Bible in 90 Days
வீட்டில் உள்ள நோய்க்கான விதிகள்
33 மேலும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் பார்த்து, 34 “நான் உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் அங்கு போய்ச் சேர்ந்த பின்பு உங்களில் சிலரது வீட்டிலே தொழுநோய் ஏற்படும்படி செய்தால் 35 அப்போது அந்த வீட்டிற்கு உரியவன் ஆசாரியனிடம் வந்து, ‘என் வீட்டில் தொழுநோய் போன்று ஒன்று இருப்பதைப் பார்த்தேன்’ என்று சொல்ல வேண்டும்.
36 “பிறகு அந்த ஆசாரியன், வீட்டில் உள்ள யாவற்றையும் வெளியே எடுத்துச் செல்ல ஜனங்களிடம் கூறவேண்டும். ஆசாரியன் அந்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீட்டுக்குரியவை என்று சொல்லத் தேவை இருக்காது. வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே வைத்த பிறகுதான் ஆசாரியன் வீட்டிற்குள் நுழைய வேண்டும். 37 ஆசாரியன் அந்த வீட்டிற்குள் நுழைந்து தொழுநோயுள்ள இடங்களைக் கவனித்து பார்க்க வேண்டும். அப்போது சுவரில் கொஞ்சம் பச்சையும், சிவப்புமான குழிகள் சுவற்றின் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இருப்பதைக் கண்டால், 38 ஆசாரியன் வெளியே வந்து அவ்வீட்டை ஏழு நாட்கள் பூட்டிவைக்க வேண்டும்.
39 “ஏழாம் நாள் ஆசாரியன் திரும்பப் போய், சோதித்துப் பார்க்க வேண்டும். தோஷம் வீட்டுச் சுவர்களில் பரவியிருந்தால் 40 ஆசாரியன் தோஷம் படிந்த கற்களைச் சுவற்றிலிருந்து பெயர்த்தெடுத்துப் பட்டணத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட அசுத்தமான இடத்திலே கொண்டு போய் போடச் சொல்ல வேண்டும். 41 வீட்டினுள்ளே தரையைப் பெயர்த்து, அதையும் வெளியே அசுத்தமான இடத்தில் போட்டுவிட வேண்டும். 42 பிறகு சுவரில் புதிய கற்களை வைத்துப் பூசவேண்டும்.
43 “கற்களைப் பெயர்த்து வீட்டைச் செதுக்கி புதிதாய்ப் பூசின பிறகும் நோய் திரும்பவும் வந்தால், 44 ஆசாரியன் போய் அந்த வீட்டைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த நோய் மேலும் சுவரில் பரவி இருந்தால் அதனை வீட்டை அரிக்கிற தொழுநோயாகக் கருதவேண்டும். அது தீட்டுள்ளதாக இருக்கும். 45 எனவே வீடு முழுவதையும் இடித்து அதன் கற்களையும் மரங்களையும் காரையையும் ஊருக்கு வெளியே அசுத்தமான தனி இடத்தில் கொட்டிவிட வேண்டும். 46 அந்த வீட்டிற்குள் நுழைகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 47 அந்த வீட்டில் எவனாவது உண்டாலோ, உறங்கினாலோ, அவனும் தனது ஆடையைத் துவைக்க வேண்டும்.
48 “புதிய கற்களும் பூச்சும் முடிந்தபிறகு அவ்வீட்டை ஆசாரியன் சோதிக்கும்போது நோய் பரவியதற்கான அறிகுறி எதுவும் இல்லாவிட்டால் அவ்வீடு தீட்டு இல்லாததாய் ஆயிற்று என்று அறிவிக்க வேண்டும்.
49 “பிறகு அந்த வீட்டை சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்கு ஆசாரியன் இரண்டு குருவிகளையும், கேதுரு கட்டையையும், ஒரு துண்டு சிவப்புத் துணியையும், ஈசோப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 50 அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். 51 பிறகு கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்தில் இவற்றை மூழ்க வைக்க வேண்டும். பிறகு அந்த இரத்தத்தை ஆசாரியன் வீட்டின்மேல் ஏழுதரம் தெளிக்கவேண்டும். 52 குருவியின் இரத்தம், ஊற்று தண்ணீர், உயிருள்ள குருவி, ஈசோப்பு, கேதுருக் கட்டை, சிவப்பு நூல் போன்றவற்றால் வீட்டின் தீட்டினைக் கழிக்க வேண்டும். 53 பின் உயிருள்ள குருவியை நகருக்கு வெளியே விட்டுவிட வேண்டும். இம்முறையில் ஆசாரியன் வீட்டைச் சுத்தம் செய்வான். பிறகு வீடு சுத்தமாகும்” என்று கூறினார்.
54-55 துணிகளிலோ அல்லது வீட்டிலோ தோஷம் பிடித்தல், தொழுநோய், ஆகியன உண்டாகும்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே. 56 வீக்கம், அசறு, தோலில் வெள்ளைப் புள்ளிகள் உண்டாகுதல் ஆகியவற்றின்போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே. 57 பொருட்கள் எப்பொழுது சுத்தமாயுள்ளன, எப்பொழுது சுத்தமற்றவையாக உள்ளன எனக் கற்பிப்பதற்குரிய விதிகள் இவைகளே.
உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களுக்கான விதிகள்
15 பிறகு கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் பார்த்து, 2 “நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒருவனுக்கு உடற்கழிவுகள் ஏற்பட்டால் அதனாலும் தீட்டு உண்டாகும். 3 இக்கழிவுகள் அவன் உடம்பிலிருந்து சரளமாக வெளியேறுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை.
4 “உடற்கழிவு ஏற்பட்டவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும். அவன் எதன் மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும். 5 அவனது படுக்கையைத் தொடுகிறவன் தனது ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். 6 உடற்கழிவு ஏற்பட்டவன் உட்காருகிற இடத்தில் உட்காருகிறவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை இவனும் தீட்டு உள்ளவனாக இருப்பான். 7 உடற்கழிவு ஏற்படுகிறவனைத் தொடுபவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை இவனுக்கும் தீட்டு இருக்கும். 8 உடற்கழிவு உள்ளவனின் எச்சில் மேலேபட்டாலும் ஒருவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை அவனுக்குத் தீட்டு இருக்கும். 9 இத்தகையவன் ஏறுகிற எந்த சேணமும் தீட்டாகும். 10 இத்தகையவனுக்குக் கீழ் இருக்கிற எந்தப் பொருளையும் தொடுகிறவன் மாலைவரை தீட்டாயிருப்பான். அப்பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டு உள்ளவனாக இருப்பான். 11 சிற்சில இடங்களில் உடற்கழிவு உள்ளவன் தண்ணீரில் தன் கைகளைக் கழுவாமலே அடுத்தவனைத் தொட்டுவிட்டால், தொடப்பட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டாக இருப்பான்.
12 “உடற்கழிவு ஏற்பட்டவன் ஏதேனும் மண் பாண்டத்தைத் தொட்டால் அம்மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். மரத்தாலான பாத்திரத்தை அவன் தொடநேர்ந்தால், அதைத் தண்ணீரால் கழுவ வேண்டும்.
13 “உடற்கழிவு உள்ளவன் அது நீங்கி சுத்தமானதும் அதற்குச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்காக ஏழு நாட்கள் காத்திருந்து, தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அப்போதுதான் அவன் சுத்தமாவான். 14 எட்டாவது நாள் அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவற்றை கர்த்தருக்கு முன் கொண்டுவந்து ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 15 அவற்றுள் ஒன்று பாவப்பரிகார பலியாகவும் இன்னொன்று தகன பலியாகவும் ஆசாரியன் கர்த்தருக்கு செலுத்துவான். இம்முறையில் ஆசாரியன் கர்த்தருக்கு முன் அவனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.
ஆண்களுக்கான விதிகள்
16 “ஒருவனுக்கு விந்து வெளிப்பட்டால், அவன் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 17 தோல் ஆடையிலும், துணியிலும் விந்துபட்டிருந்தால் அவற்றை தண்ணீரால் கழுவவேண்டும். அது மாலைவரை தீட்டுள்ளதாக இருக்கும். 18 விந்து கழிந்தவனோடு ஒரு பெண் படுத்திருந்தால் இருவரும் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.
பெண்களுக்கான விதிமுறைகள்
19 “இரத்தப் போக்குடைய மாதவிலக்கான பெண், ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 20 அவள் மாத விலக்காக இருக்கும்போது எதன் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும். 21 அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான். 22 அவள் அமர்ந்த இருக்கையைத் தொட்டவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 23 அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான்.
24 “அவளோடு ஒருவன் படுத்துக்கொண்டால் அவள் தீட்டு அவன்மேல் படும். அதனால் அவன் ஏழு நாள் தீட்டாய் இருப்பான். அவன் படுக்கிற படுக்கையும் தீட்டாகும்.
25 “ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும். 26 அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும். 27 இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான். 28 அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள். 29 எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 30 ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
31 “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார்.
32 இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும், 33 மாதவிலக்கால் தீட்டான பெண்களுக்கும், தீட்டானவளோடு படுத்துக்கொண்டவனுக்குமுரிய விதிகள் இவைகளேயாகும்.
பாவப்பரிகார நாள்
16 ஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாத முறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர். அதற்குப் பின்பு கர்த்தர் மோசேயிடம், 2 “உன் சகோதரன் ஆரோனிடம் பின்வருவதைக் கூறு: கூடாரத்தின் திரைக்குப் பின்னால் அவன் விரும்புகிற போதெல்லாம் மகாபரிசுத்த இடத்திற்கு போகவேண்டாம். திரைக்குப் பின்னால் அந்த அறையில் பரிசுத்தப் பெட்டி உள்ளது. அதன்மேல் கிருபாசன மூடி உள்ளது. நான் அதற்கு மேல் மேகத்தில் காட்சி தருவேன். ஆரோன் அங்கே சென்றால் மரித்து போகலாம்!
3 “ஆரோன் பாவப்பரிகார நாள் அன்று மிகவும் பரிசுத்தமான அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன் ஒரு காளையைப் பாவப் பரிகார பலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவை தகன பலியாகவும் செலுத்திவிட வேண்டும். 4 ஆரோன் தண்ணீரில் தன் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். பின் அவன் வேறு ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். ஆரோன் பரிசுத்த சணல் நூல் சட்டையை அணிந்து இடுப்பில் சணல் நூல் சல்லடத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும். சணல் நூல் தலைப் பாகையையும், சணல் நூலால் ஆன இடைக் கச்சையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவை பரிசுத்தமான ஆடைகள்.
5 “ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பாவப்பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் தகன பலிக்காக ஒரு ஆட்டுக் காடாவையும் வாங்கிக்கொள்ள வேண்டும். 6 பிறகு ஆரோன் காளையைப் பாவப்பரிகார பலியாக செலுத்த வேண்டும். இந்தப் பாவப்பரிகார பலி அவனுக்குரியது. இதனை ஆரோன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் சுத்திகரிப்பு செய்வதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்.
7 “பிறகு ஆரோன் இரு வெள்ளாட்டுக் கடாக்களையும் கர்த்தருக்கு முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டு வரவேண்டும். 8 பின் கடாக்களுக்காகச் சீட்டுப்போட வேண்டும். ஒரு சீட்டு கர்த்தருக்குரியது. இன்னொரு சீட்டு போக் காட்டுக்கு உரியது.
9 “பிறகு ஆரோன் கர்த்தருக்குரிய சீட்டுள்ள கடாவை கர்த்தருடைய சந்நிதியில் பாவப் பரிகார பலியாக வழங்க வேண்டும். 10 ஆனால் போக்காடாகச் சீட்டுள்ள கடாவையும் கர்த்தருக்கு முன் கொண்டு வர வேண்டும். பின் அந்தக் கடாவை உயிரோடு வனத்துக்குத் துரத்திவிட வேண்டும். இது ஜனங்களைச் சுத்திகரிப்புச் செய்யும்.
