Bible in 90 Days
சாலொமோனிடம் கர்த்தர் வருகிறார்
11 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டி முடித்தான். கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரண்மனையிலும் திட்டமிட்டபடியே வெற்றிகரமாகக் கட்டி முடித்தான். 12 பிறகு இரவில் சாலொமோனிடம் கர்த்தர் வந்தார். கர்த்தர் அவனிடம்,
“சாலொமோன், நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். நான் இந்த இடத்தை எனக்குப் பலிகள் தருவதற்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தேன். 13 நான் வானத்தை மூடினால் பின் மழை வராமல் போகும். நான் வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிட்டால் அது பயிரை அழித்துப்போடும் அல்லது என் ஜனங்களிடம் நான் நோயை அனுப்புவேன். 14 என் நாமத்தால் அழைக்கப்படும் என் ஜனங்கள் மனம் வருந்தி, ஜெபம் செய்து, என்னைத் தேடினால், மேலும் தம் பாவங்களை விட்டுவிட்டால் நான் பரலோகத்திலிருந்து அவர்களின் ஜெபங்களைக் கேட்பேன். அவர்களது பாவங்களை மன்னித்து இந்த நாட்டை வளப்படுத்துவேன். 15 இப்போது என் கண்கள் திறந்திருக்கின்றன. இந்த இடத்திலிருந்து ஜெபம் செய்யப்படுபவற்றைக் கேட்க என் காதுகள் திறந்திருக்கின்றன. 16 நான் இவ்வாலயத்தைத் தேர்ந்தெடுத்தேன். இதனைப் பரிசுத்தப்படுத்தினேன். எனவே எனது நாமம் இங்கு என்றென்றும் நிலைத்திருக்கும். எனது கண்ணும் மனமும் எப்பொழுதும் இங்கே இந்த ஆலயத்திலேயே இருக்கும். 17 இப்போது சாலொமோனே, உன் தந்தையைப் போலவே நீயும் என் முன்பாக வாழ்ந்தால், என் கட்டளைகளுக்கெல்லாம் நீ கீழ்ப்படிந்து வந்தால், எனது சட்டங்களையும் விதிகளையும் கடைபிடித்தால், 18 பிறகு நான் உன்னைப் பலமுள்ள அரசனாக ஆக்குவேன். உனது அரசு பெருமைக்குரியதாக இருக்கும். உனது தந்தையான தாவீதோடு நான் செய்து கொண்ட உடன்படிக்கை இதுதான். நான் அவனிடம் ‘தாவீது, இஸ்ரவேலின் அரசனாகிறவன் எப்பொழுதும் உனது குடும்பத்திலிருந்தே வருவான்’ என்று கூறினேன்.
19 “ஆனால் நான் அளித்த சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படியவில்லையென்றால், நீங்கள் மற்ற தெய்வங்களை தொழுதுகொண்டு சேவை செய்வீர்களானால், 20 நான் கொடுத்த எனது நிலத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வெளியேற்றுவேன். எனது நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகக் கட்டிய இவ்வாலயத்தை விட்டுவிலகுவேன். எல்லா நாட்டினரும் இவ்வாலயத்தைப் பற்றி தீயதாகப் பேசும்படி செய்வேன். 21 மிக்க உயர்ந்த மாட்சிமை கொண்ட இவ்வாலயத்தைக் கடந்துபோகிற ஒவ்வொருவனும் வியந்து போகும்படி செய்வேன். அவர்கள், ‘ஏன் கர்த்தர் இதுபோன்ற மோசமான காரியத்தை இந்த நாட்டிற்கும் ஆலயத்திற்கும் செய்தார்?’ என்று கூறுவார்கள். 22 அதற்கு மற்ற ஜனங்கள், ‘இதன் காரணம் என்னவென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது முற்பிதாக்களைப்போன்று தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிய மறுத்தனர். இந்த தேவன்தான் அவர்களை எகிப்தைவிட்டு வெளியே மீட்டுவந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவும் சேவைசெய்யவும் தொடங்கிவிட்டனர். அதனால்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இத்தகைய துன்பங்களைக் கொடுத்துள்ளார் என்பார்கள்’” என்றனர்.
சாலொமோன் கட்டிய நகரங்கள்
8 சாலொமோன் கர்த்தருக்கான ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடிக்க 20 ஆண்டு காலமாயிற்று. 2 ஈராம் தனக்குக் கொடுத்த நகரங்களைப் பிறகு சாலொமோன் கட்டத்தொடங்கினான். அந்நகரங்களில் சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்களில் சிலரை வாழ அனுமதித்தான். 3 இதற்கு பிறகு சாலொமோன் ஆமாத் சோபாவிற்குச் சென்று அதனைக் கைப்பற்றினான். 4 சாலொமோன் வனாந்தரத்திலே தத்மோர் என்ற நகரத்தையும் கட்டினான். சாலொமோன் ஆமாத் நாட்டிலே பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான நகரங்களைக் கட்டினான். 5 சாலொமோன் மீண்டும் மேல்பெத்தொரோனையும் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டினான். அந்த ஊர்களைப் பலமான கோட்டைகளாக்கினான். இந்நகரங்களுக்கு பலமான கதவுகளையும் வாசல்களையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தான். 6 சாலொமோன் மீண்டும் பாலாத்தையும் தனது பொருட்களைச் சேமித்துவைத்த வேறு சில ஊர்களையும் மீண்டும் கட்டினான். இரதங்களை நிறுத்திவைப்பதற்கான எல்லா நகரங்களையும், குதிரையோட்டிகள் வாழ்வதற்கான எல்லா நகரங்களையும் நிர்மாணித்தான். எருசலேம், லீபனோன் மற்றும் தான் அரசனாயிருந்த நாடு முழுவதும் தான் விரும்பியவற்றை எல்லாம் கட்டிமுடித்தான்.
7-8 இஸ்ரவேலர் அல்லாத வேறு இனத்தினரும் அங்கு வாழ்ந்தனர். ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என அவர்கள் பலவகையினர். சாலொமோன் இவர்களை அடிமை வேலைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினான். இவர்கள் இஸ்ரவேல் அல்லாதவர்கள். அவர்கள் இஸ்ரவேலர்களால் அழிக்கப்படாத இந்நிலப்பகுதியை விட்டுப் போனவர்களின் சந்ததியினர். இது இன்றைக்கும் அங்கே தொடர்ந்திருக்கிறது. 9 சாலொமோன் இஸ்ரவேலர் எவரையும் அடிமை வேலைச்செய்யுமாறு பலவந்தப்படுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் சாலொமோனின் போர் வீரர்களாக பணியாற்றினார்கள். இவர்கள் சாலொமோனின் படையில் தளபதிகளாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்கள் சாலொமோனின் தேர்ப்படை அதிகாரிகளாகவும், குதிரை வீரர்களின் அதிகாரிகளாகவும் இருந்தனர். 10 இஸ்ரவேலரில் சிலர் சாலொமோனின் முக்கியமான அதிகாரிகளுக்கான தலைவர்களாக இருந்தனர். இவ்வாறு 250 பேர் ஜனங்களை மேற்பார்வை செய்யும் தலைவர்களாக இருந்தார்கள்.
11 சாலொமோன் பார்வோனின் மகளை தாவீதின் நகரத்திலிருந்து அழைத்துவந்து, அவளுக்காகக் கட்டியிருந்த மாளிகையில் குடிவைத்தான். சாலொமோன், “என் மனைவி தாவீதின் வீட்டிலே இருக்கக் கூடாது. ஏனென்றால் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி இருந்ததால் அவ்விடங்கள் பரிசுத்தமானவை” என்றான்.
12 பிறகு சாலொமோன் கர்த்தருக்காக தகன பலிகளை கர்த்தருடைய பலிபீடத்தில் அளித்தான். இந்தப் பலிபீடத்தை சாலொமோன் ஆலய மண்டபத்திற்கு முன்பு அமைத்திருந்தான். 13 மோசே கட்டளையிட்டபடி ஒவ்வொரு நாளும் சாலொமோன் பலிகளைச் செலுத்தி வந்தான். ஓய்வுநாட்களிலும், மாதப் பிறப்பு நாட்களின் கொண்டாட்டங்களிலும், ஆண்டின் மூன்று விடுமுறை நாட்களிலும் பலிகள் செலுத்தப்பட வேண்டியிருந்தன. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, வாரங்களின் பண்டிகை மற்றும் அடைக்கலக் கூடாரப் பண்டிகை ஆகியவை ஆண்டின் மூன்று விடுமுறை நாட்கள். 14 சாலொமோன் தனது தந்தை தாவீதின் அறிவுரைகளைப் பின்பற்றினான். மேலும் சாலொமோன் ஆசாரியர்கள் குழுவினரை அவர்களது சேவைகளுக்காகத் தேர்ந்தெடுத்தான். தம் பணிகளைச் செய்யுமாறு லேவியர்களையும் நியமித்தான். ஆலயப் பணிகளில் ஒவ்வொரு நாளும் லேவியர்கள் துதிப்பாடல் இசைப்பதில் முதன்மையாக இருந்தும் ஆசாரியர்ளுக்கு உதவியும் வந்தார்கள். அவன் வாசல் காவல் குழுவில் இருந்து பலரை வாயிலைக் காப்பதற்காகத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறுதான் தேவமனிதனான தாவீது அறிவுறுத்தியிருந்தான். 15 ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் சாலொமோன் இட்ட கட்டளைகளில் எதனையும் இஸ்ரவேல் ஜனங்கள் மாற்றவோ மீறவோ இல்லை. மதிப்பு வாய்ந்த பொருட்களைக் காக்கும் வழிமுறையிலும் அவர்கள் சாலொமோனின் கட்டளைகளை மீறவில்லை. கருவூலங்ளையும் இவ்வாறே காத்துவந்தனர்.
16 சாலொமோனின் அனைத்து வேலைகளும் முடிந்தன. கர்த்தருடைய ஆலயப்பணி தொடங்கிய நாள் முதல் முடியும்வரை திட்டமிட்டபடியே மிகச் சிறப்பாக நடந்தன. எனவே காத்தருடைய ஆலய வேலையும் முடிந்தது.
17 பிறகு சாலொமோன் எசியோன் கேபர், ஏலோத் ஊர்களுக்குச் சென்றான். இவ்வூர்கள் ஏதோம் நாட்டில் செங்கடல் ஓரத்தில் உள்ளன. 18 ஈராம் என்பவன் தனது கப்பல்களை சாலொமோனுக்கு அனுப்பினான். ஈராமின் ஆட்களே கப்பலை ஓட்டினார்கள். அவர்கள் கடலில் கப்பல் ஓட்டுவதில் வல்லவர்கள். இவர்களோடு சாலொமோனின் வேலையாட்களும் சேர்ந்து ஓபிர் என்னும் நகருக்குச் சென்றனர். அங்கிருந்து சாலொமோன் அரசனுக்கு 450 தாலந்து பொன்னைக் கொண்டு வந்தனர்.
சீபா நாட்டு அரசி சாலொமோனைப் பார்க்க வருகிறாள்
9 சீபா நாட்டு அரசி சாலொமோனின் மேன்மையை அறிந்தாள். அவள் எருசலேமிற்கு வந்து சாலொமோனைக் கடினமான கேள்விகளால் சோதிக்க விரும்பினாள். அவளோடு ஒரு பெரிய குழுவும் வந்தது. அவள் தனது ஒட்டகங்களில் மணப்பொருட்களையும், பொன்னையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து அவனிடம் பேசினாள். சாலொமோனிடம் கேட்பதற்கு அவளிடம் ஏராளமான கேள்விகள் இருந்தன. 2 சாலொமோன் அவளுடைய கேள்விகள் அனைத்திற்கும் விடையளித்தான். பதில் சொல்லவோ, விளக்கம் தரவோ சாலொமோனுக்கு எதுவும் கடினமாக இல்லை. 3 சீபா அரசி சாலொமோனின் அறிவு ஞானத்தையும், அவன் கட்டிய அரண்மனையையும் பார்த்தாள். 4 அவள் சாலொமோனின் மேஜையில் இருந்த உணவு வகைகளையும் அவனது முக்கிய அதிகாரிகளையும் பார்த்தாள். சாலொமோனின் வேலைக்காரர்கள் பணிசெய்யும் முறையையும், அவர்கள் ஆடைகள் அணிந்திருக்கும் விதத்தையும் கவனித்தாள். அவள் சாலொமோனின் திராட்சைரசம் பரிமாறுபவர்களையும் அவர்களது ஆடைகளையும் கவனித்தாள். கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோன் கொடுத்த தகனபலிகளையும் கண்டாள். அனைத்தையும் அவள் கண்டு வியப்பில் மூழ்கினாள்.
5 பிறகு அவள் சாலொமோன் அரசனிடம், “நான் உங்கள் அறிவைப்பற்றியும் அரிய வேலைகளைப்பற்றியும் எனது நாட்டில் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். 6 நான் இங்கு வந்து என் கண்ணால் இவற்றைக் காணும்வரை நம்பாமல் இருந்தேன். உங்கள் மகத்தான ஞானத்தில் பாதியளவு கூட எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைவிடவும் நீங்கள் மகத்தானவர்! 7 உங்கள் மனைவிகளும் அதிகாரிகளும் பாக்கியசாலிகள்! அவர்கள் உங்களுக்கு சேவை செய்யும்போது உங்கள் ஞானத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்! 8 உங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதிப்போம். அவர் உங்களால் மகிழ்கிறார். தமது சிங்காசனத்தில் உங்களை அமரச்செய்திருக்கிறார். உங்கள் தேவன் இஸ்ரவேலின் மீது அன்பு வைத்திருக்கிறார். அவர் என்றென்றும் இஸ்ரவேலுக்கு உதவுகிறார். இதனால்தான், நியாயமானதையும் சரியானதையும் செய்வதற்காக கர்த்தர் உங்களை இஸ்ரவேலின் அரசனாக்கியுள்ளார்” என்றாள்.
9 பிறகு சீபா அரசி சாலொமோன் அரசனுக்கு 120 தாலந்து பொன்னையும் மிகுதியான உணவில் சேர்க்கும் நறுமணப் பொருட்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள். சீபா அரசி கொடுத்தது போன்று சாலொமோன் அரசனுக்கு உணவில் சேர்க்கும் மிக உயர்ந்த நறுமணப் பொருட்களை யாரும் கொடுத்ததில்லை.
