Bible in 90 Days
27 “நீங்கள் அதற்கு மேலும் என்னைக் கவனிக்காவிட்டாலோ, எனக்கு எதிராகத் திரும்பினாலோ, 28 நான் உண்மையாகவே எனது கோபத்தைக் காட்டுவேன். ஆம், கர்த்தராகிய நான் உங்கள் பாவங்களுக்காக உங்களை ஏழு மடங்கு தண்டிப்பேன். 29 நீங்கள் மிகவும் பசியாவதினால் உங்கள் மகன்களையும். மகள்களையும் தின்பீர்கள். 30 நான் உங்களது உயர்ந்த மேடைகளை அழிப்பேன். உங்களது நறுமணப்புகைப் [a] பலிபீடங்களை உடைப்பேன். உங்களது பிணங்களை உங்களது உயிரற்ற விக்கிரகங்களின்மேல் போடுவேன். நீங்கள் எனது வெறுப்புக்கு ஆளாவீர்கள். 31 நான் உங்கள் நகரங்களை அழிப்பேன். உங்கள் பரிசுத்தமான இடங்களை வெறுமையாக்குவேன். உங்கள் பலிகளின் மணத்தை நுகரமாட்டேன். 32 உங்கள் நிலங்களை வெறுமையாக்குவேன். அதிலே குடியிருக்கும் உங்கள் பகைவர்கள் அதிர்ச்சியடைவார்கள். 33 தேசங்களெங்கும் உங்களைச் சிதறடிப்பேன். நான் எனது வாளை உருவி உங்களை அழிப்பேன். உங்கள் வயல்கள் பாழாகும், உங்கள் நகரங்கள் அழிந்துபோகும்.
34 “நீங்கள் உங்களது பகைவரின் நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் நாடு வெறுமையடையும். இறுதியில் உங்கள் வயல்கள் ஓய்வுபெறும். அவை ஓய்வு காலத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும். 35 வயல்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறவேண்டும் என்று சட்டம் கூறுகின்றன. நீங்கள் அங்கு குடியிருந்தபோது ஓய்வுபெறாத அந்த நிலங்கள் பாழாய்க் கிடந்து ஓய்வுபெறும். 36 உங்களில் உயிரோடு இருப்பவர்களைப் பகைவரின் நாடுகளில் தைரியம் இழந்து தவிக்கச் செய்வேன். அசைகிற இலைகளின் சத்தமும் அவர்களை அச்சுறுத்தி விரட்டும். அவர்கள் எதற்கெடுத்தாலும் அஞ்சுவார்கள். யாரும் துரத்தாவிட்டாலும் யாரோ அவர்களை வாளெடுத்துக் கொண்டு துரத்துவது போன்று ஓடிக்கொண்டிருப்பார்கள். 37 யாரும் துரத்தாவிட்டாலும் கூட அவர்கள் ஓடி ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்.
“எதிரிகளை எதிர்த்து நிற்கிற பலம் உங்களிடம் இல்லாமல் போகும். 38 வேறு நாடுகளில் நீங்கள் காணாமல் போவீர்கள். உங்கள் பகைவரின் நாடுகளில் மறைந்து போவீர்கள். 39 உங்களில் உயிரோடு இருப்பவர்கள் தங்கள் பாவங்களால் பகைவர்கள் நாட்டில் அழிவார்கள். அவர்கள் தம் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தங்கள் பாவங்களால் அழிவார்கள்.
எப்பொழுதும் நம்பிக்கை இருக்கிறது
40 “ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு, அவர்கள் எனக்கு எதிராக நடந்துக்கொண்டு, பாவம் செய்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ளலாம். 41 அவர்கள் எனக்கு எதிராக நடந்துகொண்டதால் நானும் அவர்களுக்கு எதிராக நடந்துகொண்டேன். அவர்களைப் பகைவரின் நாடுகளுக்கு அனுப்பி வைத்தேன். இதனையும் அவர்கள் அறிக்கையிடலாம். அவர்கள் எனக்கு அந்நியர்களாவார்கள். அவர்கள் அடக்கமாக தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். 42 இவ்வாறு செய்தால் நான் யாக்கோபோடு செய்த உடன்படிக்கையையும், நான் ஈசாக்கோடு செய்த உடன்படிக்கையையும் நான் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையையும் நினைவுப்படுத்திக்கொள்வேன். நான் அந்த தேசத்தை நினைவுகூருவேன்.
43 “நிலம் வெறுமையாக இருக்கும். அது தனது ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும். பின் உயிரோடு இருக்கிறவர்கள் தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் எனது சட்டங்களையும், விதிகளையும் வெறுத்து கீழ்ப்படிய மறுத்ததால் இந்தத் தண்டனை பெற்றதாக உணர்ந்துகொள்வார்கள். 44 அவர்கள் உண்மையில் பாவம் செய்தவர்கள். ஆனால் அவர்கள் என்னிடம் உதவிக்கு வந்தால் நான் அவர்களை விட்டு விலகிப் போகமாட்டேன். நான் அவர்கள் சொல்வதைக் கேட்பேன். அவர்கள் தங்கள் பகைவரின் நாட்டிலே இருந்தாலும் முழுவதுமாக அழித்துவிடமாட்டேன். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை உடைக்கமாட்டேன். ஏனென்றால் நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர். 45 அவர்களுக்காக, நான் அவர்களின் முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுபடுத்திக்கொள்வேன். நான் அவர்களின் முற்பிதாக்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து, அவர்களின் தேவன் ஆனேன். மற்ற நாடுகளும் இதனைக் கவனித்தன. நான் கர்த்தர்!” என்று கூறினார்.
46 இவையே இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் கொடுத்த சட்டங்களும், விதிகளும், போதனைகளுமாகும். கர்த்தருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் சட்டங்களும் இவை தான். இச்சட்டங்களை கர்த்தர் சீனாய் மலையில் மோசேயிடம் கொடுத்தார். மோசே இவற்றை ஜனங்களிடம் கொடுத்தான்.
வாக்குத்தத்தங்கள் முக்கியமானவை
27 கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கர்த்தரிடம் ஒருவன் சிறப்பான பொருத்தனை ஒன்றைச் செய்திருக்கலாம். அவன் கர்த்தருக்கு ஒரு நபரைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கலாம். அந்த நபர் கர்த்தருக்குச் சிறப்பான ஊழியம் செய்வான். ஆசாரியன் அவனுக்கென்று ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நபரைத் திரும்பப் பெற வேண்டுமானால் அவனுக்குரிய மீட்பின் தொகையைக் கொடுக்க வேண்டும். 3 இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு ஆணின் விலை ஐம்பது வெள்ளிச் சேக்கலாகும். (நீங்கள் இதற்கு அதிகாரப்பூர்வமான பரிசுத்த இடத்தின் சேக்கலின் அளவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.) 4 இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு பெண்ணின் விலை முப்பது வெள்ளிச்சேக்கலாகும். 5 ஐந்து வயது முதல் இருபது வயதுவரை உடைய ஒரு ஆண்மகனின் விலை இருபது வெள்ளிச் சேக்கலாகும். ஐந்து முதல் வயது இருபது வயதுவரை உடைய ஒரு பெண்ணின் விலை பத்து வெள்ளிச் சேக்கலாகும். 6 ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள ஆண் குழந்தையின் விலை ஐந்து சேக்கலாகும். ஒரு பெண் குழந்தையின் விலை மூன்று சேக்கலாகும். 7 அறுபதும் அதற்கும் மேலும் ஆன ஒரு முதியவனின் விலை பதினைந்து சேக்கலாகும். இது போன்ற முதிய பெண்ணின் விலை பத்து சேக்கலாகும்.
8 “ஒருவேளை அவன் அப்பணத்தைச் செலுத்த முடியாத அளவிற்கு ஏழையாக இருந்தால் அவனை ஆசாரியனிடம் அழைத்துவர வேண்டும். அவன் செலுத்த வேண்டிய தொகையைப்பற்றி ஆசாரியனே முடிவு செய்வான்.
கர்த்தருக்கான காணிக்கைகள்
9 “கர்த்தருக்கான பலிகளாக சில மிருகங்களைப் பயன்படுத்தலாம். ஒருவன் இத்தகைய மிருகங்களைக் கொண்டுவந்தால் அவை பரிசுத்தமடைந்துவிடும். 10 அவன் அந்த மிருகத்தை கர்த்தருக்கு தருவதாக வாக்களித்திருக்கலாம். எனவே அவன் அதற்குப் பதிலாக வேறு மிருகத்தைக் கொண்டுவர முயலக்கூடாது. மோசமான மிருகத்துக்குப் பதிலாக நல்ல மிருகத்தையோ, நல்ல மிருகத்துக்குப் பதில் மோசமான மிருகத்தையோ, கொண்டுவர முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு ஒருவன் செய்தால் அந்த இரண்டு மிருகங்களுமே பரிசுத்தமாகி விடுவதால், இரண்டுமே கர்த்தருக்குரியதாகிவிடும்.
11 “சில மிருகங்களை கர்த்தருக்கு பலியாகத் தர இயலாது. இத்தகைய தீட்டுள்ள மிருகத்தை ஒருவன் கர்த்தருக்குக் கொண்டு வந்தால், அதனை ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 12 ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். அம்மிருகம் நல்லதா, கெட்டதா என்பதைப்பற்றி வேறுபாடு எதுவும் இல்லை. எனவே ஆசாரியன் முடிவு செய்வதே அம்மிருகத்தின் விலையாகும். 13 ஒருவேளை அவன் அந்த மிருகத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய விலையோடு ஐந்தில் ஒரு பங்கு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
வீட்டின் மதிப்புத் தொகை
14 “ஒருவன் தனது வீட்டை கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அர்ப்பணித்தால், அதன் விலையை ஆசாரியன் முடிவு செய்ய வேண்டும். அவ்வீடு நல்லது, கெட்டது என்பது பற்றி வேறுபாடு இல்லை. ஆசாரியன் தீர்மானிப்பதே அவ்வீட்டின் விலையாகும். 15 ஆனால் வீட்டுக்காரன் அவ்வீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் வீட்டின் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பின்பு வீடு அவனுக்குரியதாகும்.
