Bible in 90 Days
எருசலேம் மீது தேவனுடைய அன்பு
29 தேவன் கூறுகிறார், “அரியேலைப் பாருங்கள்! தாவீது வாழ்ந்த நகரமே, அரியேல். ஆண்டுதோறும் அவனது விடுமுறைகள் தொடர்ந்து வந்திருக்கின்றன. 2 நான் அரியேலைத் தண்டித்திருக்கிறேன். அந்நகரம் துக்கத்தாலும் அழுகையாலும் நிறைந்திருக்கிறது. ஆனால் அவள் எப்பொழுதும் எனது அரியேலாகவே இருக்கிறாள். 3 அரியேலே, நான் உன்னைச் சுற்றிப் படைகளை வைத்துள்ளேன். நான் உனக்கு எதிராகப்போர்க் கோபுரங்களை எழுப்பினேன். 4 நீ தோற்கடிக்கப்பட்டுத் தரையில் வீழ்த்தப்பட்டாய். இப்பொழுது ஒரு ஆவியின் சத்தத்தைப்போல உனது சத்தம் தரையிலிருந்து எழும்புவதை நான் கேட்கிறேன்”.
5 அங்கே பல அந்நியர்கள் புழுதியின் சிறு துணுக்குகளைப்போல இருக்கிறார்கள். அங்கே சில கொடூரமான ஜனங்கள் காற்றில் பறந்து வரும் பதர்களைப்போன்றுள்ளனர். 6 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உன்னை நில நடுக்கம், இடி, பலத்தகுரல், கூச்சல் ஆகியவற்றால் தண்டிப்பார். அங்கே புயற் காற்று, பெருங்காற்று, நெருப்பு ஆகியவை தோன்றி அழிக்கவும் எரிக்கவும் செய்யும். 7 அரியேலுக்கு எதிராகப் பல நாடுகள் போரிடும். இது இரவில் வருகிற பயங்கரக் கனவு போன்றிருக்கும். படைகள் அரியேலை முற்றுகையிட்டு தண்டித்தன. 8 ஆனால் அப்படைகளுக்கும் இது அத்தகைய கனவாக இருக்கும். அவர்கள் தாம் விரும்புகின்றவற்றைப் பெறுவதில்லை. இது, பசியுள்ளவன் உணவைப்பற்றிக் கனவு காண்பது போலிருக்கும். அவன் எழும்புகிறபோதும் பசியாகவே இருப்பான். இது, தாகமாயுள்ளவன் தண்ணீரைப்பற்றிக் கனவு காண்பது போலிருக்கும். அவன் விழித்தெழுகின்றபோதும் தாகமாகவே இருக்கும். சீயோனுக்கு எதிராகப்போரிடுகிற அனைத்து நாடுகளும் இது போலவே இருக்கும். அந்த நாடுகள் அவை விரும்புவதைப் பெறுவதில்லை.
9 ஆச்சரியப்படுங்கள் பிரமிப்படையுங்கள்.
நீங்கள் நன்றாகக் குடித்திருப்பீர்கள், ஆனால் மதுவினால் அல்ல.
நீங்கள் தள்ளாடி விழுவீர்கள், ஆனால் மதுவினால் அல்ல.
10 கர்த்தர் உங்களைத் தூங்கச் செய்வார்.
கர்த்தர் உங்கள் கண்களை மூடச்செய்வார்.
(தீர்க்கதரிசிகள் உங்கள் கண்களாய் இருக்கிறார்கள்).
கர்த்தர் உங்கள் தலைகளை மூடுவார்.
(தீர்க்கதரிசிகள் உங்கள் தலைகளாய் இருக்கிறார்கள்).
11 இவை நிகழும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். ஆனால் நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய வார்த்தைகள் மூடி முத்திரையிடப்பட்ட புத்தகத்தைப்போல் உள்ளன. 12 நீங்கள் அந்தப் புத்தகத்தை வாசிக்க முடிந்த ஒருவனிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லலாம். ஆனால் அவன், “என்னால் இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியாது. இது மூடப்பட்டிருக்கிறது. என்னால் திறக்கமுடியாது” என்று சொல்வான். அல்லது நீங்கள் அந்தப் புத்தகத்தை வாசிக்கமுடியாத ஒருவனிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லலாம். அதற்கு அவன், “நான் இந்தப் புத்தகத்தை வாசிக்கமுடியாது, ஏனென்றால், எப்படி வாசிக்கவேண்டும் என்று எனக்குத் தெரியாது” என்பான்.
13 எனது ஆண்டவர், “என்னை நேசிப்பதாக இந்த ஜனங்கள் கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் வாயின் வார்த்தைகளால் என்னைப் பெருமைபடுத்துகிறார்கள். ஆனால் அவர்களது இருதயங்கள் என்னை விட்டுத் தொலைவில் உள்ளன. அவர்கள் எனக்குக் காட்டும் மரியாதையானது மனிதர்கள் உண்டாக்கிய சட்டங்களைத் தாங்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு மட்டுமே இருந்தது. 14 எனவே நான் அந்த ஜனங்களை ஆச்சரியப்படுத்த சில வல்லமைமிக்க, அதிசயப்படத்தக்கச் செயல்களைச் செய்வேன். அவர்களது ஞானிகள் தங்கள் ஞானத்தை இழப்பார்கள். அவர்களின் ஞானிகள் புரிந்துகொள்ள முடியாமல் போவார்கள்” என்று சொல்கிறார்.
15 அந்த ஜனங்கள் சிலவற்றை கர்த்தரிடம் மறைக்க முயல்கிறார்கள். கர்த்தர் இதனைப் புரிந்துகொள்ளமாட்டார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அந்த ஜனங்கள் இருட்டில் தங்கள் கெட்ட செயல்களைச் செய்கிறார்கள். அவர்கள் தமக்குள்: “எவரும் எங்களைப் பார்க்க முடியாது. நாங்கள் யார் என்று எவருக்கும் தெரியாது” எனக் கூறுகிறார்கள்.
16 நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள். குயவனை களிமண்ணுக்குச் சமமாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஒருவனால் செய்யப்பட்ட பொருள் அவனைப் பார்த்து “நீ என்னை உன்டாக்கவில்லை” என்று சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இது, ஒரு பானை தன்னை உருவாக்கியவனிடம் “நீ புரிந்துகொள்கிறதில்லை” என்று சொல்வது போன்றதாகும்.
நல்ல நேரம் வந்துகொண்டிருக்கிறது
17 இதுதான் உண்மை: கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, கர்மேல் மலையைப்போன்று லீபனோன் வளமான மண்ணைக்கொண்டது. கர்மேல் மலை ஒரு அடர்த்தியான காட்டைப்போன்றதாகும். 18 புத்தகத்தில் உள்ள வார்த்தைகளை ஒரு செவிடன் கேட்க முடியும். குருடன் இருளுக்கும் அந்தகாரத்திற்கும் ஊடே பார்க்கமுடியும். 19 கர்த்தர் ஏழைகளை மகிழ்ச்சியாக்குவார். இஸ்ரவேலின் பரிசுத்தரில் ஏழையான ஜனங்கள் களிப்படைவார்கள்.
20 அற்பர்களும் கொடியவர்களும் அழிந்த பிறகு இது நிகழும். கெட்ட செயலில் மகிழ்ச்சி அடைகிற ஜனங்கள் போனபிறகு இது நிகழும். 21 (அந்த ஜனங்கள் நல்லவர்களைப்பற்றிப் பொய் சொல்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் வலைக்குட்படுத்த முயல்கிறார்கள். அவர்கள் அப்பாவி ஜனங்களை அழித்துவிட முயல்கிறார்கள்).
22 எனவே, கர்த்தர் யாக்கோபின் குடும்பத்தோடு பேசுகிறார். (இந்த கர்த்தர்தான் ஆபிரகாமை விடுதலை செய்தவர்). கர்த்தர் கூறுகிறார், “இப்போது, யாக்கோபு (இஸ்ரவேல் ஜனங்கள்) நாணமடைந்து வெட்கப்பட்டுப்போவதில்லை. 23 அவன் அவரது பிள்ளைகள் எல்லோரையும் பார்ப்பான். எனது பெயர் பரிசுத்தமானது என்று அவன் கூறுவான். இந்தப் பிள்ளைகளை நான் என் கைகளால் செய்தேன். யாக்கோபின் பரிசுத்தமானவர் (தேவன்) மிகவும் சிறப்புடையவர் என்று இந்தப் பிள்ளைகள் கூறுவார்கள். இஸ்ரவேலின் தேவனை இந்தப் பிள்ளைகள் மதிப்பார்கள். 24 இந்த ஜனங்களில் பலர் புரிந்துகொள்ளமாட்டார்கள். எனவே, அவர்கள் தவறுகளைச் செய்வார்கள். இந்த ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்கள் தமது பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள்” என்கிறார்.
இஸ்ரவேல் எகிப்தையல்ல, தேவனை நம்பவேண்டும்
30 கர்த்தர், “இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் எனக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்கள் திட்டங்களைப்போடுவார்கள். ஆனால் என்னிடம் உதவியைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால், எனது ஆவி அந்த ஒப்பந்தங்களை விரும்புவதில்லை. இந்த ஜனங்கள் தங்களுக்குள் மேலும் மேலும் பாவங்களைச் சேர்த்துக்கொண்டே போகிறார்கள். 2 இந்தக் குழந்தைகள் உதவிக்காக எகிப்துக்குப்போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாங்கள் செய்வது சரிதானா என்பதை என்னிடம் கேட்கவில்லை. அவர்கள் பார்வோனால் காப்பாற்றப்படுவதாக நம்பினார்கள். எகிப்து அவர்களைக் காப்பாற்றும் என்று நினைக்கிறார்கள்.
3 “ஆனால், எகிப்தில் ஒளிந்துக்கொள்வது உங்களுக்கு உதவாது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். எகிப்தால் உங்களைக் காப்பாற்ற இயலாது. 4 உங்கள் தலைவர்கள் சோவானுக்குப்போயிருக்கிறார்கள். உங்கள் வெளியுறவு அதிகாரிகள் ஆனேஸ் நாட்டுக்குப்போயிருக்கிறார்கள். 5 ஆனால் அவர்கள், ஏமாற்றம் அடைவார்கள். அவர்களுக்கு உதவிசெய்ய முடியாத ஜனத்தை அவர்கள் சார்ந்துள்ளனர். எகிப்து பயனற்றது. அதினால் உதவிசெய்ய முடியாது. வெட்கத்திற்கும் துக்கத்திற்குமே எகிப்து காரணமாக அமையும்” என்றார்.
யூதாவிற்கு தேவனுடைய செய்தி
6 வனாந்திரத்தில் உள்ள மிருகங்களைப் பற்றிய துக்க செய்தி:
வனாந்திரம் ஒரு ஆபத்தான இடம். இப்பூமியில் சிங்கங்களும் விஷப் பாம்புகளும் வேகமாகச் செல்லும் பாம்புகளும் நிறைந்துள்ளன. ஆனால் சில ஜனங்கள் எகிப்துக்குப்போகிறவர்கள் இதின் வழியாகப் பயணம் செய்வார்கள். அவர்கள் தங்கள் செல்வங்களைக் கழுதையின் முதுகில் ஏற்றிக்கொண்டுசெல்வார்கள். ஒட்டகங்களின் முதுகில் தங்கள் பொக்கிஷங்களை வைத்திருப்பார்கள். இதற்குப் பொருள், ஜனங்கள் தமக்கு உதவ முடியாத ஜனத்தையே சார்ந்துகொண்டிருக்கிறார்கள். 7 அந்தப் பயனற்ற நாடு தான் எகிப்து. எகிப்தின் உதவி எதற்கும் பயனற்றது. எனவே, நான் எகிப்தை, “எதுவும் செய்யாத அரக்கன்” என்று அழைப்பேன்.
8 இப்பொழுது, இதை அடையாளத்தின் மேல் எழுது. எல்லா ஜனங்களும் இதனைப் பார்க்க முடியும். இதனை ஒரு புத்தகத்தில் எழுது. இறுதி நாட்களுக்காக இவற்றை எழுது. இது நீண்ட காலத்துக்குப்பின் எதிர்காலத்தில் இருக்கும்.
9 இந்த ஜனங்கள் தம் பெற்றோருக்கு அடிபணிய மறுக்கும் பிள்ளைகளைப்போன்றுள்ளனர். கர்த்தருடைய போதனைகளைக் கேட்க அவர்கள் மறுத்துப் பொய் சொல்கிறார்கள். 10 “நாம் செய்ய வேண்டிய காரியங்களைப்பற்றி கனவுகளைக் காணாதீர்கள். எங்களிடம் உண்மைகளைச் சொல்லாதீர்கள். எங்களுக்கு நலமானவற்றை மட்டும் சொல்லுங்கள். எங்களுக்கு நல்லுணர்வை உண்டாக்குங்கள். எங்களுக்காக நல்லவற்றை மட்டும் பாருங்கள். 11 உண்மையில் நிகழப்போவதைக் காணுவதை நிறுத்துங்கள். எங்கள் வழியில் இருந்து வெளியேறுங்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரைப்பற்றி எங்களுக்குக் கூறுவதை நிறுத்துங்கள்” என்று அவர்கள் தீர்க்கதரிசிகளிடம் கூறுகிறார்கள்.
