Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
மாற்கு 9:14 - லூக்கா 1:80

சிறுவன் குணமாக்கப்படுதல்(A)

14 பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களோடு இயேசு சென்று மற்ற சீஷர்களோடு சேர்ந்து கொண்டார். அங்கு அவர்கள் ஏராளமான மக்களால் சூழப்பட்டனர். வேதபாரகர்கள் அங்கு சீஷர்களோடு வாதம் செய்து கொண்டிருந்தனர். 15 இயேசு வருவதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் ஓடிவந்து அவரை வரவேற்றனர்.

16 இயேசு சீஷர்களிடம் “வேதபாரகர்களிடம் நீங்கள் எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

17 “ஆண்டவரே! நான் என் மகனை அழைத்து வந்தேன். அவன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். அது அவனைப் பேசவிடாமல் செய்துவிட்டது. 18 பிசாசு என் மகனைத் தாக்கித் தரையில் தள்ளுகிறது. அவன் வாயில் நுரைதள்ளி பல்லைக் கடித்து சோர்ந்து போகிறான். நான் உம்முடைய சீஷர்களிடம் அப்பிசாசைத் துரத்தும்படி வேண்டினேன். அவர்களால் அது முடியவில்லை,” என்றான் கூட்டத்திலுள்ள ஒருவன்.

19 அவர் அவர்களிடம், “ஓ! விசுவாசமில்லாத மக்களே! நான் உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பது? உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் பொறுமையாய் இருப்பது? அந்தப் பையனை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார்.

20 ஆகையால் இயேசுவிடம் சீஷர்கள் பையனைக் கொண்டு வந்தனர். பிசாசு இயேசுவைப் பார்த்ததும் பையனைத் தாக்கியது. அவன் தரையில் விழுந்து உருண்டான். அவன் வாயில் நுரை தள்ளிற்று.

21 இயேசு அப்பையனின் தந்தையிடம், “எவ்வளவு காலமாக இது இவனுக்கு ஏற்பட்டு வருகிறது?” என்று கேட்டார்.

அதற்கு அவன் தந்தை, “அவன் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்தே இது உள்ளது. 22 பிசாசு பலமுறை இவனைக் கொல்வதற்காக நீரிலும், நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உங்களால் ஏதாவது செய்ய முடியுமானால் எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கேட்டான்.

23 இயேசு அப்பையனின் தந்தையிடம், “‘உங்களால் முடியுமானால் செய்யுங்கள்’ என்கிறாய். விசுவாசம் கொண்டவர்களுக்கு எல்லாக் காரியங்களும் செய்து முடிக்கத் தக்கவையே” என்றார்.

24 அப்பையனின் தந்தை பரவசமானான். “நானும் விசுவாசிக்கிறேன். எனக்கு உதவி செய்து என் விசுவாசத்தைப் பெருகச் செய்யுங்கள்” என்றான்.

25 எல்லா மக்களும் நடப்பதை அறிந்துகொள்ள ஓடி வருவதைப் பார்த்தார் இயேசு. ஆகையால் இயேசு அசுத்த ஆவியிடம் பேசினார். இயேசு, “அசுத்த ஆவியே! நீ இந்தச் சிறுவனைச் செவிடாகவும், பேச முடியாமலும் ஆக்கிவிட்டாய். இவனை விட்டு வெளியே வா என்றும் மீண்டும் இவனுள் செல்லாதே என்றும் உனக்கு கட்டளையிடுகிறேன்” என்றார்.

26 அந்த அசுத்த ஆவி கதறிற்று. மீண்டும் அப்பையனைத் தரையிலே விழும்படி செய்து, அவனை விட்டு வெளியேறிற்று. அச்சிறுவன் இறந்தவனைப் போன்று கிடந்தான். பலர் “அவன் இறந்துபோனான்” என்றே சொன்னார்கள். 27 ஆனால் இயேசு அவனது கையைப் பிடித்து அவன் எழுந்திருக்க உதவினார்.

28 இயேசு வீட்டுக்குள் சென்றார். அவரது சீஷர்களும் அவரோடு தனியே இருந்தார்கள். அவர்கள், “எங்களால் ஏன் இந்த அசுத்த ஆவியை வெளியேற்ற முடியவில்லை?” என்று கேட்டனர்.

29 இயேசுவோ, “இந்த வகையான ஆவியைப் பிரார்த்தனையைப் பயன்படுத்தித்தான் வெளியேற்ற முடியும்” என்றுரைத்தார்.

தன் மரணத்தைப் பற்றிப் பேசுதல்(B)

30 பிறகு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்கள். அவர்கள் கலிலேயா வழியே சென்றனர். தாம் இருக்கும் இடத்தை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று இயேசு விரும்பினார். 31 இயேசு தன் சீஷர்களுக்குத் தனியே உபதேசிக்க விரும்பினார். அவர்களிடம் இயேசு, “மனித குமாரன் மக்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவரை அவர்கள் கொலை செய்வார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுவார்” என்றார். 32 இயேசு என்ன பொருளில் கூறுகிறார் என்பதை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதை விசாரிக்கவும் அவர்கள் அஞ்சினர்.

யார் உயர்ந்தவர்?(C)

33 இயேசுவும், அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஒரு வீட்டுக்குள் நூழைந்தனர். பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “இன்று சாலையில் நீங்கள் எதை விவாதித்தீர்கள்?” என்று கேட்டார். 34 ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம் செய்தனர்.

35 ஓரிடத்தில் இயேசு உட்கார்ந்துகொண்டு பன்னிரண்டு சீஷர்களையும் அருகில் அழைத்தார். அவர்களிடம் இயேசு, “எவனாவது மிக முக்கியமானவனாக விரும்பினால் அவன் தன்னைவிட மற்ற அனைவரையும் மிக முக்கியமானவர்களாகக் கருதி அவன் அனைவருக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும்” என்றார்.

36 பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி, 37 “இத்தகைய குழந்தைகளை என் பெயரில் ஏற்றுக்கொள்கிற எந்த மனிதனும், என்னையும் ஏற்றுக்கொண்டவனாகிறான். என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.

இயேசுவைச் சேர்ந்தவன் யார்?(D)

38 பிறகு யோவான் இயேசுவைப் பார்த்து, “போதகரே, உங்கள் பெயரைப் பயன்படுத்தி ஒருவன் பிசாசைத் துரத்திக்கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. நம்மவர்களில் ஒருவனும் அல்ல. எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொன்னோம்” என்றான்.

39 இயேசுவோ, “அவனை நிறுத்தாதீர்கள், எவனொருவன் என் பெயரைப் பயன்படுத்தி வல்லமையான செயல்களைச் செய்கிறானோ அவன் எனக்கு எதிராகத் தீயவற்றைச் செய்யமாட்டான். 40 எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன். 41 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான்.

பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்(E)

42 “இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும். 43 உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும். 44 [a] 45 உன் கால் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனை வெட்டிப் போடு. நீ உன் வாழ்க்கையை இழந்துபோவதைவிட காலைமட்டும் இழப்பது பரவாயில்லை. இரண்டு கால்களோடு நரகத்துக்குப் போவதைவிட இது பரவாயில்லை. 46 [b] 47 உனது கண் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனைப் பிடுங்கிப் போடு. உனது வாழ்வு முழுவதையும் இழப்பதைவிட ஒரு கண்ணை உடையவனாய் இருப்பது பரவாயில்லை. இரண்டு கண்ணுடையவனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒரு கண்ணை உடையவனாய் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை. 48 நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.

49 “ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள்.

50 “உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு தனது சுவையை இழந்துபோனால் நீ மீண்டும் அச்சுவையை அதில் ஊட்டமுடியாது. அதனால் நல்ல குணமுடையவர்களாய் இருங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.

விவாகரத்து பற்றிய போதனை(F)

10 பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு வெளியேறினார். அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார். அங்கு, ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள். வழக்கம்போல இயேசு அவர்களுக்குப் போதனை செய்தார்.

சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், இயேசுவைத் தவறாக ஏதாவது பேசவைக்க முயன்றார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “மோசே உங்களிடம் என்ன செய்யுமாறு கட்டளை இட்டார்?” என்று கேட்டார்.

பரிசேயர்களோ, “ஒருவன் விவாகரத்துக்கான சான்றிதழை எழுதி அதன் மூலம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதித்து இருக்கிறார்” என்றனர்.

அவர்களிடம் இயேசு, “மோசே உங்களுக்காக அவ்வாறு எழுதி இருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தேவனின் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள். ஆனால் தேவன் உலகைப் படைக்கும்போது ‘அவர் மக்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.’ ‘அதனால்தான் ஒருவன் தன் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கொள்கிறான். இருவரும் ஒருவர் ஆகிவிடுகிறார்கள். எனவே அவர்கள் இருவராயில்லாமல் ஒருவராகி விடுகின்றனர்.’ [c] தேவன் அந்த இருவரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். எனவே, எவரும் அவர்களைப் பிரிக்கக்கூடாது” என்றார்.

10 பிறகு இயேசுவும், சீஷர்களும் அந்த வீட்டில் தனியே இருந்தனர். அப்போது சீஷர்கள் இயேசுவிடம் மீண்டும் விவாகரத்து பற்றிய கேள்வியைக் கேட்டனர். 11 அதற்கு இயேசு, “எவனொருவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறானோ அவன் தன் மனைவிக்கு எதிரான பாவியாகிறான். அத்துடன் விபசாரமாகிய பாவத்துக்கும் ஆளாகிறான். 12 இது போலவே தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை மணந்துகொள்கிற பெண்ணும் விபசாரம் செய்யும் பாவியாகிறாள்” என்றார்.

