Bible in 90 Days
23 கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான்: 24 “எரேமியா, ஜனங்கள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தாயா? அந்த ஜனங்கள் சொல்லுகிறார்கள்: ‘கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதா என்னும் வம்சங்களை விட்டு திரும்பிவிட்டார். அந்த ஜனங்களை கர்த்தர் தேர்ந்தெடுத்தார். ஆனால், இப்போது அவர் அதனைத் தேசமாக ஏற்றுக்கொள்ளவில்லை நிராகரித்துவிட்டார்.’”
25 கர்த்தர் சொல்லுகிறார்: “இரவுடனும் பகலுடனும் நான் கொண்ட உடன்படிக்கை தொடராவிட்டால், வானத்திற்கும் பூமிக்குமுள்ள சட்டங்களை நான் அமைக்காவிட்டால், பிறகு நான் அந்த ஜனங்களை விட்டு விலகலாம். 26 பிறகு, யாக்கோபின் சந்ததிகளிடமிருந்து நான் ஒருவேளை விலகலாம். ஒருவேளை ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததிகளையும் தாவீதின் சந்ததிகளையும் அனுமதிக்கமாட்டேன். ஆனால் தாவீது எனது தாசன். நான் அந்த ஜனங்களிடம் தயவோடு இருப்பேன். அந்த ஜனங்களுக்கு மீண்டும் நல்லவை ஏற்படச் செய்வேன்.”
யூதாவின் அரசனான சிதேக்கியாவிற்கு எச்சரிக்கை
34 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசனாக இருந்தபோது வார்த்தை வந்தது. அவன் எருசலேமிற்கும் அதைச்சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் எதிராகச் சண்டையிட்டு கொண்டிருந்தான். நேபுகாத்நேச்சார் தன்னோடு தனது படை முழுவதையும் ஜனங்களிடமும் அவனுடைய ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல இராஜ்யங்களுக்கும் உரிய படைகளையும் வைத்திருந்தான்.
2 இதுதான் செய்தி: “இதைத்தான் கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார்: எரேமியா, யூதாவின் அரசனான சிதேக்கியாவிடம் போ, அவனிடம் இந்தச் செய்தியைக் கொடு, ‘சிதேக்கியா, இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நான் விரைவில் பாபிலோனின் அரசனுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். அவன் அதனை எரிப்பான். 3 சிதேக்கியா, பாபிலோன் அரசனிடமிருந்து நீ தப்பிக்கவே முடியாது. நீ உறுதியாகப் பிடிபடுவாய். அவனிடம் கொடுக்கப்படுவாய். பாபிலோன் அரசனை நீயே உன் சொந்தக் கண்களால் பார்ப்பாய். அவன் உன்னோடு நேருக்கு நேராகப் பேசுவான். நீ பாபிலோனிடம் போவாய். 4 ஆனால் கர்த்தருடைய வாக்குறுதிபற்றி யூதாவின் அரசனான சிதேக்கியாவே கவனி. இதுதான் கர்த்தர் உன்னைப்பற்றி சொன்னது. நீ வாளால் கொல்லப்படமாட்டாய். 5 நீ சமாதானமான வழியில் மரிப்பாய். ஜனங்கள் இறுதி சடங்குக்கான நெருப்பை உருவாக்கி நீ அரசனாகு முன் ஆண்ட அரசர்களான உன் முற்பிதாக்களைப் பெருமைப்படுத்தினார்கள். இதே வழியில், உன்னைப் பெருமைப்படுத்தவும் ஜனங்கள் இறுதி சடங்கு நெருப்பை மூட்டுவார்கள். அவர்கள் உனக்காக அழுவார்கள். அவர்கள் சோகத்தோடு, “ஓ எஜமானனே” என்பார்கள். நான் நானே உமக்கு இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
6 எனவே, எரேமியா இச்செய்தியை கர்த்தரிடமிருந்து எருசலேமில் சிதேக்கியாவிற்குக் கொடுத்தான். 7 பாபிலோனது அரசனின் படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிட்டபோது இது இருந்தது. பாபிலோனின் படையும் யூதாவின் கைப்பற்றப்படாத நகரங்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். லாகீசும் அசெக்காவும் அந்நகரங்களாகும். யூதா தேசத்தில் மீதியுள்ள கோட்டைகளால் அமைந்த நகரங்கள் இவை.
ஜனங்கள் தங்களது ஒப்பந்தத்தை உடைக்கின்றனர்
8 அனைத்து எருசலேம் ஜனங்களோடும் சிதேக்கியா அரசன் அனைத்து எபிரெய அடிமைகளுக்கும் விடுதலை தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தான். சிதேக்கியா அந்த ஒப்பந்தம் செய்த பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது. 9 ஒவ்வொருவனும் எபிரெய அடிமையையும் விடுதலை செய்யவேண்டும். ஆணும் பெண்ணுமான எபிரெய அடிமைகள் விடுதலை செய்யப்படவேண்டும். எவரும் இன்னொரு யூதா கோத்திரத்தில் உள்ளவனை அடிமையாக வைத்திருக்கக்கூடாது. 10 எனவே யூதாவில் உள்ள அனைத்துத் தலைவர்களும் ஜனங்களனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொருவனும் ஆண் மற்றும் பெண் அடிமைகளை விடுதலை செய்வார்கள். அவர்களை இனிமேலும் அடிமையாக வைத்திருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டனர். எனவே, அனைத்து அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டனர். 11 ஆனால், அதற்குப் பிறகு, அடிமைகளை வைத்து இருந்த ஜனங்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். எனவே, விடுவிக்கப்பட்ட ஜனங்களை எடுத்து மீண்டும் அடிமைகளாக்கிக் கொண்டனர்.
12 பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது. 13 “எரேமியா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொன்னது இதுதான்: ‘நான் உங்கள் முற்பிதாக்களை அடிமையாயிருந்த எகிப்துக்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அதைச் செய்த போது நான் அவர்களோடு உடன்படிக்கைச் செய்துக்கொண்டேன். 14 நான் உங்கள் முற்பிதாக்களுக்குச் சொன்னேன், “ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொருவனும் தனது எபிரெய அடிமையையும் விடுவிக்கவேண்டும். உங்களிடம் ஒரு எபிரெய அடிமை தன்னையே விற்றுக்கொண்டவன் இருந்தால் அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் சேவை செய்த பிறகு நீ அவனை விடுதலை செய்ய வேண்டும்.” ஆனால், உங்கள் முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. என் பேச்சைக் கேட்கவில்லை. 15 கொஞ்ச காலத்துக்கு முன் சரியானது எதுவோ அதனைச் செய்ய உங்கள் மனதை மாற்றினீர்கள். உங்களில் ஒவ்வொருவரும் அடிமையாயிருந்த எபிரெய நபருக்கு விடுதலை கொடுத்தீர்கள். என் நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் எனக்கு முன் ஒரு உடன்படிக்கை நீங்கள் செய்தீர்கள். 16 ஆனால் இப்போது, நீங்கள் உங்கள் மனங்களை மாற்றியுள்ளீர்கள். நீங்கள் என் நாமத்தை மகிமைப்படுத்தவில்லை என்பதைக் காட்டினீர்கள். எப்படி நீங்கள் இதனைச் செய்தீர்கள். நீங்கள் விடுவித்திருக்கிற ஒவ்வொருவரும் ஆண் மற்றும் பெண் அடிமைகளைத் திரும்ப எடுத்திருக்கிறீர்கள். அவர்களை மீண்டும் அடிமைகளாகும்படி வற்புறுத்தியிருக்கிறீர்கள்.’
17 “எனவே இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘ஜனங்களாகிய நீங்கள் எனக்கு அடிபணியவில்லை. நீங்கள் உங்கள் எபிரெய அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் விடுதலை கொடுப்பேன் என்ற உங்கள் உடன்படிக்கையைக் காக்கவில்லை, இது கர்த்தருடைய வார்த்தை. உங்களைக் கொல்வதற்காக வாள், பயங்கர நோய், பசி ஆகியவற்றுக்கு விடுதலை கொடுப்பேன். அவர்கள் உன்னைப்பற்றி கேள்விப்படும்போது, நான் உன்னைப் பூமியிலுள்ள இராஜ்யங்களிலேயே அஞ்சத்தக்க உதாரணமாகச் செய்வேன். 18 எனக்கு முன்னால் செய்த வாக்குறுதியை காப்பாற்றாத, உடன்படிக்கையை முறித்த மனிதர்களை நான் ஒப்புக்கொடுப்பேன். அந்த மனிதர்கள் ஒரு கன்றுகுட்டியை இரண்டாக எனக்கு முன் வெட்டினார்கள்: இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தனர். 19 கன்றின் இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தவர்கள் இவர்கள்தான். யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், சபையின் முக்கியமான அதிகாரிகள், ஆசாரியர்கள் மற்றும் தேசத்தின் ஜனங்கள். 20 எனவே, நான் அந்த ஜனங்களை அவர்களது பகைவர்களிடமும் அவர்களைக் கொல்ல விரும்புகிற ஒவ்வொருவரிடமும் கொடுப்பேன். அந்த ஜனங்களின் உடல்கள் வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகும். 21 நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவையும் அவனது அலுவலக அதிகாரிகளையும் அவர்களது பகைவருக்கும் அவர்களைக் கொல்ல விரும்புகிற ஒவ்வொருவருக்கும் கொடுப்பேன். நான் சிதேக்கியாவையும் அவனது ஜனங்களையும் பாபிலோன் அரசனது படைக்கு, அப்படை எருசலேமை விட்டு விலகி இருந்தாலும் கொடுப்பேன். 22 ஆனால், நான் பாபிலோன் படை எருசலேமிற்குத் திரும்பி வருமாறு ஆணையிடுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘அப்படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடும். அவர்கள் அதைப் பிடித்து நெருப்பிட்டு எரித்துப் போடுவார்கள். நான் யூதா தேசத்திலுள்ள நகரங்களை அழித்துப்போடுவேன். அந்நகரங்கள் வெறுமை வனாந்தரங்கள் ஆகும். ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.’”
ரேகாபியர் வம்சத்தின் நல்ல எடுத்துக்காட்டு
35 யூதாவின் அரசனாக யோயாக்கீம் இருந்தபோது, எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் மகன். கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான். 2 “எரேமியா ரேகாபியரது வீட்டுக்குப்போ. கர்த்தருடைய ஆலயத்தின் பக்கத்து அறைகள் ஒன்றுக்கு அவர்கள் வருமாறு வரவழை. அவர்கள் குடிக்கத் திராட்சைரசத்தைக் கொடு.”
3 எனவே நான் (எரேமியா) யசினியாவை அழைக்கப்போனேன். யசினியா எரேமியா என்பவனின் மகன். அந்த எரேமியா அபசினியாவின் மகன். நான் யசினியாவின் அனைத்து சகோதரர்களையும் மகன்களையும் வரவழைத்தேன். நான் ரேகாபியரது வம்சத்தார் அனைவரையும் வரவழைத்தேன். 4 கர்த்தருடைய ஆலயத்திற்கு ரேகாபியருடைய குடும்பத்தாரை அழைத்து வந்தேன். அனானின் மகன்களது அறை என்று அழைக்கப்படும் அறைக்குள் நாங்கள் சென்றோம். அனான் இத்தலியாவின் மகன். அனான் தேவனுடைய மனிதனாக இருந்தான். அந்த அறை யூதாவின் இளவரசன் தங்கும் அறைக்கு அடுத்ததாக இருந்தது. சல்லூமின் மகனான மாசெயாவின் அறையின் மேலே உள்ளது. மாசெயா ஆலயத்தின் வாசல் காவலன். 5 பிறகு நான் (எரேமியா) சில கோப்பைகளைத் திராட்சை ரசத்தால் ரேகாபியர் வம்சத்தாருக்கு முன்னால் நிரப்பினேன். நான் அவர்களிடம், “கொஞ்சம் திராட்சைரசம் குடியுங்கள்” என்று சொன்னேன்.
6 ஆனால் ரேகாபியர் ஜனங்களோ, “நாங்கள் எப்பொழுதும் திராட்சைரசம் குடிப்பதில்லை. இதனை நாங்கள் எப்பொழுதும் குடிப்பதில்லை. ஏனென்றால், எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகனான யோனதாப் இந்தக் கட்டளையைக் கொடுத்தார். ‘நீயும் உனது சந்ததியாரும் என்றைக்கும் திராட்சை ரசத்தைக் குடிக்க வேண்டாம். 7 நீங்கள் எப்பொழுதும் வீடுகளைக் கட்ட வேண்டாம். விதைகளை நடவேண்டாம், அல்லது திராட்சை கொடிகளைப் பயிரிடவேண்டாம். நீங்கள் இக்காரியங்கள் எதுவும் செய்யவேண்டாம். நீங்கள் கூடாரங்களில் மட்டுமே வாழ வேண்டும். நீங்கள் இவ்வாறு செய்தால் பிறகு நீங்கள் நீண்ட காலம் இடம் விட்டு இடம் போய் வாழ்வீர்கள்.’ 8 எனவே, ரேகாபியராகிய நாங்கள் எங்கள் முற்பிதாவான யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நாங்கள் என்றைக்கும் திராட்சை ரசம் குடிக்கமாட்டோம். எங்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் என்றென்றும் திராட்சை ரசம் குடிக்கமாட்டார்கள். 9 நாங்கள் வாழ்வதற்காக வீடு கட்டவில்லை. நாங்கள் திராட்சைத் தோட்டங்களையோ வயல்களையோ சொந்தமாக்கியதில்லை. நாங்கள் என்றென்றும் அறுவடை செய்ததுமில்லை. 10 நாங்கள் கூடாரங்களில் வாழ்ந்திருக்கிறோம். எங்கள் முற்பிதா யோனதாப்பின் கட்டளையின்படி கீழ்ப்படிந்திருக்கிறோம். 11 ஆனால் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் யூதா நாட்டை தாக்கியபோது, நாங்கள் எருசலேமிற்குள் சென்றோம். நாங்கள் எங்களுக்குள், ‘வாருங்கள், நாம் எருசலேம் நகருக்குள் நுழைவோம். எனவே, நாம் பாபிலோனியரின் படையிடமிருந்தும் அராமியரின் படையிடமிருந்தும் தப்பிக்கலாம்’ என்று சொன்னோம். எனவே நாங்கள் எருசலேமில் தங்கியிருக்கிறோம்.”