தேவனிடமிருந்து மட்டுமே யூதாவிற்கு உதவி வருகிறது
12 இஸ்ரவேலின் பரிசுத்தர் கூறுகிறார், “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியை ஏற்றுக்கொள்ள நீங்கள் மறுக்கிறீர்கள். சண்டையும், பொய்யும் உங்களுக்கு உதவும் என்று அதனைச் சார்ந்து இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள். 13 நீங்கள் இவற்றைப்பற்றிய குற்றம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் விரிசல்களையுடைய உயரமான சுவர்களைப்போல இருக்கிறீர்கள். அந்தச் சுவர் விழுந்து சிறு துண்டுகளாக உடையும். 14 நீங்கள் பெரிய களிமண் ஜாடி உடைந்து பற்பல சிறு துண்டுகளாக உடைந்ததைப்போல இருக்கிறீர்கள். அந்தத் துண்டுகள் பயனற்றவை. நீங்கள் அதைக்கொண்டு நெருப்பிலிருந்து எரியும் கரித்துண்டை வெளியே எடுக்கவோ, குளத்திலே தண்ணீர் எடுக்கவோ முடியாது”.
15 இஸ்ரவேலில் பரிசுத்தராயிருக்கிற, கர்த்தராகிய எனது ஆண்டவர் சொல்கிறார், “என்னிடம் நீங்கள் திரும்பி வந்தால் பாதுகாக்கப்படுவீர்கள். என்னை நம்பினால் அது உங்களுக்கு வரப்போகிற உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்” என்கிறார்.
ஆனால் நீங்கள் அவற்றைச் செய்ய விரும்பவில்லை. 16 “இல்லை எங்களுக்கு ஓடிப்போகக் குதிரைகள் வேண்டும்!” என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மை. நீங்கள் குதிரைகள் மேலேறி ஓடுவீர்கள். ஆனால் பகைவர்கள் உங்களைத் துரத்துவார்கள். அவர்கள் உங்கள் குதிரைகளை விட வேகமாக இருப்பார்கள்.
17 ஒரு பகைவன் பயங்காட்டுவான். உங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சி ஓடுவார்கள். ஐந்து பகைவர்கள் பயங்காட்டுவார்கள். நீங்கள் அனைவரும் அவர்களை விட்டு ஓடிவிடுவீர்கள். மலையின் மேல் உள்ள கொடிக் கம்பம் மட்டுமே உங்கள் சேனையில் விடப்பட்டிருக்கும்.
தேவன் அவரது ஜனங்களுக்கு உதவுவார்
18 கர்த்தர் அவரது இரக்கத்தை உங்கள்மீது காட்ட விரும்புகிறார். கர்த்தர் காத்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் எழுந்து உங்களுக்கு ஆறுதல் செய்ய விரும்புகிறார். தேவனாகிய கர்த்தர் நீதி செய்கிறார். கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருக்கிற ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
19 சீயோன் மலையின் மேலுள்ள எருசலேமில் கர்த்தருடைய ஜனங்கள் வாழுவார்கள். நீங்கள் தொடர்ந்து அழுதுகொண்டிருக்கமாட்டீர்கள். கர்த்தர் உங்களுடைய அழுகையைக் கேட்டு ஆறுதல் செய்வார். கர்த்தர் உங்களுக்குச் செவிகொடுப்பார். அவர் உங்களுக்கு உதவுவார்.
20 கடந்த காலத்தில், எனது ஆண்டவர் (தேவன்) உங்களுக்குத் துன்பமும், தொல்லைகளும் கொடுத்தார். அது உங்களுக்கு தினமும் உண்ணும் அப்பம் போன்றும் தண்ணீர் போன்றும் இருந்தது. ஆனால் தேவன் உங்கள் ஆசிரியர். அவர் உன்னிடமிருந்து இனி தொடர்ந்து ஒளிந்துகொள்ளமாட்டார். நீ உனது ஆசிரியரை உனது சொந்தக் கண்ணால் பார்க்கலாம். 21 பிறகு, நீ தவறு செய்தால், தவறான வழியில் போனால் (வாழ்ந்தால்), (இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ) நீ உனக்கு பின்னால், “இதுதான் சரியான வழி. இந்த வழியில் நீ போக வேண்டும்” என்ற ஒரு ஓசையைக் கேட்பாய்.
22 உங்களிடம் பொன்னாலும், வெள்ளியாலும் மூடப்பட்ட சிலைகள் உள்ளன. அந்த பொய்த் தெய்வங்கள் உங்களை கறைப்படுத்தியுள்ளது. ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களுக்குச் சேவை செய்வதை நிறுத்துவீர்கள். நீ அந்த தெய்வங்களைத் தீட்டுப்பட்ட ஆடைபோல தூர எறிவாய்.
23 அந்தக் காலத்தில், உனக்காக கர்த்தர் மழையை அனுப்புவார். பூமியில் நீ விதைகளை விதைக்கலாம். பூமி உனக்காக உணவை விளைய வைக்கும். நீ ஒரு பெரிய அறுவடையைச் செய்வாய். உங்கள் மிருகங்களுக்கு வயலில் ஏராளமான உணவு இருக்கும். உன் ஆடுகளுக்கு அகலமான மேய்ச்சல் இடம் இருக்கும். 24 உனது எருதுகளுக்கும் கழுதைகளுக்கும் தேவையான உணவு கிடைக்கும். அங்கு ஏராளமான உணவு இருக்கும். உன் மிருகங்கள் உண்பதற்கு முறத்தாலும், தூற்றுக் கூடையாலும் தூற்றப்பட்ட கப்பிகள் உன்னிடம் இருக்கும். 25 ஒவ்வொரு மலையிலும் மேடுகளிலும் தண்ணீர் நிறைந்த ஓடைகள் இருக்கும். இவை ஏராளமான ஜனங்கள் கொல்லப்பட்ட பிறகு, கோபுரங்கள் தரையிலே விழுந்த பிறகு நிகழும்.
26 அந்தக் காலத்திலே, சந்திரனிலிருந்து வருகிற ஒளியானது சூரியனின் ஒளிபோல இருக்கும். சூரியனின் ஒளியானது இப்பொழுது இருப்பதைவிட ஏழு மடங்கு மிகுதியாக இருக்கும். சூரியனிலுள்ள ஒரு நாள் வெளிச்சம் ஒரு வாரம் (ஏழு நாள்) வெளிச்சம்போல் இருக்கும். இவை கர்த்தர் தமது உடைந்துபோன ஜனங்களின் அடிகளினிமித்தம் கட்டுகள் கட்டி அவற்றின் அடிக்காயத்தைக் குணமாக்கும்போது நிகழும்.
27 பார்! தொலைவிலிருந்து கர்த்தருடைய நாமம் வந்துகொண்டிருக்கிறது. அவரது கோபம் அடர்ந்த மேகப் புகையோடு நெருப்பு போன்றுள்ளது. கர்த்தருடைய வாய் கோபத்தால் நிறைந்துள்ளது. அவரது நாக்கானது எரிகின்ற நெருப்புபோல் உள்ளது. 28 கர்த்தருடைய சுவாசமானது (ஆவி) கழுத்து மட்டும் எட்டுகிற ஆற்று வெள்ளத்தைப்போன்றுள்ளது. தேசங்களை கர்த்தர் நியாயந்தீர்ப்பார். இது “நாசம் என்னும் சல்லடையில்” தேசங்களை அசைப்பது போல இருக்கும். கர்த்தர் அவர்களைக் கட்டுப்படுத்துவார். அது ஜனங்களின் வாயிலே போட்டு கட்டுப்படுத்துகிற கடிவாளத்தைப்போன்றிருக்கும்.
29 அந்தக் காலத்தில், நீங்கள் மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவீர்கள். அந்த நேரமானது, ஓய்வு நாளைத் தொடங்கும் இரவுகளைப்போன்றிருக்கும். கர்த்தருடைய மலைக்கு நடந்துபோகையில், நீங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். வழியில் புல்லாங்குழலைக் கவனித்தவண்ணம் இஸ்ரவேலின் கன்மலை அருகில் தொழுதுகொள்ளப்போகும்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.
30 கர்த்தர் அவரது சிறந்த குரலை ஜனங்கள் அனைவரும் கேட்குமாறு செய்வார். கர்த்தர், தம் கரத்தின் வல்லமையை ஜனங்கள் அனைவரும் காணும்படி கோபத்துடன் இறங்கி வருவார். அந்தக் கையானது பெரும் நெருப்பை போல எல்லாவற்றையும் எரிக்கத்தக்கதாக இருக்கும். கர்த்தருடைய வல்லமையானது மழையோடும், கல்மழையோடும் வருகிற புயல்போல இருக்கும். 31 கர்த்தருடைய குரலைக் கேட்டதும் அசீரியா அஞ்சும். கர்த்தர் அசீரியாவை கோலால் அடிப்பார். 32 கர்த்தர் அசீரியாவை அடிப்பார். அது முரசின்மீது தாளம் போடுவது போலவும், வீணைகளை மீட்டுவது போலவும் இருக்கும். கர்த்தர் தமது சிறந்த கையால் (வல்லமை) அசீரியாவைத் தாக்குவார்.
33 தோப்பேத் [a] ஏற்கெனவே நீண்ட காலத்திற்கு முன்பே தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. இது அரசனுக்குத் தயாராக உள்ளது. இது மிக ஆழமாகவும் அகலமாகவும் அமைக்கப்பட்டது. அங்கே பெரிய விறகுக் கட்டும், நெருப்பும் உள்ளது. கர்த்தருடைய ஆவியானவர் எரியும் கந்தக ஓடைபோல வந்து அதனை எரிப்பார்.
தேவனுடைய வல்லமையைச் சார்ந்தே இஸ்ரவேல் இருக்க வேண்டும்
31 எகிப்துக்கு ஜனங்கள் உதவி கேட்டுப்போவதைப் பார். ஜனங்கள் குதிரைகளைக் கேட்கிறார்கள். குதிரைகள் தங்களைக் காக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எகிப்திலிருந்து வரும் பல இரதங்களும், குதிரை வீரர்களும் அவர்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். படை மிகப் பெரிதாய் இருப்பதால் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக ஜனங்கள் நினைக்கின்றனர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை (தேவனை) ஜனங்கள் நம்பவில்லை. ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதில்லை.
2 ஆனால், கர்த்தர் ஞானமுள்ளவராய் இருக்கிறார். அவர்களுக்கு எதிராக கர்த்தர் தீங்குவரப் பண்ணுகிறார். கர்த்தருடைய கட்டளையை ஜனங்களால் மாற்ற முடியாது. கர்த்தர் எழும்பி, தீய ஜனங்களுக்கு (யூதா) எதிராகப்போரிடுவார். அவர்களுக்கு உதவ முயல்கிற ஜனங்களுக்கு (எகிப்து) எதிராகவும் கர்த்தர் போரிடுவார்.
3 எகிப்து ஜனங்கள் தேவன் அல்ல மனிதர்கள் மட்டுமே. எகிப்திலுள்ள குதிரைகள் ஆவி அல்ல, மிருகங்கள் மட்டுமே. கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார். உதவுபவர்கள் (எகிப்து) தோற்கடிக்கப்படுவார்கள். உதவியை விரும்புகிற ஜனங்களும் (யூதா) விழுவார்கள். எல்லா ஜனங்களும் சேர்ந்து அழிவார்கள்.
4 கர்த்தர் என்னிடம், “ஒரு சிங்கமோ சிங்கக்குட்டியோ உண்பதற்காக ஒரு மிருகத்தைப் பிடிக்கும்போது, அது மரித்த மிருகத்தின் அருகில் நின்று கெர்ச்சிக்கும். அப்போது அந்தச் சிறந்த சிங்கத்தை எதுவும் பயமுறுத்தாது. மனிதர்கள் வந்து சிங்கத்தின் அருகில் சத்தமிட்டால், அது அஞ்சாது. மனிதர்கள் அதிகமாக ஓசை எழுப்பலாம். ஆனால் சிங்கம் வெளியே ஓடாது” என்று கூறினார்.
அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் சீயோன் மலைக்கு வருவார். அம்மலையில் அவர் போரிடுவார். 5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமை பறவைகள் கூட்டுக்குமேல் பறப்பதைப்போன்று காப்பாற்றுவார். அவளை கர்த்தர் காப்பாற்றுவார். கர்த்தர் “கடந்து வந்து” எருசலேமைக் காப்பாற்றுவார்.
