Bible in 90 Days
இஸ்ரவேலின் அரசனான உம்ரி
21 இஸ்ரவேல் ஜனங்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒரு பகுதி கீனாத்தான் மகனான திப்னியையும், இன்னொரு பகுதி உம்ரியையும் அரசனாக்க விரும்பினார்கள். 22 ஆனால் உம்ரியின் ஆட்கள் திப்னியின் ஆட்களைவிடப் பலமிக்கவர்கள். எனவே திப்னியைக் கொன்று உம்ரி அரசனானான்.
23 யூதாவின் அரசனாக ஆசா ஆட்சி புரிந்த 31வது ஆண்டில் இஸ்ரவேலின் அரசனாக உம்ரி ஆனான். உம்ரி 12 ஆண்டுகள் ஆண்டான். இதில் 6 ஆண்டு காலம் அவன் திர்சாவிலிருந்து ஆண்டான். 24 உம்ரி சமாரியா மலையை சேமேரிடமிருந்து வாங்கினான். அதன் விலை 2 தாலந்து வெள்ளி. அதில் நகரத்தைக் கட்டி அதன் சொந்தக்காரனான சேமேரின் பெயரால் சமாரியா என்று பெயரிட்டான்.
25 உம்ரி கர்த்தருக்கு எதிராகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களை விட மோசமாக இருந்தான். 26 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களையெல்லாம் இவனும் செய்தான். யெரொபெயாம் தானும் பாவம் செய்து, ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். பயனற்ற விக்கிரகங்களையும் தொழுதுகொண்டான்.
27 இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் உம்ரி செய்த மற்ற செயல்களையும் அவர் செய்த அருஞ்செயல்களும் எழுதப்பட்டுள்ளன. 28 உம்ரி மரித்து சமாரியா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனது மகன் ஆகாப் புதிய அரசனானான்.
இஸ்ரவேலின் அரசனான ஆகாப்
29 யூதாவின் அரசனான ஆசா 38வது ஆண்டில் இருக்கும்போது ஆகாப் இஸ்ரவேலின் புதிய அரசனானான். இவன் சமாரியாவில் இருந்து 22 ஆண்டுகள் ஆண்டான். 30 இவனும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களைவிட மோசமாக இருந்தான். 31 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த அதே பாவங்களைச் செய்வது இவனுக்குப் போதுமானதாயிருக்கவில்லை. அவன் சீதோனியரின் அரசனான ஏத்பாகாலின் மகள் யேசபேலை மணந்து பாகாலையும் தொழுதுகொண்டான். 32 சமாரியாவில் பாகாலுக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தில் பலிபீடமும் அமைத்தான். 33 ஒரு சிறப்பான தூணையும் அஷெராவை தொழுதுகொள்ள உருவாக்கினான். அவனுக்கு முன்பு இஸ்ரவேலின் அரசனாக இருந்த மற்றவர்களைவிட இவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அதிகமாகக் கோபப்படுத்தினான்.
34 இவனது காலத்தில், ஈயேல் எனும் பெத்தேல் ஊரான் எரிகோவைக்கட்டினான். அப்போது, அவனது மூத்தமகனான அபிராம் மரித்தான். நகர வாயில்களை அமைக்கும் போது, இளைய மகன் செகூப் மரித்தான். நூனின் மகனான யோசுவாவின் மூலமாகப் பேசியபொழுது இது நடக்குமென்று கர்த்தர் சொன்னைதைப்போலவே இது நடந்தது.
எலியாவும் மழையற்ற காலமும்
17 கீலேயாத்தின் திஸ்பியன் நகரில் எலியா என்ற தீர்க்கதரிசி இருந்தான். இவன் அரசனான ஆகாப்பிடம், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்பவன். அவரது வல்லமையால், வருகின்ற சில வருடங்கள் மழையும் பனியும் இல்லாமல் போகும் எனக் கூறுகிறேன். நான் கட்டளையிட்டால்தான் மழைபொழியும்” என்றான்.
2 பிறகு கர்த்தர் எலியாவிடம், 3 “இந்த இடத்தை விட்டு கீழ் நாடுகளுக்குப் போ. கேரீத் ஆற்றருகில் ஒளிந்துக்கொள். அது யோர்தான் ஆற்றிற்குக் கிழக்கே உள்ளது. 4 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி. அங்கு காகங்கள் உனக்கு உணவு கொண்டுவரும்படி நான் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார். 5 எனவே எலியா அங்கே போனான். கர்த்தருடைய கட்டளைபடியே கேரீத்தில் ஒளிந்திருந்தான். 6 ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் காகங்கள் இறைச்சியும் அப்பமும் கொண்டுவந்தன. ஆற்று தண்ணீரைக் குடித்தான்.
7 மழை இல்லாமல் போனது. கொஞ்ச நாள் ஆனதும் ஆறும் வறண்டது. 8 கர்த்தர் எலியாவிடம், 9 “சீதோனில் உள்ள சாறிபாத்துக்குப் போ. அங்கே இரு. கணவனை இழந்த ஒருத்தி அங்கே இருக்கிறாள். அவள் உனக்கு உணவு தருமாறு நான் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.
10 எலியா சாறிபாத்துக்குப் போனான். நகர வாயிலுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் கணவன் மரித்துப்போயிருந்தான். அவள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா அவளிடம், “நான் குடிக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரமாட்டாயா?” என்ற கேட்டான். 11 அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, அவன், “தயவு செய்து அப்பமும் கொண்டு வா” என்றான்.
12 அவளோ, “நான் தேவனாகிய கர்த்தர் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என்னிடம் அப்பம் இல்லை. ஜாடியில் கொஞ்சம் மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. நான் விறகு பொறுக்க வந்துள்ளேன். இதனால் எங்கள் கடைசி உணவை சமைத்து உண்டுவிட்டு பிறகு பசியால் நானும் என் மகனும் மரிக்கவேண்டும்” என்றாள்.
13 எலியா அந்தப் பெண்ணிடம், “கவலைப்படாதே, வீட்டிற்குப்போய் நான் சொன்னது போல சமையல் செய். உன்னிடம் உள்ள மாவால் ஒரு சிறு அப்பத்தைச் செய், அதனை எனக்குக் கொண்டு வா. பிறகு உங்களுக்கானதைச் செய்யலாம், 14 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘அந்த ஜாடியில் உள்ள மாவு காலியாகாது, கலயத்திலும் எண்ணெய் குறையாது என்று கூறியுள்ளார். இது கர்த்தர் மழையைக் கொண்டு வரும்வரை நிகழும்’ என்கிறார்” என்றான்.
15 எனவே அந்தப் பெண் வீட்டிற்குத் திரும்பிச் சென்று எலியா சொன்னது போல் செய்தாள். எலியாவிற்கும் அந்தப் பெண்ணிற்கும் அவள் மகனுக்கும் பல நாட்களுக்குப் போதுமான உணவு இருந்தது. 16 அவளது ஜாடியும் பானையும் காலியாகாமல் இருந்தன. கர்த்தர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. கர்த்தர் எலியாவின் மூலம் பேசினார்.
17 கொஞ்ச நாள் ஆனதும் அப்பெண்ணின் மகன் அதிகமாக நோய்வாய்ப்பட்டான். இறுதியில் சுவாசிப்பதை நிறுத்தினான். 18 அப்பெண் எலியாவிடம், “நீர் ஒரு தீர்க்கதரிசி. எனக்கு உதவுவீரா. நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? என் பாவங்களை நினைவூட்டவும் என் மகனைக் கொல்லுவதற்குமா வந்தீர்கள்?” என்று கேட்டாள்.
19 எலியா அவளிடம், “உன் மகனை என்னிடம் கொடு” என்றான். பின் அவனைத் தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குப் படிவழியே ஏறிப்போனான். தனது அறையிலுள்ள படுக்கையில் அவனைக் கிடத்தினான். 20 பிறகு எலியா, “எனது தேவனாகிய கர்த்தாவே, இந்த விதவை எனக்குத் தங்க இடம் தந்தாள். அவளுக்கு இத்தீமையைச் செய்யலாமா? மகன் மரிக்க காரணம் ஆகலாமா?” 21 பின் அவன் மீது மூன்று முறை குப்புற விழுந்து, “எனது தேவனாகிய கர்த்தாவே! இவனை மீண்டும் பிழைக்கச் செய்வீராக!” என்றான்.
22 எலியாவின் வேண்டுதலுக்குக் கர்த்தர் பதிலளித்தார். அப்பையன் மீண்டும் உயிர் பிழைத்தான்! 23 எலியா அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “இதோ பார் உன் மகன் உயிரோடு இருக்கிறான்!” என்று கூறினான்.
24 அந்தப் பெண், “நீங்கள் உண்மையில் தேவனுடைய மனிதர் என்று நான் இப்போது அறிகிறேன். கர்த்தர் உங்கள் மூலமாக உண்மையில் பேசுகிறார்” என்றாள்.
எலியாவும் பாகாலின் தீர்க்கதரிசிகளும்
18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், மழை பெய்யவில்லை. கர்த்தர் எலியாவிடம், “போய் ஆகாப் அரசனைப் பார். நான் மழையை அனுப்புவேன்” என்றார். 2 எனவே எலியா ஆகாப்பை சந்திக்கச் சென்றான்.
அப்போது, சமாரியாவில் உணவே இல்லை. 3 எனவே அரசன் அரண்மனை விசாரிப்புக்காரனான ஒபதியாவைத் தன்னிடம் வரவழைத்தான். (காரணம் ஒபதியா உண்மையான கர்த்தருடைய ஊழியன். 4 ஒருமுறை யேசபேல் கர்த்தருடைய எல்லா தீர்க்கதரிசிகளையும் கொன்றாள். எனவே ஒபதியா 100 தீர்க்கதரிசிகளை 2 குகைகளில் ஒளித்து வைத்தான். ஒவ்வொன்றிலும் 50 பேரை வைத்தான். அவர்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்தான்.) 5 அரசன் ஒபதியாவிடம், “இந்த நாட்டின் வழியாக என்னைப் போகவிடு. நாம் இங்குள்ள ஒவ்வொரு ஊற்றையும் ஆற்றையும் பார்ப்போம். நமது குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் புல் கிடைக்குமா என்று பார்ப்போம். கிடைத்தால் இந்த மிருகங்களைக் கொல்ல வேண்டாம்” என்றான். 6 நாட்டைப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பகுதிக்குத் தேடிப் போனார்கள். இருவரும் நாடு முழுக்கப் போனார்கள். ஆகாப் ஒரு திசையிலும் ஒபதியா இன்னொரு திசையிலும் போனார்கள். 7 ஒபதியா, எலியாவை சந்தித்தான். எலியாவைப் பணிந்து வணங்கினான். அவன், “எலியா? எஜமானரே! உண்மையில் நீங்கள் தானா?” என்று கேட்டான்.
8 அதற்கு எலியா, “ஆமாம்! நான்தான். நான் இங்கே இருப்பதாக உன் அரசனிடம் கூறு” என்றான்.
9 பிறகு ஒபதியா, “நீர் இங்கே இருப்பதைப் பற்றி நான் அரசனிடம் சொன்னால், அவர் என்னை கொல்வார்! நான் உங்களுக்கு எந்தத் தவறும் செய்யவில்லையே! ஏன் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்? 10 தேவனாகிய கர்த்தர் மீது ஆணையாகக் கூறுகிறேன். அரசன் உங்களை எல்லா இடங்களிலும் தேடினான்! எல்லா நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினான். ஒவ்வொரு நாட்டு அரசனிடம் நீர் அங்கே இல்லையென்று சத்தியம் செய்யும்படி செய்தான்! 11 நான் அரசனிடம் போய், நீங்கள் இங்கிருப்பதைச் சொன்னால் 12 பிறகு, கர்த்தருடைய ஆவி உங்களை இங்கிருந்து வேறு இடத்துக்குத் தூக்கிச் செல்லும். பிறகு, அரசன் உங்களைக் காணாமல் என்னைக் கொல்வான்! நான் சிறுவயது முதலே கர்த்தரைப் பின்பற்றி வருகிறேன். 13 நான் செய்ததை நீங்கள் அறிவீர்! யேசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றபோது நான் 100 தீர்க்கதரிசிகளை அழைத்துப் போய் 50 பேர் வீதம் இரண்டு குகைகளில் ஒளித்து வைத்தேன். உணவு கொடுத்து காப்பாற்றினேன். 14 இப்போது நீர் இங்கிருப்பதாக அரசனிடம் சொல்ல சொல்கிறீர். அவன் என்னைக் கொன்றுவிடுவான்!” என்றான்.
15 எலியாவோ, “சர்வவல்லமையுள்ள கர்த்தர் உறுதியாக வாழ்வதுபோல, நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று நான் அரசன் முன்பு நிற்பேன்” என்றான்.