12 பிறகு எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. 13 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறது: எரேமியா, யூதாவின் ஆண்களிடமும் எருசலேம் ஜனங்களிடமும் போய் இந்த வார்த்தையைச் சொல். ‘ஜனங்களாகிய நீங்கள் ஒரு பாடம் கற்றுக்கொண்டு எனது செய்திக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ இந்த வார்த்தை கர்த்தரிடம் இருந்து வருகிறது. 14 ‘ரேகாப்பின் மகனான யோனதாப் அவரது மகன்களிடம் திராட்சைரசத்தைக் குடிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். அக்கட்டளை கீழ்ப்படியப்பட்டிருக்கிறது. இன்றுவரை, யோனாதாபின் சந்ததியார் முற்பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கின்றனர். அவர்கள் திராட்சைரசம் குடிப்பதில்லை. ஆனால் நானே கர்த்தர். நான் யூதாவின் ஜனங்களாகிய உங்களுக்குச் செய்தியை மீண்டும் மீண்டும் கொடுத்திருக்கிறேன். ஆனால் நீ எனக்குக் கீழ்ப்படியவில்லை. 15 இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களாகிய உங்களிடம் எனது வேலைக்காரர்களான தீர்க்கதரிசிகளை அனுப்பினேன். நான் அவர்களை மீண்டும் மீண்டும் அனுப்பினேன். அத்தீர்க்கதரிசிகள் உங்களிடம், “இஸ்ரவேல் மற்றும் யூதாவிலுள்ள ஒவ்வொருவரும் தீயவை செய்வதை நிறுத்தவேண்டும். நீங்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும். அந்நிய தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். அவர்களைத் தொழுதுகொள்ளவோ சேவை செய்யவோ வேண்டாம். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால் பிறகு நீங்கள், நான் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டில் வாழ்வீர்கள்” ஆனால் ஜனங்களாகிய நீங்கள் எனது வார்த்தையை கவனிக்கவில்லை. 16 யோனதாப்பின் சந்ததியார் தங்கள் முற்பிதா கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். ஆனால் யூதாவின் ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை’” என்றார்.
17 எனவே, “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். ‘யூதா மற்றும் எருசலேமிற்குப் பல தீமைகள் ஏற்படும் என்று சொன்னேன். நான் விரைவில் அத்தீமைகள் ஏற்படும்படிச் செய்வேன். நான் அந்த ஜனங்களிடம் பேசினேன். ஆனால், அவர்கள் கவனிக்க மறுத்தனர். நான் அவர்களை அழைத்தேன். ஆனால் அவர்கள் எனக்குப் பதில் சொல்லவில்லை.’”
18 பிறகு எரேமியா ரேகாபியருடைய வம்சத்து ஜனங்களிடம் கூறினான். “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், ‘நீங்கள் உங்களது முற்பிதா யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தீர்கள். யோனாதாபின் அனைத்து போதனைகளையும் பின்பற்றினீர்கள். அவன் கட்டளையிட்ட அனைத்தையும் செய்தீர்கள்.’ 19 எனவே, இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘ரேகாபின் மகனான யோனதாபின் சந்ததி எனக்கு சேவைசெய்ய எப்பொழுதும் இருக்கும்.’”
எரேமியாவின் புத்தகச்சுருளை யோயாக்கீம் எரிக்கிறான்
36 கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது. யூதாவின் அரசனாக யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆண்ட நான்காம் ஆட்சி ஆண்டில் இது நடந்தது. கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்: 2 “எரேமியா, ஒரு புத்தச்சுருளை எடு. நான் உன்னிடம் சொன்ன அனைத்து செய்திகளையும் அதில் எழுது. நான் உன்னிடம் இஸ்ரவேல் மற்றும் யூதா மற்றும் அனைத்து தேசங்களைப்பற்றிக் கூறியிருக்கிறேன். யோசியா அரசனாக இருந்த காலம் முதல் இன்றுவரை நான் உனக்குச் சொன்ன அனைத்தையும் எழுது. 3 நான் அவர்களுக்காக செய்ய திட்டமிட்டுக்கொண்டிருப்பதை ஒரு வேளை யூதா ஜனங்கள் கேட்கலாம். அப்போது ஒவ்வொருவனும் தன்னுடைய தீயச் செயல்களை நிறுத்திவிடலாம். அவர்கள் அவ்வாறு செய்தால், நான் அவர்கள் ஏற்கனவே செய்த பாவங்களை மன்னிப்பேன்.”
4 எனவே எரேமியா, பாருக் என்ற பெயருள்ளவனை அழைத்தான். பாருக் நேரியாவின் மகன். எரேமியா கர்த்தர் கூறிய வார்த்தையைச் சொன்னான். எரேமியா பேசிக்கொண்டிருக்கும் போது, பாருக் புத்தகச்சுருளில் அச்செய்திகளை எழுதினான். 5 பிறகு எரேமியா பாருக்கிடம், “என்னால் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகமுடியாது. அங்கே நான் போவதற்கு அனுமதியில்லை. 6 எனவே, நீ கர்த்தருடைய ஆலயத்திற்குள் போக வேண்டுமென்று விரும்புகிறேன். உபவாச நாளில் நீ அங்கே போ. புத்தகச்சுருளில் உள்ளவற்றை ஜனங்களுக்கு வாசி. கர்த்தரிடமிருந்து கேட்ட செய்தியை நான் சொல்ல நீ புத்தகச்சுருளில் எழுதியவற்றை வாசி. தாங்கள் வாழும் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த யூதாவின் அனைத்து ஜனங்களுக்கும் அச்செய்தியை வாசி. 7 ஒரு வேளை அந்த ஜனங்கள் கர்த்தர் தங்களுக்கு உதவ வேண்டுமென கேட்பார்கள். ஒரு வேளை ஒவ்வொருவனும் தன்னுடைய தீய செயல் செய்வதை நிறுத்திவிடலாம். கர்த்தர் அந்த ஜனங்களுடன் கோபமுள்ளவராக இருக்கிறார்” என்பதை அறிவித்திருக்கிறார். 8 எனவே, நேரியாவின் மகனான பாருக் தீர்க்கதரிசியான எரேமியா சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான். பாருக், கர்த்தருடைய செய்தி எழுதப்பட்டிருந்த புத்தகச்சுருளை உரக்க வாசித்தான். அவன் அதனை கர்த்தருடைய ஆலயத்தில் வாசித்தான்.
9 யோயாக்கீம் அரசனான ஐந்தாம் ஆண்டின் ஒன்பதாவது மாதத்தில் ஒரு உபவாசம் அறிவிக்கப்பட்டது. எருசலேம் நகரத்தில் வாழ்கின்ற அனைத்து ஜனங்களும் யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த ஒவ்வொருவரும் கர்த்தருக்கு முன்னால் உபவாசம் இருக்கவேண்டும். 10 அப்போது, எரேமியாவின் வார்த்தைகள் உள்ள புத்தகச்சுருளைப் பாருக் வாசித்தான். அவன் புத்தகச்சுருளை கர்த்தருடைய ஆலயத்தில் வாசித்தான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த எல்லா ஜனங்களின் முன்பும் பாருக் புத்தகச்சுருளை வாசித்தான். பாருக், புத்தகச்சுருளில் உள்ளவற்றை வாசிக்கும்போது மேற்பிரகாரத்திலுள்ள கெமரியாவின் அறையில் இருந்தான். அந்த அறை ஆலயத்தின் புதிய வாசல் நுழைவில் இருந்தது. கெமரியா சாப்பானின் மகன். கெமரியா ஆலயத்தில் எழுத்தாளனாக இருந்தான்.
11 மிகாயா என்ற பெயருடைய ஒருவன் கர்த்தரிடமுள்ள எல்லாச் செய்திகளையும் புத்தகச்சுருளில் பாருக் வாசிப்பதிலிருந்து கேட்டான். மிகாயா, கெமரியாவின் மகன். கெமரியா, சாப்பானின் மகன். 12 மிகாயா புத்தகச்சுருளிலுள்ள செய்திகளை கேட்டதும் அரசனின் அரண்மனையில் உள்ள செயலாளனின் அறைக்குச் சென்றான். அரசனின் அரண்மனையில் எல்லா அரச அதிகாரிகளும் உட்கார்ந்திருந்தனர். அந்த அதிகாரிகளின் பெயர்களாவன: செயலாளனாகிய எலிசாமா, செமாயாவின் மகனாகிய தெலாயா, அக்போரின் மகனான எல்நாத்தான், சாப்பானின் மகனான கெமரியா, அனனியாவின் மகனான சிதேக்கியா, மற்றும் பல பிரபுக்களும் அங்கே இருந்தனர். 13 மிகாயா, பாருக் புத்தகச்சுருளில் வாசித்து கேட்ட அனைத்தையும் அதிகாரிகளிடம் சொன்னான்.
14 பிறகு அனைத்து அதிகாரிகளும் யெகுதி என்னும் பெயருள்ள ஒருவனை பாருக்கிடம் அனுப்பினர். யெகுதி நெத்தானியாவின் மகன். நெத்தானியா செலேமியாவின் மகன். செலேமியா கூஷியின் மகன். யெகுதி பாருக்கிடம், “நீ வாசித்த புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டு என்னுடன் வா” என்றான்.
நேரியாவின் மகனான பாருக் புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டு யெகுதியோடு அதிகாரிகளிடம் சென்றான்.
15 பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம், “உட்கார், எங்களிடம் புத்தகச்சுருளை வாசி” என்றனர். எனவே, பாருக் அவர்களுக்குப் புத்தகச்சுருளை வாசித்தான்.
16 அந்த அரச அதிகாரிகள் புத்தகச்சுருளில் உள்ள அனைத்து செய்திகளையும் கேட்டனர். பிறகு அவர்கள் பயந்தனர். ஒருவரையொருவர் பார்த்தனர். அவர்கள் பாருக்கிடம், “நாங்கள் புத்தகச்சுருளில் உள்ள செய்திகளை அரசன் யோயாக்கீமிடம் கூறவேண்டும்” என்றனர். 17 பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். அவர்கள், “பாருக், எங்களிடம் சொல். புத்தகச்சுருளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை நீ எங்கிருந்து பெற்றாய்? எரேமியா சொன்னவற்றை நீ எழுதினாயா?” என்று கேட்டனர்.
18 பாருக், “ஆம், எரேமியா சொன்னான். நான் மையால் இப்புத்தகச்சுருளில் எழுதினேன்” என்று பதில் சொன்னான்.
19 பிறகு அரச அதிகாரிகள் பாருக்கிடம், “நீயும் எரேமியாவும் போய் ஒளிந்துக்கொள்ளுங்கள். எங்கே ஒளிந்திருக்கிறீர்கள் என்று யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றனர்.
20 பிறகு அரச அதிகாரிகள் அப்புத்தகச்சுருளை எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலே வைத்தனர். அவர்கள் அரசனான யோயாக்கீமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் புத்தகச்சுருளைப் பற்றிச் சொன்னார்கள்.
21 எனவே, அரசன் யோயாக்கீம் யெகுதியை அனுப்பி புத்தகச்சுருளை வரவழைத்தான். யெகுதி எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலிருந்து புத்தகச்சுருளைக் கொண்டுவந்தான். பிறகு யெகுதி அரசனிடம் புத்தகச்சுருளை வாசித்தான். அரசனைச்சுற்றி அனைத்து அதிகாரிகளும் நின்றனர். 22 இது நடந்த காலம் ஒன்பதாவது மாதம். எனவே, அரசன் யோயாக்கீம் குளிர்காலத்துக்கான அறையில் உட்கார்ந்திருந்தான். அரசனுக்கு முன்னால் நெருப்புக் குண்டத்தில் நெருப்பு எரிந்துக்கொண்டிருந்தது. 23 யெகுதி புத்தகச்சுருளை வாசிக்கத் தொடங்கினான். அவன் இரண்டு மூன்று பத்திகள் வாசித்ததும் அரசனான யோயாக்கீம் புத்தகச்சுருளைப் பிடுங்கினான். பிறகு அவன் அந்தப் பத்திகள் எழுதப்பட்டிருந்த புத்தகச்சுருளைச் சிறிய கத்தியால் வெட்டி நெருப்பிற்குள் போட்டான். இறுதியாக புத்தகச்சுருள் முழுவதும் நெருப்பில் எரிந்துப்போயிற்று. 24 அரசன் யோயாக்கீமும் அவனது வேலைக்காரர்களும் புத்தகச்சுருளில் உள்ளவற்றை வாசிக்கக் கேட்டபோது அவர்கள் பயப்படவில்லை. அவர்கள் தாங்கள் செய்த தப்புக்காக வருத்தத்தைக் காட்ட தங்கள் ஆடைகளைக் கிழிக்கவில்லை.
25 எல்நாத்தன், தெலாயா மற்றும் கெமரியா அரசன் யோயாக்கீமிடம் புத்தகச்சுருளை எரிக்க வேண்டாம் என்று சொல்ல முயன்றனர். ஆனால் அரசன் அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. 26 யோயாக்கீம் அரசன் சிலரிடம் எழுத்தாளனான பாருக்கையும் தீர்க்கதரிசி எரேமியாவையும் கைது செய்யும்படிக் கட்டளையிட்டான். அவர்கள், அரசனின் மகன் யெரமெயேல், அஸ்ரியேலின் மகன் செராயா, அப்தெயேலின் மகனான செலேமியாவும் ஆவார்கள். ஆனால் அவர்களால் பாருக்கையும் எரேமியாவையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், கர்த்தர் அவர்களை மறைத்துவிட்டார்.
27 கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் செய்தி வந்தது. இது, கர்த்தரிடமிருந்து வந்தச் செய்தி முழுவதும் எழுதப்பட்ட புத்தகச்சுருள் அரசன் யோயாக்கீமால் எரிக்கப்பட்டப்பிறகு வந்தது. எரேமியா பாருக்கிடம் பேசியிருந்தான். பாருக் அவற்றைப் புத்தகச்சுருளில் எழுதியிருந்தான். கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தச் செய்தி இதுதான்:
28 “எரேமியா, இன்னொரு புத்தகச்சுருளை எடு. முதல் புத்தகச்சுருளில் இருந்த அனைத்து செய்திகளையும் இதில் எழுது. அந்தச் சுருள் அரசன் யோயாக்கீமால் எரிக்கப்பட்டது. 29 எரேமியா, யூதா அரசன் யோயாக்கீமிடம் இவற்றையும் சொல், கர்த்தர் சொல்கிறது இதுதான்: ‘யோயாக்கீம், அப்புத்தகச்சுருளை எரித்தாய். நீ, “பாபிலோன் அரசன் உறுதியாக வந்து இந்நாட்டை அழிப்பான் என்று எரேமியா ஏன் எழுதினான்? பாபிலோன் அரசன் இத்தேசத்திலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிப்பான் என்று ஏன் அவன் சொல்கிறான்?” என்று சொன்னாய். 30 எனவே, யூதாவின் அரசனான யோயாக்கீம் பற்றி கர்த்தர் சொன்னது இதுதான். யோயாக்கீமின் சந்ததியார் தாவீதின் சிங்காசனத்தில் உட்காரமாட்டார்கள். யோயாக்கீம் மரிக்கும்போது, அவன் அரசனுக்குரிய அடக்க ஆராதனையைப் பெறமாட்டான். ஆனால் அவனது உடல் தரையில் வீசி எறியப்படும். அவனது உடல் பகலின் வெப்பத்திலும் இரவில் குளிரிலும் கிடக்கும்படி விடப்படும். 31 கர்த்தராகிய நான், யோயாக்கீமையும் அவனது பிள்ளைகளையும் தண்டிப்பேன். அவனது அதிகாரிகளையும் நான் தண்டிப்பேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் அவர்கள் துன்மார்க்கர்கள். பயங்கரமான பேரழிவு அவர்களுக்குக் கொண்டுவருவதாக நான் வாக்குறுதி செய்திருக்கிறேன். எருசலேமில் வாழ்கிற ஜனங்களுக்கும் யூதாவில் வாழ்கிற ஜனங்களுக்கும் வரும். நான் வாக்குறுதி அளித்தபடி அவர்களுக்கு அனைத்து தீயவற்றையும் கொண்டு வருவேன். ஏனென்றால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை.’”