குழந்தைகளும் இயேசுவும்(G)

13 மக்கள் தம் சிறு குழந்தைகளை இயேசு தொடுவதற்காகக் கொண்டு வந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர்கள் குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம் என்று தடுத்தனர். 14 இதனை இயேசு கவனித்தார். சிறுவர் தம்மிடம் வருகிறதை சீஷர்கள் தடை செய்தது அவருக்கு பிரியமில்லை. எனவே அவர்களிடம், “குழந்தைகள் என்னிடம் வருவதை அனுமதியுங்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். ஏனென்றால் தேவனுடைய இராஜ்யம் குழந்தைகளைப் போன்றவர்களுக்குரியது. 15 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்வதைப் போன்று நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அதற்குள் நுழைய முடியாது” என்றார். 16 பிறகு இயேசு, குழந்தைகளைக் கைகளால் அணைத்துக்கொண்டார். இயேசு அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வாதமும் செய்தார்.

பணக்காரனும் இயேசுவும்(H)

17 இயேசு அவ்விடத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தார். அப்போது ஒரு மனிதன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கினான். அவன், “நல்ல போதகரே! நான் நித்திய வாழ்வைப் பெற என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

18 அதற்கு இயேசு, “என்னை நீ நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். 19 ஆனால் உனது வினாவுக்கு விடையளிக்கிறேன். நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக [d] என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

20 அதற்கு அந்த மனிதன், “போதகரே! நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறேன்” என்றான்.

21 இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், “நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார்.

22 இயேசு இவற்றைச் சொன்னதும் அந்த மனிதன் மிகவும் வருத்தப்பட்டு அப்புறம் போனான். அவனது வருத்தத்துக்குக் காரணம் அவன் பெருஞ் செல்வந்தனாய் இருந்ததுதான்; அதோடு அச்செல்வத்தைப் பாதுகாக்கவும் நினைத்ததுதான்.

23 பிறகு இயேசு சுற்றிலும் பார்த்து தன் சீஷர்களிடம் “ஒரு பணக்காரன் தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது மிகவும் கடினமான ஒன்று” என்றார்.

24 இயேசு சொன்னதைக் குறித்து சீஷர்கள் அதிசயப்பட்டார்கள். இயேசு மீண்டும், “என் பிள்ளைகளே! தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது கடினமானது. 25 அதிலும் தேவனுடைய இராஜ்யத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவது மிகவும் கடினமானது. இதைவிட, ஊசியின் காதிற்குள் ஒரு ஒட்டகம் எளிதாக நுழைந்து விடும்” என்றார்.

26 சீஷர்கள் பெரிதும் அதிசயப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்குள், “பிறகு யார் இரட்சிக்கப்படுவார்?” என்று கேட்டனர்.

27 இயேசு தன் சீஷர்களைப் பார்த்து, “மக்கள் தங்களால் எதுவும் செய்துகொள்ள இயலாது. அது தேவனிடமிருந்துதான் வரவேண்டும். தேவனே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்” என்றார்.

28 பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறோம்” என்றான்.

29 இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவன் ஒருவன் தனது வீட்டையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தந்தையையும், தாயையும், குழந்தைகளையும், பண்ணைகளையும் எனக்காகவும், நற்செய்திக்காகவும், தியாகம் செய்கிறானோ 30 அவனுக்கு அவன் விட்டதைவிட நூறு மடங்கு கிடைக்கும். இங்கே இந்த உலகத்தில் அவன் மிகுதியான வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயார்களையும், குழந்தைகளையும், பண்ணைகளையும், பெறுவான். அதோடு பல துன்பங்களையும் அடைவான். ஆனால் அவன் நித்தியவாழ்வு என்னும் பரிசினை வரப்போகும் உலகில் பெறுவான். 31 இப்போது மிக உயர்ந்த இடத்தில் உள்ள பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த இடத்துக்குச் செல்வர், மிகத் தாழ்ந்த இடத்திலுள்ள பலர் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்வர்” என்றார்.

மீண்டும் தன் மரணத்தைப்பற்றிப் பேசுதல்(I)

32 இயேசுவும் அவரோடு இருந்த மக்களும் அங்கிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையில் இருந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று இயேசு அழைத்துச் சென்றார். இயேசுவின் சீஷர்கள் இதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவர் பின்னால் போன மக்களோ அச்சப்பட்டனர். மீண்டும் இயேசு தன் பன்னிரண்டு சீஷர்களைக் கூட்டி அவர்களோடு தனியாகப் பேசினார். எருசலேமில் அவருக்கு என்ன நடக்கும் என்பதைப்பற்றிக் கூறினார். 33 “நாம் எருசலேமுக்கு போய்க் கொண்டு இருக்கிறோம். மனிதகுமாரன் அங்கே தலைமை ஆசாரியர்களிடமும், வேதபாரகர்களிடமும் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனிதகுமாரன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிப்பர். அவர்கள் மனிதகுமாரனை யூதரல்லாதவர்களிடம் ஒப்படைப்பார்கள். 34 அவர்கள் அவரைக் குறித்து நகைப்பர். அவர்மீது காறி உமிழ்வார்கள். வாரினால் அடிப்பார்கள். கொலை செய்வார்கள். அவரோ மரணமடைந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுவார்” என்றார்.

சிறப்புச் சலுகை கேட்டவர்கள்(J)

35 பிறகு செபெதேயுவின் மகன்களாகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், “போதகரே நீங்கள் எங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.

36 அவர்களிடம் இயேசு, “நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.

37 “உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும்” என்றனர்.

38 அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நான் ஏற்கப்போகும் பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஞானஸ்நானம் பெறும் விதத்திலேயே நீங்களும் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.

39 அவர்கள், “ஆமாம், எங்களால் முடியும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் படப்போகும் துன்பங்களை எல்லாம் நீங்களும் படவேண்டியதிருக்கும். நான் பெறப்போகும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறவேண்டியதிருக்கும். 40 எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.

41 ஏனைய பத்து சீஷர்களும் இயேசு சொல்வதைக் கேட்டனர். அவர்களுக்கு யாக்கோபு மீதும், யோவான் மீதும் கோபம் ஏற்பட்டது. 42 இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், “யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். 43 ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் வழி இதுவாக இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு வேலைக்காரனைப்போல மற்றவர்களுக்குச் சேவைசெய்ய வேணடும். 44 உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப்போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும். 45 இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார்” என்றார்.

குருடன் குணமாக்கப்படுதல்(K)

46 பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்களோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் மகன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். 47 நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு வந்துகொண்டிருப்பதை அறிந்து சத்தமிட ஆரம்பித்தான். அவன், “தாவீதின் குமாரனாகிய இயேசுவே! எனக்கு உதவி செய்யும்” என்றான்.

48 பல மக்கள் அவனைப் பேசாமலிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அந்தக் குருடன் இன்னும் சத்தமாக, “தாவீதின் குமாரனே, எனக்கு உதவி செய்யும்” என்றான்.

49 அவ்விடத்தில் இயேசு, “அந்த மனிதனை இங்கே வரச் சொல்லுங்கள்” என்றார்.

எனவே அவர்கள் அக்குருடனை அழைத்தனர். அவர்கள், “மகிழ்ச்சியாய் இரு, எழுந்து வா, இயேசு உன்னை அழைக்கிறார்” என்றனர். 50 அக்குருடன் விரைவாக எழுந்தான். அவன் தன் மேலாடையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு இயேசுவினருகில் சென்றான்.

51 இயேசு அவனிடம், “நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார்.

அதற்கு அக்குருடன், “போதகரே! நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றான்.

52 “போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய்” என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான்.

எருசலேமுக்குள் இயேசு நுழைதல்(L)

11 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார். இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் எதற்காக இதனைக் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம், ‘ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது. அவர் இதனை விரைவில் திருப்பி அனுப்புவார் என்று சொல்லுங்கள்’” என்றார்.

சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள். அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் இதனைப் பார்த்தனர். “என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதையை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர். இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.

சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார். ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர். சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர்.

“அவரைப் புகழுங்கள்
    ‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ (M)

10 “தமது தந்தையான தாவீதின் இராஜ்யம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதாக.
    அந்த இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது.
பரலோகத்தில் உள்ள தேவனைப் போற்றுவோம்”

என்று அவர்கள் சத்தமிட்டனர்.

11 எருசலேமுக்குள் சென்று அங்குள்ள தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார். தேவாலயத்தில் எல்லாவற்றையும் இயேசு பார்த்தார். ஆனால் ஏற்கெனவே நேரமாகிவிட்டிருந்தது. ஆகையால் இயேசு அங்கிருந்து பெத்தானியாவுக்கு தன் பன்னிரண்டு சீஷர்களோடு சென்றார்.

அத்திமரம் பட்டுப்போவதை இயேசு அறிவித்தல்(N)

12 மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது. 13 இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை. 14 ஆகையால் இயேசு அத்தி மரத்திடம், “இனி மக்கள் யாரும் உன்னிடமிருந்து ஒரு போதும் பழத்தைத் தின்னமாட்டார்கள்” என்றார். இயேசு சொன்னதை சீஷர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

தேவாலயத்தில் இயேசு(O)

15 அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார். 16 ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார். 17 பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. [e] ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்” [f] என்றார்.

18 தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர். 19 அன்று இரவு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்நகரத்தை விட்டு வெளியேறினர்.

விசுவாசத்தின் வல்லமை(P)

20 மறுநாள் காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது. 21 பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான்.

