Bible in 90 Days
எழுபத்திரண்டு பேரை அனுப்புதல்
10 இதன் பின்பு இயேசு கூடுதலாக எழுபத்திரண்டு [a] மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார். இரண்டு இரண்டு பேராக இயேசு அவர்களை அனுப்பினார். தான் போக விரும்பிய ஒவ்வொரு நகருக்கும், இடத்துக்கும் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினார். 2 இயேசு அவர்களுக்கு, “அறுவடைக்கு மிக அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள். அறுவடை செய்வதற்கு உதவியாக மிகக் குறைவான வேலையாட்களே உள்ளனர். தேவன் அறுவடைக்கு (மக்களுக்கு) எஜமானர். அறுவடை செய்வதற்கு ஏற்ற அதிகமான வேலைக்காரர்களை அனுப்பும்படியாக தேவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
3 “நீங்கள் இப்போது போகலாம். ஆனால் கேளுங்கள். நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கு நடுவில் சிக்கிய ஆடுகளைப்போல் காணப்படுவீர்கள். 4 பணப் பையையோ, பையையோ, காலணிகளையோ எடுத்துச்செல்லாதீர்கள். வழியிலே மக்களோடு பேசுவதற்காக நிற்காதீர்கள். 5 ஒரு வீட்டினுள் நுழையும் முன்பே, ‘இவ்வீட்டில் அமைதி நிலவட்டும்’ என்று வாழ்த்துங்கள். 6 அமைதிக்குத் தகுதியுள்ள மனிதன் அங்கு வாழ்ந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி அவனோடு தங்கட்டும். அமைதிக்குத் தகுதியற்ற மனிதன் அங்கிருந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி உங்களுக்கே திரும்பட்டும். 7 அமைதியான வீட்டில் தங்குங்கள். அவ்வீட்டிலுள்ள மக்கள் தரும் உணவை உண்டு, பானத்தைப் பருகுங்கள். ஒரு வேலைக்காரனுக்குச் சம்பளம் தரப்படவேண்டும். இன்னொரு வீட்டில் தங்கும்பொருட்டு அந்த வீட்டைவிட்டுச் செல்லாதீர்கள்.
8 “ஒரு நகரத்தில் நுழையும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்றால் அவர்கள் உங்கள் முன் வைக்கும் உணவை சாப்பிடுங்கள். 9 அங்கு வாழும் நோயுற்ற மக்களைக் குணப்படுத்துங்கள். பின்னர், ‘தேவனின் இராஜ்யம் உங்களிடம் வந்துகொண்டிருக்கிறது’ எனக் கூறுங்கள்.
10 “ஒரு நகரத்துக்குப் போகும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், அந்நகரத்தில் உள்ள தெருக்களுக்குச் சென்று, 11 ‘எங்கள் கால்களில் பட்டிருக்கும் உங்கள் நகரத்தின் தூசியைக் கூட உங்களுக்கு எதிராகத் தட்டி விடுகிறோம். ஆனால் தேவனின் இராஜ்யம் சீக்கிரமாக வந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுங்கள். 12 நியாயம் தீர்க்கிற நாளில் அந்நகரத்து மக்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு, சோதோம் நாட்டு மக்களுக்குக் கிடைத்ததைவிடக் கொடுமையானதாக இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
விசுவாசமற்றோருக்கு எச்சரிப்பு(A)
13 “கோராசீனே! உனக்குக் கேடு வரும். பெத்சாயிதாவே! உனக்குக் கேடு உண்டாகும். உங்களுக்கு அநேக அற்புகங்களைச் செய்தேன். தீருவிலும், சீதோனிலும் அதே அற்புதங்களைச் செய்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே அப்பட்டணங்களின் மக்கள் தங்கள் வாழ்வை மாற்றி, பாவம் செய்வதை விட்டு விட்டிருப்பார்கள். துயரத்தின் ஆடையை உடுத்திக்கொண்டு, சாம்பலைத் தங்கள் மேல் தூவிக்கொண்டு, தங்கள் பாவங்களுக்காக வருந்துவதைக் காண்பித்து இருப்பார்கள். 14 நியாயம் தீர்க்கிற நாளில் தீரு, சீதோன் ஆகிய இடங்களைக் காட்டிலும் உங்கள் நிலை மோசமாக இருக்கும். 15 கப்பர்நகூம் நகரமே, நீ பரலோகத்திற்கு நேராக எழுப்பப்படுவாயா? இல்லை, மரணத்துக்குரிய இடத்திற்கு நேராக நீ வீசி எறியப்படுவாயாக.
16 “ஒருவன் நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது அவன் உண்மையாகவே எனக்குச் செவிசாய்க்கிறான். ஆனால் ஒருவன் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவன் என்னை அனுப்பியவராகிய தேவனை ஏற்க மறுக்கிறான்” என்றார்.
சாத்தான் விழுதல்
17 எழுபத்திரண்டு மனிதர்களும் தங்கள் பயணத்தை முடித்துத் திரும்பியபோது மிக்க மகிழ்வோடு காணப்பட்டார்கள். அவர்கள், “ஆண்டவரே, உங்கள் பெயரைக் கூறியபோது பிசாசுகள்கூட எங்களுக்குக் கீழ்ப்படிந்தன” என்றார்கள்.
18 அம்மனிதர்களை நோக்கி இயேசு, “வானிலிருந்து மின்னலைப்போன்று சாத்தான் வீழ்வதை நான் கண்டேன். 19 கேளுங்கள். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கிற வல்லமையை நான் உங்களுக்குக் கொடுத்தேன். பகைவனின் (பிசாசின்) வல்லமையைக் காட்டிலும் மிகுந்த வல்லமை உங்களுக்குக் கொடுத்தேன். உங்களை எதுவும் காயப்படுத்துவதில்லை. 20 ஆம், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகின்றன. மகிழ்ச்சியாக இருங்கள். ஏன், உங்களுக்கு இந்த வல்லமை இருப்பதால் அல்ல, உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதால் சந்தோஷப்படுங்கள்” என்று கூறினார்.
இயேசுவின் பிரார்த்தனை(B)
21 அப்போது பரிசுத்த ஆவியானவர் இயேசுவை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். இயேசு: “பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! உங்களுக்கு நன்றி. ஞானிகளிடமிருந்தும், அறிவுமிக்கவர்களிடமிருந்தும் இக்காரியங்களை நீங்கள் மறைத்ததால் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால் சிறு குழந்தைகளைப்போன்ற மக்களுக்கு இச்செயல்களை நீர் காட்டியுள்ளீர். ஆம், பிதாவே, நீர் உண்மையாகவே இதைச் செய்ய விரும்பியதால் இதனைச் செய்துள்ளீர்கள்.
22 “எனக்கு எல்லாவற்றையும் என் பிதா தந்துள்ளார். மகன் யார் என்பது பிதாவைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. பிதா யார் என்பதை மகன் மட்டுமே அறிவார். மகன் அதனைத் தெரிவிக்கும்பொருட்டு தேர்ந்தெடுக்கும் மக்கள் மட்டுமே தந்தையைப்பற்றி அறிந்துகொள்வார்கள்” என்றார்.
23 பின் இயேசு சீஷர்களை நோக்கித் திரும்பினார். அவர்கள் அவரோடு தனித்திருந்தார்கள். இயேசு, “நீங்கள் இப்போது பார்க்கிற செயல்களைக் காணும்படியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். 24 நீங்கள் இப்போது பார்க்கிற காரியங்களைக் காணவேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், மன்னர்களும் விரும்பினார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் அவர்கள் இக்காரியங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் இப்போது கேட்கிற செய்திகளைக் கேட்க வேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், அரசர்களும் விரும்பினார்கள். ஆனால் அவர்கள் இச்செய்திகளைக் கேட்கவில்லை” என்றார்.
நல்ல சமாரியன்
25 நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்து நின்றான். அவன் இயேசுவைச் சோதிக்க முயன்று கொண்டிருந்தான். அவன், “போதகரே, நித்தியமான வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
26 அவனை நோக்கி இயேசு, “சட்டத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? அங்கு எதை நீ வாசிக்கிறாய்?” என்றார்.
27 அம்மனிதன், “‘உனது தேவனாகிய கர்த்தரை நேசிப்பாயாக. உன் முழு நெஞ்சத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு வல்லமையோடும் உன் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்’” [b] என்றும், மேலும், “‘நீ உன்னை நேசிப்பது போலவே பிறரிடமும், அன்பு காட்ட வேண்டும்’j என்றும் எழுதப்பட்டுள்ளது” எனப் பதிலுரைத்தான்.
28 இயேசு அவனை நோக்கி, “உன் பதில் சரியானது. இதைச் செய்தால் நித்திய வாழ்வைப் பெறுவாய்” என்றார்.
29 அம்மனிதன் தான் வாழ்ந்து வரும் முறையே சரியானது என நிரூபிக்க விரும்பினான். எனவே அவன் இயேசுவிடம், “நான் நேசிக்க வேண்டிய பிற மக்கள் யார்?” என்று கேட்டான்.
30 அக்கேள்விக்குப் பதிலாக இயேசு: “ஒரு மனிதன் எருசலேமில் இருந்து எரிகோவிற்குப் பாதை வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தான். சில திருடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் அவனது ஆடையைக் கிழித்து அவனை அடித்தார்கள். அம்மனிதனைத் தரையில் வீழ்த்திவிட்டு அத்திருடர்கள் அங்கிருந்து சென்றார்கள். அவன் இறக்கும் தருவாயில் கிடந்தான்.
31 “ஒரு யூத ஆசாரியன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் அம்மனிதனைக் கண்டபோதும் அவனுக்கு உதவும்பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான். 32 அடுத்ததாக, ஒரு லேவியன் அவ்வழியாக வந்தான். லேவியன் காயமுற்ற மனிதனைக் கண்டான். அவன் பக்கமாய் கடந்து சென்றான். ஆனால் அவனும் அவனுக்கு உதவும் பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான்.
33 “பின்னர் ஒரு சமாரியன் அவ்வழியாகப் பயணம் செய்தான். காயப்பட்ட மனிதன் கிடந்த இடத்துக்கு வந்தான். சமாரியன் அம்மனிதனைப் பார்த்தான். காயமுற்ற மனிதனுக்காகக் கருணைகொண்டான். 34 சமாரியன் அவனிடம் சென்று ஒலிவ எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் காயங்களில் ஊற்றினான். அம்மனிதனின் காயங்களைத் துணியால் சுற்றினான். சமாரியனிடம் ஒரு கழுதை இருந்தது. அவன் காயமுற்ற மனிதனை அக்கழுதையின் மேல் ஏற்றி, ஒரு விடுதிக்கு அழைத்து வந்தான். அங்கு சமாரியன் அம்மனிதனைக் கவனித்தான். 35 மறுநாள் இரண்டு வெள்ளிப் பணத்தை எடுத்து விடுதியில் வேலைசெய்த மனிதனிடம் கொடுத்தான். சமாரியன் அவனிடம், ‘காயமுற்ற இம்மனிதனைக் கவனித்துக்கொள். அதிகப் பணம் செலவானால் நான் திரும்ப வரும்போது அதனை உனக்குக் கொடுப்பேன்’” என்றான்.
36 பின்பு இயேசு, “இந்த மூன்று பேரிலும் கள்வரால் காயமுற்ற மனிதனுக்கு அன்பு காட்டியவன் யார் என்று நீ எண்ணுகிறாய்?” என்றார்.
37 நியாயசாஸ்திரி, “அவனுக்கு உதவியவன்தான்” என்று பதில் சொன்னான்.
இயேசு அவனிடம், “நீயும் சென்று பிறருக்கு அவ்வாறே செய்” என்றார்.
மரியாளும் மார்த்தாளும்
38 இயேசுவும், அவரது சீஷர்களும் பயணம் செய்கையில் இயேசு ஓர் ஊருக்குள் நுழைந்தார். மார்த்தாள் என்ற பெயருள்ள பெண் இயேசுவைத் தனது வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தாள். 39 மார்த்தாளின் சகோதரியின் பெயர் மரியாள். மரியாள் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவரது போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது சகோதரி மார்த்தாள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். 40 மிகுதியான வேலைகளைத் தானே செய்துகொண்டிருந்ததால் மார்த்தாள் எரிச்சலடைந்தாள். அவள் உள்ளே சென்று, “ஆண்டவரே வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நானே தனிமையாகச் செய்வதற்கு என் சகோதரி என்னை விட்டு வைத்திருப்பதை நீர் கவனிக்கவில்லையா? எனக்கு உதவும்படியாக அவளுக்குக் கூறுங்கள்” என்றாள்.
41 ஆனால் கர்த்தர் அவளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், “மார்த்தாளே மார்த்தாளே நீ பல வகையான காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டு, மனதைக் குழப்பிக்கொள்கிறாய். 42 ஒரே ஒரு காரியம் முக்கியமானது. மரியாள் மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து ஒருபோதும் எடுக்கப்படமாட்டாது” என்றார்.
பிரார்த்தனைபற்றிய போதனை(C)
11 ஒருமுறை இயேசு ஓரிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். இயேசு பிரார்த்தனையை முடித்தபோது இயேசுவின் சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி, “யோவான் தன் சீஷர்களுக்குப் பிரார்த்தனை செய்வது எவ்வாறு என்று கற்பித்தான். ஆண்டவரே எங்களுக்கும் பிரார்த்தனை செய்ய நீர் கற்றுக்கொடும்” என்றான்.