சொத்தின் மதிப்பு
16 “ஒருவன் தனது வயல்களின் ஒரு பாகத்தை கர்த்தருக்கு அர்ப்பணித்தால் அதன் விலையானது அதில் எவ்வளவு விதை விதைக்கலாம் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். ஒருகலம் [b] வாற் கோதுமை, விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்பட வேண்டும். 17 ஒருவேளை வயலை யூபிலி ஆண்டில் தேவனுக்குக் கொடுத்தால், அதன் விலையை ஆசாரியன் தீர்மானிப்பான். 18 அவன் தனது வயலை யூபிலி ஆண்டுக்குப் பிறகு கொடுத்தால் ஆசாரியன் அதன் விலையைச் சரியாகக் கணக்கிடவேண்டும். அவன் அடுத்த யூபிலிக்கான ஆண்டு எண்ணிக்கையைக் கணக்கிட்டு விலையைச் சொல்லுவான். 19 வயலைக் கொடுத்தவன் திரும்பப்பெற வேண்டும் என்று விரும்பினால் வயலின் விலையோடு ஐந்தில் ஒரு பங்கு மிகுதியாகக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். பிறகு அது அவனுக்கு உரிமை உடையதாகும். 20 ஒருவேளை அவன் திரும்ப விலை கொடுத்து வாங்கிக்கொள்ளாவிட்டால், அவ்வயல் தொடர்ந்து ஆசாரியர்களுக்கு உரியதாகும். ஒருவேளை அந்த வயல் வேறு யாருக்கேனும் விற்கப்பட்டால், அவன் அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது. 21 எனவே வயலுக்குச் சொந்தக்காரன் திரும்பப் பெற்றுக்கொள்ளாவிட்டால், யூபிலி ஆண்டு வந்தாலும் அது கர்த்தருக்கு பரிசுத்தமானதாக விளங்கும், என்றென்றும் ஆசாரியர்களுக்கு உரிமை உடையதாக இருக்கும். அது கர்த்தருக்கே முழுமையாகக் கொடுக்கப்பட்ட நிலம்போல் இருக்கும்.
22 “ஒருவன் கர்த்தருக்கு அர்ப்பணித்த நிலம் அவன் விலைக்கு வாங்கியதாக இருக்கலாம். அது அவனது குடும்பச் சொத்தாக இல்லாமல் இருக்கலாம். 23 அப்போது ஆசாரியன் யூபிலி ஆண்டுகுரிய ஆண்டுகளைக் கணக்கிட்டு அதன் விலையை முடிவு செய்வான். அது கர்த்தருக்கு உரியதாக இருக்கும். 24 பிறகு யூபிலி ஆண்டில் அந்நிலம் மீண்டும் அந்நிலத்திற்கு சொந்தமான குடும்பத்திற்கே போய்ச் சேரும்.
25 “இதன் விலையை முடிவு செய்யும்போது அதிகாரப்பூர்வமான அளவை பயன்படுத்த வேண்டும். ஒரு சேக்கல் என்பது இருபது கேராவாகும்.
மிருகங்களின் மதிப்புத் தொகை
26 “ஜனங்கள் கர்த்தருக்கு மாடுகளையோ, ஆடுகளையோ சிறப்புக் காணிக்கைளாகக் கொடுக்கலாம். அவை முதலில் பிறந்தவையாக இருப்பின் அது ஏற்கெனவே கர்த்தருக்கு உரியது. எனவே அவற்றை ஜனங்கள் சிறப்புக் காணிக்கையாகக் கொடுக்க முடியாது. 27 ஜனங்கள் முதலில் பிறந்த மிருகங்களை கர்த்தருக்கே கொடுக்க வேண்டும். ஆனால் அது தீட்டுள்ளதாக இருந்தால் அவன் அதனைத் திருப்பி வாங்கிக்கொள்ளவேண்டும். ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். விலையோடு ஐந்தில் ஒரு பாகம் மிகுதியாகக் கொடுத்து அதனை வாங்கிக்கொள்ள வேண்டும். அவன் அதனைத் திருப்ப வாங்கிக்கொள்ளாவிட்டால் ஆசாரியன்தான் விரும்புகிற விலையில் மற்றவர்களுக்கு விற்றுவிட வேண்டும்.
சிறப்புக் காணிக்கைகள்
28 “ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அன்பளிப்புகளில் சில சிறப்பான அன்பளிப்புகள் [c] உள்ளன. இவை கர்த்தருக்கே உரியவை. அவற்றைக் கொடுத்தவன் திருப்பி வாங்கிக்கொள்ளவும், விற்கவும் முடியாது. இவை கர்த்தருக்கே சொந்தமானவை. காணிக்கைகளில் மனிதர்கள், மிருகங்கள், குடும்பச் சொத்திலுள்ள வயல்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். 29 சிறப்புக் காணிக்கையாக மனிதனைக் கொடுத்தால், அவனைத் திரும்ப விலைக்கு வாங்க முடியாது. அவன் கொல்லப்பட வேண்டும்.
30 “விளைச்சலில் பத்தில் ஒருபாகம் கர்த்தருக்கு உரியது. வயல்களில் விளைப வைகளிலும், மரங்களின் பழங்களிலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்கே உரியது. 31 எனவே எவனாவது இதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அதன் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் மிகுதியாகக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
32 “ஒருவனது மாடு அல்லது ஆட்டு மந்தையில் பத்தில் ஒரு பங்கான மிருகங்கள் கர்த்தருக்கு உரியவை. 33 கர்த்தருக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மிருகங்கள் நல்லவையா, கெட்டவையா என்பதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்காக அவன் வேறு மிருகங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். அவன் அவ்வாறு மாற்றிக்கொள்ள விரும்பினால் இரண்டு மிருகங்களுமே கர்த்தருக்கு உரியதாகும். இவற்றைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாது” என்று கூறினார்.
34 இவை அனைத்தும் கர்த்தர் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளாகும். இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்காக சீனாய் மலையில் அவர் கொடுத்தார்.
இஸ்ரவேலரை மோசே கணக்கிடுதல்
1 ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தர் மோசேயிடம் பேசினார். இது சீனாய் பாலைவனத்தில் நடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாம் மாதத்தின் முதல் நாளில் இது நடந்தது. கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்கள் தொகையை கணக்கிடு. ஒவ்வொரு மனிதனையும் அவனது குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் பட்டியலிடு. 3 இஸ்ரவேல் ஜனங்களில் இருபது வயது அல்லது அதற்கு மேலுள்ள எல்லா ஆண்களையும் நீயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிடுங்கள். (இந்த ஆண்கள்தான் இஸ்ரவேல் படையில் பணிபுரிய வேண்டும்.) இவர்களை குழுவின்படி கணக்கிடுக. 4 ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களுக்கு உதவுவான். அவனே அந்தக் கோத்திரத்துக்குத் தலைவனாக இருப்பான். 5 உங்களுக்குத் துணையாக நின்று உங்களுக்கு உதவி செய்பவர்களின் பெயர்கள் பின்வருவதாகும்.
ரூபனின் கோத்திரத்திலிருந்து சேதேயூருடைய மகன் எலிசூர்;
6 சிமியோனின் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்;
7 யூதாவின் கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்;
8 இசக்காரின் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்;
9 செபுலோனின் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்;
10 யோசேப்பின் சந்ததியிலிருந்து யோசேப்பின்
மகனான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா;
யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்;
11 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கீதெயோனின் மகன் அபீதான்;
12 தாணின் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்;
13 ஆசேரின் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல்
14 காத்தின் கோத்திரத்திலிருந்து தேகுவேலின் மகன் எலியாசாப்;
15 நப்தலியின் கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா” என்று கூறினார்.
16 இவர்கள் அனைவரும் தங்களுடைய கோத்திரங்களுக்கு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 17 மோசேயும் ஆரோனும் இவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டனர். 18 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்துக் கூட்டினர். பிறகு, அவர்கள் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரங்களின்படி பட்டியலிடப்பட்டனர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர். 19 கர்த்தருடைய கட்டளையின்படியே மோசே சரியாக செய்து முடித்தான். ஜனங்கள் சீனாய் பாலைவனத்தில் இருக்கும்போதே, மோசே அவர்களை எண்ணிக் கணக்கிட்டான்.
20 அவர்கள் ரூபனின் கோத்திரத்தைக் கணக்கிட்டார்கள். (இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.) இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் தம் கும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணி பட்டியலிடப்பட்டனர். 21 ரூபனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 46,500.
22 சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 23 சிமியோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களில் மொத்த எண்ணிக்கை 59,300.
24 காத்தின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 25 காத்தின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 45,650.
26 யூதாவின் கோத்திரத்தில் இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 27 யூதாவின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 74,600.
28 இசக்காரின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 29 இசக்காரின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 54,400.
30 செபுலோனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 31 செபுலோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 57,400.
32 எப்பிராயீமின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். (இவன் யோசேப்பின் மகன்) இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 33 எப்பிராயீமின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 40,500.
34 மனாசேயின் கோத்திரத்தில் உள்ளவர்களை அவர்கள் எண்ணினார்கள். (மனாசேயும் யோசேப்பின் மகன்.) இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 35 மனாசேயின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 32,200.
36 அவர்கள் பென்யமீனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 37 பென்யமீனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 35,400.
38 அவர்கள் தாணின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 39 தாணின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 62,700.
40 ஆசேரின் கோத்திரத்தில் உள்ளவர்களை அவர்கள் எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 41 ஆசேரின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 41,500.
42 அவர்கள் நப்தலியின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 43 நப்தலியின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 53,400.
44 மோசேயும், ஆரோனும், பன்னிரண்டு இஸ்ரவேல் தலைவர்களும், இந்த ஜனங்களை எண்ணினார்கள். (ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒவ்வொரு தலைவர் இருந்தனர்.) 45 அவர்கள் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதி கொண்டவர்களை எண்ணினார்கள். ஒவ்வொருவனும், தனது குடும்பத்தோடு பட்டியலிடப்பட்டனர். 46 அவர்கள் கணக்கிட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 603,550.
47 லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேலர்களோடு சேர்த்து எண்ணப்படவில்லை. 48 கர்த்தர் மோசேயிடம், 49 “லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களை எண்ணவேண்டாம். அவர்களை இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்க்க வேண்டாம். 50 லேவியர்களிடம், அவர்கள் உடன்படிக்கையின் பரிசுத்தக் கூடாரத்திற்கு பொறுப்பானவர்கள் என்று சொல். அவர்கள் அக்கூடாரத்தையும், அதற்குரிய வேலைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள பொருட்களையும் சுமக்கவேண்டும். அவர்கள் தங்கள் முகாமை அக்கூடாரத்தைச் சுற்றிலும் அமைத்து தங்கியிருந்து, அவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டும். 51 பரிசுத்தக் கூடாரமானது இடம் பெயரும்போதும், அதற்கான வேலைகளை லேவியர்களே செய்யவேண்டும். பரிசுத்தக் கூடாரமானது நிறுவப்படும்போதெல்லாம் அதற்குரிய வேலைகளையும் லேவியர்களே செய்ய வேண்டும். அவர்களே பரிசுத்தக் கூடாரத்தின் சகல பொறுப்புகளுக்கும் உரியவர்கள். லேவியின் கோத்திரத்தைச் சேராத ஒருவன், பரிசுத்தக் கூடாரத்தின் வேலைகளைச் செய்ய முயன்றால் அவன் கொல்லப்படவேண்டும். 52 இஸ்ரவேல் ஜனங்கள், தனித்தனிக் குழுக்களாக தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் குடும்பக் கொடியின் அருகிலேயே ஒவ்வொருவனும் தங்கவேண்டும். 53 ஆனால், லேவியர்கள் தங்கள் முகாமை பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியே அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உடன்படிக்கையின் பரிசுத்தக் கூடாரத்தைப் பாதுகாக்கவேண்டும். அதனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எவ்விதத் தீமையும் ஏற்படாமல் இருக்கும்” என்றார்.
