Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
பிரசங்கி 3 - உன்னதப்பாட்டு 8

ஒரு காலம் உண்டு

எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு.

பிறப்பதற்கு ஒரு காலமுண்டு,
    மரிப்பதற்கு ஒரு காலமுண்டு,
நடுவதற்கு ஒரு காலமுண்டு,
    பிடுங்குவதற்கும் ஒரு காலமுண்டு.
கொல்வதற்கு ஒரு காலமுண்டு,
    குணப்படுத்தவும் ஒரு காலமுண்டு,
அழிப்பதற்கு ஒரு காலமுண்டு,
    கட்டுவதற்கும் ஒரு காலமுண்டு.
அழுவதற்கு ஒரு காலமுண்டு,
    சிரிப்பதற்கும் ஒரு காலமுண்டு,
வருத்தப்படுவதற்கு ஒரு காலமுண்டு,
    மகிழ்ச்சியால் நடனமாடுவதற்கும் ஒரு காலமுண்டு.
ஆயுதங்களை எறிவதற்கு ஒரு காலமுண்டு,
    ஆயுதங்களை எடுப்பதற்கு ஒரு காலமுண்டு. [a]
தழுவிக்கொள்ள ஒரு காலமுண்டு,
    தழுவிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு காலமுண்டு.
சிலவற்றைத் தேட ஒரு காலமுண்டு,
    இழந்துவிட்டதாகக் கருதவும் ஒரு காலமுண்டு,
பொருட்களைப் பாதுகாக்க ஒரு காலமுண்டு,
    பொருட்களைத் தூக்கி எறியவும் ஒரு காலமுண்டு.
துணிகளைக் கிழிப்பதற்கு ஒரு காலமுண்டு,
    அதனைத் தைப்பதற்கும் ஒரு காலமுண்டு,
அமைதியாக இருப்பதற்கு ஒரு காலமுண்டு,
    பேசுவதற்கும் ஒரு காலமுண்டு.
அன்பு செய்ய ஒரு காலமுண்டு,
    வெறுக்கவும் ஒரு காலமுண்டு,
சண்டையிடுவதற்கு ஒரு காலமுண்டு,
    சமாதானம் கொள்வதற்கும் ஒரு காலமுண்டு.

தேவன் தன் உலகைக் கட்டுப்படுத்துகிறார்

ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா? 10 தேவன் நமக்குக்கொடுத்த அனைத்து கடின வேலைகளையும் நான் பார்க்கிறேன். 11 அவரது உலகத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் திறனை தேவன் நமக்குக்கொடுத்திருக்கிறார். எனினும் தேவன் செய்யும் அனைத்தையும் நாம் முழுவதும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் இதுவரை தேவன் அனைத்தையும் சரியான காலத்திலேயே செய்துவருகிறார்.

12 ஜனங்கள் வாழ்கிற காலம்வரை மகிழ்ச்சியாக இருப்பதும், சந்தோஷம் அனுபவிப்பதும் நல்ல செய்கை என்பதை நான் கற்றேன். 13 எல்லோரும் உண்ணவும் குடிக்கவும் அவரது வேலையில் மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இவை தேவனிடமிருந்து வரும் அன்பளிப்புகள்.

14 தேவன் செய்வது என்றென்றும் தொடரும் என்பதை அறிந்தேன். தேவனுடைய கிரியையோடு ஜனங்கள் எதையும் சேர்த்துக்கொள்ள முடியாது. தேவனுடைய கிரியையிலிருந்து ஜனங்கள் எதையும் எடுத்துக்கொள்ளவும் முடியாது. தேவன் இதனைச் செய்கிறார். எனவே தேவனுக்கு ஜனங்கள் மரியாதை செலுத்தவேண்டும். 15 ஏற்கெனவே நடந்து முடிந்தவை முடிந்தவையே. அவற்றை நாம் மாற்ற முடியாது. எதிர்காலத்தில் நடப்பவை நடந்தே தீரும். நாம் அவற்றையும் மாற்ற முடியாது. ஆனால் தேவன், மிகமோசமாக நடத்தப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார். [b]

16 நான் இவை அனைத்தையும் இந்த வாழ்க்கையில் பார்த்தேன். வழக்குமன்றமானது நன்மையாலும் நேர்மையாலும் நிறைந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதில் தீமையே நிறைந்திருந்தது. 17 எனவே நான் எனக்குள்ளே: “தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தைத் திட்டமிட்டுள்ளார். ஜனங்களின் செயலை நியாயந்தீர்க்கவும் ஒரு காலத்தை தேவன் திட்டமிட்டுள்ளார். தேவன் நல்லவர்களையும் கெட்டவர்களையும் நியாயந்தீர்ப்பார்” என்கிறேன்.

ஜனங்கள் விலங்குகளைப் போன்றவர்கள்தானா?

18 ஜனங்கள் ஒருவருக்கொருவர் செய்யும் செயலைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் எனக்குள்ளே, “ஜனங்கள் தாங்கள் மிருகங்களைப்போன்று இருப்பதை உணர தேவன் விரும்புகிறார்” என்று சொல்லிக்கொண்டேன். 19 மனிதன் மிருகத்தைவிட சிறந்தவனாக இருக்கிறானா? ஏனென்றால், எல்லாம் பயனற்றவை. மரணம் என்பது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரே மாதிரியாக நிகழ்கின்றது. “உயிர் மூச்சும்” மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒன்றுபோல் இருக்கிறது. மரித்துப்போன மனிதர்களிடமிருந்து மரித்துப்போன மிருகம் வேறுபடுகிறதா? 20 மனித உடல்களும் மிருக உடல்களும் ஒன்றுபோலவே முடிகின்றன. அவை மண்ணிலிருந்து வந்தன. முடிவில் அவை மண்ணுக்கே போகின்றன. 21 ஒரு மனிதனின் ஆவிக்கு என்ன நிகழும் என்பதை யார் அறிவார்? மனிதனின் ஆவி மேலே தேவனிடம் போகும்போது, மிருகத்தின் ஆவி கீழே பூமிக்குள் போகிறது என்பதை யார் அறிவார்?

22 எனவே, ஒருவன் செய்யவேண்டிய நற்செயல் என்னவென்றால் தனது செய்கையில் மகிழ்வதுதான் என்று நான் கண்டுகொண்டேன். அதையே அவன் அடைந்திருக்கிறான். ஒருவன் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவனுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கண்டு சொல்ல யாராலும் முடியாது.

மரித்துப்போவது நல்லதா?

ஏராளமான ஜனங்கள் மோசமாக நடத்தப்படுவதை மீண்டும் நான் பார்த்தேன். அவர்களது கண்ணீரைப் பார்த்தேன். துக்கப்படும் அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் அங்கே நான் பார்த்தேன். கொடுமையானவர்களிடம் எல்லா அதிகாரங்களும் இருப்பதைப் பார்த்தேன். புண்பட்ட அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் நான் பார்த்தேன். இன்னும் உயிரோடிருப்பவர்களைவிட மரித்துப்போனவர்கள் பாக்கியசாலிகள் என்று முடிவுசெய்தேன். பிறப்பிலேயே மரிப்பவர்கள் இன்னும் பாக்கியசாலிகள். ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில் நடைபெறும் தீமைகளைப் பார்க்காமலேயே போவார்கள்.

ஏன் இவ்வளவு கடினமாக வேலை செய்யவேண்டும்?

பிறகு நான் “ஏன் ஜனங்கள் இவ்வளவு கடினமாக வேலை செய்கிறார்கள்?” என்று நினைத்தேன். ஜனங்கள் வெற்றிபெறவும் மற்றவர்களை விடச் சிறப்புபெறவும் முயற்சி செய்வதை நான் பார்த்தேன். ஏனென்றால் ஜனங்கள் அனைவரும் பொறாமை உடையவர்கள். அவர்கள் தம்மைவிட மற்றவர் அதிகம் பெறுவதை விரும்பமாட்டார்கள். இது அர்த்தமற்றது. இது காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப்போன்றது என எண்ணினேன்.

சிலர், “கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம். நீ உழைக்காவிட்டால் பட்டினிகிடந்து மரிப்பாய்” என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்கலாம். எப்பொழுதும் அதிகமானவற்றைப் பெறுவதற்குப் போராடிக்கொண்டிருப்பதைவிட இருக்கின்றவற்றை வைத்து திருப்தி அடைவது நல்லது என்று நான் சொல்லுவேன்.

மீண்டும், அர்த்தமில்லாத சிலவற்றை நான் பார்த்தேன். ஒருவனுக்குக் குடும்பம் இல்லாமல் இருக்கலாம். அவனுக்கு ஒரு மகனோ அல்லது சகோதரனோகூட இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் அவன் தொடர்ந்து கடினமாக உழைக்கிறான். அவன் தன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதில்லை. அவன் மிகுதியாக உழைக்கிறான். அவன் வேலைசெய்வதை நிறுத்தி, “நான் யாருக்காகக் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். நான் ஏன் வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது?” என்று தன்னைத்தான் கேட்பதில்லை. இதுவும் மிக மோசமானதும், அர்த்தமற்றதுமான ஒன்றாகும்.

நண்பர்களும் குடும்பமும் பலம் கொடுக்கிறது

ஒருவனாக இருப்பதைவிட இரண்டு பேராக இருப்பது நல்லது. இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்தால், அவர்கள் தங்கள் வேலையிலிருந்து அதிகம் பெறலாம்.

10 ஒருவன் விழுந்தால், இன்னொருவன் அவனுக்கு உதவலாம். ஆனால் ஒருவன் தனியாக இருந்து விழும்போது உதவுவதற்கு யாரும் இல்லாமல் கிடப்பது மிகவும் மோசமானது.

11 இரண்டு பேர் சேர்ந்து படுப்பது கதகதப்பாக இருக்கும். தனியாக படுத்திருப்பது கதகதப்பாக இராது. 12 ஒருவனாக இருப்பவனைப் பகைவன் எளிதில் தோற்கடித்துவிடுவான். அவனால் இருவரைத் தோற்கடிப்பது கடினம். மூன்று பேராய் இருப்பது இன்னும் பலம். அவர்கள் மூன்று புரிகளை உடைய கயிறு அறுப்பதற்குக் கடினமாய் இருப்பதைப் போன்றவர்கள்.