2 இயேசு சீஷரை நோக்கி, “பிரார்த்தனை செய்யும்போது, இவ்விதமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்:
“‘பிதாவே, உமது பெயர் என்றென்றும் பரிசுத்தமாயிருக்க பிரார்த்திக்கிறோம். உமது இராஜ்யம் ஏற்படவும்,
பரலோகத்தைப் போலவே பூமியிலும் நீர் விரும்பியவை நடைபெறவும் பிரார்த்திக்கிறோம்.
3 ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
4 மற்றவர் செய்கிற குற்றங்களை நாங்கள் மன்னிக்கிறது போலவே,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உள்ளாக்காமல்,
பிசாசிடமிருந்து காப்பாற்றும்’” என்றார்.
தொடர்ந்து கேட்டல்(D)
5-6 பின்பு இயேசு அவர்களை நோக்கி, “உங்களில் ஒருவன் உங்கள் நண்பனின் வீட்டுக்கு இரவில் வெகு நேரம் கழித்துச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவனை நோக்கி, ‘இந்த ஊருக்குள் என் நண்பன் ஒருவன் என்னைச் சந்திக்க வந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு உண்பதற்காகக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. தயவுசெய்து மூன்று அப்பங்களைக் கொடுங்கள்’ என்கிறீர்கள். 7 வீட்டின் உள்ளிருக்கும் உங்கள் நண்பன் பதிலாக, ‘போய்விடுங்கள்! என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள். கதவு ஏற்கெனவே மூடப்பட்டிருக்கிறது. என் குழந்தைகளும், நானும் படுக்கையில் படுத்திருக்கிறோம். நான் எழுந்து உங்களுக்கு இப்போது அப்பத்தைக் கொடுக்கமுடியாது’ என்கிறான். 8 உங்கள் நட்பு ஒருவேளை அவன் எழுந்து அப்பத்தை எடுத்துக்கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் கண்டிப்பாக எடுத்து உங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பான், என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9 எனவே, நான் உங்களுக்குச் சொல்வதாவது, தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டடைவீர்கள். தொடர்ந்து தட்டிக்கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும். 10 ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக்கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும். 11 உங்களில் யாருக்காவது மகன் இருக்கிறானா? உங்கள் மகன் உங்களிடம் மீனைக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எந்தத் தந்தையாவது தன் மகனுக்கு பாம்பைக் கொடுப்பானா? இல்லை. அவனுக்கு மீனைக் கொடுப்பீர்கள். 12 உங்கள் மகன் முட்டையைக் கேட்டால் அவனுக்குத் தேளைக் கொடுப்பீர்களா? இல்லை. 13 நீங்கள் பொல்லாதவர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றைக் கொடுக்கவேண்டுமென்பதை அறிவீர்கள். எனவே தன்னிடம் கேட்கின்ற மக்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்க வேண்டுமென்பதை பரலோகப் பிதா நிச்சயமாக அறிவார்” என்றார்.
இயேசுவின் வல்லமை(E)
14 ஊமையான ஒரு மனிதனிடமிருந்து ஒரு பிசாசை ஒருமுறை இயேசு துரத்திக்கொண்டிருந்தார். பிசாசு வெளிவந்தபோது, அந்த மனிதனால் பேசமுடிந்தது. மக்கள் வியப்படைந்தனர். 15 ஆனால் சிலர் “பெயல்செபூலின் (பிசாசின்) ஆற்றலை இயேசு பயன்படுத்தி, பிசாசுகளைத் துரத்திவிடுகிறார். அசுத்த ஆவிகளுக்குத் தலைவன் பெயல்செபூல்” என்றனர்.
16 பிறரும் இயேசுவைச் சோதிக்க விரும்பினர். வானத்திருலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்படியாக இயேசுவைக் கேட்டனர். 17 அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த நினைவுகளை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு மக்களை நோக்கி, “தனக்குள் ஒன்றுக்கொன்று எதிர்த்துக்கொண்டிருக்கிற எந்த இராஜ்யமும் உடைந்து சிதறும். தனக்குள் சண்டை இடுகிற எந்தக் குடும்பமும் பிரிந்து போகும். 18 எனவே சாத்தான் தனக்குள் சண்டையிட்டால், அவனது இராஜ்யம் எப்படி நிலைபெறும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்கு நான் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். 19 நான் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்குப் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்தினால், உங்களைச் சார்ந்தவர்கள் அசுத்த ஆவிகளை வெளியேற்ற எந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்களைச் சார்ந்தவர்களே நீங்கள் கூறுவது தவறு என்பதை நிரூபிக்கிறார்கள். 20 அசுத்த ஆவிகளைத் துரத்த நான் தேவனுடைய வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
21 “பல ஆயுதங்கள் ஏந்திய ஒரு வலிய மனிதன் தன் சொந்த வீட்டைக் காவல் காக்கும்போது அவன் வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும். 22 அவனைக் காட்டிலும் வலிய மனிதன் ஒருவன் வந்து அவனைத் தோற்கடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தனது வீட்டைக் காக்கும் பொருட்டு முதல் மனிதன் வைத்திருந்த ஆயுதங்களை வலிய மனிதன் எடுத்துக்கொள்வான். முதல் மனிதனின் பொருட்களைக்கொண்டே வலிய மனிதன் தான் செய்ய நினைப்பதைச் செய்வான்.
23 “ஒருவன் என்னோடு இருக்கவில்லை என்றால், அவன் எனக்கு எதிரானவன். என்னோடு வேலை செய்யாதவன் எனக்கு எதிராகச் செயல் புரிகின்றான்.
வெறுமையான மனிதன்(F)
24 “பிசாசுக்குரிய அசுத்த ஆவியானது ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அந்த ஆவியானது வனாந்தரத்திற்குச் சென்று ஓய்வெடுக்க ஓர் இடம் தேடும். ஆனால் அதற்கு எந்த இடமும் அகப்படுவதில்லை. எனவே ஆவியானது, ‘நான் விட்டு வந்த மனிதனிடம் திரும்பிச் செல்வேன்’ என்று கூறும். 25 ஆவியானது மீண்டும் அவனிடம் வரும்போது, தனது வீடு சுத்தமானதாகவும் அழகானதாகவும் இருப்பதைக் காணும். 26 அப்போது அந்த அசுத்த ஆவியானது வெளியேபோய் தன்னைக் காட்டிலும் அசுத்த குணம்கொண்ட மேலும் ஏழு ஆவிகளைக் கூடவே அழைத்து வரும். பின்பு எல்லா அசுத்த ஆவிகளும் அவனுள்ளே சென்று வசிக்கும். முன்னே இருந்ததைக் காட்டிலும் அம்மனிதனுக்கு மிகுந்த தொல்லை உண்டாகும்” என்றார்.
மகிழ்ச்சியுள்ள மனிதர்கள்
27 இயேசு இக்காரியங்களைக் கூறியபோது, மக்களிடையே இருந்த ஒரு பெண் பேச ஆரம்பித்தாள். அவள் இயேசுவை நோக்கி, “உங்களைப் பெற்றெடுத்து தன் மார்பில் பால் ஊட்டிய உங்கள் தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள்.
28 ஆனால் இயேசு, “தேவனுடைய போதனைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிற மக்களே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள்” என்றார்.
நிரூபித்துக் காட்டுங்கள்(G)
29 மக்களின் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. இயேசு சொல்லத் தொடங்கினார், “இன்று வாழும் மக்கள் தீயவர்கள். அவர்கள் தேவனிடமிருந்து அடையாளமாக அற்புதங்களைச் செய்யும்படி கேட்கிறார்கள். யோனாவுக்கு [c] நடந்த அதிசயமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரே அடையாளமாகும். 30 நினிவேயில் வாழ்ந்த மக்களுக்கு யோனா ஓர் அடையாளமாக இருந்தான். மனித குமாரனுக்கும் அதுவே பொருந்தும். இக்காலத்தில் வாழும் மக்களுக்கு மனித குமாரனே ஓர் அடையாளமானவர்.
31 “நியாயம் தீர்க்கின்ற நாளில் இன்று வாழும் மக்களோடு தெற்கு தேசங்களின் அரசி எழுந்து நின்று, அவர்கள் செய்வது தவறு எனச் சுட்டிக்காட்டுவாள். ஏனெனில் அந்த அரசி சாலமோனின் ஞானமான போதனைகளைக் கேட்பதற்காகத் தொலை தூரத்தில் இருந்து வந்தவள். ஆனால், நான் சாலமோனைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
32 “நியாயம் தீர்க்கிற நாளில் இன்று வாழும் மக்களோடு நினிவேயின் மக்கள் எழுந்து நின்று, நீங்கள் தவறுடையவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவார்கள். ஏனெனில் அம்மக்களுக்கு யோனா போதித்தபோது, அவர்கள் தம் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொண்டார்கள். ஆனால் நான் யோனாவைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
உலகின் ஒளி நீங்கள்(H)
33 “யாரும் பாத்திரத்தை விளக்கின் மேல் கவிழ்த்து வைப்பதோ, விளக்கை மறைத்து வைப்பதோ இல்லை. அதற்குப் பதிலாக விளக்கை விளக்குத் தண்டின்மீது வைத்து உள்ளே வருபவர் பார்க்கும்படியாக ஏற்றி வைப்பார்கள். 34 உங்கள் சரீரத்திற்கு உங்கள் கண்ணே விளக்காக இருக்கிறது. உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரமும் ஒளி உடையதாக இருக்கும். உங்கள் கண்கள் கெட்டவையாக இருந்தால், உங்கள் சரீரமும் இருள் நிரம்பிக் காணப்படும். 35 எனவே கவனமாக இருங்கள். உங்களில் இருக்கும் ஒளி இருளாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 36 உங்கள் முழு சரீரமும் ஒளி வீசி எந்தப் பகுதியும் இருளாகாதபடி இருந்தால் நீங்கள் மின்னலைப்போல் ஒளி வீசுவீர்கள்” என்றார்.
பரிசேயரை இயேசு விமர்சித்தல்(I)
37 இயேசு இவற்றையெல்லாம் கூறி முடித்த பின்பு, பரிசேயர்களில் ஒருவன் அவனோடு சாப்பிடுமாறு இயேசுவை அழைத்தான். எனவே இயேசு வந்து மேசையருகே அமர்ந்தார். 38 இயேசு உணவு உண்பதற்கு முன்னே கைகளைக் கழுவாது வந்து அமர்ந்ததைக் கண்ட பரிசேயன் வியப்படைந்தான். 39 இயேசு அவனை நோக்கி, “பரிசேயர்களாகிய நீங்கள் பாத்திரத்தையும், குவளையையும் வெளிப்புறத்தில் சுத்தமாகக் கழுவுகின்றீர்கள். ஆனால் உட்புறத்தில் பிறரை ஏமாற்றித் தீமை செய்யும் காரியங்களால் நிரம்பி இருக்கின்றீர்கள். 40 நீங்கள் மூடர்கள். வெளிப்புறத்தை உண்டாக்கியவரே (தேவனே) உள்புறத்தையும் உண்டாக்கி உள்ளார். 41 உங்கள் பாத்திரங்களிலும் குவளைகளிலும் இருப்பவற்றை தேவைப்படுகின்ற மக்களுக்குக் கொடுங்கள். அப்போது நீங்கள் முற்றிலும் சுத்தமானவர்களாக இருப்பீர்கள்.
42 “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். உங்களுக்குச் சொந்தமானவற்றில், உங்கள் தோட்டத்தின் சகல விளை பொருட்களில் புதினா, மரிக்கொழுந்து முதலானவற்றில்கூட பத்தில் ஒரு பாகத்தை தேவனுக்குக் கொடுக்கின்றீர்கள். ஆனால் பிறரிடம் நியாயமாக நடந்துகொள்வதையும் தேவனை நேசிப்பதையும் மறந்துவிடுகின்றீர்கள். இவற்றை நீங்கள் கண்டிப்பாகச் செய்தல் வேண்டும். கூடவே, பத்தில் ஒரு பாகம் கொடுப்பது போன்ற காரியங்களையும் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.
43 “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இடத்தில் வீற்றிருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள். சந்தை இடங்களில் மக்கள் உங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென விரும்புகிறீர்கள். 44 நீங்கள் மறைக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருந்தால் அது உங்களுக்கு மோசமானதாக இருக்கும். அதை அறியாமல் மக்கள் அவற்றின் மீது நடந்து செல்வார்கள்” என்றார்.
யூத போதகர்களுக்குப் போதனை
45 வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே, பரிசேயரைக் குறித்து இக்காரியங்களை நீங்கள் சொல்லும்போது, எங்களையும் விமர்சிக்கிறீரே” என்றான்.
