Bible in 90 Days
13 அதற்கு அவர்கள், “அதற்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் நாங்கள் கொடுப்போமேயன்றி, உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவ்வாறே அவர்கள் அவனை இரண்டு புதிய கயிறுகளால் கட்டி, குகைக்கு வெளியே கொண்டு வந்தனர்.
14 லேகி என்னுமிடத்திற்குச் சிம்சோன் வந்தபோது, பெலிஸ்தியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள். அப்போது கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோன் மீது வந்தார். சிம்சோன் கயிறுகளை அறுத்தான். அந்த கயிறுகள் எரிந்துபோன நூலைப் போல காணப்பட்டன. உருகின கயிறுகள் போல அவன் கரங்களிலிருந்து அவை நழுவின. 15 அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்தது. அத்தாடையெலும்பால் அவன் 1,000 பெலிஸ்தியர்களைக் கொன்றான்.
16 பின்பு சிம்சோன்,
“ஒரு கழுதையின் தாடையெலும்பால்
1,000 பேரைக் கொன்றேன்!
கழுதையின் தாடையெலும்பால்
ஒன்றின் மேலொன்றாக பெரும் குவியலாக குவித்தேன்” என்றான்.
17 இவ்வாறு சொல்லி அத்தாடையெலும்பை கீழே எறிந்தான். அந்த இடம் அதனால் ராமாத்லேகி என்று அழைக்கப்பட்டது.
18 சிம்சோன் மிகவும் தாகமாயிருந்தான். அவன் கர்த்தரை நோக்கி, “நான் உமது ஊழியன், நீர் எனக்குப் பெரும் வெற்றியைத் தந்தீர். நான் தாகத்தால் மரிக்கும்படி தயவு செய்துவிடாதிரும். விருத்தசேதனம் இல்லாத மனிதர்கள் என்னைப் பிடிக்க அனுமதியாதிரும்” என்று அழுது முறையிட்டான்.
19 லேகியின் தரையில் ஒரு துவாரம் இருந்தது. தேவன் அந்தத் துவாரத்தின் வழி வெடித்து தண்ணீர் வரும்படியாகச் செய்தார். சிம்சோன் அந்தத் தண்ணீரைக் குடித்து மறுபடியும் வலிமைபெற்றான். அந்த நீரூற்றுக்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான். அது இன்னும் லேகி நகரில் உள்ளது. 20 இவ்வாறு சிம்சோன் இஸ்ரவேலருக்கு இருபது ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். இது பெலிஸ்தியரின் காலத்தில் நடந்தது.
காசா என்னும் நகருக்கு சிம்சோன் செல்லுதல்
16 ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான். அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான். 2 காசா நகர ஜனங்களிடம், “சிம்சோன் இங்கு வந்திருக்கிறான்” என்று யாரோ தெரிவித்தனர். அவர்கள் அவனைக் கொல்ல எண்ணினார்கள். எனவே, அவன் இருந்த இடத்தை சூழ்ந்தனர். அவர்கள் மறைந்திருந்து சிம்சோனின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்கள் நகர வாயிலருகே இரவு முழுவதும் அமைதியாகத் தங்கியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “காலையில் சிம்சோனைக் கொல்வோம்” என்று பேசிக்கொண்டனர்.
3 ஆனால் சிம்சோன் அவ்விலைமகளோடு நள்ளிரவுவரை மட்டுமே தங்கியிருந்தான். சிம்சோன் நள்ளிரவில் விழித்தெழுந்தான். சிம்சோன் நகரவாயில் கதவுகளை பிடித்து, மதிலிலிருந்து தளர்த்திப் பெயர்த்தெடுத்தான். சிம்சோன் கதவுகளையும், அவற்றின் இரண்டு தூண்களையும், கதவுகளை மூடும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டான். சிம்சோன் அதை தோளில் சுமந்துக்கொண்டு, எபிரோன் நகருக்கு அருகிலுள்ள மலையின்மீது ஏறினான்.
சிம்சோனும் தெலீலாளும்
4 பின்னர் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பெண்ணை நேசித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள்.
5 பெலிஸ்திய ஜனங்களின் தலைவர்கள் தெலீலாளிடம் சென்றனர். அவர்கள், “சிம்சோனைப் பெலசாலியாக வைத்திருப்பது எதுவென்று நாங்கள் அறிய விரும்புகிறோம். அவனது இரகசியத்தை உனக்குத் தெரிவிக்குமாறு நீ ஏதேனும் தந்திரம் செய். அப்போது அவனைப் பிடித்துக் கட்டுவது எப்படியென்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். பிறகு அவனைக் கட்டுப்படுத்துவதும் எளிதாயிருக்கும். நீ இதைச் செய்தால் நாங்கள் ஒவ்வொரு வரும் உனக்கு 28 பவுண்டு எடையுள்ள வெள்ளியைக் கொடுப்போம்” என்றார்கள்.
6 எனவே தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் எதனால் பெலசாலியாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். எவ்வாறு உங்களைக் கட்டி பெலவீனப்படுத்த முடியும்?” என்று கேட்டாள்.
7 சிம்சோன் பதிலாக, “ஏழு பச்சையான உலராத வில் நாண்களால் என்னைக் கட்டவேண்டும். அவ்வாறு செய்தால் நான் பிறரைப் போன்று பெலனற்றவனாவேன்” என்றான்.
8 அப்போது பெலிஸ்தியரின் அதிகாரிகள் தெலீலாளிடம் ஏழு பச்சையான வில் நாண்களைக் கொண்டு வந்தனர். அவை இன்னும் உலர்ந்திருக்கவில்லை. அவற்றால் தெலீலாள் சிம்சோனைக் கட்டினாள். 9 சிலர் அடுத்த அறையில் ஒளித்திருந்தனர். தெலீலாள் சிம்சோனிடம், “சிம்சோன், உங்களைப் பெலிஸ்தியர்கள் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். ஆனால் சிம்சோன் எளிதாக அந்த வில் நாண்களை அறுத்துப்போட்டான். விளக்கில் எரியும் திரியிலுள்ள சாம்பலைப் போன்று அவைத் தெறித்து விழுந்தன. எனவே பெலிஸ்தியர்கள் சிம்சோனின் பெலத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளவில்லை.
10 அப்போது தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் என்னிடம் பொய் சொன்னீர்கள்! என்னை முட்டாளாக்கினீர்கள். உண்மையைத் தயவுசெய்து எனக்குக் கூறுங்கள். எப்படி, யாரால் உங்களைக் கட்டிப்போட முடியும்?” என்று கேட்டாள்.
11 சிம்சோன், “யாராவது என்னை முன்னால் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் கட்டவேண்டும். அவ்வாறு யாரேனும் எனக்குச் செய்தால் நானும் பிற மனிதர்களைப் போன்று பெலமிழந்தவனாகிவிடுவேன்” என்றான்.
12 எனவே தெலீளாள் சில புதுக்கயிறுகளை எடுத்து சிம்சோனைக் கட்டினாள். சில ஆட்கள் அடுத்த அறையில் ஒளித்துக்கொண்டிருந்தனர். தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கபோகிறார்கள்!” என்றாள். ஆனால் அவன் கயிறுகளை எளிதாக அறுத்துவிட்டான். நூலை அறுத்தாற்போன்று அவன் கயிறுகளை அறுத்தெறிந்தான்.
13 பின்பு தெலீலாள் சிம்சோனை நோக்கி, “நீங்கள் என்னிடம் மீண்டும் பொய் சொல்லிவிட்டீர்கள்! என்னை முட்டாள் ஆக்கிவிட்டீர்கள். இப்போது உங்களை ஒருவன் எவ்வாறு கட்டக்கூடும் என்பதைக் கூறுங்கள்” என்றாள்.
சிம்சோன், “நீ என் தலைமயிரின் 7 ஜடைகளையும் நெசவு தறியால் நெய்து அதனைப் பின்னலிட்டு இறுகக் கட்டினால் நானும் பிற மனிதரைப்போல் பெலமற்றவனாவேன்” என்றான்.
14 பின் சிம்சோன் உறங்கப்போனான். தெலீலாள் நெசவுத் துணியின் நூலைப் பயன்படுத்தி அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் நெய்தாள். பின் தறியை நிலத்தில் ஒரு கூடார ஆணியால் அடித்தாள். அவள் மீண்டும் சிம்சோனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். சிம்சோன் கூடார ஆணியையும், தறியையும், பாவையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு எழுந்தான்!
15 பின் தெலீலாள் சிம்சோனைப் பார்த்து, “முற்றிலும் என்மேல் நம்பிக்கையற்றவராக இருக்கும்போது ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? உங்கள் இரகசியத்தை சொல்ல மறுக்கிறீர்கள்? மூன்றாவதுமுறை நீங்கள் என்னை முட்டாளாக்கிவிட்டீர்கள். உங்களது பேராற்றலின் இரகசியத்தை நீங்கள் இன்னும் எனக்குக் கூறவில்லை” என்றாள். 16 தினந்தோறும் அவள் சிம்சோனைத் தொந்தரவுச் செய்துக்கொண்டேயிருந்தாள். அவனது இரகசியத்தைப்பற்றி அவள் கேட்டதினால் அவன் ஆத்துமா மிகவும் சோர்ந்து, வாழ்க்கையை வெறுத்தான். 17 இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான்.
18 சிம்சோன் அவளிடம் இரகசியத்தைக் கூறிவிட்டான் என்பதைத் தெலீலாள் கண்டு கொண்டாள். பெலிஸ்தியரின் தலைவர்களுக்கு அவள் செய்தியைச் சொல்லியனுப்பினாள். அவள், “மீண்டும் இங்கே வாருங்கள். சிம்சோன் என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டான்” என்றாள். எனவே பெலிஸ்தியரின் தலைவர்கள் தெலீலாளிடம் வந்தார்கள். அவளுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த பணத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.
19 சிம்சோன் அவள் மடியில் படுத்திருந்தபோதே அவனைத் தெலீலாள் உறங்க வைத்தாள். பின்பு அவள் சவரம் செய்யும் ஒருவனை அழைத்து அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் சிரைத்துவிடச் செய்தாள். அப்போது சிம்சோன் தனது பெலத்தை இழந்தான். சிம்சோனின் பலம் அவனை விட்டு நீங்கியது. 20 அப்போது தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்தியர் உன்னைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். அவன் எழுந்து, “நான் எப்போதும் போல் என்னை விடுவித்து தப்பிவிடுவேன்” என்று நினைத்தான். கர்த்தர் அவனை விட்டு நீங்கிச்சென்றதை அவன் அறியவில்லை.
21 பெலிஸ்திய ஆட்கள் சிம்சோனைச் சிறைபிடித்தனர். அவர்கள் அவனது கண்களைப் பிடுங்கி, அவனைக் காசா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் ஓடிவிடாதபடிக்கு அவனுக்கு விலங்கிட்டுக் கட்டினார்கள். அவர்கள் சிம்சோனைச் சிறையில் அடைத்து, அவனைத் தானியம் அரைக்குமாறு செய்தனர். 22 ஆனால் சிம்சோனின் தலைமயிர் மீண்டும் வளர ஆரம்பித்தது.
23 பெலிஸ்தியரின் தலைவர்கள் கொண்டாட்டத்திற்கென ஓரிடத்தில் கூடினார்கள். தங்கள் பொய்த் தெய்வமாகிய தாகோனிற்குப் பெரும்பலிகொடுக்க அங்கு வந்தனர். அவர்கள், “நமது தேவன் நமது பகைவனாகிய சிம்சோனை வெல்வதற்கு நமக்கு உதவினார்” என்று சொன்னார்கள். 24 பெலிஸ்தியர் சிம்சோனைக் காணும்பொழுது, அவர்கள் தம் பொய்த் தெய்வத்தை வாழ்த்தினார்கள். அவர்கள்,
“இம்மனிதன் நம் ஜனங்களை அழித்தான்!
இம்மனிதன் நம் ஜனங்களில் பலரைக் கொன்றான்!
ஆனால் நமது தெய்வம்
நம் பகைவனை வெல்ல உதவினார்!” என்றார்கள்.
25 அவர்கள் கொண்டாட்டத்தில் களிகூர்ந்து நன்றாகப் பொழுதைப் போக்கினார்கள். எனவே அவர்கள், “சிம்சோனை வெளியே அழைத்து வாருங்கள். அவனை ஆட்டம் காண்பித்து கிண்டல் செய்ய நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். எனவே அவர்கள் சிம்சோனைச் சிறையிலிருந்து அழைத்து வந்து அவனைக் கேலிச் செய்தனர். பொய்த் தெய்வம் தாகோன் கோவிலின் தூண்களுக்கு நடுவே அவனை நிறுத்தினார்கள். 26 ஒரு பணியாள் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான். சிம்சோன் அவனிடம், “இக்கோவிலைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு என்னை நிறுத்து. நான் அவற்றில் சாய்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.
27 அக்கோவில் ஆண்களாலும் பெண்களாலும் நிரம்பிவழிந்தது. பெலிஸ்தியரின் எல்லா தலைவர்களும் அங்கிருந்தனர். கோவிலின் மாடி அடுக்கில் சுமார் 3,000 ஆண்களும் பெண்களும் இருந்தனர். அவர்கள் நகைத்துக் கொண்டு, சிம்சோனைக் கேலிச் செய்தபடி இருந்தனர்.
28 அப்போது சிம்சோன் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தான். அவன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, என்னை நினைவுகூரும். தேவனே, எனக்கு இன்னொருமுறை பெலன் தாரும். எனது இரு கண்களையும் பிடுங்கியதற்காய் இப்பெலிஸ்தியரை ஒருமுறை நான் தண்டிக்க அனுமதியும்!” என்றான். 29 பின்பு கோவிலின் நடுவே கோவிலைத் தாங்கிக் கொண்டிருந்த இரண்டு தூண்களையும் சிம்சோன் பற்றிக்கொண்டான். ஒரு தூண் அவனது வலதுபுறமும், இன்னொரு தூண் அவனது இடதுபுறமும் இருக்கும்படி நின்று கொண்டான். 30 சிம்சோன், “என்னையும் இந்த பெலிஸ்தியர்களுடன் மரிக்கவிடும்” என்றான். பின்பு அத்தூண்களைப் பலங்கொண்டமட்டும் தள்ளினான். தலைவர்கள் மீதும், அதிலிருந்த ஜனங்கள்மீதும் கோவில் இடிந்து விழுந்தது. இவ்வாறு உயிரோடிருந்தபோது கொன்றதைக் காட்டிலும் அதிகமான பெலிஸ்தியரைச் சிம்சோன் மரித்தபோது கொன்றான்.
