Bible in 90 Days
15 யூதாவில் அந்தக் காலத்தில், ஜனங்கள் ஓய்வுநாளில் வேலை செய்வதை நான் பார்த்தேன். ஜனங்கள் திராட்சைரசத்தைச் செய்ய திராட்சைகளை மிதிப்பதைப் பார்த்தேன். ஜனங்கள் தானியங்களைக் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமை ஏற்றுவதைப் பார்த்தேன். ஜனங்கள் திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் நகரத்தில் சுமந்து செல்வதைப் பார்த்தேன். ஓய்வுநாளில் அவர்கள் இவை எல்லாவற்றையும் எருசலேமிற்குள் கொண்டுவந்தனர். எனவே, நான் இதைப்பற்றி அவர்களை எச்சரித்தேன். நான் அவர்களிடம் ஓய்வுநாளில் உணவை விற்கக்கூடாது என்று சொன்னேன்.
16 எருசலேமில் தீரு நகரத்திலுள்ள சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓய்வுநாளில் மீனையும் மற்றும் சில பொருட்களையும் எருசலேமிற்குள் கொண்டுவந்து விற்றனர். அவற்றை யூதர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். 17 யூதாவில் உள்ள முக்கியமான ஜனங்களிடம் நான் அவர்கள் தவறு செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். நான் அந்த முக்கிய மனிதர்களிடம், “நீங்கள் மிக மோசமான செயலைச் செய்கிறீர்கள். நீங்கள் ஓய்வுநாளை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஓய்வுநாளை மற்ற நாட்களைப் போன்று ஆக்கிவிட்டீர்கள். 18 உங்கள் முற்பிதாக்கள் இதைப் போன்றே செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அதனால்தான் நமது தேவன் எல்லாத் துன்பங்களையும் அழிவுகளையும் நமக்கும் இந்த நகருக்கும் கொண்டுவந்தார். இப்பொழுது அதையே நீங்கள் செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இதைவிட அதிகமாக இஸ்ரவேலருக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால் நீங்கள் ஓய்வுநாளை அசுத்தம் செய்து, இது ஒரு முக்கியமான நாளல்ல என கருதுகிறீர்கள்” என்றேன்.
19 எனவே நான் இதைத்தான் செய்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் இருட்டுவதற்கு முன்னால், வாசல் காவலாளர்களிடம் எருசலேமின் கதவுகளை மூடி தாழ்ப்பாள் போடுமாறு கட்டளையிட்டேன். ஓய்வுநாள் முடியும்வரை அவர்கள் கதவைத் திறக்கக்கூடாது. வாசல்களில் நான் எனது சொந்த மனிதர்கள் சிலரை நியமித்தேன். அவர்களுக்கு உறுதியாக ஓய்வுநாளில் எருசலேமிற்குள் எந்த சுமையையும் கொண்டு வரக்கூடாது என்று ஆணையிட்டேன்.
20 ஒன்று அல்லது இரண்டு தடவை வியாபாரிகளும் விற்பனையாளர்களும் எருசலேமிற்கு வெளியே இரவில் தங்கும்படி ஏற்பட்டது. 21 ஆனால் நான் அந்த வியாபாரிகளையும், விற்பனையாளர்களையும் எச்சரிக்கை செய்தேன். அவர்களிடம் நான், “இரவில் சுவருக்கு முன்னால் தங்க வேண்டாம். நீங்கள் மீண்டும் இவ்வாறு செய்தால் நான் உங்களைக் கைது செய்வேன்” என்று கூறினேன். எனவே அந்நாளிலிருந்து அவர்கள் ஓய்வுநாளில் தங்கள் பொருள்களை விற்க வருவதில்லை.
22 பிறகு நான் லேவியர்களிடம் தங்களை பரிசுத்தமாக்க கட்டளையிட்டேன். அதனைச் செய்தபிறகு அவர்கள் வாயில்களைக் காக்கச் செல்லவேண்டும். ஓய்வுநாள் பரிசுத்தமான நாளாக அனுசரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த இது செய்யப்பட்டது. “தேவனே, நான் இவற்றையெல்லாம் செய்ததற்காக என்னை நினைத்துப்பாரும், என்னிடம் இரக்கமாக இரும். உமது பெரும் அன்பை என்னிடம் காட்டும்.”
23 அந்நாட்களில், சில யூதர்கள் அஸ்தோத், அம்மோன், மோவாப் ஆகிய நாடுகளில் உள்ள பெண்களை மணந்துகொண்டதைக் கவனித்தேன். 24 அத்திருமணங்களால் வந்த குழந்தைகளில் பாதிபேருக்கு யூதமொழியை எப்படி பேசுவது என்று தெரியவில்லை. அக்குழந்தைகள் அஸ்தோத், அம்மோன் அல்லது மோவாப் மொழிகளைப் பேசின. 25 எனவே நான் அந்த மனிதர்களிடம் அவர்கள் தவறு செய்தார்கள் என்று சொன்னேன். நான் அவர்களிடம் கடின வார்த்தைகளைச் சொன்னேன். அத்தகைய மனிதர் சிலரை நான் அடித்தேன். நான் அவர்களின் தலைமயிரைப் பிடித்து இழுத்தேன். நான் அவர்களை தேவனுடைய பேரால் வாக்குறுதியளிக்குமாறு பலவந்தப்படுத்தினேன். நான் அவர்களிடம், “நீங்கள் அந்த ஜனங்களின் பெண்களை மணந்து கொள்ளக் கூடாது. உங்கள் மகன்களை அயல்நாட்டு ஜனங்களின் பெண்கள் மணந்துகொள்ளும்படி விடக்கூடாது. உங்கள் மகள்களை அயல்நாட்டு ஜனங்களின் மகன்களை மணந்துகொள்ளும்படிவிடக் கூடாது. 26 இது போன்ற திருமணங்கள் சாலொமோனைப் பாவம் செய்யும்படி செய்தது என்று உங்களுக்குத் தெரியும். அனைத்து நாடுகளிலும் சாலொமோனைப் போன்ற பேரரசன் இல்லை. தேவன் சாலொமோனை நேசித்தார். தேவன் சாலொமோனை இஸ்ரவேல் தேசத்தின் முழுவதற்கும் பேரரசனாகச் செய்தார். ஆனாலும் சாலொமோன் வெளிநாட்டுப் பெண்களால் பாவம் செய்யும்படி ஆயிற்று. 27 இப்பொழுது நீங்களும் இந்தப் பயங்கரமான பாவத்தைச் செய்வதாக நான் கேள்விப்படுகிறேன். நீங்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றேன்.
28 யொயதா, தலைமை ஆசாரியனாகிய எலியாசிபின் மகன். யொயதாவின் மகன்களில் ஒருவன் ஆரானிலுள்ள சன்பல்லாத்தின் மருமகனாக இருந்தான். நான் அவனை இந்த இடத்தை விட்டுப் போகும்படி வற்புறுத்தினேன். அவனை ஓடிவிடும்படி வற்புறுத்தினேன்.
29 “எனது தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். அவர்கள் ஆசாரிய பதவியை அசுத்தம் செய்கிறார்கள். அது முக்கியமில்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். நீர் ஆசாரியர்களோடும், லேவியர்களோடும் செய்த உடன்படிக்கைக்கு அவர்கள் அடிபணிய மறுக்கிறார்கள். 30 எனவே, நான் ஆசாரியர்களையும் லேவியர்களையும் சுத்தமாக்கினேன். வெளிநாட்டவர்களையும், அவர்களின் உபதேசங்களையும் எடுத்துப்போட்டேன். நான் லேவியர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் அவர்களது கடமைககளையும், பொறுப்புகளையும் கற்றுக் கொடுத்தேன். 31 சரியான காலத்தில் ஜனங்கள் அன்பளிப்பாக விறகையும் முதற்பலன்களையும் கொண்டு வருவதை உறுதிபடுத்தினேன்.
“எனது தேவனே, இத்தகைய நல்ல காரியங்களைச் செய்ததற்காக என்னை நினைவுக்கொள்ளும்.”
வஸ்தி ராணி அரசனுக்கு கீழ்ப்படிய மறுக்கிறாள்
1 அகாஸ்வேரு அரசனாக இருந்த காலத்தில் இது நடைபெற்றது. அகாஸ்வேரு இந்தியா முதல் எத்தியோப்பியா வரையுள்ள 127 நாடுகளை ஆண்டான். 2 அரசன் அகாஸ்வேரு சூசான் என்ற தலைநகரில் சிங்காசனத்திலிருந்து அரசாண்டான்.
3 அகாஸ்வேருவின், மூன்றாவது ஆட்சியாண்டில், அவன் தனது அதிகாரிகளுக்கும், பிரபுக்களுக்கும் விருந்து கொடுத்தான். படை அதிகாரிகளும், பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள முக்கிய தலைவர்களும் அங்கே இருந்தனர். 4 விருந்தானது 180 நாட்களுக்குத் தொடர்ந்தன. அந்தக்காலம் முழுவதும் அகாஸ்வேரு அரசன் தனது இராஜ்யத்தின் செல்வச் சிறப்பைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் ஒவ்வொருவரிடமும் தன் அரண்மனையின் கம்பீரமான அழகையும், செல்வத்தையும் காட்டிக் கொண்டிருந்தான். 5 அந்த 180 நாட்களும் முடிந்தபோது, அகாஸ்வேரு அரசன் இன்னொரு விருந்தை ஏழு நாட்கள் தொடர்ந்து கொடுத்தான். அந்த விருந்து அரண்மனை தோட்டத்திற்குள்ளே நடைபெற்றது. சூசான் தலைநகரத்தில் உள்ள அனைத்து முக்கியமானவர்களும், முக்கியமற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனார். 6 அந்த உள்தோட்டத்தில் அறையைச் சுற்றி வெள்ளையும், நீலமுமான மெல்லிய திரைகள் தொங்கின. அத்தொங்கல்கள் வெண்கலத் தூண்களிலே, வெள்ளி வளையங்களில், மெல்லிய நூலும், சிவப்பு நூலுமான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அங்கே பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட இருக்கைகள் இருந்தன. அவை சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின் மேல் வைக்கப்பட்டிருந்தன. 7 பொற்கிண்ணங்களில் திராட்சைரசம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் வித்தியாசமாக இருந்தது! அங்கே முதல் தரமான திராட்சைரசம் அரசர்களுக்கு ஏற்ற வகையில் தாராளமாகக் கொடுக்கப்பட்டது. 8 அரசன் தனது வேலைக்காரர்களுக்கு ஒரு கட்டளை இட்டிருந்தான். ஒவ்வொரு விருந்தாளியும் அவரது விருப்பம்போல் திராட்சைரசத்தைக் குடிக்கட்டும் என்று சொல்லியிருந்தான். திராட்சைரசம் பரிமாறுபவன் அரசனுக்குக் கீழ்ப்படிந்தான்.
9 அரசனது அரண்மனையில் இராணி வஸ்தியும் பெண்களுக்கு ஒரு விருந்து கொடுத்தாள்.
10-11 விருந்தின் ஏழாவது நாளில், அகாஸ்வேரு அரசன் திராட்சைரசத்தால் உச்சப் போதையில் இருந்தான். அவன் ஏழு பிரதானிகளுக்குக் கட்டளையிட்டான். அந்த பிரதானிகள், மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகியோர். அவன் இந்த ஏழு பேரிடம் இராணி வஸ்தியை இராஜகிரீடம் அணிவித்து அழைத்துவருமாறு கட்டளையிட்டான். அவள் அழகை முக்கியமான ஜனங்களுக்கும், தலைவர்களுக்கும் காட்டவேண்டும் என்று அரசன் விரும்பினான். ஏனென்றால் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.
12 ஆனால், அந்த வேலைக்காரர்கள் போய் இராணி வஸ்தியிடம் அரசனின் கட்டளையைச் சொன்னதும் அவள் வரமறுத்தாள். அதனால் அரசன் மிகவும் கோபம்கொண்டான். 13-14 சட்டம் மற்றும் தண்டனையைப்பற்றிய ஆலோசனைகளை தேர்ந்தவர்களிடம் கேட்பது ராஜாவின் வழக்கம். எனவே, அரசன் அகாஸ்வேரு சட்டங்களைப் புரிந்துகொண்ட ஞானிகளிடம் பேசினான். அந்த ஞானிகள் அரசனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோர். இவர்கள் பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள ஏழு முக்கியமான அதிகாரிகள். அவர்களுக்கு அரசனைப் பார்க்கச் சிறப்பு சலுகைகள் உண்டு. அவர்கள் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர். 15 அரசன் அவர்களிடம், “இராணி வஸ்தியை என்ன செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது? அரசன் அகாஸ்வேருவின் கட்டளையை பிரதானிகள் கொண்டுபோனபோது அதற்கு அவள் அடிபணியவில்லை” என்று சொன்னான்.
16 பிறகு, மெமுகான் மற்ற அதிகாரிகள் கவனித்துக்கொண்டிருக்கையில், “இராணி வஸ்தி தவறு செய்தாள். அவள் அரசனுக்கு எதிராகவும், எல்லா தலைவர்களுக்கு எதிராகவும், அகாஸ்வேரு அரசனது அரசாட்சியில் உள்ள எல்லா ஜனங்களுக்கு எதிராகவும் தவறு செய்தாள். 17 மற்ற எல்லாப் பெண்களும் இராணி வஸ்தி செய்ததை கேள்விப்படுவார்கள். பிறகு அவர்கள் தம் கணவர்களுக்கு அடிபணிவதை நிறுத்துவார்கள். அவர்கள் தம் கணவர்களிடம், ‘அரசன் அகாஸ்வேரு இராணி வஸ்தியை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். ஆனால் அவள் வர மறுத்துவிட்டாள்’ என்பார்கள்.
