Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லூக்கா 20:20 - யோவான் 5:47

யூத அதிகாரிகளின் தந்திரம்(A)

20 எனவே வேதபாரகரும், தலைமை ஆசாரியரும் இயேசுவைப் பிடிப்பதற்கு ஏற்ற தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் சில மனிதர்களை இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்களை நல்ல மனிதர்களாக நடிக்கும்படியாகக் கூறியிருந்தார்கள். இயேசு கூறியவற்றில் குற்றம் காணும்படியாக அவர்கள் விரும்பினார்கள். (ஏதேனும் தவறு கண்டுபிடித்தால் அவர்கள் அதிகாரமும் ஆற்றலும் வாய்ந்த ஆளுநரிடம் இயேசுவை ஒப்படைக்க முடியும்.) 21 எனவே, அந்த மனிதர்கள் இயேசுவை நோக்கி, “போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் உண்மை என்று எங்களுக்குத் தெரியும். எல்லா மக்களுக்கும் அவற்றைப் போதிக்கிறீர். தேவனின் வழியைக் குறித்த உண்மையையே எப்போதும் கற்பிக்கிறீர். 22 இராயனுக்கு நாங்கள் வரி கட்டுவது சரியா இல்லையா என்பதை எங்களுக்குக் கூறுங்கள்?” என்றார்கள்.

23 இயேசுவை வஞ்சிக்க அம்மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். இயேசு அவர்களை நோக்கி, 24 “ஒரு காசை எனக்குக் காட்டுங்கள். யாருடைய பெயர் அதில் இருக்கிறது? யாருடைய படம் அதில் உள்ளது?”

என்று கேட்டார். அவர்கள், “இராயனுடையது” என்றார்கள்.

25 இயேசு அவர்களை நோக்கி “இராயனுடையதை இராயனுக்குக் கொடுங்கள். தேவனுடையவற்றை தேவனுக்குக் கொடுங்கள்” என்றார்.

26 அவரது ஞானம்மிக்க பதிலைக் கேட்டு அம்மனிதர்கள் ஆச்சரியமுற்றனர். அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தம் தந்திரங்களில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்களின் முன்பாக அவர்களால் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் இயேசு சொல்லவில்லை.

சதுசேயர்களின் தந்திரம்(B)

27 சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (மக்கள் மரணத்தினின்று உயிர் பெறுவதில்லை என்று சதுசேயர்கள் நம்புகிறார்கள்) அவர்கள் இயேசுவை நோக்கி, 28 “போதகரே, திருமணமான மனிதன் குழந்தைகளின்றி இறந்துபோனால், அவனது சகோதரன் அவன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று மோசே எழுதி இருந்தார். அப்படியானால் இறந்த சகோதரனுக்காகக் குழந்தைகள் அவர்களுக்குப் பிறக்கும். 29 ஓரிடத்தில் ஏழு சகோதரர்கள் வாழ்ந்தனர். முதல் சகோதரன் ஒருத்தியை மணந்து குழந்தைகள் இல்லாமல் இறந்தான். 30 பிறகு இரண்டாம் சகோதரன் அந்தப் பெண்ணை மணந்து இறந்து போனான். 31 மூன்றாமவனும் அவளை மணந்து பின்னர் இறந்தான். ஏழு சகோதரர்களுக்கும் இதுவே நடந்தது. அவர்கள் எல்லோரும் குழந்தைகளின்றி இறந்தார்கள். 32 அவர்கள் அனைவரும் இறந்த பிறகு அவளும் இறந்தாள். 33 எல்லா ஏழு சகோதரர்களும் அவளை மணந்தனர். மரணத்தினின்று மக்கள் எழும்போது, அந்தப் பெண் யாருக்கு மனைவியாவாள்?” என்று கேட்டார்கள்.

34 இயேசு சதுசேயரை நோக்கி, “பூமியில் மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்கின்றனர். 35 சிலர் மரணத்தினின்று எழும்பி அடுத்த உலகத்தில் பங்கு பெறும் தகுதியைப் பெறுவர். அந்த வாழ்வில் அவர்கள் மணம் செய்துகொள்ளமாட்டார்கள். 36 அந்த வாழ்வில் அவர்கள் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள். அவர்களால் சாகமுடியாது. அவர்கள் மரணத்தினின்று எழுந்ததால் தேவனின் மக்களாவர். 37 மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவர் என்பதை மோசே தெளிவாகக் காட்டினான். எரியும் புதரைப் பற்றி மோசே எழுதியபோது, அவன் கர்த்தராகிய தேவனை ஆபிரகாமின் தேவன் என்றும், ஈசாக்கின் தேவன் என்றும், யாக்கோபின் தேவன் [a] என்றும் கூறினான். 38 அவர்களின் தேவன் தானே என தேவன் கூறியதால் அந்த மனிதர்கள் உண்மையாக இறக்கவில்லை. வாழும் மக்களின் தேவன் அவரே. தேவனுக்கு உரியவர்கள் வாழ்பவர்களே ஆவர்” என்றார்.

39 வேதபாரகரில் சிலர், “போதகரே, உங்கள் பதில் நன்றாக இருந்தது” என்றனர். 40 அடுத்த கேள்வியைக் கேட்க யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

கிறிஸ்து தாவீதின் குமாரனா?(C)

41 பின்பு இயேசு, “தாவீதின் குமாரன் என்று கிறிஸ்துவை மக்கள் எதற்காகச் சொல்கிறார்கள்? 42 சங்கீதம் என்னும் புத்தகத்தில் தாவீதே சொல்கிறார்.

“‘கர்த்தர் (தேவன்) என் ஆண்டவரிடம் (கிறிஸ்து) சொன்னார்,
43     உங்கள் பகைவர்கள் உங்கள் ஆற்றலுக்கு அடங்கும்வரை என் வலப்பக்கத்தில் அமருங்கள்’ (D)

44 தாவீது கிறிஸ்துவை ‘ஆண்டவர்’ என்கிறான். ஆனால் கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். எப்படி இவை இரண்டும் உண்மையாகும்?” என்றார்.

வேதபாரகருக்கு எச்சரிக்கை(E)

45 தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு பேசினார். எல்லா மக்களும் இயேசு கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். 46 “வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தங்களை முக்கியமானவர்களாகக் காட்டுகிற அவர்கள் அங்கிகளை அணிந்துகொண்டு அவர்கள் அங்குமிங்கும் அலைகிறார்கள். மக்கள் அவர்களைச் சந்தையிடங்களில் மதிப்பதையும் விரும்புகிறார்கள். ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கையில் அமர ஆசைப்படுகிறார்கள். 47 ஆனால் விதவைகள் தம் வீட்டில் வைத்திருக்கிற பொருட்களையெல்லாம் கொள்ளையிடுகிறவர்கள் அவர்களே ஆவார்கள். நீண்ட பிரார்த்தனைகளைச் சொல்லித் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். தேவன் இவர்களை மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.

உண்மையான ஈகை(F)

21 தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டியில் சில செல்வந்தர்கள் தேவனுக்காகத் தங்கள் காணிக்கைகளைப் போடுவதை இயேசு கண்டார். அப்போது இயேசு ஓர் ஏழை விதவையைக் கண்டார். பெட்டியினுள் அவள் இரண்டு சிறிய செம்பு நாணயங்களை இட்டாள். இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஏழை விதவை இரண்டு சிறிய நாணயங்களையே கொடுத்தாள். ஆனால், அச்செல்வந்தர்கள் கொடுத்தவற்றைக் காட்டிலும் அவள் உண்மையில் அதிகமாகக் கொடுத்தாள். செல்வந்தர்களிடம் மிகுதியான செல்வம் இருக்கிறது. அவர்களுக்குத் தேவையற்ற செல்வத்தையே அவர்கள் கொடுத்தார்கள். இந்தப் பெண்ணோ மிகவும் ஏழை. ஆனால் அவளுக்கிருந்த எல்லாவற்றையும் அவள் கொடுத்தாள். அவள் வாழ்க்கைக்கு அந்தப் பணம் தேவையாக இருந்தது” என்றார்.

தேவாலயத்தின் அழிவு(G)

சில சீஷர்கள் தேவாலயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், “இது மிக நல்ல கற்களாலான ஓர் அழகான தேவாலயம். தேவனுக்கு அளிக்கப்பட்ட நல்ல காணிக்கைகளைப் பாருங்கள்” என்றனர்.

ஆனால் இயேசு, “இங்கு நீங்கள் பார்க்கிற அனைத்தும் அழிக்கப்படும் காலம் வரும். இந்தக் கட்டிடங்களின் ஒவ்வொரு கல்லும் தரையில் தள்ளப்படும். ஒரு கல்லின் மேல் மற்றொரு கல் இருக்காது” என்றார்.

சில சீஷர்கள் இயேசுவிடம், “போதகரே, இவை எப்போது நடக்கும்? இவை நடைபெறும் காலம் இதுவென எங்களுக்குக் காட்டுவது எது?” என்று கேட்டார்கள்.

இயேசு, “எச்சரிக்கையாக இருங்கள். முட்டாள் ஆக்கப்படாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், ‘நானே கிறிஸ்து’ என்றும், ‘வேளை வந்தது’ என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள். யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்படாதீர்கள். இவை முதலில் நிகழ வேண்டும். ஆனால் உடனடியாக ஒரு முடிவு வராது” என்றார்.

10 பிற்பாடு இயேசு அவர்களிடம், “தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும். 11 பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும்.

12 “ஆனால் இவையெல்லாம் நிகழும் முன்னர் மக்கள் உங்களைக் கைது செய்வார்கள். ஜெப ஆலயங்களில் மக்கள் உங்களை நியாயந்தீர்த்து சிறையில் தள்ளுவார்கள். அரசர்களின் முன்பும், ஆளுநர்களின் முன்பும் நிற்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னைப்பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். 14 நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக்குறித்து நடப்பதற்கு முன்னாலேயே கவலைப்படாதீர்கள். 15 உங்கள் பகைவர்கள் பதில் கூற முடியாதபடி அல்லது மறுக்க முடியாதபடி செய்திகளைச் சொல்லும் ஞானத்தை உங்களுக்குத் தருவேன். 16 உங்கள் பெற்றோரும், சகோதரரும், உறவினரும், நண்பரும் கூட உங்களை ஏமாற்றுவார்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொல்வார்கள். 17 எல்லா மக்களும் நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் உங்களை வெறுப்பார்கள். 18 ஆனால் இவற்றில் ஒன்றும் உண்மையில் உங்களைத் தீங்கு செய்யமுடியாது. 19 இக்காரியங்கள் மூலமாக உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதால் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும்.