31 சிம்சோனின் சகோதரர்களும் அவனது தந்தையின் குடும்பத்தினரும் அவனது உடலை எடுத்துக் கொண்டு வந்து, அவனது தந்தையின் கல்லறையிலேயே புதைத்தனர். அக்கல்லறை சோரா நகரத்திற்கும் எஸ்தாவோல் நகரத்திற்கும் நடுவே இருந்தது. இஸ்ரவேலருக்கு 20 ஆண்டுகள் சிம்சோன் நியாயாதிபதியாக இருந்தான்.
மீகாவின் விக்கிரகங்கள்
17 எப்பீராயீம் என்னும் மலைநாட்டில் மீகா என்னும் மனிதன் வசித்து வந்தான். 2 மீகா தன் தாயை நோக்கி, “உன்னிடமிருந்து 28 பவுண்டு வெள்ளியை யாரோ திருடிச் சென்றது உனக்கு நினைவிருக்கிறதா? நீ அதைக் குறித்து சாபமிட்டதை நான் கேட்டேன். என்னிடம் அந்த வெள்ளி உள்ளது, நான்தான் அதை எடுத்தேன்” என்றான்.
அவன் தாய், “எனது மகனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றாள்.
3 மீகா 28 பவுண்டு வெள்ளியையும் தன் தாயிடம் திருப்பிக் கொடுத்தான். அப்போது அவள், “நான் இந்த வெள்ளியை கர்த்தருக்கு விசேஷ அன்பளிப்பாகச் செலுத்துவேன். என் மகன் ஒரு விக்கிரகத்தைச் செய்து அதை வெள்ளியால் பூசும்படியாக இதைக் கொடுப்பேன். மகனே, எனவே இப்போதே அந்த வெள்ளியை உனக்கு நான் கொடுக்கிறேன்” என்றாள்.
4 ஆனால் மீகா வெள்ளியைத் தாயிடமே கொடுத்துவிட்டான். அவள் அதில் 5 பவுண்டு வெள்ளியை எடுத்து அதைப் பொற்கொல்லனிடம் கொடுத்தாள். வெள்ளி முலாம் பூசிய விக்கிரகத்தைப் பொற்கொல்லன் அந்த வெள்ளியால் உருக்கினான். அந்த விக்கிரகம் மீகாவின் வீட்டில் இருந்தது. 5 விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளும் கோயில் ஒன்று மீகாவுக்கு இருந்தது. அவன் ஒரு ஏபோத்தையும் சில வீட்டு விக்கிரகங்களையும் செய்தான். மீகா தன் மகன்களில் ஒருவனைப் பூஜை செய்வதற்கு நியமித்தான். 6 (அப்போது இஸ்ரவேலருக்கு அரசனாக யாருமில்லை. எனவே, ஒவ்வொருவனும் தான் சரியென நினைத்ததையே செய்தான்.)
7 அங்கு இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து வந்தவன். அவன் யூதா கோத்திரத்தினரோடு வாழ்ந்து வந்தான். 8 அந்த இளைஞன் யூதாவிலுள்ள பெத்லகேமிலிருந்து சென்றபின் வாழ்வதற்கு மற்றோர் இடம் தேடிக்கொண்டிருந்தான். அவன் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, மீகாவின் வீட்டிற்கு வந்தான். எப்பிராயீமின் மலை நாட்டில் மீகாவின் வீடு இருந்தது. 9 மீகா அவனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான்.
இளைஞன் அதற்கு, “நான் யூதாவிலுள்ள பெத்லேகேமைச் சேர்ந்த ஒரு லேவியன். நான் வசிப்பதற்கு ஒரு இடம் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினான்.
10 அப்போது மீகா அவனிடம், “என்னோடு தங்கியிருந்து, எனது தந்தையாகவும், போதகனாகவும் இரு. ஒவ்வொரு ஆண்டும் உனக்கு 4 ஆழாக்கு வெள்ளியைத் தருவேன். மேலும் உனக்கு உடையும் உணவும் தருவேன்” என்றான்.
மீகா சொன்னபடியே லேவியன் செய்தான். 11 இளைஞனான லேவியன் மீகாவோடு வசிப்பதற்குச் சம்மதித்தான். மீகாவின் மகன்களைப்போல் அந்த இளைஞன் அவ்வீட்டில் ஒருவனாக வாழ்ந்து வந்தான். 12 மீகா அவனைப் பூஜை செய்பவனாகத் தேர்ந்தெடுத்தான். எனவே அவன் பூஜை செய்பவனாக மீகாவின் வீட்டில் வாழ்ந்து வந்தான். 13 மீகா, “கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்பதை இப்போது அறிகிறேன். நான் இதை அறிவேன். ஏனென்றால், ஒரு லேவியன் ஆசாரியனாக இருக்கிறான்” என்றான்.
லாயீசு நகரத்தை தாண் கைப்பற்றுதல்
18 அக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசனாக யாரும் இல்லை. அப்போது தாண் கோத்திரத்தினர் வசிப்பதற்கு இன்னும் இடம் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குரிய தேசப்பகுதியை அவர்கள் சுதந்தரிக்கவில்லை. பிற இஸ்ரவேலின் கோத்திரத்தினர் அனைவரும் தமக்குரிய நிலத்தைப் பெற்றிருந்தனர். ஆனால் தாண் கோத்திரத்தினர் தமக்கான நிலத்தை இதுவரை சுதந்தரிக்கவில்லை.
2 எனவே தாண் கோத்திரத்தினர் ஏதேனும் நிலத்தைப் பார்த்து வருவதற்காக 5 வீரர்களை அனுப்பினார்கள். அவர்கள் குடியேற ஏற்ற இடத்தைக் கண்டு பிடிப்பதற்காகச் சென்றனர். அந்த 5 மனிதர்களும் சோரா, எஸ்தாவோல் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தாணின் கோத்திரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களிடம், “போய் நமக்காக நிலத்தைப் பார்த்து வாருங்கள்” என்று சொல்லப்பட்டது.
அந்த 5 மனிதர்களும் எப்பிராயீமின் மலை நாட்டிற்கு வந்தனர். அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்து, இரவை அங்குக் கழித்தனர். 3 அவர்கள் மீகாவின் வீட்டிற்கருகே வந்து கொண்டிருந்தபோது, லேவியனாகிய இளைஞனின் சத்தத்தைக் கேட்டனர். அவர்கள் மீகாவின் வீட்டில் தங்கியிருந்தபோது, அவன் குரலை அடையாளம் கண்டு கொண்டனர். அவர்கள் அந்த இளைஞனிடம், “உன்னை இங்கு அழைத்து வந்தது யார்? நீ இங்கு என்ன செய்கிறாய்? இங்கு உன் வேலை என்ன?” என்று கேட்டனர்.
4 மீகா அவனுக்குச் செய்தவற்றை எல்லாம் அந்த இளைஞன் அவர்களுக்குக் கூறினான். அந்த இளைஞன், “மீகா என்னைச் சம்பளத்திற்கு அமர்த்தினான். நான் பூஜை செய்கிறவனாக உள்ளேன்” என்று கூறினான்.
5 எனவே அவர்கள் அவனிடம், “தயவு செய்து தேவனிடம் எங்களுக்காக ஏதாவது விசாரித்துச் சொல். நாங்கள் சிலவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். நாங்கள் வாழ்வதற்காக இடம் தேடுவது வெற்றி பெறுமா?” என்று கேட்டனர்.
6 பூஜை செய்யும் இளைஞன் அந்த 5 மனிதரிடமும், “ஆம், சமாதானத்தோடு செல்லுங்கள். உங்கள் பாதையில் கர்த்தர் உங்களை வழிநடத்துவார்” என்றான்.
7 எனவே அந்த 5 மனிதர்களும் அங்கிருந்து சென்றனர். அவர்கள் லாயீஸ் நகரத்திற்குச் சென்றனர். அந்நகர ஜனங்கள் பாதுகாப்பாக வாழ்வதைக் கண்டனர். அவர்களைச் சீதோனியர் ஆண்டு வந்தனர். எல்லாம் சமாதானத்தேடு, அமைதியாக நடைபெற்றன. அவர்கள் எல்லாவற்றையும் நிறைவாய் பெற்றிருந்தனர். எந்தப் பகைவரும் அவர்களைத் துன்புறுத்துவதற்கு அருகே இருக்கவில்லை. மேலும் அவர்கள் சீதோனிலிருந்து வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஆராமின் ஜனங்களோடும் எத்தகைய ஒப்பந்தமும் அவர்கள் செய்திருக்கவில்லை.
8 அந்த 5 பேரும் சோரா, எஸ்தாவோல், ஆகிய நகரங்களுக்குத் திரும்பினார்கள். அவர்களின் உறவினர், “நீங்கள் அறிந்து வந்ததென்ன?” என்று கேட்டார்கள்.
9 அவர்கள், “நாங்கள் ஒரு இடத்தைப் பார்த்து வந்திருக்கிறோம். அது மிகவும் நன்றாக இருக்கிறது. நாம் அதைத் தாக்கவேண்டும். காத்திருக்கக் கூடாது, நாம் போய், அத்தேசத்தை கைப்பற்றுவோம்! 10 அந்த இடத்திற்கு நீங்கள் வரும்போது அத்தேசம் மிகப் பெரிய நிலப்பரப்பு கொண்டது என்பதை அறிவீர்கள். எல்லாம் மிகுதியாக அங்குக் கிடைக்கின்றன. ஜனங்கள் தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதையும் நீங்கள் காண்பீர்கள். அத்தேசத்தைக் தேவன் நமக்கு நிச்சயமாக அளித்திருக்கிறார்” என்றார்கள்.
11 எனவே தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 ஆட்கள் சோரா, எஸ்தாவோல் ஆகிய நகரங்களிலிருந்து சென்றனர். அவர்கள் போருக்குத் தயாராக இருந்தனர். 12 லாயீஸ் நகரத்திற்குச் செல்லும் வழியில் அவர்கள் யூதா தேசத்திலுள்ள கீரியாத்யாரீம் என்னும் நகரத்திற்குச் சென்று, அங்கு முகாமிட்டுத் தங்கினார்கள். ஆகையால் கீரியாத்யாரீமிற்கு மேற்கேயுள்ள இடம் இன்று வரைக்கும் மக்னிதான் எனப்படுகிறது. 13 அந்த இடத்திலிருந்து 600 பேரும் எப்பிராயீமின் மலை நாட்டிற்குப் பயணம் செய்தனர். பிறகு அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்தனர்.
14 லாயீசைச் சுற்றிப் பார்த்துவந்த 5 பேரும்தம் உறவினர்களிடம், “இந்த வீடுகளுள் ஒன்றில் ஒரு ஏபோத் உள்ளது. மேலும் வீட்டிற்குரிய தெய்வங்களும், ஒரு செதுக்கப்பட்ட சிலையும், ஒரு வெள்ளி விக்கிரகமும் இங்கு உள்ளன. உங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியும். சென்று அவற்றை எடுத்து வாருங்கள்” என்றனர். 15 எனவே அவர்கள் மீகாவின் வீட்டருகே, இளைஞனாகிய லேவியன் வசித்துவந்த இடத்தில் நின்று, அந்த இளைஞனின் நலத்தை விசாரித்தனர். 16 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 பேரும் நுழை வாயிலில் நின்று கொண்டனர். அவர்கள் கையில் ஆயுதங்களை ஏந்தியவர்களாய் போருக்குத் தயாராக இருந்தனர். 17-18 அந்த 5 ஒற்றர்களும் வீட்டினுள் நுழைந்தனர். போருக்குத் தயாராக நின்ற 600 பேரோடும் பூஜை செய்பவன் கதவிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தான். அந்த ஆட்கள் செதுக்கப்பட்ட சிலை, ஏபோத், வீட்டு விக்கிரகங்கள், வெள்ளி விக்கிரகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். லேவியனாகிய பூஜை செய்யும் இளைஞன், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
19 ஐந்து பேரும், “அமைதியாக இரு! ஒரு வார்த்தையும் பேசாதே. எங்களோடு வா. எங்கள் தந்தையாகவும், பூஜை செய்பவனாகவும் இரு. நீ இப்போது ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவனுக்காக பூஜை செய்யும் பணியைச் செய்வது நல்லதா? அல்லது இஸ்ரவேலின் மொத்த கோத்திரங்களுக்கு பூஜை செய்வது நல்லதா?” என்று கேட்டனர். 20 இது லேவியனாகிய அம்மனிதனுக்குச் சந்தோஷம் அளித்தது. எனவே அவன் ஏபோத், வீட்டு விக்கிரகங்கள், விக்கிரகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அம்மனிதரோடு சென்றான்.
21 பின்பு தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அந்த 600 பேரும் லேவியனாகிய அந்தப் பூஜை செய்பவனோடு மீகாவின் வீட்டிலிருந்து திரும்பி நடந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகள், மிருகங்கள், பொருட்கள் அனைத்தையும் தங்களுக்கு முன்பாகப் போகவிட்டனர்.
22 அங்கிருந்து தாண் கோத்திரத்து ஆட்கள் மிகுந்த தூரம் சென்றார்கள். ஆனால் மீகாவிற்கு அருகே வாழ்ந்தவர்கள் ஒன்று கூடி தாண் மனிதர்களைத் துரத்திப் பிடித்தனர். 23 மீகாவின் ஆட்கள் தாணின் மனிதர்களைப் பார்த்து சத்தமிட்டனர். தாணின் ஆட்கள் திரும்பிப் பார்த்து மீகாவிடம், “சிக்கல் என்ன? ஏன் சத்தமிடுகிறீர்கள்?” என்றனர்.
24 மீகா, “தாணின் மனிதர்களாகிய நீங்கள் எனது விக்கிரகங்களை எடுத்து வந்தீர்கள். அவற்றை எனக்காகச் செய்தேன். எனக்காக பூஜை செய்பவனையும் அழைத்துப் போகிறீர்கள். இப்போது என்னிடம் என்ன இருக்கிறது? ‘உன் பிரச்சனை என்ன?’ என்று எப்படி என்னைக் கேட்கிறீர்கள்?” என்றான்.
25 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள், “நீங்கள் எங்களோடு விவாதிக்காதிருப்பது நல்லது. எங்கள் மனதரில் சிலர் கோபக்காரர்கள். எங்களைப் பார்த்து நீங்கள் சத்தமிட்டுப் பேசினால் அவர்கள் உங்களைத் தாக்கக்கூடும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கொல்லப்படுவீர்கள்” என்றார்கள்.
26 பின்பு தாணின் ஆட்கள் திரும்பி, தங்கள் வழியேச் சென்றார்கள். அவர்கள் வலிமை மிக்கவர்கள் என்பதை மீகா அறிந்ததினால் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.
