Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
தானியேல் 9:1 - ஓசியா 13:6

தானியேலின் ஜெபம்

தரியு அரசனான முதலாம் ஆண்டில் இவை நிகழ்ந்தன. தரியு அகாஸ்வேரு என்னும் பெயருடையவனின் மகன். தரியு மேதிய குலத்தை சேர்ந்தவன். அவன் பாபிலோனின் அரசனானான். தரியு அரசனாக இருந்த முதலாம் ஆண்டில் தானியேலான நான், சில புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்புத்தகங்களில், கர்த்தர் எரேமியா தீரிக்கதரிசியிடம் எருசலேம் மீண்டும் கட்டப்படுவதற்கு முன் எத்தனை வருடங்கள் கடந்து செல்லும் என்று சொல்லியிருந்ததை நான் பார்த்தேன். கர்த்தர் 70 ஆண்டுகள் கடந்து செல்லும் என்று கூறினார்.

பிறகு நான் என் தேவனாகிய ஆண்டவரிடம் திரும்பி, ஜெபம் செய்து உதவி செய்யுமாறு அவரிடம் வேண்டினேன். நான் எந்த உணவையும் உண்ணவில்லை. நான் துக்கத்தைக் காட்டும் ஆடையை அணிந்தேன். நான் என் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டேன்.

நான் என் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தேன். நான் எனது எல்லாப் பாவங்களையும் அவரிடம் சொன்னேன்.

நான், “கர்த்தாவே, நீர் மகத்துவமும் பயங்கரமும் வாய்ந்த தேவன். நீர் உம்மிடம் அன்பு செய்கிற ஜனங்களிடம் உமது அன்பும் கருணையும் உள்ள உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கிறீர். உமது கற்பனைகளுக்கு அடிபணிகிறவர்களுக்கு உமது உடன்படிக்கையைக் காப்பாற்றுகிறீர்.

“ஆனால் கர்த்தாவே, நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் தவறு செய்திருக்கிறோம். நாங்கள் உமக்கு எதிராகத் திரும்பினோம். நாங்கள் உமது கற்பனைகளையும் சரியான நியாயங்களையும் விட்டு விலகிப்போனோம். நாங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் காது கொடுத்து கவனிக்கவில்லை. அவர்கள் உமது ஊழியர்கள். தீர்க்கதரிசிகள் உமக்காகப் பேசினார்கள். அவர்கள் எங்கள் அரசர்களிடமும், எங்கள் தலைவர்களிடமும், எங்கள் தந்தைகளிடமும் பேசினார்கள். அவர்கள் இஸ்ரவேலிலுள்ள எல்லா ஜனங்களிடமும் பேசினார்கள். ஆனால் நாங்கள் அத்தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை.

“கர்த்தாவே, நீர் நல்லவர். நீதி உமக்கே உரியது. ஆனால் இன்று வெட்கக்கேடு எங்களுக்கு உரியதாயிற்று. யூதா மற்றும் எருசலேமிலுள்ள ஜனங்களுக்கு அவமானம் உரியதாயிற்று. அவமானம் இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் உமக்கு அருகிலே உள்ள ஜனங்களுக்கும் உமக்குத் தொலைவிலே உள்ள ஜனங்களுக்கும் உரியதாயிற்று. கர்த்தாவே, அந்த ஜனங்களை நீர் பலதேசங்களில் சிதறடித்தீர். அத்தேசங்களிலுள்ள இஸ்ரவேல் ஜனங்கள் அவமானப்படுவார்களாக. கர்த்தாவே, அவர்கள் உமக்கு எதிராகச் செய்த அனைத்து கேடுகளுக்கும் அவமானப்படுவார்களாக.

“கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் அவமானப்படவேண்டும். எங்களது எல்லா அரசர்களும் தலைவர்களும் அவமானப்படவேண்டும். எங்கள் முற்பிதாக்களும் அவமானப்படவேண்டும். ஏனென்றால், நாங்கள் உமக்கு எதிராகப் பாவங்கள் செய்தோம்.

“ஆனாலும் கர்த்தாவே, நீர் தயவுடையவர் நீர் ஜனங்கள் செய்த தீமைகளை மன்னித்துவிடுகிறீர். நாங்கள் உண்மையில் உமக்கு எதிராகத் திரும்பினோம். 10 நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை. கர்த்தர் தமது ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளை அனுப்பி எங்களுக்குச் சட்டங்களைக் கொடுத்தார். ஆனால் நாங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லை. 11 இஸ்ரவேலில் உள்ள எந்த ஜனங்களும் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். அவர்கள் உமக்குக் கீழ்ப்படியவில்லை. மோசேயின் சட்டத்தில் சாபங்களும் வாக்குத்தத்தங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. (மோசே தேவனுடைய ஊழியன்). அச்சாபங்களும் வாக்குத்தத்தங்களும் சட்டத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறது. அவையெல்லாம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. ஏனென்றால் நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

12 “தேவன், எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் இவை ஏற்படும் என்று சொன்னார். அவர் அவை எங்களுக்கு ஏற்படும்படிச் செய்தார். அவர், எங்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும்படிச் செய்தார். எருசலேம் துன்பப்பட்டது போன்று வேறெந்த நகரமும் துன்பப்பட்டதில்லை. 13 அந்தப் பயங்கரமானவை எல்லாம் எங்களுக்கு ஏற்பட்டன. மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தபடியே இவை நிகழ்ந்தன. ஆனால் நாங்கள் இன்னும் கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை. நாங்கள் இன்னும் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. கர்த்தாவே நாங்கள் உமது சத்தியத்தில் கவனம் செலுத்தவில்லை. 14 கர்த்தர் எங்களுக்காகப் பயங்கரமானவற்றைத் தயார் செய்து வைத்திருந்தார். அவை எங்களுக்கு ஏற்படும்படி அவர் செய்தார். கர்த்தர் இதனைச் செய்தார். ஏனென்றால் அவர் செய்கிற எல்லாவற்றிலும் நியாயமாக இருந்தார். ஆனால் நாங்கள் இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்கிறோம்.

15 “கர்த்தாவே, எங்கள் தேவனே, உமது வல்லமையைப் பயன்படுத்தி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர். நாங்கள் உமது ஜனங்கள். இதன் மூலம் இன்றும் நீர் புகழ்பெற்று விளங்குகிறீர். கர்த்தாவே நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறோம். 16 கர்த்தாவே, எருசலேம் மீது கொண்ட கோபத்தை நிறுத்தும். எருசலேம் உமது பரிசுத்தமான மலையின் மீது இருக்கிறது. நீர் சரியானவற்றையே செய்கிறீர். எனவே எருசலேம் மீதுள்ள கோபத்தை நிறுத்தும். எங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்கள் உமது ஜனங்களைக் கேலி செய்கிறார்கள். ஏனென்றால் நாங்களும் எங்கள் முற்பிதாக்களும் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

17 “இப்பொழுதும், கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது ஊழியன். உதவிக்கான என்னுடைய ஜெபத்தைக் கேளும். உமது பரிசுத்தமான இடத்திற்கு நன்மையைச் செய்யும். அந்தக் கட்டிடம் அழிக்கப்பட்டது. ஆனாலும் ஆண்டவரே, உமது பரிசுத்தமான இடத்தினிமித்தம் இந்நன்மையைச் செய்யும். 18 என் தேவனே, என்னைக் கவனித்துக் கேளும்! உமது கண்களைத் திறந்து, எங்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களைப் பாரும். உமது நாமத்தால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு என்ன நேரிட்டது என்று பாரும்! நாங்கள் நல்ல ஜனங்கள் என்று நான் சொல்லவில்லை. அதற்காகத்தான் நான் இவற்றையெல்லாம் கேட்கவில்லை. நான் இவற்றைக் கேட்கிறேன். ஏனென்றால் நான் உமது இரக்கத்தை அறிவேன். 19 கர்த்தாவே, என்னைக் கவனித்துக் கேளும். கர்த்தாவே எங்களை மன்னியும். கர்த்தாவே கவனித்து, ஏதாவது செய்யும். காத்திருக்கவேண்டாம். இப்பொழுது ஏதாவது செய்யும். இதனை உமது மகிமைக்காகச் செய்யும். என் தேவனே, இப்பொழுது உமது நாமத்தால் அழைக்கப்படுகிற உமது நகரத்துக்காகவும், உமது ஜனங்களுக்காகவும் ஏதாவது செய்யும்” என்றேன்.

70 வாரங்கள் பற்றிய தரிசனம்

20 நான் எனது ஜெபத்தில் தேவனிடம் இவற்றைச் சொன்னேன். நான் எனது பாவங்களைப் பற்றியும், இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் தேவனுடைய பரிசுத்தமான மலைக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். 21 நான் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, காபிரியேல் என்ற தூதன் என்னிடம் வந்தான். காபிரியேல் நான் தரிசனத்தில் பார்த்த மனிதன். காபிரியேல் விரைவாக என்னிடம் பறந்துவந்தான். அவன் மாலைப் பலி நேரத்தில் வந்தான். 22 காபிரியேல், நான் அறிய விரும்பியவற்றை நான் புரிந்துகொள்ள உதவினான். காபிரியேல் என்னிடம், “தானியேலே, நான் உனக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுக்க வந்திருக்கிறேன். 23 நீ முதலில் ஜெபிக்க ஆரம்பித்தபோதே எனக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. நான் உன்னிடம் சொல்ல வந்தேன். தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். இந்தக் கட்டளையை நீ புரிந்துகொள்வாய். நீ இந்தத் தரிசனத்தைப் புரிந்துகொள்வாய்.

24 “தேவன் 70 வாரங்களை உனது ஜனங்களுக்கும் உனது பரிசுத்தமான நகரத்திற்கும் அனுமதித்தார். தீமைகள் செய்வதை நிறுத்துவதற்கும், பாவங்கள் செய்வதை நிறுத்துவதற்கும், ஜனங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், என்றென்றும் நிலைத்திருக்கிற நன்மையைக் கொண்டு வருவதற்கும், தரிசனங்களையும், தீர்க்கதரிசிகளையும் முத்திரையிடுவதற்கும், மிகப்பரிசுத்தமான இடத்தை அர்ப்பணிப்பதற்கும் இந்த 70 வாரங்கள் நியமிக்கப்பட்டன.

25 “தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது 62 வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும். 26 62 வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.

27 “பிறகு, வருங்கால அரசன் பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.

இதெக்கேல் நதிக்கரையில் தானியேலின் தரிசனம்

10 கோரேசு பெர்சியாவின் அரசன். கோரேசின் மூன்றாவது ஆட்சியாண்டில், தானியேல் இவற்றைக் கற்றுக்கொண்டான். (தானியேலின் இன்னொரு பெயர் பெல்தெஷாத்சார்). இவை உண்மையானவை, ஆனால் இவை புரிந்துகொள்வதற்குக் கடினமானது. ஆனால் தானியேல் இவற்றைப் புரிந்துகொண்டான். இவையெல்லாம் அவனுக்கு ஒரு தரிசனத்தில் விளக்கப்பட்டது.

தானியேல் சொல்கிறதாவது, “அந்தக் காலத்தில், தானியேலாகிய நான் மூன்று வாரங்களுக்குத் துக்கமாக இருந்தேன். அந்த மூன்று வாரங்களில் நான் எவ்வித ருசிகரமான உணவையும் உண்ணவில்லை. நான் எவ்வித இறைச்சியையும் உண்ணவில்லை. நான் எவ்வித திராட்சைரசத்தையும் குடிக்கவில்லை. நான் என் தலையில் எவ்வித எண்ணெயையும் தடவவில்லை. நான் இவ்விதச் செயல்கள் எவற்றையும் மூன்று வாரங்களுக்குச் செய்யவில்லை.

அந்த ஆண்டின் முதல் மாதத்தின் 28வது நாளில் நான் இதெக்கேல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன். நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, ஏறிட்டுப் பார்த்தேன். எனக்கு முன்னால் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மெல்லிய சணல் ஆடை அணிந்திருந்தார். அவரது இடுப்பில் சுத்தமான தங்கக் கச்சையைக் கட்டியிருந்தார். அவரது உடலானது ஒளிவீசும் மிருதுவான கல்லைப் போன்றிருந்தது. அவரது முகம் மின்னலைப்போன்று ஒளி வீசியது. அவரது கண்கள் தீயின் நாவுகள் போன்றிருந்தன. அவரது கைகளும் கால்களும் துலக்கப்பட்ட வெண்கலம் போன்று இருந்தது. அவரது குரலானது ஜனங்கள் கூட்டத்தின் ஆரவாரம்போல் இருந்தது.

தானியேலாகிய நான் ஒருவன் மட்டும்தான் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். என்னோடு இருந்த மனிதர்கள் அந்தத் தரிசனத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும் அவர்கள் பயந்தார்கள். அவர்கள் அவ்வளவாகப் பயந்ததால் ஓடி ஒளிந்து கொண்டனர். எனவே நான் தனியாக விடப்பட்டேன். நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு அச்சமூட்டியது. நான் என் பலத்தை இழந்தேன். எனது முகம் செத்தவனின் முகத்தைப்போன்று வெளுத்தது. நான் உதவியற்றவன் ஆனேன். பிறகு நான் தரிசனத்தில் அம்மனிதன் பேசுவதைக் கேட்டேன். அவரது குரலைக் கேட்டதும் நான் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தேன். நான் முகம் குப்புற தரையில் விழுந்து கிடந்தேன்.