11 “பிறகு ஆரோன் காளையைத் தனக்குரிய பாவப்பரிகார பலியாகச் செலுத்தி, தன்னையும் தனது குடும்பத்தாரையும் பரிசுத்தப்படுத்த வேண்டும். அவனே தனக்கான பாவப்பரிகார பலியாக அக்காளையைக் கொல்ல வேண்டும். 12 பிறகு கர்த்தரின் சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின் மேலுள்ள நெருப்புத் தணலினால் தூபகலசத்தை நிரப்ப வேண்டும். பொடியாக்கப்பட்ட நறுமணப் பொருட்களை தன் கைப்பிடி நிறைய எடுத்து திரைக்கு உட்புறமாகக் கொண்டு வர வேண்டும். 13 அவன் கர்த்தரின் சந்நிதியில் நறுமணப் பொருட்களைப் போட வேண்டும். அப்புகையானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்தை மூடும் அளவிற்கு போட வேண்டும். இவ்வாறு செய்தால் ஆரோன் மரிக்கமாட்டான். 14 ஆரோன் கொல்லப்பட்ட காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதனை விரலால் தொட்டுக் கீழ்ப்புறமாக நின்று கிருபாசனத்தின்மேல் தெளிக்க வேண்டும். இவ்வாறு ஏழுமுறை அவன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும்.
15 “பிறகு ஆரோன் ஜனங்களின் பாவப் பரிகார பலிக்கான வெள்ளாட்டைக் கொன்று, அதன் இரத்தத்தைத் திரைக்குப் பின்னால் உள்ள அறைக்குக் கொண்டு வர வேண்டும். காளையின் இரத்தத்தைச் செய்தது போன்றே இதனையும் செய்ய வேண்டும். அவன் அந்த இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பும் தெளிக்க வேண்டும். 16 இவ்வாறு ஆரோன் மிகவும் பரிசுத்தமான இடத்தைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருடைய தீட்டிற்காகவும், பாவங்களுக்காகவும் ஆரோன் இதனையெல்லாம் செய்ய வேண்டும். ஆரோன் இதனை ஆசரிப்பு கூடாரத்திற்குள்ளே செய்ய வேண்டும்.
17 “அவர்களுடைய தீட்டுகளின் மத்தியிலிருக்கிற மிகப் பரிசுத்தமான இடத்தில் இச்சடங்குகளையெல்லாம் ஆரோன் செய்யும்போது எவரும் ஆசரிப்புக் கூடாரத்தில் நுழையக் கூடாது. ஆரோன் வெளியே வந்த பிறகுதான் எவரும் நுழைய வேண்டும். இவ்வாறு ஆரோன் தன்னையும், தன் குடும்பத்தாரையும், இஸ்ரேவேல் ஜனங்களையும் சுத்தம் செய்கிறான். 18 பிறகு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின் அருகில் வரவேண்டும். அதற்குப் பிராயச்சித்தம் செய்ய, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் கொம்புகளில் தடவ வேண்டும். 19 தன் விரலினால் அந்த இரத்தத்தைத் தொட்டு ஏழுமுறை அதன்மேல் தெளிக்க வேண்டும். அதனை இஸ்ரவேல் ஜனங்களின் தீட்டுகள் நீங்கும்படி சுத்திகரித்து பரிசுத்தப்படுத்த வேண்டும்.
20 “ஆரோன் மிகப் பரிசுத்தமான இடத்தையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் பரிசுத்தப்படுத்துவான். பிறகு ஆரோன் உயிருள்ள வெள்ளாட்டை கர்த்தருக்கு முன் கொண்டு வந்து 21 தனது இரு கைகளையும் அதன் தலைமீது வைப்பான். பிறகு இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவங்களையும் குற்றங்களையும் அறிக்கையிட்டு அந்த வெள்ளாட்டின் தலையிலே சுமத்துவான். பின் அதனை அதற்கு நியமிக்கப்பட்ட ஆள் மூலம் வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவான். 22 அந்தக் கடாவானது வனாந்திரத்திற்கு அனைவரது பாவங்களையும் எடுத்து சென்றுவிடுகிறது. அதனைக் காட்டிலே விட்டுவிட்டு அந்த ஆள் வந்துவிடுவான்.
23 “பிறகு ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவான். பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போது அவன் அணிந்திருக்கும் மெல்லிய பஞ்சாடைகளை நீக்கி அவைகளை அங்கேயே வைத்துவிட வேண்டும். 24 ஒரு பரிசுத்தமான இடத்தில் தனது உடல் முழுவதையும் தண்ணீரால் கழுவி, பிறகு வேறு சிறப்பு ஆடைகளை அணிந்துக்கொள்ள வேண்டும். அதன்பின் வெளியே வந்து தனது மற்றும் ஜனங்களின் தகன பலிகளைச் செலுத்தி தன்னையும் ஜனங்களையும் பரிசுத்தமாக்க வேண்டும். 25 பின் பாவப் பரிகார பலியின் கொழுப்பை பலிபீடத்தின் மேல் எரிப்பான்.
26 “போக்காடாகிய கடாவைக் கொண்டு போய் வனாந்திரத்திலே விட்டவன் ஆடைகளைத் துவைத்துக் குளித்துவிட்டு முகாமுக்குள் வரவேண்டும்.
27 “பாவப்பரிகார பலிக்குரிய காளையையும் வெள்ளாட்டையும் முகாமிற்கு வெளியே கொண்டு செல்லவேண்டும். (அவற்றின் இரத்தத்தை மட்டும் பரிசுத்த இடத்திற்குள் கொண்டுப் போய் அதனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.) தோல்கள், உடல்கள், கழிவுகள் அனைத்தையும் ஆசாரியன் நெருப்பிலே போட்டு எரிக்கவேண்டும். 28 எரித்தவன் ஆடையைத் துவைத்து தண்ணீரில் உடல் முழுவதையும் கழுவிய பின்னரே கூடாரத்திற்குள் நுழைய வேண்டும்.
29 “இந்தச் சட்டங்கள் என்றென்றும் தொடர்ந்து இருக்கும். ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் எவ்வுணவையும் நீங்கள் உண்ணவோ, ஒரு வேலையும் செய்யவோ கூடாது. உங்கள் தேசத்தில் வசிக்கும் உள்நாட்டுக்காரர்களும், வெளிநாட்டுக்காரர்களும் கூட எவ்வேலையும் செய்யக்கூடாது. 30 ஏனென்றால் ஆசாரியர்கள் அந்நாளில் வந்து உங்களைச் சுத்திகரிப்பு செய்து உங்கள் பாவங்களைப் போக்குவார்கள். பிறகு நீங்கள் கர்த்தருக்கு முன் தீட்டு இல்லாமல் இருப்பீர்கள். 31 இந்நாள் சிறப்பான ஓய்வு நாளாகும். அன்று உணவு எதையும் உட்கொள்ளாமல் உங்கள் மனதில் தாழ்மையுடன் இருக்க வேண்டும். இந்த விதிமுறை என்றென்றும் இருக்கும்.
32 “தேவனுடைய அபிஷேகம் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசாரியனே பாவப்பரிகாரம் செய்யத் தகுந்தவன். தனது தந்தைக்குப் பிறகு தலைமை ஆசாரியனாகப் பணி செய்யும் உரிமையைப் பெற்றவன் இவன். ஆசாரியன் பரிசுத்தமான சணல் நூல் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். 33 மிகப் பரிசுத்தமான இடத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அவன் மற்ற ஆசாரியர்களையும், இஸ்ரவேல் ஜனங்களையும் சுத்தப்படுத்துவான். 34 இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களின் காரணமாக அவர்களை வருடம் ஒருமுறை பரிசுத்தம் செய்யும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்” என்றார்.
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள்.
மிருகங்களைக் கொல்வது மற்றும் உண்பது பற்றிய விதிகள்
17 கர்த்தர் மோசேயிடம் 2 “நீ ஆரோனுடனும், அவனது மகன்களோடும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசி, கர்த்தர் என்ன கட்டளையிட்டுள்ளார் என்பதைக் கூறு: 3 ஒரு இஸ்ரவேலன் ஒரு காளையையோ, அல்லது ஒரு செம்மறியாட்டையோ அல்லது வெள்ளாட்டையோ முகாமுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கொல்லலாம். 4 அவன் அந்த மிருகத்தை ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவன் அந்த மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை அவன் சிந்தியவனாகிறான். எனவே, தனது அன்பளிப்பை கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவன் அம்மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக எடுத்துச் செல்லவில்லையெனில் அவன் தனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும். 5 விதிகள் இவ்வாறு இருப்பதால் ஜனங்கள் தங்கள் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் வயல்களில் கொல்கிற மிருகங்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். 6 பிறகு ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின்மேல் கர்த்தருக்கு முன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும். கொழுப்பை நறுமணமிக்க வாசனையாக எரிக்க வேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். 7 தாங்கள் தவறாகப் பின்பற்றிய பொய்த் தேவர்களுக்கு இனிமேல் அவர்கள் எவ்வித பலிகளும் இடாமல் இருக்க வேண்டும். அவர்கள் இத்தகைய பொய்த் தேவர்களைப் பின்பற்றினால் ஒரு வேசியைப் போன்று இருப்பார்கள். இவ்விதிகள் நிரந்தரமானவை.
8 “ஜனங்களிடம் சொல்லுங்கள், இஸ்ரவேல் குடிமக்களோ அல்லது உங்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களோ தகன பலியையோ அல்லது வேறு பலிகளையோ 9 ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்கு கர்த்தருக்கு அளிக்க வரவேண்டும். இவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் மற்ற ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட்டுப் போவார்கள்.
10 “இரத்தத்தைச் சாப்பிடுகிற எவருக்கும் தேவனாகிய நான் எதிராக இருக்கிறேன். அவன் இஸ்ரவேல் குடிமகனாகவோ, அல்லது உங்களோடு குடியிருக்கும் அயல் நாட்டுக்காரனாகவோ இருக்கலாம். நான் அவர்களை மற்ற ஜனங்களிடம் இருந்து ஒதுக்கிவிடுவேன். 11 ஏனென்றால் சரீரத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. இரத்தத்தைப் பலிபீடத்தில் ஊற்றும்படி நான் விதிகளைக் கொடுத்திருக்கிறேன். உங்களைச் சுத்திகரித்துக்கொள்ள நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். இரத்தமே ஆத்துமாவை பாவ நிவிர்த்தி செய்கிறது. 12 உங்களில் எவரும், உங்களோடு வாழும் அயல் நாட்டுக்காரர்களும் இரத்தம் உண்ணக் கூடாது.
13 “எவராவது உண்ணத்தக்க பறவையையோ, மிருகத்தையோ பிடித்துக்கொன்றால் அதன் இரத்தத்தைத் தரையிலே ஊற்றி மண்ணால் மூட வேண்டும். 14 இறைச்சியில் இரத்தம் இருந்தால் இறைச்சியில் மிருகத்தின் உயிர் இருப்பதாகப் பொருள். இறைச்சியில் இரத்தம் இருந்தால் அதை உண்ணாதீர்கள். இரத்தத்தோடு உண்ணுகிற எவனும் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்படுவான்.
15 “இஸ்ரவேலராகிய நீங்களும், உங்களோடு வசிக்கும் அயலார் எவரும் தானாக மரித்துப்போன மிருகத்தையோ, வேறு மிருகத்தாலே கொல்லப்பட்ட மிருகத்தையோ உண்ணக் கூடாது, அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும். அப்படி உண்பவன் மாலைவரை தீட்டாயிருப்பான். மாலையில் அவன் தன் உடையைத் துவைத்து தண்ணீரால் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். 16 அவன் தனது ஆடையைத் துவைக்காவிட்டாலோ, தண்ணீரால் உடலைக் கழுவாவிட்டாலோ அவன் குற்றமுள்ளவனாயிருப்பான்” என்று கூறினார்.
பாலியல் உறவுகள் தொடர்பான விதிகள்
18 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: நானே தேவனாகிய கர்த்தர் 3 எகிப்திலிருந்த உங்களை நான் கானானுக்கு வழி நடத்தினேன். அங்கு செய்துவந்த செயல்களை எல்லாம் இங்கு செய்யக் கூடாது. நான் உங்களை கானான் தேசத்திற்கு நடத்திச் செல்கிறேன். அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாதீர்கள். 4 நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருங்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். 5 எனவே நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்ற வேண்டும். எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிகிறவனே உண்மையில் நீடித்து வாழ்வான். நானே கர்த்தர்.
6 “நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுடன் பாலின உறவு கொள்ளக் கூடாது. நானே கர்த்தர்!
7 “நீங்கள் உங்கள் தந்தையோடும் தாயோடும் பாலின உறவு தொடர்புகொள்ளக் கூடாது. அந்தப் பெண் உனது தாய். எனவே நீ அவளோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. 8 அவள் உனது தாயாக இல்லாவிட்டாலும் உனது தந்தையின் மனைவியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அது உனது தந்தையை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.
9 “நீங்கள் உங்கள் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தைக்கோ, தாய்க்கோ பிறந்தவளாக இல்லாமல் இருக்கலாம். அவள் உனது வீட்டிலே பிறந்தவளாகவோ வேறு இடத்தில் பிறந்தவளாகவோ இருக்கலாம்.
