Bible in 90 Days
30 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்கள் தந்தையின் குடும்பமே, எல்லா காலத்திலும் சேவை செய்யும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இப்போது கர்த்தர் சொல்கிறார், ‘அது அவ்வாறு நடக்காது! என்னை கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம்பண்ணுவேன். என்னை அசட்டை செய்பவர்களுக்கு தீமை ஏற்படும். 31 உனது சந்ததிகளையெல்லாம் அழிக்கின்ற காலம் வந்துவிட்டது. உன் குடும்பத்தில் உள்ள யாரும் முதிய வயதுவரை வாழமாட்டார்கள். 32 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நன்மைகள் ஏற்படும், ஆனால் உன் வீட்டில் மட்டும் தீமை ஏற்படுவதைக் காண்பாய். உன் குடும்பத்தில் யாரும் முதுமைவரை வாழமாட்டார்கள். 33 நான் ஒருவனை மாத்திரம் ஆசாரியனாக என் பலிபீடத்தில் சேவை செய்யப் பாதுகாப்பேன். அவன் முதுமைவரை வாழ்வான். அவன் கண்பார்வை போகு மட்டும், சக்தியெல்லாம் ஓயுமட்டும் வாழ்வான். உன் சந்ததிகள் எல்லோரும் வாளால் மரித்துப் போவார்கள். 34 இவைகள் உண்மையில் நிறைவேறும் என்பதற்கும் ஒரு அடையாளம் காட்டுவேன். உனது மகன்களான ஓப்னியும் பினெகாசம் ஒரே நாளில் மரித்து போவார்கள். 35 நான் எனக்காக ஒரு உண்மையுள்ள ஆசாரியனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வேன். அவன் எனக்குச் செவிகொடுத்து நான் சொல்லுகிறபடி செய்வான். நான் அந்த ஆசாரியனின் குடும்பத்தைப் பலமுள்ளதாகச் செய்வேன். அவன் அபிஷேகம் செய்யப்பட்ட எனது அரசரின் முன்னிலையில் எப்போதும் சேவை செய்வான். 36 பிறகு உன் குடும்பத்தில் மீதியான எல்லோரும் வந்து அந்த ஆசாரியன் முன்பு பணிந்து, வணங்கி நிற்பார்கள். அவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காகவும், சில்லறை காசுகளுக்காகவும் பிச்சை எடுப்பார்கள். அப்போது அவர்கள், ‘தயவு செய்து எனக்கு ஆசாரியன் வேலை தாரும். அதனால் நான் உண்ண உணவை பெறுவேன்’ என்று வேண்டுவார்கள்’” என்று கூறினான்.
தேவன் சாமுவேலை அழைக்கிறார்
3 சிறுவனான சாமுவேல், ஏலியின் கீழே கர்த்தருக்கு சேவை செய்து வந்தான். அந்த நாட்களில் கர்த்தர் ஜனங்களோடு நேரடியாக அடிக்கடி பேசுவதில்லை. அங்கே மிகக் குறைந்த தரிசனங்களே இருந்தன.
2 ஏலியின் கண்கள் பலவீனமாகி ஏறக்குறைய அவன் குருடாகிவிட்டான். ஒரு நாள் அவன் படுக்கையில் கிடந்தான். 3 சாமுவேல் தேவனுடைய பரிசுத்தப் பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் படுத்திருந்தான். கர்த்தருடைய விளக்கானது இன்னும் எரிந்துக்கொண்டிருந்தது. 4 கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான். 5 ஏலி தன்னை அழைப்பதாக சாமுவேல் நினைத்துக்கொண்டான். எனவே சாமுவேல் ஏலியின் அருகில் ஓடிச் சென்றான். “நான் இங்கே இருக்கிறேன். ஏன் என்னை அழைத்தீர்கள்” என்று கேட்டான்.
ஆனால் ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான்.
சாமுவேல் படுக்கைக்குத் திரும்பி போனான். 6 மீண்டும் கர்த்தர், “சாமுவேலே!” என்று கூப்பிட்டார். மீண்டும் சாமுவேல் ஏலியிடம் ஓடிப் போனான். அவனிடம், “நான் இங்கே இருக்கிறேன். என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டான்.
ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான்.
7 சாமுவேல் அதுவரை கர்த்தரைப்பற்றி அறியாமல் இருந்தான். கர்த்தர் அதுவரை அவனிடம் நேரடியாகப் பேசினதில்லை.
8 கர்த்தர் சாமுவேலை மூன்றாவது முறையாக அழைத்தார். மீண்டும் சாமுவேல் எழுந்து ஏலியிடம் ஓடிப்போனான். “நான் இங்கே இருக்கிறேன், என்னை ஏன் அழைத்தீர்கள்” என்றான்.
பின்னர் ஏலி, சாமுவேலை அழைத்தது கர்த்தர் என்பதை அறிந்துக் கொண்டான். 9 ஏலி சாமுவேலிடம், “படுக்கைக்குப் போ, அவர் உன்னை மீண்டும் அழைத்தால், ‘கர்த்தாவே, பேசும். நான் உமது தாசன். நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான்.
எனவே சாமுவேல் மீண்டும் படுக்கைக்குத் திரும்பிப்போனான். 10 கர்த்தர் வந்து அங்கே நின்றார். அவர் முன்பு போலவே செய்தார். அவர், “சாமுவேலே, சாமுவேலே!” என்று அழைத்தார்.
சாமுவேலோ, “கர்த்தாவே பேசும், நான் உமது தாசன், நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றான்.
11 கர்த்தர் சாமுவேலிடம், “நான் இஸ்ரவேலில் சில காரியங்களை விரைவில் செய்வேன். அதைப்பற்றி கேள்விப்படுகிற ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். 12 நான் ஏலிக்கும் அவன் குடும்பத்திற்கும் எதிராகச் செய்வேன் என்று சொன்னப்படியே ஒவ்வொன்றையும் தொடக்கம் முதல் இறுதிவரை செய்வேன். 13 நான் ஏலியிடம் அவனது குடும்பத்தை என்றென்றைக்கும் தண்டிக்கப் போவதாகக் கூறியிருக்கிறேன். அவன் மகன்கள் அவர்களாகவே சாபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் தேவனுக்கு விரோதமாகக் கெட்டவற்றைப் பேசியும் செய்தும் வந்தனர் என்பதை ஏலி அறிந்திருந்தும், ஏலி அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டான். 14 அதனால் தான் ஏலியின் குடும்பத்தார் செய்த பாவங்கள் ஒருபோதும், பலிகளாலோ, தானியக் காணிக்கையாலோ தீர்வதில்லை என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்” என்றார்.
15 விடியும்வரை சாமுவேல் படுக்கையிலேயே படுத்திருந்தான். அதிகாலையிலேயே எழுந்து கர்த்தருடைய ஆலய கதவைத் திறந்தான். ஏலியிடம் கர்த்தருடைய தரிசனத்தைப் பற்றிக் கூற சாமுவேல் பயந்தான்.
16 ஆனால் ஏலியோ சாமுவேலிடம், “என் மகனே சாமுவேல்!” என்று அழைத்தான். அதற்கு சாமுவேல், “ஐயா” என்றான்.
17 ஏலி அவனிடம், “கர்த்தர் உன்னிடம் என்ன சொன்னார்? அதனை என்னிடம் மறைக்கவேண்டாம். தேவன் உன்னிடம் சொன்னச் செய்தியை மறைத்தால் தேவன் உன்னைத் தண்டிப்பார்” என்றான்.
18 அதனால் சாமுவேல் ஏலியிடம் எல்லாவற்றையும் கூறினான். அவன் ஏலியிடம் எதையும் மறைத்து வைக்கவில்லை.
ஏலி, “அவர் கர்த்தர். அவருக்குச் சரியெனத் தோன்றுவதை அவர் செய்யட்டும்” என்றான்.
19 சாமுவேல் வளரும்போது கர்த்தர் அவனோடேயே இருந்தார். சாமுவேலின் எந்தச் செய்தியும் பொய்யாக நிரூபிக்க கர்த்தர் அனுமதிக்கவில்லை. 20 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் தாண் முதல் பெயெர்செபா வரைக்கும் சாமுவேல் உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரிசி என்றறிந்தார்கள். 21 சீலோவில் தொடர்ந்து கர்த்தர் சாமுவேலுக்கு தம்மை காண்பித்து வந்தார், மற்றும் அங்கே தம்முடைய வார்த்தையினாலேயே கர்த்தர் சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தி வந்தார்.
4 சாமுவேலைப் பற்றியச் செய்தி அனைத்து இஸ்ரவேலருக்கும் பரவியது. ஏலி முதியவனானான். அவனது மகன்கள் தொடர்ந்து கர்த்தருக்கு எதிராக தீய செயல்களைச் செய்து வந்தனர்.
பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை வெல்லுகின்றனர்
அந்த காலத்தில், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு எதிராகப் போர் செய்யப் போனார்கள். இஸ்ரவேலர் எபெனேசர் என்ற இடத்தில் முகாமிட்டனர். பெலிஸ்தர் தங்கள் முகாம்களை ஆப்பெக்கில் அமைத்தனர். 2 பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தாக்கும் பொருட்டுத் தயாரானார்கள். போர்த் துவங்கியது.
பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தனர். இஸ்ரவேல் சேனையில் உள்ள 4,000 வீரர்களைப் பெலிஸ்தர் கொன்றனர். 3 இஸ்ரவேல் வீரர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்பி வந்தனர். மூப்பர்கள், “கர்த்தர் ஏன் பெலிஸ்தர் நம்மைத் தோற்கடிக்கும்படிச் செய்தார்? சீலோவில் உள்ள நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம். அதன்படி தேவன் நம்மோடு கூட போர்க்களத்துக்கு வருவார். அவர் நம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார்” என்றனர்.
4 எனவே ஜனங்கள் சீலோவிற்குச் சிலரை அனுப்பினார்கள். அவர்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தனர். அப்பெட்டியின் மேல் கேருபீன்கள் இருந்தார்கள். அவை கர்த்தர் உட்காரும் சிங்காசனம் போல இருந்தது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் அப்பெட்டியோடு வந்தனர்.
5 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியானது முகாமுக்குள்ளே வந்ததும், இஸ்ரவேல் ஜனங்கள் பலமாகச் சத்தமிட்டனர். அச்சத்தம் பூமியையே அதிரச் செய்தது. 6 பெலிஸ்தர் இஸ்ரவேலர்களின் சத்தத்தைக் கேட்டு, “ஏன் இஸ்ரவேல் முகாமில் இவ்வாறு சத்தமிடுகிறார்கள்?” என்று கேட்டனர்.
பின்னர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி முகாமிற்கு கொண்டு வரப்பட்டதை அறிந்துக்கொண்டனர். 7 பெலிஸ்தர் அதனால் அஞ்சினர். அவர்களோ, “தேவன் அவர்களின் முகாமிற்கு வந்திருக்கிறார்கள். நாம் இக்கட்டில் இருக்கிறோம். இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை! 8 நாங்கள் கவலைப்படுகிறோம். வல்லமையான இந்தத் தெய்வங்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள்? இந்தத் தெய்வங்கள் ஏற்கெனவே எகிப்தியர்களுக்கு நோயையும் துன்பங்களையும் கொடுத்தவர்கள். 9 பெலிஸ்தியர்களே, தைரியமாக இருங்கள், ஆண்களைப்போன்றுப் போரிடுங்கள். முற்காலத்தில் இஸ்ரவேலர்கள் நமக்கு அடிமைகளாக இருந்தனர். நீங்கள் ஆண்களைப் போன்று சண்டையிடாவிட்டால் அவர்களுக்கு அடிமையாகிவிடுவீர்கள்!” என்றனர்.
10 எனவே பெலிஸ்தர்கள் கடுமையாகச் சண்டையிட்டு இஸ்ரவேலர்களைத் தோற்கடித்தனர். ஒவ்வொரு இஸ்ரவேல் வீரனும் தங்கள் முகாமிற்கு ஓடினார்கள். இது இஸ்ரவேலுக்குப் படுதோல்வியாயிருந்தது. 30,000 இஸ்ரவேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஓப்னியையும் பினெகாசையும் கொன்றுவிட்டனர். 12 அந்த நாளில் பென்யமீனின் கோத்திரத்திலிருந்து ஒருவன் போர்க்களத்திலிருந்து சீலோவிற்கு ஓடிப்போனான். அவன் தனது ஆடையைக் கிழித்தெறிந்தான். தலையின் மேல் புழுதியை அள்ளிப் போட்டுக்கொண்டான். இவ்வாறு அவன் தன் சோகத்தை வெளிகாட்டினான். 13 இந்த மனிதன் சீலோவிற்கு வந்தபொழுது ஏலி நகர வாசல்களுக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைப் பற்றி ஏலி கவலைப்பட்டு, கவனித்துக் காத்திருந்தான். பிறகு பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் சீலோவுக்கு வந்து அந்தக் கெட்டச் செய்தியைக் கூறினான். நகரிலிருந்த ஜனங்கள் அனைவரும் சத்தமாக அழத் துவங்கினார்கள். 14-15 ஏலி 98 வயதுடையவன். அவன் குருடன். என்ன நடக்கிறது என்பதை அவனால் காணமுடியவில்லை. ஆனால் அவனால் ஜனங்களின் உரத்த அழுகை சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஏலி, “ஏன் இவர்கள் இவ்வாறு சத்தமிடுகிறார்கள்?” என்று கேட்டான்.
பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஏலியிடம் ஓடிவந்து நடந்ததைக் கூறினான். 16 அவன், “நான் இப்போதுதான் போர்க்களத்திலிருந்து ஓடி வந்தேன்” என்றான்.
ஏலி அவனிடம், “மகனே! என்ன நடந்தது?” என்று கேட்டான்.
17 அதற்கு அவன், “பெலிஸ்தர்களிடமிருந்து இஸ்ரவேலர்கள் ஓடிப்போனார்கள். இஸ்ரவேல் படை ஏராளமான வீரர்களை இழந்துவிட்டது. உமது இரு மகன்களும் மரித்துப்போனார்கள். பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துக் கொண்டனர்” என்றான்.
18 பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்தவன் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைப்பற்றிச் சொன்னதும், ஏலி நாற்காலியிலிருந்து வாசல் பக்கமாய் மல்லாக்காய் விழுந்து தன் கழுத்தை முறித்துக்கொண்டான். அவன் வயதானவனாகவும் சரீரம் பருமனாகவும் இருந்ததால், மரித்துப்போனான். ஏலி இஸ்ரவேல் ஜனங்களை 20 ஆண்டுகள் வழிநடத்தினான்.
மகிமை போய்விட்டது
19 ஏலியின் மருமகளான பினெகாசின் மனைவி அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவள் குழந்தைப் பெறுவதற்குரியக் காலம் அது. தேவனுடைய பரிசுத்தப் பெட்டி பறிபோனதுப் பற்றி அவள் கேள்விப்பட்டாள். அதோடு அவள் தன் கணவனும் தன் மாமனாரும் மரித்துப்போனது பற்றியும் கேள்விப்பட்டாள். உடனே அவளுக்கு பிரசவ வலி ஆரம்பமாகிக் குழந்தையைப் பெற்றாள். 20 அவளது பிரசவத்திற்கு உதவிய பெண்ணோ, “கவலைப்படாதே! நீ ஒரு ஆண்மகனைப் பெற்றிருக்கிறாய்” என்றாள்.
ஆனால் ஏலியின் மருமகளோ அதைக் கவனிக்கவில்லை, எவ்வித பதிலும் சொல்லவில்லை. 21 அவள், அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்றுப் பெயரிட்டாள், அதற்கு பொருள் “இஸ்ரவேலரின் மகிமைப் போயிற்று!” என்பதாகும். தேவனுடைய பரிசுத்தப் பெட்டி பறிபோனது, கணவனும் மாமனாரும் மரித்துப் போனார்கள், எனவே அவள் இந்தப் பெயரை வைத்தாள். 22 அவள், “இஸ்ரவேலரின் மகிமைப் போயிற்று” ஏனென்றால் பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை பறித்துக் கொண்டனர் என்றாள்.
பரிசுத்தப் பெட்டியினால் பெலிஸ்தர்களுக்குத் தொல்லை
5 பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுப் போனார்கள். 2 பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்த பெட்டியை தாகோனின் கோவிலுக்குள் கொண்டுப் போய் தாகோனின் சிலைக்கு அருகில் வைத்தனர். 3 மறுநாள் காலை, அஸ்தோத் ஜனங்கள் எழுந்ததும் தாகோனின் சிலை முகம்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டனர். தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்னால் விழுந்துகிடந்தது.
அஸ்தோத் ஜனங்கள் தாகோனின் சிலையைப் பழைய இடத்தில் வைத்தனர். 4 ஆனால் மறுநாள் காலையில், மீண்டும் தாகோனின் சிலை முகம்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டனர்! கர்த்தருடைய பரிசுத்த பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை விழுந்துகிடந்தது. இந்தமுறை தாகோனின் தலையும், கைகளும் உடைந்து கோவில் வாசற்படியிலேகிடந்தன. தாகோனின் உடல் மாத்திரம் அப்படியே கிடந்தது. 5 அதனால்தான் இன்றும் கூட, தாகோனின் பூசாரிகளும், அஸ்தோத்தில் உள்ள தாகோனின் கோவிலுக்குள் நுழைகிற ஒருவனும் கோவில் வாசற்படியை மிதிப்பதில்லை.
6 அஸ்தோத்து ஜனங்களுக்கும், அவர்களது அக்கம் பக்கத்தினருக்கும் வாழ்க்கைச் சிரமமாகும்படி கர்த்தர் செய்தார். கர்த்தர் அவர்களுக்கு பல துன்பங்களைத் தந்தார். அவர்களை தோல் கட்டிகளினால் வாதித்தார். அவர்களுக்கு சுண்டெலிகளையும் அனுப்பினார். அவை அவர்களின் கப்பல்களுக்கும், நிலப்பகுதிகளுக்கும் பரவியது. நகர ஜனங்கள் அஞ்சினார்கள். 7 அஸ்தோத் ஜனங்கள் நடப்பதை எல்லாம் கண்டனர். அவர்கள், “இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியானது இங்கே இருக்கக் கூடாது! அவர் நம்மையும் நமது தெய்வமான தாகோனையும் தண்டித்திருக்கிறார்” என்றனர்.
8 அஸ்தோத் ஜனங்கள் பெலிஸ்தியரின் 5 ஆளுனர்களையும் வரவழைத்தனர். அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை நாம் என்னச் செய்யவேண்டும்?” என்று கேட்டனர்.
ஆளுனர்களோ, “இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை இங்கிருந்து காத் பட்டணத்திற்கு எடுத்துப்போக வேண்டும்” என்றனர். ஆகவே பெலிஸ்தர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர்.
9 ஆனால் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை காத் நகரம் வரைக்கும் பெலிஸ்தர்கள் எடுத்துச் சென்றதும், காத் நகரை கர்த்தர் தண்டித்தார். ஜனங்கள் மிகவும் கலக்கமுற்றனர். இளைஞர் முதியவர் என அனைவருக்கும் தேவன் தொல்லைகளை ஏற்படுத்தினார். தேவன் அங்குள்ளவர்களுக்கும் தோல் கட்டிகளை தந்தார். 10 எனவே, பெலிஸ்தியர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினர்.
ஆனால் அங்குள்ள ஜனங்கள் தேனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கண்டதும், முறையிட்டார்கள். “எங்களது எக்ரோன் நகரத்திற்கு இஸ்ரவேலருடைய தேவனின் பரிசுத்தப் பெட்டியை ஏன் கொண்டு வந்தீர்கள்? நீங்கள் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொல்ல விரும்புகிறீர்களா?” எனக் கேட்டனர். 11 எக்ரோன் ஜனங்கள் பெலிஸ்திய ஆளுனர்களைக் கூட்டி, “இஸ்ரவேலருடைய தேவனின் பெட்டி நம்மை கொன்றுப் போடுவதற்கு முன் இதனை அதன் பழைய இடத்திற்கே அனுப்பிவிடுவோம்!” என்றனர்.
எக்ரோன் ஜனங்கள் மிகவும் பயமடைந்தனர்! அங்குள்ள ஜனங்களை தேவன் மிகவும் கஷ்டப்படுத்தினார். 12 பலர் மரித்தனர். மரிக்காதவர்களுக்கு தோல் கட்டி இருந்தது. எக்ரோன் ஜனங்களின் கூக்குரல் பரலோகம்வரை எட்டியது.
தேவனுடைய பரிசுத்தப் பெட்டி திருப்பி அனுப்பப்படுகிறது
6 பெலிஸ்தர் தம் நாட்டில் பரிசுத்தப் பெட்டியை ஏழு மாதங்கள் வைத்திருந்தனர். 2 பெலிஸ்தர் தங்கள் பூசாரிகளையும், மந்திரவாதிகளையும் அழைத்து, “கர்த்தருடைய பெட்டியை என்னச் செய்யலாம்? பெட்டியை எவ்வாறு திருப்பி அனுப்பலாம்” என்று கேட்டனர்.
3 அதற்கு அவர்கள், “நீங்கள் இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைத் திருப்பி அனுப்புவதானால் வெறுமையாக அனுப்பவேண்டாம். அன்பளிப்போடு அனுப்புங்கள். அப்போது உங்கள் பாவங்களையும் இஸ்ரவேலின் தேவன் எடுத்துப் போடுவார். பின் நீங்களும் குணம் பெறுவீர்கள். நீங்களும் பரிசுத்தம் அடைவீர்கள். இதனைச் செய்தால் தேவன் உங்களைத் தண்டிப்பதையும் நிறுத்துவார்” என்றனர்.
4 பெலிஸ்தர்கள், “நம்மை மன்னிப்பதற்காக நாம் எத்தகைய காணிக்கைகளை இஸ்ரவேலரின் தேவனுக்குக் கொடுக்கவேண்டும்?” எனக்கேட்டனர்.
அதற்கு பூசாரிகளும், மந்திரவாதிகளும் பதில் சொன்னார்கள். “ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ஆளுநராக, 5 பெலிஸ்திய ஆளுநர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரேவிதமானப் பிரச்சனைதான். எனவே தங்கத்தால் 5 உருவங்களை தோல் கட்டியின் சாயலிலும், 5 சுண்டெலி சாயலிலும் செய்து அனுப்பவேண்டும். 5 எனவே, உங்களை அழித்துக்கொண்டிருக்கும் தோல்கட்டி மற்றும் எலியின் உருவங்களை செய்யுங்கள். அத்தங்க உருவங்களை இஸ்ரவேல் தேவனுக்குக் காணிக்கையாக்குங்கள். பின் இஸ்ரவேலின் தேவன், உங்களையும் உங்கள் தெய்வங்களையும், உங்கள் நாட்டையும் தண்டிப்பதை நிறுத்துவார். 6 எகிப்தியர்களையும் பார்வோனையும் போன்று கடினமனம் உடையவர்களாக இராதீர்கள். தேவன் எகிப்தியர்களைத் தண்டித்தார். எனவேதான் எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களை எகிப்தை விட்டுப் போகும்படி அனுமதித்தனர்.
7 “இப்போது நீங்கள் ஒரு புது வண்டியைச் செய்யவேண்டும். நுகம்பூட்டாத இரண்டு இளைய பசுக்களைப் பிடித்து வண்டியில் கட்டவேண்டும். அவற்றின் கன்றுக்குட்டிகளை அவற்றின் பின் போகவிடாமல் வீட்டில் கட்டவேண்டும். 8 கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அவ்வண்டியில் வைக்கவும். தங்க உருவங்களையும் சிலைகளையும் பெட்டியின் அருகில் பக்கத்தில் பையில் வைக்கவும். இவை உங்கள் பாவங்களை மன்னிக்கும் தேவனுக்கான அன்பளிப்புகளாகும். வண்டியை நேரான வழியில் போகவிடுங்கள். 9 வண்டியைக் கவனியுங்கள். அது நேராக இஸ்ரவேலரின் சொந்த இடமான பெத்ஷிமேசுக்குப் போனால், நமக்கு இந்த நோய்களைத் தந்தவர் கர்த்தர் தான் என அறியலாம். ஒருவேளை பெத்ஷிமேசுக்கு அப்பசுக்கள் நேராகச் செல்லவில்லை என்றால், இஸ்ரவேலரின் தேவன் நம்மைத் தண்டிக்கவில்லை, இந்த நோய் தற்செயலாக வந்தது என்று அறிந்துகொள்ளலாம்” என்றனர்.
10 பெலிஸ்தியர் பூசாரிகளும் மந்திரவாதிகளும் சொன்னபடிச் செய்தனர். அப்போது தான் கன்றுகளை ஈன்ற இரண்டு பசுக்களைக் கண்டார்கள். அந்த இரண்டு பசுக்களை வண்டியில் பூட்டி அதன் கன்று குட்டிகளை வீட்டுத் தொழுவில் கட்டினார்கள். 11 பின் பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை வண்டியில் வைத்தனர். தங்க உருவங்களால் செய்யப்பட்ட தோல்கட்டியையும், சுண்டெலிகளையும் அதன் பக்கத்தில் வைத்தனர். 12 பசுக்கள் நேராக பெத்ஷிமேசுக்குச் சென்றன. அவை நேராகச் சாலையில் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் சென்றன. பெலிஸ்தர்கள் தொடர்ந்து நகர எல்லைவரை பின் சென்றனர்.
13 பெத்ஷிமேசின் ஜனங்கள் தங்கள் கோதுமையை பள்ளத்தாக்கிலே அறுவடை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்தப் பெட்டியைக் கண்டனர். அவர்கள் பெட்டியை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ந்தனர். அதைப் பெற்றுக்கொள்ள ஓடினார்கள். 14-15 பெத்ஷிமேசில் யோசுவாவின் வயலுக்கு வண்டி வந்து பாறைக்கருகில் நின்றது. ஜனங்கள் வண்டி மரங்களைப் பிளந்தனர், பசுக்களைக் கொன்று கர்த்தருக்கு பலியாக செலுத்தினார்கள்.
லேவியர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். தங்க உருவங்கள் இருந்தப் பையையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அவற்றைப் பெரியப் பாறைமீது வைத்தனர். அந்த நாளில் பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருக்கு தகன பலிகளை அளித்தனர்.
16 ஐந்து பெலிஸ்திய அரசர்களும் பெத்ஷிமேசின் ஜனங்கள் செய்வதை எல்லாம் கவனித்தனர். அன்றே அவர்கள் எக்ரோனுக்குத் திரும்பினார்கள்.