18 “இன்றைக்கு பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள தலைவர்களின் மனைவிகளும் இராணி செய்ததைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அப்பெண்களும் இராணியின் செயலால் தூண்டப்படுவார்கள். அப்பெண்களும் அரசனது முக்கிய தலைவர்களுக்கு அவ்வாறே செய்வார்கள். அதனால் மிகுதியான மதிப்பின்மையும் கோபமும் பிறக்கும்.
19 “எனவே அரசனுக்கு விருப்பமானால், நான் ஒரு கருத்தைக் கூறுகிறேன். அரசன் ஒரு அரச கட்டளையைக் கொடுக்கலாம். அது பெரிசியா மற்றும் மேதியாவிற்குச் சட்டமாக எழுதப்படலாம். பெர்சியா மற்றும் மேதியாவின் சட்டங்கள் மாற்ற முடியாதவை. வஸ்தி மீணடும் அரசன் அகாஸ்வேருவுக்கு முன்னால் வரக்கூடாது என்பதுதான் அரச கட்டளையாக இருக்கவேண்டும். அதோடு அரசன் அவளைவிடச் சிறந்த பெண்ணுக்கு இராணியின் உயர் இடத்தைக் கொடுக்கவேண்டும். 20 பிறகு அரசனது கட்டளை அவனது பெரிய நாடு முழுவதும் அறிவிக்கப்படும்போது, பெரியோர் முதல் சிறியோர் வரையுள்ள எல்லாப் பெண்களும் தம் கணவர்களை மதிப்பார்கள்” என்று பதில் சொன்னான்.
21 அரசனும் அவனுடைய முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனையால் பெரிதும் மகிழ்ந்தனர். எனவே அகாஸ்வேரு அரசன் மெமுகானின் ஆலோசனையின்படிச் செய்தான். 22 அரசன் அகாஸ்வேரு தனது அரசிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் கடிதம் அனுப்பினான். அவன் அக்கடிதங்களை ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சொந்த மொழியிலேயே எழுதி அனுப்பினான். அவன் அக்கடிதங்களை ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் மொழியிலேயே எழுதி அனுப்பினான். அக்கடிதங்கள் ஒவ்வொரு மனிதனின் மொழியிலும் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தன் குடும்பத்தை ஆள்பவனாக இருக்க வேண்டும்.
எஸ்தர், இராணி ஆகிறாள்
2 அகாஸ்வேரு அரசன் தன்னுடைய கோபம் தணிந்த பிறகு, வஸ்தி செய்திருந்ததை நினைத்துப் பார்த்தான். அவன் அவளைப் பற்றிய கட்டளையை நினைத்துப் பார்த்தான். 2 பிறகு அரசனின் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கு ஒரு கருத்து இருந்தது. அவர்கள், “அரசனுக்கு அழகான இளம் கன்னிகளைத் தேட வேண்டும். 3 அரசன் தனது அரசின் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு தலைவனும், ஒவ்வொரு அழகான இளம் கன்னிப் பெண்ணை சூசான் தலைநகரத்திற்கு அழைத்துக் கொண்டு வரவேண்டும். அப்பெண்கள் அரசனின் பெண்கள் எனும் குழுவிற்குள் சேர்க்கவேண்டும். அவர்கள் யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட வேண்டும். அவன் அரசனின் பிரதானி. அவனே பெண்களுக்கான அதிகாரி. பிறகு அவர்களுக்கு அலங்காரப் பொருட்களைக் கொடுக்கவேண்டும். 4 பிறகு அரசனின் கண்களுக்கு ஏற்றப் பெண் வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும்” என்றார்கள். அரசனும் இந்தக் கருத்தை விரும்பினான். எனவே, அதனை ஒத்துக்கொண்டான்.
5 இப்பொழுது அங்கே மொர்தெகாய் என்னும் பெயருள்ள பென்யமீன் கோத்திரத்திலுள்ள யூதன் ஒருவன் இருந்தான். அவன் யாவீரின் மகன். யாவீர், கீசின் மகன். மொர்தெகாய், தலைநகரான சூசானில் இருந்தான். 6 மொர்தெகாய் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவன். அவன் யூத அரசனான எகொனியாவைச் சிறைபிடித்தபோது அக்குழுவில் இருந்தவன். 7 மொர்தெகாயிடம் அவனது சிறிய தகப்பன் மகளாகிய அத்சாள் இருந்தாள். அவளுக்கு தந்தையோ அல்லது தாயோ இல்லை. எனவே மொர்தெகாய் அவளைக் கவனித்து வந்தான். அவளது தந்தையும், தாயும் மரித்தபோது, அவன் அவளை மகளாகத் தத்தெடுத்தான். அத்சாள், எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள்.
8 அரசனது கட்டளையை கேட்டபோது பல பெண்கள் தலைநகரமான சூசானுக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்பெண்கள் யேகாயின் பொறுப்பில் விடப்பட்டனர். எஸ்தரும் அவர்களுள் ஒருத்தி. எஸ்தர் அரசனின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டு யேகாயின் பொறுப்பில் விடப்பட்டாள். யேகா, அரசனது பெண்களின் பொறுப்பை ஏற்றிருந்தான். 9 யேகாவுக்கு எஸ்தரைப் பிடித்தது. அவள் அவனது விருப்பத்திற்குரியவளானாள். எனவே யேகா விரைவாக எஸ்தருக்கு அலங்கார பொருட்களையும், சிறப்பான உணவையும் கொடுத்தான். அரண்மனையிலிருந்து யேகா ஏழு தாதிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எஸ்தருக்குக் கொடுத்தான். அரசனது பெண்கள் வாழ்கிற சிறப்பான இடத்திற்கு எஸ்தரையும், அவளது ஏழு தாதிப் பெண்களையும் இருக்கச் செய்தான். 10 எஸ்தர் யாரிடமும் தான் யூதகுலத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லவில்லை. அவள் யாரிடமும் தனது குடும்பப் பின்னணியை பற்றிச் சொல்லவில்லை. ஏனென்றால், மொர்தெகாய் அவ்வாறு சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தான். 11 ஒவ்வொரு நாளும் அரசனது பெண்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மொர்தெகாய் உலாவி வந்தான். எஸ்தர் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக்கொள்ளவே அவன் அவ்வாறு செய்தான்.
12 அரசன் அகாஸ்வேருவின் முன் போவதற்கு முன்னால், ஒரு பெண் செய்யவேண்டியது இதுதான். அவள் பன்னிரண்டு மாதங்கள் அழகு சிகிக்சை செய்யப்பட்டிருக்கவேண்டும். அதாவது, ஆறு மாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தாலும், ஆறு மாதம் சுகந்தவர்க்கங்களினாலும் பலவகை அலங்காரங்களாலும் அழகு செய்யப்பட்டிருக்க வேண்டும். 13 ஒரு பெண் இப்படி அலங்கரிக்கப்பட்டு, அரசனிடம் போவாள். கன்னிமாடத்திலிருந்து தன்னுடன் அரசனின் அரண்மனைக்கு போக தனக்கு வேண்டுமென்று கேட்டவை எல்லாம் கொடுக்கப்படும். 14 மாலையில், அப்பெண் அரசனின் அரண்மனைக்குச் செல்லவேண்டும். காலையில் அவள் இன்னொரு பகுதிக்குத் திரும்பவேண்டும். பிறகு, அவள் சாஸ்காசுடைய பொறுப்பில் வைக்கப்படுவாள். சாஸ்காஸ் அரசனுடைய பிரதானி. அவன் அரசனது ஆசைப் பெண்களின் அதிகாரி. அரசன் விரும்பி அழைத்தால் தவிர எந்த ஒரு பெண்ணும் மீண்டும் அரசனிடம் செல்லக் கூடாது. பிறகு அரசன் அவளது பேரைச் சொல்லி திரும்ப வரும்படி அழைக்கலாம்.
15 எஸ்தருக்கு அரசனிடம் போக வேண்டியமுறை வந்தபோது, அவள் எதையும் கேட்கவில்லை. அவள் யேகா தன்னிடம் எதை எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறினானோ அவற்றை மட்டும் கேட்டாள். அவன் அரசனின் பிரதானி. அரசனது பெண்களின் பொறுப்பான அதிகாரி. (எஸ்தர் மொர்தெகாயின் வளர்ப்பு மகள். அவனது சிறிய தகப்பனான அபியாயேலின் மகள்) எஸ்தரைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவளை விரும்பினார்கள். 16 எனவே, எஸ்தர் அரண்மனைக்கு அரசன் அகாஸ்வேருவிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். இது, அவனது ஏழாம் ஆட்சியாண்டில் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்தில் நிகழ்ந்தது.
17 அரசன், மற்றப் பெண்களை விட எஸ்தரை மிகுதியாக நேசித்தான். அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவன் மற்ற பெண்களைவிட அவளை மிகுதியாக ஏற்றுக்கொண்டான். எனவே, அகாஸ்வேரு அரசன் எஸ்தரின் தலையில் கிரீடத்தை அணிவித்து வஸ்தியின் இடத்தில் அவளைப் புதிய அரசியாகச் செய்தான். 18 அரசன் எஸ்தருக்காக ஒரு பெரிய விருந்தைக் கொடுத்தான். இது அவனது முக்கிய தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்குமாக இருந்தது. எல்லா நாடுகளுக்கும் அவன் அன்று விடுமுறை வழங்கினான். அவன் ஜனங்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தான். ஏனென்றால், அவன் ஒரு தாராளமான குணமுடைய அரசன்.
மொர்தெகாய் ஒரு தீய திட்டத்தைப் பற்றி அறிகிறான்
19 மொர்தெகாய் அரசனது வாசலுக்கு அடுத்து, பெண்கள் இரண்டாவது முறை கூடியபோது உட்கார்ந்திருந்தான். 20 எஸ்தர் தான் யூதகுலத்தை சேர்ந்தவள் என்பதை அதுவரை இரகசியமாக வைத்திருந்தாள். அவள் தனது குடும்பத்தைப் பற்றி யாரிடமும் கூறவில்லை. அவ்வாறு செய்யும்படி மொர்தெகாய் அவளுக்குச் சொல்லியிருந்தான். அவள் மொர்தெகாய்க்குக் கீழ்ப்படிந்தாள்.
21 மொர்தெகாய் அரசனது வாசலை அடுத்து உட்கார்ந்திருந்தபோது, இது நடந்தது. பிக்தான், தேரேசு எனும் இரண்டு அரசனது வாசல் காவல் அதிகாரிகள் அரசன் மீது கோபங்கொண்டனர். அவர்கள் அரசன் அகாஸ்வேருவை கொல்ல சதித் திட்டமிட ஆரம்பித்தனர். 22 ஆனால், மொர்தெகாய் அவர்களது திட்டத்தை அறிந்துக்கொண்டு எஸ்தர் அரசியிடம் கூறினான். பிறகு, அரசி எஸ்தர் அதனை அரசனிடம் கூறினாள். அவள் இத்தீய திட்டத்தை அறிந்து சொன்னவன் மொர்தெகாய் என்றும் கூறினாள். 23 பிறகு இந்த காரியம் சோதிக்கப்பட்டது. மொர்தெகாய் சொன்னது உண்மையென அறியப்பட்டது. அரசனைக் கொல்ல சதித்திட்டமிட்ட இரு காவலர்களும் கம்பத்தில் தூக்கிலிடப்பட்டனர். இவை அனைத்தும் அரசனுக்கு முன்பாக அரசனது வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டது.
யூதர்களை அழிப்பதற்கான ஆமானின் திட்டம்
3 இவை நிகழ்ந்த பிறகு, அகாஸ்வேரு அரசன் ஆமானைக் கௌரவித்தான். ஆமான், அம்மெதாத்தாவின் மகன். இவன் ஆகாகியன். அரசன் ஆமானுக்குப் பதவி உயர்வு கொடுத்து மற்ற அதிகாரிகளைவிட உயர் அதிகாரியாகச் செய்தான். 2 அரசனின் வாசலில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஆமானுக்குப் பணிந்து வணங்கி மரியாதைச் செய்தனர். அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று அரசன் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். ஆனால் மொர்தெகாய் அவனுக்குப் பணிந்து மரியாதை அளிக்க மறுத்துவிட்டான். 3 பிறகு, அரச வாசலில் உள்ள அரசனின் அதிகாரிகள் அவனிடம், “நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?” என்று கேட்டனர்.
4 நாளுக்கு நாள் அந்த அரச அதிகாரிகள் மொர்தெகாயிடம் பேசினார்கள். ஆனால் மொர்தெகாய் கட்டளையின்படி ஆமானை வணங்க மறுத்துவிட்டான். எனவே, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானிடம் சொன்னார்கள். ஆமான், மொர்தெகாய் விஷயத்தில் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள். மொர்தெகாய் அவர்களிடம் நான் ஒரு யூதன் என்று சொல்லியிருந்தான். 5 மொர்தெகாய் தனக்கு பணிந்து வணங்குவதில்லை என்பதையும், மரியாதை கொடுப்பதில்லை என்பதையும், ஆமான் அறிந்தபோது அவன் மிகவும் கோபங்கொண்டான். 6 மொர்தெகாய் ஒரு யூதன் என்பதை ஆமான் அறிந்திருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை மட்டும் கொன்றுவிடுவதில் திருப்தியடையவில்லை. ஆமான், மொர்தெகாயின் ஆட்களையும், அகாஸ்வேருவின் இராஜ்ஜியம் முழுவதுமுள்ள யூதர்களையும் அழிக்க ஒரு வழிவேண்டும் என்று விரும்பினான்.