6 இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய நீங்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் தேவனிடம் திரும்பிவர வேண்டும். 7 பிறகு, நீங்கள் செய்த பொன்னாலும், வெள்ளியாலுமான விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதை ஜனங்கள் நிறுத்துவார்கள். நீங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்யும்போது, உண்மையில் பாவம் செய்தீர்கள்.
8 அசீரியா வாளால் தோற்கடிக்கப்படும். ஆனால், அந்த வாள் ஒரு மனிதனின் வாளல்ல. அசீரியா அழிக்கப்படும். ஆனால், அந்த அழிவானது மனிதனின் வாளிலிருந்து வராது. அசீரியா தேவனுடைய வாளிலிருந்து தப்பி ஓடுவான். ஆனால், இளைஞர்கள் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப்படுவார்கள். 9 அவர்களது பாதுகாப்புக்குரிய இடம் அழிக்கப்படும். அவர்களின் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் கொடியை விடுவார்கள்.
கர்த்தர் இவற்றை கூறினார். கர்த்தருடைய பலிபீடம் சீயோனில் இருக்கிறது. கர்த்தருடைய அடுப்பு (பலிபீடம்) எருசலேமில் இருக்கிறது.
தலைவர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும்
32 நான் சொல்லுகிறவற்றைக் கேளுங்கள்! ஒரு அரசன் நன்மையைத்தரும் ஆட்சி செய்ய வேண்டும். தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச் செல்லும்போது நீதியான முடிவுகளை எடுக்க வேண்டும். 2 இது நிகழ்ந்தால், அரசன் காற்றுக்கும் மழைக்கும் மறைந்துகொள்வதற்கு ஏற்ற இடமாக இருப்பான். வறண்ட பூமிக்கு நீரோடை வந்ததுபோல இருக்கும். இது வெப்பமான பூமியில் பெருங்கன்மலையில் குளிர்ந்த நிழல்போல் இருக்கும். 3 ஜனங்கள் உதவிக்காக அரசனிடம் திரும்புவார்கள். ஜனங்கள் உண்மையில் அவர் சொல்லுவதைக் கவனிப்பார்கள். 4 குழம்பிப்போன ஜனங்கள் இப்பொழுது புரிந்துகொள்வார்கள். தெளிவாகப் பேச முடியாத ஜனங்கள் இப்பொழுது தெளிவாகவும் பேசுவார்கள். 5 நாத்திகர்கள் உயர்ந்த மனிதர்கள் என்று அழைக்கப்படமாட்டார்கள். மோசடிக்காரர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்றழைக்கப்படமாட்டார்கள்.
6 ஒரு நாத்திகன் தீயவற்றைப் பேசுகிறான். அவனது மனதில் தீயவற்றைச் செய்வதற்கே திட்டங்கள் இருக்கும். ஒரு துன்மார்க்கன் தவறானவற்றைச் செய்வதற்கே விரும்புகிறான். ஒரு துன்மார்க்கன் கர்த்தரைப்பற்றி கெட்டவற்றையே பேசுகிறான். ஒரு துன்மார்க்கன் பசித்த ஜனங்களைச் சாப்பிட அனுமதிக்கமாட்டான். ஒரு துன்மார்க்கன் தாகமாயிருக்கும் ஜனங்களைத் தண்ணீர் குடிக்கவிடமாட்டான். 7 அந்த நாத்திகன் கெட்டவற்றைக் கருவியாகப் பயன்படுத்துவான். ஏழை ஜனங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் வழிகளை அவன் திட்டமிடுவான். அந்த துன்மார்க்கன் ஏழை ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்லுகிறான். அவனது பொய்கள் ஏழை ஜனங்களை நேர்மையான தீர்ப்பு பெறுவதிலிருந்து விலக்குகிறது.
8 ஆனால் நல்ல தலைவன், நல்லவற்றைச் செய்யத் திட்டமிடுகிறான். அந்த நல்லவை அவனை நல்ல தலைவனாகச் செய்கிறது.
கடினமான நேரங்கள் வந்து கொண்டிருக்கின்றன
9 உங்களில் சில பெண்கள் இப்போது மிக அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பை உணருகிறீர்கள். ஆனால், நான் சொல்லுகிற வார்த்தைகளை நீங்கள் நின்று கவனிக்க வேண்டும். 10 பெண்களாகிய நீங்கள் இப்போது அமைதியை உணருகிறீர்கள். ஆனால், ஒரு ஆண்டுக்குப் பிறகு தொல்லைக்குள்ளாவீர்கள். ஏனென்றால், அடுத்த ஆண்டு திராட்சைகளை நீங்கள் பறிக்க மாட்டீர்கள். ஏனென்றால், பறிப்பதற்குத் திராட்சைகள் இருக்காது.
11 பெண்களே! இப்பொழுது நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அச்சுறுத்தப்பட வேண்டும். பெண்களே! இப்போது நீங்கள் அமைதியை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் கவலைக்குட்பட வேண்டும். உங்களது மென்மையான ஆடைகளை எடுத்துவிடுங்கள். துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அந்த ஆடைகளை உங்கள் இடுப்பில் கட்டிக் கொள்ளுங்கள். 12 துக்கத்துக்குரிய ஆடைகளை துன்பம் நிறைந்த உங்கள் மார்புக்கு மேல் போட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் வயல்கள் காலியானதால் அலறுங்கள். உங்கள் திராட்சைத் தோட்டங்கள் ஒரு காலத்தில் திராட்சைப் பழங்களைத் தந்தன. ஆனால் இப்போது அவை காலியாக உள்ளன. 13 எனது ஜனங்களின் பூமிக்காக அலறுங்கள். ஏனென்றால், இப்பொழுது முட்களும் நெருஞ்சியும் மட்டுமே வளரும். நகரத்திற்காக அலறுங்கள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த வீடுகளுக்காக அலறுங்கள்.
14 ஜனங்கள் தலைநகரத்தைவிட்டு வெளியேறுவார்கள். அரண்மனையும் கோபுரங்களும் காலியாகும். ஜனங்கள் வீடுகளில் வாழமாட்டார்கள். அவர்கள் குகைகளில் வாழுவார்கள். காட்டுக் கழுதைகளும் ஆடுகளும் நகரத்தில் வாழும். மிருகங்கள் அங்கே புல்மேயப்போகும்.
15-16 தேவன் மேலேயிருந்து அவரது ஆவியைக் கொடுக்கும்வரை இது தொடரும். இப்பொழுது பூமியில் நன்மை இல்லை. இது இப்போது வனாந்திரம்போல் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில். இந்த வனாந்திரம் கர்மேல் போலாகும். அங்கே நேர்மையான தீர்ப்புகள் இருக்கும். கர்மேல் பசுமைக் காடுகளைப்போன்று ஆகும். நன்மை அங்கே வாழும். 17 என்றென்றைக்கும் இந்த நன்மை சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். 18 எனது ஜனங்கள் சமாதானத்தின் அழகிய வயலில் வாழுவார்கள். எனது ஜனங்கள் பாதுகாப்பின் கூடாரங்களில் வாழுவார்கள். அவர்கள் அமைதியும் சமாதானமும் உள்ள இடங்களில் வாழுவார்கள்.
19 ஆனால் இவை நிகழும்முன்பு, காடுகள் விழவேண்டும். நகரம் தோற்கடிக்கப்படவேண்டும். 20 நீங்கள் தண்ணீர் நிலையுள்ள இடங்களில் விதைக்கிறீர்கள். அங்கே உங்கள் கழுதைகளையும் மாடுகளையும் சுதந்திரமாகத் திரியவும் மேயவும் விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
33 பாருங்கள், நீங்கள் போரை உருவாக்குகிறீர்கள். ஜனங்களிடமிருந்து பொருளைத் திருடிக்கொள்கிறீர்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து எதையும் திருடமாட்டார்கள். நீங்கள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்புகிறீர்கள். ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டார்கள். எனவே, நீங்கள் திருடுவதை நிறுத்தும்போது. மற்ற ஜனங்கள் உங்களிடமிருந்து திருடத் தொடங்குவார்கள். நீங்கள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்புவதை நிறுத்தும்போது, மற்ற ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பத் தொடங்குவார்கள். பிறகு நீங்கள்
2 “கர்த்தாவே, எங்களிடம் தயவாயிரும்.
நாங்கள் உமது உதவிக்காகக் காத்திருக்கிறோம்.
கர்த்தாவே ஒவ்வொரு காலையிலும் பெலத்தைக் கொடும்.
நாங்கள் தொல்லைக்குட்படும்போது எங்களைக் காப்பாற்றும்.
3 உமது வல்லமையான குரல் ஜனங்களை அச்சுறுத்தும், அவர்கள் உம்மிடமிருந்து ஓடிப்போவார்கள்.
உமது மகத்துவம் நாடுகளை ஓடிப்போக வைக்கும்” என்பீர்கள்.
4 நீங்கள் போரில் பொருட்களைத் திருடினீர்கள். அப்பொருட்கள் உம்மிடமிருந்து எடுக்கப்படும். ஏராளமான ஜனங்கள் வந்து, உங்கள் செல்வங்களை எடுப்பார்கள். வெட்டுக்கிளிகள் வந்து உங்கள் பயிர்களை உண்ட காலத்தைப்போன்று இது இருக்கும்.
5 கர்த்தர் மிகப் பெரியவர். அவர் மிக உயரமான இடத்தில் வாழ்கிறார். கர்த்தர் சீயோனை நேர்மையாலும் நன்மையாலும் நிரப்புவார்.
6 எருசலேமே நீ செழிப்பாயிருக்கிறாய். நீ ஞானம் மற்றும் அறிவில் செழிப்புடையவள். நீ கர்த்தரை மதிக்கிறாய். அது உன்னைச் செல்வச் செழிப்புள்ளவளாகச் செய்கிறது. எனவே, நீ தொடர்ந்து இருப்பாய் என்பதை நீ அறிந்துகொள்ளலாம்.
7 ஆனால் கவனி! தேவதூதர்கள் வெளியே அழுதுகொண்டிருக்கிறார்கள்.
சமாதானத்தைக் கொண்டுவரும் தூதர்கள் வெளியே மிகக் கடினமாக அழுகிறார்கள். 8 சாலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. எவரும் தெருக்களில் நடந்துகொண்டிருக்கவில்லை.
ஜனங்கள் தாங்கள் செய்த உடன்படிக்கையை உடைத்துள்ளனர். சாட்சிகளிலிருந்து நிரூபிக்கப்படுவதை ஜனங்கள் நம்ப மறுக்கின்றனர். எவரும் மற்ற ஜனங்களை மதிக்கிறதில்லை. 9 நிலமானது நோயுற்று செத்துக்கொண்டிருக்கிறது. லீபனோன் வெட்கி வாடுகிறது. சாரோன் பள்ளத்தாக்கு வறண்டு காலியாக உள்ளது. பாசானும் கர்மேலும் ஒரு காலத்தில் அழகான செடிகளை வளர்த்தன. ஆனால் இப்போது அந்தச் செடிகள் வளருவதை நிறுத்தியிருக்கின்றன.
10 கர்த்தர் கூறுகிறார், “இப்போது, நான் நின்று எனது சிறப்பைக் காட்டுவேன். நான் ஜனங்களுக்கு முக்கியமானவராக இருப்பேன். 11 நீங்கள் பயனற்ற செயல்களைச் செய்திருக்கிறீர்கள். அவை பதரைப்போலவும் வைக்கோலைப்போலவும் இருக்கும். அவை எதற்கும் பயனற்றவை. உங்கள் சுவாசம் நெருப்பைப்போன்றது. அது உங்களை எரிக்கும். 12 ஜனங்கள் அவர்களது எலும்புகள் சுண்ணாம்பைப்போன்று ஆகும்வரை எரிக்கப்படுவார்கள். ஜனங்கள் விரைவாக முட்கள் மற்றும் காய்ந்த புதர்களைப்போன்று எரிக்கப்படுவார்கள்.
13 “வெகு தொலைவான நாடுகளில் உள்ள ஜனங்கள், நான் செய்திருக்கிறவற்றைப் பற்றிக் கேள்விப்படுவார்கள். என் அருகிலே இருக்கிற நீங்கள் எனது வல்லமையைப்பற்றி அறிந்துகொள்வீர்கள்.”
14 சீயோனில் உள்ள பாவிகள் பயந்துகொண்டிருக்கிறார்கள். தீயச் செயல்களைச் செய்துகொண்டிருக்கிற ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்கள், “எங்களில் எவரும் அழிக்கும் இந்த நெருப்பினூடே உயிர் வாழ முடியுமா? என்றென்றும் எரிந்துகொண்டிருக்கிற இந்நெருப்பின் அருகில் எவரால் வாழமுடியும்?”