ஜனங்கள், அரசியல் மற்றும் புகழ்

13 ஏழையாகவும் ஆனால் ஞானமுள்ளவனாகவும் உள்ள இளைய தலைவன், முதியவனாகவும் முட்டாளாகவும் உள்ள அரசனைவிடச் சிறந்தவன். முதிய அரசன் எச்சரிக்கைகளைக் கவனிக்கமாட்டான். 14 இந்த ஆட்சியில் அந்த இளைய அரசன் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். ஒருவேளை அவன் சிறையிலிருந்து நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கலாம். 15 ஆனால் இந்த வாழ்க்கையில் ஜனங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் இதனை அறிவேன். ஜனங்கள் அந்த இளைய தலைவனைப் பின்பற்றுகிறார்கள். அவன் புதிய அரசனாக வருவான். 16 ஏராளமான ஜனங்கள் அவனைப் பின்பற்றுவார்கள். ஆனால் பிறகு, அதே ஜனங்கள் அவனை விரும்பமாட்டார்கள். இதுவும் அர்த்தமற்றது. இது காற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப் போன்றது.

பொருத்தனை செய்வதைப்பற்றி எச்சரிக்கையாயிரு

நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ளப் போகும்போது கவனமாக இருங்கள். அறிவற்ற ஜனங்களைப் போன்று நீங்கள் தேவனுக்குப் பலிகளைக்கொடுப்பதைவிட அவர் கூறுவதைக் கவனிப்பது நல்லது அறிவற்றவர்கள் தொடர்ந்து தீமைகளைச் செய்வார்கள். அவர்கள் அதைப்பற்றி தெரியாதவர்களாக இருப்பார்கள். தேவனிடம் பொருத்தனை செய்யும்போது கவனமாக இருங்கள். தேவனிடம் சொல்லும் செய்திகளைப்பற்றியும் கவனமாக இருங்கள். நீங்கள் சிந்திக்காமல் பேச உங்கள் உணர்ச்சிகள் காரணமாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். தேவன் பரலோகத்தில் இருக்கிறார். நீங்கள் பூமியில் இருக்கிறீர்கள். எனவே தேவனிடம் சிலவற்றை பேசுகின்ற அவசியமே உள்ளது. இந்த வார்த்தை உண்மையானது.

மிக அதிகமான கவலைகளால் கெட்ட கனவுகள் வருகின்றன.
    முட்டாள்களிடமிருந்து மிகுதியான வார்த்தைகள் வருகின்றன.

நீ தேவனுக்கு பொருத்தனை செய்தால் அதனைக் காப்பாற்று. நீ பொருத்தனை செய்ததை நிறைவேற்ற தாமதிக்காதே. முட்டாள்களின்மேல் தேவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார். தேவனுக்குக்கொடுப்பதாக வாக்களித்தவற்றை அவருக்கு கொடுத்துவிடு. நீ பொருத்தனை செய்து அதனை நிறைவேற்ற முடியாமல் இருப்பதைவிட, பொருத்தனை செய்யாமல் போவதே நல்லது. எனவே உனக்குப் பாவம் ஏற்படும்படி நீ வார்த்தைகளைப் பயன்படுத்தாதே. “நான் சொன்னதை அந்த அர்த்தத்துடன் சொல்லவில்லை” என்று ஆசாரியனிடம் சொல்லாதே. இவ்வாறு நீ செய்தால், தேவன் உன் வார்த்தைகளால் கோபங்கொண்டு, நீ செய்த வேலைகளை எல்லாம் அழித்துவிடுவார். உனது பயனற்ற கனவுகளும் வீண் பேச்சும் உனக்குத் துன்பம் தராதபடி பார்த்துக்கொள். நீ தேவனை மதிக்க வேண்டும்.

ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு அரசன் உண்டு

சில நாடுகளில் ஏழைகள் கடினமாக உழைக்கும்படிக் கட்டாயப்படுத்தப்படுவதை நீ காணலாம். இது ஏழைகளுக்குச் செய்யும் நேர்மையல்ல. இது ஏழை ஜனங்களின் உரிமைகளுக்கு எதிரானது, ஆனால் ஆச்சரியப்படாதே. ஜனங்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்குகிற அரசனைக் கட்டாயப்படுத்த ஒரு அரசன் இருப்பான். இவர்கள் இருவரையும் கட்டாயப்படுத்த இன்னொரு அரசன் இருப்பான். ஒருவன் அரசனாக இருந்தாலும் தன் சொந்த நாட்டில் அடிமையாகிவிடுகிறான்.

செல்வத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது

10 செல்வத்தையே விரும்புகிற ஒருவன் தன்னிடமுள்ள செல்வத்தால் மட்டும் திருப்தி அடையமாட்டான். அவன் மேலும் மேலும் செல்வத்தைப் பெற்றாலும் திருப்தி அடையமாட்டான். இதுவும் அர்த்தமற்றது.

11 ஒருவன், மிகுதியான செல்வத்தைப் பெறும்போது அதைச் செலவுசெய்ய உதவும் மிகுதியான “நண்பர்”களைப் பெறுகிறான். எனவே அந்த செல்வந்தன் உண்மையில் ஆதாயமடைவது ஒன்றுமில்லை. அவன் தன் செல்வத்தைப் பார்க்க மட்டுமே முடியும்.

12 ஒருவன், பகல் முழுவதும் கடுமையாக உழைத்தால் இரவில் சமாதானமாகத் தூங்குகிறான். அவனுக்கு உண்பதற்கு மிகுதியாக உள்ளதா குறைவாக உள்ளதா என்பதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் செல்வந்தன் தன் செல்வத்தைப்பற்றிக் கவலைபட்டுக்கொண்டு தூங்காமல் இருக்கிறான்.

13 இந்த வாழ்க்கையில் நிகழும் மிகவும் சோகமான ஒரு காரியத்தை நான் கண்டிருக்கிறேன். ஒருவன் தன் செல்வத்தை எதிர்காலத்திற்காகவே சேமித்து வைக்கிறான். 14 அதன் பிறகு ஏதாவது கெட்ட காரியம் நிகழும்போது எல்லாவற்றையும் இழக்கின்றான். தன் மகனுக்குக்கொடுக்க எதுவும் இல்லாமல் போகிறது.

15 ஒருவன் தன் தாயின் உடலிலிருந்து வெளியே வரும்போது எதுவும் இல்லாமலேயே வருகிறான். அவன் மரிக்கும்போதும் எதுவும் இல்லாமலேயே போகிறான். பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கிறான். ஆனால் மரிக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. 16 இது மிகவும் சோகமானது. அவன் வந்ததுபோலவே இந்த உலகைவிட்டு விலகியும் போகிறான். “காற்றைப் பிடிக்கும் முயற்சியால்” ஒருவன் பெறப்போவது என்ன? 17 அவனது வாழ்நாட்கள் சோகத்தாலும் துன்பத்தாலும் நிறைந்துபோகும். முடிவில் அவன் சலிப்பும், நோயும், வெறுப்பும், கோபமும் அடைவான்.

வாழ்வின் பணியை அனுபவி

18 உண்டு, குடித்து, இவ்வுலகில் வாழும் குறுகிய வாழ்வில் தான் செய்யும் வேலையில் இன்பம் காண்பதுதான் ஒருவன் செய்யும் சிறப்பான செயல்கள் என்று நான் எண்ணுகிறேன். அவனுக்கு இருப்பதெல்லாம் தேவன் கொடுத்த குறுகிய வாழ்க்கை மட்டுமே. அவனுக்கு வேறெதுவும் இல்லை.

19 தேவன், ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துக்களையும் அவற்றை அனுபவிப்பதற்கான உரிமையையும் கொடுத்திருக்கும்போது அவன் அவற்றை அனுபவித்து மகிழவேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவன் தனது வேலையில் இன்பம் காண வேண்டும். இது தேவனால் கொடுக்கப்பட்ட பரிசு. 20 ஒருவனால் நீண்டகாலம் வாழமுடியாது. எனவே அவன் இதனை வாழ்வு முழுவதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். ஒருவன் செய்ய விரும்புகிற வேலைகளில் தேவன் அவனைச் சுறுசுறுப்பாக வைத்துள்ளார்.

செல்வம் மகிழ்ச்சியைக்கொண்டு வராது

வாழ்க்கையில் நான் நேர்மையாக இல்லாத இன்னொன்றையும் பார்த்திருக்கிறேன். இதனைப் புரிந்துக்கொள்ளவும் கடினமாக இருக்கிறது. ஒருவனுக்கு தேவன் பெருஞ்செல்வத்தையும், சிறப்பையும், சொத்துக்களையும் கொடுக்கிறார். ஒருவன் தனக்குத் தேவையானவற்றையும் தான் விரும்புகின்றவற்றையும் பெற்றுக்கொள்கிறான். ஆனால் தேவன் அவனை அவற்றை அனுபவிக்கும்படி விடுவதில்லை. எவனோ ஒரு அந்நியன் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போகிறான். இது மிகவும் மோசமான அர்த்தமற்ற ஒன்றாகும்.

ஒருவன் நீண்டகாலம் வாழலாம். அவனுக்கு 100 பிள்ளைகள் இருக்கலாம். ஆனால், அவன் நல்லவற்றில் திருப்தி அடையாவிட்டால், அவன் மரித்தப் பிறகு அவனை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளாவிட்டால், அவனைவிட பிறக்கும் முன்பே மரித்துப்போகும் குழந்தை சிறந்தது என்று என்னால் சொல்ல முடியும். ஒரு குழந்தை மரித்தே பிறக்குமானால் அது உண்மையில் பொருளற்றது. அது விரைவில் இருண்ட கல்லறைக்குள்ளே பெயர்கூட இல்லாமல் புதைக்கப்படும். அது சூரியனைப் பார்த்ததில்லை. அது எதையும் அறிந்துக்கொள்வதில்லை. தேவன் கொடுத்தவற்றை அனுபவிக்காத ஒருவனைவிட அது அதிக ஓய்வைப் பெறும். அவன் 2,000 ஆண்டுகள் வாழ்ந்தவனாக இருக்கலாம். எனினும் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்காவிட்டால், மரித்துப் பிறக்கும் குழந்தை அதே முடிவுக்குச் செல்ல எளிய பாதையைக் கண்டடைகிறது.

ஒருவன் மேலும் மேலும் வேலை செய்கிறான். ஏனென்றால், அவன் தனக்கு உணவு தேடிக்கொள்ளவே அவ்வாறு உழைக்கிறான். அதனால் அவன் திருப்தி அடைவதில்லை. இந்த வழியில், ஞானமுள்ள ஒருவன் அறிவற்றைவனைவிடச் சிறந்தவன் இல்லை. வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்வதை அறிந்த ஏழையாக இருப்பது நல்லது. நாம் மேலும் மேலும் பெறவேண்டும் என்று விரும்புவதைவிட இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சி அடைவதே நல்லது. எப்பொழுதும் மேலும் மேலும் விரும்புவது பயனற்றது. அது காற்றைப் பிடிக்கும் முயற்சியைப் போன்றது.