எருசலேமின் அழிவு(H)

20 “எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள். 21 அப்போது யூதேயாவின் மக்கள் மலைகளுக்கு ஓடிச் செல்லவேண்டும். எருசலேம் மக்கள் விரைந்து செல்லவேண்டியதிருக்கும். நீங்கள் எருசலேம் நகருக்கு வெளியே இருக்கிறவர்கள், உள்ளே போகாதீர்கள். 22 தேவன் தம் மக்களைத் தண்டிக்கும் காலத்தைக் குறித்துத் தீர்க்கதரிசிகள் நிரம்ப செய்திகளை எழுதி இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் இவை எல்லாம் நிகழவேண்டிய காலத்தைக் குறித்தாகும். 23 அந்த நேரம் கருவுற்ற பெண்களுக்கும் பாலூட்டவேண்டிய சின்னஞ் சிறு குழந்தைகளை உடைய பெண்களுக்கும் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஏன்? இந்தப் பூமியில் மிகக் கொடுமையான காலம் வரும். இந்த மக்களிடம் (யூதர்களிடம்) தேவன் சினம் கொள்வார். 24 வீரர்களால் சிலர் கொல்லப்படுவார்கள். பிறர் கைதிகளாக்கப்பட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள். தூய பட்டணமாகிய எருசலேமில் யூதரல்லாத மக்கள் அவர்கள் காலம் முடியும்மட்டும் நடந்து செல்வார்கள்.

அஞ்சாதீர்கள்(I)

25 “சூரியன், சந்திரன், விண்மீன்களில் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் நடக்கும். பூமியின் மக்கள் அகப்பட்டுக்கொண்டதாக உணர்வார்கள். சமுத்திரங்கள் கலக்கமடையும். ஏனென்று மக்கள் அறியமாட்டார்கள். 26 மக்கள் அஞ்ச ஆரம்பிப்பார்கள். உலகத்திற்கு என்ன நேரிடுமோ என்று அவர்கள் கவலைப்படுவார்கள். வானிலுள்ள ஒவ்வொரு பொருளும் வித்தியாசப்படும். 27 அப்போது மேகத்தில் மனித குமாரன் அவரது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வந்துகொண்டிருப்பதை மக்கள் காண்பார்கள். 28 இந்தக் காரியங்கள் நிகழ ஆரம்பித்ததும் பயப்படாதீர்கள். மேலே பார்த்து மகிழுங்கள். கவலை கொள்ளாதீர்கள். தேவன் உங்களை விடுவிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பதால் சந்தோஷமாக இருங்கள்” என்றார்.

அழியாத தேவ வார்த்தை(J)

29 பின்பு இயேசு இவ்வுவமையைச் சொன்னார்: “எல்லா மரங்களையும் பாருங்கள், அத்தி மரம் ஒரு நல்ல உதாரணம். 30 அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள். 31 நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள்.

32 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இக்காலத்து மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இக்காரியங்கள் எல்லாம் நடக்கும்.

33 “உலகம் முழுவதும், விண்ணும், பூமியும் அழிக்கப்படும். ஆனால், நான் கூறிய சொற்களோ, ஒரு நாளும் அழிவதில்லை.

ஆயத்தமாயிருங்கள்

34 “எச்சரிக்கையாக இருங்கள். குடித்துக்கொண்டும், குடியில் மூழ்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்காதீர்கள். அல்லது உலகத்துக் காரியங்களில் அதிகப்படியாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்களால் சரியானதைச் சிந்திக்க முடியாது. பிறகு முடிவு திடுமென நீங்கள் தயாராக இல்லாதபோது வரக்கூடும். 35 பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும். 36 எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

37 பகல் வேளையில் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். இரவில் பட்டணத்திற்கு வெளியே சென்று இரவு முழுவதும் ஒலிவ மலையில் தங்கி இருந்தார். 38 ஒவ்வொரு காலையிலும் மக்கள் அதிகாலையில் எழுந்து தேவாலயத்தில் இயேசு கூறுவதைக் கேட்பதற்காகச் சென்றார்கள்.

இயேசுவைக் கொல்லத் திட்டம்(K)

22 பஸ்கா எனப்படும், யூதர்களின் புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்குரிய காலம் நெருங்கி வந்தது. தலைமை ஆசாரியரும், வேதபாரகரும் இயேசுவைக் கொல்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்கு பயந்தனர்.

யூதாஸின் சதித்திட்டம்(L)

இயேசுவின் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் யூதாஸ் காரியோத்து என்பவன் ஆவான். சாத்தான் யூதாஸிற்குள் புகுந்து ஒரு தீய செயலைச் செய்யுமாறு அவனைத் தூண்டினான். யூதாஸ் தலைமை ஆசாரியரிடமும், தேவாலயத்தைப் பாதுகாத்த வீரர்களிடமும் சென்று பேசினான். இயேசுவை அவர்களிடம் ஒப்படைப்பதைக் குறித்து அவன் அவர்களிடம் பேசினான். அவர்கள் இதனால் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தால் அவனுக்குப் பணம் கொடுப்பதாக அவர்கள் கூறினார்கள். யூதாஸ் அதற்கு ஒப்புக்கொண்டான். இயேசுவை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஏற்ற நேரத்தை எதிர்பார்த்திருந்தான் யூதாஸ். தன்னைச் சுற்றிலும் மக்கள் எவரும் பார்க்காத நேரத்தில் அதைச் செய்யவேண்டுமென யூதாஸ் விரும்பினான்.

பஸ்கா உணவு ஆயத்தம்(M)

புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. பஸ்கா ஆட்டுக்குட்டிகளை யூதர்கள் பலியிடுகிற நாள் அது ஆகும். பேதுருவையும் யோவனையும் நோக்கி இயேசு, “நாம் உண்பதற்கு நீங்கள் சென்று பஸ்கா விருந்தைத் தயாரியுங்கள்” என்றார்.

பேதுருவும், யோவானும், இயேசுவிடம், “பஸ்கா விருந்தை நாங்கள் எங்கே தயாரிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, 10 “கவனியுங்கள், நீங்கள் எருசலேமுக்குள் சென்ற பின்பு ஒரு குடத்தில் தண்ணீரைச் சுமந்து செல்லும் ஒரு மனிதனைக் காண்பீர்கள். அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். அவன் ஒரு வீட்டுக்குள் செல்வான். அவனோடு நீங்கள் செல்லுங்கள். 11 அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், ‘போதகரும் அவரது சீஷர்களும் பஸ்கா விருந்து உண்ணக் கூடிய அறையைத் தயவுசெய்து எங்களுக்குக் காட்டும்படியாக போதகர் கேட்கிறார்’ என்று சொல்லுங்கள். 12 உடனே அந்த வீட்டின் சொந்தக்காரனான அம்மனிதன் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவான். இந்த அறை உங்களுக்குத் தயாராக இருக்கும். பஸ்கா விருந்தை அங்கே தயாரியுங்கள்” என்றார்.

13 எனவே பேதுருவும், யோவானும் சென்றார்கள். இயேசு கூறியபடியே எல்லாம் நிகழ்ந்தன. எனவே அவர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தார்கள்.

இயேசுவின் இரவு உணவு(N)

14 பஸ்கா விருந்தை அவர்கள் சாப்பிடும் நேரம் வந்தது. இயேசுவும், சீஷர்களும் மேசையைச் சூழ்ந்து அமர்ந்தனர். 15 அவர்களிடம் இயேசு, “நான் இறக்கும் முன்பு இந்தப் பஸ்கா விருந்தை உங்களோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். 16 தேவனின் இராஜ்யத்தில் அதற்குரிய உண்மையான பொருள் கொடுக்கப்படும்வரைக்கும் நான் இன்னொரு பஸ்கா விருந்தைப் புசிக்கமாட்டேன்” என்றார்.

17 பின்பு இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்பு அவர், “இக்கோப்பையை எடுத்து இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள். 18 ஏனெனில் தேவனின் இராஜ்யம் வரும்வரைக்கும் நான் மீண்டும் திராட்சை இரசம் குடிக்கப் போவதில்லை” என்றார்.

19 பின்பு இயேசு, அப்பத்தை எடுத்தார். அப்பத்திற்காக தேவனுக்கு நன்றி கூறிவிட்டு அதைப் பிட்டார். சீஷர்களுக்கு அதைக் கொடுத்தார். பின்பு இயேசு, “இதனை நான் உங்களுக்காகக் கொடுக்கிறேன். எனது சரீரமே இந்த அப்பமாகும். எனவே என்னை நினைவுகூருவதற்கு இப்படிச் செய்யுங்கள்” என்றார். 20 அப்பத்தை உண்ட பின்னர், அதே வகையில் இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து “இந்தத் திராட்சை இரசம் தேவனுக்கும் அவரது மக்களுக்கும் உள்ள புதிய உடன்படிக்கையைக் காட்டுகிறது. நான் உங்களுக்காகக் கொடுக்கிற என் இரத்தத்தில் (மரணத்தில்) இப்புது உடன்படிக்கை ஆரம்பமாகிறது” என்றார்.

இயேசுவின் எதிரி யார்?

21 இயேசு, “உங்களில் ஒருவன் என்னை வஞ்சிக்கப் போகிறான். மேசை மீது அவனது கை என் கைக்குப் பக்கத்தில் இருக்கிறது. 22 தேவன் திட்டமிட்டபடியே மனிதகுமாரன் செய்வார். ஆனால் மனிதகுமாரனைக் கொல்லப்படுவதற்காக ஒப்படைக்கிற மனிதனுக்கு மிகவும் தீமை நடக்கும்” என்றார்.

23 அப்போது சீஷர்கள் ஒருவருக்கொருவர், “இயேசுவுக்கு அவ்வாறு செய்பவன் நமக்குள் யார்?” என்று கேட்டார்கள்.

தாழ்மையாக இருங்கள்

24 பின்னர் தங்களில் மிக முக்கியமானவன் யார் என்று அப்போஸ்தலர்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். 25 ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “உலகத்தில் (வேறுவேறு) தேசங்களின் அரசர்கள் மக்களை அரசாளுகிறார்கள். பிற மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் ‘மக்களின் உதவியாளன்’ என தம்மை எல்லாரும் அழைக்கும்படிச் செய்கிறார்கள். 26 ஆனால் நீங்கள் அவ்வாறு இருக்கலாகாது. உங்களுக்குள் மிகச் சிறந்தவன் சிறியவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். தலைவர்கள் வேலைக்காரனைப்போல இருக்கவேண்டும். 27 யார் மிகவும் முக்கியமானவன்? மேசையின் அருகே உட்கார்ந்திருப்பவனா அல்லது அவனுக்குப் பரிமாறுகிறவனா? மேசையருகே உட்கார்ந்திருப்பவன் முக்கியமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்களில் நான் ஒரு வேலைக்காரனைப்போல இருக்கிறேன்.

28 “பெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக்கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள். 29 எனது பிதா எனக்கு ஓர் இராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார். என்னோடு அரசாளுகிற அதிகாரத்தை உங்களுக்கு நானும் கொடுக்கிறேன். 30 என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு குலங்களையும் நியாயம்தீர்ப்பீர்கள்.