15 நல்லதும் நேர்மையானதுமான ஜனங்கள், பணத்துக்காக மற்றவர்களைத் துன்புறுத்தாதவர்கள் அந்த நெருப்பிலிருந்து தப்பமுடியும். அந்த ஜனங்கள் லஞ்சம் பெற மறுக்கிறார்கள். மற்றவர்களைக் கொலை செய்வதற்குரிய திட்டங்களைக் கவனிக்க மறுக்கிறார்கள். தீயவற்றைச் செய்யத் திட்டம் போடுவதைப் பார்க்க அவர்கள் மறுக்கிறார்கள். 16 உயரமான இடங்களில் அந்த ஜனங்கள் பாதுகாப்பாக வாழுவார்கள். அவர்கள் உயரமான கல்கோட்டைக்குள் பாதுகாப்பாக இருப்பார்கள். அந்த ஜனங்கள் எப்பொழுதும், உணவும் தண்ணீரும் பெற்றிருப்பார்கள்.
17 உங்கள் கண்கள் அரசரின் (தேவன்) அழகைப் பார்க்கும். நீங்கள் பெரிய தேசத்தைப் பார்ப்பீர்கள். 18-19 கடந்த காலத்தில் நீங்கள் பெற்றிருந்த தொல்லைகளை நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். “வேறு நாடுகளிலிருந்து வந்த அந்த ஜனங்கள் எங்கே? நாம் புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழியுடைய அந்த அதிகாரிகளும் வரி வசூலிப்பவர்களும் எங்கே? நமது பாதுகாப்புக் கோபுரங்களை எண்ணிய ஒற்றர்கள் எங்கே? அவர்கள் அனைவரும் போய்விட்டார்கள்”.
எருசலேமை தேவன் காப்பாற்றுவார்
20 நமது மதப்பண்டிகையின் விடுமுறைகளைக் கொண்டாடும் நகரமாகிய. சீயோனைப் பாருங்கள். ஓய்வெடுப்பதற்குரிய அழகான இடமான எருசலேமைப் பாருங்கள். எருசலேம் என்றும் நகர்த்தப்படாத கூடாரம்போல் உள்ளது. இனி அதன் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதில்லை. அதன் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதில்லை. 21-23 ஏனென்றால் அங்கே வல்லமையுள்ள கர்த்தர் இருக்கிறார். அந்த நாடானது ஓடைகளும் அகன்ற ஆறுகளும் உள்ள இடமாக இருக்கிறது. ஆனால் அந்த ஆறுகளில் பகைவர்களின் படகுகளோ அல்லது சக்தி வாய்ந்த கப்பல்களோ இருப்பதில்லை. அந்தப் படகுளில் வேலைசெய்கிற நீங்கள் கயிறுகளோடு வேலையை உதற முடியும். பாய்மரத்தைப் பலமுள்ளதாக்க உங்களால் முடியாது.உங்களால் பாயை விரிக்கவும் முடியாமல் போகும். ஏனென்றால், கர்த்தர் நமது நீதிபதியாக இருக்கிறார். நமது சட்டங்களை கர்த்தர் உருவாக்குகிறார். கர்த்தர் நமது அரசர், அவர் நம்மைக் காப்பாற்றுகிறார். எனவே, கர்த்தர் நமக்கு மிகுந்த செல்வத்தைத் தருவார். முடவர்களும்கூட போரில் கொள்ளையிடுவதின் மூலம் பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள். 24 அங்கே வாழ்கிற எவரும், “நான் நோயுற்றுள்ளேன்” என்று சொல்லமாட்டார்கள். அங்கே வாழ்கிற ஜனங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்.
தேவன் தமது பகைவர்களைத் தண்டிப்பார்
34 அனைத்து நாடுகளே, அருகில் வந்து கவனியுங்கள் ஜனங்கள் அனைவரும் நன்கு கவனிக்க வேண்டும். பூமியும், பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் இவற்றைக் கவனிக்க வேண்டும். 2 எல்லா நாடுகளின்மீதும், அவற்றிலுள்ள படைகளின் மீதும் கர்த்தர் கோபத்தோடு இருக்கிறார். அவர்கள் அனைவரையும் கர்த்தர் அழிப்பார். அவர்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு அவர் காரணமாக இருப்பார். 3 அவர்களின் உடல்கள் வெளியே எடுத்தெறியப்படும். உடல்களிலிருந்து நாற்றம் கிளம்பும், மலைகளில் இரத்தம் வடியும். 4 வானங்கள் புத்தகச் சுருளைப்போலச் சுருட்டப்படும். நட்சத்திரங்கள் திராட்சைக் கொடியின் இலைகள் அல்லது அத்திமர இலைகள்போல உதிரும். வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களும் உருகிப்போகும். 5 “எனது வாளானது வானில் இரத்தத்தால் மூடப்படும்போது இது நிகழும்” என்று கர்த்தர் கூறுகிறார்.
பார்! கர்த்தருடைய வாள் ஏதோமை வெட்டிப்போடுகிறது. அந்த ஜனங்களை கர்த்தர் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார். அவர்கள் மரிக்கவேண்டும்.
6 கர்த்தருடைய வாள் ஆட்டுக் குட்டிகள் மற்றும் வெள்ளாடுகளின் இரத்தம் பூசப்பட்டு, செம்மறியாட்டு கொழுப்பினால் வழுவழுப்பாக்கப்பட்டதாயும் இருக்கிறது. ஏனென்றால், கர்த்தர் போஸ்றாவிலும் ஏதோமிலும் கொல்வதற்கு இதுதான் நேரம் என்று முடிவு செய்தார். 7 எனவே, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள், பலமிக்க காளைகள் எல்லாம் கொல்லப்படும். அவற்றின் இரத்தத்தால் நாடு நிறைந்துவிடும். அதின் மண்ணானது கொழுப்பால் மூடப்படும்.
8 இவையனைத்தும் நிகழும். ஏனென்றால், கர்த்தர் தண்டனைக்கென்று ஒரு காலத்தைத் தேர்தெடுத்திருக்கிறார். கர்த்தர் ஒரு வருடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் சீயோனில் தாங்கள் செய்த பாவங்களுக்கு விலை தரவேண்டும்.
9 ஏதோமின் ஆறுகள் சூடான தாரைப்போலாகும். ஏதோமின் பூமி எரிகிற கந்தகம் போன்று ஆகும். 10 இரவும் பகலும் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும். எவராலும் அதனை அணைக்க முடியாது. அதன் புகை ஏதோமிலிருந்து என்றென்றும் கிளம்பிக்கொண்டிருக்கும். அந்தப் பூமியானது சதாகாலமாக அழிக்கப்படும். மீண்டும் அந்த நாட்டின் வழியாக எந்த ஜனங்களாலும் பயணம் செய்யமுடியாது. 11 பறவைகளும் சிறு மிருகங்களும் அந்த நாட்டைச் சொந்தமாக்கும். ஆந்தைகளும் காக்கைகளும் அங்கே வாழும். “காலியான வனாந்திரம்” என்று அந்த நாடு அழைக்கப்படும்.
12 பிரபுக்களும் தலைவர்களும் போய்விடுவார்கள். அவர்களுக்கு ஆட்சி செய்ய அங்கே எதுவும் இருக்காது.
13 அங்குள்ள அழகான வீடுகளில் முட்செடிகளும் புதர்களும் வளரும். அந்த வீடுகளில் காட்டு நாய்களும், ஆந்தைகளும் வாழும். காட்டு மிருகங்கள் தம் வாழிடங்களை அங்கே அமைத்துக்கொள்ளும். அங்கு வளர்ந்துள்ள பெரிய புல்வெளிகளில் பெரிய பறவைகள் வாழும். 14 அங்கே காட்டுப் பூனைகள் ஓரிகளுடன் வாழும் காட்டு ஆடுகள் தம் நண்பர்களைக் கூப்பிடும். அங்கே சாக்குருவிகளும் ஓய்வெடுக்க இடம் தேடிக்கொள்ளும். 15 பாம்புகள் தங்கள் வீடுகளை அங்கே அமைத்துக்கொள்ளும். பாம்புகள் தங்கள் முட்டைகளை அங்கே இடும். அம்முட்டைகள் பொரித்து, சிறு பாம்புகள் இருட்டில் திரிந்துகொண்டிருக்கும். மரித்துப்போனவற்றைத் தின்னும் பறவைகள், பெண்கள் தம் நண்பர்களைப் பார்வையிடுவதுபோன்று சேர்ந்துகொள்ளும்.
16 கர்த்தருடைய புத்தகச்சுருளைப் பாருங்கள் அதில் எழுதப்பட்டிருப்பதை வாசியுங்கள். எதுவும் குறையாமல் இருக்கும். அந்த மிருகங்கள் சேர்ந்திருக்கும் என்று அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தேவன் அவற்றை ஒன்று சேர்ப்பதாகச் சொன்னார். எனவே தேவனுடைய ஆவி அவற்றை ஒன்று சேர்க்கும்.
17 அவர்களோடு என்ன செய்யவேண்டும் என்று தேவன் முடிவு செய்துவிட்டார். பிறகு அவர்களுக்காக தேவன் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார். தேவன் ஒரு கோடு வரைந்து, அவர்களின் நாட்டை அவர்களுக்குக் காட்டினார். எனவே என்றென்றைக்கும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொண்டு அவர்கள் ஆண்டாண்டு காலம் அங்கே வாழ்வார்கள்.
தேவன் தம் ஜனங்களை ஆறுதல்படுத்துவார்
35 வறண்ட வனாந்திரம் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறும். வனாந்திரம் சந்தோஷம் அடைந்து பூவைப்போல வளரும்.
2 வனாந்திரம் முழுவதும் பூக்களால் நிறைந்து அதன் மகிழ்ச்சியைக் காட்டத் தொடங்கும். அது பார்ப்பதற்கு வனாந்திரம் மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றும். அந்த வனாந்திரமானது, லீபனோன் காடுகளைப்போலவும், கர்மேல் மலையைப்போலவும், சாரோன் பள்ளத்தாக்குபோலவும் அழகாக மாறும். இது நிகழும் ஏனென்றால், ஜனங்களனைவரும் கர்த்தருடைய மகிமையைக் காண்பார்கள். நம் தேவனுடைய மேன்மையை ஜனங்கள் காண்பார்கள்.
3 பலவீனமான கைகளை மீண்டும் பலப்படுத்துங்கள். பலவீனமான முழங்கால்களை பலப்படுத்துங்கள். 4 ஜனங்கள் அஞ்சி குழம்பினார்கள். அந்த ஜனங்களிடம் கூறுங்கள், “பலமாக இருங்கள் அஞ்சவேண்டாம்!” பாருங்கள், உங்கள் தேவன் வருவார். உங்கள் பகைவர்களைத் தண்டிப்பார். அவர் வருவார். உங்களுக்கு விருதினைத் தருவார். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார். 5 குருடர்களின் கண்கள் திறக்கப்படும். செவிடர்களின் காதுகள் திறக்கும். 6 முடவர்கள் மானைப்போல நடனம் ஆடுவார்கள். பேச முடியாத ஜனங்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவார்கள். வனாந்தரத்தில் நீரூற்று கிளம்பிப் பாயும்போது இது நிகழும். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் பாயும். 7 இப்பொழுது ஜனங்கள் கானல் தண்ணீரைப் பார்க்கின்றனர். இது தண்ணீரைப்போல தோன்றும். ஆனால் அந்த நேரத்தில் அங்கே உண்மையான தண்ணீர் குளங்களும் இருக்கும். வறண்ட நிலத்தில் கிணறுகள் இருக்கும். தண்ணீரானது பூமியிலிருந்து பாயும். ஒரு காலத்தில் காட்டு மிருகங்கள் இருந்த இடத்தில் உயரமான நீர்த்தாவரங்கள் வளரும்.
8 அந்தக் காலத்திலே, அங்கே ஒரு சாலை இருக்கும். இந்த நெடுஞ்சாலை “பரிசுத்தமான சாலை” என்று அழைக்கப்படும். தீயவர்கள் அச்சாலையில் நடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவனைப் பின்பற்றாத எவரும் அச்சாலையில் போகமாட்டார்கள்.
9 அந்தச் சாலையின் எவ்வித ஆபத்தும் இருக்காது. ஜனங்களைக் கொல்லுகின்ற சிங்கங்கள் அந்தச் சாலையில் இருக்காது. அந்தச் சாலையில் ஆபத்தைத் தரும் மிருகங்கள் எதுவும் இராது. அந்தச் சாலை தேவனால் காப்பாற்றப்பட்டவர்களுக்கே உரியது.
10 தேவன் அவரது ஜனங்களை விடுதலை செய்வார். அந்த ஜனங்கள் அவரிடம் திரும்பி வருவார்கள். இந்த ஜனங்கள் சீயோனுக்குள் வரும்போது அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். என்றென்றும் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்களின் மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் கிரீடம்போன்று இருக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் அவர்களை நிரப்பும். துயரமும், துக்கமும் வெகுதூரம் விலகிப்போகும்.