10-11 ஒரு மனிதன் தான் உருவாக்கப்பட்ட வண்ணமே, அதாவது மனிதனாக மாத்திரம் இருக்கிறான். இதைப்பற்றி விவாதம் செய்வது வீணானது. ஒருவன் இதைப்பற்றி தேவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாது. ஏனென்றால் தேவன் மனிதனைவிட வல்லமை வாய்ந்தவர். நீண்ட விவாதங்கள் உண்மையை மாற்றிவிட முடியாது.

12 பூமியில் ஒருவனது குறுகிய வாழ்நாளில், எது சிறந்தது என்று எவருக்குத் தெரியும்? அவனது வாழ்க்கை நிழலைப்போன்று கடந்துபோனது. பின்னால் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல முடியாது.

ஞான மொழிகளின் ஒரு தொகுப்பு

நல்ல மணமிக்கப் பொருட்களைவிட நல்ல பெயரைப் பெறுவது நல்லது.
    ஒருவனது பிறந்த நாளைவிட மரித்தநாளும் சிறந்ததுதான்.
விருந்துகளுக்குச் செல்வதைவிட கல்லறைக்குச் செல்வது சிறந்தது.
    ஏனென்றால் எல்லோரும் மரிக்க வேண்டியவர்களே.
    வாழ்கின்ற அனைவரும் இதனை ஒப்புக்கொள்ளவேண்டும்.
சிரிப்பைவிடச் சோகம் சிறந்தது.
    ஏனென்றால் நமது முகம் சோகமடையும்போது நமது இதயம் நல்லதாகிறது.
ஞானமுள்ளவன் மரணத்தைப்பற்றிச் சிந்திக்கிறான்.
    ஆனால் அறிவற்றவனோ எப்பொழுதும் நல்ல நேரத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான்.
ஞானமுள்ளவனால் விமர்சிக்கப்படுவது
    அறிவற்றவர்களால் புகழப்படுவதைவிட நல்லது.
அறிவற்றவர்களின் சிரிப்பு பயனற்றது.
    அது பானையின் கீழே எரியும் முட்களைப் போன்றது.
முட்கள் வேகமாக எரியும்,
    எனவே பானை சூடாகாது.
எவராவது போதுமான பணம் கொடுப்பதானால் ஞானமுள்ளவர்கள் தம் ஞானத்தை மறக்கத் தயார்.
    அப்பணம் அவனது புரிந்துகொள்ளுதலை அழித்துவிடும்.
ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது.
    ஒருவன் வீண் பெருமையும், பொறுமையின்மையும் கொள்வதைவிட கனிவும், பொறுமையும் சிறந்தது.
விரைவாகக் கோபம் அடையாதே.
    ஏனென்றால் கோபம் முட்டாளாக்கும்.
10 “இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள்’ நன்றாக இருந்தன என்று சொல்லாதே.
    என்ன நடந்தது?” என்று கேட்காதே.
    அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மை வழிநடத்தாது.

11 உன்னிடம் செல்வம் இருக்குமானால் ஞானம் அதைவிடச் சிறந்தது. உண்மையில் ஞானமுள்ளவர்கள் தேவைக்கு மிகுதியாகவே செல்வத்தைப் பெறுகிறார்கள். 12 ஞானமுள்ளவனால் செல்வந்தனாக முடியும். ஞானம் அதன் சொந்தக்காரனைப் பாதுகாக்கும்.

13 தேவனால் படைக்கப்பட்ட பொருட்களைப் பாருங்கள். ஒருவேளை அது தவறு என்று நினைத்தாலும் உன்னால் எதையும் மாற்ற முடியாது. 14 வாழ்க்கை நல்லதாக இருந்தால், அனுபவி. வாழ்க்கை கடினமாக இருக்கும்போது தேவன் நமக்கு நல்ல காலத்தையும் கஷ்டகாலத்தையும் கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பது எவருக்கும் தெரியாது.

ஜனங்களால் உண்மையில் நல்லவர்களாக முடியாது

15 எனது குறுகிய வாழ்வில் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். நல்லவர்கள் இளமையிலேயே மரித்துப்போகிறார்கள். தீயவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் பார்த்திருக்கிறேன். 16-17 ஏன் நீ உன்னையே கொன்றுகொள்கிறாய். அதிக நல்லவனாகவும் அதிக கெட்டவனாகவும் இராதே. நீ அதிக ஞானமுள்ளவனாகவும் அதிக முட்டாளாகவும் இராதே. உனக்குரிய காலத்திற்கு முன் நீ ஏன் மரிக்கவேண்டும்?

18 இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமுமாய் இருக்க முயற்சிசெய். தேவனுடைய பக்தர்களும் கூட கொஞ்சம் நல்லவர்களாகவும் கொஞ்சம் தீயவர்களாகவும் இருக்கின்றனர். 19-20 பாவமே செய்யாமல் எப்பொழுதும் நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. ஞானம் ஒருவனுக்குப் பலத்தைக்கொடுக்கிறது. பட்டணத்திலுள்ள பத்து முட்டாள் தலைவர்களைவிட ஒரு ஞானவான் பலமுள்ளவன்.

21 ஜனங்கள் சொல்லுகின்ற அனைத்தையும் நீ கேட்காதே. உனது சொந்த வேலைக்காரனே உனக்கு எதிராகப் பேசுவதை நீ கேட்கலாம். 22 மற்றவர்களைப்பற்றி நீயே பல தடவை அவதூறு சொல்லியிருப்பதை நீ அறியலாம்.

23 நான் எனது ஞானத்தைப் பயன்படுத்தி இவற்றைப்பற்றிச் சிந்தித்தேன். நான் உண்மையில் ஞானமுள்ளவனாக இருக்க விரும்பினேன். ஆனால் அது முடியாமற்போனது. 24 ஏன் பல விஷயங்கள் இவ்வாறு இருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இதனைப் புரிந்துக்கொள்வது எவருக்கும் கடினம்தான். 25 நான சற்றுக் கடினப்பட்டு முயன்று ஞானத்தைப் பெற்றேன். நான், எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுகொள்ள விரும்பினேன்.

நான் என்ன கற்றுக்கொண்டேன்? கெட்டவனாக இருப்பது முட்டாள்தனம் என்பதைக் கற்றேன். ஒரு அறிவற்றவனைப்போன்று நடிப்பதும் பைத்தியகாரத்தனமானதுதான். 26 சில பெண்கள் கண்ணிகளைப்போன்று ஆபத்தானவர்கள் என்பதை அறிந்துக்கொண்டேன். அவர்களின் இதயம் வலைகளைப் போன்றது, அவர்களது கைகள்

சங்கிலிகளைப் போன்றவை. இத்தகைய பெண்களிடம் அகப்பட்டுக்கொள்வது மரணத்தைவிட பயங்கரமானது. தேவனைப் பின்பற்றுகிற ஒருவன் இத்தகைய பெண்களிடம் இருந்து விலகி ஓடுவான். பாவியோ இவர்களிடம் அகப்பட்டுக்கொள்வான்.

27-28 பிரசங்கி, “என்னால் எத்தகைய பதிலைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காகவே நான் இவற்றையெல்லாம் சேர்க்கிறேன். நான் இன்னும் பதில்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் ஆயிரத்தில் ஒருவனை நல்லவனாகக் கண்டுபிடித்தேன். ஆனாலும் ஒரு நல்ல பெண்ணைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.”

29 “தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார். ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக் கண்டுபிடித்தனர். இதுவும் நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடமாகும்” என்று கூறுகிறான்.

ஞானமும் வல்லமையும்

ஒரு ஞானமுள்ளவனைப்போன்று எவராலும் ஒன்றைப் புரிந்துக்கொள்ளவும், விளக்கவும் முடியாது. அவனது ஞானம் அவனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. இது ஒருவனது சோகமுள்ள முகத்தை மகிழ்ச்சியுள்ளதாக மாற்றும்.

நீங்கள் அரசனின் கட்டளைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீ இதனைச் செய்யவேண்டும். ஏனென்றால் ஏற்கெனவே தேவனுக்கு வாக்களித்து இருக்கிறாய். அரசனுக்கு ஆலோசனை சொல்ல அஞ்சவேண்டாம். தவறான ஒன்றுக்கு ஆதரவு செலுத்தவேண்டாம் அரசன் தனக்குப் பிடித்தமான ஆணைகளையே தருகிறான். அரசனுக்கு ஆணைகளைத் தரும் அதிகாரம் உள்ளது. எதைச் செய்ய வேண்டும் என்று எவரும் அவனுக்குச் சொல்வதில்லை. அரசனது ஆணைகளுக்குக் கீழ்படிந்தால் ஒருவன் பாதுகாப்பாக இருப்பான். இதைச் செய்ய வேண்டிய சரியான கால்த்தை ஞானமுள்ளவன் அறிவான். சரியானவற்றை எப்போது செய்யவேண்டும் என்பதையும் அவன் அறிவான்.

எல்லாவற்றையும் செய்ய ஒருவனுக்குச் சரியான காலமும், சரியான வழியும் உள்ளன. எனவே ஒவ்வொருவனும் ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு எதைச் செய்யவேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதில் குழப்பம் இருந்தாலும், பல துன்பங்களில் உழன்றாலும் ஒருவன் அதனைச் செய்யவேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எவரும் அவனிடம் சொல்வதில்லை.

எவருக்கும் தன் ஆவியை விடாமல் தங்கவைக்கும் வலிமை இல்லை. எவருக்கும் தன் சாவைத் தடுக்கும் அதிகாரமில்லை. போர்க் காலத்தில் தன் விருப்பப்படி போய்வர ஒரு போர் வீரனுக்கு சுதந்திரம் இல்லை. இதுபோலவே, ஒருவன் பாவம் செய்தால் அது அவனை சுதந்திரம் உள்ளவனாக இருக்கும்படி செய்யாது.

நான் அனைத்தையும் பார்த்தேன். உலகில் நடைபெறுகிற அத்தனையையும் பற்றி நான் கடுமையாகச் சிந்தித்தேன். ஜனங்கள் எப்பொழுதும் மற்றவர்களை ஆள்வதற்கான வல்லமையைப் பெறுவதற்காகப் போராடுகிறார்கள் என்பதை நான் பார்த்தேன். இது அவர்களுக்குக் கெட்டது.

10 தீய ஜனங்களுக்கு அழகான சிறந்த சவ அடக்கங்கள் நடைபெறுவதை நான் பார்த்தேன். அடக்கச் சடங்கு முடிந்து ஜனங்கள் வீட்டிற்குப் போனதும் மரித்துப்போன தீயவர்களைப்பற்றி நல்லவற்றைக் கூறினார்கள். இத்தகைய காரியங்கள் தீயவன் வாழ்ந்த அதே நகரத்திலேயே நடந்து வருகின்றன. இது அர்த்தமற்றது.

