Bible in 90 Days
20 எனவே மோசே அவர்களிடம், “நீங்கள் இவற்றையெல்லாம் செய்தால், இந்த நாடு உங்களுக்கு உரியதாகும். ஆனால் உங்கள் வீரர்கள் கர்த்தருக்கு முன் போருக்குச் செல்லவேண்டும். 21 உங்கள் வீரர்கள் யோர்தானைக் கடந்து சென்று அங்கேயுள்ள எதிரிகளோடு போரிட வேண்டும். 22 எல்லோரும் தங்கள் நாட்டைப்பெற கர்த்தர் உதவிய பிறகு நீங்கள் வீட்டிற்குத் திரும்பலாம். அப்போது கர்த்தரும் இஸ்ரவேலரும் உங்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் நீங்களும் இந்த நாட்டைப் பெற்றுக்கொள்ள உதவுவார். 23 ஆனால், நீங்கள் இவற்றையெல்லாம் செய்யாவிட்டால், கர்த்தருக்கு எதிராகப் பாவிகள் ஆவீர்கள். உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவீர்கள் என்பதையும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள். 24 உங்கள் பிள்ளைகளுக்கு நகரங்களையும், மிருகங்களுக்குத் தொழுவங்களையும் அமையுங்கள். ஆனால் நீங்கள் வாக்களித்தபடி செய்து முடிக்க வேண்டும்” என்றான்.
25 பிறகு காத் மற்றும் ரூபனின் கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் உம்முடைய வேலைக்காரர்கள், நீர் எங்கள் எஜமானர். எனவே நீர் சொன்னபடியே நாங்கள் செய்வோம். 26 எங்கள் மனைவியரும், குழந்தைகளும் அனைத்து மிருகங்களும் கீலேயாத்தின் நகரங்களில் தங்கி இருப்பார்கள். 27 ஆனால் உம் அடியார்களாகிய நாங்கள் யோர்தான் ஆற்றைக் கடப்போம். எங்கள் எஜமானர் சென்னபடி நாங்கள் ஆயுதபாணிகளாக கர்த்தருக்கு முன்னால் செல்லுவோம்” என்றனர்.
28 எனவே மோசே, ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா மற்றும் இஸ்ரேவேலின் அனைத்து கோத்திரங்களிலும் உள்ள தலைவர்கள் அனைவரும் அவர்களின் வாக்குறுதியைக் கேட்டனர். 29 பிறகு மோசே அவர்களிடம், “காத் மற்றும் ரூபனின் கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து செல்வார்கள். கர்த்தரின் முன்னால் போருக்கு ஆயுதபாணிகளாக அணிவகுத்து நிற்பார்கள். உங்கள் நாட்டை கைப்பற்றுவதற்கு அவர்கள் உதவுவார்கள். பின்பு நீங்கள் கீலேயாத் பகுதியை அவர்களது நாட்டின் சுதந்திரமாகும்படி கொடுப்பீர்கள். 30 கானான் தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்வதற்கு அவர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர்” என்றான்.
31 காத் மற்றும் ரூபனின் ஜனங்கள் பதிலாக, “கர்த்தர் ஆணையிட்டபடியே நாங்கள் செய்வதாக வாக்களித்துள்ளோம். 32 நாங்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்வோம். நாங்கள் கர்த்தருக்கு முன்பாக ஆயுதம் தரித்தவர்களாகக் கானான் நாட்டிற்குச் செல்வோம். யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள நாடுகளே எங்கள் பங்குக்கு உரிய நாடுகளாகும்” என்றனர்.
33 எனவே மோசே, காத்தின் ஜனங்களுக்கும் ரூபனின் ஜனங்களுக்கும் மனாசேயின் ஜனங்களில் பாதிப்பேருக்கும் அந்த பகுதியைக் கொடுத்தான். (மனாசே யோசேப்பின் மகன்.) இந்த பூமியானது எமோரிருடைய அரசனாகிய சீகோனின் பட்டணத்தையும் பாசானுடைய அரசனாகிய ஓகின் பட்டணத்தையும் அவற்றைச் சேர்ந்த பூமியையும் கொண்டது. அந்த பூமியானது அவற்றின் எல்லையைச் சுற்றிலுமுள்ள நகரங்களையும் கொண்டது.
34 பின்பு காத் ஜனங்கள் தீபோன், அதரோத், ஆரோவேர், 35 ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா, 36 பெத்நிம்ரா, பெத்தாரன் எனும் நகரங்களையும் அவற்றின் பலமான சுவர்களையும், களஞ்சியங்களையும், தொழுவங்களையும் கட்டினார்கள்.
37 ரூபன் ஜனங்களோ, எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம், 38 நேபோ, பாகால் மெயோன், சீப்மா என்னும் நகரங்களைக் கட்டினார்கள். அவர்கள் நேபோ, பாகல் மெயோன் எனும் பெயர்களை மாற்றிக்கொண்டனர்.
39 மாகீரின் ஜனங்கள் கீலேயாத்திற்கு போனார்கள். (மாகீர் மனாசேயின் மகன்.) அவர்கள் அந்நகரத்தைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த எமோரியர்களை விரட்டியடித்தனர். 40 எனவே மோசே, மனாசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த மாகீர் ஜனங்களுக்கு கீலேயாத்தைக் கொடுத்தான். எனவே அந்தக் குடும்பம் அங்கே தங்கிற்று. 41 மனசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் அங்குள்ள சிறு நகரங்களைத் தோற்கடித்தான். பின் அந்நகரங்களை யாவீர் நகரங்கள் என்று அழைத்தான். 42 நோபாக், கேனாத்தையும் அதன் அருகிலுள்ள நகரத்தையும் தோற்கடித்தான். பிறகு அந்த இடத்தைத் தன் பெயரால் அழைத்தான்.
எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களின் பயணம்
33 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களைக் குழுக் குழுவாக எகிப்தை விட்டு அழைத்துச் சென்றனர். அவர்கள் கீழ்க்கண்ட இடங்களின் வழியாகப் பயணம் செய்தனர். 2 மோசே தாம் பயணம் செய்த இடங்களைப்பற்றி எழுதினான். கர்த்தருடைய விருப்பப்படியே மோசே எழுதினான். அவர்கள் எகிப்தை விட்டு பயணம் செய்த இடங்கள் பின் வருவனவாகும்:
3 முதல் மாதத்தின் 15வது நாளில் அவர்கள் ராமசேசை விட்டனர். அன்று காலை பஸ்காவுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வெற்றி முழக்கங்களோடு வெளியேறினார்கள். அவர்களை எகிப்து ஜனங்கள் அனைவரும் பார்த்தனர். 4 கர்த்தர் கொன்ற தங்கள் பிள்ளைகளையெல்லாம் எகிப்தியர் அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களெல்லாம் முதலாவது பிறந்த பிள்ளைகள். அவர்களது தேவர்களின் மீதும் கர்த்தர் தீர்ப்பளித்தார்.
5 இஸ்ரவேல் ஜனங்கள் ராமசேசை விட்டு சுக்கோத்திற்குப் பயணம் செய்தனர். 6 சுக்கோத்திலிருந்து அவர்கள் ஏத்தாமிற்குச் சென்றனர். ஜனங்கள் பாலைவனத்தின் ஓரத்தில் தம் முகாம்களை ஏற்பாடு செய்துகொண்டனர். 7 அவர்கள் ஏத்தாமை விட்டு ஈரோத்துக்குச் சென்றனர். அது பாகால் செபோனுக்கு அருகில் இருந்தது. அவர்கள் மிக்தோலுக்கு அருகில் தம் முகாமை அமைத்தனர்.
8 ஜனங்கள் ஈரோத்தைவிட்டு கடல் நடுவே நடந்து பாலைவனத்தை நோக்கிச் சென்றனர். பின் அவர்கள் மூன்று நாள் பயணம் செய்து மாராவிலே தம் முகாமை அமைத்தனர்.
9 ஜனங்கள் மாராவை விட்டு ஏலிமிற்குச் சென்று அங்கே கூடாரமிட்டனர். அங்கே 12 நீருற்றுகளும், 70 பேரீச்சம் மரங்களும் இருந்தன.
10 பின் ஏலிமிலிருந்து விலகி செங்கடலுக்கு அருகே முகாமிட்டனர்.
11 பின் செங்கடலைவிட்டு சீன் பாலைவனத்தில் முகாமிட்டனர்.
12 பின் சீன் பாலைவனத்தை விட்டு தொப்காவில் முகாமிட்டனர்.
13 பின் தொப்காவை விட்டு ஆலூசிலே முகாமிட்டனர்.
14 பின் ஆலூசைவிட்டு ரெவிதீமிலே முகாமிட்டனர். அந்த இடத்தில் ஜனங்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாதிருந்தது.
15 பின் ரெவிதீமை விட்டு சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டனர்.
16 பின் சீனாயை விட்டு கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டனர்.
17 பின் கிப்ரோத் அத்தாவை விட்டு ஆஸ்ரோத்திலே முகாமிட்டனர்.
18 பின் ஆஸ்ரோத்தை விட்டு ரித்மாவிலே முகாமிட்டனர்.
19 பின் ரித்மாவை விட்டு ரிம்மோன் பேரேசிலே முகாமிட்டனர்.
20 பின் ரிம்மோன்பேரேசை விட்டு லிப்னாவிலே முகாமிட்டனர்.
21 பின் லிப்னாவை விட்டு ரீசாவிலே முகாமிட்டனர்.
22 பின் ரீசாவை விட்டு கேலத்தாவிலே முகாமிட்டனர்.
23 பின் கேலத்தாவை விட்டு சாப்பேர் மலையில் முகாமிட்டனர்.
24 பின் சாப்பேர் மலையை விட்டு ஆரதாவிலே முகாமிட்டனர்.
25 பின் ஆரதாவை விட்டு மக்கெலோத்திலே முகாமிட்டனர்.
26 பின் மக்கெலோத்தாவை விட்டு தாகாத்திலே முகாமிட்டனர்.
27 பின் தாகாத்தை விட்டு தாராகிலே முகாமிட்டனர்.
28 பின் தாராகியை விட்டு மித்காவிலே முகாமிட்டனர்.
29 பின் மித்காவை விட்டு அஸ்மோனாவில் முகாமிட்டனர்.
30 பின் அஸ்மோனாவை விட்டு மோசெரோத்திலே முகாமிட்டனர்.
31 பின் மோசெரோத்தை விட்டு பெனேயாக்கானிலே முகாமிட்டனர்.
32 பின் பெனெயாக்கானை விட்டு கித்காத் மலையிலே முகாமிட்டனர்.
33 பின் கித்காத் மலையை விட்டு யோத்பாத்தாவிலே முகாமிட்டனர்.
34 பின் யோத்பாத்தாவை விட்டு எப்ரோனாவிலே முகாமிட்டனர்.
35 பின் எப்ரோனாவை விட்டு எசியோன் கேபேரிலே முகாமிட்டனர்.
36 பின் எசியோன் கேபேரிலை விட்டு காதேசாகிய சீன் என்னும் பாலைவனத்திலேயே முகாமிட்டனர்.
37 பின் காதேசாகிய சீன் பாலைவனத்தை விட்டு ஓர் என்னும் மலையில் முகாமிட்டனர். இது ஏதோம் தேசத்தின் எல்லையில் உள்ளது. 38 ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, ஓர் என்னும் மலை மீது ஏறினான். பின் அங்கேயே மரணமடைந்தான். அவன் ஐந்தாவது மாதத்தில் முதல் நாளன்று மரித்துப்போனான். அது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டு வந்த 40வது ஆண்டு. 39 அப்போது ஆரோனுக்கு 123 வயது.
40 கானான் நாட்டில் நெகேவ் என்ற பாலைவனத்தில் ஆராத் என்ற நகரம் ஒன்று இருந்தது. கானானிய அரசன் இஸ்ரவேல் ஜனங்கள் வருவதைப் பற்றி அறிந்தான். 41 இஸ்ரவேல் ஜனங்கள் ஓர் மலையை விட்டு சல்மோனாவில் முகாமிட்டனர்.
42 பின் சல்மோனாவை விட்டு பூனோனில் முகாமிட்டனர்.
43 பின் பூனோனை விட்டு ஓபோத்தில் முகாமிட்டனர்.
44 பின் ஓபோத்தை விட்டு அபாரீமின் மேடுகளில் முகாமிட்டனர். இது மோவாபின் எல்லையில் இருந்தது.
45 பின் அபாரீமினை விட்டு தீபோன் காத்திலே முகாமிட்டனர்.
46 பின் தீபோன்காத்தை விட்டு அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டனர்.
47 பின் அல்மோன் திப்லாத்தாயிமை விட்டு நேபோவுக்கு அருகிலுள்ள அபாரீம் மலைகளில் முகாமிட்டனர்.
48 பின் அபாரீம் மலைகளை, விட்டு மோவாபிலே உள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் முகாமிட்டனர். இது யோர்தான் நதியைக்கடந்து எரிகோவின் அருகிலே உள்ளது. 49 பின் யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமவெளிகளில் முகாமிட்டனர். அவர்களது பாளையம் பெத்யெசிமோத்தைத் தொடங்கி ஆபேல் சித்தீம்வரை இருந்தது.