46 அவனுக்குப் பதிலாக இயேசு, “வேதபாரகரே, உங்கள் நிலைமை மோசமானதாக இருக்கும். மக்கள் கீழ்ப்படிய இயலாத வகையில் கடுமையான விதிகளை விதிக்கிறீர்கள். மற்ற மக்கள் அவ்விதிகளுக்குக் கட்டுப்படுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றீர்கள். ஆனால் நீங்களோ அவ்விதிகளைப் பின்பற்றுவதற்கு முயன்றுகூடப் பார்ப்பதில்லை. 47 தீர்க்கதரிசிகளுக்கு நினைவுச்சின்னங்களைக் கட்டுவதால் உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். அதே தீர்க்கதரிசிகளை உங்கள் முன்னோர்கள் கொன்றார்களே. 48 உங்கள் முன்னோர் செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக எல்லா மக்களிடமும் காட்டிக் கொள்கிறீர்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள், அவர்களுக்கு நீங்கள் நினைவுச் சின்னங்களை எழுப்புகின்றீர்கள்! 49 எனவே தேவனின் ஞானமானது, ‘நான் தீர்க்கதரிசிகளையும், சீஷர்களையும், அவர்களிடம் அனுப்புவேன். தீய மனிதரால் தீர்க்கதரிசிகளிலும் சீஷர்களிலும் சிலர் கொல்லப்படுவார்கள். வேறு சிலர் துன்புறுத்தப்படுவார்கள்’” என்று உரைத்தார்.
50 “உலகம் தோன்றிய காலம் தொடங்கி கொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளின் மரணத்திற்காகவும், இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். 51 ஆபேலின் மரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். சகரியாவின் கொலைக்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள். பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் நடுவில் சகரியா கொல்லப்பட்டான். அவர்கள் எல்லாருக்காகவும் இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
52 “வேதபாரகரே, உங்களுக்குத் தீமை வரும். தேவனைப்பற்றி அறிவதற்குரிய திறவுகோலை ஒளித்து வைத்திருக்கிறீர்கள். நீங்களும் அறிந்துகொள்வதில்லை. பிறர் அறிந்துகொள்வதையும் தடைசெய்கிறீர்கள்” என்றார்.
53 இயேசு அங்கிருந்து கிளம்பும்போது, வேதபாரகர்களும் பரிசேயர்களும் அவரைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தார்கள். பலவற்றைக் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு இயேசுவை வற்புறுத்தினார்கள். 54 இயேசு தவறாக ஏதேனும் சொல்ல நேர்ந்தால் அவரைப் பிடிக்கலாம் என வழிகாண முயன்றுகொண்டிருந்தார்கள்.
பரிசேயரைப் போல இராதீர்
12 பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி வந்தார்கள். ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்குத் திரளான மக்கள் குழுமினர். மக்களிடம் பேசும் முன்பு இயேசு தம் சீஷர்களை நோக்கி, “பரிசேயரின் புளிப்பைக் (தீய தொடர்பை) குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் வேஷதாரிகள். 2 மறைக்கப்பட்ட அனைத்தும் வெளிப்படும். இரகசியங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். 3 இருளில் கூறுகின்ற செயல்கள் ஒளியில் தெரிவிக்கப்படும். இரகசியமாக அறையில் முணுமுணுக்கிற செய்திகள் வீட்டின் மேலிருந்து உரக்கத் தெரிவிக்கப்படும்” என்றார்.
தேவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள்(J)
4 பின்பு இயேசு மக்களை நோக்கி, “எனது நண்பர்களே! மக்களுக்கு அஞ்சாதீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். மக்கள் உங்கள் சரீரத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் உங்களுக்கு அவர்கள் வேறெதையும் செய்ய முடியாது. 5 நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைக் கொல்வதற்கும் நரகத்தில் தள்ளுவதற்கும் ஆற்றல் வாய்ந்தவருக்கு (தேவனுக்கு) நீங்கள் பயப்படவேண்டும். ஆம், நீங்கள் பயப்படவேண்டியவர், அவர் மட்டுமே.
6 “பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை. 7 இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது.
இயேசுவைக் குறித்து வெட்கப்படாதீர்(K)
8 “நான் உங்களுக்குச் சொல்வதாவது, பிறர் முன்னிலையில் ஒருவன் எழுந்து நின்று என்மீது அவனுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினால், நானும் அவன் எனக்குரியவன் என்பதைக் கூறுவேன். தேவதூதர்கள் முன்பாக இதைச் சொல்வேன். 9 ஆனால் ஒருவன் மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று என்னை நம்பவில்லை என்று கூறுவானேயானால், அம்மனிதன் எனக்குரியவன் அல்லன். தேவ தூதர்களுக்கு முன்னிலையில் நான் இதைக் கூறுவேன்.
10 “மனித குமாரனுக்கு எதிராக ஒருவன் எதையேனும் கூறினால், அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவற்றை ஒருவன் பேசினால் அவன் மன்னிக்கப்படமாட்டான்.
11 “ஜெப ஆலயத்தில் தலைவர்களுக்கும், முக்கியமான மனிதர்களுக்கும் முன்பாக, உங்களைக் கொண்டு வரும்போது நீங்கள் எப்படி தற்காத்துக்கொள்வது அல்லது எதைக் கூறவேண்டும் என்று கலக்கம் அடையவேண்டாம். 12 அந்த வேளையில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கூற வேண்டியதை உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.
தன்னலம் கூடாது
13 கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் இயேசுவை நோக்கி, “போதகரே, எங்கள் தந்தை இறந்து போனார். தந்தையின் உடைமையை என்னோடு பங்கிட என் தம்பிக்குச் சொல்லுங்கள்” என்றான்.
14 ஆனால் இயேசு அவனை நோக்கி, “உங்கள் நடுவில் நியாயாதிபதியாக நான் இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ யார் கூறியது?” என்று கேட்டார். 15 பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார்.
16 பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. 17 அச்செல்வந்தன் தனக்குள், ‘நான் என்ன செய்வேன்? விளைச்சலை எல்லாம் வைப்பதற்கு இடம் இல்லையே’ என்று எண்ணினான்.
18 “பின்பு அச்செல்வந்தன், ‘நான் செய்ய வேண்டியதை அறிவேன். எனது களஞ்சியங்களை இடித்துவிட்டு பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன். அவற்றில் கோதுமையையும், நல்ல பொருட்களையும் நிரப்பி வைப்பேன். 19 அப்போது நான் எனக்குள், என்னிடம் மிகுதியான அளவில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கான பொருட்களைச் சேமித்துள்ளேன். ஓய்வுகொள், உண், குடி, வாழ்க்கையை அனுபவி என்று கூறுவேன்’ என்றான்.
20 “ஆனால் தேவன் அவனை நோக்கி, ‘மூடனே! இன்று இரவில் நீ மரிப்பாய். உனக்காக வைத்துள்ள பொருட்கள் என்ன ஆகும்? அப்போது அப்பொருட்களைப் பெறுவது யார்?’ என்றார்.
21 “தனக்காகவே மட்டும் பொருட்களைச் சேர்க்கின்ற மனிதனின் நிலை இத்தகையது. தேவனுடைய பார்வையில் அம்மனிதன் செல்வந்தன் அல்லன்” என்றார் இயேசு.
கவலை வேண்டாம்(L)
22 இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். 23 உணவைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியமானது. உடைகளைக் காட்டிலும் சரீரம் மிகவும் முக்கியமானது. 24 பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. பறவைகள் வீடுகளிலோ, களஞ்சியங்களிலோ உணவைச் சேமிப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். 25 கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது. 26 சிறிய காரியங்களை உங்களால் செய்ய முடியாவிட்டால் பெரிய காரியங்களைக் குறித்துக் கவலைப்படுவானேன்?
27 “காட்டுப் பூக்களைப் பாருங்கள். அவை வளர்வதைக் கவனியுங்கள். அவை தமக்காக உழைப்பதோ, துணிகளை நெய்வதோ கிடையாது. ஆனால் பெரிய செல்வம் மிக்க அரசனான சாலமோன் கூட அப்பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடுத்தியதில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். 28 வயலிலுள்ள புல்லுக்கும் தேவன் அத்தகைய ஆடையை அணிவிக்கிறார். இன்று அந்தப் புல் உயிர் வாழும். நாளையோ எரிப்பதற்காகத் தீயில் வீசப்படும். எனவே தேவன் இன்னும் அதிகமாக உங்களுக்கு உடுத்துவிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். நம்பிக்கையில் குறைவுபடாதீர்கள்.
29 “எதை உண்போம், எதைக் குடிப்போம், என்பதைக் குறித்து எப்போதும் எண்ணாதீர்கள். அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். 30 இவ்வுலக மக்கள் அனைவரும் அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவை உங்களுக்குத் தேவை என உங்கள் தந்தைக்குத் தெரியும். 31 நீங்கள் விரும்பும் காரியம் தேவனுடைய இராஜ்யமாக இருக்க வேண்டும். அப்போது (உங்களுக்குத் தேவையான) மற்ற எல்லாப் பொருட்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.”
பணத்தை நம்பாதீர்கள்
32 “சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார். 33 உங்களிடமிருக்கும் பொருட்களை விற்று, அப்பணத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள். இந்த உலகத்தின் செல்வங்கள் நிலைத்திருப்பதில்லை. பரலோகத்தின் பொக்கிஷத்தைப் பெறுங்கள். அந்தப் பொக்கிஷம் என்றும் நிலைத்து நிற்கும். திருடர்கள் பரலோகத்தில் உள்ள பொக்கிஷத்தைத் திருட முடியாது. பூச்சிகள் அதை அழிக்கமுடியாது. 34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.”
எப்போதும் ஆயத்தமாக இருங்கள்(M)
35 “ஆயத்தமாக இருங்கள். எல்லா ஆடைகளையும் அணிந்து தீபங்களை ஏற்றி வையுங்கள். 36 திருமண விருந்திலிருந்து எஜமானர் வீட்டுக்குத் திரும்பி வருவதை எதிர்ப்பார்த்திருக்கும் ஊழியர்களைப் போல் இருங்கள். எஜமானர் வந்து தட்டுகிறார். அதே தருணத்தில் வேலைக்காரர்கள் எஜமானருக்காகக் கதவைத் திறக்கிறார்கள். 37 எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார். 38 அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார்.
39 “இதனை நினைவில் வைத்திருங்கள்: திருடன் வரும் நேரத்தை வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், வீட்டினுள் திருடன் நுழைய அவன் அனுமதிக்கமாட்டான். 40 எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார்.
நம்பிக்கையான ஊழியன் யார்(N)
41 “ஆண்டவரே நீங்கள் இந்த உவமையை எங்களுக்காக மட்டுமா அல்லது எல்லா மக்களுக்காகவுமா கூறினீர்கள்?” என்று பேதுரு கேட்டான்.
42 அவனுக்குப் பதிலாகக் கர்த்தர், “யார் ஞானமுள்ள, நம்பிக்கைக்குரிய ஊழியன்? எஜமானர் பிற ஊழியர்களைக் கவனிக்கவும் அவர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும்பொருட்டும் ஒரு ஊழியனை நியமிப்பார். அந்த வேலையைச் செய்யும்படி எஜமானர் நம்புகின்ற ஊழியன் யார்? 43 எஜமானர் வந்து அந்த ஊழியன் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவர செய்துவருவதைப் பார்க்கும்போது, அந்த ஊழியன் மிகவும் மகிழ்ச்சியடைவான். 44 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார்.
45 “ஆனால் எஜமானர் விரைவில் திரும்பி வரமாட்டார் என்று எண்ணினால் நடப்பதென்ன? அந்த ஊழியன் மற்ற ஊழியர்களை அவர்கள் ஆண்களானாலும், பெண்களானாலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பிப்பான். அவன் உண்டு, பருகி, மிதமிஞ்சிப் போவான். 46 அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார்.
47 “எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்த்த வேலை என்ன என்பது அந்த ஊழியனுக்குத் தெரியும். ஆனால் அந்த ஊழியன் அவனது எஜமானர் விரும்பியதைச் செய்ய முயல்வதோ, அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதோ இல்லை. எனவே அந்த ஊழியன் அதிகமாகத் தண்டிக்கப்படுவான். 48 ஆனால் எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை அறிந்துகொள்ளாத ஊழியனின் நிலை என்ன? தண்டனைக்குரிய செயல்களை அவன் செய்கிறான். ஆனால் தான் செய்ய வேண்டியதை அறிந்தும் செய்யாத ஊழியனைக் காட்டிலும் அவன் குறைந்த தண்டனையைப் பெறுவான். ஒருவனுக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் அவனுடைய பொறுப்பும் அதிகரிக்கும். அதிகமாக ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவனிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கப்படும்” என்றார்.
வித்தியாசமான போதனை(O)
49 இயேசு தொடர்ந்து சொன்னார், “உலகத்தில் அக்கினியைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். அது ஏற்கெனவே எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 50 நான் இன்னொரு ஞானஸ்நானத்தைப் பெறவேண்டும். அது முடியும்வரைக்கும் நான் தொல்லைக்குள்ளானதாக உணர்கிறேன். 51 நான் உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்தேன் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. நான் உலகில் பிரிவை ஏற்படுத்த வந்தேன். 52 இப்போதிலிருந்து, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள்.
53 “தந்தையும் மகனும் பிரிந்திருப்பார்கள்.
மகன் தந்தையை எதிர்த்து நிற்பான்.
தந்தை மகனை எதிர்த்து நிற்பான்.
தாயும் மகளும் பிரிந்திருப்பார்கள்.
மகள் தாயை எதிர்த்து நிற்பாள்.
தாய் மகளை எதிர்த்து நிற்பாள்.
மாமியாரும் மருமகளும் பிரிந்திருப்பார்கள்.
மருமகள் மாமியாரை எதிர்த்து நிற்பாள்.
மாமியார் மருமகளை எதிர்த்து நிற்பாள்.”
