Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 23:9-33:22

கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எதிரான தீர்ப்பு

தீர்க்கதரிசிகளுக்கான ஒரு செய்தி:
நான் மிகவும் சோகமாக இருக்கிறேன்.
என் இருதயம் உடைந்திருக்கிறது.
    எனது அனைத்து எலும்புகளும் அசைகின்றன.
நான் (எரேமியா) குடிக்காரன் போல் இருக்கிறேன்.
    கர்த்தரினிமித்தமும் அவரது பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும்.
10 யூதா நாடு முழுவதும் வேசித்தனம் என்னும் பாவம் செய்த ஜனங்களால் நிறைந்துள்ளது.
    அவர்கள் பல வழிகளில் விசுவாசமற்றவர்களாக இருக்கிறார்கள்.
கர்த்தர் அந்த நாட்டை சபித்தார்.
    அது மிகவும் வறண்டுபோயிற்று.
செடிகள் வாடி மேய்ச்சல் நிலங்கள் செத்துப்போயின.
    வயல்கள் வனாந்தரங்களைப்போன்று ஆயின.
தீர்க்கதரிசிகள் எல்லாம் தீயவர்கள்.
    அத்தீர்க்கதரிசிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தவறான வழிகளில் அதிகாரத்தைச் செலுத்தினார்கள்.
11 “தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் கூடத் தீயவர்கள் ஆனார்கள்.
அவர்கள் எனது சொந்த ஆலயத்தில் தீயவற்றைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்”
    இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
12 “எனது செய்தியை அவர்களுக்கு கொடுப்பதை நான் நிறுத்துவேன்.
    இது அவர்கள் இருட்டில் நடப்பதைப்போன்றது.
இது அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் ஆசாரியர்களுக்கும் வழுக்குகின்ற சாலையைப்போன்றது.
    அவர்கள் அந்த இருளில் விழுவார்கள்.
அவர்களுக்கு நான் துரதிர்ஷ்டம் கொண்டு வருவேன்.
    நான் அந்தத் தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் தண்டிப்பேன்”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

13 “சமாரியா தீர்க்கதரிசிகள் தவறுகள் செய்வதை நான் பார்த்தேன்.
பொய்த் தெய்வமாகிய பாகாலின் பெயரால் அத்தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வதைப் பார்த்தேன்.
    அத்தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் ஜனங்களை, கர்த்தரைவிட்டு வெளியே வழிநடத்திச் சென்றனர்.
14 இப்போது நான் யூதாவிலுள்ள தீர்க்கதரிசிகள்
    எருசலேமில் பயங்கரமான செயல்கள் செய்வதைப் பார்க்கிறேன்.
இத்தீர்க்கதரிசிகள் வேசித்தனம் என்னும் பாவத்தைச் செய்கின்றனர்.
    அவர்கள் பொய்களைக் கேட்கின்றனர்.
அவர்கள் பொய்யான போதனைகளுக்கு அடிபணிகிறார்கள்.
    அவர்கள் தீயவர்கள் தொடர்ந்து
தீயச் செயல்களைச் செய்ய ஊக்குவிக்கிறார்கள்.
    எனவே, ஜனங்கள் பாவம் செய்வதை நிறுத்தவில்லை.
அவர்கள் சோதோமின் ஜனங்களைப்போன்று இருக்கிறார்கள்.
    இப்போது எருசலேம் எனக்கு கொமோராபோன்று உள்ளது.”
15 எனவே, தீர்க்கதரிசிகளைப்பற்றி சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறது இதுதான்:
“நான் அத்தீர்க்கதரிசிகளை தண்டிப்பேன்.
    தண்டனையானது விஷமுள்ள உணவை உண்பது போலவும், விஷத்தண்ணீரை குடிப்பதுபோன்றும் இருக்கும்.
தீர்க்கதரிசிகளுக்கு ஆன்மீக நோய் ஏற்பட்டது.
    அந்நோய் நாடு முழுவதும் பரவியது.
எனவே, அத்தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்.
    அந்நோய் எருசலேமிலிருக்கும் தீர்க்கதரிசிகளிடமிருந்து வந்தது.”

16 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
    “உங்களில் அத்தீர்க்கதரிசிகள் சொல்பவற்றில் கவனம் செலுத்தாதீர்கள்.
    அவர்கள் உங்களை முட்டாளாக்க முயல்கிறார்கள்.
அத்தீர்க்கதரிசிகள் தரிசனங்களைப்பற்றி பேசுகிறார்கள்.
    ஆனால் அவர்கள் என்னிடமிருந்து அத்தரிசனங்களைப் பெறவில்லை.
அவர்களின் தரிசனங்கள் அவர்களது சொந்த மனதிலிருந்தே வருகின்றன.
17 கர்த்தரிடமிருந்து வந்த உண்மையான செய்தியைச் சிலர் வெறுக்கிறார்கள்.
    எனவே, அத்தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு வேறுபட்டச் செய்தியைக் கூறுகிறார்கள்.
அவர்கள், ‘உங்களுக்கு சமாதானம் இருக்கும்’ என்று கூறுகிறார்கள்.
    சில ஜனங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
அவர்கள் தாங்கள் செய்யவிரும்புவதை மட்டுமே செய்கிறார்கள்.
    எனவே அத்தீர்க்கதரிசிகள், ‘உங்களுக்கு எந்தத் தீமையும் ஏற்படாது!’ என்று கூறுகிறார்கள்.
18 ஆனால் அத்தீர்க்கதரிசிகளில் எவரும் பரலோகச் சபையில் நின்றிருக்கமாட்டார்கள்.
    அவர்களில் எவரும் கர்த்தருடைய செய்தியைப் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோமாட்டார்கள்.
    அவர்கள் எவரும் கர்த்தருடைய செய்தியை கூர்ந்து கவனமாகக் கேட்டிருக்கமாட்டார்கள்.
19 இப்பொழுது கர்த்தருடைய தண்டனை புயலைப் போன்று வரும்.
கர்த்தருடைய கோபம் கொடிய புயலைப்போன்றிருக்கும்.
    கெட்ட மனிதர்களின் தலைகளை மோதித் தள்ளவரும்.
20 கர்த்தருடைய கோபம், அவர் என்ன செய்ய வேண்டும் என்று
    திட்டமிட்டிருந்தாரோ அவற்றைச் செய்து முடிக்கும்வரை நிற்காது.
அந்த நாட்களின் முடிவில்
    நீங்கள் தெளிவாக அறிந்துக்கொள்வீர்கள்.
21 அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை.
    ஆனால், அவர்கள் செய்தியைச் சொல்ல ஓடினார்கள்.
நான் அவர்களோடு பேசவில்லை.
    ஆனால் அவர்கள் என் நாமத்தில் பிரசங்கம் செய்தனர்.
22 அவர்கள் எனது பரலோகச்சபையில் நின்றிருந்தால்,
    பிறகு யூதாவின் ஜனங்களுக்கு என் செய்தியைச் சொல்லியிருப்பார்கள்.
அவர்கள் தீயசெயல் செய்யாமல் ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.
    அவர்கள் பாவம் செய்யாதபடி ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.”

23 “நான் தேவன்! நான் எப்பொழுதும் அருகில் இருக்கிறேன்!”
இந்த வார்த்தை கர்த்தரிடத்திலிருந்து வருகிறது.
    “நான் தூரத்தில் இல்லை.
24 சில மறைவிடங்களில் ஒருவன் என்னிடமிருந்து ஒளிய முயலலாம்.
ஆனால், அவனைப் பார்ப்பது எனக்கு எளிதாகும்.
    ஏனென்றால், நான் பரலோகம் பூமி என்று எல்லா இடங்களிலும் இருக்கிறேன்!”
கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

25 “என் நாமத்தில் பொய்யைப் பிரசங்கம் செய்யும் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள், ‘எனக்கு ஒரு கனவு வந்தது. எனக்கு ஒரு கனவு வந்தது’ என்றார்கள். அவர்கள் இவற்றைச் சொல்வதை நான் கேட்டேன். 26 இது இன்னும் எவ்வளவு காலம் செல்லும்? அத்தீர்க்கதரிசிகள் பொய்களை நினைக்கின்றனர். பிறகு அப்பொய்களை ஜனங்களுக்குப் போதிக்கிறார்கள். 27 இத்தீர்க்கதரிசிகள் ஜனங்கள் என் நாமத்தை மறக்கச் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொய்யான கனவுகளை அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி இதனைச் செய்கிறார்கள். அவர்களது முற்பிதாக்கள் என்னை மறந்தது போலவே, எனது ஜனங்கள் என்னை மறக்கும்படி அவர்கள் செய்ய முயல்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் என்னை மறந்துவிட்டு பொய்யான பாகால் தெய்வத்தை தொழுதனர். 28 வைக்கோல் கோதுமையைப்போன்று ஆகாது. இது போலவே, அத்தீரிக்கதரிசிகளின் கனவுகள் எல்லாம் என்னிடமிருந்து வரும் செய்திகள் ஆகாது. ஒருவன் தனது கனவுகளைப்பற்றிச் சொல்ல விரும்பினால், அவன் சொல்லட்டும். ஆனால், எனது நற்செய்தியை கேட்கட்டும். நற்செய்தியைக் கேட்கிற மனிதன் எனது செய்தியை உண்மையுடன் கூறட்டும்.” 29 “எனது செய்தி அக்கினியைப் போன்றது இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. இது பாறையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது.”

30 “எனவே நான் கள்ளதீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. “இத்தீர்க்கதரிசிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் என் வார்த்தைகளைத் திருடுகிறார்கள். 31 நான் பொய்யான தீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் தம் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அச்செய்தியை என்னிடமிருந்து வருவதாக நடிக்கின்றனர். 32 பொய்க் கனவுகளைப் பரப்பும் பொய்த் தீர்க்கதரிகளுக்கு நான் எதிரானாவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் எனது ஜனங்களைப் பொய்யாலும், பொய் போதனைகளாலும் தவறாக வழிகாட்டுகின்றனர். ஜனங்களுக்குப் போதிக்க நான் இத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை. எனக்காக எதையும் செய்யும்படி நான் அவர்களுக்குக் கட்டளை இடவில்லை. யூதாவின் ஜனங்களுக்கு அவர்களால் உதவி செய்யவே முடியாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

கர்த்தரிடமிருந்து வரும் சோகச் செய்தி

33 “யூதாவின் ஜனங்களே, ஒரு தீர்க்கதரிசியோ, ஒரு ஆசாரியரோ உன்னிடம் ‘கர்த்தருடைய அறிக்கை என்ன என்று கேட்கும்போது’ நீ அவர்களுக்கு, ‘நீங்கள் கர்த்தருக்குப் பெரும் பாரமாக இருக்கிறீர்கள். நான் இப்பாரத்தைத் தூக்கிப் போடுவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது என்று சொல்.

34 “ஒரு தீர்க்கதரிசி அல்லது ஆசாரியன், அல்லது ஜனங்களில் ஒருவன் சொல்லலாம். ‘இது தான் கர்த்தருடைய அறிக்கை…’ அம்மனிதன் பொய் சொன்னான். அவனையும் அவனது குடும்பத்தையும் நான் தண்டிப்பேன். 35 இதைத்தான் ஒருவரிடம் ஒருவர் நீங்கள் கேட்கவேண்டும். ‘கர்த்தருடைய பதில் என்ன?’ அல்லது ‘கர்த்தர் என்ன பதில் சொன்னார்?’ 36 ‘கர்த்தருடைய அறிவிப்பு’ பெருஞ்சுமையானது என்று ஒருபோதும் மீண்டும் சொல்லமாட்டாய். ஏனென்றால், கர்த்தருடைய நற்செய்தி யாருக்கும் பெருஞ்சுமையாக இருக்கக்கூடாது. ஆனால் நீ எங்கள் தேவனுடைய வார்த்தையை மாற்றினாய். அவரே ஜீவனுள்ள தேவன். சர்வ வல்லமையுள்ள கர்த்தர்!

37 “நீ தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினால் ஒரு தீர்க்கதரிசியைக் கேள். ‘கர்த்தர் என்ன பதிலைக் கொடுத்தார்?’ அல்லது ‘கர்த்தர் என்ன சொன்னார்?’ 38 ஆனால் ‘கர்த்தரிடமிருந்து வந்த அறிக்கை (பெருஞ்சுமை) என்ன’ என்று சொல்ல வேண்டாம். நீங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பிறகு, கர்த்தர் இவற்றை உனக்குச் சொல்வார், ‘எனது செய்தியைக் “கர்த்தரிடமிருந்து வந்த அறிவிப்பு” பாரமானது என்று சொல்ல வேண்டாம். இவ்வார்த்தைகளைச் சொல்லவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்னேன். 39 ஆனால், நீ எனது செய்தியை பெருஞ்சுமை என்று அழைத்தாய். எனவே, நான் உன்னைப் பெருஞ்சுமையைப் போன்று தூக்கித் தூர எறிவேன். உங்கள் முற்பிதாக்களுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுத்தேன். ஆனால், நான் உன்னையும் அந்நகரத்தையும் என்னை விட்டுத் தூர எறிவேன். 40 உன்னை முடிவற்ற அவமானத்திற்கு உள்ளாக்குவேன். உன் அவமானத்தை ஒருபோதும் நீ மறக்கமாட்டாய்.’”

நல்ல அத்திகளும் கெட்ட அத்திகளும்

24 கர்த்தர் என்னிடம் இவற்றைக் காட்டினார்: கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பு இரண்டு கூடைகள் நிறைய அத்திப்பழங்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். (பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சர் எகொனியாவைச் சிறைபிடித்துச் சென்றபின் இக்காட்சியைக் கண்டேன். எகொனியா, யோகாக்கீம் அரசனின் மகனாவான். எருசலேமிலிருந்து எகொனியாவையும் அவனது அதிகாரிகளையும் அழைத்துச் சென்றனர். அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நேபுகாத்நேச்சார் யூதாவிலுள்ள அனைத்து தச்சர்களையும் கொல்லர்களையும் கொண்டு சென்றான்.) ஒரு கூடையில் நல்ல அத்திப் பழங்கள் இருந்தன. அந்த அத்திப் பழங்கள் பருவத்தின் முதலில் பறித்த நல்லப் பழங்களாய் இருந்தன. ஆனால், அடுத்தக் கூடையில் அழுகிய பழங்கள் இருந்தன. அவை உண்ண முடியாத அளவிற்கு மிகவும் அழுகியதாக இருந்தன.

கர்த்தர் என்னிடம், “நீ என்ன பார்க்கிறாய், எரேமியா?” என்று கேட்டார்.

நான், “நான் அத்திப் பழங்களைப் பார்க்கிறேன். நல்லப் பழங்கள் மிகவும் நன்றாக உள்ளன. அழுகிய பழங்கள் மிகவும் அழுகியதாக உள்ளன. அவை உண்ண முடியாத அளவிற்கு அழுகியுள்ளன” என்று பதில் சொன்னேன்.