10 ஈராமில் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் இரத்தினக் கற்களையும் கொண்டு வந்தனர். 11 அந்த வாசனை மரங்களால் கர்த்தருடைய ஆலயத்திற்கும் அரண்மனைக்கும் சாலொமோன் படிக்கட்டுகளை அமைத்தான். சாலொமோன் அம்மரத்தால் பாடகர்களுக்காகச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் செய்தான். யூதா நாட்டிலே வாசனை மரங்களால் செய்யப்பட்ட பொருட்கள் இவைபோன்று இதற்கு முன்பு இருந்ததை எவரும் பார்த்ததில்லை.
12 சாலொமோன் அரசன் சீபா அரசிக்கு அவள் விரும்பியதையும் கேட்டவற்றையும் கொடுத்தான். அவள் அவனுக்குக் கொடுத்தவற்றைவிட அதிக அளவில் அவன் அவளுக்கு கொடுத்தான். பிறகு சீபா அரசியும் அவளது வேலைக்காரர்களும் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் தம் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.
சாலொமோனின் பெரும் செல்வம்
13 ஓராண்டு காலத்திற்குள் சாலொமோன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து பொன்னைப் பெற்றான். 14 பயணம் செய்யும் வியாபாரிகளும், வணிகர்களும் மேலும் அதிகமான பொன்னைக் கொண்டு வந்தனர். அரேபியாவின் எல்லா அரசர்களும், நிலங்களை ஆள்பவர்களும் சாலொமோனுக்கு பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவந்து கொடுத்தனர்.
15 சாலொமோன் அடித்த பொன் தகட்டால் 200 பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயமும் 600 சேக்கல் எடை கொண்டதாக இருந்தது. 16 சாலொமோன் அரசன் அடித்த பொன் தகட்டால் 300 சிறிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயமும் 300 சேக்கல் பொன் எடையுள்ளதாக இருந்தது. சாலொமோன் இவற்றை லீபனோனின் காட்டு அரண்மனையில் வைத்தான்.
17 சாலொமோன் அரசன் தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தைச் செய்தான். அவன் அதனை பரிசுத்த தங்கத்தால் மூடினான். 18 அந்த சிங்காசனம் 6 படிக்கட்டுகளைக் கொண்டது. அதற்குத் தங்கத்தாலான பாதப்படியும் இருந்தது. சிங்காசனத்தின் இருக்கையின் இரண்டு பக்கங்களிலும் கை சாய்மானங்கள் வைக்கப்பட்டன. இந்த இரண்டு சாய்மானங்களுக்கும் கீழே சிங்கத்தின் உருவங்கள் நிறுத்தப்பட்டன. 19 ஆறு படிக்கட்டுகளிலும் 12 சிங்கங்களின் உருவங்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு படிக்கட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு சிங்கம் இருந்தது. எந்த அரசாங்கத்திலும் இதுபோன்ற சிங்காசனம் இருந்ததில்லை.
20 சாலொமோன் அரசனது அனைத்து தண்ணீர் கோப்பைகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. லீபனோனில் உள்ள வனமாளிகையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தூய பொன்னால் செய்யப்பட்டிருந்தன. சாலொமோனின் காலத்தில் வெள்ளியானது விலைமதிப்புள்ளதாகக் கருதப்படவில்லை.
21 தார்ஷிஸ் என்னும் நகருக்குச் செல்ல சாலொமோனிடம் கப்பல்கள் இருந்தன. சாலொமோனின் கப்பல்களை ஈராமின் ஆட்கள் செலுத்தினர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கப்பல்கள் தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் போன்றவற்றோடு தார்ஷிஸிலிருந்து திரும்பி வந்தன.
22 பூமியில் உள்ள மற்ற அரசர்களைவிட செல்வத்திலும் ஞானத்திலும் சாலொமோன் பெரியவனாக இருந்தான். 23 பூமியிலுள்ள அனைத்து அரசர்களும் சாலொமோனிடம் வந்து அவனது ஆலோசனைகளைக் கேட்டனர். தேவன் அவனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். 24 ஒவ்வொரு ஆண்டும் அரசர்கள் சாலொமோனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் வெள்ளியாலானப் பொருட்கள், தங்கத்தாலானப் பொருட்கள், துணிகள், ஆயுதங்கள், மணப்பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.
25 சாலொமோனிடம் இரதங்களையும் குதிரைகளையும் நிறுத்திவைக்க 4,000 லாயங்கள் இருந்தன. அவனிடம் 12,000 இரதம் ஓட்டுபவர்கள் இருந்தனர். சாலொமோன் இரதங்களை அவற்றுக்குரிய சிறப்பு நகரங்களிலும் தன்னுடன் எருசலேமிலும் வைத்திருந்தான். 26 ஐபிராத்து ஆறு முதல் பெலிஸ்தரின் நாடுவரைக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் உள்ள அனைத்து அரசர்களையும் சாலொமோன் ஆண்டான். 27 எருசலேமிலே அரசன் சாலொமோனிடம் கற்களைப் போன்று ஏராளமான வெள்ளி இருந்தது. பள்ளத்தாக்குகளிலே உள்ள காட்டத்தி மரங்களைப்போன்று சாலொமோனிடம் கேதுருமரங்கள் இருந்தன. 28 எகிப்திலிருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் ஜனங்கள் சாலொமோனுக்குக் குதிரைகளை கொண்டு வந்தனர்.
சாலொமோனின் மரணம்
29 தொடக்கக் காலமுதல் இறுதிவரை சாலொமோன் செய்த மற்ற செயல்களைப் பற்றிய குறிப்புகள் தீர்க்கதரிசியான நாத்தானின் எழுத்துக்களிலும் சீலோவின் அகியாவினது தீர்க்கதரிசனங்களிலும் நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமைப் பற்றி எழுதிய ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவினது தரிசனங்களிலும் உள்ளன. 30 எருசலேமில் சாலொமோன் 40 ஆண்டுகள் இஸ்ரவேலின் அரசனாக இருந்தான். 31 பிறகு அவன் தன் முற்பிதாக்களோடு நித்திரையடைந்தான். அவனுடைய தந்தையாகிய தாவீதின் நகரத்திலேயே ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். சாலொமோனது இடத்தில் அவனது மகனான ரெகொபெயாம் அரசன் ஆனான்.
ரெகொபெயாம் முட்டாள்த்தனமாக நடந்துக்கொள்கிறான்
10 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமை அரசனாக்க விரும்பியதால் அவன் சீகேம் நகரத்திற்குப் போனான். 2 யெரொபெயாம், சாலொமோனுக்கு அஞ்சி ஓடி எகிப்தில் இருந்தான். அவன் நேபாத்தின் மகன். ரெகொபெயாம் புதிய அரசனாகப் போகிற செய்தியை யெரொபெயாம் கேள்விப்பட்டான். எனவே யெரொபெயாம் எகிப்திலிருந்து திரும்பி வந்தான். 3 இஸ்ரவேல் ஜனங்கள் யெரொபெயாமைத் தங்களோடு வரும்படி அழைத்தனர். பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், 4 “உனது தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெரிய பாரத்தைச் சுமப்பதுபோல் உள்ளது. இப்பாரத்தை எளிதாக்கும். பிறகு நாங்கள் உமக்கு சேவைச்செய்வோம்” என்றனர்.
5 ரெகொபெயாம் அவர்களிடம், “மூன்று நாட்களுக்குப் பிறகு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றான். எனவே எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள்.
6 பிறகு அரசன் ரெகொபெயாம் தன் தந்தையான சாலொமோனுடன் கூடவே இருந்த மூத்த பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்தான். அவர்களிடம் அவன், “இந்த ஜனங்களுக்கு நான் என்ன பதில் சொல்லவேண்டும்?” என்று கேட்டான்.
7 அம்முதியவர்கள் அவனிடம், “நீங்கள் அந்த ஜனங்களோடு கருணையோடு இருந்தால் அவர்கள் மனம் மகிழும்படி செய்யுங்கள். நல்ல முறையில் பேசுங்கள் பின் அவர்கள் உங்களுக்கு என்றென்றும் சேவை செய்வார்கள்” என்றனர்.
8 ஆனால் ரெகொபெயாம் முதியவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் தன்னோடு வளர்ந்து தனக்கு சேவை செய்துவரும் இளைஞர்களிடம் ஆலோசனை கேட்டான். 9 அவர்களிடம் அவன், “நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்? அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? நான் அவர்களின் வேலை பாரத்தைக் குறைக்கவேண்டும் எனக் கேட்கிறார்கள். என் தந்தை அவர்கள்மேல் சுமத்திய பாரத்தைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று கேட்டான்.
10 ரெகொபெயாமோடு வளர்ந்த இளைஞர்களோ அவனிடம், “உன்னுடன் பேசிய ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது இதுதான். ஜனங்கள் உன்னிடம், ‘உங்கள் தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெருஞ்சுமையை சுமப்பது போல் உள்ளது. ஆனால் நீங்கள் அந்தச் சுமையைக் குறைக்கவேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தப் பதிலைத்தான் நீ கூறவேண்டும்: ‘எனது சுண்டு விரலானது என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது! 11 என் தந்தை உங்கள் மீது பெருஞ்சுமையை ஏற்றினார். நானோ அதைவிடப் பெருஞ்சுமையை ஏற்றுவேன். என் தந்தை உங்களைச் சவுக்கினால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக் கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்று ஆலோசனை வழங்கினர்.
12 மூன்று நாட்களுக்குப் பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் வந்தனர். அரசன் ரெகொபெயாம், “மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள்” என்று அவர்களிடம் சொல்லி இருந்தான். 13 பிறகு ரெகொபெயாம் அரசன் அவர்களோடு மிகக் கடுமையாகப் பேசினான். முதியவர்கள் சொன்ன ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. 14 ரெகொபெயாம் அரசன் இளைஞர்கள் ஆலோசனை சொன்னபடியே பேசினான். அவன், “என் தந்தை உங்கள் சுமையை அதிகமாக்கினார். நான் அதைவிட அதிகமாக்குவேன். அவர் உங்களைச் சவுக்கால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக்கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்” என்றான். 15 எனவே அரசன் ரெகொபெயாம் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. இம்மாற்றங்கள் தேவனிடமிருந்து வந்ததினால் அவன் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. தேவன் இந்த விளைவை ஏற்படுத்தினார். அகியாவின் மூலமாக யெரொபெயாமுடன் கர்த்தர் பேசிய அவரது வார்த்தை உண்மையாகும்படி இது நடந்தது. அகியா சிலோனிய ஜனங்களிடமிருந்து வந்தவன். யெரொபெயாம் நேபாத்தின் மகன்.
16 இஸ்ரவேல் ஜனங்கள் தம் அரசனான ரெகொபெயாம் தமது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கண்டனர். பிறகு அவர்கள் அரசனிடம், “நாங்களும் தாவீது குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? ஈசாயின் நிலத்தில் நாங்கள் ஏதாவது பெற்றோமா? எனவே இஸ்ரவேலராகிய நாம் நமது வீடுகளுக்குப் போவோம். தாவீதின் மகன் தன் சொந்த ஜனங்களை ஆண்டுகொள்ளட்டும்!” என்றனர். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள். 17 ஆனால் யூத நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் பலர் இருந்தனர். ரெகொபெயாம் அவர்களை ஆண்டுவந்தான்.
18 கட்டாயமாக வேலைசெய்ய வேண்டும் என நியமிக்கப்பட்ட ஜனங்களுக்கெல்லாம் அதோனிராம் பொறுப்பாளியாக இருந்தான். அவனை ரெகொபெயாம் இஸ்ரவேல் ஜனங்களிடம் அனுப்பி வைத்தான். ஆனால் அவனை இஸ்ரவேல் ஜனங்கள் கல்லெறிந்து கொன்றனர். ரெகொபெயாம் ஓடிப்போய் தேரில் ஏறிக்கொண்டான். அவன் தப்பித்து எருசலேமிற்கு ஓடினான். 19 அன்று முதல் இன்று வரை இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் குடும்பத்துக்கு எதிராகவே இருந்து வருகின்றனர்.
11 ரெகொபெயாம் எருசலேம் வந்தபோது 1,80,000 சிறந்த வீரர்களை அணி திரட்டினான். இவ்வீரர்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய கோத்திரங்களிடமிருந்து அணி திரட்டினான். இஸ்ரவேலர்களுக்கு எதிராகச் சண்டையிடவே அவர்களை அணி திரட்டினான். இதன் மூலம் அவர்களை தன் ஆட்சிக்குள் வைத்திருக்க முடியும் என்று நம்பினான். 2 ஆனால் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி செமாயாவிற்கு வந்தது. அவன் தேவனுடைய மனிதன். கர்த்தர் அவனிடம், 3 “யூதாவின் அரசனாகிய சாலொமோனின் மகன் ரெகொபெயாமிடமும், இஸ்ரவேலிலும், யூதாவிலும், பென்யமீனிலும் உள்ள ஜனங்களிடமும் கூறு என்று 4 கர்த்தர் சொன்ன செய்திகள் இவை தான்: ‘உன் சகோதரர்களோடு நீ சண்டை போடாதே! ஒவ்வொருவரையும் தம் சொந்த வீட்டுக்குப் போகவிடு. நான் இவ்வாறு நிகழும்படிச் செய்தேன்.’” எனவே ரெகொபெயாமும் அவனது படையும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து திரும்பி வந்தது. அவர்கள் யெரொபெயாமைத் தாக்கவில்லை.
ரெகொபெயாம் யூதாவை பலப்படுத்துகிறான்
5 ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்தான். தாக்குதல்களில் இருந்து தப்பிக்க யூதாவில் அவன் பலமான நகரங்களை நிர்மாணித்தான். 6 அவன் பெத்லேகம், ஏத்தாம், தெக்கோவா, 7 பெத்சூர், சோகோ, அதுல்லாம், 8 காத்து, மரேஷா, சீப்பு 9 அதோராயீம், லாகீசு, அசேக்கா, 10 சோரா, ஆயிலோன், எப்ரோன் ஆகிய நகரங்களைச் செப்பனிட்டான். யூதாவிலும் பென்யமீனிலுமிருந்த இந்த நகரங்கள் பலப்படுத்தப்பட்டன. 11 ரெகொபெயாம் இவற்றைப் பலப்படுத்திய பிறகு அவற்றில் தலைவர்களை நியமித்தான். அவர்களுக்கு உணவு, எண்ணெய், திராட்சைரசம் போன்றவற்றை விநியோகித்தான். 12 இவன் ஈட்டிகளையும், கேடயங்களையும் வைத்து அந்நகரங்களைப் பலப்படுத்தினான். யூதா, பென்யமீன் ஆகிய நாடுகளின் நகரங்களையும் ஜனங்களையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தான்.
