Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 23:40-35:15

40 “அவர்கள் தொலைதூர நாடுகளிலிருந்து ஆண்களை அழைக்க அனுப்பியிருந்தனர். நீ இம்மனிதர்களிடம் தூதுவனை அனுப்பினாய். அம்மனிதர்கள் உன்னைப் பார்க்க வந்தனர். அவர்களுக்காக நீ குளித்தாய். கண்ணுக்கு மை தீட்டினாய். நகைகளை அணிந்துகொண்டாய். 41 நீ அழகான படுக்கையில் அமர்ந்து அதனருகில் மேசையைப்போட்டாய். எனது வாசனைப்பொருட்களையும் எனது எண்ணெயையும் மேசைமேல் வைத்தாய்.

42 “எருசலேமில் உள்ள சத்தம் விருந்துண்ணும் ஒரு கும்பலின் இரைச்சலைப்போன்று கேட்டது. பல மனிதர்கள் விருந்துக்கு வந்தனர். அவர்கள் வனாந்தரத்திலிருந்து வந்ததுபோன்று ஏற்கெனவே குடித்திருந்தனர். அவர்கள் அப்பெண்களுக்கு கைவளைகளையும் கிரீடங்களையும் கொடுத்தனர். 43 பிறகு நான் விபச்சாரத்தால் களைத்துப் பழுதான ஒரு பெண்ணிடம் பேசினேன். நான் அவளிடம், ‘அவர்கள் உன்னோடும் நீ அவர்களோடும் தொடர்ந்து பாலின உறவு வைத்துக்கொள்வீர்களா?’ என்று கேட்டேன். 44 ஆனால் அவர்கள் வேசிகளிடம் போவதுபோன்று அவளோடு போய்க்கொண்டிருந்தார்கள். ஆம், அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த முறைகேடான பெண்களான அகோலாளிடமும் அகோலிபாளிடமும் போனார்கள்.

45 “ஆனால் நல்லவர்கள் அவர்களைக் குற்றவாளியாக நியாயந்தீர்ப்பார்கள். அவர்கள் அப்பெண்களை அவர்களது விபச்சாரம் மற்றும் கொலை பாவங்களுக்காக நியாயந்தீர்ப்பார்கள். ஏனென்றால், அவர்கள் அகோலாளிடமும் அகோலிபாளிடமும் விபச்சாரப் பாவம் செய்தனர். அவர்களால் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் அவர்களது கையில் இன்னும் இருக்கிறது.”

46 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்: “ஜனங்களை ஒன்று சேருங்கள். அந்த ஜனங்கள் அகோலாவையும் அகோலிபாளையும் தண்டிக்க அனுமதியுங்கள். அந்த ஜனங்கள் குழு இரண்டு பெண்களையும் தண்டித்துக் கேலி பேசும். 47 பிறகு அந்த ஜனங்கள் குழு அவர்கள் மீது கல்லை வீசிக் கொல்லும், பிறகு அவர்கள் தம் வாள்களால் அப்பெண்களைத் துண்டுகளாக்குவார்கள். அவர்கள் அப்பெண்களின் பிள்ளைகளையும் கொல்வார்கள். அவர்களின் வீடுகளையும் எரிப்பார்கள். 48 இப்படியாக, நான் இந்நாட்டில் உள்ள அவமானத்தைப் போக்குவேன். நீங்கள் செய்தது போன்ற அவமானகரமான செய்கைகளைச் செய்யவேண்டாம் என்று எல்லாப் பெண்களும் எச்சரிக்கப்படுவார்கள். 49 நீங்கள் செய்த முறைகேடான செயல்களுக்காக அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள். நீங்கள் உங்கள் அசுத்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டதற்காக தண்டிக்கப்படுவீர்கள். பிறகு நானே கர்த்தரும் ஆண்டவருமாயிருக்கிறேன் என்றும் நீங்கள் அறிவீர்கள்.”

பானையும் இறைச்சியும்

24 எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. இது சிறைப்பட்ட ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் (டிசம்பர்) பத்தாம் நாளில் நடந்தது, அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இந்த நாளின் தேதியையும் இந்தக் குறிப்பையும் நீ எழுதிவை. ‘இந்த நாளில் பாபிலோன் அரசனது படை எருசலேமை முற்றுகையிட்டது.’ இந்தக் கதையைக் கீழ்ப்படிய மறுக்கும் குடும்பத்தாரிடம் (இஸ்ரவேல்) கூறு. அவர்களிடம் இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறுகிறார்:

“‘பாத்திரத்தை அடுப்பிலே வை,
    பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்று.
அதில் இறைச்சித் துண்டுகளைப் போடு.
    தொடை மற்றும் தோள்களில் உள்ள நல்ல கறிகளைப் போடு,
நல்ல எலும்புகளாலும் பாத்திரத்தை நிரப்பு.
    மந்தையில் நல்ல ஆடுகளை பயன்படுத்து,
பாத்திரத்திற்குக் கீழே விறகுகளை அடுக்கு,
    இறைச்சித் துண்டுகளைக் கொதிக்க வை.
    எலும்புகளும் வேகும்வரை பொங்கக் காய்ச்சு!

“‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
இது எருசலேமிற்குக் கேடாகும்.
    கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது கேடாகும்.
எருசலேம் துரு ஏறிய ஒரு பாத்திரத்தைப் போன்றது.
    அத்துரு நீக்க முடியாதது!
அப்பாத்திரம் சுத்தமானதாக இல்லை,
    எனவே நீ அப்பாத்திரத்திலுள்ள எல்லாக் கறித் துண்டுகளையும் வெளியே எடுத்துப் போடவேண்டும்!
    அக்கெட்டுப்போன இறைச்சியில் ஆசாரியர்கள் எதையும் தேர்ந்தெடுக்க, தின்ன அனுமதிக்கவேண்டாம்.
எருசலேம் துருவோடுள்ள பாத்திரத்தைப் போன்றது.
    ஏனென்றால் கொலைகளினால் ஏற்பட்ட இரத்தம் இன்னும் உள்ளது!
அவள் வெறும் பாறையில் இரத்தத்தைப் போட்டாள்!
    அவள் இரத்தத்தை நிலத்தில் ஊற்றி அதைப் புழுதியினால் மூடவில்லை.
நான் அவள் இரத்தத்தை வெறும் பாறையில் வைத்தேன்.
    எனவே இது மறைக்கப்படாது.
நான் இதனைச் செய்தேன், எனவே ஜனங்கள் கோபப்படுவார்கள்,
    அப்பாவி ஜனங்களைக் கொன்றதற்காக அவளைத் தண்டிப்பார்கள்.’”

“‘எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
கொலைக்காரர்கள் நிறைந்த இந்நகரத்துக்கு இது கேடாகும்!
    நான் நெருப்புக்காக நிறைய விறகுகளை அடுக்குவேன்.
10 பாத்திரத்திற்குக் கீழே நிறைய விறகுகளை அடுக்கு.
    நெருப்பு வை,
இறைச்சியை நன்றாக வேகவை!
    மசாலாவைக் கலந்து வை.
    எலும்புகளையும் எரித்துவிடு!
11 பிறகு பாத்திரத்தைக் காலியாக்கி நெருப்பின் மேல் வை.
    அதன் கறைகள் உருகத் தொடங்கும் வரை சூடாக்கு.
அதன் கறைகள் உருகிவிடும்,
    துருவும் அழிக்கப்படும்.

12 “‘எருசலேம், அழுக்கினை போக்க
    கடுமையாக வேலை செய்யவேண்டும்.
ஆனாலும் “துரு” போகாது!
    நெருப்பு (தண்டனை) மட்டுமே துருவை அகற்றும்!

13 “‘நீ எனக்கு எதிராகப் பாவம் செய்தாய்.
    அதனால் பாவக்கறையோடு உள்ளாய்.
நான் உன்னைக் கழுவிச் சுத்தமாக்க விரும்பினேன்.
    ஆனால் அழுக்கு வெளியேறவில்லை.
எனது கோபநெருப்பு தணியும்வரை
    நான் மீண்டும் உன்னைக் கழுவ முயற்சி செய்யமாட்டேன்!

14 “‘நானே கர்த்தர், உனது தண்டனை வரும் என்று நான் சொன்னேன். நான் அது வரும்படிச் செய்வேன். நான் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை. நான் உனக்காக வருத்தப்படுவதில்லை. நீ செய்த பாவங்களுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

எசேக்கியேல் மனைவியின் மரணம்

15 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 16 “மனுபுத்திரனே, நீ உன் மனைவியைப் அதிகமாய் நேசிக்கிறாய். ஆனால் நான் அவளை உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறேன். உன் மனைவி திடீரென்று மரிப்பாள். ஆனால் உனது துக்கத்தை நீ காட்டக்கூடாது. நீ உரக்க அழவேண்டாம். நீ அழுவாய். உன் கண்ணீர் கீழே விழும். 17 ஆனால் உனது துயரத்தை அமைதியாக வெளிப்படுத்தவேண்டும். உனது மரித்த மனைவிக்காக நீ உரக்க அழாதே. நீ வழக்கமாக அணிகிற ஆடையையே அணியவேண்டும். உனது தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணியவேண்டும். உனது துயரத்தைக் காட்ட மீசையை மறைக்க வேண்டாம். உறவினர் மரித்துப்போனால் வழக்கமாக மற்றவர்கள் உண்ணும் உணவை நீ உண்ண வேண்டாம்.”

18 மறுநாள் காலையில் ஜனங்களிடம் தேவன் சொன்னதைச் சொன்னேன். அன்று மாலையில் எனது மனைவி மரித்தாள். மறுநாள் காலையில் தேவனுடைய கட்டளைபடி நான் செய்தேன்: 19 பிறகு ஜனங்கள் என்னிடம் சொன்னார்கள்; “ஏன் இவ்வாறு செய்கிறீர்? இதன் பொருள் என்ன?”

20 பிறகு நான் அவர்களிடம் சொன்னேன்: “கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் 21 இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் சொல்லச் சொன்னார். எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: ‘பார், நான் எனது பரிசுத்தமான இடத்தை அழிப்பேன். அந்த இடத்தைப்பற்றி பெருமைப்படுகிறீர்கள். அதைப்பற்றிப் புகழ்ந்து பாடுகிறீர்கள். அந்த இடத்தைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறீர்கள். ஆனால் நான் அந்த இடத்தை அழிப்பேன். நீங்கள் விட்டுச்செல்லும் உங்கள் பிள்ளைகளைப் போரில் கொல்வேன். 22 ஆனால், நான் என் மனைவிக்குச் செய்ததையே நீங்கள் செய்வீர்கள். உங்கள் துக்கத்தைக் காட்ட மீசையை மறைக்கமாட்டீர்கள். ஒருவன் மரித்ததற்காக வழக்கமாக உண்ணும் உணவை நீங்கள் உண்ணமாட்டீர்கள். 23 நீங்கள் உங்கள் தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணிந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டமாட்டீர்கள். நீங்கள் அழமாட்டீர்கள். ஆனால் உங்களது பாவங்களால் நீங்கள் வீணாக்கப்படுவீர்கள். நீங்கள் உங்களது துயர ஒலிகளை ஒருவருக்கொருவர் அமைதியாக வெளிப்படுத்திக்கொள்வீர்கள், 24 எனவே எசேக்கியேல் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு, அவன் செய்ததை எல்லாம் நீங்கள் செய்வீர்கள். அந்தத் தண்டனைக் காலம் வரும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.’”

25-26 “மனுபுத்திரனே, நான் ஜனங்களிடமிருந்து அப்பாதுகாப்பான இடத்தை (எருசலேம்) எடுத்துக்கொள்வேன். அந்த அழகிய இடம் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க அதிகமாக விரும்புகின்றனர். அவர்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் நான் அந்த நகரத்தையும் அவர்களது பிள்ளைகளையும் எடுத்துக்கொள்வேன். தப்பிப் பிழைத்த ஒருவன் எருசலேம் பற்றிய கெட்ட செய்தியைச் சொல்வதற்கு வருவான். 27 அப்பொழுது அவனோடு பேச உன்னால் முடியும். நீ இனிமேலும் மௌனமாய் இருக்கமாட்டாய். இதுபோலவே நீ அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பாய். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”

அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

25 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, அம்மோன் ஜனங்களை நோக்கி அவர்களுக்கு எதிராக எனக்காகப் பேசு. அம்மோன் ஜனங்களிடம் சொல்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: எனது பரிசுத்தமான இடங்கள் அழிக்கப்பட்டபோது நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிறபோது அதற்கு விரோதமாக இருந்தீர்கள். யூதாவின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டபோது, அவர்களுக்கு விரோதமாக இருந்தீர்கள். எனவே கிழக்கே உள்ள ஜனங்களிடம் உன்னைக் கொடுப்பேன். அவர்கள் உன் தேசத்தை எடுத்துக்கொள்வார்கள். அவர்களது படைவீரர்கள் உனது நாட்டில் தம் கூடாரங்களை அமைப்பார்கள். அவர்கள் உங்களிடையே வாழ்வார்கள். அவர்கள் உங்கள் பழங்களைத் தின்று உங்கள் பாலைக் குடிப்பார்கள்.