16 எனவே ஒபதியா அரசனிடம் போய் எலியா இருக்கும் இடம்பற்றி கூறினான். அரசனும் எலியாவைப் பார்க்க வந்தான்.
17 அரசன் எலியாவைப் பார்த்ததும், “இது நீர்தானா? நீர்தான் இஸ்ரவேலில் எல்லா கஷ்டங்களுக்கும் காரணமானவரா?” என்று கேட்டான்.
18 அதற்கு எலியா, “இஸ்ரவேலின் துன்பத்திற்கு நான் காரணம் அல்ல. நீயும் உன் தந்தையின் குடும்பமும்தான் காரணம், நீங்கள் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. பொய்தெய்வங்களை பின்பற்றினீர்கள். 19 இப்போது, அனைத்து இஸ்ரவேலர்களும் என்னை கர்மேல் மலையில் சந்திக்கும்படி கூறுங்கள். பாகாலின் 450 தீர்க்கதரிசிகளும் வரட்டும். ஆஷரா பொய்த்தேவதை அரசியின் ஆதரவு பெற்ற 400 தீர்க்கதரிசிகளும் வரட்டும். இந்த தீர்க்கதரிசிகள் அரசி யேசபேலின் உதவிபெற்றவர்கள்” என்றான்.
20 எனவே ஆகாப் அனைத்து இஸ்ரவேலர்களையும் தீர்க்கதரிசிகளையும் கர்மேல் மலைக்கு வரவழைத்தான். 21 எலியா அங்கு வந்து, “யாரை பின்பற்றுவது என்று எப்பொழுது முடிவு செய்வீர்கள்? கர்த்தர் உண்மையான தேவன் என்றால், அவரைப் பின்பற்றவேண்டும். பாகால்தான் உண்மையான தேவன் என்றால், அவனைப் பின்பற்றவேண்டும்!” என்றான்.
ஜனங்கள் எதுவும் கூறவில்லை. 22 எனவே எலியா, “நான் இங்கு கர்த்தருடைய ஒரே தீர்க்கதரிசி. நான் தனியாக இருக்கிறேன். ஆனால் பாகாலுக்கு 450 தீர்க்கதரிசிகள் உள்ளனர். 23 எனவே இரண்டு காளைகளைக் கொண்டு வாருங்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு காளையை எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் அதை கொன்று துண்டு துண்டாக வெட்டி விறகின்மேல் வைக்கட்டும். ஆனால் அதை எரிக்க வேண்டாம், பிறகு மற்ற காளையை நான் அப்படியே செய்வேன். நான் நெருப்பு எரிக்கத் தொடங்கமாட்டேன். 24 பாகால் தீர்க்கதரிசிகளே, நீங்கள் உங்கள் தெய்வத்தை நோக்கி ஜெபியுங்கள். நான் என் கர்த்தரை நோக்கி ஜெபிப்பேன். அந்த ஜெபத்திற்கு செவிசாய்த்து விறகுகளைத்தானாக எரிய வைக்கிறவரே உண்மையான தேவன்” என்றான்.
இது நல்ல திட்டம் என அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
25 எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் நிறையபேர் இருக்கிறீர்கள். முதலில் போய் ஒரு காளையைத் தேர்ந்தெடுங்கள். அதைத் தயார் செய்து உங்கள் தெய்வத்தை வேண்டுங்கள். ஆனால் நெருப்பிடவேண்டாம்” என்றான்.
26 அவர்களும் அவ்வாறே செய்தனர். மதியம்வரை, பாகாலிடம் ஜெபித்தனர். “பாகால் எங்களுக்கு பதில் கூறும்!” என்றனர். சத்தமில்லை. யாரும் பதில் சொல்லவில்லை. அவர்கள் பலிபீடத்தைச் சுற்றி ஆடினார்கள். நெருப்பு பற்றவில்லை.
27 எலியா மத்தியானத்தில் அவர்களைக் கேலிச் செய்தான், “உண்மையில் பாகால் தெய்வமானால் சத்தமாக ஜெபியுங்கள்! அவர் ஒருவேளை தியானத்தில் இருப்பார்! அல்லது வேறு வேலையில் இருப்பார்! அல்லது எங்காவது போயிருப்பார்! அல்லது தூங்கியிருப்பார்! எழுப்புங்கள்!” என்று கூறினான். 28 அவர்களும் சத்தமாக ஜெபித்தார்கள். அவர்கள் தங்களை வாளாலும் ஈட்டியாலும் காயப்படுத்திகொண்டனர். இது ஒருவகையான தொழுதுகொள்ளுதல். இரத்தம் கொட்டும்வரை இவ்வாறு செய்தனர். 29 மதியமும் போனது. நெருப்பு பற்றவில்லை. மாலைவரை வேண்டுதல்செய்தனர். எதுவும் நடக்கவில்லை. பாகாலிடமிருந்து பதிலும் வரவில்லை. எந்த ஓசையும் இல்லை. யாரும் கவனிக்கவில்லை!
30 இப்போது எலியா ஜனங்களிடம், “இப்போது என்னிடம் வாருங்கள்” என்று கூப்பிட ஜனங்கள் அவனைச் சுற்றிக் கூடினார்கள். உடைந்த கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டான். 31 எலியா அதில் 12 கற்களைக் கோத்திரங்களுக்கு ஒன்று வீதமாகக் கண்டுபிடித்தான். இது யாக்கோபின் 12 மகன்களைக் குறிக்கும். கர்த்தரால் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டவராக யாக்கோபு இருந்தார். 32 எலியா பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதைச்சுற்றிலும் குழி அமைத்தான். 7 கலன் தண்ணீர் பிடிக்குமாறு அக்குழி இருந்தது. 33 பின் பலிபீடத்தில் விறகை வைத்து, காளையைத் துண்டுகளாக்கி மேலே வைத்தான். 34 எலியா, “ஏழு ஜாடிகளில் தண்ணீரை நிரப்பச்சொன்னான். அதனை, விறகின் மேலுள்ள மாமிசத்துண்டில் ஊற்றுங்கள்” என்று சொன்னான். அவன், “மீண்டும் செய்க” என்றான். பிறகு அவன், “மூன்றாவது முறையும் அப்படியே செய்யுங்கள்” என்று சொன்னான். 35 அந்த தண்ணீர் வடிந்து பலி பீடத்தைச் சுற்றிய குழியில் நிரம்பியது.
36 இது மாலை பலிக்கான நேரம். எனவே பலிபீடத்தின் அருகில் எலியா சென்று, ஜெபம் செய்தான். “கர்த்தாவே, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் தேவனே, நீர்தான் இஸ்ரவேலின் தேவன் என்பதை நிரூபியும் என்று நான் இப்போது உம்மைக் கேட்கிறேன். நான் உம்முடைய ஊழியன் என்பதையும் நிரூபியும், நீர்தான் இவற்றை செய்ய கட்டளையிட்டுள்ளீர் என்பதைக் காட்டும். 37 கர்த்தாவே! என் ஜெபத்திற்கு பதில் சொல்லும். பிறகு அவர்கள் கர்த்தாவே நீர்தான் தேவன், என்று அறிவார்கள். நீர் அவர்களது இதயங்களை மீண்டும் திருப்பிக்கொண்டிருக்கிறீர்” என்றான்.
38 எனவே கர்த்தர் நெருப்பை அனுப்பினார். மாமிசம், விறகு, பலிபீடம், பலீபீடத்தைச் சுற்றிய இடமும் பற்றி எரிந்தது. தண்ணீரும் வற்றியது. 39 அனைவரும் இதனைப் பார்த்து, தரையில் விழுந்து வணங்கி, “கர்த்தரே தேவன், கர்த்தரே தேவன்” என்றனர்.
40 பிறகு எலியா, “பாகாலின் தீர்க்கதரிசிகளைத் தப்பிவிடாதபடி பிடியுங்கள்!” என்றான். ஜனங்கள் அவர்களைப் பிடித்தனர். அவர்கள் அனைவரையும் கீசோன் என்ற இடத்தில் கொன்றனர்.
மழை மீண்டும் வந்தது
41 எலியா ஆகாப் அரசனிடம், “போ, உணவு உண்ணும். மழை வரப்போகிறது” என்றான். 42 எனவே ஆகாப் உணவு உண்ணப்போனான். பிறகு, எலியா கர்மேல் மலையின் உச்சியில் ஏறி, குனிந்து தலையை முழங்கால்களுக்கு இடையில் வைத்து, 43 தன் வேலைக்காரனிடம், “கடலைப்பார்” என்றான்.
வேலைக்காரனும் சென்று கடலைப் பார்த்தான். திரும்பி வந்து, “எதையும் காணவில்லை” என்றான். எலியா அவனை மீண்டும் பார்க்கச்சொன்னான். இவ்வாறு ஏழு முறை சொல்ல, 44 ஏழாவது முறை வேலைக்காரன், “மனிதக் கை அளவில் சிறு மேகம் கடலிலிருந்து எழும்பி வருவதைப் பார்த்தேன்” என்றான்.
எலியா அவனிடம், “ஆகாப் அரசனிடம் போய்ச் சொல். உடனே இரதத்தில் ஏறி வீட்டிற்குப் போகச் சொல். இல்லாவிடில் மழைத்தடுத்துவிடும்” என்றான்.
45 சிறிது நேரத்தில், வானத்தில் கருமேகங்கள் கவிந்தன. காற்று வீசியது, பெருமழை பெய்தது. ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். 46 கர்த்தருடைய வல்லமை எலியாவிடம் வர, தன் ஆடையை இறுக்கக் கட்டிக்கொண்டு அரசனுக்கு முன்னால் யெஸ்ரயேல் வழி முழுவதும் ஓடினான்.
சீனாய் மலையில் எலியா
19 எலியா செய்ததை எல்லாம் ஆகாப் அரசன் தன் மனைவி யேசபேலுக்கு கூறினான். அவன் எவ்வாறு அனைத்து தீர்க்கதரிசிகளையும் வாளால் கொன்றான் என்றும் கூறினான். 2 எனவே அவள் எலியாவிடம் ஒரு தூதுவனை அனுப்பி, “நாளை இதே நேரத்திற்குள், நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போன்று உன்னைக்கொல்வேன். இல்லாவிட்டால் என்னைத் தெய்வங்கள் கொல்லட்டும்” என்று சொல்லச்செய்தாள்.
3 எலியா இதைக் கேட்டதும், பயந்தான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினான். தன்னோடு வேலைக்காரனையும் அழைத்துப்போனான். யூதாவிலுள்ள பெயெர்செபாவிற்குப் போய். அங்கே அவனை விட்டுவிட்டான். 4 பிறகு நாள் முழுவதும் பாலைவனத்தில் அலைந்தான். ஒரு புதரின் அருகில் உட்கார்ந்தான். “இது போதும், கர்த்தாவே! என்னை மரிக்கவிடும். என் முற்பிதாக்களைவிட நான் நல்லவன் அல்ல” என்று வேண்டினான்.
5 பிறகு அவன் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினான். ஒரு தேவதூதன் வந்து அவனைத் தொட்டான். “எழுந்திரு, சாப்பிடு!” என்றான். 6 எலியா தன்னருகில் தழலில் சுடப்பட்ட அடையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருப்பதைப் பார்த்தான். அவன் உண்டு குடித்து திரும்பத் தூங்கப்போனான்.
7 மீண்டும் தேவதூதன் வந்து, “எழுந்திரு! சாப்பிடு! இல்லாவிட்டால், நீண்ட பயணம் செய்யமுடியாது” என்றான். 8 எனவே எலியா எழுந்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தான். 40 நாட்கள் இரவும் பகலும் நடப்பதற்கான பெலத்தை அது கொடுத்தது. அவன் தேவனுடைய மலையான ஓரேப்புக்குச் சென்றான். 9 அங்கு ஒரு குகையில் இரவில் தங்கினான்.
அப்போது கர்த்தர், “இங்கே ஏன் இருக்கிறாய்?” என்று எலியாவிடம் பேசினார்.
10 அதற்கு எலியா, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, நான் எப்போதும் உமக்கு ஊழியம் செய்திருக்கிறேன். நான் எப்பொழுதும் என்னால் முடிந்தஅளவு சிறப்பாக சேவை செய்திருக்கிறேன். ஆனால் இஸ்ரவேலர்கள் தம் உடன்படிக்கையை முறித்துவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை அழித்தனர். உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். இப்பொழுது ஒரே தீர்க்கதரிசியான என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்!” என்று முறையிட்டான்.
11 கர்த்தர் எலியாவிடம், “எனக்கு முன்னால் மலையின் மேல் நில் அப்பொழுது நான் உன்னை கடந்து செல்வேன்” என்றார். பிறகு ஒரு பலமான காற்று அடித்தது. அது மலைகளை உடைப்பதுபோல் இருந்தது. ஆனால் அது கர்த்தர் அல்ல! பிறகு நில அதிர்ச்சி உண்டாயிற்று. அதுவும் கர்த்தர் அல்ல! 12 அதற்குப்பின், நெருப்பு உருவானது. அதுவும் கர்த்தர் அல்ல. நெருப்புக்குப்பின், அமைதியான மென்மையான சத்தம் வந்தது.