10 பிறகு ஒரு கை என்னைத் தொட்டது. அது நடந்ததும் என் முழங்கால்களும், என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கியது. நான் மிகவும் பயந்து நடுங்கினேன். 11 தரிசனத்தில் அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தானியேலே, தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். நான் உன்னிடம் பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாகச் சிந்தனை செய் எழுந்து நில், நான் உன்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறேன்.” அவன் இதைச் சொன்னதும் நான் எழுந்து நின்றேன். நான் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் பயந்தேன். 12 பிறகு அந்த மனிதன் தரிசனத்தில் மீண்டும் பேசத்தொடங்கினான். அவன், “தானியேலே, பயப்படாதே. முதல் நாளிலேயே நீ ஞானம்பெற முடிவுச் செய்தாய். தேவனுக்கு முன்னால் பணிவாக இருக்க முடிவுசெய்தாய். அவர் உனது ஜெபங்களைக் கேட்டிருக்கிறார். நான் உன்னிடம் வந்தேன். ஏனென்றால் நீ ஜெபம் செய்திருக்கிறாய். 13 ஆனால் பெர்சியாவின் அதிபதி (சாத்தானின் தூதன்) இருபத்தொரு நாள் எனக்கு எதிராக போரிட்டு எனக்குத் தொந்தரவு கொடுத்தான். பிறகு முக்கியமான தேவ தூதர்களில் ஒருவனான மிகாவேல் உதவி செய்ய என்னிடம் வந்தான். ஏனென்றால் நான் ஒருவன்தான் அங்கு பெர்சியா அரசனிடமிருந்து வரமுடியாமல் இருந்தேன். 14 இப்பொழுதும் தானியேலே, உன்னிடம் வருங்காலத்தில் உன் ஜனங்களுக்கு என்ன ஏற்படும் என்று சொல்ல நான் உன்னிடம் வந்திருக்கிறேன். தரிசனமானது நிறைவேற இன்னும் நாளாகும்” என்றான்.

15 அவன் என்னோடு இதனைப் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகம் தரையைத் தொடும்படி நான் தலை கவிழ்ந்து குனிந்தேன். என்னால் பேச முடியவில்லை. 16 பிறகு மனிதனைப்போன்று தோற்றமளித்த ஒருவன் என் உதடுகளைத் தொட்டான். நான் வாயைத்திறந்து பேச ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவனிடம் நான், “ஐயா, நான் கலக்கமடைந்தேன், பயப்படுகிறேன். ஏனென்றால், நான் பார்த்த தரிசனம் இத்தகையது. நான் உதவியற்றவனாக உணருகிறேன். 17 ஐயா, நான் உமது ஊழியனான தானியேல். நான் உம்மோடு எப்படிப் பேசமுடியும்? எனது பலம் போய்விட்டது. எனக்கு மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது” என்றேன்.

18 மனிதனைப் போன்று தோற்றமளித்தவன் என்னை மீண்டும் தொட்டான். அவன் என்னைத் தொட்ட பின் நான் திடமாக உணர்ந்தேன். 19 பிறகு அவன் என்னிடம், “தானியேலே, பயப்படாதே தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். சமாதானம் உன்னுடன் இருப்பதாக. இப்போதும் திடங்கொள்” என்றான்.

அவன் என்னோடு பேசியபோது நான் பலமடைந்தேன். பிறகு நான் “ஐயா, நீர் எனக்குப் பலத்தைக் கொடுத்தீர். இப்பொழுது நீர் பேசலாம்” என்றேன்.

20 அவன், என்னிடம், தானியேலே, நான் உன்னிடம் எதற்காக வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் பெர்சியா அதிபதிக்கு எதிராகச் சண்டையிட விரைவில் திரும்பிப் போகவேண்டும். நான் போகும்போது, கிரேக்க அதிபதி வருவான். 21 ஆனால் தானியேலே, நான் போகும்முன், சத்தியமாகிய புத்தகத்திலே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை முதலில் உனக்குச் சொல்லவேண்டும். மிகாவேலைத் தவிர வேறுயாரும் அத்தீய தூதர்களுக்கெதிராக என்னுடன் நிற்பதில்லை. மிகாவேல் உன் ஜனங்களின் அதிபதியாக ஆளுகை செய்கிறான்.

11 மேதியனாகிய தரியுவின் முதலாம் ஆட்சியாண்டில், மிகாவேல், பெர்சியா அதிபதிக்கு எதிராகப் போர் செய்தபோது நான் அவனுக்கு உதவியாக நின்றேன்.

“இப்பொழுதும், தானியேலே, நான் உண்மையைச் சொல்கிறேன். பெர்சியாவில் மேலும் மூன்று அரசர்கள் ஆளூகைச் செய்வார்கள். பிறகு நாலாவது அரசன் ஒருவன் வருவான். அந்த நாலாவது அரசன் பெர்சியாவை இதற்கு முன் ஆண்ட எல்லா அரசர்களைவிட செல்வந்தனாக இருப்பான். அந்த நாலாவது அரசன் வல்லமையைப் பெறுவதற்கு தனது செல்வத்தைப் பயன்படுத்துவான். அவன், எல்லோரும் கிரேக்க இராஜ்யத்திற்கு எதிராக இருக்கக் காரணமாவான். பிறகு மிகவும் பலமும், வல்லமையும் கொண்ட அரசன் வருவான். அவன் பெரும் வல்லமையுடன் ஆள்வான். அவன் விரும்புகிற எதையும் செய்வான். அதற்குப் பிறகு அவனது இராஜ்யம் உடைந்துபோகும். உலகின் நான்கு பாகங்களாக அவனது இராஜ்யம் பங்கு வைக்கப்படும். அவனது இராஜ்யம் அவனது பிள்ளைகளுக்கோ, பேரப்பிள்ளைகளுக்கோ பங்கு வைக்கப்படமாட்டாது. அவன் பெற்ற வல்லமையை அவனது இராஜ்யம் பெறாது. ஏனென்றால் அவனது இராஜ்யம் பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.

“தெற்கிலுள்ள அரசன் பலமுள்ளவனாவான். ஆனால் அவனது தளபதிகளில் ஒருவன் தெற்கிலுள்ள அரசனைத் தோற்கடிப்பான். அந்தத் தளபதி ஆளத்தொடங்குவான். அவன் மிகவும் வல்லமையுடையவனாக இருப்பான்.

“பிறகு சில ஆண்டுகள் கழிந்ததும் தென் பகுதி அரசனும் அந்தத் தளபதியும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். தென் பகுதி அரசனின் மகள், வடபகுதி அரசனை மணந்துகொள்வாள். அவள் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதனைச் செய்வாள். ஆனால் அவளும், தென் பகுதி அரசனும் போதுமான வல்லமையுடைவர்களாக இருக்கமாட்டார்கள். ஜனங்கள் அவளுக்கு எதிராகவும், அவளை அந்நாட்டுக்குக் கொண்டுவந்தவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள். அந்த ஜனங்கள் அவளது குழந்தைக்கு எதிராகவும், அவளுக்கு உதவியவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள்.

“ஆனால் அவளது குடும்பத்திலிருந்து ஒருவன் வந்து தென்பகுதி அரசனின் இடத்தைப் பிடிக்க வருவான். அவன் வடபகுதி அரசனின் படையைத் தாக்கி, அவனது பலம்வாய்ந்த கோட்டைக்குள் நுழைவான். அவன் போர் செய்து வெல்வான். அவன் அவர்கள் தெய்வங்களின் விக்கிரகங்களை எடுப்பான். அவன் அவர்களின் உலோக விக்கிரகங்களை எடுப்பான். வெள்ளியாலும், பொன்னாலுமான விலைமதிப்புள்ளவற்றையும் எடுப்பான். அவன் அவற்றை எகிப்துக்கு எடுத்துச்செல்வான். அவன் சில ஆண்டுகள் வடபகுதி அரசனுக்குத் தொல்லை கொடுக்கமாட்டான். வடபகுதி அரசன், தெற்கு இராஜ்யத்தைத் தாக்குவான். ஆனால் அவன் தோல்வியடைந்து தனது சொந்தநாட்டிற்குப் போவான்.

10 “வடபகுதி அரசனின் மகன்கள் போருக்குத் தயார் செய்வார்கள். அவர்கள் ஒரு பெரும் படையைச் சேர்ப்பார்கள். அந்தப் படை நாட்டை வெள்ளம்போல் வேகமாகக் கடக்கும். அந்தப் படை தெற்கத்தி அரசனின் பலமான கோட்டை வரை தாக்கும். 11 பிறகு தென்பகுதி அரசன் மிகவும் கோபங்கொள்வான். அவன் வடபகுதி அரசனோடு போரிட படையை நடத்திச் செல்வான். வடபகுதி அரசனுக்குப் பெரும்படை இருக்கும். ஆனால் அவன் போரில் தோல்வியடைவான். 12 வடபகுதி படை தோற்கடிக்கப்படும். அவ்வீரர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள். தென்பகுதி அரசன் மிகவும் பெருமைகொள்வான். அவன் வடபகுதிப் படையில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வான். ஆனால் அவன் தொடர்ந்து வெற்றி பெறமாட்டான். 13 வடபகுதி அரசன் இன்னொரு படையைப் பெறுவான். அப்படை முந்திய படையைவிட மிகப் பெரியதாக இருக்கும். பல ஆண்டுகளுக்குப்பிறகு அவன் தாக்குவான். அப்படைக்கு ஏராளமான ஆயுதங்கள் இருக்கும். அப்படை போரிடத் தயாராக இருக்கும்.

14 “அந்தக் காலங்களில், பல ஜனங்கள் தென்பகுதி அரசனுக்கு எதிராக மாறுவார்கள். உனது சொந்த ஜனங்களில் சிலர் போரை நேசிப்பவர்கள் தென் பகுதி அரசனுக்கு எதிராகக் கலகம் செய்வார்கள். அவர்கள் வெல்லமாட்டார்கள். ஆனால், அவர்கள் இதைச் செய்யும்போது இந்தத் தரிசனத்தை உண்மையாக்குவார்கள். 15 பிறகு வடபகுதி அரசன் வந்து நகரத்தின் மதில்களுக்கெதிராகக் கொத்தளங்களைக் கட்டுவான். பிறகு பலமான நகரத்தைப் பிடிப்பான். தென் பகுதி படைக்குத் திரும்பவும் போரிட வல்லமை இராது. தென்பகுதிப் படையிலுள்ள சிறந்த வீரர்களும் வடபகுதிப் படையைத் தடுக்கிற வல்லமை இல்லாமல் இருப்பார்கள்.

16 “வடபகுதி அரசன் தான் விரும்பியதையெல்லாம் செய்வான். எவரும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் வல்லைம பெற்று அழகான நாட்டை தன் அதிகாரத்திற்குள் கொண்டுவருவான். அவன் அதை அழிக்கிற வல்லமையையும் பெற்றிருப்பான். 17 வடபகுதி அரசன் தனது வல்லமை அனைத்தையும் பயன்படுத்தி தென்பகுதி அரசனோடு போரிட முடிவு செய்வான். அவன் தென்பகுதி அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். வடபகுதி அரசன் தனது மகள்களுள் ஒருத்தியைத் தென்பகுதி அரசனை மணந்துகொள்ளச் செய்வான். வடபகுதி அரசன் தென்பகுதி அரசனைத் தோற்கடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்வான். ஆனால் அத்திட்டங்கள் வெற்றியடையாது, அவன் திட்டங்கள் அவனுக்கு உதவாது.

18 “பிறகு வடபகுதி அரசன் தன் கவனத்தை மத்தியத் தரைக்கடல் கரையோர நாடுகளுக்கு நேராகத் திருப்புவான். அங்குள்ள பல நகரங்களை அவன் தோற்கடிப்பான். ஆனால் பிறகு ஒரு தளபதி அவனது பெருமைக்கும், கலகச் செயல்களுக்கும் ஒரு முடிவு காண்பான். அந்த தளபதி, வடபகுதி அரசன் வெட்கமடையும்படிச் செய்வான்.

19 “அது நடந்தபிறகு, வடபகுதி அரசன் பலமான அரண்களுடைய தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான். ஆனால் அவன் பலவீனமுடையவனாக இருப்பான். அவன் விழுவான். அவன் முடிவடைவான்.

20 “அந்த வடபகுதி அரசனுக்குப்பிறகு ஒரு புதிய அரசன் வருவான். அந்த அரசன் ஒரு வரிவசூலிப்பவனை அனுப்புவான். அந்த அரசன் தான் வளமான வழியில் வாழ போதிய செல்வம் உடையவனாக இருக்க இதனைச் செய்வான். ஆனால் சில ஆண்டுகளில் அந்த அரசன் அழிக்கப்படுவான். ஆனால் அவன் போரில் மரிக்கமாட்டான்.