7 அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் “பூர்” என்று அழைக்கப்பட்டது). 8 பிறகு, ஆமான் அகாஸ்வேரு அரசனிடம் வந்தான். அவன், “அகாஸ்வேரு அரசே, உமது ஆட்சியிலுள்ள நாடுகளில் எல்லாம் ஒருவித ஜனங்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் மற்ற ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்துள்ளனர். அவர்களது பழக்கவழக்கங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக உள்ளன. அவர்கள் அரசனது சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை. அவர்கள் உமது அரசாட்சியில் வாழ அனுமதிப்பது அரசனாகிய உமக்கு நல்லதல்ல.
9 “இது அரசனுக்கு விருப்பமானதாக இருந்தால், நான் ஒரு கருத்து சொல்கிறேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கு எனக்கு ஒரு கட்டளைகொடும். நான் 10,000 வெள்ளிக் காசுகளை அரசனின் பொக்கிஷதாரரிடம் செலுத்திவிடுகிறேன். அப்பணத்தை இவ்வேலையைச் செய்பவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான்.
10 எனவே, அரசன் தனது விரலில் உள்ள முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஆமானிடம் கொடுத்தான். ஆமான் ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகன். ஆமான் யூதர்களின் எதிரி. 11 பிறகு அரசன் ஆமானிடம், “பணத்தை வைத்துக்கொள். அந்த ஜனங்களை என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்” என்றான்.
12 பிறகு முதல் மாதத்தின் 13வது நாள் அரசனின் செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள மொழிகளில் ஆமானின் கட்டளைகளை எழுதினார்கள். அவர்கள் அரசனது நாட்டு அதிகாரிகளுக்கும், பல்வேறு மாகாண ஆளுநர்களுக்கும், பல்வகை ஜனங்களின் தலைவர்களுக்கும் எழுதினார்கள். அரசன் அகாஸ்வேருவின் அதிகாரத்தின்படியும், அவனது சொந்த மோதிரத்தின் முத்திரையிட்டும் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.
13 தூதுவர்கள் அரசனது அனைத்து மாகாணங்களுக்கும் கடிதங்களைக் கொண்டுசென்றனர். அக்கடிதத்தில் யூதர்கள் அனைவரையும் முழுமையாக அழிக்கவும், கொல்லவும் அரசனது கட்டளை இருந்தது. அதாவது இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவரையும் அழிக்க வேண்டும். ஒரே நாளில் யூதர்கள் அனைவரையும் கொல்லவேண்டும் என்று கட்டளை இருந்தது. அந்நாளும் ஆதார் எனும் பன்னிரண்டாவது மாதத்தின் 13வது நாளாக இருக்கவேண்டும். யூதர்களுக்குரிய உடமைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இருந்தது.
14 கடிதத்தின் ஒரு பிரதி சட்டமாக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டு, அவனது ஆட்சிக்குள்ளிருந்த அனைத்து மாகாணங்களிலும் சட்டமாக்கப்பட்டது. அனைத்து ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. பிறகு அந்நாளுக்காக ஜனங்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள். 15 அரசனது கட்டளையோடு தூதுவர்கள் விரைந்துக்கொண்டிருந்தனர். அந்த கட்டளை தலைநகரமான சூசானில் கொடுக்கப்பட்டது. அரசனும், ஆமானும் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சூசான் நகரம் குழம்பிக்கொண்டிருந்தது.
மொர்தெகாய் உதவிக்காக எஸ்தரை தூண்டுகிறான்
4 நடந்த அனைத்தையும் மொர்தெகாய் கேள்விப்பட்டான். யூதர்களுக்கு எதிரான அரசனது கட்டளையைக் கேட்டதும் அவன் தனது ஆடையைக் கிழித்தான். துக்கத்திற்கு அடையாளமான ஆடையை அணிந்து தலையில் சாம்பலை போட்டுக்கொண்டான். பிறகு அவன் நகரத்திற்குள் உரத்தக்குரலில் அழுதவண்ணம் சென்றான். 2 ஆனால் மொர்தெகாய் அரசனது வாசல் வரைதான் போனான். துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருந்த எவரையும் வாசலில் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். 3 எல்லா நாடுகளிலும் அரசனது கட்டளை போய்ச் சேர்ந்தது. அதனால் யூதர்களிடம் அழுகையும், துக்கமும், அதிகரித்தன. அவர்கள் உரத்த அழுகையுடன் உபவாசத்தை கடைப்பிடித்தனர். பல யூதர்கள் துக்கத்திற்கான ஆடையை அணிந்தும் தலைகளில் சாம்பலைப் போட்டுக்கொண்டும் தரையில் விழுந்துகிடந்தனர்.
4 எஸ்தரின் பெண் வேலைக்காரிகளும், பிரதானிகளும் வந்து அவளிடம் மொர்தெகாயைப் பற்றிச் சொன்னார்கள். அது எஸ்தர் அரசியைக் கலங்கவும் துக்கப்படவும் வைத்தது. அவள் அவனுக்கு துக்கத்திற்குரிய ஆடையை எடுத்துவிட்டு அணிந்துகொள்ள வேறு ஆடைகளைக் கொடுத்து அனுப்பினாள். ஆனால் அவன் அந்த ஆடைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 5 பிறகு, எஸ்தர் ஆத்தாகை அழைத்தாள். ஆத்தாகு அரசனின் பிரதானிகளுள் ஒருவன். அவன் அவளுக்கு சேவைச் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். மொர்தெகாயை அழவைத்து துக்கப்படுத்தியது எதுவென அறிந்து வரும்படி அவள் அவனுக்கு கட்டளையிட்டாள். 6 எனவே, அவன் வெளியே போய் வாசலுக்கு முன்னால் திறந்த வெளியில் மொர்தெகாய் இருக்கும் இடத்தை அடைந்தான். 7 பிறகு, மொர்தெகாய் ஆத்தாகிடம் அவனுக்கு ஏற்பட்டதைப்பற்றி சொன்னான். அதோடு அவன் ஆத்தாகிடம் ஆமான் யூதர்களைக் கொல்வதற்கு எவ்வளவு பணம் அரசின் பொக்கிஷ சாலைக்குக் கொடுப்பதாக வாக்களித்துள்ளான் என்பதையும் சொன்னான். 8 மொர்தெகாய் ஆத்தாகிடம் யூதர்களைக் கொல்வதற்குரிய அரசனது கட்டளைப் பிரதிகளையும் கொடுத்தான். அக்கட்டளை சூசான் தலைநகரம் முழுவதும் போயிருந்தது. அவன் ஆத்தாகிடம், அதனை எஸ்தருக்குக் காட்டி எல்லாவற்றையும் சொல்லும்படி கூறினான். எஸ்தர் அரசனிடம் சென்று, அரசனிடம் மொர்தெகாய்க்கும், அவளது ஜனங்களுக்கும் இரக்கம் காட்டிக் காக்குமாறு வேண்டிக்கொள்ளச் சொன்னான்.
9 ஆத்தாகு எஸ்தரிடம் போய் மொர்தெகாய் சொன்னவற்றையெல்லாம் சொன்னான்.
10 பிறகு எஸ்தர் ஆத்தாகிடம், மொர்தெகாயிடம் சொல்லுமாறு சொல்லியனுப்பினது இதுவே: 11 “மொர்தெகாய் அரசனின் தலைவர்கள் அனைவரும் அரசனது நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் இதனை அறிவார்கள். அரசனிடம் ஒரு சட்டம் உள்ளது. அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ அழைக்கப்படாமல் அரசனிடம் போகக்கூடாது. போனால், அவன் மரணத்திற்குள்ளாவான். அந்த ஆள் மீது அரசனது பொற் செங்கோல் நீட்டப்பட்டால் ஒழிய அவன் அச்சட்டத்திலிருந்து தப்பமுடியாது. அரசன் அவ்வாறு செய்தால், பிறகு அவனது உயிர் காப்பாற்றப்படும். 30 நாட்களாக நான் அரசனைப் போய் பார்க்க அழைக்கப்படவில்லை” என்று சொல்லச்சொன்னாள்.
12-13 எஸ்தரின் செய்தி மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது. மொர்தெகாய் அவளது செய்தியைப் படித்து விட்டு, அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். அதில், “எஸ்தர், நீ அரசனது அரண்மனையில் வாழ்வதால் யூத பெண்ணாகிய நீ மட்டும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதே. 14 நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கான உதவியும் விடுதலையும் வேறு இடத்திலிருந்து வரும், ஆனால் நீயும் உனது தந்தையின் குடும்பமும் அழியும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே இராணியாகத் தோந்தெடுக்கப்பட்டிருக்கலாம்” என்று எழுதியிருந்தான்.
15-16 பிறகு, எஸ்தர் மொர்தெகாய்க்கு இந்த பதிலை அனுப்பினாள்: “மொர்தெகாய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுசேர்த்து எனக்காக உபவாசம் இருங்கள். மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும் குடிக்காமலும் இருங்கள். நானும் உங்களைப் போன்றே உபவாசம் இருப்பேன். என் வேலைக்காரப் பெண்களும் உபவாசம் இருப்பார்கள். நான் உபவாசம் இருந்த பிறகு அரசனிடம் செல்வேன். அரசன் அழைக்காமல் போவது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எவ்வாறாகிலும் செய்வேன். நான் மரித்தால் மரிக்கிறேன்.”
17 எனவே மொர்தெகாய் வெளியே போனான். அவன் எஸ்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான்.
எஸ்தர் அரசனிடம் பேசுகிறாள்
5 மூன்றாவது நாள், எஸ்தர் அவளுக்குரிய அரச உடைகளை அணிந்துக்கொண்டாள். பிறகு, அவள் அரசனது அரண்மனை உட்பகுதிக்குள் போய் நின்றாள். அப்பகுதி அரசனது சபைக்கு முன்னால் இருந்தது. அரசன் தனது சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் அரண்மனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் இருந்தான். 2 பிறகு, அரசன் எஸ்தர் அரசி முற்றத்தில் நிற்பதைப் பார்த்தான். அவன் அவளைப் பார்த்தபோது மகிழ்ச்சிடைந்தான். அதனால் அவன் அவளை நோக்கி தனது கையிலுள்ள செங்கோலை நீட்டினான். எனவே, எஸ்தர் அந்த அறைக்குள் சென்று அரசன் அருகில் போனாள். பிறகு அவள் அரசனது பொற் செங்கோலின் முனையைத் தொட்டாள்.
3 பிறகு அரசன், “எஸ்தர் அரசியே, நீ விரும்புகிறது என்ன? நீ என்னிடம் என்ன வேண்டுமென கேட்கிறாய்? நீ என்ன கேட்டாலும் நான் உனக்குத் தருவேன். எனது பாதி இராஜ்யம் கேட்டாலும் தருவேன்” என்றான்.
4 அதற்கு எஸ்தர், “நான் உங்களுக்கும் ஆமானுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்று அந்த விருந்துக்கு நீங்களும் ஆமானும் வரமுடியுமா?” என்று கேட்டாள்.
5 பிறகு அரசன், “ஆமானை விரைவாக அழைத்து வா. எனவே எஸ்தர் என்ன கேட்கிறாளோ, அதன்படிச் செய்வோம்” என்றான்.
எனவே, அரசனும், ஆமானும் எஸ்தர் தயார் செய்த விருந்துக்குப் போனார்கள். 6 அவர்கள் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போது அரசன் மீண்டும் எஸ்தரிடம், “இப்போது எஸ்தரே, என்னிடம் நீ என்ன கேட்க விருப்புகிறாய்.? நான் அதனை உனக்கு கொடுப்பேன். நீ என்ன விரும்புகிறாய்? நீ என்ன விரும்பினாலும் அதனை நான் உனக்குக் கொடுப்பேன். நான் எனது பாதி இராஜ்யம்வரை கொடுப்பேன்.” என்றான். 7 எஸ்தர், “இதுதான் நான் உம்மிடம் கேட்க விரும்பியது. 8 அரசன், எனக்கு ஆதரவு கொடுத்தால், அரசன் என்னிடம் தயவாக இருந்தால், அரசனும் ஆமானும் நாளையும் வரவேண்டும். நாளை அரசனுக்கும், ஆமானுக்கும் இன்னொரு விருந்து ஏற்பாடு செய்வேன். அப்பொழுது, நான் உண்மையில் என்ன விரும்புகிறேன் என்று சொல்வேன்” எனப் பதிலுரைத்தாள்.
மொர்தெகாய் மீது ஆமானின் கோபம்
9 அவனது வீட்டைவிட்டு ஆமான் மிகவும் மகிழ்ச்சியோடு சென்றான். அவன் நல்ல மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை அரசனது வாசலில் பார்த்ததும் அவனுக்கு மொர்தெகாய் மீது கோபம் வந்தது. ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபமடைந்தான். ஏனென்றால், அவன் ஆமான் நடந்து வரும்போது எவ்வித மரியாதையையும் தரவில்லை. மொர்தெகாய் ஆமானைக் கண்டு பயப்படவில்லை. அது அவனை மேலும் கோபத்திற்குள்ளாக்கிற்று. 10 ஆனால் ஆமான் தனது கோபத்தைக் அடக்கிக்கொண்டு வீட்டிற்குப் போனான். பிறகு ஆமான் தனது நண்பர்களையும், மனைவி சிரேஷையும் அழைத்தான். 11 தான் எவ்வளவு செல்வமுடையவன் என்ற பெருமையோடு பேச ஆரம்பித்தான். அவன் தனது பல மகன்களைப் பற்றியும் அரசன் எவ்வழியில் எல்லாம் தன்னை பெருமைபடுத்துக்கிறான் என்பதைப் பற்றியும் பெருமையோடு பேசினான். மற்ற அதிகாரிகளைவிட தன்னை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருக்கிறான் என்பதையும் பெருமையோடு பேசினான். 12 ஆமான், “அதுமட்டுமல்ல, அரசி எஸ்தர் அரசனுக்குக் கொடுத்த விருந்தில் என்னை மட்டுமே அழைத்திருந்தாள். அவள் நாளை மீண்டும் விருந்துக்கு வருமாறு அழைத்தாள். 13 ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் அரசனின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று சொன்னான்.
