Bible in 90 Days
15 “எனவே லேவியர்களை சுத்தமாக்குங்கள். அவர்களை கர்த்தருக்குக் கொடுங்கள். அவர்கள் அசைவாட்டும் பலியைப் போன்றவர்கள். நீங்கள் இவ்வாறு செய்த பிறகு அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வந்து தம் பணியைச் செய்யலாம். 16 இஸ்ரவேலர்கள் லேவியர்களை எனக்குக் கொடுப்பார்கள். அவர்கள் எனக்கு உரியவர்கள். ஒவ்வொரு இஸ்ரவேல் குடும்பமும் தனக்கு முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளை எனக்குத் தர வேண்டும் என்று கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பதிலாக லேவியர்களை நான் இப்போது எடுத்துக்கொண்டேன். 17 இஸ்ரவேலர்களில் முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகள் ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். அது மனிதர்களா, அல்லது மிருகங்களா என்பது ஒரு பொருட்டல்ல. அவை எனக்குரியதாகும். ஏனென்றால் நான் எகிப்திலே, முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளையும் மிருகங்களையும் கொன்றேன். அதோடு இஸ்ரவேலில் முதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளை எனக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். 18 ஆனால் இப்போது இவர்களின் இடத்தில் லேவியர்களை எடுத்துக்கொண்டேன். இஸ்ரவேலில் உள்ள மற்ற குடும்பங்களில் முதலாவதாகப் பிறந்த ஆண் மகன்களுக்குப் பதிலாக லேவியர்களை எடுத்துக்கொண்டேன். 19 இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களிலிருந்தும் லேவியர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை ஆரோனுக்கும், அவனது மகன்களுக்கும் தத்தமாகக் கொடுத்தேன். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்காவும் சேவை செய்வார்கள். இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் பலிகளைச் செலுத்த உதவி செய்வார்கள். இதனால் பெருநோய்களும், துன்பங்களும் இஸ்ரவேலர்கள் பரிசுத்தமான இடத்திற்குள் வரும்போது ஏற்படுவதில்லை” என்றார்.
20 எனவே மோசே, ஆரோன், இஸ்ரேவேல் ஜனங்கள் அனைவரும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தனர். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் லேவியரோடு சேர்ந்து செயல்பட்டனர். 21 லேவியர்கள் தங்களையும், தங்கள் ஆடைகளையும் சுத்தப்படுத்திக்கொண்டனர். ஆரோன் லேவியர்களை அசைவாட்டும் பலிபோன்று கர்த்தருக்கு அர்ப்பணித்தான். ஆரோன் பலிகளைக் கொடுத்ததின் மூலம் அவர்களின் பாவங்கள் நீக்கப்பட்டு, அவர்கள் பரிசுத்தம் அடைந்தனர். 22 அதன் பிறகு லேவியர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் தங்கள் பணியைச் செய்ய வந்தனர். ஆரோனும் அவனது மகன்களும் அவர்களைக் கண்காணித்தனர். லேவியர்களின் பணிகளுக்கு இவர்களே பொறுப்பானவர்கள். மோசேயிடம் கர்த்தர் சொன்னபடியே ஆரோனும் அவனது மகன்களும் செயல்பட்டனர்.
23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 24 “இது லேவியர்களுக்கான சிறப்புக் கட்டளைகள் ஆகும். ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள வேலைகளை லேவியர்களில் 25 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்டவர்கள் வந்து பங்கிட்டுச் செய்ய வேண்டும். 25 ஆனால், ஒருவனுக்கு 50 வயதாகும்போது அவன் தன் பணியிலிருந்து ஓய்வுபெற வேண்டும். அவன் மேலும் வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை. 26 இப்படிப்பட்ட 50 வயதும் அதற்கு மேலும் ஆன ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் சகோதரர்களின் வேலைக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வேலைகளைத் தாமாகவே செய்யக் கூடாது. நீங்கள் லேவியர்களை அவர்களின் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும்போது இவற்றைச் செய்யவேண்டும்” என்றார்.
பஸ்கா
9 சீனாய் பாலைவனத்தில் மோசேயிடம் கர்த்தர் பேசினார். இது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வந்த இரண்டாவது ஆண்டின் முதல் மாதமாகும். கர்த்தர் மோசேயிடம்: 2 “தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில், பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. 3 அவர்கள் பஸ்கா விருந்தை இம்மாதத்தின் 14ஆம் நாளன்று சூரியன் மறைகிற அந்தி வேளையில் உண்ண வேண்டும். அவர்கள் அந்தத் தேர்ந்தெடுத்த நேரத்தில் இதனைச் செய்ய வேண்டும். பஸ்கா பண்டிகையின் விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.
4 எனவே, பஸ்காவைக் கொண்டாடும்படி இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே கூறினான். 5 அவர்கள் சீனாய் பாலைவனத்தில், முதல் மாதத்தின் 14ஆம் நாளன்று, சூரியன் மறைகின்ற சாயங்கால வேளையில் பஸ்காவைக் கொண்டாடினர். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தனர்.
6 ஆனால் அந்நாளில் சில ஜனங்கள் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. காரணம், அவர்கள் பிணத்தைத் தொட்டதால் தீட்டாகி இருந்தனர். எனவே, அன்று அவர்கள் மோசேயிடமும், ஆரோனிடமும் சென்றனர். 7 அவர்கள் மோசேயிடம், “நாங்கள் பிணத்தைத் தொட்டதால் தீட்டாகிவிட்டோம். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் கர்த்தருக்கு அன்பளிப்பைச் செலுத்த முடியாமல் ஆசாரியர்களால் தடுக்கப்பட்டோம். எனவே, எங்களால் மற்ற இஸ்ரவேலர்களோடு பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. நாங்கள் என்ன செய்யலாம்?” என்று கேட்டனர்.
8 மோசே அவர்களிடம், “கர்த்தர் இதனைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்கிறேன்” என்றான்.
9 பிறகு கர்த்தர் மோசேயிடம், 10 “எல்லா இஸ்ரவேல் ஜனங்களிடமும் இவற்றைக் கூறு. இந்த விதியானது உனக்கும் உனது எல்லாச் சந்ததிக்கும் உரியதாகும். சரியான நேரத்தில் ஒருவனால் பஸ்காவைக் கொண்டாட முடியாமல் போகலாம். அவன் பிணத்தைத் தொட்டதால் தீட்டுள்ளவனாக இருக்கலாம், அல்லது அவன் பயணத்தின் பொருட்டு வெளியே போயிருக்கலாம். 11 ஆனாலும் அவன் இரண்டாவது மாதத்தில் 14ஆம் தேதி மாலை வேளையில் பஸ்காவைக் கொண்டாடலாம். அப்போது அவன் ஆட்டுக்குட்டியின் இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும், கசப்பான கீரையையும் உண்ண வேண்டும். 12 அவன் மறுநாள் விடியும்வரை அதில் எதையும் மீதி வைக்காமல் உண்ண வேண்டும். அவன் ஆட்டுக்குட்டியின் எலும்புகள் எதையும் உடைக்கக் கூடாது. அவன் பஸ்காவின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். 13 ஆனால் இயன்றவர்கள் குறிப்பிட்ட காலத்திலேயே பஸ்காவைக் கொண்டாட வேண்டும். ஆனால் அவன் தீட்டில்லாமல் இருந்து, பயணம் போகாமல் இருந்தால் அவனுக்கு மன்னிப்பு இல்லை. அவன் சரியான காலத்தில் பஸ்காவைக் கொண்டாடாவிட்டால், அவன் மற்ற ஜனங்களிடமிருந்து பிரிக்கப்படவேண்டும். அவன் குற்றவாளியாகி அதனால் தண்டிக்கப்படுவான். ஏனென்றால் அவன் சரியான நேரத்தில் தன் அன்பளிப்பை கர்த்தருக்குச் செலுத்தவில்லை.
14 “உங்களோடு வாழ்கின்ற அயல் நாட்டுக்காரன், கர்த்தரின் பஸ்காப் பண்டிகையை பகிர்ந்துகொள்ள விரும்பலாம், இதனை அனுமதிக்கலாம். ஆனால், அவன் பஸ்காவின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவ்விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரிதான்” என்றார்.
மேகமும் நெருப்பும்
15 பரிசுத்தக் கூடாரத்தையும், உடன்படிக்கையின் கூடாரத்தையும் அமைத்த அன்று, கர்த்தரின் மேகமானது அதை மூடிற்று. மாலை முதல் காலைவரை பரிசுத்தக் கூடாரத்திற்கு மேலுள்ள மேகமானது நெருப்பு போல் காணப்பட்டது. 16 அம்மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் எப்போதும் இருந்தது. இரவு நேரத்தில் அது நெருப்புபோல தோன்றியது. 17 மேகமானது பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நகர்ந்தபோது, இஸ்ரவேலரும் கூடவே சென்றனர். அம்மேகம் நின்ற இடத்தில் அவர்கள் தங்கள் முகாமை அமைத்தனர். 18 இவ்வாறு எப்போது புறப்பட வேண்டும், எப்போது நிற்க வேண்டும், முகாமை எங்கே அமைக்க வேண்டும் என்பதையெல்லாம் இஸ்ரவேலர்களுக்கு கர்த்தர் சுட்டிக் காட்டினார். அங்கே மேகம் நிலைத்திருக்கும்வரை அவர்கள் அங்கேயே தங்கள் முகாமை அமைத்திருந்தனர். 19 சில வேளைகளில் அம்மேகமானது நீண்ட காலம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் தங்கியிருக்கும். கர்த்தரின் கட்டளைக்குப் பணிந்து இஸ்ரவேலர்கள் அதை விட்டு நகராமல் இருந்தனர். 20 சில வேளைகளில், மேகமானது பரிசுத்தக் கூடாரத்தின்மேல் சில நாட்களே தங்கியிருக்கும். எனவே, அவர்கள் கர்த்தரின் கட்டளைக்கு அடிபணிந்து, அது நகரும்போது அவர்களும் நகர்ந்தனர். 21 சில வேளைகளில் மேகமானது இரவு மட்டுமே தங்கியிருக்கும். மறுநாள் காலையில் அது நகர்ந்துவிடும். அப்போது அவர்களும் தங்கள் பொருட்களை கட்டிக்கொண்டு பின்பற்றிச் செல்வார்கள். மேகமானது பகலில் நகர்ந்தாலும், அல்லது இரவில் நகர்ந்தாலும் இஸ்ரவேல் ஜனங்கள் அதைப் பின்பற்றிச் சென்றனர். 22 அந்த மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் இரண்டு நாட்களோ, ஒரு மாதமோ, ஒரு ஆண்டோ இருந்தால் அவர்களும் அங்கே தங்கியிருப்பார்கள். கர்த்தரின் ஆணைப்படி மேகம் நகரும்வரை அவர்களும் நகரமாட்டார்கள். எப்போது மேகம் எழும்பி நகருகிறதோ அப்போது அவர்களும் நகருவார்கள். 23 எனவே, ஜனங்கள் இவ்வாறு கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். கர்த்தரின் ஆணைப்படி முகாமை அமைத்தனர். கர்த்தர் சொல்லும்போது முகாமை கலைத்து விட்டுப் புறப்பட்டனர். ஜனங்கள் மிக எச்சரிக்கையாகக் கவனித்து மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடி கீழ்ப்படிந்தனர்.
வெள்ளி எக்காளங்கள்
10 கர்த்தர் மோசேயிடம், 2 “வெள்ளியைப் பயன்படுத்தி அடிப்பு வேலையினால் இரண்டு எக்காளங்களை செய்துகொள்ளுங்கள். இந்த எக்காளங்கள் ஜனங்களை கூப்பிட்டு எப்போது நகர வேண்டும் என்பதை அறிவிப்பதற்காகப் பயன்படும். 3 இரண்டு எக்காளங்களையும் தொடர்ச்சியாக பெருந்தொனியாக ஊதினால் இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட வேண்டும். 4 ஆனால் ஒரே ஒரு எக்காளத்தை மட்டும் பெருந்தொனியாகத் தொடர்ந்து ஊதினால், தலைவர்கள் மட்டும், உன்னைச் சந்திக்க கூடிவர வேண்டும். (தலைவர்கள் என்பது 12 இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் ஆகும்.)
5 “எக்காளங்களை குறைந்த நேரம் ஊதினால், ஜனங்கள் தங்கும் இடங்களைக் கலைத்து விட்டுப் புறப்படவேண்டும் என்று அர்த்தமாகும். முதல்முறை குறைந்த நேரம் ஊதும்போது ஆசரிப்புக் கூடாரத்தின் கிழக்குப் பக்கத்தில் தங்கி இருக்கும் குடும்பங்கள் புறப்பட வேண்டும். 6 இரண்டாவது முறை குறைந்த நேரம் ஊதினால், ஆசரிப்புக் கூடாரத்தின் தென் பக்கத்தில் பாளையமிட்ட குடும்பங்கள் நகர வேண்டும். 7 ஆனால் நீ ஜனங்கள் அனைவரையும் கூட்ட வேண்டும் என்று விரும்பினால் எக்காளங்களை சற்று வித்தியாசமாக ஓயாமல் நெடுநேரம் ஊத வேண்டும். 8 ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் மாத்திரமே எக்காளங்களை ஊத வேண்டும். இதுவே என்றென்றும் வரும் தலைமுறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய சட்டமாகும்.
9 “நீங்கள் உங்கள் சொந்த பூமியில் பகைவர்களோடு சண்டையிட வேண்டி வந்தால் எக்காளத்தை மிகச் சத்தமாகப் போருக்கு முன் ஊதுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அதனைக் கேட்டு உங்கள் பகைவரிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார். 10 உங்களது சிறப்புக் கூட்டங்களுக்கும், மாதப் பிறப்பு நாட்களிலும், மகிழ்ச்சிக் காலங்களிலும் எக்காளங்களை ஊதுங்கள். நீங்கள் தகன பலியும், சமாதான பலியும் கொடுக்கும்போதெல்லாம் எக்காளங்களை ஊதுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை நினைவுகூருவதற்கு இந்த எக்காளச் சத்தம் உதவும். இவ்வாறு செய்யுமாறு நான் கட்டளையிடுகிறேன், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.
