Print Page Options
Previous Prev Day Next DayNext

Bible in 90 Days

An intensive Bible reading plan that walks through the entire Bible in 90 days.
Duration: 88 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 15:19-28:43

19 ஆம், அது உண்மையாகவே நிகழ்ந்தது! பார்வோனின் குதிரைகளும், வீரர்களும், இரதங்களும் கடலுக்குள் அமிழ்ந்தன. கடலின் ஆழத்து தண்ணீரை அவர்களுக்கு மேலாக கர்த்தர் கொண்டு வந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ கடலினூடே உலர்ந்த தரையில் நடந்தனர்.

20 அப்போது, தீர்க்கதரிசினியும், ஆரோனின் சகோதரியுமாகிய மிரியாம் ஒரு தம்புருவை எடுத்தாள். மிரியாமுடன் பெண்கள் பாடவும் நடனம் ஆடவும் செய்தனர். மிரியாம்,

21 “கர்த்தரைப் பாடுங்கள்!
    அவர் பெரிய செயல்களைச் செய்தார்.
அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்தினார்” என்று பாடினாள்.

இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்திற்குள் செல்லுதல்

22 செங்கடலை விட்டு சூர் பாலைவனத்திற்குள் மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் சென்றான். அவர்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்தனர். ஜனங்களுக்குக் குடிப்பதற்கு அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 23 மூன்று நாட்களுக்குப் பின் ஜனங்கள் மாராவிற்கு வந்தனர். மாராவில் தண்ணீர் இருந்தது. ஆனால் குடிக்க முடியாதபடி கசப்பாக இருந்தது. (இதனால் அந்த இடம் மாரா என்று அழைக்கப்பட்டது)

24 மோசேயிடம் வந்து ஜனங்கள், “நாங்கள் இப்போது எதைக் குடிப்போம்?” என்று முறையிட ஆரம்பித்தனர்.

25 மோசே கர்த்தரை வேண்டினான், கர்த்தர் அவனுக்கு ஒரு மரத்தைக் காட்டினார். மோசே அம்மரத்தை தண்ணீருக்குள் போட்டான். அவன் அவ்வாறு செய்தபோது, அது நல்ல குடிதண்ணீராக மாறிற்று.

அவ்விடத்தில், கர்த்தர் ஜனங்களை நியாயந்தீர்த்து அவர்களுக்கு ஒரு சட்டத்தைக் கொடுத்தார். ஜனங்களின் நம்பிக்கையையும் சோதித்துப் பார்த்தார். 26 கர்த்தர், “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் சரியெனக் கூறும் காரியங்களை நீங்கள் செய்யவேண்டும். கர்த்தரின் எல்லாக் கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்தால், எகிப்தியர்களைப்போல நோயுறமாட்டீர்கள். கர்த்தராகிய நான் எகிப்தியருக்கு கொடுத்த எந்த நோயையும் உங்களுக்கு வரவிடமாட்டேன். நானே கர்த்தர். உங்களைக் குணப்படுத்துகிறவர் நான் ஒருவரே” என்றார்.

27 பின்பு ஜனங்கள் ஏலிமுக்குப் பயணமாயினர். ஏலிமில் பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. எனவே தண்ணீர் இருந்த இடத்தினருகே ஜனங்கள் கூடாரமிட்டுத் தங்கினார்கள்.

16 ஜனங்கள் ஏலிமை விட்டு ஏலிமுக்கும், சீனாய்க்கும் நடுவில் உள்ள சீன் பாலைவனத்திற்கு வந்தனர். எகிப்தைவிட்டுப் புறப்பட்டபின் இரண்டாவது மாதத்தில் பதினைந்தாம் நாள் அவர்கள் அந்த இடத்தை வந்தடைந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். பாலைவனத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: “எகிப்து தேசத்தில் கர்த்தர் எங்களைக் கொன்றிருந்தால் நலமாக இருந்திருக்கும். அங்கு உண்பதற்காவது மிகுதியான உணவு கிடைத்தது. எங்களுக்குத் தேவையான எல்லா உணவும் கிடைத்தன. ஆனால் இப்போது எங்களை நீர் பாலைவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர். பசியால் இங்கு நாங்கள் எல்லோரும் செத்துப்போவோம்” என்றனர்.

அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் வானத்திலிருந்து உணவுப்பொருளை விழச் செய்வேன். நீங்கள் உண்பதற்கு அது உணவாகும். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் வெளியே போய் அவர்களுக்கு அந்தந்த நாளுக்கு மட்டும் தேவையான உணவைச் சேகரித்துவரவேண்டும். இப்படி நான் அவர்களைச் சோதித்து, என் ஆலோசனைகளைப் பின்பற்றுகிறார்களா என்று பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் அந்த நாளுக்குத் தேவையான உணவை மட்டுமே சேகரிக்கவேண்டும்: ஆனால் வெள்ளிக் கிழமையன்று, ஜனங்கள் உணவைத் தயாரிக்கும் பொழுது, இரண்டு நாட்களுக்குப் போதுமான இருமடங்கு உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” [a] என்றார்.

மோசேயும், ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “இன்றிரவு நீங்கள் கர்த்தரின் வல்லமையைக் காண்பீர்கள். எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தவர் அவரே என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கர்த்தரிடம் முறையிட்டபோது அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே நாளைக் காலையில் கர்த்தரின் மகிமையைக் காண்பீர்கள். நீங்கள் எங்களிடம் முறையிட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்” என்றார்கள்.

மோசே தொடர்ந்து, “நீங்கள் முறையிட்டீர்கள், கர்த்தர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே இன்றிரவு கர்த்தர் உங்களுக்கு மாமிசம் கிடைக்கச் செய்வார். காலையில் உங்களுக்குத் தேவையான அப்பத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஆரோனிடமும் என்னிடமும் முறையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆரோனுக்கும் எனக்கும் எதிராக அல்ல, நீங்கள் கர்த்தருக்கெதிராகவே முறையிட்டீர்கள்” என்றான்.

மோசே ஆரோனை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம், ‘கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார் என்று சொல்’” என்றான்.

10 ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். ஆரோன் பேசும்போது, எல்லா ஜனங்களும் திரும்பிப் பாலைவனத்தை நோக்கினார்கள். மேகத்தில் கர்த்தரின் மகிமை வெளிப்படுவதைக் கண்டார்கள்.

11 கர்த்தர் மோசேயை நோக்கி, 12 “இஸ்ரவேல் ஜனங்களின் முறையீட்டைக் கேட்டேன். எனவே அவர்களிடம் ‘இன்றிரவு நீங்கள் இறைச்சி உண்பீர்கள், காலையில் உங்களுக்கு வேண்டிய ரொட்டி கிடைக்கும். பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்பலாம் என்று அறிவீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்.

13 அன்றிரவு, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பனிபடர்ந்திருந்தது. 14 பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் காணப்பட்டது. 15 இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, “இது என்ன?” [b] என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே. 16 ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவனுக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்” என்றான்.

17 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறே செய்தார்கள். ஒவ்வொருவனும் இந்த உணவைச் சேகரித்துக்கொண்டான். சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக்கொண்டனர். 18 ஜனங்கள் இந்த உணவைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். உணவை அளந்தபோது ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு இருந்தது. ஆனால் ஒருபோதும் அதிகப்படியான உணவு இருந்ததில்லை. ஒவ்வொருவனும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தேவையான உணவை மாத்திரம் சேகரித்துக்கொண்டான்.

19 மோசே அவர்களை நோக்கி, “மறுநாள் உண்பதற்காக உணவை வைக்காதீர்கள்” என்றான். 20 ஆனால் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படியவில்லை. சிலர் அடுத்த நாளுக்காகச் சிறிது உணவை எடுத்து வைத்தார்கள். அந்த உணவைப் புழுக்கள் அரித்தபடியால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இவ்வாறு செய்தவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.

21 ஒவ்வொரு நாள் காலையிலும் உணவைச் சேகரித்துக்கொண்டனர். ஒருவன் தான் சாப்பிடக் கூடிய அளவு உணவை எடுத்துக்கொண்டான். வெயில் ஏறினதும் உணவு உருகி மறைந்துபோனது.

22 வெள்ளியன்று, ஜனங்கள் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் 16 கிண்ண அளவு உணவைச் சேர்த்தார்கள். எனவே ஜனங்களின் தலைவர்கள் மோசேயிடம் வந்து இதனை அறிவித்தனர்.

23 மோசே அவர்களை நோக்கி, “இவ்வாறு தான் நடக்கும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். நாளை கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாளாகிய ஓய்வுநாள் என்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. இன்றைக்குத் தேவையான எல்லா உணவையும் சமையுங்கள். மீதமாகும் உணவை நாளை காலைக்காக எடுத்து வையுங்கள்” என்றான்.

24 எனவே மீதமான உணவை ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்து அடுத்த நாளுக்காகப் பத்திரப்படுத்தினார்கள். அன்று அந்த உணவு கெட்டுப்போகவில்லை, புழுக்களும் அந்த உணவை அணுகவில்லை.

25 சனிக்கிழமையன்று மோசே ஜனங்களை நோக்கி, “இன்று ஓய்வுநாள், இது கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் விசேஷ நாள். எனவே உங்களில் ஒருவனும் வெளியே போகக்கூடாது. நேற்று சேர்த்து வைத்த உணவையே உண்ணுங்கள். 26 ஆறு நாட்கள் நீங்கள் உணவைச் சேகரிக்கவேண்டும், ஆனால் வாரத்தின் ஏழாவதுநாள் ஓய்வுக்குரிய நாள். எனவே பூமியில் விசேஷ உணவு எதுவுமிராது” என்றான்.

27 சனிக்கிழமையன்று சில ஜனங்கள் உணவைச் சேகரிக்கச் சென்றார்கள், ஆனால் அவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. 28 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “எனது கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய எத்தனை காலம் இந்த ஜனங்கள் மறுப்பார்கள்? 29 பார், உங்களுக்கு ஓய்ந்திருக்கும் நாளாக கர்த்தர் ஓய்வு நாளை உண்டாக்கினார். எனவே வெள்ளியன்று இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவை கர்த்தர் கொடுப்பார், பின் ஓய்வு நாளில் உங்களில் ஒவ்வொருவனும் ஓய்வெடுக்கவேண்டும். நீங்கள் இருக்குமிடத்திலேயே தங்கியிருங்கள்” என்றார். 30 எனவே ஜனங்கள் ஓய்வுநாளில் ஓய்வெடுத்துக்கொண்டார்கள்.

31 அந்த விசேஷ உணவை ஜனங்கள் “மன்னா” என்று அழைத்தார்கள். இந்த மன்னா தோற்றத்தில் சிறிய வெண்மையான கொத்து மல்லி விதைகளைப் போன்றிருந்தன. அவை ருசியில் தேனில் தோய்க்கப்பட்ட மெல்லிய வார்ப்புரொட்டி போன்று இருந்தன. 32 மோசே, “கர்த்தர் உங்கள் சந்ததியினருக்காக ‘இந்த உணவில் எட்டு கிண்ணம் எடுத்து வையுங்கள். அப்போது, உங்களை எகிப்திலிருந்து அழைத்து செல்கையில் வனாந்திரத்தில் நான் உங்களுக்கு கொடுத்த உணவை உங்கள் தலைமுறையினர் பார்க்க முடியும்’ என்றார்” என்று சொன்னான்.

33 எனவே மோசே ஆரோனை நோக்கி, “ஒரு சிறிய ஜாடியை எடுத்து அதை 8 கிண்ணம் மன்னாவால் நிரப்பு. கர்த்தருக்கு முன் வைக்கும்படியாக அதைப் பத்திரப்படுத்து. அதை நமது சந்ததியினருக்காகவும் பாதுகாத்து வை” என்றான். 34 (கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே ஆரோன் செய்தான். உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் அந்த ஜாடியை ஆரோன் வைத்தான்.) 35 ஜனங்கள் 40 ஆண்டுகள் மன்னாவைச் சாப்பிட்டார்கள். ஓய்வுக்குரிய நாடாகிய, கானான் தேசத்தின் எல்லையை வந்தடையும் மட்டும் அவர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள். 36 (மன்னாவை அளப்பதற்காக அவர்கள் பயன்படுத்தியது ஒரு ஓமர். எட்டுக் கிண்ணங்கள் அளவு கொண்டது ஒரு ஓமர் ஆகும்.)

17 சீன் பாலைவனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணமானார்கள். ரெவிதீமிற்கு ஜனங்கள் பிரயாணம் செய்து அங்கு கூடாரமிட்டுத் தங்கினார்கள். குடிக்கக் கூட ஜனங்களுக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே ஜனங்கள் மோசேக்கு எதிராக திரும்பி, அவனோடு வாதாட ஆரம்பித்தார்கள். “எங்களுக்குக் குடிப்பதற்கு தண்ணீர் தா” என்று ஜனங்கள் கேட்டார்கள்.

மோசே அவர்களை நோக்கி, “ஏன் எனக்கு எதிராகத் திரும்பினீர்கள்? ஏன் கர்த்தரை சோதிக்கிறீர்கள்? கர்த்தர் நம்மோடு வரவில்லை என்று நினைக்கிறீர்களா?” என்றான்.

ஆனால் ஜனங்கள் மிகவும் தாகமாக இருந்தபடியால் மோசேயிடம் தொடர்ந்து முறையிட்டார்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்களும், எங்கள் பிள்ளைகளும், ஆடு மாடுகளும் தாகத்தால் மரித்துபோவதற்காகவா எங்களை அழைத்து வந்தீர்?” என்றார்கள்.

எனவே மோசே கர்த்தரிடம் சத்தமாக அழுது, “நான் இந்த ஜனங்களோடு என்ன செய்ய முடியும்? இவர்கள் என்னைக் கொல்லத் தயாராயிருக்கிறார்கள்” என்றான்.

கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகப் போ, ஜனங்களின் மூப்பர்களில் (தலைவர்களில்) சிலரையும் உன்னோடு அழைத்துச் செல். உனது கைத்தடியையும் எடுத்துக்கொள். நைல் நதியை அடித்தபோது நீ பயன்படுத்திய தடி இதுவே. உனக்கு முன்பாக ஓரேபிலுள்ள (சீனாய் மலையிலுள்ள) பாறையில் நான் இருப்பேன். உனது கைத்தடியால் பாறையை அடி, உடனே பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும், அப்போது ஜனங்கள் அதைப் பருகலாம்” என்றார்.