13 இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஆசாரியர்களும் லேவியர்களும் ரெகொபெயாமோடு சேர்ந்து கொண்டு அவனுக்கேற்றவர்கள் ஆனார்கள். 14 லேவியர்கள் தம் புல்வெளிகளையும் வயல்களையும் விட்டுவிட்டு யூதாவுக்கும் எருசலேமிற்கும் வந்தனர். காரணம், யெரொபெயாமும் அவனது மகன்களும், லேவியர்கள் கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதை மறுத்தனர்.
15 யெரொபெயாம் தன் சொந்த ஆசாரியர்களையே மேடைகளில் பலிசெலுத்த தேர்ந்தெடுத்தான். அவன் செய்த ஆடு மற்றும் கன்றுக் குட்டியின் விக்கிரகங்களை அந்த மேடைகளில் அமைத்தான். 16 லேவியர்கள் இஸ்ரவேலை விட்டு விலகியதும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மீது நம்பிக்கைகொண்ட இஸ்ரவேலின் அனைத்துக் கோத்திரங்களிலுமிருந்த ஜனங்களும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களின் தேவனாகிய கர்த்தருக்கு காணிக்கை செலுத்த எருசலேமுக்கு வந்தார்கள். 17 அவர்கள் யூத அரசைப் பலமுள்ளதாக்கினார்கள். அவர்கள் மூன்று ஆண்டு காலத்திற்குச் சாலொமோனின் மகனான ரெகொபெயாமிற்கு உதவினார்கள். அவர்கள் இக்காலக்கட்டத்தில் தாவீதைப்போலவும் சாலொமோனைப் போலவும் வாழ்ந்ததால் இவ்வாறு செய்தனர்.
ரெகொபெயாமின் குடும்பம்
18 ரெகொபெயாம் மகலாத் என்னும் பெண்ணை மணந்தான். அவளது தந்தை எரிமோத். அவளது தாய் அபியாயேல், எரிமோத் தாவீதின் மகன். அபியாயேல் எலியாப்பின் மகள். எலியாப் ஈசாயின் மகன். 19 மகலாத் ரெகொபெயாமிற்கு ஏயூஸ், சமரியா சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள். 20 பிறகு ரெகொபெயாம் மாக்கா என்னும் பெண்ணையும் மணந்தான். அவள் அப்சலோமின் பேத்தி. இவள் இவனுக்கு அபியா, அத்தாயி, சீசா, செலேமித் ஆகியோரைப் பெற்றாள். 21 ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வேலைக்காரிகளையும் விட மாக்காவைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கு 18 மனைவியரும், 60 வேலைக்காரிகளும் இருந்தனர். இவனுக்கு 28 மகன்களும், 60 மகள்களும் இருந்தனர்.
22 ரெகொபெயாம் அபியாவைத் தனது சகோதரர்களுக்கும் மேலான தலைவனாகத் தேர்ந்தெடுத்தான். அவன் இவனை அரசனாக்க விரும்பியதால் இவ்வாறு செய்தான். 23 ரெகொபெயாம் புத்திசாலித்தனமாகத் தன் மகன்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய நாடுகளில் பரவலாக ஒவ்வொரு பலமான நகரத்திலும் இருக்கும்படி செய்தான். அவர்களுக்கு வேண்டியவற்றை விநியோகம் செய்தான். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.
எகிப்தின் அரசனான சீஷாக் எருசலேமைத் தாக்குகிறான்
12 ரெகொபெயாம் ஒரு பலமிக்க அரசன் ஆனான். அவன் தனது ஆட்சியையும் பலமுள்ளதாக்கினான். பின்னர் அவனும், அவனது யூதா கோத்திரத்தினரும் கர்த்தருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். 2 சீஷாக் எருசலேம் நகரத்தை ரெகொபெயாமின் ஐந்தாவது ஆட்சியாண்டில் தாக்கினான். இவன் எகிப்தின் அரசன். ரெகொபெயாமும், அவனுடன் ஆட்சி செய்தவர்களும் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால் இவ்வாறு நடந்தது. 3 சீஷாக்கிடம் 12,000 இரதங்களும், 60,000 குதிரை வீரர்களும், எவராலும் எண்ணிக்கையிட முடியாத அளவுடைய படைவீரர்களும் இருந்தனர். இவனது பெரியப் படையில் லிபியன் வீரர்களும், சூக்கிய வீரர்களும், எத்தோப்பிய வீரர்களும் இருந்தனர். 4 சீஷாக் யூதாவிலுள்ள பலமிக்க நகரங்களை வென்றான். பிறகு தனது படையை எருசலேமிற்கு கொண்டு வந்தான்.
5 பிறகு செமாயா எனும் தீர்க்கதரிசி ரெகொபெயாமிடமும் யூதத் தலைவர்களிடமும் வந்தான். அந்த யூதத் தலைவர்கள் எருசலேமில் கூடியிருந்தனர். ஏனென்றால் அவர்கள் சீஷாக்குக்குப் பயந்தனர். செமாயா அவர்களிடம், “கர்த்தரால் சொல்லப்பட்டது இதுதான்: ‘ரெகொபெயாம்! நீயும், உனது ஜனங்களும் என்னைவிட்டு விலகி எனது சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டீர்கள். எனவே இப்போது உன்னைவிட்டு நான் விலகி நான் உங்களைச் சீஷாக்கின் கையில் அகப்படச் செய்வேன்’” என்றான்.
6 பிறகு யூதத் தவைர்களும், ரெகொபெயாம் அரசனும் வருத்தத்துடனும், பணிவுடனும் இருந்தனர். “கர்த்தர் சொல்வது சரிதான்” என்றனர்.
7 யூதத் தலைவர்களும், அரசனும் அடங்கிப் போனதைக் கர்த்தர் கவனித்தார். பிறகு கர்த்தரிடமிருந்து செமாயாவுக்குச் செய்தி வந்தது. கர்த்தர் செமாயாவிடம், “யூதத் தலைவர்களும், அரசனும் அடக்கமாயினர். எனவே நான் அவர்களை அழிக்கமாட்டேன். நான் விரைவில் அவர்களைக் காப்பேன். எனது கோபத்தை தீர்க்க சீஷாக்கை எருசலேமின் மீது அனுப்பமாட்டேன். 8 ஆனால் எருசலேம் ஜனங்கள் சீஷாக்கின் வேலைக்காரர்கள் ஆவார்கள். இதனால் அவர்களுக்கு எனக்கு சேவைச் செய்வதற்கும் மற்ற தேசத்து அரசர்களுக்கு சேவைச் செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும்” என்றார்.
9 சீஷாக் எருசலேமைத் தாக்கினான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த கருவூலத்தைக் கைப்பற்றிக்கொண்டான். அரண்மனையில் இருந்த கருவூலத்தையும் கைப்பற்றிக் கொண்டான். அவன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான். சாலொமோன் செய்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக் கொண்டான். 10 அவற்றுக்குப் பதிலாக ரெகொபெயாம் அரசன் வெண்கல கேடயங்களைச் செய்தான். அக்கேடயங்களை ரெகொபெயாம் அரண்மனை வாசல் காவல்காரர்களின் தலைவர்கள் கையில் கொடுத்தான். 11 அரசன் கர்த்தருடைய ஆலய வாசலுக்குள் நுழையும்போது காவலர்கள் வந்து கேடயங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். பிறகு அவர்கள் அக்கேடயங்களைத் தம் அறையிலே வைத்து பூட்டிவிடுவார்கள்.
12 ரெகொபெயாம் தனக்குள்ளே அடக்கமாகத் தாழ்வாக இருந்தபோது கர்த்தர் அவன் மீதுள்ள கோபத்தை விலக்கிக்கொண்டார். எனவே, கர்த்தர் ரெகொபெயாமை முழுவதுமாக அழிக்கவில்லை. ஏனென்றால் யூதாவில் சிலவற்றை நன்மையானதாகக் கண்டார்.
13 ரெகொபெயாம் தன்னை எருசலேமில் பலமுள்ள அரசனாக ஆக்கிக்கொண்டான். இவன் அரசனாகும்போது 41 வயது. இவன் எருசலேமில் 17 ஆண்டுகள் அரசனாக இருந்தான். இந்நகரம் கர்த்தரால் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கர்த்தர் தனது பெயரை எருசலேமில் விளங்கும்படி செய்தார். ரெகொபெயாமின் தாய் நாமாள். நாமாள் அம்மோன் நாட்டிலிருந்து வந்தவள். 14 ரெகொபெயாம் தீயச் செயல்களைச் செய்தான். ஏனென்றால் அவனது மனதில் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை.
15 ரெகொபெயாம் தொடக்கக் காலமுதல், ஆட்சியின் இறுதிவரை செய்தச் செயல்களெல்லாம் தீர்க்கதரிசியான செமாயா மற்றும் ஞானதிருஷ்டிக்காரனான இத்தோ ஆகியோரின் எழுத்துக்களில் உள்ளன. இவர்கள் குடும்ப வரலாறுகளை எழுதினார்கள். ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருவரும் ஆட்சிபுரிந்தக் காலம் முழுவதும் போர் நடந்தது. 16 ரெகொபெயாம் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்ந்தான். அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு ரெகொபெயாமின் மகன் அபியா புதிய அரசனானான்.
யூதாவின் அரசனான அபியா
13 இஸ்ரவேலில் யெரொபெயாமின் 18வது ஆட்சியாண்டில், அபியா யூதாவின் புதிய அரசனானான். 2 அபியா எருசலேமில் 3 ஆண்டுகள் அரசனாக இருந்தான். அபியாவின் தாய் மாக்கா ஆவாள். மாக்கா ஊரியேலின் மகள். ஊரியேல் கிபியா என்னும் ஊரைச் சேர்ந்தவன். அபியாவிற்கும் யெரொபெயாமிற்கும் சண்டை ஏற்பட்டது. 3 அபியாவின் படையில் 4,00,000 பலமிக்க வீரர்கள் இருந்தனர். அவர்களை அபியா போரில் ஈடுபடுத்தினான். யெரொபெயாமின் படையில் 8,00,000 வீரர்கள் இருந்தனர். யெரொபெயாம் அபியாவோடு போரிடத் தயாரானான்.
4 பிறகு அபியா மலைநாடான எப்பிராயீமில் செமராயீம் என்னும் மலைமீது ஏறி நின்றான். அபியா, “யெரொபெயாமே! இஸ்ரவேல் ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். 5 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதிற்கும், அவரது பிள்ளைகளுக்கும் இஸ்ரவேல் அரசனாக என்றென்றைக்கும் இருக்கும்படியான உரிமையைக் கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தேவன் இந்த உரிமையை தாவீதிற்கு மாறாத உடன்படிக்கையாகக் கொடுத்திருக்கிறார். 6 ஆனால் யெரொபெயாம் தன் எஜமானுக்கு எதிராகிவிட்டான். நேபாத்தின் மகனான யெரொபெயாம் சாலொமோனின் வேலைக்காரர்களில் ஒருவன். சாலொமோன் தாவீதின் மகன். 7 பயனற்ற மோசமான நண்பர்களோடு சேர்ந்து யெரோபெயாம் சாலொமோனின் மகனான ரெகொபெயாமுக்கு எதிரானான். அவன் இளைஞனாகவும், அனுபவம் இல்லாதவனாகவும் இருந்தான். அதனால் அவனால் யெரொபெயாமையும், அவனது தீய நண்பர்களையும் தடுக்க முடியவில்லை.
8 “இப்போது யெரொபெயாமாகிய நீயும், இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருடைய அரசாட்சிக்கு எதிராக திட்டமிடுகிறீர்கள். கர்த்தருடைய அரசாங்கம் தாவீதின் சந்ததியாருக்கு உரியது. உங்களில் அநேகம் பேர் யெரொபெயாமால் செய்யப்பட்ட பொன் கன்றுக்குட்டிகளை தெய்வங்களாக வழிபடுகின்றீர்கள். 9 நீங்கள் கர்த்தருடைய ஆசாரியர்களையும், லேவியர்களையும் விரட்டிவிட்டீர்கள். ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததியினர். நீங்கள் உங்கள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள். இதைத்தான் மற்ற நாட்டினரும் செய்கின்றனர். ஒரு காளைக் கன்றுக்குட்டியுடன் அல்லது ஏழு செம்மறியாட்டுக் கடாக்களுடன் தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வருகிற எவனும் ‘தெய்வங்கள் இல்லாத உருவச்சிலைகளுக்கு’ ஆசாரியனாகலாம்.
10 “ஆனால் எங்களுக்கோ கர்த்தரே தேவன். யூத ஜனங்களாகிய நாங்கள் தேவனுக்கு கீழ்ப்படிய மறுக்கவில்லை. நாங்கள் அவரை விட்டு விலகவில்லை. கர்த்தருக்கு சேவை செய்கிற ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததிகளே. மேலும் கர்த்தருக்கு சேவைசெய்ய ஆசாரியர்களுக்கு லேவியர்கள் உதவுகிறார்கள். 11 அவர்கள் தகனபலி செலுத்துவார்கள். ஒவ்வொருநாள் காலையிலும், மாலையிலும் கர்த்தருக்கு நறுமணப் பொருட்களை எரிக்கிறார்கள். ஆலயத்தில் பரிசுத்தமான மேஜையின் மேல் சமூகத்தப்பங்களை அடுக்கி வைக்கிறார்கள். ஒவ்வொரு நாள் மாலையில் விளக்கை அதற்குரிய தங்கத் தண்டின் மேல் ஏற்றி வைக்கிறார்கள். எனவே அது ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது. எங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோம். ஆனால் யெரொபெயாமாகிய நீயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள். 12 தேவன் தாமே எங்களோடு இருக்கிறார். அவரே எங்களை ஆள்பவர். அவரது ஆசாரியர்களே எங்களோடு இருக்கின்றனர். தேவனுடைய ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதி உங்களுக்கு எதிராகப் போரிட அழைத்தனர். இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் போர் செய்யாதீர்கள். ஏனென்றால் உங்களால் வெற்றிபெற இயலாது” என்றான்.