இஸ்ரவேல் ஜனங்கள் முகாமோடு புறப்படுதல்
11 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாவது மாதத்தின் 20 ஆம் நாளில், உடன்படிக்கைக் கூடாரத்தின் மேல் இருந்த மேகமானது எழும்பிற்று. 12 எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் சீனாய் பாலைவனத்தைக் கடந்து பாரான் பாலைவனத்தில் நிற்கும்வரை பயணம் செய்தனர். 13 இதுவே இஸ்ரவேல் ஜனங்கள் தம் முகாமை கலைத்துவிட்டு, முதல் முதலாக புறப்பட்ட சம்பவம் ஆகும். மோசேயிடம் கர்த்தர் ஆணையிட்டபடியே அவர்கள் நகர்ந்து சென்றனர்.
14 யூதாவின் முகாமில் உள்ள மூன்று குழுக்களும் முதலில் சென்றன. அவர்கள் தங்கள் கொடியோடு பயணம் செய்தனர். முதல் குழுவானது யூதாவின் கோத்திரமாகும். அம்மினதாபின் மகனான நகசோன் அக்குழுவின் தலைவனாக இருந்தான். 15 அடுத்து இசக்காரின் கோத்திரம் வந்தது. சூவாரின் மகனான நெதனெயேல் இதற்குத் தலைவனாக இருந்தான். 16 அதற்கு அடுத்து செபுலோனின் கோத்திரம் வந்தது. ஏலோனின் மகனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான்.
17 பிறகு, பரிசுத்தக் கூடாரம் இறக்கி வைக்கப்பட்டது.பரிசுத்தக் கூடாரத்தைக் கெர்சோன் மற்றும் மெராரி குடும்பத்தில் உள்ளவர்கள் சுமந்துகொண்டு வந்தனர். எனவே, இக்குடும்பத்தவர்கள் இவ்வரிசையில் அடுத்ததாக வந்தனர்.
18 பிறகு ரூபனின் முகாமைச் சேர்ந்த மூன்று குழுக்களும் வந்தன, அவர்கள் தம் கொடியோடு பயணம் செய்தனர். முதலில் ரூபனின் கோத்திரம் வந்தது. சேதேயூரின் மகன் எலிசூர் இதற்குத் தலைவனாக இருந்தான். 19 அடுத்து சிமியோனின் கோத்திரம் வந்தது. சூரிஷதாயின் மகனான செலூமியேல் இதற்குத் தலைவனாயிருந்தான். 20 அதற்கு அடுத்து காத் கோத்திரம் வந்தது, தேகுவேலின் மகனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான், 21 பிறகு கோகாத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரிசுத்த இடத்தில் இருக்கும் பரிசுத்தப் பொருட்களைச் சுமந்துவந்தனர். இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் பரிசுத்த கூடாரத்தை அமைத்து முடிப்பார்கள்.
22 அதற்குப் பிறகு எப்பிராயீம் கோத்திரத்தின் முகாமில் இருந்து மூன்று குழுக்கள் தங்கள் கொடிகளோடு பயணம் செய்தனர். முதலில் எப்பிராயீமின் கோத்திரம் வந்தது. அம்மியூதின் மகனான எலிஷாமா அதற்குத் தலைவனாக இருந்தான். 23 அடுத்து மனாசேயின் கோத்திரம் வந்தது. பெதாசூரின் மகனான கமாலியேல் அதற்குத் தலைவனாக இருந்தான். 24 அடுத்து பென்யமீன் கோத்திரம் வந்தது. கீதெயோனின் மகனான அபீதான் அதற்குத் தலைவனாக இருந்தான்.
25 இவ்வரிசையில் உள்ள கடைசி மூன்று கோத்திரங்களும் மற்றக் கோத்திரங்களுக்குப் பாதுகாவலாக இருந்தது. அது தாண் கோத்திரத்தின் பிரிவுகள் ஆகும். அவர்கள் தங்கள் கொடியோடு பயணம் செய்தனர். முதலில் தாணின் கோத்திரம் வந்தது. அம்மிஷதாயின் மகனான அகியேசேர் அதற்குத் தலைவனாக இருந்தான். 26 அடுத்து ஆசேர் கோத்திரம் வந்தது. ஓகிரானின் மகனான பாகியேல் அதற்குத் தலைவனாக இருந்தான். 27 நப்தலியின் கோத்திரம் அதற்கு அடுத்து வந்தது. ஏனானின் மகனான அகிரா அதற்குத் தலைவனாக இருந்தான். 28 இவ்வாறுதான் இஸ்ரவேல் ஜனங்கள் ஓரிடத்தை விட்டு இன்னொரு இடத்துக்குப் போகும்போது வரிசை முறையைக் கைக்கொண்டனர்.
29 ஓபாப், மீதியானியனான ரெகுவேலின் மகன். (ரெகுவேல் மோசேயின் மாமனார்.) மோசே ஓபாபிடம், “தேவன் எங்களுக்கு தருவதாக வாக்களித்துள்ள நாட்டிற்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம். எங்களோடு வாரும், உமக்கு நாங்கள் நல்லவர்களாக இருப்போம். இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் நன்மை செய்வதாக வாக்களித்துள்ளார்” என்று கூறினார்.
30 ஆனால் ஓபாப், “இல்லை நான் உங்களோடு வரமாட்டேன். நான் எனது தாய் நாட்டிற்குத் திரும்பிப் போகிறேன். அங்கே என் சொந்த ஜனங்கள் இருக்கின்றனர்” என்றான்.
31 பிறகு மோசே, “தயவுசெய்து எங்களைவிட்டுப் போகாதிரும், எங்களைவிட இந்தப் பாலைவனத்தைப்பற்றி உமக்கு நன்றாகத் தெரியும். நீர் எங்களுக்கு வழிகாட்டியாக இரும். 32 நீர் எங்களோடு வந்தால், கர்த்தர் எங்களுக்கு அளிக்கும் நன்மையை உம்மோடு பகிர்ந்துகொள்வோம்” என்றான்.
33 எனவே, ஓபாப் ஒப்புக்கொண்டான். பிறகு அவர்கள் கர்த்தரின் மலையிலிருந்து பயணம் செய்தனர். ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு முன்னே சென்றார்கள். மூன்று நாட்கள் அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து பயணம் செய்து முகாம் அமைப்பதற்காக இடம் பார்த்தனர். 34 கர்த்தரின் மேகமானது தினமும் அவர்களுக்கு மேல் சென்றது. ஒவ்வொரு நாள் காலையிலும் அது வழிகாட்டிய வண்ணம் சென்றது.
35 ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு நகரும்போதெல்லாம் மோசே:
“கர்த்தாவே எழுந்திரும்!
உமது பகைவர்கள் சிதறடிக்கப்படட்டும்.
உமது பகைவர்கள் உம்மைவிட்டு ஓடட்டும்” என்று சொன்னான்.
36 பரிசுத்தப் பெட்டியை அவர்கள் கீழே வைக்கும்போதெல்லாம் மோசே எப்பொழுதும்,
“கர்த்தாவே, அநேக ஆயிரங்களான இஸ்ரவேல் ஜனங்களிடம் திரும்பி வாரும்” என்று சொன்னான்.
ஜனங்கள் மீண்டும் முறையிடுதல்
11 ஜனங்கள் தங்கள் துன்பங்களைப்பற்றி முறுமுறுக்க ஆரம்பித்தனர். கர்த்தர் அவர்களது முறுமுறுப்புகளைக் கேட்டு அதனால் கோபம் கொண்டார். கர்த்தரிடமிருந்து நெருப்பு தோன்றி, முகாமின் ஓரங்களில் உள்ள சில ஜனங்களை எரித்தது. 2 எனவே ஜனங்கள் மோசேயிடம் தம் மக்களைக் காப்பாற்றுமாறு கதறினார்கள். மோசே கர்த்தரிடம் வேண்டுதல் செய்ததினால் நெருப்பு அணைந்து போயிற்று. 3 எனவே அந்த இடம் தபேரா என்று அழைக்கப்பட்டது. கர்த்தர் நெருப்பின் மூலம் அவர்கள் முகாமை எரித்ததால் இந்தப் பெயர் அந்த இடத்திற்கு ஏற்பட்டது.
எழுபது முதிய தலைவர்கள்
4 இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்ந்த அயல் நாட்டுக்காரர்கள் மற்றப் பொருட்களை உண்ண ஆசைப்பட்டார்கள். எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். அந்த ஜனங்கள், “நாங்கள் இறைச்சியை உண்ண ஆசைப்படுகிறோம்! 5 நாங்கள் எகிப்தில் உண்ட மீன்களை எண்ணிப் பார்க்கிறோம். அவை எங்களுக்கு விலையில்லாதது. அங்கு எங்களுக்கு வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற நல்ல காய்கறிகளும் இருந்தன. 6 ஆனால் இப்போது நாங்கள், எங்கள் பலத்தை இழந்துவிட்டோம். இந்த மன்னாவை மட்டுமே உண்கிறோம், வேறு எதையும் புசிப்பதில்லை” என்றனர். 7 (இந்த மன்னா சிறிய கொத்தமல்லி விதை போன்று அளவிலும் மரப்பிசின் போன்று தோற்றத்திலும் இருக்கும். 8 ஜனங்கள் இந்த மன்னாவைப் பொறுக்கிக்கொண்டு வந்து அதனைக் கல்லால் அரைத்து பானையில் போட்டு சமைப்பார்கள். அல்லது அதனை எந்திரங்களில் அரைத்து மாவாக்கி அப்பங்களாகச் செய்வார்கள். இந்த அப்பங்கள் ஒலிவ எண்ணெயால் செய்யப்பட்ட இனிப்பு அப்பங்களைப்போல சுவையாக இருக்கும். 9 பூமி பனியால் நனைந்திருக்கும்போது ஒவ்வொரு இரவும் இந்த மன்னா தரையில் விழும்.)
10 மோசே ஜனங்களின் முறையீட்டைக் கேட்டான். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களும் தங்கள் தங்கள் கூடார வாசலில் இருந்துகொண்டு முறையிட்டார்கள். இதனால், கர்த்தர் பெருங்கோபம் கொண்டார். மோசேயும் இதனால் சஞ்சலப்பட்டான். 11 மோசே கர்த்தரிடம், “கர்த்தாவே, ஏன் எனக்கு இந்தத் தொல்லையைத் தந்தீர்? நான் உமது ஊழியன். நான் என்ன தவறு செய்தேன்? நான் உமக்கு என்ன பொல்லாப்பு செய்தேன்? இவ்வளவு மிகுதியான ஜனங்களுக்கான பொறுப்பினை ஏன் எனக்குக் கொடுத்தீர்? 12 நான் இவர்களின் தந்தை அல்ல என்பதையும், நான் இவர்களைப் பெற்றெடுக்கவில்லை என்பதையும் நீர் அறிவீர். ஆனால் ஒரு தாதி ஒரு குழந்தையைக் கைகளில் தாங்கிச் செல்வது போன்று நான் தாங்கிச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. ஏன் இதனை என்மேல் சுமத்தினீர்? என் முன்னோருக்குத் தருவதாகச் சொன்ன தேசத்திற்கு இவர்களை அழைத்துப் போகும் பொறுப்பை என்மேல் ஏன் சுமத்தினீர்? 13 இவர்கள் அனைவருக்கும் தேவையான இறைச்சி என்னிடம் இல்லை. அவர்கள் தொடர்ந்து முறையிட்டுக்கொண்டு ‘எங்களுக்கு இறைச்சியைத் தாரும்’ என்று கேட்கிறார்கள்! 14 நான் ஒருவனாக இவர்கள் அத்தனை பேரையும் கவனித்துக்கொள்ளமுடியாது. இந்தச் சுமை எனக்கு மிகவும் அதிகமாக உள்ளது. 15 இதுபோல் தொடர்ந்து நீர் எனக்கு அவர்களின் தொல்லைகளைக் கொடுப்பதாக இருந்தால், இப்போது என்னைக் கொன்றுவிடும். உமது ஊழியனாக என்னை ஏற்றுக்கொண்டால், இப்போது எனக்கு மரணத்தைத் தாரும். நான், என் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவேன்” என்றான்!
16 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களில் 70 முதிய தலைவர்களை என்னிடம் அழைத்து வா. இவர்கள் இஸ்ரவேலர்களின் தலைவர்களாயிருக்கிறார்கள். அவர்களை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் அழைத்து வா. அவர்கள் உன்னோடு நிற்கட்டும். 17 பிறகு நான் இறங்கி வந்து உன்னோடு பேசுவேன். இப்போது ஆவியானவர் உன்மேல் உள்ளார். ஆனால் அவர்களுக்கும் ஆவியை அளிப்பேன். பிறகு இந்த ஜனங்களைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பில் அவர்கள் உனக்கு உதவுவார்கள். இவ்வகையில் நீ மட்டும் தனியாக இவர்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியதிருக்காது.”
18 “இவற்றை ஜனங்களிடம் கூறு: நாளைக்காக உன்னைத் தயார் செய்துகொள்! நாளை நீங்கள் இறைச்சி உண்பீர்கள். நீங்கள் முறையிட்டபோது கர்த்தர் அதனைக் கேட்டார். ‘எங்களுக்கு உண்ண இறைச்சி வேண்டும், எகிப்து எங்களுக்கு நன்றாக இருந்தது!’ என்று நீங்கள் சொன்ன சொற்களை கர்த்தர் கேட்டார். எனவே, இப்போது கர்த்தர் உங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பார். 19 நீங்கள் ஒரு நாள் அல்லது, இரு நாள் அல்லது, ஐந்து நாள் அல்லது, பத்து நாள் அல்லது, இருபது நாட்களுக்கு மேலாக இறைச்சியை உண்பீர்கள்! 20 நீங்கள் இந்த மாதம் முழுவதும்கூட இறைச்சியை உண்பீர்கள். அது உங்களுக்குத் திகட்டும்வரைக்கும் உண்பீர்கள். நீங்கள் கர்த்தருக்கு எதிராக முறையிட்டதினால் இது உங்களுக்கு ஏற்படும். கர்த்தர் உங்களோடு வாழ்கிறார். உங்களது தேவைகளை அவர் அறிவார். ஆனால் நீங்கள் அழுதீர்கள்! அவரிடம் முறையிட்டீர்கள். நாங்கள் எகிப்தை விட்டு ஏன் வந்தோம்? என்று கூறுகிறீர்கள்” என்றார்.
21 மோசே, “கர்த்தாவே இங்கே 6,00,000 மனிதர்கள் உள்ளனர். ஆனால் நீர் ‘இவர்கள் ஒரு மாதத்திற்குப் போதுமானபடி உண்ண இறைச்சியைக் கொடுப்பேன்’ என்று கூறுகிறீர். 22 நாம் இங்குள்ள அத்தனை ஆடுகளையும், மாடுகளையும் கொன்றாலும் கூட அது போதுமானதாக இராது. கடலில் உள்ள அத்தனை மீன்களையும் பிடித்தாலும்கூட அவை போதுமானதாக இராது” என்றான்.