நியாயம், வெகுமதிகள், தண்டனை

11 சில நேரங்களில் ஜனங்கள் தாம் செய்கிற தீமைக்கு உடனே தண்டிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கான தண்டனை மெதுவாக வரும். இது மற்றவர்களையும் தீமை செய்யும்படி தூண்டும்.

12 ஒரு பாவி நூற்றுக்கணக்கான தீமைகளைச் செய்யலாம். அவனுக்கு நீண்ட வாழ்க்கையும் இருக்கலாம். ஆனால், தேவனுக்குக் கீழ்ப்படிவதும் மரியாதை செலுத்துவதும் இன்னும் சிறந்ததாக நான் கருதுகிறேன். 13 தீயவர்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துவதில்லை. எனவே அவர்கள் நல்லவற்றைப் பெறுவதில்லை. அவர்கள் நீண்ட வாழ்க்கையைப் பெறுவதில்லை. சூரியன் அஸ்தமிக்கும்போது நிழல் நீண்டு தோன்றுவதுபோன்று, அவர்களின் வாழ்க்கை வளருவதில்லை.

14 நியாயமாகத் தோன்றாத சில காரியமும் உலகில் நடக்கிறது. கெட்டவைகள் கெட்டவர்களுக்கும், நல்லவைகள் நல்லவர்களுக்கும் நிகழவேண்டும். ஆனால் சில நேரங்களில் நல்லவர்களுக்கு தீயவைகளும் தீயவர்களுக்கு நல்லவைகளும் ஏற்படலாம். எனினும் அவை நல்லதன்று. 15 எனவே நான் வாழ்க்கையை அனுபவிப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தேன். ஏனென்றால், ஜனங்கள் தம் வாழ்வில் செய்யவேண்டிய நல்ல காரியங்களாவன: உண்பது, குடிப்பது, வாழ்க்கையை அனுபவிப்பதுமேயாகும். தேவன் இவ்வுலகில் தங்களுக்குக்கொடுத்த கடினமான வேலையில் இன்பம் காண்பதற்காகவாவது இவை உதவும்.

தேவன் செய்வதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை

16 இந்த வாழ்வில் ஜனங்கள் செய்வதை எல்லாம் நான் கவனமாகப் படித்திருக்கிறேன். ஜனங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். அவர்கள் இரவும் பகலும் உழைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை. 17 நானும் தேவன் செய்கிறவற்றைப் பார்த்தேன். உலகில் தேவன் செய்கிறவற்றை ஜனங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒருவன் அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அவனால் முடியாது. ஞானமுள்ள ஒருவன் தேவனுடைய செயல்களைப் புரிந்துகொண்டதாகக் கூறலாம். ஆனால் அதுவும் உண்மையில்லை. இவற்றையெல்லாம் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.

மரணம் நியாயமானதா?

நான் இவை அனைத்தையும்பற்றி வெகு கவனமாகச் சிந்தித்தேன். தேவன், நல்லவர்களும் ஞானவான்களும் செய்வதையும் அவர்களுக்கு ஏற்படுவதையும் கட்டுப்படுத்துவதை நான் பார்த்தேன். அவர்கள் அன்பு செலுத்தப்படுவார்களா அல்லது வெறுக்கப்படுவார்களா என்று அவர்களுக்குத் தெரியாது. எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

ஆனால், நாம் அனைவரும் மரிக்கிறோம். இது அனைவருக்கும் நிகழ்கிற ஒன்று. மரணம் நல்லவர்கள் தீயவர்கள் என அனைவருக்கும் ஏற்படுகின்றது. சுத்தமானவர்கள் சுத்தமில்லாதவர்கள் என அனைத்து ஜனங்களுக்கும் மரணம் ஏற்படுகின்றது. பலி கொடுப்பவர்கள் பலிகொடுக்காதவர்கள் என அனைவருக்கும் மரணம் ஏற்படுகின்றது. பாவியைப் போன்றே நல்லவனும் மரித்துப்போகிறான். தேவனுக்குச் சிறப்பான பொருத்தனைகள் செய்கிறவனைப் போன்றே தேவனுக்குப் பொருத்தனை செய்யப் பயப்படுகிறவனும் மரித்துப்போகிறான்.

நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து காரியங்களிலும் மிக மோசமான காரியம் அனைத்து ஜனங்களும் ஒரே வழியில் முடிந்து போவதுதான். ஜனங்கள் எப்பொழுதும் பாவங்களையும் முட்டாள்தனங்களையும் சிந்தித்துக்கொண்டிருப்பதும் கெட்டதுதான். அவ்வகை எண்ணங்கள் மரணத்திற்கே அழைத்துச் செல்லுகின்றன. வாழ்ந்துகொண்டிருக்கிற எவருக்கும் நம்பிக்கையுண்டு. அவன் யார் என்பது அக்கறையில்லை.

ஆனால் “மரித்துப்போன சிங்கத்தைவிட உயிரோடு உள்ள நாய் சிறந்தது”

என்னும் கூற்று உண்மையானது.

உயிரோடுள்ளவர்கள் தாம் மரித்துப்போவோம் என்பதை அறிந்தவர்கள். ஆனால் மரித்துப்போனவர்கள் எதையும் அறியமாட்டார்கள். மரித்துப் போனவர்களுக்கு எந்த விருதும் இல்லை. ஜனங்கள் அவர்களை விரைவில் மறந்துவிடுவார்கள். ஒருவன் மரித்த பிறகு, அவனது அன்பு, வெறுப்பு, பொறாமை அனைத்தும் போய்விடுகின்றது. மரித்துப்போனவர்களுக்குப் பூமியில் நிகழ்ந்த இத்தனையிலும் பங்கில்லை.

முடியும்போது வாழ்க்கையை அனுபவி

இப்போது போய் உனது உணவை உண்டு மகிழ்ச்சியைப் பெறு. உனது திராட்சைரசத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைவாய். நீ இவற்றைச் செய்வது தேவனுக்கு உடன்பாடானதுதான். சிறந்த ஆடைகளை அணிந்து அழகாகக் காட்சியளி. நீ விரும்புகிற மனைவியோடு வாழ்க்கையை அனுபவி. குறுகிய உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அனுபவி. பூமியில் குறுகிய இந்த வாழ்வை தேவன் உனக்குக்கொடுத்திருக்கிறார். உனக்குரியது எல்லாம் இதுதான். எனவே இவ்வாழ்வில் நீ செய்யவேண்டிய வேலைகளுக்கு மகிழ்ச்சி அடைவாய். 10 எப்பொழுதெல்லாம் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியுமோ, அதனைச் செய். கல்லறையில் உனக்கு வேலையில்லை. அங்கு சிந்தனையும் அறிவும் ஞானமும் இல்லை. நாம் அனைவரும் மரணம் என்ற இடத்துக்கே போய்க்கொண்டிருக்கிறோம்.

அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? நாம் என்ன செய்யலாம்?

11 நான் வாழ்க்கையில் நியாயமற்ற சிலவற்றைப் பார்த்தேன். வேகமாக ஓடுகிறவன் பந்தயத்தில் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை. வலுமிக்க படை போரில் எப்பொழுதும் வெற்றிபெறுவதில்லை. ஞானத்தில் சிறந்தவன் எப்பொழுதும் அதிகமாகச் சம்பாதிப்பதில்லை. அறிவுக் கூர்மைமிக்கவன் எப்பொழுதும் செல்வத்தைப் பெறுவதில்லை. கல்வி அறிவுமிக்கவன் எப்பொழுதும் தனக்குரிய பாராட்டுகளைப் பெறுவதில்லை; நேரம் வரும்போது ஒவ்வொருவருக்கும் தீமையே ஏற்படுகின்றன.

12 அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவனால் என்றைக்கும் அறிய முடியாது. அவன் வலைக்குள் அகப்பட்ட மீனைப்போன்று இருக்கிறான். அம்மீனுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. அவன் கண்ணியில் அகப்பட்ட பறவையைப் போன்றவன். அப்பறவை அடுத்து நடக்கப்போவதை அறியாது. இதுபோலவே, ஒருவன் தீயவற்றால் கண்ணியில் அகப்படுகிறான். அது திடீரென்று அவனுக்கு ஏற்படுகின்றது.

ஞானத்தின் வல்லமை

13 இந்த வாழ்வில் ஒருவன் ஞானமுள்ளவற்றைச் செய்வதை நான் பார்த்தேன். எனக்கு அது மிக முக்கியமாகப்பட்டது. 14 மிகக் குறைந்த எண்ணிக்கைக்கொண்ட ஜனங்களையுடைய நகரம் இருந்தது. ஒரு அரசன் அதனைச் சுற்றி தன் படை வீரர்களை நிறுத்தி அதற்கு எதிராகப் போரிட்டான். 15 ஆனால் அந்நகரில் ஒரு ஞானி இருந்தான். அவன் ஏழை. ஆனால் அந்நகரைக் காப்பாற்ற தனது ஞானத்தைப் பயன்படுத்தினான். எல்லாம் நடந்து முடிந்தபிறகு, அந்த ஏழையை ஜனங்கள் மறந்துவிட்டார்கள். 16 எனினும் நான் இப்பொழுதும் ஞானம் பலத்தைவிட சிறந்தது என்பேன். அந்த ஜனங்கள் ஏழையின் ஞானத்தை மறந்துவிட்டார்கள். அவன் சொன்னதைக் கவனிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஞானமே சிறந்தது என்று நான் இன்னமும் நம்புகிறேன்.

17 ஒரு முட்டாள் அரசனால் மிகச் சத்தமாகச் சொல்லப்படுகிற வார்த்தைகளைவிட
    ஒரு ஞானியின் மென்மையான வார்த்தைகள் சிறந்தவை.
18 போரில் ஞானமானது வாள்களையும் ஈட்டிகளையும்விடச் சிறந்தவை.
    ஆனால் ஒரு முட்டாளால் பல நல்லவற்றை அழிக்க முடியும்.

10 மிகச்சிறந்த நறுமணப் பொருட்களைக் கூட சில மரித்துப்போன ஈக்கள் கெடுத்து நாற்றமடையச் செய்துவிடும். இதைப்போலவே, மிகுதியான ஞானத்தையும், மரியாதையையும் முட்டாள்தனம் கெடுத்துவிடும்.

ஞானமுள்ளவனின் எண்ணங்கள் அவனைச் சரியான வழியில் நடத்திச்செல்லும். முட்டாளின் எண்ணங்கள் அவனைத் தவறான வழியில் நடத்திச் செல்லும். ஒரு முட்டாள் சாலையில் நடந்து போகும்போதுகூடத் தனது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொண்டிருப்பான். எனவே ஒவ்வொருவனும் அவனை முட்டாள் என்று கண்டுகொள்வான்.