17 இவ்வாறு பெலிஸ்தர் தோல் கட்டிகளின் தங்க உருவங்களை தம் பாவங்களுக்கு பரிகாரமாக கர்த்தருக்குக் கொடுத்தனர். ஒவ்வொரு பெலிஸ்திய நகரத்திற்கும் ஒரு உருவம் வீதம் கொடுத்தனர். அவை அஸ்தோத்து, அஸ்கலோன், காத், காசா, எக்ரோன் ஆகியவையாகும். 18 பெலிஸ்தர் சுண்டெலியின் தங்க உருவங்களையும் அனுப்பினார்கள். அவையும் நகர எண்ணிக்கையைப் போலவே இருந்தன. இந்நகரங்களைச் சுற்றிலும் சுவர்களும், நகரங்களைச் சுற்றிலும் கிராமங்களும் இருந்தன.
பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பாறையின் மேல் வைத்தனர். அப்பாறை இன்றும் யோசுவாவின் வயலில் உள்ளது.
19 ஆனால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பார்த்தபோது அங்கே ஆசாரியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே தேவன் பெத்ஷிமேசில் 70 பேரை கொன்றார். பெத்ஷிமேசில் உள்ள ஜனங்கள் இக்கொடுமையான தண்டனைக்காகக் கதறி அழுதனர். 20 அவர்கள் “பரிசுத்தப் பெட்டியைப் பராமரிக்கும் ஆசாரியன் எங்கே இருக்கிறான்? இங்கிருந்து அந்த பெட்டி எங்கே செல்லவேண்டும்?” என்றனர்.
21 கீரியாத்யாரீம் என்ற இடத்தில் ஒரு ஆசாரியன் இருந்தான். அங்குள்ள ஜனங்களுக்கு பெத்ஷிமேசின் ஜனங்கள் தூது அனுப்பினார்கள். தூதுவர்கள், “பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டனர். இதனை உங்கள் நகரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்றனர்.
7 கீரியாத்யாரீம் ஜனங்கள் வந்து கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். அவர்கள் அதனை பாறைமேல் இருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். கர்த்தருடைய பெட்டியைக் காக்க அபினதாபின் மகன் எலெயாசாருக்கு அவர்கள் சிறப்பான சடங்குகளைச் செய்தார்கள். 2 பெட்டி கீரியாத்யாரீமிலேயே 20 ஆண்டுகள் இருந்தது.
இஸ்ரவேலர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்
இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் கர்த்தரைப் பின்பற்ற தொடங்கினார்கள். 3 சாமுவேல் அவர்களிடம், “நீங்கள் உண்மையிலேயே கர்த்தரிடம் மனப்பூர்வமாக திரும்புவீர்கள் என்றால் உங்களிடம் உள்ள அந்நிய தெய்வங்களை தூர எறியுங்கள். அஸ்தரோத் விக்கிரகங்களைத் தூக்கி எறியுங்கள். நீங்கள் உங்களை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக் கொடுங்கள். நீங்கள் கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்! பின்னரே கர்த்தர் உங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுவார்” என்றான்.
4 எனவே இஸ்ரவேலர் தமது பாகால் மற்றும் அஸ்தரோத் சிலைகளைத் தூர எறிந்தனர். கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்தனர்.
5 சாமுவேல் “இஸ்ரவேலர் அனைவரும் மிஸ்பாவில் கூடுங்கள். நான் உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்” என்றான்.
6 இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடினார்கள். அவர்கள் தண்ணீரை கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றினார்கள். இவ்விதமாக உபவாசம் இருந்தனர். அன்றைய நாளில் எந்த வகை உணவும் உண்ணாமல், தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அதை அறிக்கையிட்டனர். “நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்” என்றனர், எனவே சாமுவேல் இஸ்ரவேலர்களின் நீதிபதியாக மிஸ்பாவில் இருந்தான்.
7 பெலிஸ்தர், இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடுகின்றதைப்பற்றி அறிந்துகொண்டனர். பெலிஸ்தியர்களின் அரசர்கள் இஸ்ரவேலருக்கு எதிராகப் போர் செய்யச் சென்றனர். இதையறிந்து இஸ்ரவேலர் பயந்தார்கள். 8 அவர்கள் சாமுவேலிடம், “எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்வதை நிறுத்தவேண்டாம்! எங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுமாறு கர்த்தரிடம் கேளுங்கள்!” என்றனர்.
9 சாமுவேல் ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதனை முழுமையாக கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியாகச் செலுத்தினான். சாமுவேல் இஸ்ரவேலர்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு பதில் சொன்னார். 10 சாமுவேல் தகனபலியைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுடன் போரிட வந்தனர். ஆனால் கர்த்தர் பெலிஸ்தியர்கள் பக்கம் பெரிய இடிமுழங்குமாறு செய்தார். இது பெலிஸ்தரைக் அச்சப்படுத்தியது, மேலும் குழப்பியது. தலைவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே இஸ்ரவேலர்கள் அவர்களைப் போரில் தோற்கடித்தனர். 11 இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களை பெத்கார் வரை துரத்தினார்கள். வழியெல்லாம் பெலிஸ்தர்களைக் கொன்றனர்.
இஸ்ரவேலுக்கு சமாதானம் திரும்புகிறது
12 இதற்குப்பின், சாமுவேல் ஒரு சிறப்பான கல்லை நிறுவினான். அது தேவனுடைய உதவியை ஜனங்கள் நினைவு கூரும்படி இருந்தது. இந்த கல் மிஸ்பாவிற்கும் சேணுக்கும் இடையில் இருந்தது. அதற்கு “எபெனேசர்” (உதவியின் கல்) என்று பேரிட்டான். “இந்த இடம் வரும்வரை கர்த்தர் நமக்கு உதவிச் செய்தார்” என்றான்.
13 பெலிஸ்தர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் இஸ்ரவேலுக்குள் நுழையவில்லை. சாமுவேலின் மீதியான வாழ்வு முடியுமட்டும் கர்த்தர் பெலிஸ்தியர்களுக்கு எதிராக இருந்தார். 14 பெலிஸ்தர் ஏற்கெனவே இஸ்ரவேலர்களிடம் இருந்து எக்ரோன் முதல் காத் வரை பல நகரங்களைக் கைப்பற்றி இருந்தனர். அவற்றை இஸ்ரவேலர் திரும்பப் பெற்றனர். அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டனர்.
இஸ்ரவேலர்களுக்கும் எமோரியருக்கும் இடையில் சமாதானம் நிலவியது.
15 சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலர்களை வழிநடத்திச் சென்றான். 16 இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்துக் கொண்டு சாமுவேல் இடம்விட்டு இடம் சென்றான். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுப்பயணம் செய்து, அவன் பெத்தேல், கில்கால், மிஸ்பா போன்ற இடங்களில் நியாயம் விசாரித்து வந்தான். 17 அவனது வீடு ராமாவில் இருந்தது. எனவே எப்போதும் அங்கேயே திரும்பி வருவான். இஸ்ரவேலர்களை அங்கிருந்தே ஆண்டு கொண்டும் நியாயம் விசாரித்தும் வந்தான். சாமுவேல் ராமாவில் கர்த்தருக்காக ஒரு பலிபீடம் கட்டினான்.
இஸ்ரவேலர் ஒரு அரசன் வேண்டும் என்று கேட்கிறார்கள்
8 சாமுவேல் முதுமையடைந்ததும், அவன் தன் ஜனங்களை நியாயம் விசாரிக்க ஏற்பாடு செய்தான். 2 அவனது மூத்த மகனின் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா, அவர்கள் பெயெர்செபாவில் நீதிபதிகளாக இருந்தனர். 3 ஆனால் சாமுவேல் வாழ்ந்த விதத்தில் அவனது மகன்கள் வாழவில்லை. அவர்கள் இரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றினார்கள். அவர்கள் ஜனங்களை நீதிமன்றத்திலே ஏமாற்றினார்கள். 4 எனவே இஸ்ரவேலின் மூப்பர்கள் கூடி, ராமாவிலே சாமுவேலை சந்திக்கும்படி சென்றனர். 5 மூப்பர்கள் சாமுவேலிடம், “உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்கள் மகன்கள் சத்தியத்தின் வழியில் வாழவில்லை அவர்கள் உங்களைப் போல் இல்லை. இப்போது, மற்ற நாடுகளைப் போன்று எங்களை ஆள்வதற்கு ஒரு அரசனைத் தாருங்கள்” என்று கேட்டனர்.
6 எனவே மூப்பர்கள் தங்களை வழி நடத்த ஒரு அரசனை வேண்டினார்கள். சாமுவேல் இதனை ஒரு கெட்ட திட்டம் என எண்ணினான். எனவே சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். 7 கர்த்தர் சாமுவேலிடம், “ஜனங்கள் சொன்னதைப்போல் செய்யவும், அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. என்னைத் தள்ளியுள்ளார்கள்! என்னை அவர்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை! 8 அவர்கள் எப்போதும் செய்தது போலவே தொடர்ந்து செய்கிறார்கள். நான் எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தேன். ஆனால் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களுக்குச் சேவை செய்தனர். அவர்கள் அதையே உனக்கும் செய்வார்கள். 9 எனவே அவர்கள் சொன்னதைக் கவனித்து அவர்கள் சொல்வதுபோல் செய்யவும். ஆனால் அவர்களை எச்சரிக்கவும். ஒரு அரசன் அவர்களுக்கு என்ன செய்வான் என்பதையும் கூறு! ஒரு அரசன் எவ்வாறு ஆள்வான் என்பதையும் கூறு” என்றார்.
10 அவர்கள் சாமுவேலிடம் ஒரு அரசன் வேண்டுமெனக் கேட்டிருந்தனர். எனவே சாமுவேல் கர்த்தர் சொன்னவற்றை அவர்களிடம் சொன்னான். 11 அவன் சொன்னது. “உங்களை ஆள்வதற்கு ஒரு அரசன் வந்தால், அவன் செய்வது இதுதான்: அவன் உங்களின் மகன்களை எடுத்துக்கொள்வான். அவர்களைத் தனக்கு சேவை செய்யுமாறு பலவந்தப்படுத்துவான். அவர்களை வீரர்கள் ஆகுமாறு கட்டாயப்படுத்துவான். அவர்கள் அவனது தேரிலிருந்து சண்டையிட வேண்டும். அவனது படையில் குதிரை வீரர்களாக வேண்டும். அவர்கள் காவல்காரர்களாகி அரசனின் இரதத்துக்கு முன்னால் செல்லவேண்டும்.
12 “அரசன் உங்கள் பிள்ளைகளை வீரர்களாகுமாறு வற்புறுத்துவான். சிலர் 1,000 பேருக்கான அதிகாரிகளாகவும், இன்னும் சிலர் 50 பேருக்கான அதிகாரிகளாகவும் ஆவார்கள்.
“அரசன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி தம் வயல்களை உழவும், அறுவடை செய்யவும் ஈடுபடுத்துவான். அவன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி போருக்கான ஆயுதங்களைச் செய்யச் சொல்வான்! அவர்களது தேருக்கான பொருட்களைச் செய்யுமாறு பலவந்தப்படுத்துவான்!
13 “அரசன் உங்கள் பெண் பிள்ளைகளை எடுத்துக்கொள்வான். தனக்கான வாசனைப் பொருட்களைச் செய்யச் சொல்வான். அவர்களில் சிலரை அவனுக்காக சமைக்கவும், பலகாரம் சுடவும் பலவந்தப்படுத்துவான்.
14 “அரசன் உங்கள் செழிப்பான வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எடுத்துக் கொள்வான். தன் அதிகாரிகளுக்கு அவற்றைக் கொடுப்பான். 15 உங்கள் தானியங்களிலும் திராட்சையிலும் பத்தில் ஒரு பாகத்தை எடுத்துக் கொள்வான். அவற்றைத் தன் அதிகாரிகளுக்குக் கொடுப்பான்.
16 “அரசன் உங்களிலிருந்து வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், தேர்ந்த வாலிபர்களையும் எடுத்துக் கொள்வான். அவன் உங்கள் கழுதைகளையும் எடுத்து தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்வான். 17 உங்கள் மந்தையில் பத்தில் ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான்.
“நீங்களோ அரசர்களுக்கு அடிமையாவீர்கள், 18 காலம் வரும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அரசனால் கதறி அழுவீர்கள். அப்போது கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்லமாட்டார்” என்றான்.
19 ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு செவி கொடுக்கவில்லை. அவர்கள், “இல்லை! எங்களை ஆள ஒரு அரசன் வேண்டுமென விரும்புகிறோம். 20 அப்போது நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், அரசன் எங்களை வழிநடத்துவான். எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்றனர்.
21 சாமுவேல் ஜனங்கள் சொன்னதைக் கேட்டு கர்த்தரிடம் அவர்கள் வார்த்தைகளைத் திருப்பிச் சொன்னான். 22 கர்த்தரோ, “அவர்கள் சொல்வதைக் கேள்! ஒரு அரசனை ஏற்படுத்து” என்றார்.
பிறகு சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களிடம், “நல்லது! நீங்கள் புதிய அரசனை அடைவீர்கள். இப்போது, நீங்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றான்.