23 ஆனால் கர்த்தர் மோசேயிடம், “கர்த்தருடைய வல்லமையைக் குறைவாக எடை போடாதே! நான் சொன்னபடி என்னால் செய்யமுடியுமா? என்பதை இப்போது காண்பாய்” என்றார்.
24 எனவே, ஜனங்களோடு பேச மோசே வெளியே சென்றான். கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் மோசே ஜனங்களிடம் கூறினான். பின் 70 முதிய இஸ்ரவேல் தலைவர்களைக் கூட்டி அழைத்து வந்தான். ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி நிற்குமாறு அவர்களிடம் கூறினான். 25 பிறகு கர்த்தர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார். மோசேயின் மேல் ஆவியானவர் இருந்தார். அதே ஆவியை 70 முதிய தலைவர்கள் மேலும் கர்த்தர் வைத்தார். அவர்கள்மேல் ஆவி வந்ததும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் மட்டுமே அவ்வாறு நடந்துகொண்டனர்.
26 அப்போது எல்தாத், மேதாத் எனும் இரு முதிய தலைவர்கள் மட்டும் கூடாரத்திற்கு வெளியே போகவில்லை. அவர்களின் பெயர் முதிய தலைவர்களின் பட்டியலில் இருந்தது. எனினும் அவர்கள் கூடாரத்திற்குள்ளேயே இருந்துவிட்டனர். எனினும் அவர்கள் மீதும் ஆவி வந்தது. அவர்கள் கூடாரத்திற்குள்ளிருந்தே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 27 ஒரு இளைஞன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் கூடாரத்திற்குள் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள்” என்றான்.
28 நூனின் மகனாகிய யோசுவா மோசேயிடம், “மோசே ஐயா, நீங்கள் அவர்களைத் தடுக்கவேண்டும்” என்றான். (யோசுவா தன் சிறு வயதிலிருந்தே மோசேயிடம் உதவியாளனாக இருந்தான்.)
29 ஆனால் மோசே, “நான் இப்போது தலைவன் இல்லை என்று ஜனங்கள் நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறாயா? கர்த்தரின் ஜனங்கள் அனைவரும் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அவர்கள் அனைவர் மேலும் கர்த்தர் தன் பரிசுத்த ஆவியை வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான். 30 பிறகு மோசேயும் இஸ்ரவேல் தலைவர்களும் கூடாரத்திற்குள் சென்றனர்.
காடைகள் அனுப்பப்படுதல்
31 பிறகு கடலிலிருந்து பெருங்காற்று அடிக்குமாறு கர்த்தர் செய்தார். அக்காற்று காடைகளைக் கொண்டு வந்தது. காடைகள் கூடாரத்தைச் சுற்றிலும் பறந்து வந்து தரையில் விழுந்தன. தரையின் மேல் மூன்றடி உயரத்திற்கு அவை விழுந்துகிடந்தன. ஒரு மனிதன் எல்லா திசைகளிலும் ஒரு நாள் முழுவதும் நடக்கும் தூரம்வரை அக்காடைகள் கிடந்தன. 32 ஜனங்கள் மகிழ்ச்சியோடு சென்றனர்! அவர்கள் இரவும் பகலுமாக அவற்றைச் சேகரித்தனர். ஒவ்வொருவரும் மறுநாளும் அவற்றைச் சேகரித்தனர். அவர்கள் குறைந்தபட்சம் 60 மரக்கால் அளவு சேர்த்தனர். அவற்றை வெயிலில் காயும்படி முகாம்களைச் சுற்றிலும் பரப்பி வைத்தனர்.
33 ஜனங்கள் அந்த இறைச்சியை உண்ண ஆரம்பித்தனர். ஆனால் கர்த்தரோ பெருங்கோபம் கொண்டார். அவர்கள் வாயில் இறைச்சி இருக்கும்போதே, அவற்றை அவர்கள் தின்று முடிக்கும் முன்னரே அவர்கள் நோயுறும்படி கர்த்தர் செய்தார். அதனால் பலர் மரித்துப்போனார்கள். அங்கேயே புதைக்கப்பட்டனர். 34 எனவே ஜனங்கள் அந்த இடத்திற்கு “கிப்ரோத் அத்தாவா” என்று பெயர் வைத்தனர். இறைச்சி மேல் அதிக ஆசை கொண்டு மரித்தவர்கள் புதைக்கப்பட்ட இடம் என்று இதற்கு பொருள்.
35 கிப்ரோத் அத்தாவா என்ற இடத்திலிருந்து அவர்கள் பயணப்பட்டு ஆஸ்ரோத்துக்குப் போய் அங்கே தங்கினார்கள்.
மிரியாமும் ஆரோனும் மோசே பற்றி முறையிடல்
12 மிரியாமும், ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேச ஆரம்பித்தனர். அவன் ஒரு எத்தியோப்பிய பெண்ணை மணந்துகொண்டதால் அவனைப் பற்றி அவர்கள் அவதூறு பேசினார்கள். அவன் எத்தியோப்பிய பெண்னை மணந்துகொண்டது சரியல்ல என அவர்கள் எண்ணினார்கள். 2 அவர்கள் தமக்குள், “ஜனங்களோடு பேசுவதற்கு கர்த்தர் மோசே ஒருவனை மட்டும் பயன்படுத்தவில்லை. எங்கள் மூலமாகவும் கர்த்தர் பேசினார்” என்று கூறிக்கொண்டனர்!
கர்த்தர் இதனைக் கேட்டார். 3 (மோசே மிகவும் தாழ்மையான குணமுள்ளவன். அவன் தனக்குள் பெருமையுள்ளவன் அல்ல. பூமியிலுள்ள மற்ற மனிதர்களைவிட அவன் மிகவும் சாந்த குணமுள்ளவன்.) 4 எனவே கர்த்தர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகிய மூவருடனும் பேசி, “நீங்கள் மூவரும் இப்பொழுது ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வாருங்கள்” என்று சொன்னார்.
5 உயரமான மேகத்திலிருந்து கர்த்தர் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் நின்று: “ஆரோன்! மிரியாம்!” என்று அழைத்தார். ஆரோனும் மிரியாமும் அவரிடம் சென்றனர். 6 தேவன், “நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்குத் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். கர்த்தராகிய நான் அவர்களுக்குக் காட்சியளிப்பேன். அவர்களோடு கனவில் பேசுவேன். 7 ஆனால் மோசே அத்தகையவன் அல்ல. மோசே எனது உண்மையான ஊழியன். நான் அவனை எனது வீட்டில் எல்லா விதத்திலும் நம்பிக்கையும், உண்மையுள்ளவனாகவும் காண்கிறேன். 8 நான் அவனோடு பேசும்போது, முகமுகமாய் பேசுகிறேன். மறைபொருளான கதைகளையல்ல, அவன் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை நான் தெளிவாகக் கூறிவிடுவேன். கர்த்தரின் தோற்றத்தையே மோசே பார்க்க இயலும். எனவே, ஏன் நீங்கள் எனது ஊழியனான மோசேக்கு எதிராகப் பேசத் துணிந்தீர்கள்?” என்று கேட்டார்.
9 கர்த்தர் அவர்கள் மீது பெருங்கோபத்தோடு இருந்தபடியால் அவர்களைவிட்டு கர்த்தர் விலகினார். 10 மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பிச் சென்றது. ஆரோன் திரும்பி மிரியாமைப் பார்த்தான். அவளது தோல் பனியைப் போன்று வெளுத்திருந்தது. அவளுக்குப் பயங்கரமான தொழுநோய் ஏற்பட்டது!
11 பிறகு ஆரோன் மோசேயிடம், “ஐயா, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் முட்டாள்தனமாக பாவம் செய்துவிட்டோம். 12 மரித்துப் பிறந்த குழந்தையைப் போல அவள் தன் தோலை இழக்க விட்டுவிடாதிரும்” என்றான். (சில வேளையில் சில குழந்தைகள் பாதிதோல் அழுகிய நிலையில் மரித்துப் பிறப்பதுண்டு.)
13 எனவே மோசே கர்த்தரிடம் விண்ணப்பம் செய்து, “தேவனே தயவு செய்து இவளது தொழு நோயைப் போக்கிவிடும்” என்றான்.
14 கர்த்தர் மோசேயை நோக்கி, “அவளது தந்தை அவள் முகத்தின் மீது உமிழ்ந்தால், அவளுக்கு ஏழு நாட்கள் அவமானமாக இருக்கும். எனவே, அவளை முகாமிற்கு வெளியே ஏழு நாட்கள் வைத்திரு. அதற்குப் பிறகு அவள் குணமாவாள். பின்னர் அவள் கூடாரத்திற்குத் திரும்பலாம்” என்றார்.
15 ஆகையால் அவர்கள் மிரியாமை ஏழு நாட்கள் முகாமிற்கு வெளியே வைத்திருந்தனர். அவளைத் திரும்பக் கூடாரத்திற்குள் அழைத்துக்கொள்ளும்வரை அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. 16 அதன்பின் அவர்கள் ஆஸ்ரோத்தை விட்டு பாரான் பாலைவனத்துக்குச் சென்று, அங்கே முகாமிட்டனர்.
கானானுக்குப் போன ஒற்றர்கள்
13 கர்த்தர் மோசேயிடம், 2 “கானான் தேசத்தைக் கண்டு வருமாறு சிலரை அனுப்பு. இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கப்போகும் நாடு இதுதான். குடும்பத்திற்கு ஒரு தலைவன் என்கிற வீதம் 12 கோத்திரங்களில் இருந்தும் 12 தலைவர்களை அங்கு அனுப்பு” என்று கூறினார்.
3 கர்த்தருடைய கட்டளைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஜனங்கள் அனைவரும் பாரான் பாலைவனத்தில் தங்கியிருந்தபோது இந்தத் தலைவர்களை மோசே கானானுக்கு அனுப்பி வைத்தான்.
4 ரூபனின் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகனான சம்முவா;
5 சிமியோனின் கோத்திரத்திலிருந்து ஓரியின் மகனான சாப்பாத்;
6 யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேப்;
7 இசக்காரின் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் மகனான ஈகால்;
8 எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து நூனின் மகனான ஓசேயா;
9 பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் மகனான பல்த்தி;
10 செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகனான காதியேல்;
11 யோசேப்பின் கோத்திரத்திலிருந்து (மனாசே) ஆசின் மகனான காதி;
12 தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் மகனான அம்மியேல்;
13 ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாவேலின் மகனான சேத்தூர்;
14 நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேதியின் மகனான நாகபி;
15 காத் கோத்திரத்திலிருந்து மாகியின் மகனான கூவேல்;
16 நாட்டைப் போய் கண்டுபிடிக்கவும், அதைப் பற்றி அறியவும் மோசேயால் அனுப்பட்டவர்களின் பெயர்கள் இவைகளே ஆகும். (நூனின் மகனான ஓசேயாவுக்கு மோசே, யோசுவா என்று பெயர் வைத்திருந்தான்.)
17 மோசே அவர்களைக் கானான் தேசத்தைக் கண்டு வருமாறு அனுப்பும்போது அவர்களிடம், “நீங்கள் இந்தப் பாலைவனத்தின் தெற்குப் பகுதி வழியாகச் சென்று மலையில் ஏறவேண்டும். 18 அந்த நாடு எவ்வாறு தோற்றம் அளிக்கிறது என்று பார்க்க வேண்டும், அங்கே வாழுகிற ஜனங்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் பலமானவர்களா, அல்லது பலவீனமானவர்களா? அவர்களின் எண்ணிக்கை குறைவா, மிகுதியா? 19 நாட்டைப் பற்றியும் அதில் வாழும் ஜனங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள், இது நல்ல நாடா கெட்ட நாடா? எந்த விதமான பட்டணங்களில் குடியிருக்கிறார்கள்? நகரங்களைப் பாதுகாக்க மதில் சுவர்கள் உள்ளனவா? நகரங்கள் பலமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனவா? 20 நாட்டிலுள்ள மற்ற செய்திகளைப் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள். அங்குள்ள மண் விவசாயம் செய்வதற்குரிய வளம் உள்ளதா, அல்லது சாரம் அற்றதா? இந்நாட்டில் மரங்கள் உள்ளனவா? அங்குள்ள பழவகைகளில் சிலவற்றைக் கொண்டு வர முயலுங்கள்” என்றான். (அது முதல் திராட்சைகள் பழுக்கும் காலமாய் இருந்தது.)
21 எனவே அவர்கள் நாட்டைப் பற்றித் தெரிந்துக்கொள்ளச் சென்றனர். பின் அவர்கள் சீன் பாலைவனம் முதல் ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை சுற்றிப் பார்த்தனர். 22 நெகேவ் வழியாக நாட்டிற்குள் நுழைந்தனர். தெற்கேயும் எபிரோன் வரை சென்றார்கள். (எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.) அங்கே ஆனாக்கின் சந்ததியாகிய அகீமானும், சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். 23 பிறகு அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை சென்றனர். அங்கே அவர்கள் திராட்சைக் கொடியில் ஒரு குலையை அறுத்துக்கொண்டனர். அதனை ஒரு கம்பிலே கட்டி, இரண்டு பேர் தூக்கிக்கொண்டு வந்தனர். அவர்கள் மாதுளம் பழங்களிலும், அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தனர். 24 அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்த இடத்தில்தான் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு குலை திராட்சை பழத்தைக் கொடியோடு வெட்டிக் கொண்டு வந்தார்கள்.