54 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே கீழ்ப்படிந்தனர்.
முகாமிற்கான முன் ஏற்பாடுகள்
2 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 2 “இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றியே, தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவும், தங்களுக்கென்று தனியான கொடியை வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் குழுக்கொடியின் அருகிலேயே, ஒவ்வொருவனும் தங்க வேண்டும்.
3 “யூதா முகாமின் கொடியானது சூரியன் உதிக்கின்ற, கிழக்குத் திசையில் இருக்க வேண்டும். யூதாவின் கோத்திரம், அக்கொடியின் அருகிலேயே தங்கள் முகாம்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அம்மினதாபின் மகனான நகசோன், யூதாவின் கோத்திரத்துக்குத் தலைவனாக இருப்பான். 4 அவர்கள் குழுவில் 74,600 ஆண்கள் இருந்தனர்.
5 “இசக்காரின் கோத்திரம், யூதாவின் கோத்திரத்திற்கு அருகில் தங்கியிருக்க வேண்டும். சூவாரின் மகனான நெதனேயேல், இசக்கார் ஜனங்களின் தலைவனாய் இருப்பான். 6 அவனுடைய குழுவில் 54,400 ஆண்கள் இருந்தனர்.
7 “செபுலோனின் கோத்திரமானது, யூதாவின் கோத்திரத்துக்கு அருகில் தங்கியிருக்க வேண்டும். ஏலோனின் மகனான எலியாப், செபுலோன் ஜனங்களின் தலைவனாவான். 8 அவர்கள் குழுவில் 57,400 ஆண்கள் இருந்தனர்.
9 “யூதாவின் முகாமில் மொத்தம் 1,86,400 ஆண்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும், தங்கள் கோத்திரங்களின்படி பிரிக்கப்பட்டார்கள். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, யூதாவின் கோத்திரமே முதலில் செல்லும்.
10 “ரூபனுடைய முகாமின் கொடியைக் கொண்ட படைகள், பரிசுத்தக் கூடாரத்தின் தென்பகுதியில் இருக்கும். ஒவ்வொரு குழுவும் இக்கொடியின் அருகில் இருக்கும். சேதேயூரின் மகனான எலிசூர், ரூபன் ஜனங்களின் தலைவனாக இருப்பான். 11 இக்குழுவில் 46,500 ஆண்கள் இருந்தனர்.
12 “சிமியோனின் கோத்திரம், ரூபனின் கோத்திரத்தின் அருகில் இருக்கும். சூரிஷதாவின் மகனான செலூமியேல், சிமியோன் ஜனங்களின் தலைவனாக இருப்பான். 13 இக்குழுவில் 59,300 ஆண்கள் இருந்தனர்.
14 “காத்தின் கோத்திரமும், ரூபனின் கோத்திரத்தின் அருகில் இருக்கும். தேகுவேலின் மகனாகிய எலியாசாப், காத் ஜனங்களின் தலைவனாயிருப்பான். 15 இக்குழுவில் 45,650 ஆண்கள் இருந்தனர்.
16 “ரூபனின் முகாமில் எல்லா கோத்திரங்களிலிருந்தும் மொத்தம் 1,51,450 ஆண்கள் இருந்தனர். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்குப் போகும்போது இக்குழு இரண்டாவதாகச் செல்லும்.
17 “ஜனங்கள் பயணம் செய்யும்போது, அடுத்ததாக லேவியரின் குழு செல்ல வேண்டும். ஆசாரிப்புக் கூடாரமானது அவர்களுடைய எல்லா முகாம்களுக்கும் நடுவே இருக்க வேண்டும். அவர்கள் செல்லுகிற வரிசைப்படியே தங்கள் முகாம்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பக் கொடிகளோடுதான் பயணம் செய்யவேண்டும்.
18 “எப்பிராயீமுடைய முகாமின் கொடியையுடைய படைகள் மேற்கு பக்கத்தில் தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். அம்மியூதின் மகனான எலிஷாமா எப்பிராயீமின் ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான். 19 இக்குழுவில் மொத்தம் 40,500 ஆண்கள் இருந்தனர்.
20 “மனாசேயின் கோத்திரமானது எப்பிராயீமுடைய குடும்பத்துக்கு அருகில் தங்க வேண்டும். பெதாசூரின் மகனான கமாலியேல், மனாசே ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான். 21 இக்குழுவில் மொத்தம் 32,200 ஆண்கள் இருந்தனர்.
22 “பென்யமீனின் கோத்திரமும் எப்பிராயீமுடைய குடும்பத்துக்கு அருகில் தங்க வேண்டும். கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான். 23 அக்குழுவில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை 35,400 ஆகும்.
24 “எப்பிராயீமின் குழு தங்கி இருக்கும் இடத்தில், மொத்தத்தில் 1,08,100 ஆண்கள் இருந்தார்கள். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, மூன்றாவதாக இவர்கள் செல்ல வேண்டும்.
25 “தாண் குழுவின் கொடியானது வடக்குப் புறத்தில் இருக்க வேண்டும். தாணின் கோத்திரங்கள், அங்கே தங்கள் முகாம்களை அமைத்திருப்பார்கள். அம்மிஷதாயின் மகனான அகியேசேர், தாண் ஜனங்களின் தலைவனாக இருப்பான். 26 இந்தக் குழுவில் 62,700 ஆண்கள் இருந்தனர்.
27 “ஆசேரின் கோத்திரத்தினர் தாணின் கோத்திரத்தினரை அடுத்து இருப்பார்கள். ஓகிரானின் மகனான பாகியேல், ஆசேர் ஜனங்களின் தலைவனாக இருப்பான். 28 இக்குழுவில், 41,500 ஆண்கள் இருந்தனர்.
29 “நப்தலியின் கோத்திரத்தினரும் தாணின் கோத்திரத்தினருக்கு அடுத்துக் கூடாரமிட்டு இருப்பார்கள். ஏனானின் மகனாகிய அகீரா, நப்தலி ஜனங்களின் தலைவனாக இருப்பான். 30 இக்குழுவில் 53,400 ஆண்கள் இருந்தனர்.
31 “தாணின் குழு தங்கி இருக்கும் இடத்தில் மொத்தத்தில் 1,57,600 ஆண்கள் இருந்தார்கள். மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது, கடைசியில் செல்ல வேண்டியவர்கள் இவர்களே, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பக் கொடிகளோடு இருக்க வேண்டும்” என்று கூறினார்.
32 இவர்கள்தான் இஸ்ரவேல் ஜனங்கள். அவர்கள் குடும்பவாரியாகக் கணக்கிடப்பட்டனர். எல்லா முகாம்களிலும் இருந்த மொத்த இஸ்ரவேல் ஆண்களின் எண்ணிக்கை 6,03,550 ஆகும். 33 மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, லேவியர்களை மற்ற இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்த்து எண்ணவில்லை.
34 கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தனர். ஒவ்வொரு குழுவும் தமது சொந்தக் கொடியின் கீழ் தங்கி இருந்தது. அனைவரும் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரத்தின்படியே பிரயாணப்பட்டு போனார்கள்.
ஆசாரியர்களான ஆரோனின் குடும்பத்தினர்
3 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசிக்கொண்டிருந்தபோது, ஆசாரியனாகிய ஆரோன், மற்றும் மோசேயின் வம்ச வரலாறு கீழ்க்கண்டவாறு இருந்தது:
2 ஆரோனுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நாதாப் முதல் மகன். அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள் இளையவர்கள். 3 இவர்கள் ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கர்த்தருக்கு ஊழியம் செய்யும் பொறுப்பைப் பெற்றிருந்தனர். 4 ஆனால் நாதாபும் அபியூவும் தங்கள் பாவத்தின் காரணமாக, கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போதே, மரித்துப்போனார்கள். கர்த்தருக்குக் காணிக்கைப் பலி செலுத்தும்போது கர்த்தரால் அங்கீகரிக்கப்படாத நெருப்பை அவர்கள் பயன்படுத்தினர். எனவே, நாதாப்பும், அபியூவும் சீனாய் பாலைவனத்திலேயே மடிந்தார்கள். அவர்களுக்கு மகன்கள் இல்லை. எனவே, அவர்களின் இடத்தில் எலெயாசாரும், இத்தாமாரும் ஆசாரியர்களாக கர்த்தருக்கு ஊழியம் செய்தனர். அவர்களின் தந்தையான ஆரோன் உயிரோடு இருக்கும்போதே இது நிகழ்ந்தது.
ஆசாரியர்களின் உதவியாட்களான லேவியர்கள்
5 கர்த்தர் மோசேயிடம், 6 “லேவியர்களின் கோத்திரத்திலிருந்து அனைவரையும், ஆசாரியனாகிய ஆரோனிடம் அழைத்துக் கொண்டு வா. அவர்கள் ஆரோனின் உதவியாட்களாக இருப்பார்கள். 7 ஆசரிப்புக் கூடாரத்தில் ஆரோன் ஊழியம் செய்யும்போது, அவனுக்கு லேவியர்கள் உதவுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தக் கூடாரத்திற்கு தொழுதுகொள்ள வரும்போதும், லேவியர்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். 8 ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பது இஸ்ரவேல் ஜனங்களின் கடமையாகும். ஆனால் லேவியர்கள் இவற்றைச் சுமந்து இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சேவை செய்யவேண்டும். பரிசுத்தக் கூடாரத்தில் தொழுதுகொள்ள வேண்டிய முறை இதுவேயாகும்.
9 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் லேவியர்களை ஒப்படையுங்கள். அவர்கள் ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உதவி செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
10 “ஆரோனையும் அவனது மகன்களையும், ஆசாரியர்களாக ஊழியம் செய்ய நியமனம் செய். அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். இப்பரிசுத்தமான பொருட்களின் அருகில் வேறு எவராவது வர முயன்றால் அவர்கள் கொல்லப்பட வேண்டும்” என்றார்.