அசீரியர்கள் யூதாவைக் கைப்பற்றுதல்
36 எசேக்கியா யூதாவின் அரசனாக இருந்தான். அசீரியாவின் அரசனாக சனகெரிப் இருந்தான். எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டில், யூதாவின் அரணாக சூழ்ந்திருந்த நகரங்களுக்கு எதிராக சனகெரிப்போரிட்டான். சனகெரிப் அந்நகரங்களைத் தோற்கடித்தான். 2 சனகெரிப் எருசலேமிற்கு எதிராகப்போரிட அவனது தளபதியை அனுப்பினான். தளபதி லாகீசை விட்டு எருசலேமில் இருந்த எசேக்கியா அரசனிடம் சென்றான். அந்தத் தளபதி தன்னோடு வல்லமையான படையை அழைத்துச் சென்றான். தளபதியும் அவனது படையும் வண்ணார்துறையின் அருகிலுள்ள சாலைக்குச் சென்றனர். அந்தச் சாலை, மேல் குளத்திலிருந்து வரும் தண்ணீர்க் குழாயின் அருகில் இருந்தது.
3 எருசலேமிலிருந்து மூன்று ஆண்கள் தளபதியோடு பேச வெளியே வந்தனர். அந்த ஆண்கள், இலக்கியாவின் மகனான எலியாக்கீம், ஆசாப்பின் மகனாகிய யோவாக்கும், செப்னாவும் ஆவார்கள். எலியாக்கீம் அரண்மனை மேலாளராக இருந்தான். யோவாக் பொருளாளராக இருந்தான். செப்னா செயலாளராக இருந்தான்.
4 தளபதி அவர்களிடம், “பின்வருவதை நீங்கள் எசேக்கியா அரசனிடம் கூறுங்கள்:
“மகாராஜாவான, அசீரியாவின் அரசன் கூறுகிறார், நீ நம்பி இருக்கிற இந்த நம்பிக்கை என்ன? 5 நான் உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் வல்லமையிலும் யுத்தத்திற்கான சிறப்பு ஆலோசனையிலும் நம்பிக்கை வைத்தால், அது பயனற்றதாக இருக்கும். அவை வெற்று வார்த்தைகளே தவிர வேறு எதுவுமில்லை. எனவே, எனக்கு எதிராக நீ ஏன் போரிடுகிறாய்? இப்பொழுது நான் உன்னைக் கேட்கிறேன். உனக்கு உதவ யார்மேல் நீ நம்பிக்கை வைத்திருக்கிறாய்? 6 உனது உதவிக்கு எகிப்தைச் சார்ந்து இருக்கின்றாயா? எகிப்து ஒரு உடைந்த கம்புபோலுள்ளது. உன்னைத் தாங்குவதற்கு அதனை நீ ஊன்றினால் அது உன்னைப் பாதிக்கும். உன் கையில் ஓட்டையிடும். எகிப்தின் அரசனான பார்வோன், உதவிபெறுவதற்கு எவராலும் நம்பத்தகாதவன்.
7 “ஆனால் நீ, ‘நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தர் மீது எங்களுக்கு உதவுமாறு நம்பிக்கை வைத்தோம்’ என்று கூறலாம். ஆனால் நான் கூறுகிறேன், எசேக்கியா கர்த்தருடைய பலிபீடங்களையும் தொழுதுகொள்வதற்குரிய உயர் இடங்களையும் அழித்துவிட்டான். எசேக்கியா யூதா மற்றும் எருசலேமிடம் இவற்றைச் சொன்னான்: ‘எருசலேமில் உள்ள இந்த ஒரே ஒரு பலிபீடத்தை மட்டும் நீங்கள் தொழுது கொள்ளவேண்டும்’.
8 “நீங்கள் இன்னும் போர் செய்ய விரும்பினால், எனது எஜமானரான, அசீரியாவின் அரசர் உன்னோடு இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவார். அரசர் சொல்கிறார், ‘உங்களால் போருக்குக் குதிரைகளின் மீது சவாரி செய்யப்போதுமான ஆட்களைக் கண்டுகொள்ள முடியுமானால் நான் உங்களுக்கு 2,000 குதிரைகளைத் தருவேன். 9 ஆனால் அதற்குப் பிறகும்கூட உன்னால் எனது எஜமானரின் அடிமைகளில் ஒருவனைத் தோற்கடிக்க முடியாது. எனவே, நீங்கள் ஏன் தொடர்ந்து எகிப்தின் குதிரைகளையும் இரதங்களையும் நம்பி இருக்கிறீர்கள்?
10 “‘அதோடு, நான் இந்த நாட்டிற்கு வந்து போரிட்டபோது கர்த்தர் என்னோடு இருந்தார் என்பதை நினைவுகொள்ளவேண்டும். நான் இந்த நகரங்களை அழித்தபோது கர்த்தர் என்னோடு இருந்தார். கர்த்தர் என்னிடம், ‘எழுந்து நில், இந்த நாட்டிற்குப்போ. இதனை அழித்துவிடு!’ என்று கூறினார்’” என்று கூறுங்கள்” என்றான்.
11 எருசலேமிலிருந்து வந்த எலியாக்கீம், செப்னா, யோவாக் ஆகியோர் தளபதியிடம், “தயவுசெய்து எங்களோடு அரமேய மொழியில் பேசுங்கள். எங்களோடு எங்கள் யூத மொழியில் பேசாதீர்கள். நீங்கள் யூத மொழியைப் பயன்படுத்தினால், நகர சுவர்களுக்குமேல் இருக்கிற ஜனங்கள் நீங்கள் பேசுவதைப் புரிந்துகொள்வார்கள்” என்று சொன்னார்கள்.
12 ஆனால் தளபதி, “எனது எஜமானர் இவற்றை உங்களிடமும் உங்கள் எஜமானர் எசேக்கியாவிடமும் மட்டும் கூற என்னை அனுப்பவில்லை. சுவர்களுக்கு மேல் உட்கார்ந்திருக்கிற அந்த ஜனங்களுக்கும் கூறுமாறு என்னை அனுப்பியுள்ளார். அந்த ஜனங்கள் போதுமான உணவையும் தண்ணீரையும் பெறுவதில்லை. அவர்கள் உங்களைப்போன்றே தங்கள் மலத்தை உண்ணவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் செய்வார்கள்” என்றான்.
13 பிறகு, தளபதி எழுந்து நின்று மிக உரத்தக் குரலில் யூத மெழியில் பேசினான்.
14 தளபதி சொன்னான், மகாராஜாவான அசீரியா அரசனிமிருந்து வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: எசேக்கியா உங்களை முட்டாளாக்கவிடாதீர்கள். அவனால் உங்களை என்னுடைய வல்லமையிலிருந்து பாதுகாக்க முடியாது! 15 எசேக்கியா, “கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள். கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார். அசீரியா அரசன் இந்த நகரத்தைத் தோற்கடிக்கும்படி கர்த்தர் விடமாட்டார்” என்று சொல்லும்போது அதை நம்பாதீர்கள்.
16 எசேக்கியாவிடமிருந்து வரும் அந்த வார்த்தைகளைக் கேட்காதீர்கள். அசீரியா அரசன் சொல்வதைக் கேளுங்கள். அசீரியா அரசன் கூறுகிறான், “நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் நகரத்தைவிட்டு வெளியே என்னிடம் வர வேண்டும். பிறகு, ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளுக்குப்போக விடுதலை பெறுவீர்கள். ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்தத் திராட்சைத் தோட்டத்தில் திராட்சைப்பழம் உண்ணும் சுதந்திரம் பெறுவீர்கள். ஒவ்வொருவரும் அவர்களது சொந்த அத்திமரத்தில் அத்திப் பழம் உண்ணும் சுதந்திரத்தைப் பெறுவீர்கள். 17 இதனை, உங்கள் தேசத்தைப்போன்ற நாட்டிற்கு நான் வந்து உங்களை அழைத்துச் செல்லும்வரை நீங்கள் செய்யலாம். அந்தப் புதிய நாட்டில் உங்களுக்கு நல்ல தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும் பெறுவீர்கள். அந்த நாட்டில் உணவும் திராட்சை வயல்களும் இருக்கும்.
18 எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படிவிடாதீர்கள். அவன் சொல்கிறான், ‘கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார்’ என்று. ஆனால் நான் உங்களைக் கேட்கிறேன், அசீரியாவின் வல்லமையிலிருந்து அந்த ஜனங்களை அந்நிய நாட்டு தெய்வங்கள் எவராவது காப்பாற்றினார்களா? இல்லை. 19 ஆமாத் அர்பாத் நகரங்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். செப்பர்வாயீமின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். எனது வல்லமையிலிருந்து சமாரியாவின் தெய்வங்கள் தம் ஜனங்களை காப்பாற்றினார்களா? இல்லை! 20 இந்த நாடுகளில் என்னுடைய வல்லமையிலிருந்து தம் ஜனங்களைக் காப்பாற்றிய ஏதாவது ஒரு தெய்வங்களுடைய பெயரைக் கூறுங்கள். அவர்கள் அனைவரையும் நான் தோற்கடித்துவிட்டேன். எனவே, எனது வல்லமையிலிருந்து கர்த்தர் எருசலேமைக் காப்பாற்றுவாரா? இல்லை! என்கிறார்” என்றான்.
21 எருசலேமிலுள்ள ஜனங்கள் அமைதியாக இருந்தார்கள். அவர்கள் தளபதிக்குப் பதில் சொல்லவில்லை. (“தளபதிக்குப் பதில் சொல்லவேண்டாம்” என்று எசேக்கியா ஜனங்களுக்கு கட்டளையிட்டிருந்தான்).
22 பிறகு அரண்மனை மேலாளரான இல்க்கியாவின் மகனான எலியாக்கீம், செயலாளரான செப்னா மற்றும் பொருளாளரான ஆசாப்பின் மகனான யோவாக் ஆகியோர், தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர். (அவர்கள் துக்கமாய் இருப்பதாக காட்டினார்கள்). மூன்று பேரும் எசேக்கியாவிடம் சென்று தளபதி அவர்களுக்கு சொன்ன அனைத்தையும் கூறினார்கள்.
எசேக்கியா தேவனுடைய உதவிக்காக வேண்டுதல்
37 எசேக்கியா, தளபதியிடமிருந்து வந்த செய்தியைக் கவனித்தான். அவன் அந்தச் செய்தியைக் கேட்டதும் தான் சோகமாயிருப்பதைக் காண்பிக்க தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். பிறகு எசேக்கியா துக்கத்தைக் குறிக்கும் சிறப்பான ஆடைகளை அணிந்துகொண்டு கர்த்தருடைய ஆலயத்திற்குப்போனான். 2 எசேக்கியா அரண்மனை மேலாளரையும் (எலீக்கியாம்) செயலாளனையும் (செப்னா) ஆசாரியர்களின் மூப்பர்களையும் (தலைவர்களையும்) ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசியிடம் அனுப்பினான். அந்த மூன்று பேரும் துக்கத்தைக் குறிக்கும் சிறப்பு ஆடைகளை அணிந்திருந்தனர்.
3 அவர்கள் ஏசாயாவிடம், “அரசன் எசேக்கியா, இன்று துக்கத்திற்கும் துயரத்திற்குமான விசேஷ நாள் என்று கட்டளையிட்டிருக்கிறார். இன்று மிக துக்கமான நாளாக இருக்கும். இது குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டிய நாளைப்போன்ற ஒரு நாளாக இருக்கும். ஆனால் குழந்தை பெறவோ போதிய பெலன் தாய்க்கில்லை. 4 (உமது தேவனான கர்த்தர் தளபதி சொன்னவற்றைக் கேட்டிருக்கலாம்). அசீரியா அரசன் தளபதியை அனுப்பி, ஜீவனுள்ள தேவனைப்பற்றி மோசமாகப் பேசும்படி அனுப்பியிருக்கிறான். உமது தேவனாகிய கர்த்தர் அந்தக் கெட்ட வார்த்தைகளைக் கேட்பார். ஒருவேளை சத்துரு தப்பானவன் என்று கர்த்தர் நிரூபிக்கச் செய்வார்! தயவுசெய்து இஸ்ரவேலில் மீதியாக இருக்கிற சில ஜனங்களுக்காக ஜெபம் செய்யும்” என்றனர்.
5-6 ஏசாயா அவர்களிடம், “இந்தத் தகவலை உங்கள் எஜமானனான எசேக்கியாவிடம் சொல்லுங்கள். கர்த்தர் சொல்கிறார், ֥‘தளபதியிடமிருந்து நீங்கள் கேட்டவற்றைப்பற்றிப் பயப்பட வேண்டாம்! அசீரியா அரசனது சிறுவர்கள் என்னைப்பற்றி சொன்ன தீயவற்றை நம்பவேண்டாம். 7 பாருங்கள், நான் அசீரியாவிற்கு எதிராக ஒரு ஆவியை அனுப்புவேன். அசீரியா அரசன் அவனது நாட்டிற்கு வரவிருக்கும் ஆபத்து பற்றிய எச்சரிக்கையைப் பெறுவான். எனவே அவன் தனது நாட்டிற்குத் திரும்பிப்போவான். அந்த நேரத்தில் அவனது சொந்த நாட்டில் ஒரு வாளால் அவனைக் கொல்லுவேன்’” என்றார்.