13 எலியா அந்தச் சத்தத்தைக் கேட்டதும் தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டான். குகையின் வாசலுக்கு வந்து நின்றான். பிறகு அந்தச் சத்தம் அவனிடம், “எலியா, ஏன் இங்கிருக்கிறாய்?” என்று கேட்டது.
14 எலியாவோ, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என்னால் முடிந்தவரை உமக்கு எப்போதும் சேவை செய்து வருகிறேன். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது உடன்படிக்கையில் இருந்து நழுவி மீறிவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை உடைத்தனர். அவர்கள் உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். நான் மட்டுமே ஒரே தீர்க்கதரிசியாக உயிரோடு இருக்கிறேன். இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்” என்றான்.
15 கர்த்தர், “சாலைக்குப் போ, அது தமஸ்குவிற்கு போகும். அங்குப்போய் ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம் செய், 16 பிறகு, இஸ்ரவேலின் அரசனாக நிம்சியின் மகனான யெகூவை அபிஷேகம் செய். பிறகு, ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் மகன் எலிசாவை உனது இடத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் செய். 17 ஆசகேல் பல தீயவர்களைக் கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை யெகூ கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை எலிசா கொன்றுவிடுவான். 18 எலியா, நீ மட்டும் இஸ்ரவேலில் உண்மையானவன் என்றில்லை. இன்னும் பலர் இருக்கிறார்கள். நான் 7,000 பேரின் உயிரை மீதியாக வைப்பேன். 7,000 இஸ்ரவேலர் பாகாலை வணங்காதவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் பாகாலின் விக்கிரகத்தை முத்தமிடுவதில்லை” என்றார்.
எலிசா தீர்க்கதரிசியாகிறான்
19 எலியா அந்த இடத்தை விட்டுப்போய் சாப்பாத்தின் மகனான எலிசாவைக் கண்டு பிடித்தான். எலிசா 12 ஏக்கர் நிலத்தை உழுதுக்கொண்டிருந்தான். எலியா போகும்போது அவன் உழவை முடிக்கிற நிலையில் இருந்தான். பிறகு எலியா அவனிடம் சென்று, அவன் மீது தன் போர்வையை எறிந்தான். 20 உடனே அவன் தன் மாடுகளை விட்டு விட்டு, எலியாவின் பின்னால் போனான். எலிசா, “நான் என் தந்தையிடமும் தாயிடமும் முத்தமிட்டு விடைபெற்று வரட்டுமா?” எனக் கேட்டான். எலியாவோ, “நல்லது போ, என்னால் அதைத் தடுக்க முடியாது” என்றான்.
21 எலிசா தன் குடும்பத்துடன் சிறப்பான உணவை உண்டான். எலிசா தன் பசுக்களைக் கொன்றான். நுகத்தடியை ஒடித்து விறகாக்கினான். பிறகு இறைச்சியை சமைத்து அனைவருக்கும் உண்ண உணவளித்தான். பின்னர் அவன் எலியாவிற்குப் பின்னால் போய் அவனுக்கு சேவைசெய்தான்.
பெனாதாத்தும் ஆகாபும் போரிடல்
20 பெனாதாத் ஆராமின் அரசன். அவன் தனது படையைத் திரட்டி 32 அரசர்களோடும் குதிரைகளோடும் இரதங்களோடும் சமாரியாவைத் தாக்கி முற்றுகையிட்டான். 2 அவன் இஸ்ரவேலின் அரசனான ஆகாபுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவனுடைய செய்தி கீழ்க்கண்டவாறு இருந்தது. 3 “உனது வெள்ளியையும் பொன்னையும் எனக்குக் கொடுக்கவேண்டும். உனது தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியரையும் குழந்தைகளையும் எனக்குக் கொடுக்கவேண்டும்.”
4 இஸ்ரவேலரின் அரசனோ, “என் எஜமானனாகிய அரசனே, இப்போது நான் உமக்குரியவன் என்னைச் சார்ந்த அனைத்தும் உமக்கு உரியது ஆகும்” என்றான்.
5 மீண்டும் தூதுவர்கள் ஆகாபிடம் வந்தனர். “நாங்கள் அரசனிடம் நீங்கள் சொன்னவற்றைக் கூறினோம். பெனாதாத், ‘ஏற்கெனவே உங்கள் வெள்ளி, பொன், மனைவி ஜனங்கள் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தேன். 6 நாளை என் ஆட்களை அனுப்புவேன். அவர்கள் உங்கள் வீடுகளுக்கும் அதிகாரிகளின் வீடுகளுக்கும் வருவார்கள். உங்களது மதிப்பிற்குரிய பொருட்களைக் கொடுத்துவிட வேண்டும்’ என்றான்” என்றனர்.
7 எனவே ஆகாப் தன் நாட்டிலுள்ள மூப்பர்களை அழைத்து ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் போட்டான். அவன், “பாருங்கள், பெனாதாத் தொல்லை தர வந்துள்ளான். முதலில் அவன் எனது வெள்ளி, பொன், மனைவி, ஜனங்கள் அனைத்தையும் கேட்டான். நான் அவற்றைக் கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அவன் எல்லாவற்றையும் விரும்புகிறான். நாம் என்ன செய்யலாம்” என ஆலோசித்தான்.
8 ஆனால் மூப்பர்களும் மற்றவர்களும், “அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் சொன்னபடி செய்ய வேண்டாம்” என்றனர்.
9 எனவே ஆகாப் பெனாதாத்துக்குத் தூதுவனை அனுப்பி, “நான் உனது முதல் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் இரண்டாவது கட்டளைக்குக் கீழ்ப்படியமாட்டேன்” என்றான்.
பெனாதாத் செய்தியை அறிந்துக்கொண்டான். 10 அவனது ஒரு தூதுவனை அனுப்பி, “நான் சமாரியா முழுவதையும் அழிக்கப்போகிறேன். நகரத்தில் எதுவும் மீதியாகாது. எனது ஆட்கள் எடுத்துக்கொள்ள எதுவும் இருக்காது! இவ்வாறு நான் செய்யாவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!” என்றான்.
11 அதற்கு ஆகாப், “பெனாதாத்திடம் சொல். ஆயுதம் அணிந்திருப்பவன் ஆயுதத்தை உரிந்து போடுபவனைப் போன்று பெருமைபடக்கூடாது” என்று சொல்லி அனுப்பினான்.
12 கூடாரத்தில் பெனாதாத் மற்றவர்களோடு குடித்துக்கொண்டிருந்தான். அப்போது தூதுவர்கள் ஆகாபின் செய்தியைச் சொல்ல, சமாரியாவைத் தாக்கும்படி ஆணையிட்டான். படைகளும் நகர்ந்தன.
13 அப்போது, ஆகாபிடம் ஒரு தீர்க்கதரிசி வந்து, “அரசனே, அந்த பெரும்படையைப் பார். நானே கர்த்தர், என்று நீ அறியும்படி நான் அப்படையை உன் மூலம் தோற்கடிப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார்.
14 அதற்கு ஆகாப், “யார் மூலம்?” என்று கேட்டான்.
அதற்கு அத்தீர்க்கதரிசி, “அரசாங்க அதிகாரிகளின் ‘இளம் உதவியாளர்கள் மூலம்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
மேலும் அரசன், “போரை யார் துவக்க வேண்டும்?” என்று கேட்க,
தீர்க்கதரிசி, “நீ தான்” என்று பதில் சொன்னான்.
15 எனவே ஆகாப் அரசாங்க அதிகாரிகளின் இளம் உதவியாளர்களில் 232 பேரைச் சேர்த்தான். இதனோடு இஸ்ரவேல் படையின் எண்ணிக்கை 7,000 ஆயிற்று.
16 நடுமத்தியான வேளையில் அரசனான பெனாதாத்தும் அவனது உதவிக்கு வந்த 32 அரசர்களும் குடித்துக்கொண்டு தம் கூடாரத்தில் மயங்கிக்கிடந்தார்கள். அப்போது, ஆகாப் அவர்களைத் தாக்கினான். 17 முதலில் இளம் உதவியாளர்கள் தாக்கினர். பெனாதாத்தின் ஆட்கள் அரசனிடம் சென்று இவர்கள் சமாரியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். 18 அதற்கு அவன், “அவர்கள் போரிட வந்திருக்கலாம். அல்லது சமாதானத்திற்கு வந்திருக்கலாம் அவர்களை உயிரோடு பிடியுங்கள்” என்றான்.
19 ஆகாபின் இளைஞர்கள் தீவிரமாகத் தாக்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து இஸ்ரவேலின் படை சென்றது. 20 எதிரே வருபவர்களைக் கொன்றனர். சீரியாவிலிருந்து வந்தவர்கள் ஓட ஆரம்பித்தனர். இஸ்ரவேல் படை அவர்களை விரட்டியது. பெனாதாத் இரதத்தில் ஏறி தப்பித்து ஓடினான். 21 ஆகாப் அரசன் படையோடு போய் சீரியா நாட்டு குதிரைகளையும் இரதங்களையும் கைப்பற்றிக் கொண்டான். சீரியாவின் படையின் மீது ஆகாப் பெருவெற்றியை பெற்றான்.
22 பிறகு தீர்க்கதரிசி, ஆகாபிடம் போய், “சீரியாவின் அரசனான பெனாதாத் மீண்டும், அடுத்த ஆண்டு போரிட வருவான். எனவே உங்கள் படையைப் பலப்படுத்துங்கள். அவனிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ள கவனமாக திட்டங்களைச் செய்யுங்கள்” என்றான்.
பெனாதாத் மீண்டும் தாக்கினான்
23 பெனாதாத்தின் அதிகாரிகள், “இஸ்ரவேலின் தெய்வங்கள் மலைத் தெய்வங்களாக உள்ளனர். அதனால் வென்றுவிட்டனர். எனவே நாம் சமவெளியில் போர்செய்யவேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்! 24 இனிமேல் செய்ய வேண்டியது இதுதான். 32 அரசர்களும் கட்டளையிடும்படி அனுமதிக்காதே. ஒவ்வொரு தளபதியும் தம் படைகளை நடத்தட்டும். 25 இப்போது நீ அழிக்கப்பட்ட ஒரு படையை கூட்ட வேண்டும். இரதங்களையும் குதிரைகளையும் சேர்க்க வேண்டும். சமவெளியில் சண்டையிட வேண்டும். பிறகு வெல்வோம்” என்றனர். அவர்கள் சொன்னபடியே பெனாதாத்தும் செய்தான்.
26 அடுத்த ஆண்டில், அவன் ஆப்பெக்குக்கு இஸ்ரவேலரோடு சண்டையிடச் சென்றான்.
27 இஸ்ரவேலரும் போருக்குத் தயாராக இருந்தனர். அவர்கள் சீரியாவுக்கு எதிராக முகாம்கள் அமைத்தனர். சீரியா படையோடு ஒப்பிடும்போது, இவர்கள் படை சிறிய ஆட்டு மந்தையைப்போல் இருந்தனர். ஆனால் சீரியா, வீரர்கள் முழு பகுதியையும் சூழ்ந்தனர்.
28 இஸ்ரவேல் அரசனிடம் தேவமனிதன் ஒருவன் கீழ்க்கண்ட செய்திகளோடு வந்தான். கர்த்தர் சொன்னார், “‘கர்த்தராகிய நான் மலைகளின் தேவன் என்று ஆராமியர் சொன்னார்கள். சமவெளிப் பிரதேசங்களுக்கு நான் தேவன் அல்ல’ என்று அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்த பெரும் படையைத் தோற்கடிக்க உன்னை அனுமதிக்கிறேன். பிறகு நீங்கள் அனைவரும் எல்லா இடங்களுக்கும் நானே கர்த்தர் என்பதை உணர்வீர்கள்.”
29 படைகள் ஒன்றுக்கொன்று எதிராக ஏழு நாட்கள் முகாமிட்டிருந்தன. ஏழாவது நாள் போர் தொடங்கியது, ஒரே நாளில் 1,00,000 பேரை இஸ்ரவேலர்கள் கொன்றனர். 30 பிழைத்தவர்கள் ஆப்பெக் நகருக்குள் ஓடிப் போனார்கள். மீதியுள்ள 27,000 பேர் மீது சுவரிடிந்து விழுந்தது. பெனாதாத்தும் ஓடிப்போனான். ஒரு அறைக்குள் ஒளிந்துக்கொண்டான். 31 அவனிடம் அவனது வேலைக்காரர்கள், “இஸ்ரவேல் மன்னர்கள் இரக்கமுள்ளவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாங்கள் இரட்டுகளை இடுப்பிலும் கயிறுகளைத் தலையிலும் கட்டி அவர்களிடம் போய் கெஞ்சினால் உம்மை உயிரோடுவிடுவர்” என்றனர்.