காலத்தை அறியுங்கள்(P)
54 பின்பு இயேசு மக்களை நோக்கி, “மேற்கில் மேகங்கள் பெருகுகையில் நீங்கள் ‘மழைக்குரிய புயல் வந்து கொண்டிருக்கிறது’ என்று உடனே சொல்கிறீர்கள். உடனே மழை பொழிய ஆரம்பிக்கிறது. 55 தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே. 56 வேஷதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின் மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்றார்.
பிரச்சனையைத் தீருங்கள்(Q)
57 “சரியான ஒன்றைக் குறித்து ஏன் உங்களால் முடிவெடுக்க முடியவில்லை? 58 ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடுக்கும்போது அதைத் தீர்க்கும்பொருட்டு அவனோடு நீதிமன்றத்துக்குப் போகும்போது, வழியிலேயே அதைத் தீர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்யுங்கள். அந்த வழக்கைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் அவன் நியாயாதிபதியிடம் உங்களை அழைத்துச் செல்லக் கூடும். நியாதிபதி உங்களை ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்க, அவன் உங்களைச் சிறையில் தள்ளக் கூடும். 59 அவர்கள் உங்களிடமிருக்கும் கடைசிக் காசுவரை அனைத்தையும் எடுக்கிறவரைக்கும் நீங்கள் அங்கிருந்து வெளியே வரப்போவதில்லை” என்றார்.
மனம் மாறுங்கள்
13 அப்போது இயேசுவோடு கூட மக்கள் சிலர் இருந்தனர். கலிலேயாவிலுள்ள மக்கள் சிலருக்கு நடந்ததை அவர்கள் இயேசுவுக்குக் கூறினர். அம்மக்கள் தேவனை வழிபட்டுக்கொண்டிருக்கையில் அவர்களைப் பிலாத்து கொன்றான். அவர்கள் தேவனுக்குப் பலியிட்டுக்கொண்டிருந்த மிருகங்களின் இரத்தத்தோடு அவர்களின் இரத்தத்தையும் கலந்தான். 2 இயேசு, “அந்த மக்களுக்கு இவ்வாறு நேரிட்டதால் கலிலேயாவில் உள்ள மற்ற அனைவரைக் காட்டிலும் அவர்கள் பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 3 இல்லை, அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ஆனால் நீங்கள் அனைவரும் உங்கள் இதயங்களையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த மக்களைப்போல நீங்களும் அழிக்கப்படுவீர்கள். 4 சீலோவாமிலே கோபுரம் விழுந்தபோது கொல்லப்பட்ட பதினெட்டுப் பேரின் நிலை என்ன? எருசலேமில் வசிக்கின்ற எல்லாரைக் காட்டிலும் அவர்கள் மிகுந்த பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 5 அவர்கள் அப்படியல்ல. ஆனால் நீங்கள் உங்கள் இதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளவில்லையெனில், நீங்களும் கூட அழிக்கப்படுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் கூறினார்.
பயனற்ற மரம்
6 இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதனுக்கு ஓர் அத்தி மரம் இருந்தது. தனது தோட்டத்தில் அம்மரத்தை நட்டுவைத்திருந்தான். மரத்தில் சில பழங்கள் இருக்கிறதா என அம்மனிதன் பார்த்து வந்தான். அவன் கண்ணில் பழம் எதுவும் படவில்லை. 7 தோட்டத்தைக் கண்காணித்து வந்த வேலைக்காரன் ஒருவன் அம்மனிதனுக்கு இருந்தான். அம்மனிதன் வேலைக்காரனை நோக்கி, ‘மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் பழங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்றும் என் கண்ணில் படவில்லை. அதை வெட்டி வீழ்த்திவிடு. எதற்கு அது நிலத்தைப் பாழ்படுத்த வேண்டும்?’ என்றான். 8 அதற்கு வேலைக்காரன், ‘எஜமானரே, இன்னும் ஓராண்டுக்குள் அந்த மரம் கனி கொடுக்கிறதா என்று பார்ப்போம். அதைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி கொஞ்சம் உரத்தைப் போடுவேன். 9 அடுத்த ஆண்டு அந்த மரம் கனி கொடுக்கக் கூடும். அம்மரம் அப்படியும் கனிதராவிட்டால் நீங்கள் அதை வெட்டிப் போடலாம்’ என்று பதில் கூறினான்.”
ஓய்வு நாளில் குணமாக்குதல்
10 ஓய்வு நாளில் ஓர் ஆலயத்தில் இயேசு போதித்துக் கொண்டிருந்தார். 11 பிசாசினாலாகிய அசுத்த ஆவியைத் தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு பெண் அந்த ஜெப ஆலயத்தில் இருந்தாள். பதினெட்டு ஆண்டுகளாக அப்பெண்ணைப் பிசாசு ஊனப்படுத்திற்று. அவள் முதுகு கூனலாக இருந்தது. அவள் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. 12 இயேசு அவளைப் பார்த்து அழைத்தார். மேலும் அவளை நோக்கி, “பெண்ணே, உன் நோய் உன்னை விட்டு நீங்கிற்று” என்றார். 13 இயேசு தன் கைகளை அவள் மேல் வைத்தார். அதே தருணத்தில் அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்தது. அவள் தேவனை வாழ்த்தினாள்.
14 ஓய்வு நாளில் இயேசு அவளைக் குணமாக்கியதைக் குறித்து ஜெப ஆலயத்தின் தலைவர் கோபம் அடைந்தார். அத்தலைவர் மக்களை நோக்கி, “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் உள்ளன. அந்த நாட்களில் குணம்பெற வாருங்கள். ஓய்வு நாளில் குணமடைய வராதீர்கள்” என்றார்.
15 இயேசு பதிலாக, “நீங்கள் வேஷதாரிகளான மனிதர். ஓய்வு நாளில் கூட நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டில் கொட்டிலில் இருக்கும் எருதுவையோ அல்லது கழுதையையோ அவிழ்த்து நீர் பருகுவதற்கு அழைத்துச் செல்கிறீர்கள். 16 நான் குணமாக்கிய இப்பெண் நமது யூத சகோதரி. [d] ஆனால் சாத்தான் அவளைப் பதினெட்டு ஆண்டுகளாகப் பீடித்திருந்தான். ஓய்வு நாளில் அவளது நோயினின்று அவளை விடுவிப்பது நிச்சயமாகத் தவறல்ல” என்றார். 17 இயேசு இதைக் கூறியபோது அவரை விமர்சித்துக்கொண்டிருந்த அனைவரும் தங்களைக் குறித்து வெட்கமடைந்தார்கள். இயேசு செய்த அற்புதமான காரியங்களைக் குறித்து எல்லா மக்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
கடுகு விதையின் உவமை(R)
18 பின்பு இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எதைப் போன்றது? அதை எதனோடு ஒப்பிடுவேன்? 19 தேவனுடைய இராஜ்யம் கடுகுச் செடியின் விதையைப் போன்றது. ஒருவன் இந்த விதையை அவனது தோட்டத்தில் ஊன்றுகிறான். விதை முளைத்து மரமாகிறது. பறவைகள் அதன் கிளைகளில் கூடுகளைக் கட்டுகின்றன” என்றார்.
20 மீண்டும் இயேசு, “தேவனின் இராஜ்யத்தை எதனோடு ஒப்பிடுவேன்? 21 ஒரு பெரிய பாத்திரத்தில் அப்பத்திற்காக வைக்கப்படிருக்கும் மூன்று மடங்கு அளவுள்ள மாவோடு ஒரு பெண் கலக்கும் புளிப்பான பொருளுக்கு ஒப்பானதாக இருக்கிறது. அது மாவு முழுவதையும் புளிக்கச் செய்யும்” என்றார்.
குறுகிய வாசல்(S)
22 ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் இயேசு போதித்துக்கொண்டிருந்தார். அவர் எருசலேம் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார். 23 ஒருவன் இயேசுவிடம், “ஆண்டவரே, சிலர் மட்டுமே மீட்கப்படுவார்களா?” என்று கேட்டான்.
24 இயேசு, “பரலோகத்திற்கு நேராகத் திறக்கிற குறுகிய வாசலின் வழியாக நுழைய முயலுங்கள். பலர் அதனுள் நுழைய முயல்வார்கள். ஆனால் அவர்களால் நுழைய இயலாது. 25 ஒரு மனிதன் தன் வீட்டின் கதவை மூடிக்கொண்டால் நீங்கள் வெளியே நின்று தட்டமுடியும். ஆனால் அவன் திறக்கமாட்டான். நீங்கள், ‘ஐயா, எங்களுக்காகக் கதவைத் திறக்கவும்’ என்று கேட்க முடியும். அம்மனிதன், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது’ என்பான். 26 பிறகு நீங்கள் அவனிடம் ‘நாங்கள் உங்களோடு உண்டு, குடித்தோமே. நீங்கள் எங்களது நகரங்களில் போதித்தீர்களே’ என்று சொல்லுவீர்கள். 27 அப்போது அவன், ‘உங்களை நான் அறியேன். எங்கிருந்து வருகிறீர்கள். என்னிடமிருந்து போய்விடுங்கள். நீங்கள் பிழைகளைச் செய்கிற மனிதர்கள்’ என்பான்.
28 “நீங்கள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் தீர்க்கதரிசிகளையும் தேவனின் இராஜ்யத்தில் காண்பீர்கள். ஆனால் நீங்களோ வெளியே விடப்படுவீர்கள். பயத்தாலும் கோபத்தாலும் உரக்கச் சத்தமிடுவீர்கள். 29 கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து மக்கள் வருவார்கள். தேவனுடைய இராஜ்யத்தில் மேசையருகே அவர்கள் அமர்வார்கள். 30 வாழ்க்கையில் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்த மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்படும். இப்போது உயர்ந்த இடத்தில் இருக்கும் மக்கள் தேவனுடைய இராஜ்யத்தில் தாழ்ந்த இடத்தில் இருப்பார்கள்” என்று கூறினார்.
எருசலேமில் இயேசு மரிப்பார்(T)
31 அப்போது, சில பரிசேயர்கள், “இங்கிருந்து சென்று ஒளிந்துகொள்ளும். ஏரோது மன்னன் உம்மைக் கொல்ல விரும்புகிறான்” என்று இயேசுவிடம் வந்து சொன்னார்கள்.
32 அவர்களை நோக்கி, இயேசு, “அந்த நரியிடம் (ஏரோது) போய் ‘இன்றும், நாளையும் நான் மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளைத் துரத்தி, குணப்படுத்துதலாகிய என் வேலையை முடிக்க வேண்டும். மறுநாள், என் வேலை முடிந்துவிடும்’ 33 அதற்குப் பிறகு, எல்லாத் தீர்க்கதரிசிகளும் எருசலேமில் மரிக்க வேண்டும் என்பதால் நான் என் வழியில் செல்லவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார்.
34 “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொலை செய்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பிய அந்த மனிதர்களைக் கல்லெறிந்து கொல்கிறாய். பற்பல வேளைகளில் உன் மக்களுக்கு உதவ விரும்பினேன். ஒரு கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளின் கீழே சேர்ப்பதுபோல நான் உன் மக்களை ஒருமித்து சேர்க்க விரும்பினேன். ஆனால் நீ என்னை அனுமதிக்கவில்லை. 35 இப்போது உன் வீடு வெறுமையானதாக விடப்பட்டிருக்கும். நீங்கள், ‘தேவனின் பெயரால் வருகிறவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படடவர்’ என்று மீண்டும் சொல்கிறவரைக்கும், என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.
ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?
14 ஓய்வு நாளில் இயேசு பரிசேயர்களின் தலைவனாகிய ஒருவனின் வீட்டுக்கு அவனோடு உணவு உண்ணச் சென்றார். அங்கிருந்த ஜனங்கள் இயேசுவைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். 2 கொடிய நோய் [e] உள்ள ஒரு மனிதனை இயேசுவின் முன்னே கொண்டு வந்தார்கள். 3 இயேசு பரிசேயரிடமும், வேதபாரகரிடமும், “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா அல்லது தவறா?” என்று கேட்டார். 4 ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. எனவே இயேசு அந்த மனிதனை அழைத்து அவனைக் குணமாக்கினார். பின்னர் இயேசு அந்த மனிதனை அனுப்பிவிட்டார். 5 பரிசேயரிடமும், வேதபாரகரிடமும் இயேசு, “உங்கள் மகனோ அல்லது வேலை செய்யும் மிருகமோ ஓய்வு நாளில் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டால் விரைந்து வெளியே எடுப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார். 6 இயேசு கூறியதற்கு எதிராகப் பரிசேயர்களும் வேதபாரகர்களும் எதையும் கூற முடியவில்லை.
சுயமுக்கியத்துவம் வேண்டாம்
7 விருந்தினர்களில் சிலர் மதிப்புக்குரிய உயர்ந்த இடத்தில் அமருவதற்காக தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதை இயேசு கவனித்தார். எனவே இயேசு இவ்வுவமையைச் சொன்னார். 8 “ஒருவன் உங்களை ஒரு திருமணத்திற்காக அழைக்கும்போது, மிக முக்கியமான இருக்கையில் அமராதீர்கள். அந்த மனிதன் உங்களைக் காட்டிலும் முக்கியமான மனிதர் ஒருவரை அழைத்திருக்கக் கூடும். 9 நீங்கள் முக்கியமான இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கையில் உங்கள் இருவரையும் அழைத்த மனிதன் வந்து, ‘உங்கள் இருக்கையை இவருக்குக் கொடுங்கள்’ என்று கூறக்கூடும். எனவே கடைசி இடத்தை நோக்கி, நீங்கள் செல்லக் கூடும். உங்களுக்கு அது அவமானமாக இருக்கும்.