“‘நான் ரப்பா நகரத்தை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும் நாட்டை ஆட்டுக் கிடையாகவும் ஆக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிந்துகொள்வாய். கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: இஸ்ரவேல் அழிக்கப்பட்டதற்காக நீ மகிழ்ச்சி அடைந்தாய். நீ உன் கைகளைத் தட்டி கால்களால் மிதித்தாய். நீ இஸ்ரவேல் தேசத்தை கேலி செய்து அவமதித்தாய். எனவே, நான் உன்னைத் தண்டிப்பேன். நீ, போரில் வீரர்கள் கைப்பற்றத்தக்க விலை மதிப்புள்ள பொருட்களாவாய். நீ உனது நிலத்தை இழப்பாய். தொலைதூர நாடுகளில் நீ மரித்துப்போவாய். நான் உனது நாட்டை அழிப்பேன்! பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.’”

மோவாப் மற்றும் சேயீருக்கு எதிரான தீர்க்கதரிசனம்

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “மோவாபும் சேயீரும் (ஏதோம்) சொல்கின்றன, ‘யூத வம்சமானது மற்ற நாடுகளைப் போன்றது.’ மோவாபின் தோள்களை நான் வெட்டுவேன். அதன் எல்லையோரங்களில் உள்ள நகரங்களை நான் எடுத்துக்கொள்வேன். தேசத்தின் மகிமையையும் பெத்யெசிமோத்தையும், பாகால் மெயோனையும் கீரியாத்தாயீமையும் எடுத்துக்கொள்வேன். 10 பிறகு நான் இந்நகரங்களை கிழக்கே உள்ள ஜனங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உன் நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். கிழக்கே உள்ள ஜனங்கள் அம்மோன் ஜனங்களை அழிக்கும்படி நான் அனுமதிப்பேன். அம்மோன் என்று ஒரு தேசம் இருந்ததை எல்லோரும் மறந்துவிடுவார்கள். 11 எனவே, நான் மோவாபைத் தண்டிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”

ஏதோமிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்

12 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “ஏதோம் ஜனங்கள் யூதா வம்சத்தாருக்கு விரோதமாகத் திரும்பினார்கள். அவர்கள் பழி வாங்கினார்கள். ஏதோம் ஜனங்கள் குற்றவாளிகள்.” 13 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் ஏதோமைத் தண்டிப்பேன். நான் ஏதோமிலுள்ள மனிதர்களையும் விலங்குகளையும் அழிப்பேன். நான் தேமான் முதல் தேதான் வரையுள்ள ஏதோம் நாடு முழுவதையும் அழிப்பேன். ஏதோமியர்கள் போரில் கொல்லப்படுவார்கள். 14 நான் இஸ்ரவேலர்களாகிய என் ஜனங்களைப் பயன்படுத்தி, ஏதோமைப் பழிவாங்குவேன். இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் ஏதோமிற்கு விரோதமாக என் கோபத்தைக் காட்டுவார்கள், பிறகு ஏதோம் ஜனங்கள், அவர்களை நான் தண்டித்ததை அறிவார்கள்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

பெலிஸ்தியர்களுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்

15 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “பெலிஸ்தியர்கள் பழிவாங்க முயன்றனர். அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள். அவர்கள் தமக்குள் கோபத்தை நீண்ட காலமாக எரியவிட்டனர்!” 16 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன், ஆம், நான் கிரேத்தாவிலிருந்து வந்த அந்த ஜனங்களை அழிப்பேன். கடற்கரையோரமாக வாழ்கிற அனைவரையும் நான் அழிப்பேன். 17 நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். நான் பழிவாங்குவேன். எனது கோபம் அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கும்படி நான் செய்வேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்!”

தீருவைப்பற்றிய துக்கச் செய்தி

26 பதினோராம் ஆண்டின் முதல் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமைப்பற்றி தீரு கெட்டவற்றைச் சொன்னது: ‘ஆ, ஆ! ஜனங்களைப் பாதுகாக்கிற நகரவாசல் அழிக்கப்பட்டது! நகரவாசல் எனக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நகரம் (எருசலேம்) அழிக்கப்படுகிறது எனவே அதிலிருந்து எனக்கு ஏராளமான விலைமதிப்புள்ள பொருட்கள் கிடைக்கும்!’”

ஆகையால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு! நான் உனக்கு விரோதமானவன். உனக்கு எதிராகச் சண்டையிட பல நாடுகளை அழைத்துவருவேன். அவர்கள் மீண்டும் மீண்டும் கடற்கரை அலைகளைப்போன்று வருவார்கள்.”

தேவன் சொன்னார்: “அந்தப் பகைவீரர்கள் தீருவின் சுவர்களை அழிப்பார்கள், கோபுரங்களை இடித்துத் தள்ளுவார்கள், நானும் அந்நாட்டின் மேல் மண்ணைத் துடைப்பேன். தீருவை வெறும் பாறையைப்போன்று ஆக்குவேன். தீருவானது மீன் பிடிப்பதற்கான வலைகள் விரித்து வைப்பதற்குரிய இடமாக ஆகும். நான் இதைச் சொன்னேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு, போரில் வீரர்கள் எடுக்கத்தக்கதான விலைமதிப்புள்ள பொருளாகும். அவளது மகள்கள் (சிறு நகரங்கள்), முக்கிய பிராதான நிலத்தில் போரில் கொல்லப்படுவார்கள். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்று அறிவார்கள்.”

தீருவை நேபுகாத்நேச்சார் தாக்குவான்

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் தீருவுக்கு விரோதமாக வடக்கிலிருந்து பகைவரை வரவழைப்பேன். அப்பகைவன், பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார்! அவன் பெரும்படையைக் கொண்டுவருவான். அதில் குதிரைகள், இரதங்கள், குதிரை வீரர்கள், மற்றும் ஏராளமான வீரர்களும் இருப்பார்கள்! அவ்வீரர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள். நேபுகாத்நேச்சார் உனது முக்கியமான நிலத்திலுள்ள மகள்களை (சிறு நகரங்களை) கொல்வான். உன் பட்டணத்தைத் தாக்க அவன் கோபுரங்களைக் கட்டுவான். உன் நகரைச் சுற்றி மண் பாதை போடுவான். அவன் மதில் சுவர்வரை போகும் வழிகளை அமைப்பான். உனது சுவர்களை இடிக்க பெருந்தடிகளைக் கொண்டுவருவான். அவன் கடப்பாரைகளைப் பயன்படுத்தி உனது கோபுரங்களை இடிப்பான். 10 அங்கு ஏராளமாக குதிரைகள் இருக்கும். அவற்றிலுள்ள புழுதி உன்னை மூடும். குதிரை வீரர்கள், வாகனங்கள், இரதங்கள் ஆகியவற்றுடன் பாபிலோன் அரசன் நகர வாசல் வழியாக நுழையும்போது எழும் சத்தத்தால் உன் சுவர்கள் நடுங்கும், ஆம், அவர்கள் உன் நகரத்திற்குள்ளே வருவார்கள். ஏனென்றால், அதன் சுவர்கள் இடித்துத் தள்ளப்படும். 11 பாபிலோன் அரசன் நகரவாசல் வழியாக நகரத்திற்குள் சவாரி செய்து வருவான். அவனது குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளை எல்லாம் மிதிப்பான். அவன் உன் ஜனங்களை வாள்களால் கொல்லுவான். உன் நகரில் உள்ள பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும். 12 உனது செல்வங்களை நேபுகாத்நேச்சாரின் ஆட்கள் எடுத்துக்கொள்வார்கள். நீ விற்க விரும்புகிற பொருட்களை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன் சுவர்களை உடைத்தெறிவார்கள், கல்லாலும் மரத்தாலுமான இன்பமான வீடுகளை அழித்துக் குப்பையைப்போன்று கடலில் எறிவார்கள். 13 எனவே, நான் உனது மகிழ்ச்சியான பாடல் ஒலியை நிறுத்துவேன். ஜனங்கள் உனது சுரமண்டல ஒலியை இனிக் கேட்கமாட்டார்கள். 14 நான் உன்னை வெறுமையான பாறையாக்குவேன். நீ மீன் பிடிக்கும் வலையைப் பரப்புவதற்குரிய இடமாவாய்! நீ மீண்டும் கட்டப்படமாட்டாய். ஏனென்றால், கர்த்தராகிய நான் பேசினேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

பிற நாடுகள் தீருக்காக அழும்

15 எனது கர்த்தராகிய ஆண்டவர் தீருக்கு இதைக் கூறுகிறார்: “மத்தியதரை கடலோரங்களிலுள்ள நகரங்கள் எல்லாம் நீ விழுகிற சப்தம் கேட்டு நடுங்கும். உன் ஜனங்கள் காயமும் மரணமும் அடையும்போது இது நிகழும். 16 பிறகு அந்நாடுகளில் உள்ள தலைவர்கள் தம் சிங்காசனத்தை விட்டு இறங்கி தம் துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தம் சிறப்பிற்குரிய ஆடைகளை அகற்றிவிடுவார்கள். அவர்கள் தம் அழகான ஆடைகளை அகற்றுவார்கள். பிறகு அவர்கள் தம் நடுக்கமாகிய ஆடையை (பயம்) அணிந்துகொள்வார்கள். அவர்கள் தரையில் அமர்ந்து அச்சத்தால் நடுங்குவார்கள். நீ இவ்வளவு விரைவாக அழிக்கப்பட்டதை எண்ணி அவர்கள் பிரமிப்பார்கள். 17 அவர்கள் உன்னைப்பற்றி இச்சோகப் பாடலைப் பாடுவார்கள்:

“‘ஓ தீருவே, நீ புகழ்பெற்ற நகரமாக இருந்தாய்.
    ஜனங்கள் உன்னிடம் வாழக் கடல் கடந்து வந்தனர்.
நீ புகழோடு இருந்தாய்.
    இப்போது நீ போய்விட்டாய்!
கடலில் நீ பலத்தோடு இருந்தாய்.
    உன்னில் வாழ்பவர்களும் அப்படியே இருந்தார்கள்.
முக்கிய நிலத்தில் வாழ்பவர்களையெல்லாம் பயமுறுத்தினாய்.
18 இப்பொழுது நீ விழும் நாளில்
    தீவுகளில் உள்ள நாடுகள் அச்சத்தால் நடுங்குகின்றன.
நீ பல குடியிருப்புக் கூட்டங்களைக் கடலோரமாகத் தொடங்கினாய்.
    இப்பொழுது, நீ வீழ்ச்சியடையும் அன்று கடலோர நாடுகள் அச்சத்தால் நடுங்குவார்கள்.’”

19 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “தீரு, நான் உன்னை அழிப்பேன். நீ ஒரு பழைய வெறுமையான நகரமாவாய். அங்கு எவரும் வாழமாட்டார்கள். கடல் பொங்கி உன்மேல் பாயும்படி செய்வேன். பெருங்கடல் உன்னை மூடிவிடும். 20 நான் உன்னை மரித்த மனிதர்கள் இருக்கின்ற ஆழமான பாதாளத்திற்கு அனுப்புவேன். நீ நீண்ட காலத்திற்கு முன்னால் மரித்தவர்களோடு சேர்வாய். நீ குடியேறாமல் இருக்கும்படி தொடக்க காலம் முதல் பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களோடு நான் உன்னைத் தங்கச் செய்வேன். பிறகு உன்னில் எவரும் வாழமாட்டார்கள். உயிர்கள் வாழும் இடத்தில் நீ இருக்கமாட்டாய்! 21 பிற ஜனங்கள் உனக்கு ஏற்பட்டதைப் பார்த்து அஞ்சுவார்கள். நீ முடிந்துபோவாய். ஜனங்கள் உன்னைத் தேடுவார்கள். அவர்கள் உன்னை மீண்டும் காணமாட்டார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் சொல்வது இதுதான்.