14 பிறகு ஆமானின் மனைவி சிரேஷ் மற்றும் நண்பர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவர்கள், “யாராவது ஒருவரை, அவனைத் தூக்கிலிட கம்பம் கட்டச் சொல். அதனை 75 அடி உயரமுள்ளதாகச் செய். பிறகு, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கில் போடுமாறு அரசனை கேள். பிறகு, அரசனோடு விருந்துக்குப் போ. அப்போது உன்னால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியும்” என்றனர்.
ஆமான் இக்கருத்தை விரும்பினான். எனவே, அவன் சிலரிடம் தூக்கு மரக் கம்பம் செய்யுமாறு கட்டளையிட்டான்.
மொர்தெகாய் கௌரவிக்கப்படுகிறான்
6 அதே இரவில், அரசனால் தூங்க முடியவில்லை. எனவே, அவன் ஒரு வேலைக்காரனிடம் வரலாற்று புத்தகத்தைக் கொண்டுவந்து வாசிக்கும்படி கட்டளையிட்டான். ( அரசர்களது வரலாற்று புத்தகத்தில் அரசர்களின் ஆட்சியில் நடைபெற்றவற்றின் பட்டியல் இருந்தது.) 2 வேலைக்காரன் அரசனிடம் அதை வாசித்தான். அவன் அரசன் அகாஸ்வேருவை கொல்வதற்கான தீய திட்டத்தையும் வாசித்தான். அது மொர்தெகாய் கண்டுபிடித்த பிக்தானா மற்றும் தேரேசின் திட்டமாகும். அந்த இரண்டு பேரும் அரசனது வாசல் கதவை காக்கிற அதிகாரிகள். அவர்கள் அரசனைக் கொல்லவேண்டும் எனத் திட்டம் போட்டனர். ஆனால் மொர்தெகாய் அத்திட்டத்தைப்பற்றி அறிந்து அதனை யாரோ ஒருவரிடம் சொன்னான்.
3 அதற்கு அரசன், “என்ன சிறப்பும், பெருமையும் இதற்காக மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது?” என்ற கேட்டான்.
வேலைக்காரர்கள் அரசனிடம், “மொர்தெகாய்க்கு எதுவும் செய்யப்படவில்லை” என்றனர்.
4 அப்போது, அரசனது அரண்மனையில் வெளிப் பகுதியில் ஆமான் நுழைந்தான் அவன் தான் கட்டிய தூக்கு மரத்தில் மொர்தெகாய்யைத் தூக்கில் போடுவதற்காக அரசனைக் கேட்க வந்தான். அவன் முற்றத்தில் வரும்போது அரசன், “இப்போது முற்றத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான். 5 அரசனது வேலைக்காரர்கள் “முற்றத்தில் ஆமான் நின்றுக்கொண்டிருக்கிறார்” என்றார்கள்.
எனவே அரசன், “அவனை அழைத்து வாருங்கள்” என்றான்.
6 ஆமான் உள்ளே வந்தபோது, அரசன் அவனிடம், “ஆமான், அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யலாம்?” என்று கேள்விக் கேட்டான்.
ஆமான் தனக்குள் இப்படியாக நினைத்துக் கொண்டான், “என்னைவிட அதிகமாக பெருமைப்படுத்தும்படி அரசன் விரும்புகிறவன் யாராக இருக்க முடியும்? அரசன் என்னை பெருமைப் படுத்துவதைப் பற்றியே என்று உறுதியாக நினைத்தான்.”
7 ஆகையால், ஆமான் அரசனுக்கு, “அரசன் பெருமைப்படுத்தவேண்டும் என விரும்புகிறவனுக்கு இதனைச் செய்யும். 8 அரசன் அணிகிற உயர்ந்த ஆடையைக் கொண்டுவாருங்கள். அரசன் ஏறிச் செல்கிற குதிரையையும் கொண்டு வாருங்கள். அவர் தலையில் வைக்கிற அரசமுடியையும் கொண்டு வாருங்கள். 9 பிறகு அந்த ஆடையையும், குதிரையையும் அரசனது முக்கியமான தலைவனின் கையில் கொடுக்கப்படவேண்டும். அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்து குதிரையின் மேலேற்றி நகர வீதியில் உலா வரும்படி விடவேண்டும். அரசனின் முக்கிய தலைவன் அந்த மனிதனை குதிரை மீது நகர வீதியில் அழைத்து வரும்போது, ‘இதுபோலவே அரசன் பெருமைப்படுத்த விரும்புகிறவன் நடத்தப்படவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்’” என்ற பதில் சொன்னான்.
10 அரசன் ஆமானிடம், “வேகமாகப் போ” என கட்டளையிட்டு, “ஆடையையும், குதிரையையும் கொண்டுவா. இதனை நீ சொன்னபடி யூதனான மொர்தெகாய்க்குச் செய். மொர்தெகாய் அரசனது வாசலருகில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிறான். நீ சொன்னபடி எல்லாவற்றையும் செய்” என்றான்.
11 எனவே ஆமான் ஆடையையும், குதிரையையும் எடுத்தான். ஆடையை மொர்தெகாய்க்கு அணிவித்தான். பிறகு அவனை குதிரையில் உட்கார வைத்து நகர வீதிகளில் உலாகொண்டுபோனான். ஆமான் மொர்தெகாய் பற்றி, “இதுபோல் தான் அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற மனிதன் நடத்தப்பட வேண்டும்” என்று அறிவித்தான்.
12 பிறகு மொர்தெகாய் அரசனது வாசலுக்குத் திரும்பிப்போனான். ஆனால் ஆமான் வீட்டிற்கு விரைவாகப் போனான். அவன் தன் தலையை மூடிக்கொண்டான். ஏனென்றால், அவன் சஞ்சலமும் அவமானமும் அடைந்தான். 13 பிறகு ஆமான் தன் மனைவி சிரேஷையிடமும் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு ஏற்பட்டதையெல்லாம் சொன்னான். ஆமானின் மனைவியும், ஆட்களும் அவனுக்கு ஆலோசனைச் சொன்னார்கள். அவர்கள், “மொர்தெகாய் யூதனாக இருப்பின் நீ வெல்ல முடியாது. நீ ஏற்கெனவே வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாய். உறுதியாக நீ அழிக்கப்படுவாய்” என்றனர்.
14 இவ்வாறு அவர்கள் ஆமானுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அரசனின் பிரதானிகள் ஆமானின் வீட்டிற்கு வந்தார்கள். எஸ்தர் ஏற்பாடு செய்த விருந்துக்கு வரும்படி ஆமானை அவர்கள் விரைவுபடுத்தினார்கள்.
ஆமான் தூக்கிலிடப்படுகிறான்
7 எனவே அரசனும், ஆமானும் அரசி எஸ்தரோடு விருந்து உண்ணச் சென்றனர். 2 பிறகு இரண்டாம் நாள் விருந்தில் அவர்கள் திராட்சைரசம் குடிக்கும்போது, அரசன் மீண்டும் அரசியிடம் கேள்வி கேட்டான். அவன், “எஸ்தர் அரசியே, நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? எதை வேண்டுமானாலும் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன்னுடைய விருப்பம் என்ன? எனது நாட்டில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
3 பிறகு, எஸ்தர் அரசி, “அரசே, நீர் என்னை விரும்பினால், இது உமக்கு விருப்பமானால் என்னை வாழவிடுங்கள். எனது ஜனங்களையும் வாழவிடுங்கள் என்று கேட்கிறேன். அதுதான் உம்மிடம் வேண்டுகிறேன். 4 ஏனென்றால், நானும் எனது ஜனங்களும் அழியவும், கொல்லப்படவும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டால் கூட நான் மௌனமாக இருப்பேன். ஏனென்றால் அது அரசனைத் துன்புறத்துகிற ஒரு பிரச்சினையாக இருக்கமுடியாது” என்றாள்.
5 பிறகு அரசன் அகாஸ்வேரு எஸ்தர் அரசியிடம், “இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.
6 எஸ்தர், “எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்” என்றாள்.
பிறகு, அரசன் மற்றும் அரசி முன்னால் ஆமான் திகில் அடைந்தான். 7 அரசன் மிகவும் கோபம் அடைந்தான். அவன் எழுந்து திராட்சைரசம் விருந்தைவிட்டு, தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் ஆமான் உள்ளே இருந்து எஸ்தர் அரசியிடம் தன் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினான். அவன் தன் உயிருக்காக மன்றாடினான். ஏனென்றால், அவனைக் கொல்லுமாறு ஏற்கெனவே அரசன் முடிவுச் செய்துவிட்டதை அவன் அறிந்தான். 8 அரசன் தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, அரசி எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். அரசன் மிகவும் கோபமான குரலில், “நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ அரசியைத் தாக்குகிறாயோ?” எனக் கேட்டான்.
அரசன் இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள். 9 பிரதானிகளில் ஒருவனான அரசனுக்கு சேவைச் செய்பவனின் பெயர் அற்போனா. அவன் அரசனிடம், “ஆமானின் வீட்டின் அருகில் 75 அடி உயரத்தில் ஒரு தூக்குமரம் கட்டப்பட்டுள்ளது. அதில் மொர்தெகாயைத் தூக்கிலிடவேண்டும் என்றே ஆமான் அதைக் கட்டினான். மொர்தெகாய் உமக்கு உதவிச் செய்த ஆள், உம்மை கொல்லத் திட்டமிட்டத் தீயர்வர்களைப்பற்றி உமக்குச் சொன்னவன்” என்றான்.
அரசன், “ஆமானை அதே மரத்தில் தூக்கில் போடுங்கள்” என்றான்.
10 எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு அரசன் தன் கோபத்தை நிறுத்தினான்.
யூதர்களுக்கு உதவும்படியான அரசக் கட்டளை
8 அதே நாளில், அகாஸ்வேரு அரசன், எஸ்தர் அரசியிடம் யூதரின் எதிரியாக இருந்த ஆமானின் அத்தனை உடமைகளையும் கொடுத்தான். எஸ்தர், அரசனிடம் மொர்தெகாய் தனது உறவினன் என்று சொன்னாள். பிறகு மொர்தெகாய் அரசனைப் பார்க்க வந்தான். 2 அரசன் ஆமானிடமிருந்து தனது மோதிரத்தை வாங்கி வைத்திருந்தான். அவன் தன் விரலிலிருந்து மோதிரத்தை எடுத்து மொர்தெகாயிடம் கொடுத்தான். பிறகு எஸ்தர், ஆமானுக்குச் சொந்தமான அனைத்துக்கும் மொர்தெகாயைப் பொறுப்பாளியாக நியமித்தாள்.
3 பிறகு எஸ்தர் மீண்டும் அரசனிடம் பேசினாள். அவள் அரசனின் காலில் விழுந்து, அழத்தொடங்கினாள். ஆகாகியான ஆமானின் தீயத்திட்டத்தை நீக்கும்படி அவள் மன்றாடினாள். ஆமான் யூதர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தான்.
4 பிறகு அரசன் தனது பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான். எஸ்தர் எழுந்து அரசன் முன்னாள் நின்றாள். 5 பிறகு எஸ்தர், “அரசே, நீர் என்னை விரும்புவதானால், உமக்கும் மகிழ்ச்சியானால் எனக்காக இதனைச் செய்யும். இது நல்ல யோசனை என்று நீர் நினைத்தால் இதனைச் செய்யும். அரசன் என்னோடு சந்தோஷமாக இருக்கிறதானால், ஆமான் அனுப்பிய கட்டளையை விலக்கும்படி ஒரு கட்டளை எழுதி அனுப்பும். அரசனின் அனைத்து நாடுகளிலும் உள்ள யூதர்களை அழித்துவிட வேண்டுமென்று ஆகாகியானான ஆமான் ஒரு திட்டம் வைத்து அதை நடத்திட கட்டளை அனுப்பினான். 6 நான் அரசரை மன்றாடிக் கேட்கிறேன். ஏனெனில் என் ஜனங்களுக்கு இத்தகைய பயங்கரம் ஏற்படுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. எனது குடும்பம் கொல்லப்படுவதை என்னால் பார்க்க முடியாது” என்றாள்.
7 அகாஸ்வேரு அரசன் எஸ்தர் அரசிக்கும், யூதனான மொர்தெகாய்க்கும் பதில் சொன்னான். அரசன், “ஆமான் யூதர்களுக்கு எதிரியாக இருந்ததால், நான் அவனது சொத்துக்களை எஸ்தருக்கு கொடுத்திருக்கிறேன். என் வீரர்கள் ஆமானைத் தூக்கு மரத்தில் தொங்கப்போட்டனர். 8 இப்பொழுது அரசனது அதிகாரப்படி இன்னொரு கட்டளையை எழுதுங்கள். யூதர்களுக்கு உதவ எது சிறப்பான வழியாகத் தோன்றுகிறதோ அப்படி எழுதி, அந்த கட்டளையை அரசனது சிறப்பு மோதிரத்தில் முத்திரையிடு. அரசனது அதிகாரத்துடன் எழுதப்பட்டு அவனது சிறப்பு மோதிரம் முத்திரை பொறிக்கப்பட்ட எந்தக் கடிதமும் ரத்து செய்யப்படக் கூடாது” என்றான்.