மோசே அவ்வார்த்தைகளின்படியே செய்தான். இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அதைப் பார்த்தார்கள். இவ்விடத்தில் ஜனங்கள் மோசேக்கு எதிராகத் திரும்பி கர்த்தரை சோதித்ததால் மோசே அதற்கு மேரிபா என்றும், மாசா என்றும் பெயரிட்டான். கர்த்தர் அவர்களோடு இருக்கிறாரா, இல்லையா என்று சோதிக்க ஜனங்கள் விரும்பினார்கள்.

அமலேக்கியரோடு போர்

ரெவிதீமில் அமலேக்கிய ஜனங்கள் வந்து இஸ்ரவேல் ஜனங்களோடு போர் செய்தார்கள். எனவே மோசே யோசுவாவை நோக்கி, “சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு போய் அமலேக்கியரோடு நாளை போர் செய். நான் மலையின்மீது நின்று உங்களை கண்காணிப்பேன். தேவன் எனக்குக் கொடுத்த கைத்தடியைப் பிடித்துக்கொண்டிருப்பேன்” என்றான்.

10 யோசுவா மோசேக்குக் கீழ்ப்படிந்து, அமலேக்கிய ஜனங்களோடு போர் செய்வதற்கு மறுநாள் போனான். அதே நேரத்தில் மோசேயும், ஆரோனும், ஊரும் மலையுச்சிக்குச் சென்றார்கள். 11 மோசே கைகளை மேலே உயர்த்தியிருந்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் வென்றனர். ஆனால் மோசேயின் கரங்கள் கீழே தாழ்ந்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் தோல்வியடையத் தொடங்கினார்கள்.

12 சிறிது நேரத்திற்குப் பிறகு மோசேயின் கைகள் சோர்வடைந்தன. மோசேயோடு சென்ற மனிதர்கள் மோசேயின் கைகளைத் தூக்கியவாறே வைத்திருப்பதற்கு ஒரு வழி காண முயன்றார்கள். ஒரு பெரிய பாறையை மோசேக்குக் கீழே நகர்த்தி, அவனை அதில் உட்காரச் செய்தார்கள். பின் ஆரோனும், ஊரும் மோசேயின் கைகளைத் தூக்கிப் பிடித்தார்கள். ஆரோன் மோசேக்கு ஒரு புறமாகவும், ஊர் அவனுக்கு மறுபுறமாகவும் நின்றிருந்தனர். சூரியன் மறையும் வரைக்கும் அவர்கள் இவ்வாறே அவனுடைய கைகளைப் பிடித்திருந்தார்கள். 13 ஆகவே யோசுவாவும் அவனுடைய ஆட்களும் இப்போரில் அமலேக்கியர்களை வென்றார்கள்.

14 அப்போது கர்த்தர் மோசேயிடம், “இந்த யுத்தத்தைப்பற்றி எழுது. இங்கு நடந்தவற்றை ஜனங்கள் நினைவுகூரும்படியாக இக்காரியங்களை ஒரு புத்தகத்தில் எழுது. பூமியிலிருந்து அமலேக்கிய ஜனங்களை முற்றிலுமாக அழிப்பேன் என்பதை யோசுவாவுக்கு உறுதியாகக் கூறு” என்றார்.

15 பின் மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். “கர்த்தர் எனது கொடி” என்று அந்தப் பலிபீடத்திற்குப் பெயரிட்டான். 16 மோசே, “கர்த்தருடைய சிங்காசனத்திற்கு நேராக என் கைகளை உயர்த்தினேன். ஆகையால் கர்த்தர் எப்பொழுதும் செய்தது போல தலைமுறை தலைமுறையாக அமலேக்கியரை எதிர்த்துப் போர் செய்தார்” என்றான்.

மோசேயின் மாமனாரிடமிருந்து அறிவுரை

18 மோசேயின் மாமனாராகிய எத்திரோ மீதியானில் ஒரு ஆசாரியனாக இருந்தான். மோசேக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பல வகைகளில் தேவன் உதவியதையும், எகிப்திலிருந்து கர்த்தர் இஸ்ரவேலரை வழிநடத்தினதையும் எத்திரோ கேள்விப்பட்டான். எனவே தேவனின் மலைக்கருகில் (ஓரேப்) மோசே கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். அவன் மோசேயின் மனைவியாகிய சிப்போராளையும் அழைத்து வந்திருந்தான். (மோசே அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டிருந்தபடியால் சிப்போராள், மோசேயோடு இருக்கவில்லை.) எத்திரோ மோசேயின் இரண்டு மகன்களையும் அழைத்து வந்திருந்தான். முதல் மகனின் பெயர் கெர்சோம், ஏனெனில் அவன் பிறந்தபோது, “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக உள்ளேன்” என்று மோசே கூறினான். இன்னொரு மகனின் பெயர் எலியேசர். ஏனெனில் அவன் பிறந்தபோது, மோசே, “எனது முற்பிதாக்களின் தேவன் எனக்கு உதவி, எகிப்தின் மன்னனிடமிருந்து அவர் என்னைக் காத்தார்” என்றான். மோசே தேவனின் மலைக்குப் (சீனாய்) பக்கத்திலுள்ள பாலைவனத்தில் கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். மோசேயின் மனைவியும் அவனது இரண்டு மகன்களும் எத்திரோவோடிருந்தனர்.

எத்திரோ மோசேக்குச் செய்தி சொல்லியனுப்பினான். எத்திரோ, “உனது மாமனாராகிய எத்திரோ வந்துள்ளேன். நான் உனது மனைவியையும், உனது இரண்டு மகன்களையும் உன்னிடம் அழைத்து வந்திருக்கிறேன்” என்று சொன்னான்.

எனவே மோசே மாமனாரைப் பார்ப்பதற்கு வெளியே போனான். மோசே அவனைக் குனிந்து வணங்கி, முத்தமிட்டான். இருவரும் ஒருவருக்கொருவர் சுகசெய்திகளை விசாரித்துக்கொண்டனர். பின் மோசேயின் கூடாரத்திற்குள் மேலும் அதிகமாக உரையாடும்படிக்கு நுழைந்தனர். இஸ்ரவேல் ஜனங்களினிமித்தம் கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் எதிராகச் செய்த எல்லாவற்றையும், பார்வோனுக்கும் எகிப்தின் ஜனங்களுக்கும் கர்த்தர் செய்தவற்றையும், வழியில் அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளைப்பற்றியும், துன்பம் வந்தபோதெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எப்படிக் காப்பாற்றினார் என்பதையெல்லாம் மோசே தன் மாமனாரான எத்திரோவிடம் சொன்னான்.

கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த எல்லா நல்ல காரியங்களையும் கேள்விப்பட்டபோது எத்திரோ மிக்க மகிழ்ச்சியடைந்தான். எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் விடுதலை செய்தார் என்பதையறிந்து அவன் மகிழ்ந்தான். 10 எத்திரோ,

“கர்த்தரை துதியுங்கள்!
    எகிப்தின் வல்லமையிலிருந்து அவர் உங்களை விடுவித்தார்.
    பார்வோனிடமிருந்து கர்த்தர் உங்களைக் காப்பாற்றினார்.
11 இப்போது மற்ற எல்லா தேவர்களையும்விட கர்த்தர் பெரியவர் என்பதை நான் அறிவேன்.
அவர்கள் அடிமைகளாக உள்ளார்கள் என எண்ணியிருந்தனர், ஆனால் தேவன் செய்ததைப் பாருங்கள்!” என்றான்.

12 எத்திரோ சில பலிகளையும், காணிக்கைகளையும் தேவனை மகிமைப்படுத்துவதற்காகக் கொண்டு வந்தான். மோசேயின் மாமனாராகிய எத்திரோவோடு சேர்ந்து உண்பதற்காக ஆரோனும் இஸ்ரவேலரின் மூப்பர்களும் (தலைவர்களும்) வந்தார்கள். அவர்கள் எல்லோரும் தேவனுடைய சந்நிதியில் சேர்ந்து உணவு உண்டார்கள்.

13 மறுநாள், ஜனங்களை நியாயந்தீர்க்கும் விசேஷ வேலை மோசேக்கு இருந்தது. நாள் முழுவதும் மோசேக்கு முன்னால் காலை முதல் மாலைவரை ஜனங்கள் கூடி நின்றனர்.

14 மோசே ஜனங்களை நியாயந்தீர்ப்பதை எத்திரோ பார்த்தான். அவன், “ஏன் இவ்வாறு செய்கிறாய்? ஏன் நீ மட்டும் நியாயந்தீர்க்க வேண்டும்? ஏன் நாள் முழுவதும் ஜனங்கள் உன்னிடம் வந்துகொண்டிருக்கின்றனர்?” என்று கேட்டான்.

15 மோசே அவனது மாமனாரை நோக்கி: “ஜனங்கள் என்னிடம் வந்து, அவர்களின் பிரச்சனைகளைப்பற்றிய தேவனின் முடிவைக் கேட்டறிந்து சொல்லுமாறு என்னைக் கேட்கிறார்கள். 16 ஜனங்கள் மத்தியில் விவாதம் எழுந்தால் அவர்கள் என்னிடம் வருகிறார்கள். எந்த மனிதன் சரியாகச் செயல்படுகிறான் என்பதை நான் முடிவு செய்வேன். இவ்வகையில் நான் ஜனங்களுக்கு தேவனின் சட்டங்களையும், போதனைகளையும் கற்பிக்கிறேன்” என்றான்.

17 ஆனால் மோசேயின் மாமனார் அவனை நோக்கி, “இதைச் செய்யும் வழி இதுவல்ல, 18 நீ ஒருவனே செய்வதற்கு இது பழுவான வேலையாகும். இவ்வேலையை நீ ஒருவனே செய்ய முடியாது. அது உன்னைக் களைப்படையச் செய்யும். ஜனங்களும் சோர்ந்து போகிறார்கள்! 19 இப்போது நான் சொல்வதைக் கேள். நான் உனக்குச் சில அறிவுரைகளைக் கூறுவேன். தேவன் உன்னோடிருக்கும் பொருட்டு நான் ஜெபம் செய்கிறேன். ஜனங்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து நீ கேட்கவேண்டும், இவற்றைக் குறித்துத் தொடர்ந்து நீ தேவனிடம் பேச வேண்டும். 20 நீ தேவனின் சட்டங்களையும் போதனைகளையும் ஜனங்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். சட்டங்களை மீறக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிடு. தக்க நெறியில் நடக்குமாறு அவர்களுக்குக் கூறு. என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்குக் கூறு. 21 ஆனால் தலைவர்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பதற்காகச் சிலரை நீ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் வேண்டும்.

“உன் நம்பிக்கைக்குரிய நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள். அம்மனிதர்கள் தேவனை மதிக்கிறவர்களாக இருக்க வேண்டும். பணத்திற்காக தங்கள் முடிவுகளை மாற்றாத மனிதர்களைத் தெரிந்துகொள். ஜனங்களுக்குத் தலைவர்களாக அவர்களை நியமித்துவிடு. 1,000 ஜனங்களுக்கும், 100 ஜனங்களுக்கும், 50 ஜனங்களுக்கும், 10 பேருக்கும் கூட தலைவர்கள் இருக்கட்டும். 22 இந்த அதிகாரிகள் ஜனங்களை நியாயந்தீர்க்கட்டும். மிக முக்கியமான வழக்கிருந்தால் அவர்கள் உன்னிடம் வரட்டும், நீ என்ன செய்வதென முடிவெடுக்கலாம். ஆனால் மற்ற வழக்குகளில் இம்மனிதர்கள் உனது வேலையைப் பகிர்ந்துகொள்ளட்டும். இப்படி ஜனங்களை வழி நடத்துவது உனக்கு எளிதாகும். 23 தேவ தயவால் நீ இவற்றைச் செய்தால், நீ உனது பணியை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். அதே நேரத்தில் ஜனங்களும் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டவர்களாய் வீடு திரும்ப முடியும்” என்றான்.

24 எனவே எத்திரோ கூறியபடியே மோசே செய்தான். 25 இஸ்ரவேல் ஜனங்களில் சில நல்ல மனிதர்களை மோசே தெரிந்தெடுத்து ஜனங்களுக்குத் தலைவர்களாக அவர்களை நியமித்தான். 1,000 பேருக்கும், 100 பேருக்கும், 50 பேருக்கும், 10 பேருக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். 26 இந்த அதிகாரிகள் ஜனங்களுக்கு நீதிபதிகளாக இருந்தனர். இந்த அதிகாரிகளிடம் ஜனங்கள் தங்கள் விவாதங்களை எந்த நேரத்திலும் முன் வைக்க முடிந்தது. மிக முக்கியமான வழக்குகளை மட்டும் மோசே தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று.

27 கொஞ்ச நாட்களுக்குப்பின், மோசே தன் மாமனாராகிய எத்திரோவை வழியனுப்பினான். எத்திரோ தன் வீட்டிற்குத் திரும்பினான்.

இஸ்ரவேலோடு தேவனின் உடன்படிக்கை

19 எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் பாலைவனத்தை அடைந்தனர். அவர்கள் ரெவிதீமிலிருந்து சீனாய் பாலை வனத்திற்குப் பிரயாணம் செய்திருந்தனர். மலைக்கருகே (ஓரேப் மலை) இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரமிட்டனர். பின் மோசே தேவனைச் சந்திக்கும்பொருட்டு மலைமீது ஏறினான். மலையின் மேல் தேவன் அவனோடு பேசினார். அவனிடம், “யாக்கோபின் பெரிய குடும்பத்தினராகிய இஸ்ரவேலின் ஜனங்களுக்கு இவ்விஷயங்களைக் கூறு: ‘என் எதிரிகளுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்த்தீர்கள். எகிப்தின் ஜனங்களுக்கு நான் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள். கழுகைப்போல நான் உங்களை எகிப்திலிருந்து சுமந்து வந்து, இங்கு என்னிடம் அழைத்து வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். எனவே என் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென உங்களுக்குக் கூறுகிறேன். எனது உடன்படிக்கையை மீறாதீர்கள். நான் கூறுகிறபடி நீங்கள் நடந்தால், என் விசேஷமான ஜனங்களாயிருப்பீர்கள். உலகம் முழுவதும் எனக்குச் சொந்தமானது. ஆனால் எனது விசேஷ ஜனங்களாக இருக்கும்படி, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். ராஜரீக ஆசாரிய கூட்டமான, ஒரு பரிசுத்த ஜனமாக நீங்கள் இருப்பீர்கள்.’ மோசே, நான் கூறியதை நீ இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.