27 மீகா செய்த விக்கிரகங்களைத் தாணின் ஆட்கள் எடுத்து சென்றனர். மீகாவுடனிருந்த ஆசாரியனையும் அவர்கள் தங்களுடன் அழைத்து லாயீஸிக்கு வந்தனர். அங்குள்ள ஜனங்கள் அமைதியாக வாழ்ந்தனர். அவர்கள் எந்தத் தாக்குதலையும் எதிர்பார்க்கவில்லை. தாணின் ஆட்கள் தங்கள் வாளால் அவர்களை கொன்றுப் போட்டு, அவர்கள் நகரத்தை எரித்தனர். 28 லாயீஸில் வாழ்ந்த ஜனங்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் இருக்கவில்லை. சீதோன் நகரில் அவர்களுக்கு உதவும் ஜனங்கள் இருந்தனர். ஆனால் அந்நகரத்திலிருந்து வெகு தொலைவில் அவர்கள் வசித்தார்கள். லாயீசின் ஜனங்கள் ஆராமியரோடு எந்த ஒப்பந்தமும் செய்திருக்கவில்லை. எனவே அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. பேத்ரே கோபிற்குச் சொந்தமான ஒரு பள்ளத்தாக்கில் லாயீஸ் நகரம் இருந்தது. அந்த இடத்தில் தாணின் ஜனங்கள் ஒரு புதிய நகரத்தைக் கட்டினார்கள். அந்நகரம் அவர்கள் இருப்பிடமாயிற்று. 29 தாண் ஜனங்கள் அந்நகரத்திற்கு ஒரு புதிய பெயரிட்டனர். அந்நகரம் லாயீஸ் என்னும் பெயர் கொண்டது. அவர்கள் அதைத் தாண் என்று மாற்றினார்கள். இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும், தங்கள் முற்பிதாவுமாகிய தாணின் பெயரால் அந்நகரை அழைத்தனர். 30 தாண் நகரில் தாண் கோத்திரத்தினர் அந்த விக்கிரங்களை வைத்தனர். கெர்சோனின் மகனாகிய யோனத்தானை அவர்கள் பூஜை செய்பவனாக நியமித்தனர். கெர்சோம் மோசேயின் மகன். இஸ்ரவேலர் பாபிலோனுக்குக் கைதிகளாக அழைத்துச் செல்லப்படும் வரையிலும் யோனத்தானும், அவனது மகன்களும் தாண் கோத்திரத்தினருக்கு பூஜை செய்பவர்களாக விளங்கினர். 31 தாண் ஜனங்கள் மீகா செய்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். தேவனின் கூடாரம் சீலோவில் இருந்த காலத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வணங்கி வந்தனர்.
லேவியனான மனிதனும் அவனது வேலைக்காரியும்
19 அக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசன் இருக்கவில்லை. எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் ஒரு லேவியன் வாழ்ந்து வந்தான். அவனுடன் இருந்த வேலைக்காரி, அவனுக்கு மனைவியைப் போல வாழ்ந்து வந்தாள். அந்த வேலைக்காரி யூதா தேசத்துப் பெத்லெகேமைச் சேர்ந்தவள். 2 அந்த வேலைக்காரி லேவியனோடு ஒரு விவாதம் செய்து அவனை விட்டுவிட்டு, யூதாவிலுள்ள பெத்லேகேமிலிருந்த தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கு நான்கு மாதங்கள் தங்கியிருந்தாள். 3 பின்பு அவள் கணவன் அவளிடம் சென்றான். அவள் அவனோடு வரும்படி அழைப்பதற்காக அவளோடு அன்பாகப் பேச விரும்பினான். அவன் தன்னோடு தன் பணியாளையும், இரண்டு கழுதைகளையும் அழைத்துச் சென்றான். லேவியன் அவளது தந்தையின் வீட்டை அடைந்தான். லேவியனைக் கண்ட அவளது தந்தை சந்தோஷம் அடைந்து அவனை வரவேற்பதற்கு வெளியே வந்தான். 4 அப்பெண்ணின் தந்தை லேவியனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். லேவியனின் மாமானார் அவனைத் தங்கிச் செல்லுமாறு கூறினான். எனவே லேவியன் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தான். அவன் மாமனார் வீட்டிலேயே உண்டு, பருகித் தூங்கினான்.
5 நான்காம் நாளில் அவர்கள் அதிகாலையில் எழுந்தனர். லேவியன் புறப்படுவதற்குத் தயாரானான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை, தன் மருமகனைப் பார்த்து, “முதலில் ஏதாவது சாப்பிடு. சாப்பிட்டப் பின்னர் புறப்படலாம்” என்றான். 6 எனவே லேவியனும் அவனது மாமனாரும் சாப்பிடவும் குடிக்கவும் உட்கார்ந்தனர். பின் அந்த இளம் பெண்ணின் தந்தை லேவியனை நோக்கி, “இன்றிரவு தயவுசெய்து இங்கேயே தங்கு இளைப்பாறி மகிழ்ச்சியோடு இரு. நடுப்பகல் வரைக்கும் இருந்து போகலாம்” என்றான். எனவே இருவரும் உண்ண ஆரம்பித்தனர். 7 வேவியன் புறப்படுவதற்கு எழுந்தான். ஆனால் அன்றிரவும் அவனைத் தங்கும்படியாக அவனது மாமனார் வேண்டினான்.
8 பின்பு, ஐந்தாம் நாளில், லேவியன் அதிகாலையில் எழுந்தான். புறப்படுவதற்கு அவன் தயாரானான். ஆனால் அப்பெண்ணின் தந்தை மருமகனை நோக்கி, “முதலில் ஏதேனும் சாப்பிடு. களைப்பாறி நடுப்பகல் வரைக்கும் தங்கியிரு” என்றான். எனவே இருவரும் சேர்ந்து உண்டனர்.
9 பின் லேவியனும், அவனது வேலைக்காரியும், அவனது வேலையாளும், புறப்படுவதற்கு எழுந்தனர். ஆனால் அந்த இளம் பெண்ணின் தந்தை, “இருள் சூழ்ந்து வருகிறது. பகல் மறைய ஆரம்பிக்கிறது. எனவே இரவு இங்கே தங்கி களித்திரு. நாளைக் காலையில் சீக்கிரமாக எழுந்து உன் வழியே செல்” என்றான்.
10 மற்றொரு இரவும் தங்கியிருக்க அந்த லேவியன் விரும்பவில்லை. அவன் தன் 2 கழுதைகளோடும், வேலைக்காரியோடும் புறப்பட்டான். அவன் பயணம் செய்து எபூசை நெருங்கினான். (எருசலேமுக்கு மற்றொரு பெயர் எபூசு.) 11 பகல் கழிந்தது. அவர்கள் எபூசு நகரத்திற்கு அருகில் வந்தனர். எனவே பணியாள் எஜமானனாகிய லேவியனை நோக்கி, “இந்த எபூசு நகரத்தில் தங்கி இங்கு இரவைக் கழிப்போம்” என்றான்.
12 ஆனால் லேவியனாகிய அந்த எஜமானன், “இல்லை, இஸ்ரவேல் ஜனங்களில்லாத அந்நிய நகரத்திற்கு நாம் போகவேண்டாம், நாம் கிபியா நகரத்திற்குச் செல்வோம்” என்றான். 13 லேவியன், “வாருங்கள், நாம் கிபியாவுக்கோ, ராமாவுக்கோ செல்வோம். அந்த இரண்டு நகரங்களில் ஒன்றில் இரவில் தங்கலாம்” என்றான்.
14 லேவியனும் அவனோடிருந்தோரும் பயணத்தைத் தொடர்ந்தனர். கிபியாவில் அவர்கள் நுழைந்ததும் சூரியன் மறைந்தது. பென்யமீன் கோத்திரத்திற்குரிய பகுதியில் கிபியா இருந்தது. 15 எனவே அவர்கள் கிபியாவில் தங்கினார்கள். இரவை அந்த நகரில் கழிக்க எண்ணினார்கள். அவர்கள் நகர சதுக்கத்திற்கு வந்து அங்கு அமர்ந்தனர். ஆனால் இரவில் தங்குவதற்கு யாரும் அவர்களை அழைக்கவில்லை.
16 அன்று மாலை வயல்களிலிருந்து ஒரு முதியவன் நகரத்திற்குள் வந்தான். அவனுடைய வீடு எப்பிராயீம் மலை நாட்டிலிருந்தது. ஆனால் அவன் கிபியா நகரத்தில் வசித்துக்கொண்டிருந்தான். (கிபியாவின் ஆட்கள் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.) 17 முதிய மனிதன் நகரசதுக்கத்தில் பயணியைப் (லேவியனை) பார்த்தான். முதியவன், “எங்கு போய்க் கொண்டிருக்கிறாய்? எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான்.
18 லேவியன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து பயணம் செய்கிறோம். நாங்கள் கர்த்தருடைய கூடாரத்துக்குப் போகிறோம். நான் எப்பிராயீம் மலை நாட்டில் தொலைவான இடத்தில் வாழ்கிறவன். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமிற்குப் போயிருந்தேன். இப்போது என் வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறேன். 19 எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீனியும் உண்டு. எனக்கும், இளம்பெண்ணுக்கும், பணியாளுக்கும் ரொட்டியும் திராட்சைரசமும் உண்டு. எங்களுக்கு எதுவும் தேவையில்லை” என்று கூறினான்.
20 முதியவன், “நீ என் வீட்டில் வந்து தங்கலாம். உனக்குத் தேவையான ஏதாவது நான் கொடுப்பேன். ஆனால் இரவில் நகர சதுக்கத்தில் மட்டும் தங்காதே” என்றான். 21 பின்பு முதியவன் லேவியனையும் அவனோடிருந்தவர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுச் சென்றான். லேவியனின் கழுதைகளுக்குத் தீனி கொடுத்தான். அவர்கள் கால்களைக் கழுவி, உண்ணவும் பருகவும் செய்தனர்.
22 லேவியனும் அவனோடிருந்தவர்களும் அவற்றை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது அந்நகர மனிதர்களில் துன்மார்க்கரான சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் கதவை பலமாகத் தட்ட ஆரம்பித்தார்கள். அந்த வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் உரக்கப் பேசினார்கள். அவர்கள், “உன் வீட்டிற்கு வந்த மனிதனை வெளியே அழைத்து வா. நாங்கள் அவனோடு பாலின உறவு கொள்ளவேண்டும்” என்றனர்.
23 முதியவன் வெளியே போய், அந்த துன்மார்க்கரிடம் பேசி, “வேண்டாம், எனது நண்பர்களே, அத்தகைய தீயகாரியத்தைச் செய்யாதீர்கள். அவன் என் வீட்டு விருந்தினன். இத்தகைய கொடிய பாவத்தைச் செய்யாதீர்கள். 24 பாருங்கள், இவள் என் மகள். இதற்கு முன் பாலியல் அனுபவத்தை அறிந்ததில்லை. அவளை உங்களிடம் அழைத்து வருவேன். மேலும் எனது விருந்தினனுடைய வேலைக்காரியையும் அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பம் போல் அவர்களை நடத்தலாம். ஆனால் இம்மனிதனுக்கு அத்தகைய கொடுமை செய்யாதீர்கள்” என்றான்.
25 ஆனால் அந்த துன்மார்க்கர் முதியோன் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. எனவே லேவியன் வேலைக்காரியை அழைத்து வெளியே அனுப்பினான். அவர்கள் அவளை இராமுழுவதும் கற்பழித்து காயப்படுத்தினார்கள். அதிகாலையில் அவர்கள் அவளைப் போகவிட்டனர்.
26 விடியும்போது அவள் தன் எஜமானன் தங்கியிருக்கும் வீட்டிற்குத் திரும்பிவந்து முன் வாசலில் வந்து விழுந்தாள். வெளிச்சம் உதிக்கும்வரை அங்கேயே கிடந்தாள்.
27 வேவியன் மறுநாள் அதிகாலையில் விழித்து தன் வீட்டிற்குப் போகவிரும்பி வெளியே போவதற்காக கதவைத் திறந்த போது கதவின் நிலையில் ஒரு கை குறுக்கே விழுந்தது. அவன் வேலைக்காரி அங்கே வாசலுக்கெதிரில் விழுந்துகிடந்தாள். 28 லேவியன் அவளிடம், “எழுந்திரு புறப்படலாம்” என்றான். ஆனால் அவள் பதில் தரவில்லை (மரித்து கிடந்தாள்.)
லேவியன் தன் வேலைக்காரியை கழுதையின் மேலேற்றிக் கொண்டு, வீட்டிற்குச் சென்றான்.
29 அவன் வீட்டிற்கு வந்ததும், ஒரு கத்தியை எடுத்து அவளை 12 துண்டுகளாக வெட்டினான். அந்த வேலைக்காரியின் 12 துண்டுகளையும் இஸ்ரவேலர் வாழ்ந்த பகுதிகளுக்கெல்லாம் அனுப்பினான். 30 அதைப் பார்த்தவர்கள் எல்லோரும், “இதைப்போன்ற எதுவும் இதுவரைக்கும் இஸ்ரவேலில் நடந்ததில்லை. எகிப்திலிருந்து நாம் வந்த காலத்திலிருந்து இதைப்போன்று எதையும் பார்த்ததில்லை இதை விசாரித்து, என்ன முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றனர்.
இஸ்ரவேலுக்கும் பென்யமீனுக்கும் யுத்தம்
20 இஸ்ரவேலர் எல்லோரும் மிஸ்பா நகரில் கர்த்தருக்கு முன்பாக நிற்பதற்காக ஒன்று கூடினார்கள். தாண் முதல் பெயர்செபா வரை இஸ்ரவேலின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், கீலேயாத்திலுள்ள இஸ்ரவேலரும் அங்குக் கூடினார்கள். 2 இஸ்ரவேல் கோத்திரங்களின் எல்லாத் தலைவர்களும் அங்கிருந்தனர். தேவனுடைய ஜனங்களின் கூட்டத்தில் அவரவருக்குரிய இடங்களில் அமர்ந்தனர். அங்கு 4,00,000 வீரர்கள் தங்கள் வாளோடு நின்றனர். 3 பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள், இஸ்ரவேலர் மிஸ்பாவில் ஒன்று கூடியிருப்பதை அறிந்தனர். இஸ்ரவேலர், “இந்த கொடிய காரியம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறு” என்றனர்.