9 மிக விரைவாக அரசனின் செயலாளர்கள் அழைக்கப்பட்டனர். இது சீவான் என்னும் மூன்றாவது மாதத்தின் 23வது நாளில் நடந்தது அச்செயலாளர்கள் மொர்தெகாயின் அனைத்து கட்டளைகளையும் யூதர்கள், தலைவர்கள், ஆளுநர்கள், 127 மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் என அனைவருக்கும் எழுதினார்கள். அம்மாகாணங்கள் இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்தது. இந்த கட்டளை ஒவ்வொரு மாகாணத்தின் மொழியிலும் எழுதப்பட்டது. ஒவ்வொரு குழு ஜனங்களின் மொழியிலும் இந்த கட்டளை மொழி பெயர்க்கப்பட்டது. இந்த கட்டளை யூதர்களின் சொந்த மொழியிலும் சொந்த எழுத்திலும் எழுதப்பட்டது. 10 மொர்தெகாய் அரசன் அகாஸ்வேருவின் அதிகாரத்தால் கட்டளைகளை எழுதினான். பிறகு அவன் அரசனது முத்திரை மோதிரத்தால் கடிதங்களை முத்திரையிட்டான். பிறகு தூதர்களை குதிரைகளின் மேல் அனுப்பினான். அவர்கள் அரசனுக்காக வளர்க்கப்பட்ட குதிரைகளில் வேகமாக போனார்கள்.
11 அரசனது கட்டளைகளாகக் கடிதங்களில் சொல்லப்பட்டவை இதுதான்: ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள யூதர்கள் அனைவரும் கூடி சேர்ந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்ற உரிமையுடையவர்கள். அவர்களுக்கு தங்களையோ, தங்கள் பெண்களையோ, பிள்ளைகளையோ தாக்கும் எதிரிகளைத் தாக்கவோ, கொல்லவோ, அழிக்கவோ உரிமை உண்டு. யூதர்களுக்கு தங்கள் பகைவர்களின் சொத்தை அபகரிக்கவோ, அழிக்கவோ உரிமை உண்டு.
12 இதைச் செய்வதற்காக யூதர்களுக்கு பன்னிரண்டாவது மாதமான ஆதார் மாதத்தின் 13வது நாள் நியமிக்கப்பட்டிருந்தது. யூதர்கள் இதனை அகாஸ்வேரு அரசனின் இராஜ்யத்தின் எல்லாப் பகுதிகளிலும் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 13 அரசனின் கட்டளைப் பிரதி ஒன்று அனுப்பப்பட்டு அது சட்டமாயிற்று. எல்லா மாகாணங்களிலும் அது சட்டமானது. இராஜ்யத்திலுள்ள எல்லா நாடுகளின் ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. இது அறிவிக்கப்பட்டதால் யூதர்கள் அந்த சிறப்பு நாளுக்காகத் தயாராக இருந்தனர். யூதர்கள் தம் எதிரிகளுக்குத் திருப்பிக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். 14 தூதுவர்கள் அரசனது குதிரையில் மிக வேகமாகச் சென்றனர். அரசன் அவர்களிடம் வேகமாகச் செல்லும்படி கட்டளையிட்டான். இந்த கட்டளை, தலைநகரமான சூசானிலும் அறிவிக்கப்பட்டது.
15 மொர்தெகாய் அரசனைவிட்டு போனான். அவன் அரசனிடமிருந்து பெற்ற சிறப்பான ஆடையை அணிந்திருந்தான். அவனது ஆடை வெண்மையும், நீலமுமாய் இருந்தது. பெரிய பொற் கிரீடமும், சிறந்த பட்டும், இரத்தாம்பரமும் அணிந்திருந்தான். சூசானின் சிறப்பு விழா நடைபெற்றது. ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். 16 யூதர்களுக்குத் தனி மகிழ்ச்சியுடைய நாளாக இருந்தது. இது மிகுந்த மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் உரியநாளாக இருந்தது.
17 அரசனது கட்டளை எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் சென்றனவோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியும், உற்சாகமும் யூதர்களிடையே ஏற்பட்டன. யூதர் விருந்துடன் அதனைக் கொண்டாடினர். யூதர்களுக்குப் பயந்ததினால் மற்ற குழுவிலுள்ள ஜனங்களும் யூதர்களாகினர்.
யூதர்களுக்கு வெற்றி
9 ஆதார் என்னும் 12ஆம் மாதத்தின் 13வது நாள், ஜனங்கள் அரசனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும். அன்றுதான் யூதர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்க நம்பியிருந்த நாள். இப்பொழுது அந்த நிலைமாறி யூதர்கள் தம்மை வெறுத்த பகைவர்களைவிட பலமுள்ளவர்களானார்கள். 2 யூதர்கள் அகாஸ்வேரு அரசனின் நாடுகளில் எல்லாம் ஒன்று கூடினர். நம்மை அழிக்க நினைத்தவர்களைத் தாக்க போதுமான பலமுடையவர்களாயினர். எனவே, அவர்களுக்கு எதிராக நிற்க எவருக்கும் பலமில்லை. அந்த ஜனங்கள் யூதர்களுக்குப் பயந்தனர். 3 எல்லா மாகாணங்களின் அதிகாரிகளும், தலைவர்களும், ஆளுநர்களும், யூதர்களுக்கு உதவினார்கள். ஏனென்றால் அவர்கள் மொர்தெகாய்க்கும் பயந்தனர். 4 அரசனது அரண்மனையில் மொர்தெகாய் மிக முக்கியமான நபராகிவிட்டான். அரசனது மாகாணங்களிலுள்ள அனைவரும் அவனது பெயரையும், அவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் அறிந்திருந்தனர். மொர்தெகாய் மேலும் மேலும் அதிகாரம் உள்ளவன் ஆனான்.
5 யூதர்கள் தம் பகைவர்கள் அனைவரையும் தோற்கடித்தனர். அவர்கள் தம் பகைவரைக் கொன்று அழிக்க வாளைப் பயன்படுத்தினார்கள். தம்மை வெறுத்த ஜனங்களைத் தம் விருப்பம்போல் யூதர்கள் செய்தார்கள். 6 யூதர்கள் சூசான் தலைநகரில் 500 பேரை கொன்றழித்தார்கள். 7 யூதர்கள் கீழ்க்கண்டவர்களைக் கொன்றனர்: பர்சர்ன்தாத்தா, தல்போன், அஸ்பாதா, 8 பொராதா, அதலியா, அரிதாத்தா, 9 பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா, 10 இவர்கள் ஆமானின் 10 மகன்கள். அம்மெதாத்தாவின் மகனான ஆமான் யூதர்களின் பகைவன். யூதர்கள் இவர்கள் அனைவரையும் கொன்றனர். ஆனால் அவர்களது பொருட்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை.
11 தலைநகரமான சூசானில் எத்தனை பேர் கொன்று அழிக்கப்பட்டனர் என்று அரசன் கேள்விப்பட்டான். 12 எனவே, அரசன் எஸ்தர் அரசியிடம், “யூதர்கள் சூசானில் ஆமானின் 10 மகன்களையும் சேர்த்து 500 பேரை கொன்றுள்ளனர். இப்பொழுது வேறு மாகாணங்களில் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்? எனக்குச் சொல், நான் அதனை நடத்துவேன். சொல் நான் அதனைச் செய்வேன்” என்றான்.
13 எஸ்தர், “அரசருக்கு விருப்பமானால், சூசானில் யூதர்கள் இதைப்போன்றே நாளையும் செய்ய அனுமதி கொடுக்கவேண்டும். ஆமானின் 10 மகன்களின் உடலையும் தூக்கில் தொங்கவிட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டாள்.
14 எனவே, அரசன் அந்த கட்டளையைக் கொடுத்தான். அந்தச் சட்டம் அடுத்த நாளும் இருந்தது. அவர்கள் ஆமானின் 10 மகன்களின் உடல்களை தொங்கவிட்டனர். 15 சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 14வது நாளில் ஒன்று கூடினார்கள். அவர்கள் சூசானில் 300 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை.
16 அதே நேரத்தில் வேறு நாடுகளில் வாழ்ந்த யூதர்களும் ஒன்று கூடினார்கள். அதனால் தம்மைக் காத்துக்கொள்ளும் அளவு பலமுள்ளவர்களாக இருந்தனர். எனவே, அவர்கள் பகைவர்களைத் தாக்கமுடிந்தது. யூதர்கள் தம் பகைவரான 75,000 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை. 17 இது ஆதார் மாதத்தின் 13வது நாளில் நடைபெற்றது, 14வது நாள் அவர்கள் ஓய்வு எடுத்தனர். யூதர்கள் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறை நாளாக ஆக்கினார்கள்.
பூரீம் விழா
18 சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 13 மற்றும் 14ஆம் நாட்களில் ஒன்று கூடினார்கள். 15வது நாள் அவர்கள் ஓய்வெடுத்தனர். அவர்கள் 15வது நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினர். 19 எனவே, நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்ந்த யூதர்கள் 14வது நாளை பூரீம் விழாவாகக் கொண்டாடினார்கள். அதனை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினார்கள். அன்று விருந்தும் ஒருவர்கொருவர் அன்பளிப்பும் கொடுத்து மகிழ்ந்தனர்.
20 மொர்தெகாய் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதினான். பிறகு அவன் அகாஸ்வேரு அரசனின் மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அருகிலும் தொலைவிலும் உள்ள அனைவருக்கும் கடிதம் அனுப்பினான். 21 மொர்தெகாய் அதில் யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆதார் மாதத்தின் 14 மற்றும் 15ஆம் நாட்களில் பூரீம் விழாவை கொண்டாடும்படி எழுதினான். 22 யூதர்கள் அந்நாட்களைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், அந்நாட்களில் அவர்கள் தம் பகைவர்களை அழித்தனர். அம்மாதத்தில் அவர்களின் துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறியதால் அம்மாதத்தைக் கொண்டாடினார்கள். இம்மாதத்தில் அவர்களது அழுகை மாறி குதூகலமாய் கொண்டாடும் மாதமாக மாறிற்று. மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அவர்களிடம் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாளாக கொண்டாடச் சொன்னான். அவர்கள் ஒருவருக்கொருவர் விருந்தும் அன்பளிப்பும் கொடுத்து, ஏழைகளுக்குப் பரிசு கொடுத்து அந்த நாளை கொண்டாடச் சொன்னான்.
23 எனவே யூதர்கள் மொர்தெகாய் எழுதியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தொடங்கிய விழாவை தொடர ஒப்புக்கொண்டனர்.
24 அம்மெதாத்தாவின் மகனான ஆமான் என்னும் ஆகாகியன் யூதர்களின் பகைவன். யூதர்களை அழிக்க அவன் ஒரு தீய திட்டத்தை வைத்திருந்தான். அவன் யூதர்களை அழிக்கும் நாளை குலுக்கல் சீட்டு போட்டு தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அக்காலத்தில் குலுக்கல் சீட்டானது “பூர்” என்று அழைக்கப்பட்டது. எனவே, விடுமுறைநாளும் “பூரீம்” என அழைக்கப்பட்டது. 25 ஆமான் அவற்றைச் செய்தான். ஆனால் எஸ்தர் அரசனிடம் பேசச் சென்றாள். எனவே, அவன் புதிய கட்டளைகளை அனுப்பினான். அந்த கட்டளைகள் ஆமானின் திட்டத்தை அழித்ததோடு, ஆமானுக்கும் அவனது குடும்பத்திற்கும், அதே தீமை ஏற்படும்படியும் ஆயிற்று. எனவே, ஆமானும் அவனது மகன்களும் தூக்கு மரத்தில் தொங்கினார்கள்.
26-27 இப்போது, குலுக்கல் சீட்டு “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. எனவே, இந்த விடுமுறை நாளும் “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. மொர்தெகாய் யூதர்களுக்கு கடிதம் எழுதி இந்நாளைக் கொண்டாடச் சொன்னான். எனவே, யூதர்கள் ஆண்டில் இரண்டு நாளைக் கொண்டாடும் வழக்கத்தைக்கொண்டனர். 28 இது அவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை நினைவுப்படுத்துவதாக இருந்தது. யூதர்களும் மற்ற ஜனங்களும் சேர்ந்து சரியான காலத்தில் சரியான முறையில் ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்கள் கொண்டாடினார்கள். ஒவ்வொரு தலைமுறையில் ஒவ்வொரு குடும்பமும் இந்த இரண்டு நாட்களையும் நினைவுபடுத்தினர். அவர்கள் இந்த விடுமுறையை ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரிலும் கொண்டாடினார்கள் யூதர்கள் என்றென்றும் பூரீம் விழாவைக் கொண்டாடுவதை நிறுத்தக் கூடாது. யூதர்களின் சந்ததிகளும் எப்பொழுதும் இவ்விடுமுறையை நினைத்துக்கொள்ள வேண்டும்.