மோசே மலையிருந்து கீழே இறங்கினான். ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்கள்) வரவழைத்து அவர்களிடம் கூறும்படியாக கர்த்தர் கட்டளையிட்டவற்றை மோசே கூறினான். எல்லா ஜனங்களும் சேர்ந்து ஒரே குரலில், “கர்த்தர் கூறுகின்றவற்றிற்கு நாங்கள் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.

மோசே மீண்டும் மலையின் மேலேறி தேவனிடம் சென்றான். மோசே தேவனிடம் ஜனங்கள் அவருக்குக் கீழ்ப்படிவதாகக் கூறியதைச் சொன்னான். கர்த்தர் மோசேயிடம், “கார்மேகத்தினூடே நான் உன்னிடம் வருவேன், உன்னோடு பேசுவேன்! நான் உன்னோடு பேசுவதை எல்லா ஜனங்களும் கேட்பார்கள். நீ அவர்களுக்குக் கூறுவதை ஜனங்கள் எப்போதும் நம்புவதற்காக நான் இதைச் செய்வேன்” என்றார்.

ஜனங்கள் கூறிய அனைத்தையும் மோசே தேவனுக்குச் சொன்னான்.

10 கர்த்தர் மோசேயை நோக்கி, “ஒரு விசேஷ கூட்டத்திற்காக இன்றும், நாளையும் நீ ஜனங்களை ஆயத்தப்படுத்த வேண்டும். ஜனங்கள் அவர்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். 11 மூன்றாம் நாளில் எனக்காகக் காத்திருக்க வேண்டும். மூன்றாவது நாள் கர்த்தர் சீனாய் மலைக்கு இறங்கி வருவார், எல்லா ஜனங்களும் என்னைக் காண்பார்கள். 12-13 எல்லா ஜனங்களும் மலையை நெருங்காதிருக்கும்படி அவர்களுக்கு நீ கூறவேண்டும். ஒரு எல்லையை வரைந்து, ஜனங்கள் அதைத் தாண்டிச் செல்லாதபடி பார்த்துக்கொள். மலையைத் தொடும் மனிதனோ, மிருகமோ கொல்லப்பட வேண்டும். அவனைக் கற்களால் தாக்கியோ, அம்புகளை எய்தோ கொல்ல வேண்டும். கொல்லப்பட்டவனைப் பிறர் தொடக்கூடாது. எக்காளம் தொனிக்கும் வரைக்கும் ஜனங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே அவர்கள் மலைக்கு சமீபம் செல்லலாம்” என்றார்.

14 மோசே மலையை விட்டிறங்கி, ஜனங்களிடம் சென்று, விசேஷ கூட்டத்திற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து பரிசுத்தமாக்கினார்கள்.

15 மோசே ஜனங்களை நோக்கி, “மூன்று நாட்களில் தேவனைத் தரிசிப்பதற்குத் தயாராகுங்கள். அதுவரைக்கும் ஆண்கள், பெண்களைத் தொடக்கூடாது” என்றான்.

16 மூன்றாம் நாள் காலையில், மலையின் மேல் மேகமொன்று திரண்டு வந்தது. இடியும் மின்னலும் எக்காளத்தின் பேரொலியும் இருந்தன. கூடாரத்திலிருந்த ஜனங்கள் அனைவரும் பயந்தனர். 17 அப்போது மோசே, ஜனங்களைக் கூடாரத்திலிருந்து மலையருகேயுள்ள ஓரிடத்திற்கு தேவனைச் சந்திப்பதற்காக வழிநடத்திச் சென்றான். 18 சீனாய் மலை புகையால் நிரம்பிற்று. சூளையிலிருந்து புகை வருவதுபோல் மலையின் மேல் புகை எழுந்தது. கர்த்தர் மலைக்கு நெருப்பில் இறங்கி வந்ததால் இப்படி ஆயிற்று. மலையும் அதிரத்தொடங்கிற்று. 19 எக்காள சத்தம் உரத்து தொனிக்க ஆரம்பித்தது. மோசே தேவனிடம் பேசியபோதெல்லாம், தேவன் இடிபோன்ற குரலில் பதிலளித்தார்.

20 கர்த்தர் சீனாய் மலையின்மேல் இறங்கினார். பரலோகத்திலிருந்து கர்த்தர் மலையின் உச்சியில் இறங்கினார். பின் கர்த்தர் மோசேயை மலையின் உச்சிக்கு தன்னிடத்தில் வருமாறு கூறினார். அவ்வாறே மோசேயும் மலையின் மீது ஏறினான்.

21 கர்த்தர், மோசேயை நோக்கி, “ஜனங்கள் என்னைப் பார்கும்படி நெருங்கிவராதபடி அவர்களை எச்சரி. இதை மீறினால் அவர்களில் பலர் மரிக்க நேரிடும். 22 என்னிடம் வர வேண்டிய ஆசாரியர்களை இந்த சிறப்புச் சந்திப்புக்கு ஆயத்தமாகி வரும்படி கூறு. அவர்கள் சரியான ஆயத்தம் செய்யவில்லையென்றால், நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார்.

23 மோசே கர்த்தரை நோக்கி, “ஜனங்கள் மலை உச்சிக்கு வரமுடியாது. பரிசுத்த எல்லையை நெருங்காதபடி செய்யுமாறு நீர் தானே எங்களிடம் கூறியுள்ளீர்” என்றான்.

24 கர்த்தர் அவனிடம், “ஜனங்களிடம் இறங்கிச் செல். ஆரோனை உன்னோடு அழைத்து வா, ஆசாரியர்களோ, ஜனங்களோ என்னை அணுகவிடாதே. அவர்கள் என்னை நெருங்கினால் நான் அவர்களை தண்டிப்பேன்” என்றார்.

25 எனவே மோசே ஜனங்களிடம் போய் இச்செய்தியைக் கூறினான்.

பத்துக் கட்டளைகள்

20 பின்பு தேவன்,

“நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

“என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது.

“நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது. எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன். என்னிடம் அன்போடிருந்து எனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களிடம் நான் இரக்கம் காட்டுவேன். ஆயிரம் தலைமுறை வரைக்கும் அவர்கள் குடும்பங்களிடம் கருணையோடு இருப்பேன்.

“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெயரைத் தகாத வழியில் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் அவ்வாறு பயன்படுத்தினால், அவன் குற்றவாளியாவான். கர்த்தர் அவனது குற்றத்திற்காக அவனை தண்டிப்பார்.

“ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள். உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். 10 ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது. 11 ஏனெனில் கர்த்தர் ஆறு நாட்கள் வேலை செய்து வானம், பூமி, கடல் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். ஏழாம் நாளில் கர்த்தர் ஓய்வெடுத்தார். இவ்வாறு கர்த்தர் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை ஆசீர்வதித்தார். கர்த்தர் அதை ஒரு மிக விசேஷமான நாளாக்கினார்.

12 “உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் தரும் நாட்டில் நீண்டஆயுள் வாய்ப்பதற்கு இதைச் செய்தல் வேண்டும்.

13 “நீங்கள் யாரையும் கொல்லாதிருப்பீர்களாக.

14 “நீங்கள் விபச்சாரம், செய்யாதிருப்பீர்களாக.

15 “நீங்கள் எதையும் திருடாதிருப்பீர்களாக.

16 “பிற ஜனங்களைக் குறித்துப் பொய் சாட்சி பேசவேண்டாம்.

17 “அயலானின் வீட்டை இச்சிக்கக்கூடாது. அவனது மனைவியை விரும்பவேண்டாம். அவனது வேலைக்காரனையோ வேலைக்காரியையோ, ஆடு மாடுகளையோ, கழுதைகளையோ எடுக்க வேண்டாம். இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது!” என்றார்.

ஜனங்கள் தேவனுக்கு பயப்படுதல்

18 இதுவரை, பள்ளத்தாக்கிலிருந்த ஜனங்கள் இடி முழக்கத்தைக் கேட்டார்கள், மலையின் மீது மின்னலைப் பார்த்தார்கள். மலையினின்று புகையெழும்பக் கண்டனர். ஜனங்கள் அச்சத்தால் நடுங்கினார்கள். மலையை விட்டு தூரத்தில் நின்று கவனித்தனர். 19 பின்பு ஜனங்கள் மோசேயிடம், “நீர் எங்களோடு பேசினால் நாங்கள் கேட்போம். ஆனால் தேவன் எங்களோடு நேரில் பேசவிடாதிரும். அவ்வாறு நடந்தால், நாங்கள் மரித்துப்போவோம்” என்றனர்.

20 மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள்! கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படியாக வந்திருக்கிறார். நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதினிமித்தமாக நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்கள்” என்றான்.

21 தேவன் இருந்த கார்மேகத்திற்குள் மோசே போனபோது ஜனங்கள் மலையை விட்டு விலகி நின்றார்கள். 22 இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறுமாறு கர்த்தர் மோசேக்கு பின்வருமாறு கூறினார்: “பரலோகத்திலிருந்து உங்களோடு பேசினதை நீங்கள் கண்டீர்கள். 23 எனவே, பொன் அல்லது வெள்ளியால் எனக்கு இணையாக நீங்கள் விக்கிரகங்களை உண்டாக்க வேண்டாம். இந்த போலியான தெய்வங்களை நீங்கள் செய்யக்கூடாது.

24 “எனக்கென்று விசேஷ பலிபீடம் செய்யுங்கள். அதைக் கட்டும்போது மண்ணைப் பயன்படுத்துங்கள். அதன்மேல், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் ஆடு மாடுகளை இதற்கென்று பயன்படுத்துங்கள். என்னை நினைவு கூரும்படியாக நான் சொல்கிற இடங்களிலெல்லாம் இதைச் செய்யுங்கள். அப்போது நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். 25 பலிபீடத்தை அமைப்பதற்கு நீங்கள் கற்களைப் பயன்படுத்தினால், இரும்புக் கருவியால் பிளக்கப்பட்ட கற்களைப் பயன்படுத்தவேண்டாம். அப்பலிபீடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 26 பலிபீடத்திற்குப் படிகளைச் செய்யாதீர்கள். படிகள் இருந்தால் ஜனங்கள் பலிபீடத்தை ஏறிட்டு நோக்கும்போது உங்கள் நிர்வாணத்தை ஆடைகளின் கீழே அவர்கள் பார்க்கநேரிடும்” என்றார்.

பிற சட்டங்களும், கட்டளைகளும்

21 அப்போது தேவன் மோசேயிடம், “ஜனங்களுக்கு நீ கொடுக்க வேண்டிய பிற சட்டங்கள் இவையாகும்.

“நீங்கள் ஒரு எபிரெய அடிமையை வாங்கினால், அவன் ஆறு ஆண்டுகள் மட்டுமே உங்களுக்காக உழைப்பான். ஆறு ஆண்டுகளுக்குப்பின் அவன் விடுதலை பெறுவான். கட்டணமாக எதையும் அவன் செலுத்தத் தேவையில்லை. ஒருவன் உங்கள் அடிமையாகும்போது மணமாகாதவனாக இருந்தால், விடுதலையாகும்போது தனியனாகப் போவான். ஒருவன் அடிமையாகும்போது திருமணமானவனாக இருந்தால், அவன் விடுதலை பெறும்போது மனைவியை அழைத்துச் செல்லலாம். அடிமை மணமாகாதவனாக இருந்தால், எஜமான் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கலாம். அவள் மகன்களையோ, மகள்களையோ பெற்றெடுத்தால் அவளும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கு உரிமையாவார்கள். அடிமையின் வேலையாண்டுகள் முடிந்தபின், அவன் மட்டும் விடுதலை பெறுவான்.

“ஆனால் அடிமை எஜமானோடு நீடித்து இருப்பதாக முடிவு செய்தால் அவன், ‘நான் என் எஜமானை நேசிக்கிறேன். நான் எனது மனைவியையும், என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெறமாட்டேன். நான் இங்கேயே தங்குவேன்’ என்று சொல்லவேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால், எஜமான் அடிமையை தேவனுடைய சந்நிதானத்தில் கொண்டுவரவேண்டும். எஜமான் அடிமையை ஒரு வாசலருகே அல்லது வாசலின் நிலைக்காலின் அருகே அழைத்துச் சென்று, அடிமையின் காதில் கூர்மையான கருவியால் ஒரு துளை போடவேண்டும். அப்போது அடிமை தன் வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு தொண்டு செய்வான்.

“ஒரு மனிதன் தன் மகளை அடிமையாக விற்க முடிவு செய்தால், அவளை விடுதலை செய்வதற்குரிய விதிகள் ஆண் அடிமையை விடுவிப்பதற்கான விதிமுறைகளில் இருந்து மாறுப்பட்டவை. எஜமானுக்கு அப்பெண்ணிடம் விருப்பம் இல்லை என்றால், அப்பெண்ணை அவள் தந்தைக்கு மீண்டும் விற்றுவிடலாம். எஜமான் அப்பெண்ணை மணப்பதாக வாக்குறுதி அளித்தால் அப்பெண்ணை வேறு யாருக்கும் விற்கும் உரிமையை இழந்துவிடுவான். அடிமைப் பெண் எஜமானின் மகனை மணப்பதற்கு எஜமான் சம்மதித்தால் அவளை அடிமையாக நடத்தக்கூடாது. அவளை ஒரு மகளைப் போல் நடத்தவேண்டும்.

10 “எஜமான் மற்றொரு பெண்ணை மணந்தால் முதல் மனைவிக்குக் குறைவான ஆடையோ, உணவோ கொடுக்கக்கூடாது. அவன் அவளோடு தூங்குவதை நிறுத்தக் கூடாது. விவாகத்தில் அவளுக்கு உரிமையான எல்லாப் பொருட்களையும் அவன் கொடுத்து வர வேண்டும். 11 அவன் அவளுக்கு இந்த மூன்று காரியங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால், அப்பெண் விடுவிக்கப்படுவாள். அவள் செலுத்தவேண்டிய கடன் எதுவுமிராது.