11 மேலும் கர்த்தர் மோசேயிடம், 12 “இஸ்ரவேல் ஜனங்களின் குடும்பம் ஒவ்வொன்றிலும் முதலில் பிறக்கும் மகனை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது எனக்கு ஊழியம் செய்வதற்காக லேவியர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவர்கள் எனக்குரியவர்களாக இருப்பார்கள்; எனவே இனி இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முதல் பிள்ளையை எனக்குக் கொடுக்க வேண்டாம். 13 நீங்கள் எகிப்தில் இருந்தபோது நான் எகிப்திலுள்ள முதலில் பிறந்த அனைத்தையும் கொன்றேன். அந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு முதல் குழந்தையையும் எனக்குரியதாக நான் எடுத்துக்கொண்டேன். முதலில் பிறந்த அனைத்து குழந்தைகளும், அனைத்து மிருகங்களும் எனக்குரியது. ஆனால் இப்போது உங்களுக்கு முதலில் பிறக்கும் குழந்தைகளை உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். லேவியர்களை எனக்குச் சொந்தமாக்கிக்கொண்டேன். நானே கர்த்தர்” என்றார்.
14 கர்த்தர் மீண்டும் சீனாய் பாலைவனத்தில் மோசேயோடு பேசி, 15 “லேவியின் எல்லாக் குடும்பங்களையும், கோத்திரங்களையும் ஒருமாத வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகளைக் கணக்கிடு” என்றார். 16 மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவர்களை கணக்கிட்டான்.
17 லேவிக்கு கெர்சோன், கோகாத், மெராரி என்று மூன்று மகன்கள் இருந்தனர்.
18 ஒவ்வொருவரும் பல கோத்திரங்களுக்குத் தலைவர்கள்.
கெர்சோன் கோத்திரத்தில் லிப்னீயும், சீமேயியும் இருந்தனர்.
19 கோகாத் கோத்திரத்தில் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் இருந்தனர்.
20 மெராரி கோத்திரத்தில் மகேலியும், மூசியும் இருந்தனர்.
இந்த அனைத்துக் குடும்பங்களும் லேவியின் கோத்திரத்தில் இருந்தனர்.
21 லிப்னீ, சீமேயி ஆகியோரின் குடும்பங்கள், கெர்சோனின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். 22 அவர்கள் இரு கோத்திரங்களிலும் ஆண்களும், ஒரு மாத வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளுமாக 7,500 பேர் இருந்தனர். 23 மேற்குப்பக்கத்தில் முகாமை அமைத்துக்கொள்ளுமாறு கெர்சோனியர் கோத்திரங்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தின் பின் பகுதியில் தங்கள் முகாமை அமைத்தனர். 24 லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன் கெர்சோனிய கோத்திரத்தினருக்கு தலைவன் ஆனான். 25 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலோடு பரிசுத்தக் கூடாரத்தையும், வெளிக் கூடாரத்தையும் அதன் மூடியையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கெர்சோனியருக்கு இருந்தது. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள தொங்கு திரையையும் இவர்களே கவனித்துக்கொண்டனர். 26 மேலும் பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பிரகாரத்தின் மூடு திரைகளையும் அவர்கள் கவனித்துக்கொண்டனர். பிரகாரமானது பரிசுத்தக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றியிருந்தது. திரைகளுக்குத் தேவையான கயிறு மற்றும் மற்ற பொருட்களுக்கும் அவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்தனர்.
27 அம்ராம், இத்சேயர் எப்ரோன், ஊசியேல் ஆகிய குடும்பங்கள் கோகாத்தின் கோத்திரத்தில் இருந்தன. 28 இக்கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேலான ஆண் குழந்தைகளுமாக 8,300 [d] பேர் இருந்தனர். கோகாத்தியர்கள் பரிசுத்தமான இடத்திலுள்ள பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வகித்தார்கள். 29 பரிசுத்தக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் கோகாத்தின் கோத்திரங்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர். 30 ஊசியேலின் மகனான எல்சாபான் கோகாத்தியரின் கோத்திரங்களுக்குத் தலைவன் ஆனான். 31 அவர்கள் பரிசுத்தப் பெட்டி, மேஜை, குத்து விளக்கு, பீடங்கள், பரிசுத்த இடத்தின் பொருட்கள், தொங்கு திரை, அங்குள்ள அனைத்து வேலைகளுக்கும் உரிய பொருட்களையும் காத்து வந்தனர்.
32 ஆரோனின் மகனாகிய ஆசாரியன் எலெயாசார் லேவியர்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தான். இவன் பரிசுத்தப் பொருட்களை காவல் காப்பவர்களுக்கெல்லாம் பொறுப்பாளியாய் இருந்தான்.
33-34 மகேலி, மூசி ஆகியோரின் கோத்திரங்கள் மெராரியின் குடும்பத்தோடு சேர்ந்தது. மகேலியின் கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் குழந்தைகளும் 6,200 பேர் இருந்தனர். 35 அபியாயேலின் மகனாகிய சூரியேல், மெராரி கோத்திரத்தின் தலைவனாய் இருந்தான். பரிசுத்தக் கூடாரத்தின் வடக்கு பக்கத்தில் இவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் அவர்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர். 36 மெராரி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசுத்தக் கூடாரத்தின் சட்டங்கள், பலகைகள், தாழ்ப்பாள், தூண்கள், பாதங்கள் மற்றும் அதற்குரிய பொருள்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. 37 பரிசுத்தக் கூடாரத்தின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள தூண்கள், பாதங்கள், முளைகள், கயிறுகள் அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொண்டனர்.
38 மோசே, ஆரோன், அவனது மகன்கள் எல்லோரும் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு எதிரில் பரிசுத்தக் கூடாரத்தின் கிழக்கில் முகாமிட்டனர். பரிசுத்த இடத்தை கவனிக்கும் பொறுப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் அவர்கள் இதனைச் செய்தனர். வேறு யாராவது பரிசுத்த இடத்தின் அருகில் வந்தால், அவர்கள் கொல்லப்பட்டனர்.
39 லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களையும், ஒரு மாதத்திற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளையும் கணக்கிடுமாறு கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டார். அவர்களின் மொத்த எண்ணிக்கை 22,000.
முதல் மகன்களின் இடத்தை லேவியர்கள் எடுத்துக்கொள்ளுதல்
40 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேலில் முதலில் பிறந்த எல்லா ஆண்களையும், குறைந்தது ஒரு மாதமாவது ஆன ஆண் குழந்தைகளையும் கணக்கிடு. அவர்களின் பெயரையும் எழுதி பட்டியலிடு. 41 கடந்த காலத்தில் நான், இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் ஆண் மக்களையெல்லாம் எனக்குரியவர்கள் என்று கூறியிருந்தேன். கர்த்தராகிய நான் இப்போது லேவியர்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் அனைத்து மிருகங்களையும் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, லேவியர்களுக்குரிய முதலில் பிறந்த மிருகங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன்” என்றார்.
42 எனவே மோசே, கர்த்தருடைய கட்டளைப்படி செய்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த குழந்தைகளைக் கணக்கெடுத்தான். 43 முதலாவதாக பிறந்த ஆண்களையும், ஒரு மாதமும் அதற்கு மேலுமுள்ள ஆண் குழந்தைகளையும், மோசே பட்டியலிட்டான். அதில் மொத்தம் 22,273 பெயர்கள் இருந்தன.
44 மேலும் கர்த்தர் மோசேயிடம், “கர்த்தராகிய நான் இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்: ‘இஸ்ரவேலில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலுமுள்ள முதலில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பதிலாக லேவியர்வம்சத்திலுள்ள முதலில் பிறக்கும் ஆண்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். 45 மற்ற இஸ்ரவேலில் முதலில் பிறந்த மிருகங்களுக்குப் பதிலாக லேவியர்களிடமுள்ள முதலில் பிறக்கும் மிருகங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். லேவியர்கள் எனக்கு உரியவர்கள். 46 மொத்தம் 22,000 லேவியர்கள் இருந்தனர். ஆனால் மற்ற குடும்பங்களில் 22,273 முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் இருந்தனர். லேவியர்களை விட, முதலில் பிறந்த ஆண் பிள்ளைகள் 273 பேர் மற்ற குடும்பங்களில் இருந்தனர். 47 அதிகாரப் பூர்வமான அளவை அடிப்படையாய் வைத்துக்கொண்டு, தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாக 273 பேர்களிடமிருந்தும் வாங்கு. (ஒரு சேக்கல் என்பது இருபது கேரா இருக்கும்.) 48 இஸ்ரவேல் ஜனங்களிடம் இருந்து வெள்ளியையும் வசூல் செய். இவற்றை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் கொடுப்பாயாக. இது 273 இஸ்ரவேல் ஜனங்களுக்கான சம்பளத் தொகையாகும்’” என்றார்.
49 மற்ற கோத்திரங்களில் இருந்து வந்த 273 பேர்களின் இடத்தை ஈடுசெய்ய போதுமான அளவில் லேவியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே மோசே அந்த 273 பேர்களுக்காக பணம் வசூல் செய்தான். 50 மோசே இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளிடமிருந்து வெள்ளியை வசூல் செய்தான். அதிகாரப் பூர்வமான அளவை வைத்துக்கொண்டு, அவன் 1,365 சேக்கல் வெள்ளியை வசூலித்தான். 51 மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான். வெள்ளியை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.
கோகாத் குடும்பத்தின் வேலைகள்
4 கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “கோகாத்தின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் மொத்த ஆண்களின் தொகையை எண்ணிக் கணக்கிடு. (கோகாத்தின் கோத்திரமானது லேவியர் கோத்திரத்தின் ஒரு பகுதியாகும்.) 3 30 வயது முதல் 50 வயது வரையுள்ள, படையில் பணியாற்றக்கூடிய ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்வார்கள். 4 ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மிகப் பரிசுத்தமானப் பொருட்களைக் கவனித்துக்கொள்வதே இவர்களின் வேலை.
5 “இஸ்ரவேல் ஜனங்கள் புதிய இடங்களுக்குப் பயணம் செய்யும்போது, ஆரோனும் அவனது மகன்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளேச் செல்லவேண்டும். அவர்கள் திரையை கீழே எடுத்து, அதனால் பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியை மூட வேண்டும். 6 அதன்மேல் அழகான தோலினாலான மூடியால் மூடவேண்டும். அதன் மேல் கெட்டியான நீலத்துணியை விரித்து, தண்டுகளை வளையத்தினுள் செலுத்தி, பரிசுத்தப்பெட்டியை மூட வேண்டும்.
7 “பிறகு ஒரு நீலத்துணியைப் பரிசுத்த மேஜையின்மேல் விரிக்க வேண்டும். அதன் மேல் தட்டுக்களை வைத்து, கரண்டி, கோப்பை, மற்றும் பானங்களின் காணிக்கைக்கான ஜாடியை வைக்க வேண்டும். அதோடு சிறப்பான அப்பத்தையும் அதன் மேல் வைக்க வேண்டும். 8 பின் அதன்மேல் சிவப்புத் துணியை வைத்து, அதனை மெல்லிய தோல் மூடியால் மூடவேண்டும். பிறகு மேஜை தண்டுகளையும் வளையத்தினுள் கட்டிவிட வேண்டும்.