பிறகு, கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை வந்தது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறினார், “யூதாவின் ஜனங்கள் அவர்களின் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் பகைவர்கள் அவர்களைப் பாபிலோனுக்குக் கொண்டு வந்தனர். அந்த ஜனங்கள் இந்த நல்ல அத்திப்பழங்களைப் போன்றவர்கள். நான் அந்த ஜனங்களிடம் இரக்கத்துடன் இருப்பேன். நான் அவர்களைக் காப்பாற்றுவேன். நான் அவர்களை யூதா நாட்டிற்குக் கொண்டு வருவேன். நான் அவர்களைக் கிழித்துப் போடமாட்டேன். நான் அவர்களைக் கட்டுவேன். நான் அவர்களை பிடுங்கமாட்டேன். நான் அவர்களை நட்டுவைப்பேன். அதனால் அவர்கள் வளர முடியும். நான் அவர்களை என்னை அறிந்துக்கொள்ள விரும்புமாறு செய்வேன். நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால், பாபிலோனில் உள்ள அதிகாரிகள் தம் முழு மனதோடு என்னிடம் திரும்புவார்கள்.”

“ஆனால் யூதாவின் அரசனான சிதேக்கியா உண்ண முடியாத அளவிற்கு அழுகிப்போன அத்திப்பழங்களைப் போன்றவன். சிதேக்கியா, அவனது உயர் அதிகாரிகள் எருசலேமில் விடப்பட்ட ஜனங்கள் மற்றும் எகிப்தில் வாழும் யூதாவிலுள்ள ஜனங்கள் அனைவரும் அழுகிய அத்திப்பழங்களைப் போன்றவர்கள். நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் அது அதிர்ச்சிப்படுத்தும். யூதாவிலிருந்து வந்த ஜனங்களை மற்ற ஜனங்கள் பரிகாசம் செய்வார்கள். நான் சிதறடித்த அவர்களை, எல்லா இடங்களிலும் ஜனங்கள் சபிப்பார்கள். 10 நான் அவர்களுக்கு எதிராக வாள், பசி, நோய் ஆகியவற்றை அனுப்புவேன். நான், அவர்கள் அனைவரும் அழிக்கப்படும்வரை தாக்குவேன். நான் அவர்களுக்கும் அவர்களது முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டில் அவர்கள் என்றும் இல்லாமல் போவார்கள்.”

எரேமியாவின் பிரசங்கத்தின் சுருக்கம்

25 யூதாவின் ஜனங்களைக் குறித்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை இதுதான். யூதாவின் அரசனாக யோயாக்கீம் ஆண்ட நான்காவது ஆண்டில் இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் மகன். அவன் அரசனான நான்காவது ஆண்டு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாருக்கு முதல் ஆண்டாக இருந்தது. எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் எரேமியா தீர்க்கதரிசி பேசிய செய்தி இதுதான். கடந்த 23 ஆண்டுகளாக நான் மீண்டும் மீண்டும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். ஆமோனின் மகனான யோசியா யூதாவில் அரசனாக 13 ஆண்டுகளானதை தொடர்ந்து நானும் தீர்க்கதரிசியாக இருக்கிறேன். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உங்களுக்கு கர்த்தரிடமிருந்து செய்தியை நான் சொல்லி வருகிறேன். ஆனால் நீங்கள் கவனிக்கவில்லை. கர்த்தர் அவரது வேலைக்காரராகிய தீர்க்கதரிசிகளை உங்களிடம் மீண்டும் மீண்டும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. நீங்கள் அவர்களிடம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை.

அத்தீர்க்கதரிசிகள், “உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். அத்தீயச் செயல்களைச் செய்வதை நிறுத்துங்கள்! நீங்கள் மாறினால், பிறகு, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே கொடுத்த நாட்டிற்குத் திரும்பி வருவீர்கள். அவர் அந்த நாட்டை நீங்கள் என்றென்றும் வாழும்படி தந்தார். அந்நிய தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். அவர்களைத் தொழுதுகொள்ளவோ அவர்களுக்கு சேவைசெய்யவோ வேண்டாம். யாரோ ஒருவர் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொள்ள வேண்டாம். அது உங்கள் மீது எனக்குக் கோபத்தை மட்டும் ஊட்டும். இவ்வாறு செய்வது உங்களை மட்டுமே பாதிக்கும்.”

“ஆனால் நீங்கள் என்னை கவனிக்கவில்லை” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “யாரோ ஒருவரால் செய்யப்பட்ட விக்கிரகங்களை நீங்கள் தொழுதுகொண்டீர்கள். அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது. அது உங்களையே பாதித்தது.”

எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது இதுதான்: “நீங்கள் எனது வார்த்தைகளை கவனித்துக்கொள்ளவில்லை. எனவே நான் வடக்கில் உள்ள அனைத்து கோத்திரங்களையும் அனுப்புவேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் விரைவில் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரை அனுப்புவேன். அவன் எனது தாசன். நான் அவர்களை யூதா நாட்டிற்கும் யூதாவின் ஜனங்களுக்கும் எதிராக அனுப்புவேன். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் எதிராக அவர்களைக் கொண்டு வருவேன். அந்நாடுகளை எல்லாம் நான் அழிப்பேன். அந்நாடுகளை நான் என்றென்றும் வனாந்தரமாகும்படிச் செய்வேன். அந்நாடுகளை எல்லாம் ஜனங்களை பார்த்து அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்று இகழ்ச்சியாக பிரமித்துப் பேசிக்கொள்வார்கள். 10 அவ்விடங்களில் உள்ள மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான ஓசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். அங்கு இனிமேல் மணமகள் மற்றும் மணமகன்களின் மகிழ்ச்சி ஆராவாரம் இருக்காது. ஜனங்கள் உணவுப் பொருளை அரைக்கும் ஒலியை எடுத்துவிடுவேன். விளக்கு ஒளியையும் நான் எடுத்துவிடுவேன். 11 அந்த இடம் முழுவதும் காலியான வனாந்தரம்போன்று ஆகும். அந்த ஜனங்கள் அனைவரும் பாபிலோன் அரசனுக்கு 70 ஆண்டுகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள்.

12 “ஆனால் 70 ஆண்டுகள் ஆனதும் நான் பாபிலோன் அரசனைத் தண்டிப்பேன். நான் பாபிலோன் நாட்டையும் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் பாபிலோனியர் நாட்டை அவர்களது பாவங்களுக்காகத் தண்டிப்பேன். நான் அந்த நாட்டினை என்றென்றும் வனாந்தரமாக்குவேன். 13 நான் பாபிலோனுக்குப் பல தீமைகள் வரும் என்று சொல்லி இருந்தேன். அவை அனைத்தும் ஏற்படும். எரேமியா அந்த அயல் நாடுகளைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னான். அந்த எச்சரிக்கைகள் எல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 14 ஆம். பாபிலோனில் உள்ள ஜனங்கள் பல நாடுகளுக்கும் பல பெரிய அரசர்களுக்கும் சேவை செய்வார்கள். அவர்கள் செய்யப் போகும் அனைத்துச் செயல்களுக்கும் உரிய தண்டனையை நான் கொடுப்பேன்.”

உலகிலுள்ள நாடுகளுக்கான தீர்ப்புகள்

15 கர்த்தரும் இஸ்ரவேலின் தேவனுமாகிய கர்த்தர் என்னிடம் சொன்னது: “எரேமியா, எனது கையிலுள்ள ஒரு கோப்பைத் திராட்சைரசத்தை எடுத்துக்கொள். இது எனது கோபமாகிய திராட்சைரசம். நான் உன்னை வேறுபட்ட நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கோப்பையிலிருந்து குடிக்குமாறு அந்நாடுகளைச் செய். 16 அவர்கள் இந்தத் திராட்சைரசத்தைக் குடிக்கட்டும். பிறகு அவர்கள் வாந்தி எடுத்து புத்திகெட்டவர்களைப் போல் நடப்பார்கள். அவர்கள் இதனைச் செய்வார்கள். ஏனென்றால், அவர்களுக்கு எதிராக நான் பட்டயத்தை விரைவில் அனுப்புவேன்.”

17 எனவே, கர்த்தருடைய கையிலிருந்த திராட்சைரசக் கோப்பையை நான் எடுத்துக்கொண்டு, கர்த்தர் என்னை அனுப்பிய எல்லா நாடுகளுக்கும் நான் சென்றேன். ஜனங்களை அக்கோப்பையிலிருந்து குடிக்கும்படிச் செய்தேன். 18 நான் இந்தத் திராட்சை ரசத்தை எருசலேம் மற்றும் யூதா ஜனங்களுக்கு ஊற்றினேன். யூதா அரசர்களையும் தலைவர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். நான் இதனைச் செய்தேன். எனவே அவர்கள் காலியான வனாந்தரமாவார்கள். நான் இதனைச் செய்தேன். எனவே, அந்த இடம் மிக மோசமாக அழிக்கப்படும். ஜனங்கள் அதைப்பற்றி இகழ்ச்சியாகப் பேசி பிரமிப்பார்கள். அந்த இடத்தை சபிப்பார்கள். இது நிகழ்ந்தது. யூதா இப்பொழுது அப்படித்தான் இருக்கிறது.

19 எகிப்தின் அரசனான பார்வோனையும் அக்கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். கர்த்தருடைய கோபமாகிய கோப்பையை அவனது அதிகாரிகள், அவனது முக்கியமான தலைவர்கள் மற்றும் அவனது அனைத்து ஜனங்கள் ஆகியோரைக் குடிக்கச் செய்தேன்.

20 அரேபியர்கள் அனைவரையும் ஊத்ஸ் நாட்டிலுள்ள எல்லா அரசர்களையும் அக்கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். பெலிஸ்தியர்களின் நாட்டிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்க வைத்தேன். அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோத் ஆகிய நகரங்களில் உள்ள அரசர்கள் அவர்கள்.

21 பிறகு, நான் ஏதோம், மோவாப், அம்மோன் ஆகிய ஜனங்களை கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.

22 தீரு மற்றும் சீதோனிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன்.

தொலைதூர நாடுகளிலுள்ள அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். 23 தேதான், தேமா, பூசு ஆகிய ஜனங்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். தங்கள் நெற்றிப்பக்கங்களில் தலைமுடியை வெட்டிக்கொண்ட அனைவரையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். 24 அரபியாவிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். இந்த அரசர்கள் வனாந்தரங்களில் வாழ்கிறார்கள். 25 சிம்ரி, ஏலாம், மேதியா ஆகிய நாடுகளிலுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். 26 வடநாட்டிலுள்ள அருகிலும் தொலைவிலுமுள்ள அனைத்து அரசர்களையும் கோப்பையிலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களை ஒருவருக்குப் பின் ஒருவராகக் குடிக்கச் செய்தேன். பூமியிலுள்ள அனைத்து ராஜ்யங்களையும் கர்த்தருடைய கோபமாகிய கோப்பையைக் குடிக்கும்படிச் செய்தேன். ஆனால், “சேசாக்கு” (பாபிலோன்) அரசன் அனைத்து நாடுகளுக்கும் பிறகு, இக்கோப்பையிலிருந்து குடிப்பான்.

27 “எரேமியா, அந்நாடுகளிடம் சொல். இதுதான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் சொல்கிறது, ‘எனது கோபமாகிய இக்கோப்பையைக் குடி. இதிலிருந்து குடி. வாந்தி எடு! கீழே விழு. எழவேண்டாம். ஏனென்றால் உன்னைக் கொல்ல ஒரு பட்டயத்தை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.’

28 “அந்த ஜனங்கள் உமது கையிலிருந்து கோப்பையை எடுத்துக்கொள்ள மறுப்பார்கள். அவர்கள் அதைக் குடிக்க மறுப்பார்கள். ஆனால் நீ அவர்களிடம், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: நீங்கள் இக்கோப்பையிலிருந்து குடித்துத்தீர வேண்டும்! 29 எனது நாமத்தால் அழைக்கப்படுகிற எருசலேம் நகரத்திற்கு நான் ஏற்கனவே இத்தீமைகளை ஏற்படுத்திவிட்டேன். நீங்கள் தண்டிக்கப்படாமல் இருக்கலாம் என்று ஒரு வேளை நினைக்கலாம். ஆனால் நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் தாக்க நான் ஒரு வாளை அழைத்துக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார்” என்பாய். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

30 “எரேமியா, நீ அவர்களுக்கு இச்செய்தியைக் கொடுப்பாய்,

“‘கர்த்தர் மேலிருந்து சத்தமிடுகிறார்.
    அவர் அவரது பரிசுத்தமான ஆலயத்தில் இருந்து சத்தமிடுகிறார்!
கர்த்தர் அவரது மேய்ச்சலிடம் (ஜனங்களிடம்) சத்தமிடுகிறார்!
    அவரது சத்தங்கள் திராட்சைப்பழங்களில் ரசமெடுக்க நடப்பவர்களின் பாடலைப்போன்று சத்தமாக இருக்கிறது.
31 பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் அச்சத்தம் பரவுகிறது.
    அனைத்து சத்தம் எதைக் குறித்துள்ளது?
எல்லா நாடுகளில் உள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டித்துக்கொண்டிருக்கிறார்.
    கர்த்தர் ஜனங்களுக்கு எதிராக தம் வாதங்களைச் சொன்னார்.
அவர் ஜனங்களை நியாயந்தீர்த்தார்.
    இப்பொழுது அவர் தீய ஜனங்களை பட்டயத்தால் கொன்றுக்கொண்டிருக்கிறார்’”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

32 இதைத்தான் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நாடுவிட்டு நாடு பேரழிவு விரைவில் பரவும்.
    அவை ஒரு வல்லமை வாய்ந்த
புயலைப் போன்று பூமியிலுள்ள
    எல்லா தொலைதூர இடங்களுக்கும் பரவும்!”

33 நாட்டின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு ஜனங்களின் மரித்த உடல்கள் போய்ச் சேரும். மரித்த ஜனங்களுக்காக எவரும் அழமாட்டார்கள். எவரும் அந்த உடல்களை சேகரித்து அடக்கம் செய்யமாட்டார்கள். அவை தரையில் எருவைப்போன்று கிடக்குமாறு விடப்படும்.