10 “நீ உன் பேத்தியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் உங்களில் ஒரு பகுதியானவர்கள்.
11 “உனது தந்தைக்கும் அவரது மனைவிக்கும் பிறந்தவளாக இருந்தாலும் அவள் உனது சகோதரிதான். நீ அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
12 “உன் தந்தையின் சகோதரியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தையோடு நெருங்கிய உறவு உடையவள். 13 நீ உனது தாயின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் உனது தாயின் நெருங்கிய உறவினள். 14 நீ உனது தந்தையின் சகோதரனோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. நீ அவரது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவள் உனது அத்தை அல்லது சித்தி அல்லது பெரியம்மாள்.
15 “நீ உனது மருமகளோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவள் உனது மகனின் மனைவி. அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
16 “நீ உனது சகோதரனது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அது உனது சகோதரனை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.
17 “நீ தாய்-மகள் இருவரோடும் பாலின உறவு கொள்ளக்கூடாது. அதோடு அவளது பேத்தியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் பேத்தி அவளது மகளின் மகளாகவும் மகனின் மகளாகவும் இருக்கலாம். அவளது பேத்தி என்றால் அவளுக்கு நெருக்கமான உறவினள். அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது முறை கெட்ட செயல்.
18 “உனது மனைவி உயிரோடு இருக்கும்போது அவளது தங்கையை அடுத்த மனைவியாக வைத்துக்கொள்ளக் கூடாது. இது அந்தச் சகோதரிகளை விரோதிகளாக மாற்றிவிடும். உனது மனைவியின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
19 “ஒரு பெண் மாதவிலக்கான காலத்தில் இருக்கும்போது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் அப்போது தீட்டுள்ளவளாக இருக்கிறாள்.
20 “பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை தீட்டுள்ளவனாக்கிவிடும்.
21 “நீ உனது குழந்தைகளை மோளேகு என்ற பொய்த் தெய்வத்திற்கு முன்பு நெருப்பில் நடக்கும்படி அனுமதியாதே. நீ இதனைச் செய்தால் உனது தேவனை மதிக்கவில்லை என்று பொருள். நானே கர்த்தர்.
22 “நீ பெண்ணோடு பாலின உறவு வைத்துக்கொள்வதைப் போல ஆணோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது பயங்கரமான பாவமாகும்.
23 “நீ எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை அருவருப்பு உள்ளவனாக்கும். இதுபோல் ஒரு பெண்ணும் எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது இயற்கைக்கு மாறானது.
24 “இது போன்ற தவறான செயல்களைச் செய்து உங்களைத் தீட்டுள்ளவர்களாக்கிக்கொள்ளாதீர்கள். இத்தேசத்தில் உள்ளவர்களை வெளியே துரத்திக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நிலத்தை உங்களுக்குத் தந்தேன், ஏனென்றால் அவர்கள் இத்தகைய பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள். 25 அவர்கள் இந்த நாட்டையும் அருவருப்பாக்கிவிட்டார்கள். எனவே நான் இதன் பாவத்துக்காக இதனைத் தண்டிப்பேன். அந்நாடு அங்கு வாழ்பவர்களைக் கக்கிப்போடும்.
26 “நீங்கள் என்னுடைய சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். நீங்கள் இது போன்ற பயங்கரமான பாவங்களைச் செய்யக் கூடாது. இந்த விதிகள் இஸ்ரவேல் குடிமக்களுக்கும் அவர்களிடையே வாழும் அயலாருக்கும் உரியது. 27 உங்களுக்கு முன்னால் இந்த நாட்டில் வாழ்ந்தவர்கள் எல்லாம் அத்தகைய பாவங்களைச் செய்தார்கள். அதனால் நாடே அருவருப்பாயிற்று. 28 நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்களும் இந்த நாட்டை அருவருப்பாக்குவீர்கள். அவர்களை இந்நாடு கக்கிப்போட்டது போன்று உங்களைக் கக்கிப்போடும். 29 எவராவது இதுபோன்ற மோசமான பாவங்களைச் செய்தால் பிறகு அவர்கள் தங்கள் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள். 30 மற்ற ஜனங்கள் இத்தகைய மோசமான பாவங்களைச் செய்தார்கள், ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இது போன்ற மோசமான பாவங்களைச் செய்து உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாதீர்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குரியவர்கள்
19 கர்த்தர் மோசேயிடம், 2 “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நீ கூற வேண்டியதாவது: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர். எனவே, நீங்களும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும்.
3 “உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தாய் தந்தைக்கு மரியாதை செய்யவேண்டும். என் ஓய்வு நாட்களை [a] ஆசரிக்கவேண்டும். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்!
4 “விக்கிரகங்களை வணங்காதீர்கள். வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உருவாக்காதீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5 “நீங்கள் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொடுக்கும்போது அது அங்கீகரிக்கப்படத்தக்க சரியான வழியிலேயே செய்யவேண்டும். 6 நீங்கள் பலிகொடுத்த நாளிலும், மறுநாளும் அதனை உண்ணலாம். ஆனால் அந்த உணவில் மீதியானது மூன்றாவது நாளும் இருந்தால் அதனை நெருப்பில் போட்டு எரித்துவிட வேண்டும். 7 மூன்றாவது நாள் பலியின் மீதியான எதையும் நீங்கள் உண்ணக் கூடாது. இது தீட்டானது, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. 8 இதனை எவராவது செய்தால் அது பாவமாயிருக்கும். ஏனென்றால் அவர்கள் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றை மதிக்கவில்லை. இத்தகைய மனிதர்கள் தம் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள்.
9 “அறுவடைக் காலத்தில் நீங்கள் விளைந்த பயிரை அறுவடை செய்யும்போது வயலின் எல்லாப் பகுதிகளையும் மூலைகளையும் சேர்த்து அறுக்காதீர்கள். தானியங்கள் தரையில் சிதறுமானால் அவற்றைச் சேகரித்து அள்ளிக்கொள்ளாதீர்கள். 10 உங்கள் திராட்சைக் கொடியில் உள்ள அனைத்து திராட்சைப் பழங்களையும் பறிக்காதீர்கள். தரையில் விழும் திராட்சைப் பழங்களையும் பொறுக்கிக்கொள்ளாதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
11 “நீங்கள் திருடக்கூடாது. நீங்கள் ஜனங்களை ஏமாற்றவும் கூடாது. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். 12 எனது பெயரைப் பயன்படுத்தி பொய் சத்தியம் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் தேவனின் பெயரை மதிக்காமல் இருக்கிறீர்கள். நானே கர்த்தர்.
13 “உங்கள் அண்டை வீட்டுக்காரனுக்குத் தீமை செய்யாதீர்கள். அவனிடம் திருடாதீர்கள். வேலைக்காரனின் கூலியை விடியும்வரை இரவு முழுக்க நிறுத்தி வைக்காதீர்கள்.
14 “செவிடர்களை நீங்கள் சபிக்காதீர்கள். குருடன் விழுந்துவிடும்படி அவன் எதிரே எதுவும் போடாதீர்கள். உங்கள் தேவனுக்கு மரியாதைச் செலுத்த வேண்டும். நானே கர்த்தர்!
15 “நீங்கள் நியாயத்தீர்ப்பில் நடுநிலையுடன் இருங்கள். ஒருவன் ஏழை என்பதினால் சிறப்பான சலுகையோ அல்லது ஒருவர் முக்கியமான மனிதர் என்பதினால் விசேஷ சலுகையோ செய்யக் கூடாது. உனது அயலானுக்குத் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையில் இருந்து சொல்ல வேண்டும். 16 மற்றவர்களைப்பற்றிய பொய்க் கதைகளைப் பரப்பிக்கொண்டு திரியக் கூடாது. அயலானின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்படி நீ எதுவும் செய்யக்கூடாது. நானே கர்த்தர்!
17 “உன் மனதில் உன் சகோதரனை நீ வெறுக்கக் கூடாது. உனது அயலான் உனக்குக் கெடுதல் செய்தால் அதைப்பற்றி அவனிடம் பேசு, பின் அவனை மன்னித்துவிடு. 18 உனக்கு ஜனங்கள் செய்த தீமைகளை மறந்துவிடு. பழிவாங்க முயற்சி செய்யாதே. உனது அயலானையும் உன்னைப்போல நேசி. நானே கர்த்தர்!
19 “நீங்கள் என்னுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இருவிதமான மிருகங்களைச் சேர்த்து இனப்பெருக்கம் செய்யக்கூடாது. உங்களது வயலில் இரண்டுவிதமான விதைகளை விதைக்கக்கூடாது. இரண்டு விதமான நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது.
20 “அடுத்தவனிடம் அடிமையாய் இருக்கிற ஒரு பெண்ணுடன் ஒருவன் பாலியல் உறவுகொள்ள நேரிடலாம். ஆனால் அவளை வாங்கவோ அவளுக்குச் சுதந்திரம் அளிக்கவோ முடியாது. இவ்வாறு நடந்தால் இது தண்டனைக்குரியது. ஆனால் இது மரணத்திற்குரியது அல்ல. ஏனென்றால் அவள் சுதந்திரமானவள் அல்ல. 21 அவன் குற்றபரிகார பலியாக ஆட்டுக்கடா ஒன்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவரவேண்டும். 22 அவன் சுத்திகரிக்கப்படும்படி ஆசாரியன் பாவ நிவிர்த்தி செய்வான். கர்த்தருக்கு முன்பாக ஆசாரியன் ஆட்டுக்கடாவை குற்றபரிகார பலியாகச் செலுத்த வேண்டும், அப்போது அவன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
23 “வருங்காலத்தில் உங்கள் நாட்டுக்குள் நுழைந்த பின்பு உணவுக்காகப் பலவிதமான மரங்களை நீங்கள் நடுவீர்கள். ஒரு மரத்தை நட்டபிறகு மூன்று வருடத்திற்கு அதிலுள்ள பழங்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். 24 நான்காவது ஆண்டில் கிடைக்கும் பழங்கள் கர்த்தருக்குரியவை. அவற்றப் பரிசுத்தக் காணிக்கையாக கர்த்தரைத் துதிப்பதற்காகக் கொடுக்க வேண்டும். 25 ஐந்தாவது ஆண்டில் அம்மரத்திலுள்ள கனியை நீங்கள் உண்ணலாம். அம்மரம் உங்களுக்காக மேலும் மேலும் பழங்களைத் தரும். உனது தேவனாகிய கர்த்தர் நானே.
26 “இரத்தம் இருக்கிற இறைச்சியை நீங்கள் உண்ணக் கூடாது.
“மாயவேலைகளைப் பயன்படுத்தவோ, அல்லது எதிர்காலத்தைப்பற்றி அறிய மந்திர, தந்திர வழிகளில் முயற்சி செய்யவோ கூடாது.
27 “உன் முகத்தில் வளருகிற முடியையும், தாடியையும் மழிக்கக் கூடாது. 28 மரித்து போனவர்களின் நினைவாக உன் உடலில் கீறி அடையாளம் உருவாக்காதே. உன் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளாதே. நானே கர்த்தர்.
29 “உனது மகள் வேசியாகும்படி விடாதே. அவளை நீ மதிக்கவில்லை என்பதையே அது காட்டும். உன் நாட்டில் ஜனங்கள் வேசிகளாகும்படி விடாதே. இத்தகைய பாவம் உன் நாட்டில் காணப்படக்கூடாது.
30 “எனது ஓய்வு நாளில் நீங்கள் வேலை செய்யக்கூடாது. என் பரிசுத்தமான இடத்தை நீங்கள் மதிக்க வேண்டும். நானே கர்த்தர்.
31 “மந்திரவாதிகளிடமும் செத்தவர்களிடமும் தொடர்புகொள்வதாகக் கூறுபவர்களிடமும் புத்திமதி கேட்டு செல்லாதீர்கள். அவர்கள் உங்களைத் தீட்டுப்படுத்துவார்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
32 “முதியவர்களுக்கு மரியாதை கொடு. அவர்கள் அறைக்குள் வரும்போது எழுந்து நில். உங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துங்கள். நானே கர்த்தர்.
33 “உனது நாட்டில் வாழும் அயல்நாட்டுக்காரர்களுக்குக் கெடுதல் செய்யாதே. 34 நீ உனது நாட்டாரை மதிப்பதுபோலவே அந்நியர்களையும் மதிக்க வேண்டும். நீ உன்னையே நேசிப்பது போல அந்நியர்களையும் நேசிக்க வேண்டும். ஏனென்றால் நீங்களும் முன்பு எகிப்தில் அந்நியராயிருந்தீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.