25 அவர்கள் 40 நாட்கள் அந்த தேசத்தை நன்கு சுற்றி பார்த்தனர். பிறகு அவர்கள் தங்கள் முகாமுக்கு திரும்பி வந்தனர். 26 இஸ்ரவேல் ஜனங்கள் பாரான் பாலைவனத்தில் காதேஷ் என்ற இடத்துக்கு அருகில் தம் கூடாரங்களை அடித்திருந்தனர். அவர்கள் மோசே, ஆரோன் மற்றும் மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தனர். அந்நாட்டிலிருந்து கொண்டு வந்த பழங்களைக் காட்டினார்கள். 27 மேலும் அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய இடத்திற்கு நாங்கள் சென்றோம். பல நல்ல பொருட்களால் நிறைந்த நாடு அது. அங்கே பழுத்துள்ள சில பழங்களில் கொஞ்சம் இதோ; 28 ஆனால் அங்கு ஜனங்கள் மிகவும் பலமுள்ளவர்களாக வாழ்கிறார்கள். நகரங்கள் மிகவும் விரிவானவை, மிகவும் பலமான பாதுகாப்பு கொண்டவை. அங்கே சில ஏனாக்கின் ஜனங்களையும் கண்டோம். 29 அமலேக்கியர் தென்புறமான நாட்டில் குடியிருக்கிறார்கள். மலை நாடுகளில் ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் குடியிருக்கிறார்கள். கானானியர்கள் கடற்கரைகளிலும், யோர்தான் நதி அருகேயும் வாழ்கிறார்கள்” என்றனர்.
30 மோசேயின் அருகே இருந்த ஜனங்களைக் காலேப் அமைதிப்படுத்தி, “நாம் போய் அந்நாட்டை நமக்குரியதாக எடுத்துக்கொள்வோம். நாம் எளிதில் இவர்களை வென்றுவிடலாம்” என்றான்.
31 ஆனால் அவனோடு சென்று வந்த மற்றவர்களோ, “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்கள்” என்றனர். 32 மேலும் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் தம்மால் அந்நாட்டில் உள்ளவர்களை வெல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தனர். அவர்கள், “நாங்கள் பார்வையிட்ட அந்நாட்டில் பலமுள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே அங்கே செல்லும் எவரையும் அவர்கள் எளிதாக வென்று விடுவார்கள். 33 அங்கே நாங்கள் இராட்சதர்களையும் பார்த்தோம்! (ஏனாக்கின் சந்ததியிலுள்ள சிலர் இராட்சதப் பிறவிகளாயிருந்தனர்.) எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன் நாங்கள் சிறிய வெட்டுக்கிளிகளைப் போன்று இருந்தோம். அவர்களது பார்வையில் நாங்களும் அப்படியே தோன்றினோம்!” என்றார்கள்.
ஜனங்கள் மீண்டும் முறையிடுதல்
14 அன்று இரவு, முகாம்களில் உள்ள அனைவரும் கூக்கூரலிட்டுப் புலம்பினார்கள். 2 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டனர். அவர்கள் அனைவரும் கூடி மோசேயிடமும், ஆரோனிடமும், “நாம் எகிப்து நாட்டிலோ பலைவனங்களிலோ மரித்துப்போயிருக்கலாம், இவ்வாறு புதிய நாட்டில் கொல்லப்படுவதைவிட அது மேலானது. 3 நாம் இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு, நமது மனைவியரையும், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது” என்றனர்.
4 பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர்.
5 அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களின் முன்பும், மோசேயும், ஆரோனும் தரையில் பணிந்து வணங்கினார்கள். 6 யோசுவாவும் காலேப்பும் மிகவும் மனமுறிவடைந்தனர். (யோசுவா நூனின் மகன். காலேப் எப்புன்னேயின் மகன். இருவரும் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தவர்கள்.) 7 அங்கே கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களிடம் அந்த இருவரும், “நாங்கள் பார்த்த அந்த நாடு நன்றாக இருக்கிறது. 8 அது நல்ல பொருட்கள் பலவற்றால் நிறைந்த நாடு. கர்த்தர் நம்மீது விருப்பம் உடையவராக இருந்தால், அவர் அந்த நாட்டுக்குள் நம்மை வழி நடத்திச் செல்லுவார். அந்த நாட்டை கர்த்தர் நமக்குத் தருவார். 9 எனவே கர்த்தருக்கு எதிராக திரும்பாதீர்கள். அந்த நாட்டின் ஜனங்களுக்குப் பயப்படாதீர்கள்! நாம் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, எதுவும் அவர்களைக் காப்பாற்றாது. ஆனால், நம்மோடு கர்த்தர் இருக்கிறார். எனவே, பயப்படவேண்டாம்” என்றனர்.
10 அனைத்து ஜனங்களும் யோசுவாவையும் கலேபையும் கல்லெறிந்து கொன்றுவிட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கர்த்தரின் மகிமை, ஆசரிப்புக் கூடாரத்தின் மேலே அவர்கள் அனைவரும் காணும்படி தோன்றியது. 11 கர்த்தர் மோசேயுடன் பேசினார். அவர், “எவ்வளவு காலத்திற்கு இந்த ஜனங்கள் எனக்கெதிராக இருப்பார்கள்? என் மீது நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறார்கள், என் வல்லமையின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறார்கள். நான் எத்தனையோ அடையாளங்களை அவர்களுக்கு காட்டியிருக்கிறேன். எனினும் என்னை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். நான் அவர்களுக்கிடையில் பலப் பெருங்காரியங்களைச் செய்திருக்கிறேன். 12 அவர்கள் அனைவரையும் பெருநோயால் கொன்றுவிடுவேன். அவர்களை அழிப்பேன். நான் இவர்களை விட உங்கள் ஜனத்தை பெரியதாகவும் பலமிக்கதாகவும் பண்ணுவேன்” என்றார்.
13 பிறகு மோசே கர்த்தரிடம், “நீர் இதனைச் செய்துவிட்டால், எகிப்தியர்கள் இதனைப் பற்றி கேள்விப்படுவார்கள். நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி உமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே மீட்டுவந்தீர், என்பதை அவர்கள் அறிவார்கள். 14 எகிப்திய ஜனங்கள் கானான் ஜனங்களிடம் இதைப்பற்றி கூறினார்கள். நீரே கர்த்தர் என்பதை ஏற்கெனவே அவர்கள் அறிந்திருக்கின்றனர். நீர் உமது ஜனங்களோடு இருப்பதையும், ஜனங்கள் உம்மைப் பார்த்தனர் என்பதையும் அறிந்திருக்கின்றனர். அவர்களுக்குத் தனிச்சிறப்புடைய மேகத்தைப் பற்றி தெரியும். பகல் பொழுதில் நீர் மேகத்தின் மூலம் வழிநடத்திச் சென்றதையும், இரவில் அம்மேகம் நெருப்பாகி ஜனங்களுக்கு வெளிச்சம் தந்ததையும் அவர்கள் அறிவார்கள். 15 எனவே இப்போது நீர் இந்த ஜனங்களை அழிக்கக்கூடாது. நீர் இவர்களை அழித்தால், உமது வல்லமையைப்பற்றி அறிந்த அனைத்து ஜனங்களும், 16 ‘கர்த்தர் தான் வாக்களித்தபடி தன் ஜனங்களுக்கு நாட்டை அளிக்க முடியவில்லை. எனவே, அவர் அவர்களை பாலைவனத்தில் கொன்றுவிட்டார் என்று பேசுவார்கள்’
17 “இப்போதும், ஆண்டவரே, உமது பலத்தைக் காட்டும்! உம்மைப்பற்றி நீரே சொல்லியிருக்கிறபடி செய்யும்! 18 ‘நீர் கர்த்தர் கோபப்படுகிறதற்கு தாமதம் பண்ணுகிறார். கர்த்தர் பேரன்பு கொண்டவர். சட்டங்களை மீறி குற்றம் செய்கின்றவர்களை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் அக்கிரமக்காரர்களையும், அவர்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், அவர்களின் பிள்ளைகளையும் தண்டிப்பார்’ என்று உம்மைப்பற்றி சொல்லியிருக்கிறபடியால், 19 இப்போது உமது பேரன்பை இந்த ஜனங்களிடம் காண்பித்து, இவர்களின் பாவத்தை மன்னித்தருளும், எகிப்தை விட்டுப் புறப்பட்ட நாள்முதல் நீர் மன்னித்து வருவது போலவே, இப்போதும் மன்னித்துவிடும்” என்றான்.
20 இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுக்கொண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன். 21 ஆனால் உனக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நான் இந்த பூமியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே எனது மகிமையும் பூமியில் நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். 22 எகிப்திலிருந்து என்னால் அழைத்து வரப்பட்டவர்கள் எவரும் கானான் நாட்டைக் காணமாட்டார்கள். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும் நான் பாலைவனத்தில் செய்த பெருஞ்செயல்களையும், அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. என்னைப் பத்துமுறை சோதித்திருக்கிறார்கள். 23 நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. 24 ஆனால் எனது ஊழியனான காலேப் வேறுபட்டவன். என்னை அவன் முழுமையாகப் பின்பற்றினான். எனவே அவனை ஏற்கெனவே அவன் பார்வையிட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்வேன். அவனது ஜனங்கள் அந்நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். 25 அமலேக்கியரும், கானானியரும் இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, நாளை இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு செங்கடலுக்குச் செல்லும் சாலையின் மேலுள்ள பாலைவனத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.
கர்த்தர் ஜனங்களைத் தண்டித்தல்
26 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 27 “இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தீய ஜனங்கள் எனக்கு எதிராக முறையிடுவார்கள்? நான் இவர்களின் முறையீடுகளையும், புலம்பல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன். 28 நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது: 29 நீங்கள் பாலைவனத்தில் மரித்துப்போவீர்கள். இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள, எண்ணி கணக்கிடப்பட்ட ஜனங்கள் மரிப்பார்கள். கர்த்தராகிய எனக்கு எதிராக முறையிட்டீர்கள். 30 எனவே, நான் வாக்களித்திருந்த நாட்டிற்குள் எப்புன்னேயின் மகனான காலேபும், நூனின் மகனான யோசுவாவும் தவிர வேறு எவரும் நுழைய முடியாது. 31 அந்நாட்டிலுள்ள உங்களது பகைவர்கள், உங்கள் பிள்ளைகளை அபகரித்துக்கொள்வார்கள் என்று அஞ்சி முறையிட்டீர்கள். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன், அந்தப் பிள்ளைகள் அந்நாட்டிற்குள் செல்வார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்கள். 32 உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் இந்தப் பாலைவனத்திலேயே மரித்துப் போவீர்கள்.
33 “உங்கள் பிள்ளைகள் இந்தப் பாலைவனத்தில் மேய்ப்பர்களாக 40 ஆண்டுகள் அலைந்து திரிவார்கள், நீங்கள் எனக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால், அவர்கள் துன்பப்படுவார்கள். நீங்கள் அனைவரும் இப்பாலைவனத்தில் மரித்து விழும்வரை அவர்கள் துன்பப்படுவார்கள். 34 40 ஆண்டுகள் உங்கள் பாவங்களுக்காக நீங்கள் துன்பப்படுவீர்கள். (நீங்கள் கானான் நாட்டைச் சுற்றி பார்த்தது 40 நாட்கள். ஒரு நாளுக்கு ஒரு ஆண்டு வீதம் 40 ஆண்டுகள்.) உங்களுக்கு எதிராக என்னை நிறுத்தி வைப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
35 “நானே கர்த்தர். நான் சொல்லியிருக்கிறேன், தீய ஜனங்கள் அனைவருக்கும் நான் சொன்னபடியே செய்வேன் என்று உறுதியாய்க் கூறுகிறேன். இந்த ஜனங்கள் அனைவரும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்தார்கள். எனவே அனைவரும் இப்பாலைவனத்திலேயே மரித்துப்போவார்கள்” என்றார்.
36 புதிய நாட்டைப் பார்வையிட்டு வருமாறு மோசே அனுப்பி வைத்தவர்களில் சிலர் இஸ்ரவேல் ஜனங்களிடம் வதந்தியைப் பரப்பினார்கள். அந்நாட்டிற்குள் நுழைகிற அளவிற்குத் தமக்குப் பலமில்லை என்றனர். 37 இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அவநம்பிக்கையைப் பரப்பியதற்கு இவர்களே பொறுப்பாகும். எனவே கர்த்தர் அந்த ஜனங்களை கொல்லும்படி நோயைக் கொண்டு வந்தார். 38 ஆனால் நூனின் மகனான யோசுவாவும், எப்புன்னேயின் மகனான காலேபும் கானான் நாட்டை பார்வையிட்டவர்களில் இந்த இருவரையும் கர்த்தர் காப்பாற்றினார். மற்றவர்களைச் சாகடித்த அந்நோய் இவர்களுக்கு வரவில்லை.
கானான் நாட்டிற்குள் ஜனங்கள் நுழைய முயலுதல்
39 இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே இவை அனைத்தையும் சொன்னான். அவர்கள் மிகவும் துக்கப்பட்டு மனங்கசந்து அழுதனர். 40 மறுநாள் அதிகாலையில் அவர்கள் உயரமான மலைநாட்டிற்குள் பிரவேசிக்கப் புறப்பட்டனர். அவர்கள்: “நாங்கள் பாவம் செய்துவிட்டோம். நாங்கள் கர்த்தரை நம்பாமல் போனதற்காக வருத்தப்படுகிறோம். கர்த்தர் வாக்களித்த நாட்டிற்குள் நாங்கள் போவோம்” என்றனர்.
41 ஆனால் மோசே, “கர்த்தரின் கட்டளைக்கு ஏன் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நீங்கள் வெற்றியடையப் போவதில்லை. 42 அந்த நாட்டிற்குள் போகாதீர்கள். கர்த்தர் இப்போது உங்களோடு இல்லை. எனவே, உங்கள் பகைவர்கள் உங்களை எளிதில் வென்றுவிடுவார்கள். 43 அமலேக்கியரும், கானானியரும் உங்களுக்கு முன்னே அங்கே இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சண்டையிடுவார்கள். நீங்கள் கர்த்தரிடமிருந்து விலகிவிட்டீர்கள். எனவே நீங்கள் அவர்களோடு சண்டையிடும்போது கர்த்தர் உங்களோடு இருக்கமாட்டார். எனவே நீங்கள் அனைவரும் போரில் கொல்லப்படுவீர்கள்” என்றான்.
44 ஆனால் மோசேயின் வார்த்தைகளை ஜனங்கள் நம்பவில்லை. அவர்கள் மலை நாட்டை நோக்கிச் சென்றனர். ஆனால் மோசேயும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் அவர்களோடு போகவில்லை. 45 மலைநாட்டில் வாழ்ந்த அமலேக்கியரும், கானானியரும் கீழே இறங்கி வந்து அவர்களைத் தாக்கி, அவர்களை எளிதில் தோற்கடித்தனர். அவர்களை ஓர்மா வரை துரத்தி அடித்தனர்.