12 “ஒரு மனிதன் இன்னொருவனை திட்டமிட்டு அடித்துக் கொன்றால், அப்போது அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். 13 ஆனால் ஒருவன் மற்றொருவனைத் திட்டமிடாமல் கொன்றால், தேவன் அந்த விபத்தை அனுமதித்தார் என்று எண்ணலாம். குறிப்பிட்ட சில இடங்களை பாதுகாப்பிற்காக ஓடி உயிர்தப்பும்படி நியமிப்பேன். அதனால் இத்தகைய ஒருவன் அங்கே ஓடலாம். 14 ஒருவன் மற்றொருவனைச் சினந்து அல்லது வெறுத்துக் கொல்லத் திட்டமிட்டால், கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும். அவனை எனது பலிபீடத்திற்குத் தொலைவில் அழைத்துச் சென்று கொல்லவேண்டும்.

15 “தந்தையையோ, தாயையோ அடிக்கிற எந்த மனிதனும் கொல்லப்படவேண்டும்.

16 “ஒருவனை அடிமையாக்கவோ, அடிமையாக விற்பதற்கோ திருடிச் சென்றால், அவ்வாறு திருடிச் சென்றவன் கொல்லப்பட வேண்டும்.

17 “தந்தையையோ, தாயையோ சபிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.

18 “இருவர் வாக்குவாதம் செய்து, ஒருவனை மற்றொருவன் கல்லால் அல்லது கையால் தாக்கினால் எவ்வாறு அம்மனிதனைத் தண்டிக்க வேண்டும்? தாக்கப்பட்ட மனிதன் மரிக்கவில்லையென்றால் அவனைத் தாக்கிய மனிதனும் கொல்லப்படக் கூடாது. 19 தாக்கப்பட்ட மனிதன் படுக்கையில் சில காலம் இருக்க நேர்ந்தால், அவனைத் தாக்கிய மனிதன் அவன் குணமாகும்வரை அவனை ஆதரிக்க வேண்டும். அவன் சம்பாதிப்பதற்குரிய நாட்களை வீணாக்கியதற்குப் பணம் கொடுக்க வேண்டும். அம்மனிதன் அவன் முழுமையாக குணமாகும் வரை உதவி செய்ய வேண்டும்.

20 “சில வேளைகளில் ஜனங்கள் தங்கள் ஆண் அல்லது பெண் அடிமைகளை அடிப்பார்கள். அடிபட்டு அடிமை மரிக்க நேர்ந்தால், அவனைக் கொன்றவன் தண்டிக்கப்படவேண்டும். 21 அடிமை மரிக்காமல் சில நாட்களுக்குப் பின் குணமடைந்தால், அம்மனிதனைத் தண்டிக்க வேண்டாம். ஏனெனில் எஜமானன் அடிமையைப் பணம் கொடுத்து வாங்கியிருந்ததால் அந்த அடிமை அவனுக்குரியவன்.

22 “இரு மனிதர் சண்டையிடும்போது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கிவிடக் கூடும். அதனால் உரிய காலத்திற்கு முன்னாலேயே அவள் குழந்தையை பெறலாம். அப்பெண் அதிகமான காயமடையவில்லையென்றால், அவளைக் காயப்படுத்திய மனிதன் அபராதம் செலுத்த வேண்டும். அபராதத் தொகை எவ்வளவு என்பதை அப்பெண்ணின் கணவன் தீர்மானிப்பான். அபராதத் தொகையின் அளவைத் தீர்மானிக்க நீதிபதிகள் அவனுக்கு உதவுவார்கள். 23 ஆனால் அப்பெண் மிகுதியாகக் காயமுற்றால் அவளைக் காயப்படுத்திய மனிதன் தண்டனை பெற வேண்டும். ஒருவன் கொல்லப்பட்டால் அக்கொலைக்குக் காரணமானவனும் கொல்லப்படவேண்டும். ஒரு உயிருக்கு மற்றொரு உயிர் வாங்கப்பட வேண்டும். 24 கண்ணுக்குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும், கைக்குக் கையையும், காலுக்குக் காலையும், 25 சூட்டுக்கு சூடும், காயத்துக்குக் காயமும், வெட்டுக்கு வெட்டும் தண்டனையாகக் கொடுக்கவேண்டும்.

26 “ஒரு மனிதன் அடிமையைக் கண்ணில் அடித்ததால் அவன் குருடனாக நேர்ந்தால், அடிமை விடுதலைபெற வேண்டும். விடுதலைக்குரிய விலை அவன் இழந்த கண்ணேயாகும். இது ஆண் அடிமைக்கும், பெண்ணடிமைக்கும் பொதுவாகும். 27 ஒரு எஜமானன் தன் அடிமையை வாயில் அடித்து, அடிமை பல்லை இழக்க நேர்ந்தால் அடிமையை விடுதலை செய்யவேண்டும். அவன் விடுதலைக்கு அவன் பல்லே விலையாக அமையும். இது ஆண் அல்லது பெண் அடிமைக்கும் பொருந்தும்.

28 “ஒரு மனிதனின் மாடு ஒரு ஆணையோ, பெண்ணையோ கொன்றால், அந்த மாட்டைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அதை உணவாக உட்கொள்ளக் கூடாது. அதன் உரிமையாளன் குற்றவாளி அல்ல. 29 அது முன்பு பலரைத் தாக்கியபோது உரிமையாளன் எச்சரிக்கப்பட்டும், அவன் ஓரிடத்தில் அதைக் கட்டியோ, அடைத்தோ வைக்காமலிருந்ததால் அவன் குற்றவாளியாவான். ஏன்? அது வெளியே தனித்துச் சென்று, யாரையேனும் கொன்றால் அப்போது அதன் எஜமானன் குற்றவாளியாகக் கருதப்படுவான். மாட்டையும் அதன் உரிமையாளனையும் நீ கல்லெறிந்து கொல்ல வேண்டும். 30 மரித்த மனிதனின் குடும்பத்தினர் ஈடாகப் பணத்தைப் பெறலாம், அவர்கள் பணத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மாட்டின் உரிமையாளனைக் கொல்லத் தேவையில்லை. ஆனால் நீதிபதி கூறும் ஈடுப் பணத்தை அவன் செலுத்தவேண்டும்.

31 “ஒருவனின் மகன் அல்லது மகளை மாடு கொன்றாலும் அதே விதி பின்பற்றப்பட வேண்டும். 32 ஆனால் ஒரு அடிமையை மாடு கொன்றால், அந்த அடிமையின் எஜமானனுக்கு மாட்டின் எஜமானன் 30 வெள்ளிப்பணம் கொடுக்கவேண்டும். மாட்டைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஆண் அல்லது பெண் அடிமைக்கும் சட்டம் பொதுவானதே.

33 “ஒரு மனிதன் கிணற்றின் மூடியை அகற்றினதாலோ அல்லது ஒரு குழியைத்தோண்டி மூடாமல் விட்டதாலோ, இன்னொருவனின் மிருகம் அக்குழியில் விழுந்தால், அக்குழியைத் தோண்டியவன் குற்றவாளியாவான். 34 அவன் மிருகத்தின் விலையைக் கொடுத்து அம்மிருகத்தின் உடலைப் பெற்றுக்கொள்ளலாம்.

35 “ஒருவனின் மாடு மற்றொருவனின் மிருகத்தைக் கொன்றால் உயிருள்ள மாட்டை விற்றுவிட வேண்டும். அப்பணத்தை இருவரும் சரிபாதியாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். கொல்லப்பட்ட மாட்டையும் அவர்கள் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். 36 அம்மனிதனின் மாடு அதற்கும் முன்னர் பிற மிருகங்களைத் தாக்கி காயப்படுத்தியிருந்தால் அதன் உரிமையாளனே மாட்டின் பொறுப்பேற்க வேண்டும். அவன் மாடு மற்ற மாட்டைக் கொன்றிருந்தால் அந்த மாட்டை அவிழ்த்து விட்டபடியால் அதன் உரிமையாளன் குற்றவாளியாவான். அவன் செத்துப்போன மாட்டுக்கு ஈடாக இன்னொரு மாட்டைக் கொடுக்க வேண்டும். அவனது செத்துப்போன மாட்டின் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.”

22 “ஒரு மாட்டையோ, ஆட்டையோ திருடுகிற மனிதனை நீ எவ்வாறு தண்டிக்க வேண்டும்? அம்மனிதன் அந்த மிருகத்தைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ, அதனைத் திரும்பக் கொடுக்க முடியாது. எனவே, அவன் திருடிய மாட்டுக்குப் பதிலாக ஐந்து மாடுகளைக் கொடுக்க வேண்டும். அல்லது திருடிய ஒரு ஆட்டிற்காக நான்கு ஆடுகளைக் கொடுக்க வேண்டும். திருட்டுக்காக பணம் கொடுக்க வேண்டும். 2-4 அவனுக்கு கொடுக்க எதுவும் சொந்தமில்லையென்றால், அவன் அடிமையாக விற்கப்பட வேண்டும். ஆனால் அந்த மனிதன் தான் திருடிய மிருகத்தை வைத்திருந்தானாகில், தான் திருடிய ஒவ்வொரு மிருகத்திற்காகவும் இரண்டு மிருகங்களைக் கொடுக்க வேண்டும். அது மாடா, கழுதையா, அல்லது ஆடா என்பது ஒரு பொருட்டல்ல.

“இரவில் திருடும்படி ஒருவன் ஒரு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யும்போது திருடன் கொல்லப்பட்டால், அவன் கொலைக்கு யாரும் பொறுப்பாளி அல்ல. ஆனால் அது பகலில் நடந்தால், அவனைக் கொன்றவன் கொலைக் குற்றவாளியாவான்.

“ஒருவன் தன் வயலில் அல்லது திராட்சைத் தோட்டத்தில் நெருப்பு மூட்டக் கூடும். அந்த நெருப்பு பரவி, அடுத்த வயலிலோ அல்லது திராட்சைத் தோட்டத்திலோ பற்றிக்கொள்ள நேர்ந்தால் அயலானின் நஷ்டத்திற்கு ஈடாக அவன் விளைச்சலின் சிறந்த பலனுக்கு ஈடான பணத்தைக் கொடுக்க வேண்டும்.

“ஒருவன் வயலின் முட்புதர்களை எரிக்கும்படி நெருப்பு வைக்கக்கூடும். அது பரவி அடுத்தவனின் வயலிலுள்ள பயிர்களையோ, தானியத்தையோ அழித்தால், அழிந்து போனவற்றின் விலையை அழிவுக்குக் காரணமாக இருந்தவன் கொடுக்க வேண்டும்.

“ஒரு மனிதன் தனக்குத் தேவையான பணத்தையோ அல்லது பொருட்களையோ அடுத்த வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கச் சொல்லலாம். அவ்வீட்டிலிருந்து அப்பணமோ அல்லது பொருளோ திருடப்பட்டுவிட்டால் திருடனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். திருடன் அகப்பட்டால் அவன் திருடிய பொருளின் இரண்டு மடங்கு விலையைக் கொடுக்க வேண்டும். ஆனால் திருடன் அகப்படாமல் வீட்டின் எஜமான் குற்றவாளியாக இருந்தால் தேவன் நியாயந்தீர்ப்பார். வீட்டின் எஜமானன் தேவனுக்கு முன்னே செல்லும்போது, அவன் திருடனாக இருந்தால் தேவன் அவனைத் தண்டிப்பார்.

“காணாமற்போன மாடு, கழுதை, ஆடு அல்லது துணிகளைக் குறித்து இருவர் முரண்பட்டால் நீ என்ன செய்ய வேண்டும்? ஒருவன், ‘இது என்னுடையது’ என்றும் இன்னொருவன், ‘இல்லை, அது எனக்குரியது’ என்றும் கூறுகிறான். இருவரும் தேவனுக்கு முன்னே போக வேண்டும். யார் குற்றவாளி என்பதை தேவன் தீர்மானிப்பார். குற்றவாளியான மனிதன் அப்பொருளின் இருமடங்கு விலையை மற்றவனுக்குக் கொடுக்கவேண்டும்.

10 “ஒருவன் அடுத்தவனிடம் தனது மிருகத்தைச் சில காலம் கவனித்துக்கொள்ளும்படியாக விடலாம். அது கழுதை அல்லது மாடு அல்லது ஆடாக இருக்கலாம். யாரும் பார்க்காதபோது ஒருவன் அதனைக் காயப்படுத்தவோ, கொல்லவோ, திருடவோ செய்தால் நீ என்ன செய்ய வேண்டும்? 11 அதைப் பெற்றுகொண்டவன் அம்மிருகத்தைத் தான் திருடவில்லை என்பதை விளக்க வேண்டும். அது உண்மையானால் கர்த்தரின் சந்நிதியில் சென்று நான் திருடவில்லை என்று ஆணையிட வேண்டும். மிருகத்தின் உரிமையாளனும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்டை வீட்டுக்காரன் அந்த மிருகத்திற்காக எந்தப் பணமும் செலுத்த தேவையில்லை. 12 ஆனால் அண்டை வீட்டுக்காரன் மிருகத்தைத் திருடியிருந்தால், அவன் அதற்கான விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும். 13 காட்டு மிருகங்கள் அதனைக் கொன்றிருந்தால் அதன் உடலைச் சாட்சியாக அண்டை வீட்டுக்காரன் எடுத்துவர வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்துக்காக அவன் விலை கொடுக்க வேண்டாம்.

14 “அண்டை வீட்டுக்காரனிடமிருந்து ஒருவன் எதையேனும் இரவல் பெற்றுக்கொண்டால், அவனே அப்பொருளுக்குப் பொறுப்பாளியாவான். ஒரு மிருகம் காயமுற்றாலோ அல்லது மரித்தாலோ அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தின் விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும். அப்பொருளின் உரிமையாளன் அங்கு இல்லாதிருந்தால், அண்டை வீட்டுக்காரன் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். 15 ஆனால் உரிமையாளனே அங்கிருந்தால் அயலான் அதற்கு பொறுப்பேற்க அவசியமில்லை. அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தை வேலைக்குப் பயன்படுத்தும்போது அதற்குக் குத்தகை செலுத்தும் பட்சத்தில் அம்மிருகம் மரித்தாலோ அல்லது காயப்பட்டாலோ அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. மிருகத்தைப் பயன்படுத்தியதற்காக அவன் ஏற்கெனவே கொடுத்த பணமே போதுமானது.