35 “நியாய விசாரணையின்போது நடு நிலமையில் இருங்கள். அளக்கும்போதும், நிறுக்கும்போதும் நேர்மையாக இருங்கள். 36 உங்கள் கூடைகளும், ஜாடிகளும் சரியான அளவுள்ளவையாக இருக்கட்டும். உங்கள் எடைக் கற்களும், தராசும் பொருட்களைச் சரியாக எடை போடட்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எகிப்திலிருந்து உங்களை நானே வெளியே அழைத்து வந்தேன்.
37 “எனது கட்டளைகளையும், எனது விதிகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நானே கர்த்தர்” என்று கூறினார்.
விக்கிரக ஆராதனைக்கு எதிரான எச்சரிக்கை
20 கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ இவற்றையும் கூற வேண்டும். உங்கள் நாட்டில் உள்ளவர்களில் இஸ்ரவேலரில் ஒருவனோ அல்லது அந்நியரில் ஒருவனோ எவனாவது தன் பிள்ளைகளை போலிதெய்வமாகிய மோளேகுக்கு அர்ப்பணித்தால் அவன் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். 3 நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் தன் பிள்ளைகளை மோளேகுக்குக் கொடுத்தபடியால், எனது பரிசுத்தமான பெயருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதை அவன் காட்டிவிட்டான். அவன் எனது பரிசுத்த இடத்தைத் தீட்டாக்கிவிட்டான். 4 அவனை பொது ஜனங்கள் தங்களை விட்டு ஒதுக்கித் தள்ளிவிடலாம். மோளேகுக்குத் தன் பிள்ளையைக் கொடுத்த அவனைப் புறக்கணிக்கலாம். அவர்கள் அவனைக் கொல்லாமல் விடலாம். 5 ஆனால் நான் அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் எதிராக இருப்பேன். அவனை மற்ற ஜனங்களிடம் இருந்து பிரித்து வைப்பேன். என்னிடம் நம்பிக்கையில்லாமல் இருக்கிற எவனையும், மோளேக்குப் பின் செல்லுகிற எவனையும் நான் ஒதுக்கி வைப்பேன்.
6 “மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன். அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன்.
7 “நீங்கள் சிறப்பானவர்களாயிருங்கள். உங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் நான் பரிசுத்தராய் இருக்கிறேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். 8 என் கட்டளைகளை நினைவில் கொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படியுங்கள். நானே கர்த்தர். நான் உங்களை பரிசுத்தமாக்குவேன்.
9 “எவனாவது தன் தந்தை அல்லது தாயைச் சபித்தால் அவன் கொலை செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்வதினால் அவனது மரணத்துக்கு அவனே பொறுப்புள்ளவனாகிறான்.
பாலியல் பாவங்களுக்கான தண்டனைகள்
10 “எவனாவது பிறனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் இருவரும் விபசாரம் என்னும் பாவத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அந்த ஆண், பெண் இருவரும் கொலைச் செய்யப்பட வேண்டும். 11 எவனாவது தன் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்களின் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அது அவன் தன் தந்தையை நிர்வாணப்படுத்தியது போன்றதாகும்.
12 “ஒருவன் தன் மருமகளோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மிக மோசமான பாலியல் பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.
13 “ஒருவன் இன்னொரு ஆணோடு, பெண்ணோடு பாலின உறவு கொள்வது போன்று பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் பெரும் பாவம் செய்தபடியால் அவர்கள் கொல்லப்பட வேண்டும். அவர்களே தம் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.
14 “ஒருவன் ஒரு தாயோடும் மகளோடும் பாலின உறவு கொண்டால் இதுவும் பெரிய பாலியல் பாவமாகும். ஜனங்கள் அவர்கள் மூவரையும் நெருப்பிலே போட்டுக் கொல்ல வேண்டும். இது போன்ற பாலியல் பாவங்கள் உங்கள் ஜனங்களிடம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
15 “எவனாவது மிருகத்தோடு பாலின உறவு கொண்டிருந்தால் அவன் கொல்லப்பட வேண்டும். அந்த மிருகத்தையும் நீ கொன்றுபோட வேண்டும். 16 ஒரு பெண் மிருகத்தோடு பாலின உறவு கொண்டால் நீ அவளையும் அந்த மிருகத்தையும் கொன்றுவிட வேண்டும். அவர்களே தங்கள் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.
17 “ஒருவன் தன் சகோதரியையோ, சகோதரி முறையுள்ளவளையோ மணந்துகொண்டு அவளோடு பாலின உறவு கொள்வது வெட்ககரமான பாவமாகும். அவர்கள் பொது ஜனங்கள் மத்தியில் தண்டிக்கப்படுவதுடன், மற்ற ஜனங்களிடமிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும். ஒருவன் தன் சகோதரியோடு பாலின உறவு கொண்ட பாவத்துக்காக அவன் தண்டிக்கப்பட வேண்டும்.
18 “ஒருவன் ஒரு பெண் மாதவிலக்காக இருக்கும்போது அவளுடன் பாலின உறவு கொண்டால் அவர்கள் இருவருமே தங்கள் ஜனங்களிடமிருந்து தனியே ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அவளது இரத்தப் போக்கை அவன் திறந்து விட்டிருக்கிறபடியால் அவர்கள் பாவம் செய்தவர்களாகிறார்கள்.
19 “நீங்கள் உங்கள் தந்தை அல்லது தாயின் சகோதரியோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. இது நெருங்கிய உறவோடு பாலின உறவு கொண்ட பாவத்திற்குரியது. உங்கள் பாவத்திற்கு நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
20 “ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் அது தகப்பனின் சகோதரனோடு பாலின உறவு கொண்டது போலாகும். அவனும் அவனுடைய தகப்பனின் சகோதரனின் மனைவியும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் குழந்தைகள் இல்லாமல் செத்துப்போவார்கள்.
21 “ஒருவன் தனது சகோதரனின் மனைவியை எடுத்துக்கொள்வது தவறானதாகும். இது அவன் தன் சகோதரனோடு பாலின உறவு கொள்வது போன்றதாகும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமற்போகும்.
22 “நீங்கள் எனது சட்டங்களையும் விதிகளையும் நினைவில் கொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் உங்கள் நாட்டிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அங்கு வாழும்போது எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிந்தால் அந்த நாடு உங்களை கக்கிவிடாது. 23 நான் மற்றவர்களை அந்நாட்டினின்று துரத்திவிடுகிறேன். ஏனென்றால் அவர்கள் இத்தகைய பாவங்களையெல்லாம் செய்கின்றனர். நான் அப்பாவங்களை வெறுக்கிறேன். எனவே அவர்களைப் போலவே நீங்களும் வாழாதீர்கள்! 24 அவர்களின் நாட்டை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் என்று நான் கூறியிருக்கிறேன். அவர்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன். இது உங்கள் நாடாகும். அது நன்மைகள் நிரம்பிய நாடாக இருக்கும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!
“நான் உங்களை என் சிறப்புக்குரிய ஜனங்களாக அழைத்திருக்கிறேன். மற்றவர்களைவிட உங்களை வித்தியாசமாக நடத்தியிருக்கிறேன். 25 எனவே நீங்கள் தீட்டுள்ள மிருகங்களிலிருந்து தீட்டு இல்லாத மிருகங்களையும், தீட்டுள்ள பறவைகளிலிருந்து தீட்டில்லாத பறவைகளையும், வேறுபடுத்தி நடத்த வேண்டும். தீட்டுளள்ள பறவைகளையும், மிருகங்ளையும், ஊர்ந்து செல்லுகின்றவற்றையும் உண்ணாதீர்கள். நான் அவற்றைத் தீட்டுள்ளதாகச் செய்திருக்கிறேன். 26 நான் உங்களை எனக்கென்று சிறப்பான மக்களாகச் செய்திருக்கிறேன்; எனவே நீங்கள் எனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும். ஏனென்றால் நான் பரிசுத்தமுள்ளவர். நானே கர்த்தர்!
27 “மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிற ஆண்களையும் பெண்களையும் ஜனங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்” என்று கூறினார்.
ஆசாரியர்களுக்கான விதிகள்
21 கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் பின் வருபவைகளைக் கூறு: ஒரு ஆசாரியன் மரித்த ஒருவனின் உடலைத்தொட்டு தீட்டுள்ளவனாகக் கூடாது. 2 ஆனால் மரித்தவன் அவனது நெருங்கிய உறவினனாக இருந்தால் அவன் அந்தப் பிணத்தைத் தொடலாம். மரித்துபோனவர்கள் அவரது தாய் அல்லது தந்தை, மகன் அல்லது மகள், சகோதரன் அல்லது 3 திருமணமாகாத கன்னித் தன்மையுள்ள சகோதரி எனும் உறவினராக இருந்தால் ஆசாரியன் தீட்டு உள்ளவனாகலாம். திருமணம் ஆகாத சகோதரி என்றால் அவளுக்குக் கணவன் இல்லை. எனவே அவன் அவளுக்கு நெருக்கமானவனாகிறான். அவள் மரித்துப்போனால் அவன் தீட்டுள்ளவனாகலாம். 4 ஆனால் ஆசாரியனின் அடிமைகளுள் ஒருவன் மரித்து போனால் அதற்காக ஆசாரியன் தீட்டுள்ளவனாகக் கூடாது.
5 “ஆசாரியர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடியின் ஓரங்களை மழிக்கவோ கூடாது. தங்கள் உடலில் வெட்டி எவ்வித அடையாளக் குறிகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 6 இவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இவர்கள் தேவனின் பெயருக்கு மரியாதை செலுத்த வேண்டும், ஏனென்றால் இவர்கள் கர்த்தரின் தகன பலியையும் அப்பத்தையும் செலுத்துகிறவர்கள். எனவே, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
7 “விசேஷ வழியில் ஒரு ஆசாரியன் தேவனுக்குச் சேவை செய்கிறான். எனவே அவர்கள் வேசியையோ, கற்ப்பிழந்தவளையோ திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. 8 ஒரு ஆசாரியன் தேவனுக்கு விசேஷ வழியில் சேவை செய்கிறான். ஆகையால் நீங்கள் அவனை விசேஷமாக நடத்த வேண்டும். ஏனென்றால் அவன் பரிசுத்தமான பொருட்களை ஏந்திச் செல்பவன். பரிசுத்தமான அப்பத்தை கர்த்தருக்கு எடுத்து வருபவன். நான் பரிசுத்தமானவர்! நானே கர்த்தர். நான் உன்னையும் பரிசுத்தப்படுத்துவேன்.
9 “ஒரு ஆசாரியனின் மகள் வேசியானால் அவள் தனது பரிசுத்தத்தைக் குலைத்துகொள்வதுடன், தன் தந்தைக்கும் அவமானத்தைத் தேடித்தருகிறாள். அவளைச் சுட்டெரிக்க வேண்டும்.
10 “தலைமை ஆசாரியன் தன் சகோதரர்களுக்கிடையில் இருந்து தலைமை சிறப்பு பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவன், சிறப்பான உடைகளை அணிவதற்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அவன் தலையில் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கும். அவன் தனது துன்பங்களைப் பொது ஜனங்களிடம் வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. அவன் தன் தலை முடியை அதிகமாக வளரும்படிவிடவோ, தன் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது. 11 அவன் பிணத்தைத் தொட்டு தன்னைத் தீட்டுப் பண்ணிக்கொள்ளக் கூடாது. மரித்து போனது அவனது தாயாகவோ தந்தையாகவோ இருந்தாலும் பிணத்தின் அருகில் போகக்கூடாது. 12 தலைமை ஆசாரியன் தேவனின் பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போகக் கூடாது. அவன் அதனால் தீட்டாவதுடன், தேவனின் பரிசுத்தமான இடத்தையும் தீட்டாக்கிவிடுகிறான். அபிஷேக எண்ணெயானது தலைமை ஆசாரியனின் தலைமீது ஊற்றப்பட்டிருக்கிறபடியால், இது அவனை மற்றவர்களிடமிருந்து தனியே பிரித்துக் காட்டும். நானே கர்த்தர்!
13 “கன்னியான ஒரு பெண்ணை தலைமை ஆசாரியன் மணந்துகொள்ள வேண்டும். 14 விபச்சாரியான பெண்ணையோ, வேசியையோ, விதவையையோ, விவாகரத்து செய்யப்பட்டவளையோ மணந்துகொள்ளக் கூடாது. அவன் தன் சொந்த ஜனங்களிடமிருந்து ஒரு கன்னியான பெண்ணை மணந்துகொள்ள வேண்டும். 15 அப்பொழுது அவனது பிள்ளைகளை ஜனங்கள் மதிப்பார்கள். [b] கர்த்தராகிய நான் தலைமை ஆசாரியனை அவனது சிறப்புப் பணிகளுக்காகத் தனியாக வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.