நம்பிக்கையை இழக்காதீர்கள்(O)

31 “ஓர் உழவன் கோதுமையைப் புடைப்பது போல சாத்தான் உங்களைச் சோதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளான். சீமோனே, சீமோனே (பேதுரு), 32 நீ உன் நம்பிக்கையை இழக்காதிருக்கும்படியாக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வரும்போது உன் சகோதரர்கள் வலிமையுறும்பொருட்டு உதவி செய்” என்றார்.

33 ஆனால் பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நான் உங்களுடன் சிறைக்கு வரத் தயாராக இருக்கிறேன். நான் உங்களோடு இறக்கவும் செய்வேன்” என்றான்.

34 ஆனால் இயேசு, “பேதுரு, நாளைக் காலையில் சேவல் கூவும் முன்பு என்னைப்பற்றி உனக்குத் தெரியாதென கூறுவாய். இதனை நீ மூன்று முறை சொல்வாய்” என்றார்.

நிறைவேறும் வேதவாக்கியம்

35 பின்பு இயேசு சீஷர்களை நோக்கி, “மக்களுக்குப் போதிப்பதற்காக நான் உங்களை அனுப்பினேன். நான் உங்களை பணம், பை, காலணிகள் எதுவுமின்றி அனுப்பினேன். ஆனால் ஏதேனும் உங்களுக்குக் குறை இருந்ததா?” என்று கேட்டார்.

சீஷர்கள், “இல்லை” என்றார்கள்.

36 இயேசு அவர்களை நோக்கி, “ஆனால், இப்போது பணமோ, பையோ உங்களிடம் இருந்தால் அதை உங்களோடு கொண்டு செல்லுங்கள். உங்களிடம் வாள் இல்லையென்றால் உங்கள் சட்டையை விற்று ஒரு வாள் வாங்குங்கள். 37 வேதவாக்கியம் சொல்கிறது,

“‘மக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள்.’ (P)

இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.

38 சீஷர்கள், “ஆண்டவரே, பாருங்கள், இங்கு இரண்டு வாள்கள் உள்ளன” என்றார்கள்.

இயேசு அவர்களிடம், “இரண்டு போதுமானவை” என்றார்.

இயேசுவின் பிரார்த்தனை(Q)

39-40 இயேசு பட்டணத்தை (எருசலேம்) விட்டு ஒலிவமலைக்குச் சென்றார். அவரது சீஷர்கள் அவரோடு சென்றார்கள். அங்கே சென்றபிறகு சீஷர்களிடம் இயேசு, “நீங்கள் சோதனைக்கு ஆளாகாதவண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

41 பின்பு இயேசு ஐம்பது அடி தூரம் அளவு அவர்களைவிட்டுச் சென்றார். அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார்: 42 “பிதாவே, நீங்கள் விரும்பினால் நான் துன்பத்தின் கோப்பையைக் குடிக்காமல் இருக்கும்படிச் செய்யுங்கள். ஆனால், நான் விரும்பும் வழியில் அல்லாமல் நீங்கள் விரும்பும் வழியிலேயே அது நடக்கட்டும்” என்றார். 43 அப்போது பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதன் அவருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டான். 44 வேதனையால் இயேசு வருந்தினார். எனவே மிகவும் வேதனையோடு ஊக்கமாகப் பிரார்த்தனை செய்தார். குருதி கொட்டுவதுபோல அவரது முகத்தில் இருந்து வியர்வை வடிந்தது. 45 இயேசு பிரார்த்தனை செய்து முடிந்த பின்னர், அவரது சீஷர்களிடம் சென்றார். அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் துயரம் அவர்களைச் சோர்வுறச் செய்தது.) 46 இயேசு அவர்களை நோக்கி, “ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எழுந்து சோதனைக்கு எதிரான வலிமைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

இயேசு கைது செய்யப்படுதல்(R)

47 இயேசு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மக்கள் கூட்டம் வந்தது. பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் அக்கூட்டத்தை வழிநடத்தி வந்தான். அவன் யூதாஸ். இயேசுவை முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக யூதாஸ் வந்தான்.

48 ஆனால் இயேசு அவனை நோக்கி, “யூதாஸ், மனித குமாரனை வஞ்சிக்கும்பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?” என்று கேட்டார். 49 இயேசுவின் சீஷர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன நடக்கப்போகிறதென உணர்ந்தார்கள். சீஷர்கள் இயேசுவிடம், “ஐயா, எங்கள் வாள்களை பயன்படுத்தட்டுமா?” என்றார்கள். 50 சீஷர்களில் ஒருவன் வாளைப் பயன்படுத்தவும் செய்தான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவன் வெட்டினான்.

51 இயேசு “நிறுத்து” என்றார். பின்பு இயேசு வேலைக்காரனின் காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார்.

52 இயேசுவைச் சிறைப்பிடிக்க வந்த கூட்டத்தில் தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும், தேவாலயக் காவலர்களும் இருந்தனர். இயேசு அவர்களை நோக்கி, “வாளோடும் தடிகளோடும் நீங்கள் ஏன் வந்தீர்கள்? நான் குற்றவாளி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 53 ஒவ்வொரு நாளும் நான் தேவாலயத்தில் உங்களோடு இருந்தேன். ஏன் என்னை அங்கே சிறைபிடிக்க முயல வில்லை.? ஆனால் இது உங்கள் காலம். இருள் (பாவம்) ஆட்சி புரியும் நேரம்” என்றார்.

பேதுருவின் மறுதலிப்பு(S)

54 அவர்கள் இயேசுவைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். தலைமை ஆசாரியனின் வீட்டுக்கு இயேசுவை அவர்கள் கொண்டுவந்தார்கள். பேதுரு அவர்களைத் தொடர்ந்து வந்தான். ஆனால் அவன் இயேசுவின் அருகே வரவில்லை. 55 வீரர்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில் நடுவில் நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி உட்கார்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு அமர்ந்தான். 56 ஒரு வேலைக்காரச் சிறுமி பேதுரு உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். நெருப்பின் ஒளியில் அவனை அவள் பார்க்க முடிந்தது. அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பின்பு அவள், “இந்த மனிதனும் அவரோடு (இயேசு) கூட இருந்தான்” என்றாள்.

57 ஆனால் பேதுரு, அது உண்மையில்லை என்றான். அவன், “பெண்ணே, எனக்கு அவரைத் தெரியாது” என்றான். 58 சற்று நேரத்துக்குப் பின் இன்னொருவன் பேதுருவைப் பார்த்து, “இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களில் நீயும் ஒருவன்” என்றான்.

ஆனால் பேதுரு “மனிதனே, நான் அவரது சீஷர்களில் ஒருவன் அல்ல” என்றான்.

59 ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், இன்னொரு மனிதன், “இது உண்மை, இந்த மனிதன் அவரோடு இருந்தான். இவன் கலிலேயாவைச் சேர்ந்தவன்” என்றான். “எனக்கு நிச்சமாகத் தெரியும்” என்று அம்மனிதன் மீண்டும் வலியுறுத்தினான்.

60 ஆனால் பேதுரு, “மனிதனே. நீ கூறுகிற விஷயத்தைக்குறித்து எனக்குத் தெரியாது” என்றான்.

பேதுரு இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே சேவல் கூவியது. 61 அப்போது கர்த்தர் (இயேசு) திரும்பி பேதுருவின் கண்களைக் கூர்ந்து நோக்கினார். “சேவல் காலையில் கூவும் முன்னரே நீ மூன்று முறை என்னை உனக்குத் தெரியாது என்று கூறுவாய்” என்று கர்த்தர் ஏற்கெனவே தன்னிடம் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்தான். 62 பின்னர் பேதுரு வெளியே சென்று மனமுருகி அழுதான்.

இயேசுவைப் பரிகசித்தல்(T)

63-64 சில மனிதர்கள் இயேசுவைக் காவல்புரிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பலவாறு கேலிசெய்தார்கள். அவர் பார்க்க முடியாதபடி அவரது கண்களை மறைத்தார்கள். பின்பு அவரை அடித்து விட்டு “நீ தீர்க்கதரிசியானால் யார் உன்னை அடித்தார்கள் என்று கூறு” என்றார்கள். 65 அம்மனிதர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள்.

யூத அதிகாரிகள் முன் இயேசு(U)

66 மறுநாள் காலையில், மக்களின் முதிய அதிகாரிகள், தலைமை ஆசாரியர், வேதபாரகர் ஆகியோர் ஒன்றாகக் கூடினார்கள். அவர்கள் தம் உயர்ந்த நீதிமன்றத்துக்கு இயேசுவை அழைத்துச் சென்றார்கள். 67 அவர்கள், “நீ கிறிஸ்துவானால் அப்படியே எங்களுக்குச் சொல்” என்றார்கள்.

இயேசு அவர்களுக்கு, “நான் கிறிஸ்து என்று உங்களுக்குக் கூறினால் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். 68 நான் உங்களைக் கேட்டால் நீங்கள் பதில் தரமாட்டீர்கள். 69 ஆனால் இப்பொழுதிலிருந்து தேவனுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் மனித குமாரன் உட்கார்ந்திருப்பார்” என்றார்.

70 அவர்கள் எல்லாரும், “அப்படியானால் நீ தேவனுடைய குமாரனா?” என்றார்கள். இயேசு அவர்களுக்கு “ஆம், நான் தேவனுடைய குமாரன் என்று நீங்கள் சொல்வது சரியே” என்றார்.

71 அவர்கள், “ஏன் நமக்கு இப்போது சாட்சிகள் தேவை? அவன் இவ்வாறு சொல்வதை நாமே கேட்டோமே!” என்றனர்.

பிலாத்துவின் கேள்வி(V)

23 அந்தக் கூட்டம் முழுவதும் எழுந்து நின்று இயேசுவைப் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றது. அவர்கள் இயேசுவைப் பழிக்க ஆரம்பித்தார்கள் பிலாத்துவிடம் அவர்கள், “நமது மக்களைக் குழப்புகிற செய்திகளைக் கூறுகிறபடியால் இந்த மனிதனை நாங்கள் பிடித்து வந்தோம். இராயனுக்கு வரி கொடுக்கக் கூடாதென்று அவன் கூறுகிறான். அவன் தன்னைக் கிறிஸ்துவாகிய அரசர் என்று அழைக்கிறான்” என்றனர்.

பிலாத்து இயேசுவிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.

இயேசு, “ஆம், அது சரியே” என்றார்.

அதைக் கேட்ட பிலாத்து தலைமை ஆசாரியரிடமும், மக்களிடமும் “இந்த மனிதனிடம் தவறு எதையும் நான் காணவில்லையே” என்றான்.

அவர்கள் மீண்டும் மீண்டும், “இயேசு மக்களின் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கிக்கொண்டுள்ளான். யூதேயாவைச் சுற்றிலும் அவன் போதிக்கிறான். அவன் கலிலேயாவில் ஆரம்பித்து இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள்.

ஏரோதுவின் முன் இயேசு

அதைக் கேட்ட பிலாத்து, “இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவரா?” என்று வினவினான். பின்பு ஏரோதின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து இயேசு வருவதை அறிந்தான். அப்போது ஏரோது எருசலேமில் இருந்தான். எனவே பிலாத்து, இயேசுவை அவனிடம் அனுப்பினான்.