9 “குத்து விளக்குத் தண்டையும் அதிலுள்ள அகல்களையும் நீலத் துணியால் மூட வேண்டும். விளக்கு எரிவதற்கு உதவுகின்ற அனைத்துப் பொருட்களையும், எண்ணெய் பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும். 10 பிறகு இவை அனைத்தையும் மெல்லிய தோலால் மூடிக்கட்டி, ஒரு தண்டோடு இணைக்க வேண்டும். இது இவற்றைத் தூக்கிச் செல்ல உதவியாக இருக்கும்.
11 “அவர்கள் தங்க பலிபீடத்தின் மேல் நீலத் துணியை மூடி, அதன் மேல் மெல்லிய தோலை மூடவேண்டும். அதில் தண்டுகளை வளையத்தோடு இணைத்துக் கட்ட வேண்டும்.
12 “பிறகு பரிசுத்த இடத்தில் தொழுதுகொள்வதற்குப் பயன்படும், அனைத்து சிறப்புப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். அவற்றை நீலத்துணியில் சுருட்ட வேண்டும். பிறகு அதனை மெல்லியத் தோலால் மூடிக்கட்டவேண்டும். இவற்றைத் தூக்கிச் செல்வதற்கு வசதியாக ஒரு தண்டோடு கட்டிக்கொள்ள வேண்டும்.
13 “வெண்கலத்தாலான பலீபீடத்தில் உள்ள சாம்பலை சுத்தப்படுத்த வேண்டும். பிறகு அதனை நீலத் துணியால் மூட வேண்டும். 14 பின் தொழுதுகொள்வதற்கான அனைத்துப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். நெருப்புத்தட்டு, குறடு, சாம்பல் எடுக்கும் கரண்டி, கலசங்கள் போன்றவைகளை அவர்கள் வெண்கலத்தாலான பலிபீடத்தின் மேல் வைக்க வேண்டும். பின் மெல்லியத் தோலால் பலிபீடத்தை மூடவேண்டும். இவற்றைத் தூக்கிச் செல்ல வசதியாக தண்டுகளை வளையங்களில் மாட்டிக்கொள்ளவேண்டும்.
15 “ஆரோனும் அவனது மகன்களும், பரிசுத்த இடத்திலுள்ள பரிசுத்தமான பொருட்களையெல்லாம் மூடிவைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோகாத் கோத்திரத்தில் உள்ளவர்கள், இவற்றைத் தூக்கிச் செல்ல வேண்டும். இம்முறையில் இவர்கள் மரிக்காதபடிக்கு பரிசுத்தமான இடத்தைத் தொடாதிருக்கக்கடவர்கள்.
16 “ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசார் பரிசுத்தக் கூடாரத்தின் பொறுப்புக்குரியவன். பரிசுத்த இடத்திற்கும், அதிலுள்ள பொருட்களுக்கும் அவனே பொறுப்பானவன். விளக்குக்குரிய எண்ணெய்க்கும், நறுமணப் பொருட்களுக்கும், தினந்தோறும் செலுத்தப்படும் பலிகளுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும் அவனே பொறுப்பானவன்” என்றார்.
17 மேலும் கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 18 “கவனமாக இருங்கள். கோகாத் கோத்திரம் அழிந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 19 அவர்கள் மகா பரிசுத்த இடத்தின் அருகில் செல்லும்போது மரிக்காமல் இருப்பதற்காக, நீங்கள் அவர்களுக்காக இவற்றைச் செய்யவேண்டும். ஆரோனும் அவனது மகன்களும் உள்ளே போய்க் கோகாத்தியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் அவனது வேலையும், அவன் சுமக்க வேண்டியவற்றையும் நியமிக்க வேண்டும். 20 நீங்கள் இவற்றைச் செய்யாவிட்டால் கோகாத்தியர்கள் உள்ளே போய் பரிசுத்த பொருட்களை ஒரு வேளை பார்த்துவிடலாம். அவ்வாறு ஒரு வினாடி பார்த்தாலும், அவர்கள் மரிக்க நேரிடும்” என்று கூறினார்.
கெர்சோன் குடும்பத்தாருக்குரிய வேலைகள்
21 கர்த்தர் மோசேயிடம், 22 “கெர்சோன் குடும்பத்தில் உள்ள அனைத்துԔ ஜனங்களையும் எண்ணிக் கணக்கிடு. அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்களாகவும் பட்டியலிடு. 23 படையில் பணியாற்றக் கூடிய 30 வயது முதல் 50 வயது வரையுள்ள ஆண்களையும் கணக்கிடுக. இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தைக் கவனிக்கும் வேலையுண்டு.
24 “இவைதான் கெர்சோன் வம்சத்தாரின் வேலைகள். அவர்கள் கீழ்க்கண்டவற்றைச் சுமக்க வேண்டும்: 25 பரிசுத்த கூடாரத்தின் திரைகளையும், அதோடு ஆசாரிப்புக் கூடாரத்தையும், அதன் மூடியையும், அவற்றைப் போர்த்தியுள்ள மெல்லியத் தோல் மூடியையும், ஆசாரிப்புக் கூடார வாசல் திரையையும் சுமந்து செல்ல வேண்டும். 26 அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பலிபீடத்தின் திரையையும், பிரகாரத்ததின் வாசல் திரையையும், அதோடு கயிறுகளையும், திரைக்குப் பயன்படும் மற்ற பொருட்களையும் சுமக்க வேண்டும். இவற்றுக்காகச் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கெர்சோனியர்கள் செய்யவேண்டும். 27 கெர்சோனியர்கள் சுமத்தல் மற்றும் மற்ற வேலைகளையும் செய்யும்போது ஆரோனும் அவனது மகன்களும் இவ்வேலைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சுமக்க வேண்டிய பொருட்களைப்பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 28 ஆசரிப்புக் கூடாரத்துக்காக கெர்சோனிய கோத்திரம் செய்ய வேண்டிய பணிகள் இவைதான். ஆசாரியனான ஆரோனின் மகனான இத்தாமார் இந்த வேலைகளுக்குப் பொறுப்பானவன்.
மெராரி குடும்பத்தின் வேலைகள்
29 “மெராரி கோத்திரத்தில் உள்ள எல்லாக் கோத்திரங்களையும், எண்ணிக் கணக்கெடுக்க வேண்டும். 30 படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்காக, ஒரு சிறப்பான பணியைச் செய்ய வேண்டும். 31 நீங்கள் பயணம் செய்யும்போது, ஆசரிப்புக் கூடாரத்திற்கான மரச் சட்டங்களை, இவர்களே சுமந்து செல்ல வேண்டும். அதோடு பாதங்களையும், தாழ்ப்பாள்களையும், தூண்களையும். 32 பிரகாரத் தூண்களையும் சுமக்க வேண்டும். பிரகாரத்திலுள்ள மற்ற பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான சகல கருவிகள் ஆகியவற்றையும் சுமக்க வேண்டும். அதோடு, அதைச் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அவர்களின் பெயரைப் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் அவர்கள் எதைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். 33 இவைதான் மெராரி வம்சத்தினர் ஆசரிப்புக் கூடாரத்திற்காகச் செய்ய வேண்டிய பணிகளாகும். ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமார் இதற்கான பொறுப்புடையவன்” என்றார்.
லேவியர் குடும்பங்கள்
34 கோகாத்தியர்களையும், மற்ற இஸ்ரவேல் தலைவர்களையும் மோசேயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்கள் வாரியாகவும் கணக்கிட்டனர். 35 படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் கணக்கிட்டனர். இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர்.
36 கோகாத்திய கோத்திரத்தில் 2,750 ஆண்கள் இவ்வேலையைச் செய்ய தகுதியுடையவர்களாக இருந்தனர். 37 எனவே, ஆசரிப்புக் கூடாரத்திற்க்கான சிறப்பு வேலைகளைச் செய்ய கோகாத்திய கோத்திரத்தினர் நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடியே, மோசேயும், ஆரோனும் இதனைச் செய்தனர்.
38 கெர்சோனிய கோத்திரத்தினரும் எண்ணி கணக்கிடப்பட்டனர். 39 படையில் பணியாற்றும் தகுதியுடைய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்கள் எண்ணப்பட்டனர். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். 40 கெர்சோன் கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 2,630 ஆண்கள் இருந்தனர். 41 எனவே, கெர்சோன் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, ஆசரிப்புக் கூடாரத்தின் சிறப்பு வேலைகள் கொடுக்கப்பட்டன. கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும், ஆரோனும் செய்து முடித்தனர்.
42 மெராரி குடும்பத்திலும், கோத்திரங்களிலும் உள்ள ஆண்கள் கணக்கிடப்பட்டனர். 43 அவர்களில் படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரும் எண்ணப்பட்டனர். அந்த ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர். 44 மெராரி கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 3,200 ஆண்கள் இருந்தனர். 45 எனவே, மெராரி கோத்திரத்தில் உள்ள இந்த ஆண்கள், இச்சிறப்பு வேலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும் ஆரோனும் செய்து முடித்தனர்.
46 எனவே மோசே, ஆரோன், இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் ஆகியோர் லேவியரின் கோத்திரத்தில் உள்ளவர்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பவாரியாகவும், கோத்திர வாரியாகவும் கணக்கிடப்பட்டனர். 47 படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தின், சிறப்பு வேலைகள் தரப்பட்டன. அவர்கள் தங்கள் பயணத்தின்போது, ஆசரிப்புக் கூடாரத்தைச் சுமக்கும் வேலையைச் செய்தனர். 48 அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,580. 49 எனவே, கர்த்தர் மோசேயிடம் சொன்னப்படி, ஒவ்வொரு ஆண்மகனும், கணக்கிடப்பட்டான். ஒவ்வொருவனுக்கும் அவன் செய்யவேண்டிய வேலை ஒதுக்கப்பட்டது. அவன் எதனைச் சுமந்து செல்லவேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. இவை யாவும் கர்த்தர் கட்டளையிட்டபடியே நடைபெற்றது.
சுத்தப்படுத்துவதைப் பற்றிய விதிமுறைகள்
5 கர்த்தர் மோசேயிடம், 2 “நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிடுவதாவது: அவர்கள் தங்கள் முகாம்களை நோய்கள் பரவாதபடி வைத்துக்கொள்ளவேண்டும். அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தொழுநோய் இருந்தால், அவனை முகாமை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாருக்காவது (இரத்தப் போக்கான) விலக்கு தீட்டு இருந்தால் அவர்களையும் அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாராவது பிணத்தைத் தொட்டு அதனால் தீட்டாகியிருந்தால் அவனையும் வெளியே அனுப்பி விடவேண்டும். 3 ஆணா, பெண்ணா என்பது பற்றிக் கவலைப்படாமல் அந்த நபரை வெளியேற்ற வேண்டும். அதனால் மற்றவர்களுக்கு அந்த நோயும், தீட்டும் ஏற்படாமல் இருக்கும். நானும் உங்கள் முகாமில் உங்களோடு வாழ்வேன்” என்றார்.