16 கர்த்தர் மோசேயிடம், 17 “ஆரோனிடம் சொல்! உனது சந்ததியில் எவராவது அங்கக் குறைவுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் தேவனுக்கு சிறப்பு அப்பத்தை எடுத்துச் செல்ல தகுதியற்றவர்களாகிறார்கள். 18 உடல் உறுப்புகளிலே குறைவுள்ள யாரும் ஆசாரியனாகப் பணிச்செய்யக் கூடாது. எனக்குப் பலிசெலுத்தும் பொருள்களையும் கொண்டுவரக்கூடாது. குருடர், சப்பாணி, முகத்திலே வெட்டுக்காயங்கள் உள்ளவர்கள், கைகளும் கால்களும் அதிக நீளமாய் இருக்கிறவர்கள், 19 உடைந்த கைகளும், கால்களும் உடையவர்கள், 20 கூனர்கள், குள்ளர்கள், பூ விழுந்த கண்ணுள்ளவர்கள், சொறியர்கள், அசறு உள்ளவர்கள், விதை நசுங்கினவர்கள் ஆகியோர் ஆசாரியனாகத் தகுதியில்லாதவர்கள்.
21 “ஆரோனின் சந்ததியில் எவராவது இத்தகைய உடல்குறை உடையவர்களாக இருந்தால் அவர்கள் கர்த்தருக்கு எந்த பலிகளையும் கொடுக்க தகுதியற்றுப் போகிறார்கள். அவன் தேவனுக்கு சிறப்பான அப்பத்தை எடுத்துச் செல்ல முடியாது. 22 அவன் ஆசாரியர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதினால் பரிசுத்தமான அப்பத்தையும், மிகப்பரிசுத்தமான அப்பங்களையும் அவன் உண்ணலாம். 23 ஆனால் அவன் மிகவும் பரிசுத்தமான இடத்துக்குத் திரையைக் கடந்து போகமுடியாது. பலிபீடத்தின் அருகிலும் செல்ல முடியாது. ஏனென்றால் அவனிடம் குறையுள்ளது. அவன் எனது பரிசுத்தமான இடத்தை அசுத்தப்படுத்தக் கூடாது. கர்த்தராகிய நான் அந்த இடங்களை பரிசுத்தப்படுத்துகிறேன்!” என்று கூறினார்.
24 ஆகவே இவ்விதிமுறைகள் அனைத்தையும் ஆரோனுக்கும், ஆரோனின் பிள்ளைகளுக்கும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மோசே சொன்னான்.
22 தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், 2 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் எனக்குக் கொடுக்கும் பொருட்கள் பரிசுத்தமானவையாக இருக்கும். அவை என்னுடையவை. எனவே ஆசாரியர்களாகிய நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் பரிசுத்த பொருட்களை உங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தினால் நீங்கள் என் பெயருக்கு மரியாதை செலுத்தவில்லை என்று பொருள்படும். நானே கர்த்தர். 3 உங்களது சந்ததியார் எவரும் அப்பொருட்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுள்ளவர்களாகிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அப்பொருட்களை எனக்குக் கொடுத்தனர். நானே கர்த்தர்.
4 “ஆரோனின் சந்ததிகளில் எவருக்காவது தொழுநோய் இருந்தால் அல்லது உடற்கழிவுகள் இருந்தால் அவனது தீட்டு நீங்கும்வரை பரிசுத்த உணவை உண்ணக்கூடாது. இது, தீட்டுள்ள ஆசாரியர்கள் அனைவருக்கும் உரிய விதியாகும். ஒரு ஆசாரியன் பிணத்தைத் தொடுவதன் மூலமோ, தன் விந்துக்கழிவின் மூலமோ தீட்டு அடையலாம். 5 தீட்டுள்ள எந்த ஊர்கின்ற மிருகங்களை அவன் தொட்டாலும் தீட்டு அடையலாம். தீட்டுள்ள மனிதனைத் தொட்டாலும் ஆசாரியன் தீட்டு அடையலாம். எது அவனைத் தீட்டுப்படுத்தியது என்பது ஒரு பொருட்டல்ல. 6 ஒருவன் மேற்கூறியவற்றுள் ஏதாவது ஒன்றினைத் தொட்டால் அதன் மூலம் அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருக்கிறான். அவன் பரிசுத்தமான உணவு வகைகளில் எதையும் தின்னக் கூடாது. அவன் தண்ணீரால் தன்னைக் கழுவிக்கொண்டாலும் அவன் பரிசுத்த உணவை உண்ணக் கூடாது. 7 சூரியன் மறைந்த பிறகே அவன் தீட்டு இல்லாதவன் ஆகிறான், பிறகு அவன் பரிசுத்த உணவை உண்ணலாம்.
8 “ஒரு மிருகம் தானாகவோ அல்லது இன்னொரு மிருகத்தாலோ செத்துப் போயிருக்கலாம். எனினும் ஒரு ஆசாரியன் அதனை உண்ணக்கூடாது. அவன் அதனை உண்டால் அதனால் தீட்டுள்ளவன் ஆகிறான். நானே கர்த்தர்.
9 “ஆசாரியன் எனக்குச் சேவை செய்வதற்கென்று சிறப்பான நேரங்கள் உள்ளன. அந்த நேரங்களில் அவர்கள் கவனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்தமானவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்துவிடக் கூடாது. அவர்கள் கவனமாக இருந்தால் அழிந்து போகமாட்டார்கள். கர்த்தராகிய நான் அவர்களைச் சிறப்பான வேலைக்கென்று தனியாகப் பிரித்துவைத்திருக்கிறேன். 10 ஆசாரியர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பரிசுத்த உணவை உண்ண வேண்டும். இவர்களின் வீட்டிற்கு வரும் விருந்தினனோ கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரனோ பரிசுத்த உணவை உண்ணக் கூடாது. 11 ஆனால் ஆசாரியன் தனது சொந்தப் பணத்தின் மூலம் ஒரு அடிமையை வாங்கியிருந்தால், அந்த அடிமை பரிசுத்தமான உணவில் கொஞ்சம் உண்ணலாம். ஆசாரியன் வீட்டிலேயே பிறந்து வளர்ந்த அடிமைகளும் ஆசாரியனின் உணவை கொஞ்சம் உண்ணலாம். 12 ஆசாரியனின் மகள் ஆசாரியன் அல்லாத ஒருவனை மணந்துகொண்டால் அவளும் பரிசுத்த பலி உணவுகளை உண்ணக்கூடாது. 13 ஒரு ஆசாரியனின் மகள் விதவையாகலாம், அல்லது அவளுக்கு விவாகரத்து செய்யப்படலாம், அல்லது அவளுக்கு உதவ குழந்தைகள் இல்லாமல் போனதால் அவள் தான் பிறந்து வளர்ந்த தந்தையின் வீட்டிற்குத் திரும்பிவர நேரலாம். அப்போது அவள் தன் தந்தையின் உணவை கொஞ்சம் உண்ணலாம். ஆனால் ஆசாரியன் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும்.
14 “ஒருவன் தவறுதலாக பரிசுத்த உணவை உண்டால், அவன் அதற்குரிய விலையில் ஐந்தில் ஒரு பங்கை ஆசாரியனிடம் கூட்டிக் கொடுக்க வேண்டும்.
15 “இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அந்த காணிக்கைகள் பரிசுத்தமானவை. எனவே ஆசாரியர்கள் பரிசுத்தமான அவற்றை அசுத்தமாக்கக் கூடாது. 16 ஒருவேளை ஆசாரியர்கள் அவற்றை அசுத்தமாக்கிவிட்டால் அவர்கள் பரிசுத்த உணவை உண்ணும்போது தங்கள் பாவத்தை மிகுதிப்படுத்துகிறார்கள். கர்த்தராகிய நான் அவர்களை பரிசுத்தமாக்குவேன்” என்று கூறினார்.
17 தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், 18 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கூறு. இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனோ அல்லது அந்நியரில் ஒருவனோ எனக்குப் பலி கொண்டுவர விரும்பலாம். அது அவன் செய்த சிறப்பான பொருத்தனையாக இருக்கலாம், அல்லது அது அவன் கொடுக்க விரும்பும் சிறப்பான பலியாக இருக்கலாம். 19-20 அவர்கள் அந்த அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஏனென்றால் உண்மையில் அவர்கள் தேவனுக்கு அன்பளிப்பு செலுத்த விரும்புகின்றனர். அந்த அன்பளிப்புகளில் ஏதாவது குறை இருக்குமானால் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அந்த அன்பளிப்பால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன். அந்த அன்பளிப்பானது ஒரு காளையாகவோ, ஆடாகவோ, வெள்ளாடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆணாக இருக்க வேண்டும். அதில் எவ்வித குறையும் இருக்கக்கூடாது.
21 “ஒருவன் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரலாம். அந்த சமாதானப் பலியானது அவன் ஏற்கெனவே செய்த சிறப்பான பொருத்தனைக்கு உரியதாக இருக்கலாம். அல்லது சிறப்பாக அவன் கர்த்தருக்குக் கொடுக்கக் கூடிய அன்பளிப்பாக இருக்கலாம். அது மாடாகவோ ஆடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமானதாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். 22 குருடான, அல்லது எலும்பு முறிந்த, அல்லது நொண்டியான, அல்லது உடற்கழிவுடைய, அல்லது சொறியும் புண்ணும் உடைய மிருகங்களை கர்த்தருக்குப் பலியாகக் கொடுக்கக்கூடாது. நோயுற்ற மிருகங்களையும் கர்த்தரின் பலிபீடத்தில் செலுத்தக் கூடாது.
23 “சில நேரங்களில் மாடு அல்லது ஆட்டிற்கு கால்கள் மிக நீளமாகவோ அல்லது குறுகியோ இருக்கலாம். எனினும் ஒருவன் இதனை கர்த்தருக்கு சிறப்பான அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பினால் அது ஏற்றுக்கொள்ளப்படலாம்; ஆனால் இது சிறப்பான பொருத்தனையின் அன்பளிப்பாக ஒருவனால் கொடுக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
24 “ஒரு மிருகம் காயப்பட்டதாகவோ, நசுங்கியதாகவோ, விதை நொறுங்கியதாகவோ இருந்தால் அதை கர்த்தருக்கு பலியாகக் கொடுக்கக்கூடாது.
25 “நீங்கள் அந்நியரிடமிருந்து மிருகங்களை கர்த்தருக்குரிய பலியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அம்மிருகம் ஏதாவது ஒரு இடத்தில் புண் உள்ளதாகவோ, குறையுடையதாகவோ இருக்கலாம். எனவே, அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது!” என்று கூறினார்.
26 கர்த்தர் மேலும் மோசேயிடம், 27 “ஒரு கன்றுக் குட்டியோ, ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியோ, ஒரு வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்ததும் அது ஏழு நாட்கள் தன் தாயோடு இருக்க வேண்டும். எட்டாவது நாளே அது தகன பலியாக கர்த்தருக்கு முன்பு பலியிடத் தகுதியுள்ளதாகும். 28 ஆனால் தாயையும், குட்டியையும் ஒரே நாளில் பலியிடக்கூடாது. இந்த விதி பசுவுக்கும் கன்றுக் குட்டிக்கும் பொருந்தும்.
29 “நீ நன்றி தெரிவிப்பதற்காக கர்த்தருக்குச் சிறப்பான பலியைச் செலுத்த விரும்பினால் அது உன் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அது தேவனுக்கும் விருப்பமானதாக அமைய வேண்டும். 30 ஆனால் பலியிடப்படும் முழு மிருகத்தையும் அன்றே சாப்பிட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் அதன் இறைச்சியில் எதுவும் மீதியிருக்கக் கூடாது. நானே கர்த்தர்.
31 “எனது கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நட. நானே கர்த்தர். 32 எனது பரிசுத்தமான பெயருக்கு மதிப்புகொடு. நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சிறப்பானவராயிருப்பேன். கர்த்தராகிய நான் உங்களை என் சிறப்பான ஜனங்களாக்கியிருக்கிறேன். 33 நான் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.
சிறப்பான பண்டிகைகள்
23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கீழ்க்கண்ட பண்டிகைகள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த கூட்டங்கள் என்று அறிவி:
ஓய்வு நாள்
3 “ஆறு நாட்கள் வேலை செய்யுங்கள். ஏழாவது நாள் ஓய்விற்குரிய சிறப்பு நாள். பரிசுத்தமான சபை கூடும் நாள். அன்று ஒரு வேலையும் செய்யக் கூடாது. இது கர்த்தருக்குரிய சிறப்பு ஓய்வு நாளாக உங்கள் வீடுகளில் விளங்கவேண்டும்.