10 “எனவே ஒருவன் உங்களை அழைக்கும்போது முக்கியமற்ற இடத்தில் உட்காருங்கள். அப்போது உங்களை அழைத்த மனிதன் உங்களிடம் வந்து, ‘நண்பனே, இன்னும் முக்கியமான இருக்கையில் வந்து அமருங்கள்’ என்பான். அப்போது மற்ற எல்லா விருந்தினர்களும் உங்களை மதிப்பார்கள். 11 தன்னை முக்கியமாகக் கருதும் எந்த மனிதனும் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்திக்கொள்கிற மனிதன் உயர்வாக வைக்கப்படுவான்” என்றார்.
நீ பலன் பெறுவாய்
12 பின்பு இயேசு தன்னை அழைத்த பரிசேயனை நோக்கி, “நீ பகலுணவோ, இரவுணவோ அளிக்கையில், உன் நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், செல்வந்தர்களாகிய அக்கம் பக்கத்தார் ஆகியோரை மட்டும் அழைக்காதே. மற்றொரு முறை அவர்கள் உன்னைத் தம்மோடு உண்ணுவதற்காக அழைப்பார்கள். அப்பொழுது உனக்கு உன் பலன் கிடைத்துவிடும். 13 அதற்கு மாறாக, நீ விருந்தளிக்கும் போது, ஏழைகளையும், முடமானவர்களையும், நொண்டிகளையும், குருடர்களையும் அழைத்துக்கொள். 14 அந்த ஏழைகள் உனக்கு மீண்டும் எதுவும் அளிக்க முடியாததால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நல்லோர் மரணத்திலிருந்து எழுகையில் உனக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்” என்றார்.
பெரிய விருந்தின் உவமை(U)
15 இயேசுவுடன் மேசையருகே உட்கார்ந்திருந்த ஒரு மனிதன் இவற்றைக் கேட்டான். அவன் இயேசுவிடம், “தேவனின் இராஜ்யத்தில் உணவை அருந்தும் மக்கள் மிகுந்த சந்தோஷமாக இருப்பார்கள்” என்றான்.
16 இயேசு அவனை நோக்கி, “ஒரு மனிதன் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான். பலரையும் அவ்விருந்துக்கு அழைத்தான். 17 சாப்பிடும் வேளை நெருங்கியதும் அவன் வேலைக்காரனை விருந்தினர்களிடம் அனுப்பி, ‘வாருங்கள்! உணவு தயாராக இருக்கிறது’ என்று சொல்லுமாறு அனுப்பினான். 18 ஆனால் அந்த விருந்தினர்கள் எல்லாம் தம்மால் வர இயலாது எனச் சொல்லி அனுப்பினார்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு சாக்குப்போக்கு கூறினார்கள். முதலாமவன், ‘நான் ஒரு வயலை வாங்கியுள்ளேன். அதைப் பார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னிக்கவும்’ என்றான். 19 இன்னொருவன், ‘ஐந்து ஜோடி ஏர்மாடுகள் வாங்கி இருக்கிறேன். அவைகளை சோதித்துபார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னித்துகொள்’ என்றான். 20 மூன்றாமவன், ‘எனக்கு இப்பொழுதுதான் திருமணமாயிற்று. நான் வர முடியாது’ என்றான்.
21 “எனவே வேலைக்காரன் திரும்பி வந்தான். நடந்தவற்றை எஜமானருக்குக் கூறினான். எஜமானர் சினந்து, தன் வேலைக்காரனிடம், ‘விரைந்து செல். தெருக்களிலும், ஊரின் ஒதுக்குப் புறங்களிலும் இருக்கிற ஏழைகளையும், அங்கவீனர்களையும், குருடரையும், முடவர்களையும் அழைத்து வா’ என்றான்.
22 “பின்னர் வேலைக்காரன் அவனிடம் வந்து, ‘எஜமானரே, நீங்கள் கூறியபடியே நான் செய்தேன். ஆனால் இன்னும் அதிக மக்களுக்கு இடமிருக்கிறது’ என்றான். 23 எஜமானன் வேலைக்காரனை நோக்கி, ‘பெரும் பாதைகள் அருகேயும் கிராமப்புறத்திற்கும் செல். அங்குள்ள மக்களை வருமாறு சொல். எனது வீடு முழுவதும் ஆட்களால் நிரம்பி இருக்க வேண்டும்’ என்று வற்புறுத்தினான். 24 மேலும் ‘நான் முதலில் அழைத்தவர்களில் ஒருவர் கூட என்னோடு விருந்துண்ணப் போவதில்லை’ என்றான்” எனக் கூறினார்.
முதலில் திட்டமிடுங்கள்(V)
25 இயேசுவோடு பலர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இயேசு மக்களை நோக்கி, 26 “என்னிடம் வருகிற ஒருவன் அவனது தந்தையையோ, தாயையோ, சகோதரரையோ, சகோதரிகளையோ, என்னைக் காட்டிலும் அதிகமாக நேசித்தால் அம்மனிதன் எனக்குச் சீஷனாக ஆக முடியாது. ஒருவன் தன்னை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசிக்க வேண்டும்! 27 ஒருவன் என்னைப் பின்பற்றும்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிலுவையை (துன்பத்தை) சுமக்காவிட்டால் அவன் எனக்குச் சீஷனாக முடியாது.
28 “ஒரு கோட்டையைக் கட்டும் முன்பு, முதலில் அமர்ந்து அதைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தீர்மானிப்பீர்கள். வேலையை முடிப்பதற்குத் தேவையான பணம் உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். 29 அதைச் செய்யாவிட்டால் நீங்கள் வேலையைத் தொடங்கினாலும், அதை முடிக்க உங்களால் முடியாது. நீங்கள் அதை முடிக்க முடியாவிட்டால் அதைக் கவனிக்கிற எல்லா மக்களும் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். 30 அவர்கள், ‘இந்த மனிதன் கட்ட ஆரம்பித்தான். ஆனால் முடிக்க முடியவில்லை’ என்று சொல்வார்கள்.
31 “ஓர் அரசன் மற்றோர் அரசனுக்கு எதிராகப் போரிடச் சென்றால், முதலில் அமர்ந்து திட்டமிடுவான். அரசனிடம் பத்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தால் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட மற்ற அரசனைத் தோற்கடிக்க முடியுமா எனப் பார்ப்பான். 32 அவனால் மற்ற அரசனைத் தோற்கடிக்க முடியாதென்றால், எதிரி இன்னும் தொலைவான இடத்தில் இருக்கும்பொழுதே சில ஆட்களை அனுப்பி அந்த அரசனிடம் சமாதானத்திற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவான்.
33 “அதைப்போலவே முதலில் நீங்கள் திட்டமிட வேண்டும். என்னைப் பின்பற்ற வேண்டுமானால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும், அவ்வாறு செய்யவில்லை என்றால், நீங்கள் எனது சீஷராக இருக்க முடியாது!”
உப்பின் உதாரணம்(W)
34 “உப்பு ஒரு நல்ல பொருள். ஆனால் உப்பு அதன் சுவையை இழந்துபோனால் அதனால் பயன் எதுவும் இல்லை. அதைத் திரும்பவும் சுவை உடையதாக மாற்ற முடியாது. 35 மண்ணிற்காகவோ, உரமாகவோ, கூட அதனைப் பயன்படுத்த முடியாது. மக்கள் அதை வீசியெறிந்துவிடுவார்கள்.
“என்னைக் கேட்கிற மக்களே! கவனியுங்கள்” என்றார்.
ஆடு, வெள்ளிக்காசு உவமை(X)
15 வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள். 2 உடனே பரிசேயரும் வேதபாரகரும் குறை கூற ஆரம்பித்தவர்களாக, “பாருங்கள்! இந்த மனிதன் (இயேசு) தீயோரை வரவேற்று அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்” என்றனர்.
3 அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்: 4 “உங்களில் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்று காணாமல் போகிறது. அப்போது அவன் மற்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் தனியே விட்டுவிட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லமாட்டானா? அந்தக் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் அவன் அதைத் தேடிக்கொண்டே இருப்பான். 5 அந்த ஆட்டை அவன் கண்டுபிடிக்கிறபோது மிகவும் சந்தோஷம் அடைவான். அந்த மனிதன் அந்த ஆட்டைத் தன் தோள்களில் சுமந்துக்கொண்டு தன் வீட்டை அடைவான். 6 தன் நண்பர்களையும் அக்கம் பக்கத்தவர்களையும் அழைத்து அவர்களிடம் ‘எனது காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்’ என்று கூறுவான். 7 அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தங்கள் இதயத்தை மாற்றத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நல்ல மனிதருக்காக ஏற்படும் சந்தோஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பாவிக்காக ஏற்படும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.
8 “ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக் காசுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் ஒன்றை அவள் தொலைத்து விடுகிறாள். அவள் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வாள் அல்லவா? அந்தக் காசு கிடைக்கும் மட்டும் கவனமாகத் தேடுவாள். 9 தொலைந்து போன அந்தக் காசைக் கண்டெடுக்கும்போது அவள் தனது நண்பர்களையும் அக்கம் பக்கத்தாரையும் ஒன்றாக அழைத்து அவர்களை நோக்கி, ‘நான் தொலைத்த காசைக் கண்டெடுத்ததால் நீங்கள் என்னோடு கூட சந்தோஷப்படுங்கள்’ என்பாள். 10 அதைப்போலவே ஒரு பாவி மனந்திருந்தி தன் வாழ்வை மாற்றினால் தேவ தூதருக்கு முன்பாக மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்” என்றார்.
காணாமற்போன மகன்
11 அப்போது இயேசு, “ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். 12 இளைய மகன் தந்தையை நோக்கி, ‘நமக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களிலும் எனது பங்கை எனக்குத் தாருங்கள்’ என்று கூறினான். எனவே தந்தை செல்வத்தை இரண்டு பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான்.
13 “சில நாட்களுக்குப் பிறகு இளைய மகன் தனக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் போனான். வேறொரு தூர தேசத்துக்கு அவன் பிரயாணம் செய்தான். அங்கு அவன் பணத்தை மூடனைப்போல் வீணாகச் செலவழித்தான். 14 அவன் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தான். அதற்குப் பின்னர், அந்நாட்டில் வறட்சி நிலவியது. மழை பெய்யவில்லை. அந்நாட்டில் எல்லாருக்கும் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை. அந்த மகன் பசியாலும், பணமின்மையாலும் துன்பப்பட்டான். 15 எனவே அந்த நாட்டில் வாழ்ந்த ஒருவனிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். பன்றிகளுக்குத் தீவனமிடுமாறு அந்த மகனை அம்மனிதன் அனுப்பினான். 16 அந்த மகன் பசிமிகுதியால் பன்றிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையாகிலும் உண்ண வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒருவரும் எந்த உணவையும் கொடுக்கவில்லை.
17 “இளைஞன் தன் மூடத்தனத்தை உணர்ந்தான். அவன், ‘என் தந்தையின் எல்லா வேலைக்காரர்களுக்கும் மிகுதியான உணவு கிடைக்கும். நானோ உணவின்றி இங்கு இறக்கும் நிலையில் இருக்கிறேன். 18 நான் இங்கிருந்து என் தந்தையிடம் போய்: தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களிடமும் தவறு செய்தேன். 19 உங்கள் மகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்லன். நான் உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வாழ அனுமதியுங்கள் என்று சொல்லுவேன்’ என்று எண்ணினான். 20 எனவே அந்த மகன் அங்கிருந்து தன் தந்தையிடம் சென்றான்.
மகன் திரும்பிவருதல்
“அந்த மகன் தொலைவில் வரும்போதே அவனது தந்தை பார்த்துவிட்டார். அந்த மகனின் நிலையைக் கண்டு தந்தை வருந்தினார். எனவே தந்தை மகனிடம் ஓடினார். மகனை அரவணைத்து முத்தமிட்டார். 21 மகன், ‘தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களுக்கும் தவறு இழைத்தேன். உங்கள் மகன் என்று அழைக்கப்படுவதற்கேற்ற தகுதி எனக்குக் கிடையாது’ என்றான்.
22 “ஆனால் தந்தை வேலைக்காரரை நோக்கி, ‘விரைந்து செல்லுங்கள். விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவனுக்கு உடுத்துங்கள். அவன் விரலுக்கு மோதிரம் அணிவித்துக் காலுக்கு நல்ல பாதரட்சைகளை அணியச் செய்யுங்கள். 23 நம் கொழுத்த கன்றை கொண்டுவாருங்கள். அதைச் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவோம். ஒரு விருந்து வைப்போம். 24 என்னுடைய இந்த மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிரோடு வந்துள்ளான். அவன் காணாமல் போயிருந்தான், இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டான்’ என்று கூறினார். எனவே விருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.
மூத்த மகன் வருதல்
25 “மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு அருகாமையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். இசை, ஆடல் ஆகியவற்றின் சத்தத்தைக் கேட்டான். 26 எனவே மூத்த மகன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ‘இவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன?’ என்று கேட்டான். 27 வேலைக்காரன், ‘உங்கள் சகோதரன் திரும்பி வந்துள்ளார். உங்கள் தந்தை கொழுத்த கன்றை உண்பதற்காகக் கொன்றுள்ளார். உங்கள் சகோதரன் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி இருப்பதால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றான்.