13 ஆனால் யெரொபெயாம் ஒரு படைக் குழுவை அபியாவின் படைக்குப் பின்புறமாக அனுப்பினான். யெரொபெயாமின் படையோ அபியாவிற்கு முன்னால் இருந்தது. மறைவாகச் சென்ற படைக்குழுவோ அபியாவின் படைக்குப் பின்னால் இருந்தது. 14 அபியாவின் படைவீரர்கள் தம்மைச் சுற்றிப் பார்த்தபோது யெரொபெயாமின் படை வீரர்கள் சுற்றி நின்று முன்னும் பின்னும் தாக்குவதைக் கண்டனர். உடனே யூத ஜனங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதினார்கள். 15 பின்னர் அபியாவின் படையிலுள்ள ஜனங்கள் ஆர்ப்பரித்தனர். யூத ஜனங்கள் ஆர்ப்பரித்தபோது தேவன் யெரொபெயாமைத் தோற்கடித்தார். யெரொபெயாமின் இஸ்ரவேல் படைவீரர்களை, அபியாவின் யூதப்படை தோற்கடித்தது. 16 இஸ்ரவேல் ஆண்கள், யூதாவின் ஆண்களைவிட்டு ஓடிப்போனார்கள். இஸ்ரவேல் படைகளைத் தோற்கடிக்க தேவன் யூதப்படைகளை அனுமதித்தார். 17 அபியாவும் அவனுடைய படைவீரர்களும் இஸ்ரவேல் படை வீரர்களைத் தோற்கடித்து 5,00,000 வீரர்களைக் கொன்றுவிட்டனர். 18 இவ்வகையில் இஸ்ரவேல் ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டனர். யூத ஜனங்கள் வென்றனர். யூதப்படை வென்றதற்கான காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருந்ததுதான்.
19 அபியாவின் படை யெரொபெயாமின் படையைத் துரத்திச் சென்றது. அபியாவின் படை பெத்தேல், எஷானா, எப்பெரோன் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப்பற்றினார்கள்.
20 அபியா உயிரோடு இருந்தவரை யெரொபெயாம் பலமுள்ளவனாக ஆக முடியவில்லை. கர்த்தர் தாமே யெரொபெயாமைக் கொன்றார். 21 ஆனால் அபியா பலமுள்ளவன் ஆனான். அவன் 14 பெண்களை மணந்துக்கொண்டான். 22 மகன்களுக்கும், 16 மகள்களுக்கும் தந்தையானான். 22 அபியாவின் மற்ற செயல்கள் இத்தோ தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
14 அபியா தன் முற்பிதாக்களோடு சேர்க்கப்பட்டான். ஜனங்கள் அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு அபியாவின் மகனான ஆசா புதிய அரசனானான். ஆசாவின் காலத்தில் நாட்டில் பத்தாண்டு காலம் சமாதானம் இருந்தது.
யூத அரசனான ஆசா
2 ஆசா தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நல்லனவற்றையும், சரியானவற்றையும் செய்தான். 3 ஆசா அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும், மேடைகளையும் அகற்றினான். சிலைகளை உடைத்தான். விக்கிரகத் தோப்புகளை அழித்தான். 4 யூத ஜனங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றும்படி கட்டளையிட்டான். அவரே நம் முற்பிதாக்களால் ஆராதிக்கப்பட்ட தேவன். அவரது கட்டளைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ள வேண்டும் என்றான். 5 ஆசா யூதா நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் அமைக்கப்பட்ட மேடைகளையும், நறுமணப் பொருட்கள் எரிக்கப்படும் பலிபீடங்களையும் அகற்றினான். எனவே ஆசா அரசனாக இருந்த காலத்தில் அவனது அரசு சமாதானமாக இருந்தது. 6 இந்த சமாதானமான காலத்தில் ஆசா யூதா நாட்டில் பலமிக்க நகரங்களை உருவாக்கினான். இக்கால கட்டத்தில் ஆசா எந்தவிதமான போரிலும் ஈடுபடவில்லை. ஏனென்றால் கர்த்தர் அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார்.
7 ஆசா யூத ஜனங்களிடம், “இந்த நகரங்களை உருவாக்கி இவற்றைச் சுற்றி சுவர்களை எழுப்புவோம். கோபுரங்களையும், வாசல்களையும், வாசல்களுக்குத் தாழ்ப்பாள்களையும் அமைப்போம். இந்த நாட்டில் நாம் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற காலத்தில் இதைச் செய்வோம். இந்நாடு நமக்குரியது. ஏனென்றால் நாம் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறோம். அவர் நம்மைச் சுற்றிலும் சமாதானத்தை உருவாக்கினார்” என்றான். எனவே அவர்கள் அவ்வாறே கட்டினார்கள். தம் செயல்களில் வெற்றி பெற்றனர்.
8 ஆசாவின் படையில் 3,00,000 பேர் கொண்ட படை யூதா கோத்திரத்திலிருந்தும், 2,80,000 பேர் கொண்ட படைக்குழு பென்யமீனின் கோத்திரத்திலிருந்தும் சேர்ந்திருந்தனர். யூத வீரர்கள் பெரிய கேடயங்களையும் ஈட்டிகளையும் சுமந்துவந்தனர். பென்யமீன் வீரர்கள் சிறிய கேடயங்களையும் வில்லம்புகளையும் தாங்கினார்கள். இவர்கள் அனைவரும் தைரியமும் பலமும் மிக்க வீரர்கள்.
9 அப்போது ஆசாவின் படைகளுக்கு எதிராகச் சேரா என்பவன் கிளம்பினான். சேரா எத்தியோப்பியன். அவனிடம் 10,00,000 வீரர்களும் 300 இரதங்களும் இருந்தன. அவனது படை மரேசாவரை வந்தது. 10 ஆசா சேராவுக்கு எதிராகப் போரிடவந்தான். மரேசாவில் உள்ள செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கிலே ஆசாவின் படை வீரர்கள் போரிடத் தயாராக இருந்தனர்.
11 ஆசா தனது தேவனாகிய கர்த்தரை அழைத்து, “கர்த்தாவே, பலமானவர்களை எதிர்க்கும் பலவீனர்களுக்கு உதவ உம்மால் தான் முடியும்! எங்களுக்கு உதவும்! எங்கள் தேவனாகிய கர்த்தாவே! நாங்கள் உம்மையேச் சார்ந்துள்ளோம். உமது பேரால் இப்பெரும் படையோடு போரிடப்போகிறோம். கர்த்தாவே, நீர் எங்கள் தேவன். உமக்கு எதிராக எவரையும் வெல்லும்படிவிடாதீர்!” என்றான்.
12 பிறகு கர்த்தர் எத்தியோப்பியா படையை வெல்ல ஆசாவின் படையைப் பயன்படுத்தினார். எத்தியோப்பியா படையினர் ஓடிப்போயினர். 13 ஆசாவின் படையினர் எத்தியோப்பியா படையினரைக் கேரார் வரை விரட்டிக்கொண்டு சென்றனர். எத்தியோப்பியா வீரர்கள் மீண்டும் கூடிப் போரிட முடியாதபடி கொல்லப்பட்டனர். கர்த்தராலும் அவரது படையினராலும் நசுக்கப்பட்டனர். பகைவரிடமிருந்து ஆசாவும், அவனது படையினரும் விலையுயர்ந்த பொருட்களைக் கைப்பற்றிக்கொண்டனர். 14 ஆசாவும், அவனது படையினரும் கேரார் அருகிலுள்ள அனைத்து நகரங்களையும் தோற்கடித்தனர். அந்நகரங்களில் வாழ்ந்த ஜனங்கள் கர்த்தருக்கு பயந்தார்கள். அந்நகரங்களில் ஏராளமாக விலையுயர்ந்தப் பொருட்கள் இருந்தன. அவற்றிலிருந்து ஆசாவின் படையினர் அந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளிக்கொண்டு வந்தார்கள். 15 ஆசாவின் படை மேய்ப்பர்களின் கூடாரங்களையும் தாக்கியது. அவர்கள் அங்கிருந்த நிறைய வெள்ளாடுகளையும், ஒட்டகங்களையும் கவர்ந்தனர். பிறகு ஆசாவின் படையினர் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றனர்.
ஆசாவின் மாற்றங்கள்
15 தேவனுடைய ஆவி அசரியாவின் மீது வந்தது. அசரியா ஓபேதின் மகன். 2 அசரியா, ஆசாவைச் சந்திக்கச் சென்றான். அசரியா, “ஆசாவே, யூதா மற்றும் பென்யமீனின் எல்லா ஜனங்களே! என்னைக் கவனியுங்கள். நீங்கள் கர்த்தரோடு இருக்கும்போது அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் கர்த்தரைத் தேடினால் கண்டுகொள்ளலாம். ஆனால் நீங்கள் அவரை விட்டு விலகினால் அவரும் விலகி விடுவார். 3 நீண்ட காலத்திற்கு இஸ்ரவேலர்கள் உண்மையான தேவன் இல்லாமல் இருந்தனர். மேலும் அவர்கள் போதிக்கும் ஆசாரியர் இல்லாமலும், சட்டங்கள் இல்லாமலும் இருந்தார்கள். 4 ஆனால் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் துன்பம் வந்தபோது அவர்கள் மீண்டும் கர்த்தருடைய பக்கம் திரும்பினார்கள். அவரே இஸ்ரவேலின் தேவன். அவர்கள் கர்த்தரைத் தேடினார்கள்; கண்டுகொண்டனர். 5 அந்தக் கஷ்டகாலங்களில் எவராலும் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியவில்லை. எல்லா நாடுகளிலும் துன்பங்கள் ஏற்பட்டன. 6 ஒரு நாடு இன்னொரு நாட்டை அழித்தது. ஒரு நகரம் இன்னொரு நகரத்தை அழித்தது. தேவன் அவர்களுக்கு எல்லாவிதமான துன்பங்களையும் கொடுக்கவேண்டும் என்று எண்ணியதால் இவ்வாறு நிகழ்ந்தது. 7 ஆனால் ஆசா, நீயும் யூதா மற்றும் பென்யமீனின் ஜனங்களும் பலமுடையவர்களாக இருங்கள். பலவீனமாய் இருக்காதீர்கள். எதையும் கைவிட்டுவிடாதீர்கள். ஏனென்றால் உங்கள் பணிகளுக்குத்தக்க வெகுமதி கிடைக்கும்!” என்றான்.
8 ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியான ஓபேதின் வார்த்தைகளையும் கேட்டதும் ஊக்க உணர்வை அடைந்தான். பிறகு அவன் யூதா மற்றும் பென்யமீன் பகுதிகளில் இருந்த வெறுக்கத்தக்க விக்கிரகங்களை அப்புறப்படுத்தினான். எப்பிராயீம் மலைநாட்டில் தான் கைப்பற்றிய ஊர்களில் இருந்த வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் அப்புறப்படுத்தினான். கர்த்தருடைய ஆலய முன்வாயிலின் முன்னால் இருந்த கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்தான்.
9 பிறகு ஆசா, யூதா மற்றும் பென்யமீன் ஜனங்கள் அனைவரையும் எருசலேமில் கூட்டினான். அவன் எப்பிராயீம், மனாசே, சிமியோன் ஆகிய கோத்திரத்தினர்களையும் கூட்டினான். அவர்கள் வாழ்வதற்காக இஸ்ரவேல் நாட்டிலிருந்து யூதாவிற்கு குடியேறியவர்கள். இதுபோல் ஏராளமான ஜனங்கள் யூதாவிற்கு வந்தனர். ஏனென்றால் ஆசாவின் தேவனாகிய கர்த்தர் ஆசாவோடு அங்கே இருப்பதைக் கண்டனர்.
10 ஆசாவும், அந்த ஜனங்கள் அனைவரும் எருசலேமில் கூடினார்கள். அது ஆசாவின் 15வது ஆட்சியாண்டின் மூன்றாவது மாதமாகும். 11 அப்போது அவர்கள் 700 காளைகளையும், 7,000 ஆடுகளையும் பலியிட்டனர். இப்பலிப் பொருட்களையும் மற்ற விலையுயர்ந்தவற்றையும் ஆசாவின் படையினர் தம் எதிரிகளிடமிருந்து அபகரித்து வந்தனர். 12 பிறகு அவர்கள் தம் மனப்பூர்வமாகவும், ஆத்மபூர்வமாகவும் தேவனாகிய கர்த்தருக்கு சேவைசெய்வதாக ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அவரே அவர்களது முற்பிதாக்களால் சேவைசெய்யப்பட்ட தேவன். 13 எவனொருவன் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்ய மறுக்கிறானோ அவன் கொல்லப்பட்டான். அவன் முக்கியமானவனா அல்லது முக்கியம் இல்லாதவனா, அவன் ஆணா அல்லது பெண்ணா என்பது ஒரு பொருட்டல்ல. 14 பிறகு ஆசாவும், ஜனங்களும் கர்த்தருக்கு முன்னால் ஒரு சபதம் செய்தார்கள். அவர்கள் மிக உரத்தகுரலில் கூவினார்கள். மேலும் செம்மறியாட்டுக் கடாவின் கொம்புகளையும், எக்காளங்களையும் ஊதினார்கள். 15 யூதா ஜனங்கள் அனைவரும் அந்த உறுதிமொழியைக் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். ஏனென்றால் அவர்கள் தம் மனப்பூர்வமாகச் சத்தியம் செய்தனர். அவர்கள் மனப் பூர்வமாக தேவனைப் பின்பற்றினர். அவர்கள் தேவனைத் தேடிக் கண்டடைந்தனர். எனவே கர்த்தர் நாடு முழுவதிலும் உள்ள ஜனங்களுக்கு சமாதானத்தை அளித்தார்.
16 ஆசா அரசன் தன் தாயான மாகாளை ராஜாத்தி என்ற பதவியிலிருந்து நீக்கிவிட்டான். ஏனென்றால் அவள் அஷா என்னும் தேவதையை வழிபடும் கம்பத்தை உருவாக்கினாள். ஆசா அந்த அஷா கம்பத்தை உடைத்து துண்டுத்துண்டாக நொறுக்கிவிட்டான். பிறகு அத்துண்டுகளை கீதரோன் சமவெளியில் சுட்டெரித்தான். 17 பல மேடைகளோ யூதா நாட்டில் இன்னும் அழிக்கப்படாமல் இருந்தன. எனினும் ஆசாவின் இதயம் அவனது வாழ்நாள் முழுவதும் கர்த்தரோடு இருந்தது.
18 ஆசா, தானும் தன் தந்தையும் அளித்த பரிசுத்த அன்பளிப்புகளை தேவனுடைய ஆலயத்தில் கொண்டு வந்து வைத்தான். அவை பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவை. 19 ஆசாவின் 35வது ஆட்சியாண்டுவரை நாட்டில் போர் இல்லாமல் இருந்தது.