பஸ்கா
4 “கர்த்தர் தேர்ந்தெடுத்த விடுமுறை நாட்கள். பரிசுத்தக் கூட்டங்கள் கூடும் குறித்த காலங்களை நீ அறிவிக்கவேண்டும். 5 முதலாம் மாதம் 14ஆம் நாள் அந்தி நேரத்தில் பஸ்கா பண்டிகை நடை பெற வேண்டும்.
புளிப்பில்லா அப்பப் பண்டிகை
6 “அதே (நிசான்) மாதத்தில் 15ஆம் நாள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை வரும். நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தை ஏழு நாட்கள் உண்ணவேண்டும். 7 பண்டிகையின் முதல் நாளில் சிறப்பு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. 8 ஏழு நாட்களிலும் கர்த்தருக்கு தகன பலிகள் வழங்கப்பட வேண்டும். பிறகு ஏழாவது நாளும் சிறப்பான ஒரு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது” என்று கூறினார்.
முதல் அறுவடைப் பண்டிகை
9 மேலும் கர்த்தர் மோசேயிடம், 10 “இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல். நான் கொடுத்த நாட்டிற்குள் நீங்கள் சென்று அங்கே பயிர் செய்து அறுவடை செய்வீர்கள். அப்போது முதல் கதிரில் ஒரு கட்டை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். 11 ஆசாரியன் அக்கதிரை கர்த்தருடைய சந்நிதியில் அசைப்பான். பிறகு அது ஏற்றுக்கொள்ளப்படும். ஆசாரியன் அசைவாட்டும் பலியை ஞாயிற்றுக்கிழமை காலையில் செய்ய வேண்டும்.
12 “கதிரை அசைவாட்டும் பலி செய்கிற நாளில் ஒரு வயதுள்ள குறையற்ற ஒரு ஆண் செம்மறி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து தகன பலியாகக் கொடுக்க வேண்டும். 13 நீங்கள் தானியக் காணிக்கையையும் வழங்க வேண்டும். 16 கிண்ணங்கள் அளவுள்ள அரைத்த மாவையும், ஒலிவ எண்ணெயையும் கலந்து பலியாக வழங்க வேண்டும். மேலும் திராட்சைப் பழரசத்தில் கால் படியும் கொடுக்க வேண்டும். இக்காணிக்கையின் மணமானது கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். 14 புதிய தானியத்தையோ, பழங்களையோ, புதிய மாவால் செய்த அப்பத்தையோ உங்கள் தேவனுக்கு பலிகளை செலுத்துவதற்கு முன் உண்ணக் கூடாது. இது உங்கள் தலைமுறை தோறும் தொடர வேண்டிய சட்டமாகும்.
பெந்தெகோஸ்தே பண்டிகை
15 “அறுவடை செய்த கதிரை கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலியாக வழங்கிய ஞாயிறு காலையிலிருந்து ஏழு வாரங்களை எண்ணுங்கள். 16 50 நாட்களுக்குப் பிறகு வரும் ஏழாவது ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்கு புதிய தானியக் காணிக்கைகளை கொண்டு வாருங்கள். 17 அன்று உங்கள் வீட்டிலிருந்து இரண்டு அப்பங்களைக் கொண்டு வாருங்கள். இவை அசைவாட்டும் பலிக்குரியவை. 16 கிண்ணங்கள் அளவுள்ள மாவைப் புளிப்பு சேர்த்து அந்த அப்பங்களைத் தயார் செய்யப் பயன்படுத்துங்கள். இது முதல் அறுவடையானதும் கர்த்தருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய காணிக்கையாகும்.
18 “ஒரு காளை, இரண்டு ஆட்டுக்கடா, ஒரு வயது நிறைந்த ஏழு ஆட்டுக் குட்டிகளையும் தகனபலியாக தானியக் காணிக்கையோடு ஜனங்கள் கொடுக்க வேண்டும். அம்மிருகங்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது. அவற்றைத் தகன பலியாக செலுத்த வேண்டும். இதன் வாசனை கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். 19 மேலும் நீங்கள் பாவப்பரிகார பலியாக ஒரு ஆட்டுக் கடாவையும், சமாதான பலியாக ஒருவயதான இரண்டு ஆண் ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவர வேண்டும்.
20 “ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலி செலுத்தவேண்டும். முதல் அறுவடையின் தானிய மாவால் செய்த அப்பத்தோடு இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் அசைவாட்டும் பலியாக செலுத்த வேண்டும். கர்த்தருக்குப் பரிசுத்தமான அவைகள் ஆசாரியர்களுக்கு உரியவை. 21 அதே நாளில் நீங்கள் பரிசுத்தமான சபைக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும். அன்று வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. எக்காலத்திற்கும் உங்கள் தலைமுறைதோறும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்.
22 “நீங்கள் உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது, வயலின் மூலைகள் வரை சேர்த்து அறுவடை செய்யாதீர்கள். தரையில் விழுந்த தானியங்களை பொறுக்காதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும், அந்நியர்களுக்கும், வழிப்போக்கருக்கும் பயன்படும்படி விட்டுவிடுங்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.
எக்காளப் பண்டிகை
23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 24 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஏழாவது மாதத்தில் முதல் நாள் உங்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாள் உண்டு. அன்று பரிசுத்த சபைக் கூட்டமும் உண்டு. அன்று எக்காளத்தை ஊதி சிறப்பு நேரத்தை நினைவூட்ட வேண்டும். 25 அன்று ஒரு வேலையும் செய்யாமல் கர்த்தருக்குரிய தகனபலியைச் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
பாவப்பரிகார நாள்
26 கர்த்தர் மோசேயிடம், 27 “ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாவப்பரிகாரம் செய்யும் பண்டிகை வரும். அப்போது ஒரு பரிசுத்த சபைக் கூட்டம் உண்டு. அன்று வேலை எதையும் செய்யாமலும், சாப்பிடாமலும் இருக்க வேண்டும். கர்த்தருக்குரிய தகன பலியைக் கொண்டு வரவேண்டும். 28 அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால் அது பாவப் பரிகாரநாள். அந்நாளில் ஆசாரியர்கள் கர்த்தருடைய சந்நிதியில் உங்களைச் சுத்திகரிப்பு செய்யும் சடங்குகளைச் செய்வார்கள்.
29 “அன்று எவனாவது உபவாசம் இருக்க மறுத்தால் அவன் தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிக்கப்படுவான். 30 இந்நாளில் எவனாவது வேலை செய்தால் அவனை மற்ற ஜனங்களிடமிருந்து நான் அழித்துப் போடுவேன். 31 நீங்கள் எந்த வேலையும் அன்று செய்யக்கூடாது என்பது என்றென்றும் தொடர்ந்து வருகிற சட்டமாகும். 32 அது உங்களுக்கு ஒரு சிறப்பான ஓய்வு நாளாகும். அந்நாளில் வேறு எதுவும் நீங்கள் செய்யாமல் தாழ்மையான மனதுடன் இருக்க வேண்டும். அந்த சிறப்பான பண்டிகை அம்மாதத்தின் ஒன்பதாவது நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலைவரை தொடர்ந்திருக்கும்” என்று கூறினார்.
கூடாரப் பண்டிகை
33 கர்த்தர் மோசேயிடம், 34 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு; ஏழாவது மாதத்தின் 15 ஆம் தேதி முதல் ஏழுநாட்கள் கூடாரப் பண்டிகை நடைபெறும். 35 முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 36 நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே பரிசுத்த சபைக் கூட்டமாகும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.
37 “இவை கர்த்தரின் சிறப்பான விடுமுறைகள். அந்நாட்களில் பரிசுத்த சபைக் கூட்டங்களும் நடைபெறும். நீங்கள் கர்த்தருக்குத் தகன பலிகளையும், தானிய காணிக்கைகளையும், பானங்களின் பலியையும் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும். 38 கர்த்தரின் ஓய்வு நாட்களை நினைவுபடுத்துவதோடு இந்த விடுமுறை நாட்களையும் நீங்கள் கொண்டாடவேண்டும். மற்ற அன்பளிப்போடு இவைகளையும் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். சிறப்பான பொருத்தனைகளுக்கான பலிகளையும் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். கர்த்தருக்காகச் சிறப்பாக கொடுக்கப்படும் பலிகளோடு இவைகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
39 “ஏழாவது மாதத்தின் 15வது நாளில் நிலத்தின் விளைச்சலைச் சேர்த்து வைக்கும்போது கர்த்தருக்கு ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதல் நாளிலும் எட்டாவது நாளிலும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். 40 முதல் நாள் பழமரங்களில் இருந்து நல்ல பழங்களையும், ஈச்சமரத்தின் கிளைகளையும், தழைத்துள்ள மரக்கிளைகளையும், வில்லோ மரக்கிளைகளையும் எடுத்துகொண்டு வந்து, ஏழு நாட்கள் தேவனாகிய கர்த்தரின் சந்நிதானத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். 41 ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகையை கர்த்தருக்கு முன் ஏழு நாட்கள் கொண்டாடுங்கள். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியவையாகும். இதனை நீங்கள் ஏழாவது மாதத்தில் கொண்டாட வேண்டும். 42 நீங்கள் ஏழு நாட்களிலும் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருக்கவேண்டும். இஸ்ரவேலில் பிறந்த அனைத்து ஜனங்களும் இக்கூடாரங்களில் தங்க வேண்டும். 43 ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வரும்போது நீங்கள் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருந்தீர்கள் என்பதை உங்கள் சந்ததியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.
44 எனவே, மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தரைக் கனப்படுத்துகிற பண்டிகைகளைப்பற்றிக் கூறினான்.
விளக்குத்தண்டும், பரிசுத்த அப்பமும்
24 கர்த்தர் மோசேயிடம், 2 “இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிடு. அந்த எண்ணெய் குத்து விளக்கிற்குரியது. அது அணையாமல் தொடர்ந்து எரியவேண்டும். 3 ஆரோன் இந்த விளக்கை ஆசாரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதானத்தில் மாலைமுதல் காலைவரை அணையாமல் காக்கவேண்டும். இது திரைக்கு வெளியே உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எரிய வேண்டும். இச்சட்டம் என்றென்றைக்குமுரியது. 4 ஆரோன் கர்த்தரின் சந்நிதியில் சுத்தமான தங்கத்தாலான விளக்குத்தண்டில் விளக்கைப் பொருத்தி எப்பொழுதும் எரியவிட வேண்டும்.
5 “அரைத்த மாவை எடுத்து அதில் பன்னிரெண்டு அப்பங்களைச் செய்யுங்கள். ஒவ்வொரு அப்பமும் பதினாறு கிண்ணங்கள் அளவு மாவால் செய்யப்பட வேண்டும். 6 கர்த்தருக்கு முன்பாக தங்கத்தாலான மேஜையின்மேல் இரண்டு வரிசையாக அப்பங்களை அடுக்க வேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் ஆறு அப்பங்கள் இருக்கட்டும். 7 ஒவ்வொரு வரிசைக்கும் சாம்பிராணிப் புகை காட்டு. அது அப்பத்தோடு இருந்து, கர்த்தருக்கு நினைவு அடையாளமாக, தகன பலியாக கர்த்தருக்கு ஏற்றதாக இருக்கும். 8 அப்பத்தை இவ்வரிசையிலேயே ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஆரோன் கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். இது எல்லாக் காலங்களுக்குமுரியது. இஸ்ரவேல் ஜனங்களோடு உள்ள இந்த உடன்படிக்கை என்னென்றும் தொடரும். 9 இந்த அப்பங்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உரியதாகும். அவர்கள் பரிசுத்தமான இடங்களில் அவற்றை உண்ண வேண்டும்; ஏனென்றால் அவை கர்த்தருக்குத் தகன பலியாகக் கொடுக்கப்பட்டவை. அது என்றென்றும் ஆரோனின் பங்காக இருக்கும்” என்று கூறினார்.