பலிகளைப் பற்றிய விதிகள்
15 கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசி இதனைக் கூறு. உங்கள் வீடாக இருக்கும்படி நான் உங்களுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கிறேன். நீங்கள் அதனுள்ளே நுழைந்ததும், 3 நீங்கள் கர்த்தருக்குச் சில சிறப்புக்குரிய தகன பலிகளைச் செலுத்த வேண்டும். அவற்றின் வாசனை கர்த்தருக்கு விருப்பமானது. நீங்கள் உங்கள் மாடுகளையும், ஆடுகளையும், வெள்ளாடுகளையும் தகனபலிக்குப் பயன்படுத்தலாம். அவற்றை சிறப்பு காணிக்கைகள், உற்சாக பலிகள், சமாதானப் பலிகள் அல்லது சிறப்புப் பண்டிகைப் பலிகள், ஆகியவற்றுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.
4 “ஒருவன் கர்த்தருக்கு காணிக்கையைக் கொண்டு வரும்போது, அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். தானியக் காணிக்கை என்பது, ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் காற்படி எண்ணெய் பிசைந்து கொண்டு வரவேண்டும். 5 ஒரு ஆட்டுக்குட்டியைத் தகனபலியாகக் கொண்டுவரும் ஒவ்வொரு முறையும், நீங்கள் காற்படி திராட்சை ரசத்தையும், பானங்களின் காணிக்கையாகப் படைக்கவேண்டும்.
6 “நீங்கள் ஒரு ஆட்டுக்கடாவைப் படைக்கும்போது, தானியக் காணிக்கையையும் சேர்த்து படைக்கவேண்டும். இந்தத் தானியக் காணிக்கை, ஒரு மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான, மெல்லிய மாவிலே ஒருபடியில் மூன்றில் ஒரு பங்கு, ஒலிவ எண்ணெயோடு பிசைந்து கொடுக்க வேண்டும். 7 ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானது.
8 “ஓர் இளங்காளையைத் தகனபலியாகவோ, சிறப்பான பொருத்தனைப் பலியாகவோ, சமாதான பலியாகவோ, கொடுக்கலாம். 9 அப்போது, அதனோடு தானியக் காணிக்கையையும், ஒரு காளையையும் படைக்கவேண்டும். அதாவது, ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவுடன், அரைப்படி ஒலிவ எண்ணெயைப் பிசைந்து கொடுக்க வேண்டும். 10 அதோடு பானங்களின் காணிக்கையாக அரைப்படி திராட்சைரசத்தையும் கொடுக்கவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமாக இருக்கும். 11 நீங்கள் கர்த்தருக்கு தகனபலியாக கொடுக்கப் போகும் பலி, காளை அல்லது ஆட்டுக்கடா அல்லது செம்மறி ஆட்டுக் குட்டி அல்லது வெள்ளாட்டுக் குட்டியை இம்முறையில்தான் அளிக்கவேண்டும். 12 நீங்கள் படைக்கும் ஒவ்வொரு மிருகத்திற்கும் இவ்வாறுதான் செய்யவேண்டும்.
13 “இவ்வாறே ஒவ்வொரு இஸ்ரவேலனும் கர்த்தருக்குப் பிரியமான முறையில் தகன பலியைச் செலுத்த வேண்டும். 14 உங்களிடையே பிறநாட்டு ஜனங்களும் வாழ்வார்கள். அவர்களும் தகனபலி கொடுத்து கர்த்தரை வழிபட விரும்பினால் இந்த முறையில்தான் செலுத்தவேண்டும். 15 இதே விதிகள்தான் உங்களுக்கும், உங்களோடு வாழும் பிற நாட்டு ஜனங்களுக்கும் உரியதாகும். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியதாக விளங்கும். கர்த்தருக்கு முன்பு, நீங்களும், உங்களோடு வாழும் மற்றவர்களும், சமமாகக் கருதப்படுவார்கள். 16 எனவே, நீங்கள் இந்த விதிகளையும், சட்டங்களையும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் இதற்குப் பொருள். அந்தச் சட்டங்களும், விதிகளும் இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்களுக்கும், உங்களோடு வாழும் மற்ற ஜனங்களுக்கும் பொருந்தும்” என்றார்.
17 கர்த்தர் மேலும் மோசேயிடம், 18 “இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. நான் உங்களை வேறு நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். 19 அங்கு நீங்கள் விளைந்த உணவை உண்பதற்கு முன்னால், அதில் ஒரு பங்கை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். 20 நீங்கள் தானியத்தைச் சேகரித்து, மாவாக அரைக்கவேண்டும். அது அப்பம் செய்வதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். முதலில் செய்யப்படும் அப்பத்தை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். போரடிக்கிற களத்தில் தானியத்தைக் காணிக்கையாகக் கொடுப்பது போன்று இது இருக்கும். 21 இவ்விதிமுறை எக்காலத்திற்கும் தொடர்ந்திருக்கும். நீங்கள் பிசைந்த மாவின் முதற்பகுதியை, கர்த்தருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும்.
22 “இந்தக் கட்டளையை மறதியினால் தவறி நீங்கள் அநுசரியாமற்போனால், நீங்கள் அதற்காக என்ன செய்யவேண்டும்? 23 இந்தக் கட்டளைகளை கர்த்தர் உங்களுக்கு மோசே மூலமாகக் கொடுத்தார். உங்களுக்கு கொடுத்த அந்நாளிலேயே இக்கட்டளைகள் செயல்படத் துவங்கியது. அந்நாள் முதல் எல்லாக் காலத்திற்கும் இக்கட்டளைகள் உங்களுக்குத் தொடர்ந்து வரும். 24 எனவே, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் திட்டமிடாமல் இந்தக் கட்டளைகளை காக்கத் தவறினால் அதற்கு என்ன செய்வீர்கள்? இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இந்தத் தவறைச் செய்தால், அவர்கள் அனைவரும் சேர்ந்து, ஓர் இளங்காளையைப் பலி கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானதாகும். அதோடு தானியக் காணிக்கையையும், பானங்களின் காணிக்கையையும் ஒரு காளையோடு காணிக்கையாக கொடுக்கவேண்டும். பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பலி கொடுக்கவேண்டும்.
25 “ஜனங்களைத் சுத்தப்படுத்த ஆசாரியன் அனைத்து சடங்குகளையும் செய்ய வேண்டும். அவன் இவற்றை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்காகவும் செய்யவேண்டும். தாங்கள் பாவிகள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், எப்போது அவர்களுக்கு அது தெரிய வருகிறதோ, அப்போதே அவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புச் செலுத்த வேண்டும். அவர்கள் தகனபலியையும் பாவ நிவாரண பலியையும் கொடுக்க வேண்டும். அதனால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். 26 இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும், அவர்களோடு வாழும் மற்ற ஜனங்களும் மன்னிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நாம் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாதிருந்தால் அவர்களும் மன்னிக்கப்படுவார்கள்.
27 “ஒரே ஒரு மனிதன் மட்டும் தவறிப் பாவம் செய்தால் அவன் ஓராண்டு வயதுள்ள பெண் வெள்ளாட்டைக் கொண்டு வர வேண்டும். அது பாவப்பரிகார பலியாகும். 28 அவனைத் சுத்தப்படுத்துவதற்குரிய நியமனத்தை ஆசாரியன் நிறைவேற்றவேண்டும். அந்த மனிதன் கர்த்தர் முன்னால் தவறி குற்றம் செய்து பாவியானால் ஆசாரியன் அவனுக்கு நிவாரணம் செய்தபின் அவன் சுத்தமாக்கி மன்னிக்கப்படுகிறான். 29 குற்றம் செய்து பாவியாகிற எவனுக்கும் இந்தச் சட்டம் உரியதாகும். இச்சட்டங்கள் இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்த ஜனங்களுக்கும், அவர்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களுக்கும் உரியதாகும்.
30 “ஆனால் ஒருவன் அறிந்தே பாவம் செய்துகொண்டேயிருக்கிறவனாயிருந்தால் அவன் கர்த்தருக்கு எதிராகிறான். அவன் தம் ஜனங்களிடமிருந்து தனியே பிரிக்கப்படவேண்டும். இந்தச் சட்டம் இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்த ஜனங்களுக்கும், உங்களோடு வாழும் பிறநாட்டு ஜனங்களுக்கும் உரியதாகும். 31 கர்த்தரின் வார்த்தைகள் முக்கியமானவை என்று அந்த மனிதன் நினைக்கவில்லை. அவன் கர்த்தரின் கட்டளையை உடைத்துவிட்டான். அப்படிப்பட்டவன் உங்கள் குழுவிலிருந்து நிச்சயம் விலக்கப்பட வேண்டும். அவன் குற்றவாளியாகித் தண்டிக்கப்படுவான்!” என்றார்.
ஓய்வு நாளில் ஒருவன் வேலை செய்தால்
32 இந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்திலேயே இருந்தனர். ஒருவன் ஓய்வு நாள் ஒன்றில் எரிப்பதற்கான விறகுகளைக் கண்டு அவற்றைச் சேகரித்தான். சிலர் இதனைப் பார்த்தனர். 33 அவன் விறகைச் சேகரித்துக்கொண்டு வரும்போது, அவர்கள் அவனை மோசேயிடமும், ஆரோனிடமும் அழைத்து வந்தனர். மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து வந்தனர். 34 அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது தெரியாததால் அவனை காவலுக்குள் வைத்திருந்தனர்.
35 பிறகு மோசேயிடம் கர்த்தர், “இவன் சாகவேண்டும். முகாமிற்கு வெளியே அவனைக் கொண்டு போய் அனைவரும் அவன் மேல் கல்லெறியுங்கள்” என்றார். 36 எனவே, ஜனங்கள் அவனை முகாமிற்கு வெளியே கொண்டு போய் கல்லால் எறிந்தனர். அவர்கள் இதனை மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்தனர்.
ஜனங்கள் விதிகளை நினைவுப்படுத்திக்கொள்ள தேவன் உதவுதல்
37 கர்த்தர் மோசேயிடம், 38 “இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசி கீழ்க்கண்டவற்றை அவர்களிடம் கூறு. எனது கட்டளைகளை நினைவுப்படுத்திக்கொள்ள நான் உங்களுக்கு உதவுவேன். பல துண்டு நூல் கயிறுகளைச் சேர்த்து, உங்கள் ஆடைகளின் மூலையில் தொங்கல்களைக் கட்டிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தொங்கலிலும் நீல நிற நூலைக் கட்டிக்கொள்ளுங்கள். இதனை இப்போதும் எக்காலத்திற்கும் அணிந்துகொள்ள வேண்டும். 39 நீங்கள் இம்முடிச்சுகளைப் பார்க்கும்போதெல்லாம் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படிவீர்கள். இதனால் மறதி காரணமாக பாவம் செய்யாமல் இருப்பீர்கள். உங்கள் உடம்பும், கண்களும் விரும்புகிற காரியங்களை செய்யமாட்டீர்கள். 40 எனது அனைத்து கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் உங்கள் தேவனுக்கென்று பரிசுத்தமாக இருப்பீர்கள். 41 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நானே உங்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தேன். நான் உங்கள் தேவனாயிருக்க இவற்றைச் செய்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.
சில தலைவர்கள் மோசேக்கு எதிராகத் திரும்புதல்
16 கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகியோர் மோசேக்கு எதிராகக் கிளம்பினார்கள். (கோராகு இத்சேயாரின் மகன். இத்சேயார் கோகாத்தின் மகன். கோகாத் லேவியின் மகன். தாத்தானும், அபிராமும் சகோதரர்கள். இவர்கள் எலியாபின் பிள்ளைகள். ஓன் பேலேத்தின் மகன். இவர்கள் அனைவரும் ரூபன் சந்ததியைச் சேர்ந்தவர்கள்.) 2 இவர்கள் நான்கு பேரும் 250 இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்து மோசேக்கு எதிராக நின்றனர். இவர்கள் அனைவரும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவர்கள். அவர்களை அனைவருக்கும் தெரியும். 3 அவர்கள் அனைவரும் ஒரு குழுவாகி மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராகப் பேச வந்தனர். அவர்கள் மோசேயிடமும், ஆரோனிடமும் வந்து, “நீங்கள் அளவை மிஞ்சிப் போய் விட்டீர்கள். நீங்கள் தவறானவர்கள்! இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள். அவர்கள் மத்தியில் கர்த்தர் வாழ்கிறார்! கர்த்தரின் மற்ற ஜனங்களைவிட, நீங்கள் உங்களை மட்டும் மிக முக்கிமானவர்களாக்கிக் கொண்டீர்கள்” என்றனர்.
4 இதைக் கேள்விப்பட்டதும் மோசே தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கி, தான் பெருமை இல்லாதவன் என்பதை வெளிப்படுத்தினான். 5 பிறகு மோசே, கோராகிடமும் அவனைப் பின்பற்றி வந்தவர்களிடமும்: “நாளை காலையில் கர்த்தர், தனது உண்மையான ஊழியன் யாரென்றும் உண்மையில் யார் பரிசுத்தமானவன் என்பதையும் காட்டுவார். அந்த மனிதனை அவர் தன்னருகில் அழைப்பார். அந்த மனிதனைத் தேர்ந்தெடுத்து, கர்த்தர் தன்னருகே சேர்த்துக்கொள்வார். 6 எனவே, கோராகே! நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் 7 நாளை தூபகலசங்களில் நெருப்பை உண்டாக்கி, அதில் நறுமணப் பொருட்களையிட்டு, அவற்றை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வாருங்கள். உண்மையில் பரிசுத்தமானவன் யார் என்பதை கர்த்தர் தேர்ந்தெடுப்பார். லேவியர்களாகிய நீங்கள்தான் மிதமிஞ்சி போகிறீர்கள். நீங்கள் தவறானவர்கள்” என்றான்.
8 மேலும் மோசே கோராகிடம், “லேவியர்களாகிய நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள். 9 இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் உங்களைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருப்பதால், நீங்கள் மேலும் மகிழ்ச்சி அடையவேண்டும், இல்லையா? மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டவர்கள். பரிசுத்தக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் தம்மருகே உங்களை வரச்செய்திருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனைக்கு நீங்கள் உதவ வேண்டும். இது போதாதா? 10 ஆசாரியர்களுக்கு உதவும்படி லேவியர்களாகிய உங்களை கர்த்தர் தன்னருகே அனுமதித்திருக்கிறார். ஆனால் நீங்கள் இப்போது ஆசாரியர்களாக மாறப் பார்க்கிறீர்கள். 11 நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் சேர்ந்து கர்த்தருக்கு எதிராக நிற்கிறீர்கள். ஆரோன் ஏதாவது தவறு செய்தானா? இல்லையே! அவ்வாறு இருக்க அவனுக்கு எதிராக ஏன் முறையிடுகிறீர்கள்?” என்றான்.