சவுல் தன் தந்தையின் கழுதைகளைத் தேடுகிறான்
9 பென்யமீன் கோத்திரத்தில் கீஸ் முக்கியமானவனாக இருந்தான். இவன் அபியேலின் மகன். அபியேல் சேரோரின் மகன், சேரோர் பெகோராத்தின் மகன், பெகோரோத் பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்த அப்பியாவின் மகன். 2 கீஸுக்கு சவுல் என்ற மகன் இருந்தான். இவன் அழகான இளைஞன். இவனைப்போல் அழகுள்ளவன் யாரும் இல்லை. இஸ்ரவேலில் எல்லோரும் இவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரம் இருந்தான்.
3 ஒரு நாள் கீஸின் கழுதைகள் தொலைந்துப் போயின. எனவே அவன் தன் மகன் சவுலிடம், “ஒரு வேலைக்காரனை அழைத்துப்போய் கழுதைகளைத் தேடு” என்றான். 4 சவுல் கழுதைகளைத் தேடிப் போனான். அவன் எப்பிராயீம் மலைச்சரிவுகளிலும் சலிஷா பகுதிகளிலும் தேடினான். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே சாலீம் நாட்டுப் பக்கம் போனார்கள். அங்கேயும் இல்லை. பிறகு பென்யமீன் நாட்டுப் பக்கத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
5 இறுதியாக, சவுலும் வேலைக்காரனும் சூப் நாட்டிற்கு வந்தனர். சவுல் தன் வேலைக்காரனிடம், “நாம் திரும்பிப் போகலாம். என் தந்தை இப்பொழுது கழுதைகளை விட்டு நம்மைப்பற்றி கவலைப்பட ஆரம்பித்திருப்பார்” என்றான்.
6 ஆனால் வேலைக்காரனோ, “ஒரு தேவமனிதன் இங்கே இருக்கிறார். ஜனங்கள் அவரை மதிக்கின்றனர். அவர் சொல்வதெல்லாம் உண்மையாகிறது. எனவே, நாம் நகரத்திற்குள் போவோம். நாம் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தைப்பற்றி தேவமனிதன் கூறக்கூடும்” என்றான்.
7 சவுல் தன் வேலைக்காரனிடம், “உறுதியாக, நாம் நகருக்குள் போவோம், ஆனால் அவருக்கு எதைக் கொடுப்பது? தேவமனிதனுக்கு கொடுக்க அன்பளிப்புகள் எதுவுமில்லை. நம்மிடம் உணவு கூட இல்லையே?” என்றான்.
8 மீண்டும் அந்த வேலைக்காரன், “பாருங்கள், என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. இதனைத் தேவமனிதனுக்கு கொடுப்போம். பிறகு நாம் அடுத்துப் போக வேண்டிய இடத்தைப்பற்றி அவர் சொல்வார்” என்றான்.
9-11 சவுல் தனது வேலைக்காரனிடம், “நல்ல யோசனை! நாம் போவோம்!” என்றான். எனவே, தேவமனிதன் தங்கி இருந்த நகருக்கு அவர்கள் சென்றார்கள்.
சவுலும், வேலைக்காரனும் நகரை நோக்கி மலை மீது ஏறிக்கொண்டிருந்தனர். சாலையில் அவர்கள் சில இளம் பெண்களை சந்தித்தார்கள். அந்த இளம் பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து கொண்டிருத்தார்கள். சவுலும், வேலைக்காரனும் அந்த இளம் பெண்களிடம், “சீயர் இங்குதான் இருக்கிறாரா?” என்ற கேட்டார்கள், (முற்காலத்தில், இஸ்ரவேலில் இருந்த ஜனங்கள் தீர்க்கதரிசியை, “சீயர்” என்று அழைத்தார்கள். எனவே, அவர்கள் தேவனிடம் ஏதேனும் கேட்க வேண்டியிருந்தால், “நாம் சீயரிடம் போகலாமா?” என்பார்கள்.)
12 அந்த இளம் பெண்கள், “ஆம், சீயர் இங்குதான் இருக்கிறார். அவர் சாலையில் சற்று தூரத்தில் தங்கி இருக்கிறார். அவர் இன்றுதான் ஊருக்கு வந்தார். சமாதான பலிகளைச் செலுத்துவதற்காக இன்று சிலர் அவரை ஆராதனை இடத்தில் சந்திக்கிறார்கள். 13 ஊருக்குள் நீங்கள் விரைவாகச் சென்றால், ஆராதனை செய்யுமிடத்தில் அவர் உண்ணப்போகும் முன் அவரைச் சந்தித்துவிடலாம். அத்தீர்க்கதரிசி பலியை ஆசீர்வதிப்பார். எனவே அவர் அங்கு சேரும் முன்பு ஜனங்கள் உண்ணத் தொடங்கமாட்டார்கள். எனவே, நீங்கள் கொஞ்சம் விரைவாகச் சென்றால் அத்தீர்க்கதரிசியை சந்திக்க முடியும்” என்றார்கள்.
14 சவுலும் அவனது வேலைக்காரனும் நகரை நோக்கி மலையில் ஏறத்தொடங்கினார்கள். நகருக்குள் நுழையும் சமயத்தில், சாமுவேல் அவர்களை நோக்கி வந்தான். அப்பொழுதுதான் சாமுவேல் ஆராதனை இடத்திற்கு போக நகரை விட்டு வெளியே வந்துக்கொண்டிருந்தான்.
15 சவுல் வருவதற்கு ஒருநாள் முன்பு, கர்த்தர் சாமுவேலிடம், 16 “நாளை இந்நேரத்தில் உன்னிடம் ஒருவனை அனுப்புவேன். அவன் பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவன். அவனை இஸ்ரவேல் ஜனங்களின் புதிய தலைவனாக நீ அபிஷேகம் செய். அவன் பெலிஸ்தர்களிடமிருந்து என் ஜனங்களைக் காப்பாற்றுவான். நான் என்னுடைய ஜனங்களின் துன்பத்தைப் பார்த்திருக்கிறேன். அழுகையைக் கேட்டிருக்கிறேன்.” என்றார்.
17 சாமுவேல் சவுலைப் பார்த்தான். அப்போது கர்த்தர், “நான் சொன்னது இவனைப் பற்றித்தான். இவனே எனது ஜனங்களை ஆள்வான்” என்றார்.
18 சவுல் வழி கேட்பதற்காகக் கதவண்டை நின்றிருந்து சாமுவேலை நெருங்கி, “தயவு செய்து சீயரின் வீடு எங்கே இருக்கிறதென்று சொல்லுங்கள்?” என்று கேட்டான்.
19 அதற்கு சாமுவேல், “நானே சீயர், நீ எனக்கு முன்பாக ஆராதனை இடத்திற்கு மேடையின்மேல் ஏறிப்போ! இன்று என்னோடு சேர்ந்து நீயும் உனது வேலைக்காரனும் சாப்பிடுங்கள். நான் உங்களை நாளைக் காலையில்தான் போகவிடுவேன். உனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வேன். 20 மூன்று நாட்களுக்கு முன்னால் இழந்த கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அவைக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அனைத்து இஸ்ரவேலரும் உன்னை விரும்புகின்றனர்! அவர்கள் உன்னையும் உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் விரும்புகின்றனர்” என்றான்.
21 அதற்கு சவுல், “ஆனால் நான் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இதுதான் இஸ்ரவேலில் மிகவும் சிறிய கோத்திரம், இதில் எனது குடும்பந்தான் பென்யமீன் கோத்திரத்திரலே மிகவும் சிறியது. இவ்வாறிருக்க இஸ்ரவேல் என்னை விரும்புவதாக எப்படி சொல்கிறீர்?” என்று கேட்டான்.
22 பிறகு சாமுவேல், சவுலையும் அவனது வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டு உணவு சாப்பிடும் பகுதிக்குப் போனான். ஏறக்குறைய 30 பேர் சேர்ந்து உணவு உண்ணவும் பலியை பங்கிட்டுக்கொள்ளவும் அழைக்கப்பட்டிருந்தனர். சாமுவேல், சவுலுக்கும் அவனது வேலைக்காரனுக்கும் மேஜையில் மிக முக்கியமான இடத்தைக் கொடுத்தான். 23 சாமுவேல் சமையற்காரனிடம், “நான் எடுத்து வைக்கச் சொன்ன இறைச்சியின் ஒரு பகுதியைப் பரிமாறு” என்றான்.
24 சமையற்காரன் தொடைக்கறியைக் கொண்டு வந்து மேஜையில் சவுலின் முன்னால் வைத்தான். சாமுவேல் “உனக்கு முன்பாக இருக்கும் இறைச்சியைச் சாப்பிடு, இந்தச் சிறப்பான நேரத்தில் ஜனங்கள் கூடியிருந்தாலும் இது உனக்காக பாதுகாத்து வைக்கப்பட்டது” என்றான். எனவே சவுல் அன்று சாமுவேலோடு சேர்ந்து அதனைச் சாப்பிட்டான்.
25 அவர்கள் உண்டு குடித்ததும் ஆராதனை இடத்திலிருந்து கீழே இறங்கி மீண்டும் நகரத்திற்குள் சென்றார்கள். சாமுவேல் சவுலுக்காக ஒரு படுக்கையை மேல் வீட்டில் அமைத்தான். 26 சவுல் அதில் உறங்கினான்.
மறுநாள், அதிகாலையில் சவுலை மேல் வீட்டிற்கு அழைத்தான். “எழு, நான் உன்னை உன் வழியிலே அனுப்புவேன்” என்றான். அவனும் தயார் ஆகி சாமுவேலோடு வீட்டைவிட்டு வெளியேறினான்.
27 சவுலும் வேலைக்காரனும் சாமுவேலோடு ஊரின் எல்லைக்கு சென்றனர். சாமுவேல் சவுலிடம் “உனது வேலைக்காரனை நமக்கு முன்னே போகச் சொல். நான் உனக்காக தேவனிடமிருந்து ஒரு செய்தியை வைத்திருக்கிறேன்” என்றான். வேலைக்காரனும் முன் நடந்தான்.
சாமுவேல் சவுலை அபிஷேகம் செய்கிறான்
10 சாமுவேல் சிறப்புக்குரிய எண்ணெய் இருக்கும் ஜாடியை எடுத்தான். அதனைச் சவுலின் தலையில் ஊற்றி, முத்தமிட்டுச் சொன்னான், “கர்த்தர் உன்னை இஸ்ரவேல் ஜனங்களின் தலைவனாக அபிஷேகித்திருக்கிறார். கர்த்தருடைய ஜனங்களை நீ கட்டுப்படுத்துவாய். அவர்களைச் சுற்றியுள்ள எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவாய். கர்த்தர் உன்னை அவருடைய ஜனங்களின் மேல் அரசனாக்கியுள்ளார். இது உண்மை என்பதை நிரூபிக்க ஒரு அடையாளம் உள்ளது. 2 இன்று நீ என்னை விட்டுப் போனதும் பென்யமீன் எல்லையில் செல்சாவில் ராகேலின் கல்லறை அருகில் இருவரைக் காண்பாய். அவர்கள் உன்னிடம், ‘நீ தேடிப் போன கழுதைகள் கிடைத்தன. உன் தந்தை கழுதைகளைப்பற்றிய கவலைகளை விட்டுவிட்டார். இப்போது அவர் உன்னைப் பற்றி கவலைப்படுகிறார். அவர், என் மகனுக்காக என்ன செய்வேன்?’ என்கிறார் என்பார்கள்” என்றான்.
3 மேலும் சாமுவேல் “பின்பு தாபோரிலுள்ள பெரிய சிந்தூர மரத்தடிவரை போவாய், அங்கே மூன்று பேர் உண்னை சந்திப்பார்கள். அவர்கள் பெத்தேலுக்கு தேவனை தொழுதுகொள்ளச் செல்பவர்கள். அவர்களில் ஒருவன் மூன்று வெள்ளாட்டுக் குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், மூன்றாமவன் ஒரு புட்டி திராட்சை ரசத்தையும் வைத்திருப்பார்கள். 4 அவர்கள் உனது நலனை விசாரிப்பார்கள். அவர்கள் இரண்டு அப்பங்களைத் தருவார்கள். நீ அவர்களிடம் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 5 பிறகு நீ கிபியாத் எலோகிமுக்குப் போவாய். அங்கே பெலிஸ்தரின் கோட்டை உண்டு. நீ நகரத்துக்குள் போகும்போது தீர்க்கதரிசிகளின் கூட்டம் ஒன்று வெளியே வரும். அவர்கள் ஆராதனை ஸ்தலத்திலிருந்து வருவார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். அவர்கள் சுரமண்டலமும், தம்புரும், புல்லாங்குழலும், இரட்டை வால் யாழும் இசைப்பார்கள். 6 அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு உன் மீது இறங்குவார். நீயும் அவர்களோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனிதன் ஆவாய். 7 இவை ஆனதும், தேவன் உன்னோடு இருப்பதால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி செய்ய ஆரம்பி.
8 “நீ எனக்கு முன்னால் கில்காலுக்கு இறங்கிப்போ. நான் பிறகு அங்கு வருவேன். நான் சர்வாங்க தகன பலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்துவேன். ஆனால் நீ 7 நாட்கள் காத்திருக்க வேண்டும். பிறகு நீ செய்ய வேண்டியவற்றைப்பற்றி நான் சொல்வேன்” என்றார்.