எஜமான் உன்மீது கோபத்தோடு இருக்கிறான் என்பதற்காக உனது வேலையை விட்டுவிடாதே. நீ அமைதியாகவும் உதவியாகவும் இருந்தால் பெரிய தவறுகளைக்கூட நீ திருத்திக்கொள்ளலாம்.

இந்த வாழ்வில் நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சரியன்று. இது ஆள்பவர்கள் செய்கின்ற தவறுகள். முக்கியமான பொறுப்புகள் முட்டாள்களுக்குக்கொடுக்கப்படுகின்றன. செல்வம் உள்ளவர்களோ முக்கியம் இல்லாத பொறுப்புகளைப் பெறுகின்றனர். பிரபுக்கள் வேலைக்காரர்களைப்போன்று பின்னால் நடந்துபோகும்போது, வேலைக்காரர்கள் குதிரையின்மீது சவாரி செய்வதைப் பார்த்தேன்.

ஒவ்வொரு வேலையும் அதற்குரிய ஆபத்துகளைக்கொண்டவை

குழிதோண்டுகிற ஒருவன் அந்தக் குழிக்குள்ளேயே விழுவான். சுவரை இடித்துத் தள்ளுகிற ஒருவன் பாம்பு கடித்து மரிப்பான். பெருங்கற்களை நகர்த்திக்கொண்டிருக்கிறவன் அதனாலேயே காயப்படுவான். ஒருவன் மரங்களை வெட்டுவதும் ஆபத்தானது. அம்மரம் அவன்மேலேயே விழுந்துவிடலாம்.

10 ஆனால் ஞானம் அந்த வேலையையும் எளிமைப்படுத்தும். மழுங்கலான கத்தியால் வெட்டுவது கடினம். ஒருவன் அந்தக் கத்தியைக் கூர்மைப்படுத்தினால் வேலை எளிதாகும். ஞானமும் இதைப் போன்றதுதான்.

11 ஒருவனுக்குப் பாம்புகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரிந்திருக்கலாம். ஆனால் அவன் அருகில் இல்லாதபோது அந்தப் பாம்பு வேறு எவரையாவது கடித்துவிடுவதால் அவனது திறமை பயனற்றது. ஞானமும் இதைப் போன்றதுதான்.

12 ஞானமுள்ளவனின் வார்த்தைகள் பாராட்டைப் பெற்றுத்தரும்.
    ஆனால் முட்டாளின் வார்த்தைகள் அழிவைக்கொண்டுவரும்.

13 முட்டாள் முட்டாள்தனமானவற்றைக் கூறத் தொடங்குவான். முடிவில் அவன் பைத்தியக்காரத்தனமாகக் கூறுவான். 14 ஒரு முட்டாள் எப்பொழுதும் அவன் செய்யப் போவதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஒருவனும் பின்னால் என்ன நடக்கும் என்பதைக் கூறவில்லை.

15 முட்டாள் தன் வீட்டுக்குரிய வழியை அவ்வளவு சுறுசுறுப்பாக அறிந்துகொள்ளமாட்டான்.
    எனவே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலைச் செய்வான்.

உழைப்பின் மதிப்பு

16 ஒரு அரசன் குழந்தையைப்போன்று இருந்தால், அது நாட்டிற்குப் பெருங்கேடாகும். அரசன் தன் காலத்தை உண்பதில் கழித்தாலும் ஒரு நாட்டிற்குக் கேடுதான். 17 அரசன் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் நாட்டுக்கு அது மிகவும் நல்லது. ஆட்சியாளர்கள் குடிப்பதையும் உண்பதையும் கட்டுப்படுத்திக்கொண்டால், நாட்டுக்கு நல்லதுதான். இத்தகையவர்கள் உண்பதும் குடிப்பதும் பலம் பெறுவதற்காகத் தானே ஒழிய குடித்து வெறிப்பதற்காக அல்ல.

18 ஒருவன் வேலை செய்வதற்குச் சோம்பேறியாக இருந்தால் அவனது வீடு ஒழுக ஆரம்பித்துவிடும்.
    வீட்டுக்கூரை விழுந்துவிடும்.

19 ஜனங்கள் உண்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். திராட்சைரசம் வாழ்வை மகிழ்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனால் பணம் பல சிக்கல்களைத் தீர்க்கிறது.

வீண் பேச்சு

20 அரசனைப்பற்றிக் கெட்ட செய்திகளைக் கூறாதே. அவனைப்பற்றிக் கெட்டதாகவும் நினைக்காதே. செல்வந்தர்ளைப்பற்றியும் கெட்ட செய்திகளைக் கூறாதே. நீ உன் வீட்டில் தனியாக இருந்தாலும் இவ்வாறு கூறாதே. ஏனென்றால், சிறு பறவைக்கூட பறந்துபோய் அந்தச் செய்தியை அவர்களிடம் கூறிவிடும்.

எதிர்காலத்தைத் தைரியமாக எதிர்கொள்

11 நீ எங்கு சென்றாலும் நல்லவற்றையே செய். அப்போது நீ செய்த நன்மைகள் உனக்கே திரும்பவரும்.

உனக்குரிய பொருட்களைப் பல்வேறு நற்காரியங்களுக்காகப் பங்கிட்டுக்கொடு. பூமியில் என்னென்ன கேடுகள் நடைபெறும் என்று உனக்குத் தெரியாது.

நீ சிலவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேகம் மழையால் நிறைந்திருந்தால், அது பூமியில் தண்ணீரை ஊற்றும். மரமானது வடக்கே விழுந்தாலும் தெற்கே விழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கும்.

ஆனால் சிலவற்றைப்பற்றி உன்னால் உறுதியாகக் கூறமுடியாது. நீ ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவன் சரியான பருவம் வரட்டுமென்று காத்திருந்தால் அவனால் விதைக்க முடியாது. ஒவ்வொரு மேகத்தையும் பார்த்து மழை வருமோ என்று அஞ்சுகிறவன் ஒருபோதும் அறுவடை செய்யமாட்டான்.

காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது. தாயின் கருவிலே ஒரு குழந்தை எவ்வாறு வளர்கின்றது என்பதும் உனக்குத் தெரியாது. இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.

எனவே அதிகாலையிலே நடுவை செய். மாலைவரை உன் வேலையை நிறுத்தாமல் செய். ஏனென்றால், எது உன்னை செல்வந்தனாக்கும் என்பதும் உனக்குத் தெரியாது. நீ செய்கிற அனைத்துமே உனக்கு வெற்றியைத் தரலாம்.

உயிரோடு இருப்பது நல்லது. சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது நல்லது. உன் வாழ்நாளில் உள்ள ஒவ்வொரு நாளையும் நீ அனுபவிக்கவேண்டும். எவ்வளவுகாலம் வாழ்வாய் என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் நீ மரித்துப் போவாய் என்பதை நினைத்துக்கொள். நீ உயிரோடிருக்கும் நாட்களைவிட மரித்த பின் உள்ள நாட்களே மிக அதிகம். நீ மரித்த பிறகு எதையும் செய்யமுடியாது.

இளமையாக இருக்கும்போது தேவனுக்குச் சேவை செய்

இளைஞர்களே! இளமையாய் இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள். அனுபவியுங்கள். உங்கள் மனம் போனபடி இருங்கள். நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் செயல்களையெல்லாம் தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். 10 உங்கள் கோபம் உங்களைக் கட்டுப்படுத்தும்படி விடாதீர்கள். உங்கள் உடல் உங்களைப் பாவம் செய்யத் தூண்டும்படி விடாதீர்கள். ஜனங்கள், இளமையாய் இருக்கும்போது முட்டாள்தனமானவற்றையே செய்வார்கள்.

முதுமையின் பிரச்சனைகள்

12 நீ இளமையாக இருக்கும்போது உன்னைப் படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள் வருவதற்குமுன் நினைத்துக்கொள். “நான் என் வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன்” என்று நீ சொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை.

நீ இளமையாக இருக்கும்போதே, சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் உன் கண்களுக்கு இருண்டுபோகும் காலம் வருவதற்கு முன்னரே உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள் ஒரு புயலுக்குப் பின் மீண்டும் மீண்டும் புயல் வருவதுபோன்று உனக்குத் துன்பங்கள் வந்துகொண்டிருக்கும்.

அப்போது உனது கைகள் தம் பலத்தை இழக்கும். உனது கால்கள் பலவீனமாகி வளைந்துபோகும். உனது பற்கள் எல்லாம் விழுந்துபோய் உணவை நீ தின்னமுடியாத நிலைமை ஏற்படும். உன் கண்கள் தெளிவாகப் பார்க்காது. உன் காதுகள் கேட்க கஷ்டப்படும். வீதியில் உள்ள சப்தங்களை உன் காதுகள் கேட்காது. தானியங்களை அரைக்கிற கல் எந்திரம் கூட உனக்கு அமைதியுடன் இருப்பதாகத் தோன்றும். பெண்களின் பாடலை உன்னால் கேட்கமுடியாது. பறவைகளின் பாடல் ஒலிகூட உன்னை அதிகாலையில் எழுப்பிவிடும். ஏனென்றால் உன்னால் தூங்கமுடியாது.

நீ மேடான இடங்களைக் கண்டு பயப்படுவாய். உன் வழியில் எதிர்ப்படும் சிறியவற்றுக்குக்கூடப் பயப்படுவாய். வாதுமை மரத்தின் பூக்களைப்போன்று உனது தலைமயிர் வெளுத்துப்போகும். வெட்டுக் கிளியைப் போன்று நீ உன்னையே இழுத்துக்கொண்டு திரிவாய். வாழ்வதற்கான ஆசையை நீ இழந்துவிடுவாய். பிறகு நீ நிரந்தரமான கல்லறை வீட்டிற்குச் செல்வாய். துக்கம் கொண்டாடுகிறவர்கள் தெருவில் கூடி உனது உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்.

மரணம்

நீ இளமையாக இருக்கும்போதே வெள்ளிக் கயிறுகள் கட்டுவிட்டு, பொன் கிண்ணங்கள் நொறுங்கும் முன்னால் கிணற்றிலே சால் உடைவது போல் உன் வாழ்வு பயனற்றதாக போகும் முன்னால்,
    கிணற்றிலே மூடப்பட்டிருக்கும் கல் உடைந்து நொறுங்கி விழுவது போல், உன் வாழ்வு பயனற்றுப் போகும் முன்னால், உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள்.
உன் உடல் பூமியிலிருந்து வந்தது.
    நீ மரித்துப்போகும்போது, உன் உடல் திரும்பவும் மண்ணுக்குப் போகும்.
ஆனால் உனது ஆவி தேவனிடமிருந்து வந்தது.
    நீ மரித்துப்போகும்போது உனது ஆவி திரும்பவும் தேவனிடமே போகும்.