32 பிறகு எரேமியா இன்னொரு புத்தகச்சுருளை எடுத்தான். அவன் அதனை எழுத்தாளன் நேரியாவின் மகனான பாருக்கிடம் கொடுத்தான். எரேமியா சொன்னபடி, பாருக் புத்தகச்சுருளில் எழுதினான். அதில் அரசன் யோயாக்கீமால் நெருப்பில் எரிக்கப்பட்ட அதே செய்திகளை எழுதினான். அச்செய்திகளைப் போன்ற பல்வேறு வார்த்தைகளும் இரண்டாவது புத்தகச்சுருளில் சேர்க்கப்பட்டன.
எரேமியா சிறையில் போடப்படுகிறான்
37 நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசன். நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் மகன் கோனியாவின் இடத்தில் சிதேக்கியாவை யூதாவின் அரசனாக நியமித்தான். சிதேக்கியா யோசியா அரசனின் மகன். 2 ஆனால் சிதேக்கியா, தீர்க்கதரிசி எரேமியாவிற்குப் பிரசங்கத்திற்காக கர்த்தர் கொடுத்திருந்த செய்திகளைப் பொருட்படுத்தவில்லை. சிதேக்கியாவின் வேலைக்காரர்களும் யூதாவின் ஜனங்களும் கர்த்தருடைய செய்திகளுக்கு கவனம் செலுத்தவில்லை.
3 சிதேக்கியா அரசன், யூகால் என்ற பெயருடையவனையும் ஆசாரியன் செப்பனியாவையும் ஒரு செய்தியுடன் எரேமியாவிடம் அனுப்பினான். யூகால் செலேமியாவின் மகன். ஆசாரியன் செப்பனியா, மாசெயாவின் மகன். அவர்கள் எரேமியாவிற்குக் கொண்டுவந்த செய்தி: “எரேமியா, எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்.”
4 (அந்நேரத்தில், எரேமியாவைச் சிறையில் போட்டிருக்கவில்லை. எனவே அவன் விரும்பிய இடத்துக்குப் போகச் சுதந்திரம் உடையவனாக இருந்தான். 5 அதே நேரத்தில் பார்வோனின் படையானது எகிப்திலிருந்து யூதாவிற்குப் புறப்பட்டது. எருசலேமைச் சுற்றி அதைத் தோற்கடிப்பதற்காக பாபிலோனியாவின் படையானது முற்றுகையிட்டது. பிறகு, அவர்கள் எகிப்திலிருந்து படை புறப்பட்டு வருவதாக கேள்விப்பட்டனர். எனவே, பாபிலோனியப் படை எருசலேமைவிட்டுப் போய் எகிப்திலிருந்து வந்த படையோடு சண்டையிடப் போனது.)
6 தீர்க்கதரிசி எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. 7 “இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது: ‘யூகாலே, செப்பனியா, யூதாவின் அரசனான சிதேக்கியா என்னிடம் சில கேள்விகள் கேட்க உன்னை அனுப்பியதை நான் அறிவேன். அரசன் சிதேக்கியாவிடம் இதைக் கூறு. பாபிலோனியன் படைக்கு எதிராக உனக்கு உதவ பார்வோனின் படை எகிப்திலிருந்து வந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பார்வோனின் படை திரும்பிப் போகும். 8 அதற்குப் பிறகு பாபிலோனின் படை இங்கே திரும்பி வரும். அவர்கள் எருசலேமைத் தாக்குவார்கள். பிறகு பாபிலோனிலிருந்து வந்தப் படை எருசலேமைப் பிடித்து நெருப்பிடுவார்கள்.’ 9 இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘எருசலேம் ஜனங்களே உங்களை முட்டாள்களாக்காதீர்கள். நீங்கள் உங்களுக்குள் “பாபிலோனின் படை உறுதியாக நம்மைத் தனியேவிடும்” என்று சொல்ல வேண்டாம். அவர்கள் வேறிடத்திற்கு போகமாட்டார்கள். 10 எருசலேம் ஜனங்களே உங்களைத் தாக்கும் பாபிலோனியப் படை முழுவதையும் நீங்கள் தோற்கடித்தாலும் அங்கே கூடாரத்தில் காயப்பட்டவர்கள் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அந்தச் சில காயப்பட்டவர்களும்கூடத் தம் கூடாரத்தை விட்டு வெளியே வந்து எருசலேமை எரித்துப்போடுவார்கள்.’”
11 பாபிலோனியப் படை எகிப்தின் பார்வோனின் படையோடு போரிடச் சென்றபோது, 12 எரேமியா எருசலேமிலிருந்து பென்யமீன் தேசத்திற்குப் பயணம் செய்ய விரும்பினான். அங்கே அவன் தனது குடும்பத்திற்குரிய சொத்தைப் பங்கு வைப்பதற்காகப் போய்க்கொண்டிருந்தான். 13 ஆனால் எரேமியா எருசலேமின் பென்யமீன் வாசலுக்குப் போனபோது காவலர்களின் தலைவன் அவனைக் கைது செய்தான். தளபதியின் பெயர் யெரியா. யெரியா செலேமியாவின் மகன். செலேமியா அனானியாவின் மகன். எனவே தளபதி யெரியா எரேமியாவைக் கைது செய்தான். அவன், “எரேமியா நீ பாபிலோனியர் பக்கம் சேரும்படி விலகிக்கொண்டிருக்கிறாய்” என்று சொன்னான்.
14 எரேமியா யெரியாவிடம், “அது உண்மையன்று. பாபிலோனியரிடம் சேருவதற்காக நான் விலகிப் போகவில்லை” என்றான். ஆனால் யெரியா எரேமியா சொல்வதைக் கேட்க மறுத்தான். யெரியா எரேமியாவைக் கைது செய்து, எருசலேமில் உள்ள அரச அதிகாரிகளிடம் கொண்டு போனான். 15 அந்த அதிகாரிகள் எரேமியாவிடம் மிகவும் கோபமாக இருந்தனர். எரேமியாவை அடிக்கும்படி அவர்கள் கட்டளை கொடுத்தனர். பிறகு அவர்கள் எரேமியாவைச் சிறைக்குள்போட்டனர். சிறையானது யோனத்தான் என்ற பெயருடையவன் வீட்டில் இருந்தது. யூதாவின் அரசனுக்கு யோனத்தான் ஒரு எழுத்தாளனாக இருந்தான். யோனத்தான் வீடு சிறையாக ஆக்கப்பட்டிருந்தது. 16 அந்த ஜனங்கள் எரேமியாவை யோனத்தானின் வீட்டின் அடியிலுள்ள பள்ளத்திலே போட்டனர். அந்த அறை ஆழமான பள்ளத்திலே இருந்தது. எரேமியா அங்கே நீண்ட காலம் இருந்தான்.
17 பிறகு சிதேக்கியா அரசன் ஒரு ஆளை அனுப்பி அரசனின் வீட்டிற்கு எரேமியாவை அழைத்து வரச் செய்தான். சிதேக்கியா எரேமியாவிடம், தனியாக பேசினான். அவன் எரேமியாவிடம், “கர்த்தரிடமிருந்து ஏதாவது வார்த்தை வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.
18 எரேமியா, “ஆம். கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை வந்திருக்கிறது. சிதேக்கியா, பாபிலோன் அரசனிடம் நீ கொடுக்கப்படுவாய்” என்று பதில் சொன்னான். பிறகு எரேமியா அரசன் சிதேக்கியாவிடம், “நான் என்ன தவறு செய்தேன்? உனக்கு எதிராக நான் என்ன குற்றம் செய்தேன்? அல்லது உனது அதிகாரிகளுக்கு அல்லது எருசலேம் ஜனங்களுக்கு எதிராக என்ன குற்றம் செய்தேன்? என்னை எதற்காகச் சிறையிலிட்டாய்? 19 சிதேக்கியா அரசனே, உனது தீர்க்கதரிசிகள் இப்பொழுது எங்கே? அந்தத் தீர்க்கதரிசிகள் உன்னிடம் பொய்யைச் சொன்னார்கள். அவர்கள், ‘பாபிலோன் அரசன் உன்னையோ இந்த யூதா தேசத்தையோ தாக்கமாட்டான்’ என்றார்கள். 20 ஆனால், இப்பொழுது யூதாவின் அரசனே நான் சொல்வதைக் கேள். என் விண்ணப்பத்தை தயவுசெய்து கேள். இதுதான் நான் கேட்பது. என்னைத் திரும்ப எழுத்தாளனான யோனாத்தானின் வீட்டிற்கு அனுப்பவேண்டாம். நீர் என்னை அங்கு அனுப்பினால் நான் அங்கே மரிப்பேன்” என்று சொன்னான்.
21 எனவே சிதேக்கியா அரசன் எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே வைக்குமாறு கட்டளையிட்டான். அவனுக்குத் தெருவிலே அப்பஞ்சுடுகிறவர்களிடமிருந்து அப்பத்தை வாங்கிக் கொடுக்கச் சொன்னான். நகரத்திலே அப்பம் இருக்கும்வரை எரேமியாவிற்கு வாங்கிக் கொடுக்கப்பட்டது. எனவே அப்படியே எரேமியா காவற் சாலையின் முற்றத்திலே இருந்தான்.
எரேமியா தண்ணீர்க்குழியிலே போடப்படுகிறான்
38 அரச அதிகாரிகளில் சிலர் எரேமியாவின் பிரசங்கத்தை கேட்டனர். அவர்கள், மாத்தானின் மகனாகிய செப்பத்தியா, பஸ்கூரின் மகனாகிய கெதலியா, செலேமியாவின் மகனாகிய யூகால், மல்கியாவின் மகனாகிய பஸ்கூரும் ஆவார்கள். எரேமியா இச்செய்தியை அனைத்து ஜனங்களுக்கும் சொன்னான். 2 “இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘எருசலேமில் வாழ்கிற ஒவ்வொருவரும் வாள் அல்லது பசி அல்லது பயங்கரமான நோயால் மரிப்பார்கள். ஆனால் பாபிலோனியப் படையிடம் சரண் அடைபவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். அந்த ஜனங்கள் தாம் உயிரோடு தப்பித்துக்கொள்வார்கள்.’ 3 இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘இந்த எருசலேம் நகரமானது பாபிலோன் அரசனின் படையிடம் உறுதியாகக் கொடுக்கப்படும். அவன் இந்நகரத்தைக் கைப்பற்றுவான்.’”
4 பிறகு அந்த அரச அதிகாரிகள் ஜனங்களுக்கு எரேமியா சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டு விட்டு சிதேக்கியா அரசனிடம் சென்றனர். அவர்கள் அரசனிடம், “எரேமியா சாகடிக்கப்பட வேண்டும். இந்த நகரத்தில் இன்னும் இருக்கிற வீரர்களை அவன் அதைரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். எரேமியா தான் சொல்லிக்கொண்டிருப்பவற்றால் ஒவ்வொருவரையும் அதைரியப்படுத்திக்கொண்டிருக்கிறான். எரேமியா நமக்கு நன்மை நிகழ்வதை விரும்பவில்லை. அவன் எருசலேம் ஜனங்களை அழித்து விட விரும்புகிறான்” என்றனர்.
5 எனவே, சிதேக்கியா அரசன் அந்த அதிகாரிகளிடம், “எரேமியா உங்கள் கட்டுபாட்டுக்குள் இருக்கிறான். உங்களைத் தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியாது” என்றான்.
6 எனவே, அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கொண்டுப்போய் மல்கியாவின் தண்ணீர்க்குழியில் அடைத்தனர். (மல்கியா அரசனின் மகன்). அந்த தண்ணீர்க்குழி ஆலயப் பிரகாரத்தில் அரசனின் காவலர்கள் தங்கும் இடத்தில் இருந்தது. அந்த அதிகாரிகள் எரேமியாவைக் கயிற்றில் கட்டி தண்ணீர்க்குழியில் இறக்கினார்கள். அந்த தண்ணீர்க்குழியில் தண்ணீர் எதுவுமில்லை. ஆனால் சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றுக்குள் புதைந்தான்.
7 ஆனால், எபெத்மெலேக் என்ற பெயருடையவன் எரேமியாவை தண்ணீர்க்குழியில் அடைத்ததைப்பற்றி கேள்விப்பட்டான். எபெத்மெலேக் எத்தியோப்பியாவிலிருந்து வந்தவன். அவன் அரசனின் வீட்டில் பிரதானியாக இருந்தான். சிதேக்கியா அரசன் பென்யமீன் வாசலில் இருந்தான். எனவே எபெத்மெலேக் அரசனின் வீட்டை விட்டுப் போய் வாசலில் உள்ள அரசனிடம் பேசப் போனான். 8-9 எபெத்மெலேக், “எனது பிரபுவே, அரசனே, அந்த அதிகாரிகள் கெட்ட வழியில் நடந்திருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசி எரேமியாவை மோசமாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை தண்ணீர்க் குழியில் எறிந்துவிட்டனர். அங்கேயே பட்டினியால் மரிக்கவிடுவார்கள்” என்றான்.
10 பிறகு சிதேக்கியா அரசன் எத்திதோப்பியனான எபெத்மெலேக்கிற்கு ஒரு கட்டளை கொடுத்தான். இதுதான் கட்டளை: “எபெத்மெலேக், அரசனது வீட்டிலிருந்து மூன்று பேரை உன்னோடு அழைத்துக்கொள். போய் எரேமியாவை அவன் மரிப்பதற்கு முன்பு தண்ணீர்க்குழியிலிருந்து வெளியே எடு.”