இயேசுவைப் பார்த்ததும் ஏரோது மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவரைப்பற்றி அவன் அதிகமாக கேள்விப்பட்டிருந்தபடியினாலும், இயேசு ஏதேனும் ஓர் அதிசயம் செய்வாரா எனப் பார்க்க விருப்பப்பட்டிருந்தபடியினாலும் அவரைக் காண வெகு நாளாக விருப்பம்கொண்டிருந்தான். இயேசுவிடம் பல கேள்விகளைக் கேட்டான் ஏரோது. ஆனால் இயேசு ஒன்றுமே கூறவில்லை. 10 தலைமை ஆசாரியரும், வேதபாரகரும் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு எதிரானவைகளை உரக்கக் கூறிக்கொண்டிருந்தார்கள். 11 ஏரோதுவும், அவனது வீரர்களும் இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். அரசனுக்குரிய ஆடைகளை அணிவித்து அவரை எள்ளி நகையாடினார்கள். பின்பு ஏரோது இயேசுவைப் பிலாத்துவிடமே திரும்ப அனுப்பினான். 12 முன்னர் பிலாத்துவும், ஏரோதுவும் பகைவர்களாக இருந்து வந்தனர். ஆனால் அன்று ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர்.

பிலாத்துவும் மக்களும்(W)

13 தலைமை ஆசாரியரையும் யூத அதிகாரிகளையும் மக்களோடு கூட பிலாத்து அழைத்தான். 14 பிலாத்து அவர்களை நோக்கி, “நீங்கள் இந்த மனிதனை (இயேசு) என்னிடம் அழைத்து வந்தீர்கள். மக்களின் நடுவில் அமைதியின்மையை விளைவிக்கிறான் என்று சொன்னீர்கள். ஆனால் உங்களுக்கு முன்பாக நான் நியாயம் தீர்த்தேன். அவன் செய்ததாக நான் எந்தக் குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்கள் புகார் சொல்கிற காரியங்களில் இயேசு குற்றவாளியாக்கப்படவில்லை. 15 மேலும் ஏரோதுவும் அவரிடம் தவறேதும் காணவில்லை. மீண்டும் இயேசுவை நம்மிடமே திருப்பி அனுப்பினான் ஏரோது. அவருக்கு மரணதண்டனை தரத் தேவையில்லை. 16 எனவே நான் அவரைச் சிறிய தண்டனை ஏதேனும் கொடுத்து விடுவித்து விடுவேன்” என்றான். 17 [b]

18 ஆனால் மக்கள் அனைவரும், “அவனைக் கொல்லுங்கள். பரபாசை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டனர். 19 (நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனிதன் பரபாஸ். அவன் சிலரைக் கொன்றுமிருந்தான்.)

20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பினான். எனவே பிலாத்து மீண்டும் அவர்களை நோக்கி, இயேசுவை விடுவிப்பதாகக் கூறினான். 21 ஆனால் அவர்கள் மீண்டும் உரத்த குரலில், “அவனைக் கொல்லுங்கள். அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்றார்கள்.

22 மூன்றாம் முறை பிலாத்து மக்களை நோக்கி, “ஏன்? அவன் என்ன தவறு செய்தான்? அவன் குற்றவாளி அல்ல. அவனைக் கொல்வதற்கேற்ற காரணம் எதையும் நான் காணவில்லை. எனவே அவனுக்குச் சிறிய தண்டனை கொடுத்து அவனை விடுதலை செய்வேன்” என்றான்.

23 ஆனால் தொடர்ந்து மக்கள் சத்தமிட்டார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டுமென வேண்டினார்கள். அவர்கள் மிகவும் உரத்த குரலில் சத்தமிட்டதைக் கேட்டதும் 24 அவர்களின் விருப்பத்தின்படியே செய்ய முடிவெடுத்தான் பிலாத்து. 25 மக்கள் அனைவரும் பரபாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். கலகம் விளைவித்ததற்காகவும் மக்களைக் கொன்றதற்காகவும் பரபாஸ் சிறையில் இருந்தான். பிலாத்து பரபாஸை விடுவித்தான். கொல்லப்படும்பொருட்டு, இயேசுவை மக்களிடம் பிலாத்து ஒப்படைத்தான். மக்களும் அதையே விரும்பினர்.

சிலுவையில் இயேசு(X)

26 இயேசுவைக் கொல்லும்பொருட்டு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது வயல்களிலிருந்து நகருக்குள் ஒரு மனிதன் வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். அவன், சிரேனே நகரைச் சேர்ந்தவன். இயேசுவின் சிலுவையைச் சுமந்து அவரைத் தொடர்ந்து வருமாறு சீமோனை வீரர்கள் வற்புறுத்தினார்கள்.

27 பலரும் இயேசுவைத் தொடர்ந்தனர். சில பெண்கள் வருந்தி அழுதனர். அவர்கள் இயேசுவுக்காகக் கவலைப்பட்டனர். 28 ஆனால் இயேசு திரும்பி அப்பெண்களை நோக்கி, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் அழுங்கள். 29 ஏனெனில் பிள்ளைகளைப் பெற முடியாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் பிள்ளைகள் இல்லாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் மக்கள் பேசப்போகும் காலம் வரும். 30 அப்போது மக்கள் மலையை நோக்கி, ‘எங்கள் மேல் விழு’ என்பார்கள். சிறு குன்றுகளை நோக்கி, ‘எங்களை மறைத்துக்கொள்’ என்று சொல்லத் தொடங்குவார்கள். [c] 31 வாழ்க்கை நன்றாக இருக்கும்போது மக்கள் இவ்வாறு நடந்துகொண்டால், தீமையான காலம் வரும்போது என்ன நிகழும்?” [d] என்றார்.

32 கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு வழி நடத்திச்செல்லப்பட்டார்கள். 33 இயேசுவும், அக்குற்றவாளிகளும் “கபாலம்” என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தார்கள். ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள்.

34 இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார்.

இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள். 35 இயேசுவைப் பார்த்தபடி மக்கள் நின்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள், “தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்து என்றால் அவனே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும். அவன் பிற மக்களைக் காப்பாற்றவில்லையா?” என்றார்கள்.

36 வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். 37 வீரர்கள், “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். 38 சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் அரசன்” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.

39 சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான்.

40 ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம். 41 நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் நீயும் நானும் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” என்றான். 42 பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும்போது என்னை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்” என்றான்.

43 இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார்.

இயேசு மரித்தல்(Y)

44 அப்போது மதிய வேளை. ஆனால் மதிய நேரம் பின்பு மூன்று மணிவரையிலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. 45 சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. 46 இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார்.

47 அங்கு நின்ற இராணுவ அதிகாரி நடந்தவற்றை எல்லாம் பார்த்தான். அவன், “இந்த மனிதன் உண்மையிலேயே தேவ குமாரன்தான் என்பதை அறிவேன்” என்று கூறியவாறே தேவனை வாழ்த்தினான்.

48 இதைப் பார்க்கவென்று நகரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். பார்த்ததும் துயரமிகுதியால் மார்பில் அறைந்தபடி வீட்டுக்குத் திரும்பினார்கள். 49 இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் அங்கு இருந்தார்கள். கலிலேயாவில் இருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த சில பெண்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் சிலுவைக்கு சற்றே தொலைவில் இவற்றைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.

அரிமத்தியா ஊரின் யோசேப்பு(Z)

50-51 அரிமத்தியா என்னும் நகரில் இருந்து ஒரு மனிதன் அங்கே வந்திருந்தான். அவன் பெயர் யோசேப்பு. அவன் நல்ல பக்தியுள்ள மனிதன். தேவனின் இராஜ்யத்தின் வருகையை எதிர் நோக்கி இருந்தான். யூதர் அவையில் அவன் ஒரு உறுப்பினன். பிற யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்ல முடிவெடுத்தபோது அவன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. 52 இயேசுவின் உடலைக் கேட்கும்பொருட்டு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். உடலை எடுத்துக்கொள்ள பிலாத்து, யோசேப்புக்கு அனுமதி கொடுத்தான். 53 எனவே யோசேப்பு சிலுவையில் இருந்து இயேசுவின் உடலைக் கீழே இறக்கி ஒரு துணியால் உடலைச் சுற்றினான். பிறகு பாறைக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு கல்லறைக்குள் இயேசுவின் உடலை வைத்தான். அக்கல்லறை அதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 54 அப்பொழுது ஆயத்த நாளின் [e] இறுதிப்பகுதி நெருங்கியது. சூரியன் மறைந்த பிறகு ஓய்வு நாள் ஆரம்பிக்கும்.

55 கலிலேயாவில் இருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்கள் யோசேப்பைத் தொடர்ந்தனர். அவர்கள் கல்லறையைப் பார்த்தார்கள். இயேசுவின் உடல் உள்ளே கிடத்தப்பட்டிருந்த இடத்தையும் பார்த்தார்கள். 56 இயேசுவின் உடலில் பூசுவதற்காக மணம்மிக்க பொருள்களைத் தயாரிப்பதற்காக அப்பெண்கள் சென்றார்கள்.

ஓய்வு நாளில் அவர்கள் ஓய்வெடுத்தார்கள். மோசேயின் சட்டம் இவ்வாறு செய்யுமாறு எல்லா மக்களுக்கும் கட்டளை இட்டிருந்தது.

இயேசு உயிர்த்தார்.(AA)

24 வாரத்தின் முதல் நாளில் அதிகாலைப் பொழுதில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குப் பெண்கள் வந்தார்கள். தாம் தயாரித்த மணமிக்க பொருட்களை அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள். ஒரு பெருங்கல் கல்லறையின் நுழை வாசலில் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல் உருண்டு போயிருந்ததை அப்பெண்கள் கண்டார்கள். அவர்கள் உள்ளே சென்றார்கள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இருக்கவில்லை. அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள். அப்பெண்கள் மிகவும் பயந்தார்கள். அந்த இரு மனிதரும் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருக்கிற ஒருவரை ஏன் இங்கு தேடுகிறீர்கள்? இது இறந்தோருக்குரிய இடம். இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார். தீயோரிடம் ஒப்படைக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார் எனவும், மூன்றாம் நாளில் மரணத்தின்று எழுவார் எனவும் இயேசு கலிலேயாவில் சொன்னது ஞாபகம் இருக்கிறதா?” என்றார்கள். அப்போது இயேசு கூறியவற்றை அப்பெண்கள் நினைவுகூர்ந்தார்கள்.