இவ்வாறு அனைத்தும் பொருளற்றுப் போகும். இவை அனைத்தும் காலம் வீணானதிற்குச் சமம் என்று பிரசங்கி கூறுகிறார்.

முடிவுரை

பிரசங்கி ஞானமுடையவர். அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பிரசங்கி மிக கவனமாகப் படித்து தன் பாடங்களைக் கற்றுத்தர ஒழுங்குபடுத்தினார். 10 சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க பிரசங்கி மிகக் கடுமையாக முயற்சி செய்தார். அவர் உண்மையானதும் செம்மையானதுமான போதனைகளை எழுதி வைத்தார்.

11 ஞானிகளின் வார்த்தைகள் மிருகங்களை வழி நடத்தப் பயன்படும் கூர்மையான கோல்களைப்போல இருக்கும். அவர்களின் போதனைகள் என்றும் உடைந்துபோகாத உறுதியான ஆப்புகளைப் போன்றிருக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டும் இப்போதனைகள் நம்பிக்கைக்கு உரியவை. இந்த ஞானப் போதனைகள் எல்லாம், அதே மேய்ப்பனிடமிருந்து (தேவன்) வந்தவை. 12 என் மகனே! அப்போதனைகளைக் கற்றுக்கொள். ஆனால் மற்ற புத்தகங்களைப்பற்றி ஜாக்கிரதையாக இரு. ஜனங்கள் எப்பொழுதும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாக வாசிப்பதும் உன்னைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும்.

13-14 இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.

இது சாலொமோனின் மிகவும் அற்புதமான பாடல்

பெண் தான் நேசிக்கிற மனிதனுக்கு

என்னை முத்தங்களால் மூடிவிடும்.
    திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது.
உமது வாசனைத் திரவியங்கள் அற்புதமானவை,
    ஆனால் உமது நாமம் சிறந்த வாசனைப் பொருட்களைவிட இனிமையானது.
    அதனால்தான் இளம் பெண்கள் உம்மை விரும்புகின்றனர்.
என்னை உம்மோடு சேர்த்துக்கொள்ளும்.
    நாம் ஓடிவிடுவோம்.
அரசன் என்னைத் தன் அறைக்கு எடுத்துச்சென்றார்.

எருசலேமின் பெண்கள் மனிதனுக்கு

நாங்கள் உம்மில் களிப்படைந்து மகிழ்வோம்.
    திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது என்பதை மனதில்கொள்ளும். நல்ல காரணங்களுக்காகவே இளம்பெண்கள் உம்மை விரும்புகின்றனர்.

அவள் பெண்களோடு பேசுகிறாள்

எருசலேமின் மகள்களே, கேதார் மற்றும் சாலொமோனின் கூடாரங்களைப்போல நான் கறுப்பாகவும்,
    அழகாகவும் இருக்கிறேன்.
நான் எவ்வளவு கறுப்பென்று பார்க்கவேண்டாம்.
    வெய்யில் என்னை இவ்வளவு கறுப்பாக்கிவிட்டது.
    என் சகோதரர்கள் என் மீது கோபம் அடைந்தார்கள்.
    அவர்களின் திராட்சைத் தோட்டங்களைக் கவனிக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தினர்.
    எனவே என்னை நானே கவனித்துக்கொள்ள முடியவில்லை.

அவள் அவனிடம் பேசுகிறாள்

நான் என் முழு ஆத்துமாவோடும் உம்மை நேசிக்கிறேன்.
    எனக்குச் சொல்லும்; உமது மந்தையை எங்கே மேயவிடுகிறீர்?
    மதியானத்தில் அதனை எங்கே இளைப்பாறச் செய்வீர்?

நான் உம்மோடு இருக்க வரவேண்டும்.

    அல்லது உமது நண்பர்களின் மந்தைகளைப் பராமரிப்பதற்கு அமர்ந்தப்பட்ட பெண்ணைப்போல் இருப்பேன்.

அவன் அவளோடு பேசுகிறான்

நீ எவ்வளவு அழகான பெண்
    என்ன செய்ய வேண்டுமென்று உனக்கு நிச்சயமாய் தெரியும்.
மந்தையைப் பின்தொடர்ந்து போ.
    மேய்ப்பர்களின் கூடாரத்தினருகே இளம் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
என் அன்பே! பார்வோனின் இரதங்களில் பூண்டிய
    ஆண்குதிரைகளுக்குக் கிளர்ச்சியூட்டும் பெண் குதிரையைவிட நீ என்னைக் கிளர்ச்சியூட்டி மகிழ்விக்கிறாய்.
    அக்குதிரைகள் தங்கள் முகத்தின் பக்கவாட்டிலும் கழுத்தை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
10-11 பொன்னாலான தலையணியும் வெள்ளியாலான கழுத்துமாலையும் உனக்குரிய அலங்காரங்களாயிருக்கின்றன.
    உனது கன்னங்கள் மிக அழகானவை.
    அவை பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
    உனது கழுத்தும் மிக அழகானது.
    அது வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அவள் பேசுகிறாள்

12 எனது வாசனைப்பொருளின் மணமானது
    கட்டிலின்மேல் இருக்கும் அரசனையும் சென்றடைகிறது.
13 என் நேசர் என் கழுத்தை சுற்றிலும் கிடந்து இரவில் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் வெள்ளைப்போளப் பையைப் போன்றவர்.
14     என் நேசர் எனக்கு எங்கேதி திராட்சைத் தோட்டங்களில் முளைத்துள்ள மருதோன்றிப் பூங்கொத்துப் போன்றவர்.

அவன் பேசுகிறான்

15 என் அன்பே, நீ மிகவும் அழகானவள்.
    ஓ...நீ மிக அழகானவள் உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றவை.

அவள் பேசுகிறாள்

16 என் நேசரே! நீரும் மிக அழகானவர்
    நீர் மிகவும் கவர்ச்சியானவர்.
நமது படுக்கை புதியதாகவும், மனதை மகிழ்விப்பதாகவும் உள்ளது.
17     நமது வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரங்களாலானவை.
    நமது மேல்வீடு தேவதாரு மரத்தாலானவை.

நான் சரோனில் பூத்த ரோஜா.
    பள்ளத்தாக்குகளில் மலர்ந்த லீலிபுஷ்பம்!

அவன் பேசுகிறான்

எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல்
    நீ மற்ற பெண்களுக்கிடையில் இருக்கிறாய்.

அவள் பேசுகிறாள்

என் அன்பரே! காட்டு மரங்களுக்கிடையில்
    கிச்சிலி மரத்தைப்போல் மற்ற ஆண்களுக்கிடையில் நீர் இருக்கிறீர்.

அவள் பெண்களுடன் பேசுகிறாள்

எனது நேசரின் நிழலில் உட்கார்ந்துகொண்டு நான் மகிழ்கிறேன்.
    அவரின் கனி எனது சுவைக்கு இனிப்பாக உள்ளது.
என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார்.
    என்மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதே அவரது நோக்கம்.
காய்ந்த திராட்சையினால் செய்யப்பட்ட பலகாரத்தால் என்னைப் பலப்படுத்துங்கள்.
    கிச்சிலிப் பழங்களால் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுங்கள்.
    ஏனென்றால் நான் நேசத்தினிமித்தம் பலவீனமாகியுள்ளேன்.
என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது.
    அவரது வலது கை என்னை அணைத்துக்கொள்கிறது.
எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை,
    நீங்கள் என் அன்பை விழிக்கச் செய்யாமலும், அல்லது எழுப்பாமலும் இருக்க மான்கள் மீதும் காட்டு மான்கள் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.

அவள் மீண்டும் பேசுகிறாள்

நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்.
    இங்கே அது வந்தது.
    மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது.
    குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது.
என் நேசர் வெளிமான்
    அல்லது குட்டி மானைப் போன்றவர்.
அவர் எங்கள் சுவற்றுக்குப் பின்னால் நிற்பதையும்,
    ஜன்னல் திரையின் வழியாகப் பார்ப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
10 என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே!
    வெளியே போகலாம்.
11 பார், மழைக்காலம் போய்விட்டது.
    மழை வந்து போனது.
12 பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன.
    இது பாடுவதற்குரிய காலம்.
    கவனி, புறாக்கள் திரும்பிவிட்டன.
13 அத்தி மரங்களில் காய்கள் தோன்றியுள்ளன.
    திராட்சைக் கொடிகள் மணம் வீசுவதை நுகர்ந்துபார்.
எழுந்திரு என் அன்பே, அழகே,
    நாம் வெளியே போகலாம்.

அவன் பேசுகிறான்

14 என் புறாவே நீ கன்மலையின் வெடிப்புகளிலும்
    மலைகளின் மறைவிடங்களிலும் மறைந்துள்ளாய்.
உன்னைப் பார்க்கவிடு,
    உன் குரலைக் கேட்கவிடு,
உன் குரல் மிக இனிமையானது.
    நீ மிக அழகானவள்” என்று கூறுகிறார்.

அவள் பெண்களுடன் பேசுகிறாள்

15 திராட்சை தோட்டங்களை அழிக்கிற சிறு நரிகளையும்,
    குழிநரிகளை எங்களுக்காக பிடியுங்கள்.
    நம் திராட்சைத் தோட்டங்கள் இப்போது பூத்துள்ளன.
16 என் நேசர் எனக்குரியவர்.
    நான் அவருக்குரியவள்.
17     பகல் தனது கடைசி மூச்சை சுவாசிக்கும்போதும்,
    நிழல் சாயும்போதும், அவர் லீலி மலர்களுக்கிடையில் மேய்கிறார்.
என் அன்பரே திரும்பும்,
    இரட்டைக் குன்றுகளின் பகுதிகளிலுள்ள வெளிமான்களைப் போலவும்,
    குட்டி மான்களைப் போலவும் இரும்.

அவள் பேசுகிறாள்

இரவில் என் படுக்கைமேல்
    நான் நேசருக்காகக் காத்திருக்கிறேன்.
நான் அவருக்காக எதிர்பார்த்திருந்தேன்.
    ஆனால் என்னால் அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
இப்போது எழுந்திருந்து
    நான் நகரைச் சுற்றி வருவேன்.
அங்குள்ள வீதிகளிலும் சந்துகளிலும்
    என் நேசரைத் தேடுவேன்.
நான் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    ஆனால் என்னால் அவரைக் காணமுடியவில்லை.
நகர காவலர்கள் என்னைக் கண்டார்கள்.
    நான் அவர்களிடம், “எனது நேசரைக் கண்டீர்களா?” எனக் கேட்டேன்.
காவலர்கள் என்னைவிட்டுப் போனதும்,
    நான் என் நேசரைக் கண்டுபிடித்தேன்.
அவரைப் பற்றிக்கொண்டேன்.
    என் தாய் வீட்டில் என்னைப் பெற்றெடுத்த, என் தாயின் அறைக்கு அவரை நான் அழைத்துச் செல்லும்வரை நான் அவரைப் போகவிடவில்லை.