11 எனவே, எபெத்மெலேக் ஆட்களைத் தன்னோடு அழைத்தான். ஆனால் முதலில் அவன் அரசனது வீட்டிலுள்ள சாமான் அறைக்குக் கீழுள்ள அறைக்குச் சென்றான். அவன் கிழிந்த பழைய புடவைகளையும், கந்தைத் துணிகளையும் எடுத்தான். பின்னர் தண்ணீர்க் குழியில் அத்துணிகளையும் கயிறுகளையும் இறக்கினான். 12 எத்திதோப்பியனான எபெத்மெலேக் எரேமியாவிடம், “இப்பழையத் துணிகளையும் கந்தைத்துணிகளையும் உன் கைகளுக்குக் கீழே கட்டிக் கொள். நாங்கள் உன்னை இழுக்கும்போது இந்தத் துணிகளை கைகளுக்கு இடையில் அடங்க வைத்துக்கொள். பிறகு, இந்தக் கயிறுகள் உன்னை சேதப்படுத்தாது” எனவே, எரேமியா எபெத்மெலேக் சொன்னபடிச் செய்தான். 13 அம்மனிதர்கள் எரேமியாவை வெளியே எடுத்தனர். எரேமியா ஆலயப் பிரகாரத்தில் காவல் சாலையின் முற்றத்தில் தங்கினான்.
சிதேக்கியா எரேமியாவிடம் மீண்டும் சில கேள்விகளைக் கேட்கிறான்
14 பிறகு, அரசன் சிதேக்கியா ஒருவனை தீர்க்கதரிசி எரேமியாவிடம் அனுப்பினான். கர்த்தருடைய ஆலயத்தின் மூன்றாவது வாசலுக்கு அவன் எரேமியாவை அழைத்தான். பிறகு அரசன், “எரேமியா, நான் உன்னிடம் சிலவற்றைக் கேட்கப்போகிறேன். என்னிடமிருந்து எதனையும் மறைக்க வேண்டாம். எல்லாவற்றையும் நேர்மையாக எனக்குக் கூறு” என்றான்.
15 எரேமியா சிதேக்கியாவிடம், “நான் உனக்குப் பதில் சொன்னால் நீ உண்மையில் என்னைக் கொல்வாய். நான் உனக்கு அறிவுரைச் சொன்னாலும் நான் சொல்வதை நீ கேட்கமாட்டாய்” என்றான்.
16 ஆனால் சிதேக்கியா அரசன் இரகசியமாக எரேமியாவிடம் ஒரு உறுதிமொழி செய்து கொடுத்தான். சிதேக்கியா, “கர்த்தர் நமக்கு ஜீவனும் ஆத்துமாவைக் கொடுத்திருக்கிறார். கர்த்தர் ஜீவனோடு இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் உன்னைக் கொல்லமாட்டேன் என்பதும், உன்னைக் கொல்ல விரும்புகிற அந்த அதிகாரிகளிடம் உன்னைக் கொடுக்கமாட்டேன் என்றும் நான் வாக்குறுதி அளிக்கிறேன்” என்றான்.
17 பிறகு எரேமியா சிதேக்கியா அரசனிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், கூறுகிறார், ‘நீ பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் சரணடைந்தால் உனது வாழ்க்கை காப்பாற்றப்படும். எருசலேம் எரிக்கப்படாமல் இருக்கும். நீயும் உனது குடும்பமும் காக்கப்படுவீர்கள். 18 ஆனால் நீ சரணடைய மறுத்தால், பிறகு பாபிலோனியப் படையிடம் எருசலேம் கொடுக்கப்படும். அவர்கள் எருசலேமை எரிப்பார்கள். நீ அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது’” என்றான்.
19 ஆனால் அரசன் சிதேக்கியா எரேமியாவிடம், “ஆனால் நான் பாபிலோனியப் படையுடன் ஏற்கனவே சேர்ந்துவிட்ட யூதாவின் ஆட்களைப்பற்றிப் பயப்படுகிறேன். வீரர்கள் என்னை அந்த யூதாவின் ஆட்களிடம் கொடுப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன். அவர்கள் என்னை மோசமாக நடத்தி என்னைத் தாக்குவார்கள்” என்றான்.
20 ஆனால் எரேமியா பதிலாக, “யூதாவின் ஆட்களிடம் அவ்வீரர்கள் உன்னைக் கொடுக்கமாட்டார்கள். சிதேக்கியா அரசனே, நான் என்ன சொல்கிறேனோ அதன்படி கர்த்தருக்கு கீழ்ப்படி. பிறகு எல்லாம் உனக்கு நன்மையாகும். உனது வாழ்வு காப்பாற்றப்படும். 21 ஆனால் பாபிலோனிய படைக்குச் சரணடைய மறுத்தால், கர்த்தர் எனக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார். இதுதான் கர்த்தர் எனக்குச் சொன்னது. 22 யூதா அரசனின் வீட்டில் விடப்பட்டுள்ள ஸ்திரீகள் எல்லாம் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் அரசனின் முக்கிய அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். உங்கள் ஸ்திரீகள் ஒரு பாடலால் பரிகாசம் செய்வார்கள். இதுதான் அப்பெண்கள் சொல்வது:
“உங்கள் நல்ல நண்பர்கள் உனக்கு தந்திரம் செய்தார்கள்.
தீயக் காரியங்களை செய்யும்படி உன்னை மாற்றுகின்றனர்.
உங்கள் கால்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன.
பின்னர் உன்னை தன்னந்தனியே அவர்கள் விட்டுவிட்டனர்.”
23 “உன் மனைவிகளும் குழந்தைகளும் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோனியப் படையிடம் கொடுக்கப்படுவார்கள். நீங்கள் பாபிலோன் படையிடமிருந்து தப்பிக்க முடியாது. நீ பாபிலோன் அரசனால் கைப்பற்றப்படுவாய். எருசலேம் எரிக்கப்படும்” என்றான்.
24 பிறகு சிதேக்கியா எரேமியாவிடம், “நீ எவரிடமும் நான் உன்னோடு பேசினேன் என்று சொல்ல வேண்டாம். நீ அவ்வாறு செய்தால் நீ மரிப்பாய். 25 அந்த அதிகாரிகள் நான் உன்னிடம் பேசியதைக் கண்டுப்பிடித்துவிடலாம். பிறகு அவர்கள் உன்னிடம் வந்து, ‘எரேமியா, நீ அரசன் சிதேக்கியாவிடம் என்ன சொன்னாய் என்பதை எங்களிடம் கூறு. அரசன் சிதேக்கியா உன்னிடம் என்ன சொன்னான் என்பதையும் எங்களிடம் கூறு. எங்களோடு நேர்மையாக இருந்து எல்லாவற்றையும் சொல் அல்லது நாங்கள் உன்னைக் கொல்வோம்’ என்று சொல்வார்கள். 26 அவர்கள் இதனை உன்னிடம் சொன்னால், அவர்களிடம் சொல், ‘நான் அரசனிடம் மீண்டும் என்னை யோனத்தானின் வீட்டின் அடியில் உள்ள பள்ளத்திற்குள் அனுப்பவேண்டாம். நான் அங்கே திரும்பப்போனால் நான் மரித்துவிடுவேன்’” என்று கெஞ்சிக்கொண்டிருந்தேன்.
27 இது நிகழ்ந்தது. அந்த அரச அதிகாரிகள் எரேமியாவிடம் கேள்விகள் கேட்க வந்தனர். அரசன் என்ன பதில் சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தானோ அதனையே சொன்னான். பிறகு எரேமியாவை அந்த அதிகாரிகள் தனியே விட்டனர். எவரும் எரேமியாவும் அரசனும் என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை.
28 எனவே எரேமியா ஆலய பிரகாரத்தின் காவல் அறையில் எருசலேம் கைப்பற்றப்படும்வரை இருந்தான்.
எருசலேமின் வீழ்ச்சி
39 எருசலேம் கைப்பற்றப்பட்டது இப்படித்தான்: யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஒன்பதாவது ஆண்டின் பத்தாவது மாதத்தில் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு எதிராகத் தனது முழுப்படையுடன் புறப்பட்டான். அந்நகரைத் தோற்கடிக்க முற்றுகையிட்டனர். 2 சிதேக்கியாவின் பதினொன்றாவது ஆண்டின் நாலாவது மாதத்தின் ஒன்பதாவது நாளில் எருசலேமின் சுவர் உடைக்கப்பட்டது. 3 பிறகு பாபிலோன் அரசனின் அதிகாரிகள் எருசலேம் நகருக்குள் வந்தனர். அவர்கள் உள்ளே வந்து மத்திய வாசலில் உட்கார்ந்துக்கொண்டனர். அந்த அதிகாரிகளின் பெயர்கள் இவை: நெர்கல் சரேத்சேர், சம்கார் நேபோ மாவட்டத்து ஆளுநர், ஒரு மிக உயர்ந்த அதிகாரி, நெபோசர்சேகிம், இன்னொரு உயர் அதிகாரி மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகளும் இருந்தனர்.
4 யூதாவின் அரசனான சிதேக்கியா பாபிலோன் அதிகாரிகளைப் பார்த்தான். அவன் தனது படை வீரர்களோடு ஓடிப்போனான். அவர்கள் இரவில் எருசலேமை விட்டனர். அவர்கள் அரசனது தோட்டத்தின் வழியாகச் சென்றனர். இரண்டு சுவர்களுக்கு இடையில் இருந்த வாசல் வழியாகச் சென்றனர். பிறகு அவர்கள் வனாந்தரத்தை நோக்கிப் போனார்கள். 5 பாபிலோனியப் படை சிதேக்கியாவையும் அவனோடு சென்ற வீரர்களையும் துரத்தியது. எரிகோவின் சமவெளியில் அவர்கள் சிதேக்கியாவைப் பிடித்தனர். அவனை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுபோனார்கள். நேபுகாத்நேச்சார் ஆமாத் தேசத்து ரிப்லா பட்டணத்தில் இருந்தான். அந்த இடத்தில் நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை என்ன செய்யலாம் என்று முடிவு செய்தான். 6 அங்கே ரிப்லா பட்டணத்தில், பாபிலோன் அரசன் சிதேக்கியாவின் மகனை சிதேக்கியா பார்க்கும்போதே கொன்றான். நேபுகாத்நேச்சார் யூதாவின் அரச அதிகாரிகளை சிதேக்கியா பார்த்துக்கொண்டிருக்கும்போதே கொன்றான். 7 பிறகு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களை குருடாக்கினான். அவனுக்கு வெண்கலச் சங்கிலியைப் போட்டு பாபிலோனுக்குக் கொண்டுப்போனான்.
8 பாபிலோன் படையானது அரசனின் வீட்டையும் எருசலேம் ஜனங்களின் வீட்டையும் நெருப்பிட்டனர். அவர்கள் எருசலேமின் சுவர்களை உடைத்தனர். 9 நேபுசராதான் பாபிலோனிய அரசனின் சிறப்புக் காவலர்களின் தளபதியாக இருந்தான். எருசலேமில் மீதியிருந்த ஜனங்களைப் பிடித்துக்கொண்டுபோய் சிறையிலிட்டான். அவர்களைப் பாபிலோனுக்குக் கொண்டுப்போனான். ஏற்கனவே, அவனிடம் சரணடைந்த எருசலேம் ஜனங்களையும் கைதிகளாக பாபிலோனுக்கு கொண்டுப்போனான். 10 ஆனால் சிறப்புக் காவலர்களின் தளபதியான நேபுசராதான் யூதாவின் சில ஏழை ஜனங்களை விட்டுவிட்டுச் சென்றான். அந்த ஜனங்கள் சொந்தமாக எதுவும் இல்லாதவர்கள். எனவே, அந்த நாளில் நேபுசராதான் அவ்வேழை ஜனங்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்தான்.
11 ஆனால், நேபுகாத்நேச்சார் நேபுசராதானுக்கு எரேமியாவைப்பற்றி சில கட்டளைகளைக் கொடுத்தான். நேபுசராதான் நேபுகாத்நேச்சாரின் சிறப்புக் காவலர்களின் தலைவன். இவைதான் கட்டளைகள்: 12 “எரேமியாவைக் கண்டுபிடி. அவனை கவனித்துக் கொள். அவனைத் தாக்காதே. அவன் என்ன கேட்கிறானோ அவற்றைக் கொடு.”
13 எனவே அரசனின் சிறப்புக் காவலர் தளபதியான நேபுசராதான், பாபிலோனின் தலைமைப் படை அதிகாரியான நேபுசராதானையும் ஒரு உயர் அதிகாரியான நெர்கல்சரேத்சேரையும் மற்றும் மற்றப் படை அதிகாரிகளையும் எரேமியாவைத் தேட அனுப்பினான். 14 அவர்கள் எரேமியாவைக் கண்டனர். ஆலய முற்றத்திலிருந்து யூதா அரசனின் காவலரிடமிருந்து வெளியே எடுத்தனர். பாபிலோனது படையின் அவ்வதிகாரிகள் எரேமியாவை கெதலியாவினிடம் ஒப்படைத்தனர். கெதலியா அகிக்காமின் மகன். அகிக்காம் சாப்பானுடைய மகன். கெதலியா எரேமியாவை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுப்போகும் கட்டளைகளைப் பெற்றிருந்தான். எனவே, எரேமியா வீட்டிற்குக் கொண்டுப்போகப்பட்டான். அவன் தன் சொந்த மனிதர்களோடு தங்கினான்.