அசீரியா படை எருசலேமை விட்டு விலகியது
8-9 அசீரியா அரசன் ஒரு அறிக்கையைப் பெற்றான். அந்த அறிக்கை, “எத்தியோப்பியா அரசனான திராக்கா உம்மோடு போரிட வருகிறான்” என்று சொன்னது. எனவே, அசீரியா அரசன் லாகீசை விட்டு லிப்னாவுக்குத் திரும்பிப்போனான். தளபதி இதனைக் கேள்விப்பட்டான். அவன் லிப்னா நகரத்திற்குப்போனான். அங்கே அசீரியா அரசன் போரிட்டுக்கொண்டிருந்தான். பிறகு தளபதி எசேக்கியாவிற்குத் தூதுவர்களை அனுப்பினான். 10 “நீங்கள் இவற்றை யூத அரசனான எசேக்கியாவிடம் சொல்லவேண்டுவன:
‘நீங்கள் நம்புகிற தெய்வங்களால் முட்டாளாக வேண்டாம். “அசீரியா அரசனால் எருசலேம் தோற்கடிக்கப்படும்படி தேவன் விடமாட்டார்” என்று சொல்லாதீர்கள். 11 கவனியுங்கள், அசீரியாவின் அரசர்கள் மற்ற நாடுகளுக்குச் செய்ததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் மற்றவர்களை முற்றிலுமாய் அழித்தார்கள். நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நம்புகிறீர்களா? இல்லை. 12 அந்த ஜனங்களின் தெய்வங்கள் அவர்களைக் காப்பாற்றினார்களா? இல்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். எனது ஜனங்கள் கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்களையும் தோற்கடித்தனர். 13 ஆமாத் அர்பாத் அரசர் எங்கே இருக்கிறார்கள்? செப்பர்வாயீம் அரசன் எங்கே இருக்கிறான்? ஏனா, ஈவா நகரங்களின் அரசர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் முறியடிக்கப்பட்டனர்! அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்!’” என்று தளபதி சொன்னான்.
எசேக்கியா தேவனிடம் ஜெபம் செய்கிறான்
14 எசேக்கியா தூதுவர்களிடமிருந்து செய்தியைப் பெற்று வாசித்தான். பிறகு, எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திற்குச் சென்றான். எசேக்கியா கடிதத்தைத் திறந்து கர்த்தருக்கு முன்பு வைத்தான். 15 எசேக்கியா கர்த்தரிடம் ஜெபம் செய்யத் தொடங்கினான். எசேக்கியா சொன்னான்: 16 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நீர் கேருபீன்களின் மேல் அரசராக அமர்ந்திருக்கிறீர். நீர் மட்டுமே பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் ஆளும் தேவன்! நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர்! 17 கர்த்தாவே நான் சொல்வதைக் கேளும். சனகெரிப்பிடமிருந்து வந்த செய்தியை உமது கண்களைத் திறந்து பாரும். எனக்குச் சனகெரிப் இந்தச் செய்தியை அனுப்பினான். ஜீவனுள்ள தேவனாகிய உம்மைப்பற்றி தீயச் செய்திகளை இது சொல்கிறது. 18 கர்த்தாவே, அசீரியாவின் அரசன் உண்மையிலேயே அனைத்து நாடுகளையும் ஜனங்களையும் அழித்திருக்கிறான். 19 கர்த்தாவே, அந்த நாடுகளில் உள்ள தெய்வங்களை அசீரியாவின் அரசர்கள் எரித்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவை உண்மையான தெய்வங்கள் அல்ல. அவைகள் மனிதர்களால் செய்யப்பட்ட சிலைகள்தான். அவைகள் மரமும் கல்லும் தான். எனவேதான் அசீரியாவின் அரசர்களால் அவற்றை அழிக்க முடிந்தது. 20 ஆனால் நீரோ எமது தேவனாகிய கர்த்தர்! எனவே அசீரியா அரசனின் வல்லமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு, மற்ற நாடுகள் எல்லாம் கர்த்தராகிய நீர் மட்டுமே ஒரே தேவன் என்பதை அறிந்துகொள்ளும்” என்று ஜெபித்தான்.
எசேக்கியாவிற்கு தேவனுடைய பதில்
21 பிறகு ஆமோத்சின் மகனான ஏசாயா எசேக்கியாவிற்குச் செய்தி அனுப்பினான். ஏசாயா, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுவது என்னவென்றால், ‘அசீரியா அரசனாகிய சனகெரீப்பிடமிருந்து வந்த செய்தியைப்பற்றி நீ ஜெபம் செய்தாய். நான் உனது ஜெபத்தைக் கேட்டேன்.’
22 “சனகெரிப்பைக் குறித்து கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்:
“அசீரியா அரசனே, சீயோனின் (எருசலேம்) கன்னிமகள், ‘நீ முக்கியமானவன்’ என்று எண்ணுவதில்லை.
உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள்.
எருசலேமின் மகள் உன்னை பரிகாசம் செய்கிறாள்.
உன்னைப் பார்த்து அவள் சிரிக்கிறாள்.
23 ஆனால், நீ யாரை பரிகாசம் செய்தாய்?
நீ யாருக்கு எதிராகப் பேசினாய்?
நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு எதிராகப் பேசினாய்.
அவரைவிட நீ உத்தமன்போல நடித்தாய்.
24 எனது கர்த்தராகிய ஆண்டவரைப்பற்றி எதிராகப் பேச உனது வேலைக்காரர்களைப் பயன்படுத்தினாய்.
நீ, ‘நான் வல்லமையுள்ளவன்! என்னிடம் பற்பல இரதங்கள் உள்ளன.
எனது வல்லமையால் நான் லீபனோனைத் தோற்கடித்தேன்.
லீபனோனின் மலை உச்சிகளில் நான் ஏறினேன்.
நான் லீபனோனில் உள்ள உயரமான மரங்களை (படைகள்) வெட்டித் தள்ளினேன்.
நான் மலையின் உச்சிக்கும் காட்டின் மிக ஆழமான பகுதிக்கும் சென்றிருக்கிறேன் என்று கூறினாய்.
25 நான் கிணற்றைத் தோண்டி புதிய இடங்களிலிருந்து தண்ணீரைக் குடித்திருக்கிறேன்.
எகிப்தின் ஆறுகளை வற்றச்செய்து அந்நாட்டில் நான் நடந்து சென்றிருக்கிறேன்.’
26 “‘இதைத்தான் நீ கூறினாய். ஆனால் நான் சொன்னவற்றை நீ கேட்டாயா?
நீண்ட காலத்துக்கு முன்னால் தேவனாகிய நானே இவற்றைத் திட்டமிட்டேன்.
பழங்காலத்திலிருந்து நானே அதைத் திட்டமிட்டேன்.
இப்போதும் நானே அதை நடப்பித்தேன்.
பலமான நகரங்களையெல்லாம் அழிக்கும்படி நான் உன்னை அனுமதித்தேன்.
நான் அந்த நகரங்களைப் பாழான மண்மேடாகும்படி மாற்றினேன்.
27 அந்நகரங்களில் வாழ்ந்த ஜனங்கள் பலவீனமானவர்களாக இருந்தார்கள்.
அவர்கள் அச்சமும் குழப்பமும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அவர்கள் வயல்வெளியில் உள்ள புல்லைப்போல வெட்டப்படுகிறவர்களாக இருந்தார்கள்.
வீடுகளுக்கு மேலே வளர்ந்துள்ள புல்லைப்போல அவர்கள் இருந்தனர். அது உயரமாக வளருவதற்கு முன் வனாந்தரத்து வெப்பக்காற்றால் எரிக்கப்படுகிறது.
28 உனது படையைப்பற்றியும், போர்களைப்பற்றியும் எனக்குத் தெரியும்.
நீ எப்பொழுது ஓய்வெடுத்தாய், எப்பொழுது போருக்குப்போனாய் என்று எனக்குத் தெரியும்.
போரிலிருந்து எப்பொழுது வீட்டிற்கு வந்தாய் என்றும் எனக்குத் தெரியும்.
என்னிடத்தில் எப்போது கலக்கமடைந்தாய் என்றும் எனக்குத் தெரியும்.
29 என் மீது நீ கோபத்தோடு இருக்கிறாய்.
உனது பெருமையான சொற்களை நான் கேட்டேன்.
எனவே, நான் உனது மூக்கில் கொக்கியை மாட்டுவேன்.
நான் உனது வாயில் கடிவாளத்தைப்போடுவேன்.
நீ வந்த அதே சாலையில்
என் நாட்டை விட்டு நீ போகும்படி பலவந்தப்படுத்துவேன்.’”
எசேக்கியாவிற்கு கர்த்தருடையச் செய்தி
30 பிறகு கர்த்தர் எசேக்கியாவிடம், “நான் சொன்னவையெல்லாம் உண்மை என்பதைக் காட்ட உனக்கு ஒரு அடையாளம் தருவேன். இந்த ஆண்டு எந்த தானியத்தையும் விதைக்க மாட்டாய். எனவே இந்த ஆண்டு நீ சென்ற ஆண்டின் விளைச்சலில் காடு போல வளர்ந்த தானியம் மட்டுமே உண்பாய். ஆனால் மூன்று ஆண்டுகளில் நீ பயிர் செய்த தானியத்தையே உண்பாய். நீ அவற்றை அறுவடை செய்வாய். உண்பதற்கு உன்னிடம் ஏராளமாக இருக்கும். நீ திராட்சையைப் பயிர் செய்து அதன் பழங்களை உண்பாய்.
31 “யூதாவின் குடும்பத்தில் தப்பி மீதியாய் இருக்கிற ஜனங்கள் மறுபடியும் வளர ஆரம்பிப்பார்கள். அந்த ஜனங்கள், தரையில் தன் வேர்களை ஆழமாகச் செலுத்தி உறுதியாக வளர்ந்த செடிகளைப்போன்றவர்கள். அந்த ஜனங்களுக்கு மிகுதியான பழங்கள் (பிள்ளைகள்) பூமியின்மேல் இருக்கும். 32 ஏனெனில் எருசலேமை விட்டு வெளியே வந்த சில ஜனங்கள் மட்டும் உயிரோடு இருப்பார்கள். சீயோன் மலையில் இருந்து உயிரோடு வந்தவர்களும் இருப்பார்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய பலமான அன்பு இதனைச் செய்யும்.
33 எனவே, அசீரியா அரசனைப்பற்றி ஒரு செய்தி கர்த்தர் இதைக் கூறுகிறார்,
“அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான்.
இந்த நகரத்தில் அவன் ஒரு அம்பைக்கூட எய்யமாட்டான்.
அவனது கேடயங்களோடு இந்த நகரத்திற்கு எதிராக சண்டையிட நகரமாட்டான்.
நகரச் சுவர்களில் அவன் கொத்தளம் அமைக்கமாட்டான்.
34 அவன் வந்த சாலையிலேயே அவனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான்.
அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான்.
கர்த்தர் இதைச் சொல்லுகின்றார்.
35 இந்த நகரத்தை நான் பாதுகாத்து காப்பாற்றுவேன்.
இதனை நான் எனக்காகவும், எனது தாசனாகிய தாவீதுக்காகவும் செய்வேன்” என்று கர்த்தர் சொல்கிறார்.
The Assyrian Army Is Destroyed
36 எனவே, அசீரியாவின் பாளையத்தில் உள்ள 1,85,000 ஆட்களை கர்த்தருடைய தூதன் போய் கொன்றான். மறுநாள் காலையில் ஜனங்கள் எழுந்தனர். அவர்கள் தங்களைச் சுற்றிலும் மரித்துப்போன ஆட்களின் உடல்களைக் கண்டனர். 37 எனவே, அசீரியாவின் அரசனான சனகெரிப் நினிவேக்குத் திரும்பிப்போய் அங்கே தங்கினான்.
38 ஒரு நாள், சனகெரிப் அவனது தேவனான நிஸ்ரோகின் ஆலயத்தில் தொழுகை செய்வதற்காக இருந்தான். அந்த நேரத்தில் அவனது இரண்டு மகன்களான அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றனர். பிறகு, அந்த மகன்கள் அரராத்துக்கு ஓடிப்போனார்கள். எனவே, அசீரியாவின் புதிய அரசனாகச் சனகெரிப்பின் மகனான எசரத்தோன் வந்தான்.
எசேக்கியாவின் சுகவீனம்
38 அந்த நேரத்தில், எசேக்கியா சுகவீனம் அடைந்தான். அவன் மரணத்துக்கு சமீபமாயிருந்தான். ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசி அவனைப் பார்க்க வந்தான்.
ஏசாயா அரசனிடம், “இவற்றை உன்னிடம் சொல்லுமாறு கர்த்தர் கூறினார்: நீ விரைவில் மரிப்பாய். எனவே, நீ மரித்தபிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உனது குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். நீ மீண்டும் குணமடையமாட்டாய்!” என்று கூறினான்.