ஆசாவின் இறுதி ஆண்டுகள்
16 ஆசாவின் 36வது ஆட்சி ஆண்டில் யூதா நாட்டினை பாஷா தாக்கினான். பாஷா இஸ்ரவேலின் அரசன் ஆவான். அவன் ராமா என்னும் நகருக்குச் சென்று அதையே ஒரு கோட்டையாகக் கட்டினான். ஜனங்கள் யூதாவின் அரசனான ஆசாவிடம் செல்வதையோ அல்லது அவனிடமிருந்து திரும்புவதையோ தடுப்பதற்கான இடமாக ராமா ஊரினைப் பயன்படுத்தினான். 2 கர்த்தருடைய ஆலயத்தில் கருவூலத்தில் இருந்த பொன்னையும் வெள்ளியையும் ஆசா வெளியே எடுத்தான். அரண்மனை கருவூலத்தில் உள்ள பொன்னையும் வெள்ளியையும் ஆசா எடுத்தான். பிறகு அவன் பென்னாதாத்துக்கு தூது அனுப்பினான். பென்னாதாத் ஆராம் நாட்டு அரசன். அவன் தமஸ்கு நகரத்தில் இருந்தான். ஆசாவின் செய்தி இது: 3 “பென்னாதாத் நீயும் நானும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வோம். உன் தந்தையும் என் தந்தையும் செய்த ஒப்பந்தம் போன்று இருக்கட்டும். நான் உனக்குப் பொன்னும் வெள்ளியும் அனுப்புவேன். நீ இப்போது பாஷாவுடன் உள்ள ஒப்பந்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடு. அதனால் அவன் எனக்குத் துன்பம் தராமல் விலகிவிடுவான்.”
4 பென்னாதாத் அரசனாகிய ஆசா சொன்னவற்றை ஒத்துக்கொண்டான். அவன் தனது படைத் தளபதிகளை அனுப்பி இஸ்ரவேல் நகரங்களைத் தாக்கினான். அவர்கள் ஈயோன், தாண், ஆபேல், மாயீம், நப்தலிப் பகுதியில் இருந்த ஊர்கள் ஆகியவற்றைத் தாக்கினார்கள். இந்நகரங்களில் கருவூலங்களும் பண்டகச்சாலைகளும் இருந்தன. 5 இஸ்ரவேல் நகரங்கள் தாக்கப்படுவதை பாஷா கேள்வியுற்றான். எனவே அவன் ராமாவில் கோட்டை கட்டுவதை விட்டுவிட்டு விலகிப்போனான். 6 பிறகு ஆசா அரசன் யூதா ஜனங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் ராமா நகரத்திற்குச் சென்றார்கள். அங்கு கோட்டை கட்டுவதற்காக பாஷா வைத்திருந்த கல், மரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். அவற்றால் அவர்கள் கேபா, மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினார்கள்.
7 அப்போது யூதாவின் அரசனான ஆசாவிடம் அனானி எனும் ஞானதிருஷ்டிக்காரன் வந்தான். அனானி அரசனிடம், “ஆசா, நீ உதவிக்காக ஆராம் நாட்டு அரசனையே சார்ந்திருந்தாய். உனது தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருக்கவில்லை. நீ உன் உதவிக்காக கர்த்தரைச் சார்ந்திருக்கவேண்டும். ஆனால் உதவிக்காகக் கர்த்தரைச் சாராததால் ஆராம் நாட்டு படையும் உன் கைகளில் இருந்து விலகிப்போனது. 8 எத்தியோப்பியர்களிடமும் லூபியர்களிடமும் வலிமைமிக்க பெரிய படை இருந்தது. அவர்களிடம் ஏராளமான இரதங்களும் குதிரை வீரர்களும் இருந்தனர். ஆனால் நீ உதவிக்கு கர்த்தரை நாடியபோது அவர் இவர்களை வெல்லும்படி உதவினார். 9 கர்த்தருடைய கண்கள் பூமியில் உள்ள அனைவர் மீதும் சுற்றிவரும். தனக்கு உண்மையானவர்களை அவர் தேடி அவர்களை பலமுள்ளவர் ஆக்குவார். ஆசா நீ முட்டாள்தனமாக நடந்துக்கொண்டாய். எனவே இப்போது முதல் நீ போர்களை சந்திப்பாய்” என்றான்.
10 ஆசாவிற்கு அனானி மீது அவன் பேசிய சொற்களுக்காக கோபம் வந்தது. அவன் எந்தவித காரணமின்றி அனானியைச் சிறையில் அடைத்தான். இக்காலக் கட்டத்தில் ஆசா பலரிடம் கொடூரமாக நடந்துக்கொண்டான்.
11 தொடக்கம் முதல் இறுதிவரை ஆசா செய்த செயல்கள் யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 12 ஆசாவின் 39வது ஆட்சியாண்டில் அவன் காலில் நோய் வந்தது. இது மிக மோசமான நோய். எனினும் கர்த்தருடைய உதவியை நாடவில்லை. உதவிக்காக மருத்துவர்களை நாடினான். 13 ஆசா தனது 41வது ஆட்சியாண்டில் மரித்தான். அவன் தன் முற்பிதாக்களோடு சேர்க்கப்பட்டான். 14 தாவீதின் நகரத்திலே ஆசா தனக்கென்று ஒரு கல்லறை அமைத்திருந்தான். ஜனங்கள் அவனை அதிலேயே அடக்கம் செய்தனர். அவனை வாசனைப் பொருட்களாலும் பலவகை மணக்கலவைகளாலும் அமைக்கப்பட்ட மெத்தை மீது வைத்தனர். ஆசாவை கௌரவிப்பதற்காக ஜனங்கள் ஒரு பெரும் நெருப்பை உண்டாக்கினார்கள்.
யூதாவின் அரசனான யோசபாத்
17 யூதாவின் புதிய அரசனாக ஆசாவின் இடத்திலே அவனது மகனான யோசபாத் ஆனான். இவன் யூதாவை பலமுள்ளதாக ஆக்கினான். இஸ்ரவேலை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு அவன் யூதாவை பலப்படுத்தினான். 2 அவன் யூதாவின் அனைத்து நகரங்களிலும் படை வீரர்கள் அடங்கிய குழுக்களை நிறுத்தினான். அந்நகரங்கள் எல்லாம் யூதாவிலும், அவன் தந்தையால் கைப்பற்றப்பட்ட எப்பிராயீம் நகரங்களிலும் யோசபாத் கோட்டைகளைக் கட்டினான்.
3 கர்த்தர் யோசாபாத்தோடு இருந்தார். ஏனென்றால் இவனது சிறுவயதில் இவன் தன் முற்பிதாவான தாவீதைப்போன்று நற்செயல்களைச் செய்தான். இவன் பாகால் விக்கிரகங்களைப் பின்பற்றவில்லை. 4 யோசபாத் தன் முற்பிதாக்களைப்போன்றே தேவனைப் பின்பற்றினான். அவன் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தான். இவன் இஸ்ரவேல் ஜனங்களைப்போன்று வாழ்க்கை நடத்தவில்லை. 5 யோசபாத்தை யூதாவின் பலம் பொருந்திய அரசனாக கர்த்தர் ஆக்கினார். யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் அவனுக்கு அன்பளிப்புக்களைக் கொண்டு வந்தனர். இதனால் யோசபாத் பெருஞ் செல்வமும் பெருமையும் அடைந்தான். 6 யோசபாத்தின் மனம் கர்த்தருடைய வழியில் மகிழ்ச்சியைக் கண்டது. அவன் யூதா நாட்டில் மேடைகளை அகற்றினான். விக்கிரகங்களையும் அழித்தான்.
7 யோசபாத் தன் தலைவர்களை யூத நகரங்களில் கற்பிக்கச் செய்தான். இவை இவனது மூன்றாவது ஆட்சியாண்டில் நடந்தது. பென்னாயில், ஒபதியா, சகரியா, நெதனெயேல், மிகாயா, ஆகியோர் இவனால் அனுப்பப்பட்ட தலைவர்கள். 8 இவர்களோடு லேவியர்களையும் அனுப்பினான். லேவியர்களில் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா ஆகியோர் இருந்தனர். இவர்களோடு ஆசாரியர்களில் எலிஷாமா, யோராம் ஆகியோரையும் அனுப்பினான். 9 இவர்கள் யூதாவிலுள்ள ஜனங்களுக்குப் போதித்தனர். அவர்களிடம் 'கர்த்தருடைய சட்டபுத்தகம்' இருந்தது. அவர்கள் யூதாவின் அனைத்து நகரங்களுக்கும் சென்று அதனைப் போதித்தனர்.
10 யூதாவின் அருகிலுள்ள மற்ற நாட்டினரும் கர்த்தருக்குப் பயந்தனர். எனவே அவர்கள் யோசபாத்துக்கு எதிராகப் போரைத் தொடங்காமல் இருந்தனர். 11 சில பெலிஸ்திய ஜனங்களும் யோசபாத்துக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் யோசபாத்துக்கு வெள்ளியையும் கொண்டுவந்தார்கள். ஏனென்றால், அவன் ஒரு வலிமைமிக்க அரசனென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சில அரபியர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். அவர்கள் 7,700 ஆட்டுக் கடாக்களையும், 7,700 வெள்ளாட்டுக் கடாக்களையும் கொடுத்தனர்.
12 யோசபாத் மிக பலமுள்ளவனாக ஆனான். அவன் கோட்டைகளையும், பொருட்கள் வைப்பதற்கான கருவூலங்களையும் யூதாவில் கட்டினான். 13 யூதா நகரங்களில் பொருட்களை விநியோகம் செய்தான். எருசலேமில் யோசபாத் பயிற்சி மிக்க படைவீரர்களை வைத்திருந்தான். 14 இவ்வீரர்கள் தம் கோத்திரங்களின்படி பட்டியலிடப்பட்டனர். இதுதான் அவர்கள் விபரம்:
யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைவனாக இருந்தான். 3,00,000 வீரர்களுக்கு அவன் தளபதியாக இருந்தான்.
15 யோகனான் எனும் தளபதியிடம் 2,80,000 வீரர்கள் இருந்தனர்.
16 அமசியா எனும் தளபதியிடம் 2,00,000 வீரர்கள் இருந்தனர். அமசியா சிக்ரியின் மகன். அமசியா, தன்னை கர்த்தருடைய சேவையில் ஈடுபடுத்துவதில் மகிழ்ச்சியடைந்தான்.
17 பென்யமீனின் கோத்திரத்தில் இருந்து பின்வரும் சேனாதிபதிகள் இருந்தனர். எலியாதாவிடம் 2,00,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் வில், அம்பு, கேடயம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். எலியாதா மிகப் பலம் பொருந்திய வீரன்.
18 யோசபாத்திடம் 1,80,000 வீரர்கள் போருக்குத் தயாரானவர்களாக இருந்தனர்.
19 அனைவரும் யோசபாத் அரசனுக்குச் சேவைச் செய்துவந்தனர். அரசனுக்கு யூத நாட்டு கோட்டைகளில் பணிசெய்ய வேறு வீரர்களும் இருந்தனர்.
மிகாயா ஆகாப் அரசனை எச்சரிக்கிறான்
18 யோசபாத்துக்கு மிகுந்த செல்வமும், சிறப்பும் இருந்தது. இவன் ஆகாப் அரசனோடு ஒரு திருமண ஒப்பந்தம் செய்துகொண்டான். 2 சில ஆண்டுகளுக்குப் பிறகு யோசபாத் ஆகாபைப் பார்க்க சமாரியா நகரத்திற்குச் சென்றான். ஆகாப் பல ஆடுகளையும் பசுக்களையும் பலி கொடுத்தான். யோசபாத்துக்கும் அவனோடு உள்ள ஜனங்களுக்கும் அவற்றைக் கொடுத்தான். ஆகாப் யோசபாத்திடம் ராமோத் கிலியாத்தைத் தாக்கும்படி உற்சாகப்படுத்தினான். 3 ஆகாப் யோசபாத்திடம், “கிலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடு வருகின்றீரா?” என்று கேட்டான். ஆகாப் இஸ்ரவேலின் அரசன். யோசபாத் யூதாவின் அரசன். யோசபாத் ஆகாபிடம், “நான் உன்னைப் போன்றவன். என் ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்களே. நாங்கள் உங்களோடு போரிலே சேர்ந்துக்கொள்வோம்” என்றான். 4 யோசபாத் மேலும் ஆகாபிடம், “ஆனால் முதலில், நாம் நமது கர்த்தரிடமிருந்து செய்தியை எதிர்ப்பார்ப்போம்” என்றான்.
5 எனவே அரசன் ஆகாப் 400 தீர்க்கதரிசிகளை அணிதிரட்டினான். ஆகாப் அவர்களிடம், “நம்மால் ராமோத் கீலேயாத்துக்கு எதிராகப் போக முடியுமா அல்லது முடியாதா?” என்று கேட்டான்.
தீர்க்கதரிசிகளோ, “போக முடியும், ராமோத் கீலேயாத்தைத் தோற்கடிக்க தேவன் உதவுவார்” என்றனர்.
6 ஆனால் யோசபாத், “கர்த்தருடைய தீர்க்கதரிசி யாராவது இங்கே இருக்கிறார்களா? கர்த்தருடைய விருப்பத்தை அவர்கள் மூலம் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
7 பிறகு அரசன் ஆகாப், யோசபாத்திடம், “இன்னும் ஒருவன் இங்கே இருக்கிறான். அவன் மூலமாக நாம் கர்த்தரிடம் கேட்கலாம். ஆனால் நான் அந்த மனிதனை வெறுக்கிறேன். ஏனென்றால் அவன் எனக்காக கர்த்தரிடமிருந்து எந்த நல்லச் செய்தியையும் சொல்லமாட்டான். எப்பொழுதும் அவன் எனக்காகக் கெட்ட செய்திகளையே வைத்திருப்பான். அவனது பெயர் மிகாயா, அவன் இம்லாவின் மகன்” என்றான். ஆனால்
யோசபாத்தோ, “ஆகாப், நீ அப்படிச் சொல்லக்கூடாது!” என்றான்.
8 பிறகு அரசன் ஆகாப் தனது ஒரு அதிகாரியை அழைத்து, “வேகமாகப் போய், இம்லாவின் மகனான மிகாயாவை அழைத்து வா” என்றான்.