எபெத்மெலேக்குவிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி
15 எரேமியா ஆலயப் பிரகாரத்தில் காவலர் பாதுகாப்பில் இருந்தபோது கர்த்தரிடமிருந்து வார்த்தை அவனுக்கு வந்தது. 16 “எரேமியா, போய் எத்தியோப்பியனான எபெத்மெலேக்குவிடம் இதைச் சொல்! ‘இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார். மிக விரைவில் எருசலேம் நகரைப்பற்றி நான் சொன்ன செய்திகள் உண்மையாகும்படிச் செய்வேன். எனது செய்தி பேரழிவின் மூலமே உண்மையாகுமே தவிர நல்லவற்றின் மூலம் அன்று. நீ உனது சொந்தக் கண்களால் அது உண்மையாவதை பார்ப்பாய். 17 ஆனால், அந்நாளில் எபெத்மெலேக்கே நான் உன்னைக் காப்பாற்றுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘நீ பயப்படுகிற ஜனங்களிடம் கொடுக்கப்படமாட்டாய். 18 நான் உன்னைக் காப்பாற்றுவேன். எபெத்மலேக்கே, நீ வாளால் மரிக்கமாட்டாய். ஆனால் நீ தப்பித்து வாழ்வாய். இது நிகழும். ஏனென்றால் நீ என்னிடம் நம்பிக்கை வைத்தாய்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா விடுதலை செய்யப்படல்
40 ராமா நகரத்தில் எரேமியா விடுதலை செய்யப்பட்டப் பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுசராதான் எனும் பாபிலோனிய அரசனது சிறப்புக் காவலாளிகளின் தளபதி ராமா நகரில் எரேமியாவைக் கண்டான். எரேமியா சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். அவன் எருசலேம் மற்றும் யூதாவின் கைதிகளுக்கு இடையில் இருந்தான். அக்கைதிகள் பாபிலோனுக்குக் கொண்டு போவதற்காக இருந்தனர். 2 தளபதியான நேபுசராதான் எரேமியாவைக் கண்டதும் அவனிடம் பேசினான். அவன், “எரேமியா, உனது தேவனாகிய கர்த்தர் இந்த இடத்துக்கு இப்பேரழிவு வரும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார். 3 கர்த்தர், தான் செய்வேன் என்று சொன்னபடியே எல்லாவற்றையும் செய்திருக்கிறார். இப்பேரழிவு நடந்தது. ஏனென்றால், யூதா ஜனங்களாகிய நீங்கள் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்து கீழ்ப்படியவில்லை. 4 ஆனால் இப்போது, எரேமியா, நான் உன்னை விடுதலை செய்கிறேன். நான் உனது மணிக்கட்டுகளிலிருந்து சங்கிலிகளை எடுத்து விடுவேன். நீ என்னோடு பாபிலோனுக்கு வர விரும்பினால் நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வேன். ஆனால், நீ என்னோடு வர விரும்பவில்லை என்றால் வரவேண்டாம். பார், நாடு முழுவதும் உனக்காகத் திறந்திருக்கிறது. நீ விரும்புகிற எங்கு வேண்டுமானாலும் போகலாம். 5 அல்லது சாப்பானின் மகனான அகிக்காமின் மகனான கெதலியாவிடம் திரும்பிப் போகலாம். பாபிலோன் அரசன் கெதலியாவை யூதாவின் நகரங்களுக்கு ஆளுநராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். போய் ஜனங்களுக்கிடையில் கெதலியாவோடு வாழு. அல்லது நீ விரும்புகிற எந்த இடத்துக்கும் போகலாம்” என்று சொன்னான்.
பிறகு நேபுசராதான் எரேமியாவிற்கு கொஞ்சம் உணவும் பரிசுப் பொருட்களும் கொடுத்து போகச்செய்தான். 6 எனவே, எரேமியா அகீக்காமின் மகனான கெதலியாவிடம் மிஸ்பாவுக்குப் போனான். எரேமியா கெதலியாவோடு, யூதா தேசத்தில் விடப்பட்டுள்ள ஜனங்களோடு தங்கினான்.
கெதலியாவின் குறுகிய ஆட்சி
7 எருசலேம் அழிக்கப்பட்டபோது, யூதாவின் படையிலுள்ள சில வீரர்களும் அதிகாரிகளும் அவர்களுடைய ஆட்களும் அத்திறந்த நாட்டிலேயே, விடுபட்டனர். அந்த வீரர்கள், அகீக்காமின் மகனான கெதலியாவைப் பாபிலோன் அரசன் தேசத்தில் விடுப்பட்டுள்ளவர்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர். விடுப்பட்டுள்ள ஜனங்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏழைகளாக இருந்தனர். இவர்கள் கைதிகளாகப் பாபிலோனுக்குக் கொண்டுப்போகப்படாமல் இருந்தனர். 8 எனவே அவ்வீரர்கள் மிஸ்பாவிலுள்ள கெதலியாவிடம் வந்தனர். அவ்வீரர்கள்: நெத்தானியாவின் மகனான இஸ்மவேல், யோகனான், அவனுடைய சகோதரன் யோனத்தான், கரேயாவின் குமாரர்கள், தன் கூமேத்தின் மகனான செராயா, நெத்தோபாத் உரின் எப்பாயின் குமாரர்கள், மாகாத்தியாவை சார்ந்தவனின் மகன் யெசனியா, மற்றும் அவர்களோடு இருந்த மனிதர்கள்.
9 சாப்பானின் மகனான அகிக்காமின் மகனான கெதலியா, வந்த வீரர்களும் அவர்களோடு வந்தவர்களும் பாதுகாப்பை உணருமாறு பிரமாணம் செய்தான். கெதலியா சொன்னது இதுதான்: “வீரர்களாகிய நீங்கள், பாபிலோனிய ஜனங்களுக்கு சேவை செய்ய பயப்படவேண்டாம். இந்நாட்டில் குடியிருந்து, பாபிலோனிய அரசனுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால் எல்லாம் நல்லபடியாக இருக்கும். 10 நானும் மிஸ்பாவில் வாழ்வேன். நான் உங்களுக்காக இங்கே வந்த கல்தேயரிடம் பேசுவேன். நீங்கள் அந்த வேலையை எனக்கு விட்டுவிடுங்கள். நீங்கள் திராட்சைகளை அறுவடை செய்ய வேண்டும். கோடைப் பழங்களையும், எண்ணெயையும் எடுக்க வேண்டும். நீங்கள் எதை அறுவடை செய்கிறீர்களோ அவற்றை உங்கள் சேமிப்பு ஜாடிகளில் போட்டு வையுங்கள். உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நகரங்களில் வாழுங்கள்.” 11 மோவாப், அம்மோன், ஏதோம் மற்றும் மற்ற நாடுகளில் உள்ள அனைத்து யூதா ஜனங்களும் பாபிலோன் அரசன் யூதா தேசத்தில் யூதா ஜனங்கள் சிலரை விட்டுவிட்டுப் போயிருக்கிறான் என்று கேள்விப்பட்டனர். பாபிலோன் அரசன் சாப்பானின் மகனான அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்களின் ஆளுநாரகத் தேர்ந்தெடுத்திருப்பதைப்பற்றியும் கேள்விப்பட்டனர். 12 அந்த ஜனங்கள் இச்செய்திகளைக் கேள்விப்பட்டதும் அவர்கள் யூதா தேசத்திற்கு வந்தனர். அவர்கள் சிதறிக்கிடந்த நாடுகளில் இருந்து மிஸ்பாவிலுள்ள கெதலியாவிடம் திரும்பி வந்தனர். எனவே அவர்கள் திரும்பி வந்து திராட்சை அறுவடையையும் கோடைப் பழங்களையும் சேகரித்தனர்.
13 கரேயாவின் மகனான யோகனானும் மற்ற எல்லா யூதா படையின் அதிகாரிகளும் திறந்த நாட்டிலுள்ள அனைவரும் கெதலியாவிடம் வந்தனர். கெதலியா மிஸ்பா பட்டணத்தில் இருந்தான். 14 யோகனானும் அவனோடிருந்த அதிகாரிகளும் கெதலியாவிடம் சொன்னார்கள். “அம்மோனிய ஜனங்களின் அரசனான பாலிஸ் உன்னைக் கொல்ல விரும்புகிறான் என்பது உனக்குத் தெரியுமா? அவன் நெத்தானியாவின் மகனான இஸ்மவேலை அனுப்பியிருக்கிறான்.” ஆனால் அகிக்காமின் மகனான கெதலியா அவர்களை நம்பவில்லை.
15 பிறகு கரேயாவின் மகனான யோகனான் மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகப் பேசினான். யோகனான் கெதலியாவிடம், “நான் போய் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலைக் கொல்லட்டுமா? இதைப்பற்றி எவரும் அறிந்துக் கொள்ளமாட்டார்கள். இஸ்மவேல் உன்னைக் கொல்லும்படி விடக்கூடாது. அது மீண்டும் உன்னைச் சுற்றியுள்ள அனைத்து யூதா ஜனங்களையும் பல்வேறு நாடுகளுக்குச் சிதறும்படிச் செய்யும். அதாவது யூதாவின் சில மீந்தவர்களும் அழியும்படி நேரும்” என்றான்.
16 ஆனால், அகிக்காமின் மகனான கெதலியா கரேயாவின் மகனான யோகனானிடம், “இஸ்மவேலைக் கொல்லாதே. நீ இஸ்மவேலைப்பற்றிச் சொல்வது எல்லாம் உண்மை அல்ல” என்றான்.
41 ஏழாவது மாதத்தில், நெத்தானியாவின் மகனான இஸ்மவேல் அகிக்காமின் மகனான கெதலியாவிடம் வந்தான். (நெத்தானியா எலிசாமாவின் மகன்.) இஸ்மவேல் அவனது பத்து ஆட்களோடு வந்தான். அந்த ஆட்கள் மிஸ்பா பட்டணத்துக்கு வந்தனர். இஸ்மவேல் அரச குடும்பத்தில் ஒரு உறுப்பினன். அவன் யூதா அரசனிடம் ஒரு அதிகாரியாக இருந்தவன். இஸ்மவேலும் அவனது ஆட்களும் கெதலியாவோடு உணவு உண்டனர். 2 அவர்கள் சேர்ந்து உண்ணும்பொழுது, இஸ்மவேலும் அவனோடு வந்த பத்துபேரும் தீடீரென்று எழுந்து அகிக்காமின் மகனான கெதலியாவை வாளால் கொன்றனர். கெதலியா பாபிலோன் அரசனால் யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன். 3 இஸ்மவேல், கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த மற்ற ஜனங்களையும் கொன்றுவிட்டான். இஸ்மவேல் கெதலியாவோடு இருந்த பாபிலோனிய வீரர்களையும் கொன்றான்.
4-5 கெதலியா கொலை செய்யப்பட்ட அந்நாளுக்குப் பிறகு, 80 பேர் மிஸ்பாவுக்கு வந்தனர். அவர்கள் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டு வந்தனர். அந்த 80 பேரும் தங்கள் தாடிகளை சிரைத்திருந்தனர், தம் ஆடைகளைக் கிழித்திருந்தனர், தம்மைத்தாமே காயப்படுத்தியிருந்தனர். அவர்கள் சீகேம், சீலோ, சமாரியா ஆகிய இடங்களிலிருந்து வந்தனர். அவர்களில் எவருக்கும் கெதலியா கொலை செய்யப்பட்டது தெரியாது. 6 இஸ்மவேல் மிஸ்பாவை விட்டு அந்த 80 பேரையும் சந்திக்கப் போனான். அவர்களைச் சந்திக்க நடந்துப் போகும்போது அவன் அழுதான். இஸ்மவேல் அந்த 80 பேரையும் சந்தித்து அவர்களிடம், “என்னோடு வந்து அகிக்காமின் மகனான கெதலியாவைச் சந்தியுங்கள்” என்றான். 7 அந்த 80 பேரும் அவனோடு மிஸ்பாவுக்குச் சென்றனர். பிறகு இஸ்மவேலும் அவனது ஆட்களும் அந்த 80 பேரைக் கொன்று அந்த 80 பேரின் உடல்களையும் ஆழமான ஒரு குழிக்குள் போடத் துவங்கினார்கள். 8 ஆனால் அவர்களுள் 10 பேர் இஸ்மவேலிடம், “எங்களைக் கொல்லாதே. எங்களிடம் கோதுமையும் பார்லியும் உள்ளன. எங்களிடம் எண்ணெயும் தேனும் உள்ளன. நாங்கள் அவற்றை வயல்களில் மறைத்து வைத்துள்ளோம். அவற்றை உனக்குக் கொடுக்க விரும்புகிறோம்” என்றனர். எனவே இஸ்மவேல் அந்தப் பத்துப் பேரையும் தனியாக விட்டுவிட்டான். அவன் அவர்களை மற்றவர்களோடு கொல்லவில்லை. 9 (அந்த அகழி மிகப் பெரியது. இது ஆசா என்னும் யூதா அரசனால் கட்டப்பட்டது. ஆசா அரசன் இந்த அகழியைக் கட்டினான். எனவே போர்க் காலங்களில் அதில் தண்ணீர் இருக்கும். இஸ்ரவேல் அரசனான பாஷாவிடமிருந்து நகரத்தைக் காப்பாற்ற இதனைச் செய்தான். இது நிரம்பும்வரை இஸ்மவேல் மரித்த உடல்களைப் போட்டான்.)
10 இஸ்மவேல், மிஸ்பா நகரத்தில் இருந்த அனைத்து ஜனங்களையும் கைப்பற்றினான். பின்னர் அம்மோனியர் வாழ்ந்த நகரத்தை கடக்கப் புறப்பட்டான். அவர்களில் அரசனது மகள்களும் மற்ற விடுபட்ட மனிதர்களும் இருந்தனர். இவர்களை கெதலியா கவனித்துக்கொள்ளும்படி நேபுசாராதானால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நேபுசராதான், பாபிலோன் அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதி.
11 கரேயாவின் மகனான யோகனானும் அவனோடு இருந்த படை அதிகாரிகளும் இஸ்மவேல் செய்த அனைத்து கெட்டச் செயல்களைப்பற்றியும் கேள்விப்பட்டனர். 12 எனவே யோகனானும் படை அதிகாரிகளும் பல ஆட்களும் நெத்தானியாவின் மகனான இஸ்மவேலோடு சண்டையிடப் போனார்கள். அவர்கள் கிபியோன் நகரத்திலுள்ள பெருங்குளத்து தண்ணீர் அருகில் அவனைப்பிடித்தனர். 13 இஸ்மவேலால் கைது செய்யப்பட்டவர்கள் யோகனானையும் அவனோடு இருந்த படை அதிகாரிகளையும் பார்த்தனர். அந்த ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 14 பிறகு இஸ்மவேலால் சிறை பிடிக்கப்பட்ட அந்த ஜனங்கள் அனைவரும் கரேயாவின் மகனான யோகனானிடம் ஓடிச் சென்றனர். 15 ஆனால் இஸ்மவேலும் அவனது எட்டு ஆட்களும் யோகனானிடமிருந்து தப்பித்துக்கொண்டனர். அவர்கள் அம்மோனிய ஜனங்களிடம் ஓடிப்போனார்கள்.
16 எனவே, கரேயாவின் மகனான யோகனானும் அவனது படையதிகாரிகளும் கைதிகளை விடுவித்தனர். இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்திருந்தான். மிஸ்பாவிலுள்ள ஜனங்களைக் கைப்பற்றியிருந்தான். மீதியிருந்தவர்களில் வீரர்கள், பெண்கள், குழந்தைகள், சபை அதிகாரிகள் என இருந்தனர். யோகனான் அவர்களை கிபியோன் நகரிலிருந்து திரும்பக் கொண்டு வந்தான்.
எகிப்திற்குத் தப்பித்தல்
17-18 யோகனானும் மற்றப் படை அதிகாரிகளும் கல்தேயர்களுக்கு பயந்தனர். பாபிலோனின் அரசன் கெதலியாவை யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுத்திருந்தான். ஆனால் இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்துவிட்டான். யோகனான், கல்தேயர்கள் கோபமாக இருப்பார்கள் என்று அஞ்சினான். எனவே அவர்கள் எகிப்துக்கு ஓடிப்போக முடிவு செய்தனர். எகிப்துக்குப் போகும் வழியில் அவர்கள் கெருத்கிம்காமினில் தங்கினார்கள். கெருத்கிம்காமின் பெத்லேகம் நகருக்கு அருகில் இருக்கிறது.