28 “மூத்த மகன் கோபமுற்று விருந்துக்குச் செல்லவில்லை. எனவே தந்தை வெளியே வந்து அவனிடம் வற்புறுத்தினார். உள்ளே வருமாறு அழைத்தார். 29 மகன் தந்தையை நோக்கி, ‘நான் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் பல ஆண்டுகள் உழைத்தேன்! உங்கள் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தேன். ஆனால் ஒரு வெள்ளாட்டையாகிலும் நீங்கள் எனக்காகக் கொன்றதில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் நீங்கள் விருந்தளித்ததில்லை. 30 ஆனால் உங்கள் இன்னொரு மகன் பணத்தை எல்லாம் வேசிகளிடம் செலவழித்தான். பின்னர் வீடு திரும்பியதும் அவனுக்காகக் கொழுத்த கன்றுக் குட்டியை கொன்றீர்கள்’ என்றான்.
31 “ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை. 32 நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.
உண்மையான செல்வம்
16 இயேசு அவரது சீஷரை நோக்கி, “ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும்பொருட்டு அவனிடம் ஓர் அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள் வந்தன. 2 எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ‘உன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது’ என்றான்.
3 “பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ‘நான் என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத் தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன். 4 நான் என்ன செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம் வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தான்.
5 “எனவே, அந்த அதிகாரி எஜமானனுக்குக் கடன் தர வேண்டியவர்களை அழைத்தான். முதலாமவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ கொடுக்கவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். 6 அவன், ‘நான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம் என்று எழுது’ என்றான்.
7 “பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ‘இதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான்.
8 “பின்னர் எஜமானன் நம்பிக்கைக்குத் தகுதியற்ற அந்த அதிகாரியை அவன் திறமையாகச் செய்ததாகப் பாராட்டினான். ஆம், உலகத்திற்குரிய மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், ஆவிக்குரிய மனிதர்களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.
9 “நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனிடம் நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம் அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய். 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். 11 உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள். 12 யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது.
13 “ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம் வேறு முறையில் நடந்து கொள்வான். தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய உங்களால் இயலாது” என்றார்.
தேவ வாக்கியங்கள் மாறாதவை(Y)
14 பரிசேயர்கள் இச்செய்திகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பணத்தை நேசித்ததால் இயேசுவை விமர்சித்தார்கள். 15 இயேசு பரிசேயர்களை நோக்கி, “மக்களின் முன்பாக நீங்கள் நல்லவர்களாக நடந்துகொள்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே என்ன இருக்கிறதென தேவன் அறிவார். மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்கள் தேவனின் வெறுப்புக்கு உரியவை ஆகின்றன.
16 “மோசேயின் சட்டத்திற்கிணங்கவும், தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களுக்கேற்பவும் மக்கள் வாழ்வதை தேவன் விரும்பினார். ஆனால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகன் காலம் தொடங்கி, தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. தேவனுடைய இராஜ்யத்தில் செல்வதற்குப் பலர் மிகவும் முயன்று வருகிறார்கள். 17 வேதவாக்கியங்களில் காணப்படுகிற ஒரு எழுத்தின் ஒரு சிறிய பகுதியைக் கூட மாற்ற முடியாது. அதைக் காட்டிலும் வானமும் பூமியும் அழிந்துபோவதே எளிதாக இருக்கும்.”
விவாகரத்தும் மறுமணமும்
18 “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்து, இன்னொரு பெண்ணை மணந்துகொண்டால் அவன் விபசாரம் என்னும் பாவத்தைச் செய்தவன் ஆவான். விவாகரத்துக்கு உட்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொள்பவனும் தீய விபசாரம் என்னும் குற்றத்திற்கு உட்பட்டவன் ஆவான்” என்றார்.
செல்வந்தனும் லாசருவும்
19 “விலையுயர்ந்த ஆடைகளை எப்போதும் அணிந்துகொண்டிருந்த ஒரு செல்வந்தன் இருந்தான். ஒவ்வொரு நாளும் விருந்துண்டு களிக்கும் அளவுக்கு மிகுந்த செல்வந்தனாக இருந்தான். 20 லாசரு என்று அழைக்கப்பட்ட மிகவும் ஏழையான மனிதனும் இருந்தான். லாசருவின் சரீரம் முழுவதும் புண்ணாக இருந்தது. செல்வந்தனின் வீட்டு வாசலருகே லாசரு அடிக்கடி படுத்துக்கிடப்பான். 21 செல்வந்தனின் மேசையில் மீதியாக விடப்பட்ட உணவுத் துணுக்குகளை உண்பதற்கு அவன் விரும்பினான். நாய்கள் வந்து அவனது புண்களை நக்கின.
22 “பின்னர் லாசரு இறந்தான். தேவதூதர்கள் லாசருவை எடுத்துச்சென்று ஆபிரகாமின் மடியில் வைத்தனர். செல்வந்தனும் இறந்து அடக்கம் செய்யப்பட்டான். 23 அவன் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தான். தொலைவிலேயே ஆபிரகாம் தன் மடியில் லாசருவை ஏந்திக்கொண்டிருப்பதைச் செல்வந்தன் பார்த்தான். 24 அவன், ‘தந்தை ஆபிரகாமே! என்னிடம் இரக்கம் காட்டுங்கள். அவனது விரலைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிர்விக்குமாறு லாசருவை என்னிடம் அனுப்புங்கள். இந்த நெருப்பில் நான் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சத்தமிட்டுக் கூறினான்.
25 “ஆனால் ஆபிரகாம், ‘எனது மகனே! நீ உலகில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்துகொள். வாழ்வின் நல்ல பொருட்கள் அனைத்தும் உனக்கிருந்தன. லாசருவிற்கு எல்லாத் தீமைகளும் நேர்ந்தன. இப்போது அவனுக்கு இங்கு ஆறுதல் கிடைக்கிறது. நீயோ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய். 26 மேலும் உனக்கும், எங்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிளவு உள்ளது. உனக்கு உதவுவதற்காக யாரும் இங்கிருந்து அங்கு கடந்து வரமுடியாது’ என்றான்.
27 “செல்வந்தன், ‘அப்படியானால் தயவுசெய்து பூமியில் இருக்கும் என் தந்தையின் வீட்டுக்கு லாசருவை அனுப்புங்கள். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். கொடுமை மிகுந்த இந்த இடத்துக்கு அவர்கள் வராதபடிக்கு லாசரு எனது சகோதரர்களை எச்சரிக்கட்டும்’ என்றான்.
29 “ஆனால் ஆபிரகாம், ‘அவர்கள் படிப்பதற்கு மோசேயின் சட்டங்களும் தீர்க்கதரிசிகளின் நூல்களும் உள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளட்டும்’ என்றான்.
30 “ஆனால் செல்வந்தன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே! இறந்தோரிலிருந்து ஒருவன் சென்று கூறினால், அவர்கள் நம்பிக்கை கொண்டு தம் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்வார்கள்’ என்றான்.
31 “ஆனால் ஆபிரகாம் அவனை நோக்கி, ‘இல்லை! உனது சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி சாய்க்கவில்லை என்றால், இறந்தோரில் இருந்து வருகின்ற ஒருவன் கூறுவதையும் கேட்கமாட்டார்கள்’ என்றான்” என இயேசு கூறினார்.
பாவமும் மன்னிப்பும்(Z)
17 இயேசு தன் சீஷர்களை நோக்கி, “மக்கள் பாவம் செய்யும்படியான காரியங்கள் நிச்சயமாக நடக்கும். ஆனால் இது நடக்கும்படியாகச் செய்கிறவனுக்குத் தீமை விளையும் 2 பலவீனமான மனிதர்கள் பாவம் செய்யும்படியாகச் செய்கிற ஒருவனுக்குத் தீமை விளையும். அவன் கழுத்தில் அரைக்கிற கல்லைக் கட்டி அவனைக் கடலில் அமிழ்த்துவது அவனுக்கு நல்லதாக இருக்கும். 3 எனவே எச்சரிக்கையாக இருங்கள்!”
“உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள். 4 ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்தும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்” என்றார்.
விசுவாசத்தின் மேன்மை
5 சீஷர்கள் இயேசுவை நோக்கி, “இன்னும் மிகுந்த விசுவாசத்தை எங்களுக்கு வழங்குங்கள்” என்றார்கள்.
6 கர்த்தர், “உங்கள் விசுவாசம் ஒரு கடுகளவு பெரியதாக இருந்தால் இந்த முசுக்கட்டை மரத்தைப் பார்த்து, ‘நீ தானாகவே பெயர்ந்து கடலில் விழு’ என்று கூறினால் அந்த மரமானது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
நல்ல ஊழியர்கள்
7 “வயலில் வேலை செய்கிற ஊழியன் ஒருவன் உங்களில் ஒருவனுக்கு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் நிலத்தை உழுது கொண்டோ, ஆடுகளை மேய்த்துக்கொண்டோ இருக்கிறான். அவன் வயலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் அவனிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வந்து சாப்பிட உட்கார் என்பீர்களா? 8 இல்லை. நீங்கள் அந்த ஊழியனிடம், ‘நான் உண்பதற்கு ஏதேனும் தயார் செய். நான் சாப்பிட்டு முடிக்கும்வரை பரிமாறுவதற்கான ஆடைகளை அணிந்துகொள். பிறகு நீ சாப்பிடவும், பருகவும் செய்யலாம்’ என்பீர்கள். 9 தன் வேலையைச் செய்வதற்காக அவனுக்கு விசேஷமாக நன்றி செலுத்த வேண்டியது இல்லை. அவனது எஜமானன் சொல்வதை மட்டும் அவன் செய்துகொண்டிருக்கிறான். 10 அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் செய்யும்படியாக கூறப்பட்ட காரியங்களை நீங்கள் செய்யும்போது நீங்கள், ‘எந்த விசேஷ நன்றியறிதலுக்கும் நாங்கள் தகுதியுடையவர்கள் அல்ல. நாங்கள் செய்யவேண்டிய வேலையையே செய்து முடித்தோம்’ என்று சொல்ல வேண்டும்” என்றார்.
நன்றியுடனிருங்கள்
11 இயேசு எருசலேமுக்குப் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். கலிலேயாவைக் கடந்து அவர் சமாரியாவுக்குப் போனார். 12 அவர் ஒரு சிற்றூருக்கு வந்தார். பத்து மனிதர்கள் அவரை அங்கு சந்தித்தார்கள். அவர்கள் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களாதலால் அவர் அருகே வரவில்லை. 13 ஆனால் அம்மனிதர்கள் இயேசுவை நோக்கி, உரக்கக் கூவி, “இயேசுவே! குருவே! தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றார்கள்.
14 அம்மனிதர்களைப் பார்த்தபோது இயேசு, “போய் ஆசாரியர் முன்பு உங்களை நீங்களே காட்டுங்கள்” என்றார்.
அந்தப் பத்து மனிதர்களும் ஆசாரியரிடம் போய்கொண்டிருக்கையில் அவர்கள் குணமடைந்தார்கள். 15 அவர்களில் ஒருவன் தான் சுகம் பெற்றதைக் கண்டபோது இயேசுவிடம் திரும்பிச் சென்றான். அவன் உரத்த குரலில் தேவனுக்கு நன்றியைத் தெரிவித்தான். 16 அவன் இயேசுவின் பாதங்களில் விழுந்தான். அந்த மனிதன் இயேசுவுக்கு நன்றி கூறினான். (இந்த மனிதன் ஒரு சமாரியன். யூதன் அல்லன்) 17 இயேசு, “பத்து மனிதர்கள் நலமடைந்தனர். மற்ற ஒன்பது பேர் எங்கே? 18 தேவனுக்கு நன்றி சொல்லுவதற்குத் திரும்பி வந்தவன் இந்த சமாரியன் மட்டும் தானா?” என்று கேட்டார். 19 பின்பு இயேசு அவனை நோக்கி, “எழுந்திரு, நீ போகலாம். நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.
உங்களுக்குள் தேவராஜ்யம்(AA)
20 பரிசேயர்களில் சிலர் இயேசுவை நோக்கி, “தேவனின் இராஜ்யம் எப்போது வரும்?” என்று கேட்டார்கள்.
இயேசு பதிலாக, “தேவனுடைய இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் கண்களால் பார்க்கும்படியான வகையில் அல்ல. 21 ‘பாருங்கள், தேவனுடைய இராஜ்யம் இங்கே இருக்கிறது’ அல்லது ‘அங்கே இருக்கிறது’ என்று மக்கள் சொல்லமாட்டார்கள். இல்லை, தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது” என்றார்.
22 பின்பு இயேசு அவரது சீஷர்களை நோக்கி, “மனித குமாரனின் நாட்களில் ஒன்றை நீங்கள் காண விரும்பும் காலம் வரும். ஆனால் உங்களால் அதைப் பார்க்க இயலாது. 23 மக்கள் உங்களிடம், ‘பாருங்கள், அது அங்கே இருக்கிறது’ அல்லது ‘பாருங்கள், இங்கே அது இருக்கிறது’ என்பார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் நிலைத்திருங்கள். எங்கேயும் தேடாதீர்கள்” என்றார். 24 “மனித குமாரன் திரும்ப வருவார், என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வரும் நாளில் வானில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு ஒளிவிடும் மின்னலைப்போல அவர் ஒளிவீசுவார். 25 ஆனால் முதலில் மனித குமாரன் பல துன்பங்களைத் தாங்கி இந்தக் காலத்து மக்களால் தள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது.