4 எனவே கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் நடந்ததை விளக்கினான். அவன், “எனது வேலைக்காரியும் நானும் பென்யமீன் பகுதியிலுள்ள கிபியா நகரத்திற்கு வந்து, அங்கு இரவைக் கழித்தோம். 5 ஆனால் இரவில் கிபியா நகரத்தின் தலைவர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டைச் சூழ்ந்து என்னைக் கொல்ல விரும்பினார்கள். அவர்கள் என் வேலைக்காரியை கற்பழித்தனர். அவள் மரித்தாள். 6 எனவே நான் என் பணிப் பெண்ணை எடுத்துச் சென்று அவளைத் துண்டுகளாக்கினேன். பின் நான் ஒவ்வொரு துண்டையும் இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் அனுப்பினேன். நாம் பெற்ற தேசங்களுக்கெல்லாம் 12 துண்டுகளையும் அனுப்பி வைத்தேன். இஸ்ரவேலில் பென்யமீன் ஜனங்கள் இத்தகைய கொடிய காரியத்தைச் செய்ததால் நான் இவ்வாறு செய்தேன். 7 இப்போது இஸ்ரவேலின் மனிதர்களே பேசுங்கள். நாம் செய்ய வேண்டியதென்ன என்பது பற்றிய உங்கள் முடிவைக் கூறுங்கள்” என்றான்.
8 அப்போது எல்லா ஜனங்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர். அவர்கள் ஒருமித்த குரலில், “யாரும் வீட்டிற்குத் திரும்பமாட்டோம். ஆம், யாரும் வீட்டிற்கு திரும்பிப் போக வேண்டியதில்லை. 9 இப்போது கிபியா நகரத்திற்கு இதனைச் செய்வோம். சீட்டுப்போட்டு தேவன் அவர்களுக்குச் செய்ய நினைப்பதென்ன என்பதைக் கண்டுபிடிப்போம். 10 இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலிருந்தும் 100 பேரில் 10 ஆட்களைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு 1,000 பேரிலும் 100 பேரைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு 10,000 பேரிலும் 1,000 பேர்களைத் தேர்ந்தெடுப்போம். நாம் தேர்ந்தெடுத்தோர் ஆயுதங்களைக் கொண்டு வருவார்கள். இந்த சேனை பென்யமீன் பகுதியிலுள்ள கிபியா நகரத்திற்குச் செல்லும். இஸ்ரவேல் ஜனங்களிடையே அவர்கள் செய்தக் கொடிய தீமைக்காக அந்த ஜனங்களை சேனை தண்டிக்கும்” என்றனர்.
11 எனவே இஸ்ரவேலர் கிபியா நகரில் கூடினார்கள். தாங்கள் செய்வதில் எல்லோரும் ஒருமனப்பட்டிருந்தனர். 12 இஸ்ரவேல் கோத்திரங்கள் சேர்ந்து பென்யமீன் கோத்திரம் எங்கும் பின்வரும் செய்தியுடன் ஒருவனை அனுப்பினார்கள். “உங்கள் ஆட்களில் சிலர் இந்த கொடிய தீமையைச் செய்ததேன்? 13 கிபியா நகரிலிருந்து அந்த துன்மார்க்கரை எங்களிடம் அனுப்புங்கள். அவர்களைக் கொல்லும்படிக்கு எங்களிடம் ஒப்படையுங்கள். இஸ்ரவேலரிடமிருந்து தீமையை அகற்ற வேண்டும்.”
ஆனால் பென்யமீன் கோத்திரத்தினர் பிற இஸ்ரவேலரிடமிருந்து வந்த செய்தியைப் பொருட்படுத்தவில்லை. 14 பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள் தங்கள் நகரங்களை விட்டு, கிபியா நகரத்திற்குச் சென்றனர். இஸ்ரவேலின் பிற கோத்திரங்களுடன் போரிட அவர்கள் கிபியாவுக்குச் சென்றனர். 15 பென்யமீன் கோத்திரத்தினர் போருக்குப் பயிற்சியளிக்கப்பட்ட 26,000 வீரர்களை ஒன்றாகக் கூட்டினார்கள். அவர்களிடம் கிபியாவில் பயிற்சி பெற்ற 700 வீரர்களும் இருந்தனர். 16 இடதுகை பழக்கமுள்ள 700 பயிற்சி பெற்ற வீரர்களும் இருந்தனர். அவர்கள் கவண் கல்லை மிகவும் திறமையாகப் பயன்படுத்தக்கூடியவர்கள். ஒரு மயிரிழையும் தவறாது. அவர்கள் கவண் கல்லைப் பயன்படுத்துவதற்கு அறிந்திருந்தனர்.
17 பென்யமீன் அல்லாத மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களும் 4,00,000 வீரர்கனளத் திரட்டினார்கள். அந்த 4,00,000 மனிதர்களும் வாளேந்தியிருந்தனர். ஒவ்வொருவனும் பயிற்சிப் பெற்ற வீரனாக இருந்தான். 18 இஸ்ரவேலர் பெத்தேல் நகரத்திற்குச் சென்றனர். பெத்தேலில் அவர்கள் தேவனிடம், “எந்தக் கோத்திரத்தினர் முதலில் பென்யமீன் கோத்திரத்தைத் தாக்கவேண்டும்?” என்று கேட்டனர்.
கர்த்தர், “யூதா முதலில் போகட்டும்” என்றார்.
19 மறுநாள் காலையில் இஸ்ரவேலர் எழுந்தனர். கிபியா நகருக்கருகே அவர்கள் ஒரு முகாம் அமைத்தனர். 20 அப்போது இஸ்ரவேல் சேனை பென்யமீன் சேனையோடுப் போருக்குச் சென்றது. கிபியா நகரில் இஸ்ரவேல் சேனை பென்யமீன் சேனையை எதிர்த்துப் போரிடுவதற்குத் தயாராயிற்று. 21 அப்போது பென்யமீன் சேனை கிபியா நகரத்திலிருந்து வெளி வந்தது. அந்த நாளில் நடந்த போரில் பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையின் 22,000 மனிதர்களைக் கொன்றது.
22-23 இஸ்ரவேலர் கர்த்தரிடம் சென்றனர். மாலைவரைக்கும் அழுதனர். அவர்கள் கர்த்தரை நோக்கி, “பென்யமீன் ஜனங்களோடு மீண்டும் போரிடுவதற்குச் செல்ல வேண்டுமா? அவர்கள் எங்கள் உறவினர்கள்” என்றனர்.
கர்த்தர், “போய், அவர்களுக்கெதிராகப் போர் செய்யுங்கள்” என்று பதில் கூறினார். இஸ்ரவேல் மனிதர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினார்கள். மீண்டும் போருக்கு முதல்நாளைப் போலவே சென்றனர்.
24 இஸ்ரவேல் சேனை பென்யமீன் படையை நெருங்கிற்று. அது போரின் இரண்டாம்நாள். 25 பென்யமீன் சேனை கிபியா நகரிலிருந்து இஸ்ரவேல் சேனையைத் தாக்க வந்தது. இம்முறை பென்யமீன் சேனை மேலும் இஸ்ரவேல் சேனையின் 18,000 மனிதர்களைக் கொன்றது. இஸ்ரவேலர் படையிலிருந்த அவ்வீரர்கள் அனைவரும் பயிற்சி பெற்றிருந்தனர்.
26 பின் இஸ்ரவேலர் பெத்தேல் நகரம் வரைக்கும் சென்றனர். அந்த இடத்தில் அமர்ந்திருந்து கர்த்தரை நோக்கி அழுதனர். அன்று மாலைவரை நாள் முழுவதும் அவர்கள் எதுவும் உண்ணவில்லை. அவர்கள் கர்த்தருக்குத் தகன பலியையும், சமாதான பலிகளையையும் செலுத்தினார்கள். 27 இஸ்ரவேலர் கர்த்தரிடம் ஒரு கேள்வி கேட்டனர். (அந்நாளில் பெத்தேலில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. பினெகாஸ் என்பவன் தேவனுடைய ஆசாரியனாக இருந்தான். 28 பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசார் ஆரோனின் மகன்.) இஸ்ரவேலர், “பென்யமீன் ஜனங்கள் எங்கள் உறவினர். நாங்கள் அவர்களோடு போரிட மீண்டும் போக வேண்டுமா? அல்லது போரை நிறுத்த வேண்டுமா?” என்று கேட்டனர்.
கர்த்தர், “போங்கள், நாளை அவர்களை வெல்வதற்கு உங்களுக்கு உதவுவேன்” என்று பதில் உரைத்தார்.
29 பின்பு இஸ்ரவேல் சேனை கிபியா நகரைச் சுற்றிலும் சிலரை ஒளித்து வைத்தது. 30 மூன்றாம் நாள் இஸ்ரவேல் சேனை கிபியா நகரை எதிர்த்துப் போரிடச் சென்றது. அவர்கள் முன்பு செய்தது போலவே போருக்குத் தயாராயினார்கள். 31 பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையோடு போர் செய்வதற்காக கிபியா நகரை விட்டு வெளியே வந்தது. இஸ்ரவேல் சேனை பின்னிட்டுத் தங்களைப் பென்யமீன் சேனை துரத்தும்படி செய்தது. இவ்வாறாக நகரை விட்டு சேனை வெகு தூரம் வரும்படியாக பென்யமீன் சேனைக்கு எதிராக தந்திரம் செய்யப்பட்டது.
ஏற்கெனவே செய்தது போன்று பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையில் சில மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்தனர். சுமார் 30 இஸ்ரவேல் மனிதர்களை அவர்கள் கொன்றனர். வயல்களில் சிலரையும், பாதைகளில் சிலரையும் கொன்றனர். ஒரு பாதை பெத்தேல் நகரத்திற்கும் மற்றொருபாதை கிபியாவிற்கும் சென்றது. 32 பென்யமீன் மனிதர்கள், “முன்பு போலவே நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.
இஸ்ரவேல் மனிதர் ஓடிப்போய்க் கொண்டிருந்தார்கள், ஆனால் அது ஓர் தந்திரமே. பென்யமீன் மனிதர்களை நகரத்திலிருந்து வெகுதூரத்திற்கும், பெரும் பாதைகளுக்கும் அழைத்துவர விரும்பினர். 33 எனவே எல்லா மனிதரும் ஓடிவிட்டனர். பாகால் தாமார் என்னுமிடத்தில் அவர்கள் நின்றனர். கிபியாவிற்கு மேற்கே இஸ்ரவேலரில் சிலர் ஒளிந்து கொண்டிருந்தனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து ஓடிவந்து, கிபியாவைத் தாக்கினார்கள். 34 கிபியா நகரை இஸ்ரவேலின் 10,000 வீரர்கள் தாக்கினார்கள். போர் கடுமையாக இருந்தது. ஆனால் பென்யமீன் சேனை தங்களுக்கு நேரவிருக்கும் கொடுமையானக் காரியத்தை அறியாதிருந்தார்கள்.
35 கர்த்தர் இஸ்ரவேல் சேனையைப் பயன்படுத்தி, பென்யமீன் சேனையைத் தோற்கடித்தார். அந்த நாளில் இஸ்ரவேல் படை பென்யமீன் சேனையிலிருந்து 25,100 வீரரைக் கென்றனர். அவர்கள் போர்ப்பயிற்சி பெற்றிருந்தனர். 36 பென்யமீன் ஜனங்கள் தாம் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டனர்.
இஸ்ரவேல் சேனை பின்னோக்கிச் சென்றது. அவர்கள் திடீர் தாக்குதலை நம்பியிருந்ததால் அவ்வாறு பின்னே சென்றார்கள். 37 மறைந்திருந்த மனிதர்கள் கிபியா நகரத்திற்கு விரைந்தனர். அவர்கள் நகரெங்கும் சென்று அங்கிருந்தோரை வாளால் கொன்றனர். 38 ஒளிந்திருந்த மனிதர்கள் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை இஸ்ரவேல் வகுத்திருந்தனர். ஒளித்திருந்த மனிதர்கள் ஒரு விசேஷ அடையாளத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள். ஒரு பெரும் புகை மண்டலத்தை எழுப்புமாறு எதிர்பார்க்கப்பட்டனர்.
39-41 பென்யமீன் சேனை சுமார் 30 இஸ்ரவேல் படைவீரர்களைக் கொன்றிருந்தது. எனவே பென்யமீன் ஆட்கள், “முன்பு போலவே, நாங்கள் வெல்கிறோம்” என்றனர். அப்போது நகரிலிருந்து புகையெழுந்தது. பென்யமீன் ஜனங்கள் திரும்பி, புகையைப் பார்த்தனர். நகரம் முழுவதும் எரிய ஆரம்பித்தது. அப்போது இஸ்ரவேல் சேனையினர் ஓடுவதை நிறுத்தினார்கள். இதைக் கண்ட பென்யமீன் மனிதர்கள் பயந்தனர். அப்பொழுது தமக்கு நேர்ந்த கொடிய நிலையை அறிந்தனர்.
42 எனவே பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையைக் கண்டு ஓட ஆரம்பித்தது. அவர்கள் பாலைவனத்தை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களால் போரிடுவதை நிறுத்த முடியவில்லை. இஸ்ரவேலர் நகரங்களிலிருந்து வந்து அவர்களைக் கொன்றனர். 43 இஸ்ரவேலர் பென்யமீன் மனிதரைச் சூழ்ந்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தனர். அவர்களை ஓய்வெடுக்க விடவில்லை. கிபியாவின் கிழக்குப் பகுதியில் அவர்களைத் தோற்கடித்தனர். 44 பென்யமீன் சேனையைச் சார்ந்த 18,000 துணிவுமிக்க, பலமுள்ள வீரர்கள் கொல்லப்பட்டனர்.
45 பென்யமீன் சேனை திரும்பி, பாலைவனத்திற்கு நேரே ஓடினார்கள். அவர்கள் ரிம்மோன் பாறை எனப்படும் இடத்திற்கு ஓடினார்கள்.
ஆனால் இஸ்ரவேல் சேனையினர் பெரும் பாதைகளில் 5,000 பென்யமீன் வீரர்களைக் கொன்றனர். பென்யமீன் மனிதர்களை அவர்கள் துரத்திக் கொண்டேயிருந்தனர். அவர்களைக் கீதோம் வரைக்கும் துரத்தினார்கள். அவ்விடத்தில் இஸ்ரவேல் சேனை இன்னும் 2,000 வீரர்களைக் கொன்றது.
46 அந்த நாளில் பென்யமீன் படையிலுள்ள 25,000 பேர் கொல்லப்பட்டனர். அம்மனிதர்கள் வாளைச் சுழற்றி மிகவும் துணிவுடன் போர் செய்தனர். 47 ஆனால் பென்யமீனைச் சேர்ந்த 600 பேர் பாலைவனத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் ரிம்மோன் பாறை என்னுமிடத்திற்குச் சென்று நான்கு மாதங்கள் அங்குத் தங்கினார்கள். 48 இஸ்ரவேல் ஆட்கள் பென்யமீன் தேசத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கடந்து வந்த நகரங்களிலுள்ள மனிதர்களைக் கொன்றார்கள். அவர்கள் மிருகங்களையெல்லாம் கொன்றனர். அகப்பட்ட பொருட்களையெல்லாம் அழித்தனர். அவர்கள் நுழைந்த நகரங்களையெல்லாம் எரித்தனர்.