29 எனவே அபியாயேலின் மகளான எஸ்தர் அரசியும், யூதனான மொர்தெகாயும் பூரீம் பற்றிய ஒரு அதிகாரப் பூர்வமான கடிதத்தை எழுதினார்கள். இரண்டாவது கடிதம் உண்மையானது என்பதை நிரூபிக்க அரசனின் முழு அதிகாரத்ததோடு கடிதம் எழுதினார்கள். 30 எனவே, மொர்தெகாய் அகாஸ்வேரு அரசனின் 127 மாகாணங்களுக்கும் கடிதம் அனுப்பினான். அந்த விழா யூதர்களிடம் சமாதானத்தையும், ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையையும் உருவாக்கும் என்று மொர்தெகாய் எழுதினான். 31 மொர்தெகாய் யூதர்களுக்குப் பூரீம் விழாவை கொண்டாட ஆரம்பிக்கும்படி எழுதினான். எப்பொழுது இப்புதிய விடுமுறை நாளை கொண்டாட வேண்டும் என்றும் எழுதினான். யூதனான மொர்தெகாயும் அரசியான எஸ்தரும் யூதர்களுக்கு இக்கட்டளையை இட்டனர். அவர்கள் இவ்விரு நாட்களையும் விடுமுறை கொண்டாட்டமாக தங்களுக்கும், தங்கள் சந்ததிகளுக்கும் எற்படுத்தவேண்டும். அவர்கள் மற்ற விடுமுறை நாட்களில் உபவாசம் இருந்து, அழுது, நடந்த தீமைகளுக்கு இரங்கி நினைப்பதுபோன்று இந்த இரு நாட்களையும் கொண்டாடுவார்கள். 32 எஸ்தரின் கடிதம் பூரீம் விழாவின் விதிகளை அதிகாரப் பூர்வமானதாக ஆக்கிற்று. இவை ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டன.
மொர்தெகாய் கௌரவிக்கப்படுகிறான்
10 அகாஸ்வேரு அரசன் ஜனங்களை வரி செலுத்தும்படி செய்தான். அவனது இராஜ்யத்திலுள்ள அனைத்து ஜனங்களும் தொலை தூரத்தில் கடல் கடந்து வாழும் ஜனங்களும், வரிசெலுத்தி வந்தனர். 2 அரசன் அகாஸ்வேரு செய்த அரும்பெரும் செயல்கள் மேதியா மற்றும் பெரிசியா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டன. அந்த வரலாற்றுப் புத்தகங்களில் மொர்தெகாய் செய்தவையும் எழுதப்பட்டன. அரசன் மொர்தெகாயைப் பெரிய மனிதனாக்கினான். 3 யூதனான மொர்தெகாய் அரசனுக்கு அடுத்த இரண்டாவது முக்கிய மனிதனானான். யூதர்களில் மொர்தெகாய் மிக முக்கிய மனிதன் ஆனான். அவனை மற்ற யூதர்கள் மிகவும் மதித்தனர். அவர்கள் மொர்தெகாயை மதித்தனர். ஏனென்றால், அவன் தன் ஜனங்களின் நன்மைக்காக கடினமான வேலைகளைச் செய்தான். மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தான்.
நல்ல மனிதனாகிய யோபு
1 ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்னும் பெயருள்ள மனிதன் வாழ்ந்து வந்தான். யோபு நல்லவனும் உண்மையுள்ள மனிதனுமாக இருந்தான். தேவனுக்கு பயந்து தீயக் காரியங்களைச்செய்ய மறுத்தான். 2 யோபுவுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர். 3 யோபுவுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 1,000 காளைகளும், 500 பெண் கழுதைகளும் இருந்தன. அவனிடம் வேலையாட்கள் பலர் இருந்தனர். கிழக்குப் பகுதியில் யோபுவே பெரிய செல்வந்தனாக இருந்தான்.
4 யோபுவின் மகன்கள் ஒருவருக்குப் பின் ஒருவராகத் தங்கள் வீடுகளில் விருந்து வைத்து, அவர்களின் சகோதரிகளை அழைப்பது வழக்கம். 5 அவனது பிள்ளைகளின் விருந்து முடிந்தப்பின் யோபு அதிகாலையில் எழுந்தான். ஒவ்வொரு பிள்ளைக்காகவும் அவன் தகனபலியை அளித்தான். அவன், “என் பிள்ளைகள் கவலையீனமாக இருந்து, விருந்தின்போது தேவனுக்கெதிராக தங்கள் இருதயங்களில் தூஷிப்பதினால் பாவம் செய்திருக்கக் கூடும்” என்று எண்ணினான். அவனது பிள்ளைகள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறும்படியாக யோபு எப்போதும் இவ்வாறு செய்தான்.
6 தேவதூதர்கள் [a] கர்த்தரைச் சந்திக்கும் நாள் வந்தது. சாத்தானும் தேவதூதர்களோடு வந்தான்.
7 கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தரை நோக்கி, “நான் பூமியைச் சுற்றிப் பார்த்து வந்தேன்” என்றான்.
8 அப்போது கர்த்தர் சாத்தானிடம், “நீ எனது தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. யோபு உத்தமனும் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றை விட்டு விலகியிருக்கிறான்” என்றார்.
9 சாத்தான், “ஆம்! ஆனால் யோபு தேவனுக்குப் பயப்படுவதற்கு தக்க காரணங்கள் உள்ளன! 10 நீர் எப்போதும் அவனையும், அவனது குடும்பத்தையும், அவனுக்கிருக்கும் எல்லாவற்றையும் வேலியடைத்துப் பாதுகாக்கிறீர். அவன் செய்கின்ற எல்லாவற்றிலும் அவனை வெற்றி காணச்செய்தீர். ஆம் நீர் அவனை ஆசீர்வதித்திருக்கிறீர். நாடு முழுவதும் அவனது மந்தைகளும் விலங்குகளும் பெருகி, அவன் மிகுந்த செல்வந்தனாக இருக்கிறான். 11 ஆனால் அவனுக்கிருப்பவை அனைத்தையும் நீர் உமது கையை நீட்டி அழித்துவிட்டால் உம் முகத்திற்கு நேராக உம்மை அவன் சபிப்பான் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிலளித்தான்.
12 கர்த்தர் சாத்தானிடம், “அப்படியே ஆகட்டும். யோபுக்குச் சொந்தமான பொருள்களின் மேல் உன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய். ஆனால் அவன் உடம்மைத் துன்புறுத்தாதே” என்றார். பின்பு சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுச் சென்றுவிட்டான்.
யோபு எல்லாவற்றையும் இழக்கிறான்
13 ஒருநாள், மூத்த சகோதரனின் வீட்டில் யோபுவின் மகன்களும், மகள்களும் உண்டு, திராட்சை ரசம் அருந்திக்கொண்டிருந்தார்கள். 14 அப்போது ஒருவன் யோபுவிடம் வந்து, “காளைகள் உழுதுக்கொண்டிருந்தன, கழுதைகள் அருகே புல் மேய்ந்துக்கொண்டிருந்தன. 15 ஆனால் சபேயர் எங்களைத் தாக்கிவிட்டு உமது மிருகங்களை கவர்ந்துக்கொண்டார்கள்! சபேயர் என்னைத் தவிர எல்லா வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். உம்மிடம் சொல்லும்படியாக தப்பிவர முடிந்தவன் நான் மட்டுமே!” எனச் செய்தியைக் கூறினான்.
16 அவன் இதனைக் கூறிக்கொண்டிருக்கும்போது மற்றொருவன் யோபுவிடம் வந்தான். இரண்டாம் ஆள், “வானிலிருந்து மின்னல் மின்னி உமது ஆடுகளையும் வேலையாட்களையும் எரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பினேன். உமக்கு அந்தச் செய்தியை கூறும்படியாக வந்தேன்!” எனக் கூறினான்.
17 அந்த ஆள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இன்னொருவன் வந்தான். இந்த மூன்றாவது ஆள், “கல்தேயர் மூன்று குழுக்களை அனுப்பி, எங்களைத் தாக்கி, ஒட்டகங்களைக் கவர்ந்து சென்றுவிட்டார்கள்! அவர்கள் வேலையாட்களையும் கொன்றுவிட்டார்கள். நான் மட்டுமே தப்பினேன் இந்தச் செய்தியை உமக்குச் சொல்லும்படியாக வந்தேன்!” என்றுச் சொன்னான்.
18 மூன்றாம் ஆள் பேசிக்கொண்டிருக்கும்போதே, மற்றும் ஒருவன் வந்தான். நான்காவது ஆள், “உமது மகன்களும் மகள்களும் மூத்த சகோதரனின் வீட்டில் உண்டு, திராட்சைரசம் பருகிக்கொண்டிருந்தார்கள். 19 அப்போது ஒரு பலத்தக் காற்று பாலைவனத்திலிருந்து வீசி, வீட்டை அழித்தது, உமது மகன்களின் மீதும், மகள்களின் மீதும் வீடு வீழ்ந்ததால், அவர்கள் மரித்துப்போனார்கள். நான் ஒருவன் மட்டுமே தப்பித்தேன். எனவே உம்மிடம் இந்த செய்தியை தெரிவிக்க வந்தேன்!” என்றான்.
20 யோபு இதைக் கேட்டபோது, அவனது துக்கத்தை வெளிப்படுத்தும்பொருட்டு ஆடைகளைக் கிழித்துக்கொண்டான், தலையை மழித்துவிட்டான். பின்பு யோபு தரையில் விழுந்து, தேவனை ஆராதித்தான்.
21 “நான் இந்த உலகத்தில் பிறந்தபோது நிர்வாணமாக இருந்தேன், என்னிடம் எதுவும் இருக்கவில்லை.
நான் மரித்து இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும்போது, நான் நிர்வாணமாக எதுவுமின்றி செல்லுவேன்.
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக்கொண்டார்.
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!” என்றான்.
22 இவையெல்லாம் நிகழ்ந்தாலும், யோபு பாவம் செய்யவில்லை. தேவன் தவறு செய்திருந்தார் என்று யோபு குறை சொல்லவுமில்லை.
சாத்தான் யோபுவுக்கு மீண்டும் தொல்லைத் தருகிறான்
2 மற்றொருநாள், தேவதூதர்கள் கர்த்தரை சந்திக்க வந்தார்கள். சாத்தானும் கர்த்தரை சந்திப்பதற்காக வந்தான்.
2 கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தருக்கு, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன்” என்று பதில் கூறினான்.
3 அப்போது கர்த்தர் சாத்தானை நோக்கி, “என் தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. அவன் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றைவிட்டு விலகுகிறான். எக்காரணமுமின்றி அவனுக்குள்ளவை அனைத்தையும் அழிக்கும்படி நீ கேட்டும் கூட, அவன் இன்னும் உண்மையுள்ளவனாக இருக்கிறான்” என்றார்.
4 சாத்தான், “தோலுக்குத் தோல்! [b] என்று பதில் சொன்னான். ஒருவன் தன் உயிரை காப்பதற்காக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பான். 5 அவனது உடம்பைத் துன்புறுத்தும்படி நீர் உமது கையை நீட்டு வீரானால், அப்போது உமது முகத்திற்கு நேராக அவன் உம்மை சபிப்பான்!” என்றான்.
6 அப்போது கர்த்தர் சாத்தானைப் பார்த்து, “அது சரி, யோபு உன் ஆற்றலுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறான். ஆனால் அவனைக் கொல்வதற்குமட்டும் உனக்கு அனுமதியில்லை” என்றார்.
7 பின்பு சாத்தான் கர்த்தரிடமிருந்து சென்று, யோபுவுக்கு வேதனைமிக்க புண்களைக் கொடுத்தான். அவனது பாதங்களின் அடிப்பகுதியிலிருந்து தலையின் உச்சிவரைக்கும் வேதனை தரும் அப்புண்கள் யோபுவின் உடலெங்கும் காணப்பட்டன. 8 எனவே யோபு குப்பைக் குவியலின் அருகே உட்கார்ந்தான். அவனது புண்களைச் சுரண்டுவதற்கு உடைந்த மண்பாண்டத்தின் ஒரு துண்டைப் பயன்படுத்தினான்.
9 யோபுவின் மனைவி அவனை நோக்கி, “நீ இன்னும் தேவனுக்கு உண்மையுள்ளவனாய் இருக்கிறாயா? நீர் தேவனை சபித்தவண்ணம் மரித்துவிடு?” என்று கேட்டாள்.
10 பிறகு யோபு தனது மனைவியிடம், “நீ மூடத்தனமானவளைப் போலப் பேசுகிறாய்! தேவன் நல்லவற்றைக் கொடுக்கும்போது, நாம் அவற்றை ஏற்கிறோம். எனவே நாம் தொல்லைகளையும் ஏற்கவேண்டும், முறையிடக்கூடாது” என்று பதில் தந்தான். எல்லாத் தொல்லைகளின்போதும் யோபு பாவம் செய்யவில்லை. அவன் தேவனுக்கு எதிராக எதுவும் பேசவில்லை.
யோபுவின் மூன்று நண்பர்கள் அவனைக் காண வருகிறார்கள்
11 தேமானிலிருந்து எலிப்பாசும், சூகியிலிருந்து பில்தாதும், நாகமாவிலிருந்து சோப்பாரும் யோபுவின் மூன்று நண்பர்கள். யோபுவுக்கு நேரிட்ட எல்லா தீய காரியங்களைபற்றி கேள்விப்பட்டார்கள். அம்மூவரும் தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஓரிடத்தில் சந்தித்தார்கள். அவர்கள் அவனிடம் போய், தங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் முடிவெடுத்தார்கள் (தீர்மானித்தார்கள்).
12 ஆனால் அம்மூவரும் யோபுவைத் தூரத்தில் கண்டபோது, (அவன் யோபுவா என ஐயுற்றார்கள்) யோபு மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டதால், அவன் யோபு என நம்புவது சிரமமாக இருந்தது! அவர்கள் சத்தமிட்டு அழுதார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள், துகளைக் காற்றிலும் தலையிலும் வீசியெறிந்து, தங்கள் துக்கத்தையும் மனக்கலக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
13 பின்பு அந்த மூன்று நண்பர்களும் யோபுவோடு தரையில் ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அமர்ந்திருந்தார்கள். யோபு மிகவும் துன்புற்றுக் கொண்டிருந்ததால், ஒருவரும் யோபுவோடு எதையும் பேசவில்லை.