தேவனைத் தூஷித்த மனிதன்
10 இஸ்ரவேல் பெண்ணுக்குப் பிறந்த ஒருவன் இருந்தான். அவனது தந்தை எகிப்தியன். இஸ்ரவேலியப் பெண்ணுக்கு பிறந்த அம்மகன் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். அவன் இஸ்ரவேல் ஜனங்களோடு நடந்துகொண்டிருந்தான். அவன் முகாமில் இன்னொரு இஸ்ரவேலனோடு சண்டையிட்டான். 11 அப்போது அவன் கர்த்தரின் நாமத்தைத் தூஷித்து, அவரைப்பற்றிக் கெடுதலாகப் பேசினான். எனவே அவனை மோசேயிடம் அழைத்து வந்தார்கள். (அவனது தாயின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் மகள்.) 12 ஜனங்கள் அவனைச் சிறையில் வைத்துவிட்டு, அவனைப்பற்றிய தெளிவான பதிலைப் பெறும்படி கர்த்தரின் கட்டளைக்காகக் காத்திருந்தனர்.
13 கர்த்தர் மோசேயிடம், 14 “முகாமுக்கு வெளியே ஒரு இடத்திற்கு அவனைக் கொண்டு வா. அவன் தூஷணம் பேசியதைக் காதால் கேட்ட எல்லோரையும் ஒன்றுகூட்டி அழைத்து வா. அவர்கள் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கவேண்டும், பிறகு ஜனங்கள் அவன் மீது கல்லெறிந்து கொல்ல வேண்டும். 15 இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டும்: எவனாவது தேவனை தூஷித்தால் அவன் தண்டிக்கப்பட வேண்டும். 16 கர்த்தருக்கு எதிராக பேசுகிற எவனையும் எல்லோரும் சேர்ந்து கல்லெறிந்து கொன்று போடவேண்டும். அவன் அந்நியனாக இருந்தாலும் அவனும் இஸ்ரவேல் ஜனங்களைப் போன்றே தண்டிக்கப்பட வேண்டும். கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிற எவனும் சாகடிக்கப்பட வேண்டும்.
17 “எவனாவது ஒரு கொலை செய்தால் அவனுக்கு மரணதண்டனை உண்டு. 18 ஒருவன் இன்னொருவனுக்குரிய மிருகத்தைக் கொன்றால் அதற்குப் பதிலாக இன்னொரு மிருகத்தைக் கொடுக்க வேண்டும்.
19 “எவனாவது இன்னொருவனைக் காயப்படுத்தினால் அவனுக்கும் அதைப் போன்ற காயத்தை உண்டாக்க வேண்டும். 20 உடைந்த எலும்புக்கு எலும்பு உடைபட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல். அடுத்தவனுக்கு எவ்விதமான காயங்களை ஒருவன் உண்டாக்குகிறானோ, அதே விதமான காயங்களை அவன் அடைவான். 21 எனவே ஒருவன் ஒரு மிருகத்தைக் கொன்றால் அவன் அதற்குரிய தொகையைக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவன் இன்னொருவனைக் கொன்றுவிட்டால் அவன் மரண தண்டனையடைய வேண்டும்.
22 “இந்த சட்டம் நடுநிலையாக இருக்கும். இஸ்ரவேல் குடிமக்களுக்கும் அயல் நாட்டுக்காரர்களுக்கும் ஒரே நீதிதான். ஏனென்றால் நான் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.
23 பிறகு மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். ஜனங்கள் தேவனைத் தூஷித்தவனை முகாமுக்கு வெளியே கொண்டு சென்று அங்கு அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி செய்தனர்.
தேசத்திற்கு ஓய்வுக் காலம்
25 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது; நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் சென்ற பின்னர் ஓய்வுக்கென சிறப்பான காலத்தை அந்நாடு கொண்டிருக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற ஓய்வுக்காலம் ஆகும். 3 ஆறு ஆண்டுகளுக்கு, உங்கள் வயல்களில் விதைகளை விதையுங்கள், உங்கள் திராட்சைத் தோட்டத்தில் கிளை கழியுங்கள். அதன் பழங்களைக் கொண்டு வாருங்கள். 4 ஆனால் ஏழாவது ஆண்டில் அந்நிலத்துக்கு ஓய்வு அளியுங்கள். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற சிறப்பான ஓய்வுக் காலமாகும். அப்போது வயலில் விதை விதைக்காமலும், திராட்சை தோட்டத்தில் பயிர் செய்யாமலுமிருங்கள். 5 அறுவடைக்குப் பிறகு வயலில் தானாக வளர்ந்து விளைந்தவற்றை அறுவடை செய்யவோ, கிளை கழிக்காத கொடிகளில் உள்ள திராட்சைப் பழங்களைப் பறிக்கவோ கூடாது. பூமி ஒரு வருடம் ஓய்வு கொள்ளட்டும்.
6 “நிலம் ஒரு வருடம் ஓய்வாக விடப்பட்டாலும் உங்களிடம் போதுமான உணவுப் பொருட்கள் இருக்கும். உங்களுக்கும், உங்கள் ஆண், பெண், வேலையாட்களுக்கும், உங்கள் நாட்டிலுள்ள கூலி வேலைக்காரர்களுக்கும், அயல்நாட்டுக்காரர்களுக்கும்கூட போதுமான உணவுப் பொருட்கள் இருக்கும். 7 உங்கள் பசுக்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும்கூட போதுமான உணவு இருக்கும்.
யூபிலி-விடுதலையின் ஆண்டு
8 “மேலும் நீங்கள் ஏழு ஓய்வு ஆண்டுகள் கொண்ட ஏழு ஓய்வு ஆண்டுகளை எண்ணுங்கள். அது மொத்தம் 49 ஆண்டுகளாகும். அந்த 49 வருடங்களில் மொத்தத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பூமிக்கு ஓய்வு கிடைக்கும். 9 பாவப்பரிகார நாளில் செம்மறியாட்டுக் கடாவின் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளத்தை ஊதவேண்டும். அது ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளாக இருக்கும். நாடு முழுவதும் எக்காளம் ஊதிக் கொண்டாட வேண்டும். 10 நீங்கள் ஐம்பதாவது ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் விடுதலை என்று அறிவிக்க வேண்டும். இந்த விழாவை ‘யூபிலி’ என்று அழைப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்த சொத்திற்கும், சொந்த குடும்பத்திற்கும் திரும்புவீர்கள். 11 உங்களுக்கு ஐம்பதாவது ஆண்டு விழா மிகச் சிறப்பான யூபிலி விழாவாகும். அவ்வருடத்தில் விதைகளை விதைக்காதீர்கள். தானாக வளர்ந்த பயிர்களை அறுவடை செய்யாதீர்கள். கிளை கழிக்காத செடிகளில் உள்ள திராட்சைகளைப் பறிக்காதீர்கள். 12 அது யூபிலி ஆண்டு, அது உங்களுக்குப் பரிசுத்தமான வருடமாகும். உங்கள் வயலில் விளைந்தவற்றை உண்ணுங்கள். 13 யூபிலி ஆண்டில் ஒவ்வொருவனும் தன் சொந்த பூமிக்குச் செல்லவேண்டும்.
14 “உனது அயலானிடம் நிலம் விற்கும்போது ஏமாற்றாதே. அதுபோல் நீ நிலம் வாங்கும்போது அவன் உன்னை ஏமாற்றும்படி விடாதே. 15 நீ அயலானின் நிலத்தை வாங்கும்போது அந்த நிலத்தின் யூபிலியைக் கணக்கிட்டு அதற்கேற்ற விலையை நிர்ணயித்துக்கொள். நிலத்தை விற்கும்போதும் அதனுடைய அறுவடைகளைக் கணக்கிட்டு அதன் மூலம் சரியான விலையை நிர்ணயித்துக்கொள். ஏனென்றால் அடுத்த யூபிலிவரை அறுவடை செய்யும் உரிமையை மட்டுமே விற்கிறான். 16 யூபிலிக்கு முன் அதிகமான ஆண்டுகள் விளைந்த நிலம் அதிக விலையை உடையது. குறைந்த ஆண்டுகள் விளைந்த நிலத்தின் விலை குறையும். ஏனென்றால் உனது அயலான் உன்னிடம் அறுவடைகளின் எண்ணிக்கைகளையே விற்பனை செய்கிறான். அடுத்த யூபிலியில் அந்த நிலம் மீண்டும் அவனுக்கு உரியதாகிவிடும். 17 ஒருவரை ஒருவர் ஏமாற்றக் கூடாது. உங்கள் தேவனை நீங்கள் பெருமைபடுத்த வேண்டும். நானே உங்களுடைய தேவனாகிய கர்த்தர்!
18 “எனது சட்டங்களையும், விதிகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பின்பற்றுங்கள், அப்போது உங்கள் நாட்டில் நீங்கள் பாதுகாப்போடு வாழலாம். 19 நிலம் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தரும். நீங்கள் அதிக விளைபொருட்களைப் பெற்று நாட்டில் வசதியோடு வாழலாம்.
20 “ஆனால் நீங்கள் ‘நான் விளைய வைத்துப் பொருட்களைச் சேர்த்து வைக்காவிட்டால் ஏழாவது ஆண்டில் வசதியாக உண்ண முடியாது’ என்று சொல்லலாம். 21 கவலைப்படாதிருங்கள்! ஆறாவது ஆண்டில் என் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும்படி கட்டளையிடுவேன். தொடர்ந்து நிலம் மூன்று ஆண்டுகளுக்கு நன்கு விளையும். 22 நீ எட்டாவது ஆண்டில் பயிர் செய்யும்போதும் பழைய விளைச்சலையே உண்டுகொண்டிருப்பாய். ஒன்பதாவது ஆண்டில் புதிய விளைச்சல் கிடைக்கும்வரை இவ்வாறு செய்வாய்.
சொத்துக்குரிய சட்டங்கள்
23 “இந்த நிலம் உண்மையில் எனக்குரியது. எனவே இதனை நீங்கள் நிரந்தரமாக விற்கமுடியாது. அந்நியர்களாகவும் பயணிகளாகவுமே என் நிலத்தில் நீங்கள் அனைவரும் என்னோடு வாழ்கிறீர்கள். 24 ஜனங்கள் தங்கள் நிலத்தை விற்றுவிடலாம். எனினும் அது அவர்களின் குடும்பத்திற்கு மீண்டும் வந்து சேரும். 25 உங்களில் ஒருவன் மிகவும் வறியவனாகவோ, தன் சொத்துக்களை விற்கும் அளவுக்கு ஏழையாகவோ மாறலாம். அப்போது அவனுக்கு நெருக்கமான உறவினரில் எவராவது வந்து அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும். 26 அவனிடமிருந்து நிலத்தை திரும்ப வாங்குகிற அளவுக்கு நெருக்கமான உறவினர்கள் இல்லாமற் போகும்போது, அந்த நிலத்தைத்தானே திரும்ப வாங்குகிற அளவிற்கு அவன் பணத்தை சேகரித்திருக்கலாம். 27 பிறகு அவன் நிலத்தை விற்ற ஆண்டுகளைக் கணக்கிட்டு, அந்த எண்ணிக்கை மூலம் எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதனைத் திரும்ப விலைக்கு வாங்கலாம். அதனால் அச்சொத்து அவனுக்கு மீண்டும் உரியதாகும். 28 ஆனால் ஒருவேளை அவனுக்குத் தன் நிலத்தை திரும்ப வாங்குகிற அளவிற்குப் பணம் சேர்க்கமுடியாமல் போனால் அப்போது அந்த நிலம் யூபிலி ஆண்டுவரை வாங்கியவனிடமே இருக்கும். பிறகு சிறப்பான யூபிலி விழா நடக்கும்போது அந்நிலம் முதல் உரிமையாளனுக்கு மீண்டும் சேர்ந்துவிடும். எனவே, சரியான குடும்பத்துக்கு அந்த சொத்தானது மீண்டும் சொந்தமாகும்.
29 “ஒருவன், மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வீட்டை விற்றால் ஒரு ஆண்டு வரை மட்டுமே அவனுக்குத் திரும்ப வாங்கிக்கொள்கிற உரிமை உண்டு. 30 ஆனால் வீட்டுக்குச் சொந்தக்காரன் அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாவிட்டால் அது வாங்கியவனுக்கும் அவனது சந்ததிகளுக்கும் உரிமையாகிவிடும். வீடு யூபிலி ஆண்டில் நிலத்தைப் போன்று அதன் சொந்தக்காரனுக்குப் போய்ச் சேர்வதில்லை. 31 மதில் இல்லாத பட்டணங்களாக இருந்தால் அது வயல் வெளியாக எண்ணப்படும். அதில் உள்ள வீடுகள் மட்டுமே யூபிலி ஆண்டின்போது உண்மையான சொந்தக்காரனுக்கு சேரும்.