16 “மணமாகாத கன்னியிடம் ஒரு மனிதன் பாலின உறவு கொண்டால், அவன் அவளை மணந்துகொள்ள வேண்டும். அப்பெண்ணின் தந்தைக்குப் பரிசுப் பொருளை அவன் கொடுக்க வேண்டும். 17 பெண்ணின் தந்தை அவனைத் தன் மகள் மணக்கச் சம்மதிக்காவிட்டாலும் கூட, அவன் அப்பணத்தைக் கொடுத்துத் தீர வேண்டும். அவளுக்குரிய முழு ஈட்டுப் பொருளையும் அவன் செலுத்தியே ஆகவேண்டும்.

18 “எந்தப் பெண்ணையும் மந்திரம் செய்ய நீ அனுமதிக்கக் கூடாது. அவள் மந்திரம் செய்தால் அவள் வாழ அனுமதிக்காதே.

19 “மிருகத்தோடு யாரும் உடலுறவு கொள்ளலாகாது. அவ்வாறு செய்யும் மனிதன் கொல்லப்பட வேண்டும்.

20 “பொய்த் தேவர்களுக்கு ஒருவன் பலி செலுத்தினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே நீங்கள் பலி செலுத்த வேண்டும்.

21 “முன்பு எகிப்தில் அந்நியர்களாக இருந்தீர்கள் என்பதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். எனவே, உங்கள் நாட்டில் வாழும் எந்த அந்நியனையும் ஏமாற்றவோ, காயப்படுத்தவோ கூடாது.

22 “கணவனை இழந்த பெண்களுக்கும், பெற்றோரற்ற குழந்தைகளுக்கும் எந்தத் தீமையும் செய்யாதீர்கள். 23 விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் ஏதேனும் தீங்கு செய்தீர்களானால் நான் அதை அறிவேன். அவர்கள் பட்ட துன்பத்தைப்பற்றிக் கூறும்போது, நான் கேட்பேன். 24 எனக்கு மிகுந்த கோபம் உண்டாகும். உங்களைப் பட்டயத்தால் கொல்லுவேன். அப்போது உங்கள் மனைவியர் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அநாதைகளாவார்கள்.

25 “என் ஜனங்களில் ஏழையான ஒருவனுக்கு நீங்கள் கடனாகப் பணம் கொடுத்தால், அதற்கு வட்டி கேட்காதீர்கள். உடனே அப்பணத்தைத் திருப்பும்படியாக வற்புறுத்தக் கூடாது. 26 நீ கொடுக்கவிருக்கும் பணத்திற்கு அடமானமாக தன் மேற்சட்டையை ஒருவன் கொடுத்தால் சூரியன் மறையும் முன்னர் அந்த மேற்சட்டையைத் திரும்பக் கொடுத்து விடவேண்டும். 27 அம்மனிதனுக்கு மேற்சட்டை இல்லாமலிருந்தால் உடலைப் போர்த்திக்கொள்ள எதுவுமிராது. அவன் தூங்கும்போது சளிபிடிக்கும். அவன் என்னைக் கூப்பிட்டால் நான் அவனைக் கேட்பேன். நான் இரக்கம் பொருந்தியவராக இருப்பதால் நான் அவனுக்கு செவிகொடுப்பேன்.

28 “நீங்கள் தேவனையோ, ஜனங்கள் தலைவர்களையோ சபிக்கக் கூடாது.

29 “அறுவடையின்போது நீங்கள் முதல் தானியத்தையும், முதல் பழங்களின் ஈற்றையும் எனக்குக் கொடுக்க வேண்டும். வருடத்தின் இறுதிவரைக்கும் காத்திராதீர்கள்.

“உங்கள் முதற்பேறான மகன்களை எனக்குக் கொடுங்கள். 30 முதலில் பிறந்த ஆடுகளையும், மாடுகளையும் எனக்குக் கொடுங்கள். முதற்பேறான குட்டியானது தாயுடன், ஏழுநாட்கள் இருக்கட்டும், எட்டாவது நாள் அதை எனக்குக் கொடுங்கள்.

31 “நீங்கள் என் விசேஷ ஜனங்கள். எனவே கொடிய மிருகங்களால் கொல்லப்பட்ட விலங்குகளின் மாமிசத்தை உண்ணாதீர்கள். அந்த மரித்த மிருகத்தை நாய்கள் தின்னட்டும்.

23 “பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள்.

“பிறர் செய்கிறார்கள் என்பதால் மட்டுமே நீங்கள் சிலவற்றைச் செய்யாதீர்கள். ஒரு கூட்டம் ஜனங்கள் தவறு செய்தால் அவர்களோடு சேராதீர்கள். அந்த ஜனங்கள் உங்களை தீயவற்றைச் செய்யும்படியாகத் தூண்டவிடாதீர்கள். எது சரியென்றும் நியாயமானதென்றும் தெரிகிறதோ, அதையே செய்யுங்கள்.

“ஒரு ஏழை நியாயந்தீர்க்கப்படுகையில் அவன் மீதுள்ள இரக்கத்தினால் ஜனங்கள் அவனுக்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. அவன் செய்தது சரியாக இருந்தால் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருங்கள்.

“காணாமற்போன மாட்டையோ, கழுதையையோ பார்த்தீர்களானால், அதை அதன் உரிமையாளனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அதன் உரிமையாளன் உனது பகைவனாக இருந்தாலும், நீ அதைச் செய்ய வேண்டும்.

“மிகுந்த பாரத்தால் நடக்க முடியாத மிருகத்தைக் கண்டால் அதை நிறுத்தி அதற்கு உதவ வேண்டும். அது உனது பகைவர்களில் ஒருவனுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அம்மிருகத்திற்கு நீ உதவ வேண்டும்.

“ஒரு ஏழை மனிதனுக்கு ஜனங்கள் அநியாயம் செய்ய விடாதே. அவனும் பிறரைப் போன்றே நியாயந்தீர்க்கப்பட வேண்டும்.

“ஒருவன் குற்றவாளி என நீ கூறும்போது எச்சரிக்கையாக இரு. ஒருவனுக்கு எதிராக வீண் பழி சுமத்தாதே. குற்றமற்ற ஒருவன் செய்யாத செயலுக்குத் தண்டனையாகக் கொல்லப்படுவதற்கு வகை செய்யாதே. குற்றமற்ற மனிதனைக் கொல்பவன் கொடியவன். அம்மனிதனை நான் மன்னிக்கமாட்டேன்.

“ஒருவன் தவறு செய்யும்போது அவன் செயலை ஆமோதிப்பதற்காக ஒருவன் உனக்கு லஞ்சம் கொடுக்க வந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே. நீதிபதிகள் உண்மையைப் பார்க்காதபடிக்கு இத்தகைய பணம் நீதிபதிகளைக் குருடாக்கும். அந்தப் பணம் உண்மையுள்ளவர்களையும் பொய்யராக்கும்.

“அந்நியனுக்குத் தீங்குசெய்யாதீர்கள். எகிப்து தேசத்தில் வாழ்ந்தபோது நீங்களும் அந்நியராக இருந்ததை நினைவு கூருங்கள்.

விசேஷ விடுமுறைகள்

10 “விதைகளை விதையுங்கள், பயிர்களை அறுவடை செய்யுங்கள், ஆறு ஆண்டுகள் நிலத்தைப் பண்படுத்துங்கள். 11 ஆனால் ஏழாவது ஆண்டு நிலத்தைப் பண்படுத்தாதீர்கள். நிலம் ஓய்வெடுப்‌பதற்குரிய விசேஷ காலமாக ஏழாவது ஆண்டு இருக்கட்டும். அந்த ஆண்டில் உங்கள் நிலங்களில் எதையும் விதைக்காதீர்கள். ஏதேனும் பயிர்கள் அந்நிலத்தில் விளைந்தால் அதை ஏழைகள் அனுபவிக்கட்டும். மிகுதியான தானியங்களைக் காட்டுமிருகங்கள் உண்ணட்டும். உங்களுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரத் தோப்புக்களையும் அவ்வாறே பயன்படுத்துங்கள்.

12 “ஆறு நாட்கள் உழையுங்கள். ஏழாவது நாளில் ஓய்வு எடுங்கள். உங்கள் அடிமைகளுக்கும், வேலையாட்களுக்கும் ஓய்வுக்கும், அமைதிக்கும் அது வழிவகுக்கும். உங்கள் மாடுகளும், கழுதைகளும் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும்.

13 “இச்சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுங்கள் பொய்த் தேவர்களை தொழுதுகொள்ளாதீர்கள். அவைகளின் பெயர்களை உங்கள் நாவினால் உச்சரிக்கவேண்டாம்!

14 “ஒவ்வொரு ஆண்டும் மூன்று விசேஷ விடுமுறைகள் உங்களுக்கு இருக்கும். அந்நாட்களில் என்னைத் தொழுதுகொள்ளும்படி விசேஷ இடத்தில் நீங்கள் கூடுங்கள். 15 முதலாவது, புளிப்பில்லா அப்பப் பண்டிகையாகும். நான் கட்டளையிட்டபடியே இதைக் கொண்டாடவேண்டும். புளிப்புச் சேராத ரொட்டியை நீங்கள் ஏழு நாட்கள் உண்ண வேண்டும். ஆபிப் மாதத்தில் இதைச் செய்ய வேண்டும். ஏனெனில் அம்மாதத்தில்தான் நீங்கள் எகிப்தை விட்டு வெளியேறினீர்கள். அந்த சமயம் உங்களில் ஒவ்வொருவனும் ஒரு பலியைக் கொண்டு வரவேண்டும்.

16 “பெந்தெகோஸ்தே பண்டிகையானது ஆண்டின் இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும். உங்கள் வயல்களில் அறுவடை ஆரம்பிக்கும் கோடையின் தொடக்கத்தில் இந்த விடுமுறை நாள் வரும்.

“ஆண்டின் மூன்றாம் விடுமுறையானது அடைக்கலக் கூடாரப் பண்டிகையாக இருக்கும். இலையுதிர் காலத்தில் உங்கள் வயல்களின் எல்லாப் பயிர்களையும் சேர்க்கும் நாட்களில் இப்பண்டிகை வரும்.

17 “ஆகவே ஆண்டிற்கு மூன்றுமுறை ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கர்த்தராகிய ஆண்டவரை வணங்கும்படி நீங்கள் எல்லோரும் கூடிவரவேண்டும்.

18 “ஒரு மிருகத்தைக் கொன்று அதன் இரத்தத்தைப் பலியாகக் கொடுத்தால், புளிப்புள்ள ரொட்டியை அதனோடு படைக்கக்கூடாது. இப்பலியிலிருந்து நீங்கள் மாமிசத்தை எடுத்து உண்ணும்போது, ஒரே நாளில் அதை முடித்துவிடவேண்டும். எஞ்சிய மாமிசத்தை அடுத்த நாளுக்காகப் பாதுகாக்க வேண்டாம்.

19 “அறுவடை காலத்தில் பயிர்களைச் சேர்க்கும்போது, பயிர்களில் முதலில் அறு வடை செய்பவற்றை தேவனாகிய கர்த்தரின் வீட்டிற்குக் (பரிசுத்த கூடாரத்திற்குக்) கொண்டுவர வேண்டும்.

“தாய் ஆட்டின் பாலில் வேக வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாமிசத்தைச் சாப்பிடாதீர்கள்” என்றார்.

இஸ்ரவேலர் தங்கள் நாட்டைப் பெறுவதற்கு தேவன் உதவுவார்

20 தேவன், “நான் உங்களுக்கு முன்பாக ஒரு தூதனை அனுப்புவேன். நான் உங்களுக்கென தயாராக வைத்திருக்கிற இடத்திற்கு அத்தூதன் அழைத்துச் செல்வார். அந்தத் தூதன் உங்களைப் பாதுகாப்பார். 21 தூதனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றுங்கள். அவரை எதிர்க்காதீர்கள். நீங்கள் அவரை எதிர்த்துச் செய்கிற தவறுகளைத் தூதன் மன்னிக்கமாட்டார். அவரில் என் வல்லமை (நாமம்) இருக்கிறது. 22 அவர் சொல்கிற எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிகொடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் நான் உங்களோடிருப்பேன். உங்கள் பகைவர்களை எதிர்ப்பேன். உங்களை எதிர்க்கிற ஒவ்வொருவருக்கும் நான் பகைவனாவேன்” என்றார்.

23 தேவன், “என் தூதன் உங்களை தேசத்தில் வழி நடத்துவார். எமோரியர், ஏத்தியர், பெரிசியர், கானானியர், ஏவியர், எபூசியர் ஆகிய வெவ்வேறு ஜனங்களுக்கு எதிராக உங்களை வழிநடத்துவார். நான் அந்த ஜனங்களை எல்லாம் தோற்கடிப்பேன்.

24 “அந்த ஜனங்களின் தேவர்களைத் தொழுதுகொள்ளாதீர்கள். அவைகளுக்கு முன்பு பணியாதீர்கள். அவர்கள் வாழுகிறபடி நீங்கள் வாழாதீர்கள். அவர்களின் விக்கிரகங்களை அழித்துவிடுங்கள். அவர்கள் தெய்வங்களின் நினைவுச் சின்னங்களை உடைத்துவிடுங்கள். 25 உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால், உங்களை ஏராளமான ஆகாரத்தாலும், தண்ணீராலும் ஆசீர்வதிப்பேன். உங்களிலிருந்து எல்லா நோய்களையும் அகற்றுவேன். 26 உங்களது பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும், உங்களது பெண்களின் பிரசவத்தின்போது குழந்தைகள் மரிப்பதில்லை. நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்கும்படிச் செய்வேன்.