22 அதற்கு இயேசு, “தேவனிடம் விசுவாசம் வைத்திருங்கள். 23 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ‘மலையே போ, போய்க் கடலில் விழு!’ என்று உங்களால் மலைக்கு ஆணையிட முடியும். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாதிருந்தால், நீங்கள் சொல்வது நடக்கும் என்கிற விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், தேவன் உங்களுக்காக அவற்றைச் செய்வார். 24 ஆகையால் உங்கள் பிரார்த்தனையின்போது தேவனிடம் காரியங்களைக் கேளுங்கள். அவற்றைக் கிடைக்கப்பெற்றோம் என்று நீங்கள் நம்பினால் அவை உங்களுக்கு உரியதாகும். 25 நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, ஏதாவது ஒன்றைக்குறித்து நீங்கள் யாரிடமாவது கோபம் கொண்டிருப்பது நினைவில் வந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவும் உங்களது தவறுகளை மன்னித்துவிடுவார்” என்றார். 26 [g]

இயேசுவின் அதிகாரத்தை சந்தேகித்தல்(Q)

27 இயேசுவும் சீஷர்களும் மீண்டும் எருசலேமுக்குச் சென்றார்கள். அவர் தேவாலயத்திற்குள் நடந்து கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவிடம் வந்தனர். 28 அவரிடம், “எங்களுக்குச் சொல். இவற்றையெல்லாம் செய்ய நீ எங்கிருந்து அதிகாரம் பெற்றாய்? யார் உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று கேட்டனர்.

29 அதற்கு இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். பிறகு நான் யாருடைய அதிகாரத்தால் இவற்றையெல்லாம் செய்கிறேன் என்பதைக் கூறுகிறேன். 30 யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுத்தபோது அந்த அதிகாரம் அவனுக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார்.

31 யூதத் தலைவர்கள் இயேசுவின் கேள்வியைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள், “நாம் இவனிடம், ‘யோவான் தேவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொன்னால்’, நம்மிடம் இவன், ‘பிறகு ஏன் யோவான் மீது நம்பிக்கை வைக்கவில்லை’ என்று கேட்பான். 32 ‘மனிதனிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், பின்னர் மக்கள் நம்மீது கோபம்கொள்வர்” (யூதத் தலைவர்கள் மக்களுக்கு எப்போதும் பயந்தனர். ஏனென்றால் அனைத்து மக்களும் யோவானை உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினர்) என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

33 ஆகையால் அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குப் பதில் தெரியாது” என்றனர். இயேசுவும், “அப்படியானால், நானும் யார் அதிகாரத்தால் இதனைச் செய்கிறேன் என்பதைச் சொல்லமாட்டேன்” என்றார்.

திராட்சைத் தோட்ட உவமை(R)

12 மக்களுக்குப் போதிக்க இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். “ஒருவன் தன் தோட்டத்தில் திராட்சை பயிரிட்டான். அவன் வயலைச் சுற்றி மதில்சுவர் எழுப்பினான். திராட்சை இரசம் உருவாக்க ஒரு குழியைத் தோண்டினான். பிறகு அவன் ஒரு கோபுரத்தையும் கட்டினான். அவன் அத்தோட்டத்தைச் சில விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டான். பிறகு அவன் வேறு தேசத்திற்குப் போய்விட்டான்.

“பின்னர், திராட்சைப் பழம் பறிப்பதற்கான காலம் வந்தது. திராட்சைத் தோட்டத்திலுள்ள பழத்தின் குத்தகைப் பங்கை வாங்கி வருமாறு தோட்டக்காரன் ஒரு வேலையாளை அனுப்பி வைத்தான். ஆனால் விவசாயிகள் அவனைப் பிடித்துக் கட்டிவைத்து அடித்து வெறுங்கையோடு அனுப்பினர். பின்பு வேறொரு வேலையாளைத் தோட்டக்காரன் அனுப்பினான். அந்த விவசாயிகள் அவனைத் தலையில் அடித்தனர். அவர்கள் அவனுக்கு அவமரியாதை செய்தனர். அதனால் தோட்டக்காரன் மேலும் ஒரு வேலைக்காரனை அனுப்பிவைத்தான். அந்த விவசாயிகள் அவனைக் கொன்று போட்டார்கள். அந்தத் தோட்டக்காரன் மேலும் பல வேலைக்காரர்களை விவசாயிகளிடம் அனுப்பி வைத்தான். விவசாயிகளோ அவர்களில் சிலரை அடித்தும் சிலரைக் கொன்றும் போட்டார்கள்.

“அந்தத் தோட்டக்காரனிடம் மேலும் ஒரே ஒரு ஆளே இருந்தான். அவன்தான் அவனது மகன். அவன் தன் மகனைப் பெரிதும் நேசித்தான். எனினும் அவன் மகனை விவசாயிகளிடம் அனுப்ப முடிவு செய்தான். கடைசி ஆளாகத் தன் மகனை மட்டுமே அனுப்ப முடியும் என்று எண்ணினான். ‘என் மகனையாவது விவாசாயிகள் மதிப்பார்கள்’ என்று நம்பினான்.

“ஆனால் விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன்தான் தோட்டத்துச் சொந்தக்காரனின் மகன். இந்தத் தோட்டம் இவனுக்கு உரியதாகும். இவனை நாம் கொன்றுவிட்டால் இத்தோட்டம் நம்முடையதாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். ஆகையால் அந்த விவசாயிகள் அவனது மகனைப் பிடித்து, கொன்று, தோட்டத்துக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டனர்.

“ஆகையால் தோட்டத்துச் சொந்தக்காரன் வேறு என்ன செய்வான்? அவன் தோட்டத்துக்குப் போய் அந்த விவசாயிகளை எல்லாம் கொல்வான். பிறகு அத்தோட்டத்தை வேறு விவசாயிகளுக்குக் கொடுப்பான். 10 உறுதியாகவே நீங்கள் இந்த வாக்கியத்தை வாசித்துள்ளீர்கள்.

“‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாமென ஒதுக்கிய கல்லே வீட்டின் மூலைக்கல்லாயிற்று.
11 கர்த்தர் ஒருவரே இதனைச் செய்தவர். இது நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது’” (S)

12 இயேசு சொன்ன இந்த உவமையை யூதத் தலைவர்களும் கேட்டனர். இந்த உவமை தங்களைப் பற்றியது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் இயேசுவைக் கைது செய்ய ஒரு காரணத்தைத் தேடினர். எனினும் அவர்களுக்கு மக்களைப்பற்றிய பயம் இருந்தது. எனவே, அவர்கள் இயேசுவை விட்டுப் போய்விட்டார்கள்.

யூதத் தலைவர்களின் தந்திரம்(T)

13 பிறகு யூதத்தலைவர்கள், சில பரிசேயர்களையும், ஏரோதியர்கள் என்னும் குழுவில் இருந்து சிலரையும் இயேசுவிடம் அனுப்பி வைத்தார்கள். ஏதாவது இயேசு தவறாகப் பேசினால் அவரைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். 14 பரிசேயர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் சென்றனர். “போதகரே! நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் என்று எங்களுக்குத் தெரியும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு எவ்வித அச்சமும் கிடையாது. அவர்கள் அனைவரும் உங்களுக்கு ஒரே மாதிரிதான். தேவனின் வழியைப் பற்றிய உண்மையையே நீங்கள் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். இராயனுக்கு வரி கொடுப்பது சரியா இல்லையா என்பது பற்றிக் கூறுங்கள். நாங்கள் வரி கொடுக்கலாமா, வேண்டாமா?” என்று கேட்டனர்.

15 அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார். அவர், “எதை எதையோ சொல்லி என்னை ஏன் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசைக் கொண்டு வாருங்கள். நான் பார்க்கவேண்டும்” என்றார். அவர்கள் ஒரு காசைக் கொடுத்தார்கள். அவர்களிடம் இயேசு, 16 “யாருடைய உருவப்படம் இந்தக் காசில் உள்ளது? யாருடைய பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அவர்களோ அதற்கு, “இது இராயனுடைய படம், இதில் இராயனின் பெயருள்ளது” என்றனர்.

17 இயேசு அவர்களைப் பார்த்து, “இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுங்கள், தேவனுக்குரியதை தேவனிடம் கொடுங்கள்” என்றார். அந்த மக்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்.

சதுசேயர்களின் தந்திரம்(U)

18 பிறகு சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (சதுசேயர்கள் என்பவர்கள் எவரும் இறப்பில் இருந்து உயிர்த்தெழ இயலாது என்று நம்புகிறார்கள்.) அவர்கள் இயேசுவிடம் ஒரு வினாவைக் கேட்டார்கள். 19 “போதகரே! ஒருவன் திருமணம் ஆகிக் குழந்தை இல்லாமல் இறந்துபோனால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணந்துகொள்ளலாம் என்று மோசே எழுதி இருக்கிறார். அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அது இறந்த சகோதரனுக்கு உரியதாகும் என்கிறார். 20 ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதல் சகோதரன் மணந்துகொண்டபின் இறந்து போனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை. 21 ஆகவே, இரண்டாவது சகோதரன் அவளை மணந்துகொண்டான். அவனுக்கும் குழந்தைகள் இல்லை. அவனும் இறந்துவிட்டான். இது போலவே மூன்றாவது சகோதரனுக்கும் ஏற்பட்டது. 22 இவ்வாறே ஏழு சகோதரர்களும் அப்பெண்ணை மணந்து இறந்து விட்டனர். யாருக்குமே அந்தப் பெண்ணோடு குழந்தை பிறக்கவில்லை. இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து விட்டாள். 23 ஆனால் ஏழு சகோதரர்களும் அவளை மணந்திருக்கின்றனர். ஆகவே, மரணத்திலிருந்து மக்கள் எழும் காலத்திலே அந்தப் பெண் யாருடைய மனைவியாகக் கருதப்படுவாள்?” என்று கேட்டனர்.