26 “நோவா வாழ்ந்த காலத்தைப்போலவே மீண்டும் மனித குமாரன் வரும் பொழுதும் நடக்கும். 27 நோவாவின் காலத்தில் நோவா படகில் நுழைந்த தினத்தில் கூட மக்கள் உண்டு, பருகி, மணம் செய்து வாழ்ந்தார்கள். அப்பொழுது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எல்லா மக்களையும் கொன்றது.
28 “தேவன், லோத்தின் காலத்தில் சோதோமை அழித்ததைப் போலவே அதுவும் இருக்கும். அந்த மக்கள் உண்டு பருகி, வாங்கி, விற்று, நட்டு, தங்களுக்காக வீடுகளைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். 29 லோத்து தனது ஊரை விட்டுப்போன நாளில் கூட மக்கள் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருந்தார்கள். வானத்தில் இருந்து அக்கினி வந்து அவர்கள் எல்லாரையும் கொன்றது. 30 மனித குமாரன் மீண்டும் வரும்போதும் இதே விதமாக நடக்கும்.
31 “அந்த நாளில் ஒரு மனிதன் கூரையின் மீது இருந்தால், அவன் உள்ளேபோய் தனது பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு அவனுக்கு நேரம் இருக்காது. ஒரு மனிதன் வயலில் இருந்தால், அவன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. 32 லோத்தின் மனைவிக்கு [f] என்ன நேரிட்டது என்பதை நினைவுகூருங்கள்!
33 “தன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள முயலும் ஒருவன் அதை இழந்து போவான். ஆனால் உயிரைக் கொடுக்கிறவனோ அதை மீட்டுக்கொள்வான். 34 இரவில் ஒரே அறையில் இரண்டுபேர் உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான். மற்றவன் விட்டுவிடப்படுவான். 35 இரு பெண்கள் ஒருமித்து தானியங்களை அரைத்துக்கொண்டிருக்கக் கூடும். ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள். மற்றொருத்தி விட்டு விடப்படுவாள்” என்றார். 36 [g]
37 சீஷர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, இது எங்கே நடக்கும்?” என்று கேட்டார்கள். பதிலாக இயேசு, “வட்டமிடுகிற கழுகுகளைப் பார்ப்பதின் மூலம் இறந்த சடலத்தை மக்கள் எப்போதும் கண்டுபிடிக்க முடியும்” என்றார்.
பலன் தரும் தேவன்
18 சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும்பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்: 2 “ஓர் ஊரில் ஒரு நியாயாதிபதி இருந்தான். அவன் தேவனைக் குறித்துக் கவலைப்படவில்லை. மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவன் அக்கறையற்றவனாக இருந்தான். 3 அதே ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் இறந்து போனான். அந்தப் பெண் பல முறை நியாயாதிபதியிடம் வந்து, ‘எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்’ என்றாள். 4 அப்பெண்ணுக்கு உதவுவதற்கு நியாயாதிபதி விரும்பவில்லை. பல நாள்களுக்குப் பிறகு நியாயாதிபதி தனக்குள், ‘நான் தேவனைப்பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்கள் எண்ணுவதைக் குறித்தும் நான் அக்கறையில்லாதவனாக இருக்கிறேன். 5 ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான்.
6 “தீய நியாயாதிபதி கூறியதைக் கவனமுடன் கேளுங்கள். 7 தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார். தம் மக்களுக்குப் பதில் கூறுவதில் அவர் தயங்கமாட்டார். 8 நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார்.
தேவனுக்கு ஏற்றவன் யார்?
9 தங்களை மிக நல்லவர்களாக எண்ணிக்கொண்ட சில மனிதர்கள் இருந்தார்கள். பிறரைக் காட்டிலும் அவர்கள் மிக நல்லவர்கள் என்பதைப்போன்று அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதிப்பதற்கு இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தினார். 10 “ஒரு பரிசேயனும் வரி வசூலிப்பவனும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இருவரும் தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யச் சென்றார்கள். 11 வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 12 நான் நல்லவன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான்.
13 “வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. தன்னை உயர்ந்தவனாகக் கருதிக்கொள்கிற எவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான்.”
குழந்தைகளும்-இயேசுவும்(AB)
15 இயேசு தொடுமாறு சிலர் தங்கள் சிறு குழந்தைகளை இயேசுவின் அருகில் கொண்டு வந்தார்கள். ஆனால் சீஷர்கள் இதைப் பார்த்ததும் மக்களை அதட்டித் தடுத்தார்கள். 16 ஆனால் இயேசு அந்தச் சிறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து, அதன் பின் சீஷர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இச்சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது. 17 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும் தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது” என்றார்.
செல்வந்தனும் இயேசுவும்(AC)
18 ஒரு யூத அதிகாரி இயேசுவிடம், “நல்ல போதகரே! நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
19 இயேசு அவனை நோக்கி, “நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். 20 ஆனால் நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வேன். உனக்கு தேவனுடைய பிரமாணங்கள் தெரியும். ‘நீ தீய ஒழுக்கமாகிய பாவத்தைச் செய்யக்கூடாது. நீ ஒருவரையும் கொலை செய்யக்கூடாது. நீ எந்தப் பொருளையும் திருடக் கூடாது. பிறரைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. உனது தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும்’” [h] என்றார்.
21 ஆனால் அந்த அதிகாரி, “சிறுவனாக இருந்தபோதே இக்கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடந்து வருகிறேன்” என்றான்.
22 இதைக் கேட்டதும் இயேசு அதிகாரியை நோக்கி, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது. உன் பொருட்கள் எல்லாவற்றையும் விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடு. பரலோகத்தில் உனக்கு பலன் கிடைக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். 23 ஆனால் அம்மனிதன் இதைக் கேட்டபோது மிகவும் வருத்தமடைந்தான். அவன் பெரிய பணக்காரன், எல்லாப் பணத்தையும் தானே வைத்துக்கொள்ள விரும்பினான்.
24 அவன் வருத்தமடைந்ததை இயேசு கண்டபோது அவர், “செல்வந்தர் தேவனின் இராஜ்யத்தில் நுழைவது மிகவும் கடினமானது! 25 ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார்.
மீட்கப்படக்கூடியவர் யார்?
26 மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்றார்கள்.
27 பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார்.
28 பேதுரு “ஆண்டவரே, எங்களுக்குரிய அனைத்தையும் விட்டு உங்களைப் பின்பற்றினோமே” என்றான்.
29 இயேசு, “நான் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். வீடு, மனைவி, சகோதரர்கள், பெற்றோர் அல்லது குழந்தைகளை தேவனின் இராஜ்யத்துக்காகத் துறந்த ஒவ்வொருவனும் தான் விட்டவற்றைக் காட்டிலும் மிகுதியாகப் பெற்றுக்கொள்வான். 30 இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். அவன் இறந்த பின்னரும் தேவனோடு நித்தியமாக வாழ்வான்” என்றார்.
இயேசு மரணத்தினின்று எழுவார்(AD)
31 பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும். 32 அவரது மக்களே அவருக்கு எதிராகத் திரும்பி அவரை யூதரல்லாத மக்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, அவர் மீது உமிழ்வார்கள். அவரை இகழ்ந்து அவமானப்படுத்துவார்கள். 33 அவரைச் சாட்டையினால் அடித்து பின்னர் கொல்வார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிரோடு மீண்டும் எழுவார்” என்றார். 34 சீஷர்கள் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன் பொருள் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது.
குருடனைக் குணமாக்குதல்(AE)
35 எரிகோ பட்டணத்திற்கு அருகே, இயேசு வந்தார். பாதையருகே ஒரு குருடன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் மக்களிடம் பணத்துக்காகப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். 36 மக்கள் பாதையைக் கடந்து வருவதைக் கேட்டதும் அம்மனிதன், “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?” எனக் கேட்டான்.
37 மக்கள் அவனுக்கு, “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.
38 குருடன் பரவசமுற்று, “இயேசுவே தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.
39 அக்கூட்டத்திற்கு முன்னால் நடந்து கொண்டிருந்த மக்கள் அக்குருடனை அதட்டினார்கள். அவனைப் பேசாதிருக்கும்படியாகக் கூறினார்கள். ஆனால் அக்குருடன் இன்னும் அதிகமாகச் சத்தமிட்டவாறே, “தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான்.
40 இயேசு, “அந்தக் குருடனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி அங்கேயே நின்றுவிட்டார். அக்குருடன் அருகே வந்தபோது இயேசு அவனை நோக்கி, 41 “நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாய்?” என்று கேட்டார்.
குருடன், “ஐயா, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான்.
42 இயேசு அவனை நோக்கி, “உன் பார்வையை மீண்டும் பெறுவாய்! நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.
43 அப்போது அம்மனிதனால் பார்க்க முடிந்தது. அவன் தேவனுக்கு நன்றி கூறியவாறே இயேசுவைத் தொடர்ந்தான். இதைக் கண்ட எல்லா மக்களும் நடந்ததற்காக தேவனை வாழ்த்தினர்.
சகேயு
19 எரிகோ பட்டணத்தின் வழியாக இயேசு சென்றுகொண்டிருந்தார். 2 எரிகோவில் சகேயு என்னும் பெயருடைய மனிதன் இருந்தான். அவன் செல்வந்தனும், முக்கியமானவனுமான ஒரு வரி வசூலிப்பவனாவான். 3 அவன் இயேசுவைக் காண விரும்பினான். இயேசுவைக் காண விரும்பிய இன்னும் பலரும் அங்கு இருந்தார்கள். மக்களுக்குப் பின்னே நின்றபடி இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான். 4 எனவே, அவன் இயேசு கடந்து செல்லும் இடத்தையடைய வேகமாக ஓடிச் சென்றான். இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது சகேயு ஏறினான்.
5 இயேசு அவ்விடத்துக்கு வந்தபோது, மேலே ஏறிட்டுப் பார்த்து சகேயு மரத்தின்மீது இருப்பதைக் கண்டார். இயேசு அவனை நோக்கி, “சகேயுவே, விரைந்து வா. கீழே இறங்கு. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்கவேண்டும்” என்றார்.
6 சகேயு விரைந்து கீழே இறங்கினான். தன் வீட்டில் இயேசுவை வரவேற்பதில் அவன் மிகவும் மகிழ்ந்தான். 7 எல்லா மக்களும் இதைக் கண்டனர். அவர்கள், “எத்தகைய மனிதனோடு இயேசு தங்குகிறார் என்பதைப் பாருங்கள். சகேயு ஒரு பாவி” என்று புகார் கூறினார்கள்.
8 சகேயு கர்த்தரை நோக்கி, “நான் நல்லதைச் செய்ய விரும்புகிறேன். என் பணத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பேன். நான் யாரையாவது ஏமாற்றி இருந்தால் அவனுக்கு நான்கு மடங்கு பணத்தைத் திரும்பக் கொடுப்பேன்” என்றான்.
9 இயேசு, “இந்த மனிதன் நல்லவன். உண்மையில் ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்றைக்கு சகேயு அவனது பாவங்களில் இருந்து மீட்கப்பட்டான். 10 மனித குமாரன் இழந்துபோன மனிதர்களைக் கண்டு அவர்களை மீட்கவே வந்தார்” என்றார்.
இருப்பதைப் பயன்படுத்துங்கள்(AF)
11 எருசலேமை நெருங்கி இயேசு பயணம் செய்துகொண்டிருந்தார். தேவனின் இராஜ்யம் சீக்கிரம் வருமென்று சில மக்கள் எண்ணினார்கள். 12 மக்களின் எண்ணத்தை இயேசு அறிந்தார். எனவே அவர்களுக்குப் பின்வரும் உவமையைச் சொன்னார்: “ஒரு உயர்ந்த கௌரவம்மிக்க மனிதன், மன்னனாக நியமனம் பெறும்படியாகத் தூர தேசப் பயணத்திற்காக ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தான். பின்னர் திரும்பி வந்து அவனது மக்களை அரசாள வேண்டுமென்று அவன் திட்டமிட்டான். 13 எனவே அவன் தனது வேலைக்காரர்களில் பத்து பேரை அழைத்தான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் ஒரு பை நிறைய பணத்தைக் கொடுத்தான். ‘இந்தப் பணத்தைக்கொண்டு நான் வரும் வரைக்கும் வியாபாரம் செய்யுங்கள்’ என்றான். 14 அந்த இராஜ்யத்தின் மக்கள் அம்மனிதனை வெறுத்தார்கள். எனவே அம்மக்கள் அவன் போகும் தேசத்துக்கெல்லாம் அவனைப் பின் தொடர்ந்து செல்லுமாறு ஒரு கூட்டத்தினரை அனுப்பினர். மற்ற தேசத்துக்கு அக்கூட்டத்தினர் சென்று ‘இந்த மனிதன் எங்களுக்கு அரசன் ஆவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்கள்.
15 “ஆனால் அம்மனிதன் அரசனானான். அவன் தன் நாட்டுக்குத் திரும்பிய பின்பு, ‘நான் பணம் கொடுத்துள்ள அந்த வேலைக்காரரை அழையுங்கள். அதைக்கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறிய நான் விரும்புகிறேன்’ என்றான். 16 முதல் வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் பத்து பை நிரம்பும் அளவுக்குப் பணம் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 17 அரசன் அந்த வேலைக்காரனை நோக்கி, ‘நல்லது, நீ ஒரு நல்ல வேலைக்காரன். சிறிய காரியங்களில் உன்னை நம்பக் கூடும் என்று காண்கிறேன். ஆகவே இப்போது எனது பட்டணங்களில் பத்து பட்டணங்களை ஆளும்படியாக உன்னை நியமிப்பேன்’ என்றான்.