34 மேய்ப்பர்களே (தலைவர்களே) நீங்கள் ஆடுகளை (ஜனங்களை) வழிநடத்தவேண்டும்.
    பெருந்தலைவர்களே, நீங்கள் கதறத் தொடங்குங்கள்.
வலியில் தரை மீது உருளுங்கள்,
    ஆடுகளின் (ஜனங்களின்) தலைவர்களே.
ஏனென்றால், இது உங்களை வெட்டுவதற்கான காலம்.
    எங்கும் சிதறிப்போகும், உடைந்த ஜாடியின் துண்டுகளைப்போன்று, கர்த்தர் உங்களை முறித்து சிதறடிப்பார்.
35 மேய்ப்பர்கள் ஒளிந்துக்கொள்ள எங்கும் இடமில்லை.
    அத்தலைவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
36 நான் மேய்ப்பர்கள் (தலைவர்கள்) சத்தமிடுவதைக் கேட்கிறேன்.
    ஆடுகளின் (ஜனங்கள்) தலைவர்களின் புலம்பலை நான் கேட்கிறேன்.
    கர்த்தர் மேய்ச்சலிடங்களை (நாட்டை) அழித்துக்கொண்டிருக்கிறார்.
37 அந்த சமாதானமான மேய்ச்சல் நிலங்கள் (அரண்மனைகள்) அழிக்கப்பட்டு காலியான வனாந்தரங்ளைப்போன்று ஆனது.
    இது நிகழ்ந்தது.
    ஏனென்றால், கர்த்தர் கோபமாக இருக்கிறார்.
38 கர்த்தர், தன் குகையை விட்டு வெளியே வரும் ஆபத்தான சிங்கத்தைப்போன்று இருக்கிறார்.
    கர்த்தர் கோபமாக இருக்கிறார்!
அந்த கோபம் அந்த ஜனங்களைப் பாதிக்கும்.
    அவர்களின் நாடு காலியான வனாந்தரம்போன்று ஆகும்.

ஆலயத்தில் எரேமியாவின் பாடம்

26 யூதாவின் அரசனாக யோயாக்கீம் வந்த முதலாம் ஆட்சி ஆண்டில் கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் மகனாக இருந்தான். கர்த்தர், “எரேமியா, கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் எழுந்து நில். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தொழுதுகொள்ள வரும் யூதாவின் ஜனங்கள் அனைவரிடமும் இந்த வார்த்தையைக் கூறு. நான் சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல். எனது வார்த்தையில் எந்தப் பகுதியையும் விட்டுவிடாதே. ஒருவேளை எனது வார்த்தையை அவர்கள் கேட்டு அதற்கு அடிபணியலாம். ஒருவேளை அவர்கள் தமது தீயவாழ்வை நிறுத்தலாம். அவர்கள் மாறினால், பிறகு நான் அவர்களைத் தண்டிப்பதற்காக வைத்திருக்கும் திட்டங்களையும் மாற்றுவேன். அந்த ஜனங்கள் ஏற்கனவே செய்த தீயச்செயல்களுக்காகத்தான் நான் அவர்களைத் தண்டிக்க வேண்டும் எனத் திட்டமிட்டேன். நீ அவர்களிடம் சொல்லுவாய், ‘இதுதான் கர்த்தர் சொன்னது: நான் உங்களிடம் எனது போதனைகளைக் கொடுத்தேன். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து, என் போதனைகளைப் பின்பற்றவேண்டும். எனது ஊழியக்காரர்கள் சொல்லுகிறவற்றை நீங்கள் கேட்க வேண்டும் (தீர்க்கதரிசிகள் எனது ஊழியக்காரர்கள்). நான் தீர்க்கதரிசிகளை மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை. நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால், பிறகு நான் எருசலேமிலுள்ள என் ஆலயத்தை, சீலோவிலுள்ள எனது பரிசுத்தக் கூடாரத்தைப் போன்றுச் செய்வேன். உலகம் முழுவதிலும் உள்ள ஜனங்கள், மற்ற நகரங்களுக்குக் கேடுகள் ஏற்படும்படி வேண்டும்போது எருசலேமை நினைத்துக்கொள்வார்கள்’” என்றார்.

ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் மற்றும் அனைத்து ஜனங்களும் எரேமியா கர்த்தருடைய ஆலயத்தில் இவ்வார்த்தைகளைச் சொல்வதைக் கேட்டனர். கர்த்தர் கட்டளை இட்டிருந்தபடி ஜனங்களிடம் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் எரேமியா சொல்லிமுடித்தான். பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் அனைத்து ஜனங்களும் எரேமியாவைப் பிடித்தனர். அவர்கள் “இத்தகைய பயங்கரமானவற்றை நீ சொன்னதற்காக மரிக்க வேண்டும்” என்றனர். “கர்த்தருடைய நாமத்தால் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இவ்வாலயம் சீலோவிலுள்ளதைப்போன்று அழிக்கப்படும் என்று சொல்ல எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். இந்த ஜனங்களும் வாழாதபடி எருசலேம் வனாந்தரமாகிவிடும் என்று எப்படி தைரியமாக சொல்வாய்?” என்றனர். ஜனங்கள் எல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தில் எரேமியாவைச் சுற்றிக்கூடினார்கள்.

10 இங்கு நடந்த அனைத்தையும் யூதாவை ஆள்பவர்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் அரசனின் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் புதிய வாயிலின் முகப்பில் தங்கள் இடத்தில் அமர்ந்தனர். புதிய வாசல் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வழிநடத்தும் வாசல். 11 பிறகு ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஆள்வோர்களிடமும் ஜனங்களிடமும் பேசினார்கள். அவர்கள், “எரேமியா கொல்லப்படவேண்டும். அவன் எருசலேமைப்பற்றி கெட்டவற்றைக் கூறினான். அவன் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்” என்றனர்.

12 பிறகு எரேமியா, யூதாவின் ஆள்வோர்களிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினான். அவன், சொன்னான், “இவ்வாலயம் மற்றும் நகரைப்பற்றி இவற்றைச் சொல்ல என்னை கர்த்தர் அனுப்பினார். நீங்கள் கேட்ட அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தது. 13 ஜனங்களே, உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்! நல்லவற்றைச் செய்யத் தொடங்குங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் தமது மனதை மாற்றுவார். உங்களுக்குச் சொன்ன தீயச் செயல்களை கர்த்தர் செய்யமாட்டார். 14 என்னைப் பொறுத்தவரை, நான் உங்கள் அதிகாரத்தில் இருக்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தோன்றினபடி நல்லது என்று எதை எண்ணுகிறீர்களோ அதை எனக்குச் செய்யுங்கள். 15 ஆனால் நீங்கள் என்னைக் கொன்றால், ஒன்றை உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு அப்பாவி மனிதனைக் கொன்ற குற்றம் உங்களைச் சேரும். நீங்கள் இந்த நகரத்தையும் இதில் வாழும் ஜனங்களையும் குற்றமுடையவர்களாக ஆக்குகிறீர்கள். உண்மையாகவே கர்த்தர் என்னை உங்களிடம் அனுப்பினார். உண்மையாகவே நீங்கள் கேட்ட செய்திகள் எல்லாம் கர்த்தருடையவை.”

16 பிறகு, ஆள்வோர்களும் அனைத்து ஜனங்களும் பேசினார்கள். அந்த ஜனங்கள் ஆசாரியர்களிடமும் தீர்க்கதரிசிகளிடமும் பேசினார்கள். “எரேமியா கொல்லப்படக் கூடாது. எரேமியா சொன்னவை எல்லாம் நமது தேவனாகிய கர்த்தரிடமிருந்து வந்தது.”

17 பிறகு, சில மூப்பர்கள் (தலைவர்கள்) எழுந்து, அனைத்து ஜனங்களிடமும் பேசினார்கள். 18 அவர்கள், “மொரேசா நகரிலிருந்து மீகா என்னும் தீர்க்கதரிசி வந்தான். யூதாவின் அரசனாக எசேக்கியா இருந்த காலத்தில், மீகா தீர்க்கதரிசியாக இருந்தான். யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் மீகா இச்செய்திகளைக் கூறினான். ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:

“‘சீயோன் அழிக்கப்படும்.
    அது உழப்பட்ட வயல்போன்று ஆகும்.
எருசலேம் பாறைகளின் குவியலாகும்.
    ஆலயம் இருக்கிற குன்றானது புதர்கள் மூடின ஒரு காலி குன்றாகும்.’ (A)

19 “எசேக்கியா யூதாவின் அரசனாக இருந்தான். எசேக்கியா மீகாவைக் கொல்லவில்லை. யூதாவிலுள்ள எந்த ஜனங்களும் மீகாவைக் கொல்லவில்லை. எசேக்கியா கர்த்தரை மதித்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினான். யூதாவிற்குத் தீமை செய்வேன் என்று கர்த்தர் கூறியிருந்தார். ஆனால் எசேக்கியா கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் அவரது மனதை மாற்றிக்கொண்டார். கர்த்தர் அந்தத் தீமைகளைச் செய்யவில்லை. நாம் எரேமியாவைத் தாக்கினால் நமக்கு நாமே பல தொல்லைகளை வரவழைத்துக்கொண்டவர்களாவோம். அத்தொல்லைகளுக்கு நாமே காரணம் ஆவோம்.”

20 கடந்த காலத்தில், கர்த்தருடைய வார்த்தையைப் பிரச்சாரம் செய்ய இன்னொரு மனிதன் இருந்தான். அவனது பெயர் உரியா. அவன் செமாயாவின் மகன். உரியா கீரியாத்யாரீம் என்ற ஊரைச் சேர்ந்தவன். எரேமியா செய்ததுபோன்றே அவனும் இந்நகரத்திற்கும் தேசத்திற்கும் எதிராக தீர்க்கதரிசனம் கூறினான். 21 உரியா பிரச்சாரம் செய்வதை யோயாக்கீம் அரசனும் அவனது படை அதிகாரிகளும் யூதாவின் தலைவர்களும் கேட்டனர். அவர்கள் கோபம் கொண்டனர். யோயாக்கீம் அரசன் உரியாவைக் கொல்ல விரும்பினான். ஆனால் உரியா யோயாக்கீம் தன்னைக் கொல்ல விரும்புவதைப்பற்றி அறிந்தான். உரியா பயந்தான். எனவே எகிப்து நாட்டிற்குத் தப்பித்து ஓடினான். 22 ஆனால், யோயாக்கீம் அரசன் எகிப்துக்கு எல்நாத்தானையும் இன்னும் சிலரையும் அனுப்பினான். எல்நாத்தான் அக்போர் என்ற பெயர் உள்ளவனின் மகன். 23 அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்தனர். பிறகு, அவர்கள் உரியாவை அரசன் யோயாக்கீமிடம் கொண்டுபோனார்கள். உரியா பட்டயத்தால் கொல்லப்படவேண்டும் என்று யோயாக்கீம் அரசன் கட்டளையிட்டான். உரியாவின் உடல் ஏழை ஜனங்கள் புதைக்கப்படுகிற சுடுகாட்டில் வீசப்பட்டது.

24 ஒரு முக்கியமான மனிதன் அகீக்காம் என்ற பெயருடன் இருந்தான். அவன் சாப்பானுடைய மகன். அகீக்காம் எரேமியாவிற்கு உதவியாக இருந்தான். ஆசாரியர்களாலும் தீர்க்கதரிசிகளாலும் எரேமியா கொல்லப்படாமல், அகீக்காம் அவனைக் காப்பாற்றினான்.

கர்த்தர் நேபுகாத்நேச்சாரை ஆளுபவனாக ஏற்படுத்தினார்

27 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை வந்தது. யூதாவின் அரசனாக சிதேக்கியா ஆன நான்காம் ஆட்சி ஆண்டில் இது வந்தது. சிதேக்கியா, யோசியா அரசனின் மகன். இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: “எரேமியா, நீ பட்டையான வார் மற்றும் கம்பங்களையும்கொண்டு ஒரு நுகத்தடி செய். அதை உன் கழுத்தின் பின்னால் பூட்டிக்கொள். பிறகு நீ ஏதோம், மோவாப், அம்மோன், தீரு, சீதோன் ஆகிய அரசர்களுக்குச் செய்தியை (அதுபோன்று நுகத்தை) அனுப்பு. எருசலேமுக்கு வந்துள்ள இந்த அரசர்களின் தூதுவர்களிடம் யூதாவின் அரசனான சிதேக்கியாவைப் பார்க்கும்படி செய்திகள் அனுப்பு. அந்தத் தூதுவர்களிடம் அவர்களது எஜமானர்களிடம் செய்தியைக் கூறுமாறுச் சொல். அவர்களிடம் சொல்: சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேலின் தேவன் சொல்கிறார்: ‘நான் பூமியையும் அதன் மேல் ஜனங்களையும் உண்டாக்கினேன் என்று சொல். நான் பூமியின் மேல் அனைத்து மிருகங்களையும் உண்டாக்கினேன். நான் இவற்றை எனது பெரும் வல்லமையாலும் பலமான கையாலும் செய்தேன். இந்தப் பூமியை நான் விரும்புகிற யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன். நான் இப்பொழுது பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் உங்கள் நாடுகள் அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். அவன் எனது வேலையாள். அவனுக்குக் காட்டு மிருகங்கள்கூட பணியும்படிச் செய்வேன். அனைத்து நாடுகளும் நேபுகாத்நேச்சாருக்கு சேவைசெய்யும். அவனது மகனுக்கும் பேரனுக்கும் சேவைசெய்யும். பிறகு பாபிலோன் தோற்கடிக்கப்படக் கூடிய காலம் வரும். பல நாடுகளும் பெரும் அரசர்களும் பாபிலோனைத் தம் வேலையாளாக வைப்பார்கள்.

“‘ஆனால், இப்பொழுது சில நாடுகளும் இராஜ்யங்களும் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாருக்கு சேவைசெய்ய மறுக்கிறது. அவர்கள் நுகங்களைத் தம் கழுத்தில் மாட்டிக்கொள்ள மறுக்கலாம். அது நிகழந்தால், நான் செய்வது இதுதான். அந்த நாட்டை நான் பட்டயம், பசி மற்றும் பயங்கரமான நோயால் தண்டிப்பேன்’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் அந்த நாட்டை அழித்து முடிக்கும்வரை இதனைச் செய்வேன். நேபுகாத்நேச்சாருக்கு எதிராகச் சண்டையிட்ட நாடுகளை அழிக்க நான் அவனைப் பயன்படுத்துவேன். எனவே, உங்கள் தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்காதீர்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல மந்திரத்தைப் பயன்படுத்தும் ஆட்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். தங்கள் கனவுகளுக்கு விளக்கங்கள் கூறுபவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். மரித்தவர்களோடும் மந்திரம் பயிற்சி செய்வோர்களோடும் பேசுபவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அந்த ஜனங்கள் எல்லாம் உங்களிடம், ‘பாபிலோன் அரசனுக்கு அடிமையாகமாட்டீர்கள்’ என்று சொல்கிறார்கள். 10 ஆனால் அந்த ஜனங்கள் உங்களிடம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் தாய் நாட்டிலிருந்து தூர நாட்டிற்குக் கொண்டுப்போகப்பட அவர்கள் காரணமாக இருக்கிறார்கள். நான் உங்களை வீட்டிலிருந்து போகும்படி வற்புறுத்துவேன். நீங்கள் வேறு நாட்டில் மரிப்பீர்கள்.