பென்யமீன் மனிதர்களுக்கு மனைவியரைத் தேர்ந்தெடுத்தல்
21 மிஸ்பாவில் இஸ்ரவேல் மனிதர்கள் ஒரு வாக்குறுதி செய்து கொண்டனர். இதுவே அவர்கள் செய்த வாக்குறுதி: “நம் கோத்திரத்தில் யாருடைய மகளும், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த ஒருவனை மணக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.”
2 இஸ்ரவேலர் பெத்தேல் நகரத்திற்குச் சென்றனர். மாலைவரைக்கும் தேவனுக்கு முன்பு அமர்ந்தனர். அவர்கள் அங்கு உட்கார்ந்திருந்து உரக்க அழுதனர். 3 அவர்கள் தேவனிடம், “கர்த்தாவே, நீர் இஸ்ரவேலரின் தேவன். ஏன் இந்தக் கொடியக் காரியம் எங்களுக்கு நேர்ந்தது? ஏன் ஒரு கோத்திரத்தினர் இஸ்ரவேலரிலிருந்து மறையவேண்டும்?” என்றார்கள்.
4 மறுநாள் அதிகாலையில், இஸ்ரவேலர் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். அவர்கள் அப்பலிபீடத்தில் கர்த்தருக்கென்று தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்தினார்கள். 5 அப்போது இஸ்ரவேலர், “கர்த்தருக்கு முன்பாக எங்களுடன் இங்கு வந்து சேராத இஸ்ரவேல் கோத்திரங்களில் யாரேனும் இருக்கிறார்களா?” என்றனர். அவர்கள் தீவிரமான வாக்குறுதி கொடுத்திருந்ததினால் இந்த கேள்வியைக் கேட்டனர். மிஸ்பாவில் பிறக் கோத்திரங்களோடு வந்து சேராதவன் கொல்லப்படுவான் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.
6 தமது உறவினரான பென்யமீன் ஜனங்களுக்காக இஸ்ரவேலர் துக்கமடைந்தனர். அவர்கள், “இன்று இஸ்ரவேலிலிருந்து ஒரு கோத்திரம் விலக்கப்பட்டுவிட்டது. 7 கர்த்தருக்கு முன் நாம் ஒரு வாக்குறுதி அளித்தோம். பென்யமீன் கோத்திரத்தைச் சார்ந்தவனை நமது பெண்கள் மணக்க அனுமதிப்பதில்லை என்றோம். பென்யமீன் ஆட்களுக்கு மனைவியர் கிடைப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?” என்றார்கள்.
8 பின் இஸ்ரவேலர், “மிஸ்பாவிற்கு இஸ்ரவேலின் எந்தக் கோத்திரத்தினர் வந்து சேரவில்லை? நாம் கர்த்தருக்கு முன்னே ஒருமித்துக் கூடியுள்ளோம். இங்கு ஒரு குடும்பம் நிச்சயமாக வரவில்லை!” என்றனர். 9 இஸ்ரவேலர் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை அறிய ஒவ்வொருவராக எண்ணிக்கை எடுத்தனர். கீலேயாத்திலுள்ள யாபேசிலிந்து ஒருவரும் வரவில்லை என்பதைக் கண்டு கொண்டார்கள். 10 எனவே இஸ்ரவேலர் 12,000 வீரர்களை கீலேயாத்திலுள்ள யாபேசு நகரத்திற்கு அனுப்பினார்கள். அவர்கள் வீரரிடம், “கீலேயாத்திலுள்ள யாபேசுக்குப் போங்கள். உங்கள் வாளால் அங்கு வாழும் அனைவரையும் பெண்களையும் குழந்தைகளையும் கூட கொல்லுங்கள். 11 நீங்கள் இதைச் செய்ய வேண்டும். அங்குள்ள எல்லா ஆண்களையும் கொல்ல வேண்டும். ஆணோடு பாலின உறவுகொண்ட பெண்களையெல்லாம் கொல்லுங்கள். ஆனால் ஆணோடு பாலின உறவு கொண்டிராத கன்னிகைகளைக் கொல்லாதீர்கள்” என்றார்கள். எனவே அவ்வீரர்கள் அப்படியே செய்தார்கள். 12 ஆண்களோடு பாலின உறவுகொண்டிராத 400 கன்னிகைகளை அந்த 12,000 வீரர்களும் கண்டனர். சீலோவிலுள்ள முகாமிற்கு அவர்கள் அந்த கன்னிகைகளை அழைத்து வந்தனர். சீலோ என்னும் இடம் கானான் தேசத்தில் இருந்தது.
13 பின்பு இஸ்ரவேலர் பென்யமீன் மனிதருக்கு ஒரு செய்தி அனுப்பினர். அவர்கள் பென்யமீன் மனிதரோடு சமாதானம் செய்து கொள்ள முன் வந்தனர். ரிம்மோன் பாறை என்னுமிடத்தில் பென்யமீன் ஆட்கள் இருந்தனர். 14 எனவே பென்யமீன் மனிதர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்தனர். கீலேயாத்திலுள்ள யாபேசில் கொல்லாமல் விட்ட பெண்களை அவர்களுக்கு இஸ்ரவேலர் கொடுத்தனர். ஆனால் பென்யமீன் மனிதருக்கு வேண்டிய எண்ணிக்கைக்குப் பெண்கள் போதவில்லை.
15 இஸ்ரவேலர் பென்யமீன் மனிதருக்காக கவலைப்பட்டனர். இஸ்ரவேலின் பிற கோத்திரங்களிலிருந்து கர்த்தர் அவர்களை பிரித்ததற்காக இஸ்ரவேலர் வருந்தினர். 16 இஸ்ரவேலின் தலைவர்கள், “பென்யமீன் கோத்திரத்தின் பெண்கள் கொல்லப்பட்டனர். உயிரோடிருக்கிற பென்யமீன் ஆட்களுக்கு எங்கிருந்து பெண்களைத் தருவோம்? 17 உயிரோடிருக்கிற பென்யமீன் மனிதர்கள் தம் தலைமுறை தொடர்வதற்காக பிள்ளைகளைப் பெறுதல் வேண்டும். இஸ்ரவேலின் ஒரு கோத்திரம் அழிந்து போகாதபடிக்கு இது நடைபெற வேண்டும். 18 ஆனால் பென்யமீன் மனிதரை மணந்து கொள்ள நம் பெண்களை அனுமதிக்க முடியாது. நாம் இந்த வாக்குறுதி அளித்துள்ளோம்: ‘பென்யமீனைச் சேர்ந்தவனுக்குப் பெண் கொடுக்கிற எவனும் சபிக்கப்படுவான்.’ 19 நமக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சீலோ நகரத்தில் கர்த்தருடைய பண்டிகை காலம் இது. ஒவ்வொரு ஆண்டும் அப்பண்டிகை நடக்கிறது” என்றனர். (சீலோ நகரம் பெத்தேல் நகரத்திற்கு வடக்கிலும் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதையின் கிழக்கிலும் உள்ளது. அது லிபோனா நகரத்திற்குத் தெற்கேயும் இருக்கிறது.)
20 எனவே தலைவர்கள் பென்யமீன் கோத்திரத்திற்கு தங்கள் யோசனையைத் தெரிவித்தனர். அவர்கள், “போய் திராட்சைத் தோட்டங்களில் மறைந்துகொள்ளுங்கள். 21 பண்டிகைச் சமயத்தில் நடனமாடும்படி சீலோ நகர இளம் பெண்கள் வருகிற சமயத்தைப் பார்த்துக் கொண்டே இருங்கள். அப்போது திராட்சைத் தோட்டங்களில் உங்கள் மறைவிடங்களில் இருந்து ஓடி வாருங்கள். உங்களில் ஒவ்வொருவரும் சீலோ நகரத்து கன்னிகைகளில் ஒருத்தியை எடுத்துக்கொள்ளலாம். அந்த கன்னிகைகளை பென்யமீன் தேசத்திற்குக் கொண்டு சென்று மணந்துகொள்ளுங்கள். 22 அந்த கன்னிகைகளின் தந்தையாரோ, சகோதரரோ வந்து எங்களிடம் முறையிடுவார்கள். ஆனால் நாங்கள், ‘பென்யமீன் மனிதரிடம் இரக்கம் காட்டுங்கள். அப்பெண்களை அவர்கள் மணந்துகொள்ளட்டும். அவர்கள் உங்கள் பெண்களைத்தானே கொண்டு சென்றார்கள். அவர்கள் உங்களோடு போர் தொடுக்கவில்லை. அவர்களே கன்னிகைகளை எடுத்துச்சென்றதால், நீங்கள் தேவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறவில்லை. நீங்கள் பென்யமீன் ஆட்களுக்கு உங்கள் பெண்களை மணம் முடித்து வைப்பதில்லை என்றுதானே வாக்குறுதி அளித்தீர்கள். நீங்களே பென்யமீன் ஆட்களுக்குப் பெண்களைக் கொடுக்கவில்லை. அவர்களே உங்களிடமிருந்து பெண்களை எடுத்துச்சென்றார்கள். எனவே நீங்கள் உங்கள் வாக்குறுதியை மீறவில்லை’ என்போம்” என்றார்கள்.
23 அவ்வாறே பென்யமீன் ஆட்கள் செய்தார்கள். அந்த கன்னிகைகள் நடனமாடி வரும்போது, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெண்னைப் பிடித்துக் கொண்டான். அவர்கள் அப்பெண்களைக் கவர்ந்து சென்று, மணந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் தேசத்திற்குப் போனார்கள். அத்தேசத்தில் மீண்டும் நகரங்களை கட்டி, அந்நகரங்களில் குடியேறினார்கள். 24 பின் இஸ்ரவேலர் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள். அவர்கள் தங்கள் தேசத்திற்கும் கோத்திரங்களுக்கும் சென்றனர்.
25 அந்நாட்களில் இஸ்ரவேலருக்கு அரசன் இருக்கவில்லை. எனவே ஒவ்வொருவனும் தனக்கு சரியெனக் கருதியதைச் செய்தான்.
யூதாவில் பஞ்சம்
1 நியாயதிபதிகளின் ஆட்சிக்காலத்தில், உண்ணக்கூட போதுமான உணவில்லாத மோசமான ஒரு பஞ்சம் யூதா நாட்டில் ஏற்பட்டது. அப்போது யூதாவிலுள்ள பெத்லெகேமை விட்டு, எலிமெலேக்கு என்பவன் தனது மனைவியுடனும், இரண்டு மகன்களுடனும் மலைநாடான மோவாபுக்குச் சென்றான். 2 அவனது மனைவியின் பெயர் நகோமி. அவனது இரண்டு மகன்களின் பெயர்களும் மக்லோன், கிலியோன் என்பவை ஆகும். இவர்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமில் எப்பிராத்தியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இக்குடும்பமானது மலை நாடான மோவாபுக்கு சென்று அங்கேயே தங்கியது.
3 பின்னர், நகோமியின் கணவனான எலிமெலேக்கு மரித்துப் போனான். எனவே நகோமியும் அவளது இரண்டு மகன்களும் மட்டுமே மீந்திருந்தார்கள். 4 அவளது மகன்கள் மோவாப் நாட்டிலுள்ள பெண்களை மணந்துகொண்டனர். ஒருவனின் மனைவி பெயர் ஓர்பாள், இன்னொருவனின் மனைவி பெயர் ரூத். அவர்கள் அங்கே 10 ஆண்டுகள் வாழ்ந்தனர். 5 பின், மக்லோனும் கிலியோனும் கூட மரித்துவிட்டனர். அதன்பின் கணவனும், மகன்களும் இல்லாமல் நகோமி தனித்தவளானாள்.
நகோமி வீட்டிற்குத் திரும்பிப் போகுதல்
6 மலைநாடான மோவாப்பில் நகோமி வாழ்ந்துகொண்டிருக்கும்போது, கர்த்தர் யூதாவில் தன் ஜனங்களுக்கு உணவு கொடுத்தார் என்று அறிந்தாள். எனவே நகோமியும் மலைநாடான மோவாபை விட்டுத் தன் சொந்த நாட்டிற்குப் போக முடிவு செய்தாள். அவளது மருமகள்களும் அவளோடு புறப்பட்டனர். 7 அவர்கள் தாம் வாழ்ந்த இடத்தை விட்டுவிட்டு யூதா நாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
8 அப்போது நகோமி தன் மருமகள்களிடம், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்கேத் திரும்பிச் செல்லவேண்டும். நீங்கள் என்னோடும், மரித்துப்போன எனது மகன்களோடும் மிக அன்பாக இருந்தீர்கள். எனவே கர்த்தரும் உங்களிடம் கருணை காட்டுமாறு வேண்டிக்கொள்வேன். 9 உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல கணவனும், வீடும் கிடைக்கவேண்டுமென்று நான் வேண்டுவேன்” என்றாள். நகோமி அவர்களை முத்தமிட்டபோது, அவர்கள் அழ ஆரம்பித்தனர்.
10 பிறகு அவர்கள், “நாங்கள் உம்மோடு வர விரும்புகிறோம். உம்முடைய குடும்பத்தில் சேரவே விரும்புகிறோம்” என்றனர்.
11 ஆனால் நகோமி, “வேண்டாம் மகள்களே, உங்கள் தாய் வீட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னோடு ஏன் வரவேண்டும்? என்னால் உங்களுக்கு உதவமுடியாது. உங்களோடு கணவனாக வாழவேறு மகன்களும் என்னிடம் இல்லை. 12 உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்! ஒரு புதிய கணவனைப் பெறமுடியாத அளவிற்கு நானும் முதியவளாகிவிட்டேன். நான் மீண்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், உங்களுக்கு உதவமுடியாது. இன்று இரவே நான் கர்ப்பமாகி இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றாலும் அது உங்களுக்கு உதவாது. 13 ஏனென்றால் அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். நான் அவ்வளவு காலம் உங்களைக் காக்கவைக்கக் கூடாது. அது எனக்கு மிகவும் துக்கத்தைத் தரும்! எனக்காக கர்த்தர் செய்த பல காரியத்துக்காக நான் ஏற்கெனவே துக்கமாக இருக்கிறேன்!” என்றாள்.
14 எனவே, அந்தப் பெண்கள் மேலும் அழுதனர். பிறகு ஓர்பாள் நகோமிக்கு முத்தமிட்டு விட்டு விலகிப் போனாள். ஆனால் ரூத் அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு அவளோடு தங்கிவிட்டாள்.