கடல் வியாபாரத்தின் மையமாக இருந்த தீரு

27 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார். “மனுபுத்திரனே, தீருவைப்பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. தீருவைப்பற்றி இவற்றைக் கூறு: ‘தீரு, நீ கடல்களுக்குக் கதவாக இருக்கிறாய், பல நாடுகளுக்கு நீ வியாபாரி. கடற்கரையோரமாக உள்ள பல நாடுகளுக்குப் பயணம் செய்கிறாய். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘தீருவே, நீ மிக அழகானவள் என்று எண்ணுகிறாய்.
    நீ முழுமையான அழகுடையவள் என்று எண்ணுகிறாய்!
உனது நகரைச் சுற்றி மத்திய தரைக்கடல்
    எல்லையாக இருக்கிறது.
உன்னைக் கட்டினவர்கள் உன்னிடமிருந்து புறப்படும்
    கப்பலைப்போன்று முழு அழகோடு கட்டினார்கள்.
சேனீர் மலைகளிலிருந்து வந்த தேவதாரு மரங்களால்
    உன் கப்பலின் தளத்திற்கான பலகைகளைச் செய்தார்கள்.
லீபனோனிலிருந்து கொண்டுவந்த கேதுரு மரங்களால்
    பாய்மரங்களைச் செய்தார்கள்.
பாசானின் கர்வாலி மரங்களினால்
    உன் துடுப்புகளைச் செய்தார்கள்.
சீப்புரு தீவுகளிலிருந்து கொண்டு வந்த பைன்மரத்தால்
    உன் கப்பல் தளத்தை செய்தார்கள்.
    அதனை அவர்கள் தந்தங்களால் அலங்காரம் செய்தனர்.
உன் பாய்க்காக எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையல் உள்ள
    சணல் நூல் புடவையைப் பயன்படுத்தினார்கள்.
    அந்தப் பாய் தான் உன் கொடியாக இருந்தது.
உன் அறையின் திரைச் சீலை நீலமும் சிவப்புமாக இருந்தது.
    அவை சீப்புரு தீவிலிருந்து வந்தது.
உனது படகுகளை சீதோன் அர்வாத் என்னும் நகரங்களின் ஜனங்கள் உங்களுக்காக ஓட்டினார்கள்.
    தீரு, உன் ஞானிகள் உனது கப்பலில் மாலுமிகளாக இருப்பார்கள்.
கேபாரின் நகரத்து மூப்பர்களும் ஞானிகளும்
    கப்பலில் உள்ள பலகைகளை ஒன்றோடொன்றை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.
கடலில் உள்ள அனைத்து கப்பல்களும் அவற்றிலுள்ள மாலுமிகளும்
    உன்னுடன் வியாபாரம் செய்வதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.

10 “‘உனது படையில் பெர்சியரும் லூதியரும் பூத்தியரும் இருந்தனர். அவர்கள் உனது போர் வீரர்கள். அவர்கள் தமது கேடயங்களையும் தலைக்கவசங்களையும் உன் சுவர்களில் தொங்கவிட்டனர். அவர்கள் உன் நகரத்திற்கு பெருமையும், மகிமையும் கொண்டுவந்தனர். 11 அர்வாத் மற்றும் சிலிசியாவின் ஆண்கள் உனது சுவரைச் சுற்றிலும் காவல் காத்தார்கள். கம்மாத் ஆண்கள் உன் கோபுரங்களில் இருந்தனர். அவர்கள் தம் கேடயங்களை உனது நகரைச் சுற்றியுள்ள சுவர்களில் தொங்கவிட்டனர். அவர்கள் உனது அழகை முழுமையாக்கினர்.

12 “‘தர்ஷீஸ் ஊரார் உன்னுடைய சிறந்த வாடிக்கையாளர்கள். அவர்கள் வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம் மற்றும் நீ விற்பனை செய்த சிறந்த பொருட்களை வியாபாரம் செய்தனர். 13 கிரீஸ், துருக்கி, கருங்கடலைச் சுற்றியுள்ள பகுதி ஜனங்கள் உன்னோடு வணிகம் செய்தனர். அவர்கள் அடிமைகளையும் வெண்கலப் பாத்திரங்களையும் வியாபாரம் செய்தனர். 14 தொகர்மா சந்ததியினர் நீ விற்ற பொருள்களுக்காக போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் கொண்டுவந்தனர். 15 தேதான் ஜனங்கள் உன் வியாபாரிகளாய் இருந்தார்கள். நீ உன் பொருட்களைப் பல இடங்களில் விற்றாய். ஜனங்கள் யானைத் தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவற்றுக்குப் பதிலாகக் கொண்டுவந்தனர். 16 அராம் உன்னோடு வியாபாரம் செய்ய வந்தது. ஏனென்றால், உன்னிடம் பல நல்ல பொருட்கள் இருந்தன. அராம் ஜனங்கள் மரகதங்களையும். இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையலாடைகளையும், உயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும், உன் சந்தைகளில் விற்க வந்தார்கள்.

17 “‘யூதா ஜனங்களும், இஸ்ரவேல் ஜனங்களும் உன்னுடன் வியாபாரம் செய்யவந்தனர். கோதுமை, தேன், எண்ணெய், பிசின் தைலம் ஆகியவற்றை உன்னிடம் வாங்க வந்தனர். 18 தமஸ்கு சிறந்த வாடிக்கையாளர். உன்னிடமிருந்த அற்புதமான பொருட்களுக்காக உன்னோடு வியாபாரம் செய்ய வந்தார்கள். கெல்போனின் திராட்சைரசத்தையும், வெண்மையான ஆட்டு மயிரையும் உனக்கு விற்றார்கள். 19 தமஸ்கு உசேரில் உள்ள திராட்சை ரசத்தை உன் பொருட்களுக்காகக் கொடுத்தனர். அவர்கள் துலக்கப்பட்ட இரும்பையும், இலவங்கத்தையும், வசம்பையும் உன் சந்தைகளில் விற்றார்கள். 20 தேதானின் ஆட்கள் நல்ல வியாபாரம் செய்தனர். அவர்கள் இரதங்களுக்குப் போடுகிற இரத்தினக் கம்பளங்களை உன்னோடு வியாபாரம் பண்ணினார்கள். 21 அரபியரும் கேதாரின் எல்லா தலைவர்களும் வாடிக்கையாளர்கள். அவர்கள் ஆட்டுக்குட்டிகளையும், ஆட்டுக் கடாக்களையும் உன்னோடு வியாபாரம் செய்தனர். 22 சேபா, ராமா நகரங்களில் உள்ளவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தனர். மேல்தரமான எல்லா மணப்பொருட்களையும், எல்லா இரத்தினக் கற்களையும், பொன்னையும் உன் சந்தைக்குக் கொண்டுவந்தார்கள். 23 ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தார்களும் சேபாவின் வியாபாரிகளும், அசீரியரும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடு வியாபாரம் செய்தனர். 24 இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத் தையலாடைகளும் அடங்கிய புடவைக் கட்டுக்களையும் விலை உயர்ந்த துணிகள் வைக்கப்பட்டு கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப் பெட்டிகளையும் கொண்டுவந்து உன்னோடு வியாபாரம் செய்தனர். இவைகளையே அவர்கள் உன்னோடு வியாபாரம் செய்தனர். 25 தர்ஷீசின் கப்பல்கள் நீ விற்றப் பொருட்களைக் கொண்டுபோனார்கள்.

“‘தீரு, நீயும் ஒரு சரக்குக் கப்பலைப்போன்றவள்.
    நீ கடலில் செல்வங்கள் ஏற்றப்பட்ட கப்பல்.
26 கப்பலைச் செலுத்துகிறவர்கள் ஆழமான தண்ணீரில் உன்னை அழைத்துக்கொண்டு போனார்கள்.
    ஆனால் கடலில் உன் கப்பலை பலமான கிழக்குக் காற்று அழித்தது.
27 உனது செல்வங்கள் எல்லாம் கடலுக்குள் மூழ்கும்.
    நீ விற்க வைத்திருந்த செல்வமும் வாங்கிய செல்வமும் கடலுக்குள் மூழ்கும்.
உனது கப்பலாட்களும், மாலுமிகளும், கப்பலைச் செப்பனிடுகிறவர்களும் உன் வியாபாரிகளும்
    உன்னில் உள்ள எல்லாப் போர் வீரர்களும்
கடலுக்குள் மூழ்குவார்கள்.
    இது, நீ அழியும் நாளில் நிகழும்!

28 “‘நீ உனது வியாபாரிகளைத் தொலை தூர நாடுகளுக்கு அனுப்பினாய்.
    அந்த இடங்கள் உனது மாலுமியின் அழுகுரலைக் கேட்டு அச்சத்தால் நடுங்கும்!
29 கப்பலைச் செலுத்தும் முழுக் குழுவும் கப்பலை விட்டுக் குதிக்கும்.
    கப்பலாட்களும் கடல் மாலுமிகள் அனைவரும் தம் கப்பல்களை விட்டுக் குதித்து கரையை அடைவார்கள்.
30 அவர்கள் உன்னைப்பற்றி துக்கப்படுவார்கள்.
    அவர்கள் அழுவார்கள்.
    அவர்கள் தம் தலையில் மண்ணை வாரிப்போடுவார்கள்.
    அவர்கள் சாம்பலில் புரளுவார்கள்.
31 அவர்கள் உனக்காகத் தம் தலையை மொட்டையடிப்பார்கள்.
    அவர்கள் துக்கத்தின் ஆடையை அணிவார்கள்.
அவர்கள் உனக்காக மரித்துப்போனவர்களுக்காக அழுவதுபோன்று அழுவார்கள்.

32 “‘அவர்கள் தம் பலத்த அழுகையில், உன்னைப்பற்றிய இந்தச் சோகப் பாடலைப் பாடி உனக்காக அழுவார்கள்.

“‘தீருவைப்போன்று யாருமில்லை!
    தீரு கடல் நடுவில் அழிக்கப்படுகிறது!
33 உன் வியாபாரிகள் கடல் கடந்து போனார்கள்.
    உனது பெருஞ்செல்வம் மற்றும் உன் சந்தையின் மூலம் நீ பலரைத் திருப்திப்படுத்தினாய்.
    நீ பூமியின் அரசர்களைச் செல்வர்கள் ஆக்கினாய்!
34 ஆனால் இப்பொழுது கடல் அலைகளால்
    ஆழங்களில் உடைக்கப்பட்டாய்.
நீ விற்ற அனைத்துப் பொருட்களும்
    உனது ஆட்களும் விழுந்துவிட்டனர்!
35 கடலோரங்களில் வாழும் ஜனங்கள்
    உன்னைப்பற்றி அறிந்து திகைக்கிறார்கள்.
அவர்களின் அரசர்கள் மிகவும் பயந்திருக்கிறார்கள்.
    அவர்களின் முகங்கள் அதிர்ச்சியை காண்பிக்கின்றன.
36 பிற நாடுகளில் உள்ள வியாபாரிகள்
    உனக்காக பரிகசிப்பார்கள்.
உனக்கு நிகழ்ந்தவை ஜனங்களைப் பயப்படச் செய்யும், ஏனென்றால்,
    நீ முடிந்துபோனாய்.
    நீ இனி இருக்கமாட்டாய்.’”

தீரு தன்னைத்தானே ஒரு தேவன் என்று நினைக்கிறது

28 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, தீருவின் அரசனிடம் கூறு: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘நீ மிகவும் பெருமைகொண்டவன்!
    நீ சொல்கிறாய்: “நான் தெய்வம்!
கடல்களின் நடுவே தெய்வங்கள் வாழும் இடங்களில்
    நான் அமருவேன்.”

“‘நீ ஒரு மனிதன். தெய்வம் அல்ல!
    நீ தேவன் என்று மட்டும் நினைக்கிறாய்.
நீ தானியேலைவிட புத்திசாலி என்று நினைக்கிறாய்!
    உன்னால் எல்லா இரகசியங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறாய்!
உனது ஞானத்தாலும், புத்தியினாலும்
    நீ உனது செல்வத்தை பெற்றாய்.
நீ பொன்னையும் வெள்ளியையும்
    உன் செல்வத்தில் சேர்த்துக்கொண்டாய்.
உன் ஞானத்தாலும் வியாபாரத்தாலும்
    செல்வத்தை வளரச்செய்தாய்.
அச்செல்வத்தால்
    இப்பொழுது பெருமைகொள்கிறாய்.

“‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
தீரு, நீ ஒரு தேவனைபோன்று உன்னை நினைத்தாய்.
உனக்கு எதிராகச் சண்டையிட நான் அந்நியரை அழைப்பேன்.
    அவர்கள், நாடுகளிலேயே மிகவும் கொடூரமானவர்கள்!
அவர்கள் தம் வாளை உருவி,
    உனது ஞானத்தால் கொண்டுவந்த அழகிய பொருட்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள்.
    அவர்கள் உன் சிறப்பைக் குலைப்பார்கள்.
அவர்கள் உன்னைக் குழியிலே விழத் தள்ளுவார்கள்.
    நீ கடலின் நடுவே கொலையுண்டு மரிக்கிற பயணிகளைப்போன்று மரிப்பாய்.
அம்மனிதன் உன்னைக் கொல்வான்.
    “நான் ஒரு தேவன்” என்று இனியும் சொல்வாயா?
இல்லை! அவன் தனது வல்லமையால் உன்னை அடைவான்.
    நீ தேவனில்லை, மனிதன் என்பதை நீ அறிவாய்.
10 அந்நியர்கள் உன்னை வெளிநாட்டவரைப்போல நடத்தி கொலை செய்வார்கள்!
    அவை நிகழும், ஏனென்றால், நான் கட்டளையிட்டேன்!’”
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

11 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 12 “மனுபுத்திரனே, தீரு அரசனைப்பற்றிய சோகப் பாடலை நீ பாடு. அவனிடம் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘நீ உயர்ந்த (இலட்சிய) மனிதனாக இருந்தாய்.
    நீ ஞானம் நிறைந்தவன்.
    நீ முழுமையான அழகுள்ளவன்.
13 நீ ஏதேனில் இருந்தாய்.
அது தேவனுடைய தோட்டம்.
    உன்னிடம் எல்லா விலையுயர்ந்த கற்களும் பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் ஆகியவற்றை வைத்திருந்தாய்.
இவை அனைத்தும் பொன்னில் வைக்கப்பட்டிருந்தன.
    நீ படைக்கப்பட்ட நாளிலேயே இவ்வழகுகள் உனக்குக் கொடுக்கப்பட்டன.
    தேவன் உன்னை பலமுள்ளதாகச் செய்தார்.
14 நீ தேர்ந்தெடுக்கப்பட்ட கேரூப்களில் ஒருவன் உனது
    சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன.
நான் உன்னை தேவனுடைய பரிசுத்த மலையில் வைத்தேன்.
நீ அந்த இடத்திற்குப் பொறுப்பாளியாயிருந்தாய்.
    நீ நெருப்பைப்போன்று ஒளிவீசும் நகைகளின் மத்தியில் நடந்தாய்.
15 நான் உன்னைப் படைக்கும்போது நீ நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தாய்.
    ஆனால் பிறகு கெட்டவனானாய்.
16 உனது வியாபாரம் உனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தது.
    ஆனால் அவை உனக்குள் கொடூரத்தை வைத்தன. நீ பாவம் செய்தாய்.
எனவே நான் உன்னைச் சுத்தமற்ற ஒன்றாக நடத்தினேன்.
    நான் உன்னைத் தேவனுடைய மலையில் இருந்து அப்பால் எறிந்தேன்.
நீ சிறப்புக்குரிய கேருபீன்களில் ஒருவன்.
    உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன.
ஆனால் நான் உன்னை நெருப்பைபோன்று ஒளிவீசும்
    நகைகளைவிட்டு விலகச் செய்தேன்.
17 உனது அழகு உன்னைப் பெருமைகொள்ளச் செய்தது.
    உனது மகிமை உன் ஞானத்தை அழித்தது.
எனவே உன்னைத் தரையில் எறிவேன்.
    இப்பொழுது மற்ற அரசர்கள் உன்னை முறைத்துப் பார்க்கின்றனர்.
18 நீ பல பாவங்களைச் செய்தாய்.
நீ அநீதியான வியாபாரியாக இருந்தாய்.
    இவ்வாறு நீ பரிசுத்தமான இடங்களை அசுத்தமாக்கினாய்.
எனவே உனக்குள்ளிருந்து நெருப்பை நான் கொண்டுவந்தேன்.
    இது உன்னை எரித்தது!
நீ தரையில் எரிந்து சாம்பலானாய்.
    இப்பொழுது ஒவ்வொருவரும் உன் அவமானத்தைப் பார்க்கமுடியும்.

19 “‘மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் உனக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து திகைத்தார்கள்.
    உனக்கு நடந்தது ஜனங்களை அஞ்சும்படிச் செய்யும்.
    நீ முடிவடைந்தாய்!’”

சீதோனுக்கு எதிரான செய்தி

20 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 21 “மனுபுத்திரனே, சீதோனுக்கு எதிராகத் திரும்பி எனக்காகத் தீர்க்கதரிசனம் சொல். 22 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என்று சொல்.

“‘சீதோனே நான் உனக்கு எதிராக இருக்கிறேன்!
    உன் ஜனங்கள் என்னை மதிக்க கற்பார்கள்.
நான் சீதோனைத் தண்டிப்பேன்.
    பிறகு, நானே கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
பிறகு, நான் பரிசுத்தமானவர் என்று அறிவார்கள்.
    அவ்வாறே என்னை அவர்கள் மதிப்பார்கள்.
23 நான் சீதோனுக்கு நோயையும் மரணத்தையும் அனுப்புவேன்.
    நகரத்தில் பலர் மரிப்பார்கள்.
பலர் (பகைவீரர்) வாளால் நகரத்திற்கு வெளியில் கொல்லப்படுவார்கள்.
    பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!’”

இஸ்ரவேலைக் கேலி செய்வதை நாடுகள் நிறுத்தும்

24 “‘இஸ்ரவேலைச் சுற்றிலுள்ள நாடுகள் அவளை வெறுத்தனர். ஆனால் அந்நாடுகளுக்குத் தீமைகள் ஏற்படும். பிறகு அங்கே இஸ்ரவேல் வம்சத்தாரைப் புண்படுத்தும் முட்களும் துன்புறுத்தும் நெருஞ்சிலும் இல்லாமல் போகும். அப்பொழுது நானே அவர்களுடைய கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்ளுவார்கள்.’”

25 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “நான் இஸ்ரவேல் ஜனங்களை மற்ற நாடுகளில் சிதறடித்தேன். ஆனால் மீண்டும் இஸ்ரவேல் வம்சத்தாரை ஒன்று சேர்ப்பேன். பிறகு அந்நாடுகள் நான் பரிசுத்தமானவர் என்பதை அறிந்து அவ்வாறு என்னை மதிப்பார்கள். அந்நேரத்தில், இஸ்ரவேலர்கள் தம் நாட்டில் வாழ்வார்கள், நான் அந்த நாட்டை என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்தேன். 26 அவர்கள் தம் நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்கள் வீடுகட்டுவார்கள். திராட்சை தோட்டங்களை அமைப்பார்கள். அதனை வெறுக்கிற, சுற்றிலும் உள்ள அனைத்து நாட்டினரையும் நான் தண்டிப்பேன். பிறகு இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். நானே அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

எகிப்துக்கு விரோதமான செய்தி

29 பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எகிப்து மன்னனான பார்வோனைப் பார். அவனுக்கும் எகிப்துக்கும் எதிராக எனக்காகப் பேசு. ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘எகிப்து மன்னனான பார்வோனே, நான் உனக்கு விரோதமானவன்.
    நீ நைல் நதியின் நடுவிலே பெரிய பூதம்போன்று படுத்துக்கொண்டு,
“இது என்னுடைய நதி!
    நான் இந்த நதியை உண்டாக்கினேன்!” என்று சொல்கிறாய்.

4-5 “‘ஆனால் நான் உனது வாயில் கொக்கியைப் போடுவேன்.
    நைல் நதியிலுள்ள மீன் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும்.
நான் உன்னையும் உனது மீனையும் நதியை விட்டு வெளியே இழுத்து,
    வறண்ட நிலத்தில் போடுவேன்.
நீ தரையில் விழுவாய்.
    உன்னை எவரும் எடுக்கவோ புதைக்கவோமாட்டார்கள்.
நான் உன்னைக் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் கொடுப்பேன்.
    நீ அவற்றின் உணவு ஆவாய்.
பிறகு எகிப்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களும்
    நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்!

“‘ஏன் நான் இவற்றைச் செய்கிறேன்?
இஸ்ரவேலர்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள்.
    ஆனால் அந்த உதவி நாணல் கோலைப்போன்று பலவீனமாக இருந்தது!
இஸ்ரவேல் ஜனங்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள்.
    ஆனால் எகிப்து அவர்களது கைகளையும் தோள்களையும் கிழித்தது.
அவர்கள் உதவிக்காக உன்மேல் சாய்ந்தார்கள்.
    ஆனால் நீ அவர்களின் இடுப்பை திருப்பி முறிந்துபோகப் பண்ணினாய்.’”

எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நான் உனக்கு எதிராக ஒரு வாளைக் கொண்டுவருவேன்.
    நான் உனது ஜனங்களையும் மிருகங்களையும் அழிப்பேன்.
எகிப்து வெறுமையாகி அழியும்.
    பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

தேவன் சொன்னார்: “ஏன் நான் இவற்றைச் செய்யப்போகிறேன்? நீ, ‘இது எனது நதி. நான் இந்த நதியை உண்டாக்கினேன்’ என்று கூறினாய். 10 எனவே, நான் (தேவன்) உனக்கு விரோதமாக இருக்கிறேன். உன் நைல் நதியின் பல கிளைகளுக்கும் நான் விரோதமானவன். நான் எகிப்தை முழுமையாக அழிப்பேன். நகரங்கள் மிக்தோலிலிருந்து செவெனேவரை, எத்தியோப்பியா எல்லைவரை வெறுமையாகும். 11 எந்த மனிதரும் மிருகமும் எகிப்து வழியாகப் போகமுடியாது. எதுவும் 40 ஆண்டுகளுக்கு எகிப்தில் வாழ முடியாது. 12 நான் எகிப்தை அழிப்பேன். நகரங்கள் 40 ஆண்டுகளுக்கு அழிந்த நிலையிலேயே இருக்கும். நான் எகிப்தியர்களைப் பல நாடுகளில் சிதறடிப்பேன். நான் அவர்களை அயல்நாடுகளில் அந்நியர்களாக்குவேன்.”

13 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் எகிப்தியர்களைப் பல நாடுகளில் சிதறடிப்பேன். ஆனால் 40 ஆண்டுகள் முடிந்ததும் அவர்களை மீண்டும் கூட்டுவேன். 14 நான் எகிப்திய கைதிகளை மீண்டும் கொண்டுவருவேன். நான் எகிப்தியர்களை மீண்டும் அவர்கள் பிறந்த நாடான பத்ரோசுக்குக் கொண்டுவருவேன். ஆனால் அவர்களது அரசு முக்கியமற்றிருக்கும், 15 இது மிக அற்பமான அரசாக இருக்கும். இது மற்ற நாடுகளைவிட மேலாக என்றும் உயராது. நான் அதனை வேறு நாடுகளை ஆளமுடியாதபடி மிகச் சிறிதாக்குவேன். 16 இஸ்ரவேல் வம்சத்தார் மீண்டும் எகிப்தைச் சார்ந்திருக்கமாட்டார்கள். இஸ்ரவேலர்கள் தம் பாவத்தை நினைப்பார்கள். அவர்கள் தேவனை நோக்கித் திரும்பாமல், உதவிக்காக எகிப்திடம் திரும்பினார்கள். அவர்கள் நானே கர்த்தரும் ஆண்டவருமாயிருக்கிறேன் என்பதை அறிவார்கள்.”

பாபிலோன் எகிப்தைக் கைப்பற்றும்

17 இருபத்தேழாம் ஆண்டின் முதலாம் மாதம் (ஏப்ரல்) முதலாம் நாளில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார், தீருவுக்கு எதிராகத் தன் படையைக் கடுமையாகப் போரிடுமாறு செய்தான். அவர்கள் எல்லா வீரர்களின் தலைகளையும் மொட்டையடித்தனர். ஒவ்வொருவரின் தோளும் பாரமான தடிகள் சுமந்து தோல் உரிந்துபோனது, நேபுகாத்நேச்சாரும் அவனது படையும் தீருவைத் தோற்கடிக்கக் கடுமையாக வேலை செய்தது. ஆனால் அக்கடும் வேலையால் அவர்கள் எதையும் பெறவில்லை.” 19 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “நான் எகிப்து நாட்டை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாருக்குக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் எகிப்தியர்களைச் சிறை எடுத்துச்செல்வான். நேபுகாத்நேச்சார் எகிப்திலிருந்து பல விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச்செல்வான். இது நேபுகாத்நேச்சாரின் படைகளுக்கான கூலியாகும். 20 நான் நேபுகாத்நேச்சாருக்கு அவனது கடுமையான உழைப்புக்குப் அன்பளிப்பாக எகிப்தைக் கொடுப்பேன். ஏனென்றால், அவர்கள் எனக்காக உழைத்தார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்!

21 “அந்த நாளில் நான் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பலமுள்ளவர்களாக்குவேன். பிறகு உன் ஜனங்கள் எகிப்தியரைப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”

பாபிலோன் படை எகிப்தைத் தாக்கும்

30 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார், “மனுபுத்திரனே, எனக்காகப் பேசு. ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.

“‘அழுதுகொண்டே சொல்:
    “அந்தப் பயங்கரமான நாள் வருகிறது.”
அந்த நாள் அருகில் உள்ளது!
ஆம், கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாள் அருகில் உள்ளது.
    அது மேகமூடிய நாள்.
    இது நாடுகளை நியாயந்தீர்க்கும் காலமாக இருக்கும்!
எகிப்திற்கு எதிராக ஒரு வாள் வருகிறது!
    எத்தியோப்பியாவிலுள்ள ஜனங்கள் பயத்தால் நடுங்குவார்கள், அந்த நேரத்தில் எகிப்து விழும்.
பாபிலேனின் படை எகிப்திய ஜனங்களைச் சிறை பிடித்துச் செல்லும்.
    எகிப்தின் அடித்தளம் உடைந்து போகும்!