50 அந்த இடத்தில் மோசேயோடு கர்த்தர் பேசினார். அவர், 51 “இஸ்ரவேல் ஜனங்களிடம் இவற்றை கூறு: நீங்கள் யோர்தான் நதியை கடந்து கானான் நாட்டிற்குள் நுழைவீர்கள். 52 நீங்கள் அங்கே காணும் ஜனங்களிடமிருந்து அந்நாட்டை எடுத்துக்கொள்வீர்கள். அவர்களின் செதுக்கப்பட்ட சிலைகளையும், விக்ரகங்களையும் அழித்துவிடுவீர்கள். அவர்களின் மேடைகளையும் நீங்கள் அழிக்க வேண்டும். 53 நீங்கள் அந்நாட்டைக் கைப்பற்றி அங்கேயே குடியிருப்பீர்கள். ஏனென்றால் நான் இந்த நாட்டை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். இது உங்கள் குடும்பத்தாருக்கு உரியது. 54 உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இந்நாட்டின் பங்கைப் பெறுவார்கள். எந்தக் குடும்பத்தினர் எந்தப் பகுதியைப் பெறுவது என்பதைச் சீட்டுக் குலுக்கல் மூலம் அறிந்துகொள்வீர்கள். பெரிய குடும்பத்தினர் பெரும் பகுதியைப் பெறுவார்கள். சிறிய குடும்பத்தினர் சிறியப் பகுதியைப் பெறுவார்கள். எந்தக் குடும்பம் நாட்டின் எந்தப் பகுதியைப் பெறும் என்பதை சீட்டுக் குலுக்கல் மூலம் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் இந்த தேசத்தின் பங்கைச் சுதந்தரிக்கும்.
55 “நீங்கள் அந்த அந்நிய ஜனங்களை இந்நாட்டை விட்டுத் துரத்த வேண்டும். அவர்களை இந்நாட்டிலே தங்கவிட்டால் பிறகு அவர்கள் உங்களுக்கு மிகுந்த தொந்தரவுகளை கொண்டுவருவார்கள். அவர்கள் உங்கள் கண்களில் முள்ளாகவும், விலாக்களில் கூராகவும் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பல பிரச்சனைகளைக் கொண்டுவருவார்கள். 56 நான் அப்போது அவர்களுக்குச் செய்ய திட்டமிட்டதை உங்களுக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.
கானான் நாட்டின் எல்லைகள்
34 மோசேயிடம் கர்த்தர் பேசினார். அவர், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த கட்டளைகளைக் கூறு: நீங்கள் கானான் நாட்டிற்கு போய்க்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் கானான் நாடு முழுவதையும் பெற்றுக்கொள்வீர்கள். 3 தெற்குப் பக்கம் ஏதோம் அருகிலுள்ள சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியைப் பெறுவீர்கள். உங்களது தெற்கு எல்லையானது கிழக்கே இருக்கிற சவகடலின் கடைசியில் தொடங்கும். 4 இது ஸ்கார்ப்பியன் கணவாயின் தெற்காகக் கடந்து செல்லும். சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ்பர்னேவுக்கும் பிறகு ஆத்சார் ஆதாருக்கும், பின் அங்கிருந்து அஸ்மோனாவுக்கும் செல்லும். 5 அஸ்மோனிலிருந்து எல்லையானது எகிப்து நதியில் போய், பிறகு அது மத்தியத்தரைக் கடலில் போய் முடியும். 6 மத்தியத்தரைக் கடல் உங்களது மேற்கு எல்லையாக இருக்கும். 7 உங்கள் வடக்கு எல்லையானது மத்தியத்தரைக் கடலில் தொடங்கி, லெபனானில் உள்ள ஓர் மலைக்குச் செல்லும். 8 ஓர் என்னும் மலையிலிருந்து, இது லெபோ ஆமாத்திற்குப் போகும். பிறகு சேதாத்திற்குப் போகும். 9 பின்னர் அவ்வெல்லையானது, சிப்ரோனுக்குப் போய் ஆத்சார் ஏனானிலே முடியும். அதுதான் உங்கள் வடக்கு எல்லையாகும். 10 உங்கள் கிழக்கு எல்லையானது ஏனானிலே தொடங்கி, அது சேப்பாமுக்குப் போகும், 11 சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாவிற்குப் போகும். எல்லையானது தொடர்ந்து கலிலேயா ஏரிக்குத் தொடரும். 12 பிறகு அந்த எல்லையானது யோர்தான் நதிவரைத் தொடரும். அது மரணக் கடலில் போய் முடியும். இவை தான் உங்கள் நாட்டைச் சுற்றியுள்ள எல்லைகள் ஆகும்” என்றார்.
13 எனவே, மோசே இந்த கட்டளைகளை இஸ்ரவேல் ஜனங்களிடம் கொடுத்தான். “அதுதான் நீங்கள் பெறப்போகிற நாடு. இதனைச் சீட்டுக்குலுக்கல் மூலமாக 9 கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதி குடும்பத்திற்கும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். 14 ரூபன் மற்றும் காத்தின் கோத்திரத்தினரும் மனாசேயின் பாதிக் குடும்பத்தினரும் ஏற்கெனவே தங்கள் நாட்டைப் பெற்றுள்ளனர். 15 அந்த இரண்டரைக் கோத்திரத்தினரும் எரிகோவின் அருகில் யோர்தானுக்குக் கிழக்கே உள்ள நாடுகளைப் பெற்றுள்ளனர்” என்றான்.
16 பிறகு கர்த்தர் மோசேயோடு பேசினார். 17 அவர், “நாட்டைப் பங்கு வைக்க ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனான யோசுவாவும், 18 கோத்திரங்களின் தலைவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு தலைவர் இருப்பார். அவர்கள் நாட்டைப் பங்கு போட்டுக் கொடுப்பார்கள். 19 பின் வருபவை அந்த தலைவர்களின் பெயர்களாகும்:
யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேபு;
20 சிமியோனின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான சாமுவேல்;
21 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கிஸ்லோனின் மகனான எலிதாது;
22 தாணின் கோத்திரத்திலிருந்து யொக்லியின் மகனான புக்கி;
23 யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து எபோதின் மகனாகிய அன்னியேல்:
24 எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து சிப்தானின் மகனாகிய கேமுவேல்;
25 செபுலோனின் கோத்திரத்திலிருந்து பர்னாகின் மகனாகிய எலிசாப்பான்;
26 இசக்காரின் கோத்திரத்திலிருந்து ஆசானின் மகனாகிய பல்த்தியேல்;
27 ஆசேரின் கோத்திரத்திலிருந்து செலோமியின் மகனான அகியூத்;
28 நப்தலியின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான பெதாக்கேல்” என்றார்.
29 இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் கானான் தேசத்தைப் பங்கிடும்படி கர்த்தர் இவர்களைத் தெரிந்தெடுத்தார்.
லேவியரின் நகரங்கள்
35 யோர்தான் நதிக்கருகில் மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் கர்த்தர், மோசேயிடம் பேசினார். கர்த்தர், 2 “இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பங்குகளில் உள்ள நகரங்களின் சில இடங்களை லேவியர்களுக்குத் தரவேண்டும் என்று கூறு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரப் பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள வெளி நிலங்களையும் லேவியருக்குத் தந்துவிட வேண்டும். 3 லேவியர்கள் இந்த நகரங்களில் குடியேறுவார்கள். அவர்களின் பசுக்களும், மற்ற மிருகங்களும் வெளி நிலங்களில் மேய்ந்துகொள்ளும். 4 உங்கள் நிலங்களில் லேவியர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய பாகமாவது: நகரச் சுவர்களில் 1,500 அடி தூரமும் அதற்கிடையில் உள்ள நிலங்களும் 5 நகரத்தின் மேற்கேயுள்ள 3,000 அடி தூரமும், கிழக்கேயுள்ள 3,000 அடி துரமும், வடக்கேயுள்ள 3,000 அடி தூரமும், தெற்கேயுள்ள 3,000 அடி தூரமும், லேவியர்களுக்கு உரியதாகும். (அனைத்து நிலங்களுக்கும் நடுவில் நகரம் இருக்கும்.) 6 இத்தகைய ஆறு நகரங்களும் பாதுகாப்பின் நகரங்களாகும். விபத்தாக எவராவது ஒருவரைக் கொன்றுவிட்டால், உடனே அவன் இந்த நகரத்திற்குள் ஓடிப்போனால் இது அவர்களுக்குப் பாதுகாப்பைத் தரும். இந்த ஆறு நகரங்களோடும் மேலும் 42 நகரங்களை லேவியர்களுக்குத் தரவேண்டும். 7 எனவே மொத்தமாக நீங்கள் லேவியர்களுக்கு 48 நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களையும் தரவேண்டும். 8 பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய பங்கைப் பெறுவார்கள். சிறிய குடும்பத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் ஜனங்கள் சிறிய பங்கைப் பெறுவார்கள். எனவே பெரிய கோத்திரத்தினர் தங்கள் பங்கில் அதிக நகரங்களை லேவியர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். சிறிய கோத்திரத்தினர் சில நகரங்களை லேவியர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்” என்றார்.
9 மேலும் கர்த்தர் மோசேயிடம்: 10 “ஜனங்களிடம் இவற்றையும் கூறு: நீங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து கானான் நாட்டிற்குள் போனபின்பு 11 நீங்கள் அடைக்கல பட்டணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எவனாவது ஒருவன் தற்செயலாய் யாரையாவது கொன்றுவிட்டால், அடைக்கலப் பட்டணங்களுக்குள் ஓடிப்போக வேண்டும். 12 சாகடிக்கப்பட்டவனின் உறவினர் யாராலும் இடையூறு வராமல், வழக்கு மன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும்வரை அங்கு பாதுகாப்பாக இருப்பான். 13 ஆறு நகரங்கள் பாதுகாப்பின் நகரங்களாக விளங்கும். 14 இவற்றில் மூன்று நகரங்கள் யோர்தான் நதிக்கு கிழக்கே இருக்கும். மேலும் மூன்று நகரங்கள் கானான் நாட்டிற்குள் யோர்தான் நதிக்கு மேற்கே இருக்கும். 15 இந்த நகரங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அவர்களிடையே வாழும் அயல்நாட்டு ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பிற்காக இருக்கும். விபத்தில் எவனையாவது கொன்றுவிட்டால், பாதுகாப்புக்காக இந்நகரங்களுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளலாம்.
16 “எவனாவது இரும்பு ஆயுதத்தை பயன்படுத்தி இன்னொருவனைக் கொன்றால், அவன் கொலை செய்யப்பட வேண்டும். 17 எவனாவது கல்லைப் பயன்படுத்தி இன்னொருவனைக் கொன்றால், அவனும் கொலை செய்யப்படவேண்டும். (ஆனால் பொதுவாக கொலைசெய்யப்படத்தக்க அளவுள்ள கல்லே கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.) 18 ஒருவன் இன்னொருவனை மரத்தடியைப் பயன்படுத்திக் கொன்றால், அவனும் கொலை செய்யப்பட வேண்டியவன். (பொதுவாக மரத்தடியே பிறரைக் கொல்ல ஆயுதமாக பயன்படுத்தப்படும்.) 19 கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்திலுள்ள ஒருவன் கொலைகாரனை விரட்டிப்போய் கொன்றுவிடலாம்.
20-21 “ஒருவன் இன்னொருவனைத் தன் கையால் அடித்துக் கொலைசெய்து விடலாம் அல்லது ஒருவன் இன்னொருவனைத் தள்ளி விட்டுக் கொன்றுவிடலாம். அல்லது ஒருவன் இன்னொருவன் மீது எதையாவது வீசியும் கொன்றுவிடலாம். ஒருவன் இவற்றை வெறுப்பின் காரணமாகச் செய்தால் அவன் கொலைகாரனாகிறான். அவன் கொலை செய்யப்பட வேண்டியவன் ஆவான். கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்திலுள்ள ஒருவன் கொலைகாரனை விரட்டிப்போய் கொன்றுவிடலாம்.
22 “ஆனால் ஒருவன் எதிர்பாராத விதத்தில் ஒருவனைக் கொன்றுவிடலாம். கொன்றுவிட்ட மனிதனின் மேல் அவனுக்கு வெறுப்பு எதுவும் இல்லை. எதிர்பாராத விதத்தில் நடந்தது இது அல்லது ஒருவன் எதையோ வீச அது எதிர்பாராதவிதமாக இன்னொருவன் மீது பட்டு அவன் மரிக்கலாம். அவன் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை. 23 அல்லது ஒருவன் ஒரு கல்லை வீச அது இன்னொருவன் மீது பட்டு அவன் மரித்துப் போகலாம். அவன் யாரையும் கொல்லத் திட்டமிடவில்லை. அவன் யாரையும் வெறுக்கவில்லை. எதிர்பாராத விதத்தில் கொலை செய்துவிட்டான். 24 இவ்வாறு நிகழ்ந்தால், பிறகு சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்குரிய வழக்குமன்றமே நிறைவேற்ற வேண்டியதைத் தீர்மானிக்கும். சமூக நீதிமன்றமே கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தில் உள்ள ஒருவன், கொலைகாரனை கொலை செய்யலாமா என்பதைத் தீர்மானிக்கும். 25 சமுதாய நீதிமன்றமானது கொலைகாரனைத் தண்டிக்க வேண்டாம் என்று எண்ணினால் அவனை அடைக்கலப் பட்டணத்துக்கு அனுப்பிவிடலாம். அவன், அப்போதைய தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை அந்த பட்டணத்தில் இருக்க வேண்டும்.