11 “‘ஆனால் பாபிலோன் அரசனின் நுகத்திற்குள் தங்கள் கழுத்தை மாட்டிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படிபவர்களாக வாழ்வர். நான் அந்நாட்டாரைத் தங்கள் சொந்த நாட்டிலேயே இருந்து பாபிலோன் அரசனுக்கு சேவைசெய்யச் செய்வேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘அந்நாடுகளில் உள்ள ஜனங்கள் தம் சொந்த நாட்டில் வாழ்ந்து பயிர் செய்வார்கள்.’”

12 நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவிற்கு அதே செய்தியைக் கொடுத்தேன். நான், “சிதேக்கியா, நீ பாபிலோன் அரசனது நுகத்திற்குள் உன் கழுத்தை மாட்டிக்கொண்டு அவனுக்குக் கீழ்ப்படிந்து போக வேண்டும். நீ பாபிலோன் அரசனுக்கும் அவனது ஜனங்களுக்கும் சேவைசெய்தால், பிறகு நீ வாழ்வாய். 13 பாபிலோன் அரசனுக்கு சேவை செய்ய மறுக்கும் ஜனங்கள் பகைவரின் வாள், பசி, பயங்கரமான நோய் ஆகியவற்றால் மரிப்பார்கள். பாபிலோனிய அரசனுக்குப் பணிபுரிய மறுக்கும் ஜனங்களுக்கு இவை எல்லாம் நிகழும். கர்த்தர் இக்காரியங்கள் நடக்கும் என்று கூறினார். 14 ஆனால் கள்ளத்தீர்க்கதரிசிகளோ, ‘பாபிலோன் அரசனுக்கு நீங்கள் என்றென்றும் அடிமையாகமாட்டீர்கள்’ என்று சொல்கிறார்கள்.

“அத்தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களிடம் பொய்யைப் பிரச்சாரம் செய்கின்றனர். 15 ‘நான் அத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை!’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது ‘அவர்கள் பொய்களைப் போதிக்கிறார்கள். இது என்னிடமிருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். எனவே, யூதாவின் ஜனங்களாகிய உங்களை வெளியே அனுப்புவேன். நீங்களும் மரிப்பீர்கள். உங்களிடம் கள்ள தீர்க்கதரிசனம் உரைத்த அத்தீர்க்கதரிசிகளும் மரிப்பார்கள்.’”

16 பிறகு, நான் (எரேமியா) ஆசாரியர்களிடமும் அனைத்து ஜனங்களிடமும் சொன்னேன். “கர்த்தர் சொல்கிறார்: அந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ‘பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பலப் பொருட்களை எடுத்தனர். அப்பொருட்கள் மீண்டும் விரைவில் திரும்பக் கொண்டுவரப்படும்.’ அத்தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேளாதீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களிடம் பொய்யைப் பிரசங்கம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். 17 அத்தீர்க்கதரிசிகளை கவனிக்காதீர்கள். பாபிலோன் அரசனுக்கு சேவை செய்யுங்கள். உங்கள் தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்வீர்கள். எருசலேம் நகரம் அழிக்கப்பட நீங்கள் காரணமாக இராதீர்கள். 18 அம்மனிதர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தால், கர்த்தரிடமிருந்து வார்த்தையைப் பெற்றிருந்தால், அவர்களை ஜெபிக்க விடுங்கள். கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கும் பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்கவிடுங்கள். அரசனது அரண்மனையில் இன்னும் இருக்கும் பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்க விடுங்கள். எருசலேமில் இன்னும் இருக்கின்ற பொருட்களுக்காக அவர்களை ஜெபிக்கவிடுங்கள். இவ்வனைத்து பொருட்களும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லாமல் இருக்கும்படி அத்தீர்க்கதரிசிகளை ஜெபிக்கவிடுங்கள்.

19 “சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமில் இன்னும் விடப்பட்டுள்ள பொருட்களைப்பற்றிக் கூறுகிறார். ஆலயத்தில் தூண்களும் கடல் தொட்டியும் ஆதாரங்களும் மற்ற பணிமுட்டுகளும் உள்ளன. பாபிலோனின் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேமில் இவற்றை விட்டுவைத்தான். 20 நேபுகாத்நேச்சார், அரசன் யோயாக்கீமை சிறைக்கைதியாக வெளியே கொண்டு சென்றபோது, இப்பொருட்களை எடுத்துச் செல்லவில்லை. யோயாக்கீம் அரசனின் மகன் எகொனியாவையும் யூதாவிலிருந்தும், எருசலேமிலிருந்தும் சில முக்கியமான ஜனங்களையும் நேபுகாத்நேச்சார் கொண்டு சென்றான். 21 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களின் தேவன், கர்த்தருடைய ஆலயத்திலும் அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் விடப்பட்டுள்ள பொருட்களைப்பற்றி கூறுகிறார்: ‘அப்பொருட்கள் அனைத்தும் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லப்படும். 22 அவற்றைப் பெறுவதற்காக நான் போகும் காலத்தில் அப்பொருட்கள் மீண்டும் கொண்டுவரப்படும்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘பிறகு நான் அப்பொருட்களைத் திரும்ப கொண்டுவருவேன். இந்த இடத்தில் அப்பொருட்களை மீண்டும் வைப்பேன்.’”

பொய்த் தீர்க்கதரிசி அனனியா

28 யூதாவின் அரசனாகிய சிதேக்கியாவின் ஆட்சியாண்டான நாலாம் வருஷம் ஐந்தாம் மாதம், அனனியா என்னும் தீர்க்கதரிசி என்னிடம் பேசினான். அனனியா அசூர் என்பவனின் மகன். அனனியா கிபியோன் என்னும் நகரத்தினன். அனனியா என்னிடம் பேசும்போது, அவன் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். ஆசாரியர்களும் மற்ற ஜனங்களும் அங்கு இருந்தனர். அனனியா சொன்னது இதுதான்: “சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் சொல்கிறார்: ‘யூதா ஜனங்களின் மேல் பாபிலோன் அரசனால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன். இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னால், பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்ற எல்லாப் பொருட்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை பாபிலோனுக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். ஆனால் நான் அப்பொருட்களை இங்கே எருசலேமிற்குக் கொண்டு வருவேன். நான் யூதாவின் அரசனான எகொனியாவையும் இந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வருவேன். எகொனியா யோயாக்கீமின் மகன், நேபுகாத்நேச்சார் பலவந்தப்படுத்தி வீட்டைவிட்டு அழைத்து பாபிலோனுக்குச் சென்ற ஜனங்கள் அனைவரையும் திரும்பக் கொண்டுவருவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘எனவே யூதாவின் ஜனங்கள் மீது பாபிலோன் அரசனால் போடப்பட்ட நுகத்தை நான் உடைப்பேன்!’”

பிறகு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசிக்கு பதில் சொன்னான். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் நின்று கொண்டிருந்தனர். எரேமியாவின் பதிலை ஆசாரியர்களும் அங்குள்ள அனைத்து ஜனங்களும் கேட்க முடிந்தது. எரேமியா அனனியாவிடம் “ஆமென்! கர்த்தர் இவற்றைச் செய்வார் என்று நான் உண்மையில் நம்புகிறேன்! நீ பிரச்சாரம் செய்கிற இச்செய்தியை கர்த்தர் உண்மையாகும்படி செய்வார். பாபிலோனிலிருந்து கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களை எல்லாம் திரும்பக் கொண்டுவருவார் என்று நம்புகிறேன். தங்கள் வீடுகளிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து ஜனங்களையும் இந்த இடத்திற்குத் திரும்பவும் கர்த்தர் கொண்டுவருவார் என்று நான் நம்புகிறேன்.

“ஆனால் நான் சொல்லவேண்டியதை கவனி, அனனியா, ஜனங்கள் அனைவருக்கும் நான் என்ன சொல்கிறேன் என்பதையும் கவனி. நீயும் நானும் தீர்க்கதரிசிகளாக வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்பு சில தீர்க்கதரிசிகள் இருந்தனர். போர், பசி, பயங்கரமான நோய் ஆகியவை பல நாடுகளுக்கும், பெரும் இராஜ்யங்களுக்கும் ஏற்படும் என்று அவர்கள் பிரச்சாரம் செய்தனர். ஆனால் பிரச்சாரம் செய்கிற தீர்க்கதரிசி நமக்கு சமாதானம் வரும் என்று சொன்னால் அவன் கர்த்தரால் அனுப்பப்பட்டவனா என்பதை நாம் சோதித்து பார்க்க வேண்டும். தீர்க்கதரிசி சொன்ன செய்தி உண்மையானால் பிறகு ஜனங்கள் அவன் உண்மையில் கர்த்தரால் அனுப்பப்பட்டவன் என்பதை அறிவார்கள்.”

10 எரேமியா தன் கழுத்தைச்சுற்றி நுகத்தை அணிந்துக்கொண்டான். பிறகு அனனியா தீர்க்கதரிசி அந்த நுகத்தை எரேமியாவின் கழுத்திலிருந்து எடுத்தான். அனனியா அந்நுகத்தை உடைத்தான். 11 பிறகு அனனியா உரக்கப் பேசினான், எனவே அனைத்து ஜனங்களாலும் கேட்க முடிந்தது. அவன், “கர்த்தர் கூறுகிறார்: ‘இதே மாதிரி நான் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் ஆட்சியை உடைப்பேன். அவன் அந்நுகத்தை உலகிலுள்ள அனைத்து நாடுகள் மேலும் வைத்தான். இரண்டு ஆண்டுகள் முடியுமுன்னால் நான் அந்நுகத்தை உடைப்பேன்’” என்றான்.

அதனை அனனியா சொன்ன பிறகு, எரேமியா ஆலயத்தை விட்டுச் சென்றான்.

12 பிறகு கர்த்தருடைய செய்தி எரேமியாவிற்கு வந்தது. இது, அனனியா எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தை எடுத்து உடைத்தப் பிறகு நிகழ்ந்தது. 13 கர்த்தர் எரேமியாவிடம் சொன்னார், “போய் அனனியாவிடம் சொல். ‘இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நீ ஒரு மரநுகத்தை உடைத்து விட்டாய். நான் மரநுகத்தின் இடத்தில் இரும்பாலான நுகத்தை வைப்பேன்.’ 14 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த அனைத்து நாடுகளின் கழுத்துகளிலும் இரும்பு நுகத்தைப் பூட்டுவேன். அவர்கள் அனைவரும் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சருக்கு சேவை செய்யும்படிச் செய்வேன். அவர்கள் அவனுக்கு அடிமைகளாக இருப்பார்கள். நேபுகாத்நேச்சருக்குக் காட்டு மிருகங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுப்பேன்.’”

15 பிறகு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியிடம் சொன்னான், “அனனியா, கவனி! கர்த்தர் உன்னை அனுப்பவில்லை. ஆனால் நீ யூதாவின் ஜனங்களைப் பொய்யை நம்பச்செய்தாய். 16 எனவே கர்த்தர் இதைத்தான் சொல்கிறார்: ‘அனனியா, உன்னை இந்த உலகத்தை விட்டு விரைவில் எடுத்துவிடுவேன். இந்த ஆண்டில் நீ மரிப்பாய். ஏனென்றால் நீ ஜனங்களை கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படிக் கற்பித்தாய்.’”

17 அனனியா அதே ஆண்டில் ஏழாவது மாதத்தில் மரித்தான்.

பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம்

29 எரேமியா பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். பாபிலோனில் உள்ள மூப்பர்களுக்கும் (தலைவர்கள்) ஆசாரியர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் மற்ற ஜனங்களுக்கும் அவன் அதனை அனுப்பினான். இந்த ஜனங்களெல்லாம் நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள். (இந்தக் கடிதம், எகொனியா அரசனும், அரச மாதாவும், அதிகாரிகளும், யூதா, எருசலேம் மற்றும் யூதா தலைவர்களும், தச்சர்களும் கொல்லர்களும் எருசலேமிலிருந்து கொண்டு செல்லப்பட்டப் பிறகு அனுப்பப்பட்டது). சிதேக்கியா எலெயாசா மற்றும் கெமரியாவை நேபுகாத்நேச்சார் அரசனிடம் அனுப்பினான். சிதேக்கியா யூதாவின் அரசன். எலெயாசா சாப்பானின் மகன். கெமரியா இலக்கியாவின் மகன். எரேமியா அவர்களிடம் பாபிலோனுக்கு கொண்டு செல்லுமாறு கடிதத்தைக் கொடுத்தான். கடிதம் சொன்னது இதுதான்:

சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாக அனுப்பப்பட்ட அனைவருக்கும் இதைக் கூறுகிறார்: “வீடுகளைக் கட்டி அவற்றில் வாழுங்கள். நாட்டில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதில் வளர்ந்த கனிகளை உண்ணுங்கள். திருமணம் செய்துக்கொண்டு மகன்கள் மற்றும் மகள்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவியர்களைக் கண்டுக்கொள்ளுங்கள். உங்கள் மகள்கள் மணந்துக்கொள்ளும்படிச் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், அவர்களுக்கும் மகன்களும் மகள்களும் பிறப்பார்கள். பல குழந்தைகளைப் பெற்று பாபிலோனில் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்காதீர்கள். நான் உங்களை அனுப்பிய நகரத்திற்கு நல்லவற்றைச் செய்யுங்கள். நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிற நகரத்திற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், அந்நகரத்தில் சமாதானம் இருந்தால், நீங்களும் சமாதானமாக இருக்கலாம்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார். “உங்களது தீர்க்கதரிசிகளும் மந்திரம் பழகும் ஜனங்களும் உங்களை முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் வைத்துள்ள கனவுகளைக் கேட்காதீர்கள். அவர்கள் பொய்களைப் பிரச்சாரம் செய்கிறார்கள். அச்செய்தி என்னிடமிருந்து வந்ததாக அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