9 இஸ்ரவேலின் அரசனான ஆகாபும், யூதாவின் அரசனான யோசபாத்தும் அரச உடை அணிந்து கொண்டனர். அவர்கள் தம் சிங்காசனங்களில் சமாரியாவின் ஒலிமுக வாசலுக்கு அருகே உள்ள களத்தில் அமர்ந்திருந்தனர். அந்த 400 தீர்க்கதரிசிகளும் இரு அரசர்களின் முன் தங்கள் செய்தியைச் சொன்னார்கள். 10 கெனானாவின் மகனான சிதேக்கியா தனக்கு இரும்பு கொம்புகளைச் செய்தான். அவன், “இதுதான் கர்த்தர் சொன்னது: நீ இந்த இரும்பு கொம்புகளை அணிந்துக் கொண்டு அராமியரை அழிந்துபோகும்வரை தாக்குவாய்” என்றான். 11 அனைத்து தீர்க்கதரிசிகளும் இதனையே சொன்னார்கள். அவர்கள், “ராமோத் கீலேயாத் நகரத்திற்கு செல். நீ வெற்றி பெறுவாய். அராமிய ஜனங்களை வெல்லும்படி கர்த்தர் உதவுவார்” என்றனர்.
12 மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம் போய், “மிகாயா! கவனி. அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரே மாதிரி கூறுகின்றனர். அரசன் வெற்றிபெற முடியும் என அவர்கள் கூறுகின்றனர். எனவே அவர்கள் சொல்வதையே நீயும் கூறு. நீயும் நல்ல செய்தியைக் கூறவேண்டும்” என்றான்.
13 ஆனால் மிகாயா, “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன். எனது தேவன் சொல்வதையே நான் சொல்ல முடியும்” என்று பதிலளித்தான்.
14 பிறகு மிகாயா ஆகாப் அரசனிடம் வந்தான். அரசன் அவனிடம், “மிகாயா நாங்கள் ராமோத் கீலேயாத் நகரத்திற்குப் போரிடப் போகலாமா வேண்டாமா?” என்று கேட்டான்.
அதற்கு மிகாயா, “போ அவர்களோடு போர் செய். அந்த ஜனங்களை வெல்ல கர்த்தர் துணைசெய்வார்” என்றான்.
15 அரசன் ஆகாப் மிகாயாவிடம், “கர்த்தருடைய நாமத்தால் என்னிடம் உண்மையை மட்டுமே கூற வேண்டுமென்று பலமுறை உன்னை நான் சத்தியம் செய்ய வைத்தேன்” என்றான்.
16 பிறகு மிகாயா, “இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மலைப்பகுதியில் சிதறி ஓடுவதை நான் பார்த்தேன். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் உள்ளனர். கர்த்தர், ‘அவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் பத்திரமாக வீட்டிற்குப் போகட்டும்’ என்று கூறினார்” என்றான்.
17 இஸ்ரவேல் அரசனான ஆகாப் யோசபாத்திடம், “கர்த்தரிடமிருந்து எனக்கு மிகாயா நல்ல செய்தியைச் சொல்லமாட்டான் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அவன் எனக்கு கெட்டச் செய்திகளை மட்டுமே கூறுவான்” என்றான்.
18 அதற்கு மிகாயா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள்: கர்த்தர் தன் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். பரலோகத்தின் படை அவரது வலதுபுறமும் இடதுபுறமும் உள்ளன. அனைத்து படைகளும் அவரைச் சுற்றிலும் நின்றுக்கொண்டிருக்கிறது. 19 கர்த்தர், ‘ராமோத் கீலேயாத் நகரின் மேல் படையெடுக்குமாறு செய்து அப்போரில் ஆகாப் மரிக்குமாறு செய்ய, யாரால் தந்திரமாய்ச் செயல்பட முடியும்?’ என்று கேட்டார். அதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறானதைக் கூறினார்கள். 20 பிறகு ஒரு ஆவி வந்து கர்த்தருக்கு முன்பாக நின்றது. அந்த ஆவி ‘நான் ஆகாபிடம் தந்திரமாய்ச் செயல்படுகிறேன்’ என்று கூறியது. அதனிடம், ‘எப்படி?’ என்று கர்த்தர் கேட்டார். 21 அதற்கு அது, ‘நான் போய் ஆகாபின் தீர்க்கதரிசிகளின் வாயில் பொய் சொல்லும் ஆவியாக இருப்பேன்’ என்றது. அதற்குக் கர்த்தர், ‘நீ ஆகாபை ஏமாற்றுவதில் வெற்றி பெறுவாய். எனவே போய் அவ்வாறே செய்’ என்றார்.
22 “இப்போது ஆகாப் கவனி. பொய் சொல்லும் ஆவியை உன் தீர்க்கதரிசிகளின் வாயில் கர்த்தர் இருக்கச் செய்துள்ளார். எனவே கர்த்தர் சொன்னபடி உனக்கு தீமையே ஏற்படும்” என்றான்.
23 பிறகு சிதேக்கியா மிகாயாவின் அருகில் சென்று அவனது முகத்திலே அறைந்தான். சிதேக்கியாவின் தந்தை கெனானா. சிதேக்கியா, “மிகாயா, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னிடம் வந்து இவ்வாறு பேச வைத்தது?” என்று கேட்டான்.
24 அதற்கு மிகாயா, “சிதேக்கியா! நீ உள்ளறைக்குள்ளே ஓடி பதுங்கும் நாளிலே அதனைக் காண்பாய்” என்றான்.
25 பிறகு ஆகாப் அரசன், “மிகாயாவை அழைத்துக் கொண்டு நகர ஆளுநராகிய ஆமோனிடத்திலும் அரச குமாரனாகிய யோவாசிடத்திலும் செல்லுங்கள். 26 அவர்களிடம், இதுதான் அரசன் சொன்னது: ‘மிகாயாவைச் சிறையிலே அடையுங்கள். நான் போரிலிருந்து திரும்பி வரும்வரை சிறிது அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறு எதையும் தராதீர்கள்’ எனக் கூறுங்கள்” என்றான்.
27 அதற்கு மிகாயா, “ஆகாப்! நீ போர்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால், பிறகு கர்த்தர் என் மூலமாகப் பேசவில்லை. ஜனங்களே! நான் சொல்வதைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” என்றான்.
ராமோத் கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறான்
28 இஸ்ரவேல் அரசனான ஆகாபும் யூதாவின் அரசனான யோசபாத்தும் ராமோத் கீலேயாத்தைத் தாக்கினார்கள். 29 ஆகாப் அரசன் யோசபாத்திடம், “நான் போர்க்களத்திற்குள் நுழையுமுன் என் தோற்றத்தை மாற்றிக்கொள்வேன். ஆனால் நீ உனது உடையையே அணிந்துகொள்” என்றான். எனவே இஸ்ரவேலின் அரசனாகிய ஆகாப் தன் ஆடையை மாற்றிக்கொண்டான். இருவரும் போர்க்களத்துக்குச் சென்றார்கள்.
30 ஆராம் அரசன் தனது இரதப்படைத் தளபதியிடம் ஒரு கட்டளையிட்டான். அவன் அவர்களிடம், “எவரோடும் சண்டையிடவேண்டாம். அவன் பெரியவனாயினும் சரி, சிறியவனாயினும் சரியே. ஆனால் இஸ்ரவேலின் அரசனான ஆகாபிடம் மட்டும் சண்டையிடுங்கள்” என்றான். 31 இரதப்படைத் தளபதிகள் யோசபாத்தைக் கண்டதும் “இஸ்ரவேலின் அரசனான ஆகாப் அங்கே இருக்கிறான்!” என்று எண்ணினார்கள். எனவே யோசபாத்தைத் தாக்க அவர்கள் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் சத்தமிட்டு வேண்டினபடியால் கர்த்தர் அவனுக்கு உதவினார். தேவன் இரதப்படைத் தளபதிகளை யோசபாத்தை விட்டு விலகும்படி செய்தார். 32 அவர்களுக்கு இவன் இஸ்ரவேல் அரசனான ஆகாப் இல்லை என்று தெரிந்ததும் துரத்துவதை விட்டுவிட்டனர்.
33 ஆனால் ஒரு வீரன் எந்தவித குறியும் இல்லாமல் ஒரு அம்பை விட்டான், அது இஸ்ரவேல் அரசனான ஆகாபின் மீது பாய்ந்தது. அது ஆகாபின் உடலில் கவசம் இல்லாத பகுதியின் மேல் பாய்ந்தது. ஆகாப் தன் இரதவோட்டியிடம், “இரதத்தைத் திருப்பிக் கொள். நான் காயப்பட்டிருக்கிறேன். என்னை போர்களத்துக்கு வெளியே கொண்டு செல்!” என்றான்.
34 அன்று போர் மிகவும் மோசமாக நடை பெற்றது. அன்று மாலைவரை ஆகாப் ஆராமியருக்கு எதிராக இரதத்தில் நின்றுக்கொண்டிருந்தான். சூரியன் மறைந்ததும் அவன் மரித்தான்.
19 யூதாவின் அரசனான யோசபாத் எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தான். 2 யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் யோசபாத்தை சந்திக்க வந்தான். அவனது தந்தையின் பெயர் அனானி. அவன் அரசனிடம், “ஏன் கெட்டவர்களுக்கு உதவினாய்? கர்த்தரை வெறுப்பவர்கள் மேல் ஏன் அன்பு செலுத்தினாய். அதனால் தான் கர்த்தர் உன் மீது கோபமாக இருக்கிறார். 3 ஆனால் உனது வாழ்வில் சில நன்மைகளும் உள்ளன. நீ விக்கிரகங்களை அழித்தாய். நீ மனப்பூர்வமாகத் தேவனைப் பின்பற்றவேண்டும் என்று எண்ணினாய்” என்றான்.
யோசபாத் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறான்
4 யோசபாத் எருசலேமில் வாழ்ந்தான். பெயர்செபா நகரம் முதல் எப்பிராயீம் மலை நாடுவரை வாழும் ஜனங்களுடன் சேர்ந்து வாழும் பொருட்டு, மீண்டும் யோசபாத் வெளியேறினான். அந்த ஜனங்களை அவன் அவர்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பக் கொண்டுவந்தான். 5 யோசபாத் யூதாவில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தான். அவன் தேர்ந்தெடுத்த நீதிபதிகளை ஒவ்வொரு கோட்டையிலும் இருக்கச் செய்தான். 6 யோசபாத் நீதிபதிகளிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் ஜனங்களுக்காக நியாயந்தீர்க்கவில்லை. கர்த்தருக்காக நியாயந்தீர்க்கிறீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுக்கும்போது கர்த்தர் உங்களோடு இருக்கிறார். 7 இப்போது உங்களில் ஒவ்வொருவரும் கர்த்தருக்குப் பயப்படவேண்டும். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நமது தேவனாகிய கர்த்தர் நியாயமானவர். அவர் அநீதியானவற்றை யாருக்கும் செய்யமாட்டார். மேலும் தனது நியாயத்தீர்ப்புகளை மாற்றிக்கொள்ள பணத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டார்” என்றான்.
8 எருசலேமில், யோசபாத் சில லேவியர்களையும் ஆசாரியர்களையும், இஸ்ரவேல் கோத்திர தலைவர்களில் சிலரையும் நீதிபதிகளாகத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் எருசலேமில் உள்ள ஜனங்களின் சிக்கல்களை தேவனுடைய சட்டத்தால் சரி செய்யவேண்டும். 9 யோசபாத் அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவன், “நீங்கள் உங்கள் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் சேவைச் செய்யவேண்டும். நீங்கள் கர்த்தருக்கு பயப்படவேண்டும். 10 உங்களிடம் கொலை, சட்டப்பிரச்சனைகள், கட்டளை, விதிமுறை அல்லது வேறு சில சட்டங்கள் பற்றிய வழக்குகள் வரும், அனைத்து வழக்குகளிலும் நீங்கள் ஜனங்களைக் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யாதபடிக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். நீங்கள் உண்மையாக சேவை செய்யாவிட்டால் கர்த்தருடைய கோபம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் ஏற்படும். நீங்கள் இப்படி செய்தால் குற்றவாளிகளாகமாட்டீர்கள்.
11 “அமரியா தலைமை ஆசாரியன். கர்த்தரைப் பற்றிய காரியங்களில் அவன் உங்களுக்கு மேலாக இருப்பான். அரசனைப் பற்றிய விவகாரங்களில் செபதியா உங்களுக்கு உயர்ந்தவனாக இருப்பான். செபதியாவின் தந்தையின் பெயர் இஸ்மவேல். செபதியா யூதா கோத்திரத்தின் தலைவனாக இருக்கிறான். லேவியர்கள் உங்களுக்கு எழுத்தாளர்களாக சேவை செய்வார்கள். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் உறுதியாக இருங்கள். சரியானவற்றைச் செய்கின்ற ஜனங்களோடு கர்த்தர் துணை இருப்பாராக” என்றான்.
யோசபாத் போரை எதிர் நோக்கியிருக்கிறான்
20 பிறகு மோவாபிய ஜனங்களும், அம்மோன் ஜனங்களும், சில மியூனிய ஜனங்களும் யோசபாத்துக்கு எதிராகப் போரிடத் தொடங்கினார்கள். 2 சிலர் யோசபாத்திடம் வந்து, “உங்களுக்கு எதிராகப் போரிட ஏதோமிலிருந்து ஒரு பெரும்படை வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் மரணக் கடலின் மறுகரையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே ஆசாசோன் தாமாரில் உள்ளார்கள்!” என்றனர். (ஆசாசோன் தாமார் எங்கேதி என்றும் அழைக்கப்படுகிறது.) 3 யோசபாத்துக்குப் பயம் ஏற்பட்டது. என்ன செய்யவேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கத் தீர்மானித்தான். யூதாவிலுள்ள எல்லோரும் உபவாசம் இருக்க ஒரு நேரத்தைக் குறித்தான். 4 யூதாவிலுள்ள ஜனங்கள் ஒன்று கூடி கர்த்தரிடம் உதவி கேட்டனர். யூதாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கர்த்தருடைய உதவியை வேண்டினார்கள். 5 யோசபாத் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். அங்கு புதுப்பிரகாரத்திற்கு முன்னால் இருந்தான். யூதாவிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்த ஜனங்கள் கூட்டத்தின் முன்னர் நின்று பேசினான். 6 அவன் சொன்னதாவது:
“எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே நீர் பரலோகத்திலிருக்கிற தேவன். அனைத்து நாடுகளிலும் உள்ள அரசுகளை நீர் ஆண்டுவருகிறீர். உமக்கு அதிகாரமும் பலமும் உள்ளது. உமக்கு எதிராக எவராலும் நிற்க முடியாது. 7 நீரே எங்களுடைய தேவன். இந்த நிலத்திலிருந்து ஜனங்கள் வெளியேறுமாறு நீர் கட்டாயப்படுத்தினீர். இதனை உம்முடைய இஸ்ரவேல் ஜனங்களின் முன்னிலையிலேயே நீர் செய்தீர். நீர் இந்த நிலத்தை ஆபிரகாமின் சந்ததியினருக்கு எக்காலத்திற்கும் உரியதாக்கினீர். ஆபிரகாம் உமது நண்பர். 8 ஆபிரகாமின் சந்ததியினர் இந்த நிலத்தில் வாழ்ந்தார்கள். உமது நாமத்தால் ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். 9 அவர்கள், ‘எங்களுக்கு வாளாலோ, தண்டனையாலோ, நோயாலோ, பஞ்சத்தாலோ துன்பங்கள் வந்தால் நாங்கள் உமது ஆலயத்தின் முன்னால் உமக்கு முன் நிற்போம். உம்முடைய நாமம் இவ்வாலயத்தின் மேல் உள்ளது. நாங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நோக்கிச் சத்தமிடுவோம். பின் நீர் அதைக் கேட்டு எங்களைக் காப்பாற்றுவீர்.’