21 “அந்த அரசனைப் பின்தொடர்ந்து ஒரு கொடுமையான வெறுக்கத்தக்க மனிதன் வருவான். அவனுக்கு அரச குடும்பத்தவன் என்ற பெருமை இருக்காது. அவன் தந்திரமான வழியில் அரசன் ஆவான். ஜனங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரும்போது அவன் இராஜ்யத்தைத் தாக்குவான். 22 அவன் பெரிய வல்லமை மிக்கப் படைகளைத் தோற்கடிப்பான். அவன் ஒப்பந்தம் உடைய தலைவனையும் தோற்கடிப்பான். 23 பல நாடுகள் இந்தக் கொடூரமான வெறுக்கதக்க அரசனோடு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வார்கள். ஆனால் அவன் அவர்களிடம் பொய் பேசி ஏமாற்றிவிடுவான். அவன் பெரும் பலத்தைப் பெறுவான். ஆனால் வெகு சிலர் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

24 “வளமான நாடுகள் பாதுகாப்பை உணரும்போது கொடூரமும் வெறுக்கத்தக்கக் குணமும் கொண்ட அந்த அரசன் போய் தாக்குவான். அவன் சரியான காலத்தில் தாக்கி அவனது பிதாக்கள் வெற்றிபெறாத இடங்களில் தான் வெற்றிபெறுவான். அவன் தோற்கடித்த நாடுகளிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்வான். அவன் அப்பொருட்களைத் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுப்பான். அவன் பலமான நகரங்களைத் தோற்கடித்து அழிக்கத் திட்டம் போடுவான். அவன் வெற்றிபெறுவான். ஆனால் அது குறுகிய காலத்திற்குத்தான்.

25 “அந்த கொடூரமான வெறுக்கத்தக்க அரசனுக்கு மிகப்பெரிய படை இருக்கும். அவன் அப்படையைப் பயன்படுத்தி தனது வல்லமையையும் தைரியத்தையும் காட்டி தென் பகுதி அரசனைத் தாக்குவான். தென் பகுதி அரசன் மிகப்பெரியதும், வல்லமை உடையதுமான படையைப் பெற்று போருக்குப் போவான். ஆனால் அவனுக்கு எதிரான ஜனங்கள் இரகசிய திட்டங்களை இடுவார்கள். தென்பகுதி அரசன் தோற்கடிக்கப்படுவான். 26 தென்பகுதி அரசனுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனது படை தேற்கடிக்கப்படும். போரில் அவனது படைவீர்களில் பலர் கொல்லப்படுவார்கள். 27 அந்த இரண்டு அரசர்களும் ஒருவருக்கு ஒருவர் தீமைச் செய்ய நினைப்பார்கள். அவர்கள் ஒரே பந்தியில் உட்கார்ந்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் பொய் சொல்வார்கள். அதனால் இருவருக்கும் எந்த நன்மையும் விளைவதில்லை. ஏனென்றால் தேவன் அவர்களது முடிவுகாலத்தைக் குறித்திருக்கிறார்.

28 “வடபகுதி அரசன் பெருஞ்செல்வத்தோடு தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான். பிறகு அவன் பரிசுத்தமான உடன்படிக்கைக்கு எதிராக தீமைகளைச் செய்ய முடிவுச் செய்வான். அவன் தனது திட்டப்படி செய்தபிறகு, தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான்.

29 “ஏற்ற காலத்தில் வடபகுதி அரசன் தென் பகுதி அரசனை மறுபடியும் தாக்குவான். ஆனால் இந்த முறை அவன் முன்புபோல வெற்றிபெறமாட்டான். 30 கித்தீமிலிருந்து கப்பல்கள் வந்து வட பகுதி அரசனுக்கு எதிராகப் போரிடும். அக்கப்பல்கள் வந்து அவனை அச்சுறுத்துவதை அவன் காண்பான். பிறகு அவன் திரும்பிப் போய் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபங்கொள்வான். அவன் திரும்பி, பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைவிட்டவர்களை ஆதரிப்பான். 31 வடபகுதி அரசன் தனது படையை எருசலேம் ஆலயத்தில் பயங்கரமான செயல்களைச் செய்ய அனுப்புவான். அவர்கள் ஜனங்களைத் தினபலி கொடுக்காதபடிக்குத் தடுப்பார்கள். பிறகு அவர்கள் உண்மையிலேயே பயங்கரமான செயல்களைச் செய்வார்கள். அழிவுக்குக் காரணமாகும் அந்தப் பயங்கரமான காரியத்தை ஏற்படுத்துவார்கள்.

32 “வடபகுதி அரசன் பொய்களையும் இச்சகப் பேச்சையும் பயன்படுத்தி பரிசுத்த உடன்படிக்கையைப் பின்பற்றுவதை யூதர்கள் கைவிடும்படி செய்வான். அந்த யூதர்கள் மீண்டும் மிக மோசமான பாவங்களைச் செய்வார்கள். ஆனால் தேவனை அறிந்த, அவருக்குக் கீழ்ப்படிகிற யூதர்கள் பலம் பெறுவார்கள். அவர்கள் திரும்பி எதிர்த்து போரிடுவார்கள்.

33 “அந்த யூதர்களில் ஞானமுள்ளவர்கள் பலருக்கு அறிவை உணர்த்துவார்கள். ஆனாலும் ஞானிகள் கூட கொடுமைப்படுத்தப்படுவார்கள். சில ஞானமுள்ள யூதர்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் எரிக்கப்படுவார்கள், அல்லது சிறைபடுத்தப்படுவார்கள். சில யூதர்களின் சொத்துக்களும் வீடுகளும் கொள்ளையடிக்கப்படும். 34 அறிவுமிக்க யூதர்கள் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கொஞ்சம் உதவியும் பெறுவார்கள். ஆனால் அவர்களோடு சேரும் அநேக யூதர்கள் போலிகளாக இருப்பார்கள். 35 அறிவுமிக்க யூதர்களில் சிலர் தவறுகள் செய்து விழுவார்கள். ஆனாலும் கொடுமைக் காலம் வர வேண்டும். ஏனென்றால் அப்பொழுது அவர்கள் பலமுள்ளவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் ஆகமுடியும். இது முடிவுகாலம் வரும்வரை இருக்கும். பிறகு, சரியான நேரத்தில் முடிவு காலம் வரும்.

தன்னையே புகழும் அரசன்

36 “வடபகுதி அரசன் தான் விரும்புகிறதையெல்லாம் செய்வான். அவன் தன்னைப் பற்றியே பேசுவான். அவன் தன்னையே புகழுவான். தன்னைத் தேவனை விட பெரியவனாக நினைப்பான். அவன் இதுவரை எவரும் கேட்காதவற்றையெல்லாம் பேசுவான். அவன் தெய்வங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பவருக்கெதிராக அவ்வாறு பேசுவான். அனைத்து தீமைகளும் ஏற்படும்வரை அவன் வெற்றிபெறுவான். தேவன் என்ன திட்டமிட்டிருக்கிறாரோ அது நடைபெறும்.

37 “அந்த வடபகுதி அரசன் தனது பிதாக்கள் தொழுத தெய்வங்களைப்பற்றி கவலைப்படமாட்டான். அவன் பெண்களால் தொழுகை செய்யப்படும் விக்கிரகங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டான். அவன் எந்த தேவனைப்பற்றியும் கவலைப்படமாட்டான். அதற்குப் பதில் அவன் தன்னைத் தானே புகழுவான். அவன் மற்ற தெய்வங்களைவிடத் தன்னையே முக்கியமானவனாக ஆக்கிக்கொள்வான். 38 வடபகுதி அரசன் எந்தத் தேவனையும் தொழுதுகொள்ளமாட்டான். ஆனால் அவன் அதிகாரத்தைத் தொழுதுகொள்வான். அதிகாரமும் வல்லமையுமே அவனது தெய்வங்கள். அவன் பிதாக்கள் தன்னைப் போல் வல்லமையை நேசிக்கவில்லை. அவன் அதிகாரமாகிய தேவனை பொன்னாலும், வெள்ளியாலும் விலைமதிப்புள்ள நகைகளாலும், அன்பளிப்புகளாலும், பெருமைப்படுத்துவான்.

39 “அந்த வடபகுதி அரசன் பலம் வாய்ந்த கோட்டைகளை அந்நிய தெய்வங்களின் உதவியுடன் தாக்குவான். அவன் தன்னோடு சேர்ந்த அயல்நாட்டு அரசர்களுக்கு மிகுந்த மரியாதையைக் கொடுப்பான். அந்த அரசர்களுக்குக் கீழே அவன் பல ஜனங்களை வைப்பான். அவர்கள் ஆளும் நாடுகளுக்காக வரி வசூலிப்பான்.

40 “முடிவின் காலத்தில் தென்பகுதி அரசன் வடபகுதி அரசனோடு போர் செய்வான். வட பகுதி அரசன் அவனைத் தாக்குவான். இரதங்களோடும், குதிரைப்படை வீரர்களோடும், பல பெரிய கப்பல்களோடும் வந்து தாக்குவான். வடபகுதி அரசன் நாட்டை விட்டு வெள்ளத்தைப் போன்று வேகமாக ஓடுவான். 41 வடபகுதி அரசன் அழகான தேசத்தைத் தாக்குவான். வடபகுதி அரசனால் பல நாடுகள் தோற்கடிக்கப்படும். ஆனால் ஏதோம், மோவாப், அம்மோன் தலைவர்கள் அவனிடமிருந்து காப்பாற்றப்படுவர். 42 வடபகுதி அரசன் பல நாடுகளில் தன் வல்லமையைக் காட்டுவான். எகிப்தும் தான் எவ்வளவு வல்லமையானவன் என்பதை தெரிந்துகொள்ளும். 43 அவன் எகிப்திலுள்ள பொன்னும் வெள்ளியுமான எல்லாச் செல்வங்களையும் பெறுவான். லீபியரும், எத்தியோப்பியரும் அவனுக்கு அடிபணிவார்கள். 44 ஆனால் வடக்கத்தி அரசன் கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் அவனை அச்சமும் கோபமும் கொள்ளத்தக்கச் செய்திகளைக் கேட்பான். அவன் பல தேசங்களை முழுமையாக அழிக்கப் போவான். 45 கடல்களுக்கு இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையில் தனது இராஜ கூடாரத்தை அமைத்துக்கொள்வான். ஆனால் இறுதியில், அத்தீய அரசன் சாவான். அவனது முடிவுகாலம் வரும்போது அவனுக்கு உதவிச் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள்.”

12 “தரிசனத்தில் அந்த ஆள், தானியேலே, அந்த நேரத்தில், பெரிய அதிபதியாகிய மிகாவேல் தூதன் எழுந்து நிற்பான். மிகாவேல் உனது யூத ஜனங்களுக்கு பொறுப்பானவன். மிகத் துன்பமான ஒரு காலம் வரும். பூமியில் தேசங்கள் தோன்றிய நாள் முதலாக இதுபோன்ற துன்பகாலம் ஏற்பட்டிருக்காது. ஆனால் தானியேலே, அந்த நேரத்தில், உன் ஜனங்களில் எவருடைய பெயர் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். பூமியில் உள்ள ஜனங்களில் செத்துப் புதைக்கப்பட்டவர்கள் எல்லாரும் எழும்புவார்கள். அவர்களில் சிலர் என்றென்றும் வாழ்வதற்காக எழுந்திருப்பார்கள். ஆனால் சிலர் என்றென்றும் வெட்கமும் வெறுப்பும் அடைவதற்காக எழும்புவார்கள். ஞானமுள்ள ஜனங்கள் வானத்து ஒளியைப்போன்று பிரகாசிப்பார்கள். ஜனங்களை நல்ல வழியில் வாழக் கற்றுத்தந்த ஞானிகள் என்றென்றைக்கும் வானத்து நட்சத்திரங்களைப் போன்று ஒளி வீசுவார்கள்.

“ஆனால் தானியேலாகிய நீ, இச்செய்தியை இரகசியமாக வைத்துக்கொள். நீ இந்தப் புத்தகத்தை மூடிவை. நீ முடிவு காலம்வரை இந்த இரகசியத்தைக் காக்க வேண்டும். அநேக ஜனங்கள் உண்மையான அறிவைத் தேடி அங்கும் இங்கும் அலைவார்கள். அவர்களுக்கு உண்மையான அறிவு வளரும்.”

பிறகு தானியேலாகிய நான் வேறு இரண்டு பேரைப் பார்த்தேன். ஒருவன் ஆற்றங்கரையில் எனது பக்கம் நின்றுகொண்டிருந்தான். இன்னொருவன் ஆற்றின் இன்னொரு கரையில் நின்றுகொண்டிருந்தான். சணல் துணி அணிந்திருந்த ஒருவன், ஆற்றின் தண்ணீரின் மேல் நின்றுகொண்டிருந்தான். இருவரில் ஒருவன் அவனிடம் சொன்னான், “இந்த அதிசயங்களெல்லாம் உண்மையாவதற்கு எவ்வளவு காலமாகும்?”

சணல் ஆடை அணிந்து ஆற்றுத் தண்ணீரின்மேல் நின்றவன் தனது வலது கையையும், இடது கையையும் வானத்தை நோக்கி நீட்டினான். அவன் என்றென்றும் ஜீவித்திருக்கிற தேவனுடைய நாமத்தால் ஆணையிட்டதை நான் கேட்டேன். அவன் சொன்னான்: “இது மூன்றும், அரை ஆண்டு காலமும் இருக்கும். பரிசுத்த ஜனங்களின் வல்லமை உடையும். இவை அனைத்தும் இறுதியில் உண்மையாகும்.”