“‘பல ஜனங்கள் எகிப்தோடு சமாதான உடன்படிக்கை செய்தனர். ஆனால் எத்தியோப்பியா, பூத், லூத், அரேபியா, லிபியா மற்றும் இஸ்ரவேலர்கள் அழிக்கப்படுவார்கள்!

“‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
எகிப்திற்கு ஆதரவளிக்கும் ஜனங்கள் வீழ்வார்கள்!
    அவளது பலத்தின் பெருமை அழியும்.
மிக்தோல் முதல் செவெனே வரைக்குமுள்ள எகிப்திய ஜனங்கள் போரில் கொல்லப்படுவார்கள்.
    எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்!
எகிப்து அழிக்கப்பட்ட மற்ற நாடுகளோடு சேரும்.
    எகிப்தும் வெறுமையான நாடுகளில் ஒன்றாகும்.
நான் எகிப்தில் ஒரு நெருப்பைக் கொளுத்துவேன்.
    அவளது ஆதரவாளர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!

“‘அந்த நேரத்தில், நான் தூதுவர்களை அனுப்புவேன். அவர்கள் கெட்ட செய்தியோடு எத்தியோப்பியாவிற்குக் கப்பலில் போவார்கள். எத்தியோப்பியா இப்போது பாதுகாப்பை உணர்கிறது. எகிப்து தண்டிக்கப்படும்போது, எத்தியோப்பியர்கள் பயத்தினால் நடுங்குவார்கள்! அந்த நேரம் வருகிறது!’”

10 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நான் பாபிலோன் அரசனைப் பயன்படுத்துவேன்.
    நான் நேபுகாத்நேச்சாரை எகிப்து ஜனங்களை அழிக்கப் பயன்படுத்துவேன்.
11 நேபுகாத்நேச்சாரும் அவனது ஜனங்களும்
    நாடுகளிலேயே மிகவும் கொடூரமானவர்கள்.
    நான் எகிப்தை அழிக்க அவர்களைக் கொண்டுவருவேன்.
அவர்கள் தம் வாள்களை எகிப்திற்கு எதிராக உருவுவார்கள்.
    அவர்கள் அத்தேசத்தை மரித்த உடல்களால் நிரப்புவார்கள்.
12 நான் நைல் நதியை வறண்ட நிலமாக்குவேன்.
    பிறகு நான் வறண்ட நிலத்தைத் தீயவர்களுக்கு விற்பேன்.
நான் அந்நியர்களைப் பயன்படுத்தி அந்நாட்டைக் காலி பண்ணுவேன்!
    கர்த்தராகிய நான் பேசியிருக்கிறேன்.”

எகிப்தின் விக்கிரகங்கள் அழிக்கப்படும்

13 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.
“நான் எகிப்திலுள்ள விக்கிரகங்களை அழிப்பேன்.
    நான் நோப்பின் சிலைகளை வெளியே அப்புறப்படுத்துவேன்.
எகிப்து நாட்டில் இனிமேல் ஒரு தலைவனும் இருக்கமாட்டான்.
    நான் எகிப்து நாட்டில் அச்சத்தை வைப்பேன்.
14 நான் பத்ரோசைக் காலி பண்ணுவேன்.
    நான் சோவானில் நெருப்பைக் கொளுத்துவேன்.
    நான் நோ நகரைத் தண்டிப்பேன்.
15 நான் எகிப்தின் கோட்டையான சீனுக்கு விரோதமாக எனது கோபத்தை ஊற்றுவேன்.
    நான் நோ ஜனங்களை அழிப்பேன்!
16 நான் எகிப்தில் நெருப்பைக் கொளுத்துவேன்.
    சீன் என்னும் பெயருள்ள நகரம் துன்பத்தில் இருக்கும்.
நோ நகரத்திற்குள் வீரர்கள் நுழைவார்கள்.
    நோ ஒவ்வொரு நாளும் புதிய துன்பங்களை அனுபவிக்கும்.
17 ஆவென், பிபேசெத் ஆகிய நகரங்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள்.
    பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுவார்கள்.
18 நான் எகிப்தின் நுகங்களை முறிக்கும்போது தக்பானேசிலே பகல் இருண்டு போகும்.
    எகிப்தின் பெருமையான பலம் முடிந்துபோகும்!
எகிப்தை ஒரு மேகம் மூடும்.
    அவளது மகள்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுவார்கள்.
19 எனவே நான் எகிப்தைத் தண்டிப்பேன்.
    பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!”

எகிப்து என்றென்றும் பலவீனமாகும்

20 சிறைபிடிக்கப்பட்ட பதினொன்றாவது ஆண்டின் முதல் மாதத்து (ஏப்ரல்) ஏழாம் நாள் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 21 “மனுபுத்திரனே, நான் எகிப்து மன்னனான பார்வோனின் கையை (பலம்) உடைத்திருக்கிறேன். எவரும் அவனது கையில் கட்டுப்போட முடியாது. அது குணமாவதில்லை. எனவே அவனது கையானது வாளைத் தாங்கும் அளவிற்குப் பலம் பெறுவதில்லை.”

22 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் எகிப்து மன்னனான பார்வோனுக்கு விரோதமானவன். அவனது இரண்டு கைகளையும் நான் உடைப்பேன். அவற்றில் ஒன்று ஏற்கெனவே உடைந்தது; இன்னொன்று பலமுள்ளது. நான் அவனது கையிலிருந்து வாளானது விழும்படிச் செய்வேன். 23 நான் எகிப்தியர்களை நாடுகளிடையே சிதறடிப்பேன். 24 நான் பாபிலோன் அரசனது கையைப் பலப்படுத்துவேன். நான் எனது வாளை அவனது கையில் கொடுப்பேன். ஆனால் நான் பார்வோனின் கைகளை உடைப்பேன். பிறகு பார்வோன் வலியால் கதறுவான். அவனது கதறல் மரிக்கிறவனின் கதறல் போன்றிருக்கும். 25 எனவே நான் பாபிலோன் அரசனின் கைகளைப் பலப்படுத்துவேன். ஆனால் பார்வோனின் கைகள் கீழே விழும். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!

“நான் பாபிலோன் அரசனது கையில் என் வாளைக் கொடுப்பேன். பிறகு அவன் எகிப்து நாட்டிற்கு எதிராக வாளை நீட்டுவான். 26 நான் நாடுகளில் எகிப்தியர்களைச் சிதறடிப்பேன், பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

அசீரியா கேதுரு மரத்தைப் போன்றது

31 சிறைபிடிக்கப்பட்ட பதினொன்றாவது ஆண்டின் மூன்றாவது மாதத்து (ஜூன்) முதல் நாளில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எகிப்திய அரசனான பார்வோனிடமும் அவனது ஜனங்களிடமும் இவற்றைக் கூறு:

“‘உனது மகத்துவத்தில்,
    உன்னுடன் யாரை நான் ஒப்பிட முடியும்?
அசீரியா, அழகான கிளைகளுடன், காட்டு நிழலோடு உயரமாக உள்ள லீபனோனின் கேதுரு மரம்.
    அதன் உச்சி மேகங்களுக்கிடையில் உள்ளது!
தண்ணீர் மரத்தை வளரச் செய்கிறது.
    ஆழமான நதி மரத்தை உயரமாக்கியது.
நதிகள் நடப்பட்ட மரத்தை சுற்றி ஓடுகின்றன.
    ஒரு மரத்திலிருந்து மற்ற மரங்களுக்கு சிறு ஓடைகள் மட்டுமே பாய்கின்றன.
எனவே காட்டிலுள்ள மற்ற மரங்களைவிட அம்மரம் உயரமாக இருக்கின்றது.
    இதில் பல கிளைகள் வளர்ந்துள்ளன.
அங்கே தண்ணீர் மிகுதியாக உள்ளது.
    எனவே கிளைகள் பரந்து வளர்ந்துள்ளன.
அம்மரத்தின் கிளைகளில் வானத்துப் பறவைகள்
    எல்லாம் தம் கூடுகளைக் கட்டிக்கொண்டன.
காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் அம்மரத்துக்
    கிளைகளின் அடியிலேயே குட்டிபோட்டன.
அம்மரத்தின் அடியிலேயே
    எல்லா பெருநாடுகளும் வாழ்ந்தன.
அந்த மரம் அழகாக இருந்தது.
    அது பெரிதாக இருந்தது,
    அதற்கு அவ்வளவு பெரிய கிளைகள் இருந்தன.
    அதன் வேர்களுக்கு மிகுதியான நீர் இருந்தது!
தேவனுடைய தோட்டத்தில் உள்ள கேதுரு மரங்கள் கூட
    இம்மரத்தைப்போன்று இவ்வளவு பெரிதாக இல்லை.
தேவதாரு மரங்களுக்கு இவ்வளவு கிளைகள் இல்லை.
    அர்மோன் மரங்களுக்கு அதைப்போன்று கிளைகள் இல்லை.
இந்த மரத்தைப்போன்று தேவனுடைய தோட்டத்தில் உள்ள
    எந்த மரமும் அழகானதாக இல்லை.
நான் இதற்குப் பல கிளைகளைக் கொடுத்தேன்,
    அதனை அழகுடையதாக ஆக்கினேன்.
தேவன் தோட்டமான ஏதேனிலுள்ள
    அனைத்து மரங்களும் பொறாமைப்பட்டன!’”

10 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “இம்மரம் உயரமாக வளர்ந்திருக்கிறது. இது தனது உச்சியை மேகங்களிடையே வைத்தது. இம்மரத்திற்குத் தான் வளர்ந்திருந்ததால் பெருமை இருந்தது! 11 எனவே ஒரு பலம் வாய்ந்த அரசன் அந்த மரத்தைக் கைப்பற்றும்படிச் செய்தேன். அந்த அரசன் மரம் செய்த தீமைகளுக்காக அதனைத் தண்டித்தான். நான் அந்த மரத்தை என் தோட்டத்தில் இருந்து வெளியேற்றினேன். 12 உலகிலேயே மிகக் கொடூரமான ஜனங்கள் அதனை வெட்டிப்போட்டார்கள். அந்த மரக்கிளைகள் மலைகளின் மீதும் பள்ளத்தாக்குகளின் மீதும் விழுந்தன. அதன் முறிந்த கிளைகள் ஆறுகளால் பல இடங்களுக்கும் இழுத்துச் செல்லப்பட்டன. இனி மேல் மரத்தின் கீழே நிழல் இருக்காது. எனவே எல்லா ஜனங்களும் வெளியேறினர். 13 இப்பொழுது விழுந்த மரத்தில் பறவைகள் வாழ்கின்றன. காட்டு மிருகங்கள் விழுந்த கிளைகளின் மேல் நடக்கின்றன.

14 “இப்பொழுது, தண்ணீர்க் கரையிலுள்ள எந்த மரமும் பெருமை கொள்ளமுடியாது. அவை மேகங்களைத் தொட முயற்சி செய்வதில்லை. தண்ணீரைக் குடித்துப் பலம் கொண்ட எந்த மரமும் தான் உயரமாக இருப்பதைப்பற்றி பெருமை கொள்வதில்லை. ஏனென்றால், அனைத்தும் மரிக்க ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் உலகத்திற்குக் கீழே சீயோல் என்னும் மரண இடத்திற்குப் போகும். அவை மரித்து ஆழமான குழிகளுக்குள் போன மற்ற ஜனங்களோடு போய் சேரும்.”

15 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அந்த மரம் சீயோலுக்குள் இறங்கும் நாளிலே எல்லோரையும் அதற்காகத் துக்கப்படும்படிச் செய்தேன். லீபனோன் அதற்காகத் துக்கப்பட்டது. வயல்வெளியிலுள்ள எல்லா மரங்களும் அதன் வீழ்ச்சியைக் கேட்டு துக்கமும் அதிர்ச்சியும் அடைந்தன. ஆழ்கடல் தன் தண்ணீர் ஓட்டத்தையும் அதன் ஆறுகளையும் நிறுத்தியது. 16 நான் அந்த மரத்தை விழச் செய்தேன். நாடுகள் அது விழும் சத்தத்தைக் கேட்டு பயத்தால் நடுங்கின. நான் அந்த மரத்தை மரண இடத்திற்குப் போகும்படிச் செய்தேன். அது ஏற்கெனவே மரித்தவர்கள் சென்ற ஆழமான இடத்திற்குப் போனது. கடந்த காலத்தில், ஏதேனில் உள்ள அனைத்து மரங்களும் லீபனோனின் சிறந்த மேன்மையான மரங்களும் அந்த தண்ணீரைக் குடித்தன. அம்மரங்கள் கீழ் உலகத்தில் ஆறுதல் அடைந்தன. 17 ஆம், அம்மரங்கள் கூட, பெரிய மரத்தோடு மரண இடத்திற்குச் சென்றன. போரில் கொல்லப்பட்டவர்களோடு அவை சேர்ந்தன. அந்தப் பெரிய மரம் மற்ற மரங்களைப் பலமடையச் செய்தது. அம்மரங்கள் அப்பெரிய மரத்தின் நிழலில் நாடுகளுக்கிடையில் வாழ்ந்தன.