26-27 “அவன் பாதுகாப்பான நகரத்தின் எல்லைகளை விட்டு வெளியே போகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு போனால், அப்போது கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அவனைப் பிடித்துக் கொன்றால், அது கொலை குற்றம் ஆகாது. 28 எதிர்பாராத விதமாக இன்னொருவனைக் கொன்ற ஒருவன் தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை பாதுகாப்பான நகரத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். தலைமை ஆசாரியனின் மறைவிற்குப் பின்னர் அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பிப் போகலாம். 29 உங்கள் ஜனங்கள் வாழும் நகரங்களில் எல்லாம் இந்த விதிகள் என்றென்றைக்கும் இருக்கும்.
30 “சாட்சிகள் இருந்தால்தான், ஒருவனைக் கொலைகாரன் என்று முடிவு செய்து கொன்றுவிட தீர்ப்பளிக்க முடியும். ஒரு சாட்சி மட்டும் இருந்தால் ஒருவனைக் கொலைக் குற்றவாளியாக்க முடியாது.
31 “ஒருவன் கொலைகாரன் என்று முடிவானால், அவன் மரண தண்டனைக்குத் தகுதியாவான். அவனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தண்டனையை மாற்ற வேண்டாம். கொலைகாரன் கொல்லப்பட வேண்டும்.
32 “ஒருவன் மற்றொருவனைக் கொன்றுவிட்டு பாதுகாப்பான நகரத்திற்கு ஓடிவிட்டால் அவனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவனை வீட்டிற்கு அனுப்பிவிடாதீர்கள். அவன் தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை அந்நகரத்திலேயே இருக்க வேண்டும்.
33 “குற்றமில்லாத இரத்தம் சிந்தி உங்கள் நாட்டை அசுத்தப்படுத்திவிடாதீர்கள். இரத்தம் சிந்திய பூமியை கொலைகாரனின் இரத்தத்தைக் கொண்டு தவிர வேறு எதினாலேயும் பரிகாரம் செய்ய முடியாது. 34 நானே கர்த்தர், நான் உங்கள் நாட்டில் இஸ்ரவேல் ஜனங்களோடு வாழ்வேன். நான் அங்கே வாழ்வதால் அந்த இடத்தை அறியாதவர்களின் இரத்தத்தால் தீட்டு உள்ளதாகச் செய்யவேண்டாம்” என்றார்.
செலோப்பியாத்தின் மகள்களின் பகுதி
36 மனாசே யோசேப்பின் மகன். மாகீர் மனாசேயின் மகன். கீலேயாத் மாகீரின் மகன். கீலேயாத் கோத்திரத்தின் தலைவர்கள் மோசேயோடும் மற்ற இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களோடும் பேசப் போனார்கள். 2 அவர்கள், “ஐயா, எங்கள் நிலத்தின் பங்குகளைச் சீட்டுக்குலுக்கல் மூலம் நாங்கள் பெறுமாறு கர்த்தர் கட்டளையிட்டு இருக்கிறார். அதோடு செலோப்பியாத்தின் நிலப்பங்கானது அவனது மகள்களுக்குச் சேர வேண்டும் என்றும் கர்த்தர் கூறியிருக்கிறார். செலோப்பியாத் எங்களது சகோதரன். 3 வேறு ஒரு கோத்திரத்தில் உள்ளவர்கள் செலோப்பியாத்தின் மகளை மணக்க நேரிடலாம். அப்போது அந்தப் பங்கு எங்கள் குடும்பத்தை விட்டுப் போய்விடுமே. வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பூமியை பெற்றுக்கொள்வார்களா? இவ்வாறு சீட்டுக் குலுக்கல் மூலம் நாங்கள் பெற்ற நிலப்பாகத்தை நாங்கள் இழந்துவிடுவதா? 4 ஜனங்கள் தங்கள் நிலத்தை விற்கலாம். ஆனால் யூபிலி ஆண்டில் எல்லா நிலமும் உண்மையில் நில உரிமையாளனுக்கே திரும்பி அளிக்கப்படும். அப்போது செலோப்பியாத்தின் மகள்களுக்குரிய நிலம் யாருக்கு வந்து சேரும்? நித்தியத்துக்கும் எங்கள் குடும்பம் அந்த நிலத்தை இழந்து விட வேண்டியதுதானா?” என்று கேட்டனர்.
5 மோசே பின்வரும் கட்டளையை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தான். இந்தக் கட்டளை கர்த்தரிடமிருந்து வந்தது. “யோசேப்பின் கோத்திரத்தில் உள்ள மனிதர்கள் கூறுவது சரியே. 6 செலொப்பியாத்தின் மகள்கள் விஷயத்தில் கர்த்தர் கூறும் கட்டளைகளாவன: அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை மணந்துகொள்ளலாம். எனினும் அவர்கள் தங்கள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும். 7 இதனால் இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் உள்ள சொத்தானது இன்னொரு கோத்திரத்திற்குச் செல்லாமல் இருக்கும். எனவே ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வான். 8 ஒரு பெண் தன் தந்தைக்குரிய நிலத்தைப் பெற்றால், பின்னர் அவள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு இஸ்ரவேல் குடிமகனும் தங்கள் முற்பிதாக்களின் சொத்துக்களைத் தம் வசமே வைத்திருப்பார்கள். 9 எனவே, இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் இருந்து இன்னொரு கோத்திரத்திற்கு நிலம் போகாமல் இருக்கும். ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலத்தை பாதுகாத்துக்கொள்வான்.”
10 செலொப்பியாத்தின் மகள்கள், மோசேக்கு கர்த்தர் அளித்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். 11 எனவே மக்லாள், திர்சாள், ஓக்லாள், மில்காள், நோவாள் எனும் செலொப்பியாத்தின் மகள்கள் தம் தந்தையின் சகோதரரின் மகன்களை மணந்துகொண்டனர். 12 அவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசேயின் கோத்திரத்தினரை மணந்துகொண்டபடியால் அவர்களின் சொத்தானது அக்கோத்திரத்திற்குள்ளேயே இருந்தது.
13 எரிகோவின் எதிரே, யோர்தானுக்கு இக்கரையில் மோவாப் சமவெளியில் கர்த்தர் மோசேக்கு கொடுத்த சட்டங்களும் கட்டளைகளும் இவைகளேயாகும்.
இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசுதல்
1 இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே அறிவித்தச் செய்தி. யோர்தான் நதிக்குக் கிழக்கில் உள்ள பாலைவனத்தின் பள்ளத்தாக்கில் அவர்கள் இருந்தபொழுது, மோசே அவர்களிடம் சொன்னான். அப்பகுதி சூப்புக்கு எதிராகவும், பாரான் பாலைவனத்திற்கும் தோப்பேல், லாபான், ஆஸரோத், திசாகாப் ஆகிய நகரங்களுக்கு இடையிலும் இருந்தது.
2 ஓரேப் மலையிலிருந்து (சீனாய்) சேயீர் குன்றுகள் வழியாக காதேஸ்பர்னேயாவுக்கு பயணம் செய்வதற்கு பதினோரு நாட்கள் ஆகும். 3 ஆனால் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பதாண்டுகள் கழிந்தபின்னரே இவ்விடத்தை அடைந்தனர். நாற்பதாவது ஆண்டின் பதினோராவது மாதத்தின் முதல் நாளன்று, மோசே அந்த ஜனங்களிடம் பேசினான். அவர்களிடம் கூறுமாறு தேவன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே எடுத்துச் சொன்னான். 4 கர்த்தர் சீகோனையும் ஓகையும் வெற்றிக்கொண்ட பின்னர் இது நடந்தது. (எஸ்பானில் வசித்த சீகோன் எமோரியரின் அரசன். பாசான் மன்னனாகிய ஓக், அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வசித்தான்.) 5 இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கே மோவாப் நிலப்பகுதியில் இருந்தபொழுது, தேவன் கட்டளையிட்டவற்றை மோசே அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னான். மோசே,
6 “நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் (சீனாய்) நம்மிடம் பேசினார். தேவன் சொன்னது என்னவென்றால்: ‘நீங்கள் நீண்டகாலம் இம்மலையில் தங்கியிருந்தது போதும். 7 எமோரிய ஜனங்கள் வாழும் மலை நாட்டிற்கும், அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களுக்கும் செல்லுங்கள். யோர்தான் பள்ளத்தாக்கு, மலைநாடு, மேற்குச்சரிவுகள், யூதேயாவின் தெற்கிலுள்ள நெகேவ் (பாலைவனப் பகுதி) மற்றும் கடற்கரைப் பகுதிக்கும் செல்லுங்கள். கானான் நிலப்பகுதி மற்றும் லீபனோன் ஆகியவற்றின் வழியாக பெரும் நதியான ஐபிராத்து வரைக்கும் செல்லுங்கள். 8 அந்நிலத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். சென்று எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு நான் வாக்களித்தேன். அந்நிலத்தை அவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக நான் வாக்களித்தேன்’” என்றார்.
மோசே தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல்
9 மோசே, “அந்த நாட்களில் நான் ஒருவனாக உங்களை கவனித்துக்கொள்ள இயலாது. 10 இப்பொழுது, உங்களிடம் பலர் இருக்கிறீர்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மேலும் பலரை சேர்த்துள்ளார். ஆகவே வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போல் நீங்கள் எண்ணிக்கையில் பெருகியுள்ளீர்கள்! 11 உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், உங்களை இப்பொழுதுள்ளதைப் போல 1,000 மடங்கு எண்ணிக்கையில் அதிகரிக்கச் செய்யட்டும்! அவர் வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிக்கட்டும்! 12 ஆனால் உங்களை கவனித்துக்கொள்ளவும், உங்கள் வாதங்களைத் தீர்த்து வைக்கவும், என் ஒருவனால் முடியவில்லை. 13 ஆகவே ‘ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் சிலரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக்குவேன். புரிந்துகொள்ளும் ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த ஞானவான்களைத் தேர்ந்தெடுங்கள்’ என்று நான் சொன்னேன்.
14 “அதற்கு நீங்கள், ‘நீர் செய்யச்சொன்ன செயல் நல்ல செயல்’ என கூறினீர்கள்.
15 “ஆகவே உங்கள் கோத்திரங்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த அறிவும் அனுபவமும் நிறைந்தவர்களை உங்கள் தலைவர்களாக்கினேன். இப்படியாக, 1,000 பேர்களுக்குத் தலைவர்களையும், 100 பேர்களுக்குத் தலைவர்களையும், 50 பேர்களுக்குத் தலைவர்களையும், 10 பேர்களுக்குத் தலைவர்களையும், உங்களுக்கு ஏற்படுத்தினேன். மேலும் உங்கள் ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் அதிகாரிகளையும் கொடுத்தேன்.
16 “அந்த சமயத்தில் அந்த நீதிபதிகளிடம், ‘உங்கள் ஜனங்களுக்கு இடையிலான வாதங்களைக் கேளுங்கள். ஒவ்வொரு வழக்கிற்கும் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையாக இருங்கள். வழக்கு இரு இஸ்ரவேலர்களுக்கு இடையிலா அல்லது ஒரு இஸ்ரவேலனுக்கும் ஒரு வெளிநாட்டவனுக்கும் இடையிலா என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வழக்குகளையும் நடுநிலையுடன் தீர்க்கவேண்டும். 17 நீங்கள் நியாயம் வழங்கும்பொழுது, ஒருவன் மற்றவனைவிட முக்கியத்துவம் வாய்ந்தவன் என நினைக்கக் கூடாது. நீங்கள் அனைவரையும் சமமாகக் கருதவேண்டும். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம், ஏனெனில் உங்கள் தீர்ப்பு தேவனுடையது. ஆனால் கடினமான வழக்காயிருந்தால், என்னிடம் அவ்வழக்கைக் கொண்டு வாருங்கள். நான் நியாயம் வழங்குகிறேன்’ என்று கூறினேன். 18 அதே சமயம், நீங்கள் செய்ய வேண்டிய மற்ற எல்லாவற்றையும் உங்களுக்குக் கூறினேன்.
ஒற்றர்கள் கானானுக்கு செல்லுதல்
19 “பின் நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தோம். ஓரேப் மலையை விட்டு (சீனாய்), எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்குப் பயணம் செய்தோம். நீங்கள் கண்ட பெரியதும் கொடூரமானதுமாகிய பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்து காதேஸ்பர்னேயாவை அடைந்தோம். 20 பின் நான் உங்களிடம்: ‘நீங்கள் இப்பொழுது எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்கு வந்துள்ளீர்கள். நமது தேவனாகிய கர்த்தர் இந்நாட்டை நமக்குக் கொடுப்பார். 21 அங்கே தெரிகிறது, பாருங்கள்! நீங்கள் போய் அப்பூமியை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்! உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், நீங்கள் இதைச் செயல்படுத்துமாறு கூறினார். எனவே, பயப்படாதீர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்!’ என்று கூறினேன்.
22 “ஆனால் நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து: ‘அந்த நிலத்தைப் பார்க்க முதலில் சிலரை அனுப்புவோம். அவர்கள் அங்குள்ள வலிமையுள்ளதும், வலிமையற்றதுமாகிய இடங்களைப் பார்த்துவர இயலும். பின் அவர்கள் திரும்பி வந்து நாம் எந்த வழியாகச் செல்லவேண்டும் என்பதைத் தெரிவிப்பார்கள். மேலும் நாம் போக வேண்டிய நகரங்களையும் நமக்கு கூறுவார்கள்’ என்று சொன்னீர்கள்.