12 பிறகு மோசே எலியாப்பின் மகன்களான தாத்தானையும், அபிராமையும் அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்! 13 நீர் ஏராளமான நன்மைகள் நிறைந்த நாட்டிலிருந்து வெளியேற்றி எங்களை கொல்வதற்காக இப்பாலைவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறீர். இப்போது எங்களை விட உம்மை திறமை மிக்கவராக காட்ட விரும்புகிறீர். 14 நாங்கள் ஏன் உம்மை பின்பற்ற வேண்டும்? தேவன் வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குள் நீர் எங்களைக் கொண்டு வரவில்லை. நீர் எங்களுக்கு வயல்களோ, திராட்சை தோட்டங்களோ கொடுக்கவில்லை. இந்த ஜனங்களையெல்லாம் உங்கள் அடிமைகளாக்குவதுதான் உங்கள் எண்ணமா? முடியாது. நாங்கள் அங்கே வரமாட்டோம்” என்றனர்.
15 எனவே, மோசே மிகவும் கோபம் கொண்டான். அவன் மீண்டும் கர்த்தரிடம், “நான் இந்த ஜனங்களுக்கு எதிராக எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அவர்களிடமிருந்து எதையும், ஏன் ஒரு கழுதையையும் கூட எடுத்துக்கொள்ளவில்லை! கர்த்தாவே, இவர்களது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளாதிரும்” என்றான்.
16 பிறகு மோசே கோராகிடம், “நாளை கர்த்தருக்கு முன்னால் நீயும், உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நிற்கவேண்டும். அங்கே உங்களோடு ஆரோனும் நிற்பான். 17 நீங்கள் ஒவ்வொருவரும் நறுமணப் பொருட்களை இடுகின்ற தூபகலசத்தைக் கொண்டு வந்து அவற்றை கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். மூப்பர்களுக்குரிய 250 தூபகலசத்தோடு உனக்கும், ஆரோனுக்குமாக இரண்டு தூப கலசங்கள் இருக்கும்” என்றான்.
18 எனவே, ஒவ்வொரு தலைவரும் தனக்கென்று தூபகலசமும், அதில் இடுவதற்கு நறுமணப் பொருட்களும் கொண்டு வந்தனர். ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் அவர்கள் வந்து நின்றனர். மோசேயும் ஆரோனும் அங்கே நின்றனர். 19 கோராகும் அனைத்து ஜனங்களையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடுமாறு செய்தான். பிறகு அங்குள்ள ழுழு சபையினருக்கும் கர்த்தரின் மகிமை காணப்பட்டது.
20 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 21 “இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். அவர்களை இப்போதே அழிக்கப் போகிறேன்!” என்றார்.
22 ஆனால் மோசேயும், ஆரோனும் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கிக் கதறினார்கள், “தேவனே! நீர் மாம்சமான எல்லாருடைய ஆவிகளுக்கும் தேவன். ஒரே ஒருவன் மட்டும் பாவம் செய்தால் நீர் முழு சபையினர் மீதும் கோபங்கொள்ளலாமா?” என்றனர்.
23 பிறகு கர்த்தர் மோசேயிடம், 24 “கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப்போகும்படி ஜனங்களிடம் கூறு” என்று கேட்டுக்கொண்டார்.
25 மோசே எழுந்து, தாத்தானிடமும், அபிராமிடமும் சென்றான். எல்லா மூப்பர்களும் அவனைப் பின்பற்றினர். 26 மோசே, ஜனங்களை எச்சரித்து. “அந்தத் தீய மனிதர்களின் கூடாரங்களை விட்டு விலகிப் போங்கள், அவர்களுக்குரிய எதையும் தொடாதீர்கள், நீங்கள் இவ்வாறு செய்தால் அவர்களது பாவத்தின் காரணமாக அழிக்கப்படுவீர்கள்” என்றான்.
27 எனவே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப் போனார்கள். தாத்தானும் அபிராமும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே வந்து, தங்கள் கூடார வாசல்களில், தங்கள் மனைவி, குழந்தைகளோடு நின்று கொண்டிருந்தனர்.
28 பிறகு மோசே, “இவை எல்லாவற்றையும் செய்யுமாறு கர்த்தர் என்னை அனுப்பினார் என்று ஏற்கெனவே நான் கூறியுள்ளேன். இதுதான் அதற்கான சாட்சி. இவை எனது சொந்த எண்ணங்கள் அல்ல என்பதை இவை உங்களுக்குக் காட்டும். 29 இங்குள்ள மனிதர்கள் மரித்துப்போவார்கள். அவர்கள் சாதாரண ஜனங்களைப் போன்று மரிப்பார்களேயானால் பிறகு கர்த்தர் உண்மையில் என்னை அனுப்பவில்லை என்று தெரிந்துக்கொள்ளுங்கள். 30 ஆனால் கர்த்தர் இவர்களை அசாதாரணமான முறையில் மரிக்க செய்வாரானால், இவர்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். பூமி பிளந்து இந்த மனிதர்களை அப்படியே விழுங்கிவிடும். இதுதான் அதற்கு சான்று, இவர்கள் உயிரோடு தங்கள் கல்லறைக்குள் புதைக்கப்படுவார்கள். இவர்களுக்குரிய அனைத்தும், இவர்களோடேயே போய்ச்சேரும்” என்றான்.
31 மோசே இவற்றைச் சொல்லி முடித்ததும், அவர்கள் நின்ற இடத்தில் பூமி பிளந்தது. 32 பூமி தன் வாயைத் திறந்து, அவர்களை விழுங்கியது போல் இருந்தது. கோரகின் ஜனங்களும் அவர்களின் குடும்பங்களும் அவர்களுக்குரிய அனைத்தும் பூமிக்குள் சென்றுவிட்டன. 33 அவர்கள் தங்கள் கல்லறைக்குள் உயிரோடு சென்றனர். அவர்களுக்குரிய பொருட்களும், அவர்களோடு சென்றன. பிறகு பூமி மூடிக்கொண்டது. அவர்கள் முகாமிலிருந்து மூடப்பட்டு மடிந்தனர்!
34 இஸ்ரவேல் ஜனங்கள் அழிந்து போனவர்களின் அழுகுரல்களைக் கேட்டனர், அவர்கள் பல திசைகளிலும் ஓடிப்போய், “இந்தப் பூமி எங்களையும் விழுங்கிக் கொன்றுவிடும்” என்று கதறினர்.
35 பிறகு கர்த்தரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபதீபம் காட்டிய 250 தலைவர்களையும் அழித்துப் போட்டது.
36 கர்த்தர் மோசேயிடம் 37-38 “ஆசாரியனான ஆரோனின் மகனான எலெயாசாரிடம் நெருப்புக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவற்றிலுள்ள கரியையும், சாம்பலையும் கொட்டிவிடச் சொல். அவர்கள் எனக்கெதிராகப் பாவம் செய்தார்கள். அவர்களது பாவம் அவர்களின் உயிரைப் போக்கிவிட்டது. ஆனால், அக்கலசங்கள் இப்போதும் பரிசுத்தமானவை. அவற்றை கர்த்தருக்குக் கொண்டுவந்ததால் பரிசுத்தமடைந்தன. அவற்றைத் தகடுகளாக அடித்து, பலிபீடத்தைச் சுற்றிலும் மூடிவைக்கவும். இது எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்று கூறினார்.
39 எனவே, ஆசாரியனாகிய எலெயாசார் அனைத்து வெண்கலத் தூபகலசங்களையும் சேகரித்தான். அவற்றைக் கொண்டு வந்த மனிதர்கள் மரித்துப்போனார்கள். ஆனால், கலசங்கள் இருந்தன. அவன் அவற்றை அடித்து, தகடாக்கும்படி செய்து, பின் அத்தகடுகளைப் பலிபீடத்தைச் சுற்றி மாட்டி வைத்தான். 40 மோசே மூலமாக கர்த்தர் எலெயாசாருக்குக் கட்டளையிட்டபடிச் செய்து முடித்தான். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு அடையாளம் ஆயிற்று. ஆரோன் ஜனங்களைத் தவிர வேறு யாரேனும் நறுமணப் பொருள் கொண்டு வரக் கூடாது என்பதற்கு இது நினைவூட்டல் ஆயிற்று. யாராவது கர்த்தருக்கு நறுமணப் பொருள் கொண்டுவந்தால், கோராகும் அவனைப் பின்பற்றியவர்களும் மரித்துப் போனதுபோல் மரித்துப்போவார்கள்.
ஆரோன் ஜனங்களைக் காப்பாற்றுதல்
41 மறுநாள் இஸ்ரவேல் ஜனங்கள், மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டு, “நீங்கள் கர்த்தருடைய ஜனங்களைக் கொன்று விட்டீர்கள்” எனக் கூறினர்.
42 மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்று கொண்டு இருந்தனர். ஜனங்கள் அங்கே கூடி அவர்களுக்கு எதிராக முறையிட்டனர். ஆனால் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தை நோக்கியபோது அதை மேகம் சூழ்ந்தது. அங்கே கர்த்தரின் மகிமை காணப்பட்டது. 43 பிறகு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பாக வந்தனர்.
44 மோசேயிடம் கர்த்தர், 45 “இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். நான் இவர்களை உடனே அழிக்கப்போகிறேன்” என்றார். எனவே மோசேயும் ஆரோனும் தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கினார்கள்.
46 பிறகு மோசே ஆரோனிடம், “உனது வெண்கலத் தூபகலசத்தை எடுத்துக்கொள், பலிபீடத்திலுள்ள நெருப்பை அதில் இடு, பின் நறுமணப் பொருளைப்போடு, அவற்றை ஜனங்களிடம் கொண்டு போய் காட்டு, அது அவர்களைத் சுத்தமாக்கும். அவர்கள் மேல் கர்த்தர் கோபமாக உள்ளார். அவர்களுக்கு துன்பம் ஏற்கெனவே தொடங்கி விட்டது” என்றான்.
47-48 ஆரோன் மோசே சொன்னபடி தூபகலசமும், நெருப்பும், நறுமணப் பொருட்களும் எடுத்துக்கொண்டு ஜனங்கள் மத்தியில் ஓடினான். ஆனால், ஏற்கெனவே நோய் அவர்களிடையே துவங்கிவிட்டது. எனவே ஆரோன் மரித்துப் போனவர்களுக்கும், இன்னும் உயிரோடு இருந்தவர்களுக்கும் இடையே நின்று அவர்களைத் சுத்தப்படுத்தவதற்குரியவற்றைச் செய்தான். நோயும் நிறுத்தப்பட்டது. 49 ஆனால் 14,700 பேர் நோயால் மரித்துப்போனார்கள். கோரகினால் மரித்தவர்கள் இதில் கணக்கிடப்படவில்லை. 50 எனவே நோய் நிறுத்தப்பட்டது. பின் ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்ற மோசேயிடம் திரும்பி வந்தான்.
ஆரோன்தான் தலைமை ஆசாரியன் என தேவன் உறுதிப்படுத்துதல்
17 கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசு. அவர்களிடமிருந்து 12 கைத்தடிகளை வாங்கு. 12 கோத்திரங்களின் தலைவர்களிடமிருந்தும் ஒவ்வொரு கைத்தடியாகப் பெற வேண்டும். ஒவ்வொருவரின் பெயரையும் அவரவர் கைத்தடியிலும் எழுது. 3 லேவியின் கைத்தடியில் ஆரோனின் பெயரை எழுது. ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு கைத்தடி வீதம் பன்னிரண்டு இருக்க வேண்டும். 4 அக்கைத்தடிகளை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் வை. அந்த இடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன். அவர்களில் ஒருவனை நான் உண்மையான ஆசாரியனாக தேர்ந்தெடுப்பேன். 5 நான் யாரைத் தேர்ந்தெடுப்பேனோ அவனது கைத்தடியில் இலைகள் துளிர்த்திருக்கும். இதன் மூலம் உனக்கும் எனக்கும் எதிராக முறையிடுபவர்களை நான் தடுப்பேன்” என்று கூறினார்.
6 இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசினான். ஒவ்வொரு 12 கோத்திரங்களின் தலைவரும் தங்கள் கைத்தடியை அவனிடம் கொடுத்தார்கள். மொத்தம் 12 கைத்தடிகளைப் பெற்றான். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு கைத்தடி என்பதாக இருந்தது. ஒரு கைத்தடியில் ஆரோனுடைய பெயர் இருந்தது. 7 மோசே அனைத்து கைத்தடிகளையும் கர்த்தருக்கு முன்னால் உடன்படிக்கைக் கூடாரத்திற்குள் வைத்தான்.
8 மறுநாள் மோசே கூடாரத்திற்குள் நுழைந்தபோது லேவியின் குடும்பத்திலிருந்து வந்த ஆரோனின் கைத்தடியில் புதிய இலைகள் துளிர் விட்டிருந்ததை மோசே பார்த்தான். அதில் கிளைகளும் தோன்றி வாதுமை பழங்களும் காணப்பட்டன. 9 மோசே கர்த்தரின் சமூகத்திலிருந்து கைத் தடிகளை எடுத்து வந்து, இஸ்ரவேல் ஜனங்களிடம் அவற்றைக் காட்டினான். அவரவர் தங்கள் கைத்தடிகளை பார்த்து எடுத்துக்கொண்டனர்.
10 பிறகு கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் கைத்தடியை மீண்டும் கூடாரத்திற்குள் எனது உடன்படிக்கைப் பெட்டியின் முன்பாக வை. எப்போதும் எனக்கு எதிராகத் திருப்புவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இது எனக்கு எதிராக அவர்கள் முறையிடுவதை தடுக்கும். எனவே அவர்களை நான் அழிக்கமாட்டேன்” என்று கூறினார். 11 எனவே மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடித்தான்.
12 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் மரித்துப்போவோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தொலைந்தோம். நாங்கள் அனைவரும் அழிந்து போவோம். 13 எவராவது கர்த்தரின் பரிசுத்த இடத்தின் அருகில் வந்தாலும் மரித்துப் போவார்கள். நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம் என்பது உண்மையா?” என்று கேட்டனர்.
ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் வேலை
18 கர்த்தர் ஆரோனிடம், “நீயும், உனது மகன்களும், உன் தந்தையின் குடும்பத்தில் உள்ளவர்களுமே பரிசுத்தமான இடத்தில் ஏற்படும் தவறுகளுக்குப் பொறுப்பாவீர்கள். ஆசாரியர்களுக்கு எதிராக நடை பெறும் தவறுகளுக்கும் நீயும், உனது மகன்களும் பொறுப்பாவீர்கள். 2 உனது கோத்திரத்தில் உள்ள மற்ற வேவியர்களையும் உங்களோடுச் சேர்த்துக்கொள். ஆசரிப்புக் கூடாரத்தில் நீங்களும் உங்கள் மகன்களும் செய்யும் வேலைகளுக்கு அவர்கள் உதவுவார்கள். 3 லேவியரின் குடும்பத்தில் உள்ள அனைத்து ஜனங்களும் உங்கள் கட்டுபாட்டிற்குள் இருப்பார்கள். கூடாரத்திற்குள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமான இடத்தின் அருகிலோ, பலிபீடத்தின் அருகிலோ போகக்கூடாது. அவ்வாறு போனால் மரித்துப்போவார்கள். நீங்களும் மரித்துப்போவீர்கள். 4 அவர்கள் உங்களோடு சேர்ந்து வேலை செய்வார்கள். அவர்களே ஆசரிப்புக் கூடாரத்தைக் காக்கும் பொறுப்புள்ளவர்கள். கூடாரத்திற்குள் நடை பெற வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்கள் அருகில் எவரும் வரக்கூடாது.
5 “இஸ்ரவேல் ஜனங்கள் மீது திரும்பவும் கோபாக்கினை விழாதபடி நீங்கள் பரிசுத்த இடத்தையும் பலிபீடத்தையும் காக்கிற பொறுப்புடையவர்கள். நான் மீண்டும் இஸ்ரவேல் ஜனங்கள் மீது கோபம்கொள்ள விரும்பவில்லை. 6 அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் நானே லேவியர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள் உங்களுக்கு ஒரு பரிசைப் போன்றவர்கள். நான், அவர்களை உங்களுக்காக கர்த்தருக்குச் சேவை செய்யவும், ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சில வேலைகளைச் செய்யவும் தந்தேன். 7 ஆனால் ஆரோனே! நீயும் உன் மகன்களும் மட்டும் ஆசாரியர்களாகப் பணிபுரிய வேண்டும். பலிபீடத்தின் அருகில் செல்லும் தகுதியுடையவர்கள் நீங்கள் மட்டுமே. மகாபரிசுத்த இடத்திற்குள் திரைக்குப் பின்னால் செல்லும் தகுதி உடையவர்களும் நீங்கள் மட்டுமே. ஆசாரியர்களாகப் பணிபுரிவதை உங்களுக்கு ஒரு பரிசாகக் கொடுத்திருக்கிறேன். வேறு எவராவது எனது பரிசுத்த இடத்திற்கு அருகில் வந்தால் கொல்லப்படுவார்கள்” என்று கூறினார்.
8 பிறகு கர்த்தர் ஆரோனிடம், “ஜனங்கள் எனக்குத் தருகிற எல்லா அன்பளிப்புகளுக்கும் உங்களையே பொறுப்பாளர்களாக ஆக்கினேன். இஸ்ரவேல் ஜனங்கள் கொடுக்கும் அனைத்து பரிசுத்தமான அன்பளிப்புகளையும் நான் உங்களுக்குத் தருகிறேன். அவற்றை நீயும் உனது மகன்களும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். அவை எப்பொழுதும் உங்களுக்கு உரியது. 9 ஜனங்கள் பலிகளையும் தானியக் காணிக்கைகளையும், பாவப்பரிகார பலிகளையும், குற்றபரிகாரப் பலிகளையும் கொண்டு வருவார்கள். அவை மிகவும் பரிசுத்தமானவை. தகனம் செய்யப்படாத பலிகளெல்லாம் உங்கள் பங்காகக் கிடைக்கும். அவை உனக்கும் உன் மகன்களுக்கும் உரியதாகும். 10 அவற்றை மிகப் பரிசுத்தமான இடத்தில் வைத்துதான் உண்ண வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் உண்ணலாம். ஆனால் அவை பரிசுத்தமானவை என்பதை நீங்கள் மறக்கக் கூடாது.
11 “இஸ்ரவேலர்கள் தரும் அசைவாட்டும் பலிகளும், உங்களுக்கு உரியதாகும். நான் அவற்றை உனக்கும், உன் மகன்களுக்கும், உனது மகள்களுக்கும் தருவேன். இது உனது பங்காகும். உன் குடும்பத்திலுள்ள தீட்டு இல்லாத எல்லாரும் அதனை உண்ணலாம்.
12 “அதோடு நான் உனக்கு சிறந்த ஒலிவ எண்ணெயையும், புதிய திராட்சைரசத்தையும், தானியத்தையும் தருவேன். இவை இஸ்ரவேல் ஜனங்களால் கர்த்தராகிய எனக்குக் கொடுக்கப்பட்டவை. இவை அறுவடையின் போது, முதலில் கிடைக்கப் பெற்றவையாயிருக்கும். 13 ஜனங்கள் அறுவடை செய்யும்போதெல்லாம் முதலில் கிடைத்ததை கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். அவற்றையெல்லாம் உனக்குத் தருவேன். உன் குடும்பத்தில் உள்ள தீட்டு இல்லாத ஒவ்வொருவரும் அவற்றை உண்ணலாம்.
14 “இஸ்ரவேல் ஜனங்களால் கர்த்தருக்குக் கொடுக்கப்படும் அனைத்தும் உங்களுக்கு உரியதாகும்.
15 “ஒரு பெண்ணின் முதல் குழந்தையும் ஒரு மிருகத்தின் முதல் குட்டியும் கர்த்தருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அந்த விலங்கின் முதலீற்று தீட்டுள்ளதாக இருந்தால் கொடுப்பவரே அதைத் திரும்ப விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும். முதலில் பிறந்த குழந்தை காணிக்கையாகக் கொடுக்கப்படும்போது அதுவும் திரும்ப வாங்கப்பட வேண்டும். அப்பொழுது அக்குழந்தை மறுபடியும் அதே குடும்பத்திற்கு உரியதாகிவிடும். 16 அக்குழந்தை ஒரு மாத வயதுடையதாக இருந்தால், அதற்குரிய தொகையைக் கொடுக்கவேண்டும். அத்தொகை 2 அவுன்ஸ் வெள்ளியாகும். அது அதிகாரப் பூர்வமான அளவு முறையில் 5 சேக்கல் உடையதாக எடையிடப்பட வேண்டும். ஒரு சேக்கல் அதிகாரப் பூர்வமான அளவில் 20 கேராவாகும்.
17 “ஆனால் நீங்கள் முதலில் பிறந்த காளைக்கும், ஆட்டுக்கும், வெள்ளாட்டுக்கும் பணம் கொடுக்கக் கூடாது. அவை பரிசுத்தமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளிக்கவேண்டும். அவற்றின் கொழுப்பை எரிக்க வேண்டும். இது நெருப்பிலிடப்படும் தகனபலியாகும். இதின் மணம் கர்த்தருக்குப் பிரியமானதாயிருக்கும். 18 அவற்றின் இறைச்சியானது உங்களுக்கு உரியதாகும். அசை வாட்டும் பலியாகச் செலுத்தப்பட்ட மார்புக்கண்டமும், உங்களுக்கு உரியது. மற்ற பலிகளின் தொடைக்கறியும் உங்களுக்கு உரியது. 19 ஜனங்களால் கொடுக்கப்படும் பரிசுத்தமான அன்பளிப்புகளையும் கர்த்தராகிய நான் உங்களுக்குத் தருவேன். இது உங்கள் பங்காகும். நான் இவற்றை உனக்கும், உன் மகன்களுக்கும், உன் மகள்களுக்கும் தருவேன். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்கும் உரியதாகும். இது கர்த்தரோடு செய்யப்பட்ட உடன்படிக்கையாகும். இதனை உடைக்க முடியாது. நான் இந்த வாக்குறுதியை உனக்கும், உன் சந்ததிகளுக்கும் தந்துள்ளேன், இது மாறாததாகும்” என்று கூறினார்.
20 கர்த்தர் மேலும் ஆரோனிடம், “நீ எவ்வித நிலத்தையும் பெறமாட்டாய். மற்றவர்களுக்குச் சொந்தமான எதுவும் உனக்குச் செந்தமாவதில்லை. கர்த்தராகிய நானே உனக்கு உரியவர். இஸ்ரவேல் ஜனங்கள் நான் வாக்களித்தபடி நிலத்தைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் என்னை நானே உனக்கு சுதந்திரமாகத் தந்துள்ளேன்.
21 “இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை உங்களுக்குத் தருவார்கள். எனவே நான் அந்தப் பத்தில் ஒன்றை லேவியின் சந்ததியினருக்குக் கொடுக்கிறேன். ஆசாரிப்புக் கூடாரத்தில் பணிபுரியும் அவர்களுக்கு இதுவே சம்பளமாகும். 22 ஆனால் இஸ்ரவேலரின் ஜனங்களில் மற்றவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் அருகில் சென்றால் அவர்கள் சாகடிக்கப்படுவர்! 23 ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பணியாற்றும் லேவியர்கள் இதற்கு எதிரான பாவங்களுக்குப் பொறுப்பாவார்கள். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்குரியதாகும். நான் மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நிலமானது லேவியர்களுக்கும் கிடைக்காது. 24 ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை எனக்கு தருவார்கள். நான் அதனை லேவியர்களுக்குத் தருவேன். எனவே லேவியர்கள் மற்ற இஸ்ரவேலரைப் போல நிலம் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று கூறினார்.
25 கர்த்தர் மோசேயிடம், 26 “லேவியர்களிடம் இவற்றை கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குத் தருவார்கள். அவை லேவியர்களுக்கு உரியதாகும். ஆனால், நீங்கள் அதில் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். 27 அறுவடையானதும் தானியத்தையும், திராட்சை ரசத்தையும் நீங்கள் பெறுவீர்கள். அவற்றையும் கர்த்தருக்குக் காணிக்கையாக செலுத்த வேண்டும். 28 இவ்வாறு மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் செய்வது போலவே, நீங்களும் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தவேண்டும். ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் பத்தில் ஒரு பங்கு உங்களுக்குரியது. உங்களுக்குக் கொடுக்கப்படும் பத்தில் ஒரு பங்கில், கர்த்தருக்கு ஒரு பங்கைத் தரவேண்டும். பிறகு ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அதில் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கவேண்டும். 29 இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கைத் தரும்போது நீங்கள் அவற்றில் சிறந்த பரிசுத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அவற்றையே நீங்கள் உங்கள் பாகத்தில் பத்தில் ஒரு பங்காக கர்த்தருக்குத் தரவேண்டும்.
30 “மோசே, லேவியர்களிடம் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் அறுவடையின் போது தானியத்திலும் திராட்சைரசத்திலும் பத்தில் ஒரு பங்கைத் தருவார்கள். நீங்கள் அவற்றில் சிறந்த பங்கை கர்த்தருக்குத் தரவேண்டும். 31 மீதமுள்ளவற்றை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உண்ணலாம். நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் செய்யும் வேலைகளுக்கு இதுவே கூலியாகும். 32 நீங்கள் எப்போதும் உங்கள் பங்கிலுள்ள சிறந்த பகுதியை மட்டும் கர்த்தருக்குக் கொடுத்து வந்தால் பிறகு எப்போதும் நீங்கள் குற்றவாளியாகமாட்டீர்கள். அந்த அன்பளிப்புகளை எல்லாம் இஸ்ரவேல் ஜனங்களால் தரப்பட்டப் பரிசுத்த காணிக்கைகள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும், அப்போது நீங்கள் அழியமாட்டீர்கள்” என்று கூறினார்.
சிவப்பு பசுவின் சாம்பல்
19 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும் பேசினார். அவர், 2 “இந்த சட்டங்களெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தந்த போதனைகளாகும். பழுதற்ற ஒரு சிவப்புப் பசுவைக் கொண்டு வாருங்கள். அப்பசு நுகத்தடியில் பூட்டப்படாததாகவும் ஊனமில்லாததாகவும் இருக்க வேண்டும். 3 கன்று போடாத இளம் பசுவை ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுங்கள். அவன் அதை வெளியே கொண்டுப்போய் கொல்லவேண்டும். 4 பிறகு எலெயாசார் அதன் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரல்களால் தொட்டு பரிசுத்த கூடாரத்திற்குள் தெளிக்கவேண்டும். இவ்வாறு அவன் ஏழு முறை செய்யவேண்டும். 5 பின்பு அவன் கண்களுக்கு முன்னால் அந்தப் பசுவின் தோல், சதை, இரத்தம், குடல் அனைத்தும் எரிக்கப்பட வேண்டும். 6 பிறகு, ஆசாரியர் கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும் எடுத்து காளை எரிக்கப்படும் இடத்தில் போடவேண்டும். 7 பின்னர் ஆசாரியன் தன்னையும், தனது உடைகளையும் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப்பின் அவன் கூடாரத்திற்குள் வரவேண்டும். அவன் மாலைவரை தீட்டாக இருப்பான். 8 காளையை எரித்தவனும் தன்னைக் கழுவி உடலைச் சுத்தமாக்க வேண்டும். மேலும் தனது ஆடையையும் தண்ணீரால் கழுவ வேண்டும். அவனும் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான்.
9 “பிறகு தீட்டு இல்லாத ஒருவன் எரிந்துபோன காளையின் சாம்பலைச் சேகரித்து அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே சுத்தமான இடத்தில் கொட்ட வேண்டும். ஜனங்கள் இதனை தம்மை சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இச்சாம்பல் ஒருவனின் பாவத்தைப் போக்கவும் பயன்படும்.
10 “காளையின் சாம்பலைச் சேகரித்தவன் தனது ஆடைகளைத் துவைக்கவேண்டும். அவன் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான்.
“இந்த விதிகள் எல்லாக் காலத்துக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் உரியதாகும். இந்த விதி உங்களோடு வாழ்கிற அயல் நாட்டவருக்கும் உரியதாகும். 11 எவனாவது, மரித்துப்போனவனின் சரீரத்தை தொட்டால், அவன் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். 12 அவன் தன்னைத் தீட்டுக்கழிக்கும் தண்ணீரால் மூன்றாவது நாளும், ஏழாவது நாளும் கழுவவேண்டும். அவ்வாறு அவன் செய்யாவிட்டால் தொடர்ந்து அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். 13 ஒருவன் ஒரு மரித்த சரீரத்தைத் தொட்டால், அவன் தீட்டுள்ளவன் ஆகிறான். அவன் தீட்டுள்ளவனாக பரிசுத்த கூடாரத்திற்குள் சென்றால், அதுவும் தீட்டாகிவிடும். எனவே அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து தனியே பிரித்து வைக்கப்படுவான். தீட்டுள்ளவன் மேல் தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாவிட்டால், அவன் தொடர்ந்து தீட்டுள்ளவனாக இருப்பான்.