42 அவர்கள் கெருத் கிம்காமினில் இருக்கும் போது, யோகனானும் ஓசாயாவின் மகனான யெசனியாவும் தீர்க்கதரிசி எரேமியாவிடம் சென்றனர். எல்லாப் படை அதிகாரிகளும் யோகனான் மற்றும் யெசனியாவுடன் சென்றனர். முக்கியத்துவம் குறைந்த ஜனங்களில் இருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை அனைத்து ஜனங்களும் எரேமியாவிடம் சென்றனர். 2 அந்த ஜனங்களனை வரும் எரேமியாவிடம், “எரேமியா, நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை தயவுசெய்துக் கேளும். யூதாவின் வம்சத்திலிருந்து தப்பிப் பிழைத்த இந்த ஜனங்களுக்காக உமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்யும். எரேமியா, எங்களில் நிறைய பேர் மீதியாக இருக்கவில்லை என்பதை நீர் பார்க்கமுடியும். ஒரு காலத்தில் நாங்கள் ஏராளமாக இருந்தோம். 3 எரேமியா, நாங்கள் எங்கே போக வேண்டும், நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று உமது தேவனாகிய கர்த்தர் என்ன கூறுகிறார் என்று கர்த்தரிடம் ஜெபம்செய்துக்கேளும்” என்றனர்.
4 பிறகு, எரேமியா தீர்க்கதரிசி, “நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்கிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டபடி நான் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்கிறேன். கர்த்தர் சொல்கிற எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்வேன். நான் உங்களிடமிருந்து எதையும் மறைக்கமாட்டேன்” என்றான்.
5 பிறகு, அந்த ஜனங்கள் எரேமியாவிடம், “நாங்கள், உமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்யாவிட்டால், பிறகு கர்த்தரே எங்களுக்கு எதிரான உண்மையான நம்பிக்கையுள்ள சாட்சியாக இருப்பார் என்று நம்புவோம். உமது தேவனாகிய கர்த்தர் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவே உம்மை அனுப்பியுள்ளார் என அறிகிறோம். 6 நாங்கள் அச்செய்தியை விரும்புகிறோமா அல்லது அச்செய்தியை விரும்பவில்லையா என்பது ஒரு பொருட்டன்று. நமது தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் அடிபணிவோம். நாங்கள் உம்மை எங்களுக்கான செய்தியை அறியவே அனுப்புகிறோம். அவர் என்ன சொல்கிறாரோ அதற்கு நாங்கள் அடிபணிவோம். பிறகு எங்களுக்கு நல்லவை நடக்கும். ஆம் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிவோம்” என்றனர்.
7 பத்து நாட்கள் முடிந்ததும், கர்த்தரிடமிருந்து செய்தி எரேமியாவிற்கு வந்தது. 8 பிறகு எரேமியா, கரேயாவின் மகனான யோகனானையும் அவனுடனிருந்த படை அதிகாரிகளையும் சேர்ந்து அழைத்தான். எரேமியா, முக்கியத்துவம் குறைந்த ஆட்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஆட்கள்வரை அனைத்து ஜனங்களையும் அழைத்தான். 9 பிறகு அவர்களிடம் எரேமியா, “இஸ்ரவேலர்களின் தேவனாகிய ஆண்டவர் கூறுவது இதுதான், நீங்கள் என்னை அவரிடம் அனுப்பினீர்கள். நான் தேவனோடு வழக்காடி நான் அவரிடத்தில் நீங்கள் கேட்க விரும்பியதை கேட்டேன். கர்த்தர் சொல்கிறது இதுதான். 10 ‘ஜனங்களாகிய நீங்கள் யூதாவில் தங்கினால் நான் உங்களைப் பலமுள்ளவர்களாகச் செய்வேன். நான் உங்களை அழிக்கமாட்டேன். நான் உங்களை நடுவேன். நான் உங்களைத் தள்ளமாட்டேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால், நான் உங்களுக்கு ஏற்படுத்திய பயங்கரமான செயல்களுக்காக வருத்தப்படுகிறேன். 11 இப்போது நீங்கள் பாபிலோன் அரசனுக்குப் பயப்படுகிறீர்கள். ஆனால் பாபிலோன் அரசனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்’ இதுதான் கர்த்தருடைய வார்த்தை, ‘ஏனென்றால் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களைக் காப்பாற்றுவேன். நான் உங்களை விடுவிப்பேன். நான் உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவிப்பேன். 12 நான் உங்களிடம் தயவாய் இருப்பேன். பாபிலோனின் அரசனும் உங்களை இரக்கத்தோடு நடத்துவான். அவன் உங்களை திரும்பவும் உங்கள் நாட்டுக்குக் கொண்டு வருவான்.’ 13 ஆனால் நீங்கள், ‘நாங்கள் யூதாவில் தங்கமாட்டோம்’ என்று சொல்லலாம். அவ்வாறு நீங்கள் சொன்னால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிய மறுக்கிறீர்கள். 14 நீங்கள், ‘இல்லை. நாங்கள் போய் எகிப்தில் வாழ்வோம். எகிப்திலே நாங்கள் போரினிமித்தமாக கவலைப்படமாட்டோம். நாங்கள் எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கமாட்டோம். எகிப்தில் நாங்கள் பசியோடு இருக்கமாட்டோம்’ என்று சொல்லலாம். 15 நீங்கள் அவ்வாறு சொன்னால், பிறகு கர்த்தர் சொல்லும் வார்த்தையைக் கேளுங்கள். யூதாவில் உயிர் பிழைத்தவர்களே கேளுங்கள். இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது: ‘நீங்கள் எகிப்துக்குப் போய் வாழ வேண்டும் என்று முடிவு செய்தால் பிறகு இவை எல்லாம் நிகழும். 16 நீங்கள் போரின் வாளுக்கு அஞ்சுகிறீர்கள். ஆனால் இது அங்கே உங்களைத் தோற்கடிக்கும். நீங்கள் பசியைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். ஆனால் எகிப்தில் நீங்கள் பசியோடு இருப்பீர்கள். நீங்கள் அங்கே மரிப்பீர்கள். 17 எகிப்துக்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்த ஒவ்வொருவரும் வாள் அல்லது பசி அல்லது பயங்கர நோயால் மரிப்பார்கள். எகிப்துக்குப் போகிற ஒருவனும் உயிர் பிழைக்கமாட்டான். நான் அவர்களுக்குக் கொண்டு வருகிற பயங்கரமானவற்றிலிருந்து ஒருவன் கூட தப்பிக்கமாட்டான்.’
18 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘எருசலேமிற்கு எதிராக கோபத்தை நான் காண்பித்தேன். எருசலேமில் வாழ்ந்த ஜனங்களை நான் தண்டித்தேன். அதே வழியில் எகிப்திற்குச் செல்கிற ஒவ்வொருவரிடமும் எனது கோபத்தைக் காட்டுவேன். மற்றவர்களுக்குத் தீமை ஏற்படுவதைப்பற்றி ஜனங்கள் பேசும்போது உங்களை சான்றாகக் காட்டுவார்கள். நீங்கள் ஒரு சாப வார்த்தைப்போன்று ஆவீர்கள். ஜனங்கள் உங்களை எண்ணி அவமானம் அடைவார்கள். ஜனங்கள் உங்களை நிந்திப்பார்கள். நீங்கள் யூதாவை மீண்டும் பார்க்கமாட்டீர்கள்.’
19 “யூதாவில் உயிர் பிழைத்தவர்களே, கர்த்தர் உங்களுக்கு, ‘எகிப்திற்குப் போக வேண்டாம்’ என்று நான் இப்பொழுது எச்சரிக்கிறேன். 20 நீங்கள் தவறு செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் மரணத்துக்குக் காரணம் ஆகும். நீங்கள் என்னிடம், ‘எங்களுக்காக எங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய். கர்த்தர் என்ன செய்யவேண்டுமென்று சொல்கிறாரோ அனைத்தையும் சொல். நாங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறோம்’ என்றீர்கள். 21 எனவே இன்று, நான் உங்களிடம் கர்த்தருடைய செய்தியைச் சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்து நீங்கள் செய்யவேண்டியவற்றை உங்களுக்கு சொல்ல சொன்னதை எல்லாம் நீங்கள் செய்யாமலிருக்கிறீர்கள். 22 எனவே, இப்போது நீங்கள் உறுதியாக புரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் எகிப்திற்குச் சென்று வாழ விரும்புகிறீர்கள். ஆனால் எகிப்தில் இவை எல்லாம் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் வாள் அல்லது பசி அல்லது பயங்கரமான நோயால் மரிப்பீர்கள்” என்றான்.
43 எனவே எரேமியா ஜனங்களுக்கு அவர்களது தேவனாகிய கர்த்தர் சொன்ன வார்த்தையைச் சொல்லி முடித்தான். கர்த்தர் ஜனங்களுக்குச் சொல்லும்படி எரேமியாவை அனுப்பியவாறு எல்லாவற்றையும் சொன்னான்.
2 ஓசாயாவின் மகனாகிய அசரியாவும் கரேயாவின் மகனான யோகனானும் மற்றும் சிலரும் இறுமாப்போடும் பிடிவாதமானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் எரேமியாவிடம் கோபம் கொண்டனர். அவர்கள் எரேமியாவிடம், “எரேமியா, நீ பொய் சொல்லுகிறாய். எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை, ‘நீங்கள் எகிப்துக்கு வாழ போகவேண்டாம்’ என்று எங்களிடம் சொல்ல அனுப்பவில்லை. 3 எரேமியா, நேரியாவின் மகனான பாருக் எங்களுக்கு எதிராக உன்னை ஏவியிருக்கிறான் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களை பாபிலோனிய ஜனங்களிடம் கொடுக்குமாறு அவன் விரும்புகிறான். நீ இதனைச் செய்யுமாறு அவன் விரும்புகிறான். அதனால் அவர்கள் எங்களைக் கொல்ல முடியும். அல்லது நீ இதனைச் செய்யுமாறு விரும்புகிறான். அதனால் அவர்கள் எங்களைக் கைதிகளாக்கி பாபிலோனுக்குக் கொண்டுபோகமுடியும்” என்று சொன்னார்கள்.
4 எனவே யோகனான், படை அதிகாரிகள் மற்றும் அனைத்து ஜனங்களும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிபணியவில்லை. கர்த்தர் அவர்களுக்கு யூதாவில் தங்கும்படி கட்டளையிட்டிருந்தார். 5 ஆனால் கர்த்தருக்கு அடிபணிவதற்குப் பதிலாக, யோகனான் மற்றும் படை அதிகாரிகளும் தப்பியவர்களை யூதாவில் இருந்து எகிப்துக்குக் கொண்டு சென்றனர். கடந்த காலத்தில் பகைவர் பிற நாடுகளுக்கு அவர்களை எடுத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் யூதாவிற்குத் திரும்பினார்கள். 6 இப்பொழுது யோகனான் மற்றும் அனைத்து படையதிகாரிகளும் எல்லா ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை எகிப்துக்கு வழி நடத்திக் கொண்டு சென்றனர். அந்த ஜனங்களுடன் அரசனின் மகள்களும் இருந்தனர். (நேபுசராதான் அவர்களை கவனித்துக்கொள்ளும்படி கெதலியாவை நியமித்தான். நேபுசராதான் பாபிலோனிய அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதியாக இருந்தான்.) யோகனான் தீர்க்கதரிசி எரேமியாவையும் நேரியாவின் மகனான பாருக்கையும் அழைத்துப் போனான். 7 அந்த ஜனங்கள் கர்த்தர் சொன்னவற்றைக் கேட்கவில்லை. எனவே அனைத்து ஜனங்களும் எகிப்துக்குச் சென்றனர். அவர்கள் தக்பானேஸ் எனும் நகரத்திற்குச் சென்றனர்.
8 தக்பானேஸ் நகரத்தில், கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான். 9 “எரேமியா, சில பெரிய கற்களை எடுத்து தக்பானேஸ் நகரத்தில், அவற்றைப் பார்வோனுடைய அரண்மனைக்கு முன்னால் ஒலிமுக வாசலில் செங்கல் நடைபாதையில் களிமண்ணுக்குள் புதைத்துவை. யூதாவின் ஆட்கள் எல்லோரும் பார்க்கும்போதே நீ இவற்றைச் செய். 10 பிறகு, உன்னை கவனித்துக்கொண்டிருக்கிற யூதாவின் ஆட்களிடம் கூறு: ‘இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவது. நான் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரை இங்கே வர அனுப்புவேன். அவன் எனது வேலைக்காரன். நான் புதைத்து வைத்த இக்கல்லின் மேல் அவனது சிங்காசனத்தை வைக்கச் செய்வேன். அவன் தனது இராஜ கூடாரத்தை அதன் மேல் விரிப்பான். 11 நேபுகாத் நேச்சார் இங்கே வந்து எகிப்தைத் தாக்குவான். மரிக்க வேண்டியவர்களுக்கு அவன் மரணத்தைக் கொண்டுவருவான். அவன் அடிமைத்தனத்திற்கு ஏதுவானவர்களை சிறையிருக்கச் செய்வான். வாளால் கொல்லப்படத்தக்கவர்களைக் கொல்ல வாளை அவன் கொண்டு வருவான். 12 நேபுகாத்நேச்சார் எகிப்திலுள்ள பொய்த் தெய்வங்களின் கோயிலில் நெருப்பை மூட்டுவான். அவன் அக்கோயில்களை எரிப்பான். அவன் அந்த விக்கிரகங்களை வெளியே எடுத்துப் போடுவான். ஒரு மேய்ப்பன் தனது ஆடையைச் சுத்தப்படுத்துவதற்கு அதில் உள்ள மூட்டைப்பூச்சிகளையும் ஓட்டுப்பூச்சிகளையும் எடுப்பான். அதே வழியில் நேபுகாத்நேச்சார் எகிப்தைச் சுத்தப்படுத்துவான். பிறகு அவன் பத்திரமாக எகிப்தை விடுவான். 13 நேபுகாத்நேச்சார் எகிப்தின் சூரியத்தேவன் ஆலயத்திலுள்ள நினைவுக் கற்களை அழிப்பான். எகிப்தில் உள்ள பொய்த் தெய்வங்களின் ஆலயங்களை அவன் எரித்துப்போடுவான்.’” என்றான்.