23 “அது நல்ல யோசனை என்று நான் நினைத்தேன். ஆகவே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக மொத்தம் பன்னிரெண்டு பேரைத் தேர்ந்தெடுத்தேன். 24 பின் அந்த ஆட்கள் மலை நாட்டிற்கு ஏறிச் சென்றார்கள். அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிற்கு மட்டும் சென்று அதைச் சுற்றிப் பார்த்தார்கள். 25 அங்கிருந்து சிலவகைப் பழங்களை நம்மிடம் கொண்டுவந்து கொடுத்து அந்நிலப் பகுதியைப் பற்றி நமக்குக் கூறினார்கள். அவர்கள், ‘நமது தேவனாகிய கர்த்தர், நமக்கு நல்லதொரு நாட்டினைக் கொடுக்கிறார்!’ என்று சொன்னார்கள்.
26 “ஆனால் நீங்களோ அங்கு செல்ல மறுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். 27 நீங்கள் உங்களது கூடாரங்களுக்குத் திரும்பிச்சென்று குறைகூறத் துவங்கினீர்கள். நீங்கள், ‘கர்த்தர் நம்மை வெறுக்கிறார்! எமோரிய ஜனங்கள் நம்மை அழிப்பதற்காகவே அவர் எகிப்து தேசத்திலிருந்து நம்மை வெளியேற்றினார்! 28 நாம் இப்பொழுது எங்கே செல்லமுடியும்? நம் சகோதரர்கள் (பன்னிரண்டு ஒற்றர்கள்) நம்மை பயமுறுத்திவிட்டார்கள். அவர்கள், “அங்குள்ளவர்கள் நம்மை விடவும் பலசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் இருக்கிறார்கள்! நகரங்கள் பெரியனவாயும், வானுயர்ந்த சுவர்களைக் கொண்டதாயும் உள்ளன! மேலும் நாங்கள் இராட்சதர்களை அங்கே கண்டோம்!”’ என்று சொன்னீர்கள்.
29 “ஆகவே நான் உங்களிடம்: ‘கலக்கம் அடையாதீர்கள்! அந்த ஜனங்களைக் குறித்துப் பயப்படாதீர்கள்! 30 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்னால் சென்று உங்களுக்காகப் போரிடுவார். அவர் எகிப்தில் செய்ததைப் போலவே இதையும் செய்வார், 31 அவர் பாலைவனத்தில் செய்ததைக் கண்டீர்கள். தன் மகனை ஒருவன் சுமந்து செல்வதைப்போல, தேவன் உங்களை சுமந்து சென்றதைக் கண்டீர்கள். கர்த்தர் உங்களைப் பத்திரமாக இங்கே கொண்டு வந்து சேர்த்தார்’ என்று கூறினேன்.
32 “ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் நீங்கள் நம்பவில்லை! 33 உங்கள் பயணத்தின்போது, நீங்கள் முகாம் அமைக்கத் தகுந்த இடத்தைத் தேட உங்களுக்கு முன்பாகச் சென்றார். அவர் இரவில் அக்கினியாலும், பகலில் மேகத்திலும் உங்களுக்கு வழிகாட்டிச் சென்றார்.
ஜனங்கள் கானானுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டது
34 “நீங்கள் கூறியதைக் கேட்ட கர்த்தர் கோபமடைந்து, 35 ‘இப்பொழுது உயிருடனிருக்கும் தீயவர்களாகிய உங்களில் ஒருவரும் நான் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்த பரிசுத்த பூமிக்குச் செல்லமாட்டீர்கள். 36 எப்புன்னேயின் மகனாகிய காலேப் மட்டுமே அப்பூமியைக் காண்பான். காலேப் நடந்து சென்ற பூமியை அவனுக்கும், அவனது சந்ததியினருக்கும் வழங்குவேன். ஏனென்றால் நான் கட்டளையிட்டவற்றை காலேப் மட்டுமே செய்தான்’ என்று கர்த்தர் கூறினார்.
37 “உங்கள் நிமித்தம் என்னிடமும் கர்த்தர் கோபமாயிருந்தார். அவர் என்னிடம், ‘மோசே நீயும் அந்நாட்டிற்குள் நுழைய முடியாது. 38 ஆனால் உன் உதவியாளனும், நூனின் மகனுமாகிய யோசுவாவும் அந்நாட்டிற்குச் செல்வார்கள். யோசுவாவை ஊக்கப்படுத்து, ஏனெனில் இஸ்ரவேலர்கள் அந்த நாட்டை சொந்தமாக்கிக்கொள்ள அவன் அவர்களை வழிநடத்துவான்’ என்று கூறினார். 39 மேலும் கர்த்தர் எங்களிடம், ‘உங்கள் குழந்தைகள் எதிரிகளால் தூக்கிச் செல்லப்படுவார்கள் என்று கூறினீர்கள். ஆனால், அக்குழந்தைகள் அந்நாட்டிற்குள் நுழைவார்கள். உங்கள் தவறுகளுக்காக உங்கள் குழந்தைகளை நான் குற்றஞ் சொல்லமாட்டேன் ஏனென்றால் நல்லது கெட்டது அறியாத இளம்பருவத்தினர் அவர்கள். ஆகவே அந்த நாட்டை நான் அவர்களுக்கு வழங்குகிறேன். உங்கள் குழந்தைகள் அதைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். 40 ஆனால் நீங்களோ செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச்செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
41 “பின்னர் நீங்கள், ‘கர்த்தருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம். ஆனால் இனி தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடி நாங்கள் சென்று போராடுவோம்’ என்று சொன்னீர்கள்.
“பின் நீங்கள் ஒவ்வொருவரும் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டீர்கள். மலைதேசத்தை வெற்றி கொள்வது எளிது என்று நினைத்தீர்கள். 42 ஆனால் கர்த்தர் என்னிடம், ‘மலை மீதேறி போராட வேண்டாமென்று ஜனங்களிடம் சொல். ஏனென்றால் நான் அவர்களுடன் இருக்கமாட்டேன். அவர்களை எதிரிகள் தோற்கடிப்பார்கள்!’ என்று கூறினார்.
43 “நான் உங்களிடம் அதை சொன்னேன், ஆனாலும் நீங்கள் அதைத் கேட்கவில்லை. கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். உங்கள் சுய வலிமையைப் பயன்படுத்த எண்ணி, மலை நாட்டிற்கு ஏறிச் சென்றீர்கள். 44 ஆனால் அங்கே வசித்துக்கொண்டிருந்த எமோரிய ஜனங்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டு, தேனீக் கூட்டத்தைப் போல அவர்கள் உங்களை சேயீரிலிருந்து ஓர்மா வரைக்கும் துரத்தியடித்தார்கள், 45 பின், நீங்கள் திரும்ப வந்து கர்த்தரிடம் உதவி கேட்டு அழுதீர்கள். ஆனால் உங்களுக்குச் செவிசாய்க்க தேவன் மறுத்தார். 46 எனவே நீங்கள் காதேசில் நீண்டகாலம் தங்கியிருந்தீர்கள்.
பாலைவனத்தில் இஸ்ரவேலர் அலைகின்றனர்
2 “பின் கர்த்தர் என்னிடம் சொல்லியபடி நாம் செய்தோம். செங்கடலுக்குச் செல்லும் சாலை வாழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச் சென்றோம். சேயீர் மலைகளைச் சுற்றி பல நாட்கள் அலைந்தோம். 2 பின் கர்த்தர் என்னிடம், 3 ‘இம்மலைகளைச் சுற்றி நீங்கள் அலைந்தது போதும். வடக்கே திரும்புங்கள், 4 ஜனங்களிடம் இதைச் சொல்வாயாக: நீங்கள் சேயீர் நிலப்பகுதியைக் கடந்து செல்வீர்கள். இது ஏசாவின் சந்ததியினரான உங்கள் உறவினர்களுக்கு உரியது. உங்களைக் கண்டு அவர்கள் பயப்படுவார்கள். மிகுந்த எச்சரிக்கையாயிருங்கள். 5 அவர்களுடன் சண்டையிடாதீர்கள். அவர்களுக்கு உரிமையானதில் ஒரு அடி நிலம் கூட உங்களுக்குத் தரமாட்டேன். ஏனென்றால் சேயீர் மலை நாட்டை ஏசாவிற்குச் சொந்தமாக வழங்கினேன். 6 நீங்கள் அங்கே உண்ணும் உணவிற்கும் குடிக்கும் தண்ணீருக்கும் ஏசாவின் ஜனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 7 நீங்கள் செய்த ஒவ்வொரு செயலையும் உங்கள் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இப்பெரும் பாலைவனத்தில் நீங்கள் நடந்து செல்வதை அவர் அறிவார். இந்த 40 ஆண்டு காலமும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருந்தார். உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன’ என்று கூறினார்.
8 “ஆகவே சேயீரில் வசித்த ஏசாவின் ஜனங்களாகிய நமது உறவினர்களைக் கடந்தோம். யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து ஏலாத் மற்றும் எசியோன்கே பேர் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் வழியை விட்டு விலகி மோவாப் பாலைவனத்துக்குச் செல்லும் சாலை வழியாகத் திரும்பினோம்.
ஆர் நகரில் இஸ்ரவேலர்
9 “கர்த்தர் என்னிடம், ‘மோவாப் ஜனங்களைத் துன்புறுத்த வேண்டாம், அவர்களுக்கு எதிராகப் போர் துவங்காதீர்கள். அவர்களது நிலம் எதையும் உங்களுக்குத் தரமாட்டேன். லோத்தின் சந்ததியாராகிய அவர்களுக்கு ஆர் நகரை வழங்கினேன்’ என்று கூறினார்.”
10 (கடந்த காலத்தில், ஏமிய ஜனங்கள் ஆர் நகரில் வாழ்ந்தனர்! பலசாலிகளான அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். ஏனாக்கியர்களைப் போலவே ஏமியர்களும் உயரமானவர்கள். 11 ஏனாக்கியர்கள் ரெப்பெய்தியர்களில் ஒரு பகுதியினர், ஏமியர்களும் ரெப்பெய்தியர்கள் என்றே கருதப்பட்டனர், ஆனால் மோவாப் ஜனங்கள் அவர்களை ஏமியர்கள் என்றே அழைத்தார்கள், 12 ஓரியர்களும் முன்னர் சேயீரில் வாழ்ந்தார்கள். ஆனால் ஏசாவின் ஜனங்கள் அவர்களிடமிருந்து நாட்டை எடுத்துக்கொண்டார்கள். ஓரியர்களை அழித்துவிட்டு ஏசாவின் ஜனங்கள் அவர்களது நிலத்தில் குடியேறினார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொந்தமாக கர்த்தர் வழங்கிய நிலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் செய்ததைப்போலவே ஏசாவின் ஜனங்களும் செய்தார்கள்.)
13 “கர்த்தர் என்னிடம், ‘இப்பொழுது சேரேத் பள்ளத்தாக்கின் மறுபுறம் செல்லுங்கள்’ என்று கூறினார். ஆகவே நாம் சேரேத் பள்ளத்தாக்கைக் கடந்தோம். 14 நாம் காதேஸ்பர்னேயாவை விட்டு விலகியதிலிருந்து சேரேத் பள்ளத்தாக்கைக் கடக்க 38 ஆண்டுகள் கடந்தன. நமது முகாமிலிருந்த அத்தலைமுறையைச் சேர்ந்த எல்லா போர் வீரர்களும் மரித்துவிட்டனர். அப்படி நடக்குமென்று கர்த்தர் ஆணையிட்டிருந்தார். 15 அவர்கள் மரித்து நமது முகாமை விட்டுவிலகும் வரையிலும் கர்த்தர் அந்த ஆட்களுக்கு எதிராயிருந்தார்.
16 “போர்வீரர்கள் அனைவரும் மரித்துப் போனார்கள். 17 பின் கர்த்தர் என்னிடம், 18 ‘இன்று நீங்கள் ஆர் நகர எல்லையைக் கடந்து மோவாபிற்குள் நுழையவேண்டும். 19 நீங்கள் அம்மோனிய ஜனங்களுக்கு அருகில் செல்வீர்கள், அவர்களைத் துன்புறுத்த வேண்டாம். அவர்களுடன் போரிட வேண்டாம், ஏனென்றால் அவர்களது நிலத்தை உங்களுக்குத் தரமாட்டேன் என்று கூறினார். லோத்தின் சந்ததியாராகிய அவர்களுக்கு அந்த நிலத்தைக் கொடுத்து விட்டேன்’ என்றார்.”
20 (அந்நாடும் ரெப்பாயிம் எனப்பட்டது. கடந்த காலத்தில் ரெப்பெய்தியர்கள் அங்கு வாழ்ந்தார்கள். அம்மோனிய ஜனங்கள் அவர்களைச் சம்சூமியர்கள் என்று அழைத்தார்கள். 21 பலசாலிகளான சம்சூமியர்களில் பலர் அங்கே இருந்தார்கள். ஏனாக்கிய ஜனங்களைப் போலவே அவர்களும் உயரமானவர்கள். சம்சூமியர்களை அழிக்க அம்மோனிய ஜனங்களுக்கு கர்த்தர் உதவினார். நிலங்களை வசப்படுத்திக்கொண்டு அம்மோனிய ஜனங்கள் அங்கு வசித்தார்கள். 22 ஏசாவின் ஜனங்களுக்கும் தேவன் இதையே செய்தார். கடந்த காலத்தில் சேயீரில் ஓரிய ஜனங்கள் வாழ்ந்தார்கள். ஏசாவின் ஜனங்கள் ஓரியர்களை அழித்தார்கள். ஏசாவின் சந்ததியார் இன்று வரை அங்கே வசிக்கின்றனர். 23 கெரேத்திலிருந்து வந்த ஜனங்கள் சிலருக்கும் இவ்வாறே தேவன் செய்தார். காசாவைச் சுற்றியுள்ள நகரங்களில் ஆவியர் வாழ்ந்தார்கள். ஆனால் கெரேத்திலிருந்து வந்த ஜனங்கள் சிலர் ஆவியர்களை அழித்தனர். அவர்கள் அந்த நிலங்களை வசப்படுத்திக்கொண்டு இதுவரையிலும் வசித்து வருகின்றனர்.)