4 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் இத்தகையவர்களை முகாமைவிட்டு வெளியேற்றினர். கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தனர்.
தவறுக்குச் செலுத்தும் அபராதம்
5 கர்த்தர் மோசேயிடம், 6 “இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்திருந்தால் (ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்வது என்பது உண்மையில் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதாகும்) அவன் தண்டனைக்கு உரியவன். 7 எனவே அவன் தான் செய்த பாவத்தைப் பற்றி ஜனங்களிடம் சொல்ல வேண்டும். பின் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும். அதில் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்து பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கவேண்டும். 8 பாதிக்கப்பட்டவன் ஒருவேளை மரித்து போயிருந்தாலோ, அத்தொகையை ஏற்றுக்கொள்ள அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமலிருந்தாலோ, அவன் அத்தொகையை கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். அவன் அம்முழுத்தொகையையும் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசாரியன் அவனது பாவநிவிர்த்திக்காக ஆட்டுக் காடாவை பலியாகச் செலுத்த வேண்டும். அதனைப் பலியிடுவதன் மூலம் ஜனங்கள் செய்த பாவமானது நிவிர்த்தி செய்யப்படுகிறது. மீதி பணத்தை, ஆசாரியன் வைத்துக்கொள்ள வேண்டும்.
9 “இஸ்ரவேலனாக இருக்கும் ஒருவன் தேவனுக்கு இதுபோல் சிறப்பான அன்பளிப்புகளைச் செலுத்தினால் ஆசாரியன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது அவனுக்கு உரியது. 10 ஒருவன் இது போன்ற சிறப்பு காணிக்கைகளை கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் அவனுக்கு உரியதாகிவிடும்” என்று கூறினார்.
சந்தேகம்கொள்ளும் கணவர்கள்
11 கர்த்தர் மோசேயிடம், 12 “ஒருவனின் மனைவி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கலாம். 13 அவள் இன்னொருவனோடு பாலின உறவு வைத்துக்கொண்டு அதனைக் கணவனுக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம். அவள் தனது செயலில் பிடிபடாமல் அவளுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லாமல் இருக்கலாம். எனவே, அவள் செய்த பாவம் அவளது கணவனுக்குத் தெரியாமல் போய்விடலாம். அவளும் தன் கணவனுக்குத் தன் பாவம் பற்றி சொல்லாமல் இருக்கலாம். 14 ஆனால், அவளது கணவன் தனது மனைவி தனக்குத் துரோகம் செய்கிறாளோ என்று சந்தேகப்படலாம். அவள் தனக்கு உண்மையானவளாகவும், சுத்தமானவளாகவும் இல்லை என்று அவன் நினைக்கலாம். 15 இவ்வாறு நிகழ்ந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச் செல்லவேண்டும். அப்போது, அவன் காணிக்கையாக ஒரு எப்பா அளவான வாற் கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் அந்த வாற்கோதுமை மாவிலே எண்ணெயோ, நறுமணப் பொருளோ போடக்கூடாது. இது கர்த்தருக்குத் தானிய காணிக்கையாக இருக்கும். கணவன் சந்தேகம் அடைந்ததால் அதற்குப் பரிகாரமாக இப்பலி அமைகின்றது. தனது மனைவி தனக்கு உண்மையில்லாதவளாக இருந்தாள் என்று அவன் எண்ணியதை இப்பலி காட்டும்.
16 “ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்பு அழைத்துக்கொண்டு போய் அங்கே அவளை நிறுத்தி, 17 பிறகு ஆசாரியன் பரிசுத்த தண்ணீரை எடுத்து மண்ஜாடியில் ஊற்ற வேண்டும். பின் பரிசுத்தக் கூடாரத்தின் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து, அப்பாத்திரத்தில் போட வேண்டும். 18 ஆசாரியன் அவளை கர்த்தர் முன் நிற்குமாறு செய்து பிறகு அவளது கூந்தலை அவிழ்க்கச் சொல்லி, அவள் கையில் தானியக் காணிக்கையை வைக்க வேண்டும். இப்பலி, அவளது கணவனால் அவனது சந்தேகத்திற்காக கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கையாகும். அதே நேரத்தில் ஆசாரியன் தன் கையில் பரிசுத்த தண்ணீர் இருக்கும் மண் ஜாடியை வைத்திருக்க வேண்டும். அந்த பரிசுத்த தண்ணீர் அவள் பாவம் செய்திருந்தால் அவளுக்கு சாபத்தை உண்டாக்கும்.
19 “பிறகு, ஆசாரியன் அந்தப் பெண்ணிடம் அவள் பொய் சொல்லக்கூடாது என்றும், அவள் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றும் கட்டளையிட வேண்டும். ஆசாரியன் அவளிடம், ‘நீ இன்னொரு மனிதனோடு தொடர்பு வைக்காமல் இருந்திருந்தால், திருமணத்துக்கு பின் உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், சாபங்களைக் கொடுக்கும் இந்த தண்ணீரானது உனக்குத் தீங்கு செய்யாது. 20 ஆனால் நீ உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், உன் கணவன் அல்லாத ஒருவனுடன் நீ தொடர்பு வைத்திருந்தால், நீ தூய்மையானவளல்ல. 21 இது உண்மையென்றால், இந்த பரிசுத்தமான தண்ணீரை நீ குடிப்பதால் உனக்குத் துன்பங்கள் வரும். உனக்குக் குழந்தை பெறுகிற பாக்கியம் கிடைக்காமல்போகும். ஒருவேளை நீ இப்பொழுது கருவுற்றவளாக இருந்தால் அக்குழந்தை மரித்துப்போகும். பிறகு உன் ஜனங்கள் உன்னை விலக்கி வைத்து, உன் மீது குற்றங்களைச் சுமத்துவார்கள்’ என்று கூறவேண்டும்.
“பிறகு கர்த்தருக்கு முன்பு ஒரு விசேஷ உறுதியளிக்கும்படி அப்பெண்ணிடம் ஆசாரியன் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் அவளுக்குத் தீமைகள் ஏற்படும் என்பதை அவள் உணரச் செய்ய வேண்டும். 22 நீ கேடு உண்டாக்கக் கூடிய தண்ணீரைக் குடிக்க வேண்டும். நீ பாவம் செய்திருந்தால், ‘உனக்குக் குழந்தை ஏற்படாமல் போகும். நீ கருவுற்றிருந்தால் அது பிறக்குமுன் மரித்துப்போகும்’ என்று ஆசாரியன் அப்பெண்ணிடம் கூறவேண்டும். அதற்கு அவள், ‘நீர் சொல்கிறபடி நான் செய்வேன்’ என்று கூற வேண்டும்.
23 “இந்த எச்சரிக்கைகளையெல்லாம் ஒரு நீண்டத் தோல் சுருளில் ஆசாரியன் எழுதி வைக்க வேண்டும். அதனைப் பிறகு பரிசுத்தத் தண்ணீரால் சிறிது கழுவ வேண்டும். 24 பின்னர் கேடு தருகிற அந்தத் தண்ணீரை அவள் குடிக்க வேண்டும். அதைக் குடித்ததும், அவள் பாவம் செய்தவளாக இருந்தால் அத்தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தைத் தரும்.
25 “பிறகு ஆசாரியன் அவள் கையில் உள்ள தானியக் காணிக்கையை வாங்கி அதனை கர்த்தரின் சமூகத்தில் தூக்கிப் பிடிக்க வேண்டும். பின் அதனைப் பலிபீடத்தில் வைக்க வேண்டும். 26 ஆசாரியன் அத்தானியப் பலியைக் கை நிறைய அள்ளி பலிபீடத்தின் நெருப்பில் போட்டு எரிந்துவிட வேண்டும். அதற்குப் பிறகு ஆசாரியன் அவள் தண்ணீரைக் குடிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். 27 அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்தவளாக இருந்தால், அந்த தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தை அளிக்கும். அத்தண்ணீர் அவள் உடம்புக்குள் சென்று அவளுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அவள் கருவிலுள்ள எந்தக் குழந்தையும், அது பிறக்கு முன்னரே மரித்துப்போகும். அவள் என்றென்றும் குழந்தை பெற முடியாமல் இருப்பாள். அவள் அவளது ஜனங்களின் மத்தியில் சபிக்கப்பட்டவளாக இருப்பாள். 28 ஆனால் அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல், சுத்தமானவளாக இருந்தால், ஆசாரியன் அவளைக் குற்றமற்றவள் என்று கூறுவான். பின் அவள் சாதாரணமானவளாக குழந்தைகளைப் பெறுவாள்.
29 “இதுவே பொறாமை அல்லது சந்தேகம் பற்றிய சட்டமாகும். ஒருத்தி ஒருவனுக்குத் திருமணத்தின் மூலம் மனைவியான பிறகு, அவனுக்கு எதிராகப் பாவம் செய்தால், நீங்கள் இதையே செய்ய வேண்டும். 30 ஒரு கணவன் தன் மனைவி மீது பொறாமை கொண்டு அவளைச் சந்தேகப்பட்டாலும், அவன் இந்தப் பரிகாரத்தையே செய்ய வேண்டும். ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்னிலையில் நிற்கச் செய்து இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். இதுதான் சட்டம். 31 அவள் தவறினிமித்தம் அவள் கணவனுக்கு எதுவும் நேரிடாது. ஆனால் அந்தப் பெண்ணோ தன் பாவத்தினிமித்தம் துன்பப்படுவாள்” என்று கூறினார்.
நசரேயர்கள்
6 கர்த்தர் மோசேயிடம், 2 “இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிந்து வாழ வேண்டும் என்று விரும்பலாம். இந்த விரதகாலம் ஒருவன் தன்னையே முழுக்க கர்த்தருக்கு சில காலம் ஒப்படைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இத்தகையவனை ‘நசரேயன்’ என அழைப்பார்கள். 3 இக்காலக் கட்டத்தில், அவன் திராட்சைரசமோ, போதை தரும் வேறு பானமோ குடிக்கக் கூடாது. அவன் திராட்சைரசம் மற்றும் மதுபானத்தின் காடியையோ குடிக்கக் கூடாது. திராட்சைரசத்தால் செய்த எவ்வித பானத்தையோ திராட்சைப் பழங்களையோ, காய்ந்த திராட்சைகளையோ உண்ணாமல் இருக்க வேண்டும். 4 இந்த விரத காலத்தில் அவன் திராட்சைச் செடியின் எந்த உணவுப் பொருட்களையும், உண்ணக் கூடாது, அவன் திராட்சைப் பழத்தின் தோலையும் விதைகளையும் கூட உண்ணக்கூடாது.