எகிப்திலுள்ள யூதா ஜனங்களுக்கு கர்த்தருடைய வார்த்தை
44 கர்த்தரிடமிருந்து எரேமியா ஒரு வார்த்தையைப் பெற்றான். எகிப்தில் வாழுகிற அனைத்து யூதா ஜனங்களுக்கும் இந்த வார்த்தை உரிதானது. இந்த வார்த்தை மிக்தோல், தக்பானேஸ், நோப்பில், பத்ரோன் போன்ற இடங்களில் வாழும் யூதாவின் ஜனங்களுக்கானது. இதுதான் செய்தி: 2 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவதாவது, ‘ஜனங்களாகிய நீங்கள் யூதாவின் நகரங்களிலும் எருசலேமிலும் நான் ஏற்படுத்திய பயங்கரமானவற்றைப் பார்த்தீர்கள். அந்த நகரங்கள் எல்லாம் இன்று காலியான கற்தூண்களாக உள்ளன. 3 அந்த இடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. ஏனென்றால், அதில் வாழ்ந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர். அது எனக்குக் கோபத்தைத் தந்தது. கடந்த காலத்தில் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அத்தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. 4 மீண்டும் மீண்டும் எனது தீர்க்கதரிசிகளை அவர்களிடம் அனுப்பினேன். அத்தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்களாக இருந்தனர். அத்தீர்க்கதரிசிகள் எனது செய்திகளைப் பேசினார்கள். அந்த ஜனங்களிடம், “இப்பயங்கரமானவற்றைச் செய்யாதீர்கள். விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதை நான் வெறுக்கிறேன்” என்றனர். 5 ஆனால் அந்த ஜனங்கள் தீர்க்கதரிசிகள் சொன்னதைக் கேட்கவில்லை. அவர்கள் அத்தீர்க்கதரிசிகளிடம் தம் கவனத்தைச் செலுத்தவில்லை. அந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்வதை நிறுத்தவில்லை. அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகள் கொடுப்பதை நிறுத்தவில்லை. 6 எனவே நான் அந்த ஜனங்களுக்கு எதிராக என் கோபத்தைக் காட்டினேன். நான் யூதாவின் பட்டணங்களையும் எருசலேமின் தெருக்களையும் தண்டித்தேன். எனது கோபம், எருசலேமையும் யூதாவின் பட்டணங்களையும் இன்றைக்குள்ள வெறுமையான கற்குவியல்களாக்கிவிட்டது.’”
7 எனவே, “இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘தொடர்ந்து விக்கிரகங்களைத் தொழுதுக்கொண்டு நீங்கள் உங்களையே ஏன் காயப்படுத்திக்கொள்கிறீர்கள். நீங்கள் ஆண்களையும் பெண்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் யூதாவின் வம்சத்திலிருந்து பிரித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஒன்றுமில்லாதவர்களைபோல ஆக்க நீங்களே காரணமாகுகிறீர்கள். 8 ஜனங்களாகிய நீங்கள் விக்கிரகங்களைச் செய்து எனக்கு ஏன் கோபத்தை உண்டுப்பண்ணுகிறீர்கள்? இப்பொழுது நீங்கள் எகிப்தில் வாழ்கிறீர்கள். எகிப்திலுள்ள பொய்த் தெய்வங்களுக்கு பலிகள் கொடுப்பதன் மூலம் இப்போது நீங்கள் என்னைக் கோபமூட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களையே அழிப்பீர்கள். இது உங்களுடைய தவறு. நீங்கள் எல்லா ஜாதிகள் மத்தியிலும் ஒரு சாபச் சொல்லாகவும், அவமானப்பட்டவர்களாகவும் ஆவீர்கள். அடுத்த நாட்டு ஜனங்கள் அதைக் கெட்டதாகப் பேசுவார்கள். பூமியில் உள்ள மற்ற நாட்டினர் உங்களை கேலி செய்வார்கள். 9 உங்கள் முற்பிதாக்கள் செய்த பொல்லாப்புகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா? யூதாவின் அரசர்களும் அரசிகளும் செய்த பொல்லாப்புகளை மறந்து விட்டீர்களா? யூதாவிலும் எருசலேம் வீதிகளிலும் நீங்களும் உங்கள் மனைவியரும் செய்த பொல்லாப்புகளை மறந்துவிட்டீர்களா? 10 இந்த நாளிலும் கூட யூதாவின் ஜனங்கள் தங்களைத் தாங்கள் தாழ்த்திக்கொள்ளவில்லை. அவர்கள் எனக்கு எவ்வித மரியாதையும் செய்யவில்லை. அந்த ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றவில்லை. நான் உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் கொடுத்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை.’
11 “எனவே, இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது: ‘உங்களுக்கு பயங்கரமானவை நிகழவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். யூதாவின் வம்சம் முழுவதையும் நான் அழிப்பேன். 12 உயிர் பிழைத்தவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர். அந்த ஜனங்களும் எகிப்துக்கு வந்தனர். யூதாவின் வம்சத்திலுள்ள அந்த சிலரையும் நான் அழிப்பேன். அவர்கள் வாளால் கொல்லப்படுவார்கள் அல்லது பசியால் மரிப்பார்கள். அவர்களுக்கு நடப்பதைக் கேள்விப்பட்டு மற்ற நாடுகள் அஞ்சும். மற்றவர்கள் அவரை சபித்து நிந்தனைக்குள்ளாக்கிடுவார்கள். அந்த யூதா ஜனங்களை அவர்கள் அவமதிப்பார்கள். 13 எகிப்தில் வாழ்வதற்குப் போன அந்த ஜனங்களை நான் தண்டிப்பேன். நான் வாள்கள், பசி மற்றும் பயங்கரமான நோய்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களைத் தண்டிப்பேன். நான் எருசலேம் நகரத்தைத் தண்டித்ததுபோன்று அந்த ஜனங்களை நான் தண்டிப்பேன். 14 யூதாவிலிருந்து தப்பிப் பிழைத்து எகிப்திற்கு வாழப் போனவர்களில் ஒருவர் கூட எனது தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. அந்த ஜனங்கள் யூதாவிற்குத் திரும்பி வந்து அங்கே வாழ விரும்புகின்றனர். ஆனால் ஒருவரும் யூதாவுக்குத் திரும்பிப் போகமாட்டார்கள். ஒருவேளை சிலர் மட்டும் தப்பித்துக்கொள்ளலாம்.’”
15 யூதாவின் பெண்களில் பலர் எகிப்தில் வாழும்போது அந்நிய தெய்வங்களுக்குப் பலிகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களது கணவர்களுக்கு இது தெரியும். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. யூதாவின் ஜனங்களில் பெரிய கூட்டத்தினர் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் எகிப்தின் தென்பகுதியில் வாழுகின்ற யூதா ஜனங்களாவார்கள். மற்ற தெய்வங்களுக்கு பலிகள் கொடுத்துக்கொண்டிருக்கிற அப்பெண்களின் கணவர்கள் எரேமியாவிடம், 16 “நீ எங்களுக்குச் சொன்ன கர்த்தருடைய வார்த்தையை நாங்கள் கேட்கமாட்டோம். 17 வானராக்கினிக்கு பலிகள் கொடுப்பதாக நாங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்தபடி எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் அவளைத் தொழுதுகொள்ள பலிகள் கொடுப்போம். பானங்களின் காணிக்கையை ஊற்றுவோம். நாங்கள் இதனைக் கடந்த காலத்தில் செய்தோம். எங்கள் முற்பிதாக்கள், எங்கள் அரசர்கள், எங்கள் அதிகாரிகள் கடந்த காலத்தில் இதனைச் செய்தனர். யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் தெருக்களிலும் நாங்கள் அவற்றைச் செய்தோம். சொர்க்கத்தின் அரசியை நாங்கள் தொழுதுவந்த அந்நேரத்தில் எங்களிடம் நிறைய உணவு இருந்தது. நாங்கள் வெற்றிகரமாக இருந்தோம். கெட்டவை எதுவும் நடக்கவில்லை. 18 ஆனால் நாங்கள் வானராக்கினிக்கு தொழுதுகொள்வதை நிறுத்தினோம். அவளுக்குப் பானப் பலிகள் ஊற்றுவதை நிறுத்தினோம். அவளுக்கு தொழுகைகள் செய்வதை நிறுத்தியதிலிருந்து எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. எங்களது ஜனங்கள் வாள்களாலும் பசியாலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றனர்.
19 பிறகு பெண்கள் பேசினார்கள். அவர்கள் எரேமியாவிடம், “நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்கள் அறிவார்கள். வானராக்கினிக்கு பலிகள் கொடுக்க எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளுக்குப் பானங்களின் காணிக்கை ஊற்ற எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளைப் போன்ற அப்பங்களை நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்களும் அறிவார்கள்” என்றனர்.
20 பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுடன் பேசினான். இவற்றையெல்லாம் இப்பொழுதுதான் சொன்ன அவர்களுடன் எரேமியா பேசினான். 21 எரேமியா அந்த ஜனங்களிடம், “யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் நீங்கள், பலிகள் செய்ததை கர்த்தர் நினைவுப்படுத்தினார். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், உங்கள் அரசர்களும், உங்கள் அதிகாரிகளும், தேசத்தின் ஜனங்களும் இதனைச் செய்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கர்த்தர் நினைவுப்படுத்தினார். அதைப்பற்றி நினைத்தார். 22 பிறகு கர்த்தருக்கு உங்களோடு அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. நீங்கள் செய்த பயங்கரமான காரியங்களை கர்த்தர் வெறுத்தார். எனவே கர்த்தர் தேசத்தைக் காலியான வனாந்தரமாக்கினார். இப்பொழுது அங்கே எவரும் வாழவில்லை. மற்றவர்கள் அத்தேசத்தைப் பற்றி அருவருப்பாகப் பேசுகிறார்கள். 23 அந்த தீமையெல்லாம் உங்களுக்கு ஏற்பட்டன. ஏனென்றால், நீங்கள் அந்நிய தெய்வங்களுக்குப் பலிகள் கொடுத்தீர்கள். கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்தீர்கள். நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரது போதனைகளையும் அவர் உங்களுக்குக் கொடுத்த சட்டங்களையும் பின்பற்றவில்லை. உங்கள் உடன்படிக்கையின் பகுதியை நீங்கள் பாதுகாக்கவில்லை” என்று பதிலளித்தான்.
24 பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களிடமும் பேசினான். எரேமியா சொன்னான், “யூதா ஜனங்களாகிய நீங்கள், இப்பொழுது எகிப்தில் இருக்கிறீர்கள். கர்த்தருடைய வார்த்தையை கவனியுங்கள்: 25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘பெண்களாகிய நீங்கள் சொன்னதையே செய்தீர்கள். நீங்கள், “நாங்கள் செய்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம். பலிகள் கொடுப்பதாகவும் பானபலி ஊற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தோம்” என்றீர்கள். எனவே அவ்வாறே செய்யுங்கள். நீங்கள் செய்வதாக வாக்குறுதி கொடுத்தவற்றைச் செய்துவிடுங்கள். உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.’ 26 ஆனால் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களே! ‘நான் எனது பெரும் பெயரைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். யூதாவிலுள்ள ஜனங்களில் எகிப்தில் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கிற எவரும் என் நாமத்தால் மீண்டும் வாக்குறுதி செய்யமாட்டார்கள் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். அவர்கள் மீண்டும் “இதோ கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு…” என்று சத்தியம் செய்யமாட்டார்கள். 27 நான் யூதாவின் ஜனங்கள் மேல் கவனமாயிருக்கிறேன். ஆனால் நான் அவர்களின் மேல் நன்மைக்காக கவனித்துக்கொண்டிருக்கவில்லை. நான் அவர்கள் மேல் தீமை செய்வதற்காகவே கவனித்துக்கொண்டிருக்கிறேன். எகிப்தில் வாழ்கிற யூதாவின் ஜனங்கள் பசியால் மரிப்பார்கள், அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் முடிந்து போகும்வரை தொடர்ந்து மரித்துக்கொண்டிருப்பார்கள். 28 யூதா ஜனங்களில் சிலர் வாளால் கொல்லப்படுவதிலிருந்து தப்புவார்கள். அவர்கள் எகிப்திலிருந்து யூதாவிற்குத் திரும்பி வருவார்கள். ஆனால் தப்பி வருகிற யூதாவின் ஜனங்கள் மிகச் சிலராக இருப்பார்கள். பிறகு தப்பிப்பிழைத்த அந்த யூதா ஜனங்கள், எகிப்தில் வாழ்பவர்கள், யாருடைய வார்த்தை உண்மையாகிறது என்பதை அறிந்துக்கொள்வார்கள். எனது வார்த்தையா? அல்லது அவர்களின் வார்த்தையா? எது உண்மையானது என்பதை அவர்கள் அறிவார்கள். 29 நான் உங்களுக்கு அடையாளத்தைத் தருவேன்’ இது கர்த்தருடைய வார்த்தை, ‘எகிப்தில் நான் உங்களைத் தண்டிப்பேன். பிறகு நான் உங்களைத் தண்டிப்பேன் என்ற எனது வாக்கு உண்மையாக நடப்பதை நீங்கள் அறிவீர்கள். 30 நான் என்ன சொன்னேனோ அதைச் செய்வேன் என்பதற்கு இதுவே உங்களது சான்றாகும்’ கர்த்தர் சொல்லுவது என்னவெனில், ‘பார்வோன் ஒப்பிரா எகிப்தின் அரசன். அவனது பகைவர்கள் அவனைக் கொல்ல விரும்புகின்றனர். நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவர்களிடம் கொடுப்பேன். யூதாவின் அரசனாக சிதேக்கியா இருந்தான். நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் பகைவனாக இருந்தான். நான் சிதேக்கியாவை அவனது பகைவனிடம் கொடுத்தேன். அதே வழியில் நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவரிடம் கொடுப்பேன்’” என்று சொன்னான்.
பாருக்குக்கு ஒரு செய்தி
45 யோயாக்கீம் யோசியாவின் மகன். யூதாவில் யோயாக்கீமின் நான்காவது ஆட்சியாண்டில் தீர்க்கதரிசியான எரேமியா நேரியாவின் மகனான பாருக்கிடம் இவற்றைச் சொன்னான். பாருக் ஒரு புத்தகச்சுருளில் இவற்றை எழுதினான். எரேமியா பாருக்கிடம் சொன்னது இதுதான்: 2 “இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொல்வது: 3 ‘பாருக், நீ, “இது எனக்கு மிகவும் கொடூரமானது. கர்த்தர் எனக்குத் துக்கத்தை வேதனையோடு கொடுத்திருக்கிறார் நான் மிகவும் களைத்துப் போனேன். எனது கஷ்டத்தால் நான் தோய்ந்து போனேன். நான் இளைப்பாற முடியவில்லை”’” என்று சொன்னாய். 4 கர்த்தர் சென்னார்: “எரேமியா, பாருக்கிடம் இதனைச் சொல். இதுதான் கர்த்தர் கூறுகிறது: ‘நான் கட்டியவற்றை இடித்துப்போடுவேன். நான் நாட்டியிருக்கின்றவற்றையே பிடுங்கிப் போடுவேன். யூதாவின் எல்லா இடங்களிலும் நான் இதனைச் செய்வேன். 5 பாருக், நீ உனக்காக பெருஞ் செயலுக்காக எதிர்பார்த்திருக்கிறாய். ஆனால் அவற்றை எதிர்பார்க்காதே. ஏனென்றால், அனைத்து ஜனங்களுக்கும் பயங்கரமானவை நிகழும்படிச் செய்வேன்.’ கர்த்தர், ‘பல இடங்களுக்கு நீ போக வேண்டியிருக்கும். ஆனால், நீ எங்கே போனாலும் உன்னை உயிரோடு தப்பிக்கும்படி நான் செய்வேன்’” என்று கூறினார்.