எமோரியர்களுடன் போர்
24 “கர்த்தர் என்னிடம், ‘அர்னோன் பள்ளத்தாக்கைக் கடந்து செல்லத் தயாராகுங்கள். எஸ்போனின் அரசனாகிய சீகோன் என்னும் எமோரியர்களை நீங்கள் தோற்கடிக்கச் செய்து, அவனது நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்குவேன். ஆகவே அவனுடன் போரிட்டு அவனது நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். 25 உங்களைக் கண்டு எங்குமுள்ள ஜனங்களனைவரையும் பயப்படச் செய்வேன். அவர்கள் உங்களைப் பற்றிய செய்திகளை கேட்டு, பயந்து நடுங்குவார்கள்’ என்று கூறினார்.
26 “நாம் கெதெமோத் பாலைவெளியில் தங்கியிருந்தபொழுது, எஸ்போனின் அரசனாகிய சீகோனிடம் நான் தூதர்களை அனுப்பினேன், அந்தத் தூதுவர்கள் சமாதான வார்த்தைகளை கேட்டு சீகோனிடம், 27 ‘உங்கள் நாட்டின் வழியாக எங்களைப் போகவிடுங்கள். நாங்கள் சாலைகளிலேயே இருப்போம். சாலையின் வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பமாட்டோம். 28 நாங்கள் உண்ணும் உணவுக்கோ, அல்லது குடிக்கும் தண்ணீருக்கோ வெள்ளிக் காசுகளைத் தருகிறோம். உங்கள் நாட்டின் வழியாகச் செல்வதற்கு மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். 29 யோர்தான் நதியைக்கடந்து நமது தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு வழங்கும் நிலத்தை அடையும்வரை உங்கள் நாட்டின் வழியாகப் பயணம் செய்ய விரும்புகிறோம். சேயீரில் வசிக்கும் ஏசாவின் ஜனங்களும் ஆர் நகரில் வசிக்கும் மோவாப் ஜனங்களும் எங்களை அவர்களது நாடுகளின் வழியாகப் பயணம் செய்ய அனுமதித்தார்கள்’ என்று கூறினார்கள்.
30 “ஆனால் எஸ்போனின் அரசன் சீகோன், நம்மை அவனது நாட்டின் வழியாக செல்ல அனுமதிக்கவில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் அவனை மிகவும் பிடிவாதமாக இருக்கச் செய்தார். சீகோனை நீங்கள் தோற்கடிக்கவே கர்த்தர் இவ்வாறு செய்தார். அது மெய்யாகவே நடந்ததை இன்று நாம் அறிவோம்!
31 “கர்த்தர் என்னிடம், ‘அரசன் சீகோனையும் அவனது நாட்டையும் உங்களுக்குத் தருகிறேன். அவனது நாட்டைச் சென்று எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்று கூறினார்.
32 “பின்னர் அரசன் சீகோனும் அவனது குடிமக்கள் அனைவரும் யாகாசில் நம்முடன் போரிட வந்தார்கள். 33 ஆனால் நமது தேவனாகிய கர்த்தர் அவனை நம்மிடம் ஒப்புக்கொடுத்தார். அரசன் சீகோன், அவனது குமாரர்கள், மற்றும் அவனது குடிமக்கள் அனைவரையும் நாம் தோற்கடித்தோம். 34 அப்பொழுது சீகோனுக்குச் சொந்தமாயிருந்த எல்லை நகரங்களையும் நாம் அழித்தோம். எல்லா நகரங்களிலுமிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய அனைவரையும் அழித்தோம். எவரையும் உயிருடன் விட்டு வைக்கவில்லை! 35 அந்நகரங்களிலிருந்த கால்நடைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டோம், 36 அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்த ஆரோவேரையும் அப்பள்ளத்தாக்கின் மையத்திலிருந்த வேறொரு நகரையும் வென்றோம். அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து கீலேயாத் வரைக்குமான எல்லா நகரங்களையும் வெல்லும் வல்லமையை கர்த்தர் நமக்குக் கொடுத்தார். எந்த நகரமும் நம்மைவிட வலிமையில் மிஞ்சியிருக்கவில்லை. 37 ஆனால் அம்மோனிய ஜனங்களின் நாட்டிற்கு அருகில் நீ செல்லவில்லை. யாபோக் ஆற்றங்கரைக்கு அருகிலோ அல்லது மலை நாட்டின் நகரங்களுக்கு அருகிலோ நீ செல்லவில்லை. நமது தேவனாகிய கர்த்தர் நமக்குத் தராத எந்த இடத்திற்கு அருகிலும் நீ செல்லவில்லை.
பாசான் ஜனங்களுடன் போர்
3 “நாம் பாசானுக்குச் செல்லும் சாலையில் திரும்பிச் சென்றோம். பாசானின் அரசன் ஓக்கும், அவனது ஆட்கள் அனைவரும் எத்ரேயில் எங்களுடன் சண்டையிட வந்தார்கள். 2 கர்த்தர் என்னிடம், ‘ஓக்கைக் கண்டுப் பயப்படாதீர்கள். அவனை உங்களிடம் ஒப்புக்கொடுப்பேன். அவனது ஆட்கள், அவனது நிலம் அனைத்தையும் உங்களிடம் தருவேன். எஸ்போனை ஆண்ட எமோரிய மன்னன் சீகோனைத் தோற்கடித்தது போலவே ஓக்கையும் நீங்கள் தோற்கடிப்பீர்கள்’ என்று கூறினார்.
3 “ஆகவே நமது தேவனாகிய கர்த்தர் பாசானின் அரசனான ஓக்கைத் தோற்கடிக்கச் செய்தார். அவனையும் அவனுடைய ஆட்கள் அனைவரையும் அழித்தோம். ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. 4 அப்பொழுது ஓக்கிற்குச் சொந்தமாயிருந்த எல்லா நகரங்களையும் கைப்பற்றினோம். அவை அர்கோப் பிரதேசத்தில் ஓக்கின் பாசான் நாட்டைச் சேர்ந்த 60 நகரங்கள். 5 அந்நகரங்கள் அனைத்தும் வலிமை வாய்ந்தவையாக இருந்தன. அவை உயர்ந்த மதில்களையும், உறுதியான கதவுகளையும், வலிமையான தாழ்ப்பாள்களையும் கொண்டிருந்தன. 6 சுவர்கள் இல்லாத பல நகரங்களும் இருந்தன. எஸ்போனின் அரசனாகிய சீகோனின் நகரங்களை அழித்ததுபோலவே அவற்றையும் அழித்தோம். எல்லா நகரங்களையும் அவற்றிலிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்து ஜனங்களையும் அழித்தோம். 7 ஆனால் அந்நகரங்களிலிருந்த எல்லாப் பசுக்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் நமக்காக வைத்துகொண்டோம்.
8 “அவ்வாறு, இரண்டு எமோரிய அரசர்களின் நிலத்தைக் கைப்பற்றினோம். அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் அந்நிலத்தைக் கைப்பற்றினோம். 9 (சீதோனிலிருந்து வந்த ஜனங்கள் எர்மோன் மலையை சீரியோன் என்றழைத்தார்கள். ஆனால் எமோரியர்களோ அதை சேனீர் என்றழைத்தார்கள்.) 10 உயர்ந்த சமவெளியிலிருந்த எல்லா நகரங்களையும் கீலேயாத்தையும் நாம் எடுத்துக்கொண்டோம். சல்க்காயி துவங்கி எத்ரேயி வரைக்கும் பாசானின் எல்லாப் பகுதிகளையும் எடுத்துக்கொண்டோம். பாசானின் அரசன் ஓக்கின் ஆட்சியில் சல்க்காயிவும் எத்ரேயும் நகரங்களாயிருந்தன.”
11 (பாசானின் அரசன் ஓக் அதுவரைக்கும் வாழ்ந்திருந்த மிகச்சில ரெபெய்தியர்களில் ஒருவன். ஓக்கின் படுக்கை இரும்பாலானது. அது 13 அடிக்கும் அதிக நீளமும் 6 அடி அகலமும் உடையது. அந்தப் படுக்கை அம்மோனிய ஜனங்கள் வசிக்கும் ரப்பா நகரில் இன்னமும் உள்ளது.)
யோர்தான் நதியின் கிழக்குப் பகுதி
12 “எனவே அந்நிலத்தை நமக்கு சொந்தமாக்கிக்கொண்டோம். ரூபன் மற்றும் காத் ஆகியோரின் கோத்திரத்திற்கு அந்நிலத்தின் பகுதியை நான் தந்தேன். நான் அவர்களுக்கு அர்னோன் பள்ளத்தாக்கின் ஆரோவேர் முதல் கீலேயாத் மலைநாடு வரைக்குமான நிலப்பகுதியை அதில் இருந்த நகரங்கள் உள்ளாகக் கொடுத்தேன். கீலேயாத் மலைநாட்டின் பாதி அவர்களுக்குக் கிடைத்தது. 13 கீலேயாத்தின் மற்றொரு பாதியையும் பாசான் முழுவதையும், மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த பாதிப்பேர்களுக்கு கொடுத்தேன்.”
(பாசான் ஓக்கின் ஒரு இராஜ்யம். பாசானின் ஒரு பகுதி அர்கோப் எனப்பட்டது. அது ரெப்பாயிம் நாடு என்றும் அழைக்கப்பட்டது. 14 அர்கோப் நிலப் பகுதி முழுவதையும் (பாசான்) மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் எடுத்துக்கொண்டான். கேசூரிய ஜனங்களும் மாகாத்திய ஜனங்களும் வசித்த எல்லை வரைக்கும் அந்நிலப் பகுதி பரவியிருந்தது. அதற்கு யாவீரின் பெயரிடப்பட்டது. ஆகவே இன்றைக்கும், ஜனங்கள் பாசானை யாவீரின் நகரங்கள் என்றழைக்கின்றனர்.)
15 “நான் கீலேயாத்தை மாகீருக்குக் கொடுத்தேன். 16 மேலும் கீலேயாத்திலிருந்து துவங்கும் நிலப்பகுதியை ரூபன் கோத்திரத்திற்கும், காத் கோத்திரத்திற்கும் கொடுத்தேன். இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து யாப்போக் நதிவரைக்கும் உள்ளது. பள்ளத்தாக்கின் நடுப்பகுதி ஒரு எல்லை. யாப்போக் நதி அம்மோனிய ஜனங்களின் எல்லை. 17 பாலைவனத்தின் அருகில் உள்ள யோர்தான் நதி அவர்களின் மேற்கு எல்லை. இப்பகுதிக்கு வடக்கே கலிலேயாவும் தெற்கே சவக்கடலும் (உப்புக்கடல்) உள்ளன. இப்பகுதி கிழக்கிலுள்ள பிஸ்கா சிகரங்களின் கீழுள்ளது.
18 “அச்சமயம், நான் அந்தக் கோத்திரங்களுக்கு இக்கட்டளையைக் கொடுத்தேன். அதாவது, ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிப்பதற்காக யோர்தான் நதியின் இப்பகுதியில் உள்ள நிலத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், உங்களில் உள்ள போர் வீரர்கள் தம் ஆயுதங்களை ஏந்தி மற்றுமுள்ள பிற இஸ்ரவேல் கோத்திரங்கள் யோர்தான் நதியைக் கடக்க உதவி செய்ய வேண்டும். 19 நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நகரங்களில் உங்கள் மனைவிகளும், சிறு குழந்தைகளும், ஆடுமாடுகளும், (உங்களிடம் ஏராளமான கால்நடைகள் இருப்பதை நான் அறிவேன்.) தங்கியிருக்க வேண்டும். 20 ஆனால் உங்கள் உறவினரான மற்ற இஸ்ரவேலருக்கு கர்த்தர் யோர்தான் நதியின் மறுபுறம் வசிப்பதற்காக நிலங்களை வழங்கும் வரையிலும் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உங்களுக்குத் தந்ததைப் போலவே, கர்த்தர் அவர்களுக்கும் அங்கு அமைதியைத் தருகிறவரையிலும் அவர்களுக்கு உதவுங்கள். பின் நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நிலப் பகுதிக்கு நீங்கள் திரும்பி வரலாம்.’
21 “பிறகு நான் யோசுவாவிடம், ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் இவ்விரு அரசர்களுக்கும் செய்த அனைத்தையும் நீ பார்த்திருக்கிறாய். நீ நுழையும் எல்லா நாடுகளிலும் கர்த்தர் அவ்வாறே செய்வார். 22 அந்நாட்டு அரசர்களைக் கண்டு நீ பயப்படாதே, ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்’ என்று கூறினேன்.