27 “உங்கள் எதிரிகளோடு போரிடும்போது உங்களுக்கு முன்பாக என் வல்லமையின் செய்தியை அனுப்புவேன். போரில் உங்கள் எதிரிகள் குழப்பமுற்று ஓடுவார்கள். நான் உங்கள் பகைவர்களை வெல்ல உங்களுக்கு உதவுவேன். 28 உங்கள் பகைவர்களை விரட்ட காட்டுக் குளவிகளை [c] உங்கள் முன் அனுப்புவேன். ஏவியரும், கானானியரும் ஏத்தியரும் உங்கள் தேசத்தை விட்டுப் போவார்கள். 29 ஆனால் உங்கள் தேசத்திலிருந்து இவர்களை உடனடியாக விரட்டமாட்டேன். ஒரே ஆண்டில் நான் இதைச் செய்தால் நாடு வெறுமையாகிவிடும். எல்லாக் காட்டு மிருகங்களும் பெருகி நாட்டை ஆக்கிரமிக்கும். அவை உங்களுக்குத் தொல்லையாக மாறும். 30 எனவே உங்கள் நாட்டினின்று அந்த ஜனங்களை சிறிது சிறிதாக அனுப்புவேன். தேசத்தில் நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். நீங்கள் போகுமிடமெல்லாம் அந்நியரை உங்களுக்கு முன்பாக விரட்டுவேன்.

31 “செங்கடலிலிருந்து ஐப்பிராத்து நதி வரைக்குமுள்ள நாட்டை உங்களுக்குத் தருவேன். பெலிஸ்திய கடல் (மத்திய தரைக் கடல்) மேற்கு எல்லையாகவும் அரேபிய பாலைவனம் கிழக்கு எல்லையாகவும் இருக்கும். அங்கு வாழும் ஜனங்களை நீங்கள் தோற்கடிக்கச் செய்வேன். அங்குள்ள ஜனங்களெல்லோரும் விலகிப் போகும்படி செய்வீர்கள்.

32 “அவர்களோடும், அவர்களது தேவர்களோடும் எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள். 33 அவர்கள் உங்கள் நாட்டில் தங்க விடாதீர்கள். அவர்களைத் தங்க அனுமதிப்பது உங்களுக்குக் கண்ணியாக அமையும். எனக்கு விரோதமாக பாவம் செய்யவும், அந்நிய தேவர்களை நீங்கள் தொழுதுகொள்ளவும் அவர்கள் உங்களைத் தூண்டுவார்கள்” என்றார்.

தேவனும் இஸ்ரவேலரும் உடன்படிக்கையை செய்துகொள்கிறார்கள்

24 தேவன் மோசேயை நோக்கி, “நீயும் ஆரோன், நாதாப், அபியூ, மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மேல் வந்து என்னைத் தூரத்திலிருந்து தொழுதுகொள்ள வேண்டும். பின்பு மோசே மாத்திரம் கர்த்தரிடம் நெருங்கி வருவான். மற்றவர்கள் கர்த்தரை நெருங்கி மலை மீது ஏறி வரக்கூடாது” என்றார்.

கர்த்தர் கூறிய எல்லா விதிகளையும், கட்டளைகளையும் மோசே ஜனங்களுக்குக் கூறினான். எல்லா ஜனங்களும், “கர்த்தர் கூறின எல்லா கட்டளைகளுக்கும் நாங்கள் கீழ்ப்படிவோம்” என்று ஏகமாய் பதிலுரைத்தனர்.

எனவே மோசே ஒரு சுருளில் கர்த்தரின் கட்டளைகளை எழுதினான். மறுநாள் காலையில் மோசே எழுந்து மலையடிவாரத்தில், ஒவ்வொரு கல்லும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின் மோசே இஸ்ரவேலின் வாலிபர்களைப் பலி செலுத்தவதற்காக அழைத்தனுப்பினான். தகன பலியாகவும் சமாதான பலியாகவும் அவர்கள் இளங்காளைகளைப் பலியிட்டனர்.

மோசே இம்மிருகங்களின் இரத்தத்தை எடுத்து வைத்தான். அந்த இரத்தத்தில் பாதியைக் கிண்ணங்களில் ஊற்றினான். மீதியைப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.

விசேஷ உடன்படிக்கை பொருந்திய சுருளை எல்லா ஜனங்களும் கேட்கும்படியாக மோசே வாசித்தான். அதைக் கேட்டதும் ஜனங்கள், “கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த சட்டங்களைக் கேட்டோம். அவற்றிற்குக் கீழ்ப்படிய சம்மதிக்கிறோம்” என்றார்கள்.

பலிகளின் இரத்தத்தைச் சேகரித்து வைத்திருந்த கிண்ணத்தை மோசே உயர்த்தி, இரத்தத்தை ஜனங்கள் மீது தெளித்தான். அவன், “கர்த்தர் உங்களோடு ஒரு விசேஷ உடன்படிக்கையைச் செய்தார் என்பதை இந்த இரத்தம் குறிக்கிறது. தேவன் கொடுத்த சட்டங்கள் இந்த உடன்படிக்கையை விளக்குகின்றன” என்றான்.

பின்பு மோசே, ஆரோன், நாதாப், அபியூ மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மீது ஏறி, 10 இஸ்ரவேலின் தேவனைக் கண்டனர். அவர் நின்றிருந்த இடம் வானத்தின் நிறமுள்ள தெளிந்த நீல இரத்தினக் கற்பாறை போன்று காணப்பட்டது! 11 இஸ்ரவேலின் மூப்பர் எல்லோரும் தேவனைக் கண்டார்கள். ஆனால் தேவன் அவர்களை அழிக்கவில்லை. அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு குடித்தார்கள்.

தேவனின் கட்டளையைப் பெறுவதற்கு மோசே போகிறான்

12 கர்த்தர் மோசேயை நோக்கி, “மலையின் உச்சியில் என்னிடம் வா. அங்கே எனது கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நியாயப்பிரமாணத்தையும், கற்பனைகளையும் நான் உனக்கு கொடுப்பேன்” என்றார்.

13 மோசேயும், அவனது உதவியாளனாகிய யோசுவாவும் தேவனின் மலையின் மீது ஏறினார்கள். 14 மோசே இஸ்ரவேல் மூப்பர்களிடம் (தலைவர்களிடம்), “இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள். நாங்கள் உங்களிடம் திரும்பி வருவோம். நான் இல்லாதபோது, ஆரோனும், ஊரும் உங்களைக் கண்காணிப்பார்கள். பிரச்சனை ஏதேனும் வந்தால் அவர்களிடம் செல்லுங்கள்” என்றான்.

மோசே தேவனைச் சந்திக்கிறான்

15 பின்பு மோசே மலையின் மீது ஏறினான். மேகம் மலையைச் சூழ்ந்துகொண்டது. 16 கர்த்தரின் மகிமை சீனாய் மலையின் மீது இறங்கியது. மேகம் மலையை சுற்றி ஆறு நாட்கள் சூழ்ந்திருந்தது. ஏழாவது நாளில் கர்த்தர் மேகத்திலிருந்து மோசேயிடம் பேசினார். 17 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் மகிமையைக் கண்டார்கள். மலை உச்சியின் மீது எரிகிற நெருப்பைப் போன்று அது இருந்தது.

18 பின்பு மோசே மலையின் உச்சியில் மேகத்துக்குள் சென்றான். அங்கே மோசே 40 பகலையும் 40 இரவையும் கழித்தான்.

பரிசுத்த பொருட்களுக்குரிய காணிக்கைகள்

25 கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களிடம் காணிக்கைகளைக் கொண்டு வரச் சொல். எனக்குக் கொடுக்க விரும்புவதைக் குறித்து அவனவன் தீர்மானிக்கட்டும். அவற்றை நீ எனக்காகப் பெற்றுக்கொள். ஜனங்களிடமிருந்து நீ பெறக்கூடிய பொருட்களின் பட்டியல் இவை: பொன், வெள்ளி, வெண்கலம், இளநீலநூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், மெல்லிய துகில், வெள்ளாட்டு மயிர், சிவப்பு சாயம் தோய்த்த ஆட்டுத் தோல், மெல்லிய தோல், சீத்திம் மரம், அகல் எண்ணெய், அபிஷேக எணணெய்ப் பொருட்கள், நறுமணப்புகைப் பொருட்கள், ஏபோத்திலும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் பிற இரத்தினக் கற்களும் ஆகும்” என்றார்.

பரிசுத்தக் கூடாரம்

மேலும் தேவன், “ஜனங்கள் எனக்காக பரிசுத்த பிரகாரத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது நான் அவர்கள் மத்தியில் வாழ்வேன். பரிசுத்தக் கூடாரமும் அதிலுள்ள பொருட்களும் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை நான் உனக்குக் காட்டுவேன். நான் காட்டுகிற மாதிரியின்படியே எல்லாவற்றையும் தவறாமல் செய்.

உடன்படிக்கைப் பெட்டி

10 “சீத்திம் மரத்தால் விசேஷமான பெட்டி ஒன்றைச் செய். இப்பரிசுத்த பெட்டி 45 அங்குல நீளமும், 27 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் இருக்க வேண்டும். 11 பெட்டியின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மூடுவதற்காக சுத்தமான தங்கத்தை உபயோகி. பெட்டியின் விளிம்புகளையும் தங்கத் தகட்டால் மூடவேண்டும். 12 பெட்டியைத் தூக்குவதற்கு நான்கு தங்க வளையங்களைச் செய். பக்கத்திற்கு இரண்டாக நான்கு மூலைகளிலும் தங்க வளையங்களைப் போடு. பின் பெட்டியைத் தூக்கிச் செல்ல கழிகளைச் செய். இந்த கழிகள் சீத்திம் மரத்தில் செய்யப்பட்டு தங்கத்தால் மூடப்பட வேண்டும். 13 பெட்டியைச் சுமப்பதற்குத் தண்டுகளைச் செய். அவை சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு பொன்னால் மூடப்பட வேண்டும். 14 பெட்டியின் ஓரங்களிலுள்ள வளையங்களில் அத்தண்டுகளை நுழைக்க வேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்த வேண்டும். 15 இத்தண்டுகள் எப்போதும் பெட்டியின் வளையங்களில் இருக்க வேண்டும். தண்டுகளை அப்புறப்படுத்தக் கூடாது.

16 “நான் உனக்கு உடன்படிக்கையைக் கொடுப்பேன். அந்த உடன்படிக்கையை இப்பெட்டியில் வை. 17 பின் ஒரு கிருபாசனத்தை பசும் பொன்னால் செய். 45 அங்குல நீளமும் 27 அங்குல அகலமும் உள்ளதாக அதைச் செய். 18 பின்பு தங்கத்தினால் இரண்டு கேருபீன்களைச் செய்து அவற்றை கிருபாசனத்தின் இரு முனைகளிலும் வை. தகடாய் அடித்த பொன்னால் அவற்றைச் செய். 19 ஒரு கேருபீனை ஒரு முனையிலும் மற்ற கேருபீனை மறு முனையிலும் வை. இந்த கேருபீன்கள் ஒன்றாக இருக்கும்படி கிருபாசனத்தோடு இணை. 20 பொன் கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்ந்திருக்க வேண்டும். அவை தங்கள் சிறகுகளால் பெட்டியை மூட வேண்டும். அவை ஒன்றுக்கொன்று எதிராக கிருபாசனத்தை நோக்கியபடி இருக்க வேண்டும்.

21 “நான் உனக்கு கொடுக்கும் உடன்படிக்கையைப் பரிசுத்த பெட்டிக்குள் வை. பெட்டியின் மீது கிருபாசனத்தை பொருத்து. 22 நான் உன்னைச் சந்திக்கும்போது, உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கேருபீன்களின் மத்தியிலிருந்து உன்னோடு பேசுவேன். அங்கிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு எல்லாக் கட்டளைகளையும் கொடுப்பேன்.

பரிசுத்த மேசை

23 “சீத்திம் மரத்தால் ஒரு மேசையைச் செய். அது 36 அங்குல நீளமும், 18 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் உள்ளதாக இருக்க வேண்டும். 24 மேசையைப் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் தங்கத் தகட்டால் அழகுபடுத்து. 25 மூன்று அங்குல அகலமான சட்டத்தை மேசையைச் சுற்றிலும் வை. சட்டத்தைப் பொன் தகட்டால் அழகுபடுத்து. 26 நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்கள் இருக்கும் ஓரங்களில் வை. 27 மேசையின் மேல் சட்டத்தைச் சுற்றிலும் சுருக்கமாக வளையங்களைப் பொருத்து. இந்த வளையங்கள் மேசையைச் சுமந்து செல்லும் தண்டுகளைத் தாங்கிக்கொள்ளும். 28 தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து அவற்றைப் பொன்னால் மூடு. தண்டுகள் மேசையைச் சுமந்து செல்லப் பயன்படும். 29 தட்டுகளையும், கரண்டிகளையும், கிண்ணங்களையும், குவளைகளையும் பசும்பொன்னால் செய். பானங்களின் காணிக்கைகளைக் கொட்டுவதற்கும், ஊற்றுவதற்கும் குவளைகளும், கிண்ணங்களும் பயன்படும். 30 பரிசுத்த ரொட்டியை எனக்கு முன்பாக மேசையின் மீது வை. அது எப்போதும் தவறாமல் எனக்கு முன்பாக இருக்க வேண்டும்.

குத்து விளக்குத் தண்டு

31 “பின் நீ விளக்குத் தண்டைச் செய்ய வேண்டும். சுத்தமான பொன்னைப் பயன்படுத்தி அதன் அடிப்பகுதியைச் சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும். பூக்கள், மொக்குகள், இலைகள் பூசிய பொன்னால் அமையவேண்டும். அதிலுள்ள எல்லாவற்றையும் ஒரே துண்டாக இணைத்து அமைக்க வேண்டும்.