சவுல் தீர்க்கதரிசிகளைப் போல் ஆகிறான்
9 சவுல் சாமுவேலை விட்டு போனபோது, தேவன் சவுலின் வாழ்க்கையை மாற்றினார். அந்த நாளில் இந்த அடையாளங்கள் எல்லாம் நடந்து முடிந்தன. 10 சவுலும் அவனது வேலைக்காரனும் கிபியாத் எலோகிம் மலைக்குச் சென்றனர். அங்கே, அவன் தீர்க்கதரிசிகளின் குழுவை சந்தித்தான். தேவனுடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு சவுலின் மேல் இறங்கினார். அவனும், தீர்க்கதரிசிகளுடன் தீர்க்கதரிசனம் சொன்னான். 11 அவனை முன்பே அறிந்திருந்தவர்கள் அவன் தீர்க்கதரிசிகளோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்வதைக் கண்டனர். அவர்கள், “கீஸின் மகனுக்கு என்ன ஆயிற்று? சவுலும் ஒரு தீர்க்கதரிசியா?” என்று பேசிக்கொண்டனர்.
12 கிபியாத் ஏலோமில் வாழும் ஒருவன் “ஆமாம்! அவன்தான் அவர்களின் தலைவன்” என்றான். அதனால் “சவுலும் தீர்க்கதரிசிகளுள் ஒருவனோ?” என்பது மிகவும் புகழ் வாய்ந்தப் பழமொழி ஆனது.
சவுல் வீட்டிற்கு திரும்புகிறான்
13 சவுல் தீர்க்கதரிசனம் சொல்லி முடித்த பின், தன் வீட்டிற்கு அருகிலுள்ள தொழுதுகொள்ளுகிற இடத்திற்கு வந்தான்.
14 அப்போது சவுலின் சிறிய தகப்பன் சவுலிடமும் அவனது வேலைக்காரனிடமும், “நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?” எனக் கேட்டான்.
“நாங்கள் கழுதைகளைத் தேடிப் போனோம். கிடைக்காததால் சாமுவேலை சந்திக்கச் சென்றோம்” என்றான்.
15 “சாமுவேல் என்ன சொன்னார் என்று தயவு செய்து சொல்?” எனச் சவுலின் சிறிய தகப்பன் கேட்டான்.
16 அதற்கு சவுல், “சாமுவேல் கழுதைகள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்று சொன்னார்” என்று பதிலுரைத்தான். அரசாட்சியைப்பற்றி சாமுவேல் கூறியதைப் பற்றி சவுல் எதுவும் சொல்லவில்லை.
சவுலை அரசனாக சாமுவேல் அறிவிக்கிறான்
17 சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மிஸ்பாவில் கர்த்தரை சந்திக்க கூடுமாறு கூறினான். 18 சாமுவேல் இஸ்ரவேலரைப் பார்த்து, “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘நான் இஸ்ரவேலரை எகிப்திற்கு வெளியே அழைத்து வந்தேன். உங்களுக்குத் தீங்கு செய்ய முயன்ற எகிப்தியர்களிடமிருந்தும் மற்ற அரசுகளிடமிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றினேன்’ 19 ஆனால், இன்று நீங்கள் உங்கள் தேவனை ஒதுக்கிவிட்டீர்கள். உங்களது துன்பங்களிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும் உங்கள் தேவன் காப்பாற்றினார். ஆனால் நீங்களோ, ‘எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்’ என்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் கர்த்தருக்கு முன்பு சேர்ந்து நில்லுங்கள்” என்றான்.
20 சாமுவேல் இஸ்ரவேலர்களின் எல்லா கோத்திரங்களையும் கூட்டினான். பின் புதிய அரசனைத் தேர்ந்தெடுத்தான். முதலில் பென்யமீனின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தான். 21 அவன் பென்யமீன் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பங்களையும் வந்து கடந்துப்போகச் சொல்லின பின்பு மாத்திரி குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களின் குடும்பம் கடந்துபோகும்போது கீசின் மகனாகிய சவுலும் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
ஆனால் ஜனங்கள் அவனைத் தேடியபோது அவன் காணப்படவில்லை. 22 பிறகு அவர்கள் கர்த்தரிடம், “அவன் இன்னும் இங்கே வரவில்லையா?” எனக் கேட்டனர். அதற்கு கர்த்தர், “சவுல் கிடங்கில் பொருட்களுக்கு மறைவில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான்” என்றார்.
23 ஜனங்கள் ஓடிப்போய் அவனை அழைத்துக் கொண்டு வந்தனர். அவன் அவர்கள் மத்தியில் நின்றான். அவனது தலை மற்றவர்களைவிட உயர்ந்திருந்தது.
24 சாமுவேல் அனைத்து ஜனங்களிடமும், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனைப் பாருங்கள். அவனைப் போன்று சிறப்புடையவன் வேறுயாருமில்லை” என்றார்.
பிறகு ஜனங்கள் “அரசனே நீடுழி வாழ்க!” என்று குரலெழுப்பினார்கள்.
25 சாமுவேல் அரசாங்கத்தின் விதிகளை ஜனங்களுக்கு விளக்கிக் கூறினான். அவன் ஒரு புத்தகத்தில் அவ்விதிகளை எழுதினான். அந்த புத்தகத்தை கர்த்தருக்கு முன்பு வைத்தான். பின் ஜனங்களை வீட்டிற்கு போகுமாறு கூறினான்.
26 சவுலும் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான். தேவன் சில வீரர்களின் இதயத்தைத் தொட அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துச் சென்றார்கள். 27 ஆனால் சில கயவர்கள், “இவன் எவ்வாறு நம்மைக் காப்பாற்றுவான்?” என்றனர். அவர்கள் சவுலைப் பற்றி கெட்டவற்றைக் கூறி அவனுக்கு அன்பளிப்புக்களைக் கொடுக்க மறுத்தனர். சவுல் ஒன்றும் கூறவில்லை.
நாகாஸ் எனும் அம்மோனிய அரசன்
நாகாஸ் அம்மோனிய அரசன், காத் மற்றும் ரூபன் கோத்திரங்களை காயப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு ஆண்களின் வலது கண்ணை பிடுங்கி யாரும் அவர்களுக்கு உதவி செய்யாதபடி தடுத்தான். யோர்தான் நதி ஓரத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் ஆண்களுக்கும் அப்படியே செய்தான். எனவே 7,000 இஸ்ரவேலர்கள் அம்மோனியரிடமிருந்து தப்பி யாபேஸ் கீலேயாத்திற்கு வந்தனர்.
11 ஒரு மாதத்திற்குப்பின் நாகாஸ் தன் சேனையோடு யாபேஸ் கீலேயாத்தின் நகரை முற்றுகையிட்டான். யாபேஸ் ஜனங்கள், நாகாஸை நோக்கி, “நீங்கள் எங்களோடு ஒரு ஒப்பந்தத்தைச் செய்துக்கொண்டால் உங்களுக்குச் சேவை செய்வோம்” என்றனர்.
2 ஆனால் அம்மோனியனான நாகாஸ் “நான் ஒவ்வொரு மனிதனின் வலது கண்ணையும் பிடுங்கிய பிறகுதான் ஒப்பந்தத்தைச் செய்து கொள்வேன். அதுதான் எல்லா இஸ்ரவேலரையும் அவமானப்படுத்தும்!” என்றான்.
3 யாபேசின் தலைவர்கள் நாகாசிடம், “எங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் கொடுங்கள். அனைத்து இஸ்ரவேலருக்கும் தூது அனுப்புகிறோம். யாரும் உதவிக்கு வரவில்லை என்றால், உங்களிடம் வந்து சரணடைந்து விடுகிறோம்” என்று கூறினார்கள்.
சவுல் யாபேஸ் கீலேயாத்தைக் காப்பாற்றுகிறான்
4 சவுல் வசித்த கிபியாவுக்கு தூதுவர்கள் வந்தார்கள். அவர்கள் செய்தியை ஜனங்களிடம் சொன்னார்கள். ஜனங்கள் மிகவும் சத்தமாக அழுதார்கள். 5 அச்சமயம் சவுல் தன் பசுக்களோடு வயல் வெளியில் இருந்தான். அவன் உள்ளே வந்தபோது அவர்களின் கூக்குரலைக் கேட்டான். அவன் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்? உங்களுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் யாபேஸில் இருந்து வந்த தூதுவர்கள் சொன்ன செய்தியைச் சொன்னார்கள். 6 சவுல் அவர்கள் சொன்னதைக் கேட்டான். பின் தேவனுடைய ஆவியானவர் அவன் மீது மிகுந்த வல்லமையோடு இறங்கினார். அவன் சீறி எழுந்தான். 7 அவன் இரண்டு பசுக்களைத் துண்டுத் துண்டாக வெட்டி அத்துண்டுகளைத் தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினான். அவர்கள் அதனை இஸ்ரவேல் முழுவதும் எடுத்துச் செல்லுமாறு கூறினான். இஸ்ரவேல் ஜனங்களிடம், “சவுலையும் சாமுவேலையும் பின்பற்றி வாருங்கள். யாராவது இதைக் கேட்டு கூடி வந்து உதவாவிட்டால் அவர்களின் பசுவுக்கும் இப்படியே செய்யப்படும்!” எனச் சொல்லி அனுப்பினான்.
கர்த்தரிடமிருந்து பெரும் பயம் ஜனங்கள் மேல் வந்தது. அவர்கள் ஒன்று கூடினார்கள். 8 சவுல் ஆண்களை பேசேக்கில் கூட்டினான். அவர்களில் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து 3,00,000 பேரும், யூதாவின் ஜனங்களிலிருந்து 30,000 பேரும் கூடி இருந்தனர்.
9 சவுலும் அவனது படையும் யாபேசிலிருந்து வந்த தூதர்களிடம், “நாளை மதியத்தில் நீங்கள் காப்பற்றப்படுவீர்கள் என கீலேயாத்திலுள்ள யாபேசியர்களுக்குக் கூறுங்கள்” என்றான்.
தூதுவர்கள் சவுலின் செய்தியை யாபேசியர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். 10 பின் அவர்கள் அம்மோனியனான நாகாசிடம், “நாளை நாங்கள் உங்களிடம் வருவோம், அப்போது உங்கள் விருப்பம்போல் செய்யலாம்” என்றனர்.
11 மறுநாள் தனது வீரர்களை சவுல் மூன்று குழுக்களாக பிரித்தான். சூரிய உதயத்தின் போது, சவுலும், அவனது வீரர்களும் அம்மோனிய கூடாரங்களுக்குள் புகுந்து மதியத்திற்குள் அம்மோனியர்களைத் தோற்கடித்தனர். இரண்டு பேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி அவர்கள் பல திசைகளிலும் சிதறிப்போனார்கள்.
12 பின் ஜனங்கள் சாமுவேலிடம், “சவுலை அரசன் ஆக்கவேண்டாம் எனக் கூறியவர்கள் எங்கே? இழுத்து வாருங்கள், அவர்களைக் கொல்வோம்!” என்றனர்.
13 ஆனால் சவுலோ, “இல்லை இன்று யாரையும் கொல்லக்கூடாது! கர்த்தர் இன்று இஸ்ரவேலரைக் காப்பாற்றினார்!” என்றான்.
14 பின்பு சாமுவேல் ஜனங்களிடம், “வாருங்கள், கில்காலுக்குப் போவோம், அங்கே சவுலை மீண்டும் அரசனாக்குவோம்” என்றார்.
15 அனைவரும் கில்காலுக்குப் போனார்கள். அங்கே கர்த்தருடைய முன்னிலையில் ஜனங்கள் சவுலை அரசனாக்கினார்கள். கர்த்தருக்கு சமாதான பலிகளை கொடுத்தனர். சவுலும் இஸ்ரவேலரும் அதனை சிறப்பாக கொண்டாடினார்கள்.
சாமுவேல் இஸ்ரவேலரிடம் அரசனைப் பற்றி பேசுகிறான்
12 சாமுவேல் இஸ்ரவேலரிடம், “நீங்கள் என்னிடம் எதை எதிர்ப்பார்த்தீர்களோ அதனைச் செய்துவிட்டேன். உங்களுக்கு ஒரு அரசனை நியமித்திருக்கிறேன். 2 இப்போது உங்களை வழி நடத்த ஒரு அரசன் இருக்கிறான். எனக்கு முதுமையும் நரையும் வந்துவிட்டது. ஆனால் என் மகன்கள் உங்களுடன் இருக்கிறார்கள். நான் சிறுவயது முதலே உங்களது தலைவனாக இருந்திருக்கிறேன். 3 நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை கர்த்தரிடமும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனிடமும் சொல்லவேண்டும். நான் ஏதாவது உங்கள் பசுவையோ, கழுதையையோ திருடியிருக்கிறேனா? யாரையாவது புண்படுத்தியோ, ஏமாற்றியோ இருக்கிறேனா? நான் பணத்தையோ பாதரட்சையை லஞ்சமாக பெற்றிருக்கிறேனா? அப்படி எதாவது செய்திருந்தால் நான் அதை சரி செய்துக் கொள்வேன்” என்றான்.
4 இஸ்ரவேலர்களோ, “இல்லை! நீங்கள் எங்களுக்கு எப்போதும் தீமை செய்யவில்லை. எங்களை ஏமாற்றவோ, எங்கள் பொருட்களை எந்தக் காலத்திலும் எடுத்துக் கொள்ளவோயில்லை!” என்றனர்.