நான் பதிலைக் கேட்டேன். ஆனால் உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே நான் கேட்டேன், “ஐயா, இவை எல்லாம் உண்மையானதும் என்ன நிகழும்?” என்று கேட்டேன்.

அவன், என்னிடம், “தானியேலே, உன் வாழ்க்கையை நீ தொடர்ந்து நடத்து. இந்த வார்த்தைகள் முடிவுகாலம் வரை இரகசியமாகவும் மறைக்கப்பட்டும் இருக்கும். 10 பலர் சுத்தமாக்கப்படுவார்கள். அவர்கள் தம்மைத் தாமே சுத்தப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் தீயவர்கள் தீமையில் தொடருவார்கள். அக்கெட்டவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் ஞானமுள்ளவர்கள் இவற்றைப் புரிந்துகொள்வார்கள்.

11 “தினபலிகள் நிறுத்தப்படும். அக்காலம் முதல் அழிவை உண்டாக்கும் பயங்கரம் ஏற்படுத்தப்பட்ட நாள்வரை 1,290 நாள் செல்லும். 12 1,335 நாள்வரை காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.

13 “தானியேலே நீயோவென்றால் முடிவு வருமட்டும் சென்று வாழ்ந்திரு. உனது இளைப்பாறுதலை முடிவில் நீ பெறுவாய். மரணத்திலிருந்து எழும்பி, உனது பங்கைப் பெறுவாய்” என்றான்.

ஓசியாவின் மூலமாக தேவனாகிய கர்த்தருடைய செய்தி

பெயேரியின் மகனாகிய ஓசியாவுக்கு வந்த கர்த்தருடைய செய்தி இதுதான். இந்த வார்த்தை யூதாவின் அரசர்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் இருந்தபோது வந்தது. இது, இஸ்ரவேலின் அரசனான யோவாசின் மகனான யெரொபெயாம் என்பவனின் காலத்தில் நடந்தது.

இது கர்த்தருடைய முதல் செய்தியாக ஓசியாவிற்கு வந்தது. கர்த்தர், “நீ போய் தன் வேசித்தனத்தினால் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு வேசியை மணந்துகொள். ஏனென்றால் இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் எல்லோரும் வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமற்றவர்ளாக இருந்திருக்கிறார்கள்” என்றார்.

யெஸ்ரயேலின் பிறப்பு

எனவே ஓசியா திப்லாயிமின் மகளான கோமேரைத் திருமணம் செய்தான். கோமேர் கர்ப்பமடைந்து ஓசியாவிற்கு ஒரு ஆண்மகனைப் பெற்றாள். கர்த்தர் ஓசியாவிடம் “அவனுக்கு யெஸ்ரயேல். என்று பெயரிடு. ஏனென்றால் இன்னும் கொஞ்சக்காலததில் நான் ஏகூவின் வம்சத்தாரை அவன் யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் சிந்திய இரத்தத்திற்காகத் தண்டிப்பேன். பிறகு இஸ்ரவேலின் இராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவருவேன். அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் வில்லை யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே முறிப்பேன்” என்றார்.

லோருகாமாவின் பிறப்பு

பின்னர் கோமேர் மீண்டும் கர்ப்பமடைந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றாள். கர்த்தர் ஓசியாவிடம், “அவளுக்கு லோருகாமா என்று பெயரிடு. ஏனென்றால் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் காட்டமாட்டேன். நான் அவர்களை மன்னிக்கமாட்டேன். ஆனால் நான் யூதா நாட்டின் மீது இரக்கம் காட்டுவேன். நான் யூதா நாட்டைக் காப்பாற்றுவேன். நான் அவர்களைக் காப்பாற்ற எனது வில்லையோ வாளையோ பயன்படுத்தமாட்டேன். நான் அவர்களைக் காப்பாற்ற போர் குதிரைகளையோ, வீரர்களையோ பயன்படுத்தமாட்டேன். நான் அவர்களை எனது சொந்த பலத்தால் காப்பாற்றுவேன்” என்றார்.

லோகம்மியின் பிறப்பு

கோமேர் லோருகாமாவை பால்மறக்க செய்த பிறகு அவள் மீண்டும் கர்ப்பம் அடைந்தாள். அவள் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றாள். பிறகு கர்த்தர், “அவனுக்கு லோகம்மீ என்றுப் பெயரிடு. ஏனென்றால், நீங்கள் என்னுடைய ஜனங்களல்ல. நான் உங்களது தேவனல்ல என்றார்.

The Lord Speaks to the Nation of Israel கர்த்தர் இஸ்ரவேல் தேசத்துடன் பேசுகிறார்

10 “எதிர்காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கை கடற்கரையிலுள்ள மணலைப் போன்றிருக்கும். உங்களால் அம்மணலை அளக்கவோ, எண்ணவோ இயலாது. ‘நீங்கள் என் ஜனங்களல்ல’ என்று அவர்களுக்கு சொல்வதற்குப் பதிலாக, ‘நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

11 “பிறகு யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களும் ஒன்று கூட்டப்படுவார்கள், அவர்களுக்கு ஓர் ஆட்சியாளனை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களது இராஜ்யம் பூமியில் மிகப் பெரியதாக இருக்கும். யெஸ்ரயேலின் நாள் உண்மையில் மிகப் பெரியதாயிருக்கும்.”

“பிறகு உங்கள் சகோதரர்களிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பீர்கள். நீங்கள் உங்கள் சகோதரிகளிடம், ‘உங்கள்மேல் அவர் இரக்கம் காட்டியிருக்கிறார்’ என்பீர்கள்.”

“உங்கள் தாயோடு வழக்காடுங்கள். ஏனென்றால் அவள் எனது மனைவியல்ல. நான் அவளது கணவனும் அல்ல. அவளிடம் ஒரு வேசியைப் போன்று நடந்துக் கொள்வதை நிறுத்தவேண்டும் என்று சொல்லுங்கள், அவளது மார்பகங்களில் இருந்து தனது நேசர்களை விலக்கும்படி அவளுக்குச் சொல்லுங்கள். அவள் தனது சோரத்தை நிறுத்தாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக்குவேன். நான் அவளைத் தனது பிறந்தநாளில் இருந்ததைப் போலாக்குவேன். நான் அவளது ஜனங்களை வெளியேற்றுவேன். அவள் காலியான வறண்ட பாலைவனம் போலாவாள். அவளை நான் தாகத்தால் மரிக்கச் செய்வேன். நான் அவளது பிள்ளைகள் மேல் இரக்கப்படமாட்டேன். ஏனென்றால் அவர்கள் வேசிப் பிள்ளைகள். அவர்களின் தாய் ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொண்டாள். அவர்களது தாய் தனது செயல்களுக்காக அவமானம் அடையவேண்டும். அவள், ‘நான் என் நேசர்களிடம் செல்வேன். என்னுடைய நேசர்கள் எனக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பார்கள். அவர்கள் எனக்குக் கம்பளியும் ஆடையும் தருவார்கள். அவர்கள் எனக்குத் திராட்சைரசத்தையும் ஒலிவ எண்ணெயையும் தருவார்கள்’ என்றாள்.

“எனவே, நான் (கர்த்தர்) உங்கள் (இஸ்ரவேலின்) பாதையை முட்களால் அடைப்பேன். நான் சுவர் எழுப்புவேன். பிறகு அவள் தனது பாதையைக் கண்டுகொள்ள முடியாமல் போவாள். அவள் தனது நேசர்களின் பின்னால் ஓடுவாள். ஆனால் அவளால் அவர்களைப் பிடிக்க முடியாது. அவள் தன் நேசர்களுக்காகத் தேடிக்கொண்டிருப்பாள். ஆனால் அவளால் அவர்களைக் கண்டுக்கொள்ள முடியாது. பிறகு அவள், ‘நான் எனது முதல் கணவனிடம் (தேவன்) திரும்பிப்போவேன். நான் அவரோடு இருந்தபோது எனது வாழ்க்கை நன்றாக இருந்தது. இப்பொழுது இருக்கிறதை விட அன்று வாழ்க்கை நன்றாக இருந்தது’ என்பாள்.

“அவள் (இஸ்ரவேல்), நான் (கர்த்தர்) ஒருவர்தான் அவளுக்குத் தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்பதை அறியவில்லை. நான் அவளுக்கு மேலும் மேலும் வெள்ளியும் பொன்னும் கொடுத்துவந்தேன். ஆனால் இஸ்ரவேலர்கள் அந்த வெள்ளியையும் பொன்னையும் பயன்படுத்தி பாகாலுக்கான உருவச் சிலைகளைச் செய்தனர். எனவே நான் (கர்த்தர்) திரும்பி வருவேன். நான், என் தானியத்தை அதன் அறுவடைக் காலத்தில் திரும்ப எடுத்துக்கொள்வேன். நான் திராட்சை பழங்கள் தயாராக இருக்கும்போது எனது திராட்சைரசத்தைத் திரும்ப எடுத்துக்கொள்வேன். நான் எனது கம்பளியையும், சணலையும் திரும்ப எடுத்துக்கொள்வேன். இவற்றையெல்லாம் நான் அவளது நிர்வாணத்தை மறைப்பதற்காகக் கொடுத்தேன். 10 இப்பொழுது நான் அவளது ஆடைகளை நீக்குவேன். அவள் நிர்வாணமாவாள். எனவே அவளது நேசர்கள் அவளைப் பார்க்க முடியும். எவராலும் எனது அதிகாரத்திலிருந்து அவளைக் காப்பாற்ற முடியாது. 11 நான் (தேவன்) அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும் எடுத்துக் கொள்வேன். நான் அவளது பண்டிகைகளையும், மாத பிறப்பு நாட்களையும், ஓய்வு நாட்களையும் சபை கூடுகிற எல்லா ஆசரிப்புகளையும் நிறுத்துவேன். 12 நான் அவளது திராட்சைத்தோட்டங்களையும் அத்திமரங்களையும் அழிப்பேன். அவள், ‘எனது நேசர்கள் இவற்றை எனக்குக் கொடுத்தனர்’ என்பாள். ஆனால் நான் அவளது தோட்டத்தைக் காடாக்கும்படி செய்வேன். காட்டுமிருகங்கள் வந்து அவற்றைக் தின்னும்.

13 “அவள் பாகால்களுக்குச் சேவைசெய்தாள். எனவே நான் அவளைத் தண்டிப்பேன். அவள் பாகலுக்கு நறுமணப்பொருட்களை எரித்தாள். அவள் ஆடை அணிவித்தாள், அவள் தனது நகைகளையும், மூக்குத்தியையும் அணிவித்தாள். பிறகு அவள் தனது நேசர்களிடம் போய் என்னை மறந்துவிட்டாள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14 “எனவே, நான் (கர்த்தர்) அவளிடத்தில் இனிமையான வார்த்தைகளால் பேசுவேன். நான் அவளை வனாந்தரத்திற்கு அழைத்துப் போவேன். நான் அவளிடம் நயமாகப் பேசுவேன். 15 அங்கே நான் அவளுக்குத் திராட்சைத் தோட்டங்களைக் கொடுப்பேன். நான் அவளுக்கு நம்பிக்கையின் வாசலைப் போன்ற ஆகோர் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன். பிறகு அவள் எகிப்து தேசத்திலிருந்து வந்த சமயத்திலும் தன் வாலிப நாட்களிலும் என்னோடு பேசினதுபோல் பதிலைத் தருவாள்.” 16 கர்த்தர் இதனைச் சொல்கிறார்.

“அந்த நேரத்தில் நீங்கள் என்னை, ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள். 17 நான் அவளது வாயிலிருந்து பாகால்களின் பெயர்களை எடுத்துவிடுவேன். பிறகு ஜனங்கள் மீண்டும் பாகால்களின் பெயர்களை பயன்படுத்தமாட்டார்கள்.

18 “அப்போது நான் இஸ்ரவேலர்களுக்காகக் காட்டுமிருகங்களோடும் வானத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் உயிர்களோடும், ஒரு உடன்படிக்கைச் செய்துகொள்வேன். நான் போருக்குரியவில், வாள், ஆயுதம் போன்றவற்றை உடைப்பேன். தேசத்தில் எந்த ஆயுதமும் இல்லாதபடிச் செய்வேன். நான் தேசத்தைப் பாதுகாப்பாக இருக்கும்படிச் செய்வேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை சமாதானமாகப் படுக்கச் செய்வேன். 19 நான் (கர்த்தர்) உன்னை என்றைக்குமான எனது மணப் பெண்ணாக்குவேன். நான் உன்னை நன்மை, நீதி, அன்பு, இரக்கம், ஆகிய குணங்கள் உள்ள என்னுடைய மணமகளாக்குவேன். 20 நான் உன்னை எனது உண்மைக்குரிய மனமகளாக்குவேன். பிறகு நீ கர்த்தரை உண்மையாகவே அறிந்துகொள்வாய். 21 அப்போது நான் மறுமொழி தருவேன்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார்.

“நான் வானங்களோடு பேசுவேன்
    அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும்.
22 பூமி தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும்.
    அவை யெஸ்ரயேலின் தேவைகளைப் பூர்த்திச்செய்யும்.
23 நான் அவளது தேசத்தில் பல விதைகளை நடுவேன்.
    நான் லோருகாமாவுக்கு இரக்கம் காட்டுவேன்,
நான் லோகம்மியிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன்.
    அவர்கள் என்னிடம், ‘நீர் எங்களது தேவன்’ என்று சொல்வார்கள்.”