32 பின் அவ்வாறே போய் இஸ்ரவேல் அரசனை சந்தித்தனர். “உங்கள் அடிமையான பெனாதாத் ‘எங்களை உயிரோடு விடுங்கள்’ என்று வேண்டுகிறார்” என்றனர்.
அதற்கு ஆகாப், “அவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா? அவன் என் சகோதரன்” என்றான். 33 அவர்கள், பெனாதாத்தைக் கொல்லாமல் இருக்க வாக்குறுதிகளைக் கேட்டனர். ஆகாப் பெனாதாத்தைச் சகோதரன் என அழைத்ததும் அவனது ஆலோசகர்களும், “ஆமாம், அவன் உன் சகோதரன்” என்றனர்.
ஆகாப், “என்னிடம் அவனைக் கொண்டு வா” என்றான். எனவே பெனாதாத் அரசனிடம் வந்தான். ஆகாப் அரசன் அவனிடம், அவனோடு இரதத்தில் ஏறுமாறு சொன்னான்.
34 பெனாதாத்தோ, “ஆகாப், என் தந்தை எடுத்துக்கொண்ட உங்கள் நகரங்களைத் திரும்பத்தருவேன். நீங்கள் தமஸ்குவிலே, கடை வீதிகளை என் தந்தை சமாரியாவில் செய்ததுபோன்று வைத்துக்கொள்ளலாம்” என்றான்.
ஆகாபோ, “இதற்கு நீ அனுமதித்தால், நான் உன்னை விட்டுவிடுவேன்” என்றான். இவ்வாறு இருவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். பெனாதாத் விடுதலை பெற்றான்.
ஆகாபுக்கு எதிராகத் தீர்க்கதரிசி பேசியது
35 ஒரு தீர்க்கதரிசி இன்னொருவனிடம், “என்னைத் தாக்கு!” என்றான். ஏனென்றால் கர்த்தருடைய கட்டளை என்றான். அவனோ தாக்கவில்லை. 36 அதற்கு அவன், “நீ கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே உன்னை ஒரு சிங்கம் கொல்லும்” என்றான். அவ்வாறே அவன் அந்த இடத்தை விட்டுப்போனதும் சிங்கம் அவனைக் கொன்றது.
37 அந்த தீர்க்கதரிசி இன்னொருவனிடம் போய், “என்னைத் தாக்கு” என்றான்.
அதற்கு அவன் தாக்கி காயப்படுத்தினான். 38 எனவே, அந்த தீர்க்கதரிசி தன் முகத்திலே சாம்பலைப்போட்டு வேஷம்மாறி அரசனுக்காக வழியில் காத்திருந்தான். 39 அரசன் வந்ததும் அவனிடம், “நான் போரிட சென்றேன். நம்மில் ஒரு மனிதன் பகை வீரனை அழைத்து வந்தான். அவன், ‘இந்த மனிதனைப் பாதுகாப்பாக வைத்திரு. இவன் தப்பினால் இவனுக்காக உன் உயிரைக் கொடுக்கவேண்டும் அல்லது அபராதமாக 75 பவுண்டுகளைத் தரவேண்டும்’ என்றான். 40 நான் வேறு வேலைகளில் இருந்தபோது அவன் தப்பித்துவிட்டான்” என முறையிட்டான்.
அதற்கு இஸ்ரவேல் அரசன், “நீ ஒரு வீரனை தப்பவிட்டதற்கான குற்றவாளி ஆகிறாய். எனவே அவன் சொன்னபடிசெய்” என்றான்.
41 பிறகு அவன் தன் முகத்தில் உள்ள துணியை விலக்கவே, அரசனுக்கு அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்பது தெரிந்தது. 42 தீர்க்கதரிசி அரசனிடம், “கர்த்தர் உம்மிடம், ‘நான் உன்னிடம், மரிக்க வேண்டும் என்று சொன்னவனை விடுதலைச் செய்தாய். எனவே நீ அவனது இடத்தை அடுத்து நீ மரிப்பாய்! உனது ஜனங்கள் அவர்களின் பகைவர்களது இடத்தை எடுப்பார்கள். உன் ஜனங்களும் மரிப்பார்கள்!’ என்று சொல்லச்சொன்னார்” என்றான்.
43 இதனால் சலிப்பும் துக்கமும் அடைந்து அரசன் சமாரியாவிற்கு திரும்பினான்.
நாபோத்தின் திராட்சை தோட்டம்
21 சமாரியாவில் ஆகாப்பின் அரண்மனை இருந்தது. அதனருகில் ஒரு திராட்சை தோட்டமும் இருந்தது. அதன் உரிமையாளன் யெஸ்ரயேலியனாகிய நாபோத். 2 ஒரு நாள் அரசன் அவனிடம், “உனது வயலை எனக்குக்கொடு. அதனைக் காய்கறி தோட்டமாக்க வேண்டும். இது என் அரண்மனைக்கருகில் உள்ளது. உனக்கு அந்த இடத்தில் வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன் அல்லது நீ விரும்பினால் பணம் தருவேன்” என்றான்.
3 அதற்கு நாபோத், “நான் தரமாட்டேன். இது என் குடும்பத்திற்கு உரியது” என்றான்.
4 எனவே ஆகாப் அரண்மனைக்குப்போய் நாபோத் மீது கோபம் கொண்டான். அவன் சொன்னதை அரசன் விரும்பவில்லை. நாபோத், “என் குடும்பத் தோட்டத்தைத் தரமாட்டேன்” எனக்கூறியது எரிச்சலைத் தந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு உண்ண மறுத்தான்.
5 ஆகாபின் மனைவி யேசபேல் அவனிடம், “ஏன் நீங்கள் குலைந்து போனீர்கள்? ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
6 அதற்கு அவன், “நான் நாபோத்திடம் திராட்சைத் தோட்டத்தைக் கேட்டேன். அதற்குரிய முழு விலையோ, அல்லது வேறு வயலோ தருவதாகச் சொன்னேன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்” என்றான்.
7 அவளோ, “நீங்கள் இஸ்ரவேலின் அரசன்! எழுந்திருங்கள். சாப்பிடுங்கள். நான் அந்த வயலை வாங்கித்தருவேன்” என்றாள்.
8 பிறகு அவள் சில கடிதங்களை எழுதி அரசனின் கையெழுத்திட்டு முத்திரையும் அடித்தாள். பின் அவற்றை மூப்பர்களிடமும் நாபோத்தைப்போன்று அதே பட்டணத்தில் இருந்த முக்கிய மனிதர்களிடமும் அனுப்பினாள். 9 அக்கடிதத்தில்,
“நீங்கள் உபவாசம் பற்றி அறிவியுங்கள். பின் அனைவரையும் அழையுங்கள். அதில் நாபோத்தைப்பற்றி பேச வேண்டும். 10 அவன் மீது பொய்க்குற்றம் சாட்ட இரண்டு ஏமாற்றுக்காரர்கள் வேண்டும். அவன் அரசனுக்கும் தேவனுக்கும் எதிராகப் பேசினான் என்று கூறவேண்டும். பின் அவனை ஊருக்கு வெளியே கல்லெறிந்த கொல்லவேண்டும்” என்று எழுதியிருந்தது.
11 எனவே, மூப்பர்களும் முக்கியமானவர்களும் இக்கட்டளைக்கு அடிபணிந்தனர். 12 தலைவர்கள் உண்ணாநோன்பு நாளை அறிவித்தனர். அன்று ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர். நாபோத்தைத் தனியாக நிறுத்தினர். 13 பின் இரு ஏமாற்றுக்காரர்கள் ஜனங்களிடம் நாபோத் தேவனுக்கு எதிராகவும் அரசனுக்கு எதிராகவும் பேசினான் என்றனர். எனவே, அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றனர். 14 அவர்கள் பிறகு யேசபேலுக்கு, “நாபோத் கொல்லப்பட்டான்” என்ற செய்தியை அனுப்பி வைத்தனர்.
15 அவள் இதனை அறிந்ததும் ஆகாபிடம், “நாபோத் மரித்துப்போனான். இப்போது உங்களுக்கு விருப்பமான தோட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். 16 அவனும் அதனைச் சொந்தமாக்கிக் கொண்டான்.
17 அப்போது திஸ்பியனாவின் தீர்க்கதரிசி எலியாவிடம் கர்த்தர், 18 “அரசனிடம் போ, அவன் நாபோத்தின் வயலில் உள்ளான். சொந்தமாக்கப் போகிறான். 19 அவனிடம், ‘ஆகாப்! நீ நாபோத்தைக் கொன்றாய், அவனது வயலை எடுக்கப்போகிறாய். நாபோத் மரித்த இடத்திலேயே நீயும் மரிப்பாய். நாபோத்தின் இரத்தத்தை நக்கிய நாய்கள் உனது இரத்தத்தையும் நக்கும்’ என்று நான் சொன்னதாகச் சொல்”! என்றார்.
20 எனவே எலியா ஆகாபிடம் சென்றான். அரசனோ அவனிடம், “என்னை மீண்டும் பார்க்கிறாய். எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறாய்” என்றான்.
அதற்கு எலியா, “ஆமாம், நீ எப்போதும் உன் வாழ்வில் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய். 21 எனவே கர்த்தர், ‘நான் உன்னை அழிப்பேன். உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழிப்பேன். 22 உனது குடும்பமானது நேபாத்தின் மகனான அரசன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போன்று அழியும். பாஷாவின் குடும்பத்தைப்போல் அழியும். இந்த இரு குடும்பங்களும் முழுவதுமாக அழிந்துவிட்டன. நீ எனக்குக் கோபத்தைத் தந்ததால் நானும் அதுபோல் செய்வேன். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்யவும் காரணமானாய்’ என்றார். 23 கர்த்தர் மேலும், ‘நாய்கள் யெஸ்ரயேல் நகரில் உன் மனைவியின் உடலை உண்ணும். 24 உன் குடும்பத்திலுள்ள அனைவரும் செத்தபின் நாய்களால் உண்ணப்படுவார்கள். வயலில் மரிக்கும் யாவரும் பறவைகளால் உண்ணப்படுவார்கள்’ என்றார்” எனக்கூறினான்.
25 ஆகாபைப்போன்று இதுவரை எவரும் அதிகப் பாவங்களைச் செய்ததில்லை. அவனது பாவங்களுக்கு அவன் மனைவியும் ஒரு காரணமானாள். 26 அவன் மரவிக்கிரகங்களை தொழுதுகொண்டு பாவம் செய்தான். எமோரியர்களின் பாவங்களைப் போன்றவை இவை. எனவே கர்த்தர் அந்த நாட்டைப் பறித்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார்.
27 எலியா சொல்லிமுடித்ததும் ஆகாப் வருந்தி, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். வருத்தத்துக்கான ஆடைகளை அணிந்து சாப்பிட மறுத்தான். அப்படியே தூங்கினான்.
28 கர்த்தர் எலியாவிடம், 29 “நான் ஆகாப் திருந்திவிட்டதாக அறிகிறேன். எனவே, அவனுக்குத் துன்பம் தரமாட்டேன். ஆனால் அவனது மகனது வாழ் நாளில் துன்பங்களைத் தருவேன்” என்றார்.
மிகாயா ஆகாபை எச்சரித்தது
22 அடுத்த இரு ஆண்டுகளில், இஸ்ரவேலுக்கும் சீரியாவுக்கும் சமாதானம் நிலவியது. 2 மூன்றாம் ஆண்டில், யூதாவின் அரசனான யோசபாத் இஸ்ரவேலின் அரசனான ஆகாபைப் பார்க்கப் போனான்.
3 அப்போது, ஆகாப் அதிகாரிகளிடம், “சீரியாவின் அரசன் கீலேயாத்திலுள்ள ராமோத்தை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டான். அதைத் திரும்பப்பெற ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை? அது நமக்குச் சொந்தமாக வேண்டும்” என்றான். 4 எனவே யோசபாத்திடம், “நீ என்னோடு சேர்ந்து ராமோத்துக்காகப் போரிட வருகிறாயா?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “சரி, உன்னோடு சேர்ந்துகொள்கிறேன். எனது படை வீரர்களும் குதிரைகளும் உன் படையோடு சேர்ந்துகொள்ளத் தயார். 5 ஆனால் முதலில் கர்த்தரிடம் இதுபற்றி ஆலோசனை கேட்போம்” என்றான்.
6 எனவே ஆகாப் தீர்க்கதரிசிகளைக் கூட்டினான். அவர்கள் 400 பேர். அவர்களிடம், “நான் ராமோத்துக்காக சீரிய படையோடு போரிடப் போகலாமா? அல்லது காத்திருக்கலாமா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் “இப்போது போய் போர் செய்யும். கர்த்தர் வெற்றிப்பெறச் செய்வார்” என்றார்கள்.