5 சாமுவேல் அவர்களிடம், “கர்த்தரும், அரசரும் இன்று சாட்சிகளாக உள்ளனர். நீங்கள் சொன்னதை அவர்கள் கேட்கிறார்கள். என்னிடம் தவறில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்” என்றான். “ஆமாம்! கர்த்தரே சாட்சி!” என்று ஜனங்கள் சத்தமிட்டனர்.
6 பின் சாமுவேல் ஜனங்களிடம், “இங்கே நடந்ததை கர்த்தர் பார்த்திருக்கிறார். கர்த்தர் தாமே மோசேயையும், ஆரோனையும், தேர்ந்தெடுத்தவர். அவரே எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களை மீட்டுக்கொண்டவர். 7 இப்போது அங்கே நில்லுங்கள். உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் கர்த்தர் செய்த நன்மைகளைப்பற்றிச் சொல்வேன்.
8 “யாக்கோபு எகிப்துக்குப் போனார். பின்னர் எகிப்தியர்கள் அவருடைய சந்ததிகளுக்கு வாழ்க்கையை கடின மாக்கித் துன்புறுத்தினார்கள். கர்த்தரிடம் உதவிக்காக அழுதார்கள். கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பினார். அவர்கள் உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்துக் காப்பாற்றி இங்கே வாழும் பொருட்டு அழைத்து வந்தனர்.
9 “ஆனால் உங்கள் முற்பிதாக்கள் தமது தேவனாகிய கர்த்தரை மறந்துவிட்டனர். எனவே கர்த்தர் அவர்களை சிசெராவிடம் அடிமைகளாகுமாறு செய்தார். சிசெரா, ஆத்சோர் என்னும் இடத்தில் இருந்த படையின் சேனாதிபதி. பின்னர் கர்த்தர் அவர்களை பெலிஸ்தரின் கையிலும் மோவாப் அரசர்களிடமும் அடிமையாக்கினார். உங்கள் முற்பிதாக்களுக்கு எதிராக அவர்கள் எல்லோரும் சண்டையிட்டனர். 10 ஆனால், உங்கள் முற்பிதாக்கள் கர்த்தரிடம் உதவி கேட்டு அழுதார்கள். அவர்கள், ‘நாங்கள் பாவம் செய்துவிட்டோம். கர்த்தரை விட்டு பொய்த் தெய்வங்களான பாலையும், (பாகாலையும்) அஸ்த்தரோத்தையும் சேவித்தோம். இப்போது எங்களைப் பகைவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களுக்கு சேவை செய்கிறோம்’ என்றனர்.
11 “எனவே, கர்த்தர் எருபாகாலையும், (கிதியோன்) பேதானையும், யெப்தாவையும், சாமுவேலையும் அனுப்பினார். கர்த்தர் உங்களைச் சுற்றியுள்ள பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார். நீங்கள் பாதுகாப்பாயுள்ளீர்கள். 12 ஆனால், நாகாஸ் அரசன் உங்களுக்கு எதிராகச் சண்டையிட வந்தான். நீங்கள், ‘இல்லை! எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்!’ என்றீர்கள்! தேவனாகிய கர்த்தர் ஏற்கெனவே உங்கள் அரசராக இருந்தார்! எனினும் நீங்கள் கேட்டீர்கள். 13 இப்போது ஒரு அரசனைத் தோந்தெடுத்துள்ளீர்கள். கர்த்தர் அவரை உங்கள் அரசனாக்கினார். 14 கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்க வேண்டும். நீங்கள் அவருக்கு சேவை செய்து அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். அவருக்கு எதிராகப் போராடக்கூடாது. நீங்களும் உங்கள் அரசனும் உங்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றவேண்டும். இவற்றைச் செய்தால் தேவன் உங்களைக் காப்பார். 15 ஆனால், நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவரது கட்டளைகளுக்கு எதிராக போரிட்டால் பின் அவர் உங்களுக்கு எதிராவார். கர்த்தர் உங்களையும் உங்கள் அரசனையும் அழிப்பார்!
16 “இப்பொழுது நீங்கள் அமைதலாயிருந்து கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன் செய்யப்போகும் பெரியக் காரியத்தைப் பாருங்கள். 17 இப்போது கோதுமை அறுவடைக்காலம். நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். இடியையும் மழையையும் கேட்பேன். நீங்கள் அரசன் வேண்டுமென்று கேட்டது கர்த்தருக்கு விரோதமான காரியம் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான்.
18 எனவே, சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். அன்றே கர்த்தர் இடியையும் மழையையும் அனுப்பினார். ஜனங்கள் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தனர். 19 அனைத்து ஜனங்களும் சாமுவேலிடம், “உம்முடைய அடியார்களாகிய எங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபியுங்கள், நாங்கள் அழிந்துவிட விட்டு விடாதேயும்! நாங்கள் பலமுறை பாவம் செய்திருக்கிறோம். இப்போது அரசனைக் கேட்டு மேலும் பாவம் செய்து விட்டோம்” என்றனர்.
20 சாமுவேல் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இது உண்மை! நீங்கள் எல்லா தீமைகளையும் செய்தீர்கள். ஆனால் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்கள். முழு மனதோடு கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். 21 விக்கிரகங்கள் வெறும் சிலைகளே அவைகள் உதவாது. அவற்றைத் தொழுதுகொள்ள வேண்டாம். விக்கிரகங்கள் உங்களுக்கு உதவாது! காப்பாற்றாது! அவைகள் ஒன்றுமில்லை.
22 “ஆனால், கர்த்தர் தம் ஜனங்களைக் கைவிடமாட்டார். கர்த்தர் உங்களை தமது சொந்த ஜனங்களாக ஆக்கிக்கொள்ள விருப்பம் கொண்டார். எனவே, அவரது பெரிய பெயரினிமித்தம் தம் ஜனங்களை அவர் விட்டுவிடமாட்டார். 23 என்னைப் பொறுத்த வரை உங்களுக்காக நான் ஜெபிப்பதை என்றும் நிறுத்தமாட்டேன். நிறுத்தினால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவனாவேன். நல்வாழ்க்கைக்கான சரியான வழியை போதித்துக்கொண்டே இருப்பேன். 24 ஆனால், நீங்கள் கர்த்தரை கனம் பண்ண வேண்டும். முழு இருதயத்துடன் அவருக்கு சேவை செய்ய வேண்டும். அவர் செய்த அதிசயமான காரியங்களை மறவாதீர்கள்! 25 நீங்கள் கடினப்பட்டு தீமை செய்தால், தேவன் உங்களையும் உங்கள் அரசனையும் அழுக்கை துடப்பத்தால் நீக்குவதுப்போல் எறிந்துவிடுவார்” என்றான்.
சவுல் தன் முதல் தவறைச் செய்கிறான்
13 சவுல் அரசனாகி ஓராண்டு ஆயிற்று. பின்பு, அவன் இஸ்ரவேலை இரண்டு ஆண்டுகள் ஆண்ட பிறகு 2 அவன் 3,000 பேரை இஸ்ரவேலில் தேர்ந்தெடுத்தான். மலை நாடான பெத்லேலில் உள்ள மிக்மாசில் அவனோடு 2,000 பேர் இருந்தனர். 1,000 பேர் பென்யமீனில் உள்ள கிபியாவில் யோனத்தானோடு இருந்தனர். சவுல் மீதி உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பினான்.
3 யோனத்தான் பெலிஸ்தர்களை கேபாவில் தோற்கடித்தான். இதனை பெலிஸ்தர் கேள்விப்பட்டு, “இஸ்ரவேலர் புரட்சி செய்கின்றனர்” என்றார்கள்.
சவுல், “நடந்த நிகழ்ச்சியை எபிரெயர் கேட்க்கட்டும்” என்று சொன்னான். எனவே இஸ்ரவேல் நாடுகளில் எக்காளம் ஊதும்படி சொன்னான். 4 இஸ்ரவேலர் அனைவரும் செய்தியைக் கேட்டனர். அவர்கள், “சவுல் பெலிஸ்தரின் தலைவனைக் கொன்றான். இப்போது உண்மையில் பெலிஸ்தர் இஸ்ரவேலரை வெறுக்கிறார்கள்!” என்றனர்.
கில்காலில் கூடும்படி சவுல் இஸ்ரவேலரை அழைத்தான். 5 பெலிஸ்தர்களும் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிட ஒன்று கூடினார்கள். அவர்களிடம் 30,000 ரதங்களும் 6,000 குதிரைவீரரோடும் இருந்தனர். கடற்கரை மணலைப் போல் மிக்மாசிலே (பெத்தாவேனுக்கு கிழக்கே மிக்மாஸ் இருந்தது) கூடினார்கள்.
6 இஸ்ரவேலர் தாம் தொல்லையில் சிக்குண்டிருப்பதாக அறிந்தனர். வலைக்குள் சிக்கியதாக அறிந்துக் குகைகளிலும் மலைப் பிளவுகளிலும் ஒளிந்துக்கொள்ள ஓடினார்கள். கிணறுகள், பாறைகள், நிலத்துவாரங்களில் ஒளிந்தனர். 7 சிலர் யோர்தான் நதியைக் கடந்து காத், கீலேயாத் போன்ற நிலங்களுக்கு ஓடினார்கள். சவுல் கில்காலிலேயே இருந்தான். படையில் உள்ளவர்கள் நடுங்கினார்கள்.
8 சாமுவேல் சவுலை கில்காலில் சந்திப்பதாகக் கூறியிருந்தான். சவுல் 7 நாட்கள் காத்திருந்தான். ஆனால், சாமுவேல் இன்னும் கில்காலுக்கு வரவில்லை, வீரர்கள் சவுலை விட்டு விலக ஆரம்பித்தனர். 9 ஆகையால் சவுல், “தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொண்டு வாருங்கள்” என்று கூறி தகன பலிகளைச் செலுத்தினான். 10 அதைச் செய்து முடிக்கும் தருவாயில் சாமுவேல் வந்தான். சவுல் அவனை சந்திக்க முன் சென்றான்.
11 சாமுவேல் “என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று கேட்டான். அதற்கு சவுல் “வீரர்கள் என்னை விட்டு விலகுவதைப் பார்த்தேன். நீங்களும் சரியான நேரத்தில் வரவில்லை. பெலிஸ்தர்கள் மிக்மாசில் கூடிக்கொண்டிருந்தனர். 12 நான், ‘அவர்கள் வந்து கில்காலில் என்னைத் தாக்குவார்கள்’ என எண்ணினேன். நான் இதுவரை கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை! எனவே தகனபலி செலுத்த என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன்” என்றான்.
13 சாமுவேலோ, “நீ முட்டாள்தனமாக இதைச் செய்தாய்! நீ உனது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீ தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவர் உன் குடும்பத்தை என்றென்றைக்கும் இஸ்ரவேலை ஆளச் செய்திருப்பார். 14 இப்போது உனது அரசு தொடராது. கர்த்தர் தனக்குக் கீழ்ப்படிகிறவனையே தேடிக்கொண்டிருக்கிறார்! எனவே கர்த்தர் அந்த மனிதனைத் தெரிந்துக்கொண்டார். கர்த்தர் தம் ஜனங்களுக்காக அவனை தேர்ந்தெடுப்பார். கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீ கீழ்ப்படியவில்லை. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுத்தார்” என்றான். 15 பின் சாமுவேல் எழுந்து கில்காலை விட்டு விலகினான்.
மிக்மாசில் போர்
சவுலும், மீதியாக இருந்த அவனது சேனையும் கில்காலை விட்டு பென்யமீனில் உள்ள கிபியாவிற்கு சென்றனர். தன்னிடம் உள்ளவர்களை எண்ணினான். அவர்கள் 600 பேர், 16 சவுல், அவனது மகன் யோனத்தான், வீரர்கள் அனைவரும் கிபியாவிற்குச் சென்றனர்.
பெலிஸ்தர்கள் மிக்மாசில் முகாமிட்டிருந்தனர். 17 அவர்கள் அப்பகுதியில் வசித்து வந்த இஸ்ரவேலரைத் தண்டிக்கத் தீர்மானித்தனர். எனவே, அவர்களது சிறந்த வீரர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கினார்கள். அவர்கள் மூன்றாகப் பிரிந்து ஒரு குழு வடக்கே சூகாலின் அருகிலுள்ள ஒப்ரா வழியிலும் 18 இரண்டாவது குழு தென் கிழக்கே பெத்தொரோன் சாலையிலும் சென்றது. மூன்றாவது படை வனாந்தரத்தை நோக்கிப் போகும் செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான வழியில் சென்றது.
19 இஸ்ரவேலர்கள் யாருக்கும் இரும்பு ஆயுதங்களைச் செய்யத் தெரியாது. இஸ்ரவேலில் இரும்புக் கொல்லர்கள் யாரும் இல்லை. பெலிஸ்தர்கள் அவர்களுக்கு ஆயுதம் செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. அவர்கள் கத்தி, வாள், ஈட்டிகளை செய்துவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள். 20 பெலிஸ்தர் மட்டுமே தங்கள் ஆயுதங்களைக் கூர்படுத்த அறிந்திருந்தனர். இஸ்ரவேலர் தங்கள் கடப்பாரை, மண் வெட்டி, முக்கூருள்ள வேலாயுதங்கள், கோடரி, தாற்றுக்கோல் போன்றவற்றை கூர்மையாக்க பெலிஸ்தரிடம் சென்றனர். 21 பெலிஸ்தர்களின் கொல்லர்கள் கடப்பாரை, மண்வெட்டியை கூர்மைப்படுத்த 1/3, 1/6 சேக்கல் வெள்ளியை வசூலித்தனர். 22 எனவே, போரிடும் நாளில் சவுலோடு சென்ற இஸ்ரவேலர்களின் கையில் வாளோ அல்லது கேடயமோ எதுவும் இல்லை. சவுலிடமும் அவன் மகன் யோனத்தானிடமும் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
23 ஒரு பெலிஸ்தர் சேனை மிக்மாசியிலிருந்து போகிற மலைப்பாதை மட்டும் காத்துக் கொண்டிருந்தது.