2 எசேக்கியா ஆலயத்தின் சுவரின் பக்கம் திரும்பி ஜெபம் செய்யத் தொடங்கினான். 3 “கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உண்மையாக உமக்குச் சேவை செய்ததை நினைத்தருளும். நீர் நல்லது என்று கூறியவற்றையே நான் செய்திருக்கிறேன்” என்று அவன் சொன்னான். பிறகு எசேக்கியா மிக உரத்த குரலில் கதறத் தொடங்கினான்.
4 ஏசாயா கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றான். 5 ஏசாயா, “எசேக்கியாவிடம் போய் உனது முற்பிதாவான தாவீதின் தேவனாகிய கர்த்தர் சொன்னவை இதுதான் என்று அவனிடம் கூறு. உனது ஜெபத்தை நான் கேட்டேன். உனது கண்ணீரை நான் பார்த்தேன். நான் உனது வாழ்க்கையில் 15 ஆண்டுகளைக் கூட்டுவேன். 6 நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா அரசனிடமிருந்து காப்பாற்றுவேன், நான் இந்த நகரத்தை பாதுகாப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார் என்றான்.
21 பிறகு எசேக்கியாவிடம் ஏசாயா, “நீ அத்திப்பழங்களை பசையைபோன்று குழைத்து உனது புண்ணின்மேல் தடவவேண்டும். பிறகு நீ குணம் பெறுவாய்” என்றான்.
22 ஆனால் எசேக்கியா ஏசாயாவிடம், “நான் குணமடைவேன் என்பதையும், நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போக இயலும் என்பதையும் நீரூபிக்கும் அடையாளம் எது?” என்று கேட்டிருந்தான்.
7 அவர் இவற்றையெல்லாம் செய்வார் என்பதைக் காண்பிக்கும்படி கர்த்தரிடமிருந்து வந்த அடையாளம் இதுதான். 8 “பார், ஆகாசு சூரிய கடியாரத்தில் படிக்குப்படி இறங்கின சூரிய நிழலை பத்துப் படிகள் பின்னிட்டுத் திருப்புகிறேன். முன்பு இருந்த இடத்திலிருந்து சூரிய நிழல் பத்துப்பாகை பின்னால் போகும்” என்றான்.
Hezekiah’s Song
9 எசேக்கியா நோயிலிருந்து குணமடைந்ததும் அவனிடமிருந்து வந்த கடிதம் இதுதான்.
10 நான் முதுமையடையும்வரை வாழ்வேன் என்று நான் எனக்குள் சொன்னேன்.
ஆனால் பிறகு பாதாளத்தின் வாசல்கள் வழியாகச் செல்லும் எனது நேரம் வந்தது.
11 எனவே, நான் சொன்னேன்: “கர்த்தரை நான் இனிமேல் உயிரோடு இருக்கிறவர்களின் நாட்டில் பார்க்கமாட்டேன்.
இனிமேல் பூமியிலுள்ள ஜனங்களோடு இருந்து ஜனங்களை நான் காணமாட்டேன்.
12 எனது வீடு, எனது மேய்ப்பனுடைய கூடாரம் கீழே தள்ளப்படுவதுபோல் என்னிடமிருந்து எடுக்கப்படும்.
நெசவு செய்கிறவன் பாவினை அறுப்பதுபோல் நான் முடிந்து போகிறேன்.
எனது வாழ்வை அவ்வளவு சிறிய காலத்திற்குள் நீ முடித்தாய்!
13 ஒரு சிங்கத்தைப்போன்ற நான் எல்லா இரவுகளிலும் கதறினேன்.
ஆனால் எனது நம்பிக்கைகள் சிங்கம் எலும்புகளைத் தின்பதுபோன்று நொறுக்கப்பட்டன.
இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எனது வாழ்வை நீ முடித்துவிட்டாய்.
14 ஒரு புறாவைப்போன்று அலறினேன்.
ஒரு பறவையைப்போன்று அலறினேன்.
எனது கண்கள் சோர்ந்துபோயின.
ஆனால் நான் தொடர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எனது ஆண்டவரே! நான் அதிகமாய் ஒடுங்கிப்போகிறேன்.
எனக்கு உதவிட வாக்களிப்பீர்!”
15 நான் என்ன சொல்லமுடியும்.
என்ன நிகழும் என்று எனது ஆண்டவர் கூறினார்.
அவை நிகழ எனது எஜமானர் காரணமாக இருப்பார்.
இந்தத் தொல்லைகளை நான் எனது ஆத்துமாவிற்குள் வைத்திருந்தேன்.
எனவே இப்போது நான் எனது வாழ்வுமுழுவதும் பணிவுள்ளவனாக இருப்பேன்.
16 எனது ஆண்டவரே! இந்தக் கடின நேரத்தைப் பயன்படுத்தி எனது ஆவியை மீண்டும் வாழச் செய்யும்.
என் ஆவி பலமும் நலமும் பெற உதவும்.
நான் நலம் பெற உதவும்!
நான் மீண்டும் வாழ உதவும்!
17 பார்! எனது தொல்லைகள் போகின்றன!
இப்போது எனக்கு சமாதானம் உள்ளது.
நீர் என்னை மிகவும் நேசிக்கிறீர்.
நான் கல்லறையில் அழுகும்படிவிடமாட்டீர்.
எனது பாவங்களையெல்லாம் மன்னித்தீர்,
எனது பாவங்களை வெகு தொலைவிற்கு எறிந்தீர்.
18 மரித்த ஜனங்கள் உம்மைப் புகழ்ந்து பாடுவதில்லை.
பாதாளத்திலுள்ள ஜனங்களும் உம்மைத் துதிப்பதில்லை.
மரித்த ஜனங்கள் தமக்கு உதவுமாறு உம்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள்.
அவர்கள் தரையில் உள்ள பாதாளத்துக்குள் செல்கிறார்கள்.
அவர்கள் மீண்டும் பேசமாட்டார்கள்.
19 இன்று என்னைப்போன்று உயிருடன் இருக்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கும் ஜனங்களாக உள்ளனர்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளிடம், “உம்மை நம்ப முடியும்” என்று சொல்லவேண்டும்.
20 எனவே, நான் சொல்கிறேன்: “கர்த்தர் என்னைக் காப்பாற்றினார் எனவே நாங்கள் பாடுவோம்.
எங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் பாடல்களை இசைப்போம்”.
பாபிலோனிலிருந்து தூதுவர்கள்
39 அந்த நேரத்தில், பலாதானின் மகனான மெரோதாக் பலாதான் பாபிலோனின் அரசனாக இருந்தான். எசேக்கியாவிற்கு மெரோதாக் கடிதங்களையும், அன்பளிப்புகளையும் அனுப்பினான். எசேக்கியா நோயுற்றிருந்து குணம் பெற்றதை மெரோதாக் கேள்விப்பட்டே அன்பளிப்புகளை அனுப்பினான். 2 இந்த அன்பளிப்புகள் எசேக்கியாவை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது. எனவே, எசேக்கியா தனது பொக்கிஷ சாலையிலுள்ள விலையுயர்ந்தவற்றை மெரோதாக்கின் ஆட்கள் பார்வையிட அனுமதித்தான். அந்த ஆட்களிடம் எசேக்கியா தனது செல்வங்களான வெள்ளி, தங்கம், எண்ணெய்வளம், விலைமதிப்புள்ள வாசனைப் பொருட்கள் என அனைத்தையும் காட்டினான். பிறகு அவன் போருக்குப் பயன்படுத்தும் வாள்கள் மற்றும் கேடயங்களையும் காட்டினான். தான் பாதுகாத்து வைத்திருந்த அனைத்தையும் அவன் அவர்களுக்குக் காட்டினான். அவன் தனது வீட்டிலும், தனது நாட்டிலும் உள்ள எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான்.
3 தீர்க்கதரிசியான ஏசாயா, அரசனான எசேக்கியாவிடம் சென்று, “இந்த ஆட்கள் என்ன சொல்கிறார்கள்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான்.
எசேக்கியா, “வெகு தொலைவிலுள்ள நாட்டிலிருந்து இவர்கள் வந்தார்கள். இவர்கள் பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று கூறினான்.
4 எனவே ஏசாயா அவனிடம் கேட்டான், “உனது வீட்டில் இவர்கள் என்ன பார்த்தார்கள்?” என்று கேட்டான்.
எசேக்கியா, “இவர்கள் எனது அரண்மனையில் உள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள். நான் எனது செல்வம் முழுவதையும் காட்டினேன்” என்று கூறினான்.
5 ஏசாயா எசேக்கியாவிடம், “சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளைக் கவனி. 6 எதிர்காலத்தில், உன் அரண்மனையிலுள்ள அனைத்தும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்த உன்னிடமுள்ள அனைத்தும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும். எல்லா செல்வமும் வெளியே எடுக்கப்படும். எதுவும் விடுபடாது! சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதனைக் கூறினார். 7 பாபிலோனின் அரசன் உனது சொந்த மகன்களை எடுத்துச் செல்வான்! பாபிலோன் அரசனின் அரண்மனையில் உனது மகன்கள் வேலைக்காரர்களாக இருப்பார்கள்” என்றான்.
8 எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தரிடமிருந்து வந்த செய்தி நன்றாக உள்ளது” என்று கூறினான். (எசேக்கியா இதனைச் சொன்னான். ஏனென்றால், அவன், “நான் அரசனாக இருக்கும்போது தொல்லைகள் இல்லாமல் சமாதானம் இருக்கும்” என்று எண்ணினான்).
இஸ்ரவேலின் தண்டனை முடியும்
40 உனது தேவன் கூறுகிறார்,
“ஆறுதல்படுத்துங்கள்! எனது ஜனங்களை ஆறுதல்படுத்துங்கள்!
2 எருசலேமுடன் அன்பாகப் பேசுங்கள்.
உனது சேவைக்கான காலம் முடிந்துவிடுகிறது.
‘உனது பாவங்களுக்கான விலையைக் கொடுத்து விட்டாய்’ என்று எருசலேமிடம் கூறு.
கர்த்தர் எருசலேமை அவள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும்
இருமுறை தண்டித்தார்.”
3 கவனி! அங்கே ஒருவன் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறான்!
“கர்த்தருக்காக இந்த வனாந்திரத்தில் ஒரு பாதையை தயார் செய்யுங்கள்!
நமது தேவனுக்காக வனாந்திரத்தில் ஒரு சாலை அமையுங்கள்!
4 ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் நிரப்புங்கள்.
ஒவ்வொரு மலையையும் பள்ளத்தாக்கையும் நேராக்குங்கள்.
கரடுமுரடான சாலையை மென்மையாக்குங்கள்.
5 பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும்.
கர்த்தருடைய மகிமையை ஜனங்கள் அனைவரும் காண்பார்கள்.
ஆம், கர்த்தர் அவராகவே இவற்றைச் சொன்னார்!”
6 ஒரு குரல் சொன்னது, “பேசு!”
எனவே ஒருவன் கேட்டான், “நான் என்ன சொல்லவேண்டும்?”
அந்த குரல் சொன்னது, “ஜனங்கள் என்றென்றைக்கும் வாழமாட்டார்கள்.
அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
அவர்களது நன்மை ஒரு காட்டு மலர் போன்றது.
7 கர்த்தரிடமிருந்து ஒரு வல்லமையான காற்று புல்மேல் வீசும்.
அந்த புல்களும் காட்டு மலர்களும் வாடி செத்துப்போகும்.
உண்மையாகவே அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள்.
8 புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும்.
ஆனால், தேவனுடைய வார்த்தை என்றென்றும் தொடர்ந்து இருக்கும்.”
மீட்பு: தேவனுடைய நற்செய்தி
9 சீயோனே! உன்னிடம் சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன.
உயரமான மலைக்கு மேலே போய் நற்செய்திகளை சத்தமாய் சொல்! எருசலேமே!
உன்னிடம், சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன அஞ்சவேண்டாம்.
சாந்தமாய் பேசு! யூதாவிலுள்ள அனைத்து நகரங்களிலும் இந்தச் செய்திகளைக் கூறு: “பார், உன் தேவன் இங்கே இருக்கிறார்!”
10 எனது கர்த்தராகிய ஆண்டவர் வல்லமையோடு வருகிறார்.
எல்லா ஜனங்களையும் ஆள அவர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார்.
கர்த்தர் தமது ஜனங்களுக்காக விருதுகளைக் கொண்டுவருவார்.
அவரோடு அவர்களது பலன் இருக்கும்.
11 ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளை வழிநடத்திச் செல்வது போன்று கர்த்தர் தமது ஜனங்களை வழி நடத்துகிறார்.
கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்தி அவரது ஆடுகளை ஒன்று சேர்ப்பார்.
கர்த்தர் சிறிய ஆடுகளை எடுத்து தனது கைகளில் வைத்துக்கொள்வார். அவற்றின் தாய் ஆடுகள் அவர் பின்னால் நடக்கும்.