7 யோசாபாத், “வேறு யாராவது தீர்க்கதரிசிகள் உண்டா? அவரிடமும், தேவனுடைய விருப்பத்தைக் கேட்போமே” என்றான்.
8 அதற்கு ஆகாப், “மற்றொரு தீர்க்கதரிசி இருக்கிறார். அவர் மூலம் கர்த்தருடைய ஆலோசனைகளைப் பெறலாம். அவரது பெயர் இம்லாவின் மகனான மிகாயா. எனக்கு எதிராகவே அவன் பேசுவதால் அவனை வெறுக்கிறேன். எப்போதும் எனக்கு விருப்பம் இல்லாததையே அவன் கூறுவான்” என்றான்.
யோசாபாத், “நீ அவ்வாறு சொல்லக்கூடாது!” என்றான்.
9 எனவே, ஆகாப் ஒரு அதிகாரியை அனுப்பி மிகாயாவை அழைத்து வரச்சொன்னான்.
10 அப்போது இரு அரசர்களும் அரச உடையோடு சிங்காசனத்தில் இருந்தனர். இது சமாரியா அருகில் உள்ள நியாய மன்றம். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு முன் நின்றுகொண்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தனர். 11 அவர்களில் ஒருவன் பெயர் சிதேக்கியா, இவன் கேனானாவின் மகன். அவன் இரும்பு கொம்புகளைச் செய்து, “இதனை நீங்கள் பயன்படுத்தி போரிடுங்கள். உங்களால் வெற்றிபெற முடியுமென்று கர்த்தர் சொன்னார்” என்று கூறினான். 12 மற்றவர்களும் இதனை ஒப்புக்கொண்டனர். “இப்பொழுதே, உங்கள் படை புறப்படவேண்டும். அது ராமோத்தில் சீரிய படையோடு போரிடும். கர்த்தர் வெற்றிபெறச்செய்வார்” என்றனர்.
13 இது நடைபெறும்போது, அதிகாரி மிகாயாவைக் கண்டுபிடித்து, “எல்லா தீர்க்கதரிசிகளும் இப்போது போருக்குப்போக வேண்டும் என்கின்றனர். நீயும், அவ்வாறே சொல்” என்றான்.
14 ஆனால் அவன், “முடியாது! கர்த்தர் சொல்லச் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன்!” என்றான்.
15 பிறகு அவன் அரசனிடம் வந்து நின்றான். அரசனும், “நானும் யோசபாத்தும் சேரலாமா? சீரிய மன்னனோடு சண்டையிட ராமோத்துக்குப் போகலாமா?” என்று கேட்டான்.
அதற்கு மிகாயா, “சரி, நீ இப்போதே போய் சண்டையிடு, கர்த்தர் வெற்றிபெறச் செய்வார்” என்றான்.
16 ஆனால் ஆகாப், “கர்த்தருடைய அதிகாரத்தால் நீ பேசிக்கொண்டிருக்கவில்லை. நீ உன் சொந்த வார்த்தைகளைப் பேசுகிறாய். எனவே உண்மையைச் சொல்! எத்தனைமுறை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்? கர்த்தர் சொல்கிறதை எனக்குச் சொல்!” என்றான்.
17 அதற்கு மிகாயா, “என்ன நடக்கும் என்பதை நான் பார்க்கமுடியும். இஸ்ரவேல் படைகள் சிதறியுள்ளன. மேய்ப்பன் இல்லாத ஆடுகள்போல உள்ளன. எனவே கர்த்தர், ‘இவர்களுக்கு தலைவன் இல்லை. எனவே சண்டைக்குப் போகாமல் வீட்டிற்குப் போகவேண்டும்’ என்று சொல்கிறார்” என்றான்.
18 ஆகாப் யோசபாத்திடம், “நான் சொன்னதைப் பார்! இவன் எப்போதும் எனக்குப் பிடிக்காததையே கூறுவான்” என்றான்.
19 ஆனால் மிகாயா தொடர்ந்து கர்த்தருக்காகப் பேசினான். “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். பரலோகத்தில் உள்ள அனைத்து தேவதூதர்களும் கர்த்தருடைய பக்கத்தில் வலதுபுறமும், இடதுபுறமும் நின்றுகொண்டிருக்கின்றனர். 20 கர்த்தர், ‘உங்களில் யாரேனும் அரசன் ஆகாபிடம் ஒரு தந்திரம் செய்வீர்களா? அவன் ராமோத்தில் இருக்கும் சீரியாவின் படையை எதிர்த்து சண்டையிட வேண்டுமென நான் விரும்புகிறேன். பின்னர் அவன் கொல்லப்படுவான்’ என்று சொன்னார். என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்து தூதர்கள் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை. 21 இறுதியில் ஒரு ஆவி வெளியே வந்து கர்த்தருக்கு முன் நின்றுக் கொண்டு சொன்னது. ‘நான் தந்திரம் செய்வேன்!’ 22 கர்த்தர், ‘எவ்வாறு செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் தீர்க்கதரிசிகளைக் குழப்பி பொய் சொல்லுமாறு செய்வேன். அவர்கள் பேசுவதெல்லாம் பொய்’ என்றது. உடனே அவர், ‘போய் ஆகாபை ஏமாற்று. நீ வெற்றிபெறுவாய்’ என்றார்” என்றான்.
23 மிகாயா இவ்வாறு தன் கதையைச் சொல்லி முடித்தான். பிறகு அவன், “இது தான் இங்கு நடந்தது. இவ்வாறு பொய் சொல்லுமாறு கர்த்தர்தான் தீர்க்கதரிசிகளை மாற்றினார். உனக்குத் தீமை வருவதை கர்த்தரே விரும்புகிறார்” என்றான்.
24 பிறகு சிதேக்கியா மிகாயாவிடம் வந்து முகத்தில் அடித்தான். அவன் “கர்த்தருடைய சக்தி என்னை விட்டுவிலகி எந்த வழியாய் உன்னிடம் வந்தது?” என்று கேட்டான்.
25 அதற்கு மிகாயா, “விரைவில் துன்பம் வரும். அப்போது, நீ சிறிய அறையில் ஒளிந்துக்கொள்வாய். அப்போது நான் சொல்வது உண்மையென்று உனக்குத் தெரியும்!” என்றான்.
26 மிகாயாவைக் கைது செய்யும்படி ஆகாப், அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான். ஆகாப் அரசன், “இவனைக் கைது செய்து நகர ஆளுநரான ஆமோனிடத்திலும் பிறகு இளவரசனான யோவாசிடமும் அழைத்துக் கொண்டு போங்கள். 27 நான் சமாதானத்தோடு வரும்வரை இவனைச் சிறையில் அவர்களிடம் அடைக்கச்சொல். அதுவரை அப்பமும், தண்ணீரும் கொடுங்கள்” என்றான்.
28 அதற்கு மிகாயா, “நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் போர் முடிந்து உயிரோடு திரும்பி வந்தால் கர்த்தர் என் மூலமாக பேசவில்லை” என்று சத்தமாகச் சொன்னான்.
ராமோத் கீலேயாத்தில் போர்
29 பிறகு ஆகாபும் யோசபாத்தும் ராமோத்திற்கு ஆராமோடு சண்டையிடப் போனார்கள். அவ்விடம் கீலேயாத்தில் உள்ளது. 30 ஆகாப் யோசபாத்திடம், “நாம் போருக்குத் தயாராக்குவோம். நான் அரசன் என்று தோன்றாதபடி சாதாரண ஆடைகளையும் நீ அரச உடைகளையும் அணிந்துக்கொள்” என்றான். அவ்வாறே சாதாரண உடையில் சண்டையிட்டான்.
31 சீரியா அரசனுக்கு 32 இரதப்படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களிடம் இஸ்ரவேல் அரசனைக் கண்டுபிடிக்குமாறு கட்டளையிட்டான். அரசனைக் கொன்றுவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டான். 32 போரின்போது, அவர்கள் யோசபாத்தைக் கண்டு இஸ்ரவேலின் அரசன் என்று எண்ணித் தாக்கினர். அவன் சத்தமிட்டான். 33 ஆனால், அவன் அரசனில்லை என்பதை அறிந்துகொல்லாமல் விட்டுவிட்டனர்.
34 ஆனால் ஒருவன் குறிவைக்காமல் ஒரு அம்பை எய்தான். எனினும், அது ஆகாப் மீதுபட்டு கவசம் மூடாத உடலில் நுழைந்தது. அவன் இரத ஓட்டியிடம், “ஒரு அம்பு என்னைத் தாக்கியுள்ளது! இரதத்தை களத்தைவிட்டு வெளியே கொண்டு செல்” என்றான்.
35 படைகள் தொடர்ந்து போரிட்டன. அரசன் தொலைவில் தங்கியிருந்தான். அதிலிருந்து சீரியாவின் படையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனது இரத்தம் வடிந்து இரதத்தில் நிறைந்தது. அன்று மாலை, அவன் மரித்துப் போகவே, 36 படையை நகருக்குத் திரும்புமாறு கட்டளையிட்டனர்.
37 இவ்வாறுதான் ஆகாப் மரித்துப்போனான். சிலர் அவனை சமாரியாவிற்கு எடுத்துப் போனார்கள். அங்கே அடக்கம் செய்தனர். 38 அத்தேரை சமாரியாவிலுள்ள குளத்து தண்ணீரால் கழுவினார்கள். இரதத்தில் உள்ள இரத்தத்தை நாய்கள் நக்கின. அத்தண்ணீரை வேசி மகள்கள் தம்மைச் சுத்தப்படுத்த பயன்படுத்தினார்கள். கர்த்தர் சொன்னபடியே அனைத்தும் நடந்தது.
39 இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் ஆகாப் செய்த அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. அவன் தன் அரண்மனையைத் தந்தத்தால் அலங்கரித்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவன் உருவாக்கிய நகரைப்பற்றியும் அந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. 40 ஆகாப் மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம்பண்ணப்பட்டான். அவனுக்கு அடுத்து அவன் மகன் அகசியா, அரசன் ஆனான்.
யூதாவின் அரசனான யோசபாத்
41 இஸ்ரவேலின் அரசனாக ஆகாப் இருந்த நாலாவது ஆண்டில், யூதாவில் யோசபாத் அரசனானான். இவன் ஆசாவின் மகன். 42 யோசபாத் அரசனாகும்போது அவனுக்கு 35 வயது. இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாய் அசுபாள். இவள் சில்கியின் மகள். 43 யோசபாத் நல்லவன். அவன் முன்னோர்களைப்போன்று இருந்தான். கர்த்தருடைய விருப்பப்படி கீழ்ப்படிந்து நடந்தான். ஆனால் பொய்தெய்வங்களை தொழுதுகொள்ள அமைக்கப்பட்ட மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடாந்து அங்கு பலி செலுத்தி, நறுமணப் பொருட்களை எரித்துவந்தனர்.
44 யோசபாத் இஸ்ரவேல் அரசனோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொண்டான். 45 இவன் தைரியமாகப் பல போர்களைச் செய்தான். இவன் செய்தது எல்லாம் யூதா அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.
46 தன் நாட்டில் உள்ள முறைகெட்ட புணர்ச்சிக்காரர்களை தொழுகை இடங்களிலிருந்து விரட்டினான். அவர்கள், தன் தந்தை ஆசா ராஜாவாக இருந்தபோது இருந்தவர்கள்.
47 அப்போது, ஏதோமில் அரசன் இல்லை. ஆளுநரால் அது ஆளப்பட்டது. இவன் யூதா அரசனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.
யோசபாத்தின் கடற்படை
48 இவன் கப்பல்களைச் செய்தான். பொன் வாங்க ஓப்பீருக்குச் செல்ல விரும்பினான். ஆனால் அவை போகமுடியாதபடி எசியோன் கேபேரிலே உடைந்து போயின. 49 இஸ்ரவேலின் அரசனாகிய அகசியா யோசபாத்திடம், “என் ஆட்கள் உங்கள் ஆட்களோடு கப்பலில் போகட்டும்” என்றான். யோசபாத் ஒப்புக்கொள்ளவில்லை.
50 யோசபாத் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பின் அவனது மகன் யோராம் அரசன் ஆனான்.