ஓசியா கோமேரை அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வாங்குகிறான்

பிறகு கர்த்தர் மீண்டும் என்னிடம், “கோமேருக்குப் பல நேசர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நீ தொடர்ந்து அவளை நேசி. ஏனென்றால் அதுவே கர்த்தருடைய அன்புக்கு ஒப்பானது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வருகின்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்நியத் தெய்வங்களை தொழுகின்றனர். அவர்கள் (உலர்ந்த) திராட்சை அப்பத்தை உண்ண விரும்புகின்றனர்” என்றார்.

எனவே நான் கோமேரைப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றைரைக் கலம் வாற்கேதுமைக்கும் வாங்கினேன், பிறகு நான் அவளிடம், “நீ என்னுடன் பல நாட்கள் வீட்டில் தங்கவேண்டும். நீ ஒரு வேசியைப்போன்று இருக்கக்கூடாது. நீ இன்னொருவனோடு இருக்கக்கூடாது. நான் உனது கணவனாக இருப்பேன்” என்று சொன்னேன்.

இவ்வாறே, இஸ்ரவேல் ஜனங்கள் வேறு அரசனோ தலைவரோ இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் பலி இல்லாமலும், நினைவுக் கற்கள் இல்லாமலும் இருப்பார்கள். அவர்கள் ஏபோத் ஆடை இல்லாமலும் வீட்டுத் தெய்வங்கள் இல்லாமலும் இருப்பார்கள். இதற்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பி வருவார்கள். பிறகு அவர்கள் தம் தேவனாகிய கர்த்தரையும் அரசனாகிய தாவீதையும்காண வருவார்கள். இறுதி நாட்களில் அவர்கள் கர்த்தரையும் அவரது நன்மைகளையும் பெருமைப்படுத்த வருவார்கள்.

கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபமாயிருக்கிறார்

இஸ்ரவேல் ஜனங்களே கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள். கர்த்தர் இந்த நாட்டில் வாழ்கிற ஜனங்களுக்கு எதிராகத் தன் வாதங்களைச் சொல்லுவார். “இந்நாட்டிலுள்ள ஜனங்கள் உண்மையில் தேவனை அறிந்துகொள்ளவில்லை. தேவனுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இல்லை. ஜனங்கள் பொய்யாணையும், பொய்யும், கொலையும், திருட்டும் செய்கின்றார்கள். அவர்கள் விபச்சாரமும் செய்கின்றனர். அதனால் குழந்தைகளையும் வைத்திருக்கின்றார்கள். ஜனங்கள் மீண்டும் மீண்டும் கொலை செய்கின்றனர். எனவே. அந்த நாடானது ஒரு மனிதன் செத்தவர்களுக்காக புலம்புவதுபோல் இருக்கிறது, அதன் ஜனங்கள் அனைவரும் பலவீனமுடையவர்களாக இருக்கின்றனர். காடுகளில் உள்ள மிருகங்களும் வானத்து பறவைகளும்கடலிலுள்ள மீன்களும் மரித்துக்கொண்டிருக்கின்றன. எவனொருவனும் இன்னொருவனோடு வாதம் செய்வதோ அல்லது பழி சொல்லவோ கூடாது, ஆசாரியரே, எனது வாதம் உங்களோடு உள்ளது, நீங்கள் (ஆசாரியர்கள்) பகல் நேரத்தில் இடறி விழுவீர்கள். இரவில் தீர்க்கதரிசியும் உங்கேளாடு விழுவான். நான் உங்கள் தாயை அழிப்பேன்.

“எனது ஜனங்கள் அழிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அறிவில்லை. நீ கற்றுக்கொள்ள மறுத்திருக்கிறாய். எனவே, நீ எனக்கு ஆசாரியனாக இருக்கிறதை நான் மறப்பேன். நீ உனது தேவனுடைய சட்டங்களை மறந்திருக்கிறாய். எனவே நான் உன் பிள்ளைகளை மறப்பேன். அவர்கள் தற்பெருமை கொண்டார்கள். அவர்கள் எனக்கு எதிராக மேலும் மேலும் பாவங்கள் செய்தார்கள். எனவே நான் அவர்களது மகிமையை அவமானமாக்குவேன்.

“ஆசாரியர்கள் ஜனங்களின் பாவத்தில் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் அப்பாவங்களை மேலும் மேலும் விரும்பினார்கள். எனவே, ஆசாரியர்கள் எவ்விதத்திலும் ஜனங்களை விட வித்தியாசமானவர்களாக இல்லை. நான் அவர்களை அவர்கள் செய்த தவற்றுக்காகத் தண்டிப்பேன். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக அதற்குரிய பலனை அளிப்பேன். 10 அவர்கள் உண்பார்கள். ஆனால் அது அவர்களுக்குத் திருப்தியைத் தராது. அவர்கள் பாலினஉறவு பாவத்தை செய்வார்கள். ஆனால் குழந்தைகள் பெறமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கர்த்தரை விட்டு விலகி விபச்சாரிகளைப் போன்று ஆகிவிட்டார்கள்.

11 “வேசித்தனமும், பலமான குடியும். புதிய திராட்சைரசமும் ஒருவனின் சிந்தனைச் சக்தியை அழித்துவிடும், 12 எனது ஜனங்கள் மரக்கட்டைகளிடம் ஆலோசனை கேட்கின்றார்கள், அவர்கள் அக்கட்டைகள் பதில் சொல்லும் என்று எண்ணுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் வேசிகளைப்போன்று அந்நியத் தெய்வங்களை துரத்திக்கொண்டு போயிருக்கிறார்கள், அவர்கள் தமது தேவனை விட்டு விட்டு வேசிகளைப் போன்று ஆனார்கள். 13 அவர்கள் மலைகளின் உச்சியில் பலிகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கர்வாலி மரங்கள், புன்னைமரங்கள், அரசமரங்கள் ஆகியவற்றின் கீழே நறுமணத்தூபங்களை எரிக்கிறார்கள் அம்மரங்களின் நிழல்கள் பார்க்கையில் அழகாக இருக்கின்றன. எனவே உங்கள் மக்கள் விபச்சாரிகளைப்போன்று அம்மரங்களுக்கு அடியில் படுத்துக்கொள்கின்றனர். உங்கள் மருமகள்களும் விபச்சாரம் செய்கின்றார்கள்.

14 “நான் உங்கள் மகள்கள் வேசிகளைப் போன்று நடந்துக்கொள்வதையும் உங்கள் மருமகள்கள் விபச்சாரம் செய்வதையும் குற்றம் சொல்லமாட்டேன். ஆண்கள் போய் வேசிகளோடு படுத்துக்கொள்கின்றார்கள். அவர்கள் கோவில் வேசிகளோடு பலிகள் இடுகின்றார்கள். எனவே அம்முட்டாள் ஜனங்கள் தம்மைத்தாமே அழித்துகொள்கின்றார்கள்.

இஸ்ரவேலர்களின் அவமானத்துக்குரிய பாவங்கள்

15 “இஸ்ரவேலே, நீ ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறாய். ஆனால் யூதாவை அக்குற்றத்துக்கு ஆளாக்காதே. கில்காலுக்குப் போகாதே. பெத்தாவேனுக்கும் போகாதே. ஆணையிடுவதற்குக் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தாதே. ‘கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு...’ என்று ஆணையிடாதே. 16 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஏராளமானவற்றைக் கொடுத்திருக்கிறார். அவர் தம் ஆடுகளை ஏராளம் புல்லுள்ள சமவெளிக்குக் கூட்டிப்போகும் நல்ல மேய்ப்பனைப் போன்றவர். ஆனால் இஸ்ரவேல் பிடிவாதமாக இருக்கிறது. இஸ்ரவேல் அடங்காமல் மீண்டும் மீண்டும் ஓடும் கன்றுக் குட்டியைப் போன்றிருக்கிறது.

17 எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். எனவே அவனைத் தனியே விட்டுவிடு. 18 “எப்பிராயீம் குடித்தவர்களோடு சேர்ந்துகொண்டு விபசாரிகளைப்போல செயல்படுகிறான். அவர்கள் தங்கள் நேசர்களுடன் இருக்கட்டும். 19 அவர்கள் அத்தேவர்களிடம் பாதுகாப்புக்காகச் சென்றார்கள். அவர்கள் தம் சிந்தனையின் வலிமையை இழந்துவிட்டார்கள். அவர்களது பலிகள் அவர்களுக்கு அவமானத்தைக் கொண்டு வருகின்றன”.

இஸ்ரவேலும் யூதாவும் பாவஞ்செய்ய தலைவர்களே காரணமாகுதல்

“ஆசாரியர்களே, இஸ்ரவேல் தேசமே, அரச குடும்பத்து ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் குற்றவாளிகளாக நியாய்ந்தீர்க்கப்பட்டுள்ளீர்கள்.

நீங்கள் மிஸ்பாவில் கண்ணியைப் போன்றிருந்தீர்கள். நீங்கள் தாபோரில் தரை மேல் விரிக்கப்பட்ட வலையைப் போன்றிருக்கிறீர்கள். நீங்கள் பல தீமைகளைச் செய்திருக்கிறீர்கள். எனவே நான் உங்கள் அனைவரையும் தண்டிப்பேன். நான் எப்பிராயீமை அறிவேன். இஸ்ரவேல் செய்திருக்கிற செயல்களையும் நான் அறிவேன். எப்பிராயீமே, இப்பொழுது நீ ஒரு வேசியைப்போல் நடந்துக்கொள்கிறாய். இஸ்ரவேல் பாவங்களால் அழுக்கடைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றார்கள். அத்தீமைகள் அவர்களை அவர்களுடைய தேவனிடம் மறுபடியும் வராமல் தடுக்கின்றன. அவர்கள் எப்பொழுதும் அந்நிய தெய்வங்களைத் பின்பற்றும் வழிகளையே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை அறியாதிருந்தார்கள். இஸ்ரவேலின் அகந்தை அவர்களுக்கு எதிரான சாட்சியாக உள்ளது. எனவே, இஸ்ரவேலும் எப்பிராயீமும் தமது பாவங்களில் இடறி விழுவார்கள். ஆனால் யூதாவும் அவர்களோடு இடறி விழும்.

“ஜனங்களின் தலைவர்கள் கர்த்தரைத் தேடி போவார்கள். அவர்கள் தங்களோடு ஆடுகளையும் பசுக்கைளையும் எடுத்துச் செல்வார்கள். ஆனால் அவர்கள் கர்த்தரைக் கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர் அவர்களைவிட்டு விலகினார். அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமானவர்களாக இல்லை. அவர்களின் பிள்ளைகள் ஏதோ அந்நியனிடமிருந்து வந்தவர்கள். இப்பொழுது அவர் மீண்டும் அவர்களையும் அவர்களது நாட்டையும் அழிப்பார்.”

இஸ்ரவேலின் அழிவு பற்றிய தீர்க்கதரிசனம்

“கிபியாவிலே பூரிகையை ஊதுங்கள்.
    ராமாவிலே எக்காளத்தை ஊதுங்கள்.
பெத்தாவேனிலே எச்சரிக்கைக் கொடுங்கள்.
    பென்யமீனே, பகைவன் உனக்குப் பின்னால் உள்ளான்.
எப்பிராயீம் தண்டனை காலத்தில் வெறுமையாகிவிடும்.
    நான் (தேவன்)
இஸ்ரவேல் குடும்பங்களுக்கு
    நிச்சயமாக வரப்போவதைக் கூறி எச்சரிப்பேன்.
10 யூதாவின் தலைவர்கள் திருடர்களைப் போன்று
    மற்றவர்களின் சொத்துக்களைத் திருட முயற்சிக்கிறார்கள்.
எனவே நான் (தேவன்) தண்ணீரைப்
    போன்று எனது கோபத்தை அவர்கள்மீது ஊற்றுவேன்.
11 எப்பிராயீம் தண்டிக்கப்படுவான்.
அவன் திராட்சைப் பழத்தைப் போன்று நசுக்கிப் பிழியப்படுவான்.
    ஏனென்றால் அவன் அருவருப்பானவற்றைப் பின்பற்ற முடிவுசெய்தான்.
12 நான் எப்பிராயீமை
    பொட்டரிப்பு துணியை அழிப்பது போன்று அழிப்பேன்.
நான் யூதாவை
    மரத்துண்டை அழிக்கும் உளுப்பைப் போன்று அழிப்பேன்.
13 எப்பிராயீம் தனது நோயைப் பார்த்தான், யூதா தனது காயத்தை பார்த்தான்.
    எனவே அவர்கள் அசீரியாவிடம் உதவிக்குச் சென்றார்கள். அவர்கள் பேரரசனிடம் தங்கள் பிரச்சனைகளைச் சொன்னார்கள்.
ஆனால் அந்த அரசன் உங்களைக் குணப்படுத்த முடியாது.
    அவன் உங்கள் புண்களை குணப்படுத்த முடியாது.
14 ஏனென்றால் நான் எப்பிராயீமுக்கு
    ஒரு சிங்கத்தைப் போன்றிருப்பேன்.
நான் யூதா நாட்டிற்கு ஒரு இளம் சிங்கத்தைப் போன்று இருப்பேன்.
நான், ஆம், நான் (கர்த்தர்) அவர்களைத் துண்டு துண்டாக்குவேன். நான் அவர்களை எடுத்துச் செல்வேன்.
    அவர்களை என்னிடமிருந்து எவரும் காப்பாற்ற முடியாது.
15 அவர்கள் தங்களைக் குற்றவாளிகளென்று ஏற்றுக்கொள்ளும்வரை,
    அவர்கள் என்னைத் தேடும்வரை
    நான் எனது இடத்திற்குத் திரும்பிப்போவேன்.
ஆம், அவர்கள் தம் ஆபத்தில் என்னைத் தேடக் கடுமையாக முயற்சி செய்வார்கள்.”