தேவன் உலகைப் படைத்தார், அவர் அதனை ஆளுகிறார்
12 யார் கடல்களைக் கைப்பிடியால் அளந்தார்கள்?
யார் வானத்தை கையளவால் அளந்தார்கள்?
யார் பூமியில் உள்ள மண்ணைக் கிண்ணத்தால் அளந்தார்கள்?
யார் அளவு கோல்களால் மலைகளையும் பாறைகளையும் அளந்தார்கள்? அது கர்த்தர்தான்.
13 கர்த்தருடைய ஆவியிடம் அவர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
கர்த்தரிடம் அவர் எப்படிச் செய்யவேண்டும் என யாரும் கூறவில்லை.
14 கர்த்தர் யாருடைய உதவியையாவது கேட்டாரா?
கர்த்தருக்கு நேர்மையாக இருக்கும்படி யாராவது கற்பித்தார்களா?
கர்த்தருக்கு அறிவை யாராவது கற்பித்தார்களா கர்த்தருக்கு ஞானத்தோடு இருக்குபடி யார் கற்பித்தது?
இல்லை! கர்த்தர் இவற்றைப்பற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கிறார்.
15 பார், நாடுகள் எல்லாம் வாளியில் ஒரு சிறு துளி போன்றது.
வெகு தொலைவிலுள்ள நாடுகளை கர்த்தர் எடுத்துக்கொண்டால்
அவரது தராசில் அவற்றை வைத்தால் அவை மணலின் சிறு பொடிகள் போன்று இருக்கும்.
16 லீபனோனில் உள்ள அனைத்து மரங்களும் கர்த்தருக்கு எரித்துப்போட போதாது.
லீபனோனில் உள்ள அனைத்து மிருகங்களும் பலிக்காக கொல்வதற்குப்போதாது.
17 தேவனோடு ஒப்பிடும்போது உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுமில்லை.
தேவனோடு ஒப்பிடும்போது அனைத்து நாடுகளும் ஈடு ஒன்றுமே இல்லாமல் போகும்.
தேவன் எப்படிப்பட்டவர் என்று ஜனங்களால் கற்பனை செய்ய முடியாது
18 எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது!
தேவனுடைய படத்தை உருவாக்க முடியுமா? முடியாது!
19 ஆனால், சில ஜனங்கள் பாறை அல்லது மரத்தால் சிலைகள் செய்து
அவர்கள் அதனைத் தெய்வங்கள் என்று அழைக்கின்றனர்.
ஒரு வேலைக்காரன் ஒரு சிலையைச் செய்கிறான்.
பிறகு, இன்னொரு வேலைக்காரன் அதனைத் தங்கத்தால் மூடுகிறான்.
வெள்ளிச் சங்கிலிகளையும் அதற்காகச் செய்கிறான்.
20 அடிப்பகுதிக்காக அவன் ஒரு சிறப்பான மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.
அது உளுத்துப்போகாத மரவகையைச் சேர்ந்தது.
பிறகு, அவன் ஒரு சிறந்த மரத்தச்சனைக் கண்டுபிடிக்கிறான்.
அந்த வேலைக்காரன் விழாமல் இருக்கிற ஒரு தெய்வம் செய்கிறான்.
21 நீங்கள் உண்மையை நிச்சயமாக அறிவீர்கள், இல்லையா?
நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்!
உங்களுக்கு நிச்சயமாக ஒருவன் நீண்ட காலத்துக்குமுன் சொன்னான்!
இந்த உலகத்தைப் படைத்தவர் யார் என்று நிச்சயமாக நீ புரிந்திருக்கிறாய்!
22 கர்த்தரே உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி வளையத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
அவரோடு ஒப்பிடும்போது, ஜனங்கள் வெட்டுக்கிளிகளைப்போலிருக்கிறார்கள்.
அவர் வானங்களை ஒரு துண்டு துணியைப்போல் பரப்புகிறார்.
அவர் வானங்களைக் குடியிருப்பதற்கான கூடாராமாக்குகிறார்.
23 ஆளுவோரை அவர் முக்கியமற்றவர்களாகச் செய்கிறார்.
அவர் இந்த உலகத்தில் உள்ள நீதிபதிகளை முழுமையாகப் பயனற்றவர்களாகச் செய்கிறார்.
24 ஆளுவோர் தாவரங்களைப்போன்றவர்கள் அவர்கள் தரையில் நடப்படுகிறார்கள்.
ஆனால், அவை தரைக்குள் தன் வேர்களைச் செலுத்துவதற்குமுன்,
தேவன் அத்தாவரங்களின் மேல் ஊதுகிறார்.
அவை செத்து காய்ந்து போகின்றன.
பெருங்காற்று அவற்றை புல்லைப்போல அடித்துப்போகும்.
25 பரிசுத்தமானவர் (தேவன்) சொல்கிறார் என்னை எதனோடும் உன்னால் ஒப்பிட முடியுமா? முடியாது.
எனக்கு இணையாக ஒருவரும் இல்லை.
26 மேலே வானங்களைப் பாருங்கள்.
இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைத்தது யார்?
வானத்தில் இந்தப் “படைகளை” எல்லாம் படைத்தது யார்?
ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரும் யாருக்கு தெரியும்?
உண்மையான தேவன் மிக்க பலமும் வல்லமையும் கொண்டவர்.
எனவே, நட்சத்திரங்களில் எதுவும் குறையாது.
27 யாக்கோபே, இது உண்மை. இஸ்ரவேலே, நீ இதனை நம்பவேண்டும்!
எனவே, நீ எதற்காக இதைக் கூறுகிறாய்?
“கர்த்தர் நான் வாழும் வழியை அறியமாட்டார்.
தேவன் என்னைக் கண்டுபிடித்துத் தண்டிக்கமாட்டார்.”
28 தேவனாகிய கர்த்தர் மிகவும் ஞானமுள்ளவர் என்று நீ உறுதியாகக் கேள்விப்பட்டு அறிந்திருக்கிறாய்.
ஜனங்கள் அவருக்கு தெரிந்ததையெல்லாம் கற்றுக்கொள்ள இயலாது.
கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை.
கர்த்தர் தொலைதூர இடங்களைப் பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவிக்கிறார்.
29 கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார்.
ஜனங்கள் வல்லமையில்லாமல் இருந்தால் வல்லமை பெற கர்த்தர் காரணமாகிறார்.
30 இளைஞர்கள் சோர்வடைந்து ஓய்வு தேவை என நினைக்கின்றனர்
சிறு பையன்களும் கூடத் தடுமாறி விழுகிறார்கள்.
31 ஆனால், கர்த்தரை நம்புகிற ஜனங்கள்
புதிய சிறகுகள் முளைக்கின்ற கழுகுகளைப்போல மீண்டும் பலம் பெறுகின்றனர்.
இந்த ஜனங்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள்.
இந்த ஜனங்கள் நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.
கர்த்தரே நித்திய சிருஷ்டிகர்
41 கர்த்தர் கூறுகிறார், “தூரத்திலுள்ள நாடுகளே, அமைதியாக இருங்கள் என்னிடம் வாருங்கள்!
நாடுகளே மறுபடியும் தைரியம் கொள்ளுங்கள்.
என்னிடம் வந்து பேசுங்கள். நாம் சந்தித்து கூடுவோம்.
யார் சரியென்று முடிவு செய்வோம்.
2 இந்த வினாக்களுக்கு என்னிடம் பதில் சொல்லுங்கள்.
கிழக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிற மனிதனை எழுப்பியது யார்?
நன்மையானது அவரோடு நடக்கிறது.
அவர் தமது வாளைப் பயன்படுத்தி நாடுகளைத் தாக்குகிறார்.
அவைகள் தூசிபோல ஆகின்றன.
அவர் தமது வில்லைப் பயன்படுத்தி அரசர்களை வென்றார்.
அவர்கள் காற்றால் அடித்துச் செல்லப்படும் துரும்புகளைப்போன்று ஓடிப்போனார்கள்.
3 அவர் படைகளைத் துரத்துகிறார். அவர் காயப்படுத்தவில்லை.
இதற்கு முன்னால் போகாத இடங்களுக்கு எல்லாம் அவர் போகிறார்.
4 இவை நிகழக் காரணமாக இருந்தது யார்?இதனைச் செய்தது யார்?
தொடக்கத்திலிருந்து அனைத்து ஜனங்களையும் அழைத்தது யார்?
கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன்.
கர்த்தராகிய நானே முதல்வர்!
தொடக்கத்திற்கு முன்னரே நான் இங்கே இருந்தேன்.
எல்லாம் முடியும்போதும் நான் இங்கே இருப்பேன்.
5 வெகு தொலைவிலுள்ள இடங்களே பாருங்கள் பயப்படுங்கள்!
பூமியிலுள்ள தொலைதூர இடங்களே அச்சத்தால் நடுங்குங்கள்.
இங்கே வந்து என்னைக் கவனியுங்கள்!” அவர்கள் வந்தார்கள்.
6 “தொழிலாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். அவர்கள் பலம் பெற ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தினார்கள். 7 ஒரு வேலைக்காரன் சிலை செதுக்க மரம் வெட்டினான். அவன் தங்க வேலை செய்பவனை உற்சாகப்படுத்தினான். இன்னொரு வேலைக்காரன் சுத்தியலைப் பயன்படுத்தி உலோகத்தை மென்மைப்படுத்தினான். பிறகு, அந்த வேலைக்காரன் அடைக்கல்லில் வேலை செய்பவனை உற்சாகப்படுத்துகிறான். இந்த இறுதி வேலைக்காரன், ‘இந்த வேலை நன்று. இந்த உலோகம் வெளியே வராது’ என்று கூறுகிறான். எனவே, அவன் சிலையை ஒரு பீடத்தின் மேல் அசையாமல் ஆணியால் இறுக்குகிறான். அந்தச் சிலை கீழே விழாது. அது எப்பொழுதும் அசையாது.”
கர்த்தர் மாத்திரமே நம்மைக் காப்பாற்ற முடியும்
8 கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன்.
யாக்கோபே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து நீ வந்தாய், நான் ஆபிரகாமை நேசிக்கிறேன்.
9 பூமியில் நீங்கள் வெகு தொலைவில் இருந்தீர்கள்.
நீங்கள் தொலைதூர நாட்டில் இருந்தீர்கள்.
ஆனால் நான் உன்னிடம் தேடிவந்து உன்னை அழைத்துச் சொன்னேன்,
‘நீ எனது ஊழியன்.’
நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நான் உன்னைத் தள்ளிவிடவில்லை!
10 கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.
பயப்படாதே, நான் உனது தேவன்.
நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன்.
நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்.
11 பார், சில ஜனங்கள் உன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அவமானம் அடைவார்கள்.
உங்கள் பகைவர்கள் மறைந்து தொலைந்து போவார்கள்.
12 நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள்.
ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது.
உங்களுக்கு எதிராகப்போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள்.
13 நான் உனது தேவனாகிய கர்த்தர்.
நான் உனது வலது கையைப் பற்றியிருக்கிறேன்.
‘நான் உனக்குச் சொல்கிறேன்: பயப்படாதே!
நான் உனக்கு உதவுவேன்.’
14 விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே.
எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்!
நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்”.
கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார்.
“நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்)
உன்னைக் காப்பாற்றுகிறவரும் இதனைக் கூறுகிறார்.
15 பார்! நான் உன்னை போரடிப்பதற்கான புதிய கருவியாக்குவேன்.
அது கூர்மையான பற்களை உடையது.
விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி போரடிப்பார்கள்.
அவர்கள் தானியத்தை அதிலிருந்து பிரிப்பார்கள்.
நீ மலைகளின் மேல் நடந்து அவற்றை நசுக்குவாய்.
நீ குன்றுகளைப் பதர்களைப்போன்று ஆக்கிவிடுவாய்.
16 நீ அவற்றைக் காற்றில் தூற்றிவிடுவாய்.
அவற்றைக் காற்று அடித்துச்சென்று, சிதறடித்துவிடும்.
பிறகு, நீ கர்த்தருக்குள் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரைப்பற்றி (தேவன்) நீ மிகவும் பெருமை அடைவாய்”.
17 “ஏழ்மையும் தேவையும் கொண்ட ஜனங்கள் தண்ணீருக்காக அலைவார்கள்.
ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் தாகமாக இருக்கிறார்கள்.
அவர்களின் நாக்கு உலர்ந்துபோயிற்று.
அவர்களின் ஜெபத்திற்கு இஸ்ரவேலின் தேவனும் கர்த்தருமாகிய நான் பதில் சொல்வேன்.
நான் அவர்களை விடமாட்டேன்.
அவர்கள் மரிக்கவும் விடமாட்டேன்.
18 வறண்ட மலைகளில் நதிகளை நான் பாயச் செய்வேன்.
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை நான் எழச்செய்வேன்.
வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன்.
வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும்.
2008 by World Bible Translation Center