அவள் பெண்களோடு பேசுகிறாள்

எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை,
    என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பாமலிருக்க மான்களின் மீதும் மான்குட்டிகளின் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.

அவனும் அவனது மணப்பெண்ணும்

பெரும் ஜனங்கள் கூட்டத்தோடு
    வனாந்தரத்திலிருந்து வருகின்ற அந்தப் பெண் யார்?
மேகங்களின் கூட்டத்தைப்போல வெள்ளைப் போளத்திலும்,
    சாம்பிராணியிலும், சகல நறுமணத்திலும்,
    வரும் புகைபோல அவர்களுக்குப் பின்னால் புழுதி எழும்புகிறது.

பார், சாலொமோனின் இந்தப் பல்லக்கு இஸ்ரவேலின் பலம்வாய்ந்த
    60 வீரர்கள் அதனைச் சுற்றிப் பாதுகாத்து நிற்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள்.
    அவர்களின் இடுப்பில் வாள்கள் உள்ளன.
    இரவில் எந்த ஆபத்துக்கும் தயாராக உள்ளனர்.

சாலொமோன் அரசன் தனக்காக ஒரு பல்லக்கு செய்திருக்கிறான்.
    அதற்கான மரம் லீபனோனில் இருந்து கொண்டுவரப்பட்டது.
10 அதன் தூண்கள் வெள்ளியால் ஆனது.
    அதன் இருக்கை நீலங்கலந்த சிவப்பு நிறமான துணியால் மூடப்பட்டிருந்தது.
    எருசலேமின் பெண்கள் அதன் உட்பகுதியை மிகப் பிரியத்தோடு அன்பால் அலங்கரித்திருக்கிறார்கள்.

11 சீயோனின் பெண்களே! வெளியே வாருங்கள்.
    சாலொமோன் அரசனைப் பாருங்கள்.
திருமண நாளில் அவனது தலைமேல் அவன் தாய் அணிவித்த கிரீடத்தை பாருங்கள்.
    அந்த நாளில் அவன் மிகுந்த சந்தோஷமாய் இருந்தான்.

அவன் அவளோடு பேசுகிறான்

என் அன்பே! நீ அழகானவள்.
    ஓ நீ அழகானவள்.
உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள்
    புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன.
உன் நீண்ட கூந்தல் கீலேயாத் மலைச்சரிவில்
    நடனமாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தைபோல அசைந்துகொண்டிருக்கிறது.
உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன.
    அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப்போன்றுள்ளன.
உனது உதடுகள் சிவந்த பட்டுக் கயிற்றைப் போன்றுள்ளன.
    உனது வாய் அழகானது.
உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே
    வெட்டி வைக்கப்பட்ட மாதுளம் பழம்போல் உள்ளன.
உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது.
    அக்கோபுரத்தின் சுவர்கள் ஆயிரம் வீரர்களின் கேடயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும்
    வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன.
பகலின் கடைசி மூச்சு இருக்கும்போதும் நிழல் சாயும்போதும்,
    நான் வெள்ளைப்போள மலைக்கும் சாம்பிராணி மலைக்கும் போவேன்.
என் அன்பே, முழுவதும் நீ அழகானவள்
    உனக்கு எதிலும் குறைவில்லை.
என்னோடு வா, என் மணமகளே
    லீபனோனிலிருந்து என்னோடு வா.
அமனா மலையின் உச்சியிலிருந்து வா.
    சேனீர் எர்மோனின் சிகரங்களிலிருந்தும்,
    சிங்கக் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளினுடைய மலைகளிலிருந்தும் வா.
என் அன்பே! என் மணமகளே!
    என்னைக் கவர்ந்தவள் நீ உன் ஒரு கண்ணால்,
    உன் கழுத்திலுள்ள ஒரு நகையால் என் இதயத்தைக் கவர்ந்துவிட்டாய்.
10 என் அன்பே, என் மணமகளே,
    உன் அன்பு மிக அழகானது.
உன் அன்பு திராட்சைரசத்தைவிடச் சிறந்தது.
    உன் பரிமள தைலங்களின் மணம் சகல சுகந்தவர்க்கங்களின் மணத்தைவிடச் சிறந்தது.
11 என் மணமகளே! உன் உதடுகளில் தேன் ஒழுகுகிறது.
    உன் நாவின் அடியில் பாலும் தேனும் ஊறுகிறது.
உன் ஆடைகளின் மணம் வீபனோனின் மணம்போல் உள்ளது.
12 என் அன்பே! என் மணமகளே! நீ சுத்தமானவள்.
    நீ பூட்டப்பட்ட தோட்டத்தைப் போன்றும்,
பூட்டிவைக்கப்பட்ட குளத்தைப் போன்றும்,
    அடைக்கப்பட்ட நீரூற்றைப்போன்றும் இருக்கிறாய்.
13 உன் பக்க உறுப்புகள் ஒரு தோட்டம் மாதளஞ் செடிகளாலும்
    மற்ற பழமரங்களாலும் நிறைந்துள்ளதுபோல் உள்ளன, நளதம்.

14 குங்குமம், வசம்பு, லவங்கம்,

    தூபவர்க்க மரங்களும் வெள்ளைப்போளச் செடிகளும் சந்தன
    மரங்களும் சகலவித மணப்பொருள் செடிகளும் உள்ள தோட்டம் போலுள்ளன.
15 நீ தோட்டத்து நீரூற்று போன்றவள்
    சுத்தமான தண்ணீருள்ள கிணறும்,
    லீபனோன் மலையிலிருந்து ஓடிவரும் ஓடைகளும் அதிலே உள்ளன.

அவள் பேசுகிறாள்

16 வாடைக் காற்றே எழும்பு.
    தென்றலே வா.
என் தோட்டத்தில் வீசு.
    உன் இனிய மணத்தைப் பரப்பு.
என் அன்பரைத் தன் தோட்டத்திற்குள் நுழையவிடு.
    அவர் இனிய பழங்களைச் சாப்பிடட்டும்.

அவன் பேசுகிறான்

என் அன்பே! என் மணமகளே! நான் என் தோட்டத்திற்குள் நுழைந்தேன்.
    நான் என் வெள்ளைப்போளங்களையும் கந்தவர்க்கங்களையும் சேகரித்தேன்.
நான் எனது தேனை தேன் கூட்டோடு தின்றேன்.
    நான் எனது திராட்சைரசத்தையும், பாலையும் குடித்தேன்.

பெண்கள் அன்பர்களிடம் பேசுகிறார்கள்

அன்பர்களே! உண்ணுங்கள், குடியுங்கள் அன்பின்
    போதை நிறைந்தவர்களாய் இருங்கள்.

அவள் பேசுகிறாள்

நான் தூங்குகிறேன்
    ஆனால் என் இதயம் விழித்திருக்கிறது.
என் நேசர் தட்டுவதை நான் கேட்கிறேன்.
    “எனக்காகத் திற என் இனியவளே என் அன்பே என் புறாவே,
    என் மாசற்ற அழகியே!
என் தலை பனியால் நனைந்துவிட்டது.
    என் தலைமயிர் இரவின் தூறலால் நனைந்துபோனது.”
“நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன்.
    நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை.
நான் என் பாதங்களைக் கழுவியிருக்கிறேன்.
    அது மீண்டும் அழுக்காவதை நான் விரும்பவில்லை”
ஆனால் என் நேசர் தனது கையை கதவுத் துவாரத்தின்வழியாக நீட்டினார்.
    நான் அவருக்காக வருத்தப்பட்டேன்.
என் நேசருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்.
    என் கையிலிருந்து வெள்ளைப்போளமும் என் விரல்களிலிருந்து
    வெள்ளைப்போளமும் வடிந்து கதவின் கைப்பிடிமீது வழிந்தது.
என் நேசருக்காகத் திறந்தேன்
    ஆனால் அவர் திரும்பிப் போய்விட்டார், அவர் இல்லை.
அவர் வந்துபோனபோது
    நான் ஏறக்குறைய மரித்தவள் போலானேன்.
நான் அவரைத் தேடினேன்
    ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
நான் அவரை அழைத்தேன்
    ஆனால் அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை.
நகரக் காவலர்கள் என்னைப் பார்த்தார்கள்.
    அவர்கள் என்னை அடித்துக் காயப்படுத்தினர்.
அந்தச் சுவரின்மேல் நின்ற காவலர்கள்
    என் முக்காட்டை எடுத்துக்கொண்டனர்.
எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக்
    கண்டால், நான் நேசத்தால் மெலிந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறுங்கள்.

எருசலேமின் பெண்கள் அவளுக்குப் பதில் கூறுகிறார்கள்

அழகான பெண்ணே,
    உன் அன்பர் மற்ற நேசர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்?
உன் நேசர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா?
    எனவேதான் நீ எங்களிடம் இந்த வாக்குறுதியைக் கேட்கிறாயா?

எருசலேம் பெண்களுக்கு அவள் பதில் கூறுகிறாள்

10 என் நேசர் சிவப்பானவர், வெண்மையானவர்.
    பத்தாயிரம் பேரிலும் தனிச் சிறப்பானவர்.
11 அவரது தலை சுத்தமான தங்கத்தைப்போன்றிருக்கும்.
    அவரது தலைமுடி சுருளுடையதாயிருக்கும்.
    அது காகத்தைப்போன்று கறுப்பாயிருக்கும்.
12 அவரது கண்கள் நீரோடைகளின் அருகிலுள்ள புறாவின் கண்களைப் போலிருக்கும்.
    பால் நிரம்பிய குளத்திலுள்ள புறாக்களைப் போலவும்,
    பதிக்கப்பட்ட நகைபோலவும் இருக்கும்.
13 அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும்.
    அவரது உதடுகள் லீலி மலர்களைப்போல் இருக்கும்.
    அதிலிருந்து வெள்ளைப்போளம் வடியும்.
14 அவரது கைகள் படிகப்பச்சை நகைகளால் அலங்கரிக்கப்பட்டது போலிருக்கும்.
    அவரது உடல் மென்மையான தந்தம்.
    இந்திர நீல இரத்தினங்கள் இழைத்ததுபோன்று இருக்கும்.
15 அவரது கால்கள் பளிங்குத் தூண்கள்
    பொன் பீடத்தில் இருப்பதுபோல் இருக்கும்.
அவர் நின்றால்
    லீபனோனில் நிற்கும் கேதுருமரம் போல் இருக்கும்.
16 ஆம், எருசலேமின் பெண்களே!
    என் நேசர் மிகவும் விரும்பத்தக்கவர்.
    அவரது வாய் இனிமையுள்ள அனைத்திலும் இனிமையானது.
இப்படிப்பட்டவரே என் நேசர்
    இத்தகையவரே என் நேசர்.