32 “அந்தக் குத்துவிளக்குத் தண்டுக்கு ஆறு கிளைகள் இருக்கவேண்டும். மூன்று கிளைகள் ஒரு புறமாகவும், மூன்று கிளைகள் மறு புறமாகவும் அமைய வேண்டும். 33 ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருக்கவேண்டும். வாதுமைப் பூக்களைப் போல் மொக்குகளோடும், இதழ்களோடும் இப்பூக்களைச் செய்ய வேண்டும். 34 மேலும் நான்கு பூக்களை விளக்குத் தண்டுக்காகச் செய். இவை மொக்குகளும் இதழ்களும் கொண்ட வாதுமைப் பூக்களைப் போலிருக்கவேண்டும். 35 குத்துவிளக்கில் ஆறு கிளைகள் இருக்க வேண்டும். அடிப் பகுதியிலிருந்து மும் மூன்று கிளைகளை ஒவ்வொரு புறத்திலும் இணைக்கவேண்டும். கிளைகள் தண்டில் சேரும் மூன்று இடங்களின் அடிப்பகுதியிலும் மொக்குகளும் இதழ்களும் கொண்ட ஒவ்வொரு பூவை இணைக்கவேண்டும். 36 பூக்களும் இலைகளும் பொருத்திய குத்துவிளக்குத் தண்டானது முழுவதும் சுத்தமான பொன்னால் செய்யப்பட வேண்டும். வெவ்வேறு பாகங்களைச் சுத்தியால் அடித்து ஒன்றாக இணைக்கவேண்டும். 37 பின் குத்து விளக்குத் தண்டில் ஏழு அகல்களைப் பொருத்த வேண்டும். குத்து விளக்கின் முன்னே இந்த அகல்கள் ஒளி தரும். 38 திரிகளைக் கத்தரிக்கும் கத்தரிகளும், சாம்பல் கிண்ணங்களும் பொன்னால் செய்யப்பட வேண்டும். 39 குத்துவிளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு 75 பவுண்டு எடையுள்ள பசும் பொன்னைப் பயன்படுத்து. 40 மலையின் மீது உனக்கு காட்டியபடியே ஒவ்வொரு பொருளையும் செய்வதில் கவனமாயிரு” என்றார்.

பரிசுத்தக் கூடாரம்

26 கர்த்தர் மோசேயை நோக்கி, “பரிசுத்தக் கூடாரம் பத்து திரைச் சீலைகளால் தைக்கப்பட வேண்டும். இந்த திரைச்சீலைகள் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம் சிவப்பு ஆகிய நூல்களால் நெய்யப்படவேண்டும். ஒரு திறமை வாய்ந்த ஓவியன் இத்திரைச் சீலையில் சிறகுகளுள்ள கேரூபீன்களின் ஓவியங்களை நெய்ய வேண்டும். எல்லாத் திரைகளும் ஒரே அளவுடையதாய் இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் 28 முழ நீளமும் 4 முழ அகலமுமாக இருக்கவேண்டும். இரண்டு பிரிவாகத் திரைகளை இணை. ஐந்து திரைகளை ஒன்றாகவும், மற்ற ஐந்து திரைகளை வேறாகவும் இணை. ஒரு பிரிவின் விளிம்பில் இளநீலத் துணியால் கண்ணிகளை உருவாக்கு. இவ்வாறே மற்ற பிரிவின் விளிம்பு திரையிலும் செய். முதலிணைப்பில் 50 கண்ணிகளும் இரண்டாம் இணைப்பில் 50 கண்ணிகளும் தைக்கவேண்டும். பின்பு திரைகளை இணைப்பதற்கு 50 பொன்வளையங்களைச் செய். அது பரிசுத்தக் கூடாரத்தை ஒன்றாக இணைத்துவிடும்.

“பரிசுத்தக் கூடாரத்திற்கு மேல் மற்றொரு கூடாரத்தை உருவாக்கு. இக்கூடாரம் செய்வதற்குப் பதினொரு திரைகளைப் பயன்படுத்து. வெள்ளாட்டு மயிரால் இத்திரைகளை நெசவு செய். எல்லாத் திரைகளும் ஒரே அளவுடையதாய் இருக்க வேண்டும். 30 முழ நீளமும் 4 முழ அகலமும் உடையதாய் அது இருக்கவேண்டும். ஐந்து திரைகளை ஒன்றாகவும், வேறு 6 திரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும். ஆறாம் திரையின் பாதிப் பகுதியை கூடாரத்தின் முன் பகுதியில் மடித்துவிட வேண்டும். 10 ஒரு திரையிணைப்பின் கடைசித் திரையில் 50 கண்ணிகளையும் இன்னொரு திரையிணைப்பின் கடைசித் திரையில் 50 கண்ணிகளையும் தைக்கவேண்டும். 11 பின்னர் திரைகளை இணைப்பதற்கு 50 வெண்கல வளையங்களைச் செய். அவை கூடாரத்தின் இருபகுதிகளையும் ஒன்றாக இணைக்கும். 12 இக்கூடாரத்தின் இறுதித் திரையின் பாதிப்பகுதி பரிசுத்தக் கூடாரத்தின் பின் பகுதியில் தொங்கிக்கொண்டிருக்கும். 13 அதன் பக்க வாட்டில் பரிசுத்தக் கூடாரத்தின் திரைகள் பரிசுத்தக் கூடாரத்தின் கீழ்ப்புற ஓரங்களைக் காட்டிலும் ஒரு முழம் தாழ்வாகத் தொங்கும். இவ்வாறு பரிசுத்தக் கூடாரம் மகா பரிசுத்தக் கூடாரத்தை முற்றிலும் மறைக்கும். 14 மகா பரிசுத்தக் கூடாரத்தை மறைப்பதற்கு இரண்டு உறைகளைச் செய். சிவப்புச் சாயம் தீர்த்த ஆட்டுக்கடா தோலினால் ஒரு உறையும் மெல்லிய தோலினால் மற்றொரு உறையும் செய்யப்பட வேண்டும்.

15 “பரிசுத்தக் கூடாரத்தைத் தாங்குவதற்காகச் சட்டங்களை சீத்திம் மரத்தால் செய்ய வேண்டும். 16 அச்சட்டங்கள் 10 முழ உயரமும் 1 1/2 முழ அகலமும் உள்ளதாக இருக்கவேண்டும். 17 ஒவ்வொரு புறமுள்ள தூண்கள் குறுக்குத் துண்டுகளால் ஒவ்வொரு சட்டமாகச் சேர்க்கப்படவேண்டும். பரிசுத்த கூடாரத்தின் எல்லாச் சட்டங்களும் ஒரே அளவுடையதாக இருக்க வேண்டும். 18 பரிசுத்த கூடாரத்தின் தென் புறத்திற்கென்று 20 சட்டங்களை உருவாக்கு. 19 சட்டங்களுக்கு 40 வெள்ளிப் பீடங்களை உண்டாக்கு. ஒவ்வொரு சட்டத்தின் கீழும் இரண்டு பீடங்கள் வீதம் அமைய வேண்டும். ஒவ்வொரு பக்கத் தூணுக்கும் ஒருபீடம் வீதம் இருக்கவேண்டும். 20 பரிசுத்தக் கூடாரத்தின் மறுபக்கத்திற்கென்று (வடக்குப் புறம்) மேலும் இருபது சட்டங்கள் செய். 21 நாற்பது வெள்ளி பீடங்கள் ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு வீதம் செய். 22 ஆறு சட்டங்கள் பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்திற்கு (மேற்குப்பக்கம்) அமைத்துவிடு. 23 பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்து மூலைகளுக்கென்று இரண்டு சட்டங்கள் செய். 24 மூலைகளிலுள்ள சட்டங்கள் அடியில் சேர்க்கப்படவேண்டும். மேற்புறத்தில் சட்டங்களை ஒரு வளையத்தால் இணைக்கவேண்டும். இரண்டு மூலைகளுக்கும் அவ்வாறே செய். 25 கூடாரத்தின் மேற்குப்புறத்திற்கு எட்டுச் சட்டங்கள் இருக்கும். 16 வெள்ளிப் பீடங்கள் ஒவ்வொரு சட்டத்திற்கு இரண்டு வீதம் அமையும்.

26 “பரிசுத்த கூடாரத்தின் சட்டங்களுக்குச் சீத்திம் மரத்தாலான தாழ்ப்பாள்களைச் செய். பரிசுத்த கூடாரத்தின் முன்புறத்திற்கு ஐந்து தாழ்ப்பாள்கள் இருக்கவேண்டும். 27 பரிசுத்த கூடாரத்தின் பின்னாலுள்ள (மேற்குப் புறத்தின்) சட்டங்களுக்கு ஐந்து தாழ்ப்பாள்கள் இருக்க வேண்டும். 28 நடுவிலுள்ள தாழ்ப்பாள் ஒரு மூலையிலிருந்து மறுமூலைவரைக்கும் சட்டங்கள் வழியாகச் செல்லவேண்டும்.

29 “இந்த சட்டங்களைப் பொன் தகட்டால் மூடு. தாழ்ப்பாள்களை இணைப்பதற்குப் பொன் வளையங்களை உண்டுபண்ணு. தாழ்ப்பாள்களுக்கும் பொன் முலாம் பூசு. 30 மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே பரிசுத்தக் கூடாரத்தை உண்டாக்கு.

பரிசுத்த கூடாரத்தின் உட்புறம்

31 “பரிசுத்தக் கூடாரத்தின் உட்புறத்தில் விரிப்பதற்கு மெல்லிய துகிலினால் ஒரு விசேஷ திரைச்சீலையை உண்டாக்கு. நீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலால் அந்தத் திரைச்சீலையை உண்டாக்கி, அதிலே கேரூபின்களின் சித்திரங்களைப் பின்னு. 32 சீத்திம் மரத்தால் நான்கு தூண்களை உண்டாக்கி அவற்றைப் பொன்னால் மூடு. நான்கு தூண்கள் மேலும் பொன்னால் ஆன கொக்கிகளை இணை. தூண்களுக்கு அடியில் நான்கு வெள்ளி பீடங்களை வை. பிறகு திரைச் சீலையைத் தங்கக் கொக்கிகளில் தொங்கவிடு. 33 பொன் வளையங்களுக்குக் கீழே திரைகளைத் தொங்கவிடு. நீ செய்த உடன்படிக்கைப் பெட்டியைத் திரைக்குப் பின்னே வை. இந்தத் திரையானது பரிசுத்த இடத்தையும், மகா பரிசுத்த இடத்தையும் பிரிக்கும். 34 உடன்படிக்கைப் பெட்டியை அதன் கிருபாசனத்தால் மூடிவை.

35 “பின்பு பரிசுத்த இடத்தின் திரையின் முன்புறத்தில் நீ செய்த விசேஷ மேசையை வை. பரிசுத்த கூடாரத்தின் வடக்குப்புறத்தில் மேசை இருக்க வேண்டும். குத்துவிளக்குத் தண்டை தெற்குப்புறத்தில் வை. அது மேசையின் குறுக்காக இருக்கும்.

பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயில்

36 “பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடுவதற்கு ஒரு திரையை உருவாக்குங்கள். நீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும், மெல்லிய துகிலாலும், இத்திரையை உண்டாக்கு. அதில் சித்திரங்களைப் பின்னி வை. 37 திரைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கு. பொன் முலாம் பூசப்பட்ட சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய். ஐந்து தூண்களுக்கும் வெண்கலத்தால் ஐந்து பீடங்களைச் செய்” என்றார்.

தகனபலிகளுக்குரிய பலிபீடம்

27 கர்த்தர் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். அப்பலிபீடம் சதுர வடிவமாக இருக்கவேண்டும். 5 முழ நீளமும், 5 முழ அகலமும், 3 முழ உயரமும் இருக்கட்டும். பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளைப் பொருத்து. இப்படி பலிபீடமும், கொம்புகளும் ஒரே துண்டாக இருக்கும். பலிபீடத்தை வெண்கலத்தால் மூட வேண்டும்.

“பலிபீடத்தில் பயன்படுத்தும் பாத்திரங்களும், கருவிகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டவையாக இருக்கட்டும். பானைகள், அகப்பைகள், கிண்ணங்கள், முள் கரண்டிகள், நெருப்புச் சட்டிகள் ஆகியவற்றைச் செய். பலிபீடத்தின் சாம்பலை அகற்றுவதற்காக இவை பயன்படும். பலபீடத்திற்கு வலை போன்ற ஒரு சல்லடை செய்யவேண்டும். சல்லடையின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு வெண்கல வளையங்களை உண்டாக்கு. பலிபீடத்தின் கீழ்ப்புறத்தில் பாதி உயரத்தில் அந்த சல்லடையை உட்கார வை.

“பலிபீடத்திற்கான தூண்களை சீத்திம் மரத்தால் செய்து அதை வெண்கலத்தால் மூட வேண்டும். பலிபீடத்தின் இருபக்கங்களிலும் வளையங்களின் வழியே தண்டுகளைச் செலுத்து. பலிபீடத்தைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்து. பல கைகளால் செய்யப்பட்ட பக்கங்களை உடைய உட்குழியுள்ள பெட்டியைப்போல பலிபீடத்தைச் செய்ய வேண்டும். நான் மலையில் உனக்குக் காண்பித்தபடியே பலி பீடத்தைச் செய்யவேண்டும்.

பரிசுத்தக் கூடாரத்தின் வெளிப்பிரகாரம்

“பரிசுத்த கூடாரத்திற்கு ஒரு வெளிப்பிரகாரம் அமைப்பாயாக. அது 100 முழ நீளமான திரைகளால் தெற்குப்புறம் மறைக்கப்படட்டும். மெல்லிய துகிலால் இத்திரைகள் அமைய வேண்டும். 10 20 வெண்கல பீடங்கள் உள்ள 20 தூண்களைப் பயன்படுத்து. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும். 11 வடபுறத்திலும் திரைச் சுவர் 100 முழ நீளமாக இருக்க வேண்டும். அதற்கு 20 தூண்களும், 20 வெண்கலப் பீடங்களும் இருக்கவேண்டும். தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.

12 “வெளிப்பிரகாரத்தின் மேற்குப்புறத்தில் 50 முழ நீளமுள்ள திரைச்சுவர் இருக்க வேண்டும். 10 தூண்களும், 10 பீடங்களும் இருக்க வேண்டும். 13 வெளிப்பிரகாரத்தின் கிழக்குப் புறமும் 50 முழ அகலம் இருக்க வேண்டும். 14 வெளிப்பிரகாரத்தின் நுழை வாயில் கிழக்குப் புறத்திலேயே அமையட்டும். நுழைவாயிலின் ஒருபுறம் 15 முழ நீளமான திரைகளும், 3 தூண்களும், 3 பீடங்களும் இருக்க வேண்டும். 15 அதன் மறுபுறமும் 15 முழ நீளமான திரைகளும், மூன்று தூண்களும், அவற்றிற்கு மூன்று பீடங்களும் இருக்கட்டும்.