யோபு தான் பிறந்தநாளை சபிக்கிறான்
3 பின்பு யோபு தன் வாயைத் திறந்து தான் பிறந்த
நாளை சபித்தான்.
2-3 அவன், “நான் பிறந்தநாள் என்றென்றும் இராதபடி அழிக்கப்படட்டும் என நான் விரும்புகிறேன்.
‘அது ஒரு ஆண்’ என அவர்கள் கூறிய இரவு, என்றும் இருந்திருக்கக் கூடாதென நான் விரும்புகிறேன்!
4 அந்நாள் இருண்டு போக விரும்புகிறேன்.
அந்நாளை தேவன் மறக்க வேண்டுமென விரும்புகிறேன்.
அந்நாளில் ஒளி பிரகாசித்திருக்கக் கூடாதென விரும்புகிறேன்.
5 மரணம் எவ்வளவு இருட்டோ அதுபோல், அந்நாள் அவ்வளவு இருளாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
இருண்ட மேகங்கள் அந்நாளை மறைக்கட்டுமெனவும், நான் பிறந்த நாளிலிருந்த இருண்ட மேகங்கள் ஒளியை அச்சுறுத்தட்டும் எனவும் நான் விரும்புகிறேன்.
6 இருள் நான் பிறந்த அந்த இரவை ஆக்கிரமிக்கட்டும்.
நாள்காட்டியிலிருந்து அந்த இரவு நீக்கப்படட்டும்.
எந்த மாதத்திலும் அந்த இரவைச் சேர்க்க வேண்டாம்.
7 அந்த இரவு எதையும் விளைவிக்காதிருக்கட்டும்.
அவ்விரவில் மகிழ்ச்சியான எந்த ஒலியும் கேளாதிருக்கட்டும்.
8 சில மந்திரவாதிகள் லிவியாதானை [c] எழுப்ப விரும்புகிறார்கள்.
அவர்கள் சாபங்கள் இடட்டும்.
நான் பிறந்தநாளை அவர்கள் சபிக்கட்டும்.
9 அந்நாளின் விடிவெள்ளி இருளாகட்டும்.
அந்த இரவு விடியலின் ஒளிக்காகக் காத்திருக்கட்டும், ஆனால் அந்த ஒளி ஒருபோதும் வராதிருக்கட்டும்.
சூரியனின் முதல் கதிர்களை அது பார்காதிருக்கட்டும்.
10 ஏனெனில், அந்த இரவு நான் பிறப்பதைத் தடை செய்யவில்லை.
இத்தொல்லைகளை நான் காணாதிருக்கும்படி, அந்த இரவு என்னைத் தடை செய்யவில்லை.
11 நான் பிறந்தபோதே ஏன் மரிக்கவில்லை?
நான் ஏன் பிறப்பில் மடியவில்லை?
12 ஏன் என் தாய் என்னை அவளது ழுழங்காலில் தாங்கிக்கொண்டாள்?
ஏன் என் தாயின் மார்புகள் எனக்குப் பாலூட்டின?
13 நான் பிறந்தபோதே மரித்திருந்தால், இப்போது சமாதானத்தோடு இருந்திருப்பேன்.
14 முற்காலத்தில் பூமியில் வாழ்ந்த அரசர்களோடும் ஞானிகளோடும் நான் உறக்கமாகி ஓய்வுக்கொண்டிருக்க விரும்புகிறேன்.
இப்போது அழிக்கப்பட்டுக் காணாமற்போன இடங்களைத் தங்களுக்காக அவர்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள்.
15 அவர்கள் தங்கள் வீடுகளைப் பொன்னாலும் வெள்ளியாலும் நிரப்பினர்,
அவர்களோடு கூட புதைக்கப்பட்டிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
16 பிறப்பில் மரித்துப் புதைக்கப்பட்ட குழந்தையாய் நான் ஏன் இருக்கவில்லை?
பகலின் ஒளியைக் கண்டிராத குழந்தையைப்போன்று இருந்திருக்கமாட்டேனா என விரும்புகிறேன்.
17 கல்லறையில் இருக்கும்போது தீயோர், தொல்லை தருவதை நிறுத்துகிறார்கள்.
சோர்வுற்ற ஜனங்கள் கல்லறையில் ஓய்வெடுக்கிறார்கள்.
18 சிறைக் கைதிகளும்கூட கல்லறையில் சுகம் காண்கிறார்கள்.
அவர்களைக் காப்போர் அவர்களை நோக்கிக் கூக்குரல் இடுவதை அவர்கள் கேட்பதில்லை,
19 முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் எனப் பலவகை ஜனங்கள் கல்லறையில் இருக்கிறார்கள்.
அடிமையுங்கூட எஜமானனிடமிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறான்.
20 “துன்புறும் ஒருவன் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்?
கசந்த ஆன்மாவுடைய ஒருவனுக்கு ஏன் கசந்து வாழவேண்டும்?
21 அம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை.
துக்கமுள்ள அம்மனிதன் மறைந்த பொக்கிஷத்தைப் பார்க்கிலும் மரணத்தைத் தேடுகிறான்.
22 அந்த ஜனங்கள் தங்கள் கல்லறைகளைக் காண்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் புதை குழியைக் (கல்லறையை) கண்டு களிப்படைகிறார்கள்.
23 ஆனால் தேவன் எதிர்காலத்தை இரகசியமாக வைத்திருக்கிறார்.
அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் ஒரு சுவரை எழுப்புகிறார்.
24 சாப்பிடும் நேரத்தில் நான் துன்பத்தால் பெரு மூச்சு விடுகிறேன்.
மகிழ்ச்சியினால் அல்ல. என் முறையீடுகள் தண்ணீரைப் போல வெளிப்படுகின்றன.
25 ஏதோ பயங்கரம் எனக்கு நிகழலாம் என அஞ்சியிருந்தேன்.
அதுவே எனக்கு நிகழ்ந்துள்ளது!
நான் மிகவும் அஞ்சியது எனக்கு நேரிட்டது!
26 நான் அமைதியுற முடியவில்லை.
என்னால் இளைப்பாற முடியவில்லை.
நான் ஓய்வெடுக்க இயலவில்லை.
நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன்!” என்றான்.
எலிப்பாஸ் பேசுகிறான்
4 தேமானிலுள்ள எலிப்பாஸ்,
“யாராவது உன்னுடன் பேச முயன்றால் உன்னைக் கலக்கமுறச் செய்யுமா?
ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ள யாரால் கூடும்?
3 யோபுவே, நீ பலருக்குக் கற்பித்தாய்.
நீ பெலவீனமான கரங்களுக்கு பெலனைத் தந்தாய்.
4 வீழ்பவர்களுக்கு உன் சொற்கள் உதவின.
தாமாக நிற்க முடியாதவர்களுக்கு நீ பெலனளித்தாய்.
5 ஆனால் இப்போது உனக்குத் தொல்லைகள் நேர்கின்றன,
நீ துணிவிழக்கிறாய்.
தொல்லைகள் உன்னைத் தாக்குகின்றன,
நீ கலங்கிப்போகிறாய்!
6 நீ தேவனை கனம்பண்ணுகிறாய்.
அவரை நம்புகிறாய்.
நீ நல்லவன்.
எனவே, அதுவே உன் நம்பிக்கையாயிருக்க வேண்டுமல்லவா?
7 யோபுவே, இதைச் சிந்தித்துப்பார்:
களங்கமற்றவன் எவனும் அழிக்கப்பட்டதில்லை.
8 நான் தீமையை விளைவிப்போரையும் கொடுமையை விதைப்பவரையும் கண்டிருக்கிறேன்.
அவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடைச் செய்வதைக் கண்டிருக்கின்றேன்!
9 தேவனுடைய சுவாசம் அந்த ஜனங்களைக் கொல்கிறது.
தேவனுடைய நாசியின் காற்று அவர்களை அழிக்கிறது.
10 தீயோர் கெர்ச்சித்துச் சிங்கங்களைப்போல் முழங்குகிறார்கள்.
தீயோர் அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார், தேவன் அவர்களின் பற்களை நொறுக்குகிறார்.
11 ஆம், அத்தீயோர், கொல்வதற்கு மிருகங்களைக் காணாத சிங்கங்களைப் போன்றிருக்கிறார்கள்.
அவர்கள் இறக்கிறார்கள், அவர்கள் ஜனங்கள் அலைந்து திரிகிறார்கள்.
12 “இரகசியமாக எனக்கு ஒரு செய்தி தரப்பட்டது.
என் காதுகள் அதனை மெல்லிய குரலில் கேட்டன.
13 இரவின் கெட்ட கனவாய்,
அது என் தூக்கத்தைக் கெடுத்தது.
14 நான் பயந்து நடுங்கினேன்.
என் எலும்புகள் எல்லாம் நடுங்கின.
15 ஒரு ஆவி என் முகத்தைக் கடந்தது.
என் உடலின் மயிர்கள் குத்திட்டு நின்றன.
16 ஆவி அசையாது நின்றது, என்னால் அது என்னவென்று பார்க்க முடியவில்லை.
என் கண்களின் முன்னே ஒரு உருவம் நின்றது, அப்போது அமைதியாயிருந்தது.
அப்போது மிக அமைதியான ஒரு குரலைக் கேட்டேன்:
17 ‘மனிதன் தேவனைவிட நீதிமானாக இருக்க முடியுமா?
தன்னை உண்டாக்கினவரைக் காட்டிலும் மனிதன் தூய்மையாக இருக்க முடியுமா?
18 பாரும், தேவன் அவரது பரலோகத்தின் பணியாட்களிடம்கூட நம்பிக்கை வைப்பதில்லை.
தேவன் தனது தேவதூதர்களிடமும் குற்றங்களைக் காண்கிறார்.
19 எனவே நிச்சயமாக ஜனங்கள் மிகவும் மோசமானவர்கள்!
அவர்கள் களிமண் வீடுகளில் [d] வசிக்கிறார்கள்.
இக்களிமண் வீடுகளின் அஸ்திபாரங்கள் புழுதியேயாகும்.
பொட்டுப்பூச்சியைக் காட்டிலும் எளிதாக அவர்கள் நசுக்கிக் கொல்லப்படுகிறார்கள்.
20 ஜனங்கள் சூரிய உதயந்தொடங்கி சூரியனின் மறைவுமட்டும் மரிக்கிறார்கள், யாரும் அதைக் கவனிப்பதுங்கூட இல்லை.
அவர்கள் மரித்து என்றென்றும் இல்லாதபடி மறைந்துப்போகிறார்கள்,
21 அவர்கள் கூடாரங்களின் கயிறுகள் இழுக்கப்பட்டன.
அந்த ஜனங்கள் ஞானமின்றி மடிகிறார்கள்.’
5 “யோபுவே, விரும்பினால் கூப்பிடு, ஆனால் யாரும் பதில் தரமாட்டார்கள்!
நீ எந்த தேவதூதனிடம் திரும்பி பார்ப்பீர்?
2 ஒரு மூடனின் கோபம் அவனைக் கொல்லும்,
ஒரு மூடனின் வலிய உணர்வுகள் அவனைக் கொல்லும்.
3 தான் பாதுகாப்பானவன் என எண்ணிய ஒரு மூடனைக் கண்டேன்.
ஆனால் திடீரென அவன் மாண்டான்.
4 யாரும் அவனது ஜனங்களுக்கு உதவ முடியவில்லை.
நியாயச் சபையில் அவர்களுக்கு ஆதரவளிப்பார் எவருமில்லை.
5 அவர்களின் பயிர்களையெல்லாம் பசித்தோர் உண்டனர்.
முட்களின் நடுவே வளரும் தானியங்களையும் கூட பசியுள்ள அந்த ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்.
6 தூசிகளிலிருந்து தீயக் காலங்கள் வருவதில்லை.
பூமியிலிருந்து தொல்லை முளைப்பதில்லை.
7 ஆனால் மனிதனோ நெருப்பிலிருந்து பொறிகள் மேலே எழும்புவது எத்தனை நிச்சயமோ
அவ்வாறே, தொல்லையனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
8 ஆனால் யோபுவே, நான் உன்னைப்போல் இருந்திருந்தால்,
தேவனிடம் திரும்பி என் கஷ்டங்களைக் கூறியிருப்பேன்.
9 தேவன் செய்கிற அற்புதமான காரியங்களை ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாது.
தேவன் செய்கிற அதிசயங்களுக்கு முடிவேயில்லை.
10 தேவன் பூமிக்கு மழையை அனுப்புகிறார்.
அவர் வயல்களுக்கு தண்ணீரை அனுப்புகிறார்.
11 எளிமையானவனைத் தேவன் உயர்த்துகிறார்,
அவர் துயரமுள்ளவனை மகிழ்ச்சியாக்குகிறார்.
12 புத்திசாலித்தனமுள்ள, தீயோரின் திட்டங்களை,
அவர்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் தடுக்கிறார்.
13 ஞானமுள்ளோரையும் அவர்கள் கண்ணிகளிலேயே விழும்படி செய்து
புத்திசாலித்தனமான அத்திட்டங்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் செய்கிறார்.
14 அத்தகைய திறமைசாலிகள் பகலிலேயே தடுமாறுகிறார்கள்.
இருளில் தன் பாதையைக் காணத் தடுமாறுகின்றவனைப்போல, அவர்கள் நண்பகலிலும் காணப்படுகிறார்கள்.