18 “எனவே எகிப்தே, ஏதேனில் உள்ள பெரிய வல்லமையுள்ள மரங்களில் எதனோடு உன்னை ஒப்பிடவேண்டும்? ஏதேனின் மரங்களோடு நீயும் பூமியின் தாழ்விடங்களில் மரிக்கப்படுவாய்! அந்த அந்நிய மனிதர்களோடும் போரில் மரித்தவர்களோடும் மரணத்தின் இடத்தில் நீ படுத்திருப்பாய்.

“ஆம் அது பார்வோனுக்கும் அவனது அனைத்து ஜனங்களுக்கும் ஏற்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

பார்வோன்: ஒரு சிங்கமா அல்லது முதலையா?

32 சிறைபிடிக்கப்பட்ட பன்னிரெண்டாம் ஆண்டு பன்னிரண்டாம் மாதம் (மார்ச்) முதலாம் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் கூறினார்: “மனுபுத்திரனே, எகிப்து அரசனான பார்வோனைப்பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. அவனிடம் கூறு:

“‘நீ நாடுகளிடையில் பெருமையோடு நடைபோட்ட பலம் வாய்ந்த இளம் சிங்கம் என்று உன்னை நினைத்தாய்.
    ஆனால் உண்மையில் நீ ஏரிகளில் கிடக்கிற முதலையைப் போன்றவன்.
நீ உனது வழியை ஓடைகளில் தள்ளிச்சென்றாய்.
    நீ உன் கால்களால் தண்ணீரைக் கலக்குகிறாய்.
    நீ எகிப்து நதிகளை குழப்புகிறாய்.’”

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“நான் பல ஜனங்களை ஒன்று கூட்டினேன்.
    இப்போது நான் என் வலையை உன் மேல் வீசுவேன்.
    அந்த ஜனங்கள் உன்னை உள்ளே இழுப்பார்கள்.
பிறகு நான் உன்னை வெறுந்தரையில் விடுவேன்.
    நான் உன்னை வயலில் எறிவேன்.
எல்லாப் பறவைகளும் வந்து உன்னைத் உண்ணும்படிச் செய்வேன்.
    காட்டு மிருகங்கள் எல்லா இடங்களிலுமிருந்து வந்து வயிறு நிறையும்வரை உன்னை உண்ணும்.
நான் உனது உடலை மலைகளில் சிதற வைப்பேன்.
    நான் பள்ளத்தாக்குகளை உனது மரித்த உடலால் நிரப்புவேன்.
நான் உனது இரத்தத்தை மலைகளில் சிதறுவேன்.
    அது தரைக்குள் ஊறிச்செல்லும்.
    நதிகள் உன்னால் நிறையும்.
நான் உன்னை மறையும்படி செய்வேன்.
    நான் வானத்தை மூடி நட்சத்திரங்களை இருளச் செய்வேன்.
    நான் சூரியனை மேகத்தால் மூடுவேன், நிலவு ஒளிவிடாது.
நான் வானத்தில் ஒளிவிடும் எல்லா விளக்குகளையும் உன்மேல் இருண்டுப்போகச் செய்வேன்.
    நான் உன் நாடு முழுவதும் இருண்டுப்போகக் காரணம் ஆவேன்.
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

“நான் உன்னை அழிக்கப் பகைவரைக் கொண்டுவரும்போது பல ஜனங்கள் வருந்தி கலக்கமடையும்படிச் செய்வேன். உனக்குத் தெரியாத நாடுகள் கூடத் துக்கப்படும். 10 உன்னைப்பற்றி பல ஜனங்கள் அறிந்து திகைக்கும்படி நான் செய்வேன். அவர்களின் அரசர்கள் நான் அவர்கள் முன் வாள் வீசும்போது பயங்கரமாக அஞ்சுவார்கள். நீ விழுகின்ற நாளில் அரசர்கள் ஒவ்வொரு நிமிடமும் பயத்தால் நடுங்குவார்கள். ஒவ்வொரு அரசனும் தன் சொந்த வாழ்க்கைக்காகப் பயப்படுவான்.”

11 ஏனென்றால், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “பாபிலோன் அரசனது வாள் உனக்கு எதிராகச் சண்டையிட வரும். 12 நான் அவ்வீரர்களை உன் ஜனங்களைப் போரில் கொல்லப் பயன்படுத்துவேன். அவ்வீரகள் மிகக் கொடூரமான நாடுகளிலிருந்து வருகின்றனர். அவர்கள் எகிப்து பெருமைப்பட்டுக்கொண்டிருப்பவற்றைக் கொள்ளையடிப்பார்கள். எகிப்து ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். 13 எகிப்தில் ஆற்றங்கரையில் பல மிருகங்கள் உள்ளன. நான் அந்த மிருகங்களையும் அழிப்பேன். ஜனங்கள் இனிமேல் தங்கள் கால்களால் தண்ணீரைக் கலக்கமுடியாது. இனிமேல் பசுக்களின் குளம்புகளும் தண்ணீரைக் கலக்கமுடியாது. 14 எனவே நான் எகிப்தில் உள்ள தண்ணீரை அமைதிப்படுத்துவேன். நான் நதிகளை மெதுவாக ஓடச் செய்வேன். அவை எண்ணெயைப்போன்று ஓடும்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: 15 “நான் எகிப்து நாட்டைக் காலி பண்ணுவேன். அத்தேசம் எல்லாவற்றையும் இழக்கும். எகிப்தில் வாழ்கிற எல்லா ஜனங்களையும் தண்டிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிவார்கள்!

16 “ஜனங்கள் எகிப்திற்காகப் பாடவேண்டிய சோகப் பாடல் இதுதான். வேறு நாடுகளில் உள்ள மகள்கள் (நகரங்கள்) எகிப்திற்காக இச்சோகப் பாடலைப் பாடுவார்கள். இது அவர்கள் எகிப்திற்காகவும் அதன் ஜனங்களுக்காகவும் பாடுகிற சோகப் பாடல்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைக் கூறினார்.

எகிப்து அழிக்கப்படும்

17 சிறைபிடிக்கப்பட்ட பன்னிரண்டாவது ஆண்டு அந்த மாதத்தின் பதினைந்தாம் தேதியன்று, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, எகிப்து ஜனங்களுக்காக புலம்பு. எகிப்தையும் அந்த மகள்களையும் பலம் வாய்ந்த நாடுகளிலிருந்து கல்லறைக்கு வழிநடத்து. அவர்களைக் கீழ் உலகத்திற்கு ஏற்கெனவே ஆழமான குழிகளில் இருக்கிறவர்களோடு அனுப்பு.

19 “எகிப்தே, வேறு எவரையும்விட நீ சிறந்ததில்லை! மரண இடத்திற்கு இறங்கிப்போ. அந்த அந்நியர்களோடு படுத்துக்கொள்.

20 “எகிப்து போரில் கொல்லப்பட்ட மனிதர்களோடு சேரும். பகைவன் அவளையும் அவளது ஜனங்களையும் வெளியே இழுத்துக்கொண்டான்.

21 “போரில் பலமும் ஆற்றலுமிக்க மனிதர்கள் கொல்லப்பட்டனர். அந்த அந்நியர்கள் மரண இடத்திற்குச் சென்றனர். அந்த இடத்திலிருந்து, அந்த மனிதர்கள் எகிப்தோடும் அதன் ஆதரவாளர்களோடும் பேசுவார்கள், அவர்களும் போரில் கொல்லப்படுவார்கள்.

22-23 “அசூரும் அதன் படையும் மரண இடத்தில் இருக்கும். அவர்களின் கல்லறைகள் ஆழமான குழிக்குள் செல்லும். அந்த அசூரிய வீரர்கள் போரில் கொல்லப்படுவார்கள். அசூரியப் படையானது அதன் கல்லறையைச் சுற்றி உள்ளது. அவர்கள் உயிரோடிருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் அமைதியாகிவிட்டது. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.

24 “ஏலாமும் இங்கே இருக்கிறது. அதன் படை அவள் கல்லறையைச் சுற்றியிருக்கிறது. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். அந்த அந்நியர்கள் பூமிக்குக் கீழே போய்விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் தம்மோடு அவமானத்தை எடுத்துக்கொண்டு ஆழமான குழிகளுக்குள் சென்றுவிட்டார்கள். 25 அவர்கள் ஏலாமுக்கும் போரில் மரித்த அவர்களின் அனைத்து வீரர்களுக்கும் படுக்கை போட்டிருக்கிறார்கள். ஏலாமின் படை அதன் கல்லறையைச் சுற்றியிருக்கிறது. அந்த அந்நியர்கள் அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது, ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் தம் அவமானத்தை எடுத்துக்கொண்டு ஆழமான குழிக்குள் சென்றார்கள். அவர்கள் கொல்லப்பட்ட மற்ற ஜனங்களோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

26 “மேசேக், தூபால் மற்றும் அவற்றின் படைகளும் அங்கே உள்ளன. அவர்களின் கல்லறைகள் அதைச் சுற்றியுள்ளன. அந்த அந்நியர்களும் போரில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். 27 ஆனால், இப்பொழுது நீண்ட காலத்துக்கு முன்னால் மரித்துப்போன, வல்லமையான மனிதர்களோடு படுத்துக்கிடக்கிறார்கள். அவர்கள் தம் போர்க்கருவிகளோடு புதைக்கப்பட்டார்கள். அவர்களின் வாள்கள் அவர்களின் தலைகளுக்குக் கீழ் வைக்கப்படும். ஆனால் அவர்களின் பாவங்கள் அவர்களின் எலும்பில் உள்ளன. ஏனென்றால், அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஜனங்களை பயப்படுத்தினார்கள்.

28 “எகிப்தே, நீயும் அழிக்கப்படுவாய். அந்த அந்நியர்களால் நீ வீழ்த்தப்படுவாய். போரில் கொல்லப்பட்ட வீரர்களோடு கிடப்பாய்.

29 “ஏதோமும் அங்கே இருக்கிறது. அவனோடு அரசர்களும் மற்ற தலைவர்களும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் பலம் பொருந்திய வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் இப்பொழுது போரில் கொல்லப்பட்ட மற்றவர்களோடு கிடக்கிறார்கள். அவர்கள் அந்த அந்நியர்களுடன் கிடக்கிறார்கள். அவர்கள் ஆழமான குழிக்குள் கிடக்கும் மற்ற ஜனங்களுடன் இருக்கின்றனர்.

30 “வடக்கில் உள்ள அரசர்கள் அனைவரும் அங்கே இருக்கின்றனர்! சீதோனில் உள்ள அனைத்து வீரர்களும் அங்கே இருக்கின்றனர். அவர்களது பலம் ஜனங்களைப் பயப்படுத்தியது. ஆனால், அவர்கள் அதனால் அவமானமடைகிறார்கள். அந்த அந்நியர்கள் போரில் கொல்லப்பட்டவர்களோடு கிடக்கிறார்கள். அவர்கள் தம் அவமானத்தோடு அக்குழிக்குள் சென்றார்கள்.

31 “பார்வோன் மரண இடத்திற்குச் சென்ற ஜனங்களை பார்ப்பான். அவனும் அவனோடுள்ள அனைத்து ஜனங்களும் ஆறுதல் பெறுவார்கள். ஆம், பார்வோனும் அவனது அனைத்துப் படைகளும் போரில் கொல்லப்படுவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

32 “பார்வோன் உயிரோடு இருக்கும்போது, ஜனங்கள் அவனுக்குப் பயப்படும்படிச் செய்தேன். ஆனால் இப்போது, அவன் அந்த அந்நியர்களோடு விழுந்துகிடக்கிறான். பார்வோனும் அவனது படையும் ஏற்கெனவே போரில் கொல்லப்பட்ட வீரர்களோடு விழுந்துகிடப்பார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

தேவன் இஸ்ரவேலின் காவல்காரனாக எசேக்கியேலைத் தெரிந்தெடுக்கிறார்

33 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, உன் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம் கூறு, ‘நான் இந்த நாட்டிற்கு விரோதமாகப் போரிட பகைவரைக் கொண்டுவருவேன். அது நிகழும்போது, ஜனங்கள் ஒரு மனிதனைத் தங்கள் காவல்காரனாகத் தேர்ந்தெடுத்தனர். இந்தக் காவல்காரன், பகை வீரர்கள் வருவதைப் பார்க்கும்போதும் எக்காளத்தை ஊதி ஜனங்களை எச்சரிப்பான். ஜனங்கள் எச்சரிக்கையைக் கேட்டாலும் அதனைப் புறக்கணித்தால் எதிரிகள் அவர்களைக் கைப்பற்றிச் சிறையெடுத்துச் செல்வார்கள். அவனது சொந்த மரணத்திற்கு அவனே பொறுப்பாவன். அவன் எக்காளத்தைக் கேட்டான், ஆனால் எச்சரிக்கையைப் புறக்கணித்தான். எனவே அவனது மரணத்திற்கு அவனே காரணமாகிறான். அவன் எச்சரிக்கையில் கவனம் செலுத்தியிருந்தால், பிறகு அவன் தன் சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்க முடியும்.