5 “இந்த விரதகாலத்தில் அவன் தனது தலை முடியைக் கூட வெட்டிக் குறைத்துக்கொள்ளக் கூடாது. தனது விரத நாட்கள் முடியும் வரையில் அவன் பரிசுத்தமாக இருக்க வேண்டும். அவன் தன் தலைமுடியை வளரவிட வேண்டும். அவனது தலை முடியானது அவன் தேவனுக்குச் செய்த பொருத்தனையின் ஒரு பகுதியாகும். அவன் அந்த முடியை வெட்டாமலிருப்பது தேவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதின் அடையாளம். எனவே விரதகாலம் முடிகிறவரை தனது தலைமுடியை நீளமாக வளரவிட வேண்டும்.
6 “இவ்விரதக் காலத்தில் ஒரு நசரேயன் பிணத்தின் அருகில் செல்லக்கூடாது. ஏனென்றால் அவன் கர்த்தருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறான். 7 ஒரு வேளை அவனது தாயோ, தந்தையோ, அல்லது சகோதரனோ, சகோதரியோ கூட மரித்து போயிருக்கலாம். எனினும் அவன் அவர்களைத் தொடக் கூடாது. அது அவனைத் தீட்டு உள்ளவனாக ஆக்கும். அவன் தன்னைத் தனிப்பட்டவன் என்றும், தன்னை தேவனுக்கு முழுமையாகக் கொடுத்திருக்கிறான் என்பதையும் காட்ட வேண்டும். 8 விரதகாலம் முழுமைக்கும் அவன் தன்னை முழுவதுமாக கர்த்தரிடம் ஒப்படைக்கிறான். 9 நசரேய விரதம் கொள்பவன், இன்னொருவனோடு இருக்கும்போது, தீடீரென்று அந்த மற்றவன் மரித்துப் போனதாக வைத்துக்கொள்வோம். அவனையறியாமலேயே மரித்தவனைத் தொட்டிருப்பானேயானால், அவன் தீட்டுள்ளவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு நிகழ்ந்தால் அவன் தலைமுடியை முழுக்க மழித்துக்கொள்ள வேண்டும். (அந்தத் தலை முடியானது அவனது விசேஷ அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.) ஏழாவது நாள் தன் முடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அன்றைக்குத்தான் அவன் தீட்டு இல்லாதவனாகிறான். 10 எட்டாவது நாள், நசரேய விரதம் கொள்ளும் அவன், இரண்டு புறாக்களையும் இரண்டு புறாக் குஞ்சுகளையும் ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும். அவன் இவற்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 11 பிறகு ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகாரப் பலியாகவும் இன்னொன்றைத் தகன பலியாகவும் தரவேண்டும். இந்த தகனபலியானது நசரேய விரதத்தில் அவன் செய்த பாவத்திற்குரிய காணிக்கையாகும். (அவன் பிணத்தின் அருகில் இருந்ததால் பாவம் செய்தவனாகக் கருதப்படுகிறான்.) அந்த வேளையில், அவன் தன் தலைமுடியை மீண்டும் தேவனுக்கு தருவதாக வாக்களிக்க வேண்டும். 12 அவன் மீண்டும் ஒருமுறை கர்த்தருக்காகத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து தனியாக சில காலம் நசரேய விரதம் இருக்க வேண்டும். அவன் ஓராண்டான ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்து அதை குற்ற பரிகார பலியாகக் கொடுக்க வேண்டும். அவன் விரதம் இருந்த நாட்களெல்லாம் மறக்கப்படும். எனவே, அவன் புதிதாக விரதம் அனுசரிக்க வேண்டும். அவன் முதலில் விரதம் இருக்கும்போது, பிணத்தைத் தொட்டதினால் தீட்டானதே இதற்குக் காரணம்.
13 “அவனது விரதகாலம் முடிந்தபிறகு, ஒரு நசரேயன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் போக வேண்டும். 14 அவன் தனது காணிக்கையை கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். அவன்:
தகன பலிக்காக ஒரு வயதான, எவ்விதக் குறைபாடும் இல்லாத ஆட்டுக்குட்டியையும்;
பாவப்பரிகார பலிக்காக ஒரு வயதான, குறைபாடுகளற்ற ஒரு பெண் ஆட்டுக்குட்டியையும்,
சமாதான பலிக்காக குறைபாடுகளற்ற ஆட்டுக் கடாவையும்,
15 தானிய காணிக்கைக்காக கூடை நிறைய எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவில் செய்த அதிரசங்களையும்,
எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும் காணிக்கையாக செலுத்த வேண்டும்.
16 “இவை அனைத்தையும் கர்த்தருக்கு ஆசாரியன் கொடுக்கவேண்டும். பிறகு, அவன் பாவப் பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்த வேண்டும். 17 புளிப்பில்லாத அதிரசங்கள் நிறைந்த கூடையை கர்த்தருக்கு ஆசாரியன் கொடுக்க வேண்டும். சமாதான பலிக்காக அவன் ஆட்டுக் கடாவைக் கொல்ல வேண்டும். பிறகு அவன் தானிய காணிக்கையையும், பானங்களின் காணிக்கையையும் அளிக்க வேண்டும்.
18 “நசரேய விரதம் கொண்டவன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் செல்ல வேண்டும். அவன் அங்கே கர்த்தருக்காக வளர்த்த தலை முடியை மழித்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை சமாதானப் பலிக்குக் கீழ் நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும்.
19 “நசரேய விரதம் கொண்டவன், தன் தலை முடியை மழித்தபிறகு ஆசாரியன் வேகவைத்த ஆட்டுக்கடாவின் தோள்பாகத்தையும், கூடையில் உள்ள புளிப்பில்லாத அதிரசம் மற்றும் அடையையும் அவனுடைய உள்ளங்கையில் வைக்க வேண்டும். 20 பின்னர் ஆசாரியன் இவற்றை கர்த்தருக்கு முன் அசைவாட்டும் பலியாக ஏறெடுக்க வேண்டும். அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும் ஆசாரியனுக்கு உரியதாகும். ஆட்டுக் கடாவின் மார்க்கண்டத்தையும், தொடையையும் கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலி செய்வார்கள். அவைகளும் ஆசாரியனுக்கு உரியதாகும். அதற்குப் பிறகு நசரேய விரதம் கொண்டவன், திராட்சை ரசம் குடிக்கலாம்.
21 “நசரேய விரதம் கொள்ளும் ஒருவன், கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவையாகும். அவன் அனைத்து அன்பளிப்புகளையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவன் மிக அதிக அளவில் கர்த்தருக்கு அன்பளிப்பு தரும் வசதியைக் கொண்டிருக்கலாம். ஒருவன் அவ்வாறு மிகுதியாக அன்பளிப்பு கொடுப்பதாக வாக்குத்தந்தால் பிறகு அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அவன் குறைந்தபட்சமாக நசரேய விதிகளில் சொல்லியபடியாவது காணிக்கை செலுத்த வேண்டும்” என்றார்.
ஆசாரியனின் ஆசீர்வாதங்கள்
22 கர்த்தர் மோசேயிடம், 23 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும், சொல்ல வேண்டியதாவது: நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்போது,
24 “‘கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பாற்றுவாராக!
25 கர்த்தர் உன்னிடம் நல்லவராக இருந்து
அவர் உனக்குக் கருணை காட்டுவாராக!
26 உனது ஜெபங்களுக்கு கர்த்தர் பதில் தருவாராக!
அவர் உனக்குச் சமாதானத்தைத் தருவாராக!’ என்று சொல்லுங்கள்” என்றார்.
27 “இவ்வாறு ஆரோனும், அவனது மகன்களும் எனது நாமத்தைச் சொல்லி இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும். நானும் அவர்களை ஆசீர்வதிப்பேன்” என்று கூறினார்.
பரிசுத்தக் கூடாரத்தை அர்ப்பணித்தல்
7 மோசே பரிசுத்தக் கூடாரத்தை அமைத்து முடித்தான். அந்நாளிலேயே அதனை கர்த்தருக்கு அர்ப்பணித்தான். மோசே கூடாரத்தையும் அதிலுள்ள பொருட்களையும், பலிபீடத்தையும் அதற்குரிய அனைத்து பொருட்களையும் அபிஷேகம் செய்தான். இவையனைத்துப் பொருட்களும் கர்த்தரை தொழுதுகொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று இது காட்டியது.
2 பிறகு இஸ்ரவேலின் அனைத்து தலைவர்களும் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தினார்கள். இவர்கள் அவர்களது குடும்பத்தின் தலைவர்களும் கோத்திரங்களின் தலைவர்களும் ஆவார்கள். இவர்களே இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிடும் பொறுப்புடையவர்கள். 3 இத்தலைவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் மூடப்பட்ட ஆறு வண்டிகளையும் அதை இழுக்க பன்னிரெண்டு மாடுகளையும் கொண்டு வந்தனர். (ஒவ்வொரு தலைவர்களும் ஆளுக்கொரு மாட்டையும் இரு தலைவர்கள் சேர்ந்து ஒரு வண்டியையும் கொடுத்தனர்.) பரிசுத்தக் கூடாரத்தில் தலைவர்கள் இவற்றை கர்த்தருக்குக் கொடுத்தனர்.
4 கர்த்தர் மோசேயிடம், 5 “தலைவர்களிடமிருந்து இந்த அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள். ஆசாரிப்புக் கூடாரத்திற்கான வேலைகளுக்கு இக்காணிக்கைகள் உதவியாயிருக்கும்படி இவற்றை லேவியர்களிடம் கொடு” என்று கூறினார்.
6 எனவே, மோசே வண்டிகளையும், அவற்றை இழுத்து வந்த மாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை லேவியர்களிடம் கொடுத்தான். 7 அவன் அவற்றில் இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் குழுவினருக்குக் கொடுத்தான். அவர்களின் வேலைக்கு அந்த வண்டிகளும், மாடுகளும் தேவையாய் இருந்தன. 8 பிறகு நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் மெராரி குழுவினருக்குக் கொடுத்தான். அவர்களின் வேலைக்கு இந்த வண்டிகளும் மாடுகளும் தேவையாய் இருந்தன. ஆசாரியனான ஆரோனின் மகனான இத்தாமார் இவர்களின் வேலைக்கான பொறுப்பினை ஏற்றிருந்தான். 9 மோசே கோகாத் குழுவினருக்கு எந்த வண்டியையும், மாடுகளையும் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர்களின் வேலை, பரிசுத்தமான பொருட்களைத் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்வதாகும்.