கர்த்தரிடம் திரும்பி வருவதன் பலன்கள்

“வா, நாம் கர்த்தரிடம் திரும்பிப் போவோம்.
    அவர் நம்மைப் புண்படுத்தினார்.
    ஆனால் அவர் நம்மைக் குணப்படுத்துவார்.
அவர் நம்மைக் காயப்படுத்தினார்.
    ஆனால் அவர் நமக்குக் கட்டுகளைப் போடுவார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திரும்பவும் உயிரைக் கொண்டுவருவார்.
    அவர் மூன்றாவது நாள் நம்மை எழுப்புவார்.
    பிறகு நாம் அவரருகில் வாழ முடியும்.
கர்த்தரைப்பற்றி கற்றுக்கொள்வோம்.
    கர்த்தரை அறிந்துக்கொள்ள மிகக் கடுமையாக முயல்வோம்.
அவர் வந்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் காலைநேரம் வந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் போன்று அறிகிறோம்.
    கர்த்தர் நம்மிடம் பூமியை நனைக்க வரும் மழையைப்போன்று வருவார்.”

ஜனங்கள் விசுவாசமற்றவர்கள்

“எப்பிராயீமே. நான் உன்னை என்ன செய்வது?
    யூதா, நான் உன்னை என்ன செய்வது?
உனது விசுவாசம் காலை மூடுபனியைப் போன்று உள்ளது.
    உனது விசுவாசத் தன்மை காலையில் மறையும் பனித்துளியைப் போன்று உள்ளது.
நான் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி
    ஜனங்களுக்காக சட்டங்களைச் செய்தேன்.
எனது கட்டளைகளால் ஜனங்கள் கொல்லப்பட்டார்கள்.
    ஆனால் அந்த முடிவுகளிலிருந்து நன்மைகள் வரும்.
ஏனென்றால் நான் பலிகளை அல்ல.
    விசுவாசமுள்ள அன்பையே விரும்புகிறேன்.
நான் ஜனங்கள் தகன பலிகளை கொண்டு வருவதையல்ல
    ஜனங்கள் தேவனை அறிந்துகொள்வதையே விரும்புகிறேன்.
ஆனால் ஜனங்கள் ஆதாமைப்போன்று உடன்படிக்கையை உடைத்தார்கள்
    அவர்கள் தமது நாட்டில் எனக்கு விசுவாசம் இல்லாதவர்களாய் இருந்தார்கள்.
கீலேயாத். தீமை செய்கிறவர்களின் நகரமாயிருக்கிறது.
    அங்கு ஜனங்கள் மற்றவர்களைத் தந்திரம் செய்து கொல்லுகிறார்கள்.
வழிப்பறிக்காரர்கள் மறைந்திருந்து மற்றவர்களைத் தாக்கக் காத்திருக்கிறார்கள்.
    அதைப் போலவே, சீகேமுக்குப் போகும் சாலையில் அவ்வழியில் செல்லும்
ஜனங்களைத் தாக்க ஆசாரியர்கள் காத்திருக்கின்றார்கள்.
    அவர்கள் தீமைகளைச் செய்திருக்கிறார்கள்.
10 நான் இஸ்ரவேல் நாட்டில் பயங்கரமானவற்றைப் பார்த்திருக்கிறேன்.
எப்பிராயீம் தேவனுக்கு விசுவாசம் இல்லாமல் போனான்.
    இஸ்ரவேல் பாவத்தால் அழுக்கானது.
11 யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது.
    நான் எனது ஜனங்களைச் சிறைமீட்டு வரும்போது இது நிகழும்”

“நான் இஸ்ரவேலைக் குணப்படுத்துவேன்.
    பிறகு ஜனங்கள் எப்பிராயீம் பாவம் செய்ததை அறிவார்கள்.
ஜனங்கள் சமாரியாவின் பொய்களை அறிவார்கள்.
    ஜனங்கள் நகரத்திற்குள் வந்துபோகிற திருடர்களைப் பற்றி அறிவார்கள்.
அந்த ஜனங்கள் நான் அவர்களின் குற்றங்களை நினைப்பேன் என்பதை நம்பமாட்டார்கள்.
    அவர்கள் செய்த கெட்டவைகளெல்லாம் சுற்றிலும் உள்ளன.
    நான் அவர்களது பாவங்களைத் தெளிவாகப் பார்க்கமுடியும்.
அவர்களது தீமை அவர்களின் அரசனை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
    அவர்களது அந்நியத் தெய்வங்கள் அவர்களின் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
அப்பம் சுடுகிறவன் அப்பம் சுடுவதற்காக அடுப்பை எரிக்கிறான்.
    அவன் அடுப்பில் அப்பத்தை வைக்கிறான்.
அப்பத்தின் மாவு புளித்துகொண்டிருக்கும்போது அப்பம் சுடுபவன் அடுப்பில் அளவுக்கு அதிகமான நெருப்பைப் போடமாட்டான்.
    ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறு இல்லை.
    இஸ்ரவேல் ஜனங்கள் எப்பொழுதும் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர்.
நம்முடைய அரசனின் நாளில் அவர்கள் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர். அவர்கள் குடி விருந்துகளைக் கொடுக்கிறார்கள்.
    தலைவர்கள் திராட்சைரசத்தின் சூட்டால் நோயடைகின்றனர். எனவே அரசர்கள் தேவனைப் பரிகாசம் செய்யும் ஜனங்களோடு சேருகின்றார்கள்.
ஜனங்கள் தமது இரகசிய திட்டங்களைப் போடுகிறார்கள்.
    அவர்களது இதயங்கள் சூட்டடுப்பைப் போன்று கிளர்ச்சியடைகின்றன.
அவர்களின் ஆர்வம் இரவு முழுவதும் எரியும்.
    காலையில் அது நெருப்பாய் எரியும்.
அவர்கள் அனைவரும் எரியும் சூட்டடுப்பாய் இருக்கிறார்கள்.
    அவர்கள் தமது ஆட்சியாளர்களை அழித்தார்கள்.
அவர்களின் அரசர்கள் அனைவரும் விழுந்தார்கள்.
    அவர்களில் ஒருவரும் என்னை உதவிக்கு அழைக்கவில்லை.”

இஸ்ரவேலும் மற்ற தேசங்களும்

“எப்பிராயீம் மற்ற தேசங்களோடு கலந்திருக்கிறான்.
    எப்பிராயீம் இரண்டு பக்கமும் வேகாத அப்பத்தைப் போன்று இருக்கிறான்.
அந்நியர்கள் எப்பிராயீமின் பலத்தை அழிக்கிறார்கள்.
    ஆனால் எப்பிராயீம் இதை அறியவில்லை எப்பிராயீம் மேல் நரை மயிர்கள் தெளிக்கப்பட்டுள்ளன.
    ஆனால் எப்பிராயீம் இதனை அறியவில்லை.
10 எப்பிராயீமின் பெருமை அவனுக்கு எதிராகப் பேசுகிறது.
    ஜனங்களுக்குப் பற்பல தொல்லைகள் இருக்கின்றன.
ஆனால் அவர்கள் இன்னும் தமது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பிப் போகவில்லை.
    ஜனங்கள் உதவிக்கு அவரை நோக்கிப் பாக்கவில்லை.
11 எனவே, எப்பிராயீம் புரிந்துக்கொள்ளாத பேதையான சிறிய புறாவைப் போலானான்.
    ஜனங்கள் எகிப்திடம் உதவிக் கேட்டார்கள்.
    ஜனங்கள் அசீரியாவிடம் உதவி கேட்டுப்போனார்கள்.
12 அவர்கள் அந்நாடுகளுக்கு உதவிக் கேட்டுப் போனார்கள்.
    ஆனால் நான் அவர்களை கண்ணியில் சிக்கவைப்பேன்.
நான் எனது வலையை அவர்கள் மேல் வீசுவேன்.
    நான் அவர்களை வானத்துப் பறவைகளைப் போன்று பிடித்து அவர்களை கிழே கொண்டு வருவேன்.
நான் அவர்களை அவர்களது உடன்படிக்கைகளுக்காகத் தண்டிப்பேன்.
13 இது அவர்களுக்குக் கேடாகும். அவர்கள் என்னை விட்டு விலகினார்கள்.
    அவர்கள் எனக்கு அடிபணிய மறுத்தார்கள்.
    எனவே அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
நான் அந்த ஜனங்களைக் காப்பாற்றினேன்.
    ஆனால் எனக்கு எதிராக அவர்கள் பொய்களைப் பேசுகின்றார்கள்.
14 அவர்கள் தம் மனப்பூர்வமாக என்னை எப்பொழுதும் அழைக்கிறதில்லை.
    ஆம் அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து அழுகின்றார்கள்.
தானியத்திற்காகவும் புதுத் திராட்சை ரசத்திற்காகவும் கேட்கும்போது தங்களைத் தாங்களே வெட்டிக்கொள்கிறார்கள்.
    ஆனால் அவர்களின் இதயங்களில் அவர்கள் என்னிடமிருந்து விலகியிருக்கிறார்கள்.
15 நான் அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்கள் கைகளை பலப்படுத்தினேன்.
    ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் தீய திட்டங்களைப் போட்டிருக்கிறார்கள்.
16 ஆனால் அவர்கள் வளைந்த தடியைப் போல இருந்தார்கள்.
    அவர்கள் தங்கள் திசைகளை மாற்றிக்கொண்டார்கள்.
ஆனால் என்னிடம் திரும்பி வரவில்லை. அவர்கள் தலைவர்கள் தங்கள் பலத்தைப்பற்றி பெருமை பேசுகிறார்கள்.
    ஆனால் அவர்கள் வாள்களால் கொல்லப்டுவார்கள்.
பிறகு எகிப்து ஜனங்கள்
    அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.”

விக்கிரக ஆராதனை அழிவுக்கு வழி நடத்தும்

“உன் வாயிலே எக்காளத்தை வை. எச்சரிக்கை செய். கர்த்தருடைய வீட்டின் மேல் ஒரு கழுகைப் போன்றிரு. இஸ்ரவேலர்கள் எனது உடன்படிக்கையை உடைத்து விட்டார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. அவர்கள், ‘எங்கள் தேவனே, இஸ்ரவேலில் உள்ள நாங்கள் உம்மை அறிவோம்!’ என்று கூப்பிடுகின்றார்கள். ஆனால் இஸ்ரவேல் நன்மைகளை மறுத்தான். எனவே பகைவன் அவனைத் துரத்துகிறான். இஸ்ரவேலர்கள் அவர்களது அரசர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர்கள் என்னிடம் ஆலோசனைக்கு வரவில்லை. இஸ்ரவேலர்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர்கள் நானறிந்த மனிதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. இஸ்ரவேலர்கள் தமது வெள்ளியையும். பொன்னையும் பயன்படுத்தி தங்களுக்கு விக்கிரகங்கைளைச் செய்தார்கள். எனவே அவர்கள் அழிக்கப்படுவார்கள். 5-6 சமாரியாவே, கர்த்தர் உனது கன்றுகுட்டியை மறுத்துவிட்டார். தேவன் சொன்னார்: ‘நான் இஸ்ரவேலர்களுக்கு எதிராக மிகவும் கோபத்துடன் இருக்கிறேன்.’ இஸ்ரவேல் ஜனங்கள் தமது பாவத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். யாரோ வேலைக்காரன் அச்சிலைகளைச் செய்தான். அவை தேவன் அல்ல. சமாரியாவின் கன்றுகுட்டி துண்டுதுண்டாக உடைக்கப்படும். இஸ்ரவேலர்கள் காற்றில் விதை விதைக்க முயல்வதுபோன்ற ஒரு முட்டாள்தனமான வேலையைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தெல்லைகளை மட்டுமே பெறுவார்கள். அவர்கள் சூறைக் காற்றை அறுவடை செய்வார்கள். வயல்களில் பயிர்கள் வளரும். ஆனால் அது தானியத்தைக் கொடுக்காது. அதில் ஏதாவது தானியம் விளைந்தாலும் அந்நியர்கள் அதனைத் தின்றுவிடுவார்கள்.

“இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருந்தது.
    இதனுடைய ஜனங்கள் தங்கள் நாடுகளுக்குள்ளே தேவையற்ற கிண்ணத்தை வெளியே தூக்கி எறியப்படும் கிண்ணத்தைப்போல சிதறடிக்கப்பட்டார்கள்.
எப்பிராயீம் அவனுடைய ‘நேசர்களிடம்’ சென்றான்.
    அவன் ஒரு காட்டுக்கழுதையைப் போன்று அசீரியாவில் அலைந்துத் திரிந்தான்.
10 இஸ்ரவேல் பல நாடுகளில் உள்ள தனது நேசர்களிடம் சென்றான்.
    ஆனால் நான் இஸ்ரவேலர்களை ஒன்று சேர்ப்பேன்.
ஆனால் வல்லமையான அரசன் சுமத்தும் சுமைகளினால்
    அவர்கள் சிறிது துன்பப்பட வேண்டும்.

இஸ்ரவேல் தேவனை மறந்து விக்கிரகங்களை வணங்குகிறது

11 எப்பிராயீம் மேலும் மேலும் பலிபீடங்களைக் கட்டியது.
    அது பாவமானது.
    அப்பலிபீடங்கள் எப்பிராயீமின் பாவப் பலி பீடங்களாக இருந்திருக்கின்றன.
12 நான் எப்பிராயீமிற்காக 10,000 சட்டங்களை எழுதினாலும்,
    அவன் அவற்றை யாரோ அந்நியர்களுக்குரியதாகவே கருதுவான்.
13 இஸ்ரவேலர்கள் பலிகளை விரும்புகின்றார்கள்.
    அவர்கள் இறைச்சியைப் படைத்து உண்ணுகிறார்கள்.
கர்த்தர் அவர்களது பலிகளை ஏற்றுக்கொள்வதில்லை.
அவர்களது பாவங்களை அவர் நினைவில் வைத்திருக்கிறார்.
    அவர்களை அவர் தண்டிப்பார்.
    அவர்கள் எகிப்திற்குக் கைதிகளாகக் கொண்டுச் செல்லப்படுவார்கள்.
14 இஸ்ரவேல் அரசர்களின் வீடுகளைக் கட்டினார்கள். ஆனால் இஸ்ரவேல் அதனை உருவாக்கியவரை மறந்துவிட்டது.
    இப்போது யூதா கோவில்களைக் கட்டுகின்றது.
ஆனால் நான் யூதவின் நகரங்களுக்கு நெருப்பை அனுப்புவேன்.
    நெருப்பானது அதன் கோட்டைகளை அழிக்கும்!”

நாடு கடத்தலின் துக்கம்

இஸ்ரவேலே, பிற நாடுகள் செய்வது போன்று விழா கொண்டாடாதே. மகிழ்ச்சியாய் இராதே. நீ ஒரு வேசியைப்போன்று நடந்து உனது தேவனை விட்டு விலகினாய், தானியம் அடிக்கிற எல்லாக் களங்களிலும் நீ பாலின உறவு பாவத்தைச் செய்தாய். ஆனால் தானியம் அடிக்கிற களத்தில் உள்ள தானியம் இஸ்ரவேலுக்குப் போதுமான உணவாக இருக்காது. இஸ்ரவேலுக்குப் போதுமான திராட்சைரசமும் இருக்காது.

இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய நாட்டில் தங்கமாட்டார்கள். எப்ராயீம் எகிப்திற்குத் திரும்புவான். அசீரியாவில் அவர்கள் உண்ணக்கூடாத உணவை உண்பார்கள். இஸ்ரவேலர்கள் கர்த்தருக்குத் திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாக அளிப்பதில்லை. அவருக்கு அவர்கள் பலிகள் கொடுப்பதுமில்லை. அவர்கள் கொடுக்கிற பலிகள் மரித்தவர் வீட்டில் கொடுக்கிற உணவைப்போலிருக்கும். அதைச் சாப்பிடுகிறவர்கள் அசுத்தமடைவார்கள். அவர்கள் அப்பம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போகாது. அவர்களே அதை உண்ண வேண்டியதிருக்கும். அவர்கள் (இஸ்ரவேலர்கள்) கர்த்தருடைய ஓய்வு நாட்கள் அல்லது பண்டிகைகளைக் கொண்டாட முடியாதவர்களாக இருப்பார்கள்.

இஸ்ரவேலர்கள் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய விரோதி அவர்களுக்குண்டான எல்லாவற்றையும் தானாகவே எடுத்துச் சென்றுவிட்டான். ஆனால் எகிப்து அவர்களுடைய ஜனங்களை எடுத்துக்கொள்ளும். மெம்பிஸில் அவர்களைப் புதைப்பார்கள். அவர்களின் வெள்ளிப் பொக்கிஷங்கள் மேல் களைகள் வளரும். அவர்கள் வாழ்ந்த இடங்களில் முட்செடிகள் முளைக்கும்.

இஸ்ரவேல் உண்மையான தீர்க்கதரிசிகளை ஏற்க மறுத்தது

தீர்க்கதரிசி, “இஸ்ரவேலே, இவற்றைக் கற்றுக்கொள். தண்டனைக் காலம் வந்துவிட்டது. நீ செய்த பாவங்களுக்கு விலை செலுத்தவேண்டிய காலம் வந்திருக்கிறது” என்கிறார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, “தீர்க்கதரிசி ஒரு முட்டாள். தேவனுடைய ஆவியோடு இருக்கிற இம்மனிதன் பைத்தியக்காரன்” என்று கூறுகிறார்கள். தீர்க்கதரிசி, “நீ உனது கொடிய பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவாய். நீ உனது வெறுப்பிற்காகத் தண்டிக்கப்படுவாய்” என்று சொல்கிறார். தேவனும் தீர்க்கதரிசியும் எப்பிராயீமை காவல் காக்கிற காவலர்களைப் போன்றவர்கள். ஆனால் வழியெங்கும் பல கண்ணிகள் உள்ளன. ஜனங்கள் தீர்க்கதரிசியை தேவனுடைய வீட்டில் கூட வெறுக்கின்றனர்.

இஸ்ரவேலர்கள் கிபியாவின் நாட்களைப் போன்று அழிவின் ஆழத்திற்குச் சென்றுவிட்டார்கள். கர்த்தர் இஸ்ரவேலர்களின் பாவங்களை நினைவுகொள்வார். அவர் அவர்களது பாவங்களைத் தண்டிப்பார்.

இஸ்ரவேல் அதன் விக்கிரக ஆராதனையால் சேதமடைந்திருக்கிறது

10 நான் இஸ்ரவேலரைக் கண்டுக்கொண்டபோது, அவர்கள் வனாந்திரத்தில் இருக்கும் புதிய திராட்சைப்பழத்தைப்போன்று இருந்தார்கள். அத்திமரத்தில் பருவகாலத்தில் முதல் முதலாகப் பழுத்தப் பழங்களைப் போன்று இருந்தார்கள். ஆனால் அவர்கள் அதன்பிறகு பாகால்பேயேருக்கு வந்தார்கள். அவர்கள் மாறினார்கள். நான் அவர்களை அழுகிப்போன பழங்களை வெட்டுவதைப் போன்று, (அழிப்பதுபோன்று) வெட்ட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அவர்களால் நேசிக்கப்படுகிற பயங்கரமான பொருட்களை (அந்நிய தெய்வங்கள்) போன்று ஆனார்கள்.

இஸ்ரவேலர்களுக்குக் குழந்தைகள் இருக்காது

11 ஒரு பறவையைப் போன்று, எப்பிராயீமின் மகிமை பறந்துபோகும். இனிமேல் கர்ப்பமுறுதல் இல்லாமல் போகும். பிறப்புகளும் பிள்ளைகளும் இல்லாமல் போகும். 12 ஆனால் இஸ்ரவேலர்கள் தம் பிள்ளைகளை வளர்த்தாலும் அது அவர்களுக்கு உதவாது. நான் அவர்களிடமிருந்து அவர்களது பிள்ளைகளை எடுத்துக்கொள்வேன். நான் அவர்களை விட்டுவிடுவேன். அவர்களுக்குத் தொல்லைகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது.

13 எப்பிராயீம் தன் குழந்தைகைளைக் கண்ணிகளுக்கு வழிநடத்திச் செல்வதை நான் பார்க்க முடிகிறது. எப்பிராயீம் தன் பிள்ளைகளை கொலைக்காரர்களிடம் அழைத்து வருகிறான். 14 கர்த்தாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும். நீர் அவர்களுக்குக் குழந்தைகளை இழக்கிற கர்ப்பத்தையும் பால்கொடுக்க முடியாத முலைகளையும் கொடும்.

15 அவர்கள் பொல்லாப்பு கில்காலில் இருக்கிறது.
    நான் அங்கே அவர்களை வெறுக்கத் தொடங்கினேன்.
நான் அவர்களை என் வீட்டை விட்டுப் போகும்படி வற்புறுத்துவேன்.
    ஏனென்றால் அவர்கள் பொல்லாப்புகளைச் செய்துள்ளார்கள்.
நான் இனிமேல் அவர்களை நேசிக்கமாட்டேன்.
    அவர்கள் தலைவர்கள் கலகக்காரர்கள்.
    அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றார்கள்.
16 எப்பிராயீம் தண்டிக்கப்படுவான்.
    அவர்கள் வேர் செத்துக்கொண்டிருக்கிறது.
    அவர்களுக்கு இனிமேல் குழந்தைகள் இருக்காது.
அவர்கள் குழந்தைகள் பெறலாம்.
    ஆனால் நான் அவர்களது உடலிலிருந்து வருகிற குழந்தைகளைக் கொல்வேன்.
17 அந்த ஜனங்கள் என்னுடைய தேவன் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்.
    எனவே அவர் அவர்கள் சொல்வதைக் கேட்க மறுப்பார்.
அவர்கள் வீடு இல்லாமல் தேசங்கள் முழுவதும் அலைந்து திரிவார்கள்.

இஸ்ரவேலின் செல்வமே, விக்கிரகத் தொழுகைக்கு வழி நடத்தியது

10 இஸ்ரவேல் ஏராளமாகக் கனிகளைக் கொடுக்கிற திராட்சைக்கொடியைப் போன்றவன்.
    ஆனால் இஸ்ரவேல் மேலும் மேலும் மிகுதியாகப் பொருட்களைப் பெற்றதும் அந்நிய தெய்வங்களைக் கௌரவிக்க மென்மேலும் பலிபீடங்களைக் கட்டினான்.
அவனுடைய நாடு மேலும் மேலும் வளம் பெற்றது.
    ஆகவே அவன் மேலும் மேலும் அந்நிய தெய்வத்தை கௌரவிக்கக் கற்களை அமைத்தான்.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஏமாற்ற முயன்றார்கள்.
    ஆனால் இப்போது அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
கர்த்தர் அவர்கள் பலிபீடங்களை உடைப்பார்.
    அவர் அவர்கள் நினைவு கற்களை அழிப்பார்.

இஸ்ரவேலர்களின் பொல்லாத முடிவுகள்

இப்போது இஸ்ரவேலர்கள் கூறுகிறார்கள்: “நமக்கு அரசன் இல்லை நாம் கர்த்தரை கௌரவிப்பதில்லை. அவருடைய அரசன் நம்மை ஒன்றும் செய்யமுடியாது!”

அவர்கள் வாக்குறுதிகளைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்களை மட்டுமே சொல்கின்றனர். அவர்கள் தமது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அவர்கள் மற்ற நாடுகளோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார்கள். தேவன் அந்த உடன்படிக்கையை விரும்பவில்லை. நீதிபதிகள் உழுத வயல்களில் முளைத்திருக்கும் விஷத் தன்மையுள்ள களைகள் போன்று உள்ளார்கள்.

சமாரிய ஜனங்கள் பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை ஆராதிக்கிறார்கள். அந்த ஜனங்கள் உண்மையில் அழுவார்கள். அந்த ஆசாரியர்கள் உண்மையில் அழுவார்கள். ஏனென்றால் அவர்களது அழகான விக்கிரகம் போய்விட்டது. அது தூக்கிச் செல்லப்பட்டது. அசீரியாவின் பேரரசனுக்கு அன்பளிப்பாக அவ்விக்கிரகம் கொண்டுப்போகப்பட்டது. அவன் எப்பிராயீமின் அவமானகரமான விக்கிரகத்தை வைத்துக்கொள்வான். இஸ்ரவேல் அதன் விக்கிரகத்தினிமித்தம் அவமானம் அடையும். சமாரியாவின் அந்நிய தெய்வம் அழிக்கப்படும். இது நீர்ப்பரப்பின் மேலே மிதக்கும் மரத்துண்டைப் போன்று இருக்கும்.

இஸ்ரவேல் பாவம் செய்தது. பல உயர் மேடைகளைக் கட்டியது. ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும். அவர்கள் பலிபீடங்களில் முட்செடிகளும், களைகளும் வளரும். பிறகு அவர்கள் மலைகளிடம், “எங்களை மூடுங்கள்!” என்றும் குன்றுகளிடம் “எங்கள் மேல் விழுங்கள்” என்றும் கூறுவார்கள்.

இஸ்ரவேல் பாவத்துக்கு விலை கொடுக்கும்

இஸ்ரவேலே நீ கிபியாவின் காலத்திலிருந்து பாவம் செய்தாய். (அந்த ஜனங்கள் அங்கே தொடந்து பாவம் செய்துக்கெண்டிருக்கிறார்கள்.) கிபியாவில் அப்பொல்லாத ஜனங்களை யுத்தம் உண்மையாகவே கைப்பற்றும். 10 நான் அவர்களைத் தண்டிக்க வருவேன். படைகள் அவர்களுக்கு எதிராகச் சேர்ந்துவரும். அவர்கள் இஸ்ரவேலர்களை அவர்களது இரண்டு பாவங்களுக்காகத் தண்டிப்பார்கள்.

