கனத்தைப் பெறுகிறான்.

13 நீ பதில் சொல்வதற்குமுன்பு, மற்றவர் பேசி முடிக்கவிடு. இது உனக்கு அவமானத்தைத் தராது. உன்னை முட்டாளாகவும் ஆக்காது. அப்படியானால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளவும், மூடனாகக் காணப்படவும்மாட்டாய்.

14 நம்பிக்கையுடைய ஒருவன் நோயிலிருந்து விடுபடமுடியும். ஆனால் ஒருவன் தன்னை இழந்து போனவனாக எண்ணினால் அனைத்து நம்பிக்கைகளும் போய்விடும்.

15 அறிவுள்ளவன் மேலும் கற்றுக்கொள்ள விரும்புவான். அவன் மிகுதியான அறிவுக்காகக் கவனமாகக் கேட்பான்.

16 நீ முக்கியமான மனிதர்களைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குப் பரிசு கொண்டு போ. அப்போது நீ அவர்களை எளிதில் சந்திக்கலாம்.

17 இன்னொருவன் வந்து கேள்வி கேட்கும்வரை ஒருவன் பேசுவது சரியானது போலவே தோன்றும்.

18 வலிமையான இரண்டுபேர் வாதம் செய்துக்கொண்டிருந்தால், குலுக்கல் சீட்டு மூலமே வாதமுடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

19 நீ உன் நண்பனை அவமானப்படுத்தினால், அவனை வசப்படுத்துவது வலிமையான சுவர்களை உடைய நகரத்தை வெல்வதைவிடக் கடினமானதாகிவிடும். குறுக்குக் கம்பிகள்கொண்ட அரண்மனைக் கதவுகளின் தடுப்பைப் போல விவாதங்கள் ஜனங்களைப் பிரிக்கின்றன.

20 நீ சொல்பவை உன் வாழ்வைப் பாதிக்கும். நீ நன்மையைச் சொன்னால் உனக்கு நன்மை ஏற்படும். நீ தீயவற்றைச் சொன்னால் உனக்கும் தீமை ஏற்படும்.

21 மரணம் அல்லது வாழ்வு நேரும்படியாக நாவால் பேசமுடியும். எனவே பேசுவதை நேசிக்கிறவர்கள் அதன் பலனையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

22 மனைவியைக் கண்டுபிடிப்பது நன்மையைக் கண்டுபிடித்ததற்குச் சமமாகும். கர்த்தர் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பதை அவள் காட்டுகிறாள்.

23 ஒரு ஏழை உதவிக்காகக் கெஞ்சுகிறான். ஆனால் செல்வந்தனோ கடினமாகப் பதில் சொல்கிறான்.

24 பேசிச் சிரிக்க நல்லவர்களாக சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனைவிடச் சிறந்தவன்.

19 ஒரு முட்டாளாக இருந்து பிறரை ஏமாற்றிப் பொய் சொல்கிறவனாக இருப்பதைவிட ஏழையாகவும் நேர்மையானவனாகவும் இருப்பது நல்லது.

சிலவற்றைப்பற்றி பரவசப்படுவது போதாது. நீ செய்வது என்ன என்று உனக்குத் தெரியவேண்டும். எதையாவது அவசரமாகச் செய்வாயானால் அதைத் தவறாகச் செய்துவிடுவாய்.

ஒருவனது சொந்த முட்டாள்தனம் அவனது வாழ்வை அழித்துவிடும். ஆனால் அவன் கர்த்தர் மீது பழி சொல்லுவான்.

ஒருவன் செல்வந்தனாக இருந்தால், அவனது செல்வம் பல நண்பர்களைத் தரும். ஆனால் ஒருவன் ஏழையாக இருந்தால் எல்லா நண்பர்களும் அவனைவிட்டு விலகுவார்கள்.

இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சொல்பவன் தண்டிக்கப்படுவான். பொய் சொல்பவனுக்குப் பாதுகாப்பில்லை.

ஆள்பவரோடு நட்புக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். மேலும், பரிசு தருபவரோடு நட்புக்கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.