தேசங்களைப்பற்றி கர்த்தரிடமிருந்து வந்த செய்திகள்
46 தீர்க்கதரிசியான எரேமியாவிற்கு இச்செய்திகள் வந்தன. இச்செய்திகள் பல்வேறு தேசங்களைப் பற்றியவை.
எகிப்தைப்பற்றிய செய்திகள்
2 எகிப்து தேசத்தைப்பற்றிய செய்தி இது. பார்வோன் நேகோவின் படையைப்பற்றிய செய்தி இது. நேகோ எகிப்தின் அரசனாக இருந்தான். அவனது படை கர்கேமிசிலே தோற்கடிக்கப்பட்டது. கர்கேமிஷ் ஐபிராத்து நதிக்கரையில் இருக்கிறது. யோயாக்கீம் யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் கர்கேமிஷிலே பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரின் படை பார்வோன்நேகோவின் படையை தோற்கடித்தது. யோயாக்கீம் அரசன் யோசியாவின் மகன். எகிப்துக்கு கர்த்தருடைய வார்த்தை இதுதான்.
3 “உங்களது பெரியதும் சிறியதுமான கேடயங்களைத் தயார் செய்துக்கொள்ளுங்கள்.
போருக்கு வாருங்கள்.
4 குதிரைகளைத் தயார் செய்யுங்கள்.
வீரர்களே, உங்கள் குதிரைகள் மீது ஏறுங்கள்.
போருக்கு உங்கள் இடத்துக்குப் போங்கள்.
உங்கள் தலைக்கவசங்களை அணிந்துக்கொள்ளுங்கள்.
உங்கள் ஈட்டிகளைக் கூர்மைப்படுத்துங்கள்.
உங்கள் கவசங்களை அணிந்துக்கொள்ளுங்கள்.
5 நான் என்ன பார்க்கிறேன்?
அந்தப் படை பயந்திருக்கிறது
வீரர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் தைரியமான வீரர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் அவசரமாக ஓடினார்கள்.
அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை.
அவர்களைச் சுற்றிலும் ஆபத்து இருக்கிறது”
கர்த்தர் இவற்றைக் கூறினார்.
6 “வேகமாக ஓடுகிறவன் ஓடவேண்டாம்.
பலமுடைய வீரர்கள் தப்பித்துக்கொள்ள வேண்டாம்.
அவர்கள் அனைவரும் இடறி விழுவார்கள்.
இது ஐபிராத்து நதிக்கரையில் வடக்கில் நிகழும்.
7 யார் நைல் நதியைப்போன்று வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
யார் அந்தப் பலமும் வேகமும் கொண்ட நதியைப்போன்று வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
8 எகிப்து நைல் நதியைப்போன்று
புரண்டு வருகிறான்.
அந்த ஆற்றின் பலத்தையும் வேகத்தையும் போன்று
எகிப்து வருகிறான்.
எகிப்து, ‘நான் வந்து பூமியை மூடுவேன்.
நான் நகரங்களையும் அவற்றில் உள்ள ஜனங்களையும் அழிப்பேன்’ என்று கூறுகிறான்.
9 குதிரை வீரர்களே, போருக்குப் போய் ஏறுங்கள்.
தேரோட்டிகளே, வேகமாக ஓட்டுங்கள்.
தைரியமான வீரர்களே புறப்படுங்கள்.
கஷ் மற்றும் பூத்திலிருந்து வந்த வீரர்களே! உங்கள் கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
லீதிய வீரர்களே! உங்கள் வில்லைப் பயன்படுத்துங்கள்.
10 “ஆனால் அந்த நேரத்தில், எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தரகிய ஆண்டவர் வெல்லுவார்.
அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏதுவான தண்டனையை அவர் கொடுப்பார்.
கர்த்தருடைய பகைவர்கள் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெறுவார்கள்.
அது முடியும்வரை பட்டயம் பட்சிக்கும்.
அதன் இரத்தத் தாகம் தீர்ந்து திருப்தி அடையும்வரை பட்டயம் பட்சிக்கும்.
இது நிறைவேறும்.
ஏனென்றால், எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவருக்கான பலி இது.
அப்பலி, வடக்குத் தேசத்தில் ஐபிராத்து நதியின் எகிப்தியப் படை ஆகும்.
11 “எகிப்தே, கீலேயாத்துக்குப் போய் கொஞ்சம் மருந்தை பெற்றுக்கொள்.
பல மருந்துகளை நீ தயார் செய்வாய்.
ஆனால் அவை உதவாது. நீ குணமாக்கப்படமாட்டாய்.
12 தேசங்கள் உனது அழுகையைக் கேட்கும்.
உங்கள் அழுகை பூமி முழுவதும் கேட்கும்.
ஒரு ‘தைரியமான வீரன்’ இன்னொரு ‘தைரியமான வீரன்’ மேல் மோதுவான்.
இரண்டு தைரியமான வீரர்களும் ஒருவர்மேல் ஒருவர் விழுவார்கள்.”
13 தீர்க்கதரிசியான எரேமியாவிடம் கர்த்தர் சொன்ன வார்த்தைகள் இதுதான். இந்த வார்த்தைகள் பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சார் எகிப்தைத் தாக்கவருவது பற்றியதாகும்.
14 “எகிப்தில் இச்செய்தியை அறிவி.
மிக்தோ நகரில் இதனைச் சொல்.
நோப்பிலும் தக்பானேசிலும் இதைச் சொல்.
‘போருக்குத் தயாராகுங்கள்.
ஏனென்றால், உன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள் வாள்களால் கொல்லப்படுகிறார்கள்.’
15 “எகிப்தே உனது பலமான வீரர்கள் கொல்லப்படுவார்கள்.
அவர்களால் நிற்க முடியாது.
ஏனென்றால், கர்த்தர் அவர்களைக் கீழே தள்ளுவார்.
16 அவ்வீரர்கள் மீண்டும் மீண்டும் இடறுவார்கள்,
அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்.
அவர்கள், ‘எழு நம் சொந்த ஜனங்களிடம் திரும்பிச் செல்லுவோம்.
நம் தாய் நாட்டிற்கு போகலாம்.
நம் பகைவர்கள் நம்மைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் வெளியேற வேண்டும்’ என்று சொல்லுவார்கள்.
17 அவர்களின் தாய்நாடுகளில் அவ்வீரர்கள் சொல்வார்கள்,
‘எகிப்திய அரசனான பார்வோன் வெறும் ஆரவாரமாக இருக்கிறான்.
அவனது மகிமைக்குரிய காலம் முடிந்துவிட்டது.’”
18 இந்த வார்த்தை அரசரிடமிருந்து வந்தது.
அந்த அரசர் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
“நான் என் ஜீவனில் ஆணையிட்டுச் சொல்கிறேன்.
ஒரு வல்லமைமிக்கத் தலைவன் வருவான்.
அவன் கடலருகில் உள்ள தாபோர்மலை மற்றும் கர்மேல் மலையைப் போன்றும் இருப்பான்.
19 எகிப்திய ஜனங்களே, உங்கள் பொருட்களை கட்டுங்கள்.
சிறைபிடிக்கப்படத் தயாராகுங்கள்.
ஏனென்றால், நோப் காலியான தேசமாக அழிக்கப்பட்டிருக்கிறது.
அந்நகரங்கள் அழிக்கப்படும்.
அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
20 “எகிப்து அழகான பசுவைப் போன்று இருக்கிறது.
ஆனால் குதிரை கொசுவானது அதனைத் துன்புறுத்துவதற்கு வடக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறது.
21 எகிப்தின் படையில் உள்ள கூலிவீரர்கள் கொழுத்த காளை கன்றுகளைப் போன்றிருக்கிறார்கள்.
அவர்கள் திரும்பி ஓடுவார்கள்.
அவர்கள் தாக்குதலை எதிர்த்து பலமாக நிற்கமாட்டார்கள்.
அவர்களின் அழிவுக் காலம் வந்துக்கொண்டிருக்கிறது.
அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்.
22 எகிப்து, தப்பிக்க முயலும்போது
சுபசத்தமிடுகிற பாம்பைப்போல் உள்ளது.
பகைவன் நெருங்கி வந்துக்கொண்டிருக்கிறான்.
எகிப்தியப் படை தப்பித்து ஓட முயன்றுக்கொண்டிருக்கிறது.
எகிப்தைப் பகைவர்கள் கோடரியால் தாக்குவார்கள்.
அது மரங்களை மனிதர்கள் வெட்டுவது போன்றிருக்கும்.”
23 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்:
“அவர்கள் எகிப்திய காடுகளை வெட்டித்தள்ளுவார்கள்.
அந்தக் காட்டில் (படை) ஏராளமான மரங்கள் (வீரர்கள்) இருக்கிறது.
ஆனால் அவை அனைத்தும் வெட்டித்தள்ளப்படும்.
பகை வீரர்கள் வெட்டுக்கிளிகளை விட அதிக எண்ணிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள்.
எவராலும் எண்ண முடியாதபடி அவர்கள் ஏராளமான வீரர்களாக இருக்கிறார்கள்.
24 எகிப்து அவமானப்படும்.
அவளை வடக்கேயிருந்து வரும் பகைவன் தோற்கடிப்பான்.”
25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “தீப்ஸின் தெய்வமான அமோனை நான் விரைவில் தண்டிப்பேன், நான் பார்வோன் எகிப்து மற்றும் அவர்களின் தெய்வங்களையும் தண்டிப்பேன். நான் எகிப்திய அரசர்களைத் தண்டிப்பேன். நான் பார்வோனைச் சார்ந்துள்ள ஜனங்களையும் தண்டிப்பேன். 26 நான் எல்லா ஜனங்களையும் அவர்களது பகைவர்களாலும் அவர்களைக் கொல்ல விரும்புகிறவர்களாலும் தோற்கடிக்கப்படச் செய்வேன். நான் அவர்களை நேபுகாத்நேச்சாரான பாபிலோனின் அரசனிடமும் அவனது வேலைக்காரர்களிடமும் கொடுப்பேன்.” “நீண்ட காலத்துக்கு முன்னால், எகிப்து சமாதானமாக வாழ்ந்தது. இவ்வெல்லா துன்பங்களுக்கும் பிறகு, அது பழையபடி சமாதானமாக மீண்டும் வாழும்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
வட இஸ்ரவேலுக்கு ஒரு செய்தி
27 “யாக்கோபே, என் ஊழியக்காரனே, பயப்படாதே!
இஸ்ரவேலே! அஞ்ச வேண்டாம்!
அந்தத் தூரமான இடங்களிலிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
சிறைப்பட்டிருக்கிற நாடுகளிலிருந்து நான் உன் பிள்ளைகளை மீட்பேன்.
யாக்கோபு மீண்டும் சமாதானமும் பாதுகாப்பும் பெறுவான்.
அவனை எவரும் பயமுறுத்த முடியாது.”
28 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்,
“யாக்கோபே, என் வேலைக்காரனே! பயப்படாதே.
நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உன்னைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவேன்.
ஆனால் உன்னை நான் முழுவதுமாக அழிக்கமாட்டேன்.
ஆனால் அந்த நாடுகளை எல்லாம் அழிப்பேன்.
நீ செய்த தீயச் செயல்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.
எனவே நான் உன்னைத் தண்டனையிலிருந்து தப்பிக்கும்படி விடமாட்டேன்.
நான் உன்னை ஒழுங்குப்படுத்துவேன் ஆனால் நான் நியாயமாக இருப்பேன்.”
பெலிஸ்திய ஜனங்களைப்பற்றியச் செய்தி
47 தீர்க்கதரிசியான எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை. பெலிஸ்தியர்களைப் பற்றிய செய்தி இது. பார்வோன் காத்சா நகரைத் தாக்குவதற்கு முன்னால் இச்செய்தி வந்தது.
2 கர்த்தர் கூறுகிறார், “வடக்கில் பகை வீரர்களைப் பார்.
எல்லாம் ஒன்றுக்கூடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வேகமான ஆறு கரையை மோதிக்கொண்டு வருவதுபோன்று வருவார்கள்.
அவர்கள் நாடு முழுவதையும் வெள்ளம்போன்று மூடுவார்கள்.
அவர்கள் பட்டணங்களையும் அதில் வாழும் ஜனங்களையும் மூடுவார்கள்.
அந்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும்
உதவிக்காக அழுவார்கள்.
3 அவர்கள் ஓடுகின்ற குதிரைகளின் ஓசையைக் கேட்பார்கள்.
அவர்கள் இரதங்களின் ஓசையைக் கேட்பார்கள்.
அவர்கள் சக்கரங்களின் இரைச்சலையும் கேட்பார்கள்.
தந்தைகளால் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாமல் போகும்.
அவர்கள் உதவ முடியாமல் மிகவும் பலவீனமாவார்கள்.
4 பெலிஸ்தியர்கள் எல்லோரையும்
அழிக்கின்ற நேரம் வந்திருக்கின்றது.
தீரு மற்றும் சீதோனில் மிச்சமுள்ளவர்களை
அழிக்கும் காலம் வந்திருக்கிறது.
பெலிஸ்தியர்களை கர்த்தர் மிக விரைவில் அழிப்பார்.
கிரெட்டே தீவிலுள்ள தப்பிப்பிழைத்த ஜனங்களை அவர் அழிப்பார்.
5 காத்சாவில் உள்ள ஜனங்கள் சோகம் அடைந்து தங்கள் தலைகளை மழித்துக்கொள்வார்கள்.
அஸ்கலோனிலிருந்து வந்த ஜனங்கள் மௌனமாக்கப்படுவார்கள்.
பள்ளத்தாக்கிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களே! நீங்கள் உங்களையே இன்னும் எவ்வளவு காலம் வெட்டுவீர்கள்?
6 “கர்த்தருடைய பட்டயமே! நீ இன்னும் விடவில்லை.
நீ எவ்வளவுக் காலத்துக்குச் சண்டையிட்டுக்கொண்டே இருப்பாய்?
நீ உனது உறைக்குள்ளே திரும்பிப்போ!
ஓய்ந்திரு!
7 ஆனால் கர்த்தருடைய பட்டயம் எவ்வாறு ஓயும்?
கர்த்தர் அதற்கு அஸ்கலோன் மற்றும் கடற்கரைகளையும் தாக்கும்படி கட்டளையிட்டார்.”
2008 by World Bible Translation Center