அப்பெண்கள் கல்லறையை விட்டுப் போய், பதினொரு சீஷர்களும், மற்றவர்களும் இருக்கும் இடத்துக்குச் சென்றார்கள். கல்லறையின் அருகே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அப்பெண்கள் அவர்களுக்குக் கூறினார்கள். 10 அவர்கள் மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள், வேறு சில பெண்கள் ஆகியோர். அப்பெண்கள் நடந்த அனைத்தையும் சீஷர்களுக்குச் சொன்னார்கள். 11 அப்பெண்கள் கூறியவற்றை சீஷர்கள் நம்பவில்லை. அது விசித்திரமான பேச்சாக இருந்தது. 12 ஆனால் பேதுரு எழுந்து அது உண்மையா எனப் பார்க்கக் கல்லறைக்கு ஓடினான். அவன் உள்ளே பார்த்து இயேசுவின் உடலைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணிகள் மட்டுமே கிடப்பதைக் கண்டான். இயேசுவைக் காணவில்லை. இயேசு சென்றுவிட்டிருந்தார். நடந்தவற்றைக் குறித்து ஆச்சரியப்பட்டவனாகப் பேதுரு தனித்திருக்க விரும்பிச் சென்றான்.

எம்மாவூர் சென்ற சீஷர்கள்(AB)

13 எம்மா என்னும் ஊருக்கு அதே நாள் இயேசுவின் இரண்டு சீஷர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். எருசலேமில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அந்த ஊர் இருந்தது. 14 நடந்தவை அனைத்தையும் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். 15 அவர்கள் இவற்றை விவாதித்துக்கொண்டிருக்கும்போது இயேசு அருகே வந்து அவர்களோடு நடந்தார். 16 (இயேசுவை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து ஏதோ ஒன்றால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள்) 17 “நீங்கள், நடக்கும்போது பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் என்ன?” என்று இயேசு கேட்டார்.

இருவரும் நின்றார்கள். அவர்கள் முகங்கள் சோகத்தால் நிரம்பி இருந்தன. 18 கிலேயோபாஸ் என்பவன், “கடந்த சில நாட்களாக அங்கே நிகழ்ந்தவற்றை அறியாத மனிதர் எருசலேமில் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்” என்றான்.

19 அவர்களை நோக்கி, இயேசு, “நீங்கள் எதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்.

அம்மனிதர்கள் அவரை நோக்கி, “நாசரேத்தில் உள்ள இயேசுவைக் குறித்துப் பேசுகிறோம். தேவனுக்கும் மக்களுக்கும் அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசி. அவர் பல ஆற்றல் மிக்க காரியங்களைச் சொல்லியும் செய்தும் வந்திருக்கிறார். 20 ஆனால் தலைமை ஆசாரியரும் நம் தலைவர்களும் அவர் நியாயந்தீர்க்கப்பட்டுக் கொல்லப்படுமாறு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். 21 இஸ்ரவேல் மக்களை விடுவிப்பவர் இயேசு ஒருவரே என நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி நடந்துள்ளது. இயேசு கொல்லப்பட்டு மூன்று நாட்களாகிவிட்டன. 22 இன்று எங்கள் பெண்களில் சிலர் எங்களுக்குச் சில ஆச்சரியமான தகவல்களைச் சொன்னார்கள். இன்று அப்பெண்கள் அதிகாலையில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்றார்கள். 23 ஆனால் அவரது உடலை அங்கே காணவில்லை. அவர்களுக்கு ஒரு காட்சியில் தரிசனமான இரண்டு தேவதூதர்களைப் பார்த்தார்கள். ‘இயேசு உயிரோடு இருக்கிறார்’ என அவர்கள் சொன்னார்கள் என்று அப்பெண்கள் வந்து எங்களிடம் சொன்னார்கள். 24 அதன் பின்பு எங்களில் சிலரும் கல்லறைக்குச் சென்றார்கள். பெண்கள் சொன்னபடியே இருந்தது. கல்லறை வெறுமையாக இருந்ததை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவைப் பார்க்கவில்லை” என்றார்கள்.

25 பின்பு இயேசு இருவரிடமும், “நீங்கள் அறிவற்றவர்கள். உண்மையை மிகவும் தாமதமாக உணர்ந்துகொள்கிறீர்கள். தீர்க்கதரிசிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் நம்பவேண்டும். 26 கிறிஸ்து தன் மகிமையில் நுழையும்முன்பு இவ்வாறு துன்புற வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் கூறி இருந்தார்கள்” என்றார். 27 பிற்பாடு சுவடிகளில் தன்னைப்பற்றி எழுதிய ஒவ்வொன்றைப்பற்றியும் இயேசு விளக்க ஆரம்பித்தார். மோசேயின் புத்தகங்கள் தொடங்கி தீர்க்கதரிசிகள் வரைக்கும் இயேசுவைக் குறித்துக் கூறியவற்றை அவர் சொன்னார்.

28 அவர்கள் எம்மாவூர் என்னும் ஊரை அடைந்தார்கள். தன் பயணத்தைத் தொடர விரும்பியது போல இயேசு நடித்தார். 29 ஆனால் அவர்கள் அவர் அங்கே தங்கவேண்டுமென விரும்பினார்கள். அவர்கள் இயேசுவை “எங்களுடன் தங்குங்கள். மிகவும் தாமதமாகிவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது” என்று கெஞ்சிக் கேட்டார்கள். எனவே அவர் அவர்களோடு தங்கச் சென்றார்.

30 அவர்களோடு சேர்ந்து இயேசு உணவுண்ண உட்கார்ந்திருந்தார். உணவுக்காக நன்றி சொல்லிவிட்டு, உணவைப் பகிர்ந்தார். 31 அப்போது அம்மனிதர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் யார் என அவர்கள் உணர்ந்துகொண்டதும், அவர் மறைந்துவிட்டார். 32 இருவரும் தமக்குள்ளாக, “பாதையில் நம்முடன் இயேசு பேசிக்கொண்டு வந்தபோது ஏதோ எரிவதுப்போல் ஓர் உணர்வு இதயத்தில் எழுந்தது. வேதாகமத்தின் பொருளை அவர் விளக்கியபோது மிகவும் பரவசமாக இருந்தது” என்று பேசிக்கொண்டார்கள்.

33 பின்பு அவர்கள் எழுந்து திரும்பி எருசலேமை நோக்கிச் சென்றார்கள். எருசலேமில் இயேசுவின் சீஷர்கள் ஒன்றாகக் கூடியிருக்கக் கண்டார்கள். பதினொரு சீஷர்களும் அவர்களோடிருந்த மக்களும் 34 “மரணத்தினின்று உண்மையாகவே அவர் மீண்டும் எழுந்தார்” சீமோனுக்கு (பேதுருவுக்கு) அவர் காட்சியளித்தார் என்றார்கள்.

35 அப்போது பாதையில் நடந்த விஷயங்களை இரு மனிதர்களும் கூறினார்கள். உணவைப் பங்கிட்டபோது எவ்வாறு இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள் எனச் சொன்னார்கள்.

சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி(AC)

36 அவர்கள் இருவரும் இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார்.

37 சீஷர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் பயந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு ஆவியைப் பார்த்துக்கொண்டிருப்பதாக எண்ணினார்கள். 38 ஆனால் இயேசு, “நீங்கள் எதற்காகக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? நீங்கள் காண்பதில் ஏன் ஐயம்கொள்கின்றீர்கள்? 39 என் கைகளையும் என் பாதங்களையும் பாருங்கள். உண்மையாகவே நான்தான். என்னைத் தொடுங்கள். எனக்கு உயிருள்ள உடல் இருப்பதைப் பார்க்க முடியும். ஓர் ஆவி இப்படிப்பட்ட உடல் கொண்டிருக்காது” என்றார்.

40 இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார். 41 சீஷர்கள் ஆச்சரியமுற்றவர்களாக இயேசுவை உயிரோடு பார்த்ததால் மிகவும் மகிழ்ந்தார்கள். எனினும் கூட தாம் பார்த்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்களை நோக்கி இயேசு, “உங்களிடம் இங்கே ஏதாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார். 42 அவர்கள் சமைத்த மீனில் ஒரு துண்டைக் கொடுத்தார்கள். 43 சீஷர்களின் முன்னிலையில் இயேசு அந்த மீனை எடுத்து சாப்பிட்டார்.

44 அவர்களை நோக்கி இயேசு, “நான் உங்களோடு இருந்த காலத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். மோசேயின் சட்டத்திலும், தீர்க்கதரிசிகளின் நூற்களிலும், சங்கீதத்திலும் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற அனைத்தும் நடந்தேயாக வேண்டும் என்று நான் சொன்னேன்” என்றார்.

45 பின்பு இயேசு சீஷர்களுக்கு வேதாகமத்தை விளக்கினார். தன்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவினார். 46 பிறகு அவர்களை நோக்கி, “கிறிஸ்து கொல்லப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து எழுவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. 47-48 நீங்கள் நடந்தவை அனைத்தையும் பார்த்தீர்கள். நீங்களே சாட்சிகள். மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று நீங்கள் போய் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் தம் மனம் மாறி, தாம் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அதைச் செய்தால் அவர்கள் தேவனால் மன்னிக்கப்படுவர். எருசலேமிலிருந்து நீங்கள் புறப்பட்டு என் பெயரில் இவற்றைப் போதிக்க வேண்டும். உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இந்த நற்செய்தி கூறப்பட வேண்டும். 49 கவனியுங்கள், என் பிதா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை உங்களுக்கு அனுப்புவேன். விண்ணில் இருந்து அந்த வல்லமையை நீங்கள் பெறும்வரைக்கும் எருசலேமில் தங்கி இருக்கவேண்டும்” என்றார்.

இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்(AD)

50 எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51 இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார். 52 சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர். பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள். 53 தேவனை வாழ்த்தியவாறே எப்போதும் அவர்கள் தேவாலயத்தில் தங்கி இருந்தார்கள்.

கிறிஸ்து உலகத்துக்கு வருதல்

உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை [f] இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது. அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார். அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளிலே வெளிச்சத்தைத் தந்தது. இருளானது அந்த ஒளியை மேற்கொள்ளவில்லை.

யோவான் என்ற பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் தேவனால் அனுப்பப்பட்டவன். அவன் அந்த ஒளியைப் (கிறிஸ்து) பற்றி மக்களிடம் சொல்வதற்காக வந்தான். எனவே மக்கள் அனைவரும் யோவான் மூலமாக அந்த ஒளியைப்பற்றிக் கேள்விப்படவும் நம்பிக்கை வைக்கவும் முடிந்தது. யோவான் ஒளியல்ல. ஆனால் அவன் அந்த ஒளியைப்பற்றி மக்களிடம் சொல்லவே வந்தவன். அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது.

10 அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. 11 அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். 13 இந்தப் பிள்ளைகள் ஏனைய சிறிய குழந்தைகள் பிறப்பதைப்போல பிறக்கவில்லை. இவர்கள் ஒரு தாய் தந்தையின் விருப்பத்தின்படியோ, திட்டத்தின்படியோ பிறக்கவில்லை. இந்தக் குழந்தைகள் தேவனாலேயே பிறந்தனர்.