ஒருவன் ஏழையாக இருந்தால், அவனது குடும்பம் கூட அவனுக்கு எதிராக இருக்கும். அவனது நண்பர்களும்கூட அவனை விட்டு விலகுவார்கள். அந்த ஏழை அவர்களிடம் உதவி கேட்கலாம். எனினும் அவனருகில் அவர்கள் போகமாட்டார்கள்.

ஒருவன் உண்மையிலேயே தன்னை நேசித்தால், அறிவைப்பெறக் கடுமையாக உழைக்கவேண்டும். அவன் கடினமாக முயற்சிசெய்து புரிந்துகொள்ளுதலை அடையவேண்டும். அவன் அதற்குரிய வெகுமதியைப் பெறுவான்.

பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான்.

10 ஒரு முட்டாள் செல்வந்தனாகக் கூடாது. இது ஒரு அடிமை இளவரசனை ஆள்வதைப் போன்றது.

11 ஒருவன் அறிவுள்ளவனாக இருந்தால், அந்த அறிவு அவனுக்குப் பொறுமையைத் தரும். அவனுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது.

12 ஒரு அரசன் கோபத்தோடு இருக்கும்போது, அது சிங்கத்தின் கெர்ச்சிப்பு போன்று இருக்கும். ஆனால் அவன் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பது, மென்மையாக மழை பொழிவதுபோன்று இருக்கும்.

13 ஒரு முட்டாள் மகன் தன் தந்தைக்கு வெள்ளம்போல நிறையத் தொல்லைகளைக்கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும்.

14 ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும்.

15 ஒரு சோம்பேறி மிகுந்த உறக்கத்தைப் பெறலாம். ஆனால் அவனுக்கு மிகுந்த பசி இருக்கும்.

16 ஒருவன் சட்டத்திற்குப் பணிந்திருந்தால், அவன் தன்னைத்தானே காத்துக்கொள்கிறான். ஆனால் ஒருவன் அதனை முக்கியமில்லை என்று கருதினால், பின் அவன் கொல்லப்படுவான்.

17 ஏழைகளுக்குப் பண உதவி செய்வது கர்த்தருக்குக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். அவர்கள் மீது தயவாய் இருந்ததற்காக கர்த்தர் அவற்றைத் திருப்பித் தருவார்.

18 உன் மகனுக்குக் கற்றுக்கொடு, அவன் தவறு செய்யும்போது தண்டனைகொடு. அதுதான் ஒரே நம்பிக்கை. இதனை நீ செய்ய மறுத்தால், பிறகு அவன் தன்னையே அழித்துக்கொள்ள நீ உதவுவதாக இருக்கும்.

19 ஒருவன் மிக எளிதில் கோபம் கொண்டால், அதற்குரிய விலையை அவன் கொடுக்க வேண்டியதிருக்கும். அவனை நீ துன்பத்திலிருந்து தப்புவித்தால், அவன் அதனையே மீண்டும் மீண்டும் செய்வான்.

20 அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய்.

21 ஜனங்களுக்கு பலவித எண்ணங்கள் தோன்றலாம். எனினும் கர்த்தருடைய திட்டங்களே நிறைவேறும்.

22 ஜனங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவனை விரும்புகிறார்கள். எனவே ஜனங்களால் நம்பப்படாதவனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல்.

23 கர்த்தரை மதிக்கிறவன் நல்ல வாழ்வைப் பெறுகிறான். அவன் தன் வாழ்வில் திருப்தியடைகிறான். அவன் துன்பங்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

24 சோம்பேறி, தன் உணவிற்குத் தேவையான வேலைகளைக்கூடச் செய்யமாட்டான். தட்டிலிருந்து உணவை எடுத்து வாயில் வைக்கவும் சோம்பல்படும் அளவுக்கு அவன் முழுச் சோம்பேறி ஆவான்.

25 சிலர் எதற்கும் மரியாதை காட்டமாட்டார்கள். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அறிவற்றவன் தன் பாடத்தைக் கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறான். ஆனால் சிறு சிட்சையே அறிவாளிகளைக் கற்றுக்கொள்ளச் செய்யும்.

26 ஒருவன் தன் தந்தையிடமிருந்து திருடி, தன் தாயை பலவந்தமாக வெளியேற்றினால் அவன் மிகவும் மோசமானவன். அவன் தனக்குத்தானே அவமானத்தையும் அவமரியாதையையும் தேடிக்கொள்கிறான்.