24 இதற்கு இயேசு, “ஏன் இந்தத் தவறைச் செய்கிறீர்கள்? இதற்குக் காரணம் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் அறிகிறதில்லை. அல்லது நீங்கள் தேவனின் வல்லமையைத் தெரிந்து கொள்ளவில்லை. 25 மரணத்தில் இருந்து எழும் மக்கள் மத்தியில் திருமண உறவுகள் ஏதும் இராது. மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்ளமாட்டார்கள். அனைத்து மக்களும் பரலோகத்தில் உள்ள தேவதூதர்களைப்போல இருப்பார்கள். 26 மக்கள் மரணத்தில் இருந்து எழுவது பற்றி தேவன் சொன்னதை நீங்கள் நிச்சயம் வாசித்திருக்கிறீர்கள். மோசே தனது நூலில் முட்செடி எரிந்ததைப்பற்றிச் சொல்லும்போது தேவன் மோசேயிடம் இவ்வாறு சொல்கிறார். ‘நான் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் தேவனுமாயிருக்கிறேன்’ [h] இவர்கள் உண்மையிலேயே மரித்தவர்கள் அல்லர். 27 அவர் உயிரோடு இருப்பவர்களுக்கே தேவனாய் இருக்கிறார். சதுசேயர்களாகிய நீங்கள் தவறானவர்கள்” என்றார்.

மிக முக்கியமான கட்டளை எது?(V)

28 வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான்.

29 அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். 30 நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ [i] இது முதல் கட்டளை. 31 ‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’ [j] என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார்.

32 அதற்கு அந்த மனிதன், “போதகரே! இது ஒரு நல்ல பதில். நீங்கள் சரியான பதிலையே சொல்லி இருக்கிறீர்கள். கர்த்தர் ஒருவரே நம் தேவன். அவரைத் தவிர வேறு தேவன் இல்லை. 33 ஒருவன் தேவனைத் தன் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை” என்றான்.

34 அந்த மனிதன் புத்திசாலித்தனமாகப் பதில் கூறுவதை இயேசு அறிந்து கொண்டார். எனவே அவனிடம், “நீ தேவனின் இராஜ்யத்தை நெருங்கிவிட்டாய்” என்றார். அதற்குப் பிறகு ஒருவருக்கும் இயேசுவிடம் எந்தக் கேள்வியும் கேட்கும் தைரியம் வரவில்லை.

கிறிஸ்து தாவீதின் குமாரனா?(W)

35 பின்னர், இயேசு தேவாலயத்தில் போதித்துக்கொண்டிருந்தார். “கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர்கள் ஏன் சொல்கிறார்கள்? 36 பரிசுத்த ஆவியின் உதவியுடன் தானாக தாவீது கூறுகிறார்:

“‘கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார், நீங்கள் எனது வலது பக்கத்தில் உட்காருங்கள்.
    நான் உங்களுடைய பகைவர்களை உங்கள் ஆளுகைக்கு உட்படுத்துவேன்’ (X)

37 தாவீது தானாக அவரை ‘ஆண்டவர்’ என்று அழைக்கிறார். அப்படி இருக்கக் கிறிஸ்து எவ்வாறு தாவீதின் மகனாக இருக்க முடியும்?” என்று இயேசு கேட்டார். ஏராளமான மக்கள் இயேசு சொல்வதைக் கேட்டு மனம் மகிழ்ந்தனர்.

இயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்(Y)

38 தொடர்ந்து இயேசு உபதேசித்துக்கொண்டிருந்தார். “வேதபாரகர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் மதிப்பைத் தரும் நீண்ட ஆடைகளை அணிந்துகொண்டு அங்குமிங்கும் அலைய விரும்புகிறார்கள். சந்தைப் பகுதிகளில் மக்களிடமிருந்து மரியாதை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். 39 ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளைப் பெற விரும்புகின்றனர். விருந்துகளில் மிக முக்கியான இடங்களில் இருக்க விரும்புகின்றனர். 40 விதவைகளை இழிவாக நடத்தி அவர்களது வீடுகளைத் திருடுகிறார்கள். நீண்ட பிரார்த்தனை செய்து நல்லவர்கள்போல் தோற்றம் தருகிறார்கள். இவர்களை தேவன் மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.

கொடுப்பதின் மேன்மை(Z)

41 மக்கள் தம் காணிக்கையைச் செலுத்துகிற ஆலய காணிக்கைப் பெட்டியின் அருகில் இயேசு உட்கார்ந்திருந்தார். மக்கள் அதில் காசுகள் போடுவதைக் கவனித்தார். நிறைய பணக்காரர்கள் ஏராளமாகப் பணத்தைப் போட்டார்கள். 42 பிறகு ஓர் ஏழை விதவை வந்து இரண்டு சிறியகாசுகளைப் போட்டாள்.

43 இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த ஏழை விதவை இரண்டு சிறிய காசுகளைத்தான் போட்டாள். உண்மையில் அவள் செல்வந்தர் எவரையும்விட அதிகம் போட்டிருக்கிறாள். 44 அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குத் தேவையில்லாததையே அவர்கள் கொடுத்தார்கள். இவளோ மிகவும் ஏழை. அவள் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட்டாள். அவள் கொடுத்தது அவளது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்” என்றார்.

ஆலயத்தின் எதிர்கால அழிவு(AA)

13 இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படும்போது அவரது சீஷர்களில் ஒருவன். “பாருங்கள் போதகரே! பெரிய பெரிய கற்களோடு இந்த ஆலயம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று சொன்னான்.

இயேசுவோ, “நீ இந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறாய். இவையெல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். ஒவ்வொரு கல்லும் தரையில் சிதறிப்போகும். ஒரு கல்லோடு இன்னொன்று சேராது போகும்,” என்றார்.

பிறகு ஒலிவ மலையின் மேலே ஓரிடத்தில் உட்கார்ந்தார். அவரோடு பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் இருந்தனர். அனைவரும் ஆலயத்தைப் பார்த்தனர். சீஷர்கள் இயேசுவிடம், “இவை எப்போது நடைபெறும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். இவை நிகழும் காலத்தை நாம் எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளமுடியும்?” என்று கேட்டனர்.

இயேசு சீஷர்களிடம், “எச்சரிக்கையாய் இருங்கள். யாரும் உங்களை ஏமாற்றாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். பலர் வந்து என் பெயரைப் பயன்படுத்துவார்கள். அவர்கள், ‘நானே அவர்’ என்பார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவார்கள். போரைப் பற்றியும், போர்களைப் பற்றிய செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். பயப்படாதீர்கள். உலக முடிவு ஏற்படும்முன் இவை நிகழ வேண்டும். நாடுகள் ஒன்றோடு ஒன்று போரிட்டுக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவில்லை என்று சொல்லும் காலம் வரும். பல்வேறு இடங்களில் பூமி அதிர்ச்சிகள் ஏற்படும். இவை ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் ஏற்படும் வேதனைபோல உருவாகும்.

“நீங்கள் கவனமாயிருங்கள். மக்கள் உங்களைக் கைது செய்து நியாயம் வழங்குவார்கள். தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை அடிப்பார்கள். நீங்கள் ஆளுநர்கள் முன்பும், மன்னர்களின் முன்பும், கட்டாயமாக நிறுத்தப்படுவீர்கள். என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் இவை உங்களுக்கு ஏற்படும். 10 இவை நடைபெறுவதற்கு முன்னால் நற்செய்தியானது எல்லா மக்களுக்கும் பரப்பப்படும். 11 நீங்கள் சொல்லப்போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில் தேவன் பேசக் கொடுத்தவற்றை நீங்கள் பேசுங்கள். உண்மையில் அவற்றை நீங்கள் பேசுவதில்லை. உங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரே பேசுவார்.

12 “சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிராகிச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எதிராகி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். பிள்ளைகள் தம் பெற்றோருக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களைக் கொலை செய்ய வழி தேடுவார்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் மக்கள் அனைவரும் உங்களை வெறுப்பார்கள். இறுதிவரை உறுதியாக யார் இருக்கிறார்களோ அவர்களே இரட்சிக்கப்படுவார்கள்.

14 “பேரழிவிற்கு காரணமான மோசமான காரியத்தை நிற்கத்தகாத இடத்தில் நிற்க நீங்கள் காண்பீர்கள். [k] (இதை வாசிக்கிறவன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.) அப்போது யூதேயாவில் உள்ள மக்கள் அதை விட்டு மலைகளுக்கு ஓடிப் போவார்கள். 15 மக்கள் தம் நேரத்தை வீணாக்காமல் எதற்காகவும் நிற்காமல் ஓடிப்போக வேண்டும். எவனாவது வீட்டின் கூரைமேல் இருந்தால் அவன் பொருள்களை எடுக்கக் கீழே இறங்காமலும் வீட்டிற்குள் நுழையாமலும் இருப்பானாக. 16 எவனாவது வயலில் இருந்தால் அவன் தன் மேல் சட்டையை எடுக்கத் திரும்பிப் போகாமல் இருப்பானாக.

17 “அந்தக் காலம் கருவுற்ற பெண்களுக்கும், கைக் குழந்தையுள்ள பெண்களுக்கும் மிகக் கொடுமையானதாக இருக்கும். 18 மழைக் காலத்தில் இவை நிகழாதிருக்கும்படி பிரார்த்தனை செய்யுங்கள். 19 ஏன்?அந்த நாட்களில் அதிக அளவு வேதனை இருக்கும். தொடக்கக் காலம் முதல் இன்று வரை இது போன்ற வேதனைகள் ஏற்பட்டிருக்காது. இது போன்ற கேடுகள் இனிமேல் நடக்காது. 20 அக்கேடு காலம் குறுகியதாக இருக்கட்டும் என்று தேவன் தீர்மானித்திருக்கிறார். அக்கேடு காலம் குறுகியதாக இல்லாமல் இருந்தால் பின்னர் உலகில் ஒருவரும் உயிரோடு இருக்க முடியாது. அவர் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய மக்களுக்கு உதவும்பொருட்டு தேவன் அக்கேடு காலத்தினைக் குறுகியதாக ஆக்குவார்.