10 மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்தான். அதே நாளில், தலைவர்கள் தங்கள் காணிக்கைகளை, அந்தப் பலிபீடத்தை அர்பணிப்பதற்காகக் கொண்டு வந்தனர், அவர்கள் தங்கள் காணிக்கைகளை கர்த்தருக்காகப் பலிபீடத்தின் மேல் வைத்தனர். 11 கர்த்தர் மோசேயிடம், “ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைவனும் தன் அன்பளிப்பைக் கொண்டு வந்து பலிபீடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.
12-83 பன்னிரெண்டு தலைவர்களில் ஒவ்வொரு வரும் தங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவை பின்வருமாறு:
ஒவ்வொரு தலைவனும் மூன்றேகால் பவுண்டு எடையுள்ள ஒவ்வொரு வெள்ளித் தட்டுக்களையும், ஒன்றே முக்கால் பவுண்டு எடையுள்ள ஒவ்வொரு வெள்ளிக் கோப்பைகளையும் கொண்டு வந்தனர். இவ்விரண்டு காணிக்கைகளும் அதிகாரப்பூர்வமான அளவால் நிறுக்கப்பட்டன. வட்டமான கிண்ணங்களும், தட்டுகளும் எண்ணெயில் கலக்கப்பட்ட மெல்லிய மாவால் நிரப்பப்பட்டு இருந்தன. இது தானியக் காணிக்கைக்குப் பயன்படுவதாக இருந்தது. ஒவ்வொரு தலைவனும் பெரிய தங்கக் கரண்டியையும் கொண்டு வந்தனர். அது 4 அவுன்ஸ் எடையுள்ளதாய் இருந்தது. இக்கரண்டி நறுமணப் பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தது.
ஒவ்வொரு தலைவனும் ஒரு இளம் காளையைக் கொண்டு வந்தனர். அதோடு ஒரு ஆட்டுக் கடா, ஒரு வயதான ஒரு ஆண் ஆட்டுக்குட்டி ஆகியவற்றையும் கொண்டு வந்தனர். இம்மிருகங்கள் தகன பலிக்கு உரியவை. ஒவ்வொரு தலைவனும் பாவ பரிகார பலிக்குரியதாக ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தனர். அதோடு அவர்கள் 2 பசுக்களையும் 5 ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான 5 வெள்ளாட்டுக் கடாக்களையும், 5 ஆண் ஆட்டுக் குட்டிகளையும் கொண்டு வந்தனர். இவை அனைத்தும் சமாதான பலிக்காகக் கொல்லப்பட்டன.
முதல் நாளில், யூதா கோத்திரத்தின் தலைவனான அம்மினதாபின் மகனான நகசோன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
இரண்டாம் நாளில், இசக்கார் குழுவின் தலைவனான சூவாரின் மகன் நெதனெயேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
மூன்றாம் நாளில், செபுலோன் கோத்திரத்தின் தலைவனான ஏலோனின் மகன் எலியாப் தன் அன்பளிப்புகளைச் கொண்டு வந்தான்.
நான்காம் நாளில், ரூபன் கோத்திரத்தின் தலைவனான சேதேயூரின் மகனான எலிசூர் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஐந்தாம் நாளில், சிமியோன் கோத்திரத்தின் தலைவனான சூரிஷதாயின் மகன் செலுமியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஆறாம் நாளில், காத் கோத்திரத்தின் தலைவனான தேகுவேலின் மகன் எலியாசாப் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஏழாம் நாளில், எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவனான அம்மியூதின் மகன் எலிஷாமா தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
எட்டாம் நாளில், மனாசே கோத்திரத்தின் தலைவனான பெதாசூரின் மகன் கமாலியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
ஒன்பதாம் நாளில், பென்யமீன் கோத்திரத்தின் தலைவனான கீதெயோனின் மகன் அபீதான் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
பத்தாம் நாளில், தாண் கோத்திரத்தின் தலைவனான அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
பதினோறாம் நாளில், ஆசேர் கோத்திரத்தின் தலைவனான ஓகிரானின் மகன் பாகியேல் தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
பன்னிரெண்டாம் நாளில், நப்தலி கோத்திரத்தின் தலைவனான ஏனானின் மகன் அகீரா தன் அன்பளிப்புகளைக் கொண்டு வந்தான்.
84 இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்களிடமிருந்து இவ்வாறு பல்வேறு அன்பளிப்புகள் வந்து சேர்ந்தன. அவர்கள் இவற்றை மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்து அர்ப்பணித்த நாட்களில் கொண்டு வந்தனர். அவர்கள் 12 வெள்ளிக் தட்டுகளையும், 12 வெள்ளிக் கோப்பைகளையும், 12 தங்கக் கரண்டிகளையும் கொண்டு வந்தனர். 85 ஒவ்வொரு வெள்ளித்தட்டும் முன்றே கால் பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக் கோப்பையும் ஒன்றே முக்கால் பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. ஆக மொத்தம் தட்டுகளும் கோப்பைகளும் சேர்ந்து 60 பவுண்டு அதிகாரப்பூர்வமான அளவு எடையுள்ள வெள்ளியாய் இருந்தது. 86 நறுமணப் பொருட்கள் நிறைந்த 12 தங்கக் கரண்டிகளும், ஒவ்வொன்றும் 4 அவுன்ஸ் உடையதாக இருந்தது. அந்த 12 தங்கக் கரண்டிகளும் சேர்ந்து 3 பவுண்டு அதிகாரப் பூர்வமான அளவு எடையுள்ளதாக இருந்தன.
87 ஆக மொத்தம் தகனபலிக்கான 12 காளைகளும் 12 ஆட்டுக்கடாக்களும், 12 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகளும் கொண்டு வரப்பட்டன. அவற்றோடு தானிய காணிக்கையும் கொடுக்கப்பட்டன. கர்த்தருக்கு பாவப்பரிகாரப் பலியாக 12 ஆண் வெள்ளாடுகளும் கொண்டு வரப்பட்டன. 88 சமாதானப் பலிக்குப் பயன்படுத்துவதற்காகத் தலைவர்கள் மிருகங்களைக் கொண்டு வந்தனர். அவற்றின் எண்ணிக்கையானது 24 காளைகள், 60 ஆட்டுக் கடாக்கள், 60 வெள்ளாட்டுக் கடாக்கள், 60 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகள் என இருந்தன. இவ்வாறு மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்த பிறகு, அவர்கள் அதனை அர்ப்பணம் செய்தனர்.
89 கர்த்தரோடு பேசுவதற்காக மோசே ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே சென்றான். அப்போது கர்த்தரின் குரல் அவனோடு பேசுவதைக் கேட்டான். அந்தக் குரலானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரு கேருபீன்களின் நடுவில் இருந்து உண்டாயிற்று. தேவன் மோசேயோடு பேசிய முறை இதுதான்.
விளக்குத் தண்டு
8 கர்த்தர் மோசேயிடம், 2 “நான் காட்டிய இடத்தில் ஏழு விளக்குகளையும் வைக்க வேண்டும் என்று ஆரோனிடம் சொல். ஏழு விளக்குகளும் விளக்குத் தண்டுக்கு நேரே எரிய வேண்டும்” என்று கூறினார்.
3 ஆரோன் அவ்வாறே விளக்குகளைச் சரியான இடத்தில் வைத்தான். விளக்குத் தண்டுக்கு எதிரேயுள்ள பகுதியில் ஒளி வீசுமாறு விளக்குகள் இருந்தன. கர்த்தர் மோசேக்கு இட்ட கட்டளைக்கு ஆரோன் கீழ்ப்படிந்தான். 4 விளக்குத் தண்டு கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது. இது அடித்த பொன்னால் செய்யப்பட்டது. அடிப்பாகம் முதல் உச்சிவரை பொன்னால் பூ வேலைகள் செய்யப்பட்டிருந்தது. மோசேயிடம் கர்த்தர் சொன்னபடியே விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.
லேவியர்களை அர்ப்பணித்தல்
5 கர்த்தர் மோசேயிடம், 6 “மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து லேவியர்களைப் பிரித்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக. 7 கீழ்க்கண்டவாறு அவர்களைச் சுத்தப்படுத்த வேண்டும். அவர்கள் மீது பாவப் பரிகாரத்திற்குரிய சிறப்பான தண்ணீரைத் தெளிக்க வேண்டும். பின் அவர்கள் உடல் முழுவதிலும் சவரம் பண்ணிக் கொண்டு ஆடைகளைச் சலவை செய்ய வேண்டும். இது அவர்களின் உடலைச் சுத்தமாக்கும்.
8 “லேவியர்களில் ஆண்கள் ஒரு இளங்காளையையும், தானியக் காணிக்கையையும் எடுத்து வரவேண்டும். அப்பலியானது எண்ணெயோடு கலக்கப்பட்ட மெல்லிய மாவாக இருக்கும். பின் இன்னொரு இளங்காளையைப் பாவப் பரிகார பலியாகக் கொண்டு வரவேண்டும். 9 லேவியர்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிரேயுள்ள இடத்தில் கூட்டவேண்டும். பின் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அங்கே கூட்டவேண்டும். 10 பின் லேவியரை கர்த்தருக்கு முன்னால் அழைத்து வாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்கள்மீது தம் கைகளை வைக்க வேண்டும். 11 பிறகு ஆரோன் லேவியர்களை கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டும். அவர்கள் தேவனுக்கு அளிக்கப்படும் காணிக்கையைப் போன்று இருப்பார்கள். இம்முறையில் லேவியர்கள் கர்த்தருக்குத் தாங்கள் செய்ய வேண்டிய சிறப்பு வேலைகளுக்காகத் தயாராயிருப்பார்கள்.
12 “தங்கள் கைகளை காளைகளின் தலை மீது வைக்குமாறு லேவியர்களுக்குக் கூறுங்கள். ஒரு காளை, கர்த்தருக்குரிய பாவப்பரிகார பலியாகும். இன்னொரு காளை, கர்த்தருக்குரிய தகன பலியாகும். இப்பலிகளினால் லேவியர்கள் சுத்தம் செய்யப்படுகின்றனர். 13 ஆரோன் மற்றும் அவனது மகன்களின் முன்னிலையில் நிற்குமாறு லேவியர்களிடம் கூறு. பிறகு லேவியர்களை கர்த்தருக்கு அர்ப்பணித்துவிடு அவர்கள் அசைவாட்டும் பலியைப் போன்றவர்கள். 14 இது லேவியர்களைப் பரிசுத்தமாக்கும். அவர்கள் தேவனுக்காக ஒரு சிறப்பான முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைக் காட்டும். இவர்கள் மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். லேவியர்கள் எனக்குரியவர்கள்.
2008 by World Bible Translation Center