15 நகோமியோ அவளிடம், “பார், உனது சகோதரி தனது சொந்த ஜனங்களிடமும் தெய்வங்களிடமும் சென்றாள். எனவே, நீயும் அவளைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும்” என்றாள்.
16 ஆனால் ரூத், “உம்மைவிட்டு விலகும்படி என்னை வற்புறுத்த வேண்டாம்! என் சொந்தக்காரர்களிடம் திரும்பிப் போகுமாறு என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். என்னை உம்மோடு வரவிடும். நீர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நானும் உம்மோடு வருவேன். நீர் உறங்கும் இடத்திலேயே நானும் உம்மோடு உறங்குவேன். உம் ஜனங்களே என் ஜனங்கள். உம்முடைய தேவனே என் தேவன். 17 நீர் மரிக்கும் இடத்திலேயே நானும் மரிப்பேன். அதே இடத்தில்தான் நான் அடக்கம் பண்ணப்பட வேண்டும். நான் இந்த வாக்குறுதியைக் காப்பாற்றாவிட்டால் என்னைத் தண்டிக்கும்படி கர்த்தரிடம் கேட்டுக்கொள்வேன்: மரணம் ஒன்றுதான் நம்மைப் பிரிக்கும்” என்றாள்.
வீட்டிற்குத் திரும்புதல்
18 ரூத் தன்னோடு வர மிகவும் விரும்புவதை நகோமி அறிந்துக்கொண்டாள். எனவே நகோமி அவளோடு விவாதம் செய்வதை நிறுத்திவிட்டாள். 19 நகோமியும், ரூத்தும் பெத்லெகேம்வரை பயணம் செய்தனர். அவர்கள் பெத்லெகேமிற்குள் நுழைந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள், “இது நகோமியா?” என்று கேட்டார்கள்.
20 ஆனால் நகோமியோ ஜனங்களிடம், “என்னை நகோமி என்று அழைக்காதீர்கள், மாராள் என்று அழையுங்கள். ஏனென்றால் எனது வாழ்க்கையை சர்வ வல்லமையுள்ள தேவன் துக்கம் நிறைந்ததாக்கிவிட்டார். 21 நான் இங்கிருந்து போகும்போது எனக்கு விருப்பமான அனைத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் இப்போது நான் வெறுமையானவளாகும்படி கர்த்தர் செய்துவிட்டார். என்னைத் துக்கமுள்ளவளாகும்படி கர்த்தர் செய்தபிறகு, ஏன் என்னை நகோமி (மகிழ்ச்சி) என்று அழைக்கிறீர்கள்? சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவிட்டார்” என்றாள்.
22 இவ்வாறு நகோமியும் அவளது மருமகளான ரூத்தும் மலைநாடான மோவாபிலிருந்து திரும்பி வந்தனர். இரண்டு பெண்களும் பெத்லெகேம் வந்தபோது, யூதாவில் வாற்கோதுமை அறுவடை தொடங்கியது.
ரூத் போவாஸை சந்தித்தல்
2 பெத்லெகேமில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவனது பெயர் போவாஸ். அவன் நகோமியின் நெருங்கிய உறவினன். அவன் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சார்ந்தவன்.
2 ஒருநாள் ரூத் (மோவாபிலிருந்து வந்த பெண்) நகோமியிடம், “நான் வயலுக்குப் போகலாம் என்றும், என்மீது இரக்கம் காட்டக்கூடிய ஒருவரைக் காண முடியும் என்றும், வயலில் சிதறிக் கிடக்கும் தானியங்களைச் சேகரித்துக்கொள்ள அவர் அனுமதிக்கக் கூடும் என்றும் எண்ணுகின்றேன்” என்றாள்.
3 நகோமி, “நல்லது மகளே, போய் வா” என்றாள். எனவே ரூத் வயலுக்குப் போய், தானியங்களை அறுவடை செய்யும் வேலைக்காரர்களுக்குப் பின்னால் போனாள். சிதறிக்கிடக்கும் தானியங்களைச் சேகரித்தாள். அந்த வயலின் ஒரு பகுதி போவாஸுக்கு உரியது. அவன் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவன்.
4 பிறகு போவாஸ் பெத்லெகேமிலிருந்து வயலுக்கு வந்தான். அவன் வேலைக்காரர்களை வாழ்த்தி, “கர்த்தர் உங்களோடு இருக்கட்டும்” என்று கூறினான்.
அதற்கு வேலைக்காரர்களும், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என்றனர்.
5 பிறகு, போவாஸ் தனது வேலைக்காரர்களிடம், “அந்தப் பெண் யார்?” என்று கேட்டான்.
6 வேலைக்காரன் அதற்கு, “அவள் மோவாபிய பெண். அவள் மலைநாடான மோவாபிலிருந்து நகோமியோடு வந்திருக்கிறாள். 7 அவள் அதிகாலையில் என்னிடம் வந்து, வேலைக்காரர்களின் பின்னால் போய், சிதறும் தானியங்களை எடுத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டாள். இதுவரை இங்கேயே இருக்கிறாள். அவளது குடிசையும் இங்கேதான் இருக்கிறது” என்றான்.
8 பிறகு போவாஸ் ரூத்திடம், “பெண்ணே கவனி, நீ என் வயலிலேயே தங்கியிருந்து சிதறும் தானியங்களை எல்லாம் சேகரித்து உனக்காக எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்களின் வயலுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து பெண் வேலைக்காரர்களின் பின்னால் போ. 9 அவர்கள் எந்த வயலுக்குப் போகிறார்கள் என்பதைப் பார்த்திருந்து, அவர்களைப் பின்தொடர்ந்து செல். உனக்குத் தொந்தரவு செய்யாதபடி இங்குள்ள இளைஞர்களை எச்சரித்திருக்கிறேன். உனக்குத் தாகமாக இருக்கும்போது, எனது ஆட்கள் குடிக்கும் ஜாடியில் இருந்தே நீயும் தண்ணீரை எடுத்துக் குடிக்கலாம்” என்றான்.
10 ரூத் தரையில் பணிந்து வணங்கினாள். அவள் போவாஸிடம், “என்னைப் பொருட்படுத்தி கவனித்ததுபற்றி ஆச்சரியப்படுகிறேன். நான் அந்நிய தேசத்தாளாயிருந்தும் என் மீது கருணை காட்டுகிறீர்” என்றாள்.
11 போவாஸ் அவளுக்குப் பதிலாக, “நீ உன் மாமியாரான நகோமிக்குச் செய்துவரும் உதவியைப் பற்றி, நானும் அறிந்துள்ளேன். உன் கணவன் மரித்தப் பிறகும் நீ அவளுக்கு உதவி வருகிறாய். நீ உனது தந்தை, தாய், உறவினர், நாடு அனைத்தையும் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். இங்குள்ள எவரையும் உனக்குத் தெரியாது. எனினும் நீ நகோமியோடு இங்கே வந்துவிட்டாய். நீ செய்த நல்ல செயல்களுக்கெல்லாம் கர்த்தர் உனக்கு நன்மைச் செய்வார். 12 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் உனக்கு முழுமையான பலனைத் தருவார். அவரிடம் பாதுகாப்புக்காக வந்திருக்கிறாய். அவர் உன்னைப் பாதுகாப்பார்” என்றான்.
13 பிறகு ரூத், “நீங்கள் என்னிடம் மிகுந்த கருணையோடு இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண வேலைக்காரி. நான் உங்கள் வேலைக்காரிகளுள் ஒருத்திக்குக்கூட சமமானவள் அல்ல. ஆனால் நீங்கள் என்னிடம் கருணையான வார்த்தைகளைக் கூறி ஆறுதலடையச் செய்துள்ளீர்கள்” என்றாள்.
14 மதிய உணவு நேரத்தில், போவாஸ், “இங்கே வா! எங்களிடம் இருக்கும் அப்பத்தில், நீயும் கொஞ்சம் சாப்பிடு. உன் அப்பத்தை இந்த காடியிலே தோய்த்துக் கொள்” என்று ரூத்திடம் சொன்னான்.
எனவே ரூத் வேலைக்காரர்களோடு உட்கார்ந்தாள். போவாஸ் அவளுக்குக் கொஞ்சம் வறுத்த கோதுமையைக் கொடுத்தான். அவள் வயிறு நிறைய சாப்பிட்டாள். எனினும் உணவு மிஞ்சியது. 15 பிறகு அவள் எழுந்து தன் வேலைக்குத் திரும்பிப் போனாள்.
பின்னர் போவாஸ் தன் வேலைக்காரர்களிடம், “அவள் அறுத்த கட்டுகளின் நடுவே இருக்கும் தானியங்களையுங்கூடச் சேகரித்துக்கொள்ளட்டும். அவளைத் தடுக்க வேண்டாம். 16 அவளுக்கு எளிதாக இருக்கும்படி, அறுக்கும்போதே சில தானியக் கதிர்களை விட்டுச் செல்லுங்கள். அவள் அவற்றை சேகரித்துக்கொள்ளட்டும். சேகரிக்கும் வேலையை நிறுத்தும்படி சொல்ல வேண்டாம்” என்றான்.
நகோமி போவாஸைப்பற்றிக் கேள்விப்படுதல்
17 ரூத் மாலைவரை வயல்களில் வேலை செய்தாள். பிறகு அவள் தான் பொறுக்கியதை தட்டி அடித்துப் புடைத்தாள். அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது. 18 ரூத் அதனை எடுத்துக்கொண்டு நகரத்துக்குள் போய் தன் மாமியாரிடம் அவற்றைக் காட்டினாள். அத்துடன் தன்னிடம் மீதியிருந்த மதிய உணவையும் அவளுக்குக் கொடுத்தாள்.
19 அவளது மாமியாரோ அவளிடம், “நீ இந்த தானியத்தை எங்கே சேகரித்தாய்? எங்கே வேலை செய்தாய்? உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றாள்.
ரூத் அவளிடம் தான் யாரோடு வேலை செய்தாள் என்பதைக் கூறினாள். அவள், “இன்றைக்கு நான் வேலைசெய்த வயல்காரனின் பெயர் போவாஸ்” என்றாள்.
20 நகோமி தன் மருமகளிடம், “கர்த்தர் அவனை ஆசீர்வதிக்கட்டும்! உயிருடன் இருப்பவர்களுக்கும், மரித்துப்போனவர்களுக்கும் தொடர்ந்து தன் கருணையை அவரே காட்டி வருகிறார்” என்றாள். அத்துடன் “போவாஸ் நமது உறவினர்களில் ஒருவன், போவாஸ் நமது பாதுகாவலர்களிலும் [a] ஒருவன்” என்றாள்.
21 பிறகு ரூத், “மீண்டும் வரும்படியும், வயலில் தொடர்ந்து வேலை செய்யும்படியும் போவாஸ் என்னிடம் சொன்னார். அறுவடைக்காலம் முடியும்வரை அவரது வேலைக்காரர்களுடனேயே நானும் வேலை செய்யலாம் என்றார்” என்று சொன்னாள்.
22 பிறகு நகோமி தன் மருமகளிடம், “அவனது பெண் வேலைக்காரிகளோடு சேர்ந்து வேலை செய்வது உனக்கும் நல்லது. நீ வேறு ஏதாவது வயலில் வேலை செய்தால், யாராவது உனக்குத் தொல்லை கொடுக்கக் கூடும்” என்றாள். 23 எனவே ரூத், போவாஸின் வேலைக்காரிகளோடு சேர்ந்து தொடர்ந்து வேலை செய்துவந்தாள். வாற் கோதுமையின் அறுவடை முடியும் வரை அவள் தானியத்தைச் சேகரித்து வந்தாள். கோதுமை அறுவடைக் காலம் முடியும்வரையும் அங்கு வேலைசெய்தாள். ரூத் தனது மாமியாரான நகோமியோடு தொடர்ந்து வாழ்ந்து வந்தாள்.
தானியத்தைப் போரடிக்கும் இடம்
3 பிறகு நகோமி ரூத்திடம், “என் மகளே, உனக்காக நான் ஒரு நல்ல கணவனையும், சிறந்த வீட்டையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுதான் உனக்கும் நல்லது. 2 அதற்கு போவாஸ் சரியான மனிதனாக இருக்கலாம். போவாஸ் நமது நெருக்கமான உறவினன். நீ அவனது வேலைக்காரிகளோடு வேலை செய்திருக்கிறாய். இன்று இரவு களத்தில் தானியத்தைப் போரடிக்கும் இடத்தில் அவன் வேலை செய்வான். 3 நீ குளித்து நன்றாக ஆடை அணிந்துகொள். தானியத்தை போரடிக்கும் களத்திற்குப் போ. அவன் இரவு உண்டு முடிக்கும்வரை போவாஸின் கண்ணில் படாமல் இரு. 4 அவன் உண்டு முடித்ததும், ஓய்வுக்காகப் படுப்பான். அவனையே கவனித்துக்கொண்டிருந்தால் அவன் படுக்கும் இடத்தை நீ அறிந்து கொள்ள முடியும். அங்கேபோய் அவனது காலை மூடியிருக்கும் போர்வையை ஒதுக்கிவிட்டு அவனோடு படுத்துக்கொள். நீ திருமணத்துக்காகச் செய்ய வேண்டியதைப்பற்றி அவன் உனக்குக் கூறுவான்” என்றாள்.
5 பிறகு ரூத், “நீங்கள் சொன்னபடியே நான் செய்வேன்” என்று பதில் சொன்னாள்.
6 எனவே ரூத் தானியத்தைப் போரடிக்கும் களத்திற்குச் சென்றாள். ரூத் தனது மாமியார் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்து முடித்தாள். 7 உணவை உண்டு, குடித்தபின் போவாஸ் மிகவும் மனநிறைவோடு இருந்தான். அவன் ஒரு தானிய அம்பாரத்துக்கு அடியிலே படுத்துக்கொண்டான். பிறகு ரூத் அமைதியாக அவன் அருகிலே சென்று காலருகே போர்வையை விலக்கிவிட்டு படுத்துக்கொண்டாள்.
8 நடு இரவில் போவாஸ் தூக்கத்தில் புரண்டு படுத்தான். அப்போது விழிப்பு வந்தது. தன் காலடியில் ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 9 போவாஸ் அவளிடம், “யார் நீ?” என்று கேட்டான்.
அவளோ, “நான் உங்கள் வேலைக்காரியான ரூத். உங்கள் போர்வையை என்மேல் மூடுங்கள். நீங்களே எனது பாதுகாவலர்” என்றாள்.