11 எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்ட போரடிக்கும் களத்திலுள்ள தானியங்களின் மேல் நடக்க விரும்பும், இளம் காளையைப் போன்றவன். அவன் கழுத்தில் நான் ஒரு நல்ல நுகத்தடியை மாட்டுவேன். நான் எப்பிராயீமை கயிற்றால் கட்டுவேன். பிறகு யூதா உழவுசெய்யத் தொடங்குவான். யாக்கோபு தானாகவே பரம்படிப்பான்.

12 நீ நன்மையை நட்டால் உண்மையான அன்பை அறுவடை செய்வாய். உன் நிலத்தை உழு. கர்த்தரோடு நீ அறுவடை செய்வாய். அவர் வருவார். அவர் உன் மீது நன்மையை மழைப்போன்று பொழியச் செய்வார்.

13 ஆனால் நீ தீமையை நட்டாய். நீ துன்பத்தை அறுவடை செய்தாய். நீ உன் பொய்களின் கனியை உண்டாய். ஏனென்றால் நீ உன் அதிகாரத்தையும் உன் வீரர்களையும் நம்பியிருந்தாய். 14 எனவே உனது படைகள் யுத்தத்தின் பேரொலியைக் கேட்கும். உனது எல்லா அரண்களும் அழிக்கப்படும். இது பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல் இருக்கும். அப்போர்க்காலத்தில் தாய்மார்கள் தம் குழந்தைகளோடு கொல்லப்பட்டார்கள். 15 உனக்கு அது பெத்தேலில் ஏற்படும். ஏனென்றால் நீ ஏராளமான பாவங்களைச் செய்தாய். அந்த நாள் தொடங்கும்போது இஸ்ரவேலின் அரசன் முழுமையாக அழிக்கப்படுவான்.

இஸ்ரவேல் கர்த்தரை மறந்துவிட்டது

11 கர்த்தர், “இஸ்ரவேல் குழந்தையாக இருக்கும்போது நான் (கர்த்தர்) அவனை நேசித்தேன்.
    நான் என் மகனை எகிப்தை விட்டு வெளியே அழைத்தேன்.
ஆனால் நான் இஸ்ரவேலர்களை மிகுதியாக அழைக்க
    அவர்களும் என்னை விட்டு மிகுதியாக விலகினார்கள்.
இஸ்ரவேலர்கள் பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தார்கள்.
    அவர்கள் விக்கிரகங்களுக்கு நறுமணப் பொருட்களை எரித்தார்கள்.

“ஆனால் எப்பிராயீமை கைப்பிடித்து நடக்கப் பழக்கியது நான்.
    நான் இஸ்ரவேலர்களை என் கைகளில் எடுத்தேன்.
அவர்களைக் குணப்படுத்தினேன்.
    ஆனால் அவர்கள் அதனை அறியாமலிருக்கிறார்கள்.
நான் அவர்களைக் கயிறுகளால் வழி நடத்தினேன்.
    ஆனால் அவை அன்பு என்னும் கயிறுகள்.
நான் விடுதலை அளிக்கும் மனிதனைப் போன்றவன்.
    நான் கீழே குனிந்து அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தேன்.

“இஸ்ரவேலர்கள் தேவனிடம் திரும்ப மறுக்கிறார்கள். எனவே அவர்கள் எகிப்துக்குச் செல்வார்கள். அசீரியாவின் அரசன் அவர்கள் அரசனாவான். அவர்களது நகரங்களின் மேல் வாளானது தொங்கிக்கொண்டிருக்கும். அது அவர்களது பலமுள்ள மனிதர்களைக் கொல்லும். அது அவர்களது தலைவர்களை அழிக்கும்.

“எனது ஜனங்கள் நான் திரும்பி வருவதை எதிர்ப்பார்க்கின்றார்கள். அவர்கள் மேல் நோக்கி தேவனை அழைப்பார்கள். ஆனால் தேவன் அவர்களுக்கு உதவமாட்டார்.”

கர்த்தர் இஸ்ரவேலை அழிக்க விரும்பவில்லை

“எப்பிராயீமே, நான் உன்னைக் கைவிட விரும்பவில்லை.
    இஸ்ரவேலே நான் உன்னைப் பாதுகாக்க விரும்புகிறேன்.
நான் உன்னை அத்மாவைப் போலாக்க விரும்பவில்லை.
    நான் உன்னை செபோயீமைப் போலாக்க விரும்பவில்லை.
நான் என் மனதை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
    உனக்கான எனது அன்பு பலமானது.
நான் எனது பயங்கரமான கோபம் வெல்லுமாறு விடமாட்டேன்.
    நான் மீண்டும் எப்பிராயீமை அழிக்கமாட்டேன். நான் தேவன். மனிதனல்ல. நானே பரிசுத்தமானவர்.
நான் உன்னோடு இருக்கிறேன்.
    நான் எனது கோபத்தைக் காட்டமாட்டேன்.
10 நான் சிங்கத்தைப் போன்று கெர்ச்சிப்பேன்.
    நான் கெர்ச்சிப்பேன்.
அப்போது எனது பிள்ளைகள் என்னைப் பின்தொடர்ந்து வருவார்கள்.
    எனது பிள்ளைகள் மேற்கிலிருந்து பயத்தால் நடுங்கிக்கொண்டே வருவார்கள்.
11 அவர்கள் எகிப்திலிருந்து பறவைகளைப் போன்று நடுங்கிக்கொண்டே வருவார்கள்.
    அவர்கள் அசீரியாவிலிருந்து புறாக்களைப்போன்று நடுங்கிக்கொண்டே வருவார்கள்.
அவர்களை அவர்களுடைய தாய் நாட்டிற்கு எடுத்துச் செல்வேன்.”
    கர்த்தர் அதனைச் சொன்னார்.
12 “எப்பிராயீம் அந்நிய தெய்வங்களால் என்னைச் சூழ்ந்தான்.
    இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
ஆனால் யூதா இன்னும் தேவனோடு நடந்துக்கொண்டிருக்கிறான்.
    யூதா பரிசுத்தமானவர்களோடு உண்மையாய் இருக்கிறான்.”

கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராக இருக்கிறார்

12 எப்பிராயீம் தனது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான். இஸ்ரவேல் நாள் முழுவதும் “காற்றைத் துரத்திக்கொண்டிருக்கிறான்.” ஜனங்கள் மேலும் மேலும் பொய்களைச் சொல்கிறார்கள். அவர்கள் மேலும் மேலும் களவு செய்கிறார்கள். அவர்கள் அசீரியாவோடு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்கள். அவர்கள் தங்கள் ஒலிவ எண்ணெயை எகிப்துக்கு எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.

கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் இஸ்ரவேலுக்கு எதிராக ஒரு வாக்குவாதம் உண்டு. யாக்கோபு தான் செய்த செயலுக்காக தண்டிக்கப்படவேண்டும். அவன் செய்த தீயவற்றுக்காக அவன் தண்டிக்கப்படவேண்டும். யாக்போபு இன்னும் தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் சகோதரனோடு தந்திரம் செய்யத் தொடங்கினான். யாக்கோபு ஒரு பலமான இளைஞனாக இருந்தான். அந்தக் காலத்தில் அவன் தேவனோடு போராடினான். யாக்கோபு தேவனுடைய தூதனோடு போராடி வென்றான். அவன் உதவி கேட்டுக் கதறினான். அது பெத்தேலில் நடந்தது. அந்த இடத்தில் அவன் நம்மோடு பேசினான். ஆம், யேகோவா படைகளின் தேவன். அவரது பெயர் யேகோவா (கர்த்தர்). எனவே, உனது தேவனிடம் திரும்பி வா. அவருக்கு விசுவாசமாக இரு. நல்லவற்றைச் செய்! நீ எப்பொழுதும் உன் தேவனிடம் நம்பிக்கையாய் இரு!

“யாக்கோபு ஓர் உண்மையான வியாபாரி. அவன் தன் நண்பனைக்கூட ஏமாற்றுகிறான். அவனது தராசும் கள்ளத்தராசு. எப்பிராயீம் சொன்னான் ‘நான் செல்வந்தன்! நான் உண்மையான செல்வத்தைக் கண்டுபிடித்துள்ளேன்! எனது குற்றங்களை யாரும் கண்டுகொள்ள முடியாது. யாரும் எனது பாவங்களைத் தெரிந்து கொள்ளமாட்டான்.’

“ஆனால் நீ எகிப்து தேசத்திலிருந்த நாள் முதல், நான் உன் தேவனாகிய கர்த்தராயிருந்திருக்கிறேன், நான் உன்னைப் பண்டிகை நாட்களைப் போன்று (ஆசாரிப்பு கூடார நாட்களைப் போல்) கூடாரங்களில் தங்கச் செய்வேன். 10 நான் தீர்க்கதரிசிகளோடு பேசினேன். நான் அவர்களுக்குப் பல தரிசனங்களைக் கொடுத்தேன். எனது பாடங்களை உனக்குக் கற்பிக்கப் பல வழிகளைத் தீர்க்கதரிசிகளுக்குக் கொடுத்தேன். 11 ஆனால் கீலேயாத் ஜனங்கள் பாவம் செய்தார்கள். அந்த இடத்தில் ஏராளமான பயங்கர விக்கிரகங்கள் இருக்கின்றன. ஜனங்கள் கில்காலில் காளைகளுக்குப் பலிகளைக் கொடுக்கிறார்கள். அந்த ஜனங்களுக்கு ஏராளமான பலிபீடங்கள் இருக்கின்றன. வயல் வரப்புகளில் உள்ள கல் குவியல்களைப் போன்று வரிசை வரிசையாகப் பலிபீடங்கள் இருக்கின்றன.

12 “யாக்கோபு ஆராம் நாட்டுக்கு ஓடிப்போனான். அந்த இடத்தில் இஸ்ரவேல் ஒரு மனைவிக்காக வேலை செய்தான். இன்னொரு மனைவிக்காக அவன் ஆடு மேய்த்தான். 13 ஆனால் கர்த்தர் தீர்க்கதரிசியை உபயோகித்து இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைப் பயன்படுத்தி இஸ்ரவேலைப் பத்திரமாகப் பாதுகாத்தார். 14 ஆனால் எப்பிராயீம் கர்த்தருடைய மிகுந்த கோபத்துக்குக் காரணமாக இருந்தான். எப்பிராயீம் பலரைக் கொன்றான். எனவே அவன் தன் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுவான். அவனது ஆண்டவர் (கர்த்தர்) அவன் அவமானம் அடையும்படிச் செய்வார்.”

இஸ்ரவேல் தன்னைத்தானே அழித்திருக்கிறான்

13 “எப்பிராயீம் இஸ்ரவேலில் தன்னைத் தானே முக்கிமானவனாகச் செய்துக் கொண்டான். எப்பிராயீம் பேசினான். ஜனங்கள் பயந்து நடுங்கினார்கள். ஆனால் எப்பிராயீம் பாவம் செய்தான். பாகாலை தொழத் தொடங்கினான். இப்பொழுது இஸ்ரவேலர்கள் மேலும் மேலும் பாவம் செய்கிறார்கள். அவர்கள் தாங்களாகவே விக்கிரகங்களைச் செய்துக்கொள்கிறார்கள். வேலைக்காரர்கள் வெள்ளியால் அந்த அழகான சிலைகளைச் செய்கிறார்கள். பிறகு அவர்கள் தம் சிலைகளோடு அடிக்கடி பேசுகிறார்கள். அவர்கள் அந்தச் சிலைகளுக்குப் பலி கொடுக்கிறார்கள். அவர்கள் அந்தத் தங்கக் கன்றுகுட்டிச் சிலைகளை முத்தமிடுகிறார்கள். அதனால்தான் அந்த ஜனங்கள் விரைவில் மறைந்துவிடுகிறார்கள். அவர்கள் காலையில் காணும் மூடுபனியைப் போன்றும், விரைவில் மறையும் பனியைப் போன்றும் மறைவார்கள். இஸ்ரவேலர் காற்று வீசும்போது களத்திலிருந்து பறக்கிற பதரைப் போன்றும், ஒரு புகைக் கூண்டிலிருந்து எழும்பி மறைந்து போகும் புகையைப் போன்றும் இருப்பார்கள்.

“நீங்கள் எகிப்து தேசத்திலிருந்த நாள் முதலாக நான் உன் தேவனாகிய கர்த்தராக இருக்கிறேன். நீங்கள் என்னைத் தவிர வேறு தெய்வங்களை அறியவில்லை. நானே உங்களை இரட்சித்தவர். நான் உங்களை வனாந்தரத்திலேயே அறிவேன். நான் உங்களை வறண்ட நிலத்திலும் அறிவேன். நான் இஸ்ரவேலர்களுக்கு உணவு கொடுத்தேன். அவர்கள் அந்த உணவை உண்டார்கள். அவர்கள் தம் வயிறு நிறைந்து திருப்தி அடைந்தார்கள். அவர்கள் வீண் பெருமை அடைந்தார்கள். அவர்கள் என்னை மறந்தார்கள்!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center