21 “அக்காலத்தில் சிலர் ‘அதோ பாருங்கள் கிறிஸ்து, இதோ இவர்தான் கிறிஸ்து’ என்று கூறுவார்கள். அவர்களை நம்பாதீர்கள். 22 கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் வந்து அநேக அற்புதங்களையும், அரிய செயல்களையும் செய்வார்கள். அவர்கள் இவற்றை தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடமே செய்வார்கள். அப்படிச் செய்து அவர்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். 23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.

24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு,

“‘சூரியன் இருளாகும்.
    சந்திரன் ஒளி தராது.
25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.
    வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’ (AB)

26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 27 பூமி முழுவதும் தேவதூதர்களை மனிதகுமாரன் அனுப்பிவைப்பார். அத்தேவ தூதர்கள் உலகம் முழுவதிலும் உள்ள கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கூட்டுவார்கள்.

28 “அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது. அத்திமரக் கிளைகள் பசுமையாகவும், மென்மையாகவும் மாறி புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும்போது கோடைக் காலம் நெருங்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். 29 இது போலத்தான் நான் சொன்னவை நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் தோன்றியதும் காலம் நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ளுங்கள். 30 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.

32 “எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்துகொள்ள முடியாது. இதைப்பற்றி தேவ குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுக்கும் கூடத் தெரியாது. பிதா மட்டுமே இதனை அறிவார். 33 கவனமாய் இருங்கள். எப்பொழுதும் தயாராக இருங்கள். அக்காலம் எப்போது வரும் என உங்களுக்கும் தெரியாது.

34 “இது, பயணம் செய்பவன் தன் வீட்டைவிட்டுப் போவதைப் போன்றது. அவன் தன் வேலைக்காரர்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டுப்போகிறான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் குறிப்பிட்ட ஒவ்வொரு வேலையைக் கொடுத்துவிட்டுப் போகிறான். ஒரு வேலைக்காரன் வாசலைக் காவல் காப்பான். எப்பொழுதும் வேலைக்காரர்கள் தயாராய் இருக்கவேண்டும் என்று சொல்வான். அதைப் போலவே நானும் உங்களுக்குக் கூறுகிறேன். 35 எனவே, நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பி வருவான் என்று எவருக்கும் தெரியாது. ஒரு வேளை அவன் பிற்பகலில் வரலாம், அல்லது நடு இரவில் வரலாம் அல்லது அதிகாலையில் வரலாம், அல்லது சூரியன் உதயமாகும்போது வரலாம். 36 வீட்டின் சொந்தக்காரன் எதிர்பாராமல் வருவான். நீங்கள் எப்போதும் தயாராக இருந்தால் உங்களைத் தூங்குகிறவர்களாக அவன் கண்டுபிடிக்க மாட்டான். 37 நான் இதனை சொல்கிறேன். நான் எல்லாருக்கும் சொல்கிறேன், தயாராக இருங்கள்” என்றார்.

இயேசுவைக் கொல்லத் திட்டமிடுதல்(AC)

14 புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது வேதபாரகரும், தலைமை ஆசாரியர்களும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர். “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.

ஒரு பெண்ணின் சிறப்புச் செயல்(AD)

இயேசு பெத்தானியாவில் இருந்தார். அவர் தொழுநோயாளியான சீமோனின் வீட்டில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஒரு பெண் வந்தாள். அப்பெண்ணிடம் அதிக விலை மதிப்புள்ள நளதம் [l] என்னும் நறுமணத் தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடி இருந்தது. அவள் அந்த ஜாடியைத் திறந்து அந்நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றினாள்.

சில சீஷர்கள் இதனைக் கவனித்தனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு தங்களுக்குள் குற்றம் சாட்டினர். “நறுமணத் தைலத்தை ஏன் வீணாக்க வேண்டும்? ஓராண்டு செலவுக்குரிய பணத்துக்குச் சமமான மதிப்புள்ளதாயிற்றே இத்தைலம். அதனை விற்று அப்பணத்தை ஏழைகளுக்குச் செலவு செய்யலாமே” என்று கூறிக்கொண்டனர். அப்பெண்ணையும் அவர்கள் பலமாக விமர்சித்தனர்.

இயேசுவோ, “அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறீர்கள்? அவள் எனக்காக ஒரு நல்ல செயலைச் செய்தாள். ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நீங்கள் விரும்பும்போது எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களோடு இருக்கமாட்டேன். இந்தப் பெண்ணால் செய்ய முடிந்ததைத்தான் அவள் எனக்காகச் செய்திருக்கிறாள். நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு உதவியாக என் உடலில் தைலம் பூச முந்திக்கொண்டாள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இந்தப் பெண் செய்ததும் சொல்லப்படும். அப்போது மக்கள் இவளை நினைவில் இருத்திக்கொள்வார்கள்” என்றார்.

யூதாஸின் சதித்திட்டம்(AE)

10 பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் பேசச் சென்றான். அந்த சீஷனின் பெயர் யூதாஸ் காரியோத். அவன் அவர்களிடம் இயேசுவை ஒப்படைக்க விரும்பினான். 11 தலைமை ஆசாரியர்கள் இது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அதற்குரிய பணத்தை அவனுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆகையால் அவன் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

பஸ்கா விருந்து(AF)

12 அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். “நாங்கள் உமக்காகப் பஸ்கா விருந்து உண்ண எங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர்.

13 இயேசு நகரத்துக்குள் இரண்டு சீஷர்களை அனுப்பினார். “நகரத்துக்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்துகொண்டுவரும் ஒருவனைக் காண்பீர்கள். அவன் உங்களிடம் வருவான். அவனைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். 14 அவன் ஒரு வீட்டுக்குச் செல்வான். அந்த வீட்டு எஜமானைப் பாருங்கள். ‘ஆண்டவரும், அவரது சீஷர்களும் பஸ்கா விருந்துண்ணும் அறை எது?’ என்று கேளுங்கள். 15 அவன் மாடியில் உள்ள ஒரு பெரிய அறையைக் காட்டுவான். அந்த அறை உங்களுக்கு தயாராக இருக்கும். அங்கு விருந்து தயாராக்குங்கள்” என்றார்.

16 ஆகையால் சீஷர்கள் அவ்விடத்தை விட்டு நகரத்துக்குச் சென்றனர். இயேசு சொன்னபடி எல்லாக் காரியங்களும் நிறைவேறின. எனவே, சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர்.

17 மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார். 18 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இப்பொழுது என்னோடு உணவு உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.

19 இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர்.

20 இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான். 21 மனித குமாரன் இறந்து போவார். வேதவாக்கியங்களில் எழுதியபடி எல்லாம் நடக்கும். எனினும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுவாரோ அந்த மனிதனுக்குக் கேடு வரும். அவன் பிறக்காமல் இருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்” என்றார்.

கர்த்தரின் விருந்து(AG)

22 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லி அவற்றைப் பங்கிட்டார். அவற்றைத் தம் சீஷர்களுக்கு கொடுத்தார். அவர், “இதனைப் புசியுங்கள். இது எனது சரீரம்” என்றார்.

23 பிறகு அவர் ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சீஷர்களுக்குக் கொடுத்தார். அவர்களனைவரும் அதனைக் குடித்தனர். 24 பிறகு இயேசு, “இதுதான் எனது இரத்தம். தேவனிடமிருந்து மக்களுக்கு இது ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறது. இந்த இரத்தம் பலருக்காகச் சிந்தப்படுகிறது. 25 உங்களுக்கு நான் உண்மையைக் கூறுகிறேன், தேவனுடைய இராஜ்யத்தில் நான் புதிய திராட்சை இரசத்தைக் குடிக்கும் நாள்வரை இனி இங்கு மறுபடியும் திராட்சை இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார்.

26 அவர்கள் பாடலைப் பாடினர். பிறகு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றனர்.

சீஷர்கள் இயேசுவைவிட்டு விலகுதல்(AH)

27 பின்னர் இயேசு தன் சீஷர்களிடம், “நீங்கள் உங்கள் விசுவாசத்தை இழந்துவிடுவீர்கள் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது:

“‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன்.
    ஆடுகள் சிதறி ஓடும்.’ (AI)

28 ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.

29 பேதுரு, “மற்ற சீஷர்கள் வேண்டுமானால் தங்கள் விசுவாசத்தை இழந்து போகாலாம். ஆனால் நான் எப்பொழுதும் விசுவாசம் இழக்கமாட்டேன்” என்றான்.

30 இயேசுவோ, “நான் உண்மையைக் கூறுகிறேன். இன்று இரவே என்னைப்பற்றித் தெரியாது என்று கூறுவாய். அதுவும் சேவல் இரண்டு முறை கூவுவதற்குமுன் மூன்று முறை நீ என்னை மறுதலிப்பாய்” என்றார்.

31 ஆனால் பேதுருவோ “உங்களைத் தெரியாது என்று நான் நிச்சயமாகச் சொல்லமாட்டேன். நான் என் உயிரைக்கூட உம்மோடு விடுவேன்” என்றான். உறுதியாக எல்லாரும் அவ்வாறே சொன்னார்கள்.

இயேசுவின் பிரார்த்தனை(AJ)

32 இயேசுவும், அவரது சீஷர்களும் கெத்செமனே என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றனர். இயேசு “நான் பிரார்த்தனை செய்யும்போது எல்லாரும் இங்கே இருங்கள்” என்றார். 33 இயேசு தன்னோடு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துச் சென்றார். அவர் மிகவும் வேதனைப்பட்டு, துன்பப்பட்டார். 34 “என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. என் இதயம் துயரத்தால் உடைந்து போயிருக்கிறது. இங்கேயே காத்திருங்கள், விழித்திருங்கள்” என்றார்.