18 “இரண்டாவது வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் ஐந்து பைகள் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 19 மன்னன் வேலைக்காரனை நோக்கி, ‘நீ ஐந்து பட்டணங்கள் மேல் ஆட்சி செய்யலாம்’ என்றான்.
20 “பின்பு மூன்றாவது வேலைக்காரன் வந்தான் அந்த வேலைக்காரன் அரசனை நோக்கி, ‘ஐயா, இதோ உங்களுடைய பணப் பை இருக்கிறது. நான் அதை ஒரு துணியில் பொதிந்து மறைத்து வைத்தேன். 21 உங்கள் வலிமையைக் கண்டு நான் பயந்து போய் இருந்தேன். நீங்கள் கடினமான மனிதர் என்பதை அறிவேன். உங்களால் சம்பாதிக்கப்படாத பணத்தைக் கூட நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். உங்களால் பயிரிடப்படாத தானியத்தைக் கூட நீங்களே சேர்த்துக் கொள்கிறீர்கள்’ என்றான்.
22 “அரசன் அந்த வேலைக்காரனை நோக்கி, ‘தீய வேலைக்காரனே, உனது சொந்த வார்த்தையாலேயே உன்னை நிராகரிப்பேன். நான் ஒரு கடினமான மனிதன் என்றாய். நான் சம்பாதிக்காத பணத்தை எடுத்துக்கொள்பவன் என்றும், நான் பயிரிடாத தானியத்தைச் சேர்த்துக்கொள்பவன் என்றும் கூறினாய். 23 அது உண்மையென்றால் நீ என் பணத்தை வங்கியில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்போது நான் திரும்பி வந்தபோது என் பணத்துக்கு வட்டியாவது கிடைத்திருக்கும்’ என்றான். 24 பின் அங்கு நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து பையை எடுத்து பத்து பைகள் நிரம்ப பணம் சம்பாதித்தவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
25 “அந்த மனிதர்கள் அரசனிடம், ‘ஐயா, அந்த வேலைக்காரனிடம் ஏற்கெனவே பத்துப் பைகள் பணம் இருக்கின்றனவே,’ என்றார்கள்.
26 “அரசன், ‘தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்துகிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்தாத மனிதனிடம் இருப்பவையும் எடுத்துக்கொள்ளப்படும். 27 இப்போது எனது பகைவர்கள் எங்கே? தமக்கு அரசனாக நான் ஆவதை விரும்பாத மக்கள் எங்கே? என் பகைவர்களை அழைத்து வந்து அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் மடிவதை நான் பார்ப்பேன்’ என்றான்.”
எருசலேமுக்குள் இயேசு(AG)
28 இவற்றையெல்லாம் கூறியபின்பு இயேசு, எருசலேமை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். 29 ஒலிவ மலையருகே காணப்பட்ட பெத்பகே, பெத்தானியா ஆகிய ஊர்களருகே இயேசு வந்தபோது, அவர் இரண்டு சீஷர்களை அனுப்பினார். 30 அவர், “நீங்கள் பார்க்கிற அந்த ஊருக்குள் செல்லுங்கள். ஊருக்குள் நுழையும்போதே அங்கு ஒரு கழுதைக் குட்டி கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். எந்த மனிதனும் அதன்மீது ஏறியதில்லை. அக்கழுதையை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். 31 எந்த மனிதனாவது அக்கழுதையை ஏன் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் நீங்கள், ‘எங்கள் எஜமானருக்கு இக்கழுதை வேண்டும்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
32 இரண்டு சீஷர்களும் ஊருக்குள் சென்றார்கள். இயேசு கூறியபடியே கழுதைக்குட்டியைக் கண்டார்கள். 33 சீஷர்கள் கட்டப்பட்டிருந்த அக்கழுதையை அவிழ்த்தார்கள். கழுதையின் சொந்தக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் சீஷரை நோக்கி, “எதற்காகக் கழுதையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்கள்.
34 சீஷர்கள், “ஆண்டவருக்குத் தேவையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்கள். 35 சீஷர்கள் கழுதைக் குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து தம் மேலங்கியை அதன்மேல் போட்டார்கள். பின்பு இயேசுவைக் கழுதையின் மேல் அமர்த்தினார்கள். 36 இயேசு எருசலேமுக்குச் செல்லும் பாதை வழியாகக் கழுதையின் மேல் ஏறிச் சென்றார். இயேசுவுக்கு முன்பாக சீஷர்கள் தம் அங்கிகளைப் பாதையில் விரித்தார்கள்.
37 எருசலேமுக்கு அருகில் இயேசு வந்துகொண்டிருந்தார். அவர் ஒலிவமலை அடி நகரத்திற்கருகே வந்திருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் மகிழ்வோடு இருந்தார்கள். அவர்கள் உரத்த குரலில் களிப்புடன் தேவனை வாழ்த்தினார்கள். அவர்கள் தாம் பார்த்த எல்லா வல்லமையான செயல்களுக்கும் தேவனுக்கு நன்றி தெரிவித்தார்கள். 38 அவர்கள்,
“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசரை தேவன் ஆசீர்வதிப்பாராக!” [i]
“பரலோகத்தில் அமைதியும் தேவனுக்கு மகிமையும் உண்டாவதாக!”
என்றனர்.
39 கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, இவற்றைக் கூறாதபடிக்கு சீஷருக்குச் சொல்லுங்கள்” என்றார்கள்.
40 ஆனால் இயேசு, “நான் உங்களுக்குச் சொல்கிறேன். இக்காரியங்கள் சொல்லப்பட வேண்டியவை. என் சீஷர்கள் இவற்றைக் கூறாவிட்டால், இக்கற்கள் அவற்றைக் கூறும்” என்று பதிலுரைத்தார்.
எருசலேமுக்காக அழுதல்
41 இயேசு எருசலேமுக்கு அருகே வந்தார். அவர் அப்பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழ ஆரம்பித்தார். 42 இயேசு எருசலேமைப் பார்த்துப் பேசினார். அவர், “உனக்கு சமாதானத்தை எது வரவழைக்கும் என்று இன்றைக்கு நீ தெரிந்துகொண்டிருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் உனக்கு அது மறைக்கப்பட்டிருப்பதால் உன்னால் அதை அறிந்துகொள்ளமுடியாது. 43 உன் பகைவர்கள் உன்னைச் சுற்றிலும் ஒரு மதிலை எழுப்பும் காலம் வந்து கொண்டிருக்கிறது. உன் பகைவர்கள் உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வளைத்துக் கொள்வார்கள். 44 அவர்கள் உன்னையும் உன்னிலுள்ள எல்லா மக்களையும் அழித்து விடுவார்கள். உன் கட்டிடங்களில் உள்ள கற்களில் ஒன்றும் ஒன்றின் மேல் ஒன்று நிலைத்திருப்பதில்லை. தேவன் உன்னை மீட்பதற்காக வந்த காலத்தை நீ அறியாததால் இவையெல்லாம் நடக்கும்” என்றார்.
தேவாலயத்திற்குச் செல்லுதல்(AH)
45 இயேசு தேவாலயத்திற்குள் சென்றார். பல பொருட்களை விற்றுக்கொண்டிருந்த மக்களை தேவாலயத்திற்குள் இருந்து துரத்த ஆரம்பித்தார். 46 அவர்களிடம் இயேசு, “‘என் வீடு பிரார்த்தனைக் குரிய வீடாக இருக்கும்’ [j] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதைத் திருடர்கள் ஒளிந்திருக்கிற இடமாக [k] நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள்” என்றார்.
47 ஒவ்வொரு நாளும் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். ஆசாரியரும், வேதபாரகரும் மக்களின் அதிகாரிகளும் இயேசுவைக் கொல்ல விரும்பினார்கள். 48 ஆனால் எல்லா மக்களும் இயேசுவைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இயேசு கூறிய விஷயங்களை மிகவும் உற்சாகமாகக் கவனித்தார்கள். எனவே தலைமை ஆசாரியருக்கும், வேதபாரகருக்கும், அதிகாரிகளுக்கும் இயேசுவை எவ்வாறு கொல்ல முடியும் என்பது தெரியவில்லை.
யூத அதிகாரிகளின் கேள்வி(AI)
20 ஒரு நாள் இயேசு தேவாலயத்தில் இருந்தார். அவர் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு மக்களுக்குக் கூறினார். தலைமை ஆசாரியரும், வேதபாரகரும், முதிய யூத அதிகாரிகளும் இயேசுவிடம் பேசுவதற்கு வந்தனர். 2 அவர்கள், “இக்காரியங்களைச் செய்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தவர் யார்?” என்றார்கள்.
3 இயேசு பதிலாக, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்பேன். 4 மக்களுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
5 ஆசாரியரும், வேதபாரகரும், யூத அதிகாரிகளும் இதைக் குறித்துப் பேசினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்தது’ என்று நாம் பதில் சொன்னால் அவர், ‘அப்படியானால் நீங்கள் யோவானை ஏன் நம்பவில்லை?’ என்பார். 6 ஆனால் நாம், ‘யோவானின் ஞானஸ்நானம் மனிதரிடம் இருந்து வந்தது’ என்றுக் கூறினால் எல்லா மக்களும் நம்மைக் கல்லெறிந்து கொல்வார்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பதால் நம்மைக் கொல்வார்கள்” என்று பேசிக்கொண்டனர். 7 எனவே அவர்கள், “எங்களுக்கு விடை தெரியவில்லை” என்று பதில் சொன்னார்கள்.
8 எனவே இயேசு அவர்களை நோக்கி, “இக்காரியங்களை எந்த அதிகாரத்தால் செய்கிறேன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
திராட்சைத்தோட்ட உவமை(AJ)
9 பின்னர் இயேசு மக்களுக்கு இவ்வுவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் தன் வயலில் திராட்சைச் செடிகளை பயிரிட்டான். சில உழவர்களுக்கு அந்த நிலத்தைக் குத்தகையாகக் கொடுத்தான். பின்னர் நீண்டகாலம் அங்கிருந்து சென்றுவிட்டான். 10 திராட்சைப் பழங்களைப் பறிக்கும் காலம் நெருங்கியது. அம்மனிதன் உழவர்களிடம் அவனது வேலைக்காரனைத் தனக்குரிய பாகமான திராட்சை பழங்களைப் பெற்றுவருமாறு அனுப்பினான். ஆனால் உழவர்கள் அந்த வேலைக்காரனை அடித்து ஒன்றுமே தராமல் அனுப்பிவிட்டார்கள். 11 எனவே அம்மனிதன் இன்னொரு வேலைக்காரனை அனுப்பினான். அந்த உழவர்கள் இந்த வேலைக்காரனையும் கூட அடித்தார்கள். அவனைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. அவனுக்கு எதுவும் கொடுக்காமல் அவனை அனுப்பிவிட்டார்கள். 12 எனவே அம்மனிதன் உழவர்களிடம் மூன்றாவது வேலைக்காரனை அனுப்பினான். உழவர்கள் அவனை அடித்துக் காயப்படுத்தித் துரத்திவிட்டார்கள்.
13 “வயலின் சொந்தக்காரன். ‘நான் இப்போது என்ன செய்வேன்? நான் எனது மகனை அனுப்புவேன். நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன். உழவர்கள் என் மகனை மதிக்கக்கூடும்’ என்று எண்ணினான். 14 உழவர்கள் மகனைப் பார்த்ததும் தமக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் மகன். இவ்வயல் இவனுக்கே சேரும். இவனைக் கொன்றுவிட்டால் இவ்வயல் நமக்குச் சொந்தமாகும்’ என்று பேசிக்கொண்டனர். 15 எனவே, மகனை வயலுக்கு வெளியே தூக்கி எறிந்து அவனைக் கொன்றுவிட்டனர்.
“வயலின் சொந்தக்காரன் என்ன செய்வான்? 16 அவன் வந்து அந்த உழவர்களைக் கொன்றுபோடுவான். பிற்பாடு அந்த வயலை வேறு உழவர்கள் கையில் ஒப்படைப்பான்” என்றார். மக்கள் இவ்வுவமையைக் கேட்டனர்.
அவர்கள், “இல்லை, இவ்வாறு நடக்க அனுமதிக்கலாகாது” என்றனர். 17 ஆனால் இயேசு அவர்கள் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறு “அப்படியானால் இந்த வசனம் எதைக் கூறுகிறது:
“‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாம் எனக் கருதிய கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று’ (AK)
18 அந்தக் கல்லின்மீது விழுகிற ஒவ்வொரு மனிதனும் நொறுங்கிப்போவான். அந்தக் கல் உங்கள் மீது விழுந்தால் அது உங்களை நசுக்கிப்போடும்!” என்றார்.
19 யூத அதிகாரிகள் இயேசு கூறிய இவ்வுவமையைக் கேட்டனர். இது அவர்களைப் பற்றியே கூறப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. அதே சமயத்தில் அவர்கள் இயேசுவைச் சிறைப்பிடிக்க விரும்பினார்கள். ஆனால் மக்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்து அவர்கள் அஞ்சினர்.
2008 by World Bible Translation Center