10 “ஆனால் இப்போது, இங்கே அம்மோன், மோவாப், சேயீர் மலை ஆகிய ஜனங்கள் இருக்கின்றனர். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது அவர்களது நிலத்தின் வழியாகச் செல்ல நீர் அனுமதிக்கவில்லை. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் இவர்களை விட்டு விலகி, அழிக்காமல் போனார்கள். 11 ஆனால் பாரும், நாங்கள் அவர்களை அழிக்காமல் விட்டதற்கு அவர்கள் எங்களுக்குத் தரும் வெகுமதியைப் பாரும். அவர்கள் உம்முடைய நாட்டை விட்டு வெளியேறுமாறு எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த நாட்டை நீர் எங்களுக்கு கொடுத்தீர். 12 எங்களுடைய தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். எங்களுக்கு எதிராக வந்திருக்கும் இப்பெரும் படையை எதிர்க்க எங்களிடம் பலம் இல்லை. என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால் நாங்கள் உம்மிடம் உதவியை வேண்டுகிறோம்!” என்றான்.
13 யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் தங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் பிள்ளைகளுடன் கர்த்தருக்கு முன்னால் நின்றார்கள். 14 பிறகு கர்த்தருடைய ஆவி யகாசியேல் என்பவன் மீது வந்தது. யகாசியேல் சகரியாவின் மகன். சகரியா பெனாயாவின் மகன். பெனாயா ஏயெலின் மகன். ஏயேல் மத்தனியாவின் மகன். யகாசியேல் ஒரு லேவியன். இவன் ஆசாபின் சந்ததியான். கூட்டத்தின் நடுவில் 15 யகாசியேல், “நான் சொல்வதைக் கேளுங்கள். யோசபாத் அரசனே, யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே, கர்த்தர் உங்களுக்கு இதனைக் கூறுகிறார்: ‘இப்பெரும் படையைக்கண்டு அஞ்சவோ, கவலைப்படவோ வேண்டாம். ஏனென்றால் இது உங்களுடைய போரல்ல. இது தேவனுடைய போர். 16 நாளை கீழே இறங்கிப்போய் அவர்களோடு சண்டையிடுங்கள். அவர்கள் சிஸ் என்ற மேட்டு வழியாக வருகிறார்கள். அவர்களை நீங்கள் யெருவேல் எனும் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் முடிவில் சந்திப்பீர்கள். 17 இப்போரில் நீங்கள் சண்டையிடவே வேண்டாம். உங்கள் இடங்களில் உறுதியாக நில்லுங்கள். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவதைக் காண்பீர்கள். யூதா நாட்டினரே! எருசலேமியர்களே! அஞ்சாதீர்கள். கவலைப்படாதீர்கள்! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். எனவே நாளை அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள்’ என்றார்” என்று சொன்னான்.
18 யோசபாத் குனிந்து வணங்கினான். அவனது முகம் தரையைத் தொட்டது. யூதாவில் வாழும் ஜனங்களும் எருசலேமில் வாழும் ஜனங்களும் கர்த்தருக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தரை தொழுதுகொண்டனர். 19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை, கோகாத் மற்றும் கேரா ஆகிய கோத்திரத்தில் உள்ள லேவியர்கள் எழுந்து நின்று துதித்தனர். அவர்கள் கர்த்தரை மிகச் சத்தமாகத் துதித்தனர்.
20 அதிகாலையில் யோசபாத்தின் படையானது தெக்கோவா வனாந்தரத்திற்குப் போனது. அவர்கள் புறப்படும்போது யோசபாத் நின்ற வண்ணம், “யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள். விசுவாசத்தில் உறுதியாயிருங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள். அதனால் வெற்றி பெறுவீர்கள்” என்றான்.
21 பிறகு யோசபாத் ஜனங்களை அறிவுரைகளால் உற்சாகப்படுத்தினான். பின்னர் கர்த்தரைத் துதித்துப் பாடப் பாடகர்களைத் தேர்ந்தெடுத்தான். கர்த்தர் பரிசுத்தமும், அற்புதமும் கொண்டவர். இவரைத் துதித்துப் பாடிக் கொண்டே பாடகர்கள் படைக்கு முன்னால் சென்றார்கள். அவர்கள்,
“கர்த்தரைத் துதியுங்கள்,
ஏனென்றால் அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்!” என்று பாடினார்கள்.
22 தேவனை இவர்கள் பாடித் துதிக்கத் தொடங்கியதும், கர்த்தர் அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் மீது ஒரு மறைமுகத் தாக்குதல் நடத்தினார். இவர்களே யூதா நகரின் மேல் போர் தொடுத்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கப்பட்டார்கள். 23 அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேர்ந்து சேயீர் மலை நாட்டினர் மீது போரிடத் தொடங்கினார்கள். அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேயீர் மலை நாட்டினரைக் கொன்று அழித்தார்கள். சேயீர் மலை நாட்டினரைக் கொன்று முடித்த பிறகு தமக்குள்ளாகவே போரிட்டுக் கொல்லத் தொடங்கினார்கள்.
24 யூதா ஜனங்கள் வனாந்தரத்தில் பார்ப்பதற்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் பெரும் படையைக் கவனித்தனர். அவர்கள் செத்துப்போன பிணங்களைத்தான் பார்க்க முடிந்தது. எவரும் அங்கு உயிரோடு இல்லை. 25 யோசபாத்தும் அவனது படையும் வந்து மரித்துப் போனவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றார்கள். அவர்கள் பல மிருகங்களையும், செல்வங்களையும், ஆடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள். அவர்கள் அவற்றைத் தமக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் இவ்வாறு விலையுயர்ந்த பொருட்களை மூன்று நாட்களாக கொள்ளையிட்டனர். ஏனென்றால் அவற்றின் அளவு அவ்வளவு மிகுதியாயிருந்தது. 26 நான்காவது நாள் யோசபாத்தும் அவனது படைகளும் பெராக்கா பள்ளத்தாக்கில் கூடினார்கள். அந்த இடத்தில் அவர்கள் கர்த்தரைத் துதித்தனர். எனவே அந்த இடம், “பெராக்கா பள்ளத்தாக்கு” என்று இதுவரையிலும் அழைக்கப்படுகிறது.
27 பிறகு யோசபாத் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை எருசலேமிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போனான். அவர்களின் பகைவர்கள் அழிக்கப்பட்டதால் அவர்களைக் கர்த்தர் மிகவும் மகிழ்ச்சியோடு வைத்தார். 28 அவர்கள் எருசலேமிற்குத் தம்புருக்களோடும், சுரமண்டலங்களோடும், எக்காளங்களோடும் வந்து கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர்.
29 அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அரசுகளும் கர்த்தருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் அவை இஸ்ரவேலின் எதிரிகளோடு கர்த்தர் போரிட்டதைப் பற்றி கேள்விப்பட்டனர். 30 அதனால் யோசபாத்தின் அரசாங்கம் சமாதானமாக இருந்தது. யோசபாத்தின் தேவன் அவனைச் சுற்றிலும் சமாதானத்தைத் தந்தார்.
யோசபாத் ஆட்சியின் முடிவு
31 யோசபாத் யூதா நாடு முழுவதையும் அரசாண்டான். இவன் ஆளத்தொடங்கும்போது இவனுக்கு வயது 35, இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாயின் பெயர் அசுபாள். இவள் சில்கியின் மகள். 32 யோசபாத் தனது தந்தை ஆசாவைப் போன்று சரியான வழியில் வாழ்ந்தான். அவன் ஆசாவின் வழியைப் பின்பற்றுவதில் இருந்து மாறவில்லை. கர்த்தருடைய பார்வையில் நல்லவற்றையேச் செய்தான். 33 ஆனால் மேடைகள் அகற்றப்படவில்லை. தம் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவனைப் பின்பற்றுவதற்காக ஜனங்கள் தங்களுடைய இருதயத்தைத் திருப்பவில்லை. 34 யோசபாத் செய்த மற்ற செயல்களைப் பற்றி தொடக்கம் முதல் இறுதிவரை உள்ளவற்றைப் பற்றி ஆனானியின் மகனாகிய யெகூவின் ஆவணங்களில் எழுதப்பட்டுள்ளன. பிரதி செய்யப்பட்டு, இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்னும் புத்தகத்தில் இவை சேர்க்கப்பட்டன.
35 பிறகு யூதாவின் அரசனான யோசபாத் இஸ்ரவேல் அரசனான அகசியாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். அகசியா தீமைச் செய்தான். 36 யோசபாத் அகசியோவோடு சேர்ந்து கொண்டு தர்ஷீசுக்குச் செல்ல கப்பல் கட்டினான். அவர்கள் கப்பல்களை எசியோன் கேபேரிலே கட்டினார்கள். 37 பிறகு எலியேசர் யோசபாத்துக்கு எதிராகப் பேசினான். எலியேசரின் தந்தை பெயர் தொதொவா. எலியேசர் மரேசா ஊரினன். அவன், “யோசபாத், நீ அகசியாவோடு சேர்ந்துவிட்டாய். அதனால்தான் கர்த்தர் உனது வேலைகளை அழிப்பார்” என்றான். கப்பல்கள் நொறுங்கிப்போயின. அதனால் யோசபாத்தும், அகசியாவும் தம் ஆட்களை தர்ஷீசுக்கு அனுப்பமுடியாமல் போயிற்று.
21 யோசபாத் மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீதின் நகரிலே அடக்கம் செய்யப்பட்டான். யோராம் யோசபாத்தின் இடத்தில் புதிய அரசன் ஆனான். யோராம் யோசபாத்தின் மகன். 2 அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா எனும் சகோதரர்கள் யோராமிற்கு இருந்தனர். இவர்கள் யோசபாத்தின் மகன்கள். யோசபாத் யூதாவின் அரசன் ஆவான். 3 யோசபாத் தன் மகன்களுக்கு வெள்ளி, பொன், விலையுயர்ந்த பொருட்கள் என்று பல பரிசுகளைக் கொடுத்தான். பலமான கோட்டைகளையும் அவர்களின் பொறுப்பில் விட்டான். ஆனால் அவன் தனது ஆட்சியை யோராமிடம் கொடுத்தான். ஏனென்றால் அவன்தான் மூத்த மகன்.
யூதா அரசனான யோராம்
4 யோராம் தனது தந்தையின் அரசை ஏற்றுக் கொண்டதும் தன்னை பலப்படுத்திக் கொண்டான். பிறகு வாளால் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்றான். இஸ்ரவேல் தலைவர்கள் சிலரையும் இவன் கொன்றான். 5 யோராம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 32 வயது. அவன் எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். 6 இஸ்ரவேல் அரசர்களின் வழியிலேயே அவனும் ஆண்டான். ஆகாபின் குடும்பத்தைப் போன்றே அவனும் வாழ்ந்தான். ஏனென்றால் அவன் ஆகாபின் மகளை மணந்திருந்தான். கர்த்தருடைய பார்வையில் யோராம் தீயவற்றைச் செய்தான். 7 ஆனால் கர்த்தர் தாவீதின் வம்சத்தை அழிக்க விரும்பவில்லை. ஏனென்றால் கர்த்தர் தாவீதோடு ஏற்கெனவே உடன்படிக்கை செய்திருந்தார். தாவீதிற்கும் அவனது குடும்பத்திற்கும் என்றென்றைக்கும் விளக்கேற்றி வைப்பதாகக் கர்த்தர் வாக்களித்திருந்தார்.
8 யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்த ஏதோம் தனியாகப் பிரிந்தது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு அரசனையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். 9 எனவே யோராம் தனது அனைத்து தளபதிகளோடும் இரதங்களோடும் ஏதோமிற்குச் சென்றான். ஏதோமியப் படை யோராமையும், அவனது இரதப்படையையும் சூழ்ந்துக்கொண்டனர். ஆனால் இரவில் யோராம் அவர்களை முறியடித்தான். 10 அந்த நேரத்திலிருந்து இன்றுவரை ஏதோம் நாடு யூதாவிற்கு எதிராகக் கலகம் செய்தவாறு உள்ளது. லீப்னா ஊரினைச் சேர்ந்தவர்களும் யோராமுக்கு எதிராகத் திரும்பினார்கள். யோராம் தேவனாகிய கர்த்தரைவிட்டு நீங்கியதால் இது நடந்தது. யோராமின் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவன் அவரே. 11 யோராமும் யூதாவின் மலைப்பகுதிகளில் மேடைகளை அமைத்தான். எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புவதை செய்யாதவாறு யோராம் ஆண்டான். அவன் யூதாவின் ஜனங்களைக் கர்த்தரைவிட்டு விலக்கி வழிநடத்திச் சென்றான்.