மோசே கானானுக்குள் நுழைவதற்கு தடை
23 “பின் எனக்கென்று சிறப்பாக எதையேனும் செய்யுமாறு நான் கர்த்தரை வேண்டினேன். 24 நான், ‘கர்த்தராகிய என் ஆண்டவரே, நான் உமது அடிமை. நீர் செய்யப் போகும் அற்புதமும் வல்லமையுமான செயல்களின் ஒரு சிறு பகுதியை மட்டுமே எனக்குக் காட்டியிருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் செய்துள்ள மாபெரும் வல்லமை மிக்க செயல்களை செய்யத்தக்க வேறொரு தேவன் விண்ணுலகிலோ, பூமியிலோ இல்லை! 25 தயவுசெய்து என்னை யோர்தான் நதியைக் கடந்துசென்று, அதன் மறுபுறம் உள்ள நற்பகுதியைக் காணவிடும். அழகான மலைநாட்டினையும் லீபனோனையும் என்னைப் பார்க்கவிடும்’ என்று வேண்டினேன்.
26 “ஆனால் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்னிடம் கோபமாயிருந்தார். அவர் எனக்கு செவிசாய்க்கவில்லை. கர்த்தர் என்னிடம், ‘போதும் நிறுத்து! இதைப்பற்றி மேலும் பேசாதே. 27 பிஸ்கா மலையின் மீது ஏறிச் செல். மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளில் பார், நீ இவற்றை உன் கண்களால் பார்க்கலாம். ஆனால் நீ ஒருபோதும் யோர்தான் நதியைக்கடக்க முடியாது. 28 நீ யோசுவாவிற்கு கட்டளைக் கொடுத்து, அவனை ஊக்கப்படுத்து, திடப்படுத்து! நீ அந்நாட்டைப் பார்க்கலாம், ஆனால் யோசுவாவே இஸ்ரவேலரை அங்கு வழிநடத்திச் செல்வான். அவர்கள் அந்நாட்டைக் கைப்பற்றவும், அங்கு வாழவும் யோசுவா உதவுவான்’ என்று கூறினார்.
29 “பின்பு நாம் பெத்பெயரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.
தேவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு மோசே ஜனங்களுக்குக் கூறுகிறான்
4 “இஸ்ரவேல் ஜனங்களே, இனி நான் போதிக்கும் கட்டளைகளையும், நியாயங்களையும் கவனியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நீங்கள் வாழலாம். பிறகு உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் நிலத்தை, சென்று எடுத்துக்கொள்ளுங்கள். நான் இடும் கட்டளைகளுடன் எதையும் நீங்கள் சேர்க்கவும் கூடாது. மேலும் எதையும் (நீங்கள்) நீக்கவும் கூடாது. 2 நான் உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.
3 “பாகால்பேயோரின் நிமித்தம், கர்த்தர் என்ன செய்தார் என்று பார்த்தீர்கள். பொய்த் தெய்வங்களான அங்குள்ள பாகாலை வழிபட்ட உங்கள் ஜனங்கள் அனைவரையும், உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கே அழித்தார். 4 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருந்த நீங்கள் அனைவரும் இன்று உயிருடன் இருக்கின்றீர்கள்.
5 “என் தேவனாகிய கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படி உங்களுக்கு கட்டளைகளையும், நியாயங்களையும் போதித்தேன். நீங்கள் நுழையவும் வசப்படுத்தவும் தயாராகவுள்ள எந்த நாட்டிலும் அச்சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென்பதற்காகவே நான் அவற்றைப் போதித்தேன், 6 எச்சரிக்கையுடன் இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் அறிவும், ஞானமும் உள்ளவர்கள் என்பதை இது மற்ற நாட்டு ஜனங்களுக்கு எடுத்துக்காட்டும். அந்நாட்டு ஜனங்களும் இச்சட்டங்களைக் கேள்விப்படும்போது, ‘உண்மையிலேயே, இந்த பெரிய ஜனத்தின் (இஸ்ரவேலர்) ஜனங்கள் ஞானமுள்ளவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள்.
7 “நாம் உதவி கேட்கும்பொழுது தேவனாகிய கர்த்தர் நமது அருகில் இருக்கிறார். வேறெந்த நாட்டிற்கும் அவரைப்போல ஒரு தேவன் இல்லை! 8 நான் இன்று உங்களுக்கு வழங்கும் போதனைகளைப் போன்று நீதியான சட்டவிதிகள் வேறு எந்த பெரிய ஜனத்துக்கும் இல்லை. 9 ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவைகள் உங்கள் இதயத்திலிருந்து நீங்காதபடிக்கு காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும். 10 ஓரேப் மலையில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் நின்றதை நினைத்துப்பாருங்கள். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்வதைக் கேட்க ஜனங்களை ஒன்று கூட்டு. பின்னர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் எனக்குப் பயந்து மதிப்பளிக்க கற்பார்கள். மேலும் இவற்றை அவர்கள் தமது குழந்தைகளுக்குக் கற்பிப்பார்கள்’என்று கூறினார். 11 நீங்கள் நெருங்கிவந்து மலையின் கீழ்ப்பகுதியில் நின்றீர்கள். தீப்பற்றி மலை வான உயரத்திற்கு எரிந்தது. கரிய மேகங்கள் சூழ்ந்து இருண்டது. 12 பின் நெருப்பிலிருந்து கர்த்தர் உங்களிடம் பேசினார். யாரோ பேசும் குரலை நீங்கள் கேட்டீர்கள். ஆனால் உருவம் எதையும் நீங்கள் பார்க்கவில்லை. குரல்மட்டுமே கேட்டது. 13 கர்த்தர் உங்களிடம் தமது உடன்படிக்கையைச் சொன்னார். அவர் பத்துக் கட்டளைகளைக் கூறி, அவற்றிற்குக் கீழ்ப்படியச் சொன்னார். அந்த உடன்படிக்கையின் சட்டங்களை கர்த்தர் இரு கற்பலகைகளில் எழுதினார். 14 அதே சமயம், நீங்கள் எடுத்துக்கொண்டு வாழப்போகும் நாடுகளில், நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை உங்களுக்குப் போதிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.
15 “ஒரேப் மலை மீது நெருப்பிலிருந்து கர்த்தர் உங்களுடன் பேசிய நாளில், நீங்கள் அவரைப் பார்க்கவில்லை. ஏனென்றால் தேவனுக்கு உருவமில்லை. 16 எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எந்த உயிரினத்தின் வடிவத்திலும் சிலைகளையோ பொய்யான தெய்வங்களை உருவாக்கும் பாவத்தைச் செய்து உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள். ஆண் அல்லது பெண் போன்ற சிலைகளைச் செய்யாதீர்கள். 17 நிலத்தில் வாழும் ஒரு மிருகத்தைப்போலவோ அல்லது வானில் பறக்கும் ஒரு பறவையைப் போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள். 18 நிலத்தில் ஊர்பவை அல்லது கடலில் உள்ள மீனைப்போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள். 19 வானத்தைப் பார்க்கும் பொழுதும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் வானில் உள்ள பல்வேறு பொருட்களைப் பார்க்கும் பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள். அவற்றைத் தொழுதுகொள்ளவும், சேவை செய்யவும் தூண்டப்படாதிருக்க எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உலகின் மற்ற ஜனங்களை அவ்வாறு செய்யும்படி விட்டிருக்கிறார். 20 ஆனால் கர்த்தர் எகிப்திலிருந்து உங்களை வெளியேற்றி தமது சிறப்பான ஜனமாக்கியுள்ளார். இது, இரும்பை உருக்கும் வெப்பமிக்க உருக்காலையிலிருந்து [a] உங்களை வெளியே இழுத்துப்போட்டது போலாகும். இப்பொழுதோ நீங்கள் அவருடைய ஜனங்கள்!
21 “உங்களால் என்மீது கோபங்கொண்ட கர்த்தர், நான் யோர்தான் நதியைக் கடக்க இயலாது என்று ஆணையிட்டார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் சிறப்பான நாட்டிற்குள் நான் கடந்து போவதில்லை” என்றார். 22 ஆகவே நான் இங்கேயே மரிக்க வேண்டும். ஆனால் நீங்களோ விரைவில் யோர்தான் நதியைக் கடந்து நல்ல நிலப்பகுதியைக் கைப்பற்றி அங்கு வாழ்வீர்கள். 23 அப்புதிய பூமியில், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நீங்கள் மறக்கக்கூடாது. கர்த்தருடைய கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். எந்த உருவிலும் விக்கிரகங்களைச் செய்யாதீர்கள். 24 ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தம் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கிறார். அழிக்கும் அக்கினியாகவும் கர்த்தர் விளங்குவார்!
25 “அந்நாட்டில் நீங்கள் நீண்டகாலம் வசிப்பீர்கள். அங்கே குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் பெறுவீர்கள். அங்கு நீங்கள் முதுமையடைவீர்கள். பின் எல்லா வகையான விக்கிரகங்களையும் செய்து உங்கள் வாழ்க்கையை பாழாக்குவீர்கள். நீங்கள் அவ்வாறுச் செய்யும்போது, தேவனுக்கு மிகுந்த கோபமூட்டுவீர்கள்! 26 ஆகவே இப்பொழுதே நான் உங்களை எச்சரிக்கிறேன். பரலோகமும் பூமியும் எனக்குச் சாட்சி! அக்கொடியச் செயலை நீங்கள் செய்தால் விரைவில் அழிக்கப்படுவீர்கள். அப்பூமியைக் கைப்பற்ற நீங்கள் யோர்தான் நதியை இப்பொழுது கடக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் ஏதேனும் விக்கிரகங்களைச் செய்தால், அங்கே நீங்கள் நீண்ட காலம் வசிக்கமாட்டீர்கள். இல்லை, நீங்கள் முழுவதுமாக அழிக்கப்படுவீர்கள்! 27 கர்த்தர் உங்களைப் பல நாடுகளில் சிதறடிப்பார். கர்த்தர் உங்களை அனுப்பும் நாடுகளுக்குச் செல்ல உங்களில் வெகுசிலரே மீதியாயிருப்பீர்கள். 28 அங்கே மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்டு பார்க்கவோ, கேட்கவோ, உண்ணவோ அல்லது நுகரவோ சக்தியற்ற, மனிதர்களால் உருவாக்கப்பட்ட தெய்வங்களுக்குச் சேவை செய்வீர்கள். 29 ஆனால் மற்ற நாடுகளில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் முழு மனதுடனும் முழு இருதயத்துடனும் தேடினால் அவரைக் கண்டடைவீர்கள். 30 நீங்கள் துன்பமடைகிற பொழுது, இவைகளெல்லாம் உங்களுக்கு நேரும்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புவீர்கள். அவருக்குக் கீழ்ப்படிவீர்கள். 31 உங்கள் தேவனாகிய கர்த்தர் கருணைமிக்க தேவன், உங்களை அங்கே விட்டுவிடமாட்டார் அவர் உங்களை முழுமையாக அழிக்கமாட்டார். உங்கள் முற்பிதாக்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையை மறக்கமாட்டார்.
தேவன் செய்த பெரும் செயல்களை நினையுங்கள்
32 “இதைப்போன்ற பெரிய செயல் ஏதும் இதற்கு முன் நடந்ததுண்டா? இல்லவே இல்லை. கடந்த காலத்தைப் பாருங்கள். நீங்கள் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்தையும் சிந்தித்துப் பாருங்கள். பூமியில் தேவன் மனிதர்களைப் படைத்த காலம் வரைக்கும் பின்னோக்கிப் பாருங்கள். இவ்வுலகில் நடந்த எல்லாவற்றையும் பாருங்கள். இப்படிப்பட்ட பெரிய காரியம் எதனையும் யாரும் கேள்விப்பட்டதுண்டா? இல்லை! 33 தேவன் அக்கினியிலிருந்து உங்களுடன் பேசியதைக் கேட்டும் உயிருடன் இருக்கிறீர்கள்! வேறெவருக்கேனும் அவ்வாறு நடந்ததுண்டா? இல்லை! 34 மேலும் வேறு எந்த தேவனும் ஒரு நாட்டிற்குள் நுழைந்து தன் ஜனங்களை தனக்காகத் தேர்ந்தெடுக்க முயன்றதுண்டா? இல்லை! ஆனால் இந்த அற்புதச் செயல்களை உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்ததை நீங்களே கண்டீர்கள்! தன் வல்லமையையும் பலத்தையும் உங்களுக்குக் காண்பித்தார். ஜனங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைக் கண்டீர்கள். அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டீர்கள். போரையும், கொடுஞ் செயல்கள் ஏற்பட்டதையும் பார்த்தீர்கள். 35 கர்த்தர் அவர் தேவன் என்பதை நீங்கள் அறியவே அவற்றை நிகழ்த்தினார். அவரைப் போல் வேறொரு தேவன் இல்லை! 36 உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க பரலோகத்திலிருந்து நீங்கள் அவரது குரலைக் கேட்க வைத்தார். பூமியின் மீது அவருடைய பெரும் நெருப்பை நீங்கள் காணும்படிச் செய்து, அதிலிருந்து உங்களுடன் பேசினார்.
37 “கர்த்தர் உங்கள் முற்பிதாக்களை நேசித்தார். அதனால்தான், அவர்களின் சந்ததியினரான உங்களைத் தேர்ந்தெடுத்தார். அதனாலேயே கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார். அவர் உங்களுடன் இருந்து, தமது பெரும் வல்லமையினால் உங்களை வெளியேற்றினார். 38 நீங்கள் முன்னேறியபொழுது, உங்களைவிடவும் பெரியதும் வலிமை மிக்கதுமான ஜனங்களை கர்த்தர் வெளியில் துரத்தினார். அந்நாடுகளுக்குள் உங்களை வழிநடத்தினார். நீங்கள் வாழ்வதற்காக உங்களுக்கு அவர்களுடைய நாடுகளைக் கொடுத்தார். இன்றும் அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்.