எருசலேம் பெண்கள் அவளிடம் பேசுகிறார்கள்

அழகான பெண்ணே
    உன் நேசர் எங்கே போனார்?
உன் நேசர் எந்த வழியாகப் போனார்?
    எங்களிடம் சொல். அவரைத் தேட உனக்கு உதவி செய்வோம்.

அவள் எருசலேம் பெண்களுக்கு பதிலளிக்கிறாள்

என் நேசர் கந்தவர்க்கப் பூக்களுக்காக தோட்டத்தில் மேய
    லீலி மலர்களைக் கொய்ய தன் தோட்டத்திற்குப் போனார்.
நான் அவருக்குரியவள். அவர் எனக்குரியவர்.
    அவர் லீலிகளை மேய்பவர்.

அவன் அவளிடம் பேசுகிறான்

என் அன்பே நீ திர்சாவைப்போன்று அழகானவள்.
    எருசலேமைப்போன்று இனிமையானவள்.
    நீ கம்பீரமான நகரங்களைப் போன்றவள்.
என்னைப் பாராதே உன் கண்கள் என்னை வென்றுவிட்டன.
    உன் கூந்தல் கீலேயாத் மலைச் சரிவில் நடனமாடும்
    வெள்ளாட்டு மந்தையைப் போல் அசைந்துகொண்டிருக்கிறது.
உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போலுள்ளன.
    அவை இரட்டைக் குட்டிகள் போட்டு,
    எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப் போலுள்ளது.
உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட
    மாதளம் பழங்களைப் போன்றுள்ளன.

அறுபது ராணிகள் இருக்கலாம்
    எண்பது மறுமனையாட்டிகள் இருக்கலாம்.
    எண்ண முடியாத அளவிற்கு இளம் பெண்கள் இருக்கலாம்.
ஆனால் எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள்.
    எனது புறாவே நீயே எனது பரிபூரணமானவள்.
அவளே தன் தாய்க்கு மிகவும் பிரியமான மகள்.
    அவளே தன்னைப் பெற்றவளால் மிகவும் நேசிக்கப்படுபவள்.
இளம் பெண்கள் அவளைப் பார்த்து பாராட்டுகிறார்கள்.
    ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் பாராட்டுகிறார்கள்.

பெண்கள் அவளைப் பாராட்டுகிறார்கள்

10 யார் இந்த இளம் பெண்?
    விடியலின் வானம்போல் பிரகாசிக்கிறாள்.
நிலவைப்போல் அழகாக இருக்கிறாள்.
    சூரியனைப்போல் ஒளி வீசுகிறாள்.
வானத்தில் உள்ள படைகளைப்போல்
    கம்பீரமாக விளங்குகிறாள்.

அவள் பேசுகிறாள்

11 பள்ளத்தாக்குகளில் பழுத்த கனிகளையும்,
    திராட்சைத் தோட்டத்தில் தோன்றிய துளிர்களையும்
    மதளஞ்செடிகளால் மலர்ந்த பூக்களையும் காண,
    நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
12 நான் உணர்ந்துகொள்வதற்கு முன்பே,
    என் ஆத்துமா என்னை அரசர்களின் இரதங்களுக்குள் அமரச்செய்கிறது.

எருசலேம் பெண்கள் அவளை அழைக்கிறார்கள்

13 திரும்பிவா சூலமித்தியே திரும்பிவா,
    திரும்பி வா, திரும்பிவா அப்பொழுதுதான் உன்னைப் பார்க்கமுடியும்
சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்?
    அவள் மகானனம் நடனம் ஆடுகிறாள்.

அவன் அவளது அழகைப் புகழ்கிறான்

இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன.
    உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால்
    செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.
உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான கிண்ணம்போல உள்ளது.
    உன் வயிறானது லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது.
உன் இரு மார்பகங்களும்
    வெளிமானின் இரு குட்டிகள் போன்றுள்ளன.
உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது.
உன் கண்கள்
    பத்ரபீம் வாயிலருகே உள்ள எஸ்போன் குளங்கள்போல உள்ளன.
உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கியுள்ள
    லீபனோனின் கோபுரம் போன்றுள்ளது.
உன் தலையானது கர்மேல் மலையைப் போன்றுள்ளது.
    உன் தலைமுடி பட்டு போன்றுள்ளது.
    உன் நீண்ட அசையும் கூந்தலானது அரசனையும் சிறைபிடிக்கவல்லது.
நீ மிகவும் அழகானவள்.
    நீ மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவள்.
    நீ அன்பான, மகிழ்வளிக்கிற இளம் கன்னி.
நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள்.
    உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள கனிகளைப் போன்றுள்ளன.
நான் இம்மரத்தில் ஏற விரும்புகிறேன்.
    இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன்.

இப்போது உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும்,
    உன் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப் பழங்கள் போலவும் இருப்பதாக.
உன் வாய்
    என் அன்பிற்குள் நேராக இறங்கும் தூங்குகிறவர்களின் உதடுகளிலும் இறங்கும் சிறந்த திராட்சைரசத்தைப் போன்றிருப்பதாக.

அவள் அவனோடு பேசுகிறாள்

10 நான் என் நேசருக்கு உரியவள்.
    அவருக்கு நான் தேவை.
11 என் நேசரே வாரும்
    வயல்வெளிகளுக்குப் போவோம்
    இரவில் கிராமங்களில் தங்குவோம்.
12 அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்.
    திராட்சைக் கொடிகள் பூப்பதைப் பார்ப்போம்.
மாதளஞ் செடிகள் பூத்ததையும் பார்ப்போம்.
    அங்கே என் நேசத்தை உமக்குத் தருவேன்.

13 தூதாயீம் பழத்தின் மணம் வீசும் எல்லா வகைப் பூக்களும்
    நம் வாசலருகில் உள்ளன.
ஆம் என் அன்பரே உமக்காக நான் பல மகிழ்ச்சியான பொருட்களை சேர்த்து வைத்திருக்கிறேன்.
    அவை பழையதும் புதியதுமாக அருமையாக உள்ளன.

நீர் என் தாயிடம் பால் குடித்த என் இளைய சகோதரனைப்போன்று
இருந்தால்
    நான் உம்மை வெளியில் சந்திக்கும்போது உம்மை முத்தமிட முடியும்.
    இதனைத் தவறு என்று எவரும் சொல்லமாட்டார்கள்.
நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்.
    என் தாய் எனக்குக் கற்பித்த அறைக்கும் அழைத்துச் செல்வேன்.
நான் உமக்கு மாதளம் பழரசத்தைக் குடிக்கக் கொடுப்பேன்.
    கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும் கொடுப்பேன்.

அவள் பெண்களிடம் பேசுகிறாள்

அவரது இடதுகை என் தலைக்குக்கீழ் இருக்கும்.
    அவரது வலதுகை என்னை அணைத்துக்கொள்ளும்.

எருசலேம் பெண்களே! வாக்குறுதி கொடுங்கள்.
    நான் தயாராகும்வரை என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பவேண்டாம்.

எருசலேம் பெண்கள் பேசுகிறார்கள்

இந்த பெண் யார்?
    தன் நேசரின்மேல் சார்ந்து கொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிறாள்.

அவள் அவனிடம் பேசுகிறாள்

கிச்சிலி மரத்தடியில் உம்மை எழுப்பினேன்.
    அங்கே உம்மை உமது தாய் பெற்றாள்.
    அங்கே உம் தாய் உம்மை துன்பப்பட்டுப் பெற்றாள்.
என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும்.
    உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும்.
நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது.
    நேச ஆசையானது கல்லறையைப்போன்று வலிமையானது.
அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன.
    பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது.
ஒரு வெள்ளம் அன்பை அழிக்க முடியாது.
    ஒரு ஆறு அன்பை இழுத்துச் செல்லமுடியாது.
ஒருவன் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அன்பிற்காகக் கொடுத்துவிட்டால்
    ஜனங்கள் அவனை இழிவாகவோ அல்லது மட்டமாகவோ கருதுவார்களா?

அவளது சகோதரர்கள் பேசுகிறார்கள்

எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள்
    அவளது மார்பகங்கள் இன்னும் வளரவில்லை.
ஒருவன் அவளை மணக்க வரும்போது
    எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்?

அவள் ஒரு மதில் சுவராக இருந்தால்
    நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக் கோட்டையைக் கட்டுவோம்.
அவள் ஒரு கதவாக இருந்தால்
    அவளைச் சுற்றி கேதுருமரப் பலகைகளை இணைப்போம்.

அவள் சகோதரர்களுக்குப் பதில் கூறுகிறாள்

10 நான் ஒரு சுவர்.
    எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள்.
    அவர் என்னில் திருப்தி அடைகிறார்.

அவன் பேசுகிறான்

11 சாலொமோனுக்குப் பாகால் ஆமோனில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
    அத்தோட்டத்தின் காவலுக்காக அவன் சிலரை நியமித்தான்.
ஒவ்வொருவரும்
    1,000 வெள்ளிகாசு பெறுமான திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்தான்.
12 சாலொமோனே, நீர் உமது 1,000 வெள்ளி காசுகளையும் வைத்துக்கொள்ளலாம்.
    ஒவ்வொருவனுக்கும் அவன் கொண்டுவந்த திராட்சைகளுக்காக 200 வெள்ளிகள் கொடும்.
    ஆனால் எனது சொந்தத் திராட்சைத் தோட்டத்தை நானே கவனித்துக்கொள்வேன்.

அவன் அவளிடம் பேசுகிறான்

13 தோட்டத்தில் அமர்ந்திருக்கிறவளே,
    உன் குரலை நண்பர்கள் கேட்கின்றார்கள்
    நானும் அதைக் கேட்கவிடு.

அவள் அவனிடம் பேசுகிறாள்

14 என் நேசரே வேகமாக வாரும்.
    மணப் பொருட்கள் நிறைந்த மலைகளின்மேல் திரியும் வெளிமானைப்போலவும்,
    மரைகளின் குட்டிகளைப்போலவும் இரும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center