32 “ஆனால் லேவியரின் நகரம்பற்றி வேறு விதிகள் உள்ளன. லேவியர்கள் நகரங்களில் தங்கள் வீடுகளை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வாங்கிக்கொள்ளலாம். 33 லேவியர்களிடமிருந்து யாரவது ஒரு வீடு வாங்கினால் லேவியரின் நகரங்களிலுள்ள வீடுகளெல்லாம் யூபிலி ஆண்டில் மீண்டும் அவர்களுக்கே உரியதாகிவிடும். ஏனென்றால் லேவியரின் நகரங்கள் எல்லாம் லேவியின் கோத்திரங்களுக்கு சொந்தம். இஸ்ரவேல் ஜனங்கள் இதனை லேவியர்களுக்குக் கொடுத்துவிட்டனர். 34 அதோடு லேவியரின் நகரங்களைச் சுற்றியிருக்கிற வெளி நிலங்களை விற்கமுடியாது. அது எப்போதும் லேவியர்களுக்கே உரியதாகும்.
அடிமைகளின் எஜமானர்களுக்கு உரிய விதிகள்
35 “உன் சகோதரரில் ஒருவன் மிகவும் வறுமையனாகிவிட்டால் அவன் அயல் நாட்டுக்காரனைப் போன்று உன்னோடு பிழைக்கும்படி அனுமதிக்க வேண்டும். 36 நீ அவனுக்குக் கடன் கொடுத்து அவனிடம் வட்டி வாங்காமல் இருப்பாயாக. தேவனுக்குரிய மதிப்பைக் கொடுத்து, உன் சகோதரனை வாழவிடுவாயாக. 37 அவனிடம் நீ கொடுத்த கடனுக்காக வட்டி வாங்காதே. நீ விற்கிற உணவிற்கு மிகுதியாக லாபம் வரும்படி செய்யாதே. 38 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். உன்னை எகிப்தில் இருந்து அழைத்து வந்து கானான் நாட்டைக் கொடுத்து, உனது தேவனாக ஆனேன்.
39 “உனது சகோதரன் ஒருவன் ஏழ்மை காரணமாக உன்னிடம் அடிமையாக இருக்கலாம். நீ அடிமைபோன்று அவனை வேலை வாங்கக்கூடாது. 40 யூபிலி ஆண்டு வரை அவன் ஒரு கூலிக்காரனைப் போன்றும் ஒரு பயணியைப் போலவும் இருப்பான். 41 பிறகு அவன் உன்னைவிட்டுச் செல்லலாம். அவன் தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு மீண்டும் தன் குடும்பத்துக்குத் திரும்பமுடியும். அவன் தனது முற்பிதாக்களின் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வான். 42 ஏனென்றால் அவர்கள் எனது ஊழியர்கள். அவர்களை நான் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். அவர்கள் மீண்டும் அடிமையாகக் கூடாது. 43 இவர்களுக்குக் கொடூரமான எஜமானனாக நீங்கள் இருக்கக் கூடாது. நீங்கள் தேவனுக்கு பயப்பட வேண்டும்.
44 “உங்கள் ஆணும் பெண்ணுமான அடிமைகளைப்பற்றிய காரியங்களாவன: உங்களைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து அடிமைகளை அழைத்து வரலாம். 45 உங்கள் தேசத்தில் வசிக்கும் அயல் நாட்டவர்கள் குடும்பங்களில் இருந்து நீங்கள் அடிமைகளாக சிறுவர்களையும் அழைத்து வந்திருக்கலாம். அந்த அடிமைச் சிறுவர்கள் உனக்கு உரியவர்கள். 46 உங்கள் இறப்பிற்குப் பின் உங்களது பிள்ளைகளின் வசத்தில் அவர்கள் இருப்பார்கள். என்றென்றும் அவர்கள் உங்களது அடிமைகளாக இருக்கலாம். இந்த அயல் நாட்டுக்காரர்களை உங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சொந்தச் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு கொடுமையான எஜமானனாக நீ இருக்கக்கூடாது.
47 “அயல் நாட்டுக்காரரோ பயணிகளோ செல்வந்தர் ஆகலாம். உன் சொந்த நாட்டுக்காரன் ஏழையாக இருப்பதினால் அவர்கள் அயல் நாட்டுக்காரர் ஒருவருக்கு அடிமையாகலாம். 48 அவன் திரும்பவும் சுதந்திரமானவனாக முடியும். அவனது சகோதரரில் ஒருவன் அவனை விலை கொடுத்து மீட்டுவிடலாம். 49 அவனது சித்தப்பாவோ, பங்காளிகளோ, அவனைத் திரும்ப வாங்கலாம். ஆனால் அவனுக்குப் போதுமான பணம் இருந்தால் தானே அதனைக் கொடுத்துவிட்டு சுதந்திரம் பெற்றுவிடலாம்.
50 “அவன் தன்னை விற்றுக்கொண்ட ஆண்டு முதல் அடுத்த யூபிலி வரை எண்ணிக்கொள்ள வேண்டும். ஆண்டுகளின் எண்ணிக்கையை வைத்து விலையை முடிவு செய்யலாம். ஏனென்றால் அவன் சில ஆண்டுகளே தன்னை ‘வாடகையாகத்’ தந்திருக்கிறான். 51 யூபிலி ஆண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை மிகுதியாக இருக்கும். அவன் அதனைக் கொடுக்க வேண்டும். 52 யூபிலி ஆண்டு வர இன்னும் கொஞ்சம் ஆண்டுகளே இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை குறைவாக இருக்கும். 53 ஆனால் அவன் ஒரு வாடகை ஆளைப் போன்று அயல் நாட்டுக்காரனோடு ஒவ்வொரு ஆண்டும் இருக்க வேண்டும். அந்த அயல் நாட்டுக்காரன் கொடூரமான எஜமானனாக இல்லாமல் இருக்கட்டும்.
54 “அவனை யாரும் திரும்பி வாங்காவிட்டாலும் யூபிலி ஆண்டில் அவனும் அவனது பிள்ளைகளும் விடுதலை பெறுவார்கள். 55 ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் எனது ஊழியர்கள். நான் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!
தேவனுக்குக் கீழ்ப்படிபவர்களுக்குரிய பலன்கள்
26 “உங்களுக்காக விக்கிரகங்களை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் நாடுகளில் சிலைகளையோ நினைவுச் சின்னங்களையோ வணங்குவதற்காக ஏற்படுத்தாதீர்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!
2 “எனது சிறப்பான ஓய்வு நாட்களை நினைவில் கொள்ளுங்கள். எனது பரிசுத்தமான இடங்களைப் பெருமைப்படுத்துங்கள். நானே கர்த்தர்!
3 “எனது சட்டங்களையும் கட்டளைகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படியுங்கள்! 4 நீங்கள் இவற்றைச் செய்தால் நான் உரிய பருவத்தில் மழையைத் தருவேன். நிலம் நன்றாக விளையும். மரங்கள் நல்ல பழங்களைத் தரும். 5 திராட்சைப் பழம் பறிக்கும் காலம்வரை உங்கள் போரடிப்புக் காலம் இருக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும். நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு உங்கள் நாட்டில் சுகமாய் குடியிருப்பீர்கள். 6 உங்கள் நாட்டில் சமாதானத்தை உருவாக்குவேன். நீங்கள் பாதுகாப்புடன் இருப்பீர்கள். எவரும் வந்து உங்களை நெருங்கி அச்சுறுத்த முடியாது. தீமை செய்யும் மிருகங்களை நாட்டுக்கு வெளியே வைத்திருப்பேன். வேறு படைகளும் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்லாது.
7 “நீங்கள் உங்களது பகைவர்களைத் துரத்தி சென்று தோற்கடிப்பீர்கள். உங்கள் வாளால் அவர்களைக் கொல்வீர்கள். 8 ஐந்து பேரான நீங்கள் நூறு பேரை விரட்டிச் செல்வீர்கள், நூறு பேராக இருந்தாலும் நீங்கள் பத்தாயிரம் பேரை விரட்டிச்சென்று அவர்களை வாளால் வெட்டிக் கொல்லுவீர்கள்.
9 “நான் உங்கள்மேல் கவனமாயிருந்து நிறைய குழந்தைகளை நீங்கள் பெறும்படி செய்வேன். நான் எனது உடன்படிக்கையை பாதுகாப்பேன். 10 நீங்கள் ஒரு ஆண்டு விளைச்சலைப் போதுமான அளவிற்கு மேல் பெற்றிருப்பீர்கள். புதிய விளைச்சலும் பெறுவீர்கள். புதியதை வைக்க இடமில்லாமல் பழையதை எறிவீர்கள். 11 உங்கள் நடுவே எனது ஆராதனைக் கூடாரத்தை அமைப்பேன். நான் உங்களிடமிருந்து விலகிச் செல்லமாட்டேன். 12 நான் உங்களோடு நடந்து உங்கள் தேவனாக இருப்பேன். நீங்களே எனது ஜனங்கள். 13 நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். நான் உங்களை அங்கிருந்து மீட்டு வந்தேன். அடிமைகளாக நீங்கள் சுமந்த பாரத்தால் முதுகு வளைந்துபோனீர்கள். நான் உங்கள் நுகத்தடிகளை உடைத்து உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்தேன்!
தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனை
14 “நீங்கள் எனக்கு கீழ்ப்படியாவிட்டாலோ அல்லது என் கட்டளையை பின்பற்றாவிட்டாலோ கீழ்க்கண்ட தீமைகள் உங்களுக்கு ஏற்படும். 15 நீங்கள் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய மறுத்தால் எனது உடன்படிக்கையை மீறினவர்களாக மாறுகிறீர்கள். 16 நீங்கள் அவ்வாறு செய்தால் நான் உங்களுக்கு மோசமான தீமைகளை உருவாக்குவேன். நோய்களையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரச் செய்வேன். அவை உங்கள் கண்களையும் ஜீவனையும் கெடுக்கும். நீங்கள் செய்யும் பயிர் விளைச்சலில் நீங்கள் வெற்றி பெற முடியாது. உங்கள் பகைவர்கள் உங்களது விளைச்சலை உண்பார்கள். 17 நான் உங்களுக்கு எதிராக இருப்பேன். எனவே உங்களை உங்கள் எதிரிகள் வெல்வார்கள். அவர்கள் உங்களை வெறுத்து ஆட்சி செலுத்துவார்கள். உங்களை எவரும் துரத்தாவிட்டாலும் நீங்கள் பயந்து ஓடுவீர்கள்.
18 “இவற்றுக்குப் பிறகும் நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன். 19 உங்கள் பெருமைக்குரிய பெரிய நகரங்களையெல்லாம் அழிப்பேன். வானம் உங்களுக்கு மழையைத் தராது. நிலம் விளைச்சலைத் தராது. 20 நீங்கள் கடினப்பட்டு உழைப்பீர்கள், ஆனால் விளைச்சல் கிடைக்காது. உங்கள் மரங்களும் பழங்களைத் தராது.
21 “அல்லது இத்தனைக்குப் பிறகும் எனக்கு எதிராகவே நீங்கள் மாறி கீழ்ப்படிய மறுத்தால் உங்களை ஏழு மடங்கு கடுமையாக தண்டிப்பேன். உங்களது பாவங்கள் அதிகரிக்கும்போது தண்டனைகளும் அதிகமாகும். 22 நான் உங்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன். உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து அவை பிரித்துக் கொண்டு போகும். அவை உங்கள் மிருகங்களைக் கொல்லும். அவை உங்கள் ஜனங்களை அழிக்கும். ஜனங்கள் பயணம் செய்ய அஞ்சுவார்கள். சாலைகள் வெறுமையாகும்!
23 “இவை அனைத்தும் நடந்த பிறகும் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலோ மேலும் எனக்கு எதிராக இருந்தாலோ, 24 நானும் உங்களுக்கு எதிராக மாறுவேன். ஆம் கர்த்தராகிய நானே உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன். 25 நீங்கள் எனது உடன்படிக்கையை மீறியிருப்பதினால் நான் உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கெதிராக நான் படைகளைக் கொண்டு வருவேன். நீங்கள் பாதுகாப்புக்காக உங்கள் நகரங்களுக்கு ஓடுவீர்கள். ஆனால், உங்களுக்கிடையில் நோய்களைப் பரவச் செய்வேன். மேலும் உங்கள் எதிரிகள் உங்களைத் தோற்கடிப்பார்கள். 26 அந்த நகரத்தில் உண்பதற்குக் குறைவான அளவிலேயே தானியங்கள் இருக்கும். ஒரே அடுப்பில் பத்துப் பெண்கள் அவர்களது எல்லா உணவையும் சமைக்க முடியும். நீங்கள் அதை உண்ட பிறகும் பசியோடிருப்பீர்கள்!
2008 by World Bible Translation Center