35 இயேசு அவர்களிடமிருந்து விலகிச் சிறிது தூரம் சென்றார். அவர் அங்கு தரையில் விழுந்து அந்த வேளை தம்மை விட்டு நீங்கிப் போகக்கூடுமானால் நீங்கட்டும் என பிரார்த்தனை செய்தார். 36 “பிதாவே! உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். துயரத்தின் பாத்திரத்தில் நான் அருந்தாதபடி செய்யுங்கள். ஆனாலும் நான் விரும்புகிறபடி இல்லாமல் உங்கள் விருப்பம் போல் எல்லாம் நடக்கட்டும்” என்றார்.

37 பிறகு இயேசு சீஷர்களிடம் வந்து, அவர்கள் தூங்குவதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “சீமோனே, ஏன் தூங்குகிறாய். எனக்காக ஒரு மணி நேரம் உன்னால் விழித்திருக்க முடியாதா? 38 நீ சோதனைக்கு இடம் தாராதபடி விழித்திருந்து பிரார்த்தனை செய். உனது ஆத்துமா நல்லவற்றையே செய்ய விரும்புகிறது. ஆனால் உனது சரீரம் பலவீனமாக உள்ளது” என்றார்.

39 மீண்டும் இயேசு தனியே சென்று அதே வார்த்தைகளைச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார். 40 பிறகு சீஷர்களிடம் திரும்பி வந்தார். மீண்டும் அவர்கள் தூங்குவதைப் பார்த்தார். அவர்களது கண்கள் மிகவும் சோர்ந்திருந்தன. இயேசுவிடம் என்ன சொல்லவேண்டும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர்.

41 மூன்றாவது முறையாக இயேசு தனிப் பிரார்த்தனை செய்தபின் சீஷர்களிடம் திரும்பி வந்தார். அவர்களிடம், “நீங்கள் இன்னும் தூங்கிக்கொண்டும் இளைப்பாறிக்கொண்டுமிருக்கிறீர்கள், இதுபோதும். மனித குமாரன் பாவிகளின் கைகளில் ஒப்படைக்கப்படும் காலம் வந்துவிட்டது. 42 எழும்புங்கள், நாம் போகவேண்டும். இதோ அவர்களிடம் என்னைக் காட்டிக்கொடுக்கிற மனிதன் வந்துவிட்டான்” என்றார்.

இயேசு கைதாகுதல்(AK)

43 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே யூதாஸ் அங்கே வந்தான். அவன் பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன். அவனோடு பலர் வந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், வேதபாரகராலும், மூத்த யூதத்தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்களிடம் வாள்களும், தடிகளும் இருந்தன.

44 யூதாஸ் அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்து வைத்திருந்தான். அதன்படி, “நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர்தான் இயேசு. அவரைக் கைது செய்து பத்திரமாய்க் கொண்டு செல்லுங்கள்” என்று சொல்லி இருந்தான். 45 அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். 46 உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர். 47 இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன்.

48 இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள். 49 நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார். 50 அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.

51 ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான்.

யூதத் தலைவர்களின் முன் இயேசு(AL)

53 இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைப் பிராதன ஆசாரியனின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அனைத்து தலைமை ஆசாரியர்களும் முதிய யூதத்தலைவர்களும் வேதபாரகர்களும் கூடினர். 54 பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றான். ஆனால் இயேசுவை நெருங்கவில்லை. தலைமை ஆசாரியனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அப்போது சில காவலர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். பேதுருவும் நெருப்பருகில் சென்றான்.

55 தலைமை ஆசாரியரும், மற்றவர்களும் இயேசுவைக் கொல்லக் குற்றங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். யூத ஆலோசனைச் சங்கத்தினரால் இயேசுவைக் கொல்வதற்குரிய எவ்விதக் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. 56 பலர் வந்து அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லை.

57 பின்பு சில மக்கள் எழுந்து அவர்மேல் தவறாகக் குற்றம் சாட்டினர். 58 “‘நான் இந்த ஆலயத்தை இடித்துப் போடுவேன். இது மனிதர்களால் கட்டப்பட்டது. நான் வேறு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன். அது மனிதர்களால் கட்டப்படாதது’ என்று இவன் கூற நாங்கள் கேட்டோம்” என்றார்கள். 59 ஆனால் அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படாமல் போயிற்று.

60 தலைமை ஆசாரியன் அவர்களுக்குமுன் எழுந்து நின்றான். அவன் இயேசுவிடம், “இந்த மக்கள் உமக்கு எதிராகக் கூறுகின்றனர். இவற்றுக்கு உம் பதில் என்ன? இவர்கள் சொல்வது உண்மையா?” என்று கேட்டான். 61 ஆனால் இயேசு எதுவும் கூறவில்லை.

தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நீர் கிறிஸ்துவா? ஆசீர்வதிக்கப்பட்ட தேவனின் குமாரனா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டான்.

62 இயேசுவோ, “ஆம். நான் தேவ குமாரன்தான். எதிர்காலத்தில் மனித குமாரன் சர்வ வல்லவரின் வலது பக்கத்தில் இருப்பதைக் காண்பீர்கள். பரலோக இராஜ்யத்தில் மேகங்களின் நடுவே மனித குமாரன் வருவதைப் பார்ப்பீர்கள்” என்றார்.

63 இதைக் கேட்டதும் தலைமை ஆசாரியனுக்குக் கோபம் வந்தது. அவன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நமக்கு மேலும் சாட்சிகள் தேவையில்லை. 64 தேவனுக்கு எதிராக இவன் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அனைத்து மக்களும் இயேசுவைக் குற்றவாளி என்றனர். அவரைக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளி என்றனர். 65 சிலர் இயேசுவின் மீது காறித்துப்பினார்கள். அவரது கண்களை மூடினர், அவரைக் குட்டினர். “நீ தீர்க்கதரிசி என்பதை எங்களுக்கு நிரூபித்துக் காட்டு” என்று சொன்னார்கள். பிறகு காவற்காரர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோய் அடித்தனர்.

பேதுருவின் மறுதலிப்பு(AM)

66 அப்போது பேதுரு வீட்டின் முற்றத்தில் இருந்தான். அம்மாளிகையில் உள்ள வேலைக்காரப் பெண் பேதுருவிடம் வந்தாள். 67 பேதுரு நெருப்பு காய்ந்துகொண்டிருந்தான். அவள் பேதுருவை மிகவும் நெருக்கத்தில் பார்த்தாள்.

“நாசரேத் ஊரானாகிய இயேசுவோடு நீயும் இருந்தாய் அல்லவா?” என்று கேட்டாள் அவள்.

68 ஆனால் பேதுருவோ “நான் இயேசுவோடு இருந்ததே இல்லை” என்று மறுத்தான். மேலும், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குத் தெரியவுமில்லை, புரியவுமில்லை” என்று கூறினான். பிறகு பேதுரு விலகி வெளியே வாசல் மண்டபத்துக்குச் சென்றான்.

69 மீண்டும் அந்த வேலைக்காரப் பெண் பேதுருவைக் கவனித்தாள். அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் அவள், “இயேசுவின் சீஷர்களுள் இவனும் ஒருவன்” என்றாள். 70 பேதுரு, மீண்டும் அவள் சொல்வது உண்மையில்லை என்று கூறினான்.

கொஞ்ச நேரம் சென்றதும், பேதுரு அருகில் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பேதுருவிடம், “இயேசுவின் சீஷர்களுள் நீயும் ஒருவன். நீயும் கூட கலிலேயாவில் இருந்து வருகிறவன்” என்றனர்.

71 பேதுரு சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கி, “நான் தேவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீங்கள் பேசுகிற அந்த மனிதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.

72 பேதுரு இவ்வாறு சொன்னதும் சேவலானது இரண்டாம் முறையாகக் கூவியது. இயேசு சொல்லி இருந்ததைப் பேதுரு நினைத்துப் பார்த்தான். “இன்று இரவு சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னால் நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய்” என்று சொல்லி இருந்தார். இதனால் துயருற்று பேதுரு கதறியழுதான்.

பிலாத்துவின் விசாரணை(AN)

15 அதிகாலையில் தலைமை ஆசாரியர்கள், யூதத் தலைவர்கள், வேதபாரகர்கள் அனைவரும் கூடி இயேசுவை என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தனர். அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர். அவர்கள் இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்தனர்.

“நீ யூதர்களின் மன்னனா?” என்று பிலாத்து கேட்டான்.

அதற்கு இயேசு, “ஆமாம். நீர் சொல்வது சரிதான்” என்றார்.

தலைமை ஆசாரியர் இயேசுவின்மீது பல குற்றங்களைச் சுமத்தினர். பிலாத்து இயேசுவிடம், “இம்மக்கள் உனக்கு எதிராகக் குற்றங்களை சுமத்துவதை நீ அறிவாய். எனினும் நீ ஏன் எந்தப் பதிலும் சொல்லவில்லை?” என்று மீண்டும் கேட்டான்.

ஆனால் இயேசு இதுவரை எந்தப் பதிலையும் கூற வில்லை. இதைப்பற்றி பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான்.

இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து முயன்று தோற்பது(AO)

ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது சிறையில் இருந்து ஒருவனை ஆளுநர் விடுதலை செய்யும் அதிகாரம் பெற்றிருந்தார். மக்கள் விரும்புகின்றவனையே அவர் விடுதலை செய்ய முடியும். அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில் கலகக்காரர்களோடு ஒரு கலவரத்தில் கொலை குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

வழக்கத்தின்படி ஒருவனை விடுதலை செய்யும்படி மக்கள் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர். மக்களிடம் பிலாத்து, “யூதர்களின் மன்னனை விடுதலைசெய்ய விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். 10 பொறாமை காரணமாகத்தான் தலைமை ஆசாரியர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர் என்பதைப் பிலாத்து அறிந்திருந்தான். 11 தலைமை ஆசாரியர்கள் இயேசுவை விடுதலை செய்யவேண்டாம் என்றும் பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்றும் கேட்க மக்களைத் தூண்டிவிட்டனர்.