15 தேவன் ஏழைகளைக் காப்பாற்றுகிறார்.
திறமைசாலிகளின் கைக்கும் அவர் ஏழைகளை கப்பாற்றுகிறார்.
16 எனவே ஏழைகள் நம்பிக்கையோடிருக்கிறார்கள்.
நியாயமற்ற தீய ஜனங்களை தேவன் அழிக்கிறார்.
17 “தேவன் திருத்தும் மனிதன் பாக்கியவான்.
சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னைத் தண்டிக்கும்போது முறையிடாதே.
18 தேவன் தான் ஏற்படுத்தும் காயங்களைக் கட்டுகிறார்.
அவர் சிலருக்குக் காயமுண்டாக்கலாம், ஆனால் அவர் கைகளே அவற்றைக் குணமாக்கும்.
19 ஆறுவகை தொல்லைகளிலிருந்தும் அவர் உன்னைக் காப்பாற்றுவார்.
ஆம், ஏழு தொல்லைகளிலும் நீர் புண்படமாட்டீர்!
20 பஞ்சக்காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றுவார்.
போர்க் காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து பாதுகாப்பார்!
21 தங்கள் கூரிய நாவுகளால் ஜனங்கள் உங்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாம்.
ஆனால் தேவன் உன்னைப் பாதுகாப்பார்.
தீயன நிகழும்போது நீ அஞ்சத் தேவையில்லை!
22 அழிவைக் கண்டும் பஞ்சத்தைப் பார்த்தும் நீ நகைப்பாய்.
காட்டு மிருகங்களைக் கண்டும் நீ அஞ்சமாட்டாய்.
23 உன்னுடைய உடன்படிக்கையின்படி வயலின் பாறைகளும் கூட அந்த உடன்படிக்கையில் பங்குகொள்ளும்.
காட்டு மிருகங்களும் கூட உன்னோடு சமாதானம் செய்துக்கொள்ளும்.
24 உனது கூடாரம் பாதுகாப்பாக இருப்பதால் நீ சமாதானத்தோடு (அமைதியாக) வாழ்வாய்.
உனது கொத்துக்களை எண்ணிப் பார்த்து ஒன்றும் காணாமல் போகாதிருப்பதைக் காண்பாய்.
25 உனக்குப் பல குழந்ததைகள் பிறப்பார்கள்.
அவர்கள் பூமியின் புற்களைப்போன்று பலராவார்கள்.
26 அறுவடைக்காலம் வரைக்கும் வளரும் கோதுமையைப்போல் நீர் இருப்பீர்.
ஆம், நீர் முதிர் வயதுவரைக்கும் வாழ்வீர்.
27 “யோபுவே, நாங்கள் இவற்றைக் கற்று, உண்மையென்று அறிந்திருக்கிறோம்.
எனவே, யோபுவே, நாங்கள் சொல்வதைக் கேட்டு, நீயாகவே அதைக் கற்றுக்கொள்” என்று கூறினான்.
யோபு எலிப்பாசுக்குப் பதில் கூறுகிறான்
6 அப்போது யோபு,
2 “என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால்,
நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய்.
3 கடற்கரை மணலைக் காட்டிலும் என் துயர் பாரமானது.
அதனால்தான் என் வார்த்தைகள் மூடத்தனமானவையாகத் தோன்றுகின்றன.
4 சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அம்புகள் என்னுள்ளே இருக்கின்றன.
அந்த அம்புகளின் விஷத்தை என் ஆவி பருகுகின்றது!
தேவனுடைய கொடிய ஆயுதங்கள் எனக்கெதிராக அணிவகுத்து நிற்கின்றன.
5 எந்தத் தீமையும் நிகழாதபோது நீ கூறியவற்றைச் சொல்வது சுலபம் (எளிது).
காட்டுக் கழுதையும் தின்பதற்குப் புல் அகப்படும்போது முறையிடாது.
பசுவும் தன் உணவு கிடைக்கும்போது முறையிடாது.
6 உப்பற்ற உணவு சுவைக்காது.
முட்டையின் வெண்பகுதிக்குச் சுவையில்லை.
7 நான் அதைத் தொட மறுக்கிறேன்;
அத்தகைய உணவு எனக்குச் சலிப்பைத் தருகிறது!
உனது வார்த்தைகளும் இப்போது எனக்கு அவ்வாறே உள்ளன.
8 “நான் கேட்பவை எனக்குக் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன்.
நான் விரும்பியவற்றைத் தேவன் எனக்குத் தருவார் என விரும்புகிறேன்.
9 தேவன் என்னை நசுக்கிப் போடவேண்டும் என விரும்புகிறேன்.
அவருடைய கரத்தின் மூலமாக என்னை அழித்திடலாம்.
10 அவர் என்னைக் கொன்றுவிட்டால் நான் ஒரு காரியத்தைக் குறித்து ஆறுதலடைவேன்.
நான் ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்.
இத்தனை வேதனைகளை அனுபவித்துங்கூட பரிசுத்தமானவரின் வார்த்தைகளை கீழ்ப்படிய நான் மறுக்கவில்லை.
11 “என் வலிமை குறைந்துப்போயிற்று, எனவே தொடர்ந்து வாழ்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
எனக்கு என்ன நேருமென அறியேன்.
எனவே, நான் பொறுமையுடன் இருப்பதற்கு காரணமில்லை.
12 நான் பாறையைப்போன்று பலம் பொருந்தியவனா?
என் உடம்பு வெண்கலத்தால் ஆனதா?
13 எனக்கு நானே உதவும் ஆற்றல் எனக்கில்லை.
ஏனெனில், வெற்றியோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
14 “ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும்.
ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும்.
15 ஆனால் என் சகோதரராகிய நீங்களோ நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை.
நான் உங்களைச் சார்ந்திருக்க முடியாது.
சிலகாலம் பாய்ந்தும், மற்ற சிலகாலம் பாயாமலும் இருக்கின்ற நீரோடைகளைப்போல நீங்கள் காணப்படுகிறீர்கள்.
16 பனிக் கட்டியாலும் உருகும் பனியாலும் நிரம் பியிருக்கின்ற நீரூற்றுக்களைப்போல, நீங்கள் பொங்கிப் பாய்கிறீர்கள்.
17 உலர்ந்த வெப்பக்காலத்தில் தண்ணீர் பாய்வது நின்றுவிடுகிறது,
நீரூற்றும் மறைந்துவிடுகிறது.
18 வியாபாரிகள் பாலைவனத்தின் வளைவுகளையும் நெளிவுகளையும் பின்தொடர்ந்து,
காணாமல்போய்விடுகிறார்கள்.
19 தேமாவின் வியாபாரிகள் தண்ணீரைத் தேடுகிறார்கள்.
சேபாவின் பிரயாணிகள் (பயணிகள்) நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்.
20 அவர்கள் தண்ணீரைக் கண்டடைவதில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்,
ஆனால் ஏமாற்றமடைகிறார்கள்.
21 இப்போது, நீங்கள் அந்த நீருற்றுகளைப் போல் இருக்கிறீர்கள்.
என் தொல்லைகளைக் கண்டு அஞ்சுகிறீர்கள்.
22 நான் உங்களிடம் உதவியை நாடினேனா?
எனக்காக நீங்கள் யாரிடமாவது வெகுமானம் கொடுக்க வேண்டினேனா?
23 ‘பகைவனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!
கொடியோரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!’
என்று நான் உங்களிடத்தில் கூறினேனா?
24 “எனவே இப்போது எனக்குக் கற்பியுங்கள், நான் அமைதியாக இருப்பேன்.
நான் செய்தவற்றைச் சுட்டிக்காட்டுங்கள்.
25 நேர்மையான வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை.
ஆனால் உங்கள் விவாதங்கள் எதையும் நிரூபிக்கவில்லை.
26 என்னை விமர்சிக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?
மேலும் சோர்வு தரும் வார்த்தைகளைச் சொல்லப் போகிறீர்களா?
27 தந்தைகளற்ற பிள்ளைகளின் பொருள்களைப் பெற, நீங்கள் சூதாடவும் செய்வீர்கள்.
உங்கள் சொந்த நண்பனையே விற்பீர்கள்.
28 ஆனால் இப்போது, என் முகத்தை ஆராயுங்கள்.
நான் உங்களிடம் பொய் கூறமாட்டேன்.
29 எனவே இப்போது உங்கள் மனதை மாற்றுங்கள்.
அநீதியாய் செயல்படாதீர்கள், மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.
நான் தவறேதும் செய்யவில்லை.
30 நான் பொய் கூறவில்லை.
நான் சரியானவற்றை தவறுகளிலிருந்து பிரித்தறிவேன்” என்றான்.
7 யோபு மீண்டும், “பூமியில் மனிதனுக்கு மிகுந்த கஷ்டங்களுண்டு
வேலைக்கென வாங்கப்பட்ட பணியாளின் நாட்களைப் போன்றது அவன் நாட்கள்.
2 வெப்ப நாளில் மிகுந்த உழைப்பிற்குப்பின் குளிர்ந்த நிழலை நாடும் அடிமையைப் போன்றவன் மனிதன்.
சம்பள நாளுக்காகக் காத்திருக்கும் அப்பணியாளைப் போன்றிருக்கிறான்.
3 ஏமாற்றந்தரும் மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கழிந்தன.
துன்பந்தரும் இரவுகளை ஒன்றன்பின் ஒன்றாய் அனுபவித்தேன்.
4 நான் படுக்கும்போது, ‘எழுவதற்கு எத்தனை சமயம் இருக்கிறது?’ என்று எண்ணுகிறேன்.
ஆனால் இரவு நீண்டுக் கொண்டேபோகிறது.
நான் திரும்பியும் புரண்டும் சூரியன் உதிக்கும்வரை படுத்திருக்கிறேன்.
5 என் உடம்பில் புழுக்களும் அழுக்குகளும் படிந்திருக்கின்றன.
என் தோல் உரிந்து புண்களால் நிரம்பியிருக்கின்றன.
6 “நெய்பவனின் நாடாவைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன.
என் வாழ்க்கை நம்பிக்கையின்றி முடிவடைகிறது.
7 தேவனே, என் வாழ்க்கை ஒரு மூச்சே என நினைவுகூறும்.
நான் இனிமேல் (மீண்டும்) நன்மையைப் பார்க்கப்போவதில்லை.
8 நீங்கள் என்னை மீண்டும் பார்க்கப்போவதில்லை.
என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் அழிந்துப்போயிருப்பேன்.
9 மேகம் மறைந்து காணாமற்போகிறது.
அதைப் போன்று, ஒருவன் மரித்துக் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுகிறான், அவன் மீண்டும் வருவதில்லை.
10 அவனது பழைய வீட்டிற்கு அவன் மீண்டும் வரப்போவதில்லை.
அவன் வீடு அவனை இனி ஒருபோதும் அறியாது.
11 “எனவே, நான் அமைதியாக இருக்கமாட்டேன்! நான் வெளிப்படையாகப் பேசுவேன்!
என் ஆவி துன்புறுகிறது!
என் ஆத்துமா கசந்து போயிருப்பதால் நான் முறையிடுவேன்.
12 தேவனே, ஏன் எனக்குக் காவலாயிருக்கிறீர்?
நான் கடலா, கடல் அரக்கனா?
13 என் படுக்கை எனக்கு ஆறுதல் தருமென்று நம்பிக்கொண்டிருந்தேன்.
என் கட்டில் எனக்கு ஓய்வையும் நிம்மதியையும் தருமென்று எதிர்ப்பார்த்தேன்.
14 ஆனால் தேவனே, நான் படுத்திருக்கையில் நீர் என்னைக் கனவுகளால் பயமுறுத்துகிறீர்,
என்னைத் தரிசனங்களால் அச்சுறுத்துகிறீர்.
15 எனவே நான் வாழ்வதைக் காட்டிலும்
மூச்சடைத்து மரிப்பதை விரும்புகிறேன்.
16 நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்.
நான் என்றென்றும் வாழ விரும்பமாட்டேன்.
என்னைத் தனிமையாக விட்டுவிடுங்கள்!
ஏனெனில் என் வாழ்க்கை பொருளற்றது. (அர்த்தமற்றது)
17 தேவனே, உமக்கு மனிதன் ஏன் அத்தனை முக்கியமானவன்?
ஏன் அவனைப் பெருமைப்படுத்துகிறீர்?
ஏன் அவனைக் கண்டுக்கொள்கிறீர்?
18 ஏன் அவனைக் கரிசனையோடு காலை வேளைகளில் சந்தித்து,
ஒவ்வொரு விநாடியும் சோதிக்கிறீர்?
19 தேவனே, என்னைவிட்டுத் தூர நீர் பார்ப்பதில்லை.
என்னைவிட்டு ஒருகணமும் நீர் விலகுவதில்லை.
20 தேவனே, நீர் ஜனங்களை கவனித்து காப்பாற்றுகிறீர்.
நான் பாவம் செய்திருந்தால், நான் என்ன செய்ய முடியும்.
நீர் என்னை உமது இலக்காக ஏன் பயன்படுத்துகிறீர்?
நான் உமக்குத் தொல்லையாகி போனேனா?
21 ஏன் நீர் என் தவறை மன்னிக்கக் கூடாது?
என் பாவங்களை நீர் ஏன் மன்னிக்கக்கூடாது?
நான் விரைவில் மடிந்து கல்லறைக்குள் வைக்கப்படுவேன்.
அப்போது என்னைத் தேடுவீர்கள், நான் அழிந்துப்போயிருப்பேன்” என்றான்.
2008 by World Bible Translation Center