யோனத்தான் பெலிஸ்தர்களைத் தாக்குகிறான்
14 அன்று தன் ஆயுதங்களைத் தூக்கி வந்த இளைஞனோடு சவுலின் மகனாகிய யோனத்தான், பேசினான், “பள்ளத்தாக்கின் இன்னொரு பக்கத்தில் உள்ள பெலிஸ்தர்களின் முகாமிற்கு போவோம்” என்றான். தந்தையிடம் சொல்லாமல் போனான்.
2 சவுல் மலையோரத்தில் மிக்ரோனில் ஒரு மாதுளை மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். அதனருகில் போரடிக்கிற களம் இருந்தது. அவனோடு 600 பேர் இருந்தனர். 3 அந்நாட்களில் அகியா என்ற ஒருவன் இருந்தான். இப்போது அகியா ஆசாரியனாயிருந்தான். அகியா ஏபோத்தைத் தரித்து ஆசாரிய ஊழியம் செய்துவந்தான். அகியா என்பவன் இக்கபோத்தின் சகோதரனான அகிதூபின் மகன். இக்கபோத் பினெகாசின் மகன். பினெகாசு ஏலியின் மகன். சீலோவில் முன்பு ஏலி ஆசாரியனாக இருந்தான்.
யோனத்தான் தனியாக விட்டுப் போயிருந்ததை யாரும் அறியவில்லை. 4 அவன் சென்ற வழியில் இரு பக்கமும் போசே, சேனே எனும் இரு பெரும் பாறைகள் இருந்தன. இந்தக் கணவாய் வழியாகச் செல்ல யோனத்தான் திட்டமிட்டான். 5 இந்தப் பாறைகளில் ஒன்று மிக்மாசை நோக்கியும் இன்னொன்று கிபியாவை நோக்கியும் இருந்தன.
6 யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்து வந்த இளம் உதவியாளனிடம், “வா, நாம் அந்நியரின் முகாமுக்குப் போவோம், அவர்களைத் தோற்கடிக்க ஒருவேளை கர்த்தர் நமக்கு உதவலாம்! கர்த்தரை யாராலும் தடுக்க முடியாது. நமது எண்ணிக்கை அதிகமோ அல்லது குறைவோ அது காரியமல்ல” என்றான்.
7 அதற்கு ஆயுதங்களை சுமந்து வந்த இளம் உதவியாளன் “உங்களுக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்யுங்கள், நான் எப்போதும் உங்களோடு இருப்பேன்” என்றான்.
8 அப்பொழுது யோனத்தான், “சரி போவோம், பள்ளத்தாக்கைக் கடந்து பெலிஸ்தர்களின் எல்லைக்குள் செல்வோம். நம்மை அவர்கள் பார்க்கும்படி செய்வோம். 9 அவர்கள், ‘நாங்கள் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்’ என்றால் நாம் அங்கேயே நிற்போம். மேலே செல்லமாட்டோம். 10 ஆனால் அவர்கள், ‘இங்கே வாருங்கள்’ என்றால் போவோம். ஏனென்றால் கர்த்தர் நாம் அவர்களைத் தோற்கடிக்க அனுமதிக்கிறார் என்பதற்கு இது தேவனுடைய அடையாளமாகும்” என்றான்.
11 பெலிஸ்தர் பார்வையில் படுமாறு யோனத்தானும், இளம் உதவியாளனும் நடந்தனர். அவர்களோ, “பார்! இஸ்ரவேலர்கள் துவாரங்களில் ஒளிந்திருந்து வெளியே வருகிறார்கள்” என்றனர். 12 கோட்டைக்குமேலிருந்த பெலிஸ்தர், “இங்கே வாருங்கள், உங்களுக்குப் பாடம் கற்பிக்கிறோம்!” என அவர்களை நோக்கிக் கூவினர்.
யோனத்தான் தன் உதவியாளரிடம், “மலைக்கு என்னைப் பின்தொடர்ந்து வா, கர்த்தர் பெலிஸ்தர்களை தோற்கடிக்க அடையாளம் காட்டினார்!” என்றான்.
13-14 யோனத்தான் தன் கைகளாலும், கால்களாலும் பற்றியபடி மலைமீது ஏறினான். உதவியாளன் பின்னால் ஏறினான். அவர்கள் இருவரும் பெலிஸ்தர்களைத் தாக்கி, முதலில் 20 பேரை கொன்றனர். முன்னால் வருகின்றவர்களை யோனத்தானும், பின்னால் வருகிறவரை உதவியாளனும் கொன்றனர்.
15 வயலிலும், கோட்டையிலும், முகாமிலும் உள்ள வீரர்கள் இவர்களைக் கண்டு பயந்தனர்! பூமி அதிர்ந்தது. இதைக் கண்டு மிகுந்த தைரியமுள்ள வீரர்களும் மென்மேலும் பயந்தனர்.
16 பென்யமீன் நாட்டில் கிபியாவிலே சவுலின் காவல்காரர்கள், பெலிஸ்தர் பல்வேறு திசைகளில் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். 17 சவுல், “நம்மவர்களை எண்ணிக் கணக்கிடுங்கள். முகாமிற்கு வெளியே யார் போனது என்று தெரியவேண்டும்” என்றான்.
அவர்கள் ஆட்களின் தொகையைக் கணக்கிட்டனர். யோனத்தானும் அவனது உதவியாளனும் காணவில்லை.
18 சவுல் அகியாவிடம், “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை கொண்டுவா!” என்றான். (அப்போது கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி அவர்களோடுதான் இருந்தது.) 19 சவுல் ஆசாரியனாகிய அகியாவிடம் பேசிக்கொண்டே தேவனுடைய ஆலோசனைக்குக் காத்திருந்தான். பெலிஸ்தர்களின் முகாமில் கூச்சலும் குழப்பமும் மிகுந்தன. இதனால் சவுல் பொறுமையை இழந்து, ஆசாரியனாகிய அகியாவிடம், “இது போதும்! உன் கைகளைத் தளர்த்தி ஜெபத்தை நிறுத்து!” என்றான்.
20 சவுல் தன் படையைச் சேர்த்துக்கொண்டு சண்டையிடச் சென்றான். பெலிஸ்தர்கள் குழப்பமுற்று தங்களுக்குள் வாளால் மோதிக்கொண்டனர். 21 ஏற்கெனவே சில எபிரெயர் பெலிஸ்தருக்கு அடிமைவேலை செய்து கொண்டிருந்தனர்! அவர்களும் இப்போது இஸ்ரவேல் மற்றும் சவுல் யோனத்தானோடு சேர்ந்தனர். 22 எப்பிராயீம் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த இஸ்ரவேலர் பெலிஸ்தரின் தோல்வியைக் கேள்விப்பட்டு அவர்களும் சேர்ந்து துரத்தினார்கள். 23 எனவே, கர்த்தர் அன்று இஸ்ரவேலரை காப்பாற்றினார். அச்சண்டை பெத்தாவேனைக் கடந்தது. சவுலிடம் இப்போது 10,000 வீரர்களும் முழுபடையும் இருந்தனர். மலைநாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இந்தப் போர் பரவியது.
சவுல் இன்னொரு தவறு செய்கிறான்
24 அன்று சவுல் ஒரு பெரிய தவறு செய்தான். இஸ்ரவேலர் களைப்பாகவும் பசியோடும் இருந்தனர். அவர்களிடம், “மாலைக்கு முன் யாராவது உண்டாலோ, பகைவரை வெல்லுமுன் யாராவது உண்டாலோ தண்டிக்கப்படுவார்கள்!” என்று ஆணையிட்டிருந்தான். எனவே யாரும் அன்று உண்ணாமல் இருந்தனர்.
25-26 சிலர் போர் செய்த வண்ணம் காட்டுப் பகுதிக்குப் போனபோது தேன் கூடுகளைக் கண்டும் ஆணைக்குப் பயந்து உண்ணவில்லை. 27 ஆனால் யோனத்தானுக்கு அவற்றைப்பற்றி எந்த விஷயமும் தெரியாது. உண்ணாமலிருக்க ஜனங்கள் நிர்பந்திக்கப்பட்டதைப்பற்றி அவன் எதுவும் அறிந்திருக்கவில்லை. யோனத்தானின் கையில் ஒரு கோல் இருந்தது. கோலின் ஒரு முனையைத்தேன் கூட்டில் நுழைத்து வெளியே எடுத்து, அத்தேனைப் பருகினான். பருகி முடிந்ததும் மிகவும் தெம்பாக இருப்பதாக உணர்ந்தான்.
28 ஒரு வீரன், “உமது தந்தை ஒரு சிறப்பான ஆணைச் செய்யும்படி எல்லா வீரர்களையும் நிர்பந்தித்திருக்கிறார். யாரேனும் ஒருவர் இன்றைய தினம் உண்டால் தண்டிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்! எவரும் உண்ணவில்லை அதனால்தான் எல்லாரும் சோர்வாக உள்ளனர்” என்றான்.
29 யோனத்தானோ, “என் தந்தை ஏராளமான துன்பங்களை நாட்டுக்குத் தந்துள்ளார்! கொஞ்சம் தேன் உண்டதும் எனக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது என்பதை நீயே பார்! 30 பகைவரிடமிருந்து எடுத்த உணவை உண்டிருந்தால் நாம் மேலும் உற்சாகமாக இருந்திருக்க முடியும். நாம் இன்னும் அதிக பெலிஸ்தர்களைக் கொன்றிருக்கலாம்!” என்றான்.
31 அன்று இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களைத் தோற்கடித்து, அவர்களை மிக்மாஸ் முதல் ஆயலோன் வரை துரத்தினபடியால் களைப்பாகவும், பசியாகவும் இருந்தனர். 32 அவர்கள் ஆடுகளையும், கன்றுகுட்டிகளையும் பெலிஸ்தர்களிடமிருந்து கைப்பற்றி கொன்று தின்றனர். அம்மிருகங்களின் இரத்தம் இன்னும் உறையாதிருந்தது!
33 ஒருவன் சவுலிடம், “பாருங்கள்! ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டனர். அவர்கள் இறைச்சியை அதில் இரத்தம் இருக்கும்போது தின்று கொண்டிருக்கின்றனர்!” என்றான்.
சவுலோ, “நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள்! இப்போது இங்கே பெரிய கல்லை உருட்டிக் கொண்டு வாருங்கள்” என்றான். 34 மேலும், “ஜனங்களிடம் போங்கள், இரத்தத்தோடு இருப்பதைச் சாப்பிடுவதால் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டீர்கள். தங்கள் மாட்டையும் ஆட்டையும் என் முன் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லுங்கள். இங்குதான் அவர்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொல்லவேண்டும். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யவேண்டாம். இரத்தம் உறையாதிருக்கிற இறைச்சியை உண்ணவேண்டாம்” என்றான்.
அன்று இரவு ஒவ்வொருவனும் தங்கள் மிருகங்களைக் கொண்டு வந்து அங்கே கொன்றனர். 35 பின் சவுல் அங்கே கர்த்தருக்காக பலிபீடம் கட்டினான். சவுல் தானாகவே கர்த்தருக்காக அப்பலிபீடத்தைக் கட்டத் தொடங்கினான்!
36 சவுல், “இன்று இரவு பெலிஸ்தர்களுக்கும் பின்னால்போய் அவர்களைக் கொன்று அவர்களுடையதை எடுத்து வருவோம்!” என்று சொன்னான்.
படையினர், “உங்களுக்குச் சரி என்று படுவதைச் செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.
ஆனால் ஆசாரியனோ, “தேவனைக் கேட்போம்” என்றான்.
37 எனவே சவுல் தேவனிடம், “பெலிஸ்தர்களைத் துரத்திப் போகலாமா? அவர்களைத் தோற்கடிக்கவிடுவீரா?” என்று கேட்டான். ஆனால் தேவன் அன்று சவுலுக்கு பதில் சொல்லவில்லை.
38 எனவே, “எல்லாத் தலைவர்களையும் கூப்பிடுங்கள்! இன்று பாவம் செய்தது யாரெனப் பார்ப்போம். 39 நான் இஸ்ரவேலை காக்கும் கர்த்தருடைய பேரில் சத்தியம் செய்திருக்கிறேன். என் மகனே பாவம் செய்தாலும் சாகடிக்கப்படுவான்” என்றான். யாரும் பதில் சொல்லவில்லை.
40 பின் அவன், “நீங்கள் அந்தப் பக்கம் நில்லுங்கள், நானும் என் மகனும் இந்தப் பக்கம் நிற்போம்” என்றான்.
வீரர்களும், “உங்கள் விருப்பம் ஐயா!” என்றனர்.
41 அப்பொழுது சவுல், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, உமது தொண்டனுக்கு இன்று ஏன் பதில் சொல்லவில்லை? நானோ அல்லது என் மகனோ பாவம் செய்திருந்தால், ஊரீம்மைத் தாரும். உம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்திருந்தால் தும்மீம்மைத் தாரும்” என்று ஜெபித்தான்.