12 எலியா தீர்க்கதரிசியிடமிருந்து யோராம் ஒரு செய்தியைப் பெற்றான். அந்தச் செய்தி சொன்னதாவது:
“தேவனாகிய கர்த்தர் சொன்னது இது தான். உனது தந்தையான தாவீது பின்பற்றிய தேவன் இவர்தான். ‘யோராம்! நீ உனது தந்தை யோசபாத் வாழ்ந்த வழியில் வாழவில்லை. யூதாவின் அரசனான ஆசா வாழ்ந்த வழியிலும் நீ வாழவில்லை. 13 நீயோ இஸ்ரவேலின் அரசர்கள் வாழ்ந்ததுபோன்று வாழ்ந்து வருகிறாய். யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புகிறதைச் செய்யாதிருக்க செய்துள்ளாய். ஆகாபும் அவன் குடும்பத்தினரும் செய்தது இதுவே. அவர்கள் தேவனுக்கு நன்றியுடையவர்களாக இல்லை. நீ உன்னுடைய சகோதரர்களைக் கொன்றிருக்கிறாய். உனது சகோதரர்கள் உன்னைவிட நல்லவர்கள். 14 எனவே, இப்போது கர்த்தர் விரைவில் உனது ஜனங்களை அதிக தண்டனை கொடுத்துத் தண்டிப்பார். உனது குழந்தைகள், மனைவிகள், உனக்குரிய சொத்துக்கள் ஆகிய அனைத்தையும் கர்த்தர் தண்டிப்பார். 15 நீ கொடிய குடல் நோயால் அவதிப்படுவாய். இது நாளுக்கு நாள் மிகுதியாகும். பிறகு உனது கொடூரமான நோயால் உனது குடல் வெளியில் வரும்’ என்று கர்த்தர் கூறுகிறார்.”
16 கர்த்தர் பெலிஸ்திய ஜனங்களையும், எத்தியோப்பியர்களுக்கு அருகில் வசித்த ஆராப் ஜனங்களையும் யோராமின் மீது கோபங்கொள்ளுமாறு விளைவித்தார். 17 அவர்கள் யூதா நாட்டைத் தாக்கினார்கள். அரசனது வீட்டிற்குச் சொந்தமான அனைத்துச் செல்வங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். யோராமின் மனைவிகளையும் பிள்ளைகளையும் கைப்பற்றினர். யோராமின் இளைய மகன் மட்டும் விடப்பட்டான். அவனது பெயர் யோவாகாஸ்.
18 இவையனைத்தும் நிகழ்ந்த பிறகு கர்த்தர் யோராமிற்குக் குடல்நோய் வரும்படி செய்தார். அது குணப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. 19 பிறகு இரண்டாண்டுகள் கழிந்து அவனது நோயின் காரணமாக குடல் வெளியில் வந்தது. அவன் மிகுந்த வலியால் மரித்துப்போனான். இவனது தந்தைக்கு வாசனை பொருட்களை எரித்ததுபோல் இவனுக்கு ஜனங்கள் எரிக்கவில்லை. 20 யோராம் அரசனானபோது 32 வயதுள்ளவனாயிருந்து 8 வருஷம் எருசலேமில் அரசாண்டு மரித்துப் போனான். அவன் மரித்ததும் அவனுக்காக எவரும் துக்கப்படவில்லை. ஜனங்கள் யோராமை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். ஆனால் அரசர்களுக்குரிய கல்லறையில் அடக்கம் செய்யவில்லை.
யூதாவின் அரசனான அகசியா
22 யோராமின் இடத்திற்கு எருசலேம் ஜனங்கள் அகசியாவைப் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். அகசியா யோராமின் இளைய மகன் ஆவான். யோராமின் முகாமை அரபியர்களுடன் சேர்ந்துகொண்டு வந்தவர்கள் தாக்கியபோது, யோராமின் மூத்த மகன்களைக் கொன்றுவிட்டனர். எனவே அகசியா மட்டுமே மீதியாகயிருந்ததால் யூதாவின் அரசனானான். 2 அகசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 22 வயது. அகசியா எருசலேமில் ஓராண்டு ஆட்சி செய்தான். அவனது தாயின் பெயர் அத்தாலியாள். அவள் ஒம்ரியின் மகள். 3 அகசியாவும் ஆகாபின் குடும்பத்தினரைப்போலவே வாழ்ந்தான். இவன் இவ்வாறு வாழ்வதற்கு இவனது தாயே காரணமாக இருந்தாள். இவன் தவறு செய்ய அவள் தூண்டினாள். 4 கர்த்தருடைய பார்வையில் அகசியா தீமைச் செய்துவந்தான். இதைத்தான் ஆகாப் குடும்பத்தினரும் செய்துவந்தனர். அகசியாவின் தந்தை மரித்த பிறகு ஆகாபின் குடும்பத்தினர் இவனுக்கு தீய அறிவுரைகளைக் கூறிவந்தனர். அவை அவனுக்கு மரணத்துக்கு ஏதுவாயிற்று, 5 ஆகாபின் குடும்பத்தினர் தந்த அறிவுரைகளை அகசியா பின்பற்றினான். இவன் யோராமோடு சேர்ந்துகொண்டு ஆராமின் அரசனான ஆசகேலுக்கு எதிராகச் சண்டையிட ராமோத் கீலேயாத் நகரத்திற்குச் சென்றான். யோராமின் தந்தையின் பெயர் ஆகாப். இவன் இஸ்ரவேலின் அரசன். ஆனால் ஆராமியர்கள் போரில் யோராமைக் காயப்படுத்தினர். 6 யோராம் தன்னைக் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரெயேல் நகரத்திற்குத் திரும்பிப் போனான். இவன் ஆராம் அரசனான ஆசகேலுக்கு எதிராக ராமோத்தில் சண்டையிட்டபோது இக்காயங்களை அடைந்தான். பிறகு யோராமைப் பார்க்க அகசியா யெஸ்ரெயேல் நகரத்திற்கு சென்றான். அகசியாவின் தந்தையின் பெயர் யோராம். இவன் யூதாவின் அரசன். யோராமின் தந்தையின் பெயர் ஆகாப். யோராம் காயப்பட்டதால் யெஸ்ரெயேல் நகரத்தில் இருந்தான்.
7 யோராமைப் பார்க்க அகசியா சென்றபொழுது, தேவன் அகசியாவிற்கு மரணத்தை விளைவித்தார். அகசியா வந்ததும் யோராமோடு யெகூவைச் சந்திக்கப்போனான். யெகூவின் தந்தை நிம்சி. ஆகாபின் குடும்பத்தை அழிக்க கர்த்தர் யெகூவைத் தேர்ந்தெடுத்தார். 8 யெகூ ஆகாபின் குடும்பத்தைத் தண்டித்துக் கொண்டிருந்தான். அதோடு அவன் அகசியாவிற்கு சேவை செய்த யூதாவின் தலைவர்களையும் அகசியாவின் உறவினர்களையும் கண்டுபிடித்து அவர்களைக் கொன்றான். 9 பிறகு யெகூ, அகசியாவைத் தேடினான். அவன் சமாரியா நகரத்திலே ஒளிந்துகொள்ள முயன்றபோது யெகூவின் ஆட்கள் பிடித்துக்கொண்டனர். அவனை அவர்கள் யெகூவிடம் கொண்டுவந்தனர். அவர்கள் அவனைக் கொன்று அடக்கம் செய்தனர். அவர்கள், “அகசியா யோசபாத்தின் சந்ததியான். யோசபாத் தன் முழுமனதோடு கர்த்தரைப் பின்பற்றினான்” என்று கூறினர். அகசியாவின் குடும்பத்தினருக்கு யூதா முழுவதையும் ஆள்வதற்குரிய பெலன் இல்லாமல்போனது.
அத்தாலியாள் அரசி
10 அத்தாலியாள் அகசியாவின் தாய் ஆவாள். இவள் தன் மகன் மரித்துப்போனதை அறிந்ததும், யூதாவில் உள்ள அரசர்களின் எல்லா பிள்ளைகளையும் கொன்றுபோட்டாள். 11 ஆனால் யோசேபியாத் அகசியாவின் மகனான யோவாசை எடுத்து மறைத்து வைத்தாள். அவள் யோவாசையும் அவனது தாதிகளையும் படுக்கையறைக்குள்ளே ஒளித்தாள். யோசேபியாத் யோராம் அரசனின் மகள். அவள் யோய்தாவின் மனைவி. யோய்தா ஒரு ஆசாரியன். யோசேபியாத் அகசியாவின் சகோதரி. அத்தாலியாள் யோவாசைக் கொல்லவில்லை. காரணம் அவன் மறைக்கப்பட்டான். 12 யோவாஸ் ஆசாரியர்களோடு தேவனுடைய ஆலயத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மறைக்கப்பட்டான். அக்காலக்கட்டத்தில், அத்தாலியாள் அந்நாட்டை அரசியைப்போல ஆண்டு வந்தாள்.
யோய்தா ஆசாரியனும் யோவாஸ் அரசனும்
23 ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு யோய்தா தனது பலத்தைக் காட்டினான். அவன் எல்லா படைத்தலைவர்களுடனும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இஸ்மவேல், ஓபேதின் மகன் அசரியா, ஆதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியின் மகன் எலிஷாபாத் ஆகியோர் அந்த படைத்தலைவர்கள். 2 அவர்கள் யூதா முழுவதும் சுற்றி யூதாவின் நகரங்களில் இருந்த லேவியர்களைக் கூட்டினார்கள். இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களையும் கூட்டினார்கள். பிறகு அவர்கள் எருசலேமிற்குச் சென்றனர். 3 அனைத்து ஜனங்களும் கூடி, தேவனுடைய ஆலயத்தில் அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.
யோய்தா அவர்களிடம், “அரசனது மகன் ஆட்சி செய்வான். இதுதான் தாவீதின் சந்ததியினரைக் குறித்துக் கர்த்தர் வாக்களித்தது. 4 இப்போது, நீங்களும் செய்ய வேண்டியது இதுதான். ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு நாளில் கடமையாற்றச் செல்லும்பொழுது கதவுகளைக் காவல் காக்க வேண்டும். 5 அடுத்த மூன்றில் ஒரு பங்கினர் அரசனின் இருப்பிடத்தைக் காவல் காக்கவேண்டும். மேலும் மூன்றில் ஒரு பங்கினர் அஸ்திபார வாசலைக் காவல் காக்கவேண்டும். ஆனால் மற்றவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களில் இருக்கவேண்டும். 6 ஒருவரையும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களை மட்டும் அனுமதிக்கவேண்டும். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் சேவைச்செய்பவர்கள். அதோடு பரிசுத்தமானவர்கள். மற்றவர்கள் தங்கள் பணிகளைச் செய்வார்களாக. 7 லேவியர்கள் அரசனுக்கு அருகில் தங்கயிருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வாளைத் தங்களோடு வைத்திருக்கவேண்டும். மற்றவர்கள் எவராவது ஆலயத்திற்குள் நுழைய முயன்றால் அவர்களைக் கொல்லவேண்டும். அரசன் எங்கே சென்றாலும் அவனோடு நீங்கள் செல்ல வேண்டும்” என்றான்.
8 லேவியர்களும் யூதா ஜனங்களனைவரும் யோய்தா ஆசாரியன் சொன்னவற்றுக்கெல்லாம் கீழ்ப்படிந்தனர். யோய்தா ஆசாரியக் குழுவிலுள்ள எவரையும் விட்டுவைக்கவில்லை. எனவே ஒவ்வொரு தளபதிகளும் தங்கள் ஆட்களோடு முறைப்படி ஓய்வு நாளில் வந்து முறைப்படி ஓய்வு நாளில் போய்க்கொண்டு இருந்தனர். 9 தாவீது அரசனுக்குரிய ஈட்டிகளையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் யோய்தா ஆசாரியன் அதிகாரிகளுக்குக் கொடுத்தான். இந்த ஆயுதங்கள் எல்லாம் தேவனுடைய ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன. 10 பிறகு யோய்தா ஆட்களிடம் எங்கெங்கே நிற்க வேண்டும் என்று கட்டளையிட்டான். ஒவ்வொருவரும் தங்கள் ஆயுதங்களைக் கையில் வைத்திருந்தனர். ஆலயத்தின் வலது பக்கத்தில் இருந்து ஆலயத்தின் இடது பக்கம் வரை வரிசையாக ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பலிபீடத்தின் அருகிலும் ஆலயத்திலும், அரசன் அருகிலும் நின்றனர். 11 அவர்கள் அரசனின் மகனை வெளியே அழைத்து வந்து அவனுக்கு முடிச்சூட்டினார்கள். அவனுக்குச் சட்டப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுத்தனர். பிறகு அவர்கள் யோவாசை அரசனாக்கினார்கள். யோய்தாவும் அவனது மகன்களும் அவனுக்கு அபிஷேகம் செய்தனர். அவர்கள், “அரசன் பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.
12 ஜனங்கள் ஆலயத்தை நோக்கி ஓடுவதையும் அங்கே அவர்கள் அரசனை வாழ்த்துவதையும் அத்தாலியாள் கேட்டாள். அவளும் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடையே வந்தாள். 13 அவள் அரசனைக் கண்டாள், முன்வாயிலுக்கு முன்னால் உள்ள தூணுக்கருகில் அரசன் நின்றுகொண்டிருந்தான். அதிகாரிகளும் எக்காளம் ஊதுகிறவர்களும் அரசனுக்கருகில் நின்றுகொண்டிருந்தனர். அந்த நாட்டு ஜனங்கள் மகிழ்ச்சியோடு எக்காளம் ஊதினார்கள். பாடகர்களும் இசைக்கருவிகளை இயக்கினார்கள். அவர்கள் ஜனங்களையும் துதித்துப் பாடும்படிச் செய்தனர். அத்தாலியாள் இதனைப் பார்த்து தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “துரோகம் துரோகம்” என்று கத்தினாள்.
14 யோய்தா ஆசாரியன் படைத்தளபதிகளை அழைத்தான். அவன் அவர்களிடம், “அத்தாலியாளை பிடித்து வெளியே கொண்டுபோங்கள். அவளை யாராவது பின்பற்றினால், அவர்களைக் கொல்ல உங்கள் வாள்களைப் பயன்படுத்துங்கள்” என்றான். அதோடு ஆசாரியர் வீரர்களிடம், “அத்தாலியாளைக் கர்த்தருடைய ஆலயத்தில் கொன்றுவிடாதீர்கள்” என்று எச்சரித்தான். 15 அத்தாலியாள் அரசனின் வீட்டுக் குதிரை வாயிலுக்குள் நுழைய முயன்றபோது வீரர்கள் அவளைப் பிடித்தார்கள். பிறகு அவளை அங்கேயே கொன்றனர்.
2008 by World Bible Translation Center