14 வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே மகனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று. 15 அவரைப்பற்றி யோவான் மக்களிடம், “நான் சொல்லிக்கொண்டிருந்தவர் இவர்தான். ‘எனக்குப் பின்னால் வருகிறவர் என்னிலும் மேலானவர். இவர் எனக்கு முன்னரே இருப்பவர்’” என்று சாட்சி சொன்னான்.

16 அவர் (கிறிஸ்து) கிருபையும், உண்மையும் நிறைந்தவராய் இருந்தார். அவரிடமிருந்து நாமனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். 17 மோசே மூலம் சட்டங்கள் கொடுக்கப்பட்டன! ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே கிருபையும், உண்மையும் வந்தன. 18 எந்த மனிதனும் ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. ஆனால் இயேசுவாகிய ஒரே குமாரனே தேவன். அவர் பிதாவுக்கு (தேவனுக்கு) மிகவும் நெருக்கமானவர். அத்துடன் குமாரனே தேவனின் தன்மையை நமக்கு வெளிக்காட்டினார்.

இயேசுவைப்பற்றி யோவான்(AE)

19 எருசலேமிலுள்ள யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடம் அனுப்பி வைத்தார்கள். “நீர் யார்?” என்று கேட்பதற்காக அவர்களை யூதர்கள் அனுப்பினர். 20 யோவான் அவர்களிடம் தாராளமாகப் பேசினான். அவன் பதில் சொல்ல மறுக்கவில்லை. “நான் கிறிஸ்து அல்ல” என்று யோவான் தெளிவாகக் கூறினான். இது தான் அவன் மக்களிடம் சொன்னது.

21 “பிறகு நீர் யார்? நீர் எலியாவா?” என்று மேலும் யூதர்கள் யோவானிடம் கேட்டார்கள். “இல்லை. நான் எலியா இல்லை” என்று யோவான் பதிலுரைத்தான்.

“நீர் தீர்க்கதரிசியா?” என யூதர்கள் கேட்டனர்.

“இல்லை. நான் தீர்க்கதரிசி இல்லை” என்றான் யோவான்.

22 “நீர் யார்? உம்மைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் சொல்வதற்கென்று ஒரு பதில் சொல்லுங்கள். உம்மைப்பற்றி நீர் என்ன சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.

23 யோவான் அவர்களிடம் தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளைச் சொன்னான்.

“வனாந்தரத்தில் சத்தமிடுகிறவனின் ஓசையாக நான் இருக்கிறேன்.
    ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்.’” (AF)

24 யூதர்களான இவர்கள் பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்டிருந்தனர். 25 “நீர் கிறிஸ்து அல்ல என்று கூறுகிறீர். நீர் எலியாவோ தீர்க்கதரிசியோ அல்ல என்றும் கூறுகிறீர். பின்னர் நீர் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்?” என அவர்கள் யோவானிடம் கேட்டார்கள்.

26 “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால் உங்களோடு இங்கே இருக்கிற ஒருவர் உங்களால் அறியப்படாதவராக இருக்கிறார். 27 அந்த ஒருவர்தான் எனக்குப் பின்னால் வருகிறவர். அவரது செருப்பின் வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவன் நான்” என்று யோவான் பதிலுரைத்தான்.

28 இந்நிகழ்ச்சிகள் யாவும் யோர்தான் ஆற்றின் அக்கரையில் உள்ள பெத்தானியாவில் நடைபெற்றன. இங்கேதான் யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

இயேசு, தேவ ஆட்டுக்குட்டி

29 மறுநாள் தன்னை நோக்கி இயேசு வருவதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர் தான் தேவனுடைய ஆட்டுக்குட்டி. உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கப்போகிறவர். 30 நான் ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்தவர் இவர் தான். ‘எனக்குப் பிறகு ஒரு மனிதர் வருவார். அவர் என்னிலும் மேலானவர். ஏனென்றால் அவர் எனக்கு முன்னமே வாழ்ந்துகொண்டிருக்கிறவர். அவர் எப்போதும் வாழ்கிறவர்.’ 31 இவரை நானும் அறியாதிருந்தேன். ஆனாலும் நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்திருக்கிறேன். ஆகையால் இஸ்ரவேல் மக்கள் இயேசுதான் கிறிஸ்து என அறிந்துகொள்ள முடியும்.

32-33 “கிறிஸ்து யாரென்று நானும் அறியாமல்தான் இருந்தேன். ஆனால் தேவன் என்னைத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார். ‘நீ யார் மீது பரிசுத்த ஆவியானர் இறங்கி அமர்வதைக் காண்பாயோ, அவர்தான் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்’ என்று தேவன் என்னிடம் கூறினார்” என்றான். “நான் அவ்வாறு நிகழ்வதைப் பார்த்தேன். ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். அந்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் இறங்கி இயேசுவின் மீது அமர்ந்தார். 34 நான் இதைத்தான் மக்களிடம் சொல்லி வருகிறேன். ‘இயேசுதான் தேவனின் குமாரன்’” என்று யோவான் சொன்னான்.

இயேசுவின் முதல் சீஷர்கள்

35 மறுநாள் மறுபடியும் யோவான் அங்கே இருந்தான். அவனோடு அவனைப் பின்பற்றுகிற சீஷர்களில் இரண்டு பேர் இருந்தனர். 36 இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான்.

37 அந்த இரு சீஷர்களும் யோவான் கூறுவதைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். 38 “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு திரும்பி அவர்களைப் பார்த்து கேட்டார்.

அந்த இருவரும், “போதகரே, நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

39 “என்னோடு வாருங்கள். நீங்கள் கண்டுகொள்வீர்கள்” என்று இயேசு பதிலுரைத்தார். எனவே அவர்கள் இருவரும் அவர் பின்னால் சென்றனர். இயேசு தங்கியிருக்கும் இடத்தையும் கண்டனர். அன்று அவர்கள் அவரோடு அங்கே தங்கியிருந்தனர். அப்பொழுது நேரம் சுமார் நான்கு மணி.

40 இயேசுவைப்பற்றி யோவான் சொன்னதன் மூலமாகத் தெரிந்துகொண்டதால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த இருவரில் ஒருவன் பெயர் அந்திரேயா. அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். 41 முதல் காரியமாக அவன் தன் சகோதரன் சீமோன் பேதுருவைப் போய்ப் பார்த்தான். “நாங்கள் மேசியாவைக் (அதன் பொருள் கிறிஸ்து) கண்டுகொண்டோம்” என்று கூறினான்.

42 பிறகு அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “நீ யோவானுடைய மகனான சீமோன். நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (“கேபா” என்பதற்கு “பேதுரு” என்று அர்த்தம்.)

43 மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்லத் தீர்மானித்தார். இயேசு பிலிப்புவைக் கண்டு, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். 44 பிலிப்பு, அந்திரேயா, பேதுரு ஆகியோரின் ஊரான பெத்சாயிதாவைச் சேர்ந்தவன். 45 பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து, “மோசே எழுதியிருக்கிற சட்டங்களை எண்ணிப்பார். மோசே வரப்போகிற ஒரு மனிதரைப்பற்றி எழுதினார். தீர்க்கதரிசிகளும் அவரைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். நாங்கள் அவரைத் தெரிந்துகொண்டோம். அவர் பெயர் இயேசு. யோசேப்பின் மகன். நாசரேத்திலிருந்து வருகிறார்.”

46 ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், “நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா?” எனக் கேட்டான்.

“வந்து பார்” என்று பதிலுரைத்தான் பிலிப்பு.

47 நாத்தான்வேல் தன்னிடம் வந்துகொண்டிருப்பதை இயேசு பார்த்தார். “இதோ வந்துகொண்டிருக்கிற இவன் உண்மையாகவே தேவனின் மக்களில் ஒருவன். இவனிடம் எந்த தவறும் இல்லை” என்று இயேசு கூறினார்.

48 “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என நாத்தான்வேல் கேட்டான்.

பிலிப்பு என்னைப்பற்றி உனக்குக் கூறும் முன்பே, “நீ அத்தி மரத்தின் கீழே நிற்கும்போதே உன்னைப் பார்த்தேன்” என்று இயேசு சொன்னார்.

49 பிறகு இயேசுவிடம், “ஆண்டவரே! நீங்கள் தான் தேவகுமாரன். இஸ்ரவேலின் அரசன்” என்று நாத்தான்வேல் கூறினான்.

50 “நான் உன்னை அத்தி மரத்தின் அடியில் பார்த்ததாக ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அதனால் என்மீது நீ நம்பிக்கை வைத்தாய். ஆனால் அதைவிட மேலும் சிறந்தவைகளைக் காண்பாய்” என்று இயேசு கூறினார். 51 அவர் மேலும், “நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். பரலோக வாசல் திறந்திருப்பதையும், மனிதகுமாரனிடத்திலிருந்து தேவதூதர்கள் மேலே செல்வதையும் கீழே இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள்” [g] என்றார்.

கானாவூர் கல்யாணம்

கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இயேசுவின் தாய் அங்கே இருந்தார். இயேசுவும் அவரது சீஷர்களும் அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திருமண வீட்டில் திராட்சை இரசம் போதுமான அளவு இல்லை. அது முழுவதும் தீர்ந்துபோன பின்பு இயேசுவிடம் அவரது தாயார், “அவர்களிடம் வேறு திராட்சை இரசம் இல்லை” என்றார்.

“அன்பான பெண்ணே! நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீர் சொல்ல வேண்டாம். என் நேரம் இன்னும் வரவில்லை” என்றார் இயேசு.

“இயேசு என்ன சொல்கிறாரோ அதன்படி நீங்கள் செய்யுங்கள்” என்று இயேசுவின் தாயார் வேலையாட்களிடம் சொன்னார்.

அந்த இடத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதற்கென்று கல்லால் ஆன ஆறு பெரிய (பாத்திரங்கள்) தொட்டிகள் இருந்தன. இவ்வித தண்ணீர்த் தொட்டிகளை யூதர்கள் தங்கள் சுத்திகரிப்பின் சடங்குகளில் உபயோகித்தனர். ஒவ்வொரு தொட்டியும் இரண்டு முதல் மூன்று குடம் தண்ணீரைக் கொள்வன.

இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து, “அந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே அத்தொட்டிகளை நிரப்பினர்.

பிறகு இயேசு வேலைக்காரர்களிடம், “இப்பொழுது இதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதனை விருந்தின் பொறுப்பாளியிடத்தில் கொண்டுபோங்கள்” என்றார்.

வேலையாட்கள் அவ்வாறே கொண்டு போனார்கள். அந்த விருந்தின் பொறுப்பாளன் அதைச் சுவைத்துப்பார்த்தான். அப்பொழுது தண்ணீர் திராட்சை இராசமாகியிருந்தது. அவனுக்கு அது எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஆனால் நீரைக் கொண்டுபோன வேலையாட்களுக்குத் தெரிந்திருந்தது. 10 விருந்தின் பொறுப்பாளன் மணமகனை அழைத்து, “என்ன இது, இவ்வாறு செய்கிறீர்கள்? எல்லோரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவார்கள். விருந்தினர்கள் குடித்துத் திருப்தியடைந்த பின்னர் ருசி குறைந்த திராட்சை இரசத்தைப் பரிமாறுவார்கள். நீங்களோ நல்ல திராட்சை இரசத்தை இதுவரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள்” எனறான்.