10 பிறகு போவாஸ், “இளம்பெண்ணே! கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நீ என்னிடம் கருணை உடையவளாய் இருக்கிறாய். நீ உன் மாமியாரின் பேரில் வைத்திருக்கும் கருணையைவிட என்மீது வைத்திருக்கும் கருணை மிகவும் உயர்ந்தது. ஏழையோ பணக்காரனோ, உன்னால் ஒரு இளைஞனை மணந்திருக்க முடியும். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. 11 இளம் பெண்ணே, இனிமேல் நீ பயப்பட வேண்டாம். நீ கேட்கும் உதவியை உனக்குச் செய்வேன். நீ மிகவும் சிறந்த பெண் என்பதை நகரத்தில் உள்ள அனைவரும் அறிவார்கள். 12 நான் உனது நெருங்கிய உறவினன் என்பதும் உண்மைதான். ஆனால் என்னைவிட நெருக்கமான உறவினன் ஒருவன் உனக்கு இருக்கிறான். 13 இன்று இரவு இங்கேயே தங்கியிரு. காலையில் அவன் உனக்கு உதவுவானா என்று பார்க்கலாம். அவன் உனக்கு உதவுவதாகத் தீர்மானித்துவிட்டால் அது மிகவும் நல்லதாக இருக்கும். ஒருவேளை அவன் மறுத்துவிட்டால், பிறகு கர்த்தருடைய பேரால் ஆணையிட்டுக் கூறுகிறேன், நானே உன்னை மணந்துகொள்வேன். உனக்காக எலிமெலேக்கின் நிலத்தையும் வாங்கித் தருவேன். எனவே காலைவரை இங்கேயே படுத்திரு” என்றான்.
14 எனவே ரூத், போவாஸின் காலருகே காலைவரை படுத்திருந்தாள். விடியும் முன், இருள் இருக்கும்போதே ரூத் எழுந்தாள்.
போவாஸ் அவளிடம், “நேற்று இரவு நீ இங்கே வந்தது நமக்குள் இரகசியமாக இருக்கட்டும்” என்று கூறினான். 15 மேலும் அவன், “உனது போர் வையைக் கொண்டு வா. அதனை விரித்துப்பிடி” என்று கூறினான்.
எனவே ரூத் போர்வையை விரித்துப் பிடித்தாள், போவாஸ் அதில் ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டான். அதை நகோமிக்குத் தனது அன்பளிப்பாகக் கொடுக்கச் சொன்னான். பிறகு அதை அவளது முதுகில் ஏற்றிவிட்டு, நகரத்தை நோக்கி போவாஸ் போனான்.
16 ரூத் தனது மாமியாரான நகோமி இருந்த வீட்டிற்குப் போனாள். நகோமி கதவருகே வந்து, “யாரங்கே?” என்று கேட்டாள்.
ரூத் வீட்டிற்குள்ளே போய் போவாஸ் அவளுக்காகச் செய்ததை எல்லாம் எடுத்துச் சொன்னாள். 17 அவள், “போவாஸ் உங்களுக்கு அன்பளிப்பாக இதை என்னிடம் கொடுத்தார். உங்களுக்கு அன்பளிப்பாக எதையும் எடுத்துச் செல்லாமல் நான் வீட்டுக்குப் போகக் கூடாது என்று சொன்னார்” என்றாள்.
18 அதற்கு நகோமி, “மகளே, என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும்வரை பொறுமையாக இருப்போம். தான் செய்ய வேண்டியவற்றை போவாஸ் செய்து முடிக்கும்வரை ஓய்வெடுக்கமாட்டான். என்ன நடக்கப் போகிறது என்பதை இன்று இரவுக்குள் நாமறிவோம்” என்றாள்.
போவாஸும் மற்ற உறவினனும்
4 நகரவாசலில் ஜனங்கள் கூடும் இடத்திற்கு போவாஸ் சென்றான். தான் சொன்ன உறவினன் வரும்வரை அங்கேயே அவன் காத்திருந்தான். அவன் வந்ததும், “நண்பனே! வா, இங்கே உட்காரு!” என்றான்.
2 பிறகு போவாஸ் சில சாட்சிகளையும் அருகில் அழைத்தான். நகரத்திலுள்ள 10 மூப்பர்களையும் அழைத்து, “இங்கு உட்காருங்கள்!” என்றான். அவர்களும் உட்கார்ந்தனர்.
3 பிறகு போவாஸ் நெருங்கிய உறவினனிடம், “மோவாபின் மலை நகரத்திலிருந்து நகோமி வந்திருக்கிறாள். எலிமெலேக்கின் நிலத்தை அவள் விற்கப்போகிறாள். 4 நான் இங்கே வாழும் ஜனங்களின் முன்னிலையிலும் நமது மூப்பர்களின் முன்னிலையிலும் இதைக்கூற முடிவு செய்தேன். நீ அதனைத் திரும்ப மீட்க வேண்டுமென விரும்பினால் வாங்கிக்கொள்! நீ அந்த நிலத்தை மீட்டுக்கொள்ள விரும்பாவிட்டால் என்னிடம் கூறு. நானே அதை மீட்டுக்கொள்ளும் இரண்டாவது உரிமையாளன். நீ அதனைத் திரும்ப மீட்டுக் கொள்ளாவிட்டால் நான் வாங்கிக் கொள்வேன்” என்றான்.
5 பிறகு போவாஸ், “நீ நகோமியிடமிருந்து நிலத்தை வாங்கும்போதே நீ மரித்துப் போனவனின் மனைவியையும் பெறுவாய், அவள் மோவாபிய பெண்ணான ரூத். அவளுக்குக் குழந்தை பிறந்தால், இந்த நிலமும் அதற்கு உரியதாகும். இதன் மூலம், அந்த நிலம் மரித்துப்போனவனின் குடும்பத்திற்குரியதாகவே விளங்கும்” என்றான்.
6 அந்த நெருங்கிய உறவினனோ, “என்னால் அந்த நிலத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது. அது எனக்கே உரியதாகவேண்டும். ஆனால் என்னால் விலைகொடுத்து வாங்கமுடியாது. நான் அவ்வாறு செய்தால் என் நிலத்தை இழந்துபோனவன் ஆகிறேன். நீங்களே அந்நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான். 7 (இஸ்ரவேலில் முற்காலத்தில், ஒருவன் ஒரு சொத்தை வாங்கினாலோ மீட்டுக் கொண்டாலோ, ஒருவன் தனது பாதரட்சையை எடுத்து மற்றவனிடம் கொடுக்கவேண்டும். இது வாங்கியதற்கான ஒரு சான்றாக விளங்கும்.) 8 எனவே நெருக்கமான உறவினன், “நிலத்தை வாங்கிக்கொள்” என்று கூறி, தனது பாதரட்சையை எடுத்து போவாஸிடம் கொடுத்தான்.
9 பிறகு போவாஸ் மூப்பர்களிடமும், மற்ற ஜனங்களிடமும், “இன்று நான் நகோமியிடமிருந்து எலிமெலேக்குக்கும், கிலியோனுக்கும், மக்லோனுக்கும் சொந்தமாக இருந்த எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறேன். 10 நான் ரூத்தையும் என் மனைவியாகப் பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு நான் செய்வதால், மரித்துப்போனவனின் சொத்தானது அவனது குடும்பத்துக்கு உரியதாகவே விளங்கும். இதன் மூலம் அவனது பெயரானது அவனது குடும்பத்தையும் சொத்துக்களையும் விட்டு பிரிக்கப்படாமல் இருக்கும். இன்று இதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்” என்றான்.
11 நகரவாசலில் உள்ள ஜனங்களும் மூப்பர்களும், சாட்சிகளாக இருந்தவர்களும், “உனது வீட்டிற்கு வருகிற இந்தப் பெண்ணை இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த ராகேலைப் போலவும், லேயாளைப் போலவும் கர்த்தர் ஆக்குவாராக. நீ எப்பிராத்தாவிலே அதிகாரத்தைப் பெறுவாயாக! பெத்லெகேமில் புகழ் பெறுவாயாக! 12 தாமார் யூதாவுக்குப் பேரேசை மகனாகப் பெற்றாள். அதனால் அந்தக் குடும்பம் உயர்வு பெற்றது. அதைப்போலவே, ரூத் மூலமாக கர்த்தர் உனக்கு நிறைய பிள்ளைகளைத் தரட்டும். உனது குடும்பமும் அதைப்போலவே, உயர்வைப் பெறட்டும்” என்றனர்.
13 எனவே போவாஸ் ரூத்தை மணந்துகொண்டான். அவள் கர்ப்பவதியாக கர்த்தர் கருணை செய்தார். அவள் ஒரு மகனைப் பெற்றாள். 14 நகரத்தில் உள்ள பெண்கள் நகோமியிடம், “உனக்குப் பிள்ளையைக் கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவன் இஸ்ரவேலில் மிகுந்த புகழைப் பெறுவான். 15 அவன் மீண்டும் உன்னை வாழவைப்பான், உனது முதியவயதில் அவன் உன்னைக் கவனித்துக்கொள்வான். இவ்வாறு நடக்குமாறு உனது மருமகள் செய்தாள். அவள் உனக்காகவே இந்தக் குழந்தையைப் பெற்றாள். அவள் உன்மீது அன்புடையவள். அவள் 7 ஆண் மகன்களையும்விட உனக்கு மேலானவள்” என்றனர்.
16 நகோமி பிள்ளையை எடுத்துத் தனது கைகளில் ஏந்தி அவனைக் கவனித்துக் கொண்டாள். 17 அயல் வீட்டுப் பெண்கள், “இந்த பையன் நகோமிக்காக பிறந்தவன்” என்றனர். அவர்கள் அவனுக்கு ஓபேத் என்று பேரிட்டனர். அவன் ஈசாயின் தந்தையானான். ஈசாய் அரசனான தாவீதின் தந்தையானான்.
ரூத் மற்றும் போவாஸின் குடும்பம்
18 இது பேரேசுடைய குடும்பத்தின் வரலாறு:
பேரேஸ் எஸ்ரோனின் தந்தையானான்.
19 எஸ்ரோன் ராமின் தந்தையானான்.
ராம் அம்மினதாபின் தந்தையானான்.
20 அம்மினதாப் நகசோனின் தந்தையானான்.
நகசோன் சல்மோனின் தந்தையானான்.
21 சல்மோன் போவாஸின் தந்தையானான்.
போவாஸ் ஓபேதின் தந்தையானான்.
22 ஓபேத் ஈசாயின் தந்தையானான்.
ஈசாய் தாவீதின் தந்தையானான்.
எல்க்கானாவும் அவனது குடும்பமும் சீலோவில் ஆராதித்தனர்
1 எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் உள்ள ராமா என்னும் நகரில் எல்க்கானா என்னும் பெயருள்ள மனிதன் இருந்தான். அவன் சூப் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவன். எல்க்கானா எரோகாமின் மகன், எரோகாம் எலிகூவின் மகன், எலிகூ தோகுவின் மகன், தோகு சூப்பின் மகன், எப்பிராயீம் என்னும் கோத்திரத்திலிருந்து வந்தவன்.
2 எல்க்கானாவிற்கு இரண்டு மனைவிமார்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தியின் பெயர் அன்னாள், மற்றொருவள் பெயர் பெனின்னாள், பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை.
3 ஒவ்வொரு ஆண்டும் எல்க்கானா தனது நகரமான ராமாவை விட்டு சீலோவுக்குப் போவான். அங்கு அவன் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொண்டான், அங்கு கர்த்தருக்குப் பலிகளும் செலுத்தினான். சீலோவில் ஓப்னியும் பினெகாசும் கர்த்தருடைய ஆசாரியர்களாக சேவை செய்து வந்தனர். இவர்கள் ஏலியின் மகன்கள். 4 ஒவ்வொரு முறையும் எல்க்கானா பலிகளை செலுத்தும் போது அதில் ஒரு பங்கினை பெனின்னாளுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் கொடுத்து வந்தான். 5 எல்க்கானா அன்னாளுக்கும் இரட்டிப்பான பங்கினை எப்போதும் கொடுத்து வந்தான். ஏனென்றால் அவளில் அவன் அன்பு செலுத்தினான். கர்த்தர் அவளது கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
பெனின்னாள் அன்னாளை துன்புறுத்தல்
6 பெனின்னாள் எப்பொழுதும் அன்னாளைத் துக்கப்படுத்தி அவள் துயருறுமாறு செய்வாள், ஏனென்றால் அன்னாள் குழந்தைப்பேறு இல்லாதவளாக இருந்தாள். 7 இது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வந்தது. ஒவ்வொரு முறையும் அவர்களின் குடும்பம் சீலோவிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு போகும் போதும், பெனின்னாள் அன்னாளை வேதனைப்படுத்துவாள். ஒரு நாள் எல்க்கானா பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தான். அன்னாள் துக்கம் மீறி அழ ஆரம்பித்தாள். அவள் அன்று எதையும் உண்ணவில்லை. 8 அவளது கணவனான எல்க்கானா அவளிடம், “அன்னாள்! ஏன் நீ அழுகிறாய்? ஏன் உண்ணாமல் இருக்கிறாய்? ஏன் துக்கமாய் இருக்கிறாய்? நீ எனக்குரியவள், நான் உனது கணவன். நான் பத்து மகன்களை விட உனக்கு மேலானவன் என்பதை சிந்திக்க கூடாதா” என்றான்.
அன்னாளின் ஜெபம்
9 உணவை உண்டு குடித்த பின் அன்னாள் அமைதியாக எழுந்து கர்த்தரிடம் ஜெபம் செய்யச் சென்றாள். கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தின் கதவருகில் ஏலி எனும் ஆசாரியன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். 10 அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள், 11 அவள் தேவனிடம் ஒரு விசேஷ வாக்குறுதியைக் கொடுத்தாள். அவள், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நான் எவ்வளவு துக்கத்தில் இருக்கிறேன் என்பதைப் பாரும். என்னை நினைவு கூறும்! என்னை மறவாதேயும். நீர் எனக்கு ஒரு மகனைத் தந்தால், நான் அவனை உமக்கே தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் திராட்சை ரசமோ அல்லது வெறிகொள்ளத்தக்கவைகளை அருந்தாமலும் இருப்பான். எவரும் அவனது தலை மயிரை வெட்டாமல் இருப்பார்கள்” [b] என்று வேண்டிக்கொண்டாள்.
12 இவ்வாறு அன்னாள் நீண்ட நேரம் கர்த்தரிடம் ஜெபிக்கும்பொழுது அவளது வாயையே ஏலி கவனித்துக்கொண்டிருந்தான். 13 அன்னாள் தன் இருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தாள். அவளது உதடுகள் அசைந்தன, ஆனால் அவள் உரக்க எதையும் சொல்லவில்லை. எனவே ஏலி, அன்னாளைக் குடித்திருப்பவளாக எண்ணினான். 14 ஏலி அன்னாளிடம், “நீ அதிகப்படியாகக் குடித்திருக்கின்றாய்! இது குடியை விடவேண்டிய நேரம்” என்றான்.