16 “வெளிப்பிரகாரத்தின் நுழைவாயிலை மூடுவதற்கு 20 முழ நீளமான திரை இருக்கவேண்டும். மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும் ஆகிய துணிகளால் திரைகளையும், அதில் சித்திர வேலைப்பாடுகளையும் செய். நான்கு பீடங்கள் உள்ள நான்கு தூண்கள் திரைக்கென இருக்கட்டும். 17 வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள அனைத்துத் தூண்களும் வெள்ளி பூண்களும், வெள்ளிக் கொக்கிகளும், வெண்கலப் பீடங்களும் கொண்டதாக இருக்கவேண்டும். 18 100 முழ நீளமும் 50 முழ அகலமும் கொண்டதாக வெளிப்பிரகாரம் இருக்கவேண்டும். வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள திரைகளின் சுவர் 5 முழ உயரம் இருக்க வேண்டும். திரைகள் மெல்லிய துகிலால் நெய்யப்பட வேண்டும். தூண்களின் பீடங்கள் வெண்கலத்தாலாக வேண்டும். 19 எல்லாக் கருவிகளும், கூடாரத்தின் ஆணிகளும், பரிசுத்தக் கூடாரத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வெண்கலத்தால் அமைய வேண்டும். வெளிப்பிரகாரத்திற்கான திரைகளுக்குத் தேவையான கூடார ஆணிகளும் வெண்கலத்தால் செய்யப்பட வேண்டும்.

அகல் எண்ணெய்

20 “தரத்தில் உயர்ந்த ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படியாக இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிடு. தினமும் மாலை நேரத்தில் ஏற்றப்பட வேண்டிய விளக்கிற்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்து. 21 ஆரோனும், அவன் மகன்களும் விளக்கைச் சுத்திகரிக்கும் வேலையைச் செய்ய வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தின் முன் அறைக்குள் அவர்கள் செல்வார்கள். இது உடன்படிக்கை இருக்கும் அறைக்கு முன்பாக இருக்கும் வெளிப்புற அறை. ஒரு திரை இந்த இரண்டு அறைகளையும் பிரிக்கும். மாலை முதல், காலைவரை கர்த்தருக்கு முன் விளக்கு தொடர்ந்து எரிந்துக்கொண்டே இருக்கும்படி அவர்கள் அதைக் கவனித்து வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்களும், அவர்கள் சந்ததியும் இச்சட்டத்தை என்றென்றைக்கும் பின்பற்ற வேண்டும்” என்றார்.

ஆசாரியருக்கான உடை

28 கர்த்தர் மோசேயை நோக்கி, “உன் சகோதரனாகிய ஆரோனையும், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பிரித்து உன்னிடம் வரவழை. இவர்கள் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்வார்களாக.

“உனது சகோதரனாகிய ஆரோனுக்கென்று சிறப்பான ஆடைகளை உண்டாக்கு. அந்த ஆடைகள் அவனுக்குக் கனமும், மேன்மையும் தரும். இந்த ஆடைகளைச் செய்யும் திறமைமிக்கவர்கள் ஜனங்கள் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு விசேஷ அறிவை நான் கொடுத்துள்ளேன். அவர்களிடம் ஆரோனுடைய ஆடைகளைத் தயாரிக்கச் சொல். அவன் எனக்குச் சிறப்பான பணிவிடை செய்வதை அந்த உடை காட்டும். அவன் என்னைச் சேவிக்கிற ஆசாரியனாகப் பணியாற்றுவான். அந்த மனிதர்கள் செய்யவேண்டிய ஆடைகள் இவைகளே: நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம், ஏபோத், நீல அங்கி, முழுவதும் நெய்யப்பட்ட வெள்ளை அங்கி, தலைப்பாகை, கச்சை. ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கென்றும் இந்தச் சிறப்பு ஆடைகளை உண்டாக்க வேண்டும். பின்பு ஆரோனும், அவனது மகன்களும் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யமுடியும். பொன்னையும், ஜரிகைகளையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலையும் பயன்படுத்துமாறு அவர்களுக்குச் சொல்.

ஏபோத்தும், இடைக் கச்சையும்

“ஏபோத்தைச் செய்வதற்குப் பொன்னையும், சரிகைகளையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலையும் பயன்படுத்து. இது திறமை மிக்க கலைஞனின் வேலை ஆகும். ஏபோத்தின் தோள் பகுதி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தோள்பட்டை இருக்கவேண்டும். இந்தத் தோள் பட்டைகள் ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் கட்டப்படவேண்டும்.

“ஏபோத்திற்கு ஒரு இடைக்கச்சையைச் செய்ய வேண்டும். ஏபோத்தை நெய்தது போலவே, இடைக் கச்சையையும், பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல் ஆகியவற்றால் செய்ய வேண்டும்.

“இரண்டு கோமேதகக் கற்களை எடுத்துகொள். இஸ்ரவேலின் (யாக்கோபு) பன்னிரண்டு மகன்களின் பெயர்களையும் அக்கற்களின் மீது எழுது. 10 ஆறு பெயர்களை ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்களை மறு கல்லிலும் எழுதவேண்டும். முதல் மகனிலிருந்து கடைசி மகன் வரைக்கும் ஒவ்வொருவரின் பெயர்களையும் எழுதவேண்டும். 11 இந்த கற்களின் மீது இஸ்ரவேலின் ஆண் பிள்ளைகளுடைய பெயர்களை செதுக்கவேண்டும். முத்திரை செய்கிற முறைப்படியே இதனையும் செய். பின்பு தங்கச் சட்டங்களில் கற்களைப் பொருத்து. 12 ஏபோத்தின் வார்களில் இந்த கற்களைப் பொருத்து. கர்த்தருக்கு முன்னால் நிற்கும்போது ஆரோன் அந்தச் சிவப்பு அங்கியை அணிந்துகொள்வான். ஏபோத்தின்மேல் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களும் உள்ள இரண்டு கற்களும் இருக்கும். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் நினைவு கூருவதற்கு இக்கற்கள் உதவும். 13 ஏபோத்தின் மேல் அக்கற்கள் நன்றாக பதிக்கப்பட்டிருக்கும்படி பசும் பொன்னை பயன்படுத்து. 14 பொன்னால் இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகள் செய்து அவற்றைப் பொன் சட்டத்தில் பூட்டவேண்டும்.

நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம்

15 “தலைமை ஆசாரியனுக்காக நியாயத் தீர்ப்பு மார்ப்பதக்கத்தைச் செய். ஏபோத்தைச் செய்தது போலவே, திறமைமிக்க கை வேலைக்காரர்களைக்கொண்டு இதையும் செய்ய வேண்டும். பொன் ஜரிகையையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூலையும் பயன்படுத்த வேண்டும். 16 இந்த நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை இரண்டாக மடித்து ஒரு சதுர பையாக தைக்க வேண்டும். அது 9 அங்குல நீளமும், 9 அங்குல அகலமும் உடைய சதுரமாய் இருக்க வேண்டும். 17 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் நான்கு வரிசை விலையுயர்ந்த கற்களைப் பதிக்க வேண்டும். பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம் கற்கள் முதல் வரிசையில் இருக்க வேண்டும். 18 இரண்டாவது வரிசையில் மரகதம், இந்திரநீலம், வச்சிரம் ஆகிய கற்கள் இருக்க வேண்டும். 19 மூன்றாவது வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி ஆகிய கற்கள் இருக்க வேண்டும். 20 நான்காவது வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி என்ற கற்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் பொன்னில் பதிக்க வேண்டும். 21 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் மேற்கூறிய பன்னிரெண்டு கற்கள் இருக்க வேண்டும். இஸ்ரவேலின் மகன்கள் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கல் இருக்க வேண்டும். முத்திரை செய்கிற வண்ணமே ஒவ்வொரு கல்லிலும் இப்பெயர்கள் பொறிக்கப்பட வேண்டும்.

22 “சுத்தமான பொன்னினால் ஆன சங்கிலிகளை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்காக செய்ய வேண்டும். அவை கயிறு போல் பின்னப்பட்டிருக்க வேண்டும். 23 இரண்டு பொன் வளையங்களைச் செய்து நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு மூலைகளிலும் அவற்றை மாட்ட வேண்டும். 24 இரண்டு பொன் சங்கிலிகளையும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் இரண்டு வளையங்களில் பொருத்து. 25 இரண்டு சட்டத்திலும் சங்கிலிகளின் வார்களை இணைத்துவிடு. ஏபோத்தின் முன்பகுதியிலுள்ள இரண்டு தோள் பட்டைகளிலும் இவை பொருத்தப்பட்டிருக்கும். 26 மேலும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் மூலைகளில் பொருத்து. ஏபோத்துக்கு பொருத்தின நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் உட்புற மூலைகளில் இது இருக்கும். 27 இன்னும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து அவற்றை ஏபோத்தின் முன்புறமுள்ள தோள் பட்டைகளின் கீழ்ப்பகுதியில் பொருத்து. பொன் வளையங்களை ஏபோத்தின் இடைக் கச்சைக்கு மேல் வை. 28 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களோடு இணைப்பதற்கு நீல நிற நாடாவைப் பயன்படுத்து. இதனால் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம் கச்சைக்கு அருகேயும் ஏபோத்திற்கு எதிரேயும் இருக்கும்.

29 “பரிசுத்த இடத்துக்குள் ஆரோன் நுழையும்போது, அவன் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை அணிய வேண்டும். அவனது மார்புக்கு நேராக இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பேரையும் அவன் அணிந்துகொள்வான். இவ்வாறு கர்த்தர் அவர்களை எப்போதும் நினைவு கூருவார். 30 நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்குள் ஊரீமையும் தும்மீமையும் வை. கர்த்தருக்கு முன் செல்லும்போது இவை ஆரோனின் மார்புக்கு மேலாக இருக்கும். இப்படியாக இஸ்ரவேல் ஜனங்களின் நியாயத்தீர்ப்பை கர்த்தருக்கு முன்பாக ஆரோன் எப்போதும் சுமந்து செல்வான்.

ஆசாரியர்களுக்குரிய பிற ஆடைகள்

31 “ஏபோத்திற்காக ஒரு நீல அங்கியைத் தயார் செய். 32 தலையை நுழைத்துக்கொள்ளும்பொருட்டு நடுவில் ஒரு துவாரத்தை அமைப்பாயாக. அத்து வாரத்தைச் சுற்றிலும் ஒரு நெய்யப்பட்ட துணியைத் தைத்துவிடு. துவாரம் கிழியாதபடிக்கு அது உதவும். 33 துணியாலான மாதுளம் பழங்களை உண்டாக்க நீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூலைப் பயன்படுத்து. அவற்றை வஸ்திரத்தின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கவிடு. மாதுளம் பழங்களுக்கு இடையில் பொன்மணிகளைத் தொங்கவிடு. 34 இவ்வாறு அங்கியின் கீழே பொன் மணிகளும், மாதுளம் பழங்களும் இருக்க வேண்டும். ஒரு மாதுளம் பழமும், ஒரு பொன் மணியுமாக வரிசையாக அமையட்டும். 35 ஆரோன் ஆசாரியனாகப் பணிவிடை செய்யும்போது இந்த அங்கியை அணிந்துகொள்ள வேண்டும். கர்த்தரின் முன்னே நிற்கும்படியாக பரிசுத்த இடத்திற்கு அவன் போகும்போது அவன் சாகாதபடிக்கு மணிகள் ஒலிக்கும். பரிசுத்த இடத்திலிருந்து வெளியேறும்போதும் அவை ஒலிக்கும்.

36 “முத்திரை செய்வதைப்போல், பொன் தகட்டில் பொன் எழுத்துக்களால் அதில் ‘கர்த்தருக்கு பரிசுத்தம்’ என்னும் வார்த்தைகளை பொறித்து வை. 37 அந்த பொன் தகட்டை ஒரு நீல வண்ண நாடாவில் இணைத்துவிடு. தலைப்பாகையின் முன்புறம் அந்தப் பொன் தகடு இருக்க வேண்டும். 38 ஆரோன் அதை தலையில் அணிந்துகொள்ள வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் படைக்கும் காணிக்கைகளில் உள்ள கறையினால் அவன் கறைபடாதபடி இது உதவும். ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் காணிக்கைகள் இவைகளே. ஜனங்களின் காணிக்கைகளைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு ஆரோன் இதனை எப்போதும் தலையில் அணிந்துகொள்ள வேண்டும்.

39 “வெள்ளை அங்கியை மெல்லிய துகில் நூலிலிருந்து நெய்ய வேண்டும். தலைப்பாகைக்கும் மெல்லிய துகிலைப் பயன்படுத்து. கச்சையில் சித்திர வேலைப்பாடுகள் தைக்கப்பட்டிருக்க வேண்டும். 40 மேலங்கி, கச்சை, தலைப்பாகை ஆகியவற்றை ஆரோனின் மகன்களுக்காகவும் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு கனத்தையும் மதிப்பையும் அளிக்கும். 41 உன் சகோதரனாகிய ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் இந்த ஆடைகளை அணிவி. அவர்களை ஆசாரியர்களாக்கும்படி விசேஷ எண்ணெயை அவர்கள் மீது ஊற்று. இது அவர்களைப் பரிசுத்தமாக்கும். அவர்கள் எனக்கு சேவை செய்யும் ஆசாரியர்களாக இருப்பார்கள்.

42 “மெல்லிய துகிலால் ஆசாரியர்களுக்கு உள்ளாடைகள் தைக்க வேண்டும். அவை இடுப்பிலிருந்து முழங்கால்வரைக்கும் இருக்கும். 43 ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போதெல்லாம் ஆரோனும், அவனது மகன்களும் இந்த ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். பரிசுத்த இடத்தில் பலிபீடத்தருகே ஆசாரியராக பணிவிடை செய்ய வரும்போது இதை அணியவேண்டும். அவற்றை அணியாவிட்டால் அவர்கள் குற்றவாளிகளாவார்கள். அதனால் அவர்கள் சாகநேரிடும். ஆரோனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் என்றென்றைக்கும் இது கட்டளையாக இருக்கும்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center