12 “அப்படியானால் யூதர்களின் மன்னனாகிய இந்த மனிதனை நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று பிலாத்து மக்களிடம் கேட்டான்.

13 “அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று அவர்கள் மீண்டும் சத்தமிட்டனர்.

14 “ஏன்? இவன் என்ன பாவம் செய்தான்” என்று பிலாத்து கேட்டான். ஆனால் மக்கள் மேலும் மேலும் சப்தமிட்டனர். “அவனைச் சிலுவையில் கொல்லுங்கள்” என்றனர்.

15 மக்களைப் பிரியப்படுத்த, பிலாத்து விரும்பினான். எனவே பரபாசை விடுதலை செய்தான். இயேசுவைச் சவுக்கால் அடிக்கும்படி வீரர்களிடம் சொன்னான். பின்னர் அவரைச் சிலுவையில் அறையும்படி வீரர்களிடம் ஒப்படைத்தான்.

16 பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர். 17 அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர். 18 பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். 19 கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். முழங்காலிட்டு அவரை வணங்குவதைப்போல நடித்துக் கிண்டல் செய்தார்கள். 20 எல்லாம் முடிந்த பிறகு சிவப்பு மேலங்கியைக் கழற்றி விட்டு அவரது சொந்த ஆடையை அணிவித்தனர். அவரைச் சிலுவையில் அறைவதற்காக அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்தனர்.

இயேசு சிலுவையில் அறையப்படுதல்(AP)

21 சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். இவன் அலெக்சாண்டர், மற்றும் ரூபஸ் ஆகியோரின் தந்தை. அவன் வயலில் இருந்து நகரத்திற்குள் வந்தான். வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர். 22 “கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்) 23 அங்கே இயேசுவுக்குத் திராட்சை இரசத்தைக் கொடுக்க வீரர்கள் முயன்றனர். அந்த இரசத்தில் வெள்ளைப்போளம் என்னும் போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது. ஆனால் இயேசு அதைக் குடிக்க மறுத்து விட்டார். 24 வீரர்கள் இயேசுவைச் சிலுவை மேல் ஆணியால் அடித்தனர். இயேசுவின் ஆடையை அவர்கள் பங்கு போட்டுக்கொண்டார்கள். எந்த ஆடையை யார் எடுத்துக்கொள்வது என்பதுபற்றி அவர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.

25 அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி. 26 அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர். 27 அவர்கள் இயேசுவின் இருபுறத்திலும் இரண்டு கள்ளர்களைச் சிலுவையில் அறைந்தனர். 28 [m]

29 அவ்வழியாய்ப் போகும் மக்கள் இயேசுவை அவமரியாதை செய்து பேசினார்கள். அவர்கள் தங்கள் தலையை உலுக்கி “ஆலயத்தை இடித்துப் போட்டுவிட்டு மூன்று நாட்களுக்குள் கட்டிவிடுவேன் என்றாயே. 30 ஆகவே நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள். சிலுவையில் இருந்து இறங்கி வா” என்றனர்.

31 வேதபாரகர்களும் தலைமை ஆசாரியர்களும் அங்கே அவர்களோடு இருந்தனர். அவர்களும் இயேசுவை மற்ற மக்கள் செய்த விதத்திலேயே கேலி செய்தனர். “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான். ஆனால் தன்னைத்தான் காப்பாற்ற முடியவில்லை. 32 இவன் உண்மையிலேயே கிறிஸ்து என்றால், யூதர்களின் மன்னன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாமே. நாங்கள் அதைப் பார்த்தால் இவனை நம்புவோமே” என்றனர். இயேசுவின் இருபுறமும் அறையப்பட்ட கள்ளர்களும் இயேசுவைப்பற்றி அவதூறாகப் பேசினர்.

இயேசு இறத்தல்(AQ)

33 மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. 34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” [n] என்று பொருள்.

35 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் இதனைக் கேட்டனர். அவர்கள், “கவனியுங்கள். அவன் எலியாவை கூப்பிடுகிறான்” என்றனர். 36 ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான்.

37 இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.

38 இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்தது. அக்கிழிசல் மேற்புறம் தொடங்கிக் கீழேவரை வந்தது. 39 இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார்.

40 சில பெண்கள் சிலுவைக்குச் சற்றுத் தள்ளி நின்று இதனைக் கவனித்துக்கொண்டு நின்றனர். அவர்கள், மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாரான மரியாள் ஆகியோராவர். (யாக்கோபு மரியாளின் இளைய மகன்.) 41 இயேசுவுடனே கூட எருசலேமிற்கு வந்திருந்த ஏனைய பல பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.

இயேசுவின் அடக்கம்(AR)

42 இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளுக்கு முந்தின நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் 43 மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காகக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவிடம் துணிந்துபோய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.

44 ஏற்கெனவே இயேசு இறந்து போனதைக் கேள்விப்பட்டு பிலாத்து ஆச்சரியப்பட்டான். இயேசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்தான். இயேசு இதற்குள்ளே இறந்தது நிச்சயமா என்று அவனிடம் விசாரித்தான். 45 அந்த அதிகாரி இயேசு இறந்துபோனதை ஒப்புக்கொண்டான். எனவே இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்ல யோசேப்புக்கு பிலாத்து அனுமதி அளித்தான்.

46 யோசேப்பு மெல்லிய துணியை வாங்கி வந்தான். சிலுவையில் இருந்து இயேசுவின் சரீரத்தை இறக்கி அதனைத் துணியால் சுற்றினான். பிறகு அச்சரீரத்தைக் கொண்டு போய் பாறையில் வெட்டப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறை வாசலை ஒரு பாறாங்கல்லால் மூடிவிட்டான். 47 இயேசு வைக்கப்பட்ட கல்லறையை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயான மரியாளும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இயேசுவின் உயிர்த்தெழுதல்(AS)

16 ஓய்வு நாள் முடிந்த பிறகு மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபின் தாயான மரியாள் ஆகியோர் சில வாசனைப் பொருள்களை வாங்கினர். அவற்றை இயேசுவின் சரீரத்தின் மீது பூச விரும்பினர். வாரத்தின் முதல்நாளில் அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். சூரியன் தோன்றிய காலை நேரம் அது. அப்பெண்கள் ஒருவருக்கொருவர், “கல்லறையை மூடுவதற்கு பெரிய கல்லை வைத்திருந்தார்களே. நமக்காக அக்கல்லை யார் அகற்றுவார்?” என்று பேசிக்கொண்டனர்.

அவர்கள் கல்லறையின் அருகில் வந்தபோது வாசலில் வைத்திருந்த கல் விலக்கப்பட்டிருந்தது. அது மிகப் பெரிய கல். அப்பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தனர். அங்கே வெள்ளை ஆடை அணிந்த ஒருவனைப் பார்த்தனர். அவன் கல்லறையின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருந்தான். அப்பெண்கள் அஞ்சினர்.

ஆனால் அந்த மனிதன், “அஞ்ச வேண்டாம். நீங்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். சிலுவையில் அறையப்பட்ட அவர் இங்கில்லை. அதுதான் அவரைக் கிடத்திய இடம். இப்போது சென்று அவரது சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான்.

அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. [o]

சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்(AT)

இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதன் முதலாக இயேசு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். ஒரு முறை, ஏழு பேய்களை மரியாளைவிட்டு இயேசு விரட்டினார். 10 இயேசுவைப் பார்த்தபின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச்சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தனர். 11 ஆனால் மரியாளோ, “இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன்” என்றாள். அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.

12 பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக அவர் பார்ப்பதற்கு இல்லை. 13 அந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர். எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.

இயேசு சீஷர்களிடம் பேசுதல்(AU)

14 பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும் இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.

15 பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். 16 எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் கண்டிக்கப்படுவான். 17 விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், 18 அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.

இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்(AV)

19 சீஷர்களிடம் இவற்றைச் சொன்ன பிறகு, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் தேவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார். 20 அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வது உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.

லூக்காவின் நோக்கம்

அன்பான தெயோப்பிலுவே,

நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர். வேறு சில மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்துகொண்டிருந்தவர்களும் ஆவார்கள். மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாகக் கற்று அறிந்தேன். அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன். எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன். உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அனைத்தும் உண்மையே என்பதை நீங்கள் அறியும்பொருட்டு இவற்றை எழுதுகிறேன்.

சகரியாவும் எலிசபெத்தும்

ஏரோது யூதேயாவை ஆண்ட காலத்தில் சகரியா என்னும் ஆசாரியன் வாழ்ந்து வந்தான். சகரியா அபியாவின் பிரிவினரைச் [p] சார்ந்தவன். ஆரோனின் குடும்பத்தாரைச் சார்ந்தவள் சகரியாவின் மனைவி. அவள் பெயர் எலிசபெத். தேவனுக்கு முன்பாக சகரியாவும், எலிசபெத்தும் உண்மையாகவே நல்லவர்களாக வாழ்ந்தார்கள். தேவன் கட்டளையிட்டவற்றையும், மக்கள் செய்யும்படியாகக் கூறியவற்றையும் அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் குற்றமற்றவர்களாகக் காணப்பட்டனர். ஆனால், சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் குழந்தைகள் இல்லை. எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இருவரும் முதியோராக இருந்தனர்.