10 இதுதான் கர்த்தர் சொல்லுகிறது: “பாபிலோன் 70 ஆண்டுகளுக்கு வல்லமையுடையதாக இருக்கும். அக்காலத்திற்குப் பிறகு, பாபிலோனில் வாழ்கிற உங்களிடம் வருவேன். என்னுடைய நல்ல வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். உங்களை எருசலேமிற்கு மீண்டும் கொண்டுவருவேன். 11 நான் இதனைக் கூறுகிறேன் ஏனென்றால், உங்களுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை நானறிவேன்” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன். நான் உங்களை துன்புறுத்தும் வகையில் திட்டமிடமாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையைத் தரவும் நல்ல எதிர்காலம் அமையவும் நான் திட்டமிடுகிறேன். 12 பிறகு, ஜனங்களாகிய நீங்கள் எனது நாமத்தை அழைப்பீர்கள். நீங்கள் என்னிடம் வருவீர்கள்: ஜெபம் செய்வீர்கள், நான் உங்களை கவனிப்பேன். 13 நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் முழு மனதோடு என்னைத் தேடினால் என்னைக் கண்டுப்பிடிக்கலாம். 14 நீங்கள் என்னைக் கண்டுப்பிடிக்க அனுமதிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “உங்கள் சிறையிலிருந்து திரும்பவும் நான் உங்களைக் கொண்டுவருவேன். இந்த இடத்திலிருந்து போகும்படி நான் உங்களை கட்டாயப்படுத்தினேன். ஆனால் உங்களை எங்கெங்கு அனுப்பினேனோ அங்கங்கிருந்தெல்லாம் அழைத்துச் சேர்ப்பேன். உங்களைக் கைதிகளாய் கொண்டுப்போகச் செய்த இந்த இடத்திற்கே மீண்டும் உங்களைக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

15 நீங்கள், “ஆனால் கர்த்தர் இங்கே பாபிலோனில் தீர்க்கதரிசிகளைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லலாம். 16 ஆனால் கர்த்தர் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படாத உறவினர்களைப்பற்றி இவற்றைக் கூறுகிறார். நான், இப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் இருக்கிற அரசனைப் பற்றியும் எருசலேம் நகரிலுள்ள ஜனங்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். 17 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் விரைவில் பட்டயம், பசி மற்றும் பயங்கரமான நோயை எருசலேமில் இன்னும் வாழும் ஜனங்களுக்கு எதிராக அனுப்புவேன். நான் அவர்களை உண்ணவே முடியாத அளவிற்கு அழுகிப்போன கெட்ட அத்திப் பழங்களைப் போன்று ஆக்குவேன். 18 நான், இன்னும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களை பட்டயம், பசி, மற்றும் பயங்கரமான நோயால் துரத்துவேன். நான் இதனைச் செய்வேன். அதனால் அந்த ஜனங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பார்த்து பூமியில் உள்ள அனைத்து இராஜ்யங்களும் பயப்படும். அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். நிகழ்ந்தவற்றைப்பற்றி அவர்கள் கேள்விப்படும்போது ஜனங்கள் ஆச்சரியத்துடன் பிரமிப்பார்கள். அவர்கள், ஜனங்களுக்குத் தீயவை நடைபெறட்டும் என்று கேட்கும்போது ஜனங்கள் அவர்களை ஒரு எடுத்துக்காட்டாக பயன்படுத்துவர். அந்த ஜனங்களை நான் போகும்படி வற்புறுத்தும் போதெல்லாம் ஜனங்கள் அவர்களை நிந்திப்பார்கள். 19 அவையெல்லாம் நடக்கும்படி நான் செய்வேன். ஏனென்றால், எருசலேமிலுள்ள அந்த ஜனங்கள் எனது வார்த்தையைக் கேட்கவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களுக்கு எனது செய்தியை மீண்டும் மீண்டும் அனுப்பினேன். நான் அந்த ஜனங்களுக்கு எனது வேலைக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி எனது செய்தியைக் கொடுத்தேன். ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. 20 “ஜனங்களாகிய நீங்கள் கைதிகள். நான் உங்களை எருசலேமிலிருந்து பாபிலோனுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். எனவே கர்த்தரிடமுள்ள செய்தியைக் கேளுங்கள்.”

21 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கொலாயாவின் மகனான ஆகாப் மற்றும் மாசெயாவின் மகனான சிதேக்கியாவைப் பற்றியும் கூறுகிறார்: “உங்களிடம் இவ்விருவரும் பொய்யைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களின் செய்தி என்னிடம் இருந்து வந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்யுரைத்தனர். நான் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளையும் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளையும் கைதிகளாய் உங்கள் முன்னால் கொல்லுவான். 22 அனைத்து யூதா கைதிகளிலும் மற்றவர்களுக்குத் தீயவை ஏற்படட்டும் என்று கேட்கும்போதெல்லாம் அம்மனிதர்களை எடுத்துக்காட்டுகளாக வைத்துக்கொள்வார்கள். அக்கைதிகள் சொல்லுவார்கள்: ‘சிதேக்கியா மற்றும் ஆகாப் போன்று கர்த்தர் உன்னை நடத்தட்டும். பாபிலோனின் அரசன் அவ்விருவரையும் நெருப்பில் எரித்தான்.’ 23 இஸ்ரவேல் ஜனங்களிடையே அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் மிகவும் கெட்டவற்றைச் செய்தனர். அவர்கள் தங்கள் அயலவர் மனைவிகளோடு சோரம் என்னும் பாவத்தைச் செய்தனர். அவர்களும் பொய்களைப் பேசினார்கள். அத்துடன் அப்பொய்கள் கர்த்தராகிய என்னிடமிருந்து வந்தது என்றும் கூறினர். அவற்றைச் செய்யும்படி நானே அவர்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். நானே ஒரு சாட்சி” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

செமாயாவுக்கு தேவனுடைய செய்தி

24 செமாயாவுக்கும் ஒரு செய்தியைக் கொடு. செமாயா நெகெலாமிய குடும்பத்தில் உள்ளவன். 25 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: “செமாயா, எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் கடிதங்களை அனுப்பினாய். மாசெயாவின் மகனான செப்பனியா ஆசாரியர்களுக்கும் கடிதங்களை அனுப்பினாய். நீயும் அனைத்து ஆசாரியர்களுக்கும் கூட கடிதங்களை அனுப்பினாய். அக்கடிதங்களை நீ கர்த்தருடைய அதிகாரத்தால் அல்லாமல் உனது சொந்தப் பெயரில் அனுப்பினாய். 26 செமாயா, செப்பனியாவிற்கான கடிதத்தில் நீ சொன்னது இதுதான்: ‘செப்பனியா, கர்த்தர் உன்னை யோய்தாவின் இடத்தில் ஆசாரியனாக ஆக்கியிருக்கிறார். கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளனாக நீ இருக்கிறாய். பைத்தியம் போலவும் தீர்க்கதரிசி போலவும் நடிக்கின்ற எவரையும் நீ கைது செய்யலாம். நீ அவர்களின் கால்களுக்கு இடையில் மரக் கட்டைகளையும் கழுத்தில் இரும்புச் சங்கிலிகளையும் மாட்டலாம். 27 இப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி போன்று நடிக்கிறான். எனவே, அவனை ஏன் கைது செய்யாமல் இருக்கிறாய்? 28 எரேமியா பாபிலோனிலுள்ள எங்களுக்கு அவனது செய்தியை அனுப்பியிருக்கிறான்: பாபிலோனில் உள்ள ஜனங்களாகிய நீங்கள் அங்கேயே நீண்டகாலம் இருப்பீர்கள். எனவே, வீடுகளைக்கட்டி அங்கேயே குடியிருங்கள். தோட்டங்களை ஏற்படுத்தி நீங்கள் வளர்த்தவற்றை உண்ணுங்கள்.’”

29 செப்பனியா ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியிடம் கடிதத்தை வாசித்தான். 30 பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: 31 “எரேமியா, இந்த வார்த்தையை பாபிலோனில் உள்ள அனைத்து சிறைக்கைதிகளுக்கும் அனுப்பு, ‘நெகெலாமியனாகிய செமாயாவைப்பற்றி கர்த்தர் கூறுவது இதுதான்: செமாயா உங்களிடம் பிரசங்கம் செய்திருக்கிறான். ஆனால் நான் அவனை அனுப்பவில்லை. செமாயா உங்களை ஒரு பொய்யை நம்பும்படி செய்திருந்தான். 32 ஏனென்றால், செமாயா அதனைச் செய்திருந்தான். இதுதான் கர்த்தர் சொல்கிறது: நான் விரைவில் நெகெலாமியனாகிய செமாயாவைத் தண்டிப்பேன். நான் அவனது குடும்பம் முழுவதையும் அழிப்பேன். நான் எனது ஜனங்களுக்குச் செய்யப் போகிற நன்மைகளில் அவன் பங்குக்கொள்ளமாட்டான்’” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் செமாயாவைத் தண்டிப்பேன். ஏனென்றால் அவன் கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படி ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.”

நம்பிக்கையின் வாக்குறுதிகள்

30 இதுதான் கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை. இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறினார்: “எரேமியா நான் உன்னிடம் பேசியிருக்கின்றவற்றையெல்லாம் நீ புத்தகத்தில் எழுது. இப்புத்தகத்தை உனக்காக எழுது. இதைச் செய். ஏனென்றால் நாட்கள் வரும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது ஜனங்களை, இஸ்ரவேல் மற்றும் யூதாவை சிறையிருப்பிலிருந்து அழைத்துவரும்போது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் அவர்களது முற்பிதாக்களுக்கு அளித்த நாட்டிற்குள் திரும்பவும் அவர்களைக் குடியேற வைப்பேன். பிறகு, எனது ஜனங்கள் மீண்டும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”

இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களைப்பற்றி கர்த்தர் இச்செய்தியைப் பேசினார். கர்த்தர் கூறியது இதுதான்:

நான் ஜனங்கள் பயத்தால் அலறிக்கொண்டிருப்பதைக் கேட்கிறேன்!
    ஜனங்கள் பயந்திருக்கின்றனர்! சமாதானம் இல்லை!

“இக்கேள்வியைக் கேள்.
இதனை சிந்தித்துக்கொள்.
    ஒரு ஆண், குழந்தை பெறமுடியுமா? நிச்சயமாக முடியாது!
பிறகு ஏன் ஒவ்வொரு பலமுள்ள ஆணும் தம் கையை வயிற்றில்,
    பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போன்று வைத்திருக்கிறார்கள்?
ஏன் ஒவ்வொருவரின் முகமும் மரித்த மனிதனைப் போன்று வெளுப்பாக மாறியுள்ளது?
    ஏனென்றால், அந்த ஆண்கள் மிகவும் பயந்துள்ளனர்.

“இது யாக்கோபுக்கு மிகவும் முக்கியமான நேரம்.
    இது பெருந்துன்பத்திற்கான நேரம்.
இதுபோல் இன்னொரு நேரம் இராது.
    ஆனால் யாக்கோபு காப்பாற்றப்படுவான்.

“அந்நேரத்தில்”, இந்த வார்த்தை சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது. “நான் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் கழுத்தில் உள்ள நுகத்தை உடைப்பேன். உங்களைக் கட்டியுள்ள கயிறுகளை அறுப்பேன். அயல்நாடுகளில் உள்ள ஜனங்கள் எனது ஜனங்களை மீண்டும் அடிமையாகும்படி பலவந்தப்படுத்தமாட்டார்கள். இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் அயல் நாடுகளுக்கு சேவை செய்யமாட்டார்கள். இல்லை, அவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு சேவைசெய்வார்கள். அவர்கள் தமது அரசனான தாவீதுக்கு சேவைசெய்வார்கள். நான் அந்த அரசனை அவர்களிடம் அனுப்புவேன்.

10 “எனவே, எனது தாசனாகிய யாக்கோபுவே, பயப்படவேண்டாம்!”
    இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
“இஸ்ரவேலே, பயப்படவேண்டாம்.
    நான் உன்னை தொலைதூர இடத்திலிருந்து காப்பாற்றுவேன்.
நீங்கள் தொலைதூர நாடுகளில் கைதிகளாக இருந்தீர்கள்.
    ஆனால் உங்கள் சந்ததிகளை நான் காப்பாற்றுவேன்.
    நான் அவர்களை சிறையிருப்பிலிருந்து மீண்டும் அழைத்து வருவேன்.
யாக்கோபுக்கு மீண்டும் சமாதானம் உண்டாகும்.
    ஒரு எதிரியும் அவனை இனி தொந்தரவு செய்யவோ பயப்படுத்தவோமாட்டான்.
ஆதலால் அவன் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பான்.
11 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன்”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது
“நான் உங்களைக் காப்பேன்.
நான் அந்நாடுகளுக்கு உங்களை அனுப்பினேன்.
    ஆனால் நான் அந்நாடுகளை முழுமையாக அழிப்பேன்.
இது உண்மை. நான் அந்நாடுகளை அழிப்பேன்.
    ஆனால் உங்களை அழிக்கமாட்டேன்.
நீங்கள் செய்த தீயவற்றுக்காக நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும்
    ஆனால் நான் சரியாக உங்களை ஒழுங்குப்படுத்துவேன்.”

12 கர்த்தர் கூறுகிறார்:
“இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே!
ஆற்ற முடியாத காயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
    குணப்படுத்த முடியாத ஒரு காயத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.
13 உங்கள் புண்களைப்பற்றி அக்கறை எடுக்க யாருமில்லை.
    எனவே நீங்கள் குணம் பெறமாட்டீர்கள்.
14 நீங்கள் பல நாடுகளோடு நட்புக்கொண்டீர்கள்.
    ஆனால் அந்நாடுகள் உங்களைப்பற்றி கவலைப்படுவதில்லை.
    உங்கள் ‘நண்பர்கள்’ உங்களை மறந்துவிட்டனர்.
நான் உங்களைப் பகைவனைப் போன்று தண்டித்தேன்.
    நான் உங்களை மிகக் கடுமையாகத் தண்டித்தேன்.
உங்களது அநேக குற்றங்களால் நான் இதனைச் செய்தேன்.
    உங்களது எண்ணிலடங்கா பாவங்களால் நான் இதனைச் செய்தேன்.
15 இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்களது காயங்களைப்பற்றி ஏன் அழுகிறீர்கள்?
    உங்கள் காயங்கள் வலியுடையன.
அவற்றுக்கு மருந்து இல்லை.
    கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
காரணம் உங்கள் பெரும் குற்றம்தான்.
    உங்களது பல பாவங்களின் காரணமாக கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
16 அந்நாடுகள் உங்களை அழித்தனர்.
    ஆனால் இப்பொழுது அந்நாடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்கள் பகைவர்கள் கைதிகளாவார்கள்.
அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து திருடினார்கள்.
    ஆனால் அவர்களிடமிருந்து மற்றவர்கள் திருடுவார்கள்.
அந்த ஜனங்கள் போரில் உங்களிடமிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டனர்.
    ஆனால் போரில் பிறர் அவர்களை கொள்ளையடிப்பார்கள்.
17 நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன்.
    நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“ஏனென்றால், மற்ற ஜனங்கள் உங்களை தள்ளுண்டவர்கள் என்று சொன்னார்கள்.
    அந்த ஜனங்கள், ‘சீயோனைப்பற்றி யாரும் அக்கறைகொள்ளமாட்டார்கள்’” என்று சொன்னார்கள்.