“‘ஆனால் காவல்காரன் பகை வீரர்கள் வருவதைக் கண்டும் அவன் எக்காளம் ஊதவில்லை என்றால், அவன் ஜனங்களை எச்சரிக்கவில்லை, பகைவன் அவர்களைக் கைப்பற்றிச் சிறையெடுத்துச் செல்வான். அந்த மனிதன் கொல்லப்படலாம். ஏனென்றால், அவன் பாவம் செய்திருக்கிறான். ஆனால் காவல்காரனும் அந்த ஆளின் மரணத்திற்குப் பொறுப்பாளி ஆவான்.’

“இப்பொழுது, மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னைக் காவல்காரனாக நான் தேர்ந்தெடுக்கிறேன். எனது வாயிலிருந்து செய்தியை நீ கேட்டால், எனக்காக ஜனங்களை எச்சரிக்க வேண்டும். நான் உனக்குச் சொல்லலாம்: ‘இந்தக் கெட்ட மனிதன் மரிப்பான்.’ பிறகு நீ எனக்காகப் போய் அவனை எச்சரிக்க வேண்டும். நீ அந்தப் பாவியை எச்சரிக்காமல் அவனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படி சொல்லாவிட்டால், பிறகு அவன் தான் செய்த பாவத்துக்காக மரிப்பான். ஆனால் அவனது மரணத்திற்கு நான் உன்னைப் பொறுப்பாளியாக்குவேன். ஆனால் நீ அந்தப் பாவியைத் தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படியும், பாவம் செய்வதை நிறுத்தும்படியும் எச்சரிக்கை செய்தும் அவன் பாவம் செய்வதை நிறுத்த மறுத்துவிட்டால், பின் அவன் மரிப்பான். ஏனென்றால், அவன் பாவம் செய்தவன். ஆனால் நீ உன்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறாய்.

ஜனங்களை அழிக்க தேவன் விரும்புகிறதில்லை

10 “எனவே, மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேல் வம்சத்தாரிடம் பேசு. அந்த ஜனங்கள் சொல்லலாம்: ‘நாங்கள் பாவம் செய்து சட்டங்களை மீறினோம். எங்கள் பாவங்கள் தாங்கமுடியாத அளவிற்குப் பாரமானவை. அந்தப் பாவங்களால் நாங்கள் கெட்டுப்போனோம். நாங்கள் உயிர் வாழ என்ன செய்யவேண்டும்?’

11 “நீ அவர்களிடம் சொல்ல வேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என் உயிரின் மேல் ஆணையிடுகிறேன், நான் ஜனங்கள் மரிப்பதை, பாவிகள் கூட மரிப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவதில்லை. அவர்கள் மரிப்பதை நான் விரும்புவதில்லை. அந்தப் பாவி ஜனங்களும் என்னிடம் திரும்பி வருவதையே நான் விரும்புகிறேன். நான், அவர்கள் வாழ்வை மாற்றிக்கொண்டு உண்மையான வாழ்க்கை வாழ்வதை விரும்புகிறேன். எனவே என்னிடம் திரும்பி வா. தீமை செய்வதை நிறுத்து. இஸ்ரவேல் வம்சத்தாரே நீங்கள் ஏன் மரிக்க வேண்டும்?’

12 “மனுபுத்திரனே, உன் ஜனங்களிடம் சொல்: ‘ஒருவன் தீயவனாக மாறிப் பாவம் செய்யத் தொடங்குவானேயானால் அவன் முன்பு செய்த நன்மைகள் எல்லாம் அவனைக் காப்பாற்றாது. ஒருவன் தீமையிலிருந்து மாறிவிடுவானேயானால் அவன் முன்பு செய்த தீமைகள் அவனை அழிக்காது. எனவே, ஒருவன் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் முன்பு செய்த நன்மைகள் அவனைக் காப்பாற்றாது என்பதை நினைவில் வைத்துக்கொள்.’

13 “நான் ஒரு நல்லவனிடம் நீ வாழ வேண்டும் என்று சொல்லலாம். ஒருவேளை அவன் தான் முன்பு செய்த நன்மைகள் தன்னைக் காப்பாற்றும் என்று நினைக்கலாம். எனவே, அவன் தீமைகள் செய்யத் தொடங்கலாம். நான் அவன் முன்பு செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கமாட்டேன்! இல்லை, அவன் தான் செய்யத் தொடங்கிவிட்ட பாவத்தால் மரிப்பான்.

14 “அல்லது நான் ஒரு தீயவனிடம் அவன் மரிப்பான் என்று சொல்லலாம். ஆனால், அவன் தன் வாழ்க்கையை மாற்றலாம். அவன் பாவம் செய்வதை நிறுத்தி, சரியான வழியில் வாழத் தொடங்கலாம். அவன் நல்லவனாகவும் நியாயமானவனாகவும் ஆகலாம். 15 அவன் கடன் கொடுத்தபோது பெற்ற பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். அவன் திருடிய பொருளையும் திருப்பிக் கொடுக்கலாம். அவன் வாழ்வைத் தருகிற நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றத் தொடங்கலாம். அவன் தீமை செய்வதை நிறுத்திவிடுகிறான். பிறகு அவன் நிச்சயம் வாழ்வான். அவன் மரிக்கமாட்டான். 16 அவன் முன்பு செய்த தீமைகளை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன். ஏனென்றால், அவன் இப்பொழுது நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறான். எனவே அவன் வாழ்வான்!

17 “ஆனால் உங்கள் ஜனங்கள், ‘அது சரியன்று! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்க முடியாது!’ என்கிறார்கள்.

“ஆனால் அவர்களோ நேர்மையில்லாத ஜனங்களாய் இருக்கிறார்கள். அவர்களே மாறவேண்டிய ஜனங்களாக இருக்கிறார்கள். 18 ஒரு நல்லவன் தான் செய்யும் நன்மைகளை நிறுத்திப் பாவம் செய்யத் தொடங்கினால், பிறகு அவன் தன் பாவத்தாலேயே மரிப்பான். 19 ஒரு பாவி தான் செய்யும் தீமைகளை நிறுத்தி நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் வாழத்தொடங்கினால் பிறகு அவன் வாழ்வான். 20 ஆனாலும் நீங்கள் நான் நேர்மையாக இல்லை என்று இன்னும் சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இஸ்ரவேல் குடும்பத்தாரே, ஒவ்வொருவனும் தான் செய்த காரியங்களுக்காகவே நியாயந்தீர்க்கப்படுவான்!”

எருசலேம் எடுத்துக்கொள்ளப்பட்டது

21 எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் ஆண்டு பத்தாம் மாதம் (ஜனவரி) ஐந்தாம் நாளில் எருசலேமிலிருந்து ஒருவன் என்னிடம் வந்தான். அங்குள்ள போரிலிருந்து அவன் தப்பித்து வந்தான். அவன், “அந்நகரம் (எருசலேம்) எடுக்கப்பட்டது!” என்றான்.

22 இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவரின் வல்லமை, அந்த ஆள் என்னிடம் வருவதற்கு முன் மாலையில், என் மேல் வந்திருந்தது, தேவன் என்னை பேச முடியாதவாறு செய்திருந்தார். அந்த ஆள் என்னிடம் வந்தபோது, கர்த்தர் என் வாயைத் திறந்து மீண்டும் என்னைப் பேசும்படிச் செய்தார். 23 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார், 24 “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் அழிந்த நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்கின்றனர். அந்த ஜனங்கள், ‘ஆபிரகாம் ஒருவனாயிருந்தான். தேவன் அவனிடம் இந்த நாடு முழுவதையும் கொடுத்தார். இப்பொழுது நாங்கள் பலராக இருக்கிறோம். எனவே உறுதியாக இந்நாடு எங்களுக்குச் சொந்தம்! இது எங்கள் நாடு!’ என்கிறார்கள்.

25 “கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும்: ‘நீ இன்னும் இரத்தம் நீக்கப்படாத இறைச்சியைத் தின்கிறாய். உதவிக்காக நீ விக்கிரகங்களை நோக்கிப் பார்க்கிறாய். நீ ஜனங்களைக் கொன்றாய். எனவே, நான் உனக்கு இந்நாட்டை ஏன் கொடுக்கவேண்டும்? 26 நீ உன் சொந்த வாளை நம்பியிருக்கிறாய். நீங்கள் ஒவ்வொருவரும் அருவருக்கத்தக்கச் செயல்களைச் செய்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியோடு பாலின உறவு பாவத்தைச் செய்கிறீர்கள். எனவே உங்களுக்கு இந்நாடு கிடைக்காது!’

27 “‘கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: “என் உயிரின்மேல் ஆணை, அழிந்துபோன நகரங்களில் வாழும் அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள் என்று நான் வாக்களித்தேன். எவனாவது நாட்டைவிட்டு வெளியே இருந்தால்,நான் அவனை மிருகங்கள் கொன்று தின்னச் செய்வேன். ஜனங்கள் கோட்டைகளுக்குள்ளும் குகைகளுக்குள்ளும் மறைந்திருந்தால். அவர்கள் நோயால் மரிப்பார்கள். 28 நான் அந்நாட்டை வெறுமையானதாகவும் பயனற்றதாகவும் செய்வேன். அந்த நாடு தான் பெருமைப்பட்டுக் கொண்டவற்றையெல்லாம் இழக்கும். இஸ்ரவேல் மலைகள் எல்லாம் காலியாகும். அந்த இடத்தின் வாழியாக எவரும் கடந்து செல்லமாட்டார்கள். 29 அந்த ஜனங்கள் பல அருவருப்பானக் காரியங்களைச் செய்திருக்கின்றனர். எனவே நான் அந்நாட்டை வெறுமையான நாடாகச் செய்வேன். பிறகு இந்த ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”

30 “‘இப்பொழுது, மனுபுத்திரனே, உன்னைப்பற்றிக் கூறுகிறேன். உன் ஜனங்கள் சுவர் ஓரங்களிலும் வீட்டு வாசல்களிலும் உன்னைக்குறித்துப் பேசுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “வாருங்கள். கர்த்தரிடமிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம்” என்கிறார்கள். 31 எனவே அவர்கள் உன்னிடம் எனது ஜனங்களைப்போல வருகிறார்கள். அவர்கள் எனது ஜனங்களைப்போன்று உன் முன்னால் அமருகிறார்கள். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் நீ சொல்வதைச் செய்யமாட்டார்கள். அவர்கள் தாம் நல்லதென்று எதை உணருகின்றார்களோ அவற்றையே செய்கிறார்கள். அவர்கள் பிற ஜனங்களை ஏமாற்றிப் பணம் சேர்க்கமட்டுமே விரும்புகிறார்கள்.

32 “‘இந்த ஜனங்களுக்கு நீ ஒன்றுமில்லை. ஆனால் நீ அவர்களுக்கு இன்பப் பாட்டு பாடுகிற பாடகனாய் இருக்கிறாய். உன்னிடம் இனிய குரல் உள்ளது. நீ உனது கருவிகளை நன்றாக இசைக்கிறாய். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் நீ சொன்னபடி அவர்கள் நடக்கமாட்டார்கள். 33 ஆனால் நீ பாடுவதெல்லாம் உண்மையாக நடக்கும். பிறகு ஜனங்கள் உண்மையில் அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி வாழ்ந்தான் என்று அறிவார்கள்!’”

இஸ்ரவேல் ஒரு ஆட்டு மந்தைப் போன்றது

34 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு (தலைவர்கள்) விரோதமாகப் பேசு. எனக்காக நீ அவர்களிடம் பேசு. எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் கூறு: ‘இஸ்ரவேலின் மேய்ப்பர்களாகிய நீங்கள் உங்களுக்கு மட்டுமே உணவு ஊட்டுகிறீர்கள். இது உங்களுக்கு மிகத் தீமையாகும்! நீங்கள் ஏன் உங்கள் மந்தையை மேய்க்கவில்லை? நீங்கள் கொழுத்த ஆடுகளைத் தின்றுவிட்டு அதன் மயிரால் உங்களுக்குக் கம்பளி செய்துகொள்கிறீர்கள். நீங்கள் கொழுத்த ஆடுகளைக் கொன்று உண்கிறீர்கள். நீங்கள் மந்தைக்கு உணவளிப்பதில்லை. நீங்கள் பலவீனமான ஆடுகளைப் பலப்படுத்துவதில்லை. நீங்கள் நோயுற்ற ஆடுகளைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்கள் காயம்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போடுவதில்லை. சில ஆடுகள் எங்கோ அலைந்து காணாமல் போகும். அவற்றைத் தேடிப்போய் நீங்கள் திரும்பக்கொண்டு வருவதில்லை. காணாமல் போன ஆடுகளைத் தேடி நீங்கள் போகவில்லை. இல்லை. நீங்கள் கொடூரமானவர்களாகவும் கடுமையானவர்களாகவும் இருந்தீர்கள். இவ்வாறுதான் நீங்கள் உங்கள் ஆடுகளை வழி நடத்தினீர்கள்!