இஸ்ரவேலின் அரசனான அகசியா
51 ஆகாபின் அரசனான அகசியா இஸ்ரவேலுக்கு சமாரியாவில் அரசன் ஆனான். அப்போது யூதாவில் யோசபாத் 17ஆம் ஆண்டில் ஆண்டுகொண்டிருந்தான். அகசியா இரண்டு ஆண்டுகள் ஆண்டான். 52 அகசியா கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். அவன் தந்தை ஆகாப் மற்றும் தாய் யேசபேலைப் போன்றும், நேபாத்தின் மகனான யெரொபெயாம் போன்றும் பாவம் செய்து வந்தான். இவர்கள் நாட்டு ஜனங்களையும் பாவத்திற்குட்படுத்தினர். 53 அகசியா பாகால் தெய்வத்தை வழிபட்டான். இதனால் கர்த்தருக்கு கோபம் வந்தது. அவனது தந்தையிடம் போலவே அவனிடமும் கோபம்கொண்டார்.
அகசியாவிற்கு ஒரு செய்தி
1 ஆகாப் மரித்ததும் இஸ்ரவேலின் ஆட்சியில் இருந்து இஸ்ரவேலுக்கு எதிராக மோவாப் பிரிந்துவிட்டது.
2 ஒரு நாள், அகசியா தன் வீட்டின் மேல்மாடியில் இருந்தான். அப்போது மரச் சட்டங்களாலான கிராதியின் வழியாகக் கீழே விழுந்துவிட்டான். அவனுக்கு பலமாக அடிபட்டுவிட்டது. அவன் தன் வேலையாட்களை அழைத்து அவர்களிடம், “எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய், அவர்கள் ஆசாரியர்களிடம், இந்த காயங்களில் இருந்து குணமடைவேனா” என்று விசாரித்து வரும்படி சொன்னான்.
3 ஆனால் கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவிடம், “சமாரியாவில் இருந்து தூதுவர்களை அரசன் அகசியா அனுப்பி இருக்கிறான். நீ சென்று அவர்களைச் சந்திப்பாயாக. அவர்களிடம், ‘இஸ்ரவேலில் ஒரு தேவன் இருக்கிறார்! ஆனால் நீங்கள் அனைவரும் எதற்காக எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கச் செல்கிறீர்கள்? 4 அரசன் அகசியாவிடம் இவ்விஷயங்களைச் சொல்லுங்கள்: பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கத் தூதுவர்களை அனுப்பினாய். இக்காரியத்தை நீ செய்ததால், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையிலேயே மரித்துப்போவாய் என கர்த்தர் சொல்கிறார்!’ என்று சொல்” என்றான். பிறகு அங்கிருந்து கிளம்பி எலியா இவ்விதமாகவே அகசியாவின் ஆட்களிடம் சொன்னான்.
5 தூதுவர்கள் அகசியாவிடம் திரும்பிப் போக, அவனோ “ஏன் இவ்வளவு விரைவில் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
6 அவர்கள் அவனிடம், “ஒருவன் எங்களைச் சந்தித்தான். உங்களை அனுப்பிய அரசனிடமே திரும்பிச்சென்று, கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை சொல்லுங்கள் என்று அவன் திருப்பி அனுப்பினான். கர்த்தர் சொல்கிறார்: ‘இஸ்ரவேலுக்குள் தேவன் இருக்க, எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடம் ஏன் கேள்வி கேட்க அரசன் தூதுவர்களை அனுப்பினான்? இவ்வாறு செய்ததால் நீ உடல் நலம் தேறாமல் படுத்தபடுக்கையிலேயே மரித்துவிடுவாய்’” என்றனர். 7 அகசியா அவர்களிடம், “உங்களைச் சந்தித்து இதைச் சொன்னவன் எப்படி இருந்தான்?” என்று கேட்டான்.
8 அவர்களோ, “அவன் ரோமத்தாலான மேலாடையை அணிந்திருந்தான். இடுப்பில் தோல் கச்சை இருந்தது” என்றனர்.
பின் அகசியா, “அவன் திஸ்பியனாகிய எலியா தான்!” என்றான்.
அகசியாவால் அனுப்பப்பட்ட தளபதிகளை அக்கினி அழித்தது
9 அகசியா ஒரு தளபதியையும் 50 ஆட்களையும் எலியாவிடம் அனுப்பினான். அவர்கள் வந்தபோது, எலியா மலையுச்சியில் இருந்தான். தளபதி அவனிடம், “தேவமனிதனே, உங்களைக் கீழே வருமாறு அரசர் சொல்கிறார்” என்றான்.
10 எலியா அவனிடம், “நான் தேவமனிதன் என்றால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும் உன்னுடைய 50 ஆட்களையும் அழிக்கட்டும்!” என்றான்.
அவ்வாறே வானிலிருந்து அக்கினி வந்து தளபதியையும் அவனுடன் வந்த 50 பேர்களையும் அழித்தது.
11 அகசியா இன்னொரு தளபதியையும் 50 பேரையும் அனுப்பிவைத்தான். அத்தளபதியும், “தேவமனிதனே! நீங்கள் விரைவாக கீழே இறங்கவேண்டும் என்று அரசர் சொல்கிறார்!” என்றான்.
12 அதற்கு எலியா, “நான் தேவ மனிதனானால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும், உன் 50 வீரர்களையும் அழிக்கட்டும்!” என்றான்.
பின் தேவனுடைய அக்கினி பரலோகத்திலிருந்து வந்து அந்த தளபதியையும் 50 வீரர்களையும் அழித்தது.
13 அகசியா மூன்றாவதாக ஒரு தளபதியை 50 ஆட்களுடன் அனுப்பிவைத்தான். அவர்களும் எலியாவிடம் வந்தனர். பின் தளபதி, “தேவமனிதனே, என்னுடைய உயிரையும், உங்கள் ஊழியர்களாகிய இந்த 50 பேருடைய உயிர்களையும் காப்பாற்றுங்கள். 14 பரலோகத்தில் இருந்து வந்த அக்கினி ஏற்கெனவே வந்த இரண்டு தளபதிகளையும் அவர்களுடன் வந்த 50 வீரர்களையும் அழித்துவிட்டது. இப்போது எங்கள் மேல் இரக்கம் வைத்து எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
15 கர்த்தருடைய தூதன் எலியாவிடம், “தளபதியோடு செல், அவனைக்கண்டு பயப்படவேண்டாம்” என்றான்.
எனவே எலியா அரசனான அகசியாவைப் பார்க்கத் தளபதியோடு போனான்.
16 எலியா அகசியாவிடம், “தேவன் இப்படிக் கூறுகிறார். அதாவது: இஸ்ரவேலில் தேவன் இருக்கிறார். அவரிடம் கேட்காமல் ஏன் எக்ரோனின் தேவனான பாகால் சேபூபிடத்தில் தூதுவர்களை அனுப்புகிறாய். நீ இவ்வாறு செய்ததால் நோய் குணமாகாமல் படுத்தப்படுக்கையிலேயே மரித்துவிடுவாய்!” என்றான்.
யோராம் அகசியாவின் இடத்தைப் பெறல்
17 எலியாவின் மூலமாக, கர்த்தர் சொன்னது போல அகசியா மரித்தான். அவனுக்கு மகன் இல்லாததால் யோராம் புதிய அரசனானான். இது அவன் தந்தை யோசபாத்தின் இரண்டாம் ஆட்சியாண்டில் நடந்தது.
18 அகசியா செய்த பிறச்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
எலியாவை அழைத்துக்கொள்ள கர்த்தருடைய திட்டம்
2 சுழல் காற்றின் மூலம் எலியாவைக் கர்த்தர் பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபொழுது, எலியா எலிசாவுடன் கில்காலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள்.
2 எலியா எலிசாவிடம், “நீ இங்கே இரு. கர்த்தர் என்னைப் பெத்தேலுக்குப் போகச்சொன்னார்” என்றான்.
ஆனால் எலிசாவோ, “நான் உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் உங்கள் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்றான். எனவே இருவரும் பெத்தேலுக்குச் சென்றார்கள்.
3 சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம் வந்து, “இன்று உங்கள் எஜமானனான எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்போகும் செய்தி தெரியுமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவன், “ஆமாம், எனக்குத் தெரியும். அது பற்றி பேசவேண்டாம்” என்று பதிலளித்தான்.
4 அங்கே எலியா எலிசாவிடம், “நீ இங்கேயே இரு. கர்த்தர் என்னிடம் எரிகோவிற்குப் போகச் சொன்னார்” என்றான்.
ஆனால் எலிசாவோ, “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டு கூறுகிறேன்” என்றான். எனவே அவர்கள் இருவருமாக எரிகோவிற்குச் சென்றனர். 5 எரிகோவில் சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம், “இன்று உனது எஜமான் எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறாராமே?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவன், “ஆமாம், அது தெரியும். அதைப் பற்றி பேசவேண்டாம்” என்றான்.
6 எலியா எலிசாவிடம், “நீ தயவுசெய்து இங்கேயே இரு. யோர்தான் ஆற்றுக்குப் போகுமாறு என்னிடம் கர்த்தர் சொன்னார்” என்றான்.
அதற்கு அவன், “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்றான். எனவே இருவரும் சென்றனர்.
7 அங்கே 50 பேர்கள் அடங்கிய தீர்க்கதரிசி குழு அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது. எலியாவும் எலிசாவும் யோர்தான் ஆற்றின் அருகில் நின்றார்கள். அவர்கள் நின்ற இடத்தை நோக்கியபடி மற்ற 50 பேர்களும் அவர்களிடம் இருந்து விலகி தூரத்தில் நின்றார்கள். 8 எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கி தண்ணீரில் அடிக்க தண்ணீர் இரண்டு பாகமாகி விலகிப்போயிற்று. அவர்கள் உலர்ந்த தரையில் நடந்து அக்கரைக்குக் கடந்து போனார்கள்.
9 பின்னர் எலியா எலிசாவிடம், “என்னை உன்னிடத்திலிருந்து தேவன் எடுத்துக்கொள்வதற்கு முன் உனது விருப்பம் என்ன?” என்று கேட்டான்.
அதற்கு எலிசா, “உங்களிடம் உள்ள ஆவி எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்கவேண்டும்” என்றான்.
10 எலியா, “கஷ்டமானதையே கேட்டிருக்கிறாய். நான் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் பொழுது நீ என்னைப் பார்ப்பாயானால், இது நடக்கும். ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தில் என்னை உன்னால் பார்க்க முடியாமல் போகுமேயானால் இது நடக்காது” என்றான்.
தேவன் எலியாவை பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டது
11 எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டே நடந்துச் சென்றார்கள். திடீரென்று இரதமும் குதிரைகளும் வந்து இருவரையும் பிரித்தன. அவை நெருப்பாகத் தோன்றின! எலியா சுழற்காற்றால் வானுலகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்.
12 எலிசா இதனைப் பார்த்து, “என் தந்தையே! என் தந்தையே! இஸ்ரவேலின் இரதமும் குதிரை வீரருமானவரே!” என்று சத்தமிட்டான்.
இதற்குப் பிறகு எலியாவை எலிசா பார்க்கவில்லை. அவன் தனது ஆடையைக் கிழித்து தன் சோகத்தை வெளிப்படுத்தினான். 13 எலியாவின் மேலாடை தரையிலே விழுந்து கிடந்தது. அதனை எலிசா எடுத்துக்கொண்டு யோர்தான் கரைக்குப் போனான். மேலாடையை தண்ணீரில் அடித்து, “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்று கேட்டான்.
14 மேலாடையால் தண்ணீரை அடித்த உடனே தண்ணீர் வலதுபுறமாகவும் இடது புறமாகவும் பிரிந்துபோயிற்று! எலிசா ஆற்றைக் கடந்து போனான்.
தீர்க்கதரிசிகள் எலியாவைப்பற்றி கேட்டது
15 இவர்களைக் கவனித்துக்கொண்டிருந்த எரிகோவின் தீர்க்கதரிசிகள் எலிசாவைப் பார்த்து, “எலியாவின் ஆவி இப்பொழுது எலிசாவின் மேல் உள்ளது!” என்றார்கள். அவர்கள் எலிசாவை சந்திக்க வந்தார்கள். அவர்கள் அவனுக்கு முன்பாகத் தரையில் குனிந்து வணங்கினார்கள். 16 அவர்கள் எலிசாவிடம், “பாருங்கள், எங்களிடம் தகுதியான 50 பேர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து நாங்கள் சென்று உங்கள் எஜமானைத் தேட எங்களை அனுமதியுங்கள். ஒரு வேளை தேவனுடைய ஆவி அவரைத் தூக்கிச்சென்று எங்காவது மலையிலோ, அல்லது பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கலாம்!” என்றார்கள்.
அதற்கு எலிசா, “இல்லை, எலியாவைத் தேட ஆட்களை அனுப்பாதீர்கள்!” என்றான்.
17 எலிசா குழப்பமடையும்வரை தீர்க்கதரிசி குழு அவனைக் கெஞ்சியது. பின் எலிசா, “நல்லது, எலியாவைத் தேட ஆட்களை அனுப்புங்கள்” என்றான்.