18 கர்த்தர் கூறுகிறார்:
“யாக்கோபின் ஜனங்கள் இப்போது சிறையிருப்பில் இருக்கிறார்கள்.
    ஆனால் அவர்கள் திரும்ப வருவார்கள்.
    யாக்கோபின் வீடுகளில் நான் இரக்கம்கொள்வேன்.
இப்பொழுது நகரம் காலியான குன்றுபோல
    அழிந்த கட்டிடங்களோடு இருக்கின்றது.
    ஆனால் நகரம் மீண்டும் கட்டப்படும்.
அரசனின் வீடும் மீண்டும் எங்கிருக்க வேண்டுமோ அங்கே கட்டப்படும்.
19 அவ்விடங்களில் உள்ள ஜனங்கள் துதிப்பாடல்களைப் பாடுவார்கள்.
    அங்கே சந்தோஷத்தின் ஆரவார ஓசை இருக்கும்.
நான் அவர்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பேன்.
    இஸ்ரவேல் மற்றும் யூதா சிறியவை ஆகாது.
நான் அவர்களுக்கு மேன்மையை கொண்டுவருவேன்.
    எவரும் அதனை கீழாகப் பார்க்கமுடியாது.
20 யாக்கோபுவின் குடும்பம் முன்பு இஸ்ரவேல் குடும்பம் இருந்ததுபோல ஆகும்.
நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவை பலமுள்ளதாக்குவேன்.
    அவர்களைப் புண்படுத்தியவர்களை நான் தண்டிப்பேன்.
21 அந்த ஜனங்களின் சொந்தத்தில் ஒருவனே அவர்களை வழிநடத்திச் செல்வான்.
    அந்த அரசன் எனது ஜனங்களிடமிருந்து வருவான்.
ஜனங்களை நான் அழைத்தால் அவர்கள் நெருக்கமாக வரமுடியும்.
எனவே, நான் அந்தத் தலைவனை என் அருகில் வரச்சொல்லுவேன்.
    அவன் எனக்கு நெருக்கமாக வருவான்.
22 நீங்கள் எனது ஜனங்களாக இருப்பீர்கள்.
    நான் உங்களது தேவனாக இருப்பேன்.”

23 “கர்த்தர் மிகவும் கோபமாக இருந்தார்!
    அவர் ஜனங்களைத் தண்டித்தார்.
அத்தண்டனைப் புயலைப்போன்று வந்தது.
    அத்தீய ஜனங்களுக்கு எதிராகத் தண்டனையானது பெருங்காற்றாக அடித்தது.
24 கர்த்தர் அந்த ஜனங்களைத்
    தண்டித்து முடிக்கும்வரை கோபமாக இருப்பார்.
கர்த்தர் திட்டமிட்டபடி தனது தண்டனையை முடிக்கும்வரை
    அவர் கோபமாக இருப்பார்.
அந்தக் கால முடிவில் யூதா ஜனங்களாகிய நீங்கள்
    புரிந்துக்கொள்வீர்கள்.”

புதிய இஸ்ரவேல்

31 கர்த்தர், “அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களுக்கும் தேவனாக இருப்பேன். அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்” என்றார்.

கர்த்தர் கூறுகிறார்:
“ஜனங்களில் சிலர் பகைவரின் வாளால் கொல்லப்படவில்லை.
அந்த ஜனங்கள் வனாந்தரத்திற்குத் தப்பி ஓடி, ஆறுதலடைவார்கள்,
    இஸ்ரவேலர் இளைப்பாறுதலைத் தேடி அங்கு போவார்கள்.”
வெகு தொலைவில் இருந்து
    கர்த்தர் அவரது ஜனங்களுக்கு தோன்றுவார்.
கர்த்தர் கூறுகிறார்:

“ஜனங்களே, நான் உங்களை நேசிக்கிறேன்.
எனது அன்பு என்றென்றும் நீடித்திருக்கும்.
    ஆகையால் தான் தொடர்ந்து உங்களுக்கு அன்பு காட்டினேன்.
இஸ்ரவேலே, எனது மணப்பெண்ணே, நான் உன்னை மீண்டும் கட்டுவேன்.
    நீ மீண்டும் ஒரு நாடாவாய்.
நீ உனது மேள வாத்தியங்களை மீண்டும் எடுத்துக்கொள்வாய்.
    நீ மகிழ்ச்சியூட்டும் மற்ற ஜனங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவாய்.
இஸ்ரவேலின் விவசாயிகளாகிய நீங்கள் மீண்டும்
திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்வீர்கள்.
    சமாரியா நகரைச் சுற்றிலும் மலைப் பகுதிகளில் திராட்சைகளைப் பயிரிடுவாய்.
அவ்விவசாயிகள் அத்திராட்சைத் தோட்டங்களிலிருந்து
    பழங்களைத் தின்று மகிழ்வார்கள்.
காவல்காரன் இச்செய்தியைச் சத்தமிடும்
    ஒரு காலம் வரும்.
‘வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தரை தொழுதுகொள்ள சீயோனுக்குப் போகலாம்!’
    எப்பிராயீம் நாட்டு மலையில் உள்ள காவல்காரன் கூட இச்செய்தியைச் சத்தமிட்டுச் சொல்வான்.”

கர்த்தர் கூறுகிறார்:
“மகிழ்ச்சியாக இருங்கள்.
    யாக்கோபுக்காகப் பாடுங்கள்! இஸ்ரவேலுக்காகச் சத்தமிடுங்கள்.
அது ஜாதிகளிலேயே மகா பெரிய ஜனம் ஆகும்!
    உங்கள் துதிகளைப் பாடி சத்தமிடுங்கள்,
‘கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றினார்!
    அவர் இஸ்ரவேல் நாட்டில் உயிரோடு விடப்பட்டுள்ள ஜனங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.’
நினைவுகொள்ளுங்கள்.
வடக்கில் உள்ள அந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலை நான் கொண்டு வருவேன்.
    பூமியில் வெகு தொலை தூர இடங்களில் உள்ள இஸ்ரவேல் ஜனங்களை எல்லாம் சேர்ப்பேன்.
ஜனங்களில் சிலர் குருடாகவும் நொண்டியாகவும் இருப்பார்கள்.
    பெண்களில் சிலர் கர்ப்பமாக இருப்பார்கள், குழந்தை பெறுவதற்குத் தயாராக இருப்பார்கள்.
    ஆனால் அதிகமதிகமான ஜனங்கள் திரும்ப வருவார்கள்.
அந்த ஜனங்கள் அழுதுக்கொண்டே திரும்பி வருவார்கள்.
    ஆனால் நான் அவர்களை வழிநடத்தி ஆறுதல் செய்வேன்.
நான் அவர்களை வழிநடத்திச் சென்று நீரோடைக்கு அழைத்துச் செல்வேன்.
அவர்களை நான் எளிதான பாதையில் நடத்திச் செல்வேன்.
    எனவே, அவர்கள் இடறமாட்டார்கள்.
நான் அந்த வழியிலே அவர்களை வழிநடத்திச் செல்வேன்.
    ஏனென்றால், நான் இஸ்ரவேலின் தந்தை.
எப்பிராயீம் எனது முதலில் பிறந்த மகன்.

10 “நாடுகளே! கர்த்தரிடமிருந்து வரும் இந்த வார்த்தையைக் கேளுங்கள்.
கடல் மூலமாக தொலைதூர நாடுகளுக்கும் அச்செய்தியைக் கூறுங்கள்,ֹ ‘தேவன் இஸ்ரவேல் ஜனங்களைச் சிதறச் செய்தார்.
    ஆனால் தேவன் அவர்களைத் திரும்பவும் ஒன்று சேர்ப்பார்.
அவர் தனது மந்தையை (ஜனங்களை)
    ஒரு மேய்ப்பனைப்போன்று கவனித்துக்கொள்வார்.’
11 கர்த்தர் யாக்கோபை மீண்டும் கொண்டு வருவார்.
    கர்த்தர் தனது ஜனங்களை அவர்களை விட பலமானவர்களிடமிருந்து காப்பாற்றுவார்.
12 இஸ்ரவேல் ஜனங்கள் சீயோனின் உச்சிக்கு வருவார்கள்.
    அவர்கள் மகிழ்ச்சியில் கத்துவார்கள்.
அவர்களது முகம் மகிழ்ச்சியால் பிரகாசிக்கும்.
    கர்த்தர் அவர்களுக்கு அளித்த நல்லவற்றுக்காக மகிழ்வார்கள்.
கர்த்தர் அவர்களுக்குப் புதிய தானியம், புதிய திராட்சைரசம்,
    ஒலிவ எண்ணெய், இளம் ஆடு, பசுக்கள் ஆகியவற்றைக் கொடுப்பார்.
அவர்கள் நல்ல தண்ணீர் வளமுள்ள தோட்டத்தைப்போன்று இருப்பார்கள்.
    இஸ்ரவேல் ஜனங்கள் இனி என்றைக்கும் துன்புறமாட்டார்கள்.
13 பிறகு இஸ்ரவேலின் இளம் பெண்கள் மகிழ்வார்கள்,
    நடனம் ஆடுவார்கள்.
அந்த ஆட்டத்தில் இளம் ஆண்களும் முதிய ஆண்களும்
    கலந்துக்கொள்வார்கள்.
நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.
    இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் ஆறுதல் செய்வேன்.
    நான் அவர்களது சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.
14 நான் ஆசாரியர்களுக்கு மிகுதியான உணவைக் கொடுப்பேன்.
    நான் அவர்களுக்குக் கொடுக்கிற நல்லவற்றால் எனது ஜனங்கள் நிறைந்து திருப்தி அடைவார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

15 கர்த்தர் கூறுகிறார்,
“ராமாவில் ஒரு சத்தம் கேட்கும்.
    இது மிகவும் துக்கக் கதறலாய் மிகுந்த சோகத்துடன் இருக்கும்.
ராகேல் தனது பிள்ளைகளுக்காக அழுதுக்கொண்டிருப்பாள்.
    ராகேல் ஆறுதல் பெற மறுப்பாள்.
    ஏனென்றால், அவளது பிள்ளைகள் மரித்துவிட்டனர்.”

16 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “அழுகையை நிறுத்துங்கள்!
    உங்கள் கண்களை கண்ணீரால் நிறைக்காதீர்கள்!
உங்கள் வேலைக்காக நீங்கள் பரிசளிக்கப்படுவீர்கள்!”
“இஸ்ரவேல் ஜனங்கள் தம் பகைவரது நாடுகளிலிருந்து திரும்ப வருவார்கள்.
17 இஸ்ரவேலே, உனக்கு நம்பிக்கை இருக்கிறது”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    “உன் பிள்ளைகள் அவர்களது சொந்த நாட்டிற்கு வருவார்கள்.
18 எப்பிராயீமின் அழுகையை நான் கேட்டிருக்கிறேன். எப்பிராயீம் இவற்றைச் சொல்கிறதை நான் கேட்டேன்.
    ‘கர்த்தாவே! உண்மையில் நீர் என்னைத் தண்டித்துவிட்டீர்.
    நான் எனது பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.
    நான் என்றென்றும் பயிற்சி பெறாத கன்றுக்குட்டியைப் போன்று இருந்தேன்.
தயவுசெய்து என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
    நான் திரும்ப உம்மிடம் வருவேன்.
    நீர் உண்மையில் எனது தேவனாகிய கர்த்தர்தான்.
19 கர்த்தாவே, நான் உம்மை விட்டு அலைந்து திரிந்தேன்.
    ஆனால் நான் செய்த தீயவற்றைப்பற்றி கற்றுக்கொண்டேன்.
    எனவே நான் எனது வாழ்வையும் மனதையும் மாற்றிக்கொண்டேன்.
நான் இளமையாக இருந்தபோது செய்த முட்டாள்தனமான செயல்களை எண்ணி நான் அவமானமும் நிந்தையும் அடைகிறேன்’” என்றான்.
20 தேவன், “எப்பிராயீம் எனது அன்பான மகன் என்பதை நீ அறிகிறாய்.
    நான் அந்தப் பிள்ளையை நேசிக்கிறேன்.
ஆம். நான் அவ்வப்போது எப்பிராயீமை குறை கண்டுப்பிடித்தேன்.
    ஆனால், அவனை இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன்.
    நான் உண்மையில் அவனுக்கு ஆறுதல் அளிக்க விரும்புகிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

21 “இஸ்ரவேல் ஜனங்களே சாலை அடையாளங்களை வையுங்கள்.
    வீட்டிற்கான வழியைக் காட்டும் அடையாளங்களை வையுங்கள்.
சாலையை கவனியுங்கள்.
    நீங்கள் நடந்த வழியை நினைவுக்கொள்ளுங்கள்.
இஸ்ரவேலே, எனது மணமகளே, வீட்டிற்கு வா.
    உனது பட்டணங்களுக்குத் திரும்பி வா.
22 உன்மையில்லாத மகளே, இன்னும் எவ்வளவு காலம் நீ சுற்றித் திரிவாய்?
    நீ எப்பொழுது வீட்டிற்குத் திரும்ப வருவாய்?”
    என்று கர்த்தர் சொல்லுகிறார்.

“கர்த்தர் இந்நாட்டில் ஏதாவது புதியதைச் செய்யும்போது,
    பெண் ஆணைச் சூழ்ந்துக்கொள்வது போன்றது.”

23 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறதாவது: “நான் மீண்டும் யூதா ஜனங்களுக்கு நன்மை செய்வேன். சிறைக் கைதிகளாக எடுக்கப்பட்ட ஜனங்களை நான் திரும்பக் கொண்டு வருவேன். அந்த நேரத்தில், யூதா நாட்டிலும் நகரங்களிலுமுள்ள ஜனங்கள் மீண்டும் இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். ‘கர்த்தர் உன்னையும் வீட்டையும் பரிசுத்தமான மலையையும் ஆசீர்வதிக்கட்டும்.’”

24 “யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்கின்ற ஜனங்கள் ஒன்று சேர்ந்து சமாதானத்தோடு வாழ்வார்கள். விவசாயிகளும் தங்கள் மந்தைகளோடு சுற்றி அலைகிற மேய்ப்பர்களும் ஒன்று சேர்ந்து யூதாவில் சமாதானமாக வாழ்வார்கள். 25 நான் பலவீனமும் சோர்வும் அடைந்த ஜனங்களுக்கு வலிமையையும் ஓய்வையும் கொடுப்பேன்.”

26 இதனைக் கேட்டப் பிறகு, நான் (எரேமியா) எழுந்து சுற்றிலும் பார்த்தேன். அது ஒரு மிக இனிய உறக்கமாக இருந்தது.