15 அதற்கு அன்னாள், “ஐயா, நான் திராட்சை ரசமோ அல்லது மதுவையோ குடிக்கவில்லை. நான் ஆழமான துயரத்தில் இருக்கிறேன். நான் எனது துன்பங்களையெல்லாம் கர்த்தரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். 16 மோசமான பெண் என்று என்னை எண்ணவேண்டாம். நான் நீண்ட நேரமாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அநேக தொல்லைகள் உள்ளன. மற்றும் நான் மிகவும் துக்கத்தில் இருக்கிறேன்” என்றாள்.
17 ஏலி அவளிடம், “சமாதானத்துடனே போ. இஸ்ரவேலரின் தேவன் நீ கேட்டதையெல்லாம் உனக்குத் தருவாராக” என்றான்.
18 அன்னாள், “உம்முடைய அடியாளுக்கு உம் கண்களில் இரக்கத்தைக் காணட்டும்” என்றாள். பிறகு அவள் அங்கிருந்து போய் உணவருந்தினாள். அதற்குப்பின் அவள் துக்கமாயிருக்கவில்லை.
19 மறுநாள் அதிகாலையில் எல்க்கானாவின் குடும்பம் எழுந்து கர்த்தரைத் தொழுதுகொண்ட பிறகு ராமாவிலுள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பிப் போனார்கள்.
சாமுவேலின் பிறப்பு
எல்க்கானா தன் மனைவியான அன்னாளோடு பாலின உறவுகொண்டான், கர்த்தர் அன்னாளை நினைவுக்கூர்ந்தார். 20 அதே காலம் அதற்கடுத்த ஆண்டில் அவள் கர்ப்பமுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவள் தன் மகனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். அவள், “இவன் பெயர் சாமுவேல் ஏனென்றால் நான் கர்த்தரிடம் இவனைக் கேட்டேன்” என்றாள்.
21 அந்த ஆண்டில் எல்க்கானா சீலோவிற்குப் பலிகளைக் கொடுப்பதற்காகவும் மற்றும் தேவனுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் சென்றான். அவன் தனது குடும்பத்தை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றிருந்தான். 22 ஆனால் அன்னாள் செல்லவில்லை, அவள் எல்க்கானாவிடம், “பிள்ளை வளர்ந்து திட உணவு உண்ணும் வயதை அடையும்பொழுது, நான் இவனைச் சீலோவிற்கு அழைத்து வருவேன். பிறகு அவனை கர்த்தருக்குத் தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் சீலோவிலேயே தங்கி இருப்பான்” என்றாள்.
23 அன்னாளின் கணவனான எல்க்கானா அவளிடம், “உனக்கு எது நல்லதென்று தெரிகிறதோ அதைச் செய். பையன் பாலை மறந்து உணவு உண்ணும் காலம்வரை நீ வீட்டிலேயே தங்கியிரு. நீ சொன்னபடியே கர்த்தர் உனக்கு செய்வாராக” என்றான். எனவே அன்னாள் தன் மகனை வளர்ப்பதற்காக வீட்டிலேயே இருந்தாள்.
சீலோவில் ஏலியிடம் சாமுவேலை அன்னாள் கொண்டுபோகிறாள்
24 பிள்ளை வளர்ந்து உணவு உண்ண ஆரம்பித்ததும் அன்னாள் அவனை அழைத்துக்கொண்டு சீலோவிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போனாள். தன்னோடு மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும் ஒரு துருத்தி திராட்சைரசத்தையும் கொண்டு வந்தாள்.
25 அவர்கள் கர்த்தருக்கு முன் சென்றார்கள். எல்க்கானா காளையைப் பலியாகக் கொன்றான். அவன் முன்பு கர்த்தருக்கென்று வழக்கமாகச் செய்வதுபோல் செய்தான். பின் அன்னாள் ஏலியிடம் பிள்ளையைக் கொடுத்தாள். 26 அன்னாள் ஏலியிடம், “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா, கர்த்தரை நோக்கி ஜெபம் செய்தபடி உங்கள் முன்நின்ற அதே பெண்தான் நான். நான் உண்மையை சொல்கிறேன் என இதன்மூலம் உறுதி கூறுகிறேன். 27 நான் இக்குழந்தைக்காக ஜெபம் செய்து கொண்டேன், கர்த்தர் என் ஜெபத்திற்கு பதில் அளித்தார். கர்த்தர் இந்தக் குழந்தையை எனக்குத் தந்தார். 28 இப்போது நான் இந்தக் குழந்தையை கர்த்தருக்குத் தருகிறேன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு சேவை செய்வான்” என்றாள்.
பிறகு அன்னாள், அந்தப் பிள்ளையை அங்கேயே விட்டு விட்டு கர்த்தரைத் தொழுதுகொண்டாள்.
அன்னாள் நன்றி சொன்னது (அன்னாளின் ஜெபம்)
2 அன்னாள் ஜெபம் பண்ணி,
“என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது!
நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்!
என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன்.
உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்!
2 கர்த்தரைப்போல பரிசுத்தமான வேறு தேவன் இல்லை.
உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நமது தேவனைப் போன்ற ஒரு கன்மலை வேறில்லை.
3 இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்!
ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும்.
4 வலிமையான வீரர்களின் வில்கள் முறிகிறது!
பலவீனமானவர்கள் பெலன் பெறுகிறார்கள்.
5 கடந்த காலத்தில் ஏராளமான உணவுப் பொருட்களை வைத்திருந்த ஜனங்கள் இப்போது உணவுக்காகக் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும்.
ஆனால் கடந்த காலத்தில் பசியோடு இருந்தவர்கள், எல்லாம் இனிமேல் பசியாயிரார்கள்.
முன்பு குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் இப்போது ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள்!
ஆனால் முன்பு நிறைய குழந்தைகளைப் பெற்ற பெண் அக்குழந்தைகள் தம்மை விட்டு விலகியதால் வருத்தமாயிருக்கிறாள்.
6 கர்த்தர் மரணத்தைக் கொண்டு வருகிறவராகவும் வாழ வைக்கிறவராகவும் இருக்கின்றார்.
அவரே பாதாளத்தில் இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
7 கர்த்தர் சிலரை ஏழையாக்குகிறார், அவரே இன்னும் சிலரைச் செல்வந்தராக்குகிறார்.
கர்த்தர் சிலரைத் தாழ்த்துகிறார், மற்றவர்களை மேன்மையாக்குகிறார்.
8 கர்த்தர் ஏழை ஜனங்களை புழுதியிலிருந்து உயிர்ப்பிக்கிறார் மற்றும் அவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
கர்த்தர் ஏழை ஜனங்களை முக்கியமானவர்களாக்குகிறார்.
அவர்களை அவர் இளவரசர்களோடும் மதிப்புக்குரிய விருந்தினர்களோடும் அமர வைக்கிறார்.
கர்த்தர் உலகம் முழுவதையும் படைத்தார்!
இந்த முழு உலகமும் அவருக்குரியது!
9 கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார்.
அவர்களை அழிவினின்றும் காப்பார்.
ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள்.
அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது.
10 கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள்.
உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார்.
கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார்.
அவர் தமது அரசனுக்கு வல்லமையை அளிப்பார்.
தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்” என்றாள்.
11 பிறகு எல்க்கானா ராமாவிலுள்ள தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான். ஆனால் அந்தப் பிள்ளை சீலோவில் தங்கி ஆசாரியனாகிய ஏலிக்குக் கீழ் கர்த்தருக்கு முன்பாக பணிவிடைச் செய்தான்.
ஏலியின் தீய மகன்கள்
12 ஏலியின் மகன்கள் எல்லாரும் தீயவர்கள். அவர்கள் கர்த்தருக்கு பயப்படாதவர்கள். 13 ஜனங்களிடம் ஆசாரியர்கள் எவ்வாறு நடக்கவேண்டும் என்பது பற்றியும் கவலைப்படாதவர்கள் ஒவ்வொரு முறையும் ஜனங்கள் பலி செலுத்தும்போது, ஆசாரியர்கள் இறைச்சியைக் கொதிக்கும் தண்ணீருள்ள பாத்திரத்தில் போடவேண்டும். பிறகு ஆசாரியனின் வேலைக்காரன் மூன்று முனைகளை உடைய பெரியமுள் கரண்டியைக் கொண்டு வருவான். 14 பாத்திரத்தில் இருக்கிற இறைச்சியை எடுக்க ஆசாரியரின் வேலைக்காரன் இந்த ஆயுதத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில் இருந்து அந்த வேலைக்காரன் எடுத்துத் தரும் இறைச்சியை மட்டுமே ஆசாரியன் எடுத்துக்கொள்ள வேண்டும். சீலோவிற்கு பலிகளை கொடுக்க வந்த இஸ்ரவேலர் அனைவருக்கும் ஆசாரியர்கள் செய்ய வேண்டியமுறை இதுவே ஆகும்.
15 ஆனால் ஏலியின் பிள்ளைகளோ இப்படிச் செய்யவில்லை. பலிபீடத்தில் கொழுப்பு எரிக்கப்படுமுன்னரே அவர்களின் வேலைக்காரர்கள் பலி கொடுக்கும் ஜனங்களிடம் சென்று, “பொறிப்பதற்காக ஆசாரியருக்குக் கொஞ்சம் இறைச்சியைக் கொடுங்கள். அவர், உங்களிடமிருந்து வேகவைத்த இறைச்சியைப் பெறமாட்டார்” என்றுச் சொல்வார்கள்.
16 பலியை கொடுக்கவந்த ஜனங்களோ, “முதலில் கொழுப்பை எரியுங்கள், பிறகு உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வார்கள். இவ்வாறு நடந்தால் உடனே ஆசாரியனின் அந்த வேலைக்காரன், “இல்லை, அந்த இறைச்சியை இப்போதே கொடுங்கள், நீங்கள் அதனைக் கொடுக்காவிட்டால் அதனைப் பலவந்தமாக எடுத்துக்கொள்வேன்!” என்று சொல்வான்.
17 இவ்வாறு ஓப்னியும் பினெகாசும் கர்த்தருக்கு கொடுக்கும் பலிக்கு மரியாதை தராமல் இருந்தார்கள். இது கர்த்தருக்கு விரோதமான மிக மோசமான பாவமாயிற்று!
18 ஆனால் சாமுவேல் கர்த்தருக்கு சேவை செய்தான். அவன் இளம் உதவியாளனாக ஆசாரியர்கள் அணிகின்ற சணல் நூல் ஏபோத்தை அணிந்திருந்தான். 19 ஒவ்வொரு ஆண்டும் சாமுவேலின் தாய் அவனுக்காக ஒரு சின்ன சட்டையைத் தைப்பாள். அவள் தன் கணவனோடு சீலோவிற்கு பலிசெலுத்த வரும்போதெல்லாம் அதனைக் கொண்டு வந்து தருவாள்.
20 ஏலி, எல்க்கானாவையும் அவனது மனைவியையும் ஆசீர்வதித்தான். அவன், “அன்னாள் மூலமாக கர்த்தர் மேலும் பல குழந்தைகளைத் தரட்டும். கர்த்தரிடம் ஜெபித்துக்கொண்டபடி, அவருக்கே அளிக்கப்பட்ட அன்னாளின் மகனுடைய இடத்தை இந்த பிள்ளைகள் பிறந்து நிரப்பட்டும்” என்றான்.
எல்க்கானாவும், அன்னாளும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.
21 கர்த்தர் அன்னாளிடம் கருணையாக இருந்தார். அவளுக்கு மேலும் மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். சாமுவேல் பரிசுத்த இடத்தில் கர்த்தர் அருகிலேயே வளர்ந்து ஆளானான்.
ஏலி தனது தீய மகன்களைக் கட்டுப்படுத்த தவறுதல்
22 ஏலிக்கு மிகவும் வயது ஆயிற்று, சீலோவிற்கு வரும் இஸ்ரவேலரிடம் தம் பிள்ளைகள் நடந்து கொள்வதைப்பற்றி, அவன் மீண்டும் மீண்டும் கேள்விப்பட்டான். அதோடு அவன் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் வேலை செய்த பெண்களோடுப் படுத்துக்கொள்வதாகவும் கேள்விப்பட்டான்.
23 ஏலி தன் பிள்ளைகளிடம், “நீங்கள் செய்த கெட்டக் காரியங்களைப் பற்றியெல்லாம், இங்குள்ளவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏன் இது போல் செய்கிறீர்கள்? 24 இவ்வாறு செய்யாதீர்கள். கர்த்தருடைய பிள்ளைகள் உங்களைப் பற்றி தவறாகச் சொல்லுகிறார்கள். 25 ஒருவன் இன்னொருவனுக்கு எதிராகப் பாவம் செய்தால் தேவன் அவனுக்கு உதவலாம். ஆனால் ஒருவன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தால், யார் அவனுக்கு உதவமுடியும்?” என்று கேட்டான்.
ஆனால் ஏலியின் மகன்கள் அவன் கூறியதைக் கேட்க மறுத்துவிட்டனர். எனவே ஏலியின் பிள்ளைகளைக் கொல்ல கர்த்தர் தீர்மானித்தார்.
26 சாமுவேல் வளர்ந்து வந்தான். அவன் தேவனுக்கும், ஜனங்களுக்கும் பிரியமாயிருந்தான்.
ஏலியின் குடும்பத்தைப் பற்றிய பயங்கரமான தீர்க்கதரிசனம்
27 தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியிடம் வந்தான். அவன், “கர்த்தர் இவற்றைச் சொன்னார், ‘உன் முற்பிதாக்கள் எகிப்தில் பார்வோனின் அடிமைகளாய் இருந்தார்கள். அந்த காலத்தில் நான் உன் முற்பிதாக்களுக்குத் தோன்றினேன். 28 நான் உன் கோத்திரத்தை மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்தேன். உனது சந்ததியை எனது ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை என் பலிபீடத்திற்குப் பலி செலுத்துகிறவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை நான் ஏபோத் அணியவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரவேலர், எனக்குத் தரும் பலிகளிலிருந்து இறைச்சியை உங்கள் கோத்திரம் உண்ணும்படியும் செய்தேன். 29 இவ்வாறு இருக்க நீங்கள் ஏன் எனது அன்பளிப்புகளையும் பலி பொருட்களையும் மதிப்பதில்லை? நீ என்னைவிட உன் மகன்களையே அதிகம் உயர்த்துகிறாய். இஸ்ரவேலர், இறைச்சியை எனக்காக கொண்டு வரும்போது, அதன் நல்ல பாகங்களையெல்லாம் தின்று நீங்கள் கொழுத்துப்போய் இருக்கிறீர்கள்.’
2008 by World Bible Translation Center