தன் மக்களுக்காக தேவனுக்கு முன்னர் ஒரு ஆசாரியனாக சகரியா பணியாற்றி வந்தான். தேவனின் பணியை அவனது பிரிவினர் செய்ய வேண்டிய காலம் அது. நறுமணப் புகையைக் காட்டுவதற்காக ஆசாரியர் தங்களுக்குள் ஒருவரை எப்போதும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். சகரியா அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். எனவே சகரியா தேவாலயத்திற்குள் நறுமணப்புகை காட்டுவதற்காகச் சென்றான். 10 ஏராளமான மக்கள் வெளியே இருந்தனர். நறுமணப்புகை காட்டும்போது அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.

11 அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான். 12 தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான். 13 ஆனால் தூதன் அவனைப் பார்த்து, “சகரியாவே, பயப்படாதே. உனது பிரார்த்தனையை தேவன் கேட்டார். உனது மனைவியாகிய எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. 14 நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர். 15 கர்த்தருக்காகப் பெரிய மனிதனாக யோவான் விளங்குவான். அவன் திராட்சை இரசமோ, மதுபானமோ பருகுவதில்லை. பிறக்கிறபோதே பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக யோவான் காணப்படுவான்.

16 “நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன். 17 கர்த்தருக்கு முன்பாக யோவான் முன்னோடியாகச் செல்வான். எலியாவைப் போல் யோவானும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பான். எலியாவின் ஆவியை உடையவனாக அவன் இருப்பான். தந்தையருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே அமைதி நிலவும்படியாகச் செய்வான். பல மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் சரியானதென்று மக்கள் எண்ணவேண்டிய பாதைக்கு யோவான் அழைத்து வருவான். கர்த்தரின் வருகைக்கு மக்களை யோவான் தயார் செய்வான்” என்றான்.

18 சகரியா தூதனை நோக்கி, “நீங்கள் சொல்வது உண்மையென்று நான் எவ்வாறு அறிய முடியும்? நான் வயது முதிர்ந்தவன். என் மனைவியும் வயதானவள்” என்றான்.

19 தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். 20 இப்போது கேட்பாயாக! இந்தக் காரியங்கள் நடக்கும் நாள்வரைக்கும் நீ பேச முடியாதிருப்பாய். உனது பேசும் சக்தியை நீ இழப்பாய், ஏன்? நான் கூறியதை நீ நம்பாததாலேயே இப்படி ஆகும். ஆனால் இவை அனைத்தும் அதனதன் சரியான சமயத்தில் உண்மையாகவே நடக்கும்” என்றான்.

21 வெளியே சகரியாவுக்காக மக்கள் காத்திருந்தனர். அவன் ஆலயத்தின் உள்ளே வெகு நேரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். 22 அப்போது சகரியா வெளியே வந்தான். ஆனால் அவர்களோடு பேச முடியவில்லை. அவன் ஆலயத்திற்குள் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். சகரியாவால் பேச முடியவில்லை. மக்களுக்குச் சைகைகளையே காட்ட முடிந்தது. 23 சகரியா, ஆலயப் பணி முடிந்ததும் தன் வீட்டுக்குச் சென்றான்.

24 பின்னர் சகரியாவின் மனைவி எலிசபெத் கருவுற்றாள். ஆகவே, அவள் ஐந்து மாதங்கள் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. பின் எலிசபெத், 25 “தேவன் எனக்குச் செய்திருப்பதைப் பாருங்கள். எனது மக்கள் என் நிலையை எண்ணி வெட்கி இருந்தனர். ஆனால் கர்த்தர் அந்த அவமானத்தைப் போக்கி விட்டார்” என்று கூறினாள்.

கன்னி மரியாள்

26-27 எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம் புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள். 28 தூதன் அவளிடம் வந்து, “கர்த்தர் உன்னோடிருக்கிறார். அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார்” என்றான்.

29 தூதன் கூறியவற்றைக் கேட்டு மரியாள் மிகவும் குழப்பம் அடைந்தாள். “இதன் பொருள் என்ன?” என்று மரியாள் அதிசயித்தாள்.

30 தூதன் அவளிடம், “பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார். 31 கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. 32 அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். 33 சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான்.

34 மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள்.

35 தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். 36 உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு மகனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். 37 தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான்.

38 மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.

சகரியாவையும் எலிசபெத்தையும் மரியாள் சந்தித்தல்

39 மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள். 40 அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள். 41 மரியாளின் வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும் இன்னும் பிறக்காமல் எலிசபெத்துக்குள் இருக்கும் குழந்தை துள்ளிக் குதித்தது.

42 எலிசபெத் உரத்த குரலில் “வேறெந்தப் பெண்ணைக் காட்டிலும் அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதித்துள்ளார். உனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையையும், தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். 43 கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்? 44 உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. 45 உன்னிடம் கர்த்தர் கூறியதை நீ நம்பியதால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். இது நடக்கக் கூடியதென நீ நம்பினாய்” என்று சொன்னாள்.

மரியாள் தேவனைப் போற்றுதல்

46 அப்போது மரியாள்,

47 “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது.
    தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது.
48 நான் முக்கியமற்றவள்,
    ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார்.
இப்போது தொடங்கி,
    எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர்.
49 ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார்.
    அவர் பெயர் மிகத் தூய்மையானது.
50 தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார்.
51 தேவனின் கைகள் பலமானவை.
    செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார்.
52 சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார்.
    தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார்.
53 நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார்.
    செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார்.
54 தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார்.
    அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார்.
55 நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்”

என்று சொன்னாள்.

56 மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள்.

யோவானின் பிறப்பு

57 குழந்தைப் பேற்றின் காலம் நெருங்கியபோது எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். 58 அவளது அக்கம் பக்கத்தாரும் உறவினரும் கர்த்தர் அவளுக்குக் கருணைக் காட்டியதை கேள்விப்பட்டனர். அதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தனர்.

59 குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனபோது அக்குழந்தையை விருத்தசேதனம் செய்யும்பொருட்டு கொண்டு வந்தனர். அவனது தந்தை பெயரால் அவனை சகரியா என்று பெயரிட்டு அழைக்க விரும்பினர். 60 ஆனால் அக்குழந்தையின் தாய், “இல்லை, அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்” என்றாள்.

61 மக்கள் எலிசபெத்தை நோக்கி, “உன் குடும்பத்தில் யாருக்கும் இப்பெயர் இல்லையே!” என்றனர். 62 பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், “குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்?” என்று கேட்டனர்.

63 சகரியா எழுதுவதற்கு ஏதாவது ஒன்று கொண்டு வருமாறு கேட்டான். சகரியா, “அவன் பெயர் யோவான்” என்று எழுதினான். எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தனர். 64 அப்போது சகரியாவால் மீண்டும் பேசமுடிந்தது. அவன் தேவனை வாழ்த்த ஆரம்பித்தான். 65 அவனது அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பயமுண்டாயிற்று. யூதேயாவின் மலைநாட்டு மக்கள் இக்காரியங்களைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டனர். 66 இச்செய்திகளைக் கேட்ட எல்லா மக்களும் அவற்றைக் குறித்து அதிசயப்பட்டார்கள். அவர்கள், “இக்குழந்தை எப்படிப்பட்டதாயிருக்குமோ?” என்று எண்ணினர். கர்த்தர் இந்தக் குழந்தையோடு இருந்தபடியால் அவர்கள் இதைக் கூறினர்.

சகரியா தேவனைப் போற்றுதல்

67 அப்போது யோவானின் தந்தையாகிய சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். பின்னர் நடக்க இருப்பவற்றைக் குறித்து அவன் மக்களுக்குக் கூறினான்.

68 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்றுவோம்.
    தேவன் அவரது மக்களுக்கு உதவ வந்தார். அவர்களுக்கு விடுதலை தந்தார்.
69 தேவன் நமக்கு வல்லமை பொருந்திய இரட்சகரைத் தந்தார்.
    அவர் தாவீது என்னும் தேவனுடைய பணிவிடைக்காரனின் குடும்பத்தைச் சார்ந்தவர்.
70 தேவன் இதைச் செய்வதாகக் கூறினார்.
    பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவரது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாக இதை அவர் கூறினார்.
71 நம் எதிரிகளிடம் இருந்து தேவன் நம்மைக் காப்பாற்றுவார்.
    நம்மை வெறுக்கும் அனைவரின் கைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவார்.
72 நமது தந்தையருக்கு அருள்புரிவதாக தேவன் சொன்னார்.
    தனது பரிசுத்த வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
73 நமது தந்தையாகிய ஆபிரகாமுக்கு எதிரிகளின் சக்தியிலிருந்து.
74     நம்மை விடுவிப்பதாக தேவன் வாக்குறுதி தந்தார்.
    அதனால் பயமின்றி நாம் அவருக்குச் சேவை செய்வோம்.
75     நாம் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய முன்னிலையில் நீதியும் பரிசுத்தமும் வாய்ந்தோராக வாழ்வோம்.
76 இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்.
    கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய்.
77 அவரது மக்கள் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவாய். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படுவர்.
78 நம் தேவனின் அன்பான இரக்கத்தால் பரலோகத்திலிருந்து
    புதுநாள் ஒன்று நம்மீது பிரகாசிக்கும்.
79 இருளில் மரணப் பயத்திடையே வாழும் மக்களுக்கு தேவன் உதவி செய்வார்.
சமாதானத்தை நோக்கி அவர் நம்மை வழிநடத்துவார்.”

என்று சகரியா உரைத்தான்.

80 அச்சிறுவன் வளர்ந்துவருகையில் ஆவியில் வல்லமை பொருந்தியவனாக மாறினான். இஸ்ரவேல் மக்களுக்குப் போதிக்கும்பொருட்டு வளரும்மட்டும் அவன் மக்களிடமிருந்து தொலைவான இடத்தில் வாழ்ந்தான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center