27 “நாட்கள் வந்துக்கொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் இஸ்ரவேல் மற்றும் யூதா குடும்பம் பெருக உதவுவேன். நான் அவர்களது பிள்ளைகளும் மிருகங்களும் பெருக உதவுவேன். ஒரு செடியை நட்டு வளர்க்கின்றவனைப் போன்று நான் இருப்பேன். 28 கடந்த காலத்தில், நான் இஸ்ரவேலையும் யூதாவையும் கண்காணித்தேன். ஆனால், நான் அவர்களை வெளியே பிடுங்கிப்போடும் காலத்துக்காகவும் பார்த்திருந்தேன். நான் அவர்களைக் கிழித்துப்போட்டேன். நான் அவர்களை அழித்தேன். நான் அவர்களுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது நான் அவர்களைக் கட்டவும் பலமாகச் செய்யவும் கவனிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

29 “ஜனங்கள் என்றைக்கும் இந்த பழமொழியைச் சொல்லமாட்டார்கள்:

“‘பெற்றோர்கள் புளித்த திராட்சைகளைத் தின்றனர்.
    ஆனால் பிள்ளைகள் புளிப்புச் சுவையைப் பெற்றனர்.’

30 இல்லை, ஒவ்வொருவனும் தனது சொந்தப் பாவத்திற்காக சாவான்.

    புளித்த திராட்சையை உண்ணும் ஒருவன் புளிப்புச் சுவையைப் பெறுவான்.”

புதிய உடன்படிக்கை

31 கர்த்தர், “இஸ்ரவேலின் குடும்பத்தோடும் யூதாவின் குடும்பத்தோடும் புதிய உடன்படிக்கையைச் செய்யக்கூடிய நேரம் வந்துக்கொண்டிருக்கிறது. 32 இது அவர்களது முற்பிதாக்களிடம் ஏற்படுத்திய உடன்படிக்கை போன்றதல்ல. அது, அவர்களை நான் கையில் எடுத்து எகிப்துக்கு வெளியே கொண்டு வந்தபோது செய்தது. நான் அவர்களுக்கு ஆண்டவராக இருந்தேன். ஆனால், அவர்கள் அந்த உடன்படிக்கையை உடைத்தனர்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

33 “எதிர்காலத்தில், நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த உடன்படிக்கையைச் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது போதனைகளை அவர்களது மனதில் வைப்பேன். நான் அவற்றை அவர்களின் இருதயத்தின் மேல் எழுதுவேன். நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். 34 ஜனங்கள் தமது அயலவர்க்கும் உறவினர்க்கும் கர்த்தரை அறிந்துக்கொள்ள கற்பிக்கமாட்டார்கள். ஏனென்றால், முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை என்னை அறிவர்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களை அவர்கள் செய்த தீயவற்றுக்காக மன்னிப்பேன். நான் அவர்களது பாவங்களை நினைவுக்கொள்ளமாட்டேன்.”

கர்த்தர் இஸ்ரவேலை விடமாட்டார்

35 கர்த்தர் பகலில் சூரியனைப் பிரகாசிக்கும்படிச் செய்தார்.
    கர்த்தர் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இரவில் பிராகாசிக்கும்படிச் செய்தார்.
கர்த்தர் கடலை கலக்குகிறார்.
அதனால் அதன் அலைகள் கரையில் மோதுகின்றன.
    சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்பது அவரது நாமம்.

36 கர்த்தர், “இஸ்ரவேலின் சந்ததியார் ஒரு நாடாக இருப்பது ஒருபோதும் முடிவுறாது.
    சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் கடலின் மேலுள்ள எனது ஆதிக்கத்தை இழந்தால் மாத்திரமே அப்படி நிகழும்” என்றார்.

37 கர்த்தர் கூறுகிறார்: “இஸ்ரவேலின் சந்ததியாரை நான் ஒருபோதும் தூக்கி எறியமாட்டேன்.
    மேலே ஆகாயத்தை அளக்கவும், பூமியின் இரகசியங்களை புரிந்துக்கொள்ளவும் ஜனங்களால் முடியுமானால் இது நிகழும்.
இஸ்ரவேல் செய்த தீமையினிமித்தம் மட்டுமே நான் அவர்களைத் தள்ளுவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

புதிய எருசலேம்

38 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது, “கர்த்தருக்காக எருசலேம் மீண்டும் கட்டப்படும் நாட்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. முழு நகரமும் அனானெயேலின் கோபுரம் முதல் மூலை வாசல்வரை மீண்டும் கட்டப்படும். 39 அளவு நூலானது மூலை வாசலில் இருந்து நேராக காரேப் குன்றுவரைப் போய் பிறகு, கோரா எனும் இடத்துக்குத் திரும்பும். 40 மரித்த உடல்களும் சாம்பல்களும் எறியப்பட்ட அப்பள்ளத்தாக்கு கர்த்தருக்கு பரிசுத்தமாய் இருக்கும். கீதரோன் பள்ளத்தாக்கின் பீடபூமி முதல் குதிரை வாசலின் மூலைவரை அனைத்து வழியும் கர்த்தருக்குப் பரிசுத்த இடமாகக் கருதப்படும். எருசலேம் நகரம் மீண்டும் என்றைக்கும் கீழே இழுக்கப்படவோ அழிக்கப்படவோ ஆகாது.”

எரேமியா ஒரு வயலை வாங்குகிறான்

32 யூதாவின் அரசனான சிதேக்கியாவின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: சிதேக்கியாவின் பத்தாவது ஆட்சியாண்டானது நேபுகாத்நேச்சாருக்கு 18வது ஆட்சி ஆண்டாகும். அந்த நேரத்தில், பாபிலோன் அரசனின் படை எருசலேம் நகரத்தைச்சுற்றி வளைத்துக் கொண்டது. எரேமியா கைது செய்யப்பட்டு யூதா அரசனின் அரண்மனை முற்றத்தில் காவலர்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தான். யூதா அரசனான சிதேக்கியா அந்த அரண்மனையின் சிறையில் எரேமியாவை வைத்தான். சிதேக்கியா எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை விரும்பவில்லை. எரேமியா சொல்லுகிறதாவது, “கர்த்தர் கூறுகிறார்: ‘நான் விரைவில் பாபிலோன் அரசனிடம் எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் இந்நகரத்தைக் கைப்பற்றுவான். யூதாவின் அரசனான சிதேக்கியா பாபிலோனியர்களின் படைகளிடமிருந்து தப்பிக்கமுடியாது. அவன் உறுதியாக பாபிலோன் அரசனிடம் கொடுக்கப்படுவான். சிதேக்கியா பாபிலோன் அரசனிடம் நேருக்கு நேர் பேசுவான். சிதேக்கியா அவனைத் தனது சொந்தக் கண்களால் காண்பான். பாபிலோன் அரசன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டு செல்வான். நான் அவனைத் தண்டிக்கும்வரை சிதேக்கியா அங்கே தங்குவான்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘பாபிலோனியர்களின் படைகளுக்கு எதிராக நீங்கள் போரிட்டால் நீங்கள் வெல்லமுடியாது.’”

எரேமியா கைதியாக இருந்தபோது அவன், “கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை என்னிடம் வந்தது. இதுதான் செய்தி: ‘எரேமியா, உனது பெரியப்பாவின் மகன் அனாமெயேல் விரைவில் உன்னிடம் வருவான். அவன் உனது பெரியப்பா சல்லூமின் மகன். அனாமெயேல் உன்னிடம், “எரேமியா, அனாதோத் அருகிலுள்ள எனது வயலை வாங்கிக்கொள். அதை விலைக்கு வாங்கு. ஏனென்றால் நீதான் எனக்கு மிக நெருங்கிய உறவினன். இது உனது உரிமை. அந்த வயலை வாங்குவது உனது பொறுப்புமாகும்”’ என்பான்.

“பிறகு, கர்த்தர் சொன்னதுப்போன்று அப்படியே நிகழந்தது. எனது பெரியப்பாவின் மகன் அனாமெயேல் என்னிடம் சிறைச்சாலையில் முற்றத்திற்கு வந்தான். அனாமெயேல் என்னிடம், ‘எரேமியா, ஆனதோத் நகரத்தின் அருகில் உள்ள எனது வயலை விலைக்கு வாங்கிக்கொள். பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவர்களின் நாட்டில் இவ்வயல் உள்ளது. அந்நிலம் உனக்கு உரியது. ஏனென்றால், அது உனது உரிமை. எனவே அதைச் சொந்தமாக்கிக் கொள்’” என்றான்.

எனவே, நான் இதுதான் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை என்று அறிந்தேன். நான் எனது பெரியப்பாவின் மகன் அனாமெயேலிடமிருந்து வயலை வாங்கினேன். நான் அவனுக்காக 17 சேக்கல் வெள்ளியை எடை போட்டுக் கொடுத்தேன். 10 நான் பத்திரத்தில் கையெழுத்து இட்டேன். முத்திரையிட்ட பத்திரத்தின் நகல் ஒன்று என்னிடம் இருந்தது. நான் செய்தவற்றுக்குச் சாட்சியாக சிலர் இருந்தனர். அளவுபடியில் வெள்ளியை எடை போட்டேன். 11 பிறகு நான் முத்திரையிட்ட பத்திர நகலையும் முத்திரையிடப்படாத நகலையும் எடுத்தேன். 12 நான் அவற்றை எனது பெரியப்பாவின் மகனாக பாருக்கினிடம் கொடுத்தேன். பாருக், நேரியாவின் மகன். நேரியா, மாசெயாவின் மகன். எதிரில் முத்திரையிட்ட பத்திர நகலில் நான் விலைக்கு வாங்கியதின் விவரங்களும் கட்டளைகளும் இருந்தன. எனது மாமன் அனாமெயேலும் மற்றவர்களும் சாட்சியாக இருக்கும்போதே, நான் பத்திரத்தைப் பாருக்கிடம் கொடுத்தேன். அச்சாட்சிகளும் பத்திரத்தில் கையெழுத்து இட்டனர். யூதாவின் ஜனங்கள் பலரும் முற்றத்தில் இருந்து நான் பத்திரத்தைப் பாருக்கிடம் கொடுப்பதைப் பார்த்தனர்.

13 அனைத்து ஜனங்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் பாருக்கிடம், 14 “சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘நீ முத்திரையிடப்பட்டதும் முத்திரையிடப் படாததுமான இரண்டு பத்திர நகல்களையும் எடுத்து மண்ஜாடிக்குள் போடு. இதைச் செய். அதனால் இப்பத்திரங்கள் நீண்டகாலம் இருக்கும்.’ 15 இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘எதிர்காலத்தில், எனது ஜனங்கள் மீண்டும் ஒரு முறை வீடுகளையும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் இஸ்ரவேல் நாட்டில் வாங்குவார்கள்.’”

16 நான் நேரியாவின் மகன் பாருக்கிடம் பத்திரத்தைக் கொடுத்தப் பிறகு, நான் கர்த்தரிடம் ஜெபம் செய்தேன். நான் சொன்னேன்:

17 “தேவனாகிய கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். நீர் அதனை உமது பெரும் வல்லமையால் படைத்தீர். உமக்குச் செய்திட ஆச்சரியகரமானது எதுவும் இல்லை. 18 கர்த்தாவே, ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு நீர் உண்மையாகவும் தயவாகவும் இருக்கிறீர். ஆனால், தந்தைகளின் பாவங்களுக்காக நீர் பிள்ளைகளுக்குத் தண்டனை கொண்டு வருகிறீர். பெருமையும் வல்லமையும் கொண்ட தேவனே, உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். 19 நீர் திட்டமிட்டு பெருஞ்செயல்களைச் செய்கிறீர். கர்த்தாவே ஜனங்கள் செய்கிற அனைத்தையும் நீர் பார்க்கிறீர். நல்லவற்றைச் செய்கிறவர்களுக்குப் பரிசுகளைக் கொடுக்கிறீர். தீயவற்றைச் செய்கிறவர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறீர். அவர்களுக்கு எது ஏற்றதோ அதனை நீர் கொடுக்கிறீர். 20 கர்த்தாவே, எகிப்து நாட்டிலே நீர் வல்லமை வாய்ந்த அற்புதங்களைச் செய்தீர். இன்றுவரை நீர் வல்லமை மிக்க அற்புதங்களைச் செய்திருக்கிறீர். நீர் இவற்றை இஸ்ரவேலிலும் செய்தீர். எங்கெல்லாம் ஜனங்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நீர் இவற்றை செய்தீர். நீர் இவற்றால் பெரும் புகழை அடைந்திருக்கிறீர். 21 கர்த்தாவே, வல்லமைமிக்க அற்புதங்களைப் பயன்படுத்தி, உமது இஸ்ரவேல் ஜனங்களை எகிப்துக்கு வெளியே கொண்டுவந்தீர். நீர் உமது சொந்த வல்லமை மிக்க கையைப் பயன்படுத்தி இவற்றைச் செய்தீர். உமது வல்லமை ஆச்சரியமானது!

22 “கர்த்தாவே, இந்தத் தேசத்தை நீர் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தீர். இந்தத் தேசத்தைக் கொடுப்பதாக நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களது முற்பிதாக்களுக்கு வாக்களித்துள்ளீர். இது மிகவும் சிறந்த தேசம். இது பல நல்லவை உள்ள நல்ல தேசம். 23 இஸ்ரவேல் ஜனங்கள் இந்நாட்டிற்குள் வந்தனர். அவர்கள் இதனைச் சொந்தமாக எடுத்தனர். ஆனால் அந்த ஜனங்கள் உமக்கு அடிபணியவில்லை. அவர்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை. நீர் கட்டளையிட்டவற்றை அவர்கள் செய்யவில்லை. எனவே, நீர் இத்தகைய பயங்கரமானவற்றை இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏற்படுத்தினீர்.

24 “இப்பொழுது, நகரத்தைப் பகைவர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்கள் எடுசுவர்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் எருசலேம் சுவர்களைத் தாண்டி கைப்பற்றிவிடுவார்கள். அவர்கள் தம் பட்டயங்களைப் பயன்படுத்தியும் பசியாலும் பயங்கரமான நோயாலும் பாபிலோனியர்கள் எருசலேம் நகரைத் தோற்கடித்துவிடுவார்கள். இப்போது பாபிலோனியப்படை எருசலேம் நகரை தாக்கிக்கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நீர் சொன்னவை நிகழும். இப்பொழுது இது நிகழ்ந்துக்கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர்.

25 “எனது கர்த்தராகிய ஆண்டவரே, அத்தீயச் செயல்கள் எல்லாம் நடந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நீர் இப்பொழுது, ‘எரேமியா, வெள்ளியால் வயலை வாங்கு, வாங்கும்போது சிலரைச் சாட்சியாக வைத்துக்கொள்’ என்று சொல்கிறீர். பாபிலோனியர் படை இந்நகரைக் கைப்பற்ற தயாராக இருக்கும்போது நீர் எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறீர். இவ்வாறு எனது பணத்தை நான் ஏன் வீணாக்க வேண்டும்?”