27 போதனைகளைக் கவனமாகக் கேட்பதை நிறுத்தினால் நீ முட்டாள்தனமான தவறுகளைச் செய்துகொண்டே இருப்பாய்.

28 சாட்சி சொல்ல வருகிறவன் நேர்மையற்றவனாக இருந்தால், தீர்ப்பும் சரியானதாக இராது. தீயவர்கள் சொல்வது தீமையைத் தரும்.

29 மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைப்பவன் தண்டிக்கப்படுவான். அறிவற்றவன் தனக்கான தண்டனையைப் பெறுகிறான்.

20 திராட்சைரசமும் மதுவும் ஜனங்களின் சுயக் கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுகிறது. அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் போதை ஏறி முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள்.

ஒரு அரசனின் கோபமானது சிங்கத்தின் கெர்ச்சினையைப் போன்றது. நீ ஒரு அரசனைக் கோபப்படுத்தினால் உன் வாழ்வை இழந்துவிடுவாய்.

எந்த முட்டாளும் ஒரு வாதத்தைத் தொடங்கலாம். எனவே வாதம்செய்ய மறுப்பவனை நீ மதிக்க வேண்டும்.

ஒரு சோம்பேறி விதைகளை விதைக்கவும் சோம்பேறித்தனமாயிருக்கிறான். அதனால், அறுவடைக் காலத்தில் உணவை எதிர்ப்பார்த்தாலும் அவன் எதையும் பெறுவதில்லை.

நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான்.

பலர் தம்மை உண்மையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் கூறிக்கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது அரிது.

நல்லவன் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றான். அவன் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகின்றனர்.

ஒரு அரசன் நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும்.

ஒருவன் உண்மையாகவே, தான் செய்கிறவைகளைத் தன்னாலியன்றவரை நன்றாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியுமா? ஒருவன் பாவம் இல்லாதவன் என்று உண்மையில் சொல்லமுடியுமா? முடியாது.

10 தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார்.

11 ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும்.

12 பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார்.

13 நீ தூக்கத்தை நேசித்தால், நீ ஏழையாகிவிடுவாய். உனது நேரத்தை உழைப்பதில் செலவிடு. உனக்கு உணவு ஏராளமாகக் கிடைக்கும்.

14 உன்னிடமிருந்து எதையாவது வாங்கியவன், “இது நன்றாயில்லை. இதன் விலை அதிகம்” என்கிறான். பிறகு வேறு ஆட்களிடம் போய் தான் நல்ல வியாபாரம் செய்ததாகச் சொல்லிக்கொள்வான்.

15 தங்கமும் வெள்ளியும் ஒருவனைப் பணக்காரன் ஆக்கும். ஆனால் எதைப்பற்றிப் பேசுகிறோமோ, அதை முழுக்க அறிந்துள்ள ஒருவனின் மதிப்பு மிகவும் பெரியது.

16 அடுத்தவனின் கடனுக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டால், நீ உனது சட்டையையும் இழந்துவிடுவாய்.

17 ஒருவனை ஏமாற்றிப் பெற்றவை நல்லதுபோன்று தோன்றலாம். ஆனால், முடிவில் அது பயனற்றுப் போய்விடும்.

18 திட்டமிடுவதற்கு முன்பு நல்ல அறிவுரைகளைப் பெறவேண்டும். நீ ஒரு போரைத் துவங்கினால், போர் நடவடிக்கைகளில் சிறந்த அறிவுடையவர்களின் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்.

19 அடுத்தவர்களைப்பற்றி வம்பு பேசுகிறவர்கள் நம்பத்தகாதவர்கள். எனவே அதிகமாகப் பேசுபவர்களோடு நட்புகொள்ளாதே.

20 ஒருவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதிராகப் பேசினால், அவன் அணைந்துகொண்டிருக்கும் விளக்கைப் போன்றவன்.

21 உனது செல்வமானது பெறுவதற்கு எளிதானதாக இருந்தால், அது உனக்கு அத்தனை உயர்வாகத் தோன்றாது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center