11 இதுவே இயேசு செய்த முதல் அற்புதமாகும். இயேசு இதனை கலிலேயா நாட்டில் உள்ள கானா என்ற ஊரில் நிகழ்த்தினார். இயேசு தனது மகிமையை வெளிப்படுத்தினார். அவரது சீஷர்கள் அவரை நம்பினர்.

12 பிறகு இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். அவரோடு அவரது தாயும், சகோதரர்களும் சீஷர்களும் சென்றனர். அவர்கள் அங்கே கொஞ்ச நாட்கள் தங்கினர்.

தேவாலாயத்தில் இயேசு(AG)

13 அப்போது யூதர்களின் பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகையால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அங்கே அவர் தேவாலயத்தில் நுழைந்தார். 14 தேவாலயத்தில் வியாபாரிகள் ஆடுகள், மாடுகள், புறாக்கள் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தனர். மேசைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேறு சிலரையும் இயேசு கவனித்தார். அவர்கள் பொதுமக்கள் பணத்தை பண்டமாற்று செய்தபடி இருந்தார்கள். 15 இயேசு கயிறுகளால் ஒரு சவுக்கை உருவாக்கினார். அந்த வியாபாரிகளையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்திற்கு வெளியே அடித்துத் துரத்தினார். அவர் மேஜைகள் பக்கம் திரும்பி காசுக்காரர்களுடைய காசுகளைக் கொட்டினார். அப்பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார். 16 புறா விற்கிறவர்களைப் பார்த்து, “இவற்றை எடுத்துக்கொண்டு இங்கே இருந்து வெளியே செல்லுங்கள். என் பிதாவின் வீட்டைச் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” என்று இயேசு கட்டளையிட்டார்.

17 இது இவ்வாறு நிகழும்போது, இயேசுவின் சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வேதவாக்கியங்களை நினைவுகூர்ந்தனர்.

“உமது வீட்டைக் குறித்த என் பக்தி உணர்வு என்னை வைராக்கியமுள்ளவனாக்கும்.” (AH)

18 யூதர்கள் இயேசுவைப் பார்த்து, “ஓர் அடையாளமாக அதிசயம் ஒன்றை எங்களுக்குக் காட்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டும்” என்றார்கள்.

19 “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள். இதனை மூன்று நாட்களுக்குள் நான் மீண்டும் கட்டி முடிப்பேன்” என்றார் இயேசு.

20 அதற்குப் பதிலாக யூதர்கள், “மக்கள் நாற்பத்தாறு ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். இதனை உம்மால் மூன்று நாட்களில் கட்டி முடிக்க முடியும் என்று நீர் உண்மையாகவே சொல்கிறீரா?” என்று கேட்டார்கள். 21 (ஆனால் இயேசு ஆலயம் என்று கூறியது அவரது சரீரத்தை. 22 இதனை அவரது சீஷர்கள், இயேசு மரித்தபின் மூன்று நாட்களில் உயிர்த்தெழுந்தபோது அவர் சொன்னதை நினைவுபடுத்திப் புரிந்துக்கொண்டனர். ஆகையால் அவரது சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட வேதவாக்கியங்களையும், இயேசுவின் வார்த்தைகளையும் நம்பினர்.)

23 இயேசு பஸ்கா பண்டிகையின்போது எருசலேமில் இருந்தார். ஏராளமான மக்கள் அவர் செய்த அற்புதங்களைக் கண்டு அவர் மீது நம்பிக்கை வைத்தனர். 24 ஆனால் இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால் அவர்களது எண்ணங்களை அவர் அறிந்திருந்தார். 25 இயேசுவுக்கு அம்மக்களைப்பற்றி எவரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஒரு மனிதனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிந்தவராயிருந்தார்.

இயேசுவும் நிக்கொதேமுவும்

நிக்கொதேமு என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் பரிசேயர்களுள் ஒருவன். அவன் ஓர் முக்கியமான யூதத் தலைவன். ஓர் இரவு அவன் இயேசுவிடம் வந்தான். “போதகரே! நீங்கள் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனின் உதவியின்றி எவரொருவராலும் நீர் செய்வதுபோன்ற அற்புதங்களைச் செய்ய இயலாது” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.

அதற்கு நிக்கொதேமு, “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான்.

இதற்குப் பதிலாக இயேசு, “நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது. நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்.’ காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஆவியானவரிலிருந்து பிறக்கிறான்” என்றார்.

“இவை எவ்வாறு இயலும்?” என்று நிக்கொதேமு கேட்டான்.

10 “நீ யூதர்களின் முக்கியமான ஒரு போதகன். ஆனால் உன்னால் இவற்றைப்பற்றி இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லையே! 11 நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன், நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவற்றைப்பற்றியே பேசுகிறோம். நாங்கள் பார்த்தவற்றை மட்டுமே சொல்லுகிறோம். ஆனால் உன்னைப்போன்றவர்கள் நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 12 நான் பூமியில் உள்ளவற்றைப் பற்றி உனக்குச் சொன்னேன். ஆனால் நீ என்னை நம்புகிறதில்லை. ஆகையால், நான் பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி சொன்னாலும் நீ அவற்றையும் நம்பப்போவதில்லை. 13 பரலோகத்திற்கு ஏறிச் சென்ற ஒரே ஒருவரே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர். அவர்தான் மனிதகுமாரன்.

14 “வனாந்தரத்தில் மோசே பாம்பினை உயர்த்திப் பிடித்தான். அவ்வாறே மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும். [h] 15 பிறகு அந்த மனிதகுமாரன்மேல் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறமுடியும்.

16 ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் மகனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். 17 தேவன் தன் மகனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது மகனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் மகனை அனுப்பினார். 18 தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே மகன் மீது நம்பிக்கை இல்லை. 19 இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள். 20 தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும். 21 ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும் [i] என்று இயேசு கூறினார்.

இயேசுவும், யோவான் ஸ்நானகனும்

22 அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).

25 யோவானின் சீஷர்களுள் சிலர், யூதரோடு விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மத சம்பந்தமான முறையைப்பற்றியே விவாதித்தனர். 26 ஆகையால் யோவானிடம் அவர்கள் வந்தனர். “போதகரே! யோர்தான் நதிக்கு அக்கரையில் ஒருவர் உம்மோடு இருந்தாரே, நினைவிருக்கிறதா? நீங்கள் அந்த மனிதரைப்பற்றியும் மக்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். அவர் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏராளமான மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்” என்று கூறினர்.

27 “தேவன் எதை ஒருவனுக்குக் கொடுக்கிறாரோ, அதையே ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள முடியும். 28 ‘நான் கிறிஸ்து அல்ல’ என்று நானே கூறியதையும் நீங்கள் சோதித்து அறிந்திருக்கிறீர்கள். ‘அவருக்கான பாதையைச் செம்மை செய்வதற்காகவே தேவன் என்னை அனுப்பியிருக்கிறார்.’ 29 மணமகனுக்கே மணமகள் உரியவளாகிறாள். மணமகனுக்கு உதவி செய்கிற மாப்பிள்ளையின் தோழன், மணமகனின் வரவைக் கவனித்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறான். மணமகனின் சத்தத்தைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்கிறான். நானும் அதே மகிழ்ச்சியை அடைகிறேன். இதுவே எனது மகிழ்ச்சிகரமான நேரம். 30 இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.

பரலோகத்திலிருந்து வந்தவர்

31 “பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசு மற்ற எல்லாரையும்விடப் பெரியவர். பூமியில் இருந்து வந்தவன் பூமியைச் சார்ந்தவன். அவன் பூமியில் உள்ளவற்றைப்பற்றி மட்டுமே பேசுவான். ஆனால் பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசுவோ மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவர். 32 அவர் எதைக் கண்டாரோ, கேட்டாரோ அதையே கூறுகிறார். ஆனால் எவரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் சொல்வதை எவனொருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன், தேவன் உண்மையாய் இருக்கிறார் என்று நிரூபிக்கிறான். 34 தேவன் இயேசுவை அனுப்பினார். அவர் தேவன் சொன்னதைச் சொல்கிறார். தேவன் அவருக்கு ஆவியை நிரம்பக் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார். 36 இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.

சமாரியப் பெண்ணும் இயேசுவும்

யோவானைவிட இயேசு மிகுதியான மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாகப் பரிசேயர்கள் கேள்விப்பட்டனர். (ஆனால் உண்மையில் இயேசு எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. அவரது சீஷர்களே கொடுத்தனர்.) பரிசேயர்கள் கேள்விப்பட்டதைப்பற்றி இயேசுவும் அறிந்துகொண்டார். ஆகையால் அவர் யூதேயாவை விட்டுத் திரும்பி கலிலேயாவுக்குச் சென்றார். கலிலேயாவுக்குச் செல்கிற வழியில் இயேசு சமாரியா நாட்டைக் கடந்து செல்ல இருந்தார்.

சமாரியாவில் இயேசு சீகார் என்னும் பட்டணத்துக்கு வந்தார். அந்தப் பட்டணம், யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகில் இருந்தது. யாக்கோபின் கிணறும் அங்கே இருந்தது. இயேசு தன் நீண்ட பயணத்தால் களைத்துப் போயிருந்தார். ஆகையால் இயேசு கிணற்றின் அருகில் இளைப்பாறிட அமர்ந்தார். அது மதிய வேளை. ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு” என்று கேட்டார். (இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.)

“குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண்” என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.)

10 “தேவன் கொடுப்பவற்றைப்பற்றி நீ அறியவில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார் இயேசு.

11 “ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே! 12 நீங்கள் எமது மூதாதையரான யாக்கோபை விடப் பெரியவரா? அவர்தான் எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தார். அவரும் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார். அத்துடன் அவரது பிள்ளைகளும் மிருகங்களும் இதிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார்கள்” என்று அந்தப் பெண் சொன்னாள்.

13 “இந்த தண்ணீரைக் குடிக்கிறவர்களுக்கு மீண்டும் தாகம் எடுக்கும். 14 ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று இயேசு பதிலுரைத்தார்.

15 “ஐயா! எனக்கு அந்தத் தண்ணீரை வழங்குங்கள். அப்போது ஒருபோதும் மறுபடியும் எனக்குத் தாகம் எடுக்காது. மிகுதியாகத் தண்ணீரெடுக்க இங்கே நான் மீண்டும் வர வேண்டியதும் இராது” எனக் கூறினாள் அந்தப் பெண்.

16 “போ, உன் கணவனோடு இங்கே திரும்ப வா” என்றார் இயேசு.