“‘இப்பொழுது மேய்ப்பன் இல்லாததால் ஆடுகள் சிதறிப் போய்விட்டன. அவை ஒவ்வொரு காட்டு மிருகங்களுக்கும் உணவாயின. எனவே அவை சிதறிப்போயின. என் மந்தை எல்லா மலைகளிலும் உயரமான குன்றுகளிலும் அலைந்து திரிகின்றது, பூமியின் எல்லாப் பாகங்களிலும் எனது மந்தை சிதறிப்போயிற்று. அவற்றைத் தேடிப் போவதற்கும் கவனித்துக்கொள்ளவும் யாருமில்லை.’”

ஆகையால், மேய்ப்பர்களே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார், “என் உயிரைக்கொண்டு, நான் உனக்கு இந்த வாக்கையளிக்கிறேன். காட்டு மிருகங்கள் என் மந்தையைப் பிடித்தது. ஆம், எனது மந்தை காட்டு மிருகங்களுக்கு உணவாகியது. ஏனென்றால், அவற்றுக்கு உண்மையான மேய்ப்பன் இல்லை. எனது மேய்ப்பர்கள் எனது மந்தையை கவனிக்கவில்லை. இல்லை, அம்மேய்ப்பர்கள் ஆடுகளைத் தின்று தமக்கு உணவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் என் மந்தையை மேய்க்கவில்லை”.

எனவே, மேய்ப்பர்களே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்! 10 கர்த்தர் கூறுகிறார்: “நான் அம்மேய்ப்பர்களுக்கு விரோதமானவன்! நான் என் ஆடுகளை அவர்களிடமிருந்து வற்புறுத்தி உரிமையுடன் கேட்பேன்! நான் அவர்களை வேலையைவிட்டு நீக்குவேன். அவர்கள் இனி என் மேய்ப்பர்களாக இருக்கமாட்டார்கள். எனவே மேய்ப்பர்களால் தங்களுக்கே உணவளித்துக்கொள்ள முடியாது. நான் அவர்களின் வாயிலிருந்து என் மந்தையைக் காப்பேன். பிறகு என் மந்தை அவர்களுக்கு உணவாகாது.”

11 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான், நானே, அவர்களின் மேய்ப்பன் ஆவேன். நான் என் ஆடுகளைத் தேடுவேன். நான் அவர்களைக் கவனிப்பேன். 12 மேய்ப்பன் தன் ஆடுகளோடு இருக்கும்போது ஆடுகள் வழிதவறிப் போனால் அவன் அவற்றைத் தேடி அலைவான். அதைப்போன்று நானும் என் ஆடுகளைத் தேடுவேன். நான் என் ஆடுகளைக் காப்பாற்றுவேன். அந்த இருளான, மங்கலான நாட்களில் அவர்கள் சிதறிப்போன எல்லா இடங்களிலிருந்தும் அவர்களை நான் திரும்பக் கொண்டுவருவேன். 13 நான் அவற்றை அந்நாடுகளிலிருந்து கொண்டுவருவேன். நான் அந்நாடுகளிலிருந்து அவற்றை ஒன்று சேர்ப்பேன். நான் அவற்றைத் தம் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன். நான் அவற்றை இஸ்ரவேல் மலைகளிலும், ஓடைக் கரைகளிலும், ஜனங்கள் வாழ்கிற இடங்களிலும் மேய்ப்பேன். 14 நான் அவற்றைப் புல்வெளிகளுக்கு வழிநடத்துவேன். அவை இஸ்ரவேல் மலைகளின் உச்சிக்குப் போகும். அங்கே அவை தரையில் படுத்துக்கிடந்து புல்லை மேயும். அவை இஸ்ரவேல் மலைகளில் உள்ள வளமான புல்லை மேயும். 15 ஆம், நான் என் மந்தையை நன்றாக மேய்த்து ஓய்விடங்களுக்கு நடத்திச்செல்வேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

16 “நான் காணாமல்போன ஆடுகளைத் தேடுவேன். நான் சிதறிப்போன ஆடுகளைத் திரும்பக் கொண்டுவருவேன். நான் புண்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போடுவேன். நான் பலவீனமான ஆடுகளைப் பலப்படுத்துவேன். ஆனால் நான் கொழுத்த ஆற்றலுடைய மேய்ப்பர்களை அழிப்பேன். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பேன்.”

17 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “என் மந்தையே, நான் ஒரு ஆட்டுக்கும் இன்னொரு ஆட்டுக்கும் நியாயந்தீர்ப்பேன். நான் ஒரு ஆட்டுக்கடாவுக்கும் வெள்ளாட்டுக்கடாவுக்கும் நியாயம்தீர்ப்பேன். 18 நீங்கள் நல்ல நிலத்தில் வளர்ந்த புல்லை உண்ணலாம். ஆனால் நீங்கள் எதற்காக இன்னொரு ஆடு உண்ண விரும்புகிற புல்லை மிதித்துத் துவைக்கிறீர்கள். நீங்கள் ஏராளமான தெளிந்த தண்ணீரைக் குடிக்கலாம். ஆனால், நீங்கள் எதற்காக மற்ற ஆடுகள் குடிக்கிற தண்ணீரைக் கலக்குகிறீர்கள்? 19 எனது ஆடுகள் உங்களால் மிதித்து துவைக்கப்பட்டப் புல்லை மேயவேண்டும். அவை உங்களால் கலக்கப்பட்ட தண்ணீரைக் குடிக்க வேண்டும்!”

20 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றிடம் கூறுகிறார்: “நான், நானே கொழுத்த ஆட்டிற்கும் மெலிந்த ஆட்டிற்கும் இடையில் நியாயம் தீர்ப்பேன்! 21 நீங்கள் பக்கவாட்டினாலும் தோள்களாலும் தள்ளுகிறீர்கள். நீங்கள் உங்கள் கொம்புகளால் பலவீனமான ஆடுகளை முட்டித் தள்ளுகிறீர்கள். நீங்கள் அவை வெளியேறும்வரை தள்ளுகிறீர்கள். 22 எனவே நான் எனது மந்தையைக் காப்பேன். அவை இனி காட்டு மிருகங்களால் கைப்பற்றப்படாது, நான் ஒரு ஆட்டிற்கும் இன்னொரு ஆட்டிற்கும் இடையில் நியாயம் தீர்ப்பேன். 23 பிறகு நான் அவற்றுக்கு மேலாக ஒரு மேய்ப்பனை நியமிப்பேன். அவனே என் தாசனாகிய தாவீது. அவன் அவற்றுக்கு உணவளித்து அவர்கள் மேய்ப்பனாக இருப்பான். 24 பிறகு கர்த்தரும் ஆண்டவருமான நான் அவர்களின் தேவனாயிருப்பேன். என் தாசனாகிய தாவீது அவர்களிடையில் வாழ்கிற அதிபதியாவன். கர்த்தராகிய நான் பேசினேன்.

25 “நான் எனது ஆடுகளோடு ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்வேன். நான் தீமை தருகிற மிருகங்களை அந்த இடத்தை விட்டு அகற்றுவேன். பிறகு அந்த ஆடுகள் வனாந்தரத்தில் பாதுகாப்பாக இருக்கும், காடுகளில் நன்றாகத் தூங்கும். 26 நான் ஆடுகளை ஆசீர்வதிப்பேன். எனது மலையைச் (எருசலேம்) சுற்றியுள்ள இடங்களையும் ஆசீர்வதிப்பேன். சரியான நேரத்தில் நான் மழையைப் பொழியச் செய்வேன். அவை அவர்கள்மேல் ஆசீர்வாதத்தைப் பொழியும். 27 வயல்களில் வளர்ந்த மரங்கள் கனிகளைத் தரும். பூமி தன் விளைச்சலைத் தரும். எனவே ஆடுகள் தன் நிலத்தில் பாதுகாப்பாக இருக்கும். நான் அவற்றின் நுகத்தை உடைப்பேன். நான் அவற்றை அடிமையாக்கிய ஜனங்களின் வல்லமையிலிருந்து காப்பேன். பின் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். 28 அவர்கள் எந்த நாடுகளாலும் மிருகங்களைப்போன்று பிடிக்கப்படமாட்டார்கள். அந்த மிருகங்கள் இனி இவற்றை உண்ணாது. ஆனால் அவை பாதுகாப்பாக வாழும். எவரும் அவற்றைப் பயப்படுத்த முடியாது. 29 நான் அவர்களுக்குத் தோட்டம் இடத்தக்க நல்ல நிலத்தைக் கொடுப்பேன். பிறகு அவர்கள் பசியால் துன்பப்படவேண்டாம். பிற நாட்டினர் செய்யும் நிந்தனைகளை இனி அவர்கள் தாங்கவேண்டாம். 30 பின் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். நான் அவர்களோடு இருக்கிறேன் என்பதையும் அறிவார்கள். இஸ்ரவேல் வம்சத்தார் எனது ஜனங்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்!

31 “நீங்கள் எனது ஆடுகள். என் புல்வெளியில் மேய்கிற ஆடுகள். நீங்கள் மனிதர்கள். நான் உங்கள் தேவன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

ஏதோமுக்கு விரோதமான செய்தி

35 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, சேயீர் மலையைப் பார். அதற்கு விரோதமாக எனக்காகப் பேசு. அதனிடம் சொல், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.

“‘சேயீர் மலையே, நான் உனக்கு விரோதமானவன்!
    நான் உன்னைத் தண்டிப்பேன்.
    நான் உன்னை வெறுமையான நிலமாக்குவேன்.
நான் உன் நகரங்களை அழிப்பேன்.
    நீ வெறுமை ஆவாய்.
பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.

“‘ஏனென்றால், நீ எப்பொழுதும் எனது ஜனங்களுக்கு விரோதமாக இருந்தாய். நீ உனது வாளை இஸ்ரவேலுக்கு எதிராக அவர்களின் ஆபத்து காலத்தில் அவர்களின் இறுதித் தண்டனை காலத்தில் பயன்படுத்தினாய்!’” எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக்கொண்டு, உனக்கு மரணம் வரும்படி ஆணையிடுகிறேன். மரணம் உன்னைத் துரத்தும். நீ ஜனங்களைக் கொல்லுவதை வெறுப்பதில்லை. எனவே மரணம் உன்னைத் துரத்தும். நான் சேயீர் மலையைப் பாழான இடமாக்குவேன். அந்த நகரத்திலிருந்து வரும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன். அந்த நகரத்திற்குள் செல்ல விரும்பும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன். நான் இதன் மலைகளை மரித்த உடல்களால் நிரப்புவேன். உனது குன்றுகள் முழுவதும் மரித்த உடல்களால் நிரம்பும். உனது பள்ளதாக்குகளிலும், உனது ஆற்றுப் படுக்கைகளிலும், உடல்கள் கிடக்கும். நான் உன்னை என்றென்றும் வெறுமையாக்குவேன். உன் நகரங்களில் எவரும் வாழமாட்டார்கள். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”

10 நீ சொன்னாய், “இந்த இரண்டு குலங்களும், நாடுகளும் (இஸ்ரவேலும் யூதாவும்) என்னுடையதாக இருக்கும். நாங்கள் அவர்களைச் சொந்தமாக எடுத்துக்கொள்வோம்.”

ஆனால் கர்த்தர் அங்கே இருக்கிறார்! 11 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நீ என் ஜனங்கள் மேல் பொறாமையோடு இருந்தாய். நீ அவர்கள் மீது கோபத்தோடு இருந்தாய். நீ அவர்களை வெறுத்தாய், எனவே எனது உயிரைக்கொண்டு ஆணையிடுகிறேன், நீ அவர்களைப் புண்படுத்திய அதே முறையில் நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைத் தண்டித்து நான் அவர்களோடு இருப்பதை ஜனங்கள் அறியும்படிச் செய்வேன். 12 நான் உனது நிந்தைகளையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை நீ பிறகு அறிந்துகொள்வாய்.

“இஸ்ரவேல் மலைக்கு விரோதமாகப் பல தீயவற்றை நீ சொன்னாய். நீ சொன்னாய், ‘இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருக்கிறது! நான் அவர்களை உணவைப்போன்று சுவைப்பேன்!’ 13 நீ பெருமைகொண்டு, எனக்கு விரோதமானவற்றைச் சொன்னாய். நீ பல தடவை சொன்னாய், நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டிருக்கிறேன். ஆம், நீ சொன்னதைக் கேட்டேன்.”

14 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் உன்னை அழிக்கும்போது பூமி முழுவதும் மகிழும். 15 இஸ்ரவேல் நாடு அழிக்கப்பட்டபோது நீ மகிழ்ச்சியாக இருந்தாய். நானும் உன்னை அதைப்போலவே நடத்துவேன். சேயீர் மலையும் ஏதோம் நாடு முழுவதும் அழிக்கப்படும்! பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center