எலியாவைத் தேட தீர்க்கதரிசி குழு 50 ஆட்களை அனுப்பியது. மூன்று நாட்கள் தேடியும், அவர்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 18 எனவே அந்த ஆட்கள் எலிசா தங்கியிருந்த எரிகோவிற்குச் சென்றார்கள். அவர்கள் எலிசாவிடம் தங்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என்றார்கள். எலிசா அவர்களிடம், “நான் உங்களிடம் போகவேண்டாம் என்று கூறினேன்” என்றான்.
எலிசா தண்ணீரை சுத்தமாக்கியது
19 நகர ஜனங்கள் எலிசாவிடம் வந்து, “ஐயா, இந்த நகரம் நல்ல இடத்தில் அமைந்துள்ளதை நீங்கள் பார்க்கமுடியும். ஆனால் தண்ணீரோ மிகவும் மோசம். அதனால் இங்கு நல்ல விளைச்சல் இல்லை” என்றனர்.
20 எலிசாவோ, “ஒரு புதிய தோண்டியில் உப்பைப் போட்டுக்கொண்டு வாருங்கள்” என்றான்.
அவர்கள் அப்பாத்திரத்தை எலிசாவிடம் கொண்டு வந்தனர். 21 அவன் தண்ணீர் பாய்கிற இடத்திற்கு போனான். அதில் உப்பைப் போட்டான். “அவன், ‘நான் இந்த தண்ணீரை சுத்தமாக்குகிறேன்! இப்பொழுதிலிருந்து இந்த தண்ணீர் எவ்வித மரணத்துக்கும் காரணமாக இருக்காது. விளை நிலங்களில் தொடர்ந்து நல்ல விளைச்சலைத் தரும்’ என்று கர்த்தர் சொல்கிறார்” என்றான்.
22 எலிசா சொன்னதுபோல் தண்ணீர் பரிசுத்தமானது. இன்றளவும் அத்தண்ணீர் சுத்தமாக இருக்கிறது. அனைத்துமே எலிசா சொன்னதுபோல் நடந்தது.
சில சிறுவர்கள் எலிசாவைக் கேலிச் செய்கிறார்கள்
23 எலிசா அங்கிருந்து பெத்தேல்வரை சென்றான். அவன் மலைமீது ஏறிக்கொண்டிருந்தபொழுது, சில சிறுவர்கள் நகரத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். அவர்கள் அவனை கேலிச்செய்தார்கள். அவர்கள், “வழுக்கைத் தலையனே மேலே போ! வழுக்கைத் தலையனே மேலே போ” என்றனர்.
24 எலிசா திரும்பி அவர்களைப் பார்த்தான். அவர்களுக்குத் தீமை ஏற்படுமாறு கர்த்தரை வேண்டினான். உடனே இரண்டு கரடிகள் காட்டிலிருந்து வந்து அவர்களைத் தாக்கி 42 சிறுவர்களைக் கொன்றுபோட்டன.
25 எலிசா பெத்தேலிலிருந்து கர்மேல் மலைக்குச் சென்றான். பின்னர் அங்கிருந்து சமாரியாவிற்குத் திரும்பிச்சென்றான்.
யோராம் இஸ்ரவேலின் அரசனானான்
3 சமாரியாவில் ஆகாபின் மகனாகிய யோராம் இஸ்ரவேலின் அரசன் ஆனான். யூதாவின் அரசனாகிய யோசபாத்தின் பதினெட்டாம் ஆண்டில் அவன் அரசாளத் துவங்கினான். யோராம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆண்டான். 2 தவறு என்று கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் அவன் செய்தான். ஆனால் அவன் தன் தந்தையைப்போலவும் தாயைப்போலவும் இல்லை. அவன் தந்தை தொழுதுகொள்வதற்காக நிறுவிய பாகாலின் தூணை அகற்றிவிட்டான். 3 ஆனாலும் அவன் நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைத் தொடர்ந்து செய்து வந்தான். யோராம் இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யச் செய்தான். யோராம், யெரொபெயாமின் பாவத்தை நிறுத்தவில்லை.
மோவாப் இஸ்ரவேலிலிருந்து பிரிந்து போனது
4 மேசா மோவாபின் அரசன். அவனுக்கு ஆடு மாடுகள் இருந்தன. அவன் இஸ்ரவேல் அரசனுக்கு 1,00,000 ஆட்டுக்குட்டிகளையும் 1,00,000 செம்மறியாட்டுக் கடாக்களையும் கம்பளிக்காகக் கொடுத்து வந்தான். 5 ஆனால் ஆகாப் மரித்ததும் மோவாபின் அரசன் இஸ்ரவேலுக்கு எதிராகப் புரட்சி செய்து தன் நாட்டைப் பிரித்துக்கொண்டான்.
6 பிறகு யோராம் சமாரியாவிற்கு வெளியே சென்று இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேர்த்தான். 7 அவன் தூதுவர்களை அனுப்பி யூதாவின் அரசனான யோசபாத்திடம் பேசினான். யோராம், “மோவாபின் அரசன் எனக்கு எதிராக என் ஆட்சியிலிருந்து விலகிவிட்டான். அவனோடு போரிட என்னுடன் சேர்ந்து வருவீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு யோசபாத், “சரி, நான் உன்னோடு வருகிறேன். நான் உன்னைப் போன்றவன். எனது ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்கள். என் குதிரைகளும் உனது குதிரைகளைப் போன்றவைதாம்” என்றான்.
மூன்று அரசர்களும் எலிசாவை ஆலோசனைக் கேட்கிறார்கள்
8 யோசாபாத் யோராமிடம், “நாம் எந்த வழியில் போவது?” என்று கேட்டான்.
அதற்கு யோராம், “நாம் ஏதோம் பாலைவனத்தின் வழியாகப் போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.
9 எனவே இஸ்ரவேல் அரசன் யூதாவின் அரசனோடும் ஏதோமின் அரசனோடும் பயணம் செய்தான். அவர்கள் ஏறக்குறைய ஏழு நாட்கள் பயணம் செய்தனர். பிறகு படைவீரர்களுக்கும் மிருகங்களுக்கும் குடிக்க தண்ணீரில்லை. 10 இறுதியாக இஸ்ரவேலின் அரசன், “ஓ! கர்த்தர் நமது மூன்று அரசர்களையும் ஒன்றுகூடி அழைத்து நம்மை மோவாபியர்களிடம் ஒப்படைத்து நம்மை தோற்கடித்தார்!” என்றான்.
11 ஆனால் யோசபாத், “கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசி இங்கே இருக்கவேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார் என அவரிடமே கேட்போம்” என்றான்.
இஸ்ரவேல் அரசரின் வேலைக்காரர் ஒருவன், “சாப்பாத்தின் மகனான எலிசா இங்கே இருக்கிறார். அவர் எலியாவின் வேலைக்காரர்” என்றான்.
12 யோசபாத்தும், “கர்த்தருடைய வார்த்தை எலிசாவோடு உள்ளது” என்று கூறினான்.
எனவே இஸ்ரவேலின் அரசனும் யோசபாத்தும் ஏதோமின் அரசனும் எலியாவைப் பார்க்கப் போனார்கள்.
13 எலிசா இஸ்ரவேல் அரசனான யோராமிடம், “நான் உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை. உங்கள் தந்தை மற்றும் தாயின் தீர்க்கதரிசிகளிடம் செல்லுங்கள்!” என்றான்.
அதற்கு இஸ்ரவேலின் அரசன், “இல்லை, நாங்கள் உங்களைப் பார்க்கவே வந்துள்ளோம். ஏனென்றால் கர்த்தர் மோவாப் மூலம் எங்களைத் தோற்கடிக்க எங்கள் மூவரையும் ஒன்றாகக் கூட்டியுள்ளார். எங்களுக்கு நீங்கள் உதவவேண்டும்” என்றான்.
14 அதற்கு எலிசா, “சர்வவல்லமையுள்ள கர்த்தருக்கு நான் ஊழியம் செய்கிறேன். அவர் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு நான் உம்மிடம் உண்மையைப் பேசுகிறேன். யூதாவின் அரசனாகிய யோசபாத் இங்கே இல்லாவிட்டால் உங்களை நான் பார்த்திருக்கவோ கவனித்திருக்கவோமாட்டேன்! 15 இப்போது சுரமண்டலம் வாசிக்கிற ஒருவனை அழைத்து வாருங்கள்” என்றான்.
அவன் வந்து சுரமண்டலத்தை வாசித்தபோது, கர்த்தருடைய வல்லமை எலிசாவின் மேல் இறங்கியது. 16 பிறகு எலிசா, “இப்பள்ளத்தாக்கிலே துளைகளைப் போடுங்கள். கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்: 17 நீங்கள் காற்றையும் மழையையும் பார்ப்பதில்லை. ஆனால் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிறையும். பின் நீங்களும் உங்கள் பசுக்களும் மற்ற மிருகங்களும் குடிக்க தண்ணீர் கிடைக்கும். 18 இதனை கர்த்தர் எளிதாகச் செய்வார். மோவாப் ஜனங்களை நீங்கள் வெல்லும்படியாகவும் செய்வார்! 19 நீங்கள் பலமுள்ள (கோட்டை அமைந்த) நகரங்களையும், தேர்ந்தெடுத்த (நல்ல) நகரங்களையும் தாக்குவீர்கள். நல்ல மரங்களையெல்லாம் வெட்டுவீர்கள். தண்ணீரின் ஊற்றுகளை அடைப்பீர்கள். வயல்களைக் கற்களால் அழித்துவிடுவீர்கள்” என்றான்.
20 காலையில், பலியைச் செலுத்தும் போது ஏதோம் சாலை வழியாக தண்ணீர் வந்து பள்ளத்தாக்கை நிரப்பிற்று.
21 மோவாபிலுள்ள ஜனங்கள் அரசர்கள் தம்மோடு போரிட வருவதை கேள்விப்பட்டனர். எனவே, ஆயுதம் தரிக்கக்கூடிய வயதுடைய அத்தனை ஆண்களும் கூடினார்கள். அவர்கள் எல்லையில் போரிடத் தயாராகிக் காத்திருந்தனர். 22 அவர்கள் காலையில் விழித்தபோது சூரியன் தண்ணீரில் பிராகாசிப்பதை இரத்தம் நிறைந்திருப்பதைப் போல் கண்டனர். 23 அவர்கள், “இரத்தத்தைப் பாருங்கள், அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அழித்துக்கொண்டனர். மரித்த பிணங்களிலுள்ள விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்” என்றனர்.
24 மோவாப் ஜனங்கள் இஸ்ரவேலர்களின் முகாம்களுக்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலர்களால் தாக்கப்பட்டனர். தப்பித்து ஓட முயன்றதும் இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தி மோவாபுக்குள்ளும் புகுந்து தாக்கினார்கள். 25 இஸ்ரவேலர்கள் மோவாப் நகரங்களை நொறுக்கித்தள்ளினார்கள். ஒவ்வொரு நல்ல வயல்களில் கற்களை எறிந்தனர். நீரூற்றுகளை அடைத்தனர், நல்ல மரங்களையெல்லாம் வெட்டி எறிந்தனர். அவர்கள் மோவாபின் தலைநகரத்தின் கிர்கரசேத்தில் உள்ள கற்கள் விடுபட்டு நிற்கும்வரை விரட்டினார்கள். இஸ்ரவேல் வீரர்கள் சுற்றிவளைத்து அவர்களை தாக்கினார்கள்.
26 மோவாபின் அரசனுக்கு இந்த போர் மிகவும் பலமாக (அவனுக்கு எதிராக) இருந்தது. அவன் 700 வாள் வீரர்களைச் சேர்த்துக்கொண்டு ஏதோம் அரசனைத் தாக்கிக் கொல்லச் சென்றான். ஆனால் அவர்களால் ஏதோம் அரசனை நெருங்க முடியவில்லை. 27 பிறகு தன்னைத் தொடர்ந்து ஆட்சியில் அமர இருக்கிற தன் மூத்த மகனை மோவாபின் அரசன் அழைத்தான். நகரைச்சுற்றியுள்ள சுவரில் தன் மகனையே சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினான். இது இஸ்ரவேல் ஜனங்களைப் பெரிதும் பாதித்தது. எனவே அவர்கள் மோவாபை விட்டு விட்டு தங்கள் நாட்டிற்குப் போய்விட்டனர்.
ஒரு தீர்க்கதரிசியின் விதவை எலிசாவிடம் உதவி கேட்டல்
4 தீர்க்கதரிசிகளுள் ஒருவனுக்கு ஒரு மனைவி இருந்தாள். அந்த தீர்க்கதரிசி மரித்துப்போயிருந்தான். அவள் எலிசாவிடம் வந்து, “என் கணவன் உங்கள் ஊழியனாக இருந்தார். இப்போது மரித்துப்போனார். அவர் கர்த்தரை மதித்ததை நீங்கள் அறிவீர்கள். அவர் ஒருவனிடம் பணம் வாங்கியிருந்தார். அதற்காக இப்போது அந்த ஆள் என் இரண்டு பிள்ளைகளை அடிமையாக்கிக்கொள்ள வந்திருக்கிறான்!” என்று அழுதாள்.