39 “ஆகவே கர்த்தரே தேவன் என்பதை நீங்கள் இன்று உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும். மேலேயுள்ள பரலோகத்திலும், கீழேயுள்ள பூமியிலும் அவரே தேவன். வேறு தேவன் இல்லை! 40 நான் உங்களுக்கு இன்று தரும் அவரது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்கும் உங்களுக்குப் பின் வசிக்கப்போகும் உங்கள் குழந்தைகளுக்கும் ஒவ்வொன்றும் நல்லபடியாக நடக்கும். உங்களுக்கே எப்பொழுதும் சொந்தமாக உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கும் நாட்டில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள். இது என்றும் உங்களுடையதாயிருக்கும்!” என்றான்.
பாதுகாப்பு நகரங்களை மோசே தேர்ந்தெடுத்தல்
41 பின் யோர்தான் நதியின் கிழக்குத் திசையில் மோசே மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுத்தான். 42 ஒருவன் முற்பகையின்றி மற்றவனைக் கைத்தவறி கொலை செய்தால், அவன் அம்மூன்று நகரங்களில் ஒன்றுக்குள் கொல்லப்படாமல் ஓடிவிடலாம். ஆனால் அவன் மற்றவனை வெறுக்காமலும், வேண்டுமென்றே கொலை செய்யாதிருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கமுடியும். 43 மோசே தேர்ந்தெடுத்த மூன்று நகரங்களாவன: ரூபனின் கோத்திரத்திற்குரிய உயரமான சமவெளியில் உள்ள பேசேர், காத்தின் கோத்திரத்திற்குரிய கீலேயாத்தில் உள்ள ராமோத் மற்றும் மனாசேயின் கோத்திரத்திற்குரிய பாசானில் உள்ள கோலான் ஆகியவையாகும்.
மோசேயின் சட்டங்களுக்கான அறிமுகம்
44 தேவனின் சட்டங்களை மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தான். 45 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வெளியேறியபின், மோசே இப்போதனைகளையும் பிரமாணங்களையும் தந்தான். 46 அவர்கள் பெத்பேயோரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் யோர்தான் நதிக்குக் கிழக்கில் இருந்தபொழுது, மோசே இச்சட்டங்களை அவர்களுக்கு வழங்கினான். எஸ்போனில் வசித்த எமோரிய அரசனாகிய சீகோனின் நாட்டில் அவர்கள் இருந்தார்கள். (எகிப்திலிருந்து வெளியேறிய பொழுது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் சீகோனைத் தோற்கடித்தனர். 47 அவர்கள் சீகோனின் தேசத்தைப் பிடித்துக்கொண்டார்கள். மேலும் பாசானின் அரசனாகிய ஓக்கின் தேசத்தையும் அவர்கள் கைப்பற்றினார்கள். இவ்விரு எமோரிய அரசர்களும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் வசித்தார்கள். 48 இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஆரோவேர் முதல் சிரியோன் மலை (எர்மோன் மலை) வரையிலும் பரவியுள்ளது. 49 யோர்தான் நதியின் கிழக்கில் யோர்தான் பள்ளத்தாக்கு முழுவதையும் இந்நிலப்பகுதி உள்ளடக்கியுள்ளது. இது தெற்கில் சவக்கடல் வரையிலும் கிழக்கில் பிஸ்கா மலையின் அடிவாரம் வரையிலும் பரவியுள்ளது.)
பத்துக் கட்டளைகள்
5 மோசே இஸ்ரவேல் ஜனங்கள்
அனைவரையும் அழைத்து அவர்களிடம், “இஸ்ரவேல் ஜனங்களே! நான் இன்று உங்களிடம் கூறும் சட்டங்களையும் நியாயங்களையும் நன்றாகக் கவனித்துக் கேளுங்கள். நீங்கள் அவற்றை மனதில் கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும். 2 நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் நம்மோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். 3 கர்த்தர் இந்த உடன்படிக்கையை நமது முற்பிதாக்களுடன் செய்து கொள்ளாமல், இன்று உயிரோடு வாழ்கின்ற நம் எல்லோருடனுமே செய்துகொண்டார். 4 மலையிலே கர்த்தர் உங்களிடம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசினார். அவர் அக்கினியின் நடுவிலிருந்து உங்களிடம் பேசினார். 5 ஆனால், அந்த அக்கினியைக் கண்டு நீங்கள் பயந்தீர்கள். அதனால் நீங்கள் மலையில் ஏறாமல் இருந்தீர்கள். எனவே, கர்த்தர் சொல்வதை உங்களுக்கு அறிவிக்க நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவில் நின்றேன். அப்பொழுது கர்த்தர் சொன்னார்:
6 ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் எகிப்தில் உங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை வெளியேறச் செய்தேன். எனவே நான் கூறும் இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.
7 ‘என்னைத் தவிர அந்நிய தெய்வங்களை நீங்கள் தொழுதுகொள்ளக்கூடாது.
8 ‘மேலே ஆகாயத்திலோ, கீழே பூமியிலோ அல்லது பூமிக்குக் கீழே தண்ணீரிலோ உள்ளவைகளின் சிலைகளையோ உருவங்களையோ உண்டாக்கக்கூடாது. 9 நீங்கள் எத்தகைய விக்கிரகங்களையும் தொழுதுகொள்ளவோ, சேவிக்கவோ வேண்டாம். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்! என் ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நான் வெறுக்கின்றேன். எனக்கு எதிராக அவ்வாறு பாவம் செய்யும் ஜனங்கள் என் எதிரிகள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் அவர்களின் குழந்தைகளையும்கூடத் தண்டிப்பேன். 10 ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்!
11 ‘உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பெயரைத் தவறான வழியில் பயன்படுத்தாதே. அவ்வாறு, ஒருவன் கர்த்தருடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் அவன் தண்டிக்கப்படுவான். அவன் கர்த்தரால் குற்றமற்றவனாகக் கருதப்படமாட்டான்.
12 ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வு நாட்களைப் பரிசுத்தமாகக் கழிப்பாயாக. 13 வாரத்திற்கு ஆறு நாட்கள் உன் வேலைக்குரிய கிரியைகளைச் செய். 14 ஆனால், ஏழாவது நாளோ உங்கள் தேவனாகிய கர்த்தருக்கான ஓய்வுநாள். எனவே, அந்த நாளில் யாரும் வேலை செய்யக்கூடாது. நீ மட்டுமின்றி, உனது மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், உன் வீட்டிலுள்ள மாடு, கழுதை மற்றும் பிற விலங்குகளும்கூட வேலைச் செய்யக்கூடாது. உன் வீட்டிலிருக்கின்ற அந்நியர்களும் யாதொரு வேலையும் செய்யக்கூடாது. நீ ஓய்வு எடுப்பது போல உன் அடிமைகள் எல்லோருமே ஓய்வு எடுக்க வேண்டும். 15 நீங்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவரது ஆற்றல் மிகுந்த கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தார். உங்களை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரமாக்கினார். இதனாலேயே ஓய்வுநாளை எப்போதும் விசேஷித்த நாளாக செய்யும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டார்.
16 ‘உன் தாய், தந்தைக்கு மரியாதை செலுத்த வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீ இதைச் செய்வதற்குக் கட்டளையிட்டுள்ளார். நீ இந்தக் கட்டளையைப் பின்பற்றினால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உனக்கு அளிக்கும் நாட்டிலே உன்னை நீண்ட நாள் வாழச் செய்வார்.
17 ‘யாரையும் கொலை செய்யாதிருக்க வேண்டும்.
18 ‘விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்யாதே.
19 ‘எந்த ஒரு பொருளையும் திருடக்கூடாது.
20 ‘பிறருக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லக்கூடாது.
21 ‘பிறருடைய மனைவி மீது ஆசைகொள்ளாதே. பிறரது வீட்டையும், அவரது நிலத்தையும், அவரது வேலைக்காரன் வேலைக்காரிகளையும், அவனது மாடு அல்லது கழுதைகளையும் விரும்பக்கூடாது. மற்றவர்களிடம் உள்ள எந்த ஒரு பொருளையும் எடுத்துக்கொள்ள ஆசைப்படக்கூடாது’” என்றான்.
தேவனைக் கண்டு ஜனங்கள் பயந்தனர்
22 மோசே, “இந்தக் கட்டளைகளை கர்த்தர் மலையிலே உங்கள் எல்லோர் முன்னிலையிலுமே வழங்கினார். அக்கினியிலிருந்தும், மேகத்திலிருந்தும், இருளிலிருந்தும் மகா சத்தமாகவே கர்த்தர் பேசினார். அவர் வழங்கிய இக்கட்டளைகளைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை. அவர் இந்தக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார்.
23 “மலை அக்கினியால் எரிந்தபோது இருளிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள். பின்பு மூப்பர்களும் உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் என்னிடம் வந்தார்கள். 24 அவர்கள், ‘நமது தேவனாகிய கர்த்தர் அவரது மகிமையையும், பெருமைகளையும் காண்பித்தார். நாம் அவர் அக்கினியிலிருந்து பேசியதைக் கேட்டோம். தேவன் மனிதனோடு பேசியும் அவர் உயிரோடு வாழ்வதை இந்நாளில் கண்டோம். 25 ஆனால், இங்கே மீண்டும் நமது தேவனாகிய கர்த்தர் பேசுவதைக் கேட்டோமானால் நாம் மரிப்பது உறுதி. அந்த பயங்கரமான அக்கினியானது நம்மை அழித்துவிடும். நாம் மரிக்க விரும்பவில்லை. 26 நாம் கேட்டதுபோல் அக்கினியின் நடுவே இருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை வேறு யாராவது கேட்டு உயிரோடிருந்ததுண்டோ! 27 மோசே, நீ நெருங்கிச் சென்று, நமது தேவனாகிய கர்த்தர் கூறும் எல்லாவற்றையும் கேட்க வேண்டும். பின் கர்த்தர் உம்மிடம் கூறிய எல்லாவற்றையும் எங்களிடம் சொல்ல வேண்டும். நாங்கள் நீர் சொல்வதைக் கேட்டு அதன்படியே செய்வோம்’ என்றீர்கள்.
கர்த்தர் மோசேயிடம் பேசுகிறார்
28 “கர்த்தர் நீங்கள் என்னோடு பேசியதைக் கேட்டுக்கொண்டு, அவர் என்னிடம் சொன்னது, ‘இந்த ஜனங்கள் உன்னோடு பேசியதை எல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொன்னது எல்லாமே நன்றாகவே இருந்தன. 29 நான் விரும்புவதெல்லாம் அவர்களது சிந்தனை வழிமாறாமல் என்னை மதித்து எனக்குக் கீழ்ப்படிந்து, எனது கட்டளைகளை எல்லாம் பின்பற்றக்கூடிய மனஉறுதியைப் பெறவேண்டும். அப்போது அவர்களுக்கு எல்லாவற்றிலும் நன்மை உண்டாயிருக்கும். அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது சந்ததிகளுக்கும் என்றென்றைக்கும் அனைத்தும் நன்றாய் அமையும்.
30 “‘நீ சென்று அந்த ஜனங்களிடம், அவர்களது கூடாரங்களுக்குத் திரும்பிப் போகச் சொல், 31 ஆனால் நீயோ இங்கே எனது அருகிலேயே நில். நான் உன்னிடம் எல்லா கட்டளைகளையும், சட்டங்களையும் நியாயங்களையும் சொல்லுகிறேன். அவற்றை நீ அவர்களுக்குப் போதிக்க வேண்டும். நான் அவர்கள் வாழும்படி கொடுத்த நிலத்தில் உன் போதனைப்படியே அவர்கள் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்.’”
32 ஆகையால், நீங்கள் கர்த்தர் உங்களுக்குக் கூறிய கட்டளைகளின்படி நடந்துகொள்ளக் கவனமாக இருங்கள். தேவன் கூறியவற்றைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதீர்கள். 33 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுத்த கட்டளைகளின்படியே நெறி தவறாது வாழவேண்டும். பின் நீங்கள் தொடர்ந்து எல்லாவற்றிலும் நலம்பெற்று வாழலாம். உங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நீண்டநாள் நீங்கள் வாழ்வீர்கள்.
எப்பொழுதும் தேவனை நேசித்துக் கீழ்ப்படி!
6 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குப் போதிக்கும்படி என்னிடம் கூறியக் கட்டளைகளும், சட்டங்களும், நியாயங்களும் இவைகளே. குடியேறும்படி நீங்கள் போகிற தேசத்திலே இந்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். 2 நீயும் உன் சந்ததியினரும் நீங்கள் வாழ்கின்ற காலம்வரை உங்கள் தேவனாகிய கர்த்தரை மதிக்க வேண்டும். நான் உங்களுக்குத் தரும் சட்டங்களுக்கும் கற்பனைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்தால், நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்கள். 3 இஸ்ரவேல் ஜனங்களே, நான் கூறுவதைக் கவனமாகக் கேட்பதுடன் இந்தச் சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அப்போது உங்களுக்கு எல்லாம் நல்லவையாக அமையும், நீங்கள், அநேக குழந்தைகளைப் பெறுவீர்கள். உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி பாலும் தேனும் ஓடக்கூடிய வளமான தேசத்தைப் பெறுவீர்கள்.