14 “இவை அனைத்தும் தங்கள் கூடாரத்திற்குள் மரித்துப் போகிறவர்களைப் பற்றிய விதிகளாகும். ஒருவன் தனது கூடாரத்தில் மரித்தால், அக்கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் தீட்டாகும். அவை ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவையாக இருக்கும். 15 ஒவ்வொரு ஜாடியும், பாத்திரமும் மூடப்படாமல் இருந்தால் தீட்டாகும். 16 வெளியிலே எவனாவது பிணத்தைத் தொட்டால், ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். போரில் கொல்லப்பட்டவனையோ, மரித்தவனின் எலும்பையோ தொட்டாலும் அவன் தீட்டுள்ளவன் ஆவான்.
17 “எனவே அவனை மீண்டும் சுத்தப்படுத்த எரித்த காளையின் சம்பலை நீங்கள் பயன்படுத்தவேண்டும். ஒரு ஜாடிக்குள் சாம்பலைப்போட்டு தண்ணீரை அதில் விடவேண்டும். 18 தீட்டில்லாத ஒருவன் ஈசோப்புக் கிளையை எடுத்து அதை தண்ணீரில் நனைக்கவேண்டும். பிறகு அதனைக் கூடாரம், சகல பொருட்கள், ஜனங்கள் ஆகியவற்றின் மீது தெளிக்கவேண்டும். மரித்த மனிதனின் சரீரத்தைத் தொட்டவன் மீதும் இவ்வாறு தெளிக்க வேண்டும். போரில் கொல்லப்பட்ட ஒருவனைத் தொட்டவன் மீதும், மரித்துப் போனவனின் எலும்புகளைத் தொட்டவன் மீதும் இவ்வாறு தெளிக்கவேண்டும்.
19 “தீட்டு இல்லாத ஒருவன், இத்தண்ணீரை தீட்டுள்ளவன் மீது மூன்றாவது நாளும், ஏழாவது நாளும் தெளிக்கவேண்டும். ஏழாவது நாள் தீட்டுள்ளவன் சுத்தமாவான். அவன் தனது ஆடையை தண்ணீரில் துவைக்கவேண்டும். மாலையில அவன் சுத்தமாகிவிடுவான்.
20 “ஒருவன் தீட்டுள்ளவனாகி அதிலிருந்து சுத்தமாகாமல் இருந்தால் அவனை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கி வைக்கவேண்டும். அவன் மீது தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாததால் அவன் சுத்தமாகவில்லை: ஆகையால், அவன் பரிசுத்தக் கூடாரத்தையும் தீட்டாக்கிவிடுவான். 21 இந்த விதி எல்லாக் காலத்திற்கும் உரியது, ஒருவன் தீட்டுக்கழிக்கும் தண்ணீரால் தெளிக்கப்பட்டாலும் அவன் தன் ஆடைகளை தண்ணீரில் துவைக்க வேண்டும். தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தொடுகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 22 தீட்டுள்ள ஒருவன் யாரையாவது தொட்டால் அவனும் தீட்டுள்ளவனாவான். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்” என்று கூறினார்.
மிரியாமின் மரணம்
20 இஸ்ரவேல் ஜனங்கள் முதல் மாதத்தில் சீன் பாலைவனத்தை அடைந்தனர். ஜனங்கள் காதேசில் தங்கியிருந்தபோது மிரியாம் மரணமடைந்தாள். அவள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.
மோசேயின் தவறு
2 அந்த இடத்தில் ஜனங்களுக்குப் போதுமான தண்ணீர் இல்லை. எனவே ஜனங்கள் ஒன்று கூடி வந்து இதைப்பற்றி மோசேயிடமும் ஆரோனிடமும் முறையிட்டனர். 3 அவர்கள், மோசேயிடம் விவாதித்து, “எங்கள் சகோதரர்களைப் போலவே நாங்களும் இந்த இடத்தில் கர்த்தர் முன்னால் மரித்துப்போயிருக்கவேண்டும்? 4 எதற்காக கர்த்தருடைய ஜனங்களை இந்தப் பாலைவனத்துக்கு அழைத்து வந்தீர்கள்? நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கேயே மரித்துப் போகவேண்டும் என்று விரும்புகின்றீரா? 5 எங்களை எகிப்திலிருந்து இந்த மோசமான இடத்திற்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? இங்கே தானியங்கள் இல்லை. அத்திமரமும், திராட்சை செடிகளும், மாதளஞ் செடியும், குடிக்க தண்ணீர் கூட இல்லையே” என்றனர்.
6 எனவே, மோசேயும் ஆரோனும் கூட்டத்தை விட்டு விலகி ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று அங்கே அவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
7 கர்த்தர் மோசேயோடு பேசினார். 8 அவர், “சிறப்புக்குரிய உன் கைத் தடியை எடுத்துக்கொள். உனது சகோதரன் ஆரோனையும் ஜனங்கள் கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு பாறையின்மீது போ. ஜனங்கள் முன்னால் பாறையோடு பேசு. பிறகு பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும். அந்த தண்ணீரை நீ ஜனங்களுக்கும் மிருகங்களுக்கும் தரலாம்” என்றார்.
9 பரிசுத்தக் கூடாரத்திற்குள் கர்த்தர் முன்னிலையில் கைத்தடி இருந்தது. கர்த்தர் சொன்னபடியே மோசே கைத்தடியை எடுத்துக்கொண்டான். 10 மோசேயும், ஆரோனும் ஜனங்களிடம் பாறையின் முன்னால் கூடுமாறு சொன்னார்கள். பிறகு மோசே, “நீங்கள் எப்போதும் முறையிடுகிறீர்கள். இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் இந்த பாறையிலிருந்து தண்ணீர் வரும்படி செய்வேன்” என்றான். 11 மோசே தன் கையை உயர்த்தி பாறையின் மீது தனது கோலால் இருமுறை அடித்தான். தண்ணீர் பாறையிலிருந்து பீறிட்டு வெளியே வந்தது. ஜனங்களும் மிருகங்களும் அந்த தண்ணீரைக் குடித்தனர்.
12 ஆனால் கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே கூடியுள்ளனர். ஆனால் நீங்கள் என்னை கனப்படுத்தவில்லை. தண்ணீரை பெறும் வல்லமை என்னிடமிருந்து வந்ததை நீங்கள் ஜனங்களுக்கு காண்பிக்கவில்லை. நீங்கள் என்னில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் ஜனங்களிடம் காட்டவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு கொடுக்கப்போகும் தேசத்திற்குள் நீங்கள் ஜனங்களை அழைத்துக்கொண்டு செல்லமாட்டீர்கள்!” என்றார்.
13 இந்த இடம் மேரிபாவின் தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது! இங்குதான் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரோடு தர்க்கம் பண்ணினார்கள். அங்கே கர்த்தர் தம்மை பரிசுத்தர் என்று அவர்களுக்குக் காட்டினார்.
ஏதோம் இஸ்ரவேல் ஜனங்களைத் தடைசெய்தல்
14 மோசே காதேசில் இருக்கும்போது, சிலரை ஏதோமின் அரசனிடம் பின்வரும் செய்தியோடு அனுப்பினான்:
“உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் உங்களுக்குச் சொல்லியது என்னவென்றால்: நாங்கள் அடைந்த துன்பங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 15 வெகு காலத்திற்கு முன்னர் நமது முற்பிதாக்கள் எகிப்துக்குள் சென்றனர். அங்கே நாங்கள் நீண்ட காலம் வாழ்ந்தோம். எகிப்து ஜனங்கள் எங்களிடம் கொடூரமாக நடந்துகொண்டனர். 16 ஆனால் நாங்கள் கர்த்தரிடம் உதவி செய்யுமாறு கேட்டோம். கர்த்தர் எங்கள் குறையைக் கேட்டு தேவதூதனை அனுப்பி உதவினார். கர்த்தர் எங்களை எகிப்தைவிட்டு வெளியே அழைத்து வந்தார்.
“இப்போது நாங்கள் உங்கள் நாடு தொடங்குகிற காதேசில் இருக்கிறோம். 17 நாங்கள் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்ல எங்களுக்கு அனுமதி தரவேண்டும். நாங்கள் வயல் அல்லது திராட்சை தோட்டத்தின் வழியாக நடந்து செல்லமாட்டோம். உங்கள் கிணறுகளிலிருந்து தண்ணீர் மொண்டு குடிக்கமாட்டோம். நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே செல்வோம். நாங்கள் அந்தச் சாலையிலிருந்து வலது புறமாகவோ இடதுபுறமாகவோ நகரமாட்டோம். நாங்கள் உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை சாலையிலேயே தங்குவோம்” என்றனர்.
18 ஆனால் ஏதோம் அரசனோ, “நீங்கள் எங்கள் நாட்டின் வழியாக பயணம் செய்ய முயன்றால், பிறகு நாங்கள் வந்து உங்களோடு வாளால் சண்டையிடுவோம்” என்று பதில் அளித்தான்.
19 இஸ்ரவேல் ஜனங்களோ, “நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே பயணம் செய்வோம். உங்களுக்கு சொந்தமான தண்ணீரை நாங்களோ எங்கள் மிருகங்களோ குடித்தால் அதற்குரிய தொகையைத் தந்துவிடுவோம். நாங்கள் உங்கள் நாட்டின் வழியாக நடந்து செல்லவே விரும்புகிறோம். நாங்கள் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்றனர்.
20 ஆனால் மீண்டும் ஏதோம் அரசன், “எங்கள் நாட்டின் வழியாக நீங்கள் நடந்து செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றான்.
பிறகு ஏதோம் அரசன் மிகப் பெரியதும், பலமுள்ளதுமான படையைக் கூட்டினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களோடு போரிட வந்தனர். 21 ஏதோம் அரசன் இஸ்ரவேல் ஜனங்களைத் தன் நாட்டின் வழியாகச் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டான். அவர்கள் திரும்பி அந்த நாட்டைச் சுற்றிக்கொண்டு சென்றனர்.
ஆரோனின் மரணம்
22 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் காதேசிலிருந்து பயணம் செய்து ஓர் என்னும் மலைக்குச் சென்றனர். 23 அது ஏதோம் நாட்டின் எல்லைக்கருகில் இருந்தது. கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 24 “இது ஆரோன் மரிப்பதற்குரிய நேரம். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான். நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நாட்டிற்குள் அவன் நுழையமாட்டான். ஏனென்றால் நீயும் ஆரோனும் எனது ஆணைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. மேரிபாவின் தண்ணீர் பற்றிய நிகழ்ச்சியில் தவறு செய்து விட்டீர்கள்.
25 “இப்போது, ஆரோனையும் அவனது மகன் எலெயாசாரையும் ஓர் என்னும் மலை மீது அழைத்து வா. 26 ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அவனது மகன் எலெயாசாருக்கு அணிவித்து அழைத்து வா. ஆரோன் மலைமீது மரித்துப்போவான். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான்” என்றார்.
27 கர்த்தருடைய ஆணைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஓர் என்னும் மலையின் மீது மோசே, ஆரோன், எலெயாசார் ஆகியோர் ஏறினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவர்கள் செல்வதைப் பார்த்தனர். 28 மோசே, ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அகற்றி அதனை ஆரோனின் மகனான எலெயாசாருக்கு அணிவித்தான். பிறகு மலை உச்சியிலேயே ஆரோன் மரித்துப்போனான். மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தனர் 29 ஆரோன் மரித்துப்போனதை இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் 30 நாட்களுக்குத் துக்கம் கொண்டாடினார்கள்.
கானானியர்களோடு போர்
21 கானானிய ஜனங்களுக்கு ஆராத் என்ற அரசன் இருந்தான். அவன் பாலைவனத்தின் தென் பகுதியில் குடி இருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அத்தாரீம் சாலைவழியாக வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் படைவீரர்களை அனுப்பி இஸ்ரவேல் ஜனங்களைத் தாக்கினான். ஆராத் சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். 2 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடம் ஒரு விசேஷ வேண்டுதல் செய்தனர். அவர்கள், “கர்த்தாவே! இந்த ஜனங்களை வெல்ல எங்களுக்கு உதவும். நீர் இவ்வாறு செய்தால் அவர்களின் நகரங்களை உமக்கு அர்ப்பணிப்போம். நாங்கள் அவர்களை முழுமையாக அழித்துவிடுவோம்” என்று கூறினார்கள்.
3 இஸ்ரவேல் ஜனங்களின் வேண்டுதலை கர்த்தர் கேட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை வெல்வதற்கு கர்த்தர் உதவி செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை முழுமையாக அழித்தனர். அவர்களின் நகரங்களும் அழிக்கப்பட்டன. எனவே அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டனர்.
வெண்கலப் பாம்பு
4 ஓர் என்ற மலையை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பயணம் செய்தனர். ஏதோம் நாட்டைச் சுற்றிக்கொண்டு அவர்கள் சென்றனர். இதனால் ஜனங்கள் பொறுமை இழந்தனர். 5 அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் எதிராக முறுமுறுக்கத் துவங்கினார்கள். அவர்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்கள் இங்கே பாலைவனத்தில் மரித்துக்கொண்டிருக்கிறோம்! உண்ண அப்பம் இல்லை! தண்ணீர் இல்லை! இந்த அற்பமான உணவை நாங்கள் வெறுக்கிறோம்!” என்றனர்.
6 எனவே, கர்த்தர் விஷமுள்ள பாம்புகளை அனுப்பினார். அவை அவர்களைக் கடித்தன. அநேக இஸ்ரவேல் ஜனங்கள் மரணமடைந்தனர். 7 ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் உமக்கும் கர்த்தருக்கும் எதிராகப் பேசும்போதெல்லாம் பாவம் செய்வதாக அறிகிறோம். கர்த்தரிடம் ஜெபம் செய்யும். இப்பாம்புகள் அகலும்படி கர்த்தரிடம் வேண்டுதல் செய்யும்” என்றனர். மோசே ஜனங்களுக்காக வேண்டினான்.
2008 by World Bible Translation Center