2 அதற்கு எலிசா, “நான் எவ்வாறு உதவமுடியும்? உன் வீட்டில் என்ன இருக்கிறது என்று சொல்” என்று கேட்டான்.
அப்பெண்ணும், “என் வீட்டில் எதுவுமில்லை. ஒரு ஜாடி (ஒலிவ) எண்ணெய் மட்டும் உள்ளது” என்றாள்.
3 உடனே எலிசா அவளிடம், “நீ போய் உனது பக்கத்து வீட்டுக்காரர் அனைவர்களிடமும் கிண்ணங்களைக் கடனாக வாங்கி வா. அவை காலியாக இருக்கட்டும். நிறைய கிண்ணங்களை கடன் வாங்கு. 4 உன் வீட்டிற்குள் போய் கதவுகளை மூடிக்கொள். வீட்டிற்குள் நீயும் உன் பிள்ளைகளும் மட்டும் தான் இருக்கவேண்டும். ஒலிவ எண்ணெயை எல்லாக் கிண்ணங்களிலும் ஊற்றி நிரப்ப அது நிறைந்ததும் ஒவ்வொரு பாத்திரத்தையும் அப்புறம் வை” என்றான்.
5 எனவே அந்தப் பெண் எலிசாவிடமிருந்து கிளம்பிப்போய் வீட்டுக்கதவுகளை அடைத்துக்கொண்டாள். அவளும் அவள் பிள்ளைகள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவளது மகன்கள் அவளிடம் கிண்ணங்களைக் கொண்டுவந்தனர். அவற்றில் அவள் எண்ணெயை ஊற்றினாள். 6 அனைத்து கிண்ணங்களும் நிரம்பியபோது அவள் தன் மகனிடம், “இன்னொரு கிண்ணம் கொண்டு வா” என்றாள்.
ஆனால் அவன் அவளிடம், “கிண்ணங்கள் வேறு எதுவுமில்லை” என்றான். அப்போது ஜாடியில் இருந்த எண்ணெயும் பெருகுவது நின்று போயிற்று.
7 பின் அவள் வந்து தேவனுடைய மனுஷனுக்கு (எலிசா) அதைச் சொன்னாள். அவரோ, “நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனை அடைத்துவிடு, மீதியுள்ள பணத்தில் நீயும் உன் பிள்ளைகளும் வாழுங்கள்” என்றான்.
சூனேமிலுள்ள ஒரு பெண் எலிசாவிற்கு அறைவீடு கொடுத்தது
8 ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றான். அங்கு ஒரு முக்கியமான பெண் இருந்தாள். அவள் எலிசாவை (தடுத்து) தன் வீட்டில் உணவு உண்ண அழைத்தாள். எனவே ஒவ்வொரு நேரமும் அவர் அந்த வழியாகப் போகும்போதெல்லாம் அவன் உணவு உண்பதற்காக நிறுத்தப்பட்டான்.
9 அவள் தன் கணவனிடம், “இதோ பாருங்கள், எலிசா தேவனுடைய பரிசுத்தமான மனிதன் என்பதைத் தெரிந்துக்கொண்டேன். எப்பொழுதும் நம் வீட்டைக் கடந்தே போகிறார். 10 அவருக்காக நாம் கூரைமீது ஒரு சிறு அறை ஏற்பாடு செய்வோம். அதில் படுக்கையிட்டு, ஒரு மேஜை, நாற்காலி, விளக்குத் தண்டு ஆகியவற்றையும் வைத்துவிடுங்கள். அவர் இங்கு வரும்போது தன் உபயோகத்திற்காக இந்த அறையை வைத்துக்கொள்ளலாம்” என்றாள்.
11 ஒரு நாள் எலிசா அவளது வீட்டிற்கு வந்தான். அவன் அங்குள்ள அறைக்குச் சென்று அங்கே ஓய்வெடுத்தான். 12 எலிசா தனது வேலையாளான கேயாசிடம், “அந்த சூனேமியாளைக் கூப்பிடு” என்றான்.
அந்த வேலையாள் சூனேமியாளை அழைத்தான். அவளும் கிளம்பிவந்து எலிசாவின் முன்னிலையில் நின்றாள். 13 எலிசா தன் வேலையாளிடம், “இப்போது அவளிடம், ‘எங்களுக்கு வசதியானவற்றை உன்னால் முடிந்தவரை நன்கு செய்துள்ளாய். நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? நான் உனக்காக அரசனிடமோ அல்லது படைத் தலைவனிடமோ ஏதாவது பேசவேண்டுமா?’” எனக் கேட்கும்படி சொன்னான்.
அதற்கு அவள், “இங்கே வாழுகின்ற என் சொந்த ஜனங்களில் நான் நன்றாகவே இருக்கிறேன்” என்றாள்.
14 எலிசா தன் வேலைக்காரனிடம், “நாம் இவளுக்காக என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு கேயாசி, “எனக்குத் தெரியும். இவளுக்கு குழந்தையில்லை. இவள் கணவனுக்கு வயதாகிவிட்டது” என்றான்.
15 பிறகு எலிசா, “அவளைக் கூப்பிடு” என்றான்.
வேலைக்காரன் அவளை அழைத்தான். அவள் கதவருகில் வந்து நின்றாள். 16 எலிசா அவளிடம், “அடுத்த ஆண்டு இதே பருவத்தில் நீ உனது சொந்த ஆண் குழந்தையை அணைத்துக்கொண்டிருப்பாய்” என்றான்.
அதற்கு அவள், “இல்லை! தேவமனிதரே, நீங்கள் உங்கள் வேலைக்காரியிடம் பொய் சொல்லவேண்டாம்” என்றாள்.
சூனேமிய பெண் ஆண் மகனைப் பெறுதல்
17 ஆனால் அப்பெண் கருவுற்றாள். எலிசா சொன்னதுபோல அடுத்த ஆண்டு அதே பருவ காலத்தில், அவள் ஆண் குழந்தையைப் பெற்றாள்.
18 அந்தப் பையன் வளர்ந்தான். ஒரு நாள், அவனது தந்தையும் ஆட்களும் வயலில் அறுவடை செய்துகொண்டிருந்த இடத்துக்கு போனான். 19 அவன் தன் தந்தையிடம், “என் தலை வலிக்கிறது!” என்றான்.
அவனது தந்தை, “இவனைத் தன் தாயிடம் தூக்கிச்செல்லுங்கள்!” என்று வேலைக்காரனிடம் சொன்னான்.
20 வேலைக்காரன் அவனைத் தூக்கிக்கொண்டு தாயிடம் சென்றான். அவன் தாய் மடியில் மதியம்வரை இருந்து, பிறகு மரித்துப்போனான்.
அப்பெண் எலிசாவைப் பார்க்கப் போகிறாள்
21 அப்பெண் மேலறையில் போய் தேவ மனிதனின் படுக்கையில் பையனைக் கிடத்தினாள். அந்த அறையின் கதவுகளை அடைத்துவிட்டு வெளியே போனாள். 22 அவள் கணவனை அழைத்து அவனிடம், “தயவுசெய்து என்னோடு ஒரு வேலைக்காரனையும் கழுதையையும் அனுப்புங்கள். நான் தீர்க்கதரிசியான எலிசாவை வேகமாக அழைத்துக் கொண்டு திரும்பி வரவேண்டும்” என்றாள்.
23 அதற்கு அவளுடைய கணவன், “இன்றைக்கு அந்தத் தீர்க்கதரியிடம் போகவேண்டும் என்று ஏன் விரும்புகிறாய்? இன்று அமாவாசையோ அல்லது ஓய்வு நாளோ இல்லை” என்றான்.
அதற்கு அவள், “கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகும்” என்றாள்.
24 பிறகு அவள் கழுதையின் மீது சேணத்தைக் கட்டினாள். “வேகமாகப் போ, நான் சொல்லும் போது மட்டும் மெதுவாகச் செல்” என்றாள்.
25 அவள் தேவமனிதனைப் (எலிசாவைப்) பார்க்க கர்மேல் மலைக்குச் சென்றாள்.
எலிசாவும் சூனேமியப்பெண் வெகு தூரத்திலிருந்து வருவதைக் கவனித்தான். அவன் தன் வேலைக்காரனான கேயாசியிடம், “பார், அந்த சூனேமியப் பெண் வருகிறாள். 26 அவளிடம் ஓடிப்போ. ‘என்ன காரியம்? நன்றாக இருக்கிறாயா? கணவன் நலமா? குழந்தை நலமா?’ என்று கேள்” என்றான்.
கேயாசி அவளிடம் ஓடிப்போய் இத்தனையும் கேட்டான். அதற்கு அவள், “எல்லோரும் நலம் தான்” என்றாள்.
27 ஆனாலும் சூனேமியப்பெண் மலை மீது ஏறி எலிசாவிடம் வந்தாள். அவள் அவரது பாதத்தைப் (பணிந்து) பற்றினாள். கேயாசி நெருங்கி வந்து அவளை இழுத்து விலக்கினான். உடனே தேவ மனிதன் (எலிசா), “அவளைத் தனியாகவிடு! அவள் மிகவும் கலங்கிப்போயிருக்கிறாள். அவள் ஆத்துமா துடிக்கிறது. கர்த்தர் என்னிடம் இதைப்பற்றி எதையும் சொல்லவில்லை. கர்த்தர் என்னிடம் இதனை மறைத்துவிட்டார்” என்றான்.
28 அதற்கு அந்தப் பெண், “ஐயா! நான் உம்மிடம் மகனைக் கேட்கவில்லை. ‘என்னை ஏமாற்ற வேண்டாம்’ என்றுதானே சொன்னேன்” என்றாள்.
29 பிறகு எலிசா கேயாசியிடம், “புறப்படுவதற்குத் தயார்செய்! எனது கைத்தடியை எடுத்துக் கொண்டுபோ. பேசுவதற்காக யாரையும் நிறுத்தாதே. யாரையாவது சந்தித்தாலும் நீ அவர்களை நலம் கூடி விசாரிக்க வேண்டாம். யாராவது விசாரித்தாலும் பதில் சொல்லவேண்டாம்! எனது கைத் தடியை அந்த பிள்ளையின் முகத்தில் வை” என்றான்.
30 ஆனால் அவள், “நீங்கள் இல்லாமல் நான் போகமாட்டேன்!” என்றாள்.
எனவே எலிசா எழுந்து அந்த சூனேமியப் பெண்ணோடு போனான்.
31 அவர்களுக்கு முன்னால் கேயாசி அப்பெண்ணின் வீட்டை அடைந்தான். அவன் கைத்தடியை பிள்ளையின் முகத்தில் வைத்தான். ஆனால் அந்தக் குழந்தை பேசவோ பேச்சுக்கு பதிலாக அசையவோ இல்லை. எனவே கேயாசி எலிசாவிடம் ஓடிவந்து, “குழந்தை இன்னும் எழுந்திருக்கவில்லை!” என்று கூறினான்.
சூனேமியப் பெண்ணின் மகன் மீண்டும் உயிரடைகிறான்
32 எலிசா வீட்டிற்கு வந்தான். அவனது படுக்கையில், பிள்ளை மரித்துக்கிடந்தது. 33 அவன் அறையுள் நுழைந்ததும் கதவுகளை அடைத்தான். அவ்வறையில் அவனும் பிள்ளையும் மட்டுமே இருந்தனர். எலிசா கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான். 34 அவன் படுக்கையருகில் சென்று அப்பிள்ளை மேல் படுத்து, தன் வாயை அப்பிள்ளையின் வாயோடு வைத்து, தன் கண்ணை அதன் கண்களோடு வைத்து, தன் கைகளை அதன் கைகளோடு வைத்து நீட்டிப்படுத்தான். அப்பிள்ளையின் உடல் சூடு அடைந்தது.
35 பிறகு எலிசா அறையைவிட்டு வெளியே வந்து வீட்டைச் சுற்றி முன்னும் பின்னும் நடந்தான். பிறகு (அறைக்குள்) போய் பிள்ளை மேல் குப்புறப்படுத்தான். உடனே பிள்ளை ஏழுமுறை தும்மி தன் கண்களை திறந்தான்.
36 பிறகு அவன் கேயாசியிடம், “சூனேமியப் பெண்ணை கூப்பிடு” என்றான்.
கேயாசி அவளை அழைக்க அவளும் வந்தாள். அவன் அவளிடம், “உன் மகனை எடுத்துக்கொள்” என்றான்.
37 பிறகு அந்த சூனேமியப்பெண் அறைக்குள் வந்து எலிசாவின் பாதத்தில் விழுந்து பணிந்தாள். குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
2008 by World Bible Translation Center