17 “ஆனால், எனக்குக் கணவன் இல்லையே” என்றாள் அப்பெண்.

“உனக்குக் கணவன் இல்லையென்று நீ சொல்வது சரிதான். 18 உண்மையில் உனக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் நீ இப்பொழுது யாரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயோ அவன் உன் கணவனல்ல. நீ என்னிடம் உண்மையைச் சொன்னாய்” என்றார் இயேசு.

19 “உம்மை நான் தீர்க்கதரிசியாகக் காண்கிறேன். 20 எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்” என்றாள் அந்தப் பெண்.

21 “பெண்ணே! என்னை நம்பு. இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பிதாவை (தேவனை) வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. 22 சமாரியர்களாகிய நீங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். யூதர்களாகிய நாங்கள், எங்களால் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். யூதர்களிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது. 23 உண்மையாக வழிபடுகிறவர்கள் (தேவனை) ஆவியோடும் உண்மையோடும் வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. பிதாவும் தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகைய மக்களாக இருக்க விரும்புகிறார். 24 தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகையால் தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை வழிபடுதல் வேண்டும்” என்றார் இயேசு.

25 “கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண்.

26 பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா” என்றார்.

27 அப்பொழுது இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்தனர். இயேசு ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். ஆனால் எவரும், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றோ “ஏன் நீங்கள் அவளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றோ கேட்கவில்லை.

28 பிறகு அந்தப் பெண் தன் தண்ணீர்க் குடத்தை விட்டுவிட்டு நகருக்குத் திரும்பப் போனாள். 29 அங்கே அவள் மக்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். ஒரு வேளை அவர் கிறிஸ்துவாக இருக்கலாம்” என்றாள். 30 ஆகையால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி இயேசுவைக் காண வந்தனர்.

31 அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர்.

32 ஆனால் இயேசுவோ, “என்னிடம் உண்பதற்கு உணவுண்டு. அதனைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.

33 “ஏற்கெனவே வேறு யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்கள்” என்று சீஷர் கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

34 “எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது. 35 நீங்கள் பயிரை நடும்போது ‘அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று சொல்வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப்போன்று இருக்கிறார்கள். 36 இப்பொழுதுகூட அறுவடை செய்கிறவன் சம்பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ்வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கிறவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சியடைய இயலும். 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் இன்னொருவன் என்கிற பழமொழி இதனால் உண்மையாகிறது. 38 நீங்கள் பாடுபட்டு விதைக்காத நிலத்தை அறுவடை செய்யுமாறு உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் பாடுபட்டார்கள். நீங்கள் அவர்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள்” என்று இயேசு கூறினார்.

39 அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால்தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட்டார்” என்று கூறி இருந்தாள். 40 சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்களோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கினார். 41 மேலும் மிகுதியான மக்கள், இயேசு சொன்னவற்றின் மூலம் அவரை நம்பினர்.

42 அவர்கள், “முதலில் நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை நம்பினோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே அவர் சொன்னவற்றைக் கேட்டதால் விசுவாசிக்கிறோம். அவர் உண்மையாகவே இந்த உலகத்தை இரட்சிக்கப்போகிறவர் என்று நம்புகிறோம்” என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்கள்.

அதிகாரியின் மகன் குணப்படுதல்(AI)

43 இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார். 44 (இயேசு ஏற்கெனவே “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான்” என்று சொல்லியிருந்தார்) 45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள்.

46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அரசனின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது மகன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது மகன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.

49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய மகன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.

50 அதற்கு இயேசு, “போ, உன் மகன் பிழைப்பான்” என்றார்.

அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் மகன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.

52 “என் மகன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் மகனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.

53 இயேசு, “உன் மகன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.

54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.

38 வருட நோயாளி குணமடைதல்

பிறகு, இயேசு எருசலேமுக்கு யூதர்களின் ஒரு பண்டிகையின்போது சென்றார். அங்கே ஐந்து மண்டபங்கள் உள்ள ஒரு குளம் இருந்தது. யூதமொழியில் இதற்கு பெதஸ்தா [j] என்று பெயர். இந்தக் குளம் ஆட்டுவாசல் அருகே இருந்தது. குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் நோயாளிகள் பலர் படுத்துக்கிடந்தனர். [k] அவர்களில் சிலர் குருடர்கள்; சிலர் சப்பாணிகள்; சிலர் சூம்பிப்போன உறுப்புகளை உடையவர்கள். அவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தான். இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.

“ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான்” என்று அந்த நோயாளி பதில் சொன்னான்.

பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள். 10 ஆகையால் யூதர்கள், “இன்று ஓய்வு நாள். நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போவது சரியல்ல” என்று அவனிடம் கூறினர்.

11 ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான்.

12 “உன்னை குணமாக்கிப் படுக்கையை எடுத்துக் கொண்டு போகும்படி சொன்ன அவன் யார்?” என்று யூதர்கள் கேட்டனர்.

13 ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார்.

14 பிறகு இயேசு அவனை ஆலயத்தில் கண்டுபிடித்தார். இயேசு அவனிடம், “பார், இப்பொழுது நீ குணமாகிவிட்டாய். உனக்குக் கேடுவராதபடி மேலும் பாவம் செய்யாமல் இருப்பாயாக” என்று கூறினார்.

15 பிறகு அந்த மனிதன் யூதர்களிடம் திரும்பிப் போனான். அவன் யூதர்களிடம், “இயேசுதான் என்னைக் குணமாக்கியவர்” என்று சொன்னான்.

16 இயேசு இவ்வாறு ஓய்வு நாளில் நோயைக் குணப்படுத்தியதால் யூதர்கள் இயேசுவைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். 17 ஆனால் இயேசுவோ யூதர்களிடம், “எனது பிதா (தேவன்) வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நானும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.

18 இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடக் கடுமையாக முயற்சி செய்தார்கள். அவர்கள், “முதலில் இயேசு ஓய்வு நாளின் சட்டத்தை உடைத்துவிட்டார். பிறகு அவர் தேவனை அவரது பிதா என்று கூறுகிறார். அவர் தன்னை தேவனுக்குச் சமமாகக் கூறி வருகிறார்” என்று விளக்கம் கூறினர்.

தேவ அதிகாரம் பெற்ற இயேசு

19 ஆனால் இயேசுவோ, “உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார். 20 பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். 21 பிதாவானவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப்போலவே அவரது குமாரனும் தமது விருப்பத்தின்படி இறந்துபோனவர்களை உயிரோடு எழச் செய்வார்.

22 “அத்துடன் பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. ஆனால் அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். 23 தேவன் இதைச் செய்தார். எனவே அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார்.

24 “நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான். 25 உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முக்கியமான வேளை வரும். அவ்வேளை ஏற்கெனவே இங்கே இருக்கிறது. பாவத்தில் இறந்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். குமாரனிடமிருந்து கேட்பவற்றை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றார்கள். 26 பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். 27 அத்துடன் அவர் குமாரனுக்கு, அனைத்து மக்களுக்கும் தீர்ப்பளிக்கிற அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அந்தக் குமாரனே மனித குமாரனாக இருக்கிறார்.

28 “இதுபற்றி நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் அவரது சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். 29 அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள்.

30 “நான் தனியாக எதுவும் செய்வதில்லை. நான் எனக்குச் சொல்லியிருக்கிறபடியே தீர்ப்பளிக்கிறேன். எனவே எனது தீர்ப்பு நீதியானதே. ஏனென்றால் நான் எனக்குப் பிடித்தமானதைச் செய்வதில்லை; என்னை அனுப்பினவருக்குப் பிடித்தமானதையே செய்கிறேன்.

யூதர்களிடம் இயேசு பேசுதல்

31 “நானே என்னைப்பற்றிச் சொல்லி வந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 32 ஆனால் என்னைக்குறித்து மக்களிடம் சொல்லுகிற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைக் குறித்துச் சொல்வது உண்மையென்று எனக்கும் தெரியும்.

33 “நீங்கள் யோவானிடம் சிலரை அனுப்பியிருந்தீர்கள். அவன் உங்களுக்கு உண்மையைப்பற்றிச் சொன்னான். 34 மக்களுக்கு என்னைப்பற்றி ஒருவன் சாட்சி சொல்லி விளக்க வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும்படியாக இவற்றை நான் உங்களுக்குக் கூறுகிறேன். 35 யோவான் எரிந்து ஒளியைக் கொடுக்கிற ஒரு விளக்கைப்போன்றிருந்தான். நீங்கள் அவனது ஒளியைப் பெற்று சில காலம் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.

36 “ஆனால் நான் யோவானைவிடப் பெரியவர் என்பதற்கு என்னிடம் சாட்சி உள்ளது. நான் செய்கிற செயல்களே எனக்கு உரிய சாட்சிகளாகும். இவைகளே என் பிதா, நான் செய்யும்படியாகக் கொடுத்தவை என்பதைக் காட்டுகின்றன. 37 என்னை அனுப்பிய என் பிதா, என்னைப் பற்றி அவரே சாட்சி தருகிறார். ஆனால் நீங்கள் அவர் சத்தத்தை ஒருபொழுதும் கேட்டதில்லை. அவர் எப்படி இருப்பார் என்று நீங்கள் பார்த்ததும் இல்லை. 38 பிதாவின் அறிவுரை உங்களில் வாழ்வதுமில்லை. ஏனென்றால் பிதா அனுப்பிய ஒருவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 39 நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன. 40 ஆனால் அந்த நித்திய ஜீவனைப் பெற விரும்பும் நீங்கள், என்னிடம் வர மறுக்கின்றீர்கள்.

41 “நான் மனிதர்களிடமிருந்து பாராட்டைப் பெற விரும்பவில்லை. 42 ஆனால் நான் உங்களை அறிவேன். தேவனுடைய அன்பு உங்களில் இல்லை என்பதையும் அறிவேன். 43 நான் என் பிதாவிடமிருந்து வந்திருக்கிறேன். நான் அவருக்காகப் பேசுகிறேன். ஆனால் என்னை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். வேறொருவன் வந்து அவன் தனக்காகவே பேசினால் அவனை ஏற்றுக்கொள்கிறீர்கள். 44 நீங்கள் உங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டுவதில் விருப்பம்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய பாராட்டைப் பெற முயற்சி செய்வதில்லை. ஆகையால் நீங்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? 45 நான் பிதாவின் முன்னால் நின்று உங்களைக் குற்றம் சொல்வேன் என்று நினைக்கவேண்டாம். மோசேதான் உங்கள் குறைகளைச் சொல்கிறவன். மோசே மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். 46 நீங்கள் உண்மையிலேயே மோசேயை நம்பினீர்களானால் என்னிலும் நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஏனென்றால் மோசே என்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான். 47 ஆனால் நீங்கள் மோசே எழுதினவைகளை நம்பமாட்டீர்கள். ஆகையால் நான் சொல்வதையும் உங்களால் நம்பமுடியாது” என்று கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center