சவுலும் யோனத்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனங்கள் தப்பினார்கள். 42 சவுல் “மீண்டும் சீட்டைப் போட்டு, பாவி நானா என் மகனா” என்று கேட்டான். யோனத்தான் மேல் சீட்டு விழுந்தது.
43 சவுல் மகனிடம், “சொல் என்ன பாவம் செய்தாய்?” என்று கேட்டான்.
அதற்கு யோனத்தான், “நான் என் கோலின் நுனியில் இருந்த கொஞ்சம் தேனை சுவைத்தேன். அதற்காக நான் மரிக்க வேண்டுமா?” என்று கேட்டான்.
44 ஆனால் சவுல், “என் சத்தியத்தை நான் காப்பாற்றாவிட்டால் தேவன் என்னைத் தண்டிப்பார்! நீ மரிக்கத்தான் வேண்டும்” என்றான்.
45 ஆனால் வீரர்களோ, “இன்று யோனத்தான் இஸ்ரவேலருக்குப் பெரிய வெற்றியைத் தந்தான். அவன் மரிக்கக்கூடாது! ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தில் நாங்களும் சத்தியம் செய்கிறோம். யோனத்தானின் தலையிலிருந்து யாரும் ஒரு மயிரையேனும் அகற்ற முடியாது! தேவன் இன்று அவனுக்குப் பெலிஸ்தர்களை வெல்ல உதவினார்!” என்றனர். எனவே யோனத்தானை ஜனங்கள் காப்பாற்றினார்கள். அவன் கொல்லப்படவில்லை.
46 சவுல் பெலிஸ்தர்களைத் துரத்தாததால் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குப் போனார்கள்.
சவுல் இஸ்ரவேலரின் பகைவரோடு போரிடுகிறான்
47 சவுல் இஸ்ரவேலர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தி அவர்களின் அரசனானான். மோவாப், அம்மோனியர், ஏதோம் எனும் சோபா அரசன், பெலிஸ்தர்களை சவுல் வென்றான். சவுல் எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் இஸ்ரவேலரின் பகைவர்களையெல்லாம் வென்றான். 48 சவுல் மிகத் தைரியமானவன். இஸ்ரவேலை கைப்பற்ற முயன்ற அனைத்து பகைவரையும் வென்றான். மேலும் அமலேக்கியரையும் தோற்கடித்தான்!
49 யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா ஆகியோர் சவுலின் மகன்கள். மூத்தமகள் மேராப், இளையவள் மீகாள். 50 சவுலின் மனைவி பெயர் அகினோவாம். அவள் அகிமாசின் மகள்.
அவனது தளபதியின் பெயர் அப்னேர், இவன் சவுலின் சித்தப்பா நேரின் மகன். 51 கீஸ் சவுலின் தந்தை. அப்னேரின் தந்தையான நேர் ஆபியேலின் மகன்.
52 சவுல் தன் ஆயுள் முழுவதும் பெலிஸ்தரோடு போரிட்டான். தைரியமும் வீரமும் உள்ள யாரைப் பார்த்தாலும் அவனை அழைத்து வீரர்களின் சேனையில் சேர்ந்துவிடுவான். அவர்கள் அரசனுக்கு அருகாமையில் இருந்து அரசனை காப்பாற்றுவர்.
சவுல் அமலேக்கியரை அழித்துப்போடுகிறான்
15 ஒரு நாள் சாமுவேல் சவுலிடம், “உன்னை அபிஷேகித்து அவருடைய ஜனங்கள் இஸ்ரவேலருக்கு அரசனாக்கும்படி கர்த்தர் என்னை அனுப்பினார். இப்போது கர்த்தருடைய செய்தியைக் கேள். 2 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வரும்போது கானானுக்குப் போகாமல் அமலேக்கியர்கள் தடுத்தனர். அவர்கள் செய்தவற்றை நான் பார்த்தேன். 3 இப்போது அவர்களோடு போரிடு, அவர்களையும் அவர்கள் உடமையையும் முழுவதுமாக அழி, எதையும் உயிரோடு விடாதே. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள், பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் எதையும் விடாதே என்கிறார்’” என்றான்.
4 சவுல் தன் படையை தெலாயிமில் கூட்டினான். 2,00,000 காலாட்படையும் யூதாவிலுள்ள 10,000 சேனையாட்களும் இருந்தனர். 5 பிறகு சவுல் அமலேக்கு நகருக்குப் போய் பள்ளத்தாக்கில் காத்திருந்தான். 6 அங்கு கேனியரிடம், “அமலேக்கியரை விட்டுப் போங்கள், நான் உங்களை அழிக்கமாட்டேன். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறும்போது நீங்கள் கருணை காட்டினீர்கள்” என்றான். எனவே கேனியர் அமலேக்கியரை விட்டு வெளியேறினார்கள்.
7 சவுல் அமலேக்கியரைத் தோற்கடித்தான். அவர்களை, ஆவிலாவில் இருந்து சூர் வரை துரத்தியடித்தான். 8 ஆகாக் அமலேக்கியரின் அரசன். சவுல், அவனை உயிருடன் பிடித்தான். மற்றவர்களைக் கொன்றான். 9 எல்லாவற்றையும் அழிக்க சவுலும் வீரர்களும் தயங்கினார்கள். ஆகாக் என்பவனை உயிருடன்விட்டனர். மேலும் கொழுத்த பசுக்களையும் நல்ல ஆடுகளையும் சிறந்த பொருட்களையும் கூட அழிக்காமல் விட்டுவிட்டனர். பயனுள்ள எல்லாவற்றையும் வைத்துக் கொண்டனர். அவற்றை அழிக்க அவர்கள் விரும்பவில்லை, பயனற்றவற்றையே அவர்கள் அழித்தார்கள்.
சவுலின் பாவத்தைப்பற்றி சாமுவேல் சொன்னது
10 பிறகு சாமுவேல், கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். 11 அதற்கு கர்த்தர், “சவுல் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டான், அவனை அரசனாக்கியதற்காக வருந்துகிறேன். நான் சொல்வதை அவன் செய்வதில்லை” என்றார். சாமுவேலும் கோபங்கொண்டு இரவு முழுவதும் அழுது கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான்.
12 சாமுவேல் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து சவுலை சந்திக்க சென்றான். ஆனால் ஜனங்கள் அவனிடம், “கர்மேல் என்ற பேருள்ள யூதேயாவின் நகருக்கு சவுல் போயிருக்கிறான். அங்கே தன்னை பெருமைப்படுத்தும் நினைவு கல்லை எழுப்புகிறான். அவன் பல இடங்களை சுற்றிவிட்டு கில்காலுக்கு வருவான்” என்றனர்.
எனவே சாமுவேல் அவனிருக்கும் இடத்துக்கே சென்று சவுலைத் தேடிப் பிடித்தான். சவுல் அப்போதுதான் கர்த்தருக்கு அமலேக்கியரிடம் இருந்து எடுத்த முதல் பாகங்களை தகனபலி செலுத்திக்கொண்டிருந்தான். 13 சவுல் சாமுவேலை வரவேற்றான், “கர்த்தர் உம்மை ஆசீர்வதிக்கிறார்! கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்றினேன்” என்றான்.
14 ஆனால் சாமுவேலோ, “அப்படியானால் நான் கேட்ட சத்தம் எத்தகையது? ஆடுகளின் சத்தத்தையும், மாடுகளின் சத்தத்தையும் நான் எதற்காகக் கேட்டேன்?” என்று கேட்டான்.
15 அதற்கு சவுல், “இவை அமலேக்கியரிடமிருந்து வீரர்கள் எடுத்தவை. உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும் பொருட்டு சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் பிடித்து வந்தனர். மற்றபடி நாங்கள் அனைத்தையும் அழித்துவிட்டோம்” என்றான்.
16 சாமுவேலோ, “நிறுத்து! நேற்று இரவு கர்த்தர் சொன்னதை நான் சொல்லட்டுமா” என சவுலிடம் கேட்டான்.
சவுல், “நல்லது சொல்லுங்கள்” என்றான்.
17 சாமுவேல், “முக்கியமானவன் இல்லை என்று கடந்த காலத்தில் நீ உன்னை நினைத்திருந்தாய். பின்பு இஸ்ரவேல் ஜனங்களின் தலைவன் ஆனாய். கர்த்தர் உன்னை அரசனாக்கினார். 18 கர்த்தருக்கு உன்னை சிறப்பான கடமை நிறைவேற்ற அனுப்பினார். கர்த்தர் சொன்னார், ‘போய் அமலேக்கியரை முழுமையாக அழி! அவர்கள் தீயவர்கள். எல்லோரும் கொல்லப்படும்வரை போரிடு!’ என்றார். 19 ஆனால் நீ கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை! ஏன்? தீயவை என்று கர்த்தர் எதை ஒதுக்கினாரோ அவற்றை சேகரித்துக்கொள்ள நீ விரும்பிவிட்டாய்!” என்றான்.
20 சவுலோ, “கர்த்தருக்கு நான் கீழ்ப்படிந்தேன். அவர் சொன்ன இடத்திற்குப் போனேன். அமலேக்கியரை எல்லாம் அழித்தேன்! அவர்களின் அரசன் ஆகாக்கை மட்டுமே கொண்டுவந்தேன். 21 வீரர்கள் நல்ல ஆட்டையும், மாட்டையும் கொண்டு வந்தனர். அவை கில்காலில் உள்ள உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிட காத்திருக்கின்றன!” என்றான்.
22 ஆனால் சாமுவேல், “கர்த்தருக்குப் பிடித்தமானது எது? தகனபலியா? அன்பளிப்பா? அல்லது கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதா? கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுதான் அனைத்திலும் சிறந்தது. 23 கீழ்ப்படிய மறுப்பது தவறு, அது பில்லிசூனியத்திற்கு இணையான பெரும் பாவம். நீ கீழ்ப்படிய மறுப்பது பிடிவாதமாக பிற விக்கிரகங்களை தொழுதுகொள்வதற்கு சமம் ஆகும். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தாய். அதனால் கர்த்தர் உன்னை அரசனாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.
24 அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. நீர் சொன்னதையும் செய்யவில்லை. ஜனங்களுக்கு பயந்தேன். அவர்கள் சொன்னபடி செய்தேன். 25 இப்போது கெஞ்சுகிறேன். என் பாவத்தை மன்னியுங்கள். என்னுடன் மீண்டும் வாருங்கள் எனவே கர்த்தரை நான் தொழுதுக்கொள்வேன்” என்றான்.
26 ஆனால் சாமுவேலோ, “நான் உன்னோடு வரமாட்டேன். நீ கர்த்தருடைய கட்டளையை ஒதுக்கிவிட்டாய். இப்போது கர்த்தர் உன்னை அரசனாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.
27 சாமுவேல் திரும்பியபோது சவுல் அவரது சால்வை நுனியைப் பிடித்தான். அது கிழிந்தது. 28 சாமுவேலோ, “என் சால்வையைக் கிழித்துவிட்டாய். இதுபோல் இன்று கர்த்தர் உன்னிடமிருந்து இஸ்ரவேலின் இராஜ்யத்தைக் கிழிப்பார். உன் நண்பன் ஒருவனுக்கு கர்த்தர் அரசைக் கொடுப்பார். அவன் உன்னைவிட நல்லவனாக இருப்பான். 29 கர்த்தரே இஸ்ரவேலரின் தேவன். கர்த்தர் என்றென்றும் ஜீவிப்பவர். கர்த்தர் பொய் சொல்லவோ மனதை மாற்றவோமாட்டார். அவர் மனிதனைப் போன்று மனதை மாற்றுபவர் அல்ல” என்றான்.
30 சவுலோ, “சரி நான் பாவம் செய்தேன்! எனினும் என்னுடன் திரும்பி வாருங்கள். இஸ்ரவேலின் தலைவர்கள் மற்றும் ஜனங்களின் முன்னால் எனக்கு மரியாதைக் காட்டுங்கள். என்னுடன் திரும்பி வாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நான் தொழுதுகொள்வேன்” என்றான். 31 சாமுவேல் சவுலோடு திரும்பிப் போனான். சவுல் கர்த்தரை தொழுதுகொண்டான். 32 “அமலேக்கியரின் அரசனான ஆகாகை என்னிடம் கொண்டு வா” என்றான் சாமுவேல்.
ஆகாக் சாமுவேலிடம் வந்தான். அவன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான். “நிச்சயம் நம்மை இவர் கொல்லமாட்டார்” என்று ஆகாக் எண்ணினான்.
33 ஆனால் சாமுவேலோ, “உனது வாள் குழந்தைகளை தாயிடமிருந்து எடுத்துக் கொண்டது. எனவே இப்போது உன் தாய் பிள்ளையற்றவள் ஆவாள்” எனக் கூறி அவன் ஆகாகை கில்காலில் கர்த்தருக்கு முன்பாக துண்டுகளாக வெட்டிப்போட்டான்.
34 பிறகு சாமுவேல் ராமாவிற்குத் திரும்பிப் போனான். சவுல் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான். 35 இதற்குப் பின் சாமுவேல் தன் வாழ்நாளில் சவுலைப் பார்க்கவில்லை. சவுலுக்காக வருத்தப்பட்டான். சவுலை அரசனாக்கியதற்கு கர்த்தரும் வருத்தப்பட்டார்.
2008 by World Bible Translation Center