26 பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் வார்த்தை வந்தது. 27 “எரேமியா, நானே கர்த்தர். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் நான் தேவன். எரேமியா, என்னால் முடியாதது ஒன்றுமில்லை என்பது உனக்குத் தெரியும்” 28 கர்த்தர் மேலும் கூறினார், “நான் விரைவில் எருசலேம் நகரைப் பாபிலோனியப் படைகளுக்கும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்கும் கொடுப்பேன். படையானது நகரைக் கைப்பற்றும். 29 பாபிலோனியப் படை ஏற்கனவே எருசலேமைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவில் நகருக்குள் நுழைந்து நெருப்பிடத் தொடங்குவார்கள். அவர்கள் இந்நகரத்தை எரித்துப்போடுவார்கள். நகரத்திற்குள் பல வீடுகள் உள்ளன. அவற்றின் உச்சியிலிருந்து எனக்குக் கோபமூட்டும்படி பொய்த் தெய்வமாகிய பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தனர். அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்களுக்கும் அவர்கள் பானங்களின் காணிக்கைக் கொடுத்தனர். பாபிலோனிய படை அவ்வீடுகளை எரித்துப்போடும். 30 நான் இஸ்ரவேல் ஜனங்களையும் யூதாவின் ஜனங்களையும் கவனித்திருந்தேன். அவர்கள் செய்தது எல்லாம் தீயவையே. அவர்கள் இளமையிலிருந்துத் தீயவற்றைச் செய்திருந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் என்னைக் கோபம்கொள்ளச் செய்திருக்கின்றனர். அவர்கள் தம் சொந்தக் கைகளால் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டு என்னைக் கோபம் அடையச் செய்தனர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. 31 “எருசலேம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை, நகரத்திலுள்ள ஜனங்கள் என்னைக் கோபம் அடையச் செய்தனர். இந்நகரம் எனக்குக் கோபம் ஊட்டியிருக்கிறது. எனவே இதனை எனது பார்வையிலிருந்து விலக்குவேன். 32 நான் எருசலேமை அழிப்பேன். காரணம் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் செய்திருக்கிற தீமைதான். ஜனங்களும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களும் என அனைவரும் என்னைக் கோபமடையச் செய்தனர்.

33 “அந்த ஜனங்கள் உதவிக்காக என்னிடம் வந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு முதுகைக் காட்டினார்கள். நான் அவர்களுக்குக் கற்பிக்க மீண்டும் மீண்டும் முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கவனிக்கவேயில்லை. நான் அவர்களைத் திருத்த முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கவனிக்கவே இல்லை. 34 அந்த ஜனங்கள் தம் விக்கிரகங்களைச் செய்திருக்கின்றனர். நான் அவற்றை வெறுக்கிறேன். எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்தனர். இவ்வாறு அவர்கள் எனது ஆலயத்தைத் ‘தீட்டுப்படுத்தினார்கள்.’

35 “பென்இன்னோமுடைய பள்ளத்தாக்கில் அந்த ஜனங்கள் பொய்த் தெய்வமாகிய பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்கள். அவர்கள் அந்த தொழுகை இடங்களைக் கட்டினார்கள். எனவே அவர்கள் தம் மகன்களையும் மகள்களையும் மோளேக்கு என்ற பொய்த் தெய்வத்திற்கு குழந்தைப் பலியாக கொடுத்தனர். இப்பயங்கரமான காரியங்களைச் செய்யும்படி நான் கட்டளையிடவில்லை. நான் யூதாவின் ஜனங்கள் இத்தகைய பயங்கரமான செயலைச் செய்ய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததுக்கூட இல்லை.

36 “ஜனங்களாகிய நீங்கள், ‘பாபிலோன் அரசன் எருசலேமைக் கைப்பற்றுவான். அவன் பட்டயங்கள், பசி, பயங்கரமான நோய்களைப் பயன்படுத்தி நகரைத் தோற்கடித்துவிடுவான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார், 37 ‘இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் தங்கள் நாட்டைவிட்டு போகும்படி நான் வற்புறுத்தினேன். அந்த ஜனங்களோடு நான் கோபமாக இருந்தேன். ஆனால், நான் அவர்களை மீண்டும் இந்த இடத்திற்குக் கொண்டு வருவேன். நான் எங்கே போகும்படி வற்புறுத்தினேனோ அங்கே அவர்களை மீண்டும் சேகரிப்பேன். இந்த இடத்திற்கு நான் மீண்டும் கொண்டு வருவேன். அவர்களை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழவிடுவேன். 38 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் எனது ஜனங்கள் ஆவார்கள். நான் அவர்களது உண்மையாக தேவன் ஆவேன். 39 நான் அவர்கள் ஒரே ஜனங்களாக இருப்பதற்கான ஆசையைக் கொடுப்பேன். அவர்களுக்கு ஒரே நோக்கம் இருக்கும். தம் வாழ்நாள் முழுவதும் என்னை உண்மையாக வழிபட விரும்புவார்கள். அவர்கள் உண்மையாகவே அதைச் செய்ய விரும்புவார்கள். அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே செய்வார்கள்.

40 “‘நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் இருக்கும். இந்த உடன்படிக்கையில் நான் அந்த ஜனங்களிடம் இருந்து என்றென்றும், திரும்பமாட்டேன். நான் எப்பொழுதும் அவர்களுக்கு நல்லவனாக இருப்பேன். அவர்கள் என்னை மதிக்க விரும்பும்படிச் செய்வேன். பிறகு அவர்கள் என்னிடமிருந்து விலகமாட்டார்கள். 41 அவர்கள் என்னை மகிழ்ச்சி அடையும்படிச் செய்வார்கள். நான் அவர்களுக்கு நன்மை செய்வதில் மகிழ்வேன். நான் அவர்களை இந்த தேசத்தில் உறுதியாகவே நட்டு வளரும்படிச் செய்வேன். நான் இதனை எனது மனப்பூர்வமாகவும் ஆத்மபூர்வமாகவும் செய்வேன்.’”

42 இதுதான் கர்த்தர் சொல்கிறது: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு நான் இந்த பெரும் அழிவைக் கொண்டு வந்திருக்கிறேன். அதே வழியில் அவர்களுக்கு நான் நன்மையை செய்வேன். நான் அவர்களுக்கு நன்மை செய்வதாக உறுதி கூறுகிறேன். 43 ஜனங்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள், ‘இத்தேசம் ஒரு காலியான வனாந்தரம். இங்கே ஜனங்களோ மிருகங்களோ இல்லை. பாபிலோனிய படை இந்நாட்டை அழித்துவிட்டது.’ ஆனால் எதிர்காலத்தில், ஜனங்கள் மீண்டும் ஒருமுறை வயல்களை விலைக்கு வாங்குவார்கள். 44 ஜனங்கள் தம் பணத்தைப் பயன்படுத்தி வயல்களை வாங்குவார்கள். அவர்கள் கையெழுத்திட்டு தம் உடன்படிக்கையை முத்திரையிடுவார்கள். ஜனங்களது பத்திரங்களுக்கு ஜனங்கள் சாட்சி ஆவார்கள். ஜனங்கள் மீண்டும் இத்தேசத்தில் வயல்களை வாங்குவார்கள். இது பென்யமீன் கோத்திரம் வாழ்கிற இடம். எருசலேமைச் சுற்றியுள்ள இடங்களில் அவர்கள் வயலை வாங்குவார்கள். யூதா தேசத்திலுள்ள நகரங்களிலும் மலை நாட்டிலும் வடக்கு மலை அடிவாரங்களிலும் தென் வனாந்தரப் பகுதிகளிலும் அவர்கள் வயல்களை வாங்குவர். அது நிகழும். ஏனென்றால், நான் உங்கள் ஜனங்களை மீண்டும் இங்கே கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவனுடைய வாக்குறுதி

33 கர்த்தரிடமிருந்து வார்த்தை இரண்டாவது முறையாக எரேமியாவிற்கு வந்தது. எரேமியா இன்னும் காவல் முற்றத்தில் சிறைபட்டிருக்கிறான். “கர்த்தர் பூமியைச் செய்தார், அவர் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். கர்த்தர் என்பது அவரது நாமம். கர்த்தர் கூறுகிறார்: ‘யூதாவே, என்னிடம் ஜெபம் செய். நான் பதில் கூறுவேன். நான் முக்கியமான இரகசியங்களைக் கூறுவேன். நீ இதற்கு முன் இப்படிப்பட்ட காரியத்தை கேட்டதில்லை.’ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எருசலேமில் உள்ள வீடுகளைப்பற்றியும் யூதாவிலுள்ள அரசர்களின் அரண்மனைகளைப்பற்றியும் கூறுகிறார்: ‘பகைவர்கள் அவ்வீடுகளை இடித்துத் தள்ளுவார்கள். நகரச்சுவர்களில் உயரமான எடுசுவர்களைக் கட்டுவார்கள். பகைவர்கள் வாள்களைப் பயன்படுத்துவார்கள். இந்நகரங்களில் உள்ள ஜனங்களோடு சண்டையிடுவார்கள்.

“‘எருசலேமில் உள்ள ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றனர். நான் அந்த ஜனங்கள் மீது கோபமாக இருக்கிறேன். நான் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறேன். எனவே நான் அங்கே பலப்பல ஜனங்களைக் கொல்வேன். பாபிலோனிய படை எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும். எருசலேமின் வீடுகளில் பற்பல மரித்த உடல்கள் கிடக்கும்.

“‘ஆனால் பிறகு அந்நகரில் உள்ள ஜனங்களை நான் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்). அந்த ஜனங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படிச் செய்வேன். இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களை மீண்டும் கொண்டுவருவேன். அந்த ஜனங்களை முன்புபோல பலமுள்ளவர்களாகச் செய்வேன். அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஆனால் நான் அப்பாவத்தைக் கழுவுவேன். அவர்கள் எனக்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களை நான் மன்னிப்பேன். எருசலேம் ஒரு அற்புதமான இடமாகும். ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களும் அதனைப் புகழுவார்கள். அந்த ஜனங்கள் அங்கே நல்லவை நடைபெறுவதைப் பற்றிக் கேள்விப்படும்போது இது நிகழும். எருசலேமிற்காக நான் செய்துக்கொண்டிருக்கும் நல்லவற்றைப்பற்றி அவர்கள் கேட்பார்கள்.’

10 “‘நமது நாடு வெறுமையான வனாந்தரமாக இருக்கிறது. அங்கே ஜனங்களோ மிருகங்களோ வாழவில்லை’ என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எருசலேம் தெருக்களும் யூதா நகரங்களும் இப்போது அமைதியாக இருக்கின்றன. ஆனால் விரைவில் அங்கு ஆரவாரம் ஏற்படும். 11 அங்கே மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரிய ஓசைகள் கேட்கும். அங்கு மணமகள் மற்றும் மணமகனின் மகிழ்ச்சிகரமான ஓசை கேட்கும். கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் காணிக்கைகளைக் கொண்டு வரும் ஓசை கேட்கும். அந்த ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய தயவு என்றென்றும் தொடரும்’ என்று கூறுவார்கள். ஜனங்கள் இதனைக் கூறுவார்கள். ஏனென்றால் நான் மீண்டும் யூதாவிற்கு நல்லவற்றைச் செய்வேன். இது தொடக்கத்தைப்போன்று இருக்கும்.” கர்த்தர் இவற்றைக் கூறினார்.

12 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “இந்த இடம் இப்போது காலியாக இருக்கிறது. அங்கே மனிதர்களோ மிருகங்களோ வாழவில்லை. ஆனால், யூதாவின் எல்லா நகரங்களிலும் ஜனங்கள் இருப்பார்கள். அங்கு மேய்ப்பர்கள் இருப்பார்கள். மந்தைகள் ஓய்வு கொள்கிற மேய்ச்சல் நிலங்கள் இருக்கும். 13 மேய்ப்பர்கள் தம் ஆடுகளை அவை அவர்கள் முன்பு இருக்கும்போது எண்ணுகின்றனர். ஜனங்கள் தம் ஆடுகளை நாட்டைச் சுற்றிலும் மலைநாட்டிலும் மேற்கு மலை அடிவாரங்களிலும் நெகேவிலும் யூதாவின் மற்ற நகரங்களிலும் எண்ணுவார்கள்” என்று கூறுகிறார்.

நல்ல கிளை

14 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களுக்கு விசேஷ வாக்குறுதியைச் செய்தேன். நான் வாக்குறுதி அளித்த காரியங்களை நிறைவேற்றும் நேரம் வந்துக்கொண்டிருக்கிறது. 15 அந்த நேரத்தில், தாவீதின் குடும்பத்திலிருந்து ஒரு நல்ல ‘கிளை’ வளரும்படிச் செய்வேன். அந்த நல்ல ‘கிளை’ தேசத்திற்கு நல்லதும் சரியானதுமானவற்றைச் செய்யும். 16 அந்தக் கிளை இருக்கும்போது யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள். ஜனங்கள் எருசலேமில் பாதுகாப்பாக வாழ்வார்கள். அக்கிளையின் பெயர்: ‘கர்த்தர் நல்லவர்’”

17 கர்த்தர் கூறுகிறார், “தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவனே எப்பொழுதும் சிங்காசனத்தில் இருந்து இஸ்ரவேல் குடும்பத்தை ஆள்வான். 18 லேவியின் வம்சத்திலிருந்தே எப்போதும் ஆசாரியர்கள் இருப்பார்கள். அந்த ஆசாரியர்கள் எப்பொழுதும் எனக்கு முன்னால் நின்று தகனபலியையும் தானியக் காணிக்கைகளையும், பலிகளையும் கொடுப்பார்கள்.”

19 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தது. 20 கர்த்தர் கூறுகிறார்: “பகலோடும் இரவோடும் நான் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறேன். அவை என்றென்றும் தொடர்ந்து இருக்கும் என நான் ஒப்புக்கொண்டேன். அந்த உடன்படிக்கையை உன்னால் மாற்ற முடியாது. இரவும் பகலும் எப்பொழுதும் சரியான நேரத்தில் வரும். நீ அந்த உடன்படிக்கையை மாற்ற முடியுமானால், 21 பிறகு நீ, நான் தாவீது மற்றும் லேவியோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையை மாற்ற முடியும். பிறகு தாவீதின் சந்ததியார் அரசனாகமாட்டார்கள். லேவியின் சந்ததியார் ஆசாரியானாகமாட்டார்கள். 22 ஆனால் நான் எனது வேலையாள் தாவீதிற்கு நிறைய சந்ததிகளைக் கொடுப்பேன். லேவியின் கோத்திரத்திற்கும் கொடுப்பேன். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போன்று நிறைய இருப்பார்கள். அத்தனை நட்சத்திரங்களையும் எவராலும் எண்ண முடியாது. அவர்கள் கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமாக இருப்பார்கள். அம்மணல் துண்டுகளை எவராலும் எண்ண முடியாது” என்கிறார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center