4 “இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! 5 உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு இருதயத்துடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும். 6 இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். 7 நீங்கள் இவற்றைக் கட்டாயமாக உங்கள் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். உங்கள் வீட்டினுள் இருக்கும்போதும் வீதிகளில் நடக்கும்போதும் அவற்றைப் பற்றிப் பேசவேண்டும். நீங்கள் தூங்கச் செல்லும்போதும் உறங்கி எழும்போதும் அவற்றைப் பற்றியே அவர்களிடம் பேச வேண்டும். 8 அவற்றை எழுதிக்கொண்டு அடையாளமாக உங்கள் கைகளில் அணிந்து கொள்ளுங்கள். என் போதனைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப் பயன்படும்படி எப்போதும் அவைகளை உங்கள் நெற்றியில் அணிந்துகொள்ளுங்கள். 9 அவைகளை உங்கள் வீட்டுக்கதவு நிலைக்கால்களிலும் வாசல்களிலும் எழுதி வையுங்கள்.
10 “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.
12 “ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்! கர்த்தரை மறந்துவிடாதிருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள், ஆனால் கர்த்தர் உங்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். 13 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செய்து அவர் ஒருவரை மட்டும் சேவியுங்கள். அவரது பெயரை மட்டுமே வைத்து மற்றவருக்கு வாக்களியுங்கள் (பிற பொய்த் தெய்வங்களின் பெயரைப் பயன்படுத்தாதிருங்கள்!) 14 நீங்கள் கண்டிப்பாக பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றக் கூடாது. உங்களைச் சுற்றியிருக்கின்ற ஜனங்களின் பிற பொய்த் தெய்வங்களை நீங்கள் பின்பற்றக் கூடாது. 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் தமது ஜனங்கள் பிற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கின்றார். எனவே, நீங்கள் அத்தகைய தெய்வங்களைப் பின்பற்றினால் உங்கள் மீது கர்த்தர் மிகவும் கோபங்கொள்வார். அவர் உங்களை இந்தப் பூமியில் இருந்தே அழித்துவிடுவார்.
16 “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல் உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதனை செய்யாதீர்கள். 17 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர் உங்களுக்காக வழங்கிய எல்லா போதனைகளையும், சட்டங்களையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். 18 நீங்கள் கர்த்தரைத் திருப்திப்படுத்தும்படி நல்லவற்றையும், சரியானவற்றையும் மட்டுமே செய்யவேண்டும். அப்போது எல்லாம் உங்களுக்கு நன்றாகவே நடக்கும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு உறுதியளித்த தேசத்தில் போய் நல்ல நிலங்களை எடுத்துக்கொள்ளலாம். 19 கர்த்தர் சொன்னது போல் உங்கள் எதிரிகள் அனைவரையும் நீங்கள் துரத்திவிடலாம்.
தேவன் செய்தவற்றை உங்கள் பிள்ளைகளுக்குப் போதியுங்கள்
20 “வருங்காலத்தில், ‘நமது தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய போதனைகளுக்கும், சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் அர்த்தம் என்ன?’ என்று உன்னுடைய மகன் உன்னிடம் கேட்கலாம். 21 நீ உன் மகனிடம் சொல், ‘நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம். அப்போது கர்த்தர் தன் வல்லமையான கரத்தினாலே எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்து மீட்டுக்கொண்டார். 22 கர்த்தர் அங்கே சிறந்த அற்புதங்களைச் செய்தார். கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பே எகிப்தின் மீதும், பார்வோன் மீதும், அவன் குடும்பம் அனைத்தின் மீதும், கொடிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார். 23 பின்பு கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு கூறியபடி இந்த தேசத்தை நமக்குக் கொடுக்கும்படி நம்மை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார், 24 கர்த்தர் போதித்த அனைத்தையும் நாம் பின்பற்றும்படி கர்த்தர் நமக்கு கட்டளையிட்டார். நாம் நமது தேவனாகிய கர்த்தருக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும். அப்போது கர்த்தர் நாம் இன்று இருக்கிற வண்ணமாக எப்போதும் வாழ்ந்து செழிப்பாக இருக்கும்படிச் செய்வார். 25 நமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே அவரது சட்டங்களை நாம் கவனமாகப் பின்பற்றினோம் என்றால், அப்போது தேவன் நாம் மிக நல்ல காரியத்தைச் செய்தோம்’” என்று சொல்வார்.
இஸ்ரவேலர், தேவனின் விசேஷ ஜனங்கள்
7 “உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாழப்போகின்ற இந்த தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். உங்களுக்காக உங்களைவிடப் பெரியவர்களும், பலசாலிகளுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டினர்களையும் உங்களுக்கு முன்பாகவே துரத்துவார். 2 உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த ஏழு நாட்டினரையும் உங்களுக்குக் கீழே கட்டுப்பட வைப்பார். அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள். அவர்களை முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அவர்களிடம் எவ்வித ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவர்களிடம் இரக்கம் காட்டாதீர்கள். 3 அவர்களில் எவரையும் மணந்துகொள்ளாதீர்கள். நீங்கள் மட்டுமின்றி உங்கள் மகன்களையோ மகள்களையோ அந்த ஜனங்களைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது. 4 ஏனென்றால் அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளை என்னைப் பின்பற்றுவதிலிருந்து திசைதிருப்பி விடுவார்கள். பின்பு உங்கள் பிள்ளைகள் மற்ற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள். அதனால், கர்த்தர் உங்கள்மீது கடுமையாக கோபங்கொள்ள நேரிடும். அவர் உங்களை விரைவில் அழித்துவிடுவார்.
பொய்த் தெய்வங்களை அழித்துவிடுங்கள்
5 “நீங்கள் அந்தப் பகைவர்களுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய ஞாபகார்த்தக் கற்களை உடைத்துவிடுங்கள். அவர்களது அஷெரா கோவில் கம்பங்களை வெட்டி வீழ்த்தி, அவர்களது சிலைகளைத் தீயிலிட்டு அழித்துவிடுங்கள்! 6 ஏனென்றால் நீங்கள் எல்லோரும் கர்த்தருடைய சொந்த ஜனங்கள். இந்தப் பூமியில் உள்ள எல்லா ஜனங்களிலிருந்தும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்து தமக்கு விசேஷமான ஜனங்களாக ஆக்கினார். 7 ஏன் கர்த்தர் உங்கள் மீது அன்பு செலுத்தி தேர்ந்தெடுத்தார்? மற்ற ஜனங்களைவிட நீங்கள் அதிகமானவர்கள் என்பதால் அல்ல, மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் மிகக் குறைவானவர்களே! 8 ஆனால், கர்த்தர் தமது பெரிய வல்லமையினால் எகிப்திலிருந்து உங்களை மீட்டு வந்தார். அவர் உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். எகிப்து நாட்டு மன்னனாகிய பார்வோனின் கட்டுப்பாட்டிலிருந்து உங்களை கர்த்தர் விடுவித்தார். ஏனென்றால் கர்த்தர் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற விரும்பினார்.
9 “ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரிடம் முழு நம்பிக்கை கொள்ளலாம்! அவர் தமது உடன்படிக்கையிலிருந்து விலகமாட்டார். யாரெல்லாம் அவரிடம் அன்பு வைத்து, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களுக்கெல்லாம் தேவன் தமது அன்பையும், அருளையும் பொழிவார். உங்களிடம் மட்டுமின்றி, உங்களின் ஆயிரம் தலைமுறைகளுக்கும் அவர் தமது அன்பையும் அருளையும் தருவார். 10 ஆனால், அவரை வெறுக்கின்றவர்களை கர்த்தர் தண்டிப்பார். அவர்களை அழித்துவிடுவார். அவர்களைத் தண்டிப்பதில் சிறிதும் தயவு காட்டமாட்டார். 11 எனவே நான் இன்று கொடுக்கும் நமது தேவனுடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் நீங்கள் எச்சரிக்கையுடன் பின்பற்றவேண்டும்.
12 “உன்னோடு செய்த உடன்படிக்கையின்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டுமென்றால் இந்த சட்டங்களை நீ கவனமாகப் பின்பற்றி அவைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதைத் தேவன் உங்கள் முற்பிதாக்களுடன் உறுதி செய்துள்ளார். 13 தேவன் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் தேசத்தை தேவன் வளர்ச்சியடையச் செய்வார். உங்கள் பிள்ளைகளை தேவன் ஆசீர்வதிப்பார். உங்கள் வயல்வெளிகளை வள மாக்குவார். உன் நிலத்தில் தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும், எண்ணெயையும் தேவன் தந்தருளுவார். உங்கள் பசுக்களையும், கன்றுகளையும், ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் தேவன் ஆசீர்வதிப்பார். கொடுப்பேன் என்று உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்களித்த அந்த தேசத்தில் அவர் உங்களுக்கு எல்லா வகையான ஆசீர்வாதங்களையும் தந்தருளுவார்.
14 “மற்ற எல்லா ஜனங்களை விடவும் நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஒவ்வொரு கணவனும் மனைவியும் குழந்தைச் செல்வம் பெறுவீர்கள். உங்கள் மாடுகளும் கன்றுகளைப் பெறும். 15 உங்களிடம் உள்ள எல்லா நோய்களையும் கர்த்தர் நீக்கிவிடுவார். உங்களுக்குத் தெரிந்துள்ள எகிப்தியர்களின் கொடிய நோய்களில் ஒன்று கூட உங்கள் மீது வந்துவிடாமல் கர்த்தர் காத்துக்கொள்வார். ஆனால் உங்கள் எதிரிகளுக்கு அவ்வித நோய்கள் பிடிக்குமாறு செய்வார். 16 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உதவியோடு தோற்கடித்த எல்லா எதிரிகளையும் அழித்துவிட வேண்டும். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ளாதீர்கள். ஏனென்றால் அவை உங்களைப் பிடிக்கும் கண்ணியாகிவிடும். அவை உங்கள் வாழ்வை நாசமாக்கிவிடும்.
கர்த்தர் அவரது ஜனங்களுக்கு உதவுவதாக வாக்களிக்கிறார்
17 “‘நம்மைவிட நம் எதிரிகள் பெரியவர்கள். நாம் எப்படி அவர்களைத் துரத்திவிடுவது’ என்று உங்கள் மனதிற்குள் நீங்களே சொல்லிக்கொள்ளாதீர்கள். 18 நீங்கள் அவர்களைக் கண்டு சிறிதும் பயப்படத் தேவையில்லை. அன்று எகிப்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தின் அனைத்து ஜனங்களுக்கும் செய்ததை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 19 அவர்களுக்கு தேவன் செய்த பெரிய இடையூறுகளை நீங்கள் பார்த்தீர்கள். தேவன் செய்த அற்புதச் செயல்களையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள். எகிப்திலிருந்து உங்களை மீட்க கர்த்தர் தமது பலத்த கைகளையும் ஓங்கிய புயத்தையும் பயன்படுத்தியதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் மீண்டும் அதே ஆற்றலைப் பயன்படுத்தி, நீங்கள் பயப்படுகின்ற அனைத்து ஜனங்களுக்கு எதிராகவும் அப்படியே செய்வார்.
20 “அவ்வாறு செய்தபின்பும், மீதியுள்ளவர்களான உங்களுக்குத் தப்பி ஒளிந்து கொள்பவர்களையும் கண்டுபிடித்து அழித்துவிடுவதற்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் குளவிகளை அனுப்புவார். தேவன் அவர்கள் அனைவரையும் அழித்துவிடுவார். 21 அவர்களைக் கண்டு பயப்படாதீர்கள். ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருக்கின்றார். அவர் வல்லமையும் பயங்கரமும் கொண்ட தேவனாவார். 22 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களின் எதிரிகளை உங்கள் தேசத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் துரத்திவிடுவார். நீங்கள் அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் அழித்துவிட வேண்டாம். நீங்கள் அப்படிச்செய்தால் காட்டு மிருகங்கள் உங்களைச் சுற்றி எண்ணிக்கையில் பெருகிவிடும். 23 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களின் எதிரிகளை உங்களிடம் தோற்கச் செய்வார். அவர்கள் அழியும் வரையில் அவர்களைத் திணறச் செய்வார். 24 அவர்களது இராஜாக்கள் உங்களிடம் தோற்றுப்போக கர்த்தர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் அவர்களை அழித்துவிடுவீர்கள்! உலகம் அவர்கள் வாழ்ந்ததை மறந்துவிடும். அவர்களில் ஒருவனும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் அனைவரையும் நீங்கள் அழித்துவிடுவீர்கள்.
25 “நீங்கள் அவர்களது தெய்வங்களின் சிலைகளைத் தீயிலிட்டுக் கொளுத்திவிட வேண்டும். நீங்கள் அந்தச் சிலைகளில் உள்ள வெள்ளி அல்லது தங்கத்தின் மீது சிறிதளவும் ஆசை கொள்ளாமலும், எடுத்துக்கொள்ளாமலும் இருக்க வேண்டும். அவர்களின் வெள்ளி அல்லது தங்கத்தை நீங்கள் எடுத்துக்கொண்டால் அது உங்களை சிக்க வைத்து, உங்கள் வாழ்க்கையை நாசமாக்கிவிடும். ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை அருவெருத்து வெறுப்பவர் ஆவார். 26 எனவே, அங்கு அருவெருக்கத்தக்க விக்கிரகங்களை நீங்கள் உங்கள் வீட்டுக்குள் கொண்டுவரக்கூடாது, நீங்களும் அவற்றைக் கண்டிப்பாக வெறுத்து ஒதுக்கவேண்டும். அவை அனைத்தையும் அழித்துவிட வேண்டும்!”
2008 by World Bible Translation Center